உருவமில்லா இறைவன் உருவம் கொண்டால் அது சற்குரு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீநெல்லையப்ப சிவாலய மகிமை

திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி சமேத ஸ்ரீநெல்லையப்பர் சிவாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஸ்ரீகாந்திமதி அம்மன் இறைவனுக்கு வலது புறம் எழுந்தருளி இத்தகைய அரிய தெய்வீக திருமணக் காட்சியை ஸ்ரீஅகத்திய பிரானுக்கு அருளிய ஒப்பற்ற தலம். திருக்கயிலாயத்தில் பார்வதி பரமேஸ்வர மூர்த்திகளின் திருக்கல்யாண வைபவத்திற்காக நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே பூமி பாரத்தைச் சரிக் கட்டுவதற்காக ஸ்ரீஅகத்திய பெருமானை தென் திசைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். இவ்வாறு பூமி பாரத்தை தான் ஒருவராக ஏற்று சரி செய்தார் என்றால் ஸ்ரீஅகத்திய பெருமானின் மகிமை எத்துணை சிறப்பு வாய்ந்தது ? இதுவே தன்னுடைய பெருமையை விட தன் அடியாரின் பெருமையை கீர்த்தியை உலகறியச் செய்வதுதான் இறைவனின் தலையாய பணி என்பதை பக்தர்கள் உணர்வதற்காக இறைவன் ஆடிய திருக்கூத்தில் இதுவும் ஒன்று. என்றாலும் இந்தக் கூத்தின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது என்பதால் இது தாமிரச் சபையாக அமைந்ததோடு மட்டுமன்றி இத்திருத்தலத்தில் பொலியும் ஆறும் தாமிரபரணி என்றே தாமிர தெய்வீக சக்திகளுடன் பொலிவதாக ஆயிற்று. இறைவனின் சிரசில் பொலியும் கங்கையில் தாமிர சக்திகள் பெருக்கெடுத்து ஓடுவது ஒரு சிறப்பென்றால் இறைவன் திருநடனம் பொலியும் தாமிர சபையிலும் தாமிரபரணி ஆறு பொங்கிப் பொலியும் என்றால் இதன் சிறப்புதான் என்னே. அது மட்டுமா இத்தலத்தில் பொலியும் திருக்குளமோ பொற்றாமரைக் குளம் என்பதாகும்.

பொற்றாமரைக் குளம்
திருநெல்வேலி

மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளத்தில் விளையும் தாமரையின் ஒரே ஒரு இதழைக் கொண்டு இந்தியாவையே விலைக்கு வாங்கலாம் என்ற அளவிற்கு அதன் அபராஞ்சித தங்க மதிப்பு உயர்ந்தது என்பார் நம் சற்குரு. அப்படியானால் நெல்லையப்பர் ஆலயத்தில் விளையும் பொற்றாமரையின் மதிப்பு என்னவோ என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தானே செய்கிறது. இதற்குண்டான பதிலை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் அளித்தவரே நம் சற்குரு. குரு மங்கள கந்தர்வ லோகம் என்பது நம் சற்குருவின் நித்திய வாசஸ்தலயம். அந்த லோகத்தில் 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன என்பார். இதன் தத்துவார்த்த விளக்கங்களுள் ஒன்றே குரு மங்கள கந்தர்வ லோகம் என்பது 108 பரிமாணங்களுடன் பொலிவது என்பதாகும். மூன்று பரிமாணங்களை மட்டுமே உணரக் கூடிய மனிதர்கள் 108 பரிமாணங்களை எந்த யுகத்தில் புரிந்து கொள்வது ? ஆனால், இந்த அற்புதத்தை ஓரளவு சிந்தித்துப் பார்த்தால்தான் இவ்வளவு குறைந்த அளவு பரிமாணத்தில் விளங்கும் பூமி வாழ் ஜீவன்களையும் கரையேற்ற நம் சற்குருவும் அவர்தம் சற்குரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் பிரானும் அவதாரம் ஏற்று வந்துள்ளனர் என்றால் நம்மை விடக் கொடுத்து வைத்தவர்கள் யாராக இருக்க முடியும் ? நல்லதல்ல கெட்டதல் என்பதுபோல தொற்றுநோய்களால் வியாபித்துள்ள வருடம் 2020 என்று கொள்வதை விட இந்த ‘இருட்டு’ வருடத்தில்தான் இறைவனைப் பற்றி சாதாரண மனிதர்களும் அறிந்து கொள்ளும் பேரறிவு விருத்தியாகும் என்பதும் உண்மையே. இதை உணர்த்துவதே நெல்லையப்பர் ஆலயத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடாகும். முற்றும் கண்ட ராமக்கோன் என்பார் பல வருடங்களுக்கு முன்னரே இத்திலத்தில் வழிபாடுகள் இயற்றி ஸ்ரீமுருகப் பெருமானின் தரிசனத்தை முழுமையாகப் பெற்றார். அவர் தரிசனம் பெற்ற ஆறு பரிமாண முருகப் பெருமானின் தரிசனத்தையே பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் மூவண்ணப் பொலிவில் இன்று சாதாரண பக்தர்களுக்கு அளித்துள்ளார். இவ்வாறு முருகப் பெருமானின் ஆறு முகங்களையும் நான்கு திசைகளிலிருந்தும் தரிசனம் செய்யும் வண்ணம் வழிவகை செய்தது இவருடைய அரிய முயற்சியே. தான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்பதாக ராமானுஜரைப் போல் 120 வருடங்கள் வாழ்ந்து தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் இந்த பரிமாண ஞானத்தை ஊட்டி வந்தார் ராமக்கோன்.

ஸ்வஸ்தி சக்கரம்

பல்லாண்டுகளுக்கு முன்பே நம் சற்குருவால் அளிக்கப்பட்ட இந்த சிவநாம சக்கரத்தை இங்கு மீண்டும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அளிக்கின்றோம். இந்த சார்வரி வருட கார்த்திகை தீப தரிசனத்தின்போது இந்த ஸ்வஸ்தி சக்கரத்தை மனக் கண் முன் கொண்டு வந்து அதன் நடுவே திருக்கார்த்திகை தீபம் பிரகாசிப்பதாகக் காணக் கூடிய பேரருள் பெற்றவர்கள் பூமியில் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை எனலாம். காரணம் அந்த அளவிற்கு பரிமாண இரகசியங்கள் இந்தச் சக்கரத்தில் பின்னிப் பிணைந்துள்ளன. பொதுவாக, சாதாரண மனிதர்கள் இந்த ஸ்வஸ்தி சக்கரத்தை மனக் கண் முன் கொண்டு வரும்போது அதிலுள்ள சிவ என்ற ஒரு மந்திரமே மனக் கண்ணில் தெளிவாகத் தெரியும். உண்மையில் நான்கு சிவ மந்திரங்களும் நான்கு சக்தி சூலங்களும் தெளிவாகத் தெரிய அதன் இடையே திருக்கார்த்திகை தீபமும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதே இந்த தரிசனத்தின் முழுப் பொருள். இந்த முழுப் பொருளை பூரணமாகப் பெற முடியாவிட்டாலும் பக்தர்கள் அவரவரால் இயன்ற அளவு முயற்சிப்பதில் தவறு கிடையாது. இதுவே இந்த ராகவேந்திர வருட மகிமைகளில் ஒன்று. அரவிந்த அன்னை தெரிவிப்பதைப் போல ஒரு பந்தை விரித்து அதன் உட்புறம் வெளிப்புறமாகத் தெரியும்படி பார்ப்பதே நான்கு பரிமாணக் காட்சியாகும். இந்த காட்சி பெற்றவர்கள் எந்த ஆசையாலும் அலைக்கழிய மாட்டார்கள். அவர்களை உடலாசை, உயிர் ஆசை என்ற எதுவுமே பந்தப்படுத்த முடியாது. இவ்வாறு நான்கு பரிமாணக் காட்சி பெறும் முயற்சியைத் தொடர இந்த சார்வரி வருட தீப தரிசனமும் நெல்லையப்பர் ஆலய வழிபாடுகளும் துணை புரியும். இந்த வழிபாட்டில் மந்திரக் கோணங்களை இணைக்கும் முயற்சியாகக் கூறினால் அவரவர் தம் சற்குரு அளித்த அல்லது சற்குரு அமையப் பெறாதோர் தங்களுக்குப் பிடித்த ஒரு மந்திரத்தை நான்காகப் பிரித்து இந்த ஸ்வஸ்தி சக்கரப் பதங்களில், காட்சிகளில் அமைத்து ஓதுவதே சிறந்த வழிபாடாகும். உதாரணமாக,

முற்றும் கண்ட ராமக்கோன்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
அல்லது
ஓம்
தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நோ ராகவேந்திர ப்ரசோதயாத்
என்றவாறோ மந்திரங்களைப் பிரித்து ஓதி வரலாம். என்று இந்த மந்திரங்கள், சித்திரங்கள் மேற்கூறிய வகையில் தெளிவாக மனக் கண் முன்பு என்று காட்சி அளிக்கின்றதோ அன்று நீங்கள் நான்காம் பரிமாணத்தில் பிரவேசிக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். இவ்வாறு நான்காம் பரிமாணத்தில் பிரவேசித்த பின் அடுத்தடுத்து நீங்கள் பிரவேசிக்க வேண்டிய பரிமாணங்கள் குறித்த இரகசியங்களை தகுதி உடைய சற்குருமார்கள் உங்களுக்கு வந்து உணர்த்துவார்கள். அதுவரையில் நீங்கள் காத்திருக்காமல் நெல்லையப்பர் ஆலயத்தில் வழிபாடுகளைத் தொடரலாம் என்பதே முன்னோர்கள் காட்டிய வழி. ராமக்கோன் முன்னுள்ள தீப தம்பமானது ஏதோ யதேச்சையாக அமைந்ததல்ல. இந்த நடன மங்கையையும் சேர்த்தே இத்தூணில் விளங்கும் சக்கரத்தை தியானித்து மேற்கூறிய துதிகளை ஓதுவதாலும் பரிணாமங்கள் பற்றிய இரகசியங்களை தெரிந்து கொள்ள ஏதுவாகும். இதைத்தான் நம் சற்குரு திருக்கோயில் தூண்கள் மகிமையை உணர்ந்தாலே அனைத்து மகிமைகளையும் உணர்ந்தவர்கள் ஆவோம் என்று திருத்தலங்களின் மகிமையைப் பற்றி விளக்குவார். நெல்லையப்பர் திருத்தலத்தின் மகிமையை ஒரே ஒரு படத்தின் மூலம் கூறுவதென்றால் அதுவே பொற்றாமரைக் குளத்தின் சித்திரமாகும். அல்லது ஒரே ஒரு வரியிலும் இதன் மகிமையைக் கூறலாம். அதாவது பொன் தாமரை = 2 x 3 = 3 முன் தூண்கள் + 3 பின் தூண்கள் = ராமக்கோன் = ராமக்கோன் கண்ட ஆறுமுகங்கள் = திருநெல்வேலி.

ஸ்ரீகணேசர் கணேசாயிகளுடன்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

இந்த சூத்திரம் குழப்பம் அளிப்பதாகத் தொன்றினால் நம் சற்குருவின் எளிமைப்படுத்திய வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். தற்போது உள்ள சூழ்நிலையில் ராகு பகவானின் இருட்டு என்னும் குழப்பம் எங்கும் வியாபித்து இருப்பதாகத் தோன்றினாலும் கடவுள் நம்பிக்கை மேலோங்கி உள்ளவர்கள் இந்த இருளிலும் மின்னலைத் தரிசிப்பது போன்று திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டிய ஒரு வார காலத்திற்குள் வேம்பார் கருப்பட்டியில் நெல் பொரியைக் கலந்து நம் கைகள் கொள்ளாத அளவிற்கு பெரிய இனிப்பு உருண்டைகள் செய்து அதை ஸ்ரீநெல்லையப்பருக்கு பிரசாதமாகப் படைத்து ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் வழங்கலாம் என்பதே மேற்கூறிய சூத்திரம் விளக்கும் ஆன்மீகத் தெளிவாகும். பசும்பாலில் வேம்பார் கருப்பட்டியைக் கலந்து பால்கோவா செய்து தானமளிப்பதும் ஏற்புடையதே. வேம்பார் கருப்பட்டி என்ற பனைவெல்லம் திருநெல்வேலி மட்டும் அல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாகக் கிடைக்கக் கூடியதே. மற்ற ஊரில் உள்ள இறையன்பர்களும் மேற்கூறிய தான முறையை தங்கள் ஊரில் நிறைவேற்றி பயன்பெறலாமே. மேலே உள்ள தெப்பக்குள படத்தைப் பார்த்து தூண்களுக்கு இடையே உள்ள தூரத்தை ஓரளவு கண் பார்வையைக் கொண்டு (அதாவது இரு கண்களில் துலங்கும் பார்வையைக் கொண்டு மட்டுமே) தெரிந்து கொள்ளலாம். ஆனால், குளத்தின் ஆழத்தை இவ்வாறு அறிய முடியுமா ? இதைப் புரிந்து கொண்டால்தான் எப்படி சிவ என்ற இரண்டு எழுத்து நாமமும் சக்தி சூலமும் பரிமாணங்களை விளக்கக் கூடியதாக அமைகின்றன என்ற இரகசியமும் புரிய வரும். ஒரு சக்தி சூலத்தின் அருகில் சிவ என்ற சிவ சொரூபம் தம்பதி சகிதமாக எழுந்தருளி உள்ளதாக நினைத்துப் பாருங்கள். திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனம், நெல்லையப்பர் ஆலயத்தில் ஸ்ரீகாந்திமதியும் ஸ்ரீநெல்லையப்பர் அருளும் கோலமும் இந்த இரகசியங்களையே விளக்குவதாக உள்ளன. அச்சு வெல்லத்திற்குப் பதிலாக வறுத்த தேங்காயுடன் வேம்பார் கருப்பட்டியைக் கலந்து பூரணக் கொழுக்கட்டைகளை இத்தலத்தில் தானமளிப்பதால் நீண்ட காலமாக வரன் பார்த்து அமையாத திருமணங்கள் கைகூடி வரும். இவ்வாறு திருமணம் நிறைவேறிய பின் இங்குள்ள ஸ்ரீகணேசர் கணேசாயினி மூர்த்திகளுக்கு புதிய ஆடைகள் அணிவித்து நன்றி தெரிவிக்க வேண்டும். முற்காலத்தில் மிகவும் விமரிசையாக நிறைவேறிய இக்கணேச மூர்த்திகளின் வழிபாடு தற்போது மறைந்து விட்டது என்று கூறலாம். தம்பதிகளுக்குள் எத்தகைய கருத்து வேற்றுமையையும் தீர்த்து வைப்பவர்களே இந்த ஆதி மூர்த்திகள். பார்வதி சுவாமியின் நெற்றிக் கண் வெப்பத்தால் மறைந்து மீண்டும் இறையருளால் உருவம் பெற்ற போது முதலில் பராசக்தி கைலாயத்தில் விளங்கிய இந்த ஆதிமூர்த்திகளுக்கே வழிபாடுகள் இயற்றி ஈசனுடன் இணைய அருள் புரிந்த இந்த பிள்ளையார் மூர்த்திகளுக்கு நன்றி தெரிவித்தாளாம்.

ஸ்ரீஆறுமுக சுவாமி
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

அபூர்வமாக ஸ்ரீஆறுமுகக் கடவுள் தன்னுடைய ஆறுமுகங்களும் திசைகளைக் குறித்து பொலியும் வண்ணம் ஸ்ரீநெல்லையப்பர் ஆயலத்தில் எழுந்தருளி உள்ளார். பரிமாண அறிவை போதிக்கும் முகமாக இவ்வாறு முருகப் பெருமான் எழுந்தருளி உள்ளது இத்திருத்தலம் ஒன்றே என்பதே இந்தச் சிலாரூபத்தின் சிறப்பம்சமாகும். ராமக்கோன் இந்த ஆறுமுகக் கடவுளை வணங்கியே 4, 5, 6 என்ற பரிமாணங்களை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டார் என்பதே இத்தல வரலாறு சுட்டிக்காட்டும் பாடமாகும். வேறு எந்த திருத்தலத்திலும் இல்லாத வகையில் பரிமாணத்திற்கு ஒரு முருக மூர்த்தி என்ற வகையில் முருகப் பெருமான் பல்வேறு பரிணாமங்களில் இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான தெய்வீக இரகசியமாகும். எந்த முருகப் பெருமான் எந்தவித பரிமாணத்திற்கு உரியவர் என்பதை சித்தர்கள் தெரிவிக்கத் தயாராக இருந்தாலும் பக்தர்கள் இதன்பொருட்டு சரியான அணுகுமுறையை மேற்கொண்டு பக்தியில் சிறந்து விளங்கும் தன்மையை வளர்ப்பது கடினமே என்பதால் இந்த இரகசியங்களை அவரவர் தொடர்ந்து இத்தலத்தில் நிலவும் முருகப் பெருமான் மூர்த்திகளை வணங்கி வழிபட்டு நாளாவட்டத்தில் பக்தியைப் பெருக்கி தங்கள் சுய அனுபவத்தின் மூலமாகவே பரிமாண இரகசியங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே மகான்களின் எதிர்பார்ப்பு. இந்த அரிய திருப்பணிக்கு ராமக்கோன் அவர்களின் வழிகாட்டுதல் என்றும் அவர்களுக்கு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. எண்ணத்தின் சக்தி நீரின் மேல் படியும், சுவாமியின் பின் பக்கத்திலும், கோலத்தின் அடியிலும் படியும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படியானால் திசைக்கு ஒன்றாக தன் திருமுகத்தைக் கொண்டிருக்கும் நெல்லை ஆறுமுக சுவாமியின் திருவருள் எந்த திசை நோக்கி, எங்கு படிந்திருக்கும் என்று அறிந்து கொள்வதற்காக இத்தலத்தில் பக்தர்கள் செலவிடும் நேரமும் காலமும் இறை அனுபூதிக்காக செலவிடும் நேரம்தானே ? இது எத்தனையோ தெய்வீக குழப்பங்களுக்கு மாமருந்தாக அமையும். பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை என்று ஆறு கரணங்களில் தொடர்ந்து வழிபாடுகள் இயற்றி வந்தால் இத்தல ஆறுமுக சுவாமியின் பேரருள் பெற்று பரிமாண அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். தினை, கோதுமை, அரிசி என்ற எந்த தான்யத்தை வேண்டுமானாலும் வறுத்து அரைத்து அதில் தேன் சேர்த்து உருண்டை செய்து பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பக்தர்களுக்கும் தானமாக அளித்தலால் சிறிது சிறிதாக பரிமாணம் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளலாம். காரைக்குடி, அதைச் சுற்றியுள்ள பல இல்லங்களிலும் மாடங்கள் அமைத்து அதில் பறவைகள் குடியேறி வாழ வகை செய்தனர். இத்தகைய ஏற்பாடுகளும் பரிமாணம் பற்றிய அறிவு விருத்தியாக வழிகோலும். பலருக்கும் பரிமாண அறிவால் விளையும் பலன்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. எண்ணியல், புள்ளியியல், வானவியல், ஜோதிடம், ஆன்மீகம் என எந்தத் துறையாக இருந்தாலும் பரிமாணம் இல்லாமல் எந்த அறிவும் விருத்தி அடையாது, மேன்மை பெறாது. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்க பரிமாண அறிவு இன்றியமையாததே.

தாமிர சபையில் தரணிபாலன்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

பவள சபையில் பார்வதி
மணாளன் கூத்தைப்பார்

ஸ்ரீநடராஜர் நடனமிடும் திருச்சபைகளை பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தின சபை, சித்திர சபை என்றெல்லாம் புகழ்வதுண்டு. இந்த நடன சபைகளைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் உங்கள் கண்களில் தாரை தாரையாக நீர் வழியாவிட்டால் அது ஆச்சரியம்தான். அந்த அளவிற்கு சிவபெருமானின் தியாகம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். பொன்னம்பலம் என்னும் சிதம்பரம், தாமிர அம்பலம் என்னும் திருநெல்வேலி என எந்த நடராஜ அம்பலத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த நடராஜ திருச்சபை எதிலுமே ஸ்ரீநடராஜர் சிவகாமி இவர்களின் நாட்டிய விக்ரகங்கள் இருக்காது. அந்த சபைகள், அம்பலங்கள் எல்லாமே மனிதக் கண்களில் வெறிச்சோடியே இருக்கும். இந்தச் சபைகளின் அருகே எம்பெருமான் நாட்டியக் கோலத்தில் பொலியும் நடராஜ மூர்த்தியாக எழுந்தருளி இருப்பார். இதன் பின்னணியில் அமைந்த பல தாத்பர்யங்களில் ஒன்று சுவாமி தான் என்றோ ஒரு காலத்தில் நடனம் புரிந்த திருச்சபைகள் இவை என்ற கணக்கு கிடையாது. இன்றும் தகுதி பெற்றோர் இச்சபைகளில் அமர்ந்து தியானம் புரிந்தால் அந்த நடனக் காட்சிகளை எல்லாம் கண் முன் கொண்டு தரிசிக்கலாம். நம் சற்குரு போன்ற தகுதி பெற்ற பெரியோர்கள், மகான்கள் இந்த நடனக் கூத்து இரகசியங்களை இடம், பொருள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கலாம். ஒவ்வொரு நடராஜ சபையும் ஒரு சிவத்தலம் போல் வெவ்வேறு பலன்களை வர்ஷிக்கக் கூடியவையே. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் திருத்தலம் நடராஜப் பெருமானின் பவள சபையாகத் திகழ்கிறது. இத்தலத்தில் நம் சற்குரு திருப்பணிகள் இயற்றி நோய் எதிர்ப்பு சக்திகளை இந்த பவள சபையின் அனுகிரகமாக பக்தர்களுக்கு அளித்தார். இன்றும் எத்தகைய நோய்களால் வருந்துவோரும் இந்த பவள சபையில் செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஹோரை நேரங்களில் தரிசித்து தான தர்மங்கள் இயற்றி வந்தால் நலம் பெறுவர். முதுகெலும்பு, கால், கை மூட்டுகள் தேய்ந்து வருந்துவோரும் இத்தகைய வழிபாடுகளால் நலமடைவர். செவ்வாய் தோஷங்களுக்கு நிவர்த்தி அளிக்கும் அற்புத திருச்சபை இதுவே. நாட்டியம் என்பது ஒருவர் மட்டுமே நிறைவேற்றுவதாக இருக்க இந்த நடனக் கோலங்களில் எல்லாம் சிவகாமி அம்மையும் உடன் எழுந்தருள்கின்றார் என்றால் அம்மையின் பங்கு காட்சியா, சாட்சியா இல்லை கர்த்தாவா ?

தற்காலத்தில் இரத்த சோகை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களையும் பெருமளவில் பீடிக்கிறது. இதற்கு நிவாரணம் அளிக்கக் கூடியதே தாமிர சபையில் அல்லது நடராஜப் பெருமான் எதிரில் அல்லது திருக்கோயிலின் ஏதாவது ஒரு பகுதியில் அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் தேவாரப் பதிகங்களை ஓதி வருவதாகும். வாரம் ஒரு முறையேனும் ராஜ்மா என்னும் பருப்பை சுண்டலாக தயார் செய்து தானமாக அளித்தல் இரத்தச் சோகையை சீர்படுத்தும் வழிமுறையாக அமையும். தொடர்ந்து கர்ப்பம் நழுவுதல், கர்ப்பம் தரிக்காமை போன்ற இரத்தக் கோளாறுகளுக்கும் இதுவே நிவாரணம் அளிக்கும். கங்கை நீரில் தாமிரம் அதிகம். அதனால் அது உடம்பிற்கு குளிர்ச்சியை அளிக்கும். அதைச் சரிக்கட்டவே வடஇந்தியாவில் உள்ளோர் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமையை நிறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். காவிரி பாயும் பகுதிகளில் தங்கம் மிகுதியாக உடலில் சேர்வதால் அந்தச் சூட்டை சமன்படுத்த இறை மூர்த்திகள் உட்பட அனைவருக்கும் அரிசிச் சாதமே நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது இப்படியிருக்க காலடியில் தாமிரபரணி ஆறு பாய, தலையில் கங்கை பொழிய, தாமிரச் சபையில் நடனமாடி பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளி சந்தனக் காப்புடன் திகழும் இத்தல நடராஜ மூர்த்தியைப் பற்றி என்னதான் கூற முடியும் ? அந்தப் பெருமையை சித்தர்கள் மட்டுமே நவில இயலும். உதாரணமாக, இங்குள்ள வீடியோவில் முருக நாமத்தைக் கூறும் கருங்குருவியின் குரல் நாலைந்து விநாடிகளுக்கு ஒரு முறை ஒலிப்பது போல்தானே உங்களுக்குக் கேட்கிறது. உண்மையில் இடைவெளி இல்லாமல் ஒலிப்பதுதான் இந்தக் குருவியின் முருக நாமம். ஆனால், இந்த முருக நாமமானது மூன்று பரிமாணத்தில் ஆரம்பித்து பின்னர் நான்கு, ஐந்து என்ற பரிமாணங்களை ஒலி அலைகள் அடையும்போது அது உங்கள் காதுகளுக்கு கேட்காமல் போய் விடுகிறது. ஒரு சாதாரண குருவி இத்தகைய பரிமாணம் கடந்த ஒலியை எழுப்ப முடியும் என்றால் எம்பெருமான் நடராஜ பெருமானின் நாட்டிய கோல இரகசியங்கள் எத்துணை பிரமிப்பானதாக இருக்கும் ?!

ஸ்ரீகாந்திமதி அம்மன்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஸ்ரீகாந்திமதி சமேத ஸ்ரீநெல்லையப்பர் எழுந்தருளிய திருத்தலம் திருநெல்வேலி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும், திருத்தலத்திற்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போல திருநெல்வேலி என்ற திருத்தலத்திற்கு ஒரு அரிய சிறப்பு இருக்கத்தானே செய்கிறது. வேலி என்றால் பாதுகாப்பு, நெல்வேலி என்றால் சத்துவ குணத்தால் அமையும் பாதுகாப்பு. இந்த பாதுகாப்பு ஒன்றே பாதுகாப்பு அனைத்திலும் மிகவும் பலம் பொருந்தியது. அக்காலத்தில் கோட்டை சுவர்கள் எவ்வளவு பலமுடையதாக இருந்தாலும் அந்த பலமான கோட்டைச் சுவர்களையும், அரண்மனைச் சுவர்களையும் யானைகளைக் கொண்டே தகர்த்து விடுவார்கள். யானைகளின் பலமான சத்துவ குணமே இதன் அடிப்படைக் காரணமாகும். எத்தணை இடர்களையும் சமாளித்து இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மீண்டு இறைவன் பாதங்களைச் சரணடைய வழிவகுப்பதே திருநெல்வேலி தலத்தில் அபூர்வமாகத் திகழும் சத்துவ குண வியாபகம். நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகத்தியர் ஆஸ்ரமத்தில் சிறந்த உணவாகவும், அன்னதான பிரசாதமாகவும் தயிர் சாதமும் தக்காளி தொக்கும் துலங்கும். இதன் காரணம் அதில் விளங்கும் சத்துவ குண மகாத்மியமே என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? திருநெல்வேலி திருத்தலத்திலும் இந்த பசுந்தயிர் கலந்த அரிசி சாதம், தக்காளி தொக்கு ஊறுகாய் தானமும் என்றும் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஒரு தான முறையாகும். காந்தி மதி என்றால் பிரகாசிக்கும் அறிவு என்று பொருள், இத்துடன் சத்துவ குணத்திற்கு எல்லாம் அதிபதியாகத் திகழும் நெல்லை அப்பர் சேர்ந்தால் அது எத்துணை பலமுடையதாக, சிறப்புடையதாக இருக்கும். அதுவே நெல்லையப்பர் திருத்தல வழிபாடுகள் அனைத்திலும் ஊடுருவி நிற்கும் நிலையான சத்துவ குணம் பொதிந்த நற்சக்திகள். இத்தகைய பலம் பொருந்திய நற்சக்திகள் ஆதி திசையான கிழக்கு திசை நோக்கி இணைந்து நின்றால் அது எத்தகைய பலமுடையதாக இருக்கும். இந்த அற்புத பலத்தை வழிபாடுகள், தான தர்மங்கள் மூலமாகவே உணர இயலும், அனுபவித்துப் பலனடைய முடியும். அன்னை காந்திமதி இங்கு மூன்று தீப பிரகாச சக்திகளுடன் பிரகாசிப்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்த வழிபாட்டுப் பலன் என்று கிடையாது, தானே தலைவனுமாய், சற்குருவாய் பிரகாசிக்கும் தன்மைக்குச் சான்றாய் நின்று ஒளிர்வதாகும், மிளிர்வதாகுமே. திருக்கார்த்திகை தீப தரிசன நாளில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் மேற்கண்ட ராகவேந்திர ஸ்வஸ்தி சக்கரத்தின் நடுவே ஜோதியாய், சுடராய், தாரகையாய் காந்திமதி அன்னையின் திருவதனம் பிரகாசிப்பதாக தியானம் மேற்கொள்வது அளப்பரிய பலன்களை வர்ஷிக்கும். வழிபாடு கொள்வீர், வானளாவும் புகழ் பெறுவீரே !

பூஜ்ய அறிவைப் பெருக்குக

ஒரு இலக்கத்திற்குப் பின் பூஜ்யத்தை சேர்த்துக் கொண்டே சென்றால் அதன் மதிப்பு பத்தின் மடங்காகக் கூடிக் கொண்டே வரும். அதே சமயத்தில் அந்த இலக்கத்திற்கு முன் பூஜ்யத்தை சேர்த்தால் எத்தனை பூஜ்யங்களைச் சேர்த்தாலும் அதன் மதிப்பு சிறிதும் மாறாது. அதே சமயம் அவ்வாறு சேர்க்கும் பூஜ்யங்களால் பூருபூஜ்யம் என்ற தேவையில்லாத தோஷங்களே அந்த எண்ணிற்கு ஏற்படும் என்பதே சித்தர்களின் எச்சரிக்கை. செப்டம்பர் 8, 2020 என்ற தேதியை எழுதும்போது 08.09.20 என்று எழுதினால் தேதியாகிய எட்டிற்கும், மாதமாகிய ஒன்பதிற்கும் பூஜ்யத்தைச் சேர்ப்பதால் இந்த தேவையில்லாத பூஜ்யங்கள் பூரு பூஜ்யம் என்ற எதிர்மறை சக்தியைத் தோற்றுவிக்கின்றன. இதனால் காரியத் தடங்கல்கள் முதற் கொண்டு பொருள் விரயம், ஆரோக்ய சீர்கேடு போன்ற அனைத்து விதமான துன்பங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன. அது மட்டுமன்றி ஆண்டிற்கான அட்சரங்களை நான்கிலிருந்து இரண்டாகச் சுருக்குவதால் ஏற்படும் சீர்கேடுகளும் தனியாகச் செயல்படும். இதுவே பூருபூஜ்யம் என்னும் விளைவுகளாகும்.

இசைத் தூண்கள்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

எதற்காக பூஜ்ய அறிவைப் பெருக்க வேண்டும் என்பது அனைவரிடம் தொக்கி நிற்கும் வினா. பூஜ்ய அறிவு என்றால் என்ன என்பதை மக்கள் அறியாத போதுதான் இத்தகைய வினாக்கள் தொக்கி நிற்கும். நீங்கள் ஒரு காரை ஓட்டுவதாக வைத்துக் கொள்வோம். முதல் கியரில் கார் மெதுவாகச் செல்லும்போது முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு அப்படியே மாற்றி விடுவது கிடையாது. முதலில் கியரை பூஜ்ய நிலைக்குக் கொண்டு வந்து பின்னரே அதை இரண்டாவது கியருக்கு மாற்றுகிறீர்கள். இதுவே ஒவ்வொரு கியர் மாற்றும்போதும் உங்களையும் அறியாமல் தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சி. அவ்வளவுக்கு ஏன் போவானேன். நீங்கள் நடந்து கொண்டு இருக்கும்போத யாராவது உங்களை பின் பக்கத்திலிருந்து கூப்பிட்டால் அப்படியே சரேலென ப்ரேக் அடித்து நிற்பது கிடையாது. உங்கள் வேகத்தைக் குறைத்து பூஜ்ய நிலைக்கு உங்கள் நடையைக் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். பாட்டு ஒன்று பாடுவதாக வைத்துக் கொண்டால் அதில் ஆரோகண அவரோகண அட்சரங்கள் பூஜ்ய நிலைக்கு வந்துதானே மாறுகின்றன. இந்தப் பூஜ்ய நிலை என்பது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும் இந்த நிலையை சித்தி செய்வதற்காக எழுந்த திருத்தலங்களில் ஒன்றே நெல்லையப்பர் திருத்தலமாகும். இங்கு அமைந்துள்ள இசைத் தூண்களும், ஆறுமுக சுவாமி வழிபாடும், தலவிருட்சம் மூங்கிலும் பூஜ்ய அறிவை விருத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாம் அறிந்தது ஏழே ஸ்வரங்கள் என்றாலும் நெல்லையப்பர் ஆலயத்திலுள்ள இசைத் தூண்கள் 32 ஸ்வரங்கள் பற்றிய அறிவை விருத்தி செய்கின்றன. இவ்வாறு அதீதமான ஸ்வர அறிவால் கிட்டும் பலன்களை நடைமுறையில் உணர்ந்தால் மட்டுமே பயன்பெற முடியும். நம் சற்குரு அருளிய 32 தேவாரப் பதிகங்களை இங்கு தொடர்ந்து ஓதி வருவதால் இவ்வாறு 32 ஸ்வரங்களையும் இத்தூண்கள் கிரகித்து அதை அனுகிரகமாக சமூகத்திற்கு திருப்பி அளிக்கும் விந்தையை நீங்கள் உணர முடியும். எதிர்காலத்தில் தீராத பல வியாதிகளுக்கு இன்று நீங்கள் பெறும் ஸ்வர அறிவு ஒரு வரப்பிரசாதமாக அமையும். உங்கள் பரம்பரையைச் சேர்ந்த பலரும் அவர்களையும் அறியாமல் இந்த ஸ்வர அறிவைப் பெற்று மக்களின் தீராத வியாதிகளைத் தீர்க்கும் தன்வந்த்ரீகளாக உலா வருவர் என்பதே நம் சற்குருவின் தீர்க தரிசனம். எதிர்காலத்தில் இது சாத்தியமா என்பது உங்களுக்கு சந்தேகமாகத் தோன்றினாலும் இன்றே பல வியாதிகளுக்கும் இத்தலத்தில் சத்சங்கமாக இயற்றும் இத்தகைய வழிபாடுகள் பரம ஔஷதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தெய்வீகம் என்றும் சுவை அளிக்கக் கூடியதே என்பதற்கு நிரூபணமாக மந்திரமாவது நீறு ... என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தை இந்த இசைத் தூண்கள் முன்னால் குறைந்தது 32 பேர் கூடி பாடிப் பாருங்கள். இந்த இசைச் தூண்களில் பொலியும் ஊதா நிறக் கதிர்கள் உங்களை பிரமிக்க வைக்கும்.

ஸ்ரீவேணுவிநாயகர்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தின் தல விருட்சமான மூங்கில் நிழலில் அருளாட்சி செய்பவரே ஸ்ரீவேணுவிநாயகர் ஆவார். ஸ்ரீவேணுவிநாயகர் வழிபாடும் பூஜ்ய அறிவைப் பெருக்குவதாகும். நம் சற்குரு இந்த பூஜ்ய அறிவைப் பற்றிக் கூறும்போது, “நீங்கள் ஒரு 100, 200 அடி அகலமுள்ள வெட்ட வெளியைக் காணும்போது உங்கள் மனம் எந்தவித சலனமும் அடைவதில்லை. அதே சமயத்தில் 20 அடி விட்டமுள்ள ஒரு கிணற்றைப் பார்க்கும்போது அச்சமடைகிறீர்கள். (திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்திய ஆஸ்ரமத்தில் அமைந்த கிணற்றின் அளவு இது) இதுவே பூஜ்ய சக்தியின் வியாபகம். அந்த 20 அடி 200 அடியாக மாறினாலும் அது பூஜ்யம்தானே. ஆனால், உங்கள் மனம் அந்த காட்சியைக் கண்டு மிகுந்த அச்சம் அடையும். இந்த அச்சத்தை ஆன்மீக ரீதியாக கடக்க முடிந்தவர்களே பூஜ்யஸ்ரீ என்னும் தகுதியைப் பெற்றவர்கள் ஆவார்கள்,” என்றார். மூங்கிலால் ஆன புல்லாங்குழல்களையும், மூங்கில் நாற்காலி, மூங்கில் ஊஞ்சல், மூங்கில் தொட்டில்கள், மூங்கில் கூடைகளில் பழங்களை வைத்து தானம் அளித்தலாலும் பூஜ்ய அறிவை விருத்தி செய்ய இயலும். மூங்கிலின் இரு கணுக்களுக்கு இடையே உள்ளது வெட்டவெளி அல்ல, இதுவே வேணுவெளி என்ற தூய்மையான பரவெளியாகும். இந்தப் பரவெளியின் தன்மையை உணர்ந்தவர்களே மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் வித்தையில் உன்னதம் பெற்று இறை தரிசனம் வாய்க்கப் பெறுவர். ஸ்ரீஆறுமுக சுவாமியின் வழிபாடும் பூஜ்ய அறிவை விருத்தி செய்யக் கூடியதே. முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் ஒரு வட்டத்தில்தானே அமைகின்றன. ஸ்ரீஆறுமுக சுவாமியை வலம் வந்தவாறே இந்த ஆறுமுகங்களிலும் பார்வையை சுழல விட்டவாறே வலத்தை தொடர்ந்து கொண்டிருந்தால் நாளடைவில் பூஜ்யம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். முற்றும் கண்ட ராமக்கோன் இவ்வாறு ஆறுமுகப் பெருமானை வலம் வந்து வணங்கியே பூஜ்ய அறிவை விருத்தி செய்து அதன் மூலம் பரிமாணம் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொண்டார் என்பதே இத்தல வரலாறு கூறுவதாகும். பொதுவாக, திருத்தலங்களை, இறைமூர்த்திகளை பிரதட்சிணமாகவே வலம் வர வேண்டும் என்பது நியதி. இதற்கு விதி விலக்காக அப்பிரதட்சிண வல முறையும் நம் சற்குருவால் சில சந்தர்ப்பங்களில் அருளப்படுகிறது. இம்முறையில் எண் சக்தியைப் பற்றி, பூஜ்யத்தைப் பற்றி, பரிமாண அறிவை விருத்தி செய்து கொள்ள நினைப்பவர்கள் இத்தலத்தில் பொலியும் முருகப் பெருமான் மூர்த்திகளை அவர்கள் தனித்திருந்தாலும், தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தாலும் 6, 12, 36 ... என்றவாறு ஆறின் மடங்கில் வலம் வந்து வணங்குவதும் பின்னர் அதே எண்ணிக்கையில் அந்த மூர்த்தியை அப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதும் அற்புத பலன்களை வர்ஷிக்கும். இந்த அப்பிரதட்சிண வல முறை எண் சக்திகளை விருத்தி செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற லௌகீகமான காரணங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதும் நம் சற்குருவின் அன்புக் கட்டளை. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் சக்தியைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு எண்ணை சித்தி செய்ய மட்டுமே ஒரு மனிதனுக்கு 20 வருடங்கள் தேவைப்படும் என்பார் நம் சற்குரு. அதனால் தங்கள் பிறந்த தேதி, தங்கள் மனைவி பிறந்த தேதி, தங்களுக்கு இஷ்டமான குழந்தைகள் பிறந்த தேதி, தங்கள் குருவின் பிறந்த தேதி போன்ற ஏதாவது ஒரு தேதிக்கு உரித்தான எண்ணை ஆரம்ப எண்ணாக எடுத்துக் கொண்டு சித்தி செய்யலாம் என்பது நம் சற்குருவின் ஆலோசனை.

வேதபட்டர் (ஒன்று)
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

அப்போதுதான் எண்கள் பற்றிய இரகசியங்களை சிறிது சிறிதாக அறிந்து கொள்ள இயலும். சூரியனுக்கு உகந்த எண் ஒன்று என்றும் முருகப் பெருமானுக்கு உகந்த எண் ஒன்பது என்றும் கூறுகிறோமே, இதன் அடிப்படையில் அமைந்த கருத்து என்ன என்று ஒரு அடியார் கேட்டபோதுதான் நம் சற்குரு இந்த பதிலைக் கூறினார். அப்படியானால் பூஜ்யத்தை அறிந்து கொள்ள ஒரு மனிதனுக்கு ஆகும் ஆண்டுகள் எத்தனையோ என்று கேட்டபோது சற்குரு சிரித்து கொண்டே, “அனைத்து எண்களுக்குமான மொத்த வருடங்கள்தான் ...”, என்றார். அதாவது 9 x 20 = 180 வருடங்கள் பூஜ்ய அறிவை விருத்தி செய்ய எடுத்துக் கொள்ளும். ஆனால், எப்படி பிரகலாதனோ துருவனோ ஒரே பிறவியில் நாராயண நாமத்தை சித்தி செய்து பெருமாள் மூர்த்தியின் தரிசனத்தையே பெற்றார்களோ அதே முறையில் இப்பிறவிலேயே பூஜ்யத்தைப் பற்றி முழுமையாக அறியும் ஞானத்தை அளிக்கவல்லவரே இத்தல முற்றும் கண்ட ராமக்கோன் ஆவார். முற்றும் என்பது பூஜ்யத்தையும் குறிக்கும் என்பதும் ஞான சாகரத்தில் பொலியும் ஒரு நீர்க்குமிழே. இவ்வாறு அனைத்து எண்களையும் சித்தி செய்ய உதவும் (180 + 180) 360 ஆண்டுகள் ஒரு ராமக்கோன் சுழற்சி எனப்படும். இத்தனை வருடங்களுக்கு திருநெல்வேலியில் வாழ்ந்திருந்து நெல்மணிகளைக் காய வைத்து இறைவன் ஸ்ரீநெல்லையப்பருக்கு அமுதூட்டும் அரும்பணியை மேற்கொண்டவரே இத்தல வேதபட்டர் ஆவார். இந்த 360 ஆண்டுகளும் ஒரு நாள் கூட அவர் காய வைத்த நெல்மணிகள் மழையால் பாதிக்கப்படாமல் அவற்றை வேலியிட்டுக் காப்பாற்றினார் என்பதே ஸ்ரீநெல்லையப்பரின் பெருமையாகும். தனக்கு பிரசாதமாகப் படைக்கப்பட்ட நெல்மணிகளைத் தானே சுவாமி காப்பாற்றினார் என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றும். உண்மையில் தினமும் சுவாமிக்கு 12 மரக்கால் நெல்மணிகளைக் காயவைத்து குத்தி தூய்மைப்படுத்தி அமுது படைத்தல் என்பது எத்தனை சீரிய திருப்பணி என்பதும் இதனால் அந்த திருஅமுதைப் பெற்ற பக்தர்கள், விலங்குகள், பறவைகள், எறும்புகள் என அனைத்து உயிரினங்களும் அடைந்த பக்தி நிலையை, முக்திப் பேற்றை உணர்ந்தால்தான் வேதபட்டரின் மாண்பும் இறைவனின் கீர்த்தியும் சற்றேனும் புரியவரும். இறைவனும் வேதபட்டரின் சேவையைப் பாராட்டி அவருக்கு திருக்கயிலாய அதிகார நந்திக்கு அளித்த கௌரவத்தை அளித்தான் என்பதை இங்கு நீங்கள் காணும் சித்திரமே பறை சாற்றும். இன்றும் திருக்கயிலாய மடப்பள்ளியில் அன்னம் படைக்கும் முக்கிய பொறுப்பு வகிப்பவரே வேதபட்டர் ஆவார்.

பயணத்திற்குப் பாதுகாப்பு எது ?
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

இன்றும் நாம் உணவு சமைக்கும்போது இவரின் திருநாமத்தை நினைவு கூர்வதால் தற்கால நெற்பயிரில் விளையும் உரம், பூச்சி மருந்து, பாலிஷ் போடும் ரசாயண மருந்துகள் போன்ற பல தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பு கிட்டும். இன்றும் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பலரும் தாங்கள் தான்யங்களைக் காய வைக்கும்போது அவை மழை, காற்று போன்ற இயற்கை விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேதபட்டரை வணங்கியே தங்கள் காரியங்களை நிறைவேற்றுகின்றனர் என்பதும் சுவையான ஒரு செய்தியே. ஆறும் ஆறும் குருவே என்ற வேதவாக்கியம் வேதபட்டரைப் புகழ்ந்தே உரைக்கப்பட்டது என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? 6+6 = 12 = 3 = 360 = 3+6 = 9. அருகும் முருகும் ஒன்றே என்பதற்கும் இது சான்றாக அமைகின்றது. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் உரித்தானது ஒன்பதுதானே. வேதபட்டர் என்ற ஆறு எழுத்துக்களே திருநெல்வேலி என்று ஆறு எழுத்திற்கு பெருமை சேர்க்கின்றன, வேதபட்டர் வாழ்ந்த 360 வருடங்களுக்கு இணையான ஞான குருவிற்கு, ஆறுமுக சுவாமிக்கு உரிய எண் ஒன்பதும் ஆகுமே. இதைக் குறிக்கும் முகமாக வேதபட்டரும் ஒவ்வொரு திருக்கார்த்திகை தீப உற்சவ தினத்தன்றும் ஆறு அங்குல விட்டமுடைய நெற்பொரி உருண்டைகளைத் தயாரித்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்தார். இந்த அக்னி சத்துவ கோளத்தால் தீராத நோய்களோ, மறையாத குலப் பிரச்னைகளோ இல்லை எனலாம். இன்றும் பக்தர்கள் இத்தகைய நெற்பொரி உருண்டைகளை திருக்கார்த்திகை தீப தினத்தில் தானமாக அளித்தலால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். இந்த ஆறு அங்குல உருண்டைகள் அளிப்பது நாவிற்கு சுவை மட்டும் அல்ல, மனதிற்கு பிரமிப்பு, பிரயாணத்திற்குப் பாதுகாப்பும் கூட. சுந்தர மூர்த்தி நாயனாரின் வேண்டுகோளின்படி சேரமான் நெடுஞ்சேரலாதன் தான் திருக்கயிலைக்கு வெள்ளை யானையில் செல்லும் சுந்தரரைத் தொடர்ந்து செல்லும் முன் இத்தகைய பொரி உருண்டைகளை லட்சக் கணக்கில் திருஅஞ்சைக்களத்தில் தானம் செய்தான் என்பதே நாம் இத்தல வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளும் அரிய செய்தியாகும். இன்றும் காசிக்குச் செல்லும் முன்னாலும் காசிக்குச் சென்று வந்த பின்னரும் இவ்வாறு பல தான தர்மங்களைச் செய்வது பாதுகாப்பான பயணம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் தான் பெற்ற பிறவிப் பயன் தலைமுறைகளுக்கும் சென்று சேர வேண்டும், அவர்களைத் தொடர வேண்டும் என்ற நல்லெண்ணமும் ஒரு காரணமே.

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

இங்கு சுந்தரர் பெருமானுக்கு முன்னே சேரமான் குதிரையில் பயணம் செல்வதைக் காண்கிறோம். குதிரைக்கு முன்னே கழுதை வந்ததாக ஸ்பின் (சுழற்சி) தத்துவம் விளக்குகிறது என்பதைப் புலப்படுத்தியவரே நம் சற்குரு. இவ்வாறு எதற்கு முன் எது வந்தது என்ற அறிவை விருத்தி செய்யக் கூடியதும், அறிவின் பேரருள் களஞ்சியமே ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம் ஆகும். இங்குள்ள சுதையாலான நந்தி மூர்த்தியைச் சுற்றி 21 பெரிய அகல் தீபங்களை ஏற்றி சுற்றி வந்து வணங்குவதால் இந்த அறிவைப் பெறலாம். இதனால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். அறிவிற்கும் வியாதிகளுக்கும் மூல காரணம் பெற்றோர்களே என்ற கருத்து நிலவி வருகிறது. இது ஓரளவிற்கு காரணம் என்று கூறினாலும் கர்ம வினை என்ற ஒன்றே அனைத்திற்கும் மூல காரணம் என்று தெரிவிப்பவர்களே சித்தர்கள். அறிவு ஜீவியான பெற்றோர்களுக்கு ஞானசூன்யமான குழந்தைகள் பிறப்பதற்கும், அறிவு குறைந்த பெற்றோர்களுக்கு புத்தி பிரகாசமான சந்ததிகள் விருத்தியாவதற்கும் இந்த சுழற்சி தத்துவமே ஓரளவிற்கு விடையளிக்கும். இவ்வாறு அகல் தீபங்களை இத்திருத்தலத்தில் ஏற்ற முடியாவிட்டாலும் இங்குள்ள சுதை நந்தி மூர்த்தியை வெறும் மண் அகல்களுடன் குறைந்தது 21 முறை வலம் வந்து பின்னர் அந்த அகல் தீபங்களில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் என்ற முக்கூட்டு எண்ணெயால் தீபம் ஏற்றி தங்கள் இல்லங்களில் அனைத்து வாயிற்படிகளிலும் வைத்து வழிபடுவது கார்த்திகை தீப தினத்தில் மட்டும் அல்லாது இந்த கார்த்திகை மாதம் முழுவதும் இயற்றக் கூடிய அற்புத தீப வழிபாடாகும். இதனால் பெற்றோர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் சந்ததிகள் வளமுடன், செம்மையாக வாழ இந்த முக்கூட்டு தீப வழிபாடு நல்லருள் புரியும். பரம்பரையாகத் தொடரும் ஆஸ்துமா, சர்க்கரை போன்ற நோய்களின் வேகம் குறையும். நான்காகக் கீறிய முழுக் கத்தரிக்காயில் தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து வறுத்து அதைத் தயிர் சாதத்துடன் தானமாக அளித்தல் இவ்வருடம் முழுவதும் சிறப்பாக எத்தலத்திலும் இயற்றக் கூடிய அன்னதானமாகவும் ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் நிகழ்த்தக் கூடிய சிறப்பு தான வழிபாடாகவும் அமையும். இதுவே அன்னதானம் மூலமாகவும் நிறைவேற்றக் கூடிய “ராகவேந்திர ஸ்வஸ்தி துதி” வழிபாடாகும். இந்த கத்தரிக்காய் தானத்தைக் குறித்து ஆத்மவிசாரம் செய்து வந்தால் அடுத்த கார்த்திகை தீபம் வரை தெய்வீகத் தத்துவங்கள் பொங்கிப் பிரகாசிக்கும் இந்த தானத்தின் மகிமையும், அதைத் தொடரும் ஆத்ம விசாரத்தின் சாரமும் ஆகும். சுதையின் இறுக்கம், உறவின் நெருக்கம் !!

ஸ்ரீசயனக்கோல ராமர்
திருப்புல்லாணி

ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணர்
திருப்புல்லாணி

திருமங்கை ஆழ்வார் இறை தரிசனத்திற்காக நெல்லையப்பர் திருத்தலத்திற்கு ஏகியபோது திருநெல்வேலி திருத்தல எல்லையை அடைந்ததுமே பெருமாளின் உத்தரவை அசரீரியாகக் கேட்டார். அதன்படி திருமங்கை ஆழ்வார் திருப்புல்லாணியை அடைந்து அங்கு சயனக்கோலம் கொண்டிருக்கும் ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்து அதன் பின்னரே ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளின் தரிசனம் பெற்றார். திருப்புல்லாணி என்றால் திரு புல் ஆணி என்றும், ஆணிப் புல் என்றும் பொருள்படும். புல் ஆணி என்றால் சிறந்த தர்ப்பைப்புல் என்றும் ஆணிப் புல் என்றால் பெருமாள் சிவன் என்ற பேதம் கடந்த நிலையில் தரிசனம் செய்யக் கூடிய உயர்ந்த நிலை என்றும் பொருள். இவ்வாறு சிவன் விஷ்ணு என்ற பேதம் கடந்தவர்கள் அல்லது இந்த பேதங்கடந்த நிலையை அடைய விரும்புவர்கள் திருப்புல்லாணி ஸ்ரீசயனக்கோல ஸ்ரீராமரை தரிசனம் செய்து பின்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீபள்ளிகொண்ட ரெங்கநாதரை தரிசித்தல் நலம். பொன்னம்பலம் என்பது நீங்கள் அறிந்த சிதம்பரம் தேவாலயம். ஆணிப் பொன்னம்பலம் என்பது சிவன் விஷ்ணு பேதம் கடந்த நிலையில் பெறக் கூடிய இறை தரிசனமே. இதையே நம் சற்குரு விளக்குகையில் பத்து கோடி பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் மக்கள் இறைவனை அடைகிறார்கள். அவ்வாறு இறைவனை அடையும் அவர்களும் பல சோதனைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் முதல் சோதனை என்பது, “நீ சிவ லோகத்திற்குச் செல்ல வேண்டுமா, இல்லை சக்தி லோகத்திற்குப் போக வேண்டுமா, இல்லை கந்த லோகம்தான் உனக்குப் பிடித்த லோகமா ?” என்று கேட்பார்கள். பக்தர்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு லோகத்தைச் சொல்ல, “இவ்வளவு தூரம் பல சோதனைகளைக் கடந்து வந்த நீ இன்னும் சிவன் சக்தி என்ற பேதம் கொண்டிருக்கிறாயே. கீழே சென்று இந்த பேதங்களைக் கடந்து திரும்ப வருவாயாக,” என்று கூறி அனுப்பி விடுவார்கள். ஆனால், அடியேன் சொன்னதால் இந்த questions எல்லாம் out ஆகி விட்டதால், இதே கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். வேறு கேள்விகளைத்தான் கேட்பார்கள் ..., என்று விளையாட்டாகக் கூறுவார். இவ்வாறு பல வாயில்களைத் தாண்டி கடைசியில் ஒருவர் மட்டுமே உள்ளே செல்ல அவரும் அங்கு என்ன பார்க்கிறார் என்று நிச்சயமாகக் கூற முடியாது. அதுவே ஆணிப் பொன்னம்பலத்தே அற்புத காட்சியடி, அதை சாமி அறிவாரடி, சாமி அறிவாரடி ... என்று பெரியோர்கள் கூறி முடித்து விடுகிறார்கள், என்று கூறுவார்.

ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

திருநெல்வேலியிலிருந்து திருப்புல்லாணி வரையில் நடந்தே பாதயாத்திரையாகத் திரும்பி வந்தார் திருமங்கை ஆழ்வார் என்பதன் பின்னணியில் அமைந்த தெய்வீக விளக்கங்கள் அற்புதமானவையே. மூன்று நாட்கள் திருப்புல்லாணியை அடைவதற்கும் மூன்று நாட்கள் திருநெல்வேலிக்கு திரும்பி வருவதற்குமாக ஆறு நாட்களை எடுத்துக் கொண்ட இந்த யாத்திரையில் எதிர்காலத்தில் திருமணம் நிறைவேறாமல் தடுமாறும் பலருக்கும், திருமணமாகியும் நல்ல சந்ததிகள் அமையாத பலரின் வேதனைகளையும் தீர்ப்பதற்காக பிரார்த்தனை செய்தவாறே தன் யாத்திரையை நிறைவேற்றினார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். “ஒண்ணுமறியாத பாப்பா உள்ளே போட்டுக் கொண்டாளாம் தா(ழ்)ப்பா”, என்ற பழமொழியின் அர்த்தத்தை விளக்குவதாக அமைந்ததே திருமங்கை ஆழ்வாரின் பாதயாத்திரை. இறைவனைத் தவிர வேறு எதையும் உத்தம பார்ப்பணரான ஆழ்வார் சிந்திக்க மாட்டார் என்பதற்கிணங்க பெருமாளை மனக் கண்ணில் தரிசித்தவாறே தன் யாத்திரையை நிறைவேற்றினார் என்பதே இந்தப் பழமொழியின் உத்தம தாப்பாக் கதை. பல வகையான திருமணத் தடங்கல்களால் வருந்தும் ஆண்களும் பெண்களும், திருமணமாகி உத்தம சந்ததிகள் வாய்க்கப் பெறாதோரும் மேற்கண்ட வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். திருமங்கை ஆழ்வாரைப் போல் ஆறு நாட்களில் பாதயாத்திரையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவு காலத்தை எடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது. ஆனால், நடை யாத்திரை மட்டுமே இத்தகைய பலன்களை வர்ஷிக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். திருநெல்வேலியிலிருந்து மட்டும் அல்லாமல் மற்ற இடங்களில் இத்தகைய திருமணப் பிரச்னைகள், சந்ததிக் குறைபாடுகளால் வாடுவோர் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அத்தகையோர் குறைந்தது ஆறு நாட்களுக்கு பாதயாத்திரை அமையும் வண்ணம் தங்கள் வழிபாடுகளை அமைத்துக் கொள்வது நலம். மீதி உள்ள யாத்திரை முறைகளை வாகனங்களில் மேற்கொள்வது தவறு கிடையாது. திருமங்கை ஆழ்வார் மட்டுமே கிருஷ்ணனை தன் உள்ளத்தில் தாழிட்டு வைத்துக் கொண்டார் என்று கிடையாது. கோபிகைகளும்தானே ? இங்கு நீங்கள் கேட்கும் கோபிகா கீதத்தைப் பாடி இதன் ஒவ்வொரு வரிக்கும் குறைந்தது நான்கு முறை கோலாட்டக் குச்சியைக் கொண்டு தட்டி ஒலி எழுப்பினாலே போதுமே. அவரவர் இல்லங்களிலேயே இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நிறைவேற்றலாம்.
ஜயதி தேதிகம் கிருஷ்ணா (கோல் தட்டு) ஜந்மநா வ்ரஜ: (கோல் தட்டு)
ஸ்ரயத இந்திரா கிருஷ்ணா (கோல் தட்டு) ஸாஸ்வதத்ர ஹி (கோல் தட்டு)
இந்த ஆடல் பாடல் உல்லாசத்தால் குடும்பத்தில் திருமணம், சந்ததி விருத்தி போன்ற நற்காரியங்கள் சுலபமாக நிறைவேறுவதுடன் குடும்ப ஒற்றுமையும் சமுதாய ஒற்றுமையும் பெருகும். ஆண், பெண், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைவருமே இந்த நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆனந்தம் பெறலாம். குறையொன்றுமில்லை, கோவிந்தா.

ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம்
காஞ்சிபுரம்

கோபிகா கீதத்தைப் பாடி கோலாட்டத்துடன் ஆடி மகிழ்வதால் நாம் நான்காம் பரிமாணத்தை எளிதில் அடைய நம் சற்குருவின் தியாகம் வழிவகுக்கும் என்பதே இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியமாகும். குப்பைத்தொட்டி மாணிக்கம் என்ற ஒரு மகான் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் திருச்சியில் வாழ்ந்து வந்தார். கன்னங்கரேல் என்ற உருவம். ஆஜானுபாகுவான உடம்பு. பிள்ளையார் போன்ற பேழை வயிறு. இடையில் உடம்பிற்குப் பொருந்தாத வகையில் வெள்ளை வெளேரென்ற ஒரு கோவணத் துணி. அவர் நீரருந்தியோ உணவருந்தியோ எவரும் கண்டதில்லை. தற்போது சத்திரம் பேருந்து நிலையம் உள்ள இடத்தில் பெரிய சாக்கடை ஒன்று இருந்தது. எப்போதாவது அந்தச் சாக்கடையில் இருந்து நீரை இரு கைகளாலும் எடுத்துப் பருகுவார். இந்தச் சாக்கடை நீர் ஒன்றுதான் அவருடைய உணவு. எவருடனும் பேச மாட்டார். இரு கண்கள் மட்டும் பிரகாசமாக ஜொலிக்கும். நார்த்தாமலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் அன்னதானம் நடக்கும். அந்த வருடம் நெல், அரிசி மூட்டைகள் மாவட்டங்கள் இடையே செல்லக் கூடாது என்று தடை விதித்திருந்தார்கள் அரசாங்கத்தார். அப்போது அன்னதானம் நிறைவேற்றும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் குப்பைத் தொட்டி மாணிக்கத்தை அணுகி தொடர்ந்து வருடக் கணக்கில் நடக்கும் இந்த நற்காரியம் பாதிக்காமல் இருக்க என்ன செய்வது என்று அவரிடம் கேட்கவே அவரோ அன்னதானத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரு இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றும்படிக் கூறினார். அவ்வாறு அனைத்துப் பொருட்களையும் வண்டியில் ஏற்றிய பின்னர் தான் அந்த மூட்டைகளில் மேல் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு வண்டியை ஓட்டும்படிக் கூறினார். வண்டியும் அவர் உத்தரவின்படி நார்த்தாமலையை நோக்கி நகர்ந்தது. வழியில் ஒரு செக்போஸ்ட் அருகே வண்டி வந்தவுடன் தன் இடையில் இருந்த ஒரே ஆடையான அந்த வெள்ளைக் கோவணத்தையும் அவிழ்த்து விட்டு அவதூது கோலத்தில் பொலிந்தார். வண்டி செக்போஸ்ட் தாண்டி அமைதியாகச் சென்றது. செக்போஸ்டில் இருந்த அதிகாரிகள் அந்த வண்டியைப் பார்த்தார்களா இல்லையா என்பதை யார் அறிவார் ? வண்டி நார்த்தாமலையை அடைந்தவுடன் வண்டியிலிருந்து இறங்கி சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதாகச் சென்று விட்டார் சுவாமிகள். அன்னதானம் சிறப்பாக நிறைவேறியது. இதுவே பரிமாணம் கடந்து நின்ற அதிசயம். இந்த அற்புத நிகழ்ச்சியின் பின்னணியில் நடந்த இரகசியங்களை சித்தர்களே விளக்கவல்லவர்கள். ஒரு பொருள் நான்காம் பரிமாணத்தை அடைந்தால் கண்ணுக்குத் தெரியாது என்பது பூலோக விதி. இதை ஐன்ஸ்டீன் விஞ்ஞானியின் சார்பியல் கோட்பாடும் உறுதி செய்யும். இவ்வாறு தான் மற்றப் பொருட்களையும் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டுமானால் அவர் அவதூது கோலத்தில் மிளிர வேண்டும் என்பது விஞ்ஞானம் கடந்த மெய்ஞ்ஞான நெறி. இதுவே குப்பைத்தொட்டி மாணிக்கத்தால் அருளப்பட்ட அன்னதான மகாத்மியம். சித்தர் குல நாயகரான நம் சற்குரு தன்னுடைய கடைசி சில நாட்களில் இவ்வாறு அவதூது கோலத்தில் திகழ்ந்ததற்கு இதுவே முக்கிய காரணமாகும். அந்த அவதூது கோலத்தில் நம் சற்குரு அளித்த பரிமாண இரகசியங்களே இன்று உங்களுக்கு குருவாய்மொழி பொக்கிஷங்களாக அளிக்கப்படுகின்றன. இதைப் பற்றி சற்றே விளக்குவோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஒருமுறை ராயபுரம் அங்காளி கோயிலில் நீராடிக் கொண்டிருந்த நம் கோவணாண்டிப் பெரியவர் நீருக்குள் மூழ்கி ஒரு தாமரையை எடுத்து சிறுவன் வெங்கடராமனிடம் அளித்து அதைக் காஞ்சிப் பெரியவாளுக்கு அளித்து வரும்படிக் கூறினார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். தாமரையே இல்லாத குளத்தில் எப்படி தாமரைப் பூ கிட்டும் என்பது குறித்து சிறுவன் அதிசயித்தது ஆச்சரியமில்லையே ? உங்களுக்கும் இந்தப் புதிருக்கான விடை தெரிய வாய்ப்பில்லையே, சற்குருவின் விளக்கம் கிட்டாதபோது. எந்த செல்வமும் விரும்பாத காஞ்சி மாமுனிக்கு நாம் எதைப் பரிசாக அளிக்க முடியும் ? ஒரு ஏழை தான் பாடுபட்ட சேர்த்த ஒரு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளிக்கலாம், ஒரு கோடீஸ்வரன் பல கோடிகளை சுவாமிகளின் நற்காரியத்திற்காக அளிக்கலாம். ஆனால், பிரபஞ்ச குருவான இடியாப்ப சித்தர் ஜகத்குருவிற்கு என்ன அளிக்க முடியும் ? ஆம், உங்கள் ஊகம் சரியே. இந்த உலகத்தையே விலைக்கு வாங்கும் ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளித்தால்தானே அது நம் கோவணாண்டியின் மகிமைக்குப் பொருத்தமாக இருக்கும். அதே சமயம், அந்த விலை உயர்ந்த பரிசைப் பெறும் உத்தமரும் அதன் மதிப்பை அறிந்தவராக கனிந்த கனி சங்கராச்சாரியாரைப் போல் இருந்தால்தானே அது சிறப்பு ? இவ்வாறு ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துக் குவிக்கும் பெருமை வாய்ந்த நம் இடியாப்ப சித்த ஈசன் ஆறாம் பரிமாணத்தில் பொலியும் ஒரு தாமரை மலரை சிறுவன் வெங்கடராமன் மூலம் காஞ்சி கனிந்த கனிக்கு அளித்தார் என்பதே சித்தர்கள் விளக்கும் கருணாமிர்தம். இந்த அமிர்த சுவைக்கு எல்லை ஏது ? ஆறு என்பது மூன்றின் குசா எண்தானே. இவ்வாறு தான் தரிசனம் செய்த திருத்தலங்களில் எல்லாம் மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடிய எம்பெருமானை தரிசனம்செய்து அந்த தரிசனப் பலன்களை எல்லாம் இந்த உலகத்தவர்க்கு அளித்தவரே காஞ்சி மாமுனி. அந்த தரிசனங்களில் எல்லாம் நம் ஸ்ரீஇடியாப்ப சித்தர் அளித்த ஆறாம் பரிமாண ஸ்வர்ண சக்திகள் இந்தப் பிரபஞ்சம் எங்கும் பூத்துக் குலுங்கின என்றால் சித்தர்களின் பெருமையை சித்தர்கள் அன்றி வேறு யார் நவில இயலும் ? இன்று நாம் ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் பொற்றாமரைகளைக் காண இயலவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக பொற்றாமரைகள் குளத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதைக் காணும் தெய்வீக கண்களை நாம்தான் பெறவில்லை. இந்த பொற்றாமரைகளை நாம் காண முடியாவிட்டாலும் திருஞானசம்பந்த மூர்த்தி அருளிய இடரினும் தளரினும் ... என்று தொடங்கும் தேவாரப் பாடலையோ இத்தல, “அக்குலா மரையினர் ...”, என்று தொடங்கும் பதிகத்தையோ இக்குளக் கரையில் அமர்ந்து பாடி வந்தால் இந்த பொற்றாமரை மலர் தரிசனம் நம் சந்ததியினர் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யும். இங்கு பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். பகவான் கிருஷ்ணர் ராசலீலையின்போது ஒவ்வொரு கோபியருக்கும் ஒரு கிருஷ்ணராகக் காட்சியளிக்க அந்த கிருஷ்ணனுடன்தான் கோபிகைகள் யமுனா நதி தீரத்தில் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள் என்றால் அந்தக் கிருஷ்ண பகவான் எப்படி ஆடையுடன் திகழ்ந்தாலும் இவ்வாறு பரிமாணம் கடந்த மூர்த்தியாகத் துலங்கினார். இதுவே ராசலீலை தத்துவங்களில் ஒன்று. ஆறாம் பரிமாணத்தைக் கடந்தால் கிட்டும் தெய்வீக ராசலீலை அனுபூதி இதுவே. ராசலீலையில் மொத்தம் 15 தத்துவார்த்த நிலை விளக்கங்கள் உண்டு. இதில் ஏழு தத்துவங்களை நம் சற்குரு அடியார்களுக்கு விளக்கினார். இந்த தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடிந்தால் மீதமுள்ள விளக்கங்களையும் அளிக்கத் தயாராக இருந்தார். ஆனால், இந்த ஏழு விளக்கங்களைத் திருப்பிச் சொல்லவே அப்போது அருகிலிருந்து கேட்ட அடியார்களால் முடியவில்லை என்றால் மற்ற தத்துவங்களைப் பற்றி என்ன கூற இயலும் ? இவ்வாறு ராசலீலையில் துலங்கும் 15 தத்துவார்த்த நிலைகளையே நாம் அறிந்துகொள்ள இயலாதபோது நம் குருமங்கள கந்தர்வ லோகத்தில் பொலியும் 108 தத்துவார்த்த நிலைகளை என்று, எப்படிப் புரிந்து கொள்வது ? சற்குருவிற்கே வெளிச்சம் !

ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் பெருமாள் சன்னதியிலும் அபூர்வமாக விபூதி பிரசாதம் வழங்கப்படுகின்றது. ஒரு முறை நம் சற்குரு கப்பலில் சென்று கொண்டிருந்தபோது அந்தக் கப்பலில் சிறு ஓட்டை ஏற்பட்டு உள்ளே நீர் வர ஆரம்பித்தது. கப்பலின் கேப்டன் பிரயாணிகள் அனைவரும் தங்களிடம் உள்ள விலையுயர்ந்த ஆபரணங்கள் தவிர அனைத்தையும் கடலில் போட்டு கப்பலின் எடையைக் குறைக்குமாறு ஆலோசனை கூறினார். இது ஒன்றே அனைவரும் உயிர் தப்பும் வழி என்று கூறவே அனைவரும் அவ்வாறே செய்தனர். நம் சற்குரு தன்னிடம் உள்ள விலையுயர்ந்த நகைகள், ஆடை, அணிகலன்கள் என சூட்கேஸ் உட்பட அனைத்தையும் கடலில் போட்டு விட்டார், ஒன்றே ஒன்றைத் தவிர. ஆம், அதுதான் ஒரே ஒரு விபூதி பொட்டலம். தியாகத்தின் பரிசான, தியாகராஜனின் சின்னமான, இறைவனின் பிரசாதமான விபூதி ஒன்றே இவ்வுலகில் உண்மை என்பதற்கு

அன்பே சிவம், வைஷ்ணவ ஜனதோ என்ற உண்மையின் விளக்கமாக அமைவதே விபூதி பிரசாதம்.

ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஒரு மனிதன் எத்தகைய பிரார்த்தனைகளை இறைவன் முன் வைக்கலாம் என்ற கேள்விக்கு சித்தர்கள் பிறவாமை என்ற ஒரு பிரார்த்தனையை மட்டுமே இறைவனிடம் வேண்டிப் பெறும்படி கேட்டுக் கொள்கிறார்கள். வேறு எந்தப் பிரார்த்தனையும் முக்தி என்ற நிரந்தரமான செல்வத்தை அளிப்பது கிடையாது. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பக்தர்களின் இந்த பிரார்த்தனையை மனமுவந்து ஏற்று அருளக் கூடியவர். அதனால்தான் அவர் Upper என்றும் அழைக்கப்படுகிறார் என்று நம் சற்குரு வேடிக்கையாகக் குறிப்பிடுவார். கட்டிப் பிடிப்பதில் பல விதங்கள் உண்டு. கணவன் மனைவியை ஆசை மேலீட்டால் அணைப்பது ஒரு வகை, எதையோ கண்டு பயந்து குழந்தை தன் தாயை அணைப்பது மற்றோர் வகை, ஆறுதலை எதிர்பார்த்து அடியார்கள் அமிர்தானந்தா அன்னையை அணைப்பது வேறோர் வகை. இவை எல்லாம் நிரந்தரமான அணைப்பு அல்லவே ? மார்க்கண்டேயரைப் போல இறைவனை இறுகக் கட்டி ஆரத் தழுவி அணைப்பதே உண்மையான அரவணைப்பு ஆகும். இத்தகைய அன்பை இறைவன்பால் பெருக்க உதவும் தலமே ஸ்ரீநெல்லையப்பர் ஆலயமாகும். பூ பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ என்று கேட்டால் அன்பு என்று உரைப்பர். இது உண்மையே. இந்த அன்பு மனிதர்களால் காண முடியாது, பக்தர்கள் ஒரு கால கட்டத்தில் காணக் கூடிய பூவே நெல்லையப்பர் பொற்றாமரைக் குளத்தில் மலரும் பொற்பூ. அந்தப் பொன்னாள் வரையில் மக்கள் தங்கள் அன்பை வெளிக்காட்ட வேறெங்கும் காண முடியாதபடி அன்பின் அடையாளத்தை பறைசாற்றும் முகமாக முப்பெருந்தெய்வ மூர்த்திகள் மூலத்தானக் கருவறையிலேயே எழுந்தருளி உள்ளதே ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தின் சிறப்பாகும். ஸ்ரீநெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதி, ஸ்ரீபள்ளிகொண்ட ரெங்கநாதர் மூவருமே ஆதிதிசையான கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பது நம் பூலோக மக்கள் பெற்ற பெரும் பேறு அன்றோ ? அது மட்டுமல்லாமல், பக்தர்கள் அனைவரும் அபிஷேக ஆராதனைகளின் போது தரிசிக்கும் விதமாக ஸ்ரீநெல்லையப்பர் லிங்க மூர்த்தியின் இதயத்தில் ஸ்ரீகாந்திமதியும், ஸ்ரீபெருமாளின் இதயத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது என்னே தெய்வீகக் காட்சிகள். அருஉருவமாய் சுயம்புலிங்க வடிவில் ஸ்ரீநெல்லையப்பராய் எழுந்தருளி இருக்க, ஸ்ரீகாந்திமதி அம்மன் நின்ற வடிவில் திகழ, ஸ்ரீரெங்கநாதரோ பள்ளி கொண்டி வடிவில் நிலைத்த கோலத்தில் எழுந்தருளி இருப்பது என்பது காணக் கிடையாத இறைத் தத்துவமாகும். இந்த இறைத் தத்துவம் ஒன்றே போதும் எல்லையற்ற ஆனந்தத்தை வர்ஷிக்க. அப்பர் Upper தான் ! மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தில் பொற்றாமரைக் குளம் உண்டு, இத்தலத்திலும் பொற்றாமரைக் குளம் உள்ளதே. இவ்விரு குளங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்று உங்கள் மனம் கேட்கின்றது அல்லவா ? ஒன்று அல்ல, நிறையவே சம்பந்தங்கள் இருக்கின்றன. மூலதானத்தில் ஸ்ரீசொக்கநாதர் நடுவே எழுந்தருளி இருக்க வலது பக்கம் ஸ்ரீமீனாட்சி தேவி அன்புடன் அவரைத் தொழ இந்த கன்னிகாதானத்தை நிறைவேற்றும் முகமாக ஸ்ரீகள்ளழகப் பெருமாள் இடது பக்கம் எழுந்தருளி இருக்கும் மீனாட்சி திருக்கல்யாண வைபவமாக இத்திருக்காட்சி அமைகின்றது அல்லவா ? இந்த திருக்கல்யாண வைபோகத்தைக் கண்டு களிக்கும் உத்தமராக ஸ்ரீஅகத்திய பெருமான் எதிரே எழுந்தருளி இருப்பது எத்தகைய தெய்வீக காட்சி ?!

Think Good !
Tell Good !
Do Good !

Think Good ! Tell Good ! Do Good ! என்ற வாக்கியங்கள் பதிந்த ஒரு மாமரப் பலகையாலான ஒரு மர பீரோவை நம் சற்குருவின் இல்லத்தில் காணலாம். சற்குருவின் முன்னோர்கள் பயன்படுத்திய அந்த பழைய பீரோவை செப்பனிட்டு அதற்கு குருவிற்கு உகந்த மஞ்சள் வண்ணம் பூசி பல நற்காரியங்களுக்கு அந்தப் பீரோவை பயன்படுத்தி வந்தார் நம் சற்குரு. ஏதாவது ஒரு பொருளை அதிலிருந்து எடுக்க வேண்டும் என்றால் தன் அன்பு மனைவியிடம், “அந்த Tell Good! பீரோவிலிருந்து எடு ...”, என்று கூறுவார். Good என்றாலே அது குருவிற்கு உரிய மூன்று எண்ணாகத் திகழும். Tell Good என்னும்போது அது மூன்று Good சக்திகளுக்கு இடையே, நடுவே பொலியும் குசா சக்தியாக அல்லவா திகழ்கிறது. இவ்வாறு தன் ஒவ்வொரு செயலிலும் நல்ல எண் சக்திகளையும் அதிலும் சிறந்த குசா சக்திகளையும் இவ்வாறு பல்வேறு நற்சக்திகளைத் திரட்டி அதன் பலன்களை எல்லாம் நமக்கு தாரை வார்த்து அளித்த பெருந்தகையே நம் சற்குரு ஆவார்.

ஸ்ரீஆயுர்தேவி

Tell Good எனும்போது அது எண் ஆறின் சக்திகளையும் குரு சக்திகளையும் இணைக்கும் பூரண சக்தியாக மாறுகிறது. இதுதானே முருகப் பெருமான் ஆறுமுகங்களுக்கு உடைய சக்தியாகவும் செவ்வாய் பகவானின் அதிதேவதையாக ஒன்பது எண்ணிற்கு உரிய சக்தியாகவும் திகழும் பாங்காகும். இது இணைப்பா அல்லது லயமா ? இதை எப்படி வேண்டுமானாலும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்திற்கு ஏற்ப பயன்படுத்தி சமுதாயத்திற்கு நற்பலன்களை வர்ஷித்தவர்களே சற்குருமார்கள் ஆவர். “ஸ்ரீஆயுர்தேவியை பூலோகத்திற்கு கொண்டு வருவதற்காக அடியேன் 15 வருடங்கள் பாடுபட வேண்டியிருந்தது,” என்பார் நம் சற்குரு. ஆயுர்தேவி இருந்தது ஏதோ ஒரு லோகத்தில், பூலோக மக்கள் வசிப்பது வேறு ஏதோ ஒரு லோகம் என்று கொண்டாலும் இந்த இரண்டு லோகங்களும் ஒன்றில் ஒன்றாக இணைந்து, லயமாகி விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதே ஆன்மீகத்தின் முதல் பாடம். ஒரு அறையில் மெழுகுவர்த்தியின் ஒளி, நைட் லாம்ப், டியூப் லைட் வெளிச்சம், அடுப்பில் வெளியாகும் கேஸ் வெளிச்சம் என்று பல தரப்படட்ட ஒளி அலைகள் இருந்தாலும் இவை அனைத்தும் ஒன்றிற்கொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து ஒன்றில் ஒன்று லயமாகி விளங்குவது போல இத்தனை லோகங்களும் ஒரே இடத்தில் ஒரே கால கட்டத்தில் விளங்கும் தன்மை உடையனவே. இந்த லோகங்களில் உள்ளவர்கள் தங்கள் கீழே உள்ள பரிமாணங்களை எளிதில் கண்டு கொள்ள முடியும், இதற்கு எந்தவிதமான முயற்சியுமே தேவையில்லை, ஆனால், கீழே உள்ளவர்கள் அடுத்து ஒரு உயர்ந்த பரிமாணத்தைக் கூட என்னதான் முயன்றாலும் காண இயலாது, முடியாது என்பதே இந்த பரிமாணங்கள் பற்றிய இரகசியம். இவ்வாறு இருக்கையில் ஆயுர்தேவியை பூமிக்குக் கொண்டு வர நம் சற்குரு 15 வருடம் பாடுபட வேண்டியிருந்தது என்பது எதைக் குறிக்கிறது. இவ்வாறு உயர்ந்த பரிமாணத்தில் உள்ள தேவி உபாசனையை மூன்று பரிமாணத்தில் திகழும் மக்களும் நிறைவேற்றி பயன்பெற வேண்டுமானால் நம் பூலோக மக்களை உயர்ந்த பரிமாணத்திற்கு மாற்ற முடியாவிட்டாலும் ஆயுர்தேவி உபாசணையை மூன்று பரிமாணத்திற்கு மாற்றலாம் அல்லவா ? இதுவே நம் சற்குருவின் அரிது, அரிதான ஒரு தெய்வீகப் பணி. “ஸ்ரீம், ஹ்ரீம், ஐம்” என்ற மூன்று பீஜாட்சர சக்தியைக் கொண்டு ஆயூர்தேவியின் அவதாரத்தை, மேலிருந்து கீழிறங்கி வரும் ஒரு தெய்வீகத் திருப்பணியை நிறைவேற்றியவரே நம் சற்குரு. இதையே நாம் ஆயுர்தேவியின் மூல மந்திரத்தில் காண்கிறோம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சேனாயை
ஆயுர் தேவ்யை ஸ்வாஹா
என்ற ஆயுர்தேவி ஆவாஹன மந்திரத்தின் தாத்பர்யம் இப்போது என்ன சுவை அளிக்கின்றது பார்த்தீர்களா. நம் சற்குருவின் உத்தரவின்படி நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் முதன் முதலாக ஆயுர்தேவி பூஜையை நிறைவேற்றிய பின் பூஜை நிறைவில் ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி தன் வீட்டு முற்றத்தில் ஒலிக்க அதைக் கேட்ட அந்த அடியார் நம் சற்குருவிடம் இந்த அதீதமான ஒலியின் தன்மையைப் பற்றிக் கேட்டபோது இவ்வாறு பரிமாணம் கடந்த அனுகிரகத்தைப் பற்றி நம் சற்குரு அளித்த விளக்கங்களே இவை.

யாமிருக்க பயமேன்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் ஒன்பது பிரகாரங்கள் இருப்பதாக நாம் கூறுகிறோம் என்றால் இது பரிமாணம் கடந்த நிலையில் அனுபவிக்கக் கூடியதே என்பதை பக்தர்கள் புரிந்து கொண்டால்தான் அடுத்து நாம் அளிக்கும் விளக்கங்கள் புரிய வரும். தோத்திரபூர்ணாம்பிகையின் கையைப் பிடித்துக் கொண்டு சம்பந்த மூர்த்தி நாயனார் வேள்வித் தீக்குள் புகுந்தார். தான் மட்டும் அல்லாமல் தன்னை நம்பி, தன்னுடன் வந்த அணைத்து பக்தர்களையும் அவ்வாறு வேள்வித் தீக்குள் இட்டுச் சென்று திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார் என்பதை நாம் செவி வழிச் செய்தியாகவே கேள்விப்பட்டுள்ளோம். இதே போல் நம் சற்குரு திருச்சியில் உள்ள பசுமடத்திற்கு வருகை தந்தபோது அந்த திருப்பணியில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களையும் திருக்கயிலாயத்திற்கும், வைகுண்டத்திற்கும் அழைத்துச் சென்றார் என்பது நம் சற்குரு அறிவித்த செய்தியே தவிர இதை எவருமே நிரூபிக்க முடியாது. இது அவரவர் நம்பிக்கை குறித்து விளையும் அனுகிரகமே. அதே போல ஸ்ரீஆயுர்தேவி மூலமந்திரத்தையோ, இடரினும் தளரினும் என்ற தேவாரப் பதிகத்தையோ ஓதிக் கொண்டு ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தை வலம் வரும் பக்தர்கள் நிச்சயமாக ஏழு, எட்டு, ஒன்பது என்ற பரிமாணங்களில் சஞ்சரிப்பார்கள் என்று உறுதியாகக் கூறுவதே நெல்லையப்பர் தல புராணம். காரணம் 7+8+9 = 24 = திருநெல்வேலி. திருநெல்வேலி என்றால் சுவாமியின் பிரசாத நெல்லை மழையிலிருந்து காத்தது மட்டும் அல்ல, பக்தர்களுக்கு வரும் துன்பங்களை வேலியிட்டு காத்து அவர்களை மற்ற பரிமாணங்களுக்கே மாற்றவல்ல அற்புத தலம் என்பது பொருளாகும். நெல்லையப்பர் அருளும் அனுகிரகமோ, நம் சற்குரு அளிக்கும் அனுகிரகமோ காலம் தேசம் இவற்றைக் கடந்த பரிமாணமே என்பதைக் குறிப்பதே சமீபத்திய (கடைசி வாரம் நவம்பர் 2020) நிவர் புயலில் நிகழ்ந்த அனுபவமாகும். ரேணுகா என்ற மூன்று எழுத்து தெய்வமே ஆங்கிலத்திலும் Renuka என்று மூன்று எழுத்தாக மலரும். நம் சற்குருவின் அனுகிரகம் பெற்ற இந்த கோயிலில் மக்களைக் காப்பாற்ற கூட்டு பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. எப்படி ? சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிவப்பு செம்பருத்தி பூக்கள் ஊறிய தைலத்தால் ரேணுகா தேவிக்கு காப்பிடப்பட்டு வழிபாடு நிறைவேற்றப்பட்டது. தெய்வம் ஒன்றே உண்மையான பாதுகாப்பு என்பதை உறுதி செய்யும் விதமாக ஷீரடி சாய்பாபாவின் ஓங்கிய, நிமிர்ந்த குரு விரலே பக்தர்கள் தியானத்தில் செழித்து நின்றது. இதன் விளைவாக சென்னைவாசிகளும் 120 மைல் வேகம் கொண்ட நிவர் புயலின் ஆபத்தான விளைவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டனர். செம்பருத்தியில் குருவின் அனுகிரகம் பதிந்திருப்பது நாம் அறிந்த ஒன்று என்றாலும் இந்த குருவின் பாதுகாப்பை செவ்வாய் பகவானின் ஆயுதங்களால் தடுக்கப்படும்போது உணரும் சுவையே தனிதானே.

ஸ்ரீகாலபைரவர்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

ஒருமுறை நம் சற்குரு சென்னை மயிலாப்பூரில் உள்ள தன் இல்லத்தருகே இரு அடியார்களுடன் ஒரு முக்கியமான வேலையாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு அடியார் அவர்களைப் பார்த்து விட்டார். அதைக் கண்டதும் அந்த இரு அடியார்களும் கலங்கி விட்டனர். காரணம் அந்த அடியார் ஒரு சரியான “ப்ளேடு”. நம் சற்குருவைப் பார்த்தால் மணிக் கணக்கில் பேசுவது வழக்கம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடைவீதி என்று கூட பார்க்காமல் மணிக் கணக்கில் அவர் பேச ஆரம்பித்து விட்டால் அவர்கள் செல்லும் காரியம் நிறைவேறாதே என்ற ஆதங்கத்தில் ஒன்றுமறியாது அவர்கள் தவித்தனர். அந்த அடியாரோ அதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அவர்களிடம், “எங்கே இரண்டு பேரும் (?!) கிளம்பி விட்டீர்கள் ? நான் வாத்யாரை (சற்குருவை) பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வருகிறார்களா ?” என்று கேட்டதும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம், சற்குருவை அருகில் வைத்துக் கொண்டே சற்குருவை பார்க்கச் செல்லுகிறேன் என்று இவர் சொல்கிறாரே. ஒருவேளை நம் வாத்யார் இவர் கண்களுக்குத் தெரியவில்லை போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, “இல்லை நாங்கள் வாத்யாரைப் பார்க்க வரவில்லை, நீங்கள் வேண்டுமானால் சென்று வாத்யாரைப் பாருங்கள், நாங்கள் ஒரு முக்கியமான வேலையாக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறோம்,” என்று கூறி அவர் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து நடையைக் கட்டினர். இதுவும் பரிமாண இரகசியங்களில் ஒன்று. ஐன்ஸ்டீன் கூறும் முறையில் நாம் யந்திரங்களைப் பயன்படுத்தி உலகில் உள்ள பொருட்களை நான்காம் பரிமாணத்திற்கு மாற்ற முடியும் என்றாலும் அந்த பரிமாண மாற்றத்தில் வேண்டும் நபர்களை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. ஒன்று அனைவரும் மறைவர் அல்லது எவரும் எப்பொருளும் மறையாது. ஆனால், நம் சற்குரு போன்ற மகான்கள் ஏற்படுத்தும் இந்த பரிமாண மாற்றத்தில் வேண்டும் பொருட்களை வேண்டிய அளவிற்கு மறைய வைக்கலாம், திரும்பவும் காட்சிக்கு கொண்டு வரலாம். சார்பு கொள்கை விதிப்படி ஒருவரை நான்காம் பரிமாணத்திற்கு மாற்றினால் அவர் உடல் மறையும் காட்சியைக் காணும்போது ஒன்று அவர் அதைக் கண்டு பைத்தியமாகி விடுவார் அல்லது அதிர்ச்சியினால் மரணமடைந்து விடுவார். ஆனால், மகான்கள் ஏற்படுத்தும் இத்தகைய பரிமாண மாற்றத்தால் மனிதர்களின் உடல் மறையாது என்பதே சம்பந்தர், நம் சற்குரு இயற்றும் இத்தகைய பரிமாணத் திருவிளையாடல்களின் மகத்துவம் ஆகும். இதைத்தான் நம் சற்குரு, “உடல் இல்லாத மகான்கள் உடல் இருப்பது போல் மற்றவர்கள் கண்களுக்கு காட்டுகிறார்கள், தெரிகிறார்கள் என்று கிடையாது, காட்டுகிறார்கள் ...”, என்று சுவைபடக் கூறுவார். தெரிவது வேறு, காண்பது வேறு. இதுவே ஸ்ரீநெல்லையப்பர் பொற்றாமரைக் குளத்தில் நடைபெறும் அதிசயம். இந்த பொற்றாமரைக் குளத்தில் மலரும் தாமரைகளை நாம் காண இயல விட்டாலும் அந்த காட்சியைக் காணும் சிறப்பான கண் பெற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த அதிசயம் நிறைவேறும் ஒரே திருத்தலம் ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம் என்பதே இத்தலத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். இத்தகைய தரிசனப் பலன்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டுமானால் மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தைப் பற்றி ஆத்மவிசாரம் செய்து பாருங்கள். சிவபெருமான் சூடிய மூன்றாம் பிறையே என்றாலும் சிவபெருமானை நாம் தரிசிக்க இயலவில்லையே. பிறையை மட்டும் அல்லவா நாம் காண முடிகின்றது. இந்த தரிசனமும் நம் மூதாதையர்கள் மனமுவந்து அளித்தால்தானே உண்டு. சமீபத்தில் தங்கச்சி மடத்தில் ஸ்ரீஅமிர்தவாவி ஈசனுக்கு நடந்த திருக்கார்த்திகை அபிஷேக வைபவத்தைக் காண குதிரையில் வந்திறங்கிய ராமச்சந்திர மூர்த்தியையும், லட்சுமண சுவாமியையும் சுமந்து வந்த குதிரைகளை நீங்கள் இங்கு காண முடிந்தாலும் அந்த மூர்த்திகளை நீங்கள் காண முடியவில்லையே.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam