பதில் கேள்வியிலேயே இருக்கிறது !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவாசி திருத்தலம்

ஆதி காலத்தில் மக்களோடு மக்களாக மனித உருவில் இறைவன் நடமாடிக் கொண்டிருந்தான். காலம் செல்லச் செல்ல மனிதனின் இறை நம்பிக்கை சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. இதுவும் இறைவனின் எல்லையில்லா லீலைகளில் ஒன்றே.

மக்களின் இறை நம்பிக்கை குறைந்தபோது இறைவன் தன் மனித உருவத்தை மறைத்துக் கொண்டான். இறைவனைக் காண முடியாததால் மக்கள் தங்கள் குறைகளை எவரிடம் முறையிடுவது என்று தெரியாமல் வருந்தினார்கள். இதனால் மகான்களும் ரிஷிகளும் மக்கள் குறை களைய இறைவனை வேண்டி நின்றனர்.

 

ஸ்ரீபாலாம்பிகை அம்மன்
திருவாசி

அவர்களின் பிரார்த்தனையை ஏற்று இறைவனும் லிங்க வடிவமாகத் தோன்றி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வந்தான். மக்கள் தங்கள் நன்றிக் கடனாக சிவலிங்க மூர்த்திகளுக்கு கோயில்கள் பல கட்டி அங்கு வழிபாடுகளை நடத்தி வந்தனர். இவ்வாறு தோன்றியவையே பண்டைய திருக்கோயில்களளும் அவற்றில் எழுந்தருளிய சுயம்பு மூர்த்திகளும்.

யுகங்கள் பல கடந்தன. நீதி, நேர்மை, பக்தி என்ற தர்ம நியதிகள் குறைந்து மக்களின் சுய தேவைகள் பெருகத் தொடங்கின. வீடு, மனைவி, மக்கள், செல்வம், கல்வி என மனிதனின் தேவைகள் பலவாறாக விரிந்து பெருகின. யுக தர்ம நியதிகளுக்கு ஏற்ப வெறும் லிங்க வடிவில் மட்டும் தோன்றி கருண பொழிந்த கடவுள் பார்வதி, பரமேஸ்வரன், பிள்ளையார், முருகன் என பல வடிவங்களில் இறை அவதாரங்களாகத் தோன்றி பல திருத்தலங்களிலும் சிலா மூர்த்திகளாக எழுந்தருளினர்.

அதே சமயம் இறை சக்தியில் பல பரிமாணங்கள் தோன்றி மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற கடவுள் கோட்பாடுகளும் இந்த திருத்தலங்களில் தோன்றிப் பொலிந்தன. இம்முறையில் தோன்றிய இறைச் சின்னங்களே தற்போது சில குறிப்பிட்ட சிவாலயங்களில் அருள்பொழியும் சகஸ்ர லிங்க மூர்த்திகள்.  

ஒவ்வொரு சிவாலயத்திலும் எழுந்தருளியுள்ள மூல மூர்த்திகளின் அம்சமாக சகஸ்ரலிங்க மூர்த்திகள் விளங்கினாலும் மக்களின் சாதாரண பகுத்தறிவால் புரிந்து கொள்ள முடியாத ஆற்றலுடன் விளங்குபவையே சகஸ்ர லிங்க மூர்த்திகள். இருப்பினும் இத்தகைய லிங்க மூர்த்திகளை ஆராதனை செய்து வழிபடும் முறைகளையும், அதனால் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய அபரிமிதமான பலன்களைப் பற்றியும் சித்த வேதாந்திகள் மிகவும் சிறப்பாக நாடிகளில் பதித்து வைத்துள்ளனர். அற்புதமான அந்த ஆன்மீக இரகசியங்கள் பொதிந்த சில திருத்தலங்கள் பற்றிய மகிமைகள் குறித்து இங்கு காண்போம்.

திருச்சி அருகே உள்ள திருவாசி திருத்தலத்தில்தான் இப்பூவுலகில் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் தோன்றியது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். சகஸ்ர லிங்கம் என்றால் ஆயிரம் லிங்க மூர்த்திகள் ஒரு சேர, ஒன்றாக இணைந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தி என்று பொருள். உண்மையில் முதன் முதலில் தோன்றிய சகஸ்ர லிங்க மூர்த்தி என்பதால் இங்குள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியின் ஒவ்வொரு முகமுமே ஒரு சகஸ்ர லிங்கத்தைத் தோற்றுவிக்க வல்லது என்றால் இந்த இறை மூர்த்தியின் மகத்துவத்தை மனித வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா?

இணையாமல் இணைந்து, இணைந்து இணையாமல்

சகஸ்ர மூர்த்திகளின் அருள் வழங்கும் தன்மை குறித்து சித்த கிரந்தங்கள் இவ்வாறு வர்ணிக்கின்றன. திருவாசி திருத்தலம் மட்டும் அல்லாது ஒவ்வொரு திருத்தலத்திலும் உள்ள சகஸ்ர லிங்க மூர்த்திகள் அந்தந்த மூல மூர்த்தியின் திருவருள் சக்திகளை வாரி வழங்கினாலும் பக்தர்கள் தங்கள் குறைகளை முறையிடும்போது அவர்களின் குறைகளைத் தீர்க்கும்போது தன்னிச்சையாகவே ஆட்சி செலுத்துகின்றன என்பதே இணையாமல் இணைந்து, இணைந்து இணையால் செயல்படும் தன்மையாகும்.

இந்தத் தெய்வீகத் தன்மை முதலிடம் வகிக்கும் திருவாசி திருத்தல மகிமையைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் இத்தல சகஸ்ர லிங்க மகாத்மியத்தைப் பற்றி மேலும் உணர முடியும்.

 

ஸ்ரீமாற்றுரைவாதீஸ்வரர்
திருவாசி

பல கோடி யுகங்களுக்கு முன் நடந்த ஒரு புராண வைபவம் இது. சிவபெருமானின் அங்க லட்சணங்களின் மகிமை குறித்து, சுவாமியின் அருள் வழங்கும் சக்திகள் குறித்து தேவ லோகத்தில் யோக வித்தகர்களிடையே ஓர் அற்புதமான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. அது என்ன? சுவாமியிடம் உள்ள சக்தி வாய்ந்த அங்கம் எது, அவருடைய ஜடா முடியா? அல்லது அவருடைய திருவாசியா? சுவாமியின் திருவாசி, ஜடாமுடி இவற்றுள் எது உயர்ந்தது, எது சிறந்தது? என்பதே அப்போது நடந்த வாதம்.

மனிதன், விலங்கு, மரம், புல், பூண்டு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் உடலைச் சுற்றி, சிறப்பாக தலையைச் சுற்றி ஒரு ஒளி பிம்பம், ஒளி வட்டம் உண்டு. இதற்கு வாசி என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் ஆரா என்று அழைப்பார்கள். உடலைச் சுற்றியுள்ள இந்த ஒளி வட்டம் மஞ்சள், ஊதா, பச்சை என பல நிறங்களில் இருக்கும். ஒரு மனிதனின் குணத்தைப் பொறுத்து, ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்து வாசியின் வண்ணமும், வண்ணத்தின் அடர்த்தியும், வாசியின் விரிவும் இருக்கும்.

உதாரணமாக, பொன்னிற வாசி கருணையைக் குறிக்கும், அதனால்தான் தெய்வங்களும் மகான்களும் தங்கள் தலையைச் சுற்றிலும் பொன்னிற வட்டம் உடையவர்களாய்த் தோன்றுகிறார்கள். ஆரஞ்சு வண்ணம் மற்றவர்களுக்கு உதவும் தன்மையைப் பூண்டிருக்கும். பச்சை வண்ணம் அமைதியையும், வளர்ச்சியையும் குறிக்கும்.

இவ்வாறு இறை மூர்த்திகளைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை திருவாசி என்று அழைக்கிறோம். இதைக் குறிப்பதற்காகத்தான் திருக்கோயில்களில் தங்கம், வெள்ளி, பித்தனை போன்ற உலோகங்களால் திருவாசியைச் செய்து அதைக் கொண்டு இறை மூர்த்திகளை அலங்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது.

தேவ லோகத்தில் நடந்த விவாதம் இதைக் குறித்துதான் நடந்தது, எம்பெருமானின் திருவாசி உயர்ந்ததா அல்லது அவருடைய ஜடா முடி உயர்ந்ததா? சிவபெருமானின் ஜடா முடிதான் உயர்ந்தது என்று ஒரு தரப்பினரும், இல்லை அவருடைய திருவாசிதான் உயர்ந்தது என்று மறு தரப்பினரும் வாதிட்டனர்.

ஒரு மனிதனின் நல்லெண்ணங்கள் அனைத்தும் அவனுடைய தலை முடியில்தான் தங்குகின்றன. அதனால் எந்த அளவுக்கு ஒரு மனிதன் தன்னுடைய தலை முடியை வளர்த்து அதை முறையாகப் பராமரிக்கின்றானோ அந்த அளவுக்கு அவனுடைய உடல் ஆரோக்கியமும், மனோ பலமும், உள்ளத் தெளிவும் மேலோங்கி, அவனுடைய தெய்வீக வாழ்க்கை சிறப்படையும். அவனைச் சுற்றிலும் 12 மைல்களுக்கு வியாபித்துள்ள நல்லெண்ணங்களை அவனுடைய சிகை ஈர்த்து அவனுடைய கபாலத்தில் செலுத்தும்.

 

ஸ்ரீநடராஜபெருமான்
திருவாசி

இதனால்தான் சமீப காலம் வரை சிகை வளர்த்து, குடுமி கட்டும் வழக்கம் நம் முன்னோர்களிடம் விளங்கி வந்தது. இனி வரும் மக்கள் சமுதாயம் சிறப்பாக ஆன்மீக வழிகாட்டிகள் அற்புதமான இந்தப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதால் நல்லெண்ணத்தைச் சமுதாயத்தில் வளர்த்து, உலகையே சீர்படுத்தலாம்.

நாளுக்கு நாள் சூரியனின் வெப்பம் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். காடுகள் அழிதல், நிலத்தடி தண்ணீர் குறைதல், விமானப் போக்குவரத்து, செல்போன்களின் ஆதிக்கம் போன்ற மேலோட்டமான காரணங்கள் பல இருந்தாலும், சித்தர்களின் கூற்றுப்படி சமுதாயத்தில் பரவி வரும் தீய எண்ணக் கதிர்களின் அதிகரிப்பே பூமியில் வெப்பம் அதிகரிப்பதற்கான மூல காரணம் ஆகும்.

நல்ல பாம்பின் நஞ்சை விடக் கொடியதே மனிதனின் தகுதிக்கு மீறிய காம எண்ணங்களும், வஞ்சகச் சூழ்ச்சிகளும். மக்களின் பொறாமைக் கதிர்கள் அணுக் கதிர்களை விட ஆபத்து விளைவிப்பவை. எனவே, இத்தகைய தீய எண்ணங்கள் சமுதாயத்தைச் சூழும்போது நல்ல எண்ணங்களை விதைத்து அதை வளர்ப்பதற்கு உறுதுணை செய்வதே குடுமி, கடுக்கன், மாங்கல்யம், பூணூல், நெற்றியில் தரிக்கும் விபூதி, குங்குமம் போன்ற இறைச் சாதனங்களாகும்.

தீய எண்ண அலைகளை, எண்ண மாசை சூரியக் கதிர்கள் மட்டுமே மாய்க்க முடியும் என்பதால்தான் கருணை மிகுந்த இறைவன் சூரிய வெப்பத்தை அதிகரித்து அதன் மூலம் களைய முடியாத, ஆபத்தான எண்ணக் கதிர்களை களைகிறான் என்பதே சித்தர்கள் உணர்த்தும் பாடமாகும். எதிர்காலத்தில் மேலும் மேலும் சூரிய வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் தங்களால் இயன்ற நல்லெண்ணங்களை பரவெளியில் பரப்ப ஆவண செய்ய வேண்டியது அவர்களுடை தலையாய கடமைகளில் ஒன்றாக அமைகிறது.

குடுமி என்னும் இறைச் சாதனம் நல்லக் கதிர்களை ஈர்ப்பது போல தேவையில்லாமல் வளர்க்கும் தாடி தீய எண்ணக் கதிர்களை ஈர்க்கும் என்பது உண்மையே. எனவே தேவையில்லாமல் முகத்தில் தாடி வளர்ப்பதைத் தவிர்த்து உரிய காலத்தில் சவரம் செய்து தீய எண்ணங்களளின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி இறை அடியார்களைக் கேட்டுக் கொள்கிறோம். நகத்தில் சேரும் அழுக்கு, கேசத்தில் குடிகொள்ளும் வியர்வை, புகை, துர்நாற்றம் போன்றவை தீய எண்ணங்கள் தங்கும் புகலிடம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.

 

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
திருவாசி

ஜடா முடி என்பது இறைவனுக்கும், ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மட்டுமே உரிய இறைச் சின்னமாகும். சாதாரண மக்கள் ஜடா முடி தரிப்பது இறைச் சேவைக்கு புறம்பானது என்பதை அறியவும். அவர்கள் தங்கள் முடியை சிறிதளவும் சிக்குப் பிடிக்காமல் தேவையான அளவு எண்ணெய் விட்டு வாரி, தினமும் குளித்து சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

எம்பெருமான் தரித்த ஜடா முடியில் பல அற்புத ஆன்மீக இரகசியங்கள் உண்டு. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகப் பெருமான் உதித்ததுபோல, பெருமானின் ஜடா முடி ஜோதியிலிருந்து தோன்றிய தெய்வமே வீரபாகு தேவர் ஆவார். அது மட்டுமல்லாமல் சங்கிலிக் கருப்பு, முனீஸ்வரர் போன்ற பல காவல் தெய்வங்களும் பெருமானின் ஜடா முடி ஜோதி அம்சத்தைக் கொண்டவர்களே. எம்பெருமானின் ஜடாமுடி மிக மிகப் புனிதமானது என்பதால்தான் புனிதமான தேவ லோக கங்கைப் பிரவாகத்தையும், அமிர்த ஜீவ சக்திகள் நிறைந்தமூன்றாம் பிறையையும் இறைவன் தன் ஜடாமுடியில் தரித்தார்.

எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜடா முடிதான் சிவபெருமானின் திருவாசியை விட சிறப்பு வாய்ந்தது என்று ஒரு சாரார் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களும் முடிவில்லாமல் பல யுகங்களுக்குத் தொடர்ந்தது. அப்போது, அங்கு வந்த நாரத ரிஷி, முனிவர்களே, நீங்கள் இவ்வாறு எவ்வளவு காலம் வாதிட்டாலும் இதற்கு ஒரு முடிவு உங்களால் காண முடியாது. இத்தகைய வாதத்திற்கெல்லாம் விடை காணக் கூடிய ஒரே இடம் பூலோகம்தான். எனவே நீங்கள் அனைவரும் அங்கு சென்று பல்குனி நதிக் கரையில் குடி கொண்டுள்ள இறைவனைச் சரணடைந்து உங்கள் வாதத்திற்கு உரிய விடையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறவே, அனைவரும் நாரதர் சொல்வதுதான் சரி என்று தெளிந்து பூலோகம் விரைந்தனர்.

பொன்னி எனப் புகழப்பட்ட காவிரியின் கிளைநதியான பல்குனி அப்போது கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அனைவரும் அங்குள்ள இறைவனைச் சரணடைந்து அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தங்கள் வாதத்தைப் பற்றி விளக்கினர். அனைத்தையும் அமைதியாகக் கேட்ட எம்பெருமான் உங்கள் வாதம் அனைத்தும் உண்மையே. இரு சாரார் சொல்வதிலும் நிறைய உண்மைகள் இருக்கின்றன. எனவே இதைப் பற்றி நிறைய விளக்கங்களை உங்களுக்குக் கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனால், தற்போது உங்களுக்கு ஒரு முக்கியமான பணி காத்திருக்கிறது. அந்தப் பணியை நீங்கள் நிறைவேற்றியவுடன் உங்களுக்குத் தேவையான பதிலைத் தர சித்தமாய் உள்ளேன், என்று கூறினார்.

பல்குனி நதி தீரத்திலிருந்த அந்தத் திருக்கோயில் மிகவும் சிதலமைடைந்து இருந்தது. பிரகாரம் முழுவதும் புல் பூண்டுகள் காடாக மண்டிக் கிடந்தன. மதில் சுவர்கள் இடிந்து விழுந்து அதிலிருந்த கற்கள் நாலாபக்கமும் சிதறிக் கிடந்தன. எம்பெருமான் அந்தக் கற்களை எல்லாம் அகற்றி விட்டு, புல் பூண்டுகளை செதுக்கி கோயில் பிரகாரத்தைச் சுத்தம் செய்யும்படிக் கூறினர். இதுவே இரு தரப்பிலுமுள்ள முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இடப்பட்ட திருப்பணி.

இறைவனின் ஜடா முடிதான் உயர்ந்தது என்று வாதிட்ட ரிஷிகள் ஒரு புறம் கற்களை நகர்த்தி அப்புறப்படுத்தும் திருப்பணியை ஆரம்பித்தனர். மறுபுறம் இறைவனின் திருவாசிதான் உயர்ந்தது என்று வாதிட்ட ரிஷிகள் காடாக வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி, அப்புறப்படுத்தும் திருப்பணியில் மூழ்கினர்.

கற்களை அகற்ற ஆரம்பித்தபோது ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு கேள்வி தோன்றியது. அந்தக் கேள்விக்கு விடை கூறிய பின்தான் அந்தக் கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தத முடியும் என்ற எச்சரிக்கையும் அங்கு தோன்றியது. செய்வதறியாது திகைத்தனர் அந்த ரிஷிகள். காரணம் அந்தக் கற்களின் கீழ் தோன்றிய கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக் கொண்டிருந்தனர்.

 

ஸ்ரீபைரவமூர்த்தி
திருவாசி

திருநீற்று மண்டபம்
திருவாசி

மறுபுறம் ரிஷிகள் ஒரு செடியை வெட்டியபோது அதன் கீழ் ஒரு கேள்வி தோன்றியது. அந்தக் கேள்விக்கு பதில் அளித்தால்தான் அந்தச் செடியை அப்புறப்படுத்த முடியும் என்ற எச்சரிக்கை அதில் நிலவியது. அங்கிருந்த ரிஷிகள் எவருக்கும் அந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை. அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மறு பக்கம் இருந்த ரிஷிகளைப் பார்த்தனர். அவர்கள் இவர்களைப் பார்க்க, ஒருவருக்கொருவர் தங்கள் பகைமையை மறந்து அப்போதைய குழப்பத்தை எப்படி தீர்ப்பது என்ற சிந்தனையில் மூழ்கிப் போயினர்.

அதனால் ஒரு தரப்பிலுள்ள ரிஷிகள் தங்கள் பக்கம் தோன்றிய கேள்வியைக் கேட்டனர். அதிருஷ்டவசமாக அந்தக் கேள்விக்குரிய பதில் மறுபக்கத்திலிருந்த ரிஷிகளுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அதற்குரிய பதிலைக் கூறியவுடன் கல் மறைந்து விட்டது. அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். அதே போல மறு பக்கத்திலிருந்த ரிஷிகள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் பதிலளிக்கும் நிலையில் இருந்தனர்.

இவ்வாறு ஒரு சாரார் கேட்ட கேள்விகளுக்குரிய பதிலை மறு சாரார் கூறும் நிலை ஏற்படவே, இரு தரப்பினரும் தங்கள் வாதத்தை அறவே மறந்து கோயில் திருப்பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர். வேகமாக எல்லாக் கற்களையும் அப்புறப்படுத்தி எல்லாச் செடி, கொடிகளையும் களைந்து பிரகாரத்தைத் தூய்மையாக்கி விட்டனர். அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஒவ்வொரு கல், செடி, கொடி நீக்கிய இடத்திலும் ஒரு தூண் தோன்றியது. அதிலிருந்து கண்ணைக் கூசும் ஒளி வட்டங்கள் தோன்றி விண்வெளியை வியாபித்தன. அனைவரும் கண்கொட்டாது அந்த அற்புதத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது பளிச்சென ஓர் உண்மை அவர்களுக்கு விளங்கியது. சிவபெருமானின் திருவாசி சிறந்ததா, ஈசனின் ஜடாமுடி உயர்ந்ததா என்று யுகக் கணக்கில் வாதிட்டதால் எந்த ஒரு பயனும் விளையவில்லை. ஆனால், இறைவனுக்காக சில மணி நேரங்கள் சேவை செய்தவுடன் எல்லா சந்தேகங்களும் விலகி விட்டன. எனவே இறைவனின் கல்யாண குணங்களைப் பற்றி பேசுவதாலோ, வாதிடுவதாலோ எந்த உருப்படியான பலனும் விளையப் போவதில்லை. இறைவனுக்காக நாம் செய்யும் சேவையே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற ஒப்பற்ற உண்மையை அப்போது அவர்கள் உணர்ந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கணமே, இறைவன் பார்வதி சமேதராய் அவர்கள் முன் தோன்றி அனைவருக்கும் அருளாசி நல்கினார்.

 

ஸ்ரீபன்னிருகை வேலவன்
திருவாசி

எம்பெருமான், உங்கள் எண்ணம் சரியே. வெறும் வார்த்தைகளால் எந்த பயனும் விளைவதில்லை. உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து நிறைவேற்றும் சேவையே முக்கியமானது. இந்தத் திருத்தலம் சேவையின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக ஏற்பட்டதே. இவ்வாறு நிறைவேற்றப்படும் தன்னலமற்ற சேவைதான் ஒரு மனிதனின் திருவாசியை வளர்க்கும் தெய்வீகத் தன்மையைப் பெற்றிருக்கும்.

ஒரு மனிதனுக்கு சிகை (குடுமி என்னும் தீட்சை) முக்கியமான இறை அம்சம்தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதை விடவும் மனிதன் முக்கியமாக வளர்க்க வேண்டியது தன்னுடைய திருவாசியைத்தான். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இறைவனுக்காக, இறை அடியார்களுக்காக சேவையில் தன்னுடைய உடல், பொருள், ஆவியை செலவழிக்கின்றானோ, அர்ப்பணிக்கின்றானோ அந்த அளவிற்கு அவனுடைய திருவாசி தூய்மை பெறும், விரிவடையும். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறை சேவையால் தன்னுடைய திருவாசியை விருத்தி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

திருவாசியின் மகத்துவத்தைப் பெற்ற திருத்தலமாதலால் இறைச் சேவையில் ஈடுபடும் அனைவரும் வணங்கும் தலமாக எதிர்காலத்தில் இது சிறப்பு பெறும் என்று அருளி இறைவன் மறைந்தார்.

இரு தரப்பிலுள்ள ரிஷிகளின் வாதத்திற்குப் பதிலாக எழுந்த தூண்களே திருநீற்றுத் தூண்கள் அல்லது விபூதித் தூண்கள் என்று திருவாசி திருத்தலத்தில் தற்போது வழங்கப்படுகின்றன. அவர்களின் வாதத்திற்கு விடை அளித்த ஈசனாய் இறைவன் விளங்கியதால் அவர் தற்போது ஸ்ரீமாற்றுவாதீஸ்வரர் என்று புகழப்படுகிறார்.  

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய திருவாசியை விரிவுபடுத்துவது அவனுடைய தலையாய கடமை என்று எம்பெருமான் வலியுறுத்தினார் அல்லவா? அப்படியானால் எப்படி ஒரு மனிதன் தன்னுடைய திருவாசியின் புனிதத்துவத்தை விருத்தி செய்து கொள்வது? இந்தக் கேள்விக்கு விடையாக அமைவதே திருவாசி சகஸ்ரலிங்க வழிபாடு.

தலைச் சுழியும் திருவாசியும்

யாராவது ஒருவர் தவறு செய்தால், அவருடைய சுழி சரியாக இல்லை என்று கூறுவதுண்டு. இதிலிருந்து ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம இயல்பைக் குறிப்பது தலைச் சுழி என்று கூறலாம். எப்படி ஒரு மனிதன் தன்னுடைய தலைச் சுழியை மாற்ற இயலாதோ அதே போல தன்னுடைய விதியையும் மாற்ற இயலாது. ஆனால், வெயிலுக்குக் குடை பிடிப்பது போல, விதியின் வேகத்தை ஓரளவு குறைத்துக் கொள்ள, வேதனையைத் தணித்துக் கொள்ள உதவுவதே இறை வழிபாடாகும்.

அது போல ஒரு மனிதனின் திருவாசியின் தன்மை அவன் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், திருவாசியை அமைத்தவர் அதை மாற்றி அமைக்கலாம் அல்லவா? இவ்வாறு ஒரு மனிதனின் திருவாசியையே மாற்றி அமைக்கும் வல்லமை உடையதே திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தியின் வழிபாடாகும்.

 

தலவிருட்சம் வன்னி
திருவாசி

விதியையும் மாற்றுவார் சகஸ்ர லிங்க மூர்த்தி

தற்காலத்தில் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் யூரியன் கான்ஸ்டலேஷன் என்ற நட்சத்திரக் கூட்டமைப்பு ரகசியக் குறியீட்டு முறை பின்பற்றப்படுகிறது அல்லவா? உதாரணமாக, ஐந்து (ஓம்ரான்) வளையங்களை ஒரு குறிப்பிட்ட வடிவில் அச்சிட்டு அத்திட்டத்தால் அந்த ரூபாய் நோட்டுகளை முறையாகப் பயன்படுத்தும் முறை உறுதி செய்யப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ முடியாத வகையில் இந்த பாதுகாப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.

இதே முறையில் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறக்கும்போது அவனுடைய உடல் ஆக்கப்படும் பஞ்ச பூத விகிதாசாரமும் ரகசியக் குறியீடுகளால் அவனுடைய தலைச் சுழியில் சிருஷ் கர்த்தாவான பிரம்ம மூர்த்தியால் நிரவப்படுகிறது.

ஏன் இந்தப் பஞ்ச பூத விகிதாசார நிலையை ரகசியமாக வைக்க வேண்டும்? எல்லோருக்கும் இந்த விஷயம் அம்பலமானால் இதன் விளைவு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதைச் சற்று விரிவாகக் கூறுகிறோம். செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் என்பவை உண்மையா? அவை அனைத்தும் உண்மைதான். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இந்த பில்லி, சூன்ய வித்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன?

ஒரு கட்டிடத்தின் வரைபடத்தை நகல் எடுப்பது போல ஒரு மனிதனின் பஞ்ச பூத விகிதாசார நிலையை நகல் எடுத்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த மனிதனை நாம் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம். இதுவே பில்லி, சூன்யத்தில் கையாளப்படும் வித்தை. இந்த தாக்குதலை மனிதனின் மனமும் உடலும் சமாளிக்க முடியாத நிலை தோன்றும்போதுதான் பலர் மன நோயாளிகளாக, சித்த பிரமை பிடித்தவர்களாக மாறி இறுதியில் சுய நினைவு தோன்றாமலே மரணம் அடைந்து விடுகின்றனர். இத்தகைய கொடிய நிலையை ஏற்படுத்தக் கூடியதே பில்லி, சூன்ய செயல்பாடுகள். இவ்வாறு ஒருவருடைய தலைச் சுழி இரகசியத்தை மற்றொருவர் நகல் எடுக்க முடியாத பாதுகாப்பு கவசத்தைத் தருபவரே திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தி.

 

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
திருவக்கரை

சித்துக்காடு

ஒரு மனிதனுடைய தலைச் சுழியில் அமைக்கப்படும் இந்த பஞ்ச பூத தத்துவ அமைப்பை விவிதத்ரயம் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு விவிதத்ரய சக்திகள் பரிணமிக்கும் மூர்த்திகளை வணங்குவதால் நமது பஞ்ச பூத ரகசிய அமைப்பு முறையாகப் பாதுகாக்கப்பட்டு எந்த வித பில்லி சூன்ய சக்திகளும் நம்மை அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி, விழுப்புரம் அருகே திருவக்கரை ஸ்ரீசந்திர சேகர மூர்த்தி, சென்னை அருகே சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் போன்ற மூர்த்திகள் இத்தகைய விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் தெய்வ மூர்த்திகள். உரிய வழிபாடுகளுடன் இத்தகைய மூர்த்திகளை வணங்கி செய்வினைத் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இத்தகைய விவிதத்ரய சக்திகளின் மற்றோர் அம்சம் என்னவென்றால் ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் உண்மையில் அஸ்வினி நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோடானு கோடி லோகங்களில் ஏதோ ஒன்றை அவர் சேர்ந்தவர் என்று பொருள். ஆனால், இந்த ஆன்மீக இரகசியத்தை இன்றைய உலகில் உணர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முக்காலமும் அறிய வல்ல உத்தம குருமார்களே இந்த இரகசியத்தை உணர்ந்தவர்கள். திருஅண்ணாமலையை ஆயிரம் முறை கிரிவலம் வந்து வழிபட்டவர்களே இத்தகைய குருமார்களைத் தரிசிக்க இயலும் என்பது கலியுக நியதி.

இவ்வாறு விவிதத்ரய சக்திகளைக் கிரகிக்க வல்ல குருமார்கள் தங்கள் சீடர்களின் தலைச் சுழி இரகசியங்களை உணர்ந்து அவர்களை முறையாக வழி நடத்தி இப்பிறப்பிலும் இனி வரும் பிறவிகளிலும் அவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கையைத் தேடித் தருவார்கள். எனவே, இதுவரை இத்தகைய குருமார்கள் அமையப் பெறாதோர் இனி வரும் பிறவிகளிலாவது அந்தக் குருமார்களைப் பெற திருஅண்ணமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தனை செய்யவும். அதுவரை தங்களுக்கு வேண்டிய விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிப்பவரே திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி ஆவார் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

நோய்கள் ஏற்படக் காரணம்

போதுமான சத்து உடலில் இல்லாததால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன என்று தற்கால மனிதன் நினைத்து கிடைத்ததை எல்லாம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறான். இதுவே இன்றைய மனிதர்களின் அவல நிலை. ஆனால், சித்தர்களின் கூற்றுப்படி நம்முடைய வினைகளே நமக்கு வியாதிகளாக, நோய்த் துன்பங்களாக, விபத்துக்களாக, எதிரிகளாக உருவெடுக்கின்றன. இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும்.

 

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருவாசி

ஒரு மனிதனின் திருவாசியின் வண்ணம் தூய்மையாக இருக்கும்போது அவன் வியாதிகளால் பாதிக்கப்படுவதில்லை. முழுமையான ஆரோக்கியத்துடன் திகழ்கிறான். திருவாசியின் வண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது மனிதன் வியாதியால் துன்பம் அடைகிறான். நம்முடைய வினைகள் திருவாசியின் ஒளிக் கீற்றுகளில் தடைகளாக அமைகின்றன. அப்போது நமது உடலில் வியாதி உருவெடுக்கிறது. எனவே, வியாதிகளிலிருந்து ஒரு மனிதன் நிவாரணம் பெற விரும்பினால் அவன் தன்னுடைய திருவாசியில் ஏற்படும் தடைகளைக் காணக் கூடிய அளிவிற்கு நேத்ர சக்தியைப் பெற வேண்டும். கண்கள் ஒளி பெற வேண்டும். அப்போது தானே அந்தத் தடைகளை நீக்கக் கூடிய வழிமுறைகளையும் வழிபாடுகளையும் அவன் உணர்ந்து கொள்கிறான்.

இவ்வாறு ஒரு மனிதன் தன்னுடைய திருவாசியின் தன்மைகளை உணர உதவுவதே சுய நாம ஜெபம் என்னும் வழிபாடாகும். ஒருவர் தன்னுடைய பெயரையே தொடர்ந்து அமைதியாக உச்சரிப்பதே சுய நாம ஜெபமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் சுய நாம ஜப வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

இவ்வாறு எந்த அளவிற்கு தன்னுடைய பெயரைத் தொடர்ந்து ஜபித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு தங்களுடைய திருவாசியின் தன்மைகளை அதாவது, நிறம், அளவு, அடர்த்தி போன்ற நுணுக்கங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஒருவர் தன்னுடைய திருவாசியின் தன்மைகளை அறிந்து கொண்டால் அவற்றை முறைப்படுத்தக் கூடிய வழிமுறைகளையும் அவர் தாமே அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பெயர் கூறும் தெய்வீக இரகசியம்

எவ்வாறு ஒரு மனிதனுடைய பஞ்ச பூதக் கூட்டமைப்பு ரகசியங்கள் அவனுடைய தலைச் சுழியில் பதிக்கப்பட்டுள்ளனவோ அதே போல ஒரு மனிதனின் திருவாசி வண்ணத் தத்துவங்கள் அவனுடைய பெயரில் தற்காலத்தில் ரூபாய் நோட்டுகளில் கையாளப்படும் எண்முறை நீர்க்குறி (Digial Watermark) போன்ற ஒரு ரகசியக் குறியீட்டு முறையில் அமைக்கப்படுகின்றன.

சகஸ்ரலிங்கம்
திருவாசி

இதனால்தான் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறதோ அந்த நட்சத்திர பாதத்திற்கு உரிய எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரைத் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். உதாரணமாக, ஒரு குழந்தை கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தது என்றால் கிருத்திகைக்கு அ, இ, உ, எ என்று பாதத்திற்கு ஒரு எழுத்தாக நான்கு பாத எழுத்துக்கள் அமைகின்றன. இதில் அக்குழந்தை பிறந்த நேரத்திற்கு உரிய மூன்றாம் பாத எழுத்தான “ உ“ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் உமா, உஷா போன்ற பெயர்களை வைப்பதே உத்தமம்.

இவ்வாறு ஒருவருடைய பெயரில் உள்ள எழுத்துக்கள் பெயருக்கு உரியவர்களால் உச்சரிக்கப்படும்போதும் (சுயநாம ஜெபம்) மற்றவர்களால் உச்சரிக்கப்படும்போதும், அழைக்கப்படும்போதும், எழுதப்படும்போதும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய திருவாசி வண்ணங்கள் ஆக்கம் பெறுகின்றன. இதனால் முழுமையான உடல், மன ஆரோக்கியம் பெற ஏதுவாகிறது. மேலும் தொடர்ந்து தங்கள் பெயரை உச்சரிப்பதால் தங்களைச் சூழ்ந்துள்ள திருவாசியின் வண்ண இயல்புகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருவரின் திருநாமம் என்பது அந்த மனிதனின் பஞ்ச பூதங்களினால் ஆன உடலைத் தானே குறிக்கின்றது ? இதனால் வளர் பஞ்சமி திதியில் திருவாசியில் அமைந்துள்ள சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து தங்கள் நாமத்தை வாய்விட்டு ஓதுதலால் தங்கள் பிறவி பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். இவ்வாறு தொடர்ந்து திருவாசி திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற முடியாவிட்டாலும் முதலில் திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து சுய நாமம் இயற்றுவதான தங்கள் பெயரையே திரும்ப திரும்ப வாய் விட்டு ஒலித்து பின்னர் தங்கள் இல்லத்திலோ அல்லது தங்கள் சொந்த ஊரில் உள்ள திருத்தலங்களிலோ வழிபாடுகளைத் தொடரலாம். எது எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு பிறவியிலாவது தங்கள் பெயருக்கு அமைந்த பஞ்ச பூத சக்திகளை இவ்வழிபாட்டின் மூலம் அறிந்து கொண்டால்தான் இறைவனைப் பற்றிய பூரண அறிவைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

வண்ணங்களும் எண்ணங்களும்

ஒருவருடைய திருவாசியில் தோன்றும் நிற மாற்றங்கள் குறித்து சித்தர்கள் உரைப்பதென்ன? பொதுவாக, மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற வண்ணங்களைக் கொண்ட திருவாசிகளே ஏற்புடையவை. இதிலும், பொன்னிறம், கிளிப் பச்சை, ஆரஞ்சு போன்ற குறித்த வண்ணங்கள் தோன்றுவது சிறப்பு.

மகான்கள், அவதார மூர்த்திகள் போன்றோர்களின் திருவாசி பொன்னிறமாக இருக்கும். சாதாரண மனிதர்களிடம் இத்தகைய நிறம் பார்த்தல் மிக, மிக அரிது. ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும்போது எப்போதாவது இத்தகைய வண்ண மாலையை ஒருவர் காண நேர்ந்தால் தொடர்ந்து அவ்வண்ணத்தை தங்கள் இயல்பாக மாற்றுவதற்கு உரித்தான தவ முயற்சிகளை மேற்கொள்தல் நலம். மஞ்சள் நிற மாலையில் ஆங்காங்கே கறுப்பு, நீலம், வெண்மை போன்ற திவலைகளைக் காண நேர்ந்தால் கீழ்க் கண்ட பாடலைத் தொடர்ந்து ஓதி வருதல் நலம்.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே


அதுபோல தங்கள் திருவாசியில் பச்சை நிற மாலையைக் காண நேர்ந்தால் நலமே. இத்தகைய நிறமாலைகளை கைமாறு கருதாமல் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களிடம் காணலாம். அத்தகையோர் தங்கள் நிற மாலை தூய்மையாக இருக்கிறதா என்று கவனித்துப் பார்க்கவும். அவ்வாறு தூய்மையான திருவாசியை உடையவர்கள் கொடுக்கும் மருந்துகள் விரைவில் நோயாளியைக் குணமாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் நற்குணமுடைய சிறுவர்களிடம் இத்தகைய பச்சை வண்ண திருவாசியைக் காணலாம். அவர்கள் தங்கள் நிறமாலையில் கறுப்புத் திவலைகளைக் காண நேர்ந்தால் கீழ்க் காணும் பாடலைத் தொடர்ந்து ஓதுதல் நலம். சூரிய முத்திரைகளையும், காயத்ரீ ஜபத்தையும் சிறப்பாக நிறைவேற்றுதல் நலம்.

பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே


இவ்வாறு பச்சை நிறமாலையை உடையவர்கள் மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். இத்தகையோர் மூல நட்சத்திர தினங்களில் திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தியை வணங்கி காலை சுமார் 11 மணி அளவில் வழிபாடுகளை மேற்கொள்வதால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.

சிவப்பு வண்ணம் ஆற்றலைக் குறிக்கும். மடாதிபதிகள், சமூக சேவகர்கள் போன்றோர் இத்தகைய நிறமாலைகளைக் கொண்டிருப்பார்கள். தங்கள் நிறமாலையில் குறைபாடுகள் தோன்றினால் மேற்கண்ட இரண்டு பாடல்களையுமே ஓதி சூரிய உதய நேரத்தில் திருவாசி ஈசனை வழிபடுதல் நலம். சிவப்பு வண்ணத்தில் அடர்த்தி குறைவாக இருத்தல் நலம். அவ்வாறு தெளிந்த நிலை அமையப் பெறாதவர்கள் திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி முன் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் சரபேஸ்வர கவச துதியை ஓதுதல் நலம். பேரும் புகழும் பெறத் துடிக்கும் மனோ பாவத்தைக் குறைக்க மேற்கண்ட வழிபாடு உறுதுணை புரியும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam