கோவைக் காட்டும் கோவணம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரிதுணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கோவணாண்டியின் கோவண லீலை

தனது குருநாதர் கோவணாண்டிப் பெரியவருடன் சிறுவன் வெங்கடராமன் எத்தனையோ முறை திருஅண்ணாமலையை வலம் வந்திருந்தான் என்றாலும் ஒவ்வொரு கிரிவலத்திலும் அவன் பெற்ற தெய்வீக அனுபவங்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்தன என்பது உண்மையே.

ஒவ்வொரு முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் குறைந்தது 100 தரிசனங்களைக் காட்டி அவற்றிற்கு உண்டான பலன்களின் விளக்கங்களையும் பெரியவர் தெளிவாக தனக்கே உரித்தான மெட்ராஸ் பாஷையில் அளித்து வந்தார்.  இவ்வாறு தனது ஒன்பது வருட குருகுல வாசத்தில் சிறுவன் வெங்கடராமன் பெற்ற தரிசனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் பெருகினவே. அந்த தரிசனங்களின் பலன்களையே பிற்காலத்தில் தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு குரு பிரசாதமாக அளித்து அவர்களுக்கு நல்லாசி வழங்கி வந்தார் ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.

அத்தகைய கிரிவல அனுபவங்களில் ஒன்று...

அன்று சனிக் கிழமை. சிறுவனுக்கு பள்ளி விடுமுறை. மறு நாள் ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறையாக அமைந்ததால் இரண்டு நாட்களையும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் ”உருப்படியாக” கழிக்கலாம் என்று பெரியவர் சொன்ன அறிவுரையை ஏற்று பெரியவருடன் திருஅண்ணாமலை வந்து சேர்ந்தான் சிறுவன்.

இருவரும் குபேர தீர்த்தத்தைத் தாண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது பெரியவர் திருஅண்ணாமலையைச் சுட்டிக் காட்டி, ”இது தாண்டா ருத்ர பிரஜாபதி தரிசனம்,” என்று சொல்லி சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார்.

சிறுவனும் உடனே ரோபோ போல சடாரென பெரியவர் அருகிலேயே தரையில் விழுந்து திருஅண்ணாமலையை வணங்கினான். கிரிவலம் செல்லும்போது இவ்வாறு பெரியவர் தரையில் விழுந்து வணங்கினால் அது மிகவும் முக்கியமான தரிசனம் என்பதை சிறுவன் தன்னுடைய கிரிவல அனுபவத்தில் உணர்ந்திருந்தான்.

ருத்ர பிரஜாபதிகள் என்பவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். இத்தகைய ருத்ர பிரஜாபதியின் மகளாகப் பிறந்தவள்தான் அன்னை பார்வதி தேவி. அவ்வாறு ருத்ர பிரஜாபதி ஒவ்வொருவரும் பதவி ஏற்கும்போது அந்த வைபவம் இந்த தரிசனப் பகுதியில்தான் நிகழும்.  ஏகாதசி திதிகளில் இந்த ருத்ர பிரஜாபதி முக தரிசனம் பெறுவதால் பல ஆண்டுகள், பல பிறவிகள் ஏகாதசி விரதம் இயற்றாத கர்ம தோஷங்களும் விலகும்.

ஆரோக்ய வாழ்விற்கு வழி

ஏகாதசி விரதம் உடல், மனம், உள்ள வலிமையை அதிகரிப்பதில் நிகரற்றது. பொதுவாக, ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி எந்த அளவிற்கு பலம் பெற்றிருக்கிறாரோ அந்த அளவிற்கு ஜாதகரின் உடல் வலிமை, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால், விதி வசத்தால் பலமற்ற லக்னாதிபதியால் உடல் நலம் குன்றி இருப்பவர்கள் இத்தகைய ருத்ர பிரஜாபதி தரிசனத்தை, குறிப்பாக ஏகாதசி தினங்களில் நிறைவேற்றி தேனில் ஊறிய நெல்லிக் கனிகளைத் தானமாக அளிப்பதால் உடல் நலம் சிறப்படையும்.

திருஅண்ணாமலையில் இத்தகைய தரிசனம் பெற முடியாதவர்கள் தங்கள் ஊரில் பெருமாள் தலங்களில் துவாதசி திதி நாட்களில் இத்தகைய தேன் நெல்லிக்காய் தானங்களை அளிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

இவ்வாறு பெரியவர் அளித்த அற்புத விளக்கங்களை கேட்டுக் கொண்டே வந்த சிறுவன் கிட்டத்தட்ட இந்திர தீர்த்தப் பகுதிக்கே தாங்கள் வந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்தான்.

அப்பகுதியில் பசு மாடுகள் நிறைய உலாவின. அவைகளை அன்புடன் தடவிக் கொடுத்த பெரியவர் எங்கோ பார்த்தபடி, ”அரசனை நம்பி புருஷனைக் கை விட்டால் நல்லதுதானே?” என்றார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”நல்ல நல்ல விஷயமாக சொல்லிக் கொண்டு வந்த வாத்யார் ஏன் இப்படி ஏதோ ஒரு தப்பான விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்,” என்று நினைத்தான். ஆனால், வாய் விட்டுச் சொல்லவில்லை. காரணம், முந்திய தினம்தான் பெரியவரிடம் ஒரு முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தான்.

அது என்ன ? நீங்களும் தான் தெரிந்து கொள்ளுங்களேன்.

திருச்சி குணசீலம் அருகே ஒரு நெசவாளி இருந்தார். இறை பக்தி மிகுந்தவர். தினமும் காவிரியில் தீர்த்தமாடி குணசீலப் பெருமாளையும் ஸ்ரீ தார்மீக நாதரையும் வழிபட்டு வந்தார். தான் நெய்யும் முதல் வேட்டியை கண் தெரியாதவர்களுக்குத் தானமாக அளிக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இது தவிர வேறெந்த வழிபாட்டு முறையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அவர் உயிர் நீத்தபோது எம தூதுவர்களுக்குப் பதிலாக கைலாயத்திலிருந்து சிவ கணங்களே வந்திறங்கி அவரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்றனர். காரணம், அவரிடம் தானம் பெற்ற ஒரே ஒரு ஏழை சிவனடியாராக இருந்ததுதான்.

திருக்கைலாயத்தை அடைந்த அந்த நெசவாளி கைலாய வீதி வழியாக சென்று கொண்டிருந்தான். நமது பூமியில் ஏழை பணக்காரன், படித்தவன், பாமரன் என்ற பலத்தர மக்களும் இருப்பதுபோல திருக்கைலாயத்திலும் பலவித ஆன்மீக நிலைகளைக் கொண்ட சிவ பக்தர்கள் உண்டு. இது அந்த நெசவாளிக்குத் தெரியாது.

கிண்டல் வேண்டாம்

அப்போது அந்த தெருவில் ஒரு சித்தர் தன்னுடைய கைகளை வித்தியாசமாக ஆட்டிக் கொண்டு முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு நடந்து வந்தார். யாராக இருந்தாலும் அந்த காட்சியைக் கண்டால் நிச்சயம் சிரிப்பு வரும். எனவே அந்த நெசவாளியும் அந்தச் சித்தரைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்து விட்டான். நெசவாளியின் சிரிப்பைக் கேட்டு அந்த சித்தர் நெசவாளியைப் பார்த்தார். அவ்வளவுதான் மறுநொடி குணசீலத்தில் ஒரு சொறி நாயாகக் கிடந்தார் அந்த நெசவாளி.   

பின்னர் பல பிறவிகள் குணசீலத்திலேயே இறைவனுக்கு சேவைகள் புரிந்து மீண்டும் கைலாயம் அடைந்தார் அந்த நெசவாளி. இதற்குள் ஆயிரக் கணக்கான பிறவிகள் வந்து போய் விட்டன.

ஸ்ரீமுஞ்சி விநாயகர்
தாபாய் திருத்தலம்

அந்த நெசவாளிக்கு குருவின் வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு கைலாயம் செல்லும் அளவிற்கு இறை சேவைகள் நிறைவேற்றி இருந்தாலும் ஒருவரின் செய்கைகளை விமர்சிக்கும் தவறான ஒரு செயலைச் செய்து விட்டார். அதே சமயத்தில் அவர் சற்குரு ஒருவரைப் பெற்றிருந்தால் நிச்சயமாக அவர் நமக்கு யாருடைய செய்கைகளையும் விமர்சிக்கும் தகுதி கிடையாது. எல்லாம் இறைவன் செயல். அப்படி இருக்கும்போது ஒருவரைக் கிண்டல் செய்தால் அது இறைவனைக் கிண்டல் செய்வது போலாகும் என்று பூமியிலேயே அந்த அடியாருக்குத் தேவையான உபதேசங்கள் சற்குரு மூலம் அளிக்கப்பட்டிருக்கும்.

எனவே அத்தகைய அடியார்கள் கைலாயத்தில்தான் என்று கிடையாது அவர்கள் இனி எப்பிறவி, எங்கெடுத்து வாழ்ந்தாலும் அவர்கள் நிச்சயமாக மற்றவர்களை விமர்சித்து அவர்களுக்கு மன வேதனையை அளிக்கும் தவறைச் செய்ய மாட்டார்கள் என்று கோவணாண்டிப் பெரியவர் சிறுவனிடம் கூறியிருந்தார்.

அதானல்தான் பெரியவர் அரசனை நம்பி புருஷனைக் கை விட்டால் தப்பில்லை என்று கூறியபோது சிறுவன் மனதிற்குள் குழம்பினாலும் அதை வெளிக்காட்டாது ஆனால் அதே சமயத்தில் பெரியவரின் அந்த வார்த்தைகளையும் நம்ப முடியாமல் பெரியவரை விநோதமாகப் பார்த்தான்.

பெரியவர் ஒரு புன்சிரிப்புடன், ”ஆமாண்டா அதில் என்னடா தப்பு?” என்று எதிரிலிருந்த பெரிய அரச மரத்தைக் காட்டி கேட்டார்.

சிறுவனுக்கு இப்போது அந்த அரச மரத்தைப் பற்றி முன்பு ஒரு முறை பெரியவர் சொன்ன ஒன்றிரண்டு விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

இந்திர தீர்த்தக் கரையில் இருந்த அந்த பழமையான அரச மரத்தை மாதுரி என்ற கற்புக்கரசி வழிபட்டு உன்னத நிலைகளை அடைந்தாள். வெள்ளிக் கிழமைகளில் அந்த மரத்திற்கு தானே அரைத்த மஞ்சளைப் பூசி வழிபட்டு வந்தால் பெண்கள் நலம் அடைவர்.

பெரியவர் தொடர்ந்தார். ”என்னடா நைனா ஏதாவது புரிகிறதா? அரசன் என்றால் இறைவன். புருஷன் என்றால் பிரகிருதி. அதாவது இவ்வுலகம். யார் ஒருவர் இவ்வுலக சுகத்திற்கு அடிமை ஆகாமல் இறைவனுக்கு மட்டுமே அடிமை என்று வாழ்கிறார்களோ அவர்களுடையதே உண்மையான வாழ்வு. இதைத்தான் பெரியவர்கள் அரசனை நம்பி புருஷனைக் கை விடு என்றார்கள். ஆனால், இவ்வுலக சுகத்தை விட்டு விடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? ”

“அன்பே உருவான புத்தர் பிரான் அரண்மனை சுகத்தையும் இல்லற சுகத்தையும் அனுபவித்திருந்தாலும் அவரால் இறை அனுபூதியை முழுமையாகப் பெற முடியவில்லையே. இறுதியில் போதி மரம் என்னும் அரச மரத்தைச் சரணடைந்துதானே இறைவனை முழுமையாக உணர்ந்தார். உண்மையான குருமார்களின் நடமாட்டம் குறைந்து விட்ட இந்நாட்களில் தனக்கு குரு வேண்டும் என்ற மனதார நினைக்கும் ஆண்களும் பெண்களும் அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதால் மரங்களில் நான் உத்தம அரச மரமாக இருக்கிறேன் என்று அருளிய கிருஷ்ண பகவானே அவர்களுக்கு சற்குருவைத் தேடி தருவார். ”

பெண்களுக்கு எது பாதுகாப்பு ?

இன்றைய சூழ்நிலையில் இல்லறப் பெணகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும், கணவனால் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பையும் நற்கதியையும் அளிப்பதே அரச மர வழிபாடாகும்.

”எந்த ஊரில் இருந்தாலும் பெண்கள் நன்கு வயது முதிர்ந்த அரச மரங்களையோ, தல விருட்சமாக உள்ள அரச மரங்களையோ அல்லது கோயிலில் உள்ள எந்த அரச மரத்தை வேண்டுமானாலும் வலம் வந்து மஞ்சள் குங்குமமிட்டு வழிபடுவதால் தக்க பாதுகாப்பையும் மன அமைதியையும் பெறுவர் என்பது உறுதி. கணவன்மார்களின் குடி, சூதாட்டம் போன்ற தவறான வழக்கங்களால் அவதியுறும் பெண்கள் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுவதால் கணவன் தீய பழக்கங்களிலிருநது விடுதலை பெற துணை புரியும். கணவனின் பாதுகாப்பைப் பெற முடியாத பெண்கள் இத்தகைய வழிபாடுகளால் தார்மீக ரீதியான முறையில் உரிய பாதுகாப்பைப் பெறலாம், ஒரே அத்தி மரத்தாலான மயிலாடுதுறை அருகே உள்ள வானமுட்டிப் பெருமாள் போன்ற இறை மூர்த்திகளின் வழிபாடும் மேற்கூறிய பலன்களை அளிக்கவல்லதே. ”

”அரச மரத்தைச் சுற்றி வந்தால் அடிவயிற்றில் பிள்ளை வருமா என்று சிலர் தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொண்டு கேட்பதுண்டு. இறைவனால் ஆகாத காரியம் எதுவும் இவ்வுலகில், ஏன் எவ்வுலகிலும் இல்லை. முருகப் பெருமான், மனித உருவில் அவதரித்த ராமச்சந்திர மூர்த்தி, ஏசுபிரான் தற்காலத்தில் தோன்றிய ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களைப் போன்ற எண்ணற்றோர் விந்து சம்பந்தமின்றி இறைவனின் சங்கல்பத்தால் பிறந்தவர்கள்தாமே. ”

இவ்வாறு அரச மரத்தைப் பற்றி பெரியவர் பல அற்புத விஷயங்களைக் கூறிக் கொண்டே வந்தபோது சிறுவனுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வரவே,”வாத்யாரே ….” என்று குரல் கொடுத்தான்.

பெரியவர் சிறுவனைப் பார்த்து அன்புடன், ”என்னடா கண்ணு, ஏதாவது மிட்டாய் வேண்டுமா?” என்று பரிவுடன் கேட்டார்.

ஆனால், பெரியவர் வார்த்தைகளைக் கேட்ட சிறுவனுக்கோ என்னவோ போலாகி விட்ட்து. அவர்கள் நின்ற அரச மரத்திற்கு எதிரே சில கடைகள் இருந்தன. அதனால் அதைப் பார்த்ததும் சிறுவனுக்கு ஏதாவது வாங்கித் தரலாம் என்று பெரியவர் நினைத்ததால் அதை எண்ணி சிறுவன் சநதோஷம் அடைந்தாலும் அதே சமயத்தில் பெரியவரைக் கூப்பிட்டால் ஏதோ சாப்பாட்டிற்காகத்தான் தன்னைக் கூப்பிடுவான் என்று நம்மை சாப்பாட்டு ராமன் கணக்கில் சேர்த்து விட்டாரே என்ற வருத்தம் மறுபுறம் கொப்பளிக்க அதிலிருந்து ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “அதில்லை வாத்யாரே, நீ அரசமரத்தைப் பற்றி சொன்னதும் எனக்கு ஸ்கூல்ல ஒரு பையன் கேட்ட கேள்வி ஞாபகம் வந்த்து. அதை உன்னிடம் கேட்கலாம் என்றுதான் …”  என்று இழுத்தான்.

பெரியவர் சிரித்துக்கொண்டு, ”அப்படியா சரி சரி, நீ எப்போவும் தெய்வீகமாத்தான்டா கேட்ப. நான்தான் உன்னோட தெய்வீகத்தைப் புரிஞ்சுக்காம உன்ன சாப்பாட்டு ராமனாகவே நினைச்சுக் கிட்டு இருக்கேன்,” என்று தொடர்ந்தார். ”சரி சரி விஷயத்தைச் சொல்லு.”

”திருப்பதி மலை மேல இருக்குறது பெருமாள்தானே?”

முஞ்சிப் புல்

”என்னடாது, ஏதோ புதுசா ஒரு சந்தேகத்தைக் கிளப்பற. ஏண்டா நாம் எத்தனையோ தடவ திருப்பதிக்கு போய் லட்டு சாப்பிட்டு இருக்கிறோமே.”

வாத்யார் வேண்டுமென்றே ”லட்டு” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து பேசியதுபோல் சிறுவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் சிறுவன் அதைக் கண்டு கொள்ளாமல், ”இல்லை வாத்யாரே திருப்பதி மேலே இருக்கிற வெங்கடாஜலபதி பெருமாளப் பத்தி நீ நெறய விஷயம் சொல்லி இருக்கிற. ஆனால், எங்க ஸ்கூல் பையன் ஒருத்தன் திருப்பதி மலை மேல் இருக்கிறது பெருமாள் கிடையாது. முதலில் அங்கு இருந்தது முருகப் பெருமான்தான். பின்னால் வந்தவர்கள் முருக விகரஹத்தை எடுத்து விட்டு வெங்கடாஜலபதியை வைத்து விட்டார்கள் என்று அவன் அப்பா சொன்னதாகச் சொல்கிறான்.”

”உங்கிட்ட கேட்டாதானே எல்லா குழப்பத்துக்கும் விடை கிடைக்கும் என்பதால்தான் வாத்யாரே இப்ப அதைக் கேட்கிறேன்,” என்று சிறுவன் அப்பாவித்தனமாக பெரியவரிடம் கேட்டான்.

பெரியவர் சிறுவன் சொன்ன வார்த்தைகளை சிறு குழந்தைபோல கேட்டு விட்டு, ”ஆமாண்டா, திருப்பதி மலை தானே. குன்றின் மேல் யார் இருப்பார்கள்? குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்றுதானே பெரியவர்கள் எல்லாம் பாடியிருக்கிறார்கள். அப்படீன்னா நீயே பார்த்துக்கயேன்,” என்று கூறி பெரியவர் சிறுவனைப் பார்த்து கண்ணடித்தார்.

சிறுவனுக்கு தலை சுற்றியது. ”என்ன வாத்யாரே, ஒரு குழப்பத்தை தீர்த்துக் கொள்ள உன்னைக் கேட்டால் நீ அந்தக் குழப்பத்தை மேலும் அதிமாக்கி விட்டாயே,” என்பது போல் பெரியவரைப் பார்த்தான். ஆனால், பெரியவர் எதுவும் கூறாமல் மௌனமாகி விட்டார்.

சிறுவனக்கு மேலும் என்ன கேட்பது என்று புரியவில்லை.

ஹோரை காட்டும் வழி

பெரியவர்தான் மௌனத்தைக் கலைத்தார். ”இந்த மாதிரி குழப்பமான விஷயத்தில் எப்படி முடிவெடுப்பது? பிரச்னம் பார்க்கலாம் இல்லாவிட்டால் ஹோரை மூலம் நீ ஒரு முடிவுக்கு வரலாம் அல்லவா?”

ஆமாம் என்பது போல் சிறுவன் தலையாட்டினான்.

பெரியவர் தொடர்ந்தார், ”இது என்ன மாதம்?”

”புரட்டாசி மாதம்.”

”புரட்டாசி மாதம் யாருக்கு உகந்தது?”

”பெருமாளுக்கு.”

”இன்றைக்கு என்ன கிழமை?”

”சனிக் கிழமை”

”சனிக் கிழமை எந்த தெய்வத்திற்கு விசேஷமானது?”

ஸ்ரீ பிரணவேஸ்வரர்
தாபாய் திருத்தலம்

”சனிக் கிழமை பெருமாளுக்குத்தான்.”

”சரி, இப்போ என்ன ஹோரை?”

சிறுவன் விரல் விட்டு எண்ணி, ”புத ஹோரை.”

”சனி பகவானுக்கு புதன் நட்பா பகையா?”

”நட்பு பாவம்தான், வாத்யாரே.”

”புத ஹோரையின் அதிபதி தெய்வம் எது?”

”பெருமாள்தான்.”

பெரியவர் சிறுவனை உற்றுப் பார்த்து, ”என்னடா நைனா இன்னுமா உனக்கு சந்தேகம்?”

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்தின் உச்சகட்டத்திற்கே சென்று விட்டதுபோல் தோன்றியது.

இவ்வாறு அவர்கள் நடந்து தற்போதைய ரமணாஸ்ரமம் தாண்டி ஏகமுக லிங்க தரிசனப் பகுதிக்கு வந்து விட்டனர்.

பெரியவர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, மீண்டும் தொடர்ந்தார். ”சரிடா, உன்னோட குழப்பம் தீரவில்லை என்றால் பிரச்னம் பார்ப்போமே. உன்னுடைய கேள்வி என்ன? திருப்பதி மலை மேல் இருப்பது பெருமாளா முருகனா என்பது தானே?”

பிரச்ன ஜோதிடம் என்பது ஒருவர் கேள்வி கேட்கும்போது பதில் சொல்பவர் அந்த சமயத்தில் தன் புலன்களுக்குப் புலப்படும் பொருட்களை வைத்து, அந்த இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கிரகித்து அதிலிருந்து முடிவை யூகிப்பதாகும்.

சிறுவன் அரை குறை மனதுடன் ஆமாம் என்பதற்கு அறிகுறியாக தலையாட்டினான். சரியாக அதே சமயத்தில் ஒரு அழகான ஆண் மயில் பறந்து வந்து பெரியவரின் வலது புறத்தில் அமர்ந்தது.

பெரியவர் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, ”இந்த பார்றா முருகனே உனக்கு விடை சொல்லி விட்டான்,” என்றார்.

மிகவும் அழகான அந்த மயிலைப் பார்த்த சிறுவனுக்கு ஆனந்தமும், ஆச்சர்யமும் ஏற்பட்டாலும் தன்னுடைய குழப்பத்தின் பரிமாணம் வளர்ந்து கொண்டே போனதால் அதைத் தாங்கும் சக்தியற்று தவிக்கலானான்.

சிறுவனின் நிலையைக் கண்ட பெரியவர் பரிவுடன், ”இந்த பாருடா, எந்த விஷயத்தையும் வார்த்தைகளை வைத்து முடிவு கட்டுவதைவிட ஒருவர் தனது சொந்த அனுபவத்தின் மூலமாக உணர்ந்து கொண்டால்தான் அது நிலையான, நிரந்தர அறிவைக் கொடுக்கும். வரும் கார்த்திகை தீப உற்சவத்தின் போது நாம் இங்கு வருவோம் அல்லவா? அப்போது உன்னுடைய கேள்விக்கான விடையை நீயே அனுபவத்தில் உணர்ந்து கொள்வாய்.”

சிறுவனுக்கு தன்னுடைய கேள்விக்கு உரிய விடையைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டாலும் ஒரு பெரிய குழப்பமான சூழ்நிலை தற்போதைக்கு தள்ளிப் போய்விட்டதில் மகிழ்ச்சியே ஏற்பட்ட்து எனலாம்.

மெல்ல மெல்ல கார்த்திகை மாதமும் வந்தது.

ஆனால், அதற்குள் சிறுவன் பல விதமான சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பள்ளிப் பாடங்களை சரியாக எழுதவில்லை என்று ஆசிரியர்களிடம் தினமும அடியும் திட்டும் வாங்க வேண்டி வந்தது.

சிறுவனின் தந்தையோ, எங்கோ சுற்றி விட்டு வீட்டிற்கு லேட்டாக சிறுவன் வருகிறான் என்று அவனை சரமாரியாகத் திட்டி நன்றாக அடிக்கடி உதைக்கவும் செய்தார். அடியும் உதையும் மாறி மாறி சிறுவனைப் பதம் பார்க்க திருப்பதியைப் பற்றி சிந்தனை அறவே மறந்து போய் விட்டது.

ஏற்கனவே சிறுவனிடம் கூறியபடி பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு கார்த்திகை தீப உற்சவ திருப்பணிக்காக திருஅண்ணாமலை வந்தடைந்தார். வாத்யார் திருப்பணி என்றதும் சிறுவனுக்கு ஒருபுறம் பயம் ஏற்பட்டது.

காரணம் முதன் முதலில் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத் திருப்பணி என்று கூறி பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு வந்து ஆயிரக் கணக்கான அடியார்களின் மலத்தைச் சுமக்கும் பணியை சிறுவனுக்கு அளித்தார் அல்லவா? அது போல் இந்த முறையும் ஏதாவது ஒரு திருப்பணியை தன் தலையில் கட்டி விடுவாரோ என்று சிறுவன் பயந்தான்.

இருந்தாலும் அடி உதை வாங்கி சென்னையில் இருப்பதை விட ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்து கொண்டு வாத்யாருடன் இருப்பதுதான் சொர்க்கம் என்று சிறுவன் முடிவு கட்டி விட்டதால் கோவணாண்டிப் பெரியவர் எந்தத் திருப்பணியை அளித்தாலும் அதை முழு மனதுடன் செய்யும் நிலைக்கு சிறுவன் வந்து விட்டான், இல்லை இறைவனால் தள்ளப்பட்டானா? யார் அறிவார்?

கிரிவலப் பாதையில் ஏகமுக லிங்க தரிசனப் பகுதியில் ஒரு இடத்தில் பெரியவரும் சிறுவனும் நின்று கொண்டிருக்க பெரியவர், ”என்னடா ராஜா அன்னதான திருப்பணி செய்யலாம் என்று இங்கு கூட்டி வந்துட்ட பணியை ஆரம்பித்து விட வேண்டியதுதானே?” என்றார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”என்ன வாத்யாரே, நீ தானே திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தில் திருப்பணி செய்யலாம்னு சொன்னாய், இப்போது புதுசா ஏதோ சொல்றியே …..”

பெரியவர் இடை மறித்து, ”இந்த பார்றா, அண்ணாமலைல தக்காளி பிரிஞ்சு அன்னதானம் செய்யலாம் வாத்யாரே அப்படி, இப்படின்னு சொல்லிவிட்டு இப்ப என்ன நைனா நைசா நழுவுற.”

சிறுவன் விழித்தான். இப்போது சிறுவனுக்குப் புரிந்து விட்டது. இந்த கிழம் (பெரிய வாத்யார்) நம்மைத் திட்டம் போட்டு பழி வாங்கி விட்டது. திருஅண்ணாமலையில் தக்காளி பிரிஞ்சு சாதம் அன்னதானம் செய்ய வேண்டும் என்பது பெரியவரின் திட்டம். அதை நம்மிடம் இப்படி சொல்லாமல் சொல்லி வேலை வாங்குகிறது என்று மனதினுள் நினைத்த சிறுவன் அமைதியுடன் அடுத்த பெரியவர் என்னவெல்லாம் கேட்கப் போகிறாரோ என்று பயந்து கொண்டே அமைதியாக ஒன்றும் கூறாமல் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

”டேய் என் முகத்தைப் பார்த்தா என்னடா பிரயோசனம்? இப்போ இங்க அரிசி வருது,” என்றார் பெரியவர்.

சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

”அரிசி வருதா, எங்கிருந்து வரும்? கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு வேளை வாத்யார் கோவணத்திலிருந்து அரிசி வருமோ?” என்று சிறுவன் நினைக்க அதை கிரகித்த பெரியவர் தன்னுடைய கோவணத்தை சிறுவனிடம் தட்டிக் காண்பித்து, ”இதுல்ல ஒன்னும் இல்லடா, கண்ணு,” என்றார்.

சிறுவனுக்கு சப்பென்று போய் விட்டது. அரிசி இல்லை, கையில் காசு இல்லை, பெரியவர் கோவணமும் காலி. எப்படி தக்காளி பிரிஞ்சி வரும். பெரியவர் ஒரு திட்டத்தோடுதான் நம்மை இங்கு கூட்டி வந்திருக்கிறார். இனிமேல் அதை நினைத்து பிரயோசனமில்லை. ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம், என்று நினைத்து பெரியவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அங்கிருந்து ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காசில்லா அன்னதானம்

ஏதாவது கடையில் அன்னதானத்திற்கு நன்கொடையாக பணம் கேட்டு அதை வைத்து அன்னதானம் செய்யலாமா என்ற எண்ணத்தில் கடைவீதியை அடைந்து அங்கிருந்த ஒரு கடைக்குள் சென்றான். கடையில் நிறைய சாமி படங்கள் மாட்டியிருந்தன. கடை முதலாளி நெற்றி முழுக்க விபூதி குங்குமம் இட்டு உடம்பில் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார்.

வலுவில் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு கூப்பிய கரங்களுடன் ஓம் என்று கூறி அவருக்கு வணக்கம் செலுத்தினான் சிறுவன்.

முதலாளி அவன் வணக்கத்தைக் கண்டு கொள்ளாமல், ”என்ன வேண்டும்?” என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டிக் கேட்டார்.

சிறுவன் மென்று விழுங்கி, ”நான் எங்க தாத்தாவுடன் சேர்ந்து கார்த்திகை தீபத்திற்காக அன்னதானம் செய்வதாக இருக்கிறோம். அதனால் தங்களால் முடிந்த அளவு ஒரு நன்கொடை கொடுத்தால் நன்றாக இருக்கும்,” என்று சொன்னான்.

ஸ்ரீ தட்சிணா மூர்த்தி
தாபாய் திருத்தலம்

அதைக் கேட்டு முதலாளி பலமாகச் சிரித்து, ”ஏண்டா, உன் கண்ணைப் பார்த்தால் நீயே ரெண்டு படி சாதம் சாப்பிடுவாய் போல் தெரிகிறதே. நீ எங்கே அன்னதானம் செய்யப் போகிறாய். வேறு எங்காவது போய் கேள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது,” என்று சொல்லி சிறுவனை விரட்டி விட்டார்.

சிறுவனின் இதயத்தில் அந்தக் கடை முதலாளி சொன்ன வார்த்தைகள் முள்ளாய்த் தைத்தன. பணம் இல்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. இந்த ஆளும் வாத்யார் மாதிரி நம்மைச் சாப்பாட்டு ராமன் கணக்கில் வைத்து விட்டாரே, என்று மனம் நொந்தவனாய் அடுத்த கடைக்கு சென்றான்.

அங்கும் கிட்டத்தட்ட இது போன்ற வரவேற்பே அவனுக்கு கிடைத்தது. சிறுவனும் சளைக்காமல் கடைவீதியில் இருந்த எல்லா கடைகளுக்கும் சென்று தன் முயற்சியைத் தொடர்ந்தான். சிறுவனாக இருந்த அவனை யாரும் மதிக்கவில்லை.

மனமும் உடலும் சோர்ந்து போய் ஒரு அன்னதான மடத்தின் அருகில் வந்து சேர்ந்தான். பல ஆண்டுகளுக்கு முன் அற்புதமாக பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளித்த மடம் அது. ஆனால், அதை தலைமை தாங்கிய மகான் சமாதி அடைந்ததும் அடுத்த தலைமைப் பொறுப்பு ஏற்றவர்கள் அந்த அளவுக்கு அன்னதான கைங்கர்யத்தைத் தொடர்ந்து சிரத்தையுடன் நிறைவேற்றாததால் தற்போது அது பெயருக்கு மாத்திரம் அன்னதான மடமாக விளங்கியது.

மடத்தைச் சேர்ந்த நிலத்திலிருந்து வந்த வருமானத்தில் அப்போதிருந்த ஒன்றிரண்டு சிப்பந்திகள் நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த விவரத்தை எல்லாம் பெரியவர் அவனுக்கு சொல்லக் கேட்டு அறிந்திருந்தான்.

அந்த மடத்தைப் பார்த்ததும் அவனுக்கு சட்டென்று ஒரு எண்ணம் உதயமானது. நாமும் எவ்வளவோ இடத்திற்கு அலைந்து திரிந்து பார்த்து விட்டோம். யாரும் நன்கொடை தருவதாக இல்லை. கையில் பணம் இல்லை என்று பெரியவரிடம் சொன்னால் அவர் கொடுக்கும் தண்டனையையும் நம்மால் தாங்க முடியாது. எனவே வருவது வரட்டும் என்று நம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான் சிறுவன்.

உடனே எங்கிருந்தோ அவனுக்கு அலாதியான தைரியம் வந்து மனதில் குடி கொண்டது. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ராஜ நடை போட்டு அந்த மடத்திற்குள் சென்றான். உள்ளே செல்லும்போதே அரிசி எங்கே இருக்கிறது என்று நோட்டம் விட்டான். அரிசி இருக்கும் இடம் தெரிந்து நேரே அங்கு சென்றான். அரிசி இருந்த அறைக்கு முன்னால் ஒரு சிப்பந்தி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அரை தூக்கத்தில் இருந்தான். அவனைப் பார்த்து, “சாமி, அரிசி ஒரு படி சமையலுக்கு வேணும்,” என்றான்.

அந்த சிப்பந்தி, “நீ யாருடா?” என்று கேட்க சிறுவன், “சாமி இன்றைக்குத்தான் நான் புதிதாக சமையல் வேலைக்கு வந்திருக்கிறேன். உங்களிடம் கேட்டு மதியம் சாப்பாட்டிற்கு சமைக்க அரிசி வாங்கி வரச் சொன்னார்கள்.” என்று கூசாமல் பொய் சொல்ல அந்த சிப்பந்தியும் அதை நம்பி, ”சரி போய்க்கோடா,” என்று அரிசி இருந்த அறைக்குள் சிறுவனை அனுமதித்தான்.

அறைக்குள் சென்ற சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு பல அரிசி மூட்டைகள் இருந்தன. அதில் தரமான அரிசியைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு படியை அளந்து ஒரு சின்ன சாக்குப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.

அறை வாசலில் இருந்த சிப்பந்தியோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். ”சாமி உத்தரவு வாங்கிக்கிறேன்,” என்று அவனிடம் சொல்லி விட்டு வேகமாக நடையைக் கட்டினான். சிப்பந்தியிடமிருந்து குரட்டை சத்தமே சிறுவனுக்கு பதிலாக வந்தது.

சப்தமின்றி மடத்திற்கு வெளியே வந்த சிறுவன் வாசலைத் தாண்டியதும்  வாத்யார் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான். ஒரு வேளை நம்முடைய திருட்டுத்தனம் தெரிந்து அரிசியை பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் வேகத்தை அதிகப்படுத்தினான் சிறுவன்.

மேல் மூச்சு  கீழ் மூச்சு வாங்க பெரியவரை அடைந்த சிறுவன் கம்பீரமாக பெரியவரிடம் அரிசியைக் கொடுக்க அவரோ அதைச் சற்றும் சட்டை செய்யாமல், ”சரிடா அடுத்து தக்காளி வருது.” என்றார்.

சிறுவனுக்கோ ஏமாற்றம். “இவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம ப்ரெய்ன கசக்கி ஐடியா போட்டு அரிசி கொண்டு வந்திருக்கோம் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் அடுத்து தக்காளி வருதுங்கறாரே.”

சரிதான் … அப்போ தக்காளியும் நிச்சயம் வராது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டான் சிறுவன். இனி அங்கு நிற்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அறிந்த சிறுவன் மூச்சு வாங்க வாங்க மீண்டும் கடைவீதிக்கு ஓடினான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது சிறுவனுக்குத் தெரிந்து விட்டதால் எந்த குழப்பமும் அவன் மனதில் எழவில்லை நேரே தக்காளி மண்டிக்கு சென்றான். நல்ல தக்காளி எங்குள்ளது என்பதை ஆராய்ந்தான்.

ஒரு கடை எதிரே தரமான தக்காளி மலைபோல் அழகாக அடுக்கப்பட்டு இருந்தன. ஒரு சணல் கயிற்றை எடுத்து தன்னுடைய இரண்டு டிராயர் பாக்கெட்டுகளின் ஓட்டைகளையும் கட்டிக் கொண்டான். சிறுவன் காசு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக பெரியவர் எப்போதும் சிறுவனுடைய பாக்கெட்டுகளை ஓட்டை போட்டு விடுவார் என்பது நீங்கள் அறிந்ததே.

மெதுவாக சென்று அந்த தக்காளி மலையின் பின்னே குதிக்காலில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தக்காளியாக எடுத்து தன்னுடைய டிராயர் பைக்குள் போட ஆரம்பித்தான். ஒரு பை நிரம்பியதும் அடுத்த பையில் தக்காளிகளை திணித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக தக்காளி மலை சரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த கடை முதலாளி ஏன் தக்காளி மலை சரிகிறது எட்டிப் பார்க்க அதன் பின்னால் மறைந்திருக்கும் சிறுவனைப் பார்த்து விட்டான்.

”டேய் ஒருத்தன் தக்காளியைத் திருடுறான், அவனைப் பிடிங்கடா,” என்று குரல் கொடுக்க சிறுவனைப் பிடிக்க ஒரு சில வேலையாட்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து அருகிலிருந்த சந்து பொந்துகள் வழியாக ஓடி மறைந்து விட்டான். எங்கெங்கோ சுற்றி மீண்டும் கிரிவலப் பாதைக்கு வந்து வாத்யாரிடம் தக்காளியைத் தந்து விட்டு அடுத்து அவருடைய உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

பெரியவர், ”என்னடா இப்படி பொறுப்பில்லாத பிள்ளையா இருக்க. அரிசி தக்காளி மட்டும் இருந்தா போதுமா, மத்த எண்ணெய், சட்டி பானை எல்லாம் எப்படிடா வரும்,” என்று கேட்க சிறுவன் அடுத்த ஓட்டத்திற்குத் தயாரானான்.

இப்போது கடைவீதியின் மறுபகுதிக்கு சென்று அங்கிருந்த ஒரு கடைக்குள் சென்றான். அந்தக் கடை முதலாளியைப் பார்த்ததும், ஓவென்று அழ ஆரம்பித்தான். முதலாளி என்னவென்று புரியாமல், ”ஏன் தம்பி இப்படி அழுகிறாய்? என்று கேட்க சிறுவன், இல்லை சார், எங்க அப்பா சமைப்பதற்கு எங்க அம்மாவிடம் காசு கொடுத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். அம்மாவும் மளிகை சாமானுக்காக என்னிடம் காசு கொடுத்து உங்கள் கடையில் சாமான் வாங்கி வரச் சொன்னது. ஆனால், பாக்கெட் ஓட்டையாக இருந்ததால் காசு எல்லாம் வழியிலேயே விழுந்து விட்டது. இங்கு வந்து பார்த்தால் ஒரு காசு கூட இல்லை,” என்று தன்னுடைய ஓட்டைப் பாக்கெட்டிற்குள் விரலை விட்டு முதலாளியிடம் காட்டினான்.

”எங்க அப்பா சாயந்திரம் வேலை முடிந்து வந்து பார்க்கும்போது சாப்பாடு இல்லாவிட்டால் எங்க அம்மாவைப் போட்டு அடிப்பார், அதனால்தான் அழுகிறேன்,” என்று விக்கலுக்கிடையே சிறுவன் கூறினான்.

அந்த முதலாளியும் சிறுவனின் நடிப்பை நம்பி, ”இதற்காகவா தம்பி அழுகிறாய். பரவாயில்லை உனக்கு வேண்டிய சாமானைச் சொல்லு. உங்க அப்பா வேலை விட்டு வந்ததும் அப்புறமா பணம் கொண்டு வந்து கொடு பரவாயில்லை,” என்றார்.

சிறுவனுக்குத் தன்னுடைய நடிப்புத் திறமையைக் கண்டு ஒரே சந்தோஷம். தக்காளி பிரிஞ்சிற்குத் தேவையான மளிகை சாமான்களை கடனாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். வழியில் தனது வழக்கமான பாணியில் கொஞ்சம் சவுக்கு விறகு, ஒரு புதிய மண் பானை, பானை மூடி இவற்றையும் சேகரித்துக் கொண்டான்.

இவ்வாறு சமையலுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேகரிப்பதற்குள் நண்பகல் ஆகி விட்டது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் சிறுவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால், அன்னதானம் என்று பெரியவர் சொன்னதால் சிறுவனுக்கு ஒரு விதத்தில் அது ஆறுதலாக இருந்தது. எப்படியும் தக்காளி பிரிஞ்சி சாதம் அன்னதானம் செய்தவுடன் அதில் ஒரு சிறு பகுதியாவது நிச்சயம் தனக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், எப்போதும் போல சிறுவன் போடும் கணக்கு தப்புக் கணக்குதான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.  

வேகவேகமாக அடுப்பைப் பற்ற வைத்து சமையல் வேலையில் துரிதமாக ஈடுபட்டான். தன்னுடைய தாயாரிடமிருந்து சமையல் வேலையை சிறுவன் அறிந்திருந்ததால் எவ்வித சிரம்மும் இன்றி விரைவில் அற்புதமான மணம் கமழும் தக்காளி பிரிஞ்சியை தயார் செய்து விட்டான். சாதத்தை ”தம்” போட்டு விட்டு பெரியவரிடம் வந்து வாத்யாரே, ”பிரசாதம் ரெடி. அன்னதானம் கொடுத்து விடலாமா?” என்று கேட்டான்.

பெரியவரும், ”பேஷா கொடுத்து விடலாம்டா. யாராவது சன்னியாசி வந்தால் சொல்லு,” என்று சொல்லி மலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

அப்பாடா என்று சிறுவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். காரணம் பெரியவர் பெரும்பாலும் இந்த தானத்தை அந்தக் கோயிலில் செய், இந்தத் தீர்த்தக் கரையில் கொடுத்து விடு என்று சொல்லி விட்டால் அந்த இடத்தை இந்த மண்டை பிளக்கும் வெயிலில் கண்டு பிடித்துப் போக வேண்டுமே என்று சிறுவன் பயந்து கொண்டே இருந்தான். ஆனால், பெரியவர் அங்கேயே அன்னதானத்தைக் கொடுத்து விடலாம் என்று சொன்னதுதான் சிறுவனுடைய ஆனந்தத்திற்குக் காரணம்.

கிரிவலப் பாதையில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரைப் பார்த்தால் நல்ல ஆசாரமுள்ள சன்னியாசி போல் தோன்றியது. உடனே சிறுவன், ”வாத்யாரே ஒரு சன்னியாசி வந்து விட்டார். பிரசாதம் கொடுத்து விடட்டுமா?” என்று கேட்க பெரியவர், ”டேய் அவன் திருட்டுப் பயடா,” அவனுக்கு வேண்டாம், என்றார்.

சிறுவன், ”சரி வாத்யாரே,” என்று சொல்லி விட்டு மீண்டும் கிரிவலம் வரும் அடியார்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து மற்றோர் சன்னியாசி அவ்வழியே சென்றார். அவரைப் பார்த்தால் மிகவும் நல்லவர் போல் தோன்றவே, ”வாத்யாரே, ஒரு நல்ல சன்னியாசி போகிறார், அவருக்கு பிரசாதம் கொடுத்து விடட்டுமா?” என்று கேட்டான்.

”போடா மண்டு, அவன் பொம்பள பொறுக்கிடா,” என்றார் பெரியவர் மலையைப் பார்த்துக் கொண்டே,

சிறுவன் மனம் சோர்ந்து போனான், ”என்னா பெரியவரே, நீ பாட்டுக்கு மலையைப் பார்த்துக்கிட்டே அவன் திருடன், இவன் பொறுக்கி என்று சொல்றியே. இந்த பக்கம் பாதையைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்தால்தானே அடியார்களைப் பார்க்க முடியும்,” என்று பெரியவரிடம் கூறவே, பெரியவரும், ”சரி நைனா, நீ சொல்றபடியே கிரிவலப் பாதையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேன்,” என்று சொல்லி திரும்பி கிரிவலப் பாதையைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டார். ஆனால், கண்களை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் கடந்தது. சிறுவன் வருவோர் போவோரைப் பார்த்து பார்த்து சலித்துப் போனான். பெரியவர் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல ஆத்மா அவன் கண்ணுக்குத் தென்படவில்லை. அப்போது ஒரு சன்னியாசி அவ்வழியே வர, அவனைப் பார்த்த சிறுவன், ”வாத்யாரே, இவரு நல்லவராய்த் தெரிகிறார். அவருக்குக் கொடுத்து விட்ட்டுமா?” என்றான்.

பெரியவர், ”ஆமாண்டா நல்லவன்தான். ஆனால், அவன் உடம்பு பூரா விபூதி பூசவில்லையே,” என்றார்.

கோவண லீலை

சிறுவன் யோசித்தான், “கண்ணை மூடி அமர்ந்திருக்கும் நம் பெரியவருக்கு இந்த சன்னியாசி உடம்பில் விபூதி பூசவில்லை என்பது எப்படித் தெரியும்? அது எப்படியோ, ஆனால் இப்போது வாத்யார் ஒரு புதிய கண்டிஷனை போடுகிறார். அன்னதானம் வாங்குபவன் நல்லவனாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவன் விபூதியும் உடல் முழுவதும் அணிந்திருக்க வேண்டும்.”

“சரி அப்படி ஆளைப் பார்ப்போம் எப்படியாவது சீக்கிரம் ஆளைக் கண்டு பிடித்து அன்னதானம் செய்தால்தானே நமது பசி அடங்கும்,” என்று பசியுடன் மீண்டும் கிரிவலம் வருவோர்களைக் கவனிக்க ஆரம்பித்தான் சிறுவன்.

நிமிடங்கள் கடந்தன.

உடல் முழுவதும் விபூதி பூசிக் கொண்டு பழுத்த பழமாய் ஒருவர் வந்தார். சிறுவனுக்கு ஒரே குஷி. ”வாத்யாரே, நீ சொன்ன மாதிரி ஒரு நல்ல சன்னியாசி உடல் முழுவதும் விபூதி பூசி வருகிறார்,” என்றான்.

பெரியவரும், ”ஆமாண்டா, அவன் நல்லவன்தான். உடம்பு பூரா விபூதிதான். ஆனால், அவன் கோவணம் கட்டவில்லையே. வேட்டில கட்டியிருக்கிறான்,” என்றார்.

சிறுவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

”ஏன் இந்த பெரியவர் எல்லா கண்டிஷனையும் ஒரே சமயத்தில் சொல்லாமல் இப்படி நம்மைப் பாடாயப் படுத்துகிறார். ஹும், வேறு வழியில்லை. அடுத்து கோவணம் கட்டி, விபூதி பூசியவரைத் தேடுவோம்,” என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு சிறுவன் கிரிவல அடியார்களை கவனிக்க ஆரம்பித்தான்.

ஆனால், இடையிடையே அவனையும் அறியாமல் வாத்யார், ஒரு அடியாருக்கு அன்னதானம்தானே கொடுக்கப் போகிறார். அதை வாங்குபவன் வேட்டி கட்டியிருந்தால் என்ன, துண்டு கட்டியிருந்தால் என்ன? என்று அவன் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதை கப்பென்று மனதில் பிடித்த வாத்யார், எல்லாத்துக்கும் காரணம் இருக்கு, நைனா என்று அவன் பின்னால் நின்று கொண்டு குரல் கொடுத்தார்.

பெரியவர் தொடர்ந்து, “காரணம் இல்லாமலா நம்ம செல்லப் பிள்ளை (போகர் சித்தரை வாத்யார் அழைக்கும் அடைமொழி) கோவண மகிமையைப் பற்றி முன்னூறு ஆயிரம் லட்சம் பாடல்கள் எழுதி வைத்திருக்கிறான். ஒரு தபா (முறை) பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்ம தேவர் விழித்த போது முருகப் பெருமான் அவரை பூலோகத்தில் உள்ள தாபாய் திருத்தலத்திற்கு சென்று அங்குள்ள இறை மூர்த்தியை வழிபடும்படி அறிவுரை கூறவே பிரம்ம தேவரும் அத்தல இறைவனை வேண்டி பிரணவத்திற்கு பொருள் அறிய விழைந்தார்.”

ஸ்ரீபோகர் திருக்கோவில்
திருஈங்கோய்மலை

யாராக இருந்தாலும் பூலோகத்தில் மனிதப் பிறவியை எடுத்து விட்டால் மனிதனுக்கு என விதிக்கப்ப்ட்டுள்ள ஆசார அனுஷ்டான விதிமுறைகளை அவசியம் கடைபிடித்தாக வேண்டும் அல்லவா? அதன்படி பிரம்ம தேவரும் கோவணம் அணிந்து தாபாய் திருத்தலத்திலுள்ள ஸ்ரீபிரணவேஸ்வர மூர்த்தியை வழிபட்டு வந்தார்.

நமது உடலில் ஒவ்வொரு அவயமும் ஒரு குறிப்பிட்ட நீள அளவுகளைக் கொண்டதே. எண் சாண் உடம்பைப் பெற்ற மனிதனின் கைகள் அவரவர் கை அளவில் மூன்று சாண் கொண்டிருக்கும். அது போல ஒருவருடைய தொப்புளிலிருந்து ஒரு சாண் தூரத்தில் அமைவதே மூலாதார சக்கரம் ஆகும்.

எனவே அவரவர் கை அளவில் ஒரு சாண் அகலம் உடைய கோவணத்தை அணிந்து வழிபாடுகள் இயற்றுவதால் மனம் எளிதில் இறை வழிபாட்டில் குவியும்.

இவ்வாறு கோவணம் அணிந்து வழிபாடுகள் இயற்றிய பிரம்ம தேவர் பிரணவத்தின் பொருள் உணர்ந்து மீண்டும் பிரம்ம லோகம் சென்றார். பிரம்மன் என்பது ஒரு பதவிதானே. பதவி என்று வந்து விட்டால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு அல்லவா ?

எதுவும் நிலையானது அல்ல என்பதை தனது பூலோக வாசத்தில் உணர்நத பிரம்ம தேவர் தனது பதவிக் காலம் முடிந்த பின்னர் இறைவனை வேண்டி மீண்டும் தாபாய் திருத்தலத்தை அடைந்து முன் போலவே கோவணம் அணிந்து தவம் இயற்றத் தொடங்கினார்.

எதற்காக ? பிரம்மா என்ற பதவிக்கு ஒரு காலவரையறை உண்டு. ஆனால், இறைவனின் பக்தன் என்ற நிலையை அடைந்து விட்டால் அவன் என்றென்றும் இறைவனின் திருஉள்ளத்திலேயே நிலைத்து இருக்கலாம் அல்லவா? எனவே எந்த பதவியும் தனக்குத் தேவையில்லை. இறைவனின் மீது அன்பு கனிந்தால் அதுவே போதும் என்ற ஒரே கோரிக்கையை ஏற்று தவத்தை மேற்கொண்டார் பிரம்ம தேவர்.

பல யுகங்கள் கடுந் தவம் இயற்றிய பிரம்ம தேவருக்கு இறைவன் தன் திருக்காட்சியைத் தநத்ருளி அவரை நிரந்தரமாக தன்னுள்ளத்தில் நிலைத்துக் கொண்டார். இறைவனிடம் பக்தி ஒன்றே போதும் என்னும் உயர்ந்த நிலையை அடைய விரும்புவோர்க்கு ஆரம்ப தவமாக அமைவது கோவணம் என்னும் கவசமே ஆகும்.

கோவணத்தின் மகிமையை அற்புதமாக விளக்கிக் கொண்டு வந்த பெரியவர் சட்டென நிறுத்தி சிறுவன் அன்னதான அடியாரைத் தேடும் படலத்தைத் தொடரட்டும் என்று நினைத்து மீண்டும் மௌனம் பூண்டு அமர்ந்து விட்டார்.

நேரமோ கடந்து கொண்டிருந்தது. பெரியவர் சொன்ன அடையாளத்துடன் யாரையுமே காண முடியவில்லை. வெகுநேரம் கழித்து பெரியவர் சொன்னதுபோல விபூதி அணிந்து கோவணம் கட்டி ஒரு உத்தமர் அங்கு வந்து சேர்ந்தார்.

ஆனால், பெரியவரோ அவர் கோவணத்தில் ஓட்டைகளே என்று சொல்லி நிராகரித்து விட்டார். சிறுவனுக்கு கோபம் ஒரு புறம் பசி மறு புறம். மிகவும் சோர்வுடன் தொடர்ந்து அடியார்களைத் தேடிக் கொண்டே இருந்தான்.

இன்னும் சற்று நேரம் கழித்து பெரியவர் கூறியது போல் கோவணத்தில் ஓட்டைகள் உள்ள சன்னியாசியை சிறுவன் அடையாளம் காட்ட பெரியவரோ கோவணத்தில் மூன்று ஓட்டைகள் ஃ (ஆயுத எழுத்து) வடிவில் இருக்க வேண்டும் என்று கூறி விட்டார்.

சிறுவனுக்குக் கோபம் உச்ச கட்டத்தை அடைந்தது. ”என்ன வாத்யாரே, நான் யாரைக் காட்டினாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாயே. கொஞ்சம் கண்ணைத் திறந்து நான் காட்டுபவர்களை கொஞ்சம் பார்க்கக் கூடாதா?” என்று அழாத குறையாக பெரியவரிடம் கெஞ்சவே, பெரியவரும் சரிடா என்று சொல்லி, நன்றாக கண்களைத் திறந்து ஆனால், வானத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

சிறுவனுக்கு ஒரு புறம் ஏமாற்றமாக இருந்தாலும் ஏதோ இந்த அளவிற்காவது தன்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாரே என்று மகிழ்ந்து சன்னியாசியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான்.

கிட்டத்தட்ட மாலை நேரம் கடந்து இரவும் வந்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் சூரிய வெளிச்சம் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்து விடும். அக்காலத்தில் கிரிவலப் பாதையில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் இரவு வந்து விட்டால் அருகில் வருபவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. சிறுவன் இன்று தான் பட்டினிதான் என்ற முடிவுக்கு வந்தான்.

அப்போது பெரியவர் கூறிய அனைத்து அடையாளங்களுடன் ஒரு சன்னியாசி அவ்வழியே வந்தார். சிறுவனுக்கு பரமானந்தம். பெரியவரிடம், ”வாத்யாரே நீ சொன்ன மாதிரி உடல் முழுவதும் விபூதி பூசி, கோவணம் கட்டிக் கொண்டு ஒரு சன்னியாசி போகிறார். நீ சொன்ன மாதிரி அவர் கோவணத்தில் மூன்று ஓட்டைகளும் உள்ளன. அவருக்கு அன்னதானம் அளித்து விடலாமா?” என்று ஆர்வமுடன் கேட்டான்.
ஆனால், பெரியவரோ சிறுவனுடைய வார்த்தைகள் தன்னுடைய காதுகளில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தார். சிறுவன் மீண்டும் மீண்டும் அந்த சன்னியாசியைப் பற்றிக் கூறிக் கொண்டே இருந்தான். ஆனால், வாத்யாரிடமிருந்து எந்த சலனமும் இல்லாததால், ”வாத்யாரே,” என்று வேகமாக குரல்கொடுத்து அவரை உலுக்கினான்.

பெரியவர் சிறுவனை உற்றுப் பார்த்து, ”ஏண்டா இப்படி கூச்சல் போடுற, இப்ப என்ன ஆச்சு?” என்று ஒன்றுமே புரியாதவர் போல் கேட்டார்.

”என்ன வாத்யாரே, என்ன ஆச்சுனு இப்படி அமைதியாய் கேட்கிறாயே. காலையிலிருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு சாமானெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து அலைந்து திரிந்து அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தால், அதற்கு ஒரு ஆளைக் காட்டுவதற்கு நீ ஒத்துக்க மாட்டேங்கிறய,” என்று தன்னுடைய மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டான்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, ”நீ இப்போ சொன்னியே அவன்தான் நல்ல ஆத்மா. அவனிடமே இந்த பிரசாதத்தைக் கொடுத்து விடு.,” என்றார். அவரிடமா? சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்.
இந்நேரம் அந்த சன்னியாசி எவ்வளவு தூரம் சென்றிருப்பாரோ? ஒரு வேளை கிரிவலப் பாதையிலிருந்து விலகி வேறெங்காவது போயிருந்தால் என்ன செய்வது? இந்த வாத்யார் எப்போதுமே இப்படித்தான். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற வேலையிலேயே நம்மை மாட்டி விடுகிறார், என்று நினைத்துக் கொண்டு கிரிவலப் பாதையில் அந்த கோவண சன்னியாசியைத் தேடி ஓட ஆரம்பித்தான்.

இதற்குள் அந்த சன்னியாசி வேகமாக நடந்து வெகு தூரம் சென்று விட்டார். வேகமாக ஓடி அவரை அடைந்து, ”சாமி, சாமி எங்க வாத்யார் உங்களுக்கு பிரசாதம் கொடுப்பதற்காக உங்களை அழைக்கிறார்,” என்றான்.

”எங்கிருக்கிறார் உங்க வாத்யார்?”

சிறுவன் தூரத்தில் பெரியவர் இருந்த இடத்தைக் காட்டினான். அந்த சன்னியாசிக்குக் கோபம் வந்து விட்டது.

”இப்போது அந்த வழியாகத்தானே வந்தேன். அப்போது ஏன் கூப்பிடவில்லை? அவ்வளவு தூரம் திரும்பி வர முடியாது, போ,” என்று சொல்லி மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

சிறுவன் தடாலென்று அவர் காலடியில் விழுந்து, ”சாமி, அப்படி எல்லாம் நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் அங்கு வரும்போதே பெரியவர் உங்களை அழைத்து வரச் சொன்னார். ஆனால், நான் அவசர காரியமாக போய்விட்டதால், என்னால் வர முடியவில்லை. தவறு என்னுடையதுதான்,” என்று தன் இரண்டு விரல்களைக் காட்டி கெஞ்சும் பாவனையில் பேசினான்.

எப்படியாவது நிலைமையைச் சமாளித்தாக வேண்டுமே?

அந்த சன்னியாசியும் சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்து விட்டு, ”அப்படியானால் பரவாயில்லை,” என்று கூறி அவனுடன் திரும்பி வந்தார்.

பெரியவர் அவரைக் கண்டதும் தன் தலைக்கு மேல் கைகளை கூப்பிக் கொண்டு ஓம் என்று வணங்கினார். அந்த சன்னியாசியும் ஓம் என்று பதில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் இருவரும் கட்டித் தழுவி அன்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். அவர்களைப் பார்த்தால் இருவருக்கும் ஏற்கனவே பல வருடங்கள், ஏன் பல யுகங்கள் பழகியவர்களைப் போன்ற பரிச்சயம் தெரிந்தது.

சிறுவனுக்கு எல்லையில்லா கோபம் வந்தது. “இந்த இரண்டு கோவணாண்டிகளும் ஒருவொருக்கொருவர் இந்த அளவு நன்றாய்த் தெரிந்து வைத்துக் கொண்டா நம்மை இந்தப் பாடு படுத்தி வைத்தார்கள் ?” என்று நினைத்து அவர்களைப் பாரத்துக் கொண்டே இருந்தான்.

பெரியவர் பானையை அப்படியே எடுத்து அந்த சன்னியாசியிடம் கொடுக்க அவரும் மிக மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு சில நொடிகளில் பிரசாதம் முழுவதையும் உண்டு விட்டார்.
சிறுவன் திடுக்கிட்டான். அவன் கட்டிய மனக் கோட்டைகள் அனைத்தும் கண் முன்னே தூள் தூளாகின. பிரசாதம் எல்லாவற்றையும் அந்த சன்னியாசி ஒருவரே தின்று விட்டால் தன்னுடைய நிலை என்னாவது? பசி மயக்கத்தில் கீழே விழுந்து விடுவது போன்ற நிலையில் சிறுவன் இருந்தான்.

பழநி பஞ்சாமிர்தம்

பெரியவர் அந்த சன்னியாசியிடம், “சுவாமி, உங்களுக்காக கஷ்டப்பட்டு நம்ம பையன் பிரசாதம் தயார் பண்ணியிருக்கான். அவனை நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க,” என்று கூறியவுடன் சிறுவன் தன்னிலை அடைந்தான்.

”சாப்பாடு கிடைக்காவிட்டாலும் போகட்டும், இப்போது கிடைக்கும் ஆசீர்வாத்தை விட்டு விடக் கூடாது,” என்று அந்த சன்னியாசி காலில் விழுந்து வணங்கினான். சன்னியாசியும் சிறுவனை வாரி எடுத்து அவனுடைய தலையில் தன் இரு கைகளையும் வைத்து அற்புதமாக ஆசி வழங்கினார்.

சிறுவன் பரமானந்த நிலையை அடைந்தான். சற்று நேரம் கழித்து மீண்டும் பசி வயிற்றைக் கிள்ளவே அந்தப் பானையில் ஏதாவது மிச்சம் மீதி இருக்குமா என்று பார்க்கலாம் என்று நினைத்து திரும்பியபோது ஆச்சரியத்தில் அவன் கண்கள் விரிந்தன.

அங்கு பெரியவர் அந்த பானைக்குள் கையை விட்டு அதில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த சாதத்தை வழித்து எடுத்து நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

”ஆஹா, பஞ்சாமிர்தம், பழனி பஞ்சாமிர்தம்”, என்று சொல்லிக் கொண்டே தன் விரல்களை நக்கி நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பெரியவர்.

சிறுவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வாத்யார் அருகில் சென்று நின்று அவரையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பெரியவர் அவனைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

பசியால் மயக்கமே வந்து விட்ட நம்மைக் கண்டு கொள்ளாமல் இப்படி எச்சில் பிரசாதத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் சிறுவன் விழித்துக் கொண்டிருந்தான். அந்த மிச்சப் பிரசாதத்தில் ஒரு துளியாவது நமக்குக் கிடைக்குமா என்று சிறுவன் பார்த்தான் அதற்கும் வழியில்லாமல் சுத்தமாக வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பெரியவர்.
கைவிரல்கள் அனைத்தையும் சுத்தமாக நக்கியபின் பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு பானையில் ஒட்டி இருப்பதையும் நாக்கால் நக்கி சாப்பிட ஆரம்பித்தார் பெரியவர். சிறுவன் பெரியவரின் செய்கைகளைப் பார்த்துக் களைத்துப் போய் அப்படியே அவர் அருகில் தரையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரம் கழித்து பெரியவர் தன்னுடைய வாயையும் கைகளையும் துடைத்துக் கொண்டு அந்தப் பானை மேல் மண் தட்டை வைத்து மூடி வைத்து விட்டு சிறுவனிடம் வந்து அமர்ந்து அவனுடைய தலையை தடவிக் கொடுத்தார்.

”டேய், இவ்வளவு ருசியா தக்காளி பிரிஞ்சி செய்வதற்கு எங்கேடா கற்றுக் கொண்டாய். அந்த கோவணாண்டி ஒரு பருக்க கூட விடாம சாப்பிட்டுப் போய்ட்டான்டா.”

பாராட்டுகளை ஏற்கும் மன நிலையில் சிறுவன் இல்லை. அதனால் பெரியவரின் கைகளைத் தலையிலிருந்து தட்டி விட்டு தன்னுடைய கோபத்தை வார்த்தைகளில் வெடித்தான்.

”ஏன் வாத்யாரே, சின்ன பையன் காலேலிருந்து பட்டினியா இருக்கேன். நீ பாட்டுக்கு பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட கேட்காம எல்லாத்தையும் அந்த ஆளுக்கும் போட்டுட்டு நீயும் சாப்பிட்டு விட்டாயே.”

”ஏண்டா இந்த தம்மாதூண்டு விஷயத்துக்காகவா கோபித்துக் கொள்வார்கள். இப்ப உனக்கு என்னடா சாப்பாடுதானே வேணும். இந்தா அதில் இருப்பதை எடுத்துக் கொள்,” என்று பானையைக் காண்பித்தார்.

சிறுவனுக்குக் கோபம் எங்கிருந்தோ பொத்துக் கொண்டு வந்த்து. ”ஆமாம், நீதான் மிச்சம் மீதி இருந்ததையும் நாக்கைப் போட்டு நக்கி தீர்த்து விட்டாயே. நான் எதைச் சாப்பிடுவது?”

பெரியவரும் கோபமாக, ”சொல் பேச்சைக் கேளு நைனா. அந்த பானையைத் திறந்து பார்,” என்றார்.

சிறுவன் அரைகுறை மனதுடன் அந்த பானை மூடியை மெதுவாக திறந்து பார்த்தான். என்ன ஆச்சரியம். சிறுவன் தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை.
சுடச் சுட மணம் கமழும் பிரிஞ்சி சாதம் பானையில் நிறைந்திருந்தது.

“என்ன வாத்யாரே, புல்லா பிரிஞ்சி சாதம்? பிரமாதமா இருக்கே.”

“எல்லாம் உனக்குதாண்டா, சாப்பிடு. ”

“வாத்யாரே, நீ கொஞ்சம் எடுத்துக் கொள்ளேன்.”

“வேண்டாம், எனக்கு எல்லாம் திருப்தி. நீயே சாப்பிடு.”

வாத்யாரின் மறு வார்த்தைக்குக் காத்திராமல் சிறுவன் பிரிஞ்சி அனைத்தையும் தின்று தீர்த்து விட்டான். பிரசாதம் சாப்பிடும்போது தான் ஏற்கனவே எப்போதோ ஒரு முறை இத்தகைய சுவையான ஒரு சாப்பாட்டைச் சாப்பிட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால், பசி மயக்த்தில் அதைப் பற்றி நினைக்கும் நிலையில் அவன் இல்லை.
பானை பிரசாதம் முழுவதையும் சாப்பிட்டு விட்டு மன திருப்தியுடன் பெரியவர் முன் வந்து அமர்ந்தான் சிறுவன்.

”வாத்யாரே, இவ்வளவு ருசியான பிரிஞ்சி சாதத்தை நான் சாப்பிட்டதே இல்லை. ரொம்ப ரொம்ப அற்புதமான பிரசாதம். ”

”ஆமாண்டா, முருகப் பெருமான் கை பட்ட பிரசாதம் கசக்குமா?”

சிறுவன் திடுக்கிட்டான். ”என்ன வாத்யாரே? முருகன் பிரசாதமா? அந்த சன்னியாசிதானே …” என்று சிறுவன் ஏதோ சொல்ல வந்தான். ஒரு நொடியில் அவனுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தன.

“வாத்யாரே, இப்போ இங்கு வந்தது முருகப் பெருமானா?”

“ஆமாண்டா, இந்த சின்ன விஷயத்தைக் கூட உன்னால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?”

“வாத்யாரே, விளக்கமா சொல்லு, எனக்கு ஒன்றும் புரியவில்லை.”

“இங்கு வந்தவன் கோவணத்தில் மூன்று ஓட்டைகள் ஃ வடிவத்தில் இருந்தன அல்லவா? இது ஆயத எழுத்தைக் குறிக்கும். ஆயுத எழுத்து தமிழ் எழுத்து. தமிழுக்குத் தலைவன் முருகன். இப்படித்தாண்டா ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும்.”

முருகப் பெருமானே நேரே வந்தும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாத தன்னுடைய அறியாமையைக் கண்டு சிறுவன் மிகவும் மனம் வருந்தினான்.
இப்போது சில விஷயங்கள் தெளிவாகப் புரிய ஆரம்பித்தன.

தனக்கு கோலி குண்டு மிட்டாய், பஞ்சு மிட்டாய், பரோட்டா என்று எது கேட்டாலும் வாங்கித் தரும் பெரியவர் ஒரு போதும் எதையும் தானாக சாப்பிட்டது கிடையாது. அப்படி யாராவது பெரியவரிடம் பழம், பொங்கல் என்று கொடுத்தாலும் அதைச் சிறுவனிடம் கொடுத்து விடுவார்.

அப்படிப்பட்ட பெரியவர் அந்த சன்னியாசி உண்டு மீதம் வைத்த எச்சில் பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார் என்றால் நிச்சயம் அது இறை மூர்த்திகளின் நிர்மால்ய பிரசாதமாகத்தானே இருக்க வேண்டும். மேலும், பெரியவர் அதை உண்ணும்போது பஞ்சாமிர்தம், பழனி பஞ்சாமிர்தம் என்று முருகனுடைய பிரசாதமாகத்தானே உண்டார். அப்போது கூட இந்த மர மண்டைக்கு வந்திருப்பது முருகப் பெருமான் என்று தோன்றவில்லையே.

வெள்ளியங்கிரி யாத்திரை செல்பவர்கள் முதல் கட்டமாக பிரசாதத்தை இறைவனுக்குப் படைத்து அந்த பிரசாதத்தை இறைவன் மனித உருவில் வந்து ஏற்க வேண்டும். இறைவன் அவ்வாறு ஏற்றுக் கொண்ட பிரசாதத்தில் மிச்சத்தை உண்ட பின்புதான் யாத்திரை ஆரம்பிக்க வேண்டும்.

சபரி மலை யாத்திரைக்கு விதிக்கப்பட்ட விரத நியதிகள் போல வெள்ளியங்கிரி யாத்திரைக்கு சித்தர்கள் விதித்துள்ள முதல் விதி இதுவே. எனவே சிறுவனை வெள்ளியங்கிரி யாத்திரைக்கு அழைத்துப் போகும் முன் பெரியவர் அங்காளிக்கு பொங்கல் பிரசாதம் படைத்தார். அதை அங்காளித் தாய் நேரடியாக வந்து உண்டாள்.

அப்போது சிறுவன் பெரியவருடன் இருந்தான். அங்காள பரமேஸ்வரியை அவனால் காண முடியாவிட்டாலும் அன்னையின் தேனினும் இனிய குரலையும் வாத்யாரின் கொச்சை வார்த்தைகளையும் கேட்டு ஆனந்தம் அடைந்தான். பின்னர் அங்காள பரமேஸ்வரி உண்டு மீதம் வைத்த பொங்கல் பிரசாதத்தின் ஒரு பகுதியைத்தான் பெரியவரும் சிறுவனும் பகிர்ந்து உண்டனர். அப்போது சிறுவன் அனுபவித்த தெய்வீக ருசியும் மணமும்தான் இன்று முருகப் பெருமான் அளித்த பிரசாதத்தில் நிரவி இருந்தது.

பசி மயக்கத்தில் சிறுவன் இருந்ததால் இந்த தெய்வீக உண்மையை அவனால் கிரகிக்க முடியவில்லை. அந்த அறியாமையை நினைத்துத் தன்னுடைய தலையில் தானே குட்டிக் கொண்டான்.

“என்னடா உன்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா? ”

பெரியவரின் குரல் கேட்டு சிறுவன் நிமிர்ந்தான்.

”நாங்க எப்பவும் விட்ட இடத்திலேயே தொடர்வோம். இதோ இந்த ஏகலிங்க முக தரிசனப் பகுதியில்தான் நீ திருப்பதி பெருமாளைப் பற்றி கேட்டாய். அதற்கு விடை சொல்லத்தான் இப்போ முருகன் வந்து விட்டுப் போகிறான்.”

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

திருப்பதி லட்டு மகிமை

பெரியவரே தொடர்ந்தார். “திருப்பதி லட்டுல என்ன விசேஷம்?”

“அது நல்லா ருசியா, இனிப்பா இருக்கும்,” வாத்யாரே.

பெரியவர் சிறுவனை முறைத்தார்.

“தன்னுடைய சாப்பாட்டு ராமன் புத்தியைக் காட்டி விட்டோமோ,” என்று சிறுவன் சுதாரித்துக் கொண்டு, ”திருப்பதி லட்டு கை கொள்ளாத அளவு பெரிசா இருக்கும். எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாது.”

ஸ்ரீ அருணை ஈசன்
தாபாய் திருத்தலம்

அதற்கு மேல் சிறுவனால் ஒன்றும் யோசிக்க முடியவில்லை.

பெரியவர், ”எந்த திருத்தல பிரசாதம் என்றாலும் அது எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாது, பழனி பஞ்சாமிர்தம், சபரி மலை அபிஷேக நெய் பிரசாதம் போன்ற எதுவும் எவ்வளவு காலம் ஆனாலும் அதன் தெய்வீக சக்தியை இழப்பதில்லை. சில சமயம் துர்வாடை ஏற்பட்டு கெட்டுப் போனது போல் ஒரு பிரமை ஏற்படும். அவ்வளவே. எக்காலத்தும் இறை பிரசாதம் அதன் தெய்வீகத் தன்மையை இழப்பதில்லை.

ஒவ்வொரு திருத்தல பிரசாதத்திற்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அவ்விதத்தில் திருப்பதி லட்டிற்கென்று சில விசேஷ தெய்வீக சக்திகள் உண்டு. அதை மனித அறிவுக்கு எட்டும் வகையில் கூற இயலாது.

சாதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு படி பாத்திரத்தில் ஒரு படி பாலோ தண்ணீரோ ஊற்றலாம். ஆனால், அதில் பத்துப் படி பாலை ஊற்ற முடியுமா? முடியாது. ஆனால், ஒரு படியில் பத்துப் படி பாலை ஊற்றும் விந்தைதான் திருப்பதி லட்டில் நிகழ்வது. அதாவது பத்து லட்டுகள் செய்யத் தேவையான பொருட்கள் ஒரே லட்டில் அடங்கி விடுகின்றன.

நவீன விஞ்ஞான கோட்பாட்டின்படி குவாண்ட்டம் தியரியைக் கொண்டு விளக்கினால் இந்த உண்மையை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் பகல் இரவு என்பது கிடையாது. ஒருவரின் ரஜோ தமோ குண விகிதாசாரத்தைப் பொறுத்தே ஒருவரின் பகல் இரவு காலக் கோட்பாடுகள் அமைகின்றன. அதே போல திருப்பதி லட்டின் எடை இதுதான் என்று சொல்ல முடியாது.

ஒருவருக்கு 100 கிராம் எடையுள்ளதாகத் தோன்றும் லட்டு மற்றொருவர் கையில் வைத்தால் அது 200 கிராம் எடையுள்ளது போல் தோன்றும் இதுவும் திருப்பதி லட்டில் விளையும் விந்தையாகும். இத்தகைய விந்தைகள் திருப்பதி திருமலை புனித பூமியில் மட்டுமே நிகழும் விளைவுகள். வேறெங்கும் இந்த விந்தையை சாதாரணமாகக் காண முடியாது.

பெரியவரின் அமுத மொழிகளை மெய்மறந்து பருகிக் கொண்டிருந்தான் சிறுவன். அவன் மனமோ, “ஏழாம் வாய்ப்பாடே நமக்குத் தடுமாறுது. ஆனால், பெரியவரோ குவாண்ட்டம் அது இதுன்னு எதோ சொல்றார்,” என்று இடையிடையே எண்ணிக் கொண்டிருந்தது.

பெரியவர் தொடர்ந்து, ”எதிர்காலத்தில் நீ ஆஸ்ரமம் அமைத்து லட்சக் கணக்கான மக்களுக்கு லட்டு பிரசாதம் கொடுப்பாய் ….”

பெரியவர் கூறிக் கொண்டு இருக்கும்போதே சிறுவன் தன்னுடைய டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு குரு விரலை ஓட்டை வழியாக நீட்டி, “இந்த ஓட்டைப் பாக்கெட்டை வைத்து அன்னதானமா?” என்று கேட்பது போல் பெரியவரைப் பார்த்தான்.

பெரியவர் அவன் தலையில் ஒரு தட்டு தட்ட சிறுவன் அமைதி அடைந்தான்.

பெரியவர் தொடர்ந்தார், ”நீ எதிர்காலத்தில் அளிக்கும் லட்டுப் பிரசாதம் திருப்பதி லட்டின் சக்தியைப் பெற்றிருக்கும். அது மட்டுமல்லாமல் பழனி பஞ்சாமிர்தத்தின் நோய் தீர்க்கும் சித்தாமிர்த சக்திகளுடனும் பரிணமிக்கும். அந்த அனுகிரகத்தை அளிப்பதற்காகவே முருகப் பெருமான் இன்று கோவணாண்டியாக வந்து உன்னுடைய பிரசாதத்தை ஏற்று உன்னை ஆசீர்வதித்துச் சென்றார்.”

சிறுவன் ஆனந்த்த்தில் துள்ளிக் குதித்தான். “கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தால் எவ்வளவோ நல்லா இருக்குமே, வாத்யாரே,” என்று புலம்பினான்.

”சரிடா, விஷயத்துக்கு வருவோம். இப்போ சொல்லு திருப்பதி லட்டு பிரசாத அனுகிரகத்தை முருகன் தருவான் என்றால் திருப்பதி மலை மேல் இருப்பவன் முருகனா, பெருமாளா?”

சிறுவன் உஷாரானான்.

அவன் கண்கள் நீரை வார்த்தன. பெரியவரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ”வாத்யாரே, திருப்பதி மலைமேல் முருகனோ பெருமாளோ யார் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஒன்று மட்டும் இப்போது தெளிவாகத் தெரிந்து கொண்டேன். நீ நினைத்தால் பெருமாளை முருகன் ஆக்குவாய். முருகனைப் பெருமாள் ஆக்குவாய். திருப்பதியைப் பழநி ஆக்குவாய். பழநியை திருப்பதி ஆக்குவாய். பழநி பஞ்சாமிர்தமும் திருப்பதி லட்டாக இனிக்கும். ”

சிறுவன் குரல் தழுதழுத்தது.

பெரியவர், ”அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா, கண்ணு,” என்று செல்லமாக சொல்லிக் கொண்டே சிறுவனிடமிருந்து தன்னுடைய கால்களை விடுவித்துக் கொண்டார்.

”நீ யாரை வேண்டுமானாலும் நம்பு. எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடுடா. ஆனால் என்னை மட்டும் நம்பாதேடா.”

சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். ”என்ன வாத்யாரே, நான் உன்னைத்தான் மலை மாதிரி நம்பியிருக்கேன். இப்படி சொல்றியே.”

”என்னை நம்பாதேடா, அண்ணாமலையை நம்பு. ஏன்னா, எங்களை நம்பினால், லட்டு கிடைத்தாலும் கிடைக்கும், லௌ…………… கிடைத்தாலும் கிடைக்கும்,” என்று ஒரு கொச்சை வார்த்தையைக் கூறினார் பெரியவர்.

சிறுவனுக்கு அவர் கூறிய வார்த்தைகள் அப்போதைக்கு கொச்சை வார்த்தைகளாகத் தோன்றினாலும் காலப் போக்கில் அந்தக் கொச்சை வார்த்தைகள் சுட்டிக் காட்டிய உண்மையை உணர்ந்து கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. சிறுவன் அடைந்த அந்த அளவில்லா ஆனந்த வெள்ளம்தான் இன்று அடிமை கண்ட ஆனந்தமாக உங்கள் கைகளில் மலர்ந்துள்ளது.

இந்தக் கொச்சை வார்த்தைகளின் ஆழ்ந்த தெய்வீக உண்மையை விளக்க யுகங்கள் போதாது. சித்தாமிர்த மாமறைப் பொக்கிஷங்கள் அவை. இருப்பினும் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த சித்தாமிர்த துளிகளை ஓரளவு விளக்குகிறோம்.

லட்டு என்பது ஒரு மனிதன் கண், காது என்னும் ஐம்புலன்களால் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய சுகங்களாகும். சற்குருவை நம்பி வாழும் ஒருவர் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் பெற்று வாழ்வார். அவ்வாறு புலன் இன்பங்கள் சலித்து, புலன்களைக் கடந்து நிற்கும் இறையின்பத்தை துய்க்க விரும்பினால் அதையும் அளிக்க்க் கூடியவர் சற்குரு ஒருவரே. இன்றைய உலகில் ஆன்மீகத்தின் உச்ச நிலையாக விளங்குவதே நிர்விகல்ப சமாதி என்னும் தெய்வீக நிலையாகும். அந்நிலையையே கொச்சை வார்த்தையாக பெரியவர் வெளியிட்டார். தனது கோவணாண்டிப் பெரியவரின் கடைக் கண் கடாட்சத்தால் நிர்விகல்ப சமாதி நிலையை ஒரு சதுர்யுக காலத்திற்கு மேல் அனுபவித்தவரே சற்குரு வெங்கடராம சுவாமி அவர்கள் ஆவார்கள்.

தோத்தாபுரியின் வழிகாட்டுதலின்படி நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தாலும் அதில் நிலைத்திருக்க விரும்பாமல் தாய் சேய் என்னும் மனித உறவு நிலையிலேயே தன்னை நிலைத்துக் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல நிர்விகல்ப சமாதி நிலையைத் தாண்டிய பல உயர்ந்த தெய்வீக சித்த நிலைகளை குருவருளால் பெற்றாலும் நமது வெங்கடராம சுவாமிகள் அந்த உயர்ந்த நிலைகளில் தன்னை வைத்துக் கொள்ளாது தன்னுடைய மிக உயர்ந்த ஆன்மீக நிலையை சற்றும் வெளிக் காட்டாது அந்நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்து மக்களில் ஒருவராகவே விளங்கி மக்கள் சேவையை மகேசன் சேவையாக ஏற்று நம்மிடையே நடமாடும் தெய்வமாக விளங்கினார்கள்.

கோவணாண்டிப் பெரியவரின் வாக்கு சாட்சாத் சிவபெருமானின் வாக்குதானே. பெரியவரின் தீர்க தரிசனப்படி சிறுவன் வெங்கடராமன் பிற்காலத்தில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆஸ்ரமம் அமைத்து சுவையான அன்னதானமும் அற்புதமான லட்டு பிரசாதத்தையும் லட்சக் கணக்கான கிரிவல அடியார்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் அளித்து திருப்பணி ஆற்றினார்கள்.

லட்டு பிரசாதத்தின் மகிமையைப் பற்றி அடியார்கள் அவரிடம் கேட்டபோது சுவாமிகள் மேற்கூறிய தனது கோவணாண்டிப் பெரியவரின் கோவண லீலையை நினைவு கூர்ந்தார்கள்.

”இறையருளால் இன்று நமது ஆஸ்ரமம் வழங்கும் லட்டு பிரசாதம் அடியார்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் நிர்விகல்ப சமாதி என்னும் உயர்ந்த ஆன்மீக நிலையை அளிக்கும் தகுதியைப் பெறா விட்டாலும் அந்த லட்டுகளைப் பிரசாதமாகப் பெறும் ஒரே ஒரு அடியாரோ, அல்லது ஒரே ஒரு பிஞ்சு உள்ளமோ கை கொள்ளாத இந்த லட்டு பிரசாதத்தில் கை கொள்ளாத (தன் அறிவுக்கு எட்டாத) ஏதோ ஒரு ஆன்மீக சக்தி இருக்குமோ என்று ஒரே ஒரு நொடி ஆத்ம விசாரம் செய்தால் போதும். அடியேனுடைய கோவணாண்டிப் பெரியவர் இட்ட கட்டளையை ஒரு துளி நிறைவேற்றியவன் ஆவேன்,” என்று மிகவும் பணிவுடன் தெரிவித்தார்கள்.

அந்த யதார்த்த வார்த்தைகளில் இருந்த உண்மைக் கனல் அங்கிருந்த அடியார்களின் நெஞ்சங்களைச் சுட அவர்கள் கண்கள் நீரைப் பனித்தன.

இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு லட்டு வேண்டுமா, …………….. வேண்டுமா?

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam