நடந்தவையே நடப்பனவாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

அடியார்
குருதேவா, சாதாரண மனிதன் இறைநாமத்தைச் சொல்வதற்கும் மகான்கள் இறை நாமத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடியேன் இதைக் கேட்பதற்குக் காரணம், சாதாரண மனிதன் ’நமசிவாய’ என்று சொல்லும்போது நம் கண்ணுக்குத் தெரிந்து என்ன விந்தையும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு மகான் அதே ’நமசிவாய’ மந்திரத்தைச் சொல்லும்போது கல் தங்கமாகிறது, இறந்தவன் எழுந்து நடக்கிறானே. அப்படியானால் அவர்கள் சொல்லும் மந்திரத்தில் உள்ள விசேஷத் தன்மை என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

கிருஷ்ண பகவானின் சக்தி நிலைகள் மூன்று. ருக்மணி கிருஷ்ணன் கணவனை விட்டுப் பிரியாத நிலை.
ராதா கிருஷ்ணன் கணவனுடன் கலந்த நிலை.
பாமா கிருஷ்ணன் செல்வமும் உடல் வளமும் அருளும் நிலை.

சற்குரு
ஒரு சாதாரண மனிதன் சொல்லும் ’நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்திற்கும், அப்பர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் சொல்லும் ’நமசிவாய’ மந்திரத்திற்கும், அவர்கள் வார்த்தைகளில் எந்த விதமான வித்தியாசமும் கிடையாது. இந்த மந்திரத்தில் உத்தம மகான்கள் தனியாக எந்த பீஜாட்சர இரகசியத்தையும் பிறருக்குத் தெரியாமல் சேர்த்து உச்சரிப்பதும் கிடையாது. இது உண்மை. ஆனால், மகானுக்கும் மனிதனுக்கும் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையின் தரத்தில்தான் வித்தியாசம் எல்லாம். ஒரு சாதாரண மனிதனுக்கு இரண்டு சதவீதம் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. உத்தம மகான்கள் பொறுப்பேற்று நடத்தி வரும் சத்சங்கத்தில் உள்ள அடியார்களுக்கு ஐந்து சதவீதம் கடவுள் நம்பிக்கை இருக்கும். சத்சங்க வழிகாட்டிகள் இருபது சதவீதம் கடவுள் நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். மகான்களுக்கு 99 சதவீத கடவுள் நம்பிக்கை செழித்திருக்கும். இவ்வாறு நம்பிக்கையின் தராதரம் உயர்வாக இருப்பதாலேயே மகான்கள் கூறும் மந்திரம் எதையும் சாதிக்க வல்ல ஆயுதமாக அமைகிறது.

அடியார்
குருதேவா, தாங்கள் கூறுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே. மகான்களுக்கே 99 சதவீத கடவுள் நம்பிக்கைதான் இருக்கிறதா? அவர்களுக்குக் கூட கடவுள் மேல் முழு நம்பிக்கை கிடையாதா?

சற்குரு
ஆமாம், மகான்களே கடவுள் மேல் பரிபூரண நம்பிக்கை கொள்வது கிடையாது. மகான்களுக்கு கடவுள் மேல் நூற்றுக்கு நூறு சதவீதம் நம்பிக்கை கிடையாது என்று சொல்வதை விட கடவுள் பக்தியை, இறை நம்பிக்கையைப் பூரணமாகாத நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறார்கள் என்பதே உண்மை. இந்த ஒரு சதவீத அவநம்பிக்கையை அவர்கள் வேண்டுமென்றேதான் வைத்திருக்கிறார்கள். திருவையாற்றில் வாழ்ந்த தியாகராஜ பிரம்மத்தின் பக்தி ததும்பும் ராம கீர்த்தனைகளைக் கேட்பதற்காக ஸ்ரீராமர் தம் பத்தினி, லட்சுமண பெருமாளுடன் தியாகராஜ சுவாமிகளின் இல்லத்திற்கே எழுந்தருளினார் அல்லவா?

அந்த தியாகராஜ சுவாமிகளே ராமரை ஆராதிக்கும் கீர்த்தனையில் ’ராமா, என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’ என்றுதானே பாடி வணங்குகிறார். ’காப்பாற்ற மாட்டாயா?’ என்று கேட்கும்போதே ’ராமர் காப்பாற்ற மாட்டார்’ என்ற ஒரு சிறிது அவநம்பிக்கை அந்த வார்த்தைகளில் தொக்கி நிற்கிறது அல்லவா? அவருக்கு ராமர் மேல் முழு நம்பிக்கை இருந்தால் தியாகராஜர் எப்படிப் பாடி இருப்பார்? ’ராமா, நீ என்னைக் காப்பாற்றுவாய்’ என்றுதானே பாடியிருப்பார்.மகான்கள் எது செய்தாலும் காரண, காரியமில்லாமல் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் உலக நன்மைக்காகவே என்பது நீங்கள் அறிந்ததுதானே. அப்படியானால் அவர்கள் கடவுள் மேல் கொண்டுள்ள இந்த ஒரு சிறிது அவநம்பிக்கையிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கும் அல்லவா? அது என்ன என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?

நண்பர்கள், உறவினர்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள வெள்ளி, சனி, திங்கள், புதன் கிழமைகளே ஏற்புடையவை. வியாழன் அன்று வழங்கும் விருந்து மன வெறுப்பை ஏற்படுத்தும். ஞாயிற்றுக் கிழமை விருந்தால் பகை வரும். செவ்வாய் அன்று அளிக்கும் விருந்து விரோதத்தை வளர்க்கும்.

மகான்கள் நினைத்தால் அவர்கள் பரிபூரண நம்பிக்கையுடன் ’ராமா, கிருஷ்ணா’ என்று இறைவனை நோக்கி கூவி அழைக்க முடியும். அப்படி அவர்கள் பரிபூரண நம்பிக்கையுடன் இறைவனை நோக்கிப் பாடினால் அடுத்த வினாடியே அவர்கள் உயிர் அவர்களை விட்டுப் பிரிந்து இறைவன் திருப்பாதங்களைச் சென்றடைந்து விடும். ராமனும் அவன் நாமமும் ஒன்றல்லவா? ராமனிடம் இருந்து வந்த உயிர் பரிபூரணமாக அவனை நினைத்தால் அவனிடமே சென்று விடுவது இயற்கைதானே. அவ்வாறு இறைவனைக் கூவி அழுது இறைவனுடன் ஒன்றி விட்டால் மகான்கள் தாங்கள் பூமியில் அவதாரம் எடுத்து வந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் அல்லவா? எனவே மகான்கள் தாங்கள் உடலால் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் முழுமை அடையும் வரை இறைவனை முழு நம்பிக்கையுடன் அழைப்பது கிடையாது.

நம்பிக்கை என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு சாதாரண விஷயம் கிடையாது. ஒரு லட்சம் பக்தர்கள் முன்னால் பேச வேண்டிய முக்கியமான விஷயம் இது. இருந்தாலும் நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு நம்பிக்கையைப் பற்றி விளக்குவீர்கள் என்ற ’நம்பிக்கையில்’ தான் உங்களுடன் இந்த அற்புத விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

கோபி சந்தனத்தால் நெற்றிக்குத் திருநாமமிட்டு திரிநாமகண்ட மகரிஷியை வணங்கி வந்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறைந்த இரத்த அழுத்த நோயும் குணமாகும்.

எங்களுடைய முயற்சி எல்லாம் உங்களுக்கு ஐம்பது, அறுபது சதவீத கடவுள் நம்பிக்கையை வளர்ப்பது கிடையாது. உங்களிடம் உள்ள ஐந்து சதவீத நம்பிக்கையை ஒரு கால் சதவீதம், அரை சதவீதம் அதிகப்படுத்தினாலே அதைப் பெரும் சாதனையாகக் கொள்கிறோம். ஒரு மனிதப் பிறவியில் இந்த அளவுக்கு நம்பிக்கையை வளர்ப்பதே மிக மிகக் கடினம்தான். நந்தனாரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இறைவனைத் தவிர வேறு எதையும் நினையாத நிலையில் அவர் இருந்தார். அவருக்கு சிதம்பர ஈசன் மேல் இருந்த பக்தி அளவிட முடியாதது. ஆனால், இந்த பக்தியை, ஆழ்ந்த இறை நம்பிக்கையை நாம் நினைப்பது போல் ஒரே பிறவியில் அவர் பெற்றிடவில்லை. நந்தனாருக்காக சிவபெருமான் ஒரே இரவில் 40 வேலி நிலத்தை உழுது பயிரிட்டு, நெல் விளைத்து, அறுவடை செய்து தந்தார் அல்லவா? ஒரு வேலி நிலம் என்பது இந்தக் காலக் கணக்கில் நூறு ஏக்கர் நிலமாகும். அப்படியானால் சிவபெருமான் ஒரு இரவில் நெல் விளைவித்து அறுவடை செய்து தந்தது 4000 ஏக்கர் பரப்புள்ள நிலமாகும். 4000 ஏக்கர் நிலத்தில் எத்தனை கோடி நெல் மணிகள் முளைத்திருக்கும். நந்தனார் இறைவன் மேலுள்ள பக்திப் பெருக்கால் சிந்திய ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் ஒவ்வொரு நெல் மணியாக விளைவித்துத் தந்தார் எம் ஈசன். பக்தி மேலீட்டால் கண்ணீர் சிந்துவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. பலரும் கோயிலில் இறைவன் முன்னால் கண்ணீர் சிந்தி அழுவதை பார்த்திருப்பீர்கள். அது இறை பக்தியின் விளைவாக வரும் கண்ணீர் அல்ல. தன்னுடைய பிரச்னைகளை இறைவன் முன் நினைக்கும்போது வெளியாகும் கண்ணீர்த் துளிகள்தான் அவை.

அதிஅபூர்வ தெய்வீக இரத்தினமான சிந்தாமணியை மூன்றாம் பிறை அன்று தரித்து இரத்தினங்கள் அனைத்திற்கும் நற்கதி அளித்த கணநாதனே சிந்தாமணி விநாயகர் ஆவார். அன்று விநாயகர் அணிந்த சிந்தாமணி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இரத்தினங்களையும் ஈர்த்து விட்டது. எனவே, சிந்தாமணி விநாயகரை வேண்டி நவரத்தினங்களை அணிந்தால் ரத்தினங்கள் தன் கதிர்களை வீணாக்காது சக்தி பெருகும்.

சுயநலம் ஒரு சிறிதும் இல்லாத நிலையில் இறைவனை நோக்கி அழும்போது பரிணமிக்கும் கண்ணீரே பக்திக் கண்ணீர். இது எதையும் செய்ய வல்லது. இத்தகைய கோடி கோடி பக்தி கண்ணீர்த் துளிகளை வெள்ளமாகப் பெருக்கியவரே நந்தனார் மூர்த்தியாவார். பல கோடி கண்ணீர்த் துளிகள் பெருக இறைவனை நோக்கி அழவேண்டுமானால் ஆயிரமாயிரம் மனிதப் பிறவிகள் எடுத்தால் தானே இது சாத்தியமாகும். இவ்வாறு பல்லாயிரக் கணக்கான மனிதப் பிறவிகளில் பாடுபட்ட வளர்த்த பக்தியே, நந்தனார் என்னும் பிறவியில் கனிந்து முழுமை பெற்றது. இறை நம்பிக்கை என்பது மிக மிக நுணுக்கமான விஷயம். ஓய்வு என்பது ஒரு சிறிதுமின்றி தொடர்ந்து முயன்று கொண்டே நல்வழியில் மகான்கள் காட்டிய வண்ணம் சென்றால்தான் இறை நம்பிக்கையை ஒரு துளியாவது பெருக்கிக் கொள்ள முடியும்.

இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் எந்தப் பிறவியிலும் நீங்கள் பாடுபட்டுப் பெற வேண்டிய செல்வம் இந்த கடவுள் நம்பிக்கைதான். கடவுள் மேல் நம்பிக்கையைப் பெருக்குவது மிகவும் கடினமே. நாம் பார்க்காத ஒருவர்மேல் நம்பிக்கை கொள்வது சாத்தியமில்லை என்பதால்தான் நமக்குப் பிடித்தமான, நமக்கு ஒத்து வரக் கூடிய சத்சங்க வழிகாட்டிமேல் நம்பிக்கை கொண்டு அவர் கூறும் உபதேசங்களைக் கடைபிடித்து அவர் கூறும் நற்காரியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் இந்த நம்பிக்கை நமக்கு இறைவன் வகுத்துத் தந்துள்ள சற்குருவைக் காட்டும். சற்குருவை அடையாளம் கண்டு கொண்டால் அவரே நமக்கு இறைவனை நோக்கிச் செல்லும் வழியைக் கூறுவார். இதுவே ஆன்மீகத்தில் முன்னேறும் வழியாகும். எனவே, நம்பிக்கை என்பது பேச்சளவில் அறிய வேண்டிய ஒரு பொருளல்ல, உணர்ந்து முயன்று அனுபவிக்க வேண்டிய ஒரு உன்னத அனுபவமாகும்.

அடியார்
குருதேவா, ஆன்மீகப் பணிகளுக்காக சிலரை அழைக்கும்போது அவர்கள் நான் இப்போது வேலையில் இருப்பதால் எனக்கு நேரமில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் முழு மூச்சாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவேன் என்கிறார்களே.

சற்குரு
இதெல்லாம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும் சாக்குபோக்குகளே. இன்றைக்கு ஒரு காரியத்தைச் செய்யாதவன் நாளைக்கு அப்படி அதைச் செய்து முடிப்பான். லீவு கிடைக்கவில்லை, ’பிஸி’யாக இருக்கிறேன் என்பதெல்லாம் நொண்டிச் சாக்கு. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகில் யாரும் ’பிஸி’ கிடையாது. இறைவன் ஒருவன்தான் பிஸியாக இருக்கிறான். ஆனால், அவனே தன்னை ’பிஸி’ என்று சொல்வது கிடையாது. பக்தன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறான். மனிதர்கள்தான் என்று கிடையாது, ’ஆதிமூலமே’ என்ற யானையின் குரல் கேட்டு தன் கிரீடம் கூடத் தரிக்க மறந்து பறந்தோடி வந்தவன்தானே பரந்தாமன். ஆனால், ஆன்மீகத்தில் ஒருவரை ஈடுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதே அடியார்களாகிய உங்கள் கடமையாகும்.

நம்முள் உறையும் ஆன்மாவை
ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தாக வேண்டும். இதற்கு சித்தர்கள் கூறும் எளிய வழி என்ன? தினமும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தன்னுடைய இதயத் துடிப்போடு உறவாட வேண்டும். இதயத்துடன் உறவாடி உன்னத நிலை அடைந்த சிவனடியாரே நந்தனார் ஆவார். நந்தனார் மூர்த்தி முன் பச்சரிசி மாக்கோலம் இட்டு வணங்கி வந்தால் இருதயக் கோளாறுகள் அகலும்.

அடியேன் ஒருமுறை ஒருவரைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. அவரைப் பார்த்தவுடன் அவர் அடுத்த பத்து நிமிடங்களில் இறந்து விடுவார் என்று தெரிந்தது. பத்து நிமிடத்தில் அவரை எந்த ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்த முடியும் என்று அடியேன் வெறுமனே இருந்து விடவில்லை. அவரிடம் அவர் நோயைப் பற்றி, அவர் குடும்ப அன்பர்களைப் பற்றி ஐந்து நிமிடங்கள் விசாரித்தேன். இது அவருக்கு சிறிது ஆறுதலையும், மன அமைதியையும் தருவதற்காக. அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் அருளிய, ’எம்பெருமானே, உன்னை நான் மறந்து விட்டாலும் என்னுடைய நாக்கு உன்னுடைய நாமத்தைச் சொல்லும்...’ என்ற பொருளில் அமைந்த ’மற்றுப் பற்று...’ பதிகத்தைப் பாடினேன். இறை நாமத்தைக் கேட்ட வண்ணமே அமைதியாக அந்த நண்பர் தன்னுடைய உயிரை நீத்தார். It is never too late for anything ! உயிர் பிரியும் அந்த பத்து நிமிடத்தில் கூட நம்மால் முடிந்த நல்லதைச் செய்வதே நீங்கள் இந்த இடத்தில் பெறும் பாடமாகும்.

 

அடியார்
குருதேவா, தேவதைகளை வசியம் செய்வது துன்பத்தையே தரும் என்கிறீர்கள். நல்ல தேவதைகளை வசியம் செய்து பிறருக்கு நன்மை தரும் காரியங்களை நிகழ்த்தலாம் அவ்லவா?

சற்குரு (புன்முறுவலுடன்....)
இதெல்லாம் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவர்கள் கூறும் ஜால வார்த்தைகள். கள்ளிப்பால் சித்தரிடம் ஒருவன் வந்து, ’சுவாமி, நான் மிகவும் பக்தியுடன் உங்களிடம் வந்து கொண்டிருக்கிறேன். இது உங்களுக்குத் தெரியும். ஆனால், என்னுடைய மனைவி கொஞ்சம் கூட கடவுள் பக்தி இல்லாமள் இருக்கிறாள். நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் அவளைக் கடவுள் பக்கம் திருப்ப முடியவில்லை. தாங்கள் ஏதாவது மந்திரம் எனக்குக் கற்றுத் தந்தால் அதை வைத்து அவள் மனதை மாற்றி கடவுள் பக்தியை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் தயவுசெய்து எனக்கு ஏதாவது சொல்லிக் கொடுங்கள்.’ என்று பலமுறை அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். சித்தரும் ’ஆகட்டும், பார்க்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நீ கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், கடவுள் உன்னை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார்.

இதைப் பல நாள் கவனித்த மற்ற சீடர்கள் ஒரு முறை, ’சுவாமி, அவன் கடவுள் பக்தி வளர்ப்பதற்காகத்தானே மந்திரம் கேட்கிறான். நீங்கள் ஏதாவது அவனுக்குச் சொல்லித் தரலாமே’ என்று கேட்டனர். அதற்கு கள்ளிப்பால் சித்தர் சிரித்துக் கொண்டே, ’ஏண்டா முட்டாள்களே, நீங்களுமா அவன் ஜால வார்த்தைகளை நம்புகிறீர்கள். அவன் மந்திரம் கேட்பது தன் மனைவியை வசியப்படுத்துவதற்காக அல்ல, அந்த மந்திரத்தை வைத்து மற்ற பெண்களை வசியப்படுத்த அவன் அலைகிறான்,’ என்று சொல்லி அவன் உள்மனதை மற்றவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டினார்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது.
சென்னை நகரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். அவருக்கு அப்போது 40 வயதிருக்கும். கல்யாணம் ஆகவில்லை, பிரம்மசாரியாகவே வாழ்ந்தார். எந்த கெட்ட வழக்கமும் கிடையாது. ஒரு முறை அவருக்குக் கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. அவர் அருகில் ஒரு மந்திரவாதி இருந்தார். அவரிடம் சென்று தனக்குக் காய்ச்சல் இருப்பதாகக் கூறவே ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லிக் காய்ச்சலை சரி செய்து விட்டார். அந்த மந்திரவாதிக்கு இவரைப் பிடித்துப் போய் விட்டது. இந்த நண்பருக்கும் மந்திரவாதியின் செயல் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சில நாட்களில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.

கொஞ்ச நாள் கழித்து அந்த மந்திரவாதி இவருக்கு தனக்குத் தெரிந்த தேவதா வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து அந்த தேவதையின் அங்க அடையாளங்களை எல்லாம் விவரித்தார். ஏழு கோடி முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் குறிப்பிட்ட ஒரு தேவதை வசியமாகி விடும் என்றும் அதற்கு சுமார் ஏழு வருட காலம் எடுத்துக் கொள்ளும் என்று சொன்னார். இந்த நண்பருக்கு ஒரு வேலையும் இல்லை. அந்த மந்திர வசியம் மீது உள்ள ஆர்வத்தால் உறங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் இரவு பகலாக சாப்பிடும்போது கூட அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களும், தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று மிரண்டு விழித்து எழுபவர்களும் திருஅண்ணமலையில் தீர்க தரிசனம் பெற்று வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் கிட்டும்.

மிகவும் ஆர்வமுடன் அவர் முயற்சி செய்து வந்ததால் ஏழு வருடங்களில் சித்தியாக வேண்டிய மந்திரம் ஒன்றரை வருடங்களிலேயே சித்தியாகி விட்டது. அந்த மந்திரவாதி சொன்ன அதே அங்கே அடையாளங்களுடன் ஒரு நாள் காலை அந்த தேவதை அந்த நண்பர் முன் வந்து பிரசன்னமாகியது. அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவு எளிதில் அந்தத் தேவதை வந்து விடும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. தேவதை அவரிடம், ’நான் இப்போது உன்னிடம் வசியமாகி உள்ளேன். நீ எப்போது என்னைக் கூப்பிட்டாலும் உடனே வருவேன். நீ எது கேட்டாலும் உனக்குத் தரும் சக்தி என்னிடம் உண்டு. நீ எது வேண்டுமானாலும் கேள்’ என்று சொல்லியது.

நண்பருக்கு ஒரே ஆச்சரியம். அவர் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே அந்தத் தேவதை வந்து விட்டதால் அவருக்கு என்ன செய்வது, என்ன கேட்பது என்று புரியவில்லை. ’சரி எதற்கும் கேட்டு வைப்போமே’ என்று நினைத்து, ’எனக்கு ஏதாவது பணம் கொடேன்’ என்று கேட்டார். உடனே 100 ரூபாய் கட்டு ஒன்றை அவர் கையில் தந்து விட்டு, ’வேறு ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டது. நண்பர் யோசித்துப் பார்த்தார். வேறு எதுவும் அப்போது அவருக்குத் தேவைப்படவில்லை. ’இப்போது எனக்கு ஒன்றும் வேண்டாம். யாதாவது வேண்டுமானால் உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்று சொன்னவுடன், ’அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி தேவதை மறைந்து விட்டது.

சந்தேகம் காரணமாக கணவன், மனைவியரிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவதுண்டு. இத்தகைய தகராறுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை பெருக வழி செய்வதே திருஅண்ணாமலையில் நாம் பெறும் ’அம்மையப்ப தரிசனம்’ ஆகும். சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது திருஅண்ணாமலையையும் பர்வதமலையையும் ஒரு சேர தரிசனம் செய்வதே கணவன் மனைவியரை ஒன்று சேர்க்கும் ’அம்மையப்ப தரிசனம்’. மிகவும் சக்தி வாய்ந்த தரிசனம்.

நண்பர் ஆச்சரியத்துடன் வெகுநேரம் அந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 10,000 ரூபாய் என்பது அந்தக் காலத்தில் மிகவும் அதிகம். அந்தப் பணத்திலிருந்து ஒரே ஒரு நோட்டை வைத்து தனக்கு ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்கிக் கொண்டார். ஒரு விலையுயர்ந்த ஹோட்டலில் சென்று உணவருந்தினார். வெற்றிலை பாக்கு போட்டார். இப்படி எல்லாம் செலவு செய்தும் கையில் இன்னும் பணம் மிச்சம் இருந்தது. எல்லா இடமும் சுற்றி விட்டு இரவு வீடு வந்து பார்த்தார். அங்கே வாங்கி வைத்திருந்த கட்டில் மெத்தையைக் காணவில்லை. யாரோ திருடி விட்டார்கள்.

அவருக்கு வந்ததே கோபம். நான் யார் என்பதை அந்தத் திருடனுக்குக் காட்டுகிறேன் என்று சொல்லி உடனே அந்த தேவதையைக் கூப்பிட்டார். தேவதையும் உடனே பிரசன்னமாகியது. தேவதையிடம் நடந்த விஷயத்தைச் சொல்லி, ’அந்தத் திருடனை அடையாளம் காட்ட முடியுமா?’ என்று கேட்கவே ’இது என்ன பிரமாதம்’ என்று சொல்லி கட்டில் மெத்தையை திருடிச் சென்ற அந்தத் திருடனின் உருவத்தைத் தன் உள்ளங்கையில் காட்டியது. நண்பர் அந்தத் தேவதையிடம் ’எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னுடைய கட்டில் மெத்தையை இவன் எடுப்பான்.

நீ உடனே சென்று அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து விட்டு வா’ என்று கோபமாகச் சொல்லவே தேவதையும் அவ்வாறே சென்று அந்தத் திருடனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தது. தேவதை அறைந்தால் என்ன ஆகும்? திருடன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டான். இது கொலை அல்லவா? அதனால் இந்தப் பிரேத தோஷம், சாவுக்குக் காரணமான இந்த நண்பரைத் தாக்க அவரிடம் வந்தது. நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அந்தத் தேவதையை அழைத்து இந்தப் பிரேத தோஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படிக் கூறினார். தேவதையும் ’நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி அந்தப் பிரேத தோஷத்தையும் விலக்கி விட்டது.

இப்போது அந்த நண்பர் தான் தேவதையை வைத்து என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டார் அல்லவா? அவரால் சும்மா இருக்க முடியுமா? தனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் தன்னால் திருடனைப் பிடிக்க முடியும், காணாமல் போன பொருட்களைத் திருப்பிக் கொண்டு வர முடியும் என்றெல்லாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார். அதனால் அவரிடம் பொருள், பணத்தைத் தொலைத்தவர்கள் எல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்தனர். அந்த தேவதையைக் கொண்டு அவர்கள் தொலைத்த பணம், பொருள் எல்லாம் கண்டு பிடித்துக் கொடுத்தார். அத்துடன் நில்லாமல் பொருட்களை எடுத்தவர்களை எல்லாம் அந்தத் தேவதையைக் கொண்டு அடையாளம் காட்டிக் கொடுத்தார். தனால் பொருளைத் தொலைத்தவர்கள் அவற்றைத் திருடர்களுடன் சண்டையிட்டு பழிவாங்கும் படலமும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

வாங்கிய நிலத்தில் வரவு பார்த்திடாமல் தூங்கியே கழித்தாயே தும்பியப்பா.

இவ்வாறு ஆறு மாத காலம் நடந்தது. ஒரு நாள் ஏதோ ஒரு திருட்டைக் கண்டு பிடிக்க தேவதையை அழைக்கவே, அங்கே வந்த தேவதை நண்பர் பேச ஆரம்பிப்பதற்குள் அவருக்கு ஒரு அறை கொடுத்தது. அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நண்பர் பிணமானார். அவருடைய புண்ணிய சக்திகள் எல்லாம் விரயமாகி, இறுதியில் பேயாய் அலையும் நிலையே அவருக்குக் கிட்டியது. இன்றும் அவர் பேயாய்த்தான் அலைந்து கொண்டிருக்கிறார். அதனால் தேவதா வசியம் என்பதை எவரும் கனவிலும் எண்ண வேண்டாம்.

அடியேனுடைய ஆசான் அடியேனுக்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அதி அற்புத தேவதா வசிய மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அந்தத் தேவதைகள் என்னென்ன அற்புத வேலைகளை எல்லாம் செய்யும் என்பதையும் அடியேனிடம் விளக்கினார். ஒரே ஒரு முறை ஒரு தேவதையின் பேரைச் சொன்னாலே போதும் உடனே அது வசியமாகி விடும். அப்படிப்பட்ட தேவதைகள் எல்லாம் உண்டு. எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, ஒரு நாள் திருஅண்ணாமலைக்குக் கூட்டி வந்து இதே இடத்திலிருந்து அண்ணாமலையாரைக் காட்டி அடியேனுடைய குருநாதர் கேட்டார்.

“இவன் ஒருவனை வசியம்
செய்தால் போதும் ...”

அப்போது இந்த இடத்தில் கட்டிடம் எதுவும் கிடையாது. எல்லாம் ஒரே வயல்வெளிதான். ’டேய், உனக்கு எத்தனையோ தேவதைகளின் வசிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அந்த தேவதைகளில் எந்த தேவதையை வசியப்படுத்தி வைத்துக் கொள்ளப் போகிறாய்? இல்லை, தேவதைகளுக்கெல்லாம் தேவனாக இருக்கும் இந்த அண்ணாமலையானை நீ வசியம் செய்து கொள்ளப் போகிறாயா? எது வேண்டுமானாலும் என்னிடம் நீ தாராளமாக மனம் திறந்து சொல்லலாம்’ என்று சொன்னார். எனக்கோ ஒரு அழுகையாக வந்தது. இப்படி நம்மை வாத்தியார் சோதிக்கிறாரே’ என்று மனம் வருந்தி, ’வாத்தியாரே, எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு எந்தத் தேவதையையும் தெரியாது, அண்ணமலையாரையும் புரிந்து கொள்ள முடியாது, எனக்குத் தெரிந்தது எல்லாம் நீ மட்டும்தான், எனக்கு வேறு எதுவும் வேண்டாம், நீ மட்டும் போதும், நீ மட்டும் போதும்,’ என்று அழுது கொண்டே அவருடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அவரிடம் கெஞ்சினேன்.

அதற்குப் பெரியவர், ’போடா, அடி மண்டு. ஒன்ன மாதிரி ஒரு மடையனைப் பார்த்ததே இல்லை. இவ்வளோ தேவதையைச் சொல்றேன். ஒன்னு கூட வேணான்னு சொல்றயே. எதிர்காலத்துல எப்படிடா பிழைக்கப் போற, சரி வா, என்ன விட்டா உனக்கு வேற கதி இல்லேன்னு நினைச்சா, எனக்கும் உன்ன விட்டா வேறு வழியில்லை’ என்று திருஅண்ணாமலையே அதிரும் அளவுக்கு சிரித்துக் கொண்டே என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

வளரும் விடைகள் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam