பெருமாளின் கரிய நிறம் நமக்காகத்தானே ?

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

புது வருடம் ஒளி வருடமே

ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் ஆங்கில வருடத்தையும் முறையாகக் கொண்டாடி நம் கர்ம வினைகளைத் தீர்த்தருளும் முறைகளை நம் சற்குரு எடுத்துரைத்து வருவது நீங்கள் அறிந்ததே. இம்முறையில் இவ்வருடம் கருவூர் திருத்தலத்தை முறையாக வழிபட்டு் நம் வாழ்விலும் மனதிலும் சூழும் இருளை அகற்றும் வழிபாட்டு முறைகளை இங்கு அளிக்கிறோம். இறை வழிபாடு அனைத்துமே மன இருளை அகற்றி உள் ஒளியை பெருக்கும் வழிபாடுதான் என்றாலும் சில குறிப்பிட்ட தலங்களில் குறிப்பிட்ட சில வழிபாடுகளை மேற்கொள்வதால் கலியுக மனிதன் குறைந்த காலத்தில், குறுகிய பொருள் செலவில் நிறைந்த பலன்களை அளிக்கும் வழிமுறைகளே இத்தகைய வழிபாடுகள் எல்லாம். என்னதான் ஒரு பசு மாட்டின் உடம்பு முழுவதும் பால் பெருகி பொலிந்தாலும் அதன் மடியிலிருந்தே பாலைப் பெறுவது சுலபமான முறை என்பதால் சித்தர்கள் இவ்வாறு எளிதில் “பால் கறக்கும்” முறையை இங்கு அளித்துள்ளார்கள்.

திருஅண்ணாமலை என்பது வருடம் முழுவதும் நாளின் 24 மணி நேரமும் சுயம் ஜோதி பிரகாசத்துடன் இறைவனின் திருமேனியாக பிரகாசிக்கிறது என்றாலும் இவ்வாறு இறைப் பிரகாச ஜோதியைக் கண்டு தரிசிக்கும் அளவிற்கு தெய்வீக சக்தி பெற்றவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத் தானே உள்ளார்கள். இதனாலேயே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் திருஅண்ணாமலையார் மனித முயற்சியில் கார்த்திகை தீபம் ஏற்றிடச் செய்து அந்த தீப ஒளியில் தன் அருட் காட்சியை, அனுகிரக சக்தியை பூமியில், இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாரி வாரி அருள்கின்றார். இம்முறையில் வரும் 2020 வருடம் இறையருளால் ராகு பகவானின் சக்தி மிகுந்துள்ள வருடமாகத் திகழ்வதால் இவ்வருடம் இருள் சூழ்ந்த வருடமாகத் திகழும் என்பது சித்தர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை. ஆயினும் கடவுளை நம்பி இருப்பவர்கள், கடவுளுக்காக, கடவுள் படைத்த உயிரினங்களின் நல்வாழ்விற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் பிரகாசமாகவே இருக்கும் என்பதை உறுதிப் படுத்தும் ஆண்டாகவே இந்த வருடம் இருக்கும் என்பதை நிரூபிக்கும் ஆண்டும் இதுவாக இருக்கும் என்பதே இந்தப் புது வருடத்தின் சிறப்பாகும். இதற்கு முன்னோடியாகவே ஒளி கிரண சக்திகள் நிறைந்த செவ்வாய்க் கிழமை அன்று திருக்கார்த்திகை தீபம் மலர்கின்றது என்பதே நம்மை வியக்க வைக்கும் திருஅண்ணாமலையாரின் கருணையாகும்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கரூர்

எண் கணித ரீதியாக ராகுவிற்கு உரிய எண் நான்காக அமைவதாலும், ராகுவின் நிறம் கரிய நிறமாக அமைவதாலும் கருவூர் என்ற நான்கு அட்சர திருத்தலம், சதுர ஆவுடையில் பொலியும் ஸ்ரீகரியமாலீவரர் திகழும் கருவூர் திருத்தலம் 2020 ஆண்டிற்கு உரிய தலமாக சித்தர்களால் போற்றப்படுகிறது. இத்தல ஈசனும் பசுபதி என்ற நான்கு அட்சரங்களுடன் திகழ்வதும் சிறப்பே. நம் சற்குருவின் அடியார் ஒருவரின் திருநாமம் நான்கு எழுத்துக்களுடன் பொலிவது, அவருக்கு நான்கு எழுத்தில் அமைந்த ஒரு பெண் குழந்தையும், இரு ஆண் குழந்தைகளும் உண்டு. அவர்களின் நாமமும் நான்கு எழுத்தில் அமைந்ததே. நம் சற்குரு இத்தலத்தில் திருப்பணி ஆற்ற எழுந்தருளியபோது அந்த அடியார் தன் குழந்தைகளுடன் இத்தலத்திற்கு வந்து நம் சற்குருவை மகிழ்விக்கும் முயற்சியாக தன்னுடைய குழந்தை சதா சற்குருவைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவரைக் காணத் “துடிப்பதாகவும்” கூறினார். ஆனால் இத்தருணத்தில் ஒன்றுமறியாத அந்த பாலகனோ சற்குருவைப் பார்த்து, “இவரு எவரு நைனா?” என்று கேட்டு விட்டான். அந்த அடியார் தன்னுடைய பொய் அம்பலமான கோபத்தில் தன்னுடைய குழந்தையை அடிக்க கையை ஓங்கி விட்டார். சற்குரு சிரித்துக் கொண்டே, “பரவாயில்லை விடுங்க, சார். குழந்தை ஏதோ அறியாமல் கேட்டு விட்டான்,” என்று கூறிக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும், நம் அடியார்கள் பல சூழ்நிலைகளிலும் பலரையும் சந்தோஷப்படுத்தும் முகமாக இறைவனிடமே, சற்குருவிடமே பொய்யுரை கூறி விடுகிறோம். குருவிடம், சற்குருவிடம் பொய் கூறுதல் என்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அறியாமை நம்முடைய தவறுக்கு காரணமாக அமைவதால் அடியார்களின் இத்தகைய பல தவறுகளுக்கு பிராயசித்தத்தைப் பெற்றுத் தருவதற்காகவும் நம் சற்குரு பல இடங்களில் உழவாரப் பணிகளை நிறைவேற்றி அத்தல மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்து தம்மை நாடி நின்ற அடியார்களை எல்லாம் காத்தருளினார் என்பதே நாம் இந்த இருள் வருடத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒளிப் பிரகாச செய்தியாகும். 2020 ஆண்டு சித்தர்களால் அர்த்தநாரீஸ்வரர் ஆண்டு என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த வருடத்தை 20, 20 என்ற வகையில் ஆண் பெண் அம்சங்களுடன் பிரிக்க முடியுமாதலால் இத்தகைய சிறப்பை இந்த வருடம் பெறுகிறது. ஆணின் உழைப்பையும், பெண்ணின் சுறுசுறுப்பையும் பெற்ற ஒரு குடும்பம் தன்னிகரில்லாமல் பிரகாசிப்பதுபோல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடுகளை இயற்றுவதால் குடும்பமே நன்னிலை அடையும் என்பதே இவ்வருடத்தின் சிறப்பாகும். இதன் ஆரம்ப கட்டமாக கணவன் மனைவி இருவரும் திருஅண்ணாமலையாரின் அருளைப் பெற கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்கி திரைலோகி தரிசனங்களைப் பெற்று நன்னிலை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்பது வலது பக்கம் சிவனும் இடது பக்கம் பார்வதியும் பொலியும் கோலம்தானே. இம்முறையில் வலது பக்கம் திருஅண்ணாமலை ஜோதியும் இடது பக்கம் மனைவியும் அமையுமாறு தரிசனம் பெறுவதே 2020 வருடத்திற்கான அர்த்தநாரீஸ்வர தரிசனமாக சித்தர்களால் போற்றப்படுகிறது. இவ்வருடம் குருவிற்கு உரிய வருடமாகவும் அமைவதால் குருவே நம் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக, இறைப் பொக்கிஷமாக மிளிர்கிறார் என்ற உண்மையை பறைசாற்றும் தரிசனமாகவும் இத்தகைய வழிபாடு அமைகின்றது. அவரவரால் முடிந்த அனைத்து தரிசனங்களையுமே இவ்வாறு திரைலோகி தரிசனமாகப் பெறுவது சிறப்பென்றாலும் குறைந்தது ஐந்து தரிசனங்களை இம்முறையில் பெறுமாறு சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

திரைலோகி வழிபாடு

ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் எதிரே அமைந்த சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனம், ஸ்ரீபச்சையம்மன் கோவில் வளாகத்திலிருந்து பெறும் தரிசனம், ஸ்ரீகற்பக விநாயகர் சன்னதியிலிருந்து பெறும் தரிசனம், ஸ்ரீஉண்ணாமுலை மண்டபத்திலிருந்து பெறும் தரிசனம், அடிஅண்ணாமலை ஆலயத்திலிருந்து பெறும் தரிசனம் என்றவாறு குறைந்தது ஐந்து திருஅண்ணாமலை தரிசனப் பகுதிகளில் இரண்டு அகல் தீபங்களை அல்லது பித்தளை, வெள்ளி தீபங்களை ஏற்றி குறைந்தது ஒரு மணி நேரம் இந்த தீபங்களின் முன் அமர்ந்து வழிபடுவதே திரைலோகி வழிபாடு. திருஅண்ணாமலையில் ஜோதி எரிகிறதா இல்லையா என்பது பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். காலையில் தொடங்கும் இத்தகைய வழிபாட்டை நிறைவு செய்ய குறைந்தது எட்டு ஒன்பது மணி நேரம் ஆகும் என்பதால் அத்தனை மணி நேரம் திருஅண்ணாமலையாரின் ஜோதி தரிசனத்தைப் பெறுதல் என்பதும் சிரமமான காரியம்தானே.

மேற்கண்ட தரிசனங்களில் மட்டுமல்லாது பஞ்சமுக தரிசனம், அங்கப்பிரதட்சிண அண்ணாமலையார் ஜீவசமாதி, ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் ஆலயம், ஸ்ரீஇரட்டை விநாயகர் ஆலயம், திருஅண்ணாமலையார் திருக்கோயில் வளாகம், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், அபய மண்டபம் போன்ற பகுதிகளிலும் இத்தகைய வழிபாடுகளை இயற்றலாம். ஒரே நாளில் இந்த வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும் என்ற நியதியும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட பகுதிவரை திருஅண்ணாமலையை வலம் வந்து வழிபாடுகளை இயற்றி மீண்டும் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வழிபாடுகளை இயற்றுதலும் ஏற்புடையதே. எத்தகைய மன வேறுபாடுகளையும், விவாகரத்து வரை சென்ற திருமண உறவுகளையும் பலப்படுத்தும் மங்கள மாங்கல்ய வழிபாடு இதுவாகும். இத்தகைய வழிபாட்டில் கணவன் மனைவி இருவரும் ஏற்றி வழிபட்ட தீபங்களே திரைலோகி தீபங்கள் என்றழைக்கப்படுகின்றன. இத்தகைய தீபங்களை உரிய மாங்கல்ய பொருட்களுடன், மஞ்சள், குங்குமம், நிறைய இனிப்புகள், வளையல், மெட்டி போன்ற பொருட்களுடன் சேர்த்து சுமங்கலிகளுக்கு அவரவர் ஊரிலோ அல்லது திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலோ தானம் அளித்தல் சிறப்பு. தன்னைவிட மிகவும் உயரம் குறைவாக உடைய தன் மனைவியை ஏறிட்டும் பார்க்க விரும்பாத ஒரு கணவன் மேற்கண்ட வழிபாட்டை நிறைவேற்றிய பின் தன் மனைவியைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை என்ற அளவிற்கு தன் மனைவியின் மேல் அன்பு பெருகி விட்டது என்றால் இந்த திரைலோகி வழிபாட்டின் மகிமைதான் என்னே.

பிலாகாச யோகம்

இமயமலையில் அன்னபூர்ணா சிகரத்தில் திகழும் தம்புள் குகையில் நம் பரமகுருவான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் இப்பிரபஞ்சத்தில் திகழும் உயிர்களின் மேன்மைக்காக பிலாகாச யோகத்தில் இலயித்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த பிலாகாச யோகம் என்றால் என்ன என்பது சற்றும் நம் சிற்றறிவிற்கு எட்டாத ஒரு விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. முக்தி நிலையும் அவ்வாறுதானே. புழு, பூச்சி, ஈ, எறும்பு என்ற அனைத்து ஜீவராசிகளுமே முக்தி நிலைக்கு தகுதி உடையதாய் ஆகின்றன. ஒவ்வொரு ஜீவ ராசியும் அடையும் முக்தி நிலையும் வேறு வேறானவையே. மனிதர்களிலும் அனைவரும் ஒரே மாதிரியான முக்தி நிலையை அடைவதில்லையே. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள் அமைதியாக அமர்ந்திருக்கும்போது அவருடைய சூக்கும உடல் வெளியே கிளம்பி கக்கூஸ் அலம்பும் ஒரு தோட்டியின் வீட்டை நோக்கிச் சென்றது. அந்தத் தோட்டியின் வீட்டில் உள்ள அனைவரும் மூலாதாரம், சுசும்னா நாடி, சஹஸ்ரார சக்கரம் என்ற ஒரு குண்டலினி யோகத்திற்கான அனைத்து தகுதிகளுடன் விளங்குவதைக் கண்டார். இது போலத்தான் நாம் அனைவருமே.

ஸ்ரீருணஹர ஈஸ்வரர் ஆச்சாள்புரம்

மக்கள் அனைவருமே இவ்வாறு குண்டலினி யோகத்தின் மூலம் சஹஸ்ரார சக்கரத்தை அடையும் தகுதியுடன் பரம்பொருள் படைத்திருந்தாலும் கோடியில் ஒருவர் கூட இந்த சக்கரங்களைப் பயன்படுத்தவில்லை என்றால் அது யாருடைய தவறு ? இதுவே பிலாகாச யோகத்தின் தன்மையுமாகும். பிலம் என்றால் சிறு ஓட்டை, துவாரம், ஒரு சிறிய அளவு உடைய வழி. ஆகாசம் என்பது எல்லையற்று விளங்கும் ஒரு தன்மை. ஒரு ஜீவன் ஒரு பிலம் வழியாகச் சென்று ஆகாயத்தை அடைவதே பிலாகாச யோகம் என்பதாகும். ஒவ்வொரு ஜீவனும் சிருஷ்டியின் ஆரம்பத்தில் உயிர் வடிவில் தாயின் கர்ப்பப்பையில் பிண்டமாய் இருக்கும் உடல் பகுதியை அடைகிறது. மனிதன் உயிர் விடும் சமயத்தில் உடலில் உள்ள ஏதாவது ஒரு துளையின் வழியாக வெளியேறுகிறது. இதுவே பிலாகாச யோகத்தின் பிரதிபலிப்பாகும். இது அந்தந்த ஜீவன்களின் பிரயத்தனம் இன்றி நடப்பது, இதுவே ஜீவன்கள் தங்கள் முயற்சியால் மகான்கள், சித்தர்களைப் போல நிகழ்த்த முடிந்தால் அதுவும் பிலாகாச யோகமே. இத்தகைய பிலங்கள் திகழும் திருத்தலங்கள் நம் புனித மண்ணில் அநேகம் உண்டென்றாலும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம், கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் ஆலயம், திருச்சுழி சிவாலயம், ஆச்சாள்புரம் சிவத்தலம் போன்றவை ஆகும். இத்தலங்களில் ஏதாவது ஒன்றில் தொடர்ந்து வழிபட்டு இத்தகைய பில சக்திகளை, யோக தாரண முறைகளைக் குறித்து தியானித்து வந்தால், ஆத்ம விசாரம் செய்து வந்தால் பிலாகாச யோகம் பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். வரும் 2020 வருடம் இத்தகைய பிலாகாச யோக சக்திகளைப் பெற்றவர்களே சூரியனின் பிரகாச கதிர்கள் மறைந்திருக்கும் சமயத்தில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்காகவே இத்தகைய பிலாகாச யோக சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறைகளை சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். கோடியில் ஒருவரே இத்தகைய பிலாகாச சக்திகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் மனித முயற்சியால் ஓரளவு இத்தகைய யோக சக்திகளைப் பெறுவதால் அது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பிலாகாச யோகம் என்றால் என்னவென்றே தெரியாத அன்பர்களுக்கும் உதவியாய், வழிகாட்டியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா ? பிலாகாச யோகம் என்பது மனித வாழ்வில் என்றோ நடக்கும் ஒரு சம்பவத்திற்கான தீர்வு கிடையாது. இப்பிரபஞ்சத்தில் தோன்றிய ஒவ்வொரு ஜீவனும் என்றாவது ஒரு நாள் இந்த பிலாகாச யோகம் பற்றிய அறிவைப் பெற்றுத்தான் தீர வேண்டும் என்பதால் அந்த நன்னாள் இந்த 2020 வருடத்தில் அமையட்டுமே என்பதே சித்தர்களின் பரிந்துரை, தாயின் கருணையை மிஞ்சும் அறவுரை, அறிவுரை. வரும் 2020 வருடம் இவ்வாறு பிலாகாச யோக சக்திகளைப் பெற்று மக்கள் தங்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்தும் ஒளி வருடமாக அமைவதால் இறையன்பர்கள் எந்த அளவு ஒளி தீபங்களை மேற்கண்ட திருத்தலங்களில் அல்லது தங்கள் அருகில் உள்ள சுயம்பு சிவ மூர்த்திகள் அருளும் திருத்தலங்களில் ஏற்றி வழிபடுகிறார்களோ அந்த அளவிற்கு இந்த பிலாகாச யோக சக்திகளைப் பெறுவார்கள் என்பது திண்ணம்.

ஸ்ரீபிலவேந்தன் திருச்சுழி

மாதாந்திர விலக்கு போன்ற காரணங்களால் வீட்டில் விளக்கேற்ற முடியாத பெண்களும் தங்கள் கணவன்மார்கள், குழந்தைகளால் தீபங்கள் ஏற்றிடச் செய்து, நாளைக்கு இரு முறை தலைக்கு குளித்து, மௌனமாக இத்தகைய ஒளி வழிபாட்டில் பங்கேற்கலாம். வீட்டிலும் திருத்தலங்களிலும் தீபங்களை ஏற்றி வழிபடுதல் இந்த ஆண்டிற்கு உரித்தான மிகச் சிறந்த உன்னத வழிபாடாகும். சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயால் அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்ற ஐந்து தைலங்கள் கலந்த தீபங்கள் ஏற்றி, அணையா தீபமாக ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும். இது மிகச் சிறந்த சமுதாய பூஜையாகும் என்பதை நினைவில் கொள்ளவும். தொடர்ந்து விளக்கேற்றுவது, ஒளி பெறுவது என்றால் அதனால் நிறைய பணம் செலவாகுமே என்று பலரும் நினைக்கலாம். ஒரு வீட்டில் ஒரு தீபத்தை ஏற்ற நீங்கள் யோசனை செய்யும்போதுதான் அல்லும் பகலும் இவ்வுலகம் அனைத்துமே பிரகாசத்தில் ஜொலிக்க சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று ஏற்பாடு செய்த இறைவனின் பெருங்கருணையைப் பற்றி நாம் ஓரளவாவது ஆத்ம விசாரம் செய்து பார்க்க முடியும். பிலாகாச யோகக் கதிர்கள் என்பவை தம்புள் குகையில் ஸ்ரீஇடியாப்ப சித்தர் திருவுள்ளத்தில் பொலிபவையே என்பது உண்மையே ஆயினும் இந்த பிலாகாச யோகக் கதிர்கள் சஹஸ்ரார சக்கரம் போல் அனைவர் உடலிலும் பொலிவதால் அனைவரும் இத்தகைய பிலாகாச யோகக் கதிர்களை பெறும் தகுதி உடையவர்களே என்றாலும் எத்தனை பேர் இந்த யோக சக்திகளை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதே நாம் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். பிலாகாச யோக கதிரில் ஒரே ஒரு பரலைக் கொண்டே நாம் இவ்வுலகம் அனைத்தையும் ஒளிமயமாக மாற்ற முடியும். ஆனால் நாமோ இரவில் ஒரு விநாடி மின்சாரம் போய் விட்டாலே ஒளி பிரகாசமாய், ஒளி வெள்ளமாய் துலங்கும் இறைவனைப் பற்றி நினைக்காது டார்ச் லைட்டையும், எமர்ஜன்சி லைட்டையும் அல்லது தீப்பெட்டியையும் தானே நாடுகிறோம். இதற்காகவே நாம் ஒரு நாளின் 24 மணி நேரமும் தீபமேற்றி ஒளி பிரகாசத்தைப் பெறும் வழிபாட்டு முறையைக் கைக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். தம்புள் குகையில் பொலியும் இந்த பிலாகாச யோகக் கதிர்கள் இவ்வாறு தொடர்ந்து எரியும் அணையா ஜோதியில் ஐக்யம் பெற்று அவரவர் யோக தாரண அம்சங்களுக்கு ஏற்றவாறு ஒரு குடும்பத்திற்கோ, ஒரு ஊர் முழுவதுமோ, ஏன் ஒரு மாநிலம் முழுவதுமோ கூட ஒளியைப் பாய்ச்ச முடியும், ஜோதியைக் கொணர முடியும். இதுவே பிலாகாச யோகத்தின் தன்மை, சக்தி.

மோகினி அவதாரம் ஏன் ?

மோகினி என்பது ஒரு பெண் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கும் சக்தி வாய்ந்த உருவமே ஆகும். இதன் விளைவால் ஏற்படுவதே மோகம். இதையே நம் முன்னோர்கள் மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொன்னார்கள். இந்த தவறான கற்பனையை மனதில் வளர்க்காமல் உள்ளது உள்ளபடி மனிதன் காண்பதற்காகவே சாந்தி முகூர்த்த அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார்கள் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள். இதை நல்ல விளக்கு என்று கூறுவார்கள். அதாவது இந்த தீபத்தில் பயனாகும் எள்ளில் பிறந்த நல்லெண்ணெய் நம் மூதாதையர்களுக்கு ப்ரீதியாக அமைவதால் நம் முன்னோர்களே நமக்கு குழந்தையாகப் பிறந்து சந்ததி நன்முறையில் விருத்தியாக உதவினார்கள். இதனாலேயே தங்கள் குழந்தைகளின் மேல் உண்மையான அன்பும் பாசமும் மலர அந்தக் குழந்தைகள் தாய் தந்தையரின் குடும்பச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு நடந்ததால் குடும்பமே ஒரு பாசமிகு பசுஞ்சோலையாக விளங்கியது.

ஸ்ரீபராசரர் வழிபட்ட லிங்கம்
திருமருகல்

தற்காலத்தில் இத்தகைய மாண்பு மறைந்து திரைப்படங்களில், தொலைக்காட்சி நாடகங்களில் மனம் இலயித்து விடுவதால் மனம் போனபடி கற்பனைகளை தம்பதிகள் வளர்த்துக் கொண்டு விடுவதால் அவ்வாறு உருவாகும் சந்ததிகளும் ஏதேதோ நினைவுகளுடன் உழல்வதால் குடும்பத்தின் அமைதியின்மை என்பது தோன்றி சூறாவளிகளால் அலைக்கழிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகள் மறைந்து குடும்பத்தில் உண்மையான அன்பு நிலவ நம் மூதாதையர்களால் ஏற்படுத்தப்பட்டதே பிரதோஷ வழிபாடு என்பதாகும். பிரதோஷ வழிபாட்டில்தான் மோகினி அவதாரத்தால், பெருமாள் மூர்த்தியால் பகிர்ந்தளிக்கப்பட்ட அமிர்தப் பிரசாதமானது ராகு, கேது என்ற அசுரர்களுக்கும் மட்டுமல்லாமல் அனைத்து தேவர்களுக்கும் நல்வழி காட்டி அவர்களுக்கு இறை தரிசனமான சிவபெருமானின் பேரருளைப் பெற்றுத் தந்தது. எத்தகைய கொடுமையான விஷயமும் அதைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்து அதன் விளைவு மாறுபடும் என்பதற்கு சான்றாக அமைவதே இருள் என்பதாகும். வெளி இருள், மன இருள் இரண்டுமே பல குழப்பங்களையே ஏற்படுத்தும் என்பது ஒரு பொதுப்படையான அம்சமாக இருந்தாலும் இந்த இருளையும் உலக மக்களின் நன்மைக்காக மாற்றி அமைத்த பெரியோர்கள் பலர். நல்ல மனிதன் கூட ஒரு பெண்ணுடன் தனிமையில், இருளில் இருந்தால் தவறு புரிவது சகஜமே என்றாலும் இத்தகைய சூழ்நிலையையும் சமுதாய நன்மைக்காக மாற்றி அமைத்து அங்கு இருளையே தோற்றுவித்த உத்தமரே பராசரர் ஆவார். மச்சகந்தியுடன் தனிமையில் பராசர மகரிஷி பயணம் செய்த போது ஒரு நல்ல முகூர்த்த நேரம் அமைவதைக் கண்டு அந்த புனிதமான நேரத்தில் ஒரு பெண்ணுடன் கூடினால் ஒரு உத்தமர் இந்த உலகித்தில் பிறப்பார் என்பதால் இதற்காக படகோட்டியான மச்சகந்தியை அணுக மச்சகந்தி அதற்கு உடன்பட அந்த உத்தமர்களின் சங்கமத்தில் வேத வியாசர் தோன்றினார் என்பது நீங்கள் அறிந்ததே. மனிதர்கள் கண்ணை மூடும்போது இவ்வுலக காட்சிகள் மறைவதால் அவர்கள் வேறு உலகிற்கு சென்று விடுகின்றனர். இத்தகைய நினைவால் மீன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் பராசரல் மச்சகந்தி இவர்களின் சங்கமம் உதவியது. அவர்கள் சங்கமம் பகலில் நடந்ததால் அதை மற்றவர்கள் காணக் கூடாது என்ற உலக நியதியின்படி பராசரல் இருளை உருவாக்கி அந்த படகை மறைந்து விட்டார் என்று மேலோட்டமாகக் கூறினாலும் இருளில் காட்சிகள் தென்படாது ஆனால் நுகரும் சக்தி பாதிக்கப்படாது என்பதால் மச்சகந்தியின் உடலில் அதுவரையில் தொக்கியிருந்த மச்ச வாசனை, மீன் வாடை மறைந்து அவள் இருளிலும் ஜொலிக்கும், பிரகாசிக்கும் நறுமண புஷ்பங்கள் கமழும் புனிதவதியானாள். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் காண்க என்று இறைவனை மாணிக்கவாசகர் புகழ்ந்து பாடுகிறார்.

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும்
நாதன் காண்க

இதிலிருந்து என்ன தெரிகிறது ? இருள் என்பது எங்கும் எவ்விடத்திலும் இருக்கக் கூடிய ஒன்றே, இறைவன் திருநடனம் பயிலும்போது அந்த இருள் மறைந்து இறைவனின் நாட்டிய ஒளியான பேரருள் அங்கு நிறைகின்றது என்பதுதானே அதன் பொருள். அது எப்படியென்றால் ஒரு அறையில் அகல் விளக்கு ஒளி, டியூப் லைட் ஒளி, கத்தியைத் தீட்டும் ஒளி, டார்ச் ஒளி, எமர்ஜன்சி லைட் ஒளி என்று எத்தனை ஒளி சக்திகள் இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று இடையூறு செய்யாமல் அனைத்து ஒளிக் கற்றைகளும் ஒருசேர பிரகாசிப்பதுபோல் இறைவனின் திருநடனமும் அமையும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய தெய்வீக அம்சமாகும். எனவே மோகினி அவதாரம் என்பது உண்மையை மறைக்கும் ஒரு மாயையான பெண் வடிவமாக இருந்தாலும் அந்த மாயையையும் ஆதாரமாகக் கொண்டு ஐயப்பன் என்ற ஜோதி உருவை, இறைப் பிரகாச சந்தானத்தை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவரே சிவபெருமான். இதுவே நாம் வரவிருக்கும் இருள் வருடமான 2020லிருந்து புரிந்து கொள்ள வேண்டிய தெய்வீக அம்சமாகும். அசுரன் என்ற நான்கு எழுத்துக்கள் கொண்ட வார்த்தையில் சுரன் என்ற மூன்று எழுத்துக்கள் மறைந்துள்ளன அல்லவா ? இதுவே நாம் இந்த வருடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். அசுரன் இருளைக் குறிப்பது, சுரன் ஒளி வீசும் உள்ளத்தை உடைய மனிதனைக் குறிப்பது. ஒளியை வரவேற்கும் அளவிற்கு மக்கள் இருளை வரவேற்பதில்லை. உண்மையில் இருளை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்த மனிதனே ஒளியையும் சரியாகப் பயன்படுத்து முடியும் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகவே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், நம் சற்குரு போன்றோர் தங்கள் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவானைப் பெற்றும், பூர்ண அவதாரமான பகவான் கிருஷ்ணர் சனி பகவானின் நேரடிப் பார்வையை ஏழில் பெற்றும் அவதரித்துள்ளார்கள். பல நாடகங்களில் பலரும் சனி பகவானின் அனுகிரகம் பெற்ற சகுனியின் பாத்திரத்தை ஏற்று நடிக்க முன் வராதபோது நம் சற்குருவே அந்தப் பாத்திரத்தை உவகையுடன் ஏற்றார். அதே போல் அவரவருக்குப் பிடித்த உருவங்களை மாயக் கண்ணாடி காட்டியபோது பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த உருவமாக அது சகுனியைத்தானே காட்டியது ? இதுவே இருள் வழங்கும் இறைப் பரிசு. மதிப்பு தெரிந்தோர் மதிக்கும் பரிசும் இதுவே.

சுடலை தீபம்

திருக்கார்த்திகை வைபவத்தின் ஒரு பகுதியாக அனைத்து சிவாலயங்களிலும் பெருமாள் தலங்களிலும் சுடலை தீபம் ஏற்றுதல் அல்லது சொக்கப்பனை ஏற்றுதல் என்ற வைபவம் நிறைவேறும். பெரும்பாலும் பனை மரத்தை வெட்டி கோயிலின் முன் புறத்தில் நட்டு பனை ஓலை, தென்னை ஓலை சீற்றுகளால் அலங்கரித்து அந்தந்த இறை மூர்த்திகளின் சாட்சியாக அல்லது அந்தந்த இறை மூர்த்திகளின் அனுகிரகமாக பெற்ற ஜோதியைக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றுவார்கள். மிகுந்த சக்தி வாய்ந்த ஒளி வழிபாடு இது. இதன் தாத்பர்யத்தை உணர்ந்து மக்கள், பக்தர்கள் முறையாக வழிபட்டாலே இந்த வருடம் இருள் கர்மங்களினால் மக்கள் எவரும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படாததால்தான் மக்கள் அக இருளாலும் புற இருளாலும் வாடுகிறார்கள். பனை என்பது சுயம்பு மூர்த்தி தத்துவத்தில் மிளிர்வது. சொக்கப்பனை என்பது அனைவரும் உண்மையில் சுத்தமான ஜோதி பிரகாசமே.

பரமம் யாம் பரமம் என்ற
அவர்கள் பதைப்பொடுங்க ...

இதை உணராததால்தான் தங்கள் முன் தோன்றிய ஜோதியின் அடி முடியைக் காண்பதற்காக பிரம்மாவும் விஷ்ணுவும் மாயையால் ஆட்கொள்ளப்பட்டு அன்னப்பறவை, பன்றியாக அவதாரம் எடுத்து இளைத்தார்கள் என்பது நாம் அறிந்த புராண வைபவம்தானே. சுடலை என்பது சுடுகாட்டை குறிக்கும். சுடலை தீபம் என்பது தான் என்னும் அகம்பாவம் வளரக் காரணமான இந்த உடலைக் குறிக்கும். திருக்கோயிலில் சுடலை தீபத்தைக் காண்பதால் மட்டும் தங்கள் அகம்பாவம் முற்றிலும் மறையாது என்பது உண்மை ஆயினும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தாக்கும் கண் திருஷ்டி போன்ற திருஷ்டி தோஷங்களிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் பிரகாசிக்கும் நாளுடன் இந்த வைபவம் இணைவதால் நம் சற்குரு அருளாசியுடன் இந்த நிகழ்ச்சியில் இணையும் நம்முடைய வழிபாடுகள் நிச்சயம் தான் என்ற அகங்காரத்தை அழிப்பதற்கு உறுதுணையாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. பிரம்மா, விஷ்ணு இவர்களின் அகங்காரமே பொடி பொடி ஆனபோது மனிதர்கள் இந்த வைபவத்தால் பயனடைய மாட்டார்களா என்ன ? சுடலை தீபத்தைக் கண்ட பின் காய்ச்சிய பசும்பாலில் பனை வெல்லம், பனங்கற்கண்டு, உடைத்த முந்திரி சேர்த்து தானமளித்தல் சிறப்பு. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திர நாளிலும் இத்தகைய தானங்களை மேற்கொண்டு வருவதும் திருஷ்டி தோஷங்களிலிருந்து நமக்கு நிவாரணம் நல்கும். திருஷ்டி தோஷங்களும் மன இருளுக்கு முக்கிய காரணமே. திருஅண்ணாமலை கார்த்திகை தீப கிரணங்கள் இந்த சுடலை தீபத்துடனும் அந்தந்த திருத்தல மூர்த்திகளின் இறை சக்தியுடனும் இணைவதால் இது சக்தி மிகுந்த திருஷ்டி நிவாரண வழிபாடாக அமைகிறது. திருஅண்ணாமலை கார்த்திகை ஜோதி தரிசனம் பெற்றவர்களும் இந்த சுடலை தீபத்தை தரிசனம் செய்வதால் அவர்கள் பெறும் பலன் பெருகும். வயதானவர்கள், வியாதியஸ்தர்கள், மாத விலக்கு ஆன பெண்கள் போன்று திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசித்து பயன்பெற முடியாத அனைவருக்கும் கருணைக் கடலான இறைவனால் அளிக்கப்பட்ட வெகுமதியே இந்த சுடலை தீபமாகும். பலரும் தற்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் பல வண்ணக் குடைகளைப் பயன்படுத்துகிறார்கள். குடை என்பது வெயில் மழை என்ற இயற்கை உபாதைகளிலிருந்து மக்களைக் காப்பது போல் தோன்றினாலும் உண்மையில் தேவையில்லாத திருஷ்டி தோஷங்களை நீக்கும் தன்மையை கருப்பு வண்ணக் குடைகள் பெற்றிருப்பதால் திருமண வைபவங்களில் கூட காசி யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் குடையைப் பயன்படுத்தி தம்பதிகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும் இத்தகைய சம்பிராதயங்களை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். கருப்பு நிற குடைகளையும், கருப்பு வண்ண ஆடைகளையும் தானமளித்தலால் இவ்வருடம் ராகு பகவானின் அனுகிரகத்தைப் பெறும் வழிபாடாக அது அமைந்து பக்தர்களுக்கு தேவையான சமயத்தில் ஒளி சக்தியைப் பெற்றுத் தரும். கரிசலாங்கண்ணி தைலம், பசு வெண்ணெய், நல்லெண்ணெய் தீபம் கொண்டு கொட்டாங்குச்சியில் தயாரிக்கப்பட்ட சுத்தமான கண் மை, கரிசலாங்கண்ணி தைலம், கருப்பு கல் ஸ்லேட், பென்சில், கடப்பா சப்பாத்திக் கல் போன்ற கருப்பு நிற பொருட்கள் தானமும் இவ்வருடம் சிறப்பான பலன்களை வர்ஷிக்கும். இவ்வாறு ஒளியும் இருளும் கலந்த தானங்களே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் சுடலை நாயகனின் திருவருளைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீசோமாஸ்கந்த விநாயகர்

பார்வதி பரமேஸ்வர மூர்த்திகளுக்கிடையில் ஸ்ரீமுருகப் பெருமான் வீற்றிருக்கும் கோலத்தையே சோமாஸ்கந்தர் கோலம் என்று கூறுகிறோம். இவ்வாறு அன்னை அப்பனுக்கிடையில் பிள்ளையார் மூர்த்தியும் சேர்ந்து அமர்வது என்றால் அது பூலோக மக்கள் இயற்றிய எத்தகைய பேறு ? அபூர்வமாக லால்குடி திருத்தலத்தில் இவ்வாறு விநாயகப் பெருமானும் சுப்ரமண்ய சுவாமியும் ஒருவரையொருவர் பார்த்தவாறு அம்மை அப்பனுக்கிடையில் தூண்களில் எழுந்தருளி திருக்காட்சி நல்குகின்றனர். இத்தகைய இறை மூர்த்திகளின் எண்ணிக்கை நான்காக விளங்குவதால் அது இந்த நான்கு சக்திகள் பொலியும் ராகவேந்திர வருடத்தில் தரிசனம் பெறும் தலமாகப் பொலிகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த நான்கு மூர்த்திகளுமே நாற்றிசை நோக்கி எழுந்தருளி இருப்பது இந்த சிறப்பிற்கு மேலும் அணி கூட்டும் தெய்வீகச் சுவையாகும். ஸ்ரீஅகத்திய சுவடிகள் இந்த சிறப்பை இவ்வாறு பொழிகின்றன.

ஸ்ரீகுருகுகன் லால்குடி

ஸ்ரீகுபேரவிநாயகர் லால்குடி

நாற்றிசை மூர்த்திகள் துலங்கும் நான்மாடக் கூடல்
ஏற்றியிசை பாடுவர் இப்பாரில் வணங்கப்படுவாரே
என்று மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளையும் நோக்கி சிவபெருமான், பிள்ளையார், அம்பாள், முருகன் என்ற மூர்த்திகள் எழுந்தருளி இருப்பது எத்தகைய அற்புத திருவிளையாடல். இந்த மூர்த்திகளை வணங்கி வழிபடுவோரை வையகமே வாழ்த்தும் என்றால் இந்த மூர்த்திகளின் சிறப்பைப் பற்றி எவ்வாறு விளக்க முடியும் ? பொன்னாங்கண்ணி தைலத்தால் இம்மூர்த்திகளுக்கு காப்பிட்டு பட்டு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் கிடைத்தற்கரிய இறை சந்தர்ப்பமாகும். வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்றவாறாக ஸ்ரீசப்தரிஷீஸ்வரர், ஸ்ரீஸ்ரீமதி அம்மன், ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கு வஸ்திரங்கள் அணிவித்து சர்க்கரை பொங்கல் நைவேத்யமாகப் படைத்தல், அன்னதானம் அளித்தல் அற்புத வழிபாடாக மலர்கிறது. இவ்வருடம் குறிப்பாக செவ்வாய், வெள்ளி, வியாழக் கிழமைகளில் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றிப் பயன்பெறலாம். ராகு பகவானின் இயக்கத்தால் இவ்வருடம் பல பொருட்களை வைத்த இடம் மறந்து போய் மக்கள் பல துன்பத்திற்கு ஆளாவர் என்பதால் மேற்கூறிய வழிபாடு தகுந்த சமயத்தில் அப்பொருள் பற்றிய ஞாபகத்தைக் கூட்டும். வேலையில்லாத் திண்டாட்டம், வரன் கிட்டாமை, வயதானவர்கள், குழந்தைகள் வீட்டை விட்டுத் தொலைந்து போதல் போன்ற பலவித துன்பங்கள் இவ்வருடம் சூழ இருப்பதால் அத்தகைய துன்பங்களிலிருந்து விடுதலை பெற மேற்கூறிய வழிபாடு துணையாய் நிற்கும். தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண்கள், வீட்டு விலாசம் போன்றவற்றை தொலைபேசியில் மட்டும் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் அதைத் தொலைத்து விட்டு பலவித துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் தனியாக, பாதுகாப்பாக ஒரு நோட்டில் எழுதி வைத்து தேவையில்லாத துன்பங்களிலிருந்து மீண்டு நன்னிலை அடையும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தபால் துறையில் இருப்பவர்களும், தொலை தொடர்பு துறையில் இருப்பவர்களும் போதுமான சிக்னல் கிடைக்காமல் (communication vacuum) துன்புறும் நிலை உருவாவதால் அவர்கள் இத்தகைய நாற்றிசை மூர்த்திகளைப் போற்றி வணங்கி தங்கள் துறையில் தக்க பாதுகாப்பைப் பெறும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செல்போன் பயன்பாட்டால் இத்தகைய வெற்றிடங்கள் பரவெளியில் அதிகம் உருவாவதால் ஸ்ரீஅகத்தியர் அருளிய தேவாரப் பதிகங்களை வாய் திறந்து ஓதுவதும் ஒளி வீசும் விளக்குகளை ஏற்றி வழிபடுவதுமே இத்தகைய குறைகளைத் தீர்க்கும் ஒரே வழிபாட்டு முறை என்பதை நினைவில் கொள்ளவும். எப்போதுமே கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம்தானே ?

திருவானைக்கோவில்

ஸ்ரீபஞ்சமுகவிநாயகர் லால்குடி

பொதுவாக எல்லா வியாபாரங்களுமே திடீர் மாற்றங்களால் பாதிக்கக் கூடுமாதலால் அதிக லாபத்தை எதிர்பார்த்து சரக்கை முடக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்பது சித்தர்களின் அறவுரை. சீரான முன்னேற்றமே இவ்வருடத்தில் பலனளிக்கும். லால்குடி திருத்தலம் மட்டுமல்லாது இவ்வாறு நாற்றிசை மூர்த்திகள் அருளும் திருத்தலங்கள் அனைத்திலும் வழிபாடுகள் இயற்றி பயன்பெறலாம். இது மட்டுமல்லாமல் சதுர ஆவுடைகள் அமைந்த சிவ மூர்த்திகள் அருளும் தலங்கள், நான்கிற்கு குசாவான எட்டு எண்ணிக்கை கொண்ட கொடி மரங்கள் அமைந்த திருஆனைக்கா திருத்தலம், திருநல்லூர் திருத்தலம் போன்ற திருத்தலங்களிலும் வழிபட்டு வியாபாரிகள் பயனடையலாம். வியாபாரிகள் மட்டுமல்லாது அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்கள் குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடங்களில் உஷ்ணமான வார்த்தைகளால் கைகலப்பு நேரிட்டு துன்பம் அடைய இருப்பதால் மேற்கூறிய தலங்களில் வாரம் ஒரு முறையாவது வழிபடுதல் சிறப்பாகும். வாகனம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்கள் வண்டியை எடுக்கும் முன்னால் விளக்குகள் சரியாக எரிகின்றனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். ஒரு சில நிமிடங்களே எடுத்துக் கொள்ளும் இத்தகைய முன்னெச்சரிக்கை காரியங்களால் நமக்கும் மட்டுமல்லாது பலருக்கும் விளையக் கூடிய துன்பங்களைத் தவிர்க்கலாம். முடிந்த மட்டும் பெண்கள் தனியாக செல்வதையோ தனித்திருத்தலையோ தவிர்க்கவும். அவ்வாறு தனியே இருக்கும்படி நேர்ந்தால் தேவாரப் பதிகங்கள், தங்கள் பெயர், தங்கள் கணவன், தாய் தந்தையர் பெயர்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருத்தல் நலம். எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் விளையும் ஒரு தீய செயலின் நிழல் கூட தனித்திருக்கும் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மை உடையது என்பதை நினைவில் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் சிறுவர் சிறுமிகளிடம் செல்போன்களை விளையாடக் கொடுக்கக் கூடாது. இத்தகைய செயல்கள் பேராபத்தை விளைவிக்கும் ஆண்டு இது. கவனம் தேவை.

ஸ்ரீகிருஷ்ணலீலை திருஅதிகை

திசை பற்றிய ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த ஆண்டில் இயற்றும் வழிபாடுகள் பெரிதும் உதவும். உதாரணமாக, 3, 12, 21, 30ந் தேதி பிறந்தவர்கள் எண் மூன்றிற்குரித்தான தெய்வ மூர்த்திகளையோ, வடக்கு திசையில் அமைந்த குரு நவகிரக மூர்த்தியையோ, தட்சிணா மூர்த்தியையோ தினமும் திருத்தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும். நேரே சென்று இறை மூர்த்திகளை வழிபட முடியாதவர்கள் மானசீகமாகவேனும் வழிபாடுகளை இயற்ற வேண்டும். இதனால் ஒரு வேளை இருட்டில் அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் தெரியாத இடங்களில் மாட்டிக் கொண்டு விட்டால் இந்த திசை பற்றிய ஞானம் அவர்களுக்கு கைகொடுத்து உதவ அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அடையலாம். எதையும் கண்ணால் காண்பதே மெய் என்றவாறாக கலியுக மக்கள் சமுதாயம் நிலவி வருவதால் இவ்வருடம் ராகு பகவானின் மாயா சக்தியால் இருள் சூழும் என்ற ஆபத்து ஏற்பட்டாலும் கடவுளை நம்பியோர் நிச்சயம் கைவிடப்படார் என்ற கருத்திற்கு சான்றாக விளங்குவதே இங்கு நீங்கள் காணும் லால்குடி திருத்தல ஸ்ரீபஞ்சமுகவிநாயகர் சித்திரமாகும். நான்கு தலைகளுடன் ஸ்ரீபஞ்சவிநாயகர் தோன்றினாலும் இந்த சித்திரத்தில் உள்ள பத்து கைகள் ஐந்து தலைகளை உறுதி செய்கின்றன. இருந்தாலும் இந்த கருத்தை மனித மனம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாத பக்தர்களுக்காக ஒரு மணிப்புறாவின் ஐந்தாவது தலையையும் ஏற்று பக்தர்களுக்கு அருள் வழங்குபவரே ஸ்ரீபஞ்சமுக விநாயகர். என்னே மூத்த மகனின் மூத்த கருணை. நம் சற்குரு அருளிய அகரீற்று ஹோமத்தை வீட்டில் நிகழ்த்தியபோது அந்த ஹோம குண்டத்தில் சாய்பாபாவின் திருவுருவம் காட்சியளித்ததாக ஒரு அடியார் தகவல் அனுப்பியுள்ளார். ஹோம அக்னியில் இறைவன் காட்சி அளிப்பது அதிசயம் அல்லவே ? நம்பிக்கை இருக்கும் இடத்திற்கு மகான்களும், தெய்வங்களும் ஓடோடி வரும் என்பதற்கு சான்றாய் இருப்பதும் இந்த ஹோமம் ஆகும். தன்னுடைய நாம அட்சரங்களே ஹோமத்தில் அமையும்போது அந்த மகான் வராமல் இருப்பாரா ? எப்படி ? ச்ய்ப்ப்+அஅஅ+அஅஅ=சாய்பாபா, சரிதானே ? களி மண்ணிலும் காட்சி அளிப்பவன்தானே இறைவன். விட்டலா விட்டலா என்று கூறி களி மண்ணிற்கும் தன் குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் இறை பக்தியில் மூழ்கி இரண்டையும் சேர்த்து மிதித்தவன்தானே கிருஷ்ண பக்தன். ஆனால் எல்லோரும் இத்தகைய விட்டல் ஆகி விடுவதில்லை என்ற காரணத்தால் அந்த களிமண்ணை செங்கல்லாக சுட்டு அதில் இறை விக்ரகங்களைச் செய்து திருத்தலங்களில் வைத்து வழிபட்டு மிகச் சாதாரண மக்களும் பக்தியை வளர்க்க வழிவகுத்தவர்களே நம் முன்னோர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பல தம்பதியரும் நம் சற்குருவை நாடி தங்கள் குறையை தெரிவித்தபோது நம் சற்குரு அனைவருக்கும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு என்று உறுதியாகக் கூறினார். ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் நம் சற்குரு உபதேசத்தின் பொருள் சற்றே விளங்கும். முதலில் விக்ரஹத்திலும் உருவத்திலும் கடவுளைத் தேடும் மனிதன் தன் பக்தி பெருக, பெருக, பழுக்க பழுக்க இறைவன் எல்லோர் மனதிலும் பிரகாசிப்பதை உணர்வான். களிமண்ணில் இறைவன் இருந்தாலும் அது சுடப்பட்டு கெட்டியாகி இறை விக்ரமாக மலர்ந்து பக்தியைப் பெருக்கி, பக்தியின் அடைக்கலமாய்த் திகழும்போதுதானே இறைவனின் உண்மை சொரூபத்தை பக்தன் உணர முடிகிறது. அந்த நிலையில்தான் அவன் மாதா அமிர்தானந்தா மயி அன்னையைப் போல அனைவரையுமே தன் குழந்தைகளாய்ப் பாவித்து கட்டித் தழுவ பேரவா கொள்கின்றான். ராகு என்பது கருங்கல்லிற்கு உரியதாகையால் இந்த வருடத்தில் பக்தர்கள் இறை பக்தியை கருங்கல்லைப் போல் இறுக்கி தங்கள் உள்ளத்தில் மிளிரும் இறை சக்தியை நிச்சயமாக உணர முடியும் என்று சித்தர்கள் உறுதி அளிக்கிறார்கள். குருவருளால் பக்தியால் இறைவனை உள்ளத்தில் இவ்வருடம் தரிசனம் செய்ய இயலும் என்றால் இறை அனுகிரகத்தின் ஒரு அணுவினும் அணுவான குழந்தை செல்வத்தைப் பற்றி அல்லது மற்ற எந்த செல்வத்தையாவது பக்தன் பெற விரும்புவானா என்ன ? இங்கு அளித்துள்ள வீரட்டான சித்திரமே கடவுளைப் பற்றிய அனைத்து ஞானத்தையும் ஒரு நொடியில் அளித்து விடும். இரு பெண் கோபிகள் தங்கள் ஆடைகளுக்காக இறைவனை வேண்ட, ஒரு உண்மையான பக்தையோ எதையும் விரும்பாமல், தன் உடம்பை மறைக்கும் ஆடை இருக்கிறதா இல்லையா என்ற சிந்தனை துளியும் இன்றி தன் மனம் பரமாத்மாவிடம் ஒன்றிய நிலையில் இலயித்து இருப்பதை சித்தரிக்கும் இது கருங்கல் சித்திரமா இல்லை இறை லீலையை உணர்த்தும் விசித்திரமா ? இந்த சித்திரத்தின் பின்னணியாக அமைந்த ஹரித்துவாரமங்கலம் பிலாகாசயோகத்தின் விளக்கமாக அமையும் குருவருளே.

கல்லில் கனியும் கருணை வேந்தன்

இந்த வருடம் முழுவதும் கல்லில் திகழும் நடராஜ மூர்த்திகளை வணங்குவதால் பக்தர்கள் அளப்பரிய பலன்களைப் பெறலாம் என்பது சித்தர்களின் தெளிவுரை. கல் நடராஜ மூர்த்திகளை வணங்கும் தத்துவத்தை ஓரளவு அடியார்கள் புரிந்து கொண்டாலும் பெரும்பாலான இறை விக்ரகங்கள் கல்லில்தானே அமைந்துள்ளன என்பதே அவர்கள் இதயத்தில் தொக்கி நிற்கும் கேள்விக் குறி. ராகு என்பது வெறும் கல்லை மட்டும் குறிப்பதன்று. ராகுவின் ஏழாம் இடத்தில் கேது அமைவதுடன் இருவரின் இயக்கமும் ஒருவரை ஒருவர் தரிசித்தவாறே திகழும் என்பதை அனைவரும் அறிவர். இதுவும் ஒருவித கிரக சங்கமமே. இந்த பார்வை சங்கமத்தை குறிக்கும் இறை உருவமே நடராஜ தரிசனம் என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கம். பக்தர்கள் சித்தர்களின் இந்த விளக்கத்தை ஊன்றிப் படித்து, ஆத்ம விசாரம் செய்து பக்தியைப் பெருக்கிக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீநடராஜர் வடகுரங்காடுதுறை

ராகு திசையில் விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவு நிகழ்த்தியபோது அவரை கௌரவிக்கும் விதமாக அங்கு கூடியிருந்த பக்தர்கள் கரகோஷம் செய்தது இன்று வரை ஒரு சாதனையாகவே திகழ்கின்றது. கரகோஷம் என்ற இரு கை சேர்ந்து எழுப்பும் ஆரவார சப்தமே ராகு பகவான் சக்தியின் வெளிப்பாடாகும். இதைப் புரிந்து கொண்டால்தான் எப்படி எவ்வளவோ சிவ சக்தி உருவங்கள் இருந்தாலும் சிவ சக்தியின் வெளிப்பாடான நடராஜ உருவம் மட்டும் ஏன் இத்தகைய சக்தியுடன் பூரித்துள்ளது என்ற இரகசியம் தெளிவாகும். ஊட்டத்தூர், இன்னம்பர், வடகுரங்காடுதுறை போன்ற தலங்களில் எழுந்தருளியுள்ள கல் நடராஜ மூர்த்திகள் இத்தகைய மன உறுதி கூடிய பக்தியை பிரசாதமாக அளிக்கும் தன்மையுடன் திகழ்கின்றனர் என்பதும் இந்த மூர்த்திகளுக்கு உரிய தனித்தன்மையாகும். இவ்வருடம் இருள் சூழும் வருடம் என்று சித்தர்கள் உரைத்தாலும் இதன் மறை பொருளாக உள்ளொளி, உள்ளொலி பெருகும் ஆண்டு இதுவே என்பதும் ஒரு சுவையாகும். பலரும் தாங்கள் எத்தனையோ இறைத் தலங்களில் திகழும் இறை மூர்த்திகளைத் தரிசித்தாலும் இறைவனின் வெளிப்பாடான, இறை சக்தியின் நிலைக்கலனான தங்கள் இதயத்தின் ஒலியையோ, அதில் விளங்கும் இறைவனின் ஒளி தரிசனத்தையோ பெற்றதில்லை என்பதே ஆச்சரியமான விஷயமாகும். சாதாரண ஒரு அகல் விளக்கின் தீபமே நடுக்காட்டில் ஏற்றி வைக்கப்படும்போது அது 12 மைல்களுக்கு அப்பாலும் தெரியும் என்றால் இது இருட்டின் மகிமையைக் குறிப்பதா அல்லது விளக்கின் சக்தியை விளக்குவதா ? எது எப்படியிருந்தாலும் இந்த இரண்டின் மகிமையப் பற்றித் தெரிந்து கொள்ள, முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஆண்டே 2020 ஆகும். எந்த திருத்தல கல்நடராஜ மூர்த்தியின் முன்பு வேண்டுமானாலும் அமர்ந்து கண்களைத் திறந்து கொண்டே தங்கள் இதயத்தில் எழும் லப் டப் என்ற ஒலியைத் தியானித்து வாருங்கள். முதலில் இது சற்று சிரமமாக இருப்பது போல் தோன்றினாலும் மெல்ல மெல்ல இந்த இதயத் துடிப்பின் ஒலியை நிச்சயமாக நீங்கள் கேட்க முடியும். தொடர்ந்து இந்த ஒலி வழிபாட்டை வீடு, அலுவலகம், பஸ், கார் என அனைத்து இடங்களிலும் பயின்று வந்தால் அதன் விளைவாக உங்கள் இதயத்திலிருந்து தோன்றும் ஒளிக் கற்றையின் தரிசனத்தையும் நீங்கள் பெற முடியும். இதற்கு எத்தனை ஆண்டுகள், பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பதை திட்ட வட்டமாக கூற முடியாது என்றாலும் நீங்கள் நிறைவேற்றும் இந்த ஆரம்ப கட்ட பயிற்சிகளே உங்கள் நடவடிக்கைகளில் ஒரு நிதானத்தையும் உங்கள் காரியங்களில் ஒரு பற்றையும் பிடிப்பையும் ஏற்படுத்தும் என்பது உண்மையே. பற்றா ... அது இல்லாமல் இருப்பதற்காகத்தானே இத்தனை போராட்டமும் என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. ஆனால், இந்தப் பற்று என்பது பற்றற்றான் திருவடிகளில் பெருகும் பற்றாக நாளடைவில் மலரும் என்பதே பெரியோர்கள் அளிக்கும் உத்தரவாதம். முடிந்த மட்டும் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இந்தத் தியான பயிற்சிகளில் ஈடுபடுதல் நலம். இதயம் துடிக்கின்றது, கண்கள் இமைக்கின்றன, சுவாசம் மேலெழுகின்றது என்ற இந்தக் காரியங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கால இடைவெளியில் அமைவது போல் தோன்றினாலும் இவை அனைத்தும் ஒரே கட்டளையின் பேரில்தான் அமைகின்றன, இயங்குகின்றன என்ற உண்மையை நாம் உணரக் கூடிய ஆண்டே இந்த ராகவேந்திர வருடமாகும். அவ்வாறு உணர்வதோடு மட்டுமல்லாமல் நாம் தியானத்தில் முன்னேறி இறைப் பரம்பொருளை அடைய உதவி செய்வதும் இந்த வருட தியான மகாத்மியமாகும்.

ஸ்ரீபைரவர் வழிபாடு

இந்த வருடத்திற்குரிய எண் நான்கிற்கு குசாவாக அமையும் எட்டு எண் குறிப்பதே அஷ்டமி திதிக்குரிய ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஆகும். அஷ்டமி என்பது திதிகளில் மத்தியில் அமைந்து குசா சக்தி பெறுவதுடன் நான்கிற்கு குசாவாக அமையும் சிறப்பைப் பெறுகிறது. அது மட்டுமல்லாமல் மேற்கு திசை சூரியன் மறையும் திசையாக அமைந்து எட்டுக்குரிய எண் சக்திகளுடன் திகழ்வதும் இந்த சிறப்பிற்கு அணி சேர்க்கிறது. எனவே இந்த 2020 வருடம் மேற்கு திசை நோக்கி அருளும் பைரவர், காலபைரவர் மூர்த்திகளின் வழிபாடு சிறப்பாகும். ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம், உறையூர், திருச்சி, ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயம், லால்குடி போன்ற ஆலயங்களில் ஸ்ரீபைரவர் மேற்கு நோக்கி அருள்கிறார். உறையூர் திருத்தலத்தில் சூரிய பகவான், பைரவர், சனீஸ்வரர் என்ற மூன்று மூர்த்திகளுமே மேற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும்.

ஸ்ரீசனி பகவான் பைரவர்
சூரியன் உறையூர் சிவாலயம்

“மூவர் நோக்கும் முனி நிழல் பீடம்
காவல் கருதா கவின் வினை பொழியுமே”
என்று இந்தச் சிறப்பைப் புகழும் ஸ்ரீஅகத்திய சுவடிகள். இருள் சூழும் வருடமாக இவ்வருடம் அமைவதால் இருட்டில் முதலில் விளைவது பாதுகாப்பற்ற நிலையே. பல ஆயுதங்களையும் பெற்றிருந்தாலும் இருட்டு சூழ்ந்துவிட்டால் அந்த பாதுகாப்பையும் மேற்கொள்வதற்கு ஒளி என்ற ஒன்று அவசியம் வேண்டும் அல்லவா ? சற்றே கூர்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஒளி அளிக்கும் பாதுகாப்பின் சிறப்பைப் பற்றி உணர முடியும். உறையூர் ஆலயத்தில் இந்த மூன்று மூர்த்திகளை முறையாக தொடர்ந்து வணங்கி வருதலால் இருட்டு என்ற வினையால் பாதிக்கப்படாமல் அத்தகைய பக்தர்கள் பாதுகாப்பைப் பெறுவார்கள் என்பதே இந்த அகத்திய சுவடி விளக்கும் பாதுகாப்புப் பெட்டகமாகும். சூரியனுக்கு 10, பைரவருக்கு 8, சனி பகவானுக்கு 8, குருவுக்கு 3 என்ற கணக்கில் 29 முறை ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வலம் வந்து வணங்கி வருதலால் எத்தகைய இருட்டு சூழ்நிலையையும் பக்தர்கள் எதிர்கொள்ள முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் நம்பிக்கை. இல்லக விளக்கது இருள் கெடுப்பது ... என்று தேவாரப் பாடலையோ அல்லது ஸ்ரீஅகத்திய தேவாரப் பாடல்களையோ ஓதி வலம் வருதல் சிறப்பு. ஒளி அளிப்பவர் சூரிய பகவான், இருள் சனி பகவானுக்கு உரியது, இவ்விரு மூர்த்திகளின் சக்தி பிரவாக தன்மையோ பைரவ மூர்த்தியால் மாற்றப்படக் கூடியது என்பதே இம்மூர்த்திகளின் மேலோட்டமான சங்கம இரகசியமாகும். செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பொன்னாங்கண்ணி என்ற ஐந்து தைலங்கள் கலந்த எண்ணெய் கலந்து ஏற்றப்பட்ட 29 தீபங்களை ஏற்றி வழிபடுதல் சிறப்பு. இரண்டு தீபங்கள் நந்தி முன்பு மேற்கு நோக்கி இருக்குமாறு வைத்து மற்ற 27 தீபங்களை திசைக்கு ஒன்பது என்ற கணக்கில் இருக்குமாறு வைத்து வழிபடுவதால் எத்தகைய இருளிலும் பாதுகாப்பு பெறும் “கெட்டி” வழிபாடு ஆகும். நேரம், காலம் பார்க்காமல் ராகு காலம், எமகண்டம், மரண யோகம் என்ற நேரத்தில் எல்லாம் பயணம் செய்ய வேண்டிய அலுவலக பொறுப்பில் உள்ளவர்கள், காவல் துறை போன்ற பாதுகாப்புத் துறையினரும் இத்தகைய வழிபாடுகளால் உரிய பாதுகாப்பைப் பெறுவார்கள். நந்தியின் குறுக்கே செல்லாமல் நந்தியைச் சுற்றி மூலவரையும் சுற்றி வந்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இவ்வாறு கோயில் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி பிரவேசிக்கும் வழிபாடு இருள் உலகம், ஒளி உலகம் என்றவற்றிற்கு மாறும் வழிபாடாகவும், காலத்தைக் கடக்கும் தியானமாகவும் மலரும் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பாகும்.

சகஸ்ரலிங்கம் காளையார்கோவில்

தீப வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் இங்கு ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரே அருள்புரியும் ஸ்ரீஉதங்க மகரிஷியை வழிபட்டு அவர் அனுமதியை வேண்டுதல் நலம். மேற்கு திசையில் மறையும் சூரிய பகவானின் உதங்க கதிர்களை வழிபட்டு அக்கதிர்களை தன் குருவிற்கு அர்ப்பணித்து அதை ஸ்ரீதட்சிணா மூர்த்தி பிரசாதமாகப் பெற்று அந்த பிரசாதக் கதிர் சக்திகளை பக்தர்களுக்கெல்லாம் அர்ப்பணிக்கும் திருவுள்ளம் கொண்டவரே ஸ்ரீஉதங்க மகரிஷி ஆவார். நம் சற்குரு இத்தலத்தில் திருப்பணி இயற்றியபோது ஸ்ரீஉதங்க மகரிஷியின் அனுமதி பெற்றே திருப்பணியைத் தொடங்கினார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தங்க சுவையாகும், இல்லை அது உதங்க சுவையா ? லால்குடி அருகில் திருமங்கலம் திருத்தலத்தில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுபவர்கள் வெளிப் பிரகாரத்தை 29 முறை பிரதட்சிணமாக வலம் வருதல் நலம். இதனால் இவர்கள் சுவாமி, அம்பாளுடன் ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரில் எழுந்தருளிய ஸ்ரீஉதங்க மகரிஷியையும் வலம் வந்தவர்கள் ஆவர். பிள்ளையார் மூர்த்தி உமா மகேஸ்வரரை வலம் வந்தது உலகையே வலம் வந்ததாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே. அதே போல் திருமங்கலம் திருத்தலத்தில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரதட்சிணம் இந்த உலகையே வலம் வந்ததற்கு இணையாக பொருள் கொள்ளப்படுகிறது. இதற்கு இத்தல அம்பிகை நாமம் ஸ்ரீஉலக நாயகி என்று அமைந்ததும் ஒரு காரணமாகும். அதனால்தான் என்னவோ இத்தலத்தில் இரண்டு முறை நம் சற்குரு எழுந்தருளி மங்கள துதிகளை ஓதி பக்தர்களுக்கு எல்லாம் அருளாசி வழங்கினார் போலும். நாற்றிசை மூர்த்திகள் வழிபாட்டைப் போல் இந்த நாற்றிசை தீப வழிபாட்டையும் அனைத்து திருத்தலங்களிலும் நிறைவேற்றி பயன்பெறலாம் என்றாலும் காளையார்கோவில், லால்குடி அருகே நகர், திருச்செங்கோடு போன்று சகஸ்ரலிங்க மூர்த்திகள் பிரதட்சிணம் வரும் வகையில் அமைந்த திருத்தலங்களில் மேற்கு திசையில் இரண்டு தீபங்களையும் மற்ற திசைகளில் திசைக்கு ஒன்பது தீபங்களையும் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.

உறையூர் முனி நிழல் பீடம்

மூன்று தீபங்கள் பொலியும்போது நடுவில் உள்ள தீபம் குசா சக்தியுடன் திகழ்வது போல் உறையூரில் பொலியும் மூன்று இறை மூர்த்திகள் நடுவில் ஸ்ரீபைரவ மூர்த்தி குசா சக்தியுடன் திகழ்வது இவ்வருடத்திற்கான சிறப்பான திருத்தல சிறப்பை நல்குகிறது. தனுசு ராசியில் நிகழும் புது வருடத்திற்கான கிரக சஞ்சாரம் இத்தகைய நவ கிரக மூர்த்திகளின் சக்தியுடன் துலங்குவதே இந்த சிறப்புக்கு அணி சேர்க்கும் தனுசு ராசி பீட சிறப்பாகும். உறையூர், மாந்துறை போன்ற தலங்கள் நான்கு எழுத்துக்களுடன் அமைவதுடன் இவ்வாறு இறை மூர்த்திகள் அருளும் வளாகத்தை விட்டு நந்தி மூர்த்தி விலகி இருந்து அருள் பாலிப்பது பகல் இரவு தத்துவமாகவும் காலத்தை உணர்த்தும் கால பைரவரின் தத்துவமாகவும் பொலிகின்றது என்பதே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் சக்தியை விளக்கும் இறை சிறப்பாகும்.

பொதுவாக, நவகிரக தோற்ற விதிகளின்படி சூரியனின் புதல்வனாக சனீஸ்வர மூர்த்தியை குறிப்பதுண்டு. இவ்வாறு தந்தைக்கு தனயன் என்ற உறவு முறை முன்னால் தோன்றிய தந்தைக்கு உறவாக பின்னால் தோன்றும் தனயனைக் குறிப்பதால் சூரியன் சனீஸ்வர மூர்த்திகளின் நடுவே காலபைரவ மூர்த்தி உறையூர் திருத்தலத்தில் அமர்ந்து இத்தத்துவத்தை விளக்கும் சாட்சி நாயகனாய்த் திகழ்கிறார். தந்தையானவர் தன் குழந்தை மீது அளவு கடந்த பாசத்தைப் பொழியும்போது அந்த தந்தையே காலத்தின் சுழற்சியில் தன் மகனுக்கே குழந்தையாக பிறக்கும் நிலை உருவாகிறது. இதைக் குறிப்பதும் பைரவரின் கால தத்துவமே. இக்காரணம் பொருட்டே ஜீவன்களின் முற்பிறவி காரண காரியங்களை இறைவன் மறைத்து விடுகிறார். இந்த பிறவி இரகசியங்களை உரிய நேரத்தில், அதாவது ஒரு ஜீவன் தன் விதியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் மன உறுதியைப் பெறும்போது காலபைரவரே இந்த இரகசியங்களை உரியவர் மூலம் வெளிப்படுத்துகிறார். இதற்காகவே மனிதர்கள் அனைவரும் திருத்தலங்களில் பைரவ, கால பைரவ மூர்திகளின் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு சூரிய பகவான், சனீஸ்வர மூர்த்திகள் இவர்கள் இடையே ராகு பகவானின் பார்வை அமைவது இவ்வருட உதயத்தில் என்பதால் இத்தகைய கால இரகசியங்களை பக்தர்கள் அறிந்து கொண்டு மன அமைதி பெற்று இறை வழியில் முன்னேற இவ்வருடம் உதவியாக இருக்கும் என்பதால் இத்தகைய சிறப்புகள் பொலியும் உறையூர் திருத்தல வழிபாடு இந்த புது வருடத்திற்கு உகந்ததாக கொண்டாடப்படுகிறது.

திருவாவடுதுறை

மேலும் இத்தகைய நந்தி மூர்த்திகளுக்கு எதிரில் இத்திருத்தல தீர்த்தங்கள் அமைந்திருப்பது இந்த சிறப்புகளுக்கெல்லாம் அணி சேர்ப்பதாகும். நீர்த் தத்துவமான வளர்பிறை சந்திரனுக்கு 11ம் இடத்தில் இத்தகைய கிரக சஞ்சார இணைப்பு ஆயுளை விருத்தி செய்வதுடன் அமிர்த சக்திகளை வாரி வழங்கும் என்பதும் ஜோதிட விதியே, கால தத்துவக் கோட்பாடே. புத்தாண்டில் இத்தகைய அமிர்த சக்திகள் நிறைந்த திருக்குளங்களில் நீராடி அமிர்த சக்திகளை அடியார்கள் பெருக்கிக் கொள்வதுடன் இந்த அமிர்த சக்திகளை மற்றவர்களும் பெற வழி வகுக்கும் முறையாக தேன் கலந்த பசும்பாலை குறைந்தது 12 லிட்டர் இத்தகைய அமிர்த சக்தித் தலங்களில் தானமாக அளித்தல் சிறப்பாகும். இத்துடன் குசா சக்திகள் பொலியும் புதன்கிழமை இப்புது வருடம் தோன்றுவதால் பொன் நிறம் பொலியும் மாங்கல்யம், வாழைப்பழம், தங்க ஆபரணங்கள், வெற்றிலைப் பாக்கு, ரோஜா மலர்கள் குறைந்தது 5, பொன்னாடைகள் அதாவது மஞ்சள் நிற பார்டர் கொண்ட ஆடைகள், குங்குமப்பூ கலந்த இனிப்புகள் போன்ற குருவுக்கு உகந்த அனைத்து பொருட்களையும் தானமளித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். புதன் கிழமை நம் சற்குரு இப்புவியில் தோன்றி இறையருள் பரப்பிய பொன்னான நாள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் தாமே ?! இங்கு நீங்கள காணும் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் இணைந்து அடிஅண்ணாமலையில் அருளும் அற்புதத் திருக்கோலம் பல ஆத்ம விசார வினாக்களுக்கு விடையளிப்பது. ஒன்றுக்குப் பலமுறை இந்த விளக்கங்களை ஊன்றிப் படித்து பொருள் கொள்ள விழைவதே உங்கள் சிந்தனையை தெளிவாக்கும் சற்குருவின் முத்துப் பரல்கள், இவ்வருட ஆன்மீகப் புதையல். திருச்சி உறையூர் திருத்தலத்தில் நந்தி மூர்த்திக்கும் இறைவனுக்கும் இடையில் கொடி மரம் அமைந்துள்ளது அல்லவா ? பல திருத்தலங்களிலும் நந்தி மூர்த்திகள் நேரிடையாக இறைவனை தரிசனம் செய்யும் வகையில் அமைந்திருக்க சில தலங்களில் (உதாரணம் திருவாவடுதறை) இவ்வாறு இறைவனுக்கும் நந்தி மூர்த்திகளுக்கும் இடையே கொடி மரங்கள், கொடி மர விநாயக மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதுண்டு. இந்தக் கொடி மர விநாயகரையும், அவர் முன் உள்ள நந்தி மூர்த்தியையும், அடிஅண்ணாமலையில் ஸ்ரீவிநாயகர் அருகில் எழுந்தருளி உள்ள சிவனடியார் காரைக்கால் அம்மையாரையும், வயது குறைந்த மனைவியை திருமண பந்தத்தில் இணைத்துள்ள கணவனுக்கும் இடையே நிகழும் சுவாச பந்தன இரகசியங்களையும் தெளிவுபடுத்துவதே இந்த பந்தங்களை விளக்கும் தத்துவங்களாகும்.

அடிஅண்ணாமலை திருத்தலம்

திருத்தலங்களில் நாம் நந்தி சுவாமியின் குறுக்கே செல்லக் கூடாது, தம்பதிகள் குறுக்கே செல்லக் கூடாது என்று நம் பெரியோர்கள் கூறுவது இந்த சுவாச பந்தங்களைக் களையக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான். அவ்வாறிருக்க இறைவனே நடுவில் ஒரு கொடி மரத்தை அமைத்து நந்தியின் சுவாசத்தை தடை செய்கிறார் என்றார் அதற்கு நிச்சயம் காரணம் இருக்கும் அல்லவா ? எப்படி தந்தையாக இருக்கும் ஒருவர் தானே தன் மகனுக்கு குழந்தையாய்ப் பிறக்கிறாரோ, தன் மனைவியே அடுத்த பிறவியில் தன்னுடைய மகளாக வளர்கிறாளோ அது போன்ற பல பூர்வ ஜன்ம விளைவுகளைக் களைவதும் மேற்கண்ட கொடி மர அமைப்புகளின் பின்னணியில் அமைந்த இரகசியம் ஆகும். இங்கு நீங்கள் காணும் உத்தம சிவனடியார் உருவமான காரைக்கால் அம்மையாரின் உருவம் ஆடையின்றி இருக்கும்போது அது ஒரு விரசமான காட்சியாக அமைவதால் நீங்கள் மனதில் அந்த விரசக் காட்சியை மறைக்க முயலலாம். அதாவது நீங்கள் இருளைப் போர்த்தி அந்த காட்சியை உங்கள் மனதிலிருந்து மறைத்து விடலாம் என்பது உண்மையே ஆயினும் அதே சமயத்தில் அந்த இருளில் விநாயகப் பெருமானின் இறைக் காட்சியும் மறைந்து விடும் அல்லவா ? இத்தகைய குழப்பமான சூழ்நிலைக்கு விடையாக வருவதே எந்தக் காட்சியையும், தோற்றத்தையும் தத்துவார்த்தமாக அதாவது இறை தத்துவமாக, பெண் தத்துவமாக காண்பது என்பது. இத்தகைய தத்துவ காட்சிகள், தத்துவ விசாரம் பூரிக்கும் ஆண்டே இவ்வருடம். அடிஅண்ணாமலை, உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம், மாந்துறை சிவாலயம் போன்ற திருத்தலங்களில் வழிபட்டு ஆத்ம விசாரம் செய்து வந்தால் மெதுவே, மெதுவே, மெதுவே இந்தக் காட்சிகளின் தத்துவ விளக்கங்கள் புரியலாகும். தத்துவங்கள் புரியும் வரை வழிபாடுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும், குருவருளால்.

சங்கில் புரளும் கங்கை பிரவாகம்

நம் உடலில் வலது தோளில் சங்கும் இடது தோளில் சக்கரமும் இருப்பதாக பாவித்து இங்கு சங்கு சக்கரத்திற்கு தினமும் குளிக்கும்போது அபிஷேகம் இயற்ற வேண்டும். அதன் பின்னரே தலையில், உடலில் நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் என்பது நம் சற்குரு அளிக்கும் குளியல் விதி. இதன் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியங்கள் பல பல. ஆண்களுக்கு வலது தோள் என்பது வீரம், விவேகம், உறுதி, தைரியம், பராகிரமம் என்ற பல புருஷார்த்தங்களை அளிப்பதால் இவை அனைத்தையும் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சங்கு என்னும் ஆயுதம் வலது தோளில் இருப்பதாக ஆரம்பத்தில் நாம் பாவனையாகவே எடுத்துக் கொண்டாலும் நாளடைவில் இந்த சங்கு சக்திகளை நாம் உணர்ந்து வழிபட முடியும். இதற்கு உறுதுணையாக இருப்பதே திருத்தலங்களில் கார்த்திகை மாதத்தில் நாம் மேற்கொள்ளும் சங்கு அபிஷேகம், சங்கு வழிபாடு போன்ற தெய்வாம்சங்கள் ஆகும். சங்கு அபிஷேகத்தின் அதிசயமான சக்தி என்னவென்றால் சங்கில் ஊற்றப்படும் பால், தேன், கங்கா ஜலம் போன்றவை வலஞ் சுழி சக்தியைப் பெறுகின்றன. நாம் அந்த திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் இயற்றும்போது இத்தகைய சக்திகள் இடஞ் சுழி சக்தியைப் பெறுகின்றன.

அனைவரும் சங்கு சக்கரபாணிகளே

சங்குகள் வலஞ் சுழியாகவோ அல்லது இடஞ் சுழியாகவோ எப்படி இருந்தாலும் அதில் அபிஷேகத்திற்காக ஊற்றப்படும் பொருட்கள் சங்கில் வார்க்கப்படும்போது அல்லது அபிஷேகத்தின்போதோ இந்த இரண்டு சக்திகளையும் பெறுவதால் சங்கு அபிஷேக தரிசனமே எத்தனையோ மனஞ் சஞ்சலங்களை தீர்க்கும் மாமருந்தாக அமைகின்றது. நாம் திருத்தலங்களில் நடைபெறும் சங்கு அபிஷேகத்தில் நேரிடையாக பங்கு பெற முடியவில்லை என்றாலும் திருத்தலங்களுக்குச் சென்று நமக்கு தெரிந்த தேவார, திருவாசக, வேத, தமிழ், வடமொழி சுலோகங்களை ஓதி வந்தாலே போதும். அந்த சக்திகள் எல்லாம் அத்திருத்தலத்தில் நிறைவேறும் அபிஷேக திரவியங்களில் விரவி, நிரவி நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் அமைதியை வர்ஷிக்குமே, சாந்தத்தைப் பெருக்குமே. இதுவே நம் முன்னோர்களின் அறிவுத் திறன். இக்காரணம் குறித்தே போர்க்களத்தில் ஊதப்படும் சங்கு நாதமும் விஜய நாதம், வெற்றி நாதமாக மலர்ந்து பல பிறவிப் பிணிகளை மாய்க்கும் தேவநாதமாகப் பொலிகிறது. ஸ்ரீகிருஷ்ண பகவான் மகாபாரத யுத்தத்தில் பாஞ்சஜன்யம் சங்கு முழங்கி போரில் சங்கு ஊதும் சாரதி பணியை மட்டும் நிறைவேற்றினார் என்பது மேலோட்டமாகத் தோன்றினாலும் கோடிக் கணக்கான ஜீவன்களின் கர்ம வினையை தான் ஊதிய சங்கு கானத்தின் மூலமே நிறைவேற்றிய பெருமை அந்த நீலமணி வண்ணனைத்தான் சாரும். இதைத் தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று போற்றுகின்றார்கள். இளநீருக்கு கண் படா தீர்த்தம் என்ற சிறப்பு உண்டு. சங்கில் ஊற்றப்படும் பால், பன்னீர், கங்கை காவிரி தீர்த்தங்களும் சங்கில் ஊற்றப்பட்டு மந்திரம் ஓதப்படும்போது அவையும் கண்படா தீர்த்தமாக மாற்றப்பட்டு இறைவனுக்கு அபிஷேகம் இயற்றிய பின்னரே பக்தர்கள் கண்ணுக்குத் தென்படும் தீர்த்தமாக, இறை பிரசாதமாக வெளிவருகின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். கண்ணால் நோக்கப்பட்ட தீர்த்தத்தையும் கண் படா தீர்த்தமாக மாற்றும் தெய்வீக சக்தி சங்கிற்கு மட்டுமே உண்டு என்பதும் நம்மை பிரமிக்க வைக்கும் தெய்வீக இரகசியம் ஆகும்.

சங்கினுள் குடிகொண்டுள்ள ஜன்ய இருள் என்ற ஒருவித அமிர்த சக்தியே இதற்குக் காரணமாகும். சங்குப் பூச்சிகள் இத்தகைய ஜன்ய இருள் என்னும் அமிர்த சக்தியுடன் துலங்கும் என்பதால்தான் இயற்கையாக இறந்த சங்குப் பூச்சிகள் வாழ்ந்த சங்கையே இறை பூஜைகளுக்காக அபிஷேகத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். கர்ப்பப்பையினுள் வளரும் குழந்தை இருளில் வாழ்கின்றது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டாலும் உண்மையில் அது இந்த ஜன்ய இருள் என்ற ஜோதியைத்தான் தரிசித்துக் கொண்டிருக்கிறது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். அதனால்தான் கர்ப்பந் தாங்கும் பெண்கள் எந்த அளவிற்கு திருத்தலங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு, சங்கு பூஜைகள், அபிஷேகம் நடத்துகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிரகாசமான கண் பார்வையைப் பெறுவதுடன் திடமான, பிரகாசமான புத்தியை உடையதாகவும் இருக்கும். ஸ்திர மாதமான கார்த்திகை மாதத்தில் நிகழ்வதுதானே இறை மூர்த்திகளின் சங்காபிஷேகம்.

சங்கு தீர்த்தத்தில் சக்கரபாணி

ஒரு முறை நம் சற்குரு கோவணாண்டிப் பெரியவருடன் திருஅண்ணாமலைக்கு மேல் யோக நிலையில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, “எங்கேடா நீ அண்ணாமலையானுக்கு சாத்தின துணியெல்லாம் காணோமே, எங்க மெய்யாலுமா அதை எல்லாம் ஒழுங்கா சாத்தினியா இல்லே வேற எதையாச்சும் நெனச்சுக்கிட்டே சாத்தினியா ?” என்று குரலில் உஷ்ணம் தொணிக்க கேட்டார் சிறுவனுக்கு வெலவெலத்து விட்டது. சிறுவன் வெங்கடராமன் அங்காளி கோயிலை வலம் வரும்போது ஆற்றிய பூஜைகளில் மானசீகமாக அருணாசல ஈசனுக்கு வஸ்திரம் சார்த்தும் திருப்பணியும் ஒன்று. அதாவது காயத்ரீ மந்திரத்தையோ அல்லது தனக்குப் பரிச்சயமான ஏதோ ஒரு மநதிரத்தையோ ஓதி சுவாமிக்கு அந்த மந்திரத்தால் ஆன ஒரு ஆடையை அணிவிப்பதாக, போர்த்துவதாக மனதிற்குள் எண்ணுவதே, மானசீகமாக எண்ணுவதே மானச பூஜையின் ஒரு அங்கம், சக்தி வாய்ந்த வழிபாடு. இந்த வழிபாட்டைப் பற்றி தன் கோவணாண்டியிடம் பணிவின் காரணமாக சிறுவன் மூச்சு விட்டதே கிடையாது. பெரியவரும் ஒன்றும் தெரியாததுபோல் இதுவரை அதைப் பற்றி கேட்டதே கிடையாது. இன்றோ சிறுவன் தன் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான், லட்சக் கணக்கில் மீட்டர் துணிகளை அண்ணாமலை திருமேனிக்கு சார்த்திப் பூஜை செய்தாலும் அதில் ஒரு துணியைக் கூடவா இறைவன் ஏற்று அருளவில்லை என்பதே அவனுடைய வருத்தத்திற்கு காரணம். அந்தக் காட்சியை பரமானந்ததத்துடன் இரசித்த பெரியவர் தன் கையை ஆட்டி சிறுவனை ஒரு பக்கத்தில் பார்க்கும்படிக் கூறினார். அந்தக் காட்சியை கண்ட சிறுவன் அப்படியே பிரமித்துப் போய் விட்டான். ஆம், அங்கே சிறுவன் திருஅண்ணாமலைக்கு சார்த்திய வஸ்திரம் எல்லாம் கோடிக் கணக்கான அநாதை பெண்களுக்கும், நிர்வாணமாய் நின்ற குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஆடையாய் சுற்றி இருக்கும் காட்சி அவன் கண்களில் சிறிதே தென்பட்டது. இதுவே திருஅண்ணாமலையானுக்கு நாம் நிறைவேற்றும் வஸ்திர பூஜையின் மகிமை. மக்களாய்ப் பிறந்த அனைவரும் ஆடைகளை தானமாக அளிக்க வேண்டிய பாக்கியே லட்சக் கணக்கில் வைத்துள்ளனர். திருஅண்ணாமலையானுக்கு இவ்வாறு வஸ்திர பூஜையை நிறைவேற்றும்போது, அது மனதளவில் இருந்தாலும் நம் பாக்கியை ஏதோ ஒரு அளவில் நிறைவேற்ற அவன் கருணை புரிவான் என்பதே இந்நிகழ்ச்சி சுட்டிக் காட்டும் நீதி. துரோபதையினுடைய ஒரே ஆடையையும் துச்சாதனன் பற்றி இழுத்துபோது அவளுக்கு ஆயிரக் கணக்கில் சேலைகள் அளித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருஅண்ணாமலையில் புது வஸ்திரங்களின் மேல் கிரிவலம் வந்து அவற்றை சுமங்கலிகளுக்கு அர்ப்பணித்தது நீங்கள் அறிந்ததே. இந்த இருள் சூழும் வருடத்தில் எந்த அளவு சுயம்பிரகாச ஈசனுக்கு மானசீகமாக வஸ்திரம் சாற்றி வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் இருளில் தடுமாற மாட்டோம் என்பதே சித்தர்கள் அருளும் பாதுகாப்பு. கண்ணாடியில் பிரதிபலிக்கும் திருஅண்ணாமலையாரின் சித்திரம் கூட ஒளியுடன் பிரகாசிக்கும் என்பதே இந்த வஸ்திர பூஜையின் மகிமை. இவ்வாறு திருஅண்ணாமலையாரை லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் ஒளி வெள்ளத்தில் தரிசனம் செய்த மகான்களில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளும் ஒருவர்.

ஸ்ரீராகவேந்திர லீலை

ராகு பகவான் சக்திகள் பலம் கொள்ளும் இவ்வருடம் ராகுவிற்கு மோட்சம் அருளிய பெருமாளின் மோகினி அவதார வழிபாடு சிறப்புடையதாகிறது. மோகினி அவதாரம் கொண்ட ஏகாதசி திதியில் நிர்ஜலமாக, ஒரு துளி நீர் கூட அருந்தாது ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பது சிறப்புடையது என்றாலும் அத்தகைய மனபலம் கொண்டோரை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பதால் நன்றாக உணவருந்தி முடிந்த மட்டும் இறை நாமத்தை ஓதி ஏழைகளுக்கு அவர்கள் விரும்பும் உணவை அளித்தலே இன்றைய நாகரீக உலகில் அனைவருக்கும் ஒத்துவரும் மோகினி வழிபாடு என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இருளில் எங்கோ தெரியும் ஒரு ஒளிக் கீற்றுக் கூட மிகுந்த பிரகாசத்துடன் துலங்கும் என்றாலும் இருளில்தான் பல தவறுகள் சம்பவிப்பதாக உள்ளன. இவ்வாறு இருள் கர்மங்களை களையும், கழிக்கும் வழிபாடாக அமைவதே ஏகாதசி திதி அன்று நிகழ்த்தும் தான தர்ம வழிபாடுகளாகும். இந்த மோகினி அவதாரத்தை வழிபடும் சிறப்பான தலமாக அமைவதே காஞ்சிபுரம் தூப்புலில் உள்ள ஸ்ரீவிளக்கொளி பெருமாள் திருத்தலமாகும்.

ஸ்வேதாம்பரக் கதிர்கள்
பொலியும் திருஆனைக்கா

ஸ்ரீதீபப் பிரகாசர், ஸ்ரீதிவ்ய பிரகாசர் என்பது சுவாமியின் மற்ற நாமங்கள் ஆகும். இந்த நாமங்களே இந்த இருள் வருடத்தில் வழிபட வேண்டிய மூர்த்தி இவர்தான் என்பதைப் புலப்படுத்தும். இத்தகைய சிறப்புகளுக்கு சிகரமாய்த் திகழ்வதே நம் சற்குரு இத்தலத்தில் திருப்பணிகள் இயற்றி தீப சக்திகளை, ஜோதி சக்திகளை, ஒளி சக்திகளை, பிரகாச சக்திகளை இத்தலத்தில் புனருத்தாரணம் செய்து எதிர்கால மக்கள் சமுதாயத்தில் இருளின் கொடுமையான பிடியிலிருந்து காக்கத் துணை புரிந்தார். இவ்வருடம் இத்திருக்கோயிலில் எந்த அளவு வழிபாடுகள் இயற்றி தீப சக்திகளை பெருக்குகிறோமோ அந்த அளவிற்கு நம் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் பிரகாசம் நிறையும். இத்தலத்தின் புராண பெயர் திருத்தண்கா என்பதாகும். இது தீபத்தின் சிறப்பைக் குறிப்பது. எந்த தீபமாக இருந்தாலும் அதன் உட்பகுதி குளிர்ச்சியாக இருக்கும், பிரகாசம் கொள்ளும் வெளிப்பகுதி அனல் சக்திகள் மிகுந்திருக்கும். இதை உணர்த்துவதே தண் கா. குளிர்ச்சி தீபமாக மலர்வதுதான் தண்கா. கா என்ற பெயரில் முடியும் தலங்கள் எல்லாம் இத்தகைய மலர் சோலை சக்திகளுடனும், தீப சக்திகளுடனும் பொலியும். கோடி கா, ஆனை கா, குரக்கு கா என்பவை சில உதாரணங்கள். ஜோதி, தீபம் என்று பொதுப்படையாக கூறினாலும் தீபத்தில் பொலியும் அக்னி சக்திகள் கோடி கோடியே. உதாரணமாக ஸ்வேதாம்பரம், பீதாம்பரம், கிருஷ்ணாம்பரம், சிதம்பரம் போன்றவை நாமறிந்த ஒரு சில தீப சக்திகளே. திருஆனைக்காவில் பொலிவது ஸ்வேதாம்பரம் தீப சக்திகள், குரக்குக்காவில் பீதாம்பர தீப சக்திகள், ஸ்ரீதீபப் பிரகாசர் சன்னதியில் பொலிவது கிருஷ்ணாம்பரம் என்ற தீப சக்திகளாகும். இந்த தீப சக்திகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டவர்களே சித் அம்பர தீப சக்திகளை சிதம்பரத்தில் தரிசிக்க இயலும். திருவானைக்கோவிலில் பொலியும் ஸ்வேதாம்பரக் கதிர்களை பக்தர்கள் அனைவரும் பெற்று நல்வாழ்வு பெற தங்கள் தபோ சக்திகளை அர்ப்பணிப்பவர்களே ஸ்ரீஜம்பு மகரிஷியும், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாயும் ஆவாள். தினமும் நண்பகல் நேரத்தில் நிறைவேறும் உச்சிவேளை அபிஷேகத்தின்போது சுவாமி ஸ்ரீஜம்புகேஸ்வரர் மீது ஒரு நாவல் பழத்தை அர்ச்சித்து ஸ்வேதாம்பரக் கதிர்களை பரவெளியில் பரப்பி அருள்புரிகிறார் ஸ்ரீஜம்பு மகரிஷி. அதே சமயத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி காராம்பசுவை அர்ச்சிக்கும் வழிபாடும் அத்திருத்தலத்தில் நடைபெறும். இவ்வாறு ஸ்ரீஜம்புமகரிஷியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாயும் நிறைவேற்றும் அபிஷேக ஆராதனைகளே இவ்வாறு கருநாவல், காராம்பசு ஈர்க்கும் ஸ்வேதாம்பரம் என்னும் வெண்ணிற தெய்வீக சக்திகளை பரவெளியில் பரப்பி பக்தர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்குகின்றன. பெண்களுக்கு தனத்தில் பொலியும் இத்தகைய கருமை ஸ்வேதாம்பரக் கதிர்களை வெளியிடும் தன்மை உள்ளதால்தான் தாய்ப் பாலுக்கு நிகரான உணவு இந்த உலகத்தில் கிடையவே கிடையாது என்று சித்தர்கள் பறைசாற்றுகிறார்கள். இவ்வாறு தங்கள் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் திருவானைக்கோயிலில் உச்சிவேளை வழிபாட்டை தரிசித்தலால் தங்கள் குழந்தைகள் வளமான வாழ்வைப் பெறுவதுடன் எதிர்காலத்தில் அவர்கள் மார்பகப் புற்றுநோயால் வருந்த மாட்டார்கள் என்பதும் இத்தகைய ஸ்வேதாம்பரக் கதிர்களின் தன்மையாகும். மார்பகப் புற்றுநோயால் வருந்திய ஒரு பெண் இத்தலத்தில் எந்தவித வழிகாட்டுதலும் இன்றி ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரே அமர்ந்து வழிபட்டே தன்னுடைய நோயை நிவர்த்தி செய்து கொண்டாள் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அந்த நோய் நிவாரண சக்திகளை அளித்தது இந்த ஸ்வேதாம்பரக் கதிர்களே என்பது இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். நம் சற்குரு இத்தகைய நோய் நிவாரணம் தரும் ஸ்வேதாம்பரக் கதிர்களை எப்படி நிர்வகித்தார் என்பது வேறு சுவை. அது வர்ணம் கடந்த வானளாவிய சுவை.

பீதாம்பரக் கதிர்கள்
பொலியும் குரக்குக்கா

கிருஷ்ணாம்பரம் என்பது கருமையான இருளைக் குறிப்பதால் ஸ்ரீவிளக்கொளி பெருமாளுக்கு 108 வெண் தாமரை மலர்களை மாலையாகக் கட்டி சுவாமிக்கு அணிவித்து வழிபாடுகள் இயற்றுதல் நலம். வெண் தாமரை மலர் இருளை நீக்கி பிரகாசத்தை அளிப்பது மட்டுமல்லாது அஞ்ஞானம் என்னும் இருளையும் நீக்குவதால் தங்கள் குழந்தைகள் அறிவு செல்வம் என்னும் ஞான செல்வத்துடன் விளங்க பெற்றோர்கள் இத்தலத்தில் மேற்கூறிய வெண்தாமரை மலர் வழிபாடுகளை இயற்றுதல் நலம். குறைந்தது 108 தீபங்களை, முடிந்தால் ஆலயம் முழுவதும் பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் சிறப்பாகும். அரிதாக அமைந்த இத்தல சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுதலால் மன இருள் என்னும் அறியாமையைப் போக்கி உள்ளம் தெளிவுறும் ஞானத்தைப் பெற ஏதுவாகும். மூன்று பருப்புகள் அமைந்த நிலைக்கடலையால் மாலை கட்டி இத்தல மூர்த்திகளுக்கு அணிவித்து வழிபடுதலும் அத்தகைய கடலைகளை தானமளித்தலும் சிறப்பாகும். திருத்தண்கா திருத்தலத்தில் பொலியும் கிருஷ்ணாம்பரக் கதிர்களே விளக்கு என்ற ஒளிக்கு பின்னணியாகத் திகழ்பவை என்பதே நாம் ஓரளவு உணர்ந்து கொள்ளக் கூடிய கிருஷ்ண சுவையாகும். இருள் என்னும் சனி பகவானுக்கு உகந்த திசையாகவும் மேற்கு திசை அமைவதால் இந்தத் திசையை நோக்கிய திருமண்டலத்துடன் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். மேற்கு என்பது சூரியன் மறையும் திசை எனக் கொண்டாலும் அது சூரியன் உதிக்கும் திசைக்கு ஆரம்ப திசையே என்பதை மனதில் கொண்டு பார்த்தால்தான் 60 வயதைக் கடந்தவர்கள் தரிசிக்க வேண்டிய தலம் இதுவே என்பதை உணர்வதுடன் அந்த வழிபாடு அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் வழிபாடுகளுக்கு ஆழத்தைத் தரும், செழிப்பைத் தரும். இத்தகைய கோட்பாடுகள் இறைவன் மேற்கு திசை நோக்கி அருளும் திருஆனைக்கா போன்ற திருத்தலங்களுக்கும் பொருந்தி வரும். மாலைக் கண், நிறமாலை போன்ற கோளாறுகளால் சரியாக கண் பார்வை பெறாதவர்கள் இத்தலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நிறைவேற்றும் வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். வெள்ளெழுத்து என்று வயதான காலத்தில் ஏற்படும் குறைகளும் தொடர்ந்த வழிபாட்டால் நிவர்த்தியாகும். மின்சார பல்ப் வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், அத்துறையில் ஈடுபட்டவர்களும் ஸ்ரீவிளக்கொளி பெருமானை வழிபட்டு ஆலயங்களில் மின் விளக்குகள் பிரகாசிக்க ஏற்பாடுகள் செய்வதால் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை அடைவர். கங்கை தீர்த்தத்தில் ஒரு துளியே பறக்கும் தட்டுகளுக்கு எரிபொருளாக மாறுவதால் அந்த பறக்கும் தட்டுகள் எத்தனையோ கோடி லிட்டர் பெட்ரோலுக்கு இணையான எரிபொருள் சக்தியைத் தருகின்றன. அதே போல் நாம் பயன்படுத்தும் மின்சக்தி அனைத்துமே ஒளி சக்தியாக மாற்றப்பட்டால் நாம் மிக மிக குறைந்த அளவு மின்சக்தியின் மூலமே அளவிறந்த பிரகாசத்தைப் பெற முடியும். இத்துறையில் ஆராய்ச்சிகள் மூலம் முன்னேற வழிகாட்டுபவரே ஸ்ரீவிளக்கொளி பெருமாள் ஆவார். சுயம்பு ஜோதியாகப் பிரகாசிக்கும் மக்கள் ஏன் இறந்து போகிறார்கள் என்றே புரியவில்லை என்பார் ஜோதி ஸ்ரீராமலிங்க வள்ளலார் சுவாமிகள். சுவாமிகள் என்றோ ஏற்றி வைத்த தீபம் இன்றும் அவர் ஜீவ சமாதியில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது அல்லவா ? ஜோதியின் இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள வழிகாட்டுவதும் திருத்தண்காவில் பக்தர்கள் நிறைவேற்றும் வழிபாடு ஆகும்.

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்

ஒரே பசு மாட்டுப் பாலில் பெற்ற பாலில் கிட்டும் நெய் கொண்டு இத்தலத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுவதால் ஒளி தத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள அது உதவியாக இருக்கும். தீராத பல நோய்களுக்கு அது நிவாரண சக்தியையும் அளிக்கும். பீதாம்பர உடை அணிந்து வெண்ணெய் உண்ணும் கிருஷ்ண பகவானின் சித்திரமும், கரூர் திருத்தலத்தில் பொலியும் ஸ்ரீகரியமாலீசன் வழிபாடும், பல வண்ணத்தில் பொலியும் அமிர்தானந்த மயி அன்னையின் தரிசனமும் நல்கும் கதிர்கள் வண்ணம் பற்றி சிறப்பாக இவ்வருடம் அளிக்கும் அனுகிரகம் இப்போது சொல்லாமலே புரிந்திருக்கும் அல்லவா ? அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் அந்தர்யாமியாய் அருள்புரியும் ஸ்ரீசரஸ்வதி தேவி இங்கு சரஸ்வதி தீர்த்தமாய் கண்களுக்குத் தென்படும் விதத்தில் அருளாட்சி செய்கின்றாள் என்றால் இது பெருமாள் லீலையா இல்லை சரஸ்வதி கடாட்சமா ? 2019ம் ஆண்டு அந்தர்யாமியாய் அதாவது யார் கண்களிலும் தென்படாது மறைந்து அமிர்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தது போல் 2020ம் வருடத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவி மூலம் ஸ்ரீவிளக்கொளி பெருமாளாய் தரிசனம் அளிப்பதே பெருமாளின் கருணை மழையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு இருள் மண்டிக் கிடந்த ஒரு குகையில் ஒரு சிறு அகல் தீபத்தை ஏற்றினால் அங்கு வெளிச்சம் பரவுவதைப் போல் எத்தனையோ பிறவிகளில் அஞ்ஞானத்தில் மூழ்கி இருந்த மனித ஜீவனும் ஞானம் என்னும் ஒளியை நொடியில் பெறக் கூடிய திருத்தலமே ஸ்ரீவிளக்கொளி பெருமான் திருத்தலமாகும். தூப் என்னும் தர்ப்பை புற்கள் ஒரு காலத்தில் செழித்திருந்த தலமே தூப்புல் ஆகும். தூப் என்பது சுயம்ஜோதி பிரகாச சக்தியைக் குறிக்கும். ஐந்து தர்ப்பைகளை சேர்த்து, ஐந்து ஐந்து தர்ப்பைகளாக கட்டி மாலையாக்கி இத்தல சரஸ்வதி தேவிக்கு அளித்து வழிபடுவது சிறப்பான தூப்புல் வழிபாடாகும். தற்காலத்தில் உணவில் பலவிதமான கலப்படங்கள் நிலவுவதால் இதனால் பாதிக்கப்படும் மக்கள் ஏராளம், ஏராளம். இத்தகைய கலப்படத்தால் பக்தர்களால் பாதிக்கப்படாமல் இருக்க இத்தகைய தூப்புல் வழிபாடு உறுதுணையாக விளங்கும். பெருமாள் தலங்களில் நடக்கும் ஹோமங்களில் இட இத்தகைய தூப்புல் தர்பைகளை அளித்தல் இந்த வருடத்திற்கு உரிய ஒளி வழிபாடாகும். தூப்புல் பவித்ர தலத்தில் அவதரித்த பெருந்தகையே ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆவார். மெல்லினம், இடையினம், வல்லினம் என்ற இன எழுத்துக்கள் தமிழை முழுமை அடையச் செய்வதைப் போல வேதாந்த என்ற நாமத்தில் மூன்று இன எழுத்துக்களுமே அமைந்துள்ளதால் தூப்புல் என்னும் தர்பை பவித்ரம் அணிந்து இத்தலத்தில் அனைத்து வழிபாடுகளையும் இயற்றுதலால் பக்தர்களின் வழிபாடு முழுமை அடைய ஸ்ரீதேசிகரின் அருள் துணை நிற்கும். இவை அனைத்தையும் விட எத்தகைய இருளிலும் பிரகாசிக்கும் தன்மை உடையதே தூப்புல் தர்பையின் விசேஷ தன்மையாகும். இந்த தர்பையின் மகிமையை உணர்ந்தால்தான் ஸ்ரீவிளக்கொளி பெருமாளின் மகிமையே புரிய வரும். ஸ்ரீவிளக்கொளி பெருமாளின் மகிமையை உணர்ந்த ஒரு சில சித்த புருஷர்களுள் ஒருவரே ஸ்ரீபோடா சுவாமிகள் ஆவார்.

போடா சுவாமியின் தேடா கருணை

போடா என்ற இரண்டே எழுத்தில் பொலியும் இம்மகான் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி பக்தர்களுக்கு எல்லாம் இறையருளை வாரி வாரி வழங்கிய பெருந்தகை ஆவார். அம்பர ஜோதிகளில் சிதம்பர ஜோதியைப் போன்ற சக்தி உடையதே ஏக அம்பர ஜோதி ஆகும். ஏக அம்பர ஜோதியை தன் கண் பார்வை மூலம் பக்தர்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீபோடா சுவாமிகளையே சாரும். இந்த வருடம் இருள் சூழ இருப்பதால் இருளில் முதலில் பறிபோவது மனிதனுயை பாதுகாப்பு என்பதால் ஸ்ரீபோடா சுவாமிகளின் ஏகாம்பர கதிர்களே என்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரே சாதனமாகும்.

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்

போடா என்றால் போகாது
வாடா என்றால் வாராது
தேடி நாடி வரும் கடுவினையையும்
பொடி பொடியாக்கும் போடா சித்தனவன் பார்வை ஒளியே
என்று ஸ்ரீஅகத்திய சுவடிகள் ஸ்ரீபோடா சுவாமிகளின் கண் பார்வை ஒளி அனுகிரகிக்கும் ஏகாம்பர ஜோதியின் மகிமையைப் பறைசாற்றுகின்றன. நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியாரை, ஸ்ரீபோடா சுவாமிகளை தரிசித்து அவருக்கு தேநீர் வழங்கி வருமாறு பணித்தார் நம் சற்குரு. அவ்வாறே சுவாமிகளை ஒரு ரிக்ஷாவில் ஏற்றி அருகில் இருந்த ஒரு டீக்கடையில் தேநீர் வாங்கி சுவாமிக்கு அளித்து அவருடைய ஆசியையும் பெற்று விட்டு வந்து விட்டார் அந்த அடியார். சில நாட்கள் கழித்து அவர் அமெரிக்கா திரும்ப நினைத்தபோது ஒரு பிரமுக அரசியல் தலைவர் மறைவால் எந்த வாகனமும் சென்னையில் ஓடவில்லை. செயலற்றுப் போனார் அந்த அடியார். அப்போது ஒரு ரிக்ஷா ஓட்டி அவரை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை தன் ரிக்ஷாவில் அமர வைத்து ஓட்டி வந்து விட்டான். மௌண்ட் ரோடில் செல்லும்போது அது ரிக்ஷா போன்றே தோன்றவில்லையாம். ஒரு அயல்நாட்டு கார் செவ்வது போல் அவ்வளவு வேகத்தில் சென்றதாம் அந்த ரிக்ஷா. பிரமிப்பின் எல்லைக்கே சென்ற அந்த அடியார் விமான நிலையத்தில் அந்த ரிக்ஷா ஓட்டியை கௌரவிப்பதற்காக சில நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அளிக்க முயன்ற போது அந்த ரிக்ஷா ஓட்டியைக் காண முடியவில்லையாம். மறைந்து விட்டான் இல்லை மறைந்து போனார் ரிக்ஷா ஓட்டி. ஆச்சரியத்துடன் அமெரிக்கா திரும்பிய அந்த அடியார் உடனே நம் சற்குருவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்தது அனைத்தையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தாராம். சற்குரு சிரித்துக் கொண்டே, “இப்போது தெரிகிறதா, சார், எதற்கு அடியேன் உங்களை போடா சுவாமிக்கு டீ வாங்கி அளிக்கச் சொன்னேன் என்று ? டீ குடித்த பாக்கியைத் தீர்த்து விட்டார் சுவாமிகள் ... ”, என்றாராம் நம் சற்குரு. இப்போது சொல்லுங்கள் யார், எது சாதனை ? ஸ்ரீபோடா சுவாமிகளா, நம் சற்குருவா, இந்தக் காட்சிக்கு ஆதாரமான ஏகாம்பர ஜோதியா ? ஏகாம்பரம் என்னும் ஏக ஜோதி சக்திகளை வர்ஷிக்க 2000 ஆண்டுகள் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் நிலைகொண்ட ஸ்ரீபோடா சுவாமிகள் அந்த ஏக ஜோதியை குசா சக்தியாய் பொழிய தன் இரு நேத்திரங்களைச் சாதனமாகப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இரு மாபெரும் தெய்வ மூர்த்திகளின், அதாவது சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்தையும், பிரம்மா சரஸ்வதி திருமணத்தையும் காஞ்சிபுரம் திருத்தலத்திலேயே நிறைவேற்றிய பெருமை கொண்ட ஒரே மகான் இவர், இவரே என்பதே ஸ்ரீபோடா சுவாமிகளின் பெருங்கருணையாகும்.

கலியுக மக்களின் நிலையில்லாத மன நிலையையும் சாதகமான சாதகமாக ஏற்பவர்களே சித்தர்கள் என்பதை உறுதி செய்வதாக ஸ்ரீபோடா சுவாமிகளின் ஜீவ சமாதியும் முதலில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்திலேயே நிலை கொண்டாலும் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் சுவாமிகள் ஜீவாலயம் தற்போது ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலிக்கு வெளியில் சர்வதீர்த்தம் அருகே தோன்றி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. சர்வதீர்த்தம் என்பதும் ஸ்ரீஏகாம்பரநாதனின் திருக்குளம்தானே. தர்ப்பணம், ஹோமம், பிரசாதம் தயார் செய்தல் போன்ற அனைத்து காரியங்களிலுமே தர்பையால் ஆன பவித்ரம் என்னும் மோதிரத்தை தங்கள் வலது மோதிர விரலில் அணிந்து கொள்தலால் அந்த காரியங்கள் மிகுந்த சிறப்பைப் பெறும். அதே போல மாங்கல்ய தாரணம் என்ற வைபவத்தின்போது சிவபிரானும் பிரம்ம மூர்த்தியும் தூப்புல் திருத்தலத்தில் விளைந்த தர்ப்பையால் ஸ்ரீபோடா சுவாமிகளால் தயார் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்தே மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்றினார்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் திருமாங்கல்ய தாரண வைபவமாகும். இன்றும் தூப்புல் தர்ப்பைகளால் தயாரிக்கப்பட்ட பவித்திரம் அணிந்து மாங்கயல்ய தாரணம் நிறைவேற்றுவது என்பது பூலோகத்தில் கிடைத்தற்கரிய வரப் பிரசாதமாகும். இவ்வாறு தூப்புல் தர்பையைப் பெற முடியாதவர்கள் ஏதாவது ஒரு தர்ப்பையில் பவித்திரம் செய்து அதை ஸ்ரீவிளக்கொளி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பித்து பிரசாதமாகப் பெற்று மாங்கல்ய தாரண வைபவத்தின்போது அணிந்து கொள்தல் சிறப்பே என்பதும் சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

ஸ்ரீஅபிராமபட்டர் திருக்கடவூர்

ஸ்ரீவிளக்கொளி பெருமான் என்ற நாமமே எத்தனையோ பிறவிகளில் ஆத்ம விசாரம் நிறைவேற்றி அறிந்து கொள்ள வேண்டிய அரும் பொருளைக் கொண்டதாகும். இருள் சூழும் இந்த ராகவேந்திர ஆண்டில் ஒளி வீசும் தூப்புல் தர்பையால் ஆன பவித்ரங்களை ஸ்ரீவிளக்கொளி பெருமான் திருவடிகளில் சமர்ப்பித்து அதை பக்தர்களுக்கெல்லாம் பிரசாதமாக அளித்தல் என்பது அனைவரும் நிறைவேற்றக் கூடிய எளிய வழிபாடுதானே ? எளிமை இனிமையே சித்த வளம். விளக்கை அணைக்கும்போது தீபத்தை மலையேற்றுங்கள் என்று சொல்வதுதான் வழக்கம். காலையில் எழுந்தவுடன் மின்விசிறி, மின்சார விளக்கு போன்ற சாதனங்களைக் கூட அணைத்து விடுங்கள் என்று சொல்லாது அனைத்தையும் சாந்தப் படுத்துங்கள் என்றே சொல்லிப் பழக வேண்டும் என்பார் நம் சற்குரு. இது அத்வைத விளக்கத்தில் தோன்றும் ஓர் அரிய பாடமே. மின் விளக்குகளை, அகல் தீபங்களை சாந்தப்படுத்தும்போது எங்கிருந்தோ வந்த ஒளி மீண்டும் அந்த இடத்தைச் சேரும், மலையேறும் வைபவத்தையே குறிக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த ஒளி ? இன்னுமா உங்களுக்குச் சந்தேகம். திருஅண்ணாமலை என்னும் சுயம்ஜோதி பிரகாசத்திலிருந்து பெற்றதே நாம் இவ்வுலகில் காணும் ஒளிக் கீற்றுகள் அனைத்துமே. இதை நாம் உணராவிட்டாலும் தீபத்தை மலையேற்றும்போதெல்லாம் இவ்வாறு இந்த உண்மை தத்துவத்தை சொல்லிப் பழகிக் கொண்டோமேயானால் என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை நாமும் உணர்வோம் என்ற பெருந்தன்மையில் எழுந்ததே இந்த சித்த உரையாகும். இவ்வாறு விளக்கும் ஒளியாகவும், தீபமும் பிரகாசமுமாக இருப்பவர்களே கணவன், மனைவி, இறைவன், இறைவி, கடவுள், ஜீவன் என்ற உண்மையை உணர்த்துவதே ஸ்ரீவிளக்கொளி பெருமாள் திருக்கோயில், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகள் ஆகும். 2020 வருடம் என்பதை பிரித்தால் அது 20, 20 என்பதாக சமமாக பிரிவதைப் போல் திரியும் பிரகாசமுமாய், உடலும் உயிருமாய் விளங்கும் தம்பதிகள் இந்த 2020ம் ஆண்டில் வணங்கி அருள் பெற வேண்டிய மூர்த்தியே ஸ்ரீவிளக்கொளி பெருமாள் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? வேகவதி என்ற நான்கெழுத்து சக்தியாய் விண்ணில் சீறி வந்த சரஸ்வதி தேவியை பிரம்மா என்று நான்கெழுத்து கபாலத்தில் தாங்கி இணைத்து அருள்புரிந்த சித்த மேதையே ஸ்ரீபோடா சுவாமிகள். எத்தகைய குடும்பச் சூறாவளியாலும் பாதிக்கப்பட்டு விவாகரத்து வரை சென்ற திருமண உறவுகளும் இந்த வருடம் ஸ்ரீவிளக்கொளி பெருமாள் தலத்தில் இயற்றும் வேகவதி வழிபாடுகளால் சீர் பெறும், ஒற்றுமையுடன் திகழ்வர் என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் உண்மையாகும். நம்புவோம் நலம் பெறுவோம். வெட்சி பூ, இட்லி பூ என்றெல்லாம் அழைக்கப்படும் விருட்சி பூக்களை கொத்து கொத்தாக இத்தல அம்பாள் ஸ்ரீமரகதவள்ளி அம்மனுக்கு சார்த்தி வழிபடுதல் இவ்வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக அமைகிறது. விருட்சி பூ நான்கு இதழ்களுடன் கூடி இவ்வருடத்திற்கு உரிய எண்ணாக அமைவதுடன் அம்மலரின் செம்மை நிறமும் இவ்வருடம் தோன்ற இருக்கும் பல வியாதிகளுக்கு நிவாரணமாக அமையும் என்பதே இதன் சிறப்பாகும்.

ஸ்ரீரதி மன்மதன் திரைலோகி

தவறான உணவுப் பழக்கங்களால் பூர்வ ஜன்ம விளைவுகளால் தோன்றும் ரத்த சோகை, இரத்தப் புற்று, மாதாந்திர விலக்கு சமயத்தில் அதிக இரத்தப் போக்கு காரணங்களால் தோன்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு இத்தகைய விருட்சி பூ வழிபாடு நிவாரணம் அளிக்கும். விருட்சிப் பூக்கள் மலர்ந்தவுடன் அவை தேனீக்களால் சூழப்படும் முன் அம்மலர்களை இறை மூர்த்திகளுக்கு அளிப்பதால்தான் இறைவனின் அனுகிரக சக்திகளை நாம் முழுமையாகப் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

ஒரு முறை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஒரு திருத்தலத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நாகப் பாம்பு சுவாமிகளின் கால் வழியாக ஏறிச் சென்று அவர் தலையின் மேல் படம் எடுத்து அவருக்கு குடை பிடித்து நிற்க அத்திருக்காட்சியைக் கண்ட பலரும் அண்ணாமலையானுக்கு அரோகரா என்று குரல் கொடுத்து சுவாமிகளை திருஅண்ணாமலையானாக, சிவ மூர்த்தியாக வழிபட்ட நிகழ்ச்சியை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இதுவே விருட்சி மலரின் மகிமையாகும். பொதுவாக, அம்பாள் உபாசனையில் வல்லவராக இருக்கும் பக்தர்களின் உடலிலிருந்து கமழும் மணமே வெட்சி மணம் என்பதால் தேவி உபாசனையில் வல்லவரான ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் உடலிலிருந்து இந்த தெய்வ மணம் கமழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையென்றாலும் இவ்வாறு வெட்சி மணம் கொண்டவர்களே மற்றவர்கள் உடலில் கமழும் மல்லிகை மணத்தை, அதாவது நிர்விகல்ப சமாதியில் தோன்றும் இனிய மணத்தை அறிய முடியும். இந்த சக்தியால்தான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஸ்ரீரமண மகரிஷி பாதாள லிங்கத்தில் நிர்விகல்ப சமாதியில் மூழ்கியிருந்தபோது அவர் உடலிலிருந்து வெளியான மல்லிகை மணத்தை இனம் கண்டு கொண்டு பக்தர்கள் மூலம் இந்த அரிய உண்மையை உலகிற்கு அறிவித்தார். இவ்வருடம் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதியில் விருட்சிப் பூக்களை சமர்ப்பித்து சில பூக்களை மட்டும் பிரசாதமாகப் பெற்று பூஜை அறையில் வைத்து பூஜித்தலால் தங்கக்கை சுவாமிகளின் தங்க அனுகிரகம் தங்கமாய் நம்மைக் காக்கும்.

சக்தி உபாசகரான திருக்கடவூர் அபிராம பட்டரை அந்நாட்டு மன்னன் கண்டபோது அவர் உடலில் பொழிந்த விருட்சி மணமே அம்மன்னனின் பூர்வ ஜன்ம வினையால் அவரைக் காணத் தூண்டியது. இது மெய்தான் என்பதை உறுதி செய்யும் விதமாக இன்றும் அத்திருத்தல நந்தவனத்தில் விருட்சி பூக்களின் நறுமணம் இனிய மணமாக வீசுகிறது. “உதிக்கின்ற செங்கதிர், உதிக்கின்ற திங்கள் ...”, போன்ற சொற்றொடர்கள் இவ்வாறு உதிக்கும் சூரியனின் நிறத்தில் தோன்றும் செவ்வண்ணத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும் இந்த செந்நிறக் கதிர் சக்திகளே கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யத்தை உருவாக்கும் தன்மையையும், இறைவனிடத்தில் நெருங்கும் பக்தியை வளர்க்கும் என்பதும் நாமறிய வேண்டிய சுவை என்பதால் இத்தகைய செந்நிறத்தைக் குறிக்கும் விருட்சி மலர்களை இறைவனுக்கு அளித்து வழிபடுதலால் இறை உபாசகர்கள், குறிப்பாக சக்தி உபாசகர்கள் இந்த ஆண்டில் மேன்மையுறுவர். வரன்களுக்கிடையே ஜாதகப் பொருத்தங்களை குறிப்பாக ரஜ்ஜுப் பொருத்தம் பார்த்தே திருமணங்களை நிகழ்த்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பல காரணங்களால் இத்தகைய பொருத்தங்கள் சரியாக அமையாத தம்பதிகள் வாரிசு இன்றியே வாடுகிறார்கள் என்பது உண்மையே. அத்தகையோர் திரைலோகி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரதி மன்மத மூர்த்திகளுக்கு இத்தகைய விருட்சி மலர்களை கொத்து கொத்தாக சமர்ப்பித்து கொத்தாக துலங்கும் காலிபிளவர் கலந்த பிரிஞ்சி சாதம் தானம் அளித்து இறைவனை வேண்டி வருதலால் நன்னிலை பெறுவர் என்பது உறுதி.

அரிசேட தரிசனம் திருஅண்ணாமலை

திங்கள் குடையோன் என்பது மன்மதனுக்கு அமைந்த பல நாமங்களில் ஒன்று. பெண்களின் உடலில் துலங்கும் அமிர்த சக்திகள் வளர்பிறை தேய்பிறை காலங்களில் மாறி மாறி குடைபோல் அர்த்த சந்திர வடிவில் அமைவதால் அவைகளை இனங் கண்டு நல்ல சந்ததி அமைய வழிவகுப்பவன் என்பது இந்த நாமத்தின் பொருள். இத்தகைய அமிர்த சக்திகளை மக்கள் தவறாக சுகபோகத்திற்கு பயன்படுத்துவார்கள் என்பதால் இத்தகைய இரகசியங்கள் தற்போது மருவி, மறைந்து விட்டன. இருப்பினும் உத்தம குழந்தைச் செல்வத்திற்காக திரைலோகி திருத்தலத்தில் வழிபாடுகளை நிறைவேற்றுவதால் நல்ல ஆரோக்கியமான சந்தானங்களைப் பெற திங்கள் குடையோனின் அருள் அவர்களுக்கு குடை பிடிக்கும் என்பதே இத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளும் தானதர்மங்களும் உணர்த்தும் உண்மையாகும். அங்காளி என்றால் அழகிய காளி உருவைக் கொண்டவள் என்று மட்டும் பொருள் அல்ல, அகங்காரம் களைபவள், எதிரிகளை வெல்பவள் என்றெல்லாம் பொருள் உண்டு. இவ்வருடம் முழுவதும் எந்நேரத்திலும் குறைந்தது காலையில் மாலையில் மட்டுமாவது விளக்கேற்றி ஸ்ரீஅங்காளி துதியை ஓதி வருதல் நலம். இந்த துதியை ஓத முடியாவிட்டாலும்

அகங்காரங்களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்
செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. (51)
என்ற துதியை மட்டுமாவது ஓதி வருதலால் அக இருள் என்னும் மாயையால் ஏமாற்றப்பட்டு இன்னல் பெறும், விளைக்கும் பக்தர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு நன்னிலை அடைவர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் இல்லத்தை முதலில் கண்டுபிடிக்க முடியாமல் திணறியபோது ஸ்ரீகனிந்தகனி பரமாச்சாரியார் கீழ்க் கண்ட துதியை ஓதிவருமாறு அருளினார்.
ஜய ஜய ஜய ஜய காமாட்சி
ஜய ஜய ஜய காமகோடி
ஜய ஜய ஜய ஜய சேஷாத்ரி

ஸ்ரீமரகதவல்லி அம்மன் சரஸ்வதி தீர்த்தம் ஸ்ரீவேதாந்த தேசிகர்
ஸ்ரீவிளக்கொளி பெருமாள் ஆலயம் காஞ்சிபுரம்

ஒரு மகானின் இல்லத்தைக் கண்டு பிடிக்க கனிந்த கனியால் அருளப்பெற்ற குரு துதி என்று நாம் நினைத்தாலும் தொலைந்து போன பொருட்கள், ஆட்கள், மறந்து போன விஷயங்கள், பத்திரங்கள், சொத்துக்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள உதவும் அற்புத துதி இதுவாகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், அக்னி லிங்கம், இந்திர தீர்த்தக் கரை போன்ற இடங்களில் அமர்ந்து கொண்டோ அல்லது திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தவாறோ மேற்கண்ட துதியை ஓதி வருதலால் இதுவரை சற்குரு அமையப் பெறாதோர் சற்குருவை அடையவும், சற்குரு அமையப் பெற்றோர் தம் சற்குருவின் மேல் நம்பிக்கையும் பெருக, ஆழ்ந்து வளம் பெற இந்த வழிபாடு உறுதுணையாக நிற்கும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் அவதார தினம் 22.1.1870. ராகு பகவானின் நான்கு என்ற எண்ணைப் பிறந்த தினமாகக் கொண்ட சுவாமிகளின் பிறந்த தின விதி எண் மூன்று என்ற குரு எண்ணில் அமைவது ஓர் காணக் கிடையா அற்புதமே. பொதுவாக, நான்கிற்கு குசாவான எட்டுக்குரிய சனி பகவான் சுவாமிகளின் லக்னத்தில் அமர்ந்துள்ளார்.

ஸ்ரீவிளக்கொளி பெருமாளின் சக்தியான ஸ்ரீமரகத அம்மனின் நாமத்தை தன்னுடைய தாயின் நாமமாகப் பெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தன் அன்னையின் மூலம் திருஅண்ணாமலையின் உருவத்தை கரி கொண்டு சுவரில் வரையப் பெற்றார். அன்னையே அனைவருக்கும் முதற்குரு என்ற தன்மைக்கு ஏற்ப தன் அன்னையால் வரையப்பெற்ற அக்னி லிங்கம் தரிசனப் பகுதியிலேயே சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது என்பதே சித்தர்கள் காட்டும் சுவையாகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்த தரிசனப் பகுதி அரிசேட தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இருள் வருடத்தில் அனைவர் வாழ்விலும் ஒளி ஏற்ற வல்ல அரிசேட தரிசனத்தில் இயற்றும் வழிபாடு குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் வலுவான குடும்ப ஒற்றுமையையும் ஏற்படுத்தும். இசை ஞானம் பெற்றவர்கள் மேற்கண்ட காமகோடி துதியை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளுக்குப் பிடித்தமான, இவ்வருடம் இசைப்பதற்குரிய பிலஹரி ராகத்தில் பாடுதல் நலம். இருளைப் போக்கும் உதய ராகம்தானே பிலஹரி ? இந்த ஆங்கிலப் புத்தாண்டு கன்னி லக்னத்தில் தோன்றுவதால் திருமணம் ஆகாமல் அவதியுறுவோரும், திருமணமாகி மன வேற்றுமையால் வாடுவோரும் கோதை நாச்சியார் அருளிய, “வாரணம் ஆயிரம் ...” என்று ஆரம்பிக்கும் துதியை திருஅண்ணாமலையை வலம் வந்தோ, ஸ்ரீவிளக்கொளி பெருமாள் ஆலயத்திலோ 11 முறை ஓதி வழிபடுதல் இந்த வருடம் நிறைவேற்றப்பட வேண்டிய அற்புத வழிபாடாகும். அனைவர் உள்ளத்திலும் வாழ்விலும் மண்டிக் கிடக்கும் இருளை அகற்றி ஒளி வீச வேண்டும் என்ற உன்னத நோக்கில் அக்னி திசையான தென்கிழக்கில் தன் ஜீவ சமாதியை அக்னி லிங்கம் அருகிலேயே அமைத்துக் கொண்டார் என்றால் சற்குருவின் கருணைக்கு எல்லை உண்டோ ?

பிலம் தீர்க்கும் மலம்

இந்த புது வருடம் ராகு என்னும் இருள் சக்தியுடன் கூடியதாகத் திகழ்ந்தாலும் வெள்ளை நிறத்தை, வெண்மையின் புகழ் பரப்பும், ஒளிக்கு ஒளி சேர்க்கும் தன்மையுடன் இருள் திகழ்வதால் இத்தகைய பின்னணியில் இருளை நோக்க வேண்டும் என்பதே ஆன்மீக அன்பர்களின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். ஸ்ரீதுர்வாச முனிவர் இத்தகைய கண்ணோட்டத்தை உலகிற்கு அளிக்கவே இறைப் பிரசாதமான தாமரை மலரைக் காலடியில் போட்டு மிதித்த இந்திரனின் யானை வாகனமான வெண்ணிற யானை ஐராவதத்தை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். மகான்களின் சாபம் எப்போதும் நன்மையைத்தானே வர்ஷிக்கும் ? இவ்வகையில் முனிவரின் சாபம் பெற்ற யானை தாராசுரம், மதுரை ஐராவத நல்லூர், கரிவலம்வந்தநல்லூர், காஞ்சிபுரம் போன்ற பல திருத்தலங்களில் வலம் வந்து தன்னுடைய சாபம் நிவர்த்தியாக வழிபாடுகளை இயற்றியது என்று நாம் மேலோட்டமாகக் கூறினாலும் இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்களை சித்தர்களே அறிவர். இட பிங்கள நாடிகளின் இடையே அமையும் சுசும்னா நாடி வெண்ணிற ஒளியுடன் பிரகாசிப்பதால் இந்த சுசும்னா நாடி சுவாசத்தில் எப்போதும் திகழும் யானையானது இந்த சக்திகளை எல்லாம் மேற்கண்ட திருத்தலங்களில் நிரவி வந்தது என்பதே ஐராவதம் வலத்தில் அமைந்த ஓர் இரகசியம் ஆகும்.

வேகவதி ஆறு காஞ்சிபுரம்

இயற்கை பிலத்துடன், துளையுடன் அமைந்த ஒரே சாதனம் ருத்ராட்சம் என்பதால் இந்த ருத்ராட்சங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து மேற்கண்ட திருத்தலங்களில் ஏதாவது ஒரு திருத்தலத்தில் வலம் வந்து இந்த ருத்ராட்சங்களை தானமாக அளித்தல் இவ்வருடத்திற்குரிய தான முறையாக சித்தர்களால் அருளப்படுகிறது. இதனால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்பதால் சித்தர்களின் மௌனமே இந்த தானத்திற்குப் பதிலாகத் திகழ்கின்றது. பொதுவாக, ருத்ராட்சங்களைத் தானமாகப் பெறக் கூடாது என்பதால் ஒரு சிலர் இத்தகைய தானங்கள் அளிக்கும்போது ஏதாவது பணம், தட்சணைகள் தருவதுண்டு. அவற்றை மறுக்காமல் வாங்கி அப்படியே அந்தச் சிவன்கோயில் உண்டியலிலேயே சேர்த்து விட வேண்டும். இவ்வாறு நான்கு பனை மரம் உயரம் கொண்ட ஐராவதம் யானை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வணங்கிய இடமே தற்போது யானைப் பள்ளம் என்றழைக்கப்படுகிறது. பூர்வ ஜன்ம புண்ணியத்தால் யானை தரிசனத்தை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் பெற நேர்ந்தால் யானைக்கு கரும்புகளையும், வாழைப் பழங்களையும் அளித்தல் சிறப்பே. ஒரு முறை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு வேசியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விட்டார். மறுநாள் ஒரு ஜமீன்தார் அவளை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், இதன் பின்னணியாக அமைந்த தெய்வீகச் சுரங்கத்தில் கிட்டும் முத்துக்களை அறிந்தார் யாரோ ? சேஷம் என்றால் மீதம், மிச்சம், அத்ரி என்றால் மலை என்று பொருள். அதாவது தான் என்பது போக மிச்சமாய் இருக்கும் இறைவனின் சக்தியையே இது குறிக்கிறது. இவ்வாறு இவ்வுலகில் அனைத்தையும் இறைவனாக உணர்ந்து வழிபட்டவரே சேஷாத்ரி ஆவார். தான் சமாதி கொள்ளும் சில நாட்கள் முன்பு தான் ஒரு வீடு வாங்கிக் கொண்டு குடியேறலாமா என்று ஒரு பெண் பக்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். தான் ஜீவ சமாதி அடையப் போவதற்கும் இவ்வாறு இறைவனின் அனுமதியை சேஷ அன்னையிடம் வேண்டியவரே சேஷாத்ரி. சேடனே என்று இறைவனை அன்புடன் அழைப்பவர் ஆலவாய் சுந்தரர். வெளித் தோற்றத்திற்கு ஒரு வேசி வாழ்க்கையை வாழ்ந்தாலும் இங்கு குறிப்பிட்ட அந்தப் பெண்ணில் உதடுகளில் சதா சர்வ காலமும் வாரணம் ஆயிரம் ... என்ற பெருமாளின் வர்ணனை வரிகளே தவழ்ந்து கொண்டிருந்தன. பெண்ணின் உதடுகளைப் பார்ப்பவன் மனிதன், உதட்டில் தவழும் இறைவனைப் பார்ப்பவன் மகான். நாச்சியார் துதியை ராகமாலிகையாக இரசிக்க விரும்பும் பக்தர்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றும் பொருட்டு இங்கு அந்த சுவையும் அளிக்கப்பட்டுள்ளது.

திருவெஃகா காஞ்சிபுரம்

சேஷாத்ரி சுவாமிகள் ஹரி துவார மங்கலம் என்பதாக விளங்கிய இறைவனுக்கு முத்த மழை பொழிந்தார் என்பதே இங்கு நாம் உணர வேண்டிய சேஷ சுவை. நம் சற்குரு லால்குடி திருத்தலத்தில் திருப்பணி இயற்றியபோது ஸ்ரீஸ்ரீமதி அன்னையிடம் எந்தப் பிரார்த்தனையையும் முன் வைக்க வேண்டாம் என்று கூறினார். காரணம் சேஷாத்ரியாக இருப்பவள் அன்னை ஸ்ரீமதி. அவள் தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருக்கும்போது நாம் எதை வேண்டிப் பெற்றாலும் அது அன்னை அளிக்க இருக்கும் அனுகிரகத்திற்கு குறைவாகத்தானே இருக்கும் ? ஸ்ரீமதி, நம் சற்குரு, அருணாசலம் என்ற சோனாத்ரி அனைத்துமே சேஷாத்ரிதான் என்று விளக்குவதே ஸ்ரீவிளக்கொளி பெருமானின் கருணையாகும். இந்த அளவில்லா பொக்கிஷத்தை அளிப்பதே ஸ்ரீவிளக்கொளி பெருமான் இவ்வருடம் பிரத்யேகமாக அளிக்கும் அனுகிரகம் ஆகும். ஸ்ரீஅருணகிரி நாதர் திருப்புகழ் ஒவ்வொரு பாவிலும் முருகப் பெருமானை பெருமாளே என்று அழைப்பார். இது முருகனைப் பெருமாளாகவே வாழ்த்தி வணங்குகிறார் என்ற மேலோட்டமான கருத்தாக இருந்தாலும் பெருமான் என்ற ஆண்பால், பெண் பால் கடந்த ஒளி தத்துவமாய், இறைத் தத்துவமாய் விளங்கும் முருகப் பெருமானை அன்புடன் அழைக்கும் வார்த்தையே என்பதை உணர்த்துவதும் ஸ்ரீவிளக்கொளி பெருமாளின் கருணையாகும். ஸ்ரீசரஸ்வதி தேவி வேகமாய் வேகவதி நதி வடிவில் தேவலோகத்திலிருந்து சீறி வந்தபோது தேவியை பிரம்ம கபாலத்தில் தன் அன்புக் கணவனுடன் சேர்த்து இறையருள் புரிந்தார் ஸ்ரீபோடா சுவாமிகள் அல்லவா ? இந்த பிரம்ம முகூர்த்தத்தில் தோன்றிய பல தெய்வீக பொருட்களில் நான்கு தலைகளுடன் கூடிய பிரம்மாவிற்கு உகந்த ஆராக்கீரையும் ஒன்றாகும். நான்கு எண்ணிற்கு உகந்த இவ்வருடத்தில் நான்கு எழுத்துக்கள் கொண்ட வேகவதி ஆற்றில் தோன்றிய மூலிகையை வெல்லம் என்ற நான்கு சுவை அமிர்தத்தை கலந்து நான்கு கால்களில் நடமாடும் பசு என்ற நான்கு எழுத்துடைய தெய்வத்திற்கு அளிப்பதால் நான்கு என்ற மேகநீர் வியாதி தீரும் என்பதே ஸ்ரீஅகத்திய சுவடிகள் அளிக்கும் விளக்கமாகும். நான்கு உணர்த்தும் நற்சுவை தலம், தளம் இதுவே.

ஸ்ரீபோடா சுவாமிகள் காஞ்சிபுரம்

முருகப் பெருமான் சற்குருவாய் விளங்கும் தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் அமைந்து 30 எழுத்துக்களுடன் தோன்றுகிறது. ஆயுத எழுத்து என்பது தமிழ் எழுத்தே என்றாலும் இது மறைந்து நின்று செயல்படும்போது தமிழ் 30 எழுத்துக்களுடனும் அபூர்வமாக திருவெஃகா போன்ற வார்த்தைகளில், திருத்தலங்களில் பயனாகும்போடு நான்கு எழுத்துக்களுடன் துலங்குவதே வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். இக்காரணம் பற்றியே பெருமாளின் திருமார்பில் மறைந்து அருள் புரியும் லட்சுமி தேவியானவள் திருவெஃகா திருத்தலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆனால் திருமாலை நோக்கியவாறு அபூர்வ தோற்றம் கொண்டு விளங்குகிறாள். வழக்கத்திற்கு மாறாக வலது புறம் தலை சாய்த்து சயனக் கோலம் கொள்ளும் திருமாலின் சயனத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் லட்சுமி திருமாலின் செந்தாமரை முகத்தை நோக்கியவாறு திருவடி சேவை செய்யும் பாக்கியம் பெறுவதற்காக பல யுகங்கள் நிறைவேற்றிய தவமும் கனிந்த திருத்தலம் இதுவேயாகும். இத்தலத்தில் அருள்புரியும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் லட்சுமி தேவியானவள் தன் திருமுகத்தை நோக்கியவாறு பாத சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பேன் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய திருத்தலம் என்பதும் ஒரு சுவை. பலரும் அறியாமையால் கணவன் உறங்கும் முன் பாத சேவை செய்வது என்பது அடிமைத்தனம் என்று நினைத்து அந்த அற்புத சேவையை ஒதுக்கியவர்கள் இவ்வாறு பல வருடங்கள் விட்டுப் போன பாத சேவைக்குப் பரிகாரமாக இத்தலத்தில் பெருமாள் லட்சுமி தேவியின் தரிசனம் ஓரளவு பரிகாரமாக அமையும். தன் தாய் தந்தையருக்கு அவர்கள் இருக்கும்போது பாத சேவை, பாத தரிசனம் செய்யாது விலக்கியவர்கள் தற்போது தங்கள் பெற்றோர்கள் மறைந்து விட்டாலும் அத்தகைய தவறுகளுக்கும் இத்தல தரிசனம் பிராயசித்தமாக அமையும். ஆரா கீரை கூட்டும் வாலா அரிசி சாதமும் அல்லது எந்த பச்சரிசி சாத தானமும் தீரா வினையையும் தீர்க்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் அரிய பிராயசித்தம்.

ஒருமுறை திருமழிசை ஆழ்வார் தன்னுடைய சீடன் கனிகண்ணனுக்காக ஒரு மூதாட்டிக்கு இளமை அளித்து அவள் பெருமாள் சேவையைத் தொடர அருள்புரிந்தார். இது அறிந்த அந்நாட்டு மன்னன் கனிகண்ணன் தனக்கும் அவ்வாறு இளமையை அளிக்க அல்லது குறைந்த பட்சம் தன்னைப் புகழ்ந்து பாடியாவது தன் பெயருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கூறியபோது கனிகண்ணன் அதை மறுக்க, மன்னன் கனிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறும்படிக் கூறினான். கனிகண்ணன் அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதை அறிந்த ஸ்ரீதிருமழிசை ஆழ்வாரும் பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தன் சீடனுடன் நாட்டை விட்டுக் கிளம்பியதால் தன் பிரியமான அடியார் கூறிய வண்ணம் பெருமாள் தன் பைந்நாகப் பாயான ஆதிசேடனை சுருட்டிக் கொண்டு அந்த உத்தமர்களுடன் சென்று விட்டார். திருமாலுடன் ஒளி தேவதையான லட்சுமியும் சென்று விட்டதால் உடனே எங்கும் இருள் சூழ்ந்து நாடெங்கும் ஒளியில்லாமல், வழி தெரியாமல் தவித்தது. தன் தவறு உணர்ந்த மன்னர் திருமழிசை ஆழ்வாரை வேண்ட அவர் மீண்டும் திருவெஃகா அடைய பெருமாளும் லட்சுமி தேவியுடன் எழுந்தருளினார்.

மக்கள் செய்யும் தவற்றையும் லட்சுமி தேவியின் அனுகிரகத்தைப் பெற அடியார்கள் மேற்கொண்ட அருந்தவத்தையும் உணர்த்துவதே இந்தப் பெருமாள் லீலையாகும். இந்த ராகவேந்திர ஆண்டில் ஒளி மறையும், இருள் சூழும் என்பதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக இப்போதிருந்தே திருவெஃகா திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும் சொன்னவண்ணம் செய்யும் பெருமாளின் அனுகிரகம் அல்லவா ? பொய்கை ஆழ்வார் அவதாரத் தலம் திருவெஃகா. இத்தலத்தின் வலது பக்கம் பொய்கை என்னும் திருக்குளம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் மறு பக்கம் பாய்வது வேகவதி ஆறு. ஸ்ரீரங்கம் திருத்தலம் இரண்டாக காவிரி கொள்ளிடம் எனப் பிரிந்த பொன்னி நதி சக்தியின் நடுவே திகழ்வது போன்று பொய்கை, வேகவதி இடையே பொலியும் ஆதிசேடன் அரவணை கொண்டவரே திருவெஃகா பெருமாள். இது எப்படி பூந்தராய் என்ற சீர்காழி சிவத்தலத்தின் மகிமையை விளக்கும் என்பதை பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து கொள்வது இவ்வருடத்தில் பொலியும் சிறப்பாகும். பைந்நாகம் என்பது ஆத்ம விசாரத்திற்குரிய கருத்து.

வகிடு பிரிக்குமா கூட்டுமா ?

சென்னை சித்துக்காடு அல்லது சித்தர்கள்காடு என்னும் திருத்தலம் 2020 வருடத்துடன் தொடர்புடைய திருத்தலம் என்பதே சிறப்பாகும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருத்தலமே ஸ்ரீபிரசூனகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் அருளும் சித்துக்காடு திருத்தலம். சுவாதியின் அதிதேவதை ராகு பகவான் என்பது நீங்கள் அறிந்ததே. சொல்லப் போனால் பெண்கள் அனைவருமே வழிபட வேண்டிய திருத்தலமே சித்துக்காடு என்றால் மிகையாகாது. இத்தல அம்பிகை ஸ்ரீபிரசூன குந்தளாம்பிகை ஆவாள். குந்தளம் என்றால் கூந்தல், பிரசூன என்றால் அழகிய ஒளி மிகுந்த பிரகாசமான ஜோதி என்று பொருள். இப்போது ஏன் இந்தத் தலம் நம் சற்குருவால் சுவாதி நட்சத்திரக்காரர்களால் வழிபட வேண்டிய தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். ஒளி வீசும் கூந்தல் மகிமையைப் பற்றி சித்தர்கள் குறிப்பிடுவது என்ன ? தினமும் தலைக்குக் குளித்து கூந்தலை தூய்மை செய்து, தலை வாரி, நடுவில் வகிடு எடுத்து மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஜடை பின்னிப் பராமரித்தலே கூந்தலின் தெய்வீகத் தன்மையைப் பாதுகாக்கும் முறையாகும்.

திருமழிசை

நடுவில் வகிடெடுத்து இரண்டாகப் பிரிக்கும்போது அந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையே ஜொலிக்கும் பிரகாசமே குந்தளப் பிரகாசமாகும். மூன்று பிரிவுகளாகப் பிரிந்த ஜடை நடுவில் தோன்றுவதே இந்த குந்தளப் பிரகாசமாகும். எப்படி இரண்டாகப் பிரிந்த தலை முடி மூன்றாக பின்னப்பட்ட ஜடையால் பிரகாசம் பெறுகிறதோ அவ்வாறே இரண்டு பகுதியாய்ப் பிரியும் பிங்கலை இடகலை நாடிகளுக்கு இடையில் சுசும்னா நாடி பிரிந்து அதன் வழியே செல்லும் ஒளி மிக்க மூச்சானது இந்த குந்தள ஜோதிப் பிரகாசத்தை உருவாக்குகிறது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். குந்தள ஜோதியை சிறப்பாகப் பெறும் ஆண்டே இந்த ராகவேந்திர வருடமாகும். சித்துக்காடு திருத்தலத்தில்தான் உலகில் முதன் முதல் மூச்சுக் காற்று தோன்றி அது ஸ்ரீதாந்த்ரீஸ்வர மூர்த்தியின் பிரசாதமாக மக்களுக்கெல்லாம் அருளப் பெற்றது. இந்த உண்மையை உணர்ந்தே திருமழிசை ஆழ்வாரின் பெற்றோர்கள் அந்த தெய்வக் குழந்தையை இவ்வாலயத்திற்கு எடுத்து வந்து இறை மூர்த்திகளின் கருணைக் கடாட்சத்தை, தெய்வீக மூச்சுக் காற்றை அந்த தெய்வ அவதாரம் பெறும்படி செய்தார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியமாகும். அதிசயமாக சித்துக்காடு திருத்தல நந்தீஸ்வரர் தன் மூக்கில் இரு துளைகளுடன் விளங்குவதே இறைவனின் இந்த வைபவத்தை விளக்கும் செயலாகும் என்ற தெரிவித்தவரே நம் சற்குரு ஆவார். இந்த மகத்துவத்தை உணர விரும்புவோர் ஸ்ரீபோடா சித்தர், ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், நம் சற்குரு என்று குறைந்தது நான்கு ஏகாந்த ஜோதிகளின் தரிசனத்தைப் பெற்றிருத்தலே சிறப்பு என்று அறிவதும் இந்த ஒளி வருட மகாத்மியமாகும். குறைந்த பட்சம் ஸ்ரீஏகாம்பரஸ்வரர், ஸ்ரீகாஞ்சி காமாட்சி, ஸ்ரீவிளக்கொளி பெருமாள், ஸ்ரீசொன்னவண்ணம் செய்த பெருமாள் அருளும் திருத்தலங்களையாவது தரிசித்த பின்னர் சித்துக்காடு திருத்தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்தல் சிறப்பாகும். சுவாதி நட்சத்திரம் அருளும் நாளிலோ அல்லது சுவாதி நட்சத்திரம் அருளும் நாளிலிருந்து அடுத்த சுவாதி தினத்திற்குள்ளோ இந்த திருத்தலங்களை தரிசித்தல் காணக் கிடையா, தேடக் கிடையா அற்புத தரிசன மகாத்மியமாகும். ஸ்ரீவள்ளலார் சுவாமிகளின் விருப்பமே மனிதர்கள் அனைவரும் தன்னைப் போல ஒளி உடம்புடன் திகழ வேண்டும் என்பதாகும். இதற்கு உறுதுணையாக நிலவுவதே மேற்கூறிய ஒளி வழிபாடும் அதை நிறைவேற்ற துணை புரியும் இவ்வருட மகாத்மியமும் ஆகும்.

ஸ்ரீபெருமாள் மூர்த்தி சித்துக்காடு

சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் திருத்தலத்தில் திருமணம் என்ற இனிய ஊரில் எழுந்தருளிய பெருமாள் மூர்த்தியே ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆவார். ஒரு முறை மகா விஷ்ணு கருட வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரைத் தாண்டி மின்னல் வேகத்தில் ஏதோ பறந்து சென்று கொண்டிருப்பது போன்று தோன்றவே பெருமாள் வழக்கம்போல் ஒன்றுமறியாதவர்போல கருடாழ்வரிடம் அதைப் பற்றி விசாரிக்கவே கருடாழ்வோரோ அது யார் என்றே தெரியாமல் விழித்தார். வெட்கத்தால் தலை குனிந்து நின்ற அவரைத் தேற்றினார் பெருமாள் மூர்த்தி. பின்னர் தான் பெருமாளுக்கு உகந்த வாகனமாய் மாறுவதற்காக பெருமாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு பூலோகத்தில் உள்ள பல தலங்களில் தவம் இயற்றினார். நிறைவில் அவர் ஸ்ரீகருடக் கொடி சித்தர் என்ற மகரிஷியை சித்துக்காடு திருத்தலத்தில் தரிசனம் செய்தார் என்பது நீங்கள் அறிந்ததே. கருடாழ்வார் ஸ்ரீகருடக்கொடி சித்தரை தரிசனம் செய்து தான் பெருமாளுக்கு உகந்த வாகனமாய் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தியைப் பெற்று பெருமாள் பக்தர்கள் எந்த உலகத்திலிருந்து அழைத்தாலும் அவர்கள் குரல் விண்ணில் மறையும் முன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நம்பெருமாளை அழைத்துச் செல்லும் சக்தியையும் பெற்ற வருடமே இந்த ராகவேந்திர வருடம் என்பதால் திருமணம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீகருடக் கொடி சித்தரை தரிசனம் செய்து தேங்காய் துருவல் கலந்த சர்க்கரை பொங்கலை இவ்வருடம் முழுவதும் காலையில் அதாவது முற்பகல் நேரத்தில் தானமளித்தலால் நல்ல கண் பார்வை கிட்டும், குடும்ப ஒற்றுமை பெருகும், திருமணத் தடங்கல்கள் நீங்கும். நம் வலது தோளில் சங்கும் இடது தோளில் சக்கரமும் தங்கள் சக்தியுடன் எழுந்தருளி உள்ளனர். இந்த ஆபத்பாந்தவ மூர்த்திகளை தினமும் நாம் குளிக்கும்போது நினைவு கூர்ந்து அவர்களுக்கு தீர்த்தத்தால் அபிஷேகித்தலால் நாம் தினசரி வாழ்வில் பாதுகாப்பு பெறுவோம். பெருமாள் மூர்த்தி தரிசனத்தில், பெருமாள் தலங்களில் சங்கு சக்கரம் மாறி அமைந்துள்ளதால் சில பக்தர்கள் இது பற்றி விவரம் அறிய ஆவலாய் உள்ளனர். திருமணம் திருத்தலத்தில் ஸ்ரீகருடக் கொடி சித்தரை தரிசனம் செய்து வழிபாடுகளை இயற்றி வந்தால் இவ்வாறு நாம் பெருமாளின் பிரதிபலிப்பாகவே தோன்றியுள்ளோம் என்ற உண்மையை நாளடைவில் அறிந்து கொள்ளலாம். வலது கையில் தர்ப்பை மோதிரத்தை அணிந்து கொண்டு பசும்பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள் தூள், டைமண்ட் கற்கண்டு கலந்து தானமாக அளித்து வருதலால் தீராத பல நோய்களுக்கு விரைவில் நிவாரணம் கிட்டும். ஸ்ரீகருடக்கொடி சித்தர் அளிக்கும் இந்த அனுகிரகத்தை விசேஷமாகப் பெறும் வருடமே இதுவாகும். பொதுவாக, கருடன், யானை, மயில் தரிசனம், அவை எழுப்பும் ஒலி நல்ல சகுனமாக அமையும் என்றாலும் இவ்வருடம் கருட தரிசனம் சிறப்பான பலன்களை வர்ஷிப்பதாக உள்ளது. இதற்கு முன்னோடியாக சித்துக்காடு திருமணம் திருத்தலத்தில் ஸ்ரீகருடக்கொடி சித்தர் தரிசனம் பெறுவது நலம்.

சித்துக்காடு

இத்தல அம்பிகை ஸ்ரீபிரசூன குந்தளாம்பிகை ஆவாள். மேலோட்டமாகப் பார்த்தால் பிரசூன சோதியை அனுகிரகமாக வர்ஷிக்கும் அம்பாள் என இவள் நாமம் கூறினாலும் உயர்ந்த ஆன்மீக நிலையில் பிரகாசிப்பதே இந்த ஆன்மீக ஜோதியாகும். எப்படி ஒரு சாதாரண அகல் விளக்கின் ஒளியை பல மைல்கள் தூரத்திலிருந்தும் காரிருளில் தரிசிக்க முடியுமோ அவ்வாறு இந்த ஒளி வருடத்தில் ஒளியை வர்ஷிக்கும் இங்கு அளித்துள்ள மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை ஓதுவதால் இந்த துதியில் மிளிரும் நமசிவாய வாழ்க என்ற எட்டெழுத்துக்கள் ஒளி வகிடு தரிசனமாக, குந்தளாம்பிகையின் அனுகிரக சக்திகளாகத் துலங்கும். இங்கு குறித்த ராகமாலிகை பத்ததியில் சிவபுராணத்தை ஓத முடியாவிட்டாலும் அவரவருக்குத் தெரிந்த, புரிந்த முறையில் சிவபராணத்தை 3, 30, 75 என்ற குருவிற்கு உகந்த எண் கணித சூத்திர முறையில் மானசீகமாக அல்லது வாய்விட்டு ஓதுவதும் இவ்வருடம் சிறப்பான வழிபாடாக அமைகிறது. குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய வழிபாடு முக வசீகரத்தையும், காரிய சித்தியையும் கனியச் செய்யும். பெண்கள் கூந்தலை சுத்தம் செய்து, நல்ல மணமுள்ள தைலங்களைத் தடவி, நடுவில் வகிடெடுத்து சடை பின்னிக் கொள்ளுதலே உத்தம பலன்களைப் பெறும் முறையாக சித்தர்கள் அருள்கின்றனர். ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமாணிக்க வாசகர் என்றவாறு விரல் விட்டு எண்ணும் வகையிலே மகான்கள் இந்த பிரசூன ஜோதியை தரிசித்திருந்தாலும் இந்த ஜோதி தரிசனத்தை நாமும் பெற கருணை கொண்டு சித்தர்கள் அளிக்கும் இந்த வழிபாட்டின் மகிமையை என்னவென்று சொல்வது ? இந்த ராகவேந்திர வருடத்தில் பெண்கள் கூந்தலில் திகழும் வகிடு பிரசூன வகிடு என்றே மகான்களால் போற்றப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன் திகழும் இத்தகைய பிரசூன வகிடு தரிசனத்தை ஸ்ரீஅகத்திய பிரான் இந்த விகாரி வருடத்தில் ஒவ்வொரு யுகத்திலும் பெற்று பூலோக மக்களுக்கு அனுகிரக சக்திகளாக வர்ஷித்தார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சித்த இரகசியமாகும். முற்காலத்தில் குறிப்பாக கேரளப் பெண்கள் திருத்தலங்களில் இறை தரிசனத்தைப் பெறும்போது இவ்வாறு தங்கள் பிரசூன வகிட்டில் இறை மூர்த்திகளின் திருஷ்டி விழுமாறு சில நிமிடங்கள் குனிந்து நின்று வழிபடுவார்கள். இதனால் பிரசூன ஜோதியை உடல் முழுவதும் வியாபிக்கச் செய்யும் வழிபாடாக இது அமைகிறது. திருத்தலங்களில் மணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தின் மேல் தங்கள் கைகளை வைத்து இறை மூர்த்திகளை வழிபடுவதால் இந்த பிரசூன ஜோதியின் மகிமையால் குடும்ப ஒற்றுமை பெருகுவதுடன் கணவன்மார்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் திகழவும் இது உறுதுணையாக அமையும்.

ஸ்ரீபிருத்வி நந்தி திருஅண்ணாமலை

பொதுவாக தீபங்களை ஏற்றி வழிபாடுகளை செய்யும்போது முதல் தீபத்தை தீர்க்க சுமங்கலிகளைக் கொண்டு, 60, 80 வயது நிறைந்து பல குழந்தைகளைப் பெற்று வாழ்ந்த சுமங்கலிகள் மூலம் தீபம் ஏற்றும்படி நம் சற்குரு வற்புறுத்துவார். இத்தகைய சுமங்கலிகளுக்கே பிராண தீபிகை என்ற ஜோதி அவர்கள் ஆத்மாவில் பிரகாசித்து அவர்கள் சரீரம் மூலமாக விளக்கில் குடிகொள்ளும் என்பதே இதன் காரணமாகும். இந்த ஜோதி சக்தியை இந்த ஆண்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கும் பெருந்தகையே சித்துக்காடு திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீபிராண தீபிகை சித்தராவார். தீபிகா என்ற பெயர் கொண்ட பெண் அடியார்களுக்கு ஐந்து முக குத்து விளக்குகளை அல்லது முகங்களில்லாத விளக்குகளை இத்தலத்தில் தானம் அளிப்பதும் அல்லது அவர்கள் மூலம் மற்ற திருத்தலங்களில் தானம் அளிப்பதும் ஓர் அற்புத தீப தானமாகும். பொதுவாக சகல ஜீவ ராசிகளிடமும் இந்த பிராண ஜோதி என்பது விளங்கினாலும் பெண்களிடம், சிறப்பாக உன்னத சுமங்கலிகளிடம், அதிலும் சிறப்பாக 80 வயது நிறைந்த சுமங்கலிகளிடம் இந்த பிராண ஜோதி பிரகாசிக்கிறது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இந்த பிராண தீபிகா விளக்குகளால் தீபங்கள் ஏற்றி எந்த அளவிற்கு இந்த ஆண்டில் வழிபடுகிறார்களோ அந்த அளவிற்கு இருட்டில், மன வேற்றுமையால் பக்தர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். வரும் பிப்ரவரி மாதம் 14ந் தேதி அன்று அமையும் தீபிகா சஷ்டி இத்தகைய வழிபாடுகளுக்கு மிகவும் சிறந்ததாகும். வெள்ளிக் கிழமை, சுவாதி நட்சத்திரம், சஷ்டி திதி இணையும் நாளே தீபிகா சஷ்டி எனப்படும். சஷ்டி ஜோதியுடன், பிராண தீபிகை, குந்தள ஜோதி, சுவாதி நட்சத்திர ஜோதி என்ற ஜோதிகள் இணைவதால் இது நான்கு ஜோதிகள் இணையும் நற்சங்கமாக விளங்கி இந்த ஒளி வருடத்தில் பிரகாசிக்கும் அற்புத ஜோதி வழிபாடாக அமைகிறது. இதய வடிவில் தீபங்களை ஏற்றி அதன் நடுவில் இரண்டு ஜோதிகளை ஏற்றி சிவ சக்தி ஐக்ய சொரூபமாக பாவித்து வழிபாடுகளை இயற்றுதல் ஜோதி சக்திகளை பல மடங்காகப் பெருக்கி அளிக்கும் என்பதே இந்த தீபிகா சஷ்டியின் மகிமைகளில் ஒன்றாகும். திருஅண்ணாமலை பிருத்வி நந்தி மூர்த்தி அருகே இயற்றப்படும் இத்தகைய தீபிகா சஷ்டி வழிபாடு நாக தோஷங்களைக் களைந்து திருமணத் தடைகளை நீக்கும். சித்துக்காடு திருத்தலத்தில் மட்டுமல்லாது அனைத்து திருத்தலங்களிலும் சிறப்பாக வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகப் பெருமான் முன்பு இத்தகைய தீபிகா சஷ்டி வழிபாடுகளை இயற்றுதல் நலம். இதய ஜோதிகளை இதயத்தின் நடுவில் உள்ள சிவசக்தி ஜோதிகளை நோக்கியவாறு அமைக்கவும்.

இதய ஜோதிகளை 16, 32, 48 என்றவாறு இடத்திற்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம். முழு செந்தாமரைகளை விரித்து இந்த தீபங்களின் அருகில் வைத்தல் சிறப்பு. இதயக் கோளாறுகளால் வாடுவோரும், இரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோரும் நன்னிலை அடைவர். இந்த இதய ஜோதியை சுற்றி பக்தர்கள் கைகோர்த்தவாறு அமர்ந்து சிவபுராணத்தை ஓதுவது சிறப்புடையதே. இத்தகைய வழிபாடுகளை இயற்றும்போது இதயம் நடுவில் பிரகாசிக்கும் இரு தீபங்கள் இணைந்து பிரசூன குந்தளம் என்ற ஜோதி சக்தியாக பரிணமிப்பதை ஆன்மீக கண் கொண்டவர்கள் தரிசிக்க முடியும் என்பது உண்மையே. இந்த ஜோதி வழிபாட்டிற்கு உகந்த நிழல் திருத்தலமே தெய்வானை முருகப் பெருமானின் இதயத்தில் தேவயானை ஜோதியாக பிரகாசிக்கும் திருவெள்ளறை ஆகும். மற்ற எந்த திருத்தலத்திலும் காண முடியாத அதிசயமாக வள்ளியுடன், மறை சக்தியான தெய்வானையுடன் ஸ்ரீமுருகப் பெருமான் திருவெள்ளறை திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். குகு என்றால் தொப்புளிலிருந்து தோன்றும் நாடி. அன் என்றால் இல்லை என்பதைக் குறிப்பது. குகன் என்றால் தொப்புள் கொடி இல்லாமல் தோன்றிய குழந்தை என்று பொருள். கிருஷ்ண பகவான், ராமகிருஷ்ணர், ஏசுநாதர் போன்றோர் ஆண் சக்திக்கு அதீதமான இறை சக்தியுடன் தோன்றினாலும் அவர்களும் ஒரு தாயின் வயிற்றில் தொப்புள் கொடி மூலம் சக்தியைப் பெற்றுத்தான் தோன்றினார்கள். ஆனால் முருகப் பெருமானோ முழுக்க முழுக்க இறை சக்தியுடன் தோன்றிய பெருமையை உடைய அவதார மூர்த்தி ஆவார். ஆயினும் குழந்தையாகத் தோன்றியதால் செந்தாரை மலர்கள் மூலம் இறைவனின் சக்தியைப் பெற்றார்.

ஸ்ரீமுருகப் பெருமான் சித்துக்காடு

முருகப் பெருமான் சரவண பொய்கையில் தோன்றிய பவதாரை தாமரைகள் என்ற அற்புத செந்தாமரை மலர்கள் உன்னத நிலை அடைந்து ஸ்கந்த லோகத்தை அடைந்து விட்டாலும் இன்றும் முருகப் பெருமானை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குவதால் அனைத்து நலன்களையும் பெற்று வாழும் இனிய வழிபாடாக இது அமைகிறது. இவ்வாறு முழுக்க முழுக்க மறை சக்தியாகத் தோன்றிய முருகனையே தங்கள் வருங்கால கணவனாக வரிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவதால் அனைவரும் முருகப் பெருமானையே தங்கள் கணவனாக வேண்டி விரதம் மேற்கொண்டார்கள், விரதம் இன்றளவும் அனுஷ்டித்து பயன்பெறுகிறார்கள். இந்திரனின் மகளான தேவயானையை தன் இதயத்தில் காவல் கொண்ட முருகப் பெருமான் துலங்கும் திருவெள்ளறை தலத்தில் இந்த ராகவேந்திர வருடத்தில் வழிபடுவது எத்தகைய பொருத்தமான செயல் ? ராகவேந்திர என்றால் இருளில் துலங்கும் ஒளி என்ற பொருளும் உண்டு. முன்பு ஒரு முறை (1993ம் வருடம்) இத்தகைய ராகு சக்திகள் மிகுந்த ஆண்டில் இதே திருவெள்ளறை திருத்தலத்திற்கு ஒரு அடியாரின் திருமண வைபவத்திற்காக நம் சற்குரு எழுந்தருளியபோது ஒரு விபச்சாரியின் தவறான காரியத்திற்கு துணை நின்று தன்னை நம்பி வந்த ஒரு அடியாரின் உயிரைக் காப்பாற்றிய வரலாற்றையும் தெரிவித்திருந்தோம். இதுவும் ராகவேந்திர ஆண்டின் மகிமைகளில் ஒன்று. 120, 121 கொலைகள் என்பது இருள் சூழ்ந்த மனதின் செயல்பாடாக அமைந்தாலும் இந்த இருளிலும் பொலியும் சற்குருவின் வழிகாட்டுதல் என்பது நிழலில் ஒளிவீசும் இறை வழிபாடாக மலரும், பிரகாசிக்கும் என்பதே இந்த வருட வழிபாடுகளின் முக்கியத்துவமாகும். நாவல் பழத்தில் பெருநாவல், சிறுநாவல், நிழல்நாவல் என்ற மூன்று வகை கனிகள் உண்டு. இதில் நிழல் நாவல் என்ற சக்திகள் பெருகிய தலமே திருவெள்ளறை சிவத்தலம். ஆதலால் இங்கு நிழல் நாவல் கனிகளை இந்த வருடம் முழுவதும் தானம் அளித்தல் சிறப்பாகும். இத்தகைய நிழல் நாவல் கனிகளைப் பற்றி அறியாதோர் எந்த வகை நாவல் கனிகளாக இருந்தாலும் அவற்றை நண்பகல் நேரத்தில், உச்சி வேளையில் எத்தலத்தில் தானமாக அளித்தாலும் அவற்றில் சம்புநாதம் என்னும் நிழல் நாவல் சக்திகள் பதிய இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஜம்பு மகரிஷி அருள்புரிகிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியமாகும். இவ்வருடத்தில் அடியார்கள் தாய்மொழி அல்லாத மற்றொரு இந்திய மொழியையும், ஏதாவது ஒரு அயல் நாட்டு மொழியையும் கற்றுக் கொள்ளுதல் சிறப்பாகும். இதற்கு முன்னோடியாகத் திகழ்வதே ஹம்ஸ்வர யோகம் ஆகும்.

ஸ்ரீகசவனம்பட்டி சித்தர்

இந்த வருடம் மன இருள் சூழும் வருடமாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் தாங்கள் எங்கு வண்டியை நிறுத்துவதாக இருந்தாலும் வண்டியை எடுப்பதற்கு முன்னால் அவைகளின் அடியில் நாய், பூனை, ஓணான் போன்ற நான்கு கால்கள் உள்ள ஜீவன்கள் ஓய்வெடுக்கின்றனவா, உறங்குகின்றனவா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். சரி, நான்கு சக்கர வாகனங்களை நாம் கவனமாகப் பார்த்து எடுக்கலாம். கப்பல், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகனங்கள் முற்றிலும் நம் வசத்தில் இல்லையே நாம் என்ன செய்ய முடியும். இப்போது நீங்கள் ஸ்ரீகசவனம்பட்டி சித்தரின் அடியார் ஒருவரின் அனுபவத்தை நினைவு கூற வேண்டும். அவர் ஒரு முறை சித்தரை காணச் சென்றார். அவர் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து விட்டது. நல்ல வேளையாக பஸ்ஸில் இருந்த யாருக்கும் எந்த வித அடியும் படாமல் அனைவரும் உயிர் தப்பி விட்டனர். அந்த அடியாரும் சகுனம் சரியில்லை என்று நினைத்து ஸ்ரீகசவனம்பட்டி சித்தரைப் பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அவர் நாடி ஜோதிடம் பார்த்தபோது அவர் சில நாட்களுக்கு முன் ஸ்ரீகசவனம்பட்டி சித்தரை பார்க்கச் சென்றதாகவும், அவர் சென்ற பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு விபத்தால் மரண அடைய வேண்டும் என்ற விதி இருந்தததாகவும், ஆனால் கசவனப்பட்டி சித்தரை தரிசனம் செய்யப்போகும் ஒரு அடியார் அந்த பஸ்ஸில் இருந்ததால் அனைவர் உயிரையும் ஸ்ரீகசவனம்பபட்டி சித்தரின் அனுகிரகம் காத்து நின்றது என்றும் அந்த சுவடி ஜோதிடம் கூறியது. அப்புறம் நடந்தது என்ன என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இதுவே சித்தர்களின் மகிமை, காருண்யம். நமக்கு வரும் காய்கறிகள், பூக்கள், உணவு தான்யங்கள், ஆடை அணிகலன்கள் என்ற அனைத்துமே இவ்வாறு ரயில், கப்பல் போன்ற வாகனங்கள் மூலம் வருவதால் நாம் இத்தகைய வாகனங்களில் பயணம் செய்கின்றோமோ இல்லையோ இத்தகைய வாகனங்களில் உயிர்கள், சிற்றுயிர்கள் அகப்பட்டு உயிரிழக்காமல் இருக்க காப்புத் துதிகளையும், மந்திரங்களையும், தேவாரப் பாடல்களையும் ஓதி வர வேண்டும். அப்படி ஒரு வேளை விதி வசத்தால் ஒரு சில உயிர்கள் இந்த வாகனங்களில் மாட்டி உயிரிழந்தாலும் அவைகள் நன்னிலை அடையவே காருண்ய தர்ப்பணங்களை அளித்து இந்த உயிர்களின் மேன்மைக்காக நாம் பாடுபட வேண்டும் என்பதே சித்தர்களின் விருப்பம். இத்தகைய காருண்ய தர்ப்பணங்களுக்கு உகந்ததே இந்த ஒளி வீசும் இருள் வருடமாகும்.

ஸ்ரீகசவனம்பட்டி சித்தர்

விருச்சிக லக்னம் அமைந்த ஸ்ரீகணபதியின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருளி இருப்பதைக் குறித்து இது களத்திர தோஷத்தைக் குறிக்காதா என்று ஒரு அடியார் நம் சற்குருவைக் கேட்டார். சத்குரு சிரித்துக் கொண்டே, “ஆமாம், கற்றுக் குட்டியான உன்னுடைய ஜோதிட அறிவை வைத்துப் பார்த்தால் இது களத்திர தோஷத்தைக் குறிப்பதுதான். ஆனால் ஜோதிடன் என்பவன் ஒரு ஜாதகத்தைப் பார்த்த உடனேயே முதலில் அது ஒரு மகானின் ஜாதகமா, அவதார மூர்த்தியின் ஜாதகமா, மனிதர்களின் ஜாதகமா இல்லை பறவை விலங்குகளின் ஜாதகமா என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த அடிப்படை ஜோதிட அறிவே இல்லாத நீ எதைச் சாதிக்கப் போகிறாய் ?” என்று கேட்டு கண் சிமிட்டினார். சற்குரு தொடர்ந்து, “சரி, போகட்டும். பிள்ளையார் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் அமைந்துள்ள ராஜயோகங்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல். மற்ற யோகங்களைப் பற்றி அடியேன் என்ன சொல்ல முடியும். எத்தனையோ களத்திர தோஷங்களை களைய வந்ததே பிள்ளையார் ஜாதகம் ... ”, என்று பிள்ளையார் ஜாதகத்தின் மகிமைகளை விளக்க ஆரம்பித்தார் நம் சற்குரு. தெய்வங்களின் அருள் கடாட்சம் இவ்வாறு இருக்க மகான்களின் தோற்ற மகிமைகளைப் பற்றி எவ்வாறு கூற முடியும். பொதுவாக, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள். காரணம், இடது கால் மேல் வலது காலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் ரஜோ குணம் பெருகும் என்பது வாசி யோக விதி. ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் இடது காலை வலது கால் மேல் போட்டுக் கொண்டுதான் பெரும்பாலும் தரிசனம் அளிப்பார். காரணம் பல நற்காரியங்களுக்கு வேண்டிய ஊக்க சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பக்தர்களின் அதிகப் படியான ரஜோகுணத்தை மட்டுப்படுத்தும் சமனியோகமாகவும் இத்தகைய யோக நிலைகள் அருள்புரியும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். இவ்வருடம் தமோ குணம் பெருகும் அளவிற்கு அதற்கு சமமான ரஜோ குணமும் பெருகும் வாய்ப்புள்ளதால் இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்து குறிப்பாக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஸ்ரீகசவனம்பட்டி சித்தரின் ஜீவ சமாதி போன்ற திருத்தலங்களை தரிசனம் செய்து ராஜ்மா பருப்பு சுண்டல்களைத் தானம் அளிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். பெண்களின் மாதவிடாய்த் துன்பங்களும் இத்தகைய தானங்களால் சமனடையும். நம் சற்குரு ஸ்ரீகசவனம்பட்டி சித்தருக்கான வருணா இஷ்ட திகம்பர சக்கரத்தை நிர்மாணிப்பதற்காக அமர்ந்தபோது ஏகப்பட்ட தேவதைகள் சற்குருவின் கண் முன் தோன்றி தாங்கள் அந்த சக்கரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய விரும்புவதால் தங்கள் விண்ணப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாய் நம் சற்குருவைக் கேட்டுக் கொண்டனவாம். அவர்கள் வேண்டுதல்களை எல்லாம் சீர்பிரித்து தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவர்களின் சக்திகளை அந்தச் சக்கரத்தில் நிர்மாணிப்பதற்கு நம் சற்குருவிற்கே மூன்று நாட்கள் தேவைப்பட்டன என்றால் மகான்களுக்கு பூலோக ஜீவன்களுக்கு மேல் உள்ள பரிவும் அன்பும் எத்தகைய ஆழமுடையதாக இருக்கும் ?

ஸ்ரீதழுவக் குழைந்த நாயகி பழையாறை

காமத்தைத் தூண்டும் பத்திரிக்கைகளை மஞ்சள் பத்திரிக்கைகள் என்று அழைப்பதுண்டு. அத்தகைய மஞ்சள் பத்திரிக்கை ஒன்றில் ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா அவர்களுடைய யோகம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தபோது பல பக்தர்களும் இது பற்றி விளக்கம் கேட்டனர். அதற்கு சுவாமி சிவானந்தா, “காமக் கேளிக்கைகளில் ஈடுபடும் ஒருவனும் இறைவனைப் பற்றி அறிய விரும்பினால் அவனுக்கு உள்ள உரிமையை யாராவது தட்டிப் பறிக்க முடியுமா ? என்னைப் பொறுத்தவரை நான் இறைவனைப் பற்றிப் பேசுகின்றேன், எழுதுகின்றேன். அது எது எந்த பத்திரிகையில் வெளிவந்தாலும் அது இறைவனின் புகழைத்தானே பாடும் ?” என்று கேட்டார். மஞ்சள் என்றால் அது சிறு கீற்றாக இருந்தாலும் அது குருவைக் குறிப்பதே என்று செயல்பட்டவர் சுவாமி சிவானந்தா. சுவாமி சிவானந்தாவின் இந்த நியாயமான பதிலால் அனைவரும் மௌனமாயினர். அதுபோல் பத்திரிக்கைகளில் கவர்ச்சி நடிகைகளின், கன்னிகளின் படங்கள் வெளிவந்தாலும் அவர்கள் இதயங்களிலும் ஒளி வீசுவது இறைவன் ஒருவனே என்று அந்த மின்னல் கீற்றையும் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் இறைவனாக தரிசிப்பவர்களே மகான்கள். இவ்வாறு பகலில் தோன்றும் மின்னலை விட இரவில் நள்ளிருளில் பிரகாசிக்கும் மின்னல் அதிக பிரகாசம் உடையது போல் தோன்றுவதால் காம எண்ணங்களால் துன்புறும் பக்தர்கள் இவ்வருடம் மேற்கொள்ளும் வழிபாடுகள் இருளில் தோன்றும் மின்னலைப் போல் பிரகாசித்து மன இருளையும் உள்ள இருளையும் நீக்கும் அருமருந்தாக அமையும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். அந்தகாசுரன் என்ற அசுரனைப் பற்றி சிலர் அறிவோம். அத்தகைய அந்தகாசுரனைப் போல் கோடி மடங்கு சக்தி உடைய மாணிகேசன் என்ற அசுரனே பழையாறை திருத்தலத்தில் ஸ்ரீதழுவக் குழைந்த நாயகியையும் இறைவனையும் கொண்டாடும் இங்கு நீங்கள் காணும் அசுரன் ஆவான். இவ்வாறு ஆண், பெண் என்ற சக்திகளை தழுவி, அதாவது ஒன்று சேர்த்து அதை மற்றவர்களின் நன்மைக்காக அளிக்க வல்லவர்கள் எதையும் சாதிக்க வல்லவர்களே என்பதை உணர்த்துவதே நீங்கள் இங்கு காணும் இறை மூர்த்திகளின் காட்சியாகும். காமத்திற்கு ஆட்படாமல் காமத்தைக் கடந்து செல்லும் ஒருவனுக்கு கைவராதது எதுவும் இல்லை என்று உணர்த்துவதே தழுவக் குழைந்த கோலத்தின் மேலோட்டமான தாத்பர்யமாகும். திருவிடைமருதூர், காஞ்சிபுரம், திருவேதிகுடி போன்ற பல திருத்தலங்களில் நூற்றுக் கணக்கான சிவலிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதைக் காணலாம். திருவிடைமருதூர், திருவொற்றியூர் போன்ற திருத்தலங்களில் நட்சத்திர மூர்த்திகளே லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளனர். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களின் அடிப்படை தோற்றம் லிங்க வடிவமே ஆகும். இதை உணர்ந்து கொள்ள ஏதாவது ஒரு லிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து திருத்தலங்களில் அந்த லிங்க மூர்த்திகளைப் பார்த்தவாறு தியானம் இயற்றி வருதலால் மெதுவே மெதுவாக அனைவரும் ஆத்ம லிங்க தரிசனத்தைப் பெற சற்குருவின் அருள் சுரக்கும். இத்தகைய ஆத்ம லிங்க தரிசனத்தை அருளும் தியானத்தை ஆரம்பிக்க இந்த வருடம் உகந்ததாகும். ஆண் பெண் என்ற தத்துவங்கள் இந்த ஆத்ம லிங்கத்தின் விளக்கமாகவே அமையும் என்பதே இந்த தியானத்தைப் பற்றி சித்தர்கள் தெளிவுபடுத்தும் இரகசியமாகும். அவரவர் சக்திக்கு ஏற்றவகையில் நாகலிங்க மலர்களை இறை மூர்த்திகளுக்கு அளித்து ஒரு பூவிற்கு பத்து உணவுப் பொட்டலங்கள் என்ற கணக்கில் தானம் அளித்து வந்தால் ஆத்ம லிங்க தரிசனம் விரைவில் அருள்கூட்ட சற்குரு துணை நிற்பார். இந்த ராகவேந்திர வருடத்தில் கட்டாயம் இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பல அடியார்களும் நாம் கோயிலுக்குத்தானே போகிறோம் அதனால் இரவுப் பயணம் மேற்கொள்வதில் தவறு கிடையாது என்று தங்கள் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால், கோயிலுக்கே சென்றாலும் இந்த இரவுப் பயணத்தால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கவே நம் புண்ணியத்தின் பெரும் பகுதி கழிந்து விடும். ஒரு முறை திருஅண்ணாமலை பௌர்ணமி சேவைக்காக சில அடியார்கள் நம் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். பௌர்ணமி முடிந்த அன்றே சீர்காழி திருத்தலத்தில் விஷ்ணுபதியும் அமைந்ததால் அந்த அடியார்கள் ஒரு வேனில் ஏறிக் கொண்டு சீர்காழி சென்றனர். இரவில் பயணம் செய்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை என்று அந்த அடியார்கள் நினைத்திருந்தனர்.

ஸ்ரீசதுர்புஜ துர்கை திருக்கழிப்பாலை

வழியில் ஒரு பசு மாட்டின் மேல் அந்த வேன் மோதி அந்த பசு மாடு அந்த இடத்திலேயே உயிர் துறக்க நேர்ந்தது. இந்த நிகழ்ச்சியை நம் சற்குருவிடம் தெரிவித்தபோது அதற்கு பல பரிகார முறைகளைக் கூறி தம் அடியார்களை, அன்புக் குழந்தைகளை வரக் கூடிய பசு ஹத்தி தோஷங்களிலிருந்து காத்தார் என்றாலும் இரவுப் பயணம் என்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல என்பதே இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கடை பிடிக்க வேண்டிய உண்மையாகும். பொதுவாக திருத்தலங்களில் பகல் நேரத்தில் மட்டுமே கோயில் உழவாரப் பணிகள் நம் சற்குரு நிறைவேற்றினாலும் இரண்டு கோயில்களில் மட்டும் இரவு நேர உழவாரப் பணிகளை நிறைவேற்றும்படிக் கூறினார். திருச்சி மலைக்கோட்டையும், திருவானைக்கோவில் திருத்தலங்களே இரவு நேரத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றக் கூடிய திருத்தலங்களாகும். இன்றும் திருவானைக்கோவில் திருத்தலத்தில் பஞ்சபிரகாரத்தில் எவரும் உறங்குவது கிடையாது. காரணம் அம்பாள் இரவு நேரத்தில் பவனி வருவதால் அந்த நேரத்தில் அவளை வழிபடாமல் தூங்கிக் கழிப்பது ஏற்புடையது அல்ல என்பதே முக்கிய காரணமாகும். சித்தர்களைப் பொறுத்த வரையில் பஞ்ச பிரகாரம் என்பது பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை தூய்மைப்படுத்துவதே பஞ்ச பிரகார வழிபாடாகும். சக்தி லோகங்கள் கோடி கோடியாகத் திகழ்ந்தாலும் இதில் நம் பூலோக ஜீவன்களுக்கு ஏற்ற லோகமே அகிலவித்யா என்ற சக்தி லோகமாகும். இந்த அகிலவித்யா லோகத்திற்கு நேரடியாக செல்வதற்கு உரிய “விசா” வழங்கப்படும் இடமே திருவானைக் கோவில் பஞ்சபிரகாரம் ஆகும். இதன் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காகவே எம்பெருமான் இந்த பஞ்சபிரகாரத்தை தாமே முன்னின்று நிர்மாணித்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தப் பஞ்சபிரகாரத்தில் இரவு வழிபாடுகளை இயற்றுபவர்கள் குறைந்தது ஐந்து பேராக நிறைவேற்றுதலே சிறப்பாகும். அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, சிவராத்திரி தினங்களில் பஞ்ச பிரகாரத்தை வலம் வந்து இத்தகைய இரவு வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பு. இருள் சூழும் இந்த ராகவேந்திர வருடத்தில் இங்கு நிறைவேற்றும் வழிபாடுகள் அற்புத பலன்களை வர்ஷிக்கும் என்பதால் மாதம் ஒரு முறையாவது மேற்கூறிய தினங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலம். மாணிக்கங்கள் என்பவை இயற்கையாகவே ஒளி வீசும் ரத்தினக் கற்கள். இவற்றில் நாக மாணிக்கமே மிகுந்த சக்தி உடையதாகத் திகழ்ந்தாலும் அருவி மாணிக்கம், பாறை மாணிக்கம் என்ற மாணிக்கங்களால் ஆன தோடுகள், மோதிரங்கள், கடுக்கன்கள் போன்றவற்றை பஞ்ச பிரகாரத்தில் தானமளித்தல் பெறற்கரிய பாக்கியமாகும். இதனால் பிறர் அறியாமல் சேர்த்த, இருளில் சேர்த்த கர்ம வினைகளுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும். திருச்சி மலைக்கோட்டையையும் மேற்கண்ட நாட்களில் கிரிவலம் வந்து, தானங்கள் நிறைவேற்றி நற்பலன் பெறலாம். ஸ்ரீமாணிக்க விநாயகர் என்ற நாமம் ஏதோ தற்செயலாக அமைந்ததல்ல என்பதை அடியார்கள் ஓரளவு இப்போது உணர்ந்திருக்கலாம். கீழே கண்டெடுத்த பொருட்களையோ, பணத்தையோ, அறியாமல் பிறர் நம்மிடம் அதிகப்படியாக கொடுத்த பணத்தையோ, செல்வத்தையோ ஸ்ரீமாணிக்க விநாயகர் உண்டியலில் சேர்த்து விடுவதால் பலரும் தேவையில்லாத கர்மங்களிலிருந்து விடுபட நல்வழி காட்டுபவரே திருச்சி ஸ்ரீமாணிக்க விநாயகப் பெருமான் ஆவார். எத்தகைய கொடிய கர்ம வினைகளையும் களையும் சக்தி உடையதே அக்னி என்பதால் அக்னியில் சமைத்த உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு தானமளித்து தம் அடியார்களைக் கர்ம வினையின் பாதிப்பிலிருந்து காத்து வந்தார் நம் சற்குரு. இரண்யாட்சன் பஞ்ச அக்னிகளின் நடுவில் அதவாது நான்கு திசைகளிலும் நெருப்பை மூட்டி தலைக்கு மேலே துலங்கும் சூரியனை ஐந்தாவது அக்னியாகக் கொண்டு தவம் இயற்றி வந்தான். இவ்வாறு கொடிய கர்ம வினைகளால் அவதியுறுவோர்கள் திருக்கழிப்பாலையில் இவ்வருடம் வழிபட்டு வருதலால் சிறப்பாக தலைக்கு மேல் சூரியன் துலங்கும் மதிய நேரத்தில் அதாவது புதன் கிழமை இராகு கால நேரத்தில் இத்தல ஸ்ரீசதுராக்னி துர்கையை வழிபடுவதால் கிட்டும் பலன்கள் அமோகம். நெருப்பில் சுட்ட சப்பாத்தி உருளைக் கிழங்கு தானம் சிறப்பு.பொதுவாக சைவ சமயத்திற்கு உரிய சின்னமாக விபூதியையும் வைணவச் சின்னமாக நாமத்தையும் நெற்றியில் அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாராளமாக விபூதியையோ, திருமண் நாமத்தையோ இட்டுக் கொள்ளலாம் என்பதே சித்தர்களின் கருத்து. இவ்வருடம் ராகவேந்திர வருடமாக அமைவதால் சனிக் கிழமைகளில் அனைவரும் நெற்றிக்கு நாமம் அணிந்து கொள்தல் மன இருளைப் போக்கும் மாமருந்தாக அமையும். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் சிவபெருமான் திருநாமம் அணிந்து வைகுண்டத்திற்கு செல்வது உண்டு, அதே போல் சிவராத்திரி அன்று விபூதி பட்டை நெற்றிக்கு அணிந்து கொண்டு பெருமாள் கைலாயத்திற்கு செல்வது வழக்கம். பேதம் என்பது தெய்வ மூர்த்திகளிடம் கிடையாது, சில மனித மூர்த்திகளே பேதம் கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று திருமண் நாமம் அணிந்து கொண்டு ஆதிசேஷன் மேல் சயனித்து இருக்கும் பார்வதி சமேத சிவபெருமானின் கோலமே இங்கு நீங்கள் லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலத்தில் தரிசிக்கும் இனிய கோலமாகும். இத்தகைய தரிசனங்கள் புற இருளையும் மன இருளையும் போக்கும் என்பதே உண்மை.

சுமார் 30 வருடங்களுக்கு முன் மாதா அமிர்தானந்தா மயி குருகுலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. நான்கு எழுத்துக்களுடன் பெருமாள் நாமம் கொண்ட ஒரு பக்தருக்கு நான்கு பெண் குழந்தைகள். அந்த பக்தரின் வீட்டிற்கு அன்னை வருவதாகக் கூறினார். எல்லையில்லா ஆனந்தம் அடைந்த பக்தரின் குடும்பத்தினர் பலத்த ஏற்பாடுகளுடன் காத்திருந்தனர். மாலை மயங்கி இரவு மணி பதினொன்று ஆக இருந்தது. வீட்டிலிருந்த அனைவரும் அன்னை வருவார் என்ற நம்பிக்கையை இழந்தனர். அந்த பக்தரோ அன்னை பதினோறு மணிக்கு நிச்சயம் வருவார் என்று உறுதியாகக் கூறினார். சரியாக அவர் வீட்டிலுள்ள கடிகாரம் பதினொன்று அடித்த போது அன்னை அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தார். அன்று புதன் கிழமை, ஆயில்ய நட்சத்திர நான்காம் பாதம் நிலவும் நேரம், குரு ஹோரை முகூர்த்த நேரம். இது சற்குரு நிர்ணயித்த முகூர்த்தமா இல்லை ஒரு பக்தர் கேட்ட வரமா ? ஏதோ ஒரு பக்தரின் வீட்டிற்கு வருகை தருவது போல் தோன்றினாலும் அந்த வருகைக்குப் பின் உள்ள ஜோதிட அம்சங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். கன்னி லக்னமாக அமைய நவாம்சத்தில் ஒன்பதாம் இடமான மீன ராசியில் சந்திர பகவான் எழுந்தருள குருவிற்கு உகந்த தனுசு ராசியில் புத பகவானுடன் இணைந்து சூரியன் குருவுடன் சிவராஜ யோகம் கொள்கிறார் என்றால் இதனால் பெருகும் குரு சக்திகள், குரு சந்திர யோக சக்திகள், சுக்லாம்பர சக்திகள் எத்தனை, எத்தனை. இது அந்த பக்தரின் மாதவம் மட்டும் அன்று, இந்த நிகழ்ச்சியைப் புரிந்து கொண்டு இந்த ஆண்டு இயற்றும் தவம் அனைத்துமே மாதவமாக மாற சற்குருமார்கள் காத்திருப்பதே நம்மை பிரமிக்க வைக்கும் மாதவம் ஆகும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam