அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீகாயத்ரீ மந்திர மகிமை

காயத்ரீ மஹா மந்திரத்தின் பலனை எடுத்துரைக்கப் பிறவிகள் போதா. அனைத்து வேத மந்திரங்கள், வடமொழி மற்றும் தமிழ் மறைகள், எண்ணற்ற புராணங்கள் அனைத்தையும் வடித்தெடுத்துக் குறள் போல இரண்டே வரிகளில் அள்ளித் தருவதே காயத்ரீ மந்திரம், எத்தகைய பிரச்சனைகளுக்கும் கைமேல் பலன் தர வல்லது. அற்புத யோக நிலைகளையும், சமாதிக் காட்சிகளையும் தரும் மஹிமை கொண்டது. குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்று எத்தகைய தெய்வ மூர்த்தியின் தரிசனத்தையும் அருளும் வல்லமை கொண்டது.
எவ்விதமான கடுமையான நியம நிஷ்டைகளும் அல்லாது எளிதில் ஜபிக்கக் கூடியது காயத்ரீ மந்திரமாகும். மற்ற மந்திரங்கள், பீஜாட்சரங்களுக்குக் கடுமையான உபதேச விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜாதி, மத பேதமின்றி எவரும் துதிக்கக் கூடியது காயத்ரீ மந்திரமே. தந்தை உபதேசித்தாலே போதும் என்ற எளிய விதியை உடையது. தந்தை இல்லையெனில் தாயிடமிருந்தோ, ஏனைய குடும்பப் பெரியவர்களிடமிருந்தோ இதைப் பெறலாம்.
பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் எதையும் பெற வேண்டும் என்ற தர்ம நெறியில்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் தகப்பனாருக்கும்  பெரியோர்களுக்கும் காயத்ரியை உபதேசிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கஷ்டந் தீர்க்கும் காயத்ரீ
ஒரு மனிதன் தன் தினசரி வாழ்க்கையைப் பிரச்சனைகள் இல்லாமல் நடத்துவதற்குத் தினந்தோறும் 10000 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்று சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். அன்றாட வாழ்க்கையில் இது சாத்தியமானதொன்றா? 10,000 முறை ஜபிக்காததினால் தான் நாம் தினந்தோறும் பல துன்பங்களைச் சந்திக்கின்றோம் என்பதை உணர்வதே முதல்படி.
தன் பூஜைகள் போதுமானவையாக இல்லாததினால் தான் தனக்குக் கஷ்டங்களைத் தாங்கும் சக்தி குறைந்து கோபம், விரக்தி, குரோதம், ஏமாற்றம், மனத்தளர்ச்சி, அதைரியம் ஆகியவை ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும். கஷ்டங்கள் ஏற்படக் காரணம் கர்ம வினைகளே. கர்ம வினைகளினால் ஏற்படும் பணக் கஷ்டங்கள், இல்லற சச்சரவுகள் போன்றவற்றைத் தாங்கும் சக்தியையும், அதை முறியடிக்கும் வல்லமையையும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் அருள்கின்றது. எனவே காயத்ரீ ஜபமானது.
1) கஷ்டங்களைத் தாங்கக் கூடிய மன வலிமையைத் தருகின்றது.
2) கஷ்டங்களுக்கு மூல காரணமான கர்ம வினைகளைக் கழிக்கின்றது.
3) எதிர்வரும் துன்பங்களிலிருந்து கவசம் போல் ரட்சைபோல் காத்து அருள்கின்றது.
பூனூல் என்பது ஒரு ரட்சை போல் செயல்படுகின்றது. ஜாதி, சமய பேதமின்றி எவரும் அணியலாம். நாம் ஜபிக்கின்ற காயத்ரீ இப்பூணூலில் தங்கி அதன் மூலம் உடல் அவயங்களுக்குச் சக்தியாக அனுப்பப்படுகின்றது. பூணூலில் ப்ரம்ம முடிச்சு என்ற பகுதி இருதயத்திற்கு  நேராக அமையுமாறு எப்போதும் வைக்கப்படவேண்டும். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தியை நேரிடையாகப் பெறுமளவிற்கு நம் உடற்பாங்கு அமையவில்லை. எனவே பஞ்சபூத சக்திகளின் உறைவிடமான பூணூலின் மூலம் ஸ்ரீகாயத்ரீயின் சக்தியைப் பெறுகிறோம்.

அடியார் : குருவே! காயத்ரீயை  ஜபிப்பதற்கு 24, 36, 108 என்று விதிமுறைகள் உள்ளனவே?
குரு : சந்தியாவந்தனம், தினசரி காலை, மதியம், மாலை ஜபங்கள் போன்ற நித்ய கர்மங்களுக்கு/பூஜைகளுக்கு இந்த விதிகள் பொருந்தும், பொதுவாகத் தனக்கென உரித்தான பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவற்றிற்குத்தான் குறித்த அளவு காயத்ரீ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண சமயங்களில் எண்ண வரையறை கிடையாது.
அடியார் : காயத்ரீ மந்திரத்தை உடல் தூய்மையுடன் குறித்த இடங்களில் மட்டும்தான் செய்ய வேண்டுமா?
குரு : இத்தகைய கட்டுப்பாடுகள் மீண்டும் சந்தியாவந்தனம், ஹோமம் போன்ற நித்ய கர்மங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிரயாணம், அலுவலகம் போன்று எவ்விடத்திலும், எச்சமயத்திலும் காயத்ரீயை ஜபிக்கலாம். காயத்ரீ நினைவோடு எப்போதும் வாழ்வதற்கு எப்பொழுதும் அதை எப்போதும் ஜபித்துத் தானே ஆக வேண்டும்!
அடியார் : ஜபிப்பது என்றால்?
குரு : நித்ய கர்மாக்களில் ஜபத்தைக் குறித்தபடி குறித்த இடத்தில் செய்வதே சாலச் சிறந்தது. பழகும் வரை வாயசைவுடன் மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழகிய பின் மனத்தினுள் காயத்ரீ மந்திரத்தைக் கூறுவதே சிறந்த ஜபமாகும். நீரோட்டம் போல் மனதினில் காயத்ரீ மந்திர ஜபம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மனமானது காயத்ரீயை ஜபித்துக் கொண்டேயிருக்க அதே நினைவில் பணிகளும் தொடருமாயின் இதுவே Telepathy போன்ற அற்புதமான ஆன்மீக நிலைகளுக்கு வழி வகுக்கும். வேதத்தின் சாரம் என்பதாலும், கலியுகத்தில் வேத பரிபாலனம் வெகுவாகக் குறைந்து வருவதாலும் காயத்ரீ மஹா மந்திரம் கலியுகத்தில் உன்னத நிலையைப் பெற்றுள்ளது.
அடியார் : காயத்ரீ மந்திரத்தை அனைவராலும் சரியாக உச்சரிக்க இயலாதே, அட்சரப் பிழையால் பங்கங்கள் விளையுமே!
குரு : தவறாக உச்சரிக்க வேண்டும் என்ற மனோநிலை யாருக்கும் இல்லை. தவறாக உச்சரித்தல் கூடாது என்ற பயத்துடன் ஜபிக்கும் போது தானாகவே அம்மந்திரத்தின் சக்தியால் உச்சரிப்புகள் சரியாகிவிடும் இயன்ற மட்டும் உச்சரிப்புகளைத் தக்கவரிடம் கேட்டு ஜபிக்க வேண்டும்.
மனோபாவமே முக்கியமே தவிர குறை காணுதலையே பெரிதாகக் கொள்ளக் கூடாது.
அக்காலத்தில் தக்க முறையில் காயத்ரீ மந்திரத்தை ஜபித்ததால் 24, 36, 108 என்று குறைந்த அளவில் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டது. ஆனால் தற்போது 10,000 முறையாவது ஜபித்தால் தான் ஓரளவாவது சரியாக அமைகின்றது. மேலும் காயத்ரீ மஹிமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்லிப் பலரையும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கச் செய்வதால் ஸ்ரீகாயத்ரீ தேவியே மனமகிழ்ந்து உச்சரிப்பின் நிறை குறைகளை நிவர்த்திக்கின்றாள். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து நிவேதனம் செய்யப்பட்ட பால், பழங்கள், பக்ஷணங்கள், அன்னம், வஸ்திரம் போன்றவற்றைத் தானமாக வழங்கும் போது காயத்ரீ ஜபக் குறைபாடுகளுக்கு பரிகாரமாக அவை அமைந்து நம்மைக் காக்கின்றன!
அடியார் : பெண்களும் காயத்ரீ ஜபிக்கலாமா?
குரு : பெண்களுக்கு அவர்களுடைய மாங்கல்யமே பஞ்சபூத சக்திகளின் உறைவிடமாக விளங்க அதுவே அவர்களுக்குப் பூணூலாக அமைவதால் அவர்களும் காயத்ரீ ஜபிக்கலாம். மாங்கல்யம் என்பது மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்கச் சங்கிலியில் மாங்கல்யத்தைக் கோர்க்கக் கூடாது. மஞ்சள் சரடில் இல்லாத மாங்கல்யத்திற்குத் தோஷங்கள் உண்டு. மாங்கல்யமே பெண்களுக்குப் பூணூல் ஆகும். (மேலும் விளக்கங்களை எமது வெளியீடான மாங்கல்ய மகிமை புத்தகத்தில் விளக்கம் காணலாம்).
அடியார் : கன்னிப் பெண்கள் எப்படி காயத்ரீயை ஜபிப்பது குருதேவா?
குரு : குளித்துத் தூய்மையாக அமர்ந்து விளக்கு ஏற்றிப் பஞ்சினால் தரித்த 3 அடி நூலை எடுத்து, அந்நூலைக் கையில் ஏந்தி 21 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்து நூலில் ஒரு முடி போட வேண்டும். இவ்வாறாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்து முடி போடலாம். பிறகு பூஜை முடிந்தவுடன் அந்த சக்தி வாய்ந்த நூலை ஸ்வாமி மாடத்தில்/ பூஜை திடத்தில் வைத்தல் வேண்டும்.  இவ்வாறாக 21 முடிச்சுகள் அமைந்தவுடன் அந்த நூலுக்கு மஞ்சள் தடவி, குங்குமம் இட்டு சிவன் கோயில்/ ஏதேனும் கோயிலின் தலவிருட்சத்தில் கட்டிவிட வேண்டும் . இதுவே கன்னிப் பெண்கள் காயத்ரீ ஜபிக்கும் முறையாகும். இவ்வாறு தொடர்ந்து உண்மையாகச் செய்தால் விரைவில் படிப்பில், உடல் வளர்ச்சியில், அறிவில், தொழிலில் முன்னேற்றம் வந்து நல்ல கணவனை அடையும் பாக்கியம் பெறுவர். அன்னையின் பரிபூர்ண அருளும் கிட்டும். விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

பெண்களுக்கான மாதாந்திர தீட்டு

பெண்கள் தங்கள் இனத்திற்குரிய மாதவிலக்குப் பற்றிய விஞ்ஞான பூர்வமான அறிவினைப் புத்தகங்கள், தாய்மார்களின் அனுபவம், மருத்துவர்கள் மூலமாகப் பெறுவது இன்றியமையாததே. ஆனால் இதைப் பற்றிய மெய்ஞ்ஞான விளக்கங்களையும் தக்க பெரியோர்களாகிய சற்குருமார்களிடமும் பெற்றாக வேண்டும். எனெனில் வெறும் மருத்துவ விஞ்ஞானத்தால் மாதவிலக்கில் பெண்களுக்கு எழும் மனோரீதியான பல பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது. தகுந்த ஆன்மீக விளக்கங்களைப் பெற்றால்தான் பெண்களின் அத்தகைய தீட்டுக் காலத்தில் எழும் (வெளியில் கூற இயலா) உள் மனவி(வ)காரங்களைத் தீர்க்க முடியும்.
ஆன்மீகம் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமே
தீட்டாயிற்றே.... தெய்வீகமே அருகில் வரக்கூடாதே..., பூஜை அறையிலிருந்து தள்ளியிருக்க வேண்டுமே.... ஏதேனும் ஆகிவிட்டால் தெய்வக் குற்றம் ஆகிவிடுமே...., இவ்வாறாக அச்சங்கள் தொனிக்கும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கான ஆன்மீகப் பின்னணியைத் தெளிவாக அறிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் வராது.  பெண் இனத்திற்குரித்தான மாதவிலக்கு அம்சம் ஏற்பட்டதே ஒரு புராண நிகழ்ச்சி மூலமாகத் தான்!
எனவே குடும்ப வாழ்க்கை மூலமாக இறையனுபவத்தை எளிதாக அடையலாம் என்பதையே சித்தர்கள், மகான்களின் குடும்ப வாழ்க்கைச் சரிதங்கள் புகட்டுகின்றன. மாதவிலக்கும் குடும்ப வாழ்க்கையில் குடும்ப தலைவியாம் அற்புதத் தாயின் சரீரத்தைச் சார்ந்திருப்பதால், சித்த புருஷர்கள் இதைப் பற்றி அளிக்கின்ற அற்புதமான ஆன்மீக விளக்கங்களால் பெண்கள் தெளிவுபெற்று, தங்களுக்கு இறைவன் அளித்துள்ள தேகப் பரிமாண மாறுதல்களை அறிவுப்பூர்வமாக ஏற்று மனப்போராட்டங்களை வென்று நல்வாழ்க்கை வாழ்வார்களாக!
பெண்களின் மனோநிலை
மாதாந்திரத் தீட்டு  சமயங்களில் ஏற்படும் பெருஉதிரப் போக்கால் பலவீனம், நரம்புத் தளர்ச்சி, வயிற்று உபாதைகள், அதிஉஷ்ணக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதால்,
1. பெண்களின் மனமும் பலவீனமடைகிறது. இதனால் கோபம், அருவருப்பு, மன அசதிகள் உருவாகின்ற்ன.
2. தன் தேகத்தின் மனமும் மீதே ஒரு வெறுப்பு, மனத்தளர்ச்சி (frustration)  விகார உணர்ச்சிகள் தோன்றுகின்றன. குழந்தைகள், உறவினர் மீது காரணமில்லா எரிச்சல்கள் ஏற்படும்.
3. வாழ்க்கையின் மீது துவேஷம், நடைமுறைச் செயல்களில் வெறுப்புணர்ச்சிகள், மனக்கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன.
4. ‘எப்போது முடியும் இந்தத் துர்வேதனைகள்? என்றவாறான மன உளைச்சல்கள், பெண் குலத்தின் மீது ஓர் இனம் புரியாத எரிச்சல், தன் உடைகளின் மீது ஆத்திரம் நிறைந்த கண்டனங்கள்.
இவ்வாறாகத் தீட்டுக் காலமாகிய மூன்று நாட்கள் முழுவதும் ஒரு “சுண்ணாம்புக் காளவாய்” மீது நடப்பது போலான கொந்தளிப்பான வாழ்க்கை அமைகிறது. இவைகளைப் பெண்களால் வெளிக்காட்ட இயலாது. யாரிடம் சொல்ல இயலும்? இதற்குக் காரணம் என்ன? இதை எவ்வாறு தவிர்ப்பது? இதற்கான தீர்வுகளை ஆன்மீகத்தில் தானே பெற் இயலும்!!!
நல்வழி முறைகள் (சித்தர்கள் அருளியது)
ஆண், பெண் இருவருக்கான வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சித்தர்கள் நல்வழி காட்டியுள்ளனர். மாதவிலக்கில் பெண்களுக்கு மேற்கண்ட துன்பங்கள் ஏற்படுவது இயற்கையே! உடல் பலவீனமாவதால் மனமும் பலவீனம் அடைகிறது. எனவே மனோநிலையைச் சீராக்கும் வழிமுறைகளைக் காண வேண்டும்.
1. இயன்ற வரை வீட்டில் “ தள்ளி இருப்பது “ நல்லது.
2. அலுவலகம் செல்வோர் காலை, மாலை நேரங்களில் கட்டாயம் ஸ்நானம் செய்தல் வேண்டும்.
3. சிறிய வீடாயிருப்பின் மாதவிலக்குச் சமயங்களில் சிறு இடத்திலாவது ஒதுங்கியிருத்தல் மனோபலப் பயிற்சிகளைப் பயில்வதற்கு உதவும்.
4. அநாவசியப் பேச்சுக்களைக் குறைத்தல், வெளிச் செல்லுதலைத் தவிர்த்தல் நலம். அலுவலகம் செல்வோர் இயன்ற மட்டும் மௌனமாகத் தம் பணிகளைச் செய்ய வேண்டும்.
5. எக்காரணம் கொண்டு மாதத் தீட்டுச் சமயங்களில் கொலை, கொள்ளை, காமம் பற்றிய பத்திரிகைகளை, உணர்ச்சிகரமான நாவல்களைப் படித்தல் கூடாது.
6. மூன்று நாட்களிலும் இயன்றவரை மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
7. உணவு உண்ணத் தட்டைத் தவிர்த்து வாழையிலையில்/மந்தார இலையில் சாப்பிடுவது நல்லது. இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும். மனக் கொந்தளிப்பைத் தணிக்கும்.
8. பச்சைத் தண்ணீர் அருந்துதல் கூடாது. இது எண்ண ஓட்டங்களை அதிகரிக்கும். வெந்நீர்/ஆறிய வெந்நீர் நலம் பயக்கும்.. அருகம்புல், ஜீரக ரசம், நீராகாரம் கலந்த நீர் மன அமைதியைத் தரும். பழைய சாதம், சாற்று நீர் மிகவும் நன்மை பயக்கும்.
9. மாதத் தீட்டுத் காலத்தில், கோபம், மற்றைய உணர்ச்சிகளைக் காட்டும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம்.
துர்சக்திகளின் தீய விளைவுகள்
கலியுகத்தில் தீயவர்கள் பெருகி வருவதைப் போல தீவினை சக்திகளும்  ( negative forces ) துர்தேவதைகளும் அதிகரித்து வருகின்றன. கழிவு நீரில் கொசுக்களும் வியாதிக் கிருமிகளும் குடிகொண்டு நோய்களைப் பரப்புவது போல இந்தத் தீயசக்திகளும், துர்தேவதைகளும் பலவீனமான மனங்களைத் தேடி ஆக்ரமித்துத் தீய எண்ணங்கள், மனக் கொந்தளிப்புகள், அமைதியற்ற மனக்கிலேசங்கள், விகார உணர்ச்சிகள், அருவருப்பை எழுப்பும் மனச்சுழல்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன. பெண்கள் மாதவிலக்கு நாட்களில் உடல் தளர்ச்சியாலும், உதிர நஷ்டத்தாலும் பலவீமனாவதால் அவர்கள் மனமும் பலவீனம் அடைகிறது. இத்தகைய பலவீனமான மனங்களையே துர்சக்திகள் ஆக்ரமிக்கத் துடிக்கின்றன. உணர்ச்சியூட்டும் கதைகள், நாவல்கள் , பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் மனம் மேலும் பலவீனமடைய துர்சக்திகள் உள்ளே புகுந்து மனதை அலைக்கழிக்கும்.
எனவே தீட்டுச் சமயத்தில் பெண்கள் தங்களைத் துர்சக்திகள், துர்தேவதைகள், தீவினை சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ள ஆன்மீக வழியில் சில தற்காப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இவைதாம் நல்வழிகளாக மேலே கூறப்பட்டுள்ளன.
கவச சக்திகள் இவற்றோடு
1. தீட்டுச் சமயங்களில் ஒதுங்குமிடத்தில் மரப்பலகையிலோ பாயிலோ, துணி விரிப்பிலோதான் அமரவேண்டும். இரும்பு நாற்காலிகள், ஈஸிசேர், பிளாஸ்டிக் பாய்கள் கூடாது. மர நாற்காலி, மரச் சாமான்களில் அமரலாம். வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்திய ஊஞ்சல் பலகை, மரப்பலகைகள் உத்தமமானதாகும். இவற்றில் பெரியவரிகளின் ஆசிர்வாதங்கள் படிந்திருப்பதால் அவை நல்கவசமாக நின்று துர்சக்திகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்கும்.
2. கணவன், மனைவி இருவரும் அலுவலகம் செல்பவர்கள் எனில் மனைவியின் தீட்டுச் சமயங்களில் கணவன்மார்கள் சமையல் பணியை மேற்கொள்வது உத்தமமானது. இதனால் “காருண்ய மாதாவின்“ புண்ணிய சக்தியை அவர்கள் பெறுகின்றனர். இந்தப் புண்ணிய சக்தி எளிதில் கரையாது! வீட்டின் எட்டுத் திக்குகளிலும் இது விரவிக் கவசமாக நின்று மனைவியரைத் துர்சக்திகளிலிருந்து காக்கும். இந்த அற்புத புண்ணிய சக்தியே, தீட்டோடு அலுவலகம் செல்ல வேண்டிய மனைவிக்கு “காப்பு சக்தியாகப்” பின் சென்று பிறருடைய விகாரமான எண்ணங்களிலிருந்து தாக்குதல்களிலிருந்து மனைவியைக் கவசமாக காக்கும்.
தீட்டின்போது செய்ய வேண்டிய வழிபாடு
ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீப்ரத்யங்காரா தேவி, ஸ்ரீமாரியம்மன் போன்ற பராசக்தி அம்சங்கள் பல்வேறு வகை துர்சக்திகளை மாய்ப்பதற்காக ஏற்பட்ட அவதாரங்களாகும். இதேபோல பெண்களின் தீட்டுக் காலங்க்ளில் அவர்களைத் தாக்கும் தீயசக்திகளை அழிப்பதற்காகச் சில தேவியர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய ஆன்மீக ரகசியங்களைச் சற்குருவே எடுத்தருளி நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே பெண்கள் மாதவிலக்குச் சமயங்களில் இதற்கே உரித்தான ஸ்ரீதேவி அம்சங்களை மானசீகமாக வழிபட்டு நன்னிலை பெறுவார்களாக.
2. தீட்டுச் சமயங்களில் பெண்கள் பூஜை அறையைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இச்சமயங்களில் பெண்களிடம் துர்சக்திகளின் பாதிப்பு இருப்பதால் அவர்கள் வெளிக்காட்ட இயலாத சில மனவேதனைகளோடு இருப்பர். இந்நிலையில் உடல் அசுத்ததுடன் அவர்கள் செய்யும் பிரார்த்தனைகள், பூஜைகளின் சக்திகள், துர்சக்திகளுக்குச் செல்லும் என்பதால் இத்தகைய ஐதீகம் நடைமுறையில் உள்ளது..
3. எனினும் மாதவிலக்குச் சமயங்களில் இதற்க்குரித்தான பிரத்யேகமான ஸ்ரீதேவி மூர்த்திகள் உள்ளனர். இவற்றின் திருஉருவங்களை ஸ்ரீஆயுர்தேவி மீண்டும் கலியுகத்திற்கு வந்தது போல் தக்க சமயத்தில் சித்த புருஷர்கள் அருள்வார்கள்.
4. தீட்டு சமயங்களில் மானசீகமான பூஜைக்கு எவ்விதத் தடையும் கிடையாது. ஏனெனில் மானசீக பூஜை என்பது மனம் எனப்படும் மனோ தேகத்திற்கு வேறு வடிவம் இருப்பதால் உதடுகள் அசையாது, மானசீகமாக மனதினுள் எந்த தெய்வ மூர்த்தியையும் ஆராதிக்கலாம். மனோ தேகத்திற்குத் தீட்டு கிடையாது.
5. தீட்டுக் காலங்களில் மானசீகமாக எந்தத் தெய்வமூர்த்தியையும் வழிபடலாம் என்ற நியதியில் சில அம்சங்கள் ஏற்படும். நம்மை அறியாமல் உதடுகளால், நாவால் மந்திரங்களை ஜபித்துவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சத்தைத் தவிர்ப்பதற்கே மாதவிலக்கில் வழிபடவேண்டிய பிரத்தியக்ஷமான ஸ்ரீதேவதா மூர்த்திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை மானசீகமாக வழிபட்டு துர்சக்திகளிலிருந்து பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்களாக! இந்த விசேஷமான தேவதா மூர்த்திகளை மானசீகமாக வழிபடும் போது நம்மை அறியாது இவர்கள் மந்திரங்களை உச்சரித்தால் அதையும் பொறுத்து இந்த தேவியர்கள் நம்மைக் காக்கின்றனர்.
மாதவிலக்கிற்கு உரித்தான ஸ்ரீதேவி மூர்த்திகள்
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வழிபட வேண்டிய முக்கிய தேவியர்கள் மூவர் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
முதல்நாள் தேவி
மாதாந்திரத் தீட்டின் முதல் நாளுக்குரிய தேவி “ஸ்ரீகோதாயி குல்கரணி“ ஆவாள். இந்தத் தேவியே துர்சக்திகளிடமிருந்து பெண்களை மாதவிலக்கின் முதல் நாள் காத்து இரட்சிக்கின்றாள். எனவே இந்நாள் முழுவதும் பெண்கள்,
“ஸ்ரீகோதாயி குல்கரணியே நம:“ (ஸ்ரீ கோதாயி குல்கரணியே போற்றி)
என்ற நாமத்தை இடைவிடாது மனதினுள் உச்சரிக்க வேண்டும். மனதால் செய்யப்படும் மானசீக பூஜைக்கு நூறு மடங்கு சக்தி அதிகம். துர்சக்திகள் பெண்களின் மனதை அலைக்கழிப்பதால் ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியை இடைவிடாது ஜபித்தால் மனதிற்கு ஓர் அற்புதமான ஆன்மீக சக்தி கிடைக்கிறது. இது கவசமாக நின்று பெண்களைத் துர்சக்திகளிடமிருந்து காக்கும். எனவே மாதவிலக்கின் முதல் நாளைப் பெண்கள் ஸ்ரீகோதாயி குல்கரணி தேவி நினைவுடன் கழிப்பதே உத்தமமானதாகும்., இந்த ஏகாந்தத் தியானமானது மனதை ஒருமுகப்படுத்தும்.
ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியின் அவதார நோக்கமே மாதவிலக்கின் முதல் நாளில் பெண்களைத் தாக்கும் துர்சக்திகளிடமிருந்து அவர்களைக் காப்பதே ஆகும். எனவே அந்நாளில் தன்னைத் தியானிப்பவர்களுக்கு இத்தேவி அருள்மழை பொழிகின்றாள்.
இரண்டாம் நாள் தேவி
மாதவிலக்கின் இரண்டாம் நாளுக்குரிய தேவி “ஸ்ரீகுலாவி மலகரணி“ ஆவாள். பொதுவாக இரண்டாம் நாளில்தான் பெண்களின் உடல் உபாதைகள், மனோ பாவங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்நாளில் பெண்கள்
“ஸ்ரீ குலாவி மலகரணியே நம :” (“ஸ்ரீ குலாவி மலகரணியே போற்றி”)
என்று ஸ்ரீதேவி நாமத்தை இடைவிடாது ஜபிக்க வேண்டும். இரண்டாம் நாள் காலையில் எழுந்தவுடன் முதல் நாளுக்குரித்தான ஸ்ரீகோதாயி குல்கரணி தேவிக்கு நன்றி செலுத்திப் பின் ஸ்ரீகுலாவி மலகரணி தேவியை நினைத்துத் துதிக்க வேண்டும். இரண்டாம் நாள் முழுவதும் ஸ்ரீகுலாவி மலகரணி தேவியின் தியானத்துடன் இருப்பது பெருபாக்கியம் ஆகும். இவள் நாம ஜபமே இரண்டாம் நாளில் பெண்களைத் தாக்குகின்ற கொடிய துர்சக்திகளிடமிருந்து பெண்களைக் காக்கும். இதற்கான தேவியே ஸ்ரீகுலாவி மலகரணி ஆவாள்.
மூன்றாம் நாள் தேவி
மாதவிலக்கின் மூன்றாம் நாளுக்கு உரித்தானவள். “ஸ்ரீ பந்து பக்ஷண கரணி தேவி“ ஆவாள். இந்நாளில் முந்தைய இரண்டு நாட்களின் பலவீனத்தால் பெண்களுக்கு விரத்தி நிலை தோன்றும். இந்நிலையில் இருந்து பெண்களைக் காத்து எத்தகைய துர்தேவதைகளும், துர்சக்திகளும் அவர்களைத் தாக்காவண்ணம் கவசமெனப் பேணி அருள்பாலிப்பவளே ஸ்ரீபந்து பக்ஷண கரணி தேவி ஆவாள். மூன்றாம் நாள் காலை எழுந்தவுடன் இரண்டாம் நாளுக்கு உரித்தான ஸ்ரீகுலாவி மலகரணி தேவிக்கு நன்றி செலுத்தி வழிபட வேண்டும். மாதவிலக்கின் மூன்றாளைப் பெண்கள் ஸ்ரீபந்துபக்ஷணகரணி தேவி நினைவுடன் கழிக்க வேண்டும்.
“ஸ்ரீ பந்து பக்ஷண கரணியே நம :“  ( ஸ்ரீ பந்து பக்ஷண கரணியே போற்றி)
என்று மூன்றாம் நாள் முழுவதும் மானசீகமாக ஜபிக்க வேண்டும். இம்மூன்று நாள் தியானத்தினால் துர்சக்திகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றும் ஓர் ஆன்மீக கவசக் கோட்டையே வீட்டில் உருவாகிறது. இம்மூன்று நாட்களிலும் இயன்ற வரை மௌனமாக இருந்து மூன்று தேவியரை வழிபட்டால் அதன் சக்தி பல்கிப் பெருகுகிறது.
அலுவலகம் செல்லும் பெண்களுக்கு
1. இவர்கள் விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் கண்டிப்பாக ஸ்நானம் செய்தல் வேண்டும்.
2. ஒரு  நாளைக்கு இரண்டு முறையேனும் உடைகளை மாற்ற வேண்டும்.
3. மாதவிலக்கு நாட்களில் குங்குமம், மை, சாந்து இடுவதில் தவறில்லை. ஒட்டுப் பொட்டு எந்நாளிலும் அறவே கூடாது. ஒடடுப் பொட்டினால் (sticker) சுமங்கலித்துவ சக்தி குறைகிறது. குங்குமம், மை, சாந்து இவற்றால் பொட்டு இட்டால் சுமங்கலித்துவ சக்தி பல்கிப் பெருகும்.
4. இயன்ற வரை மூன்று நாட்களிலும் வீட்டில் ஒதுங்குதல் நலம். இயலாதோர் தினசரி தலைக்கும் சேர்த்து ஸ்நானம் செய்து உடலைச் சுத்தி செய்து கொண்டு சமையலும் செய்யலாம்.
5. பிரயாண நேரம், உணவு இடைவேளை, அலுவலக நேரம் எப்போதும், எந்நேரமும் மாதவிலக்கிற்கு உரித்தான மூன்று தேவியரையும் அந்தந்த நாட்களில் தொடர்ந்து ஜபித்தல் வேண்டும். வெளிப்புற துர்சக்திகள் அலுவலகம் செல்லும் பெண்களை மிகவும் பாதிப்பதால் இவர்கள் இடைவிடாது ஸ்ரீதேவியர்கள் நாமத்தை ஜபிக்க வேண்டும்.
6. மூன்று நாட்களும் தீட்டுடன் சமைத்தாலும் காக்கைக்கு மட்டும் அன்னமிடலாம். இந்நாட்களில் கணவன்மார்கள் சமைத்தோ, பழங்கள், கல்கண்டு, உலர்பழங்கள் கொண்டோ இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம்.
7. மூன்று நாட்களிலும் கதர் அல்லது பருத்தி ஆடைகள் அணிவதால் இவற்றிலுள்ள பஞ்சபூத சக்திகளின் மகிமையால் இவையே துர்சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பாக அமையும்.
நான்காம் நாள்
நான்காம் நாள் அன்று உடல் சுத்தியாய் இருப்பின் விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன் இயன்றால் நன்கு பழுத்த சுமங்கலிகளிடம் நன்னீர் பெற்றுக் குளிர்ந்த நீரில் நீராடுதல் சௌபாக்கியத்தைக் தரும். நான்காம் நாள் அன்று மூன்று தேவிகளுக்கும் நன்றி செலுத்தி சர்க்கரைப் பொங்கல் இட்டு கோயில்களில் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். நான்காம் நாள் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் இல்லாதோர் ஐந்தாம் நாள் கோயிலுக்குச் சென்று சர்க்கரைப் பொங்கல் தானம் செய்ய வேண்டும்.
மாதவிடாய்க் கோளாறுகள்
தீராத வயிற்று வலி, உதிரப்பெருக்கு, கடுமையான மாதவிடாய்  நோய் உள்ளோர்
1. ஏழைகளுக்கு உள்ஆடைகள் தானம் அளித்தல்
2. கர்ப்பிணிப் பெண்களுக்குப் புது ஆடைகள், போர்வைகள் அளித்தல்
3. பிள்ளைப்பேறு மருத்துவமனைகளில் தேவையான பஞ்சு (medicated cotton), உள் உறைகள் (sanitary napkins) போன்றவற்றை இலவசமாக ஏழைப் பெண் நோயாளிகளுக்கு வழங்குதல் போன்ற மேற்கண்ட தானதர்மங்களை மேற்கொள்வதால் எத்தகைய கடுமையான மாதவிடாய் நோய்களும் உடனடியாக நீங்கிப் பலன் அளிக்கும்.
பிள்ளைப் பேறு
சித்தர்கள் அருளிய மேற்கண்ட முறையில் மாதவிலக்கிற்கு உரித்தான மூன்று தேவியரையும் முறையாக வழிபடுவோருக்கு இம்மூன்று தேவியருமே ஸ்ரீகர்ப்பரக்ஷாம்பிகையிடம் அவர்களுக்குப் பிள்ளப்பேறு தந்தருளுமாறு மனம் உருக வேண்டுகின்றனர். ஸ்ரீகர்ப்ப ரக்ஷாம்பிகை தம் மூன்று அம்சங்களான இத்தேவியரின் திருவாக்கிற்கு இணங்கிய பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
எளிய முறை வழிபாடு
மேற்கண்ட மூன்று ஸ்ரீதேவியின் வழிபாடு எளிய முறையில் அமைந்துள்ளது. படிப்பறிவு இல்லாத பெண்களும் இந்த நல்வழியை மேற்கொண்டு நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக எளிய முறை வழிபாடு அருளப்பட்டுள்ளது. இது தவிர விளக்கமான வழிபாட்டு முறைகளும் உண்டு. சற்குருவை நாடிக் கேட்போருக்கு அவை அருளப்பெறும்.

மரண பயம்

சீடன் : குருவே! மாய்ந்த உடலுக்குப் பத்து நாட்கள் சடங்குகள் வைத்துள்ளதன் காரணமென்ன?
குருதேவர் : ஆவி தன் உடலை மேலிருந்து பார்க்கின்றதல்லவா? அப்போது தன்னுடைய உண்மையான சுற்றத்தார்கள், நண்பர்கள் யாரென்பதை அறிந்து கொள்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்பது வகையான வாயுக்கள் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றின் வழியாகவே உயிர் பிரியும். உயிர் பிரிகின்ற வாயு வழியைக் கொண்டு அந்த ஜீவனின் ஆத்ம நிலையைப் பகுத்து விடலாம். ஒன்பது நாட்களில் நாளுக்கு ஒன்றாக ஒவ்வொரு வாயுவாகப் பிரியும். பத்தாம் நாளில் ஆவி நிலையில் பூலோகத்தை விட்டுப் பயணம், எனவே பத்து நாட்களுக்கான சடங்குகள்!
சீடன் : குருவே! துறவிகளுக்குக் கபால மோட்சம் என்பது இவ்வகையில் அமைந்ததா?
குருதேவர் : ஆம் பொதுவாக உண்மையான துறவிகளுக்குக் கபால வாயு மூலமாக உயிர் பிரியும். ஸ்ரீதங்கால் மௌனகுரு சுவாமிகள் போன்ற சித்த  புருஷர்கள் தாங்கள் மானுட சரீரத்தை உகுக்கின்ற நேரத்தினை முன்னமே நிர்ணயம் செய்து, தங்கள் சிஷ்யர்களுக்கு மிகவும் ரகசியமாக அறிவித்தனர். இறைவன் விதிக்கின்றபடி இவர்களுக்கு கபால மோட்சம் ஏற்படும். இந்தக் கபால வாயு பூரணமாக வெளி வருவதற்காகத் தேங்காய் கொண்டு சிரசில் மோதுவதுமுண்டு. துறவிகளுக்குக் கபால மோட்சத்தில் ஒன்பது வாயுக்களும் கபாலம் மூலமாக வந்துவிடும்.
சீடன் : குருதேவா! ஏனைய உயிர்களுக்கு?
குருதேவர் : அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப வாயுப் பரிமாணம் ஏற்படுகிறது. சாதாரண மனிதர்களுக்கு மரண நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாயுவாகப் பிரிகின்றது.
சீடன் : ஞானக்கடலே! உடலைத் தகனம் செய்தபின் இது எவ்வாறு சாத்தியமாகிறது?
குருதேவர் : உடல் தகனமாவதாகச் சாதாரண கண்களுக்குத் தோன்றுகிறதே தவிர இறப்பிற்க்குப் பின் SHELL BODY ஒன்று உண்டு அதன் மூலமாக ஏனைய வாயுப்பரிமாணம் நிகழ்கிறது. சற்குருவைப் பெற்ற ஒருவனுக்கு அவரே இவையனைத்தையும் மேற்பார்வையிட்டுச் செவ்வனே தம் கடமைகளை நிறைவேற்றுகிறார். எனவே சற்குருவைப் பெற்ற சிஷ்யனுக்கு மரண பயம் இராது. ஆனால் சற்குருவின் விஸ்வரூப தரிசனத்தைப் பொதுவாக ஒரு சிஷ்யன் தன் சரீரத்தை உகுத்த பின்பு தன் ஆவி ரூபத்தில் தான் உய்த்துணர முடியும். ஏனெனில் வானளாவிய சற்குருவின் விஸ்வரூப தரிசன சக்தியைத் தாங்கும் வல்லமை அந்தச் சிஷ்யனின் சரீரத்திற்கு இருப்பதில்லை. சற்குரு விரும்பினால் அர்ஜுனனுக்குக் கிட்டியதுபோல் விஸ்வரூபத்தைக் காணும் சக்தியுடன் சற்குருவின் சுயரூபத்தைக் காணும் பாக்கியத்தையும் பூலோகத்திலேயே பெறுகின்றான்.
சீடன் : பத்து நாட்களில் செய்யப்படும் தானதருமங்கள் எவ்வாறு உதவுகின்றன?
குருதேவர் : எந்தவோர் ஆவியும் அதற்குரித்தான சரீரத்தை விடுத்தபின் பத்து நாட்களே இவ்வுலகத்தில் இருக்க முடியும். அதற்குப் பின் அதற்குரித்தான அடுத்த பிறவி நிலை DAY OF JUDGEMENT வரும்வரை விண்ணுலக யாத்திரையை அந்த ஆவி மேற்கொண்டே ஆக வேண்டும். இவ்விண்ணுலகப் பாதையில்தான் பல இன்ப துன்பங்களை அது அனுபவிக்கின்றது. உதாரணமாகத் தண்ணீர்ப் பந்தலிட்டு நீர்மோர் தானமிட்டவர்களுக்கு விண்ணுலகப் பயணம் வசதியாக, குளுமையானதாக இருக்கும். மாறாகப் புகைபிடிக்கும் பழக்கத்தால் தன்னையும் வதைத்துக் கொண்டு, பிறரையும் துன்பப்படுத்தியவர்களுக்குத் தாளமுடியாத வெப்பத்தினிடையே விண்ணுலகப் பாதை அமையும். இவ்வாறாகவே எண்ணெய்க் கொப்பரைகள் போன்ற நரக வேதனைகள் விண்ணுலகப் பாதையிலுண்டு. செய்கின்ற தான தருமங்களுக்கு ஏற்ப இப்பிரயாணம் அமையும். இதையே “தான தருமங்கள் மட்டுமே கூட வரும்“ என்று பெரியோர்கள் அறிவுறுத்தினர்.
சீடன் : தன் வாழ்நாளில் செய்ய மறந்த தான தருமங்களை இந்தப் பத்து நாட்களிலாவது செய்யும் பொருட்டே பத்து நாள் சடங்குகள் அமைந்தனவா?
குரதேவர் : ஆம். அதர்ம முறையில் சேர்த்த சொத்து, லஞ்சமாகப் பெற்ற செல்வம், சொல்லொண்ணாப் பாவங்கள் போன்றவற்றிற்கு ஓரளவு பரிகாரமாக இந்தப் பத்து நாள் தானதருமங்களைப் பகுத்துள்ளனர். இந்தச் சடங்குகளில் வலியுறுத்திக் கூறப்படுபவை தானதருமங்களே. ஆனால் அவை ஜாதி மத பேதமின்றி எளியமக்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.
சீடன் : குருதேவா! “ DAY OF JUDGEMENT “  என்பது என்ன?
குருதேவர் : ஒவ்வொரு ஆவியும் தன் அடுத்த பிறவியைப் பெறுமுன் பிறவித் தீர்ப்பு நாளில் “ Day of judgement “ இறைவனைச் சந்திக்கின்றது. அங்கு “சத்திய தீர்த்தம்“ என்ற பொய்கையில் அந்த ஆவி மூழ்கி எழும்போது இறையருளால்
1. சத்திய தீர்த்தத்தின் மகிமையால் தானே தன் வினைகளை அறிகின்ற பக்குவம் ஏற்படுகிறது.
2. தன் பிறவிகளின் கர்மவினைகளை முழுவதுமாக அறிந்து கொள்கிறது.
3. இப்பக்குவமே ஆத்ம ஞானத்தின் முதற்படியாகும். தன் வினைகளுக்கு ஏற்ப அந்த ஆவியே தன் அடுத்த பிறவியையும் நிர்ணயம் செய்து சத்தியதேவனாகிய இறைவனிடம் சமர்ப்பிக்கின்றது.
4. தன் மனைவி, குழந்தைகள் அனைவரையும் தன் கர்மவினைகளுக்கு ஏற்பத் தேந்தெடுத்து அடுத்த பிறவியின் சாராம்சங்களைத் தானே நிர்ணயம் செய்து இறைவனிடம் அளிக்கின்றது.
5. இறைவன் அதனை முழுவதுமாக ஏற்றோ அல்லது சில மாறுதல்களுடனோ அந்த ஆவிக்குரிய அடுத்த பிறவியை அளிக்கின்றான். இதுவே அனைத்து ஜீவன்களின் பரிபாலனத்திற்குரிய பொதுவான நிலையாகும்; மரணத்திற்குப் பின் நிகழுகின்ற விந்தைகளாகும். சற்குரு அமைகின்றபோது அவர் அனைத்துச் சம்பங்கள் பற்றிய ஞானத்தை முன்னரே அளித்து விடுவதால் ஆத்ம ஞானத்துடன் அந்தச் சிஷ்ய ஜீவனின் ஆவி குருவருளால் அனைத்தையும் எதிர்கொள்கின்றது. உண்மையில் சிஷ்யனுடைய சரணாகதி நிலைக்கேற்ப சற்குருவே சிஷ்யனுடைய பிறவி நிலைகளை அமைத்துத் தருகின்றார். அதனை இறைவன் முழுவதுமாக ஏற்கிறான். இதுவே  “குருவருள் இன்றேல் திருவருள் இல்லை“ என்பதன் பொருளாகும்”

சபரிமலை யாத்திரை

விரமேற்பதற்கு முன் பெற்றோர், சற்குருவின் அனுமதியைப் பெறவேண்டும். குல தெய்வம், இஷ்ட தெய்வங்களுக்குப் பூஜை செய்ய வேண்டும்.
1. குறைந்தது ஒரு மண்டல (45 நாட்கள்) விரதமின்றி மலை ஏறுதல் கூடாது.
2. வயதானவர்கள், நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டு.
3. கருப்பு வஸ்திரமே சிறந்தது.
4. அலுவலகம் செல்வோர் தாங்களாகவே உடை, விரத நியதிகளை தளர்த்திக் கொள்ளக் கூடாது. விரதம் இருந்தால் நியதிகளைப் பரிபூரணமாக மேற்கொள்ள வேண்டும். தனக்குத் தானே வசதிக்கேற்றாற்போல் விதிகளைத் தளர்த்தினால் தோஷங்கள் வரும்.
5. தகாத உடை, தகாத செயல்களாலும் கடுமையான சாபங்கள், தோஷங்கள் உண்டாகும்.
6. விரத நாளில் தினந்தோறும் ஒரு உணவுப் பொட்டலமேனும் அன்னதானம் செய்தல் வேண்டும். இதுவே விரத பங்கத்திற்கான ஓரளவு பரிகாரமாகும்.
7. சத்சங்கமாகவே ஐயப்ப பூஜை, அன்னதானம் ஆகியவற்றை நிகழ்த்த வேண்டும். தனிப்பட்ட முறையிலான பூஜையை விடக் கூட்டுப் பிரார்த்தனையே ஸ்ரீஐயப்பனுக்குப் ப்ரீதியைத் தரும்.
8. விரதம் நன்கு அமைய திடகாத்திரமான மனம் வேண்டும். எனவே விரத நாளில்,
            1. காக்கைக்கு உணவிடல்
     2. பசுவிற்குப் பழம், கீரை போன்றவற்றையளித்தல்,
     3. ஓர் ஏழைக்கு உணவளித்தல்
என இம்மூன்று தானங்களையும் விடாது விரதநாளில் தினந்தோறும் செய்தல் வேண்டும். மன அமைதி தரும் பூஜை, புனஸ்காரகளோடு வைராக்கியமான நல்மனதை தரும் இம்மூன்றுமே சிறந்த பயனளிக்கும். பசுவின் தேகத்தில் சகல கோடி, தெய்வ தேவாதியர் உறைவதால் பசுவிற்கு அளிக்கும் உணவு ஸகல தெய்வங்களுக்கும் அளிக்கும் நைவேத்தியமாகும். நைவேத்திய உணவை உண்டு நம்மை ஆசிர்வதிக்கும் இறையுருவே பசுவாகும். இதுவே விரதபங்கங்கள், நியதிகளில் வழுவுதல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.
9. தனிப்பட்ட முறை வழிபாட்டை விடக் கூட்டு பிரார்த்தனையான சத்சங்க தத்துவத்வமே சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதே ஸ்ரீஐயப்ப வழிபாடு.
10. ஜோதி வழிபாடுதான் மகர ஜோதியாம் ஸ்ரீஐயப்பனுக்குப் ப்ரீதியளிக்கும். எனவே விரத நாளில் கூட்டு விளக்கு பூஜை குங்கும, தாம்பூல தானங்களுடன் நடத்தப்பட வேண்டும்.

தாண்டினால் விளையும் தோஷங்கள்

எவரையும் மிதித்தலோ, தாண்டுதலோ கூடாது. அறியாமையால் எவரையாவது மிதித்து விட்டால் இதற்குப் பிராயச்சித்தமாக “சிவசிவ”, “நாராயண, நாராயண” போன்ற இறைநாமாவைக் கூறவேண்டும். பரமாத்மாவின் ஒரு பிரதிபலிப்பான ஆத்மா அனைத்து ஜீவன்களிலும் உறைவதால் இறைவன் வாழும் கோயிலே ஒவ்வொரு ஜீவனின் சரீரமாகும். ஆறறிவு படைத்த மனிதனிடம் பரமாத்மாவின் பிரதிபலிப்பு அதிக விகிதாசாரத்தில் அமைந்திருப்பதால், ஒருவரை மிதிக்கும் போது அந்தத் தேகத்தில் உறையும் இறைவனை சிவசிவா, நாராயணா, முருகா, ஐயப்பா என்று விளித்து அர்ச்சிக்கின்றோம்.
அர்ச்சனையின் பலன்
நம் பெயரில் கோயிலில் செய்கின்ற அர்ச்சனை என்பது நாம் செய்கின்ற தவறுகட்குப் பிராயச்சித்தங்களாகவே அமைகின்றன. அறியாமல் செய்த பிழைகள் ஓரளவு இத்தகைய அர்ச்சனை வழிபாடுகளால் நீங்குகின்றன. ஆனால் சற்குரு பெயரில் அல்லது இறைவன் பெயரில் நாம் செய்கின்ற அர்ச்சனையே நம் பிராத்தனைகளைச் தாங்கிச் செல்கின்றன.
தாண்டலுக்குப் பிராயச்சித்தம்
பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகளைத் தாண்டினால் “சிவ,சிவ, நாராயணா“ என்று துதித்து அவர்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
12 வயதுக்கு மேலுள்ள ஒரு பெண்ணைத் தாண்ட நேரிட்டால்,
            ஓம் சஞ்சல ஸ்ரீபூப்ரஸ்த்யை நம :
என்று சொல்லி அந்த பெண்ணைத் தொட்டு வணங்க வேண்டும். கணவன் தன் மனைவியைத் தாண்ட கூட இம்மந்திரத்தைக் கூறி மனைவியைத் தொட்டு வணங்கியே ஆகவேண்டும்.
ஒருபெண் ஆணைத் தாண்ட நேரிட்டால்
                        ஓம் அபஸ்ரீ பால ஸமநாயை நம :
என்று துதித்து அந்த ஆணைத் தொட்டு வணங்க வேண்டும். இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையும் அறியாமல் பிறர்மீது கால் பட்டாலும் சாபங்கள், தோஷங்கள் வருவதுண்டு. இதற்குப் பரிகாரமாக
            1. “ஓம் சஞ்சலஸ்ரீபூப்ரஸ்த்யை நம :”
            2. “ஓம் அபஸ்ரீ பாலஸமநாயை நம :”
என்று இரண்டு மந்திரங்களையும் சில நிமிடங்களாவது துதித்து, தியானித்து உறங்க வேண்டும். இதனால் உறக்கத்தில் பிறர் மீது கால்படுவதால் விளையும் சாபங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இதன் காரணமாகவே நம் பெரியோர்கள் குருபாத பூஜை  என்ற ஓர் அற்புதமான பூஜை முறையாகப் பெரிய மகான்களின் திருப்பாதங்களைத் தாங்கும் பேறு பெற்ற பாதணிகளைத் தானம் செய்கின்ற நல்வழியைக் காட்டியுள்ளனர். ஏழைகளுக்குக் காலணிகளைத் தானமாக வழங்குவதால் பிறர்மீது கால்பட்ட குற்றங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை ஏசுதல், மஹான்களைத் தூஷித்தல் போன்ற மாபெரும் குற்றங்களுக்குப் பிராயச்சித்தங்களாக இந்த காலணி தானம் அமைந்துள்ளது. தக்க பெரியோர்களை நாடி, தகுந்த திதி, நட்சத்திரங்களில் காலணிகளை/செருப்புகளை தானம் செய்கின்ற ஆன்மீக ரகசியங்களை அறிந்து பயன்பெற வேண்டும்.

வெற்றிலைக்கு மோட்சம்

ஸ்ரீராமானுஜர் தாமாகவே முன்வந்து தண்டனையை ஏற்றுக் கொண்டார். ஒரு மேடையை எழுப்பி அதில் அனைவரும் மலஜலங் கழித்திட, அதன் மேல் வெற்றிலைகளைப் பரப்பி அதில் ஸ்ரீராமானுஜர் சயனிக்கவேண்டும். இதுவே அத்தண்டனை...,, ஸ்ரீராமானுஜர் இதனை மனமுவந்து ஏற்றார். ஆனால் உத்தம விஷ்ணு பக்தரான ஸ்ரீராமானுஜரைத் தெய்வமாக மக்கள் போற்றி வணங்கியதால் அவருக்குத் தண்டனையைத் தரும் மேடையை எழுப்பக் கூட எவரும் முன்வரவில்லை!
எனவே ஸ்ரீராமானுஜரே ஒரு மேடையைக் கட்டி அனைவரையும் கூவியழைத்தார். அவர்தம் தெய்வத் திருவுரை கேட்டு ஓடோடி வந்த மக்கள் என்ன செய்வதென்று அறியாது தலைவணங்கி நின்றனர். “மேடையில் மலஜலங் கழிப்பதா! நடமாடுந் தெய்வத்திற்கா இந்நிலை?” மக்கள் அழுது புலம்பினர். ஸ்ரீராமானுஜரோ “ஹரே நாராயணா! நல்வழி காட்டப்பா!” என்று ஸ்ரீமஹா விஷ்ணுவைப் பிரார்த்தித்தார்.
மேலே விண்ணுலக லோகங்கள் பலவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான மஹரிஷிகளும், சித்தர்களும், பித்ரு தேவர்களும் வைகுண்டத்தில் கூடி ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதித்தனர். “ஸ்ரீமன் நாராயணப் பிரபோ! தங்கள் பரம பக்தன் ஸ்ரீராமானுஜனின் வேண்டுதலை நிறைவேற்ற நாங்கள் ஒரு கருவியாகப் பயன்படவேண்டும் என்பதே எங்கள் அவா!” என்று வேண்டிட ஸ்ரீமஹா விஷ்ணுவும், “ஞானியரும், யோகியரும், மலஜலமாகவும், சிறுநீராகவும் மாறி என் பக்தன் ஸ்ரீராமானுஜனின் திருமேனியைத் தாங்குவீர்களாக! சித்தர்கள் அற்புத மூலிகையாம் வெற்றிலைகளாக மாறி ஸ்ரீராமனுஜனின் திருவதனத்தைத் தாங்கட்டும். மஹரிஷிகள் ஊர் ஜனங்களாக உருவெடுக்கட்டும். பித்ரு தேவர்கள் சூட்சும சரீராங்களாக அவ்வூர் ஜனங்களின் தேகங்களில் புகுந்து நற்பணி ஆற்றுவார்களாக. தேவர்கள் மேடையைத் தாங்கி நிற்கட்டும்..” என்று அருளினார்.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அடியாராம் ஸ்ரீராமானுஜருக்குச் சேவை செய்ய எத்துணை ஆயிரம் புனித ஆத்ம ஜோதிகள் முன்வந்தன! எனவே அடியார்க்கு அடியாராகச் சேவை புரிவதில்தான் இறைவன் மகழிச்சியடைகிறான்! பித்ரு தேவர்கள் சூட்சும் சரீரங்களாக ஊர் மக்களின் தேகங்களில் மாறிட... தேவர்கள் மண் மேடையைத் தாங்கி நிற்க, சித்த புருஷர்கள் வெற்றிலைகளாக மாறி வடிவங்கொள்ள. மேலும் பல சித்த புருஷர்களும், மஹரிஷிகளும் ஊர் மக்களாய்ப் புதுவடிவங் கொண்டிட.... யோகியரும், ஞானியரும் மலஜலப் பொருளாகவும், சிறுநீராகவும் உருவெடுத்திட....
மண்மேடை மலஜலத்தால் நிரம்பி வழிய, அதன் மேல் வெற்றிலைக் காம்புகளைச் செருகின ஒரு வெற்றிலைப் படுக்கை தாயாரகியது.., அதன்மேல் ஸ்ரீராமானுஜர் சயனித்தார். புறக்கண்களுக்குத்தான் அது மலஜல மேடையாகவும், நாற்றச் சூழலாகவும் அமைந்ததே தவிர  உண்மையில் அங்கு நறுமணம் வீசியது.
மலஜலம், அற்புத சந்தனக் குழம்பாகப் பொலிந்தது. ஸ்ரீராமானுஜரின் திருமேனியைத் தாங்கியமையால் பல மஹிரிஷிகள் உய்வடைந்தனர். ஞானியரும், யோகியரும் இறையடியில் ஒன்றினர். பித்ரு தேவர்கள் அற்புத ஆன்மீக நிலைகளைப் பெற்றனர். இத்தகைய சரீர சேவையே சித்தத்தைச் சிவன்பால் செலுத்தும் எனச் சித்த புருஷர்கள் அனுபவப் பாடத்தைக் கற்பித்தனர்.
ஸ்ரீராமானுஜரின் குரு இத்தகைய அரிய காட்சியைக் கண்டு நெக்குருகினார். தம் தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று நிறைவு செய்த ஸ்ரீராமானுஜர் மேடையில் இருந்து கீழிறங்கிட முப்பத்து முக்கோடி தேவர்களும் பூமாரி பொழிந்திட்டனர். வெற்றிலையில் ஸ்ரீராமானுஜர் சயனித்தமையால் வெற்றிலைக் காம்பினைக் கிள்ளும்போது “ஸ்ரீராமானுஜாய நம:“ (ஸ்ரீராமானுஜா போற்றி) என்று தியானித்தால் அந்த வெற்றிலைக்கு மோட்சம் கிட்டும் எனச் சித்தபுருஷர்கள் அருளியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் ஏழைகளுக்குத் தாம்பூலம் அளித்தால் கணவனின் தீராத நோய் தணியும்.

உழவாரத் திருப்பணி

நம்முடைய கர்மவினைகளைச் சுலபமாகக் கழிப்பதற்கான எளிய வழிமுறை கோயில் உழவாரத் திருப்பணி ஒன்றே! வசதி மிக்கவர்கள் கோபுரத் திருப்பணி, கும்பாபிஷேகம் போன்ற இதர கோயில் திருப்பணிகளை மேற்கொள்வர். சரீரத்தைப் பிழிந்தெடுத்துச் செய்யப்படுகின்ற உழவாரத் திருப்பணிக்குத் தனிமகத்துவம் உண்டு. காரணம், இதில் மட்டுமே சஞ்சித கர்மா (பூர்வ ஜென்ம வினைகள்) பிராரப்த கர்மா (நடப்பு ஜன்ம வினைகள்) ஆகாமி கர்மா (எதிர் ஜன்ம வினைகள்) மூன்றுமே கழிகின்றன. அதிலும் சற்குரு தலைமையில் ஒரு சிறு கோயிலில் உழவாரப் பணி ஒருநாள் அதுவும் நாலைந்து மணி நேரங்களுக்கு மட்டுமே மேற்கொண்டால் கூட அபரிமிதமான புண்ணியத்தை நல்குவதோடு
1. இக்குறுகிய நான்கு மணி நேர கால உழவாரப் பணியால் கூட நூற்றுக்கணக்கான ஜன்மாக்களின் கர்ம வினைகள் கழிகின்றன.
2. கோயில்களில் தான் சித்தர்கள், மஹரிஷிகள் பல வடிவங்களில் உருவமாகவோ, அரூவமாகவோ நடமாடுகின்றனர். எனவே அவர்கள் சரீரத்தில் பட்ட காற்று நம் மீது பட்டால் கூடப் போதும், நாம் கடைத்தேறி விடலாம்.
3. சாதாரணமாக கோயிலுக்குச் என்றால் ஒரு பத்து நிமிடங்கள் கூடத் தங்கி வழிபடுவதற்கு பொறுமையிருப்பதில்லை. கோயிலில் ஒட்டடை எடுத்தல் எண்ணெய்ப் பிசுக்கெடுத்தல் குப்பையைக் கூட்டுதல், சோப்பிட்டு நீரால் தரையைக் கழுவுதல், நீர்த்தாரை அடைப்புகளை நீக்கிச் சுத்தம் செய்தல், விளக்குகள், திருவாசி போன்றவற்றைச் கழுவிச் சுத்தஞ் செய்தல், கோயில் முழுவதும் கோலமிட்டு விளக்கேற்றுதல் – இத்தகைய உழவாரத் திருப்பணியை மேற்கொள்ளும்போது குறைந்தது நான்கைந்து மணிநேரங்கள் கோயிலில் இருக்கின்ற அற்புத வாய்ப்பு கிட்டுகின்றது. இது பெறற்கரிய தெய்வத் திருவாய்ப்பல்லவா! இதனால் துர் எண்ணங்கள் நீங்கி மனம் தூய்மை பெறுகின்றது.
உழவாரப்பணி ஒரு தியானமே
கடுமையாக உழைத்து உழவாரத் திருப்பணி செய்கையில் வேறு எந்த நினைவுகளும் அண்டுவதில்லை. சாதாரணமாக கோயிலுக்குச் சென்றால் தீய எண்ணங்களும் விதவிதமான நினைவுகளும் மனதை ஆக்ரமிக்கும். ஆனால் கோயிலில் ஒட்டடைக் குச்சியால் அண்ணாந்து பார்த்து வேலை செய்கையில் காரியத்தில்தான் கண் இருக்குமே தவிர வேறு எண்ணங்கள் வராது. எங்கு நோக்கிலும் சிற்பங்கள், புராண வண்ண வேலைப்பாடுகள், தெய்வமூர்த்திகள், சித்த புருஷர்கள், மஹரிஷிகளின் உருவங்கள் – இத்தகைய தெய்வீகச் சூழ்நிலையில் உழவாரத் திருப்பணியை நாள் முழுவதும் செய்ய இதுவே உண்மையான தியானத்திற்கு வழி வகுக்கும். இத்தகைய உழவாரத் திருப்பணிகளுக்குப் பின் தியானம் செய்தால் தான் அமைதி கைகூடும். மனம் ஒடுங்கிய நிலையை உணரலாம்.
விழிப்பு நிலை
இதற்கு விழிப்பு நிலை தியானம் என்று பெயர் வேறு நினைவுகள் வராமல் சாதாரணமான எண்ணங்களுடன் தெய்வீகத் திருப்பணியைச் செய்ய, இதனால் சாந்தமும் அமைதியும் தேடிக் கோயிலுக்கு வரும் ஆயிரமாயிரம் பக்தர்களின் நலனுக்காக சுயநலமற்ற தொண்டாகவும் இத்திருப்பணி அமைவதால் இதற்கு மஹேஸ ஸேவாதியானம் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு வாழ்நாளில் குறைந்தது 300 கோயில்களில் உழவாரத் திருப்பணிகள் செய்தால் அதியற்புதமான தியான நிலைகளையும் யோக உழவாரத் சமாதிகளையும் எளிதில் பெறலாம். பலர் ஒன்று கூடி சத்சங்கம் அமைத்து விடுமுறை நாட்களில் இத்தகைய கோயில் உழவாரத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கும் தமிழகத்தில் பல சற்குருமார்கள் தலைமையில் ஜாதி, மத வேறுபாடின்றி இறைப்பணி நடத்தும் சத்சங்கங்கள் நிறைய உள்ளன. சற்குருவைத் தேடுவோர் இந்த சத்சங்கங்களை முதலில் தேடி அறிந்து பயன்பெற வேண்டும்.
குருவும் பித்ருக்களும்
நம் குரு மங்களகந்தர்வா எவரையேனும் புதிதாக சந்திக்க வேண்டுமெனில் அவர்களை ஏதேனும் கோயிலில் உழவாரப் பணியை மேற்கொள்ளச் செய்து அங்குதான் அவரைச் சந்திப்பார். இது சிவகுருமங்கள கந்தர்வாவின் கட்டளையாகும். இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் ஆன்மீக இரகசியங்கள் உள்ளன.
நம் குருமங்கள கந்தர்வா அத்தகைய புது மனிதரைச் சந்திக்குமுன் அவருடைய மூதாதையாரான பித்ரு தேவர்களிடம் தொடர்பு கொள்வார். மஹான்களே மிகச் சிறந்த மீடியங்கள். ஆனால் அவர்கள் சாமியாடுதல், குறி சொல்லுதல் போன்ற லௌகீக அம்சங்களில் ஈடுபடுவதில்லை. மாறாக இயற்கை நியதிகளுக்கு உட்பட்டே எதையும் வெளிக்காட்டா வண்ணம் இறைப்பணி புரிகின்றனர். சாதாரணமாக பித்ருதேவர்களாகிய நம் மூதாதையர் அமாவாசை, சூரிய, சந்திர கிரஹணங்கள், மாதப் பிறப்பு, சங்கராந்தி, பௌர்ணமி  போன்ற விசேஷ தினங்களில் தான் நம் வீட்டிற்கு விஜயம் செய்கின்றனர். ஏனைய நாட்களில் அவர்கள் எங்கும் வரவிரும்புவதில்லை, வருதலும் கூடாது என்பதும் இறை நியதி. அதுவும் சரியான முறையில் தர்ப்பணங்கள், தான தர்மங்கள், செய்யாவிடில் பித்ருக்களின் சாபம் ஏற்பட்டு அதனால் சந்ததியின்மை, சிறுநீரக கர்ப்பக் கோளாறுகள் , வாகன விபத்துக்கள், அங்கஹீனங்கள், வியாபார நஷ்டங்கள் போன்றவை ஏற்படுகின்றன.
உழவாரப் பணியில் குரு ஆற்றும் அற்புதங்கள்
கோயில் உழவாரத் திருப்பணிகளே பித்ரு சாபங்களுக்குச் சிறந்த பரிகாரங்களாக அமைகின்றன. ஏனெனில் பித்ரு தேவர்கள் பூலோகத்தில் எந்தத் திருக் கோயிலுக்கும் எப்போதும் விஜயம் செய்ய இறையனுமதி உண்டு. எனவே தான் மஹான்கள் தலை சிறந்த மனோரீதியான ஆற்றல் பெற்றிருப்பினும் (TELEPATHY) அவர்களால் எந்தப் பித்ரு தேவருடனும் உடனடித் தொடர்பு கொள்ளும் சக்தி உண்டெனினும் அத்தகைய ஆன்மீக விந்தைகளை (miracles)  அவர்கள் நிகழ்த்த விரும்புவதில்லை. இயற்கைக்கு முரணின்றி அவர்கள் சித்தமெல்லாம் சிவன் பால் இருப்பதால் அவர்கள் இறைவன் இட்டநியதிப்படியே செயல்படுகின்றனர். Miracles are not performed but what they perform become miracles.!!!
நம் குருமங்கள கந்தர்வா குறிப்பிட்ட கோயிலில் ஒருவரைச் சந்திக்கின்றபோது அவருடைய மூதாதையரான பித்ருக்கள் சூட்சும வடிவில் அங்கு பிரசன்னமாகின்றனர். ஏன்? பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகளை நல்வழியில் வளர்த்து நல்லவர்களாக ஆளாக்க வேண்டிய பொறுப்பு இருப்பது போல, பித்ருக்களுக்கும் அவர்களுடைய வம்சாவழியினரை நன்முறையில் கரையேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்புண்டு. எனவே அவர்கள் கோயிலில் பிரசன்னமாகித் தம் குலத்தில் வரும் அடியாரைக் கரையேற்றுமாறு  சற்குருவை வேண்டுகின்றனர். அவர்கள் மூலமாக அவ்வடியாரின் கர்மவினைப் பாங்கினை அறிந்து கொண்டு சற்குரு அவருக்குரித்தான உழவாரத் திருப்பணிகளுக்கு அனுமதி அளிக்கின்றார். இது எவர் கண்ணுக்கும் தெரியாமல் நிகழ்கின்ற விந்தை! இதுமட்டுமா?
பித்ருக்களுக்கும் முக்தியளிக்கும் சற்குரு!
ஆம்! பூலோக ஜீவன்கள் எதுவாயினும் அதற்குப் பிறப்பிறப்பற்ற நிலையைத் தரவல்ல திருவருளை குருவருளால் பொழிந்து மனித உருவில் நடமாடும் சற்குருவே எங்கோ கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி பலலோகங்களில் வாழும் பித்ருக்கள், கந்தர்வர்கள், ரிஷிகளுக்கும் முக்தியளிக்கும் தெய்வீக சக்தி பூண்டவர். எவ்வாறு?
பித்ரு தேவர்கள் நிலையே மிகவும் உயர்ந்த நிலையெனினும் அவர்கள் மேலும் பிறப்பிறப்பற்ற நல்நிலை அடைய வேண்டுமெனில் அவர்களும் நற்காரியங்களைச் செய்தாக வேண்டும், எத்தகைய நற்காரியங்கள்? அவர்களுடைய சந்ததியினர்களுக்காகப் பிரார்த்தித்து அவர்களை நல்வழிப்படுத்தி இறைநினைவுடன் வாழச் செய்வதேயாகும். காமாந்தகனாக வாழ்கின்ற ஒருவனைக் குடி, சீட்டாட்டம், குதிரை ரேஸ் இவற்றிலிருந்து விடுவிக்க அவனது மூதாதையர் அரும்பாடு படுகின்றனர். அதற்கு அவர்கள் ஒரு நிமிடம் கூட அயராது உழைக்கின்றனர். அவனோ எதற்கும் மசியாது தன் வாழ்க்கையை வீணாக்குகின்றான். பித்ருக்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தரும் தர்ப்பணங்கள், ஹோமங்கள், தானதர்மங்கள் எதையும் அவன் சரிவரச் செய்வதில்லை. பித்ருக்களிடம் தொடர்பு கொள்ளும், தெய்வீக ஆற்றல் பெற்ற குருமார்களையும் மஹான்களையும் அவன் நாடுவதில்லை.
அடியார் : குருதேவா! பித்ருக்களுக்கும் முக்தியளிக்கும் சற்குரு இதனை எவ்வாறு நிறைவேற்றுகிறார்?
குரு : கோயிலில் உழவாரப் பணியில் யாம் ஈடுபத்தும் அடியாரின் உடலில் பித்ருக்கள் சூட்சுமமாகப் புகுந்து அவர்களும் இறைப் பணி ஆற்றுகின்றார்கள். ஒரு அடியாரின் உடலில் பல பித்ருக்கள் ஒரே சமயத்தில் சூட்சுமமாகப் புகுவதுண்டு. இதற்கான ஆற்றல் சாதாரணமாக எந்த அடியாரிடமும் இருப்பதில்லை. பல பித்ருக்களின் சூட்சும சரீரங்களைத் தாங்கும் சக்தியை சற்குருவே அடியாருக்கு அளிக்கின்றார்.
பூலோகத்தில் வாழ்ந்த போது எந்தக் கோயிலிலும் உழவாரத் திருப்பணி செய்யும் வாய்ப்பைப் பெறாத பித்ருக்கள் தம் சந்ததிகளின் உடலில் புகுந்து அக்கர்ம பாக்கியினைத் தீர்த்துக் கொள்வதோடு தாங்களும் உய்வுபெற்றுத் தம் சந்ததியினரையும் மேம்படுத்துகின்றனர். சாதாரணமாக நான்கு வாளிகள் கிணற்று நீரை இறைத்தாலே களைப்படையும் ஓர் அடியார், கோயில் உழவாரத் திருப்பணியில் 30 வாளிகள் இறைத்தால் கூடக் களைப்படைவதில்லை. இந்த அபரிமித சக்தி எவ்வாறு வந்தது? பித்ருக்களாலன்றோ! இந்த அற்புதத்தை (miracles) எவரும் அறியாவண்ணம் செய்பவர் சற்குரு அல்லவா ? பித்ருக்களுக்கும் மேன்மையளித்து பூலோகத்து மனிதர்களுக்கும் இறையருள் வாரி வழங்கும் நடமாடும் தெய்வமே சற்குருநாதர். ஒரு சிறு கோயிலின் உழவாரத் திருப்பணியில் இத்தகைய ஆன்மீக விந்தைகள் (miracles) நிகழ்கின்றன. எனவே மனித குலத்திற்கு நல்வழி காட்டும் சற்குருவுடன் கோயில் உழவாரத் திருப்பணியில் அனைவரும் ஈடுபட்டு நற்கதி அடைவோமாக!

ஸ்ரீவிருட்சபாலீஸ்வரர்

சிவபெருமானின் அற்புதமான அவதாரங்களில் ஒன்றே ஸ்ரீவிருட்சபாலீஸ்வர மூர்த்தியாவார். தஞ்சை ஸ்ரீபிருஹதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீவிருட்ச பாலீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இத்தகைய மூர்த்திகளின் அவதார மஹிமைகளை அறியாது நாம் சாதாரணமாக தரிசனம் செய்து வந்துவிடுகின்றோம். தரிசனத்திற்கான பலன்கள் உண்டு எனினும் இத்தகைய அபூர்வமான மூர்த்திகளின் மஹிமைகளை அறிந்து நாம் தொழுகின்ற போது அதன் பலன் பன்மடங்காகின்றது. தரிசனம் பூர்ணமடைகின்றது.
ஸ்ரீவிருட்ச பாலீஸ்வரர் மஹிமை
உழவர் பெருமக்களும், காபி, தேயிலை போன்ற மலைத் தோட்டக்காரர்களுக்கும், ஸ்ரீவிருட்சபாலீஸ்வரரின் அனுக்ரஹம் இன்றியமையாததாகும். உழுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல், வரப்புக் கட்டுதல், பாத்தி பிரித்தல் போன்ற நிலப் பணிகளில் புல், பூண்டு, புழு போன்ற கோடிக்கணக்கான ஜீவன்கள் வதையுறுகின்றன. மேலும், பூமாதேவிக்குரித்தான பூஜைகளும், ஸ்ரீபுவனேஸ்வரி தேவிக்குரித்தான வழிபாடுகளும் முறையாகச் செய்யப் படாமையால் பல தோஷங்களும், துன்பங்களும் உண்டாகின்றன. கோயில் நிலத்தை உழுபவரும் கோயிலுக்குரித்தான விளைச்சலின் பங்கை சரிவரத் தருவதில்லை. இது மாபெரும் பாவமாக அமைந்து சொல்லொணாத் துயரங்களைத் தரும்.
நிலப்பயிர் சாகுபடியில் உண்டாகும் பலகோடி ஜீவன்களின் வதைகளுக்கு பரிகாரமாக ஸ்ரீவிருட்சபாலீஸ்வர வழிபாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே சாகுபடியில் கிட்டிய முதல் விளைச்சலைக் குல தேவதை, கிராம தேவதைகள் மட்டுமின்றி, ஸ்ரீவிருட்சபாலீஸ்வரருக்கும் அர்ப்பணித்து ஏழை, எளியோருக்கு நிறைய அன்னதானமிடுதல் வேண்டும் . விருட்சங்களாகிய பயிர்களைக் காத்து ரட்சிப்பவர ஸ்ரீவிருட்சபாலீஸ்வரர். மலைத் தோட்ட சொந்தக்காரர்கள் ஸ்ரீவிருட்சபாலீஸ்வரருக்கு மனமாரத் திருப்பணிகளும் அளவிறந்த தானதர்மங்களும் செய்திடில் மலைத் தோட்டப் பயிர்கள் நன்கு விளையும்.
ஸ்ரீவிருட்சபாலீஸ்வரர் திருப்பணி
புளி, புங்கம், இலுப்பை, தேக்கு, வேங்கை போன்ற மரங்களைப் பயிரிடுவோரும், மரம் நடும் தொழிலில் ஈடுபடுவோரும், ஸ்ரீவிருட்சபாலீஸ்வரரைத் தொழுதே ஆக வேண்டும். இவர்கள் ஸ்ரீவிருட்சப்பாலீஸ்வரர் எழுந்தருளியுள்ள கோயில்களில் கோபுரத் திருப்பணியை நடத்திக் கொடுத்திடில் தங்கள் தொழிலில் முன்னேறுவர். எனவே ஸ்ரீவிருட்சபாலீஸ்வரரைத் தொழுவதால், தம் சுயநல வாழ்வுக்காக மரம், செடி, கொடிகளுக்கு இழைக்கின்ற தீங்களுக்கு நன் முறையில் பரிகாரம் பெறலாம்.
பரிகார முறை
அதர்மமான முறையில் மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல் போன்ற பெரும் பாவங்களுக்கு ஸ்ரீவிருட்சபாலீஸ்வரருக்குச் செய்கின்ற திருப்பணிகளே உன்னதமான பரிகாரமாகும். மரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பள்ளிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும், நாற்காலிகள், பெஞ்சுகள், கரும்பலகைகள், படுக்கைகள் கோயில் வாகனங்கள், தேர் உறுப்புகள் போன்றவற்றை இலவசமாகச் செய்து தந்திடில் ஸ்ரீவிருட்சபாலீஸ்வரரின் அருளைப் பெறலாம். மரம் அறுவைத் தொழிலதிபர்கள், பர்னிச்சர் Furniture  தயாரிப்பளர்கள், விற்பனையாளர்கள் முதலியோர் ஸ்ரீவிருட்சபாலீஸ்வரர் உறையும் சிவத்தலங்களை நாடி நன்முறையில் திருப்பணிகள் ஆற்ற வேண்டும்.
பல்லாண்டுகள் நிழல் தந்து, நிலத்தைக் கெட்டியாக்கி, நிலச்சரிவு முதலியவை எற்படாவண்ணம் மக்களுக்கு நன்முறையில் சேவை செய்யும் மரங்களை வெட்டி வீழ்த்துவதால் பல சாபங்கள் ஏற்படுகின்றன. அம்மரங்கள் சாய்வதற்குக் காரணமாக இருப்போர் அம்மரங்களைப் போல் பல ஆண்டுகள் மக்களுக்குச் சேவை புரிந்தால் தான் அம்மரங்களின் சாபங்களிலிருந்து மீள முடியும். இல்லையெனில் இந்த சாபங்களால் அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும். கதிர் அறுத்தல், மரங்களை வெட்டுதல், களை எடுத்தல் போன்ற நிலப்பணிகள் ஆற்றுமுன் செய்ய வேண்டிய பூஜைகள், நற்பணிகள் பல உண்டு இவற்றைத் தக்க சற்குருமார்களை நாடி அறிதல் வேண்டும். இவையே பச்சை இன ஜீவன்களின் சாபங்களிலிருந்து மக்களைத் காப்பாற்றும். ஸ்ரீவிருட்சபாலீஸ்வரர் எழுந்தருளியுள்ள கோயில்களில் உழவாரத் திருப்பணிகள், கோபுரத் திருப்பணிகள், ஏழை எளியோருக்கு அன்னதானம், பள்ளிகள், மருத்துவமனைக்கு மரச்சாமான்கள் அளித்தல் போன்றவற்றைப் பரிகார முறையாக சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
வைச்வ தேவ பூஜை
காய்கறிகளை உண்ணுவோரும் பல தோஷங்களுக்கு உள்ளாகின்றனர். இது கருதியே “வைச்வ தேவம்” என்னும் இரவு நேரப் பூஜையைப் பெரியவர்கள் வகுத்துள்ளனர். கலியுகத்தில் இது மறைந்து விட்டது என்றே கூறவேண்டும் . ஸ்ரீவிருட்சபாலீஸ்வரரைக் குறைந்தது 21 முறையேனும் துதித்துப் பசு, யானை, காளை, எருமை, குதிரைகளுக்கு வாழைப்பழம், கீரை, கொள் முதலியவற்றைத் தினமும் அளிப்பதோடு, எறும்பிற்கும் உணவிடுவதால் பச்சைக் காய்கறிகளை உண்பதால் உண்டாகும் தோஷங்களிலிருந்து நன்முறையில் விடுபடலாம் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இதுவே எளிமையான வைச்வ தேவபூஜை.

கணவனுக்கான பாத பூஜை

ஏது பழங்காலத்து முறையாயிற்றே! இது நம் காலத்திற்கு ஒத்து வருமா? பாதபூஜை செய்கின்ற அளவிற்குக் கணவர் புனிதமானவரா? சீட்டு, புகை பொடி, பொய் எல்லாம் உண்டே! பெற்றோர்களுக்குப் பயந்து தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லையே! வீட்டிற்குள் பெற்றோர்களுக்கு ஜால்ரா, வெளியில் தன்னைத் (மனைவியை) தாஜா செய்கிறாரே! பாதபூஜை செய்தால் மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே! – இவையெல்லாம் பாத பூஜை பற்றி பெண்களிடையே எழுகின்ற அர்த்தமுள்ள வினாக்கள்!
மனைவி தனக்குப் பூஜை செய்ய வேண்டாம், திட்டாமலிருந்தால் போதுமே! பாத பூஜையைப் பெறுமளவிற்குத் தான் உயர்ந்த ஆத்மா இல்லையே! எத்தனையோ கெட்ட பழக்கங்கள் எனக்கு உண்டே! பாதபூஜையால் தனக்கு என்ன லாபம்? – இவையெல்லாம் கணவன்மார்களுடைய ஆதங்கங்கள்!
பாதபூஜையின் பலன்கள்
பாதபூஜையின் முக்கியத்துவத்தை அறிந்தால் கணவன் மனைவியரிடையே சுமுகம் ஏற்படும். எந்தப் பெண்ணும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவாள். இது நிறைவேற கணவன் ஒழுக்கம் நிறைந்தவனாகவும், பொறுமை, அமைதியுடனும் மிளிர பாதபூஜை உதவுகிறது. மனைவி எந்த அளவிற்குப் பாதபூஜை செய்கின்றாளோ அந்த அளவிற்கு
1. கணவன் நல்ல நடையுடையுடன் இறுதிக்காலம் வரை ஆரோக்கியமாக இருப்பான். படுத்த படுக்கையாக, நோயாளியாக இல்லாது திடகாத்திரமாக இருந்து பயனுள்ள வாழ்வை மேற்கொள்வான். இவை பாதபூஜையின் மகிமைகளே!
2. பாதபூஜையின் சக்தியால் கணவன் தகாத இடங்களுக்குச் செல்லமாட்டான்.
3. பாதபூஜையின் வைராக்கிய சக்தியால் பொடி, புகை, குடி போன்ற தகாத பழக்கங்கள் இருக்குமாயின் அவை குறைந்து நாளடைவில் விரைவில் மறையும்.
4. கணவன் ஆழ்ந்த இறை நம்பிக்கையைப் பெறுவான்.
மனைவியின் தியாகம்
எந்தப் பெண்ணும் தன் கணவன் நீண்ட ஆயுளுடன் திடகாத்திரமாக வாழ்வதையே வேண்டுகின்றாள். புனித மகரிஷி தம்பியினரான ஸ்ரீஅத்திரி – அனுசூயா இருவரும் சிறப்பான சில இல்லற தர்மங்களை அளித்துள்ளனர். இறை நியதிப்படி கணவனுடைய புண்ணிய சக்தியில் பாதிப் பங்கு மனைவியைச் சார்கிறது. இறைநியதியால் கணவனுடைய புண்ணிய சக்தியில் பாதியைப் பெறும் மனைவி தன் பாதபூஜையால் கணவனுக்குப் பிரதிபலனாய் ஓர் அற்புத சக்தியை அளிக்கிறாள். இந்த தியாகத்திற்குப் பரிசாக, நன்றியாகக் கணவன் தகுந்த நல்வாழ்க்கையை அளிக்கவேண்டும். இது அவனுடைய நல்லொழுக்கம், நன்னடத்தை மூலமாகவே வெளிப்படும்.
கணவனே தெய்வம்
இந்து மதப் பண்பாட்டில் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று நிதர்சனமாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் தன் (பாத) பூஜைகள் மூலம் ஒரு பெண் தன் கணவனைக் கண்கண்ட தெய்வ நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே! ஒரு முறை பாதபூஜை செய்தாலே உடனடியாகப் பலன் கிட்டுவதைப் பெண்கள் மனப்பூர்வமாக உணரலாம். தொடக்கத்தில் மாதத்திற்கு இருமுறையாக பாதபூஜையைச் செய்து அற்புதமான ஆத்ம சுத்தியை தம்பதியினர் பெறுவார்களாக! இன்றைக்கும் வட இந்தியாவில் மூத்த சகோதர, சகோதரிகளைத் தொட்டு வணங்கும் நற்பழக்கம் உள்ளது. பார்ப்பவரை நெகிழச் செய்யும் காட்சி இது! எனவே கணவருடைய பாதங்களைச் சேவியுங்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வீர் இறையருளால்!

அடிமை கண்ட ஆனந்தம்

சென்னை இராயபுரம் (கல்மண்டபம்) அங்காளம்மன் கோயில்..... கோவணான்டிப் பெரியவரைத் தேடி அங்கு வந்த சிறுவன் அவர் அமர்ந்திருந்த நிலை கண்டு திடுக்கிட்டான். வழக்கமாக ஸ்ரீபாவாடைராயன் சந்நதி அருகே, பெரிய தூணில் சாய்வாக அமர்ந்து காட்சி தரும் பெரியவர் இன்றோ..... சுற்றிலும் பச்சிலைகள்.... முடிச்சு முடிச்சாக வேர்கள்.... கொத்துக் கொத்தாய் மூலிகைகள், மரக் குப்பிகளில் தைலங்கள்.. இவற்றினிடையே அமர்ந்த பெரியவரோ வெகு மும்முரமாய்ப் பல மூலிகைககைப் பிழிந்து சாறெடுத்துக் கலந்து கொண்டிருந்தார். சிறுவன் கண்கள் கொட்டா வண்ணம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்! – மூலிகைகளெல்லாம் ரகசியமானதுன்னு சொல்வாரே! பப்ளிக்கா ஏதேதோ செஞ்கிட்டு இருக்காரே! ஆனால் விஷயமில்லாமல் எதுவும் செய்யமாட்டாரே’ – சிறுவன் சிந்தித்தான்.
“ஓம் வாத்தியாரே!” – என்ற சிறுவனுடைய வழக்கமான முதல் நமஸ்காரத்தைக் கூடப் பெரியவர் சட்டை செய்யவில்லை! ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தவாறே கையில் சிறிய குடுவைகளுடன் பெரியவர் உள்ளே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சந்நதியினுள் சென்றார். சிறுவன் மௌனமாகப் பின் தொடர்ந்தான்! பெரியவர் பலமுறை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியுடன் பேசுவதைச் சிறுவன் பார்த்திருக்கிறான். ஸ்ரீஅம்பாளின் இனிய குரலும் அவனுக்குப் பரிச்சயமாகி விட்டது. ஆனால் இனம் புரியாத பாஷை!
பெரியவர் குங்குமத்தை அர்ச்சித்தவாறே பராசக்தியுடன் பேசுவார்! அர்ச்சிக்கும் குங்குமத் துகள்கள் விண்ணில் மிதந்து ஸ்ரீஅம்பாளின் தேகத்தில் அழகிய ஆரமாக, மாலையாகக் கவினுற அமையும் அற்புதத்தைக் கண்டு சிறுவன் பலமுறை ஆனந்தித்திருக்கிறான்! பலமுறை உள்ளே சென்று வெளியே வருவதுமாக இருந்த பெரியவர், எல்லா மூலிகை சாறுக் குப்பிகளையும் ஒரு பாதரசக் குப்பியில் சேர்த்து வெகுவேகமாக இப்போது உள்ளே சென்றார். குப்பியிலிருந்து அனல்தெறிக்கும் ஆவி பறந்தது! “ஓ! வாத்தியாரால் சூடு தாங்க முடியவில்லையோ! இப்படி தூக்கிக் கொண்டு ஓடுகிறாரே!” – சிறுவன் யோசித்தான்.
பாதரசக் குப்பியை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியின் திருவடியில் சார்த்தி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் பெரியவர்! சிறுவனும் அவ்வாறே செய்தான். .. “ஓம் ராஜா!” – பெரியவர் அன்பொழுக அழைக்கச் சிறுவன் உருகிவிட்டான்!  “அந்தக் குளிகையை எடுத்து வா!” – பெரியவ்ர் கர்ப்பகிரகத்திலிருந்து வெளி நடந்தார்.
“சுடுமே!” என்று நினைத்துக் கொண்டே சிறுவன் பயந்தவாறே ஸ்ரீஅம்பாள் பாதங்களிலிருந்து குளிகையை எடுத்தான். ஜில்லென்றிருந்தது குளிகை! ..... மௌனமாக வெளியே தூணில் சாய்ந்தார் பெரியவர். குளிகையுடன் வெளிவந்த சிறுவன் அவரருகே அமர்ந்தான்.
“ஆமாம்... இங்கே சிதறியிருந்த நூற்றுக்கணக்கான பச்சிலைகள் எல்லாம் எங்கே போச்சு? சுத்தமாகக் கூட்டி வாரினாற்போல் ஒன்றையுங் காணோமே!” – ஆர்வத்துடன் கேட்டான் சிறுவன்.
“எல்லாம் காமதேனு எடுத்துண்டு போய்ட்டா” – பெரியவர் வாசலை நோக்கிக் கைகளை ஆட்டினார்,
அங்கே.... தங்க நிறத்தில் ஒரு பசு.... அழகாக ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தது! வாயில் கொத்துக் கொத்தாகப் பச்சிலைகள். இவ்வளவு அழகான பசுவை இதுவரையில் அவன் பார்த்ததில்லை. அதன் உடலெங்கும் தங்க ஆபரணங்கள்! இதுதான் தேவலோக காமதேனுவா!
‘ஓடிப் போய்ப் பார்க்கலாமா!” சிறுவன் எண்ணியதுதான் தாமதம், பெரியவர் சிறுவனின் தொடையில் அழுத்திக் கிள்ளினார். “ஆய்ங்..... “ சிறுவன் அலறியவாறே பார்வையைத் திருப்பினான். பெரியவர் ஏதும் அறியாதவர் போல் கண்களை மூடிக் கொண்டு சாந்தமாக அமர்ந்திருந்தார். சிறுவன் மெதுவாகக் கண்களை உருட்டி வாசல் பக்கம் நோக்கினான். அங்கே, தங்கநிற காமதேனுவைக் காணவில்லை. சிறுவன் மீண்டும் பெரியவரை நோக்க, அவர் இப்போது கண்களைத் திறந்து ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்ந்தார். இதன் பொருள் என்ன?
“என் கண்களை மூடி அவைகளின் தெய்வீகப் பார்வையை உனக்குத் தந்தேன். அந்த விசேஷமான நேத்திர சக்தியால் தான் நீ தங்க நிறக் காமதேனுவின் காட்சியைப் பெற்றாய்! உனக்குப் பிராப்தம் அவ்வளவே! இதோடு திருப்தி அடைவாய்!”
சிறுவன் உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான்!
பெரியவர் சிறுவனிடம் அந்தக் குளிகையை நீட்டினார்! “இது தாண்டா கனகக் கற்பகக் குளிகை, இதைக் கையில் வெச்சிருந்தா எல்லா நட்சத்திரங்களையும் பகல்லே கூடப் பார்க்கலாம். நவரத்தினங்கள், தங்கநகை, முத்து மாலை எது வேணுமோ எல்லாம் கிடைக்கும். இந்தா, இதை பத்திரமா வெச்சுக்கோ!”
சிறுவன் வேண்டாமென்று பலமாகத் தலையாட்டினான்.
“இத வெச்சுண்டா தப்பு ஒண்ணும் இல்லைடா. குரு ஆசிர்வாதம் பண்ணினதுங்கிறது விசேஷமில்லையா! தொலைச்சுட்டா நான் உன்னைத் தொலைச்சுக் கட்டிடுவேன்னு பயப்படறியா? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! நீயா நெனச்சு யாருக்கும் கொடுத்தாதான் இதைக் கொடுக்கலாம்! இல்லாட்டி ஒரு மாசம் கழிச்சி எங்கிட்ட கொடுத்துடு.”
“வேண்டாம் வாத்யாரே”
“எதிர்காலத்துல நீ திருஅண்ணாமலைல ஆஸ்ரமம் கட்டி நெறைய அன்னதானம் பண்ணனும்... அதுக்குச் செங்கல், சுண்ணாம்பு வாங்க வேண்டாமா? இந்தக் குளிகையை வெச்சு ஒரு தேய் தேய்ச்சின்னா பணமா வந்து கொட்டும்.... யார்கிட்டேயும் கை நீட்ட வேண்டாம்.”
“வேண்டாம் வாத்யாரே”
நல்ல விஷயத்துக்கு இதைப் பயன்படுத்தலாம்னு நானே சொல்றேனே! அன்னதானத்துக்கு இதை வெச்சுண்டு லட்சம் பேருக்கு அன்னம் போடலாம்! எப்பவாச்சும் தானே சித்து செய்யறோம். அதுல ஒண்ணும் தப்பில்லையே! இந்தா பத்திரமா வச்சுக்கோ!”
“வேண்டாம்  வாத்யாரே”
“இத எங்க வக்கறதுன்னு பயமா? கவலைப்படாதே! மத்தவங்க கண்ணுக்குத் தெரியாம உன் பின்னாடியே வரும். எங்கேயும் தொலையாது!”
“வேண்டாம் வாத்யாரே”
“உங்கிட்ட இது இருந்தா எவன் நல்லவன், எவன் கெட்டவன்னு நீயே தெரிஞ்ச்சுக்கலாம்! அதுக்கு மட்டுமாவது ரட்சையா இதை வச்சுக்கோ” சிறுவன் தன் இரு கைகளையும் பின்புறம் இறுகப் பிடித்துக் கொண்டு “வாத்யாரே! ரொம்ப சோதிக்காதே! வேண்டவே வேண்டாம்” என்றான்.
“இல்லைடா! எனக்குப் பயந்துண்டு வேண்டாம்னு சொல்லாதே! இந்த அங்காளி ஆசிர்வாத்துல வந்த குளிகையடா! உனக்காக எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு செஞ்சேன். பத்து நாளா நான் விரதம்னு உனக்குத் தெரியும்.. உன் குரு மனப்பூர்வமாக கொடுக்கிறேண்டா! வாங்கிக்கோ”
“வேண்டாம் வாத்யாரே”
“சரி உனக்கு இது வேண்டாம்னாலும் எதிர்காலத்துல நீ கூட்டப்போற சத்சங்க சபையில் பல ஏழை அடியார்கள் வருவாங்க. இத வெச்சுண்டு அவங்களுக்கு உதவி செய்யலாம். உனக்காக எதுவும் செய்யாதே! குழந்தை, குட்டி இல்லாதவங்க, நோயாளிங்க, வீடு வாசல் காசு பணம் இல்லாதவங்க இப்படி மத்தவங்களுக்கு இத வெச்சுண்டு நிறைய சேவை செய்யலாமே! உன் குருவான நான் தானே இவ்வளவும் சொல்றேன்.”
சிறுவன் அழ ஆரம்பித்து விட்டான்... “என்ன, ஏதாச்சும் சொல்லி விட்டுடாதே வாத்யாரே!”
“இல்லைடா, இந்தக் குளிகையை வெச்சுண்டு, ஓம் வாத்தியாரேன்னு சொன்னாப் போதும், நான் அங்கே வந்து நிப்பேன்! நீ என்னத் தேடி இங்க வரவேண்டாம்! அதுக்கு மட்டுமாவது இத வச்சுக்கோ!”
சிறுவன் கோவென்று அழுது கொண்டே வேண்டாமென்று தலையாட்டினான். பெரியவர் பொறுமையை இழந்தவராய் எழுந்து நின்றார் ..  “டேய் கடைசியாச் சொல்றேன். இது அங்காளி பாதத்துல வச்சது! உனக்குன்னு உன் குரு கொடுக்கிற பொக்கிஷம்! இத ஓம் நமசிவாயான்னு சொல்லி பத்திரமா வச்சுக்கோ! நான் சொல்லும்போது உபயோகிச்சா போதும்.!”
சிறுவன் பெரியவரின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “வாத்தியாரே! இதுக்கு மேலே என்னைச் சோதிக்காதே! என் நெஞ்சு வெடிச்சுடும்” – சிறுவன் புலம்பினான்.
பெரியவர் கால்களை உதறி, “போடா முட்டாள்! அவ்வளவும் வேஸ்ட்...... வீண் விரயம்,” என்றார் கோபத்துடன்!
சிறுவன் எழுந்து உட்கார்ந்து பெரியவரைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“அவ்வளவும் தண்டமாய் போச்சு. அவ்வளவு மூலிகையும் வேஸ்ட்., உன்னை வளர்த்ததற்கு ஒரு கழுதையை வளர்ந்திருந்தா கொஞ்சம் சுமையாவது தூக்கும். அவ்வளவும் தண்டம்., தண்டம்..” என்று கத்தியவாறே குளிகையைக் கையில் ஏந்தி மேலே தூக்க, ஒரு தெய்வரூபத்தில் ஜ்வலித்த ஒர் அழகிய உருவம் அக்குளிகையைப் பெற்றுப் பெரியவரை வணங்கிச் சென்றது.
“இவர் தான் தேவேந்திரன்! நீ வேண்டாம்னு சொன்னதுனால குளிகையை அவர் வாங்கிட்டார். உனக்கு அவர் தரிசனமே பெரிய பாக்கியம்” பெரிய புயல் அடித்து ஓய்ந்தாற்போல் இருந்தது! சிவந்த கண்களுடன் சிறுவன் பெரியவரை நோக்கினான். அவர் பின்புறக் கோவணத்திலிருந்து எதையோ உருவி, “இந்தாடா பத்து பைசா! கடலை வாங்கிக்கிணு வா! ரொம்பப் பசிக்குது” எனச் சாவகாசமாகக் கூறிட,
“அந்தக் குளிகை இருந்தா அதுல கடலை வருமில்ல! வாத்தியாரே!”
“படவாப் பயலே” என்று பெரியவர் பொய்க் கோபத்துடன் கையை ஓங்கினார் ! சிறுவன் சிட்டாய்ப் பறந்தான். என்னே  குருபாசம்! என்னென்ன சோதனைகள் !
அதன் பின்னர் பலமுறை சிவகுரு மங்களகந்தர்வா நம் குருமங்கள கந்தர்வாவிடம் “அந்த குளிகையை விட்டிட்டியே! நல்ல சான்ஸை நழுவ விட்டுட்டியே” என்று  விடாமல் கூறிக் கொண்டேயிருந்தாராம்!

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam