திருச்சுழி புரிந்தால் எச்சுழியும் புரியுமே !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

திருச்சுழி சிவத்தலம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அற்புத சிவத்தலமே திருச்சுழி ஆகும். இறைவன் ஸ்ரீதிருமேனிநாதர், ஸ்ரீபிரளய விடங்கர், ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபுவனேஸ்வரர் என இன்னும் எத்தனையோ திருநாமங்களுடன் கருணை கடாட்சம் கூட்டும் சிவத்தலம். இறைவியோ ஸ்ரீதுணைமாலையம்மை, ஸ்ரீசகாயவல்லி, ஸ்ரீமாணிக்கமாலை என்று தான் இறைவனுக்கு சற்றும் சளைத்தவலல்ல என்று நிரூபிக்கும் வகையில் கருணை வர்ஷிக்கும் அற்புத கருணாகரவல்லி. இவ்வாறு திருச்சுழி தலத்தின் பெருமை பற்றி, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைமூர்த்திகளின் அனுகிரக தன்மை குறித்து ஒரு காவியமே படைக்கும் அளவிற்கு பெருமையுடன் விளங்கும் திருத்தலமே திருச்சுழி என்றால் இந்த புண்ணிய பூமியை தாங்கும் பூமாதேவி எத்துணை கொடுத்து வைத்தவள். அதனால்தான் என்னவோ இறைவனும் பூமிநாதர் என்னும் திருநாமத்தையும் தனக்குச் சூட்டிக் கொண்டு உள்ளார். திருச்சுழியல் என்னும் தேவாரப் பெயர் கொண்ட இத்திருத்தலம் திருச்சுழி என்றே வழங்கப்படுகின்றது.

அனைத்திற்கும் ஆதியான அண்ணல்
திருச்சுழி

சுழி அல்லது சுழியலைப் பற்றி சற்றே ஆராய்வோமா ? எல்லா இயக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பதே சுழி என்பதாகும். அதாவது இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இயற்கை இயக்கமே சுழி என்பதாகும். இந்த இயக்கம் வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக அமைவதுண்டு. கணபதி மூர்த்தியே அனைத்து இயக்கங்களுக்கும் சூத்ரதாரியாக இருப்பதால் அனைத்து இயக்கங்களுக்கும் தலைவராக அவர் இடஞ்சுழி பிள்ளையார் என்றோ அல்லது வலஞ்சுழி பிள்ளையார் என்றோ வழிபடப்படுகிறார்.ஆக்கத்திற்கும் அழிவிற்கும் உறுதுணையாக நிற்பதே சக்தியாகும். உண்மையில் ஆக்கம் என்பதோ அழிவு என்பதோ எப்பொருளின் இயற்கை அன்று. மாற்றம் என்பதே நிரந்தரம். இதை உணர்விப்பதே திருச்சுழி திருத்தலத்தின் வழிபாட்டு மகிமையாகும். ஒரு ஊரில் தொடர்ந்து மழை பெய்தால் என்னவாகும் ? அதுவே ஒரு மாநிலம், நாடு என்று வரும்போது அப்போது பெருகும் நீரின் தன்மையை நினைக்க முடியுமா ? இவ்வாறு ஒரு நாடு முழுவதும் வர்ஷிக்கும் மழையில் உண்டாகும் நீரின் அளவையே ஒரு சாதாரண மனிதனால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றால் உலகம் முழுவதும் மழைப் பொழிவு நிகழ்ந்தால் அப்போது ஏற்படும் நீர்ப் பெருக்கை என்னென்பது ? இவ்வாறு மனித கற்பனைக்கு மிஞ்சிய நீர்ப் பெருக்கு தோன்றியதையே பிரளயம் என்று நாம் அழைக்கிறோம். இவ்வாறு இந்தப் பூவுலகையே மூழ்கடித்த மழை நீர் அனைத்தையும் ஒரு சிறு துவாரத்தில் செலுத்தும் அசாத்ய சாத்ய செயலைப் புரிந்தவரே திருச்சுழி திருத்தல ஈசனாவார். இத்திருக் கூத்து நிகழ்ந்த இடமே திருச்சுழி திருத்தலத்தில் உள்ள கவ்வைக் கடலாகும். இந்த உலகையே மூழ்கடித்த நீர்ப் பெருக்கு என்றால் அது நிச்சயம் கடல் என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாதே. இத்தகைய பிரம்மாண்டமான நீர்ப் பெருக்கைச் சுமந்த தீர்த்தம் தற்போது திருச்சுழி திருத்தலத்தில் நீரின்றி வறண்டிருக்கிறது என்றால் இது என்னே ஆச்சரியம், ஆச்சரியம். ஆனால், இறைவனுக்கு இதில் எந்த வித ஆச்சரியமும் இல்லையே. காரணம் பிரளய நீர்ப்பெருக்கு எங்கும் சென்று மறைந்து விடவில்லை. அது இங்கேதானே இருக்கிறது, திருச்சுழியில் சுழித்திருப்பதுதானே பிரளய வெள்ளம். பின் அது ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை. அது ஒலி வடிவில் உள்ளது. ஆமாம், பிரளயத்தை ஏற்படுத்திய நீர் அனைத்தும் தற்போது ஒலி வடிவில் உள்ளது. இந்த ஒலியை உணர முடிந்தவர்களே இத்தல இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்கள்தான் இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்திற்கு ஒலிப்புணரி என்ற பெயரையும் சூட்டியுள்ளனர். ஒலிப் புணர்ச்சியில் இந்த உலகம் தோன்றும், மறையும். திருச்சுழி திருத்தலம் மட்டுமன்று இத்திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே வறண்டு கிடைப்பதைப்போல்தான் தோற்றமளிக்கும். இது நிச்சயமாக நீர் வறண்ட பூமி கிடையாது. நீர் வேறு வடிவத்தில் அதாவது ஒலி வடிவில் பரிமளிக்கும் அற்புத தலமே திருச்சுழியாகும். திருச்சுழியில் தோன்றிய மகான் ஸ்ரீரமண மகரிஷி ஆவார். திருச்சுழியிலிருந்து பலரும் ஸ்ரீரமண மகரிஷியை சந்தித்து தங்கள் இல்லங்களில் உள்ள நீர்ப் பற்றாக்குறைப் பற்றியும் தங்கள் வயல் கழனிகளில் போதுமான நீர் கிட்டாமையும் குறித்து புலம்புவதுண்டு. அத்தகைய சமயத்தில் எல்லாம் ஸ்ரீரமணர் வெறும் புன்னகையை மட்டும் வீசுவது வழக்கம். காரணம் உலகையே மூழ்கடிக்கும் அளவிற்கு பிரளயம் தோன்றிய திருத்தலத்திலிருந்து வரும் ஒரு நபர் தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இல்லை என்றோ தன் வயலில் நீர் பாயவில்லை என்றோ புகார் கூறினால் அதைக் கேட்பவருக்கு புன்னகை தோன்றுவது இயற்கைதானே. அத்தகையோர் தங்கள் இல்லம் திரும்பும்போது அவரவர் தகுதியைப் பொறுத்து தங்கள் வீட்டுக் கிணறுகளிலோ தங்கள் நிலங்களிலோ போதுமான நீர்ப்பாசனம் பெருகுவது கண்டு அயர்ந்திருக்கின்றனர்.

ஸ்ரீரமண மகரிஷி அவர்களுக்காக நிகழ்த்திய வழிபாடுகள் குறித்து அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைதானே. தற்போதும் தங்கள் இல்லங்களில் அல்லது வயல்களில் போதுமான நீர்ப் பெருக்கு அமையப் பெறாதவர்கள் ஸ்ரீபூமிநாதரை வணங்கி முறையாக வழிபாடுகளை நிகழ்த்தி வருதலால் நிச்சயம் தங்கள் இல்லங்களிலும், தொழிற்சாலைகளிலும், வயல்வரப்புகளிலும் அற்புத நீர்ப் பெருக்கைக் காண்பர். சுத்தமான நீரில் விளையும் வெள்ளரிப் பழம், பிஞ்சு வெள்ளரிக்காய் ஊறுகாய் சேர்ந்த தயிர் சாத தானம் எத்தகைய கொடிய நீர்ப் பஞ்சத்தையும் போக்கும் அற்புத வழிபாடாகும். ஸ்ரீபூமிநாதருக்கு செவ்வாய்க் கிழமைகளில் அல்லது கீழ்நோக்கு நாட்களில் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வெல்லம் கலந்த கடலை மிட்டாய் தானம் அளிப்பதும் ஏற்புடையதே. ஒலிப் புணரியில் பிரகாசிக்கும் வேதசக்திகளை மக்களுக்குத் தேவையான வேத சக்திகளாக மாற்றி வழங்கும் வலியன் குருவிகள் என்ற ஒரு வகை புறாக்கள் தினமும் வழிபடும் தலமே சென்னை பாடி திருத்தலமாகும். தர்மமிகு சென்னையில் நீரில்லை என்று சொன்னால் மக்கள் பாடி திருத்தலத்தில் முறையான வழிபாடுகளை இயற்றவில்லை என்பதே பொருள் என்று கூறுவார் நம் சற்குரு. இங்கு நீங்கள் காணும் புறாக்களை முறையாக பராமரித்து வந்தாலே போதுமே சென்னை திருத்தலத்தில் குடிநீர் பஞ்சமே ஏற்படாது என்பதே நம் சற்குரு கூறும் அறிவுரை, அறவுரை. உழவாரப் பணிகள் இயற்றி பாடி திருத்தலத்தில் வேத சக்திகளை புனருத்தாரணம் செய்ததோடு மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சொற்பொழிவு ஆற்றி இறைவனின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டியவரே நம் சற்குரு.

ஒலிப் புணரி கௌவை கடல்
திருச்சுழி

இவ்வாறு உலகையே நீரால் மூழ்கடிக்கும் நீரால் திருச்சுழி சூழப்பட்டாலும் ஏன் இந்த பிரம்மாண்மான நீர்ப்பெருக்கை நாம் பெற முடியவில்லை என்று கேட்கத் தோன்றமல்லவா ? இத்தல கௌவைக் கடல் என்ற தீர்த்த ஞானமே அனைத்தையும் புலப்படுத்தும் ஞானத்தை வழங்கும் தன்மை உடையதாகும். சற்குரு ஒருவரே அனைத்து ஞானத்தையும் வழங்கும் தகுதி பெற்றவர் என்பது இத்தலத்தில் குருவிற்கு நிகரான மூன்று எண் சக்திகளுடன் விளங்கும் கவ்வை கடலாகும். ஒலி என்பது கண்ணுக்குத் தெரியாது என்றாலும் மூன்று என்ற குரு சக்தியைக் குறிக்கும் தூண்கள் இங்கு திகழ்வது கடவுள் கருணைதானே. இத்திருக்குளத்தை 3, 30, 120 என்றவாறு மூன்று எண்ணிக்கையில் வலம் வந்து வணங்கி மூன்று கடலைகள் பருப்பு கொண்ட நிலக்கடலையை தானமாக வழங்குதலால் சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் உத்தம சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாது வாழ்ந்து வீண் விதண்டாவாதம் பேசி நேரத்தை வீணாக்கியதற்கு பிராயசித்தமாக திகழ்வதும், இறை நம்பிக்கையை குரு நம்பிக்கையை பெருக்கிக் கொள்ள ஆழப்படுத்திக் கொள்ள துணைபுரிவதும் இந்த தீர்த்தத்தில் நிறைவேற்றும் பிரதட்சிண வழிபாடுகளாகும். உடல் சின்னாபின்னமாகியோ அல்லது உடல் கிடைக்காமல் போன தங்கள் மூதாதையர்களுக்கும், சரியான இறந்த நேரம் காலம் அறியாத மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் அளிக்க உகந்த தலம் இந்த கவ்வை கடலாகும். சிறப்பாக ஆடி மாதத்தில் இத்தகைய வழிபாடுகள் சிறப்புடையது என்றாலும் ராமேஸ்வர அக்னி தீர்த்தம் போல் எந்நாளிலும் எந்நேரத்திலும் தர்ப்பணம் அளிக்க உகந்த தீர்த்தமே இந்த கவ்வைக் கடலாகும். ஒலியை மட்டும் உணரும் பாம்புகள் இன்றும் இந்த தீர்த்தத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் சிறப்பான தலமே கவ்வை கடலாகும். தகுதியுள்ள ஒரு சிலருக்கு பாம்பின் தரிசனமோ, கனவுக் காட்சிகளோ இங்கு கிடைப்பதுண்டு. அது பற்றி சற்றும் அஞ்ச வேண்டாம். இங்கு பெறும் சர்ப்ப தரிசனம் யாவும் நன்னிலை பெற்ற உங்கள் மூதாதையர்களின் தரிசனமே. பதஞ்சலி இந்த கவ்வைக் கடலில் பல யுகங்கள் தவம் புரிந்து நன்னிலை எய்தினார். தொடர்ந்து இந்த தீர்த்தத்தை வலம் வந்து வணங்குதலால் நாய், பறவைகள் போன்ற மற்ற பிராணிகளால் உணர முடியாத ஒலியைக் கூட கேட்கும் சக்தியைப் பெறுவார்கள். பிறவிலேயே காது கேளாதவர்களும், விபத்து போன்ற துர்சம்பவங்களால் கேட்கும் திறனை இழந்தவர்களும், வயதானவர்களும் காது சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நன்னிலை பெறுவர்.

ஒலிவிடங்க சக்கரம்
திருச்சுழி

ஒளிவிடங்க சக்கரம்
பிரான்மலை

விடங்கர் என்றால் ஒரு சிறு பாதை அல்லது வழி என்று பொருள். நமது பண்டைய திருத்தலங்களில் இவ்வாறு ஒலி ஒளி விடங்கர்களை அமைத்து அதன் மூலம் இறைவனை வழிபடும் பக்தர்கள் எண்ணற்ற அனுகிரகங்களைப் பெற வழிகோலினர் நம் முன்னோர்கள். திருச்சுழி திருத்தலத்தில் நீங்கள் காணும் ஒலி விடங்க தரிசனம் பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை சமன்படுத்தி அதை மக்கள் கேட்கும் அளவிற்கு தூய்மைப்படுத்தி பக்தர்களுக்கு அனுகிரக சக்திகளாக அளிக்கின்றன. இந்த ஒலி விடங்கர்களை முறையாக பயன்படுத்த நினைப்பவர்கள் சப்தமி போன்ற திதிகளில் இந்த ஒலி விடங்கர்களுக்கு தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு வணங்குதல் சிறப்பாகும். இதனால் மந்திரம், வேதம் போன்ற நல்ல ஒலிகளை மட்டுமே கேட்கும் சக்திகள் காதுகளுக்கு விருத்தியாகும். தேவையில்லாத ஒலிகள் சிறிது சிறிதாக மறையும். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் வசிப்போர், அளவுக்கு அதிகமான சப்தம் உடைய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சாதாரண சப்தமே அதிகப்படியான சப்தமாக அதிர வைக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். மாலைக் கண் போன்று இரவில் பார்வை குறைவாக உடையவர்களும், Colour blindnes என்று வண்ணங்களுக்கு இடையே வேறுபாடுகளை உணர முடியாதவர்களும், காட்ராக்ட் போன்று கண் வியாதிகளால் துன்புறுவோரும், கெட்டியான கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களும், வெல்டிங் போன்ற அலுவல்களில் உள்ளவர்களும் ஒளி விடங்கர்களை சுவாதி நட்சத்திர நாட்களில் தரிசனம் செய்து பஞ்ச எண்ணெய் தீபங்கள் குறைந்தது 30 ஏற்றி இத்தகைய ஒளி விடங்கர்கள் அமைந்துள்ள பிரான்மலை போன்ற தலங்களில் வழிபடுவதால் நற்பலன் பெறுவார்கள். இத்தகைய ஒலி ஒளி விடங்கர்கள் பல்வேறு சூட்சும பலன்களையும் அளிக்கவல்லவையே. இத்தகைய பலன்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் குறைந்தது 12 ஆண்டுகள் இத்தகைய விடங்கர்கள் உள்ள திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி வருதல் வேண்டும். குறைந்தது 108 முறை தினமும் இத்தகைய விடங்கர்கள் நிலவும் பிரகாரங்களை வலம் வந்து வணங்குதலும் சிறப்பே. திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வந்து தாயுமான ஒலிவிடங்க தரிசனத்தைப் பெற்று வருதலால் இசைத் துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர். மேலும் இங்கு கிட்டும் ஒலி விடங்க தரிசனம் மற்ற தரிசனப் பலன்களுக்கு மெருகூட்டும் என்பது உண்மையே. “எண்ணற்ற சொல்லி இதமாக உரைத்தாலும் கந்தனுக்குப் புத்தி கவட்டையிலே ...” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது என்னதான் ஏராளமான சத்விஷயங்களை ஒருவருக்குக் கூறினாலும் அவர் மனது அமைதி அடைந்தால்தான் அவர் எந்த விஷயங்களையும் புரிந்து கொள்வார் என்பதே இதன் பொருள். ஏன் இங்கு முருகன் என்று பிரயோகம் செய்யாமல் கந்தன் என்ற சொல்லை பிரயோகம் செய்தார்கள் நம் முன்னோர்கள் என்பதும் சுவாரஸ்யமான கவட்டையே. கந் என்பது வல்லின உயிர் மெய்யுடன் மெய்யினக் கலப்பு, அதே போல தன் என்பது வல்லின உயிர் மெய்யுடன் சேர்ந்த மெய் எழுத்தே என்பதால் கந்தன் என்பதே சிறப்பான கவட்டை ஆகிவிட்டதல்லவா ?

பெயரில்லா மரம் பிரான்மலை

கவட்டை இரு பக்கமும் சமமாக உள்ள ஒரு மரக்கிளை. அது சரியாக இருந்தால்தான் அதில் தயாராகும் உண்டிவில் கொண்டு இலக்கை முறையாக வீழ்த்த முடியும். மனதை கவட்டையாக அதாவது அமைதி உடையதாக மாற்றும் திருத்தலங்களே சித்தர்கள் மொழியில் கவட்டைத் தலங்கள் என்ற அழைக்கப்படுகின்றன. திருஅண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்கள் இத்தகைய கவட்டைத் திருத்தலங்களில் அமையும். இத்தகைய கவட்டைத் திருத்தல சிறப்பை உடையதே திருச்சுழியாகும். இங்குள்ள கௌவை கடலே இத்தகைய சிறப்புகளுடன் பொலிகின்றது. கௌவை தீர்த்தத்தில் மேற்கொள்ளும் பிரதட்சிணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது. ராமேஸ்வர திருத்தலத்தில் அக்னி தீர்த்தத்தில் வீசும் அலைகள் கவ்வைத் தன்மையுடன் பிரகாசிக்கின்றன. திருஅண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் பெறுதற்கரிய கவட்டை சக்திகளைப் பெருக்குகின்றது. சிதம்பரம் திருத்தலத்தில் சிகண்டி பூர்ணம் என்ற தெய்வீக மணியோசை இத்தகைய கவட்டை சக்திகளைப் பிரதிபலிக்கின்றது. எதையும் சாதிப்பவன் இறைவன் என்று கூறுகிறோம். இதற்கு உதாரணமாகத் திகழ்பவையே திருச்சுழி, பிரான்மலை திருத்தலங்களாகும். இந்த உலகையே மூழ்கடிக்கும் அளவிற்கு தோன்றிய மழை நீர் சேர்ந்த திருத்தலமாக திருச்சுழி இருந்தாலும் நாம் எங்கும் வறட்சியையே காணுகிறோம். ஆனால் புல் பூண்டு கூட முளைக்க முடியாத மலைப் பாறையில் எவராலும் பெயர் கூற முடியாத ஒரு மரத்தை செழு செழுவென்று வளர்த்து இறைவன் நமக்கு அளிக்கிறார் என்றால் அவர் பெருமையை என்னவென்று சொல்வது ? இதுவே இறைவனின் சிறப்பு. கோடி கோடியாக மரங்கள் இருந்தாலும், அவைகள் எத்தனையோ பெயர்களில் விளங்கினாலும் பெயர் இல்லாத ஒரு மரமும் இறைவனின் படைப்பில் உண்டென்றால் அதைத் தாங்கும் பிரான்மலையின் சிறப்பை விளக்கத்தான் முடியுமா ? இறைவன் ஸ்ரீமங்கைபாகரின் கோபுரம் அருகே செழித்திருப்பதே இங்கு நீங்கள் காணும் பெயரில்லா மரமாகும். தரையில் வளரும் மரங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டிட்டு வலம் வந்து வணங்கலாம். இவ்வாறு மனிதனால் அண்ட முடியாத மரங்களை எப்படி வழிபடுவது ? நாம் நட்சத்திரங்களை வணங்கி வழிபடுவது போல் இந்த பெயரில்லா மரங்களை ஆத்ம பிரதட்சணம் செய்து, “வேயுறு தோளி பங்கன் ...” போன்ற நவகிரக துதிகளை ஓதி வணங்கி வழிபடுதலால் அவரவர் தங்கள் நட்சத்திரங்களை அறியும் வழிமுறை கிட்டும். ஒருவருடைய ஜன்ம நட்சத்திரம் ரோகிணி என்றால் அவர் உண்மையில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது கிடையாது. ரோகிணி என்பது சென்னைக்கு உள்ள 044 என்பது போன்ற தொலை தொடர்பு சங்கேத எண்ணே. இந்த எண்ணுக்குப் பின் ஆயிரக் கணக்கில் தொலை பேசிகள் உண்டு அல்லவா ? அது போல் ரோகிணி என்பது ஒரு நட்சத்திர மண்டலத்தை குறிக்கும் ஒரு எண் மாத்திரமே. திருகோகர்ணம், லால்குடி, ஊட்டத்தூர் போன்று விதானங்களில் ராசிகள் பதிக்கப்பட்டுள்ள ராசி மண்டலங்களின் கீழே நின்று கொண்டு நவகிரக துதிகளை ஓதி தன்னைத் தானே ஆத்ம பிரதட்சிணம் செய்து வணங்கி வருதலால் தான் எந்த நட்சத்திர மண்டலத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை புரிய வரும். இந்த வழிபாட்டில் வெகு விரைவில் முன்னேற்றத்தைத் தருவதே பிரான்மலையில் பொலியும் பெயரில்லா மர வழிபாடு.

ஸ்ரீஆத்ம சஞ்சீவி அனுமார்
திருச்சுழி

சற்குரு அவர்கள் ஆத்ம பூஜையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அடியேன் சும்மா இருக்கும்போது ஆத்மாவை வெளியே எடுத்து அதற்கு பூஜை செய்து கொண்டிருப்பேன்,” என்று ஆத்ம பூஜைக்கான விளக்கத்தை அருளினார். கேட்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்த பூஜை சித்தர்கள் நிலையில் உள்ளவர்களுக்கே சாத்தியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தான் வேறு தன்னுடைய ஆத்மா வேறு என்று தெளிவாகக் காண்பதற்கே எத்தனையோ லட்சம் பிறவிகள் தேவைப்படும் என்றால் அவ்வாறு வேறாகக் கண்ட ஆத்மாவிற்கு பூஜை செய்வது என்பது தான் என்பது துளி கூட தோன்றாத சித்த நிலையில் உள்ளவர்களுக்கே சாத்தியம் ஆகும். அப்படி சாதாரண மனிதர்களுக்கு முடியாத ஒரு காரியத்தை சித்தர்கள் விளக்குவதன் அவசியம் என்னவென்று கேட்கத் தோன்றும் அல்லவா ? இவ்வாறு சாதாரண மனிதர்களும் தங்கள் உள்ளே பரிணமிக்கும் ஆத்ம தரிசனத்தைப் பெற ஆத்மாவிற்கு ஒரு வடிவம் கொடுத்து திருச்சுழி திருத்தலத்தில் உள்ளதைப்போல் முட்டை வடிவ ஆத்மாவைக் கையில் ஏந்தி ஆஞ்சநேயப் பெருமான் எழுந்தருளி உள்ளார். ஆனால் சஞ்சீவி மலையைப் போல் தன்னுடைய ஆத்மாவையே கையில் ஏந்தி அருள்புரியும் ஆஞ்சநேய மூர்த்தியை முறையாக வழிபடுதல் என்பது கடுமையான பிரம்மசர்ய விரதத்துடன் வழிபட்டு வருவோர்க்கே சாத்தியம் ஆகும். குறைந்தது ஒரு வருட காலத்திற்கு தங்கள் கனவில் கூட இந்திரியம் என்னும் இறை சக்தியை வெளிவிடாத பிரம்மசாரிகளே இவ்வாறு தாங்கள் வேறு தங்கள் ஆத்மா வேறாக காண முடியும் என்பதே சித்தர்கள் கூறும் விளக்கம். ஆனால் இவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தியை வழிபடுவோர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டு எல்லா சுக போகங்களையும் ஜனக மகாராஜாவைப் போல் அனுபவிக்கலாம் என்பதும் உண்மையே. இல்லறத்தில் இருந்து கொண்டே எப்படி பிரம்மசாரியாய் வாழ்வது என்பது ஒரு புதிராக இருக்கிறது அல்லவா ? சதா சர்வ காலமும் இறைவனைப் போல் மற்றவர்களுக்காகவே தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் நம் சற்குரு போன்றோர் எப்படி “சும்மா” இருப்பார்கள் என்ற இரகசியம் புரிந்தால்தான் இல்லறத்தில் இருந்து கொண்டே பிரம்மசர்யம் அனுஷ்டிக்கும் இரகசியமும் புரியவரும். சனிக் கிழமைகளில் சுத்தமான பசு வெண்ணெயால் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு காப்பிட்டு பசு வெண்ணெய் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வருதலால் பிரம்மசர்ய விரதம் ஏற்க முயல்பவர்கள் தங்கள் பிரார்த்தனையில் தெளிவடைவர். சும்மா இருத்தலே சுகம் என்றால் சித்தர்கள் சும்மா இருக்கும் நிலையைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பார்த்தல் எத்தகைய சுகத்தைத் தரும் ?! ஆஞ்சநேய பிரபு திருச்சுழி தலத்தில் தன் ஆத்மாவைக் கையில் ஏந்தி பிரளய காள ஆசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். பக்தர்களும் இத்தகைய பிரளய காள ஆசனத்தில் அமர்ந்து இறைவனை வழிபடலாம். இந்த பிரளய காள ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த ஆசனத்தில் ஒருவர் முறையாக அமர்ந்தாலே அவருக்கு பிரளய காளத்தின் தரிசனம் கிட்டுமாம். பிரளய காளம் என்பது எமலோகத்தைத் தாண்டி புலப்படும் சஞ்சீவ லோகமாகும். புலன்களைக் கடந்த யோக தரிசனம் இது. கூப்பிய கரங்களுடனோ இரு கைகளை விரித்து உள்ளங்கைகள் பிரளய காள லோகத்தைத் தரிசனம் செய்யும் வகையிலோ அருள்புரியும் பெருமாள் திருத்தல கருடாழ்வார் மூர்த்திகளும் இத்தகைய அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவர்களே. கருடாழ்வார் மூர்த்திகளைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும் என்று சொல்வதன் உள்ளர்த்தம் இதுவே. தாங்கள் பெறும் பிரளய காள லோகத்தின் தரிசனப் பலனின் ஒரு பகுதியைத் தங்களை தரிசனம் செய்யும் அடியார்களுக்கு அனுகிரகமாக அளிப்பதே கருடாழ்வார்களின் தியாக சீலமாகும். பிரளய காள தரிசனம் காலாதீத தரிசனமே. நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஆவணி அவிட்டம் அன்று நடைபெறும் யக்ஞோபவீத தாரண வைபவத்தைத் தொடர்ந்து நடைபெறும் யோக ஆசன பயிற்சிகளின் போது ஒரு முறை நம் சற்குரு இந்த பிரளய காள ஆசனத்தில் அடியார்களை இலயிக்கச் செய்து பிரளய காள லோகத்தின் தரிசன அனுகிரக சக்திகளையும் பெற்றுத் தந்தார். அப்போது ஒரு அடியார் தன் உள்ளங்கைகளை சரியாக வைக்காதபோது சற்குருவே தம் திருக்கரங்களால் அந்த அடியாரின் கைகளைத் தொட்டு உள்ளங்கைகள் நம்மைப் பொறுத்தவரை வானத்தைப் பார்க்குமாறு வைத்து, சற்குருவைப் பொறுத்தவரை பிரளய காள லோகத்தின் சக்தி கதிர்கள் உள்ளங்கை ரேகைகளின் மீது பிரகாசிக்கும் வண்ணம் வைத்து அனைவருக்கும் இதைக் குறிப்பாக சுட்டிக் காட்டினார். அந்த இரகசியம் இப்போது அடியார்களுக்குப் புரிந்திருக்கும் அல்லவா ?

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

பிரளய விடங்கர் திருச்சுழி

திருச்சுழியின் ஒரு சுழியே கடுவினையை வேரறுக்கும்
திருச்சுழியின் ஒரு சுழியே காலனை எதிர்கொள்ளும்
திருச்சுழியின் ஒரு சுழியே கருங்கடல் தோணியாகும்
திருச்சுழியின் ஒரு சுழியே கோவைக் காட்டுமே
என்று திருச்சுழியின் மகிமையைப் பற்றி இத்தல புராணம் உரைக்கின்றது. திருச்சுழி சுட்டிக் காட்டும் முழுச் சுழியை அறியும் அளவிற்கு நம் ஆயுளும் சக்தியும் அமையாததால் திருச்சுழியின் ஒரு சுழி மகிமையைப் பற்றி மட்டுமாவது அறிய துணை நிற்பதே பிரளய விடங்கர் மகிமையாகும். பிரளய விடங்கர் என்பது பிரளயம் ஏற்படுத்திய நீர் அனைத்தையும் மறைக்கப் பயன்பட்ட ஒரு சிறு வழி என்பது பொருளாகும். இந்தச் சிறு வழி, பெரு வழி என்பது பற்றி சற்றே ஆராய்வோம். ஒரு ஐந்தடி உயரமுள்ள மனிதனை சாதாரண உயரம் உடையவன் என்று கூறுகிறோம். ஆனால், எறும்புகளின் உயர அளவைப் பற்றிக் கூறும்போது எறும்புகள் மனிதனின் காலடிபட்டே நூற்றுக் கணக்கில் மரணம் அடைவதால் அவை மனிதனை அரக்கன் என்றே அழைக்கின்றன. எனவே ஒரு மனிதன் சற்று உரக்கப் பேசினால் அவனின் குரலைக் கேட்கும் எறும்புகள் எல்லாம் மரணம் அடைய வேண்டும். எவ்வளவு கத்திப் பேசினாலும் எறும்புகள் கூறும் வார்த்தைகள் மனிதனுக்குக் கேட்காது. நடைமுறையில் இவை எதுவும் நிகழ்வதில்லை அல்லவா ? ஒரு கன்கார்ட் ஆகாய விமானம் பறக்கும் ஒலியை மனிதன் ஆகாயத்தில் கேட்க நேர்ந்தால் அவன் செவிப்பறை கிழிந்து விடும். மனிதர்கள் எறும்பு உரையாடல் என்பது மனிதர்கள் அளவில் நிகழ்த்த முடியாது என்றாலும் அவ்வாறு சிற்றுயிர்களுடன் உரையாடும் தகுதி படைத்த மகான்களும் யோகிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் எவ்வாறு இத்தகைய உரையாடலை மேற்கொள்ள முடிகிறது ? இதற்கு உறுதுணையாக நிற்பதே ஒலிப் புணரி என்னும் தத்துவமாகும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால்தான் திருச்சுழி தீர்த்தம ஒலிப் புணரியாக விளங்குகிறது. ஆகாய விமான தயாரிப்பாளர்கள் இந்த தத்துவத்தை உணர முடியாததால் அவர்கள் தீங்கிழைக்காத சப்தத்தை வெளிப்படுத்தும் விமானங்களைத் தயாரிக்க முடியவில்லை. இவ்வாறு இந்த உலகத்தையே விழுங்கிய பிரளய தீர்த்தம் எப்படி ஒரு சிறிய விடங்கரில் அடங்கியது என்பதை உணர்த்துவதே திருச்சுழி மகிமையாகும். திருக்கைலாய மலை, திருச்சி மலைக்கோட்டை, திருஅண்ணாமலை வழியே பிரவாகம் கொள்ளும் ஒரு விடங்கரும் உண்டு. இந்த விடங்கரையே தாயுமான லிங்க முக ஒலிவிடங்கர் என்ற சித்தர்கள் அழைக்கிறார்கள். சப்த ஸ்வர தேவதைகள் இந்த விடங்கர் வழியே பிரயாணம் மேற்கொள்வதால் தாயுமான ஈசனை வலம் வந்து வணங்குவதால் சப்த ஸ்வர தேவதைகளின் அனுகிரகத்தை எளிதில் பெறலாம் என்பது உண்மை. ஸ்ரீஏழு பிள்ளையார் அல்லது எழுபிள்ளையார் எதிரே திகழும் இந்த விடங்கரின் சக்தியை நம் உடல் ஏற்கவே நாம் தாயுமான ஈசனை கிரிவலமாக வந்து வணங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திலேயே நாம் இந்த விடங்கரை கடந்து விடுவோம் என்றாலும் இந்த ஒலி விடங்க சக்திகளை ஈர்க்க மனமும் உடலும் எடுத்துக் கொள்ளும் கால அளவு மனிதனுக்கு மனிதன் பெரிதும் மாறுபடுவதால்தான் அந்த சக்தியைப் பெற தாயுமான மகா லிங்கத்தை வலமாக வர வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரு மனிதனின் கட்டை விரல் நுனியில் மட்டும் முன்னூறுக்கும் மேற்பட்ட விடங்கர்கள் உண்டு. இந்த விடங்கர் ஒவ்வொன்றின் வழியாகவும் உயிர் பிரிவதால் மனிதன் அடையும் அடுத்த பிறவிகள் நிர்ணயிக்கப்படும். மனித விரலில் மட்டுமே இத்தனை விடங்கர்கள் இருந்தால் திருச்சுழி திருத்தலத்தில் ஸ்ரீபிரளய விடங்கருக்கும் ஸ்ரீபால சுப்ரமண்யருக்கும் இடையே உள்ள இடைவெளியில் எத்தனை கோடி கோடி விடங்கர்களின் ஆதிக்கம் இருக்கும். மனித நடைமுறை வாழ்க்கைக்கு சற்றும் பயன்படாத இத்தகைய விடங்கர்களைப் பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று சாதாரண மனிதர்கள் நினைப்பது இயற்கையே. ஆனால் விடங்கர் ஞானமே தெய்வீகத்தில் முதல் படியாகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. உயிர் பிரியும் இரகசியம் அறியாமல் இறைவனைப் பற்றி அறிய முடியுமா என்ன ?

திருச்சுழி வலஞ்சுழியா இடஞ்சுழியா ?

மனிதர்கள் எறும்புகளுடன் உரையாட வேண்டும் என்றால் அந்த உரையாடல் முறையாக நடக்க உதவி செய்வதே ஒலிப் புணரி என்ற இரகசியம் ஆகும். இது போன்று ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் மட்டுமல்லாமல் அந்தந்த ஜீவ ராசிகளின் சமூகத்திலேயே அமைந்த ஒலிப் புணரிகளும் உண்டு. இத்தகைய மனித ஒலிப் புணரி தத்துவத்தை முழுமையாக அறிய உதவி புரியும் தெய்வமே ஸ்ரீதிருமேனி நாதர் ஆவார். ஏன் திருச்சுழி நாதர் இத்தகைய சிறப்புப் பெயருடன் விளங்குகிறார் என்ற இரகசியம் ஓரளவு தற்போது புரிகின்றது அல்லவா ? ஆனால், இந்த இரகசியத்தை முறையாக அறிந்து செயல்படுத்துவது என்பது மிக உயர்ந்த நிலையில் உள்ள சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். உதாரணமாக, காஞ்சிபுரம் திருத்தலத்தில் அண்மைக் காலம் வரை அருள்புரிந்த மகான் போடா சுவாமிகள் போ டா என்ற இரு எழுத்தில் விளையும் ஒலிப் புணரி சக்திகளை அனுகிரகமாக தன்னை நாடி வந்த லட்சக் கணக்கான இறை அடியார்களுக்கு அளிக்க 2000 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது என்றால் ஸ்ரீதிருமேனிநாதர் அளிக்கும் மற்ற அட்சர சங்கம இரகசியங்களைப் பற்றி எப்போது அறிந்து கொள்வது, எப்போது அதை மற்ற அடியார்களுக்கு அனுகிரகமாக அளிப்பது ? திருச்சுழி திருத்தலத்தைப் பற்றி சற்குரு விவரித்துக் கொண்டு இருந்தபோது ஒரு அடியார், “வாத்யாரே, திருச்சுழி இடஞ்சுழியா வலஞ்சுழியா ... ?” என்ற கேட்டார். சற்குரு சற்றும் தாமதியாமல் உடனே, “அது திருச்சுழி”, என்றார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்

ஏழே எழுத்துக்களில் அமைந்த சற்குருவின் உபதேச வார்த்தைகள் அவை. ஏழு பிறவிகள் எடுத்துக் கொண்டாலும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத குருவருள் பொக்கிஷங்கள். இருந்தாலும் சற்குருவின் உபதேசம் பற்றி சற்றே விளக்குவோம். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் உள்ள எல்லா அன்னதானப் பாத்திரங்களிலும் RVV என்று குருவின் திருநாமத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஐந்து எழுத்து தத்துவத்தைக் குறிக்கும் மூன்று எழுத்து திருநாமம் இது. இதைப் பாத்திரங்களில் பொறிப்பதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும் ஒரு பிறவியில் நம் சற்குரு அவர்கள் பகவான் கிருஷ்ணரின் திருக்கரங்களில் பொலிந்த பாஞ்சசன்ய சங்காகத் திகழ்ந்தவர். பாஞ்ச சன்யம் என்பது ஐந்து எழுத்து சக்திகளால் உருவானது என்பது மேலோட்டமான சிருஷ்டி இரகசியம். பாஞ்ச சன்ய சங்கு வலஞ்சுழி சக்தியை வெளிவிடுமா அல்லது இடஞ் சுழி சக்திகளை வர்ஷிக்குமா ? இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பகவான் கிருஷ்ணரின் அவதார நோக்கத்தைப் பற்றி பகவானே பகவத் கீதையில் அறிவுறுத்தியதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். “நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதாரம் கொள்கிறேன்,” என்பது கீதை. நல்லவர்களைக் காக்கும் நற்சக்திகளைப் பரப்ப வலஞ்சுழி சங்கையும் தீயவர்களை அழிக்க இடஞ்சுழி சங்கையும் நாம் பயன்படுத்தலாம். தர்மத்தை நிலைநாட்ட எந்த சங்கு ஒலியை எழுப்புவது ? இந்த ஆத்ம விசார வினாவிற்கு விடையளிப்பதே பாஞ்சசன்ய சங்கு ஆகும். அது நல்ல சக்திகளையோ தீய சக்திகளையோ சங்கு நாதமாக ஒலிப்பதில்லை. பாஞ்சசன்ய சங்கு எழுப்பும் சங்கு ஒலி சங்கு நாதம் கேட்கும் அன்பர்களைப் பொறுத்து மாறுபடும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். இப்போது புரிகிறதா எதற்காக RVV என்ற மூன்று எழுத்தை பகவான் தன் திருக்கரங்களில் ஏந்தினார் என்ற இரகசியம். R அட்சரம் தர்மத்தையும் VV என்ற அட்சரங்கள் வலஞ்சுழி இடஞ்சுழி சக்திகளையும் பிரதிபலிக்கின்றன. திருஅண்ணாமலையில் அன்னதானத்திற்கு முன்னால் நைவேத்யம் படைக்கப்படும்போது சற்குரு அவர்கள் சங்குநாதம் முழங்கி அத்திருப்பணியை நிகழ்த்துவார். அந்த சங்கு நாதத்தில் எத்தனையோ அண்டங்கள் உருவாகும் என்றால் அந்த அண்டங்களுக்கு தேவையான உயிர் சக்திகளை ஊட்டுவதும் சற்குருவின் திருப்பணிகளில் ஒன்றல்லவா ? அதே சமயத்தில் அந்த அன்னதான பிரசாதத்தில் விரவிய அனைத்து தீய சக்திகளும் மறைந்து இறைவனுக்குத் தகுதி வாய்ந்த தூய பிரசாதமாக மாற்றவும் அந்த சங்கு நாதமே துணை புரியும் என்றால் சற்குருவின் திருக்கரங்களில் பொலிந்தது பாஞ்சசன்யம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் ?

ஸ்ரீபிரளய விடங்கர் திருச்சுழி

ஒரு முறை சற்குருவுடன் நெருங்கிய பழக்கமில்லாத ஒரு அடியார் சென்னையில் உள்ள சபை வீட்டில் தங்கியிருந்தார். அடியார்கள் வாரம் ஒரு முறை கூடி நாமசங்கீர்த்தனம் போன்ற இறைக் காரியங்களை நிகழ்த்துவதற்காக அமைந்த இடம் அது. திருஅண்ணாமலை ஆஸ்ரமம் அமைவதற்கு முன்னால் தோன்றிய திருத்தலம். சபைக்கு வருகை தந்த சற்குருவிற்கு அளிப்பதற்காக தேநீர் தயாரித்து சற்குருவே கடவுள் என்பதால் சுவாமிக்கு நைவேத்யம் அளிக்காமல் நேரடியாக சற்குருவிற்கு அந்த டீயை அளித்துவிட்டார். அவ்வளவுதான் சற்குருவிற்கு வந்ததே கோபம். “நாயியா இது, சுவாமிக்கு நைவேத்யம் படைக்காமல் ஒரு கேவலமான இந்த நாய் பிறவிக்கு டீயை அளிக்கலாமா ?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவ்வளவுதான் நடுநடுங்கிப் போய் விட்டார் அந்த அடியார். இறைவனுக்கு பிரசாதமாக அளிக்கப்படாத உணவை ஏற்கும் மனிதன் நாயின் பிறவியை அடைகிறான் என்றால் சற்குருவிற்கு கடவுள் மேல் உள்ள நம்பிக்கைக எத்துணை ஆணித்தரமானது. உடனே சற்குருவிற்கு அர்ப்பணிக்க இருந்த டீயை சுவாமி ரெங்கநாதருக்கும் (தற்போது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் அருள்பாலிப்பவர்) மற்ற இறை மூர்த்திகளுக்கும் நைவேத்யம் படைத்து விட்டு தற்போது பனி மலையாய்க் குளிர்ந்த சற்குருவிற்கு அந்த டீயை அளித்தார். எனவே இறைவனுக்கு ஒரு பொருள் அர்ப்பணிக்கப்படும்போதுதான் அது பிரசாதம், அது வரை அது சாதா சாதமே. ஆனால் விதி என்ற ஒன்று இருந்தால் அதற்கு விலக்கு என்ற ஒன்றும் இருக்குமே. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இந்த விதி பொருந்தாது. அவர்கள் சூழ்நிலையைப் பொறுத்து உணவேற்கலாம். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கறி, கூட்டு, பாயசம் என்று பலவிதமான பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டதால் அவை அனைத்தும் தயாராகும் வரை குழந்தைகளால் காத்திருக்க முடியாது என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் சுவாமிக்கு நைவேத்யமாகப் படைக்கப்படாத உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார் நமது சற்குரு. எனவே சற்குருவின் வழிகாட்டுதல் என்பது விதண்டாவாத கூற்று அல்ல. எக்காலத்திற்கும் எந்த இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஒத்துவரக் கூடிய ஒரு நடைமுறை உபதேசமே என்று உடனிருந்து அனுபவித்த உள்ளங்களே உணரும்.

ஸ்ரீமுருகப் பெருமானின்
யானை வாகனம் பிரான்மலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருத்தலத்திலுள்ள ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரின் ஜீவ சமாதி சற்குரு அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல திருத்தலங்களில் ஒன்றாகும். காட்டு மிருகங்களில் ராஜா என்ற பட்டத்தைப் பெற்ற சிங்கம் வைராக்ய சித்தம் உடையது. தன் பசிக்கு அல்லாது எந்த மிருகத்தையும் வேட்டை ஆடுவது கிடையாது. பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில் நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பு மேற்கொள்ளும். வருடம் ஒரு முறையே உடலுறவு கொள்ளும். முத்து என்பது சுவாதி நட்சத்திர நாளில் மட்டும் வானத்திலிருந்து தோன்றம் மழைத் துளியை ஏற்கும் சங்குப் பூச்சியாகும். வாய் திறந்து கடலில் மிதக்கும் முத்து சங்கு பூச்சி சுவாதி மழைத் துளியைப் பெற்றதும் கடலில் மூழ்கி அந்த சுவாதி தீர்த்தத்தை தன்னுடைய மந்திர ஆற்றலால் வெகுகாலம் பூஜித்து முத்தாக மாற்றி இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றது. சுவாதி என்பது வல ஓட்டு நட்சத்திரம். அதனால் வலவோட்டு சக்திகள் நிறைந்ததே முத்து. சுவாதி நட்சத்திரங்களின் மத்தியில் குசா சக்திகளுடன் பொலிவது. ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருக்கு உகந்ததாக பச்சை நிறம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிறமாலையின் மத்தியின் திகழ்வ்தும், நம் சற்குருவிற்கு உகந்ததாக, ஸ்ரீஉண்ணாமுலைத் தாயின் அனுகிரக சக்திகளை குறிப்பதாகவும் அமைந்ததுதானே பச்சை நிறம். என்றும் வளரும் ஜோதி இது. எனவே முத்து போன்று பிரகாசிக்கும் சித்தர் தன்னுடைய ராஜ வம்சத்திற்கு ஏற்றபடி சிங்கம்புணரியில் ஜீவ சமாதி கொள்வதுதானே முறை. ஸ்ரீமுத்துவடுக நாத சித்தர் அடியார்களால் ஸ்ரீவாத்யார் ஐயா என்றே அன்புடன் அழைக்கப்படுகிறார். நம் சற்குருவின் செல்லப் பெயரும் வாத்யார்தானே. நம் சற்குரு இந்தப் பூமியில் அவதாரம் கொண்ட ரோகிணி நட்சத்திரத்தில் மகா சமாதி பூண்டவர் ஸ்ரீமுத்துவடுக நாத சித்தர். நம் சற்குரு பலருக்கும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பல உபதேசங்களை அளிப்பார். ஆனால் அந்த குறிப்பிட்ட அடியார்கள் அந்த உபதேசங்களை ஏற்று செயல்படுத்துவதற்கு பல மாதங்கள், வருடங்கள் கூடி ஓடிவிடும். இது பற்றி சற்குருவே விவரித்துள்ளார். “நாங்கள் போடும் விதை உங்கள் உள்ளத்தில்... அவை முளைப்பதற்கு பல வருடங்கள் தேவைப்படுவது இயற்கையே. ஆனால் நாங்கள் போடும் விதை நிச்சயமாக முளைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. காரணம் அது உங்கள் உள்ளத்தில் அடியேன் குருநாதர் அருளால் விதைக்கப்பட்டது.” இந்த உண்மையை அடியார்கள் அனுபவத்தில் உணர உதவியதும் இத்திருத்தலமே. நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளை அனுகிரகமாக அளிக்கும் வல்லமை யானக்கு நிரம்பி உள்ளதால் இருபுறமும் யானை வாகனத்துடன் லட்சுமி தேவி அருள்வதை பல திருத்தலங்களிலும் தரிசித்திருப்பீர்கள். அது போல் இரண்டு யானைகளை நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் வைத்து அடியார்களுக்கு எல்லாம் நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளை வர்ஷிக்க திருவுள்ளம் கொண்டார். ஆனால் சற்குருவின் சீரிய எண்ணம் வேர் விட்டு முளைத்ததோ சிங்கம்புணரி வாத்யார் ஜீவ சமாதியில். லட்சுமி கடாட்ச சக்திகளை ஆசீர்வாதமாக அளிக்கும் நிலையில் துதிக்கையை தூக்கிய வண்ணம் அருள்தரும் இந்த அனுகிரக யானைகளை வணங்கி அருகே வானளாவி நிற்கும் அரச மரங்களை வணங்குவது லட்சுமி கடாட்ச சக்திகளை நிரந்தாரமாக்கும். ஸ்ரீமுத்துவடுக நாத சித்தரால் நீர் வார்த்து பராமரிக்கப்பட்ட அரச மரமே இது. ஆண்டியும் அரசனாகும் தகுதியை அனுகிரகமாக அளிப்பதே இத்தல விருட்சமாகும். குருவுக்கு உகந்த சுத்தமான அரைத்த மஞ்சளை இம்மரத்திற்கு பூசி வழிபடுதல் சிறப்பே. யானை வாகன மூர்த்திகள் லட்சுமி கடாட்ச சக்திகளை அபரிமிதமாக அளிப்பதால் இத்தகைய யானை வாகன முருகப் பெருமான் அரிதிலும் அரிதாக பிரான்மலை, பட்டீஸ்வரம் போன்ற சில குறிப்பிட்ட தலங்களிலேயே அருளாட்சி செய்கின்றார்கள். இதனினும் அரிதே பிரான்மலையில் 18 சாளர துவாரங்கள் வழியே கிட்டும் முருகப் பெருமானின் திருக்கோலம். ஒவ்வொரு திருமுகத்திலுள்ள மூன்று திருக்கண்களின் திரட்சியாக 18 ருத்ர நேத்ரங்களுடன் பொலிவதால் எத்தகைய காமக் குற்றங்களுக்கும் இந்த சாளர தரிசனம் பரிகாரம் அளிக்கின்றது. ஆனால் பரிகாரம் அதிலும் காமக் குற்றங்களுக்கு கிட்டும் பரிகாரம் என்பது வாழ்வில் ஒரு முறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும். அடிமட்ட வறுமை நிலையில் உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், வீடு வாசல், உறவினர் இல்லாமல் அநாதையாய் வாழ்வோர் இந்த சாளர தரிசனத்தால் நற்பலன் பெறுவார்கள். இந்த சாளர தரிசனத்திற்குப் பின் அவரவர் வசதியைப் பொறுத்து குறைந்தது ஒரு யானைக்கோ அல்லது ஆயிரம் இறை அன்பர்களுக்கோ வயிறார உணவளிக்க வேண்டும் என்பது நியதி.

ஸ்ரீவாத்யார் ஐயா ஜீவ சமாதி
சிங்கம்புணரி

பாலில் கரையும் தன்மை உடையது முத்து. ஒரு முறை கணித மேதை பாணினியை சோதிப்பதற்காக கூடிய சிலர் 12 கிண்ணங்களில் பாலை ஊற்றி அதில் ஒரு கிண்ணத்தில் மட்டும் மூன்று முத்துக்களைப் போட்டு வைத்து விட்டனர். பாணினியை அழைத்து அந்த முத்து உள்ள பாத்திரம் எது என்பதை தெரியப்படுத்த முடியுமா என்ற கேட்க அவர் சிரித்துக் கொண்டே, “இந்த சாதாரண விஷயங்களுக்கெல்லாம் என்னுடைய மூளையை பயன்படுத்த விரும்பவில்லை. உங்கள் கேள்விக்கு என் பையனே பதில் கொள்வானே,” என்று தன் புதல்வனை அனுப்பி வைத்தார். அவன் அந்த பால் நிரம்பிய கிண்ணங்களை 12 ராசிக் கட்டங்களின் மேல் வைக்குமாறு கூறினான். அதன் பின் அந்த கிண்ணங்களில் சமமாக ஊற்றப்பட்டிருந்த பாலை கூர்ந்து பார்த்து விட்டு முத்துக்கள் போடப்பட்ட கிண்ணத்தை அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் சுட்டிக் காட்டினான். வியப்பின் உச்சியில் நின்று எவ்வாறு அந்தச் சிறுவன் முத்து கரைந்த பாலைக் கண்டு பிடித்தான் என்று கேட்டபோது அவன் சிரித்துக் கொண்டே, “முத்து பாலில் கரைந்து விடுமாதலால் நீங்கள் போட்ட முத்துக்கள் கரைந்து இந்தக் கிண்ணத்தில் இருந்த பாலின் உயரத்தைச் சுற்றே உயர்த்தி விட்டன. மேலும் உலகில் உள்ள அனைத்து விதிகளும் இயற்கை என்று நீங்கள் கூறும் இறைவன் விதித்த விதிக்கு கட்டுப்பட்டவையே. அதனால் முத்து என்பது சந்திர பகவானுக்கு உரிய சக்தி என்பதால் சந்திரன் பகவான் ஆட்சி கொள்ளும் கடக ராசியில் உங்களை அறியாமல் முத்துக்கள் கரைந்த பால் பாத்திரத்தை வைத்து விட்டீர்கள்,” என்றான். எனவே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் முத்துக்கு உரிய சந்திர பகவான் உச்சம் பெறும் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதி கொண்டது ஒரு தற்செயல் அல்லவே ? திருமண தோஷங்களால் அவதியுறுவோர் இங்கு ஜீவாலயத்தில் முத்து மாலைகளை சமர்ப்பித்து அதை பக்தர்களுக்கு தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். காசியில் வாழ்ந்த ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் பெரும்பாலும் அவதூதராகவே நிர்வாணமாகவே உலவி வந்தார். அடிக்கடி மூன்று லிங்கங்களின் மேல் அவர் சயனித்திருக்கும் திருக்காட்சியைக் கண்டு இன்புற்றோர் பலர். தலை ஒரு சிவலிங்கத்தின் மேலும் முதுகுப் பகுதி மற்றோர் சிவலிங்கத்தின் மேல் பதிந்தும் அவருடைய திருப்பாதங்கள் மற்றோர் சிவலிங்கத்தைத் தழுவிய நிலையிலும் அமைந்திருக்கும். இதுவே அவர் த்ரை லிங்க சுவாமி என்று பெயர் பெற்றதற்கு ஒரு காரணமுமாகும். ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்தாலே இத்தகைய தெய்வீக காரியங்களின் தாத்பர்யம் புரியவரும். இத்தகைய ஈடு இணையற்ற மகான்களின் பெருமையும் புரிய வரும்.

ஸ்ரீஅகலிகை சமேத கௌதம மகரிஷி
திருச்சுழி திருத்தலம்

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் என்பது போல இறைவன் நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல இரண்டிற்கும் இடையே உள்ள தத்துவமாக விளங்குபவன் அவன். அதனால் ஒருவன் நான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விரும்பினாலும் ஒருவன் உலக நன்மைக்காக மந்திரங்களை ஜபித்தாலும் இவை எதிலும் சம்பந்தம் கொள்ளாமல் யாருக்கு எது தகுதியோ அதை அளிப்பவனாக உள்ளான் இறைவன். இவ்வாறு தீய எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் ஒரு விக்ரஹத்தில் நிரவும்போது அதைக் களைவதற்காக மகான்கள் அந்த விக்ரஹத்துடன் உடல் சம்பந்தம் கொண்டு அந்த தீவின சக்திகளை தாங்களே ஏற்று அனுபவிக்கிறார்கள். இவ்வாறு சிவ லிங்கங்களில் நிரம்பிய தீய சக்திகளை களைவதற்காகவே ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் அந்த சிவலிங்கங்கள் மேல் சயனம் கொண்டார். அது போல் ஸ்ரீசேவுக பெருமாள் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் மூர்த்தியை சில மந்திரவாதிகள் தங்கள் தீய சக்தியால் மறைத்த போது அந்த தீய சக்திகளை தன் காலால் களைந்ததோடு மட்டுமல்லாமல் பக்தர்கள் அளித்த தீவினை சக்திகள் நிறைந்த மாலைகளை தான் அணிந்து கொண்டு சிங்கம்புணரி சமுதாயத்தையே தீவினை சக்திகளின் கோரப் பிடியிலிருந்து காத்து ரட்சித்தார் ஸ்ரீமுத்துவடுக நாதர் என்றால் சித்தர்களின் கருணைதான் என்ன மகத்துவம் உடையது ? சித்தர்களின் கருணை மழை என்பது என்றும் வர்ஷிக்கும் இனிய சாரலே என்று உணர்த்தியதே நம் சற்குரு அவர்களின் திருக்கோஷ்டியூர் விஜயம். இவ்வாறு காரைக்குடி பகுதியில் அளவுக்கு அதிகமாக விரவிய தீவினை சக்திகளை, சிறப்பாக காம சக்திகளை விரட்டியடிக்க திருவுள்ளம் கொண்டார் நம் சற்குரு. சற்குருவிற்கு மாலை அணிவிக்க ஒரு யானையை ஏற்பாடு செய்திருந்தார்கள் அடியார்கள். யானை எப்போதும் சுழுமுனை சுவாசத்தில் இலயித்திருப்பதால் அதனால் தீய சக்திகளையும் தூய சக்திகளையும் எளிதில் இனங்கண்டு கொள்ள முடியும். நம் சற்குருவிற்கு அணிவிக்க ஏற்பாடு செய்திருந்த மாலையில் பல்லாயிரக் கணக்கான தீவினை சக்திகள் பெருகித் திரண்டதை யானை உணர முடிந்ததால் அது நம் சற்குருவிற்கு அந்த தீவினை வளையத்தைப் போட மறுத்தது நியாயமே. ஆனால், நற்சக்திகளை உணரும் அறிவு பெற்ற அந்த யானையோ அதன் பாகனிடமிருந்து வசவும் உதையும் பெற்றது வேறு கதை. இவ்வாறு தீவினை சக்திகள் நிரம்பிய மாலையை அணிந்து கொண்டு திருக்கோஷ்டியூர் திருத்தலத்தை தகிக்கும் வெயிலில், கொதிக்கும் தரைமீது வெறுங் காலுடன் வலம் வந்தார் நம் சற்குரு என்பதைக் காணும் பேறு பெற்றோர் ஒரு சிலரே. அவருடைய தியாகத்திற்கான காரணத்தை உணர்ந்தோர் அரிதிலும் அரிதே. இவ்வாறு திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் மாலை அணிந்து தீய சக்திகளை ஏற்றதோடு மட்டுமல்லாமல் சிங்கம்புணரி ஸ்ரீசேவுக பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீகாமாக்யா காம வேள்வி என்ற அரிதான வேள்வியை இயற்றி இந்த வேள்வியின் பலன்களை எல்லாம் திருச்சுழி திருத்தலத்தில் ஸ்ரீஅகலிகை சமேத கௌதம ரிஷிக்கு அர்ப்பணித்தார் நம் சற்குரு. காமத் தவறுகள் பல புரிந்தவர்களே இந்த வேள்ளிவில் பங்கு பெற்றனர் என்பதே நாம் இங்கு கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சமாகும். இதன் பலனாக யுகக் கணக்கில் இந்த பிரபஞ்சத்தில் நிலவி இருக்கும் காம அக்னியின் பாதிப்பிலிருந்து சமுதாயத்தைக் காக்க முடியும்.

ஸ்ரீஅதிகார நந்தி தம்பதிகள்
திருச்சுழி திருத்தலம்

சற்குருமார்களின் இத்தகைய தியாகமய வேள்விகள் இல்லாவிட்டால் நம் சமுதாயத்தில் இன்று மலரும் காம அக்னியின் விளைவால் என்றோ நம் மனித குலம் மாய்ந்திருக்கும் என்பார் நம் சற்குரு. பல யுகங்கள் கல்லாய்க் கிடந்து காமக் குற்றங்களை ஈர்த்த உத்தமியே ஸ்ரீகௌதம மகரிஷியின் தர்ம பத்தினியான அகலிகை ஆவாள். திருச்சுழியில் பொலியும் இத்தம்பதிகளின் தரிசனமே எத்தனையோ பிறவிகளின் காமக் குற்றங்களைக் களையும் தன்மை கொண்டது. ஒலிப் புணரி என்னும் தத்துவம் சிங்கம் புணரி என்ற தத்துவத்தின் அடுத்த படிக்கட்டில் அமைந்துள்ளதால்தான் சிங்கம் புணரியைப் பற்றிய இத்தகைய இறை விளக்கங்கள். எனவே சிங்கம்புணரி ஸ்ரீவாத்யார் ஐயா ஜீவ சமாதி தரிசனத்திற்குப் பின் அமைவதே திருச்சுழி திருத்தல வழிபாடாகும். சிங்கம்புணரி திருத்தல தரிசன அனுகிரகத்தை மற்ற அடியார்களும் பெறுவதற்காக இங்கு பல மணி நேரங்கள் தங்கி ஸ்ரீவாத்யார் ஐயாவின் புகழ் பரப்பி, நாம சங்கீர்த்தன மாலை சூட்டி அடியார்களுடன் மகிழ்ந்திருந்தார் நம் சற்குரு பல்லாண்டுகளுக்கு முன். திருச்சுழியில் ஸ்ரீசகாயவல்லி சமேத திருமேனி நாதர் உட்பட அனைத்து இறை மூர்த்திகளும் சக்தியை வலது பக்கம் கொண்ட நாதர்களாய் தரிசனம் அளிக்கின்றனர். ஸ்ரீஅகலிகை சமேத கௌதம மகரிஷி, ஸ்ரீஅதிகார நந்தி தம்பதிகள் என அனைவருமே இத்தகைய தரிசனக் கோலத்திதையே பக்தர்களுக்கு அளிக்கின்றனர். பொதுவாக, இடது தொடையே மனைவிக்கு உரிய இடமாக அமைவதால் வலது பக்கம் காதலியாக மனைவி இருத்தலைக் குறிக்கும். திருச்சுழி திருத்தலம் ராமாயண காலத்திற்கு முன்னரே தோற்றம் கொண்டதால் இங்கு அகலிகை ராமருக்கு முன்னரே ஸ்ரீதிருமேனி நாதரை தரிசனம் செய்து அன்று முதல் இன்று வரை என்றுமாக சமுதாயத்தில் வளரும் காமக் குற்றங்களைக் களைந்து தம்பதிகள் இடையே ஒற்றுமையை வளர்க்கும் அருள் தெய்வமாகப் பிரகாசிக்கிறாள். இவ்வாறு மனிதனுடைய குறிக்கோள் இறைவனின் திருப்பாதங்களை அடைய வேண்டும் என்பதே ஆயினும் அதுவரையில் மனிதப் பிறவி என்ற ஒன்றில் வாழ்வு தொடர வேண்டும் என்பது இறை சித்தமாக இருந்தால் அத்தகைய மனிதப் பிறவிகளில் எல்லாம் தற்போது உள்ள பிறவியில் மனைவியாக வாய்த்தவளே தன் பாகம் பிரியாளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்வோர் தொடர்ந்து வழிபட்டு நற்பலன் பெறும் மூர்த்திகளே திருச்சுழி தெய்வத் தம்பதிகள் ஆவர்.

ஸ்ரீபஞ்சமௌன நடராஜ பெருமான்
திருச்சுழி திருத்தலம்

திருச்சுழி திருத்தலத்தில் ஸ்ரீகௌதம மகரிஷிக்கும் அகலிகைக்கும் இடையே அதிகப்படியான இடைவெளி இருப்பதாகத் தோன்றும். இது சிற்பிகளின் கலை உணர்வு என்று நினைத்து பலரும் ஒதுக்கி விடலாம். உண்மையில் தாம்பத்ய உறவு பற்றிய மிகப் பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதே அகலிகைக்கும் கௌதமருக்கும் இடையே உள்ள இந்த கௌதம இடைவெளி ஆகும். கௌதம இடைவெளி என்பது ஒரு ஒளி சக்தியே. 12 வருடங்கள் தன்னுடைய கணவருக்கு பாதபூஜை செய்யும் பத்தினி பெண்களின் உடலில் தோன்றும் ஒளி சக்தியே இது. அவதார மூர்த்திகளாலும் உருவாக்க முடியாத நிறமாலை. தற்காலத்தில் தம்பதிகள் பலரும் கைகோர்த்துக் கொண்டு தாங்கள் அன்யோன்யமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் பெரியோர்கள், மகான்கள், இறை மூர்த்திகளை வணங்கும்போது அவர்கள் இத்தகைய கௌதம இடைவெளியுடன் திகழ வேண்டும் என்பது முக்கியம். 12 வருடங்கள் இத்தகைய கௌதம பூஜையை மேற்கொண்டால் தம்பதிகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு இந்திரன் தன் மனைவியை நெருங்கி உள்ளான் என்பதை உணர கௌதம மகரிஷிக்கு உதவியதே இந்த கௌதம இடைவெளியாகும். சீதா பிராட்டியும் இத்தகைய கௌதம ஒளியைப் பெற்றிருந்தாள். ராமன் சீதையைப் பிரிந்து வருந்தியபோது ஸ்ரீராமரைத் தேற்ற பார்வதி தேவி மல்லிகை மலரால் ஒரு சீதையை உருவாக்கி அத்தேவியை ராமர் வரும் பாதையில் வைத்தாள். அப்போது அவ்வழி வந்த ராமபிரான் மல்லிகையால் மலர்ந்த தேவி சீதையைப் போல் இருந்தாலும் அத்தேவியிடம் கௌதம ஒலியைக் காண முடியாததால் அவளை ஒதுக்கி விட்டாராம். இவ்வாறு பார்வதி தேவியே தன் தபோ சக்தியால் உருவாக்க முடியாததே கௌதம இடைவெளி என்ற புனித பத்தினி ஒளிப் பிழம்பாகும். பெண்களுக்கு மட்டும் தான் இத்தகைய பத்தினி சக்திகள் உண்டு என்பது கிடையாது. தன் தாரத்தைத் தவிர பிற பெண்களை எல்லாம் தாயாகக் கருதும் உத்தம ஆண்களிடம் ஒளி விடுவதே அகல்யா ஜோதியாகும். சமீப காலத்தில் இத்தகைய அகல்யா ஜோதியுடன் திகழ்ந்தவரே விவேகானந்தர் ஆவார். ஒரு முறை அமெரிக்காவில் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டு எஜமானி இளம் துறவியான விவேகானந்தரை இளம் பெண்கள் சுற்றி வருவது பற்றி கவலைப் பட்டு அவருடைய கற்புக்கு ஏதும் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பயந்து விவேகானந்தரிடம் அது பற்றிக் குறிப்பிட்டு கேட்டபோது விவேகானந்தர் சிரித்துக் கொண்டே, “தாயே, என்னுடைய கற்பு பற்றி நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். என்னை இச்சையுடன் பார்க்கும் எவளும் பச்சைத் தவளை ஆகி விடுவாள்,” என்று உறுதியாகக் கூறினாராம். இந்த உறுதியை அளிப்பதே அகல்யா ஜோதி. அதனால்தான் பஞ்ச கன்னிகைகளில் முதலில் வைத்து புகழப்படுகிறாள் அகல்யா தேவி. ஸ்ரீகௌதம தம்பதிகளின் தியாகத்தை இங்கு நினைவு கூர்வது நம் கடமையாகும். நாயன்மார்களில் நடுநாயகமாக வீற்றிருக்கும் கௌதம தம்பதிகள் தங்களை அடியார்கள் வழிபடும் பலன்களை எல்லாம் ஸ்ரீபஞ்சமௌன நடராஜப் பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு அமைதியுடன் பஞ்சமௌனத்தில் லயித்திருக்கின்றனர். கௌதம தம்பதிகள் ஸ்ரீநடராஜப் பெருமானை தரிசனம் செய்தவுடன் மூலவர் ஸ்ரீதிருமேனி நாதரையும் தரிசனம் செய்து பயன்பெறலாம் என்றாலும் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஸ்ரீபஞ்சமௌன நடராஜ தரிசனம் செய்து மூலவரையும் தரிசனம் செய்யும் தகுதி பெற்ற பின்னரே தாங்கள் கடைசி பக்தர்களாக மூலவரின் தரிசனத்தைப் பெறவே விழைகிறார்கள். இத்தகைய தியாகசீலர்களின் தரிசனம் பெறவே நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஸ்ரீஅண்டபகிரண்ட விநாயகர்
திருச்சுழி திருத்தலம்

திருச்சுழி ஸ்ரீநடராஜப் பெருமான் வேறு எங்கும் காண இயலாத பஞ்சமௌனம் என்ற பளிங்கு கல்லால் ஆனவர். இந்த அற்புத சிலா கல்லிற்கு கிருஷ்ண மௌனம் என்றும் பெயர். கண், காது, மூக்கு, செவி என ஐந்து அவயவங்களும் மௌனம் அடைந்து இறைப் பரம்பொருளில் ஒன்றி விடும் தன்மை உள்ளதால் இந்த சிலாக்கல் இத்தகைய சிறப்புப் பெயருடன் பொலிகின்றது. ஸ்ரீகௌதம தம்பதிகள் மட்டுமல்லாது அன்னை சிவகாமியுடனும் உத்தம பக்தர்களான ஸ்ரீவியாக்ரபாத முனிவருடனும் ஸ்ரீபதஞ்சலி மகரிஷியுடனும் காட்சி நல்குபவரே திருச்சுழி ஸ்ரீநடராஜப் பெருமான். பெருமானின் பஞ்சமௌன சக்தி பற்றி சற்குருவின் வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து வெளிப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பவர் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். அபூர்வமான அத்தி மரத்தால் பிரம்ம தேவரால் அமைத்து வழிபடப்பட்டதால் அத்தி வரதர் என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர். 4.7.1979 புதன் கிழமை அன்று இறைதரிசனத்திற்கு உகந்த சிம்ம லக்ன நேரத்தில் தன் அடியார்கள் சிலருடன் சென்று ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்தார் நம் சற்குரு. (சற்குருவின் ஜன்ம லக்னத்தில்தான் சனீஸ்வர பகவான் எழுந்தருளினார் என்றில்லாமல் இந்த தரிசன முகூர்த்தத்திலும் அருள்புரிந்த சனி பகவானின் கருணையை என்னென்பது?) அப்போது அத்தி வரதர் ஒரு பிரத்யேக அறையில் எழுந்தருளி இருந்தார். “அடியேன் முதலில் அத்தி வரதரைச் தரிசிக்கச் செல்கிறேன். அடியேனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வாருங்கள்,” என்று கூறி அந்த பிரத்யேக அறைக்குள் பிரவேசித்தார் நம் சற்குரு. நம் சற்குருவைத் தொடர்ந்து சற்குருவின் தாயார் முத்து மீனாட்சி உட்பட அனைவரும் மெதுவாக அந்த அறைக்குள் சென்று ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தைப் பெற்றனர். “அனைவரும் வந்து விட்டார்களா?” என்ற அருகில் இருந்த அடியாரிடம் கிசுகிசுத்தார் சற்குரு. அமைதியாக இந்தக் கேள்வி அனைவரையும் சென்றடைய அனைவரும் இதை ஆமோதிக்க அனைவரும் தரிசனத்திற்காக வந்தடைந்த செய்தி சற்குருவிற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சற்குரு, “அனைவரும் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் பெற அத்தி வரதர் முன் பிரார்த்திக் கொள்ளுங்கள். அது நிச்சயமாக அவருக்கு அருளப்படும்,” என்று சொல்ல சற்குருவின் இந்தப் பிரசாதமும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இவ்வாறு அனைவரும் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தைப் பெற்று பிரார்த்தனை செய்த பின், சற்குரு உலக நன்மைக்காக பெருமாளிடம் வேண்டிக் கொண்ட பின் அமைதியாக அனைவரும் ஸ்ரீஅத்தி வரதரிடம் இருந்து உத்தரவு பெற்று வெளியேறினர். சற்குருவின் நடவடிக்கைகளை ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் பல அற்புத உண்மைகள் புலப்படும். பொதுவாக, நாம் நம்மை விட வயதிலோ, அனுபவத்திலோ, அந்தஸ்திலோ உயர்வாக இருப்பவர்களிடம் மரியாதையுடன் அமைதியுடன் இருப்பதால் பல நன்மைகளைப் பெறலாம். அதிலும் சிறப்பாக இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்யும் போது முழுமையான அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். இறைவன் என்பவர் எங்கோ வானத்தில் உறையும் தெய்வம் மட்டும் கிடையாது நம் வெகு அருகில் அனைவரும் குரல் கொடுத்து கூப்பிடும் தூரத்தில் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கிறார். சிறப்பாக ஸ்ரீஅத்தி வரதர் 40 வருடங்கள் அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கி அனந்த சயனத்தில் இருந்தாலும் பெருமாள் அடியார்களுக்கு அவருடைய அன்பும் ஆதரவும் என்றும் நிரந்தரமாக இருக்கும். இதை உறுதிப்படுத்துவதாக அமைந்ததே சற்குருவின் செய்கையும். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உழவாரப் பணியின்போது நூற்றுக்கால் மண்டபத்தை மதியம் முழுவதும் நீர் விட்டு அலம்பி திருப்பணி புரிந்தார் நம் சற்குரு. பல மணி நேரம் தொடர்ந்து நீரில் நின்றதால் அவர் திருமேனியே குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டது என்றால் எந்த அளவு நீர்ப் பெருக்கை அந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அளித்திருப்பார். ஆனால் அவ்வாறு அளித்த நீர்ப் பெருக்கு அனைத்துமே ஸ்ரீஅத்தி வரதருக்கு அளித்த குரு அபிஷேகமே என்பதை அடியார்கள் புரிந்து கொள்ள வெகு ஆண்டுகள் ஆகி விட்டன. நூற்றுக் கால் மண்டபத்தில் ஏற்படும் நீர்ப் பெருக்கு அத்தி வரதர் உறையும் அமிர்தசரஸ் திருக்குளத்தைத்தானே சென்றடையும் ?

ஸ்ரீபாலமுருகன் திருச்சுழி

அத்தி பூத்தாற்போல் என்ற சொற்றொடர் ஒன்று உண்டு. அதாவது யாருக்கும் தெரியாமல் பூப்பது அத்தியின் தன்மை. அதுபோல் எவரும் அறியாமல் ஆனால் அனைவரின் உள்ளத்தில் நிறைந்திருப்பவரே அத்தி வரதர். உள்ளத்தில் இருக்கும் வரதரை கூவி அழைக்க வேண்டுமா என்ன ? மௌன மொழியே கோடி பிரார்த்தனைகளை வெளிப்படுத்துமே. அத்தி வரதர் அத்தி மரத்தால் பிரம்ம தேவரால் நிர்மாணிக்கப்பட்டவர். அத்தி மரம், நம் மனம், இறைவன் இம்மூன்றிலும் உறையும் தெய்வீக சக்தியே அமிர்தசரஸ் என்னும் ஜீவ சக்தியாகும். இந்த ஜீவ சக்தியில் என்றும் உறைந்து அந்த அனுகிரக சக்திகளை உள்ளிருந்தாலும் வெளியில் தரிசனம் அளித்தாலும் என்றும் வாரி வழங்குபவரே காஞ்சி அத்தி வரதர். இவ்வாறு 40 வருடங்களுக்கு ஒரு முறையே பொலியும் அத்தி வரத பெருமாளின் அனுகிரக சக்திகளை தரிசனத்தின் மூலம் நியாயமான காரணங்களால் பெற முடியாதவர்களும் நற்பலன் பெற துணை நிற்பதே திருச்சுழி பெருமானின் நடராஜ கோலமாகும். அத்தி, யானை, பஞ்சமௌனம் இவை அனைத்திலும் பொலிபவை ஒரே விதமான கருமை நிற காப்பு சக்திகளே. சுத்தமான தேங்காய் எண்ணெயில் 100 மிலிக்கு ஐந்து பூக்கள் என்ற கணக்கில் குங்குமப் பூவை ஊற வைத்து திருச்சுழி நடராஜ பெருமானுக்குச் சார்த்தி வழிபடுதல் சக்தி வாய்ந்த வழிபாடாகும். குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் அற்புத வழிபாடும் கூட இது.
அபூர்வமாக ஸ்ரீமுருகப் பெருமான் திருச்சுழி திருத்தலத்தில் ஈசான்ய திசையில் எழுந்தருளி உள்ளார். ஈசான்ய மூலை என்பது இறைவனிடம் பக்தியையும் நம்பிக்கையும் வளர்க்கும் திசை அல்லவா ? வீடுகளில் ஈசான்ய மூலை மற்ற மூலைகளை விட சற்றுத் தணிவாக இருத்தலும் சிறப்பே. தனிகை முருகன் இங்கு தணி மூலையில் இருப்பதே மற்ற எந்தத் திருத்தலத்திற்கும் இல்லாத சிறப்பைக் கூட்டுகிறது. ஆழ்கிணறு அமைப்பவர்கள், வாட்டர் டிவைனர்ஸ், கழிவு குழாய்கள் தொட்டிகள் அமைப்போர் அவசியம் வழிபட வேண்டிய தெய்வமே திருச்சுழி ஸ்ரீபாலசுப்ரமண்யவர் ஆவார். இறை நம்பிக்கை என்பது பிறவிகள் தோறும் வளர்வதே ஆயினும் அடிக்கடி அதில் தொய்வு ஏற்படும், நம்பிக்கை மறைந்தது போல் தோன்றவதும் இயற்கையே. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் திருச்சுழி முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகங்கள் இயற்றி வழிபடுதல் சிறப்பு. பகவான் ரமண மகரிஷி தன்னுடைய இறை நம்பிக்கையை வலுப்படுத்த வழிபட்ட மூர்த்தியே இவர். பிற்காலத்தில் ஸ்ரீரமணரையே பாலமுருக தெய்வமாக வழிபட்டு பக்தியைப் பெருக்கிக் கொண்டோர் பலர்.

திருச்சுழி

திருச்சுழி திருத்தலத்தில் பல அற்புதமான கல் வடிவுகளைக் காணலாம். இத்தகைய வடிவுகளில் கழிவு நீர் செல்லும் பாதையில் உள்ள ஒரு கல்லையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். உண்மையில் இந்தக் கழிவுக்கல் இரட்டையராகப் பிறந்த சாளுக்கிய அரசகுமாரர்களைக் குறிக்கிறது. தங்கள் பெயரைக் கூட வெளியிட வேண்டாம் என்று இந்த பக்த சீலர்கள் தெரிவிக்கிறார்கள் என்றால் படியாய்க் கிடந்து நின் பவள வாய் காண்பேனே ... என்று குலசேகர ஆழ்வார் பாடியது எத்தகைய பெருமை உடைய செயல். இவ்வாறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தர்கள், அடியார்கள் என்று கோடிக் கணக்கான இறை அன்பர்கள் திருத்தலங்கள் மட்டுமல்லாது திருஅண்ணாமலை, திருப்பதி, கோயில் தீர்த்தங்களில் மச்சமாய் குடிகொண்டோர் பலர். எனவேதான் திருக்கோயில்களில் அமைதியுடன் தேவையில்லாத உடல் அசைவுகளைத் தவிர்த்து பய பக்தியுடன் வழிபாடுகளை நிகழ்த்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தார்கள். நம் சற்குரு உறங்கும்போது கூட ஒருக்கணித்து இரு கைகளையும் கும்பிட்ட நிலையில் வைத்துக் கொண்டுதான் துயில் கொள்வார். யாராவது அறியாமல் சற்குருவின் செய்கைக்கு விளக்கம் கேட்டால், “அடியேன் தூங்கும்போது என்ன தேவதைகள் வருமோ அடியேனுக்குத் தெரியாது (?!). அதனால் எந்த நிலையிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவே அடியேன் கூப்பிய கரங்களுடன் உறங்குகிறேன்,” என்பார். தூங்கும்போது கூட இறை வழிபாடு, இதுவே சற்குரு நமக்குக் கற்றுத் தரும் உயர்ந்த வழிபாடு. திருத்தலங்களில் நாம் காணும் அனைத்தையும் அமைதியுடன் வணங்கி வந்தாலே போதும், அனைத்தையும் பெற்றவர் ஆவோம்.
இவ்வாறு சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் நாம் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவரின் துயர் தீர்க்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் நம் சற்குரு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இது தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி. காசி யாத்திரை மேற்கொள்ளும் முன் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடி தனுஷ்கோடி மண்ணை எடுத்து காசி திரிவேணி சங்கமத்தில் சேர்க்க வேண்டும் என்பது ஒரு நியதி. அதற்காக அடியார்களுடன் ஜைனர்களுக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்கியிருந்தார் நம் சற்குரு. அந்த விடுதியில் இருந்த ஒரு நீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டு பெருமளவில் நீர் வீணாகிக் கொண்டிருந்தது. ஓரிரவே அங்கு தங்கும் நாம் அதைப் பற்றி கவலை கொள்ளாதது இயற்கையே என்றாலும் நம் சற்குருவின் கருத்து வேறாக இருந்தது. நம் சற்குரு உடனே நம்முடன் வந்திருந்த குழாய் ரிப்பேர் செய்யும் அடியார்களை அனுப்பி தேவையான குழாய் போன்ற சாமான்களை தருவித்து கசிவு ஏற்பட்ட அந்த குழாயை சீர்படுத்தித் தந்தார். இது பற்றிக் குறிப்பிடும்போது, “அக்னி தீர்த்தத்தில் நீராடுவதோடு நம் கடமை முடிந்தது என்று கிடையாது. இன்று நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் இதில் எவ்வளவோ நீர் வீணாகும் அல்லவா ? அதுவும் ஒருவிதமான அக்னி கர்மமே. அந்த அக்னி கர்மத்தை சரி செய்ய வேண்டியதும் நம் தலையில் எழுதப்பட்ட கர்மமே,” என்று கர்ம யோகத்திற்கு அழகிய விளக்கம் அளித்தார் சற்குரு. இவ்வாறு திருத்தலங்களில் விளங்கும் சாக்கடை குழாய்களை சீரமைத்துத் தருவதும் அக்னி கர்மங்களைக் களையும் சிறந்த திருப்பணியாகும்.

ஸ்ரீஉஷா பிரத்யுஷா சமேத
சூரிய பகவான் திருச்சுழி

பலரும் சந்தர்ப்ப வசத்தால் இரு தாரங்களுடன் வாழ வேண்டியுள்ளது. உதாரணமாக தன் மனைவி உடல்நலம் குன்றி இறக்கும் தருவாயில் வேறொரு பெண்ணை தன் குழந்தைகளுக்காக மணக்கும் போது அவ்வாறு உடல் நிலை சரியில்லாதவர் மீண்டும் நன்னிலை பெற்று விடுவதுண்டு. வெள்ளம், பூகம்பம், விபத்து போன்ற காரணங்களால் மனைவியைப் பிரிந்து மறுமணம் முடித்தவுடன் மீண்டும் முதல் மனைவி கணவனைத் தேடி வருவது உண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் முறையான திருமண வாழ்வு அமைய உதவி செய்யும் தெய்வ மூர்த்தியே திருச்சுழியில் அருள்புரியும் ஸ்ரீசூரிய பகவான் ஆவார். செம்பருத்தி தைலத்தால் இவருக்கு காப்பிட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யமாக படைத்து ஏழைகளுக்கு அளித்தலால் நற்பலன் விளையும். திருமணப் பொருத்தம் பார்க்காது அமைந்த திருமணங்களில் தம்பதிகளுக்கு இடையே உள்ள உடல் சூடு பிரச்னையாக அமையும்போது இத்தகைய வழிபாடுகள் நற்பலனை அளிக்கும். தற்காலத்தில் பலரும் இரவுப் பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அத்தகையோர் பகலில் எண்ணெய் குளியலை நிறைவேற்ற முடியாமல் பல வியாதிகளுக்கு உள்ளாகிறார்கள். அத்தகையோர் கரிசலாங்கண்ணி அல்லது நீலிபிருங்காதி, மருதாணி போன்ற தைலங்களால் திருச்சுழி சூரிய பகவானுக்கு காப்பிட்டு வணங்கி வருதலால் உடல் சூடு பிரச்னைகளால் ஏற்படும் தாம்பத்யம், கண் பார்வை கோளாறுகளை ஓரளவு தவிர்க்கலாம். இத்தகைய தைலங்களால் தினமும் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதும் நன்றே. உடல் கட்டிகள், கொப்புளங்கள் இவற்றால் துன்புறுவோர் சுத்தமான களிமண்ணை உடலுக்குத் தடவி உரித்த வாழை மட்டை மேல் படுத்துக் கொள்வதால் உடல் கட்டிகள், தோல் வியாதிகள் குணம் பெறும். இத்தகைய மருத்துவங்களை மேற்கொள்ளும் முன் திருச்சுழி சூரிய பகவானை வணங்கி அவர் அனுமதியுடன் நிறைவேற்றுதலே நலம். காரணம் இந்த மருத்துவத்தில் ஏற்படும் தவறுகளே தோல் புற்று நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவும். இளமையாக உள்ள வாழை இலைகளை மைபோல் அம்மியில் வைத்து அரைத்து உடல்மேல் தடவிக் கொண்டு சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் உடல் கட்டிகள் குணமாகும்.

ஸ்ரீகிருத்திகை ரோகிணி சமேத
சந்திர பகவான் திருச்சுழி

அண்டம் நாம் காணும் இந்த உலகமும் அதைச் சூழ்ந்த பரவெளியும் ஆகும். பொதுவாக அண்டம் நம் கண்ணுக்குத் தெரிவதாகும். பகிரண்டம் என்பதும் இந்த அண்டத்தைத் தாண்டிய பரவெளி ஆகும். அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளும் வெளியும் என்பதே அண்டம் பகிரண்டம் ஆகும். நம் முன்னோர்கள் இதையே மனம், உள்ளம், உடல் என்றும் பிரித்து வைத்தார்கள். எனவே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்றால் நம் உடலுக்குள் இருக்கும் விந்தையைப் புரிந்து கொண்டால் இந்த உலகத்தையும் அதன் வியாபகத்தையும் புரிந்து கொண்ட மாதிரிதான். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வழி வகுப்பதே திருச்சுழியில் வீற்றிருக்கும் ஸ்ரீஅண்டபகிரண்ட விநாயகரும் பத்தினி சமேதராய் வீற்றிருக்கும் சூரிய சந்திர மூர்த்திகளும். நான் யார் என்ற கேள்விக்கு விடை பெறும் முன் திருச்சுழி விநாயகப் பெருமானை வழிபட்டு வருதல் இந்த கேள்விக்கு விடை பெறும் முயற்சியை எளிமைப்படுத்தும் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதே இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஸ்ரீரமண மகரிஷியின் வரலாறு ஆகும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு மூர்த்திக்கும் அதாவது விநாயகர், சூரியன், சந்திரன் என்றவாறாக உடல், மனதை ஆளும் மூர்த்திகளுக்கும், அந்த இரண்டையும் இணைக்கும் மூர்த்திக்கும் மூன்று குசா தோப்புக் கரணம் என்ற முறையில் கால்களை குறுக்கே வைத்து ஒன்பது தோப்புக் கரணங்களை பிள்ளையார் மூர்த்திக்கு இட்டு வழிபட்டு வந்தால் நாளடைவில் நாம் இந்த மனதை ஆளலாம் அதன் விளைவாய் இந்த உலகையும் ஆளலாம். இந்த தோப்புக் கரண வழிபாட்டை சந்திர பகவானின் பத்தினிகளுக்குரித்தான கிருத்திகையில் ஆரம்பித்து ரோகிணியில் பூரணமாக்குவதோ அல்லது அந்த அளவிற்கு வேகமாக தோப்புக்கரணம் இட முடியாதவர்கள் ரோகிணியில் ஆரம்பித்து கிருத்திகையில் (27 x 9 = 243) பூரணம் செய்வதும் சிறப்பே. ஒரே நாளில் கடக லக்ன நேரத்திலோ, சிம்ம லக்ன நேரத்திலோ ஆரம்பித்து இத்தகைய தோப்புக் கரண பத்ததியை நிறைவேற்றுவதும் சிறப்புடையதே. ஸ்ரீரமண மகரிஷி இந்த பத்ததியில்தான் பூரணத்துவம் பெற்றார் என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ? திருச்சுழிப் பரல் என்னும் 243 எண்ணை ஆழ்ந்து சிந்தித்து கணித மேதை ராமானுஜர் உலக கீர்த்தி பெற்றதும் ஒரு சிலரே அறிந்த இரகசியம் ஆகும். பொதுவாக கிருத்திகை நட்சத்திரம் தந்தையையும் ரோகிணி நட்சத்திரம் தாயையும் குறிப்பதால் தாய் அல்லது தந்தை அரவணப்பைப் பெறாதவர்களும் அல்லது அவர்களைப் பிரிந்தவர்களும் இத்தலத்தில் கிருத்திகை ரோகிணி நட்சத்திர நாட்களிலோ அல்லது ஞாயிறு திங்கட் கிழமைகளிலோ இத்தலத்தில் வழிபட்டு நற்பலன் பெறலாம். துவிதியை திதிகளில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுவதும் பாத ரட்சைகளைத் தானமாக அளிப்பதும் சிறப்பே. புடவை ஜாக்கெட், வேட்டி சட்டை போன்ற இணைந்த பொருட்கள் தானம் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.

பூரண மங்கள மாங்கல்ய தலம்

வெகு அபூர்வமாகக் காணப்படும் பூரண மங்கள மாங்கல்ய தலங்களுள் திருச்சுழியும் ஒன்றாகும். இங்கு ஸ்ரீகணபதி மூர்த்தி ஆதியாக ஒன்பது மூர்த்திகள் தம்பதி சமேதராய் எழுந்தருளி மங்கள் மாங்கல்ய சக்திகளை பூரணமாக நிரவியுள்ளனர். பொதுவாக அனைத்துத் திருத்தலங்களுமே இவ்வாறு பூரண தலங்களாகவே துலங்கினாலும் மக்களுக்குப் புரியும் வகையில் தம்பதி சமேதராய் எபந்தருளிய ஒன்பது மூர்த்திகள் கண்களுக்கு காட்சி நல்கும் திருத்தலமே திருச்சுழியாகும். தற்காலத்தில் சரியான முகூர்த்தம் கணிக்காது, திருமணப் பொருத்தங்கள் பார்க்காது, திருமணத்திற்கு முன்னரே உடல் சம்பந்தம் கொண்டு, பல தாரக் குற்றங்களுடன் விளங்கும் திருமணங்கள் ஏராளம் ஏராளம். இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக பரிகாரத்தை நல்குவது என்பது சித்தர்களுக்கும் மகான்களுக்கும் சாத்தியமே எனினும் பல திருமண தோஷங்களை அனுபவித்து கழிப்பது முறையே என்பதால் பக்தர்களின் தவறுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டிக் காட்டி அத்தவறுகளுக்கு முறையான பரிகாரங்களையும் அளிக்கக் கூடிய திருத்தலமே திருச்சுழி ஆகும்.

அன்பு ஜோடி ஆனந்த ஜோடி
திருச்சுழி

பூரணத்தைக் குறிப்பதுதான் எண் ஒன்பது. இந்த ஒன்பது இழைகளால் ஆன மாங்கல்யத்தை திருமண வைபவத்தில் சூட்டி திருமண வாழ்வை புனிதமான மங்கள வைபவமாக நடத்தியவர்கள் நம் முன்னோர்கள். இந்த ஒன்பது இழைகளும் சுட்டும் மங்கள வாழ்வை தெளிவுபடுத்துவதாகவே இத்தல மங்கள மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். இந்த மங்கள மாங்கல்ய சக்திகளைப் பற்றிய தெளிவான அறிவை அடியார்கள் பெறாவிட்டாலும் அனைவரும் இத்தல மூர்த்திகளை தரிசனம் செய்து அவரவரால் இயன்ற தான தர்மங்களுடன் வழிபட்டு வந்தால் அவர்கள் நிறைவான வாழ்வைப் பெறுவார்கள் என்பது உறுதி. அபூர்வமாக இத்தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரே ஒன்பது மங்கள சக்திகள் எழுந்தருளி உள்ளன. இந்த மங்கள சக்தி பீடங்களுக்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளால் அலங்கரித்து சுத்தமான குங்குமத்தால் பொட்டிட்டு வணங்கி வருதலால் தங்கள் வாழ்வில் தெரியாமல் செய்த பல குற்றங்கள் நிவர்த்தியாகி அவர்கள் முழுமையாக மங்கள வாழ்வைப் பெறுவார்கள். உதாரணமாக, சாந்தி முகூர்த்தம் போன்ற புனித நிகழ்ச்சிளின் போது ஓத வேண்டிய மந்திரங்களைக் கூட வேதியர்கள் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு பதிலாக தாங்களே ஓதி எப்படியோ திருமணத்தை சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். இதனால் அக்குறிப்பிட்ட பெண்ணுடன் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை அந்த வேதியர்க்கு நிச்சயம் உண்டாகும் என்பது உண்மையே. ஆனால், தாங்கள் அறியாமல் செய்த இந்த தவறுக்கு பிராயசித்தம் நல்கும் ஒரே திருத்தலம் திருச்சுழியே. எச்சுழியையும் நிவர்த்தி செய்யக் கூடியதே திருச்சுழி. ஆனால், பிராயசித்தம் என்பது வாழ்வில் ஒரு முறையே கிட்டும் தெய்வீக சந்தர்ப்பம் என்பதை நினைவில் கொள்ளவும். தற்காலத்தில் பலரும் திருமண தோஷங்களைக் களைவதற்காக பிறரை விட்டு மாங்கல்ய தாரணம் செய்யச் சொல்லி அந்த மாங்கல்யத்தை பிறருக்குத் தானமாக வழங்கி வருகின்றனர். இந்தத் தவறான பழக்கத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதே முறை. கணவனைத் தவிர வேறு யாருக்கும் மாங்கல்யம் சூட்டும் அதிகாரம் கிடையாது. அதே போல திருமணமாகாத பெண் திருமணம் நிறைவேறிய பின் அவளுடைய கணவன் அவளுக்கு அளிக்கும் குங்குமமே முதல் குங்குமத் திலகமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு முறை புதிதாக மணமான ஒரு பெண்ணிற்குக் குங்குமம் இட்டு விடும்படி பெண்ணின் பெரியோர்கள் நம் சற்குருவை அழைத்த போதுதான் சற்குரு மனைவிக்குக் குங்குமத் திலகமிடும் கணவனின் உரிமையை அங்கு எல்லோருக்கும் தெரியப்படுத்தினார். இவ்வாறு அறியாமல் பிறரால் கட்டிய மாங்கல்யங்களைத் தானமாகக் கூட எவருக்கும் அளித்தல் கூடாது. அத்தகைய மாங்கல்யங்களைச் சரடுடன் அம்மன் கோயில் உண்டியல்களில் சேர்த்து அம்மனிடம் தவறுக்காக பிராயசித்தத்தை பெறுவதே முறை.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருச்சுழி

திருச்சுழி தலத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எதிரில் உள்ள பிம்பங்களை நவசக்தி பிம்பங்கள் என்றும் அழைப்பதுண்டு. வெகு அரிதாகவே இத்தகைய பிம்பங்களின் தரிசனம் அமையும். நவதுர்கை சக்திகளுடன் வழிபடும் ஆதிபராசக்தி அம்சமாக இவை பொலிவதால் உடல் சுத்தியுடன் விளங்கும் ஆண்களும், பெண்களும் நவராத்திரி பூஜைகளை இந்த பிம்பங்களுக்கு இயற்றி வழிபடுவது சிறப்பு. சாதாரணமாக கோயில் விக்ரகங்களை தொட்டு வழிபடுவது ஏற்கப்படுவது கிடையாது என்றாலும் இதற்கு விதி விலக்காக திருச்சுழி திருத்தலத்தில் மட்டும் கோயில் அதிகாரிகளின் அனுமதியுடன் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் ஏற்புடையதே. திருத்தலங்களில் எவரும் தூண்களின் மேல் எந்த விக்ரஹங்கள் இல்லா விட்டாலும் சாயக் கூடாது, கை கால்களை வைக்கக் கூடாது என்று கூறுவது இக்காரணம் பற்றியே. குறிப்பாக பிரதோஷம் போன்ற திருவிழா நேரங்களில் ஒரு சதுர அங்குல இடம் கூட பிரதோஷ தரிசனத்திற்காக வரும் வானுலக தேவதைகளுக்குக் கிடைக்காததால் அவை சிரமத்திற்குள்ளாகும். அந்நேரங்களில் அரிசி மாவால் கோயில்களில் கோலமிடுவதால் அந்த தேவதைகள் நம்முடைய கோலங்களில் அமர்ந்து பிரதோஷத்தில் பங்கேற்பதுடன் அவர்கள் தரிசனத்திற்கு வழிவகுத்த அடியார்களுக்கும் அவர்களின் தரிசன பலனின் ஒரு பகுதியை அனுகிரகமாக அளித்து செல்லும். இந்த நவபிம்பங்களும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, 63 நாயன்மார்கள் இவர்கள் இடையே அமைந்துள்ளதால் ஏற்கனவே குறிப்பிட்ட திருச்சுழிப் பரல்கள் (3, 3 9, 7 9, 3 3 3 3 3) என்ற தத்துவ அனுகிரகத்தையும் அடியார்கள் பெற இந்த வழிபாடு துணைபுரியும். இந்தச் திருச்சுழிப் பரல்களுக்கு இணையான எண்ணிக்கையில் திருச்சுழி திருத்தலத்தை வலம் வந்து வணங்குவதாலும், அந்த எண்ணிக்கையில் சுத்தமான நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதாலும் திருச்சுழிப் பரல்கள் பற்றிய ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். ஸ்ரீரமண மகரிஷியின் குடும்பமே அன்னதானத்திற்கு பெயர் பெற்ற குடும்பம். அவர்கள் வீட்டின் பாதியையே அன்னதானத்திற்காக ஒதுக்கி நற்காரியம் பெருக்கி வந்தார்கள் என்றால் அதில் எத்தகைய வைராக்யம் பூண்டிருந்தார்கள் என்பது தெரிய வரும். ஸ்ரீரமணரின் தாயார் திருச்சுழிப் பரல்களுக்கு இணையான எண்ணிக்கையில் அப்பளம், வடை, வடாம் இவைகளைப் பொரித்து திருச்சுழியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நவமி திதிகளில், நவராத்திரி வைபவங்களில் அளித்து வந்தார் என்பது சுவையான செய்தி. இந்த கைகங்கர்யம் ஸ்ரீரமணாஸ்ரமத்திலும் தொடர்ந்தது என்பதை சிலர் நினைவு கூறலாம். திருச்சுழிப் பரல் பற்றி எளிமையாக விளக்க முடியுமா என்ற ஒரு அடியார் கேட்க சற்குரு பலத்த யோசனைக்குப்பின் இவ்வாறு விளக்கினார். “பருப்பு, வெங்காயம், கருவேப்பிலை என எத்தனையோ பொருட்கள் சேர்த்து ஒரு மசால் வடையைச் சுட்டாலும் அதைச் சூடாக பரிமாறா விட்டால் சுவைக்காது. அது போல திரு சுழி என்ற வார்த்தைகள் மெய்யெழுத்து இல்லாமல் இயங்கக் கூடியவையே என்றாலும் திருச்சுழிப் பரல் என்று கூறும்போது அங்கு மெய்யெழுக்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால்தான் அடியேனுக்கு டீ, காபி அளிக்கும்போது அது சூடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. அந்த ஆறிப்போன டீயில் விழுந்த ஈயே சாகாது (ஈ முக்தி அடையாது) என்றால் அடியேன் அந்த டீயை அருந்துவதால் என்ன பயன் ?” திருச்சுழிப் பரல் இப்போது விளங்கி விட்டதா ?

ஸ்ரீசனி பகவான் திருச்சுழி

“தனித்த சனி பணித்த மழை” என்ற மணி வாசகம் ஒன்று உண்டு. பழமொழியையும் விட விலை உயர்ந்த சொற்றொடர்களே இவ்வாறு மணி வாசகம் என்று மாணிக்கத்திற்கு இணையான விலை மதிப்புடையதாக போற்றப்படுகின்றன. இவ்வகையில் திருச்சுழி திருத்தலத்தில் தனிமையில் இனிமை காணும் சனி பகவான் இத்தகைய தனித்த சக்திகளுடன் அருள்பாலிக்கின்றார். வ்ருஷ பணி சக்கரம் என்ற பாம்புத் தலைகளுடன் கூடிய சக்கரத்தை பஞ்சாங்கங்களில் தரிசனம் செய்திருப்பீர்கள். எந்த இடத்தில், எந்த காலத்தில், எந்த அளவுள்ள மழைத் துளிகள் வர்ஷிக்கும் என்ற இரகசியங்கள் இந்த சக்கரத்தில் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த சக்கரத்தைப் படித்து முறையாகப் பலன் சொல்பவர்கள் தற்போது அரிதாகி விட்டதால் இந்தச் சக்கரத்தின் பலனும் அரிதாகி விட்டது. இன்றும் திருச்சுழி சனி பகவானை முறையாகப் பிரார்த்தனை செய்து வருவோர்க்கு இந்த வ்ருஷ பணி சக்கரத்தைப் பார்த்தே மழையைப் பற்றி தெளிவாகப் பொழிந்து விடுவார்கள். ஸ்ரீரமண மகரிஷி இந்த சனி பகவானை பிரார்த்தனை செய்தே இயற்கை இரகசியங்கள் அனைத்தையும் கைவரப் பெற்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். ஆனால் பகவான் என்ன வழிபாடுகள் இயற்றினார் என்பது எவரும் அறியா இரகசியம் ஆகும். இதுவே இந்த சனி பகவானின் தனித் தன்மையுமாகும். பொதுவாக, திருத்தலங்களில் எழுந்தருளிய மூர்த்திகளை எந்தெந்த வழிபாடுகளால் மகிழ்விக்கலாம் என்பதைச் சித்தர்கள் தெளிவுபடுத்துவது வழக்கம் என்றாலும் இந்த சனி பகவானைப் பற்றி அவரவர் பொறுப்பிற்கே விட்டு விடுவதும் ஒரு தனி பாணிதானே. திருச்சுழி ஸ்ரீசனி பகவான் அவருக்கு உரித்தான வருண திசையான மேற்கு திசை நோக்கி அருள்வதால் சுவாமியை தரிசனம் செய்த சில மணித் துளிகளில் மழைத் துளிகளை அனுகிரகமாக அளித்தார் என்பதை இங்குள்ள படத்தில் பொலியும் மழைத் துளிகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். சனிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து வருதலாலும், கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களை சனி பகவானுக்கு சார்த்துவதுடன் பக்தர்கள் தாமும் தலைக்கு தேய்த்துக் குளித்து வருதலும் சனி பகவானின் அனுகிரகத்தைப் பெறும் வழிபாட்டு முறைகளாகும். பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள், 60 வயதைக் கடந்தவர்கள், ஜாதக ரீதியாக தங்கள் கடைசி தசையில் வாழ்பவர்கள், மேற்கு நோக்கிய தலை வாசல்படி உடைய இல்லங்களின் உரிமையாளர்கள் அல்லது அத்தகைய வீடுகளில் வசிப்பவர்கள் அனைவரும் தரிசித்து வழிபாடுகள் இயற்றி பயனடையும் பெருமானே திருச்சுழி சனி பகவான் ஆவார். சனிப் பிணம் துணை போகும் என்ற முதுமொழிக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. சனிக் கிழமை யாராவது இறந்து விட்டால் அவர்கள் இல்லத்தில் தொடர்ந்து மரணங்கள் நிகழும் என்பது அறியாமையில் விளைவதே. இது குறித்து பயத்துடன் வாழ்வோர் திருச்சுழி சனி பகவானை வணங்கி வழிபடுதலால் நல்ல மனத் தெளிவைப் பெறுவார்கள். மரணம் பற்றிய தெளிந்த அறிவை அளிப்பதே திருச்சுழி சனி பகவான் வழிபாடாகும். இத்தலத்தில் வழிபட்டு ஸ்ரீரமண மகரிஷி மரணம் குறித்து தெளிந்த அறிவைப் பெற்றது வியப்பில்லைதானே ?

ஸ்ரீதிருமகள் பூமகள் சமேத கோவிந்தர்
திருச்சுழி

அமர்ந்த நிலையில் நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளை அருளும் ஸ்ரீதிருமகளுடனும் பூமாதேவியுடனும் ஸ்ரீகோவிந்தப் பெருமாள் எழுந்தருளி இருப்பது அரிதான காட்சியாகும். திருஅண்ணாமலை, மணமேல்குடி விண்ணகரம், ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் வராக மூர்த்தியாக திருமால் காட்சி அளிப்பதால் இத்தலங்கள் எல்லாம் பெருமாளின் வராக மேனியில் குடிகொண்ட பொன் சக்திகளை அனுகிரகமாக அளிக்கின்றன. பெருமாள் வராக அவதாரம் கொண்டு சுவாமியின் திருப்பாதங்களைத் தேடி பூமியைக் குடைந்து சென்றபோது வராக மேனியே தங்க மேனியாக மாறிப் பொழிந்ததாம். இத்திருத்தலங்களில் பெருமானை தரிசனம் செய்யும்போது தங்கள் உடல் மேல் படிந்த ஸ்வர்ண ஆகர்ஷண சக்திகளைக் கண்டு வியந்த அடியார்கள் பலர். தீவிர வைணவர்களில் பலரும் தங்கள் தோள்களில் சங்கு சக்கர இலச்சினைகளை சூடுகோல் கொண்டு பொறித்துக் கொள்வதுண்டு. இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே, “எல்லா மனிதர்களுமே பிறக்கும்போதே இந்த இலச்சினைகளுடன்தான் பிறக்கின்றனர், அவர்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. ஆனால், இந்த இலச்சினைகளைக் கொண்டாடும் மனிதர்கள் தமக்கு வரும் எந்த ஆபத்தையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியைப் பெருமாள் பிரசாதமாகப் பெறுகிறார்கள். அதற்காகவே அடியேன் நம் அடியார்கள் குளிக்கும்போதெல்லாம் நம் வலது தோளில் எழுந்தருளி இருக்கும் சக்கர பகவானுக்கும் இடது தோளில் வீற்றிருக்கும் சங்கு பகவானுக்கும் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றும் முகமாக ஒவ்வொரு தோளிலும் ஒரு செம்பு நீர் ஊற்றி அவ்விரு மூர்த்திகளுக்கும் அபிஷேகம் இயற்றுவதுபோல் பாவனை செய்யும்படி அடியார்களிடம் கூறிக் கொண்டு வருகின்றேன். இது ஆரம்பத்தில் பாவனையாக இருந்தாலும் நிச்சயம் பெருமாளின் கருணை கடாட்சத்தைப் பெற்றுத் தருவதால் சங்கும் சக்கரமும் அடியார்களின் தோளில் அமர்ந்து அவர்களைக் காக்கும், வழி நடத்திச் செல்லும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.” என்ன எளிமையான பெருமாள் வழிபாடு ? சற்குரு வலியுறுத்துவதுபோல் தலைக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று தொண்டை கிழிய கோவிந்தனை அழைத்து வந்தால் அவன் நிச்சயம் திருச்சுழி மகிமையை சீக்கிரமே புரிய வைப்பான். உண்மையில் சங்கு, சக்கரம் இரண்டுமே சுழி சக்திகளுடன் பொலிபவையே. பெருமாள் வழிபாடு ஒன்றே அந்தச் சுழிச் சக்திகள் இடஞ் சுழியா இல்லை வலஞ்சுழி சக்திகளா இல்லை இரண்டும் கடந்த திருச்சுழி சக்திகளா என்பதை ஐயம் திரிபற புரியவைக்கும். “சுழியைப் பற்றி முழுமையாகப் புரிந்தவன் கண்ணன் ஒருவனே,” என்பார் நம் சற்குரு. துரோபதையின் மானம் காக்க கண்ணனிடம் ஆடை வேண்டியபோது அதை வலஞ்சுழியாக அருளினான். அதே சுழி சக்திகள் துச்சாதனன் மூலம் இடஞ்சுழியாக பிரபஞ்சத்தை அடைந்தன. இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டதே திருச்சுழி. பிரதோஷ புனித வேளையில் நிறைவேற்றும் சோமசூக்த பிரதட்சிணம் திருச்சுழி மகிமையைப் பற்றி விளக்கும் அற்புத வழிபாடாகும்.

ஸ்ரீகதிராமங்கல மூர்த்தி திருச்சுழி

கதிர்களுடனோ அல்லது வாழைக் குலைகளுடனோ துலங்கும் இத்தகைய லிங்க மூர்த்திகள் திருத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு அருகிலோ அல்லது எதிரிலோ அமைவதுண்டு. கோயிலில் சுவாமியை தரிசனம் செய்யும்போது நிறைவாக சிவலிங்கத்தைத் தரிசனம் செய்து இதுவரை தாங்கள் தரிசனம் செய்த மூர்த்திகளின் அனுகிரக சக்திகள் அனைத்தையும் இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்து தனக்கு இந்த அபூர்வமான சந்தர்ப்பத்தை அளித்த இறைவனுக்கு நன்றி கூறி அமைதியாக அமர்வதே சித்தர்கள் கூறும் சிவத்தல வழிபாட்டு முறை. திருஅண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற பெரிய திருத்தலங்களில் இறைவனைத் தரிசித்து இவ்வாறு சமர்ப்பண வழிபாடு நிறைவேற்ற முடியாதர்களுக்கு கருணா மூர்த்தியாக அருள்வழங்குபவரே தூணில் எழுந்தருளிய இத்தகைய லிங்க மூர்த்திகள். ஆனால், தங்கள் உடல், வயது, சூழ்நிலை ஒத்துவரும்போது மூலவரையே அவசியம் தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். வழிபாட்டின் பலனே அர்ப்பணம் என்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். மழையைத் தாங்கும் மேகங்கள், குழந்தையைத் தாங்கும் கர்ப்பிணிப் பெண்கள் என்று கூறுகிறோம். இதன் பொருளை ஆழ்ந்து சிந்தித்தால் எந்த மேகத்திற்கும் மழையை உண்டாக்கும் சக்தி கிடையாது. எந்த பெண்ணிற்கும் ஒரு குழந்தையை உண்டாக்கும் தகுதி கிடையாது. சிருஷ்டி அல்லது ஒரு பொருளை உருவாக்குதல் என்பது இறைவனுக்கும் இறைநிலையில் உள்ள மகான்களுக்கும் மட்டுமே சாத்தியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிருஷ்டி இரகசியத்தை உணர வைப்பதும் இந்த கதிராமங்கல மூர்த்திகள் ஆவர். ஆங்கிலத்தில் கூட rain bearing clouds என்றுதான் கூறுவார்களே தவிர எவரும் rain producing clouds என்று கூறுவது கிடையாது அல்லவா ? ஒருமுறை ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவரை புத்திர காமேஷ்டி யாகம் நிகழ்த்துவதற்காக தசரத மகராஜா அயோத்திக்கு அழைத்து வந்தார். பிறப்பிலிருந்தே அவதூதராக விளங்கியவர் அவர். அவரை வரவேற்பதாக பல இளம்பெண்கள் நிர்வாணமாக கூடி மலர்களை அவர் நடக்கும் பாதையில் தூவினர். இது ஏதோ ஒரு ஆர்ப்பாட்டமான வரவேற்பு என்பது போல் தோன்றினாலும் ஆழ்ந்த பொருள் பொதிந்தவையே இத்தகைய ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அளிக்கப்படும் வரவேற்புகள். ரிஷ்ய சிருங்கர் என்றால் மனிதர்களுக்குப் புலப்படாத, அவர்கள் அறிவுத் திறனைக் கடந்த தெய்வீக லீலைகளைப் புரிபவர் என்ற ஒரு பொருள் உண்டு. அம்மகான் அந்த மலர் வழிபாட்டை ஏற்றுக் கொண்டபோது பல பெண்களின் இளங்கொங்கைகளை தன்னுடைய ஐந்து விரல்களால் பற்றி அனுகிரகம் புரிந்தார். மழை மேகம் பற்றி புரிந்தால்தான் இந்த லீலையின் இரகசியம் புரிய வரும். பெண் என்பவள் ஒரு குழந்தையைத் தாங்கி, பெற்று, வளர்ப்பவளே. அந்த தகுதி இல்லாத பல பெண்களை கண்டபோது முனிவர் தன் தவப்பயனால் அவர்களுக்கு பால் பாக்கியம் பெருகுமாறு தன்னுடைய லீலையால் அனுகிரகம் புரிந்தார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்ட அனுகிரகமாக தசரத மகாராஜாவும் பட்டத்து ராணிகளும் ரிஷ்யசிருங்கரின் திருப்பாதங்களுக்கு நீர்வார்த்து அபிஷேகம் நிறைவேற்றியபோது பெருமழை பொழிந்து அவரை வரவேற்றது. பல்லாண்டுகளாக மழையே கண்டிராத அயோத்தியா பூமி மழைப் பொழிவை அம்மகரிஷியின் அனுகிரகமாகப் பெற்றது. எனவே நான்கு அவதார மூர்த்திகளை ரிஷ்யசிருங்கரின் புத்திரகாமேஷ்டி யாகம் பூமிக்கு கொண்டு வந்தது ஒரு ஆச்சரியமான செயல் அல்லவே ?

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருச்சுழி

துர்வாச முனிவரின் சாபத்தால் புற்களே கோடரிக் காம்பாக மாறி யாதவ குலத்தையே அழித்த வரலாறு நீங்கள் அறிந்ததே. முனிவரின் சாபம் என்பது நல்லதைத்தானே செய்யும். இவ்வாறு பகவான் கிருஷ்ணர் உட்பட அனைத்து யாதவர்களும் துர்வாச முனிவரின் சாபத்தால் மறைந்தாலும் இறை அருளால் அந்த வம்சம் மீண்டும் பூமியில் தழைத்து நின்றதையே திருச்சுழி திருத்தலத்தில் பொலியும் இந்தச் சிவலிங்கம் சுட்டிக் காட்டுகிறது. பீஷ்மரைப் போன்ற நைஷ்டிக பிரம்மசாரிகள், துறவிகள், சன்னியாசிகள், இறை வாழ்விற்காக தங்கள் குடும்ப வாழ்வைத் துறந்தவர்களின் வம்சமும் நிச்சயம் பெருகத்தானே செய்யும். அதற்கு அனுகிரகம் செய்பவரே இந்த கதிராமங்கல மூர்த்தியாவார். ஆறு பூவன் வாழைப் பழங்களுக்குக் குறையாமல் ஒரு வாழை இலையில் வைத்து அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து பிசைந்து பக்தர்களுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும், சிறப்பாக பசுக்களுக்கும் இத்தகைய தானங்களை அளிப்பதால் எந்நிலையில் உள்ளவர்களுக்கும் சந்ததி விருத்தியாகும். இத்தகைய தானங்களை பெறுபவர்கள் இலையைத் தூர எறிவது சற்றும் தவறு கிடையாது. அக்காலத்தில் மணமாகி தங்கள் பெண்களை பிறந்த வீட்டிற்கு அனுப்பும்போது அவர்களுடன் ஒரு பால் கறக்கும் பசுவையும் அனுப்புவதுண்டு. இதுவே நிரந்தர லட்சுமி கடாட்சத்தைத் தரும் தானம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முற்காலத்தில் தை மாத உத்தராயண முதல் மூன்று தினங்களிலும் நெற்கதிர்களை தங்கள் கையால் அறுத்தெடுத்து நெற்தான்யங்களைப் பிரித்தெடுத்து ஸ்ரீகதிராமங்கல மூர்த்திக்கு அர்ப்பணித்து பின்னர் அந்தப் புது நெல் அரிசி கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து நைவேத்யமாகப் படைப்பர். அந்த முதல் இறைப் பிரசாதத்தை அண்டங் காக்கைகள் ஏற்று சந்ததிகளை காத்து ரட்சித்தன. இதனால் சந்ததிகள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்ததுடன் வயல்களும் பூச்சி அரிப்பு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் செழித்தன. தற்போது இத்தகைய நெற்கதிர் வழிபாடு அருகி விட்டாலும் பக்தர்கள் தை மாதத்தில் அபூர்வமாகப் பொலியும் இந்த திரிகுண கரிநாட்களில் சர்க்கரைப் பொங்கலை காக்கைகளுக்கு படைப்பது சிறப்பாகும். அண்டங் காக்கைகள் ஏற்கும் பிரசாதம் இந்த பூலோகத்தை மட்டும் காப்பது என்பது அல்லாமல் பல அண்டங்களையும் காக்கும் சக்தி பெற்றதாகும். ஒரு முறை ஒரு ராம நவமி தினத்தில் காக்கைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் அளித்தபோது அங்கு கூடிய காக்கைகள் பிரசாதம் உண்பதைக் கூட மறந்து கா, கா ... என்று கூவிக் கொண்டிருந்தன என்று இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு அனுபவித்த பல அடியார்கள் தங்கள் சந்தோஷத்தை சற்குருவுடன் பகிர்ந்து கொண்டனர். அதைக் கேட்ட சற்குரு, “அப்படியா அடியேனப் பொறுத்தவரை அந்தக் காக்கைகள் எங்கே கத்திக் கொண்டு இருந்தன. ஸ்ரீராமரின் அனுகிரகத்தை தங்களுக்கும் அளித்த ராமபிரானின் கருணைக்கு நன்றி அல்லவா தெரிவித்துக் கொண்டிருந்தன ...! ராமா நன்றி, ராமா நன்றி என்று அண்டங் காக்கைகள் கத்தும் அந்தக் காட்சியைத்தான் அடியேன் இங்கிருந்து (திருஅண்ணாமலை ஆஸ்ரமம்) இரசித்துக் கொண்டிருந்தேன்,” என்றாராம். ஆனால் நாமோ ... ?

புதுப் பொலிவுடன் திகழும்
ரமண குடில் திருச்சுழி

ஒரு முறை திருஅண்ணாமலை குகை நமசிவாயர் ஒரு வீட்டிற்கு வருகை தந்து அந்த இல்லத்தில் நடந்த விழாவைச் சிறப்பித்தாராம். அப்போது அங்கு வந்த அனைவருக்கும் திருநீறு வழங்கி ஆசி அளித்தாராம். ஆனால் அவர் ஆசி அளித்த சில தினங்களிலேயே அந்த இல்லம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டதாம். மகானின் கருணையைப் பற்றி புரிந்து கொள்ள முடியாத பலரும், “சாம்பல் அளித்து அந்தச் சாமியார் அனைத்தையும் சாம்பலாக்கி விட்டான்,” என்று ஏசினார்களாம். ஏச்சும் பேச்சும் மகான்களுக்கும் ஒன்றுதானே. சில நாட்களில் தன்னுடைய தவ வலிமையால் தீயில் கருகி சாம்பலாகிப் போன அந்த வீட்டை புனரமைத்து புதிதாக்கி அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு அளித்தாராம் குகை நமசிவாயர். வழக்கம்போல் அனைத்தும் நன்முறையில் நிறைவேறியவுடன் மகானின் செய்கையை அனைவரும் புகழ்ந்து பாடினார்களாம். அது போல் ஒரு பொருள் அழிகின்றது என்றால் அது புனரமைக்கப்படுகிறது, புதிதாக மாற்றப்படுகின்றது என்று தெளிவுபடுத்துவதே திருச்சுழி தலத்தில் வழிபாடுகளை இயற்றும் பக்தர்களும் அடியார்களும் புரிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். இதற்கு எடுத்துக் காட்டாக அமைந்ததே ரமண மகரிஷியின் பிறந்த தலமான திருச்சுழி ஆகும். குகை நமசிவாயர் என்ற வார்த்தைக்கு ஆழ்ந்த பல தத்துவார்த்த விளக்கங்கள் உண்டு. குகையில் அமர்ந்து சற்குரு என்பவரே இறைவன் என்னும் குகையாக திருஅருணாசலேஸ்வரராக அமர்ந்துள்ளார் என்பதை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்து, அதே அருணாசல சக்தியை தன் மனம் என்னும் குகையிலும் அமர்ந்த இறைவன் என்ற அனுபவம் பெற்று அந்த “குகை” அனுபவத்தை உலகம் அனைத்திலுமுள்ள பக்தர்களுக்கு பகிர்ந்தளித்தவரே குகை நமசிவாயர். அந்தப் பாதச் சுவடுகளைப் பின் பற்றி அவர் திருவருள் புரிந்த குகையில் தவங்கள் இயற்றி முழுமை அடைந்த பிரான்தான் ரமண மகரிஷியும். இவ்வாறு மகான்கள் முழுமை அடைய அருளும் தலமே திருச்சுழி என்பதாகும். திருச்சுழி இடஞ் சுழியா வலஞ் சுழியா என்பதை விட அனைவரையும் அனைத்தையும் முழுமையாக்கும், பூர்ணமாக்கும் ஒரு சுழியே திருச்சுழி.

எதையும் சாதிக்குமே
குரு நம்பிக்கை

குரு நம்பிக்கை என்ற திருச்சுழியே அனைத்தையும் பூர்ணமாக்கும் ஒரு சுழி என்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். தற்போது மார்பக புற்றுநோய் என்பது பலரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது. இது பற்றி ஏராளமான கேள்விகள் கேட்கப்படுவதால் அனைத்து நோய்களுக்கும் ஒரே பதிலாக அமையும் குரு நம்பிக்கை குறித்த ஒரு நிகழ்ச்சியை விளக்குகிறோம். ஒரு திருமணமான பெண்ணிற்கு மார்பு வலி ஏற்பட்டது. பரிசோதித்து பார்த்தபோது அது புற்றுநோய் என்று தெரிய வந்தது. தானறிந்து எந்த தவறும் புரியாத அந்த பெண்மணி ஆழ்ந்த குரு நம்பிக்கை கொண்டிருந்ததால் இதை இறைவனின் பரிசாக ஏற்றுக் கொண்டாள். ஆனாலும் இதற்கு பரிகாரம் தேட வேண்டுமே. என் செய்வது ? பரிகார களஞ்சியமான ஸ்ரீஅகஸ்திய விஜயத்தைப் புரட்டினாள். அதில் ஏதோ ஒரு பக்கத்தில் ராமேஸ்வர மகிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் தற்போது நமக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகள் என்று ஒதுக்கிக் கொண்டே வந்த அந்தப் பெண் கண்களில் இந்த இரு வரிகள் தென்பட்டன, “பத்துக் கடலை மிட்டாய்களை வாங்கி உங்கள் அருகிலுள்ள சிவன் கோயிலில் தானம் அளித்து வந்தால் உங்கள் நாய்க்குப் பிடித்த ஜலதோஷம் நீங்கும் (எந்த அளவிற்கும் குரு நமக்காக இறங்கி வருவார் என்பதை உணர்த்தும் ஒரு கற்பனை தானமே இது),” என்று அதில் இருந்தது. அந்த பெண்மணியின் பிரச்னையோ புற்று நோய். அவள் எந்த நாயையும் வளர்க்கவும் இல்லை. இருந்தாலும் தன்னால் நிறைவேற்றக் கூடிய ஒரு நிவாரணத்தை அவள் தெரிந்து கொண்டதால் அன்று முதல் தினமும் 10 கடலை மிட்டாய்களை வாங்கி அருகிலிருந்த சிவன் கோயிலில் தானமாக அளிக்க ஆரம்பித்தாள். மூன்று வருடங்கள் இந்த தானம் தொடர்ந்தது. இடையே ஆபரேஷன், கீமோதெரபி போன்ற பல இன்னல்களை அந்த பெண் சந்திக்க வேண்டி வந்தது. அத்தகைய சமயங்களில் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடலை மிட்டாய் தானத்தை தொடர்ந்து நிறைவேற்றி வந்தாள்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சரியாக மூன்று வருடங்கள் கழித்த பின்னர் ஒரு நாள் அந்தப் பெண்ணின் நோய் சம்பந்தப்பட்ட கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்ததால் கடலை மிட்டாய் தானப் பலனைப் பெற்ற நாய் உய்வடைந்தது. அது இப்போது தான் ஒரு அடியார் கொடுத்த தானத்தால் நன்னிலை அடைந்து விட்டோம் என்ற உணர்வைப் பெற்றது. உடனே அது இறைவனிடம், “இறைவா, அடியேனுக்கு இத்தகைய உயர்ந்த அனுகிரகத்தை அளித்த அந்த அடியார் நீடூழி வாழ தாங்கள் அருள வேண்டும்,” என்று மனமாரப் பிரார்த்தித்தது. விளைவு நீங்கள் அறிந்ததே. அந்தப் பெண்ணிற்கு புற்று நோய் இருந்த அறிகுறி சற்றும் தெரியாமல் மறைந்து சகஜ வாழ்விற்கு அவள் திரும்பினாள். அந்தப் பெண் அடியார் தற்போது குருவின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் இருப்பதால் பல கற்பனையுடன் இந்த நிகழ்ச்சி புனையப்பட்டுள்ளது என்றாலும் குரு நம்பிக்கை என்பது என்றும் மாறா, மங்கா ஒளி விளக்கே. உண்மையில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய்களுக்கு கடலை மிட்டாய்களை தானம் அளித்தலால் பெண்கள் மார்பகப் புற்று நோய்களிலிருந்து காக்கப்படுவர். ஏற்கனவே இத்தகைய பாதிப்புகளால் வருந்துவோர் நன்னிலை அடைவர் என்பது உறுதி. பல்லாண்டுகளுக்கு முன் நம் சற்குரு சூரியன் மறையும் அந்தி வேளையில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் தன்னுடன் கிரிவலமாக வந்த பல வண்ண நாய்களுக்கும் (இது ஒட்டு மொத்தமாக மனித சமுதாயம் அனைத்தையும் குறிப்பது) சற்குரு தம் திருக்கரங்களாலேயே கடலை மிட்டாய்களை தானமாக அளித்து பெண் குலத்தைக் காப்பாற்றினார் என்பது ஒரு சிலரே அறிந்த பைரவ இரகசியமாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதைக்கும் மார்பகப் புற்று நோய்க்கும் உள்ள சம்பந்தம் ஆழ்ந்த ஆத்ம விசாரத்தின் மூலம் மட்டும் அறியக் கூடிய ஒரு இறை அனுபவமே. பல தாய்மார்கள் தாங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டினால் தங்கள் இளமை குன்றிவிடுமோ, அழகு கெட்டு விடுமோ என்று பால் மறுப்பதும் மார்பகப் புற்று நோய்க்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இறைவனை வணங்குவதால் பெண்களின் இந்த தவறான மனக் குழப்பங்கள் அகலும்.

பல இலவச மருத்துவ முகாம்களில் பணியாற்றிய நமது சபையைச் சேர்ந்த ஒரு அடியார் மருத்துவர் கடலோர மருத்துவ மனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தமிழ்நாட்டிலேயே முதல்தர மருத்துவ பட்டங்களை வாங்கியவரும் கூட. கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது பலருக்கும் கடல் பயணம் ஒத்துக் கொள்ளாததால் அவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கும் ஒவ்வாமை ஊசியைப் போட்டுக் கொண்டு செல்வது வழக்கம். இந்தச் சூழ்நிலைக்குப் புதியவரான அந்த அடியாருக்கு ஒரு குறிப்பிட்ட மீனவரின் பிடிவாதப் போக்கும், அதிகார தோரணையும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சற்குருவின் மேலுள்ள ஆழ்ந்த நம்பிக்கையால் அனைத்தும் இறைவன் சித்தமே என்ற தெளிந்த நம்பிக்கையுடன் தன்னை நாடி வந்த மீனவர்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை ஒரு மருத்துவர் என்ற முறையில் அன்புடன் நிறைவேற்றி வந்தார். ஒரு முறை அந்த முரட்டு மீனவருக்கு சிக்கன் குனியா காய்ச்சல் தொற்றிக் கொண்டது. எந்த அரசாங்க மருந்தும் வெளி மருத்துவ மனைகளில் வாங்கிய மருந்தும் பயன் தரவில்லை. அந்நிலையில் அந்த மருத்துவர் நம் சற்குரு நமது ஆஸ்ரமத்தில் அறிமுகப்படுத்திய பப்பாளி லேகியத்தைப் பற்றி கூறவே அந்த அடியாரும் பல மைல்கள் பயணம் செய்து அந்த லேகியத்தைப் பெற்று தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார். பப்பாளி லேகியம் என்பது சிக்கன் குனியா, டெங்கு சுரம், டைபாய்ட் போன்ற தொற்று நோய்க் காய்ச்சல் கண்டவர்களுக்கும், இத்தகைய வியாதிகளிலிருந்து வருமுன் காப்பாகவும் அமையும் ஒரு லேகியம். என்ன ஆச்சரியம் ? அவர் நோய் குணமாகியது என்பதை விட அவர் நடவடிக்கையே வெகுவாக மாறிவிட்டது. ஆரம்பித்தில் மடித்து கட்டிய லுங்கியுடன் அரசு மருத்துவரை அணுகிய அந்த மீனவர் நாளடைவில் ஒழுங்காக துவைக்கப்பட்ட வேட்டி சட்டைகளை அணிந்து, நெற்றிக்கு விபூதி குங்குமம் அணிந்து வரத் தொடங்கினார். பின்னர் அவரிடமிருந்த அடாவடித் தனங்கள் முற்றிலும் மறைந்து போய் முண்டியடித்துக் கொண்டு மருத்துவரைப் பார்ப்பது என்றெல்லாம் இல்லாமல் மருத்துவரே தன்னை அழைக்கும் வரை ஓரமாய் ஒதுங்கி நின்று அவரைப் பார்க்கும் வரை காத்திருக்கும் உயர்ந்த குணத்தைக் கொண்டவரானார். அந்த மருத்துவராலேயே நம்ப முடியாத அளவிற்கு அந்த மீனவரின் முகத்தில் ஒரு தெய்வீகக் கலையும் தோன்றி பிரகாசித்தது. பின்னர் விசாரித்த போதுதான் அந்த மீனவரின் தெய்வீக முன்னேற்றத்திற்கான காரணத்தை அந்த மருத்துவர் அறிந்து கொண்டார். முதலில் பப்பாளி லேகியத்தை ஒரு மருந்தாக மட்டுமே எண்ணிய அந்த மீனவர் நாளடைவில் அது அனைத்து நற்குணங்களையும் பெற்றுத் தரும் பொக்கிஷமாக இருப்பதைக் கண்டு எப்போதெல்லாம் அவர் ஆஸ்ரமத்திற்கோ அல்லது அதன் மற்ற கிளைகளுக்கோ சென்றாலும் அங்கு கிடைக்கும் அத்தனை பப்பாளி லேகியங்களையும் வாங்கி விடுவாராம். அதன் பயனால் ஒரு முரடர் அடியாரானார், அன்புள்ளம் கொண்டவரானார். நமது சற்குருவை நேரில் காணாத ஒரு அடியாரிடம் இத்தனை தெய்வீக மாற்றங்கள் அவர் கொண்ட குரு நம்பிக்கை என்ற ஒன்றால் மட்டுமே நிகழும் என்றால் சற்குருவுடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகும் அடியார்கள் எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு வழிகாட்டும் களங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும் ?

ஸ்ரீசகாயவல்லி சமேத ஸ்ரீபூமிநாதர் திருச்சுழி

திருச்சுழி இடஞ்சுழியா வலஞ்சுழியா ?

அது திருச்சுழி!

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam