அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

வசிதியில்லாவிடினும் ஒருவருக்கு உணவிட வேண்டும் என்று ஆத்மார்த்தமாக எண்ணிடில் ஆண்டவன் அத்ற்கான நல்வழியைக் காட்டுகின்றார்.
பிச்சையெடுத்தேனும் கோயிலில் உள்ள கிழவருக்கு அன்னமளிக்க வேண்டும் என்று சிறுவன் எண்ணித் துணிந்தவுடனே.....
எதிர்ச் சந்துக் கடைசியில் “மினுக் மினுக்” கென்று விளக்கு எரிவது தெரியவே சிறுவன் அதை நோக்கி விரைந்தான்.
... ஒரு சிறிய சிற்றுண்டிக் கடை! கடவுளே பார்த்து அனுப்பினாற் போல்.. அங்கே.......... சுடச் சுட... இட்லிகள்... சட்னி சாம்பாருடன்! வருவது வரட்டுமெனச் சிறுவன் தைரியமாக “ஆறு இட்லி பார்சல்” , என்று குரல் கொடுத்தான்.. கையில் நயா பைசா கிடையாது!
கடைக்காரன் பார்சலைக் கட்டிக் கையில் கொடுத்ததும், “கோயிலில் இருக்கும் எங்க தாத்தாவுக்கு டிபன் கொடுத்துட்டு உடனே வந்துடறேன்! வந்து நானும் டிபன் சாப்பிடணும்.” சிறுவன் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினான்.
நின்றால் சந்தேகம் வந்துவிடுமே!
“தம்பீ! ஓடாமல் மெதுவாய் போ!” கடைக்காரன் அன்புடன் கூறியவுடனேயே சிறுவனுக்குக் குதூகலம் பீறிட்டது.  இட்லிப் பாக்கெட்டுடன் மகிழ்ச்சியுடன் கோயிலுக்குள் ஓடினான்.
“இட்லி கடைக்காரன் பாக்கியை நம்ப வாத்தியாரிடம் பேசித் தீர்த்துடலாம், இந்த மாதிரி நல்ல காரியம்னா அவருக்கு உசுராச்சே!”
கிழவரிடம் அவன் இட்லியை அளித்திட ...............................
சூடான இட்லியை லபக் லபக்கென்று விழுங்கிய கிழவர் ஓர் அலுமினியக் குவளையை நீட்டிட, அதில் அவன் நீர் எடுத்து வந்து அவருடைய தாகத்தைச் சாந்தப்படுத்தினான்.
அக்கிழவர் துணியால் தன் முகத்தை அரைப் பக்கமாக அடிக்கடி மூடிக் கொள்வதைச் சிறுவன் விநோதமாகப் பார்த்தான்! என்ன ஆயிற்று இவருக்கு!
“இந்தா வச்சுக்கோ!” – கிழவர் எதையோ நீட்டினார்! சிறுவன் தயக்கத்துடன் வாங்கிப் பார்த்தான்!
ராஜா தலை போட்ட பச்சை படிந்த செல்லாக் காசு!
“இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது! நம்ப வாத்தியார் என்ன சொல்வாரோ! இட்லிக் கடைக்காரனிடம் இதைக் கொடுத்தால் முதுகில் நாலு சாத்து சாத்துவான்...” என்ற எண்ணங்களில் மிதந்த சிறுவனை,
“டேய்! அப்படியெல்லாம் காசைக் கொடுத்துடாதே! தேவலோகத்துக் காசு அது!” – கலகலவென்று சிரித்தவாறே அங்கிருந்த தூணிலிருந்து வெளிப்பட்டார் கோவணாண்டிப் பெரியவர்!
எங்கிருந்து வந்தாரிவர்?
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாரா?
வழக்கம் போல விடையில்லா வினாக்களிவை!
“அபூர்வமான காசுடா இது! ரொம்ப பவர்புல காசு...! பெரியவர் விவரித்துக் கொண்டே செல்ல...
செப்புக்காசு மஹிமையுடன் கோவணாண்டிப் பெரியவரைக் கண்டதில் வியப்பு, திகைப்பு கொண்டு திணறிய சிறுவன் அரையிருட்டில் செப்புக் காசுடன் பெரியவரை நோக்கித் தாண்டினான்.
“டண்” ,.............  ஏதோ இடிக்க............. சிறுவன் துடிதுடிக்க கீழே விழுந்தான்.
‘விண் விண்’ என்று வயிற்றுவலி!
இங்குமங்குமாகப் புரண்டு தத்தளித்தான் சிறுவன்.
வயிற்றில் கயிற்றைக் கட்டி அறுப்பது போல் கொடிய வலி!
சிறுவன் கதறினான்!
கோவணாண்டிப் பெரியவர் இம்மியும் அசையவில்லை! அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்!
“அடடே! வயித்துவலியா!” – அந்த அரைத்துணிக் கிழவர் படுவேகமாய் இறங்கிவந்து புரண்டு புரண்டு அழுது கொண்டிருந்த சிறுவனை அழைத்து அவன் கையிலிருந்த செப்புக் காசை உருவினார்!
கையிலிருந்து காசு பிரிந்தவுடன் கொஞ்சம் வலி குறைந்தாற்போல் இருந்தது!
வலியைவிட அக்கிழவர் எதிர்பாராத விதமாக சுறுசுறுப்புடன் எழுந்து வந்து, தன் கையிலிருந்த செல்லாக் காசைப் பிடுங்கி வெகு வேவமாக அதனைத் தரையில் தேய்த்தது அவனுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அவர்தம் அரை முகத்தில் சூர்யனைப் போல் பளிச்சிட்ட கண்களைக் கண்டு சிறுவன் மேலும் வியப்புற்றான். ஒருவேளை ஒளி பொருந்திய கண்களை மறைப்பதற்குத்தான் அரை முக்காடோடு இருக்கின்றாரோ, ஆனால் அவருடைய நடை, உடை, பாவனைகள் ஒரு குருடனுடையது போலல்லவா தென்படுகிறது?
அவ்வப்போது அவன் கோவணாண்டிப் பெரியவரைப் பார்த்துக் கொண்டான். அவரோ ஹாய்யாகக் கைகளைக் கட்டிய வண்ணம், தூணில் சாய்ந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இவையனைத்தையும் பார்த்த வண்ணம் தன் கடுமையான வயிற்று வலியைச் சற்றே மறந்திருந்தான் சிறுவன், திடீரென்று வலியின் நினவு ஏற்பட்டுவிட மீண்டும் துடிக்கலானான்.
அக்கிழவர் காசைத் தரையில் தேய்த்தாரல்லவா? அதனைச் சிறிது வழித்துச் சிறுவனின் தாடையைத் தூக்கி நாக்கில் அதனைத் தடவினார்.
அவர்தம் ஸ்பரிசம் பட்டதுமே ஒரு பேரின்ப நிலை தன்னைத் தழுவுவதை உணர்ந்தான் சிறுவன். சொற்பொருள் கடந்த நிலையது!
சிரசு முதல் பாதம் வரை ஒருவிதக் குளுமையுணர்ச்சி பரவுவதை உணர்ந்தான். வயிற்றுவலி என்ன ஆயிற்று? வரிசை வரிசையாக எழுந்த ஆன்மீக அதிர்ச்சியில் வயிற்று வலியையே மறந்துவிட்டான் சிறுவன். அதுவும் மறைந்து விட்டதே! அந்த செல்லாக்காசை உரைத்து நாக்கில் வைத்ததன் மஹிமையால் தானே!
சிறுவன் தயக்கத்துடன் எழுந்து நின்றான்.
கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை அணைத்தவாறே தன்னருகில் அமரச் செய்தார். கிழவருடைய முகத்துணியைச் சற்றே அவர் விலக்கினார்.
அப்பப்பா....!  என்ன ஒளிமயமான கண்கள்! பலகோடி சூர்யன்களை நிகர்த்தாற்போல் பிரகாசமான கண்கள்! இத்தகைய ஜோதிமயமான கண்களைச் சிறுவன் பார்த்ததே இல்லை.. அத்தெய்வீகக் கண்களின் ஒளிச் சுமையைத் தாங்க இயலாது தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான் சிறுவன்.
“இவர் தாண்டா ... சித்தர்!”.... பெரியவர் தொடர்ந்தார்...
“இந்தச் செல்லாக் காசு சாதாரணக் காசு இல்லைடா! தன்வந்த்ரீ லோகத்துலேந்து வந்த காசு! சகல நோய்களையும் குணமாக்கக் கூடியது! இந்தக் காசை கொஞ்சம் உரைத்து நோயாளியின் நாக்கில் தடவினால் போதும் எந்த வியாதியும் உடனே குணமாகும். உன்னோட வயித்துவலி உண்டானதும், தீர்ந்ததும் இந்தச் சித்தரோட திருவிளையாடல் தான். இந்தக் கோயிலில் இருக்கும் 108 சிவலிங்கத்தில் ஒரு லிங்கத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார். அவ்வப்போது அந்த லிங்கத்திலிருந்து எழுந்து வந்து இந்த மாதிரி தரிசனம் கொடுப்பார்”
கோவணாண்டிப் பெரியவர் சற்று நிறுத்தியதும் அந்தச் சித்த புருஷர் தொடர்ந்தார்.
“இந்தக் காசை வெச்சிண்டு நீ எல்லா ஜனங்களுக்கும் இலவசமா சேவை செய்யணும்! வயித்து வலி, இடுப்பு வலி, நெஞ்சு வலின்னு வர்றவங்களுக்கு இந்தக் காசை ஜலம்விட்டுத் தேய்ச்சு நாக்கில் தடவினால் போதும், எந்த வலியும் பறந்துடும்.. ஆனா அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளே நூத்துகணக்கான பேருக்கு சேவை செஞ்சு இந்தக் காசைத் சுத்தமா தேய்ச்சுடணும். அது முழுசும் தேயற அளவுக்கு நீ பாடுபட்டுப் பலருக்கும் உதவியாயிருக்கணும், இப்படி செஞ்சு முடிச்சா..........”
சித்த புருஷர் இவ்விடத்தில் சற்று நிறுத்தினார்.. ஏதோ உன்னத சமாதி நிலை கூடினாற் போல் ஒடுங்கியிருந்த சிறுவன், ஆச்சரியம் கொப்பளிக்கும் கண்களுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
இப்போது அவர் சற்று அழுந்தந் திருத்தமாய்ப் பேசினார்.
“ ...................................... இந்தக் காசு முழுசும் ஒரு வருஷத்துக்குள்ளே தேயற அளவுக்குச் சேவை செஞ்சா..............”
மீண்டும் அவர் இடைவெளி தந்தார் .” ............... அதுக்கப்புறம் நீ விபூதி எடுத்துக் குடுத்தாப் போதும், சகல நோய்களும் நிவாரணம் ஆகும்”
ஒரு பேரொளி அங்கே படர்ந்தது. சித்தர் லிங்கத்தினுள் மறைந்தார். எந்த லிங்கமோ யாது பெயரோ?
சற்குரு பின்னால் ஆன்மீக வேட்கையுடன் சுற்றினால் அனைத்தையும் அறியலாம்.
அதன் பிறகு கோவணாண்டிப் பெரியவரின் அருள்வழி முறைப்படி அச்சிறுவன் சென்னையில் சேரிகள், மீனவக் குப்பங்கள், குடிசைப் பகுதிகள் சந்து, பொந்துகள் எங்கும் தீவிர இறைப்பிரச்சாரம் செய்து, அந்த தெய்வீக நாணயத்தின் மூலம் பலருடைய நோய்களைத் தீர்க்கும் பாக்கியத்தைப் பெற்றான்.
“................சிறுவன் ஆயிற்றே! இவனுக்கென்ன தெரியும், ஏதோ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துகின்றேன் என்று சொல்கிறானே, சிறுபிள்ளை ஆயிற்றே.!..........”
இவ்வாறாகப் பலவிதக் கருத்துகள் எழுந்தாலும் நாளடைவில் சிறுவனுடைய தெய்வீக சக்தி எங்கும் பரவத் தொடங்கிற்று. ஆனால் அதற்குள் எத்தனையோ சோதனைகளை சிறுவன் சந்திக்க வேண்டியதாயிற்று. அனைத்தையும் குரு அருளால் வெற்றியுடன் சந்தித்து உன்னத இறைப்பணிக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான்.
அந்த தெய்வீக நாணயத்தின் இரகசியத்தை வெளியிட இயலாத சூழ் நிலை! அதனுடன் மூலிகைகளை சேர்த்துச் நாணயத்தின் தெய்வீக சக்தியை யாவருக்கும் அளிக்க வேண்டிய வழிமுறை இக்கட்டான நிலையில்.........................
தற்போது நம் சபையின் சார்பில் சென்னையருகே கிராமங்களில் மாதாந்திர இலவச மருத்துவ முகாம்கள் இறையருளால் நடைபெற்று வருகின்றன. குருகுல வாசத்தில் பெற்ற மேற்கண்ட இறையனுபவங்களின் தொடர்ச்சியாய் நம் குருமங்கள கந்தர்வாவின் அருளாசியுடன் மருத்துவ முகாம்களில் மருந்துகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. தன்வந்திரீ லோக நாணயச் சக்கரத்தைத் தீண்டிய தெய்வத் திருக்கரங்கள் அல்லவா! மஹான்கள் கைபட்ட யாவையும் வினை, நோய், கர்மம் தீர்க்கும் மாமருந்தாய் அமைவதில் வியப்பென்ன! ஒவ்வொரு கிராமத்திற்கும் உரித்தான தும்ர லோசன தன்வந்திரீ, ஸர்ப திரிபுரண்ட தன்வந்திரீ போன்ற ஸ்ரீ தன்வந்திரீ நாம ஸ்மரணத்துடன் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.. எத்தகைய பாக்யம் பெற்ற மக்கள்!

திருஅண்ணாமலை அன்னதானம்

கடந்த நவம்பர் மாதம் 10.11.1994 முதல் 19.11.1994 வரை 10 நாட்களுக்கு திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா ஆஸ்ரமத்தில் விமரிசையான முறையில் அன்னதானம் நடைபெற்றது. நம் சபை அடியார்கள் தத்தம் குடும்பத்தினருடன்  முழுப்பங்கேற்றனர் .அனைவரையும் இயக்குவது நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் குருவருள் அல்லவா?
சாதிமத இன பேதமின்றி யாவருக்கும் பாத்திரங்கள் நிறைய, இலைகள் நிரம்ப உணவளிக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!
பணியாளர்கள் இன்றிக் குடும்பத்தோடு சபை அடியார்களே பாத்திரங்கள் கழுவுதல், விறகு எடுத்தல், சாம்பல் அள்ளுதல், சமையல் பணிகள், காய்கறி நறுக்குதல், நீர் எடுத்தல் போன்ற அனைத்தையும் குரு அருள் ஆணையாக நிறைவேற்றினர்.
அனைத்து அன்னதானக் காரியங்களையும், இறை நாமத்துடன் குருவருளால் நிறைவேற்றியது மகிழ்ச்சியைக் கூட்டியது..
ஸ்ரீஅண்ணாமலையார் திருஅருளால் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் நம் ஆசிரம வாயிலில் கார்த்திகை தீபத்தன்று நள்ளிரவில் ஆயிரக் கணக்கானோருக்கு தாக சாந்திக்காக வாசனை திரவியங்களுடன் சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சிறு திராட்சை நிறைந்த் பாதாம் பாயாஸம் (GHEER) அளிக்கப்பட்டது. உணவில் கவனமாக இருக்கும் வெளி நாட்டவர்கள் கூட சூடான பாதாம் பால் பாயாசத்தை அருந்தியது உள்ளத்திற்கு நெகிழ்ச்சியை அளித்தது.
“எங்கிருந்தோ இங்குவந்து பித்ருக்களின் அருளினால் தம் கர்ம வினைகளுக்கு ஸ்ரீஅண்ணாமலையாரின் தரிசனத்தில் பால் பாயஸம் அருந்தி இவர்கள் பிராயச்சித்தத்தைப் பெற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேறியதைக் கண்கூடாகக் கண்டோம்” என்று நம் குருமங்கள கந்தர்வா விளக்கம் அளித்தார்.
“இறைவா ! செல்வச் செழிப்புடன் அயல் நாட்டில் வாழ அருள் புரிவாயாக!” என்று ஸ்ரீஅண்ணாமலையாரிடம் வேண்டியோர்க்கு வெளி நாடுகளில் மறு பிறவி கிட்டிட அவர்களே தங்களையும்மறியாமல் ஸ்ரீ அண்ணாமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் பாணியில் வெளி நாட்டவர்களாக இப்பிறவியில் இங்கு வருகின்றனர். இதுவே பிறவிச் சக்கர மாயை! இதுவும் அவர்தம் விளக்கமே!
சர்க்கரைப் பொங்கல், லட்டு, தேங்காய் பர்பி, சுய்யம், மைதா கேக் போன்ற இனிப்பு வகைகள் தினந்தோறும் ஏழைகளுக்கு அளிக்கப்பட்டன. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதை நடைமுறையில் காட்டிய அன்னதானம்! இதுமட்டோ!!
காராபூந்தி, பஜ்ஜி, பகோடா, வடை இவற்றுடன் எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட சித்ரான்னங்கள், பிரின்ஜி சாதம் (காய்கறிகள்), கறிவேப்பிலைப் பொடி சாதம், பருப்புப் பொடி சாதம் போன்றவையும் அன்னதானத்தில் வழங்கப் பெற்றன.
பீன்ஸ், உருளை, சேனை, கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளுடன் ராஜ்மா, பட்டாணி, கொண்டைக்கடலை, டபுள் பீன்ஸ் போன்ற தானிய வகைகளுடன் கூடிய அன்னதானம் சிறப்புற நடைபெற்றது. எல்லாம் ஸ்ரீ அண்ணாமலையானின் கருணையன்றோ!
நம் குருமங்கள கந்தர்வா அளித்த (அன்னதான) விளக்கங்க்ள்
அடியார் : குருவே! பல்வேறு வகையான உணவுகளை அன்னதானத்தில் வழங்குவதன் தாத்பர்யம் என்ன?
சற்குரு : ஏழைகளின் ஏக்கங்கள் பெரும்பாலும் உணவு, உடையைச் சார்ந்தே இருக்கும். இறைவன் அவர்களுடைய ஏக்கங்களை நிறைவேற்றுவதற்கு நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றார். “இந்த சரீரம் இதற்காகவேனும் பயன்படுகின்றதே!” என்று மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இதுவே நாம் கடமையாகச் செய்வது! இதனையே அன்னதானம் என்று பிறர் சொல்கின்றனர்.
நாம் நம் வீட்டில் எந்தத் தரத்துடன் ருசியுடன் சமைத்துச் சாப்பிடுகின்றோமோ அதே அளவில் ஏழைகளுக்கும் அளிக்க வேண்டும்.
இன்ன்றைக்கு நம் மூதாதையர்களின் ஆசியினால் தான் மூன்று வேளை உணவு, காபி, டீ அனைத்தும் நமக்கு கிட்டுகின்றன. நம் மூதாதையர் சிறப்புற தான தர்மங்களை செய்து வந்ததின் பயனே நாம் அனுபவிக்கின்ற சுகங்களாகும். அப்படியானால் நம் சந்ததியினர் நம்மைப் போல் வசதியுடன் வாழ வேண்டுமெனில் நாம்  தான தர்மங்கள் செய்ய வேண்டுமல்லவா? ஆனால் இதுகூட ஒருவிதத்தில் சுயநலங்கூடிய குறுகிய கண்ணோட்டமாகும்.
உண்மையில், அன்னதானம் பெற வருகின்றவர்கள் நம்முடைய முந்தைய பிறப்புகளின் உறவினர்களே! முந்தைய பிறவிகளின் நம்முடைய பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி, மக்களே, உறவுகளே இன்றைக்கு அயலாராக அன்னதானம் பெற்றுச் செல்கின்றனர். அப்படியானால் எத்தனை பேருக்கு நாம் உணவிட வேண்டிய கர்மப்பாக்கிகள் காத்துக்கிடக்கின்றன  என்பதையுணர வேண்டும்.
ஆயிரக் கணக்கானோருக்குத் தனிப்பட்ட முறையில் உணவளித்து நம் (குறிப்பிட்ட) கர்மவினைகளைத் தீர்ப்பது சாத்தியமானதா? ஆனால் பலர் ஒன்றுகூடி சத்சங்க முறையில் அன்னதானம் புரிந்திடில் அதன் பலன்கள் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடையும் அல்லவா?
மேலும், புனிதமான எண்ணங்களுடன் கூலிக்குப் பணி என்றில்லாது சேவை மனப்பான்மையுடன், இறை நாமம் ஜெபித்தவாறே தயாரித்து அளிக்கப்படும் உணவிற்குப் பல தெய்வீக சக்திகள் உண்டு. ஒன்று ஆயிரம் ஆகப் பெருகும். திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ அண்ணாமலையே சாட்சியாக நிற்க அளிக்கப்படும் அன்னத்தின் மஹிமையை எடுத்துரைக்கப் பிறவிகள் போதா!
கோடிக்கணக்கான கர்ம் வினைகளைத் தீர்க்கவல்ல திருஅண்ணாமலை கிரிவலத்தின் திருப்பாதையில் யோகியர் மஹான்கள், சித்த புருஷர்கள், ஞானிகள் போன்றோர் எப்போதும் எந்நேரமும் திருவுலா செல்கின்றனர். அவர்தம் புனித தேகத்தில் ஊடுருவிய சிறு காற்று நம்மீது பட்டால் கூடப் போதும், நாம் கடைத்தேறி விடலாம். இத்தகைய அன்னதானக் கைங்கர்யத்தை அவர்களே நேரில் ஏதோ உருவில் வந்து உணவை பெற்றாலே போதும், அவர்தம் ஆசி அனைவரையும்  சென்றடையும்.
இறைவனுக்கு அளிக்கப்படும் நைவேத்யம் போல் அவர்கள் உண்ணும் அன்னதான உணவு பிரசாதமாகிட அவர்களின் போற்றற்கரிய அருளாசி ஏழைகளைச் சென்றடையும். இந்த ஆசியின் மஹிமையால் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டு நன்னிலை பெறும்.
பலன்கள்
உதாரணமாக சேனைக்கிழங்கு சாதம் அளித்திட்ட அதை அளிப்போர், பெறுவோர் இருவகையினருக்கும் குடல்வாய் சம்பந்தமான எத்தகைய கொடிய நோய்களுக்கும் பரிகாரம் கிட்டும்.
வெண்டைக்காய், டபுள்பீன்ஸ் போன்ற உணவு வகைகளை அளித்திடில் அதைப் பெறுவோர் அளிப்போர் குடும்பங்களில் உள்ள மனோவியாதித் துன்பங்கள் நீங்கும்.
அன்னதானத்தில் விளையும் அற்புதங்களைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு உணவுவகையின் தெய்வீகத் தன்மையும், அதன் ஆன்மீக இரகசியங்களையும் விவரித்துக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறாக ஒரு அன்னதானத்தின் பின்னணியில் நிகழ்கின்ற ஆயிரமாயிரம் விந்தைகளை ஒரு சத்சங்கம் மூலமாக சற்குரு ஒருவரே நடைமுறையில் எடுத்துக்காட்டி ஊக்குவித்து அடியார்களுக்குப் புண்ய சக்தியுடன் உயர்ந்த ஆன்மீக நிலைகளையும் அளிக்கின்றார்.
மானுட தேகத்தில் சற்குருவைச் சார்ந்து நற்பணிகளை ஆற்றிட, மேலுலகில் தேவர்கள், பித்ருக்கள் போன்ற உயர் நிலைகளை அடையலாம். ஒரு பித்ரு தேவராக உயர்நிலை அமைந்திடில், பித்ரு லோகத்திலிருந்து கொண்டு லட்சக்கணக்கானோருக்கு நல்வழி காட்டலாமன்றோ! இதற்குரித்தான அடிப்படை நிலையே சற்குரு காட்டும் சத்சங்க இறைப் பணிகளாகும்.  

விஷ்ணு சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ர நாமம் எவ்வாறு பிறந்தது?
ஸ்ரீபீஷ்மர் அருளிய விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை திரும்பச் சொல்லுமாறு ஸ்ரீகிருஷ்ணன் கேட்டிட, அனைவரும் திகைத்து நின்றனர்.
மகரிஷிகள் கூடவா விஷ்ணு நாமங்களை மறந்துவிட்டனர்! ஒரு வேளை விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இசையில் பக்தி நிலையில் தம்மை இழந்து விட்டார்களோ!
பாண்டவர்களும் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஸ்ரீகிருஷ்ணன் நகைத்தனன்,
“ஓர் அற்புதமான பொக்கிஷத்தை இழந்து விட்டீர்களே! வருகின்ற யுகத்தில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமமே பல்லாயிரம் கர்மவினைகளுக்கும் கண்கண்ட மாமருந்தாக விளங்க இருக்கின்றதே! கோடிக்கணக்கான ஜீவன்களை உய்விக்கும் உன்னத அருமந்தன்றோ விஷ்ணு சகஸ்ர நாமம்!”. அதனை இழந்து விட்டீர்களே! அதனை எவ்வாறு பெறப் போகிறீர்கள்?”என்றவாறாக ஸ்ரீகிருஷ்ணன் வினாக்களைத் தொடுத்தான்.
அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.
துன்பங்கள் கரை கடந்தாலோ அல்லது எந்தப் பிரச்சனைக்கும் பாண்டவர்கள் சகாதேவனின் ஆலோசனைகளையே நாடி நிற்பர்.
ஸ்ரீகிருஷ்ணன் சகாதேவனை நோக்கித் திரும்பினான் “சகாதேவா! உன் மூளைக்கு வேலை வந்துவிட்டது. உன்னை நம்பித்தான் இந்தப் பிரபஞ்சமே இருக்கின்றது. ஸ்ரீபீஷ்மர் உவந்தளித்த ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை மீண்டும் பெறுவதற்கு ஏதேனும் ஒரு வழி சொல்லேன்”?
“என்ன கிருஷ்ணா! உன்னுடைய திருவிளையாடலுக்கு நேரம், காலம் கிடையாதா?”
“சகாதேவா! உன் அறிவின் திறமையை, ஞானத்தின் பெருமையை ஈரேழ் உலகம் அறியும் தருணம் வந்துவிட்டது. இதில் என்னுடைய விளையாட்டிற்கு இடமேயில்லை. உடனடியாக ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம பீஜாக்ஷரங்களை எடுத்தியம்புவதற்கான வழியைப் பார்” என்று சொல்லியவாறே ஸ்ரீகிருஷ்ணன் சூட்சுமமாக ஸ்ரீபீஷ்மரின் தேகத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டிட, சகாதேவன் கற்பூரமென அதைப் பற்றினான், ஞானத்தின் சிகரமாயிற்றே!
மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பரிபூர்ணமாக அறிந்த ஒரு சில பாத்திரங்களில் சகாதேவன் பேரிடத்தை வகிக்கின்றான்.
ஸ்ரீகிருஷ்ணன் எண்ணியதைச் செயலாக்கும் அரிய வல்லமை பெற்ற சகாதேவன். ஸ்ரீபீஷ்மரின் திருமார்பைத் தழுவிய ஸ்படிக மாலையைக் கழற்றி ஸ்ரீகிருஷ்ணனின் திருக்கரங்களில் அளித்திட,
ஸ்ரீகிருஷ்ணன் அதனை மீண்டும் சகாதேவனுக்கு அணிவித்தான். சகாதேவன் ஸ்படிக மாலையினை மார்பில  பற்றி அணைத்தவாறே ஸ்ரீகிருஷ்ணனை கரங்கூப்பி வணங்கினான்.
அடுத்த க்ஷணத்தில்...................
ஸ்படிக மணிகள் சகாதேவனின் திருமார்பில் அசைந்து ஆடின, அவற்றின் அற்புதமான இசை கூட்டும் சுழற்சியில் லயித்த சகாதேவன் தன்னை மறந்த நிலையில் விஷ்ணு சக்ஸ்ர நாமத்தை ஓதத் தொடங்கினான்.!
ஆம்! நாம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பெற்றுவிட்டோம் இவ்வாறே!
ஸ்படிக மாலையின் ஆன்மீக குணங்களைப் பார்த்தீர்களா? அதி அற்புத சக்தி வாய்ந்தது ஸ்படிக மாலை, ஜபிக்கப்படும் மந்திரங்களை, பீஜாக்ஷரங்களை நன்கு கிரஹிக்கும் தன்மை வாய்ந்தது.!
எனவேதான்  ருத்ராக்ஷம், ஸ்படிகம், ஆகியவற்றை அணிந்து இறை நாமங்கள், துதிப்பாடல்கள், மந்திரங்கள், வேதமறைகள் போன்றவற்றை ஓதும் நற்பழக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் தெய்வீக சக்தி, ருத்ராக்ஷம், ஸ்படிக மாலையில் மணிகளில் பதிந்து தேகத்திற்கு சீராகப் பரவும்.
பொதுவாக மனிதனுக்கு மந்திரங்களின் தெய்வீக சக்திகளை முழுவதும் பெறுகின்ற அளவிற்கு உடற்பாங்கு. மனநிலை அமையவில்லை.! அந்த அளவிற்குப் புனிதத் தன்மையை அவன் பெறவில்லையாதலின் இடையே ஒரு மீடியமாக ருத்ராக்ஷம், ஸ்படிகம் போன்றவை இறைவனால் படைக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீபீஷ்மர் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை அவர் அணிந்திருந்த ஸ்படிக மாலை கிரஹித்துவிட்டது. அந்த ஸ்படிக மாலையின் வரவலாற்றை முன்னரே நாம் அறிவோம்.
ஸ்ரீகங்கா தேவி தன் தெய்வத்திருச் செல்வன் ஸ்ரீபீஷ்மரைக் கண்டு உகுத்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளின் திரட்சியல்லவோ அந்த ஸ்படிக மணிகள்!
அன்று கங்கைக் கரையில் ஸ்ரீகங்கா தேவி பெருக்கிய கோடிக்கணக்கான ஸ்படிக மணிகளே இன்று பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கின்றன.. ருத்ராக்ஷம், சாளக்கிராம், சங்கு போன்று இயற்கையாகக் கிடைக்கும் ஸ்படிக மணிகள் அதி தெய்வீக சக்தி வாய்ந்தவை.
ஸபடிக மணியின் வரலாற்றைத் தன் பூர்வீக ஞானத்தால் உய்த்துணர்ந்த சகாதேவன் தனக்கென சுயநலத்திற்காக அவற்றைப் பயன் படுத்தாமல் பிரபஞ்சத்திற்கே பயன்படும் வகையில் பெரும் இறைப் பணியாற்றி சேவையில் அழியாப் பெருநிலை பெற்று உய்கின்றான்.
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம் பிறந்ததில் சகாதேவனின் பெரும்பங்கு பற்றிய விளக்கங்களைத் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் ஸ்வாமிகளிடமிருந்து குருகுலத்தில் பெற்று நமக்கு அருளி அரும்தொண்டாற்றி வருபவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்.
இவ்வரிய ஆன்மீக விளக்கத்தை, ஸ்படிக வரலாறு, அதன் தெய்வீகத் தன்மை, சகாதேவன் ஸ்ரீகிருஷ்ணனின் மேல் பூண்ட அன்பால் பெற்ற அரிய ஞானம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தின் மகிமை போன்றவற்றைப் பலரும் அறியும்படி உணர்த்துவதே, நாம் நம் சற்குருவிற்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

சகாதேவனின் தெய்வீக குணங்கள்
திரௌபதி. பாண்டவர்கள், கௌரவர்கள், ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் அனைவரும் எத்தகைய துன்பத்திற்கும் பரிஹாரத்திற்காக சகாதேவனின் துணையையே நாடினர், விருப்பு, வெறுப்பின்றி, நண்பர், எதிரி என்ற பாகுபாடு இன்றி எத்தகைய துன்பத்திற்கும் சாஸ்திர ஞானம், சோதிடம், ஆரூடம், வேதமறை, பல்வேறு மிருக பாஷைகள், கைரேகை சாஸ்திரம் போன்ற சகல கலைகளையும் ஆய்ந்து உண்மையான தீர்வை அளிப்பான்.
இத்தகைய சகலகலா வல்லவனாக சகாதேவன் விளங்கக் காரணம் என்ன?
புனர்பூச நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசரஸ்வதியை மட்டுமின்றி 64 கலைகட்கும் உரியவளாகிய ஸ்ரீஞானசரஸ்தியைத் தொழுது அதனுடன் ஸ்ரீசரஸ்வதியின் குருவாகிய ஸ்ரீஹயக்ரீவருக்கு புனர்பூச நக்ஷத்திரத்தன்று மஞ்சள் நிற சாமந்திப் பூக்களால் ஆன திண்டு மாலை (கனத்த மாலை) சார்த்தி வழிபட்டாள்.
எனவே, குழந்தைகள் நன்கு படிக்க, புனர்பூச நக்ஷத்திரத்தன்று ஸ்ரீஹயக்ரீவருக்கு சாமந்திப் பூ மாலை சார்த்தி கற்கண்டு நிவேதனம் செய்து  அதனை ஏழைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக அளிக்க வேண்டும்.
ஸ்ரீசரஸ்வதி, தன் சற்குருவாம் ஸ்ரீஹயக்ரீவரிடமிருந்து கற்றது ஒரு துளியேயாம். எனவே ஸ்ரீசரஸ்வதி வழிபாட்டுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடே கலைவாணியின் பரிபூர்ண அருளைப் பெற்றுத் தரும். இது சகாதேவனின் அருள் வாக்காகும்.
சென்னை கோயம்பேடு குறுங்காளீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் (வீணை ஏந்தா) ஸ்ரீஞானசரஸ்வதியை ஸ்ரீசகாதேவன் வழிபட்டு வந்தமையால் சகலகலா ஞானத்தைப் பெற்றுப் பரிணமித்தான்.

கோயம்பேடு திருத்தலம்

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்
நம் குருமங்கள கந்தர்வாவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல் பெற்ற ஸ்தலங்களில் உழவாரத் திருப்பணி செய்யும் பாக்கியம் இறையருளால் நம் சபை அடியார்கட்குக் கிட்டியுள்ளது.
நம்முள் ஒருவராக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்,  அடியார்களுடன் சேர்ந்து கோயில் கிணறுகளில் நீரிரைத்துச் சுமத்தல், குப்பைகளைப் பெருக்குதல், துர்க்கை, சண்டீஸ்வரர், நவக்கிரஹம் போன்ற சன்னிதிகளில் ஊறிக் கிடக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நீக்குதல், ஒட்டடை அகற்றுதல், நாற்றமடிக்கும் ஜலதாரைகளில் தேங்கியிருக்கும் பல ஆண்டுக் கூளங்களை அகற்றி நீர்த் தாரையைச் சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளைச் செய்து, தெய்வீக வழிகாட்டியாய் நமக்கு அருள்வழி காட்டிவருகின்றனர்.
நூற்றுக் கணக்கான கோயில்களில் தூண்களில் உறையும் சித்த புருஷர்கள், அற்புத தெய்வமூர்த்திகளின் விசேஷார்த்தங்கள் அக்கோயிலில் நிறைவேற்ற வேண்டிய பரிகாரங்கள், திருப்பணிகள் போன்றவற்றையும் விளக்கி வருகின்றார்.
இவ்வாறாக சற்குருவுடன் கூடிய இத்தகைய கோயில் உழவாரத் திருப்பணி அனுபவங்களை விவரித்திடில் அவை பல புத்தகங்களாய் விரியும், அந்த அளவிற்கு இறையனுபதிகள் மிகுந்துள்ளன.
சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த்தாகும் திரேதா யுகத்தில் லவகுசர்களே வழிபட்ட லிங்கமெனில் இதன் ஆன்மீக பின்னணியை எத்துணை கோடி யுகங்களுக்கு முந்தையதாக கணக்கிட முடியும்! மிகவும் பழமையான பெரிய கோயில். ஆனால் மூலவரோ பச்சிளங்குழந்தையும் கட்டிப் பிடிக்குமளவிற்கு மிகச் சிறிய ஸ்வயம்பு மூர்த்தியாவார்! குழந்தைகளுக்கென எழுந்தருளியிருக்கும் சிவலிங்க மூர்த்தி!
தூண்களெங்கும் சித்த புருஷர்கள், மஹரிஷிகளின் அழகிய உருவங்கள்! இக்கோயில் பற்றிய அற்புதமான ஆன்மீக இரகசியங்களை நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சுவாமிகள் அகஸ்திய கிரந்தங்களிலிருந்து திரட்டி நம் குருமங்கள கந்தர்வாவிற்கு குருகுலவாசத்தில் எடுத்தருளியுள்ளார்.

கலியுக மக்களின் நல்வாழ்விற்கென நம் குருமங்கள கந்தர்வா, தம் குருகுலவாசத்தில் பயின்றவற்றை ஆன்மீக உரைகள், அடியார்களுடன் உரையாடல்கள், “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலமாக இறைப்பிரச்சாரம் செய்து உன்னத தெய்வீகத் திருப்பணி ஆற்றி வருகின்றார்கள்.
ஸ்ரீஏகபாத லிங்கேஸ்வர மூர்த்தி
இக்கோயில் திருக்குளம் பாசி படிந்து தற்போது காணப்பட்டாலும் ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் இதில் மூழ்கி எழுந்து இக்கோயில் நவகிரக மூர்த்திகளின் அருகே உள்ள தூணில் உறையும் ஸ்ரீஏகபாத லிங்கேஸ்வரரை (ஒற்றைக் காலுடன் கூடிய அபூர்வமான சிவதரிசனம்) தரிசித்து வழிபட்டு வர யானைக்கால் வியாதியும், தொழுநோயும் அதி அற்புத முறையில் குணமாகும்! ஆழ்ந்த இறைநம்பிக்கை அகிலத்தையும் அசைக்க வல்லதாயிற்றே!
மற்றோர் தூணில் ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயர் விசேஷமான நேர்த் திருவடிகளுடன்! பிரபஞ்சத்தின் அனைத்துப் போக்குவரத்து வாகனங்களுக்கும் உரித்தான மூர்த்தி. இம்மூர்த்தியின் விசேஷ குணங்களை சென்ற டிசம்பர் 1994 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளித்துள்ளோம்
கொடுக்குவால் குடுமி சித்தர்.
சித்த புருஷர்கள் எப்போதும் காரணப் பெயர் பூண்டுதான் அவதாரம் பெறுவர். குப்பைச் சித்தர், குப்பை கூளங்களிடையே புரண்டு, அமர்ந்து கமகமவென்று நறுமணம் வீசும் தேகத்துடன் அருள்பாலிப்பவர். இவ்வகையில் கொடுக்கு வால் சித்தருடைய குடுமி, கொடுக்கு வால் போன்று வளைந்திருக்கும். ஆனால் இவரோ தன் கொடுக்குவால் முடியை அவிழ்த்து  ஒரு முறை சிரசை ஆட்டினால் போதும், அண்டங்கள் அனைத்தும் கிடுகிடுவென நடுங்கும். பிரபஞ்சத்தின் பலகோடி அண்டங்களின் சிருஷ்டி இரகசியங்களைத் தம் கொடுக்குவால் முடியில் தாங்கி இன்றைக்கும் அருள்பாலிப்பவர்.
இறைவனைப் பற்றிய ஞானம், பிரபஞ்சம், இறப்பு, பிறப்பு. ஆத்ம விசாரம் ஆன்மீக விஷ்யங்களை ஆழ்ந்து அறிய வேண்டுவோருக்கு கொடுக்குவால் குடுமி சித்தரின் தரிசனம் உத்தம பலனைத் தரும். முறையற்ற காம உணர்வுகளைக் களைவதற்கும் தீய எண்ணங்களைக் கழிப்பதற்கும் மண்டபத் தூணில் இந்த சித்த புருஷர் அருள்பாலிகின்றார்.
லிங்க ஹஸ்த முத்திரை சித்தர்
கொடுக்குவால் குடுமி சித்தரின் ஆத்யந்த சிஷ்யர்களுள் முதன்மையானவர் லிங்க ஹஸ்த முத்திரை சித்தராவார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முறையற்ற வாழ்க்கை, தகாத உறவுகள், ஒழுங்கீனமான வாழ்வு, காமக் குரோதக் குற்றங்கள், ஏகபத்னி விரத பங்கங்கள், உடலாசையால் நிகழ்ந்த விபரீதங்கள் போன்ற்றவற்றிகு ஆளானோர்க்கு மன்னிப்பளித்து மறுவாழ்வு அருளவல்ல இந்த லிங்க ஹஸ்த முத்திரை சித்தர். ஸ்ரீஅம்மன் சந்நதியின் வலப்புறப் பின்புறத் தூணில் லிங்க ஹஸ்த முத்திரை தொனியில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். இது ஆபாச தரிசனமன்று! இதன் தாத்பர்யத்தை நன்கு உணர்ந்து கொண்டால் தவறான எண்ணங்கள் தோன்றாது! விந்தை தக்க முறையில் கட்டிடில் முக தேஜஸ், தேககாந்தி இறையருளுடன் பரிணமிக்கும் என்பதை உணர்த்துபவர்.
காலவசத்தால் நெறிபிறழ்ந்த வாழ்க்கை கொண்டோர் இத்திருக்கோயிலுக்கு வந்து ஸ்ரீகொடுக்குவால் குடுமி சித்தர், ஸ்ரீலிங்க ஹஸ்த முத்திரை சித்த புருஷ்ர்களைத் தொழுது ,

 1. தங்களுடைய கடந்த கால அதர்ம வாழ்க்கைக்காக மனதார வருந்தி,
 2. “இத்தருணம் முதல் இறைவா! உன்னருளால் நல்வாழ்க்கையைப் பிறருடைய நலனுக்காக வாழ்கின்ற உத்தம, வாழ்க்கையை நட்த்த தீவிர வைராக்கியத்தை மேற்கொள்கின்றேன் என்று சபதமெடுத்து அதன்படி நடக்க வேண்டும்.
 3. இத்தகைய தீவிர வைராக்கியத்தை மேற்கொண்டபின் நேரம் கிட்டும் போதெல்லாம் இக்கோயிலுக்கு வந்து இந்த இரண்டு சித்தபுருஷர்களைத் தரிசனம் செய்தல் வேண்டும், ஏன்? அந்தந்த்த் தூணில் ஜீவசமாதி பூண்டு இன்றைக்கும் ஜீவசமாதியிலிருந்து பேசும் அருளும் சித்தர்கள்.

தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் அளித்துத் தன் வாழ்நாள் முழுவதும் அநாதைகள் இல்லம், விதவைப் பெண்கள், அபலைப் பெண்களைப் பராமரிக்கும் இல்லங்கள், ஆஸ்ரமங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிகு இயன்ற சரீர சேவை, பொருளுதவி, அன்னதானம் , வஸ்திர (துணிகள்) தானம், காலணிகள் தானம் போன்ற பலவழிகளிலும் சேவை புரிதல் வேண்டும்.
இத்தகைய  தியாக உணர்வுடன் இறையருளால் மக்கள் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்தால் எத்தகைய பாவங்களுக்கும் சித்த புருஷர்கள் தக்க பரிகாரங்களை அருளச் சித்தமாய் உள்ளனர்.
ஸ்ரீஞான சரஸ்வதி
உட்பிரஹாரத்தில் கையில் வீணையின்றி, ஞானத்தைப் புகட்டும் அபூர்வமான ஞானசரஸ்வதி அருள் பாலிக்கின்ற அற்புதத் தலம்! ஸ்ரீஹயகிரீவப் பெருமாளின் முதல் சிஷ்யைதான் இந்த ஸ்ரீஞான சரஸ்வதி! சகாதேவன் இத்தேவியை வழிபட்டு வந்தமையால் தான் ஆயகலைகள் அறுபத்து நான்கினும் வல்லமை பெற்ற்தோடு நடப்பவை அனைத்தும் பரமாத்மாவின் திருஉளம் என்ற ஞானத்தையும் பெற்றான்!
ஸ்ரீஆனந்த வெண்சாமர விநாயகர்
மூலவரின் உட்பிரகார கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கும் அரிய, காணக்கிடைக்காத விநாயக மூர்த்தி! தன்னை நம்பி, அண்டி வந்தவர்களை நிராகரித்தவர்கள் பெற்றோர்களை நிராகரித்த பாவங்கள், குழந்தைகளை அநாதையாக விட்டவர்கள், போன்ற தவறுகளைச் செய்தோர் தங்கள் குற்றங்களுக்காக உளமாற வருந்தி, தன்னால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தக்க உதவிகள் புரிந்து இவ்விநாயக மூர்த்தியிடம் சரணடைய வேண்டும். இத்திருக்கோயிலில் பலருடன் சேர்ந்து இயன்ற உழவாரத் திருப்பணி செய்து ஆதரவற்ற பெரியோர்களுக்குத் தக்க உதவி, சேவைகளைச் செய்தல் வேண்டும்.

உத்தராயண புண்ணிய காலம்

இந்த பவ வருடத்திற்குரிய காணும் பொங்கல் அன்று நாம கீர்த்தன நாயகர்களைத் தரிசனம் செய்யவேண்டும். ஸ்ரீசத்ய பாபா போன்ற நாமகீர்த்தனத்தைப் பரப்பி வருகின்ற அவதார புருஷர்களின், மகான்களின் தரிசனம் இன்று உத்தமம் ஆனதாகும்.
அல்லது ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகியோருடைய பிறந்த பூமி, ஜீவசமாதி, இவர்கள் விஜயம் செய்த திருக்கோயில் போன்ற இடங்களைத் தரிசித்து அவர்களுடைய இறைக் கலைஞர்களுக்கு இயன்ற தான தர்மங்களைச் செய்தல் நாமகீர்த்தன நாயகர்களுடைய பரிபூர்ண ஆசிகளைப் பெற்றுத்தரும். இதனால் நம்முடைய குழந்தைகளின் கல்வி மேம்படும். அவர்கள், குறிப்ப்பாகப் பெண் குழந்தைகள், நல்லொழுக்கடத்துடன் உத்தமமான வாழ்வைப் பெறுவர்.
இம்முறையே பவவருட காணும் பொங்கலைக் கொண்டாடும் முறையென சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
உத்தராயண புண்ய காலம்
தை முதல் ஆனி வரை உத்தராயணப் புண்ய காலம், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷ்ணாயனப் புண்ய காலம் ஆகும்.
இத்தகையப் புண்யகாலங்களின் விசேஷ மஹத்துவங்கள் ஸ்ரீசூடாமணி ரகஸிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. தை மாதம் பிறக்கும் உத்தராயணப் புண்ய காலத்தில், தை முதல் ஆனி  வரை ஒவ்வொரு மாதத்தையும்

 1. வம்ஸீ தரணி தேவி – தை
 2. மாலா  தரணி தேவி – மாசி
 3. பஹு தரணி தேவி – பங்குனி
 4. பூஜா தரணி தேவி – சித்திரை
 5. ப்ரியா தரணி தேவி – வைகாசி
 6. திவ்ய தரணி தேவி – ஆனி

என்ற ஆறு அநுக்ரஹ தேவிகள் பரிபாலிக்கின்றனர்.
இந்த ஆறு தேவியரும் உத்தராயணம் பிறக்கும் தை முதல் தேதியன்று ஒன்று கூடி பக்தர்களை ஆசிர்வதிக்கின்றனர் எங்கு? புண்ய தீர்த்தங்கள், ஜீவ நதிகள், பாடல் பெற்ற ஸ்தலங்களின் ஸ்ரீஅம்பிகை சந்நிதிகள், புற்றிடங்கள், குலதெய்வக் கோயில்கள் ஆகிய இடங்களில் கூடி உத்தராயணப் பூஜை, தர்ப்பணங்கள், குறித்த தான தர்மங்கள் செய்வோருக்கு அருள் பாலிகின்றனர்.
தை மாதம் முழுவதும் தினமும் காலையில் கோலமிடுமுன் வம்ஸீதரணி தேவியைத் துதித்து நாளைத் துவக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் போதும் இந்த தேவியைத் துதித்திடில் சீரான தார்மீக எண்ணங்கள் உண்டாகி மனம் சாந்தமடையும், புனிதமான, தெய்வீக எண்ணங்கள் உருவாகும்.
தைமாதத்தில் அவ்வப்போது இயன்ற அளவு பசுக்களுக்குப் புல், இலைதழைகள், வாழைப்பழம் போன்றவற்றை அளித்து, முடிந்தால் செவ்வாய் வெள்ளியன்று கோபூஜை செய்து பசுவை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.
கோபூஜை செயவது மிகவும் எளிமையானதே! பசு, கன்றினை நீராட்டி மஞ்சள், குங்குமமிட்டு, தெரிந்த இறை நாமங்களைக் கூறி வலம் வந்து வணங்குதலே எளிமையான கோபூஜையாகும். பசு, கன்றுகளுக்கு உணவளிக்க வேண்டும்.

தை மாதப் பிறப்புத் தர்ப்பணம்
உத்தராயணப் புண்யகாலத் தர்ப்பணத்தில் ஸ்ரீவம்ஸீதரணி தேவியைத் துதித்துத் தர்ப்பணத்தைத் துவங்குதல் விசேஷமாகும். ஏனெனில், உத்தராயணப் புண்ய காலத்தில் தேவர்கள், தேவலோகத்திலும், பித்ருக்கள் பித்ருலோகத்திலும் ஸ்ரீவம்ஸீதரணி தேவியை பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்வதால் மாதத் தர்ப்பணங்களைப் பிரம்ம முகூர்த்தத்தையொட்டிய விடியற்காலை நேரத்தில் செய்வதே சாலச் சிறந்தது.
உத்தராயணப் புண்ய முதல் மாதமான தைமாதப் பிறப்பன்று பச்சரிசியைப் பரப்பி அதன்மேல் தர்ப்பைகளை வைத்துத் தர்ப்பணங்களைச் செயவது பித்ருக்களின் பரிபூர்ண ஆசியைப் பெற்றுத்தரும். இவ்வாறாக ஒவ்வொரு மாதப் பிறப்பிற்கும் தான்ய வாச தர்ப்பைச் சட்டம் உண்டு.
தை – பச்சரி தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
மாசி - கோதுமை தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
பங்குனி – சோளம் தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
சித்திரை – கேழ்வரகு தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
வைகாசி - கம்பு தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
ஆனி – கார் ( சிவப்பு நிற அர்சி) தான்ய வாசத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்
இத்தகைய தர்ப்பணங்கள் மஹாசிறப்பு வாய்ந்தவை அற்புதமான, அபரிமிதமான வரங்களைத் தரவல்ல இந்த தர்ப்பண பூஜைமுறைகளை நம்முடைய நல்வாழ்விற்கென எடுத்து அருளிய சற்குருவை வாழ்நாளில் என்றும் மறக்கலாகாது. இவை தவிர பல்வேறு தானியங்களைக் கொண்டு தர்ப்பணச் சட்டங்களை அமைக்கும் தர்ப்பண பூஜை இரகசியங்கள் பல உண்டு. சற்க்ருவை உண்மையோடு நாடுவோர்க்கு அவை அருளபெறும்.
இதுகாறும் பல “ஸ்ரீ அகஸ்திய விஜய” இதழ்களில் பலவிதமான ஆன்மீகக் கருத்துக்களை சற்குருவின் அருள்வழிகளாக வெளியிடுகையில், “சற்குருவை நாடி அறிதல் வேண்டும்” என்ற நியதி விதிக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்று பலரும் கேட்கின்றனர்,
அனைவர்க்குமாக சற்குரு....
தனி ஒருவருக்காக, தன்னைக் காண் வருவோர்க்காகத் தனிப்பட்ட முறையில் எந்த ஆன்மீக விஷயத்தையும் – இரகஸியத்தையும் சற்குரு அளிக்க விரும்புவதில்லை. அவர்தம் அருளுரைகள் உலகப் பொதுமறையாதலின் தாம் அளிக்கின்ற எந்த ஆன்மீக விஷயமும் பலரையும் சென்றடைந்து அனைவரும் அதன் பலாபலன்களைப் பெறவேண்டும் என்பதே அவருடைய பேரவா.
தன்னை அண்டி வாழும் அடியார்கள் தம் அருளாணைகளைச் செவ்வனே செய்வர் என்ற சற்குருவின் நம்பிக்கையைப் பெற, அவரை நாடுதல் தானே உத்தமம். தனி ஒருவருக்காக ஓர் ஆன்மீக விளக்கத்தை அளித்து அதனால் அவர் குடும்பம் மட்டும் சிறப்படைவதில் யாது பயன்? “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது சற்குருவின் இலட்சியமன்றோ?
எனவே தாம் அளிக்கும் ஆன்மீக விஷயங்களைத் தனக்கெனத் தேக்கித் கொள்ளாது அதன் பலன்கள் பலரையும் சென்றடையும் வண்ணம் அந்த பக்தர் யாங்கணும் பரப்பிப் பொதுச் சேவையில் ஈடுபடுபவர் என்ற நம்பிக்கையை அடைந்தால்தான் சற்குரு சத்விஷயங்களை அருள்வார். மேலும் தீயவழிகளில் சென்று ஆதாயம் தேட சத்விஷ்யங்களைப் பலர் பயன்படுத்துவர். எனவேதான் சில சக்திவாய்ந்த யந்திரங்கள், பீஜாட்சரங்கள், மந்திரங்களைத் தனிப்பட அளிப்பதில்லை.
தான்யவாச தர்ப்பண பூஜை
தான்யங்களைப் பரப்பித் தர்ப்பணம் வார்ப்பதின் முக்கியத்துவம் என்ன ? ஜோதி மயமான தேகத்தை உடைய. பித்ருக்கள், அமாவாசை, பௌர்ணமி, கிரஹணம் போன்ற புண்ய காலங்களில் தர்ப்பணங்களை ஏற்க பூலோகத்திற்கு வருவதுண்டு. ஆனால் அவர்கள் தங்கள் ஜோதி மயமான உடலுடன் பூலோகத்தில் எங்கு தங்குவர்? தினசரி பூஜை, புனஸ்காரங்கள், கோபூஜை.. ஹோம்ம், நித்யதான தருமம் போன்றவற்றை மக்கள் முறையாக்ச் செய்திடில். பித்ருக்கள் தங்கள் வம்சா வழியினரின் இல்லங்களிலேயே ஜோதிரூபங்களில் தங்கிட வாய்ப்புண்டு. ஆனால் சராசரி மனிதன் அபரிமித புண்ய சக்தியுடன் தன்னை அத்தகைய புனித நிலையிலா வைத்திருக்கின்றான்? உடல், மனம், புனிதம் பெற்றாலன்றோ அங்கு ஜோதி ஆவாஹனமாகும்! பலவித தீய கர்மங்களில் உழலும் மனிதன் என்ன செய்வது?
இந்நிலையில் பித்ரு தேவர்கள் அரசு, ஆல், வேம்பு, வில்வம், துளசி மணம் நிறைந்த கோயில் நந்தவன பூச்செடிகள், கோயில் கோபுரம், உத்தம மூலிகைச் செடிகள் புண்ய, தீர்த்தங்கள், ஜீவ ஆறுகள், கடல் போன்ற இடங்களில் தங்கி தம் வம்சாவழியினரின் தர்ப்பணங்களை ஸ்வதா தேவியின் மூலமாகப் பெற்று அருள் பாலிக்கின்றனர்.
புனிதமான சூழ்நிலையைப் பித்ருக்களுக்காக உருவாக்குவதற்காகவே தான்ய வாச விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் போல் பித்ருக்களின் ஜோதிரூபங்கள், தர்ப்பண தான்ய வாசங்களில் சாந்தமாக குடிகொண்டு நமக்கு அருள் பாலிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஅன்னபூரணி

திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் கோயிலில், சுற்றிலும் பல தேவிஸ்வரூபிணி மூர்த்திகள் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி காட்சியளிப்பது மிகவும் அபூர்வமான தரிசனம் ஆகும். எங்கும் காணக் கிடைக்காத தரிசனம்! இவர்களுக்கு அன்னஸ்வரூபிணி தேவமூர்த்திகள் என்று பெயர். இந்த ஒவ்வொரு தேவிஸ்வரூபிணியும் ஒவ்வொரு உணவுப் பொருளை படைத்து ரக்ஷித்துக் காக்கின்றனர். உலகில் எத்துணை உணவுப் பொருட்கள் நடைமுறையில் உள்ளனவோ அவ்வுளவு தேவிஸ்வரூபிணிகள் உண்டு!
சிலவித உணவுப் பொருட்களால் அலர்ஜி ஏற்படுவதுண்டு. இதனால் ஏற்படும் துன்பங்களே ஏராளம். இவர்கள் தங்களுக்கு எந்தவித உணவினால் அலர்ஜியோ அந்த உணவினைப் பெருமளவில் இங்கு திருப்பரங்க்குன்றத்தில் நைவேத்யம் செய்து அன்னதானமிட இந்த அன்னபூர்ணேஸ்வரி தேவியின் அநுக்கிரகத்தால் எந்த அலர்ஜி நோயும் தணியும். இதுமட்டுமின்றி தங்களுக்கு எதனால் அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிக்க இயலாது பல தோல் நோய்களால் அவதியுறுவோர் இத்திருக்கோயிலுக்கு வந்து சித்ரான்னங்களை (புளி, எலுமிச்சை, தயிர் ,மற்றும் பல) அன்னதானமிட அலர்ஜி நோய் குணமாகும்.
சிறுகுழந்தைகளுக்கு முதன்முதலில் அன்னமிடும் போது (அன்னப்ராசனம்) ஸ்ரீகுருவாயூரப்பன் சந்நிதியில் அதனை நிறைவேற்றுவது வழக்கம். அங்கு செல்ல இயலாதவர்கள் இங்கு ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி சந்நிதியில் அன்னப்ராசனம் செய்வது மிகவும் விசேஷமானது. இதனால் எவ்வித அன்ன துவேஷமும் இன்றி குழந்தைகள் உணவு உண்டு நன்கு வளரும்.
உணவுத்துறையில் பட்டம் பெற்று (Hotel Management Course) ஓட்டல் போன்ற தொழிகளில் ஈடுபடுவோர், சேருவோர் இந்த தேவியை தரிசனம் செய்து பணியைத் துவக்கிட தொழிலில் முன்னேற்றம் அடைவர். கேண்டீன், ஓட்டல் அதிபர்கள் இங்கு ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரியை தரிசித்து இயன்ற அளவு அன்னதானம் அவ்வப்போது செய்திட தங்கள் தொழிலில் பெரும் முன்னேற்றம் காண்பர்.
உணவு உருவாகும் ஆன்மீக ரகசியம்
எத்தனையோ மஹான்கள், மகரிஷிகள், யோகிகள், இன்னோரன்ன இறைப் பெரு நிலையை அடைந்தோர் தங்கள் மானுட சரீரத்தை உகுத்தபின் அடையும் நிலை யாதோ? இதுவே பல ஆத்ம விசாரகர்களின் மனிதில் தொக்கி நிற்கும் வினா!
கைலாயம், வைகுண்டத்தில் பெருநிலை அடைதல், பரபிரும்மத்தில் ஒன்றுதல், இறை ஆனைப்படி மீண்டும் பிறவி எடுத்துச் சேவை புரிதல், மகரிஷிகளாய், மஹான்களாய் மீண்டும் பவனி வருதல் போன்றவை மட்டுமல்லாது மக்கட்குப் பயன் படும் வகையில் மூலிகைகளாகவும். விருக்ஷங்களாகவும், உணவுப் பண்டங்களாகவும், பிரபஞ்சத்தில் யாங்கும் அவர்கள் அமைவதுண்டு. இவ்வாறாக எத்தனையோ மஹான்கள் அரிசி மணி, துளஸி, பிரண்டை, கறிவேப்பிலை, எள், நெல்லி, வாழை போன்ற பொருட்களாகவும், உணவாகவும், அனைவருக்கும் பயன்படும்படி இன்றைக்கும் மக்களுக்குச் சேவை செய்கின்றனர்.
அமிர்த வர்ஷிணி ஸ்ரீஅன்னபூரணி
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருப்பவள் ஸ்ரீஅமிர்தவர்ஷிணி ஸ்ரீஅன்னபூரணியே! திருவிளையாடல் புராணத்தில் “குண்டோதரனுக்கு அன்னமிட்டபடலம்” என்ற பகுதியில் ஸ்ரீமீனாக்ஷி திருக்கல்யாணத்தில் சிவபெருமானுடன் உடன் வந்த பூதகணத்திற்கே அனைத்து அன்னவகைகளையும் இட்டு அயர்ந்து போன ஸ்ரீஅம்பிகைதான் தம் அகங்கார எண்ணத்திற்காக சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரினாள்.
சிவபெருமான் ஸ்ரீமீனாக்ஷியின் ஓர் அம்சமாக ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரியை எழுந்தருளச் செய்திட அந்த ஸ்ரீஅமிர்தவர்ஷிணி அன்னபூர்ணேஸ்வரியே ஆதிசிவனின் கண்டத்திலிருந்து அமிர்த நீர்த்திவலைகளைப் பெற்று அந்த பூத கணத்திற்கு அருந்தும்படி அளித்திட, பூதகணத்தின் வடவாக்னி என்ற விடவைத் தீப் பசிப்பிணி அகன்று பூதகணம் மகிழ்வுற்று எழுந்தது.
திருமணத்திற்கான ஆயிரக்கணக்கான அன்ன வகைகளை உண்டும் பசியாறாத பூதகணம் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி அளித்த ஓரிரு (அம்ருத) நீர்த்துளிகளினால் பசியாறிய இறைவனின் திருவிளையாடல் கண்டு ஆச்ரயித்தான் அம்பிகை (மீனாக்ஷி தேவி)
ஸ்ரீமீனாக்ஷி : சுவாமி! ஸ்ரீஅன்னபூரணி அளித்த நீர்த்துளிகளால் தங்கள் பூதகணங்கள் பசியாறிய விதம் யாதோ ?
சிவபெருமான் : இவள் தாம் ஸ்ரீஅமிர்தவர்ஷிணி அன்னபூரணி தேவியாவாள். இவளும் உன் பிறதொரு அம்சமே. இத்தேவியைச் சுற்றிலும் ஆயிரமாயிரம் அன்ன தேவி ஸ்வரூபிணிகள் பரிவார தேவியராய் வலம் வருகின்றனர். மகரிஷிகள், யோகிகளின் ரூபங்களாக பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களின் சாராம்சம் தங்கியிருப்பதால் எத்தகைய பசிப்பிணியையும் எந்த லோகத்திலும் இது நீக்கவல்லதாகும்.
இதன்பிறகு இத்துணைப் பரிவாரங்களுடன் ஸ்ரீஅன்னபூரணி தேவியை எழுந்தருளிடச் செய்ய ஓர் இடத்தை சிவபெருமான் தேடிட, ஆங்கே தோன்றிய வியாசர், ஸ்ரீபராசர மகரிஷிகள், “ஐயனே! தங்கள் இளவல் முருகப் பெருமான் தெய்வயானையை மணம்புரியவிருக்கும் திருப்பரங்குன்றில் ஸ்ரீஅன்னபூரணி தேவியே திருமணத்தில் யாவருக்கும் உணவு பரிமாறி தம் அருளைப் பொழிந்திட தாங்கள் அனுக்ரஹம் செய்திடல் வேண்டும். ஸ்ரீஅன்னபூரணியின் திருக்கரங்களால் இதுவரையில் அன்னம் பெறும் பாக்கியம் பெற்றோர் தாங்களும், தங்கள் பூத கணமுமேயாம். இந்தப் பெரும்பேறு யாவர்க்கும் சென்றடைய திருப்பரங்குன்றத்திலேயே ஸ்ரீஅமிர்த வர்ஷிணி அன்னபூரணியை எழுந்தருளச் செய்ய வேண்டுகிறோம்” என்று பிரார்த்தித்தனர்.

தைப்பூசம்

“பூசத்தன்று பூரண ஜோதியைப் பார்த்திடில் புண்ணிய புத்திரன் பிறக்க வழியுண்டு” – ஸ்ரீஅகஸ்தியகிரந்தம்
ஒவ்வொரு மாதமும் பூச நக்ஷத்திரத்தன்று புண்யவிரதமிருந்து 12வது பூசமாதமான தைப்பூசத்தன்று ஜோதியைக் கண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூசவிரதம் என்றால் என்ன?
வறியோர்கட்கு ஏழ்மையே இருட்டாகும். ஒவ்வொரு மாதமும் பூச நக்ஷத்திரமன்று பலருடன் சேர்ந்து கோயிலில் குறிப்பாகப் பாடல் பெற்ற கோயில் தலங்களில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி ஏழைகட்கு சிறிது அன்னதானத்துடன் விளக்குகளை எண்ணெயுடன் தானமளிக்க வேண்டும் ஏழைகளின் இல்லத்தில் விளக்கேற்றி வைப்பதே ஏழ்மையைப் போக்கும் முதல் திருப்பணியாகும். இதன் பிறகு விரதத்தை முடித்து உணவை உண்ணவேண்டும் இதுவே பூச விரதமாகும்.
இவ்வாறாகப் பதினோரு மாதங்கள் பூச விரதம் இருந்து தைப்பூசத்தன்று ஆறுபடை வீடுகள், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் போன்றவர்களால் பாடல்பெற்ற ஸ்ரீமுருகன் தலங்களில் ஸ்ரீமுருகனை தைப்பூச மஹாதீபாரதனை ஒளியில் தரிசனம் கண்டபின் ஏழைகட்குத் தினைமாவு, செவ்வாழைப்பழம், பஞ்சாமிர்தம் போன்றவற்றுடன் எண்ணெயுடன் கூடிய விளக்குகளை ஏழைகட்கு தானமளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். தைப்பூச ஜோதி தரிசனம் உள்ள கோவில்களில் ஜோதி தரிசனத்திற்குப் பின் உணவை ஏற்பதே தைப்பூச விரதமாகும்.
சஷ்டி விரதம், தைப்பூச விரதம்
“சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப் (கர்ப்ப)பையில் வரும்” என்பது சஷ்டி விரதத்தால் புத்ரபாக்கியம் ஏற்படுவதைக் குறிக்கிறது சஷ்டி விரதத்தை மேற்கொள்ள இயலாதோர்க்கு மேற்கண்டப் பூச விரதமும், தைப்பூச விரத பூர்த்தியும் சித்த புருஷர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்புத்திரனோ, புத்திரியோ பெற வேண்டுவோர்க்கு முறையான தைப்பூச விரதம் கைமேல் பலன் தரக் கூடியதாகும்.
புத்ரபாக்கியம் உள்ளோர் கூட ஆண் குழ்ந்தையோ, பெண் குழந்தையோ பெற விழைவதுண்டு. இத்தகைய சத்புத்ர, புத்திரிப் பிரார்த்தனைக்கு ஏற்றது தைப் பூச விரதமே.
தை அமாவாசை. தை அமாவாசை என்றால் “கை வை அமாவாசை” என்று சித்த புருஷர்கள் பொருள் கூறுகின்றனர். கை வை என்றால் விடுபட்ட உறவுகள் இணைதல் ஆகும்.
பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேருதல், மனஸ்தாபனங்களினால் பிரிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதலே தை அமாவாசை பூஜையாகும். இந்நாளில் ஜாதி, மதபேதமின்றி அத்தகைய பெரியோர்களின் அன்பிற்குரிய சேவைகளைச் செய்தல், பாதபூஜை, அல்லது பாதங்களைத் தொட்டு வணங்குதல், இயன்ற தான, தர்மசேவைகளைச் செய்தலே பெரியோர்களின் ஆசியைப் பெறும் முறையாகும்.
பெரியோர்கள் (ஆசியுடன்) “கை வைக்கும் அமாவாஸையே தை அமாவாசை”
“மாளய அமாவாசை” நியதிகளைச் செய்ய இயலாது தவற விட்டோருக்குத் தை அமாவாஸை ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும்.
பிரிந்தவர்கள் கூடுகின்ற நாளே தை அமாவாசை ஆகும். சம்பந்திகள், பிரிந்த தம்பதியர்கள், பங்காளிகள், சகோதரர்கள், உறவினர்கள் தங்கள் மனஸ்தாபங்களை மறந்து எந்த ஒரு அம்பாள் சந்நிதியிலும் ஒன்று கூட வேண்டிய உத்தமத் திருநாள். கருத்து வேறுபாடுகளினால் பிரிந்த வியாபார பங்குதாரர்கள் இந்நாளில் கூடினால் எவ்வித தோஷங்களுக்கும் பரிகாரம் கிட்டும்.
மேற்கண்ட அனைவரும் இந்நாளில் நீண்ட ஆயுளையுடைய தம்பதியர்கட்குச் சேவை செய்து தம் சிரசில் ஆசிர்வாதம் பெறுதல் வேண்டும்.
தை வெள்ளிக் கிழமை
ஸ்ரீஅம்பாளுக்கு மிகவும் ப்ரீதியான நாள், மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர்க்குத் தை வெள்ளி பூஜை அற்புதமான வரங்களைத் தரவல்லது.
நேரங்காலம் இல்லாமை, பொருளாதார வசதிக்குறைவு போன்றவற்றால் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய இயலாதோர்க்கு தைவெள்ளிக் கிழமை பூஜை ஒரு வரப்பிரஸாதமாகும்.
வருடா வருடம் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய ஏங்குவோர் உண்டு. முறைகள் தெரியாமையாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரிவர இல்லாமையாலும் சுமங்கலிப் பிரார்த்தனையைச் செய்ய இயலாது தவிப்போரும் உண்டு. இவர்களுக்கு அமைந்ததே தைவெள்ளிக்கிழமை பூஜை ஆகும்.
சுமங்கலிப் பிரார்த்தனை பூஜை
கணவனின் நீண்ட ஆயுளுக்கும், தீர்க்கமான ஆரோக்யத்திற்காகவும் செய்யப்படும் பூஜையே சுமங்கலிப் பிரார்த்தனை ஆகும்.
பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனைப் பூஜைகளில் தன் வீட்டுப் பெண்களுக்கே, முக்கியமாக தன் புத்திரிகள், சகோதரிகட்கே புடவை, ஆபரணங்கள், சீர்வகைகள் அளிக்கும் பழக்கம் நிலவுகிறது. இதைவிட முன்பின் அறியாத (ஜாதி, மத பேதமின்றி) சுமங்கலிகட்குத் தானம் அளிப்பதையே பித்ருக்கள் மகிழ்வுடன் ஏற்று கணவன்மார்கட்கு நீண்ட ஆயுள் பாக்யத்தை ஆசியாக வழ்ங்குகின்றனர். பொதுவாக ஆசி வழங்குதல் என்பது ஒன்றையிட்டு மற்றொன்றைப் பெறுதல் ஆகும். அதாவது ஏதேனும் சிறு அளவிலேனும் சுயநலத்தை விடுத்து சேவை புரிந்தால் தான் பெரியோர்களுடைய, பித்ருக்களுடைய, தேவர்களுடைய ஆசிகள் கிட்டும் இந்தத் தியாக  நிலையை அளிக்கும் ஒரு முறையே சிறு தான தர்மங்கள் ஆகும்.
நல்ல வாழ்க்கை அமையப் பெற்ற தம் புத்திரிகட்கோ, சகோதரிகட்கோ எதை அளிப்பினும் அது கடமையின்பால் படுமே தவிர தானதருமம் ஆகாது.. எனவே சுமங்கலிப் பிரார்த்தனையில் அத்தகைய தருமங்கள் வேண்டிய பலனைப் பரிபூரணமாகத் தராது.
குடும்ப நியதிப்படி சுமங்கலிப் பிரார்த்தனையில் தம் புத்திரிகள், சகோதரிகட்கு சில முறைகளைத் தரும் வழக்கம் தொடர்ந்தால் அதற்கு சித்தபுருஷர்கள் மாற்று முறையைத் தருகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக நிலவும் முறைக்கேற்ப சுமங்கலிப் பிரார்த்தனையில் மேற்கண்ட சீர்களைப் பெறு அக்குடும்பப் பெண்கள் தாங்கள் பெற்ற புடவைகள் சீர்வரிசைகட்கு ஈடான தொகையையோ, மாற்றுப் பொருட்களையோ பிற சுமங்கலிகட்கு அளித்திடல் வேண்டும். இதனால் சுமங்கலிப் பிரார்த்தனைக்கான பரிபூரண பலன்களோடு கூடுதலான தான தர்மங்களின் விசேஷ சக்தியும் வந்து சேரும்.
தை வெள்ளியன்று ஜாதி மத பேதமின்றி சுமங்கலிகட்கு ஆடைகள், மஞ்சள், குங்குமம், தாலிசரடு, கண்ணாடி வளையல்கள், மருதாணி போன்ற மங்கலப் பொருட்களைத் தானமளித்திட சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உரிய பலன்களை எளிதில் பெறலாம்.
பல பெண்கள் ஒன்றுகூடி தைவெள்ளியில் ஸ்ரீஅம்பாள் சந்நிதியில் மேற்கண்ட மங்கலப் பொருட்களை வைத்து ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமம், அபிராமி அந்தாதி போன்ற தேவமொழி, தமிழ் மொழி இறைத்துதிகளைப் பாடி அவற்றைக் கோயிலுக்கு வரும் ஏழை சுமங்கலிகட்கு அளித்திட சுமங்கலிப் பிரார்த்தனை பரிபூரணமாக நிறைவேறுகிறது.

பீஷ்ம தர்ப்பணம்

தாய்,  தந்தையர் இருந்தால் கூட அவர்களுடைய பிரம்மச்சாரியான புதல்வர்கள் செய்ய வேண்டிய தர்ப்பண முறைகள் சில உண்டு.
ஒளபாசனம், அக்னி சந்தானம், பிரம்ம யக்ஞம் எனப்படும் பூஜைகள் பிரம்மச்சாரிகள், இல்லறவாசிகள் உட்பட அனைவரும் செய்யவேண்டிய பூஜைகளாம்.. தற்காலத்தில் அறியாமையினால் பெற்றோர்கள் தாங்கள் உயிரோடிருக்கும் வரை தம் புதல்வர்கள் தர்ப்பையையோ, எள்ளையோ தொடுதல் ஆகாது என்று கருதுகின்றனர். காரணம் பெற்றோர்களே சந்தியான வந்தனம், பிரம்ம யக்ஞம்,  சமிதாதானம், ஒளபாசனம், அக்னிசந்தானம், வைச்வதேவம் போன்ற நித்ய பூஜைகளை அறிந்தாரும் இல்லை, முறையாகச் செய்பவருமில்லை. நன்கு அறிந்திருந்தால் பிர்ம்மயஜ்ஞ மந்திரங்களில் பிரம்மச்சாரிகளுக்குரித்தான தர்ப்பண மந்திரங்கள் உண்டு என்பதைப் பரிபூரணமாக உணர்வர். மேற்கண்ட நித்ய பூஜைகள் ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உரித்தானவையே.
பீஷ்ம தர்ப்பணத்தன்று

 1. பிரம்மச்சாரிகள் பீஷ்ம தர்ப்பண நாளில் பிரம்மச்சாரிகளாய் இறந்த தம் இளவயது கல்லூரி, அலுவலக, ஊர்த் தோழர்களுக்கு எள்ளும்,  நீரும் வார்த்துத் தர்ப்பணமிடல் வேண்டும். இது மிகச் சிறந்த மக்கட் சேவையாக மலர்ந்து மஹேசனுடைய அருளை பெற்றுத் தருகிறது. இதனால் சிறந்த ஆரோக்கியமும் நல்லொழுக்கமும் ஏற்பட்டு சமுதாயத்தில் சிறப்பிடத்தைப் பெறுவர்.
 2. தாய், தந்தையரை இழந்த பிரம்மச்சாரிகளை ஒன்று சேர்த்து அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்குத் தர்ப்பணங்கள், (பிறருக்குத்) தான தருமங்கள் செய்ய உதவிடுதல் கிருஹஸ்தர்களின் மிகச் சிறந்த இறைப்பணியாகும். ஒரு கும்பாபிஷேகம் நடப்பதற்குரித்தான புண்ணியத்தைத் தரவல்ல மாபெரும் சேவையிது. இத்தகைய தர்ப்பணங்கள், சேவைகள் ஸ்ரீபீஷ்மாச்சார்யாரின் பரிபூரண ஆசியைப் பெற்றுத் தருவதோடு இதனால் எவ்வித மனக்கிலேசமில்லாத, மரண பயமற்ற, சாந்தமான அந்திம காலம் கிட்டும். மேலும் தங்கள் வயதான காலத்தில் பலருடைய உதவிகளும் தாமாகவே வந்தடையும்.
திலகுந்த சதுர்த்தி

பல்வேறு வகை தான தர்மங்கள்தாம் கலியுலகில் மனிதனுடைய கோடிக்கணக்கான கர்மவினைகளைக் களைவதற்கான எளிய சிறந்த வழியெனப் பெரியோர்கள் அருள்கின்றனர். அன்னதானம், வஸ்திர தானம், மருத்துவ உதவி, கல்விக்கான உதவி, காலணி தானம் போன்ற தானங்களோடு திலதானம் (எண்ணெய்தானம்) விளக்கு தானமும் மிகச் சிறந்தவையாக விதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் தானத்தினால் பலவித கர்மவினைகள் கழிக்கப் படுகின்றன. வீட்டில் விளகேற்றி வைப்பது என்ற சொற்றொடரின் பொருள் என்ன?
அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத போது ஒரு ஏழை தன் வீட்டில் எவ்வாறு விளக்கேற்றுவான்? அவனுக்கு ஒரு வேளையேனும் உண்ண உணவளித்து எண்ணெய் திரியுடன் விளக்கைத் தானமாக அளித்தால் அவ்வீட்டில் விளக்கேற்றிய புண்ணியமுண்டாகுமல்லவா? தாவர எண்ணெயினால் ஏற்றப்படும் ஜோதியின் மஹிமையை சென்ற இதழில் விளக்கியுள்ளோம். அந்த ஜோதியின் ஆன்மீகப் பலனாக அவ்வேழையின் வீட்டில் இறைசக்திப் பரிணமித்து தரித்திரம் விலக நல்வழி உண்டாகும்.
பிறருடைய குடும்பத்தைக் கெடுத்தவர்கள், பகை மூட்டியவர்கள், குடும்பத்தைப் பிரித்தவர்கள் மாமியார், மருமகள்களை ஆட்டிப் படைத்தவர்கள் போன்றவர்களுக்குப் பிராயச்சித்தமாக எண்ணெய் தானம் விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தாவர எண்ணெய்கள், எள், வேம்பு, இலுப்பை, ஆமணக்கு போன்ற மூலிகைகளிலிருந்து பெறப்படுபவை ஆதலின் அவற்றின் மூலிகா பந்தன சக்தியால் குறிப்பிட்ட பல கர்மங்களை கரைக்கும் தன்மையை அந்த எண்ணெய்த் தைலங்கள் பெறுகின்றன.
எண்ணெய் தானத்தின் போது அத்தானத்தை முன்னின்று காக்கும் தில தேவதைகள் அந்த கர்மாக்களின் பலன்களைத் தாமே ஏற்றுத் தியாகம் புரிந்து தானம் செய்வோரைக் காக்கின்றன.
மாத தில குந்த சதுர்த்தியன்று  ஏழைகளுக்கு நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்ற தாவர எண்ணெயினைத் தானமாக அளித்தலால் பல குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். குறிப்பாக மாமியாய், மருமகள், நாத்தனார் கருத்து வேறுபாடுகள் மறையும். பல ஆண்டுகளாக குடும்பத்தை வாட்டி வதைக்கும் நெருங்கிய உறவுத் தகராறுகள் முடிவுபெற்று நல்லுறவு ஏற்படும்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் ஐந்தும் கலந்த கலவைக்கு பஞ்சதீப எண்ணெய் என்று பெயர். இது மஹா சித்திகளைத் தரவல்லது. இந்த பஞ்சதீப எண்ணெய் தீபங்களை மாத தில குந்த சதுர்த்தியன்று பாடல் பெற்ற கோயில்களில் ஏற்றிட எவ்விதக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் மிகச் சிறந்த பரிஹாரமாக இது அமையும்.
இன்றைய தினம் பெண்கள் ஒன்றுகூடி கோயில்களில் பஞ்ச தீப விளக்கு பூஜை செய்திடில் அதனால் உத்தம பலன்களையும் தெய்வ சக்திகளையும் பெறுவர். மஹாசித்திகளையும் அளப்பரிய தெய்வானுக்ரஹங்களையும் தரவல்லது.
குந்தஜோதி விளக்கு பூஜை
விளக்கு பூஜை என்றால் ஏதோ மந்திரங்கள் நிறைந்தது, நமக்கு எட்டாதது என்று எண்ண வேண்டாம். ஜாதி மத பேதமின்றி சுமங்கலிப் பெண்கள் ஒன்றுகூடி எட்டு அல்லது ஒன்பது கஜ சேலையினை மடிசார் முறையில் அணிந்து இன்றைய தினம் கோயிலில் கூட்டாக அமர்ந்து ஐந்து முகப் பெரிய குத்து விளக்கு முதல் சிறிய அகல்விளக்கு வரைப் பலவித ஜோதிகளை மேற்கண்ட பஞ்ச தீப எண்ணெய் கொண்டு ஏற்ற வேண்டும்.
முதல் ஜோதியினை 80 வயதிற்கு மேற்பட்ட பெரிய பழுத்த சுமங்கலி கொண்டு ஏற்றிடச் செய்து அதிலிருந்து மற்ற விளக்குகளை ஏனையோர் ஏற்றிடல் வேண்டும்.
ஒரு முழு விளக்குகளை ஏற்றிட மற்றவர்கள் இறைத் துதிகளைக் கூட்டு நாம சங்கீர்த்தமனமாகப் பாடுதல் வேண்டும். ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணும் குறைந்தது மூன்று விளக்குளையேனும் ஏற்றிட வேண்டும்.
நாம கீர்த்தனம் முடியும்வரை எண்ணெயைத் தொடர்ந்து ஊற்றி ஜோதியினைக் காக்க வேண்டும். சில ஜோதிகள் காற்றினாலோ அல்லது எண்ணெய்த் திரியின்றி அணைந்தாலோ மீண்டும் அவைகளை ஏற்றுவதில் தவறில்லை.
இந்த விளக்கு பூஜைகளில் இறை நாமங்களை கூட்டாகப் பாடுவதால் அதன் தெய்வீக சக்தி பன்மடங்காகப் பெருகி விளக்கு ஜோதிகளின் வழியே யாங்கணும் பரவுகிறது. இதனால் கோயிலுக்கு வருவோர்க்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றி யாங்கணும் அந்த தெய்வீக சக்தி பரவி மகத்தான, ஜாதி, மத பேதமில்லா மக்கள் சேவையாக மலர்கிறது. எனவேதான் முறையான விளக்கு பூஜை, ஹோமத்திற்கு ஈடான சக்தியைத் தரவல்லது என சித்புருஷர்கள் அருள்கின்றனர்.
விளக்கு பூஜையின் இறுதியில் இயன்ற உணவினை இனிப்பு, பழங்களை ஸ்ரீஅம்பாளுக்குப் படைத்து அதனை அனைவரும் பிரசாதமாக ஏற்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் அளிக்க வேண்டும். அதனுடன் விளக்கு பூஜை சம்பூர்ணம் பெற்றுப் பரிபூரண பலன்களைத் தருகின்றது.

காணும் பொங்கல்

“காணும் பொங்கலன்று காண்பீர் சற்குருவை”
பவ வருட காணும் பொங்கலைக் கொண்டாடும் முறையாக சித்தர்கள் அருளியுள்ளதை ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளோம். சற்குருவைக் காணும் பொங்கல் என்றும் இதனை விளிப்பதுண்டு. காணும் பொங்கலை முறையாகக் கொண்டாடியபின் சற்குருவைக் காணும் முறையாதோ?
ஸ்ரீயாக்ஞவல்கிய மஹரிஷி என்பவர் பலகோடி யுகங்களிலும் காணும் பொங்கலன்று சற்குருவைக் காணும் நெறி முறைகளைப் பரப்பி வருகின்றார். இவர் ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியிடம் வேதம் கற்று ஒவ்வொரு மகர சங்கராந்தியன்று மட்டும் இவர் காசி ஸ்ரீஅன்னபூரணேஸ்வரியிடம் அன்னம் ஏற்பார். சென்னைக் கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீஞான சரஸ்வதியை (வீணையின்றி அபூர்வ தரிசனம்) இன்றைக்கும் தினந்தோறும் சூரிய உதயத்தின் போது வேதம் ஓதி வழிபட்டு வருபவர் பாக்கியம் உள்ளோர்க்கு குருவருளுடன் கூடிய இவரது தரிசனம் கிட்டும்.
ஸ்ரீயாக்ஞவல்கிய மஹரிஷி பவ வருட காணும் பொங்கலன்று சற்குருவைக் காணும் முறையாக அளித்துள்ளதாவது :

காணும் பொங்கலன்று 12 எருக்கு இலைகளை வைத்து உதயநேரத்தில் சூரியபகவானை தரிசித்து ஸ்ரீஆதித்ய ஹிருதயம், ஸ்ரீசூர்ய நமஸ்காரம், ஸ்ரீசூர்ய துதிகள், கோளாறு பதிகம் போன்ற தமிழ், வடமொழி மந்திரங்களால் ஸ்ரீசூரிய பகவானைப் பூஜிக்க வேண்டும்.

மந்திரங்களை அறியாதோர் “ஸ்ரீசூர்யா போற்றி!, ஸ்ரீபாஸ்கரா போற்றி!” போன்ற சூர்ய நாமங்களைத் துதித்துப் பூஜிக்க வேண்டும்,

 1. முதல் எருக்க இலையைக் கையில் ஏந்தி “ஓம் மித்ராய நம :” என்ற மந்திரத்தை 1008 முறை ஜபித்து இலையைத் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
 2. இரண்டாவது எருக்க இலையைக் கையில் ஏந்தி “ஓம் ரவயே நம :” என்ற மந்திரத்தை 1008 முறை ஜபித்து இலையைத் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
 3. மூன்றாம், நான்காம் இலைகளை முறையே “ஓம் சூர்யாய நம : “ஓம் பாணவே நம:” என்று தனித் தனியே 1008 முறை  ஜபித்து மேற்கண்ட இந்த 4 இலைகளையும் வஸ்திரங்கள், பழம், தாம்பூலம் இயன்ற தட்சணையுடன் முறையே ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் கற்றவர்கட்குத் தானமாக அளிக்க வேண்டும்.
 4. ஐந்தாம் இலையை ஏந்தி “ஓம் ககாய நம:” என்று 1008 முறை ஜபித்து அன்னம், வஸ்திரம், பூ, பழம். தாம்பூலம் இவற்றுடன் தைப் பொங்கலன்று அல்லது தை மாதம் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படுகின்ற சிவலிங்கம் அமைந்துள்ள கோயிலில் தானமாக அளித்திட வேண்டும்.
 5. ஆறாவது எருக்கு இலையை வைத்து “ஓம் சூஷ்மே நம :” என்று 1008 முறை ஓதி இதனுடன் அன்னம், வஸ்திரம், தாம்பூலம் சேர்த்து ஸ்ரீசூரிய நாராயணஸ்வாமி எழுந்தருளியுள்ள கோயிலில் தானமாக அளிக்க வேண்டும்,
 6. ஏழாம் எருக்கு இலையை வைத்து
  “ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:” என்ற மந்திரத்தை 1008 முறை ஜபித்து இதனுடன் புஷ்பம் சேர்த்து கர்ப்பம் தாங்கிய பசுவிற்கு சார்த்தி அதற்கு உணவிட வேண்டும்.
 7.  எட்டாம் எருக்கு இலையை வைத்து “ஓம் மரீசயே நம:” என்று 1008 முறை ஓதி இதனுடன் காவி நிற லங்கோடு வஸ்திரத்துடன் இயன்ற உணவினைக் காவி உடையணிந்த உத்தம அடியார்க்கு அளிக்க வேண்டும்.
 8. ஒன்பதாம் எருக்கம் இலை கொண்டு “ஓம் ஸ்ரீஆதித்யாய நம :” என்று 1008 ஓதி வேப்பமரம், அரசு, ஆல் போன்ற சமித்திற்குரிய ஏதேனும் ஒரு விருட்சத்தில் சமர்ப்பித்து, யானைக்கு உணவளித்து தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற தமிழ் மறைகளை ஓதுவோர்க்கு அன்னதானம் வஸ்திர தானம், தாம்பூலம் போன்றவைகளை அளிக்க வேண்டும்.
 9. பத்தாவது எருக்கு இலையைக் கொண்டு ஓம் சவித்ரே நம: என்று 1008 முறை ஓதி, ஸ்ரீசூரிய பகவானின் அனுக்ரஹம் பெற்ற அவரது பக்தர்கள், மஹரிஷிகள் போன்றோர் எழுந்தருளியுள்ள இடங்களும் புராண ஸ்தலங்கள், நதி, கடல்களில் சமர்ப்பித்து அன்னதானம் செய்தல் வேண்டும். (உதாரணமாக ஸ்ரீயாக்ஞ வல்கிய மஹரிஷி. ஸ்ரீஎமதர்ம ராஜா, ஸ்ரீசனீஸ்வரர் சூரியவம்ச ஸ்ரீராமர் போன்ற மூர்த்திகள் எழுந்தருளியுள்ள தலங்கள்)
 10. பதினோறாவது எருக்கம் இலையைக் கையில் ஏந்தி “ஓம் அர்க்காய நம :” என்ற நாமத்தை 1008 முறை ஓதி சூரிய கமலச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயிலில் கோதுமையினால் செய்த உணவு, வஸ்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
 11. பன்னிரெண்டாம் இலையைக் கையில் ஏந்தி “ஓம் ஸ்ரீபாஸ்கராய நம:” என்ற மந்திரத்தை 1008 முறை ஓதி மேஷ ராசியைச் சேர்ந்தவர்கட்கு உணவு, உடை ஆகியவற்றைத் தானம் செய்திட வேண்டும்.

இத்தகைய எருக்கு இலை பூஜை, தான, தருமங்களைச் செய்த பிறகு முறையாக சற்குருவைத் தரிசனம் செய்தால் “பிரத்யட்ச குருதட்சிணா மூர்த்தியாக” அவர் காட்சியளிப்பார். இதற்கு “சூர்ய கலச பிரத்யக்ஷ குரு தரிசனம்” என்ற பெயர், சற்குருவை அடையாதோர் இப்பூஜைகளுக்குப் பிறகு சித்தர்கள், மஹான்களின் ஜீவசமாதி, விக்ரஹங்களை தரிசித்திட  விரைவில் குருவை அடைவர்.
அடியார்: குருவே! இவையனைத்தையும் காணும் பொங்கலன்றே செய்ய இயலுமா?
சற்குரு: காணும் பொங்கலன்று அடியார்கள் ஒன்று சேர்ந்து 12 எருக்கு இலைகளைக் கொண்டு 12 மந்திரங்களாலும் சூரிய பகவானைப் பூஜிக்க வேண்டும். உதாரணமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் சத்சங்க அடியார்கள் குறித்த காலத்தில் இந்த நாளில் பூஜையைத் துவங்கி மேற்கண்ட 12 வகை தான தர்மங்களை வெவ்வேறு இடங்களில் எளிதாக நிறைவேற்றலாமே!
சென்னையில் மூன்று வகை தருமங்கள், திருச்சியில் ஐந்து வகை தருமங்கள் என்றவாறாகப் பகிர்ந்து செய்திடில் ஒரே சத்சங்கம் மூலமாக அனைத்தும் நிறைவேற்றப் பட்டதாக இவற்றைச் சற்குரு ஏற்று மகிழ்கிறார்.
அடியார்: சத்சங்க அமைப்பு நன்றாக அமையும், ஏற்படும் வரையில் மற்றவர்கட்கு யாது வழி குருதேவா?
சற்குரு : ஏனையோர் காணும் பொங்கலன்று 12 வித மந்திர பூஜைகளை நிறைவேற்றித் தை மாதம் முடிவதற்குள் 12 வகை தான தருமங்களையும் நிறைவேற்ற வேண்டும். சத்சங்க அமைப்பிற்கும் இது பொருந்தும். இக்கலியுகத்திற்காக மிகமிக எளிமையான பூஜைகளை மேன்மேலும் எளிமைப் படுத்திப்  பெரியோர்கள் அருளியுள்ளனர். இவ்வழிபாடுகளையேனும் மக்கள் முறையாக நிறைவேற்ற வேண்டும்.
அடியார்: சூரிய கலச பிரத்யட்ச குரு தரிசனத்தின் மஹிமை யாது குருவே?
சற்குரு: இதன் மஹிமையை எடுத்துச் சொன்னால் மனிதமனம் ஏற்காது, 30 வருட குருகுலவாசத்தின் ஒட்டு மொத்த பலாபலன்களை மேற்கொண்ட காணும் பொங்கலன்று அமையும் முறையான சூரிய கலச பூஜையின் மூலம் எளிதில் பெறலாம். 30 வருடங்கள் என்பது ஒரு சாதாரண மனிதனின் பாதி ஆயுளைக் குறிக்கிறது. தன் வாழ்நாளில் பெரும் பகுதிக்கான கர்ம வினைகளை சூரிய கலச பூஜை மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது ஓர் அற்புத தெய்வீகச் செயலன்றோ! சற்குருவைப் பெற ஏங்குவோர்க்கு இது ஓர் அற்புதமான பூஜையாகும்.
எருக்கம் இலைக்கு கபால நரம்புகளை மேன்மைப் படுத்தும் தன்மை உண்டு. இதன் வழியே சூரிய கிரணங்கள் உட்பாய்ந்து மூளையைத் தெய்வீக வழியில் திறம்படச் செய்வதால் மனிதன் நல்வழிப்படுகிறான். கொடூர எண்ணங்கள், தீய சகவாசம், ஒழுக்கமற்ற வாழ்க்கை போன்றவற்றை விடுத்து மனம் நல்வழிப்படுகிறது. எல்லோருக்கும் இது தெய்வீக சக்தியை அபரிமிதமாக அளிக்கிறது .
30 ஆண்டுகளின் குருகுலசவாச தெய்வீக சக்திகளை ஸ்ரீயாக்ஞவல்கிய மஹரிஷி கலியுக மக்களின் நலனுக்காக சூரிய கலச பூஜையாக அருளியுள்ளார். இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேன்டியது மக்களின் கடமையாம்.

தான தருமங்கள்

அடியார்: தான, தருமங்களை சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தக் காரணம் என்ன குருவே?
சற்குரு: காலை, மதிய, மாலை பூஜைகள், சூரிய வழிபாடு, சந்திர தரிசனம், நல்ல நேரங்கள், நவக்ரஹ வழிபாடு, மூன்று வேளை விளக்கேற்றி பூஜித்தல், சந்தியா வந்தனம், பிரம்ம யக்ஞ்யம் போன்ற நித்ய கர்மாக்கள், அமாவாசைத் தர்ப்பணம், பௌர்ணமி பூஜை, பித்ரு தர்ப்பணங்கள் ஏகாதசி விரதம், தினசரி ஆலய வழிபாடு, நித்ய தேவமொழி, தமிழ் மறை ஓதுதல் போன்ற இறைவழிபாடுகளை நம் பெரியோர்கள் செவ்வனே செய்து வந்ததால் பக்தி, நல்லொழுக்கம், நீண்ட ஆயுள், சிறப்பான ஆரோக்கியம், நல்ல உறவு முறைகள், நேர்மையான அரசு இவைகளுடன் வாழ்ந்தனர்.
ஆனால், இக்கலியுக மனிதன் மேறகண்டவற்றில் எதையேனும் சிறிதளவாவது நிறைவேற்றுகின்றானா?
இறைவனுடைய மாபெரும் கருணையால்தான் வாழ்கிறோம் என்ற எண்ணம் மறைந்து விட்டது. சுயநலம், அதர்மம், ஒழுக்கமின்மை காரணமாக வன்முறைகள் மேலோங்குகினற்ன.
குறித்த நித்ய, வாராந்திர, பட்ச வழிபாடுகளை மனிதன் மறந்தமையால்தான் குடும்பப் பிரச்னைகள், மனக் குழப்பங்கள், நிம்மதியின்மை, பணக்கஷ்டங்கள், வியாபார நஷ்டங்கள், தகாத ஒழுங்கீனமான உறவுகள், கெட்ட பழக்கங்கள், வாழ்க்கையில் கொந்தளிப்புகள், வேலையின்மை, திருமணம் ஆகாமை, திடீர் மரணங்கள், பெரும் விபத்துக்கள், அடிக்கடி நோய் வாய்ப்படுதல், குழந்தைகள் பாதிக்கப்படுதல் போன்றவைகளில் ஒன்று மாற்றி ஒன்றென ஏதேனும் ஒரு துன்பம் நீர்க்குமிழியாய் எழுந்து கொண்டேயிருக்கும்.
நித்ய வழிபாடுகளை முறையாகச் செய்திடில்தான் அனைத்தும் இறைவனின் விருப்பமே என்ற சத்யமான எண்ணம் ஏற்பட்டு இன்பமோ, துன்பமோ எதையும் ஏற்கும் மனப்பக்குவம் கிட்டும்.
மனிதன் நாலைந்து விசேஷ நாட்களில் வருகின்ற தானதர்மங்களைக் கண்டு மனிதன் சலிப்படைந்தால் என் செய்வது?
அடியார்: தன் குடும்பத்திற்கே வருமானம் போதவில்லையே, தான தர்மத்திற்கு எங்கே போவது என்று எண்ணுவது தவறா குருதேவா?
சற்குரு: வருமானம் போதாத வாழ்க்கை ஏன் ? இறைவழிபாடுகள், குருபக்தி முறையாக இருந்தால் எதிலும் மனத்திருபதி (contentment) இருக்கும். வருமானம் போதவில்லை என்ற எண்ணம் ஏற்படில் பூஜைகள் போதா என்பதே பொருள்.
அன்னதானத்திற்காக இருக்கின்ற நகையையும் விற்றுப் பொருள் தருகின்ற ஏழைக் குடும்பங்கள் கலியுகத்தில் இன்னமும் உண்டு! எத்தகைய தியாக உள்ளம்! அவர்களுடைய குருபக்திக்காக இறைவன் நிச்சயமாக அவர்களுக்குப் பெருங்கருணை புரிவான்!
“தன் குடும்பத்திற்கு தான, தர்மங்களைச் செய்யும் அளவிற்கு வருமானம் இல்லையே” என்று எண்ணுபவர்கள் தஞ்சாவூர் ஸ்ரீசங்கர நாராயணர் சிவாலயத்தில் கிணற்று தீர்த்தம் அருகே எழுந்தருளியிருக்கும் இரண்டு “கோண லிங்க மூர்த்திகளை” தம்பதி சகிதம் தரிசிப்பார்களாக! பிரபஞ்சத்திலேயே காணக் கிடைக்காத “கோண லிங்கங்கள்” மனிதனுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்ய அருள்புரியும் லிங்க மூர்த்திகள்.
பாருங்கள் இறைவனின் கருணையை ! வருமானம் போதவில்லை என்றால் அதை நிவர்த்தி செய்ய இறைவனே விசேஷமான சக்திகளை பூண்டு அருள்பாலிக்கின்றான்!
அடியார் : தம்பதி சகிதம் ஸ்ரீகோண லிங்க மூர்த்திகளைத் தரிசனம் செய்வது ஏன் குருதேவா?
சற்குரு: (புன்முறுவலுடன்) இதுவே ஆன்மீக ரகசியம்! கணவன், மனைவியரிடையே உள்ள விருப்பங்கள், ஆசைகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் அதுவே “வருமானம் போதவில்லை” என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாக மாறுகின்றது! தம்பதி சகிதம் இக்கோண மூர்த்திகளை வணங்கிட அவர்களுடைய ஆசைகள், விருப்பங்கள் தார்மீகமாக முறைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான முறைப்படுத்தப்பட்ட விருப்பங்கள நிறைவேற்ற “ஸ்ரீகோண லிங்க மூர்த்தி” அருள்பாலிக்கின்றார்.
எனவே வருமானம் போதவில்லை என்போர் கணவன், மனைவி குடும்பத்தில் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து செலவினங்களை முறைப்படுத்த வேண்டும். கணவன், மனைவி பரஸ்பர நல்அணுகுமுறைகளினால் தான் முறையற்ற, தகுதிக்கு மீறிய விருப்பங்களை ஆசைகளை விலக்க முடியும். தான, தர்மங்களைச் செலவினங்களாகக் கருதாது கல்வி, மருத்துவம், உணவு, உடை போன்று கடமைகளுள் ஒன்றாக எண்ணுதல் வேண்டும். இத்தகைய கண்ணோட்டம் தான் புனிதமானது.
நித்ய பூஜை, தினசரி கோயில் தரிசனம், சந்தியாவந்தனம், சூர்ய நமஸ்காரம், அக்னி சந்தானம், வைச்வதேவம், கணவனுக்குப் பாத பூஜை அக்னி ஹோத்ரம், பிராணாக்னி ஹோத்ரம் (சாப்பிடுவதற்கு முன், பின் செய்ய வேண்டிய பிரார்த்தனை) போன்றவை அனைத்து மக்களுக்கும் உரித்தானவை, இவற்றைச் செய்யாமல் விட்டதற்கான பரிஹாரங்களே தான தர்மங்கள் என்பதை அறிவுப் பூர்வமாக உணர வேண்டும்.
தான, தர்ம நியதி முறைகள் எவர் மேலும் திணிக்கப்படவில்லை. செய்தால் அவைதாம் எப்போதும் சகாயம் செய்யும், கூட வரும், செய்யாவிடில் பிறவிகள் தாம் தேடி வரும்.
தம் குறைந்த வருமானத்திற்கிடையிலும் மனோ தைர்யத்துடன் துணிந்து செயல்பட்டு சத்சங்க தான தர்மங்களில் பங்கேற்றால் இறையருளால் தேவையானவை எவ்வழியிலேனும் நிச்சயமாகக் கிட்டும். இதனைக் கண்கூடக் கண்டோர் பலருண்டு. இதுவே மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் தியாகத்திற்கான முதல் படி!
உயர்ந்த முறையான வாழ்க்கை நிலைகளைத் தம்பதிகள் பெற ஸ்ரீகோண லிங்க தரிசனம் அருள்பாலிக்கும். குடும்பப் பொருளாதார நிலை, தானதர்மங்கள் இவ்விரண்டையும் நினைத்துக் குழப்பம் அடைகின்றவர்களுக்கு ஸ்ரீகோண லிங்க மூர்த்தி தரிசனம் தக்க தெளிவைத் தந்து அருள்பாலிக்கும்.

வஸ்திர தானம்

வருடாவருடம் நம் குருமங்கள கந்தர்வா திருஅண்ணாமலையில் நிகழ்த்தும் விரிந்த அன்னதான சேவையின் ஓர் அங்கமாக “வஸ்திர தானம்” அமைகின்றது, அடியார்களின் குடும்பத்தினர் புதுத்துணிகள், பழைய துணிகளைச் சிறுகுன்று போல் குவித்து நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் அர்ப்பணிக்கின்றனர். பிறகு தொடங்குவது சற்குருவின் அற்புதமான (வஸ்திர தானம் மூலமான) கர்ம பரிபாலனம்!
நம் குருமங்கள கந்தர்வா, ஒவ்வொரு அடியாரையும் அழைத்து (ஏதோ கர்ம பரிபாலனக்கணகாக) சில புதிய, பழைய வஸ்திரங்கள் அளித்துக் குறித்த தலத்தில், கோயிலில், குறித்த நாளில் அளிக்க அருளாணையிட அடியார்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் செல்வர்.
இவ்வாண்டு 100க்கும் மேற்பட்ட குடுமபங்கள் 2000க்கும் மேற்பட்ட புதிய, பழைய வஸ்திரங்களை நம் குருமங்கள கந்தர்வாவிடம் சமர்பித்தனர்.
திருவாமூர், திருமுதுகுன்றம் , திருபாண்டிக் கொடுமுடி, திருக்கடித்தானம் போன்ற 100க்கும் மேற்பட்ட இறைத் தலங்களில், வஸ்திர தானம் செய்ய வேண்டிய இடங்களாக நம் குருமங்கள கந்தர்வா அறிவித்தார்.
.............. சில ஆண்டுகளுக்கு முன்..................
வஸ்திரதான நிகழ்ச்சியில் நம் குருமங்கள கந்தர்வா ஓர் அடியாரிடம் சில (ஸ்திரீகளுக்கான) வஸ்திரங்களை அளித்து அருணாச்லேஸ்வரர் கோயிலில் ஏதேனும் ஓர் ஏழைக்கு அளித்து அந்தப் பெண்மணியின் பெயரைக் கேட்டு வருமாறு அருளாணையிட .....
அந்த அடியார் தயங்கி நின்றார்
............”இந்த வயதில் இந்த ஆடைகளை நான் அளித்தால்.... பெயரையும் கேட்டால் .....”
அடியார் அஞ்சி நின்றார்.
நம் குருமங்கள கந்தர்வா அமைதியாகக் கூறினார்.
“முடிந்தால் செய்தால் போதுமானது! யாருக்கு கொடுக்கணும்னு தோன்றுதோ அவங்களுக்குக் கொடுத்தாப் போதும்! கட்டாயம் கிடையாது!”
மிகுந்த தயக்கத்துடன் அந்த அடியார் வெளிச்சென்றார்.
“எவரேனும் தன்னைத் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டால்...”
ஒருவழியாக மிகுந்த பிரயாசைப்பட்டுத் தயக்கத்தை விலக்கி ஓர் ஏழைப் பெண்ணுக்கு அதை அளித்து............” அம்மா உன் பேர் என்னம்மா?”
அவள் தன் பெயரைச் சொல்ல அவர் விக்கித்தும் போனார் அது இறந்து போன அவருடைய மனைவியின் பெயர்! கண்களில் நீர் வழிய அவர் திரும்பினார்.
நம் குருமங்கள கந்தர்வா விளக்கினார்.
“செத்துப் போன அவருடைய (அடியாருடைய) மனைவிக்கு சிராத்தம்..திவசம், பிண்டம் எதுவும் வைக்காமல் ஏகப்பட்ட கர்மவினைகளைச் சுமந்து அவர் (அடியார்) நிற்கிறார். பல வருடங்களில் அந்தக் கர்ம வினைகள் வட்டிபோட்டு இன்று கர்மக்குன்றாய் அவர் (அடியார்) முன் நிற்கின்றன. ஏதோ நம்முடன் ஒட்டிக் கொண்டு சில வருடங்களாக இங்கு அண்ணாமலையில் அன்னதானத்திற்கு ஏதோ உழைப்பதன் பலனாய்... இந்த ஆச்சரியமான சமபவம்.... இறைவனின் திருவிளையாடல் இது! திருஅண்ணாமலையில் எந்த ஒரு நற்காரியத்திற்கும் ஆயிரம் மடங்கு பலனுண்டு அல்லவா! அதன் பயனைப் பார்த்தீர்களா!
“.................. அந்த மனைவி இன்று ஒரு பெண்மணி ரூபத்தில் ஆடைகளைப் பெற்று அவருடைய பலவருடக் கர்மவினைகளை நொடியில் தீர்த்துவிட்டாள். காரணம் அவருடைய அன்னதான சேவை! அன்னதான சேவைக்குப் பிரதிபலனாக வஸ்திரதானத்தின் மூலம் ஒரே வஸ்திரதான நிகழ்ச்சியின் மூலம் பித்ரு சாபங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார் அருணாசலேஸ்வரர், சற்குருவிடம் இணைந்து சத்சங்க வாழ்வை மேற்கொண்டால் ஏற்படும் அற்புதப் பலனைப் பார்த்தீர்களா..!
அடியார்: குருவே! திருஅண்ணாமலையில் வஸ்திர தானம் ஆயிரம் மடங்கு மிகவும் விசேஷமானது என்று அருளியுள்ளீர்கள். இங்கு வஸ்திர தானத்திற்காக அளிக்கப்படும் வஸ்திரங்களை வெவ்வேறு கோயில்களில் தானமளிக்கச் செய்வதின் ஆன்மீகப் பின்னணியை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?
சற்குரு: ஓ.........! தாராளமாக! இவ்வாறு கேட்டால் தானே நாங்கள் விளக்கங்கள் தர முடியும். இங்கு வஸ்திரங்களை தானத்திற்கு அளித்த பின் உங்கள் கடமை முடிந்து விடுகிறது. இங்கு தரப்படும் அனைத்து வஸ்திரங்களும் அண்ணாமலையானுக்கு உரித்தானவை! எனவே இந்த வஸ்திர தானம் திருஅண்ணாமலையில் அளிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. சந்தேகந் தெளிந்ததா? (சிரிக்கின்றார்)
எனவே நீங்கள் அளித்த வஸ்திரங்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் திரு அண்ணாமலை ஸ்தல தான விதிப்படி வந்து சேர்கிறது சரிதானே (மீண்டும் புன்முறுவல்!)
அடுத்தபடியாக வஸ்திர தானத்தின் விசேஷமான தன்மை, அது சில பிராரப்த (நடப்பு கர்மா), சஞ்சித (பூர்வ ஜன்ம ) கர்மவினைகளையுங் களைகின்றது. உங்களுடைய பழைய ஜென்மங்களில் வாழ்ந்த இடங்களில் பல தேக வினைகள் தொக்கி நிற்கின்றன. உதாரணமாகப் பிறர் சொத்துக்களை, நிலங்களை அறிந்தோ அறியாமலோ அனுபவித்தல், சிறியதும் பெரியதுமான வாக்குறுதிகளைத் தவற விடுதல், இளவயது காம, குரோத, லோபக் குற்றங்கள் போன்றவற்றைக் களைவதற்காக அந்தந்த ஏரியாவிற்கு உங்களைப் பித்ரு தேவர்கள் அனுப்புகின்றார்கள். அதற்கு சற்குரு ஒரு கருவியாகப் பயன்படுகின்றார் அவ்வளவே!

ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருச்சேறை

உதாரணமாக திருச்சேறையில் ஒருவருக்கு வஸ்திரதான இடமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இதனை இவர் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறு? கையில் சில “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ்கள், மாங்கல்ய மஹிமை, பிரதோஷ மஹிமை போன்ற நம் சபைப் புத்தங்களுடன் திருச்சேறைக்குச் செல்கையில் இயன்ற அளவில் தம்முடன் வருபவர்களிடம் இறைப் பிரச்சாரம் செய்ய திருஅண்ணாமலை கிரிவல் மஹிமை, அன்னதானம் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். இறையருளால் அந்த அடியார் திருச்சேறையில் வஸ்திர தானம்  செய்து திரும்புவரை அவர் சந்திப்பது யாரைத் தெரியுமா? அவர்தம் பூர்வ ஜென்ம உறவுகள், தொடர்புள்ளவர்களையே அவர் சந்திக்கிறார்! இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் நிகழும் ஆன்மீக விந்தைகள்! அவ்வூரில் இறங்கி கற்பூரம், பூ வாங்குவது முதல் டீ, காபி, டிபன், பழம் சாப்பிடுவதுவரை அனைத்தும் பூர்வ ஜென்ம பாக்கிகளின் தீர்வுகளேயாகும். அங்கு கண்ணில் படுகின்ற காக்கை, நாய், பசு , மனிதர்கள் கூடப் பூர்வ ஜென்ம பிணைப்புகளே!
அடியார்: குருவே! ஒருவரைக் கண்ணால் காண்பதால் கர்மவினை எவ்வாறு தீரும்?
சற்குரு : திருஅண்ணாமலையில் சில வஸ்திரங்களை அளித்து அதனைத் திருச்சேறையில் கோயிலில் தானமாக அளிக்குமாறு கூறுகிறோமல்லவா? அதன் பின்னணியில் ஆயிரமாயிரம் ஆன்மீக இரகசியங்கள் உண்டு. அனைத்தையும் அடியேன் அறிவித்து விடலாம். மனிதமனம் ஏற்குமா ? எனவே ஒன்றிரண்டை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன். திருஅண்ணாமலை கார்த்திகை ஜோதியின் மஹிமையைப் பற்றி ஓரளவேணும் அறிவீர்கள் அல்லவா? பிரபஞ்சத்தின் கோடானு கோடி அண்டங்களெங்கும் அருள்பாலிக்கும் அருட்ஜோதி அல்லவா? நீங்கள் அனைவரும் வஸ்திர தானத்திற்காக வஸ்திரங்களை அளிக்கும் போது அவையாவும் ஸ்ரீஅண்ணாமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இங்குதான் சிவபெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.
தானத்திற்காக அளிக்கப்படும் வஸ்திரங்களில் கார்த்திகை தீபத்தின் அற்புத ஒளிக்கிரணங்கள் படிந்து  அபரிமிதமான புண்யசக்தியை அந்த வஸ்திரங்கள் பெறுகின்றன. திருஅண்ணாமலையின் கார்த்திகை அழற்பிழம்பு ஜோதி கிரணங்களின் புண்ய சக்திமிகுந்த துணிகளை அந்த அடியார் திருச்சேறைத் திருத்தலத்திற்கு எடுத்துச் செல்ல அந்த ஒளி கிரணங்கள் அவர் கண்ணில் படுவோர் அனைவருடைய தேகங்களுக்கும் திரண்ட புண்ய சக்தியை அளிக்கின்றது. திருஅண்ணாமலை ஜோதியை தரிசித்தோர், தரிசிக்க இயலாதோர் அனைவருக்கும் வழியெங்கும் கார்த்திகை ஜோதியின் தெய்வீக சக்திப் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இது சூட்சுமமாக நடக்கும் ஆன்மீக அற்புதங்களாகும் ( MIRACLES ).
இந்த ஆன்மீக சக்திகளின் பரிமாற்றத்தில் தான் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீர்வு பெறுகின்றன. பொதுவாக எந்த ஒரு கர்ம வினையையும் அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் திருஅண்ணாமலையில் சற்குருவின் அருளால நடைபெறும் ஜாதி, மத பேதமின்றி நிறைவேற்றப்படும் மக்கள் சேவையில் இத்திருத்தலத்திற்குரிய விசேஷத் தன்மையால், புண்யசக்தி ஆயிரம் மடங்காகப் பெருகுவதுடன் அப்புண்ய சக்தியால் பலவித கருமங்களும் (குருவருளால் மட்டுமே) கழிக்கப்படுகின்றன. எனவே, திருஅண்ணாமலைக் கார்த்திகை தீப ஜோதியின் தெய்வீக ஒளிக் கிரணங்கள் தானத்திற்கான வஸ்திரங்கள் மீது படிந்து அபரிமிதமானப் புண்ணிய சக்திகளைத் தாங்கிச் செல்வதால் அதன் அனுக்ரஹம் வஸ்திரதானம் அளிக்கப்படும் இடத்தில் யாங்கணும் பரவி ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் அருளைப் பரப்புகிறது. இவ்வாறாகவே ஸ்ரீஅண்ணாமலையாரின் ஜோதி தரிசனத்தை அறிந்தோர், அறியாதோர், கண்டோர், காணாதோர் என இன, குல, மத பேதமின்றி யாவர்க்கும் பரப்புகின்ற புண்ணிய சக்தியாலும், பலவிதக் கர்மவினைகள் கழிவு பெறுகின்றன.
பெரும்பாலும் அந்த வஸ்திரங்களைத் தானமாகப் பெறுவோர் நம் பூர்வஜென்ம உறவினர்களே! அவர்களுடைய தேகங்களில் இந்த வஸ்திரங்கள் அணியப்பட, தீபஜோதியின் அருட்சக்தி உடல், உள்ளம், மனத்தைச் சார்ந்து நல்லொழுக்கம், இறைபக்தி, தானதர்ம நல்லெண்ணங்களை உருவாக்குகிறது. பூர்வ ஜென்ம பகை உணர்ச்சி இருந்திருப்பின், அது பல ஜென்மங்களைத் தந்திடுமல்லவா? அது இப்போது இந்த வஸ்திர தான புண்ணிய சக்தியால் மறைந்துவிடுகிறது. பிறவிகள் குறைகின்றன.
அடியார் : குருவே! தாங்கள் எட்டு அல்லது ஒன்பது கஜ சேலைகளைத் தானத்திற்காக வழங்கும்படி அடியார்களிடம் கேட்பதின் தாத்பர்யம் யாதோ? தானத்திற்காக புது வஸ்திரங்களையே தாங்கள் வற்புறுத்துவதின் காரணம் அறியலாமோ?
சற்குரு: புது வஸ்திரங்கள், மந்திரங்களை, புண்ணிய சக்திகளைப் பெருமளவு கிரஹிக்கும் தன்மை வாய்ந்தன. ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சில ஆத்மாக்கள் ஏங்கும்போது இறைவன் அவர்களைப் பருத்திச் செடிகளாகப் படைக்கின்றான். அவை  பஞ்சாக, நூலாக, ஆடைகளாக உருமாற்றம் பெற்றுத் திருஅண்ணாமலை திருத்தலத்தை அடைந்து சற்குருவின் புனிதக் கரங்களால் தீண்டப்பெற்று பல இறையடியார்களின் கர்மச் சுமைகளைக் களைந்து புண்ணிய சக்தியை தானம் பெறுபவரிடம் பரிமாற்றம் செய்து மகத்தான பணியைச் செய்கின்றன.
ஒரு வஸ்திரத்தை தானத்திற்காக குருவிடம் அளித்து ஏழைகளுக்குத் தானமாகக் கொடுப்பதின் பின்னணியில் எத்தகைய இறைத் திருவிளையாடல்கள் அரங்கேறுகின்றன என்பதை உணர்ந்து கொண்டீர்களா?
புது ஆடைகளில் பஞ்சபூதங்களின் சக்தி மிகுந்திருக்கும், பழைய ஆடைகளில் அதை அணிந்தவரின் கர்மச் சுமை சிறிது சேர்ந்திருக்கும் எனினும் பழைய நல்ல ஆடைகளை தானமாக அளிக்கையில் அதன் கர்மச் சுமைகளை தானத்தை மேற்பார்வையிடும் தர்ம தேவதைகள் ஏற்பதால் அவற்றையும் தானம் செய்வதில் தவறில்லை. எனினும் ஏழைகள் புது வஸ்திரங்களையே மிகவும் விரும்புவதாலும் நாம் எப்போதும் புதுப் படைப்புகளையே இறைவனுக்குப் பிரசாதமாக அளிப்பதாலும், பஞ்சபூத சக்திகள் புத்தாடைகளில் நிறைந்து வாசம் செய்வதாலும் நாம் புது வஸ்திரங்களையே தானத்திற்காக வலியுறுத்துவதுண்டு.
அவரவர் வசதிக்கேற்ப வஸ்திரதானம் செய்தாலும் குறைந்தது ஒரு புதிய கைக்குட்டை, துண்டு, பனியன் ஒன்றையேனும் அளிக்கலாமல்லவா!
சற்குரு: இறைவனை அடைய வேண்டியவற்றுள் ஒன்றாகிய நல்லொழுக்கத்துள் ஏகபத்தினி விரதம் என்பது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போல் உடலால், உள்ளத்தால் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்! ஆனால் கலியுகத்தில் நடைமுறையில் இது சாத்யமானதா?
உடலால், கண்களால், மனதால், உள்ளத்தால் விளைகின்ற முறையற்ற காமக் குற்றங்கள் எத்தனை, எத்தனை? ஒவ்வொரு மனிதனும், ஆணோ, பெண்ணோ இதனை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சிந்தித்துப் பார்க்கட்டும்.
இத்தகைய காம குரோதக் குற்றங்களுக்குப் பரிகாரமாகத்தான் எட்டு, ஒன்பது கஜசேலை தானத்தைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். ஏன்? ஆடைதானே மானத்தின் காப்புச் சின்னம், ஆடையின்மையும் குறைந்த ஆடைகளும் தாமே காமக் குற்றங்களின் அடிப்படை! உள்ளத்திற்கு நல்லொழுக்கம் என்ற (கவச) ஆடை போடாததால் தான் தீயொழுக்கம் உண்டாகிறது!
இதற்குப் பரிகாரமாக உடலை நன்கு மூடிக் கவசமாக நிற்கும் எட்டு, ஒன்பது கஜ சேலைகளை தானமாக அளிக்கின்றோம். இதனை அணிகின்ற ஏழைப் பெண்மணிகள் “ஆஹா! எவ்வுளவு பெரிய சேலை” என்று மகிழும் போது அந்த ஆனந்தமே (தானம் கொடுத்தவரின் ) கர்ம வினைகளைக் கழிக்கும் வல்லமை பெற்றது.
அது மட்டுமல்லாது புதிய வஸ்திரங்கள், அதிலும் எட்டு, ஒன்பது கஜ சேலைகள் மிகப் பெரிதாக அமைவதால் அவற்றின் பஞ்சபூத சக்தியின் ஆகர்ஷண சக்திகளும் அதிகம்.
“எட்டு, ஒன்பது கஜ சேலைகளைப் பயன்படுத்திப் பழக்கமில்லா ஏழைப் பெண்கள் அதனை இரண்டாகக் கிழிக்கலாமே” என்றும்  எண்ணலாம்.. ஒன்றுக்கு இரண்டாக சேலைகளைப் பெறும் போது அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவார்களன்றோ! அப்படியானால் அந்த ஆனந்தம் இரட்டிப்பான (அவர்தம்) ஆசிகளைப் பெற்றுத் தருமல்லவா!
நாம் புத்தாடைகளை அணியும் போது பெறும் மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்திருக்கும். ஆனால் நாம் அளிக்கின்ற புத்தாடைகளை ஏழைகள் அணிந்து அவர்கள் அடைகின்ற ஆனந்தம் நமக்கும் இறைப்பரிசாக நமக்கு மீண்டும் வந்திட அது நீடித்த பேரின்பமாக, அருள் ஆசியாக மாறி நமக்கு என்றும் நிலைத்து நின்று கவச சக்தியாகக் காக்கும். இதுவே தான தர்மத்தின் மகத்துவம்!
எனவே ஒருவன் எந்த அளவிற்கு எட்டு, ஒன்பது கஜ சேலைகள் எட்டு முழுவேஷ்டிகள் போன்ற உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளைத் தானம் செய்கின்றானோ அந்த அளவிற்கு அவனுடைய முறையற்ற காம கர்மச் சுமை தணிகின்றது! சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முறைதவறிய வாழ்க்கையை மேற்கொண்டோர் எட்டு, ஒன்பது கஜ சேலைகளைப் பிறருக்கு தானம் செய்வது ஒரு தக்க பரிஹாரமாக அமையும். ஆனால் இத்தகைய தான தர்மங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பௌர்ணமி நாமங்கள்

ஷடில ஏகாதசி, சர்வ ஜயா ஏகாதசி என ஏகாதசிகளில் பல வகை உண்டு. பீஷ்ம துவாதசி, மத்ஸ்ய துவாதசி என்று துவாதசிகள் பல உள்ளன. இதேபோல் அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி என அனைத்துத் திதிகளுக்கு விசேஷ நாமங்கள் உண்டு, சற்குருவை நாடி இவற்றை அறிந்து திதி தேவதைகளை முறையாகத் துதித்து வணங்கிட ஒவ்வொரு நாளையும் துன்பமின்றிக் கழித்திடலாம்.
நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தசுவாமிகள் தம் ஆத்யந்த சீடனான (நம் குருமங்கள கந்தர்வா) ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கு பௌர்ணமி திதியின் மஹிமையைப் பற்றி எடுத்துரைத்து அனைத்துப் பௌர்ணமி பூஜையின் பலன்களையும் கலியுக மக்கள் பெற்றுய்ய சத்சங்கங்களைப் பேணி இறையடியார்களுக்கு வழிகாட்டி உன்னத இறைப்பணி புரியுமாறு அருளாணையிட்டார்
ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட்கடாட்சத்தால் பௌர்ணமி மஹிமையை யாவரும் உய்த்துணரும் வகையில் இங்கு எடுத்துரைக்கப்படுகிறது,
மாதம் பௌர்ணமி பெயர்
சித்திரை – தீர்த்தப் பிரஸாத பௌர்ணமி
வைகாசி – நந்திவாஹனப் பௌர்ணமி
ஆனி  - திருமஞ்சனப் பௌர்ணமி
ஆடி – கோலாகல பலி பௌர்ணமி
ஆவணி – கஷ்ட நாசன பௌர்ணமி – போஷக பௌர்ணமி
புரட்டாசி  - உதார்ச்சித பௌர்ணமி
ஐப்பசி – மாலதீப பௌர்ணமி
காத்திகை – ஜோதி தனாகர்ஷணப் பௌர்ணமி’
மார்கழி – மாத்ருபூர்ண பௌர்ணமி
தை – விபூதி சுந்தர பௌர்ணமி
மாசி – நாக கண்ட பௌர்ணமி
பங்குனி – உத்தராதிபதி பௌர்ணமி

ஸ்ரீபாலராய மகரிஷி

ஸ்ரீபாலராய மஹரிஷி என்பார் தை மாதத்தில் வரும் விபூதி சுந்தர பௌர்ணமியைப் பெரும் உத்ஸவமாக நிறைவேற்றித் திருக்கயிலாயத்தில் பரப்பிரும்மத்தை மஹா லிங்கமாகக் காணும் பாக்கியம் பெற்றவர்.
இளஞ் சிறானாய் நான்கு வயது முதலே பசுஞ்சாணத்தில் உருவான திருநீற்றை முன்வைத்து “நமசிவாய” என்னும் பஞ்சாட்சரத்தை தினந்தோறும் லட்சம் முறை பூஜித்தவர். திருநீறில் திரு நீலகண்ட சிவனைப் பூஜித்த உத்தம மகரிஷி. தன் தொண்ணூறாவது வயதிலும் கூட நித்ய பஞ்சாட்சர பூஜையைக் கைவிடாது உடற்பிணி, தள்ளாமையைப் பொருட்படுத்தாது சிவத்தில் திளைத்தவர். கலியுகத்தில் சாதாரண மனிதனாக 85 ஆண்டுகளுக்கு மேலாக நித்ய பூஜையை, பஞ்சாட்சரம் ஓதுதலைத் தவறாது செய்த உன்னத சிவனடியார்!
தை மாத பௌர்ணமிக்கு முந்தைய, சுக்லபக்ஷத்திலேயே பஞ்சாட்சர விபூதி சுந்தர யாகத்தை மேற்கொள்வார். 85 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு வருடத் தை மாதமும் இவ்விபூதி சுந்தரப் பௌர்ணமியைப் பெரும உற்சவமாகத் திருவிடைமருதூரில் நடத்திய உத்தம புருஷர்.
யாதோ அந்த விபூதி சுந்தர யாகமாவது?
................. சுக்ல பக்ஷம் துவங்கி விட்டது. ஸ்ரீபாலராய மஹரிஷி ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ திருவிடைமருதூரில் ஸ்ரீமஹாலிங்க மூர்த்தி உறையும் திருத்தலத்துக்கு வந்து சேர்ந்திட....
ஆங்கே ....... தூய்மையான பசுஞ்சாணத்தில் உருவான திருநீறு சிறுகுன்று போல் குவிக்கப்பட்டிருக்க ....
ஸ்ரீபாலராய மஹரிஷி ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து சத்சங்கக் கூட்டுப் பிரார்த்தனையாக “ஓம் நமசிவாய்” என்ற பஞ்சாட்சர நாமத்தை விண்ணுலக லோகங்களெங்கும் எதிரொலிக்கும் அளவிற்கு ஒலித்திட......
ஒரு கோடி பஞ்சாட்சர நாமத்தை ஒலித்து அத்திரு நீற்றை மஹாலிங்க மூர்த்திக்குச் சாற்றுவதே தைமாதப் பௌர்ணமியின் விசேஷ பூஜையாகும். ஆனால் ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி சிவ பஞ்சாட்சரத்தை ஒலித்திட அது சிலமணி நேரங்களிலேயே பெருகிவிடுமன்றோ! அதிலும் தைப் பௌர்ணமி திதி நெருங்கிட லடசக்கணக்கான மக்கள் இந்த விபூதி சுந்தர யாகத்தில் சேர்ந்து ஜாதி, இன, மத, குல, பேதமின்றி பஞ்சாட்சரத்தை ஓதிட அவை கோடிகளின் மடங்காய்ப் பெருகி, கோடி கோடிகளாய்ப் பெருகி “சர்வமும் பஞ்சாட்சரமயமாகத்” தோற்றம் அளித்திட.....
தைப் பௌர்ணமி பரிணமித்து விபூதி சுந்தர பௌர்ணமியாகப் பிரகாசித்தது.

பஞ்சாட்சர அணுத்துகள்களின் குன்றாய் ஜ்வலித்த திருநீறு ஸ்வயம்பு லிங்கத்தை, ஸ்ரீமஹாலிங்க மூர்த்தியை விபூதி அபிசேஷகமாய் லிங்க மேனியைத் தழுவிட ஸ்ரீபாலராய மஹரிஷியின் விபூதி சுந்தர யாகம் நிறைவு பெற்றது.
இவ்வாறாக 85 வருட விபூதி சுந்தர பௌர்ணமிகளை ஸ்ரீபாலராய மஹரிஷி தொடர்ந்து நிறைவேற்றினார்.
இம்முறை, இறைவன் அவரைச் சோதிக்க விரும்பினான் போலும்....
அதுவே ஒரு பவ வருட தைப் பௌர்ணமி
மகரிஷிக்கு உடல் தளர்ந்து விட்டது. தள்ளாத  நிலையில் படுத்த படுக்கை ஆனார். திருவிடைமருதூர்க்குச் செல்ல இயலாத நிலை ஆனால் வைரமென உறுதியான் நெஞ்சு.
மக்களோ, ஸ்ரீபாலராய மஹரிஷி இல்லாது விபூதி பூஜையை. விபூதி யாகத்தை நிகழ்த்த விரும்பவில்லை, அனைவரும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியின் முன்னமர்ந்து,
“ஐயனே மஹரிஷிக்கு விபூதி கொடு”
“ஐயனே மஹரிஷிக்கு விபூதி கொடு”
“ஐயனே  மஹரிஷிக்கு விபூதி கொடு”
என்று கண்ணீர் மல்கிக் கசிந்துருகிப் பிரார்த்தித்தனர்.
இது இறைவனின் திருச் செவியில் விழுந்ததோ இல்லையோ, ஆங்கே ஸ்ரீபாலராய மஹரிஷியின் காதுகளில் ஒலித்து விட்டது போலும்.
மஹரிஷி பதைபதைத்தார்.
“என்ன இது! பஞ்சாட்சரத்தை ஒதாது, அடியார்கள் கேவலமான எனக்காகப் பிரார்த்திக்கின்றார்களே !”
ஏதோ உத்வேகத்தில் விரைந்தெழுந்த மகரிஷி சிலருடைய துணையுடன் திருவிடைமருதூருக்கு மெல்ல மெல்ல நடந்து வந்தார். அரை மயக்கத்திலும் பஞ்சாட்சரத்தை அவர் மனம், உள்ளம் , உதடு , அனைத்தும் ஓதின.
பஞ்சாட்சர தேகமோ!!
பலருடைய துணையுடன் ஆலயத்தின் பெரிய பிரகாரத்தை அடிப்பிரதட்சிணம் செய்து .... ....செய்து என்று எழுதுகிறோமே தவிர இதையெல்லாம் அவர் செய்து முடிக்கப் பலமணி நேரங்கள் ஆயின. அவருக்காகவோ என்னவோ, கால பைரவர் ஒரு பட்சத்தையே ஒரு மண்டலமாக மாற்றி விட்டாரோ!!
அடிப்பிரதட்சணம் முடிந்தது.
கொடிக் கம்பத்தின் கீழ் அடிமரமாய்ச் சாய்ந்தார் ஸ்ரீபாலராய மஹரிஷி
கோயில் மணிகள் தாமாக ஒலித்தன. சாம்பிராணி தூபம் இயற்கையாகவே எழுந்து மணந்தது, மூலஸ்தான கோமுகத்தில் கங்கையும் காவேரியும் தானாகப் பொழிந்தது. கற்பூரத் தட்டில் சுயஞ்ஜோதி எழும்பியது.
மூலவராம் லிங்கத்தின் மேல் வெண்மையான பனிப்படலமாய்த் திருநீறு பொங்கி வழிந்தது. திரு நீறு ஊற்றோ!!!
85 ஆண்டுகளாய் ஸ்ரீபாலராய மஹரிஷி எழுப்பிய பஞ்சாட்சர ஒலிகளை, எண்ணிலா அடக்க முடியும் அவையே மூலவரின் திருமேனியில் திருநீறாய்ப் பொங்கியதோ!
இறைவனே தன்னைத்தானே பரவெளி விபூதியால் அபிஷேகம் செய்து கொண்டானோ!
மொத்தத்தில் இதுவே தைமாத விபூதி சுந்தர பௌர்ணமியைக் கொண்டாடும் முறையாகும்.
எனவே, தைமாதப் பௌர்ணமிக்கு ஒரு பட்சத்திற்கு முன்னரே சத்சங்கக் கூட்டுப் பிரார்த்தனையாக பசுஞ்சாண விபூதியை முன் வைத்து அதற்கு குறைந்தது ஒரு கோடி முறையாவது பஞ்சாட்சர நாமத்தை பிரணவத்துடன் ஓதி (ஓம் நமசிவாய) தைப் பௌர்ணமியன்று அப்புனிதமான திருநீறால் ஸ்ரீமஹாலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்வித்து, அப்விபூதி பிராசத்தை யாவர்க்கும் அளிக்க வேண்டும். இதுவே தைமாதப் பௌர்ணமியைக் கொண்டாடும் முறையென சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
ஒரு கோடி பஞ்சாட்சர நாமம்
இது மிகவும் எளிதானதே!
தனியாக ஒருவர் “ஓம் நமசிவாய” என்று ஜபித்திடில் ஒரு நிமிடத்திற்கு 150 முறையேனும் எளிதாக ஜபித்திடலாம். ஒரு மணி நேரத்திற்கு 9000 முறை பஞ்சாட்சரத்தை ஓதிடலாம். உதடுகள் அசைந்து ஒலிப்பதை விட மனதினுள் ஜபித்தால் மிகவும் விசேஷமானதாகும். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து 20 அல்லது 30 பேர்களுக்கு மேல் ஒன்றாகக் கூடி பசுஞ்சாண விபூதியை முன்வைத்துப் பஞ்சாட்சரத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் ஓதிட எட்டு லட்சம் முறை பஞ்சாட்சரங்கள் ஒதப் பெறும். தினந்தோறும் இவ்வாறு செய்திட ஒரு பட்சத்தில் (15நாட்கள்) ஒரு கோடி முறை பஞ்சாட்சரத்தை ஓதுவது மிகவும் எளிதானது தானே. உண்மையில், பத்து நபர்கள் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அது பத்து மடங்காகப் பெருகுகின்றது. எனவே, சத்சங்க வழிபாடாக “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சரட்த்தை ஜாதி, மத பேதமின்றி ஏழை, எளியோர், மாணவர்கள், தொழிலாளர்கள், கிராமத்து மக்கள் அனைவரையும் ஈடுபடுத்தி எளிய முறையில் ஆனால் விமரிசையாக இந்த விபூதி சுந்தர யாகத்தை நிறைவேற்றி திருவிடைமருதூர் சிவபெருமானுக்கு விபூதியைச் சாற்றி யாவரும் இறையருளைப் பெற்று இன்புறலாம். மிகவும் சக்தி வாய்ந்த இத்திருநீறை தினமும் அணிந்திட நித்ய பூஜைக்கான புண்ய சக்தியை அளித்து மிகச் சிறந்த தெய்வீக இரட்சையாக நம்மைக் காக்கின்றது.
ஸ்ரீபாலராய மஹரிஷி எழுந்தார். தானே தனியாக விரைந்து நடந்து மூலஸ்தானத்தை அடைந்தார்.
“அத்வைதம் சத்யம்”
“அத்வைதம் சத்யம்
“அத்வைதம் சத்யம்”
என்று  மும்முறை ஒலித்துத் திருகரங்களை லிங்க மேனியினின்று வெளிப்படுத்தி ஸ்ரீஆதிசங்கரருக்கு அருள் பாலித்த ஸ்ரீமஹாலிங்க மூர்த்தி, அதே திருக்கரங்களால் ஸ்ரீபாலராய மஹரிஷிக்கும் தம் திருமேனியிலிருந்து விபூதியை அளித்து தந்தார்.
தைப் பௌர்ணமிச் சந்திரனின் பரிபூரணமான 16 கலைகளும் ஜோதிகளாய் லிங்கத்தை வலம் வந்தன. விபூதியின் சக்தியால் தள்ளாத வயதிலும் தனி ஒருவனாகவே அங்குக் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கும் இறைவனுடைய விபூதிப் பிரசாதத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்.
“ஸ்ரீபாலராய மஹரிஷிக்கு ஜெய்!” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. காரணம், அவர்கள் கேட்டபடி மஹரிஷிக்கு இறைவன் விபூதியை அளித்துவிட்டானே!
அள்ளிக் கொடுத்தும் விபூதி குறையவில்லை. இவ்வற்புதம் நிகழ்ந்த திருத்தலமோ திருவிடைமருதூர். இக்கோயில் தூண் ஒன்றில் இன்றும் பாலராய மஹரிஷி காட்சி தருகின்றார்.
ஆண்களுக்கான சுவாச நிலை
பொதுவாக அனைவருக்கும் வலது நாசி சூரிய கலை, இடது நாசி சந்திர கலை, இருநாசி சுவாசம் சுழுமுனை ஆகும்.
ஆண்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் பகல் முழுவதும் சூரியகலையில் அதாவது வலது நாசியில் சுவாசத்தைச் செலுத்துவது நன்மை பயக்கும். இதனால் கங்கை  நதி தீரத்தில் செய்கின்ற தியானத்தின் பலன்களை எளிதில் பெறலாம்.
புதன்கிழமை அன்று ஆண்கள் இரவு முழுவதும் சுழுமுனையில் சுவாசத்தைச் செலுத்த வேண்டும். இதனால் எண்ணங்கள் எளிதில் முறைப்படுத்தப்படும். காம, குரோத எண்ணங்கள் தணியும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam