இதயத்தில் ஈசனைக் காணா விட்டால் வேறெங்கு காண்பாய் ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சூரிய வெப்பம் மிகுவதேன் ?

கோளின்றி உயிர்கள் இல்லை என்று நவகிரகங்களின் அருள் இல்லாமல் இப்புவியில் எந்த உயிரினமும் ஜீவிக்காது என்று நம் முன்னோர்கள் பற்பல யுகங்களுக்கு முன்பே நமக்குத் தெரிவித்துள்ளனர். அத்தகைய கோள்களில் பிரதானமாக விளங்கும் சூரிய பகவான் மிகுந்த வெப்பத்தை வெளியிட்டு பூமி மக்களுக்கு துன்பம் விளைவிக்கிறார் என்று நாம் நினைத்தால் அது எப்படி சரியாக இருக்க முடியும் ? அதே சமயத்தில் நாளுககு நாள் சூரியனின் வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மையே.

எனவே சூரிய பகவானைப் பற்றிய ஆன்மீக இரகசியங்களை அறிந்து கொண்டால்தான் சூரிய வெப்பம் பற்றிய உண்மையையும் நாம் உணர முடியும். நமது பூமிக்கு என உள்ளது ஒரே சூரியன் என்றாலும் பூமியில் வாழும் பல கோடி மக்களும் உணரும் சூரிய ஒளி சக்தியும் வெப்ப சக்தியும் மனிதனுக்கு மனிதன் மாறி அமையும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். இந்த ஆன்மீக இரகசியத்தின் ஒரு சில கூறுகளைப் பற்றி மட்டும் நாம் இப்போது விளக்கமாகக் காண்போம்.

மனிதர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் அவர்கள் மன நிலை முற்றிலும் ஒருவொருக்கொருவர் மாறியே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு மாறி அமைந்துள்ள குண நலன்களுக்கு அடிப்படையாக உள்ளது சத்துவ, தமோ, ரஜோ குணங்களின் விகிதாசாரமே. இந்த முக்குணங்களைப் பற்றிய விளக்கங்கள் ஏராளமாக இருந்தாலும் சூரிய வெப்பத்திற்கும் இந்த முக்குணங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு தமோ குணம் எந்த அளவிற்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு அவன் அதிகப் படியான சூரிய வெப்ப சக்தியை ஈர்ப்பான், உணர்வான். விஞ்ஞானக் கூற்றின்படி ஒளியும் வெப்பமும் பிரிக்க முடியாதவை. ஆனால், மெய்ஞான அளவுகோலின்படி ஒளியையும் வெப்பத்தையும் இநத முக்குணங்களால் எளிதாக பிரிக்க முடியும். அதாவது சத்துவ குணம் அதிகமாக உள்ள ஒரு மனிதன் அதிக அளவில் சூரிய ஒளியைப் பெறுவான் ஆனால் அதே சமயம் அவன் பெறும் வெப்ப சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும்.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டாத இந்த முக்குணத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால்தான் நாம் சூரிய வெப்பத்தைப் பற்றி ஓரளவிற்காவது புரிந்து கொள்ள முடியும். ஏன் தமோ குணத்தை அதிகமாகப் பெற்றவர்கள் சூரிய வெப்பத்தையும் அதிகமாக ஈர்க்கிறார்கள் என்ற வினா உங்கள் மனதில் எழக் கூடும் அல்லவா? இறைவன் நம்மீது கொண்ட பெருங் கருணையின் வெளிப்பாடாகவே தமோ குணம் வெப்பத்தை ஈர்க்கும் தன்மையைப் படைத்துள்ளார். சமுதாயத்தில் எந்த அளவிற்கு தமோ குணம் அதிகரிக்கிறதோ அநத அளவிற்கு முறையற்ற ஆசைகளும் காம எண்ணங்களும் தலை விரித்தாடும். இந்த காம எண்ணங்களின் தீய விளைவுகளை அக்னி சக்தியால் அன்றி எந்த சக்தியாலும் குறைக்கவோ, அழிக்கவோ முடியாது. எனவே காம எண்ணங்களால் இந்த பூமி அழிந்து விடாமல் மக்களைக் காப்பதற்காகவே சூரிய வெப்பத்தை அதிகரித்து காம எண்ணங்களை பஸ்மமாக்கி அருள்புரிந்து வருகிறார் எம்பெருமான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? சூரிய வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் ஒரே மார்கம் தமோ குணத்தைக் குறைத்துக் கொள்வது ஒன்றுதான். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும் ? ஆனால், எந்த விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றிய முழுமையான ஞானத்தை அளிக்க வல்ல சித்தர் பெருமான்களே தமோ குணத்தை மாய்க்க வல்ல எளிய வழிபாட்டு முறைகளை கலியுக மக்களின் மேன்மைக்காக அருளியுள்ளனர்.

ஆசையை விட்டு விடுவது என்பது இயலாத காரியம். அதற்காக நம் முன்னோர்கள் காட்டிய வழி என்ன ? ஆசையை அழிக்க முடியாதுதான், ஆனால் ஆசையைத் திசை திருப்பி விடுவது ஓரளவிற்கு எளிமையான காரியம் அல்லவா? அதனால் பெண்ணாசையோ, பொன்னாயையோ இருந்தால் அந்த ஆசையை விட முடியாதவர்கள் அதற்காக இறைவன் மேல் ஆசையை வளர்த்துக் கொண்டே வந்தால் என்றாவது ஒரு நாள் இந்த முறையற்ற ஆசைகள் விலகும் என்பதே அவர்கள் நமக்குச் சுட்டிக் காட்டிய பாடம்.

அதே போல தமோ குணத்தைக் களையும் வழியைப் பற்றி யோசிப்பதை விட இறைவன் மேல் பக்தியை வளர்க்கும் சத்துவ குணத்தை அதிகமாக்கிக் கொண்டால் அதனால் தமோ குணம் நிச்சயமாகக் குறைந்து விடும் அல்லவா ? இதுவே ராமாயணம் நமக்குக் காட்டும் அற்புத பாடமாகும்.

சரணாகதி தத்துவம்

ராமாயணப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டால் அதில் விபீஷணன் சத்துவ குணச் செம்மலாகவும், ராவணன் ரஜோ குணத் திலகமாகவும், கும்பகர்ணன் தமோ குணத்தின் அதிபதியாகவும் பங்கேற்று உள்ளனர். எனவே சத்துவ குணத்தைப் பெருக்கிக் கொள்ள விருமபுவோர் விபீஷணனை முன்னோடியாகக் கொண்டு அவர் காட்டிய அப்பழுக்கற்ற சரணாகதித் தத்துவத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் சத்துவ குணத்தை எளிதில பெருக்கிக் கொள்ளலாம் என்பது உறுதி. அசுரனாகப் பிறந்த விபீஷணன், விபீஷண ஆழ்வார் என்று பெரியோர்களால் புகழப்படும் ஓர் உயர்ந்த தகுதியைப் பெறக் காரணமாக இருந்தது அவருடைய சரணாகதி தத்துவமே. சரணாகதி என்றாலே விபீஷண சரணாகதி என்று பாராட்டப் படும் அளவிற்கு தகுதி பெற்றதே விபீஷணனுடைய ஆத்ம சமர்ப்பணம்.

சரணாகதி தத்துவம் என்பது வெறும் சூரிய வெப்பத்திற்கான மருந்து மட்டுமல்ல. அது அனைவரின் வாழ்க்கைக்கான அற்புத பாடம். ஆன்மீகம் என்னும் சொல்லிற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் இறைவனிடம் ஆன்மாவை சமர்பிப்பதே ஆன்மீகம் என்பதே அனைவரும் உணரக் கூடிய எளிமையான பாடமாகும். இந்த ஆத்ம சமர்ப்பண ரகசியத்தை நிறைவேற்றும் முறையே சரணாகதி தத்துவமாகும். இதைவிட உயர்ந்த, அதே சமயத்தில் பாமரரும் ஆற்றக் கூடிய எளிய வழிபாட்டு முறை வேறெதுவுமே இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. .

இராமயணத்தில் சுந்தர காண்டம் முழுமையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் இந்த விபீஷண சரணாகதி பகுதியை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து வந்தால் இறைவன் திருப்பாதங்களில் பக்தி மலரும் என்பது உறுதி. சிவன், பிள்ளையார், முருகன், சக்தி என எந்த தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வைத்து வழிபடுபவர்களாக இருந்தாலும் அவர்கள் விபீஷண சரணாகதி பண்பாட்டை வளர்த்துக் கொள்வதால் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு விபீஷண சரணாகதி சர்க்கத்தை படிப்பதற்கும் சாதகமான சூழ்நிலை அமையப் பெறாதவர்கள் கீழ்வரும் பாடலை தினமும் 21 முறைக்குக் குறையாமல் ஓதி மாதம் ஒரு முறை மங்கள சாசனம் பெற்ற பெருமாள் தலங்களில் 21 பாதசரட்சைகளைத் தானம் அளித்தலால் ராம பக்தியை எளிதில் பெருக்கிக் கொள்ளலாம்.

  குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்  
  மகனொடும் அறுவர் ஆனோம் எம்முறை அன்பின் வந்த
  அகனமர்க் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

மாயத் திரை வேண்டாம்

1994ம் வருடம் மே மாதம் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி.

எண்ணற்ற திருக்கோயில்களில் நமது வெங்கடராம சுவாமிகள் உழவாரத் திருப்பணிகள் செய்து அருந் தொண்டாற்றி வந்துள்ளார்கள் அல்லவா ? அது போல் திருச்சியிலுள்ள ஒரு பெருமாள் கோயிலில் உழவாரத் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது கோயில் அலுவலர் ஒருவர் நமது அடியார்களை அணுகி, ”சார், இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. அப்போது பெருமாளும் தாயாரும் இந்த பிரகாரத்தில் எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு அலங்காரம், ஆராதனை எல்லாம் இங்குதான் நடக்கும்.

இறை மூரத்திகளுக்கு அலங்காரம் செய்யும்போது நாம் திரையிட்டு விடுவோம் அல்லவா ? அந்த திரை பல ஆண்டுகளாக பயன்பட்டு வருவதால் அது மிகவும் அழுக்கடைந்து பல இடங்களில் எலி கடித்து ஓட்டைகள் வேறு ஏற்பட்டு விட்டது, ” என்று சொல்லி தற்போது பயன்படும் அந்தத் திரையைக் காட்டினார். அது உண்மையிலேயே திரைசீலையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மோசமாகத்தான் இருந்தது. "இந்தத் திரையை மாற்றலாம் என்றால் இது மிகவும் பெரிய திரையாக இருப்பதால் பல ஆயிரக் கணக்கான ரூபாய் செலவழியும் போல் உள்ளது. அந்த அளவிற்கு செலவு செய்ய கோயில் நிர்வாகத்தால் முடியாது. நீங்கள் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலிருந்து வருவதாகச் சொல்கிறீர்கள். உங்களால் முடிந்தால் புதிதாக ஒரு திரைச்சீலையை வாங்கித் தாருங்கள். உபயதாரர் என்ற முறையில் திரை மீது உங்கள் ஆஸ்ரம விலாசத்தையும் எழுதிக் கொள்ளலாம்,” என்றார் கோயில் அலுவலர்,

அடியார்களும், ”ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இதை நாங்கள் எங்கள் சன்னிதானத்திடம் கேட்டு ஓரிரு நாட்களில் பதில் கூறுகிறோம்," என்று சொல்லி விட்டு நமது வெங்கடராம சுவாமிகளிடம் திரைசீலைப் பற்றிய விவரத்தை அடியார்கள் தெரிவித்தார்கள். அனைத்தையும் அமைதியாகக் கேட்ட பின் சுவாமிகள், ”சுவாமி அலங்காரத்துடன் காட்சி அளிக்கும்போது அல்லது பவனி வரும்போது சுவாமியைப் தரிசிக்கும்போது எங்காவது இருட்டாக இருக்கிறது, அல்லது இப்போது இருக்கும் வெளிச்சம் போதவில்லை என்றால் சுவாமியை நன்றாகத் தரிசனம் செய்யும் அளவிற்குத் தேவையான சக்தி வாய்ந்த மின் விளக்குகளையோ இதர வசதிகளையோ செய்து தருவதுதான் இறை அடியார்களின் கடமையே தவிர சுவாமியைத் திரையிட்டு மறைக்க நாம் துணை போகலாமா ? இந்த சின்ன விஷயம் கூட உங்கள் மூளைக்கு எட்டவில்லையா ? “ என்று அன்புடன் கேட்டார்.

சுவாமிகளின் அற்புதமான இந்த பதிலைக் கேட்ட அனைத்து அடியார்களும் பிரமித்துப் போய் விட்டனர். மிகவும் சாதாரணமான இந்த விஷயத்தைக் கூட தொட்டுக் காட்ட ஒரு சற்குரு அவசியம் தேவை என்பதை அங்கிருந்த அடியார்கள் உணர்ந்தார்கள். சம்பந்தப்பட்ட அடியார்கள் இதைக் கூட நாம் யோசிக்கவில்லையே என்று எண்ணி வெட்கப்பட்டார்கள். சுவாமிகள தொடர்ந்து, ” இந்தச் சாதாரண விஷயத்தை உணர்ந்த கொள்ள பிரமாதமான தெய்வீக ஞானம் வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சத்துவ குணத்தைப் பெருக்கிக் கொண்டாலே இது போன்ற தெய்வீக விஷயங்களைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளலாம்,” என்று சத்தவ குணத்தைப் பற்றி விளக்கினார்கள் சுவாமிகள்.

கடம்பனின் கருணை மைந்தன்

இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒளிக்கெல்லாம் மூலமான புனித ஒளி எது ? அது எம்பெருமானின் முக்கண் ஒளியே என்பதில் என்ன ஐயம் ? இந்தப் புனிதமான ஒளியில் தோன்றிய முருகப் பெருமானுக்கு விருப்பமான கடம்ப மரத்தை முறையாக வழிபடுவதால் பூமியில் கடம்ப சக்திகள் அதிகரிக்கும். எந்த அளவிற்கு கடம்ப சக்திகள் பூமியில் பெருகுமோ அந்த அளவிற்கு சூரிய வெப்பம் குறையும் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.

எனவே கடம்ப மரம் தல விருட்சமாக உள்ள திருக்கோயில்களில் அம்மரங்களுக்கு நீர் வார்த்து தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூசி வழிபடுவதால் கடம்ப சக்திகள் சமுதாயத்தில் பெருகுவதுடன் இவ்வழிபாட்டை இயற்றும் பக்தர்களுக்கும் அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் பலவிதமான வெப்ப நோய்கள் தீர்வதுடன் குடும்பம், அலுவலகங்களில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் தீரும்.

  நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
 தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் 
 தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
 என்க டன்பணி செய்து கிடப்பதே

என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகத்தை ஓதி மேற்கூறிய வழிபாட்டை நிறைவேற்றுதல் சிறப்பு.

 மண் கடம்பால் மாயை போகுமே
 வெண் கடம்பு விதியை மாற்றுமே
 எண் கடம்பும் ஈசா நினதருளே

எனும் பாடைலை 18 முறை ஓதி வழிபடுதலும் சிறப்பே.

கடம்ப மரம் தலவிருட்சமாக உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் (மதுரை, குளித்தலை, திருச்சி உத்தமர் கோயில்) இவ்வழிபாட்டை மேற்கொள்ளலாம். வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் கடம்ப பூக்கள் மலர்ந்தாலும் சூரிய வெப்ப சக்திகளை மாற்றும் சக்தி வெண்கடம்ப மரத்திற்கே சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புருவமும் புருஷ லட்சணமும்

சூரியன் முதலான நவகிரகங்களின் சக்திகள் வானத்தில் மட்டுமல்லாது நமது உடம்பிலும் பல பாகங்களிலும் வியாபித்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. சிறப்பாக கைகள், கண்கள், முதுகு இவற்றில் நவகிரக சக்திகள் அதிக அளவில் பரிணமிக்கின்றன. அதனால்தான் கணவன்மார்கள் குளிக்கும்போது மனைவிமார்கள் அவர்களுக்கு முதுகு தேய்த்து விடுவதால் பெண்கள் எவ்வித சிரமமும் இன்றி அபரிமிதமான நவகிரக சக்திகளைப் பெற்று விடலாம் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அது போல பெண்களின் வலக் கண் சூரிய சக்திகளையும் இடக் கண் சந்திர சக்திகளையும் பெற்றிருக்கும். இந்த இரு கண்களுக்கும் இடையே பொட்டு வைக்காமல் புருவ மையத்திற்கு மேல் பொட்டு வைப்பதால் சூரிய சந்திரர்களுக்கு சாட்சியாக அமையும் நட்சத்திர சக்திகள் பரிணமித்து பெண்களுக்கு மாங்கல்ய சக்திகள் பெருகும். சப்த ரிஷிகளில் நிலையாக பதவி வகிக்கும் வசிஷ்ட மகரிஷியின் பத்தினியான அருந்ததி தேவி இந்த நட்சத்திர மண்டலத்தில் உறைந்து மங்கள நட்சத்திர சக்திகளை அளிக்கிறாள் என்பது சுமஙகலிப் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக இரகசியமாகும். புருவ மத்தியில் பொட்டு வைக்கும் பழக்கம் அமாவாசை தத்துவமாக அமைவதால் அது இருட்டு என்னும் குண தோஷமாக அமைந்து நட்சத்திர மங்ள சக்திகளை இழப்பதால், அதனால் பெண்களுக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

வில் ஏந்திய வேலவர் திருவையாறு

மேலும் பலமுறை சித்தர்களும் மகான்களும் வேண்டிக் கொண்டபடி எககாரணம் கொண்டும் ஒட்டுப் பொட்டைப் பெண்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கடவுள் படைப்பில் அனைத்திற்கும் ஆழ்ந்த, அற்புத தெய்வீக காரணங்கள் உண்டு. ஒரு பெண்ணின் தலையில் எத்தனை முடி இருக்க வேண்டும், வலது கண் புருவத்தில் எத்தனை முடி இருக்க வேண்டும், இடக் கண் புருவத்தில் எத்தனை முடி இருக்க வேண்டும் என்ற கணக்கு முறைகள் உண்டு. அவற்றிற்கு காரணமும் உண்டு. வலது கண்ணை விட இடது கண்ணில் முடி எண்ணிக்கையும் வலிமையும குறைவாகவே இருக்கும். எனவே கண்களை விளையாட்டாக எண்ணிக் கொண்டு புருவங்களைச் சிரைப்பதால் பெண்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாவார்கள். அதில் ஒன்று சூரிய வெப்பத்தால் ஏற்படும் கண் சம்பந்தமான நோய்கள். புருவங்களைச் சிரைப்பதால் வலது கண் சூரிய சக்திகளை இழப்பதுடன், இடது கண்ணும் சந்திர சக்திகளை இழந்து விடும். இதனால் ஒரு பக்கம் உடல் சூடு அதிகம் ஆவதுடன், மறு பக்கம் உடலை குளிர்ச்சி செய்யும் சந்திர சக்திகளும் குறைந்து விடும். அது எப்படி ? சூரியனின் பிரதிபலிப்புதானே சந்திர ஒளி ?

மேலும் பெண்கள் ஆண்களை விட ஏழு மடங்கு ஆன்மீக பலம் உள்ளவர்கள் என்று கூறுகிறோம். இந்த பலத்திற்கு அடிப்படையாக அமையும் பல லட்சணங்களில் ஒன்று பெண்களுடைய நீண்ட கூந்தல். எனவே பெண்கள் எந்த அளவிற்கு தங்கள் கூந்தலை தூய்மையாக, முறையாக பராமரிக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய ஆன்மீக பலமும் சிந்தனைத் திறனும் பெருகும் என்பது உறுதி.

தற்காலத்தில் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் தங்கள் கூந்தலை கத்தரித்து பலவித வடிவங்களை அமைத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறான செயலாகும். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பெண் கூந்தலுக்கு இணையான ஒரு ஆன்மீக அதிசயத்தை மனிதனால், ஏன் எந்த விஞ்ஞானியாலும் உருவாக்க முடியாது.

இந்த அற்புத இரகசியத்தை, "மூலாதார மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே ... " என்று வெளியிட்டவர் ஔவைப் பிராட்டி என்னும் பெண் குலத் திலகம் அல்லவா ? குண்டலினி எனும் தெய்வீக சக்தி நமது மூலாதாரத்தில் உள்ளது. இந்த குண்டலினி சக்தியை எழுப்பி அதை உடலில் உள்ள சக்கரங்கள் வழியாக சகஸ்ரார சக்கரத்தில் இணைக்கும்போதே இறைக் காட்சி கிடைக்கிறது. குண்டலினி எழுச்சி பெறாமல் இறைக் காட்சி கிடைக்கவே கிடைக்காது. குண்டலினி எழுப்ப பெண்களுக்கு உறுதுணையாக இருப்பதே அவர்கள் பிணைக்கும் சடையாகும். மூன்று பகுதிகளாக தலை முடியைப் பிரித்து சடைபோடும்போது சடை நுனி மூலாதாரத்தை தொட்டுக் கொண்ட நிலையில் இருக்கும். அதனால்தான் மிகவும் நீண்ட கூந்தல் உடைய பெண்கள் மூலதாரப் பகுதியைத் தாண்டாமல் சடையை இரண்டாக மடித்து பின்னிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது.

பெண்கள் வாரம் இருமுறை அதாவது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தைல ஸ்நானம் செய்து அத்துடன் மூலிகை எண்ணெய்களையும் பயன்படுத்துவதால் அவர்களுடைய மூன்று சடைகளும் முக்குணங்களை தூய்மைப்படுத்தும் சாதங்களாக அமைந்து, தமோ ரஜோ குணங்கள் சத்துவ குணத்தில் ஆலிங்கனமாகி விட சத்துவ குணம் ஆக்ஞா சக்கரத்திற்கு வழிகாடடுகிறது. சத்துவ குணத்தையும் தாண்டினால்தான் இறை தரிசனம். பெரியோர்கள் சடை பின்னுவதை திரிகுண ஆலிங்கன யோகம் என்று கூந்தல் பரிபாலனத்தை ஒரு யோக முறையாகவே சிறப்பித்து வந்தார்கள். இந்த இரகசியத்தை உணர்ந்த சைனாவில் ஆண்களும் தங்கள் தலை முடியைக் கத்தரிக்காமல் சடை பின்னி இன்றும் ஆன்மீக சக்திகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

மேலும் தூய்மையான கூந்தல் பரவெளியில் உள்ள நல்லெண்ணக் கதிர்களை மட்டும் ஈர்த்து கபாலத்தில் செலுத்தும் சக்தி உடையது. பொதுவாக, நன்கு பராமரிக்கப்பட்ட கூந்தல் 12 மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள தூய கதிர் வீச்சை கிரகிக்கும் ஆற்றல் உடையது. அதே போல் 12 மைல் சுற்று வட்டாரத்திற்கு நல்லெண்ணங்களை பரப்பும் சக்தியையும் உடையது பெண்கள் கூந்தல். ஒரு முறை புத்தர் ஒரு கிராமத்திற்கு வந்திருந்தார். ஆனால், தன்னுடைய ஆன்மீக உரையை ஆரமபிக்காமல் எவருடைய வரவையோ பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ பணக்காரர்களும், பிரமுகர்களும் இருந்தாலும் அவர் யாரை எதிர்பார்க்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. சற்று நேரம் கழித்து நெல் அறுவடை செய்த பெண்ணொருத்தி அங்கு வந்த பின் தன்னுடைய பேச்சை ஆரமபித்தார்.

அங்கிருந்தவர்களுக்கோ ஒரே ஆச்சரியம். அத்தனை முக்கியஸ்தர்களை விட்டு விட்டு ஒரு சாதாரண கூலிக்கு நெல் அறுக்கும் பெண்ணிற்காக ஏன் புத்தர் அவ்வளவு கால தாமதம் செய்தார் என்று அவரையே வினவியபோது அவர் அமைதியாக, ” இந்தப் பெண் கூந்தல் என்னை இங்கு அழைத்து வந்து விட்டது,” என்றார். அவருடைய பதில் யாருக்கும் புரியவில்லை. மீண்டும் அவர்கள் விளக்கம் கேட்டபோது புத்தர், ”உங்கள் அனைவருக்கும் இறைவனைத் தெரிந்து கொள்ள வேண்டும் எண்ணம் உள்ளது, அதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த மாது இறைவனில் மூழ்கி அதில் விளையாடுபவள்,” என்று கூறி அவளுடைய கூந்தல் யோக மகிமையைப் பற்றியும் அவளுடைய உன்னத தெய்வீக நிலையைக் குறித்தும் விளக்கம் அளித்தார் புத்தர் பிரான்.

ஒரு சில அங்குலத்திற்கே சாதாரண மனிதனுடைய சூட்சும சரீரம் விரவி நிற்கும். ஆனால், புத்தருடைய சூட்சும சரீரம் 30 மைலுக்கு விரவி நின்றதாம். அதனால்தான் அவர் எளிதாக அந்த பெண்ணின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு அந்தப் பெண்ணின் ஆன்மீக ஆற்றலும் இருந்தது. காரணம் அவளுடைய அற்புத கூந்தல் பராமரிப்பும், பூஜையுமே.

பள்ளியில் பயிலும்போது காநத அலைகளைப் பற்றி படித்திருப்பீர்கள். நம் தலை முடியை உடலில் உராய்ந்து காந்த ஊசியின் அருகில் கொண்டு சென்றால் அது சுழலும். நமது தலை முடி, காந்த சக்தி, மின்னலைகள் இவற்றிற்கு உள்ள தொடர்பை இதன் மூலம ஓரளவிற்கு உணர முடிகிறது அல்லவா ? இதனால் என்ன பயன் ? பெண்கள் தங்கள் கூந்தலை வாரி சடையாகப் பின்னிப் போடுவதால் தலை முடி அனைத்தும் முதுகுத் தண்டின் மேல் படிந்து விடும். இதனால் முதுகுத் தண்டு நரம்புகள் காந்த சக்தியைப் பெறுகின்றன. காந்த சக்தி என்பது நம் உடல் நரம்புகளுக்கு வேண்டிய ஒரு வகை மின் சக்திகளே. இந்த மின் சக்திகளை அடிப்படையாகக் கொண்டுதான் தற்காலத்தில் ரேகி போன்ற மருத்துவ முறைகள் அமைந்துள்ளன. மனித உடலில் தொடர்பு மையமான மூளை இதனால் பெரிதும் ஆக்கம் பெறுகின்றது. ஆனால், தலை முடியை வாரி பின்னிக் கொள்ளாமல் அலைபாய விட்டால் (floating hair) தலை முடியின் ஒரு சிறு பகுதி மட்டுமே மூளைத் தண்டில் பதிந்து மிகக் குறைந்த அளவு மின் காந்த சக்திகளும் அதனால் குறைந்த மூளை வளர்ச்சியுமே ஏற்படும் என்தை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நாகரீகம் என்ற பெயரில் மூளை வளர்ச்சியைக் குறைக்கலாமா ? அறிவை இழப்பதா ? பெண்களே சற்றே சிந்தியுங்கள்.

உடல் அபரிமிதமான உஷ்ணத்தை அடைந்தாலும் அல்லது அளவுக்கு மீறி உடல் சூடு குறைந்தாலும் அதை சரி செய்ய உதவுவதே நமது சிறு மூளை. முதுகுத் தண்டு நரம்புகள் அலைபாயும் கூந்தலால் போதுமான சக்தியைப் பெறாவிட்டால் அதனால் சிறு மூளையும் பாதிக்கப்படும் அல்லவா? அப்போது நமது உடலில் வெப்ப நிலையும் தாறுமாறான நிலையை அடைந்து பலவிதமான நோய்கள் ஏற்படும். மேலும் சிறு மூளையைக் கட்டுப்படுத்துவது கபால வாயு. சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாத போதும் அலைபாயும் கூந்தலும் கபாலச் சூட்டை அதிகரிப்பதால் வாழ்க்கைக்கு அவசியமான முடிவுகளைச் சரியாக எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

யாரை மணப்பது, எந்த வேலையில் அமர்வது, யாரை நம்புவது, எங்கு பயில்வது, வாகனம் ஓட்டும்போது எப்படித் திரும்புவது என்ற முக்கியமான முடிவுகளைக் கோட்டை விட்டு விட்டர்ல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

சித்தர்கள் விளக்கியுள்ள திரிகுண ஆலிங்கன யோகத்தைப் பற்றி நேரில் கண்டு அனுபவித்த மகான்களுள் ராமகிருஷ்ண பரமஹம்சரும் ஆவார். ஒரு முறை அவர் விஷ்ணுபூரில் எழுந்தருளியுள்ள ம்ருண்மயி தேவியை தரிசிக்க சென்றிருநதார். தேவியைத் தரிசிக்கும் முன்னர் அக்கோயில் திருக்குளத்தைச் தரிசித்தார். அத்திருக்குள நீரிலிருந்து பெண்கள் தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் வாசனை திரவியங்களின் நறுமணம் தவழ்ந்து வந்தது. அதன் காரணம் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. பெண்கள் தேவியின் அபிஷேகத்திற்காக வாசனை எண்ணெய்களை, திரவியங்களை அளிப்பதுண்டு. ஆனால், பெண்கள் அத்திருக்குள நீரில் நீராடும் வழக்கமில்லை. அவ்வாறிருக்க வாசனை நறுமணம் எப்படி அங்கு வந்தது என்று யோசித்தார். எதையுமே அன்னை காளியிடம் கேட்டுப் பெறும் சிறுகுழந்தை அல்லவா ராமகிருஷ்ண பரமஹம்சர் ? எனவே இதைப் பற்றியும் அன்னையிடம் கேட்டபோது ம்ருண்மயி தேவி அத்திருக்குளத்தில் இடுப்பு வரையில் எழுந்தருளி பெண்கள் கூந்தல், ஆறு சக்கரங்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் ஆன்மீக விளக்கங்களை பரமஹம்சருக்கு நேரில் காட்டி அருளினாள்.

சூரிய ஒலி சூரிய ஒளி

சூரிய ஒளியைப் பெற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால், சூரிய ஒலியும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக இரகசியமே. பொதுவாக, உலகில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுக்கும் வடிவம் உண்டு. ஒரு பொருளின் வடிவத்தை உணர்ந்து கொள்ள ஒருவகையில் ஆதாரமாக இருப்பது ஒளி. வெளிச்சம் இருந்தால்தானே எந்தப் பொருளையும் காண முடியும், அது சூரிய வெளிச்சமாக இருந்தாலும் சரி, மின்சார விளக்கு வெளிச்சமாக இருந்தாலும் சரி. ஆனால், எல்லாப் பொருட்களுக்கும் ஒலி வடிவமும் உண்டு. இவ்வாறு முருகப் பெருமானை உருவமாக கண்டு களிக்கும்போது அவருடைய ஒலி வடிவத்தையும் நாம் தரிசனம் செய்வதற்காக மகான்கள் அவருக்கு ஒலி வடிவத்தையும் நமக்கு அருளியுள்ளார்கள். அவற்றையே மந்திரங்கள் என்று அழைக்கின்றோம். எனவே இறை மூர்த்திகளின் ஒலி வடிவங்களே மந்திரங்கள்.

எளிமையாகக் கூற வேண்டுமானால் நமது பெயரை நமது ஒலி வடிவம் என்று தோராயமாகக் கூறலாம். அதனால்தான் ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஒலி வடிவமும், ஒளி வடிவமும் உண்டு. உண்மையில் எல்லாப் பொருட்களும் முதலில் ஒலியாகி பின்னர் ஒளியாகி ஒளிர்கின்றன என்பது ஒரு சுவையான ஆன்மீக இரகசியமாகும். இதைத்தான் பைபிளும், ”In the beginning was the Word,” என்று கூறுகிறது. இதையே சிதம்பர இரகசியமாகப் பார்த்தால், ”ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான்”, என்று சிருஷ்டி இரகசியத்தை சித்தர்கள் எளிமைப்படுத்தி கூறுகிறார்கள்.

அதுபோல சூரிய மூர்த்திக்கும் ஒலி இரகசியம் என்று இருக்கும் அல்லவா ? ஆம், நிச்சயமாக. இந்த ஒலிக் கூறு இரகசியங்களுடன் எழுந்தருளியுள்ள சூரிய மூர்த்திகளையே சூரிய சரவண மூர்த்திகள் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். பெரும்பாலான சிவாலயங்களில் இத்தகைய சூரிய சரவண மூர்த்திகள் ஈசான்ய மூலையில் பைரவர், கால பைரவர், சனீஸ்வர மூர்த்தி, கணபதி மூர்த்திகளுடன் சேர்ந்து எழுந்தருளி இருப்பார்கள். மனிதனுடைய உடலில் மையமாக விளங்கும் இதயத்தில் லப் டப் என்ற ஒலி வியாபித்துள்ளதைப் போல சூரிய ஒலி சக்திகள் இத்தகைய சூரிய சரவண மூர்த்திகளிடம் மையம் கொண்டுள்ளன என்று சித்தர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.

எனவே இத்தகைய சூரிய சரவண மூர்த்திகள் முன் அமர்ந்து ஸ்ரீஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் துதியை 12 முறைக்குக் குறையாமல் ஓதி வந்தால் பெருகி வரும் சூரிய வெப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். இதன் பின்னால் உள்ள ஆன்மீய ரகசியங்கள் நம்மை வியக்க வைக்கும். சூரியன் காலையில் உதயம் ஆகும் போது அவருடைய ஒரு சிறு துளியையே, சொல்லப் போனால் ஒரே ஒரு கதிர் ஒளியை மட்டுமே நமது பூமி பெறுகிறது. மற்ற சூரியக் கிரணங்கள் எல்லாம் சுயம்பு மூர்த்திகள், திருஅண்ணாமலை, கைலாயம் போன்ற மலை முகடுகள், ஏழு கடல்கள், கங்கை காவிரி போன்ற புனித தீர்த்தங்கள், துளசி, வில்வம் போன்ற தெய்வீக மூலிகைகள் இன்னும் எண்ணற்ற இரகசிய பதார்த்தங்கள் சூரிய ஒளியை ஈர்த்து விடுகின்றன.

கடல் நீரை புனிதமாக்கிட ஏழு கடல் நீரையும் ஒரு துளியாக்கி தன் உள்ளங்கையில் வைத்து ஸ்ரீஅகத்திய மகரிஷி அருந்தினார் அல்லவா ? எனவே ஸ்ரீஅகத்திய மகரிஷி சூரிய வழித் தோன்றலாகிய ராமபிரானுக்கு உபதேசித்த ஆதித்ய ஹ்ருதய துதியை ஓதினால் ஏற்படும் பலன்களை வாய் விட்டுக் கூறவும் முடியுமோ ? ஸ்ரீஅகத்திய மகரிஷியின் இதயத்தில் என்றும் உறைபவர் எம்பெருமான், எம்பெருமானின் இதயத்தில் எப்போதும் ஒலிப்பது ராம தாரக மந்திரம். ராம பிரான் தோன்றிதோ சூரிய வம்சம். அந்தச் சூரியனே இந்தப் பூமியின் இதயம். இதையெல்ல்ம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இந்தப் பிறவியே போதாது.

ஸ்ரீஅகத்தியர் ராம பிரான்
நாச்சியார் கோவில்

ராமபிரான் இராவணனுடன் போருக்கு ஆயத்தமானபோது எதிரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இராவணனுடைய பராக்கிரமங்களை மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். அப்போதுதான் ராமருக்குத் தெரியும் இராவணன் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண அரக்கன் அல்ல, அகில உலகத்தையும் வெற்றி கொள்ளக் கூடிய பராக்கிரம சாலி என்று. அதை அறிந்த ராமர் மிகவும் கவலை கொண்டார். எப்படி இத்தகைய பராக்கிரமசாலியை வெல்ல முடியும் ? ராமர் என்னதான் விஷ்ணு மூர்த்தியாக இருந்தாலும் அவர் எடுத்து வந்த அவதாரம் சாதாரண மனிதப் பிறவிதானே.

அந்நிலையில் ராமபிரான் அகத்திய முனிவரை தரிசித்து தன்னுடைய நிலையை எடுத்துரைத்தார். அப்போதுதான் ஸ்ரீஅகத்தியர் ராமபிரானுக்கு ஆறுதல் வார்த்தைகள் அளித்து எத்தகைய பராக்கிரம சாலியையும் வெற்றி கொள்ளக் கூடிய ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீஅகத்திய முனிவரின் அருளுரையின் படி செயல்பட்டு இராவணனை வெற்றி கொண்ட ராம பிரான் மீண்டும் ஸ்ரீஅகத்தியரைத் தரிசித்து தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது ஸ்ரீஅகத்தியரும் ராமச் சந்திர மூர்த்தியும் சேர்ந்து மனிதர்களைப் போல சிரித்த முகத்துடன் ”போட்டோ” எடுத்துக் கொண்டார்களாம். அதைத் தற்போது கற்சிலை வடிவத்தில் திருச்சி நாச்சியார் கோவிலில் தரிசனம் செய்து மகிழலாம்.

எத்துறையிலும் வெற்றி பெற விரும்புவோரும், செய்நன்றி மறந்தவர்களும் இந்த ரிஷி தூண் அருகில் அமர்ந்து ஸ்ரீஆதித்ய ஹ்ருதயத்தை ஓதி வழிபடுதலால் அற்புத பலன்களை அடைவார்கள். குங்குமப்பூ, கற்கண்டு கலந்த பசும்பால் தானம் சிறப்பு.

வெறும் சூரிய வெப்பத்தைக் குறைப்பது மட்டும் சூரிய சரவண மூர்த்திகளின் அனுகிரகம் என்று கிடையாது. மனித மனம் எட்டாத எத்தனையே அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியவரே புனித ஈசான்ய மூலையில் எழுந்தருளியுள்ள சூரிய சரவண மூர்த்தி. தற்காலத்தில் பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருகின்றன. இதனால் சமுதாயம் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். இத்தகைய கொடுமையான செயல்களுக்கு ஓரளவு பிராயசித்தத்தை அளிக்க வல்லவரும் சூரிய சரவண மூர்த்தியே என்ற சித்தர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

ஒரு உண்மைச் சம்பவம். ஒருவருக்குத் திருமணமானபின அவருடைய மனைவி எப்போதும் மயக்க நிலையிலேயே இருப்பதை அறிந்து அதற்காக எத்தனையோ மருத்துவர்களை நாடி நிவாரணம் பெற முயன்றார். அது பலன் அளிக்காத போது அவரது மூதாதையர்களின் புண்ணிய பலனால் நமது குருமங்கள கந்தர்வாவை அணுகி தன் துயர் தீர்க்குமாறு வேண்டினார். அப்போது சுவாமிகள், ”இது உங்கள் பூர்வ ஜன்ம வினைப் பயனால் வந்தது. நீங்கள் ஒத்துக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மையை உங்களுக்கு விளக்கி விடுகிறேன். முன் ஜன்மத்தில் நீங்கள் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தீர்கள். அப்போது உங்களுடன் படிக்கும் மாணவி ஒருத்தி தலைவலி என்று உங்களிடம் வந்து மாத்திரை கேட்டபோது நீங்கள், ”என்னிடம் மாத்திரை இல்லை, கை வசம் ஒரு ஊசி தான் இருக்கிறது. அதைப் போட்டால் உடனே தலைவலி சரியாகி விடும்,” என்று கூறி போதை மருந்தை அந்த மாணவிக்கு செலுத்தி அவளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டீர்கள். அவள்தான் இன்று உங்களுக்கு மனைவியாக வந்து மயக்க நிலையிலேயே இருக்கிறாள். வினை விதைத்தவர்கள் பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ” என்று இதை விளக்கும் அகத்திய நாடப் பாடலையும் கூறினார்.

 அபயம் என வந்தவளை துள்ளி விழும்
 மானென அள்ளி எடுத்தான் அவள் தன்னிலை 
 மறக்கவே நினைவைக் கிள்ளி எடுத்தானே

இவ்வாறு மயக்க நிலையிலோ, தூக்கத்திலோ, மன வளர்ச்சி குறைந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களுக்கு ஓரளவு பிராய சித்த வழிமுறைகளைக் காட்டவல்லதும் சூரிய சரவண மூர்த்திகளின் வழிபாடாகும். கோதுமை புட்டு செய்து, தேங்காய் துருவல் சேர்த்து தானமாக அளித்து வருதலால் மேற்கூறிய தவறுகளுக்கு நிவாரண வழிமுறைகள் கிட்டும். ஆனால், திருந்திய மனதிற்கே பிராயசித்தம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

எனவே கோயில்களில் உள்ள ஒவ்வொரு தெய்வ மூர்த்தியும் அற்புத அனுகிரக சக்திகளை அருள வல்லவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா? சூரிய மூர்த்தி ஒருவர்தானே ஆனால் திருக்கோயில்களில் அவர் எப்படி எல்லாம் எழுந்தருளி உள்ளார்கள் பார்த்தீர்களா ? ஈசான்ய மூலையில் எழுந்தருளியுள்ள சூரிய மூர்த்திகள், நவகிரகமாகி எழுந்துருளியுள்ள சூரிய மூர்த்திகள், துவார பாலகர்களாக எழுந்தருளி உள்ள சூரியர்கள், லிங்க மூர்த்தியை தரிசித்தவாறே உள்ள சூரிய மூர்த்திகள், பத்தினிகளுடன் எழுந்தருளி உள்ள சூரிய மூர்த்திகள், தனித்தன்மை கொண்டு விளங்கும் சூரிய மூர்த்திகள் என்று சூரிய மூர்த்திகளே பல்வேறு நிலைகளில், திசைகளில், கோலங்களில் எழுந்தருளி உள்ளார்கள்.

இவர்கள் அனைவரைப் பற்றி விளக்க முற்பட்டால் மனித ஆயுள் போதாது என்பதால் ஒரு சில மூர்த்திகளைப் பற்றி மட்டும் இங்கு விளக்குகிறோம். புதிதாக வேலையில் சேருவோர்கள், படிப்பு ஆரம்பிப்பவர்கள் இவ்வாறு எதிலும் புதிய முயற்சியைத் தொடங்குபவர்கள் துவார பாலகர்களாக எழுந்தருளியுள்ள சூரிய மூர்த்திகளை வணங்கி முழு செந்தாமரை மலர் மாலைகளை சார்த்தி வழிபடுதலால் தஙகள் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.

திருச்சி பூவாளூர் போன்று தனித்தன்மையுடன் விளங்கும் சூரிய மூர்த்திகளை வணங்கி முழு முந்திரி கலந்த சர்க்கரைப் பொங்கலைத் தானமாக வழங்குவதால் சுய வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெறும். பெற்றோர்களுக்கு ஒரே ஆண் வாரிசாக உள்ளவர்கள் இவ்வழிபாட்டால் அற்புத பலன் அடைவார்கள்.

திருச்சி அருகே துடையூர் சிவாலயம் போல் பத்தினிகளுடன் எழுந்தருளியுள்ள சூரிய மூர்த்திகளை வணங்கி 12 நெய் விளக்கு தீபங்களை ஏற்றி வழிபடுதலால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

நவகிரக மூர்த்திகளாக விளங்கும் சூரிய மூர்த்திகள் பத்தினிகளுடன் எழுந்தருளி இருப்பதுண்டு. (உதாரணம் மலைக்கோட்டை, வயலூர், லால்குடி அருகே நகர்), இத்தகைய மூர்த்திகளை வணங்கி ஆறு முறை வலம் வந்து தேங்காய் சாதம் தானமாக வழங்கி வழிபடுதலால் ஜாதகங்களில் உள்ள உபய களத்தரம் (மறுமணம், சின்னவீடு) போன்ற தோஷங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிட்டும்.

இடர்களையும் இரட்டை வாகனம்

இரண்டு வாகனங்களுடன் விளங்கும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகள், ஒரு வாகனத்துடன் விளங்கும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகளைத் தரிசனம் செய்து இருப்பீர்கள். அபூர்வமாக இரண்டு வாகனங்களுடன் விளங்கும் பிள்ளையார் மூர்த்திகளும் உண்டு. இத்தகைய பிள்ளையார் மூர்த்திகள் சூரிய வெப்பத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதிலும் சிறப்பாக செவலூர் திருத்தலம் போல் கன்னி மூலையில் எழுந்தருளி உள்ள இத்தகைய பிள்ளையார் மூர்த்திகள் பலவித குடும்ப பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கினறனர். திருமணமாகாத கன்னிப் பெண்கள் கன்னி மூலை கணபதி மூர்த்திகளை வணங்கி வருவதால் நல்ல கணவன்மார்களைப் பெறுவர் என்பது பலரும் அறிந்ததே.

செவலூர் இரட்டை வாகன
கணபதி மூர்த்தி

ஆனால், திருமணத்திற்குப் பின்னும் இத்தகைய விநாயக மூர்த்திகள் வழங்கும் அனுகிரக சக்திகளை ஒரு சிலரே அறிவர். என்னதான் மனதிற்குப் பிடித்த மணாளனை மணந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் சில பெண்களின் மனம் பிற ஆண்களை நாடுவது உண்டு. இது தவறான மனப் போக்கு, நமது தர்மத்திற்கு விரோதமான செயல் என்று உணர்ந்தாலும் தங்கள் மனப் போக்கை திருத்திக் கொள்ள முடியாமல் மனந் தடுமாறித் தவறிழைக்குப் பெண்கள் ஏராளம். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இத்தகைய மனப் போக்கு குடும்பத்தில் பலவித குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் சமுதாயத்திலும் சூரிய வெப்பத்தை அதிகரிக்கும் என்பது உண்மையே.

இந்நிலையிலிருந்து மீள இத்தகைய கன்னி மூலை இரட்டை வாகன பிள்ளையார் மூர்த்திகளுக்கு அருகம்புல்லும் செந்தாமரையும் கலந்து கட்டிய மாலைகளை அணிவித்து வணங்கி வருதலால் குடும்பத்திலும் சமுதாயத்திலும் சாந்தம் மலரும். மேற்கூறிய பிரச்னைகளை சந்திக்காதவர்களும் அருகம்புல் செந்தாமரை மாலைகளைப் பிள்ளையாருக்குச் சூட்டி சமுதாயத்தில் சூரிய வெப்பத்தைக் குறைக்கும் அருந் தொண்டை ஆற்றி வரலாம்.

பலரும் அதிகம் படிப்பதால் மூளை சூடாகி விடும் என்று நினைப்பதுண்டு. உண்மையில் எவ்வளவு படித்தாலும் மூளை சூடாகாது. படித்த விஷயங்கள் கடினமாக இருக்கும்போது அதைப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் போராடும்போதுதான் மூளைச் சூடாகி சோர்வடைந்து விடுகிறது. எனவே கடினமான பாடங்களைப் படிப்பதால் மூளைச் சோர்வு, உஷ்ணம் போன்ற நோய்களால் அவதியுறுவோரும் இத்தகைய பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி பலன் பெறலாம்.

பெண்கள் மட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பின் பிற பெண்களை நாடும் ஆண்களும் மேற்கூறிய வழிபாட்டின் மூலம் பயன் பெறுவார்கள்.

தவிர்க்க முடியாத காரணங்களினால் மறுமணம் செய்து கொண்ட பெண்கள் தங்கள் திருமண வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகள், வேதனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் மேற்கூறிய பிள்ளையார் வழிபாடு துணை புரியும்

வாத்துக்கள் வழங்கும் வாழ்க்கை

கராத்தே, குங்பூ போன்ற சண்டை பயிற்சிகளின் போது ” கியாய் “ என்று ஒருவித ஒலியை எழுப்புகிறார்கள். முறையாக பயிற்சி செய்த ஒருவர் இத்தகைய ஒலியை எழுப்பினால் அது எதிரியின் இரத்த அழுத்தத்தை இரு மடங்காக்கி விடும். அதனால் எதிரி தற்காலிகமாக செயலிழந்து போவதுண்டு. இது போல் நாம் அன்றாடம் கேட்கும் வாகன ஒலிகள், தொழிற்சாலிகளின் ஒலிகள் ஒரு எல்லையத் தாண்டும்போது அதுவும் நமது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் சூரிய வெப்பத்தையும் அதிகமாக்கி விடும் என்பது உண்மையே. இந்த உண்மையை விஞ்ஞானம் உணர்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவரை மக்களுக்கு ஏற்படும் வேதனைகளுக்கு விமோசனம் வேண்டாமா ? நன்மையும் தீமையும் ஈசன் படைப்பில் உருவாவதுதானே ? எனவே தேவையற்ற ஒலியிலிருந்து மனித குலத்தைக் காப்பதற்காக இறைவன் ஏற்படுத்திய சிருஷ்டியே வாத்துக்களாகும். ஆச்சரியமான இந்த உண்மைக்குப் பின் உள்ள தெய்வீக இரகசியத்தை உரைப்பவர்கள் சித்தர்களே. வாத்துக்கள் ” க்வாக், க்வாக் “ என்று ஒலி எழுப்பிக் கொண்டு நீரில் நீந்தி செல்லும் அற்புத காட்சியைக் காணாதவர் எவரும் இல்லை எனலாம். அவ்வாறு வாத்துக்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு ஏற்படுகிறது தெரியுமா ? நாம் அறிந்த சப்தங்கள் எல்லாம் நம் உடம்பிலிருந்து அல்லது ஹாரன் போன்ற கருவிகளிருந்து காற்று வெளியேறும்போது ஏற்படும் ஒலிதானே. ஆனால், வாத்துக்கள் ஏற்படுத்தும் ”க்வாக், க்வாக்” என்ற ஒலி காற்றை உள்வாங்குவதால் ஏற்படும் ஒலியாகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? மனிதர்களும் இயந்திரங்களும் ஏற்படுத்தும் ஒலி அலைகளை வாத்துக்கள் உள்வாங்கி இப்பூவுலகை சப்த பரிமாணங்களிலிருந்து காப்பாற்றுகிறது. பெரும்பாலும் வாத்துக்கள் நீரில் நீந்தும்போது இத்தகைய ஒலி அலைகளை ஈர்ப்பதால் அந்த ஒலி அலைகள் வாத்துகளின் உடலை அடைந்தாலும் அவை எதிரலைகளை (sympathetic vibrations) ஏற்படுத்துவதில்லை. நீருக்கு அணு சக்தி கதிர்களைக் கூட அடக்கி வைக்கும் வல்லமை உண்டு அல்லவா ?

மேலும் வாத்துக்களின் க்வாக் ஒலி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதும் ஆன்மீக விந்தையே. எனவே அதிக இரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர் வாத்துகள் மேயும் இடங்களுக்குச் சென்று அவைகள் எழுப்பும் ஒலிகளை அவ்வப்போது கேட்டு வந்தால் இதய நோய்களும், இரத்த அழுத்த நோய்களும், இரத்த சோகையும் விலகும். வாத்து மேய்ப்பவர்களுக்கு எட்டு முழு வேட்டிகளும், முழுக்கை சட்டைகளும் தானம் அளித்தல் சிறப்பாகும்.

முந்தைய யுகங்களில் டினோசார்களாக விளங்கிய மிருகங்களே யுக தர்மத்தால் சாதாரண பல்லிகளாக நம் வீடுகளில் உலவுகின்றன. அதே போல முந்தைய யுகங்களில் அன்னப் பறவைகளாக விளங்கிய தூய பறவைகளே தற்போது வாத்து வடிவில் வாழ்கின்றன. எனவே திருக்கோயில்களில் அன்ன வாகன மூர்த்தியான பிரம்ம மூர்த்திகளை கோமுகங்களின் மேல் தரிசனம் செய்து கோமுகங்களை நீர் விட்டு அலமபி சுத்தம் செய்து சாம்பிராணி தூபம் இட்டு வழிபட்டு வந்தால் சூரிய வெப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

மேலும் சூரிய வெப்பம் என்பது மனித உடலுக்கு வேதனையை அளிப்பது மட்டுமல்லாமல், காய் கனிகள், உணவுப் பொருட்கள், மரம், செடி கொடிகள் போன்ற பலவித இயற்கை வளத்திற்கும் ஊறு விளைவிப்பதாக அமைவதால் இத்தகைய பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக அளவு சூரிய வெப்பத்தால் தங்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வருகிறது.

இவ்வாறு வியாபார நஷ்டம், பொருள் நஷ்டத்தால் வேதனை அடைவோர்கள் மேற்கண்ட கோமுக பூஜையால் நற்பலன் பெறுவார்கள்.

சுபாஸ் பூஜையா சபாஷ்

சூரிய வெப்பத்தைக் குறைக்கும் பூஜைகளுள் முதலிடத்தை வகிப்பதே சுமங்கலி பாஸ்கர பூஜைகளாகும். திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் திருககோயில் தெப்பக் குளம் மிகவும் சக்தி வாய்ந்தது. நற்கீர்த்தி என்ற பிரம்ம மூர்த்தியால் 600 சதுர் யுகங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டதாகும். இத்தகைய பழமையான திருக்குளத்தில் மக நட்சத்திர தினத்தன்று இறை மூர்த்திகளுக்கு தீர்த்த வாரி பூஜைகளை மேற்கொள்வதால் சூரிய வெப்பம் பெருமளவில் குறையும் என்பது உண்மை.

இத்தகைய தீர்த்த வாரி பூஜைகளுடன் சுமங்கலிப் பெண்கள் இயற்றும் தீர்த்த பூஜைகளும் அற்புத பலன்களைத் தரவல்லவையே. இதை எப்படி நிறைவேற்றுவது ?

சுமங்கலிப் பெண்கள் மக நட்சத்திர தினத்தன்று முகத்திற்கு மஞ்சள் பூசிக் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். சுத்தமான குங்குமத்தால் நெற்றிக்கு இட்டுக் கொண்டு பருத்தி புடவைகளை அணிந்து திருக்கோயிலுக்கு வர வேண்டும். ஒரு தாம்பாளத்தில் 12 பசு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். தாம்பாளம் பித்தளை, செம்பு, மா, பலா மரம் இவற்றால் ஆனதாக இருத்தல் நலம். அலுமினியம், எவர்சில்வர் தாம்பாளஙகளைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இத்தகைய தாம்பாளங்களை உபயோகிக்க நேரிட்டால் தாம்பாளத்தின் மேல் வாழை இலை அல்லது தாமரை இலையைப் பரப்பி அதன் மேல் தீபங்களை வைக்கவும். சூரியன் பவனி வரும் ஏழு குதிரைகளுக்கு ஏழு தீபங்களும், மக நட்சத்திரம் அருளும் சிம்ம ராசி ஐந்தாவது ராசியாக அமைவதால் அதற்காக ஐந்து தீபங்களும் மொத்தம் 12 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சிம்ம ராசி சூரிய பகவானின் ஆட்சி வீடாக அமைவதும் தீர்த்த வாரி பூஜைகளின் சக்தியை மேம்படுத்தும் அல்லவா ?

இவ்வாறு 12 தீபங்கள் ஏற்றிய தாம்பாளத்தை சுமங்கலிப் பெண்கள் கையில் ஏந்தி தெப்பக் குளத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். முதல் முறை வலம் வரும்போது ஸ்ரீசூரிய நாராயண முர்த்தியே போற்றி என்று உச்சரித்தல் நலம். இரண்டாவது முறை வலம் வரும் போது துர்கை தேவியே போற்றி என்று கூறி வலம் வருதல் நலம். மூன்றாவது முறை வலம் வருமபோது தங்கள் கணவன் பெயருடன் ” ஸ்ரீ, திரு “ சேர்த்து அல்லது அத்தல இறை மூர்த்திகளின் பெயர்களை உச்சரித்து வலம் வருதல் நலம். உதாரணமாக, மகாதேவன் என்று கணவன் பெயருடைய பெண் மூன்றாம் முறை வலம் வரும்போது, ”ஸ்ரீமகாதேவன் திருவடிகள் போற்றி, திருமகாதேவன் மலரடிகள் போற்றி, ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருவடிகள் போற்றி, திரு காந்திமதி தாயே போற்றி” என்று பாடித் துதித்தும் வலம் வரலாம்.

இவ்வாறு மூன்று முறை வலம் வந்த பின் குளக்கரையில் தீபங்களை வைத்து வலது காலை முன் வைத்து வணங்கி தீபங்கள் குளிரும் வரை குளத்தின் அருகில் அமர்ந்து தீபங்கள் குளிர்ந்த பின் தாம்பாளங்களை எடுத்துச் சென்று விடலாம். சூரிய பகவானின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே இருப்பதாக நீங்கள் சித்திரங்களில் பார்த்திருப்பீர்கள். சூரிய பகவான் தனது வலது காலை முன் வைத்து தனது இயக்கத்தை ஆரம்பிப்பதை இது காட்டுகிறது. இதிலிருந்து வந்ததே பெண்கள் தங்கள் வலது காலை முன் வைத்து காரியங்களை ஆரம்பிக்கும் பழக்கம்.

அற்புதமான இந்த பூஜையின் போது தீபங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் சுமங்கலிப் பெண்களின் மஞ்சள் பூசிய முகத்தில் பிரதிபலித்து திருக்குளத்திலிருந்து வெளிப்படும் தீர்த்த வாரி சக்திகளுடனும் அத்தல மூர்த்திகளின் திருவருட் சக்திகளுடனு்ம் கலந்து விண்ணில் பிரகாசித்தால் அப்போது எத்தகைய ஆன்மீக சக்திகள் உலகில் வியாபிக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதனால் சூரிய வெப்பம் குறைவது மட்டுமல்லாமல் சமுதாய ஒற்றுமையும், குடும்ப ஒற்றுமையும், குழந்தைகளின் ஒழுக்கமும் மேன்மை பெறும். தோல் வியாதிகள் தீர்வதுடன், கடன் சுமையும் தணியும்.

திருக்கோளக்குடி

சு(மங்கலி) பாஸ்(கர) பூஜை என்பதே பிற்காலத்தில் சுபாஸ் பூஜையாக கொண்டாடப் பட்டது. ”சுபாஸ்” என்ற சொல்லில் இருந்து தோன்றியதே ”சபாஷ் “ என்ற வார்த்தை. சபாஷ் என்றால் பாராட்டுதலுக்கு உரியது என்றுதானே பொருள். சுமங்கலி பாஸ்கர பூஜைகளை இயற்றி சமுதாயத்திற்கு அளப்பரிய நண்மைகள் செய்யும் சுமங்கலிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தாமே.

நாம் உண்ணும் உணவில் உள்ள அழுக்குகளைக் களைவது நீர். தண்ணீர் நாம் உண்ணும் உணவில் உள்ள அசுத்தங்களைக் கரைத்து மலமாக நம் உடலிலிருந்து வெளியேற்ற உதவி செய்கிறது. அதனால்தான் நாம் காய் கறிகளையும் அரிசி போன்ற உணவு தான்யங்களையும் நீர் விட்டு சுத்தம் செய்கிறோம். அப்போது சமையலுக்காக செலவழியும் நீரை விட நமது கழிவறைக்கு அதிகப்படியான நீர் செலவாகிறது. இதை உணர்ந்தவனே உண்மையான பகுத்தறிவு வாதி. சுமங்கலிப் பெண்கள் இவ்வாறு தீர்த்தவாரிப் பூஜைகளை மேற்கொள்ளும்போது அதை தங்கள் வலது காலை முன் வைத்து நிறைவேற்றுவதால் தீர்த்தவாரி சக்திகளுடன், பெண்களின் சுமங்கலி சக்திகளும் இணைந்து இறை மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பல்கிப் பெருகி சமுதாயத்தில் உள்ள எண்ண அசுத்தங்களும், நினைவுக் கசடுகளும், மாசுகளும் அகல்கின்றன. இது சுமங்கலிப் பெண்கள் மட்டுமே நிறைவேற்றக் கூடிய சாதனையாகும். அதனால்தான் சுபாஸ் பூஜைக்கு சபாஷ் போடுகிறார்கள் சித்தர்கள்.

இத்தகைய சுமங்கலி பாஸ்கர பூஜைகளை மேற்கூறிய ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் குளத்தில் மட்டும் அல்லாமல் எல்லா திருக்கோயில் குளங்களிலும் சுமங்கலிகள் நிறைவேற்றி அற்புத பலன்களைப் பெறலாம்.

சுமங்கலி சக்திகள் எனப்படும் மாங்கல்ய சக்திகள் பெண்களின் மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு என்ற மூன்று இடங்களில் நிரவி இருக்கும். திருகோளக்குடி திருத்தலத்தில் அம்பிகை மூன்று சக்திகளாக மூன்று அடுக்கு நிலைகளில் அருள் புரிவதால் இததலத்தில் சுமங்கலிகள் நிறைவேற்றும் தீர்த்தவாரிப் பூஜைகளுக்கு பன்மடங்கு பலன்கள் உண்டு.

புண்ணிய நட்சத்திரத்தில் புனித பூஜை

கடுமையான வெயிலில் செல்லும்போது எங்காவது ஓய்வெடுக்க நேர்ந்தால் என்ன செய்கிறோம் ? ஜில்லென்று மோர், சர்பத், ஐஸ்கிரீம், இளநீர் போன்று ஏதாவது குளிர் பானங்களை அருந்துகிறோம். ஏன் ? வெயிலை நம்மால் குறைக்க முடியாது. ஆனால், அதற்கு மாற்றாக குளிர் பானங்களை ஏற்பதால் கடுமையான உஷ்ணத்திலிருந்து ஓரளவு விடுதலை கிட்டுகிறது அல்லவா ?

அது போல சூரிய வெப்பத்திற்கு மாற்றாக சந்திர சக்திளை பெருக்கிக் கொள்வதால் சூரிய வெப்பத்திலிருந்து நிவாரணம் பெறு ஏதுவாகிறது. சந்திர குலத்தில் ரோஹிணி நட்சத்திரத்தில் தோன்றிய அவதார மூர்த்தி கிருஷ்ண பகவான். அதே போல குரு மங்கள லோகத்திலிருந்து உலக மக்களின் நன்மைக்காக அகத்திய முனியால் உலகிற்கு அளிக்கப்பட்ட பேரருட் பொக்கிஷம் நம் வெங்கடராம சுவாமிகள் தோன்றியதும் ரோஹிணி நட்சத்திரமே. ரோஹிணி நட்சத்திர மண்டலம் உறையும் ரிஷப ராசி சந்திர பகவானின் உச்ச வீடு என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இந்தப் புனிதமான ரோஹிணி நட்சத்திரத்தில் ஆற்றப்படும் வழிபாடுகள் சந்திர மூர்த்தி முதலாக அனைத்து நவகிரக மூர்ததிகளின் அருளாசிகளை வாரி வழங்குவதால் சூரிய வெப்பம் மட்டுமல்லாது இப்புவியில் ஏற்படும் எத்தனையோ குறைபாடுகள் நீங்கப் பெற்று மக்கள் வளமாக வாழ்வு பெறுகின்றனர். இவ்வழிபாடு பற்றி

 சூரியனும் சுகம் பெறுவான் சந்திரனும் குளிரடைவான்  
 மன்னுலகில் மக்களோ மாசிலா நிலை பெறுவர்
 புண்ணிய நட்சத்திரமாம் ரோஹிணியில் புனர் பூசை  
 எண்ணிய எண்ணம் ஈடேற விண்ணில் நிலைபெறுமே

என்று அகத்திய கிரந்தரங்கள் சிறப்பிக்கின்றன. ரோஹிணி நட்சத்திர தின எளிய வழிபாடாக சித்தர்கள் அருள்வதென்ன ? காரட்டை துருவி பசும்பாலில் இட்டு நன்றாகக் காய்ச்ச வேண்டும். காரட் ஓரளவு வெந்தவுடன் இறக்கி வைத்து ஆற விட வேண்டும். நன்றாக ஆறியவுடன் அதில் தேனை கலந்து விட வேண்டும். இந்த காரட், பசும்பால், தேன் அனைத்து நவகிரக மூர்த்திகளுக்குமே ப்ரீதி அளிக்கக் கூடிய உன்னத பிரசாதமாகும்.

காரட்டின் ஆரஞ்ச வண்ணம் சூரிய பகவானுக்கு உரித்தானதே. பால் சந்திரனுக்கு உரித்தானது. பாலைக் காய்ச்சும்போது அது சுக்கிரனுக்கு ப்ரீதியான பிரசாதமாக மாறுகிறது. மேலும் அப்போது ஏற்படும் சூடு செவ்வாய் சக்திகளைக் கொண்டிருக்கும். தேனின் இன் சுவை குரு பகவானுக்கு உரித்தானது. ராமச்சந்திர மூர்த்தி சூரிய குலத் தோன்றல். பின் அவரை ஏன் ராமச்சந்திர மூர்த்தி என்று அழைக்கிறோம். இந்தப் புனித பெயருக்குப் பின்னால் உள்ள ஆயிராமாயிரம் ஆன்மீக விளக்கங்களில் ஒன்று. குருச்சந்திர யோகம் ராமச்சந்திர மூர்த்திக்கு பலமாக அமைந்தது போல இதுவரை யாருக்கும் அமைந்ததில்லை. இனி யாருக்கும் அமையப் போவதும் இல்லை என்பது சித்தர்களின் கணிப்பு.

இத்தகைய குருச்சந்திர யோக சக்திகளை அளிப்பதே பாலும் தெளி தேனும் கூடிய ரோஹிணி நட்சத்திர பிரசாதம். மேலும் பாலில் மட்டும் ரகுவம், மணிவம், கூட்டு, பசிலை, ,,, என 22 அமிர்த சக்திகள் உள்ளன. இதைப் பற்றி விளக்க 22 ஆண்டுகள் ஆகும். இதில் 21வது சக்தி வாதூலம் என்று அழைக்கப்படும். இந்த வாதூல சக்தியை ஆயிரம் மடங்காக பெருக்கி அளிக்கக் கூடிய சக்தி உடையவரே நமது வெங்கடராம சுவாமிகள் ஆவார். அவருடைய தெய்வீக சக்திகள் ஒருறம் இருக்க சுவாமிகள் தோன்றிய மே மாதம் (ஐந்தாம் மாதம் புத சக்திகள்) 21ந் தேதி என்பது இந்தச் சக்திக்கு அனுகூலமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது.

இந்தப் பிரசாதத்தை ரோஹிணி நட்சத்திர தினத்தன்று திருக்கோயில்களில் இறை மூர்த்திகளுக்குப் படைத்தோ, வீடுகளில் படைத்தோ ஏற்பதாலும், தானமாக அளிப்பதாலும் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அளப்பரிய சூரிய வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகள் சமுதாயத்தில் களையப்படுவதுடன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும், கண் நோய்கள் விலகும். எலும்புகள பலம் பெறும். ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.

அனைத்திற்கும் மேலாக குரு நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் வளரும் !!

ரோஹிணி நட்சத்திர நேரத்தை துல்லியமாகக் கணக்கிட முடியாதவர்கள் சுவாமிகள் தோன்றிய மே 21ந்தி தேதியைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் 21ந் தேதி மேற்கூறிய வழிபாட்டை மேற்கொள்வதும் ஏற்புடையதே.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து திரட்டிய அமிர்தத்தை பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு வழங்கினார். அப்போது தேவர்களுடன் மறைந்து விருந்தில் கலந்து கொண்ட ராகு, கேதுவை சூரிய பகவான் காட்டிக் கொடுத்து விடவே பெருமாள் ராகுவை அமிர்தக் கரண்டியால் தட்ட அப்போது ராகு மூர்த்திக்கு கம்பீரம் என்ற அமிர்தக் கூறு அனுகிரக சக்தி கிடைத்தது. பசும்பாலில் உள்ள 22வது அமிர்த சக்தியே கம்பீரம் எனப்படுவது. மனிதப் பிறவி இந்திரன், பிரம்மா போன்ற தேவப் பதவிகளுக்கு பாலமாய் இருப்பதைப் போல இந்த கம்பீர அமிர்த சக்தி பூலோகப் பாலில் உள்ள அமிர்த சக்திக்கும் தேவலோக பாற்கடல் அமிர்த சக்திக்கும் பாலமாய் இருப்பது.

தேவலோக அமிர்தத்தில் 108 அமிர்தக் கூறுகள் உண்டு. இதில் 21வது அமிர்தக் கூறும் விதூலம் என்ற பெயருடன் திகழ்வது வியக்க வைக்கும் ஆன்மீக இரகசியமாகும். அது ஒரு புறம் இருக்க, பெருமாள் மூர்த்தி அளித்த இந்த கம்பீர அமிர்த சக்தி ராகு பகவானுக்கு அற்புத வர சக்திகளை அளித்தது. அதனால்தான் அவர் சூரிய பகவானுக்கு பகை அம்சத்துடன், சாயா கிரகமாய், சூரியனையும் ”விழுங்கும்” கிரகண சக்திகளைக் கொண்டு திகழ்ந்தார். ராகு பகவானின் தசையில்தான் விவேகானந்தர் அமெரிக்காவில் கம்பீரமாய் எழுந்தருளி அற்புதமாய் உரையாற்றி இந்து மதத்திற்கு ஒரு ”கம்பீர“ நிலையையும் பெற்றுத் தந்தார் என்பது நீங்கள் அறிந்ததே.

எனவே மேற்கூறிய வழிபாடு ஜாதங்களில் ராகு மூர்த்தியால் அமையும் நாக தோஷங்களையும் தீர்க்கவல்லது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி அல்லவா ?

ஏற்றம் தரும் ஏழு சக்திகள்

சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளில் பவனி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் அக்குதிரைகள் மூலம் உலகிற்கு அளிக்கும் ஏழு சக்திகளைப் பற்றி அறிந்தவர்கள் வெகு சிலரே. இத்தகைய சக்திகளை முறையாகக் கையாளுவதால் சூரிய வெப்பத்தைப் பெருமளவில் குறைத்து விடலாம். இந்த ஏழு சக்திகளைப் பற்றி சாதாரண மனிதர்கள் அறிய முடியாது என்பதால் இந்த சக்திகளை மக்களுக்கு பலவித அனுகிரக சக்திகளாக மாற்றித் தரும் தெய்வ மூரத்திகள் ஏராளமாக நம் திருக்கோயில்களில் எழுந்துருளி உள்ளார்கள். இத்தகைய மூர்த்திகளை வணங்கி வார வண்ண ஆடைகள் எனப்படும் ஏழு நிற வண்ண ஆடைகளைத் தானமாக அளித்தலால் சூரிய பகவானின் அனுகிரகத்தை எளிதில் பெறலாம்.

சப்த லிங்கங்கள்
திருகோகர்ணம்

புதுக்கோட்டை திருகோகர்ண சிவாலயத்தில் ஏழு பிள்ளையார் மூர்த்திகளும், ஏழு கன்னி மார்களும், ஏழு லிங்கங்களும் எழுந்தருளியுள்ளனர். இது காணக் கிடைக்காத அற்புத பேறு. அதே போல லால்குடி சிவாலயத்தில் ஏழு கணபதி மூரத்திகளும், ஏழு ரிஷிகளும், ஏழு நாக மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளதும் நம்முடைய பாக்கியமே. இங்கு இறைவன் சப்தரிஷீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி இருப்பது அனைத்திற்கும் சிகரமான ஆன்மீக அற்புதம். சப்த கன்னிகள், சப்த ரிஷிகள் என்னும்போது ”சப்த“ என்னும் சொல் ஏழு என்ற எண்ணிக்கையையும் ஒலி என்ற குணத்தையும் குறிப்பதால் சப்த மூர்த்திகள் எழுந்தருளி உள்ள தலங்கள் சூரிய பகவானுக்கு மிகவும் ப்ரீதியான தலங்களாக அமைந்து அத்தல மூர்த்திகள் அனைத்திற்கும் அடிப்படையான ஒலி சக்திகளை இதய சக்திகளாக வர்ஷிப்பார்கள் என்பதும் ஓர் ஆன்மீக விந்தையே.

நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கிழமைக்கும் அணிய வேண்டிய நவகிரக வண்ண ஆடைகளை அணிவதன் மூலமும், வசதியற்றவர்களுக்கு தானமாக அளிப்பதன் மூலமும் சூரிய வெப்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

சூரிய உதயத்தின்போது தோன்றும் ஒளிக் கதிர்களை கடல், புண்ணிய தீர்த்தங்கள் ஈர்த்துக் கொள்ளும் அல்லவா? ஆனால், தற்போது காவேரி போன்ற புண்ணிய தீர்த்தங்கள் வற்றி விட்டதால் சூரிய ஒளிக் கதிர்கள் இந்நதிகளால் ஈர்க்கப்படாமல் போகும்போது சூரிய வெப்பம் மிகுவது இயற்கைதானே. ஆனால், புண்ணிய நதிகளில் நீர்ப் பெருக்கை நம்மால் உருவாக்க முடியாவிட்டாலும் அந்நதிகளில் தீர்த்த சக்திகளை நிச்சயமாக அதிகரிக்கச் செய்யலாம். தீர்த்தம் கண்ணுக்குத் தெரிவது, தீர்த்த சக்திகள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் தீர்த்தம் போல் செயல்பட்டு சூரிய ஒளிக் கிரணங்களை ஈர்க்க வல்லவை.

ஞாயிற்றுக் கிழமைகள், சப்தமி திதிகள், உத்திர நட்சத்திர தினங்களில் பாடல் பெற்ற காவிரித் தலங்களில் ஏழு வண்ணங்களுடைய சித்ரான்னங்களை தானம் அளித்தலால் காவிரி போன்ற புண்ணிய நதிகளில் தீர்த்த சக்திகள் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு. இத்தகைய நதிகள் வறண்டிருந்தாலும் அந்நதிகளில் நீர் இருக்கும் இடங்களில் தாமரை இலைகளில் பசு நெய் தீபங்களை ஏற்றி நீரில் மிதக்க விட்டு மேற்கூறிய தினங்களில் பூஜித்தல் அற்புத தீர்த்தவாரி வழிபாடாகும். பஞ்ச கவ்யம் முறையாக தயாரித்து இந்நதிகளில் சேர்ப்பதும் அற்புத பூஜையாகும்.

சூரிய கதிர்கள் இறை மூர்த்திகளைத் தழுவி பூஜிக்கும் பாஸ்கர பூஜைத் தலங்களில் லிங்க மூர்த்திகளுக்கு பனை நுங்கு நீர் அபிஷேகம் சிறப்பு. அத்தலங்களில் நுங்கு, நுங்கு சர்பத் தானம் பலவிதமான பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்யும்.

பிரிவாமை உண்டேல் பிறவாமை உண்டு

மிகவும் சிரமப்பட்டு அல்லல்பட்டு தற்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் மகன், மகள்களுக்குத் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். ஆனாலும், திருமணமான குறுகிய காலத்திலேயே மணமக்களிடையே மன வேற்றுமை ஏற்பட்டு பிரியும் குடும்பங்கள் ஏராளம். இதற்குக் காரணம் தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பும், சினிமா, டீவியில் காணும் கற்பனையான வளமான மண வாழ்க்கையும் அமையாததே பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகின்றது. ஒரு சில குடும்ங்களில் வெளியே தெரியாத அளவிற்கு பிரிவினை ஏற்படாவிட்டாலும் தம்பதிகள் மன ஒற்றுமையுடன் வாழாமல் பிற பெண்களை, பிற ஆண்களை நாடும் அவலமான நிலை ஏற்படுவதையும் நாம் காண்கிறோம். இவை எல்லாம் சூரிய வெப்பம் மிகுவதற்கான அடிப்படைக் காரணங்கள்.

அதிகார நந்தி தம்பதி மூர்த்திகள்
திருகோகர்ணம்

எதையும் அனுபவித்து தீர்த்தால்தான் அந்த ஆசை நம்மை மறுபடியும் அணுகாது, அதிலிருந்து நாம் விடுபட்டு இறைவன் திருப்பாதங்களில் நீங்கா பக்தியைப் பெறுவோம் என்பதை உணர்ந்தே சித்தர்கள் இல்லற வாழ்வை அனைவரும் நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதிலிருந்து விடுபடவே முடியாது. இல்லறம் கடந்தால்தான், இறையறம். எனவே கணவன் மனைவி அன்பான திருமண வாழ்க்கையை மேற்கொண்டால்தான் அவர்கள் இறை அன்பிற்குப் பாத்திரம் ஆவார்கள். இதை ஒவ்வொரு தம்பதியரும் உணர்ந்து தங்கள் இல்லறத்தை ஒரு பூஞ்சோலையாக ஆக்கிக் கொள்ள பாடுபட வேண்டும். ஆமாம், இல்லறத்தை அவ்வளவு எளிதாக தற்காலத்தில் பூஞ்சோலையாக மாற்றி விட முடியாதுதான்.

இறை மூர்த்திகளை நாடியே, அவர்களைச் சரணடைந்தே குடும்ப ஒற்றுமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவ்விஷயத்தில் அனுகிரகம் அளிப்பவர்களே அதிகார நந்தி மூர்த்தி தம்பதிகள் ஆவார்கள். திருகோகர்ணம், திருமழபாடி போன்று அதிகார நந்தீஸ்வர மூர்த்திகள் தம்பதி சகிதமாக எழுந்தருளி உள்ள தலங்களில் அவர்களை வழிபட்டு கீழ்க் கண்ட சரணாகதி துதியை 21 முறைக்குக் குறையாமல் ஓதி மாங்கல்ய பொருட்களை தானமாக அளித்தலால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

 சரணம் சரணம் ரகுநாதா சரணம்
 சரணம் சரணம் ரகுராமா சரணம்
 சரணம் சரணம் ரகுவீரா சரணம்

ஆமாம், குடும்ப ஒற்றுமைக்கும், அதிகார நந்திக்கும், ராம நாமத்திற்கும் என்ன சம்பந்தம் ? இதை நீங்களே ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் முழுச் சுவையும் உங்களுக்குக் கிடைத்து விடும் அல்லவா ?

பிறர் பெண்கள், பிறர் ஆண்களுடன் கொள்ளும் தவறான உறவுகளைக் களைய வழிவகுக்கும் இறைவழிபாடு இதுவே. மிரட்டுவதாலோ, ஏளனம் செய்வதாலோ, முரட்டுத் தனமான தண்டனைகளாலோ எவருடைய தவறுகளையும் திருத்த முடியாது, இறைவன் ஒருவரே, இறை சக்தி மட்டுமே எவரையும் திருத்தும் சக்தி உடையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணவன் மனைவியரிடையே செல்வம், பதவி, படிப்பு போன்ற காரணங்களால் ஏற்றத் தாழ்வுகள் அமையும்போது இவற்றை சரி செய்ய லால்குடி திருமங்கலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி வழிபாடும் அர்த்த நாரீஸ்வர மூர்த்திகள் வழிபாடும் சிறப்புடையது. தேங்காய் எண்ணெய் தீப வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிகோலும்.

சமீப காலத்தில் தங்கள் உடலில் மர்ம ஸ்தானங்களில் எறும்பு, பூச்சிகளின் தொந்தரவுகள் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். சமுதாயத்தில் பெருகி வரும் காமக் குற்றங்களையே இது சுட்டிக் காட்டுகிறது. மேலும் அந்த காமக் குற்றங்களைக் களைவதில் இறைவன் அத்தகைய அனுபவம் பெற்றவர்களை ஒரு கருவியாக்கி நற்காரியங்களை இயற்ற விரும்புகிறார் என்பதும் அதன் மூலம் கடவுள் நமக்குத் தெரிவிக்கும் பாடமாகும். எனவே அத்தகைய அனுபவங்களைப் பெற்றவர்கள் மேற்கூறிய பூஜைகளில் முடிந்தவற்றை நிறைவேற்றி வருதல் நலம்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam