உடல் மனம் உள்ளம் கடந்து நிற்பதே தெய்வீகம் !

ஸ்ரீதொண்டரடி பொடியாழ்வார் அருளிய திருமாலை

ராகம் மோகனம்

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ.நின் நாமம் கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

ஸ்ரீகணநாத குணசேடன்
பெருமாள்மலை

மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே.

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான்.

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.

நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவ ரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள் கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. 10

ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திருவி லாதீர் காலத்தைக் கழிக்கின் றீரே.

நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.

எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே?

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே.

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே?

சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே?

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே? 20

பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே?

பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சே நீ சொல்லாய்

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியை போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே

குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே

உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னே (என்) கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக் கணம்மா அரங்கமா நகரு ளானே

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. 30

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கமொ றறிய மாட்டா மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே

மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே

உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே

மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே.

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.

அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே

திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. 40

வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே?

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.

அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே.

பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே.

வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொடிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே.

ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமறைக்காடு பதிகம்



திருமறைக்காடு

பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.

அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.

அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.

பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ

கோடியக்கரை

ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.

விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தீப தரிசனக் கும்மி

கோலாட்டக் குச்சிகளைக் கொண்டு கும்மியடித்து பெண்கள் ஆடும் கும்மியாட்டம் என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. சில கோயில் திருவிழாக்களில் தொன்றுதொட்டு வரும் இந்த அற்புத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. திருமணமான பெண்களுக்கும் திருமணமாகாத பெண்களுக்கும் எத்தகைய உடல், மன வியாதிகளையும் சரி செய்யக் கூடியதே இத்தகைய கும்மிப் பாடல்களாகும். குறைந்தது நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் இரண்டு மரக் குச்சிகளைக் கொண்டு தட்டி ஒலியெழுப்பும் இந்த அற்புத கும்மி ஆட்டமானது எத்தகைய வியாதிகளையும் தீர்க்கக் கூடிய அருமருந்தாகும். அது மட்டுமன்றி இத்தகைய கும்மியாட்டங்கள் நடக்கும் கிராமங்களில் நெல் விளைச்சல், பயிர் விளைச்சல்கள் பெருகுவதுடன் பயிர்களும் பூச்சி மருந்துகள் இன்றியே நன்கு வளர்வதுடன் அத்தகைய உணவு தான்யங்களை ஏற்கும் மக்களும் நோய் நொடியின்றி வாழ்வர் என்பதே இத்தகைய கும்மிப் பாட்டுக்களின் மகத்துவம் ஆகும். அவரவர் இல்லங்களை மாவிலை தோரணங்களால் அர்ச்சித்து, பச்சரிசி மாக்கோலம் இட்டு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி இந்த தீபத்தைச் சுற்றி மா, தேக்கு, கொய்யா குச்சிகளைத் தட்டி ஒலி எழுப்பி நடனமிடுவது அற்புத இறை வழிபாடாகும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், கார்த்திகை, ரோகிணி நட்சத்திர நாட்களிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றிய பின்னர் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

மல்லிகை முல்லை இருவாட்சி புன்னை மற்றுமுண்டான மலரெடுத்து
உல்லாசமாகவே அண்ணாமலையார் உச்சிக் கணேசனைப் போற்றுமம்மா

கார்த்திகை தீபத்தைப் பாருமம்மா இந்த பாபத்தை தீர்க்கவே கோருமம்மா
தீர்த்த முழுதிலும் ஸ்நானஞ் செய்து வெகு சுத்தவலமாக வாருமம்மா

வல்லாளன் கோபுரம் பாருமம்மா இதை வர்ணிக்க யாராலே கூடுமம்மா
பல்லுயிர் போற்றிய அண்ணாமலையாரைப் பணிந்து பூஸ்துதி செய்யுமம்மா

சோளிங்கர்

வல்வினையெல்லா மகற்றுமலை யிது வானவரோதிய வேதமலை
நல்ல வரந்தரும் அண்ணாமலையாரை யெல்லோரும் ஸ்தோத்திரம் செய்திடுவோம்

தீரா வினைகளைத் தீர்க்குமலை அந்த தென்னவன் றன்னை புதைத்த மலை
சீராயன்பரைக் காக்குமலை கவிசித்திர அண்ணாமலை இதுவே

மானே நீ அண்ணாமலை பாரு அவர்மங்கை யுண்ணாமுலை தாயுடனே
தேனே யிருவர் பதம் வேண்டி மலை தீப தரிசனம் பாருமம்மா

கிருத யுகத்திலே தங்கமலை அந்த திரேதா யுகத்திலே பொன்னுமலை
துவாபர யுகத்திலே வெள்ளிமலை யிந்த கலியுகத்திலே அண்ணாமலை

திருக்குளத் தலங்காரங்களும் ஞானிகளே யனுட்டானங்களும்
விருப்பமாகவே அன்பர்கணெற்றியில் வெண்ணீரலங்காரம் பாருமம்மா

பொல்லாப் பாவமதை போக்க தன்னைப் போற்று மடியார் தமைக் காக்க
வல்லவனாகிய அண்ணாமலையானை வணங்கியே துதி செய்யுமம்மா

சங்கர சம்போ சதா சிவனே ஓம் சங்கர கங்காதரனே யென்றும்
திங்களணிந்தவர் யெங்களைக் காவென்று தீப தரிசனஞ் செய்யுமம்மா

சோளிங்கர்

சர்க்கரை தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து மலை சன்னதி முன்பாக வந்து நின்று
அக்கரையாகவே எத்தனையோ கோடி அன்பர் தொழுவதைப் பாருமம்மா

எண்ணிக் கணக்கிடாத அன்பர்கள் எத்தனையோ கோடி மானிடர்கள்
அண்ணாமலை தீபச்சேவை செய்ய அன்பாய் வாரதைப் பாருமம்மா

நந்தி தரிசனம் பாருமம்மா அங்கே நாதனிருக்கிறார் கோருமம்மா
முந்தித் திருக்குளம் மூழ்கியுண்ணாமலை மோனப் பிரணவம் பேசுமம்மா

மோனமெனும் பெண்ணை உள்ளாக்கி மற்ற மூன்று மிரண்டையும் ஒன்றாக்கி
ஞானவிளக்கென்னும் கார்த்திகை தீபத்தை நாடியே நீ துதி செய்யுமம்மா

என்றைக்குஞ் சொந்தஞ் சுடுகாடு நமக்கில்லறத் தொல்லை யிருக்காது
அன்று வல்லாளனை ஆண்டுக் கொண்ட உங்க அண்ணாமலையாரை வாழ்த்துமம்மா

வீணாசை கொண்டு மயங்காதே வெளிவேஷத்தை பூட்டித் தியங்காதே
காணாதகாட்சியாம் அண்ணாமலைநாதர் கர்ப்பூர தீபத்தைப் பாருமம்மா

காலனாம் பட்டக் கதையறிந்து கலிகாலத்தை வீணிலே போக்காதே
ஞாலம் பரவிய அண்ணாமலை தீபம் நட்சத்திரத்தை நீ கண்டு துதி

பொன்னும் பொருளு மிகுந்த விடமுன் பிள்ளைத் துடருஞ் சுடலை மட்டும்
நன்னை மலைத்துத் தயங்காதே நீ திடமாய் நின்று துதி செய்யுமம்மா

சோளிங்கர்

வாயால் வேதம் பலிக்காதே வாழ்நாட்களை வீணாய் கெடுக்காதே
தாயாருந் தந்தையும் அண்ணாமலையென்று தனித்து நீ துதி செய்யுமம்மா

சீர்மிகும்நாடு வளநாட்டிலுள்ள சிவஸ்தலங்களின் மேன்மையதாம்
பேர்மிகும் பூலோக கயிலாச மென்றுமே பேசிப் புகழுறா பாருமம்மா

வேதபுராணத்தில் சொல்லிடு மாமலை ஆதிகயிலாய மென்று
வெகுபாதகத்தை போக்கும் அண்ணாமலையாரை பணிந்து கும்மியடிப் போமம்மா

முக்தி தரும் தீர்த்தம் பாருமம்மா உள்ளம் உருகும் படியாகக் கோருமம்மா
லஜ்ஜைப் படாமலே அண்ணாமலையாரை யிச்சை கொண்டே துதி செய்யுமம்மா

தங்கக் கொடி கம்ப வேலைகளும் அதைச் சார்ந்த கலசங்கள் பொன்னழகும்
இங்கே நாமெடுத்துரைப்போ மென்றோவிது வெத்தனையோ காலம் செல்லுமம்மா

கல்யாண மண்டபம் பாருமம்மா அதன் காக்ஷியைக் காணவே தேடுமம்மா
நில்லாமலுள்புரம் வாருமம்மா தூண் சித்திர வேலையைப் பாருமம்மா

மாமரச் சோலையில் பிராமணர் கூடியே மாமுனிவோர் களிருப்பதுவும்
தீமையில்லாமலே அந்தணர் கூடியே செய்யும் வேத கோஷ்டம் பாருமம்மா

அன்றைக் கிரவி லெங்களண்ணாமலை ஆனந்த புஷ்பமலங்கிருதராய்
குன்றாத வெள்ளி ரிஷபத்தின் மேலேறி கோலம் வருவதை பாருமம்மா

எத்தனை வாகனம் எத்தனை கோயில் யெத்தனையோ வெள்ளி ரிஷபமதாம்
இத்தனை ரிஷபத்தை மாற்றும் பொருட்டாக சித்திரக் கலைகள் செய்தனராம்

அண்ணாமலையாரைப் பாடுவோரும் சிலர் ஆனந்தத் தாண்டவ மாடுவோரும்
எண்ணாயிரங் காலம் தபநிலை செய்தாலும் அண்ணாமலைப் பாதங் காண்பதுண்டோ ?

மாணிக்கவாசகர் அருளிய குயிற்பத்து

கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 1

ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 2

நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்
கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 3

ஸ்ரீமணிகண்டேஸ்வரர்
திருமால்பேறு

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை நீவரக் கூவாய். 4

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 5

இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 6

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய். 7

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 8

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 9

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய். 10

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்


எழுகூற்றிருக்கை

ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

ஆச்சிராமவல்லி

இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam