மனதை மணமாக்கும் மாலை மதியம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வரும் ஆங்கில புத்தாண்டு 2018 சந்திர சக்திகள் பூரித்துக் குலுங்கும் மகிமா ஆண்டாக அமைகிறது. திங்கட் கிழமையும் இரவில் அமையும் பௌர்ணமி திதியும் இந்த புத்தாண்டின் சந்திர சக்திகளை மேலும் வலுப்படுத்துகின்றன. அன்று இரவு ஸ்ரீநடராஜரின் அபிஷேகமும் அமைவதால் ஆடல் அரசனின் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டே இருக்கும் மனித மனதிற்கு அமைதியை அளிக்க வல்லதாகவும் அமைகிறது. மனோ சக்தியை வலுப்படுத்துவதே புத்தாண்டு தினத்தன்று அமையும் சித்த யோகம் பௌர்ணமி திதியின் சங்கமமாகும். மிகவும் அரிதாக அமையும் இத்தகைய சிறப்புகளுடைய புத்தாண்டில் பலவிதமான அபூர்வமான சந்திர சக்திகளை பல்கிப் பெருகுகின்றன.
சூரிய ஒளி ஏழு வண்ணக் கலவையால் ஆனது என்பதை நாம் அறிவோம். அந்த ஏழு வண்ணங்களில் ஒவ்வொன்றுமே ஏழு வண்ணங்களால் உருவானது என்பதே சித்தர்கள் கூறும் விஞ்ஞானம் அறியா மெய்ஞ்ஞான இரகசியமாகும். இதில் மஞ்சள் நிறத்தை எடுத்துக் கொண்டால் அது மணமாலை, குணமாலை, மகிமாலை, நலமாலை, வளமாலை, கழுமாலை, காசிமாலை என்ற ஏழு வண்ணங்களின் ஒருமித்த சக்தியாக அமைகின்றது. இந்த ஏழு வண்ணங்களை இந்த பூலோகத்தில் தனித்தனியாக காண முடியாது என்றாலும் ஒரு சில வண்ண சக்திகளை இறைவன் மானிட கண்களுக்குத் தெரியும் வண்ணமும் அளித்துள்ளான் என்பது நாம் பெற்ற பேறே.மகிமாலை சிவாலயம்
மஞ்சள் நிறத்தில் மூன்றாம் வண்ணப் பொலிவான மகிமாலை என்னும் சக்தியை வர்ஷிக்கும்
திருத்தலமே தஞ்சாவூர் மாவட்டம் செம்பியநல்லூர் கிராமத்தில் உள்ள மகிமாலை திருத்தலமாகும். இத்தல ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் மகிமாலை மஞ்சள் வண்ணத்தை மனிதர்களும் தரிசிக்கும் வண்ணம் அருளும் கருணா மூர்த்தி ஆவார். இங்கே உள்ள படத்தில் மகிமாலை தீப ஜோதியில் மிளிர்வதே மகிமாலை வண்ண சக்தியாகும். வருடத்தில் 365 நாட்களிலுமே இந்த மகிமாலை ஜோதியை தரிசனம் செய்யக் கூடிய ஒரே திருத்தலம் இப்பிரபஞ்சத்திலேயே மகிமாலை ஒன்றுதான் என்பதே இத்தலத்தின் சிறப்பம்சமாகும். மூன்றாம் பிறை தரிசன நாட்களில் மற்ற ஒரு சில தலங்களிலும் இத்தகைய மகிமாலை ஜோதி சக்தி பொழிவதுண்டு.
திருநாவுக்கரசு சுவாமிகளை சுண்ணாம்பு நீற்றறையில் அடைத்தபோது, “மாசில் வீணையும் மாலை மதியமும் ... ” என்ற பாடலை பாடியபடியே ஈசன் திருவடிகளின் சிந்தனையிலேயே எத்தனையோ நாட்கள் அங்கே எந்தவித உடல் மன பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது நாம் அறிந்ததே. மாலை மதியம் என்பதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. பொதுவாக காலை முதல் மாலை வரை சூரிய ஒளி பிரகாசமும் மாலையிலிருந்து மறு நாள் காலை வரை சந்திர பிரகாசமும் பூமியில் நிலவி இருந்தால் அது பூமிக்கு முழுமையான சூரிய சந்திர சக்திகளை அளிக்கும். ஆனால், பூமி சந்திர சுழற்சியில் பல நாட்களில் சூரியன் வானில் இருக்கும்போதே சந்திரனும் வானத்தில் பிரகாசிப்பதால் அந்த நாட்களில் பூமிக்கு சரி சமமான சூரிய சந்திர சக்திகள் கிடைப்பதில்லை. இவ்வாறு சரி சமமான சூரிய சந்திர சக்திகள் நிலவும்போது தோன்றும் சக்திகளே மாலை மதிய சக்திகளாகும்.ஸ்ரீகற்பகாம்பாள் மகிமாலை
மகிமாலை என்னும் மாலை மதிய சக்திகள் பூரண அமிர்த கலைகளுடன் பூரித்து இருப்பதால் உண்ண உணவின்றி எத்தனை கோடி ஆண்டுகள் வேண்டுமானாலும் இந்த பூத உடலை நிலை நிறுத்தலாம். இவ்வாறு சஹஸ்ராரத்திலிருந்து பொலியும் அமிர்த சக்திகளையே உணவாக ஏற்று பல யுகங்கள் தவமியற்றும் யோகிகளும் உண்டு. ஆனால், இந்த மாலை மதிய அமிர்த சக்திகளை சாதாரண தீப வழிபாட்டில் பெறக் கூடிய அபூர்வ தலமே மகிமாலை ஆகும். அபூர்வமாக வரும் 1.1.2018 வருடப் பிறப்பன்று இத்தகைய மாலை மதிய சக்திகள் மகிமாலை சிவத்தலத்தில் மாலை சுமார் 5.30 முதல் காலை 5.30 வரை மிக மிக சரி சமமாக விளங்குவதால் மகிமாலை ஸ்ரீசந்திரமௌலீஸ்வர திருத்தலம் 2018ம் ஆண்டிற்கான சந்திர சக்தித் தலமாக விளங்குகிறது. மகிமாலை சக்தி என்பது மஞ்சள் நிறமாலையில் மூன்றாவதாக அமைவதாலும் மகிமாலை சிவத்தலம் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்திற்கு மிகவும் உகந்ததாக சித்தர்களால் குறிப்பிடப்படுகிறது.
பூமியில் வாழும் மக்கள் மிகவும் சாதாரணமாக சந்திரனின் தரிசனத்தைப் பெற்று விடுகிறார்கள். ஆனால், சந்திர மண்டலத்தை அடைவது என்பது அத்தனை சுலபம் கிடையாது. உதாரணமாக, திருஅண்ணாமலையாரை திருஅண்ணாலையில் தரிசனம் செய்வது என்பது வேறு, அவரை கைலாயத்தில் சிவபெருமானாக தரிசனம் செய்வது என்பது வேறு. அது போல சந்திர தரிசனம் என்பது வேறு, சந்திர மண்டலத்தை தரிசனம் செய்வது என்பது வேறு.மக்கள் சாதாரணமாக நினைப்பது போல ராக்கெட்டிலோ அல்லது வேறு எந்த உபகரணத்தாலும் வாகனத்தாலும் சென்றடைய முடியாத லோகமே சந்திர மண்டல லோகம் என்பதை புரிந்து கொள்வதே பகுத்தறிவாகும். ஆஸ்ட்ரல் டிராவல் என்னும் மனவெளிப் பயணத்தால் மட்டுமே சந்திர மண்டலத்திற்கு செல்ல முடியும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். அத்தகைய மனவெளிப் பயணமும் குருவின் வழிகாட்டுதல் இருந்தால்தான் அது சந்திர மண்டலத்திற்கு வழிகாட்டும். மகிமாலை திருத்தலத்திலிருந்து பொலியும் மகிமாலை ஜோதி வழியாகத்தான் ஒருவர் மனவெளிப் பயணத்தின் மூலம் சந்திர மண்டலத்தை அடைய முடியும். குருவின் பரிபூரண அனுகிரகம் பெற்றவர்களுக்கே இந்த மகிமாலை ஜோதி தரிசனம் கிடைப்பதால் ஒருவர் எவ்வளவு காலம் மனவெளிப் பயணத்தில் எத்தனை லோகங்களுக்கு சென்றிருந்தாலும் மகிமாலை ஜோதி தரிசனம் பெறாமல் சந்திர மண்டலத்தை நெருங்கக் கூட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இதுபோல பெருங்குடி ஸ்ரீஅகத்தீசர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பெருமான் தினமும் கைலாயம் சென்று வரும் ஒளிப் பாதை அமையும் இரகசியத்தை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.தென்கயிலை வடகயிலலை ஆலயங்கள் நகர் திருத்தலம்
அபூர்வமாக நகர் போன்ற திருத்தலங்களில் தென் கைலை வட கைலை ஆலயங்கள் அமைந்திருக்கும். இத்தகைய ஆலயங்களில் உத்தராயண புண்ணிய காலத்தில் வடகைலை ஆலயத்தில் மூன்றாம் பிறை தரிசனம நாட்களில் மகிமாலை ஜோதி தரிசனத்தைப் பெறலாம். தென்கைலை ஆலயத்தில் தட்சிணாயன காலத்தில் மூன்றாம் பிறை தரிசன நாட்களில் மகிமாலை ஜோதி தரிசனத்தைப் பெறலாம். அந்த நாட்களில் கிட்டும் மகிமாலை ஜோதி வழியாகவும் சந்திர மண்டலத்தை அடையலாம். அதே போல பெரும்பாலான திருத்தலங்களில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்திருக்கும். வட இந்தியாவில் உள்ள காசி திருத்தலத்தில் காசி சந்திர சக்திகள் பொலிவதும் அதன் பெயருக்கு ஒரு காரணமாகும். காசி தலத்திலும் மற்ற காசி விஸ்வநாதர் தலத்திலும் மூன்றாம் பிறை தரிசனம் தினத்தன்று கிட்டும் காசி ஜோதி வழியாகவும் சந்திர மண்டலத்தை சென்றடையலாம். ஆனால், எந்த நாளிலும் எந்நேரத்திலும் மகிமாலை ஜோதியை தரிசனம் செய்யும் ஒரே திருத்தலம் மகிமாலை என்பது அத்தலத்தின் சிறப்பம்சமாகும்.ஸ்ரீநடுவட்ட விநாயகர் திருமலை முருகன் கோயில்
வரும் புத்தாண்டை கூறும்போதும் எழுத்தில் எழுதும்போதும் பலரும் 2018 என்று கூறாமல் 18 என்று கூறுவார்கள். இதனால் அந்த எண்ணில் பூரு பூஜ்யம் என்னும் சக்திகள் விரவி அதனால் காரியங்களில் கால தாமதமும் எதிர்பாராத பல துன்பங்களும் ஏற்படும். பூரு பூஜ்ய சக்திளின் எதிர்வினை சக்திகளைப் பற்றி அறிந்தோரும் கூட கம்ப்யூட்டர், மின் கணினி போன்றவற்றை உபயோகிப்பதால் 2018 என்பதற்குப் பதிலாக 18 என்றே எழுத வேண்டி வரும். வரும் புத்தாண்டின் எண்கணித சூத்திர எண் 2 (2+0+1+8 = 2+9 = 2) என்று அமைவதால் 18 என்ற எண்ணிற்கு உரிய தேவதையாக ஸ்ரீவிநாயக மூர்த்தி அமைகிறார். 2000 ஆண்டு முதலே வருட எண்களில் வரும் பூஜ்யங்களுக்கு இடையே கோடு போட்டு வட்டத்தில் சட்டமிட்டு பயன்படுத்தும்படி சித்தர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த வட்டத்தின் குறுக்கே அமையும் சட்டத்திற்கு உரிய கணபதி மூர்த்தியே திருமலை முருகன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநடுவட்ட விநாயகர் ஆவார்.ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருப்பூந்துருத்தி
நடுவட்டம் என்றால் என்ன ? நம் உடலை தலைக்கும் காலுக்கும் இடையே பிரித்தால் அது இடை வட்டமாகும். நம் உடலை குறுக்கே இரண்டாகப் பிரித்தால் அது நடுவட்டமாகும். இவ்வாறு அர்த்தநாரீஸ்வர சொரூபியான ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் உள்ள வட்ட சக்தியே நடுவட்ட விநாயகர் ஆவார். இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே அமர்ந்து அருளும் சோமாஸ்கந்த மூர்த்தியைப் போல அர்த்தநாரீஸ்வர சொரூப தெய்வ மூர்த்திகளுக்கு இடையே உள்ள விநாயக சக்தியே நடுவட்ட விநாயகர் ஆவார். ஸ்ரீநடுவட்ட விநாயக மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற்றவர்களே ஆண் பெண் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆண் பெண் தத்துவத்தைப் புரிந்து கொண்டவர்கள்தான் தான் யார் என்ற புரிந்து கொள்ள முடியும். தன்னை புரிந்தவர்களே தலைவன் ஈசனைப் புரிந்து கொள்ள முடியும்.
எம்பெருமான் ன்னுடைய உடம்பில் சரிபாதியை பார்வதி தேவிக்கு அளித்த வரலாறு நாம் அறிந்ததே. இந்த மாதொரு பாகனாய் இறைவன் அருளும் கோலத்தை நாம் அர்த்தநாரீஸ்வர கோலம் என்கிறோம். இந்த அர்த்தநாரீஸ்வர கோலத்தில் இறைவனின் இடது பாதி மேனியும் பார்வதி தேவியின் வலது பாதி மேனியும் மறைந்து விடுகிறது அல்லவா ? அப்படியானால் அவ்வாறு மறைந்து போன மேனிகளின் நிலை என்ன ? இறைவன் என்றும் அழியாதவர் என்பது உண்மை என்பதால் அந்த மேனிகள் ஏதோ ஒரு கோலத்தில் விளங்க வேண்டும என்பதுதானே உண்மை தத்துவம். ஆம் உண்மையே. அவ்வாறு நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் ஈசன் இறைவியின் பாதி மேனிகள் இணைந்த கோலத்தை சித்தர்கள் அர்த்தநர ரூபம் என்று அழைக்கிறார்கள்.பௌதிகத்தில் matter and antimatter என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அர்த்தநாரி கோலம், அர்த்தநர கோலத்தின் அணுவிலும் அணுவான தத்துவமே matter and antimatter என்பதாகும். எப்படி சிவ தத்துவமும் சக்தி தத்துவமும் ஒன்றுக்கொன்று இணை பிரியாமல் இயங்குகிறதோ அதுபோல இந்த அர்த்தநாரி கோலமும் அர்த்தநர கோலமும் ஒன்றுக்கொன்று இணைந்து இயைந்து இயங்குவது என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும். ஆனால் இந்த அதிசயத்தில் மேலும் அதிசயமான விஷயம் என்னவென்றால் அர்த்தநாரி கோலத்தில் இடையே அமர்ந்து பொலியும் நடுவட்ட விநாயக சக்திகளே அர்த்தநர மேனிகளின் நடுவிலும் அமர்ந்து இயங்கும் சக்தியாகும். Matter, antimatter ஒன்றுக்கொன்று மாறிய அம்சமாக விளங்குவதைப் போல அர்த்தநாரி கோலமும் அர்த்தநர கோலமும் ஒன்றுக்கொன்று மாறி இயங்குவது உண்மை என்றாலும் இந்த இரண்டையும் ஒன்றாக காணும் வல்லமை பெற்றவர்களையே சித்தர்கள் என்கிறோம். சொல்லப்போனால் சித்தர்களைத் தவிர வேறு எவராலும் இந்த இரண்டு தத்துவக் கூறுகளையும் ஒன்றாக காண முடியாது. இங்கு காணுதல் என்பது கண்ணால் காணுதல் என்பதை விட புலன்களுக்கு அப்பாற்பட்ட காணுதல் என்பதே பொருத்தமானதாகும். உதாரணமாக ஸ்ரீநடுவட்ட விநாயகர் ஆயலத்திலிருந்து பார்த்தால் ஒரு அரைவட்ட பாறை தெரியும். உண்மையில் அது முழு வட்ட வடிவில் உள்ள பாறையே என்பது சித்தர்களின் தெளிவான விளக்கம். எனவே ஸ்ரீநடுவட்ட விநாயகரின் அருளைப் பெற்றவர்களே அர்த்தநாரி அர்த்தநர தத்துவத்தை முழுமையாக உணர முடியும் என்பதற்காகவே இறைவன் இந்த அரைவட்ட வடிவ பாறையை விநாயகர் சன்னதிக்கு எதிரில் அமைத்துள்ளார்.ஆனால் சாதாரண மனிதர்களும் ஸ்ரீநடுவட்ட விநாயக மூர்த்தியின் அருளைப் பெற்று அறியாமையிலிருந்து மீள சற்குரு அருளும் அரிய சந்தர்ப்பமே வரும் ஆங்கில புத்தாண்டு தினமாகும். ஏற்கனவே கூறியதுபோல மகிமாலை சிவத்தலத்தில் 31.12.2017 அன்று மாலை 5.30 முதல் மறுநாள் காலை 5.30 மணி வரை மாலைமதிய சக்திகள் பூரணமாய் விரவி உள்ளது. 1.1.2018 காலை 6.30 மணிக்கே சூரிய உதயம் ஆகிறது. அப்படியானால் அன்று காலை 5.30 முதல் 6.30 வரையிலான ஐந்து அரை நாழிகை நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கு மகிமாலை திருத்தலத்தில் சூரிய சக்திகளும் கிடையாது, சந்திர பிரகாசமும் கிடையாது என்றுதானே பொருள். இதையே ஆரண்ய முகூர்த்தம் என்று அழைக்கிறோம். மாதங்களில் சிறந்தது மார்கழி. மார்கழியில் உயர்ந்தது பிரம்ம முகூர்த்தம். பிரம்ம முகூர்த்தத்தை விடவும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததே இந்த ஆரண்ய முகூர்த்தமாகும். இதையே நள்ளிரவு அதாவது சூரிய சந்திர கிரண சக்திகள் இல்லாத ஆரண்ய இரவு அல்லது ஆரண்ய இருட்டு என்கிறோம். மேலும் சூரியனுக்கு உகந்த ஞாயிறின் இறுதியிலும் சந்திரனுக்கு உகந்த திங்கட் கிழமையின் ஆரம்பத்திலும் இத்தகைய ஆரண்ய முகூர்த்தம் அமைவது அரிதிலும் அரிதாம். இந்த ஆரண்ய முகூர்த்தத்திற்கு உரித்தான ஒரு அற்புத வழிபாட்டை சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.திருமலை முருகத் தலம்
ஆங்கில புத்தாண்டு விடியற்காலை 5.30 மணிக்குள் மகிமாலை சிவத்தல திருக்குள கரையில் ஒற்றைப் படையில் சிவப்பு அல்லி அல்லது செந்தாமரை மலர்களாலும், இரட்டைப் படையில் வெள்ளை அல்லி அல்லது வெண்தாமரை மலர்களாலும் தர்ப்பை சட்டத்தை அமைத்து அதன் மேல் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பணம் அளிப்பதே அர்த்தாரண்ய தர்ப்பணமாகும். எத்தகைய இருட்டு அறியாமை சக்திகளையும் குணங்களையும் நீக்கக் கூடிய அபூர்வ தர்ப்பணம் இது. பஞ்சாரண்ய திருத்தலங்கள் என்ற ஹரித்துவார மங்கலம், ஆலங்குடி போன்ற தலங்களில் வழிபாடுகளை இயற்றுவதே பஞ்சாரண்ய வழிபாடாகும். ஆனால், இந்த வழிபாட்டை ஆரண்ய முகூர்த்தம் என்னும் சூரிய சந்திர கிரணங்கள் பொழியாத நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே இதுவரை எவரும் அறியாத இரகசியமாகும். ஆனால், 1.1.2018 அன்று இத்தகைய ஆரண்ய முகூர்த்தம் ஒரு மணி நேரம் மட்டுமே அமையும்போது அந்த குறுகிய நேரத்தில் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டு விளங்குவதால் மக்களின் மேல் பெருங்கருணை கொண்டு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இந்த ஆரண்ய தர்ப்பண முறையை வகுத்துத் தந்துள்ளார்கள். மேற்கூறிய முறையில் தர்ப்பணத்தை நிகழ்த்திய பின்னர் காலை 5.30 முதல் 6.30 மணிவரை மகிமாலை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி முல்லை, தாமரை, அல்லி மலர்களால் அலங்கரித்து வில்வம், வன்னி இலைகளால் அர்ச்சித்து வழிபடுதலால் பஞ்ச ஆரண்ய சக்திகளை முழுமையாகப் பெறுவதுடன், மகிமாலை சந்திர சக்திகளையும், ஸ்ரீநடுவட்ட விநாயகரின் அருட்கடாட்சத்தையும் ஒருங்கே பெறலாம்.
மகிமாலை சிவத்தலத்தில் நிறைவேற்ற வேண்டிய ஒரு சிறப்பான பஞ்ச கல்ப அபிஷேக முறையை சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர். இதன்படி பஞ்சகவ்யம், தோல் சீவிய கரும்புத் துண்டுகள், டைமண்ட் கல்கண்டு, நாட்டுச் சர்க்கரை, கரும்புச் சாறு, தேன், சுத்தமான பசும்பால் என்ற ஏழு அபிஷேகங்களை இதே வரிசையில் நிறைவேற்றுதலே பஞ்ச கல்ப பரமாபிஷேகம். இதனால் அபரிமிதமான காய கல்ப சஞ்சீவி சக்திகள் பெருகும்.இடும்பன் சன்னதி திருமலை முருகன் திருத்தலம்
நாம் எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் இறை தியானத்துடன் இறை நாமத்துடன் தொடங்குவதே சிறப்பு. நம் குருமங்கள கந்தர்வாவிடம் சரணடைந்த அடியார்கள் அனைவரும் இந்த ஆரம்ப பாடத்தை தவறாது நிறைவேற்றி வருபவர்களே. ஒரு முறை ஒரு அடியார் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீவாத்யார் அவர்களிடம், “வாத்யாரே, முன்னை விட தற்போது நான் காயத்ரீமந்திர ஜபத்தில் நன்றாக முன்னேறி உள்ளேன்,“ என்றார். அதைக் கேட்ட ஸ்ரீவாத்யார் அவர்கள், “எப்படி ஐயா, சொல்லுங்கள் பார்க்கலாம்,“ என்று புன்முறுவலுடன் ‘ஐயா‘ என்ற வார்த்தையில் ஒரு அழுத்தத்தையும் கொடுத்தார். அடியார் தொடர்ந்து, “முன்பு காபி குடிக்கும்போது காபியைப் பார்த்து காயத்ரீ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தேன். தற்போது யாராவது எனக்கு காபி எடுத்து வருவதை தூரத்தில் பார்த்து விட்டால் அப்போதே காயத்ரீ மந்திர ஜபித்தை ஆரம்பித்து அவர்கள் கொடுத்த காபியை அருந்தி முடிக்கும் வரை காயத்ரீ மந்திரம் ஜபித்துக் கொண்டிருப்பேன்,“ என்றார். இதைக் கேட்ட அடியார்கள் அனைவரும் காயத்ரீ மந்திரத்தின்மேல் அந்த அடியாருக்கு இருந்த பக்தியை மெச்சி மனதிற்குள் பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த பிரமிப்பு மாயமாய் மறைந்து விட்டது அடுத்து ஸ்ரீவாத்யார் கூறிய வார்த்தைகளால். ஸ்ரீவாத்யார் கூறியது, “பரவாயில்லை சார், நீங்கள் ஈசியாக உங்கள் வேலையை முடித்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால், நாங்கள் அப்படி இருக்க முடியாது. இங்கு பார்த்தீர்களா. இங்கு அன்னதானத்திற்காக வந்த மொத்தம் 5242 கத்தரிக்காய்களும் 1150 தேங்காய்களும் அவைகள் செடியாக மரமாக வளர விதை போடும்போதே நாங்கள் காயத்ரீ மந்திர ஜபத்தை ஆரம்பித்து இந்த காய்கள் எல்லாம் உணவாக மாறி அந்தந்த குறிப்பிட்ட கிரிவலம் வரும் அடியார்கள் கையில் திருஅண்ணாமலையார் பிரசாதமாக பரிமாறப்படும் வரை நாங்கள் காயத்ரீ மந்திம் கூறியாக வேண்டும்,“.திருமலை முருகன் கோயில் திருக்குளம்
இதைக் கேட்ட அடியார்கள் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விட்டனர். ஒரு கத்தரிக்காய்க்கு அல்லது தேங்காய்க்கு ஒரு நாளைக்கு 20000 காயத்ரீ என்று கணக்கு வைத்தால் கூட அத்தனை காய்கறிகளும் செடியாகி மரமாகி பலன் தரும் வரை எத்தனை கோடி கோடி காயத்ரீ மந்திரங்களை ஜபித்தாக வேண்டும் ? இது சாதாரண மனித மூளைக்கு சற்றும் எட்டாத விஷயம். இத்தகைய அபார சாதனைக்கு உறுதுணை செய்பவளே மகிமாலை ஸ்ரீகற்பகாம்பாள் தேவி ஆவாள்.
கல்பம் என்பது பல கோடி ஆண்டுகள் கொண்ட ஒரு கால அளவு. கல்பம் என்றால் மாறாத, நிலையான என்று பொருளும் உண்டு. கற்பகாம்பிகை என்றால் காலத்தை கடந்த அனுகிரகத்தை அளிப்பவள் என்றும் நிலையான, சாசுவதமான அருளை வாரிவழங்குபவள் என்றும் பொருளாகும். நம் குருமங்கள கந்தவர்வா அன்னதானத்திற்கு பயன்படுத்தும் அன்னதான காய்கறிகள் உயர் நிலையை அடையவும் அதை பிரசாதமாகப் பெறும் அடியார்கள் கல்ப சக்தியைப் பெறவும் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வந்தார்கள் என்று தெரிவித்தோம் அல்லவா ? ஆனால் நாம் நினைப்பது போல நீராடி நெற்றிக்கு இட்டு ருத்ராட்ச மாலைகள் அணிந்து புலித்தோல் தர்பை பாயின் மேல் அமர்ந்து பத்மாசனம் இட்டு ஆடாமல் அசையாமல் சிலை போல் காயத்ரீ மந்திரம் ஜபித்துதான் அத்தனை கோடி மந்திர உசசாடனங்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் சித்தர்களுக்கு கிடையாது. உதாரணமாக, சற்குரு வெங்கடராமன் அவர்கள் ஒவ்வொரு கார்த்திகை தீப அன்னதானத்தின்போதும் அன்னதானத்திற்கு அரிசியை அளந்து அன்னக்கூடையில் போடும்போது, “கபாலி, கற்பகாம்பாள் ...“ என்று சொல்லித்தான் அரிசியை அளந்து போடுவார்கள். அப்படி ஒரு முறை கூறும் கற்பகாம்பாள் என்ற நாம ஒலியே அன்று அன்னதானத்திற்குப் பயன்படுத்தும் அனைத்து அரிசி மணிகளுக்கும் அவைகள் விதைக்கப்பட்டதிலிருந்து, அரிசியாக மாறி, பிரசாதமாகி ஒரு அடியார் கைக்கு செல்லும வரை தேவையான காயத்ரி மந்திர சக்திகளை நிரவி விடும். இதுவே சித்தர்களின் நாம ஜப மகிமை. இதை சாதிப்பதே கற்பகாம்பளின் அருட் சக்தி.திருமலை முருகன் கோயில்
சித்தர்களின் ஆற்றலை ஒரு நடைமுறை உதாரணத்தின் மூலம் விளக்குவோம். நீங்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து பத்து லட்ச ரூபாய் சேமித்து வைப்பதாக வைத்துக் கொள்வோம் அந்த பணத்தை கார் அல்லது பஸ்ஸில் எடுத்துச் சென்று வரிசையில் நின்று உங்கள் வங்கிக் கணக்கில் கட்டும்போது வங்கியில் உள்ள கம்ப்யூட்டர் உதவியால் உங்கள் கணக்தில் அந்த பத்து லட்சம் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், வசதி படைத்த ஒருவர் தன்னுடைய வீட்டிலிருந்தே உங்கள் கணக்கில் அந்த பத்து லட்ச ரூபாயை கம்ப்பூட்டர் மூலம் ஒரே நொடியில் வரவு வைத்து விடலாம் அல்லவா ? பணம் என்பதும் புண்ணியத்தின் விளைவுதானே ? இதைத்தான் சித்தர்கள் சாதிக்கிறார்கள். இவ்வாறு ஒரு கத்தரிக்காய் எப்போது விதைக்கப்படுமோ அந்த கால கட்டத்திற்கே சென்று புண்ணிய சக்தியை கணக்கிடும்போது அவர்கள் காலச் சக்கரத்தில் பின்னோக்கி செல்கிறார்கள். அதே போல 2018ம் ஆண்டு உதயமாகும்போது மகிமாலை சிவாலயத்தில் 30 நாழிகைகள் நிலவும் மாலை மதிய சக்திகள் தோன்றும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கணித்துக் கூறியபோது அவர்கள் காலச் சக்கரத்தில் முன் நோக்கிச் சென்று அந்த சாதனையை நிகழ்த்துகிறார்கள். அந்த சாதனை நாயகி ஸ்ரீகற்பகாம்பிகையே என்பது சித்தர்கள் கூறும் இரகசியம்.காய கல்பம் செய்து உடலை வைத்திருந்தால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் உயிருடன் இருக்கலாம்
என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். கல்பம் அல்லது கற்பம் என்னும் நிலை எப்படி இருக்கும் ? ஒரு சரிவான மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருக்கும்போது அதை இரண்டு விதத்தில் அசையாமல் நிற்கச் செய்யலாம், ஒன்று ப்ரேக்கை அழுத்தி காரை நிற்கச் செய்வது மற்றொன்று ஆக்சிலரேட்டர் க்ளட்ச்சை சமமாக இயக்கி கார் முன்னோ பின்னோ செல்லாதவாறு நிலைநிறுத்துதல். இந்த இரண்டாவது செயல்பாட்டையே கல்பம் என்று கூறுகிறோம். இரண்டு முன் பின்னான சமமமான இயக்கத்தில் ஏற்படும் அசைவற்ற நிலையே கல்பம் என்பதாகும். இந்த சம நிலையை மனித வாழ்க்கையில் செயல்படுத்தக் கூடியவர்களே அவதார மூர்த்திகள், சித்தர்கள் போன்றோர் ஆவர். இதுவே கல்ப யோகம் என்றும் அழைக்கப்படும். நம் குருமங்கள கந்தவர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் மிகுந்த உடல் வேதனையுடன் துடித்தபோதுதான் இந்த கல்ப நிலை விளக்கத்தை அளித்தார்கள். “அடியேன் செய்ய வேண்டிய நற்காரியங்கள் நிறைய உள்ளன. ஆனால், அந்த நற்காரியங்களை நிறைவேற்றும் அளவிற்கு உடல் ஆரோக்யமாக இல்லை. இப்போது அடியேன் தொடர்ந்து நற்காரியங்களைச் செய்வதா இல்லை உடலை விட்டு விடுவதா ? இதுவே இறைவன் எங்களுக்கு அளித்த முக்தி நிலை,“.
இந்த இரு வேறுபட்ட இயக்கங்களை உணர்த்துவதே மேலே ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரின் இருபக்கமும் நிற்கும் இரு குதிரைகள். இந்த இயக்கங்களை புரிந்து கொண்டவர்களே கல்ப சக்தியை, கற்பக யோகத்தைப் பெற முடியும். அதற்கு உறுதுணை செய்வதே 2018ம் ஆண்டு மகிமாலை சந்திர சக்தி தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகள்.திருநல்லூர் சிவத்தலம் தஞ்சாவூர் மாவட்டம்
மகிமாலை சக்திகளுடன் கற்ப சக்திகளுடன் நெருங்கிய தொடர்புடைய தலமே திருநல்லூர் சிவத்தலமாகும்.
இறைவன் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரின் மூலத் திருமேனி இங்கு ஐந்து காலங்களில் ஐந்து விதமாக காட்சி அளிக்கிறது. தாமிரம், சிவப்பு, மஞ்சள், பச்சை, இனம் தெரியாத வண்ணம் என்ற ஐந்து வண்ணக் கோலங்களில் எம்பெருமான் தரிசனம் நல்குகிறார். ஏற்கனவே நாம் விவரித்த இறைவனின் அர்த்தநாரி தத்துவத்தை புரிந்து கொண்டால் சுவாமி அளிக்கும் நிறமாலையின் பொருள் புரியும். முதல் இரண்டு தாமிர, சிவப்பு வண்ணங்கள் சிவ சக்தியுடனும், மூன்றாவது நடுவட்ட விநாயக சக்தியாகவும் நான்காவது பச்சை வண்ணம் இறைவிக்கு உரியதாகவும் அமைகிறது. நடுவட்ட சக்தியே மகிமாலை சக்தி. ஐந்தாவதான இனம் புரியாத வண்ணம் என்பது மக்களுக்கு தெரியாத அல்லது உணர முடியாத ஆரண்ய சக்தி. இந்த அர்த்தநாரி தத்துவத்தை விளக்குவதாக மூலதானத்தில் உள்ள ஆவுடைமேல் வேறெங்கும் இல்லாத அதிசயமாக இரண்டு பாணங்கள் எழுந்தருளி உள்ளன. இதுவே அர்த்தநாரி தத்துவ வெளிப்பாடு. இத்தலத்தில் உள்ள கன்னி மூலையில் கன்னிமூலை கணபதி அருகே இரண்டு சிவலிங்கங்கள் அருகருகே எழுந்தருளி உள்ளனர். இதுவே அர்த்தநர தத்துவத்தில் இறைவன் அளிக்கும் திருக்காட்சி.அர்த்தநாரி அர்த்தநர தத்துவ தரிசனம் திருநல்லூர்
மகிமாலை, கற்பம், ஆரண்யம் என்ற சக்திகள் ஒன்றோடொன்று எப்படி இணைந்து செயலாற்றுகின்றன என்ற அற்புத தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் திருத்தலமும் திருநல்லூர் ஆகும். எப்படி ? கற்ப சக்தி என்பது தராசின் இரு தட்டுகளாக அமைந்து நிற்பது. எப்போதோ படித்த ஆப்பத்தை பங்கு போட்ட குரங்கின் கதையை நினைவு கூறுங்கள். அப்பத்தை திருடிய பூனைகள் அதை தராசின் இரு தட்டுகளில் சமமாக வைத்திருந்தால் இரண்டு பூனைகளும் பசியைத் தீர்த்து அமைதி அடைந்திருக்கலாம். ஆனால் அது மனம் என்ற குரங்கின் கையில் அகப்பட்டபோது தராசு தட்டுகள் ஏறி இறங்க இறுதியில் பூனைகள் ஏமாந்து போயின. இதுவும் கற்ப சக்தியின் எளிய விளக்கமே. இந்த விளக்கத்தின் உருவகமாக திருநல்லூர் சிவத்தலத்தில் தோன்றியவரே அமர்நீதி நாயனார் ஆவார். அவர் பெயர் ஐந்தெழுத்து என்பது குறிப்பிடத் தக்கது. இங்கு தராசின் படிக்கல்லாய் நின்றது இறைவனின் கோவணம். அது நடுவட்ட சக்தியுடன் பொலிவது. அதற்கு இணையாக அமர்நீதி நாயனார் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் அதாவது தன்னுடைய ஆடை, ஆபரணங்கள், மனைவி, மக்கள் என அனைவருடன் தன்னையும் சேர்த்து அளித்து எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடைய கோவணத்திற்கு இணையானதே என்று அளித்தபோதுதான் தராசு நிலையாக நின்றது, அமர்நீதி நாயனார் கல்ப சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டார்.அதே போல திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பூந்துருத்தி, திருப்புகலூர் போன்ற பல திருத்தலங்களில் நெடுங்காலம் உழவாரப் பணிகள் நிறைவேற்றி வந்தாலும் திருநல்லூர் திருத்தலத்தில்தான் அப்பர் பெருமான் இறைவனின் திருவடி தீட்சையைப் பெற்றார். எனவே யாருக்கு எதை எப்போது அளிக்க வேண்டும் என்று முடிவு செய்பவன் இறைவன் ஒருவனே. காரணம், அளிக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்தால்தான் அந்த பொருளுக்கு மதிப்பு. திருவடி தீட்சை என்பது தன்னுடைய வலது காலில் உள்ள ஐந்து விரல்களும் பதியும்புடி அளித்தல்தானே ? இறைவனின் ஐந்து விரல்களும் ஐந்து வண்ண சக்திகளாய் பொலியும் திருத்தலமே திருநல்லூர் திருத்தலம். இதைவிட உயர்ந்த தலத்தை இந்த பிரபஞ்சத்தில் வேறெங்கு காண இயலும். இதுவே இறைவனின் பெருங்கருணை. அப்பர் திருவடி தீட்சை பெற்ற தலத்தின் சிறப்பை உணர்ந்த நீங்கள் அப்பெருமான் இறைவனின் பாத அருள் பெற்ற நேரத்தையும் இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். ஆம், அப்பர் பெருமான் திருவடி தீட்சை பெற்ற நேரமே ஆரண்ய முகூர்த்தமாகும். திருவடி தீட்சை என்பது ஐந்து விரல்களால் பெறும் ஐந்து வண்ண சக்திகள் மட்டும் அன்று ஐந்து ஆரண்ய சக்திகளும் அந்த ஆரண்ய முகூர்த்த நேரத்தில் பொலியும், பொழியும். இந்த அற்புத ஆரண்ய முகூர்த்தம் வரும் 1.1.2018 அன்று நிறைவது நாம் பூமி வாழ் மக்கள் பெற்ற புண்ணியமே.மஞ்சள் நிறம் மகிமாலை, குணமாலை, கழுமாலை போன்ற ஏழு வண்ணங்களின் கலவையே என்று கூறினோம் அல்லவா ? இந்த நிறை மாலையில் நான்காவதாக அமையும் நலமாலை என்னும் மஞ்சள் வண்ணம் பொலியும் தலமே ஸ்ரீநடுவட்ட நாயகர் அருளும் திருமலை முருகன் தலமாகும். நான்காவதாகவும் நிறமாலையில் நடுவிலும் இந்த மஞ்சள் வண்ணம் அமைவதால் இது குசா சக்தியுடன் பொலிவதில் அதிசயமில்லை. நடு திசையில் அமைவதுதானே குசா சக்தி ? கிழமைகளில் நடுவில் அமைந்த புதன்கிழமை புனிதத்திலும் புனிதமாக விளங்குவதால் உலகத்தவர்க்கு நன்மையே சதாசர்வ காலமும் அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தோன்றிய சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அந்த பொன்னான புதனை தன்னுடைய பூலோக அவதாரத்திற்கு உரிய நாளாகத் தேர்ந்தெடுத்தார்கள். வட்ட வடிவமான இட்லி, பூரி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுப் பொருட்களை திருமலை திருத்தலத்தில் தானம் அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகம். புதன் கிழமைகளில், மூன்றாம் பிறை தரிசன நாட்களில் வழங்கும் இத்தகைய தானத்திற்கு பலன்கள் ஏராளம். சிறப்பாக பூரியை சர்க்கரைப்பாகில் நனைத்து அளிக்கும் இனிப்பு பூரிக்கு பலன்கள் பலன்மடங்காகும்.
சனிக்கிழமைகளில் இறந்தவர்களைப் பற்றி பலரும் பலவிதமான மனக் குழப்பங்களில் வாழ்கின்றனர். பொதுவாக வெள்ளி சனிக் கிழமைகளில் உயிர் விடுபவர்கள் நன்னிலை அடையவும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைதி பெறவும் முக்தி தீபம் ஏற்ற உகந்த தலமே திருநல்லூர் திருத்தலமாகும்.
ஸ்ரீநடுவட்ட விநாயக தலத்திலிருந்து மூன்றாம் பிறை தரிசனம் செய்தலால் நலமாலை என்ற மஞ்சள் வண்ண சக்திகளை அபரிமிதமாகப் பெறும் அனுகிரகம் கிட்டும். நல்லது மட்டுமே செய்வதே இந்த நலமாலை பொன் வண்ண சக்தி.திருமலை திருத்தலம்
கீழாநெல்லி என்ற மூலிகையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். கீழ் ஆ நெல்லி என்பதே கீழாநெல்லி.
ஆ என்றால் அமிர்தம். சஹஸ்ராரத்திலிருந்து கீழே விசுத்தி சக்கரத்திற்கு பொழியும் அமுத சக்தியை அளிக்கக் கூடியதே கீழாநெல்லியின் சக்தி ஆகும். அதே போல படிக்கல் என்ற ஒரு மூலிகை உண்டு. இது விசுத்தி சக்கரத்திலிருந்து சஹஸ்ரார சக்கரத்திற்கு பரவும் குண்டலினி சக்தி ஆகும். இந்த இரண்டு மூலிகை சக்திகளையும் இரண்டு தராசுகளில் ஏந்தி இந்த பிரபஞ்சம் எங்கும் பவனி வரும் தெய்வமே திருமலை முருகன் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் இடும்ப மூர்த்தி ஆவார். எத்தகைய கோபத்தையும் உக்ரகத்தையும் உடனே சமன்செய்யும் சக்தி பெற்றதே படிக்கல் மூலிகையின் தன்மை ஆகும். காரணம் எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதியில் தோன்றிய அக்னி சக்தியை விட உயர்ந்த சக்தி வேறெங்கும் கிடையாது. அந்த ருத்ராக்னியில் தோன்றிய முருகப் பெருமானே அருளும் தலம் என்பதால் திருமலை எத்தகைய கோபாக்னியையும் நொடிப் பொழுதில் குளிர்விக்கும் சக்தி பெற்றதாக பொலிகிறது. இந்த சக்தியை மூலிகை வடிவில் அளிக்கும் சக்தி பெற்றவரே இடும்பன் ஆவார். திருமலை தலத்தில் உச்சியில் விளங்கும் பொய்கை அருகில் நீங்கள் தரிசனம் செய்யும் புளிய மரமே இந்த பூவுலகில் முதன் முதல் தோன்றிய புளியமரம் ஆகும். இங்குள்ள பொய்கையின் பண்டைய பெயர் படிக்கல் பொய்கை என்பதாகும்.எத்தகைய கோப ஆவேசத்துடன் இருப்பவர்களும் திருமலை இடும்பன் சன்னதியில் சில நிமிடங்கள் அமர்ந்தால் போதும் எத்தகைய மன கோபமும் சாந்தம் அடைந்து உடல் பளுவே குறைவது போன்ற புத்துணர்ச்சியைப் பெறலாம். “இடும்பன் சந்நிதியில் ஒரே ஒரு நாழிகை முறையாக பிராணாயாமம் செய்தால் போதும் சஹஸ்ராரத்தில் ஏறி சதுராவைப் பெறலாம்,“ என்பார் சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். சதுர் ஆ என்றால் நான்காவதான நலமாலை மஞ்சள் வண்ண அமிர்த சக்தி. இரண்ய வதத்தால் சுவாமியின் திருமேனியில் எழுந்த மிதமிஞ்சிய உஷ்ண சக்திகளால் நரசிம்ம மூர்த்தியின் உக்ரஹம் பன்மடங்கு பெருகியது. அந்நிலையில் நரசிம்மர் திருமலை முருகனை தரிசனம் செய்ய மறுநொடியே அவருடைய உக்ரஹம் தணிந்து சாந்த நிலையைப் பெற்றார். ஆனால் தெய்வ மூர்த்திகள் கோபம் கொள்வதும் சாந்தம் பெறுவதும் மற்றவர்கள் நலனுக்காகத்தானே. எனவே இந்த திருவிளையாடலின் நிறைவாக முருகப் பெருமான் இடும்ப தேவரை அழைத்து தினமும் திருமலையிலிருந்து படிக்கல் நலமாலை சக்திகளையும் புளிய மரத்தின் ஜீவ சக்திகளையும் தன்னுடைய இரண்டு தராசுகளில் தாங்கி புளியங்குடி நரசிம்ம தலத்தில் நிரவி வருமாறு ஆணையிட்டார்.ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் புளியங்குடி
இவ்வாறு திருமலையில் நிலவும் படிக்கல் மூலிகை சக்திகளும் ஆதிமூல திண்டிரினி சக்திகளும் பூரித்து
குலங்கும் தலமே திருமலை முருகத் தலம் அருகில் உள்ள புளியங்குடி திருத்தலமாகும். வேறு எங்கும் இல்லாத வகையில் புளியங்குடி திருத்தலத்தில் படி பிரதோஷம் என்ற பூஜை சிறப்பாக பிரதோஷ தினத்தன்று நிகழ்த்தப்படுகிறது. உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் நடு சக்தியாக விளங்குவதுதானே வாசல் படி. இந்த வாசல்படியில்தானே இரண்ய வதம் இரண்யன் பெற்ற வரத்தின்படி நிகழ்ந்தது ? எனவே புளியங்குடி தலத்தில் நிலைப்படியில் நரசிம்மரை வழிபடும் முறை நிலவுகிறது. புளிப்பு சுவை இரத்தத்தை தூய்மைப்படுத்தி ஆயுளை வளர்க்கும் சக்தி பெற்றது. சனிக்கிழமைகளில் நரசிம்மர் ஆலயங்களில் அளிக்கப்படும் புளியோதரை தானம் தேவையில்லாத உடல் உஷ்ணத்தை தணிப்பதுடன் குடும்பத்தில் அமைதியையும் நிலவச் செய்யும். தொற்று நோய்கள் நிவாரணம் பெறும். ஒரு காரியத்தை செய்வதா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் உள்ளவர்கள் புளியங்குடி நிலைப்படி தரிசனத்தால் தெளிவான மன நிலையைப் பெறுவார்கள். ஆனால் இதை ஜோதிட ரீதியாக கொள்ளாமல் மனத் தெளிவை மேம்படுத்தும் வழிபாடாக நிறைவேற்றுவதே தெய்வீகத்தில் நாம் முன்னேற வழி செய்யும்.படிவழிபாடு புளியங்குடி
கீழாநெல்லி அஞ்செழுத்து, படிக்கல் அஞ்செழுத்து, இவைகளை தாங்கிச் சென்ற இடும்பனும் அஞ்செழுத்தே.
கோபத்தின் சிகரமாக நின்ற நரசிம்மரின் உக்ரகத்தைக் கண்ட தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தபோது அனைவரும் செய்வதறியாமல் திகைத்து பாலகனான பக்த பிரகலாதனை நரசிம்மரின் அருகில் சென்று அவர் கோபத்தை சாந்தம் செய்யும்படி அனுப்பினார்கள். குழந்தை பிரகலாதனைக் கண்ட நரசிம்மர் தாயினும் சாலப் பரிந்து தன் கருணையைப் பொழிந்து அந்த அன்புச் செல்வத்தை தன் மடியில் அமர்த்திக் கொண்டு தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக பிரகலாதனின் நெற்றி, கன்னங்களை எல்லாம் தன் நாக்கால் நக்கி அன்பைப் பொழிந்தார் அல்லவா ? இரண்யனின் கட்டுக்கடங்காத அசுர சக்திகளால் செறிந்த இரத்தத்தை தன்னுள் உறிஞ்சிய அதே நாக்கு எப்படி பிரகலாதன் மேல் அன்பைப் பொழிந்தது ? அதுவே படிக்கல் மூலிகையின் மகிமை. திருமலை முருகத் தலத்தில் பொலிந்த படிக்கல் மூலிகையின் தரிசனம் பெற்ற மறுகணமே நரசிம்மப் பெருமாளின் உக்ரகம் கயிலை மலை வெண் பனியாய் குளிர்ந்து விட்டது என்பதே உண்மை. இங்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். எப்படி ஒரு சாதாரண மூலிகை பிரம்மாண்டமான பெருமாள் அவதாரத்தை சாந்தப்படுத்தியது ?திருமலை முருகத் தலம்
நிலம்புரண்டி என்பது ஒரு சாதாரண மூலிகை தானே ? அதன் ஸ்பர்சமே எப்படி சாட்சாத் சிவபெருமானின் தரிசனத்தையே பெற்றுத் தருகிறது ? மூலிகா சக்தி என்பது ஒரு செடியின் சுய ஆற்றல் கிடையாது. தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்தவர்களே, பிறர் நலத்திற்காக தன் உயிரை தியாகம் செய்ய சித்தமாய் இருப்பவர்களே மூலிகையாய் பிறப்பெடுக்கிறார்கள். அத்தகையோரை கௌரவிக்கும் இறைவனின் அருட்கொடையே, தியாகப் பரிசே மூலிகா சக்தியாகும். இத்தகைய அற்புத சக்தி வாய்ந்த படிக்கல் மூலிகை எப்படி இருக்கும், அதைப் பார்க்க முடியுமா ? நிச்சயமாக முடியாது. படிக்கல் மூலிகை திருமலை முருகத் தலத்தில் நிறைந்திருந்தாலும் சித்தர்களைத் தவிர வேறு யாராலும் அம்மூலிகைகளைப் பார்க்க இயலாது. காரணம் அது அர்த்தநர தத்துவத்தில் விளங்குவதே ஆகும். அதனால்தான் அர்த்தநர தத்துவத்தில் தோன்றிய நர சிம்ம மூர்த்தியின் உக்ரகம் அதன் தரிசனத்தால் நொடிப் பொழுதில் சாந்தம் பெறுகிறது.
எனவே கோயில் தலங்களை பராமரித்து பாதுகாப்பது என்பது எந்த அளவிற்கு இறை அடியார்களின் கடமை ஆகிறதோ அது போல அரிய மூலிகைகளைப் பாதுகாப்பதும் இறை அடியார்களின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். உதாரணமாக வெகுவேகமாக குறைந்து வரும் ஒரு மூன்றெழுத்து மூலிகையின் மகத்துவத்தை நாடி வடிவில் அளிக்கிறோம். இது ஒரு காயகல்ப சஞ்சீவி மூலிகை.
தகரம் உகரமாக
உயிர் போனாலும் இனிக்குமே
என்பது அந்த மூலிகையை குறிக்கும் பாடல். மூலிகையைப் பற்றிய விவரங்கள் பரிபாஷையில் இருந்தாலும் அதன் தரிசன சக்திகள் பொதுபாஷையே. அந்த மூலிகை சக்தியால் கிட்டும் காயகல்ப சக்திகளை இங்குள்ள படத்தில் பெறலாம்.சதுரகிரி மலை அருகே கிட்டும் சதுரானந்த அமிர்த கிரணங்கள்
மூலிகையைப் பற்றிய ஞானமும் இறைவனைப் பற்றிய ஞானமாகப் பொலிவதால் முசுகுந்த சக்கரவர்த்தி ஸ்ரீஅகத்திய முனியை வணங்கி மூலிகை அறிவை விருத்தி செய்யும் வழிபாடுகளை அறிவுறுத்துமாறு பிரார்த்தித்தான். ஸ்ரீஅகத்திய முனிவரும் முசுகுந்த லிங்கத்தை வழிபடும் முறைகளை எடுத்தருளி தொடர்ந்து வழிபாடுகளை இயற்றி வருமாறு அருள்புரிந்தார். அந்த அறிவுரைகளை சிரமேற்கொண்டு 1800 பிறவிகள் முசுகுந்த லிங்கத்தை வழிபட்டு மூலிகை பற்றிய ஞானத்தை முழுமையாகப் பெற்றான் முசுகுந்த சக்கரவர்த்தி. இன்றும் மூலிகையைப் பற்றி அறிவை விருத்தி செய்ய விரும்பவர்களும் மூலிகை அறிவை பொது நல சேவைக்காகப் பயன்படுத்தும ஆர்வம் உள்ளவர்களும் முசுமுசுகை ஐந்து இலைகளை 300 மிலி நல்ல எண்ணெயில் போட்டு காய்ச்சி முசுகுந்த லிங்கத்திற்கு காப்பிட்டு வழிபடுவதால் அற்புத மூலிகா ஞானத்தைப் பெறுவார்கள். ஆயுள் விருத்தி தரும் அற்புத காயகல்ப வழிபாடு இது.பொதுவாக சமைத்து உணவை எவ்வளவு சீக்கிரம் உண்கிறோமோ அந்த அளவிற்கு அது
உடலுக்கு ஆரோக்யத்தை அளிக்கும் என்பது உண்மையே. சற்குரு வெங்கடராமன் அவர்கள் யாராவது டீ அளித்தால் அதை உடனே அருந்தி விட வேண்டும் என்பார்கள். “ஆறி விட்டால் அதில் ஈ விழுந்தால் கூட சாகாதே, ஐயா,” என்பார்கள். இதன் உட்பொருள், சூடான டீயில் விழுந்த ஈ இறந்து விடுவதால் ஒரு அடியாருக்கு அளித்த பிரசாதத்தில் விழுந்து உயிரை தியாகம் செய்தது என்ற கணக்கைக் காட்டி அதற்கு முக்தி அளித்து விடுவார்கள். ஆனால், அந்த டீ சூடாக இல்லாதபோது அது ஒரு ஈக்கே முக்தி அளிக்க முடியாது என்றால் அந்த டீயால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம் என்பேதே.
சமைத்த மூன்று மணி நேரத்திற்குப் பின் உணவு தன் இயல்பு நிலையிலிருந்து மாறி விடுவதால் அது உண்பதற்கு ஏற்றதல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த உணவு யாமம் கழிந்த உணவு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அரிசி சாதம் சமைத்த பின் மூன்று மணி நேரத்திற்குள் அதில் நீரை ஊற்றி வைத்திருந்து மறுநாள் காலை உண்பதால் அது சாஸ்திரத்தை மீறியதாக ஆகாது என்பது சித்தர்கள் காட்டும் வழி. பாலில் தயிர் உறை ஊற்றி வைப்பதும் இந்த தத்துவத்தில் அமைவதால்தான் தயிர் சாஸ்திரத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவாகிறது. இதன் பின்னணியில் உள்ள இரகசியங்களை சித்தர்களே அறிவர். தயிரை உறைக்கு ஊற்றிய பின் அந்த பாத்திரத்தை சற்றும் அசைக்கவோ வேறு இடத்திற்கு மாற்றவோ கூடாது என்பார்கள். காரணம் பாலில் தயிரை ஊற்றிய மறு கணமே பால் தயிர் இடையே சாரல் யோகம் என்ற யோக நிலை உருவாகிறது. அந்த யோக நிலையால் தயிர் கிட்டுவதால்தான் அது யாமம் கழிந்த உணவு என்று கருதப்படுவதில்லை. இவ்வாறு நீர் ஊற்றி வைத்திருந்த அரிசி சாதமும் சாரல் யோகம் கொள்வதால் அதுவும் ஏற்புடையதே.நாம் நினைப்பது போல் தயிரோ பழைய சாதமோ பார்வைக்கு எந்த வித சலனமும் இல்லாமல்
இருப்பது போல் தோன்றினாலும் சாரல் யோகத்தால் அவற்றில் அற்புத சுழல் சக்திகள் ஏற்படுகின்றன. அந்த சுழல் சக்திகளே தயிர் புளிப்பதற்கும், பழைய சாதம் மிருதுவாவதற்கும் காரணமாகின்றது. இந்த சாரல் சுழல் சக்திகள் அபூர்வமான காயகல்ப சக்திகளுடன் பொலிகின்றன. அதனால்தான் சுழல் சக்திகளுக்கு மூலதாரமாய் விளங்கும் மதுரை ஸ்ரீஅசாத்யசாத்ய சரபேஸ்வர மூர்த்திக்கு தயிரைக் கடைந்து வெண்ணெய் பெற்று அதை சுவாமிக்கு காப்பிட பயன்படுத்துகிறோம். ஆனால் பாலை ஊறையிடவும் பழைய சாதத்தில் நீர் ஊற்றி வைக்கவும் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தினால்தான் இந்த சாரல் சுழல் சக்திகளை முழுமையாகப் பெற முடியும். குடல்புண்கள், வயிற்றுப் புண்கள், மூலம் போன்ற வியாதிகளுக்கு பழைய சாதம் நல்ல மருந்தாக அமைவதற்கு காரணம் இந்த சுழல்வள சாரல் காயகல்ப சக்திகளே ஆகும். சுவாமிக்கு நைவேத்யமாக அளிக்கப்படும் இந்த பிரசாதத்திற்கு சாரல் ஔஷதம் என்று பெயர். இதில் திட சாரல் சக்திகள் அமைந்துள்ளதால் திடமான மனதை அளிக்கவும் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்ற நிலையான காரியங்கள் நல்ல படியாக அமையவும் இந்த சாரல் பிரசாதத்துடன் தயிர் நாரத்தை ஊறுகாய் சேர்த்து தானம் அளிப்பதால் அற்புத பலன்களைப் பெறலாம்.பழைய குற்றாலம்
குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால நீர் வீழ்ச்சியில் ஜல சாரல் அல்லது சல சாரல் சுழல் சக்திகள் பொதிந்துள்ளன.
சலசாரல் சக்திகளுடன் பொலியும் நீர்வீழ்ச்சி உலகில் இது ஒன்றே. மண் பாண்டம் திடசாரல் சக்திகளை வளப்படுத்துவதைப் போல குற்றாலத்தில் அமைந்த படிகள் வடிவில் உள்ள பாறை அமைப்பு சல சாரல் சக்திகளை மேம்படுத்துகிறது. திட சாரல் சக்திகளைப் போல் நூறு மடங்கு காய கல்ப சக்திகளைக் கொண்டதே சல சாரல் சுழல் சக்திகளாகும். சலம் என்றால் நீர், அசைவு என்ற பொருள்கள் உண்டு. இரண்டிற்கும் உகந்தது திங்கட் கிழமை. எனவே ஒரு திங்கட் கிழமை மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை அமையும் ஐந்து அரை நாழிகை நேரத்திற்கு இந்த சல சாரல் குற்றாலத்தில் நீராடி உலக மக்கள் அனைவருக்கும் சல சாரல் காயகல்ப சக்திகள தாரை வார்த்து அளித்தார் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் என்பது ஒரு சிலரே அறிந்த சுவையான இரகசியமாகும். எனவே வளர்பிறை சந்திர ஹோரை நேரத்திலும் திங்கட் கிழமைகளிலும் இந்த சாரல் தீர்த்தத்தில் நீராடுவதால் அற்புத காயகல்ப சக்திகளைப் பெறலாம். ஆனால், இக்குற்றால சாரல் பிரசாதம் சிவன் சொத்து என்பதால் இந்த தீர்த்தத்தை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்றால் அது பலனளிக்காமல் போவதுடன் பெருத்த சாபத்தையும் பெற்றுத் தரும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சாரல் நீர்வீழ்ச்சியில் நீராடுவதால் ஒரு விதமான பலனும் அந்த சாரல் அருகில் நிற்பதால் வேறு விதமான பலனும் ஏற்படுகின்றன. இது உலகில் வேறு எங்கும் பெற முடியாத சாரல் வள காய கல்ப சக்தியாகும்.திருநல்லூர் சலசாரல் கோமுகம்
ஆனால் மக்கள் தொண்டையே மகேசன் சேவையாக ஆற்றி வரும் சித்தர்கள் இந்த ஜல சாரல் சக்திகளை
சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அமைத்துள்ளதே திருநல்லூர் சிவத்தல சலசாரல் கோமுகமாகும். இந்த கோமுகத்திலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும்போது கோமுகத்தின் அருகில் நின்றாலே போதும் சலசாரல் சக்திகளைப் பெற்று விடலாம். என்னே இறைவனின் பெருங்கருணை. சிறப்பாக இந்த சலசாரல் சக்திகளைப் பெற விரும்புவோரும் சமுதாய சேவையாக சலசாரல் சக்திகளை மக்களுக்கு அளிக்க விரும்புவோரும் இங்கு இறைவனுக்கு தேன் கலந்த சுத்தமான பசும்பாலை அபிஷேகம் செய்வதால் அப்போது கிட்டும் கோமுக தீர்த்தத்தில் அற்புதமான சலசாரல் அமிர்த சக்திகள் பல்கிப் பெருகும். கோமுகத்தில் எழுந்தருளியுள்ள சதுராங்க தேவதைகளுடன் 16 ஜல சாரல் தேவதைகளும் இந்த கோமுகத்தில் எழுந்தருளி இந்த சலசாரல் தேவ சக்திகளைத் தோற்றுவிக்கின்றனர் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.வியாழக் கிழமைகளில் அமையும் குரு ஹோரை நேரத்திலும் திங்கட் கிழமைகளில் அமையும் சிம்ம லக்ன நேரத்திலும் இத்தகைய பால் தேன் அபிஷேகத்தை நிறைவேற்றுதல் சிறப்புடையதாகும். இத்தகைய ஜல சாரல் சக்திகளைப் போல நூறு மடங்கு பலன் தர வல்லதே ஒளிச் சாரல் காய கல்ப சக்திகளாகும். மகிமாலை சிவாலயத்தில் சுத்தமான பசு நெய் தீபத்தை மண் விளக்குகளில் ஆரண்ய முகூர்த்தத்தில் ஏற்றும்போது கிட்டுவதே ஒளி சாரல் காய கல்ப சக்திகளாகும்.ஸ்ரீகருப்பண்ண சுவாமி பழைய குற்றாலம்
நிலம், ஆறு, காடுகளில் நிறைவேற்ற வேண்டிய யோக ஆசனங்கள் லட்சக் கணக்கில் உள்ளன.
அது போல நீர் வீழ்ச்சிகளில் பயில வேண்டிய யோகாசனங்களை நம் கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனுக்கு தெரிவித்துள்ளார்கள். பெரியவர் கற்பித்த 8400 யோக ஆசனங்களில் ஐந்து ஆசனங்கள் பற்றிய விவரங்களை இங்கு அளிக்கிறோம். திங்கட் கிழமையில் சந்திர ஹோரை நேரத்தில் அரை நாழிகை நேரத்திற்கு ஒரு ஆசனம் என்ற கணக்கில் இந்த ஐந்து ஆசனங்களையும் இங்கு விளக்கியபடி பயில்வதால் அற்புத பலன்களைப் பெறலாம். சிறப்பாக அனைத்து மூட்டு சம்பந்தமான பிரச்னைகளும் இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் நிவாரணம் பெறும்.
1. அருவியைப் பார்த்தவாறு கை கூப்பி நின்று கொண்டு அருவி நீர் தலையில் விழுமாறு நிற்க வேண்டும்.
2. அருவியைப் பார்த்தவாறு நின்று கொண்டு அருவி நீர் இருதோள்களிலும் மாறி மாறி விழுமாறு நிற்க வேண்டும்.
3. அருவிக்கு எதிர்ப்புறமாக கம்பியைப் பிடித்தவாறு நின்று கொண்டு அருவி நீர் இடுப்புப் பகுதியில் விழுமாறு நிற்க வேண்டும்.
4. தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு இரு கைகளால் இருபாதங்களையும் பிடித்துக் கொண்டு உடலை வில் போல் வளைத்து அருவி நீர் இடுப்புப் பகுதியில் விழுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
5. பாதங்களை விரல் நுனிகள் தொடும் அளவிற்கு குனிந்து நின்று கொண்டு அருவி நீர் இடுப்புப் பகுதியில் விழுமாறு நிற்க வேண்டும்.
நீராடிய பின்னர் அருகிலுள்ள ஸ்ரீகருப்பண்ண சுவாமியை வணங்கி நன்றி தெரிவித்தலால் நீராடிய பலன் பூரணம் பெறும்.ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயம் திருஅண்ணாமலை
திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புராதனமான ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில்
தீபங்களை ஏற்றி வழிபடுதலாலும் இந்த ஒளிச் சாரல் காய கல்ப சக்திகளைப் பெறலாம். திங்கட் கிழமைகளில் ஒரு பெரிய மண் அகலில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி நூல் திரியால் தீபம் ஏற்றி ஸ்ரீகற்பக விநாயகரை வேண்டி திருஅண்ணாமலை கிரிவலத்தை கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கிரிவலத்தை அங்கேயே நிறைவு செய்த பின்னர் ஸ்ரீகற்பக விநாயகருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கிரிவலம் நிறைவு அடையும் வரை தீபம் தொடர்ந்து எரிய வேண்டும் என்பது முக்கியம். ஒருவர் கிரிவலம் வர மற்றொருவர் ஆலயத்தில் அமர்ந்து அவ்வப்போது நெய்யை ஊற்றி தீபத்தை பராமரிப்பதும் ஏற்புடையதே. இவ்வாறு சத்யவான் கிரவலம் வர சாவித்திரி தீபத்தை பராமரித்தே தீர்க சுமங்கலித்துவத்தையும் நிறைவான மங்கள வாழ்வையும் பெற்றாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் வரலாறு ஆகும்.
திருமலை ஸ்ரீநடுவட்ட விநாயகர், மகிமாலை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீகற்பகாம்பாள், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீசந்திர பகவான் என இந்த ஐந்து மூர்த்திகளுமே அர்த்தநாரி அர்த்தநர தத்துவங்களுடன் தொடர்புடையவர்களே. இவர்களில் நடுவட்ட நாயகராய் பொலியும் மூர்த்தி யார் ? இல்லை இவர்கள் அல்லாமல் வேறு ஒரு மூர்த்தியையும் நடுவட்ட நாயகராக கொள்ள முடியுமா ?
பொதுவாக அன்னதானம், நாம சங்கீர்த்தனம், தீர்த்த நீராடல் போன்ற இறை காரியங்களை ஒருவர் தொடர்ந்து 30 ஆண்டுகள் இடைவிடாது நிறைவேற்றி வந்தால் அவருடைய மூளையில் ஒரே ஒரு செல் ஆக்கம், ஊக்கம் அடைவதாக சித்தர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் மேலே உள்ள விஷயங்களை தீவிரமாக ஆத்மவிசரம் செய்து வந்தால் அமாவாசையிலிருந்து பௌர்ணமி திதிக்குள் நிரவும் 30 திதி கால அவகாசத்திலேயே ஐந்து மூளை செல்களை ஊக்கப்படுத்தும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு நீங்கள் தீவிரமாக ஆத்ம விசாரத்தில் ஈடுபடும்போது உங்கள் மூளை செல்கள் ஊக்கம் அடைந்து விட்டனவா என்று எப்படித் தெரிந்து கொள்வது ?
எப்போது நடுவட்ட நாயகன் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டதோ அப்போதே உங்கள் மூளையில் ஐந்து செல்கள் ஊக்கம் பெற்று விட்டன என்று அர்த்தம் !

 

 

திருத்தல யாத்திரை தொடரும்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam