வருவதை ஏற்றுக் கொள் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீசனீஸ்வர பகவான் மகிமை

நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்.

வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது ?

ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்

என்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.

சனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.

அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும்? அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.

மற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம்? அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான்.

அதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.

விதியை உணர்த்தும் வள்ளல்

எனவே சனீஸ்வர பகவானை முதுமை காலத்து நண்பன் என்றும், தேவையில்லாத வேகத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கும் ஔஷத மூர்த்தி எனவும், உடலுக்கும் மனதுக்கும் அமைதி அளிக்கும் புகலிடம் எனவும் கூறுவது மிகையாகாது.

சனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்பவே இப்பிறவி அமைகிறது. இப்பிறவியில் எந்த அளவுக்கு தன்னுடைய கர்ம வினைகளைக் கழிக்கிறாரோ அந்த அளவிற்கு அடுத்த பிறவிகள் நலமாய் அமையும். இல்லாவிட்டால் மேலும் மேலும் பாக்கிகள் வளர்ந்து துயரமே மேலோங்கும், பிறவிகள் வளரும். இதைத்தான் ஆதி சங்கரரும் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று வர்ணித்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறப்பதால் என்ன பயன்? பிறவித் தளையை அறுப்பதுதான் விவேகம் என்று எல்லா மகான்களும் வலியுறுத்துகிறார்கள்.

உதாரணமாக, ராமன் என்பவர் பஸ்சில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். முந்தைய பிறவியில் ராமன் கோவிந்தனுடைய காலை மிதித்து விட்டார். இந்தப் பிறவியில் கோவிந்தன் ராமனுடைய காலை மிதித்தால்தான் இந்த மிதித்தல் பாக்கி தீரும். இருவருடைய பாக்கியைத் தீர்ப்பதற்காக எத்தனை கோடி ஆண்டுகள் இடையில் கழிந்தன என்பது எவருக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். சித்தர்கள் கணக்குப்படி ஒரு மனிதப் பிறவி கிடைப்பதற்கு ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ராமனும் கோவிந்தனும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தார்கள் என்பது தெரியாது.

தற்போது இருவரும் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது முற்பிறவி உந்துதலால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிப்பார். இப்போது ராமன் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கோவிந்தனுடைய செயலை ஏதோ தெரியாமல் செய்த தவறு என்று நினைத்து ராமன் கோவிந்தனை மன்னித்து விடலாம். அவ்வாறு செய்தால் தீர்க்கப்படாத பழைய பாக்கி இத்துடன் தீர்ந்து விடுகிறது. ராமனும் கோவிந்தனும் இந்தச் சிறிய விஷயத்திற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம்.

இரண்டாவது, நிகழ்ச்சியாக ராமன் கோவிந்தனின் செய்கையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோவிந்தனை வசை பாடவோ அல்லது அடிக்கவோ செய்யலாம்? அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பேசி, உடலால் இம்சிக்கும் செயல்களைச் செய்தால் இது இன்னும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கும். இது உண்மை. இதுவே இறைவனின் விதி. இதிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டிய பாக்கியா அல்லது நாம் புதிதாக ஏற்படுத்தும் ஒரு கர்ம வினையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால் வேறு வழியின்றி அதை அனுபவித்து விடலாம். இல்லாவிட்டால் அதை எதிர்ப்பதற்காக நாம் போராடலாம்.

மனித வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் பாக்கியா கர்மமா என்பதை யாராலும் உணர முடியாது என்பதே தெய்வீக உண்மை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காத்து வழிகாட்டவே சித்தர்கள் அற்புதமான அனுபவ மொழிகளை உபதேசமாக அருளியுள்ளனர்.

“வருவதை ஏற்றுக் கொள்,”. இதுவே சித்தர்களின் எளிமையான ஆனால் நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள உபதேசமாகும்.

மேற்கண்ட கால் மிதித்தல் நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். இப்போது ராமன் சித்தர்களின் அருளுரையை ஏற்று மௌனமாக கோவிந்தனின் செயலைப் பொறுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலை ஏற்படும். ஒருவேளை ராமனுக்கும் கோவிந்தனுக்கும் முற்பிறவி பாக்கி இல்லை என்றால் கோவிந்தனுடைய செயலை ராமன் எதிர்ப்பதால் தவறு இல்லை அல்லவா? உண்மைதான், அது ராமனுக்கு எந்தக் கர்மாவையும் ஏற்படுத்தாது. ஆனால், ராமன் சித்தர்களின் அமுத மொழியை ஏற்று பேசாமல் இருந்து விட்டால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிக்கும்போது அவர் மௌனமாக இருந்த காரணத்தால் கோவிந்தனுடைய புதிய கர்மச் செயல் ராமனுக்கு சில புண்ணிய சக்திகளை அளிக்கும்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
அதிராம்பட்டினம்

அவ்வாறு கிடைக்கும் புண்ணியத்தின் பலனை மனிதக் கணக்கில் அளவு கூற இயலாது. இருப்பினும் உதாரணத்திற்காகக் கூற வேண்டுமானால் முற்பிறவி பாக்கி இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்தால், அந்த அடியை வாங்குபவர் திருப்பி அடிக்காமல் தாங்கிக் கொண்டால் அடிக்கும் மனிதருடைய 50 வருட புண்ணிய சக்தி அடிபட்ட மனிதருக்கு போய்ச் சேரும் என்பது இறைவனின் விதி. இதுவே புண்ணியத்தால் பணம் பெறும் கலியுக சேமிப்பு விதியாகும்.

அதே போல முற்பிறவி பாக்கியில்லாமல் ஒருவர் மற்றொருவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கினால் அவருடைய ஒரு வருட புண்ணிய சக்தி திட்டு வாங்கியவருக்கு போய்ச் சேருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு தகாத வார்த்தைகளால், செயல்களால், புண்ணிய சக்திகள் மிகவும் குறைந்த நிலையை அடையும் போது அது வாய்ப் புற்று நோய், தொண்டையில் கட்டி, வாய்ப் பேச முடியாமல் மூச்சு முட்டுதல் போன்ற நோய்களாக இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறது.

இத்தகைய கர்ம பாக்கி நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அதை முறையாகச் செயல்படுத்தி அனுவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து மீண்டும் பிறவி எடுக்காத நிலையை ஏற்படுத்தித் தர நமக்கு உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார். அதனால்தான் பெரியோர்கள் அவரை விதி என்று அழைத்தார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நமது குருமங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகளைக் காண பூபாலன் என்று ஒருவர் வந்தார். அறுபதை நெருங்கிய வயது. அரசு உத்தியோகத்தில் இருப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் அவருக்கு இருப்பதாகக் கூறினார்.  

அவருக்கு ஒரு பிரச்னை. ஒவ்வொரு நாளும் இரவு வந்தவுடன் சரியாக எட்டு மணிக்கு அவர் வீட்டில் உள்ள எல்லா மின்சார விளக்குகளும் சட்டென நின்று விடும். அப்போது வீட்டில் இருப்பவர்களின் உடலை யாரோ பிராண்டுவது போல் இருக்கும். ஐந்து, பத்து நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே மின் விளக்குகள் வந்து விடும். அப்போது புதிதாக வேறு எந்த நபரோ, பூச்சியோ, விலங்குகளோ தென்படாது. ஏன் இப்படி நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் பயந்து போய் நிம்மதி இன்றித் தவித்தனர்.

ஒரு சிலர் இது பேய், பிசாசுகளின் வேலை என்றனர், சிலர் ஆவிகளின் சேஷ்டை என்றனர், சிலர் இது ஏதோ பில்லி சூன்ய ஏவல் சித்து என்று காரணம் கூறினர். இதனால் மேலும் மேலும் பூபாலனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே தவிர அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சிலரின் ஆலோசனையை ஏற்று வேறு வாடகை வீட்டிற்கும் சென்று பார்த்தார், ஆனால் அங்கும் இதே பிரச்னை தொடர்ந்தது.

அவரும் பல இடங்களில் மந்திரம், தந்திரம், ஜோசியம் எல்லாம் பார்த்து விட்டு, ஆயிரக் கணக்கான ரூபாய் செலவழித்து விட்டு எந்தப் பலனும் கிடைக்காததால் தற்போது நமது சுவாமிகளைப் பார்த்து இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

சுவாமிகள் அவர் கூறுவதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு விட்டு இரண்டு மாதங்கள் கழித்து வந்தால் அப்பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்றும் இடைப்பட்ட நாட்களில் அருகில் உள்ள சுயம்பு மூர்த்தி அருள்புரியும் தலத்தில் சனீஸ்வர பகவானுக்கு ஒரு பெரிய மண் அகல் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எள் முடிச்சில் தீபம் ஏற்றி வழிபடுமாறு கூறினார். தினமும் புதிய அகலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தினமும் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் தீபம் எரியும் அளவிற்கு எண்ணெயின் அளவு இருக்க வேண்டும் என்று வழிபாட்டு முறைகளைத் தெரிவித்தார்.

சுவாமிகள் கூறியபடி வழிபாடுகளை நிறைவேற்றி விட்டு இரண்டு மாதங்கள் கழித்து பூபாலன் வந்தார். சுவாமிகளிடம் தன்னுடைய பிரச்னை சற்றும் குறைந்த பாடில்லை என்றும், ஆனாலும் விடாமல் சுவாமிகள் கூறிய சனீஸ்வர வழிபாட்டைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதாகக் கூறினார். சுவாமிகள் அவரிடம் அடுத்து வரும் வியாழக் கிழமை அவருடைய வீட்டிற்கு பத்து, பதினைந்து அடியார்களுடன் வருவதாகவும், அங்கு ஒரு நாமசங்கீர்த்தனம் நிகழ்த்துவதாகவும் கூறினார்.

பூபாலன் விடை பெற்ற பின் தன்னுடன் இருக்கும் அடியார்களிடம் யார் யார் பூபாலன் வீட்டில் நடக்க இருக்கும் நாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும்படிக் கேட்டார். என்னதான் குரு நம்பிக்கை என்று வாயால் சொன்னாலும் பிரச்னை என்று வரும்போது கடவுள் நம்பிக்கையும், குரு நம்பிக்கையும் தளர்ந்து போய் விடுவது இயல்புதானே. அடியார்கள் பலரும் பூபாலன் கூறிய விஷயங்களைக் கேள்விப்பட்டு உண்மையில் பயந்து விட்டனர். அவர் வீட்டில் இருப்பது பேயோ, பிசாசோ, ஆவியோ எதுவாக இருந்தாலும் அந்த விஷப் பரீட்சையில் ஏன் இறங்க வேண்டும் என்ற அச்சத்தால் வெங்கடராம சுவாமிகளிடம் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்ல ஆரம்பித்தனர்.

ஆவியுடன் நடந்த உரையாடல்

அனைத்தும் அறிந்தவர்தானே நமது வெங்கடராம சுவாமிகள். அவர் சிரித்துக் கொண்டே, “யாருக்கு மனதில் தைரியம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் அடியேனுடன் வாருங்கள். இது கட்டாய அழைப்பு கிடையாது. உங்களுக்குப் போதிய அளவு மன தைரியம் இல்லை என்றால், அது பற்றிக் கவலை வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அடியேனுடைய சத்சங்கத்தில் பங்கு கொள்ளலாம்,“ என்று ஆறுதல் கூறினார்.  

அந்த வியாழக் கிழமை வாக்களித்த வண்ணம் பூபாலன் வீட்டிற்கு வெங்கடராம சுவாமிகள் எழுந்தருளினார்கள். அப்போது அவருக்காக 12 சீடர்கள் காத்திருந்தனர். பூபாலன் அனைவரையும் வரவேற்று இனிப்புகள், சிற்றுண்டிகள் வழங்கினார். சுவாமிகள் அனைவரின் நலம் விசாரித்து, சற்று நேரம் பூபாலனுடைய குடும்ப அங்கத்தினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

சரியாக ஏழு மணிக்கு சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தை ஆரம்பித்தனர். சுவாமிகளுடன் சேர்ந்து அனைவரும் இறைப் பாடல்களை ஓதினர். அவர்கள் அனைவரும் வீட்டின் நடு ஹாலில் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அங்கு இரண்டு டியூப் லைட்டுகளும் ஒரு குண்டு பல்பும், ஐந்து முகங்களுடன் ஐந்து தீபங்கள் கொண்ட குத்து விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் எட்டு மணியை நெருங்கியது.

சுவாமிகளைத் தவிர அனைவரும் தங்கள் கடிகாரங்களைப் பார்த்தவாறே பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். சரியாக எட்டு மணிக்கு மின் விளக்குகளும், நல்லெண்ணெய் தீபங்களும் சட்டென குளிர்ந்து விட்டன. எங்கும் காரிருள். அப்போது வெங்கடராம சுவாமிகள் வழக்கமாகப் பாடும் வெண்ணிலாவே, ஜோதி வெண்ணிலாவே என்ற இனிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். ஆனால், சுவாமிகளுடைய குரல் மட்டும்தான் கேட்டது. வேறு யாரும் அவருடைன் சேர்ந்து பாடவில்லை. அனைவரும் பயத்தில் உறைந்து விட்டார்கள் என யூகிக்க முடிந்தது.

அந்த நிசப்தமான சூழ்நிலையில் சுவாமிகள் குரல் மட்டும் கணீரென மிக மிக இனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுவாமிகள் பாட்டை ஓதியபின் விளக்குகள் அனைத்தும் உயிர் பெற்றன. அப்போது சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படம் தடால் என்று கீழே விழுந்தது. ஆனால், அதன் கண்ணாடி சற்றும் உடையவில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு ஒவ்வொருவரிடமும் இருந்து வெளியானதைத் தெளிவாகக் காண முடிந்தது.

தரையில் விழுந்த அந்தப் படத்தை பூபாலன் எடுத்து சுவாமிகள் கையில் கொடுத்தார். “சுவாமி, இது என்னுடைய அம்மாவின் படம், நல்ல வேளை உடையவில்லை,“ என்று கூறினார்.
சுவாமிகள் தொடர்ந்து, “அப்படியா, நல்லது. உங்கள் அம்மா படம் கீழே விழுந்ததைப் பார்த்தால் அவர்கள் உங்களிடம் ஏதோ கோபம் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. அதற்குக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?“ என்று கேட்டார்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
உய்யக்கொண்டான்மலை

பூபாலன் மௌனமானார். ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பது போல் அவருடைய முகபாவம் தோன்றியது. குழப்பத்தில் அவருடைய மனைவியைப் பார்த்தார். அவரும் ஏதோ ஆழந்த யோசனையில் இருப்பது போல் தோன்றியது.

இதற்கிடையே சுவாமிகள், “என்ன சார், எதையோ தீவிரமாக யோசிக்கிறீர்கள் போல் தெரிகிறதே. எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லுங்கள். அப்போதுதானே பிரச்னைக்கு தீர்வு கிட்டும்,“ என்று கூறவே பூபாலன் ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, “அது வந்து,,, நாங்கள் இப்போது இருக்கும் இந்த வீடு என்னுடைய அம்மாவின் வீடு. அவர்கள் இறக்கும்போது இந்த வீட்டை தன்னுடைய பெண்ணிற்கு அதாவது என்னுடைய தங்கைக்கு தந்து விடும்படிக் கூறினார்கள். என்னுடைய தங்கையின் கணவர் இறந்து விட்டார். அதனால் நிராதரவான என் தங்கைக்கு உதவுவதற்காக என்னுடைய அம்மா இவ்வாறு கூறினார்கள். ஆனால், என்னுடைய தங்கைக்கு குழந்தைகள் இல்லை. அதனால் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அவளிடம் கொடுத்து விட்டு நான் இந்த வீட்டை வைத்துக் கொண்டேன். அதுதான் என்னுடைய அம்மாவின் கோபத்திற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று மென்று விழுங்கி விஷயத்தைக் கூறினார்.

சுவாமிகள் சிரித்துக் கொண்டே,“உங்கள் எண்ணம் உண்மைதான். இந்த விஷயத்தை நீங்கள் முதன் முதலில் அடியேனைச் சந்தித்த அன்றே உங்களிடம் கூறியிருக்க முடியும். ஆனால், அப்போது சொன்னால் உங்கள் மனம் ஏற்காது. அதனால்தான் இவ்வளவு காலம் கழித்து நீங்களே உண்மையை உணர்ந்து கொள்ளும் காலம் வந்தவுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன். எனவே, இனியும் நீங்கள் கால தாமதம் பாராது உடனடியாக இந்த வீட்டை உங்கள் தங்கைக்கு கொடுத்து விடுங்கள். அது ஒன்றுதான் உங்களுடைய பிரச்னைக்கு உண்மையான தீர்வு. இன்று எட்டு மணிக்கு வழக்கம்போல் மின் விளக்குகளும், எண்ணெய் விளக்குகளும் குளிர்ந்து போயின. ஆனால், யாருக்கும் எந்த ஆவித் தொந்தரவும் ஏற்படவில்ல. காரணம் இங்கு கூடியுள்ள எவரும் உங்கள் அம்மாவுக்கு தொந்தரவு அளித்தது கிடையாது. பாக்கி இல்லாதவர்களை, கர்ம பாக்கி தொடர்பு பெறாதவர்களை எந்த ஆவியும் துன்புறுத்துவது கிடையாது. இது உண்மை. அடியேன் இங்கு இருப்பதால் உங்களையும் உங்கள் அம்மாவின் ஆவி துன்புறுத்தவில்லை. ஆனால், அதற்காக உங்கள் வீட்டிலேயே குடியிருந்து உங்களைக் காப்பாற்ற முடியுமா?” என்று விளக்கம் அளித்தார்.

சுவாமிகள் கூறிய வண்ணம் பூபாலன் தன்னுடைய ஓய்வூதியத் தொகையிலிருந்து ஒரு வீட்டைத் தனக்காக வாங்கிக் கொண்டு, தான் இருந்த வீட்டை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அவருக்கு எந்த வித ஆவி சேஷ்டையாலும் தொந்தரவு ஏற்படவில்லை.

இவ்வாறு ஒருவர் தான் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையை அனுபவிப்பதற்கு உரிய மன உறுதியை அளிப்பதே சனீஸ்வரர் வழிபாடு. எனவேதான் சுவாமிகள் பூபாலனை சனீஸ்வர வழிபாடுகளை இயற்றுமாறு பணித்து அவர் உரிய மன உறுதியைப் பெற்றவுடன் தன்னுடைய வீட்டைத் தங்கைக்கு அளிக்கும்படிக் கூறினார். இந்த யோசனை ஏற்கனவே பூபாலனுக்குத் தோன்றியதுதான். இருப்பினும் தேவையில்லாமல் தன்னுடைய ஓய்வூதியத் தொகையில் பெரும்பாலான பங்கைக் கொடுத்து தனக்கு வீடு வாங்க அவர் மனம் ஒத்துக் கொள்ளவில்லை.

சற்குரு ஒருவரே எந்த மனிதனையும் பிறவித் தளையிலிருந்து விடுவிக்க முடியும் என்பதற்கு பூபாலன் வரலாறு ஒரு சான்றாகும்.

காக பகவானின் தியாகம்

சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காகம் எப்படி சனீஸ்வர மூர்த்திக்கு வாகனமாய் அமைந்தது என்பது நீங்கள் இதுவரை அறியாத தெய்வீக இரகசியமாகும்.

ஒரு தெய்வ மூர்த்திக்கு வாகனங்கள் எப்படி அமைகின்றன? மனிதர்கள் தங்களுக்கு வேண்டிய சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பணம் கொடுத்து தாங்களாக வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், தெய்வ மூர்த்திகளைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வாகனங்கள் தாங்கள் குறித்த தேவதா மூர்த்திகளுக்கு வாகனமாய் அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றன. அதற்கு உரித்தான பல்வேறு யோக, தப, தீர்த்த யாத்திரைகளை நிறைவேற்றிய பின்தான் இறைவன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பும் தெய்வ மூர்த்திகளின் வாகனங்களாக நியமிக்கின்றான்.

இவ்வகையில் அமைந்தவைதான் மூஷிகம், மயில், காளை போன்ற வாகன மூர்த்திகள். இக்காரணம் பற்றியே வாகன மூர்த்திகளை வணங்கினால் அந்த வாகனங்களுக்கு உரித்தான தெய்வ மூர்த்திகளை வணங்கிய பலன்களை வணங்கும் அடியார்களுக்கு இறைவன் தந்தருள்கின்றான். நந்தி என்பது வாகனம் என்பதற்கான இறை வார்த்தை.

காளை மட்டும் அல்லாது எம்பெருமான் சிவனுக்கு அமைந்த வாகனங்கள் கோடி கோடி.. அவை அனைத்துமே இறைவனை வேண்டி அடியார்கள் பெற்ற வரங்களே வாகனங்களாக உருபெற்றன.

ஒரு முறை தென்காசி புனித பூமியில் வாழ்ந்து வந்த காகத்திற்கு தான் சனீஸ்வர பகவானின் வாகனமாக ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. சனீஸ்வர பகவானின் பொறுமையைக் கேள்வியுற்று அவர் மேல் அலாதி அன்பும் பக்தியும் காகத்திற்கு ஏற்பட்டதே அதற்குக் காரணம். தெய்வீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது நிதானம்தானே. தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை அது உணர்ந்திருந்தது.

எப்படியாவது சனீஸ்வர பகவானின் வாகனமாக வேண்டும் என்ற விருப்பத்தால் அது பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று அங்கு வரும் மகான்கள், யோகிகளைச் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது. அவர்களும் தக்க தருணத்தில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று உறுதியளித்தனர். நம்பிக்கை தளராது காகமும் தன்னுடைய திருத்தல யாத்திரைகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது.

ஒருமுறை தென்காசி திருத்தலத்திற்கு ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன்னுடைய பத்தினி நற்பவி தேவியுடன் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்று அவர்களைத் தரிசனம் செய்து தன்னுடைய விருப்பத்தைக் கூறியது. நற்பவி தேவி காகத்திற்கு குங்குமத் திலகமிட்டு விரைவில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று அருளினாள். காகம் மிகவும் சந்தோஷம் அடைந்தது. தினமும் நற்பவி, நற்பவி என்று மனதினுள் ஜபித்துக் கொண்டிருந்தது.

கலியுகத்திற்கு உகந்தது தேவி உபாசனை. காகம் அனுதினமும் நற்பவி மந்திரத்தை ஓதி சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்ததால் காகத்தின் தவம் விரைவில் கனிந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தென்காசி அருகில் உள்ள ஐந்தருவியில் நீராடிய பின் இலஞ்சி முருகப் பெருமானை தரிசிக்க வேண்டி சென்றபோது நண்பகல் வந்து விட்டதால் கோயில் நடை சார்த்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் நடை திறக்கும்வரை திருக்கோயில் வாசலிலேயே அமர்ந்து நற்பவி நாம ஜபத்தில் திளைக்க ஆரம்பித்தது.

அப்போது தன்னையும் அறியாமல் காகம் உறங்கி விட்டது. அப்போது அதற்கு ஓர் அருமையான கனவு வந்தது. அந்தக் கனவில் நற்பவி தேவி ஓர் அன்ன வாகனத்தில் பவனி வந்து காகத்தைப் பார்த்து, “சரணாகத இரட்சகரைச் சரணடைவாய், உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று கூறினாள். கனவு களைந்து காக்கை எழுந்தது. அதே சமயம் முருகப் பெருமானுக்கு தீபஆராதனை நிறைவேறியது. அதை சுப சகுனமாக ஏற்றுக் கொண்ட காகத்தின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

தன்னுடைய நீண்ட நாள் விருப்பம் நற்பவி தேவியின் அருளால் நிறைவேறும் என்று உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. முருகப் பெருமானை தீப ஆராதனை ஊடே தரிசனம் செய்து அவருக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. உடனே கால தாமதம் செய்யாமல் சரணாகத இரட்சகர் தரிசனம் வேண்டி விரைவாகப் பறந்து சென்றது.

பொதுவாக, பகலில் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிக்கு விலக்காக அமைந்த சில திருத்தலங்களில் இலஞ்சி முருகன் திருத்தலமும் ஒன்று. இங்கு வரும் பகல் கனவுகள் பலிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

தில்லையாடி திருத்தலம்

திருக்கடவூர் அருகே உள்ள தில்லையாடி திருத்தலத்தில் அருள்பாலிப்பவரே ஸ்ரீசரணாகத இரட்சகர் ஆவார். காகம் தென்காசியிலிருந்து பறந்து சென்று தில்லையாடியை அடைந்தது. திருக்கோயிலுக்குள் சென்று கணபதி மூர்த்தியைத் தரிசித்த பின்னர் அம்பாள் ஸ்ரீசாந்த நாயகியின் தரிசனத்திற்காக பிரகார வலம் வரத் தொடங்கியது. (அம்பாளின் தற்போதைய திருநாமம் ஸ்ரீபெரியநாயகி என்பதாகும்).

பிரகார வலம் பூரணம் பெறும் நிலையில் தீப ஆராதனைக்கான மேள தாளங்கள் கேட்க ஆரம்பித்தது. ஆனால், எவ்வளவுதான் வேகமாக வந்தாலும் பிரகார வலம் பூர்த்தி அடைவதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் நிறைவேறக் கூடிய வலம் நீண்டு கொண்டே செல்வதாகத் தோன்றியது.

தில்லையாடி திருத்தலம்

காகத்திற்கு ஒன்றும் புரியவில்லை.எல்லாம் அன்னையின் திருவுள்ளம்போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பிரகார வலத்தை தொடர்ந்தது. பல மணி நேரம் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்ததால் காகத்திற்கு மிகுந்த தாகமும், பசியும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து களைப்பும் ஏற்படவே காகம் மிகவும் தளர்ந்து போய் விட்டது. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் பிரகார வலத்தை முடித்து விட்டு அம்பாள் தரிசனத்திற்குப் பின் உணவேற்கலாம் என்ற வைராக்யத்துடன் வலத்தைத் தொடர்ந்தது.

அப்போது பிரகாரத்தில் இருந்த ஒரு மண் கலயத்தில் ஏதோ புரளுவது போல் தோன்றியது. அந்தக் கலயத்தில் இருந்த நீரில் ஒரு அணில் பிள்ளைக் குட்டி விழுந்து மூழ்கி உயிருக்காகத் தத்தளித்துக் கொண்டிருந்தது. மனிதர்களைப் பொறுத்த வரையில் அது அணில் பிள்ளையாக இருந்தாலும், காகத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் சுவையான உணவுதானே? பசியாலும் தாகத்தாலும் மயங்கிய நிலையில் இருந்த காகம் அந்த அணில் பிள்ளையை விழுங்கி விடலாம் என்று தோன்றியது.

இருந்தாலும் இறை அடியார்கள் என்றும் நிதானத்தை இழக்கக் கூடாது, அதிலும் நிதானத்திற்கே பெயர் பெற்ற சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைய விரும்பும் நான் நிதானத்தை இழக்கலாமா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டது காகம்.

மனம் தெளிவு அடைந்த மறுகணம் அந்த அணில் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. மெதுவாகத் தன்னுடைய அலகால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்து அணில் பிள்ளையைக் கவ்வித் தரையில் போட்டது. ஆனால், வெகுநேரம் நீரில் மூழ்கி இருந்ததால் அணில் குளிரால் நடுங்க ஆரம்பித்தது. அந்த நிலை நீடித்தால் ஓரிரு விநாடிகளில் அதன் உயிர் பிரிந்து விடும் போல் தோன்றியது. காகம் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய உடலிலிருந்து சிறகுகளைப் பிய்த்து அணில் குட்டி மேல் போட்டு அதைத் தன் சிறகுகளால் போர்த்தி விட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அணில் குட்டியின் குளிர் குறைய ஆரம்பித்தது. அதற்குள் காகத்தின் அனைத்து இறகுகளும் குறைந்து அதன் உடலிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனால், அதைச் சிறிதும் சட்டை செய்யாமல் அணில் குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டது.

ஸ்ரீசனீஸ்வர பகவான் குற்றாலம்

அருகிலிருந்த ஒரு பழைய தேங்காய் ஓட்டை எடுத்துக் கொண்டு எங்கோ பறந்து சென்று அணில் குட்டிக்காக பால் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், உடலில் சிறகுகள் இல்லாததால் அதனால் பறக்க முடியவில்லை. அவ்வப்போது கீழே விழுந்து தத்தி தத்தி வந்து எப்படியோ பாலைக் கொண்டு வந்து அணில் குட்டிக்கு ஊட்டியவுடன் அணில் குட்டிக்கு முழுமையாக உயிர் மீண்டது. ஆனால், காகம் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து மயங்கி விழுந்தது.

அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

அணில் குட்டி மறைந்தது. அது பளீரென்ற வெள்ளை நிறத்தையுடைய ஒரு காளையாக உருவெடுத்தது. அதன் மேல் ஸ்ரீசாந்தநாயகி உடனுறை சரணாகத இரட்சகர் எழுந்தருளினார். காகம் தன்னிலை அடைந்தது. எதிரே கண்ட காட்சி கனவா நனவா என்று தெரியாமல் இன்பத்தால் திக்கு முக்காடியது. ரிஷப தேவர் காகத்திற்கு அருளாசி வழங்கினார்.

அம்பாள் காக தேவதையே, “நீ பன்னெடுங் காலம் விரும்பிய சனீஸ்வர மூர்த்தியின் நந்தியாகும் வாகனப் பதவியைக் கூட கருதாது ஒரு அணில் குட்டியின் உயிர் மீட்க உன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாய். அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டுள்ளோம். உன்னுடைய தியாகப் பணிவிடை ஒரு ஜீவனைக் காப்பாற்றி விட்டது,” என்று திருவாய் மலர்ந்து அருளினாள்.

காகம் மிகவும் பணிவுடன், “அன்னையே, தாங்கள் அறியாததா? அடியேன் ஒரு உயிரைக் காப்பாற்றினேன் என்பதை நிச்சயமாக ஒப்புக் கொள்ள முடியாது. இத்தல ஈசன் சரணாகத ரட்சகன் என்ற நாமம் பூண்டிருக்கும்போது அங்கு ஈசனை நம்பிய ஒரு ஜீவன் தன்னுடைய உயிரை இழக்குமா? இத்தல ஈசனின் பெருமையை உணர்த்த அப்பெருமான் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியதற்கு எங்கள் மூதாதையர்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்,” என்று மிகவும் பணிவுடன் கூறியது.

இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் இறை அடியார்களுக்கு இவ்வாறு ஒவ்வொரு நொடியும் சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குருமேல் கொண்டுள்ள தளராத நம்பிக்கையே ஒருவரை எதிர்வரும் சோதனைகளை வெல்லத் தேவையான சக்திகளை அளிக்கும். இறைவனைச் சந்திக்கும் அந்த நேரத்தில் கூட காகத்திற்கு எப்படிப்பட்ட சோதனைகள் ஏற்படுகிறது பார்த்தீர்களா?.

‘நாம்தான் அணில் குட்டியைக் காப்பாற்றினோம்’, என்ற எண்ணம் சிறிதளவு காகத்திற்குத் தோன்றியிருந்தால் கூட அதற்கு இறைவனின் அருளாசி கிடைத்திருக்காது.

சிவபெருமான் காகத்தின் பணிவை வெகுவாகப் பாராட்டினார். பணிந்தவன்தானே பக்தன். காகத்தை அன்புடன் தன் திருக்கரங்களால் தடவிக் கொடுத்து,  

     காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
     தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்

என்று எம்பெருமானே சனீஸ்வர மூர்த்தியை அழைத்தார். இதை விட ஒரு சிறந்த பதவி யாருக்குக் கிடைக்கும்? சனீஸ்வர மூர்த்தியின் வாகனம் காகம் என்று எம்பெருமானே இந்த துதி மூலம் அறிவித்தார். சனீஸ்வர மூர்த்திக்கு எம்பெருமானே வாகனம் அளித்தது குறித்து பேருவகை எய்தினார். அனைவரும் சிவ சக்தி மூர்த்திகளைத் தொழுது வணங்கினர்.

இவ்வாறு சனீஸ்வர பகவான் காகத்தை வாகனமாகப் பெற்ற திருத்தலமே தில்லையாடித் திருத்தலமாகும். இங்கு சனீஸ்வர மூர்த்தி தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி உள்ளார்.

 1. இத்தல சனீஸ்வர மூர்த்தியை வணங்கி செந்தாமரை மலர்களால்
  அர்ச்சித்து வழிபட்டால் நெடுங்காலமாக கிடைக்காத பதவி உயர்வுகள்
  தானாகத் தேடி வரும்.

 2. பசு நெய்யில் வறுத்த அக்ரூட் பருப்பு கலந்த பசும்பாலை
  சனீஸ்வர மூர்த்திக்கு நைவேத்யமாகப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் படிப்பில் மந்தமாக உள்ள
  குழந்தைகள் கல்வி அறிவு விருத்தியாகும்.

 3. இரண்டு, மூன்று வயதாகியும் தெளிவாகப் பேச்சு வராத குழந்தைகள் உண்டு. புதன் கிழமைகளில் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப் பிரதட்சிணம் வந்து சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டால் குழந்தைகள் பேச்சில் தெளிவு பிறக்கும்.

 4. வயதானவர்கள் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. இறுதிக் காலத்தில் குழந்தைகள் தங்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடாத நிலையை அடைய விரும்புவோர்கள் இம்மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் அந்திம வாழ்வு நலமாய் அமைய இவர் வழிகாட்டுவார்.

ஆசைக்கு அளவேது? இன்று ஆயிரம் ரூபாய் கிடைத்தால் நாளைக்கு பத்தாயிரத்தை மனம் நாடுகிறது. இத்தகைய ஆசைகள் மனிதனுக்குத் துன்பத்தை விளைவிக்கும். இன்று நூறு பேருக்கு அன்னதானம் அளித்தோம், நாளை ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவோம் என்று விரும்பினால் அது தெய்வீக ஆசை. இத்தகைய தெய்வீக ஆசைகள்தான் மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.

காகம் பெற்ற ஈஸ்வர பட்டம்

இவ்வாறு சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைந்த காக மூர்த்திக்கு அடுத்து ஓர் ஆசை தோன்றியது. அது என்ன? தன்னுடைய தேவன் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்தியாக விளங்கும்போது தான் மட்டும் சாதாரண வாகன மூர்த்தியாக விளங்குவது தன்னுடைய தலைவனுக்குத்தானே இழுக்கு. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தது.

பல காலம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் தன்னுடைய மூர்த்தியிடமே தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டது. சனீஸ்வர மூர்த்தியும் உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணமே, ஆனால், இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் தகுதி உள்ளவர் ரிஷிகளுக்கெல்லாம் தலைமை ரிஷியாக விளங்கும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் ஒருவர்தான். நீ அவரை நோக்கி தவம் இருப்பாயாக,” என்று அறிவுரை கூறினார்.

ஸ்ரீசனீஸ்வர பகவான் தில்லையாடி

காக வாகனமும் சனீஸ்வர மூர்த்தியின் அருளுரையை ஏற்று அகத்திய முனிவரை நோக்கித் தவம் இயற்றியது. ஸ்ரீஅகத்திய பெருமான் திருஅண்ணாமலையில் காக வாகன மூர்த்திக்கு ஆக்கோட்ட லிங்கம் தரிசனமும், ஈஸ்வர பட்டமும் பெற்றுத் தந்த தெய்வீக மகாத்மியத்தை எமது ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் எடுத்துரைத்துள்ளோம். வைகாச பூரண மகரிஷியே சனீஸ்வர மூர்த்திக்கு ஈஸ்வர பட்டம் பெற்ற வாகனமாக அமைந்து மக்களின் குறை தீர்த்து வருகிறார்.

இவ்வாறு காக வாகனம் ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு எவ்வகையிலேனும் நன்றிக் கடன் தீர்க்க வேண்டும் என்று விரும்பி, “சுவாமி, தங்கள் கருணையால் அடியேனுக்கு மிகவும் தெய்வீகமான ஈஸ்வர பட்டம் அருளப் பெற்றேன். தங்களின் கருணைக்கு எவ்வகையிலேனும் நன்றி செலுத்த அடியேனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்,” என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தது.

அகத்தியப் பெருமானும், “எதிர்காலத்தில் செய்நன்றி மறத்தல் என்பது கலியுகத்தில் நடைபெறும் ஒரு அன்றாட நிகழ்ச்சியாக ஏற்படும். உன்னுடைய வரலாற்றைக் கேள்விப்படும் மக்கள் உன்னை ஓர் முன்னோடியாக எடுத்துக் கொண்டால் அவர்கள் நற்கதி அடைவார்கள். ஒரு காகத்திற்கு உள்ள நன்றி மறவாத குணம் கூட ஒரு மனிதனிடம் காணப்படாதது கலியுக சாபக் கேடே. இனி வரும் மக்களுக்கு உன்னுடைய தியாகம் ஒரு பாடமாக அமையட்டும்,” என்று அற்புத ஆசி வழங்கினார்.

மேலும், “மக்களுக்கு அரும் பெரும் தொண்டாற்ற வேண்டும் என்று உன்னுடைய உள்ளம் விழைவதால் அதை நிறைவேற்றும் பொருட்டு இறைவன் அருளால் உனக்கு ஒரு இறைப் பணி வழங்க கடமைப்பட்டுள்ளேன். திருஅண்ணாமலை புனித பூமியில் மலையைச்

சுற்றிலும் 11,022 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் எல்லாம் முறையாக நீராடி வழிபாடுகள் இயற்றி மீண்டும் பொதிய மலைக்கு வந்து சேர். உனக்கு நற்செய்தி ஒன்று காத்திருக்கும்,” என்று ஸ்ரீஅகத்தியர் காகத்திடம் தெரிவித்தார்.

காகமும் பரமானந்தத்துடன் அகஸ்தியர் கூறிய முறையில் திருஅண்ணாமலையை கிரிவலம் ஆரம்பித்தது. தினமும் ஒரு தீர்த்தத்திலாவது தீர்த்த நீராடல் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்யத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு திருஅண்ணாமலையைச் சுற்றிலும் உள்ள தீர்த்தங்களில் நீராடிக் கொண்டிருந்தது.

மகரிஷிகளுக்கு இறைவன் பெரும்பாலும் பூஜை முறைகளை அளிப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே தாங்கள் மேற்கொண்டிருக்கும் இறைப் பணியைப் பொறுத்து பூஜை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் பூலோகத்தில் ஒரு மனிதனாகவோ, விலங்காகவோ, மரம், செடியாகவோ பிறப்பெடுத்தால் அந்த ஜீவ உடலை விட்டுப் பிரிய வேண்டிய நேரத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மகரிஷிகளைப் பொறுத்தவரை இதுவே ஒரு முக்தி நிலையாகும். கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்கள் மிகவும் கடினமானவை.

உதாரணமாக, ஒரு மகரிஷி ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றுவதற்காக பூலோகத்திற்கு அவரை இறைவன் அனுப்பி வைத்தால் அந்த ஒரு லட்சம் மக்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற்ற பின்தான் அவர் பூமியை விட்டுப் புறப்பட முடியும்.

இதற்கிடையே அவருடைய பூத உடல் பூமியில் ஏற்படும் கர்ம வினைகளைச் சுமக்க முடியாமல் போகலாம். ஆனால், அதை காரணம் காட்டி தாங்கள் மேற்கொண்ட பணியை நிறைவேற்றாமல் அவர்கள் தங்கள் உடலை உகுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை ஒவ்வொரு மகரிஷியும், மகானும் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.

எனவே முக்தி, மோட்ச நிலை என்பது ஒவ்வொருவருடைய ஆன்மீக நிலையைப் பொறுத்தது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

வைகாச பூர்ண மகரிஷி

தற்போது சனீஸ்வர மூர்த்தியின் காக வாகனமாக உருக் கொண்ட வைகாச பூரண மகரிஷியும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தன்னுடைய தீர்த்த யாத்திரை பூஜைகளை நிறைவேற்றி வந்தார். அவர் எப்படி தீர்த்த பூஜைகளை நிறைவேற்றி வந்தார். தான் ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக அகத்தியப் பெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த மூலிகையைப் பறித்து அவருக்கு அர்ப்பணித்து வந்தார் அல்லவா? அது போல ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடும்போதும் அந்த தீர்த்தத்திற்கு உரித்தான மலர்களைப் பறித்து வந்து அந்த மலர்களால் தீர்த்த தேவதைகளை பூஜித்த பின்னரே தீர்த்தங்களில் இறங்கி நீராடும் முறையைக் கையாண்டார் வைகாச பூரண மகரிஷி.

இறை மூர்த்திகளுக்கு மட்டும்தான் மலர் வழிபாடு என்ற கணக்கு கிடையாது. தீர்த்த தேவதைகளையும் அவசியம் மலர்களால் வழிபட வேண்டும். இவ்வாறு தீர்த்த மலர் வழிபாட்டு முறையை பூலோகத்தில் முதல் முறையாக ஏற்படுத்தியவரே சனீஸ்வர மூர்த்தியின் வாகனமாய் அருள்புரியும் வைகாச பூரண மகரிஷி ஆவார்.

தீர்த்த தேவதைகளுக்கு உரிய மலர்கள் பூலோகத்தில் மட்டும் அல்லாது வேறு லோகங்களிலும் மலர்ந்திருக்கும். அந்தக் குறிப்பிட்ட லோகங்களுக்குப் பறந்து சென்று குறித்த நேரத்திற்குள் மீண்டும் பூலோகத்திற்கு வந்து மலர்கள் வாடும் முன் அவற்றை தீர்த்த தேவதைகளுக்கு அர்ப்பணித்து அற்புதமாக வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார். உதாரணமாக, பாரிஜாத மலர் விஷ்ணு லோகத்தில் மட்டும்தான் மலரும், ஹரி சந்தன மலரை சப்தரிஷி லோகத்திலிருந்துதான் பெற முடியும்.

ஸ்ரீமுருகப் பெருமான் இலஞ்சி

திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படும். சில வகைத் தீர்த்தங்களை தேவர்கள் மட்டுமே காண முடியும். இன்னும் சில அரிதான தீர்த்தங்களை மகரிஷிகள் மட்டுமே தரிசிக்க முடியும்.

நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு தீர்த்தத்தையும் அடையாளம் காண்பதற்கு மிகவும் அபரிமிதமான பூஜா சக்திகள் தேவைப்பட்டது. அச்சமயங்களில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே யோகத்தில் ஆழ்ந்து விடுவார் காக மூர்த்தி. அடுத்த தீர்த்தம் பற்றிய விளக்கங்களை அறியும் வரை உண்ணாமல் உறங்காமல் யோகத்திலேயே நிலைத்திருந்து தவம் இயற்றி வந்தார் வைகாச பூரணர். இவ்வாறு அவர் 11,022 புனித தீர்த்தங்களையும் வழிபட்டு அவற்றில் நீராடல் மேற்கொள்வதற்கு 300 யுகங்கள் கடந்து சென்றன.

வைகாச பூரணர் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும் தீர்த்த நீராடல்களை நிறைவேற்றிய பின் அவருடைய மேனி நூறு சூரிய பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவர் உடலைச் சுற்றி பொன்னிறக் கதிர்கள் வெளிப்பட்டன. ஆனால், வைகாச பூரண மகரிஷியோ தன்னுடலிலிருந்து தோன்றிய பொற்கதிர்களை தன்னுடைய தபோ சக்தியால் மறைத்துக் கொண்டு ஒரு சாதாரண காக வடிவத்திலேயே அகத்திய முனிவரின் தரிசனத்திற்காக பொதிய மலைக்கு விரைந்து சென்றார்.

வைகாச பூரண மகரிஷியைக் கண்டவுடன் ஸ்ரீஅகத்திய முனிவர் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். வைகாச பூரணர் திடுக்கிட்டார். “சுவாமி, ரிஷி குலத்திற்கே தலைமைப் பீடாதிபதியான தாங்கள் அடியேனுடைய காலில் விழலாமா?” என்று குரல் தழுதழுக்க கண்கள் நீர் சொரிய இரு கரம் கூப்பி வணங்கி அகத்திய முனியைத் தொழுதார். அகத்தியர் அன்புப் புன்னகையுடன், “திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான தீர்த்தங்களைத் தரிசித்து அவற்றில் முறையாக நீராடி அற்புதமான தேவ லோக, விஷ்ணு லோக, சத்ய லோக மலர்களை எல்லாம் கொண்டு சிறப்பாக தீர்த்த பூஜைகளையும் நிறைவேற்றி உள்ளாய். அவ்வாறிருக்கும்போது வணங்குவதற்கு உன்னைவிடத் தகுதியான ஜீவன் எது?“ என்று வினவினார்.

காகம் தன் தலையைக் குனிந்து கொண்டது. அகத்திய பெருமானின் வார்த்தைகளில் இருந்த உண்மை காகத்தைப் பிரமிக்க வைத்தது. 300 யுகங்கள் நீராடியும் திருஅண்ணாமலை தீர்த்தத்தின் மகிமையை உணராமல் இருந்த வைகாச பூரண மகரிஷிக்கு ஒரே நொடியில் அத்தீர்த்தங்களின் அற்புத மகிமையை தன்னுடைய பணிவான வணக்கம் மூலம் தெரிவித்த அகத்திய மகரிஷியின் மேன்மை குறித்து புளகாங்கிதம் அடைந்தார். இப்படி ஒரு மகரிஷியைப் பெற்ற உலகம் எத்துணை பெருமை வாய்ந்தது என்று எண்ணி எண்ணி பேருவகை கொண்டார் வைகாச பூரண காக மூர்த்தி.

அகத்தியர் தொடர்ந்து, “மகரிஷி, அடியேன் மேற்கொள்ள இருக்கும் தெய்வீகப் பணிக்கு உங்களுடைய புண்ணிய சக்தியை ஈந்தருள வேண்டும்.இது எம்பெருமானின் விருப்பம். இதைத் தாங்கள் அன்பு கூர்ந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். வைகாச பூரணர் பெருமகிழ்ச்சி கொண்டார். தான் அகத்தியப் பெருமானுக்கு எப்படியாவது நன்றிக் கடனைத் தீர்க்க வேண்டும் என்று தானே பல யுகங்கள் காத்திருந்தார்.

இப்போது அகத்திய முனிவர் தானே முன் வந்து அந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கும்போது இதை விடச் சிறந்த பேறு என்ன இருக்க முடியும்?

வைகாச பூரணர், “சுவாமி, அடியேனுக்கு என்று எந்த வித புண்ணிய சக்தியும் கிடையாது. அனைத்தும் தாங்கள் இட்ட பிச்சையே. எனவே எப்போது வேண்டுமானாலும் அதைத் தங்கள் திருப்பாதங்களில் அர்ப்பணிக்க சித்தமாக இருக்கிறேன்,” என்று தயங்காமல் தெரிவித்தார்.

ஒரு சுப முகூர்த்த தினத்தில் அகத்தியரும் வைகாச பூரணரும் குடகு மலையை அடைந்தனர். அகத்தியர் முதலில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து முறையாக கணபதி பூஜையை நிறைவேற்றினார். பின்னர் ஒரு முகூர்த்த நேரத்திற்கு அற்புதமான வேத மந்திரங்களை ஓதி தன்னுடைய கமண்டலத்திலிருந்து மூன்று சொட்டு தீர்த்தத்தை பிள்ளையாரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அடுத்த விநாடியே அங்கு ஓர் அற்புத நீரூற்று தோன்றியது. தேவர்கள் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தனர்.  ஆம், அகத்தியர் கங்கைக்கும் மூத்த காவிரி நதியை பூமிக்கு கொண்டு வந்து விட்டார். அந்த அற்புத கோலாகலமான முகூர்த்தத்தில் அகத்தியர் வைகாச பூரணரை அழைத்து, “மகரிஷியே, தங்களுடைய திருஅண்ணாமலை தீர்த்த பூஜை பலன்கள் அனைத்தையும் இந்த தீர்த்தத்தில் தரை வார்த்துக் கொடுத்து விடுங்கள்,” என்று கூறவே வைகாச பூரணரும் சற்றும் தாமதியாது தன்னுடைய தீர்த்த பூஜா சக்திகள் அனைத்தையும் அகத்திய மகரிஷி தோற்றுவித்த காவிரி நதியில் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.

அகத்தியர், “தங்களுடைய மலர் வழிபாடு சக்திகள் நிறைந்த புண்ணிய சக்தியால் இந்நதி பொங்கிப் பெருகுவதால் இன்று முதல் காவிரி என்று அழைக்கப்படும், (மலர்கள் செறிந்த சோலைகளுடன் விளங்கும் நதி),”

”திருஅண்ணாமலையில் உறையும் தட்சிணா மூர்த்தியின் குரு சக்திகள்  இந்நதியில் பரிணமிப்பதால் உங்களுடைய பொற் கிரண சக்திகளும் அதில் கலந்து இந்நதி குருவுக்கு உகந்த நதியாக அமையும். எனவே, காவிரி பொன்னி நதி எனவும் பெரியோர்களால் அழைக்கப்படும், தாங்கள் காக வடிவில் தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டதால் இந்நதி காகநதி எனவும் வழங்கப்படும். சனீஸ்வர பகவான் முடவன் முழுக்கு என்ற தீர்த்த நீராடலை மேற்கொள்ளும் காலத்தில் தங்கள் திருநாமத்தைக் கூறி காவிரியில் நீராடுபவர்களே அதன் முழுப் பலனையும் பெற முடியும்,” என்று ஆசி வழங்கினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி நதி நமது பூலோகத்தில் பிரவாகம் கொண்டுள்ளது என்றால் இதை விடப் புனித தேசம் வேறெங்கு இருக்க முடியுமா?

ஒரு முறை ஏழு கடலையும் ஒரு துளியாக்கி அகத்திய பெருமான் தன் உள்ளங்கையில் வைத்து விழுங்கி விட்டார் அல்லவா? அதனால் அகத்தியரின் கரங்கள் பட்ட தீர்த்தத்தில் எப்போதும் ஏழு கடல்களின் சக்திகள் துலங்கும். எனவே, காவிரி தீர்த்தத்தில் ஏழு கடல் தீர்த்த சக்திகளும், திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்து தீர்த்த சக்திகளும் நிரவிப் பெருகி உள்ளன. இறை அடியார்கள் இனியாவது காவிரித் தாயின் மேன்மையை உணர்ந்து முடிந்த போதெல்லாம் காவிரியில் நீராடி அற்புத தெய்வீக சக்திகளைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நலம் அடைய வேண்டுகிறோம்.

சனீஸ்வர பகவானின் வாகன மூர்த்தியின் பெருமையே இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் சனீஸ்வர பகவானின் கீர்த்தி எத்துணை சக்தி உடைத்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.  

ஒரு மனிதன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் இந்த நலன்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமானால் அவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லவா? ஒருவர் எல்லா யோகங்களையும் பெற்றிருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை என்றால் அனைத்தும் வீண்தானே.  எல்லாச் செல்வத்திற்கும் மூலமான ஆயுள் செல்வத்தை அளிக்கும் மூர்த்தியே சனி பகவான் ஆவார்.

கடுமையான அரிஷ்ட யோகங்களையும் தகர்க்கும் சக்தி உடையதே சனீஸ்வர வழிபாடு.

அரிஷ்ட யோகங்களைத் தடுக்கும் வழி

நமது குருமங்கள கந்தர்வா வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சி. அவருக்கு செந்தில்குமார் என்று ஒரு மாணவன் ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் நண்பனாக இருந்தான். செந்திலுக்கு அம்மா அவன் மூன்று வயதாக இருக்கும்போது இறந்து விட்டாள். அவனுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டார். அந்த இரண்டாம் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. அதனால் செந்தில் சிற்றன்னையின் கொடுமையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிற்றன்னை அவனுக்கு சாப்பாடு தருவதே கிடையாது. எப்போதாவது கொஞ்சம் பழைய சோறு கொடுப்பாள் அவ்வளவுதான். அதனால் செந்தில் எப்போதும் பள்ளிக்கு வரும்போது வெறும் வயிற்றுடன்தான் வருவான். அதை அறிந்த நமது குருநாதர் தான் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டிலிருந்து பாதியைக் கொடுத்து விடுவார். இரவிலும் பெரும்பாலும் அவனுக்கு சாப்பாடு எதுவும் அவனுடைய சிற்றன்னை தருவதில்லை.

இதனால் செந்தில் எப்போதும் துரும்பு போல் இளைத்தே இருப்பான். சிறுவனான நமது குருநாதர் செந்திலின் நிலை கண்டு மிகவும் வருந்தினார். தன்னுடைய குருநாதரான கோவணாண்டிப் பெரியவரிடம் இது பற்றி ஒரு முறை கூறினான். அவரும், “இதற்கு அவனோட போன ஜன்ம கர்ம பாக்கிதான் காரணம். நீயும் நானும் இதற்கு ஒன்னும் செய்ய முடியாது,” என்று கூறி விட்டார்.

ஆனால், சிறுவனோ விடுவதாக இல்லை. “வாத்யாரே, உன்னால முடியாத ஒரு காரியம் இருக்கா, நீ நினைத்தால் எப்படியும் அவனைத் தன் சித்தியில் கொடுமையிலிருந்து மீட்டு விடலாம், எப்படியாவது அவனை சித்தியிடமிருந்து பிரித்து வேறு நல்ல இடத்தில் சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய், வாத்யாரே,” என்று முறையிட்டான்.

பெரியவர் வானத்தில் ஏதோ கணக்குப் போட ஆரம்பித்தார். குழந்தைகள் சிலேட்டில் பென்சிலைக் கொண்டு எழுதுவதைப் போல பெரியவர் தலைக்கு மேல் தன்னுடைய ஆள்காட்டி விரலால் ஏதேதோ எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, “சரிடா உனக்காக கஷ்டப்பட்டு ஒரு பிராயசித்தம் செந்திலுக்குத் தருகிறேன். நல்லா தெரிஞ்சுக்கோ அதுவும் ஒரே ஒரு முறை மட்டும்தான். இன்னும் மூன்று மாதத்தில் அவன் ஒரு கஷ்டமான சூழ்நிலையைச் சந்திக்கப் போகிறான். அதிலிருந்து அவன் உயிர் பிழைப்பது கடினமே. இருப்பினும் நீ கேட்டதற்காக சனி பகவானிடம் போராடி அவரிடம் பிராயசித்தம் பெற்றுள்ளேன். நீ முடிந்தால் அவனைக் காப்பாற்று.” என்று பெரியவர் அமைதியாகக் கூறினார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “செந்தில் உயிருக்கு ஆபத்து என்கிறார். நான் அவனை காப்பாற்ற வேண்டும் என்கிறாரே,“ என்று புரியாமல் தவித்தான்.

அவன் எண்ண ஓட்டங்களைக் கிரகித்த பெரியவர் தொடர்ந்து, “ சரிடா, எல்லா விவரத்தையும் நானே சொல்லிடறேன். வரப் போற மூணு மாசமும் தினமும் உன் கையால காக்கைக்கு ஒரு கைப்பிடி முந்திரிப் பருப்பும் ஒரு கைப்பிடி திராட்சையும் (dry grapes) வாங்கிப் போடு. மிச்சத்த சாமி பாத்துப்பாரு,” என்றார்.

சிறுவன் மேலும் குழம்பிப் போனான். அவன் அப்பா ஒரு பைசா காசு கூட அவனிடம் தருவதுகிடையாது. அப்படி யாராவது கொடுத்தால் அதைப் பாக்கெட்டில் போட முடியாத அளவிற்கு பெரியவர் வேறு அவன் டிராயர் பையில் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார். முந்திரிப் பருப்பும் திராட்சையும் எப்படி வாங்குவது, ஒரு வேளை பெரியவர் காசு தருவாரோ?” என்று நினைத்து அவர் கோவணத்தைப் பார்த்தான் சிறுவன்.

பெரியவர் இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு, “ஏண்டா நாங்க பிராயசித்தம்தான் தருவோம், துட்டு கூடவா தர முடியும்?” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக எழுந்து அங்காளி கோயிலுக்கு வெளியே போய் விட்டார்.

அப்படியானால் இனி அவரைப் பார்க்க முடியாது என்று அர்த்தம்.

சிறுவன் யோசித்தான். சரி வேறு வழியில்லை. அம்மாவைத்தான் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு தன் தாய் முத்து மீனாட்சி அவர்களிடம் செந்திலுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றியும் அதைத் தடுக்க பெரியவர் கூறிய பூஜைமுறையைப் பற்றியும் கூறினான். காக்கைக்குக் கொடுப்பதற்கு பணம் எப்படி கிடைக்கும் என்று அம்மாவிடம் கேட்டான்.

அவர்களும் சற்று யோசித்து விட்டு, “என்னிடம் ஏது கண்ணு அவ்வளவு பணம். வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். என்னிடம் சிறிதளவு பணம் உள்ளது. அதில் கொஞ்சம் பட்டாணி வாங்கி வா. பட்டாணி சுண்டல் செய்து தருகிறேன். நீ பெரியவரைப் பார்க்க அங்காளி கோயிலுக்குப் போகும்போது பீச்சில் சுண்டலை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காகத்திற்கு முந்திரிப் பருப்பு வாங்கிப் போடு,” என்று யோசனை கூறினார்கள்.

சிறுவனின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. சந்தோஷத்தில் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். முத்து மீனாட்சி அவர்களின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும். அதனால் சில நிமிடங்களிலேயே அவர்கள் கொடுக்கும் சுண்டல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும். சிறுவனும் சிரமமில்லாமல் அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு காகங்களுக்கு முந்திரிப் பருப்பும் திராட்சையும் வாங்கிப் போட ஆரம்பித்தான்.

நமது குருநாதர் சித்துக்கள் அனைத்திலும் கரை கண்டிருந்தாலும், எந்த சித்தியையும் பயன்படுத்தாது ஒரு சாதாரண மனிதனைப் போலவே பீச்சில் சுண்டல் விற்று தன்னுடைய நண்பனின் உயிரைக் காக்கப் பாடுபட்டார்.

மூன்று மாதங்கள் மூன்று நாட்களாய் கழிந்து விட்டன. மூன்று மாதம் முடிவதற்கும் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை அறிவிப்பதற்கும் சரியாக இருந்தது. ஆனால், செந்தில் குமாரோ ஒரு பரீட்சையைக் கூட ஒழுங்காக எழுத முடியவில்லை. தினமும் இரவில் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீட்டைப் பெருக்குதல் என்று கடுமையான வேலைகளைச் செய்யும்படி அவன் சிற்றன்னை துன்புறுத்தியதால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் பரீட்சை ஹாலில் அமரும்போது அப்படியே பெஞ்சின்மேல் படுத்து தூங்கி விடுவான். எவ்வளவோ முயன்றும் ஒரு பரீட்சை கூட எழுத முடியவில்லை. சிறுவன் வெங்கடராமன் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள்தான் செந்தில் குமாரின் உயிரைப் பிடித்து நிறுத்தின.

தற்கொலை செய்வதற்காக பல முறை செந்தில் முயற்சி செய்தான். ஆனால், வெங்கடராமனுக்கு அது எப்படியோ தெரிந்து விடும். அன்பு வார்த்தைகள் பேசி அவன் எண்ணத்தை மாற்றி அவன் உயிரைக் காப்பாற்றி விடுவான்.

பள்ளி விடுமுறை அறிவித்தவுடன் வெங்கடராமன் செந்திலிடம் வழக்கம் போல ஆறுதல் வார்த்தைகளைப் பேசி விட்டு பெரியவரைக் காணச் சென்று விட்டான்.

செந்தில் ஒரு பரீட்சையும் எழுத முடியாமல் குறித்து மிகவும் மனம் நொந்து போய் விட்டான். அடுத்த வருடம் பெயிலாகி ஒரே வகுப்பில் எப்படி அமர்வது என்ற கவலை ஒரு புறமும் சாப்பாடு கிடைக்காமல் சிற்றன்னையின் கொடுமையை நினைத்து துக்கம் மறு புறமும் அவனை வாட்டவே, உடனே உயிரை விட்டு விடுவது என்று முடிவுக்கு வந்தவனாய் ரயில் பாதையை நோக்கி விரைந்தான்.

தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. தண்டவாளக் கட்டைகள் மேல் தாண்டித் தாண்டி ரயிலை நோக்கி ஓடினான். ரயில் அவன் அருகில் வந்து விட்டது. அப்போது கால் இடறி அப்படியே மயங்கி தண்டவாளத்தில் விழுந்து விட்டான். ஓரிரு நொடிகளில் நடக்க இருந்த அந்த அசம்பாவிதம் அவனுடைய தாய்க்குத் தெரிய வந்தது. அவளுடைய ஆவி பறந்து வந்தது. தன்னுடைய இரு கைகளாலும் செந்தில்குமாரைத் தூக்கி எடுத்து தண்டவாளத்திற்கு மறுபுறத்தில் போட்டு விட்டு மறைந்து விட்டது.

சனிபகவான் தனித்தருளும்
திருமருகல் திருத்தலம்

இந்த நிகழ்ச்சி எதுவுமே சிறுவனுக்குத் தெரியாது. அவன் பெரியவரைப் பார்த்தபோது அவர் சிறுவனிடம் இந்த விஷயங்களை எடுத்துரைத்தார்.

சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம். பெரியவர் அவனிடம் ஏற்கனவே ஆவிகள் பற்றி பேசும்போது ஆவிகளால் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த முடியாது என்று கூறியிருந்தார். அப்படி இருக்கும்போது எப்படி ஒரு பையனைத் தூக்க முடியும் என்பது சிறுவனுக்குப் புரியவில்லை.

பெரியவர்தான் அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்தார்.

“ஆவிகளால் மனோ ரீதியான தொடர்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். ஆவிகள் சூட்சும சரீரத்தின் மூலமாகத்தான் மனிதர்களிடம் பேசும். ஜடப் பொருட்களை அவைகளால் கையாள முடியாது என்பது உண்மைதான். ஆனால், கடவுள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் அல்லவா?. இறைவனிடம் நேருக்கு நேர் பேசும் வல்லமை உடைய சித்தர்களால் முடியாதது எதுவும் இல்லை. அதனால்தான் உன்னை சனீஸ்வர மூர்த்திக்குப் ப்ரீதியான தானத்தை மூன்று மாதத்திற்கு அளிக்கும்படிக் கூறினேன். அவருடைய கருணையால் ஆகாசிக் ரெகார்டை நாங்கள் மாற்றும்படி ஆகி விட்டது. அதனால்தான் உன்னுடைய நண்பன் உயிர் பிழைத்தான், இனி அவனை மறந்து விடு,”

அதாவது, விண்ணியல் பரிச்சுவடி என்று ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. Akashic record என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். ஒரு மனிதன் முதன் முதலில் எடுக்கும் பிறவி நீர் வாழ் ஜீவி. அந்த முதல் பிறவியிலிருந்து மனிதனாகப் பிறவி எடுக்கும் வரை 84 லட்சம் யோனி பேதங்களைக் கடந்தாக வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இறைவன் ஓரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார். அதுவே விண்ணியல் பரிச்சுவடி என்று சித்த பரிபாஷையில் அழைக்கப்படும். ஒரு மனிதனுடைய ஜாதகக் கட்டத்தில் அவன் இப்பிறவியில் ஏற்படும் நிகழ்ச்சிகள், சந்திக்கப்போகும் மனிதர்கள், அவனுக்கு அமையும் சூழ்நிலைகள் குறித்த விஷயங்கள் பதிக்கப்படுவது போல விண்ணியல் பரிச்சுவடியில் ஒரு ஜீவனுடைய அனைத்துப் பிறவி இரகசியங்களும் குறிக்கப்படுகின்றன.

இந்த பரிச் சுவடியை யோகிகளும் மகான்களும் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அவர்கள் கூட அந்த பரிச்சுவடியில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மகரிஷி நிலையை விட உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்களே விண்ணியில் பரிச்சுவடியில் மாற்றங்களைப் பதிக்க முடியும். சித்தர்கள் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் என்பது உண்மை என்றாலும் இதை அவர்களாகவே நிகழ்த்துவது கிடையாது. தற்போதைய பிறவியில் விண்ணியல் பரிச்சுவடியை நிர்வகிக்கும் பொறுப்பு சனீஸ்வர மூர்த்தியிடமே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சித்தர்கள் சனீஸ்வர மூர்த்தியின் அனுமதியின் பேரில் மிக மிக அபூர்வமாக இத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறார்கள்.

உதாரணம் கூற வேண்டுமானல் ஒரு வங்கியில் மேலாளர் பணம் கொடுக்கும் அதிகாரம் பெற்றவர் என்றாலும் அதை கேஷியர் மூலமாகப் பெறுவதுதானே நடைமுறை வழக்கம். மகான்களும் பெரியோர்களும் எப்போதும் இறை நியதியை மீறிச் செயல்படுவது கிடையாது என்பதால்தான் சனீஸ்வர மூர்த்தியைப் ப்ரீதி செய்து அவர் அனுமதியுடன் செந்தில்குமாரின் மரணத்தை ஒத்திப் போட்டார் பெரியவர்.

இதுவே பெரியவர் சிறுவனுக்கு அளித்த விளக்கம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறுவன் செந்தில் குமாரைப் பார்க்கவே இல்லை. அவன் பள்ளிக்கு கோடை விடுமுறைக்குப் பின் வரவே இல்லை. மேலும் முப்பது வருடங்கள் கழிந்தன.

சிறுவன் இப்போது குருமங்கள கந்தர்வாவாக மலர்ந்தார், ஸ்ரீஅகஸ்திய ஆஸ்ரம பீடாதிபதியாக பொறுப்பில் இருந்தார். அரும்பெரும் தெய்வீகப் பணிகளை ஏற்று நடத்திக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் குருநாதர் அவர்கள் அடையாறில் அடியார் ஒருவரைப் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்நாட்களில் பெரும்பாலும் குருநாதர் நடந்தேதான் எங்கும் செல்வது வழக்கம். 10, 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடங்களுக்குக் கூட வேகமாக நடந்து சென்று விடுவார். மிகவும் அரிதாகவே மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவார்.

அப்போது அவர் முன்னால் ஒரு நாய் பாய்ந்து வந்தது. மூன்றடி உயரம், பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். உயர்ந்த ஜாதி நாய் போல் தோன்றியது. வந்த வேகத்தில் குருநாதர் மேல் பாய்ந்து தன்னுடைய இரு முன்னங்கால்களையும் தோல் மேல் வைத்து அவருடைய சட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.

குருநாதர் யோசித்தார்.  எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத திட நெஞ்சம் கொண்டவர் அல்லவா? அதே சமயம் அனைத்து உயிரையும் இறைவனாகவே மதிப்பவர். எனவே இரு கைகளையும் கூப்பி நாயை வணங்கினார். மனதிற்குள் பைரவா, பைரவா என்று ஜபிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த நாய் அவருக்கு எந்த விதமான தொந்தரவையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்காகவே முயற்சி செய்தது. அதை ஒருவாறு உணர்ந்து கொண்ட குருநாதர் அவர் தன்னை நாய் எங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கு செல்வோம் என்று அமைதியாக அதனுடன் செல்ல ஆரம்பித்தார்.

குருநாதர் மேல் போட்டிருந்த கால்களை எடுக்காமல் நாய் பின்னால் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. குருநாதரும் அதனுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அச்சமயம் நாயைக் காணாமல் அதன் சொந்தக்காரர் அங்கு வந்து விட்டார். நாயையும் குருநாதரையும் பார்த்து விட்டு, “செல்வா, இது என்ன விளையாட்டு, அவரை விட்டு விடு,” என்று சத்தம் போட்டார். உடனே நாய் தன் கால்களை குருநாதர் தோல்களிலிருந்து எடுத்து விட்டது.

குருநாதரைப் பார்த்த நாயின் சொந்தக்காரர் முகத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும், எல்லையில்லா ஆனந்தமும் ஒரே சமயத்தில் பளிச்சிட்டன.

“நீ வெங்கட்டுல்ல…. ” என்று கத்திக் கொண்டே குருநாதரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

குருநாதரும் அவனை உடனே அடையாளம் கண்டு கொண்டார். ஆம், குருநாதருடைய பள்ளி நண்பன் செந்தில்குமார்தான் அங்கு நின்று கொண்டிருந்தான்.

பின்னர் குருநாதரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று இருவரும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

செந்தில் குமார் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தவுடன் அவனுடைய தாயாரின் ஆவி அவனைக் காப்பாற்றியது அல்லவா? அவன் நினைவு தெளிந்து எழுந்தபோது ஒரு பெரிய வீட்டில் மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு குழந்தை இல்லை. பெரிய பணக்காரர். செந்திலைப் பார்த்தவுடன் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. செந்தில் தன்னுடைய சோகக் கதையைக் கூறவே அப்பணக்காரரும் செந்திலை தன்னுடைய குழந்தையாகத் தத்து எடுத்துக் கொண்டார். தற்போது மிகவும் வசதியாக மாளிகை போன்ற வீட்டில் அனைத்து வசதிகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வந்தான்.

குருநாதரும் செந்திலின் புனர் வாழ்வைப் பற்றிக் கேள்விப் பட்டு இறைவனின் கருணையையும் பெரியவரின் அன்பையும் நினைத்து அவர்களுக்கு மனமார தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு செந்தில் குமாரிடம் விடைபெற்றுக் கொண்டார். பிரிய மனமில்லாமல் மிகவும் வருத்தத்துடன் விடை கொடுத்தான் செந்தில் குமார்.

அப்போது, “வெங்கட்ராமா உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன். பல வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன். எப்படியும் கட்டாயம் ஒரு நாள் உன்னைப் பார்ப்பேன் என்று எனக்குத் தெரியும். எனக்கு தாய், தந்தை, அனைத்தும் நீதான். நீ எதற்கும் ஆசைப் படாதவன் என்று எனக்குத் தெரியும்.இருந்தாலும் நான் கொடுப்பதைப் பொருள் என்று நினைக்காமல் என்னுடைய இதயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்,” அன்பு வார்த்தைகளால் இன்ப மழை பொழிந்தான் செந்தில். அப்போது அவன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு பேசினான்.

குருநாதரும் வேறு வழியில்லாமல் அவன் கொடுக்கப்போகும் பரிசுக்கு சம்மதம் அளித்தார். செந்தில் பூஜை அறையிலுள்ள ஒரு பழைய சந்தனப் பைழையிலிருந்து விலை உயர்ந்த ஒரு வைர மோதிரத்தைக் கொண்டு வந்தான். தன்னுடைய கையாலேயே அதை குருநாதருக்குப் போட்டு விட்டான்.

மேற்கொண்டு பேசுவதற்கு அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக குருநாதருக்கு பிரியா விடை கொடுத்தான்.

குருநாதர் அப்போது நாட்டு சுப்பராய முதலித் தெருவில் நாம சங்கீர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நேரே பூஜை வீட்டிற்கு வந்த குருநாதர் அங்கிருந்த அடியார்களிடம் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கமாகக் கூறினார்.

“சார், பார்த்தீர்களா சனீஸ்வர பகவான் மகிமையை. ஒருவன் வாழ்வதற்காக வழிகாட்டியாக கையைத்தான் காட்டினேன். அந்த ஒரு சிறிய செயலுக்கே சுவாமி மகிழ்ந்து எந்தத் தகுதியும் இல்லாத கேவலமான அடியேனுக்கு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக அளித்து விட்டார். குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளது இந்த வைர மோதிரம்.

அடியேனுக்கு இன்று முதல் சனி தசை ஆரம்பிக்கிறது. சனீஸ்வர மூர்த்திக்கு ப்ரீதியானது என்பதால் அவர் ஆசியுடன் இதை அணிந்து கொண்டேன்,” என்று அடியார்களிடம் விவரித்தார்.

“ஒரே ஒரு அடி அவரை நோக்கி நீங்கள் நடந்தால் போதும் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் நவகிரக மூர்த்தியே சனீஸ்வர பகவான் என்பதே வாத்யார் (வெங்கடராம சுவாமிகளின் குருநாதர்) அடியேனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். அதைத்தான் அடியேனும் உங்களுக்குச் சொல்கிறேன். வேறு ஒன்றும் அடியேனுக்குத் தெரியாது,” என்று புன்னகையுடன் சனீஸ்வர பகவானின் மகிமையை விவரித்தார்.

பொழிச்சலூர் சனீஸ்வர பகவான்

ஒவ்வொரு காரியத்தையும் குறித்த நேரத்தில் செய்வதால் அது நலமாய் முடியும். நாள், நட்சத்திரம், யோகம் போன்ற பல விதமான கால கூறுபாடுகளையும் கணக்கிட்டுச் செய்தல் என்பது அனைவருக்கும் இயலாது. கலியக மனிதனுக்கு மிகக் குறைந்த மனோ சக்தி இருப்பதால் அதைக் கணக்கில் கொண்டு சித்தர்கள் ஹோரையை அனுசரித்து காரியங்களைச் செய்து வந்தால் அது பெரும்பாலான கால தோஷங்களை நிவர்த்தி செய்யும் என்று அருளியுள்ளனர்.

எனவே சுப ஹோரைகளான புத, குரு, சுக்ர ஹோரைகளில் காரியங்களைச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால் அக்காரியங்கள் நல்ல விதமாய் அமைந்து நற்பலன்களைக் கொடுக்கும். மேலும் சுப ஹோரைகள் குறித்த தினத்திற்கு பகை ஹோரையாக இல்லாமல் இருத்தலும் அவசியம் ஆகும். உதாரணமாக, கல்வி சம்பந்தமான ஒரு காரியத்தைச் செய்வதற்கு வியாழக் கிழமையில் வரும் குரு ஹோரை உகந்ததே. ஆனால், வியாழக் கிழமையில் வரும் சுக்ர ஹோரை உகந்ததல்ல. காரணம் குருவும் சுக்ரனும் ஒருவொருக்கொருவர் சத்ருத்துவம் என்னும் பகைமை குணத்தைப் பெற்றவர்கள். அதே சமயம், சூரிய ஹோரை சுப ஹோரையாக இல்லாவிட்டாலும் சூரியன் குருவுக்கு நட்பாக குணம் கொண்டுள்ளதால் வியாழக் கிழமையில் வரும் சூரிய ஹோரை நேரத்தில் புதுப் பணியில் சேர்ந்தால் நலம் பெறலாம். இவ்வாறு ஹோரையை முறையாகப் பயன்படுத்துவதால் அற்புத பலன்களைப் பெறலாம்.

சென்னை அருகே அடையாற்றுக் கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசனீஸ்வர பகவான் வீடு, நிலம், தொழிற்சாலை போன்ற நிரந்தர சொத்துக்கள் மூலம் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியவர். சனிக் கிழமைகளிலும், பூசம், அனுஷ நட்சத்திர தினங்களிலும் சனி ஹோரை நேரத்தில் இம்மூர்த்தியை வழிபட்டு நீலோத்பல மலர் மாலைகளைச் சூட்டி ஆராதனை செய்வதால் நெடுநாளைய சொத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam