குருவை நம்பினால் அவர் உன்னை நிழல் போல் தொடர்ந்து காப்பார்.

அடியார்
குருதேவா, ஒருவருக்கு ஆயுள் 60 வருடங்கள் என்று அவர் ஜாதகத்தைப் பார்த்து ஆயுள் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அவர் 40 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் ஜோதிடமே பொய் என்று சொல்கிறார்களே.

சற்குரு
ஜோதியிடம் இருந்து வந்ததால் அதை ஜோதிடம் என்று சொல்கிறார்கள். இறைவனான ஜோதியிடம் பிறந்து வந்த ஒரு கலை பொய்யாகுமா? யோசித்துப் பார். ஒரு காலமும் ஜோதிடம் பொய்ப்பது கிடையாது. ஜோதிடக் கலையைப் பயன்படுத்துவதில்தான் குழப்பங்களும், தவறுகளும் ஏற்படுகின்றன. நீ கூறியபடி 60 ஆண்டு காலம் ஆயுள் உடையவர் 40 வயதில் இறந்தால் அதை எப்படி ஜோதிடத் தவறு என்று சொல்ல முடியும். அந்த மனிதனுடைய ஆயுள் 60 ஆண்டு காலம். 40வது வயதில் தற்கொலை செய்து கொண்டு அவன் உடல் மறைய வேண்டும் என்பது அவன் ஜாதகத்øதை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். பாக்கி உள்ள 20 வருடங்களுக்கு அவன் மனித உடல் இல்லாத ஆவியாக அலைந்து விட்டு 60 வருடங்கள் முடிந்த உடன் வேறு லோகத்திற்குச் சென்று விடுவான். இதுதான் ஜோதிடத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் எடையுள்ள தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெயைத் தலையில் தடவி சிறிதுநேரம் கழித்து குளித்து வந்தால் கபாலச் சூடு தணிந்து எண்ணங்கள் தெளிவாகும்.

நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் வரை மனித ஆவி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே சுற்றிச் சுற்றி வரும். அந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அது நகர்ந்து செல்ல முடியாது. அது மட்டுமல்ல. அவ்வாறு அந்த ஆவி நகர முடியாத நிலையில் இருக்கிறது என்பதை மற்ற ஆவிகள் எளிதில் தெரிந்து கொள்வதால், அங்குள்ள தீய ஆவிகள் இந்தத் தற்கொலை செய்து கொண்ட ஆவியைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும். ஆவிகள் தரும் வேதனைகளை எல்லாம் வார்த்தைகளால் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட 20 ஆண்டு ஆவி வாழ்க்கைக்குப் பின்தான் அந்த ஆவி நிலையிலிருந்து விடுதலை பெற்று அடுத்த உயிர் நிலையை அடைய முடியும்.

இதை மக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மனிதப் பிறவி என்பது கடவுள் மனிதனுக்குக் கொடுத்த ஒரு வெகுமதி. தற்கொலை செய்து கொள்வது என்பது பரிசைக் கொடுத்தவர் முகத்திலேயே திருப்பி அடிப்பது போலாகும். இந்த நன்றி கெட்டக் காரியத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்புப் பெறவே முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

அடியார்
குருதேவா, பொதுவாக மக்கள் தங்களால் தாங்க முடியாத வயிற்று வலி, புற்று நோய், கடன் தொல்லை, காதல் தோல்வி போன்ற பிரச்னைகளால்தானே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

காலையில் பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் (சுமார் 500 மி.லி)
நீர் அருந்தினால் கழிவு நீர்த் தாரைகள் தூய்மை பெறும்.

சற்குரு
மேலோட்டமாகப் பார்த்தால் உங்கள் கூற்றில் உண்மை இருப்பது போல் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எது உண்மை நிலை என்பது புரிய வரும். இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும் என்பதுதானே பழமொழி. நமக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் அறிந்தோ அறியாமலோ முன்பு செய்த வினைகளே காரணம். தவறு செய்தவன் தண்டனையை மனதார ஏற்றுக் கொள்வதுதானே முறை. உலகச் சட்டமும், தெய்வீகச் சட்டமும் இதில் தவறுவது கிடையாதே.

தற்கொலை செய்து கொள்வதால் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? உன்னிடத்தில் ஒருவன் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டால் அந்த கடன் பாக்கி தீர்ந்து விடுமா? நன்றாக யோசித்துப் பார். அவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்த ஆயிரம் ரூபாய் கடனை உரிய வட்டியுடன் சேர்த்து உன்னிடமோ, உன் பரம்பரையில் வரும் யாரிடமோ கொடுத்தால்தானே அந்தக் கடன் பாக்கி தீரும். கடனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டால், கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதோடு, தற்கொலை செய்து கொண்ட பின் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் வரை ஒரே இடத்தில் நகராமல் இருந்து எல்லா ஆவிகளின் தாக்குதல்களையும் அனுவித்துக் கொண்டு, மனித ஆயுள் முடிந்த பின் இறைவனை அவமதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான தண்டனையையும் அனுபவித்தாக வேண்டுமே. இவ்வளவு வேதனைகள் தேவைதானா?

ஆஸ்ட்ரல் ட்ராவெல் என்னும் நுண் பரவெளிப் பயணத்திற்கு உறுதுணை செய்பவரே பாண்டிச்சேரி அரவிந்த மாதா ஆவார். சிலிகான் கூடு என்னும் அரிய தெய்வீகப் பரவெளிக் கூட்டைப் பெற்ற இந்தத் தாய் நுண் பரவெளிப் பயணம் செய்யும் அனைவருக்கும் வரும் துன்பங்களைக் களைந்து பாதுகாப்பளிக்கிறார். இரவில் அமைதியான ஆழ்ந்த தூக்கம் பெற விரும்புவோர் அன்னை அரவிந்த மாதாவின் உருவத்தைச் சில நிமிடங்கள் தியானித்து பின் படுக்கைக்குச் சென்றால் நிம்மதியான உறக்கம் கிட்டும்.

எந்த மனிதனுக்கும் அவன் தாங்க முடியாத கஷ்டத்தை இறைவன் கொடுப்பதில்லை என்பதே இறை நியதி.
2007ம் ஆண்டு முதல் குடும்பம், தொழில், சமுதாயப் பிரச்னைகளால் தற்கொலைகள் நிறைய நிகழ வாய்ப்புண்டு என சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. இறை நம்பிக்கை குறைவதே தற்கொலை எண்ணத்திற்கு மூல காரணம் ஆகும்.

இந்தியாவில் 3862 கோடி சுயம்பு லிங்க மூர்த்திகள் உள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 சுயம்பு மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். சுயம்பு மூர்த்தியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அகலும். கோடானு கோடி சிவலிங்க மூர்த்திகளை உங்களைச் சுற்றி வைத்துக்கொண்டு, அவர்கள் அருகிலேயே 24 மணி நேரமும் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் நம்பிக்கையை இழக்கலாமா? எப்போதும் இறை நாமத்தைச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயரையே நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். சுயநாம ஜபமும் தன்னம்பிக்கையையும், இறை பக்தியையும் வளர்க்கும் உன்னத மார்க்கமே.

தொடர்ந்து ஒரே நாமத்தைச் சொல்வதால் சலிப்பு ஏற்படுவது போல் தோன்றினால் தேவாரம், திருவாசம் போன்ற பக்தி கமழும் பாடல்களைப் பாடி வாருங்கள். தினமும் ஒரு பாடலைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை மணமுள்ளதாகும். தினமும் சாம கானம் ஓதி வந்தால் அல்லது சாம வேத பீஜாட்சரங்கள் பரிணமிக்கும் ‘மந்திரமாவது நீறு...‘ என்னும் திருஞான சம்பந்த மூர்த்திகளின் தேவாரத் திருப்பதிகத்தை ஓதி வந்தால் சாம வேதப் பிரியனான எம் ஈசன் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அபரிமிதமாக வளர்த்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொடுப்பான். திருச்சி லால்குடி அருகில் உள்ள திருமங்கலத்தில் அருள்புரியும் ஸ்ரீசாமவேதீஸ்வர ஈசனை வாழ்வில் ஒரு முறையாவது சென்று தரிசித்து வந்தால் தற்கொலை எண்ணங்கள் உங்களை அணுகாது.

தற்கொலை என்பது உங்கள் பிரச்னைகளுக்கு நீங்கள் போடும் ‘கமா‘வே தவிர அது முற்றுப் புள்ளி ஆகாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அடியார்
விதியை மதியால் வெல்லலாம் என்பது உண்மைதானா, குருதேவா?

சற்குரு ( அடியார் கண்களில் ஊடுவிப் பார்த்து...)
விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருந்தால், விதியை மதியால் வெல்லலாம்.

இட்டார் கெட்டார், இடாதார் வாழ்ந்தார் என்பது முதுமொழி. திருநீறு இட்டு யார் கெட்டார், திருநீறு இடாது யார் வாழ்ந்தார் என்பதே இதன் உண்மைப் பொருளாகும்.

(அடியார்கள் புரியாமல் விழிப்பதைப் பார்த்த சற்குரு தொடர்கிறார்...)
இது ஒன்றும் புரியவில்லை என்றால் ஒரு உதாரணம் மூலம் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளலாம். பஸ் ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினால் விழுந்து விடுவோம் என்பது விதி. ஆனால், பஸ் டிரைவர்களோ, கண்டக்டர்களோ பஸ் ஓடும்போது லாவகமாக இறங்கி விடுகிறார்களே. அது எப்படி? விதி விதித்தவர்களே விதியை மாற்ற முடியும், அவர்கள் நினைத்தால் விதியை மீறலாம். நமது விதியை விதித்தவன் இறைவன். இறைவன் நினைத்தாலன்றி விதியை யாராலும் வெல்ல முடியாது. பல சமயங்களில் விதியை மீறி, விதிக்குப் புறம்பாக சில செயல்கள் நடப்பது போல் தோன்றும் அவை எல்லாம் வெறும் தோற்றங்களே.

மார்கண்டேயரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 16 ஆண்டுகள் என ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட அவர் என்றும் வாழும் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல இங்கு இறைவனுடைய ஆயுள் நிர்ணயம் எவ்விதத்திலும் மாற்றம் பெறவில்லை. இது எப்படி என்பதை தெரிந்து கொள்ளும் முன், ஒவ்வொருவருக்கும் ஆயுள் எப்படி இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது அவசியம். மனிதனுடைய ஆயுள் அவன் விடும் மூச்சு எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கப்படுகின்றது.

ஒருவருடைய ஆயுள் 50 கோடி மூச்சுகள் என்று இருந்தால், இந்த எண்ணிக்கை மூச்சுக் காற்றை சுவாசிக்க அவருக்கு 60 ஆண்டு காலம் ஆகலாம் என்ற கணக்கை வைத்து அவருக்கு 60 ஆண்டுகள் என்று கணக்கிடுகிறோம். அவரே பிராணாயாமம் பயின்று தன்னுடைய மூச்சு விடும் காலத்தை நீட்டித்துக் கொண்டால் அந்த அளவிற்கு அவருடைய ஆயுட் காலமும் கூடும் அல்லவா? இதுதான் விதியை மதியால் வெவ்வது. ஆமைகள் ஒரு சுவாசத்திற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு மிகவும் மெதுவாக சுவாசிப்பபதால்தான் அவை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்கின்றன.

நமக்கு வரும் தீய எண்ணங்களில் முக்கால் பங்கு குடிநீர் மூலமாகவே வருகின்றன. நீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்துவதால் பெரும்பாலான தீவினைத் துன்பங்களிலிருந்து மீளலாம். நின்று கொண்டோ, நடந்து கொண்டோ நீர் அருந்துவதைத் தவிர்த்து, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நீர் அருந்துவதே நலம்.

மனித ஆயுள் மூச்சுக் காற்றை வைத்து நிர்ணயம் ஆவது போல ஒவ்வொரு ஜீவனுக்கும் வெவ்வேறு விதமான ஆயுள் நிர்ணய நியதி உண்டு. சித்தர்கள், மகான்களின் ஆயுட் பரிமாணம் மனிதர்களைப் போல மூச்சுக் காற்றை வைத்து நிர்ணயம் ஆவது கிடையாது. மேலும் அவர்கள் உலகை விட்டுப் புறப்படும் நேரம், காலம், சூழ்நிலை இவற்றை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு இறைவனால் வழங்கப்படுகிறது.
மார்கண்டேயர் ஒரு மகரிஷி என்பதால் அவருக்கு எப்படி இறைவனால் ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.

ஒரு முறை மார்கண்டேய மகரிஷி அடர்ந்த காடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தேவரிஷி நாரதர் வந்துகொண்டிருந்தார். மார்கண்டேயர் நாரதரை வணங்கி அவர் நலம் விசாரித்தார். நாரதரும் மார்கண்டேயரை வணங்க, இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்போது திருக்கைலாயம் சென்று கொண்டிருந்தார். அதை அறிந்த மார்கண்டேயர் மகிழ்ந்து, ’சுவாமி, அம்மை அப்பருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவியுங்கள். அடியேன் பூமியில் பிறப்பெடுத்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடியேனுடைய ஆயுள் எப்போது முடிவுறும் என்பது தெரியவில்லை. தாங்கள் அம்மை அப்பரைப் பார்க்கும்போது அடியேன் இந்தப் பூமியில் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாரதரும், ’தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிவபெருமானிடம் தங்கள் ஆயுளைப் பற்றி கேட்டு வருகிறேன், ’ என்று சொல்லி தன் கயிலை யாத்திரையைத் தொடர்ந்தார்.

சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர்
திருச்சி மலைக்கோட்டை

மார்கண்டேயர் முக்காலமும் உணர்ந்த பெரிய மகரிஷி. அவர் நினைத்தால் ஒரு நொடியில் தன்னுடைய ஆயுள் ரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பணிவின் காரணமாக நாரதர் மூலமாக இறைவனிடமிருந்தே தன்னுடைய ஆயுளைப் பற்றி அறிய விரும்பினார். நாரதர் கொண்டு வரும் செய்தியை எதிர்பார்த்து ஒரு ஆலமர நிழலில் தங்கி இருந்தார் மார்கண்டேயர். நேரம் கடந்து கொண்டிருந்தது. பகல் பொழுது முடிந்து மாலை நேரமும் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து விடும். மார்கண்டேயர் கால நேரம் தவறாது சந்தியா வந்தனப் பூஜைகளை ஆற்றி வருபவர். மாலைநேர சந்தியா வந்தன வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட நதி அருகே ஆற்றி வருவது வழக்கம்.

இப்போது நாரதரை எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர் வேறெங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. சந்தியா வந்தான நேரமோ கடந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அருகில் ஒரு புலையன் குட்டை இருந்தது. அதாவது தோல் பதனிடுபவன் ஆடு, மாடு என்று விலங்குகளின் தோலை உரித்து அவற்றைப் பதப்படுத்துவதற்காக ஒரு சிறு குட்டையில் ஊற வைத்திருப்பான். அந்தக் குட்டைதான் அங்கிருந்தது. துõரத்திலிருந்து பார்த்தாலே வயிற்றைக் குமட்டும் துர்நாற்றத்துடன் இருந்தது. மார்கண்டேயர் ஒரு சிறிதும் யோசிக்ககிவில்லை. நேரே சென்று அந்தக் குட்டையில் இறங்கி மூன்று தடவை முழுகி எழுந்தார். அர்க்ய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கரைக்கு வந்தார். அந்தக் குட்டை கரையிலேயே அமர்ந்து தன்னுடைய மாலை சந்தியா வந்தன வழிபாட்டையும் முறைப்படி நிறைவேற்றினார்.

மார்கண்டேயர் ஒரு நாற்றமடிக்கும் குட்டையில் மூழ்கும் நேரத்தில் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மார்கண்டேயரின் அர்க்ய வழிபாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஒரு மரத்தின் அருகில் மார்கண்டேயர் பார்வையில் படாத நிலையில் நின்று கொண்டு அவர் இயற்றும் சந்தியா வந்தன பூஜைகளைக் கவனித்து வந்தார். எல்லா வழிபாடுகளையும் மார்கண்டேயர் நிறைவேற்றிய பின் அவர் எதிரே வந்து தன்னுடைய வணக்கத்தை நாரதர் தெரிவித்துக் கொண்டார். திருக்கைலாயத்தில் அதிகார நந்தி தரிசனம், பார்வதி பரமேஸ்வரரிடம் நடந்த தெய்வீக உரையாடல்கள் போன்ற தெய்வீக விஷயங்களை எல்லாம் மார்கண்டேயரிடம் தெரிவித்தார்.

ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.

ஸ்ரீமார்கண்டேய மகரிஷி திருநீலக்குடி

பின் மார்கண்டேயரின் ஆயுள் அவர் நிறைவேற்றும் சந்தியா வந்தன பூஜைகளைப் பொறுத்து அமையும் என்றும் அவர் எவ்வளவு நாள் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுகிறாரோ அவ்வளவு அவர் இந்தப் பூமியில் நிலைத்திருப்பார் என்றும் எம்பெருமான் உரைத்ததை மார்கண்டேயரிடம் தெரிவித்தார். நாரதர் தொடர்ந்து, ‘மகரிஷியே, தாங்கள் இடம், பொருள், தோஷம் எதுவும் பார்க்காமல் சந்தியா வந்தனத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையில் விடாப் பிடியாக இலயித்து இருக்கிறீர்கள். ஒரு புலையன் குட்டை என்று கூடப் பொருட்படுத்தாது அதில் மூழ்கி நீங்கள் சந்தியா வழிபாட்டை நிறைவேற்றுவது அடியேனை மெய் சிலிர்க்க வைக்கிறது. கைலாய நாதன் ஆசிர்வதித்தது போல தாங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழ அடியேனும் எம்பெருமானைப் பிரார்த்திக் கொள்கிறேன்’, என்று பணிவுடன் கூறினார்.

யுகங்கள் எவ்வளவு கடந்தாலும் மார்கண்டேய மகரிஷி தன்னுடைய சந்தியா வந்தன வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுதானே இருப்பார், அப்படியானால் அவர் ஆயுள் முடியாமல் என்றும் சிரஞ்சீவியாக பூமியில் வாழ்வார் என்பதுதானே இறைவனினின் விதியாக அமைகிறது. இங்கே இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடியார்
விதியை வெல்ல முடியாது என்றால் மனித முயற்சி என்று ஒன்றிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடாதா?

சற்குரு
விதி என்பது வேறு, மனித முயற்சி என்பது வேறு. விதியை வெல்ல முடியாது என்பதால் மனிதன் முயற்சி எடுக்கக் கூடாது என்று அர்த்தம் கிடையாது. யாருமே இறைவனின் விதியைப் புரிந்து கொள்வது கிடையாது. இறைவனைப் புரிந்து கொண்டால்தான், இறைவன் விதித்த விதியையும் புரிந்து கொள்ள முடியும். கடவுள் தரிசனம் பெறும் வரை மனிதன் அல்லும் பகலும் குரு காட்டிய வழியில் தன் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். விதிக்கும் முயற்சிக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொள்ளுங்கள்.

(சற்குரு சிரித்துக் கொண்டே....)
நீங்கள் எல்லோரும் கணக்கில் சூரப் புலிகள் ஆயிற்றே. ஒரு சின்ன கால்குலேஷன். உங்களிடம் ஒன்பது இலக்கங்கள் காட்டக் கூடிய ஒரு கால்குலேட்டர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது 25000000, 35000000 என்ற இரண்டு எண்களின் பெருக்குத் தொகையை அந்த கால்குலேட்டரில் கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் ,இரண்டு எண்களின் பெருக்கற் பலன் ஒன்பது இலக்கங்களைத் தாண்டுவதால் அந்த கால்குலேட்டர் நாம் சொன்ன எண்களைப் பெருக்க ஒத்து வராது. இது விதி.

பாலில் 22 அமிர்தச் சுவைகள் உள்ளன. பாலின் அமிர்தச் சுவையை உணர முடிந்தால் வேறு எந்த உணவையும் மனம் நாடாது. எந்த அளவிற்குப் பாலைக் காய்ச்சுகிறோமோ அந்த அளவிற்கு அதிலுள்ள அமிர்தச் சுவைகளும் விருத்தியாகும். அதனால்தான் நன்றாகப் பசும் பாலைக் காய்ச்சி செய்யப்பட்ட பால் கோவா தானம் குழந்தையின்மை, கடுமையான உடலுருக்கி (tuberculosis) நோய்கள் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆனால், இந்த விதியை நம் மதியால் எப்படி மாற்றுகிறோம். 25, 35 என்ற எண்களை மட்டும் கால்குலேட்டரில் பெருக்கி அதனுடன் 12 சைபர்களைச் சேர்த்துக் கொண்டால் நமக்கு வேண்டிய விடை கிடைத்து விடுகிறது. மனித முயற்சி இல்லா விட்டால் இது எப்படி சாத்தியமாகும்? இவ்வாறு இறைவனின் விதியை மீறாமல் நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள மனித முயற்சி கட்டாயம் தேவை. வழிகாட்டிகளாகிய நாங்கள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் அனைவரும் ஆயிரக் கணக்கான மீட்டர் துணிகளை தானம் செய்ய வேண்டிய பாக்கிகளுடன் வந்து பூமியில் பிறந்து விட்டீர்கள். இந்தத் துணி பாக்கி தீர்ந்தால்தான் மனிதப் பிறப்பிலிருந்து உங்களுக்கு முக்தி கிட்டும்.

ஆனால், ’நானே நல்ல ட்ரெஸ் போட்டுக்க முடியல, நான் எப்படி வாத்யாரே 30000 மீட்டர் துணி தானம் கொடுப்பது?’ என்று உங்கள் மனதிற்குள் கேட்பதும் அடியேன் காதில் விழுகிறது. 30000 மீட்டர் துணி தானம் கொடுத்தால்தான் உங்கள் துணி பாக்கி தீரும் என்ற இறைவன் விதித்த விதியை மீறாமல், உங்களை திருஅண்ணாமலைக்கு வரவழைத்து உங்களை 30 மீட்டர் துணியையாவது தானம் செய்யத் தூண்டுகிறோம். தான, தர்மங்கள் ஆயிரம் மடங்காகப் பெருகும் புண்ணிய பூமியல்லவா? இங்கு நிறைவேற்றும் அன்னதானம், ஆடைதானம், இறை நாம ஜபம் போன்ற அனைத்து நற்காரியங்களும் பல்லாயிரம் மடங்காகப் பெருகுவதால் மக்களின் கர்மாவை எளிதில் தீர்க்கும் கர்ம பூமியாக அருள் வழங்குகிறது.

இப்படித்தான் குருநாதர்கள் தங்கள் சீடர்களின் பாக்கியைத் தீர்க்க அல்லும் பகலும் தங்கள் உயிரையே கொடுத்து முயற்சி செய்து போராடுகிறார்கள். எனவே, வாழ்நாளின் கடைசி மூச்சு இருக்கும் வரை நல்ல காரியங்களை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரிஷிகேஷ் சிவானந்தா தன் சுயநினைவிழந்து உயிர் விடப் போகும் நிலையில் கூட தன்னுடைய விரலால் தன் வலது தொடையில் ஓம், ஓம் என்று எழுதிக் கொண்டிருந்தார். முக்தி, மோட்ச நிலைகளைக் கடந்த அவர் ஏன் இன்னும் இறை நாமத்தை எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? தங்களை நம்பி வாழும் அடியார்களைக் கரை சேர்க்கவும், மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருந்து பாடம் புகட்டவும் இவ்வாறு மகான்கள் தங்களுடைய முயற்சியைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள்.

ஒரு அடியாரை முதன் முதலில் பார்க்கும்போதே அவர் எந்த தேதி, கிழமை, மணி, நிமிடத்தில் அடியேனுடைய சத்சங்கத்தை விட்டுப் பிரிந்து சென்று விடுவார் என்று தெரிந்து விடும். அண்ணாமலையார் விதித்த இந்த விதியை மாற்ற முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் நாங்கள் ‘விதிப்படி நடக்கட்டும்‘ என்று வெறுமனே இருந்து விடுவது இல்லை. நமது மூத்த அடியார்கள் மூலமாகவும், அடியேனும் எங்கள் உயிரைக் கொடுத்து அவரை சத்சங்கத்தில் நிலை நிறுத்தவே பாடுபடுகிறோம். இது அடியேனுடன் நெருங்கி இருக்கும் பல அடியார்களுக்கும் தெரியும். மனிதன் இறை தரிசனம் பெறும் அந்தப் புனித நேரத்திற்கு ஒரு வினாடிக்கு முன்னே கூட தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. எனவே, எந்நேரமும் விழிப்புடன் இருந்து அடியார்கள் நற்காரிய முயற்சிகளைத் தொடர்ந்து றிறைவேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் எவ்வித சந்தேகமோ, குழப்பமோ வேண்டாம்.

அடியார்
மகான்கள் அற்புதச் செயல்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் கூற முடியுமா, குருதேவா?

சற்குரு
Miracles எனப்படும் அற்புதத் செயல்கள் எல்லாம் உங்களுக்குத்தான் அற்புதங்களே தவிர மகான்களுக்கு அவை எதுவும் அற்புதச் செயல்கள் அல்ல. மந்திரத்தால் மாங்காயை வரவழைக்கும் மந்திரவாதிக்கு அவன் செயல் அதிசயமாகவா இருக்கும்? மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவை ஆச்சரியமாக இருக்கலாம். அற்புதங்கள் செயல்படும் விதம் மகான்களுக்குப் புலப்படுவதால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது கிடையாது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

டூத் பிரஷ் கொண்டு பல் விலக்கும்போது
குரு விரல் (ஆள்காட்டி விரல்) பிரஷ் மீது
படாமல் வைத்துக் கொண்டு பல்
துலக்குவதால் ஆயுள் வளரும்

உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் உங்களைச் சுற்றி 24 மணி நேரமும் அற்புதச் செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள்தான் அந்த அற்புதச் செயல்களைக் கண்டு கொள்வதோ, கவனிப்பதோ அவைகள் அற்புதங்கள் என்று உணர்ந்து கொள்வதோ கிடையாது. காலையில் சூரியன் எழுவது ஒரு அற்புதம், அதிசயம். மாலையில் அவன் கடலில் மறைவது ஓர் அற்புதம். இரவில் சந்திரன் ஒளி வீசுவது ஓர் அற்புதம், ஆனந்தம். இருண்ட வானில் நட்சத்திரங்கள் மின்னுவது அதிசயமோ, அதிசயம். மழை பெய்வதோ மிகப் பெரிய அதிசயம். இவற்றைத் தினந்தோறும் நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பதால் இவை எல்லாம் உங்களுக்கு அதிசயச் செயல்களாகப் படவில்லை.

சந்தியா வந்தன மந்திரங்களை ஊன்றிப் படித்தீர்களானால் காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பது எத்தகைய அதிசயம் என்பது உங்களுக்குப் புலனாகும். நம் கற்பனைக்கு எட்டாத பல எதிர்மறை வினைத் தாக்கங்கள், அசுர சக்திகளை மீறித்தான் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கிறான், மறைகிறான். ஏன், உங்களுக்குள்ளேயே எவ்வளவோ அதிசயங்கள் நடக்கிறதே. நீங்கள் பசித்து உணவு உண்டால், அது அதிசயம். உண்ட உணவு நல்ல முறையில் செரித்தால், அது அதிசயம். இரவில் உங்களுக்கு நல்ல தூக்கம் வந்தால் அது அதிசயம். பசி இல்லாமல் புளிச்ச ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கு பசி என்பது அவன் அனுபவித்திராத ஒரு அதிசயப் பொருளாக இருக்கும். துõக்கம் வராதவர்கள் தூங்குபவர்களைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். பலர் பொறாமையால் வெந்து போவது கூட உண்டு.

மகான்கள் பெரும்பாலும் அற்புதங்களைச் செய்வதில்லை. இறைவன்தான் மகான்களின் வார்த்தைகன் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக அற்புதங்களை இயக்குகிறார். முதலை வாயிலிருந்து குழந்தையை மீட்டதும், மண்ணைப் பொன்னாக்கியதும், தங்கக் காசு மழை பொழிந்ததும், அமாவாசை அன்று நிவாவைக் காட்டியதும் அடியார்களின் பெருமையை மன்னனும், மக்களும் புரிந்து கொள்வதற்காக எம்பெருமான் அரங்கேற்றிய அற்புதங்களே. கடுமையான வியாதியால் பீடிக்கப்பட்ட பெண்ணொருத்தி ஏசுநாதருடைய துணியைத் தொட்டுக் குணமடைந்தபோது, ஏசுநாதர், ’மகளே, இந்த அற்புதத்தை நான் நிகழ்த்தவில்லை, உன்னுடைய நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’, என்று கடவுள் நம்பிக்கையே எல்லா அற்புதங்களையும் ஆற்றவல்லது என்று நினைவுறுத்தினார்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அன்னை பராசக்தியின் ஞானப் பாலை உண்டு “தோடுடைய செவியன்...“ என்னும் தேவாரப் பாடலை பாடினார் அல்லவா? பூமியில் பிறக்கும் மனிதனின் முதல் உணவாக தாய்ப் பால் அமைவது போல இறை தரிசனம் பெறும் அடியார்களுக்கு அன்னை பராசக்தியே ஞானப் பாலை ஊட்டி ஞானத்தை வழங்குகிறார். இவ்வகையில் சுந்தர மூர்த்தி நாயனாரும் அன்னை பராசக்தியின் ஞானப் பாலை அருந்திய பின்தான் “பித்தா பிறைசூடி..“ என்னும் தேவாரப் பதிகத்தை பாடினார் என்பது பலர் அறியாத இறை இரகசியம்.

அடியார்கள் எல்லாம் இத்தகைய அற்புதச் செயல்களிலோ, சித்திகளிலோ நாட்டம் கொள்ளாமல் இறை நம்பிக்கையை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அடியேனுடைய குருநாதர் சொல்வார், ’நீ சித்தியைச் சுற்றி வரக் கூடாதுடா, சித்திகள்தான் உன்னைச் சுற்றி வர வேண்டும்.’ எனவே, உண்மையான அற்புதம் இறை நாமமே. அணிமாதி சித்திகள் 18 மட்டுமல்லாமல், பிரமாதி சித்திகள் என்று 1008 சித்திகள் உண்டு. இந்த சித்திகள் மட்டுமின்றி அதற்கு மேலும் உள்ள ஆயிரமாயிரம் சித்திகளை எல்லாம் தரவல்லதே பஞ்சாட்சரம் என்னும் பவித்ரமான நமசிவாய மந்திரமாகும்.

அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயம் தாங்கள் எடுத்த குறிக்கோளை முயன்று நிறைவேற்ற உறுதுணை செய்வதே நமசிவாய மந்திரமாகும். சித்தர்கள் அருளிய நமசிவாய சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை பயின்று ஜபித்து வந்தால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது உறுதி. இந்த ‘நமசிவாய‘ சக்கரத்தின் விசேஷம் என்ன? நமது கையைப் பார்த்து அதில் உள்ள ரேகைகளைக் கொண்டு நமது விதியைச் சொல்கிறார்கள் அல்லவா? இது எப்படி? நமது மூளையில் பதிவாகும் எண்ணங்கள், குறிக்கோள்களே கைரேகைகளாக உருவெடுக்கின்றன. இதே முறையில் சென்று கை விரல்களை நமசிவாய சக்கரத்தில் சுழற்றும்போது உயர்ந்த எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள் மூளையில் உருவாகி நமக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருகின்றன.

உண்மையான அற்புதம், அதிசயம் கடவுள் ஒருவரே. இறைவனும் அவன் நாமமும் ஒன்று. இந்த நமசிவாய சக்கரத்தை முறையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எல்லா சித்திகளையும் இறைவன் உங்களுக்காக நிறைவேற்றுவார். சித்திகளைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். அவை உங்களை நாடி, ஓடி வரும்.

நமசிவாய சக்கரம்

இங்கு கொடுத்துள்ள ’நமசிவாய’ சக்கரத்தை ஒரு பேப்பரில் அல்லது ஒரு பலகையில் வரைந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் இந்தச் சக்கரத்தை நீங்கள் வரைந்து கொள்ளலாம். இந்தச் சக்கரத்தை உங்கள் முன் வைத்து கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளவும். முதலில் சக்கரத்தில் உள்ள ’ந’ என்ற எழுத்தில் வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலை வைத்து ’ந’ என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லவும். அடுத்து ’ம’ என்ற எழுத்தில் உங்கள் நடுவிரலை (சனி விரல்) வைத்து ’ம’ என்று சொல்லவும்.

அடுத்து ’சி’ என்ற எழுத்தின் மேல் உங்கள் மோதிர விரலை (சூரிய விரல்) வைத்து ’சி’ என்று சொல்லவும். அடுத்து ’வா’ என்ற எழுத்தின் மேல் உங்கள் சுண்டு விரலை (புத விரல்) வைத்து ’வா’ என்று சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்து உங்கள் ஆள்காட்டி (குரு விரல்)விரல் ’ய’ என்ற எழுத்தைத் தொடுமாறு வைத்து ’ய’ என்று சொல்லவும்.

உடலையும் உள்ளத்தையும்
தூய்மையாக்கும் நமசிவாய சக்கரம்

அடுத்து சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் எடுக்காமல் ’ய’ என்ற அட்சரத்தைச் சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி திரும்பவும் உங்கள் உள்ளங்கை பூமியைப்பார்க்குமாறு வைத்துக் கொண்டு சுண்டு விரலுக்குரிய ’வா’ என்ற எழுத்தைச் சொல்லவும். அடுத்து உங்கள் மோதிர விரலால் ’சி’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் நடுவிரலால் ‘ம’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் ஆள்காட்டி விரலால் ’ந‘ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். இவ்வாறு நீங்கள் ’நமசிவாய, யவாசிமந’ என்று சொல்வது ஒரு சுற்று பஞ்சாட்சர ஜபமாகும்.

உங்கள் சூழ்நிலை, ஓய்வு நேரம், குறிக்கோள் இவற்றைப் பொறுத்து இந்த ‘நமசிவாய, யவாசிமந‘ ஜபத்தை 108, 1008, 1008, 100008 என எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த ஜபத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, நிறைவேற்ற உங்கள் விரல்களில் ஓர் அற்புத சக்தி உருவாவதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். உங்கள் எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் உற்சாகத்தையும், வார்த்தைகளில் சந்தோஷத்தையும் நீங்களே எளிதில் உணரலாம்.

உங்கள் கைகள் தூய்மை அடைவதால் உங்கள் கைகளால் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும், நீங்கள் எடுத்துத் தரும் பணம், தான்யம், உணவு, ஆபரணம் போன்ற செல்வங்கள் விருத்தியாகும். மற்றவர்கள் உங்களிடம் பேச வேண்டும். உங்களிடம் பழக வேண்டும் என விருப்பப்படும் அளவிற்கு உங்களின் தோற்றமும், செய்கையும் கவர்ச்சியுடன் அமையும்.

உடல், மனம், உள்ளம் மூன்றையும் சுத்திகரிக்கும் அற்புத யோகமே இந்த நமசிவாய ஜப யோகமாகும். இந்த ஜப யோகத்தை ஒரு தாளிலோ, பலகையிலோ தொடர்ந்து பயின்று வரும்போதே, அலுவலகம், பள்ளி, பஸ், ரயில் என வெளி இடங்களில் ஓய்வாக இருக்கும்போது இந்தச் சக்கரம் இல்லாமலும் எழுத்துக்களை மனதில் உருவமாக நினைத்துக் கொண்டு அங்குள்ள மேஜை, உங்கள் இடது உள்ளங் கை, தொடை என எந்தப் பொருளின் மீதும் கைவிரல்களைச் சுழற்றி இந்த நமசிவாய ஜப யோகத்தைப் பயின்று வரலாம்.பிதாமகர்

ஸ்ரீராம நாம சக்கரம்

பீஷ்மர் மகாபாரத யுத்த களத்தில் தோல்வியுற்று மரணப் படுக்கையில் கிடந்தார் அல்லவா? இச்சாம்ருத்யு என்ற அற்புதமான வரம் பெற்றிருந்ததால் அவர் விரும்பினால் ஒழிய அவரை மரணம் நெருங்காது. அதனால் அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிரை விட விரும்பி மரணப் படுக்கையில் தாங்க முடியாத வேதனையில் துடித்துக கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குத் தாகம் ஏற்படவே அர்ச்சுனனை நோக்கி தனக்கு தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். யுத்த களத்தில் தண்ணீருக்கு எங்கே போவது? ஆனாலும், அர்ச்சுனன் இறைவனை வேண்டி ஒரு ஜல அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். ஜல அஸ்திரத்தால் தண்ணீர் கொண்டு வர இயலவில்லை.

அர்ச்சுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. எந்தக் குழப்பத்தையும் தீர்க்கக் கூடியவர் பரமாத்மா ஒருவர்தான் என்பதால் அங்கிருந்த அனைவரும் அஸ்திரம் பலனளிக்காததற்கு காரணம் என்ன என்று அறியும் வண்ணம் கிருஷ்ண பகவானை நாடினர்.

பகவான் ஒரு குறும்புப் புன்னகையுடன் சகாதேவனை நோக்க சகாதேவனும் கிருஷ்ணனின் ரகசிய செய்தியைப் புரிந்து கொண்டு விரைந்து சென்று அர்ச்சுனனின் அம்பு தரையில் பதிந்திருந்த இடத்திற்கு அருகே தன்னுடைய குரு விரலையும் சனி விரலையும் வைத்து ஏதோ சைகை செய்தான். மறு விநாடியே பூமியிலிருந்து கங்கை பிரவாகம் பீறிட்டு வெளி வந்து பீஷ்மரை அடைந்து அவருடைய தாகத்தைத் தீர்த்து வைத்த்து.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அதிசய செயலைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அப்போதுதான் கிருஷ்ண பரமாத்மா அனைவரிடமும் ராம நாம மகிமையை எடுத்துக் கூறி அதை கைகளால் ஜபிக்கும் முறையை அறிந்த ஒருவன் சகாதேவன் மட்டுமே என்ற இரகசியத்தையும் அன்று முதன் முதலில் வெளியிட்டார்.

இவ்வாறு சகாதேவன் பல வருடங்கள் பயின்று வந்த ராம நாம மகிமையால்தான் பூமிக்கடியில் மறைந்திருந்த கங்காதேவி தன்னுடைய தனயனாக இருந்த பீஷ்மரின் தாகம் தீர்க்க விரைந்து வந்தாள்.

எனவே ஒரு தாயின் அன்பையும் மீறிய சக்தி உடைய ராம நாம சக்திதான் எந்த அற்புத்த்தையும் உலகில் சாதிக்கும் என்பதை உணர்த்தவே கிருஷ்ண பரமாத்மா இந்த நாடகத்தை நிகழ்த்தினார் என்பதை அப்போது அனைவரும் உணர்ந்து போற்றினர்.

சகாதேவன் ஓதிய ராம நாம ஜப யோகத்தை நீங்களும் இங்கே காட்டிய முறையில் பயின்று நலம் பல பெறலாம்.

வளரும் விடைகள் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam