ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தொடரும் விற்குடி விஜயம்...

நூபுரமும் கோமுகமும்

கேது சக்திகள் பொலியும் ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டில் நாம் மிகவும் ஆனந்தமடையக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால் நம்முடைய தாய், தந்தையர் நமக்கு உறுதுணையாக அமைந்து அவர்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக நம்மை வந்தடையும் என்பதே. பெற்றோர்களுக்கு முறையாக பாத பூஜை போன்ற வழிபாடுகள் இயற்றுதலால் அவர்கள் சந்ததிகள் பெற முடியாத ஆசீர்வாதம் எதுவுமே இருக்க முடியாது என்ற அளவிற்கு பெற்றோர்களின் ஆசி குழந்தைகளுக்கு உறுதுணையாக அமையும் தாயுமான ஆண்டே இது.

இதற்கு எதிர்மறையாக, விரோதப் பாங்கில் அமைவதே சகோதரர்கள் இடையே, சகோதரிகள் இடையே, சகோதர சகோதரிகள் இடையே இந்த ஆண்டு தலைதூக்கும் உறவுக் குழப்பங்கள், உரிமைப் பிரச்னைகள், அதனால் விளையும் வெளியே சொல்ல முடியாத வேதனைகள் ஆகும்.

மைதிலிபதே ரகுநந்தனா...
S for Sairam!

பெற்றோர்களின் ஆசியைப் பெற முடியாதவர்கள் என் செய்வது? உத்தமப் பெரியோர்கள், வழிகாட்டிகள், சற்குரு அமையும் பாக்யம் பெற்றவர்கள் சற்குருவின் மேன்மை உணர்ந்து முடிந்த மட்டும் அவர்களின் அறிவுரைகளை ஏற்று நடத்தலால் மலை போல் வரும் துன்பமும் பனி போல் விலகும் அதிசயத்தைக் காணக் கூடிய ஆண்டு இதுவாகும்.

பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் அடங்கியதுதானே குடும்பம், அதன் மாறுபட்ட இணைப்பாகத் துலங்குவதே சமுதாயமும். எனவே இவர்கள் அனைத்தையும் முறையாக இணைக்கும் வழிபாடாக சித்தர்களால் அளிக்கப்பட்டுள்ளதே கோமுக வழிபாடாகும். நூபுரம் என்றாலே நூபுர சித்தர்பிரானை நினைக்காமல் இருக்க முடியாது அல்லவா? மதுரை அழகர் கோயில் அருகே இருக்கும் நூபுர கங்கையில் வழிபாடுகள் இயற்றி ஒசூர் ஸ்ரீநூபுர ஈசனுக்கு நூபுர கங்கைத் தீர்த்தத்தால் குறித்த நாட்களில் வழிபாடுகள் இயற்றி அதன் பலாபலன்களை எல்லாம் இவ்வருடம் மக்களுக்கு தாரை வார்த்து அளிக்கும் உத்தம மகானே ஸ்ரீநூபுர சித்தர் ஆவார்.

அண்ணன் போல் நினைத்து பழகுகிறேன், என்னைத் தங்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற விதமான சினிமா ‘டயலாக்குகள்’ எல்லாம் இந்த வருடம் துன்பத்தில் முடியுமாதலால் இத்தகைய உத்தரவாதங்கள் எதையுமே மனதில் கொள்ளாமல் உண்மையான தந்தை சிவன் ஒருவனே, உண்மையான சகோதரன் பெருமாள் ஒருவனே, உண்மையான தாய் உண்ணாமுலை ஒருத்தியே என்ற நினைவில் தெளிவாக இருந்தால் அடியார்கள் துன்பமடைய மாட்டார்கள். இது இந்த நூபுர வருடம் மட்டும் அல்லாமல் அனைத்து வருடங்களிலுமே செல்லுபடியாகக் கூடிய ‘சித்த நாணயம்’ ஆகும்.

இந்த சித்த நாணயத்தின் சக்தியை அனைவரும் பெறும் முகமாகவே நம் திருஅண்ணாமலை ஆஸ்ரம அடியார்களின் சீருடையாக உண்ணாமுலை அம்மனின், மரகதவல்லியின் நிறமான பச்சையை நம் சற்குரு அளித்துள்ளார்.

இறைவி இறைவனின் கண்களைப் பொத்தியபோது தோன்றிய ஒளியே, பெருமானின் நெற்றிக் கண் அமைந்த நூபுரம் என்ற சிதாகாசத்தில் தோன்றியதே நூபுர ஒளி என்பதைக் கண்டோம். இந்த நூபுர ஒளிப் பிரகாசம் சுவாமி அணிந்திருந்த மூன்றாம் பிறையில் பிரதிபலித்து, பிரகாசித்தபோது அதைக் காணும் பேறு பெற்றவரே நூபுர சித்தர் என்ற உத்தமர் ஆவார். அது மட்டுமல்லாமல் இந்த அபூர்வ பிரகாசமானது சுவாமியின் பின்னால் கண்களைப் பொத்திக் கொண்டு நின்றிருந்த அம்பாளின் மேல் பிரகாசிக்க, பிரதிபலிப்பு கொள்ள அப்போது தோன்றிய சக்தியே, அம்பிகையே ஸ்ரீமரகதாம்பாள் ஆவாள்.

ஸ்ரீகாஞ்சிகனி
குண்டலினி யோக அனுகிரகம்
(கால் அமைப்பே கோமுக ஆசனம்)

ஒசூர் திருத்தலத்தில் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீசந்திரசூடராக எம்பெருமான் எழுந்தருளியதன் பின்னணி இதுவே. ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் என்று மக்களுக்கு அருள்வழங்கும் கனிந்தகனி பரமாச்சாரியார் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய பெயருக்கேற்ப மூன்றாம் பிறை தரிசனத்திலேயே கழித்து உண்மையான ஜகத்குருவாய் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அருளை வாரி வழங்கினார். இவ்வாறு ஒவ்வொரு மூன்றாம் பிறையையும் எந்த திருத்தலத்திலிருந்து தரிசிக்க வேண்டுமோ அந்த திருத்தலத்திலேயே தரிசித்து அந்த சந்திரசூட அனுகிரகத்தை அளித்த பெருந்தகையே கனிந்தகனி ஆவார்.

இவ்வாறு தன்னுடைய விஜய யாத்திரையில் ஏழாவது மூன்றாம் பிறை தரிசனமாக காஞ்சி கனிந்த கனி பெற்ற திருத்தலமே ஒசூர் என்ற மூன்று எழுத்து சந்திர சக்தி திருத்தலமாகும்.

ஏழில் மூன்று என்பதுதானே இவ்வருடம் சித்தர்கள் அளிக்கும் வழிபாட்டின் மகத்துவம். எனவே இவ்வருடத்தில் கனிந்தகனி பெற்ற மூன்றாம் பிறை தரிசனத்தை ஒசூர் திருத்தலத்தில் பெறுவது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறு என்பதை இங்கு குறிக்க வேண்டுமா என்ன? இவ்வாறு பிரபஞ்சத்தில் நூபுர மூன்றாம் பிறை ஒளியை சந்திர ஒளியாகப் பெறும் திருத்தலம் இது ஒன்றே என்பது ஒசூர் திருத்தலத்தின் தலையாய மகிமையாகும்.

ஒசூர் சந்திரசூட தரிசனத்தில் அடியார்கள் நிறைவேற்றக் கூடிய யோகமே கனிந்த கனி உபதேசம் அளித்த சந்திரசூட யோக முறையாகும். இம்முறையில் கனிந்தகனியின் வலதுகால் கட்டைவிரலில் பார்வையைத் தொடங்கி அதிலிருந்து சுவாமி உடலின் பின் பகுதி வழியாக இடது காலுக்கு வந்து, அங்கிருந்து இடது கரம் வழியே சுவாமியின் திருவதனத்தை, சந்திர பீடத்தை அடைந்து வலம் வந்து மீண்டும் வலது கை வழியே, வலது கைப் பற்றியிருக்கும் வலது கால் கட்டை விரலை அடைவது ஒரு சுற்று சந்திரசூட பிரதட்சிணமாகும்.

முதலில் இங்கு அளித்துள்ள படத்தைப் பார்த்து இத்தகைய சந்திரசூட யோகம் பழகிய பின்னர் சிறிது சிறிதாக சுவாமிகளின் உருவத்தை மனதில் பதித்துக் கொண்டு இத்தகைய மூன்றாம் பிறை தரிசன யோகத்தை நிறைவேற்றுதலால் அடியார்கள் சிறிது சிறிதாக மிக கடினமான குண்டலினி யோகத்தையும் பழகும் தகுதியைப் பெறுவார்கள். ‘எங்கிருந்து வந்தோமோ அங்கே மீண்டும் அடைவதே குண்டலினி, அத்வைத்ம் உணர்த்தும் கொள்கை.’ இதை உணர்த்துவதே ஜகத்குருவின் சந்திரசூட யோகம்.

இது எங்கோ கேள்விப்பட்ட ஒரு பிரதட்சிண முறைபோல் தோன்றுகிறதே ...
ஆம், நீங்கள் விற்குடி தீர்த்தங்களை வலம் வந்து நிறைவேற்ற வேண்டிய ஆலிலை அஸ்வத பிரதட்சிணத்தின் ஒரு மாறுபட்ட தோற்றமே இது. இவ்வாறு மக்கள் தர்ப்பணம் இயற்றி நன்னிலை அடைய தன் உடலையே தாரை வார்த்து அளித்த கயாசுர மகரிஷியைப் போல் தன்னுடலையே ஆலிலை பிரதட்சிணத்திற்காக அளித்த கனிந்தகனியை ஜகத்குரு என்று வர்ணிப்பது எத்தகைய பொருத்தமான செயல்?!

ஸ்ரீசந்திர பகவான் விற்குடி

இவ்வருடம் முழுவதும் மதுரை நூபுர கங்கையிலிருந்து தீர்த்தம் பெற்று ஒவ்வொரு மூன்றாம் பிறை தரிசன நாள் அன்றும் இறைவனுக்கு அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்பாகும். ஒசூர் ஸ்ரீநூபுர ஈசனுக்கு யூபுரம் மலையிலுள்ள நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் இயற்றுவது சிறப்பாகும். ஒசூர் ஸ்ரீசந்திரசூட ஈசனுக்கும் இதே முறையில் வழிபாடுகள் இயற்றுவது சிறப்பானதே.

அதே போல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், உத்திரட்டாதி, ரோகிணி நட்சத்திர நாட்களிலும், 21ந் தேதி அன்றும் அல்லது சிறப்பாக இத்தகைய குருமங்களகந்தர்வ சக்திகள் கூடும் நாட்களில் கோயில் கோமுகங்களை சுத்தம் செய்து தாமே கையால் அரைத்த சந்தனம், பொடி செய்த மஞ்சள், குங்குமம் இவற்றால் பொட்டிட்டு வழிபடுவது சிறப்பாகும். பசுவின் முகத்திற்கும் வால் பகுதிக்கும் இவ்வாறு பொட்டிட்டு வணங்கி வழிபடுவது சிறப்பே. லட்சுமி உறையும் பகுதி என்பதால் பலரும் பசுவின் பிருஷ்டம் என்ற வால் பகுதியை மட்டும் வழிபடுகிறார்கள். பசுவின் முகமும் கோமுகமாகத் திகழ்வதால் பசுவின் முகத்தையும் மங்களகரமாக மதித்து வழிபடக் கூடிய ஆண்டே இந்த நூபுர ஆண்டாகும்.

குங்குமப் பொட்டுடன் திகழும் தன் மனைவியின் முகத்தையும், தாய், சகோதரி போன்றவர்கள் முகத்தையும் இவ்வாறு தரிசித்து, ஒரு நாளின் முதல் வழிபாடாகக் கொள்வதால் கிட்டும் அனுகிரகம் அமோகமே.

மூன்றாம் பிறை தரிசன நாள் அன்று அளிக்க வேண்டிய பிரசாதம் பற்றி நம் சற்குரு ஒரு சுவையான தகவலைத் தந்தருள்கின்றார். ஒரு முறை வைகுண்டத்திலிருந்து மகாவிஷ்ணு பூலோகத்தில் சிவனாக எழுந்தருளிய இறைவனைப் பார்க்க வந்திருந்தார். அவ்வாறு பல திருத்தலங்களையும் தரிசித்து கேரளாவில் உள்ள மம்மியூரை அடைந்தபோது எம்பெருமான் அவருக்கு ‘வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும்’ கலந்த பிரசாதத்தை விருந்துபசாரமாக அளித்தானாம். அதை ஏற்ற மகாவிஷ்ணு மிகவும் மகிழ்ந்து உடனே லட்சுமி தேவிக்கு SMS ஒன்று அனுப்பி விட்டாராம்.

ஓசூர்

அது என்ன?

“உன்னுடைய அண்ணன் சிவபெருமான் அடியேனுக்கு மிகவும் சுவையான ஒரு பிரசாதத்தை அளித்து விட்டான். அதை உனக்கும் அளிப்பதற்காக, உன்னை அழைத்துவர வைகுண்டம் வந்தால் எங்கும் கிட்டாத அந்த சுவையான பிரசாதத்தை சில வேளைகளாவது ‘மிஸ்’ பண்ண வேண்டி வரும் என்பதால் என்னால் அங்கு வரமுடியவில்லை. அதனால் நீ வைகுண்டத்தை காலி பண்ணிக் கொண்டு வந்து விடு. இங்கு குடித்தனத்தை ஆரம்பித்து தினமும் ‘வடித்த கஞ்சி இடித்த தேங்காய்’ பிரசாதத்தை சுவைக்கலாம்...,” என்பதே அது.

இவ்வாறு குருவிற்கு உரித்தான வெல்லம் என்ற இனிப்பு சுவையையும், சந்திர பகவானுக்கு உரித்தான அரிசியையும், இடித்த தேங்காய் என்ற சுக்ர அனுகிரகத்தையும் ஒருங்கிணைத்து உருவாகும் பிரசாதமே குருவாயூரப்பனுக்கும், மம்மியூர் சிவனுக்கும் தினமும் படைக்கப்படும் நைவேத்யமாகும். இந்த பிரசாத்தை மூன்றாம் பிறை ஈசனுக்கு நைவேத்யம் படைத்து நாமும் உண்டு, பிறருக்கும் அளித்து ஆனந்தம் பெறுவோமே.

நூபுர மங்களம் என்ற மங்கள வார நாளான செவ்வாய்க் கிழமை அன்று தோன்றும் மங்கள சக்திகளை முழுமையாக வர்ஷிப்பதே செவ்வாய்க் கிழமை அன்று தோன்றும் திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஜோதியாகும். ஒரு வார காலத்திற்கு அண்ணாமலை நூபுர மங்கள சக்திகளை பக்தர்கள் அனைவரும் பெறும் பொருட்டு ஒரு வார காலத்திற்கு அன்னதானம், தீபங்கள் ஏற்றுதல் போன்ற வழிபாடுகளை இயற்றுதல் இந்த சுபகிருது வருடத்தில் கிட்டும் அரிதிலும் அரிய ஒரு சந்தர்ப்பமே.

கிரஹஸ்த தர்மம்

சன்னியாச தர்மம், கிரகஸ்த தர்மம் என்ற பல்வேறு தர்ம நிலைகளை நம் சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இவற்றில் எது சிறந்தது? எது சிறந்தது என்பதை விட எந்த தர்மத்தில் இருந்தாலும் அதை முறையாக அனுஷ்டிப்பதே சிறப்புடையது என்று நம் சற்குரு வலியுறுத்துவார். உதாரணமாக, ஒரு வீட்டில் சமைக்கும்போது கவனம் சிதறினால் அடுப்பில் வைத்திருக்கும் பண்டங்களிலிருந்து நீர் பொங்கி அடுப்பில் உள்ள அக்னியை அணைத்து விடும். அதனால் சமையலுக்கான பொருள்கள் வீணாவதுடன், கரி, விறகு, கேஸ் போன்றவையும் வீணாகி விடும் அல்லவா? சில சமயம் அவ்வாறு வெளியேறும் கேஸ் பல ஆபத்துக்களையும் ஏற்படுத்தி விடுவதுண்டு.

சப்தாவர்ண தீர்த்தம் ஒசூர்

அதே அடுப்பில் முறையாக சமைத்தால் தானும் உண்டு மற்றவர்கள் பசியையும் தீர்க்கும் சேவையைப் புரியலாமே. அபரிமிதமாக சமுதாயத்தில் உண்டாகும் அக்னி சக்தியை முறைப்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் அதை பயன்படுத்துவதற்காக உத்தம கிரஹஸ்தரான சத்ரு சம்ஹார மூர்த்தி அருளும் யோனி முத்திரையை இங்கு அளிக்கிறோம். அனைத்து தீயணைக்கும் நிலையங்களிலும் வழிபடப்படும் சத்ரு சம்ஹார மூர்த்தி இவ்வாறு நீரையும் நெருப்பையும் முறையாகப் பயன்படுத்தும் முறைகளை தெளிவுபடுத்தி உள்ளார்.

இவ்வாறு நீரையும் நெருப்பையும் முறைப்படுத்தும் முகமாகவே பரணி நட்சத்திரம் என்ற அக்னி நட்சத்திரம் பொலியும் நாளில் அன்னதானம் அளித்து மக்களின் வயிற்றுப் பசி என்ற அக்னியை அணைத்து அருஞ்சேவை புரிந்து வந்தார் சுவாமிகள். ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் என்பதால் சத்ரு சம்ஹார மூர்த்தி அருளியுள்ள யோனி முத்திரையை கோமுக ஆசனத்துடன் இணைத்து இந்த வருடம் முழுவதும் நிகழ்த்தி வருதலால் ஆசையால் அல்லல்படும் நிலை மாறும்.

ஆடை ஆசை, அங்க ஆசை, ஆபரண ஆசை போன்ற ஆசைகள் இந்த ஆண்டில் வரம்பின்றி பெருகுமாதலால் கோமுக வழிபாட்டை எவ்வகையிலேனும் நிறைவேற்றி இறையருள் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நம் சற்குரு அருளும் இத்தகைய நீரையும் நெருப்பையும் இணைக்கும் அனுகிரகத்தின் மகிமை சொல் பொருள் கடந்தது என்றாலும் அதை ஓரளவு பெற கடுகளவு முயற்சி செய்வோமே.

தலவிருட்சம் வில்வம் ஒசூர்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப அன்னதானத்தின்போது பத்து நாட்கள் அன்னதான அடுப்பில் விளையும் ருத்ராக்னியில் புடம் போட்ட தங்கமாக மிளிர்ந்த அடியார்களுக்கு அகத்திய தீர்த்தத்திலிருந்து நீரை எடுத்து அபிஷேகம் இயற்றினார் சுவாமிகள்.

கும்பகோணம் மகாமக வைபவத்தின்போது அன்னதானம் நிறைவேற்றி லட்சக் கணக்கான பக்தர்களின் பசி என்ற வடவாக்னியைத் தீர்த்த நம் சற்குரு அந்த அன்னதானத்தில் பங்கேற்ற அடியார்கள் தலைகளில் வட்ட வடிவில் கனக நீர்த்தாரை என்ற என்றும் குறைவில்லாமல் தங்ககுரு சக்திகளை அளிக்கும் தீர்த்தத்தை ஒரு கெண்டி மூலமாக வர்ஷித்து அனுகிரகத்தைப் பொழிந்தார்.

‘வடவனலை மீதெழுப்பி’ என்று அருணகிரி நாதர் பாடியவாறு குண்டலினி சக்தியை எழுப்புவதே இவ்வாறு வடவாக்னியை நீருடன் இணைக்கும் அன்னதான கைங்கர்யமாகும் என்று உணர்வித்த அண்ணலே நம் சற்குரு ஆவார்.

மெய்ஞானபுரியில் குருவருள் ஒன்றே மெய்ஞானம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அங்கு ஹோம திருப்பணி ஆற்றிய அடியார்களுக்கு எல்லாம் ஞான தீர்த்தம் என்ற தட்சிணா மூர்த்தியின் மெய்ஞான தீர்த்தத்தை அருளிய விந்தையையும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு நீரையும் நெருப்பையும் இணைக்கும் ஒரு தர்ப்பண வழிபாட்டு முறையை நம் சற்குரு அளிக்கிறார். ரிஷி தர்ப்பணம் என்ற முறையில் உள்ளங்கையில் நீரை ஊற்றி வலது கை சுண்டு விரல் வழியாக நிலத்தில் ஊற்றுவதே ரிஷி தர்ப்பணமாகும்.

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
என்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடிய பின் மூன்று முறை அர்க்யம் அளித்தலே இவ்வாறு நிறைவேற்றக் கூடிய எளிய ரிஷி தர்ப்பணமாகும். மூன்றாம் பிறை தரிசன நாள் அன்று மாதம் ஒரு முறையாவது 80 வயது, 60 வயது கடந்த பெரியோர்களுக்கு தம்பதி சகிதமாக பாதபூஜை நிறைவேற்றி எட்டு முழ வேட்டி, அங்கவஸ்திரம், ஒன்பது கஜ புடவை ஒரு மீட்டர் நீளமுள்ள ரவிக்கை துணியுடன் தானமளித்து வழிபடுதலால் சகோதரர்கள் இடையே, சகோதரிகள் இடையே, சகோதரி சகோதரிகள் இடையே இவ்வருடம் தோன்றக் கூடிய அனைத்து பூசல்களும், தகாத உறவுக் குழப்பங்களும் மறைந்து குடும்பத்தில், சமுதாயத்தில் அமைதி நிலவும்.

அஸ்வினி அருளமுதம்
டமரு நாத தயாநிதி !

படியாய்க் கிடக்கும்
பஞ்சபூத சக்திகள் ஒசூர்

இந்த வருடம் அதிகமான அளவில் தீ விபத்துக்கள் ஏற்படும் என்று சித்தர்கள் கூறிய குருவாய்மொழியை அளித்திருந்தோம். மின்சாரமும் ஒருவிதமான தீ சக்தியாக விளங்குவதால் கம்ப்யூட்டரில் ஏற்படும் வோல்டேஜ் மாற்றங்களால் கண்கள் பெருமளவு பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க முடிந்தவரை ஆன்மீக விஷயமாக இருந்தாலும் அவற்றை print-out எடுத்து பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். செல்போன்களும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆண்டு இது. உறங்கும்போது செல்போன்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே இன்றைய சூழ்நிலையில் நாம் பெறக் கூடிய ஒரே பாதுகாப்பு முறையாகும்.

கடன் தொல்லைகளால் உயிரே பறிபோகும் அளவிற்கு துன்பங்கள் ஏற்படும், கவனம் தேவை, செலவில் கவனம் தேவை.

டமரு என்பது வல்லின மெல்லின இடையின அட்சரங்கள் சேர்ந்த ஒரு பதம் மட்டும் அன்று, சிவபெருமான் உலகங்களை, பிரபஞ்சங்களை தான் ஒலிக்கும் டமரு நாதம் மூலம்தான் தோற்றுவிக்கிறார். அந்த டமரு என்ற உடுக்கை ஒலியை இந்த ஆண்டு டமரு நாத தயாநிதி பிரசாதமாக, நம் சற்குருவின் ஒலி பிரசாதமாக இங்கு அளித்துள்ளோம். செல்போன்கள் பயன்படுத்துவோர் இந்த டமரு ஒலியை ring tone, caller tune என்ற விதமாக அமைத்துக் கொள்வதால் தேவையற்ற பயன்பாடுகளை தவிர்க்க இது உதவும்.

உலகங்களைத் தோற்றுவிக்கும் டமரு நாதம் மக்களின் சாதாரண குறைகளைத் தீர்க்க முடியாதா என்ன? தேவை நம்பிக்கை, நம்பிக்கையே.

பஞ்சபூத சக்திகளை
பரம சக்திகளாக மாற்றும்
யோனி முத்திரை

செல்போன்களில் வெளியாகும் நுண் கதிர்கள் நம் சுற்றுப்புறத்தில் நிலவும் ஓசோன் என்னும் உயிர்க் கதிர்களை பெருமளவில் பாதிக்கக் கூடியவை. 50 அடி நீளம், 50 அடி அகலம், 12 அடி உயரமுள்ள ஒரு அறையில் ஒரே ஒரு துளி ஓசோனை நிரவி விட்டால் அது அந்த அறையில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளையும் அழித்து விடும் இயல்புடையது. இந்த ஓசோன் கதிர்களின் செயல்பாட்டில் குறுக்கிடுவதே செல்போன் பிரயோகத்தில் உண்டாகும் நுண்கதிர் நச்சு சக்திகள். இந்த நச்சுத் தன்மையை ஓரளவு சரிக்கட்டும் முகமாகவே நம் சற்குருவின் கோமதி கோபுர வாச வழிபாடு அமையும்.

டமரு என்ற பதத்தில் உள்ள அஅஉ என்ற உயிரெழுத்துக்கள் கோமதி கோபுர வாசத்தில் அமைந்த மூன்று ஏழுகளைப் போல் செயல்படுவதால் இது அஉஅ என்ற உயிரெழுத்து நிவாரண கவசமாக அமைந்து சமுதாயத்தில் அமைதியை உருவாக்கும் என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய சற்குருவின் அருளாசி.

சோமசூக்த சுந்தர வலம்

ஒரு முறை வீரபாண்டிய கட்டபொம்மன் மேல் தீய ஆவிகளை எதிரிகள் ஏவிவிட்டதால் உயிரே போகும் அளவிற்கு துன்பமடைந்தான். அவனை பரிசோதித்த அரண்மனை வைத்தியர்கள் அன்று மாலைக்குள் மதுரை பொற்றாமரைக் கோயில் குளத் தீர்த்தத்தை கொண்டு வந்து தெளிக்கா விட்டால் மாமன்னர் உயிர் விட நேரிடும் என்று கூறி விட்டனர். இதை அறிந்த ஓர் போர் வீரன் தன் உயிரையும் பயணம் வைத்து பாளையங்கோட்டையிலிருந்து நூற்றுக் கணக்கான மைல்கள் தள்ளியிருக்கும் மதுரை திருத்தலத்திற்கு ஒரு குதிரையில் ஏறி 600 மைல் வேகத்தில் பறந்து வந்தான்.

சோமசூக்த சுந்தர வலம்

மதுரையை அடைந்ததும் அவன் குதிரையிலிருந்து குதித்து பொற்றாரைக் குளத்தை அடைந்தான். குதிரை தான் வந்த அதிக வேகத்தைக் குறைப்பதற்காக வட்டமாக ஒரு மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பொற்றாரைக் குளப் பிரசாதம் பெற்ற வீரன் மீண்டும் ஓடிக் கொண்டிருந்த குதிரை மேல் பாய்ந்து ஏறினான். குதிரை பழையை வேகத்தை சிறிது சிறிதாக எட்டிப் பிடித்து, பாளையங்கோட்டையையும் சூரியன் மறைவதற்குள் எட்டிப் பிடித்தது. அரண்மனையின் அருகே குதிரை சென்றபோது மீண்டும் குதிரையிலிருந்து கீழே பாய்ந்து உருண்டான் அந்த வீரன். பொற்றாமரைக் குளப் பிரசாதத்தை அரண்மனை வைத்தியரிடம் அளித்து விட்டு அந்த போர் வீரன் மரணம் அடைந்து விட்டான். இரண்டு முறை 600 மைல் வேகத்தில் பறக்கும் குதிரையிலிருந்து கீழே குதித்ததால் அந்த வீரனின் உடலில் பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அவன் துடித்தாலும், மாமன்னருக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்தோமே என்ற திருப்தியில் மன சமாதானம் கொண்டான். தியாகத்தால் பரம்பொருளிடம் ஒன்றி விட்டான் வீரன். மாமன்னர் காப்பாற்றப்பட்டார்.

ஸ்ரீகங்காதீசர் ஒசூர் திருத்தலம்

பறக்கும் தட்டுகள் லட்சக் கணக்கான மைல் வேகத்தில் பறக்கின்றன. ஆனால், அவை ஏதாவது ஓர் இடத்தில் சடன் ப்ரேக் போட்டு நின்று விடுவதும் உண்டு. நூறு மைல் வேகத்தில் ஓடும் குதிரையால் சாதிக்காத முடியாத ஒரு ‘ப்ரேக்கை’ பறக்கும் தட்டுகள் எப்படி சாதிக்கின்றன? இதுவே நேர்க் கோட்டு இயக்கத்தை சுழல் சக்தியாகவும், சுழல் சக்திகளை நேர்க்கோட்டு சக்தியாகவும் மாற்றும் விஞ்ஞான சாதனையாகும். பறக்கும் தட்டைச் சுற்றி உள்ள வளையங்களே இத்தகைய சுழல் சக்தியை நேர்கோட்டு சக்தியாகவும், நேர்கோட்டு சக்தியை சுழல்சக்திகளாகவும் மாற்றும் விந்தையைப் புரிகின்றன.

இத்தகைய அற்புத விஞ்ஞான சக்திகளாலும் ஒரு துளி நீரில் மறைந்திருக்கும் இயக்க சக்திகளை புரிந்து கொள்ள இயலாது. ஒரு அளவிற்கு மேல் மாற்ற இயலாது.

கணவன் மனைவி உறங்கும்போது ஆண்கள் இடது பக்கம் ஒருக்கணித்து படுத்தும், பெண்கள் வலது பக்கம் ஒருக்கணித்து படுத்தும் உறங்க வேண்டும் என்று சித்தர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது ஒருவர் மூச்சு சுவாசம் மற்றவர் சுவாசத்தில் லயமடைந்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

மேற்கூறிய மூன்று விஷயங்களையும் அடியார்கள் பலமுறை வாசித்து ஆத்மவிசாரம் செய்து வந்தால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களில் அடியார்கள் இயற்றும் சோமசூக்த பிரதட்சிணம் எப்படி நம் உடலில் மறைந்து கிடக்கும் குண்டலினி என்ற ஆக்க சக்தியை அற்புத வளம் தரும் சக்தியாக மாற்ற முடியும் என்ற இரகசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

நித்திய பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரத்தில் அடியார்கள் எந்த சிவாலயத்தில் வேண்டுமானாலும் மேற்கண்ட முறையில் சோமசூக்த சுந்தர வல பிரதட்சிணத்தை நிறைவேற்றி பயன்பெறலாம். மூன்று முறை சோமசூக்த பிரதட்சிணத்தை நிறைவேற்றி மெதுவாக, மிக மெதுவாக, அதாவது நித்திய பிரதோஷ நேரமான இரண்டு மணி நேரம் முழுவதும் நிறையும் வண்ணம் அதை நிறைவேற்றுவது மிகவும் சிறப்பாகும்.

சிவனருட் செல்வர்

அக்னி பகவானுக்கு வாலாட்டி, சாலாட்டி என்ற இரண்டு நாக்குகள் உண்டு. இவ்வாறு இரண்டு நாக்குகளுடன் அருளும் அக்னி பகவானை திருவதிகை, திருக்கழுக்குன்றம் சிவாலயங்களில் தரிசித்திடலாம். அக்னியின் இரண்டு வித செயல்பாடுகளையே இந்த இரண்டு நாக்குகள் குறிக்கின்றன. உதாரணமாக, நீரை 50 டிகிரி வெப்பத்திற்கு சூடுபடுத்துவதாக வைத்துக் கொள்வோம். வேறு ஒரு பாத்திரத்தில் நீரை ஐந்து டிகிரி வெப்ப நிலைக்கு குளிர்விப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஸ்ரீஅக்னி பகவான் திருஅதிகை

இந்த இரண்டு பாத்திரத்தில் உள்ள நீரின் தோற்றம் எந்த விதத்திலாவது பாதிக்கப்படுமா? நம் கண்ணுக்குத் தெரிந்த வரையில் இதில் எந்தவித மாற்றமும் தென்படாது. விஞ்ஞான கோட்பாட்டின் படியும் இந்த இரண்டு பாத்திரத்திலும் உள்ள மூலக் கூறுகளின் இணைப்பு H2O என்றவாறுதான் இருக்கும். அப்படியானால் இந்த இரண்டு பாத்திரத்தில் உள்ள நீரின் மாறுபட்ட தன்மையை எப்படி உணர்ந்து கொள்வது? இதுவே வாலாட்டி சாலாட்டி என்ற நாக்குகள், அக்னியின் இருவகை செயல்பாடுகளைக் குறிக்கும் சக்திகளாகும்.

நம் சற்குரு எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு பாடம் என்ன, எத்தனையோ சுவையான பாடங்கள் நிறைந்திருக்கும். நம் சற்குருவின் காரில் ரிவர்ஸ் ஹார்ன் (reverse horn) வைத்திருப்பார். அது கூட சத்யசாய் பாபா ஆஸ்ரமத்தில் ஒலிக்கும் ஆரத்தி பாடலாக அமைந்திருந்தது. இதற்கு ஆயிரமாயிரம் தெய்வீக காரணங்கள் இருந்தாலும் கார் ரிவர்ஸில் பின்நோக்கி செல்லும்போது மெதுவாகத்தான் செல்லும், செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் கார் முன்னோக்கி வேகமாகப் பாய்ந்து செல்லப் போகின்றது என்பதையும் அவ்வாறு வேகமாகச் செல்வதற்குத் தேவையான சக்தியை அது தற்போதைக்கு சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதையும் குறிக்கிறது. ஆரத்தி பாட்டு என்பது நாமசங்கீர்த்தனத்தின் இறுதியில் இசைக்கப்படும் ஒரு பாடலாக இருந்தாலும் அது அடுத்து நடக்க வேண்டிய நாமசங்கீர்த்தனுக்கு உரித்தான சக்தியை சேமித்து வைக்கும் பாடலாகவும் இருக்கிறதே. இதுவரை reverse horn இல்லாதவர்கள் அதைப் பொருத்திக் கொள்வதற்கு உகந்த ஆண்டே N2023 ஆகும்.

இது ஒரு புறம் இருக்கட்டும்...
நம் கழிவறையில் இருக்கும் நீருக்கும், கங்கையில் கரைபுரண்டு ஓடும் தீர்த்தத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? உலகத்தில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளாலும் இந்த வித்தியாசத்தைக் கூற முடியாது. இரண்டிலும் உள்ள வாலாட்டி சாலாட்டி என்ற அக்னி சக்திகளே இந்த மாற்றத்தைக் கூற முடியும். வாலாட்டி சாலாட்டி என்ற அக்னி நாக்குகளின் சுழல் சக்திகளே குண்டலினி யோகத்தில் சூரிய நாடியில் உள்ள அக்னி சக்தியாகவும் சந்திர நாடி உற்பவிக்கும் குளிர் சக்தியாகவும் உருவெடுக்கின்றன.

மனித உடலின் வெப்ப நிலை சுமார் 96 டிகிரி சென்டிகிரேட் என்று கூறுகிறோம். இந்த வெப்பநிலையில் பத்து டிகிரி கூடினால் காய்ச்சல் அளவுக்கு அதிகமாகி மனிதன் சுயநினைவை இழக்கிறான். மனித உடலின் வெப்பம் பத்து டிகிரி குறைந்தாலும் இதே நிலைதான், ‘மேளம் கொட்டி விட’ வேண்டியதுதான். ஆனால், குண்டலினி யோகத்தில் 30,000 டிகிரி வெப்பநிலையை அடைந்தாலும் மனிதன் ஆத்மசக்தியால் நிரப்பப்படுகின்றான், சுய நினைவை இழப்பதில்லை என்றால் இதற்குக் காரணமும் வாலாட்டி சாலாட்டி சக்திகளே.

குண்டலினி யோக நிலையில் அக்னியில் தோன்றும் வாலாட்டி சாலாட்டி என்ற அக்னி பகவானின் இரு நாக்குகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அவை மறைந்து அது குண்டலினி சக்தியாக லயமாகிறது.

மறைந்த இரு நாக்குகளின் அக்னி சக்தி என்னவாகும்? இதுவே மகான்களின் அரிய திருப்பணி, கனவிலும் காணக் கிடைக்காத கவின்மிகு அனுக்கிரகம்.

இதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சரித்திர காலத்திற்கு நாம் செல்ல வேண்டும்...
பஞ்ச அக்னிகள் நடுவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறான் சூரபத்மன்...
சுற்றிலும் அக்னி குண்டங்கள் நான்கு திசைகளிலும் உஷ்ண கதிர்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க தலைக்கு மேல் ஐந்தாவது அக்னி சக்தியாக சூரிய பகவான் முழுப் பிரகாசத்துடன் அக்னி ஜ்வாலைகளை வீசிக் கொண்டிருக்கிறார். கடுமையான அந்த அசுரனின் தவயோக பலத்தால் அந்த யுகத்தைச் சேர்ந்த பிரம்மாவும், விஷ்ணு மூர்த்தியும் சூரபத்மனை நெருங்க முயற்சித்தபோது, அது இயலாமல் போகவே அவனுடைய கடும் தவத்தை மெச்சி அவனிடமிருந்து விலகியே சென்று விட்டனர்.

ரிஷி தர்ப்பணம்

இறுதியில் எம்பெருமானே ஒரு துளி நீரின் வடிவில் சூரபத்மன் முன் தோன்றி அவன் வேண்டுவது யாதென வினவ, சூரபத்மனும், “பரம்பொருளே, தாங்கள் ஒரு துளி நீர் வடிவில் எழுந்தருளி உள்ளீர்களே, இதுதான் உங்கள் சுயஉருவமா?” என்று கேட்க இறைவனும், “சூரனே, என்னுடைய சுயவடிவான அக்னி உருவில் தோன்றினால் அதைத் தாங்க இயலாது நீ ஒரே நொடியில் பஸ்மமாகி விடுவாய்... உன்னுடைய ஈடு இணையற்ற தவத்தை மெச்சியே இவ்வாறு ஒரு துளி நீரில் தோன்றினோம்...”, என்று பரம்பொருள் விளக்கம் அளிக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்தது எம்பெருமான் லீலைகள் ... ...
இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது இவ்வாறு வரம்பில்லா சக்தி கொண்டதே, எல்லையில்லா மகிமை வாய்ந்ததே நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு துளி நீர்...
“இறைவனைப் பற்றி நாம் அனைத்தும் அறிந்து கொண்டு விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பக்தர்கள் முதலில் ஒரு துளி நீரின் மகிமையை உணர்ந்து கொண்டாலே அது பெரிய பெரிய விஷயம்...”, என்பார் நம் சற்குரு. அதற்கு முதற் படியே இந்த நூபுர ஆண்டில் பக்தர்கள் மேற்கொள்ளும் முகமாக இங்கு அளிக்கப்பட்டுள்ள வழிபாடுகள்.

வாழைப் பழம் எப்படி உருவாகின்றது என்பதை நாம் அறியாவிட்டாலும், ஐந்து பழங்களைத் தின்று நம் பசியை தீர்த்துக் கொள்வதுபோல் ஒரு துளி நீரின் மகிமையை நாம் உணரா விட்டாலும் அந்த நீரின் மகிமையை உணர்ந்து தெளிந்து அதை உலகிற்கெல்லாம் அனுகிரகமாக அளிக்க மகான்கள் தயாராக இருக்கும்போது அதை முறையாக பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்.

அருமருந்து ஒளஷதம்
ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

சேஷாத்ரி சுவாமிகள் திருஅண்ணாமலையை ஒரு லட்சம் முறை வலம் வந்து அதனால் கிட்டிய அற்புத சிவ பிரதட்சிண சக்திகளை எல்லாம் உலக மக்களின் நன்மைக்காக தாரை வார்த்து அளித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அந்த அற்புதத்தை சுவாமிகள் எப்படி நிறைவேற்றினார் என்ற இரகசியத்தை நம் சற்குருவைத் தவிர வேறு யாராலும் விளக்க முடியாது.

சுவாமிகள் திருஅண்ணாமலையை வலம் வந்தபோது சிவபெருமானின் அருளால் வாலாட்டி அக்னி பகவானின் நாக்கு சக்திகளால் அக்னி சக்திகள் அவர் திருமேனியில் சேர்ந்தன. சுவாமிகள் தன் திருஉடலை உதிர்த்து விட நினைத்தபோது திருஅண்ணாமலை திருக்கோயிலில் குழுமிய அடியார்கள் எல்லாம் சிவகங்கை தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து சுவாமிகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றினர். அந்த தீர்த்தத்தில் அக்னி பகவானின் சாலாட்டி அக்னி நாக்கு சக்தியால் தன் உடலில் சேர்ந்த அனைத்து அக்னி சக்திகளையும் இந்த உலகிற்கு தாரை வார்த்து அளித்தார் சுவாமிகள். இந்த அற்புதத்தை எம்பெருமானின் ஜடாமுடியை அலங்கரிக்கும் கங்கா தேவி ஒருத்தியே நிறைவேற்ற முடியும் என்பதே கங்கா தேவியின் தனிப் பெருங் கருணையாகும்.

இத்தகைய சுழற் சக்திகளை கங்கை தீர்த்தம் அளிப்பதால்தான் மற்ற உலகங்களிலிருந்து பறக்கும் தட்டுகளில் பயணம் வரும் அயல் கிரக வாசிகள் கங்கை தீர்த்தத்தை ஒரே ஒரு டம்ளர் அளவு பெற்று தங்கள் பறக்கும் தட்டுகளில் அந்த நீரில் ஒரு பகுதியை எரிபொருளாக வைத்துக் கொண்டு சுமார் 300 வருடங்களுக்கு பறக்கின்றார்கள். மீதி தீர்த்தத்தை தங்கள் லோகங்களில் உள்ள கொள்கலன்களில் சேர்த்து அந்த லோகங்களில் வாழும் ஜீவன்களின் தீர்க்க முடியாத நோய்களை எல்லாம் தீர்க்கும் அருமருந்து ஔஷதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சாலாட்டி வாலாட்டி என்ற சுழல் அக்னி சக்திகளைப் பற்றி நாம் புரிந்து கொள்வது கடினம் என்றாலும் இந்த சக்திகளை நாம் இறைமூர்த்திகளுக்கு வழங்கி அதன் பலாபலன்களை சமுதாயத்திற்கு அளிப்பதில் எந்தவித சிரமமும் இல்லையே. பெரிய பனை விசிறிகளை கோயில்களுக்கு அளித்து இரவில் நடக்கும் பள்ளியறை பூஜைகளின் போது இறைவனுக்கும் இறைவிக்கும் சாமரம் வீசும் அரிய பலாபலன்களை இதன் மூலம் பெறலாம். வெள்ளிப் பூண்கள் அமைந்த சாமரங்களை நாம் கோயில்களுக்கு அளிக்க முடியாவிட்டாலும் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத பலன்களை அளிக்கக் கூடியதே இந்த பனை ஓலை கைங்கர்யமாகும்.

அனுவாவி அனுகிரகம்

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது ஊஞ்சல் சேவைகளையும், சாமர சேவையையும் இயற்றுவது இத்தகைய சேவைகளில் துலங்கும் பலாபலன்களை சந்ததியினரும் சமுதாயமும் பெற்று அமைதியுடன் வாழவே. நம் சற்குரு சீதாதேவி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஆற்றிய இத்தகைய சேவைகளை காண்பதற்கு கண் கோடி வேண்டும் என்று கூறும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. சோமசூக்த பிரதட்சிணத்தில் நம் சற்குருவின் சுந்தர அனுகிரகம் இணையும் சேவையே அது.

ஸ்ரீதனவிஜய கணபதி
திலதைப்பதி

“கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்...”, என்பர் பெரியோர். அதாவது ஒரு நாய் உருவம் கொண்ட மண் பொம்மையைக் கண்டால் சிறு குழந்தை அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அதற்கு முத்த மழை பொழியும். வளர்ந்த மனிதர்களோ அந்த பொம்மையை சிறிதும் சட்டை செய்வதில்லை. இதையே நம் சற்குரு தமக்கே உரிய பாணியில், “அடியேன் உனக்கு சேவை செய்வதாக நினைத்தால் நீ முட்டாள், உன்னுள் உறையும் இறைவனுக்கு சேவை செய்யவே அடியேன் விரும்புகிறேன்...”, என்பார்.

நாம் பிற உயிர்களிடம் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்தே வாழ்க்கை சுவை உள்ளதாக அமைவதும், வேதனை தருவதும். ஒரு பாம்பு நம்மை நோக்கி வருவதைப் பார்த்தால் அதைப் பாம்பாக நினைத்து அதை அடிக்க ஒரு குச்சியைத் தேடினால், அது தன்னைக் காத்துக் கொள்ள சீறுகிறது. நாம் பாம்பின் உள்ளிருக்கும் இறைவனுக்கு சேவை செய்ய நினைத்தால் அது தாயின் மடியில் உறங்கும் சேயைப் போல, மாதா அமிர்தானந்தா மடியில் அடைக்கலம் தேடும் சேயைப் போல, நம்மிடமும் உறவாடும்.

இவ்வாறு நாம் இறைவனுக்கு சேவை செய்யும் அறிவாளியாக இருக்க விரும்புகிறோமா, அல்லது மனிதனுக்கு சேவை செய்யும் ......ளாக இருக்கப் போகிறோமா என்பதைப் பொறுத்தே இவ்வாண்டு பலன் அமையும் என்பதே இந்த N2023 ஆங்கில ஆண்டின் சுருக்கமான பலனாகும்.

அக்னி பகவானின் இரு நாக்குகள் அருளும் அனுகிரகம் பற்றி நாம் அறிய முடியவில்லை என்றாலும் அக்னி பகவானுக்கு உரிய எண் ஒன்பது என்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஒன்பது எண் சக்திகளையும் ஒன்பது கணபதி உருவங்களில் ஆவாஹனம் செய்து அந்த எண் சக்திகளுக்கு ஹோமம் இயற்றி அதை தம்பதிகளின் ஒருமைப்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் அளித்தவரே நம் சற்குரு ஆவார். சோமசூக்த சுந்தர வலத்தின்போது இந்த ஒன்பது கணபதி காயத்ரீ மந்திரங்களையும் ஒவ்வொரு திதிக்கும் உரியதாகவோ அல்லது ஒவ்வொரு தினத்தில் கூடும் எண்ணிற்கு உரிய வகையிலோ மாற்றிக் கொண்டு ஜபித்தலால் எண் சக்திகள் அடியார்கள் வாழ்க்கையில் இயைந்து உறவாடும். அது மட்டுமா கணபதி, முருகப் பெருமானின் அனுகிரக சக்திகளும் ஒன்றி உறவாடுமே?

ஸ்ரீதிரிபுராந்தக கணபதி
அதிகை திருத்தலம்

ஸ்ரீசித்தி கணபதி, பிரதமை திதி, தசமி திதி, தேதிகள் 1, 10, 19, 28
ஓம் தத் புருஷாய வித்மஹே வரசித்தி விநாயகாய தீமஹி
தந்நோ ருண மோசன ப்ரசோதயாத்

ஸ்ரீமகா கணபதி, துவிதியை திதி, ஏகாதசி திதி, தேதிகள் 2, 11, 20, 29
ஓம் தத் புருஷாய வித்மஹே ஸர்வ வியாபகாய தீமஹி
தந்நோ கணபதி ப்ரசோதயாத்

ஸ்ரீருத்ர கணபதி, திரிதியை திதி, துவாதசி திதி, தேதிகள் 3, 12, 21, 30
ஓம் தத் புருஷாய வித்மஹே த்ரிபுராந்தகாய தீமஹி
தந்நோ ருத்ர கணபதி ப்ரசோதயாத்

ஸ்ரீபிரயாண சகாய கணபதி, சதுர்த்தி திதி, திரயோதசி திதி, தேதிகள் 4, 13, 22, 31
ஓம் தத் புருஷாய வித்மஹே பிரயாண சகாய தேவாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

ஸ்ரீபஞ்சமுக கணபதி, பஞ்சமி திதி, சதுர்த்தசி திதி, தேதிகள் 5, 14, 23
ஓம் தத் புருஷாய வித்மஹே பஞ்சமுக சிம்ம வாஹனாய தீமஹி
தந்நோ மங்கள ப்ரசோதயாத்

ஸ்ரீசெல்வ கணபதி, ஷஷ்டி திதி, தேதிகள் 6, 15, 24
ஓம் தத் புருஷாய வித்மஹே கற்பக விருட்ச சமேதாய தீமஹி
தந்நோ பொக்கிஷ ப்ரசோதயாத்

ஸ்ரீநாகாபரண கணபதி
நாகப்பட்டிணம்

ஸ்ரீரத்ன கர்ப்ப கணபதி, சப்தமி திதி, தேதிகள் 7, 16, 25
ஓம் தத் புருஷாய வித்மஹே மகாரத்ன கர்ப்ப தேவாய தீமஹி
தந்நோ நாகாபரண கணபதி ப்ரசோதயாத்

ஸ்ரீதன விஜய கணபதி, அஷ்டமி திதி, தேதிகள் 8, 17, 26
ஓம் தத் புருஷாய வித்மஹே ஷோடச ஆயுத தேவாய தீமஹி
தந்நோ தன விஜய கணபதி ப்ரசோதயாத்

ஸ்ரீஆத்ம கணபதி, நவமி திதி, தேதிகள் 9, 18, 27
ஓம் தத் புருஷாய வித்மஹே
மதுலாகிரி வஸ்து ஆத்ம சாந்தி தேவாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

அமாவாசை, பௌர்ணமி திதி நாட்களில் அடியார்கள் தமக்கு இஷ்டமான தெய்வத்தின் காயத்ரீ மந்திரங்களை ஓதி பாராயணம் செய்து பயன்பெறலாம். அல்லது கீழ்க்கண்ட கணபதி காயத்ரீ மந்திரங்களை ஓதுவதும் சிறப்பே.
அமாவாசை திதிக்கான ஸ்ரீவிக்ன கணபதி போற்றித் துதி
ஓம் தத் புருஷாய வித்மஹே சங்கட நிவாரணாய தீமஹி
தந்நோ சங்கர புத்ர ப்ரசோதயாத்

பௌர்ணமி திதிக்கான ஸ்ரீஷோடச கணபதி போற்றித் துதி
ஓம் காலஸ்வரூபாய வித்மஹே காலாதீதாய தீமஹி
தந்நோ கால யோக ஷோடச கணபதி ப்ரசோதயாத்

நூபுர ஜோதி வழிபாடு

கணவன் மனைவியரிடையே ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாயத்தில் அமைதி நிலவவும் ஒரு அரிய பூஜையை நம் சற்குரு அருள்கின்றார். கணேசர், கணேசாயிணி என்றவாறு இரு மஞ்சள் பிள்ளையார் மூர்த்திகளைப் பிடித்து ஒரு வெற்றிலையில், அல்லது வாழை இலையில், அல்லது பூவசரன் இலையில் வைத்து அதற்கு செந்தாமரை, நீலோத்பல மலர்களால் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதி அர்ச்சிக்க வேண்டும்.

ஒற்றுமை வளர்க்கும்
சொக்கப்பனை சோழீஸ்வர பூஜை

கணவன் கீழ்க் கண்ட மந்திரத்தை ஓதி செந்தாமரை மலர்களால் பிள்ளையார் மூர்த்திக்கு அர்ச்சிக்க வேண்டும்.
நிதன பதயே நமஹ
ஊர்த்வாய நமஹ
ஹிரண்யாய நமஹ
சுவர்ணாய நமஹ
திவ்யாய நமஹ
பவாய நமஹ
ஸர்வாய நமஹ
சிவாய நமஹ
ஜ்வலாய நமஹ
ஆத்மாய நமஹ
பரமாய நமஹ

மனைவி நீலோத்பல மலர்களால் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதி அர்ச்சிக்க வேண்டும்.
நிதன பதாந்திகாய நமஹ
ஊர்த்வ லிங்காய நமஹ
ஹிரண்ய லிங்காய நமஹ
சுவர்ண லிங்காய நமஹ
திவ்ய லிங்காய நமஹ
பவ லிங்காய நமஹ
ஸர்வ லிங்காய நமஹ
சிவ லிங்காய நமஹ
ஜ்வல லிங்காய நமஹ
ஆத்ம லிங்காய நமஹ
பரம லிங்காய நமஹ

இவ்வாறு கணவனும் மனைவியும் பத்து மலர்களை இறைவனுக்கு அர்ச்சித்த பின்னர், ஆளுக்கொரு மலரை கையில் ஏந்தி
ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி
தந்நோ அருணாசல ப்ரசோதயாத
என்று ஓதி தம்பதிகள் இருவரும் செந்தாமரை, நீலோத்பல மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். இந்த பத்து மலர்களும் அருணாசல ஈசனின் பத்து முகடுகளுக்கு நிறைவேற்றும் அர்ச்சனையாகவும், 11வது மலர் சிவசக்தி ஐக்ய சொரூப தரிசன ஈசனுக்கு அர்ச்சிப்பதாகவும் அமையும் என்பதை விளக்கவும் வேண்டுமோ?!

ஒசூர் சிவாலயம்

இத்துடன் அவரவர் விரும்பும் துதிகளையும் ஓதலாம். பூஜை நிறைவில் இந்த கணேச மூர்த்திகளை ஓடும் நீரில் விட்டு விடலாம். அல்லது சுமங்கலிகள் நீராடும்போது இந்த மஞ்சள் மூர்த்திகளை தங்கள் முகத்தில் பூசுவதற்கும் வைத்துக் கொள்ளலாம்.

திருமணமாகாதவர்கள் அல்லது மற்ற ஆண்களோ பெண்களோ 60, 80 வயது நிறைந்த தம்பதிகளைக் கொண்டு மேற்கண்ட பூஜையை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய மங்களப் பொருட்களை தானமாக அளித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுதலும் நன்றே. அவரவர் பிறந்த தினங்கள், ஜன்ம நட்சத்திர தினங்கள், திருமண நாட்கள் போன்ற நாட்களில் இத்தகைய பூஜைகளை இயற்றுதல் சிறப்பு.

இத்தகைய பூஜையை மாதம் ஒரு முறை மூன்றாம் பிறை தரிசன நாளில் நிறைவேற்றி இரு புருவங்கள் இடையே அமையும் நூபுர மண்டலத்தில் இறைவனின் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்தைப் பெற்றவரே ஸ்ரீநூபுர சித்த பிரான் ஆவார். அதனால் இந்த பூஜை நூபுர ஜோதி பூஜை என்றும் வழங்கப்படும்.

“தெய்வீகம் என்பது விளையாட்டல்ல, ஐயா...,” என்பார் நம் சற்குரு. அதற்கு உதாரணமாகத் திகழ்வதே நீங்கள் அறிய முற்படும் ஒரு துளி நீரின் மகிமை. பல லோகங்களிலும் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு, என்பதை அறியாமலே அங்குள்ள தலைமை விஞ்ஞானியையே தமக்கு உரிய வழிகாட்டியாக கொண்டு வாழும் ஜீவன்கள் கோடி கோடியே. பூலோகத்தில் பிறப்பெடுத்த ஜீவன்கள் மட்டுமே, அதிலும் தக்க சற்குரு வழிகாட்டியாக அமைந்தால்தான் கடவுள் என்ற ஒருவர் உண்டு என்ற கருத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்.

இங்கு நீங்கள் அறிந்த நீரின் மகிமை பற்றி புரிந்து கொள்வதற்காக ஒரு அடியார் நம் சற்குருவின் வழிகாட்டுதலின்படி தினமும் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷிக்கும் ஸ்ரீவருண பகவானுக்கும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்க்யம் அளித்துக் கொண்டு வந்தாராம். அதன் பிறகே நீங்கள் இங்கு காணும் நீரின் மகிமையைப் பற்றி ஒரு துளி அளவு அவர் புரிந்து கொண்டாராம். ஒரு துளி நீரின் மகிமையே இவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றால் எம்பெருமானின் சடையிலிருந்து தோன்றிய கங்கை நீரே ஒரு தீர்த்தக் குளமாக பெருகி இருக்கும் அந்தப் பொய்கையின் பிரம்மாண்டம் எந்த அளவிற்கு இருக்கும்?!

சப்தாவர்ண தீர்த்தம்

ஒசூர் சிவாலயத்தில் ஸ்ரீசந்திரசூட ஈசனுக்கும் ஸ்ரீகங்காதீசனுக்கும் இடையே அமைந்துள்ள தீர்த்தமே சப்தாவர்ண தீர்த்தமாகும். சப்த ஆவர்ணம் என்றால் ஏழு ஆவரண சக்திகளால் மறைக்கப்பட்ட அற்புதம் என்பது ஒரு பொருள். சப்தம் என்ற ஒலியே சமுத்திரமாக, கடலாக, நீர் நிலையாக அமைந்துள்ள தீர்த்தம் என்று ஒரு பொருள். ஒளி சக்திகளே ஒலியாய் துலங்கும் நீர் நிலை என்பது மற்றோர் பொருள். இவ்வாறு அவரவர் கொண்ட ஆன்மீக நிலையை ஒட்டி அருள் வழங்கும் தீர்த்தமே சப்தாவர்ண தீர்த்தமாகும்.

ஸ்ரீவருண பகவான் ஒசூர்

சப்தாவர்ண தீர்த்தத்தின் மற்றோர் சிறப்பம்சம், நாம் நினைப்பது போல் இந்தத் தீர்த்தத்தின் ஒவ்வொரு துளியும் ஒரே வண்ணத்தில், ஒரே சக்தியுடன் துலங்குவது கிடையாது என்பதே. நொடிக்கு நொடி இந்த தீர்த்தத்தில் உள்ள நீரின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். இந்த தீர்த்தத்தின் மகிமையை நாம் அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ மனித நிலையில் நிச்சயமாக முடியாது என்றாலும் இத்தகைய ஒரு அற்புத தீர்த்தத்தை தரிசனம் செய்ய அருள் புரிந்த நம் மூதாதையர்களின் கருணையை நினைத்து அவர்களுக்கு இந்த நூபுர ஆண்டில் நன்றி கூறலாமே.

நம் மூதாதையர்களுக்கும் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷிக்கும் நன்றி கூறும் விதமாக இங்குள்ள தீர்த்தம் கொண்டு ஸ்ரீவருண பகவானுக்கும் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷிக்கும் அர்க்ய வழிபாடுகளை ஆற்ற வேண்டும் என நம் சற்குரு வழிகாட்டுகிறார். சப்தாவர்ண தீர்த்தத்தில் அர்க்ய, தர்ப்பண வழிபாடுகளை ஆற்ற முடியாவிட்டாலும் அவரவர் இல்லத்திலிருந்தோ, மற்ற தீர்த்தங்களிலிருந்தோ நீரைக் கொண்டு வந்து இத்தலத்தில் எங்கு வேண்டுமானாலும் தர்ப்பணம், அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்றுவது மிகவும் சிறப்போ, சிறப்பு.

உமையவள் ஈசனின் கண்களை தன் அன்புக் கரங்களால் மறைத்த திருவிளையாடலில் நிகழ்ந்த அற்புதங்கள் கோடி கோடியே. அவற்றில் ஒன்றே ஒசூர் திருத்தலத்தில் நாம் இன்றும் தரிசனம் செய்யும் மரகத மலையாகும். ஈசனின் மூன்றாம் கண்ணிலிருந்து தோன்றிய ஒளியானது உமையவளின் மேல் பட்டு பிரகாசித்த சக்திகளை அம்பாள் தாயினும் சாலப் பரிந்து அந்த மரகத ஒளிக் கற்றைகளை மரகதப் பாறைகளாக மாற்றி இன்றும் பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் அமைத்துள்ளாள் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இறைவியின் திருவிளையாடலாகும். இந்த திருவிளையாடலுக்கு அம்மைக்கு உறுதுணையாக இருந்து இன்றும் மக்களுக்கு இந்த மரகத மலையின் ஒளிக் கிரணங்களை எந்நேரமும், குறிப்பாக மூன்றாம் பிறை தரிசன நாட்களில் மக்களுக்கு அனுகிரக சக்திகளாக அளிக்கிறார் என்பதே ஸ்ரீநூபுர சித்தரின் சேவைகளுள் ஒன்றாகும்.

ஸ்ரீபஞ்சலிங்க மூர்த்திகள்
ஒசூர்

அதனால்தான் இங்குள்ள படிக்கட்டுகளில், பாறைகளில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து வழிபாடுகளை இயற்றுவதால், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதால் அதியற்புத நோய் நிவாரண சக்திகளைப் பெறலாம் என்று சித்தர்கள் வழிகாட்டுகின்றனர்.

மரகதம் என்பது பச்சை நிற ஒளிக் கதிர்களை வெளிவிடுவதால் அது குசா சக்தியுடன் பொலிகிறது என்பதும் இரு ஈசமூர்த்திகளுக்கும் இடையே அமைந்து இந்த ஒளிக் கற்றைகள் சோமாஸ்கந்த ஒளிப் பிழம்பாய் துலங்குகின்றன என்பதும் நம்மை பிரமிக்க வைக்கும் தெய்வீகச் சுவையே.

ஒசூர் திருத்தலத்தின் பண்டைய நாமம் ஓசையூர் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் ஒசூர் என்று மருவி அழைக்கப்படுகிறது. ஒரு இடத்தில், நிலத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்காக 90 டிகிரி கோணத்தில் அமைந்த ஒரு அரசங்குச்சி அல்லது வேப்பங்குச்சியைத் தாங்கி அங்கு வலம் வருவர். தரையின் அடியில் இருக்கும் நீரின் விசை சக்தியால் அந்தக் குச்சியில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து கீழே இருக்கும் நீரின் அளவு, தன்மை போன்ற பல விஷயங்களை, நுணுக்கங்களை அறியும் நிபுணர்கள் இன்றும் பலர் உண்டு.

நீர் மட்டும் அல்லாது நிலத்தின் அடியில் இருக்கும் தங்கம், வைரம், தாமிரம் போன்றவற்றின் அளவையும் கண்டு பிடிக்கும் திறமை உள்ள பல நிபுணர்கள் உலகெங்கும் விரவி இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு பிறவியில் இங்குள்ள ஸ்ரீசந்திரசூட ஈசனையும் ஸ்ரீகங்காதீசனயும் வணங்கி அருள் பெற்றவர்களே.

நல்ல பாம்பு என்று நாம் அழைக்கும் நாகத்தின் நாக்கு சரியாக இவ்வாறு 90 டிகிரி கோணத்தில் இருப்பதாலும் அதன் தோல் அமைப்பு ஆறு என்ற சுக்ர சக்திகளுடன் துலங்குவதாலும் நல்ல பாம்பு நீரைத் தரைமட்டத்திற்கு இழுக்கும் அதியற்புத சக்திகளைக் கொண்டுள்ளது.

ஸ்ரீஅக்னி பகவான் ஒசூர்

ஒரே ஒரு தாவர இலையைக் கொண்டு சென்னை மாநகரத்திற்கே தேவையான மின்சார சக்திகளை அளித்து விடலாம் என்பார் நம் சற்குரு. இத்தகைய சக்திகளை உள்ளடக்கியதே தாவரங்களில், நீரில் உள்ள “உட்சுழற்சி” சக்திகள். இந்த உட்சுழற்சி சக்திகளை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பார் நம் சற்குரு. இந்த உட்சுழற்சி சக்திகளே ஒரு துளி கங்கை நீருக்கும், சாக்கடையில் வழிந்தோடும் கழிவு நீருக்கும் உள்ள வித்தியாசம். சாக்கடைக் கழிவுகளில் உள்ள அசுத்தத்தையும் “அழித்து” தூய்மையாக்க வல்லதே ஈசன் சடையிலிருந்து தோன்றிய கங்கை தீர்த்தம். இந்த ஒரே ஒரு விஷயத்தை பக்தர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டாலே அடியார்கள் அனைத்தையும் உணர்ந்தவர்கள் ஆவார்கள்.

இறை நாமத்திலும் இத்தகைய உட்சுழற்சி சக்திகள் தோன்றுவதால்தான் இறை நாம சக்தியைப் புரிந்து கொண்ட மகான்கள் அந்த சக்திகளை சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றே நாம் ஒசூர் திருத்தலத்தில் காணும் சப்தாவர்ண தீர்த்தமாகும்.

நாம் தினமும் உண்ணும் தயிர் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும். ஆனால் தயிரில் நீரைக் கலந்து, மத்து கொண்டு கடைந்து, அந்தத் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு குளிர்ச்சியே தோன்றும். இரவில் உஷ்ணம் காரணமாக நாம் தயிரைப் பயன்படுத்துவதில்லை என்றாலும் குளிர்ச்சி சக்திகளுடன் கூடிய மோரை நாம் இரவில் கூட பயன்படுத்துகிறோம். அதுபோலவே நீரைப் பயன்படுத்தி மூதாதையர்கள், மகான்கள், அவதாரங்களுக்கும் வழிபாடுகளை இயற்றி நாம் நல்வழி வாழ சித்தர்கள் வழிகாட்டுகிறார்கள்.

தற்போதைய விஞ்ஞானக் கூற்றின்படி நாம் மில்க்கிவே என்ற ஒளி மண்டலத்தைச் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறோம். அந்த மண்டலத்தின் உட்சுழற்சியும் ஒரு துளி நீரின் அடிப்படை சுழல் சக்திகளும் ஒன்றே என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் உட்சுழற்சி சக்திகளாகும். இதுவே நாம் எளிதாக நாம் புரிந்து கொள்ள சற்குருமார்கள் அளிக்கும் “உட்சுழற்சி” சக்திகள்.

ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரர்

ஒசூர் என்னும் ஓசையூர் திருத்தலம் பல அரிதிலும் அரிதான சிறப்புகளைக் கொண்டுள்ளது. பூவுலகில் எங்கும் காண முடியாத முக்கண் ஜோதியாக தோன்றியுள்ள ஒரே தலம் இதுவே. சுவாமியின் ஒளிப் பிரகாசத்தை மூன்றாம் பிறைச் சந்திரன் பிரதிபலிக்கும் ஒரே தலம் இதுவே.

ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரர் ஒசூர்

சப்தாவர்ண தீர்த்தம் என்பதாக ஒலி சக்திகள் தீர்த்த வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருளும் ஒரே தலம். பித்ரு தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம், அர்க்யம், சந்தியா வந்தன வழிபாடுகள், என்றும் நிலைத்து நிற்கும் ஆத்ம பரிபூரண சக்தி போன்ற அனைத்திற்கும் துணை புரியும் ஒரே தீர்த்தம்.

ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஒசூர்

பஞ்ச லிங்கங்கள் ஒரே இடத்தில் கூடி நிற்பது என்பது பூவுலகில் சாத்தியமில்லை. எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதி தோன்றியபோது அந்த ஒரு க்ஷண நேரத்தில் பஞ்ச பூதங்கள் அனைத்தும் ஸ்ரீரெங்கநாதரிடம் அடைக்கலம் கொண்டு சுவாமியை தரிசித்து அருள் பெற்றன. அந்த பஞ்ச பூத சக்திகளும் தாங்கள் இந்த உயர்ந்த நிலையை அடைய வழிபட்ட திருத்தலமே ஒசூர் திருத்தலம். அந்த பஞ்ச பூத சக்திகள் படியாய்க் கிடந்து வழிபட்ட ஸ்ரீபஞ்சலிங்க மூர்த்திகளையே இத்தலத்தில் இன்றும் பக்தர்கள் தரிசித்து வழிபடுகிறார்கள்.

ஸ்ரீஜலகண்ட ஈசன் என்று தற்போது பக்தர்களால் நோய் நிவாரணம், திருஷ்டி நிவாரணம் போன்றவற்றிற்காக வழிபடும் ஈசன் உண்மையில் நீரில், அக்னியில் உள்ள இரு சுழற்சி சக்திகளை வழிபடுவதாகவே அமைந்தவர் ஆவார். முற்காலத்தில் சப்தாவர்ண தீர்த்தத்திலிருந்து மண் குடத்தில் தீர்த்தம் பெற்று இந்த ஈசனை வலம் வந்து பின்னர் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வர மூர்த்திக்கு அபிஷேகம் இயற்றும் வழிபாட்டு முறை நடைமுறையில் இருந்து வந்தது. பக்தர்கள் முயற்சி செய்தால் இந்த அரிய வழிபாட்டை மீண்டும் புனரமைத்து சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகளை வேரூன்றச் செய்யலாம்.

ஒசூர் திருத்தலத்தில் நாம் குறிப்பிடும் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரர் என்னும் இறை மூர்த்தி இறைவனின் வாகனத்தைக் குறிப்பதன்று. ஸ்ரீகாசி விஸ்வநாதர் சன்னதி எதிரே நந்தி விடைவாகனத்தின் மேல் சூட்சும வடிவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபார்வத சமேத ஸ்ரீசிவபெருமான் மூர்த்தியைக் குறிப்பதாகும். சப்தாவர்ண தீர்த்தத்திலிருந்து தீர்த்தத்தைப் பெற்று, அந்த நீரை தலையில் அல்லது தோளில் சுமந்து வந்து ஸ்ரீஜலகண்டேஸ்வரரை வலம் வந்து ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதால் தீராத நோய்களே இல்லை எனலாம்.

சூட்சும வடிவில் அமைந்த இறைவிக்கும் இறைவனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகம் நிறைவேற்றும் பாக்யத்தைப் பக்தர்கள் பெறும் ஒரே தலம் ஒசூர் என்னும் ஓசையூராகும்.

சப்தாவர்ண ஒளியொலி பூஜை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் ஒரேவிதமான உட்சுழற்சி சக்தியைக் கொண்டிருந்தாலும் மின்விளக்கு, மின்விசிறி, கொதிகலன், ஏர்கண்டிஷனர் போன்ற பலவற்றில் பலவிதமான சக்திகளைக் கொடுப்பதாகப் பயன்படுத்துகிறோம். அது எப்படி ? அனைத்திற்கும் அடிப்படை ஒரே உட்சுழற்சி சக்தியே. அதுபோல் நோய் என்னவாக இருந்தாலும் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரருக்கு இயற்றும் ஒரே சப்தாவர்ண தீர்த்த அபிஷேகமே அனைத்தை நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என்பதே நாம் அறிந்து பயன்பெறக் கூடிய சப்தாவர்ண தீர்த்தத்தில் மறைந்திருக்கும் உட்சுழற்சி சக்திகள்.

விசிறி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் திருஅண்ணாமலை ராம்சூரத்குமார் சுவாமிகள் தன்னை தரிசனம் செய்ய வரும் பல அன்பர்களிடம் சூடான தேநீரைப் பெற்று அதைத் தன்னிடம் வைத்திருக்கும் ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி அருந்துவார். பின்னர் தானே அந்த கொட்டாங்குச்சியை நீர் விட்டு அலம்பி, பத்திரமாக வைத்துக் கொள்வார். தன்னிடம் வரும் அடியார்களுக்கு சில சமயங்களில் விசிறி கொண்டு விசிறி விடுவதும் உண்டு. இவை அனைத்தும் மேற்கூறிய நோய் நிவாரண சக்திகளை பக்தர்களுக்கு அளிக்கும் ஒரு கனிந்த அனுகிரகமே. இதற்கு உறுதுணையாக தன் இடது கைவிரல்களில் பக்தர்கள் உணரும் வண்ணம் ராம தாரக மந்திரத்தை எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார்.

ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஒசூர்

விசிறி சுவாமிகளின் சற்குருவால் குரு பிரசாதமாக அளிக்கப்பட்டதே அந்த சுக்ர ஜீவ ஊற்றான கொட்டாங்கச்சி. அது சாதாரண ஜீவ ஊற்று அன்று. எக்காலத்தும் ஒளி ஒலி சக்திகளை நோய் நிவாரண அனுகிரகமாக அளிக்கும் அமிர்த ஊற்றையே, தன்வந்த்ரீ நோய் நிவாரண சக்திகளாக தன் அன்புச் சீடனுக்கு அளித்திருந்தார் அவர்தம் சற்குரு.

விசிறி சுவாமிகளின் இந்த அனுகிரகத்தை ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொண்டால் ஓரளவிற்கு பக்தர்கள் சப்தாவர்ண தீர்த்த மகிமையையும் புரிந்து கொள்ளலாமே. இதைத்தான் நம் சற்குரு அடிக்கடி, “நாங்கள் எல்லாம் (சித்தர்கள்) குட்டையில் ஊறிய மட்டைகளே...”, என்று புன்னகையுடன் வர்ணிப்பார்.

எதையும் வார்த்தைகளால் கூறுவதை விட நடைமுறையில் நடத்திக் காட்டினால்தான் நம் மனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு விடையளிப்பதே இங்கு நீங்கள் காணும் நீரும் நெருப்பும் இணைந்த பூஜை. ஒசூர் திருத்தல மலர்களுக்கு மட்டுமே இவ்வாறு நீரையும் நெருப்பையும் அக்னி சக்திகளாக மாற்றி அதை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கும் சக்தி உண்டு என்பதால் ஒசூர் திருத்தலத்தில் பெற்ற மலர்களைக் கொண்டு இந்த மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீரும் நெருப்பும் சேர்ந்த வழிபாடு திருக்கார்த்திகை தீபத்தன்று இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பாகும். ஒசூர் திருத்தலத்தில் மட்டுமே இவ்வாறு எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதி பிரகாசம் தோன்றி அது சந்திர ஒளியில் அமிர்த, ஔஷத சக்திகளாகப் பிரகாசிக்கிறது என்ற அதிசயத்தை நாம் கண்களால் காணும் ஒரு அரிய வாய்ப்பே இது.

இதே முறையில் ஒசூர் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரருக்கு ஜோதி வழிபாட்டை நிறைவேற்றி பக்தர்கள் வாழ்வாங்கு வாழ திருஅண்ணாமலையாரைப் பிரார்த்திக்கிறோம்.

நம் கண்ணுக்குத் தெரியும் வகையில் உள்ள இறைமூர்த்திகளையே நாம் சரியாகப் பயன்படுத்த முடியவில்லையே, அவ்வாறிருக்க சூட்சும சக்திகளை நாம் எப்படிப் பயன்படுத்த முடியும் என்ற எண்ணம் தோன்றலாம். இங்கு அளிக்கப்படும் நம் சற்குருவின் அனுபவம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதால் அதை உங்களுக்கு அளிக்கிறோம். பொறுமையாக இந்த அனுபவத்தைப் படித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் நீங்கள் அளப்பரிய பலன்களைப் பெறுவீர்கள் என்பது உறுதி.

சூட்சும சரீர பிரவேசம்

ஒரு முறை நம் சற்குரு சென்னையில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு அல்ஷேசன் நாய் அவர் தோள் மேல் தன் இரு கால்களையும் போட்டது. இரு பின்னங்கால்களில் மட்டும் நின்று கொண்டிருந்த அதன் உருவமோ ஒரு மனிதனின் உயரத்திற்கு இருந்தது. அதைப் பார்த்த நம் சற்குருவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதே சமயம் தனக்கே உள்ள பேரியல்பாய் அந்த நாயை “பைரவா, பைரவா...” என்று அழைத்து அன்பு காட்டினார். அந்த நாயின் செய்கையைப் பார்த்தால் அது நம் சற்குருவைத் துன்புறுத்தும் எண்ணத்தில் அவ்வாறு தன் சற்குருவின் மேல் பாய்ந்ததுபோல் தெரியவில்லை. அது எங்கோ தன்னை அழைத்துச் செல்வதாகத் தோன்றவே அது நகரும் திசையில் தானும் அந்த நாயுடனே நகரத் தொடங்கினார். அந்த நாய் அருகில் உள்ள ஒரு பெரிய பங்களா உள்ளே நம் சற்குருவுடன் சென்றது.

இந்த காட்சியைக் கண்டு வேகமாக வெளியில் வந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் நம் சற்குருவை ஒரே ஒரு நொடி பார்த்தார். அவ்வளவுதான்... ஓடி வந்து சற்குருவைக் கட்டிக் கொண்டு, “வெங்கடராமா... சௌக்கியமாக இருக்கிறாயா? பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டன...”, என்று குசலம் விசாரிக்க ஆரம்பித்தாராம். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது...

ஆம், நம் சற்குருவின் பழைய நண்பனே அந்த வீட்டின் சொந்தக்காரர்...
பழைய நினைவலைகள் நம் சற்குருவின் மனதில் மோதின ,,,
நம் சற்குருவுடன் கூடப் படித்த நண்பனே அந்த பணக்காரன். அக்காலத்தில் அவன் தன் சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். அதனால் பல நாட்கள் அவன் சரியாக உண்ணக் கூட முடியாமல் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். பரீட்சைக்குக் கூட பணம் கட்ட முடியாத நிலையில் நம் சற்குருதான் அவனுக்காக ஸ்கூல் பீஸ் முதற் கொண்டு தன் தாயிடம் கேட்டு செலுத்தி வந்தார். தன் தாய் தயாரித்து கொடுத்த பட்டாணி சுண்டலை சென்னை கடற்கரையில் விற்று அதனால் கிட்டிய வருமானத்தை அந்த நண்பனுக்கு அளித்து வந்தார் நம் சற்குரு.

ஸ்ரீவீரபத்திரர் ஒசூர்

சிற்றன்னையின் கொடுமையால் வேதனை எல்லை மீறவே சிறுவனான மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இரயில் தண்டவாளத்தில் ஓடினான். ஆனால், சரியான உணவேற்காத காரணத்தால் பாதியிலேயே மயங்கி விழுந்து விட்டான். அதைப் பார்த்தாள் ஆவி உருவில் இருந்த அந்த மாணவனின் தாய். ஒரு ஆவியால் சிறு காகிதத்தைக் கூட நகர்த்த முடியாது. அந்தத் தாயுள்ளமோ பதறியது ... எப்படியோ முயற்சி செய்து தன்னுடைய அருமை மகனை தண்டவாளத்திலிருந்து தூக்கி தரையில் போட்டு தன் மைந்தனைக் காப்பாற்றியது. அத்துடன் அந்த ஆவி தன்னுடைய முழு சக்தியையும் இழந்து விட்டது. அந்தச் சிறுவனைக் காப்பாற்றக் கூடிய தாயின் அரவணைப்பையும் இழந்தான் அச்சிறுவன். இதுவரையே நம் சற்குரு உணர்ந்தது.

ஸ்ரீகாலபைரவர் ஒசூர்

ஆண்டுகள் உருண்டோடின ...
அந்தச் சிறுவன்தான் இன்று வளர்ந்து ஒரு சிற்றுண்டிச் சாலையில் சேர்ந்து உண்மையான உழைப்பால் தன்னுடைய முதலாளியைக் கவரவே அவர் தன்னுடைய சொத்து அனைத்தையும் அளித்து, தன்னுடைய ஒரே மகளையும் அந்தச் சிறுவனுக்கே மணம் முடித்து வைத்து விட்டார்.

“வெங்கடராமா, உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று எத்தனை நாள் காத்துக் கொண்டு கிடந்தேன் தெரியுமா? இன்றுதான் அந்தப் பிரார்த்தனை நிறைவேறியது...” என்று கூறி தான் பல வருடங்களாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு விலை உயர்ந்து கடிகாரத்தை நம் சற்குருவிற்கு அன்பளிப்பாக அளித்தாராம்.

ஒரு சாதாரண மானிடத் தாய் தன் குழந்தைக்காக தன் சக்தியை மீறிய ஒரு செயலை சாதிக்கிறாள் என்றால் தாய்க்கு எல்லாம் தாயாக விளங்கும் தாயுமான ஈசனின் சூட்சும பிரவேசத்தை உணர்த்தும் ஸ்ரீநந்தீஸ்வரரின் கருணை எவ்வளவு உயர்வாக இருக்கும்? இந்த அற்புதத்தை உணர்ந்து கொள்ள அடியார்கள் பெறும் சந்தர்ப்பமே ஒசூர் திருத்தலத்தில் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வரரின் திருக்காட்சி, வழிபாடு.

ஸ்ரீகஜலட்சுமி ஒசூர்

இங்கு குறிப்பிட்ட சற்குருவின் பழைய நண்பன் தன் மனதில் நம் சற்குருவின் உருவத்தை பதித்துப் பல்லாண்டுகள் அவரைக் காண வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்ததால் அந்த ஏக்கத்தையும் அந்த ஏக்கத்திற்கு காரணமாக இருந்த நம் சற்குருவின் உருவத்தையும் அந்த “நாயும்” தன் எஜமானரிடமிருந்து பெற்று தன் நேத்ரங்களில் பதித்துக் கொண்டது என்பதே இந்த “பைரவ சேவையின்” பின்னணியில் அமைந்த சுவையாகும்.

நம் சற்குரு, யாராவது அவரை படம் எடுக்க முயன்றால் அவர்களிடம் அன்பாக, “சார், அடியேனை காமிராவில் பதிக்காதீர்கள்... அடியேனை உங்கள் உள்ளத்தில் பதித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் ...”, என்பார். எத்தகைய விலையுயர்ந்த, விலை மதிப்பற்ற குரு வாக்கியம் இது ?!

இறைவனின் மூச்சுக் காற்றை பூலோக மக்களும் பெறும் அளவிற்கு அதன் தன்மையை அவரவர் நிலையில் பெறும் அதியற்புத தவ நிலையில் சிவத்தலங்களில் நந்தீஸ்வர மூர்த்தி எழுந்தருளி இருப்பதால் இந்த பிராண சக்திகளை நாம் முறையாகப் பெறும் பொருட்டு நந்தீஸ்வரருக்கும் சுவாமிக்கும் அதாவது லிங்க மூர்த்திக்கும் இடையே செல்லக் கூடாது என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர். ஒசூர் திருத்தலத்திலுள்ள ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தியோ எம்பெருமானை தேவியுடன் சேர்த்து தாங்கும் பெருமையைக் கொண்டிருப்பதால் பக்தர்கள் தாராளமாக இந்த நந்தீஸ்வரரை வலம் வரலாம்.

தன் தாய் தந்தையருக்கு பாத பூஜைகள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களோ அல்லது தாய் தந்தையர் காலமானதால் அவர்களுக்கு இத்தகைய சேவைகளைத் தொடர முடியாதவர்களோ, கணவருக்கு பாதபூஜைகள் நிறைவேற்றாதவர்களோ தங்கள் கடனுக்கு ‘வட்டியோடு’ சேர்த்து அளிக்கக் கூடிய திருத்தலம் இதுவாகும். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.

சூக்கும பிரவேசம் கோடி பெறும்... என்பதன் ஆழ்ந்த அர்த்தமே நம் சற்குரு சுட்டிக் காட்டும் அனுபவமும், ஒசூர் நந்தீஸ்வர மூர்த்தியின் தரிசனமும், வழிபாடும்.

பூஜ்யம் என்பது நேர்கோடு

பூஜ்யம் என்பது நேர்கோடு என்ற நம் பரம குருவின் வாக்கியம் நம் மனதில் பலமுறை ஒலிக்கும், பிரதிபலிக்கும் வாக்யமே. அதைப் போல் இதன் மறுதலையான நேர்கோடு என்பது பூஜ்யம் என்பதும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும். இதை உணர்த்துவதே சூட்சும சரீர பிரவேசம் உணர்த்தும் தத்துவமாகும்.

நம் சற்குரு சீதாப்பிராட்டி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு ஊஞ்சல் சேவை சாதித்த அனுகிரகத்தை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இது போன்றதே ராம்சூரத் குமார் சுவாமிகள் விசிறி கொண்டு தம் சீடர்களுக்கு விசிறி அவர்கள் கர்ம வினைகளைக் களைவதும், ராமானுஜர் போன்ற இறை அடியார்கள் சுவாமிக்கு நிறைவேற்றும் சாமரம் வீசும் கைங்கர்யமும் ஆகும்.

ஸ்ரீகலைவாணி அருள்வாய்நீ
ஒசூர்

இந்த சேவைகளில் எல்லாம் முன் பின்னாக அசையும் ஊஞ்சலோ, (கவனிக்க, பின் முன்னாக அல்ல...) பக்கவாட்டில் அசையும் விசிறியோ, சாமரமோ இத்தகைய நேர்கோட்டு சக்திகளை வல, இட பிரதட்சிண சக்திகளாக மாற்றி அதன் மூலம் பக்தர்களின் பல கடுமையான வினைகளைத் தீர்க்கின்றன என்பதே மகான்களின் இத்தகைய அற்புத சேவையின் பின்னணியில் நிகழும் அற்புதமாகும். முன் பின் ஆடும் ஊஞ்சலாக இருந்தாலும், பக்கவாட்டில் நகரும் விசிறியாக இருந்தாலும் அந்த நேர்கோட்டு இயக்கத்தை பிரதட்சிண, அப்பிரதட்சண சக்திகளாக மாற்றி அக்னி சக்திகள், வருண சக்திகள் என்றவாறு அவற்றில் அனுகிரக சக்திகளைப் பதித்து அல்லது அகனியின் வாலாட்டி சாலாட்டி நிவாரண சக்திகளாக அதை பக்தர்களுக்கு அளிக்கிறார்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் குரு சேவையாகும்.

இவ்வாறு நேர்கோட்டு சக்திகளை பூஜ்ய சக்திகளாகவோ, பூஜ்ய சக்திகளை நேர்கோட்டு இயக்கமாக மாற்றுவதோ நம் சற்குருவின் நிலையில் உள்ள மகான்கள் மட்டுமே ஆற்ற இயலும் என்பதே இதன் சிறப்பாகும். மற்றவர்கள் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வர மூர்த்திக்கு இங்கு விளக்கிய உள்ள முறையில் நீரையும் நெருப்பையும் இணைக்கும், நீரில் அமிழ்ந்த தீபங்களின் பூஜை மூலம் ஓரளவு சாதிக்கலாம். இதற்கு வழிகாட்டுவதே ஒசூர் திருத்தலத்தில் நீங்கள் இயற்றும் வழிபாடுகள்.

மேகம் என்றால் பொதுவாக மழை வர்ஷிக்கும் ஒரு வானப் பகுதி என்றே பலரும் எண்ணுகிறோம். உண்மையில் மேகத்தில் 108 வகைகளுக்கு மேல் உண்டு. மேகங்களின் தன்மை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. நீர் பொழியும் கார்மேங்கள் மட்டும் அல்லாது நவரத்தினக் கற்களை வர்ஷிக்கும் காமதேனு லோகத்து மேகக் கூட்டங்கள் உண்டு. தங்கத்தை வர்ஷிக்கும் மேகக் கூட்டத்தை புஷ்கலை ஆவர்த்தம் என்று அழைக்கிறோம். மேகம் மட்டும் அல்லாது குறிப்பிட்ட திருத்தலங்களில் உள்ள விமானங்களும், தலவிருட்சங்களும் கூட இத்தகைய அபூர்வ சக்திகளைப் பூண்டவையே.

திருவெள்ளியான்குடி புஷ்கலை ஆவர்த்தம் என்ற விமானம் தங்கத்தை பொற்கிரணங்களாக வர்ஷிக்கும் தன்மை உடையது என்பதே ஏற்கனவே விளக்கி உள்ளோம். நீல வருணம் என்ற மேகக் கூட்டங்கள் நெருப்புக் கிரணங்களை வெளிவிடுபவை ஆகும். பொதுவாக, நெருப்பால் அழியும் பிரளயம் ஏற்படும்போது இத்தகைய நீலவருணம் என்ற மேகக் கூட்டங்கள் உலகை தீயில் ஆழ்த்தி விடும். இவ்வாறு அடியார்கள் நீரால் நெருப்பால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே நம் சற்குரு கருணை கொண்டு நீரும் நெருப்பும் இணையும் மேற்கண்ட வழிபாட்டை அருளியுள்ளார்கள். மின்சாரம், கண் திருஷ்டி, பொறாமை போன்றவையும் அக்னிக் கதிர்களுக்கு இணையான துன்பத்தை அளிக்கவல்லவையே.

சர்ப்ப சர்ப்ப நீ வாராய்

குறித்த அளவு புண்ணிய சக்தியின் பெருக்கத்தால் விளைவதே இந்திர பதவி. உதாரணமாக, ஒருவர் 100 கோயில்களுக்கு கும்பாபிஷேகப் பணிகள் நிறைவேற்றினால் அவர் இந்திரன் ஆவதற்கு தகுதி பெறுகிறார். இத்தகைய இறை சேவையை பாராட்டும் பொருட்டு ஸ்ரீஅகத்திய பிரான் தலைமையில் சப்த ரிஷிகளே புதிதாக பதவி ஏற்கும் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றி வைத்து அதை தேவலோகம் எங்கும் சுமந்து சென்று இந்திர சிம்மாசனத்தில் அமர வைப்பர்.

ஸ்ரீஇந்திர பகவான் ஒசூர்

ஒரு முறை இவ்வாறு பதவி ஏற்க வேண்டிய இந்திரனை தேவலோகத்தில் ரிஷிகள் சுமந்து சென்ற போது பதவியின் மமதையால் இந்திரன் கர்வமடைந்து, “என்ன இது பல்லக்கை இவ்வளவு மெதுவாக சுமந்து செல்கிறார்கள்...”, என்று நினைத்தான். ரிஷிகள் குழுவில் இருந்தவர்களில் ஸ்ரீஅகத்திய பிரானின் உருவம் ஐந்து அடி என்பதால், அவர் மற்றவர்களை விட சற்றே குள்ளமாக இருந்ததால், அவர் விரைவாகச் செல்ல முடியவில்லை. ஸ்ரீஅகத்திய பிரானின் உருவத்திற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு. அது வேறு சுவை.

மமதையால் தூண்டப்பட்ட இந்திரன் தன் அடியில் பல்லக்கைச் சுமந்து சென்ற ஸ்ரீஅகத்திய பிரானை காலால் உதைத்து, “சர்ப்ப சர்ப்ப...”, என்று துரிதப்படுத்தினான். சர்ப்ப என்றால் விரைவாக என்று பொருள். ஸ்ரீஅகத்தியர் நிமிர்ந்து இந்திரனைப் பார்த்தார்.
அவ்வளவுதான்...
இந்திரன் பதவியை இழந்து ஒரு சர்ப்பமாக, மலைப் பாம்பாக பூமியில் ஒரு காட்டில் விழுந்தான். அவன் விழுந்த இடத்தை விட்டு நகரக் கூட முடியவில்லை. யுகங்கள் உருண்டோடின ... ஒரு நாள் ஸ்ரீஅகத்தியர் அவ்வழி செல்லும்போது அவரை அடையாளம் கண்டு கொண்டு அவர் காலடியில் விழுந்து கதறினான். அறியாமல் செய்த தவற்றுக்கு தன்னை பொறுத்தருளுமாறு வேண்டினான். ஸ்ரீஅகத்தியர் மனமிரங்கி, “எங்கு இறைவன் நந்தி என்ற பெயரில் தனியாக எழுந்தருளி உள்ளானோ அந்த மூர்த்தியை வலம் வந்து கோண்டே இரு. உரிய காலத்தில் இறைவன் உனக்கு அருள்புரிவார்,” என்று கூறி மலைப் பாம்பு வடிவில் இருந்த அந்த இந்திரன் நகர்வதற்கு தேவையான சக்தியையும் அருளினார்.

இவ்வாறு ஒவ்வொரு திருத்தலமாக மலைப் பாம்பு வடிவில் அங்குள்ள இறை மூர்த்திகளை வழிபட்டுக் கோண்டே வந்தான் இந்திரன். தொடர்ந்த சேவையால் அவன் ஸ்ரீபதஞ்சலி முனிவரின் தரிசனத்தைப் பெற்று ஓசையூர் என்ற ஒசூர் திருத்தலத்தில்தான் இறைவன் சூட்சும வடிவில் ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்ற தேனினும் இனிய செய்தியை அறிந்து கொண்டான். இவ்வாறு ஸ்ரீசூட்சும நந்தீஸ்வர மூர்த்தியை பல காலம் வலம் வந்து தான் இழந்த பதவியை மீண்டும் பெற்றான் என்பதை கூறவும் வேண்டுமா என்ன?

திருப்பராய்த்துறை சிவாலயம்

இவ்வாறு மீண்டும் பதவி பெற்று யானை வாகனத்தில் எழுந்தருளிய இந்திரனையே நீங்கள் ஒசூர் திருத்தலத்தில் தரிசனம் செய்கிறீர்கள். அதனால்,
பதவியை இழந்தவர்கள்
அதிகாரத்தை இழந்து அல்லல்படுவோர்
குடும்பத்திலும் சமுதாயத்திலும் தங்களுக்கு உரிய மரியாதை கிட்டவில்லையே என்று நினைத்து மனம் புழுங்குவோர்
தற்காலிக வேலை நீக்கம் பெற்றவர்கள் (suspended employees)
போன்ற அனைவரும் ஸ்ரீசூட்சும நந்தீஸ்வர மூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு 32, 64, 96 என்றவாறாக 32ன் மடங்கில் பிரதட்சிணம் வந்து வழிபடுவதால் நல்லருள் பெறுவார்கள்.

மகான்கள் தாயினும் சாலப் பரிந்து நமக்கு அருள் பொழிபவர்கள். அறியாமையால் நாம் அவர்களுக்குத் துன்பமே அளித்தாலும் அவர்கள் அந்த தவறுக்கு கைமாறாக கருணையைத்தான் அளிப்பார்கள். இதற்கு சான்றாகத் திகழ்வதே ஸ்ரீஅகத்திய பிரான் இந்திரனுக்கு அளித்த ‘சாபம்.’ பாம்பு நெளிந்து நெளிந்து செல்வதாகக் கூறுகிறோம். உண்மையில் இவ்வாறு வளைந்து செல்லும் சுழற்சியில்தான் உட்சுழற்சி சக்திகள் தோன்றுகின்றன. அந்த சக்திகளால் நல்ல பாம்பு சமுதாயத்தில் உள்ள எதிர்வினை சக்திகளை எல்லாம் ஈர்த்து பஸ்மம் செய்கிறது. பாம்பின் விஷம் கெட்டிப் படுவதற்கும் இந்த நெளிவு சக்திகளே காரணம்.

நல்ல பாம்பின் இயக்கத்தில் பல தாம்பத்ய இரகசியங்களும் பொதிந்துள்ளதால் அதை விவரிக்காமல் இங்கு அந்த சக்திகளால் ஆக்கம் பெறும் முறைகளை மட்டுமே அளித்துள்ளோம். இந்த சக்திகளைப் புரிந்து கொண்டால்..., புரிந்து கொள்ளத்தான் வேண்டும், அப்போதுதான் இறைவனைக் குறித்த அறிவு விருத்தியாகும் என்பதால் பல திருத்தலங்களிலும் இத்தகைய பாம்பு வடிவங்களை பக்தர்கள் வழிபட்டு பயனடையும் முறையில் நம் பெரியோர்கள் அளித்துள்ளார்கள்.

இந்திரன் என்பவன் மழை, காற்று, இடி மின்னல் என்ற பல இயற்கை சக்திகளையும் கையாள்பவன். அந்த சக்திகளை எல்லாம் அவன் மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் முறையாகப் பிரயோகப்படுத்தும் முறையை அறிந்திருப்பது தானே முறை. அதற்காகவே இந்திர பகவான் இவ்வாறு ஒலி சக்திகள் ஆவரணமாகி உள்ள சப்தாவர்ண தீர்த்தம் விளங்கும் ஒசூர் திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி இந்த ஒலி ஒளி சக்திகளை இந்திரன் அறியும் முகமாக ஒரு வழிபாட்டை அளித்தார் என்பதே ஸ்ரீஅகத்திய பிரானின் ‘சாபத்தின்’ பின்னணியில் அமைந்த பல காரணங்களுள் ஒன்றாகும்.

பொடிப் பொடியாகும் வினைகள்

“கர்ம வினையைக் கழிப்பது ஒரு புறம் இருக்க, மீண்டும் புதுக் கர்மாக்களை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே பிரம்ம பிரயத்தனம்...”, என்பார் நம் கோவணாண்டி. “அதனாலதான் பல சீட்டு மெத்த மேலே (தெய்வீக சித்த சாம்ராஜ்யத்தில்) காலியாவே இருக்குடா...”, என்பாராம். உதாரணமாக, ஒருவர் பல புண்ணிய காரியங்களை செய்ததற்காக ஒரு பெரும் பணக்கார பதவியை அடுத்த பிறவியில் அளித்தால் அந்த பதவியில் இருந்து கொண்டு கார், பங்களா, பல வேலையாட்கள் என்று தான் சேர்த்த புண்ணிய சக்திகளை வசதிகளாக அனுபவித்து தீர்த்துக் கொண்டால் அதனால் எந்தவித துன்பமுமில்லை. ஆனால், அவ்வாறு புண்ணியத்தைக் கரைக்கையில் பல தேவையில்லாத பெண் உறவுகள், அடி தடி, கொலை குத்து என்று அந்த பணக்காரன் இறங்கினால் அதனால் வேதனைகள்தானே மிஞ்சும்?

ஸ்ரீபோடா சுவாமிகள்

இவ்வாறு கர்ம வினைக் கழிவு என்ற கடினமான பணியை தம் சற்குருவின் ஆணையாக ஏற்று பூலோகத்தில் தோன்றியவரே நம் சற்குரு. இத்தகைய கடினமான பணிக்கு ஒரு ஆழமான, பலமான அஸ்திவாரம் வேண்டுமே. அதற்காக, தன் நேத்ர சக்திகள் மூலமே கர்ம வினைகளைப் பொடிப் பொடியாக்கும் ஸ்ரீபோடா சித்தரிடம் பயிற்சி பெறுமாறு தன் அருமை சீடன் வெங்கடராம சுவாமிகளை அனுப்பி வைத்தார் கோவணாண்டி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வாறு ஸ்ரீபோடா சுவாமிகளின் நேத்ர அனுகிரகங்களைப் பெற்று அதை முறையாக பூலோக மக்களின் கர்ம வினைக் கழிவிற்காகப் பயன்படுத்தும் முன் கோவணாண்டியும் நம் சற்குருவும் விஜயம் செய்த தலங்களுள் ஒன்றே ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருத்தலமாகும். இங்குள்ள ஸ்ரீசூக்கும நந்தி மூர்த்தியை 960 முறை வலம் வந்து வணங்குமாறு பணித்தார் கோவணாண்டி. 960 வலத்தையும் ஒரு நாழிகை என்ற 24 நிமிடத்தில் நிறைவேற்றியவரே நம் சற்குரு. இந்த குறுகிய காலத்தில் இத்தகைய நெடிய தவத்தை நம் சற்குரு ஆற்றுவதற்கு உதவியதே இத்திருத்தலத்தில் அபூர்வமாகப் பொலியும் சப்தாவர்ண சக்திகள்.

இதனால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.

அமெரிக்காவில் பணி புரியும் தன் நெருங்கிய சீடர் ஒருவரை ஸ்ரீபோடா சுவாமிகளைத் தரிசித்து வருமாறு பணித்தார் நம் சற்குரு. அந்தச் சீடரும் ஸ்ரீபோடா சுவாமிகளைத் தரிசித்து அவருக்கு சூடான தேநீரையும் அளிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரிடம் மட்டுமே இவ்வாறு தேநீரைப் பெறுவார் சுவாமிகள் என்பது காஞ்சிபுரத்தில் பிரசித்தமான விஷயமே.

அந்தச் சீடரும் சில நாட்கள் கழித்து அமெரிக்கா பறப்பட்டார். ஆனால், அன்று ஒரு பிரபலமான அரசியல் தலைவர் மறைந்து விட்டதால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது எனலாம். ஆட்டோ, டாக்சி என்ற எந்த வாகனமும் ஓடவில்லை. சீடரோ தான் அமெரிக்கா செல்வதைத் தள்ளிப் போட முடியாத நிலையில் இருந்தார். மனம் மிகவும் குழம்பிய நிலையில் பெட்டி, படுக்கைகளுடன் தன் வீட்டு வாசலில் வந்து நின்றார்.

ஸ்ரீஆஞ்சநேயர் ஒசூர்

அப்போது அங்கு ஒரு ரிக்ஷா வந்து நின்றது. தொட்டால் விழுந்து விடும் நிலையில் இருந்த துருபிடித்துப் போன பழைய ரிக்ஷா, அதன் டிரைவரோ சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர். “எங்கே சாமி போவனும் ... ஏறி குந்து...”, என்றார். சீடருக்கு ஒன்றும் புரியவில்லை... வேறு வழியில்லாமல் பெட்டி படுக்கைகளை வண்டியில் ஏற்றி அமர்ந்து கொண்டார். மறு கணம் ரிக்ஷா மீனம்பாக்கம் ஏர்போட்டை நோக்கி ‘பறக்க’ ஆரம்பித்தது. ரிக்ஷா மௌண்ட் ரோட்டை அடைந்தபோது அவ்வளவு பெரிய சாலையில் அந்த ரிக்ஷாவைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. ஒரு பெரிய தலைவர் மௌண்ட் ரோடில் செல்வது போல், தரையில் பறக்கும் ஏரோப்ளேனைப் போல் இருந்தது அவர்கள் சவாரி. சீடருக்கோ ஆச்சரியம், பிரமிப்பு, ஆனந்தம்...

வழி மறிப்பார் எவருமின்றி அவர்கள் ஏர்போர்ட்டை அடைந்தார்கள். கற்பனை செய்ய முடியாத சேவையைச் செய்த அந்த ரிக்ஷாகாரனுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைத்த சீடர் 500 ரூபாயை எடுத்து அந்த ரிக்ஷா ஓட்டியிடம் கொடுக்க நினைத்தார்.

ஆனால், என்ன ஆச்சரியம்... அந்த ரிக்ஷாகாரரையும் காணோம், ரிக்ஷாவையும் காணோம் ... கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரிக்ஷாவின் சுவடே தெரியவில்லை. அந்த ரிக்ஷா ஓட்டியைத் தேடலாமே என்று நினைத்தபோது அந்தச் சீடர் பயணம் செய்யும் விமானம் தயார் நிலையில் இருப்பதை ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். வேறு வழியின்றி அவர் விமானத்தை அடைந்து, பத்திரமாக அமெரிக்கா வந்து சேர்ந்தார்.

தன் வீட்டை அடைந்த அந்த சீடர் முதலில் நம் சற்குருவிடம் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டார். விஷயம் அறிந்த சற்குருவோ, “ஆமாய்யா, அதனால்தான் உன்னை போடா சுவாமிக்கு டீ வாங்கித் தரும்படிக் கூறினேன், சுவாமிகளை விட்டால் வேறு எவன் தன் உயிரைப் பணயம் வைத்து உன்னை ஏற்போர்ட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்வான், அதுவும் வண்டி வாடகை கூட வாங்காமல்...”, என்று கேட்டாராம்.

இவ்வாறு சென்னையே ஸ்தம்பித்து நின்றாலும் இறையடியார் ஒருவர் அமெரிக்காவிற்கு செல்லத் துணை புரிந்த நம் சற்குருவிடம் அடைக்கலம் கொண்டால், எத்தகைய இயற்கை சீற்றங்களினால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிப்படைந்தாலும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் சிறு குழந்தையைப் போல நாம் தைரியமாக நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடரலாம். இத்தகைய பல இயற்கைச் சீற்றங்களும் சூழும் ஆண்டே N2023.

தேவை நம்பிக்கை, நம்பிக்கை ஒன்று மட்டுமே...

பூதலிங்க ஜோதி தீபம்

திருஅண்ணாமலையில் இறைவனே மக்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் ஜோதி வடிவில் கார்த்திகை தீப திருநாள் அன்று காட்சி நல்கும் அற்புதம் நீங்கள் அறிந்ததே. இதில் ஒவ்வொரு நாள் அண்ணாமலையார் அருளும் தரிசனத்தின் நாமம் ஒவ்வொரு பெயர் கொண்டு துலங்கும். பொதுவாக, பரணி தீபம், கார்த்திகை தீபம், விஷ்ணு தீபம், சரண தீபம், பூதலிங்க ஜோதி தீபம் என்றவாறு இத்தகைய தீபங்களின் நாமம் சித்தர்களால் வழங்கப்படும்.

பரமன் இதயத்தில் பாமரன்!

இவ்வாறு 2022ம் ஆண்டு சுபகிருது கார்த்திகை மாதம் ஐந்தாம் நாள் சனிக் கிழமை அன்று துலங்கிய தீப தரிசனமே பாதச் சரண பத்ம தீபம் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது. பஞ்ச பூதங்களும் ஒசூர் திருத்தலத்தில் பஞ்சபூத லிங்க மூர்த்திகளை வழிபட்டு நற்கதி அடைந்தன என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இவ்வாறு பஞ்ச பூதங்களுக்கும் ஏற்பட்ட தோஷங்களை களைந்து கொள்ள பஞ்சபூதங்களே இவ்வாறு ஈசனை வலம் வந்து வணங்கின என்றாலும் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர முடியாது அல்லவா?

பஞ்ச பூதங்கள் ஒன்றாக இணைந்தால் அங்கு பிரளயம் தோன்றிவிடும். எனவே ஸ்ரீரங்க ரெங்கநாதர் அருளிய முறையில் பஞ்ச பூதத்தின் சக்திகளே மனித வடிவம் கொண்டு திருஅண்ணாமலையாரை ஒரு யுகத்தில் வலம் வந்தன. அந்த சக்திகளை மீண்டும் 10ந் தேதி டிசம்பர் மாதத்தில் புனர்பூச நட்சத்திர ஜோதி இணைந்த தரிசனத்தில் புனருத்தாரணம் பெற்றதை நமக்காக நம் சற்குரு பரிந்தளிக்கும் தீபக் காட்சியே இங்கு நீங்கள் காண்பதாகும்.

நம் சற்குருவின் ஜீவ சமாதி எழுந்தருளியுள்ள சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதியில் குரு ஹோரை நேரத்தில் அமைந்த ஹிருதய கோல தரிசனமானது இவ்வாறு நம் சற்குரு தம் அடியார்கள் அனைவரின் இதயத்தில் எழுந்தருளிய காருண்யத்தை பறைசாற்றுகிறது. நேர்அண்ணாமலையில் எழுந்தருளிய இத்தகைய வடிவம் இறைவன் இறைவியின் திருமார்பில் மட்டும் எழுந்தருளவில்லை, திருஅண்ணாலையாரை நம்பும், திருஅண்ணாமலையாரை குருவாய்க் கொண்டு பூஜிக்கும் அனைவரின் உள்ளத்தில் எழுந்தருளிய கோலமே என்று பறைசாற்றுவதாகும்.

கார்த்திகை ஐந்தாம் நாள் பிரகாசித்த தீப நேரத்தில் ராமபிரான் தோன்றிய புனர்பூச நட்சத்திரம் இணையும் பாங்கை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் எம்பெருமான் இதயத்தில் ராமரும், ராமரின் இதயத்தில் எம்பெருமானும் எழுந்தருளிய கோலமும், இத்தகைய கோலம் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடாக தோன்றிய அனைத்து மக்களின், பிரபஞ்சப் பொருட்களிலும் அண்ணாமலையார் ஜோதி வடிவில் எழுந்தருளிய இரகசியம் புலனாகும் அல்லவா? இதைப் பூரணமாக பக்தர்கள் உணர்ந்து கொள்வதற்காக திருஅண்ணாமலையாரின் உள்ளொளி ஆத்ம பிரகாசம் எங்கும் தோன்றியதே தவிர, ‘ஜோதி’ வடிவத்தை பக்தர்கள் எவரும் தரிசிக்கவில்லை என்பதே இதன் சிறப்பாகும், கண்கொள்ளா, புலன்களுக்கு அப்பாற்பட்டதே அண்ணாமலை ஜோதி மகிமையாகும்.

ஆதித்யன் இதயத்தில் அருந்தவன்!
திருஅண்ணாமலை

ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வர சிவாலயத்தின் வடக்கில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளும், தெற்கில் ஸ்ரீபிரம்மாவும் எழுந்தருளி இருப்பதால் நேர்கோட்டில் அமையும் இந்த மூர்த்திகளை வணங்கிய பின்னர் பெருமாளுக்குரிய சனிக் கிழமை அன்று இணையும் குரு ஹோரை நேரத்தில் திருஅண்ணாமலையாரை தரிசிப்பது என்பது எத்தகைய பேறு. இத்தகைய ஒரு அரிய சந்தர்ப்பத்தை அடியார்கள் பெற இங்குள்ள தரிசனங்கள் அவர்களுக்கு அருள் புரியும். மேற்கூறிய முறையில் இந்த N2023 வருடம் இறை தரிசனத்தை அமைத்துக் கொள்வதும் பெறுதற்கரிய அருந்தவப் பலனே.

சிவராத்திரியன்று பெருமாள் நீரில் குழைத்த விபூதி இட்டுக் கொண்டு திருக்கைலாய சிவபூஜையில் பங்கெடுத்துக் கொள்வாராம். வைகுண்ட ஏகாதசி அன்று சிவபெருமான் நெற்றி நிறையும் அழகிய நாமம் இட்டுக் கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருள்வாராம். இவ்வாறு சிவன் நெஞ்சில் பெருமாளும், பெருமாளின் இதயத்தில் எம்பெருமானும் எழுந்தருளிய கோலத்தைக் குறிப்பதாகப் பொலிந்ததே 10.12.2022 அன்று பிரகாசித்த தீபத்தின் சக்திகளாகும். அன்றைய கிரிவலத்தில் எங்கும் இறைவனின் நெஞ்சில் பூத்த பிரகாசமே ஒலியாகப் பூத்து, பரிணமித்தது என்பதற்கு இங்குள்ள தீப தரிசனக் காட்சிகளே சாட்சி.

இத்தகைய சங்கரநாராயண ஐக்யத்தை ஸ்ரீபிரம்மாவும் பூஜிப்பதாகவே ஒசூர் திருத்தலத்தில் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் சிவாலயத்தின் தெற்குப் பகுதியில் எழுந்தருளிய இறைவனின் பாதங்கள் விளக்கும் மகாத்மியமாகும்.

ஆலமாகறல் ஆழமாய் மாற

ஒசூர் திருத்தலத்தின் மற்றோர் நாமம் ஆலமாகறல் என்பதாகும். மாகறல் என்றால் உடும்பு. சுபகிருது புத்தாண்டில் வழிபட வேண்டியே ஈசனே வடமாகறல் ஈசன் என்பதை நீங்கள் அறிவீர்கள். வடமாகறல் போல் ஆலமாகறல் திருத்தலமாக விளங்குவதே ஒசூர் சிவத்தலமாகும். நம்முடைய பரம்பரையில் உள்ள ஒருவர் மட்டும் இறைவன் மேல் உடும்புப் பிடி போன்ற பக்தியை வளர்த்துக் கொள்ள மற்றவர்கள் அந்த பக்தி நிழலில் வாழ்வது சிறப்பாகுமா? அந்த ‘உடும்பு’ பரம்பரையில் தோன்றும் ஒவ்வொருவருமே இவ்வாறு இறைவன் மேல் உடும்புப்பிடி என்ற வலுவான பக்தியை வளர்த்துக் கொள்வதுதானே சிறப்பு. இவ்வாறு ஆலமாகறல் எனும் ஒசூர் திருத்தல வழிபாட்டால் இறைவன் மேல் ஏற்படும் பக்தி சிறிது சிறிதாக உடும்புப் பிடியாக மாறும் என்பதே ஒசூர் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளின் சிறப்பாகும்.

இத்தகைய உடும்பு பக்தி பல தலைமுறையகளுக்கும் பெருகும் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். கோடி கோடியாய் அயல்நாட்டு வங்கிகளில் பணம் சேர்த்து வைத்தாலும் அது இந்நாட்டில் திகழும் ஒருவரின் கடும்பசியை போக்க முடியாது. ஆனால், ஒசூர் திருத்தலத்தில் நாம் திரட்டும் மாகறல் வழிபாட்டுப் பலன்களோ பல பரம்பரைகளுக்கும் பல்கிப் பெருகி, நிலைத்து நின்று அரும்பசி ஆற்றும். கொடு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகவும் அது மாறும்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் ஒரு சீடர் கேட்டார், “சுவாமி, ஆத்மா பரிசுத்தமானது, எந்த தீவினைகளாலும் தீண்டப்படாதது என்று சொல்கிறோம். அதே ஆத்மாவிடம் சேர்ந்த தேவையற்ற அழுக்கே, ஆவரணம் என்ற மாயை மறைப்பு சக்தியே, நம்மை இறைவனிடம் அண்ட விடாமல் செய்கிறது என்று கூறுகிறோம். இவ்வாறு பரிசுத்தமான ஆத்மா எப்போது தூய்மை அற்றதாக ஆகியது என்பதை நம்மால் அறிய முடியுமா?” என்று கேட்டார்.

ஸ்ரீராமபிரான் ஆதிதிருவரங்கம்

இந்த கேள்வி இன்று பலரின் மனோ நிலையை பிரதிபலிப்பதுதானே? சுவாமி சீடனை உற்றுப் பார்த்து, “ஏன், எங்கு, எப்போது என்ற கேள்விகள் அனைத்தும் பூலோகத்திற்கு உரித்தானவை, இந்த பஞ்ச பூதக் கூட்டினால் உருவான மனிதனுக்கு உரியவை. ஆத்மா பரிசுத்தமற்ற நிலையைப் பெற்றதோ பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையைக் குறிப்பதாகும். பஞ்ச பூதக் கூட்டில், பஞ்ச பூத நிழலில் வசிக்கும் மனிதனால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது...” என்று பதிலளித்தார்.

அதே சமயம் பஞ்ச பூத உடலில் வசித்த சுவாமி விவேகானந்தரால் இதை எப்படிப் புரிந்து கொள்ள முடிந்தது? இதுவே உத்தம குருநாதர் ஒருவர் உவந்தளிக்கும் அடிமை கண்ட ஆனந்தமாகும். அனைவரும் பஞ்ச பூத உடல் சக்திகளைத் தாண்டியே குண்டலினி யோகத்தில் இலயித்து இறை தரிசனம் பெற்றாலும், நம் சற்குரு ஒருவரே இவ்விஷயத்தில் உறுதியாய் இருந்து, இறை தரிசனம் என்ற ஒன்று வாய்ப்பதாக இருந்தால் அது சற்குருவின் கருணையால், சற்குருவின் முன்னிலையிலேயே நிகழட்டும், சம்பவிக்கட்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அந்த உறுதிப்பாட்டை மெச்சியே நம் கோவணாண்டியும் தம் அருமைச் சீடனுக்கு இறைவனின் திருக்காட்சியைப் பெற்றுத் தந்தார் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

இவ்வாறு பஞ்ச பூத உடல் கூட்டிலேயே பஞ்சபூத சக்திகளுக்கு அப்பாற்பட்ட இறை தரிசனத்தை நம் சற்குருவை நம்பும் அனைவரும் பெற உதவும் திருத்தலங்களே திருவரங்கம், ஆதிதிருவரங்கம், ஒசூர் என்பவையாகும்.

அது எப்படி சாத்தியமாகும் ?

ஸ்ரீராமபிரான் ஆதிதிருவரங்கம்

ஒரு முறை கைலயங்கிரியில் பார்வதி பரமேஸ்வர மூர்த்திகள் இறையடியார்களுக்கு, பூத கணங்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கோ தொலைவில் ‘டம்’ என்று பெரிய சப்தம் கேட்டதாம். பார்வதி தேவி திகைத்து, “சுவாமி, இது என்ன சப்தம்...?” என்று கேட்டாளாம். இறைவன் நகைத்து, “தேவி, ராவணன் பிறந்து விட்டான். அதனால் கைலை வரை எதிரொலிப்பதே அந்த சப்தம்...”, என்றாராம். சற்று நேரம் கழித்து அதே போல் மீண்டும் அந்த ‘டம்’ சப்தம் எதிரொலித்ததாம். தேவி குழப்பத்துடன், “சுவாமி, இது என்ன மீண்டும் அதே போல் ஒரு பெரிய சப்தம் கேட்கிறதே?” என்று கேட்டாளாம். இறைவன் மீண்டும் அதேபோல் தெய்வீக புன்னகையை உதிர்த்து, “தேவி, ராவணன் ராமபாணத்தால் மரணம் எய்தி விட்டான்...” என்றாராம்.

இதுவே நம் பூமிக்கும் இறைவன் உறையும் கைலாயத்திற்கும் இடையே விளங்கும் கால தேச வித்தியாசக் கணக்கு. இந்த கால தேசக் கணக்கிற்கும் அப்பாற்பட்டதே இறை தரிசனம் என்றால் அதையும் பெற்றுத் தரக் கூடிய நம் சற்குருவை இதயத்தில் கொண்ட ஒருவன் எதற்காகக் கலங்க வேண்டும்?

திருவரங்கத்தின் தெற்கில் விளங்கும் காவிரி
காவிரி இரண்டாய்ப் பிரிந்து வடக்கில் பொன்னி நதியாக துலங்கும் வடகாவிரி
ராவணனின் மறைவிற்கு சாட்சியாக நின்ற திருவரங்கம்
திருவரங்கத்திற்கு முன் ராவணன் பிறந்தபோது தோன்றிய ஆதிதிருவரங்கம்
ஆதிதிருவரங்கத் தீர்த்தமான தென் பெண்ணை நதி

ஒசூர் திருத்தலத்தை தரிசனம் செய்து இந்த ஐந்து தெய்வீக விஷயங்களையும் N2023 ஆண்டில் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் பஞ்ச பூதக் கூட்டிலேயே சற்குரு திருவருளால் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்ட இறை இரகசியங்களைப் பெற்று ஆனந்தம் அடையலாம்.

திருஅண்ணாமலை அருகில் உள்ளதே ஆதிதிருவரங்கம் என்னும் பெருமாள் தலமாகும். ஒசூர் திருத்தலத்தில் பஞ்ச பூதங்கள் தவமியற்றியபோது பஞ்சபூத சக்திகளும் திருவரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளின் தரிசனத்தை ஒரு சில நொடிகள் பெற்றன என்று விளக்கினோம் அல்லவா? இவ்வாறு பஞ்ச பூத சக்திகளும் திருச்சி திருவரங்கத்திற்கு முன் முந்தைய யுகம் ஒன்றில் இவ்வாறு பஞ்ச பூத சக்திகளை, ராவணன் தோன்றியபோது விளங்கிய அனுகிரகத்தைப் பெற்ற தலம் ஆதிதிருவரங்கம் என்றால் இதன் புராணச் சிறப்பை எப்படி விளக்க முடியும்?

கோழியிலிருந்து முட்டை வந்ததா?

கோழி முதலில் வந்ததா, இல்லை முட்டை முதலில் வந்ததா? இது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் ஒரு கேள்வியே. எந்த ஆய்வாளரும், விஞ்ஞானியும் இதற்கு ஒரு திருப்தியான பதிலைக் கூற முடியவில்லை. ஆனால், எந்த கேள்விக்கும் இறுதி விடையை அளிக்கக் கூடிய சித்தர்களே இதற்கான விடையையும் தெளிவாக, குழப்பமில்லாமல், மனித மனம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அளித்துள்ளனர். இதுதான் பதில் என்பதை விட உண்மையை யார் உரைத்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பதற்கும் இது உதாரணமாக நிலவும்.

இறைவனின் தோன்றாநிலை திருஅண்ணாமலை

கோழியிலிருந்தே முட்டை வந்தது என்பதே சித்தர்கள் கூறும் பதில். இந்தப் பதிலை நாம் கண்ணை மூடிக் கொண்டு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை, தொடர்ந்து ஆத்ம விசாரத்தில் மூழ்கினால் நாமும் இந்தப் பதிலைப் பெறுவோம் என்பதே இந்த சத்திய வாக்கியத்தின் பின்னணியில் அமைந்த தெய்வீக உறுதிப்பாடாகும்.

சித்தர்களின் உறுதிப்பாட்டை விளக்குவதாகவே நோவாவின் பேழை என்பதும் அமைந்திருந்தது. உலகம் முழுவதும் வெள்ளத்தால் அழியும் என்று அறிந்தபோது உலகத்திலுள்ள அனைத்து விலங்குகள், பறவைகள் அனைத்தையும் காக்க நோவா என்ற தீர்க்கதரிசியின் ஏற்பாட்டை விளக்குவதே பைபிளில் நாம் காணும் ஜல பிரளயம். நோவா பறவைகளின் முட்டைகளையோ, விலங்குகளின் கன்றுகளையோ பாதுகாத்து வைக்கவில்லை. மாறாக விலங்குகளையும் பறவைகளையும்தான் தன்னுடைய கப்பலில் சேமித்து, பாதுகாத்து வைத்திருந்தார்.

ஆதிதிருவரங்கம்

புராணங்களை ஊன்றிப் படித்தாலும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பூமியில் பல இடங்களில் பிரளயங்கள் தோன்றி பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியது என்றாலும் உலகம் முழுவதும் நீரில் மூழ்கும் யுகப் பிரளயங்கள் தோன்றும்போது அனைத்தை உயிர்களும் அழிந்து விடும் என்றாலும் அந்த உயிர்களை தோன்றாநிலையான சூட்சும நிலையில் வைத்திருப்பதே கும்பகோணம் திருத்தலத்தில் உள்ள கும்ப கலசம் ஆகும்.

பிரளயம் தோன்றிய குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஸ்ரீகிராத மூர்த்தி தன்னுடைய அம்பால் இந்த கும்ப கலசத்தை வீழ்த்த அதிலிருந்து மீண்டும் உயிர்கள் தோன்றி உலகில் நிறையும் என்பதே சிருஷ்டி பற்றி நம் புராணங்கள் அளிக்கும் விளக்கமாகும்.

நீங்கள் இங்கு காணும் சிவசக்தி ஐக்ய தரிசனத்தை தினமும் தரிசனம் செய்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலும் நீங்கள் சிருஷ்டி இரகசியங்களை சிறிது சிறிதாக உணர்ந்து கொள்ளலாம். சிவ சக்தி ஐக்யம் என்பது சிவனும் சக்தியும் சேர்ந்து ஒன்றுபட்டு நிலவும் ஒரு தரிசனம் என்பது மேலோட்டமான ஒரு விளக்கமே. சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவம் இல்லை என்பார்கள். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் இருக்கும் இறை சக்தியை சிவம் என்றும், இவ்வாறு அனைத்து சிருஷ்டித் தொழிலிலும் ஈடுபட்டு பிரகாசிக்கும் இறை சக்தியை நாம் சக்தி என்று பொதுவாக அழைக்கிறோம்.

இதனால் என்ன பெரிய பயன் கிடைத்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். உலகில் தோன்றும் எந்தக் கேள்விக்குமே இந்த இறை தரிசனத்தில் விடை உண்டு, உண்டு, உண்டு என்பதே இதன் சிறப்பாகும். உதாரணமாக, அப்பா முதலில் வந்தாரா, மகன் முதலில் வந்தானா என்று ஒருவர் கேட்கலாம். இது என்ன ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி...? அப்பா என்ற உறவு முதலில் வந்தது, மகன் என்ற உறவு பின்னர் வந்தது என்று ஒருவர் கூறலாம். உண்மையில் இரண்டும் ஏக கால சம்பவங்களே...

ஆம், குழந்தை பிறக்கும் முன் அம்மா அங்கு கிடையாது, பெண் மட்டுமே இருந்தாள், குழந்தை பிறந்ததால்தான் பெண் அம்மா ஆனாள். இதே கருத்தை உங்களால் விரித்துப் பார்க்க முடிந்தால் உங்கள் மனதில் குழப்பம், அமைதியின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் இறைவனுடன் ஒன்றாய்த் தோன்றியவர்களே, ஒளியாய் மிளிர்பவர்களே, இத்தகைய ஒரு எல்லையில்லா ஞானம் கனியும் ஆண்டே N2023.

ஸ்ரீபடிக்காசு விநாயகர்
திருவீழிமிழலை

திருவீழிமிழலையில் அருள்புரியும் அண்ணலே ஸ்ரீபடிக்காசு விநாயக மூர்த்தி ஆவார். சித்தர்கள் இவரை ஆதிவிநாயகர் என்றே அழைத்து அருள்கூட்டுகின்றனர். இறைவனின் தோன்றாநிலையை பக்தர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அருள் புரியும் மூர்த்தியே ஸ்ரீபடிக்காசு விநாயக மூர்த்தி. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் ஸ்ரீஅப்பர் பெருமானும் இந்த விநாயக மூர்த்தியை வேண்டியே வறுமையில் வாடிய மக்கள் அரும்பசி தீர்க்க பொற்காசுகளைப் பெற்றனர் என்பதை நாம் அறிவோம்.

இறைவனை அறிந்து கொள்வதில் பொதுவாக 21 படித்தரங்கள் உள்ளன. இவற்றில் 18 படிகளாக அமைந்த வழிமுறைகளையே 18 புராணங்களாகவும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களாகவும், 18ம் படி கருப்பு என்ற தெய்வ மூர்த்தியாகவும் பெரியோர்கள் மக்களுக்கு வழங்கி உள்ளனர். இந்த 18 படிகளுக்கு மேல் உள்ள படித்தரங்களை தக்க குருமார்கள் மூலமே அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக இரகசியங்களாகும்.

அதனால்தான் ஸ்ரீபடிக்காசு விநாயக மூர்த்தியின் தரிசனத்தையே நம் சற்குரு முன்னர் அளிக்கவில்லை. கரூர் அருகே தேவர்மலையில் அருள்புரியும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளின் உருவத்தை பக்தர்கள் தரிசிக்க பல்லாண்டு காலம் தவம் இயற்றியதுபோல் ஸ்ரீதிருவீழிமிழலை ஆதிவிநாயக மூர்த்தியின் தரிசனத்தைப் பெறவும் உதவியதே நம் சற்குருவின் பல்லாண்டுகள் தொடர்ந்த தவம்.

என்றும் துணையாக வரும்
சற்குருவின் இணையடிகள்!

அதே போல் திருவீழிமிழலையின் கோபுர கலசங்கள் 7+5=12 என்பதாக குரு எண்ணிக்கையைக் குறிப்பதாக வரும் அல்லவா? இவ்வாறு குரு சக்தியைக் குறிக்கும் வகையிலான கோபுரங்கள் அனைத்தையும் இந்த வருடம் தரிசித்து வந்தால் அவ்வப்போது அடியார்களுக்கு தோன்றும் அவநம்பிக்கையை அறவே களைந்து விடலாம் என்பது உறுதி. குடும்பத்தில், சமுதாயத்தில், நண்பர்களிடையே, சக ஊழியர்களிடையே அவநம்பிக்கை தோன்றினால் வாழ்க்கை என்னாவது?

இறைவனின் தோன்றாநிலையும் எதிர்காலமும் ஒன்றா என்ற சந்தேகம் ஏற்படலாம். தோன்றாநிலை என்பது வேறு, எதிர்காலம் என்பது வேறு. எதிர்காலம் என்பது காலத்திற்கு உட்பட்டது, ஸ்ரீகாலபைரவரின் ஆளுகைக்கு உட்பட்டது, தோன்றாநிலை என்பது பைரவ தோற்றத்திற்கும் அப்பாற்பட்டது, கால தேச கோட்பாடுகளுக்கே அப்பாற்பட்டது எனலாம்.

நம் சற்குரு அளித்த தோன்றாநிலை அனுகிரகத்தை அடியார்கள் நலன் கருதி இங்கு அளிக்கிறோம். ஒரு முறை நம் சற்குரு ஒரு அடியாரின் இல்லத்திற்கு எழுந்தருளினார். காலையில் துயில் எழுந்தவுடன் அந்த அடியாரின் வீட்டின் பின்புறம் இருந்த தென்னந் தோப்பில் உள்ள மரங்களை எல்லாம் பார்வையிட்டார். அப்போது அந்த அடியாருக்கு நம் சற்குருவின் ‘பார்வையில்’ உட்சுழற்சியாக பதிந்திருந்த தோன்றாநிலையைப் பற்றி சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் அந்த தோட்டத்தில் உள்ள ஒரு தென்னைமரம் கரையான்களால் அரிக்கப்பட்டு கீழே விழும் நிலையில் இருந்தபோது அந்தத் தென்னைமரத்தை அகற்ற நேர்ந்தது. ஆனால், அந்த தென்னை மரமே சுபகிருது ஆண்டில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற திரியாக ஒரு திருத்தலத்தில் விளங்கியது என்றால் இது சற்குருவின் தொலைநோக்குப் பார்வை என்று கொண்டாலும், சற்குருவின் தோன்றாநிலை அனுகிரகம் என்பதே நாம் ஆத்மவிசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

உண்ணும்போதும் காயத்ரீ
உறங்கும்போதும் காயத்ரியே!

திருஅண்ணாமலையில் ஆஸ்ரம கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பல சவுக்கு மரக் குச்சிகள் வாங்கப்பட்டன. ஆஸ்ரமத்தில் ஹால், சமையல் கூடம் போன்ற உயரமான பகுதிகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அந்த சவுக்குக் குச்சிகள் பாதியாக வெட்டப்பட்டு மீதம் உள்ள கட்டுமானப் பணிகளில் முட்டுக் கட்டையாகவும், அன்னதான க்யூ வரிசை அமைக்கும் கொம்புகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் அந்தக் கொம்புகளும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திருக்கார்த்திகை தீப அன்னதான சமையலில் விறகாகப் பயன்படுத்தப்பட்டன.

அந்த விறகுக் குச்சிகளை நம் அடியார்களிடம் காட்டி, “இந்த சவுக்குக் குச்சிகளை கடைசி வரை நற்காரியத்திற்காக பயன்படுத்தி அவற்றை அண்ணாமலையாரின் திருவடிகளில் சமர்ப்பிக்கும் குருநாதன் உங்களை இறைவனிடம் சேர்க்க நினைக்க மாட்டானா?” என்று ஒரு ஆழ்ந்த, அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்டார்கள். சற்குருவின் கேள்வி, கேள்வியாகவே இருக்கிறதே... இதற்கு உரிய பதிலை நாம் செயல் மூலம் உறுதிப்படுத்த உதவுவதே N2023.

சற்குருவின் தோன்றாநிலை அனுகிரகத்தை மற்றோர் கோணத்திலிருந்தும் பார்க்கலாம் என்ற கருத்தை மட்டும் இங்கு அளிக்கிறோம். ஆனால், இது நிச்சயம் தோன்றாநிலையைக் குறிக்காது என்பதையும் அடியார்கள் கவனிக்கவும். இங்கே படத்தில் உள்ள பசு கீரையை உண்ணும்போது காயத்ரீ மந்திரத்தை ஓதியவாறே உள்ளது என்பதை நம் சற்குருவின் குருவாய்மொழியாக, வலது காலை நீட்டியிருக்கும் பசு மாடுகள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் என்று நாம் புரிந்து கொள்கிறோம். சற்குருவின் விளக்கத்தை உறுதி செய்வதாக இதன் விளக்கம் 24 அட்சரங்கள் உடையதாக, 24 அட்சரங்கள் உடைய காயத்ரீ மந்திரத்தின் விரிவாக அமைந்துள்ளது.

குருவின் கனிந்த ஆசியுடன்
ஒளிரும் வலம்புரி!

அதே சமயம் இந்தப் பசு மாடு
ஓம் பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை நிச்சயமாக ஜபிக்கவில்லை. இந்த பிரம்ம காயத்ரீ மந்திரம் அளிக்கும் சக்தியை மந்திரமாக, பசுமாடுகளுக்கு உரிய விலங்கின மொழியில், ஜபித்துக் கொண்டிருக்கிறது என்பதே பசு மாடுகள் காயத்ரீ மந்திரம் ஜபிக்கின்றன என்ற கூற்றின் பொருளாகும். விலங்கின மொழியில் காயத்ரியை ஜபித்தாலும் மனித மொழியில் 24 அட்சங்களுடன் துலங்கும் மந்திரமாக அதைப் புரிந்து கொள்ளும் சக்தியை அளிக்கவல்லவையே கோமாதாக்கள். இந்த மந்திர ஜப சக்திகளை நம் சற்குரு சிபாரிசு செய்யும் அன்னதானம், வழிபாடுகள் மூலமாகவும், ஒரு பெண்ணைத் தாயாக கருதி நோக்கும் நிலையிலும் வர்ஷிக்கலாம் என்பதும் N2023 ஆண்டில் காயத்ரி மந்திரம் அளிக்கும் ஞான விளக்கமே.

வலம்புரியா இடம்புரியா

சங்குகளில் பல வகை உண்டு. நாம் அறிந்தது வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு என்ற இரு வகை சங்குகள் மட்டுமே. ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரு சங்கு வலம்புரியாக இருக்கும், ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரு சங்கு பாஞ்சசன்யமாக இருக்கும் என்பது சாஸ்திர விளக்கம். யாரும் பாஞ்சசன்ய சங்கைப் பார்த்தது கிடையாது. பகவான் கிருஷ்ணர் மகாபாரத யுத்தத்தில் சங்கு நாதம் முழங்கியது பாஞ்சசன்யம் சங்கின் ஒலி கொண்டே என்பது நாம் அறிந்ததே.

வலம்புரிச் சங்கில் நாதம் இடம்புரியாகவும், இடம்புரிச் சங்கில் நாதம் வலம் சுழித்து வரும் என்பது இங்கு நாம் அளித்துள்ள வலம்புரிச் சங்கை நோக்கினால் எளிதில் புரிந்து கொள்ளலாம். பாஞ்சசன்யம் சங்கில் தோன்றும் நாதமோ, வலம்புரி நாதத்தில் இடம்புரி நாதம் லயமாகி வருவதாகும்.

இந்த நாதத்தை சங்கு இல்லாமலே ஒலிக்க வல்லவர்களே உத்தம நிலையில் திகழும் நம் சற்குரு போன்ற மகான்கள் ஆவர். நாம் அறியக் கூடிய முறையில் இத்தகைய பாஞ்சசன்ய நாதத்தை உருவாக்கும் முறையை அடியார்கள் பலரும் தரிசிக்கும் வண்ணம் அனுகிரகம் புரிந்தவரே நம் சற்குரு ஆவார்.

1992 என்ற குருவருடத்தில் இவ்வாறு தன்னுடைய நாக்கை ஒரு சுழற்று சுழற்றி அப்படியே அந்தச் சுழல் நிலையில் நாக்கை இரண்டாக மடித்து தன் தொண்டைக்குள் ஆழமாக செலுத்தி உள்நாக்கை இந்த அமைப்புத் தொட்டுத் துலங்கும் நிலையை தொட்டுக் காட்டிய வித்தையாக காட்டி நம் அடியார்களுக்கு இந்த அருங்காட்சியை நம் சற்குரு நல்கினார் என்பதே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அடிமை கண்ட ஆனந்த அனுபவமாகும்.

வலம்புரிச்சங்கு

இத்தகைய அமைப்பில் நாக்கு துலங்கினால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒருவர் உணவின்றி வாழலாம். பண்டைய காலத்தில் குகைகளில் வாழ்ந்த ரிஷிகள் இவ்வாறு உணவின்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தவம் இயற்றத் துணைபுரிந்ததே இந்த அமிர்தலய முத்திரையாகும். இந்த அமைப்பில் நாக்கு துலங்கும்போது கபாலத்தில் இருந்து அமிர்தம் சொட்டும், அந்த அமிர்தத் துளியில் ஒரு சிறிது அருந்தினாலும் எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் உணவின்றி வாழலாம் என்பது இந்த அமிர்த சக்தியின் வரகுண சக்தியாகும்.

அடியார்களைப் பொறுத்த வரை ஒரு சங்கு வலம்புரியாக இருந்தாலும் இடம்புரியாக இருந்தாலும் அதைக் கொண்டு சங்கு நாதம் எழுப்பினாலே போதும் சமுதாயத்தில் அமிர்த சக்திகள் பல்கிப் பெருகும். இவ்வாறு சங்கு நாதம் எழுப்பும்போது சங்கை ‘ஊதுகிறோம்’ என்ற நினைவின்றி சங்கு நாதம் ‘எழுப்புகிறோம்’ என்ற நினைவில் தோய்ந்து இலயித்தால் போதும் மற்ற தவ முறைகளை நம் சற்குரு அமைத்து விடுவார் என்பதே இந்த N2023 வருடத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் நம் சற்குரு திருக்கார்த்திகை தீப அன்னதானத்தின்போது இறைவனுக்கு நைவேத்யம் படைக்கும் சந்தர்ப்பங்களில் இத்தகைய அபூர்வ சங்கு நாதத்தை எழுப்புவார். அவ்வாறு சங்கு நாதம் எழுப்பும்போது பல லோகங்கள் உருவாகும் என்பதும் அந்த லோகங்களில் சிருஷ்டிக்கப்படும் ஜீவன்களுக்கு நம் திருஅண்ணாமலை பிரசாதமே முதல் சித்த உணவாக நம் சற்குருவால் படைக்கப்படும் என்பதும் நம்மை பிரமிக்க வைக்கும் செய்தியாகும்.

திருக்கார்த்திகை தீப அன்னதான வைபவத்திற்கு முன் அத்தகைய லோகங்களில் சிருஷ்டிக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் தோன்றாநிலையில் இருந்தவையே என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கக் கூடியதுதானே ?! நம் பாரத தேசத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் தோற்றமும் திருஅண்ணாமலையில் தரிசனம் செய்யக் கூடியதுதான். அது மட்டும் அல்ல, நம் ஆஸ்ரமத்தில் எழுந்தருளி உள்ள சூட்சும பிரவேச கோபுரமும் இவ்வாறு அனைத்து திருத்தல சக்திகளையும் ‘சூட்சுமமாய்’ பிரகாசிக்கவல்லவையே. சந்தியாவந்தனம் காயத்ரியில் அடங்கும், காயத்ரீ ஓங்காரத்தில் லயமாகும் என்ற பரமஹம்சரின் பரம வாக்கியங்கள் தோன்றாநிலையைச் சுட்டிக் காட்டுபவையே.

முள்ளில்லா வில்வம்

முள், ரோஜாவின் நறுமணம், வேப்பிலைக் கசப்பு போன்ற ஆயிரமாயிரம் பொருட்களை நாம் அன்றாடம் பயன்படுத்தினாலும் பூலோகத்தில் இவற்றை விஞ்ஞானிகளால் உருவாக்க முடியாது. இவை தேவலோக தேவதைகளால் உருவாக்கப்பட்டு நம் பூலோகத்தில் பயன்படுபவை என்பார் நம் சற்குரு. நெருஞ்சி முள்ளை விஞ்ஞானத்தால் உருவாக்க முடியாது என்றால் முள்ளில்லா நிலையையும் நிச்சயம் விஞ்ஞானத்தால் உருவாக்க முடியாது என்பதும் நாம் பகுத்துணர வேண்டியது அல்லவா?

இத்தகைய ஞானத்திற்கு சான்றாகத் திகழ்வதே லால்குடி அருகே நகரில் திகழும் ஸ்ரீஅதுல்ய நாயகி உடனுறை ஸ்ரீஅப்பிரதட்சணேஸ்வரர் திருத்தலமாகும். முள்ளை நாம் உருவாக்க முடியாது என்றாலும் நெருஞ்சி முள் படுக்கையில் இதயநோய் உள்ளவர்களைப் படுக்க வைத்து அந்த வைத்தியத்தின் மூலம் பல இதயக் கோளாறுகளைச் சரி செய்வது போல் முள்ளில்லா வில்வ மரம் துலங்கும் நகர் திருத்தலத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் குறித்து நம் சற்குரு அருளியுள்ளார்.

N2023 வருடம் என்பது கேது கிரகத்தின் அப்பிரதட்சிண சக்திகள் துலங்கும், சுழலும் ஆண்டாக விளங்குவதால் நகர் திருத்தலத்தில் இத்தகைய அப்பிரதட்சிண சக்திகளை புனருத்தாரணம் செய்வது சிறப்பாகும்.

முள்ளில்லா வில்வம் நகர்

இது எப்படி சாத்தியமாகும் ?

காஞ்சி கனிந்தகனி பரமாச்சாரியார் நகர் திருத்தலத்திற்கு வந்தபோது அங்குள்ள குருக்களிடம், “நீ ஒன்றும் செய்ய வேண்டாம், இங்குள்ள வில்வ மரத்தின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து இந்த சிவலிங்கத்திற்கு (ஸ்ரீஅப்பிரதட்சிண ஈஸ்வர லிங்க மூர்த்திக்கு) தினமும் அர்ச்சனை செய்தாலே போதும் ...”, என்றாராம். இதனால் அப்பிரதட்சிண சக்திகள் இத்திருத்தலத்தில் பெருகி இந்த உலகம் அனைத்திற்கும் தேவையான அப்பிரதட்சிண சக்திகளை சிவ பிரசாதமாக வர்ஷிக்கும் என்பதே உலக நன்மைக்காக இயற்றிய கனிந்தகனியின் கனிவான ஏற்பாடு. அதே சமயம் அந்த சிவாச்சாரியாரின் பல தலைமுறைகள் நற்கதி அடைந்து விடும் என்பது இந்த உபதேசத்தின் உட்கருத்து.

சிறிது காலம் கழித்து நம் சற்குரு தம் அடியார்களுடன் உழவாரப் பணிக்காக எழுந்தருளியபோது இத்தகைய அப்பிரதட்சிண சக்திகளை மீண்டும் புனருத்தாரணம் செய்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். தம் அடியார்களை மூலத்தான கருவறையில் அர்த்த பத்மாசன முறையில் ஆசனமிட்டு அந்த கருவறையை அப்பிரதட்சிணமாக வலம் வந்து உழவாரத் திருப்பணிகளை நிறைவேற்றுமாறு கூறினார். சுவாமியின் மேல் கூரையில் தண்ணீரை பீச்சி அடித்து அந்த நீர் முழுவதும் சுவாமியின் மேலும், அந்த அப்பிரதட்சிண இறைப் பிரசாதம் தம் அடியார்கள் மேலும் வர்ஷிக்குமாறும் பெருங்கருண புரிந்தார்.

நம் சற்குரு உலகம் முழுவதும் அப்பிரதட்சிண சக்திகளை தம் எளிய திருப்பணி மூலம் புனருத்தாரணம் செய்த உலகளாவிய பிரம்மாண்டமான திருப்பணி இது.

ஸ்ரீஅதுல்ய நாயகி அம்மன் நகர்

இத்தகைய பிரபஞ்சம் நிரவிய, உலகளாவிய பிரம்மாண்டமான ஒரு நற்காரியத்தை நம் சற்குரு நிறைவேற்ற உதவியதே நம் சற்குரு அணிந்திருந்த ‘கழுதைக் காது’ கோவணமாகும். இதோ எங்கோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இந்த கழுதைக் காது கோவணம்தான் நம் கோவணாண்டி, வெங்கடராமன் என்ற நாமம் கொண்ட, ராமன் என்று கோவணாண்டியால் அழைக்கப்படும் ரமண மகரிஷிக்கு ‘கட்டி விட்ட’ கோவணமாகும்.

நம் பெரியோர்கள் அணிந்திருந்த இத்தகைய கோவணத்தின் சிறப்பு என்னவென்றால் அது இருமடிப்புடன் துலங்குவதாகும். சங்கின் அமைப்பை நாம் ஆராந்ந்து பார்த்தால்தான் இந்த கோவணத்தின் சிறப்பையும் நாம் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, வலம்புரிச் சங்கின் அமைப்பு வலஞ் சுழியாக இருந்தாலும், அந்த சங்கால் நாதத்தை ஒருவர் எழுப்பும்போது அதில் எழும் நாதம் இடஞ் சுழியாக அமையும். இவ்வாறு இடஞ் சுழியும் வலஞ் சுழியும் ஒருங்கிணைவதே நம்மை பிரமிக்க வைக்கும் நம் மூதாதையர்களின் அறிவுத் திறன் ஆகும்.

வலஞ்சுழி சங்கின் அமைப்பு சிவ சக்தி, அதில் எழும் நாதம் இடஞ் சுழி ஆகும், இது சக்தி அம்சம். இதுவும் சிவ சக்தி ஐக்யத்தைக் குறிப்பதே ! எனவேதான் அடியார்கள் சங்கு நாதம் எழுப்பும்போது சங்கு ஊதுகிறார்கள் என்று சொல்லாமல் சிவத்தையும் சக்தியையும் ஒருங்கிணைக்கும் அற்புதத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பர் பெரியர்.

எனவே கனிந்த கனியைப் போன்றோ, நம் சற்குருவையோ ஒத்த அறிவை, ஞானத்தை உடையவர்கள் நாம் இல்லை என்றாலும் இவ்வாறு இருமடிப்புடைய கோவணம் அணிந்து சங்கு நாதம் எழுப்புவது என்பது நம்மால் நிறைவேற்றக் கூடிய ஒரு திருப்பணிதானே. இந்த N2023 ஆண்டு முடிந்தபோதெல்லாம் நகர் திருத்தலத்தில் ஆரம்பித்து நம்மால் இயன்றவரை மற்ற சிவத்தலங்களிலும் பெருமாள் தலங்களிலும் இவ்வாறு சங்கு நாதம் எழுப்புவது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே.

N2023 என்பது நகர் திருத்தலத்திற்குரிய எண் கணித சக்திகளுடன் துலங்குவது என்பதும் நம் வியப்பிற்குரிய ஒரு சுவையே. இங்கு நீங்கள் காணும் வீடியோவில் N2023 ஆண்டு பொற்சுழற்சியாக (golden spiral) அமைந்துள்ளதால் நம் மனதில் குழப்பங்கள் தோன்றும் பொழுதெல்லாம் இந்த வீடியோவைப் பார்த்து ஆத்மவிசாரம் செய்து வந்தால் குருவருளால் குழப்பம் தீர்க்கும் அருமருந்தாக அது அமையும்.

நகர் என்பது சூரிய சக்தித் தலமாக இருப்பதால் ஏழு எண்ணிக்கையில் அடியார்கள் இங்கு சங்கு நாதம் எழுப்புவது சிறப்புடையதாகும். அடியார்கள் எழுவரும் ஒன்றாக இணைந்து சங்கு நாதம் எழுப்புவது ஒரு முறை. அதே அடியார்கள் ஒருவர் மாற்றி ஒருவர் சங்கு நாதம் எழுப்புவது மற்றோர் முறை. குறைந்தது ஒரு மணி நேரம் இத்தகைய சங்கு நாதம் முழங்கும்போது அந்த சங்கு நாதத்தில் பாஞ்சசன்ய நாதத்தையும் நம் சற்குரு உருவாக்குவார் என்பதே நம்மை மெய்மறக்கச் செய்யும் ஒரு அனுபூதியாகும். இதை நிறைவேற்றக் கூடிய வருடமே N2023, இந்த அற்புதத்தை குருவருளால் நிறைவேற்ற வல்ல திருத்தலமே நகர் சிவாலயம்.

இந்த ஆண்டு சங்கு நாதத்தை எழுப்பும்போது ஏழு அடியார்கள் வரிசையாக நின்று கொண்டு இத்தகைய சேவையை மேற்கொள்தல் சிறப்பு. இதன் பின்னணியில் அமைந்த எண் கணித சக்திகளைக் குறித்து ஆத்மவிசாரம் செய்து பார்ப்பதும் சிறப்பே.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி
பெருமாள்மலை

2, 4, 6 என்ற எண்ணிக்கையில் உள்ள அடியார்கள் முதலிலும் அதைத் தொடர்ந்து உடனே 1, 3, 5, 7 என்று எண்ணிக்கையில் நிற்கும் அடியார்கள் சங்கு நாதம் எழுப்புதல் நலம். வலம்புரி, இடம்புரி என யார் எந்தச் சங்கை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

பாஞ்சசன்யம் என்ற ஏழெழுத்து சங்கு இந்த வருடத்திற்கு உரியது என்றாலும் அதைப் பார்த்தவர்களே கிடையாது என்னும்போது அதை எவ்வாறு பிரயோகிக்க முடியும்? ஒரு யுகத்தில் நம் சற்குரு, பகவான் கிருஷ்ணரின் திருக்கரங்களில் சக்கராயுதமாகத் திகழ்ந்தவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

இது பற்றிய ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சி … …
ஒரு முறை சிறுவனான நம் சற்குரு, கோவணாண்டியுடன் ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் எதிரில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் எதிரே சற்று தூரம் தள்ளி கட்டுமஸ்தான உடம்புடைய நான்கு பேர் வந்து கொண்டிருந்தார்கள்.

கோவணாண்டி அவர்களைப் பார்த்து, “டேய் இட்லி, இந்த நான்கு பேரும் இவளை கற்பழிக்கப் போகிறார்கள்…”, என்றார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை ...

பேரதிர்ச்சியுடன், “என்ன வாத்யாரே, இன்று வெள்ளிக் கிழமை என்று சொல்வது போல் சற்றும் உணர்ச்சியில்லாமல் சர்வ சாதாரணமாக இவ்வளவு பெரிய தப்பான விஷயத்தை, ஒரு இளம் பெண்ணின் மானப் பிரச்னையை விவரிக்கிறாயே ?” என்று கேட்டான்.

“ஒன்றை சிவனுக்குச் சூட்டு
அது கொன்றையாக இருக்கட்டும்!”
ஸ்ரீஅகத்திய பிரான்

பெரியவரோ வழக்கமான புன்னகையுடன், “என்னை என்னடா செய்யச் சொல்றே… விதியைத் தெரிவிப்பது மட்டும்தான் எங்க வேலை … உண்மையிலேயே உனக்கு அந்த பொண்ணு மேலே அக்கறை இருந்தா அவள் மானத்தைக் காப்பாற்றலாமே … ஏன் இப்படி மக்கு மன்னாராட்டம் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டார்.

சிறுவன் யோசித்தான் … யோசித்தான்… நம் வாத்யார் சொல்வது சரிதானே …
வயதானவரை விட்டு ஒரு காரியத்தை செயல்படுத்த தூண்டுவதை விட நாமே அந்தக் காரியத்தில் “குதிப்பதுதானே” முறை என்று நினைத்துக் கொண்டு …
“சரி  வாத்யாரே, நீதான் விதிப்படி எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று இருந்தாலும் … விதி அறியாத நான் கண் முன்னால் நடக்கப் போகும் ஒரு கொடிய செயலைத் தடுக்க என்னாலான ஒரு முயற்சியை செய்துதானே தீர வேண்டும்?” என்று கேட்டான்.

இதற்குள் அவர்கள் இன்னும் அந்தப் பெண்ணை நெருங்கி வந்து விட்டார்கள் ….
“என்னால் இப்போது என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். பெரியவர் அமைதியாக, “உடனே நற்பவி சக்கரத்தை எழுப்பி விடு… அப்போது அந்த இடத்தில் எண்ணமே தோன்றாத ஒரு சூன்ய நிலை தோன்றி விடும். அப்போது எந்த நல்ல காரியமோ, தவறான காரியமோ எதுவுமே அங்கு நடக்க முடியாது,” என்றார்.

எல்லையில்லா சந்தோஷம் அடைந்த சிறுவன் உடனே நற்பவி சக்கரத்தை எழுப்ப ஆரம்பித்தான்.

ஒளியாய் உணர்வாய் பெருமாள்
இதயத்தில் பிரகாசிக்கும் லட்சுமி
நகர் சிவாலயம்

நேரமோ கடந்து கொண்டிருந்தது … அந்த நால்வரும் அந்தப் பெண்ணின் அருகே வந்து விட்டனர் … எப்படியோ உயிரைக் கொடுத்து நற்பவி சக்கரத்தை எழுப்பி விட்டான் சிறுவன். அந்த நால்வரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர், அந்தப் பெண்ணும் அந்த நால்வரையும் பார்த்தாள். ஆனால், நற்பவி சக்கரம் உருவாக்கிய சூன்ய நிலையில் அங்கு எந்த எண்ணமும் தோன்றாமல் இருந்ததால் அவர்கள் மௌனமாக அந்தப் பெண்ணைக் கடந்து சென்று விட்டனர். பறி போக இருந்த ஒரு பெண்ணின் மானம் நம் சற்குருவின் அருஞ்செயலால் காப்பாற்றப்பட்டது.

ஆயிரமாயிரம் சூரியன்களை
ஒத்த வில்வ கனிகளுடன்
திகழும் நகர் வில்வம்

அப்பாடா … என்று ஒரு பெருஞ்செயலை செய்து முடித்த ஆயாசத்தில் இளைப்பாறினான் சிறுவன்.

இவ்வாறு சக்கராயுதமாகத் திகழும் அனுகிரகத்தை நம் சற்குரு பெற்றிருந்ததால்தான் நற்பவி சக்கரத்தையும்  எழுப்பி ஒரு அபலைப் பெண்ணின் மானம் காத்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னரே நவராத்திரி மகிமையைப் பற்றி எடுத்துரைத்தார் பெரியவர். அந்தப் பெண் நவராத்திரி மாலை நேரத்தில் ஒன்பது நாட்களிலும் அருகில் உள்ள ஒரு அநாதை ஆஸ்ரமத்தில் இருந்த அநாதைப் பெண் குழந்தைகளுக்கு தலை வாரி விடும் சேவையைச் செய்திருந்தாள். அந்த சேவையை அறிந்த நம் கோவணாண்டி அந்தச் சேவையால் உருவான புண்ணிய சக்தியை அந்தப் பெண்ணின் மானம் காக்க நம் சற்குரு மூலம் இறைவனின் ஒரு கருவியாகச் செயல்பட்டார்.

புண்ணியம் இருந்தால் மட்டும் போதாது அதை உரிய முறையில் செலவழித்து நமக்கு உரிய முறையில், நமக்குத் தேவைப்படும் சரியான சமயத்தில் அளிக்கவல்லவரே நம் சற்குரு.

எனவே நாம் பாஞ்சசன்ய சங்கை பார்க்க முடியாவிட்டாலும் பாஞ்சசன்ய சங்கு நாதத்தை உலகத்தவர் நன்மைக்காக அளிக்க நம் சற்குரு தயாராக இருக்கும்போது அதை செயல்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதற்கு உரிய வருடமே N2023.

இருள் சூழ்வதற்கு பல காரணங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். சூரியன் மறைந்து இருள் சூழ்வது ஒரு வகை, அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டு ஒளியே புக முடியாத ஒரு அறையில் இருள் சூழ்வது ஒரு வகை, பல மைல்கள் பூமிக்குள் நீண்டு ஒளி புகாத குகைகள் பலவற்றிலும் இருள் மண்டிக் கிடப்பது ஒரு வகை, இறைவனின் கண்களான சூரிய சந்திரர்களை பார்வதி மறைத்தபோது பூமியெங்கும் இருள் சூழ்ந்தது ஒரு வகை. சில வருடங்களுக்கு முன் தொற்றுநோயின் ஆக்கிரமிப்பால் உலக மக்கள் மனதில் இருள் சூழ்ந்ததை பல்லாண்டுகளுக்கு முன்னரே தன் தீர்க தரிசனத்தால் அறிந்து உரைத்து வரவிருக்கும் துன்பங்களிலிருந்து தம் அடியார்கள் மூலம் இவ்வுலக சமுதாயத்தை மன இருளிலிருந்து காக்க சித்த ஒளி என்னும் பாதுகாப்பு குடையை அளித்ததும் நம் சற்குருவின் கருணைதானே?

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

இவ்வாறு உலக சமுதாயத்தை தொற்று நோய்களின் கொடுமைகளிலிருந்து காக்கும் முகமாகவே நம் அடியார்கள் லால்குடி அருகே நகர் திருத்தலத்தில் சுமார் ஒரு மணி நேரம் பாஞ்சசன்ய சங்கு நாதத்தை எழுப்பினார்கள். அதை இங்கு நீங்கள் கேட்டு மகிழலாம். மரண பயம் என்பது ஒருவரை பீடித்தால்தான் அது எத்தகைய கொடுமையான ‘நோய்’ என்பதை உணரவே முடியும். அத்தகைய கொடுமையான நோய்க்கும் ஓரளவு நிவாரணம் அளிப்பதே இங்கு நீங்கள் கேட்கும் பாஞ்சசன்ய சங்கு நாதமாகும். மரண பயம் தோன்றா விட்டாலும் கடுமையான வியாதிகளால் படுத்த படுக்கையாய் இருப்பவர்கள் இந்த சங்கு நாதத்தை தொடர்ந்து கேட்பதால் பயன் பெறலாம்.

இது வெறும் சங்கு நாதம் அல்ல, தொடர்ந்து இந்த சங்கு நாதத்தை கேட்டு வந்தால் அவரவர் மூதாதையர்களின் ஆறுதல் வார்த்தைகளையும், வழிகாட்டுதலையும் தெளிவாகப் பெற முடியும் என்பதே இந்த சங்கு நாதத்தின் மகிமைகளில் ஒன்றாகும். ஒரு சூரியனின் ஒளியைக் கூட நாம் நேரடியாக காண முடியாது, காணவும் கூடாது என்பதே சூரிய ஒளியின் சக்தியாகும். ஆனால், நகர் திருத்தலத்தில் திகழும் முள்ளில்லா வில்வ காய், கனிகளை எத்தனை வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் கண்டு சூரிய சக்தியைப் பெறலாம் என்பதே இத்தலத்தின் மகிமையாகும். ஆயிரமாயிரம் சூரியன்களின் சக்தியை ஒத்த முள்ளில்லா வில்வ காய்களை நாம் தரிசிக்க அருள் புரிந்த நம் சற்குருவின் மகிமையை என்னவென்று கூறுவது?

இந்த முள்ளில்லா வில்வ மரம் தோன்றியதும் பல தேவயுகங்களுக்கு முன் ஒரு ஸ்ரீரெங்க பஞ்சமி தினத்தன்றுதான் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் ஆன்மீக இரகசியமாகும்.

பிள்ளையார் பிடிக்க...

பிள்ளையார் பிடிக்க குரங்காய்ப் போயிற்று… என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் உள்ள தொடர்பை இந்தப் பழமொழி விளக்குகிறது.

“ராம நாமத்தின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் ஒரே ஒரு முறை ராம் என்று கூறிவிட்டு கடலைத் தாண்டி இலங்கைக்குள் குதித்தார் ஆஞ்சநேயர். அதே ராமரோ கடலைத் தாண்ட லட்சக் கணக்கான குரங்குகளை வைத்து இலங்கைக்கு பாலம் கட்ட வேண்டியிருந்தது…,” என்பார் பரமஹம்சர்.
அதுபோல் சூரிய நாடி சந்திர நாடி இரண்டையும் ஒன்றில் ஒன்று இலயம் அடையச் செய்து, சுசும்னா நாடியில் சுவாசத்தை செலுத்தி குண்டலினி சக்தி மூலம் இறைவனை அடைவது ஒரு வகை.

இதயத் தாமரையும்
உதயத் தாமரையும் நகர்

பாஞ்சசன்ய சங்கில் காலம் தேசம் இரண்டையும் இலயம் அடையச் செய்து அவ்வாறு கிட்டும் ஓங்கார சக்தியால் உலகத்தவர்க்கு நன்மை பெருக்குவது நம் சற்குரு கட்டும் ‘இனிய தெய்வீகப் பாலம்’ ஆகும்.

சங்கினுள் துலங்கும் வலம்புரி, இடம்புரி அமைப்புகள் சிவத்தைக் குறிப்பது. தேசம், இடம் என்ற அம்சங்களுடன் பொலிவது. சங்கில் அடியார்கள் எழுப்பும் நாதம், சக்தி அம்சத்துடன் பொலிவது. கால அம்சமாகப் பொலிவது. அடியார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால இடைவெளியில்தானே சங்கொலியை எழுப்புவார்கள்.

அசையா தேச சக்திகளை அசையும் கால இடைவெளியில் இணைக்க வல்ல, இலயமாக்க வல்ல சக்தி கொண்ட ஒரே பெருந்தகை நம் சற்குரு மட்டுமே, இதைக் குறிப்பதாகவே திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய கிரிவலப் பகுதியில் நம் ஆஸ்ரமத்தை அமைத்தார் நம் சற்குரு.

சட்டி பரதேசி என்பவர் பன்றிமலை சுவாமிகளின் குருநாதர். திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரையைச் சேர்ந்த புனிதர். ஒவ்வொரு மூன்றாம் பிறை தரிசன நாள் அன்றும் திருஅண்ணாமலை, குறித்த தலங்களில் வலம் வந்து புனிதத்தைப் பரப்புபவர். பாஞ்சசன்ய சங்கொலியில் சிவசக்தி ஐக்ய சக்திகளை இணைக்கும் இம்மகான் அறிவித்த தானமுறையை இங்கு அளிக்கிறோம்.

அமாவாசை அன்று ஒரு புதுச் சட்டியில் பசும் பாலைக் காய்ச்சி உறை ஊற்றி வைக்க வேண்டும். உறை ஊற்றிய பின்னர் அந்தச் சட்டியை எக்காரணம் கொண்டும் அசைக்கக் கூடாது, மூன்றாம் பிறை தரிசன நாள் அன்று அந்த சட்டித் தயிரில் கைப்பிடி அளவு சர்க்கரை சேர்த்து ஏழைகளுக்கு சட்டியுடன் தானம் அளித்து விட வேண்டும்.

அவரவர் சக்திக்கு இயன்ற வரையில் மேற்கூறிய முறையில் எத்தனை தயிர் சட்டிகளை வேண்டுமானாலும், ஒருவருக்கு ஒரு சட்டித் தயிர் என்ற வகையில், தானம் அளிப்பது இவ்வருடம் நிறைவேற்றக் கூடிய அற்புத பரதேச தானமாகும். இதனால் கிட்டும் பலன்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே.

திருஅண்ணாமலை அபய மண்டபப் பகுதி, தசமுக தரிசனப் பகுதி, மூன்றாம் பிறை தரிசனத் திருத்தலங்கள், பாடல் பெற்ற தலங்கள் போன்றவற்றில் இத்தகைய தானங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

விஞ்ஞானத்தால் கலப்படம் செய்ய
முடியாதது நிறம் மட்டுமே!

தானத்திற்கு முன்னர்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பிருஹஸ்பதயே நமஹ என்று ஓதி மஞ்சள் நிறப் பூக்களாலும்
(உதாரணம் செவ்வந்தி, பொன்னரளி)
ஹரி ஓம் நாராயணாய நமஹ என்று ஓதி வெள்ளை நிறப் பூக்களாலும்
(உதாரணம் தும்பை, வெண்தாமரை, சங்குப்பூ)
ஓம் கார்த்திகாய நமஹ என்று ஓதி சிவப்பு நிறப் பூக்களாலும்
(உதாரணம் சிவப்பு அரளி, செந்தாமரை)
ஓம் ஈஸ்வராய நமஹ என்று ஓதி பவளமல்லி பூக்களாலும்
(மாற்றாக மூன்று நாகலிங்கப் பூக்கள் மட்டும், 108 பவளமல்லி மலர்களுக்குப் பதிலாக)
இந்த சட்டித் தயிரை சிவசக்தி ஐக்ய சொரூபமாக பாவித்து 108 முறை மேற்கூறிய மந்திரம் ஓதி பூஜித்தல் சிறப்பாகும். அவரவர் வசதியைப் பொறுத்து ஏதாவது ஒரு மலரால் அர்ச்சித்தல் கூட ஏற்புடையதே. அர்ச்சனைக்குப் பின் இந்த நிர்மால்ய மலர்களை ஓடும் நீரில் விட்டு விடுதல் சிறப்பு. வேலை இல்லாமல் அவதிப்படுபவர்களும், நிரந்தர வேலை வாய்ப்பைப் பெறாதவர்களும் இத்தகைய தான தர்மங்களால் நலம் பெறுவர்.

மேற்கூறிய தானத்தின் பலன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் அதை ஒரு அடிமை கண்ட ஆனந்த வர்ணனையாக இங்கு அளிக்கிறோம்.
திருச்சி அருகில் உள்ள குணசீலம் பெருமாள் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நம் சற்குருவால் நிறைவேற்றப்பட்டபோது அங்குள்ள மனநோயாளிகளின் விடுதியை தூய்மைப்படுத்தும் திருப்பணியும் நிறைவேற்றப்பட்டது. அப்போது அங்குள்ள மன நோயாளிகள் பலரையும் பிரம்பு கொண்டு அடிக்கும் செயலைக் குறித்து நம் அடியார்கள் கேட்டபோது நம் சற்குரு புன்முறுவலுடன், “திருக்கோயிலில் எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்காகத்தான்… ,” என்று கூறி அங்குள்ள ஒரு நோயாளியைச் சுட்டிக் காட்டினார்.

“இந்த அறியா வயதுடைய பாலகன் போல் தோன்றும் இவன் தன்னுடைய முந்தைய பிறவியில் ஒரு மனநோயாளிப் பெண்ணிடம் தகாத உறவு கொண்டு அவளை கர்ப்பவதி ஆக்கி விட்டான், பின்னர் அவளை நிராகரித்தும் விட்டான்…தாய் மனவளர்ச்சி இல்லாத காரணத்தால் பிறந்த குழந்தையும் உணவின்றி இறந்து விட்டது… இந்தக் கர்மத்தை எப்படி சரி செய்வது? இங்கு இவனுக்கு வழங்கப்படும் பிரம்படியால் சிறிது சிறிதாக தன்னுடைய தவறுகளை உணர்ந்து கொள்வான். அடுத்த பிறவியில் இவன்  அந்த மனநோயாளிப் பெண்ணுக்கும், மறைந்த அந்த குழந்தைக்கும் நல்வழி காட்டும் சேவையைச் செய்ய பெருமாள் துணை புரிவார்…”, என்றார்.

குணசீலம் ஸ்ரீதார்மீகநாதர் சிவாலயம்

பிரம்படியால் மனம் திருந்துவது ஒரு வகை கர்மவினைக் கழிப்பு என்றாலும் பிரம்படி இன்றி தானதர்மத்தாலும் நமக்கு நல்வழி புகட்டுபவரே சட்டி பரதேசி.

“சிவபெருமான் அடிக்கடி விஜயம் செய்யும் இடம், அதாவது வந்து போகும் இடம் இமயமலை என்னும் திருக்கயிலை. ”
“சிவபெருமான் தானே மலையாய் அமர்ந்த இடம் திருஅண்ணாமலை…”
“நினைத்தவுடன் பஸ் அல்லது கார் ஏறி டர்… என்று வந்து விடுகிறீர்கள் அண்ணாமலைக்கு, ஆனால், உங்கள் பித்ரு மூர்த்திகளுக்கோ பல மில்லியன் (லட்சாதி லட்சம்) வருடங்களுக்கு ஒரு முறையே திருஅண்ணாமலையை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது…,” என்பார் நம் சற்குரு.

இத்தகைய அரிதிலும் அரிய திருஅண்ணாமலை தரிசனத்தை நாம் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வழிசெய்வதே சட்டி பரதேசி வழங்கும் சட்டி தயிர் தான வழிபாடு.
சட்டி என்பது குருவைக் குறிக்கும் மூன்று எழுத்துக்களால் ஆன ஒரு அட்சய பாத்திரம். இதில் இறைவனின் பெருங்கருணை என்ற வல்லின சக்தியை தன்னுடைய தவவலிமையால் “பிடித்து” அதை பக்தர்களுக்கு குரு கருணையாக அளிப்பவரே சட்டி பரதேசி. காலம் என்ற பரத்தையும், தேசம் என்ற இடத்தையும் ஒருங்கிணைத்து, இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒரு அனுகிரகத்தை அளிப்பவரே சட்டி பரதேசி.

ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி

சிவபெருமான் இமயமலைக்கு வரும்போது சுவாமிக்கு மெய்க்காப்பாளாராக அமையும் பெரும் பொறுப்பு கொண்டவரே ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி. அனைத்து கருப்பண்ண சுவாமிகளுக்கும் ஆதியாய்த் தோன்றி அருள்புரியும் காவல் தெய்வம்.

N2023 வருடத்தில் அஷ்டமி திதி, சனிக் கிழமை, கரிநாட்களில் ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமியின் அழைப்பாக நம் சற்குரு அருளிய கீழ்க் கண்ட துதியை அடியார்கள் சத்சங்கமாக ஓதி வருதலால் உடல், மனக் காப்புப் பெறுவர் என்பது உறுதி.

தலவிருட்சம் மகிழமரம்
ஆதிதிருவரங்கம்

தினமும் இரவு உறங்குவதற்கு முன்னர், நெடும் பயணங்கள் மேற்கொள்ளும் முன்னர் குறைந்தது 108 முறை ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமியின் காயத்ரீயை ஓதுவதால் எத்தகைய ஆபத்துக்களும், தொற்றுநோய்களின் துன்பங்களும், கொடிய கனவுகளும் அண்டாமல் அடியார்கள் அமைதி பெறலாம்.

ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி அழைப்பு
வானமே எல்லையாய் வளர் கீர்த்தி மேவியே வீச்சருவா ஏந்திய மூதா கருப்பண்ண சுவாமியே
வகையுடன் நின்றிங்கு வாழ்த்துகின்ற பக்தரின் வாட்டமெல்லாந் தவிர்த்து
ஞானமே உருவாகி ஞாயிற்றின் ஒளியென நானிலத்திருள் நீக்கிடும் எமது குல தெய்வமாய் நாடெல்லாம் போற்றவே நலம் தரும் மூதா கருப்பண்ண சுவாமியே
அளவிலா உவகையோடு அலைகடல் என்னவே ஆர்ப்பரித்து ஓசை கூட்டிக் கானமே இசைத்திங்கு கணக்கிலே பல யுகமாய்
கருணையோ டெம்மைக் கண்டு கண்களெனக் காத்திடும் மூதா கருப்பண்ண சுவாமி திருவடியே சரணம் சரணம் சரணம்

ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி காயத்ரி
ஓம் தத் புருஷாய வித்மஹே
சப்தப்ரம்ம மஹாதேவாய தீமஹி
தந்நோ ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி ப்ரசோதயாத்

முன் பின் சங்கு ஊதிய அனுபவமே இல்லாத ஒரு அடியார் மேற்கண்ட கருப்பண்ண சுவாமி காயத்ரீயை ஓதியே சங்கொலி எழுப்ப ஆரம்பித்தார் என்றால் “சப்தப்ரம்ம மகாதேவராக” விளங்கும் மூதா கருப்பண்ண சுவாமியின் மகிமைதான் என்னே!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam