திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

லட்சுமி கடாட்சம்

ஸ்ரீ என்பது லட்சுமி தேவியைக் குறிக்கும். ஸ்ரீ என்ற பதம் செல்வம், மேன்மை, அழகு, புனிதம் இவற்றையும் குறிக்கும். இறைவன் அனைத்து செல்வங்களையும், வசதிகளையும், மேன்மைகளையும் தருவதால்தான் எல்லா தெய்வ மூர்த்திகளையும் குறிக்கும் அடைமொழியாக ஸ்ரீ என்ற சொல்லைச் சேர்த்து ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் என்று அழைக்கிறோம்.

ஒரு சாதாரண சொல்லும் ஸ்ரீ என்ற அடைமொழியைப் பெறும்போது அது புனிதம் பெற்று விடுகிறது. ஸ்ரீ என்ற தேவமொழி வார்த்தைக்குப் பதிலாக தமிழ்ப் பதமான திரு என்ற அடைமொழியையும் பயன்படுத்தலாம். கண்ணுடன் திரு சேர்ந்து திருக்கண் என்று அழைக்கும்போது அது இறைவன் தங்கும் இடமாகவும், திருக்குளம் என்பது கோயில் குளமென்றும், இறைவன் நீராடும் குளம் என்றும் புனிதம் பெறுகின்றது.

வார்த்தையுடன் திரு சேர்ந்து திருவார்த்தை எனும்போது அது பகவத்கீதை, புராணங்கள், பைபிள், குரான் என்ற புனித நூல்களைக் குறிக்கிறது. இவ்வாறு ஸ்ரீ கடாட்சம், லட்சுமி கடாட்சம், திருக்கடாட்சம் என்ற அனைத்துப் பதங்களும் மனிதர்கள் பெற்று அனுபவிக்கக் கூடிய பல்வேறு வளங்களையே சுட்டிக் காட்டுகின்றன.

எப்போது ஒரு மனிதன் இப்பிறவியில் அனைத்து சுகங்களையும் வளங்களையும் பெற்று வாழ்கின்றானோ அவனே லட்சுமி கடாட்சம் பூரணமாக, முழுமையாக பெற்ற மனிதனாகக் கருதப்படுவான். நமது பாரதத்தில் தோன்றிய மகான்கள் அனைவரும் மக்கள் எல்லோரும் சுக போகங்கள் அனைத்தையும் பெற்று வாழும் வழி முறைகளை எடுத்துரைத்துள்ளனர்.

ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் மனிதன் மனிதனாய் வாழும் வழிமுறைகளைத்தான் கற்பிக்கின்றன. அவை லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றியவையாக இருந்தாலும் இன்று வாழும் மக்களுக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் வேண்டிய அனைத்து வாழ்க்கை வழிமுறைகளும் அவைகளில் அனுபவ ரீதியாக உணர்த்தப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகளையே அவ்வப்போது பூமியில் தோன்றும் மகான்கள் தங்கள் போதனைகளாக மக்களுக்குப் புகட்டுகின்றனர்.

எல்லா வளங்களையும், செல்வத்தையும் ஒரு மனிதன் பெற்று வாழ யோகம் பெற்றிருந்தாலும் ஆயுள் வளத்தை அவன் பெறாவிட்டால் அதனால் என்ன பயன்? எனவே லட்சுமி கடாட்சத்தில் முதன்மையாக நாம் உணர வேண்டியது ஆயுள் விருத்தியே ஆகும்.

அனந்த பத்மநாப விரத நாள்
அன்று 21 காய்கறிகளுடன் அன்னதானம் செய்பவர்களுக்கு 32 விதமான உயிர்ச் சத்துக்களும் 16 விதமான தாது சத்துக்களும் பெருகி முழுமையான ஆரோக்கியம் கிட்டும்.

திருமணத்திற்கு முன் ஜாதகப் பொருத்தம் பார்த்து வரன்களைத் தேர்ந்தெடுப்பது நமது முன்னோர்கள் வழக்கம். ஆனால், தற்காலத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது ஒரு வியாபாரப் பொருளாகவே ஆகி விட்டது. முக்கியமான பொருத்தங்களைப் பார்ப்பதை விடுத்து வெறும் பத்துப் பொருத்தங்களில் பெருவாரியான பொருத்தங்கள் அமைந்தால்போதும் என்ற நிலையே தற்போது எங்கும் நிலவி வருகிறது.

உண்மையில் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முதலில் தம்பதிகள் இருவரின் ஆயுள் பாவத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இருவருக்கும் நல்ல ஆயுள் பலம் இருந்தால்தான் திருமணம் என்ற பந்தத்தைப் பற்றி மேற்கொண்டு ஆலோசிப்பதில் அர்த்தம் இருக்கும்.

அடுத்து தம்பதிகள் இருவருக்கும் மனப் பொருத்தம் முழுமையாக இருப்பது அவசியம். தற்காலத்தில் படிப்பு, அந்தஸ்து, வேலை, வருமானம் இவற்றை வைத்து தம்பதிகளின் பொருத்தத்தை நிர்ணயிக்கின்றனர். எனவே திருமணம் என்பது வர்த்தக ரீதியான ஓர் உடன்படிக்கையாக மாறி விடுகிறது. ஆனால், மகான்களோ நல்ல குணம், குடும்ப பாரம்பரியம், தெய்வ பக்தி, பெரியோர்களிடம் மரியாதை, விட்டுக் கொடுக்கும் பண்பு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் இவற்றை வைத்தே தம்பதிகளின் பொருத்தத்தை நிர்ணயிக்க வேண்டுமாய் அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு தோன்றும் மண வாழ்க்கையே நல்ல சந்ததிகள் உருவாக வழி வகுக்கிறது. ஆரோக்கியமான சந்திதிகள் தழைப்பதற்கு விஞ்ஞானம்  ஆயிரமாயிரம் கோட்பாடுகளைக் கூறுகிறது. பெரியோர்களோ ஒரே ஒரு விஷயத்தைத்தான் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாகக் கூறுகின்றனர். அதுவே குடும்ப ஒற்றுமை. எந்த அளவிற்கு ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் அன்புடன் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடன் திகழ்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் அவர்களுடைய சந்திதிகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இது எக்காலத்திலும் மாறாத உண்மை. எவராலும் மறுக்க முடியாத உண்மையும் கூட.

இக்காரணம் பற்றியே அக்காலத்தில் திருமணங்களைக் கோயில்களில் நிகழ்த்தினார்கள். என்னதான் ஜாதகப் பொருத்தம் பார்த்தாலும் மனிதக் கணக்கில் பிழைகள் ஏற்படுவது சகஜம்தானே. திருக்கோயில்களில் நிகழ்த்தப்படும் திருமணங்களில் பொருத்த தோஷங்கள் ஓரளவிற்கு அத்திருத்தல தேவதை, தெய்வ மூர்த்திகளால் நிவர்த்தி செய்யப்படுகின்றன. மேலும் எந்த வித கால தோஷங்களும் இல்லாத சுப முகூர்த்த நேரத்தைக் கணிப்பது என்பது தற்காலத்தில் மிகவும் அரிதான காரியமாகத் திகழ்கிறது.

பிரபலமான ஜோதிட வல்லுநர்கள் கூட காலத்தின் கட்டாயத்தால் சூன்யத் திதி, கூடா நாட்கள் (பிரபலாரிஷ்ட யோகம்), சந்திராஷ்டமம், குரு, சுக்கிர மூடங்களில் முகூர்த்தங்களைக் குறித்து விடுகின்றனர். இத்தவறுகள் நிச்சயமாக தம்பதிகளையும் அவர்களின் சந்ததிகளையும் பாதிக்கும். இத்தகைய கால சந்தி தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஒரே இடம் திருக்கோயில்கள்தான்.

திருமண முகூர்த்தங்கள் மட்டும் அல்லாது சீமந்தம், கிருஹப் பிரவேசம், பணி நியமனம் போன்ற பல காரியங்களுக்காகவும் முகூர்த்தங்களைக்

சிறிதளவு நெய் விட்டு லேசாக வறுத்த 10 பூண்டு பற்களை திங்கட் கிழமை தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கி இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும்.

குறிக்கும்போது ஒன்றரை மணி நேரத்தை முகூர்த்த நேரமாகக் குறிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. ஒரு முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை அதாவது ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் என்ற கால வரையறையை உடையது என்பது உண்மையே. ஆனால், கலியுகத்திற்கு உகந்த கால அம்சமாக சித்தர்களால் வலியுறுத்தப்படுவது ஹோரை என்ற கால அம்சமே. எனவே எல்லா முகூர்த்த நேரங்களிலும் சுப ஹோரை விரவி இருக்க வேண்டும் என்பது சித்தர்களின் உபதேசம்.

ஒன்றரை மணி நேரத்திற்கு முகூர்த்தத்தைக் குறிக்கும்போது இத்தகைய சுப முகூர்த்த நேரங்கள் அமையும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. உதாரணங்கள் மூலமாக இவ்விஷயத்தைத் தெளிவு படுத்துவோம்.

ஒவ்வொரு நாளும் ஹோரை நேரங்கள் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசைக் கிரமத்தில் மாறி மாறி வருகின்றன. இதில் முதல் ‘ஹோரையாக அந்தந்த தினத்திற்கு உரிய ஹோரை அமையும், அதாவது ஞாயிறு அன்று சூரிய ஹோரையும், வியாழக் கிழமை அன்று குரு ஹோரையும் முதல் ‘ஹோரையாக அமையும். அவ்வாறு அமையும்போது ஒன்றரை மணி நேரத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டால் சூரியன்+சுக்கிரன், சுக்கிரன்+புதன், புதன்+சந்திரன், சந்திரன்+சனி, சனி+குரு, குரு+செவ்வாய் என்றவாறாகத்தான் ஹோரை நேரங்கள் அமையும். அவ்வாறு அமைந்தால் பகை கிரகங்களின் ஆதிக்கத்தால் முகூர்த்த நேரங்கள் பாதிக்கப்படும் அல்லவா?

சூரியனும் சுக்கிரனும், புதனும் தேய்பிறைச் சந்திரனும் ஒருவருக்கொருவர் பகையாக அமைவதால் அவர்கள் ஆதிக்கும் பெறும் முகூர்த்த நேரமும் இந்த விரோத ஆதிக்கத்தால் பாதிக்கப்படும். மேலும் சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்கள் சுப ஹோரையை உடையதாக இருந்தாலும் வரிசைக்கிரமமாக ஞாயிறு, வியாழன், வெள்ளிக் கிழமைகளுக்கு இவர்களின் ஹோரை விரோத பாவத்துடன்தானே விளங்கும். எனவே முகூர்த்த நேரங்களைக் கணிக்கும்போது கிரஹ மூர்த்திகளின் விரோத பாவத்தையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணத்தை திருக்கோயில்களில் நிகழ்த்துவதுடன் அவரவர்கள் முடிந்த அன்னதானத்தையும் நிறைவேற்றுவதால் அவை இத்தகைய கால தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்து தம்பதிகள் நலமுடன் வாழ உறுதுணை செய்யும்.

மனிதன் நீண்ட ஆயுளுடன் இருந்தால்தான் அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்க முடியும். ஆயுள் மட்டும் போதுமா? நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால்தானே எந்த சுகத்தையும் பூர்ணமாக அனுபவிக்க முடியும். தெளிவில்லாத பார்வை உடையவன் டிஜிட்டல் டீவி வைத்திருப்பதால் என்ன பயன்? எல்லா தெய்வ மூர்த்திகளின் வழிபாடுகளுமே மனிதர்களுக்கு உடல், மன ஆரோக்கியத்தைத் தர வல்லவையே. சிறப்பாக சூரிய மூர்த்திக்கு உகந்த பூஜைகளான காயத்ரீ ஜபம், சந்தியா வந்தன வழிபாடு, தீர்த்த நீராடல் போன்றவை சிறப்பான ஆரோக்கியத்தை தர வல்ல அற்புத வழிபாடுகளாகும்.

மேலும் எந்த அளவிற்கு ஒரு மனிதன் மற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறானோ அந்த அளவிற்கு அவனும் அவனுடைய சந்ததிகளும் ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள். நமது வெங்கடராம சுவாமிகள் தமது வாழ்நாளை மற்றவர்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்து அனைவருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக விளங்கிய ஒப்பற்ற மகான்.

ஒருவன் எப்போது வேண்டுமானாலும் தன்னை திருத்திக் கொள்ளலாம். உயிர் துறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன் தான் செய்த தவறை உணர்ந்து இறைவனின் திருவிளையாடல்களைக் கேட்ட வண்ணம் உயிர் நீத்தவரே பரீக்ஷித் மகாராஜா.

அவர்கள் ஒருமுறை திருச்சி அருகே உள்ள ஒரு தொழுநோய்க் காப்பகத்தில் இருந்த 300 நோயாளிகளுக்கு இறைப் பிரசாதத்தை அளிக்கும்படி திருச்சியில் உள்ள அடியார்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

தொழுநோய் என்பது சுமார் 600 வருடங்களுக்கு ஒரு மனிதனை வாட்டக் கூடிய நோயாகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. ஒரு மனிதன் ஒரு பிறவியில் தன்னுடைய நாற்பதாவது வயதில் தொழுநோயால் பீடிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அவன் அப்பிறவியில் என்பதாவது வயது வரை உயிருடன் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்தப் பிறவியில் அவன் கழித்த நோயின் அளவு 40 வருடங்களாகும். இவ்வாறு ஒவ்வொரு பிறவியிலும் எவ்வளவு வருடங்கள் அந்நோயால் பாதிக்கப்படுகின்றானோ அவை அனைத்தும் சேர்ந்து 600 வருடங்கள் கழிந்தால்தான் அந்நோயிலிருந்து அவனுக்கு விடுதலை கிட்டும்.

கருணையே உருவான நமது சுவாமிகள் நோய் எத்தகைய கொடுமையாக இருந்தாலும் நோயை வெறுக்கலாம், ஆனால் நோயாளியை வெறுக்கக் கூடாது என்ற கோட்பாடை உடையவர். எனவே எந்த நோயாளியாக இருந்தாலும் அவர்களை தமது குழந்தைகளாகப் பாவித்து அவர்களுக்கு முடிந்த மட்டும் ஆரோக்கியம் வழங்க அருந்தொண்டாற்றினார்கள்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்காக சென்னை அருகே உள்ள கோவூர் திருத்தலத்திலிருந்து லட்சுமி தேவி வாசம் செய்யும், ‘ம’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு சித்த மூலிகை மருந்தைப் பெற்று அதை திருச்சியில் உள்ள தமது அடியார்கள் மூலம் தொழு நோய்க் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு வழங்குமாறு கூறினார்கள். அப்போதுதான் சுவாமிகள் தொழுநோயின் கொடுமையைப் பற்றி விளக்கிக் கூறி இவ்வாறு 600 ஆண்டுகள் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய கொடுமையான நோயை நாம் வழங்கும் மருந்து மீதமுள்ள பிறவிகளில் அவன் அந்நோயிலிருந்து விடுதலை பெற வழிவகுக்கிறது என்று கூறினார்கள்.

அதாவது நாம் மருந்து வழங்கும் ஒரு தொழு நோயாளி ஏற்கனவே 100 வருடங்கள் அந்நோயை அனுபவித்திருந்தால் நமது சுவாமிகள் வழங்கிய மருந்தை உட்கொண்டால் இனி அனுபவிக்க வேண்டிய (600 - 100 = 500) 500 வருட வேதனையிலிருந்து விடுதலை கிட்டும் என்று அருளினார்கள். என்னே குருவின் கருணை கடாட்சம். இந்த அற்புதத்தை கண் கூடாகக் கண்டு அனுபவித்த அடியார்கள் இன்றும் அந்த நாட்களை எண்ணிப் புளகாங்கிதம் அடைகின்றனர்.

சுவாமிகள் அருளியபடி தொழுநோய்க் காப்பகத்தில் நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தி இறைவனை வேண்டிப் பிரார்த்தித்து இறைப் பிரசாதமும், உணவுகளும், சிற்றுண்டிகளும், புத்தாடைகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. இனிப்பு, சிற்றுண்டிகளை விட தங்களையும் சமூகத்தில் உள்ளவர்கள் மதிப்பதைக் கண்டு அந்த நோயாளிகளின் உள்ளம் நெகிழ்ந்தது. அது அவர்களின் நோய் தீர்க்கும் அருமருந்தாக அமைந்து சுற்றுப் பறத்தில் ஒரு அற்புத அமைதியை ஏற்படுத்தியது.

இதில் இன்னும் ஒரு அற்புதம் என்னவென்றால் அந்த தொழு நோய்க் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள அதிகாரி மறு நாள் நமது அடியார் ஒருவரை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் நமது அடியாரை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டு கூறினாராம், “சார், நான் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் இத்தகைய நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்து வருகிறேன். ஆனால், நேற்று இரவு தங்கள் அடியார்கள் வந்து சென்றபின் இங்கு நோயாளிகளிடம் ஏற்பட்ட அமைதியையும், ஒற்றுமையும், சமாதானத்தையும் நான் இதுவரை என்னுடைய வாழ்நாளில் அனுபவித்ததே கிடையாது.”

தன்னலமற்ற இறை சேவையால் ஆரோக்கியம், அமைதி, ஒற்றுமை இவற்றை எவ்விடத்திலும் ஏற்படுத்த முடியும் என்பதை தமது ஒவ்வொரு அசைவிலும் ஏற்படுத்திக் காட்டியவரே நமது வெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.

தங்கத்தை எளிதில் சம்பாதித்து விடலாம். ஆனால், குரு பக்தியைப் பெருக்குவதே மிகவும் சிரமமான காரியம்.
குரு அருகில் இருந்தால் மலையளவு தங்கமும் ஒரு பொருட்டல்ல.
எதிர்காலத்தில் தங்கமும் தற்போது அலுமினியத்தைப் போல மதிப்பில்லாமல் போய் விடும்.

இந்த வைபவத்தில் வழங்கப்பட்ட மருந்தின் அளவோ ஒரு மில்லி கிராம் எடை கூட இருக்காது. ஆனால், இறைப் பிரசாதம் என்பதால் அது ஆற்றிய அற்புதம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. பிரசாதம் பெற்ற நோயாளிகள் 600 வருட கர்ம வினையின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என்றால் பிரசாதம் வழங்கிய அடியார்கள் பெறும் பேறு எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். ஆனால், இந்த பாக்கியம் எதுவுமே சற்குருவை ஒருவரைத் தவிர வேறு யாராலும் நிகழ்த்து முடியாது என்பதும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

லட்சுமி கடாட்சத்தை பூரணமாகப் பெற விரும்பினால் அது தன்னலமற்ற இறை சேவையால் மட்டுமே சாத்தியம் என்பது தற்போது சொல்லாமலே விளங்கும். மேலும் சேவை மனோபாவத்துடன் இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாகும். இதற்கு விளக்கமாக ஒரு சம்பவத்தையும் சுவாமிகள் நினைவு கூர்ந்தார்கள்.

சுவாமிகள் சிறிது காலம் ஒரு வீட்டு மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள். அப்போது சுவாமிகளைக் காண ஒருவர் வந்தார். ரசவாதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டுத்தான் அவர் அங்கு வந்திருந்தார் என்பது சுவாமிகளுக்குத் தெரியும். ரசவாதம் என்பது எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றும் ஒரு வித மூலிகை ரசாயன வித்தை. எப்படியோ, யார் மூலமோ கேள்விப்பட்டு அவர் சுவாமிகளிடமிருந்து அக்கலையைக் கற்றுக் கொள்ள பெரு முயற்சி செய்தார்.

சுவாமிகள் தனக்கு அக்கலையைப் பற்றி எதுவுமே தெரியாது என்று பலமுறை கூறியும் அவர் சுவாமிகளை விடுவதாக இல்லை, சித்தர்கள் அனைவரும் ரசவாதம் தெரிந்தவர்கள் என்பதால் நமது சுவாமிகளின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது சுவாமிகளிடமிருந்து அவர் ரசவாதத்தை இம்முறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்திருந்தார்.

சுவாமிகளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிகள் வீட்டுக்கு ஒரு சொறி நாய் அடிக்கடி வந்து போகும். அதைக் காணும் போதெல்லாம் அதற்கு சிறிது பொறை, பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை நமது சுவாமிகள் கொடுப்பார்கள். அன்று வாசலில் அந்த சொறி நாய் படுத்துக் கொண்டிருந்தது. புதிதாக வந்தவரைப் பார்த்ததும் சத்தம் போட்டுக் குரைக்க ஆரம்பித்தது.

வந்தவர் தயக்கத்துடன் மேலே செல்லாமல் நின்று விட்டார். அதே சமயம் சுவாமிகளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று மன உறுதியுடன் வாசலில் காத்துக் கொண்டிருந்தார். நாய் எப்படியும் சிறிது நேரத்தில் எங்காவது சென்று விடும். நாம் சுவாமிகளைப் பார்த்து விடுவோம் என்று தீர்மானத்துடன் வீட்டு வாசலில் காத்திருந்தார். ஆனால், அந்த நாயோ எங்கும் செல்லாமல் விடாமல் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தது. நேரமோ கடந்து கொண்டிருந்தது. நாய் நில்லாமல் குரைத்ததால் அக்கம்பக்கம் இருந்தவர்களும் வெளியே வந்து என்ன ஏதென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

வந்தவரும் வெகுநேரம் நின்று பார்த்தார். இரண்டு மணி நேரம் ஆகியது. நாயோ குரைப்பதை நிறுத்தவில்லை. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டு அந்த வேண்டாத விருந்தாளி வந்த வழியே திரும்பி விட்டார். அவருடன் தெரு முனை வரை சென்று அவர் திரும்பிப் போய் விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டவுடன்தான் நாய் குரைப்பதை நிறுத்தியது.

சுவாமிகள் மாடியிலிருந்து இறங்கி வந்து நாயின் அற்புத சேவையைப் பாராட்டினார். அடுத்த நாள் திருஅண்ணாமலை பௌர்ணமி அன்னதானத்திற்கான பணிகளை நிறைவேற்ற வேண்டி இருந்ததால் சுவாமிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது நாயின் பணி அவருக்குப் பேருதவியாக அமைந்தது. அன்புடன் நாயைத் தடவிக் கொடுத்தார். அந்த நாயின் உடல் முழுவதும் நிறைய புண்கள் இருந்தன, பல இடத்தில் ரோமங்கள் இல்லாமல் புண்கள் வெளியே தெரிந்தன. அவற்றில் சீழ் பிடித்து சீழும் இரத்தமும் கசிந்து கொண்டிருந்தன. பத்தடி தூரத்தில் அந்த நாயைப் பார்க்கும் எவரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் விடுவார்கள். குடலைப் புரட்டும் அப்படி ஒரு துர்நாற்றம் அதன் உடலிலிருந்து வீசிக் கொண்டிருந்தது.

ஆனால், சுவாமிகளோ எதையும் கண்டு கொள்ளாமல் அதன் உடல் முழுவதும் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார்கள். நாயின் கண்களிலிருந்து தாரை தரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்னதான் நாயாக இருந்தாலும் அதற்கும் தன்னுடைய சீர்கேடான நிலை தெரியும் அல்லவா? அருவருப்பான உடலுடன் இருக்கும் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து இவர் தன் மேல் கருணை பொழிகிறாரே என்று நினைத்து நாய் கண்ணீர் துளிகளை உகுத்தது.

சுவாமிகளோ நாயின் உடலைப் பார்க்கவில்லை. அதன் சேவையைத்தான் பார்த்தார். தன் உயிரைக் கொடுத்து குரல் எழுப்பிய அந்த நாயின் சேவை அவரைக் கவர்ந்தது. உடல் ஆரோக்கியம் உள்ள எந்த நாயாலும் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்குக் குரைக்க முடியாது. ஒன்றிரண்டு பிஸ்கட் துண்டுகளுக்கு நன்றிக் கடனாக மணிக் கணக்கில் சேவை ஆற்றிய அந்நாயின் நன்றி மறவாத குணத்திற்கு தான் எவ்விதத்திலேனும் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்ற உந்துதலால் அவ்வளவு துர்நாற்றம் உள்ள நாயின் உடலையும் தடவிக் கொடுத்தார்.

இவ்வாறு எந்த அளவிற்கு பிற உயிர்களின் மனம் மகிழ, உள்ளம் நெகிழ நாம் சேவை செய்கிறோமோ அந்த அளவிற்கு நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெறும் என்பதை உணர்த்துவதற்காக வெங்கடராம சுவாமிகள் இந்நிகழ்ச்சியை நமக்கு விளக்கினார்கள். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பூரணம் அடைந்தால்தான் லட்சுமி கடாட்சமும் பூரணம் அடையும் என்பது சொல்லாமலே இப்போது விளங்குகிறது அல்லவா? மனத்தைச் சற்குரு காட்டும் வழியில் நிலைநிறுத்துதலே மன ஆரோக்கியத்திற்கான மாமருந்து.

உயிருடன் உயிர் இரண்டறக் கலக்கும் சிவசக்தி ஐக்ய நிலையின் ஓர் அங்கமே உள்ளங்கையில் மருதாணி இட்டுக் கொள்ளும் யோகமாகும். மருதாணி இலையில் உயிர் உண்டு. அதை அரைத்துத்தான் கையில் இட்டுக் கொள்ள வேண்டும். காய்ந்த இலையில் உயிர் இல்லாததால் மருதாணிப் பவுடரைக் கையில் இட்டுக் கொள்வதால் எந்த யோகப் பலனும், மூலிகை அனுகிரகமும் கிட்டாது.

நீண்ட ஆயுளும் உடல் மன ஆரோக்கியமும் இருந்தாலும் விரும்பியதை வாங்கி ஆண்டு அனுபவிக்க கையில் பொருள் வேண்டுமே? பொருள் இருந்தால்தானே இவ்வுலக வாழ்க்கை இன்பமாக அமையும். நல்ல காரியம் செய்வதற்கும் கையில் காசு வேண்டுமே.

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த அளவிற்கு லக்கினம், இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினோராம் இடமும் அதன் அதிபர்களும் பலமாக அமைகிறார்களோ அந்த அளவிற்கு செல்வ விருத்தி, பொருள் சேர்க்கை கிட்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் அறிவிக்கின்றன. இத்தகைய ஜாதக அமைப்புடன் குருவும் சேர்ந்து பலம் பெறும்போது கிட்டும் செல்வம் நேர்மையான வழியிலும் நல்ல காரியத்திற்காக செலவிடப்படும் தன்மையை உடையதாகவும் இருக்கும் என்பது உண்மை.

அனைத்து லட்சுமி கடாட்ச அனுகிரக சக்திகளும் ஒருங்கே அமையப் பெற்றதே ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ஜாதகமாகும். எனவே லட்சுமி கடாட்சத்தை முழுமையாகப் பெற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பூஜிக்க வேண்டியது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ஜாதகக் கட்டங்கள் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா?

இதனால் எவ்வளவோ முயற்சிகள் செய்து நாம் ஈட்டும் செல்வமானது விரயம் ஆகாமல் நல்ல முறையில் செலவாகும் என்பது உறுதி.

சுவாமிகளின் ஜாதகக் கட்டத்தை ஒரு மாம்பலகையில் வரைந்து கொண்டு அதை மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து பூலோக பாரிஜாத மலரான பவள மல்லிகைப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் நிலையான செல்வத்தைப் பெற்று வாழ்வார்கள் என்பது உறுதி. தினமும் 21 பொட்டலங்கள் உணவு அன்னதானமாக வழங்குவது வழிபாட்டுப் பலன்கள் நிலைகொள்ள உறுதுணை புரியும்.  

ஸ்ரீநிவாசன் என்று பெருமாளை அழைக்கிறோம். லட்சுமி உறையும் திருமார்பு உடையவர் என்ற பொருளில் அவரை அழைப்பதன் காரணம் யாது? மனிதன் என்பவன் திருமணம் என்ற புனிதமான வைபவத்தின் மூலமாகத்தான் முழுமை பெறுகிறான் என்னும் உண்மையைக்

குறிப்பதே ஸ்ரீநிவாசன் என்பதாகும். நல்ல வாழ்க்கைத் துணை அமைவதும் லட்சுமி கடாட்சத்தின் ஒரு அங்கமே.

திருமணம் மனதுக்கு விரும்பிய ஒருவருடன் நிகழும்போதுதான் அது சந்தோஷத்தை அளிக்கும், நற்சந்ததிகளை உருவாக்க துணை புரியும். அதனால்தான் எல்லாப் பொருத்தங்களுக்கும் முன்னோடியாக தம்பதிகளின் மனப் பொருத்தத்தை முக்கியமாக வைத்தார்கள்.

மனம் விரும்பினால் மட்டும் ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை வாய்த்து விடுமா என்ன? இறை சேவையும், பிற உயிர்களின் சேவையுமே ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் என்பதை புராணங்களும் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.

பார்வதி, வள்ளி, தெய்வானை, மீனாட்சி, ராதை, ருக்மணி என எந்த அவதார தேவியரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மனதுக்கேற்ற மணாளனைக் கரம் பிடிக்க எவ்வளவோ அரும் பெரும் தவங்களையும் விரதங்களையும் கடைபிடித்தார்கள் என்பது விளங்கும்.  

கலியுகத்தைப் பொறுத்த வரையில் ஆண், பெண் இருவருமே தெய்வீகப் பணியில் எந்த அளவிற்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது உண்மையே. அப்படியானால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வரனைத்தான் நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். அப்படி இருக்கும்போது எதற்காக விரதம், இறை சேவை என்று கேள்வி எழலாம்.

நம்முடைய உறவுகள் இந்தப் பிறவியுடன் முடிவடைவது கிடையாது. அவை மீண்டும் மீண்டும் வளரும். எந்த அளவிற்கு இறைப் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறோமோ அதைப் பொறுத்துதானே இனி வரும் பிறவிகள் அமையும். இப்பிறவியின் நல்வினை, தீவினைகளின் விளைவுதானே இனிவரும் பிறவிகளில் நாம் பெறப் போகும் வாழ்க்கைத் துணையும் சந்ததிகளும்.

எனவே, நாம் அடுத்தடுத்து பெறும் வாழ்க்கைத் துணை இனிமையாக அமைய தொடர்ந்து நற்காரியங்களையும், விரத பூஜைகளையும் அவசியம் தொடர்ந்து இயற்றியே ஆக வேண்டும்.

நல்வாழ்க்கைத் துணை அமைய

நல்ல வாழ்க்கைத் துணை அமைய நமது வெங்கடராம சுவாமிகள் ஏராளமான பூஜை முறைகளையும் விரத நெறி முறைகளையும் வகுத்துத் தந்துள்ளார்கள்.
குறிப்பாக ஆண்கள்,

 1. சுயம்பு மூர்த்திகள் அருள்புரியும் சிவாலயங்களில் தினமும் 108 முறை பிரதட்சணமாக வலம் வருதல்.
 2. குசா முறையில் தினமும் காலை, மாலை சந்தியா நேரங்களில் 108 தோப்புக் கரணம் இட்டு பிள்ளையாரை வணங்குதல்.
 3. புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடுதல்.
 4. இலவச திருமணங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தல்
 5. பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையும், எருமை மாடுகளுக்கு தண்டுக் கீரையும் அளித்தல்

போன்ற தெய்வீக காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி வந்தால் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைய இறைவன் அருள்புரிவார்.
கன்னிப் பெண்களும் அவர்களின் பெற்றோர்களும்,

 1. தினமும் கோயில் நந்தவனங்களில் உள்ள பூச்செடிகள், துளசி, வில்வ மரங்களுக்கு நீர் வார்த்தல்
 2. கோயில்களில் பச்சரிசி மாக்கோலம் இடுதல், சிறப்பாக வசந்த மண்டபங்களை சுத்தம் செய்து அலங்கரித்தல்
 3. மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு கிலோ எடைக்குக் குறையாமல் தங்கள் கைகளால் மஞ்சள் இடித்து இறை மூர்த்திகளின் திருமஞ்சனத்திற்காக அளித்தல்
 4. நவராத்திரி தினங்களிலும் விஷ்ணுபதி புண்ணிய நாட்களிலும் இயன்ற சுமங்கலி தானங்களை நிகழ்த்துதல்
 5. வாசமுள்ள மலர்களைத் தொடுத்து இறை மூர்த்திகளுக்கு அளித்தல்

போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து இயற்றி வந்தால் மண வாழ்க்கை மணமுள்ளதாக அமையும்.
மனம் விரும்பியவாறு மண வாழ்க்கை அமைந்தாலும் அது மேலும் சிறப்படைய வேண்டுமானால் நல்ல சந்ததிகள் வேண்டுமே. பெயரளவில் சந்ததிகள் அமைந்தால் அது சிறப்பாகுமா? உத்தம சந்ததிகள் பெறும்போதுதான் நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவு அடைந்ததாகக் கொள்ள முடியும். தக்கார் என்று ஒருவரை பெருமைப் படுத்துவது அவருடைய எச்சம் என்ற சந்ததிதானே.
நல்ல மணமுள்ள சந்ததிகள் உருவாக பாடுபடுவதும் ஒரு இறைப் பணியே. எந்த அளவிற்கு ஒரு மனிதன் நல்ல சந்ததிகளை உருவாக்கித் தருகிறானோ அந்த அளவிற்கு அவன் மேலுலகத்தில் உயர்ந்த இடத்தைப் பெறுகிறான். அதனால்தான் அக்காலத்தில் நிறைய குழந்தைகள் பெற்ற தாய்மார்களை தெய்வத்திற்கு இணையாக வைத்துப் போற்றினார்கள்.

சித்தர்கள் திருவாக்கின்படி மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களே மற்றவர்களை ஆசீர்வதிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள். தனி மரம் தோப்பாகாது என்பது முதுமொழி.

உத்தமர்சீலி திருத்தலம்

இவ்வாறு நற்சந்ததிகள் உருவாக வழிகாட்டும் பல திருத்தலங்கள் நம் பாரத தேசம் எங்கும் நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த தலங்களுள் ஒன்றே திருச்சி அருகே காவிரியின் வடகரையில் அமைந்துள்ள உத்தமர்சீலி திருத்தலமாகும். மிருகண்டு முனிவர் பூஜித்த அற்புதமான தலம்.

உலகம் புகழும் உத்தம குழந்தையைப் பெற வேண்டி மிருகண்டு முனிவர் பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைத் தொழுதார். அவ்வாறு உத்தமர்சீலி திருத்தலத்திற்கும் தம் பத்தினிபுடன் வந்திருந்து அத்தல இறைவனான ஸ்ரீகைலாச நாதரையும் அம்பிகை ஸ்ரீஆனந்தவல்லி தேவியையும் வழிபட்டார். அப்போது இறைவன் உத்தம குழந்தையைப் பெற விரும்பினால் உத்தம சூரிய சக்திகளை இப்பூவுலகெங்கும் தோற்றுவிக்க தொண்டாற்ற வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை ஸ்ரீஅரவிந்த நாயகி தாயாரிடம் வேண்டிப் பெற்றுக் கொள்வாயாக, என்று தெரிவித்தார்.

தீட்சை (குடுமி) வைத்திருப்பவர்கள் தலை முடியைக் கட்ட கங்கை நீரில் நனைத்த கயிற்றைப் பயன்படுத்துவதால் மனம் தெளிவடையும்.

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்க திருத்தலத்தைப் போல் உத்தமர்சீலி திருத்தலமும் காவிரி, வடகாவிரி என இரு புண்ணிய நதிகளின் இடையே இயற்கை எழில் கொஞ்சம் அற்புதச் சூழலில் திகழ்கிறது. இங்கு உறையும் ஸ்ரீசெங்கனிவாய்ப் பெருமாளை முறையுடன் வணங்கி இறைவன் அருளிய வண்ணம் ஸ்ரீஅரவிந்த நாயகி தாயாரிடம் தன்னுடைய விண்ணப்பத்தைத் தெரிவித்தார் மிருகண்டு முனிவர்.

தாயாரும், “உத்தமமான குழந்தைச் செல்வத்தைப் பெற விழையும் நீ உத்தமமான மலரான தாமரையை உலகெங்கும் உள்ள திருத்தல தடாகங்களில் மலரச் செய்வாய்,” என்று ஆணையிட்டாள். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் இதன் பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக ரகசியமானது மிகவும் ஆழ்ந்த கருத்துடையது. ஏற்கனவே பல திருத்தலங்களிலும் உள்ள தடாகங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்குகின்றன. அவ்வாறு இருக்கும்போது தேவி புதிதாக தாமரை மலர்களை மலரச் செய்ய வேண்டும் என்றால் அதில் ஏதோ உட்கருத்து இருக்க வேண்டும் அல்லவா?

தேவியின் திருவார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி ஸ்ரீநிவாசனை தியானித்து அதற்கான விளக்கங்களை ஆத்ம விசாரம் செய்யத் தொடங்கினார் மிருகண்டு மகரிஷி. தொடர்ந்த நெடுங்கால தவத்திற்குப் பின் தேவியின் இன்னுரை புரிந்தது. சாதாரணமாய் மலரும் தாமரை மலர்கள் காலையில் மலர்ந்து மாலையில் வாடி விடும். ஆனால், மிருகண்டு முனிவரால் அளிக்கப்படும் தாமரை மலர்கள் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் வாடாத அற்புத தெய்வீக சக்திகள் படைத்ததாக இருக்க வேண்டும், என்பதே தேவியின் திருவார்த்தைகளில் பொதிந்த உட்கருத்து.

ஸ்ரீகைலாசநாதர் உத்தமர்சீலி

ஸ்ரீஆனந்தவல்லி உத்தமர்சீலி

இதை உணர்ந்த மிருகண்டு முனிவர் பேருவகை கொண்டார். தொடர்ந்து உத்தமர்சீலி திருத்தலத்திலேயே பல யுகங்கள் தவத்தில் ஆழ்ந்தார். தவமும் கனிந்து ஆயிரம் வருடங்கள் ஆனாலும் வாடாத தாமரை மலர்களை உருவாக்கும் அற்புத தாவர விதைகளை இறைப் பிரசாதமாகப் பெற்றார். அந்த அற்புதமான தாவர சக்திகளை எல்லாம் பாரதம் எங்கும் உள்ள திருத்தலங்களில் நிரவச் செய்தார். அத்தடாகங்களில் பூத்த தாமரை மலர்கள் எல்லாம் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் வாடாமல் தன்னுடைய தூய இறை சக்தியைப் பரப்பிக் கொண்டே இருக்கும்.

அத்தகைய தாமரை மலர்களைத்தான் கஜேந்திரன் என்ற யானை லட்சுமி தேவியின் பூஜைக்காக தடாகத்திலிருந்து பறித்தது. அதனால்தான் அதன் கால்களை முதலைக் கவ்வியபோது அதனுடன் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட நிலையிலும் யானைத் துதிக்கையில் இருந்த தாமரை மலர் வாடாமல் இருந்தது. இவ்வாறு மிருகண்டு முனிவர் நிர்மாணித்த தாமரைத் தடாகங்கள் பல திருத்தலங்களிலும் தாமரை மலர்களைத் தோற்றுவித்து இறை சேவைக்குத் தங்களை இன்றளவும் அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றன.

இத்தகைய தடாகங்களின் ஓர் அம்ச சக்திகளைக் கொண்டவையே சூரிய தீர்த்தங்கள் என்ற சிறப்புடன் தற்போது பல திருத்தலங்களில் விளங்குகின்றன. அத்தீர்த்தங்களில் நீராடி இறைவனை வணங்குவதால் குழந்தைச் செல்வங்கள் கிட்டும் என்பது உண்மை. உதாரணமாக, திருவெண்காடு சூரிய தீர்த்தத்தில் நீராடி குழந்தைச் செல்வத்தைப் பெற்றோர் இன்றைய உலகிலும் ஆயிரமாயிரமாய்த் திகழ்கிறார்கள்.

இவ்வாறு சூரிய சக்திகளை உலகெங்கும் மிருகண்டு முனிவர் நிர்மாணித்து அருந்தொண்டாற்றியதன் விளைவாக மார்கண்டேயரை அருந்தவப் புதல்வனாகப் பெற்றார். சூரிய சக்திகளுடன் மார்கண்டேயர் விளங்கியதன் பொருட்டே அவர் சூரிய பகவானுக்கு உகந்த சந்தியா வந்தன வழிபாடுகளை காலந் தவறாமல் இயற்றி என்றும் சிரஞ்சீவியாய் அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார்.

உத்தம சந்ததிகளைத் தோற்றுவிக்க சூரிய சக்திகள் மட்டும் அல்லாது சுக்கிர சக்திகளும், சந்திர, குரு சக்திகளும் தம்பதிகள் பெற வேண்டிய அத்தியாவசியமான அனுகிரக சக்திகளாகும். இவ்வாறு சூரிய சக்திகளுடன் சுக்கிர சக்திகளையும் வழங்கும் அற்புத தலமே உத்தமர்சீலி திருத்தலமாகும். இத்தலத்தில் கருட பகவான் எழுந்தருளியுள்ள சுக்கிர சாளரத்தின் வழியே பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இதனால் முறையான சந்ததி விருத்திக்குத் தேவையான சுக்கிர சக்திகளும், நிலையான லட்சுமி கடாட்ச சக்திகளும் பல்கிப் பெருகும்.

சூரிய சக்திகளையும், சுக்கிர சக்திகளையும் உத்தமர்சீலி திருத்தலத்தில் பெற்ற பின்னர் குரு சக்திகளையும், சந்திர சக்திகளையும் பெற உதவும் திருத்தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள திருமாந்துறை திருத்தலமாகும். வாலி தன் பத்தினியான தாரா தேவியுடன் இத்தலத்திற்கு வந்திருந்து தேனிலவு தரிசனம் செய்து அங்கதனை உத்தம வாரிசாகப் பெற்றர் என்பது வரலாறு.

மிருகண்டு முனிவரும் தன் பத்தினியுடன் தேனிலவிற்காக ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் அருள்புரியும் இத்தலத்திற்குத்தான் வருகை புரிந்தார்.

தேனிலவு என்றால் என்ன ?

புது மணத் தம்பதியர் உத்தம சந்ததிகளை உருவாக்கத் தேவையான குரு சக்திகளையும் சந்திர சக்திகளையும் பெறும் வழிபாட்டு முறையே தேனிலவு என்பதாகும். விவரம் தெரிந்த நாள் முதலாகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மூன்றாம் பிறையை தரிசனம்செய்து குரு சக்திகளையும், சந்திர பகவானின் அமிர்த சக்திகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே இந்த நற்பழக்கத்திற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். முதன் முதலில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு என்று பால்சோறு ஊட்டும்போது அதை மூன்றாம் பிறை அன்றுதான் ஊட்ட வேண்டும். அப்போதுதான் பாலில் உள்ள சுக்ர சக்திகள் ஆக்கம் பெறும். அதைத் தொடர்ந்து பௌர்ணமி தினங்களில் ஊட்டும் நிலாச்சோறு பூர்ண சந்திர சக்திகளையும் அமிர்த சக்திகளையும் குழந்தைகளுக்குப் பெற்றுத் தரும்.

அவ்வாறு சிறுவயதிலிருந்தே மூன்றாம் பிறையைத் தவறாமல் தரிசனம் செய்த பின்னர் திருமணத்திற்குப் பின் முதன் முதலில் தம்பதி சமேதராய் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தலே தேனிலவு என்று பெரியோர்களால் அழைக்கப்படுகிறது. குரு சக்திகள் பூர்ணமாக நிரவியுள்ள அமிர்த சக்தித் திரவியம்தான் தேன் என்பது. எனவே, குருவின் கருணை கடாட்சத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றும்போது அதில் ஒரு அங்கமாக தேன் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற நியதி உள்ளது.

ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் திருமாந்துறை

ஸ்ரீபாலாம்பிகை திருமாந்துறை

மேலும் அபிஷேகத்திற்காக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் அவசியம் தேனைச் சேர்க்க வேண்டும் என்பது இக்காரணத்தினால்தான் என்பது தற்போது உங்களுக்குச் சொல்லாமலே புரிய வரும்.  

ஒவ்வொரு மூன்றாம் பிறையையும் ஒவ்வொரு திருத்தலத்திலும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற நியதி இருப்பது போல தம்பதிகள் முதலில் திருமாந்துறை திருத்தலத்தில்தான் மூன்றாம் பிறையை தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு மூன்றாம் பிறையை தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டாவிட்டாலும் திருமணம் நிகழ்ந்த ஒரு மண்டல காலத்திற்குள் அதாவது 48 நாட்களுக்குள் இத்தல இறைவனையும் அம்பாளையும் தம்பதி சமேதராய்த் தரிசனம் செய்து சுவாமிக்கு தேன் அபிஷேகம் நிறைவேற்றுதல் உத்தம சந்ததிகள் கிடைக்க வழிகோலும்.

கலியுக நியதியால் காமத் தவறுகள் கரை புரண்டோடும் என்பது சித்தர்களின் கணிப்பு. விதியை மாற்ற முடியா விட்டாலும் தங்கள் தவறுகளுக்காக உண்மையிலேயே மனம் வருந்தி திருந்தி வாழ நினைக்கும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் தர வேண்டியது மகான்களின் கடமை அல்லவா?

இவ்வாறு எத்தகைய கொடிய காமக் குற்றங்களுக்கும் பிராய சித்த வழிமுறைகளைத் தரக் கூடிய திருத்தலம் பூவுலகில் இது ஒன்றே.

அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி என்று பஞ்ச மாதாக்களை வணங்குவது போல சப்த மாதாக்கள், சப்த கன்னியர், நவ கன்னிகை தேவதைகள் என்றெல்லாம் உண்டு அல்லவா? அதே போல தாய்க்கு இணையாக வைத்துப் போற்றப் பட வேண்டிய உறவு முறைகளையும் பெரியோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ராஜா (தற்காலத்தில் முதலாளி, எஜமான்), குரு, மூத்த சகோதரன், மாமனார் இவர்களின் பத்தினிகளும் தாய்க்கு இணையானவர்களே. ஆனால், இத்தகைய உறவு முறைகளிலும் காமத் தவறுகள் ஏற்பட்டால் அத்தகைய கொடிய தவறுகளுக்கு எங்குமே பிராய சித்தம் பெற முடியாது.

கருணைக் கடலான பெரியோர்கள் அத்தகைய கொடிய தவறுகளுக்கும் பிராய சித்த தலமாக திருமாந்துறை திருத்தலத்தைப் படைத்துள்ளார்கள். ஆனால், பிராயசித்தம் என்பது திருந்திய நெஞ்சங்களுக்கே என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறோம்.

உமா மகேஸ்வரன், மிருகண்டு முனிவர் தம்பதிகள், மீனாட்சி சுந்தரேசனார் போன்றோர் தேனிலவைக் கொண்டாடி நலன்கள் பல பெற்ற திருமாந்துறை திருத்தலத்தில் நீங்களும் தேனிலவைக் கொண்டாடி அனைத்து வளங்களையும் பெற்று வாழும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மைக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

திருச்சி நகருக்கு மேற்கில் 30 மைல் தொலைவில் உள்ள வளம் மிகுந்த ஒரு கிராமத்தில் ஒரு ஜமீன்தார் இருந்தார். நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை, தென்னை, நெல் பயிரிட்டு அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே ஆண் செல்வம். அவன் பள்ளிப் பருவத்தைக் கடந்த நிலை வந்ததும் பெண் மோகம் பெருக ஆரம்பித்தது.

ஜமீன்தாரின் ஒரே வாரிசு என்பதால் அவன் கேட்காமலே அவனுக்கு எல்லாம் கிடைத்தன. கையில் பணம் ஏராளமாக புழங்கியதால் எல்லாவிதமான கெட்ட பழக்கங்களும் ஏற்பட்டன. இதனால் நாளடைவில் அவன் உடல் தளர்ந்து, அவனிமிருந்த ஆண்மை முற்றிலும் மறைந்து போனது. அவனுடைய நிலையை ஓரளவு ஊகித்த ஜமீன்தார் அவசரமாக திருமணத்தை நிகழ்த்தி வைத்தார். பையனால் அதை மறுக்க முடியவில்லை.

சிறு வயதில் ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களால் இல்லற வாழ்க்கை பாலைவனமாக மாறியது. அவனும் பல மருத்துவர்களைச் சென்று பார்த்தான். யாராலும் அவன் பிரச்னைக்கு உரிய சரியான தீர்வைத் தர முடியவில்லை. பூர்வ ஜன்ம புண்ணியத்தால் அவன் வெங்கடராம சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு அவர் பாதங்களில் சரணடைந்தான்.

சுவாமிகளிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றிக் கூறினான். சுவாமிகளும் இது அவனுடைய பூர்வ ஜன்ம பாக்கி என்பதாக அறிந்தார். அவன் உண்மையில் மனம் திருந்தி வாழச் சித்தமாய் இருப்பதையும் அறிந்தார். எனவே அவனுடைய பிரச்னைக்குத் தீர்வு அளிக்க முன் வந்தார்.

ஸ்ரீசோமநாதர் நீடூர்

ஸ்ரீவேயுறுதோளியம்மை நீடூர்

“வாரம் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் நீர் மோர் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தானம் அளிக்கும்போது என்று 300 பேருக்குக் குறையாமல் நீர் மோர் தானம் பெறக் காத்திருக்கிறார்களோ அன்று அவன் அளிக்கும் தானம் நிறைவு அடைவதாக அர்த்தம். அதன் பின்னர் தன்னை வந்து பார்த்தால்போதும்,” என்று கூறி அனுப்பி விட்டார்.

அவனும் சுவாமிகள் கூறியபடியே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் ஸ்ரீரெங்கநாதரைத் தரிசிக்க வரும் இறை அடியார்களுக்கு நீர் மோர், பானகம் தானம் வழங்க ஆரம்பித்தான். ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் உள்ள சந்திர புஷ்கரணியிலிருந்து பெறப்பட்ட பிரசாத தீர்த்தத்தையும் நீர் மோர் தானத்தில் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் எவ்வளவுதான் ருசியான மோர், பானகம் கொடுத்தாலும் ஒரே சமயத்தில் தானத்திற்காகக் காத்திருக்கும் அடியார்களின் எண்ணிக்கை 300ஐ அடையவில்லை.

ஆனால், நம்பிக்கை சிறிதும் இழக்காமல் பல வருடங்கள் நீர் மோர் தானம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தான். ஒரு வருட சித்திரைத் தேர் வைபவத்தில் ஆயிரக் கணக்கான அடியார்கள் ஸ்ரீரங்கத்தில் கூடவே 300 அடியார்களுக்கு மேல் வரிசையில் நீர் மோர் தானத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அவனும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அன்னதானம் பூரணம் அடைந்ததற்காக ஸ்ரீரெங்கநாதப் பெருமாளுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு, வீட்டிற்குக் கூடச் செல்லாமல் நேரே சென்னையை நோக்கிப் புறப்பட்டான் நமது சுவாமிகளின் தரிசனத்திற்காக.

சுவாமிகளிடம் அன்னதான விவரங்களைக் கூறினான். அவரும் அவன் கூறிய விஷயங்களைக் கேட்டு விட்டு, ”உன்னுடைய மூதாதையரிகளின் அரும்பெருங் கருணையால் உனக்கு நல்ல சந்ததி கிட்டும் காலம் வந்து விட்டது. நல்ல நிலையில் மேலுலகத்தில் இருக்கும் உன்னுடைய பாட்டானாரே உனக்குக் குழந்தையாகப் பிறப்பதற்குக் காத்திருக்கிறார்,” என்ற தேனினும் இனிய செய்தியை அவனிடம் கூறி அடுத்த ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மண அளவில் தன்னை வந்து காணுமாறு பணித்தார்.

அவ்வண்ணமே அவனும் நமது சுவாமிகளிடம் வந்து சேர்ந்தான். அதற்கு முன்னரே சுவாமிகள் அவனுக்குத் தர வேண்டிய மருந்தைத் தயாரித்து வைத்திருந்தார்கள். ‘அ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் மூலிகையுடன் அதில் கால் பகுதி ‘ஆ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் மூலிகையைச் சேர்த்து மோர் விட்டு அம்மியில் அரைக்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரம் விடாமல் அரைக்க வேண்டும். ஒரு நிமிட இடைவெளி விட்டு மருந்தை அரைத்தால் கூட மருந்தின் வீரியம் குறைந்து விடும். நமது சுவாமிகளும் அவரது துணைவியாரும் ஒருவர் மாற்றி ஒருவராக அம்மியில் மருந்தை அரைத்து தயார் செய்தனர்.

விழுதாக இருந்த அந்த மருந்தை அவனிடம் கொடுத்து அங்கேயே சாப்பிடும்படிக் கூறினர். அதை உட்கொண்ட அடுத்த விநாடியே தன்னுடைய உடம்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. சுவாமிகள் மேலும் பல அறிவுரைகளை அவனுக்குக் கூறினார். பின்னர் சுவாமிகளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினான்.
பாலைவனமான அவனுடைய இல்லற வாழ்வு மனம் வீசும் சோலையாகப் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று குழந்தைகள் அவனுக்குப் பிறந்தன. இதனால் குரு நம்பிக்கை நன்கு தழைத்தது.

இன்று குருவின் சத்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அவர் இட்ட பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வரும் உத்தம அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்கின்றார்.

திருச்சி திருநெடுங்கள நாதருக்கு சூரிய பகவான் பூஜை செய்யும் நாட்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சுவாமியின் லிங்கத் திருமேனி முழுவதும் நிறையுமாறு மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்து வணங்குவதால் தீராத கடன் பிரச்னைகளால் வருந்துவோருக்கு நல்ல நிவாரணம் கிட்டும். தனக்கு உரிமையுள்ள பூர்வீக சொத்துக்கள் கிடைக்க நியாயம் தேடித் தருபவரும்
திருநெடுங்கள நாதரே.

சுவாமிகள் அளித்த பிராயசித்த வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் அதில் உள்ள தெய்வீக ரகசியங்கள் தெளிவாகும். இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறைகளையே சுவாமிகள் அனைவருக்கும் போதித்து வந்தார். அவர் அற்புதம் என்று ஒரு கூறி ஒரு செயலைச் செய்யாவிட்டாலும் கூட அவர் ஆற்றிய செயல்கள் அனைத்தும் அற்புதமாகவே மலர்ந்தன.

சந்தான விருத்திக்கு சூரிய, சந்திர, சுக்கிர, குரு சக்திகள் பெருக வேண்டும் என்பது இறை நியதி அல்லவா? சுவாமிகள் அருளிய மோர் தானத்தில் இத்தனை சக்திகளும் ஒன்று திரண்டன. அந்த அடியார் அளித்த மோர் தானத்தில் சுக்கிர சக்திகளும், ஞாயிற்றுக் கிழமை தானம் அளித்ததால் அதில் சூரிய சக்திகளும், சந்திர புஷ்கரிணியிலிருந்து பெறப்பட்ட பிரசாதத்தை தானத்தில் சேர்த்ததால் அதில் சந்திர சக்திகளும், 300 பேர் ஒரே சமயத்தில் வரிசையில் நின்று தானம் பெற்றதால் குரு சக்திகளும் ஒன்று சேர்ந்து அவருக்கு சந்தான பாக்கியத்தை நல்கின.

மேலும், சுவாமிகள் வழங்கிய மருந்தில் உள்ள மூலிகையில் குறில் ஒலி  ஆண் சக்தியையும், நெடில் ஒலி பெண் சக்திகளையும் அளித்தன. குறிலும் நெடிலும் சேர்ந்த சிவசக்தி ஐக்ய பிரசாதமான மருந்து அவருக்கு சந்தான பாக்கியத்தைத் தந்தது. எனவே சிவசக்தி ஐக்யத்தைக் குறிக்கும் புஜங்கப் பாடல்களை பகல் இரவு ஐக்யமாகும் சந்தி நேரங்களில் ஓதி குசா விளக்கில் மூன்று தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்ப ஒற்றுமை நிலவும், சந்ததிகள் நலம் அடைவர். ஸ்ரீஆதி சங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் போன்ற துதிகளில் இத்தகைய சந்தான வர சக்திகள் அபரிமிதமாய் பொதிந்திருக்கும்.

உத்தமர்சீலித் திருத்தலத்தில் உறையும் பெருமாள் ஸ்ரீசெங்கனி வரப் பெருமாள் என்றும் புகழப்படுகிறார். அறிவு முதிர்ந்த உத்தம குழந்தைகளை அளிப்பவர் என்ற பொருளுடன் பெரியோர்கள் இத்தல மூர்த்தியை அவ்வாறு அழைக்கின்றனர். சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்யாள் சுவாமிகளின் பெற்றோர்கள் இத்தலத்தில் வழிபட்டே அவரை உத்தம புத்திரனாகப் பெற்றதால் சித்தர்கள் காஞ்சி முனியை, செங்கனியான் ஈன்றெடுத்த கனிந்த கனி’, என்று பாராட்டுகிறார்கள். கலியுகம் கண்ட காவி உடை தரித்த கடைசி சன்னியாசி அவர் ஒருவரே என்பது சித்தர்கள் அவருக்குச் சூட்டும் புகழ் மாலையாகும்.

மனிதன் என்றால் அவனுடைய வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளுடன் அமையும் என்பது இறைவனின் விதி. எனவே ஒரு மனிதன் அனைத்து லட்சுமி கடாட்ச அனுகிரக சக்திகளைப் பெற்று வாழ்ந்தாலும் அந்நிலை நிரந்தரமாக அமையுமா என்பது ஒரு கேள்விக் குறியே. இத்திருத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு அருள்புரியும் ஸ்ரீஅரவிந்த நாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் ஸ்வஸ்திஸ்ரீ யோகம் பூண்டிருப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத திருக்கோலமாகும். இந்த யோகத்தின் வல்லமையால் இத்தல மூர்த்தியை வழிபட்டுப் பெறும் லட்சுமி கடாட்ச சக்திகள் என்றும் தேயாமல், மாறுபாடு அடையாமல் பல்கிப் பெருகும் என்று சித்தர்களின் கிரந்தங்கள் பறைசாற்றுகின்றன.

இத்தலத்தில் அருள்புரியும் கணபதி மூர்த்தி ஸ்ரீவரத விநாயகராக எழுந்தருளி இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் வாய் விட்டு கேளாமலே அவர்கள் எண்ணுவதை எண்ணியவாறே வழங்கும் வள்ளல் மூர்த்தியாவார். பெரும்பாலும் ஸ்ரீவேணுகோபால சுவாமி எழுந்தருளி உள்ள திருத்தலங்களில் இத்தகைய வரத மூர்த்திகளின் அருளாட்சி பொலியும். காரணம் வேணுகோபால சுவாமி எட்டாம் எண்ணுக்கு உரித்தானவர். எட்டாம் எண்ணை தலை கீழாகப் போட்டாலும் எட்டுதானே வரும். எனவே பக்தர்கள் விதி வசத்தால் அவர்கள் நிலை தலை கீழாக மாறினாலும் அதையும் சீர் செய்யும் மூர்த்திகளே வேணுகோபால சுவாமியும் வரத கணபதி மூர்த்தியும்.

எட்டு கணபதி மூர்த்திகள்

மனிதன் வாழ்க்கையின் எட்டு நிலைகளைக் குறிக்கும் எட்டு கணபதி மூர்த்திகளின் சக்திகளை ஒரு சேரப் பெற்ற ஸ்ரீவரத கணபதி மூர்த்தியை வழிபட்டு எந்நிலையிலும் மாறாத லட்சுமி கடாட்ச சக்திகளை கைக்கொள்ள உதவுவது இத்திருத்தலத்தின் மற்றோர் சிறப்பம்சமாகும்.

எட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்

 1. ஸ்ரீவரத கணபதி

  தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தி. குறிப்பாக 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி.  இவர் அளிக்கும் செல்வம் நிரந்தரம் பெறும். எடுத்த காரியத்தை நடத்தும் மூர்த்தி இவரே.

 2. பல்லாலேஸ்வர கணபதி
  வாழ்க்கையில் உள்ள மேடு பள்ளங்களை அறிந்து வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற அருள்புரியும் கணபதி மூர்த்தி. சகட யோக ஜாதகக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே.

 3. மகா கணபதி
  இளமை இருக்கும் வரை மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சுவது கிடையாது,. ஆனால், ஒரு சிறு நோய் நொடியில் விழுந்து விட்டால் கூட மரண பயத்தால் மிரண்டு விடுபவர்களே பெரும்பான்மையினர். இறுதிக் கால வாழ்வு மரண பயத்தால் நசித்து விடாமல் இருக்க அருள்புரியும் மூர்த்தி இவரே.

 4. மயூரேஸ்வர கணபதி

  கார், பஸ் போன்ற வாகனங்கள் தயாரிப்பவர்களும், உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் வணங்க வேண்டிய மூர்த்தி. அடிக்கடி விமானப் பயணங்கள் மேற்கொள்வோர் வழிபட வேண்டிய அனுகிரக மூர்த்தி இவரே.

 5. சித்தி விநாயகர்

  கன்னிப் பெண்கள் வணங்க வேண்டிய மூர்த்தி. தங்களுக்கு வரப் போகும் கணவன்மார்கள் பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும் என்று கன்னிப் பெண்கள் நினைப்பது இயற்கையே. ஆனால், பணம் படைத்தவனை விட நல்ல மனம் படைத்தவனே மேல் என்று உத்தம வழிகாட்டும் மூர்த்தி இவரே.

 6. சிந்தாமணி விநாயகர்

  தங்களையும் அறியாமல் பலரும் நான்காம் பிறையை தரிசனம் செய்து விடுவதுண்டு. நான்காம் பிறையைப் பார்த்தால் வீண் பழி நேரும் என்று கிருஷ்ண பரமாத்மாவே தன்னுடைய அனுபவத்தால் நமக்குப் பாடம் புகட்டி உள்ளார். இவ்வாறு தவறிப் போய் நான்காம் பிறையை தரிசனம் செய்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே சிந்தாமணி விநாயகர்.

 7. மூன்றாம் பிறை அன்றுதான் சிந்தாமணி விநாயகர் அற்புதமான சிந்தாமணி என்ற ஆபரணத்தை தரித்தார். அதனால் பக்தர்கள் இவரை வணங்குவதால் மூன்றாம் பிறையை தரிசனம் பெற்ற பலன் கிட்டும். உலகிலுள்ள அனைத்து நவரத்தினங்களின் சக்தியை ஈர்க்கும் வல்லமை உடையதே விநாயகர் தரித்துள்ள சிந்தாமணி ஆகும். எனவே, சிந்தாமணி விநாயகரைப் பிரார்த்னை செய்து நவரத்தினங்களை அணிவதால் லட்சுமி கடாட்ச சக்திகள் ஸ்திரம் பெறும். நவரத்தினம் தன் சக்திக் கிரணங்களை விரயம் செய்யாது.

 8. கிரிஜாத்மஜ கணபதி

  குன்றிருக்கும் இடமெல்லாம் கணபதி குடியிருக்கும் இடம் என்ற சிறப்பைக் கொண்டவரே கிரிஜாத்மஜ கணபதி. மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுக்காத உயர் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் வணங்க வேண்டிய மூர்த்தி இவரே. தாயை குருவாக மதிப்பவர்களுக்கும், தாய் சொல்லைத் தட்டாத தனயன்களுக்கும் அருள்புரியும் மூர்த்தி.

 9. விக்நேஸ்வர கணபதி மூர்த்தி

  நற்காரியங்களில் ஏற்படும் இடர்களைக் களைந்து இறுதி வெற்றியைத் தரும் மூர்த்தி. அரிஷ்ட யோகங்களிலிருந்து மீள அருள்புரியும் அண்ணல்.

மேற்கூறிய எட்டு கணபதி மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை ஒருங்கே நல்கும் ஸ்ரீவரத கணபதி மூர்த்தியைப் போல 32 கணபதி மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை ஒன்று திரட்டி வழங்கும் மூர்த்திகளும் உண்டு.

உத்தமர்சீலி வழிபாட்டு முறைகள்

‘சீலம் மிகுந்தால் ஞாலம் மிகும்’, என்று இத்திருத்தல மகிமையைப் பற்றி பெரியோர்கள் எடுத்துரைக்கின்றனர். எந்த அளவுக்கு இங்கு உறையும் இறை மூர்த்திகளை பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய புகழ் இவ்வுலகில் நிலைத்திருக்கும் என்பது இம்மூதுரையின் பொருள்.

 1. சூரிய சக்திகள் நிறைந்த தலம் என்பதால் மாதப் பிறப்பு தினங்களிலும், சூரியனுக்கு உகந்த சித்திரை, ஆவணி மாதங்களிலும் சர்க்கரைப் பொங்கல் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் தோல் நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். நீர்க் கடுப்பு, அம்மை, மூலம் போன்ற உஷ்ண நோய்களின் வேகம் தணியும்.

 2. மாலைக் கண், கண் கட்டிகள், கண் புரை போன்ற நோய்களால் அவதியுறுவோர் இட்லியுடன் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து தானமாக அளித்து வந்தால் நேத்ர சக்திகள் விருத்தி பெற்று நலம் பெறுவர்.

 3. ஒழுக்கமுள்ள கணவன், குணவதியான மனைவியைப் பெற விரும்புவோர் விஷ்ணுபதி தினங்களில் தங்கள் கைகளால் அரைத்த மஞ்சளால் திருமஞ்சனம் நிகழ்த்தி மணமுள்ள மாலைகளை பெருமாளுக்கும் தாயாருக்கும் சூட்டி வழிபடுவதால் மனம் விரும்பும் மண வாழ்க்கை அமையும். இத்தலத்தில் உறையும் ஸ்ரீஆனந்தவல்லி சமேத கைலாச நாதருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை நிகழ்த்துவதும் அவசியமானதாகும்.

 4. புதன் கிழமைகளில் முந்திரிப் பருப்பு கலந்த புளியோதரையை இறை மூர்த்திகளுக்குப் படைத்து தானம் அளித்தலால் வெளிநாட்டுப் பயணங்கள் பாதுகாப்பாய் அமையும். கப்பல்களில் பணிபுரிவோர் நலம் பெறுவர்.

அனைத்து வளங்களையும், வசதிகளையும், செல்வங்களையும் ஒருவர் பெற்று விட்டாலும் அவை அனைத்திலும் உத்தமமான செல்வம் எது? வள்ளுவப் பெருந்தகை செல்வத்தில் தலை சிறந்தது கேள்விச் செல்வமே என்று உறுதியாய்க் கூறிகிறார். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை எவ்வளவோ வார்த்தைகளை ஒவ்வொரு மனிதனும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு செவிச் செல்வம் ஆகி விடுமா, அவனைக் கரையேற்றி விடுமா?

இதை ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் உத்தம சற்குரு ஒருவரின் உபதேசமே உண்மையான செவிச் செல்வம் என்பது புலனாகும். சற்குருவின் நல்வார்த்தைகளே ஒரு மனிதன் பெறக் கூடிய உத்தமமான செல்வமாகும், இதுவே என்றும் அழியாச் செல்வம், யாரும் திருடிச் செல்ல முடியாத பாதுகாப்பான செல்வம்.

இத்தகைய உயர்ந்த செல்வத்தை பெற விழைவோர் வியாழக் கிழமைகளில் இத்திருத்தலத்தில் உறையும் ஆஞ்சநேய மூர்த்திக்கு மூன்று வரிசைகளில் அமைந்த ஏலக்காய் மாலையைச் சூட்டி வணங்குவதால் குரு வார்த்தைகளில் நம்பிக்கை வளரும். இதுவரை சற்குருவின் தரிசனம் பெறாதவர்கள் உத்தம குருவின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.

ஏலக்காய் மூலிகை ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தன்மையை உடையது. அதனால்தான் சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், பானகம், தாம்பூலம் போன்ற இறைப் பிரசாதங்களில் ஏலக்காயைச் சேர்த்து ஆன்மீக உணர்வைப் பெரியோர்கள் வளர்த்து வருகின்றனர்.

ஓம் குருவே சரணம்


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam