உள்ளத்தின் ஒலி இறைவனின் ஒளி !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மணி ஓசையின் மகத்துவம்

ஒரு பெரிய மகான் திருவொற்றியூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒவ்வொருவரும் அவரைக் கடந்து போகும்போது, ”இதோ ஒரு நாய் போகிறது, அடடே ஒரு கழுதை போகிறது, இங்கே பார் ஒரு நரி போகிறது,” என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம். காரணம் அவர் கண்ணுக்கு அவர் எதிரே செல்லும் மனிதர்களுடைய சுய ரூபம் தெளிவாகத் தெரிந்ததுதான்.

ஒரு முறை ராமலிங்க அடிகள் உடல் முழுவதும் தூய வெள்ளை அணிந்து கொண்டு அத்தெரு வழியாகச் சென்றாராம். அப்போது அந்த மகான், ”ஆஹா, இங்கு ஒரு மனிதன் போகிறான்,” என்றாராம். வெறும் மனித உடல் பெற்றிருந்தால் மட்டும் போதுமா? மனித உடலில் மனிதத் தன்மையுடன் வாழ்வதுதான் சிறப்பு.

மனிதத் தன்மை என்றால் என்ன? அவதாரங்களுக்கே நல்வழி காட்டும் உயர்ந்த நிலையில் திகழ்ந்தவரே வள்ளலார் பெருமான். ஆனால் தன்னுடைய இறைத் தன்மையைப் பூரணமாக மறைத்துக் கொண்டு ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து லட்சக் கணக்கான பக்தர்களுக்கு அறவழி காட்டி வந்தார் அப்பெருமான்.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீநடராஜ பெருமான்
சங்கரன்கோவில்

நடக்கும்போது அவருடைய நிழல் தரையில் விழாது. முழுக்க முழுக்க ஒளி உடம்பாகவே வள்ளலார் பெருமானின் புனித உடல் பிரகாசித்ததால் ஒரு மனிதனுடைய தூல உடலில் நிரவி நிற்கும் நிழல் என்ற மலம் அவருடைய உடலில் இல்லாது அதனால் தரையில் நிழல் விழாத தெய்வீக நிலையில் திகழ்ந்தார். இதுவே மனிதத் தன்மை,

இது வள்ளலார் பெருமானுக்கு மட்டுமே இறைவன் அளித்த அருட் கொடை என்று எண்ண வேண்டாம். இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு ஜீவ ராசிக்குமே, புல், பூண்டு, விலங்கு, பாம்பு என்ற எல்லா உயிரினங்களுக்குமே இறைவன் அளித்துள்ள தெய்வீக வெகுமதியே இந்த நிலை.

ஆனால், இந்த தெய்வீக நிலையை உயிரினங்கள் உணராததால் வள்ளலார் பெருமான் பெற்ற அந்த உயர்ந்த பரவச நிலையை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற மாயையில் மாட்டி அலைக்கழிக்கப்படுகின்றன இப்பூவுலக ஜீவன்கள்.

பெருங் கருணை கொண்டு சித்த மூர்த்திகள் சாதாரண ஜீவன்களும் வள்ளலார் பெருமான் போன்ற மூர்த்திகள் பெற்ற இறை நிலையைப் பெறும் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றே மணி ஓசையின் மூலம் இறைவனை அடையும் உத்தம இறை மார்கமாகும்.

வள்ளலார் பெருமான் தான் நிறுவிய சத்திய ஞான சபையில், ”இதோ வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார். மீண்டும் அவர் வெளி வராததைக் கண்டு கதவைத் திறந்து பார்த்தபோது அறையினுள் அவரைக் காண முடியவில்லை. ”வருகிறேன்,” என்று சொல்லிச் சென்றவர் மீண்டும் வராமல் இருப்பாரா? சத்திய ஞானிகளின் வாக்குப் பொய்க்குமா?

உண்மையில் அறையினுள் சென்ற வள்ளலார் பெருமான் உடனே திரும்பி வந்து விட்டார். ஆனால், தன்னுடைய மனித உடலை விட்டு விட்டு சத்திய ஜோதியாகத் திரும்பி வந்ததால், ஞான ஜோதியாய்ப் பரிமாணம் கொண்டு பிரகாசித்ததால் அவரை இன்று வரை சாதாரண மனிதர்கள் யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சித்தர்கள் அருளும் மணி ஓசை வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் இயற்றுவதன் மூலம் நீங்களே அருட் பிரகாச வள்ளலாரைப் போன்ற ஒளி உடம்பை எளிமையாகப் பெற முடியும் என்பது திண்ணம். 

சிவபெருமானின் நெற்றிக் கண் ஒளியிலிருந்து தோன்றிய முருகப் பெருமானை தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்ட வள்ளலார் பெருமானின் புனித உடல் சிதம்பரேசனின் பெருங் கருணையால் ஜோதி பிழம்பாக உருக் கொண்டு மீண்டும் எம்பெருமானின் நெற்றிக் கண் சுடரில் ஒன்றி பூரணம் கொண்டது.

எம்பெருமானின் பேரருட் கடாட்சத்தால் மீண்டும் வள்ளலார் அருட் பெருஞ் சோதியாக அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளினார். மக்களின் இதயத் தடாகத்தில் முகிழ்க்கும் பக்தி தாமரையை மலர வைக்கும் ஆதவன் அருட்பெருஞ்சோதி வடிவான சத்திய ஞான பராபரன் வள்ளலாரே. இதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

எம்பெருமானின் இப்பேரருள் கடாட்சத்தையே வள்ளலார் பெருமான் தன் வேத மந்திரமாக,

     அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
     தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

என்று முழங்கி வந்தார்கள். ”இதோ வருகிறேன்,” என்று வாக்களித்தபடி வள்ளலார் மீண்டும் இப்பூவுலகில் எழுந்தருளி உள்ளார்கள். இந்த சத்தியத்தை உணர்ந்து தங்கள் பக்தியை வளர்ப்பவர்கள் நிச்சயமாக வள்ளலார் பெருமானை அருட்பெருஞ்சோதியாக தங்கள் இதய மண்டபத்தில் கண்டுணர முடியும்.

இவ்வாறு வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.

ஆன்மீக அனுபவம் என்பது ஒவ்வொரு ஜீவனைப் பொறுத்தும் மாறுபாட்டை உடையது. உலகில் பெரும்பாலான இறையடியார்கள் ஒரு சில தினங்கள் கோயில்களுக்குச் சென்று வந்து விட்டாலோ, ஒன்றிரண்டு மந்திரங்களை ஓதி விட்டாலோ தாங்கள் ஆன்மீகத்தின் எல்லைக்கே சென்று விட்டதாக நினைத்து அரை குறையான ஆன்மீக அனுபவத்துடன் நின்று விடுகிறார்கள். எனவே சித்தர்கள் ஒரு இறையடியார் தான் ஆன்மீகத்தில் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளோம் என்பதை தாங்களே உணர்ந்து கொள்ளும் சில எளிய அளவுகோல் முறைகளை அறிவித்துள்ளார்கள்.

உதாரணமாக, ஒருவர் தன்னுடைய உள்ளங்கையைப் பார்ப்பது போல் என்று தன் முதுகைப் பார்க்க ஆரம்பிக்கிறாரோ அன்று அவர் ஆன்மீகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கத் தகுதி பெறுகிறார் என்பது சித்தர்கள் வாக்கு. அதே போல் திருஅண்ணாலையைப் பார்த்தால் எப்போது அது வேறும் கல் பாறையாகக் காட்சி தராமல் ஒளி வீசும் தங்க மலையாக, மாணிக்க மலையாகத் தோன்றுகிறதோ அப்போது ஆன்மீகத்தில் முதல் வகுப்பில் சேரத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அதே போல சிதம்பரத்தில் ஓசை எழுப்பும் சிகண்டி பூர்ணம் மணி பெரும்பாலான பக்தர்களுக்கு இரண்டு மணியாகத் தோற்றமளிக்கும். என்று இந்த இரண்டு மணிகளும் ஒரே மணியாகத் தோன்றுகிறதோ அன்று ஆன்மீகத்தில் முதல் பாடம் பயில தகுதி பெற்றதாகக் கணக்கில் கொள்ளலாம்.

சிகண்டி பூர்ணம் மணியை ஒவ்வொரு கோணத்தில் நோக்கினால் ஒவ்வொரு விதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையது. உதாரணமாக, சிகண்டி பூர்ணம் எழுந்தருளி இருக்கும் திசை தென்கிழக்கு. அது அக்னி பகவானுக்கு உரியது.

உலகிலேயே சிறந்த ஆலய மணி
சிகண்டி பூர்ணம், சிதம்பரம் நடராஜர் சன்னதி
(மணி ஓசையைக் கேட்கவும்)

வெப்பம், ஒளி என்ற இரண்டு இணை பிரியா அம்சங்களுடன் விளங்குவதே அக்னி என்பது நீங்கள் அறிந்ததே. இதை அக்னி பகவானுக்கு உரிய இரு நாக்குகளாக பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். வாலாட்டி, சாலாட்டி என்ற அக்னி பகவானின் இரு நாக்குகள் இந்த ஒளி, உஷ்ண தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்த தத்துவத்தால் சாதாரண மனிதனுக்கு என்ன பயன் என்று நீங்கள் கருதலாம். குரு மங்கள கந்தர்வ லோகத்திலிருந்து பூலோக மக்களைக் கரையேற்றுவதற்காக பெருங்கருணயுடன் வந்த சத்குருமார்களை ”வாத்தியார்” என்று அழைக்கிறோம். வாக்கு+தீ+யார் என்பதே வாத்தியார் என்று அழைக்கப்படுகிறது. யாருடைய வாக்கில் அக்னி பகவானைப் போன்ற வாலாட்டி, சாலாட்டி சக்திகள் இணைந்து அது உன்னுடைய கர்ம வினைகளைக் களைந்து இறை உணர்வை ஊட்டுகிறதோ அவரே வாத்தியார் ஆவார்.  

இவ்வாறு இறை மார்கத்தில் முன்னேற நினைக்கும் அடியார்கள் தங்கள் வாக்கில் தீயையும் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அளிப்பதே சிகண்டி பூர்ணமாகும்.

ஒளி வெப்பம் என்ற இரண்டு இணை பிரியா தத்துவத்தைப் போல வெப்பமும் குளிர்ச்சியும் ஒன்றை ஒன்று பிரிந்து நிற்பதில்லை. இந்த செய்தி உங்களுக்கு வியப்பளிக்கிறது அல்லவா? ஆனால், அதுவே உண்மை.

உலகிலேயே மிக வெப்பமான பொருள் எது? ஆதி மூலமான திருஅண்ணாமலையைத் தவிர உலகில் வேறு எதுவும் வெப்பம் உடையதாக இருக்க முடியாதே, அதே போல உலகில் குளிர்ச்சியான பொருள் எது? நீங்கள் திருக்கைலாயம் என்று விடையளிக்கலாம்.

உண்மையில் திருக்கைலாய பனி மலையைப் போல பல மடங்கு குளிர்ச்சி உடையதே திருஅண்ணாமலையின் உட்புறமாகும். எப்படி திருஅண்ணாமலையின் வெப்ப நிலையை மனித சக்தியால் உணர முடியாதோ அதே போல அதன் குளிர்ச்சி அளவையும் மனிதக் கணக்கில் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஆனால், குளிர்ச்சியும் சூடும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையே என்பதை இன்றைய விஞ்ஞான அளவு கோலான மைக்ராஸ்கோப் மூலம் ஒரு சாதாரண மனிதன் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் நீரைக் கொதிக்க வைக்கும்போது அது 100 செண்டிகிரேடு வெப்ப நிலையை அடைந்தவுடன்  கொதித்து ஆவியாகிறது அல்லவா? அந்நிலையில் நீங்கள் ஒரு சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் மூலம் நீரைப் பார்த்தால் அதனுள் ஐஸ் கட்டிகள் தோன்றித் தோன்றி மறைவதைப் பார்க்க முடியும்.

வெந்நீர் உடலுக்கு குளிர்ச்சியையும், பனிக் கட்டி உடலுக்கு சூட்டைத் தருவதும் இந்த தத்துவத்தின் வெளிப்பாடே.
இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பாடான இரு வெவ்வேறு சக்தி நிலைகளைத் தன்னுள் கொண்டதே சிகண்டி பூர்ணம் என்ற ஒப்பற்ற மணியாகும்.

ஆனால் முரண்பாடு என்று நாம் நினைப்பதே மனத்தளவில்தான். உண்மையில் முரண்பாடு என்பது ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒன்றால் மற்றொன்று உருவாகும் நிலையே ஆகும்.
இதையே சிவ சக்தி தத்துவம் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இதை உணர்த்துவதும் சிகண்டி பூர்ண மணி ஓசையே. வீடியோ பார்க்கவும்

திருமண வைபவங்களின் போது மணமகளை முதலில் சந்திரன், கந்தவர்வன், அக்னி தேவன் என்ற மூன்று தேவர்களுக்கும் மணம் புரிந்து அதன் பின்னர் நான்காவதாக மனிதனுக்கு திருமணம் நிகழ்த்து வழக்கம். திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணையும் தெய்வீக பந்தம்தானே.

எனவே சந்திர தேவனுடன் இணையும்போது ஒரு பெண்ணிற்கு எதிர்ப்புகளை சமாளிக்கும் மன ஆற்றலும், கந்தர்வனின் இணைப்பால் கவர்ச்சியும் அழகும், அக்னி தேவனின் இணைப்பால் என்றும் மாறாத இளைமையும் மணப் பெண்ணிற்கு ஏற்படும்.

அது போல எந்த அளவிற்கு சிதம்பர திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிகண்டி பூர்ண மணி ஓசையை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கேட்டு உணர்ந்து பக்தி கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் என்றும் மாறா இளமையுடன் திகழ்வான் என்பது உறுதி.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிகண்டி பூர்ண மணியைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முன்னால் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக உண்மைகளில் ஒன்றே ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாடு.

ஒலிக்கும் ஓசைக்கும் என்ன வித்தியாசம்? ஒலி என்னும் சொல் ஒரு பொருளிலிருந்து எழும் எல்லா வித சப்தத்தையும் குறிக்கும். ஓசை என்பது முறைப்படுத்தப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட ஒலியாகும். சப்த ஸ்வரங்களில் நெறிப்படுத்தப்பட்ட ஒலியை நாம் சங்கீதம், இசை, நாதம் என்கிறோம். இறை சக்தியுடன் மிளிரும் மணி ஒலியை நாம் ஆலய மணி ஓசை என்று அழைக்கிறோம். குறிப்பிட்ட வேத சக்திகளை ஆரவார வருண கீதமாக அள்ளி வீசும்போது அதை அலை ஓசை என்று வர்ணிக்கிறோம்.

எனவே ஒரு மனிதன் நெறியுடன், ஒழுக்கமுடன் வாழ்ந்து இறை மார்கத்தில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்குத் தேவையானது மணி ஓசையே. இவ்விதத்தில் முதன்மை இடத்தைப் பெறுவதே தில்லை சிதம்பரேசனின் ஆலய மணி ஓசையாகும். இந்த மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டு அது கூறும் உண்மையை ஆத்ம விசாரம் செய்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் எளிதில் தங்களை இறை நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும்.

முதலில் ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்து கொண்டால்தான் ஓசை கூறும் உண்மையை ஒலியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஓரிடத்தில் இலவசமாக வேஷ்டி, சட்டை, புடவை வழங்குவதாக அறிவிப்பு வந்தது. ’இலவசம்’ என்ற வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம் அங்கிருந்த அனைவரும் தங்கள் வேலையை அப்படியே போட்டு விட்டு வேட்டி, புடவை விநியோகிக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

திடீரென நூற்றுக் கணக்கானோர் ஒரே இடத்தில் சென்று குவிந்ததால் அந்த கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு புடவை, வேட்டி எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் ஒருரையொருவர் முந்திக் கொண்டு செல்ல முற்பட்டதால் நெரிசல் அதிகமாகி பலர் கீழே விழுந்து மற்றவர்கள் அவர்கள் மேல் ஏறி முன்னே செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு சிலர் தங்கள் இன்னுயிரை இழக்கவும் நேர்ந்தது.  

இது ’இலவசம்’ என்ற ஒலியால் வந்த துன்பம். மற்றோர் இடத்தில் ஒரு காட்டு வழியாக இரு நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி ஒரு சாது தலை தெறிக்க ஓடி வந்தார். அவரைப் பார்த்தால் ஏதோ புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகம் துரத்திக் கொண்டு வருவது போல் தோன்றியது. நண்பர்கள் அவரை நிறுத்தி, ’ஐயா, உங்களை என்ன விலங்கு துரத்திக் கொண்டு வருகிறது. ஏன் இப்படி தலை தெறிக்கும் வேகத்தில் ஓடி வருகிறீர்கள்’?” என்று கேட்கவே, அவரும், ”தம்பிகளே, நீங்கள் உடனே இங்கிருந்து ஓடி விடுங்கள். அங்கே நிறைய ஆட்கொல்லி சிதறிக் கிடக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே அவர்களைக் கடந்து ஓடி விட்டார் அந்த சாது.

அந்த நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் ஏதோ பைத்தியக்காரன் போல் பிதற்றுகிறான். நாம் முன்னே சென்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற ஆவலில் மேற்கொண்டு முன்னேறிச் சென்றனர். சற்று தூரம் சென்றவுடன் அவர்கள் எதிரில் ஒரு ஆல மரம் தென்பட்டது, அதன் அடியில் ஒரு மூட்டை அளவு தங்கக் காசு தரையில் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்தவுடன் இருவருக்கும் எல்லையற்ற ஆனந்தம்.

”சரியான முட்டாள் அந்த சாது. தங்கக் காசுகளை ஆட்கொல்லி என்று சொல்லும் இவனைப் போன்ற மடையன்கள் இருந்தால்தான் நம்மைப் போன்றவர்களுக்கு நல்லது,” என்று பேருவகையுடன் அந்தக் காசுகளை கையில் எடுத்து தடவிக் கொடுத்து குதூகலம் அடைந்தனர். அதே சமயம் இருவர் மனத்திலும் அந்தக் காசுகள் அனைத்தையும் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் எப்படிக் கவர்ந்து செல்வது என்ற அசுர எண்ணம் தீவிரமாக பெருக்கெடுத்தது.

அதில் மூத்தவன், ”இவ்வளவு காசுகளையும் எளிதில் எடுத்துச் செல்வது கடினம். நீ போய் அருகில் ஏதாவது சாக்குப் பை கிடைக்கிறதா என்று பார்த்து வா. அப்படியே சாப்பிடுவதற்கும் ஏதாவது உணவு வாங்கி வா,” என்று சொல்லி அனுப்பினான். இளையவனும் அதன்படி அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்து சாக்குப் பை, உணவை வாங்கி வரும்போது தண்ணீர் புட்டி, விஷம் இவற்றையும் சேர்த்து வாங்கினான். உணவிலும், தண்ணீரிலும் விஷத்தைக் கலந்து கொண்டு வந்து மூத்தவனிடம் கொடுத்தான்.

அவன் வருவதை தூரத்திலிருந்து  பார்த்த மூத்தவன் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து இளையவனைத் ஒரு மரத்தடியால் தாக்கிக் கொன்று விட்டான். பின்னர் அந்த தங்கப் புதையலுக்கு யாரும் பங்காளி கிடையாது என்ற சந்தோஷத்தில் காசுகளை மூட்டையில் கட்டிப் போட்டுவிட்டு விஷம் கலந்த உணவையும் நீரையும் உண்டு எமலோகம் அடைந்தான்.
நெடுநேரம் கழித்து அவ்வழியே திரும்பி வந்த சாது அவ்விரு இளைஞர்களையும் பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தார். ”ஆட்கொல்லியை நெருங்காதீர்கள் என்று எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் இப்படி ஆசையால் அறிவிழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களே,” என்று கனத்த உள்ளத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இந்நிகழ்ச்சி ”ஆட்கொல்லியை நெருங்காதீர்கள்” என்ற ஓசையை அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவை விளக்குகிறது.
வள்ளலார் பெருமான், சத்ய சாய் பாபா போன்ற மகான்கள் தங்களிடம் வந்த பலருக்கும் இவ்வாறு தங்கக் காசுகளையும், தங்கப் பேனா, வாட்ச், செயின் போன்ற பல பரிசுகளையும் வழங்கி வந்தனர். அதன் பின்னால் உள்ள தெய்வீகச் செய்தி இதுவே.

தங்களுக்கு வேண்டியர்களுக்கு இத்தகைய அன்பளிப்புகளை அளித்தார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட அந்த மகான்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஓர் அற்புத இறைச் செய்தி இருக்கும் என்று நினைத்துத் தெளிவதே அம்மகான்களைப் போற்றும் முறையாகும். ”தங்கம் என்பது ஆட்கொல்லி, அதை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அதனால் விளையும் வேதனைகள் ஏராளம்,” என்ற உண்மையே மகான்கள் தங்களுடைய அற்புதத் செயல்கள் மூலம் சமுதாயத்திற்கு உணர்த்தும் பாடமாகும்.

இவ்வாறு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர உதவுவதே வேத மந்திரங்களாகும். எந்த அளவுக்கு வேதம் ஓதுவதை முறையாகப் பயின்று அதை நடை முறையில் பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டையும் ஓசையின் மகத்துவத்தையும் நாம் உணர முடியும். தினமும் மூன்று வேளை சந்தியாவந்தன வழிபாடும், காயத்ரீ ஜப மந்திரமும் வேத பாராயணத்தின் முக்கியமாக அங்கமாகும் என்பதும் உண்மையே.

ஆனால், வேத சம்ரட்சணை என்பது அரிதாகி முறையாக வேதம் ஓதுவோர்களும் காசுக்கு வேதத்தை விற்கும் அவலநிலை பெருகி விட்டதால் வேதம் கற்க விரும்பினாலும் முறையாக வேதம் பயில முடியாமல் போய் விடுகிறது.

இருப்பினும் தேவமொழி அல்லாமல் பிற மொழியிலும் வேதத்திற்கு இணையான தெய்வீக மந்திரங்கள் இருக்கத்தானே செய்கின்றன. நமது தமிழ் மொழியில் உள்ள தேவார திருவாசகப் பதிகங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற இறைப் பொக்கிஷங்களும் நான்கு வேதத்திற்கு இணையான பலன்களை நிச்சயமான அளிக்க வல்லவையே. பன்னிரு திருமுறை முழுமையும் ஓத இயலாதோரும் எளிமையாக ஓதி வழிபட ஸ்ரீஅகத்திய பெருமான் அருளிய எளிய தேவாரத்திரட்டு பதிகங்களை ஓதி வருவதாலும் நான்கு வேதங்களை ஓதிய பலன்களை பாமரர்களும் பெற முடியும்.

திருமுறைப் பாடல் பெற்ற தலங்களிலும் மங்கள சாசனம் பெற்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிகழ்த்துதல் நலம். தனி நபர்களாக வேதம் ஓதி பலன் பெறுவதை விட பலரும் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடுகள் இயற்றுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன் மடங்காய்ப் பெருகும். மேலும் இத்தகைய வேதபாராயணத்திற்குப் பின் இயன்ற அளவு அன்னதானம் நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

எங்கு வேத மந்திரங்கள் ஓதினாலும் அங்கு பசி உருவாகும் என்பது தெய்வீக உண்மை. எனவே வேதம் ஓதிய பின்னர் சுவையான உணவு இறை அடியார்களுக்கு அளித்தலும் ஒரு சிறப்பான வேத வழிபாடாக மலர்கிறது.

ப்ரார்த்த வேதம் ஓதும்
கன்யாகுமரி கடல்

கிருஷ்ணாமிர்த வேதம் ஓதும்
அமிர்தபுரி கடல்

ஓசையின் மகத்துவத்தை உணர உதவும் திருத்தலங்களும் உண்டு. வேதாரண்யம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற திருத்தலங்கள் ஓசையின் மகத்துவம் நிரம்பப் பெற்றவை.

தரங்கம்பாடி திருத்தலத்தில் உள்ள கடல் அலைகள் எம்பெருமானின் இறைலீலைகளை சதாசர்வ காலமும் பாடிக் கொண்டிருப்பதைப் போல இத்திருத்தலங்களில் உள்ள கடல் அலைகள்  அல்லும் பகலும் வேதத்தை ஓதிக் கொண்டே இருக்கின்றன.

நாம் அறிந்த ருக், யஜுர் முதலாகிய வேதங்கள் மட்டுமல்லாது ஆயிரக் கணக்கில் கோடிக் கணக்கில் வேதங்கள் உண்டு. இம்முறையில் இத்திருத்தல கடல் அலைகள் ஓதும் வேதம் பொதுவாக லவண வேதம் என்று அழைக்கப்படும். இவற்றில் ஒவ்வொரு திருத்தலத்தில் கடல் அலைகள் ஓதும் வேதம் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும். கன்னியாகுமரி கடல் அலைகள் ஓதும் வேதம் ப்ரார்த்த வேதம் எனப்படும். சகோதரத்துவத்தையும், நட்புணர்வையும் வளர்க்கும் தெய்வீகப் பாங்கு உடையது.

குமரி அன்னையின் மடியில் தன்னை ஒரு பாலகனாகக் கருதி தியானத்தில் மூழ்கிய விவேகானந்தர் மூன்று நாட்கள் ஊண், உறக்கம் இன்றி இந்தப் ப்ரார்த்த வேத ஓசையைக் கேட்டு அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னுடைய சிகாகோ சொற்பொழிவில் உலகம் அனைத்திற்குமான சகோதர உணர்வையும், ஒற்றுமையையும் வளர்த்து அழியாப் புகழ் பெற்றார்.

திருச்செந்தூரில் தவழும் கடல் அலைகள் க்ரௌஞ்சம் என்னும் வேதத்தை சதாசர்வ காலமும் ஓதிக் கொண்டிருக்கின்றன. எத்தகைய பகைமையையும் அழிக்கும் வல்லமை உடையது க்ரௌஞ்ச வேத பாராயணம். அது மட்டுமல்லாமல் இறைவன் மீதும் குரு மீதும் அசையாத நம்பிக்கையை வளர்க்க உதவுவதும் க்ரௌஞ்ச வேத சக்தியாகும்.

சிவபெருமானின் அவதாரமான ஆதிசங்கரர் ஒரு முறை காசி மணிகர்ணிகா கங்கைப் படித் துறையில் நீராடி வெளிவரும்போது மாட்டிறைச்சியையும், நான்கு நாய்களையும் கொண்டு வந்த ஒரு புலையன் அவர் மீது மோதி விட்டான். ஆதிசங்கரருக்கு பெருங் கோபம் மேலிட்டது, ”அடே, புலையனே என்ன தைரியம் இருந்தால், என் மீது நீ மோதலாம்? ” என்று கேட்டார். புலையன் அமைதியாக, ‘’சுவாமி, அடியேன் தங்களைத் தீண்டினேனா, இல்லை உங்கள் ஆன்மாவைத் தீண்டினேனா?” என்று புன்சிரிப்புடன் கேட்டான்.

அதிர்ந்து போனார் ஆதிசங்கரர். ”இறைவன் ஒருவனே. அப்பெருமானே பல உயிர்களாகத் தோற்றம் கொண்டுள்ளான். இதில் உயர்வு தாழ்வு என்பது எக்காலத்தும் எவ்விடத்திலும் கிடையாது,” என்று அத்வைத்த தத்துவத்தை எங்கும் பிரசாரம் செய்து வரும் என்னுடைய புத்தி இப்படி ஒரு விநாடி மழுங்கிப் போய் விட்டதே, என்று மனம் நொந்தவராய் அப்புலையனிடம் மன்னிப்புபக் கோரினார்.

ஸ்ரீஆதிசங்கரர்
திருமாந்துறை திருத்தலம்

அந்தப் புலையன் வேறு யாரும் அல்ல. வேதநாயகனான சிவபெருமானே மாயை என்னும் மாட்டு இறைச்சியைக் கையில் ஏந்திக் கொண்டு நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக நடத்திக் கொண்டு வந்தவன். எம்பெருமானின் திருச்சரணங்களில் பணிந்து எழுந்தார் ஆதிசங்கரர். பெருமான் அவரை அள்ளி அணைத்துக் கொண்டு, ”குழந்தாய், வருந்தாதே. தவறு என்று நேரும்போதுதான் அதை நிவர்த்தி செய்யும் மார்கத்திற்கு வழி பிறக்கும். என்னதான் இறை அவதாரமாக இருந்தாலும் தான் ஏற்ற தத்துவத்திலும், பக்தியிலும் அவ்வப்போது குறைபாடு ஏற்படுவது இயற்கையே. எனவே இத்தகைய தவறு மீண்டும் ஏற்படாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதே புத்திசாலித்தனம்,” என்று அற்புத இறை அறிவுரையை வழங்கிச் சென்றார் சுவாமி.

எம்பெருமானின் திருவார்த்தைகளைக் குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார் ஆதிசங்கரர். எல்லாப் பிரச்னைகளுக்கும் வேதத்தில் தீர்வு கூறப்பட்டது அல்லவா? எனவே தான் கைக்கொண்ட அத்வைத தத்துவக் கருத்தில் மீண்டும் தவறு ஏற்படாது இருக்க யாது செய்ய வேண்டும் என்பதை அறிய வேத வியாசரை அடைந்து தன்னுடைய குறையை நிறைவு செய்யும் மார்கத்தைப் பற்றி வினவினார்.

வேத வியாசர் நான்கு வேதங்கள் மட்டும் அன்றி அனைத்து வேதத்தையும் ஓதி கரை கண்டவர். எம்பெருமானின் பேரரருளுக்குப் பாத்திரமானவர். ஆதிசங்கர பெருமானின் பிரச்னையைக் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்த பின்னர், ”இறைவன் எல்லையற்றவர். வேதமும் எல்லையற்றது. அநாதியானது. இந்த உண்மையை உனக்கு உணர்த்தவே. இறைவன் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்தி உள்ளான். மேலும் இந்த சம்பவத்தால் உலக மக்களுக்கும் ஒரு அற்புத வழிபாடு கிட்டும்,” என்றார்.

வியாச பகவான் தொடர்ந்து, ”இங்கிருந்து நேரே தெற்கே சென்றால் குமரன் குடிகொண்ட திருச்செந்தூர் என்ற அற்புத கடற்கரை திருத்தலம் உண்டு. அங்கு உறவாடும் கடல் அலைகள் சதாசர்வ காலமும் க்ரௌஞ்ச வேதம் என்ற அற்புத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றன. ஒரு மண்டல காலத்திற்கு அந்த தேவ அலைகள் ஓதும் வேதத்தைக் கேட்டு வந்தால் க்ரௌஞ்ச மலையைப் போல இறை நம்பிக்கையும் குரு நம்பிக்கையும் வளரும்,” என்று ஆதி சங்கரருக்கு ஆசி கூறி அனுப்பினார்.

வியாச முனிவரின் அருளாணையின்படி ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை வணங்கி ஒரு மண்டல காலத்திற்கு க்ரௌஞ்ச வேதத்தை ச்ரவணம் செய்து பேறு பெற்றார். அதனால் அவரை நீண்ட நாள் வருத்திய கடுமையான வயிற்று வலியும் மறைந்தது. எனவே எத்தகைய வயிற்று உபாதை உள்ளவர்களும் இன்றும் திருச்செந்தூர் கடல் அலைகள் ஓதும் க்ரௌஞ்ச வேதத்தை கேட்டு வந்தால் நற்பலன் பெறுவர்.

ஒலியும் ஒளியும் ஒன்றாய் இணைந்த
திருஅண்ணாமலை ஈசன் உறையும் திருக்கோபுரங்கள்

உலகிலேயே சிறந்த கடல் எது? உங்கள் மனதில் எத்தனையோ கடல், கடற்கரைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில் இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் சிறந்த உயர்ந்த திவ்யமான புனிதமான கடலே எம்பெருமான் அனந்த சயனம் கொள்ளும் திருப்பாற்கடலாகும்.

திருப்பாற் கடல் உண்மையில் உண்டா? நிச்சயமாக உண்டு. திருப்பாற்கடலைப் பார்க்க முடியுமா? நிச்சயமாகப் பார்க்க முடியும், உங்களுக்கு மனமிருந்தால் எம்பெருமானின் கருணை இருந்தால். திருப்பாற்கடலைப் பார்த்தவர்கள் உண்டா? ஆயிரக் கணக்கில் கோடிக் கணக்கில் திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்கள் அன்றும், என்றும் உண்டு.

தமிழில் ராம காவியத்தை அருளிய கம்பர் பெருமான் திருப்பாற்கடலை தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த திவ்ய கடலில் எழும் வேத ஓசையையும் கேட்டு மகிழ்ந்தவர். இதைத் தான் தன்னுடைய அவையடக்கப் பாடலாக ”ஓசைபெற்றுயர் பாற்கடல்” என்று கூறியுள்ளார். பணிந்தவனே பக்தன் என்பதால் கம்ப நாடனின் பணிவால் மகிழ்ந்த நரசிம்மப் பெருமாள் ஸ்ரீரங்க திருத்தலத்தில் தன்னுடைய சிம்ம கர்ஜனையால், நரசிம்ம ஓசையால் கம்பராமாயணம் பெருமாளின் புகழ் பாடும் வேதம் என்ற ஒப்புதலை அளித்தார்.

நரசிம்மப் பெருமாளால் மங்கள சாசனம் பெற்ற தெய்வீகப் பாடல்களே கம்ப ராமாயணப் பாடல்கள் என்பது உண்மை. திருப்பாற் கடல் ஓதும் வேதத்திற்கு பஞ்சக்ஷீரம் என்ற நாமம் அளித்துள்ளனர் ஆழ்வார் பெருமக்கள். கம்பர் பெருமான் பல வருடங்கள் இந்த பஞ்சக்ஷீர வேத ஓசையைக் கேட்டுக் கேட்டு அவற்றை தன்னுடைய பாடல்களிலும் பொதித்துள்ளார். இவ்வாறு இந்த பஞ்சக்ஷீர வேத சக்திகளை உள்ளடக்கியதே, ”அஞ்சிலே ஒன்று பெற்றான் …”, என்று தொடங்கும் பாடலாகும். இதன் பின்னால் அமைந்த ஒரு அற்புத புராண நிகழ்ச்சியைக் காண்போமா?

ராம ராவண யுத்தத்திற்குப் பின் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ராமேஸ்வரக் கடற்கரையில் சிவலிங்க வழிபாடு நிகழ்த்த ராம பிரானும் சீதாப் பிராட்டியும் சிவலிங்கம் ஒன்றை இமயமலையிலிருந்து எடுத்து வருமாறு அனுமாரை அனுப்பினார்கள் அல்லவா? அனுமான் வெகுநேரம் சென்றும் வராததால் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் தவறி விடக் கூடாது என்று ராமர் பிரான் ராமேஸ்வர மண்ணைக் கொண்டு சிவலிங்கம் நிர்மாணித்து சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் உத்தம சிவ பூஜையை நிறைவேற்றி விட்டார்.
அவர்களின் சிவ பூஜை முடிந்த பின்னரே அனுமான் சிவ லிங்கத்துடன் கயிலையிலிருந்து வந்தார். தான் கொண்டு வந்த சிவ லிங்கத்தின் தேவையின்றியே ராமரும் சீதையும் வேறொரு சிவ லிங்கத்தைக் கொண்டு பூஜை நிறைவேற்றியதைக் கண்டு அனுமான் மிகவும் வருத்தம் அடைந்தார். சீதா பிராட்டியும் ராமச் சந்திர மூர்த்தியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும்  அனுமாரின் மனம் சாந்தி பெறவில்லை.

இறுதியில் ராம பிரான் தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை அகற்றி விடும்படி அனுமாரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், அனுமார் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ராம பிரான் உருவாக்கிய சிவலிங்கத்தை பூமியிலிருந்து அகற்ற முடியவில்லை. தன்னுடைய வாலால் சிவலிங்கத்தைச் சுற்றி தன் ஆத்ம பலம் முழுவதையும் பிரயோகம் செய்தபோதும் ராமநாத லிங்கம் சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை.

அப்போதுதான் ராமபிரானின் பராக்கிரமத்தையும், அவருக்கு சிவபெருமானின் மீதுள்ள ஆழம் காண முடியாத பக்தியையும், உலக உயிர்கள் மீது அவர் கொண்டிருந்த தீவிர அன்பையும் அனுமானால் உணர முடிந்தது. இதன் பின்னால் இன்னும் தெய்வீக லீலைகளும் பின்னிப் பிணைந்திருந்தன.

பாற்கடலில் பள்ளி கொண்ட
பரந்தாமன் திருப்பாற்றுரை

அதுநாள் வரை தான்தான் சிறந்த ராம பக்தன் என்ற எண்ணம் அனுமான் மனத்தில் வேருன்றி நின்றது. எப்போது தன்னுடைய வாலால் ராம லிங்கத்தைக் கட்டி இழுக்க நினைத்தாரோ அப்போது ராம பிரான் உருவாக்கிய லிங்க மூர்த்தியின் மகத்துவத்தால் ஒரு நொடியில் தன்னுடைய  அகம்பாவம் அனைத்தும் அனலில் இட்ட மெழுகாய் கரைந்தோடுவதை உணர்ந்தார்.

உலகில் எதை சாதிப்பதும் எளிது. ஆனால், ஒருவன் கொண்டிருக்கும் தான் என்ற அகம்பாவ எண்ணத்தை மற்றொருவர் களைவது என்பது மிக மிகக் கடினமான செயல். அசாத்தியம் என்றே சொல்லலாம். இந்த மிக மிகக் கடுமையான ஒரு காரியத்தையும் ராம பிரான் பிரதிஷ்டை செய்த சிவ லிங்கத்தின் ஸ்பரிசம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் ராம பிரானின் இறை பக்தி, அவர் உயிர்கள் மேல் கொண்டுள்ள கருணையை அளவிட்டுக் கூற முடியுமா?

மேலும் அதுநாள் வரை தான் ராம நாம ஜபத்தில் கரை கண்டவன் என்ற எண்ணம் அனுமான் மனதில் வளர்ந்து மலையாய் உயர்ந்திருந்தது. ராம நாம சுவையைப் பூரணமாக உணர்ந்தவன் என்ற எண்ணமும் வலுவாக அனுமான் உள்ளத்தில் நிறைந்திருந்தது. அன்று ராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் தான் அதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அள்ள அள்ளத் தெவிட்டாத ராம நாம சுவையையும் அனுபவித்தார். அதைக் கண்டு பெரிதும் வியப்பு மேலிட ராம பிரானின் விழிகளைச் சந்திக்க சக்தியற்றவராய் அன்னையை நோக்கி தன்னுடைய சந்தேகத்திற்கு விடையளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

குறும்பு செய்த குழந்தை அப்பாவின் அடிக்குப் பயந்து அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளியும் ஒரு சிறு குழந்தையின் நிலையில் இருந்த அனுமானைப் பார்த்து ராமரும் பலமாகச் சிரித்து விட்டார். குதூகலம் பூத்துக் குலுங்கும் அந்த பொன் மாலைப் பொழுதில் அன்னை சீதா தேவி அனுமாரின் கேள்விக்கான விடையைக் கூறினாள்.

பாற்கடல் ஓதும் வேதம் பஞ்சக்ஷீரம் எனப்படும். இதை தேவ பஞ்சாட்சரம் என்றும் அழைக்கலாம். இதன் தேவமொழி பதத்தைக் கூற வேண்டும் என்றால், ”ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே,” என்று அழைக்கலாம். இந்த தேவ பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுபவர் யார்? அவர் வேறு யாருமல்ல, இந்த பிரபஞ்சத்தின் உண்மையான பெருமாள் பக்தரான சாட்சாத் சிவபெருமானே இந்த தேவ பஞ்சாட்சரத்தை ஓதி விஷ்ணு மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேவ பஞ்சாட்சர மந்திரத்தின் பிரதிபலிப்பே பாற்கடலில் ஒலிப்பதாகும்.

ஆனால், பாற்கடல் தரிசனம் என்பது அவ்வளவு எளிதானதா? சாதாரண பாமர மக்களும், பாற்கடலில் ஒலிக்கும் வேதத்தைக் கேட்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காகவே ராமேஸ்வரத்தில் உள்ள கடல் அலைகள் எம்பெருமான் திருவருட் கருணையால் இந்த பஞ்சக்ஷீர வேதத்தை ஓதும் வல்லமையைப் பெற்றுள்ளன. எனவே இவ்வாறு பஞ்சக்ஷீர வேதத்தை சதா சர்வ காலமும் ஓதும் கடல் அலைகள் தவழும் ராமேஸ்வர திருமண்தானே அதை ஓதும் சிவபெருமான் அமரும் சிவலிங்கமாக இருக்க முடியும்?

இந்த இறை இரகசியத்தை ராம பிரான் உணர்ந்த காரணத்தால்தான் ராமேஸ்வரக் கடற்கரையில் பல யுகங்கள் பஞ்சக்ஷீர வேதத்தை ஓதிய அலைகள் தவழும் மண் துகள்களைக் கொண்டு ராம லிங்கத்தை உருவாக்கி அதை அனைத்து பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தார்.

ராம பிரானின் இந்த அற்புதத் தொண்டிற்கு ஈடு இணை ஏதாவது உண்டா? எனவே ராமேஸ்வர திருத்தலத்தில் இன்று நீங்கள் காணும் ராமநாத லிங்க மூர்த்தி ஒரு சாதாரண மண் கட்டி அல்ல, அது ராம பிரானின் ஜீவன், சிவபெருமானின் உள்ளம், சீதா பிராட்டியின் கற்புக் கோயில், ராமதாசன் ஆஞ்சநேயனின் அகம்பாவம் களைந்த ஜோதிப் பிழம்பு, கோடிக் கணக்கான அலை தேவதைகள் சேர்த்த பஞ்சக்ஷீர வேதப் பொக்கிஷம், கோடி கோடி புனித அலை மூர்த்திகளை தன்னுடைய இதயத்தில் தேக்கிய பூமித் தாயின் வடிவம்.

யாரெல்லாம் ராம நாமத்தின் மகிமையைப் பூரணமாக அறிய விரும்புகிறார்களோ அவர்கள் ராமேஸ்வரக் கடல் அலைகள் ஓதும் பஞ்சக்ஷீர வேதத்தை தொடர்ந்து கேட்டு வருதலால் பெரும் பயன் பெறுவர்.

இவ்வாறு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டவர்களே மணி ஓசையின் மகத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
வீடுகளில் ஆலயங்களில் பலவிதமான மணிகளைப் பயன்படுத்துகிறோம். இவை எல்லாவற்றிலும் பொதுவாக உள்புறம் ஒரு தண்டம் இருக்கும். இதை நாக்கு என்றும் சொல்வதுண்டு. சாதாரணமாக மணி அடிக்கும்போது அதிலிருந்து எழுவது ஒலி. பூஜை நேரத்தில் மணி அடிக்கும்போது அதிலிருந்து எழுவதே ஓசை. எனவே மனிதனுக்கு நன்மை பயப்பது மணி ஓசையே என்பதில் தற்போது உங்களுக்கு ஐயம் இல்லை அல்லவா?

வீடுகளில் அல்லது ஆலயங்களில் எங்கு மணி அடித்தாலும் மணி அடிப்பவர்கள் கட்டாயம் கோவணம் அணிந்து இருக்க வேண்டும். ஆலயங்களில் அவசியம் இந்த நியதியைக் கடை பிடிக்க வேண்டும். ”மணி அடிக்கும்போது ஒரு நாக்குதான் ஆடலாம்,” என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதன் அர்த்தத்தை அவரவர் ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்தலே நலம்.

சாதாரணமாக இறை மார்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் பிரம்மசர்யத்தைக் கடை பிடித்தல் அவசியம். இதற்கு உதவுவதே கோவண ஆடையாகும். ஆண்கள் புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதும் அவசியம். இதனால், கபாலச் சூடு கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற விந்து விரயத்தைக் கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கவும் இயலும்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மணி ஓசை கூறும் இரகசியங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அவரவர் வசதியைப் பொறுத்து வெண்கலம், பித்தளை, வெள்ளி போன்ற எம்மணியை வேண்டுமானாலும் பூஜைக்காகப் பயன்படுத்தலாம்.
மணி, தங்கமணி, மணிவேல், சுப்ரமணியன் போன்று மணி என்ற சொல்லைத் தங்கள் பெயர்களில் உடையவர்களும், ஜோதி, ஜோதிராஜன், ஆனந்தஜோதி என ஜோதி என்ற சொல்லை தங்கள் பெயரில் உடையவர்களும் தங்கள் வாழ்நாளில் ஐந்து கோயில்களிலாவது பெரிய வெண்கல மணிகளைத் தானமாக அளித்தல் அவசியம்.

பொதுவாக ஆலயமணிகளின் எடை 30 கிலோ இருத்தல் நலம். இவ்வாறு மணிகளைத் தானமாக அளிக்க வசதி இல்லாதவர்கள் திருக்கோயில்களில் பூஜை காலங்களில் மணி அடிக்கும் சேவையை மேற்கொள்தலும் ஏற்புடையதே.

அவ்வாறு கோயில்களில் மணி அடிக்கும் சேவையை மேற்கொள்பவர்கள் அவசியம் மூன்று வேளை தலைக்குக் குளித்தல், மூன்று வேலை பல் துலக்குதல், மணி அடிக்கும் நேரத்திலாவது கோவணம் கட்டிக் கொள்தல் போன்ற நியதிகளைக் கடைப் பிடித்தல் நலம். இதனால் பரவெளி தூய்மை பெறும். வேத சக்திகள் பெருகும்.

செல் போன்களின் பெருக்கத்தால் வான் மண்டலம் முழுவதும் சாலைகளில் உள்ள வேகத் தடைகளைப் போல வேதத் தடைகளால் மாசு அடைந்துள்ளது. மேற்கூறிய முறையில் ஆலயமணி சேவையை நிறைவேற்றுவதால் இந்த வேதத் தடைகள் நீங்கி வேத சக்திகள் நிரவ வாய்ப்புண்டு.  
இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும்போது மட்டுமல்லாமல் வேத மந்திரங்கள் ஓதும்போதும், தேவார திருவாசகப் பாடல்கள் பாடும்போதும், இறைவனின் திருவீதி உலா காலத்திலும், ஷோடசோபசாரம் போன்ற எல்லா வித இறை உபசாரங்களிலும் மணியைப் பயன்படுத்தலாம். அவை எல்லாம் ஒலியை ஓசையாக்கி பிரபஞ்சத்தில் நற்சக்திகளை நிரவும். சங்கு, மத்தளம், இசைக் கருவிகள், சாம்பிராணி, மலர் வழிபாடு, கீர்த்தனைகள் இவற்றுடன் மணி ஓசை சேரும்போது இத்தகைய வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.

ஆலய மணியுடன் இணைந்த குசா தத்துவம்

குசா என்பது நல்லதை மட்டுமே நிலைநாட்டியக் கூடிய அற்புத இறை சக்தியாகும். இதை உணர்ந்த நம் முன்னோர்கள் ஆலய மணிகளை குசா சக்தியை பரவெளியில் பரப்பும் ஓர் அற்புத அணிகலனாக அமைத்துள்ளார்கள். ஆலய மணியின் அமைப்பைக் கூர்ந்து கவனித்தால்தான் இவ்வுண்மை விளங்கும். மணியின் நாக்கு மணியின் விளிம்பைத் தொடும் விதத்தில் சற்றே மணிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்த அமைப்பு ஆலய மணி ஒலிக்கும்போது இறை மூர்த்திகளின் அனுகிரக சக்திகளோடு குசா நற்சக்தி கிரணங்களையும் ஒருங்கிணைத்து பரவெளியைத் தூய்மைப்படுத்தி சமுதாயத்தை வளப்படுத்தும். பொதுவாக, நமது புனித பாரத நாட்டில் மட்டுமே இத்தகைய குசா சக்தி பொலியும் மணி அமைப்பைப் பார்க்க முடியும். சில நாடுகளில் ஆலய மணியின் வெளிப்புறத்தை கட்டை போன்ற சாதனங்களால் மோதி, இடித்து மணி ஓசையை ஏற்படுத்துவார்கள். இதனால் குசா நற்சக்திக் கிரணங்களை பெற முடியாமல் போய்விடுகிறது.

மின்சாரத்தால் இயங்கும் அழைப்பு மணி (door bell, calling bell) போன்றவை இத்தகைய குசா சக்திகளை வெளிப்படுத்த இயலாததால்தான் அவை மனதிற்கு உகந்த அமைதியை ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலானோருக்கு இத்தகைய மின்சார மணியால் மனக் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணமாகும். தனிமை, இயலாமை, பலமின்மை போன்றவை கூடுதல் காரணங்களே.

பூஜ்யம் என்பது நேர்கோடு

இறைவனைப் பற்றிய கோட்பாடுகளில் தலை சிறந்ததாக அமைவதே சித்தர்கள் அருளிய, ”எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா ! ” என்னும் சித்த குரு வேத சூக்த மாமந்திரமாகும். இதே போன்று ”பூஜ்யம் என்பது நேர்கோடு,” என்ற சித்த மந்திரமும் உண்டு.

வாழ்க்கையில் எந்நிலையில், எவ்விடத்தில், எக்காலத்தில் உள்ளவர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்துவதே இந்த பூஜ்ய மந்திரமாகும். இந்த பூஜ்ய மந்திரத்தின் பின்னால் உள்ள விளக்கங்கள் கோடி கோடி.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், அசையும் அசையாப் பொருட்களும் இந்த பூஜ்ய மந்திரத்தின் வெளிப்பாடாக அமைந்தவையே. ஆதி சங்கர பகவத்பாதாள் இந்த பூஜ்ய மந்திரத்தின் வெளிப்பாடாக தன் கையில் தண்டம் ஏந்தி அத்வைத பிரசாரத்தை மேற்கொண்டார். இன்றுவரை அவரின் வழித் தோன்றல்களான ஆச்சார்ய பெருமக்களும் கையில் தண்டம் ஏந்தி இந்த பூஜ்ய மந்திரத்தின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் திருக்கோயில்களில் கொலுவீற்றிருக்கும் லிங்க மூர்த்திகள் அனைவருமே இந்த பூஜ்ய மந்திரத்தின் வெளிப்பாடாக அமைந்து அருள்பாலிக்கின்றனர். அதே போல ஆலய மணிகளும் இந்த பூஜ்ய மந்திரத்தை வெளிப்படுத்தி யுக யுகமாக இறை சக்தியை, சித்த குரு வேத சக்தியை பிரபஞ்சம் எங்கும் பெருக்கி, பரப்பிக் கொண்டிருக்கின்றன.
அற்புதமான இந்த பூஜ்ய மந்திரத்தை மனித வாழ்க்கையோடு எப்படிப் பிணைத்து நற்கதி பெறலாம் என்று சற்றே விளக்குகிறோம்.
பூஜ்யம் என்பது ஒரு வளைந்த கோடு, அதை எப்படி நேர் கோடு என்று அழைக்க முடியும் என்பது ஒரு சாதாரண மனிதனின் கேள்வி. நீங்கள் பூமியின் மேல் ஓரிடத்தில் நின்று கொண்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு நிற்கும் நீங்கள் கிழக்கு நோக்கி நேரே நடந்து சென்று கொண்டே இருந்தால் என்றாவது ஒரு நாள் மீண்டும் ஆரம்பத்தில் நின்ற இடத்திற்கு நிச்சயம் வருவீர்கள் அல்லவா?

இப்போது நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் நடந்து நடந்து இந்த பூஜ்ய வடிவில் அமைந்த உலகத்தை ஒரு முறை சுற்றி வந்து ஒரு பூஜ்ய வடிவத்தை அமைத்து விட்டீர்கள். ஆனால், நீங்கள் நடந்து சென்றதோ நேராகத்தான், வளைந்து நெளிந்து செல்லவில்லையே. நீங்கள் நடந்தது ஒரு நேர்கோட்டின் மேல்தான் இதில் எந்த சந்தேகமும் கிடையாது அல்லவா?

இப்போது உங்கள் மனதில் எழும் அடுத்த கேள்வி என்ன? சரி பூஜ்யம் என்பது நேர்கோடாகவோ வளைந்த கோடாகவோ இருந்து விட்டுப் போகிறது. பூஜ்யம் ஒரு நேர்கோடாகவோ, நேர் கோடு ஒரு பூஜ்யமாகவோ இருப்பதால் எனக்கு என்ன பயன்? இதற்கு சித்தர்கள் கூறும் விளக்கம் என்னவென்றால் என்று நீ பூஜ்யத்தை நேர்கோடாக பார்க்க ஆரம்பிக்கிறாயோ அன்றுதான் ஞானத்தின் வாயிற்படியில் முதல் அடி எடுத்து வைக்கிறாய் என்று உணர்ந்து கொள்.

இதை இன்னும் சற்று விளக்குவோமா? ஒரு கை வளையலை மேஜை மேல் வைத்துப் பாருங்கள். அது வட்ட வடிவமாகத் தோன்றும். அதை அப்படியே திருப்பி பக்கவாட்டில் பார்த்தால் அதன் வடிவம் நேர் கோடாகத்தானே தோன்றும்? இந்த விளக்கம் வட்ட வடிவத்திற்கு மட்டும்தான் பொருந்தும் என்று கிடையாது.

சதுரம், முக்கோணம், செவ்வகம், அறுங்கோணம், பகுவல் வடிவங்கள் (fractal shapes) என எந்த வடிவத்தை பக்கவாட்டிலிருந்து பார்த்தாலும் அது நேர்கோடாகத்தானே தெரியும். எனவே நேர்கோடு என்னும் ஒரு தோற்றம்தான் சதுரம், வடிவம் என பல வடிவங்களாகத் தெரிகிறது. பல வடிங்களாகத் தெரிகிறது என்று சொல்வதை விட ஒரே நேர்கோட்டை நீங்கள்தான் வட்டம், சதுரம், முக்கோணம் என்று பல வடிங்களாகப் பார்க்கிறீர்கள்.

எனவே உண்மையில் இருப்பது இறைவன் மட்டும்தான், ஆனால் மனிதன், தாவரம், விலங்கு, நல்லது, கெட்டது என்று இறைவனைப் பல கூறுகளாகப் போட்டு இருக்கும் ஒன்றை இல்லாத பல வடிவங்களாகப் பார்த்து மனிதன் தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறான்,
அடிப்படை நிலையில் பார்த்தாலும் அரிசி என்று ஒரே ஒரு தானியத்தைக் கொண்டு இட்லி, தோசை, புட்டு, முறுக்கு என்ற எத்தனை எத்தனை உணவுப் பதார்த்தங்களைப் படைத்து அதிலும் மனம் திருப்தி அடையாமல் இன்னும் பல புதிய உணவு வகைகளை ருசி பார்க்க மனம் அலைவதால் மனித மனம் அமைதி இழக்கிறது.

அதே போல தனக்கு உரிமையான மனைவியை மறந்து மனம் பல மாற்றங்களைத் தேடுவதால் இன்றைய மனித சமுதாயமே முறையற்ற காமக் குற்றங்களால் சீரழிந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரே தகரத்தால் தயாரிக்கப்பட்ட பல வண்ண கார்களுக்கு மனம் ஏங்கி கொலை, கொள்ளை போன்று ஈடுபடுவதால் பாழான குடும்பங்கள் எத்தனை எத்தனை.
இவ்வாறு அனைத்து விதமான சமுதாய சீர்கேடுகளையும் களைய வல்ல ஒப்பற்ற சித்த மந்திரமே பூஜ்யம் என்பது நேர்கோடு என்ற சித்த மந்திரமாகும். இந்த சித்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமைவதே ஆலய மணி என்றால் அதன் மகத்துவத்தை வாய்விட்டுக் கூற முடியுமா?

மணி ஓசையின் மகத்துவத்தை அறிய வேண்டுமானால் முதலில் ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும், ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தால் ஓசை உணர்த்தும் உண்மையை அறியலாம். ஓசை உணர்த்தும் உண்மையை செவிமடுத்தால் அது பலவாய்ப் பிரிந்து நிற்கும் ஒன்றைச் சுட்டிக் காட்டும். இவ்வாறு பலவாய்ப் பிரிந்து நிற்கும் ஆதாரமான ஒலியை உணர்ந்து கொண்டால் அதை எப்படி ஒளியாக மாற்ற முடியும் என்ற இரகசியத்தை ஆலய மணி ஓசை மூலமாக உணரலாம்.

இது ஒலி ஒளி இரகசியத்தின் அடுத்த நிலையாகும். இத்தகைய ஒலி ஒளி இரகசியத்தை புலப்படுத்தும் திருத்தலங்கள் உலகெங்கும் பல உண்டு. இதில் முதன்மையாகத் திகழ்வதே தில்லையம்பல நாதன் உறையும் சிதம்பர திருத்தலமாகும். திருஅண்ணாமலை ஆக்கோட்டை லிங்கம், மதுரை அருகே திடியன்மலை, திருச்சி துவரங்குறிச்சியில் உள்ள ஒலியுலா சுவாமிகளின் ஜீவசமாதி, வட:லூர் ராமலிங்க சுவாமிகள் ஆலயம் போன்ற திருத்தலங்களும் ஒலி ஒளி தியானத்திற்கு ஏற்றவையே.

இந்த ஒலி ஒளி தியானத்தை உத்தம சற்குரு மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பது கலியுக நியதி. தமது சற்குருவின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற ராமலிங்க வள்ளலார் சுவாமிகள் தில்லையம்பல பதியில் ஒரு மண்டல கால தியானத்திலேயே ஒலி ஒளி இரகசியத்தை கைவரப் பெற்று அதன் மூலம் ஒளி உடம்பைப் பெற்றார்கள் என்பது சித்த இரகசியமாகும்.

இவ்வாறு சிதம்பர திருக்கோயில் ஆலய மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டு தியானித்து வந்தால் சற்குருவின் வழிகாட்டுதல் என்னும் பாக்கியத்தைப் பெறாதோரும் நாளடைவில் எம்பெருமான் தில்லை பிரானின் ஆனந்த நாட்டிய ஒலியை தங்கள் இதயத்தில் கேட்டு உணர ஆரம்பிப்பார்கள். இவ்வாறு பரம்பொருளின் ஆனந்த தாண்டவத்தை தங்கள் இதயத்தில் உணர ஆரம்பித்த மறுகணவே அவர்களை நாடி சற்குரு தேடி, ஓடி வருவார். அத்தகையோர் சற்குருவைத் தேட வேண்டியதில்லை. அவர்களைத் தேடி சற்குரு வர வேண்டும், சற்குரு வந்தே ஆக வேண்டும் என்பது இறை நியதி. சிற்றம்பல நாதனின் தேவ ஆணை. இதுதான் ஆண்டவன் கட்டளை என்பது.

மனிதர்களில் சிறந்தவர் யார்? மனிதர்களில் சிறந்தவர்களை அந்தணர் என்று அழைப்பார்கள். அந்தணர் என்பவர் யார்? தர்மத்தில் நிலைத்து நின்று மற்ற உயிர்களுக்காகவே வாழ்ந்து மற்றவர்களுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள் என்பது வள்ளுவர் மொழி. யார் தர்மத்தில் நிலைத்து நிற்க முடியும்? யார் இதயத்தில் சிதம்பர நாதன் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அவர்தான் உண்மையான அந்தணர், அவர்தான் தர்மத்தில் நிலை பெற்றிருக்க முடியும்.

இதைத்தான், ”தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்,” அதாவது ”யார் உள்ளத்தில் தில்லை நாதன் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அவருடைய அடியாரின் பாதத்தை வணங்குகிறேன்,” என்று சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் கோயில் கொண்டு உறையும் அந்தணர்களின் பெருமையை மிகவும் சிறப்பாக, மிகவும் பணிவுடன், அவர்களுக்கு இறைத் தொண்டர்களின் வரிசையில் முதலிடம் கொடுத்து கௌரவப்படுத்தி தம் திருத்தொண்டத் தொகையில் புகழ்ந்து பாடியுள்ளார்.  

திருஅண்ணாலையில் வாழ்வது சிறப்புதான். ஆனால், அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்புடையது திருஅண்ணாமலை ஈசன் நம் உள்ளத்தில் வாழ்வது.
இவ்வாறு சிதம்பரம் திருக்கோயிலின் ஆலய மணி ஓசையைத் தொடர்ந்து கேட்கும் பாக்கியம் பெறாதோர் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த சிகண்டி பூர்ண மணியைக் கேட்டு ஆனந்தப் பரவசம் கொண்டு எஞ்சிய தங்கள் வாழ்நாளில் இறை பூஜையை மேற்கொள்ளும்போதெல்லாம் இந்த ஆலய மணி ஓசையை தங்கள் உள்ளத்தில் நிரப்பி வந்தால் அதுவே அனைத்து பூஜை பலன்களையும் நிறைவு செய்து உத்தம பலன்களை எல்லாம் வர்ஷிக்கும்.

ஆலயமணியின் தனிச் சிறப்பு

மூர்த்தி, தீர்த்தம், தலம் எனச் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் உரிய சிறப்பு அம்சங்கள் உண்டு அல்லவா? இவ்வாறு ஒரு திருத்தலத்தில் உள்ள தல விருட்சம், கொடி மரம், வாகனங்கள் போன்றவற்றிற்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு அத்தல ஆலயமணிக்கு உண்டு. அது என்ன தெரியுமா?

ஒரு திருக்கோயில் என்று இருந்தால் அதில் ஒவ்வொரு திசைக்கும் உரிய திக்கு தேவதைகள், சக்திகள் என்று உண்டு. அவை எல்லாம் அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும். உதாரணமாக, கன்னி மூலையில் உள்ள சக்திகள், தேவதைகள் கஜானன லோகக் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால், ஒரு திருத்தலத்தில் உள்ள ஆலயமணியில் உறையும் தேவதைகள் அதிகார நந்தியின் நேரடி அருளாட்சியின் கீழ் அமைவதே ஆலயமணியின் சிறப்பம்சமாகும்.

தேவலோகம், பிரம்மலோகம், சத்திய லோகம் என்பதைப் போல கண்டா  பிரவாகம் என்று அழைக்கப்படும் லோகம் உண்டு. இது அதிகார நந்தியின் நேரடி அருளாட்சியில் அமைந்தது. இந்த கண்டா பிரவாக லோகத்து தேவதைகளே ஒவ்வொரு ஆலயமணியிலும் அமர்ந்து அருளாட்சி செய்கின்றன. கண்டா பிரவாக தேவதைகளின் சேவை மிகவும் பிரமிக்கத்தக்கது. இவை எல்லாம் சித்த கிரந்தங்களில் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.

கண்டா பிரவாக தேவதைகளின் ஒரே ஒரு இரகசிய சேவையை மட்டும் இங்கு விளக்கியுள்ளோம்.
திருமணம், கிரஹப் பிரவேசம், சீமந்தம் போன்ற பல நற்காரியங்களுக்காக முகூர்த்த நேரம் கணிக்கின்றோம். இதில் சூன்ய திதி, ராகு காலம், எம கண்டம், ஹோரை, லக்னம், குரு சுக்ர மூடம் போன்ற ஆயிரக் கணக்கான ஜோதிடக் கோட்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு எத்தனை ஆயிரம் ஜோதிடக் கோட்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நிறைவாக ஒரு 8.30 முதல் 9,00 வரை, 6 மணி முதல் 7 மணி வரை என ஏதோ ஒரு முகூர்த்த நேரத்தைத்தானே குறிக்கிறோம்.

இவ்வாறு குறித்த முகூர்த்த நேரத்தில் குறித்த சுப காரியத்தை எப்படி நிறைவேற்றுவது? உதாரணமாக, சரியாக 7 மணி 12 நிமிடத்தில் மாங்கல்ய தாரணம் நிகழ வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த சரியான முகூர்த்த நேரத்தை எப்படிக் கணக்கிடுவது? இதில் ஏற்படும் குழப்பத்திற்கு முடிவேயில்லை.
அந்தக் குறிப்பிட்ட கல்யாண மண்டபத்தில் கூடியிருப்பவர்களின் ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டும். இந்நிலையில் எது சரியான நேரம் என்று யார் முடிவு செய்வது? எந்த ஆதாரத்தைக் கொண்டு சரியான மணியைக் கண்டு பிடிப்பது? இதற்கு யாராலும் சரியான விடையைக் கூற முடியாது.

எந்த விஷயமாக இருந்தாலும் இறுதி பதிலை அளிக்கக் கூடியவர்கள் சித்தர்கள் மட்டுமே. எனவே சித்தர்கள் சரியான நேரத்தை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்று பாருங்கள்.  
அதை அறிவதற்கு முன்னால் நவீன யுத்தம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட இடத்தில் குண்டு வீச வேண்டும். சற்றும் முன் பின் மாறாமல் குறித்த இடத்தில் குண்டு விழ வேண்டும் என்றால் அதை நவீன யுத்த முறையில் எப்படி நிறைவேற்றுகிறார்கள்? தற்போதைய விஞ்ஞான முறையில் எந்த இடத்தில் குண்டு வீச வேண்டுமோ அந்த இடத்தை போட்டோ படம் எடுத்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுகிறார்கள். யுத்த விமானத்தில் குண்டை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி பறக்கிறார்கள். விமான ஓட்டிக்கு எந்த இடத்தில் சரியாக குண்டு போட வேண்டும் என்ற விவரம் தெரிய வேண்டியதில்லை.

அவன் வெறுமனே அந்த ஊர் வழியாக விமானத்தை ஓட்டிச் சென்றாலே போதும். எந்த இடத்தில் குண்டுபோட வேண்டுமோ அந்த இடத்திற்கு தகுந்தாற்போல கம்ப்யூட்டர் உதவியால் விமானம் தன்னுடைய பீரங்கிகளை திசை திருப்பி வைத்துக் கொண்டு விமான ஓட்டிக்கு தகவல் தெரிவிக்கும்.  மறு நொடி விமான ஓட்டி ஒரு பட்டனை அழுத்தி தன்னுடைய செயலை நிறைவேற்றி விடலாம்.

இது அழிவிற்காக பயன்படுத்தப்படும் ஒரு விஞ்ஞானக் கோட்பாடு. இதே விஞ்ஞானக் கோட்பாட்டை மெய் ஞானிகளான சித்தர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்று பாருங்கள். சித்தர்கள் கணக்கிடும் முகூர்த்த நேரம் அமிர்த நேரம் எனப்படும். பொதுவாக பூலோக கணக்கில் ஒரே ஒரு நிமிடம் நிரவி நிற்கக் கூடிய மிகவும் புனிதமான முகூர்த்த நேரம் இது.

மேற்கூறியது போல் முகூர்த்த நேரம் 7 மணி 12 நிமிடம் என்று சித்தர்கள் முடிவு செய்தால் அந்த நேரத்தை எந்த திருத்தல கண்டா பிரவாக தேவதைகளின் ஆளுகைக்கு அந்த திருமண தலம் அமைகிறதோ அந்தத் தல தேவதைகளிடம் சமர்ப்பித்து விடுவார்கள். உதாரணமாக, திருச்சி சோமரசம்பேட்டையில் ஓரிடத்தில் திருமணம் நடப்பதாக வைத்துக் கொண்டால், சோமரசம்பேட்டை என்பது ஸ்ரீஉஜ்ஜீவ நாதரின் தெய்வீக ஆளுகைக்கு உட்பட்டது.

இப்பூமியில் உள்ள எல்லா இடங்களுமே ஏதாவது ஒரு சுயம்புமூர்த்தியின் இறை ஆதிக்கத்தின் கீழ் வருவது என்பது நீங்கள் அறிந்ததே.
எனவே ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருத்தலத்தில் உள்ள கண்டா பிரவாக தேவதைகள் சித்தர்கள் சமர்ப்பித்த அமிர்த நேரத்தை கம்ப்யூட்டர் போல குறித்து வைத்துக் கொண்டு அதை நவகிரக மூர்த்திகளிடம் சமர்ப்பித்து விடுவார்கள். அந்த குறிப்பிட்ட முகூர்த்த நேரமான 7 மணி 12 நிமிடம் வந்தவுடன் நவகிரக தேவதைகள் கண்டா பிரவாக தேவதைகளுக்கு தெரிவிக்க அவர்களிடமிருந்து சற்குரு நாதர்களான சித்தர்பிரான்கள் சரியான முகூர்த்த நேரத்தை அறிந்து மாங்கல்ய தாரணம் குறித்த நேரத்தில் நிகழ வழி வகுக்கிறார்கள்.

எந்தெந்த நவகிரக தேவதைகள் எந்தெந்த கோணத்தில் அமர்ந்து உள்ளார்கள் என்பதைக் குறிப்பதுதானே உண்மையான முகூர்த்த நேரம். எனவே மனிதர்கள் தயாரித்த கடிகார நேரங்கள் எப்படி அமைந்தாலும் நவகிரக மூர்த்திகளின் எழுந்தருளலே முகூர்த்த நேரமாக அமைகிறது என்பது உண்மை.
பாரத யுத்தத்தில் அமாவாசையை சூரிய சந்திரர்களைக் கொண்டு உருவாக்கியதும், பூர்ண அமாவாசையில் சந்திரனை எழுந்தருளிச் செய்து பௌர்ணமி திதியை தோற்றுவித்த அபிராமி பட்டரையும் நினைவு கூறுங்கள். இந்த உண்மை எளிதில் விளங்கும்.

இப்போது தெரிகிறதா சற்குரு நாதர் எப்படி எல்லாம் தங்கள் சீடர்கள் கரையேற பாடுபடுகிறார் என்று?
தில்லையம்பதி சிகண்டி பூர்ண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டு பூஜித்து வருவதால் எம்பெருமானின் நாட்டிய ஒலியை தங்கள் இதயத்தில் கேட்கும் ஆன்மீகப் பேற்றினை அடியார்கள் பெறலாம் என்று கூறினோம் அல்லவா? இவ்வாறு எம்பெருமானின் நாட்டிய ஒலியைத் தங்கள் இதயத்தில் கேட்டு பெரும்பேறு அடைந்தவர்களே காரைக்கால் அம்மையார், பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற சான்றோர்கள்.

இந்நிலைக்கு அடுத்த ஆன்மீக நிலையாக அமைவதே ஒலியை ஒளியாக மாற்றி பஞ்ச பூதங்களாலான மனித உடலை ஒளிக் கூடாக மாற்றும் சித்த வித்தையாகும். பதஞ்சலி ரிஷி போன்ற உத்தமர்கள் இந்த ஒளி உடம்பை எளிதில் பெற முடியும் என்றாலும் பலவித தெய்வீக இரகசிய காரணங்களால் எம்பெருமானின் நாட்டிய ஒலியில் பெருகிய ஆன்மீக அனுபவத்திலேயே லயித்து, நிலைத்து விட்டார்கள்.

ராமலிங்க அடிகள், நந்தனார், ஒலியுலா சுவாமிகள் போன்றோர் ஒலி நிலையைத் தொடர்ந்த ஒளி நிலையில் திகழ்ந்தவர்கள். இவ்வாறு ஒலியை ஒளியாக மாற்றும் தெய்வீக நிலைகளாக அமைந்தவையே சிதம்பரம் திருத்தலத்தில் அமைந்த ஆலய மணிகளாகும்.

சபாநாயகர் எழுந்தருளிய பிரகாரத்திற்கு அடுத்த பிரகாரத்தில் அமைந்துள்ளதே நிருத்த கண்டா என்ற ஆலய மணியாகும். காலத்தை விரயம் செய்த குற்றத்திற்கு ஓரளவு பரிகாரம் தருவதே இந்த நிருத்த கண்டா மணி ஓசையும், அதன் வழிபாடும்.

உதாரணமாக, ஓம் பூர் புவ சுவஹ தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் என்ற பிரம்ம காயத்ரீ மந்திரத்தை ஓதும் போது வார்த்தைகளுக்கு இடையே சிறிது மந்திரம் ஓதாத நேரம் அமையும் அல்லவா? இந்த நேரமும் கால விரயம் என்ற கணக்கில் சித்ர குப்தரால் கணக்கில் கொள்ளப்படுகிறது.

அத்தகைய கால விரயத்தையும் சரி செய்ய மனிதர்களுக்கு வழிகாட்டுவதே சிதம்பர திருத்தலத்தில் அமைந்த நிருத்த கண்டா மணியாகும். அம்மணியைக் கொண்டு கால விரயத்தை எப்படித் தவிர்ப்பது?

நீங்கள் காயத்ரீ மந்திரத்தை ஓதும்போது ”ஓம்” என்று உச்சரித்து ”ம்” என்ற ஒலியை நீட்டி, தீர்கமாக இசைக்கிறீர்கள் அல்லவா? அப்போது அந்த ஒலியுடன் இந்த நிருத்த கண்டா மணி ஓசையை இணைத்துக் கொண்டால் மந்திரம் ஓதுவதில் ஏற்படும் கால விரயக் குற்றத்திற்கு நிருத்த கண்டா மணி ஓசை ஒரு தெய்வீக பிராய சித்தமாக அமைந்து நீங்கள் கால விரயம் செய்த குற்றத்திலிருந்து விடுதலை பெறுகிறீர்கள்.

ஒவ்வொரு முறை காயத்ரீ மந்திரத்தை ஓதும்போதும் அந்த பிரணவ ஒலியை நிருத்த கண்டா மணி ஓசையுடன் இணைக்க வேண்டும் என்பது முக்கியம். எந்த திருத்தலத்தில் அமைந்த ஆலய மணியும் இவ்வாறு கால விரயக் குற்றத்தை நீக்கும் சிறப்புடையது என்றாலும், இதுவரை ஓதிய காயத்ரீ மந்திரத்தில் சேர்ந்த கால விரய தோஷத்தை நீக்க வல்லது சிதம்பரத்தல நிருத்த மணி ஓசையே ஆகும்.

ஒரு முறையாவது சிதம்பர திருத்தலத்தில் ஒலிக்கும் இம்மணி ஓசையை நன்றாகக் கவனித்து கேட்டு விட்டால், அதன் பின்னர் நீங்கள் எங்கு காயத்ரீ மந்திரத்தை ஓதினாலும் அத்துடன் மானசீகமாக இந்த நிருத்த கண்டா மணி ஓசையை எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒலியை ஒளியாக்கும் தெய்வீக வித்தையை நிருத்த கண்டா, சிகண்டி பூர்ண ஆலய மணிகள் இணைந்து விளங்குவதால் இன்றும் சிதம்பர திருத்தல பூஜையில் இவ்விரு மணிகளின் இணைந்த மணி ஓசையே பூஜை விதானமாக அமைந்து பிரபஞ்சம் எங்கும் அற்புத இறை சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய தெய்வீக சிறப்பு வாய்ந்த மணி ஓசை மனிதனின் வாழ்நாள் முழுவதும் அவனைத் தொடர்ந்து வருவதில் என்ன வியப்பு? குழந்தை பிறந்த உடனேயே கால்களுக்கு கொலுசு அணிவிக்கிறார்கள் அல்லவா? இதன் பின்னால் உள்ள தெய்வீக ரகசியம் இப்போது உங்களுக்குத் தெளிவாக விளங்கி இருக்குமே.

குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு உரிய வயதில் பலவித சலங்கைகளையும் அணிவித்து நாட்டிய நடனங்கள் கற்பித்து இறையருளைக் கூட்டி வைக்கின்றனர். அது போல கற்புக்கரசி கண்ணகியின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு மாணிக்கப் பரல்கள் ஒலிக்கும் மாணிக்கச் சிலம்பை அணிவித்து மகிழ்ந்தனர்.

கண்ணகியின் தந்தையார் மாநாய்கன் காவிரிப்பூம்பட்டினத்தில் புகழ் பெற்று விளங்கிய தனவந்தர்.  சிறந்த சிவ பக்தர். தாயார் குமுதவல்லி சிறுவயது முதலே தில்லை நாதனை தினமும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்ட கற்புக்கரசி. இவர்களின் தவப் பயனால் உலகையே உய்விக்கவல்ல ஒரு பத்தினித் தெய்வம் தோன்றும் என்பதை பெரியோர்கள் மூலம் அறிந்த இந்த தெய்வீகத் தம்பதியினர் அவர்கள் சொற்படி கண்ணகியின் குழந்தைப் பருவத்திலேயே மாணிக்கச் சிலம்பை அணிவித்தனர்.

அதற்குக் காரணம் என்ன? எம்பெருமான் அடிமுடி காணாத அண்ணாமலையாக உருவெடுத்தபோது அவர் முதலில் தன்னை மாணிக்க மலையாகத்தானே மற்றவர்கள் கண்களுக்கு தரிசனம் அளித்தார். எனவே எத்தகைய உஷ்ணத்தையும், வெப்ப சக்தியையும் தாங்கக் கூடியது மாணிக்கம் என்பது தெளிவாகிறது அல்லவா? இக்காரணம் பற்றியே எதிர்காலத்தில் கற்புக்கரசியாக கண்ணகி ஜொலிப்பாள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவள் பெற்றோர்கள் எத்தகைய கற்புக் கனலையும் தாங்கக் கூடிய வல்லமை பெற்ற மாணிக்க சிலம்புகளை தங்கள் குழந்தைக்கு அணிவித்தனர் என்பது இதுவரை நீங்கள் அறியாத தெய்வீக இரகசியம்.

நமது புனித பூமிக்கு ஒளி விளக்காகத் திகழும் சூரிய பகவானுக்கு உரியதும் மாணிக்கம்தானே. சிம்ம ராசியில் பிறந்தவர்கள், 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் மாணிக்கம் பதித்த கடுக்கன்களை அணிந்து வருவதால் அவர்கள் வாழ்க்கை சிறப்புப் பெறும்.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ரிஷிகளும், முனிவர்களும் எதிர்கொள்ள முடியாத கனலே கற்புக்கரசிகளின் கற்புக் கனலாகும். தெய்வ அவதாரங்களே கற்புக்கரசிகளின் சாபத்தைத் தீர்க்க முன்வருவதில்லை என்பது நளாயினியின் வரலாறு மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

கண்ணகி தன்னுடைய கற்புக் கனல் மூலம் மதுரை மாநகரை அழித்தாள் என்றே பலரும் எண்ணுவர். அன்று முதல் இன்று வரை பத்தினி தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகி தீ மூலம் உயிர்களை எரிக்கும் தகாத செயலைச் செய்வாளா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். எப்படி முருகவேளின் சக்திவேல் இரண்யனின் அகம்பாவத்தை அடியோடு அழித்ததோ, எப்படி ராமபிரானின் ராமபாணம் இராவணனின் பிறர் மனை நோக்கும் தீய எண்ணத்தை வேரொடு களைந்து அவனைப் புனிதப்படுத்தியதோ அதே போல கண்ணகியின் கற்புத் தீ மதுரை மாநகரைப் புனிதப்படுத்தியது என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் பேருண்மை.

பாண்டிய மன்னன் கோவலனைக் கொன்றதற்கு காரணம் கேட்டு அரசவைக்குச் சென்று தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக கண்ணகி தன்னுடைய காற்சிலம்பை தரையில் வீசி உடைக்கும்போது அச்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில் பட்டுத் தெரித்தவுடன், மன்னன் கோவலன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து உயிர் நீத்தான் அல்லவா?

அந்நிலையை பாண்டிய மன்னன் அடைவதற்குக் காரணம் கண்ணகியின் சிலம்பில் செறிந்து நின்ற கற்புக் கனலே. பாண்டிய மன்னன் நீதி வழுவாத பெருந்தகை. அவன் தன்னுடைய வாழ்க்கையில் செய்த ஒரே தவறு கோவலைக் கொன்றதே. எனவே அவனுடைய குற்றத்தைக் களைந்து அவனைத் தெய்வலோகத்திற்கு இட்டுச் சென்றது கண்ணகியின் கற்புக் கனல். தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தேவகுணம்.

தன்னுடைய ஆருயிர் கணவன் இறப்பதற்குக் காரணமாக இருந்த மன்னனையும் மன்னித்து அவனுக்கு தெய்வீக வாழ்வு அளிக்க ஒரு பெண் தெய்வம் நினைக்கிறது என்றால் அந்தத் தெய்வம் எப்படி மற்றவர்களின் உயிர்களை தீயால் அழிக்க விளையும் என்பதை ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.

கற்புக்கரசி கண்ணகியின் திருப்பாதங்களைத் தழுவிய காற்சிலம்புகளில் ஒலித்த ஒரு சிறு மாணிக்கத் துகள் நாடாளும் மன்னன் ஒருவன் இழைத்த கொடுஞ் செயலை மன்னித்து அவனுக்கு தெய்வீகப் பேறு அளிக்க வல்லது என்றால் மாணிக்க மலையாகத் திகழும் எம்பெருமான் உறையும் தில்லையம்பதியில் ஒலிக்கும் ஆலய மணிகளின் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா?

இவ்வுகில் மனிதன் காணக் கூடிய தெய்வீகமான, சிறந்த ஜோதி எது? கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதிதான் உலகிலேயே மிகப் புனிதமான ஜோதியாகும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.

திருஅண்ணாமலை ஜோதியைவிடப் புனிதமான ஒரு ஜோதி உண்டா? உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. ஆம். திருஅண்ணாமலை ஜோதியை விடவும் புனிதமான ஜோதி ஒன்று உண்டு. அதுவே உத்தம சற்குரு ஒருவரின் தூல உடலை தகனம் செய்யும்போது எழும் ஜோதி. சித்தத்தில் இறைவன் மட்டுமே நிலைக்கும் உத்தம குருமார்களின் உடலைத் தகனம் செய்யும்போது அதிலிருந்து எழும் ஜோதியை சத்ய ஜோதி என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். இந்த தெய்வீகமான சத்ய ஜோதி திருஅண்ணாமலை ஜோதியைப் போல முன்னூறு மடங்கு புனிதமானது என்று பிருகு நாடி பறைசாற்றுகின்றது.

இதை மனித மனம் ஏற்குமா? சற்று ஆழ்ந்து சிந்தித்தால் சத்ய ஜோதியின் மகத்துவம் புரியவரும். திருஅண்ணாலை ஜோதியில் கூட நீங்கள் புகையைப் பார்க்கலாம். ஆனால், உத்தம குருமார்களைத் தகனம்செய்யும்போது எழும் சத்ய ஜோதியில் வெறும் ஒளியையும், வெப்பக் கனலை மட்டுமே காணவோ, உணரவோ முடியும். சத்ய ஜோதியில் புகை என்பதையே நீங்கள் பார்க்க முடியாது. 

இந்த அற்புதமான தெய்வீக உண்மையை, சத்தியத்தை நேரில் கண்டு அனுபவித்து வியந்தவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் நாடி, தேடிச் சென்று உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

திருஅண்ணாமலை ஜோதியைப் பற்றிய தெய்வீக அனுகிரக சக்திகளை பலரும் அறிந்திருக்கலாம். குருமார்களால் அருளப்படும் இந்த சத்ய ஜோதியின் பயன் என்ன?
சத்ய ஜோதியால் விளையும் பயன் கோடிக் கணக்கில் உண்டு. ஆனால், தற்போது எடுத்துக் கொள்ளப்பட்ட மணி ஓசை என்பதைப் பற்றி ஆராய்ந்தால் ஒலி மயமான, பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட மனித உடலை எளிமையாக ஒளியாக மாற்றும் வல்லமை பெற்றதே சத்ய ஜோதியாகும். இது சித்தர்களால் அளிக்கப்பட்டுள்ள ஒலி ஒளி மாற்றத்திற்கான ஒரு குறுக்கு வழி, சித்த ஷார்ட்கட் முறை என்றும் கூறலாம்.

எனவே மனித வாழ்க்கையின் குறிக்கோள் எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதியில் இணைவதுதான். வேறு எந்த குறிக்கோளும் இதற்கு நிகராகாது. உண்மையில் இறைப் பிரசாதம் என்பது இறைவனின் நெற்றிக் கண் சுடரில் ஒன்றி வாழ்வதே. இந்த இறைப் பிரசாதத்தை சதா சர்வ காலமும் வேண்டியே குடம் குடமாக பக்திக் கண்ணீர் வடித்த அருணகிரி நாதர்,

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

என்று முருகப் பெருமானின் திருவடிகளில் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கின்றார்.

ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam