அனைத்திலும் உயர்ந்த அரன் சூடிய மகுடம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருக்கழிப்பாலையில் கழியும்
கர்மவினைகள்

சிதம்பரம் திருத்தலத்திற்கு அருகாமையில் உள்ளதே திருக்கழிப்பாலை சிவத்தலமாகும். சிதம்பரம் தலத்தை தரிசனம் செய்யும் பக்தர்கள் இறைவனின் அனுகிரகத்தை உணர, தங்களைப் படைத்த பெருமானின் மேன்மையை உணர்ந்து கொள்ள உதவி செய்வதே தியாகத்தின் சிகரமான திருக்கழிப்பாலை திருத்தலமாகும். பொதுவாக, சக்கரவர்த்திகள் தங்கள் மணிமகுடமாக தங்கம் வைரத்தால் அமைந்த மகுடங்களையே அணிந்து கொள்வார்கள். சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழும் எம்பெருமான் எதைத் தனக்கு உகந்த மகுடமாக அணிந்து கொள்வான் ? ஆம் தியாகம் என்னும் மகுடத்தை அணிந்த தியாகராஜனாகத் திகழ்பவனே திருக்கழிப்பாலை சிவத்தலத்தில் உறையும் ஸ்ரீபால்வண்ணநாதப் பெருமான் ஆவார். காய்ச்சக் காய்ச்ச மிகும் பசும்பாலின் சுவை போல உரைக்க உரைக்க கூடும் சுவையாக ஸ்ரீபால்வண்ண நாதரின் பெருமை பொங்கிப் பெருகுவதால் மீண்டும் ஒருமுறை ஸ்ரீபால்வண்ண நாதரின் பெருமைகளை விவரிப்பதில் பேருவகை எய்துகிறார்கள் சித்தர்கள்.

திருக்கழிப்பாலை

ஓயாமல் ஒழியாமல் சதாசர்வ காலமும் பா பு என்ற பீஜாட்சர ஒலியை எழுப்பிக் கொண்டிருப்பவையே கஞ்சலங்கை என்னும் திருநாமம் கொண்ட தவளைகள். மனிதர்கள் இடுப்பிற்குக் கீழே தங்கத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி இருப்பதால் கஞ்சலங்கை தவளைகளின் ரீங்காரத் தொனியை சாதாரண மனிதர்கள் கேட்கும் சாத்தியக் கூறுகள் கிடையாது. இந்த பா பு என்ற பீஜாட்சர ஒலியானது தங்க சலங்கைகளில் மாணிக்கப்பரல்கள் மோதுவதால் தோன்றும் ஒலியை ஒத்திருக்கும் என்று கஞ்சலங்கை ஒலியைக் கேட்கும் பாக்கியம் பெற்ற சித்தர்கள் விண்டுரைக்கிறார்கள். இவ்வாறு இறைவனைப் பற்றிய பர தியானத்திலேயே பீஜாட்சர சக்திகளை ஒலித்துக் கொண்டிருக்கும் தவளைகள் ஆயிரம் வருடங்களின் நிறைவில் இஷ்ட பரிமாண தேவதா நாகம் என்ற அற்புத நாகத்தின் முன்னிலையில் சென்று நிற்கும். இவ்வாறு பீஜாட்சர ஒலி ஒளிப் பிழம்பாக நிற்கும் கஞ்சலங்கை தவளைகளை தன்னுள் ஏற்று அவற்றை சிவனுடன் சேர்த்து விடும் இஷ்ட பரிமாண தேவதா நாகம். 18 அடி நீழமுள்ள இஷ்ட பரிமாண நாகத்தின் நீளமானது ஒரு அடி குறைந்து விடும். இவ்வாறு 18000 ஆண்டுகள் அருந்தவம் இயற்றி 18 தவளை தியாகிகளுக்கு முக்திஅளித்த இஷ்ட பரிமாண தேவதா நாகமானது 18000 ஆண்டுகள் நிறைவில் பால்வண்ண நிறத்தில் தன் திருவாயில் தோன்றும் மாணிக்கத்தை ஸ்ரீபால்வண்ண நாதரின் கிரீடமாக சமர்ப்பித்தது அப்பெருமானின் திருவடிகளிலேயே தன்னுடைய பிராணனை ஜோதியாக சேர்த்து விடும். இந்த ஜோதி தரிசனத்தைப் பெறும் தகுதி பெற்ற ஒரே பெண்மணியே ஸ்ரீலோபாமுத்ரா தேவி ஆவாள். இவ்வாறு ஸ்ரீலோபாமுத்ரா தேவி திருஅண்ணாமலையில் தரிசனம் பெற்ற சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதி நமது ஆஸ்ரமத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. இத்தகைய ஜோதி தரிசனம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் என்ற உண்மை சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். உத்தம மணாளனுக்காக பல்லாண்டுகள் திருஅண்ணாமலையை வலம் வந்த ஸ்ரீலோபாமுத்ரா இஷ்டபரிமாண தேவதா திருஅண்ணாமலையாருடன் ஐக்யமான ஜோதி தரிசனம் பெற்றவுடன் திருக்கழிப்பாலைக்கு விரைந்து சென்று எம்பெருமான் அளித்த மாணிக்கக் கல்லை சிவ பிரசாதகமாகப் பெற்றாள். கடுக்கன் அணிய இரண்டு கற்கள் வேண்டுமல்லவா ? அந்த நாக மாணிக்கத்தை ஸ்ரீலோபாமுத்ரா தன் வலது கரத்தில் வைத்து பரம்பொருளை வேண்ட ஸ்ரீஉண்ணாமுலைத்தாய் இரண்டாவது மாணிக்கக் கல்லை சக்தி பிரசாதமாக ஸ்ரீலோபாமுத்ராவிற்கு அளித்தாள். அந்த அற்புதமான அஷ்டகோண மாணிக்கக் கடுக்கன்களையே தன் ஆருயிர் கணவரான ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு திருமண பரிசாக அளித்தாள் ஸ்ரீலோபாமுத்ரா. அன்று முதல் ஸ்ரீலோபாமுத்ரா ஸ்ரீலோபாமாதாவாக உலக ஜீவன்களுக்கெல்லாம் அன்னையாக மாறிய வரலாறு நீங்கள் அறிந்ததே. இவ்வாறு வளர்பிறை நாட்களில் சிறப்பாக ரோஹினி, உத்திரம், திருவோணம் நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிவசக்தி ஐக்ய தரிசனம் பெற்று ஸ்ரீபால்வண்ணநாதரை திருக்கழிப்பாலையில் குருவருள் திரளும் 2019 ஆண்டு தரிசனம் செய்வதை பெரும் பாக்கியமாக வர்ணிக்கிறார்கள் சித்தர்கள்.

திருக்கழிப்பாலை

திருக்கழிப்பாலை

அபூர்வமாக துவார பாலகர்களாக தம்பதி சமேதராய் நந்தி மூர்த்திகளே எழுந்தருளி இருப்பது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். அதிகார நந்தி மூர்த்திகள் என்பவர்கள் ஈசன் எழுந்தருளியிருக்கும் திருக்கைலையில் அருள் சுரக்கும் சிவ மூர்த்திகள். பொதுவாக அதிகார நந்தி மூர்த்திகளின் தரிசனமே கைலாய தரிசனத்திற்கு சமமான பலன்களை அளிக்கவல்லது என்றால் தம்பதி சமேதராய் எழுந்தருளியிருக்கும் அதிகார மூர்த்திகளின் பெருமையை என்னென்று சொல்வது ? திருக்கைலாயத்தில் ஒரே ஒரு அதிகார நந்தியே எழுந்தருளி இருக்க திருக்கழிப்பாலையில் இரு அதிகார நந்தி மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர் அல்லவா ? திருக்கைலையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் ஆயிரக் கணக்கான திருத்தலங்களில் எழுந்தருளி இருப்பதைப் போன்ற மகிமையைக் குறிப்பதே இத்தகைய மூர்த்திகளின் அனுகிரகம் என்று கூறலாம். உண்மையில் யோக நிலையில் குறிப்பாக குண்டலினி யோகத்தில் உன்னத நிலையை அடைய விரும்புபவர்கள் இவ்வாறு இரண்டு அதிகார நந்திகள் தம்பதி சகிதமாய் எழுந்தருளி இருக்கும் தரிசனம் பெறுவதால் யோக நிலையில் அற்புத முன்னேற்றத்தைப் பெற ஏதுவாக இருக்கும். அதிகார நந்திகள் மட்டுமல்லாது சூரிய சந்திர மூர்த்திகளும் இத்தலத்தில் இருபுறமும் எழுந்தருளி இருப்பதை தரிசனம் செய்யலாம். குடும்ப ஒற்றுமை, தம்பதிகள் ஒற்றுமை, தொழில், வியாபாரம் ரீதியான முன்னேற்றம் இவை அனைத்தையும் ஒரு சேர அளிப்பதே இத்தகைய மூர்த்திகளின் தரிசனப் பலனும் வழிபாட்டுப் பாங்குமாகும். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பெருங்கருணையை உடையவரே எம்பெருமான் என்பது ஏதோ ஏனோதானோவென்று சொல்லக் கூடிய சொற்றொடர் என்பது கிடையாது என்பதற்கு நிரூபணமாக அமைந்ததே 2019ம் வருட கிரக சஞ்சார அமைப்பும் திருக்கழிப்பாலையில் இறை மூர்த்திகள் எழுந்தருளியுள்ள எழிலான கோலமும். ஆங்கிலக் கணக்கு என்பதும் சித்தர்களின் சாம்ராஜ்யத்தில் விளைந்த இறைவனால் அளிக்கப்பட்ட எண் கணிதம்தானே ? இதன்படி 2019ம் ஆண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு கிரக சஞ்சாரத்தை நோக்கினால் லக்கினத்திலிருந்து இரண்டு, மூன்றாம், நான்காம் வீடுகளில் ஆறு கிரகங்கள் ஜோடியாக எழுந்தருளி உள்ளனர். ஏழாம் வீட்டில் லக்னத்தைப் பார்த்தவாறு செவ்வாய் பகவான் எழுந்தருளி உள்ளார். இந்த கிரக அமைப்புகள் குறிக்கும் இரகசியத்தை சற்றே ஆராய்வோமா ? வருட உதய நேரமான கன்னி லக்னத்திலிருந்து மூன்று வீடுகளில் ஜோடிக் கிரகங்கள் எழுந்தருளி இருப்பதால் மூன்று இறை ஜோடி மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் திருக்கழிப்பாலை திருத்தலம் குருவருள் திரட்சியுடன் (2+0+1+9=12=3) பொலியும் வருடத்தில் தரிசனம் செய்ய வேண்டிய தலமாக அமைகிறது. லக்னாதிபதியான புத பகவான் குருவுடன் சேர்ந்து ஸ்திர ராசியான விருச்சிக ராசியில் குசா சக்தியுடன் எழுந்தருளி இருப்பதால் லக்னத்தில் இருந்து ஏழாம் அதிபதியான செவ்வாய் கிரகம் அக்னி கிரகமாக இருந்தாலும் அதன் பார்வையால் குருவை நம்பி இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மேலும் செவ்வாய் கிரகம் என்பது விருச்சிக ராசியின் அதிபதியாக இருப்பதால் குசாதிபதியின் பார்வை நன்மையையே செய்யும் என்பது விதி.

திருக்கழிப்பாலை

2019ம் ஆண்டு பற்றி சித்த கிரந்தங்கள் கூறுவது என்ன ? 2019ம் ஆண்டு குரு எண்ணான மூன்றின் சக்தி மிகுந்த கிரணங்களால் திகழ்வதால் குருவருளைப் பெற 2019ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைகிறது. 1.1.2019 என்று வருடப் பிறப்பு நாளைக் கூறும்போது அது ஐந்தாக அமைவதால் ஐந்து கோபுரக் கலசங்கள் உடைய ஐந்து அட்சரங்கள் உடைய கழிப்பாலை என்ற திருத்தலம் வழிபாட்டிற்கு உரிய சிறப்பான தலமாக பொலிகின்றது. ஸ்ரீலோபாமுத்ரா திருக்கழிப்பாலையில் சிவபிரசாதமான மாணிக்கக் கல்லை இறைவனிடமிருந்து பெற்று அதை தேவியின் அருளால் இரண்டாகப் பெருக்கி ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு எட்டு முகக் கடுக்கனில் பதித்து அருளினாள் அல்லவா ? அதுவே 2019ம் ஆண்டில் பொலியும் எண் கணித அதிசயம், அற்புதமாகும்.

லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் சனீஸ்வர பகவான் எழுந்தருளி இருக்க அதிலிருந்து நான்காம் வீடான மீனத்தில் செவ்வாய் பகவான் எழுந்தருளி இருப்பதைக் குறித்து ஆத்ம விசாரம் செய்வதால் இந்த அற்புதத்தை எண்ணி எண்ணி மகிழலாம், ஆனந்திக்கலாம். எட்டு என்னும் விதியின் வேகத்தைக் குறிப்பதே இங்கு நீங்கள் காணும் அட்ட மூர்த்திகளின் தரிசனமும் திருக்கழிப்பாலை திருத்தலமும். விதியின் வேகம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு தெரிந்து கொண்டால்தான் அதிலிருந்து காப்பாற்றப்பட்டதன் மகிமையையும் உணர்ந்து கொள்ளலாம் அல்லவா ? வருமுன் எந்த வேதனையையும் குருவருளால் நீக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும். வந்தபின் குருவை அல்லது யாரையும் குறை கூறுவதால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

செவ்வாய் என்பது அக்னி, மின்சாரம், சண்டை சச்சரவிற்கான மூர்த்தி ஆவார். எனவே செவ்வாயின் பார்வையை 2019ம் ஆண்டின் லக்னம் பெறுவதால் அணுகுண்டுகள் சோதனையால் உலக மக்கள், விலங்குகள், தாவரங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மையே. செவ்வாய் வீற்றிருக்கும் இடம் மீன ராசியாக அமைவதால் இத்தகைய சோதனைகள் கடலில் நிகழ்த்தப்பட்டாலும் அதன் பலன்ய் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பூமியின் பெரும்பங்கு நீராக இருப்பதால் உலகம் முழுவதற்குமே இத்தகைய சோதனைகள் தீமையை விளைவிக்கும் என்பது உண்மையே. வெளி நாடுகளில் இருக்கும் நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதால் வெளி நாடுகளில் இருக்கும் நம் நாட்டு பிரஜைகள் தாய் நாட்டிற்கு திரும்பி விடுதல் நலம் பயக்கும். செவ்வாய் பகவானின் பார்வை கன்னி ராசியில் விழுவதால் பெண்கள் இத்தகைய சோதனைகளால் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும் ஏழாம் வீடு பொதுவாக களத்திர ஸ்தானமாக அமைவதால் விவாகாரத்து என்னும் குடும்ப பிரிவினைகளுக்கான கோர்ட் வழக்குகள் பெருகும். இத்தகைய வழக்குகளை துரிதப்படுத்துபவர்களும் பெண் குலத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இங்கு இனத்தைப் பற்றி குறை கூறுவதாக எண்ணாது சோதிட அமைப்புகளைப் புரிந்துகொண்டு தக்க பிராயசித்த வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவே இத்தகைய ஜோதிட கணிப்புகள் சித்தர்களால் அருளப்பட்டுள்ளன என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால்தான் தெய்வீகத்தையும் சித்தர்களின் அருட்கடாட்சத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீசதுராக்னி துர்கை
திருக்கழிப்பாலை

அக்னிகளில் பலவகை உண்டு. நடனாக்னி, சிலம்பாக்னி, ருத்ராக்னி, நேத்ராக்னி என்பவை அக்னிகளில் சில வகையே. அதனால்தான் அரணிக் கட்டையில் எழும் அக்னி உயர்ந்த அக்னியாகவும் தீக்குச்சியில் எழும் அக்னி தரத்தில் குறைந்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. இந்த அக்னியில் விளையும் வேறுபாடே நம் குழந்தை அளிக்கும் முத்தத்திற்கும் மனைவி அளிக்கும் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடாகும். இது உடனே புரிந்து கொள்ளக் கூடிய அக்னி கோட்பாடாகும். பொதுவாக, சதுராக்னி என்பது பெண் தெய்வ மூர்த்திகளால், பெண்களால், பெண் குழந்தைகளால் தோற்றுவிக்கக் கூடிய ஒரு அக்னியாகும். திருக்கழிப்பாலையில் அருள்புரியும் ஸ்ரீசதுராக்னி துர்கை மூர்த்தி இத்தகைய அபூர்வமான அக்னி சக்தியை தோற்றுவித்து சமுதாயத்தில் சிறப்பாக கொந்தளிப்பான சூழ்நிலைகளில் அமைதியை ஏற்படுத்துகிறாள் என்பதே சித்தர்கள் ஸ்ரீசதுராக்னி அல்லது ஸ்ரீசதுரா தேவி துர்கையைப் பற்றி குறிப்பிடும் இரகசியமாகும். அனைவரும் தரிசிக்கும்படியாக நான்கு கரத்துடன் காட்சி அளிப்பதே ஸ்ரீசதுரா தேவியின் சிறப்பம்சமாகும். இந்த நான்கு கரங்களும் நான்கு வித அக்னி சக்திகளைக் குறிக்கின்றன. பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அவர்களின் கற்பைக் குறிப்பதால் தங்களுக்கு மனைவியாக வரும் பெண்களின் கற்பைக் குறித்து கணவன்மார்கள் கவலை கொள்வது இயற்கையே. இத்தேவியை தொடர்ந்து நம்பிக்கையுடன் வழிபட்டு வருவதலால் கற்பில் சிறந்த பெண்களை அதாவது நான்காம் இடம் பலமாக உள்ள பெண்களை வாழ்க்கைத் துணைவியாக அடைய இத்தல துர்கை வழிபாடு உறுதுணையாக அமையும். பெண்கள் கற்புக்கரசியாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள் தாங்களும் பிறர் மனையை நாடாதவர்களாக இருப்பார்கள் என்பதில சிறிதும் ஐயமில்லையே. இத்தகைய தம்பதிகளால் உருவாகும் சமுதாயம் பூஞ்சோலையாக மலரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது அல்லவா ? இதற்கு உதாரணமாக திகழ்வதே ஸ்ரீலட்சுமிதேவியின் திருமண வைபவம் ஆகும். மணமாலையைக் கையில் ஏந்தி பிரபஞ்சம் எங்கும் வலம் வந்தாள் லட்சுமி தேவி. அப்போது லட்சுமி கண்ட காட்சியே இப்போது நீங்கள் திருக்கழிப்பாலையில் தரிசனம் செய்யும் நந்தி மூர்த்தியின் தரிசனம். ஆம், வலது காலும் வலது முகபாவமும் ஆண் சக்தியைக் குறிப்பதுதானே. அந்த உத்தம ஆண் மகனாகத் தரிசனம் அளித்தவரே ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஆவார். அவர் திருமார்பில் மாலையை அணிவித்து நாராயண மூர்த்தியின் திருவடியில் சேவை சாதிக்க அமர்ந்தவளே ஸ்ரீமகாலட்சுமி. அந்த வலது கால் நீட்டி வலது புற தரிசனம் தரும் நந்தி மூர்த்தியையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். தாங்கள் திருமணத்திற்கு முன்பு எத்தகைய தவறுகள் செய்திருந்தாலும் குறிப்பாக காமத் தவறுகள் பல புரிந்திட்டாலும் இனி அத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்று மனதார திடமான முடிவெடுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவி செய்யும் நந்தி மூர்த்தியே திருக்கழிப்பாலை நந்தி மூர்த்தி ஆவார். காணக் கிடைக்கா காளை தரிசனம் இதுவே. சதுராக்னி துர்கையைப் போல் வடக்கு முகமாக அமர்ந்து தாமே மஞ்சளை அரைத்து அதை தேவி அபிஷேகத்திற்கு அளித்தலால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்க ஏதுவாகும். திருமணம் ஆன பெண்கள் தாங்கள் திருமணத்திற்கு முன்னால் இழைத்த தவறுகளுக்கு பிராயசித்தம் பெற்று நன்முறையில் வாழ இத்தகைய மஞ்சள் அபிஷேகம் அவர்களுக்கு உறுதுணையாக அமையும். மஞ்சள் கிழங்கில் சதுராக்னியைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். இதில் பெண்கள் கொள்ளும் மனோபாவமே இத்தகைய சதுராக்னி சக்திகளைத் தோற்றுவிக்கும் என்பதே உண்மை. இதில் இன்னும் பல இரகசியங்கள் உள்ளன. அவற்றைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கொள்தலே நலம்.

தியாகேசனின் தியாகப் பரிசு

திருக்கழிப்பாலை திருத்தலத்தில் இஷ்ட பரிமாண நாகம் இயற்றிய தியாகம் குறித்தும் கஞ்சலங்கை தவளையின் தியாகம் குறித்தும் சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு தியாகத்தின் கோட்டையாகத் திகழும் திருக்கழிப்பாலையில் கூடிய இன்னுமோர் தியாகப் பரிசே சற்குரு வெங்கடராமன் அருளியதாகும். எட்டு கோடி அடியார்களுக்கு திருஅண்ணாமலையாரின் பிரசாதத்தை அளித்ததால் அவருக்கு அன்னபூரணி லோகத்திலிருந்து ஒரு பரிசு அளிக்கப்பட்டது அல்லவா ? அந்த பரிசின் மகிமையில் ஒரு பகுதியை தியாகத் தலமான திருக்கழிப்பாலை திருத்தலத்திற்கும் பகிர்ந்தளித்தார் சற்குரு. எனவே இத்தல நாதரை பால் அபிஷேகம் மூலம் வழிபடும் அடியார்களுக்கு ஈசன் மகுடமாகத் திகழும் பால் பிரசாதம் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். வேறு எந்த சிவத்தலத்திலும் பக்தர்கள் பெற முடியாத அரிய பிரசாதமே இந்த குருவருடத்தில் அடியார்கள் பெறும் அரிய பிரசாதமாகும். சுத்தமான பசும்பாலைத் தவிர மற்ற அபிஷேகங்கள் ஆவுடைக்கு நிறைவேற்றப்படுவதால் ஈசனுக்கு அளிக்கப்படும் பால் மட்டும் சிறிதளவு இஷ்ட பரிமாண நாக ரத்தினம் நிலவிய தியாக பரவெளியில் மிளிர அந்த சிவ பிரசாதத்தை பெறுவது என்றால் இதை விடச் சிறந்த குரு பிரசாதத்தை ஒருவர் கனவிலும் பெற முடியுமா என்று சற்றே எண்ணிப் பாருங்கள். குரு வருடத்தில் குருவருளால் கிட்டும் குரு பிரசாதம் !

ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரர்
திருக்கழிப்பாலை

2019ம் வருட புத்தாண்டு தரிசனமாக திருக்கழிப்பாலை ஸ்ரீபால்வண்ணநாதரின் தரிசனம் சித்தர்களால் புகழப்பட்டாலும் மூலத்தானத்தில் இறைவியும் இறைமூர்த்தியும் எழுந்தருளி இருக்கும் திருவீழிமிழலை, அவளிவநல்லூர் போன்ற திருத்தலங்களும் ஸ்ரீஅகத்திய பெருமான் திருமணக் காட்சி பெற்ற திருத்துறைப்பூண்டி போன்ற திருத்தலங்களும் குருவருளைப் பொழியும் திருத்தலங்களாகும். திருக்கழிப்பாலை திருத்தலம் மட்டுமல்லாது மேற்கூறிய தலங்களை தரிசனம் செய்யும் போதும் கடுக்கன் அணிந்து தரிசனம் செய்வதும் இறை மூர்த்திகளை, திருத்தலங்களை அஷ்ட நமஸ்கார முறையில் வணங்குவதும் கிடைத்தற்கரிய பேறாகும். பொதுவாக சூரியனும் சனி பகவானும் இணைந்திருத்தல் என்பது குடும்பத் தகராறுகள், நெருங்கிய உறவினர்களுக்குள் பகையை மூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால் மேற்கூறிய தலங்களில் பெறும் இறை தரிசனங்கள் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகின்றன. திருக்கழிப்பாலை திருத்தலத்தை வருடப் பிறப்பன்றே தரிசனம் செய்ய முடியாமல் போனாலும் 2019 வருடத்தில் மற்ற நாட்களிலாவது கடுக்கன் அணிந்து ஸ்ரீபால்வண்ணநாதரின் தரிசனம் பெறுதல் மிகவும் சிறப்பாகும். குடும்பப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கும், கணவன் மனைவி இடையே மன ஒற்றுமையைக் குலைக்கும் சக்திகள் இந்த ஆண்டில் பலமடைவதால் கூடியவரை குடும்பப் பிரச்னைகளில் மௌனம் சாதிப்பதே உகந்தது என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இது திருமணம் ஆகாதவர்களுக்கும் பொருந்தும் சித்தர்களின் அறிவுரையாகும். இந்த வருடம் முழுவதும் பால் அபிஷேகமும், பால் அபிஷேக பிரசாதமும் மிகவும் சிறப்புடையது. அரை ஆழாக்காக இருந்தாலும் சுத்தமான நாட்டுப் பால் தரும் ஜீவ சக்தியை, தெய்வீக அனுகிரகத்தை குடம் குடமாகக் கொட்டும் அயல்நாட்டுப் பசுக்களிலிருந்து பெறும் பால் அளிக்க முடியாது என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். எனவே ஸ்ரீபால்வண்ணநாதரின் அனுகிரகத்தை பூரணமாக பெறக் கூடிய இந்த குருவருள் திரளும் வருடத்திலாவது பசும்பாலின் முழுப் பலனையும் பெற்று அனுபவிக்கும்படி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறோம். பாலில் திரளும் 22 ஊட்டச் சத்துக்களையும், அமிர்த சக்திகளையும் பெறக் கூடிய வருடமே 2019 என்பதை இவ்வருட கிரக சஞ்சாரத்தை ஊன்றிக் கவனித்தால் விளங்கும். ஆனால், இவ்வரிய சிரஞ்சீவி சக்திகளை இறை மூர்த்திகளுக்கு நிகழ்த்தும் பசும்பால் அபிஷேகம் மூலம் மட்டுமே பெற முடியும் என்பதே உண்மை. மேலும் அக்னி கிரகமான செவ்வாயின் நேரடிப் பார்வையில் இந்த வருடப் பிறப்பு அமைவதால் தீர்க்க முடியாத பல அக்னி நோய்கள் சூரிய வெப்பத்தால் இவ்வருடம் தோன்ற இருப்பதால் அவைகளிலிருந்து விமோசனம் பெற நாட்டுப் பால் அபிஷேகமே நிவாரண மருந்தாக சித்தர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும் அபிஷேக தீர்த்தவழித் தாரையாக திருத்தலங்களில் விளங்கும் கோமுகம் அமைந்திருப்பதால் கோமுகம் மூலமாக, கோமுகங்களில் எழுந்தருளி இருக்கம் சதுராங்க தேவதைகளின் அனுகிரகத்துடன் மட்டுமே அபிஷேக பிரசாதங்களை பெற வேண்டும் என்ற விதி அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. விதி என்றால் அதற்கு விலக்கு என்ற ஒன்றும் உண்டே. விதியை மீறும்போதுதானே சுவையே பிறக்கிறது. எனவே இந்த கோமுக பிரசாதம் என்ற விதிக்கு விலக்காக அமைந்ததே ஸ்ரீபால்வண்ண நாதரின் சிரசில் பொலியும் பால் பிரசாதம். கோமுகம் என்ற “இடைத்தரகர்” இன்றி நேரடியாக பக்தர்கள் பெறக் கூடிய பிரசாதமே ஸ்ரீபால்வண்ண நாதரின், இஷ்டபரிமாண தேவதை நாகத்தின், கஞ்சலங்கையின் தியாகப் பரிசான பால் பிரசாதமாகும். இம்மூவர் உகந்தளிக்கும் பால் பிரசாதமே மூன்றின் சக்திகள் பொலியும் இப்புத்தாண்டாகும்.

மௌனாக்னியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருக்கழிப்பாலை

அக்னியில் பல வகை உண்டு. இதில் மௌனாக்னி என்ற உஷ்ண வகையைத் தோற்றுவிப்பவதே திருக்கழிப்பாலையில் பொலியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடு ஆகும். பொதுவாக வார்த்தையை விட ஆயிரம் மடங்கு சக்தி உடையது மௌனம், மௌனத்தை விட ஆயிரம் மடங்கு சக்தி உடையது மௌனாக்னி. இந்த மௌனாக்னியைப் பிரயோகம் செய்தவரே சற்குரு வெங்கடராமன். அந்த மௌனாக்னியில் புடம்போட்ட தங்கமாக மிளிரும் அடியார்கள் இன்றும் உண்டு. 2019ம் வருடம் முழுவதும் பிரயோகம் செய்வதற்கு அடியார்கள் தேர்ந்தெடுக்கும் மௌனாக்னியைப் பற்றிய ஞானத்தை அளிப்பவரே திருக்கழிப்பாலையில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவார். இத்தலத்தை அஷ்ட நமஸ்கார முறையிலும், அடிப் பிரதட்சிணமாகவும், ஓடியும் இவ்வாறாக மூன்று முறைகளில் தரிசனம் செய்து அடியார்கள் தங்கள் மௌன சக்திகளைப் பெருக்கிக் கொள்ள உதவும் தலமே திருக்கழிப்பாலை ஆகும். இத்தகைய பிரதட்சிணங்களால் மௌன சக்தியைப் பெருக்கிக் கொள்ள உதவுவதும் இந்த குரு சக்திகள் பொலியும் வருடமே. அக்னிக்கு பலவித வண்ணங்கள் உண்டு என்றாலும் நாம் இங்கு குறிப்பிடும் மௌனாக்னியின் வண்ணத்தால்தான் ஸ்ரீதட்சிணா மூர்த்தி அலங்கரிக்கப்பட்டுள்ளார் என்பதும் ஓர் இனிய இரகசியமாகும். பக்தர்கள் திருக்கழிப்பாலை மூர்த்திகளைத் தரிசனம் செய்து வழிபாடுகளை இயற்றும்போது தங்கள் வலது பக்க மூச்சுக் காற்றில் இந்த வண்ணத்தை தரிசிக்க முடிந்தால் அவர்களுடைய வழிபாடு சிறப்பாக அமைந்துள்ளது, அவர்களுக்கு மௌனாக்னியின் தரிசனம் கிடைத்துள்ளது என்று பொருளாகும். ஆனால், பலருக்கும் இந்த மௌனாக்னி இரகசியங்களை உணரும் வாய்ப்பில்லை என்றாலும் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய, “மந்திரமாவது நீறு ...” என்ற தேவாரப் பதிகத்தை இத்திருத்தலத்தில் பாடியவாறே திருத்தலத்தை வலம் வருதலால் மௌனக்னி சக்திகளை உடலும் உள்ளமும் பெறும் என்பதே உண்மை. இந்தப் பதிகத்தில் வரும், “முத்தி, பத்தி, சித்தி,” என்ற மூன்று வார்த்தைகளும் மௌனாக்னி சக்தியைத் தோற்றுவிக்க வல்லவையே என்று சித்தர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றே மூன்று தேவாரப் பதிக வார்த்தைகளே நாம் இதுவரை கேள்விப்படாத அக்னி சக்திகளை தோற்றுவிக்கும் வல்லமை பெற்றவை என்றால் முழுப் பதிகத்தையும் பாடுவதால் கிட்டும் பலன் என்னவோ ? சூரிய உதயத்திற்கு முன் பறித்த விருட்சி மலர்களை (இட்லிப்பூ) இத்தல தட்சிணா மூர்த்திக்கு அளித்து வழிபடுதலால் மௌனாக்னி சக்திகளை எளிதில் பெறலாம். சூரியனைக் கண்ட விருட்சி மலர்கள் இத்தகைய அமிர்த சக்திகளை கொண்டிருக்காது என்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று காலையில் பெறும் இத்தகைய மலர்களை திருக்கழிப்பாலை தட்சிணா மூர்த்திக்கு சாற்றுதலால் அற்புத பலன்களைப் பெறலாம். “திங்கள் கழியும் தீநாள் வினையைக் களையும் நன்னாளே,” என்று அகத்திய கிரந்தங்கள் மொழிவதன் இரகசியம் இதுவே. கழிப்பு ஆலை என்பதைச் சுருக்கிக் கூறுவதே கழிப்பாலை ஆகும். அதாவது ஒன்று, இரண்டு என்று கைகளால் செய்யப்படும் பொருட்கள் ஆயிரம், லட்சம் என்று ஆலையில்தானே தயாரிக்கப்படும். இவ்வாறு கர்ம வினைகள் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் பஸ்மமாகும் கழிப்பு ஆலையே திருக்கழிப்பாலை திருத்தலமாகும்.

சதுராக்னியில் விளையும் சாதுர்யம்

பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அவர்களின் கற்பைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்ததே. இத்தகைய நான்காம் இடம் கற்பின் சிகரமாக விளங்கும் மாதர்கள் இயற்கையாகவே சீதா தேவியைப் போல் கற்புக்கரசிகளாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக ராமர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தை சீதையின் ஜாதகமாகக் கொண்டு பார்த்தால் அதன் நான்காம் கற்புத் தானமான மேஷ ராசிக்கு அதிபதியாகத் திகழும் செவ்வாய் பகவான் ஜன்ம லக்னத்தில் உச்சம் பெற்று விளங்குகிறார். அதனால் ஜாதக ரீதியாகவே இத்தகைய சதுராக்னி சக்திகளைக் கொண்ட சீதா தேவி ராவணனை ஒரு நொடியில் தீக்கு இரையாக்கி இருக்க முடியும். சீதையின் கற்புக் கனல் பற்றிய இரகசியம் தெரிந்த உத்தமிகளில் ஒருத்தியே திரிசடை என்னும் அசோகவனம் காத்த அரக்கிகளில் ஒருத்தி ஆவாள். அதனால்தான் திரிசடை சீதாதேவியிடம் ஏன் இத்தகைய அற்புத கற்புக் கனல் சக்திகளைக் கொண்டிருந்தும் தவறான வார்த்தைகளைப் பேசும் ராவணனை அழிக்கவில்லை என்று கேட்டபோது அது தன் கணவரின் வில்லுக்கு இழுக்கு ஆகுமே என்று தெரிவித்தாளாம். ஒரு அரக்கனை தன்னுடைய கணவனுக்கு நிகராக வைத்துக் கூட நினைத்துப் பார்க்காத உத்தமியாகத் திகழ்ந்தவளே கற்புக்கரசி சீதா பிராட்டியார். அதனால் ராவணனை அழிக்காதது ராமனுக்கு இழுக்கு என்று சொல்லாமல் ராமனுடைய வில்லுக்கு இழுக்கு என்ற சீதையின் கற்புத் திறத்தை பறை சாற்றுவதே சதுராக்னி மகிமையாகும். அத்தகைய அக்னி சக்திகளை சாதாரண மானிடப் பெண்களுக்கும் அனுகிரகமாக தாரை வார்த்து அளிக்கவல்லவளே திருக்கழிப்பாலை சதுராக்னி துர்கா தேவி ஆவாள் என்றால் அன்னையின் கருணக்கு எல்லை ஏது ?

ஸ்ரீநடராஜ மூர்த்தி திருக்கழிப்பாலை

துர்கா தேவி இத்தகைய சதுராக்னி சக்திகளைப் பெற பல சதுர்யுகங்கள் நடராஜர் முன்னிலையில் தவமியற்றினாள் என்பதே உண்மை. அத்தகைய சதுராக்னி சக்திகளை அனுகிரகமாக அளிக்கவல்ல் ஸ்ரீநடராஜ மூர்த்தியையே நீங்கள் திருக்கழிப்பாலையில் தரிசனம் செய்கிறீர்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். எனவே சதுராக்னி தேவியின் மகிமையைப் பற்றி உணர வேண்டுமானால் இத்தல ஸ்ரீநடராஜ மூர்த்தியை வேண்டிப் பிரார்த்திப்பதும் துர்கையின் அக்னி சக்திகளைப் புரிந்து கொள்ள உதவும் வழிபாடாகும். இங்கு அருள் புரியும் நான்கு மூர்த்திகளும் ஒவ்வொரு விதமான அக்னி சக்திகளைப் பற்றிய அறிவைப் புகட்டுவர் என்பதே இந்த நடராஜ மூர்த்தங்களைப் பற்றிய எளிய விளக்கமாகும். சித்ரான்னங்களான புளியோதரை, தயிர்சாதம், தக்காளி சாதம் என்ற மூன்று சாதங்களை மட்டுமாவது இத்தலத்தில் அன்னதானமாக இயற்றுதலால் சதுராக்னி சக்திளைப் புரிந்து கொள்ளும் எளிய வழிபாடாக அவை அமையும். சதுரம் என்பதற்கு குளிர்ச்சி என்ற பொருளும் உண்டு. சதுராக்னி என்றால் குளிர்ச்சியான அக்னி என்று பொருள். எப்படி சூடான ஒரு பொருள் குளிர்ச்சி தன்மையுடன் இருக்க முடியும் ? 100 டிகிரி வெப்பத்தில் பூலோகத்தில் நீர் கொதிக்கும் என்பது உண்மையே. ஆனால் செவ்வாய் கிரகத்தின் சாதாரண உஷ்ண நிலையே 5000 டிகிரி என்றால் அந்த கிரகத்திற்கு 100 டிகிரி என்பது குளிர்ச்சியைத் தானே ஊட்டும். இதை விடச் சிக்கலானதே சதுராக்னியின் தன்மை. தன் பார்வையாலேயே ராவணனை எரித்து விடும் தன்மை உடையவள் சீதா தேவி. ஆனால் ராமருடன் அவள் எப்படிச் சேர்ந்திருந்தாள். அதுவே சதுராக்னியின் தன்மை. அதுவே கற்புக்கனல், எதிரியை பஸ்மமாக்கும் கனல் கணவனுக்கு வீசு தென்றலாய்ப் பொழிகிறது. இக்காரணம் பற்றியே இதைத் தீ என்று சொல்லாமல் கனல் என்று கூறினார்கள் பெரியோர்கள். தீக்கு பெரியவர், குழந்தை என்ற வேறுபாடு தெரியாது. கண்ணகி மதுரையை அழித்ததும் இத்தகைய கற்புக் கனல் கொண்டுதான். அதனால்தான் அது குழந்தைகள், பசுக்கள், பெண்களை விடுத்து மற்றவர்களை பஸ்மம் செய்தது.

கற்புக் கனல் என்னும் நெருப்பு சக்தியானது இவ்வாறு குறிப்பிட்டவர்களை மட்டும் தாக்கக் கூடியது என்றால் எம்பெருமானின் வசந்தம் என்னும் காற்று சக்தி இத்தகைய தன்மைகளுடன் பொலியும் என்பது உண்மைதானே. தீயில் பலவகை இருப்பது போலவே வசந்தம் என்னும் காற்றிலும் பல தன்மைகள் உண்டு. இவற்றில் தில்லை வசந்தம் என்பது சிதம்பரம் திருத்தலத்தில் வீசுவது. இதன் தன்மையை அறிந்து உணர்ந்த தேவாரப் பெரியோர்கள் அந்தந்த காலத்தில் வீசும் தில்லை வசந்தத்தை உணர்ந்து அதன் பலன்களை மக்களுக்கும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அர்ப்பணிப்பதற்காகவே ஒவ்வொரு இறை அடியாரும் ஒவ்வொரு வாசல் வழியாக தில்லை அம்பலத்தினுள் பிரவேசித்து அங்கு வீசிய தில்லை வசந்தத்தை மக்கள் ஏற்கும் சக்தியாக மாற்றி அருள்புரிந்தார்கள் என்பதே நாம் அவர்களின் தியாகத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அற்புதமாகும். இவ்வாறு பித்ருக்களின் ஆசியை தம் அடியார்களுக்கு வழங்குவதையே பிரதானமாகக் கொண்ட நம் சற்குரு வெங்கடராமனும் பித்ருக்களுக்கு உரிய தெற்கு வாசல் வழியாக எழுந்தருளினார்கள் என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இங்குள்ள தில்லை காடுகளின் தரிசனத்தை திருக்கழிப்பாலையில் வழிபாடுகளை இயற்றுவதற்கு முன்னும் பின்னரும் தரிசனம் செய்வதாலும், சிதம்பர நடராஜப் பெருமானின் தரிசனத்தை தொடர்ந்து பெறுவதாலும் அல்லது தேவாரப் பெரியோர்களைப் போல தொடர்ந்து ஒவ்வொரு வாசல் வழியாகச் சென்று தில்லை நாதனை தரிசனம் செய்வதாலும் தில்லைக் காடுகளின் மகிமையைப் பற்றியும், திருக்கழிப்பாலையின் தரிசன மகிமையைப் பற்றியும் அனைத்திற்கும் மேலாக இத்தனை தெய்வீகப் பரிசுகளை எதிர்பார்ப்பு ஏதுமின்றி அருளும் சற்குருவின் பெருமை பற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

தில்லை நாதனின் திருக்கூத்து

ஒலி ஒளி இரகசியங்கள் பூரணமாகப் பொலிவதே திருக்கழிப்பாலை திருத்தலமாகும். திருக்கழிப்பாலை இரகசியம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னர் சிதம்பரம் இரகசியம் பற்றிய உண்மைகளை உணர்ந்திருக்க வேண்டியது அவசியமே. “ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான்,” என்று எம்பெருமானின் கூத்து இரகசியத்தைப் பற்றி வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். ஆனால் சாதாரண பக்தர்கள் இத்தகைய ஒலி ஒளி இரகசியங்களை அறியும் சாத்தியக் கூறுகள் இல்லாததால் எம்பெருமானே தன் உத்தம அடியாரான ஸ்ரீஅகத்திய பெருமான் மூலம் இந்த ஒலி ஒளி சக்திகளை பக்தர்களுக்கு அனுகிரக சக்திகளாக விநியோகித்து அருள்புரிகின்றார் என்பதே உண்மை. உதாரணமாக திருக்கோளக்குடியில் இறை மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்படும் நைவேத்ய சக்தியானது ஒளிப் பரிமாணம் கொண்டு பிரபஞ்சத்தில் நிலவும் விந்தையை இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் செவலூர் திருத்தல விடியலும் திருக்கோளக்குடி நைவேத்ய ஆராதனை ஒலியும் புலப்படுத்துகின்றன. இந்த இரசியங்களை உணரவல்லவர்களே ஒலி ஒளி பரிமாண இரகசியங்களை உணர முடியும். இதற்காகவே திருகோளக்குடியில் நிலவும் பூமி அந்தர வாஸ்து சுந்தர சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள செவலூர் திருத்தல மூர்த்திகளின் தரிசனம் உதவி செய்யும் என்று சித்தர்கள் அருள்கின்றனர். இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய தெய்வீக சக்திகளை தொட்டுக் காட்டுவதும் சித்தப் பெருமக்களின் திருப்பணிகளில் ஒன்று என்றால் அந்த சித்த ஈசனையே குருவாகப் பெற்றிருப்பது எத்தகைய பெரும்பாக்கியம் என்பதை அடியார்கள் உணர முடியும்.

செவலூர் விடியல்

இந்த ஒலி ஒளி பரிமாண இரகசியங்களை உலகத்தவர்க்கு உணர்த்தவே கஞ்சலங்கை தவளையும், இஷ்ட பரிமாண தேவதையும், ஸ்ரீஅகத்திய பெருமானும் இறைவனின் திருக்கூத்தில் பங்கேற்கின்றனர். இந்தச் சுவையான திருக்கூத்தை பக்தர்கள் உணரந்து கொள்ள உதவும் திருத்தலமே திருக்கழிப்பாலை ஆகும். ஸ்ரீஅகத்திய பெருமான் அணிந்துள்ள எட்டு கோணங்கள் உள்ள கடுக்கன் எட்டு திசைகளில் உருவாகும் சப்தங்களை மாற்றும் ஒலிப் பெருக்கியாகவும் அந்த கடுக்கன் நடுவில் அமைந்துள்ள பால்வண்ண மாணிக்கமானது ஒளிப் பெருக்கியாகவும் செயல்பட்டு இறை அடியார்களுக்கு அனுகிரக சக்திகளை வாரி வழங்குகின்றன என்பதே உண்மை. காதில்லா ஆதிசேஷ பெருமான் சிதம்பர நடராஜ பெருமான் நாட்டிய ஒலி சக்திகளை கிரகித்து தில்லை காடுகளில் பொலியும் புன்னைத் தென்றல் மூலம் அனுப்ப அந்த ஒலி சக்திகளை கஞ்சலங்கை தவளைகள் தங்கள் பா பு ஒலியால் பீஜாட்சர சக்தியாக மாற்றி நாக தேவதையின் உணவாக அர்ப்பணிக்க அந்த ஒலி பீஜாட்சர சக்திகளை ஒளி சக்தியாக மாற்றி, ஒளிப் பரிமாணமாக இறை மூர்த்தியிடம் நாக மூர்த்திகள் அர்ப்பணிக்கின்றன என்பதே நாம் திருக்கழிப்பாலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக இரகசியங்களாகும். சசபிந்து மகரிஷி என சிவபெருமானின் சிரசில் குடிகொண்ட நாகம், கார்கோடகன் என பல மைல்கள் விரிந்து பரந்த நாகம், பூ நாகம் என்ற விரல் அளவே உடைய நாகம் என்று நாகங்களில் பல விதங்கள் உண்டு. அவற்றில் இஷ்ட பரிமாண நாகம் என்பவை தாங்கள் விரும்பிய உருவத்தை எடுக்கவல்ல நாகங்கள் என்றாலும் திருக்கழிப்பாலையில் திகழும் நாகம் 18 அடி கொண்டு விளங்குவதற்கு பல தெய்வீக காரணங்கள் உண்டு. ஆயிரம் ஆண்டிற்கு ஒரு அடி சுருங்கும் இந்த நாக தேவதையானது தான் இறுதியில் மாணிக்கத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்கும்போது ஒரு அடியாகத் திகழ்ந்தால்தான் தன்னுடைய பணியை நிறைவேற்ற முடியும் என்பதால் இந்த நீள அளவைக் கொண்டுள்ளது. ஸ்ரீஅகத்திய பிரான் எந்த உருவில் திகழ முடியும் என்றாலும் ஐந்தடியில் நடமாடி இந்த பிரபஞ்சத்தில் காரியங்களை நிகழ்த்தி வந்தார் என்பது உண்மையே. ஸ்ரீஅகத்தியர் மரபில் வந்த சற்குரு வெங்கடராமன் அவர்களும் ஐந்தடியில் திகழ்ந்து இயற்றிய சாதனைகள் நீங்கள் அறிந்ததே. உயரம் குறையக் குறைய இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதே நேரம் தூரம் பற்றிய அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய விளக்கமாகும்.

திருக்கழிப்பாலை

நாம் காணும் பரந்த இப்பாரத பூமியில் எண்ணற்ற திருத்தலங்கள் விளங்கினாலும் ஒரு ஆலயத்தின் அருள்சக்திகள் மற்ற திருத்தலங்கள் அளிக்கும் யோக சக்திகளுக்கு நிச்சயம் மாறுபட்டிருக்கும். இம்முறையில் திருக்கழிப்பாலை திருத்தலத்தில் பொலியும் யோக சக்திகளே ஜோதி கலை யோகம் என்ற அற்புத சக்திகள் ஆகும். இந்த ஜோதி கலை யோகத்தில் திகழும் மகான்கள் ஓரிடத்தில் அமர்ந்தால் அவர்களைச் சுற்றி ஒளி வெள்ளமாய் பரவும். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டாலும் அந்த ஒளி அலைகள் குறித்த நேரத்திற்கு யோகம் கொண்டு அவ்விடத்தில் நிலை பெற்றிருக்கும். நொடிக்கு மூன்று லட்சம் மைல்கள் செல்லும் சக்தி உள்ள ஒலி அலைகள் ஓரிடத்தில் நிலைபெறும் என்றால் அத்தகைய சக்தி உள்ள மகான்களின் ஒளி ஆற்றலை எப்படி விவரிக்க முடியும். அத்தகைய சக்தி பெற்ற மகான்களின் தரிசனம் பெற்ற அடியார்கள் நம் ஆஸ்ரமத்தில் உண்டு என்பதே நம் ஆஸ்ரமத்தின் பெருமை. உதாரணத்திற்கு ஜோதி கலை யோக சக்திகளுடன் திகழும் புகைப்படங்களையே திருக்கழிப்பாலை திருத்தலப் படங்களாக இங்கு தரிசனம் செய்கிறீர்கள். எம்பெருமானின் சிரசில் பொலியும் மூன்றாம் பிறைச் சந்திரனும் இத்தகைய ஜோதி கலையில் பொலிவதால்தான் திருக்கழிப்பாலை திருத்தலத்தை மூன்றாம் பிறை சந்திரன் மிளிரும் நாட்களில் தரிசனம் செய்வதால் இந்த ஜோதி கலை யோக சக்திகளை எளிதில் பெறலாம் என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாய்ப் பிரகாசிக்கும் மூலவரின் சிரசு பாகம் மூன்றாம் பிறைச் சந்திரனை ஒத்திருப்பது இத்தகைய அம்ருத சக்திகளை எளிதில் தரிசனம் செய்யும் அடியார்களுக்கு வழங்குவதற்காகவும் உள்ள ஒரு ஏற்பாடாகும்.

இவற்றில் இன்னும் கோடி கோடி இரகசியங்கள் உண்டு என்பதும் உண்மை. பொதுவாக ஜோதி கலை யோகத்தில் வல்லவர்களே சிவலிங்க உற்பவம் என்ற நிகழ்ச்சி மூலம் சிவலிங்கத்தை தங்கள் உடலில் உருவாக்கி அதை தங்கள் வாய் வழியாக சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் முன்னிலையில் வெளிக் கொணர்வர். இதை சத்ய சாய் பாபா போன்ற மகான்கள், சற்குரு வெங்கடராமன் போன்றோர் அரிதாக இவ்வாறு சுயம்பு லிங்க மூர்த்திகளை வழிபாட்டிற்கு வழங்கினாலும் முருக வழிபாட்டின் மகிமையை உணர்த்த சில மகான்கள் பெருமளவில் இத்தகைய சிவலிங்கங்களை உற்பவிப்பதும் உண்டு. அத்தகைய ஒரு மகானே சமீப காலம் வரை மக்களுக்கு விராலிமலை அருகே வழிகாட்டி வந்தார். முருகப் பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண் ஜோதியிலிருந்து தோன்றியதால் இத்தகைய சிவலிங்கங்கள் சுத்தமான ஆண் தத்துவத்தில் மிளிரும் என்பதே இவ்வாறு உற்பவிக்கப்பட்ட லிங்கங்களின் தனிச் சிறப்பாகும். விராலிமலை முருகப் பெருமானின் தரிசனமும் வழிபாடும் ஆண் சக்திகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்து குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் திருத்தலமாக விளங்குவதன் காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த ஜோதி கலை யோக சக்தியை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் பக்தர்களுக்கு விநியோகம் செய்து வருபவரே மாதா அமிர்தானந்தா மயி ஆவார். எனவே அமிர்தா அன்னையின் தரிசனம் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் ஜோதியாக விளங்குவதில் வியப்பொன்றும் இல்லையே ?

ஸ்ரீபைரவர் திருக்கழிப்பாலை

இத்தகைய ஜோதி கலையை சாதாரண மக்களும் பெற முடியுமா என்ற கேள்வி எழலாம். அனைத்து யோகங்களிலும் வல்லவரான சிவபெருமான் யோக சக்திகளை தன்னிடம் வைத்திருப்பதே மற்றவர்களுக்கு வழங்குவதற்காகத்தானே ? ஆனால், பக்தர்கள் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாது வாழ்கின்றனர். இவ்வாறு ஜோதி கலை யோக சக்தியை விரும்புபவர்கள் ஜோதி சக்திகள் மிளிரும் மாலை கதிரவனின் ஒளிகளை சற்குரு காட்டும் குறித்த கால பைரவ யோக நேரத்தில் கேதார்நாத் போன்ற திருத்தலங்களில் தரிசனம் செய்யலாம். அத்தகைய யோக சக்திகளை தரிசனம் செய்த அடியார்கள் இன்றும் நம்மிடையே உள்ளதால் அவர்களை நாடி இந்த ஒலி ஒளி யோக விளக்கங்களை எளிதில் பெறலாம். இது அனைவருக்கும் சாத்தியம் கிடையாது என்பதால் இவ்வாறு ஜோதி கலை யோக சக்திகள் செறிந்த ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கால பைரவ அஷ்டக துதியை தினமும் மாலை சூரியன் மறையும் நேரத்தில் குறைந்தது எட்டு முறையாவது திருக்கழிப்பாலை திருத்தலத்தில் ஸ்ரீகாலபைரவரின் முன் ஓதுதல் சிறப்பாகும். அஷ்டகம் என்பது எட்டு சக்திகளை உடைய துதி என்பதும் எட்டு கோணங்கள் உடைய கடுக்கன்களை ஸ்ரீஅகத்திய பெருமான் அணிந்து திருக்கழிப்பாலை மகிமையை உலகிற்கு இன்றும் பரப்பி வருகிறார் என்பதும் இந்த வழிபாட்டின் பின்னணியாக அமையும் எளிய விளக்கமாகும். கால பைரவ லோகத்தில் விளங்கும் இத்தகைய ஜோதி கலை யோக சக்திகளை கிரகித்து இறை அடியார்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீஆதிசங்கரரையே சாரும். ஒலி ஒளி யோகத்தில் சிறந்து விளங்க உதவி செய்பவையும் இத்தகைய வழிபாடுகள் ஆகும். பொதுவாக, யோக வழிபாடுகளை மேற்கொள்பவர்கள் வெறுந் தரையில் அமராது மான் தோல், தர்பைபாய், பட்டுத் துணி இவற்றின் மீது அமர்ந்து தியானம், வழிபாடுகளை இயற்றுவதால் அவர்களுடைய யோக சக்திகள் தரைக்கு செல்லாது அடியார்களின் உடலிலியே தங்கும் என்பது மரபு. பகவத் கீதையும் இத்தகைய முறையில் அமைந்த வழிபாடுகளை வலியுறுத்துகிறது. ஆனால் வானமே கூரையாகவும் பூமியே இல்லமாகவும் கொண்ட பைராகிகள் என் செய்வது ? அவர்கள் இவ்வாறு இயற்கையாக பலாச பூக்கள் என்ற காட்டுத்தீ மலர்கள் விரவிய நிலங்களில் அமர்ந்து தியானம் போன்ற வழிபாடுகளை மேற்கொள்வதால் அவர்கள் தியான சக்திகள் மேம்படும். இதைக் குறிப்பதாகவே இங்கு ஸ்ரீபைரவ மூர்த்திக்கு பலாச ஆசனம் அளிக்கப்பட்டுள்ளது. நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நாள், கிழமை, மணி என்ற கால பாகுபாட்டையும் நேரம் என்பது விதியையும் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு திருக்கழிப்பாலை பைரவ மூர்த்தியைப் போல வாகனமில்லாது அருள்புரியும் பைரவ மூர்த்திகள் இயற்கையாகவே கால நேர பேதத்தைக் கடக்க உதவும் இறை மூர்த்திகளாகத் துலங்குவர். விதியையும் கடக்க வல்ல இத்தகைய பைரவ மூர்த்திகளை 2019ம் ஆண்டு தரிசனம் செய்தல் மிகவும் விசேஷமானதாகும். குருவருளால் மட்டுமே இத்தகைய மூர்த்திகளைப் பற்றிய ஞானத்தை எளிதில் பெறமுடியும் என்பதால் இவ்வருடம் வாகனமில்லாது அருள்புரியும் பைரவ மூர்த்தியின் வழிபாடு சிறப்பான பலன்களை நல்கும். பொதுவாக எல்லா இறை மூர்த்திகளும் வாகனத்துடன் திகழும்போது இவ்வாறு ஒரு இறை மூர்த்தி வாகனமில்லாது அருள்புரிவதற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா ? இந்த ஆண்டு அந்த காரணத்தைப் பற்றி ஆத்ம விசாரம் செய்வதன் மூலம் அவரவர் நிலையைப் பொறுத்து பல பிறவிகளையே கடந்து விடலாம் என்பது இத்தகைய வாகனமில்லா பைரவ மூர்த்திகளின் தரிசனமும் ஆத்ம விசார மகிமையும் ஆகும்.

உறங்காவில்லியின் உறங்கா நிலை

ராமானுஜரின் முதன்மைச் சீடராக திகழ்ந்தவனே உறங்காவில்லி என்ற மல்யுத்த வீரனாவான். தற்காலத்தில் பலரும் உறக்கம் என்பது மனிதனுக்குத் தேவையான ஒன்று என்ற எண்ணத்தில் தூங்கியே பொழுதைக் கழிக்கின்றனர். ஆனால் ராமானுஜர் போன்று மனிதனின் முழுமையான ஆயுளான 120 வருடங்கள் வாழ்ந்த மகான்கள் கூட தங்கள் வாழ்நாளில் உறங்கியதே கிடையாது என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மையாகும். ராமானுஜரின் வரலாறு மட்டுமல்லாது அவரின் சீடரான உறங்காவில்லியின் வரலாறு சுட்டிக்காட்டும் பாடமும் இதுவாகும். உறங்க வேண்டிய நேரத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு கொள்வது என்பதில் தவறு கிடையாது. ஆனால் படுத்தவாறே இரவில் நிகழ்த்த வேண்டிய பூஜைகளை நிறைவேற்றியாக வேண்டும். இவ்வாறு இரவு பூஜைகளை நிறைவேற்றாது காலத்தைக் கழித்தவர்களுக்கு குருவருளால் பிராயசித்தம் கிட்டும் வருடமே இது என்பதால் முடிந்த மட்டும் படுத்தவுடன் உறங்குதல் என்பதைத் தவிர்த்து முடிந்த மட்டும் படுக்கையில் படுத்தவாறே ராத்திரி சூக்தம், தேவாரப் பதிகங்கள் குறிப்பாக திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய இடர்களையும் பதிகம் போன்றவற்றை மனதிற்குள் ஜபித்து இறை சக்தியைப் பெருக்கிக் கொள்ளுதல் சிறப்பாகும்.

பெருமாளின் விழியழகின் முன்
எங்கள் மருண்ட பார்வையும்
கலை இழந்தனவே

முட்கள் பன்றிக்கு அழகா
பன்றி முட்களுக்கு ஆதரவா?

கால பேதத்தைக் கடந்து நின்று அறிதுயில் சயனம் கொண்ட பெருமாள் நின்ற நிலையில் அருள்புரிவதே திருப்பதி திருத்தலமாகும். சயன நிலையில் கால நேரத்தை கடந்த யோக மூர்த்தியாக அருள்புரிவதே திருஅண்ணாமலை திருத்தலமாகும். இவ்விரண்டு யோக நிலைகளை குறிப்பதாகவே இங்கு நீங்கள் காணும் சித்திரங்கள் அமைந்துள்ளன. உறங்காவில்லியின் வரலாற்றை அறிந்து கொண்டால் இந்த யோகநிலைகளின் மகத்துவம் புரியவரும். மல்யுத்த வீரனான உறங்காவில்லி அழகில் மயங்கி திருமால் பவனி சமயத்தில் கூட இறை தரிசனம் பெறாது தன் மனைவியின் அழகில் மயங்கி அவளுக்கு சாமரம் வீசியவன். அவன் ராமானுஜரின் அனுகிரகத்தால் பெருமாளின் திருவிழி அழகில் மயங்கி அன்று முதல் ராமானுஜரின் முதன்மைச் சீடராகத் திகழ்ந்தான். ஆனால் ராமானுஜரின் சீடர்களுள் ஒரு இல்லறவாசிக்கு ராமானுஜர் கொடுத்த முக்கியத்துவம் பற்றி சர்ச்சை ஏற்பட்டதால் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி சீடர்களில் சிலரை இரவில் அனுப்பி உறங்காவில்லியின் மனைவி அணிந்திருந்த நகைகளை களவாடி வருமாறு கூறினார். ராமானுஜரின் சீடர்களைக் கண்ட உறங்காவில்லியின் மனைவி அவர்கள் தன்னுடைய ஒரு பக்கத்து நகைகளைத் திருடும் வரை உறங்குவது போல் நடித்து அவர்கள் தன்னுடைய மறுபக்கத்து நகைகளையும் திருடுவதற்கு ஏதுவாக புரண்டு படுத்தபோது ராமானுஜரின் சீடர்கள் தப்பிப்பதற்காக உறங்காவில்லியின் வீட்டிலிருந்து ஓடி விட்டார்கள். மறுநாள் காலை விஷயம் அறிந்த உறங்காவில்லி தன்னுடைய மனைவியின் மீதி நகைகளை ஒரு துண்டில் முடிந்து ராமானுஜரிடம் குரு காணிக்கையாக சமர்ப்பித்தான். “தங்களுக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை. தங்களுடைய சீடர்கள் அடியேனுடைய மனைவியின் ஒரு பக்கத்து நகைகளை மட்டும் பெற்றுக் கொண்டு சென்று விட்டனர். பொறுமையில்லாத என் மனைவியின் செயலால் நேர்ந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன். இப்போது அவளின் மற்ற நகைகளையும் கொண்டு வந்துள்ளேன். அவற்றைத் தாங்கள் பெருமனது கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று கூறி ராமானுஜரிடம் சமர்ப்பித்தான். எனவே இவ்வாறு உறங்காது இறைவனை வேண்டிய மனதுடன் இரவுப் பொழுதைக் கழித்தது உறங்காவில்லி மட்டுமல்ல அவனுடைய அருமை மனைவியும் இரவுப் பொழுதை இறைவனுக்காக அர்ப்பணித்த உத்தமியே என்பதை உணர்த்துவதே மேற்கண்ட நிகழ்ச்சியாகும். இந்த உண்மையை உணர்த்துவதும் இவ்வருட இரவு நேர வழிபாடாகும்.

கண் நிறைந்தானா கண் நிறைத்தானா ?

மலையடிப்பட்டி திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீகண்நிறைந்த பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். ஸ்ரீகண்நிறைத்த பெருமாள் என்ற திருநாமமும் இவருக்கு உரித்தானதே. இவ்வாறு கண் நிறைந்த பெருமாளின் திருக்கண்கள் எத்தகைய சக்தியால் நிறைந்தன என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுமல்லவா ? ஆம், பெருமாளின் திருக்கண்கள் சிவம் என்ற இறை சக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் நிறையாது, பூரணம் பெறாது என்ற உண்மையை உணர்த்துவதே மலையடிப்பட்டி திருத்தல மகிமையாகும்.

இவ்வாறு பெருமாள் மூர்த்தி சிவ பெருமானை தன் திருக்கண்களில் நிறைத்துக் கொள்ள தவம் இயற்றிய பல திருத்தலங்களுள் சிதம்பரம் அருகில் உள்ள சிவபுரி திருத்தலமும் ஒன்றாகும். கும்பகோணம் அருகில் உள்ள சிவபுரம் என்ற திருத்தலம் வேறு. சிவபுரி தலத்திலுள்ள அஸ்வத்த விருட்சம் என்னும் அரச மரமே பெருமாள் தவமியற்றிய கோலத்தை கலியுக மக்களுக்கு உணர்த்துவதாகும். தினமும் சிவபுரி ஈசனை தரிசனம் செய்யும் பாஸ்கர மூர்த்தியானவர் முதலில் இத்திருக்குள தீர்த்தத்தை தரிசனம் செய்து தன் நேத்ரங்களை சுத்தி செய்து கொண்ட பின்னர் அரச மரமாக திருக்குளக் கரையில் எழுந்தருளி உள்ள பெருமாளைப் பிரார்த்தனை செய்து சிவபுர பெருமானை தரிசனம் செய்யும் சிவபுரி சக்திகளைப் பெற்று அந்த சக்திகளை தன் கண்களில் “புரிந்து கொண்டு” மூலவரை தரிசனம் செய்கிறார் என்பதே சிவபுரி ஈசனின் மகாத்மியாகும். சூரிய உதயத்திற்கு முன் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதலால் பக்தர்கள்கள் நல்ல கண் பார்வையைப் பெறுவதுடன் வயதான காலத்திலும் கண்ணாடி போடாத நல்ல கண் பார்வையுடன் திகழ்வார்கள். அவர்கள் மற்றவர்களை நம்பி வாழாத சுதந்தர வாழ்வையும் பெருமாள் மூர்த்தி அளிப்பார் என்பது உண்மையே.

கண்நிறைந்த பெருமாள் சிவபுரி

முப்புரி, சிவபுரி என்று இறை சக்திகளை அணிந்து கொள்ளும் முறை பற்றி பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். புரிதல் என்றால் அணிந்து கொள்தல் என்று மேலோட்டமாக கூறினாலும் புரிதல் உணர்ந்தால் அனைத்தையும் உணர்ந்து கொள்தலே ஆகும் என்பதால்தான் எதையும் புரிந்து கொள்ளுமாறு பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிவபுரி என்றால் அனைத்திற்கும் தலைவனான இறைவனைப் புரிந்து கொள்ள உதவும் தலமே சிவபுரி ஆகும். இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள இத்திருத்தல குளக்கரையில் அரச மரமாக எழுந்தருளி அனைவரும் சிவபெருமானின் மகிமையை பரிந்து கொள்ள அருள்சுரக்கும் மூர்த்தியாக விளங்குகிறார் கண் நிறைந்த பெருமாள். பெருமாளின் அழகான கண்களுக்கு மேலும் அழகூட்டுவது அவர்தம் கண்களில் நிறைந்த சிவசொரூபமே என்ற உண்மையை உணர்த்துவதே சிவபுரி தலத்தின் மகிமையாகும். பெருமாளின் இந்த நிரந்தர சேவையைப் புரிந்து கொண்டவர்களே சிவத்தைப் புரிந்து கொள்ள முடியும், உணர்ந்து கொள்ள முடியும். அதனால்தான் அருஉருவமாக எழுந்தருளி உள்ள சிவசக்தியைப் புரிய வைப்பதற்காக மனித உருவத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள் மூர்த்தியை வணங்கும் வழிபாடு தோன்றியுள்ளது என்பதே காலவர்த்தமான வழிபாடு உணர்த்தும் உண்மையாகும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்பதைப் போல கண்கள் ஒளியுடன் இருக்கும்போதே சூரிய வழிபாடுகளை மேற்கொண்டு வந்தால்தான் வயதான காலத்தில் உணவும், பழக்க வழக்கங்களும் சீரழிந்து போனாலும் சிறுவயதில் மேற்கொள்ளும் நல்ல பழக்க வழக்கங்கள் காரணமாக கண்பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைப் போல தக்க சற்குரு கிடைத்த காலத்திலேயே இறைவனைப் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள உதவுவதும் 2019 ஆண்டு ஆகும். உதாரணமாக, நாம் பலமுறை எடுத்துக் கூறியும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஇடுக்குப் பிள்ளையார் சன்னதியில் கிரிவலப் பாதையில் இருந்து இடுக்குப் பிள்ளயார் சன்னதியில் உள்ள நுழைந்து வெளியே திருஅண்ணாமலையாரைப் பார்த்தவாறு வரும்போதுதான் ஸ்ரீஇடைக்காடர் இச்சன்னதியின் கீழ்ப் பகுதியில் பிரதிஷ்டை செய்த எந்திரங்கள் நம் உடலில் சரியான முறையில் உராய ஏதுவாகும். அதனால் நிச்சயம் பூமியில் நாம் பிறந்து அல்லலுற வேண்டிய ஒரு பிறவி குறையும் என்பது உண்மை.

ஸ்ரீவிநாயக மூர்த்தி திருக்கழிப்பாலை

அதே போல பாண்டிச்சேரி சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடேசாகிப் ஜீவ சமாதியை தரிசனம் செய்து வழிபாடு இயற்றுதலால் தீராத பல வியாதிகள் நயம் பெறுகின்றன. ஆனால் பலரும் இத்தலத்தை இட வலமாக வந்து தங்கள் வியாதியைப் பெருக்கிக் கொள்வதையே பார்க்கிறோம். முதலில் இடம் வலம் என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடியாரம் க்ளாக்வைசாக சுற்றுகிறது என்று கூறுகிறோம். அதாவது கடியாரத்தின் திசைக்கு ஏற்ப அதன் முட்கள் சுழலுவதே கடியார திசையாகும். அது போல வலம், இடம் என்னும் திசைகள் இறைவனை வைத்தே முடிவு செய்யப்பட வேண்டியவை. திருத்தலங்களை, ஜீவ சமாதிகளை வலம் வர வேண்டும் என்று கூறும்போது இறைவனுக்கு வலத்திசையில் சுற்ற ஆரம்பித்து இறைவனுக்கு இடத் திசையில் வலத்தை, ஆலயம், மலை சுற்றுவதை, பிரதட்சிணத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது பொருள். ஆனால், நவகிரகங்களை வலம் வரும்போது ஏழு சுற்றுகள் வலமாகவும் இதற்கு எதிர்மாறாக அதாவது இடம் வலமாக இரண்டு சுற்றுகளை ராகு கேது மூர்த்திகளுக்கு என்று ஒதுக்க வேண்டும் என்பது பெரியோர் உரை. இங்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். அப்படியானால் எந்த மலையையும் திருத்தலத்தையும் இடம் வலமாக வரக் கூடாதா ? நிச்சயமாக இடம் வலமாக வரலாம். ஆனால் இந்த மாறிய சுற்று முறைகளை சிபாரிசு செய்யும் உரிமை பக்தர்களின் பிறப்பு, பூர்வ ஜன்ம இரகசியங்கள் பற்றி நன்றாகக் தெரிந்த சற்குரு ஒருவருக்கு மட்டுமே உண்டு என்பதே உண்மை. இவ்விஷயத்தில் சந்தேகம் உள்ளவர்கள் சற்குரு வெங்கடராமன் அவர்கள் நமது ஆஸ்ரமத்தின் கொள்கைகளாக வழங்கியுள்ள 15 கோட்பாடுகளைப் படித்து ஆத்ம விசாரம் செய்து முடிவு செய்து கொள்ளலாம். சூரபத்மன் முருகப் பெருமானை இடம் வலமாக சுற்றி வந்து வணங்கினான் என்று சற்குரு வெங்கடராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே சூரபத்மனைப் போல தவ வலிமை உள்ளவர்களே இறைவனை இடம் வலமாக வரலாம் என்று தெளிவாகத் தெரிகின்றது அல்லவா ? மற்றவர்கள் சற்குருவின் ஆலோசனைப்படி நடத்தலே உத்தமமானதாகும். ஒரு விஷயத்தில் எது சரியான முறை என்று தெரியாதபோது பொதுவான முறையான வலம் இடமாக வலம் வருதலைத் தேர்ந்தெடுத்தலே சிறப்பாகும். ஒருவேளை அது தவறாக இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது சற்குருவின் கடமை அல்லவா ? ஒருமுறை சற்குரு வெங்கடராமன் காசியிலுள்ள ஹரிச்சந்திரா காட்டிற்கு விஜயம் செய்தார்கள். அப்போது அங்கு ஒரு பைராகி வந்திருந்தார். பைராகி என்பவர்கள் தங்களை விட உயரமான சூலங்களை கையில் தாங்கி நிர்வாணமாய், பார்த்தாலே அச்சுறுத்தும் கோலத்தில் திகழ்பவர்கள். அந்த பைராகியின் சீடராக இருந்த ஒரு சிறு வயது பையன் ஒரு இயந்திரத்தை தரையில் வரைந்து அதில் பல வண்ணங்களைத் தீட்டி ஒவ்வொரு மூலையிலும் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக் கொண்டிருந்தான். அந்த பைராகியுடன் பத்து பதினைந்து வருடங்கள் சஞ்சாரம் செய்து அற்புதமாக குருசேவை இயற்றியவன். இருந்தாலும் ஏதோ தவறுதலாக வைக்கக் கூடாத இடத்தில் அந்த யந்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து விட்டான். அவ்வளவுதான் அதைப் பார்த்த பைராகிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்து விட்டது. அவருடைய கண்கள் கோவைப் பழமாக சிவக்க உதடுகள் ஒரு மந்திரத்தைத் தெளிவாக உச்சரித்தன. அவ்வளவுதான். மறுநொடி அந்த இளைஞன் அந்த யந்திரத்தின் முன் விழுந்து இறந்து விட்டான். பைராகி அத்தகைய கடுமையான கோபத்தைக் கொள்வதற்கும் காரணம் இருக்கத்தான் செய்தது. திருநீறு, எலுமிச்சம்பழம், தண்ணீர் இவற்றில் ஓதும் மந்திர சக்திகளை மாற்றுதல் என்பது அவ்வளவு எளிதல்ல.

ஸ்ரீபுவனேஸ்வரி திருக்கழிப்பாலை

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நம் சற்குரு அந்த பைராகியின் அருகில் சென்று, “ஏனப்பா, உன்னை நம்பி இத்தனை வருடங்கள் சேவை செய்தவனை உனக்கு ஏற்பட்ட ஒரு நொடி கோபத்தால் இந்த மண்ணிலிருந்து மறைத்து விட்டாயே. தவறாக வைத்த அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து விட்டு பஞ்ச பூத சுத்தி செய்து மீண்டும் அந்த பழத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து பிராண பிரதிஷ்டை செய்தால் அவன் அறியாது செய்த தவறுக்கு பிராயசித்தம் கிடைத்து விடுமே. அந்த இளைஞன் செய்தது தவறுதான். ஆனால் அதற்காக உன்னைக் குருவாக ஏற்ற நிலையில் ஒரு குருநாதர் செய்யும் செயல் தவறை மன்னிப்பதுதானே,” என்று இதமாக கூறிடவே அந்த பைராகி தன்னுடைய தவற்றை உணர்ந்து கோபத்தை மாற்றிக் கொண்டு ஒரு மந்திரத்தைக் கூறவே அந்த இளைஞன் தூக்கத்திலிருந்து விழித்து எழுவதைப் போல் எழுந்தான். இங்கு திறந்தது சீடனின் கண்கள் மட்டுமல்ல, தவறை மட்டுமே பார்த்துப் பழகிய ஒரு குருநாதரின் கண்கள் பிராயசித்தத்தையும் பார்க்க திறக்க உதவியதே சற்குருவின் அருட்பணி. ஏதோ ஒரு சீடனுக்கு நல்வழி காட்டுவது மட்டும் நம் சற்குருவின் திருப்பணி அன்று, ஒரு உயிரை மாய்ப்பதையும் மீட்பதையும் விளையாட்டாக நிகழ்த்தும் ஒரு பைராகியின் செயலிலும் தெளிவைக் கூட்ட வல்லவரே சற்குரு வெங்கடராமன் என்றால் அத்தகைய சித்த ஈசனை சற்குருவாகப் பெற்றவர்கள் இந்த குரு ஆண்டிலாவது சற்குருவின் மகிமையை உணர்ந்து அவர்தம் வழி நிற்றலே உத்தம சீடர்களின் பணியாகும்.
சென்னை மைலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சற்குரு வெங்கடராமன் அவர்கள் அடிக்கடி செல்வது உண்டு. அவ்வாறு செல்லும்போது அங்குள்ள குப்பைகள், தேங்காய் நார், உடைந்த அகல் சட்டிகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்வது வழக்கம். ஒரு முறை இவ்வாறு சற்குரு கோயிலை வலம் வந்து கொண்டிருந்தபோது அவர் செய்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் சற்குருவின் பின்னால் அவர் நிழல்போல் தொடர்ந்தார். அனைத்தும் அறிந்த சற்குருவோ அதுபற்றி ஒன்றும் தெரியாதவர்போல் தன் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார். தன் திருப்பணிகளை முடித்து, இறை தரிசனம் முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பும் நிலையில் அந்த மர்ம ஆசாமி அவரை அணுகி, “சார், சற்று என் கூட வர முடியுமா ? நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைக் காட்ட ஆவலாக உள்ளேன்,” என்று கூறவே சற்குருவும் அதை ஆமோதித்து அந்த மனிதருடன் சென்றார். அவர் சற்குருவை அழைத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குடிசைக்கு சென்றார். சற்குரு சில மாதங்களாகத் தென்பட்ட அந்த குடிசையைப் பற்றி அறிந்திருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றி பொருட்படுத்தவில்லை. குடிசைக்குள் சென்ற அந்த ஆசாமி ஒரு பழைய மேஜை மேல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டிருந்த செம்பு தகடு ஒன்றை எடுத்து அதன் மேல் நறுக்கி வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழத்தை தடவி ஒரு மந்திரத்தைக் கூறவே அது தங்கமாக பளபளத்தது. அந்த தங்கத் தகட்டைச் சற்குருவிடம் கொடுத்து, “இவ்வாறு எனக்கு கிடைக்கும் தங்கத்தை விற்று அதில் சிறிதளவு என்னுடைய சாப்பாடு போன்ற வசதிகளுக்கும் மிச்சத்தை இறை சேவை, அடியார் சேவைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தங்களைப் பார்த்தால் மிகவும் நல்லவர் போல் தெரிகின்றது. எனவே இதுவரை எவருக்கும் தெரிவிக்காத இந்தக் கலையை தங்களிடம் சொல்லிக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்,” என்றார். சற்குரு அவரை அன்புடன் பார்த்து, “ஐயா, தங்கள் விருப்பத்திற்கு அடியேனுடைய பணிவான வணக்கங்கள். ஆனால் தற்போது அடியேன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடியேனுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை அடியேனுடைய குடும்பத்திற்காக செலவழித்ததுபோக மீதம் உள்ள சொற்ப தொகையை வைத்து கோயில் திருப்பணி, அன்னதானம் போன்று அடியேனுடைய குரு காட்டிய வழியில் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இது அடியேனுக்குத் தெரிந்த ஆன்மீகப் பணி. தாங்கள் சொல்லும் ரசவாத வித்தையை அறிந்து கொள்ள அடியேனுக்கு சற்றும் விருப்பம் இல்லை,” என்று தெளிவாகக் கூறி விட்டு அக்குடிசையை விட்டு வெளியே வந்து விட்டார்.

ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கழிப்பாலை

மறுநாள் திருக்கோயிலுக்கு அக்குடிசை வழியாக சென்ற சற்குரு முதல் நாள் வரை கண்ட குடிசை அங்கு இல்லாதது கண்டு ஆச்சரியம் அடைந்தார். ஒரு வேளை இறைவனை நம்பி வாழும் ஒரே ஒரு உத்தமரைப் பார்த்தது போதும் இனி எந்த ரசவாதத்திற்கும் வேலையில்லை என்று நினைத்தோ என்னவோ அந்த ஆசாமி அந்த இடத்தைக் காலி செய்து விட்டார். சற்குரு சுட்டிக் காட்டிய இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் அறியும் நீதி யாது ? கடவுள் ரச ரூபமாக, உணர்வு மயமாக இருக்கிறார் என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். எனவே ரசவாத சித்தி என்பது உணர்வு மயமாய் இருக்கும் ஈசனை அறிந்து கொள்ள தன்னால் முடிந்த சேவையை இயற்றுவதே உத்தம வழி, இறைவனை மிஞ்சிய ரசவாத சித்தி உலகில் ஏதுமில்லை. இறைவனின் சுவை வடிவை உணர்ந்து கொள்ள உதவும் முதல் படியே அன்னதானம் ஆகும். இரவு நேர வழிபாட்டிற்கு உகந்ததாக இவ்வருடம் திகழ்வதற்கு மற்றோர் காரணமும் உண்டு. மேற்கண்ட வீடியோ படத்தில் முள்ளம்பன்றியின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். மற்ற விலங்குகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு முள்ளம்பன்றியின் முட்களுக்கு உண்டு. அவை எளிதில் மனிதனின் தோலை துளைத்துச் சென்று விடும். ஆனால் அந்த முட்கள் தோலின் வெளியே எளிதாக வராது. இவை தீய எண்ணங்களின் இயல்பைக் குறிப்பவை. தீய எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுப்பது எளிதுதான், அவ்வாறு உள்ளே சென்ற தீய வினைகளை வெளியே அனுப்புவது என்பது மிகவும் கடினம். இதை உணர்த்துபவையே முள்ளம்பன்றிகளின் முட்கள். எனவே பௌர்ணமி, ஏகாதசி போன்ற நாட்களில் இரவில் திருஅண்ணமலையை கிரிவலம் வந்து சிறப்பாக இத்தகைய முள்ளம்பன்றிகளின் தரிசனம் பெறுதலால், நாய்களுக்கு பொறை கடலைமிட்டாய் போன்ற உணவு வகைகளை அளிப்பதால் முட்களாய் தைத்த தீய எண்ணங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இறையருள் துணை நிற்கும். மிகவும் அரிதாக நவகிரக மூர்த்திகளிடையே துலங்கும் இத்தல சனீஸ்வர பகவானை வணங்கி முள்முறுக்கு போன்ற கடினமான தின்பண்டங்களை தானமாய் அளித்தலால் இரவில், தனிமையில், இருட்டில் பிறர் அறியாமல் செய்த தவறுகளுக்கு ஓரளவு பிராயசித்தம் பெற முடியும். அத்தகைய தவறுகளை மீண்டும் தொடராமல் காக்கும் திடமான மனோ சக்தியை அளிக்கக் கூடியதும் இந்த ஆண்டில் புரியும் நவகிரக வழிபாடாகும். இருளுக்குப் பகை வெளிச்சம் என்பது போல், அறியாமைக்கு விடியல் அறிவு என்பதாக நண்பகலில் அதாவது மதியம் உச்சி வேளையில் ஸ்ரீஉச்சிநாதரை சிவபுரியில் வழிபடுவதே 2019க்கு உரித்தான வழிபாடாக மலர்கிறது. ஸ்ரீஉச்சிநாதரை வழிபடுவதற்கு முன் உச்சிவேளைப் பொழுதின் இரகசியங்களை ஓரளவு உணர்ந்து கொள்தல் சிறப்பு அல்லவா ? திருச்சி உச்சிப் பிள்ளையார் ஜலன்பிரகிருணி என்றே ஒரே சக்தியால் உருவான மூர்த்தி. உலகிலேயே மிகப் பெரிய பிள்ளயார் மூர்த்தி இவரே. ஆனால் இவர் மலை உச்சியில் அமர்ந்திருக்கிறார் என்பதை மட்டும் அனைவரும் அறிந்தாலும் உச்சிவேளையில் வழிபடப் பட வேண்டிய மூர்த்தி என்ற இரகசியத்தை உணர்ந்தோர் சித்த வழியில் வந்த ஒரு சிலரே. திருச்சியில் பணிபுரியும் நமது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியார் தினமும் இவரை நண்பகல் வேளையில் ஒரே ஒரு முறை வலம் வந்தார். சில ஆண்டுகளே இந்த வழிபாடு நடைபெற்றாலும் அவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்து விட்டார்கள்.

ஸ்ரீஉச்சிநாத சுவாமி சிவபுரி

ஸ்ரீகனகாம்பிகை சிவபுரி

இது பற்றி சற்குரு வெங்கடராமன் அவர்களிடம் கேட்டபோது, “என்ன சார் செய்வது, மதியம் உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து வணங்குவதால் கிட்டும் புண்ணிய சக்திகள் அமோகம். அதை அடியேனுடன் இருக்கும் அந்த அடியாராலேயே தாங்க முடியாது என்பதால்தான் புண்ணியமே செய்ய முடியாத ஒரு ஊருக்கு அவரை நாங்கள் மாற்ற வேண்டி வந்தது,” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அந்த அளவு சக்தி வாய்ந்தது, பண்ணியம் செறிந்தது உச்சிப் பிள்ளையார் வழிபாடும். உச்சி நேர பூஜைகளும். சிவபுரி ஆலய குளக்கரையில் மகா விஷ்ணுவே அரச மரமாக எழுந்தருளி உள்ளார் என்று கூறினோம் அல்லவா ? அரச மரத்திற்கு போதி மரம் என்ற பெயரும் உண்டு. உதய காலத்திற்கு முன் டன் கணக்கில் ஓசோன் எனப்படும் தூய காற்று சக்தியை காற்று மண்டலத்தில் அரச மரம் வெளியிடும் என்ற இரகசியத்தை ஒரு சிலரே அறிந்திருந்தாலும் அரச மரம் போத சக்தியை நண்பகலில் வெளிவிடும் என்ற இரகசியம் அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. அரச மரம் போதி மரம் என்று அழைக்கப்படுவதன் காரணம் இதுவே ஆகும். அது மட்டுமல்ல திருஅண்ணாமலையிலிருந்து வெளியாகும் இத்தகைய ஓசோன் சக்திகள் போத சக்திகளாக வடிவம் பெற்று பக்தர்களுக்கு புரியாத விஷயங்களை போதிப்பதும் தெளிவுபடுத்துவதும் நண்பகல் நேரத்தில்தான் என்பதும் தேவ இரகசியமே. திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சணமாக பல ஆண்டுகள் வலம் வந்த ஸ்ரீஅங்கப் பிரதட்சிண அண்ணாமலை சுவாமிகளுக்கு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் இந்த போத சக்தியை ஊட்டியதும் இந்த நண்பகல் நேரத்தில்தான். கௌதம புத்தரும் இந்த போத நேரத்தில்தான் இந்த போத சக்திகளைப் பெற்று நிர்வாணம் அடைந்தார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் போத, போதி இரகசியம் ஆகும். எனவே காலை நேரத்தில் திருக்கழிப்பாலையில் வழிபாடுகளை இயற்றவும் உச்சி வேளையில் ஸ்ரீஉச்சிநாதரை சிவபுரியில் வழிபடுவதற்கு ஏதுவாக இத்திருத்தலங்களும் அருகிலேயே அமைந்திருப்பதே இறைவனின் அருட்கொடையாகும். உச்சி வேளை என்பது கால தோஷங்கள் அற்ற அபிஜித் முகூர்த்தமாக எல்லா வைபவங்களுக்கும் ஏற்ற நேரமாக நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உச்சிவேளை என்பது மதியம் 12 மணி என்ற கணக்கைக் கருத்தில் கொள்ளாது உச்சி வேளை என்பது பகல் பொழுதின் உச்சிவேளை, மதிய, மத்திம நேரம் என்று பொருள் கொள்வதே சரியாகும். அதன்படியே உச்சிவேளையையும் கணக்கிட வேண்டும். இந்த உச்சி வேளைக்கு ஒரு நாழிகை முன்னும் பின்னும் சிவபுரியில் உள்ள அரசமர நிழலில் அமர்ந்து தியானம் புரிவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. சிவபுரியில் நிலவும் திருக்குளத்தின் நாமம் கிருபாசமுத்திரம் என்பதாகும். குளத்தை எப்படி சமுத்திரம் என்று கூற முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றலாம்.

கிருபாசமுத்திரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சிவபுரி

கிருபா சமுத்திரம் என்றால் கருணைக் கடல் என்று பொருள். இந்த கருணைக் கடலில் மூழ்கி பக்தர்களுக்கு கடவுள் நம்பிக்கை, குரு நம்பிக்கை என்ற முத்தை வாரி வழங்கும் மூர்த்தியே இத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅகத்திய பெருமான் ஆவார். எனவே இந்த கருணைக் கடலில் தோன்றாத இறை ஞானமோ, குரு நம்பிக்கையோ வேறு எந்த தலத்திலும் உதிக்காது என்பார் நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள். ஸ்ரீஅகத்திய பெருமான் ஏழு கடலையும் ஒரு துளி நீராக்கி தன் உள்ளங்கையில் வைத்து அருந்தினார் என்று நாம் அறிவோம். இது ஏதோ எவராலும் முடியாத காரியத்தை நான் மட்டும் செய்தேன் என்ற அகம்பாவத்தில் தோன்றிய ஒரு செயல் கிடையாது அல்லவா ? பூலோக மக்களின் எல்லா கர்மங்களையும் ஏற்கும் ஏழு கடலை அருந்துவதால் ஏழு கடலில் பெருகிய மனிதர்களின் கர்ம வினைகள் அனைத்தையும் ஒரே நொடியில் ஏற்று அதை பஸ்மம் செய்ய ஸ்ரீஅகத்திய பெருமானால் முடியும் என்றால் அத்தகைய சித்த பெருமக்கள் எழுந்தருளும் திருக்குளங்கள் ஏன் கர்ம வினையைக் கழிக்கும் சமுத்திரங்களாகத் திகழ மாட்டா? இதுவே நாம் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய பேருண்மையாகும். இவ்வருடம் சிவபுரியில் மட்டும் அல்லாது குற்றாலம், அண்ணாமலை, தவத்துறை (லால்குடி) போன்று சிவத்தலத்தின் பெயரும் திருக்குளங்களின் பெயரும் சிவகங்கை, குற்றாலம், ஐந்தருவி என்று ஐந்தெழுத்தாக மலரும் திருத்தலக் குளங்களில் நீராடி இறைவனை தரிசித்தலால் கடவுள் நம்பிக்கையும், குரு நம்பிக்கையும் வளரும் என்பது சித்தர்கள் அறவுரை, அறிவுரை. சித்தர்கள் கருணைக் கடலாக பொலிவதற்கு ஒரு உதாரணம். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு வழக்கம்போல் அடியார்கள் எவரும் வருவதற்கு முன்னரே தம் பத்தினியுடன் எழுந்தருளி இருந்தார் நம் சற்குரு. அப்போது அன்னதானக் கூடம் எந்தப் பொருளும் வைக்கப்படாததால் விசாலமாக ஆனால் சுத்தமாகத் துலங்கியது. வெகு தூரம் பயணம் செய்து வந்த களைப்பால் சற்குருவின் மனைவி ஹாலிலேயே படுத்து கண்ணயர்ந்து விட்டார்கள். சற்குருவுடன் வந்த ஒரே ஒரு அடியாருடன் சற்குரு அன்னதானம் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எழுந்த சற்குரு அந்த அடியாரின் ஒரு செருப்பை கையில் எடுத்துக் கொண்டு தன் மனைவியை நோக்கி விரைந்தார். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. சற்குருவின் பரபரப்பான செயலுக்கு காரணம் புரியாமல் அந்த அடியார் எழுந்து நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீவிநாயகப் பெருமான் சிவபுரி

வேகமாகச் சென்ற சற்குரு தன் மனைவி அருகில் தரையில் எதையோ அடித்தார். அந்த களேபரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சற்குருவின் மனைவி எழுந்து விட்டார். சற்று நேரம் கழித்துதான் நடந்த விஷயத்தை அறிந்து கொண்டார். அதாவது ஒரு சாண் அளவு நீளமுள்ள ஒரு தேள் வேகமாக சற்குருவின் மனைவியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. சற்குரு சமயத்தில் அந்த அளவிற்கு வேகமாகச் செயல்பட்டிருக்காவிட்டால் அந்தப் பெரிய தேள் சற்குருவின் மனைவியைத் தீண்டும் வாய்ப்பு இருந்தது. அதை அறிந்த சற்குருவின் மனைவி திடுக்கிட்டுப் பயந்து விட்டாள். ஆனால் சற்குருவோ, ”நீ ஏனம்மா கவலைப்படுகிறாய். அடியேன்தான் அந்தத் தேளைக் கவனித்து விட்டேனே. நீ போய் நிம்மதியாக ரெஸ்ட் எடுத்துக் கொள்,” என்று புன்னகையுடன் கூறினார். மேலோட்டமாகப் பார்த்தால் சற்குரு தன் மனைவியை தேள் கடியிலிருந்து காப்பாற்றினார் என்றுதான் தோன்றும். உண்மையில் அந்த அடியாரைத்தான் சற்குரு காப்பாற்றியிருந்தார் என்பது இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் படித்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் புரியவரும். போகக் கூடாத பல இடங்களுக்குச் சென்று அந்த அடியார் ஏற்றுக் கொண்ட மூட்டை மூட்டையான கர்ம வினைகளைக் கழிக்கவே அவருடைய செருப்பைக் கையில் எடுத்து ஒரு தேளுக்கு முக்தி அளிக்கும் திருப்பணியையும் சற்குரு நிறைவேற்றினார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். எனவே சற்குருவின் மேன்மையை உணர்விப்பதும் இத்தகைய கிருபா சமுத்திரங்களாகும் என்பதால் அவை கருணைக் கடல்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சிவபுரி இறைவியின் நாமமோ கனகாம்பிகை என்பதாகும். கனகாம்பிகை என்றால் வழிபடுவோர்க்கு தங்கம் போன்ற குணநலன்களை அளிக்கக் கூடியவள், நிலையான தங்க சக்திகளை அளிக்கவல்லவள் என்றெல்லாம் மேலோட்டமாக பொருள் கொண்டாலும் கனகாம்பிகை என்றால் தங்கத்தால் வாங்க முடியாததையும் அனுகிரகமாக அளிப்பவள் என்று ஒரு பொருளுக்கு நிகராக விளங்குபவளே ஸ்ரீகனகாம்பிகை ஆவாள். அதாவது ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் என்ற விளம்பரத்தை பல வியாபாரத் தலங்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒன்றை கொடுத்தால் எத்தனையோ ஆயிரம் அனுகிரகங்களை அள்ளி வழங்குபவளே ஸ்ரீகனகாம்பிகை ஆவாள். அதாவது 2019ம் ஆண்டு எந்த பொருள் வாங்கினாலும் அதில் ஒன்றைத் தானமாக அளிப்பதால் ஸ்ரீகனகாம்பிகை அளிக்கும் அனுகிரகத்தையே சிவபுரி என்கிறார்கள் பெரியோர்கள். அந்த சிவபுரியை கனகாம்பிகையின் அனுகிரகமாக அளிக்கவல்ல தலமே சிவபுரி திருத்தலமாகும். உதாரணமாக, இதை உதாரணத்திற்கு மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு மாப்பிள்ளையை வரனாகப் பார்த்து முடிவு செய்தார்கள் பெண் வீட்டார். எல்லாச் சடங்குகளும் முறையே நிறைவேறின. ஆனால் திருமண நாளிற்கு முன் அந்த மாப்பிள்ளைக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட செய்தியை அறிந்து விட்டதால் திருமணத்தை பெண் வீட்டார் கைவிடும்படி ஆயிற்று. அந்த திருமண நிச்சயத்திற்காக ஆன செலவு, அலைச்சல், பழிச்சொல் என பல வேண்டாத பிரச்னைகளை அவர்கள் சந்திக்கும்படி ஆயிற்று. அவர்கள் திருமணத்திற்கு முன் ஸ்ரீகனகாம்பிகையை தரிசனம் செய்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தால் இத்தகைய அனாவசிய செலவுகளும் மன உளைச்சல்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். இதுவே இவ்வருடம் அனைவரும் சிறப்பாக திருமண சம்பந்தங்களில் ஈடுபடுவோர், புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குவோர், புதிதாக வேலையில் சேருவோர் கவனிக்க வேண்டிய அம்சமாகும். குரு ஆண்டில் குரு அளிக்கும் எச்சரிக்கை இது. ஒன்று வாங்கினால் ஒன்றைத் தானமாக அளிக்க வேண்டும் என்றால் ஒரு வீடு வாங்குபவர் எப்படி ஒரு வீட்டைத் தானமாக அளிக்க முடியும் என்ற கேள்வி எழலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. சற்குருவை நம்பினால் அவரே எல்லா காரியங்களுக்கும் வழிகாட்டுவார்.

ஸ்ரீதுர்கை அம்மன் சிவபுரி

சமீபத்தில் சுனாமி புயலில் வீடு இழந்த மீனவர்களுக்காக மாதா அமிர்தானந்த மயி அவர்கள் ஒரு லட்சம் வீடுகளைத் தானமாக அளித்தார்கள். இது அவர்களுடைய பாக்கியா ? நிச்சயமாக கிடையாது அல்லவா ? அந்த அன்னையை குருவாகப் பெற்றவர்கள் பல பிறவிகளில் வைத்திருந்த பாக்கியை இவ்வாறு ஒட்டு மொத்தமாக சரி செய்கிறார்கள். இதுவே சற்குருவை நம்புவோரின் சந்ததிகளும் பெறும் பலன். இந்த அனுகிரகத்தை அளிப்பதும் ஸ்ரீகனகாம்பிகை மேல் கொள்ளும் நம்பிக்கையும் வழிபாடும் ஆகும். இவ்வாறு கர்ம வினைகளை ஒட்டு மொத்தமாக சரி செய்யக் கூடிய திருத்தலங்களே கழிப்பு ஆலையும் சிவபுரியும் என்பதில் சந்தேகமில்லை. உச்சி வேளை என்பது காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளுக்கு நடுவில் குசா சக்தியுடன் பொலிவதும் குருவும் புதனும் சேர்ந்து நடுநாயகமாக வருடப் பிறப்பு நேரத்தில் மூன்றாவது ராசிக் கட்டத்தில் திகழ்வதும் இந்த சங்கம ராசி நாயகன் ஐந்தில் எழுந்தருளி இருப்பதும் இத்தகைய கர்ம வினைக் கழிப்பிற்கு உறுதுணையாக அமைகின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். ஒரு முறை திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது சற்குரு அவர்கள் மளிகை காய்கறி வாங்குதல், வாகனங்கள் அனுப்புதல், அன்னதானம் போன்ற அனைத்துக் காரியங்களையும் செவ்வாய் ஹோரையிலேயே நிறைவேற்றினார்கள். இது பற்றி கேட்டபோதுதான் செவ்வாய் பகவானின் கர்மவினையைக் கழிக்கும் பாங்கினைப் பற்றி எடுத்துரைத்தார்கள். ஆனால் செவ்வாய் பகவானின் அக்னி சக்தி தீட்டிய பட்டாக் கத்தியைப் போன்றது. சற்குருநாதர்களே இதை பிரயோகிக்க முடியும் என்பது உண்மை. கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனை வள்ளல் நடிகர் நடித்த பல திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வாராம். அந்த நடிகர் பெரிய பட்டாக்கத்தியை ஏந்தி சண்டையிடும் காட்சி நேரத்தில் எல்லாம் எழுந்து நின்று விசில் அடித்து (ஓஜஸ் ஒலி எழுப்பி) ஆர்ப்பாட்டம் செய்வாராம். பட்டாக்கத்தியை ஏந்தி சண்டை செய்வது என்பது கர்ம வினையைக் கழிக்கும் சண்டை காட்சியை நிகர்த்தது என்றும் அது மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஒரு செயல் என்று அந்த காட்சிகள் சிறுவன் வெங்கடராமனுக்கு நன்கு மனதில் பதியும்படி ஓஜஸ் ஒலி எழுப்பி ஒரு தெய்வீக சூழ்நிலையை உருவாக்கினார் என்று புரிந்து கொள்ள கோவணாண்டி மறைந்த பின்னரும் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாம். நம் நிலையோ நீங்கள் அறிந்ததே. கர்மவினைக் கழிப்பு என்னும் செயலை நிர்வகிக்கும் பல ஆசனங்கள் அருள் உலகத்தில் காலியாக எவரும் அமர்வாரின்றி காலியாக இருப்பதாகவே நம் சற்குரு தெரிவிப்பார். கோவணாண்டி நம் சற்குருவை குருமங்கள கந்தவர்வ லோகத்திலிருந்து கர்ம வினைக் கழிப்பிற்காக அழைத்தபோது முதலில் மறுத்து விட்டாராம். பின்னர் கோவணாண்டியில் வற்புறுத்தலின் பேரில்தான் பூலோகம் இறங்கினார் சற்குரு வெங்கடராமன். காரணம் ஒரு கர்ம வினையை மிகவும் சிரமப்பட்டு கழிக்கும் அதே வேளையில் அந்த அடியார்கள் வேறு ஒரு கர்ம வினை பாக்கியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது திருஅண்ணாமலையார் ஆலயத்திற்குள் தானம் அளிப்பதற்காக காய்ச்சின பசும்பால், காய்ந்த திராட்சை, முந்திரி, குங்குமப்பூ கலந்த சுவையான பிரசாதத்தை அளித்தார் சற்குரு. அந்த பசும்பாலை விநியோகம் செய்ய மூன்று எவர்சில்வர் டம்ளர்களையும் அளித்தார். அந்தப் பாலை விநியோகத்திற்காக எடுத்துச் சென்ற நம் அடியார்கள் மூன்று டம்ளர்களில் சுவையான பாலை அளித்ததால் கும்பல் கூடி விநியோகம் தாமதம் ஆனதால் பக்கத்திலிருந்த கடையில் டிஸ்போ டம்ளர்களை வாங்கி அவைகளில் பால் விநியோகம் செய்து அன்னதானத்தை முடித்தனர். அன்னதானம் சிறப்பாக நிறைவேறிய செய்தியை சற்குருவிடம் தெரிவித்து அன்னதானத்துடன் அண்ணாமலையார் கோயிலை திருப்பணி செய்யும் வேலையையும் செவ்வனே முடித்ததாக கூறினர்.

ஸ்ரீசந்திரனும் ஸ்ரீசனிபகவானும் சிவபுரி

அதாவது டிஸ்போ டம்ளர்களில் பாலை அருந்திய சிலர் அந்த டம்ளர்களை கீழே போட்டு விட்டு சென்றதால் அந்த டம்ளர்களை அப்புறப்படுத்தி சிந்திய பால் பிரசாதம் விழுந்த இடங்களை தூய்மை செய்ததையே இவ்வாறு சற்குருவிடம் தெரிவித்தனர். சற்குரு ஒரு பெரிய மூச்சு விட்டு, “ரொம்ப சந்தோஷம் சார்,” என்று கூறினார். அடியார்கள் சேர்த்து வைத்த கர்மாவிற்கு நிவர்த்தியாக முந்திரி, குங்குமப்பூ போன்ற விலை உயர்ந்த பொருட்களால் பிரசாதம் செய்து அன்னதானத்திற்காக அனுப்பினால் அந்த அன்னதானத்தை நிறைவேற்றும்போது டிஸ்போ டம்ளர்களை உபயோகித்து ஒரு புது கர்மாவை அடியார்கள் ஏற்படுத்தினால் அதை எப்போது சரி செய்வது என்பதே சற்குருவின் பெருமூச்சிற்குக் காரணம் என்பதை பின்னால் தெரிந்து கொணடோம். சற்குரு கூறியபடி அன்னதானம் பெறும் அடியார்கள் சற்று நேரம் வரிசையில் காத்திருந்து பிரசாதம் பெற்றால்தான் திருஅண்ணாமலையார் கோயில் வளாக தெய்வீக சக்திகள், அடியார்களின் கண்கள், மூக்கு, சுவாசம் அந்த பிரசாத பால் தரிசனத்தால் பெறும் பலன்கள் இவை உடலில் சேர்ந்து அந்தப் பாலின் முழு பலனும் அவர்கள் மனம், உடலில் சோரும் என்பதே சற்குரு அவர்களின் ஏற்பாடு. சிவப்பு நிற வண்ணம் கலந்த பசும்பாலை மேற்கூறியபடி ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை அருளும் சிவபுரியில் தானம் அளித்தலால் தான் தோன்றித்தனமான செயல்கள் மறைந்து குருவருளை திருவருளாக மதிக்கும் பண்பாட்டை ஸ்ரீதுர்கை அம்மன் அருள்வாள். சிவபுரி திருத்தலத்தின் பெயர் திருநெல்வாயில் என்பதாகும். நெல்வாயில் என்ற பதத்தின் அருமையை புரிந்து கொள்ள சாதாரண மக்களுக்கு குறைந்தது ஒரு சதுர்யுகம் ஆகும் என்பது சித்தர்களின் கணக்கு. காரணம் ஸ்ரீஅகத்திய பெருமானின் உள்ளங்கையில் அவருடைய அன்னையான ஸ்ரீஆஷாசுவாசினி நெல்மணியை வைத்தபோது அதன் முனையில் சித்தர்களின் தபோ சக்தியே ஆசீர்வாத சக்தியாக பொதிந்து மிளிர்ந்தது. அதனால்தான் அது அட்சதை என்ற பெயர் பெற்றது. அட்சதை என்றால் பெருகும் புண்ணிய சக்திகள் என்று பொருள். 80 வயது நிரம்பிய பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு ஆசீர்வாத அட்சதைகளைத் தயாரிக்கும் முறை இதிலிருந்து தோன்றியதே. இந்த ஆசீர்வாத சக்திகள் நெல்லின் முனையாக, நெல் வாயிலாகத் தோன்றிய திருத்தலமே நெல்வாயில் என்பதால் இறைவனுக்கு இவ்வாறு பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முனை உடையாத அட்சதைகளை புஷ்பங்களாக அர்ச்சிக்கும் முறை இத்தலத்தில் தோன்றியது. எனவே முனை உடையாத பச்சரிசி கொண்டு பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து அட்சதை மணிகைளைத் தயாரித்து அதனுடன் மூன்று மூன்று இதழ்களைக் கொண்ட வில்வ இலைகளைச் சேர்த்து திருநெல்வாயில் ஈசனுக்கு அர்ச்சனை செய்வதால் அளப்பரிய மங்கள, மாங்கல்ய சக்திகளைப் பெறலாம். இத்தகைய அட்சதை ஆராதனைக்கு உரிய வருடமும் இதுவே ஆகும். ஆதிசங்கரர் அருளிய ஏகவில்வம் என்பது மூன்று இதழ்கள் கொண்ட வில்வ தளமே என்பதே சித்தர்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய மங்கள இரகசியமாகும்.

மூச்சுக் காற்றும் மூக்கறு படலமும்

இராமாயணத்தில் சூர்ப்பனகை ராமரை அணுகியபோது ராமர் தானோ மணமானவன் என்றும் தன் தம்பி லட்சுமணன் தான் தனியாக இருக்கிறான் என்று சொல்லி சூர்ப்பனகையை லட்சுமண சுவாமியிடம் அனுப்ப லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கறுத்த வரலாறு நீங்கள் அறிந்ததே. ஆனால் உண்மையில் சூர்ப்பனகையின் மூக்கில் வளர்ந்த நாகத்தையே லட்சுமணன் தன்னுடைய வாளால் அறுத்து சூர்ப்பனகைக்கு அனுகிரகத்தையே அளித்தான் என்ற சித்தர்கள் கூற்றை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இவ்வாறு சூர்ப்பனகையின் மூக்கிலிருந்து நாகம் வெளியேறியவுடன் அவள் பூர்வஜன்ம வினையால் முதன் முதலாக தில்லை திருத்தலத்தின் மூச்சுக் காற்றை சுவாசித்தாள் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். இதற்கு உதவியதே ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமண சுவாமியின் அவதாரம் என்பதை உணர்ந்து கொண்டால்தான் சிவபுரி என்பது ஆயிரம் உலக அழகிகள் வரிசையில் வந்தாலும் தன் மனைவியை மட்டும் நேசிக்கும் தன்மையை அனுகிரகமாக அளிப்பது திருநெல்வாயில் ஈசனுக்கு சமர்ப்பிக்கும் அட்சதை என்ற மகிமையை உணர்ந்து கொள்ள இயலும். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? மூச்சுக் காற்றின் இரகசியங்களை உணர்ந்து கொள்ள உதவி செய்வதே சிவபுரி திருத்தலத்தின் மகிமையாகும். இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள உதவுவதே இவ்வருடம் இயற்றும் வழிபாடாகும். மூச்சுக் காற்றிற்கு உரிய புத பகவான் குசா சக்தியுடன் ஸ்திர ராசியில் எழுந்தருளி இருப்பது பிராணாயாம சக்திகளை உணர உதவும் ஜாதக அமைப்பாகும். பிராணாயாம கலையில் நாகங்களே வல்லமை உடையவையாக இருப்பதால் ஸ்ரீஆதிசேஷன் அனுகிரகம் பெற்ற தில்லைக் காற்றை இவ்வருடம் சுவாசித்து பிராணாயாம மகிமைகளை உணர்நது கொள்ளும்படி சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். சிரஞ்சீவி சக்திகள் மிகுந்த சிவபுரி அரச மரத்தின் கீழ் அமர்ந்து எவ்வளவு நேரம் பிராணாயாம யோகத்தில் நிலைகொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் தில்லை சுவாசம் பன்மடங்காகப் பெருகும் என்பது உண்மை. ஆயிரம் தலை உடையவர் ஆதிசேஷன் என்று கூறுகிறோம். அந்த ஆயிரம் தலைகளில் ஒன்றின் மூலம்தான் தில்லை நடராஜ பெருமானின் திருக்கூத்தில் திகழும் ஒலி சக்திகளைத் திரட்டி அடியார்கள் புரிந்து கொள்ளும், மனிதர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுவாச சக்தியாக அருள்கின்றார் என்றால் ஆதிசேஷ பகவானின் மற்ற சிரசுகளின் இரகசியங்களை என்று, எந்தப் பிறவியில் புரிந்து கொள்வதோ ? குறட்டை விடுபவர்கள் தாங்கள் எந்த துன்பத்தையும் அனுபவிப்பது இல்லை என்றாலும் தங்கள் குறட்டை ஒலி மற்றவர்களுக்கு அதிருப்தியை அளிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் பெருகும்போது அவர்கள் தங்கள் குறையை நிவர்த்தி செய்ய நாட வேண்டிய திருத்தலமே சிவபுரி ஆகும். பகல் தூக்கமும் அத்தகைய தூக்கத்தின் போது எழும் குறட்டை ஒலியும் பல நற்காரியங்களுக்குத் தடையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

 

திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது நமது ஆஸ்ரமத்தில் அன்னதானம் தயார் செய்யும் சமையற் கூடத்தில் ஆளுயரத்திற்கு அக்னி எழுவதால் அங்கு தரையெல்லாம் கொதிக்கும். அங்குள்ள சிமெண்ட் தரையில் நிற்கவே முடியாது என்றால் அக்னி மலையில் திகழும் அன்னதானக் கூடத்தில் பொலியும் அக்னியின் சக்தி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். எனவே அடியார்கள் அந்த சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் சணல் சாக்கைப் பரப்பி அதன் மேல் நின்று கொண்டு பணி புரிவார்கள். அப்படியானால் அங்கு அக்னியில் அன்னதானத்தை சமைப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம் ? அதைப் பற்றி கூறும்போது ஒரு அடியார், “வாத்யாரே, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றும்போது .... உள்ள முடிகள் கூட பொசுங்கி விடுகின்றனவே,” என்றார். சற்குருவோ சிரித்துக் கொண்டே, “அப்படியானால் இந்த ருத்ராக்னியில் மட்டுமே பஸ்மமாகும் எத்தனை கடினமான கர்மத்துடன் அடியார்கள் இங்கு வந்துள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நீங்கள் அனுபவிக்க வேண்டிய அக்னி சூட்டின் ஒரு பகுதியையே மட்டும் அனுபவிக்கிறீர்கள். இது அடியேனுடைய குருநாதன் இடியாப்ப சித்தன் உங்களுக்காக விதித்த பாக்கியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்றார் அமைதியாக. இனி சமையலறை சூட்டைப் பற்றி அடியார்கள் முறையிடுவார்களா என்ன ? எதற்காக இத்தகைய விளக்கங்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு சற்குரு அளிக்கும் புண்ணிய சக்தியை ஒரே வாரத்தில், ஒரே நாளில் செலவு செய்யும் அடியார்கள் ஏராளமாய் உண்டு என்பார் நம் சற்குரு. நம்ப முடியாத இந்த சந்தேகத்திற்கு விடையளிப்பதாகவே கீழ்க்கண்ட நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

திருஅண்ணாமலை

சாதாரணமாக வீட்டில் குளிப்பதால் களைய முடியாத பல கர்ம வினைகளை சிவகங்கை, கிருபாசமுத்திரம் போன்ற கோயில் தீர்த்தங்கள் தீர்த்து விடும் என்பது உண்மை. இத்தகைய தீர்த்தங்களால் தீர்க்க முடியா கர்ம வினைகளும் உண்டு. அவை இடி, மின்னல் போன்ற இறை உபகரணங்களால் தீர்க்கப்படுகின்றன. ஐயர் மலையில் நடைபெறும் இடி பூஜை இத்தன்மையைச் சார்ந்ததே. இடி மின்னல்களாலும் தீர்க்க முடியாத கர்ம வினைகளே திருஅண்ணாமலை தீபத்தில் பஸ்மம் செய்யப்படுகின்றன. எனவே எந்த இறை சக்தியாலும் தீர்க்க முடியாத கர்ம வினைகளே திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தில் பஸ்மமாகின்றன என்றால் இந்த தீபத்திற்கு கலப்பட பொருட்களை அளிப்பதாலோ, பக்தர்கள் அளிக்கும் எண்ணெய், திரி, நெய் போன்ற பொருட்களை திருடிச் செல்வதாலோ விளையும் கர்ம வினைகளை இந்த பிரபஞ்சத்தில் எவராலும் தீர்க்க முடியுமா என்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். இவ்வாறு திருக்கார்த்திகை தீபம் நிறைவேறியவுடன் அந்த தீபக் கொப்பரையை திருக்கோயிலில் இறக்கி வைத்தவுடன் அந்த கொப்பரையில் விரவிய கரிய புகையாகிய கர்ம வினைப் படிவை திருஅண்ணாமலையார் பிரசாதம் என்ற பெயரில் பக்தர்கள் எடுத்துச் சென்று விநியோகம் செய்வதால் தீர்க்க முடியாத பல கர்ம வினைகளுக்கு வித்திடுகிறார்கள் என்பதே உண்மை. குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்தது என்பது பழமொழி அல்ல அது உண்மையே என்பதை நிரூபிப்பதே இந்நிகழ்ச்சி ஆகும். இத்தகைய தீர்க்க முடியாத கர்ம வினைகளுக்கும் சற்குருவின் அருளால் பிராயசித்தம் பெறுவதும் இந்த குரு வருடத்தில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். கர்ம வினைக் கழிப்பு, புகைக்கு உரித்தான சனி பகவான் தனுசு ராசியில் வீற்றிருப்பதும் குரு பகவான் சனிக்கு 12ல் எழுந்தருளி கர்ம வினைக் கழிப்பிற்கு உதவி புரிவதும் இந்த ஆண்டில் குருவருளால் அமையும் கிரக சஞ்சார அமைப்பாகும். கேனோபஸ் என்ற அகத்திய நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்து கடல் நீரை உறிஞ்சி மக்களின் கர்ம வினையைத் தீர்க்கிறார் என்பது விஞ்ஞானமும் அறிந்த உண்மையாகும். புத குரு கிரகங்களின் சங்கமம் இந்த உண்மையை உணர்த்துவதாகும். எனவே ஸ்ரீஅகத்திய பெருமான் ஏதோ ஒரு சமயத்தில் மக்களின் கர்ம வினையைக் களைந்து அருள்புரிந்தார் என்றில்லாமல் தொடர்ந்து சித்தர்களால் நிறைவேற்றப்படுவதே இத்தகைய கர்ம வினைக் கழிப்பாகும். அதற்கு உரிய வருடம் இதுவாக, திருக்கழிப்பாலை அமைவதை மக்களும், பக்தர்களும், அடியார்களும் மிக மிக அரிதாக கிடைக்கும் இந்த அகத்திய மகாத்மியத்தை, குருவருளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிட்டும் குருபிரசாதம் இதுவே. ஆனால், திருந்திய மனதிற்கே பிராயசித்தம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை அல்லவா ?

குருவருளே திருவருள்

சற்குரு மேற்கொள்ளும் இத்தகைய கர்ம வினைக் கழிப்பு என்பது எத்தகைய கடினமான செயல் என்பதை அவரை அண்டியிருக்கும் சீடர்கள் தெரிந்து கொள்வது அவசியம்தானே. ஒரு முறை சற்குரு அவர்கள் நம் அடியார் ஒருவரின் மகன் திருமணத்திற்கு எழுந்தருளி அந்தக் கல்யாண மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். அவருடன் ஒரு பெண் மருத்துவ அடியாரும், அவருடைய மகளும், அடியார் ஒருவரும் அமர்ந்திருந்தனர். (அந்தப் பெண்ணிற்கு தற்போது திருமணமும் நடந்தேறி விட்டது) அப்போது சற்குருவின் தாக சாந்திக்காக இளநீர் அளிக்கப்பட்டது. உடன் இருந்த அடியார்கள் உடனே அந்த இளநீரை அருந்தி விட்டனர். ஆனால் சற்குருவோ அந்த இளநீரை கையில் வைத்திருந்தபடியே அந்த அடியார்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் அந்த இளநீரை அருந்தாதது பற்றிக் கேட்டபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “இந்த இளநீரின் பின்னால் உள்ள கர்மவினையைப் பற்றி தெரியாததால் நீங்கள் அருந்தி விட்டீர்கள். எங்களுடைய பணி அவ்வளவு எளிதில் முடிவதில்லை. இந்த இளநீர் தோன்றிய தென்னை மரத்திற்கு நீர் ஒரு சாக்கடையிலிருந்து வந்தது. அந்த சாக்கடை நீர் தென்னை மரத்திற்கு சென்று ஒரு இளநீராக உருவாவதற்கு எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளுமோ அத்தனை மக்களுடைய கர்ம வினைகள் அந்த சாக்கடை நீரில் கலந்திருக்கும் அல்லவா ? அத்தனை கர்மத்திற்கும் நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். (அதாவது அந்த கர்ம வினைகளைத் தீர்க்க வேண்டும்) அதன் பின்னரே இந்த இளநீரை அடியேன் ஏற்றுக் கொள்ள முடியும்,” என்றார். தேடித் தேடி அலைந்தாலும் கோடிக் கோடியில் ஒருவரான நம் சற்குரு குருமங்கள கந்தர்வாவைக் குருவாகப் பெற்றவர்கள் இனியாவது அவர்தம் மேன்மை உணர்ந்து குருபாதங்களைச் சரணடைவோமாக ! இவ்வாறு சாக்கடைக் கழிவையும் தனக்கு உகந்த அபிஷேக தீர்த்தமாக, கண்படா கவின் மழையாக ஈசன் ஏற்றுக் கொள்கிறான் என்றால் ஈசனின் கருணைதான் என்னே. இறைவனின் எல்லையில்லா கருணையை உணர வைப்பதும் இந்த குரு ஆண்டே ஆகும். இறை வழிபாட்டிற்காக கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றும் திருமணமாகாத ஒருவர் திருமண வயதைத் தாண்டியவராக இருந்தால் அவர் தனக்குத் திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்துடனும், அவ்வாறு மணமான ஒருவர் பிற பெண்களுடன் சேர்ந்திருக்க விழையும்போது அது தகுதிக்கு மீறிய பேராசையாகவும் விளையும். இத்தகையோர் ஏற்றும் தீபங்களில் இத்தகைய ஏக்கங்களும், பேராசைகளும் புகையாக மாறி திருத்தலத்தை சூழும். குருவருளால் அத்தகைய திருத்தலங்களில் திருப்பணி நிறைவேற்றும்போது இந்த தகாத நச்சு எண்ணங்கள் அடியார்களால் அகற்றப்படுகின்றன. அவ்வாறு அகற்றப்படும் நச்சு எண்ணத்தில் ஒரே ஒரு எண்ணத்தை ஒரு அடியார் கிரகித்தால் கூட அவருக்கு பைத்தியமே பிடித்து விடும் அல்லவா ? அதனால் அத்திருத்தலத்தில் உறையும் தர்ம தேவகைள், அற தேவதைகள், தீப தேவதைகள் இன்னும் பல அற்புத தேவதைகளின் உதவியால் சற்குருவானவர் அந்த கர்ம வினைகள் திருப்பணி செய்யும் அடியார்களைப் பாதிக்கா வண்ணம் காத்து அருள்கின்றார். அதனால்தான் ஒரு சிறு திருப்பணியைச் செய்வதானால் கூட சற்குருவின் முறையான முன்அனுமதியைப் பெறும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு காரியத்திற்கு முன்னும் சற்குருவின் அனுமதியை வேண்டி நிற்பது அடிமைத்தனம் ஆகாதா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதில்தான் பேரானந்தமே இருக்கிறது என்பதற்கு நிரூபணமாய் அமைந்ததே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் அடிமை கண்ட ஆனந்தம் பகுதியும் இந்த வலைத்தளத்தில் விளையும் சற்குருவின் அனுபவ முத்துக்களும் ஆகும்.

பூஞ்சோலையில் அன்பு மலர்ந்தால்
தேனீக்களுக்கு கொண்டாட்டம்தானே ?

இந்த ஆண்டு முழுவதும் காய்ச்சின பசும்பாலில் குங்குமப்பூ, டைமண்ட் கல்கண்டு சேர்த்து தானம் அளித்தலால் கிடைக்கும் பலன்கள் அற்புதம். குறிப்பாக கூற வேண்டுமானால் எதிர்பாராத தீ விபத்துகள், மின்சார தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிட்டும். இயைந்த மூர்த்திகளின் இந்த இனிய தானத்தை வசதியின்மை காரணமாக நிறைவேற்ற முடியாதவர்கள் செவ்வாழைப் பழங்களைத் தானமாக அளித்தலும் ஏற்புடையதே. அழகுப் பதுமையாய் மனைவி வாய்க்கப்பட்டவர்கள் கூட மன சஞ்சலங்களுக்கு இவ்வாண்டில் ஆட்படுவதால் மேற்கூறிய தான தர்மங்களால் நல்லுறவு குடும்பத்தில் மலரும். ஓரு முறை அன்னதானத்திற்காக கடன் வாங்குவதற்கு நம் சற்குரு சென்ற இடத்தில் அவரைக் காக்க வைத்து விட்டதால் அவர் நள்ளிரவே வீடு திரும்பும்படி ஆயிற்று. சற்குருவிடம் வாகனங்கள் ஏதும் அப்போது கிடையாது. நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் செல்வது வழக்கம். அவ்வாறு வேகமாக தன்னுடைய இல்லத்திற்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில் ஒரு கட்டைசுவர் மேல் ஒரு திருடன் அமர்ந்து கொண்டிருக்க அவனுக்கு இரு புறமும் அவனுடைய அடியாட்கள் அவனுக்கு உடம்பு மசாஜ் செய்து கொண்டிருந்தார்கள். சற்குருவைக் கண்டதும், “டேய், நில்லுடா. இங்கே வாடா,” என்றான். சற்குருவோ சிறிது சலனமில்லாமல், “அண்ணே, கூப்பிட்டீங்களா. இதோ வருகிறேன். என்ன வேண்டும் உங்களுக்கு ?” என்று கேட்டுக் கொண்டு அந்தத் திருடனின் அருகில் சென்று நின்றார். தான் கண்ட காட்சியின் ஆச்சரியம் தாங்க முடியவில்லை திருடனுக்கு. காரணம் ஒருவன் நடுராத்திரியில் மரியாதையின்றி அழைத்தாலே கோபம் வந்து தாக்குவதற்கோ அல்லது ஓடுவதற்குத்தானே எவரும் முயல்வர். அவ்வாறு இருக்கும்போது மிக்க மரியாதையை வெளிக்காட்டியபடி ஒருவர் தன்னிடம் வருகிறார் என்றால் இதைத் தன்னுடைய வாழ்நாளில் முதன்முதலாக அனுபவிக்கும் அந்தத் திருடனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்குருவை ஏற இறங்கப் பார்த்தான். “பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் ?” என்று கேட்டான். சற்குரு, “பணமா ... பணம் இல்லாமல்தானே நடந்து வந்து கொண்டிருக்கிறேன் ...”, என்றார். அந்தத் திருடன் அவர் கூறுவது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது சற்குருவின் சட்டைக்குள் ஒளிந்திருந்த தங்கச் செயின் அந்தத் திருடனின் கண்ணில் பட்டு விட்டது. “அடடே, மைனர் செயின் எல்லாம் போட்டிருக்கிறாயே ? காசில்லை என்று சொல்கிறாயே. அதைக் கழட்டு, கழட்டு,” என்றான். சற்குரு தான் கழுத்தில் அணிந்திருந்த அந்த செயினை கழற்றி மிகவும் மரியாதையுடன் இரு கைகளாலும் அந்தத் திருடனின் கையில் கொடுத்தார். இக்காட்சியை பக்கத்திலிருந்து இரசித்துக் கொண்டிருந்த திருடனின் அடியாட்களில் ஒருவன் அவனிடம், “ரொம்பப் பயந்து விட்டான் போலிருகிக்கிறது,“ என்றான்.

 

திருடனோ, “ஊம் ...” என்ற உறுமலுடன் செயினை அலட்சியமாகப் பெற்றுக் கொண்டு, அது ஒரு டாக்கெட் செயின் என்பதை உணர்ந்து கொண்டு அந்த டாக்கெட்டைப் பிரித்துப் பார்த்தான். சற்குருவின் மனைவி அன்புப் பரிசாக அந்த டாக்கெட் செயினை அவர்களின் திருமண நாளன்று அளித்திருந்தாள். அதில் ஒரு புறம் சற்குருவும் மறுபுறம் சற்குருவின் தர்ம பத்தினியும் சிரித்த வண்ணம் இருந்தார்கள். அவ்வளவுதான். அந்தப் படங்களைப் பார்த்த அந்த திருடன் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். அங்கிருந்தவர்களுக்கு காரணம் ஒன்றும் புரியவில்லை. சற்குருவோ மெதுவாக அழுது கொண்டிருந்த திருடனின் கைகளிலிருந்து அந்தச் செயினை வாங்கி மீண்டும் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

ஒருவாறு அழுகை ஓய்ந்த பின் அந்தத் திருடன், “நானும் ஒருத்தியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவளோ என்னை விட்டு விட்டு வேறொருவனை ...”, அந்த திருடனுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, “நீயாவது நல்லா இரு சாரே,” என்று சொல்லி சற்குருவிற்கு ஆசி (?!) கூறி வழியனுப்பினான். இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்ன ? எந்தத் திருடனின் உள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான். அந்த மனிதனுக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த மனத்தில் விளையும் அன்பை அறிந்து கொள்ள அன்புடனும் மரியாதையுடனும் அணுக வேண்டும். இவ்வாறு அன்பில் அகப்பட்டுக் கொண்டது கணவன் மனைவி என்ற உறவு மட்டும் அல்ல, ஒரு திருடனின் மனமும்தானே ? “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ...” என்பது போல சற்குருவின் மனைவி அன்புடன் பரிசாக அளித்த தங்கச் செயினே அந்தத் திருடனுடைய கல் மனதையும் கரைக்கும் சக்தி பெற்றதாக விளங்கியது. இதில் அதிசயமான ஆச்சரியம் என்னவென்றால் இத்தகைய அன்யோன்ய தம்பதிகளுக்கு இடையே நிலவும் உடல் சுகம் கூட சற்குருவின் மேன்மை முன்பு ஒளி குன்றும் என்பதே. இந்த உண்மைக்கு நிரூபணமாய் அமைவதே குரு செவ்வாய் கிரகங்களுக்கு இடையே உள்ள பரிவர்த்தனை என்ற குரு மங்கள அம்சமாகும்.

இவ்வாறு அன்யோன்யமாய் இருக்கும் உறவுகளில் கூட அவ்வப்போது பிளவுகள் ஏற்படுவதற்கு நாம் வாழும் சூழ்நிலையில் படிந்துள்ள வினைகளும் காரணமாக அமைவதால் அடிக்கடி வீடு, அலுவலகம் போன்றவற்றில் அடர்த்தியாக சாம்பிராணிப் புகை இட்டு வருவது சிறந்த காப்பாக அமையும். இவ்வருடம் தனுசு ராசியில் விளங்கும் சனி பகவான் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை அளிக்க வல்லவர். இதுதான் உண்மையான பாதுகாப்பு. வசதியுள்ள பலரும் துப்பாக்கிகளைப் பாதுகாப்பிற்காக வைத்திருப்பது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது, “துப்பாக்கியே ஒரு எதிர்மறை சக்தி (negative force). அது எப்படி பாதுகாப்பை அளிக்க முடியும் ?” என்று கேட்டார்கள். துப்பாக்கியே எதிர்மறை சக்தியைத் தோற்றுவிக்கக் கூடியது என்றால் அதனுள் விளங்கும் தோட்டா, குண்டு என்பவை எப்படி பாதுகாப்பை அளிக்க முடியும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். துப்பாக்கி குண்டே எதிர்மறை சக்திகளுடன் விளங்கும், எதிர்மறை சூழ்நிலைகளை உருவாக்கும் என்றால் அந்தப் பெயரில் அமைந்த மோட்டார் வாகனங்கள் தோற்றுவிக்கும் விளைவைப் பற்றி எண்ணிப் பார்க்கத்தான் முடியுமா ? “தானத்தில் சிறந்தது அன்னதானம்,” என்பார்கள். “தானத்தில் சிறந்தது நிதானம்,” என்பார் நம் சற்குரு. நம்மையும் நம் குடும்ப அங்கத்தினர்களையும் காக்கும் வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது எந்த அளவு விழிப்பு உணர்வுடன் நிதானமாக செயல்பட வேண்டும் என்பதையே சற்குருவின் நிதான உரை தெளிவுபடுத்துகின்றது.

 
குரு
கிருபையாக
விளங்கும் இந்த ஆண்டில்
முடிந்த மட்டும் சற்குருவின் உபதேசங்களில்
உங்களுக்குப் பிடித்ததை உங்கள் சக்திக்கு
இயன்றவரையில்
நிறைவேற்றி வந்தாலே போதும்.
!!! வெற்றி நமதே !!!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam