குரு விரும்பினால் காமதேனுவும் கைக்குள் அடக்கமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்



ஸ்ரீமரகதாம்பாள், பர்வதமலை. தற்காலத்தில் psoriasis என்னும் ஒரு வகை தோல் வியாதியால் பெரும்பாலான இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வியாதி மருந்துகளுக்கு கட்டுப்படாது. ஆனால், அத்தகைய நோய் உள்ள இளம் பெண்களும் திருமண பாக்கியங்கள் பெற்று நலமுடன் வாழ அருள் செய்யும் தெய்வமே பர்வதமலை ஸ்ரீமரகத தேவி ஆவாள். மரகதப்பச்சை பட்டுப் புடவையை அம்பாளுக்கு சார்த்தி வழிபட்டு வருவதால் கடுமையான தோல் நோய்கள் நிவாரணம் பெறும்.



இறைக் காட்சிகளால் கண்கள் குளிரட்டும்.
குழல் இசையால் செவிகள் நிறையட்டும்.



பர்வதமலை சிவாலயம். குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும் அற்புத திருத்தலமே பர்வத மலையாகும். பல குடும்ப பிரச்னைகளால் வாழும் கணவன் மனைவியர் இத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு வளர்பிறை சதுர்த்தி திதிகளில் இறைவழிபாடு செய்து வருவதால் எத்தகைய குடும்ப பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வு கிட்டும்..



பர்வதமலையிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்கக் கிட்டும் தென்கயிலை கும்ப தரிசனம். இத்தரிசனம் தினமும் பெற்று ஒருமணி நேரத்திற்குக் குறையாமல் பன்னிரு திருமுறை பாடல்களை, ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு பதிகங்களை ஓதி வந்தால் வேத பீஜாட்சர ஒலிகளைக் கேட்க முடியும்.



பொதுவாக திருஅண்ணாமலையில் ஒரு கோடி இறையடியார்களுக்கு அன்னதானம் வழங்கிடில் காமதேனுவின் தரிசனம் கிட்டும் என்பது திருஅருணாசல புராண மகாத்மியம். அதேபோல மூன்று கோடி இறை அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கியவர்கள் காமதேனுவின் தரிசனப் பலனை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். இங்கு நீங்கள் காண்பது சாட்சாத் காமதேனு பட்டியின் பிரத்யட்ச தரிசனம் ஆகும். பெறற்கரிய இத்தரிசனம் பெறும் இறையடியார்கள் அவரவர் வசதியைப் பொறுத்து குறைந்தது 108, 1008 குழ்ந்தைகளுக்கு பால் இனிப்புகளை தானமாக அளித்தலால் இந்த அரிய அனுகிரகத்தைப் பெற்றுத் தந்த நமது வெங்கடராம சுவாமிகளின் பெருங் கருணைக்கு ஓரளவு நன்றி செலுத்தியதாகும்.



பர்வதமலை அருகே கிட்டும் ஓமசாரல் தரிசனம். வயது முதிர்ந்த பலருக்கும் குளிர் காலத்தில் குளிரைத் தாங்க முடியாமல் வருந்துவர். அடிக்கடி குளிர் சுரங்கள் வருத்துவதும் உண்டு. இத்தகைய முதுமைத் துன்பங்கள் தாக்காதிருக்க இளமையிலேயே பர்வத மலை யாத்திரையின்போது விலையுயர்ந்த கம்பளிப் போர்வைகளைத் தானம் அளித்தல் நலம். நரம்பு வியாதிகள் நிவாரணம் பெறும். கம்பளிகள் உயர்ந்த தரம் உள்ளவையாய் இருத்தல் அவசியம்.



சமுதாயம் அனைத்து வளங்களையும் பெற்று மக்கள் அமைதியுடன் வாழ வனதேவதைகளின் ஆசிகள் அவசியம். தற்காலத்தில் வன தேவதைகளின் வழிபாடு மிகவும் குறைந்து விட்டது. பர்வத மலை அடிவாரத்தில் அருள்புரியும் இந்த முனீஸ்வர மூர்த்திகளை வணங்கி சர்க்கரை பொங்கல் படைத்து அமாவாசை தினங்களில் தானம் அளித்து வந்தால் மழை வளம் பெருகும். முனீஸ்வர வழிபாடு இயற்கை வளத்தைப் பெருக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.



கிருத யுகங்களில் இறை அவதார மூர்த்திகள் மக்களோடு மக்களாய் நடமாடியது போல் இறை காரியங்களில் ஈடுபட்டுள்ள அடியார்களை ஊக்குவிப்பதற்காக இன்றும் மகான்கள் புனிதத் தலங்களில் காட்சி தருகிறார்கள். 2006ம் ஆண்டு திருக்கார்த்திகை தீப அன்னதானத்தில் பங்கு பெற்ற இறை அடியார்கள் பர்வத மலைக்கு யாத்திரை சென்றபோது அவர்கள் அறியாமல் அவர்களுக்கு திருக்காட்சி தந்த ஸ்ரீபூண்ட மகானே இங்கு ஒரு சாதாரண கிராமவாசி வடிவில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். வாழ்க ஸ்ரீபூண்டி மகான் திருவாடிகள். வளர்க நம் குருமங்கள கந்தவர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் பேரருள் பெருங்கருணை கடாட்சம். ஒன்பது வயது சிறுவனாக இருந்த வெங்கடராம சுவாமிகளுடன் இரண்டு வருட காலங்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து நிலம்புரண்டி போன்ற அற்புத மூலிகைகளின் தரிசனங்களையும் அன்னபூரணி லோகத்தைச் சார்ந்த ஒரு சாண் உயரமே உடைய அற்புத மகான்களின் தரிசனத்தையும் பெற்றுத் தந்தவரே பூண்டி மகான் ஆவார்கள். கலசபாக்கத்தில் ஜீவ சமாதி பூண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் பூண்டிமகான் ஜீவ சமாதியில் சஷ்டியப்தி பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை கொண்டாடி உரிய தான தர்மங்களை அளித்தலால் நீண்ட ஆரோக்யமான வாழ்வு கிட்டும்.



பர்வத மலை திருத்தல யாத்திரையில் அடியார்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள் பலப் பல. அதில் ஒன்று வாழ்க்கை நிலையற்றது, நீர்க் குமிழ் போன்றது என்பதே. இத்தகைய எண்ணங்களை திடமாக கொடுக்கக் கூடியதே உயரமான இடங்களில் நாம் காணும் இது போன்ற குறுகிய பாலங்கள். விஞ்ஞானக் கணக்கில் இவை அனைத்தும் விர்ஜின் ஸ்டீல். மெய்ஞ்ஞானக் கணக்கில் இவை கர்மம் இல்லாக் கம்பிகள்.



சக்ர தீர்த்தம், பர்வதமலை. இத்தீர்த்தத்தில் கால்கள் படாது தீர்த்தம் எடுத்து கண்கள் முகத்தில் தலையில் தெளித்துக் கொள்தலால் கண் திருஷ்டி தோஷங்கள், பில்லி, சூன்யம் போன்றவை விலகும். சிலர் தூக்கத்தில் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள் அத்தகையோர் இத்தீர்த்த தரிசனத்தால் நலம் பெறுவர்.



ஓளஷத சந்திர தீர்த்தம், பர்வதமலை. மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை தீர்த்தம். சுமார் 300 விதமான காய்ச்சல் நோய்களுக்கு அருமருந்தாக விளங்குவது இத்தீர்த்தமாகும். இனங்கண்டு கொள்ள முடியாத காய்ச்சல் நோய்களால் வருந்துவோர் இத்தீர்த்தத்திலிருந்து நீர் பெற்று கிருத்திகை நட்சத்திர தினத்தில் முருகன் கோயில்களில் அன்னதானம் அளித்தலால் நலம் பெறுவர். அன்னதானத்திற்கு மட்டுமே இத்தீர்த்தத்திலிருந்து நீர் பெறலாம் என்பது இறை நியதி. கவனம் தேவை.


ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர், பர்வதமலை. ஆண்களுக்கு வரும் எதிர்பாராத ஆபத்துகளிலிருந்தும் கடுமையான நோய்களிலிருந்தும் காப்பவரே பர்வதமலை இறைவன் ஆவார். சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள், அக்னி ஆலைகள், அணு உலைகள் போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தல இறைவனை தரிசனம் செய்து பட்டாடை அங்கவஸ்திரம் சுவாமிக்கும் இறை மூர்த்திகளுக்கும் அணிவித்து வழிபடுதல் நலம். ஆயுள் விருத்தி அளிக்கும் அரிய மூர்த்தி.



திருமணமான பெண்கள் கணவனின் எதிர்பாராத ஆரோக்ய கேடுகளால் தங்கள் மணவாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரிதும் வருந்துகிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன்மார்களின் குறைகளை வெளியில் சொல்ல முடியாத நிலையிலும் இருப்பார்கள். இத்தகையோர் பர்வதமலை மேல் சென்று இறைவனை வழிபட முடியாவிட்டாலும் பர்வதமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிடோபா சுவாமிகளின் ஜீவ சமாதியில் அன்னதான வழிபாடுகளை மேற்கொள்வதால் நலம் அடைவர்.



என்னதான் வேலையில் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாதபடி அவர்கள் மேல் பிற அதிகாரிகள் ஏதாவது ஒரு குறையைக் கூறி அவர்களை வெவ்வெறு இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி பணி மாற்றங்களால் அவதியுறுவோர் பர்வதமலை மூர்த்திகளை வணங்கி ஏழைகளுக்கு காலணிகளை குறைந்தது 21 ஜோடிகள் தானமாக அளித்தலால் நலம் பெறுவர்.



கரடி தீர்த்தம், சதுரகிரிமலை. குருஹோரை நேரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி கடலை மிட்டாய்களை நாய்களுக்கு அளித்து வந்தால் குருவின் மேல் அவ்வப்போது முளைக்கும் சந்தேகங்கள் அகலும். இத்தீர்த்தத்தில் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கரடி சித்தர் நீராடுவதால் இத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு மண்டல காலத்திற்குள் கரடி சித்தர் தினமும் பூஜிக்கும் ஸ்ரீமாற்றுரைவாதீஸ்வரர், திருவாசி திருத்தலத்தில் இறைவனை வழிபடுவது வழிபாட்டுப் பலனை பூரணம் அடையச் செய்யும்.



ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்திகள், சதுரகிரிமலை. ஒன்றுக்கு மேல் சரக்கு வாகனங்களை உடைய வாகன உரிமையாளர்களும், டூரிஸ்ட் வேன்கள் உரிமையாளர்களும் வழிபட வேண்டிய மூர்த்திகள். பச்சை திராட்சையும் கறுப்பு திராட்சையும் கலந்த பழரசங்களை தானமாக அளித்தல் நலம். தங்கள் ஊரில் உள்ள நந்தி மூர்த்திகளுக்கு சந்தனக் காப்பிட்டு இத்தகைய பழங்களை அவர்கள் திருமேனியில் பதித்து வழிபடுதல் அற்புதமான பலன்களை வர்ஷிக்கும்.



அஷ்டதிக்குபால ஜோதி தரிசனம், திருஅண்ணாமலை. ஒவ்வொரு வருடம் கார்த்திகை தீப ஜோதி தரிசனம் பெறும் அஷ்ட திக்கு பாலகர்கள் தங்கள் தரிசன பாக்கியத்தின் ஒரு பகுதியை இத்தரிசனத்தில் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துச் செல்கிறார்கள். எனவே அடியார்கள் இத்தரிசனம் தினமும் பெற்று வெளியில் செல்வதால் காரியத் தடங்கல்கள் நிவர்த்தி ஆகும். கண் திருஷ்டிகள் தணியும்.



ஸ்ரீசௌந்திரநாயகி அம்மன், அன்பில் சிவாலயம், லால்குடி. சில பெண்களுக்கு முகத்தில் வடு, மரு, தழும்பு, மச்சம் போன்ற காரணங்களால் திருமணத் தடைகள் ஏற்படுவதுண்டு. இவ்வாறு அங்க குறைபாடுகளால் திருமணங்கள் நிறைவேறாத பெண்கள் இத்திருத்தல அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி பூப்பந்தல் அலங்காரம் செய்து வழிபட்டால் நலம் அடைவர். பெண்கள் கையால் வாழை நார் கொண்டு பூக்களைத் தொடுத்தலே சிறப்பாகும். வாழையடி வாழையாக சந்ததிகள் நன்முறையில் வாழ வழி செய்வதே வாழை நார் கொண்டு பூத்தொடுக்கும் பழக்கமாகும். அக்காலத்தில் பெண்கள் பேரன், பேத்திகள் எடுத்த நிலையிலும் கூட வீட்டு வேலைகளைச் செய்து வந்ததுடன் சிறந்த கண் பார்வையுடன் விளங்கியதற்கு பூத்தொடுக்கும் பழக்கமே சிறந்த வழிபாடாக அமைந்து அவர்களுக்கு நல்வழி காட்டியது.



ஸ்ரீபைரவ மூர்த்தி, அன்பில் சிவாலயம். பொதுவாக விபத்து, தற்கொலை போன்ற அகால மரணம் அடைந்தவர்களுக்கு உரிய தர்ப்பண வழிபாடுகளை இயற்றுதல் கடினம். சனிக் கிழமைகளில் கருவேப்பிலை துவையல் கலந்த சாதம் அன்னதானமாக அளித்து வந்தால் தக்க நிவாரண முறைகள் நல்லோர்களால் அருளப்படும். ராணுவத்தில் சேவை செய்து மரணம் அடைந்தவர்களுக்கும் கருவேப்பிலை சாத அன்னதானம் நற்கதியை அளிக்கும்.



ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி, அன்பில் சிவாலயம். அக்கா தங்கைகளை அண்ணன் தம்பிகள் மணத்தல், மூத்தவர்களை விடுத்து இளையவர்களுக்கு திருமணம் நிகழ்த்துதல் போன்ற காரணங்களால் குடும்பங்களில் ஏற்படும் உட்பூசல்களுக்கு நிவாரணம் அளிப்பதே இத்தல முருகன் வழிபாடாகும். சனிக் கிழமைகளில் மாலை ஐந்து மணிக்கு முருகன் சன்னதியில் தீபமேற்றி வேல்விருத்தம் துதிகளை ஓதி வந்தால் குடும்ப சச்சரவுகள் தணியும். குடும்ப ஒற்றுமை பெருகும்.



திரு வாகீச முனிவர் தவம் இயற்றும் காட்சி, அன்பில் சிவாலயம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கும்போது கூட வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டு, பொய் சாட்சிகள் மூலம் அத்தகையவர்களையும் கோர்ட்டுக்கு இழுத்து விடுவது உண்டு. இதுவும் ஒருவித பூர்வ ஜன்ம கர்ம வினையே. இத்தகையோர் இத்தல வாகீச மூர்த்தியை வழிபட்டு எட்டு முழ வேஷ்டி சட்டை, ஒன்பது கஜ புடவை ரவிக்கை போன்றவற்றை ஏழை தம்பதிகளுக்கு தானம் அளித்து வர நற்பலன் பெறுவார்கள்.



ஸ்ரீஅம்பிகை, நேமம் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருத்தலம், பூதலூர் அருகே, தஞ்சாவூர். கணேஷ், ரமேஷ் போன்று ”ஷ்” என்ற அட்சரத்தை பெயர் இறுதியில் உடையவர்களும், அபிலாஷா (தீவிர ஆசை), நிஷா (இருட்டு) போன்ற எதிர்மறை பெயர்களை உடையவர்களும் இவ்வாறு தங்கள் பெயரில் ஏற்பட்டுள்ள நாம தோஷங்களை களைய அருள் புரியக் கூடிய திருத்தலமே நேமம் சிவாலயம். தாமே இடித்த மஞ்சள் பொடியால் அம்பிகைக்கு அபிஷேகம் நிறைவேற்றி குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட்டு வர பெயர்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் தணியும். நாம தோஷங்களைக் களைபவளே நேம தேவி.



ஸ்ரீஐராவதீஸ்வரர் சிவாலயம், நேமம், தஞ்சாவூர். லட்சுமி கடாடசம் என்றால் செல்வ விருத்தி என்று பொதுவாக சொன்னாலும் லட்சுமி கடாட்ச சக்திகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூறுகள் உண்டு. இதில் ஐராவத த்வீபம் என்ற லட்சுமி கடாட்ச சக்தியை அளிக்கக் கூடிய இறை மூர்த்தியே நேமபிரான் ஆவார். தாம் பதவியில் உள்ளவரை எந்தவித இடையூறும் இல்லாமல் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்களின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற உதவுவதே ஐராவத த்வீப சக்திகளாகும்.



ஸ்ரீஐராவதீஸ்வரர் திருத்தலம், நேமம். கோடைக் காலத்திலும் சிலருக்கு குளிர்காலத்தைப் போல் சளி பிடித்து மூச்சிழுப்பு நோய்கள் ஏற்பட்டு வருத்தும். இத்தகைய சளி, மார்பு நோய்களால் வருந்துவோர் யானைகளுக்கு அருகம்புல் அளித்து நேம ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் மூச்சிழுப்பு நோய்கள் குணமாகும். இத்தகையோர் புதன் கிழமைகளில் அவசியம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.



ஸ்ரீஐராவதீஸ்வரர் சிவாலயம், நேமம், தஞ்சாவூர். காலில் பித்த வெடிப்பு, புண், சிரங்கு போன்ற பாத நோய்களுக்கு நிவாரணம் அளிப்பவரே நேமம் திருத்தல நந்தி மூர்த்தி ஆவார். மாதம் இருமுறை கை, கால்களுக்கு மருதாணி இட்டு இத்தலத்தில் அடிப் பிரதட்சிணம் வர கால் நோய்கள் நிவாரணம் பெறும். கோயில் நந்தவனங்களில் உள்ள மரம் செடிகளுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்வதும கால் நோய்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லதாகும்.



ஸ்ரீஸ்வேத வஜ்ர நாதர், நேமம் திருத்தலம். வைரங்களில் பல ரகங்கள் உண்டு. அதில் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த ஸ்வேத வஜ்ரம் என்ற ரத்னத்தால் உருவானவரே நேமத்தில் அருள் புரியும் பட்டை லிங்க மூர்த்தி ஆவார். வைரத்தில் படும் ஒளிக் கதிர்கள் வெளிச் செல்லாது ”total internal reflection” என்ற முறையில் உள்ளுக்குள்ளேயே பிரதிபலிக்கப்படுவதைப் போல இந்த லிங்க மூரத்தியின் முன் அமர்ந்து சொல்லப்படும் இறை நாமங்கள் பல கோணங்களில் பிரதிபலிக்கப்பட்டு பல்லாயிரம் மடங்கு சக்தி பெறும்.



ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன், அகத்தியான்பள்ளி, வேதாரண்யம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், பலருடைய திருமண வாழ்க்கை இதற்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது. மூன்று தல வில்வங்களால் தாமே தொடுத்த வில்வ மாலைகளை இத்தல இறைவனுக்கு வியாழக் கிழமைகளில் சார்த்தி வழிபட்டு வருவதால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணங்கள் தெரிய வரும். காரணங்கள தெரிந்து விட்டால் அதை நிவர்த்தி செய்வது எளிது தானே ? எத்தகைய மனக் குழப்பத்திற்கும் விடை அளிப்பவளே பாகம்பிரியாள் அன்னை.



ஸ்ரீஅகத்தீஸ்வரர், அகத்தியான்பள்ளி. மணமற்ற மண வாழ்க்கையை மணம் வீசச் செய்பவரே இத்தல இறை மூர்த்தி ஆவார். ராம பாண பூக்களை 21 முழம் கொண்டு சுவாமிக்கு அலங்கரித்து சுந்தர காண்ட பாடல்களை ஓதி வர மண வாழ்க்கையில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும். இராமர் சீதையை காட்டிற்கு அனுப்பிய பின் தாங்க முடியாத வேதனை அடைந்தார். அப்போது இத்தல இறைவனை வேண்டியே ஆறுதல் பெற்றாராம். எனவே தம்பதி பிரிவினைகளால் ஏற்படும் வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் மூர்த்தியே இவர்.



அன்னவாசல் சிவாலயம், புதுக்கோட்டை மாவட்டம். ராஜ்மா என்னும் பருப்பை சுண்டல் செய்து செவ்வாய்க் கிழமைகளில் சுப்ரமண்ய புஜங்கம் துதிகளை ஓதி முருகன் கோயில்களில் அன்னதானமாக வழங்கி வருதலால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் அதிகமான ரத்தப் போக்கால் விளையும் இரத்த சோகை நோய்கள் குணமாகும். இவ்வாறு உணவிற்கும் நோய்க்கும் உள்ள தொடர்பை விளக்க சித்தர்களால் வழிகாட்டப் படும் தலமே அன்னவாசல் திருத்தலமாகும்.



ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர், அன்னவாசல், புதுக்கோட்டை. மிகவும் தொன்மையான சுயம்புலிங்க மூர்த்தி. அன்னபூரண லோகத்து சித்தர்களால் தினமும் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்படும் அற்புத மூர்த்தி. இரவில் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈச அருளால் இத்தல மூர்த்திக்கு அன்னபூரண லோகத்து சித்தர்கள் ஆற்றிய சித்த பூஜையை கண்டு களித்த பெருந்தகையே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். பனை வெல்லம், கரும்புசாறு, தேன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சர்க்கரை நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும்.



ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மன், அன்னவாசல் சிவாலயம். பவ கரண யோக நேரத்தில் அம்பிகைக்கு 1008 வளையல்களுக்குக் குறையாமல் சார்த்தி அவ்வளையல்களை பிரசாதமாகப் பெற்று நவராத்திரியில் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் தானமாக அளித்து வந்தால் பிரசவக் கோளாறுகள் அகலும். தற்காலத்தில் பல பெண்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய வழிபாட்டால் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஓரளவு வேதனை தணிய இந்த வழிபாடு உதவும்.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam