அகந்தையை அழிப்பதே சிவபுரம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வாலிகண்ட சிவபுர மகிமை

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் என்னும் பழமையான ஊரில் அமைந்துள்ள சிவாலயம் சொற் பொருள் கடந்த பெருமை உடையது. இறைவன் ஸ்ரீவாலீஸ்வரர், இறைவி ஸ்ரீவாலாம்பிகை. வாலி கண்ட புரம் என்றால் வாலி பார்த்த, வாலி வழிபட்ட சிவாலயம் என்று மேலோட்டமாக பொருள் கொண்டாலும் வாலீஸ்வரன் என்றால் உண்மையான அறிவு உடையவர்களால் வணங்கப்படும் தலைவன், வாலாம்பிகை என்றால் மெய்யறிவு உடையவர்களுக்கு தலைவியாய் இருப்பவள் என்று பொருள். உண்மையே ஈசன் என்ற உண்மையை உணர்விப்பதே வாலிகண்டபுரம் ஆகும். இந்த உண்மையை உலகத்தவர்க்கு உணர்த்தியவர்களுள் முதன்மை வாய்ந்தவனே அறிவு அண்ணல் தண்டாயுதபாணி தெய்வம் ஆவார். வேறு எங்கும் காண இயலா வகையில் குபேர திக்கான வடக்கு திக்கை நோக்கி கையில் தண்டத்துடன் ஸ்ரீபாலதண்டாயுதபாணி எழுந்தருளி உள்ளார். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இல்லை என்ற பாணியில் ஏகாந்தமாக சேவை சாதிக்கும் இத்தல முருகப் பெருமானை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும் என்பதே உண்மை.

ஸ்ரீபாலதண்டாயுதபாணி வாலிகண்டபுரம்

முருகன் தனக்கு ஞானப் பழம் கிட்டவில்லை என்று கோபித்துக் கொண்டு பழநி மலையில் அமர்ந்த போது பார்வதி தேவியானவர் எம்பெருமானின் திருவிளையாடல்களை எடுத்தியம்பி முருகப் பெருமான் கொண்ட கோபத்தைத் தவிர்க்கும் உபாயம் அருளினார் அல்லவா ? முருகப் பெருமான் கோபம் தணிந்து தன்னுடைய தவற்றை உணர்ந்து எம்பெருமானை வணங்கிய தலமே வாலிகண்டபுரம் ஆகும். கோபம் என்ற தீயை அணைப்பது தண்ணீர்தானே ? அதனால் தன்னுடைய கோலை ஊன்றி இத்தலத்தில் சரவண தீர்த்தம் என்ற அற்புத தீர்த்தத்தை உருவாக்கினார். மூர்த்தி, தீர்த்தம், தலம் என்பதை முறையாக தரிசிக்க சற்குரு வாய்க்கும் பராபரமே என்று அருளினார் தாயுமானவர். அந்த சற்குரு முருகப் பெருமானே தன்னுடைய தண்டத்தால் உருவாக்கிய தீர்த்தம் என்றால் அது எத்தகைய மகிமை வாய்ந்ததாக இருக்கும். இந்த தீர்த்தத்தில் முழுகி எழுவதால் கிட்டும் பணிவு வேறு எந்த தீர்த்தத்திலும் கிட்ட வாய்ப்பில்லை. இந்த சரவண தீர்த்தத்தால் ஆணவமே அழியும் என்றால் மற்ற வியாதிகளைப் பற்றி கூற வேண்டுமா ? ஆனால், சக்தி வாய்ந்த இந்த சரவண தீர்த்தமும் இன்று வற்றிக் கிடக்கிறது என்றால் கலியுகத்தின் தீவிரத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் மூதாதையர்களுக்கு இத்தீர்த்தக் கரையில் தர்ப்பணம் அளித்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளை இயற்றி, அதன் பின்னர் பக்தர்களுக்கும் அடியாரகளுக்கும் கறும்புச் சாறு, நீர்மோர், பழரசங்கள் போன்ற தானங்களை அளித்தல் சிறப்பு. தண்டாயுதபாணி தெய்வம் நீர் வற்றியதுபோல் தோன்றும் இத்தல சரவணப் பொய்கையிலிருந்து தினமும் தீர்த்தம் எடுத்து தன் அன்னைக்கும், சகஸ்ரலிங்கம், தட்சிணா மூர்த்தி, நடராஜ பெருமான், மூலச் சிவலிங்க சொரூபத்திற்கும் அபிஷேகம் நிறைவேற்றுகிறார் என்றால் தண்டாயுதபாணி தெய்வத்திற்குக் கிடைக்கும் தீர்த்த தரிசனமே நமக்குக் கிட்டவில்லை என்றால் நம்முடைய இறை நம்பிக்கை எந்த அளவிற்கு பரிணமித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கு வாலிகண்டபுர சரவண தீர்த்தமும் ஒரு அளவு கோலாகும் என்பதே உண்மை. நமக்கு தீர்த்த தரிசனம் கிட்டவில்லை ஆயினும் சரவணபவ மூர்த்தி நிறைவேற்றும் அபிஷேகத்தை அளவிலா உவப்புடன் ஏற்கும் இந்த இறை மூர்த்திகளின் தரிசனமாவது நமக்குக் கிடைப்பதற்கு நமது மூதாயைர்கள் எத்தகைய கருணை மழையைப் பொழிந்துள்ளார்கள் என்பதை உணர வைப்பதும் வாலிகண்டபுர மகிமையாகும். முற்காலத்தில் முருகப் பெருமானை நினைவு கூர்ந்து சரவணப் பொய்கை கரையில் தர்ப்பணாதி வழிபாடுகளை நிறைவேற்றிய பின்னரே உள்ளே சென்று இறை மூர்த்திகளை வழிபடும் மாண்பு நிலவியது என்பதை இந்த தீர்த்தத்தின் கட்டமைப்பைப் பார்த்தாலே நாம் இன்று புரிந்து கொள்ளலாம். வரும் விளம்பி வருட சிவராத்திரி தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றார் வாலிகண்டபுர பாலதண்டாயுதபாணி. காரணம் முருகனுக்கு உரிய செவ்வாய் பகவான் ஆட்சி கொள்ளும் மேஷ, விருட்சிக ராசிகளில் செவ்வாய் பகவானும் குரு பகவானும் எழுந்தருள்வது என்பது அரிதிலும் அரிதான சிவராத்திரி மகாத்மியம் அல்லவா ? இந்த அற்புத யோக நேரத்துடன் சிவனுக்கு உரிய சிவயோகமும் இணைவது என்பது எத்தகைய இறை அனுகிரகத்தை வர்ஷிக்கக் கூடிய வழிபாடு ?

சரவணப் பொய்கை வாலிகண்டபுரம்

அபூர்வமான இந்த சிவ யோக சக்திகளை கிரகிக்கும் யோக வழிபாடாக சித்தர்கள் ஒரு அற்புத வழிபாட்டை அருளியுள்ளார்கள். அதாவது சிவராத்திரிக்கு முன் வரும் சிவ யோக தினங்களில் ஏதாவது ஒரு கோயில் தீர்த்தத்தை சுரக் குடுவையில், செப்புப் பாத்திரத்தில் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் எடுத்து வைத்து அதற்கு விபூதி குங்குமம் பூசி சத்சங்கமாக தேவாரப் பதிகங்களை ஓதி வழிபாடுகளை இயற்றி குறிப்பாக சிவ யோக நாள் முதலாக ஐந்திரம் அல்லது மாகேந்திரம் யோக தினம் வரையிலான ஏழு நாட்களுக்கும் வழிபாடுகளை இயற்றி அந்த தீர்த்தத்தை வாலிகண்டபுர ஈசனுக்கு சிவராத்திரி தினத்தில் அபிஷேகத்திற்கு அளித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். இந்த ஏழு யோக தினங்களுக்குள் நடுவே அமைந்த சுபம் என்ற யோக தினத்தில் முருகப் பெருமானுக்கு உகந்த தான தர்மங்களை இயற்றுதல் என்பது அற்புதமான குசா நற்பலன்களை நிரந்தரமாக அளிக்கக் கூடியது. குறிப்பாக தேன் கலந்த தினைமாவு உருண்டைகளை 12 வயது நிறைந்த பாலகன், பாலகிகளுக்கு அளித்தல் சிறப்பாகும். இதன் பலன்களோ எழுத்தில் வடிக்க இயலாது என்பதால் சித்தர்கள் இந்த வழிபாட்டின் மகிமை பற்றி மௌனம் சாதிக்கிறார்கள். 27 யோக நாட்களில் சிவம் முதலான ஏழு யோக தினங்களே வார சக்திகளுடன் திகழ்கின்றன என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத யோக யோக அமைப்பாகும். இவ்வருட சிவராத்திரி பூஜை என்பது குகனின் குரு பூஜையாக அமைவதால் ஒவ்வொரு காலத்திலும் முதல் பூஜை பஞ்சாமிர்த அபிஷேகமாக அமைவது சிறப்பாகும். பூஜை நிறைவில் மேற்கூறிய கங்கா தீர்த்த அபிஷேகத்தை நிறைவேற்றுதல் நலமே. எக்குளத்து தீர்த்தமானாலும் மேற்கூறிய பூஜையால் அதை எம்பெருமான் தன் சிரசில் பொழியும் கங்கை தீர்த்தமாகவே ஏற்கிறார் என்றால் இந்த பூஜையால் பக்தர்களுக்குக் கிடைக்கும் பலன்களை வர்ணிக்க முடியுமா ? கோயில் தீர்த்தங்களுக்கு பதிலாக கங்கை தீர்த்தத்திற்கு யோக பூஜைகள் நிறைவேற்றி அதை சிவராத்திரி அபிஷேகத்திற்கு அளிப்பதும் ஏற்புடையதே. வாலிகண்டபுரம் என்பது பக்தியை வளர்க்கும் பல்கலைக் கழகம் மட்டுமன்று பகுத்தறிவிற்கு தீனி போடும் பண்பாட்டுக் கழகமே என்று உணர்த்துவதே இங்கு தூணில் பொலியும் சாதுர்ய முக்கோணமாகும்.

சாதுர்ய முக்கோணம் வாலிகண்டபுரம்

சதுரத்திற்கு நான்கு பக்கங்கள், முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள். இரண்டும் இணைந்த ஏழு முக்கோணங்களுடன் திகழ்வதே வாலிகண்டபுர தூண் ஒன்றில் விளங்கும் அபூர்வ சித்திரமாகும். இரண்டு சதுரங்கள் இணைந்தால் அதில் எட்டு பக்கங்களும் இரண்டு முக்கோணங்கள் இணைந்தால் அதில் ஆறு முக்கோணங்களும் அமையும் என்பதால் இதில் அமைந்த ஏழு முக்கோணங்களுள் சதுரத்தையோ முக்கோணத்தையோ நாம் தனியாகப் பிரிக்க முடியாது என்பதே இந்த சாதுர்ய முக்கோணத்தின் சிறப்பம்சமாகும். ஆனால் சதுரத்திற்கு உரிய குரு பகவானும் முக்கோணத்திற்கு உரிய செவ்வாய் பகவானும் செவ்வாய் கிரகத்திற்குரிய மேஷ விருச்சிக ராசிகளில் எழுந்தருளி இருப்பதால் இத்தகைய சித்திரங்கள் இவ்வருட சிவராத்திரி அன்று சிறப்பான பூஜைக்குரிய சக்கரங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய குரு மங்கள சக்திகளுடன் துலங்கும் சக்கரத்தால் அமைந்த ஹோம குண்டத்தை ஒரு திருமணத்தில் நிர்மாணித்து அதில் ஸ்ரீலோபாமாதா ஸ்ரீஅகத்திய தம்பதிகளுக்கு ஆஹூதி அளித்து குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார் நம் குரு மங்கள கந்தர்வா வெங்கடராமன் அவர்கள் என்றால் அந்த ஹோம குண்டத்தின் அமைப்பு, அதில் வளர்த்த ஹோமம் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். மதுரையில் ஒரு அடியார் திருமண வைபவத்தில் நிகழ்த்திய ஹோம குண்டத்தின் அடித்தளம் இவ்வாறு சதுரமாகவும் அது நிறைவு கொள்ளும்போது முக்கோண வடிவத்திலும் திகழ்ந்ததே அந்த ஹோம குண்டத்தின் சிறப்பம்சமாகும். இந்த இரண்டு வடிவங்களையும் சேர்த்து அதில் ஏழு அடுக்குகள் அமைந்திருந்தன என்பது ஒரு சிறப்பு என்றால் வாலிகண்டபுரத்து கோபுரம் ஏழு அடுக்குகளுடன் ஒன்பது கலசங்களுடன் திகழ்வது அதற்கு இணையான சிறப்பு அல்லவா ? இந்த ஹோம குண்டம் நிர்மாணிக்கப்பட்ட இடமோ ஹஸ்தினாபுரம் என்ற ஏழு எழுத்து தலமாகும். இவ்வாறு தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் பிரமிப்பைக் கூட்டியவரே நம் சற்குரு. தங்களுடைய குடும்ப வாழ்வில் பல பிரச்னைகளுடன் திகழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உரிய வயதில் திருமண வாழ்வைக் கோருவோர், வாழ்வில் பல குழப்பங்களைச் சந்திப்பவர்கள் உரிய அனுமதியுடன் இந்த சாதுர்ய முக்கோணச் சக்கரத்தை கங்கை, காவிரி நீரால் அலம்பி தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து வழிபடுதல் சிறப்பு. சிவராத்திரி தினம் மட்டுமல்லாது வளர் பஞ்சமி, சப்தமி, வெள்ளிக் கிழமைகளிலும் இந்த சாதுர்ய முக்கோண சக்கரத்தை மேற்கூறிய முறையில் வழிபடுதல் சிறப்பாகும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அறிவு ஜீவிகளுமே இத்தகைய வழிபாட்டால் சிறப்படைவர் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சமாகும். சிறப்பாக கணக்கு, ஜியோமிதி போன்ற பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள இந்த வழிபாடு குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவி செய்யும். ஒன்று நீயல்லை, அன்றி ஒன்றில்லை என்பதே கடவுள் பற்றி சித்தர்களின் கோட்பாடு. அதாவது இதுதான் கடவுள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியாது, ஆனால் கடவுள் இல்லாமல் ஏதாவது இருக்கிறதா என்றால் அதைக் காட்டவும் முடியாது. இந்த கோட்பாட்டிற்கு கணக்கு ரீதியான விளக்கமே இங்கு நீங்கள் காணும் சித்திரமாகும். மனோலய கலைப் பயிற்சிக்கு (telepathic communication) இந்தப் படத்தை வரைந்து ஆத்ம விசாரம் செய்து வருவதால் நல்ல முன்னேற்றம் கிட்டும். மனோலயக் கலையில் உதவும் அனைத்து வடிவங்களுமே இந்த சித்திரத்தில் அடங்கியுள்ளன என்பதே உண்மையாகும்.

சகஸ்ரலிங்கம் வாலிகண்டபுரம்

பொதுவாக மூலவரை விட்டுத் தனியாக அருள் புரியும் ஸ்ரீசகஸ்ரலிங்க மூர்த்தியானவர் இங்கு மூலவருடன் வலம் வரும் விதத்தில் அமைந்திருப்பது மற்ற எந்த திருத்தலத்திலும் இல்லாத தனிச் சிறப்பாகும். சகஸ்ர லிங்கத்தை ஒரு முறை வலம் வந்தால் ஆயிரம் முறை வலம் வந்ததற்கு சமம் என்றால் இந்த மூர்த்தியை மூலவருடன் சேர்த்து வலம் வருவது என்றால் அது வாலிகண்டபுரத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியமாகும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய அற்புதம் என்னவென்றால் சகஸ்ரலிங்க மூர்த்தியை ஒரு முறை வழிபட்டால் ஆயிரம் முறை வழிபட்ட பலன்கள் பெருகும் என்பதால் பொதுவாக சகஸ்ர லிங்க மூர்த்திகளை வலம் வரும்போதோ, நாமாவளிகளைக் கூறும்போதோ மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பார்கள் நம் பெரியோர்கள். இங்கு பலன்கள் மட்டும் ஆயிரம் மடங்காகவோ அதற்கு மேற்பட்ட முறையிலும் பெருகுவது கிடையாது, நம்முடைய பிரார்த்தனையும் ஆயிரம் மடங்காக பெருகும் என்பதே உண்மை. ஒரு மனிதப் பிறவியைப் பெறுவதற்கே ஒரு கோடி ஆண்டுகள் தேவைப்படும் என்றால் சகஸ்ர லிங்க மூர்த்திகளிடம் தேவையில்லாத பிரார்த்தனைகளை முன் வைத்து விட்டால் அந்த வினையிலிருந்து விடுபட எத்தனை கோடி மனிதப் பிறவிகளும், எத்தனை கோடி ஆண்டுகள் வழிபாடும் தேவைப்படும் ? இதை உணர்ந்த நம் முன்னோர்களின் அறிவுத் திறனையே வாலிகண்டபுரத்தில் சகஸ்ரலிங்க மூர்த்தியை தரிசனம் செய்யும் நாம் கண்டு பிரமிக்கிறோம். இந்த சகஸ்ரலிங்க மூர்த்தியை வழிபடும் அதே வேளையில் மூலவரின் வாகனமாக அமைந்த நந்தி மூர்த்தியையும் தரிசனம் செய்யும் பாக்யத்தைப் பெறுகிறோம். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்றால் மருந்தைக் கையில் எடுத்தவுடன் குரங்கின் நினைவு தோன்றுவது மனித மனத்தின் இயல்பாக இருப்பதால் இந்தத் தவற்றைக் களையும் மூர்த்தியாகவும் மூலவரின் நந்தி மூர்த்தி எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். அதனால் சகஸ்ரலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தவுடன் எத்தகைய நல்ல பிரார்த்தனை, தீய வேண்டுதல்கள் மனதில் முளைத்தாலும் அதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அதை அப்படியே மூலவரின் நந்தி பகவானின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டால் போதுமே ? என்னே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். சிவ அபராதத்திற்குக் கூட மன்னிப்புப் பெற்று விடலாம். குரு அபராதத்திற்கு என்றுமே மன்னிப்புப் பெற முடியாது. அந்த குருவே மனம் கனிந்து மன்னிப்பு அளித்தால்தான் உண்டு. ஆனால், ஒருவர் செய்த தவறு என்னவென்று உணர்ந்தால்தானே அந்த தவற்றிற்கு மன்னிப்புக் கோர முடியும் ? இவ்வாறு ஒருவர் செய்த தவறு என்ன என்பதைத் தெளிவாக உணர்விக்கும் கருணை கடாட்ச மூர்த்தியே இந்த சகஸ்ர லிங்க மூர்த்தி ஆவார். பக்தர்கள் மன அமைதியுடன் இந்த சகஸ்ரலிங்க மூர்த்தியை மூலவருடன் சேர்த்து வலம் வந்து வணங்குதலால் தாங்கள் செய்த குரு அபராதத்தையும் நினைவுபடுத்துபவரே இந்த மூர்த்தியின் பெருங்கருணை ஆகும். இதுவும் குரு வருடத்தில் சற்குருமார்களே மனமுவந்து அளிக்கும் குரு பிரசாதம் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே குருவின் மகிமையை உணர்த்துவதும் குரு அபராதம் தீர வழிகாட்டுவதும் சகஸ்ரலிங்க வழிபாடு ஒன்றே என்பதை நினைவில் கொள்ளவும். அதனால்தான் ஏதோ ஒன்றிரண்டு தலங்களில் மட்டுமே சகஸ்ரலிங்க மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

ஸ்ரீஜேஷ்டாதேவி வாலிகண்டபுரம்

ஸ்ரீராமர் வாலிகண்டபுரம்

ஸ்ரீராமர் ஈரேழு வருடங்கள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் கைகேயின் வரம் என்பதைப் பலர் அறிந்திருந்தாலும் ஸ்ரீராமர் வனவாசத்தின்போது எந்த சுக போகங்களிலோ, கேளிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்பது இந்த வனவாசத்தின் முக்கிய நோக்கம் என்பதை அறிந்தவர் ஒரு சிலரே. ஸ்ரீராமருடன் சீதையும் செல்ல உத்தேசித்தபோது அரண்மனை வாசத்தில் பழக்கப்பட்ட ஒரு செல்வச் சீமாட்டி இவ்வாறு கடுமையான விரத நெறிகளுடன் வாழ முடியாதே என்ற தயக்கத்துடன்தான் சீதையை உடன் அழைத்துச் செல்ல யோசித்தார். எனவே வனவாசம் முடிந்த பின்னர் முதன் முதலில் சீதா தேவி ஜேஷ்டா தேவிக்குத்தான் தன் நன்றியைத் தெரிவித்தாளாம். வனவாசத்தின்போது சீதையம் ராமரும் சதாசர்வ காலமும் உடனிருந்தாலும் காமம் என்பதை அறியாதவர்களாய் ஒரு கணவனும் மனைவியும் இருக்க முடியும் என்பதை உலகத்தவர்க்கு நிரூபித்துக் காட்டியதே சீதாராம வனவாச வாழ்க்கை. இதை உணர்த்துவதே வாலிகண்டபுரம் திருத்தலத்தில் ஸ்ரீசீதாராம சமேதராய் இம்மூர்த்திகள் ஸ்ரீஜேஷ்டாதேவி முன்பு எழுந்தருளிய கோலமாகும். அனைவரும் நாம் எங்கே வனவாசம் செல்லப் போகிறோம், நமக்கு இத்தகைய தரிசனங்களால் என்ன பயன் என்று நினைக்கலாம். உண்மையில் சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, சாவித்ரி விரதம் என எந்த நோண்பை ஏற்றாலும் அரை வயிற்றுடன், முழுக்க முழுக்க இறை நினைவுடன் இருப்பது என்பது கடினமே. அதற்கு உதவி செய்வதே ஸ்ரீஜேஷ்டா தேவியின் தரிசனமும் ஸ்ரீசீதாராம தம்பதி தரிசனமும். இத்தகைய தரிசனங்களாலும் முறையான விரத வழிபாடுகளாலும் இல்லறப் பெண்கள் எந்தவிதமான பிரச்னைகளையும் மன அமைதியுடன் பொறுமையாக ஏற்கும் பண்பைப் பெறுவர். உறக்கத்தையும் சோம்பலையும் அளிப்பவள் ஜேஷ்டாதேவி என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. உண்மையில் உடல், மனதிற்குத் தேவையான ஓய்வை அளிப்பவளே ஜேஷ்டாதேவி ஆவாள். சிவராத்திரி போன்ற விரதங்களின் போது கண்ணயராது வழிபாடுகளை இயற்ற உதவி செய்வதும் ஜேஷ்டாதேவியின் அனுகிரகமே என்பதே உண்மை. ஸ்ரீலட்சுமி தேவியின் தரிசனத்தை வாலிகண்டபுரத்தில் பெற இயலாதவர்கள் ஸ்ரீஜேஷ்டாதேவியை வணங்குதலாலும், லட்சுமி தேவியின் பூலோக அவதாரமான சீதாதேவியை தோத்திரம் செய்வதாலும் லட்சுமி கடாட்ச சக்திகளை பூரணமாய்ப் பெறலாம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உண்மையில் லட்சுமி கடாட்ச சக்திகள் என்பவை எவ்விரதத்திற்கும் உறுதுணையாய் நிற்கும் ஏக பத்தினி விரதமே, காம நிவிருத்தியே. இதை உணர்த்துவதே ஜடாயு படலத்தில் ஜடாயு ராமபிரானைத் தழுவிக் கொண்ட வரலாறாகும். “அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி”, என்று இந்நிகழ்ச்சியை கம்பர் வர்ணிக்கிறார். ஜடாயுவிற்கு ராமபிரான் கண்ணனாகத் தோன்றியதன் உள்ளர்த்தம் இதுவே. மனைவியுடன் கூடி இருந்தாலும் காமம் அற்றவனாய் ராமன் திகழ்ந்ததால் அவர் அழகிய கண்களை உடையவராய்த் திகழ்ந்தார். இவ்வாறு எந்த விரதத்தை ஏற்பவர்களும் கண்ணனாய் திகழ்ந்தால்தான் விரதத்தின் முழுப் பயனும், உண்மையான பலனும் கிட்டும் என்பதே ஜடாயு தெரிவிக்கும் இரகசியமாகும். அல்லி என்றாலும் தாமரை என்றாலும் ஒன்றுதானே ? இங்கு அல்லித் தாமரை என்னும்போது பிற பெண்களை, தன் சொந்த மனைவியாயினும் விரதம் ஏற்றபோது தழுவாத ராமர் என்ற பொருளைக் குறிப்பது. அதுவே கண்களுக்கு அழகைக் கூட்டுவது.

ஸ்ரீநடராஜமூர்த்தி வாலிகண்டபுரம்

வாலிகண்டபுரத்தில் துர்கையின் தரிசனத்தைப் பெற முடியாது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் தேவையில்லாத சக்தியை இறைவனே பிரயோகம் செய்வது கிடையாது என்பதை நிரூபிப்பதாகவே வாலிகண்டபுரத்தில் துர்கை எழுந்தருளவில்லை என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். ஸ்ரீராமர் சாதாரண மனிதனாகத் தோன்றியதால் அவர் ராவணனை வெல்லும் அளவிற்கே தேவையான சக்திகளுடன் பூலோகத்தில் தோன்றினார். ஆனால் யுத்தகளத்தில் ஸ்ரீராமரை ஜெயிப்பதற்காக இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்தபோது ஸ்ரீராமரே அதை எதிர்பார்க்கவில்லை. அந்த யாகத்தை இந்திரஜித் செய்தால் ஸ்ரீராமர் கூட அவனை வெல்ல முடியாது, நேர்மையான வெற்றி கிட்டாது என்ற காரணத்தால் சுக்ரீவனுடைய படை வீரர்கள் இந்திரஜித்தின் நிகும்பலா யாகம் பாதியில் நின்று போகும்படியாக அதைக் கலைத்து விட்டார்கள். இத்தகைய செயலுக்கு உதாரணமாகத் திகழ்வதே வாலிகண்டபுரத்தில் துர்கையின் அவதாரம் தோன்றாததற்குமான காரணமுமாகும். ஸ்ரீபாலதண்டாயுதபாணியே வடக்கு முகம் பார்த்து எழுந்தருளி அசுர சக்திகளை மாய்ப்பதால் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி தங்களை அசுர சக்திகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே உண்மை. இங்கு ஒரு கேள்வி எழலாம். அவதார புருஷரான ராமர் இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்து தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வான் என்பதை அறியாதவரா என்ன ? ஆனால் ஒரு அவதார மூர்த்திக்கு இந்த விஷயங்கள் தெரிய வரும் என்றாலும் ஒரு சாதாரண மனிதனாக ராமபிரான் தோன்றியதால் ஒரு சாதாரண மனிதன் சந்திக்க வேண்டிய அனைத்து பிரச்னைகளையும் தெய்வ நம்பிக்கையால், கடவுள் வழிபாட்டால் எப்படி தீர்க்கலாம் என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டியவரே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. எதிரி தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வான் என்று தெரிந்தாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ? இதுதான் ஸ்ரீராமர் நிலையும். ஆனால், ஒருவன் செல்லும் பாதை தவறானதாக இருந்தால் அவன் என்னதான் பலசாலியாக இருந்தாலும் அவன் இந்திரஜித்தைப் போல தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை அறிவுறுத்துவதே ராமாயண காவியம் ஆகும். மாணிக்கங்களில் பல வகை உண்டு. பாறை மாணிக்கம், கடல் மாணிக்கம், அருவி மாணிக்கம் என்று வைரத்தை விடவும் கடினத் தன்மை பொருந்திய மாணிக்க வகைகள் உண்டு. இவற்றில் ரஜத மாணிக்கம் என்ற அபூர்வ மாணிக்கத்தால் உருவான மூர்த்தியே ஸ்ரீரஜத விநாயகர் ஆவார். உடல் பலம் மிக்கவர்களை வைரம் பாய்ந்த உடம்பு என்பார்கள். உண்மையில் உடல் பலம் என்பது கடவுள் நம்பிக்கையால் தோன்றி வளர்வதே. ஒரே இடத்தில் அசையாமல் இருந்தாலும் ரமண மகரிஷிக்கு அசாத்திய உடல் பலம் இருந்தது. இத்தகைய உடல் பலம் மிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் சுழற்றிய கத்தி இன்றும் சென்னை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த கத்தியை ஒருவரால் தூக்கவே முடியாது என்றால் துப்பாக்கி குண்டுகள் கூட அந்த கத்தியில் பட்டுத் தெறிக்கும் அளவிற்கு கத்தியைச் சுழற்றிய வேகம் இருந்தது என்றால் வீரபாண்டிய கட்ட பொம்மனின் உடல் பலம் எவ்வளவு வைரம் பாய்ந்ததாக இருக்கும். அத்தகைய உடல் பலத்தை அனுகிரகமாக அளிக்கக் கூடிய மூர்த்தியே ஸ்ரீரஜத விநாயகர் ஆவார்.

ஸ்ரீரஜத விநாயக மூர்த்தி
வாலிகண்டபுரம்

ஔவையார், துர்வாச மகரிஷி போன்று விநாயகர் வழிபாட்டில் உன்னத நிலையை அடைந்தவர்களால் வழிபடப்பெற்றவரே ஸ்ரீரஜத விநாயக மூர்த்தி ஆவார். இந்த பிள்ளயாருக்கு 1008 தோப்புக் கரணங்கள் இட்டோ அல்லது சிவாலயத்தை 1008 முறை பிரதட்சணமாக வலம் வந்த பின்னரே சகஸ்ரலிங்க மூர்த்தியை வழிபடும் பக்தி மாண்பு முற்காலத்தில் நிலவியது. இவ்வாறு குறைந்தது ஆயிரம் முறை சகஸ்ரலிங்க மூர்த்தியை வழிபட்ட பின்னரே பக்தர்கள் ஸ்ரீவாலீஸ்வரரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கே ஸ்ரீவாலீஸ்வரர் மகிமை குறித்து புரிந்து கொள்ள முடியும். வாலி என்பது இரண்டு இடையின எழுத்துக்களால் ஆன சொல். குசா சக்தியுடன் பொலிவது. இந்த ஒரு பதத்தின் மகிமையைப் பற்றி புரிந்து கொள்ளவே ஒரு சதுர்யுக காலம் ஆகும் என்றால் ஸ்ரீவாலீஸ்வரரின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்ள எத்தனை யுகங்கள் ஆகும். தற்போது பத்து தோப்புக் கரணங்கள் கூட தொடர்ந்து போடும் வலிமை சிறுவர்களுக்கே இல்லை என்றால் பெரியவர்களைப் பற்றியும், வயதானவர்களைப் பற்றியும் கூறு வேண்டுமா என்ன ? அக்காலச் சிறுவர்கள் தங்கள் கையால் எள்ளைப் பிழிந்து எண்ணெய் எடுக்கும் அளவிற்கு உடல் பலம் பெற்றிருந்தனர். இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் பெற்றோர்களை மதித்து, நேசித்ததே. அத்தகைய உடல் பலம் பெற்றவர்களே ஸ்ரீரஜத விநாயகரைப் பிரார்த்தனை செய்து சகஸ்ரலிங்க மூர்த்தியை வழிபடும்போது ஆயிரம் தோப்புக் கரணங்களால் விளைந்த உடல் பலத்தால் மனோ பலத்தைப் பெறுகின்றனர். இவ்வாறு விளைந்த மனோ பலத்தால் புரிந்த கொள்ளக் கூடியதே சாதுர்ய முக்கோண ரகசியமாகும். இவ்வாறு ஒன்றின் பலனாக ஒன்று விளையும் பல மணிகளால் கோர்க்கப்பட்ட பக்தி மாலையை அணிந்து ஸ்ரீவாலீஸ்வரரை தரிசனம் செய்யும்போதுதான் இறைவனின் மகிமையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்பது உண்மையாயினும் இத்தகைய ஆன்மீகப் பொக்கிஷங்களை அள்ளி வழங்கும் நம் சற்குருவைப் பெற்றுள்ளோம் என்பதே மன நிறைவை அளிக்கும் மகோன்னத பரிசு அல்லவா ? சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபத்தை ஸ்ரீரஜத விநாயகர் முன் ஒன்பதிற்கு குறையாமல் ஏற்றி வழிபடுவதே தற்காலத்தில் யாவருக்கும் ஒத்து வரக் கூடிய எளிய ரஜத தீப வழிபாடாகும். இத்தகைய மாணிக்க ஒளிக் கதிர்கள் விநாயகர் மீது பட்டு பக்தர்கள் மேல் அவை பிரசாதமாக அளிக்கப்படும்போது அவற்றின் விளைவால் உடல் பலமும், மனோ பலமும் பெருகும் என்பது உண்மை. சுத்தமான ஒளிச் சுடரால் விளையும் இத்தகைய ஒன்பது தீபங்களுக்கே இவ்வளவு சக்தி உண்டென்றால் இவ்வாலயம் முழுவதும் சிவராத்திரி போன்ற ஒளி நிறைந்த (?!) நாட்களில், ஒளி நிறைக்கும் பூஜைகளின் போது நெய் தீபங்களை ஏற்றி வழிபடுவதால் உண்டாகும் பலன்களை வார்த்தைகளால் விண்டுரைக்க முடியமா ? இத்தகைய பூஜைகளின்போது ஆண்கள் மேலாடை இன்றியும் பெண்கள் மடிசார் புடவைகளுடனும் வழிபாடுகளை நிறைவேற்றுவதால் ரஜத ஒளி சக்திகளை உடம்பில் மனதில் ஏற்றுக் கொள்ள இவை ஏதுவாக அமையும். கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் வேறு எங்கும் பெற முடியாததே ரஜத மாணிக்க ஒளி சக்திகள். வாலிகண்டபுரத்தின் தல விருட்சம் மாவிலங்கை. இதை வில்வபத்திரி, மகாவில்வம் என்றும் அழைப்பதுண்டு. மகா வில்வம் என்று மூன்று முதல் பதினாறு இதழ்கள் உடைய வில்வத்தையும் அழைப்பதுண்டு. வில்வ பத்திரியில் மூன்று இதழ்கள் மட்டுமே இருப்பதால் இது குருவில்வம் என்று சித்தர்களால் புகழப்படுகிறது. இவ்வருடம் எல்லா வழிபாட்டிற்கும் சிறப்பாக சிவன், அம்பிகை, மகாலட்சுமி, தட்சிணா மூர்த்தி, பைரவர் அர்ச்சனைக்கு உகந்ததாக இந்த வில்வ பத்திரி அற்புத பலனளிக்கவல்லது.
ஓம் தத் புருஷாய வித்மஹே யோக ரூபாய தீமஹி
தந்நோ சிவயோகி பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஒவ்வொரு வில்வ பத்திரியிலும் ஓதி எந்த இறை மூர்த்தியின் அர்ச்சனைக்கும் வழிபாட்டிற்கும் பயன்படுத்தலாம். விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான் ... என்றவாறாக 27 யோகங்களின் பெயரைக் கூறியும் ஆராதனைக்கு வில்வ பத்திரியைப் பயன்படுத்தலாம். இதனால் நோய் நிவாரண சக்திகள் பெருகி ஆயுள் விருத்தியாகும். அதிகப் படியாக வளரும் உஷ்ணத்திலிருந்து விடுதலை அளிப்பதே இத்தகைய யோக சக்திகள் கூடிய வழிபாடாகும்.

தலவிருட்சம் குருவில்வம்
வாலிகண்டபுரம்

வில்வ பத்திரியை மக்கள் வழக்கில் தீக்குச்சி மரம் என்று அழைப்பதுண்டு. இதுவும் ஒரு தெய்வீக தாத்பர்யத்தை விளக்குவதே. கர்பப்பையில் வளரும் சிசு வெளியே வரும்போது ஒரு இரும்புக் கம்பியையும் வளைக்கும் அளவிற்கு பலத்தைப் பெருக்கக் கூடியது அப்படியானால் குழந்தை வளர்க்கும் அந்த கருப்பையின் தன்மை எவ்வளவு மென்மையாகவும் அதே சமயத்தில் பலத்தைக் கூட்டக் கூடியதாகவும் இருக்கும். இதை நினைவிற்குக் கொண்டு வருவதே இத்தல விருட்ச மகிமையாகும். தீக்குச்சியின் மருந்தில் தோன்றும் அக்னி சக்தியானது தீக்குச்சி மென்மையாக, தீயை எளிதில் ஈர்க்கும் தன்மையுடன் இருந்தால்தானே அக்னி நெருப்பிலிருந்து மரத்திற்கு பரவும் தன்மை எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கும், நடக்கும். இவ்வாறு இறைவனின் சக்திகளை, குரு அனுகிரகங்களை எளிமையாக்கி, முழுமையாக்கித் தருவதே வில்வ பத்திரியின் தன்மையாகும். அதனால்தான் இத்தல விருட்சம் ஏதோ நேற்று தோன்றிய செடி போல் நம் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. ஆனால் காவிரி மண் துகளைவிட பல கோடி பிரம்ம மூர்த்திகள் தோன்றி இறைவனிடம் ஐக்கியம் பெற்றதைப் போல வாலிகண்டபுர திருத்தலத்தில் தோன்றி இறைவனிடம் ஐக்கியம் பெற்ற வில்வ பத்திரிகள் கோடி கோடியே. வில்வபத்திரியின் நோய் எதிர்ப்பு சக்தி அபாரமானது. சித்தர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த இந்த வில்வபத்திரியின் மகிமையைப் பற்றிக் கூறுகிறோம். இம்மரத்தின் இலைகள் ஒரு புறம் பச்சையாகவும் மறுபுறம் சற்றே சாம்பல் படிந்தது போல் தென்படும். இந்த சாம்பல் படிந்த பாகம் ஓசோன் என்னும் வான சக்தியை ஈர்க்கக் கூடியது. உண்மையில் ஒரு வில்வபத்திரி ஈர்க்கும் ஓசோன் சக்தியை ஒரு மனிதன் தான் ஆயுள் முழுவதுமே பயன்படுத்தினால் கூட எவ்வித நோய் நொடிகளும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்றால் இந்த தல விருட்சத்தின் மகிமையை எப்படிப் புகழ்வது. ஆனால் இம்மரத்தின் ஒரு இலை சக்தியைக் கூட மனிதர்கள் நேரிடையாக தங்கள் உடலில் ஏற்கும் சக்தியைப் பெறாததால் இம்மரத்தை வலம் வந்து வணங்குதலால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெறுமாறு பெரியோர்கள் அமைத்துள்ளனர். உண்மையில் இம்மரத்தை வலம் வருவதால் தீராத தொற்று வியாதிகளே இல்லை என்னும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியது. இத்தல விருட்ச மகிமை பற்றி கோவணாண்டிப் பெரியவர் அளித்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடுகிறோம். திருச்சியை அடுத்த ஒரு கிராமத்தில் ஒரு ஜமீன்தாரின் மகன் இருந்தான். அவனுக்கு சுமார் இருபது வயதிருக்கும், கட்டுமஸ்தான உடம்பு. பின் என்ன கேட்கவா வேண்டும் ? முயற்சி என்ற ஒன்று இன்றியே பல இளம்பெண்கள் அவனை நாடினர். விளைவு அவன் தன் இளமையை இழந்தான். கடைசியில் தன் ஆண் உறுப்பையும் ஆபரேஷன் என்ற பெயரில் மருத்துவர்கள் வெட்டி எடுத்து விட்டார்கள். என்ன இருந்தாலும் அவன் தன் தந்தைக்கு பையன்தானே ? அதனால் அவரும் ஒரு பெண்ணை அவனுக்கு திருமணம் முடித்து விட்டு பரலோகம் சென்றடைந்தார். இப்போது அந்த இளைஞனுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாயிற்று. பல நாட்கள் யோசித்து தன் நண்பனை அழைத்து அவனிடம் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி அந்த அபலைப் பெண்ணிற்கு வாழ்வளிக்கும்படிக் கூறினான். அருமை நண்பனும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான். வருடங்கள் உருண்டோடின. ஜமீன்தார் பையன் இவ்வுலகை விட்டு மறைந்தான். ஆனால் அவன் செய்த தியாகம் அவனைக் காத்து நின்றது. அவனுடைய நண்பனுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் உறவினர் ஒருவரின் ஆலோசனையை ஏற்று வாலிகண்டபுரத்தில் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு தினமும் ஈசனை வழிபட்டு வந்தான். எப்படி ? தன் அருமை மனைவியுடன் வில்வ பத்திரி மரத்தை வலம் வந்து கொண்டிருந்தான். சில மாதங்களில் அவள் கருவுற்று ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால், அது ஆணா பெண்ணா என்பதை எவராலும் கூற முடியவில்லை. காரணம் அக்குழந்தைக்கு சிறுநீர் போகும் இடத்தில் ஒரு சிறிய துவாரம் இருந்தது. அவ்வளவே. இந்நிலையில் யார் என்ன பதிலைக் கூற முடியும் ? பெற்றோரோ மனம் தளரவில்லை. அவர்களுக்குத்தான் உபாயம் தெரியுமே. மீண்டும் அவர்கள் வில்வ பத்திரி மரத்திற்கு படையெடுத்தனர். விளைவு நீங்கள் அறிந்ததே. ஆம். அந்த குழந்தை ஓராண்டிற்குள் தான் ஆண்தான் என்பதை நிரூபித்தது. இந்த வர்ணனையில் பல விளக்கங்கள் வேண்டுமென்றே அரைகுறையாக விடப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நிகழ்ச்சியை நிதானமாகப் படித்து பல முறை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் சித்தர்களின் பெருமையையும், வில்வபத்திரியின் நோய் நிவர்த்தி சக்திகளையும், அனைத்திற்கும் மேலாக ஸ்ரீவாலீஸ்வரர் மகிமையைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். வில்வ பத்திரியின் மகிமையைப் புரிந்து கொண்டால்தான் அதன் சக்தியால் ருத்ர அட்சம் என்று ருத்ர நேத்ரங்களுடன் பொலியும் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் மகிமையைப் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்ளலாம். காரணம் தல விருட்சத்தின் கண்களே அதன் இலைகள்.

ஸ்ரீபரவெளி விநாயக மூர்த்தி
வாலிகண்டபுரம்

வாலிகண்டபுரம் திருத்தலத்தில் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே ஆரம்ப மண்டபத்தில் திருக்கோபுரம் எதிரே எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபரவெளி விநாயக மூர்த்தி ஆவார். இவ்வாறு பரவெளி விநாயக மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் ஆலயங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பல புள்ளி விவரங்களுடன் அமைக்க வேண்டியதே இத்தகைய விநாயக மூர்த்தியின் பிரதிஷ்டை அம்சங்கள் ஆதலால் குறிப்பிட்ட தலங்களிலேயே இத்தகைய மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். ஆனால் பெரும்பாலான இறை அடியார்கள் பெருமை வாய்ந்த இம்மூர்த்திகளை தரிசனம் செய்யாது சென்று விடுகிறார்கள். அதனால் அவர்களின் தரிசனப் பலன்கள், பிரார்த்தனைகள் பூர்த்தி ஆவதில்லை என்பதை நினைவு கூறவும். ஸ்ரீபரவெளி விநாயகர் எழுந்தருளி உள்ள மண்டபம் பரவெளி மண்டபம் என்று அழைக்கப்படும். பரவெளி மண்டபத்தின் அளவு அதன் பரிமாணம், ராஜகோபுரத்திலிருந்து அது அமைய வேண்டிய தூரம், மூலவருக்கும் பரவெளி மண்டபத்திற்கும் உள்ள இடைவெளி போன்ற பல்வேறு புள்ளி விவரக் கணக்குகளைக் குறிப்பதே பரவெளி மண்டபமாகும். ஸ்ரீபரவெளி விநாயகரைத் தரிசிப்பதற்காகவே ஸ்ரீஅகத்திய பெருமான் ராஜகோபுரத்தில் எழுந்தருளி தினமும் ஸ்ரீபரவெளி விநாயகப் பெருமானின் தரிசனத்தைப் பெறுகிறார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மகாத்மியமாகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அண்ட சராசரங்களில் உள்ள இரகசியங்கள் அனைத்தும் நம் உடலிலேயே நிலவி, நிரவி உள்ளன என்பதைக் குறிப்பதே இப்பழமொழி ஆகும். இது உண்மையே. இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக எழுந்தருளி உள்ள விநாயக மூர்த்தியே இவர். அணு விஞ்ஞானம், நாநோ டெக்னாலஜி போன்ற நுண்துறை படிப்புகளுக்கும், வான ஆராய்ச்சி (astronomy, astrology), ஆகாயப் புலமை போன்ற பரிமாணம் கடந்த ஆராய்ச்சிகளுக்கும் வழிகாட்டியாய் துலங்குபவரே ஸ்ரீபரவெளி விநாயக மூர்த்தியாவார். பகல் இரவு என்பது சூரிய மூர்த்தி, பூமியின் சுழற்சியால் ஏற்படுவதே. தேய் பிறை, வளர்பிறை என்னும் தோற்றங்கள் சூரியன், சந்திர மூர்த்திகளின் சுழற்சியால் ஏற்படுபவையே. பரவெளி என்பது இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவதுதானே. அதனால் ஸ்ரீபரவெளி விநாயக மூர்த்தியை வணங்குவதற்கு பகல், இரவு, வளர்பிறை, தேய்பிறை ஏன் ஆண், பெண் என்ற எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. அனைத்தும் கடந்த அநாதி மூர்த்தியே பரவெளி விநாயக மூர்த்தி ஆவார். ஸ்ரீபரவெளி கணபதி மூர்த்தியை சமீப காலத்தில் வணங்கி பேறு பெற்றவர்களுள் முதன்மையாகத் திகழ்பவரே திருப்புன்கூர் நந்தனார் ஆவார். அதனால்தான் அவர் திருபுன்கூரில் குளம் வெட்டிய போது விநாயக மூர்த்தியே அவர் அள்ளிக் கொட்டிய குளத்து மண்ணை சுமந்து செல்லும் கூலி ஆளாக பணியாற்றினார். நந்தனார் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் வேலை செய்ய யாரும் வரவில்லை என்பதை விட அவரிடம் பணி செய்யும் அளவிற்கு தகுதி பெற்றவர் ஸ்ரீவிநாயக மூர்த்தியைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு மகிமை வாய்ந்தது அவர் பரவெளி விநாயக மூர்த்தியை வலம் வந்து வணங்கி இயற்றிய வழிபாடு.

ஸ்ரீஅகத்திய முனிவர் வாலிகண்டபுரம்

ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதன் நடுவே உள்ள அணுத் துகளுக்கும் அதைச் சுற்றிவரும் அணுத் துகளுக்கும் உள்ள இடைவெளி எத்தனையோ கோடி மடங்கு வித்தியாசமானதாக இருக்கும். அதே போல அமைந்திருப்பதே சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை அண்டத்தில் அமைந்திருக்கும் தோற்றமும். ஆனால் இவை எதுவுமே வெற்றிடம் கிடையாது, அனைத்தும் பொருள் பொதிந்தவையே என்று உணர்த்துவதே ஸ்ரீபரவெளி விநாயகர் வழிபாடு. இதன் அடிப்படையாக அமைந்ததே கோயில்களில் உள்ள மூலவர், கோஷ்ட மூர்த்திகள், பிரகாரங்கள், பிரகார தேவதைகள், கொடி மர அமைப்புகள், தீர்த்தங்கள் என்ற அனைத்து இறை அம்சங்களுமே. இந்த ஞானத்தை அடைய உறுதுணையாக அமைவதே ஸ்ரீபரவெளி விநாயக மூர்த்தியின் வழிபாடாகும். நிலச்சரிவு, பூகம்பம், மழை, இடி மின்னல், ஆழிப் பேரலைகள் போன்ற இயற்கை அம்சங்களைக் குறித்த அறிவை விருத்தி செய்வதும் இத்தகைய விநாயக மூர்த்திகளின் வழிபாடாகும். காலையில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நிகழும் அனைத்துக் காரியங்களிலும் விளையும் கர்ம வினைகளின் தொகுதியை ஸ்ரீபரவெளி விநாயகரின் திருப்பாதங்களின் அர்ப்பணிக்கும் செங்கதிரோனின் செந்நிறக் கதிர்களையே இக்கட்டுரையின் உதயத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். சூரிய மூர்த்தியே இரவில் தரிசனம் பெற முடியாத இந்த மூர்த்தியை பக்தர்கள் வலம் வந்து பலன் பெறலாம் என்றால் இந்தப் பெருமானின் கருணையை எந்த அளவிற்கு நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ? எப்போது வேண்டுமானாலும் வலம் வந்து வணங்கக் கூடிய மூர்த்தியே ஸ்ரீபரவெளி விநாயகர் ஆவார். பரவெளி என்பது பூஜ்ய வடிவம் கொண்டது கிடையாது என்றாலும் பரவெளி அறிவை விருத்தி செய்து கொள்ளும் முன் பூஜ்ய அறிவை விருத்தி செய்ய வேண்டியது அவசியம் என்பதால் இட்லி, இடியாப்பம், தோசை, வடை போன்ற பூஜ்ய வடிவு கொண்ட உணவுப் பொருட்களை தானமாக அளித்தலால் பூஜ்ய அறிவையும் அதன் விளைவாக ஏற்படும் பரவெளி அறிவையும் விருத்தி செய்து கொள்ளலாம். உதாரணமாக, 2002, 2020 என்ற இரு வருடங்களுக்கு உரிய எண் எண்கணித சூத்திரத்தின்படி 4 என்றே அமையும் அல்லவா ? ஆனால் இந்த எண்களின் இடையே உள்ள சூன்ய வியாபகம் என்பது மாறி அமைகிறது அல்லவா ? இத்தகைய சூன்ய வியாபக கலையில் வல்லவர்களான சித்தர்களே இத்தகைய எண் கணித சூன்ய அமைப்பிற்கு தகுந்த விளக்கங்களை அளிக்க முடியும். இந்த சூன்ய வியாபகங்களின் பொருளை உணர்ந்து கொள்ள உதவுவதும் பரவெளி விநாயக மூர்த்தியின் வழிபாடாகும். இது பற்றி மேலும் விளக்க வேண்டுமானால் ஆறடி அகலமுள்ள கிணற்றின் கரையில் நீங்கள் இருக்கும்போது தோன்றும் மன நிலையும், 60 அடி குறுக்களவு உள்ள ஒரு கிணற்றின் கைப்பிடிச் சுவர் மீது நிற்கும்போது ஏற்படும் மனோ நிலையும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது அல்லவா ? குறுக்களவு அதிகரிக்க அதிகரிக்க அந்த கைப்பிடிச் சுவற்றின் மீது நிற்கும்போது உண்டாகும் பயமும் அதிகரிக்கிறது என்பது உண்மையே. இதை அனுபவத்தில் கண்டால்தான் அதன் உண்மை நிலை புரிய வரும். இந்த பயத்திலிருந்து நாம் விடுபட உதவி செய்வதற்காகவே 2000 வருடம் முதற் கொண்டு தேதிகளை எழுதும்போது அதில் வரும் பூஜ்யத்திற்குள் நடுவே கோடு போடும்படி, அதாவது வட்டத்திற்குள் சட்டமிடும்படி சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். சித்தர்களுக்கு அடியார்கள் மேல் உள்ள கருணையை புரிய வைப்பதும் இத்தகைய பூஜ்ய மூர்த்திகளின் வழிபாடுகளில் ஒன்றாகும். 2002, 2020 என்ற இரு எண்களுக்கு உள்ள வித்தியாசம் 18, அதாவது 9ன் இரண்டு மடங்கு. அதனால்தான் ஒன்பது கலசங்கள் உடைய வாலிகண்டபுரம் போன்ற திருத்தல கோபுரங்கள் இத்தகைய சூன்ய வியாபகத்தை விளக்கும் தூபிகளாக விளங்குகின்றன என்பதும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய சூத்திர அமைப்பாகும்.

ஸ்ரீசுத்தோதக மகரிஷி வாலிகண்டபுரம்

சூன்யம், பூஜ்யம் என்ற இரு சொற்களும் குறிக்கும் தன்மை ஒன்றே என்று மேலோட்டமாகக் கூறினாலும், இரண்டும் வெவ்வேறு பொருள் உடையவையே. பூஜ்யஸ்ரீ என்ற பட்டம் பெற்றவர்கள் பலருண்டு, ஆனால் சூன்யஸ்ரீ என்று எவரையும் அழைப்பதில்லை. இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதும் பரவெளி விநாயக வழிபாடாகும். இதனால் என்ன நன்மை என்று கேட்கத் தோன்றலாம். பரவெளி விநாயகரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற கணக்கில் 12 ஆண்டுகள் வலம் வந்து வணங்கினால்தான் சூன்யத்திற்கும் பூஜ்யத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியும். அத்தகைய வேறுபாட்டை உணர்ந்தவர்களே உண்மையான பூஜ்யஸ்ரீ என்ற பட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய தகுதி பெற்றவர்களே நற்பவி சக்கரத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் எழுப்பி அந்த இடத்தில் எண்ணங்களே தோன்றாத சூன்ய நிலையை உருவாக்கலாம். அத்தகைய தகுதி பெற்ற சான்றோரே நம் சற்குரு என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும்.
எடுத்ததற்கெல்லாம் அதாவது பல்லி, பாச்சை போன்ற வீட்டுப் பூச்சிகளுக்குக் கூட பயந்து ஊரை கூட்டுபவர்கள் உண்டு. ஆனால் அவ்வாறு பயப்படுபவர்களுக்கு இதற்கு காரணம் சொல்லத் தெரியாது. பெரும்பாலும் பூர்வ ஜன்ம வினைகளே இதற்குக் காரணமாக அவைதால் பூரண ஜன்ம வினைகளைக் களைந்து அடியார்களுக்கு தைரியத்தை ஊட்டவே அவர்கள் பயப்படக் கூடிய பல்லி வடிவம் எடுத்து வாலிகண்டபுரத் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீசுத்தோதக மகரிஷி. பல்லி நம் உடலில் விழுவதற்கு பல பலன்களை கூறுவது போல் பல்லியின் சகுனங்களுக்கும் எத்தனையோ பலன்கள் உண்டு. ஆனால், பல்லிகள் எழுப்பும் சப்தம், தொனி, வேகம், எண்ணிக்கை இவற்றை வைத்துத்தான் அவை கூறும் பலனைத் தெளிவாக அறிய முடியும். செய்வினை போன்ற துரோகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சகுன தேவதைகளின் வாயைத்தான் முதலில் கட்டி விடுவார்கள். பொதுவாக ஒரு விபத்தோ தீய செயலோ ஓரிடத்தில் நடக்க இருப்பதை சகுன தேவதைகளின் நடவடிக்கையைக் கொண்டே நாம் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் நாம் எச்சரிக்கையுடன் செயல்படாதிருக்க இத்தகைய சகுன தேவதைகள் செயலிழக்கும்படி செய்து விடுவார்கள். ஆனால் நாம் நமது வீட்டை நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்து, வாரம் இரு முறையாவது சாம்பிராணி தூபம் இட்டு வந்தால் இத்தகைய சகுன தேவதைகளின் செயல் தன்மையைக் குறைக்க முடியாது. ஸ்ரீசுத்தோதக மகரிஷியின் தலை, நான்கு கால்கள், வால் என ஆறு இடங்களில் சந்தனக் குங்குமப் பொட்டிட்டு இம்மகரிஷி அலங்கரிக்கும் தூணை வலம் வந்து வணங்குதலால் சகுன தேவதைகளின் ஆசியைப் பெறலாம். வெள்ளிக் கிழமை, நேத்ரம் ஜீவன் பூரணமான நாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம். ஒரு முறை தன்னுடைய வீட்டில் சற்குரு அமர்ந்திருந்தபோது எங்கிருந்தோ வந்த இரண்டு சிட்டுக் குருவிகள் சுவாரஸ்யமாக பேச ஆரம்பித்தன. அவைகள் என்ன பேசிக் கொள்கின்றன என்பதை உற்றுக் கேட்டார் சற்குரு. அனைத்து மிருகங்கள், பறவைகளின் பாஷைகளை அறிந்தவர் அல்லவா நம் சற்குரு ? அவை சில வீடுகள் தள்ளி இருப்பவர் ஒரு வார காலத்தில் மரணம் அடைய இருப்பதைக் குறித்துதான் பேசிக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட சற்குரு அப்பறவைகளின் பேச்சைத் தொடர்ந்து கேட்டார். சற்று நேரம் கழித்து அப்பறவைகள் அங்கிருந்து பறந்து சென்று விட்டன. பொதுவாக ஒரு மனிதனுடைய இறுதி காலம் அவரவருடைய ஆன்மீக நிலையைப் பொறுத்து முன்னரே அறிவிக்கப்படும். இவ்வாறு தன்னுடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாத உயிர் உடலிலிருந்து பிரிய மறுக்கும்போது அங்கு ஒரு பெரிய போராட்டமே நிகழும். அந்த வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது. ஆனால் சற்குரு அமைந்தவர்களும், சற்குருவின் மேல் நம்பிக்கை கொண்டவர்களும் இயற்கையின் இந்த முடிவை அமைதியாக ஏற்பார்கள். இப்போது சற்குருவிற்கு அந்த சிட்டுக் குருவிகள் குறிப்பிட் ஆத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பு அதாவது அந்த உயிர் அமைதியாக மரணத்தை எதிர்கொள்ள அதை தயார் செய்யும் பொறுப்பை நிறைவேற்றும்படி ஆயிற்று. “மற்றுப் பற்று ...” என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகத்தை மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் காதில் விழும் வண்ணம் ஒலிப்பதால் அவர் ஆத்மா அமைதி அடையும். இதற்கு வழிகோலுவதே ஸ்ரீசுத்தோதக மகரிஷி வழிபாடாகும். சிலருக்கு உடம்பில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இத்தகையோர் ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் ஸ்ரீசுத்தோதக மகரிஷியை பத்தின் மடங்காக (10, 20, 30 ...) வலம் வந்து வணங்குதலால் நலம் அடைவர்.

ஸ்ரீவாலீஸ்வரியின் சிம்ம வாகனம்
வாலிகண்டபுரம்

குருவிகள் மனிதனின் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது மனிதர்கள் தங்களைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழலாம். சிட்டுக் குருவிகள் எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமே தவிர அவை மக்களுக்கு எவ்விதத்திலும் உதவ முடியாது என்பது உண்மை. ஆனால் தன்னலம் கருதாத குருமார்களோ எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் மனிதர்கள் நல்வாழ்வை அடைய துணைபுரியவும் முடியும். இவ்வாறு தன்னலம் மறந்து பிறர் நலத்திற்காக உதவ துணை புரிவதும் ஸ்ரீசுத்தோதக மகரிஷியின் வழிபாடாகும். அம்மகரிஷி தன் தபோ பலனால் எந்த அழகிய உருவத்தையும் எடுத்திருக்க முடியுமே ? அவர் ஏன் ஒரு சாதாரண பல்லி வடிவத்தில் பவனி வருகிறார். தியாகம் என்பதே உயிருக்கு, ஆறறவு என்ற பகுத்தறிவுக்கு அழகு என்று உண்மையான அழகை உணர்ந்தவர்களுள் ஒருவரே ஸ்ரீசுத்தோதக மகரிஷி ஆவார்.
அபூர்வமாக சில அம்பிகை மூர்த்திகளே இத்தகைய சிம்ம வாகனத்துடன் அருள்வர். ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உண்ணாநோன்பிருந்து தன் ஆன்மீக பலத்தைப் பெருக்கிக் கொள்வதே சிங்கத்தின் இயல்பு. பல்வேறு காரணங்களால் இவ்வாறு உண்ணாநோன்பை மேற்கொள்ள இயலாதவர்கள் இந்த சிம்ம மூர்த்தியை வணங்கி வருதலால் உடல் பலமும், மனோ பலமும் பெருகும் என்பது உண்மை. மேலும் புலனடக்கத்திற்கு பெயர் பெற்றது சிம்ம ராஜா என்பதால் கலியுகத்தில் சிம்ம வாகன தரிசனம் சிறப்பானதாக சித்தர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் இத்தகைய வாகன மூர்த்திகளுக்கு செம்பருத்தி தைலங்களால் காப்பிட்டு வணங்குதலால் புலனடக்கம் மிகும். பெண் மேலதிகாரிகளால் துன்புறும் சிப்பந்திகள் சிம்ம வாகனங்களையும், சிம்ம வாகன மூர்த்தியையும் வழிபட்டு வருதல் நலம். நீதித் துறை, காவல்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் இத்தகைய வழிபாட்டால் நலமடைவர். நேர்மையாக தங்கள் துறையில் பிரகாசிக்க விரும்பும் அனைவருக்கும் உதவக் கூடியதே இத்தகைய வழிபாடாகும். திருத்தலங்களில் விளங்கும் மூர்த்திகளுக்கும் அவர்களின் வாகனங்களாக விளங்கும் நந்தி மூர்த்திகளுக்கும் இடையே தொடர்ந்து சுவாச பரிவர்த்தனை நடந்து கொண்டே இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. சில திருத்தலங்களில் இறைவன், இறைவி தனித்தனி நந்தி மூர்த்திகளுடனும், சில திருத்தலங்களில் இவ்வாறு நந்தி மூர்த்திகள் தனியாக விளங்கினாலும் அவைகளின் சுவாசங்கள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவதாகவோ, பரிவர்த்தனை செய்து கொள்வதாகவோ இருக்கும். இவை எல்லாம் மனிதர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விடியலாக அமைகின்றன என்பதே உண்மை. உதாரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஐந்து அல்லது அதற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. அப்போதுதான் இருவரும் அருகருகே உறங்கும்போது ஒருவர் மூச்சுக் காற்றை மற்றோருவர் சுவாசிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் ஆயுளை, ஆரோக்கியத்தைப் பாதிக்காது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இரண்டாம் தார திருமணங்கள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளால் இத்தகைய அமைப்புகள் நிலவாதபோது அதற்குப் பரிகாரமாக அமைவதே இவ்வாறு அம்மையப்பனின் நந்தி வாகனங்கள் குறுக்கு வசமாக அமைந்திருக்கும் தன்மையாகும். உயர் குண்டலினி சக்தி இரகசியங்களில் இவை பல்வெறு யோக நிலைகளைக் குறிப்பதாகவும் அமைகின்றன. இடகலை, பிங்கள நாடிகள் மறைந்து குண்டலினி சக்தி சுசும்னா நாடி வழியாக எழும் என்ற குண்டலினி இரகசிய கோட்பாடுகளில் உண்மையில் இடகலை, பிங்கள நாடிகள் ஒன்றுக்கொன்று லயமாகி இணைகின்றன என்பதே உண்மை. இவ்வாறு ஆண் பெண் உறவின்றியே பேரின்பத்தை ஒருவர் அடைய முடியும் என்றால் இறையின்பம் என்பது என்ன என்பதை உணர்த்துவதும் இத்தகைய நந்தி மூர்த்திகளின் வழிபாடே. வயது வித்தியாசமுள்ள தம்பதிகள் இடையே தோன்றும் ஆயுள் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காகவே சிம்ம லக்ன முகூர்த்த நேரத்தில் கணவன் மனைவியின் திருமாங்கல்யம், வகிடு, நெற்றி என்ற மூன்று இடங்களில் குங்குமம் இடுமாறு சித்தர்களால் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய ஜோதிட அம்சங்கள் அறியாதோரும் இத்தலத்தை மூன்று முறை வலம் வந்து ஸ்ரீவாலீஸ்வரி அம்மனின் குங்கும பிரசாதத்தை கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரத்தை ஓதி மேற்கூறிய மூன்று இடங்களில் பூசிக் கொள்தல் நலம்
ஓம் மகா தேவ்யை ச வித்மஹி குங்கும சக்தியை ச தீமஹி
தந்நோ வாலீஸ்வரி தேவ்யை ப்ரசோதயாத்.
ஸ்ரீவாலீஸ்வரி அம்மன் அருளால் தீர்க சுமங்கலித்துவம் பெற்று பிரகாசிக்கும் அடியார்கள் நம் ஆஸ்ரமத்தில் உண்டு என்பதும் சுவையான செய்தியாகும்.

ஸ்ரீகருடாழ்வார் வாலிகண்டபுரம்

கருடன்கள் வானத்தில் வட்டமிட்டுப் பறப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அந்த கருடன்கள் செய்யும் ஆன்மீகப் பணியை ஒரு மனிதன் தன் வாழ்க்கை முழுவதையுமே செலவழித்தால் கூட முடியாது என்பதே கருடன்களின் சிறப்புத் தன்மையாகும். பொதுவாக கருட மூர்த்திகளைப் பார்த்தவுடன், “நாராயணா, நாராயணா,” என்று ஆறு முறை கூறி அடியார்கள் தங்கள் வலது சூரிய விரலால் (மோதிர விரல்) தங்கள் இரு கன்னங்களையும் மாறி மாறித் தொட்டுக் கொள்ள வேண்டும் என்பதே சித்தர்கள் கூறும் எளிய வழிபாடு. இந்த வழிபாட்டின் பின்னணியில் உள்ள இரகசியங்களை உணர்த்துவதும் வாலிகண்டபுரத்தில் ஸ்ரீகருடாழ்வாருக்கு இயற்றும் வழிபாடாகும். கருடன்கள் நிழல் தங்கள் மேல் விழுவது என்பது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். அத்தகைய பாக்கியம் பெற்றோர் உடனே,
ஓம் தத் புருஷாய வித்மஹே நாராயண பாத சேவகாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
என்ற கருட காயத்ரீ மந்திரத்தை எட்டு முறை ஜபித்தல் நலம் தரும். ஆயுளை வளர்ப்பதுடன் பல தீராத வியாதிகளுக்கு அருமருந்தாக அமைவதும் இத்தகைய கருட நிழல் தீண்டலும் வழிபாடும் ஆகும். ஒருவர் விளக்கு அருகில் இருக்கும்போது உள்ள நிழலின் அளவை விட அவர் விளக்கை விட்டு தள்ளிப் போகும்போதுதானே அவர் நிழலின் அளவும் அதிகரிக்கும். இதுவே கருடன்களின் தெய்வீகத் தன்மையைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். இவ்வாறு சுமார் பத்து மைல் விட்டத்திற்குப் பறக்கும் கருடன்கள், கழுகுகள் நீர் நிலைகள், உணவு பற்றிய விஷயங்களை மற்ற பறவைகளுக்குத் தெரிவிப்பதுடன் தங்கள் நிழல் விழும் இடங்களில் எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்பதே கருடன்களின் அரும் பணியாகும். தெய்வீகத் தோட்டிகளே கருடன்கள். எலிகள், பூச்சிகள், பறவைகள் போல சிறு பிராணிகள் பூமியெங்கும் இறந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இவை மற்ற விலங்குகளால் உண்ணப்படாமல் கிடக்கும்போது அவை சமுதாயத்தில் வெளிப்படுத்தும் நச்சுத் தன்மை மிகவும் கொடியதாகும். எனவே இத்தகைய சிறு பிராணிகள் கிடக்கும், கிடைக்கும் நிலை பற்றி மற்ற பிராணிகளுக்கும் அறிவிப்பதும் அவ்வாறு மற்ற பிராணிகளால் தீண்டப்படாமல் கிடக்கும்போது அவை பரவெளில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தாது இருக்க ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதும் கருடன்களின் அறப் பணிகளில் ஒன்றாகும். இவ்வாறு கூப்பிய கரங்களுடன் நின்ற நிலையில் அருள்புரியும் கருடாழ்வார் மூர்த்திகள் பல தீராத வியாதிகளைத் தீர்த்தருளும் மருத்துவ சக்திகளுடன் திகழ்கிறார்கள் என்பதால் இத்தகைய மூர்த்திகளை வணங்கி சத்து, வைட்டமின் சக்திகள் கூடிய டானிக்குகளை கர்ப்பிணிகளுக்கு தானமாக அளித்தலால் தீராத பல வியாதிகளுக்கு நிவாரணம் கிட்டும். மேலும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதோ ஒரு ஆபத்தான வியாதி வந்து விட்டதாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மருத்துவர்களால் ஏமாற்றப்படும்போது அத்தகைய தவறான யுக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இத்தகைய கருட மூர்த்திகளின் வழிபாடு பாதுகாப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. கரிசலாங்கண்ணி தைலத்தால் இந்த கருடாழ்வார் மூர்த்திக்கு காப்பிட்டு வணங்கி வருதலால் கண்ணில் புரை விழுதல், மாலைக் கண் போன்ற நோய்கள் நிவர்த்தியாகும். இளம் பெண்களுக்கு கரிசலாங்கண்ணி தைலத்தை தானமளித்தலும் சிறப்புடையதே.

ஸ்ரீவாலீஸ்வரர் வாலிகண்டபுரம்

ஸ்ரீவாலாம்பிகை வாலிகண்டபுரம்

ஒவ்வொரு வருட புத்தாண்டு தினத்தன்றும் நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள் ஏதாவது ஒரு மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றுவது வழக்கம். இம்முறையில் 1993ம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்ரீவாலீஸ்வரருக்கு புத்தாண்டு தினத்தன்று அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றினார் நம் சற்குரு. அத்தகைய அபிஷேக ஆராதனைகளின் போது முழுக்கை சட்டை அணிந்திருந்தார் நம் சற்குரு. பொதுவாக அபிஷேகம் நிறைவேற்றும்போது திறந்த மேனியுடனே அர்ச்சகர்கள் நிலவுவது வழக்கம். நம் சற்குரு சித்தர் என்ற பாரம்பரியத்தில் பொலிவதால் சாதாரண ஆடை அணியும் முறை அவர்களுக்குப் பொருந்தாது என்றாலும் சித்தர்களின் ஆடை அலங்காரத்திலும் ஒரு தெய்வீகம் நிச்சயம் இருக்கும் அல்லவா ? சித்தர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்களுக்கு உடல் கிடையாது. ஆனால் உடல் இருப்பது போல் காட்டுகிறார்கள், அவ்வளவே,” என்பார். நிழல் என்பது சித்தர்களின் உடலுக்கு இல்லாததால் உடலைப் போலவே நிழலையும் அவர்கள் காட்டுவதுண்டு. ஆனால், இறைவனுக்கு அபிஷேகம் போன்ற வைபவங்களின் போது அவர்களின் தூல உடலின் சக்தி அனைத்தையும் ஒளி, ஒலி சக்திகளாக மாற்றி இறை மூர்த்திகளுக்கு அளித்து அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட (reflected attributes) தெய்வீக சக்திகளை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பதால் அவர்களின் மிகவும் அவசியமான உடல் பகுதிகளே மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படுகின்றன என்பதே உண்மை. நம் சற்குரு இறைவனுக்கு அபிஷேகம் நிறைவேற்றும்போது சற்றும் கைகளின் அசைவு கூட இன்றி அவர் உருவம் திகழும்போது அது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். யார் விக்ரஹம், எவர் சிலை என்று தெரியவே தெரியாது, ஒரு வேளை இரண்டும் ஒன்றோ ?! இவ்வாறு சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் பகவான் தன் வக்ர அக்னி சக்தியை உலகிற்கு அளித்ததைப் போல் இவ்வருடமும் செவ்வாய் பகவானின் அக்னி விளைவுகள் கடுமையாக இருப்பதால் இந்த அபரிமிதமான உஷ்ண சக்தியை சமன் செய்யும் பொருட்டு வில்வ பத்திரி அலங்காரத்தை சிவராத்திரியின் நான்கு காலங்களில் மட்டுமல்லாது அனைத்து பூஜைகளிலும் இத்ததைய ஆராதனைகளை நிறைவேற்றி அதிகப்படியான உஷ்ணத்திற்கு வடிகால் தேடும்படிக் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் வெளியிடங்களுக்குச் செல்லும்போதெல்லாம் தன்னுடைய ஆடை குறித்து மிகவும் கவனமாக இருப்பாராம். தன்னுடைய சட்டையில் அனைத்து பட்டன்களும் ஒழுங்காகப் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை எல்லாம் சரி பார்த்துக் கொள்வாராம். இந்த ஜோதி இரகசியங்கள் பற்றி அறியாதவர்கள் அவருடைய சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளைக் கண்டு ரசிப்பதும் உண்டு. அப்படியும் ஒரு முறை கவனக் குறைவால் அவருடைய தெய்வீக ஒளி வெளியே தெரிந்து விட்டதாம். உடனே மெத்தை மேல் இருந்து, “நீ என்ன பெரிய பிஸ்தாவா, என்ன ஒளிகளைக் காட்டி வேடிக்கை காட்டுகிறாயா ?” என்று எச்சரிக்கை செய்தார்களாம். சற்குரு அடிக்கடி விளையாட்டாகச் சொல்வார். “மெத்தை மேல் (அருள் உலகம்) இருப்பவர்கள் எல்லாம் பொல்லாத ஆட்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

ஸ்ரீமகாவிஷ்ணு வாலிகண்டபுரம்

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஒரு அறையைக் காட்டி சற்குரு, “அடியேன் அடிக்கடி சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு சென்ற இடம், ஜாக்கிரதையாக பயன்படுத்துங்கள், ராஜா,” என்றார். சட்டையைக் கழற்றிப் போடுதல் என்றால் இந்த மனித உடம்பை விட்டு விட்டு மனோலய பயணத்தை மேற்கொண்டு உடம்பிலிருந்து வெளிச் செல்லுதல் என்று அர்த்தம். இவ்வாறு உடம்பை விட்டு வெளியே செல்லும்போது அதை வேண்டாதவர்கள் அபகரித்து அந்த தெய்வீக உடம்பை எரித்து விடவோ அல்லது தவறான செயலுக்குப் பயன்படுத்தக் கூடும் என்பதால் ஸ்ரீஆதிசங்கரர் போல் சிலர் தங்கள் நெருங்கிய சீடர்களை அந்தப் புனித உடம்பிற்குக காவலாக வைத்துச் செல்வதும் உண்டு. இத்தகைய உடம்புகள் வைக்கும் இடம் திருத்தலங்களைப் போல் மிகவும் புனிதமாகத் திகழும், இவ்விடத்தில் செய்யப்படும் ஜபம் நாமஸ்மரணம், தியானம் போன்ற நற்காரியங்களுக்கு பன்மடங்கு பலன்கள் ஏற்படும் என்பதால் அந்த இடத்தைப் புனிதமாக பயன்படுத்தி நற்சக்திகளை மேலும் வலுப்படுத்த விழைந்தார் நம் சற்குரு என்பதே இந்நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளும் பாடமாகும். குறிப்பாக நாராயண நாம ஜபமும், விஷ்ணு சகஸ்ரநாம துதிகளும் இத்தகைய மனோலயப் பயணங்களுக்கு உறுதுணையாக அமையும் என்பது ஆன்றோர்களின் அறிவுரை. ஒரே ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்து இந்தியாவையே விலைக்கு வாங்கக் கூடிய மதிப்புள்ள அபராஞ்சித தங்க நாணயங்கள் உண்டு. இந்த விலை மதிப்பற்ற, மதிப்புள்ள தங்கத்தால் ஆன விக்ரஹங்களும் உண்டு என்றாலும் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் இத்தகைய தங்க விக்ரஹங்களின் இருப்பிடம் அறிந்து அதை களவாட முயன்றால் அந்த தங்க விக்ரஹங்களை கற்சிலையாக மாற்றும் வித்தையை இத்தகைய மனோவெளி பயணங்களின்போது நிறைவேற்றுவதும் சித்தர்களின் பணிகளில் ஒன்றாகும். அதனால்தான் எவரும் இத்தகைய தங்க விக்ரஹங்களைக் களவாடும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஆக்குவது பிரம்மன் என்றால், காப்பது பெருமாள்தானே. எத்தனையோ திருத்தலங்களில் ஸ்ரீமகாவிஷ்ணு சங்கு சக்கரதாரியாய் விளங்கினாலும் இந்த ஆயுதங்கள் வெவ்வேறு யுகத்தில் பல பல காரண காரியத்தோடு தோன்றியவை. இவ்வகையில் வாலிகண்டபுரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு தம் திருக்கரத்தில் ஏந்திய சக்கரம் ஆழிசெஞ்சுடர் என்ற நாமத்துடன் திகழ்வது. இந்த சக்கராயுதத்திற்கு எத்தனையோ தெய்வீக பிரயோகங்கள் இருந்தாலும் மனிதர்களைப் பொறத்த வரை அவர்களுக்குத் தெரியாமல் உலகெங்கும் நடைபெறும் அணு சோதனைகளில் விளையும் அதிகப்படியான உஷ்ண சக்தியிலிருந்தும், அணுக் கதிர்களிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பு பெறுவார்கள். குங்குமப்பூ கலந்த நல்லெண்ணையால் ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு காப்பிட்டு சகஸ்ரநாம துதிகளால் ஆராதனை செய்வதால் உஷ்ண வியாதிகள் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். வசதியுள்ளவர்கள் இதை ஒரு சமுதாயப் பணியாக ஏற்று நிறைவேற்றி வந்தால் அவர்கள் சந்ததிகள் அதிகப்படியான உஷ்ணத்தால் தோன்றும் கட்டிகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் இத்தகைய உடல் கோளாறுகள் உடலில் தோன்றும் முன், வருமுன் காப்பதே புத்திசாலித்தனமாகும். சிறப்பாக செவ்வாய், சனிக் கிழமைகளில் இயற்றும் இத்தகைய வழிபாடுகளுக்கு மகத்தான பலன்கள் உண்டு. ஆறு தேங்காய் எண்ணெய் தீபங்களை முதல் வரிசையிலும் 12 விளக்கெண்ணெய் தீபங்களை அடுத்த வரிசையிலும் பிறை வடிவில் ஏற்றி வழிபடுதலால் இந்த 18 தீபங்களும் பெருகி வரும் உஷ்ண சக்தியிலிருந்து பாதுகாப்பை நல்கும். வாலிகண்டபுரம் போன்று நின்ற நிலை மகாவிஷ்ணு, கருடாழ்வார், தலவிருட்சங்கள், கோமுகங்களின் முன்பு இத்தகைய வழிபாடுகளை இயற்றி பலன் பெறலாம். இந்த சுதர்சன தீபங்களை ஏற்றும்போது,
ஓம் தத் புருஷாய வித்மஹே மங்கள தேவாய தீமஹி
தந்நோ மகா விஷ்ணு ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே திருத்தலங்களில் தீபங்களை ஏற்றி வருதலால் அதிகப்படியான உஷ்ண சக்தியை ஏற்கும் ரட்சையாக ஸ்ரீபெருமாளின் சக்கராயுதம் விளங்கி நம்மைக் காக்கும். பெண்கள் மாதவிடாய் கழிந்தவுடன் இத்தகைய வழிபாடுகளை இயற்றுவதும் சிறப்பே.

ஸ்ரீவாலி வாலிகண்டபுரம்

ராமாயண வாலி சிவனை வழிபட்டு அற்புத வரங்களை பெற்றது அனைவரும் அறிந்ததே. தன்னை எதிர்க்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்பதே வாலி பெற்ற வரம். அதனால் வாலியை எவராலும் எதிர்த்துப் போரிட முடியவில்லை. சாட்சாத் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானே மறைந்து நின்று ராம பாணம் விடுத்து வாலியின் நான் என்ற அகந்தையைக் களைந்தார். அவ்வாறு அகந்தையை இழந்து இறை வடிவம் பெற்ற ஸ்ரீவாலி மூர்த்தியின் தரிசனத்தையே நீங்கள் வாலிகண்டபுரத்தில் பெறுகிறீர்கள். அவ்வாறு வாலி ஸ்ரீவாலீஸ்வரரை தரிசனம் செய்தபோது வாலி பெற்ற தரிசன பலனையே வாலிகண்ட சிவபுரம் என்று அழைக்கிறோம். எனவே வாலிகண்ட சிவபுரத்தின் மகிமை சொற் பொருள் கடந்த சிவஞான போதம் ஆகும். புறம் என்றால் இரண்டு பரிமாணங்களைக் கொண்டது, புரம் என்பது பரிமாணங்களைக் கடந்து நிற்பது. இத்தகைய சிவபுர தரிசனத்தை வாலி உடனே பெற்று விடவில்லை. பல யுகங்களாக காயத்ரீ வழிபாடுகள், சந்தியா வந்தனம், அர்க்ய வழிபாடுகள் போன்றவற்றை முறையாக இயற்றிய பின்னரே சர்வேஸ்வரானால் இந்த அனுகிரக சக்திகள் வரமாக அளிக்கப்பட்டன. இன்றும் காலையில் ஒரு சமுத்திரக் கரையிலும், மதியம் ஒரு சமுத்திரக் கரையிலும், மாலையில் ஒரு சமுத்திரக் கரையிலும் காயத்ரீ அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்றி வருபவனே வாலி. இந்த வருடம் வாலி தன் சந்தியாவந்தன பலன்களை ஸ்ரீவாலீஸ்வரருக்கு அர்ப்பணிக்கும்போது அந்த வழிபாட்டுப் பலனில் ஒரு பகுதியை தன்னை வழிபடும் அடியார்களுக்கு குருஞான பிரசாதமாக அள்ளி வழங்குபவரே வடக்கு திசை நோக்கி எழுந்தருளிய இத்தல முருகப் பெருமான் ஆவார். உண்மையில் மாலை சந்தியா வந்தன வழிபாடுகளை வாலி இவ்வருடம் கண்டி கதிர்காமம் திருத்தலத்தில் நிறைவேற்றுவதாக சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. அனைவரும் தினமும் கண்டி கதிர்காமம் நிலவும் இலங்கைக்கு யாத்திரை சென்று வருவது இயலாது என்பதால் வாலிகண்டபுரத்தில் நிலவும் முருகப் பெருமான் தன்னை நம்பி வழிபடும் பக்தர்களுக்கு வாலியின் இந்த வழிபாட்டுப் பலனில் ஒரு பகுதியை முருகப் பிரசாதமாக அளிக்கிறார் என்பதே உண்மை. குறிப்பாக செவ்வாய்க் கிழமை மாலை நேரத்தில் முருகப் பெருமானை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் கண்டி கதிர்காமம் திருத்தல தரிசன பலனை பெறலாம் என்பது சித்தர்களின் பரிந்துரையாகும். கண்டி என்றோ கதிர்காமம் என்றோ கூறாது கண்டி கதிர்காமம் என்றே கூற வேண்டும் என்பது சித்தர்களின் பரிந்துரை. இத்திருத்தலமே அக்னி சக்திகளுடன் திகழ்வதால்தான் தீப கண்டி என்று உரைத்து அதில் பிரகாசிக்கும் ஒன்பது தீபச் சாளரங்கள் வழியாக கண்டி கதிர்காமம் முருகப் பெருமானின் அக்னி சக்திகளை அடியார்களுக்கு எல்லாம் வாரி வழங்கி வந்தார் நம் சற்குரு என்ற இரகசியம் தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். கண்டி கதிர்காமம் என்ற வார்த்தையைத் திரும்ப திரும்ப ஒலித்தாலே அது சுற்றுப்புறத்தில் அக்னி சக்திகளை நிரவி நிலைநிறுத்தும் என்பது உண்மையே. வாலிகண்ட சிவபுரத்தின் மகிமையைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ள விளைவது இயற்கையே. நாயன்மார்கள் 63 என்பது நாம் பொதுவாக உரைப்பது. உண்மையில் 108 நாயன்மார்களுக்கு மேல் இந்த உலகை பவனி வருவதாக சித்தர்கள் உரைக்கிறார்கள். இத்தகைய நாயன்மார்கள் சிலா விக்ரஹங்களில் எழுந்தருளாது அக்னி சக்தியாக வாலிகண்டபுரத்தில் திகழ்வதால் இத்தலத்தில் உள்ள விக்ரஹங்களுக்கு நவ (புது) வஸ்திரங்களை அணிவித்து வழிபடுதலே இவர்களின் அக்னி சக்திகளைப் பக்தர்கள் பெறும் எளிமையான மார்க்கமாகும். இக்காரணம் பற்றியே ஆண்கள் மேல் வஸ்திரம் இல்லாதும் பெண்கள் மடிசார் புடவையுடன் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம் என பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு விக்ரஹகங்களின் மேல் சாற்றும் புதிய ஆடைகளே வாலிகண்ட சிவபுரத்தின் மகிமையை ஓரளவு புலப்படுத்தும் என்பதே உண்மை.

ஸ்ரீநந்தி தேவர் வாலிகண்டபுரம்

பொதுவாக ஒருவரின் லக்னத்தின் ஏழாமிடத்திருந்து கலவி நுட்பத்தையும் ஐந்தாமிடத்திலிருந்து சந்தான பாக்கியத்தையும் அறிந்து கொள்ளலாம். ஐந்தாமிடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட காலம் கடந்த காலமாக மாறி ஏழாமிடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது என்பது நிகழ் காலமாக மாறி விட்டது. அதனால் குழந்தை என்பது கலவியில் கிட்டும் ஒரு வேண்டாத பரிசாக (by-product) மாறி விட்டது. ஆனால் அத்தகையோரும் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும்போது அவர்களுக்கு கைகொடுப்பதே வாலிகண்டபுரம் திருத்தலமாகும். பல விஷ்ணு மூர்த்திகளின் ஆயுட்காலத்திற்கும், பிரம்ம மூர்த்திகளின் காலத்தைத் தாண்டியும் பஞ்சாக்னியின் நடுவே தவம் இயற்றிய சூரபத்மன் இறைவனின் அக்னி தரிசனத்தை தாங்கும் நிலையில் இல்லை. அதனால்தான் சிவபெருமான் ஒரு நீர்த்துளி வடிவில் சூரபத்மனுக்கு தரிசனம் அளித்தார். அத்தகைய அக்னி பெருமானின் நெற்றிக் கண் ஒளியிலிருந்தே முருகப் பெருமான் தோன்றினார் என்றால் சந்தான பாக்கியம் என்பது எத்தகைய சக்தி வாய்ந்த அக்னி சக்தியை உள்ளடக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக்தர்கள் இத்தகைய அக்னி சக்திகளை தங்கள் மூச்சுக் காற்றின் மூலமே பெற முடியும் என்பதால் சந்தான பாக்கியம் கோருவோர் அக்னி சக்திகள் மூச்சுக் காற்றில் லயமாகும் திருத்தலமான வாலிகண்டபுரத்தில் வெளிபிரகாரத்தில் கைகோர்த்தவாறு அல்லது ஒருவர் மூச்சுக் காற்று மற்றொருவர் உடலில் நிலவும் வண்ணம் நெருங்கி குறைந்தது மூன்று முறை வலம் வந்து பின்னர் திருக்கோயிலினுள் சென்று அம்பிகையையும் மூலவரையும் தரிசித்தல் நலம். வளர்பிறை சஷ்டி தினங்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம். நந்தியையும் சேர்த்தே இத்தகைய பிரதட்சிண வலங்களை மேற்கொள்தலால் சந்தான சக்திகள் மூச்சுக் காற்றில் லயமாக நந்தி மூர்த்தி அருள்புரிவார். நந்தி எம்பெருமானின் முன் கால்கள் இருக்கும் நிலையை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். ஸ்பர்ச லாவண்யம் என்ற நாமத்துடன் நந்தி மூர்த்தியின் கழுத்தில் திகழும் சங்கை ஆண்கள் தரிசித்து நலம் பெறலாம். எத்தகைய உடல் குறைகளையும் சரி செய்து சந்தான பாக்கியத்தை அளிக்க வல்ல வழிபாடு இதுவே. நம்பிக்கையே மாமருந்து. நந்தி மூர்த்திகளின் மணிகள், கழுத்துப் பட்டைகள், சங்குகள் போன்றவை ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பிராணாயாமக் கலையில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் வெளி பிரகாரத்தில் இருக்கும் இத்தகைய நந்திமூர்த்திகளை வணங்கி பீடத்தைச் சுற்றி 21 அகல் தீபங்களை ஏற்றி வழிபடுதலால் மூச்சுக் கலைகள் பற்றிய இரகசியங்களை நாளடைவில் புரிந்து கொள்ளலாம். காற்று வேறு, கலைகள் வேறு. சற்றே வாயைத் திறந்து காட்சி அளிக்கும் நந்தி மூர்த்திகள் உண்டு, இவ்வாறு நாக்கை மடித்துக் காட்டி அருள் புரியும் நந்தி மூர்த்திகள் உண்டு. இத்தகைய நாக்கு மடித்த நந்தி மூர்த்திகளே பிராணாயாம கலைக்கு உறுதுணையாய் நிற்பவர்கள். மௌன சாதகம் இவர்களுடையது. மனம் தாங்காத பிரச்னைகளுக்கும் பதில் அளிக்க வல்லவர்களே வாய் திறந்த மூர்த்திகள். ஆனால் இவர்கள் கூறும் பதிலை புரிந்து கொள்வோர் யாரோ ? “நந்தி எம்பெருமான் அணிந்துள்ள ஸ்பர்ச லாவண்யம் என்ற சங்கைப் பற்றி மட்டுமே திருமணம் ஆனவர்களிடம் ஒரு வருடம் சொற் பொழிவு ஆற்றலாம் என்றால் சுவாமி அணிந்திருக்கும் மற்ற ஆபரணங்கள் பற்றிப் பேசுவதற்கு எத்தனை யுகங்கள் ஆகும்?” என்று கேட்பார் நம் சற்குரு.

ஸ்ரீநாரிகோப தட்சிணாமூர்த்தி
வாலிகண்டபுரம்

இவ்வருடம் பல அக்னி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறினோம் அல்லவா ? அதே சமயம் அக்னி ஹோத்ரம், அக்னி ஸ்தம்பனம் போன்ற வழிபாடுகளில் உன்னதம் பெற உதவுவதும் இந்த வருடம் என்பதே உண்மை. உண்மையில் சந்தான பாக்கியம் என்பதே ஒரு வகையாக அக்னி ஸ்தம்பன கலைதான் என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிய வரும். ருத்ராக்னியின் தன்மை புரிந்தவர்களே இத்தகைய அக்னி தம்பன கலையில் மேன்மை அடைந்து அதை மற்றவர்களின் நன்மைக்காக பகிர்ந்தளிக்க முடியும். பத்து கோடி இறை அடியார்களுக்கு நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள் அன்னதானம் வழங்கினார் என்றால் அந்த அன்னதானத்தை சமைக்க செலவான ருத்ராக்னி மிக மிகக் குறைந்த அளவே என்பது உண்மை. பாக்கி ருத்ராக்னி சக்திகள் என்னவாயிற்று ? அடியார்கள், இறைவனை, குருமார்களை நம்பியவர்களின் கர்ம வினைகளைக் களைய அந்த ருத்ராக்னி சக்திகள் பயன்பட்டன. இந்தப் புரட்சியை நிகழ்த்தியவரே நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள். உணவு தயாரிப்பதற்காக மட்டும் ருத்ராக்னி சக்திகள் பயனாகவில்லை, உத்தம சந்தானங்களை உருவாக்கவும், தீராத வியாதிகளைத் தீர்க்கவும், ஏன் பல சரி செய்ய முடியாத கடன்களைத் தீர்ப்பதும் ருத்ராக்னியின் சக்தியே. உதாரணமாக, தன் தாய்க்கு சேவை செய்ய முடியாமல் அந்தத் தாய் தன் இறுதி மூச்சை விட்டால் அந்தக் கொடுமையான தவறையும் சரி செய்யக் கூடிய சக்தி ருத்ராக்னிக்கு உண்டு, தவறுகளை ருத்ராக்னி மூலம் சரி செய்யும் பாங்கு நம் சற்குரு போன்ற சித்தர்களுக்கே உண்டு. அக்னியில் சமைத்த உணவுப் பொருட்களை தானமாக அளிப்பதும், தீபங்களை திருத்தலங்களில் ஏற்றுவதும், சாம்பிராணி இடுதல் போன்ற தூப வழிபாடுகளை அதிகரிப்பதும் இத்தகைய தம்பன வழிபாடுகளில் உன்னதம் பெறும் எளிய முறையாகும். முறையற்ற காமத்தால் விரயமாகும் அக்னி சக்திகள் கணக்கில் அடங்கா. தீ விபத்துகள், நிலச்சரிவு போன்ற பல சம்பவங்களுக்கு முறையற்ற காமத் தவறுகளும் காரணமாகின்றன. இலவச திருமணங்கள் மூலம் இத்தகைய காமத்தை முறைப்படுத்தும் வழிபாடுகளை இயற்றுவதும் அக்னி தம்பன சக்திகளை எளிதில் பெறும் வழிபாட்டு முறையாகும். முற்காலத்தில் 12, 18 என்ற கணக்கில் எல்லாம் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்து வந்துள்ளார்கள். இதுவும் ஒருவிதமான அக்னிஹோத்ர வழிபாடுதான். இவ்வாறு நிறைய குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ஆடை, அணிகலன்களை அளித்து வணங்குவதும் இவ்வருடம் அக்னி வழிபாடாக போற்றப்படுகிறது. நாரிகோபம் என்பது பெண்கள் மீதுள்ள அதீத மோகம், காதல், ஈர்ப்பைக் குறிப்பதாகும். பொதுவாக நான்கு சனகாதி சீடர்களுடன் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்திகள் ஒரேயொரு முனிவருடன் திகழும் தோற்றம் இத்தகைய நாரிகோப சக்திகளைக் குறிக்கும். தன் மனைவியின் மீது அதீதமான அன்பு கொண்டவர்களுக்கு அதிகப்படியான குழந்தைகள் பிறக்கும் என்பது தவறான கருத்தாக இருந்தாலும் தன் மனைவியின் மீதோ, மற்ற பெண்களின் மீதோ அதிக ஈடுபாட்டைக் கொண்டவர்கள் இத்தகைய தட்சிணா மூர்த்தி தெய்வங்களை வழிபட்டு வருதலால் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இறை பக்தியாக உருவெடுக்கும் என்பது உண்மையே. மேலும் இறை வழியில் முன்னேறிச் செல்லும் பக்தர்களுக்கு இயற்கையாகவே பெண்களின் மேல் நாட்டம் அதிகரிக்கும் என்பது உண்மையே. அதனால் அவர்கள் எந்தவித மனக் குழப்பமும் கொள்ளாது இத்தகைய நாரிகோப மூர்த்திகளை வழிபட்டு வருதலால் காம எண்ணங்கள் முறைப்படுத்தப்பட்டு அவை இறை பக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை. தன்னுடைய பூர்வ ஜன்மம் ஒன்றில் இத்தகைய நாரிகோப தட்சிணா மூர்த்தியை வழிபட்டே தன்னுடைய அதீதமான பெண் மோகத்தை இறை பக்தியாக மாற்றிக் கொண்டார் திருநீலகண்ட நாயனார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடமாகும். திருநீலகண்ட மூர்த்தி, நாயன்மார்களில் முதன்மையாக அமைவதற்கு இந்த நாரிகோபமே முக்கிய காரணம் என்றால் முறைப்படுத்தப்பட்ட பெண் மோகம் சாதிக்காதது எது ?

 

வாலிகண்டபுரம் திருத்தலம் மற்ற சிவாலயங்களைப் போல் எல்லா அனுகிரக சக்திகளையும் அளிக்கவல்லதாயினும் சிறப்பாக பூப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற மூன்று முக்கிய பாக்கியங்களை அளிக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இதற்கு சான்றாக விளங்குவதே இத்தலத்தில் துவார பாலகர்கள், கருடாழ்வார் மூர்த்தியுடன் பக்தர்கள் புடைசூழ எழுந்தருளியிருக்கும் பூலோகத்தை கையில் ஏந்திய குழந்தை கிருஷ்ணன் கோலமாகும். இத்தலத்தில் ஒரு பிரபஞ்சத்தையே உருவாக்கிய பெருமை கண்ணபிரானையே சேரும். இவ்வாறு தான் பூலோகத்தையே விழுங்கி தூய்மை ஆக்குவதற்கு அருள்புரிந்த மூர்த்தியே ஸ்ரீவாலீஸ்வரர் ஆவார் என்று தன் இடது கையை உயர்த்தி பக்தர்களுக்கு இறைவனின் பெருமையை எடுத்துரைக்கிறார். கண்ணன் வெண்ணையும் உண்பான், அவன் மண்ணையும் பிரியமுடன் உண்பான் என்பது பக்தர்கள் அறிந்த கிருஷ்ண லீலையாக இருப்பதால் எது அவர்களுக்கு நலம் தருமோ, எந்த கிருஷ்ண லீலை அவர்கள் மனதிற்கு பிடித்திருக்கிறதோ அந்த லீலையை அவர்கள் வணங்கிப் பயன்பெறலாம் என்ற எல்லையில்லா பரோபகாரியாய் கிருஷ்ணன் எழுந்தருளிய திருத்தலமே இது. ஆண்கள் யக்ஞோபவீதம் அணியும்போது அவர்கள் இரண்டாவது பிறவியை அடைவது போல பெண்கள் பூப்பு அடையும்போது அவர்கள் இரண்டாவது பிறவியை அடைகிறார்கள் என்பதே உண்மை. அதனால் முற்காலத்தில் பூப்பு ஜாதகத்தையும் வைத்து திருமணப் பொருத்தங்களைப் பார்த்தார்கள். ஓன்று நீயல்லை அன்றி ஒன்றில்லை என்ற இறை தத்துவத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவனே ஸ்ரீகிருஷ்ண பகவான். பூமியிலிருந்து கொண்டு பூமியை, மண்ணை உண்டான். எப்படி ? தியாகத்தின் உச்சக் கட்டமே கிருஷ்ணாவதாரம். அவதாரம் ஒரிடத்தில் பூரணம் பெறுகின்றது என்றால் அங்கு தியாகமும் பூரணம் பெறுகின்றது என்றுதானே அர்த்தம். அதனால்தான் சற்குரு கிருஷ்ணனைக் குறிப்பிடும்போதெல்லாம் அவன், இவன் என்று ஏகவசனத்தில்தான் விமர்சிப்பார். நானே எனக்கு மரியாதை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா ? கிருஷ்ண லீலைகளில் ஏதாவது ஒன்றைப் புரிந்து கொண்டாலே போதும், நாம் தெய்வீகத்தைப் புரிந்து கொண்டதாக அர்த்தம்.

ஸ்ரீதுவாரபாலகமூர்த்தி
வாலிகண்டபுரம்

ஸ்ரீதுவாரபாலகமூர்த்தி
வாலிகண்டபுரம்

அமிர்தகலை என்பது சந்திரனின் வளர்பிறை தத்துவத்தோடு இணைவது போல் பெண்களுக்கு உருவாகும் அமிர்த கலை என்பது அவர்களின் பூப்பு அடையும் நேரம், திதியுடன் ஒத்திருப்பதால் அமிர்தகலை யோகங்களை அறிய திருமண ஜாதகங்களில் இது முக்கியத்துவம் பெற்றது. இந்த அமிர்தகலை யோகம் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களுடன் இணைத்து குழப்பிக் கொள்ளப்படுவதால் பலரும் இதன் அருமை பெருமை தெரியாது திருமணப் பொருத்தங்களில் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ஜாதக அம்சங்களாகி விட்டன. இருப்பினும் வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை கலந்த வெண்ணையை இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் நினைவுடன் தானம் அளித்தலால் இத்தகைய அமிர்த நிலைகள் சாதாரண மக்களுக்குத் தெரியா விட்டாலும் அவர்கள் விரும்பிய வரன்கள் கிட்ட இந்த நவநீத தானம் உறுதுணையாய் நிற்கும். தாமதமாகி பருவம் அடையாத பெண்களும் இத்தகைய தானத்தால் பலனடைவார்கள். வயதுக்கு வருதல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அது அத்தியாவசியமே. எப்போது ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் பெற்றோர்களை உண்மையாக மதிக்கக் கற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் பருவம் அடைந்தவர்களாக கருதப்படுவர் என்று பிரகடனம் செய்தவரே நம் சற்குரு.
ஓம் தத் புருஷாய வித்மஹே லோகாதீதாய தீமஹி
தந்நோ நவநீத ப்ரசோதயாத்
என்று 16 முறை ஓதி வெண்ணெய் உருண்டைகளை இத்தலத்தில் அல்லது எத்தலத்திலும் தானமளித்தல் சிறப்பாகும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் தகாத வார்த்தைகள் பேசுதல், திருட்டு, பொய்யுரை, பிடிவாதம் போன்ற கெட்ட பழக்கங்கள் மறையும். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிராக விளங்கிய நம் குழந்தையே இன்று கண்ணுக்குத் தெரியும் ஒரு தவறைச் செய்கிறது என்றால் அதற்கு நாம்தானே பொறுப்பேற்க வேண்டும். இதையே குழந்தை உருவில் நவநீத கிருஷ்ண இறைக் கோலம் நமக்கு உணர்த்துகிறது. (மீண்டும் படிக்கவும் ...)
இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். கண்ணனோ வெண்ணையைத் திருடுபவன், ஆஞ்சநேய மூர்த்தியோ எப்போதும் ராம தியானத்தில் திளைப்பவர், ராம பிரானையே ரசிப்பவர், ருசிப்பவர். நாமோ கண்ணனுக்கு வெண்ணெய் அளிக்காது ஆஞ்சநேய மூர்த்திக்கு அல்லவா வெண்ணெய் காப்புப் போடுகிறோம். இதில்தான் கிருஷ்ணாமிர்தம், கண்ணன் சுவை அடங்கியுள்ளது. ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவன் கிருஷ்ணன் (சற்குரு அருளிய வார்த்தைகள்). பக்தர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஆஞ்சநேய மூர்த்திக்கு வெண்ணெய் காப்பு இடும்போது அந்த வெண்ணெயைத் திருடிக் கொள்பவன் கிருஷ்ணன். அந்தத் திருட்டில் ஆஞ்சநேயருக்கு அளிக்கும் பங்கே ராம அவதாரத்திற்கு அடுத்து வந்த கிருஷ்ண அவதார சுவை. அது மட்டுமல்ல எப்போதோ துரோபதை அளித்த ஒரு துண்டு கோவணத் துணியான அவளுடைய சீலைக்குப் பதிலாக சீலை சமுத்திரத்தையே தன் சுண்டு விரலில் கொண்டு வந்தவன் கிருஷ்ணன். ஆனால் அதற்காக கிருஷ்ண பகவான் திருஅண்ணாமலையை எத்தனையோ முறை வலம் வர வேண்டியிருந்தது என்பது வேறு காதை, இல்லை கீதையோ ? எனவே எடுப்பவன் மட்டும் கண்ணன் அல்ல, கொடுப்பவனும் அவனே.

ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர்
வாலிகண்டபுரம்

பூமியை வலம் வரும் சந்திர பகவான் சூரியனுடைய ஒளிக் கிரணங்களைக் குறிப்பிட்ட கோணங்களில் கிரகித்து அதை அமிர்த கலைகளாக மாற்றி மக்களுக்கு அளிக்கிறார் அல்லவா ? இந்த அமிர்த கலைகளின் மூலம் ஜீவ சக்திகளை முறையாகப் பெற உதவுவதே பிரதோஷ வழிபாடாகும். அது போல கணவன் மனைவி படுத்துறங்கும்போது ஆண்கள் இடது புறம் ஒருக்கணித்தும் பெண்கள் வலது புறம் ஒருக்கணித்தும் உறங்கும்போது இத்தகைய அமிர்தகலைகள் அவர்களின் மூச்சுக் காற்றில் லயமாகி அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது உண்மையே. ஆனால் தற்கால ஒட்டுக் குடித்தனங்களில் இத்தகைய உறங்கும் முறைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இவ்வாறு அம்மை அப்பனுக்கு ஒன்றுக்கொன்று குறுக்கே அமைந்த தலங்களில் நந்தி மூர்த்திகளின் குறுக்கே செல்லாது குறைந்தது 11 முறை பிரதோஷ நந்தி மூர்த்தியையும் சேர்த்து வலம் வருதல் அமிர்த கலைகளை பெறும் எளிய வழிபாடாக அமைகிறது. தற்காலத்தில் சர்க்கரை நோய் பெரும்பாலானவர்களைத் தாக்குவதற்கு இத்தகைய அமிர்த சக்திக் குறைபாடே முக்கிய காரணமாகும். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தது பழைய கதை, புழக்கடையில் அமிர்த சாகரத்தை வைத்துக் கொண்டு சர்க்கரை நோயால் வாடுவது புதுக்கதை. இத்தகைய அமிர்த கலைகள் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும் தெய்வமே ஸ்ரீவாலீஸ்வரி அம்மன் ஆவாள். ஆண் பெண்ணிற்கு இடையே இயல்பாக உள்ள வசீகர சக்தியை வாலை சக்தி என்று குறிப்பதுண்டு. இந்த வாலை சக்திகள் அபரிமிதமாக சுமங்கலி சக்தியுடன் சேர்ந்து பொலிவதால் கண்ணகி, மாதவி போன்ற சுமங்கலிகள் இத்தகைய வாலை சக்திகளுடன் பிரகாசித்தனர். ரம்பை, ஊர்வசி போன்ற தேவமாதுக்களும் இத்தகைய வாலை சக்திகளை அனுகிரகமாக அளிக்கவல்லவர்களே என்பதை உணரும்போது அது மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கும். தெய்வீகத்தில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் பக்தர்கள் தங்கள் பக்தியை பெருக்கிக் கொள்ளும்போது இத்தகைய வாலை சக்திகளையே அவர்கள் எதிர்கொள்வதால் சற்குருநாதர்கள் இன்றி அமையும் அவர்களுடைய வாழ்க்கை தடம் புரண்டு செல்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் விரல்களைச் சேர்த்து வைக்கும்போதே இந்த இயல்பான வாலை சக்திகள் அவர்களுக்கு இடையே சங்கம சுகத்தை அளிப்பதால் அவர்கள் இந்த வாலை சக்திகளை முறைப்படுத்தும் வரை அதற்குரித்தான வழிபாட்டு முறைகளை செயல்படுத்தும்படிக் கூறினார் அல்லவா வாலையோகி ரஜனீஷ். ஆனால் அந்தப் பொறுமையைக் கடைபிடிக்க முடியாமல் போய் அவர்கள் திருமணம் செய்து கொண்டு குறுக்கு வழியில் இன்பத்தைத் தேடியதால் பகவான் தன்னுடைய உடலை விட்டுப் புறப்படும்படி ஆயிற்று. வாலை யோகத்தில் முறையான முன்னேற்றத்தை நாடும் பக்தர்களுக்கு வழிகாட்டும் தெய்வமே ஸ்ரீவாலீஸ்வரி அம்மன் ஆவாள். வாலை யோக சக்தி என்பது புலன்கள் கடந்த தெய்வீக நிலையில் மட்டுமே உணரப் படுவதால் பெரும்பாலான தெய்வ மூர்த்திகள் தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு இறைப் பிரசாதமாக இந்த வாலை யோக சக்திகளை அளிப்பதற்காக கண் மூடி தவம் கிடக்கிறார்கள். ஆனால், இந்த வாலை யோக சக்திகளைப் பெற, புலன்கள் கடந்த இந்த அதீத நிலையை உணர பக்தர்கள் தான் தயாராக இல்லை. வாலை சக்திகளை உணர முடிந்தால் அதுவே பக்தியில் எல்கேஜி. எமது ஆஸ்ரமத்தில் பெறக் கூடிய சுலூவியான் கடகம் என்னும் சக்கர வழிபாடு வாலை சக்திகள் அருளும் பக்தி நிலையை மேம்படுத்த உதவுவதே. சந்திர பகவான் கடக ராசியில் எழுந்தருளும் காலங்களில்
ஓம் தத் புருஷாய வித்மஹே ஸ்ரீபிரஹஸ்பதி உச்ச ஸ்தான தேவாய தீமஹி
தந்நோ கற்கடேஸ்வர ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை 11ன் மடங்காக ஜபித்தல் அமிர்த சக்திகளை, வாலை யோக சக்திகளைப் பெறும், பெருக்கும் சித்த வழிபாட்டு முறையாகும். பொதுவாக மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு திருமண வாழ்வு சுவைப்பதில்லை. அத்தகையோர் மேற்கண்ட வழிபாட்டை தொடர்ந்து இயற்றுவதால் பலன் அடைவர். குரு சக்தியுடன் இவ்வாண்டு பொலிவதால் வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியைத் தொழுது (திருத்தவத்துறை லால்குடி) வழிபாட்டை நிறைவு செய்தல் நலமே.

 

ஸ்ரீகுளம்வெட்டிய விநாயகர் திருப்புன்கூர்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam