ஆரண்யத்தில் வழிகாட்டும் அழற்பிழம்பே ஆசான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சற்குருவின் பிறந்த நாள்

நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவம் என்னும் மாபெரும் சித்த ஜயந்தி ஒவ்வொரு வருடமும் மே மாதம் 21ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற ஜெயந்தி வைபவங்களை விட இந்த சுபகிருது வருடத்தில் தோன்ற இருக்கும் ஜெயந்தியானது மிகவும் சிறப்புடன் திகழ்வது நம் பூலோக மக்களின் பெரும் பாக்கியமே.

அப்படி என்ன சிறப்பு இந்த சுபகிருது வருட ஜெயந்தி என்று உங்கள் மனம் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ?
சௌந்தர்ய லஹரியின் சிறப்பைப் பற்றி கனிந்த கனி பரமாச்சாரியார் குறிக்கும்போது அம்பிகையின் பேரழகைப் பற்றி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் விளக்கும்போது அம்பிகையின் புகழை நான் பாடுவது என்பது கண்களைக் கூசச் செய்யும் சூரிய பகவானின் ஒளிக் கதிர்களின் முன் அகல் தீபத்தைக் காட்டுவது போலவும், எல்லையில்லா சமுத்திரத்திற்கு உத்தரிணியால் நீர் வார்ப்பது போலவும் அல்லவா ஆகும் என்பார். அதுபோன்றதுதான் நம் சற்குருவின் பிறந்த நாள் மகிமையைப் பற்றி ஒரு அடிமட்ட அடியார் கூறுவது ஆகும்.

அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற முறையில் சற்குருவின் அருளால் சற்குருவின் பிறந்த நாள் மகாத்மியத்தைப் பற்றி இங்கு ஓரளவு விளக்க முற்படுகிறோம். வரும் 21.5.2022 சனிக் கிழமை அன்று ஒன்பது கிரகங்களுமே ஐந்து ராசிகளில் இணைந்து சஞ்சரிக்கின்றன. பொதுவாக, ஒரு ஜாதகத்தில் 1, 4, 7, 10 என்ற வீடுகளும் அதிலும் சிறப்பாக 5, 9 என்ற லட்சுமி தானங்களும் சிறப்படைகின்றன. அவ்வாறு இருக்கும்போது மிக்க சிறப்புடைய லட்சுமி தானமான ஒன்பதாம் வீட்டில் குரு மங்கள கந்தர்வா என்ற நாமத்தைக் குறிக்கும் குரு, செவ்வாய் (மங்களம்), சுக்கிரன் (கந்தர்வம்) என்ற மூன்று கிரகங்களும் இணைந்து அருளாட்சி செய்கின்றன என்றால் இந்த ஒரு சிறப்பை விளக்குவதற்கு மட்டுமே யுகங்கள் போதாது.

உலகில் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அது நல்லது அல்லது கெட்டது என்ற ஒரு பயன்பாட்டைத் தரும் அல்லவா ? உதாரணமாக, ஒரு கத்தியை எடுத்துக் கொண்டால் அதைக் கொண்டு பழத்தையும் நறுக்கலாம் அல்லது ஒருவர் கழுத்தையும் அறுக்கலாம். ஆனால்,சித்தப் பெருமக்களால் அருளப்பட்ட குசா தத்துவம் நன்மை என்ற ஒன்றை மட்டும் வர்ஷிக்கும் தனித்தன்மை கொண்டது. சுபகிருது வருடத்தில் நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தில் குரு கிரகம் மங்கள கந்தர்வ கிரகங்களுக்கிடையே குசா சக்தியுடன் பொலிவதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த அனுகிரகம், குசா அனுகிரகம், குரு அனுகிரகம்.

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே திகழும் ரெங்கநாதபுரம் என்ற கஜாரண்ய திருத்தலமே இவ்வருட சற்குரு பிறந்த நாள் வழிபாட்டுத் தலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இதன் காரணம் என்னவோ ? எப்படி மூன்று பொருள்கள் நடுவில் திகழும் ஒரு பொருள் குசா சக்தியுடன் துலங்குமோ அது போல் ஏழு யானைகளுக்கு நடுவே திகழும் யானையும் வற்றாத வர நிதியும் குன்றாத குணநிதியும் அளிக்கும் என்பது ஆசான் அருளுரை. ரெங்கநாதபுரம் சிவத்தலத்தில் ஏழு யானைகள் சப்தகஜ சக்திகளாக வீற்றிருப்பது பக்தர்கள் அறிந்த ஒன்றே. இந்த ஏழு யானைகளின் சக்தியையும் மக்களுக்கு வற்றாத வர நிதியாக, குன்றாத குண நிதியாக அளிப்பதற்காகவே பரமாச்சார்யார் சுவாமிகள் இத்தலத்தில் ஏழு நாட்கள் தங்கி கஜ பூஜைகள் ஆற்றினார் என்ற வரலாறும் சுவையளிப்பதே.

மூன்றும் ஆறும் முத்தாய்ப் பொலியட்டும்

மூன்றின் குசா ஆறு, ஆறின் குசா மூன்று. இத்தகைய நிரந்தர நற்சக்திகள் பொங்கிப் பொலியும் ஆண்டே 2022 என்பதாகும். நம் சற்குருவின் பிறந்த வருடம் 1947, மூன்றைக் குறிப்பது. இந்த வருடமோ ஆறிற்கு உரித்தானது. இத்தகைய நிரந்தர நற்சக்திகளை ஸ்ரீகஜாரண்ய ஈசனே பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக வழங்குகின்றான் என்பதே இந்த நிரந்தர நற்சக்திகள் வழங்கும் சிரஞ்சீவித்துவ தன்மையாகும். இறைவன் ஒருவனே நிரந்தரம், ஈசன் மட்டுமே என்றும் நிரந்தர அனுகிரக சக்திகளை அருளவல்லவன் என்பதை உணர்ந்து கொண்டால் இந்த நிரந்தர குசா சக்திகளின் தன்மை புரிய வரும். இந்த நிரந்தர சிரஞ்சீவித்துவ வரங்களை அருளவல்லதும் இந்த சுபகிருது வருடத்தில் ஆரண்ய தலத்தில் ஏழு யானைகளையோ அல்லது அதற்கு அதிகமாகவோ வைத்து நிகழ்த்தும் வழிபாடுகளாகும்.

ஸ்ரீராமானுஜ ஆச்சாரியார்

இங்கு நம் சற்குரு அருளிய யானைகளுக்கு இயற்றக் கூடிய சில உபசார வழிபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எவை சாத்தியமோ அவற்றை அடியார்கள் ஏற்று நிகழ்த்துவது சிறப்பாகும். கஜ பூஜை என்பது பொதுவாக அரசர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்ற அளவிற்கு மிகுந்த பொருள் செலவும் ஆள் பலமும் தேவைப்படக் கூடிய பூஜையாக இருப்பதால் முடிந்த மட்டும் அடியார்கள் ஒன்று சேர்ந்து அவரவர் இயன்ற பொருள் உதவியை அளித்து ஒற்றுமையாகச் செயல்படுவதே சிறப்பாகும். சிறிது பொருள் உதவி கூட அளிக்க முடியாத சூழ்நிலையில் உள்ள அடியார்கள் அனேகர் உண்டு என்பதையும் நாம் மறுக்க முடியாது. அவர்களுக்கு உதவும் முகமாக கீழ்க்கண்ட பிரார்த்தனை முறை அளிக்கப்பட்டுள்ளது. இதை முடிந்தவரை அடியார்கள் நிறைவேற்றி வந்தால் நம் சற்குருவின் ஜன்ம தினம் கோலாகலமாக இனிது நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

காயத்ரீ மந்திரத்தால் சாதிக்க முடியாத காரியம் உலகத்தில் எதுவுமில்லை என்பார் நம் சற்குரு.
ஓம்
பூர் புவஹ சுவஹ
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
அல்லது தமிழில்
ஓம்
ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ
அந்த சுடர்க் கடவுளின்
மேலான ஒளியைத் தியானிப்போமாக
என்ற ஐந்து பகுதிகளாக பிரம்ம காயத்ரீ மந்திரத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து காயத்ரீ மந்திரப் பிரிவுகளையும் வாய் விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஓதி துதிக்கையைத் தூக்கிக் கொண்டிருக்கும் (படத்தைப் பார்க்கவும்) யானையின் ஐந்து பகுதிகளுக்கு, அதாவது துதிக்கை, நான்கு கால்களுக்கு அர்ப்பணிப்பதாக மனதில் பாவனை செய்து வந்தாலே போதும். நம் சற்குருவால் அளிக்கப்பட்ட என்ன எளிமையான காயத்ரி கஜாரண்ய வழிபாடு. இந்த வருடம் மட்டும் அல்லாது நம் ஆயுள் முழுவதுமே இத்தகைய நவகிரக காயத்ரி மந்திர வழிபாட்டை ஏற்று வருதல் என்பது கிடைத்தற்கரிய பேறே.

மதயானையின் நடையழகே
மகான்களின் நடையழகு !

அவரவர் மனத்திறனைப் பொறுத்து நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தன்று ஐந்து ராசிகளில் பொலியும் ஒன்பது கிரகங்களையும் வரிசையாக,
மகர ராசி .. சந்திர பகவான்
கும்ப ராசி .. சனீஸ்வர பகவான்
மீன ராசி .. செவ்வாய் பகவான், குரு பகவான், சுக்ர பகவான்
மேஷ ராசி .. ராகு பகவான் (இணைந்த கேது பகவான்)
ரிஷப ராசி .. சூரிய பகவான், புத பகவான்
என்று மனதிற்குள் பூஜை செய்து வருவதும் அற்புத பலன்களை அளிக்கக் கூடியதே. அனுஜம் என்றால் புத்திரன், வாரிசு என்றெல்லாம் பொருள் உண்டு. ராம அனுஜம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீராமானுஜர் இவ்வாறு மேற்கண்ட முறையில் நவகிரக பூஜைகளை இயற்றியே மனிதனின் பூரண ஆயுளான 120 ஆண்டுகளை முறையாக வாழ்ந்து, மக்களுக்கும் பக்தர்களுக்கெல்லாம் பயனுள்ள முறையில் சேவையில் கழித்தார் என்பதை உணர்வதே நம் சற்குருவிற்கு பல்லாண்டு கூறும் பயனுள்ள முறையாகும்.

கோசர கிரக நிலை என்பது இன்றைய தினத்தில் கிரகங்கள் மேஷம் முதலான ராசி கட்டங்களில் நிற்கும், சஞ்சரிக்கும் நிலையாகும். நாம் ராம பிரான், கிருஷ்ண பகவான், நம் சற்குரு போன்ற பெரியோர்களின் ஜாதகக் கட்டங்களில் சஞ்சரிக்கும் கிரகங்களை தினமும் தரிசித்து பூஜைகளை இயற்றி வந்தாலே அது கோசர கிரக வழிபாடாக மாறி நற்பலன்களை அளிக்கும் என்று கூறுகிறோம். அதே போல இந்த சுபகிருது ஆண்டில் நம் சற்குருவின் பிறந்த நாளில் விளையும் கிரக சஞ்சார நிலையையே நாம் நிரந்தரமாக ஏற்று வழிபட்டு வந்தாலும் அதுவும் உத்தமமான நவகிரக வழிபாடாக மலர்ந்து சிறந்த பலன்களை வர்ஷிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

பஞ்ச பிரகார பதநி தீர்த்தம்

நம் சற்குருவின் பிறந்த நாளன்று திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீகஜாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் கஜ பூஜைகள் நிகழ்த்தும் போது யானைகளுக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்பு. இதன் பின்னணியில் அமைந்த வரலாறு சுவையானதே. ஆனேஸ்வரர் திருத்தல விமானத்தை ஏழு யானைகள் தாங்குகின்றன என்று கூறினோம் அல்லவா. உண்மையில் ஒரு யுகத்தில் சப்த ரிஷிகளே ஸ்ரீஆனேஸ்வரருக்கு யானை உருவில் அபிஷேக ஆராதனைகளே நிறைவேற்றி மகிழ்ந்தனர். அப்போது ஸ்ரீஆனேஸ்வரர் தானும் ஒரு யானையாக மாறி அவர்களுக்கு காட்சி அளித்து சப்தரிஷிகளின் உபசாரங்களையும் யானை வடிவிலேயே மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாராம். காளையார்கோவில் திருத்தலத்தில் இறைவன் காளை வடிவில் ஸ்ரீஅகத்தியருக்கு காட்சி அளித்ததை இங்கு நினைவு கூர்க. பக்தர்களின் நம்பிக்கை, ஆர்வத்தைப் பொறுத்து வரும் 21.5.2022 சனிக் கிழமை அன்று ஸ்ரீஆனேஸ்வர மூர்த்தியே யானை வடிவில் தோன்றும் சந்தர்ப்பம் மிகுதியாக உள்ளதால் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீகாலபைரவர்
கீழவாளாடி லால்குடி

இந்த அபூர்வ சந்தர்ப்பத்தில் யானைகளை அபிஷேகிப்பதற்காக அடியார்கள் தீர்த்தத்தை முன்னரேயே ஏற்பாடு செய்து கொள்வது சிறப்பாகும். காவிரி அல்லது கொள்ளிட தீர்த்தத்தை வெள்ளி, செம்பு, மண் குடங்களில் நிரப்பி அதற்கு வாசமுள்ள மலர் மாலைகளைச் சூட்டி, ஐந்து மாவிலைகளைகள், மஞ்சள் பூசிய தேங்காயால் அலங்கரித்து திருவானைக்கோவில் பஞ்ச பிரகாரம் அல்லது ஆனேஸ்வரர் திருத்தலத்தை வலம் வந்து வணங்குதல் நலம். பஞ்ச பிரகாரமாக இருந்தால் ஒரு பிரதட்சணமும், ஆனேஸ்வரர் திருத்தலமாக இருந்தால் ஐந்து பிரதட்சண சுற்றுகளும் இயற்றுதல் சிறப்பு. பிரதட்சிணமாக தலையில் தீர்த்தத்தை சுமந்து வரும்போது

பஞ்ச பிரகார பதநி தீர்த்தம்
அஞ்சுதல் அஞ்சாமை அவனுக்கில்லை
குஞ்சித பாதம் குவலயம் காக்குமே
நெஞ்சிலே வைப்போம் நிமலனடி தன்னை

என்ற பதநி துதியை ஓதுதல் சிறப்பு. துளசி, வில்வல், வெட்டிவேர், கடுக்காய், சிறிது பச்சை கற்பூரம் என்ற ஐந்தையும் இந்த பதநி தீர்த்தத்தில் சேர்த்தல் நலம். ஸ்ரீவசிஷ்டர் தலைமையில் சப்த ரிஷிகளும் மேற்கண்ட துதியை ஓதி கொள்ளிட தீர்த்தத்தை தலையில் சுமந்து சென்று ஸ்ரீஆனேஸ்வரருக்கு அபிஷேகம் இயற்றிய காட்சியை நேரில் தரிசனம் செய்யும் பெருமையைப் பெற்றவர்கள் கனிந்தகனி பரமாச்சாரியாரும், நம் கோவணாண்டியும், சிறுவனான வெங்கடராமனும் ஆவர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆசார அனுஷ்டான முறைகளில் பெரிதும் வேறுபாடு இருப்பதால் யானைகள் ரெங்கநாதபுரம் திருத்தலத்தை அடைந்தவுடன் அவைகளுக்கு வயிறார கரும்பு, கவளச் சோறு, வாழைப்பழம், சுத்தம் செய்யாத அருகம்புல் போன்ற புல்வகைகள் இவற்றை அளித்தல் நலம். பின்னர் யானைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி, ஆடை அணிகலன்கள் அணிவித்து, அலங்கரித்து மீண்டும் அவைகளுக்கு உணவளிக்கலாம். ஒவ்வொரு யானையும் குறைந்தது இரண்டு டன் கரும்பு சாப்பிடக் கூடியது என்பதை நினைவில் கொண்டு முடிந்த மட்டும் யானைகளுக்கு வயிறார உணவளிப்பது சிறப்பாகும். இது வாழ்வில் ஒரு முறையே கிட்டக் கூடிய சந்தர்ப்பம் என்பதால் அடியார்கள் அரிதிலும் அரிய இந்த சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பெரியவருக்கு பெரியவர்
அளிக்கும் அனுகிரகம்

ஒரு யுகத்தில் சாகம்பரி தேவி ஏழு தாமரைகளை இங்குள்ள தீர்த்தத்தில் தோற்றுவித்தாள் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த உத்தம சந்தர்ப்பத்தில் கொள்ளிட தீர்த்த அபிஷேகத்திற்குப் பின் இந்த சாகம்பர்ய சக்திகளை யானைகள் பெற்று மகிழும்படி ஒவ்வொரு யானை பகவானுக்கும் குறைந்தது 108 குடங்களால் அடியார்கள் தங்கள் கைகளால் இந்த திருக்குளத்திலிருந்து நீர் இறைத்து அல்லது மோட்டார் பம்புகள் மூலம் நீர் இறைத்து வார்த்தலும் சிறப்புடையதே. இதனால் யானைகள் பெறும் ஆனந்தத்தை நேரில் கண்டு அனுபவித்தால்தான் உணர முடியும். இந்த திருக்குள தீர்த்தத்தில் Krishna Musk என்ற நறுமணத்தை (scent) கலந்து யானைகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றுதலும் நலமே.

தற்போது ரெங்கநாதபுரம் திருக்குளத்தில் நீர் இல்லாததால் லாரிகளில் காவிரி, கொள்ளிடம் தீர்த்தங்களைக் கொண்டு யானைகளுக்கு அபிஷேகம் இயற்றுதலும் ஏற்புடையதே. அனைத்தும் இறைவன் செயலே, கடவுளின் அனுகிரகத்தை அளிக்கவல்லதே என்பதே இந்த நீர் வற்றிய நிமல நிலையுமாகும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. இது வெறும் பழமொழி அல்ல என்று நிரூபிப்பதே கஜாரண்யேஸ்வர திருத்தலமாகும். இத்திருக்குளத்தில் யானைகளை நிற்க வைத்து லாரிகளில் பெறப்படும் தீர்த்தங்களால் அபிஷேகம் இயற்ற வேண்டும். அவ்வாறு அபிஷேகம் நிறைவேற்றும்போது பல லாரி தீர்த்தங்களால் குளம் சேறாகி விடும் அல்லவா ? இந்த சேற்றில் அடியார்கள் புரள்வது, யானைகள் புரள்வது, இந்த சேற்றால் யானைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டுதல் என்பது வாழ்வில் கற்பனை செய்ய முடியாத அனுகிரகங்களை அளிப்பதாகும்.

திருஅண்ணாமலை தசமுக தரிசனம்

எத்தகைய தோல் வியாதிகளும் இந்த சேற்றில் புரளும் அனுகிரகத்தால் குணமாகும் என்பது வியக்க வைக்கும் உண்மையாகும், நாடோடியையும் நாட்டு மன்னனாக்கும் குபேர சக்திகளை வர்ஷிக்க வல்லது இது. கஜ அபிஷேகத்தின் போது கிட்டும் கஜ சாணத்தை காய வைத்து அதில் துளையிட்டு மூன்று கிராம் எடையுள்ள சுத்த தங்கத்தை வைத்து தங்க பஸ்பம் செய்து அதை தேனில் கலந்து உட்கொண்டு வந்தால் பல நரம்பு வியாதிகளும் நயமாகும். குழந்தை பாக்கியம் கை கூடும்.

இந்த தங்க பஸ்பத்தின் மகிமையைப் பற்றி அகத்திய வாடகங்கள்
தங்கக் கதிரை தட்டில் வைத்தால்
திங்கள் ஒளியின் திண்மை குறையுமே
மங்கள வாழ்வளிக்கும் மங்களமே
தங்கப் புடம் போட்ட தங்கம் தங்கமே
என்று சிறப்பிக்கின்றன. குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துவதில், தம்பதிகளுக்கிடையே உள்ள மன வேற்றுமைகளைக் களைவதில் இந்த தங்க பஸ்பத்திற்கு இணையான வேறொரு ஔஷதம் இல்லை என்றே கூறலாம்.

திருமணத்திற்கு முன்பு கணவன் மனைவி ஜாதகங்களை பொருத்திப் பார்க்கும்போது ரஜ்ஜுப் பொருத்தம் என்ற பொருத்தத்தில் கணவன் மனைவி இருவரின் உடல் கந்தங்கள், அதாவது அவர்களின் உடலிலிருந்து வரும் வியர்வை நாற்றம் காற்றுடன் கலக்கும்போது ஏற்படும் உண்டாகும் மணம், ஒத்துப் போகிறதா என்பதை ஒரு முக்கிய பொருத்தமாக வைத்திருக்கிறார்கள். சந்ததி விருத்திக்கும் மிக முக்கியமான பொருத்தம் இது. இந்த உடல் கந்தம் சரியான முறையில் அமையாதபோது தாம்பத்ய ஒற்றுமை மறைகிறது. இதையே ஆகாத பெண்டாட்டி கால் (காற்றின் வழி வரும் கந்தம்) பட்டாலே குற்றம் என்று நாம் உரைக்கிறோம். ‘ஆகாத’ இந்த கந்தமும் மேற்கண்ட வழிபாட்டில் சீராகும் என்பதே கஜாரண்ய திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளின் மகத்துவமாகும்.

மேற்கண்ட முறையில் இயற்றும் யானைகள் வழிபாட்டின்போது கிட்டும் யானை சாண வராட்டிகளைக் கொண்டு சதுர்த்தி அல்லது சதுர்த்தசி திதிகளில் இயற்றும் கணபதி ஹோமத்தில் ஆஹூதி அளிப்பதும் சிறப்புடையதாகும். இவ்வருடம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தை எந்த திருத்தலத்தில் கொண்டாடினாலும் அங்கு இயன்ற அளவு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். நல்ல எண்ணெயுடன் மாதா அமிர்தானந்தா ஆஸ்ரமத்தில் கிட்டும் Brahmi Ghritam என்ற வல்லாரை கலந்த பசு நெய்யை ஒரு லிட்டர் எண்ணெய்க்கு ஒரு புட்டி கிருதம் என்ற கணக்கில் கலந்து தீபமிடுவதால் யானையைப் போல் கூறிய அறிவும், நினைவாற்றலும் பெருகும். இவ்வருடம் முழுவதுமே இத்தகைய வழிபாடுகளை குறிப்பாக வியாழக் கிழமைகளில் நிறைவேற்றுவதால் அற்புத பலன்களைப் பெறலாம். படிப்பில் மந்தமான குழந்தைகளும் நற்பலன் பெறுவார்கள்.

துளி தூளி அம்சம்

கோதூளி முகூர்த்தம் என்ற ஒன்றைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், இதற்கு உரித்தான கால அளவைப் பற்றி எந்த நூலிலும் நாம் காண முடியாது. உத்தம குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு உபதேசமாக அளிப்பதே இந்த கோதூளி முகூர்த்தத்தின் தன்மை அகும். அது போல் ராமபிரானின் திருவடிகள் பட்டு கல்லாய்க் கிடந்த அகலிகை பெண்ணாய் உருவெடுத்தாள் என்று நாம் இராமாயணத்தில் படிக்கிறோம். இந்த அகலிகை சாப விமோசனத்தைப் பற்றி மட்டுமே ஒரு புராணம் எழுதும் அளவிற்கு தெய்வீக மகத்துவங்கள் மறைந்துள்ளன, பொதிந்துள்ளன என்பார் நம் சற்குரு.

ஸ்ரீவலம்புரி விநாயகர்
ரெங்கநாதபுரம்

அசோகவனத்தில் இருந்த சீதையை அடைவதற்கு ராவணன் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அதில் தோல்வியையே சந்தித்தான். இது பற்றி தம் நெருங்கிய நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது ஒருவன், “ஏன் நீ ராமனின் உருவெடுத்து சீதையை அடையக் கூடாது?” என்று கேட்டபோது ராவணன் நகைத்து, “இந்த ஒரு சாதாரண நாடகம் நான் அறியாததா என்ன? ராமனின் உருவத்தை மனதில் நினைத்த மறுவிநாடியே அடுத்தவன் பெண்டாட்டியை அடைய வேண்டும் என்ற எண்ணமே மறைந்து காற்றோடு கலந்து விடுகிறதே, என் செய்வேன்?” என்று கேட்டானாம்.

அத்தகைய ஒரு இறை அவதாரத்தின் பாதங்கள் ஒரு உத்தமியின் மேல் படுமா ?

இதுவே சற்குரு தெரிவிக்கும் அகலிகை பாப விமோசன இரகசியம். ராமரின் பாதம் அகலிகையின் உடலைத் தொடவில்லை, ராம பிரானின் பாத தூளியே அகலிகையின் உடல் அங்கத்தைத் தொட்டு பாப விமோசனத்தை அருளியது. துளி என்பது பஞ்ச பூத சக்திகள் உடைய ஒரு பகுதி, தூளி என்பது பஞ்ச பூதங்களைக் கடந்த தெய்வீக அம்சம்.

இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். ஒரு முறை நம் சற்குரு அன்னதான விஷயமாக ஒருவரை சந்திக்க இரு அடியார்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் எதிரில் ஒரு ’பிளேடு’ அடியார் வந்து கொண்டிருந்தார். அதாவது அவர் எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் குறைந்தது ஒரு மணி நேரம் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார். “அவர் வாத்யாரைப் பார்த்து விட்டால் செல்லும் காரியம் தடைப்பட்டு விடுமே ...,” என்று சற்குருவுடன் வந்த அடியார்கள் அஞ்சினர். ஆனால், என்ன ஆச்சரியம் ... அவர்களைக் கண்ட அந்த அடியார், “எங்கேப்பா ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்க, நான் வாத்யாரைப் பார்க்க போகிறேன்.. நீங்களும் வருகிறார்களா ?” என்று கேட்டாராம். அந்த அடியாரின் கண்களுக்கு நம் சற்குருவின் பஞ்சபூத உருவ வியாப்தம் தெரியவில்லை. இதுவே தூளி என்பதன் ஒரு ஆன்மீக விளக்கம். மற்ற விளக்கங்களை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

கஜ ரிஷப சக்திகள்
பொலியும் ரெங்கநாதபுரம்

புல், பூண்டு என்ற ஒரு தாவரத்தைக் கூட மனிதனால் உருவாக்க முடியாது என்றால் ஒரு துளியும் புரியாத காலத்தை மனிதனால் உருவாக்க முடியுமா? காலத்தை உருவாக்கவல்ல இறை அம்சத்தையே நாம் காலபைரவர் என்று அழைக்கிறோம். காலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியே, அளவே முகூர்த்தம் என்பதாகும். ஈசனின் அருள் பெற்ற அடியார்கள் மட்டுமே காலத்தை, முகூர்த்த நேரத்தை உருவாக்க முடியும். பிறந்த நாள் அன்று நாம் பெரியோர்களுக்கு, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை அளிக்கிறோம், அவர்களை மகிழ்விக்க, அவர்கள் மகிழ்ச்சியில் நாமும் கலந்து கொள்ள. இந்த மகிழ்ச்சியைப் போல் பன் மடங்கு மகிழ்ச்சி கூடியதே நம் சற்குரு நமக்காக அளிக்கும் பரிசு, அள்ள அள்ளக் குறையாத தெய்வீக பொக்கிஷம், உண்ண உண்ண தெவிட்டாத திவ்யாமிர்தம் ...

ஆம், அதுவே கஜதூளி முகூர்த்தம் என்ற சித்தாமிர்தம்.

சித்தர்கள் மனமுவந்து அளிக்கும் இந்த சித்தாமிர்தத்தை நாம் பெறக் கூடிய நாளே 21.5.2022 சனிக்கிழமை என்ற திரவாரமாகும். இந்த திவ்யாமிர்தத்தை நாம் பெற வழிவகுக்கும் திருத்தலமே ஸ்ரீஆனேஸ்வரர் அருளும் ரெங்கநாதபுரம் ஆகும். எப்படி ஸ்ரீகாலபைரவர் காலத்தைப் படைக்கிறாரோ அது போல நம் சற்குரு நம் அடியார்களுக்காக இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களின் நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் கஜதூளி முகூர்த்தம் என்ற அரிதிலும் அரிய ஒரு முகூர்த்த நேரத்தை தன் பிறந்த நாள் பரிசாக அளிக்கிறார், தன் பிறந்த நாள் பரிசாக மற்றவர்களுக்கு தாரை வார்த்து அளிக்கிறார்.

ஒரு மனிதனின் அறிவை தான் பெற்ற பட்டங்கள், விருதுகள் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறான். தான் ஒரு பெரும் பணக்காரன் என்பதை அவனிடம் உள்ள கோடிக் கணக்கான பணம், வசதிகள் தெரிவிக்கின்றன. சித்தர்களும், மகான்களும் தங்கள் தெய்வீகத் தன்மையை தாங்கள் நிரவிய ஜீவ சமாதிகளின் எண்ணிக்கையை வைத்து மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறார்கள். சித்தர்கள் தெரிவிக்கிறார்கள் என்பதை விட இறைவனே உலக ஜீவன்களின் நன்மைக்காக அவர்களின் செயல்பாட்டை தன்னுடைய அனுகிரகமாக அங்கீகரிக்கிறான் என்று உணர்வதே சரியான அணுகுமுறை.

சூரியன்களும் இணையுமோ ?
திருச்சி நாச்சியார்கோயில்

நமது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் பூலோகத்தில் அதிகபட்ச ஜீவ சமாதிகளை உடையவர் ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள் ஆவார். சுவாமிகள் கைலாயம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஜீவ சமாதிகளில் எழுந்தருளி உள்ளார். நம் சற்குருவின் பூலோக ஜீவ சமாதிகளோ 51 இடங்களில் அமைந்துள்ளன. திருஅண்ணாமலை தசமுக தரிசனம் அல்லது சிவசக்தி ஐக்ய தரிசனம் எதிரே அமைந்துள்ளதே நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதி. (5+1=6) ஆறைக் குறிக்கும் எண் சக்திகளுடன் திகழ்வதால் இந்த ஆறிற்கு உரிய 2022 வருடம் நம் சற்குருவால் கஜதூளி முகூர்த்தம் என்ற அற்புத முகூர்த்த சக்திகளை தாரை வார்த்து அளிக்கும் சுக்ர ஆண்டாகப் பொலிகின்றது.

நம்புவோம், நலம் பெறுவோம் !

ராமபிரான் ராவணனுடன் யுத்தம் ஆரம்பிக்கும் முன் ஸ்ரீஅகத்திய பிரானிடம் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசமாகப் பெற்றார். அதன் பலனாகவே தனக்கு நிகரான பலமுடைய ராவணனை ராமபிரானால் வெல்ல முடிந்தது என்பதை நாம் அறிவோம். அப்போதைய சூழ்நிலையில் ராமபிரானை சீதையின்றி, தன்னந்தனியனான ராம பிரானை ஸ்ரீஅகஸ்தியர் தரிசனம் செய்தார் என்றாலும் சீதையுடன் இணைந்த ஸ்ரீசீதாராமரின் தரிசனத்தைப் பெற பெரிதும் விரும்பினார் ஸ்ரீஅகத்திய பிரான் என்பதை சூரிய குலத் தோன்றல் அறியாதவரா என்ன ? எனவே அயோத்தியில் பட்டாபிஷேகம் நிகழ்ந்த பின்னர் முதன் முதலில் ஸ்ரீராமபிரான் எழுந்தருளியது ஸ்ரீஅகத்திய பிரானின் குடிலில்தான். அப்போது ஸ்ரீஅகத்தியரும் ஸ்ரீராமபிரானும் இணைந்து இருவரும் புன்னகையுடன் ‘போட்டோ’ எடுத்துக் கொண்டதை நீங்கள் இன்றும் திருச்சி நாச்சியார் கோயில் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.

அந்த சுப முகூர்த்த நேரத்தில் ஜகன்மாதாவான சீதாப்பிராட்டி சித்தர்குல நாயகரான ஸ்ரீஅகத்திய பிரானின் இணைபிரியா நிழலான ஸ்ரீலோபாமாதாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றாளாம். அந்த சித்த பத்தினியின் அற்புத ஆசியையே நீங்கள் வரும் 21.5.2022 சனிக் கிழமை அன்று பெற இருக்கிறீர்கள் என்பதே ஸ்ரீஅகத்திய வழித் தோன்றலான நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியம்.

சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருதில்லை !
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள் !!

காளையும் கஜமும்
திருபுவனம் சிவாலயம்

இவ்வாறு சீதையும் ராமரும் இணைந்த கோலத்தை மட்டும் குறிப்பதல்ல நீங்கள் ஆனேஸ்வரர் திருத்தலத்தில் தரிசிக்கும் தலையும் இரண்டு முன் கால்களும் உடைய யானை தரிசனம். பிரிந்த உறவு, பிரிந்த செல்வம், சொத்து, பிரிந்த நண்பர்கள், அனைத்திற்கும் மேலாக தற்காலிகமாக நம்மை விட்டுப் பிரிந்த நற்குணம் இவை அனைத்தையும் இணைப்பதே வரும் 21.5.2022 அன்று நீங்கள் இயற்றும் வழிபாடு.

எப்படி ராமாயணத்தின் ஒரு அணுத் துகளைக் கூட ஒரு மனிதப் பிறவியில் அறிந்து கொள்ள முடியாதோ அது போன்ற அற்புதத்தை உடையதே ஸ்ரீஅகத்திய பிரானின் வரலாறும் ஆகும். ஒரு மனிதப் பிறவியில் ஸ்ரீஅகத்திய பிரானின் கடுக்கன் மகிமையைக் கூட தெரிந்து கொள்ள முடியாது, புரிந்து கொள்ள இயலாது என்றால் சுவாமியின் மற்ற மகாத்மியங்களைப் பற்றி என்ன கூறுவது? காளையார்கோவில் திருத்தலத்தில் இறைவன் காளை வடிவில் காட்சி அளித்தார், ரெங்கநாதபுரம் திருத்தலத்தில் இறைவன் யானை வடிவில் தரிசனம் அருளினார். இந்த கஜ ரிஷப சக்திகளே ஸ்ரீஅகத்திய பிரானின் எட்டு முகங்கள் உடைய கடுக்கன்களில் குடி கொள்ள அவற்றை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கிறார் ஸ்ரீஅகத்திய பிரான் என்பதே நம் சற்குரு நமக்காக பிறந்த நாள் பரிசாக அளிக்கும் மற்றோர் சித்த அனுகிரகம்.

தாயம் என்றால் சந்தர்ப்பம், நன்மை, தீமை என்ற அர்த்தங்கள் எல்லாம் உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை நற்சக்தியாக மாற்றும் வல்லமை உடையதே கஜாரண்யேஸ்வர திருத்தலத்தில் நாம் இயற்றும் வழிபாடுகளின் தன்மையாகும். இந்த அபூர்வ சக்திகயை அடியார்களுக்கு அளிக்கவே காஞ்சி பெரியவர், நம் சற்குரு போன்ற பல குருமார்கள் தாங்கள் அரும்பாடுபட்டு ஈட்டிய புண்ணிய சக்திகளை இத்தலத்தில் தாரைவார்த்து அளித்துள்ளனர்.

சிறப்பாக நம் சற்குரு தன் ஜனன தினமான மே 21ந் தேதி இந்த அபூர்வ கஜதாய சக்திகளை ஸ்ரீஆனேஸ்வரர் திருத்தலத்தில் குரு அனுகிரகமாக அளிக்கிறார் என்பதே நம்மை மெய்சிலிக்க வைக்கும் குரு மங்கள கந்தர்வ அம்சமாகும். ஆம், 21.5.2022 அன்று இருபுறமும் மங்கள கந்தர்வ சக்திகள் புடைசூழ குரு பகவான் எழுந்தருளி இருப்பதே இந்த கஜதாய சக்திகளை பக்தர்கள் அனைவரும் எளிதில், விரைவில் பெறக் கூடிய கிரக சஞ்சார அம்சமாகும். இங்குள்ள வீடியோவில் நீங்கள் காணும் கஜதாய குருவியை உங்களால் தரிசிக்க முடியாவிட்டாலும் யானைகளுக்கு வயிறார உணவிட்டு அவைகள் முன் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் இந்த கஜதாய சக்திகளைப் பெறும் ஒரு முறையாகும்.

ஸ்ரீஆயுர்தேவி

கம்ப்யூட்டரில் multi-tasking என்ற செயல்முறையைப் பற்றி பெரும்பாலானோர் அறிவீர்கள். ஒரே சமயத்தில் பல புரோகிராம்களை இயக்கும்முறை எல்லா கம்ப்யூட்டர் ஆபரேடிங் சிஸ்டத்திலும் செயல்படுவதே என்றாலும் இந்த முறையை முடிந்த மட்டும் குறைத்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்பவரே நம் சற்குரு. அதே சமயத்தில் தெய்வீகத்தில் இத்தகைய multi-tasking வேலைகளை அவரவர் மூளை செயல்திறனுக்கு ஏற்ப அதிகப்படுத்திக் கொள்ளும்படி கூறுவார். மாறுபட்ட இரு கருத்துக்கள் போன்ற இந்த சற்குரு வழிகாட்டுதலின் பின்னணியில் உள்ள தெய்வீக அம்சங்களை, ஆத்மவிசார நுணுக்கங்களை நாம் அறிந்து கொள்ள உதவுவதும் வரும் சற்குருவின் பிறந்த நாள் அன்று பரிணமிக்கும் ஜகதல ஜகதள அம்ச சக்திகளாகும். உதாரணமாக, ஒரு திருத்தலத்தை வலம் வரும்போது தேவாரப் பாடல்களை ஓதியவாறே, கையில் ஒரு முத்திரையை வைத்துக் கொண்டு, சுவாமிக்கு ஒரு உபசாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு, கண்ணோட்ட சக்தியால் ஒரு இயந்திரத்தை வரைவதாக வைத்துக் கொண்டால் இது ஒருவிதமான multil-tasking செயல்பாடுதான், ஆனால், நம் சற்குருவால், அனைத்து குருமார்களால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சித்த வழிபாடு, செயல்பாடாகும்.

சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 50000 multi-tasking காரியங்களை நம் சற்குரு நிறைவேற்றினாலும் பௌர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற வைபவங்களின்போது இந்த வேலைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுமாம். தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்றவாறு இத்தகைய அபூர்வ சக்திகளை தம் அடியார்களுக்காக அளிப்பதும் இந்த கஜாரண்ய திருத்தலத்தில்தான். கூரிய கண் பார்வையும், குவிந்த அறிவுத் திறனும் செயல்படுவதே இந்த multi-tasking செயல்பாட்டில்தான்.

ஏதாவது ஒரு இஷ்ட தேவதை, தெய்வ மூர்த்தியை மனக் கண் முன் கொண்டு வந்து தொடர்ந்து நிலைநிறுத்துதலே அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தியான முறை. எந்த தெய்வ மூர்த்தியை நினைப்பது என்பதுதான் பலருடைய பிரச்னை. உதாரணமாக, பிள்ளையாரை தியானிக்கலாம் என்றால் அமர்ந்த பிள்ளையார், நின்ற பிள்ளையார், சயனிக்கும் பிள்ளையார், நான்கு கை பிள்ளையார், 16 கை பிள்ளையார் என்றவாறு ஆயிரக் கணக்கில் பிள்ளையார் மூர்த்திகள் மட்டுமே உள்ளனரே. இந்தக் குழப்பத்திற்கு விடையாக வருவதே ஸ்ரீஆயுர்தேவியின் திருஉருவமாகும். அம்பாளுக்கு ஒரே ஒரு உருவம்தான். ஸ்ரீசிவமூர்த்தி, ஸ்ரீபெருமாள் மூர்த்தி, ஸ்ரீதுர்கை வழிபாடு என்ற அனைத்து தெய்வ மூர்த்திகளும், தியானம், அர்ச்சனை, தானம் போன்ற அனைத்து வழிபாட்டு முறைகளும் ஒருங்கே இணைந்ததே ஸ்ரீஆயுர்தேவி வழிபாடாகும்.

QR code sample

நம் சற்குருவின் ‘கனவுக் கன்னி’ ஸ்ரீஆயுர்தேவி என்றால் அது மிகையாகாது. காரணம் சுமார் பதினைந்து ஆண்டுகளின் அருந்தவப் பலனை இணைத்து சித்த லோகத்திலிருந்து ஸ்ரீஆயுர்தேவியை தருவித்த நம் சற்குரு ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாட்டை மற்ற உயிர்களுக்கெல்லாம் அர்ப்பணித்தே தம் எஞ்சிய மனிதப் பிறவியை கழித்தார் என்பதே நம் சற்குருவின் வாழ்க்கைப் பயணம் சுட்டிக் காட்டும் வரலாறாகும். 1992ம் குரு சக்தி ஆண்டில் ஸ்ரீஆயுர்தேவியை பூலோக ஜீவன்களுக்கு அர்ப்பணித்த நம் சற்குருவின் தியாக வாழ்வை உணர்ந்தோர் இந்த பேருண்மையையும் உணர்வரே.

நவ கரத்தினளாய் நவ ரிஷிகளைக் கையில் தாங்கிய கோலத்தில் நவ தத்துவ ரூபிணியாய் விளங்குபவளே ஸ்ரீஆயுர்தேவி ஆவாள்.
ஒன்பதிற்கு மிஞ்சிய எண் இல்லை
அன்னைக்கு மிஞ்சிய ஆறுதல் இல்லை
ஆயுர்தேவிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்ற பெரியோர்கள் கூற்றிற்கு ஏற்ப ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டால் புலனாகாத தத்துவங்களே இல்லை எனலாம். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை, “அம்மா, ஒருவன் இதுதான் உண்மை என்கிறான், மற்றொருவனோ இதுதான் உண்மை என்று வேறொன்றைச் சுட்டிக் காட்டுகிறான். எது உண்மை என்பதை நீ ஒருத்தியே உரைக்க வல்லவள்,” என்று காளியே எதற்கும் இறுதி முடிவு கூறவல்லவள் என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்த உண்மையை நமக்கு ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டின் மூலம் தெளிவுபடுத்துவதே நம் சற்குருவின் பிறந்த நாள் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

இது பற்றிய ஒரு சுவையான செய்தி. தற்போது எங்கு பார்த்தாலும் quick response code என்பதான QR code படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம், பலரும் இதனைப் பயன்படுத்திக் கொண்டும் இருக்கலாம். மனிதனையும் இறைவனையும் இணைக்க நம் சற்குருவால் அருளப்பட்ட QR code தான் ஸ்ரீஆயுர்தேவியின் உருவமாகும். அதனால் அடியார்களுக்கு தோன்றும் எந்தவித லௌகீக, ஆன்மீக சந்தேகங்களையும் ஸ்ரீஆயுர்தேவியின் தியானத்தின் மூலமே தீர்த்து விடலாம் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் QR code பிறந்த நாள் பரிசாகும். QR என்பது குருவைக் குறிக்கும் மூன்று எண் சக்திகளுடன் திகழ்வதும், quick response என்பது 2022 வருடத்திற்கான குசா சக்தி எண்ணாக திகழ்வதும் கூடுதல் சிறப்பே.

இங்குள்ள படத்தில் நீங்கள் காண்பது http://www.kulaluravuthiagi.com என்ற வெப்தளத்திற்கான QR code ஆகும். இந்த QR code நாளையே மாறலாம். ஆனால், நம் சற்குருவால் அளிக்கப்பட்ட ஆயுர்தேவி QR code என்றும் மாறாது என்பதே அதன் சிறப்பாகும்.

ஆதானம் கோதானம் என்னவோ?

ஆ என்றால் பசு, கோ என்றாலும் பசு என்று பொருள். அப்படியானால் நம் முன்னோர்கள் ஆதானம், கோதானம் என்று இரண்டு தான முறைகளை ஏன் குறித்தார்கள்? ஆதானம் என்றால் ஒரு வீடு அல்லது குழந்தை உருவாகும் முகூர்த்த நேரம், கோ தானம் என்றால் பசுவைத் தானமாக அளிக்கும் முகூர்த்த நேரம் என்று பொருள். இவ்விரு முகூர்த்த நேரங்களின் பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக அம்சங்கள் ஏராளம், ஏராளம். இவ்விரு முகூர்த்த நேரங்களும் தற்போது பலதரப்பட்ட வியாபார அம்சங்களாக மாறி விட்டதால் இவற்றை இணைக்கும் ஒரு தான முறையை சித்தர்கள் அளித்துள்ளனர். அதுவே மடிப்பால் தானம் என்பதாகும். அதாவது கன்றையும் பசுவையும் காலை முதல் மாலை வரை கிரகப்பிரவேசம் நிறைவேறும் வீட்டில் கட்டி வைத்து அந்தக் கன்று “வயிறார” தாயின் பாலை சுதந்திரமாக அருந்துவதற்கு வழிவகுக்கும் தான முறையே மடிப்பால் தானமாகும். ஆதானம், கோதானம் என்ற இரண்டு தான முறைகளையும் “முறையாக” இணைக்கும் தான முறையே மடிப்பால் தானம் என்பதாகும். நம் சற்குருவின் பிறந்த தினத்தை அனைவராலும் ரெங்கநாதபுரத்தில் கொண்டாட முடியாவிட்டாலும் பலரும் இந்த மடிப்பால் தான முறையை அவரவர் இல்லத்தில் கொண்டாடி மகிழலாமே.

மடிப்பால் தானத்துடன் கன்றிற்கும் பசுவிற்கும் புது வேட்டி புடவைகளை அணிவித்து மலர் மாலைகள் சூட்டி மகிழ்வதும் சிறப்பான தான முறையே.

Numbers and patterns make this world என்பார் உலகறிந்த தத்துவ ஞானி. இது சிருஷ்டியைப் பற்றி விளக்கும் ஒரு தத்துவம் என்றாலும் இந்த தத்துவத்தை வைத்து அன்னை ஆயுர்தேவியை உணர்வதை விட அன்னை அளிக்கும் அருள் மூலம் உலகத்தை உணர முற்பட்டால், அறிய விழைந்தால் எண்களின் சக்தியையும் தாண்ட முடியும், பரிமாணத்தையும் கடந்து செல்ல முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் தெய்வீக விளக்கம். பூஜ்யம் என்பது எண்களின் எல்லையைத் தாண்டிப் பிரகாசிக்கும் தெய்வீக தத்துவமாகும். அதனால்தான் பூஜ்யஸ்ரீ என்று பலரையும் வர்ணித்தாலும் ஒருபோதும் ஸ்ரீபூஜ்ய ... என்று வர்ணிப்பதே கிடையாது. காரணம் எந்த எல்லைக்கும் அப்பாற்பட்டதே பூஜ்யம் என்பதாகும்.

சூரிய நாராயணனை தரிசிக்கும்
ஸ்ரீரங்க ரெங்கராஜன்

இறைவனின் ஒளிப் பிரகாசத்தை பொன்னிறமாகக் குறிக்கிறோம். பொன்னார் மேனியனே என்ற இறைவனைக் குறித்த வர்ணனை அனைவரும் அறிந்த ஒன்றுதானே. அவ்வாறிருக்க ஸ்ரீஆயுர்தேவி செக்கர் வானின் ஒளி பிம்பம் பிரகாசிக்க துலங்குவதேனோ ? இதுவே சித்தர்கள் சுட்டும் கர்ம காருண்ய பிம்பம். இந்த அபூர்வ பிம்ப சக்தியுடன் துலங்குபவளே ஸ்ரீஆயுர்தேவி அம்பாள் ஆவாள். தேவியின் ஒன்பது கரங்கள், தேவி தாங்கும் ஒன்பது ரிஷிகள், அன்ன வாகனம், சிம்ம பீடங்கள், கர்ம காருண்ய பிம்பம் இவை அனைத்தையும் இணைப்பதே நேர்கோடு என்னும் சித்தர்கள் அளிக்கும் விளக்கம். இந்த விளக்கத்தை உணர முடிந்தால் பூஜ்யம் என்பது நேர்கோடு என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக உணர முடியும். இந்த பிம்ப சக்திகள் அபூர்வமாக பிரகாசிக்கும் அதிகாலைப் பொழுதையே சோளிங்கர் திருத்தலத்தில் அடியார்கள் நலனுக்காக இங்குள்ள வீடியோ படத்தில் அளித்துள்ளோம்.

நீங்கள் இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார், சற்குரு உங்களை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பார் நம் சற்குரு. இது எந்த யுகத்திலோ நடந்தது என்பது கிடையாது. இன்றும் நீங்கள் இரசித்து அனுபவிக்கக் கூடிய சித்த மகாத்யமே இது என்பதை உணர்த்துவதே இங்கு நீங்கள் காணும் ஸ்ரீரங்கம் திருத்தல யானையின் வழிபாட்டு காட்சியாகும். நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தை ரெங்கநாதபுரத்தில் கொண்டாடுவதற்காக தீர்த்தம் எடுக்க கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்றபோது நம் அடியார்களின் திருப்பணியை மனதார, மனமார ஆசீர்வதித்த ஸ்ரீரெங்கநாத கஜராஜனின் திருக்காட்சியே இது.

ஸ்வஸ்திக் தரிசனம்

நம் சற்குருவின் அடியார்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்று (21.5.2022) அவர்கள் பெறும் குரு தரிசனம் Swastik darshan (ஸ்வஸ்திக் தரிசனம்) என்றே அழைக்கப்படும். கற்பனையை மிஞ்சும் சுவையை அளிக்கக் கூடியதே இந்த தரிசனம். நம் சற்குருவின் ஜன்ம லக்னத்தை கடகம் எனக் கொண்டால் அந்த கடக லக்னத்திலிருந்து இதயத்தைக் குறிக்கும் நான்காம் இடத்தில் துலா ராசியில் கோசரமாக கேது எழுந்தருள்கின்றார். கேது கிரகத்திற்குரிய உரிய தெய்வமே யானை முகம் கொண்ட கணபதி. இன்று சனிக் கிழமை, கரி நாள். துலா ராசியில் உச்சம் கொள்பவரே சனீஸ்வர மூர்த்தி என்பது நீங்கள் அறிந்ததே. இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் கஜம் ஆரண்யத்தைக் கலக்கும், ஆரண்யத்தில் கலக்கும்.

சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தில் கிட்டும் இந்த அற்புத ஒளி கிரணங்களின் சக்திகளைப் பெற, குருவின் அனுகிரகத்தைப் பெற ஸ்வஸ்திக் வடிவில் தீபங்களை ஏற்றுதல் சிறப்பாகும். ஸ்வஸ்திக் வடிவின் ஒரு ஆரத்திற்கு 4, 8, 16 தீபங்கள் என்ற கணக்கில் 32, 64, 128 என்ற எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபடலாம். சமுதாய நலனை பன்மடங்கு ‘கலக்கும்’ ஆரண்ய பூஜையே இது. ஆரண்யம் என்றால் அடர்ந்த காடு. ஆரண்யத்தில் ஒளி வீசும் ஸ்வஸ்திக் தீப மகிமையை சற்குரு மட்டுமே உரைக்க இயலும், விளக்க இயலும்.

நம் குருமங்களகந்தர்வா, குரு மங்களம் கந்தர்வம் என்ற மூன்று சக்திகளின் பிரதிபலிப்பாக கஜாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் 21.5.2022 அன்று எழுந்தருளினார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த அனுகிரகமாகும். இந்த மூன்று கஜமூர்த்திகளும் குரு மங்களம் கந்தர்வம் என்ற சக்திகளுக்கு உரித்தான மூன்று வண்ணங்களின் பிரதிபலிப்பாகத் திகழ்ந்தனர். சிவப்பு, மஞ்சள், ஊதா என்ற மூன்று வண்ணங்களே இன்று உலகின் அடிப்படை வண்ணங்களாகத் திகழ்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே.

இந்த மூன்று வண்ணக் கலவைகளின் பிரதிபலிப்பாகவே அவர்களின் செயல்முறைகளும் அமைந்தன என்பதை இந்த பிறந்த நாள் வைபவத்தில் பங்கு பெற்றோர் எளிதில் உணர முடியும். ஒரு யானை விடியற்காலையில் அபிஷேகத்தை ஏற்க, ஒரு யானை திருக்குளத்தில் நீராட, மற்றோர் கஜ மூர்த்தியோ திருத்தலத்தின் உள்ளே வலம் வந்து கஜ மூர்த்தி பிள்ளையார் முன் கஜகோஷமாக பிளிறியதை அனைவரும் கேட்டு பேருவகை கொண்டனர் அல்லவா ? இந்த பேரானந்தம் கஜாரண்யத்தில் குழுமிய பக்தர்கள் மட்டும் அல்லாது இந்த பிரபஞ்சத்தை முழுவதும் பரப்ப அடியார்கள் ஏற்றியதே இந்த திருத்தலத்தில் மிளிர்ந்த ஸ்வஸ்திக் தீபங்களாகும். இந்த தீபங்களை உற்று நோக்கினால் இந்த மூன்று வண்ணங்களின் பிரதிபலிப்பை இன்றும் நீங்கள் தரிசித்து மகிழலாம். இந்த வீடியோவில் நீங்கள் கேட்கும் இசையும் நம் சற்குருவின் பிரபஞ்ச வியாபகத்தை உறுதி செய்வதாக அமைவதும் அதன் சிறப்பாகும். ஓங்காரமே பிரபஞ்சம் முழுவதற்குமான ஆதி ஒலி வடிவம் என்பதால் அந்த ஆதி ஒலி வடிவத்திலேயே நம் சற்குருவை ஆட்கொண்ட கோவணாண்டி இடியாப்ப சித்த ஈசனின் பெருமையை என்னென்று கூற முடியும் !

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்பார் ஒரு கவி. நம் சற்குருவின் தியாகம், அன்பு, அனுகிரகம் இவை அனைத்தையும் ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால்

பூஜ்யம் என்பது நேர்கோடு !


ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam