அத்தோரணம் இத்தோரணம் எத்தோரணம் முத்தோரணம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மூன்றாம் பிறை முத்தோரணம்

குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து இந்த பூவுலகை தூய்மைப்படுத்தி அதில் நல்ல ஜீவன்களையும், நல்ல ஜீவ சக்திகளையும் உருவாக்கும் திருவுள்ளம் கொண்டு தோன்றிய நம் குருமங்கள கந்தர்வா 2008ம் ஆண்டு தம் யதாஸ்தானமான குருமங்கள கந்தர்வ லோகத்தை அடைந்தார் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

தன்னுடைய தெய்வீக பொறுப்பாக இப்பூவுலகில் 51 ஜீவ சமாதிகளை உருவாக்கி எழுந்தருளி பூலோக ஜீவன்களுக்கெல்லாம் 32 அறப் பலன்களையும் இனிதே முழுவதுமாக அருளியவரே நம் சற்குரு. பிள்ளையார் பூவுலகில் தோன்றிய ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை எப்படி கணேச மூர்த்தியின் பிறந்த நாளாக கொண்டாடி நாம் அனைவரும் மகிழ்கிறோமோ அதே போல் நம் சற்குரு மீண்டும் குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளிய திருநாளே மூன்றாம் பிறை முத்தோரண நாள் என்பதாகும்.

ஆனந்தம் ஆனந்தமே !

கிருத யுகம், கலியுகம் போன்ற லோகங்கள் லட்சக் கணக்கான ஆண்டுகள் வியாபித்து இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு யுகமும் தோன்றிய சுபமுகூர்த்த நாளை நாம் கொண்டாடி பலன் அடைவது போல நம் சற்குரு குருமங்கள கந்தர்வ லோகத்தை அடைந்த நன்னாளை பூலோக வாசிகள் கொண்டாடி பெரும் பலன் பெறலாம் என்பதே நம் சற்குரு நமக்காக அருளும் இனிய சித்த அனுகிரகமாகும். வரும் ஆடி மாதம் மூன்றாம் பிறை தினமே நம் சற்குரு முதன் முதலாக குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளிய தினமாகும்.

இதைப் பற்றி பல வருடங்களுக்கு முன் குறிப்பிடும்போது நம் சற்குரு, “பூமியைப் போல் அல்ல குருமங்கள கந்தர்வ வாசிகள், அண்ணன் எப்போ சாவான் திண்ணை காலியாகும், என்ற எண்ணத்தில், கற்பனையில் மிதப்பவர்கள் அல்ல அடியேனுடைய லோக வாசிகள். எத்தனை யுகங்கள் ஆனாலும் அடியேன் வரும் வரை அந்த சீட் அருகிலேயே காத்திருந்து அந்த சீட்டை சுத்தமாக துடைத்து துடைத்து வைத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு, அடியேன் வரவுக்காகக் காத்திருப்பவர்களே குருமங்கள கந்தவர்வ லோகத்தைச் சேர்ந்தவர்கள்...அடியேன் மேல், அடியேனுடைய வார்த்தைகளில் அசையா நம்பிக்கை கொண்டவர்கள்...”, என்றார்.

ஸ்ரீஅகத்திய பிரான்
கரிவலம்வந்தநல்லூர்

அப்போது ஒரு அடியார், “வாத்யாரே, தங்கள் லோகத்திலிருந்து வந்த யாராவது தற்போது நமது ஆஸ்ரமத்தில் இருக்கிறார்களா?” என்று கேட்டார். நம் சற்குரு ஒரு புன்முறுவலுடன், “அடியேன் லோகத்தைச் சேர்ந்த எவருமே இந்த ஆஸ்ரமத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த பூமியிலேயே அடியேன் லோகத்தைச் சேர்ந்த எவரும் இல்லை என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. அந்த அளவு குரு பக்தி உடையவர்கள் குருமங்கள கந்தர்வ லோக வாசிகள்.”

“வானத்தைச் சுட்டிக் காட்டி அதோ தெரிகிறது பார் வெள்ளைக் காக்கை என்றால் காக்கை எப்படி வெள்ளையாக இருக்க முடியும் என்று யோசிக்க மாட்டார்கள். ‘சுவாமி, அந்த காக்கைகளுக்கு தற்போது என்ன உணவிட வேண்டும்?’ என்று கேட்பார்கள். அருகில் இருக்கும் ஐந்து நாற்காலிகளைப் பார்த்து இந்த ஆறு நாற்காலிகளையும் அந்த அறையில் வைத்து விடு என்று சொன்னால் எந்த அறை என்று கேட்பார்களே தவிர இங்கே இருப்பவை ஐந்து நாற்காலிகள்தானே என்று கேட்கவே மாட்டார்கள். அந்த அளவு குரு நம்பிக்கை அவர்களுடையது ...”, என்றார் நம் சற்குரு தொடர்ந்து.

வரும் 30.7.2022 சனிக் கிழமை அன்று மக நட்சத்திரம், அமிர்த யோகம் கூடும் சுபதினத்தில் நம் சற்குரு குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளும் நாள் அமைவது நம் பூலோக மக்களின் பெரும் பேறே. இந்த சுப முகூர்த்த நாளையே மூன்றாம் பிறை முத்தோரணம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர். சனிக் கிழமையில் பிரகாசிக்கும் இந்த அமிர்தயோக சக்திகளை பெறும் முகமாக அமைந்த சில வழிபாடுகளை மட்டும் அடியார்கள் இங்கு அறிந்து பயன்பெறலாம். மூன்றாம் பிறையை சிவபெருமான் தன் ஜடாமுடியில் சூடி சந்திர மௌலீஸ்வரராக அருங்காட்சி அருள்கின்றார் என்பது கோடிக் கணக்கான சிவானுகிரகங்களில் ஒன்றே.

நமது பூலோகத்தில் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரனை மட்டுமே நாம் தரிசிக்க இயலும். குருமங்கள கந்தர்வ லோகத்திலோ 108 சூரியன்களும், 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றனர் என்றால் இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ? எனவே சிவபெருமான் நிமிர்புன் சடையை அலங்கரிக்கும் சந்திர பகவானின் ஒளிக் கிரணங்களில் நம் குருமங்கள லோகத்தில் எழுந்தருளிய நம் சற்குருவின் அனுகிரக கிரணங்களும் ஒளி வீசும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த இரகசியமாகும்.

சோழி சுவை சந்திர சுவையே !

இத்தகைய சந்திரமௌலீஸ்வர கிரணங்களின் சக்தியைப் பெற நாம் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் உள்ள அனைத்து வாயில்களையும் மூன்று தோரணங்களால் அலங்கரித்தல் மிகவும் சிறப்பாகும். வாழைக் கன்றுகள், முதிர்ந்த வாழை மரங்கள், பாக்கு, ஈச்சம் பழங்கள், தேங்காய், இளநீர் குலைகள், தேங்காய் குருத்து, தென்னம்பாளை, தென்னை மட்டைகள் போன்ற பல தாவரங்களாலும் அலங்கரித்தலால் நாம் இத்தகைய முத்தோரண சக்திகளைப் பெறலாம். முத்தோரணம் என்பது மூன்று தோரணம், முத்து ஆரணம், முன்னிலை அலங்காரம் என்றெல்லாம் விளங்குவதால் இந்த அனைத்து அலங்காரங்களையும் இறை மூர்த்திகளுக்கு நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

கரி சத்யத்தை வணங்கும்
கரிவலம்வந்தநல்லூர்

முத்தோரண வழிபாட்டிற்கு உகந்த திருத்தலமாக கரிவலம்வந்தநல்லூர் விளங்குவதற்கு பல சுவையான ஆன்மீக காரணங்கள் உண்டு. கரிவலம்வந்தநல்லூர் என்ற திருத்தல நாமத்தில் நான்கு மெய்யெழுத்துக்களுக்கு மீதம் உள்ள எட்டு உயிர்மெய் எழுத்துக்கள் குசாவாக அமையும். நல்லூர் என்ற திருத்தல நாமத்தின் மூன்று மடங்கே குருவிற்கு உரிய மூன்று எழுத்துக்கள் அல்லவா, கரிவலம்வந்தநல்லுர் என்ற 12 எழுத்தும் குரு சக்திகளுடன் திகழ்வதுதானே. இந்த குரு சக்திகளைப் பெறவே முத்தோரணம் என்ற பிரதட்சிண முறை சித்தர்களால் அருளப்பட்டுள்ளது. அதாவது முதலில் பிரதட்சிணமாக திருக்கோயிலை வலம் வந்து ஒரு சுற்று பிரதட்சிணம் நிறைவேறிய பின், திரும்பி அப்பிரதட்சிணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வருவதே ஒரு சுற்று முத்தோரண பிரதட்சிணமாகும். பிரதோஷ தினங்களில் நிகழ்த்தும் சோம சூக்த பிரதட்சிணம் போன்றதே இது. இவ்வாறு தொடர்ந்து மூன்று பிரதட்சிணங்களை மூன்றாம் பிறை நாட்களில் நிகழ்த்துவதே மூன்றாம் பிறை முத்தோரண வழிபாடாகும்.

ஒரு முறை நம் சற்குரு ஸ்ரீபிரகதீஸ்வரர் நந்தி திருப்பணிக்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். அப்போது நம் அடியார் ஒருவர் இல்லத்தில் தங்கியிருந்தார் நம் சற்குரு. அந்த அடியார் வீட்டில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஸ்ரீசாய்பாபா அமர்ந்திருந்த கோலத்தைப் பற்றிக் கூற முடியுமா என்று அந்த அடியார் கேட்டபோது நம் சற்குரு அதற்கான விளக்கத்தை அளித்தார்கள். ஆனந்த தியானம், ஆனந்தாதீத தியானம் என்றெல்லாம் அழைக்கப்படும் பாபாவின் தியானத்தைச் சுட்டுவதே அப்படம். தன்னுடைய தூல உடலை அணுவிலும் சிறிய அளவில் சுருக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தன்னுடைய சூட்சும சரீரத்தை ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்திற்கு பெருக்கிக் கொள்ள வேண்டும்.

விரல் அமைப்பை இங்குள்ள வீடியோ படத்தில் இருப்பதுபோல் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் பாபா ஆனந்த தியானத்தை ஆரம்பிக்கும்போது இந்த பூலோகத்தில் மட்டும் அல்ல, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுமே பாபாவின் சுண்டு விரல் என்னும் புதவிரலை அடைந்து அங்கிருந்து மேலே ஏறி இரு குரு விரல்கள், சுக்கிர விரல்களின் இடையே அமையும் ஆனந்த புட்குழி என்னும் அமிர்த சாகரத்தில் மூழ்கி, குளித்து, எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவித்து மீளும். அவரவர் இறை நம்பிக்கையைப் பொறுத்து, கர்ம வினைகளின் படிவுகளைப் பொறுத்து இந்த ‘பரம ஆனந்தத்தின்’ அளவும் கால அளவும் மாறுபடும். சுமார் பத்தாயிரம் மைல்களுக்கு மட்டுமே பூலோகத்தில் நாம் அறிந்த உயிர்கள் வியாபித்து இருக்கும் என்றாலும் ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்தில் வாழும் கண்ணுக்குத் தெரியாத, நாமறியா உயிர்கள் எத்தனை கோடி இருக்கும் என்பதை நாம் உணர்ந்தால்தான் பாபாவின் அருமை பெருமை தெரியவரும். இவ்வளவு பிரம்மாண்டமான தியான நிலையில், உயிர்களுக்கு எல்லாம் அளிக்கும் அனுகிரகத்திற்கு பாபா எடுத்துக் கொள்ளும் நேரமோ பூலோக கணக்கில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே.

சிந்துப்பட்டி

நம் சற்குரு அளித்த மேற்கண்ட விளக்கத்தைக் கேட்ட அனைவரும் மெய்மறந்து நின்றனர் என்பதைக் கூறவும் வேண்டுமோ. அந்த அடியாரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு படத்தை நம் சற்குருவிடம் அர்ப்பணிப்பதே முறை என்ற நோக்கில் அந்த பாபா படத்தை சற்குருவிடம் அளித்து விட்டார். அனைத்து இறை தூதுவர்களின் மகிமைகளை எல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனியாக காணும் திறம் பெற்ற நம் சற்குரு அந்தப் படத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.

துரும்பையும் பிரம்மா ஆக்குபவர்தானே சற்குரு ?

நந்தி திருப்பணி இனிதே நிறைவேறி நம் சற்குரு சென்னை புறப்படும் சமயம் அந்த படத்தை நம் சற்குருவிடம் அந்த தஞ்சை அடியார் அளிக்க நம் சற்குருவும் தன்னுடன் தன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த அடியாரிடம் அதை அளித்து, “இந்தப் பெட்டிக்குள் இந்த படத்தை வைத்து விடு...”, என்று கூறினார். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் மனிதக் கணக்கில் அந்தப் பெட்டியை விட அந்தப் படத்தில் நீளம் அதிகமாகவே இருந்தது. சற்குரு, முடியாத காரியத்தை நமக்கு அளிக்க மாட்டாரே என்ற நம்பிக்கையில் அந்த பெட்டிக்கு மேல் படத்தை வைத்து நேரடியாகப் பார்த்தபோது அந்த படத்தின் நீளம் பெட்டியின் நீளத்தை விட அதிகமாகத்தான் இருந்தது. நம் சற்குரு தனக்கு அளித்த இந்த பாடத்தைப் பற்றி அந்த அடியாரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எவ்வளவு நாட்களுக்கு ? சுமார் 25 ஆண்டுகள் ஆயின ... சற்குரு அளித்த இந்த உபதேசத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்வதற்கு. அது என்ன ? அதை நீங்களும் அறிந்து கொள்ளுங்களேன்.

உடலுக்குள் உயிர் இருக்கிறதா ? உயிருக்குள் உடல் இருக்கிறதா ? உயிருக்குள்தான் உடல் இருக்கிறது என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கம். இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடிந்தால்தான் தூல சரீரத்திற்கும் சூட்சும சரீரத்திற்கும் உள்ள தொடர்பை மனிதர்கள் அறிந்து கொள்ள முடியும். பாபாவின் ஆனந்த தியானமும் இந்த தத்துவத்தை, உண்மையை விளக்குவதே. அனைத்து உயிர்களும் பாபாவின் உடலில் புகுகின்றன எனும்போது நாம் தூல சரீரத்தை நினைத்துக் கொள்வதால்தான் ஆனந்த தியானம் அளிக்கும் பரமானந்தத்தை நம்மால் உணர முடிவதில்லை. மேலே கூறிய அடியாரைப் போல் நீங்கள் ‘சோம்பேறி’ அடியாராக இருக்க மாட்டீர்கள் அல்லவா ? நீங்கள் விரைவிலேயே அதாவது இந்த சுபகிருது ஆண்டு இறுதிக்குள் தூல சரீரத்திற்கும், சூட்சும சரீரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வழிசெய்வதே மூன்றாம் பிறை தரிசனங்களின் மகத்துவமும், சிறப்பாக கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் மூன்றாம் பிறை முத்தோரண வழிபாட்டின் மகிமையும்.

ஸ்ரீசக்கரம்
கரிவலம்வந்தநல்லூர்

சுபகிருது என்னும் இவ்வருடத்தைக் குறிக்கும் ஐந்து எழுத்துக்களுக்கு உரியதாக அமையும் இம்முத்திரையில் சுக்கிர விரல் என்ற சுபவிரல் ஆள்பவரை நோக்கியும் மற்ற நான்கு விரல்களும் (சு பகிருது) எதிர்த்திசையிலும் அமைவதால் இந்த ஆனந்தாதீத முத்திரை இவ்வருடத்திற்கு உரிய முத்திரையாக நம் சற்குருவால் அங்கீகரிக்கப்படுகிறது. ஸ்ரீசத்யசாய் பாபாவின் ஆனந்த தியானத்தை நிறைவேற்றும் அளவிற்கு அடியார்கள் உயரவில்லை எனினும்
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்
என்றவாறு காயத்ரீ மந்திரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கட்டை விரல்கள், ஆள்காட்டி விரல்கள், நடுவிரல்கள், மோதிரவிரல்கள், சுண்டுவிரல்கள் என்ற ஐந்து ஜோடி விரல்களுக்கும் காயத்ரீ மந்திரத்தின் ஐந்து பகுதிகளையும் அர்ப்பணிப்பதாக, கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் சுழல்வதாக தியானித்து வருவது என்பது அனைவராலும் நிறைவேற்றக் கூடிய ஒரு சுபலட்சண தியான முறைதானே. திருத்தலங்களில் அல்லது அவரவர் இல்லங்களில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த மந்திர ஜபத்தை கைக்கொள்ளலாம்.

கீழிருந்து மேலே எண்ணம், மந்திரம் சுழல்கையில் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மனக் கிலேசங்களும், குழப்பங்களும், பெண் உறவு முறைகளால் ஏற்படும் வேதனைகளும் தணியும். மேலிருந்து கீழாக மந்திரம் தவழ்கையில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமையான பிரச்னைகளும், பெண்கள் மேல் ஏற்படும் அதீத மோகங்களும், காம எண்ணங்களும், ஆண் உறவு முறைகளில் ஏற்படும் சீர்கேடுகளும் நயமடையும்.

சிறுவயதிலிருந்தே இத்தகைய காயத்ரி ஜபமுறையைக் கையாண்டு வந்தால் ஆண்கள் எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் எடுக்கும் உடல் வலிமையையும், பெண்கள் பார்வையால் சூரியனையும் நிறுத்தும் மன வலிமையையும் பெறுவர்.

காயத்ரீ மந்திரம் போன்று ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த கொடிக்கவித் துதியின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விரல் தொகுதிக்கும் கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக நினைவை விரவி, ஓதி வழிபாடு செய்தலும் அற்புத பலன்களை வர்ஷிக்க வல்லதே.

கடல் சோழிகள் என்பவை கடலோரத்தில் இயற்கையாக ஒதுங்கும் சோழிகளே. இவற்றையோ அல்லது நம் ஆஸ்ரமம் போன்று உத்தம குருமார்கள் நடத்தும் ஆஸ்ரமத்திலிருந்து பெறப்பட்ட சோழிகளையோ குழந்தைகளிடம் அளித்து அதைக் கொண்டு அவர்கள் விதவிதமாய் தெய்வீக உருவங்களை அமைக்கும்படி, வரையும்படி ஊக்குவித்து வர வேண்டும். இதனால் அவர்களின் தூல சூட்சும சரீரங்கள் உன்னத நிலை பெறும். அனைவரும் ஸ்ரீசத்யசாய் பாபா அளவிற்கு உன்னத நிலையை அடைவார்களோ இல்லையோ, ஆனால், அனைவரும் தங்கள் உடல் மன வளங்களை நிச்சயமாய்ப் பெருக்கிக் கொள்வர் என்பது உறுதி.

வெண் கொற்றக் குடையில்
பவனி வரும் மாதா அமிர்தானந்தா

மூன்றாம்பிறை தரிசன நாட்களில் மேற்கண்ட சோழிகளை சந்திர பகவானிடம் அர்ப்பணித்து வணங்குவதால் சிறுவர்கள், பெரியோர்கள் என அனைவரும் மன வளக் கலையில் சிறந்து திகழ்வார்கள். தாம்பத்ய உறவில் ஏற்படும் ஆனந்தம் ஒரு சில நிமிடங்களே என்றாலும் இதை பல மணி நேரங்களுக்கு நம் மனமானது சூட்சும சரீரத்தில் பதித்து தொடர்ந்த ஆனந்தத்தைப் பெருக்கிக் கொள்ளும். இதனால் மனித மனம் வஜ்ரம் போன்ற மன உறுதியைப் பெறுவதுடன் எத்தகைய சமூக கேடுகளையும், சமுதாய துன்பங்களையும் நாம் எதிர்நோக்கி வெல்லலாம் என்பதே மனிதர்கள் பெறும் நிரந்தர அனுகிரகமாகும்.

யானையின் தோல் கருமை நிறம் உடையதாக நாம் எண்ணுகிறோம். இது சாதாரண கருமை நிறம் அன்று, எத்தகைய எதிர்மறை சக்திகளையும், வினைகளையும் களையும் இயல்பு கொண்டதே யானையின் ஈருரி ஆகும். இதனால்தான் அப்பர் பெருமான் ஈருரி போர்த்த இறைவனின் புகழைப் பாராட்டி, இறைவனின் தியாகத்தை வானளாவ வர்ணிக்கிறார். இவ்வாறு இறைவன் போர்த்தும் ஈருரியை மனிதர்கள் ஒரு விநாடி கூட போர்த்த முடியாது என்பதே யானைத் தோலின் சிறப்பாகும். ஒரு சில நொடிகளிலே மனிதனின் உடல் பஸ்பமாகி விடும்.

நம் சற்குரு திருக்கோஷ்டியூர் திருத்தலத்திற்கு சென்றிருந்தபோது சற்குருவை வரவேற்க ஒரு யானையை ஏற்பாடு செய்திருந்தனர் அங்கிருந்த அடியார்கள். யானையின் துதிக்கையில் ஒரு மலர் மாலையைக் கொடுத்து அதை நம் சற்குருவிற்கு அணிவிக்குமாறு யானையிடம் அதன் பாகன் கூறியபோது யானை மறுத்து விட்டது. யானைப் பாகன் மிரட்டியும், கூக்குரல் இட்டும், யானையை ஓட்டும் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியும் அந்த யானை வலியைப் பொறுத்துக் கொண்டதே தவிர, அந்த மாலையை கடைசி வரை நம் சற்குருவிற்கு அணிவிக்கவே இல்லை. நம் சற்குருவும் அந்த யானையை வற்புறுத்தாது விட்டுவிடுங்கள் என்று அந்த யானைப் பாகனிடம் இதமாக கேட்டுக் கொண்டார்.

அந்த யானை, மலர் மாலையில் பதிந்திருந்த தீய எண்ணங்களை எல்லாம் பஸ்மம் செய்வதற்காக தானே வைத்துக் கொண்டது, அந்த தீய சக்திகள் நிறைந்த மலர் மாலையை ஒரு உத்தமருக்குச் சூட்ட அந்த யானை தயாராக இல்லை, இதுவே யானையின் கூரிய அறிவுத் திறன் கொண்ட தியாகச் செயலாகும்.

இது போன்றதே நீங்கள் இங்கு காணும் ஸ்ரீசத்ய சாயியை வணங்கும் யானையின் காட்சியுமாகும். பாபா அணிந்திருக்கும் தூய வெண்ணிற பட்டு வஸ்திரம் நம் பூலோகத்தில் கிடைப்பது அல்ல, சத்ய சாய் லோகத்திலிருந்து பிரத்யேகமாக பராங்குசம் என்னும் வஸ்திர தேவதைகளால் தினமுமே கொண்டுவரப்படும் உடைகளே அவை. இங்கு நீங்கள் காணும் வெண்பட்டு வஸ்திரங்கள் எத்தகைய தீய சக்திகளையும் களையக் கூடிய இயல்பு உடையவை. அதை தன்னை பணிந்து வணங்கும் யானைக்கு பரிசாக அளிப்பவரே ஸ்ரீசத்ய சாய் பாபா.

சூரியன், சூரிய சக்தி என்பவை நாம் நினைப்பதுபோல் ஒன்றே ஒன்று அல்ல. உதாரணமாக,
• பூமியில் கிழக்கே உதிக்கும் சூரியன்
• சூரிய மூர்த்தி, சூரிய நாராயணன், கோடி சூரிய பிரகாசர் என்ற நாமங்களில் எல்லாம் எழுந்தருளிய இறை மூர்த்திகள்

ஸ்ரீசூரிய பகவான்
துடையூர்

• நவகிரக மூர்த்தியாக திருத்தலங்களில் எழுந்தருளிய சூரிய மூர்த்திகள்
• துவார பாலகர்களாய் திருத்தலங்களில் எழுந்தருளிய மூர்த்திகள்
• சிவ சூரியன் நாமத்தில் எழுந்தருளிய தெய்வ மூர்த்திகள்
• மனிதர்கள் விரல்களில் மோதிர விரல் என்ற சூரிய சக்தி விரல்கள்
• சூரியனுக்கு உரிய நவதான்யமான கோதுமை, தாமரை மலர்கள்
• சூரிய சக்திகளை உடைய, சூரிய சக்திகளைப் பிரதிபலிக்கும் திருத்தல தீர்த்தங்கள்
• சூரியன், பாஸ்கரன், உதய சூரியன், ரவிச்சந்திரன் போன்ற சூரிய சக்தி நாமங்கள்
• அவரவர் ஜாதகத்தில் எழுந்தருளிய சூரிய கிரகம்
• எண் ஒன்றிற்கு உரிய சூரிய பகவான்
என்றவாறு எல்லையில்லாது பிரகாசிப்பவை சூரிய சக்திகளாகும்.

அதே போல் கருப்பு என்ற வண்ணத்தைக் குறிக்கும் சக்திகளும் உண்டு
• காளி தேவி, கிருஷ்ண பகவான், மூத்த திருமகள் போன்ற கருநிற தெய்வங்கள்
• கருப்பண்ண சுவாமி, சங்கிலிக் கருப்பு, ஒண்டிக் கருப்பு போன்ற கருப்பு தெய்வ மூர்த்திகள்
• கருநீல வடிவுடைய சனி கிரகம்
• கரிய மேகம்
• நடுவிரல் என்னும் சனிவிரல்
• அனைத்து வண்ணங்களும் சேர்ந்த கலவை
• தலை முடி
• யானையின் தோல்
• உளுந்து, எள் போன்ற கரிய நிறமுடைய தான்யங்கள்
• கரிய நிறமுடைய மலர்கள்
• எண் எட்டைக் குறிக்கும் சனி பகவான்
• ஜாதகத்தில் எழுந்தருளிய சனீஸ்வரன்
என்றவாறு கரிய நிறமுடைய, கரிய நிறத்தைக் குறிக்கும் சக்திகளும் கோடி கோடியே. தலை முடி என்பது கரிய நிறத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும் கண் புருவம், மீசை, தாடி, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள ரோமங்கள், மார்பகங்களில் உள்ள ரோமங்கள், அக்குள் பகுதி ரோமங்கள் என்றவாறு இந்த ரோமங்களும் வெவ்வேறு வண்ணங்களை, சக்திகளை உடையவையே.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
முசிறி

ஏன், கருப்பு, வெள்ளை என்ற வண்ணங்களுக்கு இத்தகைய ஒரு நீண்ட விளக்கத்தை அளிக்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். இத்தகைய நீண்ட பட்டியலை அளித்தாலும் வெள்ளை, கருப்பு என்பதை நாம் எந்த மானுட சிந்தனையாலும் பகுத்துணர முடியாது என்பதே இந்த நிறங்களின் பிரத்யேக சக்தியாகும். உதாரணமாக, வைரம் என்று நாம் அறிந்த இரத்தினக்கல் கரிய நிறமுடைய கரிதானே. கிருஷ்ணன் என்ற கரிய நிறமுடைய கடவுள் பொன்னிறமாய்ப் பிரகாசிப்பவர்தானே. ஐராவதம் என்ற யானை கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசத்துடன் பவனி வருவதுதானே ?

கரியான வைரத்தில் total internal reflection என்றவாறு பிரதிபலிக்கும் ஒளி சக்திகளே வைரத்தின் பளபளப்பிற்கு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே.

மனிதனின் கர்ம வினை என்ற ஒன்றே இத்தகைய வண்ண பேதங்களை உருவாக்க வல்லது. இந்த கர்ம பேதமே நம் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றுகிறது என்றால் மிகையாகாது. இதை உணர்த்தியவரே ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் ஆவார். இந்த மகோன்னத சித்தர் திருஅண்ணாமலை திருக்கோயிலின் கொடிமரத்தடியில்தான் எப்போதும் அங்கு தோன்றும் கொடி மர நிழலில் அமர்ந்திருப்பார். சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ கொடி மர நிழலில் இளைப்பாறுவதுபோல்தான் தோன்றும். நம் சற்குரு போன்று தெய்வீக கண்கள் படைத்தவர்களுக்கு மட்டுமே அந்த உத்தம சித்தர் கொடி மர நிழலில் தோன்றும் எத்தகைய கர்மங்களை எல்லாம் பஸ்மம் செய்து கொண்டிருக்கிறார் என்ற இரகசியம் தெரிய வரும். கர்ம வினையை உடைய மனிதர்களுக்கு மட்டுமே நிழல்கள் பூமியின் மேல் படியும். வள்ளலார் சுவாமிகள் போன்ற உத்தமர்களுக்கு நிழல் பூமியில் படியாது.

அதே போல் திருஅருணாசல புனித பூமியில் திகழும் கொடி மரத்திற்கும் நிச்சயம் நிழல் கிடையாதுதான். ஆனாலும் மனிதர்கள், மற்ற உயிரினங்களின் கர்மங்களையும் திருஅருணாசல கொடி மரம் தாங்கி அருள்வதால் அதுவும் நிழலுடன் திகழும், அந்த நிழலில் தோன்றும் கர்ம வினைகளை ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அந்த கொடி மர நிழலில் தங்கி, ஊர்ந்து சென்று மக்களின் கர்ம வினைகளை எல்லாம் பஸ்மமாக்கினார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உமாபதி மகாத்மியமாகும். உமா பதி என்பது சிவ சக்தி ஐக்யமாக அனைத்து பிரபஞ்ச ஜீவன்களையும் குறிக்கும் ஒரு காரணப் பெயரே.

எப்படி விலை மதிப்பே இல்லாத ஒரு கரித் துண்டும் ஒளியை தன்னுள் பிரதிபலிக்கும் சக்தியைப் பெறுவதால் அது விலை மதிப்பற்ற வைரமாகிறதோ அது போல் மனித இதயமும் தன் உள்ளத்துள் இறை சக்தியைத் தொடர்ந்து பிரதிபலிக்கச் செய்தால் மனிதன் விலை மதிப்பற்ற வைரமாகப் பிரகாசிப்பான் என்று உணர்த்துவதே ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிய கொடிக்கவித் துதியாகும்.

குருமங்கள சக்திகள் பொலியும்
வெண்கொற்றக் குடை

இதை உணர்த்துவதே அடியார்கள் உணர்ந்த ஒரு அடிமை கண்ட ஆனந்த அனுபவமாகும். சமீபத்தில் 21.5.2022 அன்று கஜாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் நம் சற்குருவின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது குருமங்களகந்தர்வ சக்திகள் பொலியும் யானை சாணத்தை நம் அடியார்கள் பெற்று ஹோமத்திற்காக தங்கள் இல்லங்களில் வைத்திருந்தபோது அந்த சாணத்திலிருந்து வெண் காளான்கள் தோன்றி பிரகாசித்ததையே இங்குள்ள சித்திரத்தில் நீங்கள் தரிசிக்கிறீர்கள்.

குடை என்பதற்குப் பல பொருட்கள் உண்டு. கொற்றம் என்பதற்கும் பல அர்த்தங்கள் உண்டு. வெண் கொற்றக் குடை என்றால் வெற்றியை நல்கும், பாதுகாப்பை அளிக்கும், வீரத்தை வர்ஷிக்கும் சாதனம் என்று பொருள். இத்தகைய அனுகிரகத்தைத்தானே இறை வழிபாட்டை மேற்கொள்ளும் அடியார்களும், சற்குருமார்களைத் தரிசனம் செய்யும் பக்தர்களும் வேண்டுவது, விரும்புவது.

மழை வெயிலிலிருந்து பாதுகாப்புப் பெறவே குடையைப் பயன்படுத்துவார்கள். இறை மூர்த்திகள், மகான்கள், வேந்தர்கள் இவர்கள் பவனி வரும்போது குடையைப் பிடித்து வருகிறார்கள் அல்லவா ? இதுவே வெண் கொற்றக் குடை என்பதாகும். இந்த வடிவத்தில்தான் காளான் என்ற தாவரமும் திருஆனேஸ்வரர் திருத்தலத்தில் யானைகளின் அனுகிரகமாக, கஜ குடைகளாக அளித்தன. சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் நிகழ்த்தும் கணபதி ஹோமத்தில் இந்த வெண்காளான் குடைகளையும் ஆஹூதியாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அளப்பரியவையே. குறிப்பாக, பாதுகாப்பு இல்லாதோர்க்கு பாதுகாப்பும், வசதி வாய்ப்பு இல்லாதோர்க்கு அரிய வாய்ப்பை அளிப்பதும், அனைத்து துறைகளிலும் வெற்றியை நல்குவதும் இத்தகைய ஹோமத்தின் பலன்களாகும்.

சுவேதாரண்யம் என்றால் வெண் காடு என்று பொருள். சுவேதாரண்ய ஈசனாக, பால் வண்ண நிறத்தில் அருள்பவரே கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஈசன் ஆவார். ஸ்ரீசக்கரம் என்ற யோக சக்கரத்தைப் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 43 முக்கோணங்கள் அமைந்ததே ஸ்ரீசக்கரமாகும். கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தொடர்ந்து வழிபாடுகள் இயற்றி வந்தால் சுவேதம் ஆரண்யம் என்ற இரு வார்த்தைகள் சுட்டும் பொருள் ஒன்றில் ஒன்று லயமாகி இரண்டும் ஒரே இறை சக்தியாக பரிணமிக்கும். அப்போது 43 கோணங்கள் என்பது மறைந்து (14 x 3 = 42 + 1 = 43) ஒரே சக்தியாக பரிணமிக்கும். இந்த அற்புதத்தையே இங்குள்ள திருத்தலத்தில் திகழும் ஸ்ரீசக்கரம் உணர்த்தும் தெய்வீகப் பரிசாக நீங்கள் தரிசிக்கிறீர்கள்.

அன்பு நிறைந்த உள்ளம்!
இறைவன் நிறைந்த இல்லம்!!

சுவேதம் என்றால் வெண்மை என்றும், சுயம்பாக ஒலிக்கும் வேதம் என்றும் பொருள் உண்டு. அதாவது தன் உள்ளில் ஒலிக்கும் வேத ஒலியை கேட்க வல்லவனே, உணர வல்லவனே சுவேதன். ஒவ்வொரு மனிதனுமே ஸ்வேதன்தான், இந்த உண்மையை உள்ளங்கை நெல்லிக் கனியாக உணர உதவும் திருத்தலமே கரிவலம்வந்தநல்லூர் ஆகும். ஸ்வேதர்களே வருக, வருக !

நாய்க்குடை என்றும் காளான்களை சிலர் அழைப்பதுண்டு. நம் சற்குருவோ தன்னை நாய் என்று அழைப்பதைப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாங்கள் ஸ்வேதம் ஆரண்யம் என்ற சொற்கள் சுட்டும் பொருளை உடனடியாக அறிய முடியாவிட்டாலும் தங்களை நாய் என்ற, இறைவனின் நன்றி மறவா ஜீவன் என்ற, குருவின் அடிமை என்ற, பணிவுத்தன்மையை உருவாக்கிக் கொள்வதும் ஸ்வேதாரண்ய இறைவனை உணரும் ஒரு மார்க்கமே. ஸ்வேதம் ஆரண்யம் என்ற இணைப்பு சிவ சக்தி ஐக்யத்தின் ஒரு அம்சமாக இருப்பதால் இதன் மகிமையை சொல்லவும் வேண்டுமோ ?

உதாரணத்திற்காக 32 மண் அகல்களை வைத்து ஸ்வஸ்திக் ஜோதி தீபங்களை ஏற்றி வழிபடும் முறை இங்கு அளிக்கப்பட்டுள்ளது. திருத்தலங்களில் அல்லது இல்லங்களில் இம்முறையில் இவ்வருடம் முழுவதும், அடியார்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே இத்தகைய தீப வழிபாடுகளை தாராளமாக கடைபிடித்து பயன்பெறலாம். நம் சற்குரு எழுந்தருளிய குருமங்களகந்தர்வ லோகத்திலிருந்து குரு சக்திகளை தீப கிரணங்களாக ஈர்த்து அடியார்களுக்கு அளிக்கும் வல்லமை இந்த ஸ்வஸ்திக் சக்கரத்திற்கு உண்டு.

மஞ்சள், களி மண், தங்கம், வெள்ளி, பசுஞ்சாணம், யானை சாணம் போன்ற எந்த புனிதப் பொருட்களால் உருவான பிள்ளையார் மூர்த்தியையும் இந்த சக்கரத்தின் நடுவே எழுந்தருளச் செய்து தீப ஆராதனையை நிறைவேற்றலாம்.

இந்த தீப வழிபாட்டுடன் 15, 16 அகல் விளக்குகள் அமைந்த சந்திர பிறையையும், சிறப்பாக மூன்றாம் பிறை தரிசன நாட்களில் சேர்த்துக் கொள்வதும் சிறப்புடையதே.

15 அகல் தீபங்களுக்கு ஒரு சிறப்பும், 16 அகல் விளக்கு தீபங்களுக்கு மற்றோர் சிறப்பும் உண்டு.

பிறையும் ஸ்வஸ்திக் சக்கரமும்

15 அகல் தீபங்களை பிறையாக ஏற்றி ஸ்வஸ்திக் சக்கரத்துடன் இணைக்கும்போது 32 + 15 = 47 என்ற கணக்கில் சந்திரனுக்கு உரித்தானதாக, பால் வண்ண பவளப் பிறை என்ற நாமத்துடன் அமைகிறது. இது ராகு கேது மூர்த்திகளுக்கு உரித்தான 4, 7 என்ற எண் சக்திகளைக் கொண்டிருப்பதால் காலசர்ப்ப யோக விளைவுகளைத் தணிக்கும் இரட்சையாக இது செயல்படுகிறது.

16 தீபங்கள் அமைந்த சந்திர பிறையை இணைக்கும்போது அது 32 + 16 = 48 என்ற குரு சக்தி பொலியும் இயந்திரமாக, முத்தோரண முழுத்தாரை என்ற நாமத்துடன் மலர்கிறது. இது மூன்றாம் பிறையை அலங்கரிக்கும் ஒரு எண் கணித சூத்திரமாகவும் பொலியும்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போட்டி நடத்தியபோது தங்கள் இல்லத்தை மங்கள பொருட்களால் அலங்கரித்து தீபங்களை ஏற்றி அதை அன்பால், பண்பால் நிறைத்த பாண்டவர்களின் மேன்மையைப் பற்றி உணர்வீர்கள். இது போலவே நம் இல்லங்களையும் அன்பால், பண்பால் நிறைக்கும் பல வழிபாடுகளில் ஒன்றே ஸ்வஸ்திக் ஜோதி வழிபாடாகும்.

நம் சற்குருவின் இல்லத்தில்
* நல்லதை நினை
* நல்லதை பேசு
* நல்லதை செய்
என்ற செயல்பாடுகளைக் குறிப்பதாக
* Think Good
* Tell Good
* Do Good
என்ற வாசகங்கள் அமைந்த மூன்று மர பீரோக்கள் இருக்கும். இந்த பீரோக்களில் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், அன்னதானத்திற்கு தேவையான பணம் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிக்கும். இவ்வாறு குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல விஷயங்களைப் பற்றி நினைத்து, பேசி வந்தால்தான் நாட்கள் செல்லச் செல்ல நல்ல காரியங்களை செயல்படுத்தும் அளவிற்கு நம் மனமும் விரியும் பொருளாதாரமும் பெருகும். அடிக்கடி நம்முடைய உரையாடல்களிலும் இந்த நல்வார்த்தைகளே அமைவதால் அது சமுதாயத்திற்கும் நலம் பயக்கும் ஒரு வாயு வியாபகமாகவும் அமையும். நம் சற்குரு தன் மனைவியிடம் ஏதாவது பணம் எடுத்து வர வேண்டும் என்றால், “அம்மா, Do Good பீரோவிலிருந்து 300 ரூபாய் எடுத்து வா...”, என்று சாந்தமாக கேட்பார்கள். இதுவே இல்லங்களில் அன்பை விதைக்கும், பரிமாறும் முறைகளில் ஒன்று.

உதயமார்த்தாண்ட தரிசனம்
திருஅண்ணாமலை

இம்முறையில் நீங்கள் இங்கு காண்பதுதான் LOVE என்ற நான்கு ஆங்கில எழுத்துக்களை தாங்கி அமர்ந்துள்ள ஒரு அன்பு குடும்பம். LOVE என்பது 21 எண்ணைக் குறிக்கும் குரு சக்திகளுடன் திகழ்வதே.

நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் எதிர்மறை சக்தி என்பது நம்மை ஏமாற்றி நம்முள் குடி புகுந்து விடும் என்பதால் நம் வாழ்க்கையை நடத்துவதில் கவனமாக இருக்க இத்தகைய நற்சக்திகளைப் பரப்பும் பொருட்களால் நம் இல்லங்களை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

வீணை என்பது சிவபெருமானையே மகிழ்விக்கும் இசையைக் கூட்ட வல்லதுதான். ஆனால், இங்குள்ள வீடியோவில் வீணை வாத்தியத்தின் வால் பகுதியில் யாழி உருவம் அமைந்திருப்பதை நீங்கள் கவனிக்க வாய்ப்பில்லைதான். அப்படியே கவனித்தாலும் அதன் தீய விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பு அதை விடக் குறைவே. நம் சற்குரு இத்தகைய யாழி உருவத்தை முடிந்த மட்டும் தவிர்க்கும்படி அறிவுறுத்துவார். நம் ஆஸ்ரமத்தில் ராம லட்சுமணர்கள் அமர்ந்திருக்கும் ஆசனம் யாழி அமைந்த திருவாசியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை பலரும் பார்த்திருக்கலாம். அந்த யாழியை நாம் அகற்ற முடியாது என்றாலும் அந்த உருவத்தின்மேல் ஓம் சக்கரத்தை பொருத்தி இருப்பதை இன்றும் நீங்கள் காணலாம். இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் நற்சக்திகளையே உருவாக்க, இணைக்க பாடுபட வேண்டும். இங்குள்ள வீணையில் யாழியை அகற்றி அதில் அன்னம், தாமரை, சங்கு போன்ற நல்ல உருவங்களை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்.

சனி பணம் துணை போகும்

நம் பாரதமெங்கும் சில பழமொழிகள் தவறாக பொருள் கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றே சனி பணம் துணை போகும் என்பதாகும். நடைமுறையில் இது சனி பிணம் துணை போகும் என்பதாக, அதாவது யாராவது ஒருவர் சனிக் கிழமையில் இறந்தால் அதைத் தொடர்ந்து பல மரணங்கள் அக்குடும்பத்தில் நிகழும் என்றவாறு பல அனர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறே பல்லி விழுதல், கனவுகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி நம் அடியார்களே பலவிதமான குழப்பத்துடன் நடமாடுகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

கால் மாறினாலும்
கால் மாறா ஸ்ரீநடராஜர்
லால்குடி

இவை அனைத்தும் மனம் பற்றிய விஷயங்களாக இருப்பதால் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடுகள் எத்தகைய மனக் குழப்பங்களுக்கும் ஒரு மாமருந்தாக அமையும். வரும் 30.7.2022 மூன்றாம் பிறை நாள் சனிக் கிழமையில் அமைவதால் இது மேற்கண்ட குழப்பத்தை எப்படி தீர்க்கும் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

எதற்கும் இறுதி முடிவு என்பது நம் சற்குரு அளிப்பதுதானே ? குரு மங்கள கந்தர்வ சக்திகளைக் குறிக்கும் குரு பகவானும், செவ்வாய் பகவானும் ஆட்சி பெற்று விளங்க கந்தர்வத்தை குறிக்கும் சுக்ர பகவான் மிதுனத்தில் எழுந்தருளி உள்ளார். மிதுனத்திற்கு உரிய புத பகவானோ கடகத்தில் எழுந்தருளிய சூரிய பகவானுடன் யோக நிலையில் வீற்றிருக்கிறார். பரிவர்த்தன யோகத்தில் சூரியனும் சந்திரனும் திகழ்வதால் கடக ராசியை வக்ர சக்தியுடன் நோக்கும் சனீஸ்வரரின் பார்வையால் தீய சக்திகள் செயலிழக்க, நற்காரியங்கள் பெருகும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான ஜோதிட அம்சங்களாகும். அதனால் எந்த அளவிற்கு 30.7.2022 அன்று தான தர்மம் போன்ற சுயநலமற்ற காரியங்களில், நற்காரியங்களில் பணத்தையும் பொருளையும் உடலையும் மனத்தையும் செலவிடுகிறோமோ அந்த அளவிற்கு இவை அனைத்தும் நம்முடன் துணை போகும், நமக்கு நல்லதையே வர்ஷிக்கும், பெருக்கும் என்பது பொருள்.

ஸ்ரீகாளிதேவி லால்குடி

மார்த்தாண்டம் என்றால் சூரியன், உதய மார்த்தாண்டம் என்றால் உதய சூரியன் என்பது ஒரு மேலோட்டமான பொருளே. ஸ்ரீஉதயமார்த்தாண்டம் என்ற நாமத்தில் ஈசன் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். உதயமார்த்தாண்டம் என்ற சூரிய மூர்த்திக்கு அருள் புரிந்ததால் ஈசன் இத்தகைய ஒரு சிறப்புப் பெயரைப் பெற்றார். ஒவ்வொரு கிரகத்திற்கும் அனுகிரகம் அளிக்கும் காலம், சக்தி பெருகும் காலம், வலிமை பெறும் காலம் என்று உண்டு. இம்முறையில் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் மிகவும் சக்தி உடையதாகத் திகழும், இதுவும் உதய மார்த்தாண்டமே.

ஸ்ரீபாஸ்கரராயர் அருளியது போல் சூரியனின் கதிர்கள் ஏழு நிமிடங்களுக்கு மாறி அமைவதால் 30.7.2022 அன்று நம் சற்குருவின் பிரார்த்தனையால் அபூர்வமான குருமங்கள உதயமார்த்தாண்ட சக்திகள் பொங்கிப் பெருகுகின்றன. இந்த உதயமார்த்தாண்ட சக்திகளை அடியார்கள் பெருமளவில் பெறவே இங்கு பல வழிபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல ஆயுளையும், நோயில்லாத உடல் ஆரோக்கியத்தையும், என்றும் மானம் இழக்காத, பறிபோகாத நிலையையும் அளிப்பதே உதய மார்த்தாண்ட சக்திகளின் சில பலன்களாகும். ஏழு நிமிடங்கள் மட்டுமே இந்த உதய மார்த்தாண்ட சக்திகள் பூமியில், குறிப்பாக கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் நிரவும் என்றாலும் இந்த அபூர்வ சக்திகள் நம்மை, நம் பாரம்பர்யத்தை ஏழேழ் பிறவிகளுக்கும் தொடர்ந்து வந்து உறுதுணையாக அமையும்.

ஸ்ரீஆருத்ர மகரிஷி பெற்ற
ஆருத்ரா தரிசனம் திருஅண்ணாமலை

லால்குடி திருத்தலத்தில் ஸ்ரீநடராஜ மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீகால்மாறிய நடராஜப் பெருமான் உதயமார்த்தாண்ட பிறையுடன், திருவாசியுடன் திகழ்வதை நீங்கள் இன்றும் தரிசித்து மகிழலாம். இவ்வாறு கால் மாறி ஆடும் நடராஜ நாட்டியத்தைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம் என்றாலும் இங்கு சில சுவையான சித்த இரகசியங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.

வளர்பிறை சந்திரனும் சூரியனும் இணைந்ததே இங்குள்ள உதயமார்த்தாண்ட திருவாசியாகும். லால்குடி திருத்தலத்தில் உள்ள ஸ்ரீநடராஜர் மண்டபத்தில் ஏழு நடராஜ வடிவங்களும் ஒரு நடனகாளி தேவியின் உருவமும் அமைந்துள்ளன. நாம் கண்ணாடியைப் பார்க்கும்போது அதில் நம்முடைய வலது கால் இடது காலாக மாறி அமைவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுவேதான் இங்கு நீங்கள் காணும் நடராஜ தத்துவ விளக்கமும். “ஆர் ருத்ரன்?” என்று ஆருத்ர மகரிஷி நடராஜ மூர்த்தியை நோக்கி கேட்டபோது ஸ்ரீருத்ர ஈசன் மிகவும் மகிழ்ந்து தான் யார் என்பதை அம்மகரிஷிக்கு “காட்டி” அருளியதே ஆருத்ரா வழிபாடாக மலர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். சுருக்கமாகச் சொன்னால் நாம் அனைவரும் இறைவனின் பிரதிபலிப்பே. இந்த பிரதிபலிப்பைச் சுட்டிக் காட்டுவதே லால்குடி, மதுரை போன்ற திருத்தலங்களில் அமைந்த கால் மாறி அமைந்த நாட்டியக் கோலமாகும்.

கால் மாறினாலும் நடராஜப் பெருமான் நம்மை அரவணைக்கும் கருணை என்றும் மாறாது என்பதைக் காட்டுவதாகவே இங்குள்ள சந்திரப் பிறையும் சூரியனும் இணைந்த மார்த்தாண்ட திருவாசி அமைந்துள்ளது.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
லால்குடி

லால்குடியில் அருளும் கால்மாறிய நடராஜர் வடக்கு திசையான குபேர திசையை நோக்கி எழுந்தருளி உள்ளார். தெற்கு திசையை நோக்கி எழுந்தருளிய நடராஜப் பெருமானின் பிரதிபலிப்பாக, ஜீவன்களின் தொகுதியாக இவர் துலங்குகின்றார் என்பது ஒரு பொருளானாலும் செல்வத்தை நாடும் ஜீவன்களுக்கு உற்ற துணை, பிரதிபலிப்பாக, துணையாக அருள்வதே காளி சக்தியாகும் என்பதை உணர்விக்கவும் ஸ்ரீகாளி தேவி உக்ர நடன அம்ச தேவியாக அருகிலேயே வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளாள். இந்த நடராஜ நடன மண்டபம்
• சப்தபடி நாட்டிய மண்டபம்
• சப்தநிலை குரு சக்தி குசா சக்தி மண்டபம்
• சப்தரிஷி மண்டபம்
• சப்தபதி மண்டபம்
• சப்தமுறை மண்டபம்
• அவரவர் தரிசன மண்டபம்
• ஆருத்ரா தரிசன மண்டபம்
என்றெல்லாம் சித்தர்களால் புகழப்படும். இதில் உள்ள அவரவர், அதாவது அவர் அவர், உதாரணமாக கணவன், மனைவி என்ற சக்திகள், எந்த ஜீவனாக இருந்தாலும் அதற்கு தன்னிலையை அறிவித்து தகைசார்ந்த தகைமையைப் புகட்டும் வழிகாட்டி மண்டபமாகத் திகழ்கின்றது என்பதே இவ்வருடம் லால்குடி நடராஜ மண்டபத்தில் வழிபட்டு நாம் பெறக் கூடிய சக்திகளாகும். ஒருவர் தான் யார் என்று அறிந்த பின்தான் இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ள இயலும். இதை உணர்த்துவம் இந்த வழிபாட்டின் மகிமையாகும்.

மூன்றாம் பிறை மூவலம்

மூன்றாம் பிறை முத்தோரணம் என்பது போல மூன்றாம் பிறை மூவலம் என்ற ஒரு அபூர்வமான மூன்றாம் பிறை வழிபாட்டு முறையையும் லால்குடி திருத்தலத்தில் பக்தர்கள் மேற்கொள்ளலாம். நடராஜப் பெருமான் மட்டுமல்லாது கன்னிமூலை கணபதி, தட்சிணா மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளும் பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைந்துள்ளதே லால்குடி திருத்தலத்தின் முக்கியமான சிறப்பாகும். இக்காரணம் பற்றியே இது திரு தவத்துறை என்று பாராட்டப்படுகிறது. சப்தரிஷிகளும் மூல மூர்த்தியான ஸ்ரீசப்தரிஷீஸ்வரரிடம் ஐக்கியம் கொள்ளும் முன் இந்த முத்தோரண வழிபாட்டை நிறைவேற்றி இனி வரும் பக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் அமைந்தனர், அமர்ந்தனர் என்பதும் இந்த வழிபாட்டின் மற்றோர் சிறப்பம்சமாகும்.

கன்னிமூலை கணபதி, நடராஜ மண்டபம், தட்சிணா மூர்த்தி மண்டபம் என்ற வரிசையில் ஒவ்வொரு மூர்த்தியையும் 21 முறை வலம் வந்து வழிபடுதலே மூன்றாம் பிறை மூவலம் என்பதாகும். கற்பனைக்கு எட்டாத பலன்களை வர்ஷிக்கக் கூடியதே இந்த வலமாகும். இறை மூர்த்திகளின் பின்புறமும், நீரின் மேலும், கோலத்தின் அடியிலும் சக்திகள் படியும். இவ்வகையில் ஸ்ரீநடராஜ பெருமானின் பின்னழகை தரிசனம் செய்து பக்தர்கள் பலன் பெறக் கூடிய முறையில் இந்த வலம் அமைந்திருப்பது எத்தகைய சிறப்பிற்கும் ஈடாகாதே. சுவாமியின் பின்னழகை தரிசனம் செய்யும் அதே சந்தர்ப்பத்தில் கால் மாறிய நடராஜ பெருமானையும், அல்லது தத்துவமாக நம்மை நாமே, நம் சுய சிருஷ்டி உருவத்தை தரிசிக்கும் ஒரு அரிய வாய்ப்பும் கிட்டுகிறது என்பதை பக்தர்கள் நினைவில் கொள்ளவும்.

சதுர்த்த மோன நிலை

காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஓதும்போது இந்த ஐந்து மந்திரத் தொகுதிகளுக்குள் மந்திரம் ஓதாத நான்கு கால இடைவெளிகள் தோன்றுகின்றன அல்லவா ? இந்த நான்கு இடைவெளிகளை மனிதர்கள் சாதாரணமாக நினைத்தாலும் காலப் போக்கில் இவை பெரும் கர்ம வினை மலையாய்ப் பெருகி பல பிறவிச் சுமைகளை மனிதனுக்கு அளித்து விடும் என்பதால் நம் சற்குரு போன்றோர் இந்த கால விரயத்திற்குப் பரிகாரமாகவும் லால்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள மேற்கூறிய மூர்த்திகளை 21 முறை வலம் வந்து வணங்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.

21 x 3 = 63 என்ற மூன்றாம் பிறை மூவலம் அக்னி அம்சங்களுடன் பொலிவதால் எத்தகைய கால விரய தோஷத்தையும் இந்த வழிபாடு பஸ்மமாக்கி விடும். இத்தகைய கால விரயத்தை நீக்கும் வழிபாட்டு முறையையே நாம் சிதம்பரம் திருத்தலத்தில் விளங்கும் நிருத்த கண்டா மணி ஓசையில் இணைத்து அளித்தோம் என்பதை அடியார்கள் அறிவார்கள்.

இதே போல திருக்குற்றாலத்தில் பொழியும் பழைய குற்றால அருவி, ஐந்தருவி என்ற இரு அருவிகளிலும் தீர்த்தம் பெற்று இந்த அருவித் தீர்த்தத்தால் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதும் கால விரய தோஷங்களுக்கு அற்புத பரிகாரத்தை அளிக்கும். நம் சற்குரு மேற்கூறிய அருவிகளில் நீராடியபோது அளித்த சக்திகளையே இங்கு பக்தர்கள் புனருத்தாரணம் செய்து பெறுகிறார்கள் என்பதே எக்காலத்தும் பெருகும் சித்த சாம்ராஜ்யத்தின் செல்வமாகும். நம் சற்குருவின் 51 ஜீவ சமாதிகளில் பொலியும் ஆதித்ய (சூரியன், 1) சூட்சும (புதன், 5) சக்திகளின் இணைப்பாக 30.7.2022 அன்று கடக ராசியில் பொலியும் சதுர்த்த மோன நிலை அனுகிரகம் அளிக்கின்றது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆனந்த வர்ஷமாகும்.

திருக்குற்றால திருத்தலத்தில்
வாத்ய இசை !

ஒரு முறை சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஊத்துக்கோட்டை திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்ற நம் சற்குரு அடியார்களுடன் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் பஸ்சில் உள்ள டீவியில் மிகுந்த சப்தத்துடன் ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தை சுவாரயஸ்யமாகப் பார்ப்பதுபோல் நம் சற்குருவும் அமர்ந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஒரு அடியார், “வாத்யாரே, எப்படி உங்களால் இவ்வளவு சப்தத்திற்கு இடையில் இந்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது?” என்று கேட்கவே நம் சற்குருவோ, “ஏன் சார், படம் பார்த்து பொழுதுபோக்கும் நிலையிலா அடியேன் இருக்கிறேன், நாங்கள் ஒவ்வொரு வினாடியும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஆயிரமாயிரமாக எங்கள் தலைமேல் குவிந்து உள்ளன. உங்கள் கண்ணுக்கு அடியேன் படம் பார்ப்பது போல் தோன்றும் அவ்வளவே...,” என்றார். “இந்த தியான நிலையை அடியார்கள் மேற்கொள்ள முடியுமா ?” என்று அந்த அடியார் கேட்டபோது இதற்கு விடையாக நம் சற்குரு அளித்த தியான முறையே, யோக நிலையே சதுர்த்த மோன நிலை ஆகும். உதாரணமாக, திருக்குற்றாலம் திருத்தலத்தில் ஒலிக்கும் மேள தாள வாத்யங்களின் ஓசை இங்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் திருக்குற்றால அருவி ஓசையும் ஓங்கார நாதமாக ஒலிக்கின்றது. இந்த ஓங்கார நாதத்தை தெளிவாக உங்களால் கேட்க முடிந்தால் நீங்கள் சதுர்த்த மோன நிலையில் இலயித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இதற்கு உறுதுணையாக அமைவதே லால்குடி, கரிவலம்வந்தநல்லூர் போன்ற திருத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடுகளாகும்.

சக்திபர ஊர்த்துவ தாண்டவ ஸ்ரீநடராஜப் பெருமான் நல்லாடை

சதுர்த்த மோன நிலையின் மற்றோர் சிறப்பான அனுகிரகம் ஒளியையும் ஒலியையும் இணைக்கும் பாங்காகும். நடராஜப் பெருமான் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்துகையில் பெருமானுக்கு எதிராக ஆடிய காளி தேவி தன் கால்களை தலைக்கு மேல் தூக்க முடியாத பெண்ணின தன்மையால் தலை குனிந்து தோல்வியைத் தழுவினாள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். உண்மையில், இதன் பின்னணியில் பல சுவையான நிகழ்ச்சிகள் உள்ளன. ஒலியையும் ஒளியையும் இணைப்பதே ஊர்த்துவ தாண்டவம். இதை இணைப்பதாகவே சிவபெருமான் தன் காலில் இருந்து கழன்று விழுந்த கழலை தன் கட்டை விரலாலும் அடுத்த குருவிரலாலும் மின்னல் வேகத்தில் எடுத்து தன் காதில் அணிந்து கொண்ட சிவ லீலை சுட்டிக் காட்டுகின்றது.

இந்த உண்மைக்கு சான்றாகவே திருக்குற்றாலத்தில் பொலியும் சித்திரசபையும் குற்றால அருவிகளில் இணையும் ஓங்கார நாதமும் ஒலியும் ஒளியுமாய் இறைவனின் படைப்பிற்கு, எம்பெருமானின் நாட்டிய சுவைக்கு மெருகூட்டுகின்றன. ஊர்த்துவம் என்றால் மேலே எழுதல் என்று பொருள். சிவபெருமான் காலை மேலே தூக்கி கழலை காதில் மாட்டும்போது தோன்றும் ஓங்கார நாத ஒலியை காளி தேவியால் உருவாக்க முடியாது என்பதும் காளி தேவியின் ‘தோல்விக்கு’ காரணமாகும். ‘ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவன் தானே சிதம்பரத்தான்’, அப்படியானால் அந்த சிதம்பரத்தானைத் தவிர ‘வேறார்’ ஒலியை உருவாக்க முடியும் ?!

பொதுவாக, நடராஜப் பெருமான் அக்னி அம்சமான தன் வலது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலக் காட்சியைத் தான் அடியார்கள் பலரும் தரிசித்து இருப்பார்கள். இதற்கு விதி விலக்காக மாயவரம் அருகே நல்லாடை திருத்தலத்தில் எம்பெருமான் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவ கோலத்தை தரிசிக்கலாம். நல்லாடை என்பது அக்னி சக்திகள் பொலியும் பரணி நட்சத்திர தலமாகப் பொலிவதால் எம்பெருமானின் வலது கால் ஊர்த்துவ தரிசன சக்திகளை சாதாரண மானிடர்களால் தாங்க முடியாது என்பதே இதன் முக்கிய காரணமாகும். இதற்காகவே மூன்று மண்டபங்களுக்கு வெளியிலிருந்து மூலவரைத் தரிசிக்கும்படியாக இத்தலம் அமைந்துள்ளது. இந்த ‘குளிர் சக்தி’ தரிசனமும் பக்தர்களால் ‘தாங்கும்’ அளவிற்கு இருப்பதற்காக அம்பாளின் நேர் முகப் பார்வையில் இணையுமாறு இங்கு சுவாமியைத் தரிசித்தல் நலம்.

அரிதரிதாய் அமர்ந்தாரே

ஆணும் பெண்ணும் இணைந்த கோலத்தை அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்று அழைக்கிறோம். சிவபெருமானின் தோற்றங்களில் தட்சிணாமூர்த்தியின் உருவத்தைத் தவிர அனைத்து சிவ கோலங்களுமே நின்ற கோலத்தில்தான் அமைந்துள்ளன. இதற்கு விதி விலக்காக நல்லாடை திருத்தலத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார் என்பதே வேறெங்கும் காண முடியாத அபூர்வ காட்சியாகும். ‘சிவ’ என்பதே எழுச்சி மிக்க கோலம்தான். இந்த எழுச்சி மிக்க கோல வர்ணனையை இன்றும் நீங்கள் காதார கேட்டு மனதார உணர வழிவகை செய்வதே நம் சற்குருவின் தெய்வீக உரைகளாகும்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்லாடை

இத்தகைய எழுச்சி மிக்க வழிபாட்டில் எழும் அக்னி சக்திகளை சாதாரண ஜீவன்களால் கிரகித்துப் பயன்பெற முடியாது என்ற காரணத்தால் சுவாமியே அமர்ந்த கோல அர்த்தநாரீஸ்வர சொரூபத்தில் பிரகார, கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீஅகத்திய பெருமான் சுவாமியைக் காணும்போதெல்லாம், “தனியே எம்பெருமானை மட்டும் தரிசிப்பது கிடையாது. அடியேன் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டு விட்டால், சுவாமி கோபித்துக் கொண்டு ஒரு சினப் பார்வையே சற்றே வீசினாலும் போதுமே, அந்த ருத்ராக்னியில் அடியேன் பஸ்மமாகி விடுவேனே. ஆனால், அன்னை பார்வதி உடன் இருக்கும்போது அடியேன் சுவாமியைப் பார்த்தால் அடியேன் என்ன அபத்தமான வேண்டுகோளை இறைவன் முன் வைத்தாலும் அன்னை அதை பெரிதுபடுத்தாமல், நம் குழந்தை ஏதோ தெரியாத்தனமாய்க் கேட்கிறது, கோபித்துக் கொள்ளாதீர்கள், என்று நம் சுவாமியிடம் வினயமாய்த் தெரிவிப்பாள் அல்லவா?” என்று கூறுவார்.

இவ்வாறு சுவாமியும் இறைவியும் மக்களுக்காக பக்தர்களுக்காக அருளும் வினயக் கோலமே அமர்ந்த கோல ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலமாகும். மேலும் அக்னி அம்சங்கள் பொருந்திய துர்கை தேவிக்கு அருகில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி உள்ளதால் பக்தர்கள் துர்கையின் அக்னி சக்திகளால் புனிதமாக்கப்பட்டு சிவ சக்திகளைத் தாங்கும் வல்லமையைப் பெறுவார்கள். மேலும் துர்கையின் தாய்மை சக்திகளும் எதிரில் எழுந்தருளி உள்ள குழந்தை சண்டேஸ்வர மூர்த்தியால் சிறப்புப் பெறுகிறது என்பதும் நல்லாடை திருத்தலம் சுட்டிக்காட்டும் இறை லீலைகளாகும். இத்தகைய ஈருரி சக்திகளைப் பெறவே இந்திரனின் யானை வாகனமான ஐராவதம் நல்லாடை திருத்தலத்தை வலம் வந்து பல யுகங்கள் வழிபட்டது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த சுவையாகும். இந்த ஈருரி அக்னி சக்திகளும் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் வழிபாடு இயற்றும் பக்தர்களுக்கு அனுகிரகமாக கிட்டுகின்றன.

நல்லாடை அல்லது கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் பல யுகங்கள் வழிபட்டு மனிதர்கள் பெறும் பலனை ஒரே வழிபாட்டில் நம் சற்குரு அளிக்கவல்லவர் என்றால் சற்குருவின் கருணைதான் என்னே என்னே !

எந்தப் பொருளையும் தூய்மைப்படுத்தும் இயற்கையான இயல்பு அக்னிக்கு உண்டு. நீர் என்பது அடுத்தபடியாக வருவதுதான். ஆனால், அனைத்துப் பொருட்களையும் அக்னியால் தூய்மைப்படுத்துவது என்பது இயலாததுதானே. எனவே பெரும்பாலான வழிபாடுகளில் மந்திரங்களில் தோன்றும் அக்னி சக்திகளே உடலையும் மனதையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைகின்றன. இவ்வாறு நல்லாடை என்பது அக்னி சக்தியால் தூய்மைப்படுத்தப்பட்ட ஆடை என்பதும் ஒரு பொருளாகும்.

மீனாட்சி தேவிக்கும் சோமசுந்தரப் பெருமானுக்கும் மதுரையம்பதியில் திருமணம் நிகழ்ந்தது அல்லவா ? இந்த திருமணத்திற்கு தம்பதிகள் அணிய வேண்டிய ஆடைகளை நல்லாடை திருத்தலத்தில் நிகழ்ந்த ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு, அந்த ஆடைகளை இறைப் பிரசாதமாக இறைத் தம்பதிகளுக்கு அளித்தவரே மிருகண்டு மகரிஷி ஆவார். இவ்வாறு தம்பதிகளுக்கு அளித்த கூரை புடவை ரகங்களை தயார் செய்த ஊர்தான் அக்காலத்தில் மாயவரம் அருகில் உள்ள கூரைநாடு ஆகும். இதையொட்டி இன்று நாமும் கூரைநாட்டுப் பகுதிகளில் கிடைக்கும் சுத்த பருத்தியாலான மஞ்சள் நிற ஒன்பது கஜ புடவைகளையும், எட்டு அல்லது பத்துக்கு ஆறு என்ற நூல் வேட்டிகளையும் நல்லாடை இறை மூர்த்திகளுக்கு அணிவித்து மற்ற ஜோடி புடவை வேட்டிகளை இத்தல ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவடிகளில் சமர்ப்பித்து அந்த ஆடைகளை கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தம்பதிகளுக்கு தானமாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அமோகமே.

முருகவேளிள் அருட்கைவேல்

நமசிவாய, ராம ராம என்ற மந்திரங்களை கைவிரல்களால் ஜபிப்பதுபோல் முருக மந்திரத்தையும் கைவிரல்களால் ஜபிக்க முடியுமா என்று நம் சற்குருவிடம் வினவியபோது நம் சற்குரு அளித்த விடையை இங்கு அளித்துள்ளோம். மனித ஆரோக்யத்திற்கு இன்றியமையாதது வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் ஆகும். உண்மையில் இந்த மூன்று நாடிகளால் மனித ஆரோக்யம் அமைகிறது என்பதை விட மனித உடல், மனம், உள்ளத்தின் ஆரோக்ய நிலையையே இந்த மூன்று நாடிகளும் சுட்டிக் காட்டுகின்றன. புற்று நோய்களின் தன்மையை உறுதி செய்ய தற்காலத்தில் கிர்லியன் போட்டோ முறை (Kirlian photography) கையாளப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இறந்த மனித செல்லிலிருந்து கதிர்கள் வராதபோது அது புற்று நோயின் அறிகுறியாக கொள்ளப்படுகிறது.

உண்மையில் இறந்த உடல் செல்களுக்குள் ஒளிக் கதிர்கள் செல்வதில்லை என்பதே நம் முன்னோர்கள் சூக்கும சரீரம் குறித்து தெரிவித்த தெய்வீக உண்மையாகும். ஒரு முறை திண்டுக்கல் அருகில் உள்ள ஸ்ரீகள்ளியடி சித்தரைத் தரிசிக்க ஒரு அடியார் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றபோது, சுவாமி அந்த அடியாரைப் பார்த்து, “என்னப்பா செத்துப் போன ஆளை எல்லாம் நண்பன் என்று கூட்டிக் கொண்டு திரிகிறாயே?” என்று கேட்டாராம். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்த நாள் அந்த நண்பர் இறந்து விட்டார் என்று அறிந்தபோதுதான் சுவாமிகள் இவ்வாறு சூட்சும சரீரத்தின் இயல்பைப் பற்றி தெரிவித்தார்கள் என்று புரிந்து கொண்டாராம்.

மனித ஆரோக்ய நிலையைக் குறிக்கும் இந்த மூன்று நாடிகளைப் பற்றி அறிய பன்னெடுங்காலம் கை தேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் பயில வேண்டும். நடைமுறையில் இது சாத்தியாமாகக் கூடியதா ? அப்படியே இந்த நாடிகளைப் பற்றி அறிந்தாலும் அவற்றை சமன் செய்வது என்பது கைதேர்ந்த வைத்தியர்களால் மட்டுமே இது சாதிக்கக் கூடியது அல்லவா? சூடு, குளிர்ச்சி என்ற சாதாரண விஷயத்தையே மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணமாக, தயிர் உண்ணுதல் சூட்டை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். அதற்காகவே தயிரில் நீரை ஊற்றி கடைந்து பின்னர் அந்த தயிரை உபயோகித்தால் அது உடல் நலத்திற்கு குளிர்ச்சியை அளிக்கும். இந்த கடைந்த தயிரை இரவில் கூட சாதத்தில் ஊற்றி உணவருந்தலாம் என்று கூறுவதே சித்த வைத்தியம்.

இவ்வாறு இந்த மூன்று சித்த வைத்திய நாடிகளைப் பற்றி அறிவது தற்கால மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்பதால் நம் சற்குரு போன்ற மகான்கள் முருக மந்திரத்தை அளித்து இந்த மூன்று நாடிகளின் தெய்வீக சக்தியை சாதாரண மனிதர்களும் பெறும் வழிபாட்டு முறையை அளித்துள்ளனர். மனிதனின் உள்ளங்கைகளில் ஆயுள் ரேகை, புத்தி ரேகை, இதய ரேகை என்ற மூன்று முக்கிய ரேகைகள் உண்டு. மூளை, இதயம், மற்ற உடல் உறுப்புகளுக்கும் தொடர்பை உடையதே இந்த மூன்று ரேகைகளாகும்.

இடது கையில் உள்ள இந்த மூன்று ரேகைகளின் மேல் வலது ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல்களை வைத்து வள்ளி முருகா தேவானை என்று ஜபிப்பதே முருக நாம மந்திர ஜபமுறையாகும். ஒவ்வொரு ரேகைக்கும் ஒரு நாமமாக வள்ளி, முருகா, தேவானை என்றோ அல்லது வ ள் ளி, மு ரு கா, தே வா னை என்று மூன்று ரேகைகளுக்கும் ஒரு முருக நாமத்தை ஓதி ஜபிப்பதும் ஏற்புடையதே. இவ்வாறு குறைந்தது ஒரு நாழிகை நேரமான 24 நிமிடங்களுக்கு ஜபித்து பின்னர் வலது ஆள் காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல்களை ஒன்று சேர்த்து இடக் கை மணிக்கட்டின்மேல் வைத்து மூன்று நாடிகளை தொட்டு சரவணபவமுருகா என்று ஓதி இடது மணிக்கட்டில் நாம் இரத்தத் துடிப்பாக. நாடித் துடிப்பாக குறைந்தது ஒரு நிமிடம் ஸ்பரிசித்து, உணர்வதே ஒரு சுற்று முருக நாம ஜபமுறையாகும்.

அவரவர் சூழ்நிலை வசதியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஜப முறையைக் கையாளலாம். ஓரிடத்தில், இல்லத்தில், திருத்தலங்களில் அமர்ந்தோ அல்லது ஆலயங்களை, மலைத் தலங்களை வலம் வரும்போதோ கூட இம்முறையில் முருக நாமத்தை ஜபிக்கலாம். படுக்கையில் படுத்தபடி, இரவில் தூங்கும் முன் இவ்வாறு ஜபித்தபடியே உறங்குவது கூட தவறு கிடையாது. நல்ல உடல், மன ஆரோக்யத்தை அளிக்கக் கூடிய அற்புத வழிபாடு இது.

புற்று நோயைக் கண்டறிந்து இறந்த செல்களை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தி ஓரளவு ஆரோக்யத்தை அளிப்பதாக தற்போதைய விஞ்ஞானம் கூறுகின்றது. இவ்வாறு இறந்த செல்களுக்கும் உயிரை, ஜீவ சக்தியை அளித்து முழுமையான ஆரோக்யத்தை அளிக்க வல்லதே மேற்கூறிய முருக நாம ஜப முறை என்றால் எத்தனை பிறவிகள் ஓடாய்த் தேய்ந்தாலும் நம் சற்குருவிற்கு நம்மால் நன்றிக் கடன் அளிக்க முடியுமா?

பிரளயம் காத்தார்

பொதுவாக பிரளயம் என்றால் முழுவதுமாக அனைத்தும் அழிவது என்றே நாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் இறைவனுடைய படைப்பில் எதுவும் அழிவதில்லை, எதுவும் புதிதாகத் தோன்றுவதும் இல்லை. இறைவன் படைப்பில் மாற்றமே உண்மை, மாற்றமே என்றும் நிரந்தரம். இந்த மாற்றமானது உலகளாவிய நிலையில் தோன்றும்போது அதை பிரளயம், மிகப் பெரிய மாற்றம் என்று நாம் கூறுகிறோம்.

பிரளயம் காத்தார், பிரளயம் காத்த அம்மன், பிரளயநாதர், பிரளகால நாதர், பிரளயம் காத்த விநாயகர் என்றெல்லாம் நாம் வணங்கும் மூர்த்திகள் அனைவருமே இவ்வாறு நாம் அறிந்த பிரளய இரகசியங்களை மக்கள் உணரும் வகையில் நல்முறையில் பயன்படுத்த வழிகாட்டுபவர்களே.

சீர்காழி, திருச்சுழி, திருஅண்ணாமலை போன்ற பல தலங்களும் பிரளய காலத்தில் மறையாது பிரளயத்தையும் மிஞ்சி, விஞ்சி நிற்கும் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். அப்படியானால் பிரளயத்தால் உலகம் அழியும் சமயத்தில் இத்தகைய திருத்தலங்களை நாம் அடைக்கலம் கொண்டு விடலாமே என்று மனித மனம் எண்ணுவது இயற்கையே. ஆனால், ஜலபிரவாகத்தில் உலகம் பிரளயத்தைச் சந்திக்கப்போவதாக வைத்துக் கொண்டால் அப்போது ஒரு நொடிக்குள் 300 அடி உயரத்திற்கு உலகம் முழுவதும் நீர் சூழ்ந்து விடும் என்றால் மனிதனின் இந்த சுயநலம் எண்ணம் எப்படி நிறைவேறும் ?

பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நிகழும் பிரளயத்தைக் காப்பதற்காக மட்டும்தானா இறை மூர்த்திகள் பல திருத்தலங்களிலும் எழுந்தருளி உள்ளனர். பிரளயம் என்பது பிரபஞ்சம், உலகம், நாடு, சமூகம், இனம், குடும்பம் என்று மட்டுமல்லாது ஒரே ஒரு மனிதனின் மனத்திலும் கூட தோன்றி அலைக்கழிக்க வல்லதே. மது, மாது, வறுமை மயக்கத்தால் மனதில் பிரளயத்தை சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். இத்தகைய பிரளய எண்ணங்களை மாய்ப்பதற்காக அல்லும் பகலும் ரிஷிகளும், மகான்களும், குருமார்களும் பூமியில் தோன்றி பல பல பூஜைகளை இயற்றி நம்மைக் காத்து வருகின்றனர். இம்முறையில் குருவித்துறை திருத்தலத்தில் தோன்றிய மரத்தில் தீய எண்ணங்களை ஈர்த்த இலைகளைப் பறித்து வீசி எறிவதாகவும், உண்டு கழிப்பதாகவும் உள்ள ஒரு வானரத்தின் செயலை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

குருவித்துறையில் ஸ்ரீசெண்பகவல்லி தாயார் சன்னதியில் உள்ள சாளரமும் இவ்வாறு தீய சக்திகளைக் களைந்து நல்ல சக்திகளை மட்டும் திருச்சன்னதியில் உலவ விடுவதாக, நிரவி அருள் புரியும் தன்மையையும் நீங்கள் கண்டு இரசிக்கலாம். இத்தகைய சாளரங்கள் பலவும் நம் திருத்தலங்களில் ஏராளமாக உள்ளன. இத்தகைய சாரளங்களின் பணியை உணர்ந்தால் சாதாரண ஜடப்பொருட்கள் என்று நாம் நினைக்கும் இறை சாதனங்களும் இறைவன் படைப்பில் எவ்வளவு உயர்ந்த பணியை ஆற்றுகின்றன என்பதை உணர்ந்து கொள்வோம்.

இறைவன் கருணை எல்லையற்றது என்பதை உணர்த்துவதே எண்ணில் பதியும் ஏற்றமிகு தெய்வீக சக்திகள். மூன்று என்பது குருவிற்கு உரிய எண் கணித இலக்கணமாகும். இந்த எண்களின் தெய்வீக சக்தியே பல பிரளயங்களைத் தடுத்து மனித மனதில் நல்லெண்ணங்களை வேரூன்றச் செய்யும் சக்தி பெற்றது என்றால் இத்தகைய திருத்தலத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடுகளின் மற்ற தன்மைகள் எப்படி இருக்கும்?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam