ஞாயிற்றம்பலப் பற்றைப் பற்றுக பற்று விடற்கு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திரயம்பகேஸ்வரர் பாகம் 1
ஆடிய பாதமே அபய பாதம்

100 மீட்டர் நீளமுள்ள ஒரு செப்புக் கம்பியை மின் சக்தியுடன் இணைத்தால் அதன் மறு முனையில் உள்ள எலக்ட்ரான் நகரத் தொடங்கும். இவ்வாறு நடுவில் உள்ள கம்பியில் உள்ள எலக்ட்ரான்கள் இந்த கம்பி மின்சாரத்துடன் இணைக்கப்பட்டது என்பதை எப்படி ‘அறிந்து’ கொண்டன. மின்சாரத்தில் உள்ள உட்சுழற்சி சக்திகளே இந்த மின்னோட்டத்திற்கு காரணம். இன்று வரை விஞ்ஞானத்தால் அணுக முடியாதது இந்த உட்சுழற்சி தத்துவம்.

ஒரு மின்னலில் உள்ள மின்சார சக்திகளை வைத்து சென்னை மாநகர் முழுவதிற்குமே நாம் மின் சக்தியை அளிக்க முடியும் என்றால் ஒரு மின்னல் எத்தகைய சக்தியைப் பெற்று இருக்கிறது? ஐயர்மலை திருத்தலத்தில் உள்ள பஞ்சமகா சித்தர்களின் தலைமை குருவான ஆறுமுக சுரேஸ்வரர் மின்னல் சக்திகளை தம் உடலில் தாங்கி இந்த பிரபஞ்சத்தில் களைய முடியாத கர்ம வினைகளை எல்லாம் தன்னுள் ஏற்று, தன் மேல் பொலியும் மின்னல் இடி சக்திகளால் இவற்றை பஸ்மம் செய்கிறார் என்பதே நம் சற்குரு கூறும் கர்ம இரகசியங்கள்.

ஞாயிற்றம்பலம்

ஆடி மாதத்தில் சரவணபவ கூடைகளில் மாதுளங்கனிகளை வைத்து தானம் அளிக்கும்போது இவ்வாறு பொதுவாக களைய முடியாத பல கர்ம வினைகளும் இந்த தானங்களில் தோன்றம் உட்சுழற்சி சக்திகளால் களையப்படுகின்றன.

ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பா ஒரு நாள் ஆற்றிற்கு குளிக்கச் சென்றபோது தாயுடன் வந்த சிறுவன் ஆதிசங்கரரின் கால்களை ஒரு முதலை கவ்விக் கொண்டது. குழந்தையை காப்பாற்ற வழியில்லாமல் தவித்தாள் ஆர்யாம்பாள். அப்போது சங்கரரே, “அம்மா, எப்படி இருந்தாலும் காலைக் கவ்விய இந்த முதலை என்னை விழுங்கி விடுவது உறுதி. அவ்வாறு முதலைக்கு இரையாவதை விட நீங்கள் சதா சர்வ காலமும் வழிபடும் ஞாயிற்றம்பல பகவதியையும், ஞாயிற்றம்பல சித்தரையும் வேண்டிக் கொண்டு என்னை இறைசேவைக்கு முழுவதுமாக அர்ப்பணித்து விட்டால் (அதாவது தான் துறவியாவதற்கு நீங்கள் அனுமதித்து விட்டால்...), அவர்கள் அனுகிரகத்தால் ஒருவேளை இந்த முதலை என்னை விட்டு விடலாம்...”, என்றார். தாயும் வேறு வழியின்றி அவ்வாறே வேண்டிக் கொண்டாள். முதலையும் சங்கரரின் காலை விட்டு விட்டது.

இது ஒன்றும் பிரமாதமான கணக்கு அல்ல உங்களைக் குழப்புவதற்கு...
தாய்க்கு குழந்தை மேல் அலாதி பற்று, எஞ்சி இருந்த அந்தப் பற்றையும் விட்டு விட்டால் தன் தாய் இறைவன் திருவடியை அடைவது உறுதி என்பதை உணர்ந்து கொண்டார் பரபிரம்மமான ஆதிசங்கரர். அதே சமயம் உலகிற்கு ஒரு அவதாரத்தை ஈந்த பெருமையையும் தன் அன்னை பெறுவாளே! இப்போது உங்களுக்கு அனைத்தும் தெளிவாகி இருக்கும் அல்லவா? ஞாயிற்றம்பல திருத்தலத்தில் அடியார்கள் கட்டும் வீடு வெறும் குடும்பநலனுக்காக மட்டும் அமைவது அல்ல, இந்த உலகம் அனைத்தும் நலமாய் இருக்க ஒரு பற்றற்ற பரம நிலையை உருவாக்குவதற்கே.

மண் கையில் ஒட்டலாம், ஆனால், மணல் கையில் ஒட்டாதே...!

மஞ்சள் சிவப்பு பச்சை என்ற
திரயம்பக சக்திகள் வலம் வரும்
திருஅண்ணாமலையார்

ஆடி மாதம் 18ம் தேதி திகழும் பதினெட்டாம் பெருக்கு வழிபாடு இந்த திரயம்பகேஸ்வரர் பிரபாவத்தில் நிகழ்வதால் நமக்கு கிட்டும் பலன்கள் எத்தனை எத்தனையோ. 3 x 6 = 18 என்ற விதமாக சுக்ர சக்திகளின் மூன்று மடங்கு பெருக்கமே இந்த ஆடி 18க்கு உரித்தானதாக அமைவதால இந்த மூவாற்றுப் புழா சக்திகளை அடியார்கள் பெறும் விதமாக திருவலஞ்சுழி திருத்தலத்தில் வாழை இலை அல்லது தாமரை இலைகளின் மேல் ஆறு செம்பருத்தி இதழ்களைப் பரப்பி இதன் மேல் தீபங்களை ஏற்றி வலஞ்சுழித்துப் பாயும் காவிரி ஆற்றில் விடுதல் மிகச் சிறந்த வழிபாடாக அமையும். இலை, மலர், தீபம் என்ற மூன்றும் குருமங்களகந்தர்வ சக்திகளாக ஒருங்கிணையும் என்பது நீங்கள் உணரக் கூடியதுதானே.

ஆடி 18ம் பெருக்கு
சுக்ர தீபம்

இன்று நாள் முழுவதும் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இளநீர் தானம் அளித்தல் அற்புத பேறே. நம் சற்குரு திருவலஞ்சுழி திருத்தலத்தில் உழவாரத் திருப்பணிகள் இயற்றியபோது இத்தகைய தானம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய்க் கோளாறுகளுக்கும், அடி வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியதே அரிதாகக் கிட்டும் இத்தகைய தான வழிபாடு.

குணசீலம் அருகே ஆமூர் ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஓமாமாம் சித்தர் பற்றி நீங்கள் அறிவீர்கள். சூரியக் கதிர்களில் விளங்கும் தின்ன கோணம், கன்னி கோணம், பரிதி கோணம் என்ற கோண சக்திகளின் ஒரு பகுதியே நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் மூன்று கோண சக்திகளாகத் துலங்குகிறது, 3-phase current with 120 degrees angle flow for every phase. சித்தர்கள் கோண சக்திகள் என்று கூறுவது நமக்குப் புரிவதற்காகவே, உண்மையில் இந்த கோணங்களுக்கு உரித்தான தேவதைகள் வலம் வந்து ஸ்ரீதிரயம்பக ஈசனை வணங்கும் காலமே இந்த ஆடி மாதம் என்பதால் திருஅண்ணாமலையை குறைந்தது 18 நாட்கள் (3 x 6 = 18) வலம் வந்து வணங்குவதால் வருங்காலங்களில் ஏற்படக் கூடிய மின்சார விபத்துகள், மின் தடை போன்ற எதிர்பாராத வேதனைகளால் அடியார்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தீபம் ஒளி சுடர் என்றவாறு தீபங்களில் பரிணமிக்கும் ஒளி தேவதைகள் இந்த உட்சுழற்சி பிரவாகத்தில் ஈசனை வழிபடும் அற்புத காலமாக அமைவதால் திருஅண்ணாமலை பித்ரு தீர்த்தம், பிருத்வி நந்தி, வருண லிங்கம் அருளும் பகுதிகளில் வாழை இலை அல்லது தாமரை இலைகளின் மேல் 15 சுக்ர தீபங்களை ஏற்றி ஆடி மாதம் முழுவதும் வழிபடுவதும் ஒரு அற்புத வழிபாடாக அமையும்.

“நீ இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார்...”, என்ற சற்குருவின் வாசகங்களை நிரூபிக்கும் வகையில் அடியார்கள் இயற்றும் திரயம்பகேஸ்வர வழிபாட்டில் இந்த உண்மை தெளிவாகின்றது. ஆடி ஒன்று முதல் 21ந் தேதி வரை திரயம்பகேஸ்வர வழிபாட்டில் குருமங்களகந்தர்வ உட்சுழற்சி திகழும் அற்புதத்திற்கு மற்றோர் அணிகலனாக ராகு பகவானின் அனுகிரகமும் இந்த உட்சுழற்சியில் இணையும் அற்புதத்தை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.

திருநாவுக்கரசு நாயனார் தன் தோளில் எந்நேரமும் உழவாரப்படையை ஏந்தியவாறே எங்கும் சஞ்சரிப்பார். திருத்தலங்களில் புல், முட்புதர்களை அப்புறப்படுத்துதல், காலில் குத்தக் கூடிய சிறு கற்கள், கூழாங்கற்கள் இவற்றை தன் உழவாரப் படையால் அகற்றி திருக்குளத்தில் போட்டு திருத்தல பிரகாரங்கள் எப்போதும் தூய்மையாக துலங்கும்படி திருப்பணி செய்தவாறே இருப்பார். நம் சற்குருவும் இத்தகைய உழவாரப் படையை ஏந்திய நிகழ்ச்சியை நாம் தெரிவித்துள்ளோம்.

அப்படி என்ன இந்த உழவாரப் படைக்கு தனி சிறப்பு ? இந்த உழவாரப் படையின் வடிவமே இதன் தனி சிறப்பிற்கு முக்கியமான காரணமாகும். “தோசைத் திருப்பியின் வடிவம் என்று சொன்னால் உங்களுக்கு சட்டென புரியும். அந்த வடிவம் தான் அப்பர் ஏந்திய உழவாரப் படை வடிவம்...”, என்று சிரித்துக் கொண்டே உழவாரப் படையின் வடிவத்தை விவரித்தார் நம் சற்குரு. இந்த உழவாரப் படையின் வடிவமே, ராகு பகவானின் லோக வடிவமே திருநள்ளாறு நள தீர்த்தம் என்று நாம் இன்று தரிசிப்பது.

நம் பூத உடலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதால் உணவைக் கொண்டே பல அற்புதங்களை நிவைறேற்றியவர்களே, இன்றும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்களே மகான்கள். 300 பணியாளர்களைக் கொண்ட ஒரு ஆங்கிலேய துரை குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தியபோது அவரையும் அவர் மனைவியையும் தங்கள் கையால் மாவு அரைத்து இட்லி சுட்டு காஞ்சி கனிந்தகனி பெரியவருக்கு கொடுக்க அதன் பலனாய் அந்த தம்பதிகள் உத்தம குழந்தை பாக்கியம் பெற்ற அதிசயத்தை நீங்கள் அறிவீர்கள்.

அது போல அமிர்தானந்தா அன்னையும் தன் திருக்கரங்களால் தோசை வார்த்து நூற்றுக் கணக்கான அடியார்களுக்கு அளித்த அற்புதத்தையும் நேரில் கண்டு பலரும் இரசித்திருக்கலாம். இந்த தோசை இட்லி பதார்த்தங்கள் தயாரிப்பில் பொதிந்துள்ள தாம்பத்ய இரகசியங்கள் கோடி கோடி. ‘தோசை திருப்பி’ என்னும்போது அது ராகுவையும் ராகுவின் எதிர் வீட்டு ராசியாக சுழலும் கேதுவையும் குறிக்கும் அல்லவா? இந்த தத்துவார்த்த விஷயங்களை உணர்ந்து கொண்டாலே போதும் நீங்கள் உட்சுழற்சியாக ராகு கேதுவின் இணைப்பு குருவுடன் மேஷ ராசியில் இணையும் அற்புதத்தை அறிந்து பிரமிப்பின் உச்சத்தை அடையலாம்.

இந்த ராகு சக்திகள் உறையும் நள தீர்த்தத்தின் மகிமையை தங்கள் வாழ்வில் இணைத்து பயன்பெற விரும்பும் அடியார்கள் திண்டு தோசைகளை வார்த்து அதற்கு பெரிய வெங்காயம் சக்கரம் போல் அரிந்து தயாரித்த மிளகாய் சட்னியுடன் தானம் அளித்தல் சிறப்பாகும். சனிக் கிழமையின் ராகு கால நேரமான காலை சுமார் 1.30 மணி நேரம் (9 - 10.30) ஞாயிற்றுக் கிழமை ராகு காலம் எமகண்டம், இரவு ராகு காலம் எமகண்டம் இணையும் நேரமான மாலை 4.30 முதல் 9 மணி வரை திகழும் 4.30 மணி நேரம் இவைகளை இணைத்தால் 6 மணி நேரம் என்ற சுக்ர சக்திகள் இணைந்து பெருகுவதே நம் அடியார்களுக்கு கிடைக்கும் அமிர்த பொக்கிஷமாகும்.

சனி, ராகு, கேது கிரக தசை, புக்தி, அந்தரம் என்ற இணைப்பால் வருந்தும் அடியார்கள் எண்ணற்றோர். இத்தகைய இணைப்பில் துன்புறும் அடியார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக நம் சற்குருவால் அளிக்கப்படுவதே இந்த அரிய சந்தர்ப்பம். ராகுவைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. நாம் ஏன் கெடுக்கும் ராகுவைப் பற்றி கவலைப்பட வேண்டும், கொடுக்கும் ராகுவின் பலன்களைப் பெருக்க உதவுவதே மேற்கூறிய தான முறை. இந்த தானத்தை திருநள்ளாறு திருத்தலத்தில் மட்டும் அல்லாது ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் விளங்கும் திருத்தலங்களிலும், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் நிறைவேற்றி பயன்பெறலாம்.

இன்று பலரும் பிரமாதமாக சமைக்கப்பட்ட சாப்பாட்டை ருசி பார்க்க நேர்ந்தால் நள பாகம் நன்றாக இருக்கிறதே... என்று பாராட்டுவதை நீங்கள் அறிவீர்கள். நள மகராஜா இவ்வாறு தன் சமையலில் அற்புத ருசியை ‘கொண்டு வந்ததற்கு’ அவர் பல காலம் இந்த நளதீர்த்தத்தில் நீராடியதன் பலனே என்பது தற்போது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா? இது என்றோ நளன் பெற்ற அனுகிரகம் அல்ல, நீங்கள் விரும்பினால், உங்கள் மனது ஏங்கினால் இன்றும் உங்கள் தோசையில் சுவையை உருவாக்க நள மகராஜா தயாராக இருக்கிறார்?!

எங்கும் குரு எதிலும் குரு!
தலவிருட்சம் தர்ப்பை திருநள்ளாறு

திரு நள ஆறு என்பதே திருநள்ளாறு ஆயிற்று. நளன் தன்னுடைய மனைவியைப் பிரிந்து வருந்தியபோது தன் மனைவியுடன் சேரும் நல்ல வழியைக் காட்டி அருளியதால் இத்தகைய குடும்ப ஒற்றுமை பெயரை திருநள்ளாறு பெற்றது எனலாம். விவாகரத்து, பொருளாதர ஏற்றத் தாழ்வு, உடற்கூறு பிரச்னைகள், மனம் பேதலிப்பு, அந்தஸ்து, இடமாற்றம் போன்ற எத்தகைய பிரச்னைகளால் தம்பதிகள் பிரிந்து வாழ நேர்ந்தாலும் இந்த திரயம்பகேஸ்வர வழிபாடு காலத்தில் நிகழ்த்தும் திண்டு தோசை தானம் பல அற்புதங்களை நிகழ்த்தும்.

திருநள்ளாறு இறைவனின் நாமம் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் என்று அமைந்திருப்பதால் சனிக் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் இத்தலத்தில் தங்கியிருந்து தர்ப்பை பாயில் ‘உறங்கி’ மேற்கூறிய வகையில் அன்னதானத்தை நிகழ்த்துதலால் கிட்டும் பலன்கள் அளப்பரியன.

ராகு பகவானும் கேது பகவானும் அசுரர்களாக இருந்தாலும் தேவர்கள் பெற இருந்த அமிர்தத்தை தாங்களும் மோகினி அவதாரப் பெருமாளிடமிருந்து பெற வேண்டும் என்று தேவர்களுடன் மறைந்து விருந்துண்பதற்காக அமர்ந்தபோது அவர்களுக்கு பெருமாள் அமிர்தத்தைப் பரிமாறினாலும், தேவர்களான சூரியனும் சந்திரனும் இவ்வாறு அசுரர்களே தேவ வடிவெடுத்து விருந்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்று மோகினி அவதாரப் பெருமாளின் ‘காதைக் கடித்தபோது’ பெருமாள் கோபம் அடைந்து ராகு கேது அசுரர்களை கரண்டியால் தாக்கவே அவர்கள் தங்கள் உடலையும் தலையையும் இழந்து சாயா கிரகங்களாக விண்ணுலகம் ஏகினர்.

எப்படி மின்சாரம், காந்த சக்தி என்ற அடிப்படை சக்திகளை நாம் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் அந்த சக்திகள் இன்றி நாம் ஒரு நொடியும் இப்பூவுலகில் நிலைத்திருக்க முடியாதோ, அது போன்றதே இந்த ராகு கேது மூர்த்திகள் கண்ணுக்குத் தெரியாத நிழல் வடிவில் இருந்தாலும் அவர்களின் சக்தி அளப்பரியதே.

சற்றே கூர்ந்து நோக்கினாலும் பெருமாளின் மோகினி அவதாரம் ராகு கேது மூர்த்திகளை அமிர்தக் கரண்டியால் தாக்கியது ஒரு அற்புத அனுகிரகமே என்பது தெரியவரும். பொதுவாக, அமிர்த சக்திகள் என்பவை அமிர்த சக்தி திரவியங்களிலும், அமிர்தம் பொதியும் மூலிகைகளிலும், அமிர்த நேர காலத்திலும் பொலியும் என்றாலும் நாம் அறியா எத்தனையோ ஆயிரம் முறைகளால் நாம் அமிர்தத்தைப் பெறலாம். அதில் ஒன்றுதான் இவ்வாறு திரயம்பகேஸ்வர வழிபாட்டில் ஆடி மாதம் முழுவதும் திரளும் அமிர்த சக்திகள். இதை நாம் நன்முறையில் பெறும் முகமாகவே இங்கு பலவித வழிபாட்டு முறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இங்கு நீங்கள் காணும் வீடியோவில் அமிர்த சக்திகளை நிலைநிறுத்தும் கருட பகவானின் காட்சியைக் காணலாம். கருட பகவான் வானில் பறக்கும்போது நாராயணா நாராயணா என்று கூறி ஆறு முறை வலது இடது கன்னங்களை சூரிய விரலால் தொடும் வழிபாட்டு முறையை நீங்கள் அறிவீர்கள். பொதுவாக, மனிதர்களின் நிழலை யாரும் மிதிக்கக் கூடாது, கோபுரத்தின் நிழலும் நம் வீட்டுக் கூரைகளின் மேல் விழக் கூடாது என்ற நியதி உண்டு. மக்களின் கர்மங்களே நிழல்களே, சாயா பிம்பங்களாக இவ்வாறு நிழலாக பதிவதால் அந்நிழல்கள் நமக்கு கர்மவினைப் பெருக்கத்தை உருவாக்கும் என்பதே இதன் முக்கிய காரணமாகும்.

சாயா என்பதற்கு சாயாத, நிலைத்த, கீழே விழாத என்ற பொருளும் இருப்பதால் குருவின் அனுகிரக சக்தி ஒன்றே இவ்வாறு சாயா கிரகங்களின் நிழல் தன்மையை ‘சாயாத’ என்ற நிலைத்த தன்மையாக மாற்றும் சக்தி உடையது என்று உணர்த்துவதே திருநள்ளாறு தலத்தில் விழும் கருட மூர்த்திகளின் நிழல் தன்மையும், இத்திருத்தல நள தீர்த்தத்தில் விழும் சனீஸ்வர மூர்த்தியின் வாகனமான காக்கையின் நிழல்களும் ஆகும்.

நாம் கருட மூர்த்தியை வானில் தரிசிக்கும்போது ஆறுமுறை நாராயணா நாராயணா என்று சொல்லும்போது அதில் சுக்ர சக்தி பிரவாகம் ஏற்படுகின்றது அல்லவா? இந்த சுக்ர சக்திகள் (6 x 4 = 24) என்றவாறு நாராயண அட்சரங்களைக் கொண்டிருக்கும். இந்த 24 அட்சரங்களும் சேரும்போது அதில் திரள்வதும் 2+4=6 என்ற அமிர்த சக்திதானே? இந்த அமிர்த சக்திகள் 2, 4 என்ற சந்திரன் ராகு என்ற கிரகங்களுக்கு உரித்தான எண் சக்தியைக் கொண்டிருப்பதால் அது ராகுவுடன் பகைமை கொண்ட சந்திரனை இணைப்பதாக ஆகும். 4 எனும்போது அது 2 என்ற சந்திர சக்திக்கு குசா சக்தியாக விளைந்து, ராகுவிற்கு உரிய எண் சக்தியுடன் திகழ்ந்தாலும், குசா சக்தி என்பது நன்மையையே அருளும் என்ற குரு வாக்கியத்தின்படி செயல்படும். அது மட்டுமல்லாமல் இந்த சக்திகளை முழுமைப்படுத்தவே நாம் சூரிய விரலால் இரு கன்னங்களிலும் அமிர்த சக்திகளைப் பதிக்கின்றோம். இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி சூரிய விரலைப் பதிக்கும்போது ஒன்றிற்கு இரண்டு என்ற குசா சக்திகள் அங்கு உருவாகின்றன அல்லவா?

ராகு பகவான் பெருமாளிடம் பெற்ற அமிர்த சக்திகளை தனக்கென வைத்துக் கொண்டாரா என்ன? இல்லவே இல்லை. இதை இங்கு நள தீர்த்தத்தில் பொலியும் அமிர்த வர்ஷம் மூலம் நாம் நேரில் கண்டு இன்புறலாம். நம் சற்குரு உடல் நலம் குன்றி இருக்கையில் திருநள்ளாறு நள தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் பெற்று பருகியதை நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். எத்தகைய உடல் நலக் கேடான சமயத்திலும் அடியார்களின் நலனையே கருதி அவர்களுக்கு அமிர்த சக்திகளை வர்ஷித்தவரே நம் சற்குரு என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றே.

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி

பெரும்பாலும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தியை பிள்ளையார் பூமியில் பிறந்த நாளாக, தோன்றிய நாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். பல பஞ்சாங்கங்களிலும் பிள்ளையார் சதுர்த்தியை புரட்டாசி மாதத்தில் குறித்து இருப்பதைக் காண்கிறோம். எதற்கும் இறுதி முடிவு என்பது சித்தர்கள் கூறும் வழியாக இருப்பதால், அடியார்கள் நம் சற்குரு காட்டிய வழியில் நடந்து ஆவணி மாதம் 3ம் தேதி (20.8.2023) ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் சுக்ல பட்ச சதுர்த்தி திதியையே பிள்ளையார் சதுர்த்தியாக கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

களிமண் பிள்ளையாரை  கடையில் வாங்கும் நேரம் நல்ல சுப ஹோரையில் அமைய வேண்டும் என்பது முக்கியம்.  ஆவணி மாதம் நாம் இவ்வாறு களிமண் பிள்ளையாரை வாங்க முடியாது என்ற நிலை ஒரு வேளை ஏற்பட்டால் களிமண்ணில் காவிரி கங்கை தீர்த்தத்தை கலந்து பிள்ளையாரைப் ‘பிடிக்கும்படி’ கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீகனிந்தகனி விநாயகர்
திருஅண்ணாமலை

ஆவணி மாதம் என்பது சிம்ம ராசியில் சூரியன் பிரகாசிக்கும் மாதமாக இருப்பதால், பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மூன்றாம் தேதியில் ஞாயிற்றுக் கிழமை ஆதித்ய ஹஸ்த நாளில் அமைவது என்பது எத்தகைய சிறப்பு? இவ்வாறு அடியார்கள் தங்கள் ‘ஹஸ்தம்‘ கொண்டே அதாவது கையால் ஹஸ்தம் நட்சத்திரம் துலங்கும் நாளில் பிள்ளையாரைப் பிடிப்பது என்பது எத்தகைய பேறு?

பிள்ளையாருக்கு ஒன்பது
வண்ணக் குடை

இவ்வாறு களிமண்ணால் பிள்ளையாரை உருவாக்கும் நேரம் 20.8.2023 காலை சுமார் 8.30 மணிக்கு அமைவது சிறப்பாகும். அடியார்கள் தாங்களாகவே பிள்ளையாரை உருவாக்க வேண்டி வந்தால் இதற்காக  சுத்தம் செய்யப்பட்ட களிமண்ணை முன்னரே சேகரித்து வைத்துக் கொள்தல் தவறு கிடையாது.

இன்றைய பிள்ளையார் சதுர்த்தி ஆதித்ய ஹஸ்த நாளில் அமைவதால் பச்சரிசி மாவால் இதய கமல கோலம் வரைந்து அதன் நடுவில் பிள்ளையாரை வைத்து வழிபடுதல் சிறப்பாகும். இவ்வாறு வனவாச காலத்தில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வெற்றிலையின் மேல் வைத்து ராமபிரான் வழிபட்டதால்தான் ராமபிரான் அகத்திய முனிவரால் ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திர உபதேசத்தைப் பெற்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

ஒரு ஒப்பற்ற அவதார மூர்த்தியே ஒரு மந்திரத்தை அகத்திய முனிவரிடம் பெறுவதற்கு எத்தகைய கடினமான விரத வழிபாட்டு நியதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றால்  நாம் எளிதில் இந்த மந்திரத்தை இன்று பெறுவதற்கு நம் முன்னோர்கள் எத்தகைய விரத முறைகளை எல்லாம் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்களை குறைந்தது ஒரு நாழிகை நேரமாவது தியானிக்க வேண்டிய நேரமே இந்த பிள்ளையார் சதுர்த்தி நாளாகும்.

வரும் பிள்ளையார் சதுர்த்தி ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுவதால் அடுத்த திங்கட் கிழமை அன்றே பிள்ளையாரை விசர்ஜனம் செய்ய வேண்டி வரும். இவ்வாறு முழு முதற் கடவுளை ஒன்பது நாட்களுக்கு முழுமையாக ஆராதனை செய்யக் கூடிய இனிய சந்தர்ப்பம் கனியும் ஆண்டே சோபகிருது ஆகும்.

ஒரு யுகத்தில் பிள்ளையார் சதுர்த்தி திகழும் ஆவணி மாதத்தையே வருடத்தின் முதல் மாதமாக ஏற்று வழிபாடுகள் செய்து வந்தனர். இத்தகைய காணாதிபத்ய சக்திகள் திகழும் சோபகிருத வருடமாகத் திகழ்வது எத்தகைய பேறு.

இதை நாம் பயன்படுத்தும் விதமாக வழக்கமான ஒவ்வொரு நாளுக்கும் உரிய வண்ணத்துடன்  ரோஸ், வெள்ளை என்பதையும் சேர்த்து ஒன்பது வண்ணங்களால் ஆன குடையை  தயாரித்து அதை பிள்ளையாருக்கு ஆபரணமாக அளித்து வழிபடுதல் சிறப்பாகும். அதே போல் இந்த ஒன்பது தினங்களிலும் மற்ற நைவேத்ய பிரசாதங்களுடன் இரவில் ஒன்பது வண்ண பாலும், பகலில் ஒன்பது வண்ண கெட்டி தயிரும் (yogurt dessert), ஒவ்வொரு நாளும் அன்றைக்கு உரிய வண்ணத்துடன் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

இயன்றால் நவரத்னங்களால் கணபதிக்கு அலங்காரம் செய்து வழிபடுதல் சிறப்பாகும்.

இத்தகைய பிள்ளையார் சதுர்த்தி குழப்பங்கள் திரிசிரன் காலத்திலேயே நடந்த ஒன்றுதான். ஒருமுறை திரிலோக சஞ்சாரியான நாரதர் திருச்சியை அடைந்து திரிசிர மகாராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்று மகிழ்ந்த திரிசிரன் நாரதருக்கு ஏகப்பட்ட பழங்கள் பலகாரங்கள் படைத்து அவரை உண்ணுமாறு வேண்டிக் கொள்ள நாரதரோ, “என்ன, திரிசிரா, நான் விரதமிருக்கும் காலம் அறிந்து விதவிதமான உணவுப் பண்டங்களை எனக்கு அளிக்கிறாயே?” என்று கேட்டார்.

திரிசிரன் குழப்பமடைந்து, “சுவாமி, இப்போது தாங்கள் விரதமிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதே?” என்றான். நாரதரோ, “என்ன திரிசிரா, ஆவணி மாதம் வரும் பிள்ளையார் சதுர்த்தி திருநாளைக் கொண்டாட ஆடி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்திலேயே விரதத்தை ஆரம்பிப்பது என்பது தொன்று தொட்டு வரும் முறைதானே...?” என்று ஒன்றுமறியாதவர் போல் கேட்டார்.

ஸ்ரீஅகத்திய மாமுனி
திருக்குற்றாலம்

“ஆமாம், சுவாமி, தாங்கள சொல்வது சரிதான். ஆனால், இந்த பிள்ளையார் சதுர்த்தி புரட்டாசி மாதத்தில் வருவதாக அல்லவா ஜோதிடர்கள் கூறினார்கள்...”, என்றான் திரிசிரன். “இது வழக்கமான குழப்பம்தான். ஆதி மாதத்தில் வருவதுதானே ஆதி ஈசனை வணங்கும் சரியான முறை, அதனால் இன்றிலிருந்தே ஆடி மாதத்தில் விரதத்தை ஆரம்பித்து ஆவணி சதுர்த்தி அன்று பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடி உனக்கும் நாட்டு மக்களுக்கும் நலம்பல பெருகச் செய்வாயாக...”, என்று கூறினார். மேலும் தொடர்ந்து, “உனக்கு ஏதாவது இவ்விஷயத்தில் குழப்பம் இருப்பதாகத் தெரிந்தால் பொதியமலை அகத்திய பிரானை சந்தித்து மேலும் விளக்கங்களைப் பெறுவாயாக...”, என்று கூறி மறைந்து விட்டார் திரிலோக சஞ்சாரி.

சூரியன் பிரவேசிக்கும் மாதத்தைக் கொண்டேதான் அந்த மாதப் பிறப்பு நிகழ்கிறது. இதில் சூரியன் பிரவேசிக்கும் மாதமாக ஆவணி இருப்பதால் அது ஆதி மாதம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

திரிசிரன் உயிரினும் மேலாக நாட்டு மக்களை மதித்து நடந்ததால் அவர்களுக்கு ஒரு நல்ல பலன் விளைகிறது என்றால் அதை முதலில் பெறுவதுதான் உத்தம மன்னனின் உயிர் மூச்சாக இருந்ததால் உடனே தன் புஷ்பக விமானத்தில் ஏறி பொதிய மலையை நோக்கிப் பறந்தான் திரிசிரன்.

திரிசிரனை அன்புடன் வரவேற்ற அகத்திய மகாமுனியும், “இதில் சந்தேகம் ஏற்படுவதற்கு என்ன காரணம், திரிசிரா? ஆதி பகவன் பிள்ளையார் பூமியில் தோன்றியது ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி அன்றுதானே. எனவே பிள்ளையார் சதுர்த்தியை ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடுவதுதானே முறை...” என்று கூறி ஒரு மணம் மிகுந்த ரோஜா மலரை திரிசிரனுக்கு பிரசாதமாக அளிக்கவே அந்த அற்புத சித்த மாமுனியின் பிரசாதத்தைப் பெற்ற திரிசிரன் மனம் குளிர்ந்து கண்களை மூடி அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டான். தேனருவி பெருகும் பொதிய மலையையே கண்களில் ஒற்றிக் கொண்ட ஒரு குளிர்ச்சியை அடைந்தான் திரிசிரன்.

“கண்களைத் திறந்து அந்த மலரைப் பார்...” என்றார் அகத்திய பெம்மான்.

கண்ணைத் திறந்து தன் உள்ளங்கையை விரித்து பார்த்தான். அங்கே இரு கைகளிலும் களிமண் பெருகி ஒரு மலைபோல் உயர்ந்து நின்றதைக் கண்டான். செய்வதறியாது அகத்திய முனியைப் பார்த்தான். அகத்தியர் சிரித்தவாறே, “கனிந்த உன் பக்திக்கு மகிழ்ந்து பிள்ளையாரே அளித்த கஜனான லோகத்து பிரசாதம், இதை ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி அன்று உன் கைகளால் பிள்ளையார் பிடித்து பிள்ளையாரை வழிபட்டு மகிழ்ச்சி அடைவாயாக...”, என்று திரிசிரனுக்கு ஆசி வழங்கினார் அகத்திய மகா முனி.

இவ்வாறு அகத்திய பிரானிடமிருந்து ஒரு ரோஜா மலரைப் பெறும் பாக்கியத்தை நாம் பெறா விட்டாலும் நம் கோவணாண்டி தரிசித்த அகத்தியரின் மேனி வண்ணமான அந்த ரோஸ் வண்ணத்தையாவது நாம் குடையில் வைத்து பிள்ளையாருக்கு அளிக்கும் பாக்கியம் நமக்கு பெருகுவதே இந்த சதுர்த்தி.

இவ்வாறு திரிசிரன் பெற்ற அனுகிரகம் என்றோ நடந்தது கிடையாது, அது இன்றும் தொடரும் இனிய வைபவமே என்று உணர்த்துபவரே நம் சற்குரு. ஒரு விநாயக சதுர்த்தி அன்று தான் பூஜித்த விநாயகரைப் பெருமானை காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் விசர்ஜனம் செய்து பிள்ளையார் சக்திகளை இந்த உலக அன்பர்களுக்கு எல்லாம் அளித்த குரு கருணையை நாம் ஏற்கனவே விளக்கி உள்ளோம். திரிசிரன் ஒரு யுகத்தில் பிள்ளையாரை விசர்ஜனம் செய்த அதே காவிரிப் படித்துறையில்தான் நம் சற்குருவும் பிள்ளையாரை விசர்ஜனம் செய்தார் என்றால் யுகயுகமாய்த் தொடரும் சற்குருமார்களின் கருணை விலாசம்தான் என்னே என்னே!

ஆனால் எத்தகைய மனக் குழப்பங்கள் தோன்றினாலும் அனைத்தையும் வென்று மனச் சமாதானத்தை உருவாக்கி ஆழ்கடல் போன்ற மன அமைதிக்கு வழிகாட்டுபவர்தானே சற்குரு. இதைக் குறிப்பதே மல மாதம் என்ற அபரிமித தெய்வ, தேவ, யோக, ஞான, பக்தி சக்திகள் பன்மடங்காய்ப் பெருகும் ஆடி மாதமாகும். மல மாதத்தை காரணம் காட்டி வரலட்சுமி விரதத்தையே தள்ளிப்போடும் விந்தையை பல பஞ்சாங்களில் காணலாம்.. ஆம், வரலட்சுமி விரதம் என்பது அனைத்து விதமான லட்சுமி கடாட்ச சக்திகளையும் அருளும் விரத வழிபாட்டு முறைதானே?!

எனவே வரலட்சுமி விரதத்தை இந்த ஆடி மாதப் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமை அதாவது 28.7.2023 அன்று லட்சுமி தேவிக்கு உரிய அனுஷம் நட்சத்திரம் கூடும் நாளில் கொண்டாடுவது என்பது கிடைத்தற்கரிய பேறே. இந்த நன்னாள் சுக்ல பட்சம் தசமி திதியுடன் சேர்ந்து வருதல் என்பது பாக்யத்திலும் பாக்யமே. அனைத்திலும் வெற்றியைச் சூடும் ஆனந்தத் திருநாள் இதுவே!

அங்கநல அங்கவள தேவதைகள்

தேவதைகளில் எத்தனையோ வகை உண்டு. இவற்றில் அங்கநல அங்கவள தேவதைகள் என்பவை மலமாதத்தில் மட்டுமே திருஅண்ணாமலையை வலம் வந்து அதன் பலன்களை எல்லாம் சமுதாயத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்கின்றன. எந்தவித மந்திர தந்திர வழிபாட்டு முறையையும் எதிர்பார்க்காதவர்கள் என்பதே இவர்களின் தனித்தன்மை ஆகும். நல்ல எண்ணத்தில், நல்ல செயல்களில் மகிழும் தேவதை தெய்வங்கள். மலமாதம் வளர்பிறை நாட்களில் அங்கநல தேவதைகளும், மலமாத தேய்பிறை நாட்களில் அங்கவள தேவதைகளும் திருஅண்ணாமலையை வலம் வருகின்றன.

மின்னல் போன்ற ஒளிப் பிழம்பு வடிவத்திலும், குற்றால நீர் வீழ்ச்சி சாரலை ஒத்தும் இவர்களின் அனுகிரகம் அமையும். இத்தகைய தேவதைகளின் அபூர்வ அனுகிரகத்தை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். உலக அழகிகள், ஒலிம்பிக் போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் போன்ற அனைவருமே ஏதாவது ஒரு பிறவியில் இத்தகைய தேவதைகளின் அனுகிரகத்தைப் பெற்றவர்களே.

இந்த அரிய அனுகிரகத்தை நாம் பெறும் விதமும் நம் சற்குருவால் சுட்டிக் காட்டப்படுகிறது. குருடர்கள், செவிடர்கள், உடல் ஊனமுற்றோர், அங்கம் குறைவானவர்கள் போன்றோருக்கு வாகன வசதி அளித்து அவர்களைக் கூட்டிக் கொண்டு கிரிவலம் வந்து அவர்களுக்குத் தேவையான உணவு, சிற்றுண்டி போன்ற வசதிகளை அளித்து மீண்டும் அவர்கள் இருப்பிடம் கொண்டு சேர்த்தலால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரும் எதிர் வரும் பிறவிகளில் இந்த அங்கநல அங்கவள தேவதைகளின் அருளால் நல்ல பிறவிகளைப் பெறுவர்.

அங்கநல சக்திகள் பொலியும்
கேரள புனித பூமி

திருஅண்ணாமலை மட்டும் அல்லாது ஐயர்மலை, பழநி, திருச்செங்கோடு, பெருமாள்மலை போன்ற மலைத் தலங்களை வலம் வந்து இத்தகைய அரிய பலன்களை இந்த மலமாதம் முழுவதும் பெறலாம். தன் மறைவுக்குப் பின்னர் மகாத்மா காந்தி ஒரு முறை பித்ரு லோகத்தில் இவ்வாறு திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்று விரும்பிய போது அங்குள்ள தேவதைகள் அவரை ஒரு கனத்த மழையின் ஊடே திருஅண்ணாமலைக்கு அழைத்து வந்தனர் என்பதை ஒரு சில அடியார்கள் நம் சற்குரு கூற கேள்வியுற்றிருக்கலாம். பாரத தேச மக்களின் ஒற்றுமைக்காகவே பாடுபட்டு உயிர் துறந்த அந்தப் புனித ஆத்மா கிரிவலம் வரும்போது கிரிவலப் பாதையில் உள்ள ‘பல கட்சிக் கொடிகளைக் கண்டு’ உள்ளம் வருந்தும் என்பதற்காக ஒரு பெரும் மழையை தோற்றுவித்தனர் பித்ரு தேவதைகள். அந்த மழைத் துளிகளில் அபூர்வமான அங்கநல அங்கவள தேவதைகளின் அருட்பிரவாகமும் கலந்து நின்றது என்பதும் நம் சற்குரு அளிக்கும் சுவையே.

ஸ்ரீஅங்கவளநாயகி அம்மன்
கோனேரிராஜபுரம்

அங்க நலம், அங்க வளம் என்ற பதங்களை நாம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இது வெறும் செழிப்பான உடல் வளத்தையோ, உடல் ஆரோக்யத்தையோ மட்டும் குறிப்பதன்று என்பதை உணர்வோம். நாம் ஒரு பொருளைக் காணும்போது அதை முழுமையாகக் காண வேண்டும். மகான்கள், பூரண யோகிகளைத் தவிர யாருமே இத்தகைய முழுமையான ‘பார்வையைப் பெற்றவர்கள்’ அல்ல. ஓவியர்களில் ரவிவர்மா இத்தகைய முழுமையான பார்வையைப் பெற்றவர். அதனால்தான் அடியார்கள் ரவிவர்மாவின் ஓவியத்தை வைத்து வணங்கும்படிக் கூறுகிறோம்.

முழுமையான பார்வையை ஒரு ஆணோ பெண்ணோ பெற்றிருந்தால் அவர் வேறு எந்த ஆணையோ பெண்ணையோ ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்பதே முழுமையான பார்வையின் வெளிப்படையான அடையாளம். இவ்வாறு ஒருவரைப் பூரணமாக்குவதும் இந்த அங்கநல அங்கவள தேவதைகளின் அனுகிரகமாகும். எந்த அளவிற்கு நாம் இந்த மல மாதத்தில் வழிபாடுகளை குரு நம்பிக்கையுடன் நிறைவேற்றுகிறோமோ அந்த அளவிற்கு நம் பார்வையில் ‘முழுமை’ பெறுவோம் என்பதே இந்த மல மாத்தில் திரளும் அபூர்வ அனுகிரக சக்திகளாகும்.

பிரபஞ்சத்திற்கு என்று ஒரு லயம் உண்டு என்பார் மாதா அமிர்தானந்தா. இந்த லயம் பிரபஞ்சத்தில் திகழும் எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கும் என்றாலும் இந்த லயத்தைப் புரிந்து கொண்டவர்களே தாங்கள் மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் வெற்றி வாகை சூடுகிறார்கள். பக்தர்களுக்கு லயம் என்பது இறைவனுடன் இணையும் இனிய வைபவம்தானே. இல் வாழ்க்கையில், இவ்வாழ்க்கையில் புனித லயத்தை தோற்றுவித்து, வெற்றிகளைக் குவித்து, அவ்வாழ்வில், இறை வாழ்வில் இனிமையைத் தருவதற்கு அருள்புரிபவர்களே அங்கமய அமிர்தமய தேவதைகள்.

மலமாதத்தில் எந்நாளிலும் இத்தகைய கிரிவல வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனினும், வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தின நாளன்று செவ்வாய்க் கிழமை அமாவாசை வியதி பாத யோகம் இணையும் நாளில் இத்தகைய கிரிவலத்தை அடியார்கள் மேற்கொள்தல் நலமே.

மல மாதம் முழுவதும் திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை கிரிவலம் வந்து வழிபடும் அங்கநல அங்கவள தேவதைகள் மல மாத இறுதியில் மின்சார விளக்கு ஒளி இல்லாத திருக்கோயில்களின் மூலத்தான கருவறையில் தங்கள் அனுகிரக சக்திகளை தாரை வார்த்து அளிக்கின்றனர். இந்தப் பலன்களை எல்லாம் நம் அடியார்கள் பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய அனுகிரகத்தை சிறப்பாக அளிக்கக் கூடிய கேரள திருத்தலங்களை தரிசிக்கும்படி நம் சற்குரு சிபாரிசு செய்கின்றார் என்றால் நம் சற்குருவின் கருணைக்கு எல்லைதான் உண்டோ?

கோட்டயம் குமரிகள் என்று கேரளப் பெண்கள் உலகப் புகழ் பெறுவதற்கு அவர்கள் தினமும் பெறும் இத்தகைய அங்கவள அங்கநல தேவதைகளின் அருட் கடாட்சமும் முக்கிய காரணமாகும்.

படைப்புகள் பலவிதம்

பிரம்மாவே அனைத்து உயிர்களின் தந்தை என்பதை நாம் அறிவோம், ஆனால், பிரம்ம தேவர் ஒருவர்தான் படைப்பு தொழிலுக்கு உரியவர் என்பது கிடையாது. இதை சற்றே விளக்குவோம்.

அரவிந்தமாதா அன்னையிடம் ஒரு பக்தர், “பிரம்மாதான் உயிர்களை படைக்கிறார் என்றால் அதில் ஏன் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு எல்லாம் உருவாகிறது?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டார். அன்னை சற்று நேரம் அவரை உற்றுப் பார்த்து விட்டு, “நீ சொல்வது முற்றிலும் சரியே, பிரம்மாதான் உயிர்களைப் படைக்கிறார், அதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை, ஆனால், அவர் ஒருவர் மட்டும்தான் படைப்புத் தொழிலுக்கு உரியவர் என்று நினைக்காதே. உண்மையில் பெரும்பாலான மனித உயிர்களைப் படைப்பவர்கள் மனிதர்கள்தான்...”, என்றார் அன்னை.

ஆடிப்போய் விட்டார் கேள்வி கேட்டவர்...

திருஅண்ணாமலை

அன்னை தொடர்ந்து, “நீ (அதாவது மனிதன்) என்ன பெரிய ஆளா உன்னை வந்து பிரம்மா படைப்பதற்கு? உதாரணமாக, நீ ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு அதை அவருக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டாய் என்று வைத்துக் கொள். அப்போது என்ன ஆகும்? எத்தனை பிறவிகள் ஆனாலும் அந்த ஒரு லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து அவருக்கு ஏதாவது ஓரு பிறவியில் திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு இந்த இருவருக்கும் ஏற்படும் பிறவிகள் உன்னுடைய செயலால்தான் உண்டானது என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்...,” என்றார்.

ஆ பிரம்ம கீட ஜனனீ என்ற லலிதா சகஸ்ரநாமத்தில் லலிதா பரமேஸ்வரியை போற்றுகிறோம். பசு பிரம்மா புழு போன்ற உயிர்களைத் தோற்றுவிப்பவளே லலிதா பரமேஸ்வரி என்பது இதன் பொருள். அப்படியானால் பசு பிரம்மா புழு என்ற உயிர்கள் அனைத்தும் அன்னையின் பார்வையில் ஒன்றாகத்தானே துலங்கும். இதைத்தான் இறைவனை சர்வத்ர சம தர்சன என்று உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் ஈசன் என்ற புகழ்கிறார்கள் பெரியோர்.

ஒரு முறை நாரத மகரிஷி பெருமாளிடம், “சுவாமி, நாராயணா நாராயணா என்று சதாசர்வ காலமும் நாராயண நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறேனே அந்த நாராயண நாமத்தின் மகிமையை தாங்களே தங்கள் திருவாயால் கூறினால் அது எந்த அளவிற்கு சுவையாக இருக்கும்?” என்று கேட்டார். பெருமாள் பெரிதாக நகைத்து, “என்ன நாரதா உன் திருவிளையாடலை என்னிடமே ஆரம்பித்தால் எப்படி? உன்னுடைய திருவிளையாடலுக்கு உகந்த இடம் பூலோகம்தானே ... எனவே அங்கு சென்று உன்னுடைய திருவிளையாடலைத் தொடர்வாயாக ...”, என்று கூறினார்.

நாரதர் வேறு வழியின்றி வைகுண்டத்திலிருந்து இறங்கி பூலோகம் அடைந்தார். அங்கு ஒரு காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு மர நிழலில் மண்ணிலிருந்து ஒரு புழு தோன்றுவததைக் கண்டார். உடனே விரைந்து அதன் அருகில் சென்று “நாராயணா” என்று ஓதினார். ஆனால், நாராயண நாமத்தைக் கேட்ட மறுவிநாடியே அந்தப் புழு சுருண்டு விழுந்து இறந்து விட்டது. நாரத மகரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன இது, நாம் ஒன்று நினைக்க வேறொன்றாக நடந்து விட்டதே...” என்ற பலத்த சிந்தனையுடன் காட்டில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

சற்று தூரம் சென்றவுடன் அங்கே ஒரு மான், குட்டியை பிரசவித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். ஆஹா இதுவே தக்க தருணம் என்று நினைத்துக் கொண்டு சென்று அந்த மானின் அருகில் குனிந்து “நாராயணா” என்றார். நாராயண மந்திர ஒலி கேட்ட அந்த விநாடியே அந்த மான் குட்டி மயங்கி விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. திடுக்கிட்டார் நாரத மகரிஷி... அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

பலவாறாக தன்னுடைய மூளையை மேலும் மேலும் குழப்பிக் கொண்டே சென்ற நாரதர் தான் காட்டை விட்டு நாட்டிற்குள் சென்றதையே கவனிக்கவில்லை. அப்போது பலத்த ஆரவாரம் தன்னருகே கேட்கவே சிந்தனையிலிருந்து மீண்டு தலையை தூக்கிப் பார்த்தார். அந்நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து, பழம் மாலைகள் வஸ்திரங்கள் போன்ற மங்கலப் பொருட்களை எல்லாம் அவர் திருவடிகளில் சமர்ப்பித்து அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

ஒன்றும் புரியவில்லை நாரதருக்கு... ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்க்கவே அந்நாட்டின் மந்திரியானவர் நாரதரிடம், “தேவரிஷி நாரதருக்கு எங்கள் வணக்கம். பல்லாண்டுகளாக குழந்தை வாரிசு இன்றி தவித்த எங்கள் மன்னருக்கு ஒரு இளவரன் தோன்றி உள்ளான். ராணி குழந்தைப் பேற்றிற்காக சென்றிருக்கிறாள். இந்த அற்புத முகூர்த்தத்தில் நிகழ்ந்த தங்கள் நல்வரவால் நாங்கள் பெரும் பேறு பெற்றோம். இன்னும் யாரும் இளவரசனைப் பார்க்கவில்லை, நீங்கள்தான் இளவரசனை முதலில் பார்த்து ஆசி வழங்க வேண்டும்...” என்றார்.

நாரத மகரிஷியின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நாரத மகரிஷியைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். உண்ணும்போதும், உறங்கும்போதும், எப்போதும் நாராயணா நாராயணா என்று நாராயண நாமத்தைத் தவிர வேறு எதையுமே சொல்ல அறியாதவர்.

கிருஷ்ணாங்காரக ஒளி
பிரவாகத்தில் திருஅண்ணாமலை

அப்படிப்பட்ட நாரத மகரிஷி பிறந்த இளவரசனை முதலில் பார்த்தால் நாராயண நாமத்தைத்தானே கூற வேண்டும். ஆனால், ஏற்கனவே இருமுறை நாராயண நாமத்தை உச்சரித்து அதனால் விளைந்த ‘பரிதாப நிலையை’ உணர்ந்த நாரத மகரிஷி மீண்டும் நாராயண நாமத்தைக் கூற பெரிதும் தயங்கினார்.

“சரி, என்ன நடந்தாலும் நடக்கட்டும்...” என்று தன்னுடைய மனதை திடப்படுத்திக் கொண்டு பிறந்த அந்த இளவரசனின் தங்கத் தொட்டில் அருகில் சென்று அந்த குழந்தையின் காதில் நாராயணா என்று ஓதி விட்டு அந்த குழந்தை உயிர் விடுவதைப் பார்க்க சகிக்காமல், திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து மீண்டு வேகமாக அந்த அறைக்கு வெளியே நடக்க ஆரம்பித்தார் நாரத மகரிஷி.

“நில்லுங்கள், நாரத மகரிஷியே...”, என்ற ஒரு பலத்த குரல் அவர் ஓட்டத்தை தடுத்து நிறுத்தியது. சுற்றும் முற்றும் பார்த்தார் நாரதர்... அந்த அறையில் அவரைத் தவிர வேறு யாருமே தென்படவில்லை... குழம்பினார் நாரதர்... “தங்களின் நாராயண அமிர்தம் பருகிய இளவரச குழந்தைதான் பேசுகிறேன்...”, என்ற குரல் தொடர்ந்தது. ஆம், சந்தேகமே இல்லை, பிறந்த குழந்தைதான் பேசியது. ஆயிரம் சூரிய பிரகாசம் கண்களில் குடி கொள்ள அந்த குழந்தையை நோக்கி ஓடினார் நாரத மகரிஷி. “நாரத மகரிஷியே, அடியேனுடைய தாழ்மையான வணக்கங்கள் ... ” அந்த குழந்தை தொடர்ந்தது.

“கேவலம் ஒரு புழுவாகப் பிறந்தேன் மண்ணில் ...”
“உங்கடைய நாராயண நாமத்தின் மகிமையால் உயர்வு பெற்று உடனே ஒரு மானின் வயிற்றில் பிறந்தேன். மீண்டும் உங்கள் பெருங்கருணையால் நாராயண நாமத்தைக் கேட்டு இந்த நாட்டின் இளவரசனாகப் பிறக்கும் ஒரு சிறந்த பேற்றையும் பெற்றேன். திரிலோக சஞ்சாரியான உங்களைத் தரிசிப்பதே பெரும் பேறு. அவ்வாறிருக்க தங்களை இனம் கண்டு கொண்டதோடு மட்டும் அல்லாமல் பிறந்த உடனே பேசும் வல்லமையையும் தங்கள் திருவருளால் பெற்றேன். அத்தகைய உத்தமரிடம் இருந்து நாராயண நாமத்தை உபதேசமாகப் பெறுவதற்கு அடியேன் உங்களுக்கு என்ன கைமாறு செய்வது என்றே தெரியவில்லை...”, என்றதாம் அந்த நாராயண குழந்தை.

இறைவனின் சக்தி வடிவான ஆஷா சுவாசினி தேவியின் அருட்குழந்தையே அகத்திய பிரான் ஆவார். பிரணவ சொரூபமானவர். முருகப் பெருமானும் ஓங்கார சொரூபியே. ஒலி ஒளி வடிவமே இந்த இரு மூர்த்திகளுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்பார் நம் சற்குரு.

         ஓங்கார அமிர்த ஒளி பிரவாகம் .. முருகப் பெருமான்
         ஓங்கார அமிர்த ஒலி பிரவாகம் .. அகத்திய பெருமான்
         ஓங்கார ஜீவ சக்தி பிரவாகம் .. நம் சற்குருவின் சீடர்கள் அனைவரும்
இந்த பேருண்மையை நாம் உணர்ந்து கொண்டால் நம்மை யாராவது அசைக்க்க்க முடியுமா?

ஒரு முறை அமிர்தானந்தா அன்னையைப் பற்றிக் கூறும்போது, “உங்களில் யாருக்காவது நல்ல காரியம் செய்ய வேண்டும், அதற்குப் பணம் இல்லை என்று தோன்றினால் நீங்கள் அன்னையிடம் சென்று ஒரு பெரிய கல்லைக் கொடுத்து, அம்மா எனக்கு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று கொள்ளை ஆசை, ஆனால், அதற்குரிய வசதி என்னிடம் இல்லை, என்று சொன்னால் போதும். அம்மா, அந்தக் கல்லைத் தொட்டு உங்களிடம் திரும்பக் கொடுத்து விடுவார்கள். அந்தக் கல் ஒரு பெரிய தங்கப் பாறையாகி விடும். அந்த தங்க சுரங்கத்தால் நீங்கள் வேண்டிய நற்காரியங்களை செய்யலாம்...”, என்றார் நம் சற்குரு.

ஸ்ரீகிருஷ்ண பகவானின்
ராசலீலை தத்துவம்

இது திரயம்பக ஈசனின் தூல வழிபாடாகும். இந்த வழிபாடு சூட்சும வழிபாடாக மாறும்போது அங்கு திரயம்பகேசன் எங்கும் பரந்த ஏகாந்த ஜோதியாக மலர்வதால் உங்களுக்கு தங்கம் வைரம் என்ற பாகுபாடே மறைந்து விடும். எவ்வளவு நாட்களுக்குத்தான் தூல வழிபாட்டில் இன்பம் காண்பது, சூட்சும வழிபாட்டில் நாம் மலர வேண்டாமா? அதற்கு வழி வகுப்பதே ஆடி மாத திரயம்பகேச வழிபாடாகும்.

தூலமாக ஒரு வழிபாடு அமையும்போது அங்கு அமிர்தா அன்னை, நம் சற்குரு, கனிந்தகனி பரமாச்சாரியார் என்ற பேதம் தோன்றுவது இயற்கையே. ஆனால் சூட்சும வழிபாட்டில் அனைத்து குருமார்களும் ஒன்றேயான இறைசக்தியாகத் தோன்றுவதால் அங்கு பேதத்திற்கு இடமேயில்லை.

பராசரர் கங்கையைக் கடந்து படகில் சென்று கொண்டிருந்தபோது ஒரு அவதாரம் தோன்றுவதற்கான நல்ல நேரம் கனிந்து நின்றதை அவர் உணர்ந்தார். தன் விருப்பத்தை அந்த படகோட்டியான மச்சகந்தியிடம் கூறவே அவளும் அந்த அவதாரத் தோற்றத்திற்கு இணங்கவே படகைச் சுற்றி காரிருளைத் தோற்றுவித்து அந்த சங்கமத்தில் துவிபாயனர் என்ற வியாச மகரிஷியை உலகிற்கு அளித்தார் பராசரர். வியாச பகவானின் தோற்றம் காரிருளுக்கு இடையே, நடுவே நிகழ்ந்ததால் அவர் கருமையான நிறம் கொண்டார் என்பது பொருள் அல்ல. கருமை என்பது பூரணத்தின் வண்ணமே, வர்ணமே.

கிருஷ்ண பகவான் இவ்வாறு பூர்ண அவதாரமாகத் திகழ்ந்ததால்தான் அவரை அனைவரும் கிருஷ்ணன் என்றே போற்றி மகிழ்ந்தனர். வியாசாய விஷ்ணு ரூபாய என்று கூறுவதும் இத்தகைய பூர்ணம் பெற்ற அவதார குணத்தை விளக்குவதாகும். மீன்கள் கண் மூடிய நிலையிலும் பூர்ண காட்சியைப் பெற வேண்டும் என்று பராசரரும் மச்சகந்தியும் விழைந்ததற்கு இந்த ‘நல்லிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் பேரருளே’ காரணமாகும் என்பது இப்போது விளங்குகிறது அல்லவா?

கண்ணைத் திறந்து ஒரு காட்சியைக் காண்பதற்கும் கண்ணை மூடி ஒரு காட்சியைக் காண்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? கண்களை மூடி விட்டால் வெறும் இருட்டைத் தானே சந்திக்கிறோம். உண்மையில் அந்த இருட்டு நம் சூட்சும சரீரத்தின் பிரதிபலிப்பே. நாம் சூட்சும சரீரத்தைக் காணும் சக்தி பெறாததால் அது வெறும் இருட்டாகத் தோன்றுகிறது. அதனால்தான் நம் சற்குரு, “கண்களை மூடி வெறும் இருட்டைக் காண்பதால் என்ன பயன்? கண்களைத் திறந்து உன்னைச் சுற்றி இருக்கும் பசியால் வாடும் ஏழைகளைப் பார். அவர்களுக்கு எந்நிலையில் உதவலாம் என்பதைச் சிந்தித்து செயலாற்று...,” என்பார்.

திருஅண்ணாமலை

பகவான் கிருஷ்ணர் தன்னுடைய உயிர் மற்றவர்களால் பறிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார். இவ்வாறு தன் உயிரைப் பறிப்பவன்...
          1. படிப்பறிவே இல்லாத பாமரனாக இருக்க வேண்டும்
         2. குரு நம்பிக்கை பூரணமாக விளங்கும் ஒரு உத்தமனாக இருக்க வேண்டும்
         3. தன் பசிக்காக மட்டுமே வேட்டையாடுபவனாக இருக்க வேண்டும்
என்று அவ்வாறு பல தகுதிகளை உடைய ஏகலைவனைத் தேர்ந்தெடுத்தார். ஏகலைவன் ஒரு முறை பசியின்றி பல நாட்கள் வாடியபோது சற்று தூரத்தில் மரக் கிளையில் ஒரு மான் ஆடி அசைவதைப் போன்ற ஒரு காட்சியைக் கண்டான். இது மனிதன் அல்ல, மிருகமே என்று உறுதி செய்து கொண்டு தன் அம்பால் அந்த மானைத் தாக்க, “தனித் துணை சிவமே, வழித் துணை சிவமே” என்ற கோஷத்துடன் கிருஷ்ண பரமாத்மா எம்பிரானுடன் கலக்கும் காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்.

அப்போதுதான் தான் குறி வைத்து அம்பு எய்தது மான் அல்ல, கிருஷ்ண பகவானின் சிவந்த திருவடியே என்பதை அறிந்து துடித்தான். ..

மகாத்மா காந்தியை கோட்சே தன் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். துப்பாக்கிக் குண்டின் மூலமாகவோ, அம்பு துளைப்பதன் மூலமாகவோ, எவ்வழியிலும் ஒரு மனிதனின் உடலை விட்டு உயிர் பிரியும் என்றாலும் பகவான் கிருஷ்ணர் ஏன் இவ்வாறு ஒரு உத்தமனின் அம்பின் மூலமாக தன் இன்னுயிரை எம்பெருமானின் திருவடிகளில் அர்ப்பணித்தார் என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் அதற்கு கிடைக்கும் விடையை உங்களுக்கு கூற இந்த வெப் தளத்தின் ஆயிரமாயிரம் பக்கங்கள் கூட போதாது என்பதால் அந்த அற்புத விடையை நீங்களே கண்டு பேரானந்தம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பராசரர் மச்சகந்தி முதலாக கிருஷ்ண பகவான் நிறைவாக நீங்கள் அறியும் மகாபாரதம் எல்லையற்ற இறை இரகசியங்களை உணர்விக்கும் ‘கிருஷ்ண மாதமே’ இந்த ஆடி மல மாதமாகும்.

கிருஷ்ண லீலை மகத்துவம்

இந்த சோபகிருது ஆடி மாதம் முழுவதுமே கிருஷ்ணாங்காரக ஜோதி திருஅண்ணாமலையில் திகழும் என்பது சித்தர்கள் அளிக்கும் ஒரு வரபிரசாதமாகும்.

கிருஷ்ணாங்காரக ஜோதி என்றால் என்ன?

செவ்வாய் கிழமை, பௌர்ணமி திதி, திருவோணம் நட்சத்திரம் இவை இணையும் புனித நேரத்தில் திருஅண்ணாமலையில் தோன்றுவதே கிருஷ்ணாங்காரக ஜோதி ஆகும். இந்த ஜோதி சக்திகளையே ராச லீலையில் கிருஷ்ண பகவானுடன் நடனமாடிய கோபியர்கள் எல்லாம் பெற்றனர்.

ராஜா என்றால் உயர்ந்தவன், மனிதர்களில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவன். இவ்வாறு ஒரு உயர்ந்த லீலையை, ராச லீலையைப் புரிந்தவனே கிருஷ்ண பகவான்.

ராச லீலையில் அப்படி என்ன சிறப்பு?

ராஜகோபுரத்தில் ராசலீலை
திருஅண்ணாமலை

இங்குள்ள வண்ண ஓவியத்தைப் பார்த்தாலே நீங்கள் ஓரளவு ராச லீலையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். யமுனை நதிக் கரையில் திகழ்ந்த பௌர்ணமி இரவு நிலவொளியில் ஒவ்வொரு கோபியர் பெண்ணிடம் நடனமாட ஒரு கிருஷ்ணன் தோன்றினான் என்றால் இந்த மிக உயர்ந்த லீலையை மனிதர்கள் எவராவது கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா?

ஒருமுறை பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ண கோஸ்வாமி என்ற பக்தரைக்  காண பக்தை மீரா தன் பரிவாரங்களுடன் சென்றிருந்தாள். மீரா ஒரு பெண் என்பதால் பெண்களைப் பார்க்க விரும்பாத கோஸ்வாமி அவளைப் பார்க்க முடியாது என்று நிராகரித்து விட்டார்.

மீரா தன் தோழியிடம், “பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஒருவனே ஆண் மகன், மற்ற அனைவருமே கிருஷ்ணனிடம் பக்தி கொண்ட கோபிகை பெண்களே. கோஸ்வாமி கிருஷ்ண பக்தர் தன்னை இன்னும் ஒரு ஆண் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறார்?” என்று கேட்டாளாம்.

இதுவே முழுமையான ஆண் மகனான கிருஷ்ண பகவானின் பெருமை.

கிருஷ்ண பகவான் துரோபதைக்கு ஆடை அளித்து அவள் மானத்தைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் என்பதை தன் தீர்க தரிசனத்தால் அறிந்து எம்பெருமானை வேண்டி திருஅண்ணாமலையை வலம் வந்தார். திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் வேட்டியைத் தரையில் பரப்பி அதில் நடந்து வந்து திருஅண்ணாமலையை வலம் வந்தார் கிருஷ்ண பகவான். அவ்வாறு பகவான் வலம் வந்த வேட்டிகளே எம்பெருமான் அருளால் ஆயிரம் மடங்குகளாக பெருகி துரோபதையின் மானத்தைக் காத்தன என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியம்.

ராஜ லீலை, ராச லீலை என்றால் என்ன? ராஜா என்றால் மன்னன் என்று பொருள், ராச என்றால் சந்திரன். ராமபிரானுடைய வனவாசத்தில் ராம பிரானைச் சந்தித்து அவரைக் கட்டித் தழுவி தங்கள் பக்தியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பிய ரிஷிகளுக்கு எல்லாம் அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதற்காக ராமபிரான் தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் இடமளித்து அவர்களுடன் கூடி மகிழ்ந்து பக்தி ரசத்தை அவர்கள் அருந்தி இறை பக்தியில் முழுமை பெற வழிவகுத்த இறைத் திருவிளையாடலே ராச லீலையாகும்.

இது போல ஒவ்வொரு கோபியர் பெண்ணுடனும் ஆட வேண்டுமானால் அதற்கும் அருள் வழங்குபவன் அண்ணாமலையான் ஒருவன்தானே. இதற்காக கிருஷ்ண பகவான் தேர்ந்தெடுத்ததே மேற்கூறிய திருவோணம், செவ்வாய்க் கிழமை, பௌர்ணமி இணையும் அபூர்வ முகூர்த்த நாளாகும்.
இத்தோடு நிறைவதா கிருஷ்ண லீலை? ராதை கிருஷ்ண பகவானை விட சற்றே வயதில் மூத்தவள், ஜாம்பவானின் மகளான ஜாம்பவதியோ தொட்டில் குழந்தை. இவ்வாறு பல பல வயது வித்தியாசங்கள், உருவ வேறுபாடுகள் உடைய அனைவருடனும் ஒருவர் நடனமாட வேண்டுமென்றால் அவர்கள் ஒரே வயதுடன் திகழ்ந்தால், மன வளர்ச்சி பேதம் உடையவர்களாக இருந்தால் அது ஒத்து வருமா?

ஒரு வயது குழந்தை ஜாம்பவதியுடன் ‘கிழவனான’ கிருஷ்ண பகவான் நடனமாடினால் அது கேட்பதற்குக் கூட சுவாரஸ்யமாக இருக்காதே? இவ்வாறு யாரோடு எல்லாம் கிருஷ்ண பகவான் நடனமாடுகிறாரோ அவர்கள் உள்ளம் விரும்பும் உன்னத வயது, உருவம், இளமை இவற்றை ஏற்று நடனமாடுவதே ராசலீலையாகும்.

அது மட்டுமல்ல…

ஏதோ ஒரு யுகத்தில் கோபியர்களோடு யமுனை நதிக் கரையில் பௌர்ணமி நிலவொளியில் நடனமாடிய கிருஷ்ண பகவான் நம் உள்ளத்தில் மட்டும் நடனமாட மாட்டானா என்ன? உங்கள் நம்பிக்கையைப் பொறுத்து உங்கள் உள்ளத்திலும் கிருஷ்ண பகவான் திருநடனமிடும் உன்னத பௌர்ணமி நாளே இந்த ஆடி மல மாதமாகும். கிருஷ்ணாங்காரக ஜோதி பூர்ணமாகப் பொலியும் திருநாள்.

மேலே கூறியபடி திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் புதிய எட்டு முழு வேட்டியை விரித்து அதன் மேல் நடந்து வந்து, அந்த வேட்டி முடிவில் மற்றோர் வேட்டியை விரித்து அதன் மேல் நடந்து வந்து, மீண்டும் ஏற்கனவே முதலில் விரித்த வேட்டியின் மேல் நடந்து வர வேண்டும்.

இவ்வாறு இரு புதிய எட்டு முழ வேட்டிகளை மாறி மாறி கிரிவலப் பாதையெங்கும் பரப்பி அதன் மேல் நடந்து வந்து கிரிவலம் வருதே கிருஷ்ணாங்காரக ஜோதி பிராகாசத்தை சாதாரண பக்தர்களும் பெறும் எளிய முறை ஆகும்.

கிருஷ்ண நவநீத சக்திகளை வர்ஷிக்கும்
காஞ்சி கனிந்த கனி

கிரிவலம் நிறைவேறிய பின்னர் இந்த வேட்டிகளை துவைத்து சுத்தம் செய்து யாருக்கு வேண்டுமானாலும் தானமாக அளித்து விடலாம். ஆடி மாதம் பௌர்ணமியே இத்தகைய கிரிவலத்திற்கு உகந்தது என்றாலும் இந்த ஆடி  மல மாதம் முழுவதும் கிருஷ்ணாங்காரக ஜோதி பரிணமிப்பதால் ஆடி மாத நிறைவிற்குள் இவ்வாறு கிரிவலம் நிறைவேற்றுவது சிறப்பாகும்.

வசதி படைத்த பக்தர்கள் பலர் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து கிரிவலப் பாதை முழுவதுமே எட்டு முழ வேட்டிகளைப் பரப்பி கிரிவலம் இயற்றி அந்த வேட்டிகள் அனைத்தையும் தானமாக அளிப்பது என்றால் இதனால் கிட்டும் பலன்களை எல்லாம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா? கிரிவலத்திற்கு பல வேட்டிகளை பயன்படுத்தும் அடியார்கள் அந்த வேட்டிகளைச் சுத்த செய்ய வேண்டும் என்ற நியதி கிடையாது.

ஒரே நாளில் இத்தகைய கிரிவலத்தை நிறைவேற்ற முடியாவிட்டாலும் பகுதி பகுதியாகவும் கிரிவலத்தை தொடர்ந்து நிறைவேற்றி பயன்பெறலாம்.

உங்களுக்குப் புரிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் அதை தெரிவிப்பதே ஒரு பாக்யம் என்பதால் இந்த அரிய பொக்கிஷத்தை உங்களுக்கு அளிக்கிறார் நம் சற்குரு. கிருஷ்ணன் என்றால் முழுமையானவன் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு முழுமை பெற்ற ஒருவன் அளிக்கும் அனுகிரகமும் முழுமையாகத்தானே இருக்கும்.

இப்போது நீங்கள் இவை அனைத்தையும் கூட்டிப் பாருங்கள். முழுமையான மாதம், அதுவும் மல மாதம், முழுமையான நிலவொளி, திரு என்ற திருவோண நட்சத்திரம் நிலவும் நேரம், அமிர்த சக்திகள் பொலியும் சந்திரனுக்கு உரித்தான ஆடி மாதம், இவை அனைத்திலும் பெருகும் கிருஷ்ணாங்காரக ஒளி சக்தி நம் தூல உடலிலும் சூட்சும உடலிலும் முழுமையாகப் பெருகுவதே இந்த ஆடி மாத கிரிவலம் அளிக்கும் அதியற்புத பலனாகும்.

ஏதாவது ஒரு வடிவிலோ உருவத்திலோ நாம் கிருஷ்ண பகவானை தரிசிக்க உதவுவதே இந்த ஆடியில் நம் உள்ளத்தில் ‘ஆடும்’ கிருஷ்ண பகவானே வலம் வரும் கிருஷ்ணாங்காரக மாதம் ஆகும். ஆடிய பாதமும் அபய பாதமும் ஒன்றாக இணைந்து பரிணமிப்பதே ஆடி கிரிவலம். ஆம், கிருஷ்ணாங்காரக பெருமாள் சக்திகளும் நடராஜ பெருமானின் திருநடன சக்திகளும் ஒன்றாய் இணைவதே ஆடி மாதத்தின் பெருமையாகும்.
ராசலீலையில் மொத்தம் 15 தத்துவங்கள் உள்ளன, இவை ஒன்றுக்கொன்று உயர்ந்த நிலையில் விளங்குபவையாகும். இதில் முதல் தத்துவம் ஒரு கோபுரத்தின் அடியில் தங்கும் நிழலைக் குறிப்பது.

வள்ளலார் சுவாமிகளுக்கு நிழல் தரையில் படியாது. ஒரு மனிதனுக்கே நிழல் இல்லாது இருக்கும்போது திருமகளான லட்சுமி தேவிக்கு நிழல் எப்படி இருக்க முடியும்? தேவியின் நிழலில் தங்கி நரசிம்மரின் பெருங்கோபம் தணிய சற்றே அமைதி கொண்டார் என்று கூறுவது எங்ஙனம்?
“அரவா, நீ ஆடும்போது அடியேன் உன் ‘அடியின் கீழ்’ இருக்க வேண்டும்…” என்று காரைக்கால் அம்மையார் உரைப்பதன் பொருள் யாது? எம்பெருமானின் திருவடி நிழல் என்றால் என்ன?.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் உரிய விடையை உங்களால் அறிந்து கொள்ள முடிந்தால் நீங்கள் ராசலீலையின் முதல் கட்டத்தைத் தாண்டும் தகுதியைப் பெற்று விட்டீர்கள் என்று பொருள்.

கிருஷ்ண நவநீதம்

கிருஷ்ண பகவானை நவநீத கிருஷ்ணன் என்றும், வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் என்றும் நம் உள்ளத்தைத் திருடிய அந்த பகவானைப் பாராட்டுவது உண்டு. வெறும் வெண்ணெயைத் திருடுவது மட்டுமா கிருஷ்ண லீலை, இல்லவே இல்லை. நவநீதம் என்பது என்றும் பெருகும் ஆரோக்ய சக்திகள், நோய் நிவாரண சக்திகளின் திரட்சி, அங்காரக அருள் மழை என்றெல்லாம் பொருள்படும்.

திருக்குற்றாலத்தில் கிருஷ்ண நவநீதம்

மார்கழி மாதத்தில் விடியற்காலையில் திருஅண்ணாமலையில் திரளும் நோய் நிவாரண சக்திகளான ஓசோன் கதிர்களை ஒத்தவையே இந்த கிருஷ்ண நவநீத சக்திகள். பகவான் கிருஷ்ணர், கனிந்தகனி, நம் சற்குரு போன்ற பல அவதார புருஷர்களாலும் அவ்வப்போது உலக நன்மைக்காக வர்ஷிக்கப்படுவதே இந்த கிருஷ்ண நவநீதம் என்ற நோய் எதிர்ப்பு சக்திகளாகும். திருக்குற்றால மலையில் இத்தகைய நோய் நிவாரண சக்திகளை வர்ஷித்த பெருமாள் மூர்த்தியை அகத்திய பெருமான் ‘குளு குளு குற்றாலா...’ என்று கூறி சிவலிங்கமாக மாற்றி விட்டார். இதனால் சிவசக்தி ஐக்ய தரிசனம் போல் இந்த சிவா விஷ்ணு சக்திகளும் ஐக்யமாகி உலக மக்களுக்கு நிரந்தர நோய் நிவாரண சக்திகளை வர்ஷித்துக் கொண்டிருக்கின்றன.

பைத்தியம் என்ற விபரீத மனநிலையை சரி செய்யும் சக்தி உலகில் எந்த மருந்திற்குமே கிடையாது, காமத்தால் உடலில் தோன்றும் உஷ்ணத்தை எந்த யோக ஆசனம், பிராணாயாம முறைகளாலும் சமன் செய்ய முடியாது. இத்தகைய கடுமையான விளைவுகளையும் சமன் செய்து மனதை, உள்ளத்தை அமைதிப்படுத்துவதே இந்த கிருஷ்ண நவநீத சக்திகள். இந்த சக்திகளை முழுமையாகப் பெறவே திருக்குற்றாலத்தில் ஒரு மண்டலமான 48 நாட்கள் பழைய குற்றாலம் அருவியில் தினமும் நீராடும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார்.

திருஅண்ணாமலையில் பொலியும் அபூர்வமான கிருஷ்ண நவநீத சக்திகளை பக்தர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் விநியோகிக்கும் விதமாக நம் அடியார்கள் நிறைவேற்றிய பூஜையின் ஒரு பகுதியை இங்குள்ள வீடியோவில் நீங்கள் காணலாம். கிருஷ்ண நவநீத சக்திகளுடன், திருக்கச்சூர் ஔஷத மருந்து சக்திகளும், கொண்டராங்கி பர்வதத்தின் நோய் நிவாரண நவநீத சக்திகளும் இதில் இணைந்துள்ளன என்பதே நம் சற்குருவிற்கு அடியார்களின் மேல் பொலியும் பெருங்கருணையை குறிப்பதாகும்.

இத்தகைய கிருஷ்ண சக்திகளையும், சிவசக்தி ஐக்ய சக்திகளையும் நம்முடன் இணைத்துக கொள்வதற்காகவே நம் ஆஸ்ரமத்தைப் பார்த்து ஸ்வஸ்தி முத்திரையை இட்டு வணங்கி
          ஓம் தத் புருஷாய வித்மஹே லோபாமுத்ரா சமேதாய தீமஹி
          தந்நோ அகஸ்தீஸ்வர ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தையும், அண்ணாமலை சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறு நமஸ்காரமிட்டு
          ஓம் தத் புருஷாய வித்மஹ சிவசக்தி ஐக்ய ஸ்வரூபாய தீமஹி
          தந்தோ அருணாசலேஸ்வர ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தையும் ஒதுமாறு நம் சற்குரு உபதேசித்தார்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தொடரும் முத்தச் சுடர்...

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam