நீ எனக்கு சீடன், நான் உனக்கு சீடன், என்றும் ! :: ஆசான்

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விருத்தசீர மாமேரு

நம் சற்குரு கோவணாண்டியுடன் திருஅண்ணாமலையை எத்தனை முறை வலம் வந்தார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது, எத்தனை பிறவிகளில் இந்த வலம் தொடர்ந்தது என்பதையும் நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. இரவு நேரங்களில் திருஅண்ணாமலையை வலம் வந்த காலத்தில் எல்லாம் வெகுநேரம் நடந்து களைப்படைந்து விட்டால் நம் சற்குருவை ஒரு சுமைதாங்கியின் மேல் படுக்க வைத்து விட்டு தான் கீழே உள்ள கல்லில் படுத்துக் கொள்வார். “நீ சின்னப் பிள்ளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள், நான் லோயர் பர்த்தில் படுத்துக் கொள்கிறேன்...”, என்ற காரணம் கூறி விடுவார்.

சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு சோழீஸ்வரம்

2022ம் ஆண்டில் அடியார்கள் எத்தனை சுமைதாங்கிக் கற்களை நிறுவ முடியுமோ அத்தனை சுமைதாங்கிக் கற்களை நிறுவுமாறு நம் சற்குரு தெரிவித்திருந்தார். விருத்தசீர சுமைதாங்கி என்ற இந்த அழியாச் சின்னங்கள், சித்த அவதாரச் சின்னங்களாய் நம் கோவணாண்டி, சிறுவன் மகிமைகளை என்றென்றும் நிலைநாட்டும் என்பதே இந்த சுமைதாங்கிகளின் பின்னணியில் அமைந்த ஆன்மீகச் சுவையாகும்.

திருவெள்ளியான்குடி ஸ்ரீகோலவில்லி வெள்ளி ராமர் ஆலயத்தின் முன்பாகவும், ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயத்தின் முன்பாகவும், திருச்சி சோமரசம்பேட்டை அருகில் உள்ள பெருங்குடி ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தின் அருகிலும் இத்தகைய விருத்தசீர சுமைதாங்கிகள் நம் அடியார்களால் 30.12.2022 வெள்ளிக் கிழமை அன்று நிறுவப்பட்டன என்பதே நம் உள்ளம் பூரிக்கும் செய்தியாகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை வெறும் சுமைதாங்கிகள் என்று தோன்றினாலும் வெள்ளிக் கிழமை, ரேவதி நட்சத்திரம், 30ந் தேதி, மார்கழி 15ம் நாள், சித்த யோகம் என்ற இணைப்பை சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இதன் தெய்வீக பிரதிஷ்டை சக்திகள் நம்மை பிரமிப்புக்குள்ளாக்கும். 2022 என்று குருவும் சற்குருவும் (3+3) இணையும் ஆண்டில் இவ்வாறு அப்பர் பர்த்தும் லோயர் பர்த்தும் இணைவது என்பது எத்தகைய மகத்துவம் வாய்ந்த ஒரு ‘birth’ ஆக அடியார்களுக்கு அமையும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு திருவெள்ளியான்குடி

விருத்தசீரம் என்றால் முதிர்ந்த அனுபவம், கனிந்த கனி என்றெல்லாம் பொருளுண்டு. நம் அடியார்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த சுமைதாங்கியில் விடை உண்டு, நிவாரணம் உண்டு. ஒரு கோயிலில் மூல மூர்த்தியை தரிசிக்க முடியாவிட்டாலும் அங்குள்ள தீர்த்தம், கொடி மரம், தலமரம் இவற்றை தரிசனம் செய்து தங்கள் மனக் குறைகளைக் கூறினாலும் அந்தக் குறைகள் இறையருளால் தீர்க்கப்படும் என்பதுபோல தொற்றுநோய், கலவரம், ஊரடங்கு என்ற எதிர்மறை சக்திகள் தோன்றி சகஜ வாழ்க்கையை பாதித்தாலும் அடியார்கள் இத்தகைய சுமைதாங்கிகளை வணங்கி வழிபாடு இயற்றுவதால் தகுந்த வழிகாட்டுதலை, மன அமைதியைப் பெறுவார்கள் என்பது உறுதி.

இந்த சித்த குரு வேத சூக்த மாமேருவிற்கு பச்சை, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மணமுள்ள மலர் மாலைகள் அணிவித்து, எண்ணெய் தீபங்கள், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி என்று எந்த வழிபாட்டு அம்சங்களையும் இந்த சுமைதாங்கிகளின் மேல் ஏற்றி வைத்து, நின்றோ, அமர்ந்தோ, முழங்காலிட்டோ, ஏன் படுத்த நிலையில் கூட இந்த சுமைதாங்களின் அருகில் பிரார்த்தனை செய்து பயன்பெறலாம். சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் கேசரி, டைமண்ட் கல்கண்டு படைத்து தானமளித்தலும் சிறப்பே.

தலையில், இடுப்பில், முதுகில் சுமை தூக்கி வருபவர்கள் தங்கள் சுமைகளை இந்தச் சுமைதாங்கிக் கற்களில் இறக்கி வைத்து இளைப்பாறுவது வழக்கம். இது பழைய கதை. தற்காலத்தில் இவ்வாறு சுமை தூக்குபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது எனலாம். அதே சமயத்தில் பொறாமை, நோய், இயலாமை, தள்ளாமை போன்ற காரணங்களால் மக்களின் மனச் சுமை பல மடங்கு அதிகரித்து விட்டது, மலிந்து விட்டது என்பது உங்களைச் சுற்றிலும் காணக் கூடிய ஒரு சாதாரண விஷயமே. இத்தகைய மனச் சுமைகளை நீக்கும் மாமருந்தே இந்த சுமைதாங்கிக் கற்களாகும். இந்த சுமைதாங்கி கற்கள் தாங்கும் மந்திரத்தைப் பார்த்துக் கொண்டு, ஜபித்துக் கொண்டே இருந்தால் போதும். உங்கள் மனச் சுமை அனைத்தும் நீங்கி விடும், மாயமாய் மறைந்து விடும். இது ஒரு உத்தம குருவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அல்ல, இரு உத்தம ஆன்மீகச் சிகரங்களின் இணைந்த உத்திரவாதம் ஆகும்.

முதுமையோ, இயலாமையோ ஒரு வேதனை அல்ல, தாங்கி பொறுத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தமான அனுபவமும் கிடையாது. நம் சற்குரு ஒரு முறை, “சார், இறைவனிடம் வேண்டினேன், அடியேன் அனுபவிக்காத சுகம் கிடையாது, ஓட்டாத உள்ளூர் வெளிநாட்டுக் கார்கள் கிடையாது, அனுபவிக்காத வசதியும் கிடையாது, சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷனர் முதற் கொண்டு அனைத்து வசதிகளையும் அனுபவித்துப் பார்த்து விட்டேன். அதனால் கொஞ்சம் உடல் வேதனையையும், மன வேதனையையும் கொடு என்றேன் ... அதுதான், ஐயா, அடியேன் இப்போது அனுபவிக்கும் வேதனைகள்...”, என்பது மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த நம் சற்குருவின் ‘அடிமை கண்ட ஆனந்தம்’.

சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு பெருங்குடி

இந்த வேதனைக்கு (?!) எல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அமைந்ததே நம் சற்குரு இந்தப் பூமி வாழ்க்கையை உகுத்த அந்த கடைசி நொடி அனுபவமும். இரு குரு சக்திகளை குறிக்கும் மருத்துவமனையில் இருந்த நம் சற்குருவை ஸ்கேன் எடுக்கும் மெஷினில் படுக்க வைத்தனர். உடலில் துணி அனைத்தும் அகற்றப்பட்டு இருந்தாலும் சற்குருவுடன் ஒட்டி இருந்தது நம் கோவணாண்டி அளித்திருந்த குருவைக் குறிக்கும் மூன்று ருத்ராட்சங்கள் மட்டுமே. அவற்றையும் கழற்ற முடியுமா என்று நம் சற்குருவைக் கேட்டபோது நம் சற்குருவோ, “அம்மா, இந்த ருத்ராட்சத்தை எங்கள் ஐயா கொடுத்தார், அவர் ஞாபகமாக இந்த ருத்ராட்சங்களை அடியேன் இன்று வரை அணிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் ஸ்கேன் செய்வதற்கு இடையூறாக இருக்கும் என்றால் இதை அடியேன் தலைமேல் வைத்துக் கொள்கிறேன், போதுமா?” என்று கேட்டு அந்த ருத்ராட்சங்களை தன் தலை மேல், நெற்றி உச்சியில் மாட்டிக் கொண்டார்.

பொறுப்பில் இருந்த பணியாட்கள் ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தனர். CT Scanner வடதிசை என்ற குரு திசை நோக்கி நகர ஆரம்பித்தது. “பூஜ்யம் என்பது நேர்கோடு!” என்ற ஆசானின் அனுபவ மொழியை தன் வாழ்நாள் முழுவதும், முழுவதுமாகக் கடைபிடித்து வந்த நம் சற்குரு தன் வாழ்வின் கடைசி நொடியிலும் கடை பிடித்தார். ஆம், பூஜ்யம் என்ற வளைவு கோட்டு விசை, நேர் கோட்டு விசையாக மாறி ஸ்கேனர் செல்ல, upper berth, lower berthஉடன் இணைய, தன் வாழ்வின் கடைசி மூச்சை உலகத்தவர் நன்மைக்காக தன் சற்குருவின் மடியில் பள்ளிகொண்டவாறே தாரை வார்த்து அளித்தார் நம் சற்குரு.

எப்போதாவது சுமக்கும் தலை பாரமே சிரமம் என்றால் வாழ்நாள் முழுவதும் pacemaker போன்ற சாதனங்களை உடலில் பொருத்தி இருப்பவர்களும், மூத்திரப்பை போன்றவற்றை எப்போதும் தங்களுடன் தூக்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களும் என் செய்வது? இத்தகையோர்க்கும் ஓரளவு நிவாரணம் அளிக்க வல்லதே இத்தகைய சுமைதாங்கி வழிபாடாகும்.

ஸ்ரீஅகத்தீசன் பெருங்குடி

இதுவே கொடுமை என்றால் ... ?

மனிதன் சுமக்கும் சுமைகளில் ‘தான்’ அகந்தையே மிகவும் கொடியது என்பார் மாதா அமிர்தானந்தா. கொடுமையான அந்த ஆணவத்தையும் அழிக்க வழிகாட்டுவதே இந்தச் சுமைதாங்கியின் தொடர்ந்த வழிபாடு.

நம் சற்குருவை நேரில் தரிசனம் செய்யாதவர்கள் சிவ குடும்பமாகத் திகழும் இந்த மாமேருவிடம் பிரார்த்தனை செய்து வந்தால் உரிய சற்குருவை அவர்கள் நிச்சயம் பெறுவார்கள்.

அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !

அவரவர் பிறந்த நாட்கள், திருமண நாட்கள், ஒவ்வொரு மாதமும் 21ந் தேதி, ரோகிணி நட்சத்திர நாட்களில் நம் அடியார் மூர்த்திகள் இந்த சித்த குரு வேத சூக்த மாமந்திர மாமேருவை வணங்கி வழிபடுதலால் அவர்கள் விஜய மூர்த்திகளாய்த் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை, ஐயமில்லையே!

நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் வலம்புரிச் சங்கு 21 தலைமுறைகளாக ஸ்ரீஅகத்தீசனுக்கு சேவை செய்து மகிழ்கிறது என்றால் இது சங்கா இல்லை விஜய சங்கா ?!

‘லப் டப்’ என்ற இதய ஒலியைக் கேட்கவல்லவர்களும், உணரவல்லவர்களும், ஸ்டெதாஸ்கோப் மூலம் இந்த ஒலியை தினமுமே கேட்கும் மருத்துவர்களும் பாக்கியசாலிகளே. காரணம் இந்த வேத ஒலி இறைவனின் உடுக்கை ஒலியின் பிரதிபலிப்பாக, ஆன்மாவின் குரலாக ஒலிப்பதே ஆகும். இதயத்தின் ஆரோக்கியத்தை உள்ளொலி இணைப்பான இதய ரேகைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அதே போல் கால் ரேகைகளும் இதயத்தின் ஆரோக்யத்தை உணர்விப்பவையே. இவ்வாறு கால் மூலமாக ஆரோக்யத்தைப் பெருக்கும் முகமாகவே ஆலய பிரதட்சிணங்கள், கிரிவலங்கள், பாத யாத்திரை போன்றவை நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆடையூர்

பக்தர்களுக்கு அனுகிரகம் அளிப்பதற்காக அபய முத்திரை தரிசனங்கள் இறை மூர்த்திகளால் அளிக்கப்பட்டாலும் நடராஜ மூர்த்தி அளிக்கும் அரிதிலும் அரிய அபய பாத தரிசனம் நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளது அல்லவா? ஆனால் இந்த தரிசனப் படத்தைப் பெறாதவர்கள் என் செய்வது? அவர்களுக்கும் அருள்புரிவதாக அமைந்துள்ளதே சித்த குரு வேத சூக்த மாமந்திர மாமேருவாகும். இதன் lower berth அபய பாத தரிசன சக்திகளை அளிப்பதாகும். பாறையாய் இறுகிய பிறவித் தளைகளை மாயம் செய்யும் இதுவா lower berth ?

நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதி அமைந்த திருஅண்ணாமலை ஆடையூர் திருத்தலத்தில் இரு விருத்தசீர சுமைதாங்கிகள் நம் அடியார்களால் நிறுவப்பட்டன. நம் கோவணாண்டி பெரியவரே சிறுவன் வெங்கடராமனின் 51வது ஜீவ சமாதி அமையும் இடத்தைச் சூட்சுமமாகக் குறிப்பிட்டார். இதன் காரணம் என்ன? மகரிஷிகள் அனைவருக்கும் பாத பூஜைகைள் நடைபெற்றதே குபேர லிங்கம் அமைந்துள்ள கிரிவலப் பாதை பகுதியாகும். சற்குருவின் பாதக் கமலங்களை குறிக்கும் விதமாக நம் அடியார்களால் இரு விருத்தசீர சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டன, இதுவே நம் சற்குருவின் தொலை நோக்குப் பார்வை அடியார்களுக்கு சுட்டிக்காட்டும் மகத்துவமாகும். ஆடையூர் திருத்தலத்தில் துலங்கும் இந்த இரு சுமைதாங்கிகளையும் நம் சற்குருவின் திருப்பாதங்களாக பாவித்து வழிபாடுகள் நிகழ்த்துவதால் திரளும் பலன்களை வர்ணிக்கத்தான் இயலுமா?

பெற்றோர்களுக்கு பாதபூஜைகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஆற்ற இயலாதவர்கள், தங்கள் கணவன்மார்களுக்கு பாத பூஜைகளை நிறைவேற்ற விருப்பமில்லாதவர்கள் இந்த இரு மாமேரு சின்னங்களை வணங்கி வழிபடுதலால் நற்பலன் பெறுவார்கள். தொடர்ந்த வழிபாடு அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையைப் பெருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், நடராஜ மூர்த்தியின் ஆடிய பாதமும் அபய பாதமும் ஒன்றாய்த் துலங்குவதே ஆடையூர் திருத்தல மாமேரு பிரதிஷ்டையாகும்.

இந்த மாமேருவை தரிசனம் செய்து வழிபட விரும்புவோர் தேவநந்தல் கிராமம், ஆடையூர் என்று விசாரித்து கிரிவலப் பாதையிலிருந்து விலகி காஞ்சி செல்லும் சாலையில் செல்லும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாமேருவும் பூமியில் நிலைகொள்ளும்போது எத்தனையோ சுவையான வரலாறுகளை உள்ளடக்கித்தானே பிரகாசிக்கும். அதுபோல் திருச்சி கிள்ளுக்கோட்டை அருகில் உள்ள ஸ்ரீகண்ணிறைந்த பெருமாள் தலத்தில் எழுந்தருளிய மாமேருவின் தோற்றத்தில் உள்ள சுவையே அழிஞ்சில் என்னும் என்றும் வற்றாத, மறையாத சுவையாகும். அழிஞ்சில் மரத்தின் விதைகள் எங்கும் பரவி மறையாது அந்த மரத்தின் உள்ளேயே சென்று மறைந்து விடும் இயல்புள்ளதால் அழிஞ்சில் மரத்தை தல விருட்சமாக உடைய மலையடிப்பட்டி சிவாலயத்தின் மலையடிப்பகுதியாக ஸ்ரீகண்ணிறைந்த பெருமாள் தலம் விளங்குவதே மலையடிப்பட்டியின் தனிச் சிறப்பாகும். விருத்த என்றால் பழைமை வாய்ந்த, முதிய என்று பொருள். சீரம் என்றால் வளமையான, பால் சுரக்கும், இளமையான என்றெல்லாம் பொருள். எனவே கோவணாண்டி பெரியவரையும் பாலகனான நம் சற்குருவையும் குறிக்கும் இந்த விருத்த சீர சுமைதாங்கி பழைமையான சிவத்தையும் பாலகனான பெருமாளையும் இணைக்கும் தலத்தில் தோன்றியிருப்பது எத்தகைய பெருமை தரும் சீர்மை. மேலும் பெற்றோரின் சுமையாக வளரும் ஒரு குழந்தை அந்த பெற்றோர்களைத் தாங்கும் சுமை தாங்கியாக, தம் பெற்றோரைத் தாங்குவதாக இங்கு ஆலமரத்தின் விழுதுகளாக மாறித் தாங்குவதும் நாம் இரசிக்கக் கூடிய மற்றோர் சுவையே.

கண்ணன் என்ற பெருமாள் நாமத்திற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. நம் சற்குரு அளிக்கும் சுவையோ இவை எல்லாவற்றிலும் அமிர்தமயமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அது என்ன?
கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருக்கும்போது தன் தலைக் குடுமியில் மயிலிறகு சூடி காட்சி அளிப்பது வழக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இதன் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியத்தை சித்தர்கள் மட்டுமே அறிவர். சிவபெருமான் எப்போதும் தன் இதயத்தில் பெருமாளைச் “சூடி”
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே
என்று நாம உச்சாடனம் செய்து கொண்டே இருப்பார்.

தேவபாண்டலம்

விருத்தசீர மாமேரு தரிசனம்...
1. ஆதிபீடம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருஅண்ணாமலை
2. தேவநந்தல் ஆடையூர் திருஅண்ணாமலை, ஆடியபாதம்
3. தேவநந்தல் ஆடையூர் திருஅண்ணாமலை, அபயபாதம்
4. சோழீஸ்வரம் சிவாலயம், கும்பகோணம்
5. திருவெள்ளியான்குடி பெருமாள் ஆலயம், கும்பகோணம்
6. ராச்சாண்டார் திருமலை, திருச்சி
7. பெருங்குடி, திருச்சி
8. மலையடிப்பட்டி, கீரனூர் அருகே, திருச்சி
9. வெள்ளலூர் கோயம்புத்தூர்
10. தேவபாண்டலம், திருஅண்ணாமலை அருகே
11. ஐயர்மலை, குளித்தலை அருகே
12. சாத்தமங்கலம், லால்குடி
13. ஆமூர், குணசீலம் அருகே
14. திருத்தியமலை, துறையூர் அருகே
15. கொட்டாங்குறிச்சி அத்தாழநல்லூர் அருகே
16. நரிக்குடி கும்பகோணம் அருகே
17. கொண்டராங்கி திருமலை ஒட்டன் சத்திரம்
18. பெருமகளூர் சிவாலயம்

அதுபோல் பெருமாளும் எப்போதும் ஒரு சிவநாமத்தை கூறி அதை ஒவ்வொரு இமைப் பொழுதும் மற்றவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்பதையே தம் நித்திய கடமையாகக் கொண்டிருந்தார். இதுவே கண்ணன் என்ற நாமத்தின் பொருளாகும். ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமாள் உச்சரிக்கும் சிவ நாமத்தின் பலா பலன்களை மற்றர்களின் நலனுக்காக அளிப்பதே கண்ணன் என்ற பெருமாள் நாமத்தின் பொருள் என்பதே நம் சற்குரு உவந்தளிக்கும் நாம மகிமை. பூமியில் பெருமாள் எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலுமே இந்த நாம உச்சாடன மகிமை தொடர்ந்தது. கிருஷ்ணாவதரத்தில் ஏகலைவனின் அம்பு தன் சிவந்த பாதத்தில் பதிந்து தான் வைகுண்டம் திரும்பும் தருணம் வந்தபோது, “தனித் துணை சிவவே, அடியேன் வழித்துணை சிவமே,” என்று சிவநாம தியானத்தில் பெருமாள் இலயித்துத்தான் வைகுண்டம் ஏகினார். இதுவே திருஅண்ணாமலை அருகில் உள்ள தேவபாந்தலம் திருத்தலம் சுட்டிக் காட்டும் மகிமையாகும்.

பந்தலம், பாந்தலம் என்ற சொற்கள் எல்லாம் சிவ பந்தலாய் பெருமாளுக்கு அமைந்து பெருமாளைக் காத்த, சிவனடியார்களைக் காத்த பாந்தவ சக்திகளே ஆகும். மேலோட்டமாக பார்ப்பதற்கு பெருமாள் தன் ஆயுள் முழுவதும் தேவ அற்புதங்களை நிறைவேற்றியது போல் தோன்றினாலும் இந்த அற்புதங்கள் அனைத்தின் பின்னணியிலும் சிவபெருமானின் காக்கும் சக்திகளே ஆதாரமாக அமைந்தன என்பதை நாம் அறிவோம். அது போல் பெருமாளுக்கு பாதுகாப்பு பந்தலாய் காத்த சக்திகளே தேவபந்தல திருத்தலத்தில் இன்றும் பக்தர்களைக் காக்கும் சக்திகளாக தொடர்ந்த பரிணமிக்கின்றன. இதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள உதவி செய்வதே தேவபாந்தல திருத்தலத்தில் நம் அடியார்கள் பிரதிஷ்டை செய்த விருத்தசீர சுமை தாங்கி ஆகும்.

விருத்த சீர சுமைதாங்கிகளை ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருமண மேடையாக அலங்கரித்து அதில் பிரம்மா சரஸ்வதி மூர்த்திகளை எழுந்தருளச் செய்து திருக்கல்யாண வைபவத்தைக் கொண்டாடிய நிகழ்ச்சிகள் திருச்சி ராச்சாண்டார்மலை போன்ற திருத்தலங்களில் அமைந்தன என்பதும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி தம்பதிகளின் திரண்ட அருளை நம் அடியார்களுக்கு மட்டும் அல்லாது இந்த சமுதாயத்திற்கு பெற்றுத் தந்த பெருமையை பறைசாற்றுகிறது.

திருமண நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா, காது குத்தும் விழாக்கள், சீமந்தம் போன்ற அனைத்து விதமான மங்கள காரியங்களையும் இந்த விருத்தசீர மாமேருக்களின் சாட்சியாக நிகழ்த்தி நம் சற்குருவின், அனைத்து சித்தப் பெருமக்களின் ஆசிகளையும் பெற்றிடலாம் என்பதே நம் அடியார்கள் நிதர்சனமாக கண்ட உண்மையாகும்.

திருத்தலங்களில் விளங்கும் இறை மூர்த்திகளைப் போன்ற தெய்வாம்ச சக்திகள் பூரணமாய்ப் பொலியும் மூர்த்திகளே, லிங்க சொரூபங்களே இந்த விருத்த சீரமகா மேரு தோற்றங்கள் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. அப்படியானால் திருத்தலங்களில் உள்ள மூர்த்திகளுக்கு அர்ச்சனை, ஆராதனை இயற்றுவது போல் இந்த மூர்த்திகளுக்கும் அர்ச்சனை வழிபாடுகள் இயற்றினால் மனதிற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்குமே என்று எண்ணிய அடியார்களின் வேண்டுகோளை ஏற்று இங்கு விருத்தசீர மகாமேருவை அர்ச்சித்து வணங்கும் போற்றித் துதிகளை அளித்துள்ளோம். இந்த போற்றித் துதிகளை எந்த மாமேருவிற்கும் அடியார்கள் ஓதி பயன்பெறலாம். செந்தாமரை, வெண்தாமரை, கொன்றை மலர்கள், ராமபாணம் மல்லிகை வகைகள், விருட்சிப்பூ, செவ்வந்தி போன்ற எந்த மணமுள்ள பூக்களையும் அர்ச்சனைக்கு உபயோகித்துப் பயன் பெறலாம்.

1. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் பேதம் கடந்தாய் போற்றி
2. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் அகண்டாகார சச்சிதானந்த அருளே போற்றி
3. ஓம் ஓளம் ஹ்ரீம் க்லீம் ஒலிக்குள் ஒளியான உணர்வே போற்றி
4. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் காற்றினும் கடுகி காப்பாய் போற்றி
5. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் என்னுயிர் எந்தாய் இறைவா போற்றி
6. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் மண் மீது மாயிருள் களைவாய் போற்றி
7. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் விண்மீது விளங்கும் விண்ணொளி போற்றி
8. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் கண்ணில் கருத்தாய் கலந்தாய் போற்றி
9. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் பூவினுக்கு கோவே கவினே போற்றி
10. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் கோவினுக்கு குணமருள் கோவே போற்றி
11. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் ஆவினுக்கருளும் அமுதே போற்றி
12. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் அன்பே அருளே ஆதவா போற்றி

நேத்ர பாவன யோகம்

13. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் ஆசை முகமெல்லாம் நேசமானாய் போற்றி
14. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் நெஞ்சில் நிலைத்த மஞ்சமே போற்றி
15. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் நிமலா நிர்மலா கலிமலா போற்றி
16. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் நீதி நினதடி சோதி நினதடி போற்றி
17. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் அஞ்சாமல் அருளும் ஆசான் போற்றி
18. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் பற்று அறுக்கும் பரமனே போற்றி
19. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் மிச்சப் பிழை பொறுக்கும் மீமாம்சா போற்றி
20. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் கடம்பா கதிரா கதிர்வேலா போற்றி
21. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் இடும்பன் தோள் மீது ஏகினாய் போற்றி
22. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் சாம்பா சத்யா சதுர்வேதா போற்றி
23. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் வேம்பா வில்வா விடையூர்வாய் போற்றி
24. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் கம்பத்தடியான் காளமேகா போற்றி
25. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் காழி அமர்ந்த கருவே போற்றி
26. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் ஊழி துடைக்கும் உறுதுணை போற்றி
27. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் மாயை மணாளன் நீயே போற்றி
28. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் சிவமும் சக்தியும் உக்தியும் ஆனாய் போற்றி
29. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் வேலி கடந்த வித்தகா போற்றி
30. ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் திரிநாமம் ஒரு நாமமானாய் போற்றி

மேற்குறித்த நாமாவளிகளை ஓதியவாறே இந்த விருத்தசீர சுமைதாங்கிகளை, திருத்தலங்களை, திருத்தல பிரகாரங்களை, திருஅண்ணாமலையை, தீர்த்தங்களை, தல விருட்சங்களை வலம் வருதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. இந்த விருத்தசீர சுமைதாங்கிகளை நோக்கியவாறு அமர்ந்து இந்த நாமாவளிகளை ஓதும்போது கண்களை முதலில் மேலே நம் சற்குருவின் குருமங்களகந்தர்வ சக்திகள் துலங்கும் மேரு கல்லில் பதிந்துள்ள ஓம் என்று பீஜாட்சரத்தை தியானித்தலும், அடுத்து மேருவின் இடது தூணான ஸ்ரீதேவி சக்திகள் துலங்கும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள ஔம் என்று பீஜாட்சரத்தை தியானித்தும், அடுத்து நம் இடியாப்ப சித்த ஈசனின் அருள் திரமாகத் திகழும் பாத தூளியான ஹ்ரீம் என்ற பீஜாட்சரத்தை ஓதியும், அடுத்து மகாமேருவின் இடப் பகுதியில் பூதேவி சக்திகளுடன் திகழும் சிலாவில் க்லீம் என்ற எதிர்மறை சக்திகளை அகற்றும் பீஜாட்சரத்தை ஓதுதல் சிறப்பாகும்.

யோக மார்க்கத்தைப் பற்றி ஒரு துளியும் அறியாதவர்கள் கூட இந்த நேத்ர பாவன யோகத்தைக் கைகொண்டு உத்தம நிலைகளை அடையலாம். உண்ணும்போதும் உறங்கும்போதும் கூட நிறைவேற்றக் கூடியதே இந்த யோகமாகும். தினமும் திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்க வேண்டும் என்பது நம் சற்குருவின் விருப்பம். இதை மனத்தளவில் கூட நிறைவேற்ற முடியாதவர்கள் எண்ணற்றோர் உண்டு. இத்தகையோர் இந்த பீஜாட்சரங்களை ஓதி வருதலால் நாளடைவில் அவர்கள் திருஅண்ணாமலையின் தரிசனத்தை தெளிவாகப் பெற முடியும். அந்நிலையில் அருணை வலம் உள்ளங்கை நெல்லிக் கனிதானே?

இந்த பீஜாட்சரங்களை மட்டும் ஓதியே நன்னிலை அடைந்த அடியார்கள் காவிரி மணலினும் விஞ்சி இருப்பார்கள் என்றால் இந்த பீஜாட்சரங்களின் மகிமையையோ அதைத் தொடரும் நாமாவளிகளின் மகிமையையோ சொற்களால் விளக்க முடியுமா? சொற்பதம் கடந்த துரீய இன்பமே இந்த பீஜாட்சரங்களில், நாமாவளிகளில் பொதிந்திருப்பது!

விருத்தியாகும் விருத்தசீர வழிபாடு...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam