யோகத்தில் அடங்குவது திசை ! மௌனத்தில் லயமாவது ஓசை !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்சென்னை பார்த்தசாரதி ஆலயம்

புராதன சிறப்பு பெற்ற திருத்தலங்களுள் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருத்தலமும் ஒன்றாகும். ஸ்ரீராமபிரானின் அவதாரத்திற்கு முன் தோன்றியவரே மதுமான் மகரிஷி ஆவார். மதுமான் மகரிஷிக்கு தம்பதி சமேதராய் சீதா பிராட்டியுடன் பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஒரு சேர தரிசனம் அளித்த அற்புத திருத்தலம் இது. இத்தலத்தில் ராம பிரான் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தெய்வங்கள், அவதாரங்களின் படத்தை வைத்துப் பூஜிக்கும் முறையை விவரிக்கும்போது ராமரின் படத்தை மட்டும் தெற்கு திசை நோக்குமாறு வைக்கக் கூடாது என்றும் வாஸ்து மூர்த்தியின் படத்தை கண்டிப்பாக கிழக்கு அல்லது வடக்கு திசையில்தாடன் வைக்க வேண்டும் என்றெல்லாம் தெளிவுபடுத்தி உள்ளார்கள். காரணம் ராமபிரானின் உயிரான சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால் ராம பிரானை தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்யும்போது அவர் தெற்கு திசையான இலங்கையில் சீதை அடைந்த வேதனைகளை நினைவுகூர வேண்டி வருவதால் இராம பிரான் தெற்கு திசையை நோக்க விரும்பவில்லை. ஆனால், ஸ்ரீரங்கம் போன்ற திருத்தலங்களில் ராமபிரான் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார் என்பது நாம் அறிந்ததே.

இறைமூர்த்திகளின் செய்கைகளில் ஆயிரமாயிரம் காரணம் இருக்கும். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை நிர்மாணித்தபோது நமது சபையைச் சேர்ந்த பலரும் தங்கள் நகை, உடைமைகளை விற்றுக் கூட திருப்பணிக்காக அளித்தார்கள். இது குறித்து நமது சற்குருவிடம் ஒரு அடியார், “வாத்யாரே, ஸ்ரீரங்க ராஜ கோபுரம் கட்டினால் இலங்கை அழிந்து விடும் என்கிறார்களே. அது உண்மையா ?” என்று கேட்டார். சற்குரு, “அது உண்மைதான் என்று சாஸ்திரத்திலும் உள்ளது,” என்று பதிலளித்தார். அதைக் கேட்ட அடியார், “வாத்யாரே, ஒரு நாடு அழிந்து விடும் என்று சொல்லும்போது அந்த காரியத்தை நாம் செய்வது சரியா ?” என்று கேட்கவே, ஸ்ரீவாத்யார்,“இங்க பாருய்யா, சாமிக்கு ஒருத்தன் கோபுரம் கட்டுகிறான் என்றால் அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது நம் கடமை. அதனால் உலகமே அழிந்து விடும் என்றாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அது இறைவனின் பொறுப்பு. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ரங்கநாதர் தெற்கு நோக்கிய பார்வையுடன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ளதால் ராஜகோபுரம் அமைக்கும்போது தெற்கில் உள்ள இலங்கை அவருடைய பார்வை தீட்சண்யம் பெறாது. அதனால் இலங்கை அழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது உண்மையே. அடியேனுக்கும் உனக்குமே இந்த சாஸ்திரம் தெரியும்போது ரெங்கநாதருக்குத் தெரியாதா ? ராஜ கோபுரம் இல்லாமல் பல காலம் ரெங்கநாதர் இருந்தார். அது அவர் விருப்பம். இன்று ராஜகோபுரம் வானளவ எழுகிறது. இதுவும் அவர் விருப்பமே என்று தெளிந்தால்தான் தெய்வீகம் புரியும்,” என்று தன் உரையை நிறைவு செய்தார் சற்குரு.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் நிறைவு பெற்றபின் இலங்கையின் பெரும்பகுதி உள்நாட்டு கலவரத்தால் அழிந்தது நாம் அறிந்ததே. ஆனால், இலங்கையை ஆண்ட ராவணன் எவ்வளவு தவறு செய்திருந்தாலும் அங்கிருந்த மண்டோதரி, விபீஷணன், கும்பகர்ணன், திரிசடை போன்ற பலரும் உத்தமர்களாகத்தானே இருந்தார்கள். அவர்களின் கதி என்னாவது ? எனவே அத்தகைய நல்லவர்களைக் காக்கவே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமர் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். எனவே ஒருவர் எத்தகைய கொடுமையான சூழ்நிலையில் இருந்தாலும் அவர் இறைவனை நம்பினால் உலகமே அழிந்தாலும் அவர் பாதுகாப்புடன் திகழ்வார் என்பதற்கு ஸ்ரீரங்க ராஜகோபுரமும் தெற்கு நோக்கிய ராமர் திருக்கோலமும் நமக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

அதுபோல தெற்கு நோக்கிய பார்த்தசாரதி ஆலய இராம பிரானுக்கும் ஒரு சரித்திரம் நிச்சயம் இருக்கும் அல்லவா ? மதுமான் மகரிஷி என்பவர் ராம அவதாரத்திற்கு முன்னரே சாயாவனம் திருத்தலத்தில் அவதாரம் பெற்று திருஅண்ணாமலையை யுக கணக்கில் கிரிவலம் வந்து வழிபாடுகள் நிறைவேற்றியவர். அவர் ராமருக்கு மூத்தவர் என்பதால் ராமபிரான் அவரைத் தன்னுடைய தந்தையாக பாவித்து குடும்ப சகிதமாக தன்னுடைய தரிசனத்தை அளித்தார். ஸ்ரீராமர் மதுமான் மகரிஷிக்கு தரிசனம் அளித்தார் என்பதை விட மகரிஷியை குடும்ப சகிதமாக வணங்கி வழிபட்டார் என்று சொல்வதே சரியாகும். ராமபிரானின் பணிவுக்கு இது மற்றோர் சான்றாகும்.
ராம அவதாரத்தை நாம் அழ்ந்து நோக்கினால் ராம பிரான் தன்னைச் சக்கரவர்த்தி என்று பிரகடனப்படுத்தியதை விட தன்னை ஒரு சாதாரண மனிதனாக காட்டி சேவை செய்த நிகழ்ச்சிகளே ஏராளம். தான் ஒரு சாதாரண மனிதன் என்று காட்டுவதில்தான் அவர் பேரானந்தம் கொண்டார். ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் தன் மனைவி துன்பம் அனுபவித்த திசையை நோக்க விரும்பமாட்டான் என்பதற்காகத்தான் ராமரை நாம் சாதாரண மனிதனாகப் பாவித்து அவரை தெற்கு தவிர மற்ற திசைகளில் எழுந்தருளச் செய்கிறோம். இதை தெளிவுபடுத்தவே ராம பிரான் மதுமான் மகரிஷிக்கு தெற்கு நோக்கிய கோலத்தில் தரிசனம் அளித்தார். மேலும் ஸ்ரீராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் தரிசனம் என்பது பஞ்ச பூத தரிசனத்திற்கு இணையானது ஆகும். பஞ்ச பூதங்களின் கூட்டுதானே மனித உடல் ? எனவே பஞ்ச பூதத்திலான இந்த மனித உடலை விடுத்து உயர் நிலைக்கு செல்ல உதவு செய்யக் கூடியதே பித்ருக்களின் தரிசனம். பித்ருக்கள் தெற்கு திசையில்தானே குடிகொண்டிருக்கிறார்கள். எனவே தெற்கு நோக்கிய ராம தரிசனம் என்பது நமது பித்ரு மூர்த்திகள், பித்ரு பத்னிகள் அனைவரின் ஒட்டு மொத்த தரிசனம் ஆகும். இந்த தரிசனத்தை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற உயரிய நோக்கில் அமைந்ததுதான் மதுமான் மகரிஷியின் தவமும்.

இதுவரை தங்கள் மூதாதையர்களுக்கு எந்த வித படையல், திவசங்கள், தர்ப்பணங்கள் நிறைவேற்றாதவர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்து மதுமான் மகரிஷி தோன்றிய சாயாவனம் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுவதால் இதுவரை மூதாதையர்களுக்கு வழிபாடுகள் இயற்றாத தவறிலிருந்து ஓரளவு விமோசனத்தைப் பெறலாம்.

மங்கை கண்ணும் மாய கண்ணே மதுமான் கண்ணே மாசறு கண்ணே
மங்கை பங்கன் மாசறு மணாளா இங்கு தங்கி எம்குறை தீர்ப்பீர்

என்ற மதுமான் மகரிஷி துதியை ஓதி ஸ்ரீராமரை வலம் வந்து வணங்குவதும் சாயாவன திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அற்புத பலன்களை அளிக்கும் சிறப்பான வழிபாடாகும். சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் மேற்கண்ட மதுமான் துதியை ஓதியவாறே பார்த்தசாரதி ஆலய ராமபிரானை ஞாயிறு, வியாழக் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் சூரிய பகவானே அவர்களுக்கு சற்குருவை காட்டி அருள்வார். சற்குருவைப்பெற்ற பலரும் சற்குருவின் பெருமையை உணர்வது கிடையாது. “நான் பல வருடங்களாக சற்குரு காட்டிய வழியில்தான் செல்கின்றேன். ஆனால், எந்த முன்னேற்றத்தையும் கண் கூடாகக் காண முடியவில்லை என்று கூறுபவர்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. ஏன் சற்குருவைப் பெற்ற லட்சக் கணக்கான அடியார்கள் கூட சற்குரு பெற்றும் சரியான முன்னேற்றத்தைக் காண்பது கிடையாது. இதற்குக் காரணம் அவர்கள் சற்குருவின் உபதேசத்தை ஏனோதானோவென்று புரிந்து கொள்வதுதான். இது சீடர்களின் தவறே தவிர சற்குருவின் இயலாமை கிடையாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சற்குருவின் ஒரே ஒரு உபதேசத்தை, மீண்டும் கவனிக்கவும், சற்குருவின் ஒரே ஒரு உபதேசத்தை முழுமையாக, தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொண்டால்போதும் அனைத்தையும் சாதித்து விடலாம். இதற்கு உதவுவதும் மேற்கூறிய ராமபிரான் வழிபாடாகும்.

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam