குளவிக் கூட்டிற்கும் வாஸ்து சாஸ்திர நியதிகள் உண்டு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குசா யந்திர வழிபாடு

இறைவனை வழிபடுவதில் பல வழிமுறைகள் உள்ளன. இறைவனின் நாமத்தை ஓதுதல், இறை விக்ரஹங்களை மலர்கள் தூவி வழிபடுதல், தெய்வ உருவங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றுதல், பாத யாத்திரையாகச் சென்று இறை மூர்த்திகள் உறையும் திருத்தலங்களைத் தரிசித்தல் என இறை வழிபாடு ஆயிரக் கணக்கான பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களைத் தானமாக அளித்து வழிபடும் சேவையையே நமது குரு மங்கள கந்தர்வா நமக்கு சித்த வேத மந்திரமாக உணர்த்தி வந்துள்ளார்கள்.

இத்தகைய இறை சேவையின் ஓர் அங்கமாகத் திகழ்வதே ஸ்ரீகுசா யந்திர வழிபாடாகும்.

யந்திரம் என்றால் என்ன?

மனிதனுடைய அறிவால் மட்டுமே உணர முடியாத ஒரு இறை தத்துவத்திற்கு மனிதர்கள் தங்கள் கண்களால் கண்டு அறியத்தக்க முறையில் உருவகப்படுத்தும் வரை படமே யந்திரமாகும். உதாரணமாக, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஸ்ரீசுப்ரமணிய பெருமானின் அவதார ரகசியத்தை சரவணபவ யந்திரமாக வழிபடுகிறோம். ஒன்றுடன் ஒன்று இணைந்து திகழும் இரண்ட சம பக்க முக்கோண வடிவமே ஸ்ரீமுருகப் பெருமானுக்கு உகந்த சஷ்டி யந்திரமாக பக்தர்களால் வழிபடப் படுகிறது.

இம்முறையில் ஒவ்வொரு இறை அவதார மூர்த்திக்கும், தேவதைகளுக்கும், தெய்வங்களுக்கும், அக்னி, வாயு போன்ற தத்துவங்களுக்கும் யந்திரங்கள் உண்டு. மகான்கள், யோகிகள், ஞானிகளின் அனுகிரக சக்திகளையும், அவதார கோட்பாடுகளையும் யந்திர வடிவில் அமைத்து வழிபடலாம். ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகளின் அவதார தத்துவத்தை ஏற்கனவே நமது குருமங்கள கந்தர்வா அவர்கள் யந்திரமாக வடித்து பூலோக மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்துள்ளார்கள்.

முதலாம் இறைத் தத்துவம்

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுமே நல்லது, கெட்டது என இரண்டு பலன்களையுமே அளிக்கக் கூடியதுதானே. இந்த விதிக்கு விலக்காக அமைந்ததே ஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் பூலோக மக்களுக்காக அளிக்கப்பட்ட குசா தத்துவமாகும். நன்மையை மட்டுமே அளிக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தத்துவமே குசா தத்துமாகும். குசா தத்துவம் பற்றிய விளக்கங்களை மூன்று பாகங்களாக எமது ஆஸ்ரமம் வெளியிட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் குசா தத்துவத்தை யந்திர வடிவில் நமது குருநாதர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
பரந்து விரிந்த இறை தத்துவம்

இறைவன் என்றால் என்ன, கடவுள் என்பவர் யார் என்பதற்கு கோடி கோடி விளக்கங்கள் பல கோடி வருடங்களாக அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்விளக்கங்கள் அனைத்திலும் பத்து முக்கிய கோட்பாடுகளை பிரதானமாக சித்தர்கள் அங்கீகரித்துள்ளனர். அந்த பத்து இறை விளக்கங்களில் மூன்று முக்கிய விளக்கங்களைப் பற்றி மட்டும் ஆராய்ந்து அந்த விளக்கங்களை மனித சமுதாயம் எப்படித் தங்கள் நல்வாழ்விற்காக பயனுள்ளதாக ஆக்கி கொள்ள முடியும் என்பதை ஸ்ரீகுசா யந்திர வழிபாட்டின் மூலம் இங்கு அளிக்கிறோம்.
               
மாணிக்க வாசகப் பெருமான் அருளிய      நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்னும் இறைத் தத்துவம் சித்தர்களால் போற்றப்படும் ஒரு முக்கியமான இறைத் தத்துவமாகும். ஒலியாகவும் ஒளியாகவும் எழுந்தருளியுள்ள இறைவனை பக்தி என்னும் சாதனம் மூலம் உணரலாம் என்பது மணிவாசகப் பெருமானின் அருளுரை.

இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே கீழ்க் காணும் ஸ்ரீசிரபாத யந்திரமாகும்.

சிரபாத யந்திரம்

ஸ்ரீபாத யந்திரம், ஸ்ரீருத்ராக்ஷ யந்திரம் என்றெல்லாம் போற்றப்படும் இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணின் வடிவத்தைப் பெற்றிருப்பதால் இதை ருத்ராக்ஷ யந்திரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு வட்டத்தின் மேல் இன்னொரு வட்டம் பதிந்திருக்கும் அமைப்பைப் பெற்றிருப்பதால் இது சிரபாத யந்திரம் என்றும் வழங்கப்படுகிறது. திபெத்திய லாமாக்கள் திருக்கயிலாயத்தை வலம் வரும்போது இம்முறையில்தான் நமஸ்காரப் பிரதட்சணம் செய்வார்கள். அதாவது முதலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்த பின் எழுந்து அடுத்த நமஸ்காரத்தை முதல் நமஸ்காரத்தில் தலை பூமியைத் தொட்ட இடத்தில் தங்கள் இருபாதங்களை வைத்து வணங்கி அடுத்த நமஸ்காரத்தை நிறைவேற்றுவார்கள்.

பக்தியை வளர்க்கக் கூடியதாகவும் பணிவைக் காட்டுவதாகவும் அமைந்துள்ள இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் மாணிக்க வாசகப் பெருமானின் இறைத் தத்துவத்தை காலப் போக்கில் உணர்ந்து கொள்ள இந்த யந்திர வழிபாடு துணை புரியும்.

யந்திரம் அமைக்கும் முறை

ஒரு மா, பலா அல்லது தேக்குப் பலகையில் இந்த யந்திரத்தை வரைதல் நலம். பச்சரிசி மாவு அல்லது கையினால் அரைத்த சந்தனத்தில் இந்த யந்திரத்தை வரைதல் சிறப்பு.

முதலில் பிள்ளையார் சுழி இட்டபின் ஒரு வட்டத்தை வரைந்து கொள்ளவும். அந்த வட்டத்தின் மையப்புள்ளியில் அடுத்த வட்டத்தின் விளிம்பு தொடும் வண்ணம் இரண்டாவது வட்டத்தை வரைந்து கொள்ளவும். இரண்டு வட்டங்களுக்கும் பொதுவான ருத்ர நேத்ரப் பகுதியே சிர பாத யந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த யந்திரப் பகுதியில் பசு வெண்ணெய், கையால் அரைத்த மஞ்சள் அல்லது சந்தனத்தால் பூசி அலங்கரிக்கவும். யந்திரத்தின் நடுப் பகுதியில் சுத்தமான குங்குமத்தால் மோதிர விரலால் பொட்டு இடவும்.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சிரபாத யந்திரத்தை வாசமுள்ள மலர்களாலும், மஞ்சள் நிற பூக்களாலும், சுவர்ண புஷ்பம் என்று அழைக்கப்படும் தங்க காசுகளாலும், வெள்ளி நாணயங்களாலும் அர்ச்சித்து வழிபடுதல் நன்று. இந்த யந்திரத்தின் முன்னால் ஓதப்படும் சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள் சிறப்பான பலன்களை வர்ஷிக்கும்.

பாதாம் பருப்பு என்று நாம் அழைக்கும் பருப்பு பணிவை வளர்க்கும் அற்புத மூலிகையாகும். பாதம் ஆகும் பருப்பே பாதம் பருப்பு என்று சித்தர்கள் இதன் மகத்துவத்தைப் போற்றுகிறார்கள். பாதம்பருப்பின் வடிவத்தைப் பெற்றுள்ள சிரபாத யந்திரத்தை வணங்கி மூன்றாம் பிறை தினங்களில் பாதம்பருப்பு கலந்த பாயசத்தை குழந்தைகளுக்கு இறைப் பிரசாதமாக வழங்கி வந்தால் கடவுள் நம்பிக்கையும் குரு நம்பிக்கையும் மேலோங்கும். மேலும், ஏக பக்ஷ தோஷம் என்ற ஒரு கடுமையான தோஷத்திற்கு அருமருந்தாக அமைவதும் சிரபாத யந்திர வழிபாடாகும்.

கலியை மிரட்டும் ஏக பக்ஷ தோஷம்

கடுமையான கால தோஷத்தையும் களையும் வல்லமை உடையதே சிரபாத யந்திரமாகும். கால தோஷங்களில் ஒன்றே ஏக பக்ஷம் என்னும் தோஷமாகும். ஏழரை நாட்டுச் சனியைப் போல சந்திர பகவானின் சஞ்சாரத்தில் விளையக் கூடிய இந்த தோஷமானது, ஒவ்வொரு ராசி மண்டலத்திலும் சுமார் 2000 வருடங்களுக்கு விரவி இருக்கும்.

பூமியின் அச்சானது சூரியனை வலம் வரும்போது ஒரு வட்டத்தில் சுழல்கின்றது அல்லவா? இந்த ஒரு சுழற்சிக்கு ஆகும் காலம் 21600 வருடங்கள் ஆகும். இதை 12 ராசிகளுக்கு பங்கிட்டு ஏற்படுவதே ஏக பக்ஷ தோஷமாகும். ஏக பக்ஷ தோஷத்திற்கு ஆட்படுபவர்கள் பலவீனமான மனத்தைக் கொண்டிருப்பதால் பலவிதமான மனக் குழப்பங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமையும். சந்திராஷ்டம தினங்களிலும் தேய்பிறை நாட்களிலும் ஏக பக்ஷ தோஷ விளைவுகள் அதிகரிக்கும். எனவே, தேய்பிறை நாட்களில் பிறந்தவர்களும், குறிப்பாக விருச்சிக ராசிக்காரர்களும் இந்த ஏக பக்ஷ தோஷ விளைவுகளால் அதிகம் பாதிப்படைவார்கள்.

மனக்குழப்பம் நீங்க வழிகாட்டுவதே சிரபாத யந்திர வழிபாடாகும். தெய்வ மூர்த்திகளில் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரையும் சனீஸ்வர பகவான் தன்னுடைய கால பிடியின் கீழ் கொண்டு வர இயலவில்லை அல்லவா? அதே போல அவதார மூர்த்திகளில் ஏக பக்ஷ தோஷத்தால் நெருங்க முடியாத மூர்த்தியே ராம பிரான் ஆவார்.

எனவே, நவதி திதி, புனர்பூச நட்சத்திர நாட்களில் கையால் அரைத்த சந்தனத்தை ராமபிரானுக்கு சார்த்தி, அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் ஏக பக்ஷ தோஷங்கள் தங்களை நெருங்கா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம். பெண்கள் ஆண்கள் என இரு பாலாருமே ஏக பக்ஷ தோஷத்தால் பாதிப்படையும் வாய்ப்புகள் கலியுகத்தில் மிகுதியாக இருப்பதால் மக்கள் அனைவருமே இந்த சிரபாத யந்திரத்தை வழிபடுவது அவசியம்.

இரண்டாம் இறைத் தத்துவம்

ஸ்ரீஆதி சங்கரர் அருளிய அத்வைத தத்துவம் சித்தர்களால் போற்றப்படும் இரண்டாம் இறை தத்துவமாகும். எங்கு ஆரம்பமோ அங்குதான் முடிவும் என்பது சித்தர்கள் கூறும் அத்வைத இறை தத்துவ விளக்கமாகும்.

உலகில் நித்தியமான பொருள் என்ற ஒன்று கிடையாது. இறைவன் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மாயையே என்பது ஸ்ரீஆதி சங்கரர் அருளும் இறைத் தத்துவ விளக்கமாகும்.

இந்த இறைத் தத்துவத்தின் விளக்கமாக அமைந்ததே ஸ்ரீயந்திரமாகும். தகுதி வாய்ந்த வழிகாட்டிகள், சற்குருமார்கள் மூலம் ஸ்ரீயந்திரம் வரையும் முறையை அறிந்து கொண்டு அதன்படி தாங்களாகவே ஸ்ரீயந்திரத்தை அமைத்து வழிபடுவதே சிறப்பாகும். முறையான வழிகாட்டுதலைப் பெற முடியாதவர்கள் சிதம்பரம் திருக்கோயிலில் ஸ்ரீஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீயந்திரத்தை வழிபடுதல் நலம்.

பிரபஞ்சத்தின் அனைத்து சிருஷ்டி ரகஸ்யங்களையும் உள்ளடக்கியதே ஸ்ரீயந்திரமாகும். ஸ்ரீயந்திரத்தில் விருத்தி கோணம், சுன்ன கோணம் என்ற இரண்டு சிறப்பான கோணங்கள் உண்டு.
விருத்தி கோணத்தில் குறித்த திதி, நட்சத்திரத்தில் வைத்து வழிபடப்படும் பொருட்கள், சக்திகள் யாவும் பன்மடங்கு அற்புதமாக விருத்தி அடையும். இதற்கு நேர்மாறான பலன்களைத் தரக் கூடியதே சுன்ன கோணமாகும். சுன்ன கோணத்தில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரத்தில் வைக்கப்படும் பொருட்கள் உடனடியாக மறைந்து விடும் தன்மை உடையன.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஸ்ரீயந்திரத்தின் வெளிப்பாடு என்பதே உண்மை. சிறப்பாக எகிப்திய பிரமிடுகள், அமெரிக்காவில் உள்ள கொலராடோ பள்ளத்தாக்குப் பகுதிகள், ஓரிகான் ஏரி, பொதியமலை, திருஅண்ணாமலையின் குறித்த சில முகடுகள் ஸ்ரீயந்திரத்தின் விசேஷ கோண சக்திகளை உடையவை.

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த ஈச பிரான் சிறுவனான நமது வெங்கடராம சுவாமிகளை எகிப்திய பிரமிடுகளை காண அழைத்துச் சென்றார். ஒரு குறிப்பிட்ட பிரமிட்டுக்குள் உள்ளே சென்று பல இரசியமான பகுதிகளையும் சிறுவனுக்கு சுட்டிக் காட்டி அதன் ஆன்மீக தத்துவங்களை எல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார். பெரியவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்ட சிறுவனுக்கு தான் ஏதோ விக்கிரமாதித்தன் காலத்திற்குச் சென்று வேதாளங்களுடன் உலவதுபோல் ஒரு பிரமையே ஏற்படத் துவங்கி விட்டது.

பெரியவர், நீ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த எகிப்து நாட்டில் ஒரு ராஜாவாக இருந்தாய். அப்போது உனக்கு பட்டத்து ராணி மட்டும் அல்லாது 3000 ராணிகள் உனக்கு சேவை செய்தனர். என்று சொல்லும்போது சிறுவனைப் பார்த்து கண் சிமிட்டினார். சிறுவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

பெரியவர் தொடர்ந்து, உனக்கு நண்பனாக இருந்தவனே டுட்டக்காமேன் என்ற கந்தர்வன். அற்புதமான சித்திகள் பல உனக்கு சொல்லிக் கொடுத்தான். இருவரும் இணை பிரியா நண்பர்கள். பலவிதமான தியான முறைகளையும் அவன்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தான். இப்போது அவை எல்லாவற்றையும் நீ மறந்து விட்டாலும் உரிய காலத்தில் அவை உனக்குக் கை கொடுக்கும்.

அதன் பின்னர்தான் நீ மரியமைக்கேல் ஆசான் என்ற குருவை நாடி அவரிடம் கூடு விட்டு கூடு பாயும் ரகசியத்தைத் தெரிந்து கொண்டாய். என்று பல பழைய விஷயங்களையும் பெரியவர் நினைவூட்டினார்.

ஆம், சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருந்ததே அவன் மரிய மைக்கேல் ஆசான் என்பவரிடம் கற்ற ஆவி பற்றிய விளக்கங்கள். சொர்க்கம், நரகம், ஆவிகளின் தன்மை, ஆவிகளின் நடமாட்டம், ஆவிகளுடன் பேசுதல் போன்ற பல அற்புத விஷயங்களை எல்லாம் அப்போதுதான் கற்றுக் கொண்டான்.  

வாஸ்து சக்திகள் பல்கிப் பெருகும் தேனிமலை

இவ்வாறு பற்பல ஆன்மீக விஷயங்களை அசைபோட்டுக் கொண்டே பெரியவருடன் நடந்து வந்த சிறுவன் அங்கிருந்த ஒரு தங்க சிம்மாசனத்தைக் கண்டு பெரிதும் அயர்ந்து விட்டான். ஆம், அவ்வளவு ஒரு அற்புதமான சிம்மாசனம். பெரியவர் யமலோகம், இந்திர லோகம் என பல லோகங்களில் உள்ள சிம்மாசனங்களை எல்லாம் சிறுவனுக்குக் காட்டி இருக்கிறார். ஆனால், அந்த சிம்மாசனங்களில் எல்லாம் இல்லாத ஒரு கவர்ச்சி, ஈர்ப்பு பிரமிட்டில் பார்த்த சிம்மாசனத்தில் இருந்ததால் அது அவனை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

அதைப் பார்த்ததுமே ஓடிப் போய் அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்ளலாம் என்று சிறுவனுக்குத் தோன்றியது. ஆனால், மறு கணமே பெரியவரின் பலமான கை விரல்கள் தனது வலது கையை இறுகப் பிடிப்பதை உணர்ந்தான்.

டேய், ஏண்டா உனக்கு இந்த விபரீத ஆசை. தங்கத்துக்கும் வைரத்துக்கும் ஆசைப்படாதவன் ஆச்சே, நீ. இந்த தம்மாத்துண்டு தங்கத்தைப் பாத்து பிரமிச்சுப் போய்ட்டியே, என்றார்.

சிறுவனோ, இல்லை வாத்யாரே, தங்கத்தின் மேல் எனக்கு துளிக் கூட ஆசையே இல்லே. நீதான் எமதர்ம ராஜாவோட சிம்மாசனம், இந்திரனோட சிம்மாசனம் எல்லாமே நேரா காட்டி இருக்கியே. அதெல்லாம் பார்த்து எனக்கு கொஞ்சம் கூட ஆசை வரலியே. ஆனால், இதைப் பார்த்தால் உடனே ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று மனசு துடிக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. என்னைத் தடுக்காதே ஒரே ஒரு நிமிஷம் அதில் ஏறி உட்கார்ந்து விட்டு இறங்கி விடுகிறேன், என்று பிடிவாதம் பிடித்தான்.

சிறுவன் ஒரு புறம் அந்தத் தங்க சிம்மாசத்தில் உட்கார பிடிவாதம் பிடித்தாலும் மனதில் மட்டும் அந்த அற்ப ஆசைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெரியவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சிறுவன் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கவே பெரியவரும், சரி சரி ஒரே ஒரு நொடிதான் சிம்மாசத்தில் அமரலாம் அதற்கு மேல் அதிலிருந்து குதித்து விட வேண்டும். இதை கவனமாக நன்றாக மனதில் வாங்கிக் கொண்டு அதில் ஏறி உட்கார், என்று கண்டிப்புடன் கூறி சிறுவனுக்கு அனுமதி கொடுத்தார்.

அவ்வளவுதான், கோடை விடுமுறைக்கு வீடு திரும்பும் பள்ளிச் சிறுவனைப் போல எல்லையில்லா குதூகலத்துடன் மாணிக்கம், வைரம் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தின் மேல் ஏறி குஷியாக அமர்ந்து கொண்டு அதன் கைப்பிடிகளில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு ஒரு வெற்றிப் புன்னகையுடன் பெரியவரைப் பார்த்தான்.

ஆனால், அந்த சந்தோஷம் ஒரே ஒரு நொடிதான் நீடித்தது. அடுத்த நொடியே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் வேகமாகச் சுழல ஆரம்பித்தன. பெரியவர் உள்பட அங்கிருந்த எல்லாமே சிறுவனின் கண் பார்வையிலிருந்து மறைந்து போயின. தன்னுடைய உடல் வேகமாகச் சுருங்குவதைப் போல சிறுவனுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. அவ்வளவுதான். வீல் என்று கத்திக் கொண்டே சிறுவன் மயக்கமானான்.

கண் விழித்துப் பார்த்தால் ராயபுரம் அங்காளி கோயிலில் பெரியவரின் மடியில் படித்திருப்பதை உணர்ந்தான். சில நிமிடங்கள் கழித்துதான் தான் எகிப்திய பிரமிட் ஒன்றில் இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த காட்சி நினைவுக்கு வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்ற எந்த விவரமும் அவன் நினைவில் இல்லை.

சிறுவன் மயக்கமடைந்ததற்கான காரணத்தையும் அதன்  பின் நடந்த நிகழ்ச்சிகளையும் பெரியவர்தான் விளக்கிக் கூறினார்.

ஸ்ரீயந்திரத்தில் உள்ள சுன்னக் கோணத்தின் சக்திகள் பொலியும் சரியான கோண அளவில் அந்த தங்க சிம்மாசனம் அமைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த அரசர்கள் தாங்கள் உயிரை விட நினைக்கும்போது அந்த தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவார்கள். சில நொடிகளில் அவர்களுடைய உடல் மறைந்து விடும். நமது பாரத நாட்டில் வடக்கிருந்து உயிர் நீத்தல் என்னும் முறை இருந்தது அல்லவா? அதைப் போன்றதுதான் இந்த சுன்னக் கோண ஆசனமும்.

சிறுவன் முந்தையை பிறவியில் எகிப்திய நாட்டின் அரசனாக இருந்து, பின்னர் இவ்வுலகை விட்டுப் பிரிய வேண்டிய தருணத்தில் அந்த ஆசனத்தில் அமர்ந்துதான் தன்னுடைய இறுதி மூச்சை விட்டு அந்தப் பிறவியை நிறைவு செய்தான். முந்தைய பிறவியின் நினைவலைகளால் உந்தப்பட்ட சிறுவன் தன்னையும் அறியாமல் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான்.

ஸ்ரீயந்திரம்தான் அனைத்துப் படைப்பையும் தன்னுள் அடக்கிய அபூர்வ யந்திரமாக இருப்பதால் சுன்னக் கோணத்தில் மறையும் பொருள்கள் தங்கள் மூலத்தை அடைந்து விடுகின்றன. இவ்வாறு சிறுவனைப் பெரியவர் தடுத்து நிறுத்தாமல் சில விநாடிகள் விட்டிருந்தால் சிறுவன் தன்னுடைய மூல லோகமான குருமங்கள கந்தர்வ லோகத்திற்குச் சென்றிருப்பான்.

தக்க தருணத்தில் காப்பாற்றப்பட்ட சிறுவனை பெரியவர் அங்காளி கோயிலுக்கு அழைத்து வந்து சிறுவன் தன்னுடைய தற்போதைய நிலையை அடைவதற்காக பற்பல யோக சாதனங்களை மேற்கொண்டு அரும்பாடு பட்டு சிறுவனுக்குப் புத்துயிர் அளித்தார் எனலாம். பல சிரஞ்சீவி மூலிகைகள், தீர்த்தங்களால் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து அவனுக்கு புனர் வாழ்வை அமைக்க பெரியவருக்கு 48 நாட்கள் எடுத்துக் கொண்டது.

இந்த விவரங்களை எல்லாம் கேட்ட சிறுவன் பிரமிப்பில் ஆழ்ந்து போனான். எங்கிருந்து வந்தேனோ அந்த மூலத்திற்கே சென்ற என்னை இந்தப் பெரியவர் மீட்டுக் கொண்டு வந்து விட்டார் என்றால் இந்த அற்புதத்தை இறைவனைத் தவிர, அந்த அங்காளியைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்ற முடியாதே. அப்படி என்றால் மிட்டாயும் பரோட்டாவும் வாங்கித் தரும் ஒரு கோவணாண்டி என்று மட்டுமே சிறுபிள்ளைத் தனமாக நாம் எண்ணும் இவர் உண்மையிலேயே மனித உருவில் வந்த அங்காளிதானோ என்று ஆழ்ந்த ஆத்ம விசாரத்தில் மூழ்கி தன்னை மறந்தான் சிறுவன்.

அவன் தலையை ஏதோ அன்பான கைகள் கோதுவதை உணர்ந்து தன்னிலைக்கு மீண்டான் சிறுவன்.

அங்கே பெரியவர்தான் உயிரை மீட்டிய அன்பான சிரிப்புடன் அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்

என்னடா நைனா, ஏற்கனவே 48 நாள் நீ அங்காளியை சுற்றாமல் கோட்டை விட்டு விட்டாயே. உள்ள பாக்கி போதாதென்று இந்தப் பாக்கியை இந்தக் கிழவன் எப்படியடா தீர்ப்பான். ஓடு, ஓடு, சீக்கிரம் பிரதட்சணத்தை முடி. அப்புறமாக முடிந்தால் என்னை வந்து பார்… ” என்று சொல்லி விட்டு வேகவேகமாக நடந்து அங்காளி கோயிலை விட்டு வெளியே சென்று விட்டார்.

சிறுவன் தினமும் அங்காளியை ஆயிரம் முறை வலம் வரவேண்டும் என்பது பெரியவர் சிறுவனுக்கு இட்டிருந்த கட்டளை. இந்த உத்தரவை சிறுவன் பெரியவரோடு இருந்த ஒன்பது ஆண்டுகளும் ஒரு நாள் கூட தவறாது நிறைவேற்றி வந்தான்.  

தல யாத்திரை, கோயில் திருப்பணி போன்ற தெய்வீக காரியங்களில் சிறுவன் ஈடுபட்டிருந்தால் மட்டுமே இதிலிருந்து சிறுவனுக்கு விலக்கு உண்டு. அத்தகைய சமயங்களில் கூட எத்தனை நாள் சிறுவன் பிரதட்சிணத்தை நிறைவேற்ற முடியவில்லையோ அத்தனை நாட்களுக்கு பெரியவர் கொடுக்கும் வட்டி எண்ணிக்கையையும் சேர்த்து நிறைவேற்ற வேண்டும்

சிறுவன் ஒரு சமயம் விளையாட்டாக பெரியவரிடம் இதுபற்றிக் கேட்டும் விட்டான். ஏன் வாத்யாரே, கொடுத்த கடனுக்குத்தான் வட்டி கேட்பார்கள், நீ என்னடாவென்றால் அங்காளியைச் சுற்றுவதற்குக் கூட வட்டி கணக்குப் பார்க்கிறாயே?

அதற்குப் பெரியவர், எங்க கணக்கு உனக்கு இப்போது புரியாதுடா. நீ எதிர்காலத்துல ஒரு சத்சங்கம் வைத்து நடத்தும்போது வங்கியில் பணி புரியும் பலரும் உன்னிடம் சீடர்களாக வந்து நீ நிறைவேற்றும் திருப்பணியில் பங்கு கொள்வார்கள். கர்ம பரிபாலனம் என்னும் கடினமான பொறுப்பேற்று இந்த பூமிக்கு வந்திருக்கும் நீ அவர்களுடைய கர்மத்தையும் கணக்கிட்டு அவர்களையும் கரையேற்ற வேண்டும் அல்லவா?

இந்த உலகில் கர்ம வினை சாராத பணிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளன. பெரும்பாலான பணிகள் கர்மத்தைச் சேர்த்துத் தரக் கூடிய நிலையில்தான் உள்ளன. ஒரு வங்கியில் பணி புரியும் சத்சங்க அடியார் நல்லவராக இருந்தாலும் அவர் சம்பளமாக பெரும் பணம் மக்கள் தரும் வட்டிப் பணத்திலிருந்துதானே வழங்கப்படுகிறது. அதனால் அவருடைய பணியும் கர்ம வினையைச் சேர்க்கும் பணியாகவே சித்தர்களாலும் மேலுலகத்திலும் கணக்கிடப்படுகிறது.

எனவே நாளை உன்னிடம் வரும் அடியார்களின் வட்டிக் கணக்கையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்தான் அவர்களை கர்ம வினைகளிலிருந்து மீட்டு தெய்வீகத்தில் முன்னேற்ற முடியும்.


இவ்வாறு வங்கி என்று அல்லாது ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் தங்கள் பணியில் சேரும் கர்ம வினைகளிலிருந்து மீள வேண்டுமனால் அதற்கு வழி காட்டக் கூடியவர் சற்குரு ஒருவரே. எனவேதான் குரு இல்லா வாழ்க்கை குருட்டு வாழ்க்கை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

கர்ம வினைகளிலிருந்து விடுதலை அடையாமல் என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் அது தெய்வீக முன்னேற்றத்தைத் தராது. கர்ம வினைகளிலிருந்து மீளாத நிலையில் தன்னிச்சையாக ஒருவர் செய்யும் நற்காரியங்களும் இறை வழிபாடுகளும் அபரிமிதமான புண்ணியத்தையே தரும். புண்ணியம் பிறவியை வளர்க்கும், முக்தியைக் காட்டாது.

சிறுவன் திடுக்கிட்டான். விட்டுப் போன 48 நாள் பிரதட்சண பாக்கியைத் தீர்ப்பதற்கு எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லையே? ஆனால், பாக்கியைத் தீர்த்தால்தான் பெரியவரைப் பார்க்க முடியும். பெரியவரைப் பார்க்காமல் ஒரு நாள் கூட சிறுவனால் இருக்க முடியாது. அதை நினைத்தவுடன் களைப்பு, சோர்வு எல்லாம் சிறுவனை விட்டுப் பறந்தன.

வில்லிலிருந்து புறப்பட அம்பென அங்காளியைச் சுற்ற ஆரம்பித்தான். அவ்வப்போது வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் தலையைக் காட்டி விட்டு வர வேண்டும். ஒரு நாள் வீட்டில் இல்லை என்றாலும் அடுத்த நாள் சிறுவனுடைய அப்பா அவனை நையப் புடைத்து  விடுவார். ஒருவாறாக ஒரு வாரத்திற்குள் பழைய பிரதட்சண பாக்கியான 48000 சுற்றுகளை சிறுவன் நிறைவேற்றி விட்டான்.

பிரதட்சணம் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு களைப்புடன் கண்களை மூடிய நிலையில் அங்காளிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான். நன்றி கூறிய பின் கண்களைத் திறந்து அங்காளியைப் பார்த்தால் அங்கு அங்காளியைக் காணவில்லை. சிறுவன் கண்களைக் கசக்கிக் கொண்டு நன்றாக கருவறையைப் பார்த்தான். ஆம், அங்கு நிச்சயமாக அங்காளியைக் காண முடியவில்லை ஆனால், அதிசயத்திலும் அதிசயமாக அங்காளி கொலுவிருக்கும் இடத்தில் கோவணாண்டிப் பெரியவர் வழக்கமான புன்னகை ததும்பும் கருணை முகத்துடன் வீற்றிருந்தார்.

சிறுவனுக்கு ஒரு புறம் அக்காட்சி பேரானந்தத்தை அளித்தாலும் மறுபுறம் ஒரு வாரம் பெரியவரைக் காணாததால் நமக்கு ஏதோ மயக்கமோ கனவோ வந்து விட்டதோ என்ற குழப்பமும் மேலிட்டது. நிதானமாக , நன்றாகத் தன்னை சுதாரித்துக் கொண்டு மனதை ஒரு நிலைப் படுத்தி அங்காளியைக் கவனித்துப் பார்த்தான். அவன் காட்சியில் எந்த சந்தேகமும் இல்லை. அங்குப் பெரியவர்தான் கருணையை அள்ளி வீசிக் கொண்டு அங்காளி தேவியாய் அருளாட்சி செய்து கொண்டிருந்தார். அதில் துளியும் சந்தேகமில்லை.

சிறுவனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தான். காரணம் பெரியவர் ஒரு முறை குரு நம்பிக்கையைப் பற்றிப் பேச்சு வந்தபோது கூறினார். ஒருவனுக்கு குரு நம்பிக்கை பூரணமாக வளர்ந்து விட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? எப்போது மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கமோ, இறை விக்ரஹமோ உன்னுடைய குருவாய்த் தெரிகிறதோ அப்போது உன்னுடைய குரு பக்தி கனிந்து விட்டதாக அர்த்தம்.

ஒரு பக்தனுக்கு குரு நம்பிக்கை பூர்ணத்துவம் அடைவதைத் தவிர உயர்ந்து பேறு வேறு என்னவாக இருக்க முடியும்? இந்த பூர்ணத்துவத்துவத்தை இந்த பிறவியிலேயே அடைந்து விட்ட சிறுவனைத் தவிர உயர்ந்த ஆத்மா வேறு எது இப்புவியில் இருக்க முடியும்?

அந்த உன்னதமான சந்தோஷ அலைகளில் தவழ்ந்த சிறுவன் அங்கு கண்டது அங்காளியா அல்லது குருநாதரா? நீங்களே ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

 இவ்வாறு இறை நம்பிக்கையை பூர்ணமாக ஆக்கித் தரும் வல்லமை உடையதே ஸ்ரீ யந்திர வழிபாடாகும். திருச்சி மணப்பாறையில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் ஸ்ரீயந்திரம் பொலியும் அற்புத தலமாகும். ஸ்ரீஅகத்திய பெருமானால் ஸ்ரீதன யோக முறையில் ஸ்ரீயந்திரம் பொலியும் அற்புதத் தலம் இதுவே.

எம்பெருமான் அகத்தியருக்கு தமிழ் மொழி இலக்கணத்தை வழங்கி அருள்புரிந்தார் அல்லவா? அது போல அம்பிகையால் ஸ்ரீதன யோகத்தை அகத்தியர் பெற்ற தலமே மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலமாகும். உலகத்திலுள்ள அனைத்து பெண்களும் அவசியம் வழிபட வேண்டிய தலம். குருபக்தியைப் பெருக்கிக் கொள்ளவும் இறை நம்பிக்கையில் வேரூன்றி நிற்கவும் சாதி மத இன பேதமின்றி அனைவராலும் வழிபடப்பட வேண்டிய பெருமானே இத்தல ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆவார்.

தாயுமான சுக சித்தரின் அற்புதத் தொண்டு

இடுசுரை கர்ப்பம் என்ற யோக முறையில் மக்களுக்குத் தொண்டாற்றி பக்தி நிறைந்த சந்ததிகள் பெருக வழிபுரிந்த ஒப்பற்ற பெருமான் இவர். (ஸ்தல விருட்ச மகிமை இரண்டாம் பாகம் என்னும் எமது நூலில் தாயுமான சுக சித்தரின் விளக்கங்களைக் காணலாம்,) அதுபோல ஸ்ரீயந்திர வழிபாட்டை மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துக் கூறி சக்தி வழிபாடு பெருக அரும்பெருந் தொண்டாற்றினார். கலியுகத்திற்கு உகந்தது சக்தி வழிபாடு என்பதே சித்தர்களின் அருளுரை,

சந்ததி குறைபாடுகளைக் களையும்
ஸ்ரீஅகஸ்தீஸ்வரர், மணப்பாறை

ஸ்ரீயந்திரத்தில் உள்ள விருத்தி கோணம், சுன்ன கோணம் என்ற கோண சக்திகள் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருத்தலத்திலும் பொலியும் அல்லவா? இந்த கோணங்களின் வழிபாட்டு முறைகளை அறிந்து அதன் மூலம் மக்களின் ஏழ்மையையும் நோய்களையும் நிவர்த்தி செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் இவரிடம் யார் எந்த காரணத்திற்காக வருவார்கள் என்பதை தன்னுடைய யோக சக்தியால் தெரிந்து கொள்வார்.

அவ்வாறு நோய் நிவாரணத்திற்காகவோ வேறு சில பிரச்னைகளுக்காகவோ வரும் அடியார்களுக்குத் தேவையான விருத்தி, நிவாரண சக்திகளை முன் கூட்டியே அறிந்து அத்தகைய சக்திகள் பெருகும் குறிப்பிட்ட கோண திக்கில் குறிப்பிட்ட பிரகாரப் பகுதியில் அமர்ந்து கொள்வார். அன்றைய தினம் வரும் ஒவ்வொரு அடியாரும் அவரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கோணத்திலும் தரிசனம் செய்யும் நிலைக்கேற்ப அவரவருடைய பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிட்டும்.

உதாரணமாக, ஒருவர் சாப்பாட்டிற்கே சம்பாதிக்க முடியாத கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தால் அவரை விருத்தி கோண திக்கில் நிற்கும்படிச் செய்து அவருடைய தன விருத்தி சக்திகளை மேம்படுத்தி முறையான வருமானம் பெருக நல்வழி காட்டுவார்.

அதே போல கடுமையான நோய்களால் வருந்துவோர்கள் இவரை அடைக்கலம் நாடி வந்தால் அவர்களை சுன்ன கோண திக்கில் சில நொடிகள் அமர வைத்து நோய் பெருக்கும் சக்திகளை விலக்கி ஆரோக்யம் வளர அருள் செய்வார். இவ்வாறு ஆயிரக் கணக்கான மக்கள் இவரை சரணடைந்து நல்வாழ்வு பெற்றனர்.

விருத்தி கோண சுன்ன கோண வழிபாடு

தாயுமான சுக சித்தரை இன்று தூல வடிவில் நாம் கண்டு வழிபட முடியாமல் போனாலும் அப்பெருமானின் திருஉருவத்தை ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருத்தலத்தில் தூணில் தரிசனம் செய்து பலன் பெறலாம்.

ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், குடும்ப பிரச்னைகள், சந்ததியின்மை, திருமணத் தடங்கல்கள் போன்ற பற்பல துன்பங்களால் வருந்துவோர் இப்பெருமானை அடைக்கலம் அடைந்தால் தங்கள் துன்பங்களுக்கான தீர்வுகளை எளிதில் பெறலாம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியது விருத்தி கோண சக்திகளா அல்லது சுன்ன கோண சக்திகளா என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, பள்ளியில் குறைந்த மார்க்குகள் வாங்கும் மாணவர்களுக்கு அறிவு விருத்தி என்ற விருத்தி சக்தி அவசியம் வேண்டும். இத்தகையோர் ஒரு கைப்பிடி அளவு வில்வ இலைகளை தங்கள் கைகளில் தாங்கி இத்தல இறைவனையும் அம்பிகையையும் 21 முறை வலம் வந்து வில்வ தளங்களை இத்தலத்தில் உள்ள விருட்சத்திலோ அல்லது தங்கள் ஊரில் உள்ள அரசு, ஆல், வன்னி, வேம்பு போன்ற பால் விருட்சங்களிலோ சேர்த்து விட வேண்டும்.

அதே போல கடுமையான இதய நோய்கள், சர்க்கரை வியாதிகளால் துன்புறுவோர் அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு தங்கள் கைகளில்

ஏந்தி இத்தலத்தை 21 முறை வலம் வந்து தல விருட்சத்திலோ, ஏதாவது பால் விருட்சங்களிலோ ஓடும் நதிகளிலோ விட்டு விட வேண்டும். இதனால் கடுமையான நோய்களிலிருந்து எளிதில் நிவாரணம் கிட்டும். பூரணமான நிவாரணம் கிட்டும் வரை வழிபாட்டைத் தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் என்பது முக்கியம்.

சில சமயம் ஒருவருக்குத் தேவையான சக்திகளைத் தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். உதாரணமாக, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வருந்துவோர்க்கு தேவையானது விருத்தி சக்திகள் என்றாலும் இதனால் கடனும் பெருகி விடுமா என்ற சந்தேகம் எழலாம் அல்லவா? அவ்வாறு தங்களுக்குத் தேவையான சக்திகளில் குழப்பம் ஏற்படும்போது ஒரு கைப்பிடி அளவு துளசி இதழ்களை தங்கள் கைகளில் ஏந்தி இத்தல மூர்த்தியை வணங்கி நெல்லி மரத்தடியில் இட்டு வந்தால் தங்களுக்கு எந்த சக்தி வேண்டுமா அந்த சக்திகளை இத்தல இறைவன் அருள்வார்.

குரு பக்தியும் இறை நம்பிக்கையும் வலுப்பெற விரும்பும் அடியார்கள் தங்கள் கைகளால் அரைத்த சந்தனத்தை இத்தல மூர்த்திகளுக்கு அளித்து வழிபடுதலால் வியக்கத்தக்க முறையில் இறை நம்பிக்கை வேரூன்றி வளரும்.

ஸ்ரீகுசா யந்திர வழிபாடு

பிரபஞ்சம் அனைத்தும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்துதானே தோன்றியது. அனைத்திற்கும் மூலமான ஓங்கார ஒலியின் யந்திர வடிவமே ஸ்ரீகுசா யந்திரமாகும்.

ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பூலோக கணக்கில் தன்னுடைய அறுபது ஆண்டுகளுக்கும் மேல் ஆற்றிய ஆன்மீக சேவையின் ஒட்டு மொத்த புண்ணிய வடிவமே, அருணாசல பெருமானின் கருணை வடிவமே ஸ்ரீகுசா யந்திரமாகும்.

ஸ்ரீகுசா யந்திரத்தை முழுமையாக உணர ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் காலம் 108 குரு மங்கள ஆண்டுகள் என்று சித்த குறிப்பேடுகள் கூறுகின்றன. நம்முடைய பூலோகத்தின் சூரிய சித்தாந்தக் கணக்கில் ஒரு பிரம்மாவின் ஆயுள் 432 கோடி ஆண்டுகள். இது குரு மங்கள லோக கணக்கில் ஒரு நொடி என்றால் ஒரு குரு மங்கள ஆண்டு என்பது என்ன என்பதை எவராலும் விளக்கிக் கூற கற்பனைதான் செய்து பார்க்க முடியுமா?

ஸ்ரீகுசா யந்திர மகிமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, விஞ்ஞானத்திற்கு எட்டாதது, தேவர்களுக்கும் புலனாகாதது. இன்று பூலோகத்தில் வாழும் நாம் நிச்சயமாக நமது முன்னோர்களை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் செய்தவர்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும்? எப்படி?

   மனித உடலில் உள்ள வாஸ்து நாடிகளைத் தூய்மை செய்து வாஸ்து சக்திகளைப் பெருக்கும் வாஸ்து தோப்புக் கரணம்

ஸ்ரீகுசா யந்திரம் என்ற சித்தர்களின் மாமறைப் பொக்கிஷத்தைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். அதை வழிபடவும் நமக்கு எம்பெருமான் அருணாசல ஈசனால் இந்த மனிதப் பிறவியில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை விடச் சிறந்த பேரின்பம் உலகில் வேறேது?

ஸ்ரீமகா விஷ்ணு தன்னுடைய திருக்கரங்களில் சக்கர ஆயுதத்தை ஏந்தி அருள் வழங்குகிறார் அல்லவா? இச்சக்கரங்களை இருவிதமான யோக நிலையில் அவர் ஏந்தி அருளாட்சி செய்கிறார். சக்ராயுதத்தை பிரயோக முறையிலும் அபயம் அளிக்கும் வரப் பிரசாதியாகவும் தோன்றி கருணை வழங்குகிறார்.

அதே போல ஸ்ரீகுசா யந்தித்தை பிரயோக முறையிலும், சக்கர வழிபாட்டு முறையிலும் பயன்படுத்தி அனுகிரகம் பெறலாம்.

ஸ்ரீகுசா யந்திர பிரயோகம்
ஏற்கனவே பன்முறை எடுத்துரைத்தது போல குசா என்னும் இறை சக்தி நல்லதை மட்டுமே செய்யக் கூடிய ஓர் அற்புத சித்த சக்தியாகும். இதை எவராலும் தவறான காரியங்களுக்கு, தீய பலன்களை அளிக்கப் பயன்படுத்த முடியாது. எனவே, நற்காரியங்களை செய்ய விரும்பும் அடியார்களும், பக்தர்களும் ஸ்ரீகுசா யந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் வரைந்து பயன் பெறலாம்.

ஸ்ரீகுசா யந்திரம் வரையும் முறை

மிகவும் எளிமையாக, குழந்தைகள் கூட வரையும் முறையில் அமைக்கப்பட்டுள்ளதே ஸ்ரீகுசா யந்திரம் ஆகும். முதலில் ஒரு பெருக்கல் குறியை வரைந்து கொள்ளவும். பெருக்கல் குறியைச் சுற்றி நான்கு வட்டங்களை வலஞ் சுழித்து வரைந்து கொள்ளவும். இவை அனைத்தையும் சுற்றி ஒரு பெரிய வட்டத்தை வலஞ் சுழியாக வரைந்து கொள்ளவும். வட்டங்கள் அனைத்தையும், அதாவது நான்கு சிறிய வட்டங்களையும், ஒரு பெரிய வட்டத்தையும் வலமாகவே, பிரதட்சண முறையில், (ஆங்கிலத்தில்  க்ளாக்வைசாக) வரைய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். வலஞ் சுழித்த கோடுகள் நற்சக்தியைத் தரும் என்பது குசா தத்துவத்தில் ஒன்று.

கை விரல்கள், பேனா, பென்சில், கலர் சாக்பீஸ், பெயிண்டுகள், பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி, இயற்கை வண்ணங்கள் போன்ற எந்த உபகரணங்கள் கொண்டும் ஸ்ரீகுசா யந்திரத்தை வரையலாம். வலது மோதிர விரலாலும், சந்தன குச்சிகளாலும் ஸ்ரீகுசா யந்திரத்தை வரைதல் சிறப்பு.

உதாரணமாக, நாம் உணவிற்காக, தானத்திற்காக பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சர்க்கரை, மாவு போன்றவைகள் மீது கை விரல்களால், மூலிகை குச்சிகளால் ஸ்ரீகுசா யந்திரத்தை வரையலாம். நம்முடைய சம்பளப் பணம், பரீட்சை விடைத்தாள், வங்கி காசோலைகள், பத்திரங்கள் போன்றவற்றின் மேல் கை விரல்களால், மாங்குச்சிகளால் ஸ்ரீகுசா யந்திரத்தை வரையலாம்,

எந்த உபகரணத்தையும் பயன்படுத்தாமல் மானசீகமாகவும் நாம் அருந்தும் காபி, டீ, குளிர்பானங்களின் மேலும், நாம் பயணம் செய்யும் பஸ், கார் போன்றவற்றிலும் கூட ஸ்ரீகுசா யந்திரத்தை மானசீகமாக வரைந்து வழிபடுதலால் அற்புத பாதுகாப்பு கவசச் சக்திகளைப் பெறலாம்.

சுருக்கமாகச் சொன்னால் எங்கெல்லாம், எப்போதெல்லாம் உங்களுக்கு நற்சக்திகள், நற்பலன்கள் தேவைப்படுகிறதோ, எப்படி எல்லாம் நீங்கள் சமுதாயத்திற்கும் இறைவனுக்கும் சேவை செய்ய விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் ஸ்ரீகுசா யந்திரத்தை வரைந்து அதன் மூலம் குசா சக்திகளை பிரயோகம் செய்து நற்காரிய சித்திகளைப் பெறலாம் என்பது சித்தர்கள் வாக்கு.
ஸ்ரீகுசா யந்திர பிரயோகத்தைப் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளை அறிவதன் மூலம் உங்களுக்கு குசா தத்துவம் எளிதாக விளங்கும்.

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை காசி, அயோத்தி, பிரயாகை, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற திருத்தலங்களுக்கு தீர்த்த யாத்திரையாக அழைத்துச் சென்றார். இவ்வாறு பல திருத்தலங்களையும் வழிபட்டு வருவதற்கு இரண்டு மாத காலம் ஆகி விட்டது. தீர்த்த யாத்திரை முடிந்து சிறுவன் சென்னைக்குத் திரும்பிய மறுநாள் அவன் முழு ஆண்டு பரீட்சைகள் எழுத வேண்டும் என்று தெரிய வந்தது. அதைக் கேட்டு சிறுவன் மிரண்டு விட்டான்.

ஏற்கனவே சிறுவனுக்கு படிப்பில் அவ்வளவாக நாட்டம் கிடையாது. ஆன்மீக சிந்தனைகளை ஏற்ற மனம் ஏட்டுப் படிப்பில் கவனம் கொள்ளாதது இயற்கைதானே. ஆனால், பெரியவரோ சிறுவன் வெறும் பள்ளிப் படிப்பு மட்டும் போதாது, பல கலாசாலைப் பட்டங்களையும் அவன் பெற வேண்டும் என்று துடிப்பாக இருந்தார். அதனால் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை அவனுடைய அப்பாவும், கோவணாண்டிப் பெரியவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

சிறுவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு முழு நாள் கூட படிக்க முடியாது. வேறு வழியின்றி அங்காளி கோயிலை நோக்கி ஓடி வந்தான். எப்போதும் ஆபத்பாந்தவர் கோவணாண்டிதானே.

நேரே வாத்யார் காலில் விழுந்தான். வாத்யாரே, என்ன செய்வியோ தெரியாது, என்னை நீதான் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு பெரிய பீடிகை போட்டான் சிறுவன். பெரியவர் ஒன்றும் தெரியாதது போல் என்னடா தப்பு பண்ணிட்டு வந்திட்டியா, எங்காவது ஆடு, மாடு திருடி விட்டாயா? பரவாயில்லை சொல்லு, எல்லாம் நம்ப பசங்கதான், தைரியமா சொல்லு, என்று கிண்டல் செய்தார்.

(ஏற்கனவே சிறுவன் ஒரு முறை சில கோழிகளைத் திருடி அதனால் பிறர் கர்மத்தில் குறுக்கிட்டு விளைந்த குழப்பங்களை மலரும் நினைவுகளாக சிறுவனுக்கு மறைமுகமாக சுட்டிக் காட்டினார் பெரியவர்,)

சிறுவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு, ஒண்ணுல்ல வாத்யாரே, நாளைக்கு பரீட்சை. ஒன்றும் படிக்கவில்லை. அதனால எப்படியாவது நீதான் காப்பாத்தனும், என்றான்.

பெரியவர், ஏண்டா, படிக்கிற பையனுக்கு படிக்கிறதைத் தவிர வேறு வேலை என்ன? இதுக்கெல்லாம் போய் அங்காளி கிட்ட ரெக்கமெண்டேஷன் செய்ய முடியாதுடா? என்று சொல்லி விட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர், சரி சரி உனக்கும் என்னை விட்டா வேறு யாரையும் தெரியாது, எங்கே நாளைக்கு நடக்கப் போகும் பரீட்சைக்கான நோட்டைக் கொடு, என்று கேட்டு அந்த நோட்டை வாங்கிப் பார்த்தார். அதில் சில கேள்விகளுக்கு எதிரே ஸ்ரீகுசா யந்திரத்தை வரைந்து, இந்த கேள்விகளைப் பார்த்துக் கொண்டு போ, அங்காளி கவனிச்சுக்குவா, என்று சொல்லி சிறுவனை அனுப்பி விட்டார்.

சிறுவனும் அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்ரீகுசா யந்திரம் பெரியவரால் பொறிக்கப்பட்ட கேள்விகளைப் படித்துக் கொண்டு சென்றான். பள்ளிக்குச் சென்ற சிறுவன் அங்கு கேள்வித்தாளை வாங்கியதும் அப்படியே பிரமித்துப் போய் விட்டான். பெரியவர் குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளும் அங்கு அச்சாகி இருந்தன. சிறுவன் அந்த ஆண்டு பரீட்சைகளில் தேறி விட்டான் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

சமீபத்தில் நமது ஆஸ்ரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு பௌர்ணமி இரவும் திருஅண்ணாமலையை கிரிவலமாக வரும் பல்லாயிரக் கணக்கான இறைஅடியார்களுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரசாத விநியோகத்திற்காக மந்தார இலை பயன்படுத்தப்படுகிறது.

மந்தார இலைகள் 50 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக அதற்கென பிரத்யேகமான அறைகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பௌர்ணமி அன்று தேவையான எண்ணிக்கைக்கு குறைந்த அளவே இலைகள் இருப்பதாக தெரிய வந்தது. வெளியூர்களிலிருந்து அந்த இலைகள் பெறப்படுவதால் அந்தக் குறிப்பிட்ட பௌர்ணமிக்குத் தேவையான இலைகளை உடனே பெறமுடியாத சூழ்நிலை அமைந்து விட்டதால் இந்த இக்கட்டான நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மந்தார இலைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை அடியார்களால் வழங்கப்பட்டது. ஆனால், சூடான பிரசாதத்தை வாழை இலையில் வழங்க முடியாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

வேறு வழியில்லாத அந்த நிலையில் திடீரென குசா தத்துவத்தைப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் ஒருஅடியாருக்குத் தோன்றவே உடனே அந்த எண்ணத்தைச் செயலாக்கி அனைத்து மந்தாரை இலைக் கட்டுகளிலும் மேற்கூறிய குசா பிரயோக யந்திரத்தை ஒரு சந்தனக் குச்சியைக் கொண்டு வரைந்து அந்த மந்தார இலைகளை பிரசாத விநியோகத்திற்காகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

எவராலும் நம்ப முடியாத அதிசயமாக குறைந்த அளவு மந்தார இலைகளைக் கொண்டு வழக்கமாக வரும் அனைத்து கிரிவல அடியார்களுக்கும் இறைப் பிரசாதம் திருஅண்ணாமலையாரின் பெருங் கருணையால் வழங்கப்பட்டது. அப்போது ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து அடியார்களும் குசா தத்துவத்தின் பெருமையை அன்று கண்கூடாக உணரத் தொடங்கினர். என்னதான் ஒரு தத்துவம் படிப்பதற்குச் சுவையாக இருந்தாலும் அதன் தெய்வீக மகத்துவத்தை நடைமுறையில் அனுபவித்துப் பார்த்தால்தானே அதன் உண்மை விளங்கும்.

இவ்வாறு பிரயோக முறையில் ஸ்ரீகுசா யந்திரத்தை வழிபடுவதுபோல அதை ஓர் இறை பூஜையாகவும் மேற்கொள்ளலாம். அத்தகைய பூஜை முறையில் குசா யந்திரத்தை வரையும்போது அதை கீழ்க் காணும் முறையில் அமைத்தல் நலம்.

ஸ்ரீகுசா யந்திர பூஜை முறை

தங்கம், வெள்ளி, தாமிரத் தகடுகளிலோ, மா, பலா, தேக்கு, சந்தன மரப் பலகைகளிலோ, முழு வாழை இலைகளிலோ ஸ்ரீகுசா யந்திரத்தை மேற்கூறிய முறையில் வரைந்து கொள்ளவும். சந்தனக் குச்சி, வெள்ளி ஊசிகளைக் கொண்டு உலோகத் தகடுகளில் யந்திரத்தை வரையலாம். பலகைகளில் வரைவதாக இருந்தால் பெயிண்ட், மூலிகை வண்ணங்கள், பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி. குங்குமம் இவற்றைக் கொண்டு வரையலாம். பொதுவாக, மரப் பலகைகளின் மேல் யந்திரத்தை வரைவதாக இருந்தால் தங்கள் கையால் அரைத்த மஞ்சளைத் தடவி அதன் மேல் சுத்தமான குங்குமத்தால் ஸ்ரீகுசா யந்திரத்தை வரைந்து வழிபடுதல் மிகவும் சிறப்பு.

ஸ்ரீகுசா யந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபடுதல் அவசியம். இந்த திக்குகளை நோக்கியோ அல்லது இந்த திக்குகளில் யந்திரத்தை வைத்தோ வழிபடலாம்.

பெண்கள் பூஜைக்கு முதல் நாள் நீரில் வேப்பிலை, மஞ்சள் போட்டு வைத்திருந்து மறுநாள் காலையில் இந்த நீரால் குளித்து, சுத்தமான ஆடைகள் அணிந்து பூஜை செய்தல் நலம். பூஜைக்கு பயன்படுத்தும் வஸ்திரங்களை மற்ற துணிகளோடு சேர்க்காமல் வைத்திருத்தல் நலம்.

ஆண்கள் முதல் நாள் நீரில் பன்னீர் இட்டு அத்துடன் பவளமல்லி பூக்களைப் போட்டு வைத்திருந்து மறுநாள் பூஜைக்கு முன் இந்நீரில் குளித்தல் நலம். குளிக்கும்போது ஆண்கள் அவசியம் கோவணம் அல்லது லங்கோடு கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும் என்பது நியதி. பொதுவாக, எப்போது வீட்டில் அல்லது ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும்போதும் கோவணம் கட்டி குளித்தலால் பலவிதமான தீர்த்த தோஷங்கள் தங்களை அண்டாதவாறு காத்துக் கொள்ளலாம்.

குளித்தபின் அரைத்த சந்தனத்தால் நெற்றிக்கு இட்டுக் கொண்டு குங்குமம் வைத்தல் அவசியம். நீரிட்டுக் குழைத்த விபூதியால் உடலில் 36 பட்டைகளை அணிதல் அற்புதமான பலன்களைத் தரும். (விளக்கங்களுக்கு www.kulaluravuthiagi.com தளத்தில் விபூதி அணியும் வீடியோ படத்தைப் பார்க்கவும்)

சுத்தமாக துவைத்த 4 அல்லது எட்டு முழு வேஷ்டியை அணிந்து கொண்டு இடுப்பில் துண்டைக் கச்சமாக அணிந்து கொள்ளவும். பஞ்ச கச்சம் அணிந்து பூஜை செய்தலால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

பூஜையை ஆரம்பிக்கும் முன் மின்சார விளக்குகள் இருந்தாலும் நல்லெண்ணெய் அல்லது பசு நெய் தீபம் ஏற்றிய பிறகே வழிபாடுகளை இயற்றுதல் நலம். பொதுவாக, பூஜை நேரங்களில் மின் விளக்குகள் அணைந்து போனால் அது சகுனத் தடையாக அமைந்து மன வருத்தத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் அணையாத எண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடுகளை நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீகுசா யந்திர பூஜைக்கு எல்லா விதமான தூப தீபங்களையும் பயன்படுத்தலாம் என்றாலும் த்ரிண லக்ஷ்மி தூபம், லக்ஷ்மி தூபம், ஆபத்சகாய தூபம், சத்ரு பய நிவர்த்தி தூபம், சரபேஸ்வர தூபம், மணவாள க்ஷேம தூபம், அவரவர் குல தெய்வத்திற்கு உகந்த தூபம், கருப்பண்ண சுவாமி தூபம், ஐயனார் தூபம், வீரபத்திரர் தூபம், பைரவர் தூபம் போன்ற தூபங்கள் சிறப்பான பலன்களைத் தரும்.

ஸ்ரீகுசா யந்திரத்தை மணமுள்ள மலர்களைக் கொண்டு அலங்கரித்தல் நலம். மலர்களால் பூஜை செய்யும்போது ஸ்ரீஅகஸ்திய தேவாரத் திரட்டு, நட்சத்திரத் துதி, ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் நட்சத்திரக் காப்பு, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துதி, ஸ்ரீஅகஸ்தியர் அருளிய லட்சுமி துதி போன்ற தெய்வீகம் ததும்பும் பாடல்களை ஓதுதல் நலம். ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள், ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு உகந்த காயத்ரீ மந்திரங்களையும் 21 முறை அல்லது 18 முறை, 108 முறைகளுக்குக் குறையாமல் ஓதி வழிபடுதல் நலம்.

ஸ்ரீகுசா யந்திரத்தை அனைத்து வித வாசனை மலர்களாலும் அலங்கரித்து வழிபடுதல் சிறப்பு என்றாலும் குறித்த சில மலர்களை அர்ப்பணித்து வழிபடுதலால் கீழே குறிப்பிட்ட பலன்களைப் பெறலாம் என்பதும் உண்மையே.

            >      
மலர்கள்     பலன்கள்
பவளமல்லி  லட்சுமி கடாட்சம்
செந்தாமரை      மேற்படிப்பு, கல்வி அபிவிருத்தி
மல்லிகை       குடும்ப ஒற்றுமை
முல்லை, ராமபாணம் தான தருமத்தில் நாட்டம்
வாசனை செவ்வந்தி   நுண்ணறிவு
அருகம்புல்        இரத்த சோகை நீங்கும்
ரோஜா      தோல் நோய்கள் நீங்கும்
(உதிராத மலர்களைப் பயன்படுத்துதல் சிறப்பு)

                           நைவேத்யமாக இரண்டு உரித்த வாழைப்பழங்களையும், வெற்றிலை பாக்குடன் வைத்து வழிபடுதல் நலம்.

சிலர் வெறும் வயிற்றோடு பூஜை செய்தால் சோர்வடைந்து விடுவதுண்டு. அத்தகையோர் இளநீர் அல்லது நீராகாரம் அருந்தி விட்டு தாராளமாக பூஜையை மேற்கொள்ளலாம். உடன் வெங்காயம் உண்ணுதல் நலம். நீராகாரம், வெங்காயம் அசுர சக்திகள் உடையது என்ற எண்ணம் வழக்கில் இருப்பது உண்மையே. ஆனால், வெங்காயம், நீராகாரம் இரண்டையும் ஒன்றாக ஏற்கும்போது ஒன்றுக்கொன்று மாற்றாக அமைந்து மனம் அமைதி கொள்ளும் என்பது சித்தர்கள் கூறும் மெய்ஞான தத்துவம்.

குசா சக்திகளைப் போலவே வாஸ்து சக்திகளும் மக்களுக்கு நன்மையை வழங்கும் தன்மையை உடையதே. எனவே, எமது ஆஸ்ரமத்திலிருந்து பெறப்படும் வாஸ்து யந்திரத்தையும், ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சக்கரத்தையும் மேற்கூறிய முறையிலேயே வழிபடலாம்.

அவ்வாறு வாஸ்து பூஜைகளை மேற்கொள்ளும்போது,

     தரிசன சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி
     ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ 
(அல்லது)
     நீள்நெடுங்கால் கொண்டு புவியோடு வானமும்
     தலையோடு அளந்த பெருமாள் அவதார வாஸ்து தேவா நமஹ

என்ற அற்புதமான சித்த வாஸ்து துதிகளை ஓதி வணங்குவதால் அனைத்து விதமான வாஸ்து துன்பங்களிலிருந்து மீளலாம்.

நம்முடைய இல்லத்தில் வாஸ்து சக்திகள் பெருகவும், தீய சக்திகள் அண்டாது விலகவும், குசா சக்திகள் இல்லத்தில் குடி கொள்ளவும் சித்த பிரான்கள் எண்ணற்ற நடைமுறைப் பழக்க வழக்கங்களை அளித்துள்ளனர். எந்த அளவிற்கு அந்த நற்பழக்கங்களை நமது வாழ்க்கையில் மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நற்சக்திகள் நமது இல்லத்தில் குடியேறி அமைதியான ஆனந்தமயமான வாழ்க்கையை வாழலாம் என்பது உறுதி.


  1. மாலையில் விளக்கு வைத்த பின் தலை வாரக் கூடாது.

  2. தலை வாரிய முடியை குப்பையில் சேர்க்கக் கூடாது, முடியைச் சுற்றி வீட்டு மூலை முடுக்குகளில் எறியக் கூடாது. வெளியே எறிதலும் தவறு. உதிரும் முடிகளை தனியே எடுத்து வைத்து அவ்வப்போது ஓடும் நதிகள், கடல்களில் சேர்த்தலே முறை. இதுவே லட்சுமி கடாட்சம் பெறும் அடிப்படை பூஜையாகும்.

  3. மாலையில் விளக்கு ஏற்றும்போது கொல்லைக் கதவை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதலே உத்தமம். ப்ளாட்டுகளில் குடி இருப்போர் கொல்லைப் பக்கம் இருக்கும் ஜன்னல், கதவுகளை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதல் நலம்.

  4. வீட்டில் அழுக்குத் துணிகள், தேவையில்லாத குப்பைகளை சேர விடக் கூடாது. வீட்டில் எந்தத் திசையில் அழுக்குத் துணிகள், குப்பைகள் சேருகின்றனவோ அந்தத் திசையில் தோஷங்கள் பெருகும். அதனால் அந்தத் திசையிலிருந்து நமக்கு வர வேண்டிய நற்பலன்கள் வராது என்பதை நினைவில் கொள்ளவும்.

  5. மேற்கூறிய வாஸ்து துதிகள் சிறப்பான எண் கணித சூத்திரத்தின் அடிப்படையில் சித்தர்களால் அருளப்பட்டவை. முதல் துதி 26 அட்சரங்களைக் கொண்டு (2+6) எட்டு திக்குகளையும், இரண்டாம் துதி 42 அட்சரங்களைக் கொண்டு (4+2) சுக்கிர சக்திகளையும் குறிக்கும். திருக்கோயில்களில் செவ்வாய்க் கிழமைகளில் நான்கு தீபங்களையும், வெள்ளிக் கிழமைகளில் ஆறு தீபங்களையும் ஏற்றி வந்தால் திக்கு தோஷங்கள் நீங்கும்.

  6. தலை முடி மட்டும் அல்லாது உடலில் உள்ள சிறு முடிகள், நகத் துண்டுகள் போன்றவை தரையில் விழுந்தாலும், குப்பையில் சேர்ந்தாலும் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். தினமும் சுவாமி படங்களைத் துடைத்து சுத்தம் செய்தலால் இத்தகைய தோஷங்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.

  7. பட்டை லிங்கம் எழுந்தருளிய கோயில்களில் அந்தக் குறிப்பிட்ட லிங்கத்தில் அமைந்துள்ள பட்டைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் திக்கு தோஷங்கள் தீர வழி பிறக்கும். பொதுவாக, எட்டு அல்லது 16 தீபங்களை, எட்டு, பதினாறு திசைகளில் பட்டை லிங்கக் கோயில்களில் ஏற்றி வழிபடுதல் நலம். சிறப்பாக சமயபுரத்தில் உள்ள ஸ்ரீபோஜேஸ்வரர் ஆலயம், ஐயர்மலை திருத்தலம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோயில் (திருவானைக் கோவில், திருச்சி) போன்ற திருத்தலங்கள் திக்கு வழிபாடுகளுக்கு உகந்தவை.
ஸ்ரீவாஸ்து மங்கள திருக்கண்ணாடி

பொதுவாக, வீடுகள் கட்டும்போது மக்கள் குடியேறுவதற்கு உகந்த நிலங்களில்தான் வீடுகளைக் கட்ட வேண்டும் என்பது முக்கியமான வாஸ்து நியதி. அதுபோல பள்ளிக் கூடம், மருத்துவ மனை, திருக்கோயில்கள், பூங்கா போன்ற ஒவ்வொரு கட்டிடத்தையும் எந்த நிலத்தில் கட்ட வேண்டும், இடுகாடு, சுடுகாடு போன்றவற்றை எத்தகைய நிலங்களில் அமைக்க வேண்டும் என்ற வாஸ்து ரகசியங்கள் உண்டும்.

ஆனால், தற்காலத்தில் பலரும் மயானங்கள், விளை நிலங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் போன்ற பொதுக் காரியங்களுக்கான நிலங்களில் வீடுகள் கட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் கட்டாயத்திலும் உள்ளனர். இதனால் பற்பல வாஸ்து தோஷங்களை சந்திக்க வேண்டிய துரதிஷ்டம் அவர்களை வந்தடைகிறது. தவிர்க்க முடியாத இத்தகைய தோஷங்களிலிருந்து மக்களைக் காக்க சித்த புருஷர்கள் ஒரு தெய்வீகமான மங்கள வழிபாட்டுப் பொருளை அளித்துள்ளனர். அதுவே ஸ்ரீவாஸ்து மங்கள திருக்கண்ணாடி ஆகும்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

ஒரு அடி நீளம், ஒரு அடி அகலமுள்ள நல்ல, தரமான முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொள்ளவும். அந்த கண்ணாடிக்குப் பின் அதே அளவுள்ள அதாவது ஒரு அடி நீள அகலமுள்ள ஒரு தர்பைப் பாயைச் சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கட்டி விடவும். அவ்விரண்டையும் சேர்ப்பதற்கு குறிப்பிட்ட வண்ணமுள்ள துணியைப் பயன்படுத்தவும். பைப்பிங் அல்லது பீடிங் என்ற முறையில் தைப்பது சிறப்பு.

பீடிங் வைத்து தைக்கப் பயன்படும் துணி சிவப்பு, கறுப்பு, வெள்ளை, மஞ்சள், நீல நிறத்தில் இருக்கலாம். நீங்கள் எந்த வண்ணமுள்ள துணியைப் பயன்படுத்துகிறீர்களோ அந்த வண்ணத்திற்கு உகந்த கிரகத்தின் தசை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நடந்து கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டுத் தலைவருக்கு குரு தசை நடந்து கொண்டிருந்தால் பிரகஸ்பதிக்கு உகந்த மஞ்சள் நிற துணியால் கண்ணாடிக்கு பீடிங் அமைக்கலாம். கண்ணாடியின் நாலு மூலைகளிலும் அதே வண்ணத் துணியால் சடை பின்னி தொங்க விட வேண்டும். சடையின் நீளம் அந்த தசை நடப்பவரின் மோதிர விரல் நீளத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

இதுவே ஸ்ரீவாஸ்து மங்கள திருக்கண்ணாடியைத் தயார் செய்யும் முறை. இவ்வாறு அமைத்த திருக்கண்ணாடியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலோ அல்லது அந்தத் திசைகளை நோக்கியோ இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும். இது மிக மிக மங்களகரமான வாஸ்து பொருள்.

இரண்டு அகல் தீபங்கள், இரண்டு உரித்த வாழைப் பழங்கள், வெற்றிலை பாக்கு இவற்றுடன் மணமுள்ள மலர்களை இக்கண்ணாடியின் முன் வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் எமது ஆஸ்ரமத்தில் பெறப்படும் தந்தப் பொடியால் அல்லது சுத்தமான மூலிகைப் பொடியால் பல் துலக்கி, ஆலம்பட்டைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்து, நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு கண்ணாடியை வணங்க வேண்டும்.

நைவேத்யமாக வைத்த வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவற்றை சுமங்கலிகளுக்குத் தானமாக வழங்கி விட வேண்டும். முடிந்த மட்டும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு சுமங்கலிகளைத் தேர்ந்தெடுத்து தானம் அளிக்கவும்.

தினமும் வாசற்படியை மஞ்சள் நீரால் அலம்ப வேண்டும். இது மிகவும் அவசியம். இதில் விதி விலக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு இல்லத்தில் மங்கள சக்திகளை, லட்சுமி கடாட்ச சக்திகளை அளிக்கும் குபேர லோகத்திலிருந்து வரும் தேவதைகள் இந்த வாசற்படிகளில்தான் உறைகின்றன. மஞ்சள் நீரால் அலம்பி வழிபடுவதால் குபேர சக்திகள் பெருக ஏதுவாகும். பலரும் வாசற் படிகளை காலால் மிதித்தல், வாசற்படியில் நின்று கொண்டு அபான வாயுவை வெளி விடுதல், தும்முதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் வாஸ்து தோஷங்களைக் களைய மஞ்சள் நீராட்டு அவசியம்.

எல்லா நிலைப் படிகளிலும் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.

முன் வாசலில் ஒரு கருப்புக் கயிற்றில் ஊமத்தங்காய், சங்கு இவற்றைக் கட்டித் தொங்க விட வேண்டும். மாதம் ஒரு முறை ஊமத்தங்காயை கடலில் போட்டு விட்டு, சங்கிற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இத்தகைய வழிபாடுகளால் ஏராளமான வாஸ்து தோஷங்களும், ஏவல், பில்லி சூன்யம் போன்ற தீய சக்திகளும் விலகும்.

சகஸ்ர குஞ்சரா வழிபாடு

ராம பிரான் இராவணனை சம்ஹாரம் செய்து அயோத்திக்குத் திரும்பிய பின்னர் பட்டாபிஷேக வைபவங்கள் எல்லாம் சிறப்பாக நிறைவேறியது. பட்டாபிஷேக விழாவின் போது ராம பிரான் தன்னுடன் இலங்கைக்கு வந்து போரிட்டு அற்புத சாகசங்கள் புரிந்த வானரப் படை அனைத்திற்கும் உரிய பரிசுகளை எல்லாம் அளித்து கௌரவித்தார். மேலும் வானரப் படைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு உலகம் எங்கும் தீர்த்த யாத்திரைகள் புரிந்தார்.

மூர்த்தி, தீர்த்தம், தலம் என விமரிசையாக எல்லா தலங்களிலும் வழிபாடுகள் இயற்றிய வழிபட்ட ராமபிரான் எகிப்து நாட்டை வந்தடைந்தார். அந்நாட்டு மக்கள் லட்சக் கணக்கில் திரண்டு வந்து தங்களுடைய சக்கரவர்த்தியான ராமபிரானுக்கு அன்புக் காணிக்கைகள் பலவற்றையும் அளித்து தங்கள் பக்தியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தினர்.

அப்போது, ராமபிரான் சக்கரவர்த்தி என்ற முறையில் குடிமக்களின் குறைகளைக் களைந்து அவர்களுக்குத் தேவையான நலன்களை அளிப்பதற்காக அந்நாட்டு மக்களின் குறைகளைத் தெரிவிக்குமாறு கேட்டார். மக்கள் அனைவரும் ராமராஜ்யத்தில் மிகவும் சந்தோஷமாகவும், அமைதியுடனும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஒரே ஒரு பிரச்னைக்கு மட்டும் ராமபிரான் தீர்வு அளிக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

அது என்ன? உலகிலேயே மிகவும் நீளமான நைல் நதி எகிப்து நாட்டில் பாய்ந்து அந்நாட்டை வளப்படுத்திக் கொண்டிருந்தது. நீளமான நதி என்பது மட்டுமல்லாமல் மிகவும் வல்லமை உடைய நதியாகவும் நைல் விளங்கியது. கட்டுக்கடங்காத சக்தியுடன் அந்நதி பாய்ந்து சென்று கொண்டிருந்ததால் ஆண்டு தோறும் மிகுந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நதியின் இருபுறங்களிலும் இருந்த வயல் வெளிகளையும் அதிலுள்ள பயிர்களையும் நாசம் செய்து வந்தது.

வயலில் உள்ள வரப்புகளை உருத் தெரியாமல் அழித்து விடுவதால் வெள்ளம் குறைந்த பின் பயிர்கள் அழிந்து போன பிரச்னை ஒரு புறம் இருக்க வயல் வரப்பு எல்லைத் தகராறுகளும் மக்களிடையே பெருகி, அதனால் சமுதாயத்தில் அடிக்கடி நிலத் தகராறுகளும், பஞ்சமும் அமைதியின்மையும் நிலவியது.

இந்தப் பிரச்னைக்கு சக்கரவர்த்தி ராம பிரான்தான் ஏதாவது ஒரு தீர்வு கூற வேண்டும் என்று ராமரிடம் சரணடைந்தனர். ராம பிரானுடன் சுக்ரீவன், குகன், ஆஞ்சநேயர், அங்கதன் முதலானோரும் சென்றிருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆலோசனையைக் கூறினர். முதலாவதாக, நைல் நதியின் கரையோரங்களில் உயர்ந்த சுவர் கட்டி வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தலாம் என்பது ஓர் ஆலோசனை. மூவாயிரம் மைல்களுக்கு மேல் நீளமுடைய நதியின் இரு புறங்களிலும் சுவர் எழுப்புதல் என்பது சாமானிய விஷயம் அல்லவே? எனவே, அந்த ஆலோசனை ராமரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இரண்டாவதாக அணை ஒன்றை எழுப்பி ஆரம்பித்திலேயே வெள்ளத்தின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் என்பது மற்றோர் ஆலோசனை. ஆனால் இயற்கை அரணாக அமையும் உயர்ந்த மலைகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அணை கட்டி வெள்ளப் பெருக்கைத் தடுப்பது என்பது இயலாத காரியம். எனவே அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

குஞ்சரா குரங்குகள் திருப்பதி

இவ்வாறு ஒவ்வொரு யோசனையும் மேலோட்டமாக சிறப்பாக தோன்றினாலும் ஆழ்ந்து சிந்தித்தபோது அது பிரச்னையைத் தீர்க்கக் கூடியதாய இல்லை. அப்போது சுக்ரீவன் எழுந்து, “சுவாமி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நாம் இலங்கையில் போரிட்டபோது நம்முடைய கூடாரங்கள் எந்த வித இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்படவில்லை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த கூடாரங்களை அமைத்த வானர வீரர்களை விட்டு இந்த நாட்டு நிலங்களை அளந்து சீர்திருத்தம் செய்தால் நைல் நதியின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தலாம்,” என்று ஆலோசனை கூறினார்.

ராமர் இலங்கை போரை குறித்த நிகழ்ச்சிகளை மீண்டும் நினைவு கூர்ந்தார். இப்போது அவருக்கு அந்த விஷயங்கள் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வந்தன. ராவணனுடன் நடந்த யுத்தத்தின் போது ராவணன் நவகிரகங்களையும் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்ததால் அவர்களின் துணையுடன் பலமான காற்று, அளவுக்கு அதிகமான மழை, வெள்ளப் பெருக்கு, இடி, மின்னல் இவற்றைத் தோற்றுவித்து வானரங்கள் தங்கியிருந்த கூடாரங்களைத் தகர்க்க திட்டமிட்டான் ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த கூடாரங்கள் சிறிதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், அப்போதிருந்த யுத்த களேபரத்தில் அது பற்றி சிந்திக்க அவகாசம் இல்லாத காரணத்தில் அந்த அற்புத கூடாரங்கள் அமைத்த வானர வீரர்களைக் கௌரவிக்க முடியாமல் போயிற்று.

அதற்கு உரிய தருணம் இப்போது வந்து விட்டது. இதுவும் ராம லீலைகளில் ஒன்றே. சுக்ரீவனிடம், “ஆமாம், எந்த இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்படாத மிகவும் வலிமை மிகுந்த கூடாரங்களை நமது வானரப் படைகள் அமைத்திருந்தனர். அதற்குக் காரணமான வீரர்களை இப்போது அறிமுகப்படுத்துவீராக,” என்று ராமர் கேட்கவே, சுக்ரீவ ராஜா தனது பரிவாரத்திலுள்ள மூன்று குரங்குகளை ராம பிரானுக்கு அறிமுகப் படுத்தினார். குஞ்சரா என்ற வகையைச் சார்ந்தவை அந்த மூன்று குரங்குகள், அவைகள் செயல்படும் விதம் மிகவும் அற்புதமானது.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

குஞ்சரா குரங்குகள் கூடாரம் அமைக்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்த பின் அந்த இடத்தின் ஈசான்ய மூலையில் முதல் குரங்கு வடக்கு திக்கு நோக்கி பார்த்து அமர்ந்து கொண்டு தன்னுடைய வாலை தெற்கு நோக்கி நீட்டும். முதல் குரங்கின் வால் முடியும் இடத்தில் இரண்டாவது குரங்கு தென்கிழக்கு திசை நோக்கி பார்த்து அமர்ந்து கொண்டு தன்னுடைய வாலை வடமேற்கு திசையை நோக்கி நீட்டும். இரண்டாவது குரங்கின் வால் முடியும் இடத்தில் மூன்றாவது குரங்கு மேற்கு திசையைப் பார்த்து அமர்ந்து கொண்டு கிழக்கு திசை நோக்கி தன்னுடைய வாலை நீட்டும்.

குஞ்சரா குரங்குகளின் விசேஷ சக்தி என்னவென்றால் அவர்களுடைய வாலை நீட்டி அளக்கும்போது அது மிகவும் துல்லியமாக ஒரு நேர்கோட்டில் அமையும். மேலும் தேவையான அளவு நீளத்திற்குத் தங்கள் வாலை நீட்டவும், குறைக்கவும் சக்தி பெற்றிருந்தன அக்குரங்குகள். இவ்வாறு மூன்று குரங்குகளின் வால் சேர்ந்து ஒரு முக்கோண நிலப் பகுதி அமையும். இந்த முக்கோணத்திற்கு கோண குஞ்சரம் என்று பெயர். மிகவும் புனிதமான சக்தியை உடையது இந்த குஞ்சர கோண நிலப் பகுதி.

இவ்வாறு தொடர்ந்து ஈசான்ய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை, வாயு மூலை என்ற நான்கு மூலைகளிலும் நான்கு முக்கோண நிலப் பகுதிகளை அளந்து அமைக்கும்போது நடுவில் ஒரு சதுரமான நிலப் பகுதி அமையும். (படத்தைப் பார்க்கவும்), இந்த சதுர நிலப் பகுதிக்கு கோண மய குஞ்சரம் என்று பெயர். கோண மய குஞ்சரம் நிலப் பகுதியில் அற்புத வாஸ்து சக்திகள் பொலியும். எனவே, இத்தகைய கோண மய குஞ்சரம் எந்த வித இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்படாது என்பது வாஸ்து சாஸ்திர உண்மையாகும்.

இவ்வாறு கோண மய குஞ்சர சக்திகள் உடைய கூடாரங்களை வானரப் படைகள் அமைத்ததால்தான் அவை எல்லாவித இயற்கை சீற்றங்களையும் எதிர்த்து நின்றன என சுக்ரீவன் எடுத்துரைத்தார். அதைக் கேட்ட ராமபிரான் பெரிதும் மகிழ்ச்சியுற்று அந்தக் குஞ்சரா குரங்குகளின் சேவையைப் பாராட்டி அவைகளுக்கு அற்புத சன்மானங்களையும் மனித வரலாற்றில் அவர்களின் சேவை நீங்கா இடத்தைப் பெறும் எந்த வரத்தையும் கொடுத்து அருளினார். ராமபிரானின் வாக்கிற்கு ஏற்ப திருப்பதி திருத்தலத்தில் உலவும் குஞ்சரா குரங்குகளை இன்றும் பக்தர்கள் தரிசித்து அருள்பெறலாம்.

ராம பிரானின் வார்த்தைகளை நிரூபணம் செய்யும் வகையில் இன்றும் பாரத தேசம் மட்டும் அல்லாது எகிப்து, ஆப்ரிகா, கீழை நாடுகளில் இத்தகைய கோண குஞ்சரா முறையில் நிலம் அளக்கும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பாக நதிக் கரையோரங்களில் உள்ள நிலப் பகுதிகளையும், வயல் வெளிகளையும் இவ்வாறு கோணக் குஞ்சரா முறையில் அளந்து சீர்செய்தால் அவ்வயல்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதுடன் அவ்வயல்களில் வளரும் பயிர்களும் விலங்கினங்களாலும், பூச்சிகளாலும், நோய்க் கிருமிகளாலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

ஸ்ரீஆரணவல்லி அம்மன் செவலூர்

பின்னர் சுக்ரீவ மன்னனின் மேற்பார்வையில் நைல் நதியின் இரு புறத்திலும் உள்ள நிலங்கள் அனைத்தும் இவ்வாறு குஞ்சரா குரங்குகளால் அளக்கப்பட்டு சீர்திருத்தம் அடைந்தன.

குஞ்சரா குரங்குகள் இத்தகைய சிறப்பான சக்தியை எவ்வாறு பெற்றன? ராம பிரானே அக்குரங்குகளிடம் இது பற்றி வினவியபோது, அக்குரங்குகள் கோண சக்தி சகஸ்ர லிங்கங்களை ஓராயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வழிபட்டதால் இறைவனின் வரப்பிரசாதமாக இத்தகைய சக்திகள் பிரம்மாவால் தங்களுக்கு அருளப்பட்டன என்ற தெய்வீக இரகசியத்தை வெளியிட்டன.

எத்தனை யுகங்கள் வழிபட்டாலும் ஒரு சகஸ்ர லிங்கத்தின் முழுமையான பெருமைகளை உணர்ந்து கொள்ள முடியாது. சகஸ்ர லிங்கத்தின் கோண சக்திகளை வழிபட்டே குஞ்சரா குரங்குகள் வாஸ்து சக்திகளை வரமாகப் பெற்றன என்றால் சகஸ்ர லிங்க மூர்த்திகள் எண்ணற்ற சக்திகளை யாரால் உணர முடியும். எல்லா சகஸ்ர லிங்கங்களும் இத்தகைய கோண வர சக்திகளை அபரிமிதமாகப் பொலிந்தாலும் சில சகஸ்ர லிங்க சக்திகளை மட்டும் மனிதர்கள் தங்கள் வழிபாடுகளால் பெற முடியும்.

உதாரணமாக, ஈசான்ய கோண சக்திகளை திருச்சி திருவாசி சகஸ்ர லிங்கமும், அக்னி கோண சக்திகளை திருச்சி மலைக்கோட்டை தாயுமான சகஸ்ர லிங்க மூர்த்தியும், வாயு மூலை சக்திகளை நகர் திருத்தல சகஸ்ர லிங்க மூர்த்தியும் வழங்கி மக்களை வாஸ்து பிரச்னைகளிலிருந்து காத்து விமோசனம் அளிக்கின்றனர். எனவே, ஒவ்வொரு வாஸ்து பூஜை நாளிலும் நான்கு நாழிகை (96 நிமிடங்கள்) நேரத்திற்குக் குறையாமல் இத்தகைய சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி வணங்குவதால் எத்தகைய கடுமையான வாஸ்து தோஷங்களிலிருந்தும் மீளலாம்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam