தவறான எண்ணங்களைப் பெருக்கி தவறான செயல்களிலிருந்து விடுபட உதவுவதே 2022 !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருமாலின் சக்தி சுடராழி

வேலூர் மாவட்டத்தில் திருமால்பேறு, திருமால்பூர் சிவத்தலத்தில் எழுந்தருளி உள்ளதே ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டேஸ்வரர் சிவாலயம். மூலவர் பிருத்வி அம்சங்கள் நிறைந்த மண் சிவலிங்கம். ராமேஸ்வரக் கடற்கரையில் சீதாப்பிராட்டியால் கடற்கரை மண்ணைப் பிடித்து உருவாக்கிய சிவலிங்கத்தைப் போல விருத்தசீர நதிக்கரையில் மணிகண்டர், தீண்டச் சிவந்தார், சாதரூபர், தயாநிதி, பவளமலையார், வாட்டந்தவித்தார், சாகிசனர் என்ற திருநாமங்களுடன் இறைவன் எழுந்தருளி இருந்தாலும் தற்போது மணிகண்டர் என்ற இறை நாமமே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த ஏழு சக்திகளில் நடுநாயகமாகத் துலங்கும் தயாநிதி என்ற சக்தியையே தன்னுடைய பூரண சக்தியாக, சக்கராயுதம் வடிவில் திருமாலுக்கு வழங்கி அருள்புரிந்ததால் பெருமான் தயாநிதீஸ்வரர் என்றே சித்தர்களால் புகழப்படுகிறார்.

ஸ்ரீமணிகண்டேஸ்வரர்
திருமால்பேறு

சக்கராயுதம் என்றால் எதிரிகளை, பகைவர்களை மாய்ப்பது என்று நாம் பொருள் கொண்டாலும் உயிர்கள் ஈசனை அணுக விடாமல் தடுக்கும் எதிர்மறை சக்திகளை எல்லாம் தகர்த்து இறைவனிடம் சேர்க்கும் சக்தியைக் கொண்டதே திருமாலின் சுதர்சன சக்கரமாகும். இதையே சக்தி சுடராழி என்னும் வார்த்தைகள் குறிக்கின்றன. இதில் உள்ள ஏழு அட்சரங்களும் விருத்தசீரம் என்ற புனித ஆற்றில் பொலியும் ஏழு சக்திகளைக் குறிக்கின்றன என்பதே நாம் இத்தல தேவாரப் பாடல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளும் மகாத்மியமாகும்.

ஆஞ்சநேய வீரா
அனுமந்த சூரா

திருமால்பேறு ஆறு எண் சக்திகளுடன் துலங்குவதும் இந்த சக்திகள் திரு மால் பேறு என்ற சிவ சக்தி அம்சங்களாகப் பிரிந்து 2 2 2 என்றவாறு 2022 வருடத்திற்கான எண் சக்திகளைக் குறிப்பதால் வரும் ஆங்கில வருடம் 2022க்கான வழிபாட்டுத் தலமாக பிரகாசிக்கின்றது. வக்ர கதியில் இயங்கும் சுக்ர பகவானுடன் சூரிய பகவான் இணைவதால் காமத் தவறுகள் மலிந்து மக்கள் மனதை மயக்கும் ஆண்டாக இவ்வருடம் முழுவதுமே துலங்கும். சமுதாயத்தில் நல்ல நிலையில், நல்ல அந்தஸ்தில் திளைப்பவர்களும் காமத் தவறுகளுக்கு ஆட்பட்டு துன்பம் அடையும் ஆண்டு இதுவே. மதி மயக்கும் தேய் பிறைச் சந்திரன் சக்தி பெற்ற செவ்வாய் பகவானுடன் இணைந்து இந்த எதிர்மறை அம்சங்களை மேலும் பலப்படுத்துகிறார் என்பதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய துன்பமே. கடவுள் நம்பிக்கை உள்ளோர் உறவினரிடையேயும் நண்பர்களிடமிருந்தும் எதிர்ப்பையும் அவதூறுகளையும் ஏற்று அனுபவிக்க வேண்டிய ஆண்டு இது. அதே சமயம் இறுதி வெற்றி ராமருக்கே என்பதான ஸ்ரீராமஜயம் கைகொடுக்கும் ஆண்டும் இதுவே. அடியார்கள் எந்த அளவு ராமரை மட்டுமே நம்பி, அதாவது சுதர்சன சக்கரத்தின் தெய்வீக சக்திகளை மட்டுமே நம்பி, காரியத்தில் இறங்குகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் எத்தகைய எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி கொள்ள இயலும் என்று தெய்வீக சக்திகளை தெளிவாக உடல், உள்ளத்தில் நிறைத்துக் கொள்ள உதவும் ஆண்டும் இதுவே.

விருத்தசீர நதி
திருமால்பேறு

பலவீனமான எண்ணத்தைக் கொண்டவனே மனிதன், ஆனாலும் எத்தகைய பலவீனமான மனிதனும் இறைவனுடன் சேரும்போது அவன் கற்பனையைக் கடந்த பலமுள்ளவன் ஆகின்றான் என்று உணர்த்துவதே 2022. நவகிரகங்களை படியாக்கி அவர்கள் மேல் நடந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியவன் இராவணன். அத்தகைய மாவீரனையும் எதிர்த்து அடிபணிய வைத்த பெருமை ராமரின் வில்லுக்கு உண்டு, இந்த பெருமையை ராமபிரான் பெறுவதற்கு உதவியவர்களோ ஆயுதங்களையே ஏந்தாத குரங்குகள் என்றால் எந்த பலவீனத்தையும் பலமாக்குபவன் இறைவன் ஒருவனே என்ற உண்மைக்கு சான்றாக திகழ்கின்றது அல்லவா ராமருக்கு உதவிய குரங்குப் படைகள்.

குரு பகவான் கும்ப ராசியில் நிலை கொள்வதால் குருமார்களின் அனுகிரகம் இந்த வருடம் முழுவதும் மறைந்தே இருக்கும் என்பதையே இது குறிக்கிறது. ஆனால், பத்தில் நிலைகொள்ளும் இத்தகைய நவாம்ச விஜய சக்திகள் குருவை நம்பும் அடியார்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும் என்பதே இந்த குடத்தில் இட்ட குத்து விளக்கின் தன்மையாகும். இதை அனுபவ பூர்வமாக அறிய விரும்பும் அடியார்கள் தொடர்ந்து திருமால்பேறு திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதும், இயலாதவர்கள் தேவார ஆவரண பூஜையை தொடர்ந்து நிறைவேற்றி வருவதாலும் உடல் உள்ளங்களில் எம்பெருமானை நிறைத்துக் கொண்டு முன்னேறுவார்கள் என்பதும் இந்த வருடத்தின் முக்கண் விஜய சக்திகளின் (2 2 2) தன்மையாகும்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் மூர்த்திகள்
திருமால்பேறு

மனதை ஆள்பவன் சந்திர பகவான். சந்திர பகவானோ விருச்சிக ராசியில் நீசமடைந்து செவ்வாய் பகவானுடன் இணைந்து, ராகு பகவானால் பார்க்கப்படுவதால் மனித மனம் வார்த்தைகளைக் கடந்த தீய சக்திகளால் மாசு அடையும், பாதிக்கப்படும். இருப்பினும் புது வருடம் தோன்றும் கன்னி லக்னத்திலிருந்து மூன்றில் இருக்கும் சந்திர பகவான் குரு பகவானிடமிருந்து விஜய சக்திகளைப் பெறுவதால் குருவை நம்புவோர் நன்னிலை அடைவர் என்பதையே இந்த ஜோதிட அம்சங்கள் தெளிவாக்குகின்றன. தேவார ஆவரண பூஜைகள் நிறைவேற்றி வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றுடன் இரு கண்களைக் குறிக்கும் வட்ட வடிவ பால் இனிப்புகள் (இரண்டு) சேர்த்து பக்தர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து தானம் அளித்து வருதலால் 2022 ஆண்டு தோன்றும் எத்தகைய கடவுள் அவநம்பிக்கை பாதிப்புகளும், குருவிற்கு எதிராக வளரும் அவநம்பிக்கை சக்திகளும் மனித மனத்தை அண்டாதவாறு பக்தர்கள் பாதுகாப்பு பெறுவர். இதை உணர்த்துவதே திருமால்பூர் சக்கராயுதத்தின் தன்மையாகும். இவ்வருடம், திருமணமானவர்கள் தங்கள் மனைவியை அன்புடன் நடத்துவதாலும், திருமணமாகாதவர்கள் தங்கள் தாய் தந்தையை மதித்துப் போற்றுவதாலும் சந்திர பகவானின் நீச அம்ச பாதிப்புகளால் வேதனை அடைய மாட்டார்கள் என்பதே நம் சற்குரு தம் அடியார்களுக்கு பிரத்யேகமாக அளிக்கும் அனுகிரகமாகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அடியார்களை சோதிப்பதற்காகவே, வேண்டுமென்று சீண்டுவதற்காகவே மனைவிமார்களும், தாய் தந்தையரும் அடியார்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ள முடியாத வேதனையை அளிப்பார்கள் என்பதும் இவ்வருட ‘மகாத்மியங்களில்’ ஒன்றாகும். தாமே அரைத்த சந்தனத்தால் தாய் தந்தையரின் பாதங்களுக்கு பொட்டிட்டு, வலம் வந்து வணங்குவதும், கணவன் மனைவிக்கு நடுநெற்றி, மாங்கல்யம், உச்சி வகிடு என்ற மூன்று இடங்களிலும் குங்குமப் பொட்டிட்டு மனைவியை சக்தி அம்சமாகப் போற்றுவதும் சிறப்பான பலன்களை நல்கும் வழிபாடாக அமையும். குறைந்தது அரை மணி நேரமாவது மனைவியுடன் அன்றைய தின நிகழ்ச்சிகளை, சாரம் இல்லாவிட்டாலும், வர்ணிப்பதால் இது பல பிரச்னைகளையும் தீர்க்கும் வழிபாடாக அமையும்.

ஸ்ரீஅலங்காரப் பெருமாள்
திருமால்பேறு

திருமாற்பேறு தலவரலாற்றின்படி திருமால் ததீசி முனிவர் மீது தன்னுடைய சக்கராயுதத்தை பிரயோகிக்க, ஒரு உத்தம முனிவரின் மேல் அந்த ஆயுதம் பிரயோகிக்கப்பட்டதால் அதன் சக்திகள் அனைத்தும் மறைந்து, சக்கராயுதமும் மழுங்கி விட்டது. பெருங்கவலை கொண்டார் பெருமாள். தேவர்களின் ஆலோசனையின் பேரில் இத்தலத்தில் சிவனை ஆயிரம் செந்தாமரைகளால் வழிபட ஒரு நாள் அவர் அர்ச்சனை செய்ய வேண்டிய மலர்களில் ஒன்று குறையவே தன் கண்ணையே பறித்து தாமரை மலராக ஈசனுக்கு சூட்டி மகிழ்ந்தார் பெருமாள். பெருமாளின் அற்புத வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன், பெருமாள் வேண்டிய வண்ணம் சக்கராயுதத்தை தன்னுடைய அன்புப் பரிசாக வழங்கினார். இவ்வாறு பெருமாள் சக்கராயுதம் பெற்ற நேரமே ஒரு யுகத்தில் சனிக் கிழமை பிரம்ம முகூர்த்த நேரமாகும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் புத்தாண்டு 2022 தோன்றுவது பூலோக மக்களின் பெரும் பேறே, திருமால்பேறே. பெருமாள் வழிபாட்டிற்குரிய நாளாக சனிக் கிழமை தோன்றியதும் திருமால்பேறு திருத்தலத்தில்தான்.

விருத்தசீர நதி
திருமால்பேறு

பெருமாளுக்குரிய சனிக் கிழமையில் தோன்றும் புத்தாண்டில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிறைய முந்திரிப் பருப்புகள் சேர்த்த சர்க்கரைப் பொங்கலை ஒரு தாமரை இலை அல்லது வாழை இலையில் வைத்து சர்க்கரைப் பொங்கலைச் சுற்றி குங்குமப்பூ கலந்த வட்ட வடிவ பால் இனிப்புகள் 24 வைத்து பெருமாளுக்கு நைவேத்யமாக சமர்ப்பிப்பது 2022 ஆண்டுக்கான சிறந்த வழிபாடாகும். இத்தகைய வழிபாட்டை திருமால்பேறு திருத்தலத்தில் நிறைவேற்றுவதே சிறப்பு என்றாலும், அது இயலாதபோது அடியார்கள் தங்கள் ஊரில் உள்ள திருத்தலங்களிலோ அல்லது தங்கள் இல்லங்களிலோ இத்தகைய பிரம்ம முகூர்த்த வழிபாட்டை இயற்றுதல் நலமே. வழிபாட்டிற்குப் பின் இந்த புத்தாண்டு பிரசாதத்தை பக்தர்களும், பசுக்களும், காக்கைகளும் பகிர்ந்து கொள்தல் சிறப்பே.

திரு மால் பேறு என்பதில் திரு என்பது லட்சுமியைக் குறிக்கும், மால் என்பது பெருமாளைக் குறிக்கும், பேறு என்பது திருமால் பெற்ற சக்கராயுதத்தைக் குறிக்கும். பேறு என்பது பெருமை, புகழ், வாரிசு, செல்வம் போன்ற பல பொருட்களையும், பெருமாளின் அனுகிரக சக்திகளையும் சுட்டுவதாகும். ஒரு யுகத்தில் பெருமாளின் சக்கராயுதமாக நின்றவர் நம் சற்குரு என்பதை அறிந்தோர் ஒரு சிலரே, எந்த பெருமாள் மூர்த்திக்கு எந்த யுகத்தில் நம் சற்குரு சக்கராயுதமாக அலங்கரித்தார் என்பதை அறிந்தோர் அதிலும் குறைவாக விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. எது எப்படியிருந்தாலும் பெருமாளின் கரங்களில் பொலியும் சக்கரத்தாழ்வார் நம் சற்குருவே என்று உறுதியாக நம்பி செயல்படுவோர்களுக்கு நிச்சயமாக நம் சற்குருவின் வழிகாட்டுதலை திருமால்பேறு திருத்தல வழிபாட்டில் பெற்று மகிழலாம் என்பதே இவ்வருட திருமால்பேறு வழிபாடு உணர்த்தும் மகாத்மியமாகும்.

விருத்தசீர பெருமாள் வழிபாடு

2022 ஆண்டிற்குரிய அற்புத வழிபாடாக விருத்தசீர பெருமாள் வழிபாடு என்ற ஒரு வழிபாட்டை சித்தர்கள் அருள்கின்றனர். விருத்தசீர நதிக்கரையில் அமைந்த திருமால்பேறு திருத்தலத்தில் உள்ள சிவலிங்க மூர்த்தி உமையவள் கரங்களால் பிடித்து உருவான சுயம்பு மூர்த்தி. அடியார்கள் தங்கள் ஆத்மாவில் உறையும் ‘உமையவள்’ சக்தியை இந்த விருத்தசீர நதி மணலில் ஆவாஹனம் செய்து பிள்ளையார் மூர்த்தியாக வழிபடுவதே விருத்தசீர பெருமாள் வழிபாடாகும். இந்த வழிபாடு பிள்ளையார், சிவன், உமை, பெருமாள், முருகன், குரு என்ற 2022க்கு உரிய ஆறுவித தெய்வீக சக்திகளால் அமைந்த உன்னத வழிபாடாக அமையும்.

சென்னிமலை

விருத்தசீர நதியில் வெள்ளி அல்லது சனிக் கிழமைகளில் பிரம்ம முகூர்த்தத்தில் அவரவர் கைகளால் ஒரு பிடி மணலை எடுத்து ஒரு புதிய மண் தட்டில் வைத்து அதை நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். சற்றும் ஈரமில்லாமல் மணல் நன்கு உலர்ந்த பின் அதில் பேயம்பழத் துண்டுகளையும் மலைத் தேனையும் சேர்த்து பிசைந்து இந்த கலவையால் பிள்ளையார் மூர்த்தியை ‘பிடிக்க’ வேண்டும்.

ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாள்
திருமால்பேறு

இவ்வாறு மண் சக்கர பீடத்தில் எழுந்தருளிய இவரே 2022 ஆண்டு வணங்க வேண்டிய விருத்தசீர பெருமாள் மூர்த்தி ஆவார். மேற்கூறிய ஆறு மூர்த்திகளுக்கு உரிய அஷ்டோத்திர அர்ச்சனையையோ அல்லது சகஸ்ரநாம அர்ச்சனையையோ இந்தப் பெருமாள் மூர்த்திக்கு இயற்றி வழிபடலாம். பிள்ளையார் சதுர்த்தி அன்று கடையில் வாங்கும், அல்லது நாமே உருவாக்கும் பிள்ளையார் மூர்த்தியை ஒரு வாரத்திற்குள் ஓடும் நதியில் விசர்ஜனம் செய்து விடுகிறோம். ஆனால், இந்த விருத்தசீர பெருமாளை நம் இல்லத்தில் இந்த 2022 வருடம் முழுவதும் வைத்து வழிபடலாம். இந்த மூர்த்தியில் ஏதாவது வெடிப்பு, பிளவு தோன்றினால், அல்லது எறும்புகளால் அரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே இந்த பெருமாள் மூர்த்தியை விசர்ஜனம் செய்து விட வேண்டும். மூர்த்தி நன்னிலையில் இருந்தால் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பக்தர்கள் தங்கள் இல்லத்தில் வைத்து வழிபடலாம். திருமால்பேறு திருத்தலத்தில் பொலியும் விருத்தசீர நதி பல வருடங்களாக மழைப் பொழிவு இல்லாமையால் நீரின்றியே இருந்தது. நம் சற்குருவின் பிரார்த்தனையின் பேரில்தான் இவ்வருடம் இங்கு காணும் தீர்த்தத்தை சற்குரு அருளால் பெற முடிகிறது என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மை. இது ஒரு புறம் இருக்க, விருத்தசீர நதியில் உமையவளால் பிடித்து உருவாக்கப்பட்ட சிவலிங்க மூர்த்தியே இன்று மூலவராக இருந்து அனைவருக்கும் அருளாட்சி புரிகின்றார். உங்கள் பக்தியைப் பொறுத்து உமையவள் சுயம்பு லிங்க மூர்த்தியை உருவாக்க மண் எடுத்த அதே இடத்தில் நீங்களும் தற்போது மண் எடுத்து விருத்தசீர பெருமாளை உருவாக்கினால் அதன் பெருமையை வாய் விட்டு உரைக்கத்தான் முடியுமா ? உமையவளின் பக்திக்கு முன்னால் நம்முடைய பக்தி என்பது தூசி தூசி தூசி என்றாலும் இந்த பக்தியைப் பெறுவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கும் நம் சற்குருவின் மகிமைதான் என்னே, என்னே. விருத்த சீரம் என்றால் பெருகிக் கொண்டே செல்லும் தாயின் முலைப் பால், அன்பாய்ப் பெருகும் சிரஞ்சீவி சக்தி என்று பொருள். இதை எண்ணத்தில் விதைத்து முயன்றால் நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ? முயற்சியை விதைப்பதற்கு இதுவே தக்க தருணம்.

அடியார்கள் தங்கள் பெயரையே சுயநாம ஜபமாக இந்த மூர்த்திக்கு அளித்து வழிபடுதலும் சிறப்பாகும். அவரவர் நாமத்திற்கு உரிய காயத்ரீ மந்திரங்களையும் இந்த மூர்த்திக்கு சமர்ப்பித்து வழிபடலாம். உதாரணமாக, ரகுநந்தன் என்ற நாமம் உடையவர்,
ஓம் தத் புருஷாய வித்மஹே
பிரம்ம புத்ராய தீமஹி
தந்நோ ரகுநந்தன் பிரசோதயாத்
என்று காயத்ரீ மந்திரம் ஜபித்து வழிபடுதலும் ஏற்புடையதே. இது அவரவர் உள்ளத்தில் பொலியும் ஆத்ம மூர்த்தியின் அனுகிரகத்தை சிறப்பாகப் பெற்றுத் தரும்.

சென்னிமலை (பிண்ணாக்கீச சித்தர்
ஜீவசமாதியிலிருந்து)

இவ்வாறு விருத்தசீர பெருமாள் மூர்த்தியை ‘பிடிக்கும்போது’ பயன்படுத்தப்படும் பேயன் பழத்திற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. நம் சற்குரு ஒரு முறை சென்னிமலைக்கு சென்றிருந்தார். அப்போது மூலத்தானத்தில் நம் சற்குருவைக் கண்ட அந்த கோயில் குருக்கள் முற்பிறவி புண்ணியத்தால் ஈர்க்கப்பட்டு, “சுவாமி, உங்களைப் பார்த்தால் மிகவும் தேஜசுடன் திகழ்கிறீர்களே ? தாங்கள் யார் என்று சொல்ல முடியுமா ?” என்று கேட்க நம் சற்குருவும், “அடியேன் நாமம் சுப்ரமண்ய சிவாச்சாரியார். அடியேன் இல்லம் திருஅண்ணாமலை பே கோபுரத் தெருவில் உள்ளது. அடியேன் திருஅண்ணாமலை கோயிலில்தான் அர்ச்சகராகப் பணி புரிகிறேன். தாங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து அடியேனைப் பார்க்கலாம்...” என்று கூறினார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நம் சற்குரு தேவையில்லாத ஒரு பொய்யைக் கூறியதாகத் தோன்றும். உண்மையில் குரு மங்கள கந்தர்வ லோகத்திலிருந்து “இறங்கி” வந்தவர் என்பதையே இது குறிக்கிறது. பே என்றால் மேகம், வானம் என்று பொருள். தான் வானத்தையும் பூமியையும், மனிதர்களை கடவுளோடு இணைக்கும் அவதாரமாகத் தோன்றியவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பே அம் பழம் என்பதே பேயம் பழம் ஆயிற்று. விருத்தசீர நதி மணலில் உள்ள தெய்வ சக்தியையும், மலைத் தேனில் உள்ள முருக சக்தி என்ற அமிர்த சக்தியையும் இணைப்பதற்காகவே பேயம் பழத் துண்டுகளை பயன்படுத்தும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2022 வருடம் முழுவதும் பே கோபுரம் என்னும் மேற்கு கோபுரத்தை தரிசனம் செய்வதும் அல்லது அதன் வழியே சென்று இறை மூர்த்திகளை திருஅண்ணாமலை ஆலயத்தில் வழிபடுவதும் அற்புதமான பலன்களை வர்ஷிப்பதாகும்.

சக்கர தீர்த்தம் திருமால்பேறு

தினமும் காலையில் நிகழ்த்தும் கர தரிசன வழிபாட்டின்போது, அதாவது உள்ளங்கைகளை அகல விரித்து அவைகளில் உள்ள ரேகைகளை எல்லாம் உற்று நோக்கி சங்கர நாராயண கோமதித் தாய்க்கு நமஸ்காரம் என்று ஓதி வழிபாட்டின் நிறைவில்
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரபிரம்ம ஸ்ரீதேவி பக்தாய
ஸ்ரீவெங்கடராம சித்த ஈச மகராஜ் கீ ஜெய்
என்றவாறு நம் சற்குருவை தியானித்து பே கோபுரத்தை தங்கள் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறைத்து தரிசனம் செய்வதும் 2022 ஆண்டில் தேவையில்லாத பல பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்பார்கள். இது பூஜ்யம் இடம் பெறும் தன்மையைப் பொறுத்ததே. 0222, 2022, 2202, 2220 என்றவாறு இந்த வருட எண்களில் பூஜ்யம் கொள்ளும் நிலையை நாம் பகுத்துணரலாம். ‘மதிப்பில்லாத’ பூஜ்யம் என்றாலும் அது வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு நகர்ந்து செல்லும்போது அதன் மதிப்பு சிறிது, சிறிதாக கூடுகிறது அல்லவா ? இதையொட்டியே திருமணத்திற்கு முன் கணவனின் வலது பக்கத்தில் இருக்கும் மனைவி திருமணத்திற்குப் பின் கணவனின் இடது பக்கத்தை அலங்கரிக்கும் இதய நாயகியாக மாறுகிறாள். இதைக் குறிப்பதே விருத்தசீர நதி மணலில் அமைக்கும் விருத்தசீர பெருமாளின் இதயத்தில் குடியிருக்கும் லட்சுமி தேவியின் தன்மை. இவ்வாறு லட்சுமி பெருமாளின் மார்பில் மறைந்திருக்கும் ‘இதய நாயகி’ என்ற தன்மையைக் குறிப்பதே 2022 வருடத்தின் தன்மையாகும்.

இதைப் பூரணமாக உணர்ந்து கொண்டால் இந்த வருடம் இனிய வருடமே. இவ்வாறு எல்லையில்லாது அமையும் பூஜ்யத்தின் மதிப்பை நாம் புரிந்து கொள்ளும் எல்லைக்குள் கொண்டு வந்து, நம்முடைய பயன்பாட்டில் பூஜ்யத்தை வைத்துக் கொள்ளவே சித்தர்கள் வட்டத்திற்குள் சட்டமிடும்படி, அதாவது 2022 என்ற வருடத்தில் வரும் பூஜ்யத்தில் ஒரு குறுக்குக்கோட்டை இடும்படி வலியுறுத்துகிறார்கள்.

2022 முழுவதுமே குறிப்பாக சனிக் கிழமைகளில் குறுக்கே அரிந்த பெரிய வெங்காயம், கருவேப்பிலை இவை கலந்த பக்கோடாவை விருத்தசீர பெருமாள் மூர்த்திக்கு நைவேத்யம் படைத்து தானமளித்தல் சிறப்பாகும். பலவிதமான கண் நோய்களுக்கும், கண் பார்வையால் ஏற்படும் திருஷ்டி நோய்களுக்கும், தகாத பார்வைக் குற்றங்களுக்கும் இத்தகைய தான தர்மங்கள் ஓரளவு நிவர்த்தி அளிக்கும். விருத்தசீர நதியின் மணல் கருப்பு நிறமாக இருப்பதற்கு உரிய காரணங்களை ஆத்ம விசாரம் மூலம் அறிந்து கொள்வதும் இத்தகைய கண்ணேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

ஸ்ரீவிருத்தசீர சுமைதாங்கி

விருத்த என்றால் முதிர்ந்த, பழைய, செறிவூட்டப்பட்ட என்றெல்லாம் பொருளுண்டு. விருத்தசீர என்றால் அமிர்த சக்திகளால் செறிவூட்டப்பட்ட, முதிர்ந்த சக்திகள் நிறைந்த என்றுதானே பொருள். நாம் அறிந்த, சித்தர்களால் செறிவூட்டப்பட்ட சக்தி வாய்ந்த மாமந்திரமே
எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே
அருளாளா அருணாசலா
என்பதாகும். இந்த சித்த வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட, அல்லது வண்ணம் பூசப்பட்ட சுமைதாங்கி கற்களை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையெங்கும், திருப்பதி மலைப் பாதையெங்கும், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பட்டி தொட்டியெங்கும் நிறுவுதலை இந்த 2022 வருட வைராக்யமாக ஏற்றுச் செயல்படுத்துதலே நாம் சற்குருவிற்கு ஆற்றக் கூடிய அரும்பெரும் பணியாகும். இரட்டை படுக்கை வசதி கொண்ட (double berths) இத்தகைய 300 ஸ்ரீவிருத்தசீர சுமைதாங்கி கற்களை நிரவுதலை இந்த வருடம் நிறைவேற்றி நம் பரம்பரையையே கரையேற்றி விடலாம் என்பதே விருத்தசீர சக்திகளின் மகிமைகளுள் ஒன்று.

ஸ்ரீவிருத்தசீர சுமைதாங்கி

ஒரு முறை தன் சற்குரு கோவணாண்டி பெரியவருடன் திருப்பதி சென்றிருந்தான் சிறுவன். திருப்பதியைச் சுற்றிலும் விசேஷமான 108 தீர்த்தங்கள் இருப்பதாக ஒரு முறை பெரியவர் சிறுவனிடம் கூறியிருந்தாரே தவிர அவைகளில் எதையும் சிறுவன் தரிசனம் செய்தது இல்லை. பெரியவரும் சிறுவனிடம் அந்த தீர்த்தங்களைப் பற்றி பின்னர் ஒருபோதும் விளக்கிக் கூறியதே இல்லை. இம்முறை அத்தீர்த்தங்களைப் பற்றி பெரியவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று மனக் கணக்கு போட்டுக் கொண்ட வந்த சிறுவன், “இக்கட சூடு, நைனா,” என்று குதூகலமாக பளிச்சிட்ட பெரியவரின் குரலைக் கேட்கவே தன்னுடைய ஆழ்ந்த நினைவுகளிலிருந்து மீண்டு உடனிருந்த பெரியவரின் செய்கைகளைக் கவனிக்கலானான். வேகவேகமாக இருண்ட காட்டுப் பகுதிக்குள் வந்த பெரியவர் தன்னுடைய கால் பெருவிரலால் தரையில் ஒரு கூழாங்கல்லை நெண்டி புரட்டி விடவே அந்த கல் இருந்த இடுக்கில் ஒரு பெரிய தீர்த்தமே விரிந்தது.

ஆமாம், கிட்டத்தட்ட 30, 40 தூரத்தில் இருந்த அந்த அருவியிலிருந்து பளிங்கு போன்ற நீர் விழுந்து அது சல சலவென்று சப்தத்தை உண்டாக்கிக் கொண்டு அவர்கள் முன்னே ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக ஒரு காட்சியைக் கண்டு சிறுவன் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விட்டான். அருகிலிருந்து ஒரு மரத்திலிருந்து ஒரு பழுத்த இலை அந்த அருவி நீரில் விழுந்து மிதக்கவே, நீரோட்டத்தில் மிதந்து சென்ற அந்த காய்ந்த மஞ்சள் நிற இலை ஒரு நொடியில் பச்சை பசேலென்ற நிறத்தில் மாறி விட்டது.

ஸ்ரீஅலங்காரப் பெருமாள்
திருமாற்பேறு

சிறுவன் ஆவென்று ஆச்சரியத்தில் அருகில் இருந்த பெரியவரை நோக்க, அவரோ மற்றோர் ஆச்சரியமான காட்சியை சிறுவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். ஆம், எப்போதும் வெறும் உடம்புடன் இடுப்பில் ஒரு கோவணத்துடன் மட்டுமே காட்சி அளிக்கும் பெரியவர் அப்போது தோளில் ஒரு பெரிய தேங்காய்ப் பூ துண்டுடன் காட்சியளித்தார். சிறுவன், “வாத்யாரே, என்ன இது பிரமாதமான இந்த துண்டை எங்கே வாங்கினாய் ...”, என்று வழக்கம்போல் ஆச்சரியத்துடன் கேட்டான். பெரியவரோ அதைக் கண்டு கொள்ளாமல், “அது இருக்கட்டும்டா ... நீ இப்போது கேட்க நினைத்தது அந்த பழுத்த இலை எப்படி பச்சை இலை ஆகியது என்பதுதானே ?” என்று கேட்கவே அப்போதுதான் சிறுவன் தன்னுடைய கேள்வியையே மறந்து விட்டது உணர்ந்து தலை குனிந்தான்.

பெரியவர் தொடர்ந்து, “அது ஒண்ணும் இல்லை நைனா, திருப்பதியைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் ஒரு மகிமை வாய்ந்த தீர்த்தம் இது, முதியவர்களையும் இளமையாக்கும் சிரஞ்சீவி தீர்த்தம் ... இதில் அடியேன் ஒரு முக்கு முக்கி எழுந்து இளமையாக ஜொலிக்கலாம் என்று நினைக்கிறேன் ... என்ன சொல்கிறாய் நீ ?” என்று கேட்டுக் கொண்டே தன் தோள் மேல் கிடந்த துண்டை அருகில் இருந்த ஒரு பாறை மேல் வைத்து விட்டு குளிப்பதற்கு தயாரானார். சிறுவன் பாய்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டான். “என்ன வாத்யாரே, நீ மட்டும் குளிப்பதற்கு ரெடியாக வந்ததோடு மட்டுமல்லாமல் என்னை விட்டு விட்டு குளிப்பதற்கு வேறு போகப் போகிறேன் என்கிறாயே ...”, என்று கூறி தொடர்ந்து, “நானும் பச்சிளங் குழந்தையாக மாறக் கூடாதா ?” என்ற கேள்வியை கண்ணில் தொக்கி வைத்துக் கொண்டு கேட்டான் சிறுவன். ஒரு நிமிடம் யோசித்த பெரியவர், “சரிடா, நீ சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது ..” என்று இழுத்தவாறு ஒரு பதிலைக் கூறிவிட்டு, “ஆனால், அதற்கான நேரம் இன்னும் கனியவில்லையே, சரி அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் வா ...”, என்று கூறி அவனுடைய கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அந்த தீர்த்தத்தை விட்டு அகன்றார்.

சிறுவனுக்கு பலத்த ஏமாற்றம். “என்ன இது, கைக்கு கிட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதாக பெரியவர் நம்மை சோதித்து விட்டாரே, சரி பரவாயில்லை, அடுத்த முறை பெரியவர் இல்லாமல் நாம் மட்டும் தனியாக வந்து இந்த தீர்த்தத்தில் ஒரு டைவ் அடிக்கலாம் ”, என்று எண்ணிக் கொண்டே அப்போதைக்கு அந்த தீர்த்த அருவியின் அமைப்பை நன்றாக மனதில் ‘போட்டோ’ எடுத்துக் கொண்டான். சுமார், பதினைந்து நிமிடம் கழித்து பெரியவர் சிறுவனின் கைப்பிடியை தளர்த்தி திடீரென்று ப்ரேக் போட்டு நின்றார்.

சக்கர தீர்த்தம் விற்குடி

“ஆமா, நைனா, அடியேன் தோள் மேல் போட்டிருந்த அந்த பெரிய துண்டை எடுத்துக் கொள்ள மறந்து விட்டேனே,” என்றார். சிறுவனோ மிகுந்த உற்சாகமாக, “ஆஹா, என்னவொரு அரிய வாய்ப்பு ...”, என்று மனதிற்குள் நினைத்தவனாய், “அதனால் என்ன வாத்யாரே, நான் உடனே ஓடிப் போய் அதை எடுத்து வந்து விடுகிறேனே...”, என்று கூறி விட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்தான். பெரியவரிடம் இருந்து விடுபட்ட சிறுவன் ஒரே ஓட்டத்தில் தாங்கள் நின்றிருந்த அந்த இடத்தை அடைந்தான். ஆனால், அங்கு அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெரியவரும் சிறுவனும் பார்த்த அந்த ‘இளமையாக்கினார் தீர்த்தம்’ அங்கு இல்லை, எவ்வளவு தேடியும் சிறுவனால் அந்த தீர்த்தம் இருக்கும் சுவடையே காண முடியவில்லை. “ஹா ஹா ஹா ...” என்ற சிரிப்பொலி அருகில் கேட்கவே பிரமிப்புடன் திரும்பிப் பார்த்தான். பெரியவர்தான் அங்கு முகத்தில் புன்னகை தவழ நின்று கொண்டிருந்தார்.

அருவி மறைந்தது ஒரு ஆச்சரியம் என்றால் வெகு தூரத்தில் நின்றிருந்த பெரியவர் எப்படி ஒரு நொடிக்குள் அங்கு தோன்றினார் என்பது சிறுவன் அடுத்து அடைந்த ஆச்சரியமாகும். “என்ன, நைனா, என்ன இப்படி அதிசயமாகப் பார்க்கிறாய், கூழாங்கல்லில் உலகத்தையே மறைக்கும் எங்களுக்கு இந்த அருவி ஒரு சாதனையா என்ன ...”, என்ற அர்த்தம் பொதிந்த ஒரு வாக்கியத்தை உதிர்த்தார் பெரியவர். சிறுவன் மெல்ல மெல்ல இவ்வுலக நினைவுகளுக்கு மீண்டான்.

ஸ்ரீகோதண்டராமர்
புன்னைநல்லூர் தஞ்சாவூர்

அந்தப் புனிதமான ‘இளமையாக்கினார் தீர்த்தக் கரையில்தான்’ பெரியவர் சிறுவனுக்கு திருமால்பேறு திருத்தல மகிமைகளையும், நேபாளத்தில் உள்ள கண்டகியில் தோன்றும் சாளக்கிராம சிலாவின் மகிமைகளையும், திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள இத்தகைய சஞ்சீவி சக்தி தீர்த்தங்களைப் பற்றியும் ஓரளவு எடுத்துரைத்தார். திருஅண்ணாமலையைச் சுற்றி 11022 (எண் கணிதம் 6) தீர்த்தங்கள் இருப்பதும் இந்த தீர்த்தங்கள் அனைத்தும் இவ்வருடம் விசேஷ விருத்தசீர சக்திகளைப் பெருகின்றன என்பதும் நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியங்கள் ஆகும்.

நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் உள்ள சாளக்கிராம் திருத்தலத்தில் பெருமாளின் சக்கராயுதம் பொலியும் சாளக்கிராம சிலாக்கள் ஏராளமாகப் பொலிகின்றன. 12 சாளக் கிராம கற்கள் அடங்கிய ஒரு பித்ரு பிருந்தத்தை ஒரு மரப் பெட்டியில் வைத்து அந்த பெட்டியை நம் ஆஸ்ரமத்தில் விளங்கும் ஸ்ரீஅங்காள தேவி படத்தின் முன்பு வைத்து பல ஆண்டுகள் பூஜைகளை நிறைவேற்றி வந்தார் நம் சற்குரு என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. இந்த சிலாக் கற்களை தரிசனம் செய்யும் பாக்கியம் எல்லா அடியார்களுக்கும் அமையவில்லை என்றாலும் நம் சற்குருவால் புனருத்தாரணம் செய்யப்பட்ட இந்த சாளக்கிராம விஷ்ணு சக்திகளை அனைத்து அடியார்களும் பெறும் ஒரு வழிபாட்டை முறையை அளித்துள்ளார் நம் சற்குரு என்பதே நமக்கு ஆறுதல் தரக் கூடிய செய்தியாகும்.

சக்கர தீர்த்தம் நேபாளம் சாளக் கிராம், நாமக்கல், விற்குடி, திருமால்பேறு போன்ற சில திருத்தலங்களில் அமைந்துள்ளது என்றாலும் திருமால்பேறு திருத்தலத்தில் பெருமாள் சக்கராயுதம் பெற்றதால் இந்த திருத்தலத்தில் விளங்கும் சக்கர தீர்த்தம் பித்ரு மூல சக்திகளுடன் பொலிகின்றது என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். அதனால்தான் என்னவோ இந்த தீர்த்தம் அழுக்கடைந்து, பாழடைந்து கிடப்பது போல் மக்களின் கண்களுக்குத் தெரிகின்றது. திருமால்பேறு சக்கரத் தீர்த்தக் கரையில் அடியார்கள் தங்கள் 12 தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபடுவதே அரிதிலும் அரிதிலும் ‘இளமையாக்கினார்’ சிரஞ்சீவி சக்திகளைப் பெறும் முறையாகும். பெயர் தெரிகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் அனைவரும் தன்னுடைய 12 தலைமுறையைச் சேர்ந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதே திருமால்பேறு திருத்தலத்தில் இயற்றக் கூடிய தர்ப்பண வழிபாடாகும். 2022 ஆண்டு முழுவதும் இந்த தர்ப்பண பூஜைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் நிறைவேற்றி பலன் பெறலாம்.

பலரும் பெருமாள் உறையும் சாளக்கிராம சிலாக்களை வாங்க முடியும் என்றாலும் இவை உண்மையான கற்களா என்பதைப் பற்றி உறுதி செய்வதற்கு நம் சற்குருவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் விருத்தசீர நதி மணலைக் கொண்டு ‘பிடித்த’ விருத்தசீர பெருமாளே இத்தகைய சாளக்கிராம பெருமாள் சிலாக்களை வழிபட்ட பலனை அளிக்கவல்லவர் என்றால் நம் சற்குருவின் பெருமைதான் என்னே. பொதுவாக, சாளக்கிராம கற்கள் கண்டகி நதியில் பல யுகங்கள் மூழ்கி இருப்பதால் அந்த கற்களில் எல்லாம் கண்டகி நதியின் பிரவாகத்தால் சக்கர வடிவங்களும், சக்கர சக்திகளும் இயற்கையாகவே அவைகளில் பொங்கிப் பொலியும் என்பதே சாளக்கிராம சிலாக்களின் தன்மையாகும். இத்தகைய சாளக் கிராம சிலாக்களால் உருவான அபூர்வமான கோதண்டராமர், சீதை, லட்சுமணன், சுக்ரீவன் போன்ற அனைத்து மூர்த்திகளையும் தரிசிக்கக் கூடிய திருத்தலமே தஞ்சை புன்னைநல்லூர் திருத்தலமாகும். நம் அடியார்களால் சந்தனக் காப்பு அளிக்கப்பட்ட மூர்த்திகளையே இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள்.

ஸ்ரீநரசிம்ம மூர்த்தி
நாமக்கல்

அடியார் ஒருவருக்கு நம் சற்குரு பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கடுக்கனை அளித்தார். இது நடந்த எத்தனையோ வருடங்களுக்குப் பின்னரே அவர் தன்னுடைய காதில் கேட்கும் திறன் மந்தமாகி விட்டதையும் இந்த தொந்தரவிலிருந்து நிவாரணம் அளிக்கவே வேறு யாருக்கும் அளிக்காத ஒரு கடுக்கனை தமக்கு அளித்தார் என்பதை நம் சற்குருவின் தனிப் பெருங்கருணையாக அந்த அடியார் உணர்ந்து கொண்டார். ஆனால், காதில் விழ வேண்டிய எந்த தெய்வீக விஷயத்தையும் அவர் இழக்கவில்லை என்பதும் உண்மை. இது என்றோ நடந்த அற்புத செயல் அல்ல. இன்றும் அடியார்களின் இல்லங்களில் எந்த நல்ல ஒலிகள், தெய்வீக வார்த்தைகள் ஒலிக்க வேண்டுமோ அவை மட்டும் இல்லத்தில் நிரவுவதற்கு உதவி புரிபவரே விருத்தசீர பெருமாள் ஆவார். டீவி போன்றவற்றில் எழும் முறைகேடான வாசகங்கள், ஒருவரையொருர் திட்டிக் கொள்ளும், தகாத வார்த்தைகள் நிறைந்த ஏசுதல்கள் போன்ற எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் அனைத்து சப்தங்களையும் கிரகித்துக் கொண்டு நல்ல எண்ணங்களை மட்டும் ‘விருத்தி’ செய்து அளிப்பவரே விருத்தசீர பெருமாள் ஆவார்.

கௌதம ரிஷியின் உத்தம மனைவியின் கற்புத் திறம் பற்றி அனைத்து உலகங்களும் புகழ்ந்து கூறவே இதனால் கோபமுற்ற முக்கடவுள்களின் பத்தினிகளும் அகலிகையின் கற்பிற்கு எப்படியாவது களங்கத்தை ஏற்படுத்த விரும்பினர். அதனால் தங்கள் கணவன்மார்களான சிவன், பெருமாள், பிரம்மா இவர்களை அகலிகையின் ஆசிரமத்திற்கு அனுப்பி அவளை ஆடையில்லாமல் நிர்வாணமாக பிட்சை அளிக்கும்படிச் செய்யத் தூண்டினர்.

தங்கள் மனைவிமார்களின் வேண்டுகோளின்படி மும்மூர்த்திகளும் கௌதம ரிஷி வெளியே சென்றபின் அவர் ஆஸ்ரமத்தை அடைந்து பிட்சை வேண்டினர். மும்மூர்த்திகளை உபசரித்து அவர்களை குடிசைக்குள் வரும்படிக் கூறினாள் அகலிகை. அவர்களுக்கு பிட்சை அளிக்க சித்தமானாள் அகலிகை. அவர்களோ தாங்கள் ஒரு விரத நிஷ்டையில் இருப்பதாகவும் அகலிகை உடலில் ஆடையில்லாமல் நிர்வாணமாக விருந்து பரிமாறினால்தான் தாங்கள் ஏற்க முடியும் என்று கூறவே சற்றும் சளைக்காமல் அகலிகை தன்னுடைய கணவருக்கு தினமும் பாத பூஜை செய்யும் உத்தரிணியை எடுத்து அதிலிருந்து ஒவ்வொரு துளி நீரை அந்த ‘அதிதிகள்’ மேல் தெளிக்கவே அவர்கள் அனைவரும் மறு நொடியே பச்சிளங் குழந்தைகளாக மாறி தரையில் தவழ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரையும் தன் மடிமேல் கிடத்தி நிர்வாணமாக அவர்களுக்கு பால் அமுது ஊட்டி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினாள் ஜகன் மாதாவான அகலிகை.

சங்கு தீர்த்தம்
நாமக்கல்

சக்கர தீர்த்தம்
நாமக்கல்

வான மார்க்கமாக கௌதமரின் ஆஸ்ரமத்தை அடைந்த முத்தேவியரும் அகலிகையின் குடிசைக்குள் என்ன நடக்கிறது என்றே பார்க்க முடியவில்லை. அகலிகையின் பத்தினி சக்தி அந்த அளவிற்கு வானுயர்ந்து முத்தேவிகளின் பார்வையையும் மறைக்கும் அளவிற்கு வியாபித்திருந்தது. வெகு நேரமாகியும் தங்கள் கணவன்மார்களைக் காணாததால் முப்பெருந்தேவியரும் தங்கள் சுய உருவத்தை ஏற்று அகலிகையின் குடிசையின் முன் நின்றனர். முப்பெருந்தேவியரே தங்கள் குடிசைக்கு எழுந்தருளியதைக் கண்டு அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கி அவர்களை குடிசைக்குள் வரவேற்றாள் அகலிகை. குடிசைக்குள் தங்கள் கணவன்மார்களைக் காண முடியாததால் ஒரே பதைபதைப்பு அவர்கள் நெஞ்சில் குடியேறியது. அவர்கள் குழப்பத்தை மேலும் அதிகரிப்பதாக மூன்று பச்சிளங் குழந்தைகள் வாயில் சொட்டும் பாலுடன் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தன. இந்தக் காட்சியைக் கண்ட முத்தேவியரும் செய்வதறியாது அகலிகையின் திருப்பாதங்களில் விழுந்து தாங்கள் ஆடிய நாடகத்தை விவரித்தனர். அகலிகை அப்போதுதான் தங்கள் குடிசைக்கு வருகை தந்து குழந்தையாக மாறியது ஈசன் முதலான தெய்வங்களே என்பதை உணர்ந்தாள். முத்தேவியருக்கு ஆறுதல் அளிக்கும் முகமாக உத்தரணியிலிருந்து மீண்டும் ஒரு துளி நீரை தெளிக்கவே அந்த குழந்தைகள் எல்லாம் தங்கள் சுய உருவைப் பெற்றனர். சிவன் பெருமாள் பிரம்மா என்று மூன்று தெய்வங்களையும் தம்பதி சகிதமாக தொழுதாள் அகலிகை ஜகன்மாதா.

ஸ்ரீஆஞ்சநேயர் திருத்தலம்
நாமக்கல்

இவ்வாறு தோன்றியதே சிவன் பெருமாள் பிரம்மா மூர்த்திகளின் சக்திகள் இணைந்த தத்தாத்ரேய அவதாரம். இது என்றோ நடந்த வைபவம் என்றாலும் இத்தகைய தத்தாத்ரேய தெய்வீக சக்திகள் பரிணமிக்கும் ஆண்டாக 2022 அமைவதால், பாத சக்திகள் பூரிக்கும் திரு மால் பேறு திருத்தலத்தில் பாதசக்திகளை அடியார்கள் அனைவரும் புனருத்தாரணம் செய்து கொள்ளலாம். ஒரு தெய்வ மூர்த்தியையே குழந்தையாக மாற்றும் அளவிற்கு சக்தி கொண்டதாக அகலிகை வர்ஷித்த ஒரு துளி பாதாபிஷேக தீர்த்தம் அமைந்தது என்றால் இது அகலிகையின் பதிவிரதை சக்தியா, கௌதம மகரிஷியின் புருஷ சக்தியா, இல்லை இரண்டும் இணைந்த சிவ சக்தி ஐக்ய சக்தியா என்பதை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்தலே சிறப்பாகும்.

தத்தாத்ரேய அவதாரம் என்றோ நிகழ்ந்தது என்றாலும் இதை இன்றும் தரிசிக்க பக்தர்களுக்கு உதவுவதே நாமக்கல் திருத்தலமாகும். இடையில் வாளுடன், கையில் ஜபமாலையுடன், இதயத்தில் மூத்த பெருமாள், விருத்தசீர பெருமாள் தியானத்துடன் பொலிபவரே நாமக்கல் ஆஞ்சநேய மூர்த்தி ஆவார். ஆஞ்சநேய மூர்த்தியின் உயரம் 18 அடி. பக்தன் எதிரே எழுந்தருளிய சாளக்கிராம பெருமாள் மூர்த்தியின் உயரமோ 216 அடி (18 x 12).

ஸ்ரீதத்தாத்ரேய ஆஞ்சநேய மூர்த்தி
நாமக்கல்

எப்படி ஜலன்பிரகிருணி என்ற சக்தியுடன் ஒரே பிள்ளையார் மூர்த்தியாக திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் எழுந்தருளி உள்ளாரோ அது போல ஒரே கல்லாலான ஆஞ்சநேய மூர்த்தியாகவும், ஒரே சாளக்கிராம கல் சிலாவில் எழுந்தருளிய மூர்த்தியாக பெருமாளும் எழுந்தருளிய அற்புத தலமே நாமக்கல் ஆகும். சாளக்கிராமம் என்பது பொதுவாக கட்டை விரல் அளவே உடையது என்றாலும் பக்தர்ளுக்கு அருளும் முகமாக தஞ்சாவூர் புன்னைநல்லூர் திருத்தலத்தில் ஆளுயரத்திற்கும், நாமக்கல் திருத்தலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் 216 அடி உயரத்திலும் எழுந்தருளி உள்ளார் வாமனராக உலகளந்த பெருமாள் மூர்த்தி. பெருமாளின் வலது தோளில் சக்கர தேவரும் இடது கோளில் சங்கு தேவரும் எழுந்தருளி சேவை சாதிப்பது போல் நாமக்கல் நரசிம்மப் பெருமாளின் வலது புறத்தில் சக்கர தீர்த்தமும் இடது புறத்தில் சங்கு தீர்த்தமும் பொலிவது பூலோக மக்களின் பெரும்பேறே. இவ்வாறு வருண பகவான் பெருமாளின் சங்கு சக்கரத்திற்கு அமுத மழையாக அபிஷேகம் இயற்றும் தீர்த்தம் முழுவதும் நரசிம்மப் பெருமாளின் பாதங்களை அடைய இத்துடன் நரசிம்மப் பெருமாள் மூர்த்திக்கு தினமும் பாதாபிஷேகம் இயற்றும் நாமகிரி தாயாரின் சக்திகளும், நரசிம்மரின் இதயத்தில் மறைந்திருக்கும் மகாலட்சுமி தேவியின் பாதாபிஷேக தீர்த்தமும் இணைவது என்பது எத்தகைய அபூர்வ கருணை கடாட்சம். நரசிம்மர் வீராசனக் கோலத்தில் அமர்ந்த அபூர்வ திருத்தலமே நாமக்கல் என்பதும் லட்சுமி தேவியின் மங்களத்திற்கு மேலும் மெருகூட்டுவதாகும். பொதுவாக, நரசிம்ம மூர்த்தியின் இடது தொடையில், மனைவிக்குரிய தானத்தில் எழுந்தருளும் மகாலட்சுமி தேவி இரண்யாட்சனை சம்ஹாரம் செய்த சுவடு கூட களையாமல் உள்ளங்கையில் இரத்தக் கறையுடன் நரசிம்ம மூர்த்தி சம்ஹாரக் கோலத்துடன் இருப்பதால் தேவி பெருமாளின் இதயத்தில் மறைந்துள்ளாள் என்பதே நாமக்கல் நரசிம்மக் கோலத்தின் தனிச் சிறப்பாகும்.

பாதக் கமல பரம ஆண்டு

2022 வருடத்தை சித்தர்கள் பாதக் கமல பரம ஆண்டு என்று வர்ணிக்கின்றனர். இறை மூர்த்திகளின், மகான்களின், குருமார்களின், பெற்றோர்களின், கணவன்மார்களின் பாத பூஜைக்கு உகந்த ஆண்டே 2022 ஆகும். திருமால்பேறு ஸ்ரீஅலங்காரப் பெருமாள் மூர்த்தியைப் போல் இறை மூர்த்திகளை தங்கள் நேத்ர கமலங்களால் அர்ச்சிக்கும் பேறு பெற்றவர்கள் நாம் இல்லை என்றாலும் இறை மூர்த்திகளின் பாதங்களை, பாதக் கமலங்களாக நினைத்து அர்ச்சிக்கும் உயர்ந்த மனோ நிலையையாவது நாம் வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா ? இவ்வாறு தன்னுடைய கணவனின் பாதக் கமலங்களில் சிந்தையை கல் போல் அசையாது நிறுத்தி, நிலைகொள்ள பெருமாள் மூர்த்தியிடம் வரம் பெற்றவளே அகலிகை என்பதே அகலிகை சாம விமோசனம் என்ற இராமாயண வரலாறு உணர்த்தும் நீதியாகும்.

இலந்தை தலவிருட்சம்
ஓமாம்புலியூர்

நாம ம் கிரி, நாம ம் கல் என்ற வார்த்தைகளே நாமக்கல் திருத்தலத்தின் மகிமையை தெளிவாக உணர்த்துகின்றன. மனைவி மட்டும் அல்லாது பக்தனும் இறைவன் மேல் அசையாத சிந்தனையை வளர்க்க உதவுவதும் நாமக்கல் போன்ற திருத்தலங்களில் இவ்வருடம் இயற்றும் வழிபாடுகளின் மகிமையாகும். உலகிலேயே உயர்ந்த சாளக்கிராம சிலாவில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எழுந்தருளி இருப்பதால் நாமக்கல் திருத்தலத்தை சிம்ம விரத சிலா என்று சித்தர்கள் புகழ்கின்றனர். மனைவியை நம் சற்குரு போன்றோர் நாரிமணி என்று அழைப்பதுண்டு. பெண்களில் சிறந்தவள் என்ற பட்டத்தை இது குறிப்பதாகும். இவ்வாறு உண்மையிலேயே நாரிமணியாக, நன்னாரியாக இருக்க விரும்பும் பெண்கள் நாமக்கல் திருத்தல சங்கு சக்கர தீர்த்தத்தில் Kachikali, நன்னாரி போன்ற நறுமணங்களைக் கலந்து திருமால்பேறு ஸ்ரீஅலங்காரப் பெருமாள் மூர்த்திக்கு அபிஷேகம் இயற்றுவது சிறப்பாகும்.

பெற்றோர்களுக்கோ, கணவன்மார்களுக்கோ பாத அபிஷேகம், பாத பூஜை நிறைவேற்றிய பின்னர் திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் கிரிவலம் மேற்கொள்தலால் தங்கள் வழிபாட்டுப் பலன்கள் குறைந்தது நூறு மடங்காகப் பெருகும் என்று இந்த வருடம் மேற்கொள்ளும் பாத பூஜைகளின் சிறப்பை சித்தர்கள் வர்ணிக்கின்றனர். மேற்கண்ட நறுமணங்களை பாத பூஜைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதும் ஏற்புடையதே. இவ்வாறு அபரிமிதாக கிடைக்கும் பாத பூஜை சக்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க பயன்படுவதே இலந்தை வடை என்பதாகும். இலந்தையை வதரி, பத்ரி என்றெல்லாம் அழைக்கின்றோம். இவ்வாறு இலந்தைமரத்தை தலவிருட்சமாக உடையதே ஓமாம்புலியூர், திருநணா (பவானி முக்கூடல்) உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களாகும். கிரிவலத்திற்குப் பின்னர், அல்லது திருமால்பேறு திருத்தலத்தில் தர்ப்பணம் அளித்த பின்னர் குறைந்தது 144 இலந்தை வடைகளை (12 x 12 = 144) தானமாக அளித்தலால் பல தலைமுறைக்கும் இத்தகைய புண்ணிய சக்திகள் பெருகி பாதுகாப்பு சக்திகளை அளிக்கும்.

இலந்தை தலவிருட்சம்
பவானி என்னும் திருநணா

நாமம்கிரி, நாமம்கல் என்ற திருத்தல நாமங்களில் ‘ம்’ என்ற மெய்யெழுத்து நடுவில் திகழ்கின்றதல்லவா ? மெய் என்ற உடலின் மேன்மையை இந்த மகரம் சுட்டுகின்றது. நாம் மனித உடலை உகுத்த மறு விநாடியே வேறொரு சரீரம் அளிக்கப்படுகிறது, உடல் இல்லாமல் இந்த ஆத்மா தனித்திருக்க முடியாது என்பதையே இறைவனின் இந்த ஏற்பாடு சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு அமையும் ‘மெய்’ நமக்கு ‘மெய்யாக’ பயன்பட வழிகாட்டுவதே இந்த பாத பூஜை ஆண்டில் மேற்கொள்ளும் வழிபாடுகளின் சிறப்பாகும். ஆமாம், ஓமாம்புலியூர், திருநணா போன்ற திருத்தலங்களில் பொலியும் வதரிக்கும் பத்ரி நாராயணனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இலந்தை பழத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் சக்கராயுதத்தை ஒத்திருப்பதும், இலந்தை பழத்தின் சுவை புளிப்பும் இனிப்பும் கலந்ததாக சங்கர நாராயண அம்சங்களுடன் துலங்குவதும் மேலோட்டமான காரணங்களே.

பொதுவாக ஒரு இல்லத்தில் நான்கைந்து பேர் வசிப்பதாகக் கொண்டால் அவ்விடத்தில் வசிக்கும் உயிருள்ள ஜீவன்களின் எண்ணிக்கை என்பது ஆயிரம் சதுர அடிக்கு ஒருவர் என்ற கணக்கில் அமையும், ஆனால் அவ்விடத்தில் அமைந்துள்ள நாற்காலி, மேஜை, தரை, சுவர், டீவி, பீரோ என்பதாக அமையும் ஜடப் பொருட்களின் எண்ணிக்கையோ ஆயிரக் கணக்கில் அல்லவா திகழும். இவ்வாறு மேலோட்டமாகப் பார்த்தால் உயிருள்ள பொருட்களின் எண்ணிக்கையை விட ஜடப் பொருட்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பதாகவே தோன்றும். சித்தர்களோ ஜடப் பொருட்களுக்கும், ஜீவ சக்தி பெருகிய உயிருள்ள பொருட்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் பாராட்டுவதில்லை. இதையே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி பாடலாக அசைவற்ற பொருளும் நீயே அதாவது அசைவன அசையாதவன அனைத்தும் நீயே என்ற வார்த்தைகளில் ஜடப் பொருட்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாக நம் சற்குரு அருளியுள்ளார்.

ஸ்ரீசாரபரமேஸ்வரர்
திருச்சேறை

குறைந்தது தினமும் ஆறு நாழிகை நேரமாவது (24 x 6 = 144 நிமிடங்கள்) அசைவற்ற ஜடப் பொருட்களுடன் உரையாடுவதை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமான பயிற்சி போல் தோன்றினாலும் இந்த சுவையை அனுபவித்தவர்களுக்கு இது திகட்டாத தேன் பாகாய் மாறும். இப்பாடலில் வரும் இசை, திசை, நாமம், பசை, அங்கம், வனப்பு போன்றவை எல்லாம் ஜடப் பொருட்களா என்று ஆத்ம விசார சிந்தனையைத் தொடர்வது இத்தகைய ஜடப் பொருட்களுடன் கொள்ளும் உரையாடலுக்கு சுவை அளிக்கும். ஒரு முறை நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் இருந்த சுவர் சித்திரத்தில் உள்ள ஆப்பிள், திராட்சை, வாழைப்பழங்கள் போன்றவையோடு எப்படி உரையாடுவது என்பதை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தன்னுடைய பொன்னான நேரத்தை செலவழித்து விளக்கினார் நம் சற்குரு என்பதே இந்த ‘உரையாடலின்’ மகத்துவத்தைத் தெரிவிப்பதாகும்.

பெருமாள் பாதங்கள்
திருச்சேறை

இதனால் என்ன பயன் என்று உங்களில் சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். ஒரு கப்பலையே தன்னுடைய வாக்கால் செலுத்திக் கொண்டிருந்தான் ஒரு கேப்டன் என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஒரு முறை திருஅண்ணாமலையிலிருந்து வீடு திரும்பும்போது சற்குருவின் கார் வீட்டிற்கு பல மைல்கள் முன்னால் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. அருகில் எந்த பெட்ரோல் பங்க்கும் இல்லை, வேறு வழியின்றி தன்னுடைய கபாலியுடன் அன்புடன் பேசவே வீடுவரை கார் எந்தவித பிரச்னையும் இன்றி ‘ஓடி’ வந்ததாம். கபாலி என்பது நம் சற்குரு தன் காருக்கு அளித்த செல்லப் பெயர். அதே போல் நம்முடைய ‘ஜடப் பொருள்’ நமக்கு உதவுவது ஒரு சாதனை அல்ல, எதிரியின் உடமையான ஜடப் பொருளுமே அன்பிற்கு அடி பணியும் என்று உணர்த்துவதே மெய்ப்பொருள் நாயனார் வரலாறு ஆகும். எவராலும் வெல்ல முடியாத அரசராக இருந்த மெய்ப்பொருள் நாயனாரை ஒழித்து விடுவதற்காக வஞ்சக எண்ணத்துடன் வந்த ஒரு எதிரி நாட்டு அரசர் மெய்ப்பொருள் நாயனார் முதுகில் கத்தியைப் பாய்ச்சி விட்டான். ஆனால், நெற்றியில் சிவ சின்னமான திருநீறு அணிந்திருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அவனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப தன் மெய்க்காவலாளி ஒருவனை உடன் அனுப்பினார். அவன் திரும்பி வந்து ‘நல்ல செய்தி’ கூறும் வரை தன்னுடைய உயிரைக் காக்கும்படி அந்த எதிரியின் கத்தியிடம் அன்புடன் உரையாடினாராம் மெய்ப்பொருள் நாயனார். இது ‘மெய்யை’ தரிசனம் செய்த மெய்ப் பொருள் நாயனார் வரலாறு.

அசைவன, ஜடப் பொருட்கள் இவை இணைந்ததே இவ்வுலகம் என்பதால் எந்த அளவிற்கு நாம் ஜடப் பொருட்களுடன் இணக்கத்தைக் கொண்டு வாழ்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்படையும். இந்த சிறப்பை மக்கள் உணர உதவும் திருத்தலமே திருச்சேறை ஆகும். சிவத்தலமும் வைணவத் தலமும் இணைந்து விளங்கும் பெரும் தலம். இறைவன் ஸ்ரீசாரபரமேஸ்வரர், பெருமாள் ஸ்ரீசாரநாதன். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சாரதேவி, மகா லட்சுமி தாயார் போன்ற ஐந்து தேவிகளைச் ‘சேர்ந்து’ ஸ்ரீசாரநாதன் விளங்குவதால் இந்த 2022 வருடம் வழிபட வேண்டிய மூர்த்தியாக இவர் துலங்குகின்றார்.

ஸ்ரீஞானாம்பாள்
திருச்சேறை

பற்பல காரணங்களால் தங்கள் கணவன்மார்களுக்கு பாதபூஜை நிறைவேற்றாதவர்கள் இத்தலத்தில் வெட்டவெளியில் அருளும் பெருமாள் பாதக் கமலங்களுக்கு மல்லிகை, நன்னாரி நறுமணத் திரவியங்களால் அபிஷேகம் இயற்றி வழிபடுவது சிறப்பாகும். வெட்ட வெளி மூர்த்திகளாக இந்த பாதங்கள் விளங்குவதால் இந்த திருப்பாதங்கள் மேல் தென்றல் தீண்டி செல்வதாலும், வருண பகவானின் சார அபிஷேகத் தீர்த்தத்தாலும் இந்த பெருமாள் பாதங்கள் அபிஷேகம் பெறுவதால் அந்த அளவிற்கு பக்தர்கள் பெறும் நலம் பெருகிக் கொண்டே செல்லும் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும்.

செம்புலப் பெயல் நீர் போல கணவன் மனைவி இல்லறத்தில் நல்லறமாக இணைய உதவும் விஷ்ணுபதி திருத்தலமே திரு சேறை ஆகும். மண்ணும் நீரும் சேர்ந்து உருவாகும் சேறு என்பதே செந்தாமரை மலருக்கு ஆதாரமாகிறது. மண்ணும் நீரும் ஜடப் பொருட்கள் என்றால் இதில் உருவாகும் தாமரை உயிருள்ளதுதானே. இத்தகைய சிரஞ்சீவி சக்திக்கு ஆதாரமாக இருப்பதே மார்க்கண்டேய தீர்த்தமும் சார தீர்த்தமும் அமைந்த சேறை திருத்தலமாகும். அசையும் பொருளுக்கும் ஜடப் பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதில் கண்டு பிடித்து விட முடியாது. உதாரணமாக, கடையில் விற்கப்படும் ஒரு சக்கரம் எந்த வித ஜீவ சக்தியையும் கொண்டிருக்காது. நம் சற்குருவால் அளிக்கப்படும் யந்திரமோ ஜீவ சக்தியுடன் துலங்கும். ஒரு பிளாஸ்டிக் மாமரத்திற்கு எத்தனை வருடங்கள் நீர் வார்த்து வந்தாலும் அதில் ஒரு மாங்காயைப் பெற முடியுமா என்ன ? அதே சமயம் சற்குரு ஒருவர் அளிக்கும் யந்திரம் ஜீவ சக்தி என்ற உயிர் சக்தியுடன் துலங்குவதால் அதை நம்பிக்கை, பக்தி என்ற நீர் விட்டு தொடர்ந்து பராமரித்தால் நிச்சயம் அது கனியைக் கொடுக்கும்.

நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஒரு பெரிய கட்டை இருந்தது. சாதம் வடிக்கும்போது அந்த கட்டையை அணைத்து வைத்துதான் நீர்க் கஞ்சியை வடிப்பார்கள். ஒவ்வொரு முறை சாதம் வடிக்கும்போதும், சாதத்தை வடித்த பின்னரும் அந்த சாதத்திற்கு நமஸ்காரம் தெரிவிக்கும்படிக் கூறுவார் நம் சற்குரு. ஆஸ்ரம மடப் பள்ளியில் பணிபுரிபவர்கள் சாதத்திற்கு, அடுப்பில் பொலியும் அக்னி இவை அனைத்திற்கும் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் என்றாலும் இந்த senior அடியாருக்கு ஒரு தனி மரியாதை உண்டு என்று நம் சற்குரு தெரிவிப்பார்.

இலந்தை நிழலில் ஸ்ரீசகஸ்ர ஈசன்
உத்தரகோசமங்கை

நம் சற்குரு 40 வருடங்களுக்கு மேலாக திருஅண்ணாமலையில் அன்னதானம் நிறைவேற்றி வந்தாலும் எத்தனையோ அடியார்கள் இத்தகைய அன்னதான கைங்கர்யத்தில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று விடுகிறார்கள். ஆனால், அந்த ‘கட்டை அடியாரோ’ தொடர்ந்து நம் சற்குரு நிறைவேற்றும் கைங்கர்யங்களில் பங்கேற்று வருகின்றார் என்றால் கோடிக் கணக்கான கிரிவல அடியார்களுக்கு அன்னம் படைக்க உதவி புரியும் இவர் ஜடப் பொருளா, சக்தியின் மறுவடிவமா என்று நம்மைக் கேட்பார் நம் சற்குரு. ஒவ்வொரு முறை சாதத்தை வடிக்கும்போதும் இந்த கட்டை அடியார், வடிக்கும் அந்த அடியாரை வணங்குவதால் இந்த உத்தம நமஸ்காரத்திற்கு அங்கீகாரமாகவே அடியார்கள் சாதத்தை வடிக்கும்போது வணக்கம் செலுத்தும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார் என்பதே அன்னதான பிரசாதத்திற்கு சுவை கூட்டும் இரகசியமாகும்.

ஸ்ரீவல்லப கணபதி
திருமால்பேறு

ஒரு முறை நம் அடியார் ஒருவர் திருமணத்தில் ஒரு பிரம்மாண்டமான வேள்வி குண்டத்தை நிறுவி அதில் சுதர்சன சக்கரத்தை ஆவாஹனம் செய்து ஹோமம் வளர்த்து ஆஹூதிகள் அளித்தார் நம் சற்குரு. அதைப் பற்றி விவரிக்கும்போது, “நீங்கள் பத்துப் பதினைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரே சமயத்தில் ஆஹூதி அளிக்கும் அளவிற்கு இது பிரம்மாண்டமான வேள்வி குண்டமாக இருந்தாலும் பெருமாள் பெற்ற சுதர்சன சக்கரத்தின் கோடியில் ஒரு பங்கு சக்தி கூட இங்கு வியாபிக்கவில்லை. இந்த சுதர்சன சக்கரம் இங்கு அக்னி ஜுவாலைகளுடன் சுழலும் காட்சியை அடியேன் காண்பது போல் நீங்கள் கண்டாலே போதும் அனைவரும் எழுந்து ஓடி விடுவீர்கள்...”, என்றார் நம் சற்குரு.

இவ்வளவு சக்தி உள்ள சக்கராயுதத்தைப் பெற்ற மகாவிஷ்ணு அதை ஒரே ஒரு ஜலந்தரன் என்ற அசுரனை மாய்ப்பதற்காக மட்டும் பிரயோகம் செய்து இருப்பாரா என்ன ? இன்று பாரதம் முழுவதும் பெருமாள் சக்கராயுதம் பெற்ற தலங்களான திருமால்பேறு, திருவெள்ளறை, விற்குடி போன்ற தலங்கள் மட்டும் அல்லாது சுதர்சன சக்கரத்தின் சக்தி பெற்ற இலந்தையை தலவிருட்சமாகப் பெற்ற ஓமாம்புலியூர், பத்ரிநாத், உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களும் இத்தகைய சுதர்சன சக்திகளுடன் துலங்கும் என்பதே உண்மை.

எடுத்ததற்கெல்லாம் பயப்படும் சுபாவம் உள்ளவர்கள், அதாவது இந்த வியாதி நமக்கு வந்து விடுமோ, பணம் இல்லாமல் திருமணம் நின்று விடுமோ, போகும் வாகனம் விபத்துக்குள்ளாகி விடுமோ என்று அஞ்சி அஞ்சி வாடுபவர்கள் மேற்கண்ட தலங்களில் 144 முறை ஆலயத்தை அல்லது தல விருட்சத்தை வலம் வந்து 144 இலந்தை வடைகளை தானமாக அளிப்பதால் நன்னிலை பெறுவார்கள். கடுமையான தோல் வியாதிகள் நயம் பெறும். இலந்தை மரத்தில் நாம் காணும் முட்கள் அனைத்தும் சுதர்சன லோகத்தில் இருந்து வந்து வியாபித்துள்ள விஷ்ணுகதிர் சக்திகளாகும். எத்தகைய தீய எண்ணங்களையும் மாய்க்கும் சக்தி இந்த முட்களுக்கு உண்டு.

வளம் கொழிக்கும் வல்லபை

திருமால்பேறு திருத்தலத்தில் ஸ்ரீவல்லப கணபதி மூர்த்தி வல்லபை தேவியுடன் பத்து கரங்களுடன் எழுந்தருளி உள்ளார். தும்பிக்கையையும் சேர்த்தால் இவர் ஏகாதச மூர்த்தி என்பதாக அமைவதால் இவரை பதினொன்று கர மூர்த்தியாகவும் வழிபடலாம். இவ்வாறு தசகர வல்லப மூர்த்திகள் அரிதானவர்கள் என்றாலும் அருகிலேயே உள்ள தக்கோலம், திருவாலங்காடு போன்ற திருத்தலங்களில் இத்தகைய தசகர மூர்த்திகள் எழுந்தருளி உள்ளது நாம் பெற்ற பேறே. ஆனால், பரிதி சக்திகள் என்றவாறாக வடக்கிலும், தெற்கிலும் மூன்று மூன்றாக திகழும் ஆறு கரங்கள் சுட்டும் பரிதி சக்திகளை வர்ஷிக்கும் மூர்த்தியாகத் துலங்குவதால் இந்த மூர்த்தி திரு மால் பேறு என்பதாகவும், 2022 என்று வருடத்திற்கு உரிய மூர்த்தியாகவும் துலங்குவது எத்தகைய அதிசயம்.

ஸ்ரீவல்லப கணபதி
திருவாலங்காடு

ஸ்ரீவல்லப கணபதி தக்கோலம்

திருமால்பேறு ஸ்ரீவல்லபை கணபதி மூர்த்தியை வழிபடும் முறையாக சித்தர்கள் அருள்வதாவது. வெள்ளிக் கிழமைகளில்
வளம் கொழிப்பாய் வல்லபை
வளம் கொழிப்பாய் வல்லபை
வளம் கொழிப்பாய் வல்லபை
என்று ஓதி மூன்று படி அரிசியை அளந்து போட்டு அதில் புளி சாதம் தயாரித்து திருத்தலங்களில் தானம் அளிப்பதால் திருமால்பேறு திருத்தலத்தில் பிரகாசிக்கும் பரிதி சக்திகளை குடும்பத்தினர் அனைவருமே பெறும் அற்புத வழிபாடாக இது அமையும்.

தன்னிலையை தானறியும் பரிதி நிலை
என்னிலையை நீ உரைப்பாய் வல்லபை கணபதியே
என்று உரைக்கும் சித்த நாடிகள். ஸ்ரீவல்லப கணபதியின் வழிபாட்டிற்கும் ஒவ்வொருவரும் தன்னிலையை அறிவதற்கு உரிய உபாயத்தைப் பெறவும் இந்த வழிபாடு துணை புரியும். இது பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு அளிக்கிறோம். திருஅண்ணாமலையில் அகஸ்திய ஆஸ்ரமத்தை நிர்மாணிப்பதற்காக நம் சற்குரு வந்திருந்தார். அப்போது செவ்வாய் மடத்தில் தங்கி அடியார்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது பூர்வ ஜன்ம புண்ய வசத்தால் ஒரு அடியார் நம் சற்குருவை முதன் முதலில் சந்தித்து, “விசிறி சாமியாரின் நிலையைப் பற்றி தாங்கள் கூற முடியுமா?” என்று கேட்டார். அந்த அடியார் கேள்வி கேட்ட தோரணையோ, “எனக்கே எல்லாம் தெரியும்...”, என்ற அகம்பாவத்துடன் கேட்பதாக வெளிப்படையாக அனைவருக்கும் தோன்றினாலும், நம் சற்குரு தமக்கே உரிய பெருந்தன்மையுடன், “சார், அடியேன் நிலையே அடியேனுக்குத் தெரியவில்லை, இதில் சாமி (விசிறி சாமியார்) நிலையைப் பற்றி அடியேன் என்ன கூற முடியும்?” என்று மிகவும் வினயத்துடன் பதிலளித்தார்.

சந்திர பகவான் பைரவர்
வீரபத்திரர் திருமால்பேறு

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அதுவரை அடியார்களுடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த நம் சற்குரு அப்போதுதான் மொத்தமான மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு புருஷ சூக்தத்தைப் பற்றி முதன் முதலில் கேள்விப்படுபவர் போல் அந்த சூக்தம் அமைந்த பக்கத்தை புத்தகத்தில் பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு அடியாரிடம் பக்க எண்ணை கேட்டுத் தெரிந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஒரு யுகத்தில் ஒரு வார காலத்திற்கு சூரியனே பிரகாசிக்காத போது தன்னுடைய தபோ பலனால் பூமிக்கே சூரிய ஒளியை, பாஸ்கர பிரகாசத்தை அளித்த நம் சற்குரு ‘ஆடிய’ நாடகத்தை இன்று நினைத்தாலும் அடியார்கள் முகத்தில் புன்னகை அரும்பும்.

ஆன்மீகத்தில் திளைப்பவர்கள் முதலில் அடியெடுத்து வைக்க வேண்டிய முதல் படியின் நிலையே இதுவாகும். தன்னை அறிந்த ஒருவனே அடுத்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள முடியும், அதன் பின்னரே குருவைப் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள முடியும். அதன் பின்னரே மனித வாழ்வு, மனித ஜீவ வாழ்க்கை பூரணமடையும். இதற்கு உதவுவதே ஸ்ரீவல்லப கணதியின் வழிபாடாகும். ஸ்ரீவல்லப கணபதியின் நேர் எதிரே ஸ்ரீசூரிய பகவான் எழுந்தருளி இருப்பதும், இடது பக்கத்தில் ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசந்திர பகவான், ஸ்ரீபைரவர் எழுந்தருளி இருப்பதும் இந்த வழிபாட்டிற்கு உறுதுணை செய்யும் கால கோள அம்சங்களாகும்.

நாம் ஒரு கோயில் கோபுரத்தின் கீழ் தங்கும்போது அந்தக் கோபுரத்தில் உள்ள நிழலில் நாம் இளைப்பாறுகிறோம். நிழல் என்பது சூட்சும உடலைக் குறிக்கிறது. இவ்வாறு ஆன்மீகத்தில் அடுத்தடுத்த நிலைகளை நாம் அடையும்போது அந்த நிலைகளையே நாம் ஆன்மீக முன்னேற்றம் என்று கூறுகிறோம். திருமால்பூர் திருத்தலத்தில் ஸ்ரீவல்லப கணபதி மூர்த்தியை நாம் சற்குரு கூறிய முறையில் தொடர்ந்து வழிபடுவதால் ஆன்மீகத்தில் நாம் எளிதில் பதினொன்றாவது நிலை என்னும் பரிதி சக்கர நிலையை அடைவோம் என்பது உறுதி. இந்த பரிதி சக்கரம் என்ற தெய்வீக நிலையை ஒவ்வொருவரும் நிச்சயமாக அடைவார்கள் என்று உறுதி அளிப்பதே திருமால்பேறு திருத்தலத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் மூன்று பரிதி சுடர் சக்திகளைக் கூட்டும் மூன்று திருக்கரங்களின் தன்மையாகும்.

பதினாறு கால் மண்டபம்
திருமால்பேறு

திருமால்பேறு திருத்தலத்தில் அபூர்வமாகப் பொலியும் வளம் பரிதி சக்திகளை அடியார்கள் பெறும் விதமாக ஒரு அற்புத வழிபாட்டு முறையை சித்தர்கள் அளிக்கின்றனர். அலுகலகத்திற்கு செல்லும் முன்னரோ, திருத்தலங்களுக்கு செல்லும் முன்னரோ, வழிபாடுகள் பூஜைகளை நிகழ்த்தும் முன்னரோ சந்தன நறுமணத்தை (sandal perfume) மூன்று துளிகள் வலது முன் கையிலும் மூன்று துளிகள் இடது முன் கையிலும் வைத்து ‘வளம் கொழிப்பாய் வல்லபை’ என்று ஓதி அந்த சந்தனத் துளிகளை உடம்பில் தேய்த்துக் கொள்தல் அனைவரும் நிறைவேற்றக் கூடிய வழிபாட்டு முறையாகும். இதனால் அடியார்கள் தாங்கள் ஆரோக்யத்தையும், நோய் எதிர்ப்பு சக்திகளை பெருக்கிக் கொள்வதோடு எதிர்மறை எண்ணங்கள் தங்களை தாக்காமல் காத்துக் கொள்ளலாம். சமூகத்தில் ஆரோக்ய கதிர்களை விருத்தியாக்கக் கூடியதே இந்த வழிபாட்டு முறையாகும். ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் இவ்வாறு சந்தன நறுமணத்தைப் பயன்படுத்தி பயன்பெறலாம். ஸ்ரீவல்லப கணபதியின் 11 கரங்களிலும், நெற்றி, பெருவயிறு, மூஷிக வாகனம், ஸ்ரீவல்லபை என்பதாக குறைந்தது 15 இடங்களில் தாமே அரைத்த சந்தன நறுமணம் கலந்த சந்தனத்தால் பொட்டிட்டு வணங்குவதும் அபரிமிதமான நோய் நிவாரண சக்திகளை அளிக்கக் கூடியதே.

பாதவழி பரமன்வழி

திருமால்பேறு சக்கர தீர்த்தத்தில் பாதவழி பரமன்வழி என்பதான ஒரு அற்புத வழிபாட்டை நம் சற்குரு நமக்காக அளித்துள்ளார்கள். எந்நாளிலும் இந்த வழிபாட்டை ஏற்று பக்தர்கள் பயன் பெறலாம் என்றாலும் இத்தலத்தில் அதிகார நந்தியாக அருளும் ஆஞ்சநேய மூர்த்தி சனிக் கிழமைகளில் சக்கர தீர்த்தத்தை இம்முறையில் வலம் வருவதால் நாமும் இதே முறையில் வலம் வந்து ஆஞ்சநேய மூர்த்தியின் பாதம் பட்ட படிகளில் நாமும் பாதங்களைப் பதிப்பது என்றால் எத்தகைய பேறு ? இங்கு நீங்கள் காணும் சக்கர தீர்த்தமும் சிரஞ்சீவி சக்திகள் நிரந்தரமாகப் பொலியும் சனிக் கிழமை அன்று எடுக்கப்பட்டதே என்பதே சற்குருவின் கருணை. படத்தில் காட்டியபடி படிகளில் ஏறி இறங்குவதே பாதவழி பரமன்வழி வழிபாடாகும். துரோணாச்சாரியார் பல யுகங்களுக்கு முன் இம்முறையில்தான் திருமால்பேறு திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி அஸ்வத்தாமன் என்ற சிரஞ்சீவியை மைந்தனாகப் பெற்றார்.

சக்கர தீர்த்தம் பாதவழி பரமன்வழி
திருமால்பேறு

சிறுவனான நம் சற்குரு கோவணாண்டியுடன் இத்தலத்திற்கு வந்தபோது பதினாறு முறை இவ்வாறு வலம் வந்தான். அதன் பின்னரே கோயிலுக்கு உள்ளே சென்று பெரியவர் எங்கிருக்கிறார் என்று அங்குள்ள 16 கால் மண்டபத்தில் அமர்ந்து அவருக்காகக் காத்திருந்தான். அப்போது அழுக்கடைந்து ஓட்டைகள் உள்ள கோவணத்தை அணிந்து கொண்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் குச்சி ஒன்றை வலக் கையில் ஏந்தியபடி அங்கு வந்து நம் சிறுவனிடம், “என்ன தம்பி, கால் வலிக்கிறதா ?” என்று பரிவுடன் கேட்டான். அந்தச் சிறுவனுக்கோ அப்படி ஒன்றும் பெரிய வயதில்லை. அப்படி இருக்கும்போது நம்மை எப்படித் தம்பி என்று அழைக்கிறான்...” என்று நம் சிறுவனுக்கு கோபம் ஏற்பட்டாலும் அந்த மாடு மேய்க்கும் சிறுவனின் குரலில் இருந்த தெய்வீகப் பரிவு நம் சிறுவனை மயக்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும். அமைதியாய் இருக்கும் நம் சிறுவனை உற்று நோக்கியவாறே ஒன்றும் பதிலுரைக்காமல் அந்தச் சிறுவன் ஒரு தெய்வீகப் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு அங்கிருந்து கோபுரம் வழியாக வெளியே சென்று விட்டான். சற்று நேரம் கழித்து சிறுவன் மறைந்த அதே கோபுரம் வழியே வந்த கோவணாண்டி, சிறுவனை கோபமாகப் பார்த்து, “எங்கே நைனா மாயமாய் மறைந்து விட்டாய் ... உன்னைத் தேடி தேடி காலே வலிக்கிறது ...”, என்று கூறினார். சிறுவனுக்கோ மகா கோபம், நம்முடைய கால் வலியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறும் முன் சும்மாவென்று இவர் வேறு கதையை ஆரம்பிக்கிறாரே என்று பயந்து கொண்டே எதுவும் கேட்காமல் அடுத்து பெரியவரின் உத்தரவிற்காகக் காத்திருந்தான்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருமால்பேறு

சிறுவனை அழைத்துக் கொண்டு கோயிலில் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்து பல தெய்வீக விளக்கங்களையும் அருளினார் பெரியவர். நம் கோவணாண்டி அளித்த விளக்கங்களையே இங்கு நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? அவ்வாறு கோயிலினுள் ஒவ்வொரு பகுதியாக சென்ற சிறுவன் திடீரென்று ஷாக் அடித்தது போல் நின்றான். சந்திர பகவான், பைரவர், வீரபத்திரர் என்று மூவரும் ஆயுத எழுத்து வடிவில் எழுந்தருளிய கோலத்தைக் கண்டபோதுதான் சிறுவனுக்கு அந்த எண்ணம் மின்னல் போல் பளிச்சிட்டது. ஆம், கோவணத்தில் மூன்று ஓட்டைகளுடன் நம்முன் சற்று நேரத்திற்கு முன் எழுந்தருளியது சாட்சாத் முருகப் பெருமான்தான். தாயிடம் கொஞ்சும் சேயாய் அஞ்சனாட்சி அம்பிகையின் எதிரில் 16 கால் மண்டபத்தில் 16 வயது பாலகனாய் கையில் தண்டத்துடன் எழுந்தருளிய முருகப் பெருமானின் கருணையை நினைத்து நினைத்து கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய ஆரம்பித்தது. “திருஅண்ணாமலையில் முதன் முதலில் பெரியவருடன் அன்னதானம் நிகழ்த்தியபோது பழநி முருகப் பெருமான்தான் உடலெங்கும் விபூதி பூசி கோவணத்தில் மூன்று ஓட்டையுடன் எழுந்தருளி நமக்கு காட்சியளித்தான். அந்த முருகனே இங்கு பாலகனாய் தண்டத்துடன் காட்சி அளித்துள்ளான். நம்முடைய மர மண்டைக்கு இந்த சாதாரண விஷயம் கூட விளங்கவில்லையே...,” என்று நினைத்து தன்னுடைய தலையில் வேகமாக குட்டிக் கொண்டான். பெரியவரோ, “என்னடா இது, சாமிய பத்தி என்ன என்ன அற்புத வரலாறு எல்லாம் சொல்லிக்கிட்டு வர்ரேனே, நீ என்ன தலையில் குட்டிக் கொண்டு அசடாட்டம் சிரிக்கிறே ...”, என்றார். அறிந்தும் அறியாதவர் போல் நடிக்கும் பெரியவரின் செய்கையைக் கண்டு சிறுவன் வாய் விட்டு சிரித்தே விட்டான் என்பதைக் கூறவும் வேண்டுமோ.

ஸ்ரீசுயாம்பிகை சமேத அதிகார நந்தி
திருமழபாடி

திருக்கைலாயத்தில் சேவை சாதிப்பவர் அதிகார நந்தி என்பது நீங்கள் அறிந்ததே. பிரம்மா, விஷ்ணு என்பவர்களைப் போல் இந்த அதிகார நந்திகளும் யுக யுகமாய்த் தோன்றி எம்பெருமானிடம் ஐக்யம் கொள்பவர்களே. ஒரு யுகத்தில் தோன்றிய அதிகார நந்தி மூர்த்திக்கு திருமழபாடி திருத்தலத்தில்தான் திருமணம் நிகழ்ந்தது.இந்த அதிகார நந்தி மூர்த்திக்கு முன் தோன்றியவரே நைஷ்டிக பிரம்மச்சாரியாய் விளங்கும் ஆஞ்சநேய மூர்த்தி.

ஸ்ரீஅதிகார நந்தி
திருமால்பேறு

இந்த பிரம்மச்சர்ய ஆஞ்சநேய மூர்த்தியே அதிகார நந்தியாக திருமால்பேறு திருத்தலத்தில் தரிசனம் அளிப்பவர் ஆவார். இந்த அதிகார நந்தி மூர்த்தியை நீங்கள் தரிசிக்கிறீர்கள் என்றால் இத்தகைய பேறு நீங்கள் பெறுவதற்காக உங்கள் மூதாதையர்கள் எத்தனை அரிய பூஜைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும், எத்தனை திருத்தலங்களை தரிசித்து இருக்க வேண்டும். இதற்காகவே சக்கர தீர்த்தத்தில் 12 தலைமுறையைச் சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து நன்றி செலுத்தும்படி நம் சற்குரு பணிக்கின்றார் என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ?

திருமால்பேறு திருத்தலத்தில் சக்கர தீர்த்தப் படிகளில் ஏறி இறங்கும்போது கீழ்க் கண்ட துதியை ஓதி அவரவரால் எவ்வளவு முறை முடியுமோ அத்தனை முறை இந்தப் படிகளில் ஏறி இறங்குதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே.

பாத வழி பரமன் வழி
கீத வழி கீதாச்சாரியன் வழி
ஓதும் வழியும் அவன் வழியே
அல்லது
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற துதியை ஓதியவாறே வலம் வருதல் சிறப்பாகும். சக்கர தீர்த்தத்தில் நம் சற்குருவைப் போல் 16 முறை வலம் வருபவர்கள் 16 கால் மண்டபத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்தல் நலம். இதனால் கிட்டும் ஆன்ம பலன்களை வாய் விட்டு வர்ணிக்க இயலாது.

நாராயணா சங்கர நாராயணா

திருமால்பேறு திருத்தலத்தில் வேறு எங்கும் காண இயலாத நிலையில் சிவபெருமானின் முன்புறமும் மூலவரின் பின்புறமும் திருமால் எழுந்தருளி உள்ளார். முன்புறம் எழுந்தருளியுள்ள மூர்த்தி சிவனிடம் சக்கராயுதத்தைப் பெற்ற மூர்த்தியாகவும் பின்புறம் எழுந்தருளிய மூர்த்தி சிவனின் சக்திகளை தகுதியுள்ள அனைவருக்கும் ஆவர்த்த அனுகிரகமாக விநியோகிக்கும் ஆவர்த்த பெருமாளாகவும் துலங்குகின்றார். ஆவர்த்தம் என்பது ஏழு வகையான மேகங்களில் ஒன்று, மழை தரக் கூடியது, சிவபெருமானின் அருளை ‘வர்ஷிக்கும்’ சியாமள மூர்த்தியாகத் துலங்குபவரே ஆவர்த்தப் பெருமாள். பெருமாளை கருமை நிறம் உடையவன் என்று கூறுவது இத்தகைய மழை சக்திகள், வருண சக்திகள் நிறைந்த காருண்ய தன்மையைக் குறிப்பதாகத்தான். அர்ச்சாவதார மூர்த்தியாகவும் பெருமாள் திருமால்பேறு திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். சித்தர்கள் இவரை புண்டரீசன் என்று அழைக்கிறார்கள். தன் விழித் தாமரைகளை கையில் ஏந்தி காட்சி அளிப்பதால் புண்டரீகப் பெருமாள், செந்தாமரைக் கண்ணன் என்று அழைப்பது எத்தகைய பொருத்தம்.

ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன்
திருமால்பேறு

ஸ்ரீஆவர்த்தப் பெருமாள்
திருமால்பேறு

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நிறைய பெருமாள் மூர்த்திகள் துலங்கும் தலமாக இருப்பது போல் தோன்றினாலும் இந்த பெருமாள் சக்திகளை, விஷ்ணு கதிர் அம்சங்களை புரிந்து கொள்தல் என்பது மிகவும் கடினமே. இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இங்கு ஒரு குறிப்பிடுகிறோம். நம் ஆஸ்ரம அடியார் காஞ்சி கனிந்தகனி பெரியவரை தரிசிக்கச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த ஒரு பக்தர் தன் தாத்தா பூஜித்து வந்ததாகக் கூறி ஒரு பெட்டி நிறைய சாளக் கிராம கற்களை கனிந்த கனியிடம் காண்பித்தார். அதைப் பார்த்த காஞ்சி முனி தன்னுடைய காலால் அந்தப் பெட்டியை இழுத்து தன்னருகே வைத்திருந்து அதை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு, அந்த பக்தரிடம் அந்தப் பெட்டியை திரும்ப அளித்து விட்டு அவர் தாத்தாவைப் பற்றிய பல விஷயங்களை விசாரித்தாராம். சுமார் அரை மணி நேரம் கழித்து அந்தப் பக்தர் காஞ்சி முனியிடமிருந்து உத்தரவு பெற்றுச் சென்று விட்டாராம். ஆனால், பெரியவரோ அந்த சாளக்கிராம கற்களைப் பற்றி எதுவுமே கூறாததால் வந்தவருக்கும் ஏமாற்றம், அருகிலிருந்தவர்களும் அந்த சாளக்கிராம சிலாக்களைப் பற்றி ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அனைத்து வர்ணனைகளையும் பொறுமையாக் கேட்டுக் கொண்டிருந்த நம் சற்குரு, “ஆமாம், பெரியவர் எந்தக் காலால் அந்தப் பெட்டியை இழுத்தார்?” என்று கேட்கவே அடியாரும் யோசித்து இடது காலால் பெட்டியை இழுத்ததாகக் கூறினார். சற்று நேர யோசனை பாவனையில் இருந்த நம் சற்குரு ஒரு புன்னகையுடன், “இது வாமனப் பெருமாள் உலகளந்த கோலம், அந்தப் பெட்டியில் இருந்த கற்கள் வாமனர் காலத்தைச் சேர்ந்தவை. அந்த அளவு புராதனம் வாய்ந்த கற்கள், இதை அந்த அடியார் உணர்வதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது தெரியாது. பெரியவர் இதைக் குறிப்பால் உரைத்ததால் நாமும் பொறுத்துப் பார்ப்போமே,” என்று கூறி தன் உரையை முடித்து விட்டார்.

ஸ்ரீஉலகளந்த பெருமாள்
காஞ்சிபுரம்

அத்திவரம்
திருமால்பேறு

திருமால்பேறு திருத்தலத்தில் ஆறு முக்கியமான பெருமாள் சக்திகள் துலங்குகின்றன என்பது சித்தர்கள் அருளும் இரகசியம்.
1. அலங்காரம் (சுவாமிக்கு முன்னுள்ள பெருமாள்)
2. ஆவர்த்தம் (சுவாமியின் பின்புறம் உள்ள பெருமாள்)
3. புண்டரீகம் (கண்தாமரை செந்தாமரையுடன் எழுந்தருளிய மூர்த்தி)
4. அஞ்சனாட்சி அம்பாள் (பெருமாளின் சகோதரி)
5. ஆஞ்சநேயர் (அதிகாரநந்தி பொறுப்பில் இருப்பவர்)
6. அத்திவரம், அத்திமரம் (பிரகாரத்தில் உள்ளது)
இவ்வாறு ஆறு ஆறாய்ப் பெருகும் சுபமங்கள பெருமாள் சக்திகள் உடைய, சிரஞ்சீவி சக்திகள் பெருகும் விருத்தசீர திருத்தலத்தை நம்முடைய வழிபாட்டிற்கு உகந்ததாக 2022 வருடத்தில் அருள்வதே நம் சற்குருவின் கருணையாகும். அத்தி மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள் குங்குமம் பொட்டுக்களை ஆறு வரிசையில் துலங்குமாறு அமைத்து வழிபடுதல் நலமே. இந்த அபூர்வ பெருமாள் சக்திகளின் தன்மையை
அலங்காரம் ஆவர்த்தம் இடைதுலங்கும்
மணிகண்டம் மகாதேவ மாமேருவே
என்று சித்த நாடிகள் வர்ணிக்கும் சிவசக்தியும் ஆறெழுத்து மாமேருவாய்த் துலங்குவது நாம் பெற்ற பேறே.

சித்தர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாதா அமிர்தானந்தாவைப் பற்றியே தவறான ஜாதகக் குறிப்புகள் பல வெப் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே இந்த விஞ்ஞான உலகில் நாம் சந்திக்கும் அபரிமிதமான ‘விஞ்ஞான வளர்ச்சியாகும்.’

எனவே அடியார்கள் தாங்கள் பெறும் தெய்வீக கருத்துக்கள் சரிதானா என்பதை சரி பார்க்கும் ஆத்ம விசாரத்தை முறையாகக் கையாண்டால்தான் அவர்கள் மனத் தெளிவைப் பெற முடியும். அதனால்தான் கனிந்தகனியும் சாளக்கிராம சிலாக்களைப் பற்றிய பூர்விக இரகசியங்களை வெளிப்படுத்தாமல் தன் செய்கை மூலமே அவைகளை குறிப்பால் உணர்த்தினார். இதுவும் இந்த 2022 சுக்ர ஆண்டில் அடியார்கள் கவனமாகக் கையாள வேண்டிய அணுகு முறை.

குழந்தையாய் இருந்து பார் கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார் என்பார் நம் சற்குரு. குழந்தையாய் மாறுவது என்பது அவ்வளவு எளிதா என்ன? இருந்தாலும் இதற்குண்டான முயற்சியை மேற்கொள்வதற்கு உரிய திருத்தலமாகத் திகழ்வதே திருமால்பேறு விருத்தசீர நதியாகும். சீரம் என்றால் பால். இவ்வாறு பால் மனம் மாறாத குழந்தைத் தன்மையை அளிக்கக் கூடியதே விருத்தசீர நதியாகும்.

ஆரா அறிய முனையும்
காகம் ? திருமால்பேறு

குயிற்பத்து மணிவாசக கீதம்
(அலங்காரம்)

விருத்தசீர நதியில் முழங்கால் ஆழத்தில் நின்று கொண்டு மாணிக்கவாசகப் பெருமான் அருளிய குயிற்பத்து தேவாரப் பாடலை குறைந்தது ஒரு நாழிகை நேரமேனும் வாய் விட்டு இசைத்து பின்னர் உடனே திருமால்பேறு திருத்தல சக்கர தீர்த்தத்தில் உள்ள படிகளில் ஏறி இறங்குவதால் ‘பால் மன’ சக்தியை அடியார்கள் விருத்தி செய்து கொள்ள ஏதுவாகும். அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக குயிற்பத்து கீதம் அமைந்திருப்பதால் இந்த சுக்ர வருடத்திற்கு உரிய கீதம் இது என்பதைக் கூறவும் வேண்டுமோ ? நதியில் இறங்கும் முன் வழக்கம் போல்,
பித்ரு தேவதைகளே போற்றி
தீர்த்த தேவதைகளே போற்றி
சற்குருவே சரணம்
என்று ஓதி தலையில் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டு பின்னர், முகம், கை கால்களை அலம்பி அதன் பின்னரே காலை தீர்த்தத்தில் வைக்க வேண்டும். இது விருத்தசீர நதி என்று மட்டும் அல்லாது எந்த திருத்தல தீர்த்தமாக இருந்தாலும் அடியார்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறையாகும். இதனால் கற்பனைக்கெட்டாத சக்தி வாய்ந்த தீர்த்த சக்திகளை நம் உடலில் உள்ள 72000 நாடிகளும் உரிய முறையில் பெற்று விருத்தி செய்யும். குறிப்பாக குண்டலினி தியானம், வாசி யோகம், திருவாசி வழிபாடு (aura practice) போன்ற பயிற்சிகளுக்கு மேற்கண்ட வழிபாட்டு முறை நல்ல பலனளிக்கும்.

இருவருக்கும் நானே நந்தி!
திருமால்பேறு

வேறு எங்கும் காண முடியாத அதிசயமாக திருமால்பேறு திருத்தலத்தில் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் கருட சேவை உற்சவம் தினமும் நிகழ்வது நாம் பெற்ற பெரும் பேறே. இந்த உற்சவத்தில் பங்கு பெறும்போது இவ்வருடம் குயிற்பத்து தேவார கீதத்தை பக்தர்கள் ஒன்று சேர்ந்து இசைத்தால் கிட்டும் பலன்கள் அமோகமே. ஒவ்வொரு திருமால் தலத்திலும் ஒரு குறித்த நாளில், பொதுவாக பிரம்மோற்சவ காலத்தில் கருட சேவை நடைபெறுவது இயற்கை என்றாலும் திருமாற்பேறு திருத்தலத்தில் தினமுமே காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கருட சேவை நிறைவேறுவதே கண் கொள்ளாக் காட்சியாகும். நம் சற்குரு கோவணாண்டியுடன் சிறுவனாக தரிசனத்திற்கு வந்தபோது சக்கர தீர்த்தத்தை ஏற்கனவே கூறியதுபோல் 16 முறை வலம் வந்து வணங்கிய பின்னர் இந்த கருட சேவையை நேரில் காணும் பாக்யத்தைப் பெற்றார். நம்மால் கருட வாகனத்தில் பவனி வரும் ஸ்ரீஅலங்காரப் பெருமாளை, பெருமானை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து கருட வாகனத்தில் பவனி வரும் ஸ்ரீஆவர்த்தப் பெருமாளை, ஸ்ரீபுண்டரீகப் பெருமாளை வரவேற்கும் குயிற்பத்து கீதத்தை இசைக்கும் பெரும் பேற்றைப் பெறலாமே. பெருமாளின் கருட வாகன பவனியை நம்மால் காண முடியாவிட்டாலும் குயிற்பத்து கீதத்தை இசைக்கும்போது நிச்சயம் குயில், காக்கை, கருங்குருவி, கருடன் போன்ற பெருமாள் தரிசனங்களை நம்மால் காண முடியும் என்பதே இந்த இசையின் மகத்துவமாகும்.

63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் போன்ற உத்தமர்களைப் போல் சமண சமயம் கூறும் பெரியோர்களே தீர்த்தங்கர்கள் ஆவர். இவர்களுள் 24வது தீர்த்தங்கராய் அவதாரம் கொண்டவரே நம் சற்குரு என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். நம் கோவணாண்டி சிறுவனான சற்குருவை திருமால்பேறு சக்கர தீர்த்தத்தில் 16 முறை ஏறி இறங்கி வழிபடும்படி கூறியதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதில் முக்கியமான காரணம் 24வது தீர்த்தங்கராக தோன்றிய நம் சற்குருவின் தீர்த்த சக்திகளை சக்கர தீர்த்தத்தில் நிரவுவதும் முக்கிய காரணமாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
திருமால்பேறு

சக்கர தீர்த்தத்தில் நான்கு திசைகளில் அமைந்துள்ள படிகள் சுட்டும் தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் தெய்வீக காரணங்கள் நிறைய உண்டு என்பதாக நீர் நிறைந்து இருந்தால் இந்த 24 தீர்த்தப் படிகளையும் நாம் தரிசிக்கும் பேறு பெற்றிருக்க முடியாது அல்லவா ? இவ்வாறு சக்கர தீர்த்தம் காய்ந்து கிடப்பதும் நாம் 24 தீர்த்தங்கர்களையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்யத்தைப் பெறுவதற்காகவே.

தீர்த்தம் என்றால் குளம் என்பது மட்டுமல்ல, மகான்களின் புனிதப்படுத்தும் செய்கைகள் அனைத்தும் தீர்த்த சக்தி வாய்ந்தவையே, திருத்தலங்கள் அனைத்துமே தீர்த்த சக்திகளால் பூரித்து நிற்பவையே. மாயையே 24 தத்துவங்களாகப் பிரிந்து இருப்பதால் நாம் சக்கர தீர்த்தப் படிகளில் ஏறி இறங்கி வழிபடும் அளவிற்கு அனைத்து மாயா விநோதங்களிலிருந்தும் எளிதில் விடுபடுவோம், அதனால் பிறவிச் சக்கரத்திலிருந்து எளிதில் விடுபடுவோம் என்பதும் ‘சக்கர’ தீர்த்தத்தின் மகிமையே. இங்கு நீங்கள் நம் சற்குருவின் மகிமைகளைப் படிப்பதும் மற்றவர்களுக்கு விளக்குவதும் தீர்த்த நீராடல் சக்திகளை அளிக்கவல்லவையே. நம் சற்குரு மிகவும் நோய்வாய்ப்பட்டு, பிரம்ம ஜோதி ஐக்யம் பெறும் முன்னர் இவ்வாறு நிர்வாணக் கோலத்தில் விளங்கியதும் இவ்வாறு தீர்த்த சக்திகளை, தீர்த்தங்க அனுகிரகங்களை மற்றவர்களுக்கு அளிப்பதற்காகவே என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. எப்படி திருத்தலங்களின் திருக்குளங்கள் ‘பாவ விநாச’ தீர்த்த சக்திகளுடன் துலங்குகின்றதோ அதே போல் மகான்களின் இத்தகைய ‘தீர்த்தங்க’ கோலமும் நம்மை புனிதப்படுத்தி இறைவன் திருவடிகளில் கொண்டு சேர்ப்பவையே. ஓங்காரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்ம மூர்த்தியை சிறையில் அடைத்து விட்டு நான்கு முகங்களோடு படைப்புத் தொழிலை மேற்கொண்ட முருகப் பெருமானை திண்டுக்கல் அருகிலுள்ள சின்னாளம்பட்டி திருத்தலத்தில் தரிசித்து மகிழலாம். பிரம்மா சாபவிமோசனம் பெற்று சிவனருளால் மீண்டும் படைப்புத் தொழிலை தொடங்கியபோது முருகப் பெருமான் மீண்டும் ஆறுமுகத்துடன் தோன்றிய தலமே திருமால்பேறு ஆகும்.

ஸ்ரீசகஸ்ர லிங்கம்
திருவாலங்காடு

எனவே 2022 ஆண்டு ஆறுமுகக் கோலத்தை வழிபடும் ஆண்டாகவும், சிறப்பாக திருமால்பேறு திருத்தல ஆறுமுகப் பெருமானை வழிபடும் வருடமாகத் திகழ்கின்றது. அஞ்சனாட்சி என்றால் மை பூசிய கண்ணால் ஆட்சி செய்தல் என்பது மேலோட்டமான பொருள். திருமால்பேறு அம்மன் அப்படி என்ன ஆட்சி செய்தாள் ? ஆறுமுகங்களுடன் விளங்கிய முருகப் பெருமானின் ஆறுமுகங்களையும் ஒரு முகமாய்த் துலங்கும் எழிற்கோலத்துடன் துலங்கச் செய்தவளே இத்தல அம்பிகை ஸ்ரீஅஞ்சனாட்சி ஆவாள். மை விழிக்கு மயங்கும் காளைகள் அன்னை அருளால் இத்தகைய மாயைகளிலிருந்து விடுபட துணைபுரிபவளும் மை பூசிய கன்னியே.

இறைவனின் லீலைகள் அனைத்தும் ஆழ்ந்த அர்த்தம் கூடியவை, சாதாரண மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அந்த லீலைகளைப் புரிந்து கொள்ள முடிந்தால் அவை எல்லையற்ற ஆனந்தம் அளிப்பவையே. முருகப் பெருமானுக்கு அன்னையான பார்வதி தேவியோ தன் குழந்தைக்கு பாலூட்டாமல் கார்த்திகைப் பெண்கள் அறுவர் மூலமாக பாலமுது ஊட்டினாள் என்று அறிவோம். தன் அடியார்களான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் போன்ற நாயன்மார்களுக்கோ தானே பாலமுது ஊட்டினாள் என்று அறிகிறோம். இது ஏதோ ஓரவஞ்சனையான செயல்போல் தோன்றுகிறது அல்லவா ? இதுவும் ஒரு அமுத லீலையே. அஞ்சனாட்சி என்ற ஆறு அட்சரங்கள் உடைய பார்வதி தேவியின் அம்சத்திலிருந்து தோன்றியவர்களே ஆறு கார்த்திகைப் பெண்கள். இந்த ஆறு கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை அஞ்சனாட்சி தேவி தன்னுடைய திருக்கரங்களால் அரவணைத்து ஒரே முருகப் பெருமானாக ஆக்கினாள் என்பதே ஆறு தாய்மார்களின் அரவணப்பையும், அஞ்சனாட்சி தாயின் அரவணைப்பையும் ஒரு சேரப் பெற்ற திருமால்பேறு ஆறுமுகப் பெருமான் பெற்ற பேறாகும். திருமால்பேறு திருத்தல மணிகண்ட ஈசன் மட்டும் அன்பில் அரவணைப்பில் தோன்றிய தெய்வம் அல்ல, முருகப் பெருமானும் என்பதே இறைவனின் மற்றோர் லீலை, இல்லை சக்தியின் லீலையா ?

அனைவர்க்கும் தாய் சிவனே

அனைவர்க்கும் தாய் சிவனே என்பார் நம் சற்குரு. அந்த சிவனே அம்மையே என்று அழைக்கும் பாக்கியம் பெற்ற தாயே காரைக்கால் அம்மையார் ஆவார். கயிலாயத்தில் பெருமானைக் காண காரைக்கால் அம்மையார் தலைகீழாக நடந்து சென்றபோது அதைப் பார்த்த பார்வதி தேவி எம்பெருமானிடம், “சுவாமி, என்ன இது கைலாயத்திற்கு ஒரு பேய் வருகிறது?” என்று கேட்டாளாம். இறைவன் நகைத்து, “அம்மா, அது பேய் அல்ல, அடியேனுக்கும் தாயான தயாநிதி ...” என்று கூறி காரைக்கால் அம்மையாரின் தியாகங்களை விவரித்தாராம். அப்படி ஒரு தியாகச் செயலே இவ்வாறு தலைகீழாக நடந்து உலகம் எங்கும் பவனி வந்த யாத்திரையாகும். பூமியெங்கும் தரைக்கு மேல் ஒவ்வொரு ஆறு அடிக்கும் ஒரு காற்று நீரோட்டம் வியாபித்துள்ளது.

இந்த இரகசியங்களை இன்றைய விஞ்ஞானம் உணரவில்லை. திருஅண்ணாமலை, நெடுங்குடி, பழநி போன்ற மலைத்தலங்களில் எல்லாம் இந்த காற்று நீரோட்டங்கள் மனிதர்களால் கிரகிக்கும் நிலையில் உள்ளதால் மலைத் தலைங்களில் கிரிவலம் வரும்போது பல்டி பிரதட்சிணம், வேகமான ஓட்டப் பிரதட்சணம் (sprint circumambulantion), somersault போன்ற கிரிவல முறைகளை நம் சற்குரு சிபாரிசு செய்கிறார். பெண்கள், வயதானவர்கள் இத்தகைய பிரதட்சிண முறைகளை மேற்கொள்ள முடியாது என்றாலும் இளைஞர்கள், நல்ல ஆரோக்ய நிலையில் உள்ளவர்களும் இத்தகைய பிரதட்சிண முறைகளை மேற்கொள்வதால் அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்திகளையும், நிரந்தர ஆரோக்கிய கதிர்களையும் வான மண்டலத்திலிருந்து ஈர்த்து தம் குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் சேவை புரியலாம்.

கைலாயம் மட்டும் அல்லாது திருஅண்ணாமலை போன்ற பல திருத்தலங்களிலும் காரைக்கால் அம்மையார் தலை கீழாக நடந்து சென்று இத்தகைய காற்று நீரோட்ட சக்திகளை மக்கள் பெற்று நல்வாழ்வு வாழ விநியோகித்துள்ளார். திருவாலங்காடு வரும்போது சக்கர தீர்த்தத்தில் இத்தகைய ‘காற்று நீரோட்ட’ சக்திகளை ஒவ்வொரு ஆறு படியிலும் பதியுமாறு சேவை புரிந்தவரே காரைக்கால் அம்மையார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இந்த ‘காற்று தீர்த்த சேவையில்’ இணைந்து மகேசன் சேவையை புரிந்தவர்களே நம் சற்குரு, கோவணாண்டி என்ற இரகசியம் இப்போது தெளிவாகின்றது அல்லவா ?

ஒரகடம்

பல சுவையான தத்துவ விளக்கங்களை அளிக்கக் கூடியதே எம்பெருமானின் ஊர்த்துவ நடனக் கோலமாகும். தன்னுடைய காலை தலைக்கு மேல் தூக்கி ஆடுவதே ஊர்த்துவ தாண்டவம் என்பது மேலோட்டமான ஒரு விளக்கமே. இந்த விளக்கத்தை அடிப்படையாக வைத்தே பெண்ணாக விளங்கிய காளி தேவி தன்னுடைய காலைத் தூக்கி ஆடுவதற்கு வெட்கம் அடைந்து சிபெருமானிடம் தோற்று விட்டாள் என்று கூறுவது உண்டு. நம் சற்குரு அளிக்கும் விளக்கமோ ஊர்த்துவ தாண்டவம் என்பது சிவ தத்துவத்தையும் சக்தி தத்துவத்தையும், அதாவது தோன்றாத நிலையையும் தோன்றும் நிலையையும், அசையா நிலையையும் அசையும் நிலையையும் இணைக்கும் தாண்டவக் கோலமாகும். சிவன் ஒருவனே இவ்விரு கோலங்களிலும் திகழக் கூடியவன், காளி அதாவது சக்தி அசையும் நிலையில் மட்டுமே நின்று அருளவல்லவள் என்பதால் காளியால் இந்த தாண்டவத்தைப் பயில முடியவில்லை என்பதே ஊர்த்துவ தாண்டவத்தின் தத்துவ விளக்கமாகும். இந்த இரு நிலைகளையும் மக்களுக்கு பயன்படும் வகையில் அளிப்பதற்காகவே, “அரவா நீ ஆடும்போது அடியேன் உன் அடியின் கீழ் இருக்க வேண்டும்,” என்ற காரைக்கால் அம்மையின் பிரார்த்தனையும் ஆகும். திருவாலங்காடு என்ற திருத்தலம் சுட்டிக் காட்டுவதும் இவ்வாறு வானத்தையும் பூமியையும் இணைக்கும் ஆலவிழுதின் தத்துவத்தையே ஆகும். இறைவன் தட்சிணா மூர்த்தியாக ஆலமரத்தின் கீழ் விழங்குவதும், ஒரகடம் போன்ற திருத்தலங்களில் உள்ள வானையும் மண்ணையும் இணைக்கும் ஆலவிழுதுகளின் தெய்வீகத் தன்மையும் இதுவே ஆகும்.

ஒரு பிறந்த குழந்தையை ஒரு கம்பியை பிடித்துக் கொண்டு இருக்குமாறு தொங்க விட்டால் அது பல மணி நேரங்களுக்கும் அந்த கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கும். ஆனால், ஒரு முதியவரை இவ்வாறு கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கச் சொன்னால் சில நிமிடங்களிலேயே அவர் துவண்டு விழுந்து விடுவார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? மனிதனின் எதையும் தாங்கும் சக்தி (withstanding capacity) வயதாக வயதாக குறைந்து கொண்டு போகிறது. அப்படியானால் வயதானவர்கள் என்ன செய்வது ? இவர்களுக்கு உதவுவதற்காகவே திருவாலங்காடு, தக்கோலம், திருமாற்பேறு, வட்டமலை போன்ற திருத்தலங்களில் உள்ள 16 கால் மண்டபங்கள் கைகொடுக்கின்றன.

இத்தலங்களில் அமைந்துள்ள 16 கால் மண்டபங்களில் அமர்ந்து கொண்டு மாணிக்கவாசகப் பெருமான் அருளிய குயிற்பத்து பாடல்களை குறைந்தது மூன்று முறை ஓதி வழிபடுதலால் முதிய வயதில் தோன்றும் களைப்பு, அசதி, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை தாக்காது அனைவரும் நலமுடன் வாழலாம். முதியவர்கள் என்று அல்லாது பெண்கள், குழந்தைகள் என போதுமான உடல் ஆரோக்யம் இயற்கையாக அமையாத அனைவருமே மேற்கூறிய வழிபாட்டால் பயன்பெறுவார்கள்.

இது சுக்ர சக்திகள் மிகுந்த ஆண்டாகத் துலங்குவதால் கோசாலை பராமரிப்பும், கோசாலையில் உள்ள மாடுகளுக்கு அகத்திக்கீரை, அச்சுவெல்லம், கோதுமைத் தவிடு போன்றவற்றை அளித்து வருதலும் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றி கன்றுடன் கூடிய பசு மாடுகளுக்கு கோசூக்த மந்திரங்களை ஓதி பூஜித்தல் சிறப்பாகும். வாரம் ஒரு முறையாவது, குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் குங்கிலியம் கலந்த சாம்பிராணி தூபம் திருத்தலங்களிலும், பசுமடங்களிலும், இல்லங்களிலும் இட்டு வருதலால் தொற்று நோய்கள் குறைந்து சமுதாயத்தில் ஆரோக்யம் பெருகும், தீய சக்திகளின வேகம் தணியும்.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை
திருமாற்பேறு

ஒரு முறை நாதர மகரிஷி பெருமாளிடம், “சுவாமி, ஒரே ஒரு முறை நாராயணா என்று கூறினால் முக்தி நிச்சயம் என்று கூறுகிறார்களே ? அடியேனோ சதாசர்வ காலமும் நாராயணா நாராயணா என்று தங்கள் திருநாமத்தைத்தானே உச்சரித்துக் கொண்டு இருக்கிறேன், அப்படியானால் இதற்கு என்ன விசேஷமானப் பலன் கனியும் ?” என்று கேட்டார். அனைத்தும் அறிந்த பெருமாளோ, “நாரதா, எந்த விஷயத்தையும் சோதித்துப் பார்ப்பதற்கு உரிய இடம் பூலோகம்தானே, அதனால் இந்த நாம மகிமையையும் பூலோகம் சென்று தெரிந்து கொள்வதுதானே முறை ?” என்று கூறவே நாரதரும் அதுவே சரியென்று என்று தெளிந்து பூலோகம் ஏகினார். விடியற்காலையில் அவர் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது காலை கதிரவனின் ஒளியில் ஒரு புழு மண்ணில் தோன்றுவதைப் பார்த்தார். இதுவே தக்க தருணம் என்று நினைத்து அந்தப் புழுவின் அருகில் சென்று நாராயணா என்று கூறினார். மறுநொடியே அந்தப் புழு சுருண்டு விழுந்து மரணம் அடைந்தது, திடுக்கிட்டார் நாரத மகரிஷி, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

மிகுந்த குழப்பத்துடன் தொடர்ந்து அந்த காட்டில் நடந்து கொண்டு இருந்தார். தொடர்ந்த பயணத்தால் பூலோகத்திற்கே இயல்பான பசி, தாகம் கூட அவரைத் தீண்டவில்லை. சற்று நேரத்திற்குப் பின் அங்கு ஒரு கர்ப்பிணியான மான் பிரசவிப்பதுபோல் தோன்றவே அந்த மானின் அருகில் சென்று நாராயணா என்று கூறினார். தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவந்த மான் குட்டி நாராயணா என்ற நாமத்தைக் கேட்ட மறுநொடியே தரையில் விழுந்து உயிரை விட்டது. இப்போது நாரத மகரிஷிக்கு தெளிவு பிறந்தது. நாராயண நாமம் உயிரைப் போக்கி விடும் என்பதே அவர் பெற்ற தெளிவு. இத்தகைய பலத்த யோசனையில் நாரத மகரிஷி இருந்ததால் தான் காட்டை விட்டு வெளியே வந்து நாட்டை நெருங்கியதே தெரியவில்லை. மக்கள் அனவைரும் திரண்டு வந்து நாரத மகரிஷிக்கு பலத்தை வரவேற்பை அளித்து அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாட்டு அரசி பிரசவிக்க இருந்ததால் அப்போது தோன்றும் குழந்தையை, தங்கள் எதிர்கால சக்கரவர்த்தியை, நாரத மகரிஷியே முதலில் பார்த்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதை அறிந்த நாரத மகரிஷிக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

ஈசனடி போற்றி
எந்தையடி போற்றி

வேறு வழியின்றி அரண்மனையை அடைந்த நாரதர் பிறந்த ராஜகுமாரனைப் பார்த்து வழக்கம்போல் நாராயணா என்று கூறி விட்டு அந்தக் குழந்தை இறப்பதைப் பார்க்க மனமில்லாதவராய் அங்கிருந்து திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தார். “நில்லுங்கள், மகரிஷியே ...”, என்ற குரல் கேட்டு ‘சடன் ப்ரேக்’ போன்று நின்றார் நாரதர். “யார் அந்தத் தனி அறையில் அறையில் தன்னை அழைத்தது ?” என்று நினைத்து சுற்றி முற்றும் பார்த்தார் நாரதர். “தேவ ரிஷி நாரதருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் ...”.

ஆம், பிறந்த ராஜகுமாரனின் குரல்தான் அது ... பிறந்த குழந்தையிடமிருந்து வந்த அந்த குரலைக் கேட்டு குழந்தையை நெருங்கினார் நாரதர். குழந்தை தொடர்ந்தது, “நாரத மகரிஷியே, தங்களுடைய அருந் தொண்டிற்கு அடியேன் எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. கேவலம் ஒரு புழுவாய்ப் பிறந்த எனக்கு நாராயண திருமந்திரத்தை ஓதி நான் மானாக பிறக்கும்படிச் செய்தீர்கள். மானாகப் பிறந்த நான் சில மணி நேரங்களில் மனிதனாகப் பிறப்பெடுத்ததும் தாங்கள் ஓதிய நாராயண நாமத்தின் மகிமையால்தான். மனிதனாகப் பிறந்தாலும் எத்தனையோ பிறவிகள் எடுத்த பின்னரே தங்களைப் போன்ற தேவரிஷியின் தரிசனம் கிடைக்கும். இருந்தாலும் தாங்கள் ஓதிய நாராயண நாமத்தின் மகிமையால் உடனே பேசும் சக்தி பெற்றதோடு மட்டுமல்லாமல் தங்களை தரிசனம் செய்யும் பாக்கியமும் பெற்றேன். இவை அனைத்துமே தேவரிஷியான தாங்கள் ஓதிய நாராயண நாமத்தின் மகிமையால்தானே ?” என்று கேட்டதாம் அந்த தெய்வக் குழந்தை.

ஒரு நாராயண நாமத்திற்கே இத்தகைய மகிமை என்றால் அலங்காரப் பெருமாள், ஆவர்த்தப் பெருமாள், புண்டரீகப் பெருமாள் என்ற எத்தனை எத்தனையோ நாராயண மூர்த்திகள் எழுந்தருளிய திருமாற்பேறு திருத்தலத்தின் மகிமைதான் என்னே என்னே ?

ஸ்ரீவராகப் பெருமாள்
நாச்சியார் கோவில்

பெருமாளின் அவதாரமான வராக அவதாரம் என்னும் பன்றி வடிவ அவதாரம் பற்றி நீங்கள் அறிவீர்கள். விஷ்ணு மூர்த்தி பன்றி வடிவில் தோன்றினார் என்பது மட்டுமே நாம் அனைவரும் அறிவோம். அதற்கு மேல் பெருமாள் அவதாரத்தைப் பற்றி மனிதர்கள் தெரிந்து கொள்ளவே முடியாது என்பதே பெருமாள் அவதாரத்தின் மகிமையும் கால வர்த்தமான சக்திகளின் தன்மையுமாகும். எனினும் இந்த ஆண்டு 2022ன் உதயநேரத்தில் சனீஸ்வர பகவானுடன் கூடி, சூரியனுக்கும் குரு பகவானுக்கும் இடையில் மகர ராசியில் புத பகவான் நிலை கொண்டிருப்பதால் வராக அவதாரத்தின் மகிமையை சாதாரண மக்களும் பெற்றுய்யும் ஆன்மீக வழி நம் சற்குருவால் அருளப்படுகிறது. பன்றி என்பது மக்களால் மிகவும் இழிந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படுவது, வராக அவதாரமோ மிக உயர்ந்த தேவ நிலையை உடையதாக, மக்களால் புரிந்து கொள்ளவே முடியாத நிலை கொண்ட தரம் பெற்றதாய் விளங்குவது. இதுவே 2022 வருடத்திற்கான சிறப்பாகும். எவ்வளவு தாழ்ந்த, இழிந்த நிலையில் சமுதாயத்தில் திகழ்பவர்களும் தங்கள் முயற்சியால் உலகமே வியக்கும் அளவிற்கு உயர்ந்த நிலையை அடையலாம். இந்த நிலையை அடைய நிச்சயம் குருவருள் தேவை, தெய்வீக வழிபாட்டில் ஊக்கமும் உறுதிப்பாடும் தேவை, இதை உணர்த்துவதே குரு பகவானிற்கும் சூரிய பகவானிற்கும் இடையே உள்ள புத பகவானின் நிலை. புதன், சனிக் கிழமைகளில் காரட், பச்சை பட்டாணி, உருளைக் கிழங்கு போன்றவற்றை பன்றிகளுக்கு உணவாகக் கொடுத்து வருவதால் சிறிது சிறிதாக தெய்வீகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த முயற்சிகளுக்கு வித்திடுவதே இவ்வருடம் ஆகும். சமுதாயத்தில் தோல்வியைச் சந்திக்கும் அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு பன்றியை பசுங் கன்றாக மாற்ற முயற்சிப்பதுதான். பன்றி பன்றியாகவே இருக்கட்டும், அதை வராக அவதாரமாக மாற்ற சதா சர்வ காலமும் முயற்சிப்பவரே நம் சற்குரு போன்றோரின் அரும்பெரு முயற்சிகளாகும். “எந்த அடிப்படை விஷயத்தையும் மாற்ற நாங்கள் முயற்சிப்பதே கிடையாது, அவரவர் வழி சென்று அவர்களை உயர்த்த இறையருளால் முயற்சி செய்வதே அடியேனின் கடமை ...”, என்பார் நம் சற்குரு.

சிவசக்தி ஐக்ய தரிசனம்
திருஅண்ணாமலை

சிலருடைய வியர்வை துர்நாற்றம் உடையதாகத் திகழ்வதால் இவர்களைச் சுற்றி எப்போதும் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். இத்தகையோர் புதன் கிழமைகளில் மல்லிகை, முல்லை, இருவாட்சி போன்ற மணமுள்ள மலர்களை குறைந்தது மூன்று முழம் தங்கள் கையால் வாழை நாரால் கட்டி பெருமாள் மூர்த்திகளுக்கு, குறிப்பாக ஸ்ரீவராக மூர்த்திக்கு அணிவித்து வருதலால் துர்நாற்றம் விலகும். தொடர்ந்த வழிபாடு அவசியமே. தலை முடியில் தோன்றும் முடிச்சுகள், சிக்குகள் தீரவும் இத்தகைய வழிபாடு துணைபுரியும். இது நீச சந்திர பகவானின் சக்தியால் தோன்றும் நிலையாக இருந்தாலும் திர ராசியில் நிலைகொள்ளும் குரு பகவானின் அருளால் இத்தகைய நிலைகள் தீரும் என்பதே 2022 வருட மகாத்மியங்களில் ஒன்றாகும். எங்கோ இருக்கும் எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக் கொடி நாட்டுவதை விட ஒருவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து தெரியும் சப்த ரிஷி மண்டல சக்திகளை வழிபட்டு உலகம் முழுவதிற்கும் அர்ப்பணிக்கலாமே. நம் சற்குருவின் எதிர்பார்ப்பும் இதுதானே ?!

பூமியின் அடியில் மிக ஆழத்தில் புதைந்திருக்கும் அரிய வேர்களையும், மூலிகைக் கிழங்குகளையும் தன்னுடைய மோப்ப சக்தியால் இனங் கண்டு கொள்ளக் கூடியதே பன்றி ஆகும். அடியார்கள் மேற்கூறிய வராக வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் பல “புதையல்” பொக்கிஷங்களை பெற்றுப் பயனடைவார்கள். வெளியே சொல்லக் கூடியதல்ல இந்த “வராக” இன்பம் என்றாலும், அடியார்கள் பெறும் ஆனந்தம் ஆண்டவன் பெறும் ஆனந்தம்தானே.

குயிற்பத்து திருவாசக கீதம்
(ஆவர்த்தம்)

குயிற்பத்து வாதவூரன் கீதம்
(புண்டரீகம்)

சீதையும் ராமனும் ஒரு நாள் வனத்தில் தனித்திருக்கையில் சீதை மடியின் மீது தலை வைத்து ராமன் துயில் கொண்டிருந்தான். வசந்தகால நிலவை இரசிக்க மேற்கொண்ட தேனிலவு அல்லவே ராம பிரான் ஏற்றிருந்த வனவாசம். ராமபிரான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் தீவிர தெய்வீக விளக்கங்கள், மக்களுக்கும் பிரஜைகளுக்கும் வழிகாட்டக் கூடிய பல மறை பொருள் விளக்கங்கள் அதில் இருக்கும். அப்போது ஒரு அசுரன் காக்கை வடிவில் அங்கு வந்து சீதையைக் கொத்தி துன்புறுத்த ஆரம்பித்தான். ராமபிரானின் நித்திரை கலைந்து விடக் கூடாது என்பதற்காக தன்னால் இயன்ற மட்டும் போராடினாள், என்ன இருந்தாலும் பெண் அல்லவா ? சீதைக்கும் அந்த காக்கை வடிவ அசுரனுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் ‘துயில் களைந்து’ எழுந்தான் ராம பிரான். நடந்தது கண்டு அங்கிருந்த ஒரு தர்பைப் புல்லை அஸ்திரமாக காக்கை மேல் எய்யவே அந்த அசுரனும் மாண்டு விழ, அந்த உடலிலிருந்து சுய உருவம் பெற்று ஒரு தேவதை ராமபிரானுக்கு நன்றி கூறி விட்டு வானில் சென்று மறைந்தது.

சப்தகன்னிகள் திருமால்பேறு

இவ்வாறு ராம பிரானின் வனவாசம் முழுவதுமே பலவிதமாக அசுர சக்திகளை மாய்ப்பதற்காகவே தோன்றியது எனலாம். மனைவியானவள் கணவனின் தலையைக் கோதும்போது அசுர சக்திகள் மாயும் என்பதற்கு பூமா தேவியின் புதல்வியான சீதை மக்களுக்குப் புகட்டிய பாடம் இது என்றாலும் சாதாரண மக்கள் முரட்டுத் தனமான தங்கள் குழந்தைகளை இவ்வாறு தலையைக் கோதி உறங்க வைப்பதால் அவர்கள் பல அசுர எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வர். குழந்தைகளின் தலை முடியைக் கோதும்போது குயிற்பத்து பாடலையும், வேற்றாகி விண்ணாகி போன்ற தேவாரப் பாடல்களையும் வாய்விட்டு உரக்க இசைத்தல் சிறப்பாகும். படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளும் நலம் பெறுவர்.

ரிஷிகேஷ் சிவானந்தா பிராண வித்யையில் வல்லவர். நம் உடலில் உள்ள தசவாயுக்களில் ஒன்று பிராணன் என்பது. இது பிரபஞ்சத்திலும் நிரவி உள்ள சக்தியே. தன்னுடைய தபோ பலனால் பிரபஞ்சத்தில் உள்ள பிராண சக்திகளை ஈர்த்து மக்களின் உடலில் அதைச் செலுத்தி பலரின் தீராத வியாதிகளை தீர்த்து வைத்தவரே சிவானந்தா. அதே போல திருமால்பேறு திருத்தலத்தில் சக்கராயுதத்தைப் பெற்ற பெருமாள் மூர்த்தி அதை வெறுமனே தன்னுடைய அலங்காரத்திற்காகவா வைத்திருப்பார் ? மற்றவர்களின் துயர் துடைத்தால்தானே அது ஆயுதம். இவ்வாறு மற்றவர்களின் துயர் துடைக்க தம்முடைய ஆத்ம சக்தியை ஆயுதமாக மாற்றும் எண்ணம் உள்ளவர்கள் மாணிக்கவாசகப் பெருமானின் குயிற்பத்து கீதத்தை மூன்று முறை ஓதி அதன் பலன்களை நோயாளிகள் அல்லது பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தாரை வார்த்து அளித்தலும் பிராண வித்யா சக்திகளை கையாளும் முறையாக, சிறப்பாக இவ்வருடம் நிறைவேற்றக் கூடிய வழிபாடாக நம் சற்குரு அளிக்கிறார்.

அலை புரண்டு எழுந்து விழுந்தாலும் தண்ணீர்தான், அமைதியான ஆழ்கடலாக இருந்தாலும் தண்ணீர்தான் என்று இறைவனின் பெருமையைப் பற்றிக் கூறுவார் பகவான் ராமகிருஷ்ணர். அதுபோல் திருமால்பேறு பெருமாளின் மூன்று சுடராழி சக்திகளைக் குறிப்பதாக அமைந்த மூன்று குயிற்பத்து கீத முறைகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபிரயோக சக்கர பெருமாள்
திருவக்கரை

அடியார்கள் தங்கள் விருப்பம்போல் எந்த முறையிலும் பாடி கோவிந்த பக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம். உடலில் அடிபட்டு, காயம்பட்டு இருந்தால் குயிற்பத்து கீதத்தை மூன்று முறை வாய்விட்டு பாடி விட்டு வீக்கத்தின் மேல் ஆதரவாக ஊத உடனடி நிவாரணம் கிட்டும் என்பதும் குயிற்கீதத்தின் நோய்நிவாரண சக்திகளாகும். குயிற்பத்து கீதத்தை மூன்று முறை ஓதும்போது அதில் அலங்காரம், ஆவர்த்தம், புண்டரீகம் என்ற சுக்ர சக்திகள் நம் சற்குருவால் பதிக்கப்படுகின்றன என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் அமைந்த சித்த இரகசியமாகும். கடுமையான கண்ணேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் இத்தகைய வழிபாடுகள் பலனளிக்கும்.

திருவெள்ளறை, திருமால்பேறு, விற்குடி போன்ற திருத்தலங்களில் சக்கராயுதம் பெற்றாலும் திருமால்பேறு திருத்தலத்தில் பெருமாள் பெற்ற சக்கராயுதம் பிரயோக சக்கரம் எனப்படுகிறது. எப்படி மந்திரங்களில் வாழ்த்து மந்திரங்கள், சாந்தி மந்திரங்கள், பிரயோக மந்திரங்கள் என்று உள்ளனவோ அது போல் ஆயுதங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் உண்டு. பொதுவாக, வறுமை, பிணி, நோய்கள் போன்ற துன்பங்களின் நிவாரணத்திற்காக ஓதப்படும் மந்திரங்கள் இத்தகைய வகையைச் சார்ந்ததாக அமையும். தீய சக்திகளை மாய்ப்பதில் பிரயோக சக்கரம் பெரும்பங்கு வகிப்பதால் தற்போது சமுதாயத்தில் பரவியுள்ள தீய எண்ணங்களை, எதிர்மறை சக்திகளை வெல்வதில் திருமால்பேறு திருத்தலத்தில் பொலியும் பிரயோக சக்கரம் ஏந்திய ஸ்ரீஆவர்த்தப் பெருமாளின் தரிசனம் நற்பலனை அளிக்கவல்லது. நோய் நிவாரண நாட்களான செவ்வாய், சனிக் கிழமைகளில் இத்தகைய பிரயோக சக்கரம் தாங்கிய பெருமாள் மூர்த்திகளை திருமால்பேறு, திருவக்கரை போன்ற திருத்தலங்களில் தரிசனம் செய்து குங்குமப்பூ கலந்த சர்க்கரை பொங்கலை தானமளித்தலால் எத்தனைய கடுமையான தொற்றுநோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். விபத்து, மாதவிடாய் நோய்களால் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுசெய்வதாக இத்தகைய தான, தரிசன முறைகள் அமையும். பொதுவாக, லால்குடி வீணா தட்சிணா மூர்த்தி, திருவக்கரை ஸ்ரீபிரயோக சக்கர பெருமாள் மூர்த்தி, நான்கு கைகளுடன் திகழும் துர்கை மூர்த்திகள் இவர்கள் கோஷ்ட மூர்த்திகளாய் அமைவது எத்தகைய எதிர்மறை சக்திகளையும் மாய்க்கும் வல்லமை பெற்றிருப்பதால் வீணை, தம்புரா போன்ற கம்பி வாத்தியங்களை மீட்டி இத்தலங்களில் வழிபடுவதால் சமுதாயத்தில் தோன்றும் தீய சக்திகளை மாய்க்கும் சக்தி வாய்ந்த வழிபாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தம்புரா என்பதில் அ, ஆ, உ, மெய் என்ற நான்கு அட்சரங்களைக் குறிக்கும் நான்கு கம்பிகள் அமைந்து எந்த அடிப்படை சுருதியையும் கூட்டும் சக்தி பெற்றிருப்பதால் பக்தை மீரா, மாதா அமிர்தானந்தா போன்ற நடமாடும் தெய்வ மூர்த்திகள் விடியற்காலையில் தம்புராவை இசைத்து தீய எண்ணங்களை, எதிர்மறை சக்திகளை விலக்கி, நல்ல தெய்வீக சக்திகளை பரவெளியில் பரப்பி சமுதாயத்தை காத்தனர், காத்து வருகின்றனர். நாமும் இந்த ஞானக் கடலில் சேரும் ஒரு துளியாக சேவை செய்யும் பாக்யத்தைப் பெறலாமே. ஒரு அரண்மனையையே அக்னி பிரவாகத்தில் மூழ்கச் செய்த பெருமையை தான்சன் பெற்றது இத்தகைய தம்புரா கானத்தில்தானே.

ஸ்ரீஜகத்ரட்சக பெருமாள்
ஆடுதுறை பெருமாள்கோயில்

வீணை, தம்புரா போன்ற இசைக் கருவிகள் பலா மரத்தில் உருவாக்கப்படுவதால் பலா மரத்தை தல விருட்சமாக உடைய லால்குடி அருகே திருமங்கலம், திருக்குற்றாலம், திருவையாறு அருகே ஆடுதுறை பெருமாள் கோயில், திருக்காரவாசல் போன்ற திருத்தலங்களில் வீணை, தம்புராவுடன் வலம் வந்து வணங்குதல் சிறப்பு. வீணையில் உள்ள 24 ஸ்வர குமிழ்களும் திருமால்பேறு போன்ற சக்கர தீர்த்தங்கள் அமைந்துள்ள தலங்களின் 24 மாயா தத்துவங்களுடன் இணைவதால் இத்தகைய தலங்களில் வீணை, தம்புரா போன்ற கருவிகளை வாசித்து நிறைவேற்றப்படும் இசைக் கச்சேரி இந்த வருடம் மிகுந்த பலன்களை அளிக்கவல்லதாகும்.

குழுகட்டி இரகசியம் என்ற சித்தர்கள் மட்டும் அறிந்த ஒருவித சுபமங்கள கதிர்கள் இவ்வருடம் பரிணமிக்க இருக்கின்றன. திருச்சி உய்யக்கொண்டான் மலையில் அருளும் ஸ்ரீகுளுமாயி அம்மன் இத்தகைய கதிர்களை பெண்களுக்கு அளிக்கவல்ல தெய்வ மூர்த்தியாக விளங்குவதால் கன்னிப் பெண்கள் ஒவ்வொரு வியாழக் கிழமையும் சக்கர தீர்த்தம் உள்ள தலங்களிலோ, பலா மரத்தை தலவிருட்சமாக உள்ள தலங்களிலோ அல்லது சக்கர தீர்த்தமும் பலா மரமும் அபூர்வமாக பொலியும் ஸ்ரீவையம்காத்த பெருமாள் அருளும் திருவையாறு அருகில் ஆடுதுறை பெருமாள் தலத்திலோ இறை மூர்த்திகளுக்கு பெரிய செவ்வந்திப்பூ திண்டு மாலைகளை அணிவித்து வழிபடுதலால் கன்னிப் பெண்கள் நலமடைவர். தங்கள் குடும்பத்தில் கன்னிப் பெண்கள் இல்லாவிட்டாலும் இதை ஒரு சமுதாய பூஜையாக ஏற்று நிறைவேற்றுவதும் சிறப்பே. இங்குள்ள வீடியோவில் நீங்கள் கேட்கும் இசை இத்தகைய ‘குழுகட்டி’ சக்திகளை ஈர்க்கவல்லதாகும்.

தனுர்மாத மூன்றாம்
பிறை தரிசனம்

திருமாற்பேறு திருத்தலத்தில் பெருமாள் சக்கராயுதம் பெற்றார் என்றால் பெருமாளுடைய வில்லான சார்ங்கம் என்பதைப் பெற்ற தலமும் சிறப்பு மிக்கதாகத்தானே இருக்கும் ? பித்ருக்களின் நாயகரே பெருமாள் என்பதை நாம் அறிவோம். மங்கள வாரமான செவ்வாய்க் கிழமை அன்று கிரிவலம் வந்து தனுர் மாதமான மார்கழியில் திருஅண்ணாமலை பித்ரு முக்தி தீர்த்தத்தில் நீராடி இங்கு நீங்கள் காணும் சந்திர மௌல்வி சார்ங்க தரிசனம் என்ற அற்புத தரிசனத்தைப் பெற்றே சார்ங்கம் என்ற வில்லை சிவபெருமானிடமிருந்து பெருமாள் பெற்றார் என்று சித்த கிரந்தங்கள் தெரிவிக்கின்றன. அந்த திருத்தலம் உரிய நேரத்தில் சித்தர்களால் அறிவிக்கப்படும் என்றாலும் அதுவரையில் நம் குருவி மூளையை கசக்கிப் பார்த்து அறிந்து கொள்ள முயற்சிப்பதும் தெய்வீகம்தானே? இத்தரிசனத்தால் மூதாதையர்களின் சொத்து சம்பந்தமான நீண்ட நாள் வழக்குகள் நல்ல முடிவைத் தரும். ஆன்மீக அறிவைத் தூண்டும் நண்பர்களின் நட்பு கிடைக்கும். சார்ங்கம் என்பது வில் என்ற ஆயுதத்தைக் குறிக்கும் என்றாலும் விற்குடி போன்ற திருத்தலங்களில் துலங்கும் சங்கு, சக்கர தீர்த்தங்களில் நீராடி மூன்றாம் பிறை தரிசன நாட்களில் தர்ப்பணம் அளித்து வழிபடுதலால் கனிந்த கனி பரமாச்சாரியார் வழிகாட்டுதல்படி ஆத்மா என்னும் அம்பை இறைத் திருவடிகளில் சேர்க்கும் சார்ங்கத்தை நாம் பெறவும் இத்தகைய வழிபாடுகள் துணை புரியும்.

காலம் தோன்றுவது காலபைரவரின் திருவடிகளில்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam