சூரியன் ஒளியைக் கூட்டும் ஒளி வட்டம் உன்னைக் காட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சஹஸ்ர லிங்க மகிமை

உயிர்களின் தலையாய கடமை இறைவனை அடைவதே. அவ்வாறு உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறைவன அடையும் வழிமுறைகளையும் இறைவனே வகுத்துத் தந்துள்ளான். அவ்வழி முறைகளுள் மனிதர்கள் தங்கள் உடலைச் சுற்றியுள்ள திருவாசி என்னும் ஒளி வட்டத்தை தூய்மைப் படுத்தி விருத்தி செய்வது ஆன்மீகத்தின் அரிச்சுவடியாக அமைகிறது.

திருவாசி சகஸ்ரலிங்கம்

திருக்கோயில்களில் உள்ள சகஸ்ர லிங்க மூர்த்திகளே நமது திருவாசியை தூய்மைப்படுத்த உறுதுணை புரியும் தெய்வ மூர்த்திகளை. இம்மூர்த்திகளை சித்தர்கள் அருளியுள்ள முறைகளில் தொடர்ந்து வழிபடுவதால் மனிதர்கள் மட்டும் அல்லாது  தேவர்கள், ரிஷிகள், தெய்வ தேவதா மூர்த்திகளும் தங்கள் ஒளி வட்டத்தை விருத்தி செய்து கொள்ள முடியும். அனைத்து லோகங்களுக்கும் உரித்தான திருவாசி விருத்தி மூர்த்திகளே சகஸ்ர லிங்க மூர்த்திகள் என்பதை நினைவில் கொள்ளவும்.

சகஸ்ர லிங்க மூர்த்திகள் திருவாசி ஒளி வட்டத்தை வளப்படுத்தும் அருட் சக்திகளை வாரி வழங்கும் தன்மை பெற்றவர்கள் ஆனாலும் அவர்களுடைய திருவருட் கிரணங்களை நேரிடையாகப் பெரும் அளவிற்கு மனித உடலும் மனமும் தேவையான புனிதத் தன்மையைப் பெறாததால் சகஸ்ர லிங்கங்கள் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் பல திருவாசி ஈர்ப்புப் பெட்டகங்களை இறைவனே நிர்மாணித்துள்ளார். உதாரணமாக, திருச்சி அருகே உள்ள திருவாசி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியின் அருட் கிரணங்களை ஈர்த்து மக்களுக்கு அருளும் திருப்பணியை அக்கோயிலில் விளங்கும் அன்னமாம் பொய்கையும், விபூதித் தூண்களும் நிறைவேற்றி வருகின்றன.

தீரா நோய்களும் தீரும் திருத்தலம்

எத்தகைய கொடிய நோய்களுக்கும் நிவாரணம் அளிக்க வல்லதே திருவாசி சகஸ்ரலிங்க வழிபாடாகும். அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க் கிழமையும் கூடும் நாட்களில் இத்தலத்தில் உள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டு குறைந்தது 21 பொட்டலங்கள் தக்காளி சாதம் தானமாக அளித்தலால் இரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட கொடிய நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். சிறப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் அங்காரக மூர்த்திகளில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு நிவாரண பலன்களை துரிதப்படுத்தும். சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்ட பின்னர் அன்னமாம் பொய்கையையும், விபூதித் தூண்களையும் (தற்போது நவகிரக மூர்த்திகளுக்கு வலது புறத்தில், ஆலயத்தின் தெற்கு திசையில் எழுந்தருளியுள்ள தூண்கள்) வலம் வந்து வணங்கினால்தான் வழிபாடு பூரணமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேழவேந்தன் என்ற ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருடைய ஒன்பது வயது பையன் தன்னுடைய ஆட்டைத் தேடி ஒரு உயரமான பாறையின் மீது ஏறிச் சென்றபோது கீழே விழுந்து விட்டான். தலையில் பலமான அடிபட்டு மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டான். உடனே அருகிலுள்ள வைத்தியரிடம் கொண்டு சென்று வைத்தியம் பார்த்தனர். அவனைப் பரிசோதித்த வைத்தியர், இனி அவனுக்கு நினைவு திரும்பாது என்று சொல்லி அனுப்பி விட்டார். படுத்த படுக்கையாக சிறுவன் ஆகி விட்டான். மூச்சு விடுவதைத் தவிர வேறு எந்த செய்கையையும் அவனிடம் காண முடியவில்லை.

ஸ்ரீபாலாம்பிகை அம்மன் திருவாசி

ஸ்ரீமாற்றுரைவாதீஸ்வரர் திருவாசி

செய்வதறியாது திகைத்த அந்த ஏழை விவசாயி தினந்தோறும் திருவாசி சென்று இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் இறைவன் அருளால் கருவூர் சித்தரை திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் காண நேர்ந்தது. அந்த ஏழை விவசாயிடம் அவனுடைய மைந்தனின் நிலையைக் கேட்டு அறிந்தார். இது பூர்வ ஜன்ம வினையின் விளைவே என்பதை எடுத்துக் கூறி, சகஸ்ர லிங்க வழிபாட்டை இயற்றும் முறையை அவனுக்கு விளக்கிக் கூறினார். அதிருஷ்ட வசமாக அடுத்து வந்த ஒரு செவ்வாய்க் கிழமை அஸ்வினி நட்சத்திரம் கூடும் நாளாக அமைந்தது. அந்த ஏழை விவசாயியும் மூன்று கூடை நிறைய செந்நிற அரளிப் பூக்களைக் கொண்டு வந்து மாலைகள் தொடுத்து, சகஸ்ர லிங்க மூர்த்திக்கும், எல்லா விபூதித் தூண்களுக்கும் மாலைகள் அணிவித்து வணங்கினான்.

அன்னமாம் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து பிரசாதம் செய்து அங்கிருந்த ஏழைக் குழந்தைகளுக்கு பிரசாதமும் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பினான்

என்ன ஆச்சரியம், அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. அப்பா என்று கூவிக் கொண்டு அவனுடைய ஒன்பது வயது மகன் ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டான். இரண்டு வருடங்களாக படுத்து படுக்கையாக கண்களைக் கூடத் திறக்காது மயங்கிக் கிடந்த சிறுவன் ஒரே நாளில் பரிபூரண குணம் அடைந்தது கண்டு அந்த ஊரே அதிசயத்தில் ஆழ்ந்தது.

திருச்சி அருகே உள்ள அந்த கிராமம் எது தெரியுமா? ஆம், திருவாசிதான் அந்த சஞ்சீவ சக்தி பெற்ற கிராமம். ஆதிமூல சகஸ்ர லிங்கம் எழுந்தருளியுள்ள கிராமம். எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்க வல்ல திருத்தலம் என்பதால்தான் குரு மங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தின் சார்பில் இத்திருத்தலத்தில் முதல் இலவச மருத்துவ முகாம் சேவையை ஆரம்பித்து தமிழகம் எங்கும் நூற்றுக் கணக்கான கிராமங்களில் லட்சக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தன்னுடைய தொண்டர் குழாம் மூலம் அற்புத நோய் நிவாரண திருப்பணிகளை நிறைவேற்றி வந்தார்கள்.

அது மட்டும் அல்லாது தமிழகத்தின் புனித நதியான காவிரி ஆற்றின் வட, தென் கரைகளில் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் உழவாரத் திருப்பணி, ஹோம யக்ஞம், அன்னதான மகோத்சவம் போன்ற அருட் பணிகளையும் நிறைவேற்றியபோது முதன் முதலில் உழவாரத் திருப்பணியை நிறைவேற்றிய திருத்தலமும் திருவாசிதான் என்பது குறிப்பிடத் தக்கது.


விண்ணுலாவும் வேதம் மண்ணுலாவுமா?

எக்காலத்திலும் எவ்விடத்திலும் பரந்து விரிந்து செறிந்துள்ளதே அநாதியான வேத சக்திகள். இறைவனைப் போலவே வேத சக்திகளுக்கு தோற்றமும் முடிவும் இல்லை. நீக்கமற நிறைந்துள்ள ஜீவ சக்தியே வேதம். கல்லிலும் உண்டு, மண்ணிலும் உண்டு வேதம் என்பதைப் பறை சாற்ற இறைவி வேத சக்திகளை ஒன்று கூட்டி திரு ஏகாம்பர ஈசனாக எழுந்தருளச் செய்து வழிபட்ட திருத்தலமே திருக்கச்சி ஏகம்பம் என்று புகழப்படும் காஞ்சிபுரம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அம்பிகை வேத சக்திகளை ஒன்று கூட்டி வேதநாயகனாக இறைவனை எழுந்தருளச் செய்திருந்தாலும் இந்த வேத சக்திகளை நேரிடையாகப் பெறுதல் மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. இத்திருக் கோயிலில் பெரிய ஆவுடையுடன் எழுந்தருளியுள்ள சகஸ்ரலிங்க மூர்த்தியே வேத சக்திகளை மூலவரிடம் இருந்து கிரகித்து பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்யும் அருட் பணியை மேற்கொண்டுள்ளார் என்பது இதுவரை நீங்கள் அறியாத சித்த இரகசியம்.

திட்டை சகஸ்ரலிங்கம்

இவ்வாறு சகஸ்ர லிங்க மூர்த்தி வேத சக்தியாக வழங்கும் அருட் கிரணங்களை இத்தல விருட்சமான பிரம்மாண்டமான மாமரத்தின் இலைகள் ஈர்த்து அக்கிரணங்களை இத்திருத்தலத்திலுள்ள ருத்ராட்ச பந்தலில் கோர்க்கப்பட்டுள்ள ருத்ராட்ச மணிகளுக்கு வழங்கவே, ருத்ராட்ச சக்கரங்களால் மேலும் புனிதப்படுத்தப்பட்ட வேத சக்திகள் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கின்றன. எனவே, திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியுள்ள திரு ஏகாம்பர நாதரை வழிபட்ட பின் இத்தல சகஸ்ர லிங்க மூர்த்தியையும், வேதம் கொழிக்கும் மாமரத்தையும், வேதப் பெட்டகமாய் நடராஜர் திருச்சன்னதியில் மறைந்திருக்கும் ருத்ராட்ச மணிகளையும் தரிசித்தால்தான் வழிபாடு பூரணம் அடையும் என்பதை அறிந்து கொள்ளவும். அவ்வப்போது இத்திருத்தல சகஸ்ர லிங்கம், தல விருட்சமான மாமரம், ருத்ராட்சப் பந்தல்களை காவிரி, கங்கை போன்ற புனிதத் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வருவதால் அளப்பரிய தெய்வீக சித்திகளைப் பெறலாம் என்பது உறுதி.

மிகவும் தொன்மையான திருத்தலத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த சித்தர் பிரான்களும் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்கு நன்னெறி புகட்டி வந்துள்ளனர். அவர்களுள் ஒருவரே திரு ஏகாம்பர கோயிலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மனித உடலில் வாழ்ந்து சமீப காலத்தில் சமாதி நிலை கொண்ட போடா சித்தர் ஆவார். என்றும் வாழும் ஏகாந்த ஜோதியான இந்த தெய்வீக சித்தர் பிரானே இறைவனுக்கும் இறைவிக்கும் இத்திருத்தல மாமரத்தின் அடியில் இறைத் திருக் கல்யாணத்தை நிறைவேற்றிய பெருமையை உடையவர். எம்பெருமான் ஈசனுக்கே திருமணத்தை நிகழ்த்திய பெருந்தகை என்றால் இவருடைய தொன்மையை யாரால் கணக்கிட்டுக் கூற முடியும்.

புதிராய்ப் பூத்த போடா சுவாமிகள்

ஏகாம்பர நாதர் கோயில் வெளிப் பிரகாரத்தில் எப்போதும் காட்சி அளிக்கும் இவரை பலரும் தரிசிக்க வருவதுண்டு. அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகித்த ஒரு அதிகாரி போடா சித்தரின் மகிமைகளைக் கேள்விப்பட்டு இவரைக் காண வந்தார். பழங்கள், பூமாலைகள், இனிப்பு வகைகள், புது வஸ்திரங்கள் என பலதரப்பட்ட அன்பு காணிக்கைகளையும் அவரிடம் சமர்ப்பித்து அவருடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்த அதிகாரி ஒரு முக்கியப் பிரமுகர் என்பதால் அவருடன் பத்து, பதினைந்து எடுபிடி ஆட்களும் உடன் வந்திருந்தனர். ஆனால், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பழத் தட்டுகளை தள்ளி விட்டு, போடா, போடா என்று கூறி அந்தப் பிரமுகரின் வம்சத்தையே கேவலப்படுத்தும் ஒரு வார்த்தையும் கூறினார். அதைக் கேட்டு அனைவரும் கதிகலங்கி விட்டனர். அந்த அதிகாரிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றார். போடா சுவாமிகள் ஒரு பெரிய மகான் என்று கேள்விப்பட்டு வந்து, வந்த இடத்தில்இவருடைய செயல் முற்றிலும் எதிர்பதமாக இருந்தது குறித்து மேற்கொண்டு என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் தவித்தார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் போடா சித்தர் அருகே ஒன்பது வயதான நமது குருநாதர் வெங்கடராம சுவாமிகளும், அவருடைய சற்குருநாதர் ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளும் அமர்ந்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு முன்தான் கோவணாண்டியான பெரியவர் சிறுவன் வெங்கடராமனை போடா சித்தரை தரிசனம் செய்ய அழைத்து வந்திருந்தார். சிறுவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த சித்தரைப் பற்றி பெரியவர் எவ்வளவோ அற்புத விஷயங்களை எல்லாம் சொன்னாரே, ஆனால், இவருடைய செயலோ நமக்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறதே, என்று நினைத்து அந்த அதிகாரியைப் போல சிறுவன் வெங்கடராமனும் குழம்பி இருந்தான்.

கோவணாண்டிப் பெரியவர் அந்த அதிகாரியை சாடை காட்டி தன்னுடன் வருமாறு அழைத்து, கோயில் பிரகாரத்தில் மனித சந்தடி இல்லாத ஒரு இடத்திற்கு அவரைக் கூட்டிக் கொண்டு சென்றார்.

சகஸ்ரலிங்கம் காளையார்கோவில்

“என்ன சார், அந்த சித்தர் ரொம்ப திட்டிட்டாரேன்னு வருத்தப்படாதீங்க. அவரு பெரிய மகானு. இந்தக் கோயில்லேயே ரெண்டாயிரம் வருஷமா குந்திக்கினு இருக்காரு. பெரிய பெரிய அற்புதம் எல்லாம் செய்யறவரு. அவரு ஏதாச்சும் செஞ்சா அதுல நெறயா, அர்த்தம் இருக்கும். ”

“சரி இப்ப உங்கள என்ன சொல்லி திட்டினாரு,” என்று கேட்டார்.

அந்த அதிகாரிக்கு மீண்டும் போடா சித்தர் கூறிய வார்த்தைகளைக் கூற முடியவில்லை. துக்கமும், வருத்தமும் தொண்டையை அடைத்தது.

பெரியவர் தொடர்ந்தார். “சரி, சரி, நீங்க சொல்றதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். என் காதுலேயும் அவரு சொன்னது விழுந்துச்சு. உங்க பூர்வீகம் எந்த ஊர். உங்க தாய், தந்தையைப் பத்தி சொல்லுங்க ...” என்று கொஞ்ச கொஞ்சமாக அவருடைய வருத்தத்தைத் தணித்து அந்த அதிகாரியைத் தன் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். அவருடன் பேசியதிலிருந்து அவர் தாயார் ஒரு தேவதாசி பாரம்பரியத்தில் வந்தவர் என்று தெரிய வந்தது. எனவே, அது குறித்து அந்த அதிகாரிக்கு உள் மனதில் ஒரு வருத்தம் வெகு காலமாக இருந்து வந்தது. போடா சுவாமிகள் எதிர்காலத்தில் ஒரு அவமானமான சூழ்நிலையை அந்த அதிகாரி சந்திக்கக் கூடாது என்ற கருணையின் காரணமாக தான் அந்த தேவதாசி பரம்பரையைக் கூறி அந்த அதிகாரியை அழைத்து அவருக்கு எதிர்காலத்தில் எந்த ஒரு அவச் சொல்லும் அவர் முந்தைய வாழ்வைக் குறித்து வராத அளவிற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்து விட்டார் என்று பெரியவர் உணர்ந்து கொண்டார். இருந்தாலும் இதை அந்த அதிகாரி உணர வேண்டும் அல்லவா?

அதனால் பெரியவர் அவரிடம், சுவாமி, “நீ ரொம்ப களச்சுப் போய் இருக்க. அதனால உன் கூட வந்தவங்க எல்லாம் இங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் உள்ள போய் அங்க இருக்கற மாமரத்து நெழலுல கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்படியே அங்க பக்கத்துல இருக்கற சகஸ்ர லிங்கத்தையும் பாத்துட்டு வந்துடு,” என்று அன்புடன் கூறினார்.

சகஸ்ரலிங்கம் திருவக்கரை

இப்போது ஓரளவு மன அமைதி பெற்ற அந்த அதிகாரி பெரியவர் சொன்னபடியே ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குள் சென்று வேதம் கொழிக்கும் மாமரத்தையும் சகஸ்ரலிங்கத்தையும் தரிசனம் செய்தார். அப்போது அவர் மனதில் போடா சுவாமிகள் தன்னை ஏன் அப்படி அழைத்தார் என்று ஒரு நொடியில் உணர்ந்து கொண்டார். “நான் தேவதாசியின் குலத்தில் வந்தது குறித்து எவ்வளவு நாள் தனிமையில் கரைந்திருக்கிறேன். இனி அந்த வேதனை என்னைத் தாக்காது. யாரும் எனக்கு அந்த வேதனையைத் தர முடியாது. இம்மகானின் பெருங் கருணையால் என்னுடைய பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கம் இப்புனிதரரல் நிரந்தரமாக துடைக்கப்பட்டு விட்டது. இந்தப் பேரன்பிற்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? கருணையே உருவான இந்த தெய்வத்தின் மகிமை உணராமல் ஏதேதோ நினைத்து விட்டோமே,” என்று மனதிற்குள் ஆயிரக் கணக்கான எண்ண அலைகள் அலை மோதின.

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

அந்த மகானின் கருணையை உணர்ந்ததும், கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. ஓடோடி வந்து போடா சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து அவர் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். பக்கத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் என்ன, உங்களுக்கு போடா சுவாமிகளின் கருணையும், சகஸ்ர லிங்கத்தின் மகிமையும், சித்தர்களின் பேரன்பும் தெள்ளெனத் தெரிகின்றது அல்லவா? இவ்வாறு பல பிறவிகளில் நம்மிடம் சேர்ந்துள்ள கர்ம வினைகளை ஒரே நொடியில் வேரறுக்க வல்லதே சகஸ்ர லிங்க மூர்த்தி வழிபாடு. ஆனால், அம்மூர்த்திகளை வழிபடும் மார்கத்தைக் கூறவல்லவர்கள் சற்குருமார்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.

வந்தது நலம், இனி வருவதும் நலமே

நாம் அண்ட சராசரத்தில் சிறந்த அக்னி, ஒளி எது தெரியுமா? எல்லா ஒளிகளுக்கும் மூலமான ஒளி எங்கு பிறந்தது? சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த ஒளியே, எம்பெருமானின் முக்கண் ஜோதியே முதன் முதல் தோன்றிய ஜோதியாகும். அது போல உலகில் முதல் முதலில் தோன்றிய ஒலி எது?

அதுவே எம்பெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றிய பிரணவ ஒலியாகும். இந்த பிரணவ ஒலியில் நமது பூலோகத்திற்குத் தேவையான ஜீவ ஒலி மட்டும் பூலோகத்தில் என்றென்றும் நிலையாயுள்ள திருஅண்ணாமலையில் பிரதிபலிக்கப்பட்டு, பின்னர் சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் உள்ள கோயில் மணியால் ஈர்க்கப்படுகின்றது என்பது இதுவரை நீங்கள் அறியாத ஒரு ஆன்மீக இரகசியமாகும். எனவே இப்பூவுலகில் உள்ள அனைத்து மணிகளிலும் சிறந்த ஆலய மணியாகத் திகழ்வது சிதம்பர கோயில் மணியே ஆகும். இந்த அற்புத மணிக்கு சித்தர்கள் சூட்டியுள்ள பெயரே சிகண்டி பூர்ணம் என்பதாகும்.

ஒளியும் ஒலியும்

ஒரு மனிதனுடைய திருவாசியில் உள்ள வண்ணங்களை திருவாசி திருக்கோயிலில் விளங்கும் சகஸ்ர லிங்க பூஜை சீர்படுத்துவது போல சிகண்டி பூர்ண மணி ஒலியானது எந்த ஜீவனின் திருவாசியில் உள்ள  தோஷங்களையும் நீக்கும் வல்லமை உடையதாகும். ஆனால், இந்த ஒலியை நேரிடையாக மனிதர்கள் பெற முடியாது. சிகண்டி பூர்ண மணி ஒலியை ஒளியாக்கி அதன் மூலமே திருவாசி நிற மாலையைத் தூய்மைப்படுத்த முடியும்.

இத்தகைய அரும்பணியை மேற்கொண்டு இப்பூவுலகில் அவதரித்த சித்தர் பிரானே வியாக்ரபாதர் என்று அழைக்கப்படும் புலிக்கால் முனிவர் ஆவார். சூரியன் உதிக்கும் முன்னரே மரங்களில் உள்ள மலர்களைப் பறித்து, தேனீக்களும் வண்டுகளும் மொய்க்காத புத்தம் புது மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று இறைவனிடம் புலிக்கால்களை வரமாகப் பெற்றவர். ஆனால், இம்மகானின் அற்புத தவ சீலங்களைப் பற்றி முழுமையாக அறிந்தோர் ஒரு சிலரே.
இவர் ஆற்றிய தவங்களுள் ஒன்றே சிகண்டி பூர்ண மணி ஓசையை கிரகித்து அதை பூலோக ஜீவன்களின் நன்மைக்காக சகஸ்ர லிங்கங்களில் பதித்து வைக்கும் திருப்பணியாகும்.

சஹஸ்ரலிங்கம் உத்தமபாளையம்

வியாக்ரபாதர் புலியின் கால் நகங்களை மட்டும் வரமாகப் பெறவில்லை. புலிகளின் மருத்துவ குணத்தையும், நோய் தீர்க்கும் பாங்கையும், ஆரோக்கியம் வளங்கும் அருள் சக்திகளையும் வரமாகப் பெற்றவரே வியாக்ர பாதர். இயற்கையாகவே புலிகளுக்கு நோய் தீர்க்கும் சக்தி அதிகம் உண்டு. காரணம் புலிகள் தங்கள் உணவை வேட்டையாடுவதற்காக மரங்களில் ஏறிப் பதுங்கிக் கொள்கின்றன என்று நாம் நினைக்கிறோம்.

உண்மையில் பல மூலிகை மரங்களிலும் ஏறி அவற்றில் உள்ள மூலிகை சக்திகளை தங்கள் கால் நகங்களில் ஈர்த்துக் கொள்கின்றன. பின்னர் கங்கை, காவிரி, பம்பை போன்ற நதியோரங்களிலும், தீர்த்தங்களிலும் தாங்கள் சேகரித்த மூலிகை ஜீவ சக்திகளை தங்கள் விரல் நகங்கள் மூலமாகவும், பாதச் சுவடுகளாலும், பாலைச் சுரந்தும் நிரவுகின்றன. ஒரு கை தேர்ந்த சித்த வைத்தியர் தன் ஆயுள் காலம் முழுவதும் சேகரிக்கும் மூலிகை திரவிய்ங்களை விட ஒரு புலி ஒரு வளர்பிறை பட்சத்தில் (15 நாட்கள்) நிரவக்கூடிய மூலிகை சக்தி அதிகம் என்றால் புலிகளின் மருத்துவ ஆற்றல் எத்தகையது என்று சற்றே யோசித்து பாருங்கள்.
இக்காரணம் பற்றியே ஐயப்ப சாஸ்தாவும் புலியைத் தன் வாகனமாகக் கொண்டு தீராத நோய் தீர்க்கும் தன்வந்த்ரீ பெருமானாக அவதாரம் கொண்டார். குறிப்பாக, பம்பை நதிக் கரையில் இத்தகைய தன்வந்த்ரி புலிகளின் வாசம் அதிகம் என்பதால் பம்பை நதியை முடிந்த மட்டும் புனிதமாக வைத்துக் கொள்ளும்படி சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள். புலிகளின் மற்றோர் அதிசயிக்கத் தக்க அம்சம் அதனுடைய கூரிய பார்வை. கனத்த இருளிலும் அதனுடைய கண்கள் பிரகாசமான ஒளியுடன் இருக்கும். அதனால்தான் காரிருளிலும் வியாக்ரபாதர் பல மரங்களில் ஏறி மலர்களை இனங் கண்டு எம்பெருமான் பூஜைக்காக அவைகளைக் கொய்து வந்தார்.

மேலும், சூரியனைக் கண்டு மலரும் தாமரை, சந்திரனைக் கண்டு மலரும் அல்லி, பிரஹஸ்பதியைக் கண்டு மலரும் நீலக் குறிஞ்சி என்பது போல சிகண்டி பூர்ண மணி ஓசையை ஈர்த்து மலரும் மலர்களே நாகலிங்க புஷ்பங்களாகும். எனவே, உலகில் எந்த இடத்தில் நாகலிங்க பூக்கள் பூத்தாலும் அம்மலர்களில் நிரவி நிற்பது எம்பெருமானின் உடுக்கை ஒலியே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்காரணம் பற்றியே சுயநலத்திற்காகவோ, அழகுக்காகவோ, அலங்காரத்திற்காகவோ எவரும் நாகலிங்க மலர்களைப் பறிக்கக் கூடாது என்றும், அம்மலர்களைப் பறித்து இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அப்படி இறைவனுக்கு அர்ப்பணித்த ஒவ்வொரு நாகலிங்க மலருக்கும் குறைந்தது ஆறு பொட்டலங்களையாவது அன்னதானமாக இறையடியார்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்க வேண்டும் என்று பலவிதமான இறைநியதிகளையும் மகான்கள் வகுத்துள்ளனர்.

சகஸ்ரலிங்கம் திருச்சி மலைக்கோட்டை

லால்குடி அருகே உள்ள நகர் திருத்தலத்தில் உத்தராயண புண்ணிய காலம் முழுவதும் சகஸ்ர லிங்க மூர்த்திக்கு ஆயிரம் நாகலிங்க பூக்களால் அர்ச்சித்து வழிபட்டவரே வியாக்ரபாதர் ஆவார். இவ்வாறு முள் இல்லாத வில்வ மரத்தில் அடியில் அருளாட்சி செய்யும் சகஸ்ர லிங்க மூர்த்திகள் ஆயிரம் சுயம்பு லிங்க சக்திகளைக் கொண்டிருப்பதால் அந்த அற்புத சக்திகளை எல்லாம் தன்னுடைய நாகலிங்க மலர் வழிபாட்டால் ஈர்த்து காவிரியில் இரு கரையிலும் உள்ள சிவத்தலங்களில் பன்னெடுங் காலம் அர்ப்பணித்து அருந் தொண்டாற்றினார் புலிக்கால் முனிவர்.

எனவே, குறைந்தது 12 நாகலிங்க பூக்களால் நகர் சகஸ்ரலிங்க மூர்த்தியை அர்ச்சித்து வழிபட்டு குறைந்தது 108 பொட்டலங்கள் அன்னதானம் அளித்தலால்,

  1. எத்தகைய கடுமையான, நாள்பட்ட நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

  2. கண் பார்வைக் குறைவு, கண் பார்வை மங்குதல், கண்ணில் பூ விழுதல், கண் கட்டிகள், கான்சர் போன்ற கண் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

  3. தொலை தொடர்புத் துறை, எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறையில் உள்ளவர்கள் புது கண்டு பிடிப்புகளால் பேரும் புகழும் பெறுவர்.

  4. இரத்த சோகை, தோல் நோய்கள் எளிதில் குணமாகும்.

  5. எப்போதும் வறுமைக் கோட்டிலேயே வசிக்கும் நிலையிலுள்ளவர்கள் தங்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக் காண்பார்கள்.

”வரப்புயர கோலுயரும்” என்ற பொன்மொழியைப் போல ஒரு நாட்டின் வளத்தை அதிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்தே கூறி விட முடியும். காரணம் எந்த அளவிற்கு புலிகள் ஓரிடத்தில் மிகுந்துள்ளனவோ அந்த அளவிற்கு அவைகளுக்கு உணவாகும் மான்களின் நடமாட்டம் இருக்கும். அது போல மான்கள் நிறைய இருந்தால் அங்கு அவைகளுக்குத் தேவையான பசும் புல் செழித்திருக்கும் என்பது உண்மை. இவ்வாறு பசும்புற்கள் செழித்திருந்தால் அங்கு மழைப் பொழிவு நிறைந்துள்ளது என்றுதானே அர்த்தம்?

இவ்வாறு பருவ மழை குறைவின்றி இருந்தால் அங்கு நேர்மையான ஆட்சி, வேதம் ஓதும் அந்தணர், உத்தமப் பெண்டிர் நிறைந்துள்ளனர் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய புலிகளும் உத்தமிகளும் நிறைந்து செறிந்திருந்த நாடு நாம் பாரதம் ஒன்றுதான். வீடுகளுக்குப் புலிகள் வந்து அவற்றைத் தங்கள் கண் தீட்சண்யத்தினாலேயே விரட்டி விட்டப் பெண்களைப் பற்றி நாம் அறிவோம். புலிளை ”முறைத்து விரட்டியதே” நமது தாய்க் குலம்.

கர்ம பூமியில் களையும் கர்மங்கள்

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவரும் சிறுவனும் சென்னையிலிருந்து திருஅண்ணாமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். மத்தியான வேளை. கோடைக்காலம் ஆனதால் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. பொதுவாக, பகல் நேரங்களில் ஏதாவது கோயில் மண்டபங்களில் தங்கி விட்டு மாலை, இரவு நேரத்தில்தான் பெரியவர் சிறுவனை நடந்து அழைத்து வருவார். வழக்கத்திற்கு மாறாக அன்று நண்பகலில் காலைப் பொசுக்கும் வெயிலில் நடந்து கொண்டிருந்தனர்.

வழியில் அவர்கள் ஒரு மேம்பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது அங்கு அவர்கள் மிகவும் பரிதாபமான காட்சியைக் காண நேர்ந்தது. ஒற்றை மாட்டு வண்டி ஒன்று மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது. வண்டியில் பத்து பதினைந்து மூட்டைகள் இருந்தன. ஒரே மாடு, ஏற்றமான இடம், கடுமையான வெயில், இத்தனை காரணங்களால் அந்த மாட்டால் வண்டியை இழுக்க முடியவில்லை. புஸ், புஸ் என்று மூச்சு விடும் சத்தம் 50 அடி தூரத்திற்கு மேல் கேட்டது. வண்டியை ஓட்டி வந்தவனுக்கு சுமார் 25 வயதிருக்கும். மேல் சட்டை கூட அவன் அணிந்திருக்கவில்லை. நல்ல கட்டுமஸ்தான கருத்த மேனி. உருண்டு திரண்டிருந்த கை கால்கள்.

காணக் கண் கோடி வேண்டும் திருஅண்ணாமலை தரிசனம்

வண்டி நகராமல் நின்று போனதால் அவன் கோபம் அடைந்து மாட்டைச் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தான். அதுவும் பலனளிக்காதபோது சாட்டைக் குச்சியின் பின்னால் இருக்கும் ஆணியைக் கொண்டு அதன் முதுகில் குத்திக் குத்தி விரட்டினான். மாட்டின் உடலிலிருந்து ரத்தம்தான் வழிந்தோடியதே தவிர மாடு ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியவில்லை. மாட்டின் உடலிலிருந்து நுரை தள்ளிக் கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கி வெளியே வந்து விழுந்து விடும் போல் இருந்தது.. ஆனால், மாட்டின் நிலையைப் பற்றி சிறிதும் சட்டை செய்யாமல் அதை அடித்து மேலே ஓட்டுவதிலேயே அந்த வண்டிக்ககாரன் கவனமாக இருந்தான்.

சிறுவனுக்கு மாட்டின் பரிதாபமான இந்த நிலையைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தான். உணர்ச்சி வேகத்துடன் கொதித்தெழுந்தான்.

“என்ன, வாத்யாரே, வாயில்லா மாட்டைப் போட்டு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அந்த வண்டிக்காரன் இம்மா அடி அடிக்கிறான். நீ பாட்டுக்கு பேசாம இருக்கியே. அவனை ஒரு ரெண்டு அடி குடுத்துட்டு வாயேன்”, என்று சத்தமிட்டான்.

அதற்கு பெரியவர், “டேய், கொஞ்சம் பொறுமையா இருந்து என்ன நடக்குதுன்னு பார்டா”, என்றார்.

வண்டிக்காரனின் அடி தாங்காமல் மாடு மயங்கி அனல் கக்கும் தார் ரோட்டில் மயங்கி விழுந்து விட்டது. ஆனால், அந்நிலையிலும் வண்டிக்காரன் அதை விடுவதாக இல்லை. அதன் வாலைத் தன் வாயால் கடித்து அதை எழுப்பி விட்டு மீண்டும் மாட்டை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தான்.

சிறுவன் பொறுமையை இழந்தான்.

சகஸ்ரலிங்கம் திருக்குற்றாலம்

“பெரியவரே நீ வேணுமானா பேசாம இரு. என்னால் இந்த கண்றாவிய பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியல. நான் போய் அவ முதுவுல நாலு அடி போட்டுட்டு வர்றேன்”, என்று வண்டியை நோக்கிப் போக ஆரம்பித்தான். பெரியவர் சிறுவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“எதுக்கும் அவசரப் படக் கூடாது, நைனா, தெய்வீகத்துல ரொம்ப பொறுமை அவசியம்.”

“என்ன, வாத்யாரே, கண் முன்னாடி ஒரு மாட்டைப் போட்டு ஒரு மடையன் அடிச்சுக் கிட்டு இருக்கான் அதைப் பாத்துக்கிட்டு பேமேன்னு இருக்க சொல்றியே. உனக்கு கொஞ்சமாவது நல்லா இருக்கா”, என்று தன்னையும் அறியாமல் பெரியவரின் செய்கைகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்தான்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, தன்னுடைய வலது உள்ளங்கையை விரித்து, “ இக்கட சூடு, நைனா,” என்று கூறினார்.

இந்தப் பரிதாபமான நிலையிலுள்ள மாட்டைப் பார்த்து எப்படி இவரால் சிரிக்க முடிகிறதுஈ என்று தன் மனதில் தோன்றிய ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு பெரியவரின் உள்ளங்கையைப் பார்த்தான்.

சகஸ்ரலிங்கம் நகர்

அதில் ஒரு காட்சி 70 எம்எம் சினிமா படம் போல் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்ட காட்சி இதுதான்.

ஒரு குக்கிராமம். சீமை ஓடு வேய்ந்த ஒரு வீட்டின் முன் ஒரு ஜமீன்தார் மர நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். முறுக்கி விட்ட பெரிய மீசையுடன் கையில் பிரம்பு ஒன்றை வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு கையை ஆட்டி ஆட்டி பக்கத்தில் ஏதோ சொல்லிக் கொண்ருக்கிறார். அவரைச் சுற்றிலும் 20, 25 பேர் மேல் சட்டை இல்லாமல் கையைக் கட்டிக் கொண்டு மிகவும் மரியாதையுடன் அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அங்குள்ள சூழ்நிலையையும் மனிதர்களின் ஆடைகளையும் பார்த்தால் இந்த நிகழ்ச்சி நடந்த காலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் என்று தோன்றியது.

அவர்கள் எதிரே ஒரு புளிய மரத்தில் ஒரு இளைஞனை கட்டி வைத்திருந்தனர். நன்றாக வயல் வரப்புகளில் வேலை செய்பவன் போல் இருந்தது. உழைப்பால் முறுக்கேறிய உடம்பு என்று பார்த்தாலே தெரிந்தது. அவன் அருகில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு குதிரையை அடிக்கும் சாட்டை இருந்தது. அந்தச் சாட்டையால் அந்த இளைஞனை மாறி மாறி அடித்தனர். வலி தாங்காமல் கதறி அழுதான் அந்த இளைஞன். அவன் உடலிலிருந்து ரத்தம் பீறிட்டெழுந்து அவன் உடலை நனைத்தது. இடுப்பில் ஒரு கோவணம் மட்டுமே கட்டி இருந்தான். வியர்வை ஆறாக ஓடியது. அடியின் வேதனை தாங்காமல் மயக்கம் ஏற்படவே தலை தொங்கி விட்டது. உடனே ஜமீன்தான் ஏதோ சொல்லவே ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் ஊற்றினர். சற்று மயக்கம் தெளிந்து லேசாக கண் திறந்து பார்த்தான். அவ்வளவுதான். மீண்டும் அந்த இளைஞனைச் சுற்றி இருந்தவர்கள் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தனர்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த சிறுவனுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய ஆயுளில் இப்படி ஒரு கொடுமையான நிகழ்ச்சியைப் பற்றி அவன் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவனுடைய பிஞ்சு மனம் இத்தகைய மிருகத்தனமான செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“போதும் வாத்யாரே, என்ன வாத்யாரே இது, ஏற்கனவே ஒரு கொடுமையான விஷயத்தைப் பார்த்து என் மனம் கொதிக்கிறது. நீ வேறு அதை விடக் கொடுமையான ஒரு விஷயத்தைக் காட்டி என்னை வதைக்கிறாயே” என்று பரிதாபமாக பெரியரிவரிடம் முறையிட ஆரம்பித்தான்.

“எல்லாம் காரணமாத்தான், நைனா. அந்த மரத்தில் கட்டிப்போட்டிருக்க சிறுவனையும், அந்த ஜமீன்தார் முகத்தையும் நன்றாக உற்றுப் பார்”, என்றார்.

பெரியவர் கூறியபடி சிறுவன் இருவர் முகத்தையும் நன்றாக சில வினாடிகள் உற்றுப் பார்த்தான்.

ஆங்….. என்று கத்திக் கொண்டு துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான். அவனுக்கு எல்லா உண்மையும் ஒரே நொடியில் புரிந்து விட்டது.

உங்களுக்குப் புரிகிறதா?

இறைவன் கண்களைக் கொடுத்தது இவர்களைக் காணவே !!

உண்மை இதுதான். அங்கு புளிய மரத்தில் கட்டப்பட்டு அடி வாங்கிக் கொண்டிருந்த இளைஞன்தான் சிறுவன் எதிரே இருந்த வண்டிக்காரன். அவனை அடிக்கச் சொல்லி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜமீன்தார்தான் அந்த வண்டி மாடு. அவர்கள் இருவரின் முந்தைய பாக்கி சிறுவனின் கண்ணெதிரே தீர்ந்து கொண்டிருந்தது. இதுதான் உண்மை.

இது தெரிந்தவுடன். சிறுவன், ”வாத்யாரே, இப்படி ஒரு கொடுமையான சம்பவத்தை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. இப்ப அந்த மாட்டுக்கு வண்டிக்காரன் கொடுக்கற அடி போதாது என்றுதான் தோன்றுகிறது. நான் போய் என் பங்கிற்கு அந்த மாட்டை ஒரு அடி அடித்து விட்டு வரட்டுமா”, என்று ஒருவித வினோதமான குதூகலத்துடன் சிறுவன் கேட்டான்.

சகஸ்ரலிங்கம் உத்தரகோசமங்கை

பெரியவர் சிரித்துக் கொண்டே, “என்னடா, கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் எனக்கு புத்தி மழுங்கி விட்டதாக நினைத்தாய், இப்போ என்னடான்னா நீ புத்தி மழுங்கி மாட்டை அடிக்க புறப்பட்டு நிக்கிறியே”, என்று கிண்டலாகச் சிரித்தார்.

சிறுவன் வெட்கத்தால் தலை குனிந்தான். மனதைப் பிடிக்கத் தெரிந்த இவரை நாம் பிடிக்க விட்டு விட்டோமே. ஏ, மனமே அஞ்சாதே, எல்லாம் ஈசன் செயல், என்று ஆயிரமாயிரம் முறை பெரியவர் நம்மிடம் சொன்னாலும் நான் இதை மறந்து விட்டு அலைகிறேனே, என்று தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, பெரியவரின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மௌனத்தால் தன்னுடைய அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளுக்கும் செய்கைகளுக்கும் அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

அனைத்தும் அறிந்தாலும் அறியாதவர் போல நாடகமாடி தெய்வீகத்தைப் புகட்டியவர்தானே கோவணாண்டிப் பெரியவர். சிறுவனின் தலையை வருடி விட்டு, நம் பயணத்தைத் தொடரலாமா, என்பது போல தலையை ஆட்டிக் கேட்கவே, சிறுவனும் நாம் வந்த வேலையைக் கவனிப்போம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு பெரியவரின் வேகமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட ஆரம்பித்தான். இருந்தாலும் அவ்வப்போது திரும்பி திரும்பி அந்த மாட்டையும் வண்டிக்காரனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சென்றான்.  

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

அந்தப் பயணத்தின்போதுதான் பெரியவர் சிறுவனுக்கு பாதாள லிங்கத்தின் தியானம் செய்வதால் கிடைக்கக் கூடிய ஆத்ம விசார பலன்கள் பற்றியும், சகஸ்ரலிங்கத்தின் அருகில் தியானம் செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள் பற்றியும் சிறுவனுக்கு விளக்கிக் கூறினார்.

திருஅண்ணாமலை பாதாள லிங்கத்தில் தியானம் மேற்கொண்டு ஆத்ம விசாரத்தில் கரை கண்ட ரமண மகரிஷியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். இதே போல சகஸ்ரலிங்க தியானத்தில் உன்னதம் பெற்ற மகானே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார். தன்னுடைய சிறு வயதில் இரவில் மயான பூஜைகளை மேற்கொண்ட சேஷாத்ரி சுவாமிகள் பகல் நேரத்தில் காஞ்சி ஏகாம்பர நாதர் திருக்கோயிலில் உள்ள சகஸ்ர லிங்கத்தின் அருகில் அமர்ந்து தினமும் ஒரு லட்சம் முறை காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் மந்திர ஜபத்தை நிறைவேற்றி வந்தார். பொதுவாக, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு லட்சம் முறை இந்த மந்திரத்தைச் சொன்னாலே அவனுடைய பாவங்கள் அனைத்தும் களையப்படும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், மக்கள் அனைவரும் முக்தி அடைய வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் சுவாமிகளிடம் பூரித்ததால் அவர் தினமுமே ஒரு லட்சம் முறை காமோ கார்ஷீத் மந்திரத்தை ஓதி மக்களை தீவினை அண்டாமல் காப்பாற்றிய உத்தமர். நம்முடைய காலத்தில் வாழ்ந்த ஒரு நைஷ்டிக பிரம்மசாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற வேத வாக்கியத்தை முழுமையாக உணர விரும்புவோர் சகஸ்ர லிங்கத்தின் அருகில் அமர்ந்து தினமும் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு வந்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

சகஸ்ர லிங்க அபிஷேகம்

ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படி இருக்கும்போது ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும் அல்லவா? எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இம்முறையில் சகஸ்ர லிங்க மூர்த்திகள் மட்டும் அல்லாமல் மற்ற சிவ மூர்த்திகளையும், பெருமாள், அம்பாள் மூர்த்திகளையும் வழிபடலாம் என்பதும் உண்மையே.

பால் அபிஷேகம்

சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது. பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும். எக்காரணம் கொண்டும் பாக்கெட் பால்அபிஷேகம் எந்த தெய்வ மூர்த்திக்கும் ஏற்புடையது அல்ல. பக்தர்கள் இதை உணர்ந்து ஆவண செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறோம். பலரும் எங்களுக்குக் கிடைப்பது பாக்கெட் பால்தான், அதனால் அதைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் என்று கூறிவது உண்டு. படிப்பிற்காக, சம்பாதிப்பதற்காக நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்யத் தயங்குவதில்லையே. இதே போல தங்களுக்குத் தெரிந்தவர்கள் எங்காவது மாடு வைத்திருந்தால் அவர்களைக் கொண்டு அருகில் இருக்கும் இறை மூர்த்திகளுக்கு கறந்த பாலை வாங்கி அபிஷேகம் செய்யச் சொல்லலாம் அல்லவா? எதற்கும் மனம் இருந்தால் மார்கம் உண்டு.

சகஸ்ரலிங்கம் திருஆமாத்தூர்

சகஸ்ரலிங்கம் திருநெல்வேலி
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

மேலும் கன்றுள்ள மாட்டின் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது. மாடு கன்று குட்டிக்கு வேண்டும் அளவு பால் ஊட்டியபின் கறந்த பாலைத்தான் சுவாமியின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஏகாதசி திதி அன்றும் மனிதர்களின் உடலில் ஏக கங்கா என்ற ஒரு திவ்ய நீர் சுரக்கும். கங்கைக்கு இணையான தீர்த்தம் இது. ஏகாதசி அன்று நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இறைவனை வழிபடும் போது இந்த ஏக கங்கா நம் உடலில் உள்ள 72000 நாடி நாளங்களில் பாய்ந்து உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மன, உள்ள வளத்தையும் நல்கும்.

இதே போல பசுவின் உடலிலும் சுதாம கங்கா என்ற ஒரு திவ்ய நீர் சுரக்கும். இதை தர்ம கங்கா என்றும் கூறுவதுண்டு. இந்த சுரப்பு நீரில் 22 விதமான அமிர்தச் சுவைகள் உண்டு. உலகில் வேறு எந்த மூலிகையிலும், காய், கனிகளிலும் இந்த அமிர்தச் சுவையைக் காண முடியாது. பசுவின் மடியில் உற்பத்தியாகும் இந்த தர்ம கங்காவை கன்றுக் குட்டிகள் முட்டி, முட்டிதான் அதைப் பாலில் சேர்க்கும். எனவே கன்றுக் குட்டிகள் தாயின் மடியை முட்டிப் பால் குடித்தால்தான் நாம் இந்த அமிர்த சக்திகளை பால் மூலம் பெற முடியும். இதைத்தான் சுந்தரரும் கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி என்று பக்தர்கள் இறை அமிர்தத்தை பெறும் முறையாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

இத்தகைய தர்ம கங்காமிர்தம் செறிந்த பாலே சகஸ்ர லிங்க மூர்த்திக்கு ஏற்புடையது.  எனவே முடிந்த போதெல்லாம் கன்றுக் குட்டிகள் தங்கள் தாய்ப் பசுவிடம் வேண்டிய அளவு பாலை ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை அருந்தும் தானத்தை ஏற்றுச் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். நிரந்தர செல்வத்தைப் பெறக் கூடிய பூஜை முறைகளுள் இத்தகைய மடிப்பால் தானமும் ஒன்றாகும்.

கன்று குடித்தால் பசு தரும் பால் அளவு குறைந்து விடும் என்ற தவறான கருத்தை இனியாவது மக்கள் மாற்றிக் கொண்டால் அது சமுதாயத்திற்கு நன்மை தரும். இன்று சமுதாயத்தில் பெருமளவில் காணப்படும் கடுமையான இரத்த சோகை நோய்க்கு இவ்வாறு கன்றுகளுக்கு பால் கொடுக்காமல் பாலைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தயிர் அபிஷேகம்

பசும் பாலைப் போலவே தயிரையும் பசும் பாலிலிருந்துதான் பெற வேண்டும். கடையில் விற்கும் தயிர் இறை மூர்த்திகளின் அபிஷேகத்திற்கு ஏற்புடையது அல்ல. பொதுவாக, சமைத்த எந்த ஒரு பதார்த்தமும் மூன்று மணி நேரத்திற்குப் பின் தன் ஜீவ சக்தியை இழந்து விடும் என்பது பெரியோர்கள் கூற்று. இதை யாமம் கழிந்து உணவு என்றும், அத்தகைய உணவைத் தவிர்ப்பது நலம் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால், இதற்கு விலக்காக இருப்பது பசும்பால், தயிர் போன்றவை. இருப்பினும், பசுந் தயிரை இறை அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தும்போது அதில் ஒரு குறிப்பிட்ட முறையில் தயார் செய்வது நலம்.

அதாவது, நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி அதில் தயிரைத் தோய்த்து உறை ஊற்றி வைத்து விட வேண்டும். இரண்டாம் அந்த உறை ஊற்றிய தயிரிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அடுத்த நாள் காய்சிய பாலில் உறை ஊற்ற வேண்டும். பின்னர் அவ்வாறு கிடைக்கும தயிரை மூன்றாம் நாள் பாலில் உறை ஊற்ற வேண்டும். இவ்வாறு மூன்று முறை உறை ஊற்றிய தயிர் மிகவும் தூய்மை உடையதாகவும், சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு ஏற்புடையதாகவும் சித்தர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

பாலைக் காய்ச்சுவதற்கும், உறை ஊற்றி வைப்பதற்கும் மண் கலயங்களைப் பயன்படுத்துவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். கிருஷ்ணர் இவ்வாறு மண் கலயங்களில் சேமித்து வைக்கப்பட்ட தயிரைத்தான் விரும்பி உண்டார் என்பது நீங்கள் அறிந்ததே. நந்த கோபர் மாளிகையில் தங்கம், வெள்ளியாலான பானைகள் இருந்தாலும் கோபிகைளின் குடிசைகளில் மண் கலயங்களில் தேய்காய் நாரில் தொங்கிய உறியில் கிடைத்த தயிர்தான் கோகுல கண்ணனுக்கு மிகவும் உவப்புடையதாக இருந்தது.

தேங்காய் உறி பல கண் திருஷ்டி தோஷங்களையும், காத்து, கருப்பு தோஷங்களையும் நீக்கும். சமுதாயத்தில் பரவியுள்ள பல ஆவி தோஷங்களைக் களைவதற்காகத்தான் இத்தகைய உறி அடித் திருவிழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். வீட்டு வாசல்களிலும் தேங்காய் நாரினால் வேயப்பட்ட மிதி அடிகளைப் பயன்படுத்துவதால் வெளியிலிருந்து வரும் எச்சில், கழிப்பு, திருஷ்டிகழி தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சகஸ்ரலிங்கம் வாலிகண்டபுரம்

பொதுவாக மூலவரை விட்டுத் தனியாக அருள் புரியும் ஸ்ரீசகஸ்ரலிங்க மூர்த்தியானவர் வாலிகண்டபுரம் சிவத்தலத்தில் மூலவருடன் வலம் வரும் விதத்தில் அமைந்திருப்பது மற்ற எந்த திருத்தலத்திலும் இல்லாத தனிச் சிறப்பாகும். சகஸ்ர லிங்கத்தை ஒரு முறை வலம் வந்தால் ஆயிரம் முறை வலம் வந்ததற்கு சமம் என்றால் இந்த மூர்த்தியை மூலவருடன் சேர்த்து வலம் வருவது என்றால் அது வாலிகண்டபுரத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியமாகும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய அற்புதம் என்னவென்றால் சகஸ்ரலிங்க மூர்த்தியை ஒரு முறை வழிபட்டால் ஆயிரம் முறை வழிபட்ட பலன்கள் பெருகும் என்பதால் பொதுவாக சகஸ்ர லிங்க மூர்த்திகளை வலம் வரும்போதோ, நாமாவளிகளைக் கூறும்போதோ மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பார்கள் நம் பெரியோர்கள். இங்கு பலன்கள் மட்டும் ஆயிரம் மடங்காகவோ அதற்கு மேற்பட்ட முறையிலும் பெருகுவது கிடையாது, நம்முடைய பிரார்த்தனையும் ஆயிரம் மடங்காக பெருகும் என்பதே உண்மை. ஒரு மனிதப் பிறவியைப் பெறுவதற்கே ஒரு கோடி ஆண்டுகள் தேவைப்படும் என்றால் சகஸ்ர லிங்க மூர்த்திகளிடம் தேவையில்லாத பிரார்த்தனைகளை முன் வைத்து விட்டால் அந்த வினையிலிருந்து விடுபட எத்தனை கோடி மனிதப் பிறவிகளும், எத்தனை கோடி ஆண்டுகள் வழிபாடும் தேவைப்படும் ? இதை உணர்ந்த நம் முன்னோர்களின் அறிவுத் திறனையே வாலிகண்டபுரத்தில் சகஸ்ரலிங்க மூர்த்தியை தரிசனம் செய்யும் நாம் கண்டு பிரமிக்கிறோம். இந்த சகஸ்ரலிங்க மூர்த்தியை வழிபடும் அதே வேளையில் மூலவரின் வாகனமாக அமைந்த நந்தி மூர்த்தியையும் தரிசனம் செய்யும் பாக்யத்தைப் பெறுகிறோம். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்றால் மருந்தைக் கையில் எடுத்தவுடன் குரங்கின் நினைவு தோன்றுவது மனித மனத்தின் இயல்பாக இருப்பதால் இந்தத் தவற்றைக் களையும் மூர்த்தியாகவும் மூலவரின் நந்தி மூர்த்தி எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். அதனால் சகஸ்ரலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தவுடன் எத்தகைய நல்ல பிரார்த்தனை, தீய வேண்டுதல்கள் மனதில் முளைத்தாலும் அதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அதை அப்படியே மூலவரின் நந்தி பகவானின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டால் போதுமே ? என்னே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். சிவ அபராதத்திற்குக் கூட மன்னிப்புப் பெற்று விடலாம். குரு அபராதத்திற்கு என்றுமே மன்னிப்புப் பெற முடியாது. அந்த குருவே மனம் கனிந்து மன்னிப்பு அளித்தால்தான் உண்டு. ஆனால், ஒருவர் செய்த தவறு என்னவென்று உணர்ந்தால்தானே அந்த தவற்றிற்கு மன்னிப்புக் கோர முடியும் ? இவ்வாறு ஒருவர் செய்த தவறு என்ன என்பதைத் தெளிவாக உணர்விக்கும் கருணை கடாட்ச மூர்த்தியே இந்த சகஸ்ர லிங்க மூர்த்தி ஆவார். பக்தர்கள் மன அமைதியுடன் இந்த சகஸ்ரலிங்க மூர்த்தியை மூலவருடன் சேர்த்து வலம் வந்து வணங்குதலால் தாங்கள் செய்த குரு அபராதத்தையும் நினைவுபடுத்துபவரே இந்த மூர்த்தியின் பெருங்கருணை ஆகும். எனவே குருவின் மகிமையை உணர்த்துவதும் குரு அபராதம் தீர வழிகாட்டுவதும் சகஸ்ரலிங்க வழிபாடு ஒன்றே என்பதை நினைவில் கொள்ளவும். அதனால்தான் ஏதோ ஒன்றிரண்டு தலங்களில் மட்டுமே சகஸ்ரலிங்க மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam