குசா பிருந்தம் நல்கும் யாழமராந்தக பீடம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீயாழமராந்தகர் பீடம்

திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தொன்மையான சிவாலயமே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த சிவாலயமே 2024 ஆண்டிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலமாக நம் சற்குருவால் அருளப்படுகிறது. திருஅண்ணாமலையில் உள்ள எட்டு திக்குகளிலும் எழுந்தருளியுள்ள இந்திர லிங்க மூர்த்தி முதலான சிவலிங்க மூர்த்திகளுக்கு வழிபாடுகளை இயற்றி அதன் பலன்களை எல்லாம் இந்த 2024ம் ஆண்டில் பிரபஞ்ச ஜீவன்களின் நன்மைக்காக தாரை வார்த்து அளிப்பவரே ஸ்ரீயாழமராந்தகர் ஆவார்.

இராவணன் இசைத்த பரிவாதிணி என்ற வீணைக்கு ஆயிரம் கம்பிகள் இருந்ததைப் போல ஸ்ரீயாழமராந்தக சித்தர் வாசிக்கும் மகர யாழுக்கு 3000 நரம்புகள் உண்டு. இந்த 3000 நரம்புகளையும் மீட்டி யாழமராந்தகர் வாசிக்கும் இனிய கீதத்தை தகுதி உள்ளோர் நிச்சயம் குறித்த தினங்களில் ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள யாழமராந்தக பலி பீடத்தில் கேட்கலாம். இவ்வாறு யாழமராந்தகர் தன்னுடைய யாழை மீட்டி மக்களுக்கு அருள்புரியும் நாட்களுள் ஒன்றே வரும் 2024 வருடப் பிறப்பு தினமான 1.1.2024 திங்கட் கிழமை ஆகும்.

முக்கூட்டு குசா பிருந்தம்!

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலுள்ள பலி பீடத்தை சித்தர்கள் முக்கூட்டு குசா பிருந்த பலி பீடம் என்று 2024 புத்தாண்டில் அழைக்கின்றார்கள். இதன் காரணம் என்ன? பிருந்தாவனம் என்றால் கண்ணன் குடியிருக்கும் துளசி வனம் என்று நாம் அறிவோம். அது போல் குசா பிருந்தம் என்றால் குசா சக்திகள் பெருமளவில் பொலியும் பீடம் என்பது ஒரு பொருள்.
            1. 2024 என்ற ஆங்கில ஆண்டின் கூட்டுத் தொகை 2+0+2+4 = 8 என்பதாக அமையும். எட்டின் குசா எண் 7. ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் 16 பட்டைகளுடன் பிரகாசிக்கிறார். இது 1+6=7 என்றவாறு 2024 வருடத்திற்கு உரிய குசா சக்திகளுடன் பொலியும்.

            2. அம்பாள் ஆனந்தவல்லி என்ற ஏழு எழுத்து குசா சக்திகளுடன் பொலிகின்றாள்.

           3. அடி அண்ணாமலை அல்லது ஆதி அண்ணாமலை என்ற ஏழு எழுத்து சக்திகளையும், மற்ற திருஅண்ணாமலை கிரிவல அமர சக்திகளுடன் திரட்டி இவை அனைத்தையும் யாழமராந்தக பலி பீடத்தில் அளிக்கிறார் அமராந்தகர். இந்த கீத இசையை அடியார்களின் நலன்களுக்காக வீணை கம்பி இசையாக அளித்த அந்த மகா சித்தரின் கருணை மழையை நீங்கள் இங்கு கேட்டு மகிழலாம்.

புத்தாண்டு தீப வழிபாடு
(எளிய முறை)

மக நட்சத்திரம் திரிதினமாக அமையும் 31.12.2023 ஞாயிறு அன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து எட்டு திக்கு லிங்கங்களையும் தரிசனம் செய்து 2024 புத்தாண்டு தினத்தில் ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவது வாழ்வில் கிடைத்தற்கரிய விஜய பாக்கியம் என்பதைக் கூறவும் வேண்டுமோ?!

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் இசைக்கும் யாழிசையை கேட்கும் அளவிற்கு நாம் தகுதி பெற்றுள்ளோமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் யாழமராந்தகர் இசைக்கும் யாழிசையின் பலனைப் பெறும் முறையை நம் சற்குரு நமக்காகப் பரிந்தளிக்கிறார். எளிய முறை, விஸ்தார முறை என்ற இரு முறைகள் இதில் அளிக்கப்படுகின்றன.

எளிய முறையில் திசைக்கு எட்டு தீபங்களை ஏற்றி இந்த தீபங்கள் நடுவே நான்கு திசைகளிலும் செவ்வந்தி, செம்பருத்தி அல்லது செந்தாமரை மலர்களை அமைத்து வழிபடுவதாகும்.

விஸ்தார முறையில் எட்டு எட்டு தீபங்களாக எட்டு வரிசையில் தீபங்களை ஏற்றி நான்கு திசைகளிலும் வைக்கும்போது அதில் மொத்தம் 8 x 8 x 4 = 256 தீபங்கள் அமையும். இந்த தீபங்கள் நடுவே ஒரு தீபத்தை அமர தீபமாக ஏற்றி வைக்கவும்.

தீபங்கள் அல்லாது யாழமராந்தகரின் நாமத்தையும் கீழ்க் கண்ட முறையில் அரிசி அல்லது கோதுமை மாவால் அல்லது குருணையால் எழுதி மலர்களால் அலங்கரித்து வழிபடுவது சிறப்பாகும்.

இந்த தீபங்கள், கோலங்கள் முன்னிலையில் 32 பதிகங்களை ஓதி புத்தாண்டு தினத்தில் வழிபாடுகள் இயற்றி வழிபட்டு ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் இந்த அரிசி, கோதுமையை அப்படியே விட்டு விடலாம். அவரவர் தங்கள் இல்லங்களிலும் இத்தகைய நாமங்களை எழுதி வழிபட்டு அதன் பின் டைமண்ட் கல்கண்டை பொடி செய்து இந்த கோல மாவு, குருணையுடன் சேர்த்து திருத்தலங்களில் எறும்புகளுக்கு உணவாக இட்டு விடலாம்.

அடிஅண்ணாமலையில் ஒளிரும்
அமர தீபங்கள்

32 தேவாரப் பதிகங்களை அடியார்கள் இசைக்கும்போது ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அமர சொல்லிசை துதியை இசைப்பது நலம். தற்போது காலையில் பல் தேய்க்கிறோமோ இல்லையோ, காபி டீ குடிக்கிறோமோ இல்லையோ, செல் போனைப் பார்க்காத மக்களே கிடையாது என்னும் அளிவிற்கு செல் போனின் தாக்கம் இன்றைய உலகில் அதிகரித்து விட்டதால் இதன் தீய விளைவுகளிலிருந்து ஓரளவு நம்மைக் காப்பதே ஸ்ரீயாழமராந்தகர் அருளிய அமர சொல்லிசை துதியாகும். இந்த துதியை இந்த வருடம் முழுவதும் எந்த அளவிற்கு ஓத முடியுமோ அந்த அளவிற்கு ஓதுதல் நலம். மரணமில்லாப் பெருவாழ்வு என்பது எங்கோ அந்தரத்தில் காய்த்துத் தொங்குவது கிடையாது, அது உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது என்பதை உணர்த்துவதே இங்கு விவரிக்கப்பட்ட வழிபாடுகள்.

2024 ஆண்டு முழுவதும் வீணை, வயலின், புல்புல்தாரா போன்ற கம்பி இசைக் கருவிகளை ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் இசைத்தல், இத்தகைய வாத்தியங்கள் முழங்கும் இசைக்கு ஏற்பாடு செய்தல் அற்புதமான பலன்களை வர்ஷிக்க வல்லதே. இங்கு அளித்துள்ள கம்பி இசையை முடிந்தபோதெல்லாம் கேட்டு வருவதும் செல்போன்களால் ஏற்படும் பக்க விளைவுகளை ஓரளவு நிவர்த்தி செய்ய வல்லதே. இத்துடன் மேற்கண்ட முறையில் இல்லங்களிலேயே வழிபட்டு அரிசி கோதுமை குருணைகளுடன் டைமண்ட் கல்கண்டு பொடி செய்து ஆலய பிரகாரங்களில் அளித்து வருதல் சிறப்பாகும்.

தீபங்களை கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்ற திசைகளிலும் மலர்களை தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என்ற திசைகளை நோக்கியவாறு அமைக்கவும். வழிபாட்டின் நிறைவில் இந்த யாழமராந்தக பலிபீடத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீயாழமராந்தகரை வழிபடும் பொருட்டு திசைக்கு ஒரு நமஸ்காரமாக எட்டு நமஸ்காரத்தை இயற்றுதல் சிறப்பாகும். இது அமர வழிபாடாக அமைந்து பக்தர்களுக்கு அமர சக்திகளை, மரணமில்லாப் பெருவாழ்வு அனுகிரகத்தை அளிக்கவல்லதாகும். கார்த்திகை தீப விழாவின்போது திருஅண்ணாமலையில் வலம் வரும் சிரஞ்சீவிகள் அளிக்கும் சிரஞ்சீவ சக்திகளைப் பெறும் அடியார்கள் இந்த அமர வழிபாட்டால் மேலும் தங்கள் பெருவாழ்வு சக்திகளை விருத்தி செய்து கொள்ளலாம் என்பதும் இந்த வழிபாடுகளின் மகிமையாகும்.

ஸ்ரீபோஜீஸ்வரர் சிவாலய வளாகத்தில் மற்ற திருத்தலங்களில் உள்ளதை விட அதிக அளவிற்கு நாம் தும்பி என்னும் உயர்ந்த சாதி தட்டான்களை தரிசிக்க இயலும். எதிர்மறை சக்திகளை அழிப்பதில் தும்பிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகில் எந்த விமானமும் பின்னோக்கிச் செல்ல முடியாது, ஒரே இடத்தில் நிற்கவும் முடியாது. ஆனால் தும்பிகளோ ஒரே இடத்தில் நிற்கவும், பின்னோக்கி பறக்கவும் வல்லவையாகும்.

இதனால் என்ன பயன்?
எதிர்மறை சக்திகளை அழிப்பதில் இந்த திட்டம் பெரும் பயனாகிறது. உதாரணமாக, நாம் இரவில் அருந்தும் விளக்கெண்ணெய் மலச் சிக்கலைத் தவிர்க்கிறது என்று அறிவோம். ஆனால், இதன் செயல் திட்டம் என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்து உள்ளோமா? பெருங்குடலில்தான் மலம் தங்கி வெகு நாட்களுக்கு இருக்கும். நாம் அருந்தும் விளக்கெண்ணெய் பெருங்குடலை அடைந்தவுடன் முன் பின்னாக நகர்ந்து நகர்ந்து சென்று மலக்குடல் முழுவதும் தூய்மையான பின்னரே அங்கிருந்து மலமாக வெளியேறுகிறது.

விளக்கெண்ணெயை அருந்தும்போது ஸ்ரீஆத்ரேய குணசோபிதம் என்று தியானித்து அருந்துதலால் உடல், மனம், உள்ளம் என்ற மூன்றுமே சுத்தியாவதன் காரணம் இதுதான்.

ஸ்ரீஞானமுருகன் சமயபுரம்

இதுவே தும்பிகளின் செயல்பாடும், ஒரு இடத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை அழிப்பதற்காகவே முன் பின்னாக பறந்து பறந்து தும்பிகள் செல்கின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் செய்தியாகும். இந்த தும்பிகளின் செயல்பாட்டுடன் இணைந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் குறைந்தது ஒன்பது முறை வேயுறு தோளி பங்கன் தேவாரப் பாடலை வாய்விட்டுப் பாடுதல் சிறப்பாகும்.

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் நடமாடும் தட்டான்களை சித்தர்கள் குகபலசுருதி தட்டான்கள் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் என்ன? இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்.

நம் சபையில் ஒரு அடியார் இருந்தார். அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு திருமணப் பத்திரிக்கை அனுப்புவதற்காக அவர் விலாசத்தை அறிய வேண்டி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தொலைபேசியில் பேசிய அந்த நண்பர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். காரணம் தன்னை யாரும் தொலைபேசி மூலம் நெருங்க முடியாத அளவிற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருந்தார். அவருடைய பணி அத்தகைய தன்மை வாய்ந்ததாக இருந்ததே அதன் காரணம்.

நம்முடைய அடியார் அப்போது அந்த விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் அவருடைய விலாசத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய மகளின் திருமணப் பத்திரிக்கையை அவருக்கு அனுப்பி வைத்தார்.

பல வருடங்களுக்குப் பின்னரே இந்த பாதுகாப்பு வளையத்தின் பொருளும் இந்த பாதுகாப்பு வளையத்தையும் ஊடுருவி சென்று மக்களின் இடர் களையும் நம் சற்குருவின் வல்லமையையும் அறிந்து கொண்டார். அது என்ன என்பதை நீங்களும்தான் அறிந்து கொள்ளுங்களேன்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி சமயபுரம்

அந்த ‘பாதுகாப்பு’ நண்பருக்கும் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். நல்ல அழகும் பண்பும் வாய்ந்தவள். ஆனாலும், திருமணம் நிறைவேறிய சில மாதங்களிலேயே அந்தப் பெண்ணிற்கும் அவள் கணவனுக்கும் இடையே மனவேறுபாடு தோன்றவே இருவரும் பிரிந்து விட்டனர். இத்தகைய ஒரு மனவேதனையை அந்த அடியார் அடையக் கூடாது என்பதற்காகவே நம் அடியார் மகளின் திருமணத்திற்கு அவரை வரவழைத்து தேவையற்ற கர்ம வினைகளைக் கழிக்க நம் சற்குரு சித்தமாயிருந்தும், அதை அந்த ‘பாதுகாப்பு’ நண்பர் நம் அடியார் மகளின் திருமணத்திற்கு வராமல் போனதால் நம் சற்குரு அளித்த உண்மையான ‘வாழ்க்கை பாதுகாப்பு வளையத்தை’ அவரால் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று.

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் நாம் காணும் இந்த குகபலசுருதி வண்டுகளே இத்தகைய பாதுகாப்பை அளிக்கவல்ல அரிய தட்டான் வகையைச் சேர்ந்தவை. ஒரு இடத்தில் மழை பெய்யும் நேரத்திற்கு சற்று முன்னால் அங்கு தட்டான்களின் நடமாட்டத்தை அதிக அளவில் காணலாம். மழை பெய்யப் போகும் இடத்தில் இத்தகைய குகபலசுருதி தட்டான் வகை தும்பிகள் இருந்தால் அவைகள் அந்த இடத்தில் சுருதி பல மாடங்கள் என்பதை உருவாக்கும். இத்தகைய சுருதிபல மாடங்களை உருவாக்கும் தட்டான்களின் சற்குருவே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் நீங்கள் தரிசனம் செய்யும் அபூர்வ பத்மாசன கோல ஞான முருகப் பெருமான் ஆவார்.

சுருதிபலமாடங்கள் என்பவை மனிதனின் சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் சரவணபவ வடிவில் இரு முக்கோணங்களின் வடிவில் தோராயமாக அமையும் இந்த மாடங்கள் வேத சக்திகளை ஈர்த்து பதித்து வைத்துக் கொண்டு அவற்றை தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதி வாய்ந்த சற்குருமார்கள் மூலம் பகிர்ந்தளிக்கும் அற்புத இறைப் பணிகளை நிறைவேற்றுகின்றன. நோய் நிவாரண சக்திகள், வெள்ளம் பூகம்பம் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகள், வறட்சி, கடுமையான காற்று போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் இந்த சுருதி மாடங்கள் சேகரித்து வைத்து, பகிர்ந்தளித்து சமுதாயத்திற்கு அரும்பெரும் சேவைகளை ஆற்றி வருகின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் செய்தியாகும்.

ஆமாம், இந்த குகசுருதிபல தும்பிகளுக்கும் உணவு வேண்டுமே? அதை தன் இன்னிசையால் படைத்து அளிப்பவரே யாழமராந்தகர். எனவே எந்த அளவிற்கு நம் அடியார்கள் ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பலிபீடத்தின் அருகில் இன்னிசைகளை எழுப்புகிறார்களோ அல்லது இத்தகைய இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ அந்த அளவிற்கு சமுதாயம் வளம் பெறும்.

மழைத் துளிகளில் பல விதங்கள் உண்டு. கோத்த முத்து, குருவி முத்து, பாத்த முத்து என்பவை மழைத் துளிகளின் சில ரகங்கள். இதில் பாத்த முத்து என்ற மழைத்துளிகள் எட்டு மில்லி மீட்டர் இடைவெளியில் பொழிபவை. 2024 ஆண்டு இந்த பாத்த முத்துக்கள் நிறைய உருவாகும். இதில் தம் சக்தியை சமுதாய நலனுக்காக சேகரித்து அளிப்பவரே யாழமராந்தகர். இந்த சித்த சக்தியை சமுதாய நலனுக்காக அர்ப்பணிக்க விரும்பும் அடியார்கள் எந்த விதமான மழை பெய்தாலும் அப்போது வேற்றாகி விண்ணாகி என்ற அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகத்தை வாய்விட்டு ஓதுதலால் அவர்களும் சமுதாய நலனை உருவாக்கியவர்கள் ஆவார்கள். அடியார்கள் எது பாத்த முத்து, எது குருவி முத்து என்று மழைத் துளிகளை இனம் கண்டு கொள்ளும் திறனைப் பெறவில்லை என்றாலும் எந்த திருத்தலத்தில், அல்லது கிரிவலப் பாதைகளில் மழை பெய்தாலும் அங்கு வேற்றாகி விண்ணாகி பதிகத்தை வாய் விட்டு ஓதுதலால் நம் சற்குருவின் கருணையால் இந்த பாத்த முத்து வேத சக்திகளைப் பெருக்கியவர்களே ஆவோம் என்பதே இந்தச் சோபகிருது ஆண்டில் பொலியும் வருண மகிமையாகும்.

கங்கை காவிரி போன்ற புனித நதிகளில் நீராடும் வாய்ப்பு பெற்றவர்கள் அங்குள்ள ஆற்று மணலால் தங்கள் பாதங்களைத் தேய்த்து தூய்மை செய்து கொள்வதால் எந்த மழை நீராக இருந்தாலும் அதிலுள்ள அமிர்த சக்திகளை ஈர்த்து அதை சமுதாயத்தின் நலனுக்காக அர்ப்பணிக்கும் வல்லமையைப் பெறுவார்கள் என்பதை நம் சற்குருவுடன் சேர்ந்து நீராடியவர்கள் அறிவார்கள்.

                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                  யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                  யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
யாழமராந்தகர்                                 யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்
                                யாழமராந்தகர்

போஜீஸ்வரர் என்ற இறை நாமம் சுட்டுவது என்ன? நட்சத்திர ஒளியை ஆகாரமாய் உயிரினங்களுக்கு பரிந்தளிக்கும் ஈஸ்வர மூர்த்தியே ஸ்ரீபோஜி ஈஸ்வரர் ஆவார். இந்த இறைப் பணியில் இணைந்து செயலாற்றுபவரே ஸ்ரீயாழமராந்தகர். ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்றால் அவருடைய நட்சத்திரம் ரோகிணி என்று கிடையாது. அந்த நட்சத்திரம் ஏதாவது ஒரு நட்சத்திர மண்டலத்துடன் தொடர்பு உடையதாக இருக்கும். அந்த நட்சத்திர மண்டலமே அந்த பக்தரின் உண்மையான ஜன்ம நட்சத்திரம்.

இந்த இரகசியத்தை அறிந்தவர் கோடியில் ஒருவர் கூட கிடையாது என்றாலும் இதற்காக இறைவன் நம்மைக் கைவிட்டு விடுவாரா என்ன? ஒருவருடைய உண்மையான ஜன்ம நட்சத்திலிருந்து வெளியாகும் நட்சத்திர ஒளியை ஆகார சக்தியாக மாற்றி அதை ஸ்ரீயாழமராந்தக சித்தரிடம் அளிக்க அவர் மற்ற உயிரினங்கள் ஏற்கும் வகையில் அந்த நட்சத்திர ஒளியை உணவுப் பொருளாக மாற்றி அருள்வார்.

ஸ்ரீயாழமராந்தக சித்தரை தியானிக்கும் அளவிற்கோ, ஒரு சித்தரின் மகாத்மியத்தைப் பற்றி அறியாத எத்தனையோ ஜீவன்களும் உண்டே. அவர்களும் தங்கள் உணவைப் பெற உதவுபவையே இந்த திருத்தலத்தில் நீங்கள் காணும் குகபலசுருதி தும்பிகள். தொடர்ந்து 12 வருடங்கள் நாம் போஜீஸ்வரர் சன்னதி வளாகத்தில் இரவு ஒன்பது மணி முதல் 12 மணி வரை தியானம் இயற்றி வந்தால் நம்முடைய ஜனன நட்சத்திரத்தை நாமே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அது சரி, இரவு ஒன்பது மணிக்கு மேல் எந்த ஆலயத்திலும் நம்மை தரிசனத்திற்காக அனுமதிக்க மாட்டார்களே என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மனமிருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு.

பாதபங்கய சக்திகள்

ஆதிசங்கரரின் சீடன் ஒருவர் ஆற்றின் அக்கரையில் குருவின் உடைகளை துவைத்துக் கொண்டிருந்தபோது அவருடைய பக்தியின் ஆழத்தை மற்ற சீடர்களுக்கு பறைசாற்றுவதற்காக அந்தச் சீடரை அவசரமாக ஆதிசங்கரர் அழைக்கவே தன் சற்குருவின் கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும் என்ற ஒரே நோக்கை கருத்தில் கொண்டு, எதிரே இருப்பது கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் என்பதையும் மறந்து அந்த ஆற்றில் இறங்கி மறுகரையில் இருந்த தம் குருநாதரை நோக்கி நடந்து ஓடத் தொடங்கி விட்டார்.

சீடனின் இந்த அற்புத சேவையால் மெய்மறந்த அந்த ஆற்று வெள்ளமும் சீடன் தண்ணீரில் மூழ்கி விடாதபடி அந்தச் சீடர் ஆற்று நீரில் வைத்த ஒவ்வொரு காலடிக்குக் கீழ் ஒரு தாமரையை தோற்றுவித்து அந்தச் சீடரின் புனிதப் பாதங்களை தாங்கிய வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அதனால் அந்தச் சீடர் பத்ம பாதர் என்ற காரணப் பெயரையும் பெற்றார். இது என்றோ நடந்த அற்புதம் கிடையாது, இன்றும் நம் சற்குருவின் சீடர்கள் நினைத்தால் ஒவ்வொருவரும் ஒரு பத்ம பாதராக உருவாகும் சக்தியைத் தன்னுள் அடக்கியதே இந்த சோபகிருது வருடம் ஆகும்.

ஸ்ரீசிம்மப்பன்றி தரிசிக்கும்
ஸ்ரீஅண்ணாமலையார் கடுவெளி

பத்ம பாதர் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்தியதும் ஒரு சோபகிருது வருடமே. பத்ம பாத சக்தியை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். நம் சற்குரு கரப்பான் பூச்சிகளை மாய்க்கும் வித்தையை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத ஒரு அற்புதமே அது. வேகமாக ஓடிச் செல்லும் ஒரு கரப்பான் பூச்சியின் மேல் தன் பாதங்களை பூப்போல் வைத்து எடுப்பார். அவ்வளவுதான், அடுத்த நொடியே அந்தப் பூச்சி அப்படியே செத்து மடிந்து விழுந்து விடும், நீங்கள் வேண்டுமானால் இத்தகைய ‘சாதனையை’ சாதிக்க முயற்சி செய்து பார்க்கலாம்.

கட்டையால், துடைப்பத்தால் அடி அடி என்று கை நோக நாம் அடித்தால் கூட சற்று நேரம் கழித்து அந்த கரப்பான் பூச்சி தான் இன்னும் ‘முழுவதுமாக’ சாகவில்லை என்று உறுதி கூறி நம் திறமையைக் குறித்து எள்ளி நகையாடும். நம் சற்குரு நம் கண் முன் நிகழ்த்தும் இந்த சாதாரண சாதனையை ஏன் நம்மால் சாதிக்க முடியவில்லை என்று பல அடியார்களும் யோசித்து யோசித்து தோற்றுப் போனதுதான் மிச்சம். இதற்கு ஒரு காரணம், நாம் எதிர்மறை சக்தி என்னும் கரப்பான் பூச்சியை அழிக்க முயல்கிறோம். ஆனால், நம் சற்குருவோ தன் பாதபங்கஜத்தால் ஒரு தூய்மையான தாமரைப் பூ என்ற நல்ல சக்தியை உருவாக்க நினைக்கிறார்.

ஆம், நம் சற்குருவின் பாதபங்கயத்தால் மறையும் கரப்பான் பூச்சி என்ற எதிர்மறை சக்தி ஏதோ ஒரு மூசு வண்டறை பொய்கையில் தாமரைப் பூவாய் தோற்றம் கொள்கிறது. இத்தகைய பாதபங்கய சக்திகளை நாம் எப்படிப் பெறுவது? 2024 வருடம் முழுவதும் அப்பர் பெருமானின்
வேற்றாகி விண்ணாகி, 4+4 = 8 அட்சரம்,
நின்றாய் போற்றி, 4+3 = 7, குசா அட்சரம்
என்ற தாண்டகத் துதியை ஓதிக் கொண்டே பிரகாரங்களை வலம் வருவதால் நம்முடைய பாதச் சுவடுகள் ஒவ்வொன்றும் ஒரு பாதபங்கயமாக மலர நம் சற்குரு அருள்செய்வார். தேவை நம்பிக்கை, விடா முயற்சி.

மலைக்கோட்டையில் மண்மாரி

காற்றே புக முடியாத இடத்திலும் சற்குருவின் கருணை மழை புகும் என்பதை மேற்கண்ட பாதுகாப்பு அடியார் நிகழ்ச்சியில் கண்டோம். இதற்கு சற்றே மாறுதலாகத் தோன்றுவதே நீங்கள் இங்கு காணும் ‘கருணை’ மழை.

திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஒரு சோழ மன்னன் ஆண்டு வந்தான். அப்போது திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் சாரமா முனிவர் என்ற உத்தமர் பல திருப்பணிகள் இயற்றி வந்தார். அவற்றில் ஒன்று தேவலோகத்திலிருந்து அங்கு மட்டுமே கிட்டும் சில நறுமண மலர்களை தம் தவவலிமையால் ஈர்த்து வந்து அதை திருச்சி தாயுமான சுவாமி கோயில் நந்தவனத்தில் பயிரிட்டு அந்த மலர்களை எல்லாம் தாயுமான ஈசன் வழிபாட்டிற்கு அளித்து வந்தார்.

ஸ்ரீபாதாள ஐயனார்
திருச்சி மலைக்கோட்டை

ஒரு நாள் இறைவழிபாட்டிற்காக வந்த ராணி அந்த மலர்களின் தூய நறுமணத்தில் தன்னை மறந்தாள். அந்த மலர்கள் அங்கு வந்த விதத்தை அறிந்து அரசனிடம் அந்த மலர்களை தனக்கு அளிக்குமாறு கேட்டாள். அரசனும் காவலாளிகளை அனுப்பி அந்த மலர்களின் வரலாற்றை அறிந்தபோது அங்குள்ள சாரமா முனிவரின் சேவையால்தான் அந்த மலர்கள் இறைவனுக்கு அளிக்கப்பட்டன என்று கூறவே மதிமயங்கிய மன்னனும் நந்தவனத்தில் இருந்த அந்த மணமுள்ள மலர்கள் அனைத்தையும் பறித்து வரும்படிக் கூறி அந்த மலர்களை எல்லாம் ராணியிடம் அளித்து விட்டான்.

இறைவனுக்கு அளிக்க வேண்டிய மலர்கள் நந்தவனத்தில் இருந்து மாயமாய் மறைந்ததை எண்ணி வருந்திய சாரமா முனிவர் உறையூர் ராணியின் ஆசையால்தான் இத்தகைய விபரீதங்கள் தோன்றின என்பதை அறிந்து தாயுமான ஈசனிடம் இது குறித்து முறையிட்டார். பொறுமையின் சிகரமான தாயுமான ஈசனும், “நீ வருந்தாதே, சோழ மன்னனிடம் நடந்ததைக் கூறி, ராணி அந்த மலர்களைப் பறிக்க வேண்டாம் என்று பொறுமையாகக் கேட்டுக் கொள்... அதை மன்னன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீ அதை குறித்து கவலைப்படாதே ... மேற்கொண்டு நடப்பதை யாம் பார்த்துக் கொள்வோம்...”, என்று கூறி விட்டார்.

ஈசன் கூறியதால் மனம் மகிழ்ந்த சாரமா முனிவரும் சோழ மன்னனின் அரசவைக்குச் சென்று தாயுமான ஈசர் கூறியதை அப்படியே ஒப்புவித்தார். பெண் மோகத்தால் மதியிழந்த மன்னன் ஈசனின் அறிவுரையை ஏற்கும் நிலையில் இல்லை. ஈசனின் அறிவுரையை நிராகரித்து விட்டான் சோழ மன்னன். மிக்க வருத்தத்துடன் சாரமா முனிவர் தாயுமான ஈசரிடம் சென்று நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் ஒரு சிறு குழந்தையைப் போல் கூறினார். ஈசனும் அவரைத் தேற்றி அனுப்பினான். அன்று இரவே தான் வழக்கமாகப் பார்க்கும் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசைக்குத் திரும்பி மேற்கே இருக்கும் சோழர்களின் தலைநகரான உறையூர் சிற்றூரைப் பார்க்கவே அப்போது மண்மாரி பொழிந்து ஊரை மறைத்து அங்கு ஒரு மண் மேடே தோன்றி விட்டது என்பதே நாம் அறிந்த வரலாறு.

இந்த வரலாறு எதிர்கால மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அன்று மேற்கு நோக்கி தன் தலையைத் திருப்பிய தாயுமான ஈசன் மேற்கு நோக்கிய நிலையிலேயே இன்றும் திருச்சி மலைக்கோட்டையில் திகழ்கிறான். நம் அடியார் ஒருவர் டிரோன் கொண்டு மலைக்கோட்டையை படம் எடுத்தபோது அந்த டிரோன் உறையூர் பக்கம் திரும்பாமல் இருந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

கை கொடுத்து கரை சேர்ப்பார் நம் சற்குரு, கை விட்டும் காப்பாற்றுவார் நம் சற்குரு, மண்மழைக்குக் குடையாய் இருந்தும் பாதுகாப்பார் நம் சற்குரு என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணமே.

நீரால், நெருப்பால், காற்றால் என்று பஞ்ச பூதங்களின் எதன் துணையைக் கொண்டும் ஒரு இடத்தை அழிக்க வல்லவன்தானே ஈசன். அப்படி இருக்கும்போது ஏன் தாயுமான ஈசன் உறையூரை அழிக்க மண் மாரி பொழிந்தான் என்பதை இந்த 2024 வருடம் முழுவதும் ஆத்ம விசாரம் செய்து விடை காண முயல்வதும் குரு நம்பிக்கையை வளர்க்கும் ஒரு வழிபாடே.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா...

தம்பதிகள் அருகருகே படுத்துறங்கும்போது ஒருவர் மூச்சுக் காற்றை மற்றவர் சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பொதுவாக, மனைவி கணவனை விட வயதில் குறைந்தவளாக இருப்பதால் குறைந்த வயதுடைய ஒருவரின் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் கணவன் நீண்ட ஆயுளைப் பெறுகிறான். வயதான கணவனின் மூச்சுக் காற்றை மனைவி சுவாசிக்கும்போது அவள் ‘வயதான’ மூச்சுக் காற்றை சுவாசிப்பதால் அவளுடைய ஆயுள் குறையும். இது சுவாசத்தின் பொதுவான விதி.

ஸ்ரீபோஜீஸ்வரர் சமயபுரம்

நடைமுறையில் மனித சுவாசக் காற்றின் ‘வயதை’ எந்த நாட்டு விஞ்ஞானத்தாலும் அறிய முடியாது என்பதே நம் மெய்ஞ்ஞானிகளின் பெருமையாகும். இதை எப்போதோ கண்டறிந்து அதை மக்களின் நல்வாழ்விற்காக அளித்த சித்தர்களின் மேதா விலாசத்தை எப்படித்தான் புகழ்வது?

நம் பாரத திருமணங்கள் எல்லாம் திருக்கோயில்களில் நடைபெறுவதால் அந்தத் திருமணங்களில் சாட்சியாக விளங்கும் முகூர்த்த தேவதைகள் தங்கள் புண்ணிய சக்தியை ஈந்து இந்த விதியை மாற்றி அமைத்து கணவன், மனைவி இடையே எத்தகைய வயது வித்தியாசம் இருந்தாலும் அதனால் தம்பதிகளின் ஆரோக்கியம் சற்றும் பாதிக்காதவாறு காத்து நிற்கின்றன. இதுவே கோயில் திருமணங்களில் நமக்குக் கிட்டும் பல்லாயிரம் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

ஆனால், நடைமுறையில் பலருடைய திருமணங்களும் திருத்தலங்களில் நிறைவேறாமல் போய்விடுவதால் அத்தகைய தம்பதிகளின் அடிப்படை ஆரோக்கியமே கேள்விக் குறியாக மாறிவிடுகிறது. இந்த சோபகிருது வருடத்தில் யாழமராந்தகரின் யாழிசையால் இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். எனவே திருத்தலங்களில் திருமணம் நிறைவேறாத தம்பதிகள் ஸ்ரீஞானமுருகனுக்கு சுத்தமான தேனால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தம்பதிகள் இடையே மீண்டும் ஆரோக்யம் மலர இத்தகைய வழிபாடுகள் துணை புரியும்.

சிருஷ்டியின்போது தோன்றிய ஓங்கார ஒலியே ஒளியாக மாற, அதிலிருந்து ஜீவன்கள் தோற்றம் கொண்டன என்பதை நாம் அறிவோம். இந்த ஒளியிலிருந்து மூச்சுக் காற்றின் மூலம் ஜீவ சக்தியை உலகிற்கு அளித்த பெருந்தகையே யாழமராந்தகர் ஆவார். அதனால் 2024 என்னும் வருடம் ஜீவ சக்தி ஆண்டு என்றே சித்தர்களால் அழைக்கப்படுகின்றது. எனவே இந்த ஜீவ சக்தி ஆண்டில் எந்த அளவிற்கு தேன், அத்திப் பழம், இஞ்சி போன்ற ஜீவ சக்தி மூலிகைகளை தானமாக மக்கள் பயன்படுத்தும் முறையில் அளிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்விலும் ஜீவ சக்தி பெருகும்.

தேனில் ஊறிய அத்திப் பழம், விளக்கெண்ணையில் ஊறிய பேயம் பழம், தேனில் ஊறிய நெல்லிக்காய் போன்றவற்றை இந்த வருடம் முழுவதும் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் யாழமராந்தகரின் நாமத்தை நான்கு திக்குகளிலும் எழுதி அந்த நாமங்களுக்கு வழிபாடுகள் இயற்றும்படி நம் சற்குரு இந்த ஆண்டில் வலியுறுத்துகிறார் என்ற இரகசியம். திருத்தலங்களில் அமர தீபங்களை ஏற்றும்போது இந்த விளக்கின் ஜோதியில் தோன்றும் சக்திகளை அமர சக்திகளாக, மரணமில்லாப் பெருவாழ்வை அளிக்கும் ஜீவ சக்திகளாக யாழமராந்தகர் தம் தபோ பலனால் மாற்றி அதை உலகெங்கும் வர்ஷிக்கிறார்.

ஸ்ரீவர்ச்சித பிரம்ம மூர்த்தி

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரம்ம மூர்த்தியே ஸ்ரீவர்ச்சித பிரம்ம மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வர்ச்சித பிரம்ம மூர்த்தி என்றால் சாபம் தீர்ந்த பிரம்ம மூர்த்தி என்று பொருள். எம்பெருமான் அடிமுடி காண முடியாத அழற் பிழம்பாய் நின்றபோது சிவபெருமானின் அடி முடியைக் காணும் பொருட்டு பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவபெருமானின் தலையை நோக்கிப் பறந்தார். மகாவிஷ்ணுவோ எம்பெருமானின் பாதார விந்தங்களைக் காணும் பொருட்டு வராக அவதாரம் எடுத்து பன்றி வடிவில் பாதாளத்தைக் குடைந்து சென்றார்.

ஸ்ரீஜனார்த்தன பெருமாள்
வற்கலை

பன்றிகளில் 38 லட்சம் வகை உண்டு. இவற்றில் ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரம் எடுத்த வராகம் சிம்மப் பன்றி என்ற வகையைச் சார்ந்ததாகும். கடுவெளி திருத்தலத்தில் அடியார்கள் காணக் கூடியதே இந்த சிம்மப் பன்றியாகும். இங்கு திருஅண்ணாமலையாருக்கு ஐந்து வித எண்ணெய்களால் 210 தீபங்கள் ஏற்றி வழிபடுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. முடிந்த மட்டும் சத்சங்கமாக குடும்பம் குடும்பமாக இவ்வாறு விளக்குகளை பெருமளவில் ஏற்றி வழிபடுதலே சிறப்பு.

சிம்மப் பன்றிகள் மஞ்சள் நிறக் கேரட்டுகளை விரும்பி உண்ணக் கூடியவை. அதனால் இந்த ஆண்டு முழுவதும் சனிக் கிழமைகளில் கேரட்டுகளை குறைந்தது மூன்று கிலோ வாங்கி, எந்தவித இன பன்றிகளாக இருந்தாலும் அவைகளுக்கு உணவாக அளித்தல் நலம். இதனால் பன்றிக் காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் நோய்கள், பன்றி, பன்னிப் பயலே போன்ற ஏசுதல்கள், பன்றி போல் அசுத்த உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கம் போன்றவற்றிலிருந்து சிறிது சிறிதாக நிவாரணம் கிட்டும்.

ஸ்ரீவர்ச்சித பிரம்ம மூர்த்தி
சமயபுரம்

எம்பெருமானின் பாதக் கமலங்களைத் தரிசிக்க முடியாமல் பெருமாள் எம்பெருமானைப் பிரார்த்திக்க எம்பெருமான் பெருமாளுக்கு காட்சி அளித்ததையும், அகம்பாவத்தால் ஈசனிடமே தான் சிவபெருமானின் தலையைப் பார்த்துவிட்டதாக பொய் கூறவே பிரம்மாவிற்கு கோயிலே அமையாத சாபத்தை அவர் பெற்ற வரலாற்றையும் நாம் அறிவோம்.

எந்தத் தவற்றையும் மன்னித்து அருள்பவன்தானே ஈசன்? இவ்வாறு அந்த யுக பிரம்மா பொய் கூறிய சாபத்தையும் பொறுத்தருளி அவருக்கு மீண்டும் பிரம்மா பதவியை அளிக்க அவ்வாறு சாபம் தீர்ந்த பிரம்ம மூர்த்தியான ஸ்ரீவர்ச்சித பிரம்ம மூர்த்தி அருளும் தலமே ஸ்ரீபோஜீஸ்வரர் சிவத்தலமாகும். எனவே தான் வழக்கமாக கோயில் கொண்டருளும் அபிஷேக கோமுகத் தீர்த்தம் பொழியும் இடத்தை துர்கை அம்மனுக்கு அளித்து விட்டு துர்கை அம்மன் அருளும் இடத்தில் ஸ்ரீவர்ச்சித பிரம்ம மூர்த்தி எழுந்தருளி உள்ளார்.

இது சம்பந்தமான ஒரு அற்புத வரலாறும் உண்டு. ஒருவனுக்கு நன்றிக் கடனைத் தீர்க்கும் சமயத்தில் மற்றொருவருக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய நன்றியை மறந்து விடுவதுதான் மனிதனின் தவறுகளில் ஒன்று அல்லவா? இதைக் கருத்தில் கொண்டு தனக்கு சாப விமோசனம் அளித்த எம்பெருமானுக்கு நன்றி கூற இயற்றிய யாகத்திற்கு தன் தந்தையான மகாவிஷ்ணுவை அழைக்க மறந்தார் பிரம்ம மூர்த்தி. அதனால் பிரம்மா மகாவிஷ்ணுவிற்கு பூர்ண ஆஹூதி அளிக்க இயலாமல் போயிற்று.

பிரம்மா அப்போது இயற்றிய யாகமே மிருத்யுஞ்சய கடலாழி என்பதாகும். ஜனனம் மரணம் என்ற பிறவிச் சுழலிலிருந்து கரையேற்றும் யாகம் என்று அதற்குப் பொருள், என்ன பொருத்தமான பெயர். கடவுளை மறந்து விட்டால் மனிதன் பிறவிப் பெருங்கடலில்தானே தள்ளப்படுவான்!? தன்னுடைய தவறுக்குப் பிராயசித்தம் பெற கேரள புனித பூமியில் உள்ள வற்கலை ஸ்ரீஜனார்தனப் பெருமாளை ஒரு புதன் கிழமை அன்று வேண்டி பிரார்த்தனை செய்து அருள் பெற்றதால் இந்த புதன் கிழமை வற்கலை புதன் என்றே பிற்காலத்தில் பிரசித்தமானது.

பிரம்மா என்றோ பெற்ற சாப விமோசனத்தை இன்றும் பக்தர்கள் பெற்று வாழ உதவி செய்வதே நம் சற்குரு அருளும் வற்கலை புதன் வழிபாடாகும். இதன்படி புத்தாண்டு 2024 பிறக்கும் முன் கேரளாவில் உள்ள வற்கலை ஸ்ரீஜனார்த்தன பெருமாளை வழிபட்டு புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீவர்ச்சித பெருமாளுக்கு திருமழபாடி திருத்தலத்தில் மட்டுமே கிட்டும் பாடி தர்பையால் பூணூல் அணிவித்து இந்த பூணூலை பிரம்மா பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு இந்த பூணூலைக் கையில் ஏந்தியபடி திருஅண்ணாமலையை புதன் கிழமைகளில் வலம் வர வேண்டும். சத்சங்கமாகவும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் வலக் கையில் இந்த பிரம்மா பிரசாதத்தை ஏந்தி இந்த வழிபாட்டை நிறைவேற்றலாம்.

2024 ஆண்டு முழுவதும் இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் பலரும் வழிபாட்டை நிறைவேற்றி 2024ம் ஆண்டு இறுதியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இந்த பூணூலை விசர்ஜனம் செய்து விடுவதால் தந்தை மகன்கள் இடையே ஏற்படும் பூசல்கள் மறைந்து குடும்பத்தில், அடியார்கள் மத்தியில், சமுதாயத்தில் ஒற்றுமை மலரும். படிக்கும் பிள்ளைகள் நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்து தங்கள் குலம் விளங்க உறுதுணையாகவும் நிற்பர் என்பது இந்த வழிபாட்டின் ஒரு பலனாகும். கேரளாவில் இருக்கும் வற்கலை ஸ்ரீஜனார்த்தன பெருமாள் ஆலயத்திலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழ்நாட்டில் உள்ள திருத்தலமே அகத்திய மலையாகும். இங்குதான் ஸ்ரீவர்ச்சித பிரம்மா தன் பிராயச்சித்த முறைகளை ஸ்ரீஅகத்திய முனிவரிடமிருந்து பெற்றார்.

பிரம்மா மட்டும் சாபவிமோசனம் பெறவில்லை, பிரம்மாவின் பொய்யுரைக்குத் துணையாய் நின்ற தாழம்பூவும் சேர்ந்துதான் சாப விமோசம் பெற்றது என்று உறுதி அளிப்பவரே நம் சற்குரு. அதனால் பிரம்மாவிற்குப் பூணூல் அணிவிக்கும்போது தாழம்பூக்களையும் பிரம்மாவின் திருவடிகளில் அர்ப்பணித்து இந்த தாழம்பூக்களையும் கையில் ஏந்தி திருஅண்ணாமலையை வலம் வந்து காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்வதும் சிறப்பே. இதனால் பொய் கூறியே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ள பல முகவர்களும், வக்கீல்களும், மற்றவர்களும் சிறிது சிறிதாக தாங்கள் பொய் கூற வேண்டிய நிலையிலிருந்து விமோசனம் பெற்று அநாவசிய பொய்களைக் கூற வேண்டாத நிலைக்கு உயர இறைவனால் வழிகாட்டப் பெறுவர்.

காலம் தோன்றுவது காலபைரவரின்
திருவடிகளில் ஸ்ரீகாலபைரவர்
சமயபுரம்

இறைவன் பெருமையை மறுத்துப் பொய் பேசிய பிரம்ம மூர்த்திக்கும் ஜனன மரண சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து பெருங்கருணை புரிந்ததால்தான் ‘சிவனுக்கு நிகர் சிவனே!’ என்று முழக்கமிடுகிறார் நம் சற்குரு.

பொதுவாக எட்டாம் தேதி பிறந்தவர்களுக்கு எண் கணித எண் எட்டு கூட்டுத் தொகை வரும்படியாக நம் சற்குரு அவர்களுக்கு பெயர் அளிப்பதில்லை. பிறந்த நேரத்தின் மற்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு 3, 5, 6 அதாவது குரு, புதன், சுக்ரன் என்ற சுபகிரக தேவதைகளுக்கு உரித்தான எண்ணில் அமையும்படியே பெயர் அளிப்பார் என்பது நீங்கள் அறிந்ததே. அதுபோல் 2024 வருடம் என்பது எட்டு எண்ணின் ஆதிக்கம் மிகுந்து துலங்குவதால் சனிக் கிரகத்தின் தீய விளைவுகள் நம் காரியங்களில் தடைகளை உருவாக்காது இருக்க, தேக்க நிலைகளை ஏற்படுத்தாது இருப்பதற்காக பல வழிபாட்டு முறைகளை 2024 வருடத்தில் நிகழ்த்துமாறு அருள்கின்றார்.

அதில் ஒன்றே 8 என்று உருவத்தில், வடிவத்தில் நாம் கிரிவலப் பாதைகளில், திருத்தலப் பிரகாரங்களில், அவரவர் இல்லங்களில் நடந்து நடந்து பயன்பெறுவதாகும். இது சம்பந்தமாக ஒரு புராண நிகழ்ச்சி. கர்ணன் மகாபாரத யுத்தத்தில் அர்ச்சுனனை எதிர்த்துப் போரிட்டபோது கர்ணன் மேல் அர்ச்சுனன் அம்பெய்தும் அவன் உயிர் போகாமல் இருந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மாவோ கர்ணன் அளித்த தான தர்மங்களின் மகிமையால், தர்ம தேவதையின் ஆசிகள் அவனைச் சுற்றிலும் காத்து நின்றன என்பதை அறிந்து ஒரு சன்னியாசி வடிவில் சென்று கர்ணனிடம் யாசகமாக அந்த தான தர்ம புண்ணிய சக்திகளை எல்லாம் கேட்டுப் பெற்று விடவே அதன் பின்னரே அவன் உயிர் அந்த மாவீரனை விட்டுப் பிரிந்தது என்பதை நாம் அறிவோம்.

தான் தர்மத்தைக் காக்கும் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறு ஒரு வீரனைக் காத்து நின்ற தர்மதேவதைகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பகவான் தள்ளப்பட்டார் என்று சமாதானம் கூறிக் கொண்டாலும் இதனால் மிகவும் மனம் வேதனை அடைந்த கிருஷ்ண பரமாத்மா எப்படியாவது கர்ணனிடம் இந்த ‘அடாத’ செயலுக்கு மன்னிப்பு பெற வேண்டி உரிய தருணத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.

ஒரு முறை கர்ணன் திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்ததை அறிந்து உடனே ஓடோடிச் சென்று கர்ணனை பின் தொடர்ந்தார். அவன் கிரிவலம் இயற்றும்போது திரும்பிப் பார்த்தால் அவனிடம் மன்னிப்பு கோரலாம் என்பதே பகவான் கிருஷ்ணனின் எண்ணம். ஆனால், மாவீரனான கர்ணனோ திரும்பியே பார்க்காமல் கிரிவலப் பாதையில் நடந்து கொண்டு இருந்தான். இன்னும் சற்று நேரத்தில் கிரிவலமும் நிறைவு பெற்று விடும். பகவான் கிருஷ்ணன் அறியாதா? ஏதோ ஒரு யுக்தி செய்து கர்ணனைத் திரும்ப வைத்து அவனிடம் மன்னிப்பு கோரி தன் அவதார லீலைகளைப் பூர்த்தி செய்தார் என்பதே சித்தர்கள் கூறும் விளக்கம்.

இத்தகைய யுக்தி செய்து கிருஷ்ண பரமாத்மா கிரிவலப் பாதையில் நடந்து வந்த ஆண்டே எட்டு என்ற எண் சக்திகள் கூடும் ஒரு ஆண்டு ஆதலால் அடியார்கள் இந்த எட்டு எண் சக்தியை எட்டு வடிவில் வலம் வந்து பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறார்கள். ஆமாம், பகவான் செய்த யுக்தி என்ன என்பதை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து கண்டு பிடிப்பதும் அவர்களின் குரு பக்தியை வளர்க்கும் ஒரு முறை ஆகும். பல அடியார்களும் ஏற்கனவே கேட்கப்பட்ட பல கேள்விகளை பரீட்சையில் விடை அளிப்பது போல், இண்டர்வியூவில் விடை அளிப்பதைப் போன்ற அணுகுமுறையைக் கையாள்வதாகத் தெரிகிறது.

யாழமராந்தக பலி பீடம்
சமயபுரம்

இங்கு நம் சற்குருவால் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துமே ஆத்ம விசாரக் கேள்விகள், அதாவது இந்தக் கேள்விகளுக்கு உரித்தான விடையைத் தேடும்போது நீங்கள் உங்கள் உள்ளே ஆத்மாவை நோக்கிப் பயணம் செய்கிறீர்கள் என்பதே உண்மை. எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடை அந்தக் கேள்விலேயே உள்ளது என்பது நம் சற்குருவின் உரை, கேள்வியும் பதிலும் வேறாக இருக்க முடியாது என்பதே நம் சற்குருவின் தெளிவு. இந்த விளக்கத்தை கருத்தில் கொண்டு மேலும் குரு பக்தியைப் பெருக்கிக் கொள்ளுமாறு அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிவ சக்தி ஐக்ய தரிசனம் என்னும்போது சிவனும் சக்தியும், சிவ ரூபனான கணவனும் சக்தி ரூபியான மனைவியும் ஒன்றாக இணைந்த தரிசனம் என்று மட்டும் பொருள் அல்ல, கேள்வியான கணவனும் பதிலுமான மனைவியும் இணைவதும் சிவ ஐக்ய தரிசனமே. இதை கருத்தில் கொண்டால் விடை தெரியாத கேள்வி என்று ஒன்று இருக்க முடியுமா? கணவன் மனைவி இடையே குழப்பம் தோன்ற முடியுமா?

எட்டு என்ற எண்ணின் சனீஸ்வர சக்திகளை மிதமாக்கும் வண்ணம் நம் சற்குருவால் அளிக்கப்படும் மற்றோர் வழிபாட்டு முறையே திருத்தலங்களில் தீபங்கள் ஏற்றி வழிபடும்போதெல்லாம் மூன்று முறை 2024 என்பதை எழுதி வழிபடும் முறையாகும். இதனால் இந்த மூன்று ஆண்டுகளின் கூட்டுத் தொகை, 2024+2024+2024 = 24 = 6 என்பதாக, சுக்ர சுபஎண்ணாக விளையும் என்பதே நம் சற்குருவின் மேதா விலாசம்.

கேள்விகள் என்றாலே அதில் பதிலும் அடங்கியிருக்கும் என்ற நம் சற்குருவின் உபதேசத்தை அளித்திருந்தோம். அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் அடியாரின் பெயரும் அதில் அடங்கியிருக்கும் என்ற உண்மையை இங்கு நீங்கள் அறிந்து இன்புறலாம். திருஅண்ணாமலையை கிரிவலமாக வரும் கர்ணனை என்ன சொல்லி பகவான் கிருஷ்ணர் அழைத்துத் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்வார் என்ற ஆத்ம விசார கேள்விக்கு சூரிய குலத் தென்றலான ஒரு அடியார் சரியான பதிலைக் கூறி உள்ளார். கர்ணனும் சூரிய பகவானின் உத்தம புத்திரன்தானே.

பவதி பிட்சாந்தேஹி என்று கூவி யாசிப்பது பண்டை காலத்தில் சன்னியாசிகள் கையாண்ட முறை என்பதை நாம் ஆதிசங்கரரின் வரலாற்றின் மூலம் அறிகிறோம். இந்த முறையை முதன் முதலில் பூலோகத்தில் தர்மம் யாசிப்பதற்காக கையாண்டவரே பூர்ண அவதாரமான கிருஷ்ண பகவான். இவ்வாறு பவதி பிட்சாந்தேஹி என்ற தீனக் குரலைக் கேட்டதும் சட்டென்று யாரோ பிச்சைக்காக யாசிக்கும் குரல் கேட்கிறதே என்று தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தான் அந்த கொடை வள்ளல். எதிரில் நின்றவரோ சாட்சாத் கிருஷ்ண பகவான்!

மகாபாரத யுத்தத்தின்போது தன்னுடைய கவச குண்டலங்கள் அனைத்தையும் தானமாகப் பெற்ற அதே பழுத்த கிழ உருவம் தன் கண் முன்னே இரு கைகளை ஏந்தி நிற்பதைக் கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான் கர்ணன். “சுவாமி, இன்னும் தங்களுக்கு ஏதாவது வேண்டுமா? அன்று யுத்த பூமியில் எதுவும் கொடுக்க இயலாது வெறும் கையுடன் நின்றதைப் போல்தான் இன்றும் இந்த திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நிற்கின்றேன். இருந்தாலும் இந்த நிலையிலும் அண்ணாமலை ஈசன் என்னைக் கைவிட மாட்டான். நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்...” என்ற அதே மாவீரத் தோரணையில் பகவானிடம் கேட்டான்.

“கர்ண மகா பிரபுவே, அன்று தாங்கள் அளித்த தானத்தில் எந்த வித குறைபாடும் இல்லை, ஆனால், நான்தான் தானம் செய்கிறேன் என்ற மமதை அதில் இருந்ததால், அந்த ஆணவத்தையும் தங்களிடம் யாசகமாகப் பெற்று போகத்தான் வந்துள்ளேன்...”, என்றான் மாயக் கண்ணன். திடுக்கிட்டான் கர்ணன்.

“தானம் செய்கிறேன், நான் தானம் செய்கிறேன்...” என்று அல்லவா இத்தனை நாளும் ஆணவத்துடன் உலவி வந்துள்ளேன். இந்த ஆணவ எண்ணத்தையும் தானமாகப் பெற்றுக் கொள்ள ஒருவரை அனுப்புகிறான் அந்த அண்ணாமலையான் என்றால் அவன் கருணைக்கு ஈடேது...”, என்று நினைத்து அகம் மிக மகிழ்ந்து ‘நான் தானம் செய்தேன், தானம் செய்கின்றேன்...”, என்ற எண்ணத்தையும் பூர்ண அவதாரமான பகவான் கிருஷ்ணனுக்கு தானம் அளித்தான், தற்போது பூர்ணமாகப் பொலிந்த கர்ணன்.

அப்போது கர்ணன் தொண்டு கிழத்தை அங்கு காணவில்லை, பூர்ணமாகப் பொலிந்த கிருஷ்ண பகவானின் திருஉருவத்தைத்தான் அங்கு தரிசித்தான் என்பதைக் கூறவும் வேண்டுமோ? இத்தகைய பூரண அவதாரமான கிருஷ்ண பகவானைப் பற்றி அளிக்கும் நம் சற்குருவின் வர்ணனையோ, “பாவம்யா... கிருஷ்ணன்...!”

அது ஏனோ ?!

இந்த கேள்விக்கு ஒரு சிறிய அடியார் ஒரு பெரிய விடையை அளித்து விட்டார். “பாவம்யா கிருஷ்ணன், அவன் பூர்ண அவதாரமாய் இருந்து பிரபஞ்சம் அனைத்திற்கும் நன்மையையே செய்து வந்திருந்தாலும் அவனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்பதை விட மானிடர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.” உண்மையில் இது நம் சற்குருவைப் பற்றிய வர்ணனையே ஆகும். யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற நிலை வந்த போதுதான் தன் இன்னுயிரையும் மக்கள் நலனுக்காக அளித்து இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

ஸ்ரீஜனனீ துர்கை

ஸ்ரீபோஜீஸ்வரர் சிவாலயத்தில் அருள்புரியும் துர்கை அம்மனே ஸ்ரீஜனனீ துர்கை ஆவாள். ஸ்ரீஜனனீ துர்கை இங்கு எழுந்தருளியதன் பின்னணியில் அமையும் விளக்கங்கள் மிகவும் சுவையானவையே. பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்ம தேவரை ஆறுமுகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டு தானே பிரம்ம தேவரின் படைப்புத் தொழிலை மேற்கொண்ட வரலாற்றை நீங்கள் அறிவீர்கள்.

முருகப் பெருமான் இவ்வாறு படைப்புத் தொழிலை மேற்கொண்டு பெண் இனத்தைப் படைக்கும்போது சுவாமி பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வந்தது. எப்படி ஆதிசங்கரர் அனைத்தும் உணர்ந்த எம்பெருமானின் பிரதிபலிப்பாகவே பூமியில் தோன்றினாலும் மண்டனமிச்ரரின் மனைவி, கணவன் மனைவி மட்டுமே உணர்ந்த தாம்பத்ய இரகசியங்கள் பற்றிய விளக்கங்களை ஆதிசங்கரரிடம் கேட்டபோது அவர் தடுமாறியது போல் நடித்து இந்த கேள்விகளுக்கு விடையளிக்க சற்று அவகாசம் அளிக்குமாறு கேட்டார்.

ஸ்ரீதுர்கை அம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

பின்னர், மரணம் அடையப் போகும் ஒரு மன்னனின் உடலில் புகுந்து தாம்பத்ய இரகசியங்களைக் ‘கற்று அறிந்து‘ மண்டன மிச்ரரின் மனைவியை வென்றார் என்பதை நாம் அறிவோம். அதுபோல் பெண்கள் சம்பந்தமான பல விஷயங்களையும் அறிவதற்காக தன்னுடைய அன்னையான பராசக்தியை வேண்டியபோது அன்னை, ஜகன்மாதாவின் அம்சமான ஜனனீ துர்கையை தோற்றுவித்து ஆறுமுக சுவாமியின் சிருஷ்டி நல்ல முறையில் நிறைவேற உதவி புரிந்தாள். சுப்ரமண்ய சுவாமி சிவபெருமானின் ‘தூய ஆண் தத்துவம்’ என்ற அடிப்படையில் தோன்றிய தெய்வம் என்பதால் அவரால் பெண் அம்சங்களைப் பற்றிய அறிவை இயற்கையாக பெற முடியவில்லை என்பதும் ஒரு சிருஷ்டி தத்துவமாகும்.

இத்தகைய சிருஷ்டி தத்துவ விளக்கங்களை புகட்டவல்ல தேவியாகவும் ஜனனீ துர்கை தோன்றியதால் தேவி சிருஷ்டி துர்கை என்றும் போற்றப்படுகிறாள். நான்கு கரங்களுடைய ‘சிருஷ்டி முருகப் பெருமானுக்கு’ சிருஷ்டியில் உதவி புரிவதற்காக தோன்றிய ஜனனீ துர்கை ‘சிருஷ்டி’ என்ற நான்கு அட்சரங்களுடன் அழைக்கப்படுவது எத்தகைய பொருத்தம்.

தன்னுடைய இளைய குமரன் இவ்வாறு சிருஷ்டி தத்துவத்தில் உதவ தன் வழிகாட்டுதலை நாடுவான் என்பதை பல யுகங்களுக்கு முன்பே உணர்ந்து அதற்கான தவப் பலனைப் பெறுவதற்காக அன்னை பராசக்தி இவ்வாறு சிருஷ்டி துர்கையாகத் தோன்றி தவம் புரிந்த தலமே இன்றைய திருஅண்ணாமலை துர்கை அம்மன் ஆலயம் அகும்.

இந்த ஆலயத்தின் அருகிலுள்ள ஸ்ரீஅங்கப்பிரதட்சிண அண்ணாமலை சுவாமிகளின் ஜீவாலயம் அமைந்துள்ள அறுபத்து மூவர் மடம் என்ற மடத்தில் நம் சற்குரு பல வருடங்கள் அன்னதான கைங்கர்யங்கள் இயற்றியதைப் பல அடியார்களும் அறிவர். இந்த துர்கை அம்மன் கோயிலில் ஒரு பிரம்மாண்டமான கிணறு இருந்தது. இந்த கிணற்றில் இருந்து நீர் இறைத்துத்தான் அக்காலத்தில் ஸ்ரீதுர்கை அம்மனுக்கும் மற்ற பரிவார தேவதை, தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்த ஆலயத்திற்கும் அருகிலுள்ள அறுபத்து மூவர் மடத்திற்கும் இடையே ஒரு சிறு துவாரம் இருந்தது.

ஸ்ரீஉத்யோக நந்தீஸ்வரர்
ஸ்ரீதுர்கை அம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

துர்கையம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீரை அடியார்கள் இறைத்து அந்த துவாரத்தின் வழியே உள்ள ஒரு குழாய் வழியாகத்தான் அன்னதான திருப்பணிக்காக அளித்தனர். அன்னதான கைங்கர்யத்திற்காக பத்து நாட்கள் இந்த கிணற்று நீரை இறைத்து, இறைத்து அந்தக் கிணறே வற்றி விட்டது என்றால் எவ்வளவு நீரை அன்னதான திருப்பணிக்காக நம் சற்குரு பயன்படுத்தி இருப்பார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இந்த கிணற்று நீரை இறைத்த அடியார்களுக்குத்தான் சிற்றுண்டி, டீ காபி, உணவு என்ற அனைத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான செய்தி.

இவ்வாறு சிருஷ்டிக்கு உதவிய அடியார்களுக்கு நம் சற்குரு முன்னுரிமை அளிப்பது என்பது ஒரு ஆச்சரியமான விஷயமா என்ன?

கலியுக நியதியாக இன்று அந்த பிரம்மாண்டமான கிணறும் இல்லை, இடையே அமைந்த ‘சிருஷ்டி துவாரமும்’ இல்லை. ஆனால் இவை அனைத்திற்கும் சாட்சியாக நின்ற உத்யோக நந்தீஸ்வரர் இன்றும் இத்திருத்தலத்தில் அருள்கின்றார். பொதுவாக, நந்தி மூர்த்திகள் மூல மூர்த்தியைப் பார்த்தபடிதான் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், சுவாமிக்கு எதிர்ப்புறம் பார்த்தவாறு எழுந்தருளி இருக்கும் நந்தி மூர்த்திகளை நாம் உத்யோக நந்தி மூர்த்தி என்று அழைக்கிறோம். அதாவது சுவாமியின் வழிகாட்டுதலை, ஆதரவை நாடும் அடியார்களுக்கு உதவும் முகமாக தயார் நிலையில், இறைவன் தம் மீது எழுந்தருள்வதற்கு ஏதுவாக அருளும் நந்தி மூர்த்திகளே உத்யோக நந்தி மூர்த்திகள்.

இந்திய ராணுவத்தில் பணி புரியும் ஓட்டுநர்கள் இவ்வாறு தங்கள் அதிகாரிகளை கால தாமதமின்றி சுமந்து செல்வதற்கு வசதியாக இவ்வாறு ‘தயார் நிலையில்’ தங்கள் வாகனங்களை இன்றும் இவ்வாறு நிறுத்துவதை நீங்கள் அறிவீர்கள்.

இதை கருத்தில் கொண்டே தம் அடியார்களின் தீனக் குரல் கேட்ட அடுத்த நொடி அவர்களைச் சென்றடையும் வண்ணம் நம் சற்குருவிற்கு உதவும் வண்ணம் நம் ஆஸ்ரமத்தில் உள்ள நந்தி மூர்த்தியும் இவ்வாறு உத்யோக நந்தியாகவே எழுந்தருளி இருப்பதையும் நீங்கள் அறிவீர்களே.

எட்டிப் பிடிப்போம் எட்டை

திருஅண்ணாமலையில் துர்கை அம்மன் கோயில் பிரகாரத்தில் எழுந்தருளி உள்ள உத்யோக நந்தி மூர்த்தி மாயக் குழிவடு தரிசனம் அல்லது காமக் குழி வடு தரிசனம் அல்லது ஜனனீ தரிசனம் என்றெல்லாம் அழைக்கப்படும் தரிசனங்களை நோக்கி எழுந்தருளி உள்ளார். அதுபோல் நம் ஆஸ்ரமத்தில் உள்ள உத்யோக நந்தி மூர்த்தியும் சிவ சக்தி ஐக்ய தரிசனத்தின் எதிரே இவ்வாறுதான் எழுந்தருளி உள்ளார் என்பதே நம் சற்குரு உண்ர்த்தும் இரகசியம். இந்த ஒற்றுமையை நாம் உணர்ந்து கொள்ள வழிவகுப்பதும் எட்டு வடிவத்தில் கிரிவலப் பாதைகளில், திருத்தலக் கோயில் பிரகாரங்களில் அல்லது அவரவர் இல்லத்தில் இயற்றும் பிரதட்சிணம் ஆகும்.

ஸ்ரீஅங்கப்பிரதட்சிண
அண்ணாமலை சுவாமிகள் ஜீவாலயம்
திருஅண்ணாமலை

மேலே வலது இயக்கமாகவும் (clockwise), கீழே இடது இயக்கமாகவும் (anti-clockwise) அமைந்த இரு பூஜ்யங்கள் இணைந்த வடிவம்தானே எட்டு என்பது?! இம்முறையில்தான் சிறுகுழந்தைகளுக்கு நாம் எட்டை வடிவமைக்கும் முறையையும் பயிற்றுவிக்கிறோம். இரு பூஜ்யங்கள், வலது இடது இயக்கங்கள், ஆண் பெண் சக்திகள் இணைந்ததுதான் சிவ சக்தி ஐக்ய தரிசனம், மாயக் குழிவடு தரிசனம் என்பதை இப்போது நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம் அல்லவா? ஆனால், இந்த எளிய விளக்கத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது அவ்வளவு சாமான்யமல்ல, இதற்காக நம் சற்குருவால் உபதேசிக்கப்பட்டதே எட்டு பிரதட்சிணம். ஆரம்பத்தில் பூஜ்ய வடிவ இணைப்பாகத் தோன்றும் இரு பூஜ்யங்களும் இறுதியில் ஒரே பூஜ்ய தோற்றமாக, இறைவனின் வடிவமாகத் தோன்றும், தம்பதிகள் இருவரும் இணைந்து ஒரே காட்சியாகக் காணும் உயர்ந்த நிலையைப் பெறுவர் என்பதே எட்டின் இரகசியம்.

இவ்வாறு எட்டு பிரதட்சிணத்தைப் பயிலும் அடியார்கள் ஆரம்பத்தில் வலது இடது இயக்கங்களை கைக்கொள்வதுபோல் தோன்றினாலும், எப்போது அவர்கள் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதுபோல் உணர்கிறார்களோ அன்றுதான் அவர்களது ‘எட்டு தியானம்’ நிறைவடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம். அப்போதுதான் பூஜ்யம் என்பது நேர்நோடு என்ற நம் கோணவாண்டியின் கோவண கீதையை உணர்ந்தவர்கள் ஆவோம். இந்த பூஜ்ய வடிவத்தைத்தான் தன் இடையிலும், தலையில் ‘சஹாரா’ என்ற வடிவாகவும் தரித்து உலகை, பிரபஞ்சத்தை வலம் வந்து கொண்டிருந்தார் கோவணாண்டி என்பதே நம் சற்குரு கூறும் இனிய கோவண கீதை விளக்கம்.

நம் சற்குரு ஆற்றிய அனைத்து அன்னதானப் பணிகளும் செவ்வனே நிறைவேற வழிகாட்டியதே இந்த ‘எட்டு அனுகிரகமாகும்’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். கோவணத்தை இரண்டாக மடித்து இடையில் அணிந்து கொள்ளும்போது அது இரண்டாகத் தோன்றுமா அல்லது ஒன்றாக இணைந்த பூஜ்யமாகத் தோன்றுமா?!

ஸ்ரீஜனனீ துர்கை இவ்வாறு சிருஷ்டியில் முருகப் பெருமானுக்கு உதவுவதற்காக திருஅண்ணாமலையை வலம் வந்தபோது எட்டாம் நாள் விளங்கிய தீபங்களை தரிசனம் செய்து அந்தப் பலன்களை எல்லாம் பிரபஞ்ச பெண் குலம் பிரத்யேகமாக பெற வேண்டிய ஜனன சக்திகளாக அளித்தாள். அந்த சிருஷ்டி தரிசனங்களே யாழமராந்தக தீப தரிசனங்களாக இன்றும் அழைக்கப்படுகின்றன.
1. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் கொன்றை மலர்களின் வழியாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருகில் பெறும் ஜோதி தரிசனம்
2. ஸ்ரீரமணாஸ்ரமத்தில் பெறும் ஏகமுக ஜோதி தரிசனம்
3. ஸ்ரீஉண்ணாமுலையம்மன் தாயாருக்கு தன் உடலின் ஒரு பகுதியை ஈந்து சுவாமி அருளிய உண்ணாமுலையம்மன் ஜோதி தரிசனம்
4. குழஅழகு தரிசனம் என்பதாக அடிஅண்ணாமலை அழகம்மை தீர்த்தத்திலிருந்து பெறும் ஜோதி தரிசனம்
5. அபய மண்டபம் எதிரே உள்ள பித்ருத் தீர்த்தத்திலிருந்து பெறும் ஜோதி தரிசனம்
6. சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் பெறும் ஜோதி தரிசனம்
7. மகாமக ஜோதி தரிசனம் (ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் அருகில் மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியிலிருந்து பெறும் தரிசனம்)
8. அடிஅண்ணாமலையில் இலுப்பை மரத்தின் ஊடே பெறும் நிரந்தர ஜோதி தரிசனம்
இந்த எட்டு தரிசனங்களை இங்கு நீங்கள் தரிசித்து பலன் பெறலாம் என்பதே யாழமராந்தகர் நம் அடியார்கள் நலம் வேண்டி அருளும் தரிசனப் பலன்களில் ஒன்றாகும்.

>
யாழமராந்தக தீப தரிசனம் 1 ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருகே கொன்றைமரம் வழியாக கிட்டும் தரிசனம். கொன்றை மலர்கள் குரு பிரசாதத்தை லட்சுமி கடாட்ச சக்திகளாகவும் அருளவல்லவை. சிறு வயதிலேயே இத்தகைய லட்சுமி கடாட்ச சக்திகள் கைவரப் பெற்றவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 2 ஸ்ரீரமணாஸ்ரமத்தில் சுவாமிகள் இந்த ஏகமுக லிங்க தரிசனத்தை பார்த்தவாறேதான் தன் பக்தர்களுக்கு நீள சோபாவில் அமர்ந்து தரிசனம் அளித்து வந்தார். அமர தீப தத்துவத்தை உடலால் மனதால் அறிந்து கொள்ள உதவும் அபூர்வ தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 3 ஈசன் தன் உடலில் சரி பாதியை சக்திக்கு ஈந்து தானும் சக்தியும் சரி நிகரே என்று உலகிற்கு உணர்த்திய தீப தரிசனம். உடற்கூறு பிரச்னைகளால் தம்பதிகள் இடையே அமையும் வேறுபாடுகளைக் களைய உதவும் தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 4
உலக அழகிகள் அனைவரும் ஒன்று கூடி தேவியை வணங்கும் குழஅழகு அடிஅண்ணாலை தரிசனம். அழகு என்றால் என்ன என்பதை தத்துவ ரீதியாக அனைவரும் உணர்ந்து கொள்ள உதவும் தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 5
அபய மண்டபம் எதிரே கிட்டும் பித்ரு முக்தி அண்ணாலை தரிசனம். அடியார்களின் தர்ப்பண வழிபாடுகள் தங்கள் பித்ருக்களுக்கும் முக்தி நிலை அளிக்கக் கூடிய ஒரே தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 6
சிவனும் சக்தியும் ஒன்றாய் இணைந்து அருளும் திருஅண்ணாமலை தரிசனம். மனித விருப்பங்கள் அனைத்தும் தார்மீகமான முறையில் நிறைவேற உதவும் தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 7
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் அருகிலிருந்து கிட்டும் மகாமக தரிசனம்.
 
யாழமராந்தக தீப தரிசனம் 8
குரு நம்பிக்கை மேலும் மேலும் பெருகி வேரூன்ற அடிஅண்ணாமலை அருகே இலுப்பை மர இலைகள் வழியே கிட்டும் அண்ணாமலை தரிசனம்.
 

பெண்களுக்கு ஏற்படும் பிறவி உறுப்பு பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய்த் துன்பங்கள் போன்ற துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறவும், இத்தகைய நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களும், சிறப்பியல் நிபுணர்களும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து மேற்கண்ட அமராந்தக தரிசனங்களை தரிசித்தல் நலம்.

கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்... என்ற நம் கோவணாண்டியின் அமுத மொழியை பிரகாசிப்பதாக அமைந்த ஒரு நிகழ்ச்சி...
ஒவ்வொரு திருக்கார்த்திகை தீப வைபவத்தை ஒட்டியும் நம் ஆஸ்ரமத்தில் விளக்கு பூஜை நடைபெறுவது அடியார்கள் அறிந்ததே. இவ்வாறு ஒரு விளக்கு பூஜையின் நிறைவில் அண்ணன் பிள்ளையாரின் பெயரைக் கொண்ட ஒரு அடியார் விளக்கு பூஜையில் வைத்து பூஜித்த ஒரு பெரிய வெள்ளி குத்து விளக்கை தம்பி முருகப் பெருமானின் பெயரைக் கொண்ட ஒரு அடியாருக்குத் தானமாக வழங்கி விடுமாறு நம் சற்குரு கூற அடுத்த நொடியே அந்த அடியார் விளக்கு பூஜையின் அபூர்வ குரு பிரசாதமான அந்த வெள்ளிக் குத்து விளக்கை தானமாக அளித்து விட்டார்.
என்னே நம் சற்குருவின் மேதா விலாசம்...
என்னே நம் அடியார்களின் குரு பக்தி...

திருமணம் ஆகாத பெண்கள், தனித்து கிரிவலம் வரும் பெண்கள் போன்றோர் ஒவ்வொரு தரிசனத்திலும் எட்டு முறை வணங்குவதும், தம்பதிகளாய் கிரிவலம் வருவோர் ஒவ்வொரு தரிசனத்தையும் ஒன்பது முறை நமஸ்கரித்து வணங்குதலும் சிறப்பாகும். செவ்வாய் கிழமைகளில் இத்தகைய கிரிவலங்களை ஆரம்பித்து தொடர்ந்து நிறைவேற்றுதல் சிறப்பு. இந்த தரிசனங்களில் சிறிது “பொடி” உள்ளதால், பூரண பலன் பெற கவனத்துடன் செயல்படவும்.

தற்போது திருக்கார்த்திகை தீபம் குளிர்ந்து விட்டதால் தீப தரிசனத்தை நாம் பெற முடியாது என்பது உண்மையே என்றாலும் இந்த தரிசனங்கள் அமையும் இடங்களில் வணங்கி எழுதலால் பலன்கள் முழுமையாகவே கிட்டும் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் தரிசனப் பலன்.

அருணாசல தீப தரிசனத்தை நாம் தற்போது பெற முடியாத குறையை நிவர்த்தி செய்வதாக அருள்வதே நம் சற்குரு அருளும் அமர தீப கிரிவல முறையாகும். இம்முறையில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் தீபத்தை ஏற்றி வைத்து அவ்வப்போது அதற்கு எண்ணெய் ஊற்றி கிரிவலம் முழுவதும் இந்த தீபத்தை ஏந்தி மெதுவாக வலம் வருதல் ஆகும். ஒரே கிரிவலத்தில் திருஅண்ணாமலையை வலம் வர முடியாதவர்கள் கிரிவலத்தை இரண்டு, மூன்று நாட்களோ அல்லது அதற்கு மேலுமோ நீட்டித்துக் கொள்ளலாம். பித்தளையிலான ஹரிக்கேன் விளக்குகளில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மூலிதை தைலங்கள் இவற்றைக் கலந்தும் இத்தகைய வழிபாடுகளுக்கு பயன்படுத்தி நற்பலன் பெறலாம்.

ஒரு முறை நம் சற்குரு அனைவரும் பயன்படுத்தும் விதமாக அவரவர் நாமத்தை, சுயநாமமாக ஜபிக்கும் முறையை உபதேசித்தார். பெரும்பாலும் இத்தகைய நாமங்கள் அவரவருடைய அம்மா கூப்பிடும் விதத்தில் இருப்பதே நன்று என்பதே குருவின் வழிகாட்டுதல். அப்போது எட்டெழுத்தில் அமைந்த ஒரு அடியாருக்கு குருவின் சக்தியைக் கொண்ட “திருநா” என்ற மூன்று எழுத்து மந்திரத்தை சுயநாமமாக ஜபிக்கும்படி அந்த அடியாருக்கு அருளினார்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது அவர்கள் 4, 7, 8 என்ற ராகு, கேது, சனீஸ்வரரைக் குறிக்கும் எண்களில் பிறந்திருந்தால் 3, 5, 6 என்றவாறு சுப எண்களைக் கூடியதாகவே குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முறையே நம் சற்குருவால் அங்கீகரிக்கப்பட்டது. மேற்கண்ட சுயநாம பலன்கள் யாருக்கோ, எப்போதோ நம் சற்குருவால் அளிக்கப்பட்டது என்று கிடையாது. இன்றும் நம் சற்குருவின் நிழலில் நடக்க விரும்பும் அடியார்களுக்காக அளிக்கப்பட்டதே இவ்வாறு அமர ஜோதியை கையில் ஏந்தி சனீஸ்வர ஆண்டில் திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்குவதாகும்.

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆரம்பித்து மற்ற கிரிவலப் பாதைகளிலும், திருத்தல பிரகாரங்களிலும் இத்தகைய அமர தீபங்களை ஏந்தி இந்த 2024 ஆண்டு முழுவதும் வலம் வந்து பயன்பெறலாம். இதனால் திருஅண்ணாமலையில் அபூர்வமாக ஒளிரும் அமர தீப சக்திகளை உலகெங்கும் நிரவும் திருப்பணியில் நாம் யாழமராந்தகருடன் இணையும் திருப்பேற்றையும் பெற்றவர்கள் ஆவோம். ஆனால், 12 வருடங்களுக்கு ஒரு முறை கோயில் கும்பாபிஷேகம் நிறைவேற்றுவது போல் இந்த தீபங்களில் நிறையும் அமர சக்திகளை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து புனருத்தாரணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவசியமே.

இந்த வருடம் தோன்ற இருக்கும் செம்மேனி சூடு என்ற அதீத உஷ்ணத்தால் விளையும் வியாதிகளைத் தீர்க்கும் மார்கமாகவும் இது அடியார்கள் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு இரட்சையாக அமையும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வளரும் யாழிசை...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam