கொடியது கொடியது பிறவிப்பிணி கொடியதே !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

குறைவற்ற செல்வம் அருளும் குணக்குன்று

ஆயுர்வேத வைத்தியத்தில் சிறுநீரை ஒரு துளி நல்லெண்ணெயில் விட்டு நோயின் தன்மையை அறிந்து கொள்ளும் முறை ஒன்று உண்டு. ஈடு இணையில்லாத சிறப்பை உடைய இந்த நோய் அறியும் முறையானது தொன்று தொட்டு நம் சித்த வைத்தியர்களால் பின்பற்றப் பட்டு வந்த வைத்திய முறையே. தற்போதோ இதனால் கிட்டும் முடிவுகள் தவறான விளக்கத்தைத் தருவதால் பலரும் இம்முறையைக் கையாளுவதில்லை. காரணம் இந்த நோய் காணும் முறைக்கு அடிப்படையான சுத்தமான நல்லெண்ணையே நல்ல எண்ணையாக இல்லாததுதான். நோயை இனங் காணும் முறையிலேயே தவறு நேர்ந்தால் அந்த நோய்க்கு எவ்வாறு வைத்தியம் பெறுவது ? சரி போகட்டும், நாடி பார்த்து நோயின் தன்மையை உணரலாம் என்றால் தற்காலத்தில் பல வைத்தியர்களுக்கும் நாடி பார்க்கும் முறையே தெரிவதில்லை. அதனால் பலரும் ஆங்கில வைத்திய முறையில் பயன்படுத்தப்படும் ஸ்கேன், lab test போன்றவை மூலமாக ஓரளவு நோயின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்றாற்போல் ஆயுர்வேத மருந்துகளை அளிப்பது சகஜமாகி விட்டது. இதனால் எல்லாம் திருப்தி அடையாத நோயாளிகள் இறைவனை நம்பி திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி தங்கள் நோய்க்கு நிவாரணம் பெறலாம் என்றால் அந்த வழிபாட்டு முறைகளிலும் பலவித குழப்பமான சூழ்நிலைகளை நோயாளிகள் சந்திக்க வேண்டி வருவதால் அந்தக் குழப்பங்களுக்கு ஒரு தீர்வாக இந்தக் கட்டுரை பயன்படும் என்று நம்புகிறோம்.

சகஸ்ரலிங்கம் குற்றாலம்

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் கம்பெனி நமக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை அளிக்கிறது என்பதற்காக பல் கூட தேய்க்காமல் ஆடைகளை சரியாக அணியாமல் அலுவலகத்திற்குச் செல்வாரா என்ன ? அதுபோல் நம்முடைய கர்ம வினைகளை ஆலய வழிபாடுகள் நிச்சயம் தீர்க்கும் என்றாலும் அந்த ஆலயத்தில் உள்ள இறைவனை அணுகுவதற்கு முன்னால் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய உடல், மன சுத்தி வழிபாடுகள் காலை துயில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகுமுன் ஆயிரம் ஆயிரம் உண்டு அல்லவா ? இவ்வாறு மனிதப் பிறவி எடுத்த மனிதன் நிறைவேற்ற வழிபாடுகள் ஆயிரமாய் விரியும் என்றால் இவ்வாறு நல்ல மனிதப் பிறவிக்கு வழிகோலுவது நல்ல தாய் தந்தையர்களின் சீரான நல்ல பழக்க வழக்கங்கள் என்பதால் அந்த வழிபாட்டிலிருந்தே நம் மனிதப் பிறவி தொடங்குகிறது என்பதே உண்மை. மனிதனின் முதல் சுத்தி வழிபாடாக அமைவதே ஆசமனம் அல்லது ஆசமணீயமாகும். குத்துக்காலிட்டு அமர்ந்து உள்ளங்கையில் சுத்தமான நீரை மூன்று முறை ஊற்றி அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று கூறி மூன்று முறை நீரை அருந்துவதே அனைவரும் நிறைவேற்றக் கூடிய ஆசமன வழிபாடாகும். மிக மிகச் சாதாரணமான இந்த வழிபாடே உத்தம சந்தானங்கள் உருவகிக்க உதவும் நித்திய பூஜை முறை என்றால் இதை நிறைவேற்ற மக்கள் தயங்குவது ஏனோ ? கிழக்கு நோக்கி குத்துக்காலிட்டு காளி ஆசனத்தில் அமர்ந்து இரு கால்களுக்கிடையில் வலது உள்ளங்கையில் விடும் தீர்த்தமானது உடல் சுத்தி, மன சுத்தி, பஞ்சபூத சுத்தி என்றவாறாக உடல், மனம் மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள நமது உள்ளும் புறமும் திகழும் பஞ்சபூதங்களையும் சுத்தி செய்யவல்லதாக அமைகிறது என்றால் இதை வழிபாட்டிற்கு அமைத்த நம் மூதாதையர்களின் அறிவுத் திறன்தான் என்னே ? குளிக்கும் முன், நீராடிய பின், உணவருந்தும் முன், உணவேற்ற பின்னர், பூஜைக்கு முன், பூசை நிறைவில் என எல்லா சமயங்களிலும் நிறைவேற்றக் கூடிய ஒரு வழிபாட்டு முறையே ஆசமனம் ஆகும். உங்களுக்கு ஏதாவது ஒரு காரியத்திற்கு முன் ஆசமனம் செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் எழுந்தால் ஆசமனம் செய்து அந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள், ஆசமனம் செய்யாமல் அந்த காரியத்தில் ஈடுபடுவதை விட அது சாலவும் நன்று. பாண்டிச்சேரி அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தில் அருள்புரியும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி மனித கற்பனைக்கு எட்டாத எத்தனையோ வியாதிகளைத் தீர்க்கும் குணமுடையது, சக்தி பெற்றது. பலரும் இந்த ஜீவ சமாதியை தற்போது அப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குகின்றனர். இது சம்பந்தமாக பல பக்தர்கள் எது சரியான முறை என்று அறிந்து கொள்வதற்காக திருஅண்ணாமலையில் நமது ஆஸ்ரமத்தையும் மற்ற அடியார்களையும் அணுகுவதால் இது பற்றிய விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். ஸ்ரீபடேசாகிப் அருள்புரியும் ஜீவ சமாதி மட்டும் அன்று எத்திருத்தலத்தையும் பிரதட்சிணமாக அதாவது சுவாமிக்கு வலமாக ஆரம்பித்து சுவாமிக்கு இடமாக வலத்தை பூர்ணம் செய்தலே பிரதட்சிணம் எனப்படும். இது விதி என்று இருந்தாலே விலக்கு என்ற ஒன்று வந்து விடும் அல்லவா ? இந்த விதிக்கு விலக்காக இதுவரை செயல்பட்டவன் சூரபத்மன் ஒருவனே.

ஸ்ரீமுருகப்பெருமான் பின்னவாசல்

முருகப் பெருமான் சூரபத்மனுடன் போர் செய்ய ஆயத்தமாக நின்றபோது சூரபத்மனின் சிவ பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அவனுக்கு அருள்புரிய நினைத்து தன்னுடைய விஸ்வரூபக் கோலத்தைக் காட்டினார். அதுவரை எவரும் பெற்றிராத அந்த திவ்ய கோலகலக் காட்சியில் தன்னை மறந்தான் சூரபத்மன். சூரபத்மனுடைய பரம்பரையைச் சேர்ந்த கோடி கோடி மூதாதையர்களும் முருகப் பெருமானின் ஒரு ரோமத்தின் நுனியில் தொங்கியதைக் கண்டு முருகப் பெருமானின் பராகிரமத்தையும் காலங்கடந்த கோலத்தையும் எண்ணி வியந்தான் சூரபத்மன். செய்வதறியாது திகைத்து முருகப் பெருமானை அப்பிரதட்சிணமாக வலம் வந்தான். இதனால் சூரபத்மனிடமிருந்த அனைத்து பராகிரம சக்திகளும், வீரமும், புண்ணிய சக்திகளும் முருகப் பெருமானை சென்றடைந்தது. அவனிடம் எஞ்சி நின்றது தான் என்ற அகந்தை மாத்திரமே. அதன் விளைவாக ஆஹா ஒரு பொடியனையா நாம் வணங்குவது என்று எண்ணி முருகப் பெருமானை அழிக்க தன்னுடைய வாளை ஓங்கினான் சூரபத்மன். அத்துடன் அவனின் அகங்காரத்தை அழித்து முழுமையடைந்த பக்தனாக தன்னகத்தே ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான். இரண்டாவது விதி விலக்காக நவகிரக வழிபாட்டின்போது சூரியாதி கிரகங்களை வலம் வருவதற்காக அவைகளை ஏழு முறை பிரதட்சிண வலமாகவும் ராகு கேது கிரக மூர்த்திகளுக்கு உரியதாக இருமுறை மட்டுமே அப்பிரதட்சிணமாக வலம் வரலாம். அரிதாக, சற்குரு குறித்த சில பக்தர்களின் வினைகளைத் தீர்ப்பதற்காக அப்பிரதட்சிணமாக திருஅண்ணமாலையையோ, குறித்த சில திருத்தலங்களை குறித்த நேரங்களில் ஹோரைகளில் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூறுவதுண்டு. இந்த விதி விலக்குகளைத் தவிர மற்ற எல்லா தெய்வ மூர்த்திகளையும், மகான்களின் ஜீவ சமாதிகளையும், தாய் தந்தையர் போன்ற பெரியோர்களையும் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதே முறை என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதுவரை தெரியாமல் எத்தனையோ பக்தர்கள் திருத்தலங்களிலும், படேசாகிப் ஜீவ சமாதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வந்து இருப்பதுண்டு. அதற்கு எந்த விதமான பரிகார முறைகளை மேற்கொள்வது என்ற சந்தேகம் வரலாம். நடந்ததைப் பற்றிய கவலையை விடுங்கள், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும், சுபமான பிரதட்சிணங்களாக இருக்கட்டுமே.

நீர் அருளும் நிமல பாக்கியம்

இந்தப் பூமி மட்டும் அல்லாது நம் மனித உடலின் பெரும் பகுதியும் நீரால் அமைந்துள்ளதால் நீரை முறையாகப் பயன்படுத்தி வந்தாலே நாம் இம்மையிலும் மறுமையிலும் அனைத்தையும் பெற முடியும் என்பதை நீரின்றி அமையாது உலகம் என்றார் வள்ளுவப் பெருந்தகை. விபூதி, எலுமிச்சை, நீர் என்ற மூன்றும் எளிதில் மந்திரங்களை கிரகிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இவற்றை முழுவதுமாக செறியச் செய்ய முடியாது என்பதே இம்மூன்றின் இயல்பாகும். You cannot fully saturate. நம் உள்ளங்கையில் வார்க்கும் ஒரு சொட்டு நீருக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் விடும் ஒரு துளி தீர்த்தத்திற்கும், நம் சற்குரு உள்ளங்கையில் பள்ளி கொள்ளும் தீர்த்தத்திற்கும் மலையளவு வேறுபாடு இருப்பது இக்காரணம் பற்றியேதான். நம் உடல் முழுவதும் வியாபித்துள்ள தீர்த்த சக்திகளை தூய்மைப்படுத்தும் எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் இவை அனைத்திலும் மிக மிக எளிமையாக நிறைவேற்றக் கூடியதே இந்த ஆசமனம் என்பதால்தான் இதற்கு இத்தகைய முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் அளித்து வந்துள்ளனர்.

ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்
ஜீவசமாதி கண்டனூர்

அதோடு மட்டுமல்லாமல் நம்பிக்கை, மந்திரம் என்ற இரண்டை மட்டுமே சாதனமாகக் கொண்டு நீரை தூய்மைப்படுத்த முடியும் என்பதும் நீரின் இயல்பாகும். நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் எங்கு சென்றாலும் நம்மைப் போல் தண்ணீர் புட்டியை கக்கத்தில் வைத்துக் கொண்டு செல்வது கிடையாது. அவர் நீர் அருந்துவதே கிடையாது, நீர் அருந்த வேண்டிய அவசியமே இல்லை என்றாலும் ஒரு வழிகாட்டியாக செயல்படுவதற்காக நீர் அருந்தும்போது வழியில் தேங்கிக் கிடக்கும் எந்த நீரையும் அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று மூன்று முறை நீரை அள்ளி அந்த நீரிலேயே வார்த்து விட்டுப் பின்னர் அந்த நீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தாவும் கங்கைக் கரையிலேயே ஒரு சிறு இல்லத்தில் வசித்து வந்தார். மறுகரையில் சிவானந்தா ஆஸ்ரமம் பெரிதாக வளர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்களுக்கு அடைக்கலம் அளித்த போதிலும் தன்னுடைய இருப்பிடத்தை மாற்ற விரும்பவில்லை. மழைக் காலங்களில் கங்கை பெருக்கெடுத்து செல்வதால் அவருடைய சிறு இல்லமெங்கும் கங்கை தீர்த்தம் நிரம்பி அவருடைய கையேடுகள் கூட மிதக்க ஆரம்பித்து விடும். ஆனால், அவர் உறுதியாக அங்கேயே தங்கியதுடன் மண் கலந்த அந்த கங்காஜலத்தையே அருந்தவும் செய்தார். அதனால் அவருக்கு பல சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு துன்பம் அடைந்தபோது கூட தன் இருப்பிடத்தை அவர் மாற்றவில்லை. “இமயம் என் தந்தை, கங்கை என் தாய். தாய் தன்னுடைய தனயனுக்குத் துன்பம் விளைவிப்பாளா ?” என்பது அவருடைய கேள்வி. நம் பரமகுருவிற்கோ, சுவாமி சிவானந்தாவிற்கோ உள்ள நம்பிக்கையை நாம் பெறா விட்டாலும் முறையாக நீரைக் காய்ச்சி முடிந்தால் அதில் சிறிது சுக்கைப் போட்டு காய்ச்சி அருந்தி வந்தாலே போதும் அது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி நம் உடலை இறைவன் குடி கொள்ளும் கோயிலாக மாற்றி விடும். ஊன் உடம்பை ஆலயமாக மாற்றும் முறைதான் இது. நாம் நன்கு யோசித்து, ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய பொருட்களுள் நீர், நீர் சக்தியும் அடங்கும். நீர் சக்திகள் மிகுந்தது எச்சில் மட்டுமல்ல கோழை என்னும் சளியுமாகும். கோழையில் அக்னி சக்திகளும் மிகுந்திருக்கும். அக்னி சக்திகள் மிகுந்த 2007ம் ஆண்டில் திருஅண்ணாமலை தீப சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு தாரை வார்த்து அளித்தார் நம் சற்குரு என்பது நாம் பல முறை விளக்கிய வரலாறே. இவ்வாறு தீப சக்திகள் அளிக்கப்பட்ட திருத்தலங்களில் எச்சில் பொறுக்கி ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதி கொண்டு எழுந்தருளிய காரைக்குடி அருகிலுள்ள கண்டனூர் திருத்தலமும் ஒன்றாகும். எச்சில், எச்சம் என்பதற்கு சந்ததி, தீராத கர்மங்கள், பாக்கி வினைகள் என்றெல்லாம் பொருளுண்டு.

இவ்வாறு தீராத பல கர்ம வினைகளைக் களைந்தருளும் வல்லமை உடையதே திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் என்பதால் அக்னி சக்திகளுக்கு உரித்தான 2007ம் ஆண்டில் தான் இத்தனை ஆண்டுகள் ஒன்று சேர்த்த அக்னி சக்திகளை எல்லாம் ருத்ராக்னி சக்திகளாக உருவகித்து அந்த சக்திகளை எல்லாம் திருஅண்ணாமலையாரிடம் அர்ப்பணித்து அதை திருஉண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையார் பிரசாதமாகப் பெற்று அதை இந்த பூலோகம் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் தன் பூதஉடல் என்ற அஸ்தி மூலம் அர்ப்பணித்தவரே நம் சற்குரு என்ற பெருமையை உணர்ந்தோர் ஒரு சிலரே. இந்த ஒரே ஒரு சித்த மகாத்மியத்தை உணர்ந்து கொண்டாலே போதும் அவர்கள் எச்சம், சந்ததி மிச்சமின்றி வாழும், அதாவது எந்த கர்ம வினையும் அண்டாது வாழ்வர் என்பது உறுதி. திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை அந்த அக்னி ஆண்டில் தரிசிக்க முடியாவிட்டாலும் இந்த குரு ஆண்டிலாவது இத்தகைய குரு சக்திகள், அக்னி சக்திகள் பொங்கிப் பொலியும் ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர் போன்ற ஜீவ சமாதிகளை தரிசனம் செய்து பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுதல் நல்ல ஆரோக்யமான வாழ்வையும் சந்ததிகளையும் பெற்றுத் தரும்.

ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்
ஜீவசமாதி கண்டனூர்

சந்ததி என்னும் குழந்தை பாக்கியத்தை பெறாதோர் எவ்வளவோ பேர் இருக்க அவ்வாறு குழந்தைச் செல்வங்களைப் பெற்றவர்களும் தங்கள் குழந்தைகள் முறையான கல்வி, ஆரோக்யம், மன வளர்ச்சியைப் பெறாமல் போவது கண்டு மனம் வருத்தம் கொள்வது இயற்கையே. அத்தகையோருக்கு சோலை வனமாகத் திகழ்வதே ஸ்ரீஎச்சில் பொறுக்கி சித்தரின் ஜீவ சமாதி வழிபாடாகும். நோய் நிவர்த்திக்கான செவ்வாய்க் கிழமைகளிலும், குரு நம்பிக்கை வளர்க்கும் வியாழக் கிழமைகளிலும் சிறப்பான வழிபாடு மேற்கொண்டு அவரவரால் இயன்ற அன்னதான சேவைகளை நிறைவேற்றுவது எச்சில் கர்மங்களைத் தீர்க்கும் இனிய வழிபாடாக அமையும். தற்காலத்தில் பலரும் திருமண வைபவங்களில் மணமக்களை ஆசீர்வதிக்க அளிக்கும் அட்சதைகளை தூரத்தில் இருந்தே விசிறிப் போடுவதால் அந்த ஆசீர்வாதப் பரல்கள் தம்பதிகளை அடையாமல் போவதுடன் கீழே விழுந்து மற்றவர்கள் காலில் மிதிபடும் அவல நிலையை அடைகிறது. இதனால் தம்பதிகள் மட்டும் பலத்தை தோஷங்களை அடைவதில்லை. இவ்வாறு அட்சதை மணிகளை அள்ளி வீசுவோர் இல்லத்திலும் திடீர் நோய்கள், பொருள் விரயம், கண்ணேறு கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வாக அமைவதே ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதியில் நிறைவேற்றும் வழிபாடு. முனை முறியாத முழு பாசுமதி அரிசியில் மஞ்சள் சேர்த்து பழுத்த 80, 60 வயது நிறைந்த சுமங்கலிகளால் உருவான அட்சதையை பருத்தி நூல் அல்லது வாழை நாரால் தொடுக்கப்பட்ட பூச்சரங்களுடன் ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதியில் அளிப்பது அற்புதமான ஆயுள் விருத்தி, ஐஸ்வர்ய வழிபாடாக அமையும். அவரவர் இல்லங்களில் துளசி மாடத்தின் முன்னால் அமர்ந்து இத்தகைய அட்சதைகளால் வழிபடுவதும் அற்புத ஆயுள் விருத்தி ஐஸ்வர்ய கடாட்ச வழிபாடாக மலரும் என்பதில் ஐயமில்லை. “எச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்” என்ற 16 எழுத்து நாமத்தை 108 முறை ஓதி மேற்கூறிய வழிபாட்டை நிறைவேற்றுவது பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறும் சித்த முறையே.
ஆறுமுகமும் பதினெட்டாக மலரும்
பதினெட்டும் தீவினையைப் பொசுக்கும் கருநாக்காய்த் தீண்டுமே
என்பது ஸ்ரீஆறுமுக சித்தரின் ஜீவ சமாதி வழிபாடு இவ்வாண்டில் அருளும் அனுகிரகம் குறித்த குருவாக்கிய நாடிப் பாடலாகும். திருமண முறிவு, விவாகரத்து பிரச்னைகளால் அவதியுறுவோரும் மேற்கூறிய வழிபாட்டால் நற்பலன் பெறுவர்.

ஷோடச நித்யா துளசி மாடம் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் விநியோகிக்கப்பட்ட அற்புத வழிபாட்டுச் சாதனமாகும். இதை பயன்படுத்தும் பக்தர்கள் இன்றும் உண்டு. மங்கள சக்திகளை, பதினாறு தெய்வீக சக்திகளை பக்தர்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் வழிபாடே ஷோடச நித்யா துளசி மாடமாகும். இதில் நான்கு திசைகளில் துலங்கும் விளக்கு மாடங்களும் எட்டு திசைகளில் துலங்கும் பீட தானங்களும் உண்டு. இந்த அமைப்பின் பின்னால் உள்ள தெய்வீக இரகசியங்களை ஓரளவு உணர்ந்து கொள்ள உதவி செய்வதே திருப்பாற்றுரை மகிமை குறித்த எல்லையில்லா எண் சூத்திரம் என்ற கட்டுரைப் பகுதியாகும். இந்த விளக்கு மாடம் குறிக்கும் எட்டு திசைகளில் மிருகி முத்திரையுடன் இணைந்த ஸ்வஸ்தி நமஸ்காரம் அல்லது சாஷ்டாங்க நமஸ்கார முறையில் ஜீவ சமாதிகளை வணங்குவதால் நான்கு திசைகளில் உள்ள சக்திகள் மட்டும் பெருகுதோடு மட்டுமல்லாமல் இந்த அஷ்ட நமஸ்கார பத்ததியால் எட்டு விதமான அனுகிரகங்களும் பதினாறு நித்ய மங்கள, மாங்கல்ய சக்திகளாக விருத்தியாகின்றன என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் அமைந்த சித்த இரகசியமாகும். தங்கள் ஜாதகங்களில் ஆயுள்காரகனான எட்டாம் அதிபதியோ, ஆயுளை வழங்கும் சனி பகவானோ பகைவர்களால் பார்க்கப்பட்டோ, கூடி இருந்தாலோ, பகை அம்சங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அத்தகையோர் மேற்கூறிய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். இவ்வாறு ஒரு துளசி மாடத்தைக் கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் இருந்த ஒரு அடியாருக்கு மேற்கண்ட துளசி மாடம் ஒன்றை தம் அன்புக் காணிக்கையாக அளித்து ஜாதக ரீதியான குறைந்த அவருடைய ஆயுளை தீர்க்கமாக நீட்டித்து அருள்புரிந்தார் நம் சற்குரு என்பதை ஒரு சில அடியார்களே அறிவர். இவ்வாறு நான்கு மாடங்களிலும் தீபங்களை ஏற்றி ஒன்பதின் மடங்காக இந்த துளசி மாடத்தை வலம் வந்து வணங்குவது அகால மரணங்களைக் களையும் ஒரு சமுதாய சேவையாகவும் அமையும். இந்த துளசி மாடத்தின் முன் தர்ப்பணத்தை நிறைவேற்றும் முறை குறித்து ஏற்கனவே விவரித்துள்ளோம். இதுவும் சமுதாயத்தைக் காக்கும் ஒரு அகால மரண சேவையே.

ஸ்ரீஆரணநாதர் செவலூர்

ஆரோக்யம் அல்லது நோய் என்பது ஒரு மனிதன் ஆரம்பமாகும்போதே அவனைத் தொடரும் வைபவமாக அமைவதால் மனிதன் ஆரம்பமாகும் நிகழ்ச்சியான கருத் தரித்தல் என்ற நிலையையும் கரு தரிக்கும் நிலையமான கர்ப்பப்பை குறித்த இரகசியங்களையும் அறிந்து கொண்டால்தானே அவன் ஆரோக்யத்தைப் பற்றியும் அவனை எதிர்கொள்ளும் நோயைப் பற்றியும் அறிந்தவன் ஆகிறான் ? இதற்கு ஆரம்ப தலமாக அமைவதே உங்களை ஆச்சரியப்படுத்தும் செவலூர் திருத்தலமாகும். புதுக்கோட்டை அருகில் அமைந்துள்ள செவலூர் திருத்தலம் வாஸ்து சக்திகள் பொலியும் தலம் என்பதைப் பலரும் அறிந்திருந்தாலும் அது மனிதனின் ஜனன காலத்துடன் தொடர்புடையதே என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. மூன்று மையங்கள் உண்டு. அதாவது ஒரு பொருளின் இடைப் பகுதி, நடுப் பகுதி, ஆரணம் என்ற மூன்று மையப் புள்ளிகள் எல்லாப் பொருட்களுக்கும் பொதுவானவை. முற்காலத்தில் சிற்பிகள் ஒரு சிலையை செதுக்கும்போது சிறப்பாக இறை விக்ரஹங்களை அமைக்கும்போது அந்த விக்ரஹத்தின் ஆரணப் பகுதியையே முதலில் தேர்ந்தெடுத்து அங்கிருந்து தங்கள் தொழிலை மேற்கொள்வர். காரணம் ஆரணம் சிறப்பாக அமைந்தால்தான் அனைத்தும் சிறப்பாக அமையும் என்பதே இதற்குக் காரணம். நம் உடலின் ஆரண மையப் பகுதியாக அமைவதே நாம் உருவான கர்ப்பப்பை என்றால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய வாஸ்து சாஸ்திரம் இங்கிருந்துதானே, இந்த ஆரம்ப இல்லத்திலிருந்துதானே தொடங்க வேண்டும் ? பொதுவாக கர்பப்பையின் அளவுகள் 3 அங்குலம் நீளம், 1.2 அங்குலம் தடிமானம், 1.8 அங்குலம் அகலம் என்றவாறாக இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த அளவுகள் குரு மங்கள அளவுகளாக இருப்பதால் குரு மங்கள கந்தர்வாவான நம் சற்குருவைத் தவிர வேறு யாரும் நம்மைக் கரையேற்ற முடியாது என்பதற்கு இந்த அளவுகோல்களைத் தவிர வேறொரு சான்று உங்களுக்கு வேண்டுமா என்ன ? காலம் கடந்து 20, 50 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் நாம் உருவான காலத்தை மாற்ற முடியாதே என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவது இயற்கையே என்றாலும் காலம் கடந்து நிற்பவர் ஈசன் ஒருவனே என்பதால் இறைவனுக்குச் செய்யும் சேவை நிச்சயமாக காலம் கடந்து நின்று நம்மைக் கரை சேர்க்கும் என்பதால் நம் தோற்றத்திற்குக் காரணமான சக்திகள் செறிந்த பசுவின் பாலை அதன் இளம் சூடு ஆறும் முன் இத்தல ஸ்ரீபூமிநாதருக்கும் நந்தி மூர்த்திக்கும் அபிஷேகித்தலால் எத்தகைய ஜனன கால தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் வழிபாடாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி செவலூர்

ஒரு நாட்டு பசு மாட்டை வாகனத்தில் ஏற்றி செவலூர் கொண்டு வருவதற்கு எவ்வளவோ பொருள் செலவாகுமே என்று நீங்கள் எண்ணலாம். தற்காலத்தில் இதயம், கர்ப்பப்பை, நுரையீரல் இவைகளில் தோன்றும் தீர்க்க முடியாத நோய்களுக்கு ஆகும் செலவைப் பார்க்கும்போது இவை எல்லாம் ஒரு பொருட்டல்லவே. தேவை நம்பிக்கை மாத்திரமே. இடை, நடு மையம் என்ற இலக்கணங்களைக் கொண்டு செவலூர் அமைந்திருந்தாலும் ஆரண மையம் என்பது பூமியின் உள்பகுதியில்தானே அமைய முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றலாம். உடலில் தலையில் அடிபட்டிருந்தாலும் காலில் அடிபட்டிருந்தாலும் வாய் வழியாக கொடுக்கும் மருந்துகளோ அல்லது தற்காலத்தில் கையில் போடும் ஊசிதானே வலி நிவாரணமாக அமைகிறது. இதே முறையில்தான் பூமியின் உட்பறத்தில் எங்கோ ஒரு இடத்தில் இந்த ஆரண மையம் அமைந்திருந்தாலும் நாம் ஸ்ரீபூமிநாதருக்கும் ஸ்ரீஆரணநாதர் என்ற நந்திமூர்த்திக்கும் நிறைவேற்றப்படும் மேற்கூறிய பசும்பால் அபிஷேகம் ஆரண மைய சக்திகளுடன் துலங்கும் இறைவனுக்கு அளிக்கப்படுகிறது என்பதே உண்மை. ஸ்ரீஆரணவல்லி அம்பிகைக்கு தாமே அரைத்த மஞ்சளால் அபிஷேகம் நிறைவேற்றுவதும் ஆரண சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாகும். மூன்று மூன்றாக 18 கொம்பு மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள் கிழங்குகளை வட்டமாக வைத்து அதன் நடுவில் மூன்று மஞ்சள் கிழங்குகளை வைத்து அதை ஆரண சக்தியாக பாவித்து ஸ்ரீஅகத்தியர் அருளிய திருமகள் துதியை பல சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் ஒன்று சேர்ந்து 21 முறை ஓதி இந்த மஞ்சள் கிழங்குகளை கையால் அரைத்து அம்பிகைக்கு அபிஷேகம் அளிப்பது அனைத்து விதமான மாங்கல்ய தோஷங்களையும் திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மஞ்சள் காப்பு வழிபாடாக அமையும். வெள்ளிக் கிழமை, வளர் பஞ்சமி திதி, ரோகிணி, உத்திர நட்சத்திர நாட்கள் அல்லது இவை சேர்ந்து வரும் நன்னாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பானதே. கர்ப்பப்பை கோளாறுகளையும், மாதவிடாய்த் துன்பங்களையும் நீக்கும் அற்புத வழிபாடு இது. அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பெண்ணியல் மருத்துவர்கள், வாஸ்து நிபுணர்கள், ஜோதிடர்கள், கட்டிட வல்லுநர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். கட்டிட வல்லுநர்களுக்கு சுமைப் பகிர்வு (load sharing) என்ற நுண்ணறிவு பெருகும் தலமே செவலூர் என்பது இத்தல வழிபாடு உணர்த்தும் மகிமைகளில் ஒன்று. நடுவே தூண்களே இல்லாது ஒரு லட்சம் மக்கள் விளையாட்டுகளை கண்டு களிக்க அமைக்கப்பட்ட இந்திரபிரஸ்தம் போன்ற அரங்குகளைக் கட்ட உதவி செய்வதே இத்தலத்தில் பெறும் கட்டிடக் கலை அறிவாகும். வாஸ்து சாஸ்திரம் என்பது இந்த உடலாகிய கட்டிடம் நன்முறையில் எழுவதோடு மட்டுமல்லாமல் அதை முறையாகப் பராமரிக்க உதவுவதே என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். மனித உடல் தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பதும் செவலூர் திருத்தலமாகும். மனித உடல் தோன்றும் கர்ப்பப்பை மனித உடலின் ஆரணப் பகுதியில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஆண் பெண் இணைப்பில் தோன்றும் குழந்தை நன்முறையில் தோன்றுவதற்கு ஆதாரமான மன்மதக் கணைகளை சீர்படுத்துவதும் செவலூரே என்பதே நம்மை பிரமிக்க வைக்க இரகசியம் ஆகும். மன்மதன் தாமரை, அசோகம் போன்ற மலர்க் கனைகளை பெண்களின் மேல், குறிப்பாக உத்தம பத்தினிகளின் மேல் செலுத்துகிறான் என்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இது உண்மையே.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் செவலூர்

இந்த மலர் அம்புகள் அந்தந்த பத்தினிகளுக்கு ராஜாவாக அமைந்த கணவன்மார்களால் செலுத்தப்படுவதால் இந்த மன்மத பாணங்களின் தெய்வீகத் தன்மை மாறாமல் பத்தினி தெய்வங்கள் பெறுவதற்காகவே முகத்திற்கு மஞ்சள் பூசி, சுத்தமான குங்குமமிட்டு, மங்கள தாலியை நூலில் கோர்த்து, கண்களுக்கு சுத்தமான மையைப் பூசி, இடுப்பிற்கு கருப்புக் கயிறு, மேகலை (ஒட்டியாணம்) போன்ற பாதுகாப்புக் கருவிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் காலம் காலமாக சிபாரிசு செய்து வந்துள்ளனர். இந்த விதி முறைகளை தம்பதிகள் தவறாது கடை பிடித்து வந்தாலே போதும் பிறக்கும் குழந்தைகள் எந்த வித அங்கக் குறைபாடும், மனக் கோளாறுகள் இன்றியும் தோன்றும். மன்மத பாணங்களுக்கும் செவலூர் திருத்தலத்திற்கும் உத்தம சந்தான பாக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தாமரை மலர்களால் மாலை கட்டி இத்தல தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து மௌனமாக அடிப் பிரதட்சிணம் நிறைவேற்றி வருதல் நலம். தம்பதிகள் இடையே அமையும் உடற்கூறு பிரச்னைகளுக்கு தக்க தீர்வை உரியோர் மூலம் அளிப்பதும் இத்தகைய வழிபாடுகளாகும். நம் சற்குருவிடம் ஒரு அடியார் தன் மனைவியைப் பற்றி புகார் செய்தார். அவர் ஒரு சிறு வார்த்தை சொன்னாலே போதும் அந்தப் பெண்மணி தன் கையில் வைத்திருக்கும் தட்டு, கரண்டி, டம்ளர் என்று எந்தப் பொருளையும் அந்த பாத்திரங்களில் என்ன சூடான பொருள் இருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அந்த அடியார் மீது வீசி விடுவாள். சற்குரு அந்த அடியார் சொன்ன புகார்களை எல்லாம் அமைதியாகக் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே, “அவள் உத்தமி, அவள் மீது எந்தத் தவறும் கிடையாது. தவறு உன்னுடையதுதான், கண்ணு,” என்று அன்புடன் அரவணைத்து மேற்கூறிய செவலூர் திருத்தல வழிபாட்டைத் தெரிவித்தார். அந்த அடியார் மட்டுமல்ல அந்த அடியாரைத் தொடர்ந்து பலரும் தங்கள் இல்லற வாழ்வில் நலமடைந்தனர் என்று கூறவும் வேண்டுமோ ?! நட்சத்திரம் என்பது என்ன ? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு நட்சத்திர மண்டலப் பகுதியைத்தானே அந்த குறிப்பிட்ட நாளுக்கான நட்சத்திரம் என்று அழைக்கிறோம். இதனுடன் தொடர்பு கொள்வதே பெண்களின் உடலில் குறித்த பகுதியில் தோன்றும் அமிர்த சக்திகள். இந்த அமிர்த சக்திகளை இனங்கண்டு நடைமுறை வாழ்க்கையோடு இணைக்க முடிந்தால் அவர்கள் இல்லற வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். தற்காலத்தில் இத்தகைய அறிவு பெற்றவர்கள் மிகவும் அருகி விட்டதால் நம் சற்குரு ஸ்ரீஅஸ்தீக சித்தர் வழிபாட்டின் மூலம் பெண்கள் இத்தகைய அமிர்த சக்திகளைப் பெற்று அதைக் குடும்ப வாழ்வில் அர்ப்பணிக்கும் இனிய வாழ்க்கை முறையை அருளியுள்ளார்கள். இந்த இரகசியங்களை மனதிற் கொண்டு நாகப் புற்றுகளுக்கு பால் வார்த்து வழிபட்டு வந்தால் அடியார்கள் தங்கள் இல்லற வாழ்வில் சுகம் அடைவதுடன், உத்தம சந்தானங்கள் தோன்றவும் இவை வழி வகுக்கும். ஆண்களும் பெண்களும் அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்று முசிறி, திருவக்கரை போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரையும் அல்லது திருத்தலங்களில் அமைந்த சந்திர மூர்த்திகளையும், பிறந்த திதி நாட்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீகாலபைரவர் போன்ற இறை மூர்த்திகளையும் வழிபட்டு வருதலும் சிறப்புடையதே. இத்தகைய வழிபாடுகளால் அமிர்த சக்தி ஞானம் பெருகுவதால் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நல்வாழ்வு பெற இந்த தெய்வீக ஞானம் பெரிதும் துணை புரியும். ஒல்லி, பருமன், உயரம், குள்ளம் போன்ற பிரச்னைகள் மட்டுமல்லாது வெளியில் சொல்ல முடியாத பல பிரச்னைகளால் விவாகாரத்து வரை சென்ற தம்பதிகள் ஏராளம். இவை அனைத்திற்கும் அடிப்படையான காரணம் தம்பதிகள் இடையே அன்யோன்ய வசியம் இல்லாததுதான். குறைந்தது 21 நீலோத்பல மலர்களால் மாலை கட்டி இத்தல அம்பிகைக்கு அளித்து, பைரவ மூர்த்திக்கு காய்ச்சின பசும்பாலில் டைமண்ட் கல்கண்டு கலந்து நைவேத்யமாக வைத்து தானமளித்தலால் எத்தகைய தாம்பத்ய பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்வுடையும். வசதி படைத்தோர் குங்குமப்பூ, முந்திரி, பாதம், பிஸ்தா போன்ற பருப்புகளையும் வறுத்து பாலுடன் சேர்த்து தானம் அளிப்பதும் சிறப்பாகும். சிறப்பாக மார்கழி மாதம் சூரிய உதயத்திற்கு முன் இயற்றும் இத்தகைய வழிபாடுகளால் தீராத குடும்பப் பிரச்னையே கிடையாது என்று உறுதி அளிப்பவரே நம் சற்குரு.

இதயக் கமலம்

மனிதன் பிறக்கும்போதே எத்தகைய நோய்களுக்கும் இடங்கொடுக்காத வகையில் உத்தம பிறவி எடுத்து விட்டால் அதை விடச் சிறந்த பாக்கியம் எதுவும் கிடையாதுதான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா ? பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வியாதியின் பிடியில் தவிப்பதுதான் கலியுக மனிதனின் நிலையாக மாறி விட்டதால் மனிதனைத் தாக்கும் முதல் வியாதியாக இருக்கும் இதயக் கோளாறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு விவரிக்கிறோம். மனிதனின் இதயத்தை இதயக் கமலம் என்று தாமரை மலருடன் ஒப்பிடுவார்கள் பெரியோர்கள். தாமரையில் யார் குடியிருப்பார்கள் ? இறைவன்தான், இதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாதே. இன்றைய மனிதனோ இதயத்தில் இறைவனை குடி வைக்காமல் அதாவது இதயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யாது எது எதையோ மனத்தில் குடியேற்றுவதால்தான் மனிதன் நிம்மதியின்றி தவிப்பதுடன் மட்டுமல்லாமல் பலவிதமான நோய்களுக்கும் ஆட்பட்டு அல்லல்படுகின்றான்.

திருஆனைக்கா அஷ்டதிக்கு கொடிமரம்

இல்லறப் பெண்கள் முறையாக தங்கள் கடமைகளைச் செய்து வந்தாலே போதும் தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் குடும்பத்தில் எவருக்குமே நோய் நொடிகள் அண்டாது என்று உறுதியளிக்கிறார்கள் சித்தர்கள். இதயக் கமல கோலமானது அடியார்களுக்கு மட்டும்தான் நன்மை பயப்பது என்று கிடையாது. இதய மருத்துவர்களும் இந்த இதயக் கமல கோலத்தை தங்கள் இல்லங்களில் வரைந்து தினந்தோறும் பூசித்து வருதால் இதயம் பற்றிய அறிவு பெருக்கெடுக்கும். இந்தக் கோலத்தில் குறித்த 16 இதய நாளங்களில் ஏற்படும் வீக்கம், அடைப்பு, இரத்தக் கசிவு போன்ற வேதனைகளே இதய நோய்களாக உருவெடுக்கின்றன. இதயக் கமல கோலத்தை பச்சரிசி மாவால் திருத்தலங்கல் வரைந்து இந்தக் கோலத்தைச் சுற்றி எட்டு திசைகளிலும் எட்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி இடை இடையே தேங்காய் எண்ணெய் தீபங்கள் எட்டு ஏற்றி இதயக் காப்பு துதியை ஓதி வந்தால் எத்தகைய இதய நோய்களும் அண்டாது. இது அற்புத சமுதாய வழிபாடும் கூட. எட்டின் மடங்காக அடியார்கள் இந்தக் கோலத்தைச் சுற்றி அமர்ந்து வழிபாடு இயற்றுவதும் சிறப்புடையதே. திருவானைக்கோவிலில் எட்டு திக்குகளில் பொலியும் கொடி மரங்களை முறையாக வழிபட்டு வந்தாலே போதும் கணவன் மனைவிமார்கள் தங்கள் குடும்ப வாழ்வில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பதுடன் இருதய கோளாறுகள் அவர்களை அண்டாது. வேறு எத்திருத்தலத்திலும் அமையாத இந்த கொடி மரங்களின் திசை ஞானம் குறித்து அறிந்த எட்டு கால் பூச்சிகள் என்னும் சிலந்திப் பூச்சிகளே இத்தலத்தில் வழிபட்டு முக்தி அடைந்தன. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதனோ இன்னும் காந்தத்தை வைத்துத்தான் திசை அறியும் நிலையில் உள்ளான். இந்த அஷ்ட திக்கு கொடி மரங்கள் உள்ள பிரகாரத்தை தம்பதிகள் ஒன்று சேர்ந்து வலம் வருதல், இந்த கொடி மரங்களைச் சுற்றிலும் எட்டு தீபங்களை ஏற்றி வழிபடுதல், தேய்பிறை வளர்பிறை அஷ்டமி திதிகளில் குறைந்தது எட்டு பேருக்கு தேங்காய் சாதம் தானம் அளித்தல் போன்ற வழிபாடுகள் இருதய நோய்களுக்கு நிவாரணமாக அமையும். வருமுன் காப்பாக இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதலே சிறப்பாகும். இந்த கொடி மரங்களைச் சுற்றி எட்டு வெண் தாமரைகளை வைத்து எட்டு முறை வலம் வந்து வணங்கி அந்தத் தாமரைகளை இல்லத்திற்கு எடுத்துச் சென்று அதில் உள்ள இதழ்களால் தாமரை டீ தயாரித்து அருந்துவதால் இருதயம் பலமாகும். பள்ளி மாணவர்களுக்கு அறிவு விருத்தியாகும். இத்துடன் கைகளுக்கு மருதாணி இட்டு இந்த கொடிமரங்களை வலம் வந்து வணங்குவதால் பெண்களுக்கு ஏற்படும் பூப்பு பிரச்னைகளும், மாதவிடாய்க் கோளாறுகளும் அகலும். சிறப்பாக பிரதோஷ வேளையில் இந்த கொடி மரங்கள் ஒவ்வொன்றையும் எட்டு முறை வலம் வந்து வணங்குவதால் எம்பெருமானின் 64 நர்த்தனக் கோலங்களையே வலம் வந்து வணங்கிய பலனை வர்ஷிக்க தாண்டவ ரிஷிகள் என்ற அற்புத ரிஷிகள் காத்துள்ளனர். நாம்தான் இந்த அபூர்வ வழிபாட்டு முறையைப் பயன்படுத்துவது கிடையாது. இனியாவது இந்த வழிபாட்டு முறையை கைக்கொண்டு இருதய வியாதிகளிலிருந்து விடுபட்டு குடும்ப ஒற்றுமையைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்ந்து இறைவன் உறையும் இதயத்தில் இறைவனைத் தரிசித்து மகிழும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

திருஅதிகை நாட்டியக் கோலம்

அனைவரும் திருஆனைக்கா அண்ணலை தரிசனம் செய்து தங்கள் இருதய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முடியாது என்பது உண்மையாக இருந்தாலும் இதையும் தீர்ப்பதற்காக பெருங்கருணையுடன் எழுந்தருளியிருப்பதே இறைவனின் அனுகிரக சக்தியாகும். திருநின்றவூர் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் திருத்தலம் என்று இருதய பெயரிலேயே இறைவன் எழுந்தருளி உள்ளார் என்றால் இதைவிட இறைவனின் கருணைக்குச் சான்றாக ஒன்றைக் கூற முடியுமா ? பூசல் நாயனார் என்னும் சிவனடியார் பொருள் வசதி இல்லாததால் தன் இதயத்தில் கோயில் கட்டி அதில் எல்லையில்லா எம்பெருமானை எழுந்தருளச் செய்த பெருமை உடைய திருத்தலமே இதுவாகும். தன்னை இதயத்தில் சிறை வைத்த அடியாரை இறைவன் மட்டும் சும்மா விடுவானா என்ன ? வேறெங்கும் இல்லாத சிறப்பாக, கருணையாக திருநின்றவூர் மூலத்தான சன்னதியிலேயே பூசல் நாயனாரின் திருவுருவம் என்றும் சதாசர்வ காலமும் சிவ தரிசனத்தைப் பெற்று மகிழும்படி எழுந்தருளி உள்ளது இறைவனின் கருணையா இல்லை பக்தியின் சிறப்பா ? இருதய ஆல் ஈஸ்வரர் என்று இறைவனே பக்தர்களின் உள்ளத்தில் ஆலமரம் போல் பரந்து விரிந்து நிலை கொள்ளும் இத்திருத்தலத்தில் அடியார்கள் அடிப் பிரதட்சணம் இயற்றி பசு நெய் தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுதலால் இருதய நோய்கள் மட்டுமல்ல, மனைவி மேல் சந்தேகம், கணவன் மேல் புகார், வேலையாட்கள் மீது அவநம்பிக்கை என்று மனதில் எழும் அனைத்துப் பிரச்னைகளும் தீர்வு பெறும் தலம் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். இறைவனை மனதில் எழுந்தருளச் செய்தால் மனம் அமைதி கொள்ளும் என்பது உண்மை. மனம் அமைதி கொண்டால்தான் இறைவனை உள்ளத்தில் எழுந்தருளச் செய்ய முடியும் என்பதும் உண்மையே. இவ்வாறு மன அமைதிக்கு வழிகாட்டும் உத்தம அண்ணலே நம் சற்குரு எழுந்தருளிய மயிலை திருத்தலமாகும். இங்கு தோன்றிய வாயிலார் நாயனாரை வழிபட்டு வருதலாலும் மனம் தெளிவு பெறும், மனம் அமைதி கொள்ளும். அமைதி அடைந்த மனத்தை எந்த வியாதியுமே அண்டாது என்பது உண்மையே. இறை வழிபாட்டிற்கு அத்தியாவசியமான மன அமைதியைக் கற்பிக்கும் இடமே மயிலை திருத்தலமாகும். பலரும் அமைதியாக இருப்பது போல் வெளிப் பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர்கள் மனமோ அரிக்கேன் என்ற புயல் காற்று வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கும். அத்தகையோரின் மனத்தில் வீசும் புயலை அவர்கள் கண் பார்வை காட்டிக் கொடுத்து விடும். மனம் சாந்தம் கொள்ளும்போதுதான் இறை மூர்த்திகளின் மீது கண் பார்வை நிலை கொள்ளும், உண்மை நிலை புரியும். இவ்வாறு மனதில் சாந்தத்தை உருவாக்கவல்ல திருத்தலமே சென்னை மயிலை திருத்தலமாகும். இங்கு அமைதி கொள்ளாத மனம் எங்கும் தூங்காது, அமைதி பெறாது. மனம் அமைதி பெறாததற்கு மனதில் எழும் காட்சிகளே முக்கிய காரணம் என்பதால் குருடர் சேவை இருதய நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றதாக அமைகிறது. திருஆனைக்கா, திருநின்றவூர், மயிலை ஆகிய தலங்களில் வழிபாடுகளை இயற்ற முடியாதவர்கள் 63 நாயன்மார்கள் விளங்கும் சிவத்தலங்களில் கண்ணப்ப நாயனார், வாயிலார் நாயனார், பூசல் நாயனார் என்ற நாயன்மார் மூர்த்திகள் முன்னால் பச்சரிசி மாவால் இருதய கமலக் கோலமோ அல்லது தங்களுக்குத் தெரிந்த கோலமோ இட்டு அதன் மேல் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்த முக்கூட்டு எண்ணெயால் தீபம் ஏற்றி அந்த தீபங்கள் குளிரும் வரை பிரகாரங்களை பிரதட்சிணம் வருதல் நலம்.

ஸ்ரீகண்ணப்ப நாயனார் பட்டமங்கலம்

தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய நாயன்மார்களின் முன்பு தீபம் ஏற்றுவதும் சிறப்புடையதாகும். உதாரணமாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநாளைப்போவார், மங்கையர்க்கரசியார் போன்ற நாயன்மார்கள் முன்பு மாக்கோலம் இட்டு தீபம் ஏற்றி வழிபடுதலால் இருதய நோய்கள் மட்டுமல்லாது தங்கள் வாழ்க்கைக்கு உரிய தக்க வழிகாட்டுதலையும் பெற முடியும். கண்ணப்ப நாயனார், கண் அப்பிய நாயனார் என்றும் போற்றப்படுகிறார். அப்புதல் என்றால் நன்றாகப் பதியும்படி பூசுதல் என்று பொருள் அல்லவா ? தன்னுடைய கண் இறைவனின் நேத்திரக் கோளத்தில் நன்றாகப் பதியும்படி ஆர்வத்துடன் பூசியதால் கண்ணப்ப நாயனார் கண் அப்பிய நாயனாராகப் புகழப்படுவதில் ஆச்சரியம் அல்லவே. பார்வை இழந்தவர்களுக்கு அல்லது பார்வை குறைந்தவர்களுக்கு பாடம் கற்பித்தல், எழுதிக் கொடுத்தல், படித்துக் காட்டுதல், கதை சொல்லுதல் போன்ற இலவச சேவைகளும் இறைவன் மேல் பக்தியை வளர்க்கும் அற்புத சாதனங்களே. கண் இழந்தவர்களுக்கு தங்களுடன் இணையாக விளையாடும் தோழர்கள் இல்லை என்பது ஒரு பெரிய மனக் குறை. இந்தக் குறையை நிவர்த்தி செய்தாலே ஆயிரக் கணக்கில் அவர்களுக்கு கொடுத்து உதவியது போன்ற சந்தோஷம் கிடைக்குமே. இது அனைவரும் நிறைவேற்றக் கூடிய பணிதானே. கண் இழந்தவர்களை திருஅண்ணாமலை, காளஹஸ்தி, மேற்கூறிய தலங்களுக்கு அழைத்துச் செல்வதும் இருதய நோய்களைத் தீர்க்கும் அற்புத சேவையே. தற்காலத்தில் பல திருத்தலங்களிலும் இறை மூர்த்திகளுக்கு அமைக்கும் திருவாசியில் யாழி உருவங்களை பதித்து வைக்கின்றனர். இது எதிர்மறை சக்திகளைத் தோற்றுவிப்பதால் இத்தகைய யாழி உருவங்களைத் தவிர்த்து திருஅதிகை திருத்தலத்தில் உள்ளது போன்ற விழித் தாமரையை திருவாசியில் பதித்தலோ அல்லது ஓம் என்னும் பிரணவ சக்கரத்தையோ பதிக்கும்படி சித்தர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஏற்கனவே இவ்வாறு அமைந்த யாழி உருவங்களை மாற்ற முடியாது என்ற நிலையில் உள்ளபோது அந்த யாழி உருவங்களுக்கு மேல் ஓம் என்னும் பிரணவ யந்திரத்தை நம் ஆஸ்ரமத்தில் உள்ளது போல் அமைத்து வழிபடுதல் நலம். சாதாரணமாக தியானத்திற்காக அமர்ந்து பக்தர்கள் கண்களை மூடும்போது ஒரு இருண்ட சூழ்நிலையை அதாவது இருட்டைத்தான் சந்திக்கிறார்கள். எப்போது அவர்கள் இமையை மூடும்போது இங்குள்ள சித்திரத்தில் உள்ளது போன்ற விழித் தாமரையை அவர்கள் தரிசிக்கிறார்களோ அப்போதே அவர்கள் தியான நிலையில் சரியாக முன்னேறுகிறார்கள் என்பது பொருள். எனவே திருத்தலங்களில் தூணில் உள்ள ஒவ்வொரு சித்திரமும் சிலையும் ஆயிரம் பொருள் பொதிந்த அர்த்தங்களுடன் கூடியதாக இருக்கும் என்பதே நாம் திருத்தலங்களைப் பற்றிக் கொள்ள வேண்டிய சரியான கண்ணோட்டமாகும். கண்ணப்ப நாயனார் இறைவனின் பசியைத் தீர்ப்பதற்காக பறவை இனங்களில் மிகச் சிறந்த குருவிகளைச் சமைத்து அந்தக் கறி உணவுகளை இறைவனுக்கு நைவேத்தியாக பரிமாறியதால் அந்த குருவி இனங்கள் அனைத்தும் முக்தி பெற்று விட்டன என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். அந்தக் குருவிக் கறிகளின் மாமிச சக்திக்கு இணையான வல்லாரை, அஸ்வகந்தா, சிறுநெருஞ்சி லேகியம் என்ற லேகியங்களை தானமாக அளிப்பதால் இருதய நோய்களிலிருந்து விரைவில் நிவாரணம் கிட்டும். இதயத்தில் குடியிருக்கும் இறைவனுக்கு இதை விடச் சிறந்த நைவேத்யம் ஒன்று உண்டா ?

ஊர்த்துவரேதஸ் என்ற எட்டெழுத்து சக்தி ஒன்று உண்டு. பூமியின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படாமல் மனிதனின் முதுகுத் தண்டில் சகஸ்ராரத்தை நோக்கி எழும் குண்டலினி சக்தியே இது. மூலாதாரத்தின் சக்தியை காலால் எழுப்பும் சக்தி பெற்றவர்கள் அதாவது பிராணாயாம சக்தியில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த படியாக இந்த குண்டலினி யோகத்தை குருவருளால் மேற்கொள்ள முடியும். பிராண வித்யா என்னும் பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து அதை மற்றவர்களின் உடல் நோய்களைத் தீர்க்க பயன்படுத்தும் வித்தையில் தலை சிறந்தவரே ரிஷிகேஷ் சிவானந்தா சுவாமிகள் ஆவார். இந்த ஊர்த்துவரேதஸ் சக்தியை அனைவரும் பெறும் மார்கமாக “ஊர்த்துவமூலம் ... ” என்று தொடங்கும் பகவத் கீதையின் பதினைந்தாவது பகுதியை தினமும் உணவு வேளையின்போது ஓதும் பழக்கம் சிவானந்தா ஆஸ்ரமத்தில் மட்டுமல்லாது இரை தேடும்போது இறையையும் தேடு என்ற ஞானானந்தா கிரியின் உபதேசத்தை ஒட்டி இந்தியாவின் பல ஆஸ்ரமங்களிலும் இந்த கீதை பாராயண முறை பின்பற்றப்படுவது சிறப்பே. இவ்வாறு ஊர்த்துவரேதஸ் சக்திகளை மனிதர்கள் பெறுவது கடினம் என்றாலும் இதை அனைவருக்கும் குரு பிரசாதமாக தாரை வார்த்து அளித்தவரே, இன்றும் பக்தர்களுக்கெல்லாம் இந்த சக்திகளை அனுகிரக சக்திகளாக அளித்துக் கொண்டிருப்பவரே ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவார். திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது முன்கால்களை அழுத்தி தரையில் வைத்து பின்னங்கால்களை, குதிகால்களை உயர்த்தி நடக்கும்போது இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்திகள் உடலில் தோன்றுகின்றன என்றாலும் இதை மற்றவர்களின் நலனுக்காக தாரை வார்த்து அளிக்கும் சக்தி பெற்றவர் கிருஷ்ண பகவான் ஒருவரே. அஷ்டமி திதி ஜனனம் என்ற ஒரு சிறப்பே இத்தகைய சக்திகளை மற்றவர்களுக்கு அளிக்கவல்லது என்றால் பகவானின் மற்ற சிறப்புகளைப் பற்றி பக்தர்கள் என்று அறிந்து கொள்வது. அஷ்ட வக்ர மகரிஷியும் இவ்வாறு தன் உடலில் எட்டு இடங்களில் ஏற்பட்ட கோண சக்திகளால் இந்த ஊர்த்துவரேதஸ் சக்திகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலிருந்து ஈர்த்து அதை மக்களுக்கெல்லாம் அளிக்கும் அற்புத நோய் நிவாரண சேவைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியம் ஆகும். இவ்வாறு ஸ்ரீகிருஷ்ண பகவான் ஈர்த்த ஊர்த்துவரேதஸ் சக்திகளை நேரிடையாக பக்தர்கள் பெறும் சக்தி பெறாததால் பசுக்களின் பாலை கறந்த சூடு ஆறும் முன் இறை மூர்த்திகளுக்கு அர்ப்பணித்து அந்தப் பால் அபிஷேக திருக்காட்சியைப் பெறும் பக்தர்களும், பால் பிரசாதத்தை கோமுகம் வழியாக பெறும் பக்தர்களும் பெருமளவில் இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்திகளைப் பெறுகின்றார்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா ? பல திருத்தலங்களிலும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் காலை பசு மாடுகள் நக்குவது போன்ற காட்சியை நீங்கள் காணலாம். ஸ்ரீகிருஷ்ண பகவான் திருஅண்ணாமலையை வலம் வந்து பெற்ற ஊர்த்துவரேதஸ் சக்திகளையே இவ்வாறு க்ஷீர சக்திகளாக பசுக்களுக்கு அளிக்கிறார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியம். ஒரு சாதாரண பால் அபிஷேகம் என்று நாம் நினைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னால் எத்தகைய நோய் நிவாரண சக்திகள் மறைந்துள்ளன பார்த்தீர்களா. மடிப்பால் தானம் என்னும் கன்று குட்டிகளுக்கு பாலை நாள் முழுவதும் அளிக்கும் தான முறையை கிரக பிரவேச நாட்கள் மட்டுமல்லாது மற்ற தினங்களிலும் மேற்கொள்வதால் இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்தியால் இல்லங்களில் நோய் நிவாரண சக்திகள் பெருகும். திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஅருணகிரி நாதரின் ஜீவ சமாதியை தரிசிப்பதால் இந்த ஊர்த்துவரேதஸ் சக்திகளைப் பெறலாம். திருஅண்ணாமலை கிரிவலத்தில் எவ்வளவு தூரம் இவ்வாறு முன்கால்களால் பிரதட்சிணம் செய்கிறோமோ அந்த அளவிற்கு ஊர்த்துவரேதஸ் சக்திகள் பெருகும், உடலில் நிறையும். மற்ற மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசிக்கும்போதும் இவ்வாறு அஷ்ட நமஸ்கார பத்ததி முறையில் தரிசனம் செய்வதால் இத்தகைய நோய் நிவாரண சக்திகள் பெருகும். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என்றவாறாக எட்டு திசைகளில் நமஸ்கரிப்பதே அஷ்ட நமஸ்கார பத்ததி ஆகும். சக்தி வாய்ந்த சித்த வழிபாட்டு முறை இது. இருதயத்துடன், இதயத்துடன் நேரிடை தொடர்பு கொள்ளும் முத்திரை இது.

ஏகாதச ருத்ர லிங்கங்கள் ராமேஸ்வரம்

நாள், நட்சத்திரம் என்று காலத்தின் ஐந்து பகுதிகளையும் குறிப்பதே பஞ்சாங்கம் என்பதாகும். இந்த பஞ்சாங்கத்தில் திதியை முறையாகப் பயன்படுத்தினால் செல்வம் பெருகும் என்பது விதி. உடல் ஆரோக்கியம் என்பதே மனிதர்கள் பெற வேண்டிய முக்கிய செல்வமாக விளங்குவதால் இந்த திதி வழிபாடே அனைத்து ஆரோக்யங்களையும் நல்கி வியாதிகள் அற்ற சிறப்பான ஆரோக்யத்தை அளிக்கவல்லதாகும். மக்களுக்கு சிறப்பான ஆரோக்யத்தை அளிக்கவல்லதே ஏகாதசி திதியாகும். முறையாக ஏகாதசி விரதம் இருந்தாலே அதாவது நிர்ஜலம் என்றவாறாக நீர் கூட அருந்தாது இறை நினைவில் முழுவதுமாக மூழ்கி இருத்தலே ஏகாதசி விரதத்தை முறையாகக் கொண்டாடும் முறையாகும். இத்தகைய விரதத்தில் மட்டுமே ஏககங்கா என்ற அற்புத நோய் நிவாரண சக்தியை அளிக்கும் அமிர்த சுரப்பு உடலில் ஏற்படும். இந்த அமிர்த சுரப்பை உடல் எங்கும் பரிமாற்றம் செய்யவே நீர் அருந்தாது இறை நினைவுடன் ஏகாதசி திதியைக் கொண்டாட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். நடைமுறையில் இது பலருக்கும் சாத்தியம் ஆவதில்லை என்பதால் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடி இத்திருத்தலத்தில் அபூர்வமாக எழுந்தருளி உள்ள ஏகாதச ருத்ர லிங்கங்களை தரிசனம் செய்வதால் நாம் முறையான ஆரோக்ய வாழ்வைப் பெற முடியும் என்பதே நம் சற்குருவின் அருளுரை. நெருப்பில் சுட்ட சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை தானமளிப்பது இந்த வழிபாட்டிற்கு துணை செய்யும் தான முறையாகும். ஏகாதசி என்ற விரத நாளில் உணவு தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். இதைப் பற்றி தெளிவாக நம் சற்குரு ஏற்கனவே அருளியுள்ளார். ஒருவர் சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவேன் என்ற ஆரோக்ய நிலையிலோ அல்லது வறுமை நிலையிலோ இருக்கும்போது திதியைக் காரணம் காட்டி அவருக்கு அன்னதானத்தை நிராகரிப்பது எவ்விதத்திலும் சரியாகாது. அதனால் ஏகாதசி மட்டுமல்ல கிரகண காலங்களிலும் தாராளமாக அன்னதானம் நிறைவேற்றலாம் என்பதே சித்தர்களின் அருளுரை, தெளிவுரை. திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து ஏகாதச ருத்ர மூர்த்தி தரிசனம் கண்டு அன்னதானம் நிறைவேற்றுவதும் ஆரோக்ய வாழ்வை அளிக்கக் கூடியதே. இங்கு நீங்கள் தரிசனம் செய்வதே சற்குருவின் பெருங் கருணையால் ஐப்பசி மாதம் வளர் ஏகாதசி திதி அன்று ஏகாதச ருத்ர மூர்த்திகள் நல்கும் திருக்காட்சியாகும்.

வாழ்வித்த மருந்து

என்னதான் ஒரு திருத்தலம் எத்தனையோ வியாதிகளையும் தீர்க்கக் கூடியதாக இருந்தாலும் ஒரே திருத்தலத்திலேயே மனிதனுடைய நோய்கள் அனைத்தையும் தீர்த்து நோயில்லா பெருவாழ்வைப் பெற முடியாதா என்ற கேள்வி மனிதர்கள் மனதில் தோன்றுவது இயற்கையே. திருவெறும்பூர் திருத்தலம் தோல் நோய்களைத் தீர்க்கும், திருமுல்லைவாயில் நரம்புத் தளர்ச்சி நோய்களைக் குணமாக்கும், திருப்பைஞ்ஞீலி திருத்தலமோ பைத்தியத்தையும் நீக்கும் சக்தி பெற்றது, கபால நோய்களைத் தீர்ப்பார் மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் என்றாலும் அனைத்து நோய்களையும் தீர்த்து அருள்புரிபவரே வாழ்வற வாழ்வித்த மருந்தாக இறைவன் அருள்புரியும் உத்தரகோசமங்கை திருத்தலமாகும். “மூன்று காட்சியும் ஒன்பதே” என்ற சிறப்புடையதாக அமைந்ததே உத்தரகோசமங்கை திருத்தலமாகும். பொதுவாக அம்பாளும் இறைவனும் ராஜ கோபுரங்களுடன் திகழ்வது என்பது அரிதான காட்சியாக இருந்தாலும் இவ்வாறு அரிய கோபுரங்களுடன் திகழ்ந்தாலும் அந்த கோபுரங்களில் உள்ள கலசங்கள் சுவாமி கோபுரத்தில் அதிகமாகவும் அம்பாள் கோபுரத்தில் அதை விடச் சற்று குறைவாகவே இருத்தலே நாம் காணும் கோபுரக் காட்சிகளின் சிறப்பாகும். இதற்கு விதிவிலக்காக அமைந்ததே உத்தரகோசமங்கையில் அம்பாள் ராஜ கோபுரமும் சுவாமியின் திருக்கோபுரமும் நோய் தீர்க்கும் ஒன்பது கலசங்களுடன் திகழ்வதாகும். இத்தலத்தின் திருநாமமும் ஒன்பது எழுத்துக்களுடன் திகழ்வதும் இந்த நோய் தீர்க்கும் சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும்.

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை என்ற சொல்லிற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்றாலும் உத்தரம் என்றால் பதில் கோசம் என்றால் தொகுப்பு என்ற பொருளும் உண்டு. மக்கள் மனதில் எழும் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கக் கூடிய ஒரே திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். போகர், புலிப்பாணி போன்ற உத்தம சீடர்கள் மக்களின் மனதில் அவ்வப்போது முளைக்கும் கேள்விகளுக்கு உரிய சரியான பதிலை தங்கள் சற்குருவான ஸ்ரீஅகத்திய மகரிஷியிடமிருந்து பெற்று மக்கள் நல்வாழ்விற்காக அர்ப்பணித்ததைப் போல மக்களின் சார்பில் பார்வதி மங்கை கேள்விக் கணைகளைத் தொடுக்க அதற்கு எம்பெருமான் அளித்த தெய்வீக பதில்களின் சாகரமே உத்தரகோசமங்கை ஆகும். இந்த கண்ணோட்டத்தை மனதில் கொண்டு இங்குள்ள மங்கை கோபுரத்தையும் மணாளன் கோபுரத்தையும் தரிசனம் செய்தால் உங்கள் மனதில் எழும் வினாக்கள் அனைத்திற்கும் உள்ளங்கை நெல்லிக் கனியாக பதில்கள் மிளிரும் என்பதே உத்தரகோசமங்கையின் சிறப்பாகும். இறைவி பார்வதி தேவி மங்கள நாயகியாக பல திருத்தலங்களில் எழுந்தருளி இருந்தாலும் இறைவனும் ஸ்ரீமங்களேஸ்வரராக இத்தலத்தில் எழுந்தருளி இருப்பதே இத்தகைய அர்த்தநாரீஸ்வர கோலத்தை மேலும் சிறப்பிப்பதாகும். இறைவி எழுப்பும் வினாக்களுக்கு இறைவன் அளிக்கும் செம்மையான பதில்கள் இறைவியின் மனதில் அதாவது கேட்பவரின் மனதில் மங்களத்தன்மையை, இனி கேள்விகளே மனதில் எழாத பூரண நிலையை ஏற்படுத்தி விடும் என்றால் உத்தரகோசமங்கையின் சிறப்புதான் என்னே. இத்தலத்தின் பெருமையைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுவதானால் ஒரு முறை சற்குரு அவர்கள் ஒரு அடியார் இல்லத்தில் எழுந்தருளினார். சற்குருவை வரவேற்று தங்கள் இல்லத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து “சீரார் பவளங்கால் ...”, என்று மாணிக்க வாசகர் உத்தரகோசமங்கையில் அருளிச் செய்த திருப்பொன்னூசல் பதிகத்தைப் பாடி வரவேற்பு அளித்தார். கடுகளவு இந்தச் சிறிய சேவைக்கே அந்த அடியார் இன்றளவும் பக்தர்கள் மனதில் எழும் வினாக்களுக்கு உரிய தெய்வீக பதிலை அளிக்க முடிகிறது என்றால் உத்தரகோசமங்கை திருத்தல வழிபாடு எந்த அளவிற்கு பக்தர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு எல்லாம் உரிய விடைகளை கருணா மூர்த்தி அம்பாள் மூலம் பெற்றுத் தரும்.

ஸ்ரீமரகத நடராஜர் உத்தரகோசமங்கை

கைலாயக் காட்சி உத்தரகோசமங்கை

ஆன்மீக வினாக்கள் என்று கிடையாது தங்கள் மனதில் எழும் அனைத்து வினாக்களுக்கும் பதில் பெற விரும்புவோர் இத்தல சகஸ்ர லிங்க மூர்த்தியை தரிசனம் செய்து சகஸ்ர லிங்கத்தின் அருகில் உள்ள துவாரம் வழியாக கைலாயக் காட்சி என்னும் இத்தலத்தில் கிடைக்கும் அரிய காட்சியை தரிசனம் செய்வதால் தங்கள் மனதில் அனைத்து வினாக்களுக்கும் உரிய பதிலைப் பெறுவார்கள். உத்தரகோசமங்கையின் தல விருட்சமான இலந்தை மரத்தடியில் சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளதால் இந்த தல மர நிழலில் தீரா வியாதிகளே இல்லை என்று சொல்லலாம். உண்மையில் இத்தல இலந்தை மரத்தை அர்த்தநாரி இலந்தை என்றே கூறலாம். இப்பூவுலகில் தோன்றிய முதல் இலந்தை மரம் இதுவே. இந்த இலந்தை மரம் தோன்றிய பின்பே மாணிக்க வாசகரால் இந்த சகஸ்ர லிங்கமே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றால் இத்தலவிருட்சம் காலம் கடந்து நிற்பது அல்லவா ? இலந்தைப் பழத்தில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் கலந்து இருப்பதும் இதை அர்த்தநாரீஸ்வர தத்துவ மரமாக புகழ்வதற்கான காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக இலந்தை தல விருட்ச நிழல் இருதய வியாதிகளுக்கு ஓர் அற்புத வரப் பிரசாதமாகும். தொடர்ந்து இத்தல விருட்ச நிழலில் அமர்ந்து கைலாயக் காட்சி தரிசனத்துடன் சகஸ்ர லிங்க தரிசனத்தையும் மேற்கொண்டு வந்தால் மருத்துவர்கள் துணையின்றி தாங்களே தங்கள் இருதய நோய்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நோய்களுக்குமான காரணத்தை அறிந்து கொள்ளலாம். நோய்க்கான காரணத்தை, மூலத்தை அறிந்து கொண்டால் மற்றதெல்லாம் ஒரு நொடியில் நிகழ்வதுதானே. வதரி, பத்ரி என்ற சொற்களும் இலந்தை மரத்தைக் குறிப்பவையே. பத்ரி நாராயண அம்சமாக, சிவ சக்தி ஐக்ய சொரூபமாக விளங்கும் இலந்தை மரத்தின் அடியில் அமர்ந்து சகஸ்ர லிங்க தரிசனத்தையும் கைலாயக் காட்சியையும் சுக்ர பீட துவாரம் வழியாகப் பெறுவது என்றால் இதை விடச் சிறந்த பாக்கியத்தை பூலோக மக்கள் பெற முடியும் ? சுக்ர பீட முத்திரையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரு சுக்ர விரல்கள் எனப்படும் கட்டை விரல்கள் மேல் குருவிரல்கள் என்னும் ஆள்காட்டி விரல்கள் பள்ளி கொள்வதையே சுக்ர பீட முத்திரை என்று அழைக்கிறோம். உத்தரகோசமங்கையில் குருவருடமான இவ்வருடம் சுக்ரபீட முத்திரை வழியாக கைலாய காட்சியைக் கண்டு தரிசனம் பெறுவது என்பது எத்தகைய பேறு ? இதன் பலன்களை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கோசார ரீதியாக தனுசு ராசியில் குரு பகவான் எழுந்தருளி உள்ளதால் உத்தரகோசமங்கையில் ஒரு வருட காலத்திற்கு இத்தகைய சுக்ரபீட முத்திரை வழியாக கைலாய காட்சி பெறுதல் என்பது எத்தனையோ வியாதிகளுக்கும், அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் விடை அளிக்கும் உத்தம வழிபாடாக அமைகிறது.

ஸ்ரீசகஸ்ரலிங்கம் உத்தரகோசமங்கை

திருஅண்ணாமலையை எங்கு தொட்டாலும் குரு அருள் சுரக்கும் என்பது போல் உத்தரகோசமங்கையை எங்கு தொட்டாலும் உடல் நோய்களும் மன நோய்களும் விலகும் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். காக்கைகள் அடிக்கடி நீரில் மூழ்கி அந்த நீர்த் திவலைகளைத் தங்களைச் சுற்றி தெளிப்பதை பலரும் கண்டிருக்கலாம். இது ஏதோ பறவைகளின் விளையாட்டு என்று மக்கள் நினைப்பதுண்டு. உண்மையில் இது பரவெளியில் அக்னி சக்திகளை நிரவும் வழிபாடு ஆகும். இந்தக் காட்சியே, சிறப்பாக தேய்பிறை செவ்வாய்க் கிழமைகளில் கிட்டும் இத்தகைய நோய் நிவாரண காட்சிகள் பல வியாதிகளுக்கும் மருந்தாக அமையும். காக்கைகள் தெளிக்கும் நீருக்கே இத்தகைய நோய் நிவாரண சக்தி உண்டென்றால் ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி நோய் நிவாரண சக்திகளை இன்றளவும் பூலோகத்தில் வர்ஷிக்கிறார் என்றால் இத்தலத்தில், அக்னி தீர்த்தத்தில் விளையும் நோய் நிவாரண சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? இங்கு நீங்கள் தரிசனம் செய்வது இத்தகைய நோய் நிவாரண சக்திகள் நிரம்பிய அக்னி தீர்த்தம் மட்டும் அல்ல அத்தீர்த்தத்தில் பொலியும் ஒன்பது கலசங்கள் கொண்ட கோபுர நிழலுமாகும். செவ்வாய் என்பது ஒன்பதைக் குறிக்கும் எண் ஆதலால் ஒன்பது கலசங்கள் உடைய கோபுர நிழலை புதன் கிழமைகளில் அதிலும் சிறப்பாக இவ்வாறு புத பகவானுக்கு உரித்தான மரகத நடராஜர் ஆலயத்தில் தரிசனம் செய்வதால் கிட்டும் நோய் நிவாரண சக்திகள் கோடி கோடியே. குசா சக்திகள் பொலியும் புதன் கிழமையில் நீங்கள் மரகத நடராஜர் தரிசனம் பெறுதல் என்பது உங்கள் மூதாதையர் செய்த யுகக் கணக்கான புண்ணியமே என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி அக்னி தீர்த்தத்தில் நீராடி நோய் நிவாரண அக்னி சக்திகளை வர்ஷித்தது எத்தனையோ யுகங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி போல் உங்களுக்குத் தோன்றினாலும் இன்றளவும் உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இந்த புண்ணிய சக்திகளை மக்களும் மற்ற உயிரினங்களும் பெறுமளவிற்கு இந்த தீர்த்தத்தில் வர்ஷிக்கிறார் என்பதே இலந்தை மர நிழலில் பள்ளி கொண்ட அவருடை திருப்பாதுகைகள் உறுதி செய்கின்றன. இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் பாதுகைகளே எத்தனையோ வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக அமைவதுடன் எத்தனையோ வியாதிகளுக்கு நோய் நிவாரண சக்தியையும் அளிக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் 2000 புதிய வியாதிகளுக்கு அருமருந்து அளிக்கக் கூடிய ஒரே தீர்த்தம் இங்கு விளங்கும் அக்னி தீர்த்தமே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

ஸ்ரீவராகி அம்மன் திருக்கோயில்
உத்தரகோசமங்கை

குடும்ப அங்கத்தினர்கள், சத்சங்க அடியார்கள், மருத்துவர்கள் போன்றோர் இங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடி சகஸ்ர லிங்க மூர்த்தியை தரிசனம் செய்து ஒருவர் கையை ஒருவர் கோர்த்தவாறு அமர்ந்து ஸ்ரீகாகபுஜண்டரின் மனைவியான நற்பவி தேவியின் திருநாமத்தை வாய்விட்டு ஓதுவதால் கிட்டும் பலன்கள் ஏராளம், ஏராளம். சற்குரு அவர்கள் அருளிய இந்த நற்பவி நாம உச்சாடனத்தில், நற்பவி தியானத்தில் மலரும் நோய் நிவாரண சக்திகள் கோடி கோடியே. அனுபவித்தவர்கள் பலன் உணர்வர். பிறவிப் பிணியையே தீர்க்கவல்ல அற்புத வழிபாடு இது என்றால் வேறு எந்த நோய்தான் மக்களை நாடும் ? இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் சகஸ்ர லிங்கத்தின் புகைப்படமே நோய் நிவாரண சக்திகளை வர்ஷிப்பதை உணர முடியும் என்றால் இத்தகைய சக்திகளை நேரடியாக நீங்கள் உத்தரகோசமங்கையில் பெற்றால் அது எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். எதையும் சாதிக்கவல்லவர் நம் சற்குரு என்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சான்றாகும். ஸ்ரீவராகி அம்மன் உபாசனையில் வல்லவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தபோது முதல் 20000 கிரிவலப் பலனை தன்னுடைய தாய் முக்தி அடைவதற்கும், அடுத்த 20000 கிரிவலப் பலனை தன்னுடைய தந்தையார் முக்தி அடைவதற்கும், பாக்கி கிரிவலப் பலன்களை எல்லாம் இந்த உலக மக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காகவும் அர்ப்பணித்தார் என்பதே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் பற்றி சித்தர்கள் உரைக்கும் இரகசியம் ஆகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற உத்தமர்களே தங்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பலனை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்றால் முக்தி என்பது எத்தகைய உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த முக்திப் பதவியையே எளிதாக அளிக்கக் கூடியதே உத்தரகோசமங்கையில் பக்தர்கள் இயற்றும் ஸ்ரீவராகி அம்மன் வழிபாடாகும். அரிதிலும் அரிதாக ஸ்ரீவராகி அம்மன் தனிக் கோயில் கொண்டு இத்தலத்தில் பொலிவதால் நோய் நிவாரண சக்திகள் மட்டுமல்லாமல் தாங்கள் விரும்பும் எந்த சக்தியையும் பெற இத்தல அம்பிகை அருள் புரிகிறாள். ஸ்ரீவராகி அம்மன் இத்தலத்தில் சுயம்புவாய்த் தோன்றி அருள்பாலிப்பதால் குடும்ப ஒற்றுமைக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் அருளும் தேவி இவளே. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஸ்ரீவராகி தேவியைப் போல் அமர்வதில் பெருவிருப்பம் கொண்டவர். அவர் அமரும் நிலையே ஸ்ரீவராகி அனுகிரகத்தை அளிக்கக் கூடியதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற விஷயங்களை நீங்களே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஒவ்வொரு திருஅண்ணாமலை கிரிவலத்தை முடித்தவுடன் ஒரு முறை மூன்று நிமிட வராகி முகூர்த்த நேரத்தில் அமர்ந்து அவ்வாறு கிட்டும் நோய் நிவாரண சக்திகளை எல்லாம் இந்த உலகிற்கு அர்ப்பணித்த பெருந்தகை ஆவார்.

ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீமங்களேஸ்வரர் உத்தரகோசமங்கை

மங்களம் என்ற வார்த்தைக்கு பல சுபமான அர்த்தங்கள் உண்டு அல்லவா ? மங்கள நீராடல் என்று திருமணத்தின்போது மணப் பெண்ணிற்கும் மணமகனுக்கும் நிகழ்த்துவாரகள். மணமக்களின் பிரம்மச்சர்ய வாழ்வின் மங்களமாக திருமண வாழ்வின் ஆரம்பமாகத் திகழ்வதே இந்த மங்கள நீராடல். அது போல நோய்வாய்ப்பட்டு துன்பத்தில் வாடும் நோயாளிகள் தங்கள் துன்பம் மறைந்து சுக வாழ்வைப் பெற, ஆரோக்ய வாழ்வைப் பெற உறுதுணையாக நிற்கும் தெய்வ மூர்த்திகளே உத்தரகோசமங்கையில் அருள் புரியும் ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீமங்களேஸ்வரர் இறை மூர்த்திகள் ஆவர். அபூர்வமாக ஸ்ரீமங்களேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதுடன் சதுர ஆவுடையில் எழுந்தருளி இருப்பது எத்தகைய கொடிய நோய்களிலிருந்தும் பக்தர்களுக்கு நிவாரணம் அளித்து அவர்கள் ஆரோக்ய வாழ்வைப் பெற வழிகாட்டும் உத்தம மூர்த்தி ஆவார். ஸ்ரீமங்கள நாயகி பெண் அடியார்களுக்கு வரும் நோய்களைத் தீர்ப்பதுடன் அவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்படும் மாதவிடாய்த் துன்பங்கள், பிரசவ வேதனைகள் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் சகாயதேவியாக அருள்புரிகிறாள். மூலமூர்த்தி சதுர ஆவுடையுடன் திகழ்வதால் போலீஸ், ராணுவம், உளவுத் துறை போன்ற ஆபத்து துறைகளில் பணிபுரிவோருக்கு தக்க பாதுகாப்பையும் தைரியத்தையும் அளிக்கும் ஆபத்சகாய ரட்சகராக அருள்புரிகிறார். பிரம்மா விஷ்ணு இறைவனின் அடி முடி தேடிய வைபவத்திற்கு முன் தோன்றிய தலமாதலால் இங்கு தாழம்பூ மலர் இறைவனுக்குச் சூட்டப்படுகின்றது. இங்குள்ள தல விருட்சமும் இந்த வைபவத்திற்கு முன் தோன்றிய சிறப்புடையதே. குரு தத்துவமாக பொலியும் மூன்று இதழ்களுடன் பொலியுடம் பத்ரி பத்ரங்களுடன் இந்த தலவிருட்சம் பொலிவதும் இக்காரணம் பற்றியே. உத்தரம் என்பது வடக்கு திசையையும் குறிப்பதால் இங்கு தல விருட்ச நிழலில் சகஸ்ர லிங்கத் திருவடியில் அமர்வது சாட்சாத் குருநிழலில் அமர்ந்த புண்ணிய சக்திகளைத் தரவல்லது என்றால் உத்தசகோசமங்ககைக்கு நிகர் உத்தரகோசமங்கையே.

ஸ்ரீமுருகப் பெருமான் உத்தரகோசமங்கை

ஸ்ரீவிநாயகப் பெருமான் உத்தரகோசமங்கை

அபூர்வமாக உத்தரகோசமங்கையில் சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீமுருகப் பெருமானும் இடதுபுறம் ஸ்ரீபிள்ளையார் மூர்த்தியும் எழுந்தருளி உள்ளனர். அதோடு ஸ்ரீமுருகப் பெருமான் பட்டீஸ்வரம் திருத்தலத்தில் உள்ளது போல் யானையை வாகனமாகவும் பெற்றிருக்கிறார். இது குறித்த வரலாறு சுவையானதே. தியாகத்தின் உச்சகட்டமாகத் திகழ்வதே. முருகப் பெருமான் தெய்வானையை மணந்த பின்னர் வள்ளியையும் திருமணம் கொள்ள விழைந்தபோது வள்ளி அறியாமையால் வயோதிக வடிவில் வந்த சுப்ரமண்ய சுவாமியை நிராகரித்தார். இந்த காதல் ஜோடியை இணைக்க தூதுவராக யானை வடிவில் வந்து அருள்புரிந்தவரே ஸ்ரீவிநாயகப் பெருமான் ஆவார். அண்ணனின் தியாகத்தை மெச்சி யானை வாகனத்தைப் பெற்றதுடன் ஸ்ரீவிநாயகப் பெருமான் உவந்தளித்த இறைவனின் வலது பக்கத்தில் எழுந்தருளும் பாக்கியத்தையும் சகோதரப் பரிசாகப் பெற்றவரே, அண்ணனின் அன்புக் காணிக்கையாகப் பெற்ற மணாளனே ஸ்ரீமுருகப் பெருமான் ஆவார். சிறு வயது முதலே தீராத வறுமையில் உழல்வோரும், அண்ணன் இருக்க மணம் புரிந்து கொண்ட தம்பிமார்களும் இத்தல முருகன் பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி யானைகளுக்கு வயிறார உணவளித்து வந்தால் சுகமடைவர். தங்களுக்கிடையே சொத்துத் தகராறு, குடும்பப் பிரிவினை போன்ற தோஷங்களால் வருந்துவோரும் இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி இந்த உன்னத சகோதரர்களுக்கு ஆடைகள் சார்த்தி வழிபடுதலால் அவர்கள் இடையே, அவர்கள் சந்ததிகள் இடையேயும் குடும்ப ஒற்றுமை ஓங்கும். பாகப் பிரிவினை தகராறுகள் சுமுகமாகத் தீர்வுடையும். சிலருக்கு சிறுவயதிலேயே தோல் சுருங்குதல், தலை நரைத்தல், முதுகு கூன் விழுதல், பற்கள் விழுந்து விடுதல் போன்ற துன்பங்களால் வருந்துவதுண்டு. இத்தகையோர் இத்தல முருகன் பிள்ளையார் மூர்த்திகளை கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி தைலங்களால் காப்பிட்டு, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் வைத்து வழிபடுதலால் வயதுக்கு மீறிய வியாதிகளால் விளையும் துன்பங்கள் குறையும். சிறு வயதிலேயே படிக்கும் மாணவர்கள் கண்களுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு திரியும் அவல நிலையும் மறையும். வயதாகி திருமணமாகாமல் வருந்துவோர் இத்தகைய வழிபாடுகளால் திருமண பாக்கியத்தையோ, தகுந்த பாதுகாப்பையோ பெறுவார்கள். பொதுவாக, வயதாகி விட்டது என்பதால் விவாகரத்து ஆன பெண்களையோ, கணவனை இழந்த பெண்களையோ, கணவனால் நிராகரிக்கப்பட்ட பெண்களையோ திருமணம் செய்து கொள்வதை சித்தர்கள் அங்கீகரிப்பதில்லை. ஆனால், ஏற்கனவே மணமானவர்கள் முறையான விவாகரத்தைப் பெற்ற பின் இத்தகைய பெண்களை ஏற்றுக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்பதால் இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு அளிப்பதும் இந்த தானம் மாறிய சகோதரர்களின் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

உத்தரகோசமங்கை

திருமணமான புதிதில் சற்குரு தன் மனைவியுடன் பெருமாள் நாமம் கொண்ட அடியாருடன் மதுரை அருகில் உள்ள சதுரகிரி மலைக்கு சென்று அங்கு மூன்று இரவுகள் மூன்று பகல் நேரங்களில் தங்கி தவமியற்றிய வரலாற்றை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். விளக்கே இல்லாமல் சூரிய நட்சத்திர ஒளி பிரகாசத்தில் திகழ்ந்த அந்த குகையில் சற்குரு பெற்ற அனுகிரகத்தை குறித்த சில அடியார்கள் பல வருடங்களுக்குப் பின் சதுரகிரி மலையில் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சியாக அப்போது அவர்கள் காலபைரவரின் தரிசனத்தை நேரே பெற்ற வரலாற்றையும் முன்னரே தெரிவித்துள்ளோம். இவ்வாறு சதுர்வேத சக்திகள் பெற்ற தலமே சதுரகிரி மங்கலம் என்று அழைக்கப்படும் உத்தரகோசமங்கை ஆகும். சூரியன் இல்லாத இரவு வேளையில் சந்திரன் ஒளி வழங்குவான், சந்திரனும் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும்போது நட்சத்திரங்கள் ஒளி வழங்கும், நட்சத்திரங்களும் மறைந்த வேளையில் வேதங்கள் தங்கள் வேத சக்தியால் பொருட்களைக் காணும் தன்மையை அளிக்கும். அந்த வேத சக்திகளையும் மனிதன் பெற முடியாமல் போகும்போது தன் சற்குருவின் அனுகிரகமே ஒளி மயமாக விளங்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தலமே உத்தரகோசமங்கை ஆகும். இந்த வரிகளில் ஆழ்ந்த பல கருத்துக்கள் பொதிந்துள்ளதால் பக்தர்கள் இந்த வரிகளை பல முறை படித்து தங்கள் வாழ்க்கைக்கு ஒளி வீசும் கலங்கரை விளக்கமாக, தெளிவூட்டும் குரு ஜோதியாக உணர்ந்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நம் சற்குரு, குறித்த சில அடியார்கள் சதுரகிரியில் பெற்ற காலம் கடந்த அனுபவங்களை இந்த காலம் கடந்த நேரத்திலும் பெற உதவி செய்வதே உத்தரகோசமங்கையில் இலந்தை நிழலில் வீற்றிருக்கும் சகஸ்ரலிங்க வழிபாடு ஆகும். சாதாரணமாக சகஸ்ர லிங்கத்தை ஒரு முறை சுற்றி வந்தாலே ஆயிரம் சிவலிங்கங்களைச் சுற்றி வந்த பலன் பெருகும் என்பதால் பெரும்பாலான சகஸ்ரலிங்கங்கள் அடியார்கள் சுற்றி வலம் வந்து வணங்கும் முறையில் எழுந்தருள்வது கிடையாது. அபூர்வமாக ஒரு சில திருத்தலங்களில் மட்டுமே (லால்குடி நகர், காளையார்கோவில், திருச்செங்கோடு) வலம் வரும் வகையில் சகஸ்ரலிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் இவ்வாறு காலம் கடந்த தலவிருட்சத்தின் நிழலில் இத்தகைய அபூர்வ மூர்த்தி எழுந்தருளி இருப்பது சதுர்வேதமங்களமாகத் திகழும் உத்தரகோசமங்கையில் மாத்திரமே. இந்த சகஸ்ரலிங்கம் முன் அமர்ந்து தொடர்ந்து வழிபாடு இயற்றுபவர்கள் “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின்” தரிசனத்தையும் பெற முடியும் என்றால் என்னே அரிய பாக்கியம் இது் ?! இவ்வாறு வேதம் கடந்த வேத நாயகனின் தரிசனத்தை ஒளி வடிவில், மரகத ஒளி வடிவில் ஸ்ரீவியாசர் பெற்ற திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். அன்று பெருமான் அளித்த ஒளிப் பரல்கள் இன்றும் ஒளி வீசுகின்றன என்றால் இந்த இறை கருணைக்கு ஈடு இணை ஏது ? ஸ்ரீஇடியாப்ப சித்தருடன் சிறுவன் வெங்கடராமன் இத்தலத்திற்கு வந்து இந்த மரகதப் பரல்களின் தரிசனம் பெற்ற போது அப்படியே திகைத்து நின்று விட்டானாம். சிறுவன் வெங்கடராமன் மீண்டும் இவ்வுலக நினைவைப் பெற ஒரு வார காலத்திற்கு மேல் ஆகி விட்டதாம். இங்கு நீங்கள் காணும் வலைக் கம்பிகளின் நிழல், சந்தனக் காப்பு, மரகத ஒளி வடிவம் இவற்றைத் தாண்டி நீங்கள் காண்பதே நித்திய மங்கள மதுர நடராஜர் தரிசனம்.

ஸ்ரீராமானுஜர்

ஸ்ரீவெங்கடராம சித்தர் என்றோ பெற்ற ஸ்ரீநடராஜர் தரிசனத்தால் என்ன பலன் என்று ஒரு சிலருக்கு கேட்கத் தோன்றலாம். ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான் என்று தில்லைக்கூத்தை வர்ணிப்பவரே நம் சற்குரு. இவ்வாறு ஆதியில் நடனம் பொலிந்த நடராஜப் பெருமானின் தரிசனத்தை பெற்றே அந்த தரிசன பலனை பூலோக மக்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் நம் சற்குரு என்பதே இந்த நடராஜ தரிசனத்திற்குப் பின் அமைந்த தெய்வீக இரகசியம். நம் சற்குரு திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் இருந்தபோது அங்கு நிலை கொண்ட ஸ்ரீராமர் சீதை லட்சுமணன் என்ற தெய்வ மூர்த்திகளுக்கு ஊஞ்சல் சேவை சாதித்தவாறே அவர்களுடன் சாதாரண மனிதரைப் போல உரையாடிக் கொண்டிருப்பதை தரிசனம் செய்து, இரசித்த ஆஸ்ரம அடியார்கள் அநேகர். நம் சற்குரு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மதுரமான பதில்களை அளித்து வந்தவரே ரகுநாதன் ஆவார். அதே போல் திருஅண்ணாமலையாருடன் தசமுக சிவசக்தி ஐத்ய தரிசனம் எதிரே அமர்ந்து தன்னுடை விரல் அசைவுகளைப் பல கோணங்களில் காட்டி திருஉண்ணாமுமலை சமேத திருஅண்ணாமலையாருடன் நம் சற்குரு உரையாடிய விநோதத்தைக் கண்டு இரசித்த ஆஸ்ரம அடியார்களும் அநேகர். இது ஏதோ ஆண்டானுக்கும் அடியவர்க்கும் நடந்த உரையாடல் கிடையாது என்பதை ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை அறிந்தோர் அறிவர். ஸ்ரீஉடையவர் அன்றாடம் தன்னிடம் அடியார்கள் கேட்கும் கேள்விகளை எல்லாம் தொகுத்து ஸ்ரீவரதராஜ பெருமாளிடம் சமர்ப்பிக்க அப்பெருமான் தேனினும் இனிய தன் குரலால் அந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து வந்தார் என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இதே ஒலியாகி ஒளியாகி அதற்கப்பாலும் மிளிர்ந்த திருஅண்ணாமலையான் உத்தம அடியாரான நம் சற்குருவிற்கு தன்னை நம்பி வந்த சீடர்களுக்கு எல்லாம் பதில் அளித்து வந்தார் என்று அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா ? இதுவே கேட்காமல் கேட்ட கேள்விகளுக்கு சொல்லாமல் சொல்லும் பதில்கள். இது நிகழும் அரங்கமே ஒரு காலத்தில் திருஅண்ணாமலை ஆஸ்ரமம், இன்று உத்தரகோசமங்கை நடராஜ சன்னதி. உண்மையில் இறைவனிடம், சற்குருவிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. மௌனமாக இருந்தால் கூட நம் மனதில் தோன்றும் கேள்விகள் அனைத்தையும் உரிய பதில்கள் மூலம் தீர்த்து வைப்பார்கள். சற்குருவிடம் கேள்விகள் கேட்கும்போது ஒருவர்தானே கேள்வியைக் கேட்பார். ஆனால் சற்குரு கூறும் பதிலைக் கேட்டு அது சரியே என்று தலையாட்டுபவர்கள் நாலைந்து பேர் அக்கூட்டத்தில் இருப்பார்கள். இது எதைக் குறிக்கிறது. சற்குரு ஒருவருக்கு மட்டும் பதில் அளிப்பதில்லை. பலர் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாக பதிலை அளிக்கிறார் என்பதே இதன் பின்னணியில் அமைந்த சுவையான, தெய்வீக இரகசியம். சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோர் திருஅண்ணாமலை ஆஸ்ரமம், தசமுக தரிசனம், சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனம் என்று கூட கிடையாது தங்கள் இல்லத்தில் அமர்ந்தபடியே, தங்கள் படுக்கையில் படுத்தபடியே தங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு நிச்சயமாக உரிய விடைகளைப் பெறலாம். நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் ஸ்ரீஉடையவரின் சித்திரத்தை அளிக்க ஒரு அடியார் வந்து போது அவருக்கு உடையவர் வர்ஷம் என்ற நவ அட்சர மழைப் பொழிவை உருவாக்கி வருண பகவான் கௌரவித்தார் என்றால் சற்குருமார்களின் கருணைக்கு, நவஅட்சர திருத்தலமான உத்தரகோசமங்கைக்கு இதை விடச் சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியுமா ?

ஸ்ரீதுர்கை அம்மன் உத்தரகோசமங்கை

ஆடையின்றி பல ஆண்கள் நடுத் தெருவில் திரியும் நிலைபற்றிக் குறிப்பிட்டு நம் சற்குருவிடம் கேட்டபோது, “உடலில் நல்ல இரத்தம் இருக்கும் திமிறில் பெண்களை அலங்கோலப்படுத்தி விரட்டி அடிப்பதால் எதிர்காலத்தில் ஆண்கள் சந்திக்கும் நிலையே இது. அனுபவித்துத்தான் இதை சரி செய்ய முடியும்,” என்றார். அதே போல மன நிலை சரியில்லாத பெண்களுடன் கூடி இன்பம் அனுபவித்தவர்கள் இதன் விளைவாக பைத்தியம், மூளையில் கட்டி, புற்று நோய் போன்ற வியாதிகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதால் தற்காலிக சுகத்திற்கு அடிமைப்பட்டு எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என்று சித்தர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இவ்வாறு முற்பிறவிகளில் பெண்களுக்கு இழைத்த கொடுவினைகளே இப்பிறவியில் பல வியாதிகளாக வந்து மிரட்டுகின்றன என்பதே உண்மை. முற்பிறவிகளைப் பற்றி அறியா விட்டாலும் இப்பிறவியில் பெண்களுக்கு செய்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவைகளுக்கு தக்க பிராயசித்தம் பெற வழிகாட்டும் திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். உத்தரம் என்றால் மேற்கூரை, அதாவது இல்லத்திற்கு மேற்கூரை போன்ற பாதுகாப்பை அளிப்பவளே உத்தம மனைவி என்பவள் ஆவாள். இத்தகைய மனைவிக்கு இழைக்கும் துன்பங்களே தீராத வியாதிகளாக வந்து மக்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்ள உதவும் தலமே உத்தரகோசமங்கை ஆகும். நவமி திதிகளில் இத்தலத்தில் ஒன்பது முறை வலம் வந்து இத்தல துர்கை அம்மனை வணங்கி வழிபடுவதால் தாங்கள் செய்த தவறுகளின் தன்மை தங்கள் மனத்தின் மூலமாகவோ, தக்க பெரியோர் மூலமாகவோ உணர்த்தப்படுவார்கள் என்பதே இத்தல துர்கை வழிபாட்டின் மகிமை ஆகும். பருத்தியாலான ஒன்பது கஜ புடவைகளை அம்மனுக்கு சார்த்தி வழிபடுவதும், பெண்களுக்கு தானமாக அளித்தலும் பிராயசித்த முறைகளை உணர வழிகாட்டும். இதுவே பிராயசித்தமாகாது என்பதை நினைவில் கொள்ளவும். தீக்கொழுந்து அல்லது ஜ்வாலா சக்தியை அனுகிரகமாக அளிக்கும் ஒரே தேவியே உத்தரகோசமங்கை துர்வா தேவி ஆவாள். சமீப காலத்தில் தன்னுடைய முற்பிறவி ஒன்றில் இத்தகைய அனுகிரகத்தைப் பெற்றவளே கண்ணகி ஆவாள். இச்சக்தியைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் என்றாலும் சூரியனிடமிருந்து தோன்றும் அக்னி சக்தியால் பூமியிலுள்ள பொருட்கள் வெப்பமடைந்தாலும் நடுவிலுள்ள வானப் பகுதியோ பனிக் கட்டியை விடக் குறைந்த குளிர் சக்தியுடன்தானே துலங்குகிறது. கண்ணகி பெற்ற இத்தகைய தீக்கொழுந்து சக்தியால்தான் மதுரையில் குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள், பசுக்கள், வேதம் ஓதும் அந்தணர் போன்றோரைத் தவிர்த்து தன்னுடைய கற்புக் கனல் வீசும்படிச் செய்தாள். உத்தம பெண்களை எந்தச் சூழ்நிலையிலும் காக்கும் சக்தி பெற்றதே இந்தத் தீக்கொழுந்து சக்தி ஆகும். பல ஆண்களிடையே பணி புரிய வேண்டிய நிலையில் உள்ள இளம் பெண்கள், தனித்து வாழும் பெண்கள், தங்கள் கற்பிற்குக் களங்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் சூழ்நிலையில் உள்ள அனைத்துப் பெண்களும் உத்தரகோசமங்கை துர்கா தேவியை வணங்கி வருவதால் நல்லருள் பெறுவார்கள். அவதார மூர்த்திகளே இத்தகைய தீக்கொழுந்து சக்திகளுக்கு அஞ்சுவர், தெய்வங்களே இத்தகைய கற்புக் கனலுக்கு எதிரிடையாக செயல்படுவது கிடையாது என்றால் இந்தக் கற்புக் கனல் எத்தகைய சக்தி உடையதாக இருக்கும் ? இத்தகைய தீக்கொழுந்து சக்திகளை மற்றவர்களுக்கு அனுகிரக சக்தியாக அளிப்பதற்காக அமிர்தானந்த மயி அன்னை ஒன்பது ஆடைகளுடன் திகழ்கிறார் என்பதையும் இத்தகைய பாதுகாப்பு கவச சக்திகளை மற்ற பெண்களுக்கு அளிக்க விரும்பும் பக்தர்கள் ஒன்பது விதமான ஆடைகளை பெண்களுக்கு தானமாக அளித்தல் நலம் என்று ஏற்கனவே சற்குரு அருளியுள்ளதை இங்கு நினைவு கூர்க.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam