கையை மூடினால் அந்தரங்கம், கையை விரித்தால் அத்வைதம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்



ஸ்ரீகணேச மூர்த்தி, ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை மாவட்டம். சிலர் மிகவும் சுறுசுறுப்பாக ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால், ஆரம்பித்த வேகத்திலேயே அதை மறந்து வேறு வேலைக்குப் போய் விடுவார்கள். இவ்வாறு எக்காரியத்தையும் சரியாக முடிக்க முடியாமல் அரைகுறையாக விட்டுவிடுபவர்களுக்கு நிறைந்த வைராக்யத்தை அளிக்கக் கூடிய தலமே மாணிக்கவாசகர் குருவைப் பெற்ற ஆவுடையார் கோயில் திருததலமாகும். சதுர்த்தி திதிகளில் தேன் மட்டும் அருந்தி இத்தல பிள்ளையாரை வழிபட்டு வர எடுத்த காரியத்தை துடிப்புடன் நிறைவேற்றும் வைராக்ய சக்தி காலக் கிரமத்தில் கை கூடும்.





ஸ்ரீமுத்து கணபதி, ஆவுடையார் கோவில். ஒரே கோயிலில் பல பிள்ளையார் மூர்த்திகள் இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியின் அனுகிரக சக்திகள் முற்றிலும் மாறுபடும் என்பதற்கு ஆவுடையார் கோவில் திருத்தலமும் ஒரு உதாரணம் ஆகும். தந்தை வழியிலும் தாய் வழியிலும் மொத்தம் 12 தலை முறையினருக்கு தர்ப்பணம் அளித்தலே சிறபபாகும். ஆனால், இவ்வாறு தங்கள் சந்ததியிலுள்ள மூதாதையர்களின் பெயர்கள் அநேகமாக பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அத்தகையோர் தங்கள் வம்சாவழியினரின் பெயர்களை அறிய உதவுபவரே ஸ்ரீமுத்துப் பிள்ளையார் ஆவார். மார்கழி மாதத்தில் பனி முத்துக்கள் மறையும் முன் சேகரித்த அருகம்புல் மாலைகள் இவருக்கு ப்ரீதி.



ஆத்மசக்தி தீர்த்தம், ஆவுடையார் கோவில். ஒவ்வொருவர் மனதிலும் மிகவும் ஆழ்ந்த தெய்வீக எண்ணங்கள் நிரவியுள்ளன. ஆனால், அதை எப்படி வெளியே கொண்டு வருவது என்ற இரகசியத்தை உணர்ந்தவர் குரு ஒருவரே. அதனால்தான் குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கை ஆகிவிடுகிறது. ஆவுடையார்கோவில் தீர்த்தத்தில் புனர்பூச நட்சத்திர தினத்தில் நீராடி புத்தாடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் இறை அடியார்கள் தங்கள் மனதில் ஆழப் பதிந்துள்ள தெய்வீக சக்திகளை தாங்களே உணரும் தெய்வீக நிலைகள் வந்து சேரும்.



hகுருந்தமரம், ஆவுடையார் கோவில். துளசி மாலை, கடுக்கன், நெற்றிச் சின்னங்கள், பூணூல், அரைஞாண் கயிறு போல ருத்திராட்சமும் சக்தி வாய்ந்த திருஷ்டி ரட்சை காப்புச் சாதனமாகும். ஆனால், உரிய முறையில் பெறப்பெற்ற ருத்ராட்சத்திற்கே தெய்வீக சக்திகள் உண்டு. எனவே இறையடியார்கள் தங்களிடம் உள்ள ருத்ராட்சங்களை இக்குருந்த மர நிழலில்வைத்து 108 முறை குருந்த மரத்தை வலம் வந்து மாணிக்க வாசகரின் பிடித்த பத்து பாடல்களை ஓதி ருத்ராட்சங்களை அணிந்து கொண்டால் அம்மாலைகளில் உள்ள தோஷங்கள் நீங்கும்.



ஸ்ரீகணேச மூர்த்தி, இடையாற்றுமங்கலம், லால்குடி. ஸ்ரீகணேச மூர்த்திக்கு வலப்புறம் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி எழுந்தருளி உள்ள திருத்தலமே இடையாற்று மங்கலமாகும். எத்தகைய கொடிய திருமண தோஷங்களையும் தீர்க்கக் கூடியதே இத்தகைய ரிஷி வல சக்திகளாகும். வலஞ்சுழி விநாயகரைப் போல இவ்வாறு ரிஷிகள் பிள்ளையாரின் வலப் புறத்தில் எழுந்தருளி இருப்பதையே ரிஷி வல மாங்கல்ய சக்திகள் என்று சித்தர்கள் புகழ்ந்து கூறுகிறார்கள். ஒரே ரக மாங்கனிகளால் இத்தல விநாயகருக்கு மாலை அணிவித்து வழிபடுதல் ரிஷி வல சக்திகளைப் பெறும் எளிய முறையாகும்.



ஸ்ரீஅகத்திய லிங்கம், திருநெடுங்களம், திருச்சி. நாயன்மார்கள் புடை சூழ ஸ்ரீஅகத்தியப் பெருமான் தினமும் லிங்க மூர்த்திகளை பூஜிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தல மூர்த்திகளுக்கு தினமும் புதுப் பூணூலை சார்த்தி வழிபடுவதால் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் திகழ்வர். பெண் பிள்ளைகள் உரிய வயதில் பருவம் அடையும். இத்தல தீர்த்தத்திலிருந்து நீர் பெற்று நந்தவனத்தைப் பராமரித்தல் சிறப்பாகும்.



ஸ்ரீஒப்பிலா நாயகி அம்மன், திருநெடுங்களம். நாற்பது வயது தாண்டிய பல பெண்கள் இடுப்பு வலியால் துன்பம் அடைகின்றனர். இதற்கு பல ஆன்மீக காரணங்கள் இருந்தாலும் முந்தைய பிறவிகளில் கோயில்களில் மாக்கோலம் இடாததும் ஒரு காரணம் என்று சித்தர்கள் அருள்கின்றனர். எனவே இப்பிறவியிலாவது திருநெடுங்களம் போன்ற பாடல் பெற்ற தலங்களில் பச்சரிசி மாக்கோலம் வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைகளில் இட்டு அம்மனை வழிபட்டு வந்தால் இடுப்பு வலி துன்பங்கள் நீங்கும்.



ஸ்ரீபைரவ மூர்த்தி, திருநெடுங்களம். சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சிறிது மல்லிகை செண்ட் கலந்து இததல பைரவருக்கு காப்பிட்டு வந்தால் இரவில் படுக்கையிலிருந்து கீழே விழும் துன்பங்கள் ஏற்படாது. அச்சுறுத்தும் கனவுகளிலிருந்து நிவாரணம் கிட்டும். சுமங்கலிகளுக்கு 12 முழத்திற்குக் குறையாமல் மல்லிகைப் பூச்சரங்களை கோயில்களில் தானம் அளித்தலும் தீய கனவுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருநெடுங்களம். சிரசாசனம் என்னும் யோகத்தை பிரம்மசாரிகள் மட்டுமே பயில வேண்டும் என்ற யோக நியதி உள்ளது. ஆனால், இம்முறையை அறியாமல் இல்லறத்தில் இருப்பவர்களும் சிரசாசனத்தை பயிலும்போது பலவிதமான உடல், மன துன்பங்கள் ஏற்படும். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பவரே திருநெடுங்கள யோக தட்சிணா மூர்த்தி ஆவார். முறையாக யோகாசனம், தியானம் அறியாமல் பயின்று அதனால் ஏற்படும் துன்பங்களுக்கு பிராயசித்தம் அளிப்பவரே இத்தலதட்சிணா மூர்த்தி ஆவார்.



திருநெடுங்களம் சிவாலயம். அந்தி முகூர்த்த பூஜைக்கு ஏற்ற தலங்களில் திருநெடுங்களம் சிவாலயம் ஒன்றாகும். மாலையில் சூரியன் அஸ்தமனம் பெற்ற நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் இல்லங்களிலோ ஆலயங்களிலோ விளக்கேற்றி ஒரே இடத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம், இடர்களையும் பதிகம் போன்ற பதிகங்களை ஓதுவதே அந்தி முகூர்த்த பூஜையாகும். எத்தகைய இடர்பாடுகளையும் களையக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த பூஜை இது.



ஸ்ரீநித்திய சுந்தரேஸ்வரர் சிவாலயம், திருநெடுங்களம். காசிக்கு இணையான இரட்டை விமானங்களுடன் திகழும் காவிரிக் கரைத் தலம். தோடு, செருப்பு, மெட்டி, கொலுசு, வளையல்கள் போன்று இரட்டையான பொருட்களை இத்தல இறைவனை வேண்டி தானம் அளித்து வந்தால் கணவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள், பணியாட்கள் இடையே உள்ள உறவு பலப்படும்.



ஸ்ரீநெடுங்களநாதர், திருநெடுங்களம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஐந்து கிலோ தங்கம், ஒரு ஏக்கர் நிலம், 20000 மீட்டர் துணை போன்ற தானங்களை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும் என்பது சித்தர்கள் அறிவுரை. சாதாரண மனிதனுக்கு எட்டாக் கனியாகத் தோன்றும் இந்த தான தர்மங்களை நிறைவேற்றும் வழிமுறைகளை பெறுவதற்கு உதவக் கூடிய தலமே திருநெடுங்களமாகும். திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய இடர்களையும் பதிகத்தை தினமும் 11 முறைக்குக் குறையாமல் ஓதி வந்தால் வாழ்க்கைக் கர்ம வினைகளை முறையாக ஆற்றுவதற்கு தேவையான வழிமுறைகள் நல்லோர் மூலம் பெறலாம்.



ஸ்ரீவரதராஜ பெருமாள், திருநெடுங்களம். அஷ்டலட்சுமிகள் அளிக்கும் லட்சுமி கடாட்சத்தைப போல அட்ட தரித்திர நிலை என்ற தரித்திர, பஞ்ச நிலைகளும் உண்டு. லட்சுமி கடாட்ச பூஜைகளை நிறைவேற்றி செல்வ வளங்களை பெருக்கிக் கொள்வது ஒரு புறம் இருக்க அட்ட தரித்திர நிலைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதும் அவசியம். ஆகார பஞ்சம், ஆடை பஞ்சம், ஆளுமைப் பஞ்சம் போன்றவை சில முக்கியமான பஞ்சங்கள், தரித்திர நிலைகளாகும். இத்தல பெருமாள் மூர்த்தி அட்ட தரித்திர நிலைகள் அண்டாது காக்கும் மூர்த்தி ஆவார். பெண்கள் பகலில் தூங்குதல், சடை பின்னாமல் தலை விரிகோலமாக அலைதல், தலை வாரி முடியை தரையில் போடுதல் போன்ற காரியங்களால் தரித்திர நிலைகள் உருவாகும். கவனம் தேவை.



ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், திருமாந்துறை சிவத்தலம், லால்குடி. எத்தகைய கொடிய காமக் குற்றங்களுக்கும் பிராயசித்தம் அளிக்கக் கூடியதே திருமாந்துறை சிவத்தலம். ஆனால், குரு மூலமாகவே அததகைய தவறுகளுக்கு பிராயசித்தம் பெற வேண்டும் என்பது இத்தல நியதி. ஒருமுறை மண்டன மிச்ரரின் வாதத்தின் இடையே பரகாய பிரவேசத்தால் இறந்த மன்னன் உடலில் புகுந்து சில அந்தரங்க தாம்பத்ய இரகசியங்களை அறிந்து கொண்டார் ஆதிசங்கரர். உன்னத சந்தியாச நிலையில் அதுவும் ஒரு குறைபாடே என்பதால் அந்த தூசி அளவு தவறுக்கும் பிராயசித்தம் வேண்டி இத்தலத்தை அடைந்து பல பிராயசித்த வழிபாடுகளை மேற்கொணடு இறைவனை வேண்டி களங்கமில்லா சன்னியாசத்தைத் திரும்பப் பெற்றார். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளின் சற்குருவான கோவிந்த பகவத்பாதாள் நர்மதா நதி தீரத்தில் கடுமையான தவம் மேற்கொண்டு இருந்ததால் ஸ்ரீஆம்ரவனேஸ்வர ஈசனின் ஆணையால் ஸ்ரீமிருகண்டு முனிவரே மீண்டும் ஆதிசங்கரருக்கு சன்னியாசத்தை அளித்து சன்னியாச தர்மத்தைப் புதுப்பித்தார் என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும்.



ஸ்ரீவாலாம்பிகை, திருமாந்துறை சிவத்தலம். நிலையான மாங்கல்ய சக்திகளையும், ஒழுக்கமுள்ள பிள்ளைகளையும் அளிப்பவளே திருமாந்துறை அம்பாள் ஆவாள். ஆடி மாதம் பூர நட்சத்திரம் அன்று அம்பிகையை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானப் பொருட்களை தானமாக அளித்திட பெண்கள் நலமடைவர். வாலா அரிசி என்ற ஒருவகை அரிசியை வறுத்து அரைத்து அதில் வெல்லம் சேர்த்து உருண்டைகள் செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தைகள் குண நலத்துடன் வளர்வர். கணவனுடைய தீய பழக்கங்கள் அகலும்.



ஸ்ரீஆடல்வல்லான், திருமாந்துறை. தற்காலத்தில் ஏட்டுப் படிப்பை வைத்துக் கொண்டு பலரும் திருமணப் பொருத்தங்கள் பார்த்து வருவதால் சரியான மண வாழ்வு அமையாது தம்பதிகள் பலவிதமான வேதனைகளை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. முதலில் ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் அது ஒரு மனிதனுடையதா, விலங்கினுடையதா, ரிஷியினுடையதா, தெய்வ அவதாரத்தினுடையதா என்ற அடிப்படை ஜோதிட அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படை ஜோதிட அறிவை அளிப்பதே ஆடல்வல்லானின் ஆடல் கோலங்கள்.



ஸ்ரீஆம்ரவனேஸ்வரர், திருமாநதுறை. காயத்ரீ வலஞ்சுழித்து செல்லும் அற்புத தெய்வீகத் திருத்தலமே திருமாந்துறையாகும். பல தலைமுறையினருக்கும் பல தலை முறைகளாக தர்ப்பணம், திவசம் அளிக்காத குறைகளைக் களையக் கூடிய அற்புத பித்ரு முக்தித் தலமே திருமாந்துறை என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும். அற்புத சந்ததி விருத்தியையும் நோயற்ற நீண்ட வாழ்வையும் அளிக்கக் கூடிய தெய்வமே ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் ஆவார். அகண்ட நாம சங்கீர்த்தனங்கள், வேத யக்ஞங்கள் இத்தலத்திற்கு உரிய சிறப்பு வழிபாடுகளாகும்.



ஸ்ரீவியாக்ர தட்சிணாமூர்த்தி, திருவேங்கைவாசல், புதுக்கோட்டை. வியாக்ரபாத மகரிஷி புலிக்கால்கள் பெற்ற திருத்தலம். விடியற்காலையில் ஐந்து மணிக்கு தரையில் படாமல் சேகரித்த செங்கீற்று பவளம் என்று சித்தர்களால் புகழப்படும் பவளமல்லி பூக்களால் திருவேங்கைவாசல் இறை மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் அரிய பலன்கள் கிட்டும். இவ்வாறு ஒரு நாளில் இயற்றும் மலர் வழிபாடு ஒரு வருடம் இத்தலத்தில் இயற்றிய அற்புத பலன்களைக் கொடுக்கும். காலையில் பொழுது புலரும் முன், வண்டுகள் மலர்களில் தேனைப் பருகும் முன் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க இருட்டில் மரங்களில் ஏறும் வண்ணம் புலியின் சீரிய பார்வையையும் கூரிய நகங்களையும் புலிக்கால் முனிவர் பெற்ற திருத்தலம். கூரிய கண் பார்வையைப் பெற அடியார்கள் வழிபட வேண்டிய திருத்தலம்.



ஸ்ரீஜகதீஸ்வரர், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம். பொதுவாக சதுரம், செவ்வக வடிவ மனைகளில் வீடுகட்டுதல் சிறப்பு. ஆனால், தற்காலத்தில் நவீன குடியிருப்புகளில் இத்தகைய விதி முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனவே சரியான மனை அமைப்புகள் இல்லாதபோது இத்தல இறைவனை வேண்டி செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது நெய் விளக்கு தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால் நில தோஷங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.



ஸ்ரீஜகத்ரட்சகி அம்மன், மணமேல்குடி, புதுக்கோட்டை. முந்தானை நிலத்தில் படும்படி பெண்கள் சீலையை அணிவதால் பல விதமான தோஷங்களுக்கு ஆளாகிறார்கள். அவற்றில் ஒன்றே கர்ப்பை பைகள இறக்கம், குடலிறக்கம் போன்ற ஹெர்னியா என்று அழைக்கப்படும் நோய் வகையாகும். முந்தானை தரையை நோக்கி இறங்க இறங்க குடலும் தரையை நோக்கி இறங்கும் என்று அகத்திய கிரந்தங்கள் அறிவிக்கின்றன. இத்தகைய தவறுகளுக்கு ஓரளவு பிராயசித்தம் அளிப்பதே இத்தல அன்னை வழிபாடு. பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு துவாதசி திதிகளில் வயிறு நிறைய உணவு அளித்தல் சிறப்பாகும்.



ஸ்ரீபைரவ மூர்த்தி, ஸ்ரீஜகதீஸ்வரர் சிவாலயம், மணமேல்குடி. தேள், நட்டுவாக்கிளி, பூரான் போன்ற விஷஜந்துக்கள் தொல்லையால் வருந்துவோர் இத்தல பைரவ மூரத்திக்கு வெஜிடபிள் கட்லட் தேநீர் (டீ) தானம் அளித்தலால் நன்மை பெறுவர். விஷம் என்பது ஒரு வகை பித்தமாகும். தேயிலையில் உள்ள செஞ்சாந்து என்னும் துவர்ப்பு சுவை தேள் போன்ற விஷ ஜந்துக்களின் விஷத்தன்மைக்கு நிவாரணமாக அமைகின்றன என்பது சித்தர்கள் அளிக்கும் சுவையான ஆன்மீக இரகசியமாகும். தேயிலை நீருடன் நாட்டுச் சர்க்கரை, சிறிது இஞ்சி, நீர் கலக்காத பாலைச் சேர்த்து தேநீர் தயாரிப்பது ஓரு சுவையான முறையாகும்.



ஸ்ரீதட்சிணா மூரத்தி, ஸ்ரீஜெகத்ரட்சகர் சிவாலயம், மணமேல்குடி. திருமணங்களில் மாங்கல்ய தாரண முகூர்த்த நேரங்கள் குறிக்கும்போது ஏழாமிடம் அவசியம் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான முகூர்த்தங்கள் இவ்வாறு அமையாது போய்விடுகின்றன. இதுபோன்று பலவிதமான முகூர்த்த தோஷங்களால் வருந்துவோர் வியாழக் கிழமைகளில் 300 மணமுள்ள செவ்வந்தி பூக்களால் பூ அங்கி ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சார்த்தி வழிபடுதால் நலம் பெறுவர். மணமுள்ள செவ்வந்திகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.



புதுவீட்டில் குடி புகுவோர் தற்காலத்தில் சமையலறை எந்தத் திசையில் உள்ளது, படுக்கை அறை எந்த அளவில் உள்ளது என்றெல்லாம் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உண்மையில் இல்லத்தில் அவசியம் இருக்க வேண்டியது துளசி செடியும் பவளமல்லி செடியும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இததகைய தெய்வீக காப்பு ரட்சை சக்திகளை தங்கள் இல்லத்தில் அமைக்க முடியாதவர்கள் தங்கள் இல்லங்கள் அருகில் உள்ள கோயில் நந்தவனங்களில் வாரம் ஒருமுறையாவது சிறப்பாக சனிக் கிழமைகளில் செடி, மரங்களுக்கு நீர் வார்த்து வழிபடுதல் அவசியம்.



ஸ்ரீஜகத்ரட்சகர் சிவாலயம், மணமேல்குடி, புதுக்கோட்டை. ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷங்கள் பல வகையால் அமையலாம். இதில் சுக்ர சஞ்சாரத்தால் விளையும் செவ்வாய் தோஷங்களை களைய வல்லதே ஸ்ரீஜகத்ரட்சகர் சிவாலய தீர்த்தமாகும். வெள்ளிக் கிழமைகளில் இத்தீர்த்தத்தில் நீராடி நாரத்தங்காய் ஊறுகாய் சேர்த்து தேங்காய் தானம் அளித்தலால் செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார வழிமுறைகள் கிட்டும்.

>

பொன்னகரம் பெருமாள் தலம், மணமேல்குடி. சிலர் வீட்டில் தனியாக இருக்கும்போதோ தனியாக நடந்து செல்லும்போதோ ஜல்ஜல் என்ற சலங்கை ஒலிகள் கேட்பது உண்டு. நற்சக்திகள், தீவினை சக்திகள் என இரண்டுமே இத்தகைய பிரமையைத் தோற்றுவிப்பது உண்டு. இதைப் பற்றிய குழப்பத்தால் சர்ச்சையில் ஈடுபடுவதைவிட இத்தகைய ஒலிகள் நம் மன நிலையைப் பாதிக்காமல் இருக்கும் வழிபாடுகளை மேற்கொள்வதே சிறப்பாகும். இத்தலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் வேகவைத்த வேர்க்கடலை குறைந்தது ஒரு படி தானம் அளித்து வந்தால் மனக் குழப்பங்கள் மறையும்.



ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி, ஸ்ரீஜகத்ரெட்சகர் திருத்தலம், மணமேல்குடி. எவ்வித துன்ப சூழ்நிலைகளும் ஏற்படாதபோது கூட சிலருக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திடீரென தோன்றும். இதற்கு பற்பல காரணங்கள் உண்டு. பொதுவாக, தற்கொலை எண்ணத்திற்கு நிவாரணமாக அமைவதே ஒரு சாண் குறுக்களவு உள்ள பொரி உருண்டை தானம் ஆகும். செவ்வாய்க் கிழமைகளில் முருகன் சன்னதிகளில் அளிக்கப்படும் இத்தகைய தானங்கள் திடமான மனோ சக்தியை அளிக்கும் தன்மையை உடையன.



ஸ்ரீஜகத்ரட்சகர் சிவாலயம், மணமேல்குடி. கோயில் தல விருட்சங்களுக்கு தாமே அரைத்த மஞ்சளால் அலங்கரித்து வலம் வந்து வணங்குவதால் தோல் நோய்களால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும். வெள்ளிக் கிழமைகளில் 51 முறையும், வியாழக் கிழமைகளில் 30 முறையும் இத்தகைய தலவிருட்ச வலங்களை மேற்கொள்ளுதல் சிறப்பாகும். மூட்டுவலிகளுக்கு அற்புத நிவாரணம் கிட்டும். தலவிருட்சங்களில் அடியில் அமர்ந்து ஜபிக்கப்படும் மந்திரங்கள் எளிதில் சித்தியாகும்.



ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருத்தலம், மணமேல்குடி. இப்பழமையான ஆல், அரசு, வேம்பு மரங்களை வலம் வந்து வணங்கி திருக்குளாத்திலிருந்து நீர் வார்த்து வணங்கி வருதலால் தந்தை வழி சொத்துக்களை இழந்தோர் மீண்டும் அத்தகைய சொத்துக்களை மீட்க இறைவன் அருள் புரிவார். ஷண்ணாவதி தினங்களில் இத்திருக் குளக்கரையில் தர்ப்பணம் அளித்து வருதலால் எத்தகைய சொத்து பிரச்னைகளுக்கும் நியாயமான முறையில் தீர்வுகள் கிட்டும். கோர்ட்டு வழக்கு என்று அலைய வேண்டிய அவசியமே கிடையாது. இது சித்தர்கள் காட்டும் நல்மார்கம்.



திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் கோயில். இத்தல பெருமாள் கோயிலின் பிரதான கோபுரத்தின் விதானத்தில் அமைந்துள்ளதே இங்கு நீங்கள் காணும் தீர்க நேத்ர புஷ்பம் என்னும் சித்திரமாகும். இத்தல வாசல் படிகள் அனைத்தையும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு தரிசனம் செய்து இந்த நேத்ர புஷ்பத்தை தரிசனம் செய்து பின்னர் ஒவ்வொரு படியையும் தொட்டு தரிசனம் செய்து படிகளில் கீழிறங்கி சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வந்தால் எத்தகைய கண் நோய்களும் நிவாரணம் பெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேத்ர சக்தி முழுமையான நாட்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும்.



திருவெள்ளறை ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன் திருத்தலம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதுமொழிக்கு சான்றாக விளங்குவதே இத்திருத்தலமாகும். உரிய அனுமதியுடன் இக்கோயில் மடப்பள்ளியை தூய்மைப்படுத்தி திருப்பணிகள் செய்து வந்தால் நீண்ட ஆயுளும் கடுமையான நோய்களிலிருந்து நிவாரணமும் கிட்டும். சனிக் கிழமைகளில் குறைந்தது 21 பேருக்காவது புளியோதரை தானம் அளித்து வருதலும் நலமே.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam