இன்று மூன்று வேளை உணவு கிடைத்தால் உன்னுடைய புண்ணியம் நிறைவாக இருக்கிறது என்று அர்த்தம்!

அடியார்
குருதேவா, சிலர் எவ்வளவுதான் நன்றாக சத்துள்ள உணவுகளை ஏற்றாலும் சரியான ஆரோக்யத்தைப் பெறாமல் இருக்கிறார்களே. இதன் காரணம் என்ன?

சற்குரு
உண்ணும் உணவு மட்டுமே ஒருவருக்கு ஆரோக்யத்தைத் தந்து விடாது. இதைத்தான் நம் பெரியோர்கள் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இறை நினைவுடன் தயார் செய்யப்பட்டு, இறை நினைவுடன் உண்ணும் உணவுதான் ஒருவருக்கு ஆரோக்யத்தைத் தரும். சாப்பிடுவது என்பது உணவுப் பொருட்களை வயிற்றுக்குள் தள்ளுவது அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உணவு ஏற்பது என்பது இறைவனை வண்ணங்களால் வழிபடும் ஒருவித பூஜையே. எவ்வாறு வண்ண வண்ண மலர்களால் இறைவனின் பல்வேறு குணாதிசயங்களை நாமாவளியாகக் கூறி இறைவனை அர்ச்சிக்கிறோமோ, அவ்விதமே மனித உடலினுள் வாழும் இறை சக்தியை வண்ண வண்ண உணவுகளால் அர்ச்சித்து வழிபடும் முறையே உணவு சாப்பிடுவதாகும். இந்த உண்மையை உணர்ந்தவர்களே மகான்களும் யோகிகளும். நாம் உண்ணும் காய், கனிகளும், மளிகைப் பொருட்களும் இறைவனின் பல வண்ண வடிவுகளே.

பலரும் நேற்று என்ன உணவு உண்டார்கள், போன வாரம், போன மாதம் என்ன பதார்த்தம் சாப்பிட்டார்கள் என்று நினைவு கூற இயலாத நிலையில் இருக்கிறார்கள். என்ன சாப்பிட்டோம் என்று நினைவு வைத்துக் கொள்வது ஒரு பெரிய விஷயமா என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், இந்த கேள்விக்குப் பின் உள்ள ஆன்மீக இரகசியத்தைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழாது. நீங்கள் போன வாரம் உண்ட உணவு நினைவிருந்தால் அன்று எந்த வண்ணமுள்ள இறைவனை நீங்கள் வணங்கினீர்கள் என்ற நினைவு வரும் அல்லவா? இதைத்தான் சித்தர்கள், ‘உண்ட உணவு உனக்கு நினைவிருந்தால் உயர்வு தரும் ஈசன் நினைவு உனக்கிருக்கும்‘ என்ற பரிபாஷைச் சூத்திரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிலருக்கு உடல் ஆரோக்யமாக இருந்தாலும் வாயிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டு இருக்கும். இதற்குப் பலவிதமான முன் வினை தொடர்புகள் உண்டு. இந்த துர்நாற்றம் அகல வாரம் ஒரு முறையாவது மாசிக்காய் ஒரு துண்டை வாயில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வைத்திருந்து கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரத்தை மனதிற்குள் ஓதி வந்தால் துர்நாற்றம் விலகுவதுடன் அவர்கள் பேச்சில் தெளிவும் ஏற்படும்.
“ஓம் தத் புருஷாய வித்மஹே
மாசிக்காய் தேவாய தீமஹி
தந்நோ ஜனரஞ்சன ப்ரசோதயாத்.’

உடலில் இரத்த அணுக் குறைவு, இரத்த சோகை, உயிர் அணுக் குறைவு நோயால் வாடுவோர் தினமும் கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திக் கீரை அளித்து வந்தால் நலம் பெறுவர்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் என்னென்ன உணவு சாப்பிட்டோம் என்பதை ஒரு டைரியில் குறித்துக் கொண்டு வாருங்கள். இது நாளடைவில் உங்களை உன்னத தியான நிலைக்குத் தயார்படுத்தும் ஒரு மார்கமாக அமையும்.

உண்ணும்போது பல வண்ணமுள்ள உணவுகளால் இறைவனை எப்படி வழிபடுவது?
ஒவ்வொரு உணவு பதார்த்தத்தையும் பல பொருட்களைச் சேர்த்துதான் தயார் செய்கிறோம். அந்தப் பொருட்களின் வண்ணங்களுக்கு உரித்தான தேவதைகளையும், அந்தப் பொருட்களுக்கு உரிய அனுகிரக சக்திகளை அளிக்கும் தேவதைகளையும், அதிதேவதைகளையும் வணங்கி உணவு ஏற்பதால் இதுவே அற்புத பூஜையாக மலர்ந்து நமக்கு முழுமையான ஆரோக்யம் கிட்டும். இதுவே உண்மையான தியான நிலைக்கு நம்மை விரைவில் இட்டுச் செல்லும் என்பதும் உண்மையே. மக்கள் உண்ணும் சில சாதாரணமான உணவு பதார்த்தங்களை எவ்வாறு ஏற்பது என்பதை உங்களுக்கு விளக்குகிறேன்.

1. இட்லி, தோசை போன்ற உணவுகளில் பிரதானமாக இருப்பது அரிசி. அரிசிக்கு உரித்தான தேவதை சந்திரன். இட்லி, தோசை சாப்பிடும்போது சந்திர காயத்ரீ மந்திரத்தை ஓதி வந்தால் அரிசியில் அபரிமிதமாக இருக்கும் யூரியா போன்ற இரசாயண மருந்துகளும், நெற் பயிரில் தெளிக்கும் பூச்சி மருந்துகளின் வேகமும் தணிவதால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் தணியும். சிறுநீரகங்கள் வலிமை பெறும்.

‘சந்த்ரசூட சந்த்ரசூட சந்த்ரசூட பாஹிமாம், சந்த்ரசூட சந்த்ரசூட சந்த்ரசூட ரக்ஷமாம்’
என்ற சந்திரமௌலீஸ்வர மந்திரத்தையோ,
ஒம் தத்புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி தந்நோ சந்த்ர பகவான் ப்ரசோதயாத்
என்ற சந்திர காயத்ரீ மந்திரத்தையோ ஓதி இட்லி, தோசை உண்ணுவது நலம். ஒரு இட்லிக்கு 3 காயத்ரீ என்ற எண்ணிக்கையில் காயத்ரீயை ஓதவும். தோசையாக இருந்தால், ஒரு தோசைக்கு 6 முறை காயத்ரீ மந்திரத்தை ஓதவும்.

2. வெண்பொங்கலை உணவாக ஏற்கும்போது 51 முறை சந்திர காயத்ரீயையும் 51 முறை குரு காயத்ரீயையும் ஓதுதல் வேண்டும். வெண் பொங்கலில் அரிசியுடன் சீரகமும் சேர்வதால் குரு காயத்ரீயையும் ஜபித்தல் நலம்.
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி தந்நோ பிருஹஸ்பதி ப்ரசோதயாத்’
என்பது சீரகத்திற்காக ஜபிக்க வேண்டிய குரு காயத்ரீ.

நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துõய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீர் கொதிக்கும்போது மேற்கண்ட பிருஹஸ்பதி மந்திரத்தை ஓதினால் நீரில் உள்ள தோஷங்கள், நில வகை தோஷங்கள் அகலும்.

ஸ்ரீசந்திரசேகரர்
திருமீயச்சூர் சிவாலயம்

3. வெண்பொங்கலுடன் வடையும் சேர்த்து உண்பது தற்காலத்தில் சாதாரணமாக நிகழ்வதால் வடையில் உள்ள உளுந்து, மிளகு இவற்றிற்கான காயத்ரீ மந்திரங்களையும் ஓதுதல் நலம். உளுந்து தானியமானது சனி பகவான், சந்திர பகவான் இரு தேவதைகளின் அனுகிரகத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு அபூர்வமான தானியமாகும். தோலுடன் இருக்கும் உளுந்து சனி ப்ரீதியாக அமைவதால், ஹோமம், தான்ய பூஜை போன்றவற்றில் உளுந்தைப் பயன்படுத்தப்படும்போது, ’ஓம் தத்புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்‘ என்ற காயத்ரீயை ஓதவும். தோல் நீக்கிய உளுந்து சந்திர ப்ரீதியாக அமைவதால் இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்ற பதார்த்தங்களில் சேர்க்கப்படும்போது சந்திர காயத்ரீயை ஓதுதல் நலம்.

மிளகு சூரிய பகவானுக்குப் ப்ரீதியாக அமைவதால்
’ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி தந்நோ சூரிய பகவான் ப்ரசோதயாத்‘
என்ற காயத்ரீயை ஓதி மிளகு கலந்த உணவுகளை ஏற்றல் நலம். சூரிய கோளம் வெளிப் பார்வைக்கு உஷ்ணத்தைக் கொடுக்கக் கூடியதாகத் தோன்றினாலும், உண்மையில் சூரிய கோளத்தின் உட்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை. இவ்வாறே சித்தர்கள் அளித்துள்ள சூரிய நமஸ்காரம் என்னும் ஆசன பூஜைகளும் உடலுக்கும் மூளைக்கும் அபரிமிதமான குளிர்ச்சியை அளிக்கும் என்பது அனுபவத்தில் மட்டுமே உணரக் கூடிய அற்புதமாகும்.

வடையில் வெங்காயம் சேர்த்திருந்தால் அது சூரிய ப்ரீதியாக அமையும். வெங்காய பஜ்ஜி, வெங்காயச் சட்னி இவைகளை ஏற்கும்போது சூரிய காயத்ரீயை ஓதுதல் நலம்.

வெங்காயத்தின் உள்வெட்டுத் தோற்றம் பெருமாள் ஏந்தும் சக்கராயுதத்தை ஒத்து இருப்பதால் திண்டு தோசை, வெங்காய சட்னியை சனிக் கிழமை தோறும் பெருமாள் கோயிலில் தானமாக அளித்து வந்தால் உத்தியோகத்தில் நிலையில்லாமல் இருப்பவர்கள் நலம் அடைவர்.

4. ‘பருப்பு இல்லாத சாம்பாரா, சாம்பார் இல்லாத கல்யாணமா’ என்பது வெறும் உணவு பதார்த்தின் சிறப்பை மட்டும் கூறுவதாக எண்ணாதீர்கள். சுப்ரமண்ய சுவாமியின் அனுகிரகம் பெறாமல் எந்தக் கல்யாண வைபவமும் சிறப்பாக அமையாது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. இதை ஒட்டியே பங்குனி உத்திர சுப்ரமண்ய சுவாமி திருமண வைபவமும் அமைந்துள்ளது. கூடா நாள், மரண யோகம் போன்ற கால தோஷம் உடைய நாட்களில் நிகழ்ந்த திருமணங்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்போர் பங்குனி உத்திர நாட்களில் சாம்பார் சாதம் அன்னதானமாக அளித்து வந்தால் திருமண தோஷங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும். சாம்பார் சாதம் ஏற்கும்போது, ‘ஓம் தத்புருஷாய வித்மஹே வள்ளிதேவசேனா சமேதாய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்’ என்ற சுபமங்கள காயத்ரீயை 18 முறை ஜபித்தல் நலம்.

5. மதியம் உணவருந்தும்போதும், விருந்துகளில் கலந்து கொள்ளும்போதும், சாப்பாட்டில் எல்லாவிதமான காய்கறிகளும், உணவு பதார்த்தங்களும் கலந்திருப்பதால் அனைத்திற்கும் பொதுவாக ‘அன்னபூர்ணே சதா பூர்ணே...’ என்ற அன்னபூரணி சுலோகத்தை 21 முறை சொல்லி உணவருந்துவது நலம்.

6. ஜீரக ரச சாதம் உண்ணும்போது அஸ்வினி தேவதைகளை வணங்குதல் நலம். அஸ்வினி தேவர்களுக்கு உரிய காயத்ரீ மந்திரமான ‘ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி தந்நோ அஸ்வினி தேவ ப்ரசோதயாத்’ என்பதை 31 முறை ஜபித்தல் நலம்.

7. புளியோதரை பெருமாளுக்குப் படைக்க வேண்டிய விசேஷமான பிரசாதமாக அமைவதால் புளியோதரை உண்ணும்போது ஸ்ரீவிஷ்ணு காயத்ரீ மந்திரத்தையே புத பகவானுக்கு உரித்தான காயத்ரீ மந்திரத்தையோ 101 முறை ஜபித்தல் நலம்.

8. தேங்காய் சாதம் உண்போர் தேங்காய்க்கு உரிய நவகிரக தேவதையான சுக்ர மூர்த்தி காயத்ரீயை 51 முறை ஜபித்தல் நலம்.

9. பால், மோர் அருந்தும்போது அல்லது பால் சாதம், மோர் சாதம் உண்ணும்போது சந்திர காயத்ரீயை 20 முறை ஜபித்தல் நலம்.

இவ்வாறு இறை நினைவுடன் ஒவ்வொரு உணவையும் உண்டு வந்தால் எந்த வண்ணமுடைய இறைவனை வழிபட்டோம் என்ற நினைவு நமது உடல், மனம், உள்ளத்தில் பதிந்து நிரவி உடல் ஆரோக்கியமாக விளங்குவதுடன் கடவுளை நோக்கி மிக விரைவாக முன்னேறுவோம் என்பது உறுதி. இவ்வாறு உணவில் வண்ணங்களைப் பார்த்து இறைவனை வழிபட்ட உத்தமர்களைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால் காஞ்சி மட பீடாதிபதியான பரமாச்சார்யார் சுவாமிகளைக் கூறலாம். அவர் விரும்பியிருந்தால் 10,000 ஆண்டுகள் மனித உடலில் ஆரோக்யமாக வாழ்ந்திருக்கலாம். அந்த அளவிற்கு உடல் ஆரோக்யத்தைப் பெற்றிருந்தார். அந்த பூரண ஆரோக்யத்தின் ரகசியம் அவர் உணவில் உள்ள வண்ணங்களால் இறைவனை வழிபட்டதே ஆகும். அனைவரும் கடைபிடிக்கக் கூடிய எளிய உணவு பழக்கத்தை உங்களுக்குக் கூறுகிறேன். எல்லா வயதினரும், எல்லா சமூக அந்தஸ்து நிலையில் உள்ளவர்களும் கடைபிடித்து பயனடையும் வகையில் உள்ள மிகச் சிறந்த உணவு முறை.

மாதிரி உணவு முறை

காலை எழுந்து பல் துலக்கியவுடன் நீராகாரம் அல்லது இளநீர் அருந்தவும். நீராகாரம் அருந்துபவர்கள் சிறிது பச்சை வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். உடலில் உள்ள பித்தத்தை நீக்கி உடலையும், மூளையையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை நீராகாரத்திற்கு உண்டு. சமைத்த உணவை மூன்று மணி நேரத்திற்கு மேல் வைத்திருப்பதால் ஏற்படும் தோஷத்தைக் களைவதற்கே வெங்காயத்தை ஏற்கிறோம். குடல் புண், வாய்ப் புண், வாய் துர்நாற்றம், கண் எரிச்சல், தலை சுற்றல் போன்ற நோய்களுக்குத் தீர்வாக அமைவது நீராகாரமும், இளநீரும் ஆகும். நீராகாரத்துடன் பச்சை மிளகாயை சேர்த்து உண்ண வேண்டாம்.

லிங்கத் திருமேனியில் நாமம் பூண்டு
அருள்புரியும் ஸ்ரீநாமபுரீஸ்வரர், ஆலங்குடி

அடியார்
வெங்காயம், பூண்டு இவற்றில் அசுர குணம் இருப்பதாகச் சொல்கிறார்களே, இது உண்மையா, குருதேவா?

சற்குரு
உண்மைதான், ஆனால், அசுர குணமும் கலியுகத்தில் தேவைப்படுவதால் வெங்காயம், பூண்டு இவற்றை உணவில் சேர்ப்பதால் தவறு கிடையாது. தீய சக்திகளை, தீய எண்ணங்களை, எண்ண மாசுகளை எதிர்த்துப் போராடும்போது அசுர சக்திகள் நிறைந்த வெங்காயம், பூண்டு இவற்றின் அசுர சக்தியால்தான் தீமையை வெல்ல முடியும். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்ற தத்துவத்தில் அமைவதே இந்த உணவு முறையாகும். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் நவரத்தினங்கள், தர்ப்பண பூமிகள், நோய்க் காப்பு உணவுகள் போன்றவை யாவும் அசுரர்களின் தியாகத்தால் வந்தவையே. அந்த உத்தமர்களின் தியாகத்தை மறந்து விட்டால், நாம் நன்றி கெட்டவர்களாக ஆகி விடுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிதமிஞ்சிய சூடு, சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீர் சரியாக வெளியேறாமல் கை, கால் மூட்டுகளில் யூரிக் அமிலத்தின் தேக்கம் போன்றவற்றால் துன்பம் அடைபவர்கள் ஒரு சிறு கரண்டி துளசிப் பொடியையும், வில்வப் பொடியையும் ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அகலும். அதிக பட்சம் வருடத்திற்கு ஒரு மண்டல (45 நாட்கள்) காலம் மட்டுமே இந்த சூரணத்தை ஏற்கலாம்.

வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், மலைக்கோட்டை, ஐயர்மலை, கயா புனித பூமி, இவை எல்லாம் நமக்கு எப்படிக் கிடைத்தன என்பதை சிந்தித்துப் பாருங்கள். சித்தர்களைப் பொறுத்த வரையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பதையே மேலுலகத்தில் கணக்கிடுகிறார்கள்.

அடியேனுக்குத் தெரிந்த ஒருவர் தினமும் பசு நெய்யில் வதக்கிய எட்டுப் பூண்டை சாப்பிடுவார். பூண்டு சாப்பிடும்போது ஒவ்வொரு பூண்டிற்கும் ‘அச்சுதா, அனந்தா, கோவிந்தா’ என்று ஏதாவது ஒரு விஷ்ணு நாமத்தைச் சொல்லித்தான் பூண்டைச் சாப்பிடுவார். சிறிது சாம்பார் (சின்ன) வெங்காயத்தைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் மோர் குடிப்பார். அவர் ஒரு நாளைக்கு 80 மைலுக்குக் குறையாமல் நடப்பார். நடந்தே எல்லா கோயில்களுக்கும் செல்வார். ஒரு நாளைக்கு குறைந்தது 8 கோயில்களையாவது நடந்து சென்று தரிசனம் செய்து விட வேண்டும் என்ற வைராக்யத்துடன் வாழ்ந்தார். தன்னுடைய கடைசி காலம் வரை இந்த வைராக்யத்தை நிறைவேற்றினார் என்பதுதான் சிறப்பு. சாகும் தறுவாயில் ‘நாராயணா, நாராயணா’ என்று குடும்பத்தினர் அனைவரையும் இறை நாமம் சொல்லச் சொல்லி அந்த இறைநாமத்தைக் கேட்டுக் கொண்டே இறைவனடி சேர்ந்தார். முறையான உணவுப் பழக்கம் எப்படி ஒரு மனிதனை இறைவனிடம் இட்டுச் செல்லும் என்பதற்கு அவர் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகும்.

அப்படி அசுர குணத்தை நீக்கி உண்ண விரும்புவோர் வெங்காயம், பூண்டு கலந்த உணவுப் பதார்த்தங்களில் சிறிதளவு இஞ்சித் துண்டை சேர்த்து உண்டால், அதில் உள்ள அசுர குணம் மாறி விடும். நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு நீராகாரம், இளநீர் போன்ற உணவுகள் ஏற்புடையதாக இருக்காது என்றால் அவர்கள் கேப்பை (கேழ்வரகு) கஞ்சி ஒரு டம்ளர் அருந்தலாம். கஞ்சியுடன் மாங்காய் தொக்கு, எலுமிச்சை, நாரத்தை ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். கேப்பை (கேழ்வரகு) கழி காலையில் உண்ண வேண்டாம். நல்ல பசிக்கும்போது மட்டுமே கேப்பைக் கழி உடலுக்கு ஒத்துக் கொள்ளும். எக்காரணம் கொண்டும் கருவாட்டுக் குழம்பை உணவில் சேர்க்க வேண்டாம். வாய்க்கு ருசியாக இருந்தாலும் உடலுக்குப் பல தீமைகளை விளைவிப்பதால் கருவாட்டுப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும்.

தென்மேற்கு திசையான நிருதி திக்கிற்கு சித்தர்கள் வழங்கும் பரிபாஷைப் பெயர் “வெண்டைக்காய் மூலை’ என்பதாகும். கோயிலில் நிருதி திக்கில் இருக்கும் கன்னி மூலை கணபதியை வணங்கி தோப்புக் கரணம் இட்டு வந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞானம் போன்ற கடினமான பாடங்களையும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெருகும். தீய பழக்கங்கள் அவர்களை அண்டாது.

மதியம் சாதத்துடன் பருப்பு அல்லது சாம்பார் சேர்த்து உண்ணவும். சாதத்தில் நெய், சிறிதளவு சுக்குப் பொடி சேர்த்து ஏற்றல் உணவில் உள்ள பல வகையாக தோஷங்களை நீக்கி உடலை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும். ரசம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்பவர்கள் பருப்பு சாதத்திற்குப் பின் ரச சாதம் உண்ணலாம். சாம்பார் சாதத்திற்குப் பின் ரச சாதம் ஏற்கக் கூடாது. சாம்பார் சாதத்திற்குப் பின் மோர் சாதம் உண்பதே முறை.

மற்றொரு முறையாக கீரை, சாம்பார் சாதம் அல்லது கீரை, குழம்பு ஏற்கலாம். சாதத்தில் குழம்பு சேர்த்துக் கொண்டால் மோர் சாப்பிட வேண்டும். அப்போது ரசம் சாப்பிடக் கூடாது.

சாம்பார் சாதத்துடன் சேர்த்து உண்ணக் கூடிய உணவு வகைகளைத் தெரிந்து உண்பது நல்லது. சாம்பார் வைக்கும் தினங்களில் உடன் வெண்டைக்காய் கறி, கீரை, ரசம், உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ், புடலைங்காய் பெரியல், அவரைக் காய் கறி இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து உண்ணுதல் நலம்.

தற்காலத்தில் பெண்களிடையே வேகமாகப் பரவி வரும் மார்புப் புற்று நோய்க்கு முன் வினைக் காரணங்களாக அமைவதில் ஒன்றே ஊசி, மாத்திரை போன்ற செயற்கை முறைகளால் தாய்மார்கள் பால் வற்றச் செய்தல் ஆகும். இத்தகைய துன்பங்களால் வருந்துவோர் திருஅண்ணமலையில் உண்ணாமுலை மண்டபத்திற்கு அருகில் உள்ள ‘இருமுலை கூம்பு தரிசனம்’ பெற்று கறவை நின்ற பசுமாடுகளைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தால் நோயின் வேதனை ஓரளவு தணியும்.

உணவின் அளவு ஆரோக்யத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எட்டுப் பிடி அதாவது எட்டுக் கவளம் என்பதே ஒவ்வொரு மனிதனும் ஏற்க வேண்டிய உணவின் அளவாகும். தன்னுடைய திறந்த கையால் எவ்வளவு எடுக்க முடியுமோ அதுவே ஒரு கவளமாகும். சாதம், குழம்பு, காய், கறி இவை அனைத்தும் சேர்ந்து எட்டுக் கவள உணவு உண்டு கால் வயிறு தண்ணீர் பருக வேண்டும். கால் வயிறு காற்றுக்காக விட்டு விட வேண்டும். இதுவே ஆரோக்யமான உணவுப் பழக்கமாகும். காலையில் எட்டுக் கவளம் உணவு ஏற்றால் இரவில் மூன்று கவள உணவு மட்டுமே ஏற்க வேண்டும். இரவில் சாப்பாட்டைத் தவிர்ப்பவர்கள் ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர் சத்து மாவுக் கஞ்சி அருந்தலாம்.

இதுவரை சொன்ன உணவுப் பழக்கம் ஆரோக்ய நிலையில் உள்ள ஒரு சராசரி மனிதனுக்கு உரித்தானது.

அடியார்
குருதேவா, இதயம் பலவீனமாக உள்ளவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தில் பல மாறுதல்களைச் செய்ய வேண்டியள்ளதே. அதைப் பற்றியும் தாங்கள் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

சற்குரு
அடியேன் இதுவரை சொன்னது பொதுவாக அனைவரும் அனுசரிக்க வேண்டிய ஒரு உணவுப் பழக்கம். இதைச் சிறுவயது முதல் அனுசரித்து வந்தால் எந்த வித நோயும் அண்டாது. இதய நோய், சர்க்கரை நோய் பான்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல் நிலையை நன்கு பரிசீலித்த பின்னரே அவர்களுக்கு உரித்தான பிரத்யேகமான உணவு முறையை அளிக்க முடியும். இருந்தாலும் மிகவும் முற்றிய நிலையில் இல்லாத சாதாரண நிலையில் உள்ள சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும் இங்கே அளித்துள்ள உணவுப் பழக்கங்கள் நோயின் கடுமையைத் தணித்து ஆரோக்ய நிலை அடைய உறுதணையாக இருக்கும்.

சர்க்கரை நோய்க்கு நிவாரணம்

பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலை, உத்தியோகம், பணி இவற்றைப் பொறுத்து தங்களுக்கு ஒத்து வரக் கூடிய, தங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட்டு வரலாம். ஹோட்டல், விடுதிகள் போன்ற வெளியிடங்களைத் தவிர்த்து தாமே சமைத்து உண்ணுதல் நலம். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுக்காக காலியாக வைத்திருத்தல் என்னும் உணவுப் பழக்கம் எக்காலத்திற்கும், யாவர்க்கும் பொருந்தி வரக் கூடிய ஓர் ஆரோக்யமான உணவுப் பழக்கமாகும்.

35 வயதிற்குப் பின் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

கண் நோய்களைத் தீர்க்கும்
ஸ்ரீஒளியுலா சுவாமிகள்
ஜீவாலயம், துவரங்குறிச்சி

அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இரவு உணவு கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக இருத்தல் நலம். சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 50 வயதிற்குப் பின் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும். 40 வயது முதல் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதனால் மூட்டு வலி, ஈரல் வீக்கம் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் முற்றிய நிலையிலிருந்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரிசி சாதத்தைத் தவிர்த்து கோதுமை உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோயை சரியான உணவுப் பழக்கத்தால் எளிதில் குணமாக்கி விடலாம் என்பது உண்மையே. இவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு அருகம்புல் உருண்டையை வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் அருந்தவும். அருகம்புல் உருண்டை எப்படி செய்வது? வேர், தண்டு நீக்கிய அருகம்புல்லைச் சேகரித்து அம்மியில் வைத்து நன்றாக அரைக்கவும். அத்துடன் நீர் சேர்க்காமல் தேவையான அளவு வடிகஞ்சியை ஊற்றி நைசாக அரைக்கவும். அருகம்புல்லை கல் அம்மி, ஆட்டுக்கல்லில்தான் அரைக்க வேண்டும். மின்சார மிக்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. அருகம்புல் விழுதான பதத்திற்கு வந்தவுடன் அதை வழித்தெடுத்து, உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை வேட்டியில் அந்த உருண்டைகளை வைத்து நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

சர்க்கரை நோய் தீர்க்கும் ஆராக் கீரை

அருகம்புல் உருண்டையில் உள்ள ஈரப் பதம் நன்றாகக் காயும் வரை தேவையான நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் அருகம்புல் உருண்டைகளைப் போட்டு பத்திரப்படுத்தி வைக்கவும். இப்படி தயார் செய்யப்பட்ட அருகம்புல் உருண்டைகளை தினமும் ஒரு உருண்டை வெறும் வயிற்றில் உண்டு ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் ஆரம்பி நிலையிலுள்ள சர்க்கரை வியாதி குணமாகும். முற்றிய நிலையிலுள்ள நோயின் கடுமை தணியும்.

இரண்டாவதாக, இரவில் அரிசி சாதத்தில் நீர் ஊற்றி வைத்திருந்து காலையில் (பழைய) சாதத்தில் உள்ள நீரை வடித்து விட்டு உண்பதால் சாதத்தில் உள்ள பெரும்பான்மையான ஸ்டார்ச் சத்து நீர் மூலம் வெளியேறி விடும். இந்த சாதத்தை நாள் முழுவதும் சாம்பார், ரசம், மோர் இவற்றை சேர்த்து உண்ணலாம். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது.

மூன்றாவதாக, நீர் ஆரை என்ற ஒரு கீரை உண்டு. வயல் வரப்புகளில், வாய்க்கால்களில் நீர் தொடர்ந்து இடங்களில் முளைத்திருக்கும். நாலு இதழ்கள் கொண்டது. இந்த ஆராக்கீரையைச் சமைத்து தினந்தோறும் உண்ண வேண்டும். பசுவிற்கும் ஒரு கைப்பிடி ஆராக் கீரையை சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்துக் கொடுத்தில் மிகவும் துரிதமான பலன்களைக் கொடுக்கும். ஆராக் கீரையைப் பெற இயலாதவர்கள் தினமும் ஒரு கட்டு அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு அளித்து வரவும். இந்த உணவு முறையையும், தான முறையையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் மிக எளிதில் சர்க்கரை வியாதியின் துன்பத்திலிருந்து மீளலாம். இதய நோய்கள் அகற்றும் உணவு முறை.

இதய நோய் நிவாரணம்

பொதுவாக, இதயத்திற்கு இரத்தம் அளிக்கும் செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும்போது இரத்தக் குழாய்களின் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. சில சமயம் போதுமான அளவு எண்ணிக்கையில் இதயம் துடிக்காததால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து நாளடைவில் இதயம் பலவீனம் அடைவதுண்டு. இத்தகைய இதயக் கோளாறுகளை முறையான உணவுப் பழக்கங்களால் ஓரளவு குணப்படுத்தலாம். நெடுநாள் இரசாயண மருந்துகளையே பயன்படுத்தி வருவதால் உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் தளர்வு அடைந்து மிகவும் பலவீனமாக உள்ளவர்களும் இத்தகைய சீரான உணவுப் பழக்கத்தால் போதுமான உடல் பலத்தைப் பெறலாம். இதய நோய் உள்ளவர்கள் என்றில்லாமல் அனைவருக்குமே பயன்படக் கூடிய ஒரு உணவுப் பழக்கத்தை இங்கு அளிக்கிறோம்.

காலையில் வெறும் வயிற்றில் வில்வம், துளசி இதழ்களுடன் மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்கவும். பத்து வயதிற்கு ஒரு மிளகு என்ற கணக்கில் மிளகைச் செர்த்துக் கொள்ளவும்.

ஒரு மணி நேரம் கழித்து காலை உணவாக பொன்னாங்கண்ணி அல்லது வல்லாரைக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பருப்புப் போட்டோ, பருப்பு சேர்க்காமலோ சமைத்து உண்ணலாம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு டம்ளர் கேரட் சூப் பருகவும்.

பின்னர் பத்து பாசுமதி அரிசியை லேசாக வாணலியில் வறுத்து நீரில் கலந்து குடித்து விடவும்.

சிறிது நேரம் கழித்து ஐந்து சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) தண்ணீரில் வேக வைத்து ஆறியவுடன் வெங்காயத்தை நீருடன் சேர்த்து சாப்பிட்டு விடவும்.

வாரம் ஒரு முறையாவது மிதமான சுடுநீரில் வேப்பிலை போட்டு குளித்து வரவும்.

திங்கட் கிழமை அன்று ஐந்து பல் நாட்டுப் பூண்டில் நெய் தடவி லேசாக வதக்கி உண்ணவும்.

ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் கேழ்வரகு தோசையும், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் சோள தோசையும், புதன், சனிக் கிழமைகளில் கம்பு தோசையும் உண்டு வரவும்.

இத்தகைய முறையான உணவுப் பழக்கங்களுடன் நம் சற்குரு அளித்துள்ள இதய நோய் அகற்றும் துதிகளையும் தொடர்ந்து ஓதி வருதலால் அடியார்கள் நல்ல ஆரோக்யத்தைப் போற்றி பாதுகாக்க முடியும் என்பது உறுதி.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam