சனியில் நீராடி சாசுவதமான அருளைப் பெறலாமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்திருகோடிகா சிவத்தலம்
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருகோடிக்கா திருத்தலம் கோடிக் கணக்கான சிறப்புகளுடன் பொலியும் சிவத்தலம். கோடி என்பதற்கு லட்சம், கோடி என்ற எண்ணிக்கை மட்டுமல்லாது ஒரு மூலை, சாஸ்வதமான இடம், இது இன்ன தன்மை உடையது என்று கோடிட்டுக் காண்பிப்பதாகவும், புகலிடம் என்றவாறு பலவிதமாக பொருள் கொள்ளலாம். இறையன்பில் உச்சக்கட்டத்தில் நின்ற துர்வாசர், எமதர்மராஜா மட்டுமல்லாது எண்ணற்ற அவதாரங்களும், ரிஷிகளும், தேவர்களும், தேவதைகளும், மகான்களும் முக்தி பெற்று இன்று இத்தலத்தில் உறையும் சிறப்பான பெருமை உடையதே திருகோடிக்கா திருத்தலம் ஆகும். காவிரி வடக்கு முகமாக வலஞ்சுழித்து ஓடும் பெருமை மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் முதல் நாள் நீராடும் சிறப்புத் தன்மையுடன் திகழ்வதும் இத்தலம் ஆகும். குறிப்பாக சப்த கன்னிகள் நீராடி பக்தர்களுக்கு அருள்வழங்கும் திருத்தலம் இதுவே. எனவே கார்த்திகை மாதப் பிறப்பன்று மட்டுமல்லாமல் நாள்தோறும் இத்தலத்தில் திகழும் தீர்த்தங்களில் நீராடுதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். சிறப்பாக வரும் கார்த்திகை மாதப் பிறப்பன்று காலை ஆறு மணி அளவில் காவிரியில் நீராடி முழுத் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்தலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல அகால மரணங்ளைத் தடுப்பதுடன் கைக்கெட்டியது வாய்க்கெட்டாது வாழும் நிலையிலுள்ள பலரும் இத்தகைய வழிபாடுகளால் சிறப்பான பலனைப் பெறுவார்கள். நிரந்தர லட்சுமி கடாட்சம் என்பதைப் பெயரளவில்தான் பலரும் கேள்விப்பட்டுள்ளோம். அது உண்மையில் எப்படி இருக்கும் என்பதை சாதாரண மக்களும் அறிய இறைவன் அருளும் இனிய சந்தர்ப்பமே மேற்கண்ட வழிபாடாகும்.


ஸ்ரீஎமபகவான் திருகோடிக்கா திருத்தலம்
சனி நீராடு என்பதற்கு சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்று மட்டும் பொருள் கிடையாது. குளிர்ந்த நீரில் குளி, சனி தனித்தருளும் திருத்தலங்களில் நீராடி ஆயுளை விருத்தி செய்து கொள் என்றெல்லாம் பொருள் உண்டு. அபூர்வமாக திருகோடிக்காவில் ஸ்ரீபாலசனி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீசனீஸ்வர பகவான் தலையில் சிவலிங்கத்துடனும் காக்கை வாகனத்திற்குப் பதிலாக கருட வாகனத்துடனும் எழுந்தருளி உள்ளார். சனிக் கிழமைகளில் இவரை தரிசனம் செய்து இவர் எதிரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஎமதர்மராஜாவையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். குறிப்பாக வரும் முடவன் முழுக்கு நாளில் இந்த இரு சூரிய புத்திரர்களையும் தரிசனம் செய்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். நவகிரக மூர்த்திகளில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் சனிபகவானும் ஒரு வகையில் முடவன்தானே. ஆனால், அதிக வேலைப் பளு பொறுப்புகள் காரணமாக ஓய்வு தேவைப்படும்போது அதை சிறந்த முறையில் அளிப்பவர் சனிபகவான் மட்டுமே. அது மட்டுமல்லாமல் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் கஷ்டப்பட்டு உழைத்த பொருள் சீக்கிரமாக அநாவசியமாக செலவழிந்து விடாமல் தகுந்த முறையில் மெதுவாக செலவாக அருள்புரிபவரும் சனீஸ்வர பகவானே. முடவன் ழுமுக்கு தினத்தில் வெள்ளிக் கிண்ணத்தில் சுத்தமான நல்லெண்ணய் தானம் இத்தலத்தில் அளித்தல் சிறப்பாகும். இதனால் ஜாதக ரீதியாக உள்ள பல அரிஷ்ட யோகங்கள் நிவர்த்தியாவதோடு நீண்ட ஆயுளும் முடவன் முழுக்கு தினத்தில் மட்டுமே இந்த அனுகிரகம் சனி பகவான், சூரிய பகவான், சுக்ர பகவான் இவர்களால் அளிக்கப்படுகிறது என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.


ஸ்ரீபாலசனீஸ்வர பகவான் திருகோடிக்கா
ஆட்சி பெற்ற சுக்ர பகவான் துலாவில் எழுந்தருள அதிலிருந்து லக்னம் உட்பட அனைத்து கிரகங்களுமே கிரக மாலிகையாக எழுந்தருள்வது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். இந்த கிரக மாலிகை சமயத்தில் துலா நீராடலை மேற்கொள்வது என்பது சற்குருவின் அனுகிரகத்தால் அன்றி வேறு எதனாலும் சாதிக்க முடியாது என்பதை சூரிய பகவானுடன் விருச்சிக ராசியில் எழுந்தருளி குருபகவான் இதற்கு நிரூபணமாக அமைகின்றார். இந்த கிரக மாலிகையில் ஐந்து ராசியில் ஏழு கிரகங்கள் எழுந்தருளி உள்ளதால் ஸ்ரீநடராஜர் சபாநாயகராக அம்பிகையுடன் எழுந்தருளியுள்ள நடராஜ மண்டபத்தில் ஸ்ரீபால சனீஸ்வரர், ஸ்ரீதுர்வாசர், ஸ்ரீசித்திர குப்தர், ஸ்ரீஎமதர்ம ராஜரை வணங்கி இந்த தரிசன பலன்களை எல்லாம் ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமானின் திருவடிகளில் சமர்பிப்பதால் கிடைக்கும் அனுகிரக சக்திகளை எழுத்தில் வடிக்க இயலாது. நவகிரகங்களின் அனுகிரகம் மட்டுமல்லாது ஸ்ரீதுர்வாச முனிவரின் தரிசனத்திற்காக ஏங்கிய முப்பத்து முக்கோடி தேவர்களின் அனுகிரகமும் அடியார்களுக்கு கிடைக்கும் என்றால் இந்த தரிசன பலன்களை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும் ? சுத்தமான நல்லெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் பசு நெய் சேர்த்து திருக்கோயில் முழுவதும் சிறப்பாக ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள மண்டபத்தில் இம்முக்கூட்டு எண்ணெயால் தீபமேற்றி வழிபடுதலால் நிரந்தர லட்சுமி கடாட்சம் கிட்டுவதுடன் அபமிருத்யு தோஷங்களும் விலகி நீண்ட ஆயுள் கிட்டும். சிறப்பாக பெண்களுக்கு ஏற்படும் திருமண தோஷங்கள் விலகி நல்ல திருமண பாக்கியம் கிட்டும். சதய நட்சத்திரம் ஒன்றை நூறாக்கும் தன்மை உடையதால் இன்று தாமே அரைத்த சந்தனத்தால் ஸ்ரீநடராஜருக்கும் மற்ற தெய்வ மூர்த்திகளுக்கும் காப்பிட்டு வணங்குதல் சிறப்பு.


ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் திருகோடிக்கா
மூன்று கோடி மந்திர தேவதைகள் ஸ்ரீதுர்வாச முனிவரை வணங்கி இத்தலத்தில் வழிபட்டு சாயுஜ்ய முக்தி அடைந்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. உண்மையில் எத்தனையோ யுகங்களுக்கு முன் மந்திர தேவதைகள் பெற்ற சாயுஜ்ய முக்தியால் கலியுக மக்களுக்கு என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? ஸ்ரீராமரைப் போல் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தந்தை சொல்லையே மந்திரமாக ஏற்று அது சுட்டிக் காட்டும் பொருளைப் பற்றி தெரியாமல், கவலைப்படாமல் வாழ்பவர்கள் இன்றும் ஸ்ரீராமராகவே போற்றப்படுவார்கள் என்பார் சற்குரு வெங்கடராமன் அவர்கள். அவர்கள் ஸ்ரீராமரைப் போல் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் கருப்பாகவோ, சிவப்பாகவோ, குட்டையாகவோ நெட்டையாகவோ, ஒல்லியாகவோ தடியாகவோ, கிறிஸ்துவராகவோ முசல்மானாகவோ இருக்கலாம். அவர் தன்னுடைய தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் அவர் காட்டிய வழியில் சென்றால் அவர் ஸ்ரீராமராகவே கருதப்படுவார். யாரெல்லாம் தன்னுடைய மனைவியை தெய்வமாக மதித்து போற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஸ்ரீராமரே. நெற்றிக்குத் திலகமிட்டு ருத்ராட்சம் அணிந்து பெண்களை வேறுவிதமாகப் பார்ப்பவர்களை நிச்சயமாக ராமர் என்ன ஒரு மனிதனாகக் கூட கருத முடியாது என்பார் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். ஸ்ரீதுர்வாச முனிவரைத் தொடர்ந்து அவர் காட்டிய வழியில் நின்று பெண்களை தெய்வமாக மதித்து இத்தல மூர்த்தியை முறையாக வணங்கி முக்தி நிலை அடைந்தோர் ஏராளமாக உண்டு.


ஸ்ரீதுர்வாச மகரிஷி திருகோடிக்கா
தன்னுடைய உருவப் படத்தை வைத்து வழிபட விரும்பிய அடியார்களுக்கு சற்குரு அளித்த பதில் இதுவே. “அடியேனுடைய படத்தை வைத்து வழிபடுவதால் எந்த வித பயனும் கிடையாது. ஸ்ரீராமரை வழிபட்டுக் கொண்டு ராவணனைப் போல் வாழ்வதால் என்ன பயன் ? ராமரைப் பற்றி கேள்விப்படாத அடியார் கூட ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தால் அவருக்கு நிச்சயமாக ஸ்ரீராமரின் அனுகிரகம் கனிவதுடன் அடியேனுடைய குருநாதர் இடியாப்ப சித்தரின் அனுகிரகமும் நிச்சயமாக உண்டு,” என்று கூறி ஒரு நிகழ்ச்சியை விவரித்தார். மந்திராலயத்தில் ஸ்ரீராகவேந்திரரின் நினைவாக தினமும் ஆயிரக் கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெறுகிறது அல்லவா? அதை நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ராஜா தினமும் ஒரு மாங்கல்யத்தை இலவசமாக தானமாக அளிப்பதுண்டு. இதை அறிந்த ஸ்ரீஇடியாப்ப சித்தர் சிறுவன் வெங்கடராமனை அழைத்துக் கொண்டு மந்திராலயம் சென்றாராம். “டேய், அன்னதானம் பண்ற அந்த ராஜாவுக்கு மாங்கல்ய தானம் பற்றிய இரகசியம் தெரியாது. அடியேனைப் பற்றியும் தெரியாது. ஆனால், அவன் செய்கிற மாங்கல்ய தானம் என்ற விஷயம் அடியேனுக்கு பிடித்த விஷயம். அதை தன்னலம் கொஞ்சமும் இல்லாம அவன் பண்றான். அதனால அவனுக்கு அனுகிரஹம் தர வேண்டியது அடியேனுடைய டூடியாப் போச்சு,” என்று அந்த ராஜா வழங்கிய மாங்கல்ய தானத்திற்கு தான் அனுகிரஹம் செய்ய வேண்டிய காரணத்திற்கான விளக்கத்தை கோவணாண்டி அளித்தாராம்.


ஸ்ரீசித்ரகுப்தர் திருகோடிக்கா
சூரிய பகவான், சந்திர பகவான் போன்ற எண்ணற்ற கால தேவதைகள் நம்முடைய காரியங்களுக்கு சாட்சியாக இருந்தாலும் சித்ர குப்தர், எம பகவான் போன்ற பலரும் நம்முடைய காரியங்களுக்கு சாட்சியாகத் திகழ்கின்றனர். வெறும் சாட்சியாக திகழ்வதால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா ? உண்மையில் இவ்வாறு தெய்வ தேவதைகள் நம்முடைய காரியங்களை எல்லாம் கண்காணிக்கின்றன என்பது ஆரம்பத்தில் நமக்கு ஒரு பெரிய விஷயமாகத் தோன்றுவது கிடையாது என்றாலும் நம்முடைய பக்தி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த கால தேவதைகளின் மகத்துவம் புரியத் தொடங்குகிறது என்பதே உண்மை. இவ்வாறு காலத்தையும் நேரத்தையும் ஒன்றாகக் கருதும் மனிதன் நேரத்தின் தொகுப்பே காலம் என்று உணர முற்படும்போதுதான் நேரத்தை கவனமாகக் கையாள ஆரம்பிக்கின்றான். உண்மையில் எந்தத் துறையில் முன்னேற்றம் என்றாலும் அது இறுதியில் காலம் நேரத்தைப் பற்றிய முன்னேற்றமாகத்தான் இருக்கும். உதாரணமாக கம்ப்யூட்டர் துறையில்தான் முதன் முதலில் மில்லி செகண்ட், நாநோ செகண்ட் என்ற காலப் பகுப்பின் முக்கியத்துவமும் உன்னதமும் புரியவருகின்றது. செகண்ட் என்ற காலப் பாகுபாடே இல்லாதபோது நாநோ செகண்ட் என்று காலத்தை பகுப்பதால் யாது பயன் ? இதைத்தான் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியின் துவார பாலகர்களாய் அமைந்துள்ள ஸ்ரீசித்ரகுப்த மூர்த்தியும் ஸ்ரீஎம மூர்த்தியும் நமக்குப் புலப்படுத்துகின்றனர். உண்மையில் இவ்விரு மூர்த்திகளின் வழிபாடு மேலோட்டமாகப் பார்த்தால் வேறு வேறாகத் தோன்றினாலும் இரண்டும் காலம் நேரத்தைப் பற்றியதுதான் என்ற இரகசியம் புரியவரும். கால நேரத்தின் பகுப்பான முந்திரிப் பருப்பு கலந்த அன்னதானத்தை இத்தலத்தில் நிறைவேற்றுவதால் கால நேரம் பற்றிய இரகசியங்களும் ஸ்ரீசித்ர குப்தர் ஸ்ரீயம பகவானின் அருட் சுரக்கும் பாங்கும் மக்களுக்குப் புரியும் என்பதில் சந்தேகமில்லை.


ஸ்ரீவடுக பைரவர் திருகோடிக்கா
பொதுவாக பைரவ லோகம் என்பது காலம் பற்றிய அறிவைத் தரும். பைரவ வழிபாடு கால நேரத்தைப் பற்றிய அறிவை விருத்தி செய்யும். அதனால்தான் வெளியூர்ப் பயணங்களின்போது கால நேரத்தைக் குறிக்கும் முந்திரி பருப்பு மாலையைச் சாற்றி நீண்ட யாத்திரைகளை மேற்கொள்தல் நலம் என விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறப்பாக திருகோடிக்கா போல ஸ்ரீவடுக பைரவர் அருளும் தலங்கள் முக்கால ஞானத்தை எளிதில் கூட்டவல்லவை. ஒரு காரியத்தில் பல தடவை முயற்சி செய்து அது விரும்பிய பலனை அளிக்காதபோது வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீவடுக பைரவர் ஆவார். தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பலர், வேலை தராத கம்பெனிகள் பலவற்றில் ஏறி இறங்கி அலுத்துப் போனவர்கள் ஏராளம், ஒரே குழந்தைக்கு வரன் பார்த்து பார்த்து சலித்துப் போனவர்கள் அனேகர் உண்டு. இத்தகையோருக்கு நல்லதொரு திருப்பத்தை தருவதே ஸ்ரீவடுக பைரவர் வழிபாடு ஆகும். பொதுவாக மேற்குப் பார்த்த மூர்த்திகள் யாவருமே வாழ்வின் இறுதி காலத்தில், கடைசி தசையில் வழிபட வேண்டிய மூர்த்திகள் ஆவர். குறிப்பாக திருகோடிக்கா போன்று மேற்கு திசையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசனீஸ்வர மூர்த்தி, ஸ்ரீதுர்வாச முனிவர், திரிகோடி லிங்க மூர்த்திகள் அனைவருமே எதிர்காலம் பற்றிய பயத்தைப் போக்கி நல்வாழ்விற்கு உறுதுணையாய் நிற்பவர்களே. உண்மையில் மனித வாழ்க்கை என்பது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அருளியதைப் போல ஒரு கமாவே தவிர அது புல் ஸ்டாப் ஆகாது. இப்பிறவியில் நாம் செய்யும் காரியங்களே அடுத்த பிறவியில் மனைவி, குழந்தைகளாக, உற்றம், சுற்றத்தாராக அமைவார்கள் என்ற ஞானத்தை அளிப்பவரே ஸ்ரீவடுக பைரவ மூர்த்தி ஆவார். மேலும் அடுத்த பிறவி எத்தகைய ஜீவ ராசியாக அமைந்தாலும் அதிலும் துளசி, பசு மாட்டைப் போல இறை நினைவுடன் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் பண்பாட்டை அளிப்பதும் ஸ்ரீவடுக பைரவர் வழிபாடாகும்.


ஸ்ரீஅகஸ்தியபிரான் திருகோடிக்கா
ஸ்ரீதுர்வாச முனிவர் மந்திர தேவதைகளை ஸ்ரீஅகத்திய பிரானிடம் அனுப்பி அவர்கள் உய்யும் வழியை கேட்டுப் பெறுமாறு கூறினார். அதனால் ஸ்ரீதுர்வாசருக்கே மந்திர தேவதைகளுக்கு முக்தி அளிக்கும் சக்தி கிடையாது, அதை அளிக்கவல்லவர் ஸ்ரீஅகத்தியர் ஒருவரே என்று பொருள் கொள்ளக் கூடாது. தெய்வீகத்தில் எந்த உத்தம நிலையை அடைந்தாலும் அதற்கு மேலும் பல படித்தரங்கள் உண்டு. இவை எல்லையற்றவை என்பதை இறை மார்க்கத்தில் சஞ்சரிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மந்திரம், தந்திரம், தான தர்மம் என்று எந்த உபாயம் மூலமாகவும் இறைவனை அடையலாம் என்பது உண்மையாக இருந்தாலும் முதலில் ஒரு மனிதன் அடைய வேண்டியது உத்தம சற்குருவையே என்பதுதான் ஸ்ரீதுர்வாச முனிவரும் ஸ்ரீஅகத்திய முனிவரின் தரிசனமும் நமக்கு உணர்த்தும் பாடமாகும். கோடி கோடியாக தீர்த்தங்களும், மந்திரங்களும், மந்திர தேவதைகளும், இறை மூர்த்திகளும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சீடனுக்கு எந்த உபாயம் ஒத்து வரும் என்ற இரகசியத்தை உணர்ந்தவரே சற்குரு ஆதலால் சற்குருவைச் சரணடைந்தால் அவரே எந்த தீர்த்தத்தில் நீராடி, எந்த மந்திரத்தை ஓதி, எந்த மூர்த்தியை வழிபட்டு முக்திப் பாதையில் முன்னேறலாம் என்பதை உணர்த்துவார். சற்குருமார்கள் கோடி கோடியாக இருந்தாலும் இவர்களில் நமக்கு எவர் வழிகாட்டுவார் என்ற திடமான வழிகாட்டுதலை அளிப்பதும் திருகோடிக்காவில் இயற்றும் தீர்த்த தான வழிபாடாகும். இவ்வாறு குரு பகவான் அனைத்து கிரகங்களுடன் புடை சூழ அமர்ந்திருக்கும் வரும் விளம்பி வருட கார்த்திகை மாதப் பிறப்பு தினம் அமைந்திருப்பதால் இந்த அற்புத முகூர்த்த நாளில் திருகோடிக்கா வலஞ்சுழி காவிரியிலோ, திருகோடிக்கா தீர்த்தங்களிலோ அல்லது இரண்டிலுமோ நீராடி உரிய தான தர்மங்களுடன் வழிபடுதல் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.


ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் திருகோடிக்கா
ஸ்ரீதுர்வாச முனிவரால் ஸ்ரீஅகத்திய தரிசனத்திற்கு வழிகாட்டப்பட்ட மந்திர தேவதைகள் ஸ்ரீஅகத்தியர் காட்டிய வழியில் தங்கள் வழிபாடுகளைத் தொடர்ந்த பின்னர் அவர்களுக்கு ஸ்ரீதிரிபுரசுந்தர அம்மனின் தரிசனம் கிட்டியது. மந்திர தேவதைகள் அனைவரும் ஸ்ரீதிரிபுரசுந்தரியை ஸ்ரீரெங்கநாதராக வழிபட்டனர் என்று இத்தல புராணம் கூறினாலும் இதன் உண்மைப் பொருளை உரைக்கவல்லவர்கள் சித்த பெருமக்களே. உண்மையில் அனைத்தும் கடந்த பிரம்மாண்ட நாயகனே ஸ்ரீரெங்கநாதராக ஸ்ரீதிரிபுரசுந்தரியின் புவன மாயைக் காட்சியாக அளித்தான் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். உருவம் உணர்வு கடந்து நிற்பவன் இறைவன் என்பதே உண்மை. எனவே ஒருவர் ஸ்ரீரெங்கநாதராக, ஸ்ரீதிரிபுர சுந்தரியாக தரிசனம்செய்கிறார் என்றால் அது இறைவனின் பெருங்கருணையையே குறிக்கிறது. இந்த தரிசனம் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும் என்றால் துருவனுக்கு பெருமாள் அளித்த தரிசனத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஓம் நமோநாராயணாய என்று நாரதர் உபதேசித்த எட்டெழுத்து மந்திர உபதேசத்தை பக்தி சிரத்தையுடன் ஏற்று ஜபித்த துருவனுக்கு மகர குண்டலங்களுடன் கூடிய பெருமாளின் தரிசனம் கிடைத்தது. ஆனால், பெருமாள் அணிந்திருந்த குண்டலங்கள் ஆடாமல் அசையாமல் ஜொலித்தன. ஏன் அந்த குண்டலங்கள் காற்றில் ஆடி ஆனந்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அப்பாவித்தனமாக சிறுவனான துருவன் கேட்டபோது அதற்கு பெருமாள், “நீ அசைக்கவில்லை அதனால் குண்டலங்கள் ஆடவில்லை,” என்று பதிலளித்தாராம். எனவே பெருமாளுக்குத் தெரியாத இரகசியமில்லை. இந்த கேள்வியிலும் பதிலிலும் ஆழ்ந்து முழுகுங்கள், அப்போதுதான் முத்து கிட்டும்.


ஸ்ரீகரைசேர்த்த விநாயகர் திருகோடிக்கா
பக்தர் ஒருவர் பெருமழையில் நனைந்து இருட்டில் வீடு தெரியாமல் தடுமாறியபோது அவருடைய இருப்பிடம் சேர வழிகாட்டியவர் இவரே என்று தலவரலாறு கூறுகிறது. உண்மையில் ஆன்மீகம் என்ற காட்டில் திக்குத் திசை தெரியாமல் தடுமாறும் எவரையும் நல்வழிப்படுத்தக் கூடிய விநாயக மூர்த்தி இவரே. பொதுவாக, ஸ்ரீவிநாயக மூர்த்தியை வணங்கி எந்த வழிபாட்டையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் இந்த விதிக்கு விலக்காக ஸ்ரீஉதங்க மகரிஷியை வழிபட்டு உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வழிபட வேண்டும், ஸ்ரீதுர்வாச மகரிஷியை வழிபட்டு ஸ்ரீஅருணாசல ஈசனை வழிபட வேண்டும், ஸ்ரீஏரண்ட மகரிஷியை தரிசனம் செய்து கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியை வழிபட வேண்டும் என்ற விதி இருப்பது போல திருகோடிக்கா ஈசன் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியை வழிபடும் முன்னர் தரிசனம் பெற வேண்டிய மூர்த்தியே ஸ்ரீகரைசேர்த்த விநாயகர் ஆவார். தெரியாத எந்தத் துறையிலும் பிரவேசிக்கும் முன்னர் இந்த விநாயக மூர்த்தியை மானசீகமாக வேண்டியேனும் பிரவேசிப்பதால் நற்பலனைப் பெறுவார்கள். “சுக்லாம் பரதரம் ... ” என்று வேண்டி தலைக்கு குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடும் முறையில் வெள்ளை நரம்புகளால் தூண்டப்படும் மண்டலத்தை செயல்படுத்துபவரே இந்த விநாயக மூர்த்தி ஆவார். மூளை அறுவை சிகிச்சைகளில் என்னதான் கவனமாக மருத்துவர்கள் செயல்பட்டாலும் மூளையின் சில பகுதிகள் பயன்படாமல் செயலிழந்து விடும். நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள், மூளை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை போன்றவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் இந்த விநாயகரை வேண்டி தங்கள் சிகிச்சைகளை மேற்கொள்தல் நலம். “கரை” என்பது மூளையின் சில பகுதிகளையும் குறிக்கும். மூளை அறுவை சிகிச்சைக்கு முன்னால் நோயாளிகளும் இந்த விநாயகரை வணங்கி ராஜ்மா பருப்பு சுண்டலை தானமாக வழங்குதலால் நற்பலன் பெறுவார்கள்.


வேதலிங்க மூர்த்திகள் திருகோடிக்கா
வேதம் என்பது நாமறிந்த ரிக் முதலான நான்கு வேதங்கள் மட்டுமல்லாது கோடி கோடியாய் இப்பிரபஞ்சத்தில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நாம் அறிந்ததோ நான்கு வேதங்கள் மட்டுமே. இதைப் பற்றி கவலைப்படாது தினந்தோறும் திருக்கோடிக்கா போன்ற தலங்களில் உள்ள வேதலிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து வருதலால் நொடி தோறும் புதிது புதிதாய் தோன்றும் வேத மந்திர சக்திகளை நாம் கிரகிக்க முடியும். அவ்வாறு இந்த வேத லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊரில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து வருதலாலும் அத்தகைய சுயம்பு லிங்க மூர்த்திகளை பிரதட்சிணம் செய்து வழிபடுதலால் க்ஷணம் தோறும் தோன்றும் வேத சக்திகளை சாதாரண மக்களும் கிரகித்து பலன்பெற முடியும். இது போன்ற ஆயிரமாயிரம் கருத்துக்களை கணக்கில் வைத்துத்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று நம் பெரியோர்கள் ஆலய வழிபாட்டை தினந்தோறும் நிகழ்த்த வேண்டிய அவசியத்தைப் பற்றி வலியுறுத்தினார்கள். திருத்தவத்துறை, திருகோகர்ணம் போன்ற பல தலங்களில் மேல்விதானங்களில் நவகிரக மூர்த்திகளின் உருவங்கள் அமைந்திருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், கரிவலம்வந்தநல்லூர் போன்ற தலங்களில் கோயில் விதானங்களில் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டோ செதுக்கப்பட்டோ இருக்கும். இவை அனைத்துமே ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சத்தில் தோன்றும் வேத சக்திகளை மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் விநியாகிப்பதற்காக சித்தர்கள், மகான்களின் ஏற்பாடு ஆகும். பிரதோஷ நாட்களில் தமிழ் வேத மறைகளை ஓதிக் கொண்டு பக்தர்கள் முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தின் மேல் சிவனும் பார்வதியும் கொலுவீற்றிருக்க அதைத் தொடர்ந்து நான்கு வேதங்கள் முழங்குவதைக் கேட்டிருப்பீர்கள். திருத்தலங்களில் சுவாமியுடன் செல்லும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட தேவார திருவாசக பாடலையோ ரிக் வேதத்தின் ஒரு குறிப்பிட்ட சாகையையோ ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் ஓதிக் கொண்டு சென்றாலும் அந்த பிரதோஷ விழாவில் பங்கேற்கும் மற்ற லோகத்திலிருந்து வரும் தேவதைகள் இந்த வேத ஒலிகளை அந்தந்த கால நேரத்திற்கு ஏற்றவகையில் மாற்றித் தருகிறார்கள் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய விந்தையாகும். இவ்வாறு பிரதோஷ பூஜையில் ஒரு திருத்தலத்தில் நடைபெறும் மகிமைகளில் ஒரு தூசு அளவு அறிந்தால் கூட ஒரு பக்தரும் கோயில் வளாகத்தை விட்டு நகர மாட்டார்கள்.

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam