திருஅண்ணாமலையைச் சுற்றி வா, நீ கர்ப்பத்தில் சுற்ற மாட்டாய் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஅருணாசல கிரிவல முறை

காண்போரின் எண்ணங்களையெல்லாம் கொள்ளை கொள்ளும் திருஅண்ணாமலையாரின் அருட்கடாட்சத்தை அள்ளிப் பருகும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் எழில்மிகு ஆஸ்ரமம். தன் சீடர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காகவும், உலக மக்களின் நல்வாழ்வுக்காகவும் உன்னத தொண்டு ஆற்றி வரும் உத்தம குருநாதரும், அவர்தம் சீடர்களும் அருட்பெருஞ்சோதி அண்ணாமலையை வலம் வரும் முறை பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வுரையாடலைக் கேட்போமா?

சீடன் : சற்குரு மகாதேவா! குறிப்பிட்ட நேரத்தின்படி வேலையைச் செய்யும் மக்கள் குறைந்து விட்டனரே! இதன் காரணம் யாதோ?

குரு: மக்கள் அனைவரும் உதட்டளவு புகழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். உதட்டளவு புகழ்ச்சியை எதிர்பார்க்கும் மக்கள் உள்ளத்து நிறைவோடு வேலைகளைச் செய்வரா? ஆகவே எந்த ஒரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தின்படி செய்பவர் குறைந்து விட்டனர்.

சித்தர்கள் வணங்கும்
ஸ்ரீகனிகணபதி மூர்த்தி

‘மகிழ்ச்சி பொங்க, மனநிறைவு பெற
புகழ்ச்சியால் பூமியில் புளகாங்கிதம் பெற்று வாழ
நிகழ்ச்சியே இதுவாய் ஆகவேணும் என்று
இகழ்ச்சி எதுவாயினும் பெற்று வாழ விரும்புதே இம்மாநிலம்!’

என்று இத்தகைய மக்களின் நிலை பற்றி அகத்திய கிரந்தங்கள் எடுத்தியம்புகின்றன.

சீடன்: தற்போது தொழிலாளிகளும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு வேலை செய்வதில்லையே, குருதேவா!

குரு: உண்மைதான், ஒருவருக்கு எட்டு மணி நேர வேலை என்று நிர்ணயித்து, அதற்கு ஊதியமும் கொடுத்து விடுகிறார்கள் தொழிலதிபர்கள், அரசாங்கத்தார், தனி அதிபர்கள். ஆனால் இதில் எத்தனை பேர் எட்டு மணி நேரம் விடாமல் உழைக்கிறார்கள்? இதில் எத்தனை மணி நேரம் வீணடிக்கிறார்கள்? அவரவர் மனசாட்சியே இதற்கு பதில் சொல்லும்.

சீடன் : ஆனால் தனக்குப் பிடித்தமான காரியமாயிருந்தால், அதில் சுயநலமும் கூடியிருந்தால் அதற்கு நேரம் காலம் பார்ப்பதே கிடையாது. அது ஏன், குருதேவா?

குரு: இதற்குக் காரணம் கருவிலிருந்தே தெய்வீகம் உருவாகவில்லை என்பது ஆன்மீகம் தருகின்ற விளக்கம்.

சீடன் : குருதேவா! சிலர் தங்களுக்கு இட்ட பணி நேரத்தைவிட அதிகமாகவே வேலை செய்கின்றனர், அது ஏனோ?

குரு: இதற்குக் காரணம் தாய், தந்தையரின் பூரணமான இறை நம்பிக்கையே ஆகும். வாழ்க்கையில் ஏற்பட்ட சில விரக்தியான சம்பவங்களாலும் இவ்வாறு மாறலாம்.

சீடன் : விரக்தியால் அதிகமாக வேலை செய்கிறார்களா? விளக்கம் வேண்டும், குருதேவா!

குரு: ஆமாம், சீடனே! சிலர் காதலில் தோல்வி அடைந்திருக்கலாம். அதன் தாக்குதலால் வெளியுலகைப் பார்க்க அஞ்சி வேலையில் மிகுந்த நேரத்தைச் செலவிடுகின்றனர்.     குடும்பத்தில் பல பிரச்னைகள்  இருக்கலாம். மனைவி, குழந்தைகளால் தொல்லை, அவர்களுக்கு நோய், கடன் தொல்லை, வறுமை போன்ற பல துன்பங்களைச் சந்திக்க அஞ்சி அதை மறக்க வேலையில் ஈடுபடுகின்றனர்.

சீடன் : குருதேவா! எட்டு மணி நேரம் வேலை செய்கின்றேன் என்று ஒரு வேலைக்குச் சேர்ந்துவிட்டு அதை ஒரு மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு மற்ற நேரங்களெல்லாம் வீண் கதையடிப்பதும், தன்னுடைய சுயநல விருத்திக்கு உரித்தான வேலைகளைச் செய்வதும் தவறல்லவா?

குரு: ஆமாம்! இவ்வாறு ஒவ்வொருவரும் அவருடைய வாழ்நாளில் பல மணி நேர கர்மங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பல மணி நேர கர்மாக்கள் தான் மனிதனை ஆன்மீகத்தில் செல்லவிடாத முதல் மாயையாய் அமைந்து விடுகிறது.

சீடன் : ஆன்மீகப் பாதையிலுள்ள மற்ற தடைக் கற்கள் யாதோ, குருதேவா?

குரு: மனிதனின் சுயநலம் அடுத்த தடைக்கல்லாய் அமைகிறது. சுயநலம் ஓர் அளவிற்குத் தேவைதான். ஆனால் அந்தச் சுயநலமே முழுநேரச் செயல்பாடாக அமைந்து விடக் கூடாது.

சீடன் : நாம் ஒவ்வொருவரும் முன் வினை, நடப்பு வினை, எதிர்கால வினை, இறந்த பிறகும் மறுவினை என்ற நினைவுகளை நிரந்தரமாக ஆழ்மனதில் பதித்திருக்கிறோம் என்ற கூற்று உண்மையா, குருதேவா?

குரு: இது உண்மையே.

சீடன்: ஆனால் இத்தகைய நிலைகளைப் பற்றி நம்முடைய மனமானது உணர்வதில்லையே, குரு தேவா?

குரு: உடல் பாதிக்கப்பட்டு நோயால் சாய்ந்தவுடனும், எதிர்பாராத விபத்துக்களைச் சந்திக்கும் போதும், பணத்தை நம்பிக் கொடுத்துத் திரும்பி வராத போதும், மனைவி மக்கள் நம்மை மதிக்காது ஒதுக்கும் பொழுதும் அல்லது நிராகரிக்கும் பொழுதும் தான் இத்தகைய வினைகளைப் பற்றி ஏற்றுக் கொள்ளுகிறோம்.

இது மிகவும் நேரங்கடந்த தீர்ப்புகள். அனுபவித்த பிறகு, தண்டனை பெற்ற பிறகு ஒருவன் திருந்துவது உலகத்திலுள்ள 95 சதவீத மக்களின் இயற்கையான வாழ்வாகும்.

சீடன்: குருதேவா! சிலர் மட்டும் அதிதிறமையாகத் திருந்தி வாழ்கிறார்களே, அது எங்ஙனம்?

குரு: அதற்குக் காரணம் அனைவரும் ஒத்துக் கொள்ளும் நடப்பு வினையே ஆகும். (இப்பிறவியில் நாம் செய்கின்ற நற்செயல்களும், தீய செயல்களும் ஆகும்.)

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் அவரவர் கர்மங்களை அவரவர் செய்கைகளால் நிர்ணயித்து ஆண்டவனை சாட்சியாய் வைத்துத் தங்கள் எதிர்காலத்தை முடிவு செய்கின்றனர். ஆகவே நாம் இறைவனைச் சந்திக்கும்பொழுது நல்வினை தீவினைகளுக்கு உரித்தான தண்டனையையும், வெகுமதியையும் நாமே நிர்ணயித்து இறைவனிடம் அளிக்கின்றோம்.

சீடன்: கேட்கவே, வியப்பாக இருக்கிறதே, குருதேவா! தண்டனையையும், வெகுமதியையும் நாமே நிர்ணயிக்கின்றோமா?

குரு: ஆமாம்! அவ்வாறு அவற்றை அளிக்கும் போது பெரும் கருணைக் கடலான திருஅண்ணாமலையான் அதில் நாம் நிர்ணயிக்கின்ற நல்லது, தீயதில் உள்ள குற்றங்களை மாற்றி குறைத்து, தீயவற்றை அதிகமாகக் குறைத்து நல்லதைப் பெருக்கித் தன் ஆசியோடு அளிக்கின்றான் ஒளி உலகில். அப்பொழுது நாம் எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய திருஅண்ணாமலையானைப் பார்த்து, “ஐயனே தகுதியற்ற நாயேனுக்கு இத்தகைய சிறப்புடைய தலையெழுத்தைத் தாங்கள் மாற்றித் திருஅருள் கூட்டியுள்ளீர்கள். ஆகவே நான் ஒன்று மட்டும் உங்களைக் கேட்கின்றேன். அதற்கும் அருள வேண்டும், அருணாசல சிவனே!” என்று நாம் பிறக்கும் முன் தீர்ப்பு நாள் (Day of Judgement) அன்று ஒவ்வொரு ஆன்மாவும் திருஅண்ணாமலையானை வேண்டுகிறது. அப்பொழுது ஈசன் அனுக்கிரகம் பண்ணுகிறேன் என்று கூறியபோது அந்த வேண்டுதல் என்ன என்பதை இந்த ஆன்மா கேட்கிறது.

சீடன்: ஆன்மா கேட்கத் துடிக்கும் அந்த வேண்டுதல் யாதோ, குருதேவா?

குரு: “பூமியில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உனை மறவாமல் நல்லதையே நினைத்து, பூமியில் நிறைவேற்றப்பட்டுள்ள தர்ம சட்டத்திற்கு உட்பட்டுள்ள நல்லதையே நினைத்து, நல்லதையே சொல்லி, நல்லதையே செய்து, உன் நினைவு மாறாமல் பூலோக வாழ்வுக்கு உரித்தான வேலைகளையும் செய்து என்னை நம்பியிருப்பவர்களையும், தர்ம காரியங்கள் செய்கின்றவர்களையும், முதியோர்களையும், பெரியோர்களையும் மதித்து, சற்குருவை அடைந்து நற்பணிகள் செய்து உன் திருப்பாதத்தை அடைய விரும்புகிறேன். அருணாசலா! இதற்கு நீ அருள வேண்டும்!” என்று ஒவ்வொரு ஆன்மாவும் வரம் கேட்கிறது. அதற்கு இறைவனும், “என்னை உண்மையாக நம்பி வலம் வந்து தர்ம காரியங்களை குரு வாக்கின்படி செய்தால் நீ இறக்கும்போது என் நினைவு உன்னை வந்து சேரும். அப்பொழுது அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ என்று நினைக்கும் பொழுது உனக்கு முக்தியைத் தருவேன்!” என்றார் எம்பெருமானாகிய அருணாசல சிவன்.

சீடன்: நினைத்தால் முக்தி தரும் தலம் திருஅண்ணாமலை என்பதன் விளக்கத்தைத் தங்கள் திருவாக்கின் மூலம் இன்று உணரும் பேறு பெற்றோம், குருதேவா!

குரு: அருமைச் சீடனே! இத்தகைய திருஅருணாசலத்தை ஆழ்ந்து, பரந்து, விரிந்து, நெடிதுயர்ந்து வளர்ந்து சாதாரண ஊனக் கண்களுக்கு உச்சியைக் காட்டி ஆனால் சூரியனுக்கோ, நட்சத்திரங்களுக்கோ எல்லையில்லாமல் வளர்ந்து நின்று அவர்களால் குறுக்கே புகமுடியாமல் வலம் வருகின்ற நிலையில் திருஅருணாசலம் தன் மகிமையை, சொற்களால் அடங்க முடியாத தன்மையை அனைவருக்கும் விளக்குகிறார். இதை ஆழ்ந்து அறிந்த மகான்கள் எடுத்து விளக்குகின்றனர். ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தாலும் முன்வினை அருள் கூட்டியிருந்தாலொழிய அருணாசலத்தைப் பற்றி நினைக்கவோ, தரிசிக்கவோ வலம் வரவோ, அதன் முறையைத் தெரிந்து முறையோடு வலம் வரவோ முடியாது. குருஅருள் இருந்தால்தான் முடியும். அருணாசலத்தில் பலகோடி முகதரிசனங்கள் உண்டு. அவை அனைத்தையும் வெளியிடாமல் முதன் முதலில் ஆரம்பிப்பவர்களுக்கு ஒருசிறு அளவே இங்கு தருகிறோம்.

பிரதட்சண முறை ஆரம்பம்

சீடன்: குருதேவா! இத்தகைய சிறப்புடைய அருணாசல ஈசனை எங்ஙனம் முறையாக வலம் வருவது என்பதை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டுகிறோம்.

குரு: இறைவனே பூரண கிரிவடிவாய் இருப்பதால் உலகத்தில் மிகப் பெரிய தான்தோன்றி உருஅருவான சிவலிங்க மூர்த்தி இவர் ஒருவரேதான்! சூரிய கிரணங்கள் குறிப்பிட்ட சில நாட்களில் இறைவன் மீது பட்டு வணங்குகின்ற சிவலிங்கங்கள் பாரத பூமியில் பல இருந்தாலும் சூரியனே வலம் வந்து வணங்குகின்ற மூர்த்தி திருஅருணாசலம் ஒன்றுதான்!

ஸ்ரீகுதூகல நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

சீடன்: குருதேவா! சூரிய பகவானே வலம் வந்து வணங்குகிறார் என்றால் மானிடர்கள் திருஅருணாசலத்தை வலம் வந்து வணங்குவது பெறற்கரிய பாக்கியமன்றோ!

குரு: ஆமாம்! அருணாசலம் வருகின்ற ஒவ்வொருவரும் கிரிவலம் வருவது மிகமுக்கியமாகும். பூலோகத்தில் மட்டும் இறைவன் அருகே இருப்பதால் பலருக்கும் இறைவனுடைய அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடுகிறது. திருஅண்ணாமலையில் உருவமாகவும், அருவமாகவும், உருஅருவமாகவும் பலகோடி சித்தர்கள், மகான்கள், யோகிகள், முனிகள், ரிஷிகள், பல அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகைகள் வடிவமாகவும், கற்பாறைகளாகவும் பார்க்கின்றவர்களுக்குக் காட்சி தந்து பல லீலைகள் புரிகின்றனர். திருமாலும், நான்முகனும் இறைவனுடைய அடியையும் முடியையும் தேடி இங்கு பலமுறை முயற்சி செய்தும் காணமுடியாதபோது முறையாக வலம் வந்து தரிசனம் பெற்றனர்; திருவாழ்வும் உற்றனர்.

சீடன்: குருதேவா! நான்முகக் கடவுளும், பலகோடி தெய்வங்களும், தேவர்களும், சித்தர்களும், யோகிகளும், மகான்களும், திருமாலும் வலம் வந்து வணங்கிய இடமாதலால் நாம் அனைவரும் வலம் வந்து வணங்குதலே முறை என்பதை உணர்ந்தோம். திருஅருணாசலத்தை வலம் வரும் முறைகளைக் கலியுக மக்கள் பெற்றது எங்ஙனம், குருதேவா?

குரு: திருஅருணாசலத்தை வலம் வரும் முறைதனை திருநந்தீஸ்வரர் பல கோடி யுகங்களாகவும், இன்றும் தொடர்ந்து முடிவிலாது கூறிக்கொண்டே இருக்க அச்சிறப்பினை எம்பெருமானாகிய ஸ்ரீஅகத்தியப் பெருமான் இன்னும் தொடர்ந்து எழுத்க்கொண்டே இருக்கிறார் என்றால் அருணாசலத்தின் மகிமைதான் என்னே!

பொதுவாக 1008 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகங்களுக்கும், 108, 108 காண்டங்களாக தொகுத்துக் கொடுத்து அதில் ஒரு காண்டத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகிய அருணாசல கிரிவல மகிமை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிவலம் வரும் முறை இலட்சத்து எட்டு முறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் அருணாசலம் பலப்பல முக தரிசனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக தரிசனமும் பலவித தெய்வீக, லௌகீகக் காரியங்களுடைய பூரணத்திற்காக தரிசனப் பலனாய் அமைத்து அருள்கின்றார் திருஅருணாசலம்.

சீடன்: குருதேவா! அருணாசல ஈசன் பல லட்ச முக தரிசனங்களைக் கொண்டுள்ளதால் ஒரே ஒரு முறை கிரிவலத்தால் அனைத்து தரிசனங்களின் மகிமையையும் உய்த்து உணர முடியாதல்லவா?

குரு: ஆமாம்! பல லட்சம் முறை தரிசனங்களையும் ஓர் அளவே திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை ஸ்ரீலஸ்ரீ சிவகுரு மங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள், குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அவர்களுக்குப் பல கடினமான பயிற்சியோடு வலம் வரும் முறைதனை அருளியதில் ஒரு சிறு தொகுப்பே மக்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு அருளுகின்றோம் சிவன் திருவருளால்.

ஸ்ரீபூதநாராயணர் ஆலயம்
திருஅண்ணாமலை

ஸ்ரீஇரட்டை பிள்ளையார் ஆலயம்
திருஅண்ணாமலை

முதலில் திருஅருணாசலேஸ்வரர் கிழக்குக் கோபுர வாயிலை வணங்கி அப்படியே வலம் வரத் தொடங்கி, தெற்குக் கோபுர வாயிலை அடைந்து தெற்கு வாயிலை வணங்கி, அங்கிருந்து மேற்குக் கோபுர வாயிலை அடைந்து மேற்கு வாயிலை வணங்கி, அப்படியே வடக்குக் கோபுர வாயிலை அடைந்து வடக்குக் கோபுர வாயிலை வணங்கி, நான்கு மாடவீதி வழியாக பூத நாராயணன் கோயிலை அடைந்து பூத நாராயணனை வணங்கி அதன் வழியே இரட்டைப் பிள்ளையார் கோயிலை அடைந்து இரட்டைப் பிள்ளையாரை வணங்கி, மீண்டும் கிழக்குக் கோபுர வாயிலை அடைந்து அதன் இடப்புறம் வீற்றிருக்கும் விநாயகரை வணங்கித் தொடர்ந்து கோபுரத்தின் வலப்புறம் இருக்கும் சாமுண்டேஸ்வரியை (பல கைகளுடன் காட்சியளிக்கும் மகிஷாசுரமர்த்தினி அம்மன்) வணங்கி, தொடர்ந்து அருணகிரி நாதர் பூரண அனுக்ரகம் பெற்ற கம்பத்து இளையனாரை (அருணகிரி நாதரின் பக்தியை உலகுக்கு உணர்த்தக் கம்பத்தில் தோன்றி அருள் புரிந்த முருகப் பெருமானை) தரிசனம் செய்து, அடுத்து சிவகங்கை தீர்த்தத்தின் அருகேயுள்ள கணபதியை தரிசனம் செய்து, நந்தீஸ்வரரை வணங்கி உள்ளே சென்று அடுத்த கோபுர வாயிலைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் ‘பிரம்ம லிங்கம்’ என்று முகங்களுடன் கூடிய லிங்கம் இருக்கும். பிரம்ம லிங்கத்தை நமஸ்காரம் செய்து மீண்டும் படியேறி ஈசன் ஆலயத்துள் புகுந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டு (திருஅண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து) மீண்டும் பிரம்ம லிங்கம் வழியே வந்து தெற்குக் கோபுர வாயிலை அடைய வேண்டும். தெற்குக் கோபுரத்திலிருந்து அண்ணாமலையாரை வணங்கி நமஸ்கரிக்க வேண்டும். அது ஏக முனிக்கல் கூம்புமுக தரிசனம் எனப்படும்.

ஸ்ரீசாமுண்டேஸ்வரி
திருஅண்ணாமலை

ஏகமுனிக்கல் கூம்புமுக தரிசன மகிமை:

முனிகளில் பலவித முனிகள் உண்டு. அதில் தவமுனி என்ற ஒரு முனி விசேஷ சக்தி உடைய முனியாகும். தவமுனீஸ்வரர் என்றும் அழைப்பதுண்டு. பல குடும்பங்களுக்கு முனீஸ்வரர் குலதெய்வமாகும். மனிதர்கள் பல நேரங்களில், பல முறையில் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றாமல் சென்று விடுகின்றனர். மனிதன் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அதில் மனிதன் என்றால் கொடுத்த வாக்கினைச் செய்பவன் என்ற ஒரு பொருளும் உண்டு. கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால் வாக்கு நாணயம் தவறிய செய்கைக்கு ஆளாகின்றனர். அவ்வாறு வாக்கு நாணயம் தவறியவர்களைத் தண்டிப்பதற்காக பல தூதுவர்களை இறைவன் திருஅண்ணாமலையான் நியமித்திருக்கிறான். அவ்வாறு வாக்கு நாணயம் தவறியவர்கள் தாங்கள் சொன்ன வாக்கை ஒருகால் இயற்கையிலேயே மறந்திருக்கலாம். அவ்வாறு மறந்த வாக்கை நினைவுபடுத்துகிறது இந்த தரிசனம். ஒவ்வொருவரும் தெற்குக் கோபுர வாயிலிருந்து இந்த தரிசனத்தைப் பெற வேண்டும்.

கிரிவலம் செல்வோர் வாழைப் பழமோ அல்லது பிஸ்கட்களோ (rusk, பொறை, ரொட்டி, பன் போன்ற உணவுப் பொருட்கள்) தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். வழியிலுள்ள ஏழை, எளியவர்களுக்கும், நாய்களுக்கும், பசுமாடுகளுக்கும் உணவிட அவை பயன்படும். அத்துடன் ஊதுபத்தி, கற்பூரம், நெய்தீபம் முதலியவற்றையும் உடன் எடுத்துச் சென்றால் ஒவ்வொரு தரிசனத்திலும் அருணாசல ஈசனை வழிபட ஏதுவாக இருக்கும்.

ஸ்ரீகம்பத்து இளையனார் ஆலயம்
திருஅண்ணாமலை

தெற்குக் கோபுர வாயிலிருந்து கற்பக விநாயகர் கோயிலை அடைந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும். அங்கிருந்து தொடர்ந்து வலம் வரும்போது அருணாசல ஈசனின் பலமுக தரிசனங்களை இடையில் புதிதாக வந்த கட்டிடங்கள் மறைத்து விடுகின்றன. இந்திர தீர்த்தம் வரை தொடர்ந்து வலம் வருகின்றோம். இந்திர தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அது தற்சமயம் பரிதாபத்திற்கு உரித்தான நிலையில் இருக்கிறது. அங்கிருந்து கிடைக்கும் தரிசனம் கூட்டுமுக தரிசனம் ஆகும். இதை தரிசிப்போர் குடும்பங்களில் பிரிவு இருந்தால், கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமையால் பிளவு இருந்தால், உறவினர்களின் பிரிவு, நல்ல நண்பர்களின் பிரிவு இருந்தால் மீண்டும் அவர்களைக் கூட்டுவிக்கும். ஒற்றுமையை வளர்க்கும் உன்னத தரிசனம்.

இந்திர தீர்த்த மகிமை:

திருஅருணாசலத்தைச் சுற்றியுள்ள பல விசேஷமான தீர்த்தங்களில் இந்திர தீர்த்தமும் ஒன்று. தியாகச் சுடராக, தவ வலிமைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது இத்தீர்த்தம்.

இந்திர பகவான் ஒரு யாகம் செய்ய நினைத்தார். யாகத்தின் பலன் யாது என்றால் வருணனுடைய சக்திகளான மழைகளில் பல விதங்கள் உண்டு. மழைத்துளிகளின் வழியாகத்தான் மனிதப் பிறவி எடுக்கும் ஆத்மாக்கள் முதல் பல ஜீவராசிகள் வரை அனைத்துயிர்களும் பயிர்களை வந்தடைகின்றன. ஆத்மாக்கள் எந்தெந்த பயிரின்பால் போய்ச் சேர வேண்டும் என்பதற்கு ‘தீர்த்த கண்டங்கள்’ என்ற ரகசியம் உண்டு. எத்தனை மழைத்துளிகள் எப்படி விழ வேண்டும். எங்கே விழ வேண்டும், எந்தத் துளி வழியாக எந்த ஆவி எந்தப் பயிரை அடைய வேண்டும் என்ற ரகசியங்கள் உண்டு. இந்த உள்ளீட்டு ரகசிய சக்தியைப் பெறுவதற்காக இந்திரன் அற்புதமான ஆத்ம பிரவேச சூட்சும யாகத்தை நடத்த விரும்பினான். கடினமான தவங்களை மேற்கொண்டால்தான் அந்த யாகத்தை நடத்த முடியும். தவத்தை ஏற்றால் இந்திரனின் பணிகள் தடைப்படும். இந்திரனின் பணிகளில் தடங்கல் ஏற்படாமல் யாகத்தை எவ்வாறு நடத்துவது என்பதைத் தன் குரு பிரகஸ்பதியிடம் கேட்டான். பிரகஸ்பதி தன்னுடைய ஞான திருஷ்டியால் இறைவன் அருளை வேண்டி ஞானக் கண்ணால் நோக்கினார். அப்பொழுது அருணாசலத்தில் தற்சமயம் இந்திர தீர்த்தம் இருக்குமிடத்தில் யாழ் அமராந்தகன் என்ற ஒரு ரிஷி கட்டெறும்பு வடிவெடுத்து அருணாசல சிவனை நோக்கி தவமிருந்தார்.

ஸ்ரீகற்பக விநாயகர்
திருஅண்ணாமலை

எதற்காக தவமிருந்தார்? இந்த இடத்தில் அருணாசலத்தை யார் ஒருவர் வலம் வருகிறார்களோ அவர்கள் கால்பட்ட அடி தூசியால் எறும்புப் புற்று கட்டியிருந்தார் அந்த ரிஷி. அந்தப் புற்றில் ரிஷி தங்கி தவமியற்றினார். அந்த ரிஷிதான் ஆத்மாக்கள் எந்தெந்த தான்ய வடிவில் மனிதன் உடலைப் போய்ச் சேர வேண்டும் என்ற ரகசியத்தை அறிந்தவர். அவரைக் கேட்டுப் பலன் பெறுமாறு இந்திரனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் பிரகஸ்பதி.

இந்திரன் எறும்பு வடிவ ரிஷியை நாடி வந்தான். அருணாசலத்தை குரு ஆணைப்படி முறையாக வலம் வந்தான். இந்த இடத்திற்கு வந்தவுடன் அவனுக்கு அளவு கடந்த தாகம் ஏற்பட்டது. தாகம் ஏற்பட்டதால், தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அருணாசலத்தை வேண்டினான். அப்பொழுது எறும்பு வடிவில் இருந்த ரிஷி இந்திரனின் வேண்டுதல் அறிந்து மனித வடிவெடுத்து இந்திரனுக்கு அருணாசல சுனை தீர்த்தத்தை அளித்தார். தாக சாந்தி அடைந்த இந்திரன் ரிஷியை வணங்கி, “அடியேன் நடத்தும் ஆத்ம பிரவேச சூட்சும யாகத்திற்குத் தங்கள் அருளாசியை வழங்க வேண்டும்!” என்று பணிவுடன் கேட்டான். ரிஷி மகிழ்ந்து, “பல மகான்கள் நடந்து சென்ற பாத தூளியைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இந்த இடத்தில் நீ ஒரு தடாகம் அமைத்து, அருகில் இந்திர மண்டபமும் கட்டி, கிரிவலம் வரும் ஏழை, எளிய மக்களுக்கும், மகான்களுக்கும், பிராணிகளுக்கும் தாக சாந்தியும், அன்னதானமும் செய்திட்டால் உன்னுடைய யாகங்கள் சிறப்புடன் நிறைவேறும்!” என்று ஆசி கூறினார். ரிஷியின் உத்தரவுப்படி அற்புதமான தடாகத்தை ஏற்படுத்தி, இந்திர மண்டபம் கட்டி அனைவருக்கும் தான தருமங்கள் செய்யும் பேறு பெற்றான் இந்திரன்.

இத்தகைய சிறப்புடைய இந்திர தீர்த்தம் இன்று சாக்கடை நீர் அனுப்பும் குளமாகவும், மாடுகள் கட்டும் இடமாகவும், இருக்கிறது, என்ன வேதனை!

குளத்தின் எதிரே இந்திர மண்டபம் கட்டி இறைவன் கிரிவலம் வரும்போது தங்கும் இடமாக அமைத்தான். இன்றிருக்கும் நிலை வலம் வருபவர்களுக்கே தெரியும்!

இந்திர மண்டபத்தை அடுத்து பல மண்டபங்கள் உள்ளன. அவையெல்லாம் சுவாமி குடியிருக்கின்ற மண்டபங்கள். ஆனால் தற்சமயம் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பலர் பலவிதமாக அம்மண்டபங்களைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மண்டபத்திலிருந்தும் ஒவ்வொரு தரிசனம் உண்டு.

இந்திர தீர்த்தம்
திருஅண்ணாமலை

தொடர்ந்து வலம் வரும்போது மகான் சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமம் உள்ளது. சுவாமிகளின் தரிசனம் நற்பலன்களை அளிக்கக் கூடியது. ஆசிரமத்தின் உள்ளேயிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் அது தேஜோமுக தரிசனம் ஆகும். தேஜோ முக தரிசனத்தால் வாழ்நாளில் தெளிவற்று இருந்தவர்கள், தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் வியாபாரம், தொழில், வாழ்க்கை, நட்பு, செய்கை போன்றவற்றில் தோல்வி கண்டோர் தெளிவு பெறுவார்கள்.

அடுத்து கிரிவலத்தில் வருவது ரமண ஆசிரமம். அங்கிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்ய அது ஏறு பஞ்சமுக தரிசனம் ஆகும். சூழ்நிலை சந்தர்ப்ப வசத்தால் தவறு செய்தோர் மீண்டும் தவறு செய்யாமல் அவர்களைக் காக்கிறது ஏறு பஞ்சமுக தரிசனம், அறியாமல் தவறிழைத்தவர்களுக்கு ஓர் உத்தம தரிசனம்.

ரமணாசிரமத்திலிருந்து சிறிது தூரம் சென்றபின் ஒரு மடம் உள்ளது. அங்கிருந்து நாம் பெறும் தரிசனம் திடமுக தரிசனம்.

திடமுக தரிசன மகிமை:

எம்பெருமான் திருவருளால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆனால் கல்யாண விருந்தில் கலந்து கொள்ள பிள்ளை வீட்டாரிடமிருந்து யாரும் வரவில்லை. ஒரே ஒரு குண்டோதரன் மட்டும் விருந்துண்ண வந்திருந்தான். ஆனால் அவனோ மிகச் சிறுவன்.

மதுரை மாமன்னனின் கல்யாணமல்லவா? விருந்து எப்படியிருக்கும்? பிள்ளை வீட்டார் ஏராளமானவர்கள் வருவார்கள் என்று ஆயிரக்கணக்கான அண்டாக்களில் சாம்பார், ரசம், மோர், பாயசம், காய்கறிகள், இனிப்பு, கார வகைகள் என ஏற்பாடு செய்திருந்தனர்.

திடமுக தரிசனம்
திருஅண்ணாமலை

மீனாட்சி அம்மை இறைவனிடம் திருக்கல்யாணத்தில் யாராவது உணவு உண்ண அனுப்பி வைக்கும்படி கேட்க இறைவன் அந்த மிகச் சிறிய குண்டோதரனை அனுப்பி வைத்தார். மகாராணியும், மற்ற முக்கியஸ்தர்களும், “ஒரு சிறுவனுக்காக இவ்வளவு பதார்த்தங்களைப் பண்ணி வைத்திருக்கிறோமே, எல்லாம் வீணாகி விடுமே, என்ன செய்வது?” என்று திகைத்தார்கள். வேறு வழியில்லாமல் குண்டோதரனுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தார்கள். ஆயிரக்கணக்கான அண்டாக்களில் இருந்த பதார்த்தங்கள் அனைத்தையும் ஒன்றிரண்டு நொடிகளுக்குள் விழுங்கி விட்டு மீண்டும் பசி, பசி என்று கூச்சலிட ஆரம்பித்தான் குண்டோதரன். பெண் வீட்டார்கள் அதிர்ந்து போனார்கள். வேலையாட்களும், முக்கியஸ்தர்களும் மீனாட்சியம்மையிடம் ஓடினார்கள். குண்டோதரன் எல்லா உணவையும் உண்டு விட்டு மீண்டும் பசியால் துடிப்பதை அறிவித்தார்கள்.

செய்தி கேட்டு மகாராணி மீனாட்சி அம்மை வெட்கித் தலை குனிந்தாள். “மாப்பிள்ளை வீட்டாரில் ஒரு சிறு குண்டோதரனுக்கே தங்களால் உணவளிக்க முடியவில்லையே! பிள்ளை வீட்டார் அனைவரும் விருந்திற்கு வந்திருந்தால் நம் நிலைமை என்னவாகியிருக்கும்?” என்று நினைத்து வருந்தினாள். சோமசுந்தரப்ப் பெருமானிடம் இந்த செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று நினைத்து மனம் குழம்பினாள். ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு ஈசனிடம் நிலையை அறிவித்தாள். எம்பெருமான் ஒரு புன்முறுவலுடன், “கவலை வேண்டாம்” என்று அம்பிகைக்கு ஆறுதல் அளித்து “வை கை” என்று சொல்ல வைகை நீர் வந்தது. வைகை நீரை உண்டு பசியாறினான் குண்டோதரன். எம்பெருமான் மீனாட்சி அம்மையை நோக்கி, “ஒரு குண்டோதரனுக்கு உணவளிக்க முடியாமல் போகவே திடமற்ற நிலையை அடைந்தாய். மீனாட்சி! நீ திடமனதுடன் இருந்தால் தான் கயிலை வரலாம். சஞ்சல மனதுடன் எங்ஙனம் என்னுடன் வாழ முடியும்?” என்று கூறினார். மீனாட்சி எம்பெருமானை வணங்கி, “சுவாமி! சஞ்சலம் அடைந்துள்ள நான் திடமனதை அடைவது எவ்வாறு? அதற்குரித்தான வழியைத் தாங்கள்தான் கருணையுடன் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தாள். எம்பெருமான், “மீனாட்சி! அருணாசலத்தை முறையோடு கிரிவலம் வா, அவ்வாறு வலம் வந்து நிற்கும் போது எங்கு உன்னுடைய மனம் சஞ்சலமற்ற நிலையை அடைகிறதோ, அங்கிருந்து அருணாசலத்தைப் பார். அன்றிலிருந்து உனக்கு திடமனது வாய்க்கும். அக்கணம் யாம் உன்னை ஏற்போம்!” என்று அருளினார்.

ஈசன் அருளிய முறையில் மீனாட்சி அம்மை முறையாக கிரிவலம் வந்து அருணாசலத்தை தரிசனம் செய்து திடமனது பெற்றாள். ஈசனுடன் கலந்தாள். மீனாட்சி அம்மை நின்ற இடத்தில் ரிஷி ஒருவர் மடத்தை அமைத்தார்.

யார் ஒருவர் இந்த இடத்திலிருந்து அருணாசல ஈசனை தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் மன சஞ்சலங்கள் நீங்கி திட மனதை அடைவார்கள்.

சீடன்: மனம் சஞ்சலம் அடையக் காரணம் என்ன, குருதேவா?

குரு: மனம் சஞ்சலம் அடைய ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. சிலவற்றை மட்டும் எடுத்துரைப்போம்.

  1. காதல் தோல்வியால் ஆண், பெண் இருபாலருக்கும் மன சஞ்சலமும், வேதனையும் ஏற்படுகிறது.
  2. பணம் கடனாகக் கொடுத்துத் திரும்பி வராத போது மனம் சஞ்சலமடைந்து அதன் விளைவாக இருதயக் கோளாறுகளும், மூளைக் கோளாறுகளும் ஏற்படுவதுண்டு.
  3. திருமணமானபின் கணவன் வேறு ஒரு பெண்ணை விரும்பி மணம் செய்து கொள்ளும்போது திட மனது சோர்வடைந்து சஞ்சலம் ஏற்படுகிறது.
  4. கணவன் தன்னை விட்டுவிட்டு சந்நியாசி ஆகிவிடுவானோ என்று நினைப்பதால் சில மனைவிமார்களின் திட மனது சஞ்சலமடைகிறது.
  5. குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்ற ஏக்கத்தில் மனம் வருந்தி திட மனது சஞ்சலமடைகிறது.
  6. மதுவாலோ, மங்கையாலோ பிறரை மயக்கிப் பொய்க் கையெழுத்து வாங்கி ஒருவர் குடும்பத்தை ஏமாற்றியிருந்தால், ஏமாற்றியவரின் மனம் அதை நினைத்து நினைத்து சஞ்சலம் கொள்கிறது.
  7. வீடு கட்டித் தருகிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு வீடு கட்டித் தராமல் ஏமாற்றினால் மனம் சஞ்சலம் கொள்கிறது. திட மனது தன்மை குறைகிறது.
  8. சொத்துக்களைப் பங்கு பிரிப்பதில் சுயநலமாகச் செயல்பட்டு ஏமாற்றியிருந்தால் திட மனது சோர்வடையும்.
  9. தகுதிக்கு மீறிய ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்வதால் அதை நிறைவேற்ற முடியாத போது மனம் சஞ்சலமடையும்.

நந்திமுக தரிசனம்
திருஅண்ணாமலை

தொடர்ந்து மேல் நோக்கி சென்றால் கிடைப்பது “நேர் பாறை நந்திமுக தரிசனம்”. தனிப்பாறை உச்சியில் நந்தி மண்டபம் அமைந்து நந்தீஸ்வரர் பார்க்கின்ற பார்வையாகும். அங்கு மயான பூமிகள் நிறைய உண்டு. அங்கிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்ய அது பிருங்கி முனி மயான தரிசனம் ஆகும். அந்த மயானத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் பிருங்கி முனி தவமிருந்து பலருக்கு அருள்வழி காட்டினார்.

அடுத்து மேலே செல்ல “பிருத்வி நந்தி தரிசனம்”. அண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டு மிகப் பெரிய பிருத்வி நந்தி அமர்ந்திருக்கும் எழில்மிகு காட்சி. அந்த இடத்திலிருந்து சுவாமி தரிசனம் மிக விசேஷம். அவ்விடத்தில் தீபம் ஏற்றுதல், ஊதுபத்தி ஏற்றுதல் போன்ற வழிபாடுகளைச் செய்து சுவாமியை நமஸ்கரிக்க வேண்டும். அங்கிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்ய ‘பிருத்வி பங்காரு முக தரிசனம்’ ஆகும்.

பிருத்வி பங்காரு முக தரிசன மகிமை:

மகாலட்சுமியின் அனுக்ரகத்தைப் பெறுவதற்காக சங்கநிதி என்ற கந்தர்வன் நீண்ட நாட்களாக அருணாசலத்தின் அடியில் சங்க தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி அதில் ஸ்நானம் பண்ணி முறையாக கிரிவலம் வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வந்தபொழுது அவனுக்கு உடல் நோயுற்று படுத்தான். யாரும் அவனை கவனிக்காததால், மருந்தும் ஏற்காததால் உடல் வாடினான். அப்பொழுது இறைவனாகிய அண்ணாமலையார் தங்க பஸ்பம் கொடுத்து அவன் நோயை நீக்கினார். நோயை நீக்கி ‘சங்க நிதி’ என்ற நிதிகளுக்கு அதிபதியாய் ஆக்கினார். அந்த சங்கநிதி “பங்காரு முக தரிசனம்” என்று அனைவருக்கும் தெரிவித்து முக்தி நிலை பெற்றான். பிருத்வி நந்தியின் அருகே இருக்கும் சங்க நந்தி நிதி தீர்த்தம் தற்போது வீடுகளால் மறைந்திருக்கிறது. தற்கால சூழ்நிலை வசத்தால் அதைச் சுற்றியிருப்பவர்கள் அதை மேடும் பள்ளமுமாக மாற்றி மறைத்து வைத்துள்ளார்கள்.

இத்தரிசனத்தைப் பெறுவோர் பொன்னாபரணங்களைப் பெறுவர்; ஏழ்மை விலகும்.

தொடர்ந்து பலவித முக தரிசனங்கள் ஆரம்பமாகிறது. அவற்றை குருவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். கிரிவலத்தில் அடுத்த தரிசனம் பாச லிங்க தரிசனம்.

பிருத்வி நந்தி பாசலிங்க தரிசனம்
திருஅண்ணாமலை

பாசலிங்க தரிசன மகிமை:

தசரத மகாராஜா ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். ஒலியைக் கேட்டு அம்பு பிரயோகம் செய்யும் வித்தையை தசரதர் அறிந்திருந்தார். வயதான கண் தெரியாத ரிஷிகளைச் சுமந்து வந்த சிறுவன் ஓரிடத்தில் அவர்களை இறக்கி வைத்தான். அப்போது இரவு நேரம். அவர்களுக்கு தாகம் ஏற்பட்டதால், சிறுவன் அவர்களை அங்கேயே விட்டு விட்டுத் தண்ணீர் எடுத்து வர அருகிலிருக்கும் ஓடைக்குச் சென்றான். ஒரு சிறு குடத்தை ஓடை நீரில் வைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த ஒலி யானை நீர் அருந்தும் ஒலிபோல் தசரத மகாராஜாவுக்குக் கேட்டது. யானை என்று நினைத்து சிறுவன் இருந்த திசையை நோக்கி அம்பை விடுத்தார் மகாராஜா. “அம்மா!” என்று அலறியவாறே சிறுவன் தரையில் சாய்ந்தான். சிறுவனின் கூக்குரல் கேட்டு தசரதர் அதிச்சியடைந்தார். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்பதை உணர்ந்து சிறுவனை நோக்கி ஓடினார். இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனைப் பார்த்து மனம் பதறினார்; செய்வதறியாது திகைத்தார். சிறுவன் தசரதரைப் பார்த்து, “என்னுடைய கண் தெரியாத வயதான தாய் தந்தையர் தாகத்தால் வாடியுள்ளனர். அவர்களுக்கு உடனே தண்ணீர் கொடுங்கள்.” என்று கூறி உயிர்விட்டான். வயதான பெற்றோரிடம் நடந்த விவரத்தை தசரத மகாராஜா கூறினார். அவர்கள் மனம் வருந்தி, “நாங்கள் புத்திர சோகத்தால் வருத்தமடைவதுபோல் நீயும் மகனை இழந்து துயரமடைவாய்.” என்று சாபமிட்டனர். தசரதர் தன் குல குருவான வசிஷ்ட மகரிஷியிடம் “இச்சாபத்திற்குப் பரிகாரம் செய்ய யாது செய்ய வேண்டும்?” என்று வினவ வசிஷ்டர் அருணாசல ஈசனை கிரிவலம் வரும் முறையை விவரித்து பாசலிங்க தரிசனம் பெறச் செய்தார். பாச வயப்பட்டால் ஒருநாள் பிரிவு வந்தே தீரும். அதைத் தவிர்க்க இயலாது, ஆனால் இறைவன்பால் நாம் வைக்கும் அன்பு நமக்கு நற்கதியைத் தரும். என்றுமே அதில் பிரிவில்லை. இதையுணர்ந்த தசரதர் முறையான கிரிவலத்தால் ஈசன் அருள் பெற்றார்.

சிவராஜ சிங்க தீர்த்தம்
திருஅண்ணாமலை

தொடர்ந்து மேலே சென்றால் சிறு மண்டபத்தில் அப்பு நந்தி அழகாக அமர்ந்திருப்பதைக் காணலாம். நந்தீஸ்வரரின் கொம்புகள் வழியாக சுவாமி அருணாசல ஈசனை தரிசனம் செய்ய அது மித்ர சாரு தரிசனம் ஆகும். இத்தரிசனத்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறவும், காணாமல் போன கைப் பொருளைத் திரும்பப் பெறவும் இத்தரிசனம் வழி செய்கிறது.

வழியெல்லாம் நெடுக, ‘அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ!’ என்று ஓதிக் கொண்டும், இறை நாமங்களைப் பாடிக் கொண்டும் செல்ல வேண்டும். கிரிவலத்தில் அடுத்து வருவது சிவராஜ சிங்கர் தீர்த்தம். தீர்த்தக் கரையிலுள்ள நந்தீஸ்வரரின் கொம்புகள் வழியாக சுவாமி அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். அந்த இடம் காமக்காடு எனப்படும். அங்கிருந்து பெறும் தரிசனம் காம எண்ணங்கள் ஓரளவு தணிய வழி வகுக்கும். காமத்தவறுகள் குறையும். காமத்தால் ஏற்பட்ட மன வேதனைகள் தணியும்.

அவ்விடத்திலிருந்து தேயு நந்தி வரை அங்க பிரதட்சிணம் செய்வதால் பல தவறுகளுக்குப் பிராயச்சித்தம் காணலாம். ஒவ்வொருவரும் தினமும் சந்தியா வந்தனங்களைச் செய்து முறையாக காயத்ரி ஜபிக்க வேண்டும். இதைச் சரிவர நிறைவேற்ற முடியாதவர்களுக்கு அங்கபிரதட்சிணம் ஒரு சிறந்த பரிகாரமாக அமையும். ஆனால் மீண்டும் அத்தகைய தவறுகள் ஏற்படாமலிருக்க உறுதி கொள்ள வேண்டும்.

அவ்வாறே யக்ஞோபவீதத்தை தவறாகப் பயன்படுத்துவோர் உண்டு. (யக்ஞோபவீதத்தால் முதுகு சொறிந்து கொள்வது, அதில் சாவியை மாட்டி வைத்துக் கொள்வது போன்ற தவறுகள்.) அத்தகையோர் அங்க பிரதட்சணத்தால் பரிகாரம் பெறலாம். மீண்டும் அத்தவறுகளை அவர்கள் செய்யக் கூடாது.

காமக்காட்டைக் கடந்தவுடன் தேயு நந்தி வீற்றிருக்கிறார். சாந்திமலை நந்தி என்றும் இவரை அழைப்பதுண்டு. நந்தீஸ்வரரின் கொம்புகள் வழியாக அருணாசல ஈசனை தரிசனம் செய்ய அது சதுர்முக தரிசனம் ஆகும். பிரம்ம தேவர் தினமும் இத்தரிசனம் செய்து திருஅண்ணாமலையாரின் அருளைப் பெறுகின்றார். நீண்டு நெடிதுயர்ந்து நின்ற அண்ணாமலையாரின் முடியைக் காண பிரம்ம தேவர் அன்னபட்சி உருவம் எடுத்து மேல் நோக்கிப் பறந்து சென்றார். பல கோடி யுகங்கள் பறந்தும் ஈசனின் முடியைக் காண முடியவில்லை. அதனால் வெட்கமடைந்து திரும்பினார். ஆனால் திரும்பி வந்து ஈசனிடம் தான் முடியைக் கண்டதாகப் பொய் கூறினார். அத்தவறுக்காக பிரம்ம தேவர் தினமும் இங்கிருந்து அருணாசல ஈசனை தரிசனம் செய்து பிராயச்சித்தம் பெறுகிறார்.

இத்தரிசனம் செய்வோர் வேதம், படிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவர். பிரம்ம தேவரின் அனுக்ரகத்தைப் பெற்றுத் தரும் இத்தரிசனம்.

அடுத்து மேலே செல்ல கிடைப்பது காயத்ரி தரிசனம்:

காயத்ரி தரிசன மகிமை:

ஒவ்வொரு மனிதனும் தன் காயமானது (உடல்) கடைத்தேற அருந்தொண்டாற்ற வேண்டும். இதில் முதன்மையானது காயத்ரி ஜபம். காயத்ரியை அனைவரும் ஜபிக்கலாம். மனித இனத்திற்கே உள்ள ஏகபோக சொத்து காயத்ரி. இது எந்த தனி மனிதனுக்கோ, இனத்தவருக்கோ சொந்தமானது அல்ல, காயத்ரி மனிதநல மேம்பாட்டிற்காக இறைவனால் அளிக்கப்பட்ட பொக்கிஷம்.

காயத்ரியை முறையாகத் தொடர்ந்து ஜபித்து வந்தால் முதலில் வாக்கு சுத்தமும், அதைத் தொடர்ந்து உடல் சுத்தமும் ஏற்படுகிறது. நீண்ட நாள் ஜபத்தினால் மனத்தெளிவு ஏற்படுகிறது. திருஅண்ணாமலையில் காயத்ரி தரிசனம் மக்கள் அனைவரும் கண்டு மனத்தெளிவு பெறவே உள்ளது. எம்பெருமானின் பெருங்கருணையால் யார் வேண்டுமானாலும் காயத்ரி தரிசனம் பெறலாம்.

இவ்வாறாக ஒரு முறை காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற மூன்று தேவிகளும், “எங்களை அனைவரும் ஜெபிக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்குக் காப்பாக அமைய வேண்டும்” என்று வேண்டி வலம் வந்தனர். அற்புதமான தீர்த்தங்கள் அண்ணாமலையைச் சுற்றி ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறு வலம் வரும்போது மகேந்திராதிபர் என்ற மகரிஷி அந்த இடத்தில் அமர்ந்து அபரிமிதமாக காயத்ரி மந்திரங்களை ஜெபித்து தன்னைச் சுற்றி காயத்ரி கவசத்தை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது தேவியர் மூவரும் அருணாசல ஈசனின் அருளால் அந்த மகரிஷியைச் சந்தித்தனர். அவரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவரைப் பணிந்து, “சுவாமி! இதுகாறும் காயத்ரி கவசத்தைப் பூண்ட யாரையும் நாங்கள் கண்டதில்லை. அத்தகைய உத்தமரை இன்றுதான் முதன் முதலில் சந்திக்கிறோம். எங்கள் பாக்கியம்தான் என்னே! இக்கணம் வரை காயத்ரி மந்திரத்திற்கு உரித்தான தேவியர் நாங்களே என்று இறுமாப்புக் கொண்டிருந்தோம். தங்களுடைய காயத்ரி கவசத்தைக் கண்டவுடன் இறைவன் அருளால் எங்கள் அகம்பாவம் நீங்கியது. எங்கள் தவறைப் பொறுத்து ஆசி அருள வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டனர். மூவரும் வணங்கியபோது அவர் கூறலுற்றார். “திருஅண்ணாமலையில் இதைப் போன்ற கோடானுகோடி காயத்ரி கவச சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது அடியேன் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறேன். முத்தேவியராகிய நீங்களே காயத்ரி மந்திரத்திற்கு உரித்தானவர்கள். முத்தேவியரின் அகம்பாவம் நீங்க திருஅண்ணாமலையார் நிகழ்த்திய திருவிளையாடல் போலும் அடியேனை நீங்கள் சந்தித்தது!” என்று பணிவுடன் கூறினார்.

முத்தேவியரின் அகம்பாவம் விலகியதால் அந்த இடத்தில் சாந்நித்தியம் பெருகியது. முத்தேவியரும் மகிழ்ந்து, “கிரிவலம் வந்து காயத்ரி தரிசனம் செய்பவர்க்கு நாங்கள் ஆசி வழங்குவோம்!” என்று மகரிஷியிடம் வாக்களித்தனர்.

கிரிவலத்தில் மேலே செல்ல எம்பெருமானாகிய ஈசன் இரண்டு முகங்களுடன் காட்சியளிக்கிறான், அது சக்தி சிவ தரிசனம் ஆகும்.

ஸ்ரீஉண்ணாமுலை மண்டபம்
திருஅண்ணாமலை

சக்தி சிவ தரிசன மகிமை:

கடவுள் கருணையால் நள மகாராஜா சூழ்நிலை வசத்தால் உருமாற வேண்டிய நிலை வந்தது. அது மட்டுமல்லாமல் அருமை மனைவி தமயந்தியையும் பிரிந்து வருந்தினார். உருமாறிய நளமகாராஜா ஓர் அரண்மனையில் சேர்ந்து சமையல்காரனாகவும், குதிரை ஓட்டுபவனாகவும் அரசன் இட்ட பணிகளைச் செய்து வந்தார். அரசன் குருவருளால் தன் குரு கூறிய வண்ணம் அருணாசலத்தை கிரிவலம் வந்தான். அரசனுடன் குதிரைக்காரனாக நளமகாராஜாவும் வந்தார். அவ்வாறு வலம் வருகையில் காயத்ரி தரிசனம் அருகே அமர்ந்து அரசன் காயத்ரி ஜெபித்தான். அவனுடன் நளமகாராஜாவும் அமர்ந்து காயத்ரி ஜெபித்தான். பின்னர் தொடர்ந்து அரசனும் நளமகாராஜாவும் கிரிவலம் வந்தனர். சக்தி சிவ தரிசனம் அருகே வரும்போது நளமகாராஜாவின் உருவம் மாறித் தன்னுடைய சுயரூபத்தைத் தான் மட்டும் காணும் பேறு அடைந்தார். எம்பெருமானின் கருணையை நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அங்கேயே அருணாசல ஈசனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இறைவனிடம் தன் நிலையைக் கூறி மனமுருக பிரார்த்தனை செய்தார். எம்பெருமான் அசரீரியாக ஒலித்தார். “நளமகராஜனே! கவலை வேண்டாம். நீ மீண்டும் தமயந்தியுடன் சேரப் போகிறாய். துன்பங்கள் எல்லாம் தீரும்!” அதைக் கேட்ட நளமகராஜா பேருவகையுற்றார். சில காலம் கழித்து அசரீரி பலித்தது. நளமகராஜாவும் தமயந்தியும் இணைந்தனர். எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெற்றனர். பின்னர் இருவரும் அருணாசல ஈசனை கிரிவலம் வந்து தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து சக்தி சிவ தரிசனம் செய்தனர். பிரிந்த தம்பதிகட்கு ஓர் உத்தம தரிசனம் இது. இத்தரிசனத்தால்:-

  1. பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ்வர்.
  2. கணவனை அவதூறு சொல்லிப் பிரிந்த மனைவியோ, மனைவியை அவதூறு சொல்லிப் பிரிந்த கணவனோ உண்மை நிலையுணர்ந்து தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு வாழ வழி ஏற்படும்.
  3. சந்தேகத்தினால் கணவன், மனைவியரிடையே ஏற்பட்ட சச்சரவுகள், பிரிவுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.
  4. குழந்தைகளின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த கணவனோ, மனைவியோ தங்கள் தவறையுணர்ந்து சேர்ந்து வாழ வழி ஏற்படும்.

தொடர்ந்து கிரிவலம் செல்லும் வழியில் உண்ணாமுலை மண்டபமும், உண்ணாமுலை தீர்த்தமும் உள்ளது. உண்ணாமுலை மண்டபத்திலிருந்து காணும் தரிசனம் சோமாஸ்கந்த தரிசனம் எனப்படும். இது மிகவும் விசேஷசமானதொரு தரிசனம்.

சோமாஸ்கந்த தரிசன மகிமை:

எம்பெருமான் திருவருளால் முருகன் மாம்பழத்திற்காக ஒரு திருவிளையாடலை நடத்தினான். அது என்ன?

  1. எங்கெல்லாம் மலைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனுடைய சாந்நித்தியம் இருக்கின்றது என்பதைக் காட்டவும்.
  2. ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பதை மக்களுக்கு உணர்த்தவும்.
  3. பூலோகத்தில் முருக வழிபாட்டை யார் முறையாகச் செய்கிறார்களோ அவர்கள் எல்லாவித அனுக்கிரகத்தையும் பூரணமாய்ப் பெறுவர் என்பதை அனைவரும் உணரவும்.
  4. ‘அம்மை அப்பரே தெய்வம்’ என்ற தேவ வாக்கை உலகம் உணரவும்

எம்பெருமானாகிய முருகன் திருவிளையாடலை அம்மையப்பருடன் சேர்ந்து நிகழ்த்தினான்.

‘அம்மையப்பரே தெய்வம்’ என்ற வாக்கிற்கிணங்க சுப்ரமண்ய சுவாமி தாய் தந்தையரிடையே அமர்ந்து திருஅருள் புரிய அருணாசல ஈசனை வலம் வருகிறார்.

பல ஆண்டுகளாக இரட்சக குலசேகர ரிஷி என்ற மகா உத்தமர் சிவசக்தி ஐக்கிய சொரூப தரிசனத்தில் அமர்ந்து தவம் செய்துகொண்டிருக்கிறார். சுப்ரமண்ய சுவாமி கிரிவலம் வரும்போது சக்தி சிவ தரிசனத்தை அடைகிறார். அங்கிருந்து அருணாசல ஈசனை நோக்குகிறார். ‘அம்மை அப்பர் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் இடையே நாம் அமர்ந்து கொண்டால் தாய் தந்தையர் இருவரின் அரவணைப்பும் கிடைக்குமே!’ என்று நினைத்து அருகே செல்கிறார் அங்கே சென்று குலசேகர ரிஷி தவத்தில்  இருப்பதைப் பார்த்து அந்த இடத்தைத் தான் பெற வேண்டி ரிஷியிடம் முறையிட்டார். ஆனால் ரிஷி ஆழ்ந்த யோக நிலையில் இருந்ததால் கண் திறக்கவில்லை. அப்போது அருணாசல ஈசன் அசரீரியாக முருகப் பெருமானிடம், “யோக நிலையில் இருக்கின்ற ரிஷியை உன்னால் அழைக்க முடியாது. அன்பிற்கே கட்டுப்பட்டவர் அந்த மகரிஷி. அன்புடன் அவரை அழைத்து விரும்பியதைப் பெறுவாய்!” என்று கூறினார். இதைக் கேட்ட பால முருகன் அருணாசலத்தை வலம் வந்து சிவநாமத்தை விடாமல் ஜெபித்துப் பேரருள் பெற்றார்.

ஸ்ரீஇரட்சக குலசேகர ரிஷி
ஒரகடம்

எம்பெருமான் கருணையால் மகரிஷியின் அருகே சென்று அருணாசல ஈசன் புகழ் பாடினார். பால முருகனின் தேமதுரச் சொற்களைக் கேட்டு குலசேகர ரிஷி கண்களைத் திறந்தார். எதிரே முருகப் பெருமானைக் கண்டு வணங்கினார். முருகப்பெருமானும் ரிஷியை வணங்கினார். அவரிடம் தனது வேண்டுகோளைத் தெரிவித்தார். ரிஷி பெரிதும் மகிழ்ந்து, “ஈசனின் கண்களிலிருந்து தீப்பொறி வடிவுடன் வந்த முருகப் பெருமானே! அருண தேயுலிங்கத்தில் இடைவெளியில் அமர்ந்திருக்க தகுதியுள்ளவர் நீங்கள் ஒருவர் மட்டுமே!” என்று சொல்லி தன் இருப்பிடத்தை முருகப் பெருமானுக்கு அளித்து சோமாஸ்கந்தராக முருகனை அமர்த்தி, “இந்த சோமாஸ்கந்த தரிசனத்தை முறையாக யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு மனம் குளிர உண்ணாமுலை, அருணாசல ஈசன், கந்தபெருமானின் அனுக்ரகம் கிடைக்கும்!” என்று சொல்லி அண்ணாமலையிடை ஒன்றாகக் கலந்து மறைந்து விட்டார் ரிஷி.

குழந்தையற்றோர் இத்தரிசனத்தில் சேவை செய்தால் ஈசன் நல்லோர் மூலமாய்க் குழந்தையில்லாக் குறையைப் பூர்த்தி செய்வார். (உதாரணமாக 1.) நோயுற்றிருக்கும் போது தனக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நல்லவர் ஒருவர் முன்வருவார். 2.) தான் இறந்த பிறகு தன்னுடைய ஈமக் கடன்களை நிறைவேற்ற நல்லவர் ஒருவர் முன்வரலாம்.)

அடுத்து கிரிவலத்தில் வருவது அடிஅண்ணாமலை திருக்கோயில். அங்கிருந்து அருணாசல ஈசனை தரிசனம் செய்ய அது சிவயோக முக தரிசனம் ஆகும்.

சிவயோகமுக தரிசனம்:

சிவபெருமானின் திருஅருள் கடாட்சத்தால் யோக தத்துவத்தையும், யோக ரகசிய முறைகளையும் நடைமுறையில் செயல்படுத்த இறைவன் உத்தம யோகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தான். அத்தகைய உத்தம ரிஷி கயிலையிலிருந்து பூமிக்கு வந்தார். வரும்போது காண்பதற்கரிய காட்சி ஒன்றைக் கண்டார். அது என்னவென்றால் ஒரு பசு மேய்ப்பவர் இறந்து கிடக்கிறார். அவரைச் சுற்றிப் பல பசுக்கள் நின்று அழுது கொண்டிருக்கின்றன. யோகி நினைத்தார். ‘எவ்வளவு அன்பாக அவன் இந்தப் பசுக்களைப் பராமரித்திருந்தால், அவன் இறந்ததற்காகப் பசுக்கள் அழும்!” இதைப் பார்த்தவுடன் யோகியின் திருக்கண் பார்வை பசு மேய்ப்பவன் மீது பட்டது. அவனை மீண்டும் உயிரோடு எழுந்திருக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ‘பசுவின் உடலில் பல கோடி தேவர்கள் வசிக்கிறார்கள். பசுக்கள் மகிழ்ச்சியடைந்தால் அனைத்து தேவர்களும் மகிழ்வார்கள். பசுக்களைக் காணாமல் அதன் சொந்தக்காரர்களின் துயரமும் பசுக்களைக் கண்டால் நீங்கும். பசு மேய்ப்பவன் பசுக்களுடன் இல்லம் திரும்ப வேண்டும்’ என்று முடிவெடுத்தார்.

அடிஅண்ணாமலை

அப்போது யோகத்தில் பலவித பிரயோகங்கள் உண்டு. கூடு விட்டுக் கூடு பாயும் பிரயோகம் மூலம் தன்னுடைய உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு பசு மேய்ப்பவனின் உடலில் ரிஷியானவர் பிரவேசித்தார். பசு மேய்ப்பவன் உயிர் பெற்றான். அனைத்துப் பசுக்களும் சந்தோஷமடைந்தன. பசுக்களையெல்லாம் அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்து விட்டு தன்னுடைய உடலிருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தார் ரிஷி. ஆனால் இறைவன் அவர் உடலை மறைத்து விட்டான். வேறு வழியின்றி பசு மேய்ப்பவரின் உடலிலேயே ரிஷி இருக்க வேண்டியதாயிற்று. அதனால் பல தேவையில்லாத சூழ்நிலைத் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. பின்னர் அங்கு இருப்பவர்கள் நாளடைவில் பசு மேய்ப்பவரின் உடலில் ஒரு யோகி இருக்கிறார் என்றறிந்து துன்பத்தைக் கொடுக்காமல் நிறுத்தினர்.  ரிஷி அங்கிருந்து புறப்பட்டு உடல் மறைந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள அண்ணாமலை வந்து சேர்ந்தார். முறையாக கிரிவலம் வந்தார்.

அடி அண்ணாமலை அருகே வரும்போது பிரம்ம தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷமாக வீற்றிருக்கின்ற ஈசனை தரிசனம் செய்து மேல் நோக்கிப் பார்த்தார். பார்த்த போது அவருக்கு அவருடைய உடல் உருவம் பூரணமாய் ஈசனே பெற்றிருக்கிறான் என்பதை உணர்ந்து பேருவகை அடைந்தார். அந்த தரிசனம் சிவயோக முக தரிசனம் என்று சொல்லப்படுகிறது. இதைச் செய்தவர் திருமூலர் என்கின்ற உத்தமர். ஆகவே திருமூலரின் அருளாசியைப் பெற விரும்புவோர்கள் இத்தரிசனத்தை முறையாகச் செய்ய மிக்க நலத்தைப் பெறுவர்.

அடுத்து வருவது மாணிக்கவாசகர் தீர்த்தம். இவ்விடத்தில் திருவாசகப் பாடல்களைப் பாடி அருணாசல ஈசனை தரிசனம் செய்தல் விசேஷம். மேலே செல்ல மாணிக்கவாசகர் மண்டபம் காட்சியளிக்கிறது. இது மிகவும் பாழடைந்த நிலையிலுள்ளது. இங்கிருந்து எம்பெருமானை தரிசனம் செய்ய அது லாவண்ய சுகமுனி தரிசனம் ஆகும்.

லாவண்யசுகமுனி தரிசனம்
திருஅண்ணாமலை

லாவண்ய சுக முனி தரிசன மகிமை:

உத்தம முனிவர் ஒருவர் தினமும் அருணாசல ஈசனை வலம் வந்து கொண்டிருந்தார். கடுமையான தவங்களை மேற்கொண்டிருந்தார். பலவிதமாய் அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டார். அவ்வாறு கிரிவலம் வருகையில் மிகவும் அசிங்கமான முகத்தையுடைய ஒரு பெண் அவர் காலில் விழுந்து வணங்கித் தன்னுடைய குறையைக் கூறி அழுதாள். முனிவர் மனமிரங்கினார் . அருணாசல ஈசனைத் தொழுதார். “லாவண்யா அருணாசலா! அழகைத் தருவாய்!” என்று இறைவனிடம் பிரார்த்திக்க கடவுருளால் அப்பெண் முகப் பொலிவைப் பெற்றார்ள்.

கோரமான, அசிங்கமான முகமுடையவர்களும், விகாரம் அடைந்தவர்களும் இத்தரிசனம் செய்ய கடவுளருளால் அழகிய முகத்தைப் பெறுவார்கள். முகம் ஓரளவாவது சீர் பெறும் வைத்தியர்கள் உதவியால்.

மேலே செல்ல கிரிவலத்தில் அடுத்து வருவது வாயு லிங்கம். அங்கிருந்து ஈசனை தரிசனம் செய்ய அது வாயு லிங்க தரிசனம் ஆகும்.

வாயு லிங்க தரிசன மகிமை:-

வாயு பகவான் தான் நிரந்தரமாக இறைவனின் திருஅருளைப் பெற வேண்டும் என்று பல காலம் அருணாசலத்தை வலம் வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வரும்போது தன்னுடைய சக்தியானது குறைந்து அசைவற்று நின்று விட்டது. இது ஏன் நடந்தது என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை நின்ற இடத்திலிருந்து ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அசையும் பொருள் அசையாமல் போனதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. அவ்விடத்திலிருந்தே இறைவனைப் பிரார்த்தித்தான், “இறைவனே! நான் செய்த தவறு என்ன? தவறு ஏதாவது இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும்!” என்று அருணாசல ஈசனை வேண்டினான். அப்போது சுழற்காற்று ஒன்று உருவாயிற்று. அது ஆழமாக மணலைத் தோண்டி வெளியே எடுத்தது. அதில் ஏற்பட்ட குழிக்குள் அற்புதமான மகரிஷி ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான் வாயு பகவான். அந்த மகான் பெயர் கண்ட நீறு மகரிஷி. கழுத்துப் பகுதியில் திருநீறு இட்டிருப்பார். ஆகவே கண்ட நீறு மகரிஷி எனப் பெயர் பெற்றார். மகரிஷியைச் சேவித்த வாயு பகவான். “என்னால் அசைய முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? தாங்கள் கருணை கூர்ந்து இதற்கு விடையளிக்க வேண்டும்!” என்று மகரிஷியை வேண்டினான்.

மகரிஷி, “வாயு பகவானே! ஆக்கத்திற்காக வாயுவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அழிவுக்கு வாயு அதிகமாகப் பயன்பட்டதால் ஏற்பட்ட சாபமே இது. ஆகவே யார் ஒருவர் ஆக்கப் பூர்வமாக வாயுவைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அதிகமாக அனுக்கிரகம் செய்வதாக வாக்களிப்பாய்!” என்று கூற வாயு பகவானும் அங்ஙனமே வாக்குக் கொடுத்தான். அதனால் மகரிஷி மீண்டும் வாயுவிற்குத் தன் தபோபலத்தை அளித்து, தான் அங்கேயே லிங்கமாக மாறினார். லிங்கத்தை வாயு பகவான் பூஜித்து நலமடைந்தான்.

எனவே காற்றைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர்களும், காற்று சம்பந்தமான தொழிற்சாலை நடத்துவோரும் (உதாரணம்: மின்விசிறி, டயர், ட்யூப் தொழிற்சாலை, சோடா, கலர் தொழிற்சாலை, Units, A/C Units போன்றவை) அப்பொருட்களை வியாபாரம் செய்வோரும் இந்த வாயு லிங்கத்தை வணங்கி, கண்ட நீறு மகரிஷியை நினைத்து திருப்பணிகளும், தானங்களும் செய்திட அனைத்து நலன்களையும் பெறுவர். இங்கிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்திட அனைத்து நலன்களையும் பெறுவர். இங்கிருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்திட அது கண்ட நீறுமுக தரிசனம் ஆகும். அனைத்து வாயு துன்பங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் என்பதே இந்த தரிசனத்தின் அற்புதப் பலனாகும்.

கிரிவலத்தில் தொடர்ந்து வருவது ஆகாய நந்தி தரிசனம். நந்தீஸ்வரரின் கொம்புகள் வழியாக அருணாசல ஈசுவரரை வணங்குவது மகாவிசேஷம். இது ஜென்ம சாபல்ய முக தரிசனம் எனப்படும். பல பிறவிகளில் அடைந்த சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கிறது இந்த தரிசனம்.

தசமுக தரிசனம் திருஅண்ணாமலை

மேலே செல்ல அடுத்து வருவதோ ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகத்தியர் ஆசிரமம். இங்கிருந்து பார்க்கின்ற தரிசனம் சிவசக்தி ஐக்கிய தரிசனம் ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு எளிதில் திருமணம் கூடவும், திருமணத் தடங்கல்கள் நீங்கவும், கணவன் மனைவியரிடையே ஒற்றுமை நிலவவும் இத்தரிசனம் மூலம் எம்பெருமானாகிய அருணாசல ஈசன் அருள் புரிகின்றான். இதுவே தசமுக தரிசனமாகவும் அமைகிறது. அருணாசல ஈசன் பரந்து விரிந்து இரண்டு கண்களிலும் முழுவதுமாக நிறைந்து அருளும் பூரணமான தரிசனம்.

பஞ்சமுக தரிசனம்
திருஅண்ணாமலை

தசமுக தரிசன மகிமை (ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகத்தியர் ஆசிரமம்)

அசுரர்களின் குலத்தைச் சேர்ந்த ராவணன் வலம் வந்து வணங்குகிறான் ஒருமுகத்தோடு, அவ்வாறு வலம் வந்து வணங்கும் போது ஈசனுடைய பத்து முகங்களாக இருக்கின்ற அருணாசலத்தை தரிசிக்கப் பேராவல் கொண்டவனாய் இவ்விடத்தில் அமர்ந்து அருணாசல ஈசனை நோக்கி தவமியற்றினான். தசமுக தரிசனம் பூரணமான தரிசனம். எனவே அனைத்து முகங்களையும் ஒரே சமயத்தில் பார்த்து மகிழ வேண்டும் என்பதே ராவணன் விருப்பம். பல ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. எம்பெருமான் பெருங்கருணை கொண்டு தன்னுடைய ஒவ்வொரு முகத்தையும் ராவணன் தன்னுடைய ஒவ்வொரு முகத்தால் பார்க்கும் வண்ணம் பத்துத் தலைகளை அளித்தார். ராவணன் பத்துத் தலைகளைப் பெற்ற இடம் அண்ணாமலையில்தான். அதோடு மட்டுமல்லாமல் தான் நினைக்கும்போது அந்த பத்துத் தலைகளை அனைவருக்கும் காட்டவும், மீண்டும் ஒரு தலையாக மாறவும் வரம் பெற்றான்.

ஆகவே தசமுக தரிசனம் பலவிதமான துன்பங்களைப் போக்குவதோடு சிவசக்தி ஐக்கிய தரிசனமும் கலந்திருப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகவும், பிரிந்தவர் சேரவும், ஞானசக்திகள் பெற்ற அருட்ஜோதி ஞானிகள், உத்தமக் குழந்தைகள் பிறப்பதற்கும் உத்தம இடமாக அமைகின்றது.

திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பெற்றோர்கள் தசமுக தரிசனத்தில் தங்கி எம்பெருமானைப் பிரார்த்தித்து அதன் பலனாய் உத்தம ஞானியைப் பெற்றெடுத்தனர்.

ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர்
ஆஸ்ரமம் திருஅண்ணாமலை

கிரிவலத்தில் தொடர்ந்து செல்ல கம்பீரமாக வீற்றிருக்கும் அதிகார நந்தீஸ்வரரைக் காணலாம். அருகே பஞ்சமுக தரிசனமும் அமைகிறது.

அதிகார நந்தியிடமிருந்து பார்க்கின்ற தரிசனம் பஞ்சமுக தரிசனமாகவும் அமைகிறது. பஞ்சமுக தரிசனத்தைப் பெற்றுத்தான் அதிகார நந்தி தன் உயர் பதவியைப் பெற்றார். உத்தியோகத்தில் உயர் பதவி வேண்டுவோர், பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு தள்ளிச் செல்வதால் மனச் சோர்வடைபவர்கள் முறையாக கிரிவலம் வந்து பஞ்சமுக தரிசனத்தைப் பெற்றால் நலம் பெறுவர்.

தொடர்ந்து கிரிவலம் வர தாரா கிரி முனை தீர்த்தத்தைக் காணலாம். இது மிகவும் விசேஷமான தீர்த்தம். தற்சமயம் வீடுகளால் மறைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செல்ல இடுகாடுகளை அடைகிறோம். இடுகாடுகளுக்கிடையே இருந்து ஈசனை தரிசனம் செய்ய அது கோணலிங்க தரிசனம் ஆகும். அவ்விடத்தில் கோணமாய்த் திரும்பி ஈசன் காட்சியளிக்கின்றான்.

கோணலிங்க தரிசன மகிமை:-

கோணலிங்க தரிசனத்தை அவதூத மகான்கள் நீண்ட காலமாக தங்களுடைய அவதூத தவம் முறையாக நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் அருணாசலத்தை வலம் வந்து வணங்கிச் செல்வர். ஆகவே மனதில் மாசு இல்லாமல், எதன் மீதும் பற்று இல்லாமல் இறைவன் பாதமே கதி என்று இருக்க வேண்டிய துறவியர் இத்தரிசனம் செய்ய மிகுந்த பலனைத் தரும். உண்மையான துறவறம் பூணாமல் காவி ஆடையைக் கட்டக் கூடாது.

மேலே கிரிவலத்தில் காண்பது துர்கையம்மன் கோயில். இங்கிருந்து காணும் தரிசனம் மாயக் குழிவடு தரிசனம் எனப்படும். பௌர்ணமி பூர்ண சந்திரனோடு அமைகின்ற இத்தரிசனத்தால் அலை பாயும் மனவோட்டங்களால் ஏற்பட்ட மாயைகள் விலகும். குறிப்பாக தகாத பாலுணர்வுகள் தணியும். முறையற்ற காம எண்ணங்கள் குறையும். தீய சக்திகளை அழித்து நம்மைக் காக்கும். தீய எண்ணங்கள் நீங்குகின்றன. முறையற்ற வாழ்க்கையால் மன வேதனையுடன் வாழும் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் இந்த தரிசனம் தகுந்த பிராயச் சித்தம் தரும் தெய்வீக சக்தி வாய்ந்தது. அவர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு வாழத் தக்க தான தர்மங்களுடன் கூடிய இத்தரிசனம் உத்தமமான பலன்களை அளிக்கும்.

ஸ்ரீதுர்கையம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

அடுத்து பூத நாராயணன் கோயிலை அடைகிறோம். மாயக் குழிவடு தரிசனத்தை முடித்த பிறகு பூத நாராயணன் கோயிலில் கிரிவலத்தை முடிக்கின்றோம். அங்கிருந்து பெறும் தரிசனம் பசுபதி தரிசனம் ஆகும். பசுவாகிய மக்களெல்லாம் பதியாய் இருக்கின்ற சிவனைச் சேருவதற்கு வலம் வர வேண்டும் குருவருளால் என்று உணர்த்துவதே பசுபதி தரிசனம்.

சீடன்: சற்குரு மகாதேவா! பெறுதற்கரிய அருணாசல கிரிவல மகிமைகளை ஓர் அளவே தங்கள் பெருங்கருணையால் இன்று உய்த்துணரும் பேறு பெற்றோம். வலம் வருவோர் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றி விளக்க வேண்டும்!

குரு: 1. திருமணம் ஆகாமல் இருப்போர், திருமணம் ஆனவர்களும் காவி ஆடை (துறவியர் ஆடை) அணிந்து அருணாசலத்தை வலம் வரக் கூடாது. திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை அணியாமல் வலம் வரக் கூடாது.

2. வலம் வரும் போது பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சைக் கேட்போருக்கோ சிறு பிரசாதம் (வாழைப் பழமாவது) தருதல் நலம். காசு கொடுக்கும் வழக்கம் கிடையாது.

3. வலம் வரும் போது முக்கிய தரிசனங்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நலம் தரும்.

4. முடிந்த மட்டும் அவரவர் குல தர்மப்படி ஆடையை அணிவதும், வீண் பேச்சுக்களும், தேவையில்லாத குடும்பக் கதைகளும் பேசாமல் அருணாசல சிவ என்றோ, இறை நாமாவளிகளையோ, தேவாரம், திருவாசகம் போன்ற அல்லது வேத பாராயணம், நாம கீர்த்தனம் போன்ற அற்புத ஞானம் வழங்கும் இறை நாமாவளியையோ பாடிக் கொண்டு அருணாசல ஈசனைத் துதித்து வலம் வருதல் மிக்க விசேஷம். (இன்னும் சொல்ல வேண்டிய துதிகள் உண்டு. எந்தெந்த தரிசனத்தில் எதைச் சொல்ல வேண்டும் என்ற முறையும் உண்டு. அதை குருவை நாடித் தெரிந்து கொள்ளவும்.) தூபப் புகை, ஊதுவத்தி ஏற்றி வருதல் நலம் தரும்.

5.கார்த்திகை தீபத்தன்று நெய் பிரார்த்தனை உள்ளவர்கள் மட்டுமே திருஅண்ணாமலை மீது ஏறி பிரார்த்தனை செலுத்தலாம். வீணாக வேடிக்கை பார்க்க திருஅண்ணாமலை மீது ஏறக்கூடாது. ஏன் என்றால் திருஅண்ணாமலையில், குரு தட்சிணாமூர்த்தியின் உடம்பு மீது பாவங்களையே செய்து, பொய்யே சொல்லித் திரியும் சாதாரண மனிதனின் பாதம் படக் கூடாது. நெய் பிரார்த்தனைக்கு மட்டும் மக்கள் ஏறிச் செல்லலாம். இது மிக முக்கியம்.

6.வாகனத்தால் வலம் வரக்கூடாது. நடக்க முடியாதவர்கள் இருந்த இடத்திலேயே விழுந்து வணக்கம் செலுத்த வேண்டும்.

கிரிவலத்தில் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள்; அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்களாகும். ஆகவே அருணாசலத்தில் ஒருவரை ஏமாற்றினால் அதற்குப் பிராயச்சித்தம் கிடையாது. அருணாசலத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்தால் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டிவரும். அருணாசலத்தில் தர்ம காரியத்திற்காக இலவசமாக நிலபுலன்களை வழங்குவது அளப்பரிய தேவ லோகத்தைத் தரும்.

சீடன்: திருஅண்ணாமலையின் புனிதத் தன்மை மனித மனம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்தது; சிறந்தது. அவ்வாறிருக்க நம் பாதங்கள் இந்தத் தூய மண்ணில் படலாமா, அதன் மேல் கிரிவலம் வரலாமா என்று சிலர் அச்சம் கொள்ளலாமே, குருதேவா! அதற்கு வழி யாதோ?

குரு: அனைத்து உயிர்களும் திருஅண்ணாமலையாரைக் கண்டு அனுபவித்து ஆனந்திக்க வேண்டும். அவரை வலம் வந்து திருஅருள் பெறவேண்டும் என்று சடையப்பர் என்ற ஓர் உத்தமர் விரும்பிக் கடுந்தவம் புரிந்தார். ஈசனருள் கூடியது., பின் அவ்வுத்தமர் தன் ஜடாமுடியை பூமியின் அடியில் முழுவதுமாகப் பரப்பி மனிதர்களுடைய காலடி தூசி பூமிக்கடியில் இருக்கும் கோடானு கோடி லிங்கங்களைச் சென்று அடையாதவாறு தடுத்து விடுகிறார். எனவே அனைவரும் எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி திருஅருணாசல ஈசனைப் பாதுகைகள் இல்லாமல் வலம் வரலாம்.

சீடன்: குருதேவா! கிரிவலம் வருவதற்கான விசேஷ நாட்கள் ஏதாவது உள்ளனவா?

குரு: பௌர்ணமி, அமாவாசை திதிகளில் கிரிவலம் வருதல் அளப்பரிய பலன்களைத் தரும். மாதப் பிறப்பு நாட்களில் வலம் வருவதும் மிகவும் விசேஷம். தினமும் ஒரு முறையாவது கிரிவலம் வருதல் மகாவிசேஷம். எம்பெருமான் அருணாசல ஈசனை ஒரு நாளில் பல முறை வலம் வருவது அதைவிட விசேஷம்.

அருமைச் சீடனே! எல்லாவற்றிற்கும் மேலாக கிரிவலம் வருவோர் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அருணாசல ஈசனின் தரிசனப் பலன்கள் ஒவ்வொரு நொடிக்கும் மாறுபடுகிறது. எனவே தரிசனங்களின் பூரண பலனைப் பெற அருணாசல ஈசனைக் கண்கள் நோக்கியவாறே கிரிவலம் வர வேண்டும். மிகவும் நிதானமாக, மெதுவாக ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடப்பதா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நடப்பது போல் வலம் வருவதால் மிகவும் விசேஷமான பலன்களைப் பெறலாம் என்று அகத்திய கிரந்தங்கள் தெரிவிக்கின்றன.

சீடன் : மஹா பிரபோ! இப்பிறவி எடுத்ததன் பயனை இன்று முழுமையாக அடைந்தோம். அண்டங்களுக்கெல்லாம் பேரொளியாகி, அண்டங்கள் கடந்து நின்று, அணுவுக்குள் அணுவான அருணாசல ஈசனின் அருமை பெருமைகளையும், அவர்தம் கிரிவல மகிமையையும் தங்கள் பெருங்கருணையால் உய்த்துணர்ந்தோம். இதை அனைத்து மக்களும் நன்முறையில் பயன்படுத்தி அருணாசல ஈசனை முறையாக வழிபட்டு அவன் பேரருளுக்குப் பாத்திரமாக தங்கள் திருத்தாள் வணங்குகிறோம்.

குரு: இன்னும் ஏராளமான தரிசனங்கள், தீர்த்த மகிமைகள் உண்டு. இதைத் தொடர்ந்து கூறுவோம்!

(குரு துதியுடன் சீடர்கள் அருணாசலகிரியைத் துதித்து மௌனத்தில் ஆழ்கின்றன.)

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே!

இயற்கை எண்ணைய் தீபத்தின் சிறப்பு

சந்தியா, சரஸ்வதி, காயத்ரி என்ற ஜோதி ரூப தேவியர் மூவரும் முறையே காலை, மதியம், மாலை வேளைகளில் எங்கெல்லாம் இயற்கை எண்ணெயில் தீபம் ஏற்றப்படுகிறதோ, அந்த ஜோதியில் எழுந்தருளி அருள்புரிகின்றனர். எனவே இல்லங்களில், குறிப்பாக பூஜை அறைகளில் எப்போதும் சுத்தமான இயற்கை எண்ணெய் கொண்டு தீபமேற்றுதலே சிறந்தது.

நல்லெண்ணெய்: சனிக்கிழமையன்று சிவனுக்கு தீபம் ஏற்றினால் வீட்டில் சோர்ந்து வேதனை அடைவோர், வேதனை நீங்கப் பெறுவர்.

விளக்கெண்ணெய்: குலதெய்வப்பிரீதி, குடும்பக் காரியங்கள் குறைவில்லாமல் நடக்கும்.

தேங்காயெண்ணெய்: கணவன் – மனைவியிடையே நிலவும் தீராத சண்டை தீர்ந்து குடும்ப ஒற்றுமை வளரும். அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஏற்ற வேண்டும்.

இலுப்பெண்ணெய்: சிவனுக்கு உகந்தது. கடன் தொல்லைகள் தீரும்.

முக்கூட்டு எண்ணெய் : (வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் கலந்தது) கடல் கடந்து சென்ற கணவன் பத்திரமாகத் திரும்பி வருவான்.

பஞ்சதீப எண்ணெய்: (பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காயெண்ணெய் கலந்தது) வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதிகள் தீரும். நரம்புத் தளர்ச்சி வியாதிகள் நீங்கும்.

கடலைஎண்ணெய் தீபம் அறவே கூடாது. அதனால் சாபங்களே மிகும்.

இதில் இன்னும் பல இரகசியங்கள் உண்டு தக்க சற்குருவை நாடினால் அவரே அனைத்தையும் அருளுவார்!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam