உன்னுடைய கேள்வியில்தான் பதிலும் இருக்கிறது !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்ஸ்ரீவிநாயக மூர்த்திகள், திருத்தவத்துறை
இந்த விநாயக மூர்த்திகள் ஒவ்வொருவரையும் குறைந்தது ஒரு நிமிடமாவது தரிசனம் செய்த பின்னர் எந்த விநாயக மூர்த்தியை உங்கள் மனம் நாடுகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு மூர்த்தியின் மேல் உங்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும். அப்படியானால் நீங்கள் கடவுள் தரிசனம் பெற வெகு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பது வெளிப்படை.
இதற்காக மனம் தளர வேண்டாம். சற்குரு நினைத்தால் எந்த இடைவெளியையும் ஒரு நொடியில் கடந்து இறை தரிசனத்தைப் பெற்று விடலாம் என்பது உண்மையே. ஆனால், அதற்கு முன் கடவுள் தரிசனம் பெற ஏன் இத்தகைய ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா ?

விநாயகர், முருகன், அம்பாள் என எந்த இறை மூர்த்தியின் தரிசனத்தைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு முன்னால் கட்டாயம் நவகிரக மூர்த்திகளின் தரிசனத்தைப் பெற்றுத்தான் தீர வேண்டும். அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இதிலிருந்து தோன்றும் அடுத்த கேள்வி. நவகிரக மூர்த்திகளின் தரிசனம் எப்போது கிட்டும் ? உதாரணத்திற்கு நீங்கள் செவ்வாய் பகவானின் தரிசனம் பெற விழைந்தால் அதற்கான பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகளை இடைவிடாது நிகழ்த்திக் கொண்டிருப்பீர்கள் அல்லவா ? ஆனால், செவ்வாய் பகவானோ எத்தனையோ விதமாக இந்த பூவுலகில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம். அதாவது லால்குடி திருக்கோயிலில் நவகிரக மூர்த்தியாக எழுந்தருளியுள்ள செவ்வாய் பகவான் வேறு, கோயம்பேடு திருத்தலத்தில் நவகிரக மூர்த்தியாக எழுந்தருளியுள்ள செவ்வாய் பகவான் வேறு. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் எழுந்தருளி உள்ள செவ்வாய் பகவான் வேறு, உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் பகவான் வேறு. அது மட்டுமல்லாமல் உங்கள் வலது உள்ளங்கையில் மறைந்திருக்கும் செவ்வாய் பகவான் வேறு, உங்கள் இடது உள்ளங்கையில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய் பகவான் வேறு. இப்போது நீங்கள் லால்குடி திருத்தலத்தில் நவகிரக மூர்த்தியாக எழுந்தருளி உள்ள செவ்வாய் பகவானை தரிசனம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக ஆராதனை செய்து வருவதாக வைத்துக் கொண்டால் மெல்ல மெல்ல மற்ற செவ்வாய் மூர்த்திகள் எல்லாம் இந்த செவ்வாய் மூர்த்தியில் ஐக்கியமடைந்து விடுவார்கள். அப்போது உங்களுக்கு ஒரே ஒரு செவ்வாய் பகவானின் தோற்றம் மட்டும்தான் உங்கள் உபாசனையில் இருக்கும். இப்போது உங்கள் கையில் உள்ள செவ்வாய் பகவானும், ஜாதகத்தில் உள்ள செவ்வாய் பகவானும் மறைந்து, இவ்வாறு நீங்கள் அறிந்த அனைத்து செவ்வாய் மூர்த்திகளின் சக்திகளும் ஒரே ஒரு செவ்வாய் பகவானாக உருப் பெற இறுதியில் அந்த செவ்வாய் பகவானின் உருவமும் மறைந்து உங்களுக்கு செவ்வாய் பகவான் என்பது ஒரு தத்துவமாக மட்டுமே மிஞ்சியிருக்கும் அல்லது பூரணம் பெற்றிருக்கும். இவ்வாறு செவ்வாய் பகவானை இரண்டற்ற ஒன்றாக காணும் தத்துவ நிலைதான் செவ்வாய் பகவானின் தரிசனம் என்பதாகும். இதற்காகத்தான் நம் பெரியோர்கள் இறை நெறியில் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுப்பது உண்டு, “ஆசையை அறுமின் ஆசையை அறுமின் ஈசனோடேனும் ஆசையை அறுமின்,“ என்று. காரணம் நீங்கள் ஏதாவது ஒரு திருத்தல செவ்வாய் பகவான் மீது ப்ரத்யேக அன்பைக் கொண்டு விட்டால் உதாரணமாக வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் பகவான் மீது உங்களுக்கு அதீதமான பற்று ஏற்பட்டு விட்டால் அவரின் உருவமே உங்கள் கண் முன் நிற்குமே தவிர அவரைத் தத்துவமாக உங்களால் காண இயலாது, உங்களுக்கு செவ்வாய் பகவானின் தரிசனமும் கிடைக்காது ! செவ்வாய் பகவானின் தத்துவ தரிசனம் கிடைக்கும்போதுதான் நீங்கள் கால, தேச பரிமாணங்களை கடந்த நிலையில் சஞ்சரிக்கிறீர்கள். அங்கு கேள்வியும் இல்லை பதிலும் இல்லை,
அனைத்தும் பூர்ணம், சம்பூர்ணம் !!ஸ்ரீபிரளயகாலேஸ்வரர் திருத்தலம் பெண்ணாடம்
சீர்காழி, திருவையாறு, ஜகந்நாதபுரி (பூரி) போன்று பிரளயத்தையும் விஞ்சி நிற்கும் பல திருத்தலங்களுள் ஸ்ரீபிரளயகாலேஸ்வரரின் புகழும் அடங்கும். ஆனால், மற்ற எந்த திருத்தலத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்புடன் விளங்குவதே பெண்ணாடம் திருத்தலம் ஆகும். இறைவனின் சித்தத்தில் உறையும் மார்கண்டேயர், அகஸ்தியர் போன்ற சித்தர்கள் இறைவனைப் போன்ற பூரணத் தன்மையுடன் துலங்குவதால் இவர்கள் பிரளயத்தை ஒரு சாட்சியாக கண்டு பிரளயம் மறைந்து மீண்டும் ஜீவன்கள் சிருஷ்டி கொள்ளும்போது தங்கள் இறைப் பணிகளை மீண்டும் தொடர்கின்றனர். இவ்வாறு இறைவனுடன் பக்தியால் நெருங்கிய ஜீவன்கள் பிரளய காலத்தில் பலவிதமான இறை சொரூப ஐக்ய சக்திகளுடன் விளங்குகின்றனர். இறைவனை விறகில் தீயினன், மணியில் ஜோதியன் என்று திருநாவுக்கரசர் புகழ்ந்து பாடுவது போல பிரளய காலத்தில் சக்தி உபாசகர்கள் அனைவரும் பராசக்தியின் ஜோதியில் ஒன்றி நிலைபெறும் இடமே பெண்ணாடம். இதையொட்டியே இத்தலத்திற்கு பெண்ணாடகம் என்ற பெயரும் ஏற்பட்டது. பெண்ணை ஆடகம் என்பதே பெண்ணாடகம். ஆடகம் என்பது பிரளய காலத்தில் சக்தி உபாசகர்கள் ஐக்கியமாகும் ஜோதி தத்துவத்தின் நாமமாகும்.
அணையில் தேக்கி வைத்துள்ள நீரைப்பார்க்கும்போது அது சலனமற்று இருப்பதாகவே தோன்றும். ஆனால், அணையின் கதவுகளைத் திறந்த பின் அதில் எத்தகைய சக்தி வெளியாகிறது. அது போல ஆடகமாக மிளிரும் ஜோதியின் அசையா நிலையே பெண்ணை ஆகும். இது சக்தி உபாசனையின் உன்னத நிலையிலேயே உணரக் கூடிய தத்துவமாகும்.
பெண்ணாடம் திருத்தலத்தில் ஒளிரும் சக்தி உபாசனை சக்திகளின் உன்னதம் பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறோம். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன் இத்தலத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது பல பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் வெள்ளி, தாமிரம், வெண்கல குடங்களில் கங்கை, காவிரி நீரை தலையில் சுமந்து வந்து ஸ்ரீசற்குருவிற்கும் அவருடன் வந்திருந்த அடியார்களுக்கும் மிகவும் அன்புடன் பாதாபிஷேகம் நிறைவேற்றினார்கள். அப்போது ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், “இவ்வாறு இறையடியார்களின் பாதத்தில் நீரை ஊற்றி அபிஷேகம் செய்து வரவேற்கும் தெய்வீகப் பண்பாட்டை காண்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இறைவனுக்கு நிறைவேற்றப்படும் ஆறுகால அபிஷேக ஆராதனைகளை விட இறையடியார்களை உள்ளன்புடன் பூஜிக்கும் அடியார்களின் சேவை வானளாவ உயர்ந்ததாகும். அவ்வாறு பாத பூஜை செய்யும் அடியார்களின் திருவடிகளில் பொன் வைத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. அடியேனுக்கு அந்த அளவிற்கு பொருளாதார வசதி இல்லையாயினும் அடியேன் குருநாதன் அருளால் அடியேனால் இயன்ற ஒரு சிறு காணிக்கையை பாத பூஜை செய்த அடியார்களுக்கு நன்றிக் கடனாக அளிக்கிறேன். அதை அவர்கள் தயவுசெய்து ஏற்றுக் கொண்டு அடியேனையும் அடியேன் கூட்டத்தைச் சேர்ந்த அடியார்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்,“ என்று பணிவுடன் தெரிவித்து பாதங்களில் நீர் ஊற்றி வணங்கிய ஒவ்வொருவருக்கும் ஒரு புது பத்து ரூபாய் நோட்டை காணிக்கையாக அளித்து கௌரவித்தார்.
பொன் எங்கே பத்து ரூபாய் எங்கே, இரண்டும் எப்படி ஈடாகும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் கரம் தீண்டிய அந்த பத்து ரூபாயின் மகிமை தெரிவதற்கு அடியார்கள் மேலும் 25 வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது.
திருஅண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப அன்னதான வைபவம் ஆரம்பமான நேரம். அன்னதான வைபவத்தை ஆரம்பிப்பதற்கு முன் ருத்ராக்னி தேவதைகளுக்கும் பித்ரு தேவதைகளுக்கும் வந்தனம் கூறி அவர்கள் ஆசியை வேண்டி பூஜைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீசற்குரு அவர்கள் நிறைவேற்றும் அக்னி பூஜையானது தெய்வீக அம்சங்களால் பூரித்து கண் கொளளாக் காட்சியாக விளங்கும். அந்த வருடம் அக்னி பூசையின்போது அங்கு குழுமிய அடியார்கள் ஒவ்வொருவர் கையிலும் 10, 100, 500 என்றவாறாக புது ரூபாய் நோட்டுக்களை அளித்து தங்கள் கைகளில் வைத்திருந்து ஸ்ரீவாத்யார் கூறும் மந்திரங்களை ஜபிக்குமாறு கூறினார். இவ்வாறு ஒவ்வொரு பூஜையின் பின்னணியில் உள்ள தெய்வீக மகத்துவங்களை எவராலும் உணர முடியாது, அதை சற்குரு விளக்குவதும் கிடையாது. எப்போதோ ஓரிருமுறை அத்தகைய பூஜைகளில் பங்கு பெறும் அடியார்கள் சில தெய்வீக அற்புதங்களை நேரில் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்து விடுவது உண்டு. அவ்வாறு மேற்கூறிய அக்னி பூஜையில் பங்கேற்ற ஒரு அடியார் ஸ்ரீவாத்யார் கூறிய மந்திரங்களை ஓதிக் கொண்டே இருந்தவர் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுகளில் தோன்றிய காட்சிகளைக் கண்டு பெரும் அதிசயத்தில் ஆழ்ந்து விட்டார். பூஜை நிறைவுறும் சமயம் ஒவ்வொருவரிடமும் தந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப வாங்கிக் கொண்டு வந்த ஸ்ரீவாத்யார் அந்த அடியாரைப் பார்த்து, “என்ன சார், நோட்டில் பட்டாம் பூச்சி பறக்குதா ?“ என்று கேட்டுக் கொண்டே அவரிடமிருந்த ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். (சற்குருமார்கள் தங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்துதான் பேசுவார்கள் என்பதற்கு மேற்கூறிய சற்குருவின் கேள்வியும் ஒரு உதாரணம். அந்த கேள்வியில் உள்ள அட்சரங்களை எண்ணிப் பார்த்தால் அதுவும் குரு எண்ணாக மிளிரும்).
உண்மையில் அந்த அடியாரின் கையில் இருந்த நோட்டுகளில் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டுதான் இருந்தன. எப்படி? அந்த அடியார் ஒரு வங்கியில் கேஷியராகப் பணியாற்றியவர். பணம் செலுத்துபவர்கள் அளிக்கும் நோட்டுகள் உண்மையான நோட்டுகளா என்பதை அறிய ஒரு மெஷினில் (fake currency detector) அதைப் போடுவார். அப்போது ரூபாய் நோட்டில் மினுமினுக்கும் துகள்களைக் கொண்டு நோட்டின் தரத்தைச் சரி பார்ப்பது வழக்கம். அது போல் அந்த அடியார் வைத்திருந்த நோட்டில் மெஷின் வழியாகப் பார்ப்பது போல் ஏராளமான துகள்கள் மின்னின. அதுவே அவர் அடைந்த ஆச்சரியத்திற்குக் காரணம். திருக்கார்த்திகை தீப அன்னதான கைங்கர்யத்திற்காக பங்கேற்க வரும் அடியார்கள் தங்களுடைய பித்ருக்களின் ஆசியால் அத்தகைய சற்குருவின் சத்சங்கத்தை நாடும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த பித்ரு தேவர்களே அந்த அடியார் வைத்திருந்த நோட்டில் பட்டாம்பூச்சிகளாக தரிசனம் அளித்தார்கள். இது சற்குரு ஒருவரே நிறைவேற்றக் கூடிய சாதனையாகும். இந்த தெய்வீக அற்புதத்தை சற்குரு அவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார் ?
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
ஜெய ஜெய ஜெய சங்கர
ஹர ஹர ஹர சங்கர
என்பது பித்ரு தேவர்களின் ஒளி ரூபத்தைக் காண உதவும் ஒலி ரூப மந்திரமாகும். இதன் அர்த்தம் மூங்கில் இலைகளின் மேல் சந்திர ஒளி குளிர்ந்து நீர்த் துளியாக பொலிகின்றது. இந்த சந்திர ஒளியில் ஆவாஹனமாகும் பித்ரு சக்திகளை சூரியன் தன்னுடைய ஒளிக் கிரணங்களால் ஏற்று அந்த பித்ருக்களுடைய வழித் தோன்றல்களுக்குத் தேவையான ஆசீர்வாத சக்திகளை அளிக்கின்றான் என்பதாகும். மூங்கிலில் உள்ள நீண்ட இழை எத்தகைய மந்திரங்களையும் ஏற்கும் சக்தி பெற்றது. அதனால்தான் பித்ருக்களின் நாயகரான பெருமாள் மூர்த்தி கிருஷ்ண லீலையில் மூங்கில் புல்லாங்குழலுடன் அருளாட்சி புரிகிறார். மூங்கில் இலைகளைப் பரப்பி அதன் மேல் அளிக்கும் தர்ப்பணம் எத்தகைய கடுமையான பித்ரு தோஷங்களையும் தீர்க்கவல்லதாகும். மிண்டுரங்க குவளை என்ற மூங்கில் குவளை தீர்த்தத்தால் நிறைவேற்றப்படும் அபிஷேக ஆராதனைகளின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இவ்வாறு மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரை மூங்கில் இழை மேல் தூங்கும் பன்னீராக மாற்றி அருணாசல விந்தை புரிந்தவரே நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள். அதாவது தம் உத்தம அடியார்கள் அளித்த பித்ரு தர்ப்பண சக்திகளை ரூபாய் நோட்டில் விரவியுள்ள மூங்கில் இழைகளின் மேல் வார்த்து அதன் மேல் அவரவர் பித்ரு மூர்த்திகளை ஆவாஹனம் செய்து வழிபட அருள்புரிந்தார். ரூபாய் நோட்டுகளை தயார் செய்யப் பயன்படுத்தப்படும் காகிதம் மூங்கில் தாவரத்திலிருந்து பெறப்படுவதே. தர்ப்பணத்திற்காக உள்ளங்கையில் வார்க்கப்படும் நீருக்கு பன்னீர் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக, ஒரு பித்ரு தேவதைக்கு முக்தி அளிக்க வேண்டுமானால் அந்த பித்ரு தேவதையின் வழித் தோன்றல்கள் குறைந்தது 25000 முறை திருஅண்ணாமலையை பக்தி சிரத்தையுடன் வலம் வர வேண்டும் என்பது திருஅண்ணாமலை கிரிவல நியதி. தன்னுடைய தாயும் தந்தையும் முக்தி பெற 20 ஆண்டுகள் 50000 முறை கிரிவலம் வந்த ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகிமை நீங்கள் அறிந்த ஒன்றே. ஆனால், ஒரே அக்னி பூஜையில் ஆயிரமாயிரம் பித்ருக்களை கரையேற்றவல்ல சக்தியை நம் குருநாதர் பூண்டிருக்கிறார் என்றால் அவர் பெயரை கேட்பதற்கே நாம் எத்தனை ஆயிரம் ஜென்மம் திருஅண்ணாலையை சுற்றி வர வேண்டும், இல்லை சுற்றி வந்திருக்க வேண்டும். அத்தகைய ஒரு மகா சித்தரின் திருவடியில் அன்னதானம் நிறைவேற்றும் பாக்கியம் நமக்குக் கிட்டியது என்றால் இதை விடச் சிறந்த ஒரு பேற்றை கனவிலும் நினைக்க முடியுமா ?ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருத்தலம், திருக்காட்டுப்பள்ளி
பலவகை அக்னிகளைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், தூய்மையான ருத்ராக்னி சக்தியால் உருவாக்கப்பட்ட அன்னதான பிரசாதத்தை அளித்த ஈடில்லாப் பெருமை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களையே சாரும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி
தந்நோ ருத்ராக்னி ப்ரசோதயாத்
என்ற இருவரி காயத்ரீ மந்திரத்தை ஓதி ருத்ராக்னியை அன்னதான அடுப்பில் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஆவாஹனம் செய்து விடுவார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஆன்மீக பிரம்மாண்டத்தை அறிந்து கொண்டால்தான் சற்குருவின் பெருமையை புரிந்து கொள்ள இயலும். ருத்ராக்னி என்பது சிவபெருமானிடமிருந்தே வருவதால் மற்ற அக்னி சக்திகளைப் போல் இதை எவராலும் உருவாக்க முடியாது. இதை சிவப் பிரசாதமாக மட்டுமே பெற முடியும். அப்படி சிவ பிரசாதமாகப் பெற்ற ருத்ராக்னியை எந்த பூலோக பொருளிலும் நேரடியாக ஆவாஹனம் செய்ய முடியாது. அந்த ருத்ராக்னி சக்தியைப் பெறுமளவிற்கு புனிதமான ஒரு பொருள் இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை ! ருத்ராக்னி சக்தியை ஒரு கோடியாகப் பகுத்து அந்த துளியை இன்னும் ஒரு கோடி பகுத்து அதில் கோடியில் ஒரு தூசி அளவு அக்னி சக்தியை ஆவாஹனம் செய்தால் அது நமது பூமியைப் போன்ற கோடி பூமிகளை ஒரு நொடியில் பஸ்மமாக்கி விடும் என்றால் ருத்ராக்னியின் சக்தி என்ன பிரம்மாண்டமானதாக இருக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த ருத்ராக்னியை தம் உடலில் ஏற்கும் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் திருகார்த்திகை தீப அன்னதானம் நிறைவு பெறும் வரையில் அதைச் சிறிது சிறிதாக அன்னதான கைங்கர்யத்தில் செலவிடுகிறார்கள் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அன்புத ஆன்மீக இரகசியமாகும். ருத்ராக்னியைத் தாங்கும் புனித தேகத்தைப் பெறுவதற்காகவே திருஅண்ணாமலையை ஒரு கோடி தடவைக்கு மேல் கிரிவலம் வந்துள்ளார்கள், ஸ்ரீவெங்கடராமனாக மனித அவதாரம் கொண்ட பிறவியில் மட்டும் ராயபுரம் ஸ்ரீஅங்காளியை ஒரு கோடி தடவைக்கு மேல் அக்னி மந்திரங்களை ஓதி வலம் வந்து வழிபட்டார்கள். ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஓதிய அக்னி மந்திரம் அவருக்கும் ஸ்ரீஇடியாப்ப சித்தருக்கும் இடையில் மட்டுமே பொலிந்த சித்த பொக்கிஷம். இன்றும் எவராவது ஒரு கோடி முறை ஸ்ரீஅங்காளி தேவியை வலம் வந்து அந்தப் புண்ணிய சக்தியை அன்னதானத்திற்காக பயன்படுத்த விரும்பினால் அவர்களுக்கு இந்த மந்திரம் குருவருளால் உணர்த்தப்பெறும். புனித பாரத பூமியில் உள்ள திருத்தலங்களை எல்லாம் மூன்று முறை நடந்து சென்று தரிசனம் செய்து, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி தன் புனித தேகத்தை மேலும் புனிதப்படுத்திக் கொண்டார்கள். அரை நொடியே ஈசனின் தரிசனத்தைப் பெற கோடிக் கணக்கானோர் கியூவில் நிற்க தம் சற்குரு அருளால் ஒரு சதுர்யுக காலத்திற்கு அருணாசல ஈசனின் தரிசனத்தைப் பெற்ற ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அந்த தரிசனப் பலன் அனைத்தையுமே இந்தப் பூலோக மக்களுக்கு அர்ப்பணிக்க திருவுள்ளம் கொண்டதால்தான் ருத்ராக்னியையும் தம் உடலில் தாங்கும் அளவிற்கு அவர் தேகம் மிக மிக மிக அபூர்வமான புனிதத் தன்மையுடன் விளங்கியது. இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரு கையளவு மணலை அக்னி சக்தியாக மாற்றினாலே அது இந்த பூலோகத்தை அழித்து விடும. இவ்வாறுதானே குண்டலினியாக மூலாதாரத்தில் எழும் அக்னி சக்தி 30000 டிகிரி வெப்பத்துடன் திகழ்கிறது. அப்படியானால் ருத்ராக்னியை தம் உடலில் ஏற்கும் ஸ்ரீவெங்கடராமனை எவரும் நெருங்க முடியாதே ? ஆனால், பத்து டன் எடையுடைய அணுகுண்டாக இருந்தாலும் அது வெடிக்கும்போதுதானே அது அக்னியை வெளிப்படுத்தும். அதற்கு முன் அது சாதாரண கேஸ் சிலிண்டரைப் போல்தானே தோன்றும். அது போல் ருத்ராக்னியை தன் உடலில் ஆவாஹனம் பெறும் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அந்த ருத்ராக்னி சக்தியை சாந்த சக்தியாக தம் உடலில் ஏற்பதால் அவர் உடல் கைலாயத்தை மிஞ்சிய குளிர்ச்சியுடன் திகழ்ந்து சாந்தத்தின் இமயமாக காட்சி அளிக்கிறது. இந்த சாந்த சக்தியின் மகத்துவத்தால்தான் அவரை தரிசனம் செய்யும் அடியார்கள் எல்லாம் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அவர் திருவடியில் தங்கியவாறே சேவை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவலைத் தங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொண்டு இருந்தனர்.
இவ்வாறு புனிதத்திலும் புனிதமாக ருத்ராக்னி திகழ்வதால் அதில் தயாரான அன்னதான பிரசாதத்தின் ஒரே ஒரு சோற்றுப் பருக்கை தீர்க்கும் நோய்கள் எத்தனை எத்தனை, மறையும் வறுமை நிலைகள் எத்தனை எத்தனை, மாயமாகும் பிறவிகள்தான் எத்தனை எத்தனை ?!வானளாவிய குரு கருணை
மனிதனுக்கு ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும். வாழ்வதே வயிற்றுக்காகத்தானே ? ஆனால், அந்த வயிற்றுக்கு ஈணும் சமயத்தில் கூட எவர் பசிக்கு எதை அளிக்கலாம் என்பதில்தான் கவனமாக இருந்தார்கள் நம் வெங்கடராமன் அவர்கள். ஒருமுறை அன்னதான கைங்கர்யம் துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. உணவருந்த ஆரம்பித்த சற்று நேரத்தில் அவர் உணவு பரிமாறும் அடியாரைப் பார்த்து, “சார், நீங்கள் எப்போது என்ன செய்கிறீர்கள் என்றால் வேகமாக ஓடி இந்த ஆஸ்ரமத்தை ஒரு சுற்று சுற்றி வந்து விடுங்கள் ...“. உணவு பரிமாறும் அடியார் திகைத்தார். மத்தியான நேரத்தில் ஆஸ்ரமத்தைச் சுற்றி ஓடி வருவானேன் என்ற குழப்பம் ஒரு பக்கம், ஸ்ரீவாத்யார் இப்போதுதான் சாப்பிடவே ஆரம்பித்திருக்கிறார். அதைப் பாதியில் நிறுத்தி விட்டு வெளியில் செல்வது உசிதமல்லவே என்ற நினைப்பு மறு பக்கம். ஸ்ரீவாத்யார் அவர் எண்ணத்தை உணர்ந்தவராக, “பரவாயில்லை சாப்பாட்டை அடியேன் பார்த்துக் கொள்வேன், நீங்கள் சீக்கிரம் சென்று உங்கள் வேலையை முடித்துக் கொண்டு வாருங்கள்,“ என்று கூறவே அந்த அடியாரும் மனதிற்குள் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியே சென்று ஆஸ்ரமத்தை சுற்றி ஓடி வர ஆரம்பித்தார். காரணம் அது ஆஸ்ரமத்தைச் சுற்றி ஓடி வர வேண்டிய சமயமும் அல்ல, ஓடி வர வேண்டிய வயதும் அவருக்கில்லை. ஒரு சில நொடிகளில் வெயிலில் ஓடிச் சென்று ஆஸ்ரமத்தை வலம் வந்து விட்டு மீண்டும் ஸ்ரீவாத்யாருக்கு உணவைப் படைத்தார். வழக்கம் போல் ஸ்ரீவாத்யார் அவர்கள் தன்னுடைய செயலுக்கான காரணத்தை விவரிக்கவில்லை. வழக்கம்போல் அந்த அடியாரும் விரைவில் அதாவது பதினைந்து வருடங்கள் கழித்து அதுவும் குருவருளால் ஸ்ரீவாத்யாரின் செயலுக்கான காரணத்தை அறிந்து கொண்டார்.பரகாய பிரவேச கோபுரம்
ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் உள்ள வாயில் கோபுரத்தில் நமது பாரத நாட்டில் உள்ள அனைத்து திருத்தலங்களில் உள்ள சக்திகளும் கோபுர கலசங்களாகவும் விமான தளங்களாகவும் சாளரங்களாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதனால் எந்த லோகத்திலிருந்து எந்த தேவதைகள், தெய்வங்கள், அவதார மூர்த்திகள், மகரிஷிகள் திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக பூலோகம் வந்தாலும் அவர்கள் தங்கள் தெய்வீக சரீரத்தை இந்த பரகாய பிரவேச கோபுரத்தில் உகுத்து விட்டு தாங்கள் வந்த காரியம் நிறைவேற்றத் தேவையான ஒரு பூலோக உடலை எடுத்துக் கொள்வார்கள்.அது மனிதனாகவோ, பாம்பாகவோ, யானையாகவோ, எறும்பாகவோ கூட இருக்கலாம். அந்த உடலில் கிரிவலத்தை நிறைவேற்றிய பின் மீண்டும் தங்கள் தெய்வீக உடலை பெற்றுக் கொண்டு தங்களுடைய லோகத்திற்கு திரும்பி விடுவார்கள். அவ்வாறு திரும்பிச் செல்லும் முன் தங்களுக்கு இத்தகைய வசதிகள் செய்து கொடுத்ததற்காக தங்கள் கிரிவல புண்ணியத்தில் ஒரு பங்கை ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு அளித்து விட அதை அவர் தேவையானவர்களுக்கு தேவையான விதத்தில் பகிர்ந்து அளித்து விடுவார்கள்.


அது போல் அன்று மாலை நடக்க இருந்த ஒரு நாடகத்தில் உணவு பரிமாறிய அடியார் ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷியாக வேடம் ஏற்று நடிக்க வேண்டியிருந்தது. அன்று மதியம்தான் ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷி சத்யலோகத்திலிருந்து திருஅண்ணாமலை கிரிவலம் நிறைவேற்றுவதற்காக பூலோகம் வந்திருந்தார். அவர் மீண்டும் பரகாய பிரவேச கோபுரத்தில் தன்னுடைய உடலை மாற்றிக் கொள்வதற்கு தேவைப்படும் ஒரு சில நொடிகளுக்குள் அவரை வலம் வந்து வணங்கினால் கிட்டும் பலன்கள் ஏராளம். ஆனால், அந்த மகரிஷியை பரகாய பிரவேச கோபுரத்தில் தரிசனம் செய்து வலம் வருவது என்பது இயலாத காரியம் அல்லவா ? அதற்கு சுலபமான வழி ஆஸ்ரமத்தையே வலம் வந்து வணங்கினால் அது அந்த மகரிஷியையும் வலம் வந்ததாகத்தானே அர்த்தம் ? இதுவல்லலோ சற்குருவின் ஏற்பாடு. எனவே ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் குருகுல வாசத்தில் நிகழும் ஒவ்வொரு சிறு சம்பவமும் இறை அடியார்களுக்கு அவர்கள் கனவிலும் நினைக்காத அனுகிரகத்தை அளிப்பதற்காகவே என்று உணர்ந்தால் இதை விடச் சிறந்த பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும் ?மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக மகான்கள் படும்பாட்டை எழுத்தில் வடிக்க இயலாது. அதுபோல் ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷியும் மக்கள் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருஅண்ணாமலையை வலம் வந்து இறைவனை பிரார்த்தனை செய்தவாறே இருக்கிறார். மக்கள் இறைவனையே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதானே மகான்களின் விருப்பமாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் மனிதன் மனிதனாக வாழ்ந்தால்தான் அவன் இறைவனைப் பற்றி முழுமையாக நினைக்க முடியும். தானே அரைகுறை வாழ்க்கை வாழும் மனிதன் இறைவனைப் பற்றி எப்படி முழுமையாக அறிந்து கொள்ள முடியும் ? ஆம், எல்லா மனிதர்களும் அரைகுறை வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் என்பதே சித்தர்கள் கூறும் நம்பமுடியாத இரகசியமாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் அரைகுறையான வாழ்க்கையையே பெரிய சாதனையாக எண்ணும் மனிதன் முழுமையான ஞானம் பெற்ற மகான்களின் செயல்களைப் பார்த்து அவர்களை கோமாளிகளாக நினைப்பதுதான். ஆனால், அவர்களோ மனிதனின் அறியாமையைப் பற்றி உணர்ந்தவர்கள் ஆதலால் மனிதனுடைய எத்தகைய கோமாளித்தனத்தையும் பொறுத்துக் கொண்டு மனித சமுதாயத்தை மேம்படுத்தும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். சர்க்கஸ் கோமாளி அனைவரையும் சிரிக்க வைத்தாலும் அவனுடைய சொந்த வாழ்க்கை சோகமயமாகத்தான் இருக்கும். ஸ்ரீவெங்கடராமன்அவர்கள் விரும்பி போற்றியது சர்க்கஸ் கோமாளிகள், சிரிப்பு நடிகர்களின் தியாக வாழ்க்கையை.
“ஒரு சாதாரண டீயைக் கூட எந்த ஒரு மனிதனுக்கும் முழுமையாக சுவைத்துக் குடிக்கத் தெரியாது,” என்று நம் வெங்கடராமன் அவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். “மற்ற எந்த ஆஸ்ரமத்திலும் நடைமுறையில் இல்லாத வழக்கமாக ஸ்ரீஅகத்திய ஆஸ்ரமத்தில் மட்டும் ஸ்ட்ராங் டீயும், டிகிரி காப்பியும் வழங்கப்படும் காரணம் இதுவேயாகும். என்று ஒரு அடியாருக்கு காபியின் முழுமையான சுவை தெரிகிறதோ அன்றுதான் அவர் ஒரு தூசி அளவாவது இறைவனின் சுவையை உணர தகுதி பெறுகிறார்,” என்பது அவர்தம் உரை. இந்த குருவருளைப் பெற பாடுபடும் பெருந்தகையே ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷி ஆவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாக 16 மணி நேரம் நனவு நிலையிலும், எட்டு மணி நேரம் உறக்க நிலையிலும், ஒரு நாழிகையில் எட்டில் ஒன்றான மூன்று நிமிட நேரம் கனவு நிலையிலும் சஞ்சரிக்கின்றான். இதுவே ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய மனித வாழ்க்கை முறையாகும். பொதுவாக, மகான்கள் மட்டும் என்றில்லாமல் எந்த மனிதனும் உறங்குவது கிடையாது என்பது உண்மையே. உண்மையில் மனிதன் நனவு வாழ்க்கையைப் போல் இரண்டு மடங்கு காரியங்களை தூக்க வாழ்க்கையில் நிகழ்த்துகின்றான். அதனால்தான் மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேவையான அளவு தூங்கினால்தான் அவனுடைய செயல்கள் முறைப்படுத்தப்பட்டு அவன் ஆரோக்யமான வாழ்வை மேற்கொள்வான். காட்டு விலங்குகள் இத்தகைய அமைதியான முறையில் இருப்பதால் அவை ஆரோக்கியத்துடன் திகழ்கின்றன. வீடுகளில் வளரும் நாய், பூனை போன்ற மிருகங்கள் துரித உணவு, ஏசி ரூம், செல்போன் போன்ற பாதிப்புகளால் விரைவில் தங்கள் ஆரோக்யத்தை இழக்கின்றன. மூன்று நிமிடங்களே நிகழும் கனவு உலக செயல்களை விரித்துப் பார்த்தால் அவை 16 மணி நேர நனவுலக நிலைக்கு விரவி நிற்கும். உதாரணமாக, நீங்கள் கனவில் ஒரு பருந்தாக மாறி பறப்பதாக கொண்டால் அந்த கனவில் நீங்கள் கண்ட காட்சிகளை விரித்துப் பார்த்தால் அது 16 மணி நேரத்திற்கு விரிந்து நிற்கும். அவ்வாறு கனவை முழுமையான நனவு நிலையில் காணும் சக்தியை சாதாரண மனிதன் பெறாததால்தான் கனவில் கண்ட காட்சிகள் கூறும் உண்மையை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு கனவை நனவாகப் பார்த்தலை விட நனவுக் காட்சிகளை கனவில் சுருக்கி சமுதாயத்திற்கு சேவை புரிந்தவர்களே மகான்கள். ஆம், ஆண்டாள் கண்ட பெருமாளின் திருமணம் கனவாகச் சுருங்கி அது பெருமாள் பிரசாதமாக இன்றும் மக்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறதே.ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர், திருக்காட்டுப்பள்ளி
மனிதனுக்கும் மகான்களுக்கும் என்ன வித்தியாசம் ?
மனிதர்கள் காணும் இந்த மூன்று நிலைகளையும் மகான்கள் தான் என்ற சுயநலத்தை விடுத்து வெறும் சாட்சி பூதமாக காண்பதால் அவர்கள் முழுமையான வாழ்க்கையை வாழ்பவர்களாக ஆகிறார்கள். அதனால்தான் அவர்கள் காலம் கடந்த வாழ்க்கையை மேற்கொள்ள முடிகிறது. இதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய 16 மணி நேர நனவுலக வாழ்க்கையை மூன்று நிமிட கனவாக சுருக்கி காண முடியும் என்றால் ஒரு மனிதனின் பல பிறவி நிகழ்ச்சிகளை ஏன் ஒரு மகான் அதையே ஒரே நொடிக்குள் சுருக்கிக் கொண்டு வர முடியாது. அவ்வாறு சுருக்கி தான் கண்ட காட்சிகளையே சற்குருமார்கள் தங்களுடைய அடியார்களின் சூட்சும சரீரத்தில் பதித்து விடுகிறார்கள். இதைத்தான், “நாங்கள் முதன் முதலில் ஒரு அடியாரை காணும்போதே அவர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அளித்து விடுகிறோம்,” என்று நம் குருமங்கள கந்தர்வா கூறுவதன் உட்கருத்தாகும்.
இவ்வாறு முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் நாம் எதற்காக பிறப்பெடுத்தோம் என்ற இரகசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பவரே ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷி. அம்மகரிஷியின் வழிகாட்டுதலைப் பெற வேண்டுமானால் ஞாயிற்றுக் கிழமை பகல் பொழுதில் திருஅண்ணாமலை இந்திர லிங்கத்திலிருநது கிரிவலத்தை ஆரம்பித்து சூரியன் மறைவதற்குள் இந்திர லிங்கத்தில் கிரிவலத்தை முடிக்க வேண்டும். இதனால் தங்கள் பிறவிப் பயனை, பலனை உணர்ந்து கொள்ள ஸ்ரீகர்த்தவ்ய மகரிஷியின் வழிகாட்டுதலும் சற்குருவின் திருவருளும் துணைபுரியும்.
கோடி முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, ஒரு பிறவிலேயே கோடி முறை அங்காள பரமேஸ்வரியை வலம் வந்து வணங்கி, எம்பெருமானின் திவ்ய திருவடிகளை 48 லட்சம் ஆண்டுகள் தரிசனம் செய்த அந்த சற்குரு வெங்கடராமன் என்ற சச்சிதானந்த விஸ்வரூபம் தன்னைப் பற்றி கூறுவது என்ன ?
“அடியேன் ஒரு கேவலமான நாய் ! ”தற்போது எங்கும் பரவலாக பேசப்படும் டெங்கு காய்ச்சல் என்னும் விஷக்காய்ச்சல் தொன்று தொட்டு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் நோயே ஆகும். ஆனால் பல இறையன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த காய்ச்சல் நோய் பற்றிய விவரங்களை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். Dengue fever என்ற விஷக் காய்ச்ச்ல் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய் என்று விஞ்ஞனாம் கூறினாலும் சித்தர்கள் இது பற்றி ஏற்கனவே அளித்த ஆன்மீக பதிலையே மீண்டும் நினைவு கூறுகிறோம். நல்லதும் தீயதும் பிறர் தர வாரா, நமக்கு வரும் அனைத்து நோய்களும் துன்பங்களும் நம்முடைய முந்தைய வினைகளின் விளைவுகளே. இதைச் சற்றும் குழப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டால்தான் நாம் டெங்கு காய்ச்சலுக்கு விரைவில் நிவாரணத்தைப் பெற முடியும். இல்லையேல் அது பிறவிகள் தோறும் நம்மையும் நமது சந்ததிகளையும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற பெரும்பாலான காய்ச்சல்களுக்கு மூல காரணம் நாம் பெரியோர்களையும், வயதானவர்களையும், ஊனமுற்றவர்களையும் உதாசீனப்படுத்தி அவர்களுக்கு வேதனை அளித்ததே ஆகும். நாம் அளித்த வேதனையின் ஆழத்தைப் பொறுத்து நாம் அடையும் வேதனையின் தீவிரமும் இருக்கும். உதாரணமாக, ஒரு முதியவரைப் பார்த்து, “என்ன பெரிசு சௌக்கியமா ?“ என்ற குசல வார்த்தைகளில் கலந்த கிண்டல் பேச்சு கூட ஒரு நிமிட டெங்கு வேதனையை அளித்து விடும் என்று சித்தர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு வயதான நாயையோ, கழுதையையோ துன்புறுத்தினாலும் அதுவும் டெங்கு காய்ச்சலை வரவேற்பதாகும். சில சமயம் வயதானவர்கள் அறியாமையால் மேலே இடித்து விடுவதோ, காலை மிதித்து விடுவதோ உண்டு. அப்போது பாதிக்கப்பட்டவர், “ஏன் உன் கண் அவிஞ்சு போச்சா ?“ என்று தவறுக்கு மீறிய வசைச் சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. இவ்வாறு திட்டுபவர் பாத யாத்திரை, அன்னதானம் போன்ற நற்காரியங்களை இயற்றி புண்ணிய பலத்துடன் இருந்தால் அவருடைய வாக்குகள் பலித்து அதனால் அந்தப் பெரியவர் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். காலச் சக்கரத்தில் பாதிக்கப்பட்டவரின் புண்ணிய பலம் குறையும்போது அந்த பெரியவர் அடைந்த வேதனைகளை ஏதாவது ஒரு கடுமையான காய்ச்சலாக அனுபவித்தே தீர வேண்டும். எனவே மற்றவர்களை விட தெய்வீக காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வார்த்தைகளைக் கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால்தான் அப்பர், மாணிக்க வாசகர் போன்ற பெரியோர்கள் எப்போதும் தங்களை நாய், அடிமை என்றே சதாசர்வ காலமும் பாவித்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தார்கள். இவ்வாறு கோயில், குளம் என்று வழிபாடு செய்தவர்களும் நோய் வாய்ப்படுவதற்கு மேற்கூறியவையும் சில காரணங்களாகும் என்று தெளிந்தால்தான் எந்த வேதனை வந்தாலும் அதை இறையருளால், குருவருளால் ஏற்போம் என்ற திட மனதை நாளடைவில் பெற முடியும். இந்த திட மனதுதான் கடவுள் தரிசனத்திற்கு முன்னோடி.
சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் உறங்கும்போது இடது பக்கமாக ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டு கைகள் இரண்டையும் குவித்து தன்னுடைய முகத்திற்கு நேரே வைத்துக் கொள்வது வழக்கம். “உறங்கும்போது தேவதைகள் நம்மைச் சுற்றி உலவுவது உண்டு. அவ்வாறு அவர்கள் வரும்போது நாம் அவர்களை மரியாதையுடன் வரவேற்பதற்காக இவ்வாறு பணிவுடன் இருக்க வேண்டும்,“ என்று அவர் தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளிப்பார். இவ்வாறு உறங்கும்போது கும்பிட்ட நிலையில் கைகளை வைத்துக் கொண்டு பணிவுடன் துலங்கும் பக்தர்கள் பலர் இன்றும் நம்மிடையே உண்டு. அத்தகைய இறையன்பர்களை எவ்வித காய்ச்சல் நோய்களும் அண்டாது.ஸ்ரீசுடர் தம்பன பரதேவி
தஞ்சாவூர் வீரசிங்கம்பேட்டை ஸ்ரீவைத்யாநாத சுவாமி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவாலாம்பிகை அம்பிகைக்கு சித்தர்கள் சூட்டியுள்ள நாமமே ஸ்ரீசுடர் தம்பன பரதேவி என்பதாகும். தம்பனம், ஸ்தம்பனம் என்றால் நிறுத்துதல் என்று பொருள். ஒளி சக்தியை, பிரகாசத்தை ஸ்தம்பனம் செய்யும் சக்தியுடன் இந்த பிரபஞ்சத்தில் விளங்கும் அம்பிகையே ஸ்ரீவாலாம்பாள் ஆவாள். ஒளி என்பது நாம் சாதாரணமாக கண்களால் தரிசிக்கக் கூடியது. இந்த ஒளி சக்தியானது பிரம்மாண்டமாக பரிமாணம் கொள்ளும்போது அதை சுடர் என்று அழைக்கிறோம். அதனால்தான் மாணிக்கவாசகர் இறைவனை சோதியே சுடரே என்று அழைக்கிறார். நாம் மின் விளைக்கை ஏற்றும்போது விளக்கிலிருந்து வெளிச்சம் புறப்பட்டுச் செல்கின்றது அல்லவா ? ஸ்விச்சை நிறுத்தியவுடன் விளக்கும் அணைந்து விடுகிறது. ஆனால், ஸ்விச்சை நிறுத்தி மின்சாரத்தை நிறுத்தி விட்டாலும் பரவிய மின் வெளிச்சத்தை மேற் செல்ல விடாமல் நிறுத்த முடியுமானால் அதுவே ஒளியை ஸ்தம்பனம் செய்வது என்பதாகும். இவ்வாறு ஒளியையும் ஸ்தம்பனம் செய்யும் ஆற்றல் பெற்றவர்களே சித்தர்கள். இந்த ஒளி தம்பன சக்தியை அனுகிரகமாக அளிக்கும் அம்பிகையே ஸ்ரீவாலாம்பிகை என்பது இதுவரை எவரும் அறியாத அற்புத இரகசியம் ஆகும். இவ்வாறு ஸ்தம்பனம் செய்த ஒளியின் மகத்துவத்தைப் பற்றி சித்தர்களே முழுமையாக உணர்ந்தவர்கள் என்றாலும் இந்த ஒளி ஸ்தம்பனத்தில் ஒன்றிரண்டு இரகசியங்களை குருவருளால் இப்போது தெளிவுபடுத்துகிறோம். ஓரிடத்தில் ஒளியை ஸ்தம்பனம் செய்து விட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவ்விடம் பிரகாசமாகவே இருக்கும். இத்தகைய அனுகிரகத்தை பெற்றவரே ஸ்ரீஅபிராம பட்டர் ஆவார். ஸ்ரீபட்டர் அம்பாளின் ஒளிச் சுடரை ஸ்தம்பனமாகப் பெற்றதால் அவர் எப்போதும் அம்பாளின் சோதி தரிசனப் பிரகாசத்திலேயே மூழ்கி இருந்தார். அவருக்கு எப்போதும் நித்ய பௌர்ணமியே. அதனால் அரசன் திதியைப் பற்றிக் கேட்டபோது அபிராம பட்டர் பௌர்ணமி என்று தான் அனுபவித்துக் கொண்டிருந்த அம்பாளின் சோதிப் பிரகாசத்தை வெளியிட்டார். இந்த ஸ்தம்பன சோதியை எந்த மின் சக்தியாலும் ஊடுருவ முடியாது. அதாவது ஸ்தம்பன ஒளி பரிணமிக்கும் இடத்தில் லட்சம் வாட்ஸ் சக்தி உடைய ஒரு மின் விளக்கை ஏற்றினாலும் அது அந்த ஸ்தம்பன ஒளியை ஊடுருவிச் செல்ல முடியாது. அதி பயங்கர இடி மின்னலும் கூட ஸ்தம்பனம் செய்யப்பட்ட ஜோதியின் அருகில் செல்ல முடியாது. எனவே இங்கு நீங்கள் ஸ்தம்பன சோதியில் ஒளிரும் ஸ்ரீவாலாம்பிகையை தரிசனம் செய்கிறீர்கள் என்றால் அது நிச்சயம் நீங்களோ அல்லது உங்களுடைய மூதாதையர்களோ திருஅண்ணாமலையை ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்து சேகரித்த புண்ணியத்தின் விளைவே என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.இந்த ஒளி ஸ்தம்பனத்தால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் ? நாம் சாதாரணமாக காய்ச்சல் என்று கூறும்போது அதில் ஆயிரமாயிரம் கர்ம வினைகள் பொதிந்துள்ளன. உதாரணமாக, ஒரு நாயைக் கல்லால் அடிப்பதற்கும் குச்சியால் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா ? அதுபோல் மனிதன் எத்தனை விதமான காய்ச்சல் நோயை அனுபவிக்க வேண்டுமோ அவை அனைத்திற்கும் பரிகாரம் அளிக்கக் கூடியதே ஸ்ரீவைத்யநாத சிவாலயத்தில் நிலவும் 300 சிவலிங்கங்கள். இங்கு தூலமாக 276 சிவலிங்கங்களும் சூட்சுமமாக 24 சிவலிங்கங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவாலாம்பிகை அருளும் ஒளி ஸ்தம்பன சக்தியை ஒருவர் பெற்றுவிட்டால் அவரை எந்தவிதமான காய்ச்சல் நோயும் அண்ட முடியாது. எந்த வித கர்மவினைகளாலும் நெருங்க முடியாததே ஒளி தம்பன சுடர். ஸ்ரீஅகத்திய முனிவர் சதுரகிரி மலையில் வாலை குடை மடு என்ற குகையில் 300 ஆண்டுகள் தவமியற்றி இந்த அனுகிரக சக்தியை ஸ்ரீவாலாம்பிகையிடம் ஒளி தம்பன சக்தியாக அர்ப்பணித்துள்ளார். ஸ்ரீஅகத்திய மரபில் வந்த அனைவரும் எளிய வழிபாடுகள் மூலம் இந்த ஒளி தம்பன சக்தியைப் பெறலாம். சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், பசு நெய் இவற்கைக் கலந்து வளர்பிறை அஷ்டமி திதி முதல் அடுத்த தேய்பிறை அஷ்டமி திதிக்குள் ஏதாவது ஒரு நாள் ஸ்ரீவைத்யாநாத சுவாமி திருத்தலத்தில் அந்த பஞ்ச எண்ணையைக் கொண்டு 108 அகல் தீபங்களை ஏற்றி அதில் ஒரு அகல் விளக்கை மட்டும் பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு வந்து அதில் உள்ள எண்ணெய்யை மற்ற எண்ணெயுடன் சேர்த்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அனைவருமே இந்த ஒளி தம்பன சக்தியைப் பெற்று எவ்வித காய்ச்சல் நோயும் அண்டாத ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம். மாதம் ஒரு முறையாவது இத்தகைய தீப அகலைப் புதப்பித்துக் கொள்ள வேண்டும்.
சித்தர்களின் பாசறையாக விளங்கும் சதுரகிரியில் உள்ள வாலை குடை மடு என்னும் குகை இன்றும் எவராலும் நெருங்க முடியாத இரகசியப் பகுதியில் உள்ளது. மக்களுக்கு அருந் தொண்டாற்றுவதையே தம் உயிர் மூச்சாக கொண்ட சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இந்த குகைக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி இந்த ஒளி தம்பன சக்தியைப் பிரசாதமாகப் பெற்று மேற்கூறிய பரகாய பிரவேச கோபுரத்தில் சக்கர ரூபத்தில் பதித்துள்ளார்கள் என்பதும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சித்த இரகசியமாகும். எவரும் நெருங்க முடியாத இந்த குகைக்கு கயிறைக் கட்டி அதில் தொங்கிக் கொண்டே மேலேறிய அந்த சாசகத்தை அவர் விவரித்தபோது அதைக் கேட்ட அடியார்கள் ஒரு பிரம்மாண்டமான திரில்லர் சினிமாவையும் விஞ்சிய அனுபவத்தைப் பெற்றார்கள். ஆமாம், எவரும் நெருங்க முடியாத அந்த குகைக்குச் செல்ல அங்கு கயிற்றைக் கட்டி வைத்திருந்தது யார் ?
பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட சுத்தமான திருநீறை நீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொண்டு திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த, “மந்திரமாவது நுறு ...“ என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தை நம்பிக்கையுடன் ஓதுவதால் எத்தகைய காய்ச்சல் நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மருத்துவர்களால் கைவிடப் பட்டு மரணத்தின் எல்லைக்கே சென்று திருநீற்றுப் பதிகத்தின் மகிமையால் நிவாரணம் பெற்றோர் ஏராளம்.
ராயபுரம் ஸ்ரீஅங்காளம்மனுக்கு தாமே அரைத்த மஞ்சளால் அபிஷேகம் நிறைவேற்றி, “திருநீற்றின் மகிமையை ...“ என்று தொடங்கும் ஸ்ரீஅங்காளி அந்தாதி பாடலை ஓதுவதாலும் எத்தகைய காய்ச்சல் நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
பொதுவாக மற்ற கர்மங்களைப் போல நோய்களையும் நிர்வாகம் செய்வதற்காக நவகிரக மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். இவ்வாறாக காய்ச்சல் நோய்க்கு அதிபதியாகத் துலங்கும் ஸ்ரீசனீஸ்வர மூர்த்திக்கு ப்ரீதியான உணவை அளிப்பதன் மூலமும் காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் பெறலாம். கல் உரல் அல்லது ஆட்டுக்கல்லில் இரும்பு கடப்பாரை அல்லது இரும்பு பூண் போட்ட மர உலக்கையால் அரிசியை இடித்து தயார் செய்த இடியாப்பத்தில் தேங்காய் பால் கலந்து தானம் அளிப்பதால் காய்ச்சல் நோய்களிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.ஸ்ரீஜுரஹரேஸ்வரர், திருமழபாடி திருத்தலம்
ஸ்ரீஜுரஹரேஸ்வரர் லிங்க வடிவமாக எழுந்தருளிய தலங்கள் அனைத்து காய்ச்சல் நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியவையே. திருமழபாடியில் அருள்புரியும் லிங்க மூர்த்திக்கு 108 இளநீர் அபிஷேகம் சிறப்பு. சென்னை கோவூர் திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்திக்கு தேன் அபிஷேகம் நிறைவேற்றி வில்வத்தால் அர்ச்சனை செய்தலால் எத்தகைய விஷக் காய்ச்சலும் உடனே விலகும்.ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவிலில் மிகவும் அபூர்வமாக ஸ்ரீஜுரஹரேஸ்வரர் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி ஒரு நாழிகை நேரத்திற்கு குறையாமல் தொடர்ந்து சந்தனத் தூள் அகில் கலந்த சாம்பிராணி தூபம் இடுவதால் அனைத்து காய்ச்சல் நோய்களிலிருந்தும் துரித நிவாரணம் கிட்டும்.பொதுவாக அக்னி லிங்க மூர்த்திகள் எழுந்தருளிய தலங்கள் காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் தலங்களாகும். ஸ்ரீராமர் தன்னுடைய படையில் உள்ள குரங்குகள் கடுமையான காய்ச்சல் நோயால் அவதியுற்றபோது ஸ்ரீதிருக்காட்டுப்பள்ளி மூர்த்தியிடம் அவர்களுடைய நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்து கொண்டாராம். ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின் இததலத்திற்கு வந்து தற்போது பூண்டி மாதா திருத்தலம் அமைந்த இடத்தில் கருங்காலி விறகால் அக்னி உண்டாக்கி அரிசி புட்டு செய்து லட்சக் கணக்கான மக்களுக்கு புட்டு தானம் செய்து தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டாராம். ஸ்ரீராமர் காட்டிய வழியில் இன்று பூண்டி மாதாவை தரிசனம் செய்து திருக்காட்டுப் பள்ளி திருத்தலத்தில் புட்டு தானம் செய்வதால் அக்னி சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து துரித நிவாரணம் கிட்டும் என்பது சித்தர்களின் அறிவுரை.ஸ்ரீஔஷத தட்சிணா மூர்த்தி. வீரசிங்கம்பேட்டை
ஒரு முறை ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடன் பசுக்களை பராமரிக்கும் ஒரு கோசாலையில் திருப்பணி செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த பசுஞ் சாணத்தைக் கண்ட சற்குரு கடும்லோபி ஒருவன் தங்கக் கட்டியின் மேல் பாய்வது போன்ற ஆர்வத்துடன் அந்த சாணக் குவியல் மேல் பாய்ந்து அதை அப்புறப்படுத்தத் தொடங்கினார். அதுபற்றி கேட்டபோது அவர் புன்னகையுடன், “உங்கள் கண்களுக்கு இது மாட்டுக் கொட்டகை. அடியேனைப் பொறுத்தவரை இது கைலாயமே, வைகுண்டமே. இங்கு திருப்பணி புரியம் அடியார்கள் அனைவரும் இப்போது வைகுண்டத்திலோ, கைலாயத்திலோதான் திருப்பணி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் ஐயம் வேண்டாம்,“ என்று சற்குருவுடன் இணைந்து நிறைவேற்றும் திருப்பணியின் மகிமையைப் பற்றி விவரித்தார்கள். இன்றும் இத்தகைய உயர்ந்த தெய்வீக லோகங்களுக்கு செல்லக் கூடிய அனுகிரகத்தை அளிக்கக் கூடிய தெய்வமே ஸ்ரீவாலாம்பிகை ஆவாள்.
ஸ்ரீவாலாம்பிகையை பரதேவி என்று சித்தர்கள் அழைப்பதன் பின்னணியில் உள்ள தெய்வீக இரகசியம் இதுவே ஆகும். இகம் என்றால் இவ்வுலக வாழ்வு, பரம் என்றால் தெய்வீக உலக வாழ்வு. எனவே பரதேவி என்றால் தெய்வீக உலக வாழ்வை அனுகிரகமாக அளிக்கும் தேவி என்று பொருள். ஏற்கனவே கூறியது போல் பஞ்ச எண்ணெய் தீபங்களை ஸ்ரீவைத்யநாத சுவாமி திருத்தலத்தில் ஏற்றி அதில் ஒருஅகலை பிரசாதமாக வீட்டில் ஏற்றுவதால் அடியார்கள் குறித்த பல தெய்வீக லோகங்களில் வழிபாடு இயற்றுபவர்களாக ஆகிறார்கள் சற்குருவின் கருணை கடாட்சத்தால். எனவே சற்குருவின் கருணை கடாட்சம் என்பது என்றும் எங்கும் பொலியும், பொழியும் சோதி என்பதில் எவ்வித ஐயப்பாடும் வேண்டாம்.ஸ்ரீநந்தீஸ்வரர், ஸ்ரீவைத்யநாத சுவாமி திருத்தலம்
இந்த பஞ்ச எண்ணெய் வழிபாட்டை நாம் பல நற்காரிய சித்திகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், பசு நெய் என்ற ஐந்து நெய்யை சமமாக கலந்து பெறுவதே பஞ்ச தீப எண்ணெய். ஆனால், காரிய சித்திக்காக இந்த விகிதத்தை மாற்றிப் பயன்படுத்தும் முறையை இங்கு அளிக்கிறோம். நல்லெண்ணெய் தவிர மற்ற நான்கு எண்ணெய் சமமாக இருக்க அதற்கு சமமாக நல்லெண்ணெய் இருந்தால் அது யம தீபத்திற்கு ஏற்றதாகும். அதாவது தேங்காய் எண்ணெய் 100 மிலி, விளக்கெண்ணெய் 100 மிலி, இலுப்பெண்ணெய் 100 மிலி, பசு நெய் 100 மிலி என்று எடுத்துக் கொண்டால் இது நான்கும் சேர்ந்த கூட்டுக் கலவைக்கு சமமாக (100+100+100+100) 400 மிலி நல்லெண்ணெய் சேர்த்தால் அது யம தீபத்திற்கு உகந்ததாகும். சனிக் கிழமை, யம கண்ட நேரம், மரண யோக நாட்களில் திசைக்கு இரண்டு தீபங்களாக குறைந்தது எட்டு தீபங்களையும் எட்டின் மடங்கில் தீபங்களை ஏற்றி வழிபடுதலால் நீண்ட ஆயுளைப் பெறலாம். உண்மையில் இதுவே லட்சுமி கடாட்ச வழிபாடாகும். ஒருவர் கோடி கோடியாக பணம் இருந்தாலும் அகால மரணமோ, விபத்தோ ஏற்பட்டால் அந்த அபார செல்வத்தால் என்ன பயன் ? விபத்துக்கள், அகால மரணங்களை தடுக்கக் கூடியதே மேற்கூறிய எமதீப வழிபாடாகும்.
நல்லெண்ணெயைப் போல தேங்காய் எண்ணெய் விகிதத்தை மாற்றினால் அது குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சுபமங்கள தீபமாக அமைகிறது. இங்கு அளிக்கும் விகிதத்தில் குசா சக்திகளும் பொதிந்துள்ளதால் இதனால் கிட்டும் நற்பலன்கள் பன்மடங்காகும். அதே போல் இந்த பஞ்ச எண்ணெய் கலவையில் இலுப்பெண்ணெய்க்கு பதிலாக வேப்பெண்ணெயை கலந்து துர்கை, மாரியம்மன் போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிடாய்த் துன்பங்கள் நீங்கும். திருமணத் தடங்கல்கள் விலகும்.ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீவைத்யநாத சுவாமி திருத்தலம்
தமது அடியார்கள் தெய்வீகத்தில் முன்னேறுவதற்காக சற்குருமார்கள் ஏற்கும் கடுமையான உழைப்பை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் திருச்சி சென்னை போன்ற மாநகரங்களை சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ சேவையை தமது அடியார்கள் மூலம் நிறைவேற்றினார்கள். அப்போது அந்த சேவைகளில் சற்குருவின் கருணையே மருந்தாக மாறி மருத்துவ முகாமில் சேவை பெறுபவர்களின் வியாதியைக் குணப்படுத்துகிறது என்றாலும் அந்த தெய்வீக சக்தியையும் தாங்குவதற்கு மருத்துவ முகாமில் பணி புரியும் அடியார்களுக்கு ஔஷத சக்தி தேவை அல்லவா ? அதற்காக பல அடியார்களை கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மூலிகை சுனைகளில் நீராடச் செய்து ஸ்ரீகோரக்கரின் குகைக்கும் அழைத்துச் சென்றார் ஸ்ரீவாத்யார அவர்கள். கோரக்கர் குகைக்கு செல்லும்போது ஒரு நீரோடை வழியாக அடியார்களை அழைத்துச் சென்றார்கள். நீரோடையில் ஆழம் அதிகமாக இல்லாவிட்டாலும் மணல் இல்லாமல் பாறைகளே நிறைந்திருந்ததால் ஓடையில் வழுக்கல் அதிகமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக அடியார்கள் நீரோடையைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சற்குருவின் பின்னால் வந்து கொண்டிருந்த அடியார் கால் வழுக்கி விட்டது. ஆனால், அவர் கீழே விழும் முன் மின்னல் வேகத்தில் ஸ்ரீவாத்யார் திரும்பி அந்த அடியாரின் கையை இறுகப் பிடித்து அவர் கீழே விடாமல் காப்பாற்றி விட்டார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அந்த அடியாரைத் தொடர்ந்து வந்த அடியார் கூட தனக்கு முன்னால் செல்லும் அடியார் கீழே விழப் போகிறார். என்று உணர முடியவில்லை. ஆனால், எங்கும் எப்போதும் விளங்குவது அல்லவா குருவின் கருணை ? அதற்கு மேலும் கிடையாது கீழும் கிடையாது. உள்ளும் கிடையாது, வெளியும் கிடையாது. அது சச்சிதானந்த பரப்பிரம்மம் என்பதை கண் கூடாக அனைத்து அடியார்களும் தரிசனம் செய்து குருவருளை முழுமையாக உணர்ந்தபோது கொல்லிமலையின் குளிர்ச் சாரல் இன்னும் அதிகமானது !
ஏன் அந்த அடியாரின் பின்னால் வந்தவர் அவரைக் கவனிக்கவில்லை என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீவாத்யார் அவர்கள், “யோவ், அவர் கரும்பு, நாங்கள் இரும்பு,“ அதாவது அந்த அடியாரை கரும்பு மீசை அடியார் என்று ஸ்ரீவாத்யார் அழைப்பார். நெல் போல் அல்லாமல் கரும்பு மெதுவாக வளர்வதால் மெதுவான நடவடிக்கை உள்ளவரை ஸ்ரீவாத்யார் கரும்பு என்று அழைக்கிறார். எனவே கரும்பாக இருக்க வேண்டிய காலம் எது, இரும்பாக வேண்டிய காலம் எது என்பதை சற்குரு அழகாக தொட்டுக் காட்டினார் கோரக்கர் குகையில். கோரக்கர் குகையிலிருந்து திரும்பி வரும்போது அந்த நீரோடை வழியாக வராமல் வேறுபாதை வழியாக ஸ்ரீவாத்யார் அழைத்து வந்து விட்டார். அப்போதுதான் அந்த நீரோடையின் மகிமையும் கோரக்கர் குகை மகிமையும் அடியார்களுக்குத் தெரிய வந்தது. அது என்ன, அந்த மூலிகைகள் கலந்த தீர்த்தத்தில் நடந்து கோரக்கர் குகைக்கு சென்றால்தான் கோரக்கர் குகையில் உள்ள தெய்வீக மருத்துவ சக்திகளை கிரகித்து அதை மகேசன் சேவையாக மருத்துவ முகாமில் அடியார்கள் பயன்படுத்த முடியும் என்பதே அந்த இரகசியம் ஆகும். ஸ்ரீவாத்யாரின் இரும்புப் பிடியைப் பற்றி இன்றும் அந்த அடியார் நினைத்து நினைத்து உள்ளம் பூரித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே கரும்பாக விளங்கும் சற்குருவின் பிடி இரும்பாக மாறுகிறது என்றால் அதுவும் மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமே !ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில், அன்பில், லால்குடி
இறைவனின் பேராற்றலில் விளையும் தரிசனத்தை எந்த மனித சக்தியாலும் தாங்க இயலாது. அதனால் இறைவனே படைப்பின் தொடக்கத்தில் இடி, மின்னல், காற்று, மழையாய் தன் தோற்றத்தை வெளிப்படுத்த அதைக் கண்டு பேரானந்தம் கொண்டான் ஆதி மனிதன். காலம் செல்லச் செல்ல மனிதர்களின் தெய்வீக சக்தி குறைய ஆரம்பிக்க இறைவனின் ஏதாவது ஒரு வடிவத்தைக் காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போது இறைவனின் அன்பை லிங்க வடிவில் இந்த பூவுலகில் தோற்றுவித்தார். இறைவனின் பேரன்பு உலகில் முதன் முதலில் லிங்க வடிவில் தோன்றிய இடமே லால்குடி என்று சித்தர்கள் அருளுவதால் திருச்சி வாழ்மக்கள் அனைவரும் தாங்கள் இந்த புனித பூமியில் தோன்றியதற்காக இறைவனுக்கு எந்நாளும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். லால்குடி என்றால் செவ்வான வண்ணன் குடிகொண்ட திருத்தலம் என்று பொருள்.
அன்பு லிங்கத்தை ஒரு முறை தரிசனம் செய்தாலே மனிதன் பிறவா நிலையை அடைந்து விடுவான் என்பதால் அன்பு லிங்கத்தைப் பற்றிய விவரங்களை சித்தர்கள் இரகசியமாகப் பாதுகாதது வைத்துள்ளனர். ஆனாலும் யானைகள் வழிபட்ட ஸ்ரீகஜாரண்யேஸ்வரர், திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரர் போன்ற லிங்க மூர்த்திகளை வழிபடுதலால் அன்பு லிங்கத்தை வழிபட்ட பலனில் ஒரு பகுதியைப் பெற முடியும் என்று கீழ்க் காணும் பால் மயக்க நாடிப் பாடல் வழிகாட்டுகிறது.ஸ்ரீபோகர் :
அன்பாளும் அரவத்தான் அவன் திறம் எத்திறம்
மண்பால் மகிமை காண மண்ணுயிர்க்கு ஆகாதோ ?
ஸ்ரீஅகத்தியர் :
அன்பை அன்பால் கட்ட அது உனக்கு ஆகாது பாரேன்
அன்பால் ஆனையைக் கட்டினான் அவன் வழி நீ செல்வாயே !இந்த அற்புதமான அன்பு லிங்கத்தின் தரிசனம் பெற்றவர்களே காரைக்கால் அம்மையார், கனிந்த கனி ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார், ஸ்ரீசத்யசாய் பாபா, ஸ்ரீஅமிர்தானந்த மயி போன்ற பெரியோர்கள் ஆவர்.
இறைவனின் லிங்க வடிவைக் கண்ட மனிதன் அதோடு திருப்தி அடைந்தானா ? இல்லை. அடுத்து அவன் தன்னைப் போலவே இறைவனையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பவே சிவபெருமான் தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர், கால பைரவர், நடராஜர், கஜசம்ஹார மூர்த்தி போன்ற பல இறைவடிவங்களை ஏற்று திருத்தலங்களில் எழுந்தருளினான். இதனால் மனிதர்கள் ஓரளவு மனச் சாந்தி அடைந்தார்கள் என்றாலும் இறைவனின் சக்தி வடிவையும் காணும் அவா அவர்களுக்கு தோன்றவே இறைவன் அம்பாளாக, அர்த்தநாரீஸ்வரராக, துர்கை போன்ற வடிவங்களில் தோன்றி மக்களின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்தான்.ஸ்ரீகஜாரண்யேஸ்வரர், ரெங்கநாதபுரம், திருக்காட்டுப்பள்ளி அருகே
அடுத்து மனிதன் தன்னைப் போலவே இறைவனுக்கும் ஆடை ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தால் என்ன என்று பேராவல் கொண்டான். இதுவும் இயற்கைதானே. அப்போது தோன்றியவர்களே பெருமாள் மூர்த்திகள், பிள்ளையார், முருகப் பெருமான் போன்ற இறை மூர்த்திகள். நாளடைவில் நவகிரக மூர்த்திகளின் ரூப சஞ்சாரங்களும் திருக்கோயில்களில் தோன்றின. இவ்வாறு கலியுக ஆரம்பத்தில் தோன்றியதே மாரியம்மன் மூர்த்திகள், முருக வழிபாடு, காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களின் வழிபாடாகும். கல்வி அறிவில்லாத பாமர மக்களும் இறைவனுடன் நேரிடையாக அன்புடன் உறவாட எழுந்த மூர்த்திகளே மாரியம்மன் மூர்த்திகள் ஆவர். இந்த ஆதி மாரியம்மனின் அன்பு இல்லமே லால்குடி அருகில் உள்ள அன்பில் மாரியம்மன் திருத்தலமாகும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இனிய தெய்வீக இரகசியமாகும். எத்தகைய மந்திர தந்திர வழிபாடுகள் அறியாதோரும் மனிதர்களைப் போல உறவாடி பக்தி வளர்க்கக் கூடிய பராசக்தி அம்சமே அன்பில் மாரியம்மன் ஆவாள். எத்தகைய கடுமையான காய்ச்சல் நோய்களும் இத்தலத்தில் நிறைவேற்றப்படும் தீப வழிபாட்டால் விரைவில் நிவாரணம் பெறும். நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், பசு நெய் சேர்ந்த முக்கூட்டு எண்ணெயால் 36, 72, 108 என்ற கணக்கில் 36ன் மடங்காக தீபம் ஏற்றி வழிபடுதலால் எத்தகைய விஷக் காய்ச்சல் நோய்களும் உஷ்ண நோய்களும் துரிதமாக நிவாரணம் பெறும். இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப் பாய் தானம் இத்தலத்தில் நிறைவேற்றுதலால் எக்காலத்தும் நோயால் வாடும் நிலையும் பிறர் தயவில் வாழும் நிலையும் ஏற்படாமல் இத்தல அன்பு தெய்வம் காக்கும். ப்ளாஸ்டிக் பாய்களைத் தவிர்க்கவும்.
நிலம், நீர், நெருப்பு என்ற முக்கூட்டு தத்துவத்தையே மாரி என்று அழைக்கிறோம். மேலும் அன்பில் அருகில் உள்ள காயத்ரீ, கொள்ளிட முக்கூடல் சங்கமம் தற்போது கால மாற்றங்களால் தர்ப்பணம் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதால் அன்பில் மாரியம்மன் தலத்தில் ஏற்றப்படும் முக்கூட்டு தீப எண்ணெய் வழிபாடு பித்ருக்களுக்கு ஒரு சாந்தி வழிபாடாகவும் முச்சுழல் மாரி சக்தி என்ற அக்னி நோய் நிவர்த்தி சக்தியை நல்கும் வழிபாடாகவும் அமைகிறது.சில சமயங்களில் திடீரென உடல் உஷ்ண நிலை அளவுக்கு அதிகமாக மிகுந்து காய்ச்சல் ஏற்படுவது உண்டு. எவ்வித சிகிச்சைகளுக்கும் மருந்துகளுக்கும் கட்டுப்படாது. பெரும்பாலும் மகான்களை, உன்னதமானவர்களை உதாசீனப்படுத்துவதால் இத்தகைய காய்ச்சல் உண்டாவதுண்டு. காற்று, ஆவி சேஷ்டைகளாலும் இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படும். ஸ்ரீஅகத்திய பெருமான் திருக்குற்றால நாதர் திருத்தலத்திற்கு சென்றபோது அவரை கோயிலினுள் நுழைய ஆலயக் காப்பாளர்கள் அனுமதிக்காதபோது அவர்கள் இத்தகைய உடல் வேதனைக்கு உள்ளானார்கள். பின்னர் ஸ்ரீஅகத்திய பெருமானே தென்காசி ஈசனை வேண்டி அவர்களுடைய தவறுகளை மன்னித்து அருளுமாறு பிரார்த்தித்து தவறிழைத்தவர்களுக்கு பரிகாரத்தையும் பெற்றுத் தந்தார். விதை நீக்கிய பலாச்சுளையில் தேனை நிறைத்து அதை ஒரு சிறிய சப்பாத்தி மேல் வைத்து தானம் அளித்தலே ஸ்ரீஅகத்திய பெருமான் பெற்றுத் தந்த பரிகாரமாகும். இந்த பரிகார முறைக்கு தேன் குடை தானம் என்று பெயர். தற்போது இந்த தேன் குடை பரிகாரத்தை நிறைவேற்ற விரும்புபவர்கள் ஒவ்வொரு பலாச்சுளைக்கும் “தலையே நீ வணங்காய் ...“ என்று தொடங்கும் திருஅங்கமாலை தேவாரப் பதிகத்தை ஓதி தானம் அளித்தலால் இனந் தெரியாத கடுமையான காய்ச்சல் நோய்க்கு இது தகுந்த நிவாரணமாக அமைகிறது. திருக்குற்றால நாதர் திருக்கோயிலிலும், தென்காசி சிவத்தலத்திலும், லால்குடி அருகில் திருமங்கலம் சிவாலயத்திலும், வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள திருப்புன்கூர் சிவாலயத்திலும் இத்தகைய தானத்தை நிறைவேற்றுதல் சிறப்பு. ஒவ்வொரு பலாச் சுளைக்கும் ஒரு முறையாவது திருஅங்கமாலையை ஓத வேண்டியது அவசியம். குறைந்தது 21 பலாச்சுளையை தானமாக அளிக்க வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக திருஅங்கமாலையை ஓதுவதால் தானம் சிறப்பாக அமையும். சிறிய செலவிலான, எளிய முறையில் அமைந்த மகத்துவம் பெற்றதே ஸ்ரீஅகத்தியர் அருளிய தேன் குடை தான வழிபாடாகும். திருமணம், மருத்துவம் போனற அத்தியாவசிய செலவுகளால் ஏற்பட்ட கடன்களும் இந்த தேன் குடை தானத்தால் நிவர்த்தியாகும். அதே போல லாபத்தை எதிர்பாராமல் கொடுத்த கடன்களும் இந்த தானத்தால் வசூலாகும். கடன் நிவர்த்திக்காக தேன் குடை தானம் அளிப்பவர்கள் திருஅங்கமாலை பதிகத்திற்குப் பதிலாக திருநெடுங்களம் இடர்களையும் பதிகத்தை ஓத வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.ஸ்ரீசாமவேதீஸ்வரர் திருத்தலம், திருமங்கலம், லால்குடி
வேதத்தால் வேதத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாமா ? ஏன் முடியாது என்று சாதித்துக் காட்டியவரே சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். பல வருடங்களுக்கு முன் திருமங்கலம் திருத்தலத்தில் உழவாரத் திருப்பணி நிறைவேற்றும் பாக்கியம் ஆஸ்ரம அடியார்களுக்கு கிட்டியது. திருமங்கலம் கோயில் வெளிப் பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. கோயில் உள் பிரகாரத்தில் தலவிருட்சம் பலா மரத்திற்கு எதிரில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அந்த சிறிய கிணற்றிலிருந்தே நீரை எடுத்து திருப்பணிக்காக பயன்படுத்துமாறு கூறவே அடியார்களுக்கு தயக்கம். காரணம் அந்த கிணற்றில் ஒரு சாண் உயரத்திற்கே நீர் இருந்தது. அதிக பட்சம் பத்து பதினைந்து குடம் நீர் இறைத்தாலே நீர் வற்றி விடும்போல் தோன்றியது. இருந்தாலும் சற்குருவின் உத்தரவை மீற முடியாததால் அந்த கிணற்றிலேயே மோட்டார பம்ப் செட்டை இணைத்து நீர் இறைக்க ஆரம்பித்தார்கள். இடையே கோயிலுக்குள் மின்சார இணைப்பில் ஏதோ கோளாறு ஏற்படவே பம்ப்செட் பொறுப்பில் இருந்த அந்த அடியார் அதை கவனிக்க கோயிலுக்குள் சென்று விட்டார்.அந்த வேலையில் முழுகிய அவர் சில நொடிகளில் நீர் தீர்ந்து விடுமே என்ற எண்ணத்தையும் மறந்து விட்டார். சற்குருவின் உத்தரவின்படி கோயில் முழுவதும் நீர் விட்டு அலம்பப்பட்டது, வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டன, கோயில் நந்தவனத்தில் பூச்செடிகள், மரங்களுக்கெல்லாம் அடியார்கள் நீரை வாரி இறைத்தனர். மாலை சுமார் நான்கு மணிக்கு உழவாரப் பணி நிறைவேறியபோதுதான் பம்ப்செட் பொறுப்பில் இருந்த அடியாருக்கு தான் காலையில் மோட்டாரைப் பொருத்தியபோது ஒரு சாண் அளவு தண்ணீர்தானே அந்த சிறிய கிணற்றில் இருந்தது, அது எப்படி இவ்வளவு நேரம் தண்ணீரைக் கொடுத்தது என்று ஒன்றும் புரியாமல் கிணற்றுக்கு ஓடோடிச் சென்று பார்த்தார். ஆனால், என்ன அதிசயம், காலையில் அவர் பம்ப் செட் பொருத்தியபோது எந்த அளவு கிணற்றில் நீர் இருந்ததோ அதில் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட தண்ணீர் குறைந்ததாக தெரியவில்லை. ஆச்சரியத்தின் உச்சகட்டத்தை அடைந்த அவர் நேரே ஸ்ரீவாத்யார் அவர்களிடம் ஓடிச் சென்று தாங்க முடியாத ஆச்சரியத்துடன் கிணற்றில் தண்ணீர் சற்றும் குறையாத அதிசயத்தை விவரித்தார். வழக்கம்போல் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அந்த அடியார் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டு விட்டு, “ஆமாம், சார். நீங்கள் சொல்வது எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால், அடியேன் அந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்திருந்தால் அல்லவா அது குறைந்திருக்கும் ?”
ஸ்ரீவாத்யாரின் இந்த பதிலால் அந்த அடியாரின் குழப்பம் இன்னும் அதிகரித்தது. அப்போதுதான் ஸ்ரீவாத்யார் அவர்கள் திருமங்கல ஸ்ரீசாமவேதீஸ்வர ஈசனின் மகிமையைப் பற்றி விவரித்தார்கள்.அபூர்வமாக வலது பக்கம் பார்க்கும் காக்கை வாகனம் உடைய ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, திருமங்கலம்
உலகில் வேத சக்தியுடன் பொலியும் தலங்கள் திருக்கழுக்குன்றம். திருவேதிகுடி போல் ஒரு சில தலங்களே உள்ளன. ஆனால், சாமவேத சக்திகளுடன் பொலியும் திருத்தலம் இந்த பிரபஞ்சத்திலேயே திருமங்கலம் சிவாலயம் ஒன்றுதான். இந்த சாமவேத சக்திகளை தரிசனம் செய்யவே எத்தனையோ மகரிஷிகள் பல யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்ற வேண்டி வந்தது. பரசுராமர் இத்தலத்திற்கு வந்தபோது ஸ்ரீசாமவேதீஸ்வரர் தரிசனமே அவருக்குக் கிட்டவில்லை. அதன் பின்னர் அவர் தட்சிணா மூர்த்தி எதிரே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதை பல யுகங்கள் தொடர்ந்து சாமவேதம் ஓதி பூஜித்த பின்னரே அவருக்கு ஸ்ரீசாமவேதீஸ்வரரின் தரிசனம் கிட்டியதாம். ஸ்ரீபரசுராமர், ஸ்ரீஉதங்க மகரிஷி போன்ற உத்தமர்கள் ஓதிய வேத சக்திகள் எல்லாம் இத்தல பலா மரத்தில் சாமவேத சக்திகளாக பரிணமித்துள்ளன. அந்த சாமவேத சக்திகளையே நீர் வடிவில் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கிரகித்து அந்த சாம வேத சக்திகளை ஸ்ரீசாமவேதீஸ்வரருக்கு சித்தாமிர்த அபிஷேகமாக நிறைவேற்றினார்கள். இதுவே வேதத்தை வேதத்தால் அபிஷேகம் செய்த சாமவேத மகாத்மியமாகும்.மயில் வாகனத்தில் அமர்ந்த தெய்வானையுடன் ஸ்ரீமுருகப் பெருமான், திருமங்கலம்
இங்குள்ள நந்தவனம் ஸ்ரீஆனாய நாயனாரால் அவர்தம் கைப்பட உருவாக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டதாகும். உலகில் வேறு எந்த நந்தவனத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு இந்த நந்தவனத்திற்கு உண்டு. ஆனாயர் தம் புல்லாங்குழல் இசையில் சாம வேத சக்திகளை இணைத்து அதை பஞ்சாட்சர தீர்த்தமாக திருமங்கல நந்தவனத்திற்கு வார்த்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். எனவே இந்த நந்தனவனத்தில் உள்ள பூச்செடிகளுக்கு ஒரே ஒரு வாளி நீர் வார்த்தால் கூட அதனால் கிட்டும் பலன்கள் அற்புதம். பூகம்பத்தையும் பூவால் தடுக்கும் தலம் இதுவே !
வேலை வாய்ப்பு இல்லாத படித்த பட்டதாரிகள் இந்த நந்தவனத்தில் மூன்று வண்ணங்கள் உடைய பூச்செடிகளை நட்டு பராமரிப்பதால் அவர்களுக்கு தகுதியான உத்தியோகம் கிடைப்பதுடன் அவர்களுடைய எத்தனையோ தலைமுறைகளும் நற்கதி பெறுவர் என்பது திருமங்கல நந்தவனத்தின் சிறப்பாகும். உதாரணமாக, நந்தியாவட்டை, தங்க அரளி, செம்பருத்தி போன்ற மூன்று செடிகளை நட்டு மூவண்ண சாம சக்திகளை உருவாக்கலாம்.
சென்ற 17.10.2017 அன்று நிகழ்ந்த குருமங்கள கந்தர்வ சிவராஜ யோகத் திருநாளை முறையாக கொண்டாட முடியாதவர்கள் இத்தலத்தில் மேற்கூறிய முறையில் தேன் குடை தானத்தை நிறைவேற்றுவதால் சிவராஜ யோக பலனை மட்டுமாவது ஹேவிளம்பி வருட ஐப்பசி மாதம் முழுவதும் பெறலாம் என்று சித்தர்கள் நல்வரம் அளிக்கின்றனர். சாமவேத சக்திகளைப் பெறவும், சிவராஜ யோக சக்திகளைப் பெறவும் தேன் குடை தானத்தை திருமங்கல தலத்தில் நிறைவேற்றுபவர்கள் திருஞானசம்பந்தி மூர்த்தி நாயனார் அருளிய, “வாசி தீரவே ...“, என்னும் பதிகத்தை ஓதுதல் சிறப்பு.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, காருகுடி
தஞ்சாவூர் ஸ்ரீவைத்யநாத சுவாமி திருத்தலத்தில் பொலியும் ஒளி தம்பன இரகசியங்கள் பற்றி விளக்கியுள்ளோம். அது போல காருகுடி திருத்தலத்தில் பொலியும் அசல தீப சக்திகளும் மனித கற்பனைக்கெட்டாத தெய்வீக வரப் பிரசாதமாகும். நடந்து கொண்டே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதால் ஒருவிதமான பலன் கிட்டும். ஆடாமல் அசையாமல் இரயிலிலோ காரிலோ செல்லும்போது வேறொரு விதமான பலனைப் பெறுவோம். ஓரிடத்தில் அசையாமல் தர்பாசனத்தில் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து காயத்ரீ ஜபிக்கும்போது அது பன்மடங்கு சக்தி பெற்றதாக ஆகிறது. அதே போல காருகுடி திருத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு அதீத சக்திகள் ஏற்படுகின்றன. இது குறித்த ஒரு சம்பவத்தை இங்கு அளிக்கின்றோம்.
சிறுவன் ஸ்ரீஇடியாப்ப சித்தரிடம் குருகுல வாசம் கொண்டபோது அவர் கோவணாண்டியாக அவனுக்கு காட்சி அளித்தார் அல்லவா ? ஆரம்ப நாட்களில் சிறுவனுக்கு ஏன் நமது குருநாதர் இப்படி வெறும் கோவணத்தை மட்டுமே அணிந்த நிலையில் உலா வருகிறார். அவர் வேஷ்டி, சட்டை,துண்டு, பைஜாமா போன்ற உடைகளை அணிந்து கொண்டால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றும். அதுவும் நகரத்தில் கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஜங்ஷன் போன்று ஆயிரக் கணக்கானோர் கூடும் இடங்களில் சிறுவனுக்கு இந்த எண்ணம் தீவிரமாக உதயமாகும். சிறுவன் மனதில் இருந்த எத்தனையோ எண்ணங்களை, ஆசைகளை சிக்கெனப் பிடித்த பெரியவர் இதைப் பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சிறுவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு அவன் ஒருமுறை வாய் திறந்தே தன்னுடைய இந்த சிறு அபிலாஷையை வெளியிட்டான். பெரியவரோ அதைக் கேட்டவுடன் பெரிதாக சிரித்து, “நைனா, இந்த கோவணத்தையே ரொம்ப கஷ்டப்பட்டு கட்டியிருக்கேன்னு உனக்கு தெரியாது. காலம் போனால் நீயே ஒரு நாள் புரிஞ்சுப்பே,“ என்று சொல்லி சிறுவனின் வாயை அடைத்து விட்டார். பெரியவர் கூறிய அந்த நாளும் வரத்தான் வந்தது.
பள்ளி விடுமுறையில் ஒருமுறை பெரியவர் சிறுவனுடன் காருகுடி திருத்தலத்திற்கு வந்தார். காருகுடி அம்பாளின் மகிமையை எல்லாம் விவரித்த பெரியவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சன்னதியில் 21 அகல் தீபங்களை ஏற்றி வைக்கும்படி கூறவே சிறுவனும் அவ்வாறே ஸ்ரீதட்சிணா மூர்த்தி சன்னதியில் தீபங்களை ஏற்றி வைத்து ஸ்ரீஸ்வர்ண காமாட்சி துதியை தன்னை மறந்து ஓதினான். எத்தனை முறை அந்த துதியை ஓதியிருப்பானோ தெரியாது திடீரென அந்த கோயில் அதைச் சுற்றியிருந்த அனைத்துப் பொருட்களும் மறைந்து விட்டன. பெரியவரும் வழக்கம்போல் தன்னை எங்கோ மறைத்துக் கொண்டார். ஆனால், சிறுவன் ஏற்றி வைத்த 21 தீபங்கள் மட்டும் பிரகாசமாக மிகவும் பிரகாசமாக சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த தீப ஜோதியைக் கண்டு சிறுவன் அடைந்த பரமானந்தத்திற்கு எல்லையே கிடையாது. அதன் பின்னர் பல நாட்கள் கழித்துதான் சிறுவன் காருகுடி திருத்தலத்தில் அடைந்தது துரிய நிலை என்பதை உணர்ந்தான். அது வேறு புராணம்.ஞாயிற்றுக் கிழமை இரவு பெரியவருடன் சென்னை திரும்பிய சிறுவன் அடுத்த நாள் காலை பள்ளிக் கூடம் செல்வதற்கான தயார் நிலையில் தன்னுடைய தந்தையிடம் உத்தரவு பெறுவதற்காகச் சென்றான். வழக்கம்போல் தலையை ஆட்டி வழியனுப்பும் தன் தந்தையிடமிருந்து சிறுவனுக்கு கிடைத்ததோ அவன் கன்னத்தில் பளார் என்ற அறை. ஆம், சிறுவனின் அப்பா கொடுத்த பலமான அறையில் சிறுவனின் புத்தக மூட்டை ஒரு மூலையில் போய் விழுந்தது. கைகளால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு துடித்த சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. போய் வருகிறேன் என்று சொன்னதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று சிறுவன் மனதில் குழப்ப சிந்தனைகள் உருவெடுத்தன. சிம்மக் குரலில் சிறுவனின் அப்பா கேட்டார், “ஏண்டா, ஸ்கூலுக்கு போற லட்சணமா இது ?“ சிறுவன் தொடர்ந்த குழப்பத்துடன் விழித்துக் கொண்டே நிற்க அவனையும் அறியாமல் அவன் பார்வை எதிரே இருந்த நிலைக் கண்ணாடியின் மேல் விழுந்தது.
அங்கே சிறுவன் ஆடையின்றி நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான் !!
இதை எந்த அப்பாதான் சம்மதிப்பார். முதல் நாள் காருகுடி திருத்தலத்தில் அசல தீப ஜோதி தரிசனத்தில் தன்னை முழுவதுமாக மறந்த நிலையில் இருந்த சிறுவனுக்கு தான் ஆடை அணிய வேண்டும் என்பதைக் கூட மறந்த அவதூத கோலத்தில் இருந்தான் என்பதை நேரம் செல்லச் செல்ல சிறுவன் மெதுவாக உணர்ந்து கொண்டான். அனைத்தும் உணர்ந்த சிறுவனின் தாயும் தன்னுடைய தனயனின் குருகுல அனுபூதிகள் பூரணம் அடையட்டும் என்ற எண்ணத்தில் அவளும் சிறுவனின் நிலையை உணர்த்தவில்லை போலும். அப்போதுதான் சிறுவனுக்கு மின்னல் போல் தன்னுடைய கோவணாண்டியின் மகிமை புரிய வந்தது. ஒரு தீப ஜோதியின் தரிசனத்திலேயே தன் நிலையை சிறுவன் மறந்து விட்டான் என்றால் சதா சர்வ காலமும் சர்வேஸ்வரனின் அசல தீப வெள்ளத்தில் திளைக்கும் ஸ்ரீஇடியாப்ப சித்தர் கோவணத்தை அணிவது என்பதே மிகவும் கஷ்டமான காரியம்தானே !
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கோவணாண்டி ஈசன் முன்னிலையில் சிறுவன் வெங்கடராமன் ஓதிய ஸ்வர்ண காமாட்சி துதியை கந்தர்வர்களையும் பழிக்கும் அவருடைய இனிய குரலிலேயே இங்கு கேட்டு ஆனந்தம் அடையலாம்.இங்கு நீங்கள் கேட்கும் உடுக்கை ஒலியின் பீஜாட்சர சக்திகளை உங்களால் கிரகிக்க முடிந்தால் நீங்கள் துரீய நிலையில் சஞ்சரிக்கும் தகுதியைப் பெற்றவர்கள் ஆகிறீர்கள்.
ஒளி தம்பன சக்திக்கும் அசல தீப சக்திக்கும் நோய் நிவாரணத்தைப் பொறுத்து விளையும் மாற்றங்கள் என்ன ? ஒளி தம்பனத்தால் ஒரு மனிதன் காய்ச்சல் போன்ற உஷ்ண வியாதிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறான். அசல தீப சக்திகள் தீப ஜோதியை ஆயிரம் மடங்காக பெருக்குவதால் இது சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் எதிர்வினை சக்திகளையும், தீய எண்ணங்களையும் பஸ்மம் செய்து சமுதாயத்தை நோய் நொடிகளிலிருந்து பாதுகாக்கிறது. காருகுடி திருத்தலத்தில் சிறுவன் வெங்கடராமன் பெற்ற மற்றோர் அனுகிரஹமும் உண்டு. இத்திருத்தல கோபுரத்தில் காணும் ஆண் பெண் நிர்வாணக் காட்சிகள் புகட்டும் ஆன்மீகப் பாடத்தையும் சிறுவன் துரீய நிலையில் சஞ்சரித்தபோது உணர்ந்தான். இந்த துரிய நிலை அனுபவங்களும் பெரியவர் காமாக்யா திருத்தலத்தில் அளித்த தாம்பத்ய உறவு விளக்கங்களுமே சிறுவன் எதிர்காலத்தில் உத்தம சற்குரு நிலைக்கு உயர்ந்தபோது தன்னை நாடி வந்த ஆயிரக் கணக்கான தம்பதிகளின் தாம்பத்ய பிரச்னைகளைத் தீர்க்கும் அருமருந்தாக அமைந்தன.!! அசல ஜோதியால் அசல சக்தியை ஆராதிப்போம் !!

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam