நல் மனமே தரும் நறுமணம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பூக்கள் தரும் புனிதங்கள்

பூக்கள் என்றவுடன் அவற்றின் மணமும், மென்மையும், வண்ணமும்தான் படைப்பின் அதியற்புதமாய் நம் சிந்தனையை ஸ்பரிசிக்கும். தற்போதைய மனித குலத்திடம் அலசித் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாகத்தான் புனிதம் விளங்குகிறது. ஆனால் பூக்குலமோ புனித வளாகமாய், பரிசுத்தச் செழிப்புடன் உலகெங்கும் மிளிர்கின்றன. பூக்கள் யாவும் தியாக தீபங்கள். எந்தப் பூச்செடியும் தனக்கென பூக்களைப் புஷ்பித்துக் கொள்வதில்லை. அனைத்தும் பிற ஜீவன்களுக்காகவே பறிக்காமல் பூமியில் விழுந்தாலும், பூக்கள் நிலத்திலும் உரமாகச் சேர்கின்றன, தம் மணத்தால் பூமியையும், சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கின்றன.
மந்திரங்களாலும், மாயங்களாலும், தந்திரங்களாலும் சாதிக்க முடியாதவற்றைப் பூக்கள் கொண்டு நன்முறையில் சாதிக்கலாம். எண்ணற்றச் சித்தர்கள் பூக்களின் தெய்வீக ரகசியங்களை நமக்கு நிறையவே அளித்துள்ளனர்.
இவற்றை அகஸ்திய குல தீபிகையான சத்குரு வெங்கடராம சுவாமிகள் திரட்டுப் பால் போல் நமக்குத் திரட்டி அமிர்தப் பொருளாய் ஆக்கி தந்துள்ளார். இவற்றை அறிந்து முறையாகப் பயன்படுத்தி இறையருளை யாவரும் பெற்று உய்க உய்கவே!!

சித்தர் சித்து விளக்கங்கள்

சித்து என்பது அனைவரிடமும் உள்ளதொரு சக்தியே. சித்தர்கள் அனைத்தையும் சாதிக்கின்றார்கள். நம்மால் முடியவில்லையே, ஏன்?
சித்தர்கள் தங்கள் சித்தத்தை இறைவன்பால் செலுத்தி ஒருமுகப்பட்டு ஆன்மயோக சக்தியைப் பெறுகின்றார்கள். ஆனால் மனித குலம் என் செய்கின்றது? நமக்குப் பிடிக்காதவர்களை வெறுத்தும், வீண் ஆசைகளை வளர்த்தும், தவறான வழிகளில் சம்பாதித்தும், இன்பத்தை நாடியும், அவற்றை அடைய சித்தத்தையும், சிந்தனையும் வீணாய், விரயமாய்ச் செலவழிப்பதால் அவரவருள் இருக்கும் சித்சக்தி எல்லாமே விரயமாகி, எதையும் சாதிக்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் பூக்களால் ஆகும் எளிய வழிபாடு சித்சக்தியை நன்கு விருத்தி செய்யும், நல்மார்கத்தில் செலுத்தும்.
சுயநலமின்றி ஒருவர் பிற ஜீவன்களுக்கான சேவைகளை ஆற்றிச் சித்தத்தை இறைவனிடம் செலுத்தினால், அவருடைய சித்சக்திகள் அநாவசியமாய்ச் செலவழியாது, நன்கு விருத்தி ஆகும்.
சித்தர்களுக்கு இயற்பெயர் கிடையாது. குப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர், சங்கூதிச் சித்தர் என்றவாறாய் காரணப்பெயர் நிலைத்து நிற்க்கும். இடியாப்ப சித்தர், பூண்டிச் சித்தர், தொள்ளைக்காது சித்தர், தடிதூக்கி சித்தர், சுரைக்காய் சித்தர், தொழுப்பேட்டு சித்தர், பன்றிமலை சித்தர், கழுவெளிச் சித்தர் – இவை யாவும் காரணப் பெயர்கள்.

ஏற்றம் தரும் இரு வழிகள்

இறைவனை அடைய – பக்தி, ஞான, கர்ம, யோக மார்க்கங்கள் எனப்பல உள்ளன. தவங்கள் செய்து விரதங்கள் இருந்து நாம சங்கீர்த்தனமும், கோயில் திருப்பணிகளும் மற்றொரு வழி.
இரண்டாவதின் மூலம் இறைவனை எளிதில் அடையலாம். இவ்வுலகில், மறு உலகிலும் பல காரியங்களைச் சாதிக்க பூக்கள் வழி வகுக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பற்றி இங்கு காண்போம். ஆம், பூக்கள் தரும் புனிதங்களைக் கொண்டு புனிதமான இறைவனை எளிதில் அடைந்திடலாம். இதுவும் பூத்தவமே!
கட்டுப்பாடு இல்லாத மன ஓட்டங்களும், எண்ணங்களும் தாம் மனிதனை அலைக்கழிக்கின்றன அல்லவா? முதலில் எந்தெந்த எண்ணங்கள் எந்தெந்த நல்ல காரியங்களுக்கு உதவியாக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பூக்களின் நறுமணம், அவ்வப்போது நற்சிந்தனைகளை, நல்எண்ணங்களை எழுப்பும், எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று.

மந்தாரை மலர் திருவெறும்பூர்

இந்தக் கலியில் பார்வைக்குக் கெட்டதாகத் தெரிவதெல்லாம் கெட்டவையாக இருப்பதில்லை. நல்லவையாகத் தெரிவதெல்லாம் உண்மையில் நல்லவையாக இருப்பதில்லை. எனவே தீர விசாரித்து அறிய வேண்டும். இதற்குப் பூக்களின் நறுமணங்கள் உதவும்.
இதற்காக எப்போதும் கையில், பையில் – ஆலயத்தில், வீட்டில் பூஜித்த புஷ்பப் பிரசாதங்களை எப்போதும் கை வசம் வைத்திருக்க வேண்டும். கோயில் பூப் பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாயும் செயல்படும்.
மஹான்களும் பூ, குங்குமம், அட்சதை போன்றவற்றை வைத்து ஆசீர்வாதம் செய்வர். காரணம் அவர்களுடைய ஆசீயை நேரடியாய்ப் பெறும் யோகசக்தி, மனப் பக்குவம் நமக்கு இல்லாததால், இடையில் புனிதசக்தி நிறைந்த பூக்கள் பயனாகின்றன.
இவ்வாறு ஆசீர்வதிக்கையில் படே சாஹிப் சித்தர், பரமாச்சார்யாள் போன்ற சித்தர்களும், மகான்களும் முனிவர்களும் சிலருக்கு கூடுதலாய் அனுகிரகம் செய்வது போல் தோன்றும். அப்படி அல்ல. உத்தமர்கள் எப்போதும் காண்பது, அவரவர் உள்ளிருக்கும் ஆன்மாவையே!
சித்தர்களும், மகான்களும் பூஜை செய்வதோ, வேண்டுவதோ – மற்ற அடியார்களுக்காகவும், பக்தர்களுக்காகவும்தான், நம்மை போல் அது வேண்டும், இது வேண்டும் என்பதாய்ச் சுயநலமாய் அல்ல.
நம்முள் யார் அவ்வாறு பிற ஜீவன்களுக்காகச் சேவை செய்கின்றார்களோ அவர்களுக்குக் கூடுதலாய்த் தம் ஆன்மசக்தியை அவர்கள் அளிக்கின்றார்கள். இதையே நாம் வேறு விதமாய் புரிந்து கொள்கின்றோம்.
நம்மை விடப் புனிதமானவர்கள் உலகில் உண்டு என்பதே இதில் நாம் பெறும் பாடம். இதை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவ்வாறு மஹான்கள் ஆற்றும் ஜபமும், தவமும், பூஜையும் பூக்கள் போன்று பிறருக்காகவே.
ஆனால் கலியுக மனிதர்களாகிய நாமோ நம் வேவைக்காகவே எப்போதும் வேண்டுகிறோம். வேண்டுவது உண்மையாகவே நமக்குத் தேவையா, அதனால் பயன் உண்டா என்று எண்ணிக் கூட பார்ப்பதில்லை.
ஏதாவது தேவை என்றால் நினைத்த உடனே இறைவனிடம் வேண்டி விடுகின்றோம். இதற்காக எத்தனை பூஜைகள், வழிபாடுகள், நமஸ்காரங்கள் செய்கின்றோம்? முறையானவற்றைக் கேட்பதில் தவறில்லை! கேட்பதற்கும் எல்லை வேண்டும் அல்லவா. பூக்களோடு பூஜித்தால் எண்ணங்கள் முறைப்படுத்த பெறும்.
சந்தியாவந்தனம், காயத்ரீ ஜபம், பூஜைகளை ஏன் தலைமுறை தலமுறையாக ஓரளவேனும் செய்து வருகின்றோம்? நம் முன்னோர் செய்ய சொன்னார்கள், அவர்களும் செய்தார்கள், பலன்களை அடைந்தார்கள், இதில்தான் உண்மையான சந்தோஷம், திருப்தி மன அமைதி கிடைக்கின்றது.
பழமையை, தொன்று தொட்டு வந்ததைக் கடைபிடிப்பதில்தான் நிரந்தரமான ஆனந்தமும், பரிபூரணமான திருப்தியும் கிட்டுகின்றன என்பதை நன்கு உணர வேண்டும். தீபாவளி, பொங்கலைக் கொண்டாடுகையில் ஊரே, நாடே சந்தோஷப்படுகின்றதே!
இடையில் வந்த தவறான கடைபிடிப்பாய், காலையில் (அதுவும் நாயுடன்) வாக்கிங் போகும் போது, ஷூவைக் கூடக் கோயில் வாசலில் கழற்றாது கும்பிடும் அவல நிலைக்கு எவரும் ஆளாகக் கூடாது. பழமையைக் கை விட்டதால் வந்த ஒழுக்க கோளாறு இது.
நாயுடன் அதிகாலையில் வெளிச் செல்வோர், அதிகாலையில் கோயிலுக்குச் செல்ல மறுப்பதேனோ? இதே வினாவைத்தான் வாக்கிங் செல்லும் போது கூட நாயும் மனிதனை அடிக்கடி கேட்கின்றது. ஆனால் நாய் பாஷை தெரியாததால், ”உஷ், சும்மா இரு, சும்மானாச்சும் குலைக்காதே!” என்று மனிதன் அதட்டி தட்டி விடுகின்றான்.

கொக்கு மந்தாரை காளையார்கோவில்

நாய்களுக்கு பூக்களின் மகத்துவம் தெரியும். பூ நன்றாக வாசனையாய் இருப்பதும் தூர இருந்தே அதற்கு மிகவும் நன்றாகவே தெரியும், இருப்பினும் அருகில் சென்று முகர்ந்து பூவின் யோகமணத்தைப் பெற்று பயனை அடைந்து கொள்கின்றது. ஆனால் பூக்களின் புனிதத்தை அறிந்தாலும், மனித குலம் தினமுமே பூக்களைப் பயன்படுத்துவது இல்லையே!
நமக்குப் பெரியோர்கள் தந்துள்ள எளிமையான வழிபாடுகள் பூக்களைப் போல் புனிதமானவை. அதாவது புனிதமானதைக் கடைபிடித்தால் நல்வழியும் ஆகும், திருப்தியும், சந்தோஷமும் கிட்டும். இதுவும் பூக்கள் தரும் பாடம்.
ஒவ்வொரு பூவும் தன் நிறத்தால், மணத்தால், வண்ணத்தால் பலருக்கும் ஆனந்தம் தந்து கடைசியில் தானே காய்ந்து ஒரே நாளில் முக்தி அடைவதாய் சத்குரு வெங்கடராம சுவாமிகள் உரைப்பார். இவ்வாறு அன்றைய நாளில் முக்தி அடைய இருக்கும் புனிதமான ஒரு பூ எனும் ஜீவனை, ஜீவியை, பூவைத் தொட்டு, எடுத்து இறைவனுக்குச் சார்த்துதல் அதற்கான முக்தியை முன்னரே கூட்டித் தரும் அருட்சேவை அல்லவா. தன்னால்தான் முக்திக்கான நல்வழிகளை கடைபிடிக்க முடியவில்லை, ஒரு பூவிற்கு அதற்கான தெய்வீக வாய்ப்பை அளிக்கலாமே!
வாழ்க்கையில் இறைவழிபாட்டில் கழியும் நேரமே உண்மையாகச் செலவான நேரம் என்று உரைப்பார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
தரையில் உட்கார்ந்து பூக்களை இட்டு அர்ச்சித்துப் பூஜித்து வர வேண்டும். ஆனால் பூஜைகள் என்றால் உட்கார்ந்து பூஜிப்பது மட்டுமல்ல.
அலுவலகத்தில் இருக்கும் போதும், பிரயாணம் செய்யும் போதும், நடக்கும் போதும், சும்மா இருக்கும் போதும் மனதினுள் ஓடை போல் காயத்ரீ மந்திரத்தை அல்லது தெரிந்த மந்திரத்தை ஒலித்துக் கொண்டிருப்பதும் பூஜைதான். மனதினுள் அருணாசலத்தை கிரிவலம் வருதலாய் பாவனை செய்வதும் பூஜைதான்.

மூன்று வேளைகளிலும் சந்தியா வந்தன வழிபாடுகளை முறையான காலத்தில் செய்ய வேண்டும். இது ஜாதி பேதமின்றி எல்லோருக்கும் உரித்தானதே, காலை சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவும், மதியத்தில் தலைக்குமேல் சூரியன் இருக்கும் நேரத்திலும், மாலை சூரியன் மறைவதற்கு சற்று முன்பாகவும் தான் அர்க்யம் விட வேண்டும். காயத்ரீ மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். கொக்கு மந்தாரை எனும் புஷ்பத்தை பார்த்து கொண்டே ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஜபித்தால் பன்மடங்கு பலன்கள் கிட்டும்.
சூரிய நமஸ்காரம் என்பதும் அனைவருக்கும் முக்கியமானதே. இப்போதெல்லாம் டீவி, சினிமா, கம்ப்யூடர் காரணமாக சிறு வயதிலேயே கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது. காயத்ரீ மந்திரத்தைச் சிறு வயதிலேயே ஜபித்தல், சூரிய நமஸ்காரம் ஆற்றுதல், தினமும் உணவில் கருவேப்பிலை சேர்த்தல், வாராந்திர எண்ணெய் நீராடல் போன்றவற்றைக் கடைபிடித்தால் கண் பார்வை நன்றாக இருக்கும். கண்களுக்கு சுவாமிக்குச் சார்த்திய நந்தியா வட்டைப் புஷ்பத்தை வைத்து வந்தால் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கும், கண் பார்வை விருத்தி ஆகும்.
“காமம் புகு முன் காயத்ரீ புக வேண்டும்” என்பது பழமொழி. சிறு வயதிலேயே…… அதாவது காம எண்ணங்கள் பிள்ளைகளின் மனதில் புகும் முன்னரேயே பூணூல் இட்டு காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வந்தால் நல்ஒழுக்கம் வாழ்வில் நன்கு பரிணமிக்கும். தேவையற்ற காம எண்ணங்கள் உள்ளே புகாது. பூணூல் என்பது அனைவருக்கும் உரித்தானது, குறித்த வகையினருக்கு மட்டுமல்ல. பூணூலை “வட்ட காயாம் பூ” என்று போற்றுவார்கள்.
முற்காலத்தில் ஆலயங்களில் தினமும் அனைத்து மூர்த்திகளுக்கும் பூணூல் சார்த்தும் முறை இருந்து வந்தது. இதனை மீண்டும் தொடர வேண்டும். யாராவது ஆலையங்களுக்குப் பூணூல்களை அளித்தால்தானே இது சாத்தியமாகும்!

இறைவனைக் காணும் பாதை

இப்போதேல்லாம் பலருக்கும் தாம் நிறைய பூஜைகள் செய்வது போலவும், செய்தது போதும் என்ற எண்ணமும் வந்து விடுகின்றது. கோயிலுக்குப் போய் வருவதால் விளையும் பலன்கள், தீய எண்ணங்களில் கரைந்து விடுகின்றன என்பதை மனித குலம் உணர்வதில்லை. செய்த பூஜையில் கிட்டிய புண்ணியம், தவறான பார்வை, தவறான எண்ணங்களில் படுவேகத்தில் கழிந்து போவதை பலரும் அறிவதில்லை.
நாம் செய்யும் பூஜைகள், கோயில் தரிசனம் சந்தியாவந்தன வழிபாடு, சூரிய நமஸ்காரம், ஜபங்கள் எல்லாம் நமக்குத் தருவது ஒன்றைத்தான். அது இறைவனைக் காணும் பாதையில் நம்மைக் கொண்டு போய் விடுவதுதான். நற்பாதையில் கொண்டு போய் விட்டு விட்டால் இறைவனைக் கண்டுவிடமுடியுமா? நல்ல வினா.
இதற்கான விளக்கங்களை நமக்காக வேண்டி போகர், புலிப்பாணி, புலஸ்தியர் கேட்டு நமக்கு விளக்கங்களை அளித்துள்ளனர். இவை சத்குரு வெங்கடராம சுவாமிகள் போன்ற அகஸ்திய குல தீபப் பிரகாசிகள் மூலம் நம் சமுதாயத்தை அடைகின்றன.

பூஜை, புனஸ்காரங்கள், அனுஷ்டானங்கள் இறைவனைக் காட்டும் பாதையில் கொண்டு போய் விடுகின்றன. அப்படி என்றால் அங்கிருந்து இறைவன் கோயிலை அடைய வழி எதுவோ?
குரு: விரதங்கள், வழிபாடுகள் எல்லாம் நற்பாதையில் அழைத்துச் சென்று கோயிலின் வாயில் வரைதான் சென்று விடும்.
பூக்களும் விரதம் இருப்பதுண்டு. இவ்வாறு விரதம் இருக்கும் பூக்கள் எளிதில் வாடாது. கூடுதலாய் நறுமணத்துடன் இருக்கும். விரதம் இருப்போர் இவற்றைக் கண்டறிந்து விரத நேரத்தில் அருகில் வைத்து கொள்ள வேண்டும்.
விரதம் என்றால் ஒருவேளை சிற்றுண்டி உணவிற்கு பதிலாக நீராக அருந்துவது, நடுவில் விரதத்தை நிறுத்தி, பின்னப்படுத்தி உண்பது இவை விரதமாகாது. உணவு உண்ணாமல், நீர் கூட அருந்தாமல் இறை நினைவுடன் இறைநாமம் விடாமல் கூறி விரதமிருந்தால், அதுவே உண்மையான விரதம். இத்தகைய விரதங்கள்தாம் இறைவன் கோயில் வாசல் வரை கொண்டு போய் விடும்.
வீட்டில் விளையும் புஷ்பத்தைத் தொடுத்து அருகில் உள்ள பழமையான ஆலயத்திற்குத் தொடர்ந்து அளித்து வந்தால், இவ்வரிய பூச்சேவையின் ஆன்ம சக்தியால் ஆலய பூமிக்கும், அந்தந்த வீட்டு பூமிக்கும் ஆன்மசக்தி நீரோட்ட சக்தி உண்டாகும். இதுவும் கோயில் வரை சென்று வழி காட்ட வல்லது.
கோயில் வாயிலையும் கடந்து உள்ளே இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆன்மயோகசக்தியானது ஒருவர் செய்யும் தான, தர்மத்தால் மற்றும் இறைத் திருப்பணியால்தான் கலியில் எளிதில் கிட்டும்

“உள்ளார்ந்த ஆர்வத்துடன் இட்ட தானத்திற்கும், உகந்து செய்த தர்மத்திற்கும் கோயிலின் வாசலையும் கடந்து செல்லும் பலாபல சக்தி உண்டு.”
“ஓடியிட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல் தர்மம் வந்து காக்குமே!”
(அகத்திய கிரந்த மொழி)

அகத்திய நாடி

அகத்திய கிரந்த மொழி என்றால் எழுதாக் கிளவியாய் வேத மந்திரங்கள் போல் பரவெளியில் நிறைந்து பரந்து சாசுவதமான அமிர்த வாக்காய்ச் சதுர் கோடி யுகங்களிலும் இருப்பவை. இவற்றில் அபூர்வமான, இதுவரையிலும் எவரும் மொழிந்திடாத அபூர்வமான வேதமா மந்திரங்கள், நான்கு யுகங்களிலும் ஜீவன்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், ஜீவன்கள் அடையும் இன்ப துன்ப விளக்கங்கள், இடர்களை, நோய்களை அந்தந்த யுக நியதிக்கு ஏற்ப களையும் வழி முறைகள் போன்றவை தீர்க தரிசனமாய் இவற்றில் அளிக்கப் பெற்றிருக்கும்
சத்குரு வெங்கடராம சுவாமிகள் போன்ற அகத்திய குருவழி மூல தீபங்களாம் தக்க சத்குரு மூலமாகவே இவற்றை வானில் இருந்து கிரகித்து ஈர்த்துப் பெற்றிட முடியும். அகத்திய நாடி என்றும் முற்காலத்தில் இதனை உரைப்பர். ஆனால் ‘நாடி’ என்றால் தற்காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் என்றே பலரும் அர்த்தம் கொள்வதாலும், பலரும் அகத்திய நாடி ஜோதிடம் என்று போட்டுக் கொள்வதாலும் அகத்திய நாடி என்ற பதத்தையே ஆன்மீக ரீதியாகப் பயன்படுத்தாமல் இருத்தலே நலம் போல் தோன்றுகின்றது. இதனாலும் அகத்திய குருவாய்மோழி கிரந்தங்கள் என்றே குறிப்பிட வேண்டியதாகின்றது.
சத்குரு வெங்கடராம சுவாமிகளின் ஆனிமீகப் பேருரைகளில், வானிலிருந்து அந்தந்த தருணத்தில் ஈர்த்து அளிக்கப் பெறும் இத்தகைய அகத்திய நாடி கிரந்த குருவாய் மொழி பாக்கள், அமிர்த மழை போல் தானாய்ச் சுயம்பாய்ப் பொழிவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள், கேட்டிருக்கின்றார்கள், ஒலிநாடவில் தற்போதும் கேட்டிடலாகும்.
ஆக, இறைவனைக் காண்பதில் இத்தனை ஆன்ம சக்திகளின் உதவி தேவை. தானமும், தர்மமும் கோயிலின் வாசலைக் கடக்கும் என்றால், எந்தச் செயல்தான் இறைவனைக் காட்டும்? அருமையான ஆத்மவிசார வினா.
குரு: இறைவனைக் காட்டும் பாதையில் வந்து சேர்ந்திட பூஜைகள், சூரிய நமஸ்காரம், சந்தி, ஜப வழிபாடுகள் தேவை. அப்பாதையில் முன்னேறிக் கோயிலை அடைவதற்கு விரதங்கள் தேவை.
இவைகளினால் ஒருவன் இறைவன் இருக்குமிடமாகிய கோயிலினுள் வர முடியும். அக்கோயிலினுள் இன்னமும் உட்செல்வதற்கோ ஓடியிட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும் தேவை. வேறு எவற்றாலும் அவ்வளவு எளிமையாய்ப் பாமரர்க்கும் துணை ஆவது போல் கலியில் எளிதில் பல கோடி சூரிய பிரகாசமுள்ள இறைவனைக் காண முடியாது.

பூக்களின் புனித நாயகர்

திருவிழாக்களில் இறைவனைத் தரிசிப்பது, தீர்த்தம்-தலம்-மூர்த்தி தரிசனம் இறைவனைக் காட்டுமா?
பூஜைகள் நடக்காமல் இருக்கும் கோயில்களில் பூஜை செய்யச் செய்வது இறைவனைக் காட்டுமா?
இவை யாவும் இறைவழியில் நடத்திச் செல்லும் நன்முறையிலான விரதப் பாதையாகும். பலரும் தேடிக் கொண்டிருப்பவை, இந்தப் பாதையில் இருந்து அவ்வப் போது சறுக்காது நிலை நிற்பதே பெரிய சாதனைதான். ஆலயங்களுக்கு நடந்தே சென்று பூக்களை அளிக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டு வந்தால், இந்தப் பாதையில் சீராய்த் துலங்கிட முடியும்.
விரதம் என்பது உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, விளக்கில்லாத கோயிலில் விளக்கேற்றுவது என்ற திடமான எண்ணமும் விரதம்தான்.
ஒருவருடைய தேவை அறிந்து செய்யும் தானம் இறைவனைக் காட்டுமா?
இவை எல்லாம் இறைவனைக் காட்டுவதற்கு அருகில்தான் அழைத்துச் செல்லும். இவை மட்டுமே இறை தரிசனத்திற்குப் போதாது. இதற்கு மேலும் உத்தம நிலைச் சேவைகள் உண்டு.
நாரத மகரிஷியிடம் ஒரு சமயம் ஸ்ரீமஹாவிஷ்ணு எண்ணை வழியும் கிண்ணத்தைத் தந்து கீழே சிந்தாமல் “உலகை சுற்றி வா” என்றவுடன், கிண்ணத்தையே நினைவில் கொண்டு நாரதர் உலகைச் சுற்றி வந்தார் என்ற புராண அனுபூதியை நன்கறிவோம். அவ்வப்போது ஒரு முறை கூட நாராயண நாமத்தை மாமுனிவரால் கூற முடியவில்லை என்பதை இறுதியில் அவரே உரைத்தார். எனவே மாமுனிகளுக்கே இத்தகைய பலத்த சோதனை என்றால், பல இன்னல்களுக்கு நடுவில் வாழ்க்கையை நடத்தும் கலியுக மக்களுக்கு என்னதான் நல்வழி? எளிய வழியில் இறைவனை அடைவதற்கு பூலோக மக்களுக்கான நல்வழி யாதோ?
நாரதர் ஒரு பெரும் மகரிஷி. மேற்கண்ட புராண வைபவத்தின் படி, நமக்காக இறைவன் நாரத மாமுனி மூலம் ஒரு பாடத்தைக் கற்பித்தான். கலியில் பூலோக மக்கள் காட்டிற்குச் சென்று தவம் செய்ய வேண்டாம். பெரிய பெரிய யாகங்களும், ஹோமங்களும் செய்ய வேண்டாம். இறை நாமத்தை எளிமையாய் பக்தியுடன் கூறி வந்தாலே போதும் என்பதனை உலகிற்கு உணர்த்திடவே இந்த அனுபூதி விளைந்தது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
ஒரு காரியம் செய்யும் போது, மனம் அதில் ஈடுபட்டுவிட்டால், எந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையும் தெரியாத வண்ணம் அதில் ஈடுபட்டுச் செய்ய வேன்டும் என்பது முறை. இந்த ஒருமிப்பிற்கு பாரிஜாதப் பூவினாலான பூஜை நன்கு உதவிடும்.
மஹாபாரதப் புராணத்திலே ஒரு சம்பவம்… துரோணர் தன்னுடைய சீடர்கள் அனைவரையும் நிற்கச் செய்து ஒரு இலக்கினைக் காட்டி குறி வைக்கச் சொல்கிறார். ஒவ்வொருவரிடமும் குறி பார்க்கையில் என்ன தெரிகின்றது என்று கேட்கின்றார்.
ஒருவர் பரந்த ஆகாயமும் அதன் முன்பு மரமும் அதனில் குறிவைத்துள்ள பழமும் தெரிகிறது என்கிறார். மற்றொருவர் மரமும் அதில் உள்ள இலைகளும் பழங்களும் தெரிகின்றன என்றார். மற்றொருவர் மரத்தின் கிளையும், பழங்களும் தெரிகின்றன என்கின்றார்.
இறுதியில் அர்ச்சுனனிடம் கேட்கின்றார் துரோணர். அதற்கு அர்ச்சுனன், “குறி வைத்துள்ள பழம் மட்டுமே தெரிகின்றது!” என்கிறான். ”சபாஷ்! அதுதான் உண்மையான குறி!” என்கிறார் துரோணர்.
நாம் செய்யும் நற்காரியத்தில் ஐம்புலன்களும் அதில் ஈடுபட்டிருக்கும் போது, இறைவனை மட்டுமே ஒரே குறியாய் நினைப்பது சாத்தியமாகுமா? இயலும், பூக்களின் துணையால்.
இங்கு பூக்களின் பங்கு உண்டு. ஐந்து வகை வாசனைப் புஷ்பங்களை குரு ஹோரை நேரத்தில் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி வந்தால் பிள்ளைகள் கல்வியில் நன்கு கவனம் செலுத்துவர்.
குரு: ஒரு செயலில் ஈடுபடும் போது, ஐம்புலன்களும் ஒடுங்கும் போது, சுவாசம், இருதயம் துடிப்பு தனித் தனியே நடைபெறுகிறதுதானே. உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஆணைகளைப் பிறப்பிக்கும் மூளையும் வேலை செய்து கொண்டுதானே உள்ளது. உதிரம் ஓடிகொண்டுதானே உள்ளது.
இது போல், சிறு வயதில் இருந்தே உள்ளுக்குள் இறைநாமம் சொல்லிப் பழகியிருந்தால், எந்த காரியத்தில் ஈடுபட்டிருத்தாலும் மனம் இறைநாமத்தை, இறைமந்திரத்தை சொல்லி கொண்டே இருக்கும்தானே, உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் இறைவன் சிந்தனையே என்பதே உத்தம் இறை அடியார்களின் பவித்ரமான நிலை. இதை அடைந்துள்ளோமா என்று இறைவழி நடக்கும் அப்யாஸிகள் அவ்வபோது தம்மைச் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
மஹான்கள் விழிப்பு, உறக்க நிலை இரண்டிலுமே எப்போதும் இறைச் சிந்தனையில் மட்டுமே லயிக்கின்றனர்.
வீட்டில் பூஜையறையில் வெள்ளைத் தாமரைப் புஷ்பத்தை வைத்து போக வர இதனை தரிசித்துக் கொண்டிருந்தால் இறைச் சிந்தனை அடிக்கடி ஏற்படும். தவறுகளுக்கு ஆளாகாதும் காக்கும்.
வாய் திறந்து பாடுவீர்!
வாழ வழி காணுவீர்!
இறைவனை எளிதில் காட்டும் நற்செயல்கள் யாதோ?
இரண்டு நற்செயல்கள். ஒன்று நாமசங்கீர்த்தனம், மற்றொன்று கோயில் திருப்பணிகள்.
வாயைத் திறந்து இறைவனை பாடுவது நாம சங்கீர்த்தனம். நன்றாகப் பாடுவதோ, நல்ல சங்கீத அறிவோ இங்கு முக்கியமில்லை. வாயை திறந்து இறைநாமம் சொல்வது மிகவும் முக்கியம். முணுமுணுப்பதல்ல.
இறைவனைப் பற்றி வாயாரப் புகழ்வதும் பாடுவதும் இறைவனை காண வழி செய்கின்றன.
இரண்டாவதாய் வரும் கோயில் திருப்பணி என்றவுடன் கும்பாபிஷேகம் செய்வது, புதுக்கோயில் கட்டுவது என்பது பொருள் அல்ல. பழமையானதும், குடமுழுக்கு ஆகியும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ள தொன்மையான கோயில்களை உழவாரத் திருப்பணியால் சுத்திகரிப்பதும் அரிய ஆலயத் திருப்பணியே. உண்மையில் தக்க சத்குரு மூலம் சத்சங்கப் பூர்வமாய் ஆற்றும் உழவாரத் திருப்பணிகளில் கிட்டும் அபரிமிதமானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான புண்ணிய சக்தி வேறு எங்கும், எவ்விதத்திலும், எந்த லோகத்திலும் கிட்டவே கிட்டாது என்பார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
ஆலயப் பிரகாரங்களில், கோபுரங்களில், விமானங்களில் சிறு செடிகள் முளைத்திருந்தால் அவற்றைப் பிடுங்கிச் சுத்தம் செய்வதும் ஒரு திருப்பணியே. விளக்கே இல்லாத கோயிலில் விளக்கேற்றுவது ஒரு பெரும் திருப்பணியாகும்.
இவ்வாறு உத்தமக் கோயில் திருப்பணிகளைச் சற்றும் செலவில்லாமல் செய்ய வழி இருக்கும் போது, அதனை செய்யாது விடுவது பெருந்தவறுதானெ?
அலுவலகம் செல்வோர் மற்ற நாட்களில் முடியாவிட்டாலும் விடுமுறை நாட்களிலாவது கட்டாயமாகக் கோயில் திருப்பணிகளைச் செய்து வர வேண்டும்.
இவ்வாறாய்க் கலியில் நாம சங்கீர்த்தனமும் (இறைநாமம் பாடுதல்), கோயில் திருப்பணியும் செய்வதே, இறைவனை நேரில் காட்டும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த வழிபாடுகள். பூக்களைத் தொடுத்தவாறே பாடுதல் மிகச் சிறந்த கலியுக தவம்.
சத்குரு கீழ் நாமசங்கீர்த்தனமும், கோயில் திருப்பணியையும் ஆற்றி வந்தால் இறைவனை நேரில் காட்டும் என்பதை உணர வல்லார் பெரும் பாக்கியசாலிகளே.
பிறந்தவுடனே எவரும் பெரியவர்களாக ஆகி விடுவதில்லை. எடுத்தவுடனேயே எம்.காம், எம்.சி.ஏ ஆகி விட முடியுமா? படிப்படியாகத்தான் வளர்ந்து படிக்கின்றார்கள். இதே போல், ஒவ்வொருவரும் செய்யும் திருப்பணிகளும் நாம சங்கீர்த்தனமும் அவரவரை இறைவனைப் படிப் படியாய் காண வழி செய்கின்றது.
கல்லூரியில் கல்வியில் ஒரு பி.எஸ்.ஸி, பீ.காம் டிகிரி, டிப்ளமா வாங்குவதற்குப் பதினேழு, பதினெட்டு வருடங்கள் காத்திருக்கப் பொறுமை உள்ள மனிதனுக்கு, இறை தரிசனத்திற்காகக் காத்திருக்க பொறுமை இல்லையா என்று ஆணித்தரமாக வினவுவார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
வாழ்வில் பரிசுத்தமான, நீடித்த பொறுமையைப் பெறுவதற்கு புதன் கிழமை தோறும் துளசி தளங்களைத் தாமே தொடுத்து பசுக்களுக்குச் சார்த்தி வழிபட்டு வர வேண்டும்.
கூத்தனூர் சரஸ்வதி கோயில் அருகே உள்ள இஞ்சிக்குடி சிவாலயத்தில் அருளும் அமர்ந்த கோல சாந்தபார்வதி அம்பிகைக்குத் தாமே தொடுத்த நறுமணப் பூக்களைச் சார்த்தி வணங்கி வருதல், வாழ்வில் சாந்தத்தைப் பெற்றுத் தந்திடும்.

புள்ளிக் கோலங்களின் புனிதம்

கோயில்களில் அரிசி மாவினால் கோலம் போடுவது ஒரு சிறந்த திருப்பணியாகும். இதைச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை ஆகும். இதனால் பல நன்மைகள் கோலம் போடுவோருக்கு மட்டுமல்லாது, சமுதாயத்துக்கும், பிற ஜீவன்களுக்கும் விளைகின்றன.
எந்த இல்லத்தின் முன்னும் புள்ளி மாக்கோலங்கள் இருந்தால் அவ்விடத்தில் தீயசக்திகள் அண்ட இயலாது. இவ்வகையில் கோலங்கள் வீட்டை காக்கும் ரட்சைகளும் ஆகும்.
புள்ளி கோலங்களை நானிலத்து நட்சத்திரப் பூக்கள் என்று போற்றுகின்றனர். கோயிலில் இடும் கோலங்கள், நம்முடைய வாழ்நாளில் ஏற்படும் பல சிக்கல்களிலிருந்து நம்மைக் காப்பாறுகின்றன, எப்படியோ?
கோலங்கள் எல்லாம் பீஜாட்சர சக்திகள், பித்ரு லோக தேவதைகள் வந்தமரும் சக்கரங்கள், யந்திரங்கள் ஆகும். ஓரிடத்தில் கோலம் போட்டவுடனேயே அதனுடைய யோக யந்திரச் சக்கரக் கோணத்தால் அந்த இடமே பரிசுத்தம் ஆகி விடுகின்றது. இது அதிஉத்தம சமுதாய சேவை அல்லவா. வீட்டில் கோலம் போட்டாலும் அப்பகுதியைச் சுத்திகரிக்க வல்லதாகும். ஆலயத்தில் புள்ளிக் கோலம் இட்டாலோ ஊரையே, பரவெளியையே சுத்திகரிக்கும். கோலத்தினுள் இருக்கும் புள்ளிகள் கூட கூட கோலத்திற்கான அருளும் சக்திகள் மிகும்.
கோலத்திலும் புனிதமான பூக்களின் பங்கு உண்டு. பல கோலங்களும் பூக்களின் அமைப்பைக் கொண்டிருக்கும். துர்க்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி மூன்று தேவியரும் மேரு மலையில் இட்ட பூக்கோலங்களைப் பார்த்துத்தான் சிருஷ்டியின் போது பிரம்ம மூர்த்தி ஜீவன்களின் வடிவங்களை ஆக்கினார்.
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில், தெருவில், கோயிலில் கோலம் இட்டு நடுவில் பசுஞ் சாணி உருண்டை மேல் பறங்கி பூவை வைப்பார்கள். பசுஞ் சாண உருண்டை என்பது கோலோகம். கோலம் என்பது பிரபஞ்சத்தைக் குறிக்கும். பறங்கியின் மஞ்சள் நிறம் ஸ்ரீசுபஸ்ரீ எனும் மங்கள தேவதா மூர்த்தியை குறிக்கும். இந்த வடிவமே சுபமங்கள லோகத்தின் வடிவம் என்பதால் எங்கெல்லாம் இவ்வாறு பறங்கி பூ வைத்த கோலம் தென்படுகின்றதோ, அங்கு மங்கள தேவதைகள் உடனேயே பிரசன்னமாகி, இவ்வாறு வரைந்து வைத்தோருக்கு நல்வரங்களை வார்த்து செல்வர்.
எத்தனையோ நல்ல விஷயங்களைக் கேட்டாலும், கேட்கும் வரை அதனைச் செய்ய நினைக்கும் மனம், சிறிது நேரம் கழித்து அதே நிலையில் இருப்பதில்லையே! இதற்கு காரணம் என்ன?

பூக்களின் பிறப்பு

குரு: மனம், நாம் சொல்கிறபடியெல்லாம் கேட்காது. ஒருவர் ஒரு விஷயத்தைக் கூறினால், உடனே அதைச் செய்ய வேண்டும் என்று மனம் நினைக்கும். இது சொல்பவரின் வெற்றி. ஆனால் அதனையே நினைத்து செயலில் கொண்டு வந்தால்தான். கேட்டவருக்கு வெற்றி.
சந்திர மூர்த்திதான் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் மனகாரகர். பெரும்பாலான பூக்கள் மலர்வதும் சந்திர ஒளியில்தான். மனஉலகிற்கான கிரஹ மூர்த்தி. மனம்தானே மனிதனை ஆட்டிப் படைகின்றது. சந்திர பகவான் அருளிருந்தால் தான் மனம் அடங்கும்.
சந்திர மூர்த்தி ஒரு சமயம் மேரு மலையில் கடுந்தவம் செய்தார். தீக்கற்களிடையே நின்று பல காலம் தவம் நிகழ்ந்தது. சந்திரரின் தவம் ஏன், எதற்காக என்று அறியாத தேவர்கள், பலர் ஆச்சிரியத்துடன் சந்திர மூர்த்தியைப் பார்த்தார்கள். உடல் தேயத் தேயத் தவமிருந்தார் சந்திரன். அப்போது திடீரென்று அவர் முன்னால் ஒரு தீப்பிழம்பு தோன்றி, பதினாறாகப் பிரிந்தது. ஒவ்வொரு பிழம்பும் ஒவ்வொரு நற்காரியத்தைச் செய்தது.
ஒரு பிழம்பு கற்களைக் குளிர வைத்தது. மற்றொரு பிழம்பு அந்தந்த இடங்களில் தாவரங்களை வளர்த்தது. மற்றொன்று தாவரங்களுக்கு உயிர் ஊட்டியது. இவ்வாறாய் நிகழ்ந்து வர…. கடைசிப் பிழம்பில் அனைத்துப் பிழம்புகளும் ஒன்று சேர்ந்து அம்பிகையாய் உருவெடுத்தது.

சந்திர பகவான் அம்பிகையை வணங்கிட…. அம்பிகை அமிர்த தாரைகைகளை சந்திர பகவான் கைகளில் அளித்தனள். அதனை உண்ணும் போதும் பல அமிர்த தாரகைத் துளிகள் தெறித்தன. அச்சிறு அமிர்த புஷ்பத் துளிகளில் இருந்து எண்ணற்றப் பூக்கள் தோன்றின. மேலும் பல வகைகளிலும் பூக்களின் தோற்றம் ஏற்பட்டன.
அமுதமயச் சந்திர பகவானின் சீதள கிரணங்களின் அருந்தவத்தால்தான், பூக்களுக்கு இவ்வளவு மென்மையும், மணமும், வண்ணமும் கிட்டி உள்ளன. இவ்வாறாய் அம்பிகையின் திருகர ஸ்பரிசம் பெற்ற அமிர்த தாரகைகளே பூக்களாகி பூமிக்கு வந்துள்ளன.

அகஸ்தியர்தாம் இவ்வரிய தெய்வீக ரகசியங்களை சனகாதி முனிவர்கள் மூலமாய் உலகிற்கு முதன் முதலில் உணர்த்தியவர். மென்மேலும் பல வகைகளிலும் அந்தந்த யுக நியதிகளிக்கு ஏற்பப் பூக்களின் தோற்றம் அமையும். எனினும் இதன் அடிப்படைத் தத்துவம் என்பது அமிர்த தாரகைகளில் அரும்புவனவே பூக்கள் என்பதாம்.
பூக்களின் கோடானு கோடி வகைகள்
இவ்வாறு அமிர்த தாரகைகளில் பூரித்த பூக்களில் மொத்தம் 38000 கோடி வகைகள் உண்டு. இவற்றில் 20000 கோடி பூக்கள் விண்ணுலகங்களுக்கு சென்றன.
11000 கோடி பூக்கள் சித்தர்களின் லோகங்களில் உள்ளன. அகஸ்தியரே மூலிகைகளுக்கு அதிபதி ஆதலால் இவற்றைச் சித்தர்கள் தங்கள் சித்த லோக்ங்களில் கொண்டு பிரபஞ்ச நலனுக்கான வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்.
இந்த 11000 கோடிப் பூக்களின் ஏகாந்த ஜோதியில் ஒரே ஒரு பூவின் துணையால்தான் போகர் சித்தர் 10,000 சீடர்களுடன் ஆகாயத்தில் தோன்றினார்.
500 கோடி பூக்கள் மருத்துவ சக்தி பெற்றவை. இவற்றை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 1000 கோடி பூக்கள் அசுரர்களுக்குச் சென்றன. மீதமுள்ள 100 கோடி பூக்களே பூவுலகில் மக்களுக்கென வந்தன.
இத்தனைக் கோடி பூவுலகப் பூக்களையும் ஒருவர் சாதாரணமாக எத்தனை கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் பார்க்கத்தான் முடியுமா? இதனால்தான் இவற்றை தரிசித்துள்ள சத்குருவைச் சரண் அடைந்தால் அவர் மூலம் பற்பல பூக்களை தரிசித்த பல பலன்களைப் பெற்றிடலாகுமே. இவ்வாறு பூக்களே 20000 கோடி என்றால், கோடானு கோடியாய்ச் சதுர் கோடி யுகங்களில் விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்ச ரகசியங்களை என்னென்பது?
அடுத்ததாய், பூக்களின் தோற்றத்துக்கு அமிர்த தாரகைகளை வார்த்த அம்பிகையைப் பற்றி இப்போது அறிய வேண்டுமே!
குரு: அரியும் சிவனும் ஒன்று என்று உலகுக்கு காட்டிய அன்னை கோமதித் தாய்தான் அந்த அதியற்புத அம்பிகை. சனகாதி முனிவர்கள் சாந்தத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்த போது, அன்னை கோமதி தேவி அவர்களை தட்சிணாமூர்த்திப் பெருமானை வணங்கச் செய்து, வழிபாட்டு முறைகளைப் புகட்டி சாந்தத்தைப் பெற்றுத் தந்தாள்.
பூலோகத்திற்கு வந்த ஒவ்வொரு பூவின் பின்னும் ஒரு மகான் அல்லது சித்தரின் புண்ணிய சரிதை உள்ளது. எவ்வாறு ஒவ்வொரு வேத மந்திரத்திற்கும் ரிஷி, சந்தஸ் போன்ற இலக்கணங்கள் உண்டோ இதே போல, ஒவ்வொரு பூவிற்கும் உண்டு.
பல மகான்களும், சித்தர்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தவம் புரிந்து அறிந்த பூக்களின் ரகசியங்களும் உண்டு. மனதை அடக்கிய மகான்கள் சித்தர்கள், எப்படியும் வாழ்வர், எப்படியும் இருப்பர். எனவே உத்தமர்களை இகழாதீர்கள். அவர்களை எடை போட முயலாதீர்கள். மனிதப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச எல்லையைத் தாண்டி நிற்பவர்களே மஹான்களாகிய உத்தமர்கள்.
உத்தமர்களை வீணே பழித்து சந்ததிகளுக்கு ஒரு போதும் நீக்க முடியாத பெரும் பாவத்தை சொத்தாக அளித்து விடாதீர்கள். உத்தமர்களை இகழ்ந்தால், அவர்களால் பூவுலகிற்கு அறிவிக்கப்பட்ட பூக்களை அணிந்தாலோ, பயன்படுத்தினாலோ, வழிபாட்டுக்குக் கொண்டாலோ வீண்சாபம்தான் விளையும். எனவே எந்த உத்தமரையும் இகழாதீர்கள்.
“சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே!” (தாயுமானவர்)
முனிவர்கள்தான் எல்லாப் பூக்களையும் இவ்வுலகிற்கு அறிவித்தார்களா?
பிரம்மா வாழும் உலகிற்கு சத்திய லோகம் என்று பெயர். தாமரையின் மேல் அமர்ந்து சிருஷ்டித் தொழிலை செய்பவர் பிரம்ம தேவர்.

உத்தம பெண்களின் உத்தம வரம்

ஒரு பெண் எதைப் பெரிதும் நாடிக் கேட்க வேண்டும். நல்ல கணவனையா? கணவன் நல்லவனாக இருந்து விட்டால் போதுமா? மனைவியும் நல்லாளாய் இருக்க வேண்டும் அல்லவா.
பணம், செல்வம், அழகு, நற்குணம் வேண்டும் என்று கேட்போரும் உண்டு. இவை மட்டும் போதுமா? நல்ஒழுக்கமும் வேண்டுமே! சிறப்பான ஒழுக்கம் மட்டும் போதுமா, நல்ல இல்லறம் வேண்டுமே!
அல்லது தீர்க சுமங்கலி பாக்யத்தைத் கேட்டிடலாமா? கணவன் பூவுலகத்தை விட்டுச் சென்ற பின், அவன் பூவுலகில் விட்டுச் சென்ற நற்காரியங்களை, வைராக்கியங்களைத் தொடர்ந்து செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி வரும் மனைவியும் தூய பதிவிரதையே.
எனவே புனிதமான பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தல் உத்தமமானது. வெள்ளிக் கிழமை தோறும் பசுவிற்குத் தாமரைப் பூ மலர்களைச் சார்த்தி வழிபட்டு வந்தால் உத்தமர்களின் ஆசி திரண்டு வரும். இது தீர்க சுமங்கலித்துவத்திற்கு உதவும்.
சுமங்கலித்துவம் இருந்தால் தானே பதிவிரதையாய் இருக்க முடியும் என்பதல்ல. சுமங்கலித்துவம் என்பது கணவன் உயிருடன் இருக்கும் போது, பூவுடனும், குங்குமப் பொட்டுடனும் இருப்பது மட்டுமல்ல. கணவன் மனம் கோணாமல் இறைவழியில் கணவனை நடக்கச் செய்து, காரியங்களை கணவன் இறந்த பின்னும் அவன் விட்டுச் சென்ற தெய்வீகக் காரியங்களை தொடர்ந்து செய்து வாழ்வதும் சுமங்கலித்துவத்தின் அம்சமல்லவா.
நல்லபடியாக மேலுலகிற்கு சென்று, அங்கும் கணவனுக்கு உதவிடலாகும் அல்லவா. இத்தகைய நன்னிலையைப் பெற, கணவனுக்கு பிறகு அந்த உத்தமி தொடர்ந்து நற்காரியங்களைச் செய்து வரலாகுமே.
“இவை எல்லாம் உத்தமிக்கான அம்சங்களே, விண்ணுலகச் சான்றோர் மேலிருந்து கீழிருப்போரின் உடல்களைப் பார்ப்பதில்லை, உள்ளங்களைத் தான் பார்க்கின்றனர். உள்ளம் தூய்மையானால், உடலும் தானே புனிதமாகி விடும். உத்தமமான விண்ணுலகங்களில் ஆத்மாக்கள் (உள்ளங்கள்) தான் உறையும். அங்கு உடல்கள் கிடையா. எவரும் எந்த உருவத்தையும் எப்போதும் எடுக்கலாம்.”
பூலோகத்து மகளிர் இள வயதில் தக்க துணையுடன் கோயிலுக்கு தினமும் சென்று வாசலைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, கோயிலையும் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரிசி மாவினால் கோலம் விதம் விதமாக போடுவது, பூக்களை மாலையாகக் கட்டுவது போன்ற எண்ணற்ற எளிய தொண்டுகள் பல உள்ளன.
திருமணமான பின்னர், கணவனின், குழந்தைகளின், பெற்றோரின் தேவைகளைக் கவனித்த பின் குடும்பத்தார் துணையுடன் கோயிலுக்குச் சென்று தொண்டுகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்!

பூக்களின் புனிதங்களை உலகிற்கு உணர்த்தியோர்

அகஸ்தியர் நான்கு மாமுனியர்கள் பற்றித் தம் சீடர்களுக்கு உரைத்து, இந்நால்வரே பூக்களின் புனிதங்களை உலகிற்கு உணர்த்தியோர் என்றும் விவரித்தார்.
இந்த நான்கு மாமுனிகள் தாம் எப்போதும் தென்முகக் கடவுளின் திருவடிகளில் பொலியும் நான்கு சனகாதி மஹரிஷிகள் ஆவர். சனகர், சனாதனர், சனத்குமாரர், தட்சிணா மூர்த்தி சுவாமியின் திருவடிகளில் என்றென்றும் இந்நால்வரும் துலங்கிடக் காரணமே, அவர்கள் பூக்களால் ஆற்றிய பூசனைப் பலன்களே.
இந்நால்வரும் முன்னர் பிரம்மாவிடம் சென்று மன அமைதிக்கான நல்வழியை கேட்டனர். மாமுனியர்க்கு இல்லாத சாந்தமா? இருப்பினும், பூலோக மக்களுக்கு இதனைப் பற்றி நற்பாடம் புகட்டிடவே, இத்தகைய புராண வைபவங்களை இறைவன் மாமுனிகள், தெய்வ மூர்த்திகளின் சம்வாதம் (வினா – விடை விரிவுரை) மூலமாய் நிகழ்த்திக் காட்டுகின்றர்.
பிரம்மாவும் அவர்களை சங்கரநாராயண மூர்த்தியை உலகிற்குக் காட்டி அளித்த கோமதி தாயை வழிபட்டு வரும்படி அருள்வழி காட்டினார்.
சனகாதி முனிவர்கள் கோமதி அன்னைக்குப் பலவிதங்களில் பூஜை செய்து வந்தனர். காவடி எடுத்துப் பல நிலைகளில் தவம் செய்து, எண்ணற்ற பூஜைகள், பற்பல அபிஷேகங்களுடன் செய்து வழிபட்டனர். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உத்தம தெய்வீக நிலையை அளிக்க வல்லதாம்.
கோமதி அன்னையின் பாதத்தினை அரைத்த சந்தனக் குழம்பால் அலங்கரித்துப் பல நிறக் கதம்ப மலர்களால் அலங்கரித்துப் பூஜித்தல் சிறப்பானதாம். பெண் பிள்ளைகளுக்கு நல்ல காப்பு சக்தியை அளிக்கும் உத்தம வழிபாடு இது.
ஆதிகாலத்தில் செடி, கொடிகளில் இலைகள் இருக்கும், பிறகு காய்கள் காய்த்து கனியாகுமே தவிர, பூக்கள் கிடையாது. இப்பொழுதும் பூவாது காய்க்கும் சில வகை அத்தி போன்ற மரங்கள் உண்டு. இதை ஒட்டியே ‘அத்தி பூத்தாற் போல்’ என்ற பழமொழி வந்தது.
சனகாதி முனிவர்கள் இவ்வாறு ஆழ்ந்து பூஜை செய்த போது, கோமதி தாய் ஆனந்தித்து இவர்கள் முன் தோன்றிச் சந்திரனின் அமிர்த தாரகைகளால் பூமிக்கு வந்த பூக்களைப் பற்றிக் கூறுகின்றார். இம்மாமுனிவர்களும் மென்மேலும் பூண்ட தவத்தால், அரிய தபோ பலன்களை அடைந்து அவற்றை அன்னையிடம் இருந்தே பெற்றனர்.
என்னதான் முக்தி, மோட்சம் பெற்ற மாமுனி ஆனாலும், மாமுனியர் தமக்கெனச் சுயநலமாய் எதையும் கேட்டுப் பெறுவதில்லை என்றாலும், அப்படி எதையும் கேட்டிட்டாலும் எதையும் தாங்கள் வைத்துக் கொள்ளாது அவற்றைக் கிருஷ்ணார்ப்பணமாய்ச் சமர்ப்பித்து, பிற ஜீவன்களின் நலன்களுக்காய் அர்ப்பணித்திட வேண்டும் என்ற நியதியும் உண்டு.
இவற்றின் ஊடே அவர்கள் எதைக் கேட்டுப் பெற வேண்டுமானாலும் தவம், யோக, தியானம், பூஜை, தான, தர்மங்களை ஆற்றி இவற்றின் மூலமாகவே மானுடர்களைப் போல் எந்த வரத்தையும் பெற முடியும் என்ற ஆன்மத்வ நியதியும் உண்டு.
கோமதி அம்பிகை வார்த்ததாய் முதலில் பூவுலகிற்கு வந்த மூலமுதற் பூக்களாலையே நான்கு முனிவர்களும் கோமதி அம்பிகையை அர்ச்சித்து வழிபட்டனர். இவற்றுக்கு கோமதி புஷ்பம் என்று பெயர். அம்பிகை கூட, இந்த ஆதிமுதற் புஷ்ப பூஜையைத் தான் ஏற்கும் முன்னர், தனக்கு இவ்வாறு கோமதி என்ற பெயர் வரக் காரணமான – அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் குடி கொண்டிருக்கும் – பசுவிற்கே, கோமாதாவிற்கே முதல் பூசனையாய் அர்ப்பணித்தார். இவ்வாறு பூவுலகிற்கு முதன் முதலாய் கோலோகத்தில் இருந்து வந்த முதல் புஷ்பப் பூஜையைப் பெற்றதே மூலமுதல் காராம் பசு.
பின்னர் கோமதித் தாயும் நான்கு மாமுனிவரையும் தட்சிணா மூர்த்தியிடம் இட்டுச் சென்று, தக்க வழிபாட்டு முறைகளையும் அளித்து மன அமைதி காணும் மார்கத்தை அடையச் செய்தார்.
பசு, மற்றும் கோமதி அம்மனைப் பூக்களால் அர்ச்சித்த பலன்களால் நான்கு முனிவர்களுக்கும் காணுதற்கரிய தட்சிணாமூர்த்தியின் தரிசனம் வெகு விரைவில் கிட்டியது.

மன அமைதிக்கு வழி

மன அமைதி என்றால் என்ன? எதைக் கொண்டு மன அமைதி பெற்று விட்டதாக கருத முடியும்?
இதனை சாட்சாத்  மௌன மொழிக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியே நால்வருக்கும் எதையும் வாய் திறந்து புகட்டாது மௌன மொழியிலேயே புகட்டினார். இவ்வாறு சாந்த சக்திகளைப் பெற்ற சனகாதி முனிவர்கள் நால்வரும் மன அமைதி பெறும் மார்கத்தை ஒவ்வொருவராக விளக்கலானார்கள்.
தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக் கிழமை அன்றோ அல்லது மற்ற நாட்களில் குரு ஹோரையில் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களால் கிரீடம் சார்த்தி வழிபட்டு வருவது நல்விதமான மன அமைதியைத் தரும்.
மனதை ஒரு சிறிது அடக்குவதும் எவராலும் அவ்வளவு எளிதில் முடியாது. மனதை முதலில் அது போகிற போக்கில் விட்டு விடுங்கள். ஆனால் இறைநாமத்தை ஒலித்து கொண்டே இருங்கள். நடுவில் மனம் இதை விட்டு எங்கெங்கோ போனாலும் சிறிது நேரம் சென்றவுடன் தானாகவே மீண்டும் மனம் இறை நாமத்திற்கு வரும்! பிறகு மீண்டும் வெளியே செல்ல முயலும். இந்தப் போராட்டம் நிச்சயமாய் எல்லோருக்கும் நிகழும், இவ்வாறு நிகழ்வதுதான் தியானத்தின் தொடக்கம்,
இறைநாமம் ஓதுகையில் கரங்களுக்குள் உதிரி மல்லிப் பூக்களை வைத்து கொண்டு அவ்வபோது தரிசித்து வருதல் நல்மன மீட்சியை தர வல்லதாம். இவ்வாறு பழகப் பழக, வெளியில் மனம் அடிக்கடி சென்று வரும் இடைவெளி குறைந்து கொண்டே வரும். மனமும் சிறிது சிறிதாய் இறை நாமத்தோடு ஒன்றிச் சொல்லும், ஒன்றி செல்லும் பழக்கமும் வரும்.
இதனைத்தான் சான்றோர்கள் நாமசங்கீர்த்தனம் எனபர். இறைநாமங்களை மாற்றி, மாற்றி பல விதங்களில் இனிமையாகச் சொல்வது, பாடுவது.
ஓம் முருகா, ஓம் முருகா ஓம்
ஓம் முருகா, ஓம் முருகா ஓம்
என்ற இந்த இரு எளிய இறைத் துதி வரிகளை எத்தனையோ விதங்களில் பாடலாகுமே
அகஸ்தியர் இறைநாமங்களை “உதர புஷ்பங்கள்” என்பார். உதரம் என்றால் நிறைய அர்த்தங்கள் உண்டு. வயிறு, நெஞ்சு, தொண்டை, வாய், உதட்டில் இருந்து இறைநாமம் ஒட்டு மொத்தமாய் எழுவதால், சிவா, முருகா, ராமா, கிருஷ்ணா, என்ற ஒவ்வொரு இறைநாமமும் உதர புஷ்பமே.
பல இறை நாமங்களை, குணங்களை ஒன்றாக்கி ஒரு பாடலாய் பாடுவதால், இதில் இசையும் கலந்திருப்பதால் அதில் நன்கு ஈடுபடும், காரணம் என்ன?
இசை கருவிகளைப் பயன்படுத்தும் முன்னர் ஒவ்வொரு வாத்யத்திற்கும் குண்டு மல்லிப் பூச்சரத்தைச் சார்த்த வேண்டும். ஒவ்வொரு வாத்தியமும் உயிர்ப் பொருளாய் உறைந்து நாம் அறியாத இறைநாமங்களைச் சொல்வதால் இது ஒரு சத்சங்கம் போல் ஆகின்றது. பலரும் சேர்ந்து செய்யும் சத்சங்கப் பூஜைகளுக்குத் தான் ஆன்ம வல்லமை, ஆத்ம வலிமை, ஆன்மார்த்த சக்தி அதிகம். இதற்காகத்தான் சத்சங்கப் பூஜைகளாய் கோயில் விழாக்கள் நிகழ்கின்றன.
சத்சங்கப் பூர்வமாய்ப் பத்து பேர்கள் சேர்ந்து ஒரு முறை “ராம” என்று இறைநாமத்தைச் சொன்னால், அப்போது ஒவ்வொருவரும் பத்து முறை இறைநாமம் ஓதியதாய் ஆன்மீகக் கணக்காகும். இதில் புண்ணிய சக்தி மழையாகவே பெய்து அபரிமிதமாய்க் கிட்டும்.
சத்சங்கமாய் இறை நாமத்தை ஒலிக்கையில் தான் மனமும் நன்கு ஆழ்ந்து ஈடுபடும். இதனால் இந்த இசைக் கலவையில் இறைநாமம் பலர் சேர்ந்து பாடுவதால் மனம் ஒன்றிப் பாட வாய்ப்புகள் அதிகம். சத்சங்கப் பூர்வமாய் பஜனை வைக்கையில் ஒரு தாம்பாளம் நிறைய மல்லிகை அல்லது கதம்பப் பூப்பந்தை உருட்டி சக்கரம் போல் வைக்க வேண்டும். பஜனை முடிவில் எல்லோருக்கும் புஷ்பப் பிரசாதத்தை அளிக்க வேண்டும்
நம் முன்னோர்கள் சிறந்த தெய்வீக அறிவுள்ளவர்கள். எதைச் செய்தாலும் அர்த்தத்துடனும் காரியத்துடனும் தான் செய்துள்ளார்கள். ராகம், தாளம் எல்லாம் மனித மனதை லயிக்க செய்பவை. மெய் மறந்து பாடினர், மெய் மறந்து ஆடினார், மெய் மறந்து பார்த்தோம், கேட்டோம் என்கின்றோமே, இந்த மெய்மறத்தல்தான் உண்மையான தியான்ம்.
பிரம்மா தாளமிட, விஷ்னு மத்தளம் வாசிக்க, இறைவி பாடிட, திருமகள் உடன் பாடிட, சரஸ்வதி வீணை வாசிக்க, சித்தர்கள், மாமுனிகள் பல வாத்யங்களை வாசித்திட, நடராசப் பெம்மானின் இடையறா நாட்டியத்தால்தானே உலகமே இயங்குகின்றது. இதனால்தான் பூக்களே புஷ்பிக்கின்றன.

உடையார்கோயில் தர்மவல்லி அம்பாள்

தர்ம சக்திகளை எந்த யுகத்திலும் தேவையான அளவில் அருளிடவே உடையார் கோயில் எனும் அதியற்புதச் சிவத்தலத்தில் கரவந்தீஸ்வரர் ஆலயத்தில் தர்மவல்லியாய் அம்பிகை அருள்கின்றாள் (வல்லி = கொடி)
கிராமங்களில் நிகழும் “பூச்சொரியல்” பூஜை பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே. கூடை கூடையாய்ப் பூக்களைக் கொணர்ந்து அம்மனுக்குப் பூச்சொரியலாய் அபிஷேகிப்பார்கள். கிராமத்தை அண்டி இருக்கும் பீடைகள் – பூச்சொரியல் மூலம் அதாவது பூக்களின் புனிதங்கள் மூலம் – முற்றிலும் கழியும். அம்பிகையின் திருமேனியில் படும் ஒவ்வொரு பூவும், ஒரு நல்தேவதையாய் மாறி அந்த ஊருக்கு சுபிட்சம் தரும் என்பது தொன்று தொட்டு வரும் ஆழ்ந்த நம்பிக்கை முற்றிலும் உண்மையே. அதாவது லட்சம் பூக்கள் ஓரிட்த்தில் சேர்ந்தால், அவ்விட்த்தில் சுபிட்ச தேவதைகள் கண்டிப்பாய்ப் பிரசன்ன்மாக வேண்டும் என்பது இறைநியதி.
சப்த மங்கையர்க்கான பூச்சொரியல் பூஜை
எப்போதும் தர்ம ஒளி பொங்கும் கற்பக விருட்சம் புண்ணிய விருட்சம் போன்றவை தர்ம விருட்சங்களாகும். இவற்றில் புண்ணிய விருட்சம் எனும் அரிய மரமானது தாழமங்கை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் – ஸ்ரீ ராஜராஜேவரி ஆலயத்தின் தல விருட்சமாகும்
தஞ்சாவூர் – பசுபதி கோயில் அருகே தாழமங்கைச் சிவாலயம் உள்ளது. சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழு சப்தமங்கைத் தலங்களும் அருகருகே உள்ளன.



ஸ்ரீதர்மவல்லி அம்மன் உடையார்கோவில்

ஒவ்வொரு உலக மகளிரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வழிபட வேண்டிய சப்தமங்கைத் தலங்களிவை. சப்தமி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறுமியர், கன்னியர் இவ்வேழு தலங்களிலும் வழிபட்டு வந்தால் புனிதமான பெண் குலத்திற்கு உரிய ஏழு பருவங்களும் நன்முறையில் அமையும்.
இந்த ஏழு சப்தமங்கைத் தலங்களில் ஒவ்வொன்றிலும் எந்த வகைப் பூக்களைச் சார்த்தி, அர்ச்சித்து வழிபட்டிடில் விசேஷமான பலன்களை வார்க்கும் என்பதற்கான புஷ்பவாரணப் புனித நெறிகளையும் சித்தர்கள் அளித்துள்ளனர்.
சக்கரமங்கை – விருட்சிப் பூ, குண்டு மல்லி, மனோரஞ்சிதம்
அரிமங்கை – செந்தாமரை, துளசி, மஞ்சள் நிற நறுமணப் பூக்கள், பவளமல்லி
சூலமங்கை – அரளி, செந்தாமரை, வெண்தாமரை, சண்பகம்
நந்திமங்கை – நந்தியாவட்டை, அடுக்கு நந்தியாவட்டை, பன்னீர் புஷ்பம்
பசுமங்கை – ரோஜா, பிட்சி பூ, சாமந்தி
தாழமங்கை – தாழம்பூ, கதம்பம், மல்லி
புள்ளமங்கை – சம்பங்கி, மருதம், தவனம், வில்வம், மஞ்சள் அல்லது சிகப்பு கோங்கிலவப் பூ (கோங்கிலவம் – இது முள் இலவ மரம் எனப்படும் – கச்சனம் மற்றும் திருமங்கலக்குடி கோயில்களுக்கான தலவிருட்சம் கோங்கிலவம்)
தர்ம விருட்சங்களின் கொடிகளைப் பற்றியவாறு தெய்வ லோகங்களில் இருந்து பூமிக்கு வந்த தேவியே உடையார் கோயில் தர்மவல்லி,
தஞ்சாவூர் – சாலியமங்கலத்தை அடுத்து உடையார்கோயில் உள்ளது
அதாவது தர்மசக்திகளுடன் பூமிக்கு வந்த தேவி. உலகில் அதர்மம் பெருத்து வருகின்றதே என்று அஞ்சி வருந்துவோர் இத்தலத்தில் பன்னிரு வகைப் பூக்களால் தர்மவல்லியை அர்ச்சித்து வழிபட்டு வந்தால் மனசாந்தம் கிட்டும், யுகதர்மப் பரிபாலனம் அறியலாகும். உத்தமர்களின் ஆசீர்வாதங்கள் தேடி வரும்.
மகான்கள் பூமிக்கு வருவது ஏன்?
இயற்கையாகவே யுக நியதியாய் பூமியில் தருமசக்தி குறைந்து வர வேண்டும் என்ற கலியுக நியதி இருப்பதால் தானே, இத்தகைய அதர்ம நிகழ்ச்சிகள் நாம் வாழும் கலியில் நடைபெறுகின்றன. யுகதர்ம நியதியே இப்படித்தான் என்றால், இதில் ஏன் தர்மத்தை நிலை நாட்ட மகான்கள் மீண்டும் மீண்டும் பூவுலகிற்கு வந்து முயற்சித்துக் கஷ்டப்பட வேண்டுமோ?
எந்த யுகமாயினும் சரி, தர்மத்தை நிலை நாட்டிட, நல்லோராய் வாழ, நல்ல சமுதாயாத்தை உருவாக்கிட மனுஷப் பிரயத்தனம் எனும் மானிட நல்முயற்சிகள் எடுத்தே ஆக வேண்டும், தொய்வடையக் கூடாது.
அதர்மமான கலியிலும் பிள்ளைகளை நன்முறையில் வளர்ப்பதுதானே பெற்றோர்களின் கடும் முயற்சியும், தவமும் ஆகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பூத்தொடுத்து வந்தால் இந்த தவம் எளிதாகும். வீட்டிலேயே பூக்களைத் தொடுப்பதானது இறைவழிபாடாக மட்டும் அல்லாது சிறப்பான யோக, தியானப் பயிற்சியாகவும் ஆகின்றது என்பதை பலரும் அறிய மாட்டார்கள். ஆம், பூத்தொடுத்தலில் மனம் நம்முறையில் ஒடுங்கும். எனவே இது உத்தம தியானமுமாயும் ஆகின்றது.

கலியுகத்தில் இறைவனைக் காண

ஒவ்வொரு யுகத்திலும் ஒரு விதமான தரும நியதிகள் நல்லொழுக்க நியதிகள் ஒன்றே. ஒரு யுகத்தில் 10000 ஆண்டுகள் தவம் செய்தால் இறைவனைப் பார்க்கலாம் என்ற தர்ம நியதி. அடுத்த யுகத்தில் பல நூறு ஆண்டுகள் ஒரு காலில் நின்று, அல்லது தண்ணீரில் நின்று, நெருப்பில் நின்று தவம் செய்தால் இறைவனிடம் வரம் பெறலாம் என்று வரும். அடுத்த யுகத்தில் உணவு உண்ணாமை, ஒரு இடத்தில் நிலையாக இருந்து தவம் செய்து பல ஆண்டுகள் கழித்து இறைவனைப் பார்த்து வரம் பெறலாம் என்று உண்டாகும்
ஆனால் கலியுகத்திலோ, “கடினமாக தவம், தாண்டவம் எதுவும் வேண்டாம், இறை நாமத்தை ஓதினால் போதும், சங்கீர்த்தனமாக வாய் திறந்து பாடினாலேயே இறைவனைக் காணலாம் என்ற எளிய நியதி உள்ளது”

ஸ்ரீபுஷ்பாம்பிகை ஆலயம் கொறுக்கை தஞ்சாவூர்

பாட்டு என்றவுடன் அதற்கு இசை ஞானம் வேண்டுமே என்று எவரும் ஒதுங்க வேண்டாம். பாடுவதற்கு அதில் கவனம் இருந்தால் போதுமானது. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாட்டுப் பயிற்சியை, இறைநாமம் ஓதுதலைக் கற்பிக்க வேண்டும். வீட்டில் மருது தவனம், துளசி, வில்வம் போன்ற பூசனைக்கு உரிய தளங்கள் இருந்து கொண்டே வந்தால் அந்த வீட்டில் சங்கீத ஞானம் விருத்தி ஆகும்.
ஆலயங்களில் முதல் நாள் இட்ட மாலைகளை மறுநாள் களைகையில் இவற்றைக் குப்பையில் இடாது கடல், ஆறுகளில் சேர்த்து வந்தால் குடும்பத்திற்கு இது பெரிய புண்ணியச் சொத்தை அளிக்கும். நல்ல வேலை வாய்ப்பும் கிட்டும், வாழ்வு ஸ்திரமாகும்.
”சம்பவாமி யுகே யுகே” என்பதாய் தர்மம் மங்கும்போதெல்லாம் யாம் தோன்றுவோம் என்றாரே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
மகான்கள் இங்கு வருகையில் பூக்கள் நிறைந்திருக்கும் நந்தவனத்தருகேதான் பெரும்பாலும் தங்குவர். அவர்களைச் சுற்றித் தரும கார்யங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மாமுனிவர்களின் இயல்பு அது. ராவணனுடைய கொடுங்கோல் ஆட்சியின் போது நிறைய மாமுனிகள் இலங்கைக்கு வந்து சென்றனர். அப்படியும் ராவணன் திருந்தவில்லை. ஆனால் ராவணனைப் போன்று சமுதாயத்தில் இருந்த பலரும் திருந்தினர். எனவே மஹரிஷிகள் தம்முடைய கடமையைச் செய்து கொண்டே இருப்பார்கள். திருந்துவது திருந்தாமல் இருப்பது அவரவருடைய விதிப்படி நிகழும்.
என்னதான் ஒரு மனிதன் கெட்டவன் என்றாலும், அவனுள் ஒரு நல்ஈரம் இரக்கமாய் இருக்கத்தான் செய்யும். அதை வைத்துக் கொண்டு அவன் நல்லதைப் பற்றிக் கொண்டால் அவனும் நல்லவனாகி அவனைச் சுற்றி இருப்போரும் திருந்துவர். இதனால் சமுதாயத்தின் ஒரு பகுதியும் இத்தகைய தீயவர்களின் அச்சத்தை விடுத்து நற்காரியங்கள் நடக்கலாகுமே! இதற்கு மாமுனிவர்களின் முயற்சிகள் உதவும்.
குடும்பத்தில் எவரேனும் தீயவழக்கங்களுக்கு ஆட்பட்டிருந்தால், ஞாயிறு தோறும் கருப்பண்ண சுவாமிக்கு சங்கு புஷ்ப மாலைகளைச் சார்த்தி வழிபட்டு வந்தால் நன்னிலைப்படுவர்.
வால்மீகி மாமுனிவரும் முன்னர் எப்படிக் காட்டில் அறிந்தோ, அறியாமலோ அதர்ம வழியில் கிடந்தார் என்பது அனவருக்கும் தெரியும். இன்று பார் போற்றும் உத்தம மஹரிஷியாய் வால்மீகி மஹரிஷி ஜ்வலிக்கின்றார்.
பல ஜன்மங்களில் உடன் இருந்து, சில விஷயங்களால் பிரிந்தவர்கள், இத்தகைய மஹான்களை அறிந்தோ அறியாமலோ தரிசிக்கையில், பழைய தருமங்களும், தானங்களும் நினைவுக்கு வந்து, அதனால் இப்பிறவியில் தருமங்களைச் செய்து நற்கதி அடைவார்கள். இத்தகையோருக்காகவும் மகான்கள் கலியுகத்தில் வந்து செல்வர்.
மல்லிகையின் நறுமணம் நல்லோர், கெட்டோர் எல்லோரையும் அடையுமே! மஹான்கள் பூக்கள் போன்று புனிதம் கொண்டவர்கள். ஆதலால், அவர்கள் எந்த வடிவத்தில் பூமிக்கு வந்தாலும் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களை தரிசித்தாலும் நல்புத்தி கிட்டும், நன்மை விளையும். இதனால்தான் இறைவனும் அவ்வப்போது பூமிக்கு உத்தமர்களை அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றார்.

பூக்களின் தெய்வீக ஆற்றல்

எப்போது புஷ்பம் வாங்கினாலும் அதனை தெய்வத்திற்குச் சூட்டிய பிறகு தலையில் சூட வேண்டும்
ஒரு முறை பயன்படுத்தியதை பூக்களை மீண்டும் வாங்குதல் தவறு. இதற்காகத் தெரிந்த இடத்தில்தான் புஷ்பம் வாங்குதல் நன்று.
திருமணத்தில் உபயோகித்த பூ, பிரேதத்தின் மேல் போட்ட பூ முதலியவைகளை குறைந்த விலையில் விற்க முன் வருவார்கள். இவைகளை வாங்கி உபயோகித்தால் வயிற்று வலி வரும். சந்தி சாயும் போது வாங்கக் கூடாது.
நெற்றியில் குங்குமம் இட்ட சுமங்கலிகளிடம் தான் புஷ்பம் வாங்க வேண்டும் என்ற நெறி ஒரு காலத்தில் இருந்து வந்தது. அப்போது பொற்றிடையோகி எனும் யோகஞானியார் பல காலம் தவமிருந்து ஆண்கள் நெற்றிச் சின்னம் இட்டுப் பூக்களை விற்றால் அவர்களிடம் இருந்து பூக்களை வாங்கிடலாம் என்ற வரத்தினைப் பெற்றார். இந்த நியதிகளுடன் வாங்கும் புஷ்பத்தின் மூலம் பொற்றிடையோகி அருள் புரிவார்.
பெண்கள் பூவினை ஒற்றை மலராகத் தலையில் வைக்க கூடாது. இதனால் திருமணத் தடங்கல்கள் அதிகம் வரும்.
பூக்களைக் கொண்டையில் குத்தி செருகுதல் தவறு. நடுவகிடு எடுத்து வாரி, ஆள்காட்டி விரலாலும், கட்டை விரலாலும் முடியை தூக்கி, கட்டை விரலாலும், மோதிர விரலாலும் பூ வைக்க வேண்டும்.
இரு பக்கமும் பூ தொங்க கூடாது. தலையில் புஷ்பம் செண்டாக இருக்க வேண்டும்
காதின் நுனியிலிருந்து அடிவரை இடைப்பட்ட இடைவெளி தூரத்தில் தலையில் பின்பக்கம் புஷ்பம் வைக்க வேண்டும்.
மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாசனை அற்ற புஷ்பத்தை வாசனை உள்ள புஷ்பத்தோடு சேர்க்கக் கூடாது. இதனால் சாபம் தான் வருகிறது. வாசனை இல்லாத புஷ்பத்தை ஒரு போதும் தெய்வத்திற்கோ, கோயிலுக்கோ, இல்லத்திற்கோ பயன் படுத்த கூடாது. உதாரணமாய் காட்டு மல்லி, காகிதப் பூக்கள் கூடாது.
காட்டுமல்லி எனப்படும் புஷ்பத்தை வாசனையான மல்லியுடன் சேர்த்து வைத்தால், கெட்ட கனவுகள் வரும்! காட்டு மிருகங்கள் கனவில் பயமுறுத்தும். காகிதப் பூக்கள் வைத்தால் மனதில் சஞ்சலமிருக்கும்.

அர்ச்சனைப் பூக்கள்

அம்பிகையை எந்தக் கிழமையில் எவ்விதமான பூக்களால் அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள். குறிப்பாக நவராத்திரியில் இதனைக் கடைபிடித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
ஞாயிறு : தாமரைப் பூக்களால் அலங்காரம் செய்து வழிபடுதல் நன்று. இதனால் இல்லத்தில் கடன் வராது. பெண்களுக்கு மகா பதிவிரதைத் தன்மையைக் கொடுக்கும்.
சென்னை அருகே உள்ள ஞாயிறு, திருசெங்கட்டாங்குடி, சூரியனார் கோயில் அருகே உள்ள திருமங்கலக்குடி, பாஸ்கர பூஜை எனும் சூரிய கிரணங்கள் சுவாமி மேல் படியும் தலங்கள் சிறப்பானவை.

திருச்செங்கட்டாங்குடி

திங்கள்: அல்லி மலராலும், மல்லிகை மலராலும் அம்பிகையை அலங்கரித்து பூசிக்க வேண்டும். மனஒற்றுமையை பாதிக்கும் வகையிலான குடும்பத்தில் உள்ள குறைபாடுகள் குறைகள் நீங்கி, ஒற்றுமை வளரும்
செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் மற்றும் உத்திர மேருர் சிவாலயம், மகிமாலை சிவாலயம், முசிறி ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரர் கோயில் இப்பூஜைக்கு மிகவும் ஏற்றவை.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் மகிமாலை

செவ்வாய்: அரளி, சம்பங்கியால் அலங்கரித்துப் பூஜை ஆற்றுதல். வாகன விபத்திலிருந்து கணவனைக் காப்பாற்ற வல்ல சக்தி வாய்ந்த பூஜை. அடிக்கடி பிரயாணம் செய்வோருக்கு இது தக்க காப்பாய் அமையும். திருவாரூர் – குடவாசல் அருகே உள்ள காப்பனாமங்கலம், சென்னை கோயம்பேடு சிவாலயம், சாக்கோட்டை உய்யவந்த அம்பாள் கோயில் போன்றவை இதற்கு ஏற்ற ஆலயங்கள்.
புதன்: பவழ மல்லியினால் அலங்காரம் செய்து பூஜிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி நன்கு வளரும்.
காஞ்சிபுரம் – வந்தவாசி இடையே உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் ஆலயம், புதுக்கோட்டை அருகே திருவோணம் கிராமத்தில் உள்ள சிவாலயம், கூத்தனூர் சரஸ்வதி கோயிலுக்கு அருகே உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணர் கோயில் போன்றவை இதற்கு முக்கியமானவை.

ஸ்ரீஉய்யவந்த அம்மன் சாக்கோட்டை

வியாழன்: சாமந்திப் பூக்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். வியாபரம் பெருகி கஜானா நிறையும்.
புதுக்கோட்டை அருகே உள்ள பூரம் நட்சத்திரத் தலமான திருவரங்குளம் சிவன் கோயில், ஆவுடையார்கோயில் – திருப்புனவாசல் அருகே உள்ள தீயத்தூர் சஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் கோயில், திருக்கருகாவூர் அருகே உள்ள பொன்மான்மேய்ந்த நல்லூர் ஸ்ரீலக்ஷ்மீ நாராயண பெருமாள் கோயில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் போன்றவை இதற்கு ஏற்புடையவை.
வெள்ளி: பிச்சிப்பூ, (இராமபாணம் எனப் போற்றப்படும் புஷ்பம்) வெள்ளையும் சிவப்பும் கலந்த பிச்சிப் பூவினால் அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் குறை நீங்கி மாங்கல்ய பலம் கிடைக்கும்.
நாட்டரசங் கோட்டை கண்ணாத்தாள் அம்மன், திருப்பாற்றுறை, திருச்சி, சுவாமிமலை அருகே நாக்குடியில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரி, திருவாரூர் அருகே கல்யாண மஹாதேவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண மீனாக்ஷீ (இங்கு ஆலயம் தரைமட்டமாகி உள்ளது) போன்ற ஆலயங்கள் சிறப்புடையவை.

திருப்பாற்றுரை சிவத்தலம்

சனிக்கிழமை: மனோரஞ்சிதம், நீலோத்பவம், சங்கு புஷ்பம் போன்ற புஷ்பங்களால் அலங்கரித்து வழிபட்டு வந்திட, பரிசுத்தமான மன நிம்மதி, தூய சாந்தம் இல்லறத்தில் கிடைக்கும்.
சென்னை – பாண்டிச்சேரி இடையில் உள்ள மரக்காணம் பூமீஸ்வரர், அறந்தாங்கி அருகே அரசர்குளம் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர், மீமிசல் அருகே உள்ள மஞ்சக்குடி அஞ்சேல் பெருமாள் மற்றும் ஸ்ரீ கல்யாண லக்ஷ்மீ நரசிம்மர், திருச்சி – துறையூர் அருகே திருத்தியமலை தாயினும் நல்லாள் அம்பிகை கோயில் போன்றவை.
சண்பகப் பூவிற்கு நறுமணம் தோன்றிய திவ்யமயப் புராண வைபவம் பூக்களின் திவ்யத்தைப் பூலோகத்திற்குப் பறை சாற்றிய பண்டாரவாடைச் சித்தர்
பண்டாரவாடை எனும் பெயருள்ளத் தலங்களில் சிறிது காலம் ஆரம்பத்தில் உறைந்து, இத்தலங்களின் மகத்துவத்தையும், பல பூக்களின் மஹிமைகளையும் சமுதாயத்திற்கு மீண்டும் உணர்வித்து, இறுதியில் அருணாசலமாம் திருஅண்ணாமலையை அடைந்து, சமுதாய இறைப் பணிகளைத் தொடர்ந்தவரே பண்டாரவாடைச் சித்தர். காரணப் பெயரைச் சூடியதற்கு ஏற்ப பூக்களின் நறுமணங்களில் துலங்கும் அளப்பரிய தெய்வீக ரகசியங்களை பூமிக்கு உணர்த்தி வந்த சித்தர்பிரான்.
குப்பை சித்தரும், மலப்புழுச் சித்தரும் குப்பையில், மலத்திலேயே எப்போதும் கிடந்தாலும் அவர்கள் அமர்ந்திருக்கும் இடமும், அவர்களின் திருமேனியும் இராப் பகலாய் எப்போதும் மல்லிகையின் நறுமணத்துடன் திவ்யமான பரிமள சுகந்தத்துடன் வீசிக் கோண்டே இருக்கும்.
கோயிலுக்குச் செல்வோர் இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மலமூத்திராதிகளை மிதித்து சென்று பூக்களை அளித்து அவர்கள் கைப்பட வாங்கிச் சென்று, ஆலயங்களில் அளிக்கையில், “இப்பூக்களை குப்பை சித்தர், மலப்புழுச் சித்தரிடம் ஆசியாகப் பெற்று வாங்கி வந்தீர்களா?” என்றே கோயில்களில் கேட்பார்கள். அந்த அளவுக்கு இவர்கள் வார்க்கும் நறுமண சுகந்த் புஷ்ப கந்தம் உலகை திவ்யமாக்கி வந்தது. இதே போன்றே பண்டாரவாடைச் சித்தர்பிரான் இருக்கும் இடத்திலும் எப்போதும் சண்பக மலரின் நறுமணம் நிரவியதாலும் – பண்டாரவாடைச் சித்தர் என்ற காரணப் பெயரை அடைந்தார்.

திருவரங்குளம் புதுக்கோட்டை

தற்போது எல்லா இடங்களிலும் கிடைப்பதும், முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததும், பூக்களிலேயே அதிநறுமணமும் கொண்டதுமான சண்பக மலரானது, தனக்குரிய தெய்வீக மணத்தை சாகம்பரீ தேவியின் அரும்பெருந்தவ வரத்தால் பெற்றிட்ட புண்ணியத் தலமே திருச்செங்காட்டாங்குடி. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே உள்ள பாடல் பெற்ற சிவத்தலமிது.
பூவுலகில் தாவரங்களைப் படைக்கும் சாகம்பரீ தேவி, சண்பக மலருக்கு திவ்யமான நறுமணத்தைப் பெற்றிடப் பூஜித்த ஆலய பூமியே திருசெங்காட்டாங்குடி ஸ்ரீ உத்ராபதீஸ்வரர் ஆலயம். பிள்ளைக் கறியமுது படைத்த சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த புண்ணியத் தலம். சிவா, விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகளும், மலைமகளாம் ஆதிபராசக்தி, திருமகள், கலைமகள் ஆகிய சக்தி – மும்மூர்த்திகளும் சண்பகத்திற்கு நறுமணத்தை வார்த்து, முருக பெருமானுக்கு முதன்முதலாய் சிரசில் சண்பக மலர் சூட்டப் பெறுகையில், மும்மூர்த்திகளின் ஆணையால் சண்பகத்தின் நறுமாமணமே பூமியில் சுயம்பாய்த் தோன்றி பிரபஞ்சத்தை நிறைத்தது. இந்த வைபவம் நிகழ்ந்த காலத்தில் பண்டாரவாடைச் சித்தர் பிறிதொரு சித்தராய் இச்சிவப்பதியில் பிரசன்னாமாகி இருந்தார்.
சண்பக மலரின் நறுமணப் படைப்பின் போது, இவ்வாறு தாம் தெய்வ சாட்சியாய் உடனிருந்த காரணத்தால், பண்டாரவாடைச் சித்தர் சண்பக மலரானது எவ்வாறு வடதிசைச் சூரண வாடைக் காற்றை கிரகித்து அபூர்வமான நறுமணத்தை இப்பூவுலகில் பெற்று நிரவிகின்றது என்பதையும், அருணாசல மலையடியில் குறித்த புஷ்ப சக்தி நாளில் உணர்த்தி காட்டினார். அன்றைய தினத்தில் அருணாசல பூமி முழுவதும் சண்பக மலரின் நறுமணம் தானாகவே கமழ்ந்தது. அபூர்வமாய் வடதிசையில் இருந்து சண்பக நறுமண வாடைக் காற்றும் வீசியது. அருணாசல மலையில் பண்டாரவாடைச் சித்தர்பிரான் காட்டியருளிய சண்பக வாடைக் குன்று இன்றைக்கும் சண்பக மணம் பூரிக்கும் தலமாய் இருக்கின்றது.

விண்ணுலக லோகங்களிலும் பூச்செடிகள் உண்டு. அங்கு தங்கத்தினாலான பூக்கள், ரத்தினப் பூக்கள், வைடூரியப் பூக்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடந்தாலும் – தாமரை, மல்லி போன்ற பூவுலகப் பூக்களுக்கே அங்கே தெய்வீகத்வம் மிகுதி.
நம் பூலோகத்துப் பூக்களின் தெய்வீக மஹிமையை உணர்த்தும் முகமாகத்தான் – துவாதசி அன்று நாம் வாழும் பூமியில் தாமரை கொண்டு அர்ச்சித்தால், தேவலோகங்களில் ஆயிரம் பொற்றாமரைகளால் அர்ச்சித்த பலன்கள் கிட்டும் என்ற தெய்வ நியதி துலங்குகின்றது. இஃதும் பூலோகத்துப் பூக்களின் தெய்வீகச் செழுமையைப் புலர வைப்பதாகும்.
இதனால்தான் மஹரிஷிகளும், ஞானியரும், யோகியரும் கோடானு கோடி தேவர்களும், கின்னர, கிம்புருட கந்தர்வர்களும் மகத்தான பலன்களை வார்க்க வல்ல தவம், வழிபாடு என்றாலே பூலோகத்திற்கு ஓடோடி வந்து விடுகின்றார்கள்.
தேங்காயையும் “கபால புஷ்பம், கபால கனி” என்று சித்தர்களின் லோகங்களில் போற்றுகின்றார்கள்.

ஸ்ரீகௌதம மகரிஷி

ஆதிமுதலில் பூக்களைப் படைக்கையில் ராதை, துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்ரீ ஆகிய ஐந்து “பஞ்ச மாதேவியரும்” – சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் தம் நெற்றிக் கண்களால் நிறுவித் தந்த நேத்திரப் புஷ்பச் சக்கரத்தின் பால் – வேதபுஷ்பம், மந்திர புஷ்பம், ஞானபுஷ்பம், யோகபுஷ்பம், நட்சத்திர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் போன்ற ஏழு மூல புஷ்பங்களுக்கான புஷ்ப பீஜங்களையும் தோற்றுவித்து, சாகம்பரீ தேவியிடம் அளித்திட…
…. இவ்வாறுதான் பூமியில் சாகம்பரீ தேவியின் மூலமாய்ப் பூக்கள் நவராத்திரியின் தசமித் திருநாளில் படைக்கப் பெறலாயின. வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வோரு நாளிலும் கோடானு கோடிப் பூக்கள் படைக்கலாகி, அண்ட சராசர லோகங்கள் அனைத்திற்கும் அனுப்பப் பெற்றன.
இவ்வாறு நறுமணப் பூக்கள் நிறைந்த நந்தவனம் பூவுலகின் முதன் முதலில் தோன்றிய தலங்களுள் ஒன்றே பூவனூர். தஞ்சாவூர் – நீடாமங்கலம் அருகே உள்ள இப்புனித பூமியே கற்பக விருட்சத்தின் முதல் புஷ்பம் புமியில் விழுந்த தலம். கற்பகப் பூவைச் சூடிய கற்பக வல்லியும், ராஜ புஷ்பத்தைச் சூடிய ராஜராஜேஸ்வரியும், ஜலயோகப் புஷ்பத்தைச் சூடிய சாமுண்டீஸ்வரியும் அருளும் பூமி. பூக்கள் தரும் புனிதங்களைக் கலியிலும் அபரிமிதமாய்ப் பொழியும் தலம்.

ஸ்ரீகௌதமர் ஆஸ்ரமம்
திருஅண்ணாமலை

சாகம்பரீ தேவியால் படைக்கப் பெற்றவையே கோடானு கோடி புஷ்பங்கள். இதன் காரணமாகவும் விண்ணுலகத்தின் சர்வ தெய்வாதி, தேவாதி தேவ தெய்வ லோகங்களிலும் பூமியில் விளையும் தாவரப் பூக்களைப் பறித்து தொடுத்து நிதமும் பூஜிப்பதையே பெரிதும் போற்றுகின்றனர். இஃதும் பூவுலப் பூக்களின் அளப்பரிய தெய்வீக மேன்மையை விண்டுரைப்பதாம்.
முக்தர்கள், மோட்ச பூமியினர், பிதுர்க்கள் போன்றோரும், அனைத்து கோடானு கோடி விண்ணுலகவாசியரும் பூவுலகத்தின் தெய்வீக மகத்துவங்களைப் பெரிதும் உணர்ந்தவர்கள் ஆவர். அவரவர் லோகங்களில் நம் பூமியில் விளைந்த பூக்களால் பூஜிப்பதையும், பூமியில் உள்ள ஆலயங்களில் பூக்களைக் கொண்டு வழிபடுவதையும் பெரிதும் போற்றுகின்றனர்.
ஆனால் நாம் இந்த பூமியிலேயே வாழ்ந்து வந்தும், பூலோகத்துப் பூக்களின் புனிதத்துவத்தை அறிய மாட்டாதவராய் இருக்கின்றோமே, என் செய்வது? இனியேனும் அறிந்து, உரியனவற்றைச் சரியாய்க் கடைபிடித்துப் பிறருக்கும் உரைத்துப் பயன் பெறுவோமாக!
குழந்தைகளுக்கு அட்சராப்யாசம் என்பதும் முதன் முதலில் பாடம் சொல்லித் தரும் சடங்கு ஆகும். இதில் வாழைப் பூ, தாழம் பூ, வெண்தாமரைப் பூ, அடுக்கு நந்தியாவட்டை, செண்பகப் பூ ஆகிய ஐந்தையும் ஒரு தாம்பாளத்தில் அரிசியின் மேல் வைத்துப் பூஜையில் வைத்திடுவர். வாழைப் பூவின் மடலை விரித்து அதில் முழுமையான அரிசி மணிகளை அட்சதை நிறைத்து வைத்திடவும், வித்யா பூஜையை ஆற்றிடவும். பசு, கன்றின் முன் இச்சடங்கை நிகழ்த்துவது மிகவும் விசேஷமானது.
பூஜைக்குப் பிறகு வாழைப் பூவை நன்கு பிரித்து பசுவிற்கு அளிக்க வேண்டும்
இந்த முதலாம் அட்சர பயிற்சிக்கான புனிதச் சடங்கில், எந்த மொழியில் முதலில் கற்பிக்கின்றோமோ அதே மொழியில் எப்போதும் கற்பித்தலே, கற்றாலே உத்தமமானது. இதற்கு நிறைய தெய்வீகக் காரணங்கள் உண்டு.

சங்கில் ஒலிக்கும் கருப்பர்

ஒவ்வோரு மொழியின் எழுத்துகளும் “அட்சர புஷ்பம்” எனப்படுவது. இதனால்தான் இறைத் துதிகளை “அட்சர மாலை”, அதாவது அட்சர புஷ்பங்களாலான மொழியின் வார்த்தைகளால் ஆன பாமாலை என்றும் போற்றுவர். நிதமும் ரங்கனுக்கு பூமாலை சூட்டிப் பாமாலை சார்த்திய ஆண்டாளின் தெய்வானுபூதியும் இதனைப் புலப்படுத்துவதாம்
பெரும்பாலோர் தமிழிலோ, வடமொழியிலோ இந்த கல்வித் தொடக்கத்தை (வித்யாரம்பம், அட்சரப்யாசம்) ஆரம்பித்து விட்டு, பிறகு ஆங்கிலத்தில் ஏ, பி, சி, டீ என்று தாவி விடுவர். இது தவறு.
கல்வியில் சிறத்தல் என்றால் நிறைய மார்க்குகள் வாங்குவது மட்டுமல்ல. நல்ஒழுக்கத்திலும், நற்பண்பிலும் ஓங்கி உயர்ந்தவராய்க் கல்வியோடு சேர்ந்து பண்போடு, அன்போடு வளர்தலே கல்வியின் ஆத்மசக்தி மகத்துவம். கல்விப் பாடங்களும் ஆன்ம சக்தி கூடியவையாய் இருத்தல் வேண்டும். வெறும் விஞ்ஞானக் கல்வியால் பிள்ளைகள் இயந்திர கதியாய் மாறி விடுவார்கள், அல்லது உள்ளத்தை, புத்தியை, மனதைப் பண்புடன் உயர்த்தாது. மெய்ஞ்ஞானக் கல்வியும் தேவைதான். மெய்ஞ்ஞானம் மூலமாகவே
ஆத்மசக்தி, ஆன்மசக்தி, ஞானசக்தி, யோகசக்தி, பக்தி ஐந்தும் இணைந்து வருவதே சீரிய கல்வி
தற்கால குழந்தைகள் நற்பண்புகளுடன் கல்வியில் சிறந்து வாராது இருக்க மூல காரணம், பெற்றோர்களே. முதலில் ஆரம்பித்த மொழியில் படித்த பிறகு, எத்தனை மொழிகளும் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியில் முதலில் கற்றால், நற்பண்புகளை வார்க்கும்.
நம் புனிதத் திருநாட்டின் தொன்மையான வழிமுறைகளை விட்டு விடலாகாது. தினமும் பெண் பிள்ளைகள் தலைக்குப் பூச்சூட்டிப் பள்ளிக்குக் சென்றால் நல்முறையிலான ஞாபக சக்தி உண்டாகும். பள்ளியின் பரவெளியும் பூக்களின் நறுமணத்தால் பரிசுத்தமாகும்.
பிரம்ம லோகத்தில், சாட்சாத் பிரம்ம மூர்த்தியே புஷ்பங்களைப் பறித்து தினமும் சிவபூஜை, விஷ்ணு பூஜைகளை ஆற்றி வருகின்றார் எனில் பூவுலகில் மனிதர்களுக்குப் பூக்களை வைத்து ஆற்றும் நித்திய பூஜையும், தினசரி ஆலய தரிசனமும் அவசியமானதுதானே. பூக்களின் புனிதத்துவத்தை உணர்த்தும் பிரம்ம லோகத்து அனுபூதி ஒன்றை இருடிகள் புராணத்தில் இருந்து இங்கு காண்போமாக.
ஒரு நாள் மாலையில்….
ஆனந்தமான அப்பொழுதில் மிகச் சிறப்பான நல்ல அமிர்தாமிர்த கடாட்ச நேரம் ஒன்று வந்தமைந்தமையால்….இதனை தெய்வீகப் பரிபூரணத்துடன் பயன்படுத்திப் பிரபஞ்சத்திற்கு நலம் பயக்க விழைந்தார் பிரம்ம மூர்த்தி. எவ்வாறோ?
நான்முக மூர்த்தி அனைத்து லலிதங்களையும், அழகு சக்திகளையும் ஒருங்கிணைத்து அந்த அபூர்வமான அமிர்த நேரத்தில் ஒரு பெண்ணை அந்த அமிர்தகடாட்ச காலத்திற்குள் படைத்தார். அனைத்துக் கலைகளையும் கல்வியையும், பண்புகளையும் கற்பிக்கச் சித்தம் கொண்டு வித்யா பூஜை செய்து கல்வி பாடத்தைத் தொடங்கினார்.
நான்கு வேதங்களையும் நன்கறிந்த பிரம்மா, தாம் தோற்றுவித்த அம்மணிக்குத் தானே சர்வ கலைகளையும் கற்பித்து நன்முறையில் வளர்த்தார். விண்ணுலக லோகங்களில் அன்றி பூமியின் சிறப்பைக் கருதி, அதியற்புதமாய் பூலோகத்தில்தான் இந்த பிரம்ம வித்யாசாலை தொடங்கியது.
புனிதமான மாதும் சர்வ கலைகளிலும் சிறப்புற்று வளர்ந்திட .... மணப் பருவமும் கனிந்து வந்தது.
ஒரு நாள் .... நாரத மாமுனி பிரம்ம லோகத்திற்கு வந்திட ..., அப்பெண்மணி நாரதரை வணங்கி ஆசி வேண்டினள்.. “தீர்க சுமங்கலி பவ!” என்று ஆசி கூறினார் நாரதர். அப்பெண் நல்வரம் ஒன்றை வேண்டி மாமுனியிடம் சமர்ப்பித்தாள்.
சகலமும் அறிந்த மும்மூர்த்தியருள் ஒருவராய்ப் பொலியும் பிரம்ம தேவரின் அருட்பார்வையில் கற்ற பெண்மணி – அடக்கம், பணிவுடன் துலங்குவதையும், பாத பூஜை செய்து வணங்கி வரம் வேண்டி நிற்பதையும் கண்டும் வியந்தார் நாரத மஹரிஷி. பிரம்ம மூர்த்தியால் அளிக்க முடியாத வரங்களா?
உத்தம பெரியோர்களுக்கு பாதபூஜை செய்கையில் அருகில் குருக்கத்தி மலர் அல்லது சிகப்பு வண்ண விருட்சிப் பூ இருத்தல் உத்தமமானது.

நாராயணா நாம மகிமை

அந்த பெண்மணி நாரத மாமுனியிடம் கூறலானாள்.
“சுவாமி! ஓம் நாராயனாய நம: என்று துதிப்பதை விட, ஓம் நமோ நாரத நாராயணாய நம: என்று கூறினாலே திருமால் விருப்பமுடன் ஏற்று விரைவில் அருள்புரிவார்” என்று அடியேனிடம் பிரம்ம மூர்த்தி கூறி உள்ளார். அதாவது, தன் அடியாரின் நலம் பேணுவதில் திருமால் வல்லவராம். திருமாலின் உத்தம அடியார் தாங்கள் தாமே! தங்களுடைய ஒப்பற்ற விஷ்ணு பக்தியின் மகத்துவத்தை விளக்குகையில் அடியேனிடம் பிரம்ம மூர்த்தி மேற்கண்டவாறு உரைத்தார்.
அடியேன் உத்தமப் பதிவிரதையாய்த் திகழ்ந்திட தக்க நல்வரந்தனை வார்ப்பீர்களாக!” என்று அப்பெண்மணி கேட்டு வணங்கினள். நாரதரும் மனமுவந்து நல்விரத முறை ஒன்றை உபதேசித்து அவ்வாறே வரமளித்தார்.
உலகம் போற்றும் பதிவிரதையாக உதவும் முல்லை மலரின் புனிதமான மகத்துவம்
பிரம்ம மூர்த்தி பல கலைகளையும் நற்பண்புகளையும் கற்பித்து வளர்த்து, பல மகான்களிடம் பணிவிடை செய்வித்து வளர்த்த பெண்ணை... நல்லதொரு உத்தமருக்குத் திருமணம் செய்து கொடுக்க விழைந்தார்.
இந்த சமயத்தில் தான், அந்த பெண் நாரத மகரிஷியிடம் மேற்கண்ட நல்வரத்தைக் கேட்டுப் பெற்றனள். நாரதரும் இதற்கான விரத முறையை உணர்த்தினார்.
உலகம் போற்றும் உண்மையான பதிவிரதையாகப் பிரகாசிப்பதற்கு, பௌர்ணமி தோறும் விரதமிருக்க வேண்டும். விரத நேரத்தில் முல்லை மலர்களை கோமதி அன்னையின் திருநாமங்களை ஓதித் தொடுத்து அம்பாளுக்கு முறையோடு சார்த்தி வணங்கி வர வேண்டும் என்பதே கோமதி உபாசனைக்கான முல்லைப் பூச்சர விரத பூசனை.
“கோமாதா எங்கள் குலமாதா
குலமாதா எங்கள் கோமாதா
கோமாதா விண்டுரைத்த கோமதி மாதா
கோ குலத்தின் திலகவதி கோமதி மாதா”
-என்பது கோமதி ஈஸ்வரிக்கான துதி. சங்கரநாராயண மூர்த்திக்கான இறைவியே கோமதி அன்னை.
பெண்கள் மஞ்சள் அரளி, மஞ்சள் நிறச் சாமந்தி, அடுக்கு மல்லி, கதம்பப் பூக்களைக் கொண்டு அர்ச்சித்தும், அம்மனின் திருவடிகளில் இட்டும் எப்போதும் வாழ்வில் ஓதி வர வேண்டிய அதியற்புதமான கோமாதா துதியிது.
மிகவும் எளிமையான பூஜைதான். பூலோகத்துப் பெண்கள் யாவரும் ஆற்றக் கூடியதே.
பிரம்மரால் படைக்க பெற்ற அம்மாதும் இவ்வாறு பௌர்ணமி தோறும் விரதமிருந்து முல்லை மலர்களைச் செடியிலிருந்து தானே பறித்து, கோமதித் தாயின் நாமங்களை ஓதித் தோடுத்து அம்பாளுக்கு சார்த்தி வழிபட்டு வந்தாள். அந்த உத்தமப் பெண்ணை மணப்பதற்குப் பலரும் முன் வந்தனர். அந்த யுகத்து நியதிப்படி, கல்யாண வரனைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்மீகத் தேர்வு முறை ஒன்று வைக்க பெற்றது.
இதன்படி பூமியைச் சுற்றி வலம் வந்து அகில வலத்தை முதலில் முடிப்போர்க்கு அப்பெண்ணை மணமுடிப்பது என்ற தெய்வீகத் தேர்வு முறைப்படி அப்பெண்ணுக்குத் திருமணத்தை ஆற்றிட முனைந்தார் நான்முகர்.
பூமியை வலம் வருதல் என்பது குறித்த தவ, யோக ஞான சக்தியைப் பூண்டிருந்தால்தான் எவருக்குமே இயலும். மேலும் பூமியை ஆத்மார்த்தமாய் வலம் வருவோர்க்கு, தீர்காயுளும், தீர்க தரிசனமும் கிட்டும் என்பதும் உண்டு. ஏழு மலை, ஏழு நதி தேவதைகள் வார்த்துள்ள அரும்பெரும் நல்வரங்களிவை.

ஸ்ரீதாயினும் நல்லாள் திருத்தியமலை

பலரும் உலகத்தைச் சுற்றி வர ஆரம்பித்தனர். பிள்ளையாரின் முந்தைய மாங்கனிப் புராண வைபவத்தைக் கருத்தில் கொண்டு, இறைவனையும், இறைவியையும் சுற்றி வந்தால், அகில உலகங்களையும் சுற்றி வந்ததாகப் பொருள் என்று கொண்டு சிவலோகத்திற்கு விரைந்தோரும் உண்டு
பல அவதாரங்களை எடுத்து உலகைக் காத்த மஹாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் சுற்றி வந்தால், உலகைச் சுற்றியதாய் அமையும் என்பதாய் விஷ்ணு-லக்ஷ்மீ லோகங்களுக்குச் சென்றோரும் இருந்தனர்.
இதையெல்லாம் பார்த்தார் நாரத மகரிஷி, முக்காலத்தையும் அறிந்தவராயிற்றே. அப்போதெல்லாம் விண்ணுலகங்களை விட, பூமியில்தான் எண்ணற்ற நற்காரியங்களைச் சாதித்தவாறு மகான்களும், மாமுனிவர்களும் தவத்தில் ஆழ்ந்து கிடந்து, நடந்து இருந்தனர். எனவே மாமுனி பூலோகத்திற்கு உடன் விரைந்து வந்தார்.
கௌதம மாமுனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். மாமுனிவரை வணங்கி, பிரம்ம லோகத்துத் தேர்வைப் பற்றி நாரதர் அவருக்குத் தெரிவித்தார்.
“தங்களைப் போன்ற ஓர் உத்தம மாமுனி பவித்ரமான பெண்ணை மணந்து கொண்டால், எண்ணற்ற தெய்வீகக் காரியங்களை, தவங்களை, வேள்விகளை நிறைவேற்றும் தெய்வீக நிலைகள் எளிதில் கிட்டும். உலகம் போற்றும் ஓர் உத்தமப் பதிவிரதை, பார் பொற்றும் மாமுனியோடு வாழ்ந்திடில், அவர்களுடைய புனிதமான கூட்டுத் தவத்தால், புனிதமான சந்ததியால் பிரபஞ்சமே உய்வு பெறும் அல்லவா.
”இல்லற வாழ்வே சிறந்த வாழ்வு என்று சித்தர்களும் போற்றுகின்றனர். ஆகையால், உத்தமத்தினும் உத்தமராகிய கௌதம மாமுனியே! பிரம்ம லோகத்தில் தோன்றிய அந்த உத்தமப் பெண்ணை மணக்கத் தாங்களே முற்றிலும் தகுதியானவர்!” என்று கூறி கௌதம மஹரிஷியிடம் வாதாடி நின்றார் நாரத மாமுனி.
கலியுகத்தில் நல்ல மணப் பெண்ணைப் பெற்றிட, “மாங்கல்ய பாக்கியம் தரும் மங்கள குரு பகவானே” என்று ஓதியவாறு – ஆண்கள் தாமே தொடுத்த சாமந்தி பூக்களாலான மாலையை வியாழக் கிழமை தோறும் குரு ஹோரை நேரத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்குச் சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும்
இங்கு யாவரும் பயன்படுத்த வேண்டியதாய்க் குறிப்பிடப்படுவது மஞ்சள் நிற சாமந்திப் பூவாகும்.(துலுக்க) ஜவ்வந்தி பூ எனப்படும் வகை அல்ல
வியாழக் கிழமைக்கான குரு ஹோரை நேரம்: காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, இதற்குப் பின் விடியற்காலை 3-4. அந்தந்த நாளின் சூரிய உதய நேரத்தைப் பொறுத்து இந்த நேர முறை சற்றே மாறும்.
நாரதர் வற்புறுத்திய போதும் முதலில் கௌதமர் திருமணம் புரிந்து கொள்ளத் தயங்கினாலும், ‘தெய்வ அசரீரித் திருவாக்கு’ இதனை ஆமோதிப்பதாய் வானில் தோன்றிடவே, நாரதரின் மொழிக்கு ஒப்ப, இதுவும் இறைச் சித்தமே எனத் தெளிந்து, கௌதம முனிவர் பிரம்ம லோகத்திற்குப் புறப்பட்டார்.
வழியில் பசு மாடு ஒன்று கன்றினை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் கன்றின் தலை மட்டும் வெளியில் வந்து தரிசனம் தந்தது.
முன்புறம் தாய்ப் பசுவின் திருமுகம், பின்புறம் கன்றுப் பசுவின் திருமுகம். இரு புறமும் திருமகளின் திருமுகங்களைக் கொண்ட கோலம்! என்னே அற்புதமான தரிசனம்!
இவ்வாறு இருபுறத் திருமகள் கடாட்ச தரிசனம் கூடிய எந்தப் பசுவையும் வலம் வந்திடில், வேறெந்த லோகத்திலும் கிட்டாத அரிய தவப் பலன்கள் கிட்டும். இவ்வகையில் தரிசனம் தரும் பசுவினை 14 தடவைகள் சுற்றி வலம் வந்தால், ஈரேழு பதினான்கு உலகன்களையும் வலம் வந்த பலன் பெய்யும் என்ற தெய்வ நியதியும் உண்டு. இதனை நன்கறிந்தவர்களே மாமுனியர்கள்
”இருபுறமும் ஒரு பசுவின் திருமகளின் திருவடிவம்
கருக்கண்ணால் காண்பவரோ பதிவிரதை பதங் காண்பார்”
என்ற அகத்திய கிரந்த மொழியும் இதனைச் சிறப்புற உரைப்பதாம். கோ பூஜையின் போது, இவ்வரிய மந்திரத்தை ஓதி வலம் வந்து வணங்கிடில் சந்ததிகள் நன்கு நன்முறையில் விருத்தியாகித் தழைக்கும்.
ஆனால் பலன்கள் எதையுமே எதிர்பாரதவராய் கௌதம முனிவர், கிடைத்தற்கரிய தரிசனம் என்பதை மட்டுமே சிந்தையில் கொண்டு – இரு புறமும் லக்ஷ்மீயின் திருப்பசு முகத்தைக் கொண்ட அப்புனிதமானப் பசுவைச் சுற்றிப் பதினான்கு முறை மங்களகரமாய் கோசூக்தம் ஓதியவாறே மாமுனிவர் வலம் வந்தார்.
பின்னர் நாரதரே பிரம்ம லோகத்தில் பிரம்ம மூர்த்தியிடம் இதற்கான ஆன்மீகப் பலன்களை உரைவித்து, “அனைவரிலும் உலகை முதலில் சுற்றி வந்தவர் கௌதம மகரிஷியே” என்று கூறிட… அனைவரும் இதனை மனப் பூர்வமாக ஏற்று ஆசி கூறிட, கௌதமருக்கும் அந்த உத்தமிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.

ஸ்ரீபால்வளநாயகி அம்மன்
தஞ்சை பசுபதிகோயில்

ஸ்ரீபசுபதிநாதேஸ்வரர்
தஞ்சை பசுபதிகோயில்

இந்த உத்தமிதான் உத்தமப் பதிவிரதையாய் அண்ட சராசரமும் சதுர் கோடி யுகங்களாய்ப் போற்றும் ”அகலிகை”
இந்த புராண வைபவத்தை பக்தி நிறந்த அருட் கனிவோடு அகஸ்தியர் தன் சீடர்களுக்கு உணர்வித்தார்.
சினையாக இருக்கும் பசிவிற்குத் தினமும் வாழைப் பூவை நன்கு உரித்து பக்தியுடன் கொடுத்து வணங்கி வந்தால் வீட்டில் அடிக்கடி எற்பட்டு வரும் கொந்தளிப்பு நிலை மாறி சாந்தம் புஷ்பிக்கும்.
”கோமாதா விண்டுரைக்கும் கோலோக வேதம்
ஆகமத்தின் அத்தனையும் திரண்டு வரும் பாலாய்
பாகவதப் பரிநூலும் பரிந்துரைக்கும் கோவே!
பசுபதியாய் பதிபசுவாய் அருளிடுவாய் அம்மே!”
என்பது கோமாதா, கோமதி மாதாவை இணைத்துத் துதிக்கும் பாசுரம்.
தஞ்சாவூர் அருகே தாழமங்கை ஆலயத்தை ஒட்டி (கள்ளர்) பசுபதி கோயில் எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலில் வெள்ளி, செவ்வாய், பிரதோஷம் நாட்களில் பசு, கன்றுடன் மூன்று வலம் வந்து, பசு பூஜைகளை (கோ பூஜை) ஆற்றி வந்தால், இல்லத்தில் சந்ததி நன்முறையில் தழைக்கும்.
இவ்வாறு ஆலயத்தில் பசுவுடன் புனித வலம் வருகையில் பசுவானது கோமேயம், சாணி இடுதல் மிகவும் மங்களகரமானதாம். கோமேயம், சாணி இடுகையில், இதன் துளி தெறித்து நம் உடலில் படுவது பலத்த தெய்வ ஆசீர்வாத சக்திகளை உணர்த்துவதாம்.
உத்தமப் பதிவிரதையாம் அகலிகைக்குக் ‘கல்லாய்க் கிடப்பாய்’ எனும் சாபம் விளைந்தது ஏனோ, ஏனோ?
இது சாபம் அல்ல. “கனிந்த தவத்தின் முற்றோதல்” என்பர் சித்தர்கள்.
முல்லை மலர்ப் பூசனையால் பதிவிரதையாய்ப் பிரகாசிக்கும் பாக்கியத்தை அடைந்தனள் அகலிகை எனில், ராமாயணக் காலத்தில் அகலிகைக்கு ஏன் சாபம் ஏற்பட்டது? – என்ற வினா எழும்
ராமாயணக் காலத்திற்கும் முன்னிருந்தே பொலிந்த பதிவிரதா தீபப் பிரகாசியே மூத்த பதிவிரதையான அகலிகை
ஒரு சமயம்..... பிரம்ம லோகத்திலும், பூலோகத்திலுமாய் வளர்ந்து கொண்டிருந்த அகலிகையைப் பார்த்துச் சற்றே ஒரு கணம் ஆசை கொண்டனன் இந்திரன். இப்பேராசையை அப்போதே கழட்டி விட்டிருக்க வேண்டும். ஆனால் நிராசையாயினும் தேவர்களின் தலைவரான இந்திரனையும் விடாது போலும். அகலிகையை மணம் புரிந்துச் கொள்ள முயற்சித்து, இந்திரன் தோற்றான். கௌதமர் அகலிகையை மணந்தார். ஆனால் இந்திரனுக்கு துர்எண்ணம் உள்ளுக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள்… விடிவதற்கு முன்னால்… அகலிகையை அடைய வெறி கொண்டு, இந்திரன் சேவலாக உருமாறிக் குரல் கொடுத்தான். விடிந்து விட்டது என்று எண்ணிய கௌதம மகரிஷி நதியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராட சென்றார். அப்போது இந்திரன் கௌதம மாமுனியின் வடிவெடுத்து அகலிகையின் முன் நின்றான்.
அதிகாலையில் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தால், விடிந்ததா, இல்லையா என்று தெரியாதா, கௌதம மாமுனிவருக்கு? இரவில் உறங்கும் நீரோட்டத்தைக் கண்டாலேயே மஹரிஷியார் விடிந்ததா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாமே! இதற்காக கௌதம மாமுனி ஏன் நதி வரை நடந்து சென்று, நதி உறங்குவதைக் கண்டு திரும்பி வர வேண்டுமோ?
இந்திரனுக்கு கௌதமர் அகலிகை மஹரிஷி தம்பதியினர் மூலம் புத்தி புகட்டவே இத்தகைய புராண அனுபூதி நிகழ்கின்றது.
இந்திரன் தன் மனதில் ஏற்பட்ட விகார எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொள்ள அகலிகையை அணுகினான். ஆனால் அகலிகையின் உள்மனதோ இவர் கௌதம மகரிஷி அல்ல என்று உணர்த்தியது.
இதற்கிடையில் நதி வரை சென்ற கௌதமர் திரும்பி வந்தார். இருவரையும் கண்டவுடன் சபிக்கின்றார், ஏனோ?
இந்திரனின் விகார எண்ணங்களுக்குக் காரணம், அகலிகையின் அழகு. கௌதமரின் “கல்லாய் கிட!” எனும் சாபம் அகலிகையின் தேகத்திற்கு மட்டுமே, அகலிகையின் ஆத்மப் பிரகாசிக்கு அல்ல.
மாற்றான் மனைவி என்றவுடன் கூட மனதில் எண்ணங்களை அடக்கத் தெரியாத இந்திரனுக்கோ “உடல் முழுவதும் யோனிக் கண்களாகட்டும்” என்று மாமுனி சபித்தார். இந்திரன் வெட்கித் தலைகுனிந்து யோனிக் கண்கள் நிறைந்த உடலோடு வெளியில் இருக்க அஞ்சி இமாலயத்தில் ஒரு தாமரைத் தடாகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டான். நெடுங் காலத்திற்கு விமோசனமே கிட்டவில்லை.
இந்திரன் சாபத்திற்கு விமோசனம் அப்போது இல்லைதான். பிற்பாடு கெஞ்சி கூத்தாடித்தான் பெற்றான். ஆனால் உத்தம புருஷராம் ஸ்ரீராமரின் கால் தூசி கல் மேல் பட்டவுடன் அகலிகை எழுவாள் எனும் சாப நிவர்த்தியும் தானாய் விளைந்தது.
ஸ்ரீராமர் உத்தம புருஷர். ஏகபத்தினி விரதன். பிற பெண் மீது தன் கால் படுவதை அவள் கல்லாய், மண்ணாய்க் கிடந்தாலும் கூட ஒப்ப மாட்டார் அல்லவா.
இங்கு கல்லாகிடினும் அகலிகை பெண் தானே! எவ்வாறு ஸ்ரீராமரின் கால் பட முடியும்? இதற்குமான எண்ணற்ற ஆன்மப் பூர்வமான ஆத்மசக்தி விளக்கங்கள் உண்டு.
ஆனால் இந்தப் புராண வைபவத்தைப் பலரும் அகலிகைக்கு மாசு கற்பிக்கும் வகையில் இயம்பக் கூடும். இது முற்றிலும் தவறு. முதலில் நடந்த புராண வைபவத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான விளக்கங்களை – அனைத்துப் புராணங்களையும் இறை ஆணையாய் சாட்சியாய் நின்று கண்டு வரும் நவநாத சித்தர்களின் குருவாய் மொழியாய் முழுதுமாய் நன்கு அறிய வேண்டும்.
பிரம்மனால் படைக்க பெற்று, நாரத மகசிஷியினால் உத்தமப் பதிவிரதையாய் வரமளிக்கப் பெற்று, முல்லை மலர்களால் பௌர்ணமி தோறும் கோமதித் தாயை வணங்கி வந்த கௌதம மகரிஷியின் உத்தமப் பத்தினி அகலிகை எக்காலத்தும் பிழை செய்திடாள். உத்தம பதிவிரதையிடம் எக்காலத்தும் ஓரணுப் பிழையும் எழவே எழாது.

திருமீயச்சூர்

இந்திர பதவி என்பது கோடானு கோடி ஜன்மங்களில் உத்தம நற்காரியங்களைச் செய்து கிட்டுவது. இருப்பினும் உத்தம தேவபதவி என்றாலும், இந்திரரும், எத்தகைய தேவலோகத்தினரும் அகங்காரத்தால், ஆசையால் தவறு செய்யக் கூடும். இதிலும் துர்வகைக் காமம் மிக மிகப் பொல்லாதது. எவரையும் வளைத்துக் கீழே தள்ளி விடும். இதற்கும் இந்திரன் பாடம் பெற்றாக வேண்டும்.
மேலும், உத்தம பத்தினியரிடம் எந்த லோகத்தாரும் தெய்வத்துக்குச் சமானமாய் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடங்களையும் கற்பிக்கவே இத்தகைய புராண அனுபூதிகள்.
எவருமே தன் அழகாலோ, ஆடையாலோ மற்றவர் உள்ளத்தில் சிறிது கூட எந்தவிதமான தவறான பிரதிபலிப்பையும் அறிந்தோ, அறியாமலோ ஒரு காலத்தும் ஏற்படுத்தலாகாது.
உண்மையில் திருமணம் ஆன பின் கணவன், மனைவி இருவருமே தம்மை மென்மேலும் அழகுபடுத்திக் கொள்வதில் ஈடுபடலாகாது என்பதே உத்தம ஆன்ம விதி. தன்னைப் பற்றி எவர் ஆசை கொண்டாலும், அதனைக் களையும் மார்கத்தையும் அவரவரே அருளல் வேண்டும் என்ற ஆன்மீக நியதியும் முந்தைய யுகங்களில் உண்டு.
இதன் காரனமாகவும் நெடுங் காலத்திற்கு அகலிகையின் மேல் ஆசையை வளர்த்து கொண்டிருந்த இந்திரனுக்கு, அதே அகலிகையின் மூலம் நிகழும் புராண அனுபூதி மூலம் பெரும் பாடம் ஒன்றும் வந்தமைந்தாக வேண்டியும் இருந்தது.
கடல் மண் அளவிற்கு எண்ண முடியாத தொகையில் கோடிக் கணக்கான இந்திரர்கள் வந்து சென்றுள்ளதாய் சத்குரு வேங்கரடராம சுவாமிகள் எடுத்துரைப்பார். அதாவது குறித்த மலையளவு புண்ணியம் இருந்தால் எவரும் இந்திரராகி விடலாம். ஆனால் பெறுதற்கரிய இந்திர பதவியை அடைந்து விட்டு, அதன் அளப்பரிய பதவி சுகங்களை அனுபவிக்கையில், ஒரு சிறு காம எண்ணம் அல்லது துர் எண்ணம் உள்ளே நுழைந்து விட்டால்… அவ்வளவுதான்.. இந்திர பதவியே பறி போய் விடும். பலத்த சாபங்களுக்கும் ஆளாக நேரிடும்.
இதனால் பல இந்திரர்களும் சாதாரண மானுடராய் பூமிக்கு வந்து தினமும் பூத்தொடுத்து எளிமையாய் வழிபட்டுப் பரிகாரம் பெற்ற அதிஉத்தமத் தலங்களுள் ஒன்றே – அரிதினும் அரிதாய் சிம்ம பீடத்தின் மேல் குடி கொண்டருளும் திருமீயச்சூர் பெருமாள் ஆலயம். மயிலாடுதுறை – திருவாரூர் இடையே கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் செல்லும் வழியில் திருமீயச்சூர் உள்ளது. பலரும் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை மட்டும் தரிசித்து வந்து விடுகின்றார்கள். திருமீயச்சூர் சிவாலயம் அருகிலேயே சிம்ம பீட பெருமாள் ஆலயம் உள்ளது. குற்ற உணர்வுகளைக் களைந்து தக்க பரிகாரத்தை வார்க்க வல்ல பெருமாள் ஆலயம். உள்ளிருந்தே கெடுக்கும் பகமையை அகற்றி நல்வாழ்வைத் தர வல்லது.
அம்பாள் வழிபாடுதான் முறையற்ற காமத்தை முழுதுமாய் நீக்கும். இதற்குப் பூக்களின் புனிதம் அருந்துணை புரியும். பூக்களால் அர்ச்சிப்பதும், அலங்கரிப்பதும் அம்பாள் வழிபாட்டில் பிரதானம் ஆயிற்றே. பூக்களில் பூரிக்கும் நறுமணத்தின் ஆன்மசக்தியானது, துர்எண்ணங்களைப் பரிசுத்தமாக்க வல்லது.
உலக மனிதர் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் சிறிது காலமேனும் அம்பிகை வழிபாட்டைக் கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும் என்று சித்தர்களின் குருவாய் மொழியாய் உரைப்பார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆன்மீகப் பிரசங்கத்தைத் தொடங்குகையில், “சகோதர, சகோதரிகளே!” என்று விளித்த போது, அனைவரும் ஓர் உத்வேகத்தோடு தம்மையும் அறியாமல் எழுந்து நின்று கரகோஷித்தனர் என்பது உலகமே அறிந்ததே. ஆனால் இதற்காய் விவேகானந்தர் அளித்த கூடுதல் ஆன்ம விளக்கங்களைப் பலரும் அறியார். “என் உள்ளத்தில் ஒரு போதும் நான் காம எண்ணத்தை அண்ட விட்டதே கிடையாது. இதனால் மனதின் அளப்பரிய முழு ஆற்றலையும் அங்கே என்னால் பயன்படுத்த முடிந்தது!” விவேகாநந்தர் தியானத்தின் போது தன்னருகில் இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பெற்ற பிரசாதப் பூக்களை நிரவி வைத்துக் கொள்வார்.
இவ்வாறு அகலிகை கல்லாய் மாறிய புராண வைபவத்தின் பின்னனியில் கோடானு கோடி காரணங்கள் காணக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்திற்கும் தெள்ளிய பாடம் புகட்டுவதாம். இவை அனைத்தும் சித்புருடர்களின் கிரந்தங்களில் இருந்து, தக்க சித்தர்குல தீபப் பிரகாசிகையாய் குருவாய்மொழி மூலமாகவே கிட்ட பெறுவதாம். இத்தகைய அகத்திய குலதீபப் பிரகாசியே சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
ஸ்ரீராமர் தோன்றிய திரேதா யுகத்திற்கும் முந்தைய இப்புராண அனுபூதியானது, அத்தனை கோடி இந்திரர்களுக்கும், கலியுகத்தின் கோடானு கோடி மானுடர்களுக்கும் தக்க பாடம் புகட்டும் முகத்தான் இறையாணையாய் நிகழ்ந்ததாகும்.
ஒரு மாமுனி புகட்டும் பாடத்தை விட, ஒரு பதிவிரதாதேவி புகட்டும் பாடம். எந்த யுகக் காலத்தும் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது மாமுனியரின், யோகியரின், ஞானியரின் வாக்கும் கூட. எனவேதான் புனிதவதியாம் அகலிகை உள்ளிட்ட வைபவம் மூலம் இந்திர லோகத்துக்கே பெரும் பாடம் புகட்டப் பெற்றது.
பெண்ணோ, ஆணோ எவருமே தங்கள் அழகு வதனத்தைப் பற்றி ஒரு போதும் பெருமை கொள்ளலாகாது. இரு பாலாருமே அழகையோ, கல்வி மேன்மையையோ ஒரு போதும் அறிந்தோ, அறியாமலோ வெளிக் காட்டலாகாது. இதிலும் திருமணம் ஆன பின் தன்னை மென்மேலும் அழகுபடுத்திக் கொள்தல் என்பதையே முற்றிலும் இருபாலாரும் தவிர்த்து, உள்ளத்தழகாம், அகவழகாம் ஆன்மீக அழகைப் பேணுவதில்தான் கவனம் கொள்தல் வேண்டும்.
மந்திர ஜபிப்பு, விரதம், ஆழ்ந்த வழிபாடு போன்றவை “தேஜஸ்” எனும் அழகுப் பிரகாசத்தை வார்க்கும். இது மிகவும் புனிதமானது. காண்போரையும் தூய்மைப்படுத்தும்.
காரைக்கால் அம்மையாரும், ஔவைப் பிராட்டியாரும் தம் திருமேனி அழகைத் தியாகம் செய்து, பூமாதேவிக்கு அர்ப்பணித்துச் சாதாரன வடிவத்தை ஏற்று அருந்தவம் புரிந்ததை நாமறிவோம்.
எனினும் கலியில் இவ்வாறு நற்பாடத்தைச் சொல்வது எளிதுதான், கலியில் கடைபிடிப்பது கடினமே. பூக்களால் பூஜிப்பது இதனை எளிமையாக்கும். உத்தம பத்தினியரின் அனுபூதிகள் நல்வைராக்யத்தைக் கனியச் செய்யட்டும். நல்ல மன ஆற்றலைப் பேணும். இதற்காகவே மஹான்களின் வாழ்க்கைச் சரிதங்களை அடிக்கடி படித்து வர வேண்டும் என்பது.
பூக்களைக் கொண்டு தினமும் இல்லத்தில், பூஜித்து வந்தால் மனம் தானாகவே ஆன்மச் செழுமை அடையும். ஆலயங்களுக்கு தாமே குடும்பத்தில் தொடுத்த பூக்களையும், தாமே சுற்றி ஆக்கிய பூணூல்களையும் அளிப்பதும் சீரிய இறைப்பணியே. இதன் மூலம் நூற்றுக் கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் மலர்ப் பிரசாதத்தை அளிக்கும் வாய்ப்பு கிட்டும் அல்லவா. இதுவும் தியாகமயச் சேவையே.
தற்காலத்தில் கலியுகத்தின் ஆபாசமான ஆடைக் குறைப்புகள் எவரையும் மோகம் அடையச் செய்யும் வண்ணம் நடைமுறையில் ஆகி வந்து முறையற்ற காமத்தை தினமுமே உலகச் சமுதாயத்தில் விளைய்ச் செய்யும் வகையில் விட்டனவே, என் செய்ய?
இத்தகையக் கலியுகத் தீமைகளை தீர்க தரிசனமாய் முன் கூட்டியே அறிந்த மஹான்களும் இதற்கான அரிய தீர்வுகளை நல்கித்தான் உள்ளனர். ஆனால் இவற்றைக் கடைபிடித்து வந்தால்தானே ஐயா உலகில் காமப் பாவ செயல்கள் தணியும்
ஆலயங்களில் அம்பிகை, அம்மனுக்கு – முற்றிலும் பூக்களால் ஆன – பூப்பாவாடை சார்த்துதல், பூச்சொரியல் எனும் புனிதமான வைபவங்களை – ஆயிரக் கணக்கான புஷ்பங்களை அம்மனுக்குச் சார்த்தி வழிபடும் உத்சவங்களை – யானைக்கான கஜபூஜை, பசுவிற்கான கோபூஜை போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்தி வருவதும் இதற்கான தக்க ஆன்மீக தீர்வுகளில் ஒன்றாகும்
உத்தம லோகங்களில் பத்னியரை, பத்தினி தெய்வமாகவே கொள்வர், பத்தினிகள் தெய்வ லோகங்களில் தினமும் தெய்வ மூர்த்திகள் நடந்து சென்று சென்று உள்அமரும் மூலத்தானப் படிக்கட்டுக்களாகப் பதிவர். இதனைப் “பத்தினிக் கல்” என்றும் அழைப்பர். கிராமப் புறங்களில் இத்தகைய “பத்தினிக்கல்” வழிபாடு இன்றும் உண்டு.
திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் நிகழ்கின்றதே, இதுவும் பத்னிக்கல் வழிபாட்டு முறைதான்.
இங்கு அம்மி என்பது பத்தினிக் கல் அம்சம் ஆகும் என்பதைப் பலரும் அறியார். அம்மி புனிதமான சாதனம் ஆயிற்றே, இதன் மேல் கால் வைக்கலாகுமா?
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தலில் திளைக்கும் ஆன்ம வழிபாடு யாதெனில்…
அகலிகை போன்ற பத்னி தெய்வங்கள் உறையும் கல்லை உள்ளங் காலால் ஸ்பரிசித்து, வானில் தலையை உயர்த்தி அங்கும் பத்னி (நட்சத்திர)க் கல்லை தரிசித்து, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைப் புனிதப் பிரகாசம் நிறைந்து ஆற்றும் உத்தம பூஜை இது.
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை நல்ஒழுக்கம், நற்பண்பு, நற்குணங்களுடன் உத்தமப் பதிவிரதையாய்த் திகழ வேண்டும் என்று வேண்டிப் பிராத்திப்பதானது.
மறு ஜன்மத்தில் மனிதராய்ப் பிறப்பதை விட, ஆலய வாசலில் கல் படிகளாய்க் கிடந்து, இறையடியார்களின் திருப்பாதங்கள், பாத தூசிகள், பாதத் துளிகள் தன் மேல் தினமும் பட வேண்டும், இதுவே உய்வு தருவது என்று ஏங்கி இறைவனிடம் வரம் பெற்றுக் கோயிலில் படிக்கற்களாய்க் கிடப்போர் எத்தனை, எத்தனை?
பண்டரீபுரத்தின் ஒரு கோயில் வாசல்படியின் அடியில் நாமதேவர் எனும் உத்தம கிருஷ்ண பக்த மஹான் தன் திருமேனியை பதித்துக் கொண்டுள்ளார். இங்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை தரிசிக்க வரும் லட்சக் கணக்கான கிருஷ்ண தரிசிகளின் புனிதமான திருவடிகள் தன் உடலில் பட்டு, மிதித்து செல்ல வேண்டும் என்ற காரணத்தால். இத்தகைய தியாகமயச் சித்தத்தால்தான் நாமதேவர் போன்ற மஹான்கள் “என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாய்” நான்கு யுகங்களிலும் பிரகாசிக்கின்றனர். என்பார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
வானில் நட்சத்திரங்களாய்ப் பிரகாசிக்கும் அருந்ததி வசிஷ்டர் மாமுனி தம்பதியரை பகலிலேயே தக்க சான்றோரின் நல்வழி காட்டுதல் மூலம் தரிசித்து, உத்தமப் பதிகளாய் தம்பதியர் இருவருமே சிறக்க, இந்த (பத்னிக்கல்லாம்) அம்மி(யை) மிதித்து அருந்ததி (நட்சத்திரத்தைப்) பார்க்கும் திவ்யமான வழிபாடு உதவிடும்.
இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் கல் வடிவத்தில் முனிபீடம், அம்மன் பீடம் இருப்பதை தரிசிக்கலாம். மஞ்சக்குடி அஞ்சேல் என்ற பெருமாள் ஆலயத்திலும் முனிபீடக் கல் பன்னெடுங் காலமாய் உள்ளது.
பத்தினிக்கல் வழிபாட்டில் அதிஉத்தமப் பத்னியரை தெய்வம் போல் அதாவது சிலை வடிவில் பத்னிக் கல்லாய் வழிபடுகின்றோம். இத்தகையப் பத்னிக்கல்லில் பூக்களை இட்டு வழிபடுதல் பரிசுத்தத்திற்குப் பூக்கள் பெரிதும் உதவுவதைக் குறிப்பதாம். பதிவிரதையாம் கண்ணகியை பத்னிக் கல் வடிவில் வழிபடும் வழக்கமும் தெய்வத் தமிழ் திருநாட்டில் உண்டே.
பத்னிக்கல் பீடத்தை, தெய்வச் சாயல் என்றும் போற்றுவர். இவ்வாறு பத்னியரை பத்னிக்கல் வடிவில், அதாவது சிலா பீட வடிவில் போற்று வழிபாடு தோன்றிய புண்ணிய பூமியே பனஞ்சாயல் என்ற புனிதமான கிராமம் ஆகும்.
தேவகோட்டை – வெள்ளையபுரம் – ஒக்கூர் – திருப்புவனவாசல் பகுதியில் பனஞ்சாயல் உள்ளது.
பனஞ்சாயல் கிராமத்தில் சிலைகட்டி அம்மனாய் வழிபடப் பெறும் வடிவற்ற அம்மன் பூமிதான் பத்தினிக் கல்லாய்ப் பதிவிரதைகளின் வழிபாட்டைப் பூவுலகிற்கு அளித்த மூலமுதல் அம்மன் தலம் ஆகும். கல்யாண மீனாக்ஷியாகவும் புனிதமான பத்னிப் பீட்த்தை போற்றி வணங்குவர்.
பன்னெடுங் காலம் கல்லாய்க் கிடந்த அகலிகை தேவி, ஸ்ரீராமரின் திருப்பாத தரிசனத்தால் அகலிகையாய் மானுட வடிவு கொண்ட பின்னர், அந்தப் பத்னிக் கல் பனஞ்சாயல் கிராமத்தில் கௌதம மஹரிஷியாலேயே பூமியடியில் பிரதிஷ்டை செய்யப் பெற்றது. கண்ணுக்குப் புலப்படாத பத்னிக்கல் பீடமிது. இதனையே பூமியடிப் பீடமாய்க் கொண்டு சிலைகட்டி அம்மன் தோன்றி இருப்பதாய் ஐதீகம்
ஸ்ரீராமரின் புனிதமான திருவடிகள் பட்ட பீடமாதலின், இங்கு கௌதம மாமுனியும், அகலிகையும் பனஞ்சாயல் கிராமத்தின் சிலைகட்டி அம்மனை அரிதினும் அரிய பனம் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டு உள்ளனர். பிரபஞ்சத்தின் அத்தனைக் கோடி மாமுனி பத்தினிகளும், பிதுர் பத்தினிகளும் வழிபடும் உத்தமத் தலம் பனஞ்சாயல் கிராமம். இங்கு நறுமணமுள்ள பூக்களைப் படைத்து வழிபடுவது குடும்பத்தில் மகத்தான ஒற்றுமையைப் பேணிக் காத்து ரட்சிப்பதாகும். இங்கிருந்துதான் கௌதம மஹரிஷியும், அகலிகையும் பூக்களின் புனிதங்களைப் பற்றி உலகிற்கு எடுத்தியம்பத் துவங்கினர்.
எனவே உத்தம பத்தினியராய் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் போற்றப் பெறும் வண்ணம் பதிவிரதையாய் வாழ்ந்து சிறந்த பிரகாசிக்க விழைவோர், பனஞ்சாயல் தலத்தில் சிலைகட்டி அம்மனை செவ்வாய், வெள்ளி, சப்தமி நாட்களில் கிட்டுகின்ற நறுமணப் பூக்கள் அனைத்தையும் கொணர்ந்து பூசனை செய்து வழிபட்டு வருதல் வேண்டும். அரிதினும் அரிய பனம் பூக்களால் வழிபடுவதும், பனம்பழத்தைப் படைப்பதும் வழிபாடுதனை மிகவும் சக்தி வாய்ந்ததாக்கும்.
தஞ்சாவூர் பசுபதிகோயில் அருகே உள்ள சக்கரமங்கை (சக்கரப்பள்ளி), அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை (நல்லிச்சேரி), பசுமங்கை (கள்ளர் பசுபதிகோயில்), தாழமங்கை, புள்ளமங்கை (பசுபதிகோயில்) ஆகிய ஏழு சப்தமங்கைத் தலங்கள் போன்று மங்கையர் குலத்திற்கான உத்தம வழிபாட்டுத் தலங்களுள் பனஞ்சாயல் சிலைகட்டி அம்மன் ஆலய பூமியும் ஒன்று

கோபுரம் கட்டி கல் வழிபாடு

தற்காலத்தில் அருணாசல கிரிவலம், மற்றும் ஆலய வழிபாட்டுகளில், பாதயாத்திரைகளில் வழியெங்கும் பக்தர்கள் சிறு கற்களைக் குவித்து குழந்தைகள் போல் சின்னஞ் சிறுமாடம், சின்னஞ்சிறு கோபுரம் கட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதற்குப் பத்தினிக்கல் கோபுரம் அல்லது பத்தினிக் கல் பீட வழிபாடு என்றே பெயர்.
தொன்மையான இந்தப் பத்தினிக் கல் வழிபாடு அறிந்தும், அறியாமலும் தற்போது மீண்டும் எண்ணற்ற தலங்களில் புனரமைப்பைப் பெற்று வருவதும் மகிழ்ச்சி தருவதே. ஸ்ரீ ராமர் காலத்திற்கு முந்தைய காலத்திருந்தே பத்னிக்கல் வழிபாடு பூவுலகில் நிலவி வருவதாகும். கௌதம மாமுனி – அகலிகை மஹரிஷி தம்பதியரால் மீண்டும் நடைமுறை ஆக்கப் பெற்ற உத்தம வழிபாடு.
அந்தந்த ஆன்ம பூமிக்கு உரிய சிறு கற்களைக் கொண்டு சிறு பீடம், சிறு கோபுரம் ஆக்கி வைக்கும் இவ்வரிய வடிவிற்குப் பத்னிக்கல் பீடம் அல்லது பத்னிக்கல் மாடம் என்று பெயர். புனிதமான இல்லறம், சிறந்த இல்லம் அமைவதற்கான வழிபாடாய் இந்தப் பத்னிக்கல் வழிபாடு ஏற்பட்டது. வாஸ்து சாத்திரப்படி ஆலயங்களில் மூலக்கல்லும் (corner stone), இல்லங்களில் அஸ்திவாரக் கல்லும் இதன் வகைப்படி அமைவதே.

கோபுரக்கல் வழிபாடு
திருப்புன்கூர்

இவ்வாறாய், திருமணச் சடங்கில் அமையும் புனிதமான அம்மிச் சடங்கானது பத்னிக் கல் வழிபாடுமாயும் ஆகிறது. உத்தம ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் திருத்தலங்களுக்கான மலைப் பாதையில் அல்லது பாதயாத்திரை வழியில் கல்லாய்க் கிடப்பதையே வைகுண்டம், திருக்கயிலாயம் போல் கருதி கொண்டு கிடப்பார்களாம்.
இவ்வாறாய் பத்னிக் கல் வழிபாடினைப் பூமியில் மீண்டும் புனரமைக்கும் வகையில் அகலிகை தேவி, பௌர்ணமி தோறும் முல்லை மலர்களால் கோமதி அம்பிகையைப் பூஜித்து வந்தமையால் – பத்தினி தெய்வங்களையும் கை கூப்பி வணங்கி வந்த ஸ்ரீராமரின் திருப்பாதம் படுதல் – என்ற பெறுதற்கரிய பாக்கியத்தையும் பெற்றாள்.
ராமாவதாரத்திற்கு முந்தையதாய், எத்தனையோ பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மூத்த கல்லாய்க் கிடந்து வந்தனள் அகலிகை. இதனால்தான் அகல்யா தேவியின் பதிவிரதாத் தன்மையைப் போற்றும் பதிகங்கள் ‘மூத்த கற்பதிகம்’ என்றே போற்றப் பெறும். நாயன்மார்களுக்கெல்லாம் மூத்தவரான காரைக்கால் அம்மையாரின் திவ்யமான தேவார பாசுரங்களை “மூத்த திருவந்தாதி” என்று போற்றுமாப் போல.
இவ்வாறாய் அகலிகை சாபம் பெற்றுக் கல் ஆகினள் என்பதன் புனிதமான தாத்பர்யம். “மூத்த பத்னிக் கல்” தெய்வமாயும் ஆயினள் என்பதே. இதுவே இந்த புராண அனுபூதியின்பால் ஒளிரும் மகத்தான, தலையாய தெய்வத்வம். இதனை நன்கு புரிந்து கொண்டால், ‘அகலிகை ஏன் கல்லாகும் சாபம் பெற்றனள்’ என்ற வினாவே ஒருகாலும் எழாது.
ஸ்ரீராமரின் திருப்பாத தூளி பட்டவுடன் சாபம் தீர்ந்து, அகலிகை கௌதமரைச் சார்ந்தாள். தவறு செய்திருந்தால் ஏகபத்னி விரதமான ஸ்ரீராமரினி புனிதமான பாதம் படுமா?
அகலிகை மாதாவை, பஞ்சபத்னி மாதாக்களில் ஒருவராய் வைத்து, “ஐஞ்சுடர் முனிபத்னிகளில்’ ஒருவராய் சிறப்பித்துப் போற்றி வரும் கண்ணபிரானின் திருவாசகமாய் பொலிந்து பிரகாசிக்கும் கீழ்க் கண்ட பழமையான துதி ஒன்றில், அகலிகை தேவியின் பெயர் முன்னே வருவது இங்கு தெய்வீகச் சிறப்புடன் குறிப்புடன் குறிப்பிட வல்லதாம்.
பஞ்சமாதா ஸ்தோத்திரம்
“அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரே நித்யம் மஹாபாதக நாசனம்”
-என்ற பரமானந்தத் துதியுடன் மகாபாரதத்தில் கண்ணனால் பஞ்ச பதிவிரதா தேவிகளில் முதலாவதாக வைக்கப்பட்டு வணங்கப்படுபவள் அகலிகை தேவி ஆவார். (அகலிகை மாதா, திரௌபதி தேவி, சீதா தேவி, தாரா தேவி, மண்டோதரி தேவி – ஆகிய பஞ்ச பதிவிரதா மாதாக்கள்)
எனவே உலகெங்கும் மகளிர் குலத்தால் பெரிதும் ஜபிக்கப் பெற்று வரும் இந்தத் துதியில் முதல் பெயராக வைத்து மூத்த பதிவிரதை என்று போற்றப்படும் அகலிகை, இத்தகைய தெய்வத்வ உயரிய நிலை பெறக் காரணம், கோமதி அம்பிகைக்கு முல்லை மலர்ப் பூக்களைத் தொடுத்துச் சார்த்திய பூசனையின் மஹிமை என்றே அகஸ்தியர் போற்றுகின்றார்.

பூக்கள் வாங்க நியதிகள்

தொங்கும் முந்தானையுடன் பெண்கள் பூவை வாங்குதல், பறித்தல், சூடுதல் கூடாது. அடக்கம், பணிவு போன்ற பவித்ரமான குணங்களை அடைவதற்கு முந்தானை பவித்ரமாய் உதவும் வஸ்திரப் பகுதியாகும்
இதனால்தான் ஆலயங்களில் புனிதமான தீர்த்தத்தைப் பெறுகையில், ஆணும், பெண்ணும் பணிவாய்க் குனிந்து, இடது உள்ளங்கை மேல் வேட்டியின் நுனி அல்லது புடவையின் முந்தானையை வைத்து, அதன் மேல் வலது உள்ளங் கையை வைத்து தீர்த்தத்தைப் பெற்று அருந்துவர்.
புதுக்கோட்டை – ஆவுடையார் கோயில் அருகே உள்ள மீமிசல் ஸ்ரீகல்யாண ராமர் ஆலயத்தில் கணவனின் வேட்டி நுனியையும், மனைவியின் முந்தானையையும் பிணைத்து இருவரும் சிவா – விஷ்ணு ஆலயங்களை வலம் வரும் மகத்தான வழிபாடு, குடும்பச் சாந்தத்திற்கு உதவுவதாய்த் துலங்குகின்றது.
ஸ்ரீராமர் – சீதா பிராட்டி தெய்வ தம்பதியரால் இத்தலத்தில் இந்தப் புனிதமான முந்தானை முடிச்சு வழிபாடு துவங்கி வைக்கப் பெற்றதாகும். இவ்வாறு வழிபாடு வந்திடில் தம்பதியர் இடையே நல்ல சுமுகம் ஏற்பட்டு இல்லறத்தில் மனவேறுபாடுகள் முற்றிலுமாய் அகன்று சாந்தம் கொழிக்கலாகும்.
பெண்களுக்கு ஒரு போதும், முந்தானை தரையில் தொங்கிடலாகாது, முந்தானை பவ்யமாய் உடலைச் சுற்றி இருப்பதே பவித்ரமானது. முந்தானை தொங்கி இருத்தல் பலத்த அசுபமான தோஷங்களைத் தரும். இதில் புண்ணிய விரயம் உண்டாகும். கடுந்தோஷங்கள் பற்றி வரும்.
ஒரு முழ நீள அளவிற்கு முந்தானை கீழே தொங்கினால், கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்காது.
இரண்டு முழ நீள அளவிற்கு முந்தானை கீழே தொங்கினால், நெருப்பினால் கண்டம் உண்டாகும்.
மூன்று முழு நீள அளவிற்கு முந்தானை கீழே தொங்கினால், விரும்பி மணந்தவரையே கை விட வேண்டிய விதியாகி விடும்.
பாதம் வரை முந்தானை கீழே தொங்கினால், பிறந்த இடமும் இல்லாமல், புகுந்த இடமும் இல்லாமல் அவதியுற நேரிடும்.
நெற்றியில் குங்குமத் திலகம் சூட்டிய சுமங்கலிகளிடம் பூ வாங்குதல் உத்தமம். பூ விற்போர் ஆண் குலத்தாராயின் விபூதி, நாமம் போன்று நெற்றிச் சின்னம் இட்டவரிடம் பூ வாங்குதல் வேண்டும்.
பிறப்பையும், இறப்பையும், இறைவன் மறை பொருளாகவே வைத்துள்ளான். இதுவும் நன்மைக்கே. பூக்களுக்கு இதன் ரகசியத்தை உணர்விக்கும் தெய்வத்வம் உண்டு. ஆனால் பூக்களின் புனிதங்கள் பற்றிய திவ்யமான ஞானம் உள்ளோர்க்கே தக்க சத்குரு மூலம் இது கிட்டும்.
பூக்களின் புனிதத்திற்கு நல்லதையும் எதிர்காலத்தையும் உணர்விக்கும் தீர்க தரிசனம் உண்டு. இதனால்தான் ஒரு காரியத்தை நடத்தலாமா இல்லையா என்பதற்கான “பூப்போட்டு பார்க்கும்” ஆன்மீக வழிமுறையும் தொன்று தொட்டுத் தோன்றியது. ஆனால் கண்டதற்கெல்லாம், சகட்டு மேனிக்கு இந்த முறையை பயன்படுத்தலாகாது.
மேலும் பூப்போட்டுப் பார்ப்பதால், அதன்படி கிட்டும் முடிவை மனதார ஏற்கும் பக்குவம் கனிந்தால்தான் இதனை கடைபிடிக்க வேண்டும். பூவை எடுப்போரும் கள்ளங் கபடமற்ற சாந்த பூஷணராய் இருக்க வேண்டும். இதனால்தான் கள்ளங் கபடமற்ற குழந்தைகளை வைத்து பூவை எடுப்பர்.
குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வேண்டி, ஆலயங்களில் மட்டுமே இதனை கடைபிடிக்க வேண்டும். பலரும் அறியும்படி இதனைச் செய்தலாகாது.
இம்முறையில் ஏதேனும் ஒரு முடிவு கிட்டி, அது ஏற்று வராததால் விட்டு விடுவது என்றால், இம்முறை ஒரு போதும் பலன் தராது. ஆழ்ந்த நம்பிக்கை இதில் மிக மிக அவசியம்.
உலகெங்கும் இறைநாமம் ஓதிட ஓதிடத்தான் பூக்களின் எண்ணிக்கைப் பூவுலகில் பெருகும். இதனால்தான் தெய்வங்களின் பெயர்களை “நாமப்பூ, நாமாட்சரப் புஷ்பம்” என்பார்கள். “ஓம் நமசிவாய” என்று ஓதி ஒரு பூவை இட்டால், இதில் அட்சர சக்தியும், ஒலி சக்தியும் இணைந்து ஆங்கே நாமச்சுடர் ஒன்று எழும். இதனை நாமாவளிச் சுடர், நாமஜோதி என்றும் போற்றுவர்.
இவ்வாறு பூவுலகில் ஒரு கோடி முறை ராமநாமத்தை ஒலித்தால், ராமநாமத்தை எழுதினால் உடனேயே அதியற்புதமாய் “ராமஜோதி” தோன்றி உலக ஜீவன்களுக்கு காப்பு ரட்சையாய் நிற்கும் என்பது தசாவதார மூர்த்திகள் படைத்த நியதி. ராமநாம ஜபத்திற்கு அவ்வளவு புனிதமான தெய்வீக சக்தி.
இத்தகைய ராமஜோதிகளின் பால் தோன்றியதே ராமபாணப் பூ. ஆம், இந்தப் பூ, ராமஜோதியில் விளைந்ததே. தற்போது எளிதில் கிட்டுவது. பிட்சி பூ என்றும் போற்றுவர். ஸ்ரீராமர் பிட்சிப் பூவால் ஸ்ரீ பிட்சீஸ்வரருக்குச் சிவபூஜை ஆற்றிய தலம் மாமண்டூர். சென்னை – செங்கல்பட்டு அருகே மாமண்டூர் உள்ளது. இத்தலத்தில்தான் பிட்சி பூ, ராமபாணப் பூவாய் ஆயிற்று.
ராமேஸ்வரத்தில் சீதை வடித்துத் தந்த சிவலிங்கத்தை ஸ்ரீராமர் பிரதிட்டை செய்து பூசிக்கையில் எழுந்த சிவராம ஜோதியில்தான முதலில் புஷ்பித்தது.
பாணம் என்றால் ஆயுதம் மட்டுமல்ல. மன்மத தேவர் பூக்களை பாணமாக எய்திடில், ஆங்கே புத்திர சந்தான பாக்கியம் கிட்டும் அல்லவா. பூ பாணம் என்றால் பூக்களால் அர்ச்சிப்பது.
மல்லிகைப் புஷ்பத்தின் மகத்துவத்தை ஒரு மஹாபாரதப் புராண சம்பவம் மூலம் இருடிகள் பாரதம் விளக்குவதை மீண்டும் காண்போம். சத்குரு வெங்கடராம சுவாமிகள் எடுத்தியம்பியது.
கௌரவர்களின் அவை….. துரியோதனன் முன்னிருக்க…. பீஷ்மர், துரோனர், விதுரர் முதலியோரும் அமர்ந்திருக்கின்றனர்.
துரியோதனன், “பெரியோர்களே! பாண்டவர்களுக்கு எதிராகப் போர் தொடங்க நிச்சயித்து விட்டேன். ஆனால் படை திரட்டுவதற்க்கு முன், கண்ணனைப் பார்த்து வரலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் விருப்பத்தைக் கேட்கவும் ஆவலாக உள்ளேன். நீங்கள் தாராளமாக எதனையும் எடுத்துக் கூறலாம்!” என்றான்.
பீஷ்மர், விதுரரும் துரியோதனன், கண்ணபிரானைச் சந்தித்து ஆசி பெறுவதை கேட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டாலாவது துரியோதனனின் மனம் நல்லபடியாக மாறாதா என்று அப்பெரியோர்கள் எண்ணினர். துரோணரும், கிருபரும் இதனை ஆமோதித்தனர்.
ஆனால் சகுனி மட்டும் முதலில் ஒன்றும் கூறவில்லை. “தான் துரியோதனின் பக்கத்தில் எப்போதும் வீற்றிருப்பவன், தன்னிடம் கேட்கும் போது பதில் கூறலாம்” என்ற மமதையில் சற்றே நிதானித்தான். அனைவருடைய ஆமோதிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்று கொண்ட துரியோதனன் சகுனியிடம் திரும்புகின்றான். சகுனி பதிலேதும் கூறவில்லை.
சபையைக் கலைத்து விட்டு துரியோதனன் அரியணையில் இருந்து இறங்குகையில் சகுனி, “துரியோதனா! என்னைத் தனிமையில் சந்தித்திடு. உன்னிடம் இது பற்றி முக்கியமான விஷயம் கூற வேண்டும்” என்றான். கோபத்தோடு, நேராக தன் அரண்மனைக்கு சென்று விட்டான் என்றாலும் இறுதியில் சகுனியின் கருத்தையும் கேட்க விரும்பி அங்கு சென்றான்.
சகுனி துரியோதனனுக்கு என ஓர் உயர்ந்த ஆசனம் அமைத்திருந்தான். அதில் அவன் அமர… சகுனி தனக்கு துரியோதனின் காலளவு மட்டத்தில் படு கீழே மற்றோரு ஆசனத்தில் அமைத்து அமர்ந்து கொண்டான். சகுனி, எண்ணியபடியே துரியோதனன் தன் முன்னிருந்த ஆசனங்களில் வேற்றுமையை எண்ணி, தனக்கு அதிக மதிப்பும் கௌரவமும் தரும் சகுனியில் மேல் பெருமதிப்பு கொண்டான். இப்படியாய் சகுனி விதைத்த தீய திட்டமே பூ(ரி)த்து ஆங்கே விளையலாயிற்று.
சகுனி பேசினான். “துரியோதனா!  நீ போருக்குப் படை திரட்டும் முன் கண்ணனைப் பார்த்து வர இருப்பதாய் உன் அபிப்பிராயத்தை கூறினாய். சபையில் அனைவரும் ஆமோதித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் உன் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் நடிப்பவர்கள். அவர்கள் உண்மையில் அக்கறை உள்ளவர்கல் அல்லர். அல்லும் பகலும் உன் நலனையே கருதும் நான், அவர்கள் முன் சொல்லும் சொல் எதுவும் எடுபடாமல் போகும். எனவே உன் நலம் கருதி தனிமையில் சந்திக்கச் சொன்னேன். மேலும் நான் சொல்வது மிகவும் ரகசியமானது. வேறு எவருக்கும் தெரியக் கூடாது.” என்று பீடிகை போட்டுப் பேசலானான்.
”துரியோதனா! பாண்டவர்களுடன் போர் செய்வது என்று நீ எடுத்த முடிவு சரியானதே. அதிலும் கிருஷ்ணனை அதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அறிவுடைய செயல். ஆனால் நான் குறித்துத் தரும் நாளில் நீ கண்ணனைப் பார்த்து ஆசி பெற்று வா!”
சகுனியிடம் வேறு எதையோ பெரிதாய் எதிர்பார்த்த துரியோதனன், “ஏன், நாள் குறிக்க நாட்டில் ஜோதிடர்களா இல்லை!” என்று நகைத்தான்.
“உண்மையாக உன் நலனில் அக்கறை கொண்டவர்களே உனக்கு நல்ல நாள் குறித்து தர முடியும். சபையில் உள்ளவர்களை நம்பாதே!” என்று சொல்லித் தான் தயாராகக் குறித்து வைத்திருந்த நாட்களைக் கூறினான்.
சிறிது மௌனமாக மனதிற்குள் கணக்கிட்ட துரியோதனன், அதில் தனக்கான சந்திராஷ்டம நாளும் வந்து விட்டதைக் கண்டு கோபத்துடன் எழுந்தான்.
“சகுனி மாமா! எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்குத் தீமை தரும் சந்திராஷ்டம தினங்களைக் குறித்துத் தருவீர்கள்! உண்மையில் என்மேல் அக்கறை கொண்டவரா நீங்கள்?”
சகுனி,  “துரியோதனா! சந்திராஷ்டமம் என்று தெரிந்துதான் குறித்துள்ளேன்.சந்திராஷ்டமம் நன்மை தராது என்று பொருளல்ல. அந்நாளில் நீ கேட்கும் வரத்தில்தான் சாமர்த்தியம் வேண்டும். நீ கண்ணனிடம் நான் கூறும் இரண்டு வரங்களைக் கேள்!” என்றான்.
“இதற்கு முன் ஒன்றைத் தெரிந்து கொள். சிசுபாலன் பிறந்த சமயம், அவன் தாய் அனைவரையும் அழைத்துக் குழந்தையை காண்பிக்கின்றாள், ஏன் தெரியுமா?”
”சிசுபாலன் பிறக்கையில் அவனுக்கு நான்கு கைகள் இருந்தன. எவர் இக்குழந்தையைப் பார்க்கும் போது, கூடுதலான இரண்டு கைகளும் மறைகின்றனவோ, அவரால்தான் சிசுபாலனுக்கு மரணம் என்பது நியதி. எனவே இதனைச் சாமர்த்தியமாய் அறிந்து கொள்ளவே ஒவ்வொருவரையும் குழந்தையைத் தூக்க செய்கின்றாள் சிசுபாலனின் தாய். உறவுக்காரனாக கண்ணபிரானும் அப்போது அங்கு வந்திருந்தான்.”
அனைவரும் குழந்தையைத் தூக்கிப் பார்த்தனர். கண்ணன் மட்டுமே பாக்கி.
“கண்ணா குழந்தையைத் தூக்கு,” என்கிறாள்.
“இல்லை அத்தை! வேறொரு நாள் ஆகட்டும்!”என்று சொல்லி பார்த்தார் கிருஷ்ணன்.
“கண்ணு! இன்று நீ குழந்தையை தூக்கித்தான் ஆக வேண்டும்!”
”அத்தை! இன்று இக்குழந்தைக்கு சந்திராஷ்டமம், வேறொரு சமயம் பார்க்கலாம்” என்று கண்ணன் கூறி முடிப்பதற்குள், “இல்லை கண்ணா! என் மனத் திருப்திக்காக இன்று நீ தூக்கத்தான் வேண்டும், நீ என்ன இக்குழந்தைக்கு எதிரியா என்ன?”
“அத்தை! இனி விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு” என்று சொல்லியவாறே கண்ணன் குழந்தையைப் பின் பக்கமாகச் சென்று தூக்குகின்றான். கிருஷ்ணர் தன்னைத் தொட்டவுடனேயே, ஜென்மாந்திரப் பகைமையால் அக்குழந்தையாம் சிசுபாலன் இரண்டு கைகளாலும் கண்ணனைக் குத்த வருகின்றது. இதனை அறிந்தே கண்ணன் பின் பக்கத்திலிருந்து குழந்தையைத் தூக்கினான்” என்றான் சகுனி.
”இதற்கும் சந்திராஷ்டமத்தில் நான் கண்ணனைப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்றான் துரியோதனன்.
”இல்லை துரியோதனா! சிசுபாலன் மரணம் கண்ணனால் அல்ல, அவனுடைய தாயினால்தான்.”
“கண்ணன் தூக்கியவுடன் குழந்தையின் இரண்டு பின்பக்கக் கைகளும் மறைந்தன. உடனே அழத் தொடங்கிய சிசுபாலனின் தாய், கண்ணனால்தான் தன் குழந்தைக்கு மரணம் என்று உணர்ந்து கொண்டு விட்டாள்.
“குழந்தை மீது பாசம் கொண்ட தாய் என்ன செய்திருக்க வேண்டும்? கண்ணா என் மகனை நீ கொல்லக் கூடாது என்றல்லவா வரம் கேட்டிருக்க வேண்டும், ஆனால் அவள் அவ்வாறு கேட்கவில்லையே! கண்ணா! என் மகனின் நூறு பிழைகளைப் பொறுப்பாய்,” என்றல்லவா வரம் கேட்டாள்” – என்று சகுனி திட்டப்படியே பேசலானான்.
“நூறுக்கு மேல் தன் மகன் பிழை செய்ய மாட்டான் என்று நினைத்தாளோ இல்லை, நூற்றுக்கு மேல் பிழை செய்த பின் அவன் தன் மகனில்லை என்று நினைத்தாளோ தெரியவில்லை. அவள் கேட்ட வரத்தினாலேயே அவள் குழந்தைக்கு மரணம். ஆகையால் துரியோதனா நீயும் அவ்வாறு செய்து விடாதே! கண்ணனால் தான் உனக்குப் பேராபத்து. எனவே நீ கேட்கும் முதல் வரத்தால் கண்ணன் எவ்வித ஆயுதம் தாங்கி போர் செய்ய கூடாது என்றும் இரண்டாவது வரத்தால் அவனுடைய படை முழுவதும் உன்னிடம் வந்து விட வேண்டும் என்றும் கேள்!”
”தன் படையும் இன்றி, ஆயுதம் இன்றி கண்ணனால் உன்னை ஒருகாலும் வெல்ல முடியாது. இவ்வாறு இரு வரங்கள் பெற்று வா. வெற்றி உன் பக்கமே! என்றான் சகுனி.
சந்திராஷ்டமம் என்று தெரிந்தும் சகுனியின் தூண்டுதலினால் துரியோதனன் கண்ணனைப் பார்த்தான். இதன் விளைவுகள் நீங்கள் அறிந்ததே.
சந்திராஷ்டமம் தினங்களில் சந்திர கிரகத்துக்கு உரிய உளுந்து தானியம் சேர்ந்த வடைகளைப் பசுக்களுக்கு அளித்தல், சந்திர ஒளியில் மலரும் பூக்களால் வழிபடுதல், மூன்றாம் பிறை தரிசனம் போன்றவற்றைக் கைக்கொள்தல் நன்று.
சந்திராஷ்டம தினத்தில்தான் அலுவலகப் பணிகள் அரசுப் பணிகள், தேர்வுகள், இண்டர்வ்யூ, பயணங்கள் போன்றவை தவிர்க்க முடியாததாய் கலியில் வந்து சேர்ந்து விடும். இந்நிலையில் அந்தந்தக் காரியம் அல்லது பயணத்திற்கோ முன்போ, பின்போ நிலாத்துண்டத் திங்கள் பெருமாள் (காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்), தலைச்சங்காடு நாண்மதியம், சந்திரசேகரர், ஒளிமதி, மகிமாலை, சந்திரமௌலீஸ்வரர், போன்ற சந்திர சக்தித் தலங்கள், சந்திர மூர்த்தி வழிபட்ட இறைத் தலங்களில் உளுந்து வகைப் பண்டங்களைப் படைத்து வழிபட்டுப் பசுக்களுக்கு அளித்தல் நன்று.

பூக்களின் சகுனங்கள்

சகுனத்தை அறிவதிலும் புஷ்பம் பயன்படுகிறது
சுவாமிக்கு அணிவிப்பதற்காக எதிரில் ஒருவர் மாலை கொண்டு வந்தால் – அது காரிய சித்தி – சுப சகுனம்.
மனிதர்களுக்கு போடுவதற்காக பூ மாலை ஏந்தி ஒருவர் எதிர் வந்தால், பணத்தினால்தான் காரியசித்தி என்பதனை அறியலாம்.
மகான்களுக்கு அணிவிக்க எதிரில் மாலையுடன் வந்தால், கடன் தொல்லை தீரும், பிறவி கடன், திருமணக் கடன் கூடத் தீர்ந்து விடும்.
பிரேதத்திற்கு அணிவிக்க மாலையுடன் எதிர் வந்தால் கெட்ட சகுனம், காரிய தடங்கல். அன்று வெளியில் செல்லலாகாது.
பூக்களிடம் இருந்து அறிய வேண்டியன
மல்லிகை தான் இருக்கும் இடத்தை சுகந்த நறுமணத்துடன் வைத்து கொள்ளும். பூலோகத்தில் மல்லிகைப் பூ இருந்தாலும், அதற்கான நறுமணம் யாவும் விண்ணுலகப் புஷ்ப லோகத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கும்.
மல்லிகையைப் போலவே மனிதர்களும் தாங்கள் இருக்கும் இடத்தை எப்போதும் பூக்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றுடன் நல்வாசனையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். துர்மணம் இருக்க கூடாது. இதன் காரணமாய்த்தான் மானுடர்கள் தலையிலோ, காதிலோ, பையிலோ, கையிலோ எப்போதும் மலர்களை வைத்திருக்கும் புனித பண்பாடு ஏற்பட்டது.
ஒரு மல்லிகைச் செடியோ, கொடியோ தானிருக்கும் இடத்தில் இவ்வளவு நறுமணத்தை நிரவி உலகிற்குத் தியாகமயமாய் நிரவித் தருவதென்றால், மனிதன் மலர்களிடம் இருந்து எவ்வளவு விஷயங்களை, தியாகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதன் புனிதமான பூச்செடிகளிடம் அவ்வபோது பேசியும் வர வேண்டும். மனதுக்கு ஆறுதலாயும் இருக்கும்.
யார் வந்தாலும் எவ்வித பேதமும் இன்றி மலர்கள் நறுமணம் கொடுக்கும். இதுவே மலர்களின் தான, தர்மம். மலர்கள் தங்கள் மணத்தின் மூலம் புகட்டும் பாடத்தில் இதுவும் ஒன்று.
இவ்வாறு நிறைய பாடங்களை மனித குலம் புஷ்பங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகவே மனிதன் பூக்களிடம் நிறைய பேசி வர வேண்டும் என்பது, பிறர் இதனைப் பார்த்து கேலி செய்வார்களோ என்று ஆரம்பத்தில் எண்ணக் கூடும். முதலில் மானசீகமாக பேசி வாருங்கள். பூக்கள் நிச்சயமாய் பதில் தருவதைச் சிறிது சிறிதாய்ப் புரிந்து கொள்ளலாம்.
மலர்கள் நறுமணத்தைத் தருவது போல, யார் எந்த நேரத்தில் தானமாய் வந்து கேட்டாலும் உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். இதன் உண்மைப் பொருளானது, ஏழைகளுக்கு ஏதேனும் கொடுப்பதற்கு உணவு, பழங்கள், பிஸ்கட், மிட்டாய் என்று எதையேனும்… குறிப்பாய் பயணத்தின் போது எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே.
எவருக்கும் காசாய்க் கொடுக்காதீர்கள், காசைக் கொடுத்து அதில் பீடி, சிகரெட் என்று தீயதை வாங்கினால் இந்த பாவத்தின் பங்கு அப்படி காசு கொடுத்தவரையும் தொத்தும். இயன்ற வரையில் பொருளாய்க் கொடுங்கள். ஆனால் கலியுகம் இது. கவனமாயும் இருத்தல் வேண்டும்.
முக்கியமாக உங்கள் அன்பினையும் சேர்த்து பரிமாறிக் கொடுங்கள். அதாவது எவரையும் வெறுக்காதீர்கள். அந்த அன்பு பல்கிப் பரவிப் பிறருக்கும் உதவும். நாட்டிலும் சாந்தத்தை நிரவும்.
அன்பும் பூக்களின் நறுமணம் போலவே எங்கும் நிரவும், கொடுக்க கொடுக்க குறையாது. வெறுப்பு, பகைமை, விரோதம், கிரோதம், வன்முறை, பயங்கரவாதம், போர் போன்ற தீயவை பெருகி வரும் கலியில் – மாமறை ஓதுதல், பூக்களின் நறுமணம், ஆலய உத்சவங்கள், தினசரி கோயில் தரிசனம், தான தர்மங்கள், வேள்விகள், நித்திய ஆலய பூஜைகள், பெரியோர்களின் தரிசனம், நல்ஒழுக்கம் போன்றவைதாம் அன்பு, சாந்தத்தைப் பூவுலகில் பரிமளிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
பூக்கள் செடிகளில் இருப்பதை விட, இறைவனுக்கு பூஜைகளுக்கு, நற்காரியங்களுக்குப் பயன்படுகையில் அவற்றின் தெய்வசக்தி பன்மடங்காகின்றது. இதற்கு மனித குலம் உதவிட வேண்டும்.
பூக்குலத்திற்கு மனிதச் சமுதாயம் உதவுதல் என்பது பூக்களைப் பறித்து வழிபாடுகளுக்குப் பயன்படுத்துதல் என்பது தானே, இதில் பெரிதும் பயனடைவது மனித குலம் தானே. மனிதர்களுக்கு தானே இதில் அளப்பரிய புண்ணியம் கிட்டுகின்றது.

அனைவருக்கும் ஆலயத் திருப்பணி

கலியுகத்தில் ஆலயத் திருப்பணியும், இறைநாமத்தை ஓதும் நாமசங்கீர்த்தனமும் எளிதில் இறைவனை அடையும் மார்கமாகும். எனவே நமக்கு வசதி இல்லை, கையில் காசு, பணம் இல்லை, எங்கள் ஊரில் சத்சங்க அமைப்பு இல்லையே – என்று ஏங்குவோர் கூட, எளிமையான முறையில் ஆலயத் திருப்பணிகளைச் செய்யலாம், எவ்வாறு?
எத்தனையோ கோயில்களின் நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப் படாமல் அப்படியே கிடக்கும், அலங்காரத்திற்கும் அளிப்பதும் உத்தம இறைத் தொண்டல்லவா. பறித்து தொடுத்த மாலையாகத் தினமும் அளித்து வந்தால் பிரம்ம லோகமே நிறையும் அளவிற்குப் புண்ணிய வளம் சேரும் என்பது சத்குரு வெங்கடராம சுவாமிகள் வார்த்தளித்துள்ள சித்தர்களின் குருமோழி.
மற்றொரு எளிய ஆலயத் திருப்பணி ஒன்றும் உண்டு. அடிக்கடி குருநாதர் எடுத்துரைத்து வந்ததுதான். பலரும் கோயிலில் கற்பூரத்தை ஏற்றி கற்பூரம் இருந்த பிளாஸ்டிக் கவரையும் கூடக் குப்பையாய் அங்கேயே போட்டு விடுகின்றார்கள், இதனால் கற்பூரம் ஏற்றிய பலன், - குப்பை போட்ட தவறான செயலில் போய் விடுகின்றது என்பதும் க்ஷணத்திலேயே கழிந்து போய் விடுகின்றது என்பதும் பலரும் அறியாததாகும். இதனைப் பன்முறை விளக்கி வந்துள்ளார் சத்குரு வெங்கடராம சுவாமிகள்.
இனியேனும் இவ்வாறு கிட்டும் அரிய புண்ணியத்தை விரயமாக்கும் தவறான செயலைத் திருத்திக் கொள்ளவும். பிறருக்கும் எடுத்து சொல்லவும்.
கஷ்டபட்டு பஸ், ஆட்டோ பிடித்து, செவ்வாய்க் கிழமையில் கோயிலுக்குச் சென்று ராகு கால துர்க்கா பூஜையில் ஏற்றிய தீப ஜோதிப் பலன்கள் – பெருமளவில் இவ்வாறு தேங்காய் நார், வாழைப் பழத்தோல், காலி ஊதுபத்தி பாக்கெட், காகிதங்களைக் குப்பையாய் அங்கேயே போடுவதால் கழிந்து போய் விடும் என்பதை பலர் உணர்வதில்லை. இனியேனும் இதை அறிந்து கொவார்களாக.

ஸ்ரீகுணாம்பிமை அம்மன்
செல்லூர்

ஆலயத்தில் விளக்கேற்றி விட்டுப் பலரும் இவ்வாறு போடும் குப்பைகளை அகற்றி இடத்தைச் சுத்தம் செய்வோருக்கு, விளக்கேற்றிய பலா பலன்கள் தாமாய் வந்து சேரும்.
அதாவது எவ்வித வசதியும் இல்லாது, செலவுக்குப் பணம் இல்லாது கோயிலுக்குச் செல்லும் ஒருவர், இவ்வாறு எளிமையான முறையில் கோயிலில் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வந்திடில், கற்பூரம் ஏற்றிய பலன்களும், ஏனைய பலவும் கிட்டுகின்றன.
கோடானு கோடி அசுரர்களை, தேவர்களை, இந்திரர்களை, மானுடர்களைத் திருத்த வல்ல செல்லூர் குணாம்பிகை ஆலயம்

செல்லூர் திருத்தலம்

தினமும் நந்தியா வட்டப் பூக்களைச் சார்த்தி இறைவனை வழிபட்டு வந்தால் தர்ம நந்தியின் அருள் கிட்டும். இதன் மூலம் வாழ்வில் எக்காலத்தும் முறையற்ற காம இழிவுச் செயல்களுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொண்டிடலாம். ஏற்கனவே வாழ்வில் காமப் பாவச் செயல்களில் சிக்கி அல்லல்பட்டு வாடுவோரும் திருவாருர் குடவாசல் அருகே உள்ள ஸ்ரீகைலாசநாதர் – ஸ்ரீகுணாம்பிகை அருளும் சிவாலயத்தில் இந்த வழிபாட்டை ஆற்றி வந்திடில் தக்க பரிகாரம் கிட்டலாகும். நற்குணமும் கிட்டும்.
நந்தியா வட்டைப் பூச்செடி, பூவுலகில் முதன் முதலில் தோன்றிய மிகவும் தொன்மையான சிவபதி. ஸ்ரீகுணாம்பிகையின் தரிசனமே உள்ளம், மனம், புத்தி, அறிவு, உடலை சுத்திகரிக்க் வல்லதாம். இவ்வாறு பூக்களின் புனிதமானது, தீய எண்ணங்களின் துர்வாசனையையே தகர்த்து, உலக மனித குலத்தையே முழுதுமாய் ஆன்மீக ரீதியாய்ச் செழுமைப்படுத்த வல்லதாம்.
லலிதா சகஸ்ரநாமத்தை ஓதிய பின் முடிவில் கோமதி அம்மனின் திருநாமத்தைச் சொல்லி முடித்தால்தான் பூரண பலன் கிட்டும். ஏனென்றால் லலிதா(ங்கி) என்ற ராகமும், புஷ்பமும் கோமதித் தாயின் திருவடிகளில்தான் தோன்றின. லலிதா அல்லது லதாங்கி ராகத்தில் பாடுவது விசேஷமானதாகும்.

ஸ்ரீகைலாச நாதர்
செல்லூர்

ஹயக்ரீவ மூர்த்தியிடம் பாடம் கற்றமையால் கலைவாணிக்கு சாட்சாத் ஹயக்ரீவ பெருமாளே சத்குரு ஆகின்றார். அகஸ்தியரின் பத்னியாம் லோபா மாதா அண்ட சராசரங்கள் அனைத்திலும் பூஜித்த மஹா மந்திரம் லலிதா சகஸ்ரநாமம் ஆகும். இதனை லலிதா, லதாங்கி ராகங்களில் பாடும் வரிகள் கோமதி அன்னையின் திருப்பாதங்களைச் சென்றடயும் என்பது அகஸ்தியர் – லோபாமாதாவின் திருவாக்கு.

மாடாக்குளம் ஸ்ரீகபாலீஸ்வரி

மதுரை – பழங்காநத்தம் – பைகாரா மார்கத்தில், மாடாக்குளம் பகுதியில் படியேறிச் செல்ல வல்ல சிறு குன்றின் மேல் கபாலீஸ்வரீ அம்மன் அருள்கின்றாள். கபாலீஸ்வரரை மணப்பதற்காய் அம்பிகை இக்குன்றில் பூண்ட தவக் கோலமே கபாலீஸ்வரி அவதாரிகை. கபாலீஸ்வரியாய் முன்னர் துலங்கிய தன் தவக்கோலத்தைக் காண – கற்பகாம்பாள் அம்பிகையே ஆண்டு தோறும் குறித்த நாளில் – இக்குன்றிற்கு மயில் வடிவில் வருவதான புராணப் பூர்வ ஐதீகமும் உண்டு. கபாலி மலை (கபால கிரி) என்பது தொன்மையான பெயர்.

நந்தி வணங்கும் விநாயகர்
மருதூர் சமயபுரம்

மனிதன் பகுத்தறிவால்தான் அனைத்தையும் அறிய வேண்டி உள்ளது. ஆனால் பறவைகள், விலங்குகளுக்கு மூலிகை ஞானம் போன்ற பலவும் இயற்கையிலேயே வந்தமைவதும் படைப்பின் பிரம்ம ரகசியமாகும். கபால ஞானசக்தி தளங்கள் ஒரு சிலவே உள்ளன. இவற்றில் உள்ள (ஞானசக்திப்) பூக்களின் தரிசனமே அரிய ஞானத்தை நல்கிடும். இக்குன்றின் அமைப்பு தேங்காயின் கபால (மேல் ஓடு) போலிருக்கும். கபாலபதி எனும் பிராணாயாம யோக முறை பிறந்த தலமிது. தேங்காயை ‘கபாலக் கனி’ என்றே சித்தர்கள் போற்றுவர். தேங்காய்க்குள் முளைக்கும் தேங்காய்ப் பூவே ”கபால புஷ்பம்”
தேங்காய்க்குள் ஐந்து விதமான பஞ்ச பூத சக்திகளும் உண்டு. தேங்காய்ப் பருப்புதான் பிருத்வி (நிலம்) என்பதாம். கண் படாத் தீர்த்தமாய் உள்ளே இளநீரும், காற்றும் உண்டல்லவா. தேங்காயின் உள்பகுதிச் சூடான அக்னியோடு, சுவையான இளநீருக்கு மேற்பரப்பில் பர ஆகாசமும் உண்டு. ஆக நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் ஆகிய இவ்வைந்து பஞ்ச பூத சக்திகளும் தேங்காய்க்குள் உய்வதால்தான், உலகெங்கும் அத்தனை இறை வழிபாடுகளுலும் தேங்காய் முதன்மையான இடத்தை பெறுகின்றது. தீபம், பூ, தேங்காய், தீர்த்தம், பழம் ஆகிய ஐந்தும் பஞ்சபூத சக்திகளின் குணப்பாடாய் எந்த இறை வழிபாட்டிற்கும் மிகவும் முக்கியமானதாம்.
தேங்காய்ச் சிருட்டிப்பதற்கான திவ்யமான படைப்பு ஞானமானது, நான்முகர், சாகம்பரீ தேவிக்கு கபாலீஸ்வரியால் அருளப் பெற்ற தலமிது. ஆதியில் ஐந்து தலைகளுடன் துலங்கிய பிரம்ம மூர்த்தியின் ஐந்து சிரசுக் கபாலங்களிலும் ஆதிபூமியில் தோன்றிய ஐந்து முதல் தேங்காய்களும் உடைக்கப் பெற்றன. இவ்வாறு தலைக் கபாலத்தில் தேங்காயை உடைத்துக் கொள்ளும் கபாலக்னி யோக வழிபாடு, இங்குதான் தோன்றியது.
தேங்காயை உடைக்கையில் எழும் சப்தம் ‘கபால க்லீங்காரம்’ ஆகும். ஓங்காரத்தின் அம்சமிது. இந்த பீஜமந்திரத்திற்கு பிரத்யதி தேவதா மூர்த்தி கபாலீஸ்வரி. பிள்ளையாருக்கு ப்ரீதியான பீஜ ஒலி ஆகையால் சிதறுகாய் வழிபாடு, கணபதிக்கென முக்கியத்துவம் கொண்டது.
கபாலீஸ்வரர் தம் திருக்கரங்களால் முதல் தேங்காயை உடைத்த புனிதமான கபால ஜோதிப் பீடமே இக்குன்று. இதன் மேல்தான் கபாலீஸ்வரி எழுந்தருள்கின்றாள். தேங்காயை உடைக்கையில் எழும் க்லீங்கார பீஜ ஒலி – அம்மனின் திருச்செவிகளில் பதியுமாறு – குன்றின் மேல் – கபாலீஸ்வரி அம்மன் அருகிலேயே முழுத் தேங்காய்களை உடைத்து வழிபடுதல் சிறப்பான பிரார்த்தனையாம்.
கபாலி குன்றைச் சுற்றி மலைவலம் வருதல், கபாலீஸ்வரிக்கு வாழ்வில் நன்முறையில் ஸ்திரத் தன்மை பெற்றிட உதவும். கபாலம், தலை, முகம் பற்றிய பிணிகளுக்கு தீர்வுகளைத் தந்திடும் தலம். புத்தி சுவாதீன்மிமை, மூளைக் கோளாறுகள் அகல உதவும் தலம். கபாலத் துறை டாக்டர்களுக்குமான வைத்யசக்தி பூமி.

சந்திராஷ்டம வகைகள்

அகஸ்தியர் : சீடர்களே ! அடக்கம் அமரருரள் உய்க்கும். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். ஆரிருள் என்பது ஆறு வகையான இருளைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உடலை விட்டுப் பிரிந்து செல்லும்போது இந்த ஆறு இருளையும் சந்திக்க வேண்டி வரும். இவைகளைச் சுலபமாகக் கடந்து செல்ல ஒரு வழி உள்ளது. அது என்ன ?
போகர் : மற்றவர் வாழ்வில் விளக்கேற்றி இருந்தால் இந்த இருளில் ஒளி கிடைக்கும்.
அகத்தியர் : இது ஓரளவு உண்மையே. உண்மையில் வாய் திறந்து உயிர் பிரியும்போது யார் இறை நாமம் கூறுகிறார்களோ அவர்களுக்கு இந்த இருளைக் கடப்பது எளிது. இருளில் ஒளி விளக்கு ஏந்திச் செல்வது ஒரு உதவிதான். ஆனால் இருளைக் கடப்பது என்பது கடினம். அதை விடக் கடினமானது ஒருவர் இறக்கும் தறுவாயில் இறை நாமம் கூறுவது. இறப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
சந்திராஷ்டம வகைகள்
சந்திராஷ்டமத்தில் ஆறு வகை சந்திராஷ்டமங்கள் உள்ளன. அவற்றில் மூன்றைப் பூக்களால் துன்பத்திலிருந்து விலக்கலாம்.

ஸ்ரீகைலாசநாதர்
செல்லூர்

ஸ்ரீகுணாம்பிகை
செல்லூர்

சாதக சந்திராஷ்டமம்
மகா தோஷ காலம். மரணத் தறுவாயில் உணவு உண்ணும்போது விக்கல் ஏற்பட்டு அதனால் உயிர் பிரியும். இதிலிருந்து தப்பிக்க வழி உள்ளது. கணபதியும் திருமாலும் இச்சந்திராஷ்டமத்திற்கு அதி தேவதைகள். இவர்களுக்கு தொடர்ந்து சந்திராஷ்டம காலங்களில் செம்பருத்தி அருகம்புல் இவைகளுடன் இடையில் மல்லிகை கட்டி மாலையாக அணிவித்து வர வேண்டும். மேலும் மேற்கூறியவாறு இத்தினங்களில் செய்து பெண் பார்க்கப் போனால் திருமணம் பெருமணமாகத் திகழும். பதவி உயர்வு முறையோடு கிடைக்கும். பணம் கடன் வாங்கினால் வியாபாரம் விருத்தி ஆகி கடன் தொல்லை தீரும். இத்தகைய பல காரியங்கள் சித்தியாகும்.
மைத்ர சந்திராஷ்டமம்
ஒரு காரியம் செய்வதாக வாக்குக் கொடுக்க வைத்து, செய்து முடிப்பதற்குள் உயிர் பிரிந்து விடும். மிகக் கடினமானது. இந்நிலையில் மைத்ர சந்திராஷ்டமம் உயிரைப் பிரிக்கும். அவ்வாறு ஆகாமல் கொடுத்த வாக்குகளை காப்பாற்றிட இச்சந்திராஷ்டம காலங்களில் ஸ்ரீராமர் கோயிலுக்கு துளசியும் சம்பங்கியும் சேர்த்துக் கட்டிய மாலை அணிவித்துக் கொண்டே வந்தால் பெறும் பலன் தெரியா விட்டாலும் இந்த மைத்ர சந்திராஷ்டம விளைவுகளிலிருந்து நிவாரணம் கிட்டும். மரணம் வருகையில் உடல் உறுப்புகள் எந்த நிலையில் ஒத்துழைக்கும் என்பதும் தெரியாது. எனவே அப்போதைக்கு இப்போதே சொல்லிப் பழக வேண்டும். நாம சங்கீர்த்தனம் பழக வேண்டும். உடல் உறுப்புகள் வேலை செய்யவில்லை என்றாலும் மனம் இறைநாமம் கூறும். எனவே அடக்கத்துடன் இறைநாமம் கூற இளமை முதல் பழக வேண்டும்.
சீடர் : குருவே ! ஒருவர் அடக்கத்தை இழக்கக் காரணம் என்ன ?
அகஸ்தியர் : ஒவ்வொருவர் வாழ்விலும் மாதந்தோறும் சந்திராஷ்டமம் என்று இரண்டேகால் நாட்கள் வரும். மதிகாரகன் சந்திரனால் நாம் மதிகெட்டு பல தொல்லைகளுக்கு உள்ளாவது இந்த நாட்களில்தான். சந்திராஷ்டமம் என்பது என்ன ? அவரவர் பிறந்த ராசியில் எட்டாம் இடத்தில் சந்திரன் பிரவேசிக்கும்போது பொறுமையின்மை, கோபம், பொறாமை, உடல் வியாதி முதலியன நடக்கும். இதனால் பல துன்பங்கள் பல நாட்களுக்கு விளையும். இந்த இரண்டேகால் நாட்கள்தான் சந்திராஷ்டமம் எனப்படுகிறது. இந்த இரண்டேகால் நாட்களையும் மிக ஜாக்கிரதையாக ஆண்டவன் நாமம் சொல்லிக் கழிக்க வேண்டும். இந்த நாட்களில் விபத்துக்கள் ஏற்படும். கூடியவரை பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணங்கள் வந்தால் இறை நாமம் கூறி இந்த சந்திராஷ்டமம் வரும் வாரத்தில் திங்கட்கிழமை அன்று கோமாதாவிற்கு உளுத்தம் பருப்பினால் ஆன வடை ஆகாரமாக கொடுத்து வேண்ட வேண்டும் அல்லது சந்திரசேகர சுவாமிக்கு திங்கட்கிழமை பாலபிஷேகம் செய்ய வேண்டும்.
சண்பகப் பூவினால் முருகனுக்கு இச்சந்திராஷ்டம காலத்தில் மாலை அணிவித்து அன்றைய தினம் மாப்பிள்ளை பார்க்கப் போனால் திருமணம் சிறப்பாக அமையும். புத்தாடைகள் வாங்கலாம். பெருமன நினைவு இயந்திரப் பயிற்சி அதாவது கம்ப்யூட்டர் கற்க சேரலாம். கணவன், தந்தை முதலியவர்களுக்குப் பாத பூஜை செய்ய மிகவும் உகந்த நேரமாகும்.
பரம மைத்ர சந்திராஷ்டமம்
இச்சந்திராஷ்டம காலத்தில் இறக்கும் தருவாயில் தன்னைத் தானே உத்தமன் என்று நினைக்க வைத்துத் தவறும் செய்ய வைத்து அதில் உயிர் பிரியும். இச்சந்திராஷ்டம தினங்களில் மருவுமல்லியும், தவனமும் தட்டிய மாலை ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி அல்லது ஸ்ரீரங்கநாத சுவாமிக்குச் சாற்றி வணங்கினால் இச்சந்திராஷ்டம காலத் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
பரம மைத்ர சந்திராஷ்டம தினங்களில் சிவபெருமானுக்கு வில்வத்தாலும் நாகலிங்க புஷ்பத்தாலும் அர்ச்சித்து வணங்கி நிச்சயதார்த்தம் செய்தால் அத்திருமணம் உயர் மணமாக அமையும். ஜன்ம ஜன்மமாகத் திருமணம் தொடரும். ஒவ்வொரு பிறவியிலும் கணவன் மனைவி மாற மாட்டார்கள். கூட்டு வியாபாரம், புதிய வியாபாரம் தொடங்க உத்தமமான நேரம்.

பூவும் திசைகளும்

பூவைத் தலையில் வைக்கும் திக்குகள் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கிழக்குப் பக்கமாகப் பார்த்து தலையில் பூ வைத்துச் சென்றால் போகின்ற இடத்தில் சண்டைகள் வரும். இது வாசனை அற்ற மலருடன் வாசனை மலரை சேர்த்து வைப்பதால் வருகின்றது.
சிவப்பு நிறப் பூக்களைத் தெற்குப் பக்கமாகத் திரும்பி தலையில் வைத்துக் கொண்டால் கணவனுடன் சண்டை வரும். தடுக்க முடியாது. எனவே தெற்கு நோக்கிப் பூச்சூடுதலைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கு திசை பார்த்து பொன்னிறமான மலர்களைச் சூடக் கூடாது. பண இழப்பு வரும். கிரணங்கள் ஒடுங்கும் திசை. எனவே கிழக்குப் பார்த்து பொன்னிறமான மலர்களைச் சூடினால் குடும்பம் வளரும். பணம் வளரும்.
வடக்குப் பார்த்து முந்தின நாள் பூவைச் சூடுதல் தவறு. இதனால் கணவனுக்கு கடன் தொல்லை அதிகமாகும்.
கஜானா செழிக்க மல்லிகை
இந்திர பிரஸ்தத்தில் தர்மர் ராஜ சபையில் வீற்றிருக்கிறார். நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு கிரீடத்துடன் சிம்மம் என வீற்றிருக்கும் தர்மர் பக்கத்தில் அர்ச்சுனன், சகாதேவன், பீமன், நகுலன் அனைவரும் வீற்றிருக்கின்றனர். கிரகப் பிரவேசம் செய்யும் நாள். எல்லா நாட்டு அரசர்களும் வந்து அமர்ந்துள்ளனர். துரியோதனனும் வந்து அமர்ந்துள்ளான். யாகங்களும் யக்ஞங்களும் ஒரு புறம் நடைபெற ஹோமங்களும் மறுபுறம் கோலாகலமாக நடைபெறுவதைக் கண்டு உள்ளூர பொருமிக் கொண்டிருக்கிறான் துரியோதனன். அதே சமயம் பஞ்சபாண்டவர்களும் வேத வித்துகளைப் புகழ்ந்து தானங்களைக் கொடுக்க வேண்டும், முறையோடு செய்ய ஆள் தேவை, யாரை நியமிப்பது என்று யோசிக்கின்றனர்.
கண்ணன் ஓரமாக அமர்ந்திருந்தான். தருமர் கண்ணனிடமே அந்த வேலையைக் கொடுத்து விடலாம் என்கிறார். அனைவரும் ஒப்புக் கொண்டாலும் கண்ணன் ஒப்பவில்லை. ‘நான் இதற்கெல்லாம் தகுதியானவன் இல்லை, தேவையில்லை,’ என்றான். ஒருவர் மாற்றி ஒருவரைச் சொல்ல அனைவரும் சரியல்ல என்கிறான் கண்ணன். இவ்வளவு விஷயம் நடந்த பின்னும் சகாதேவன் வாய் திறவாமல் இருக்கிறான். உடனே கண்ணன், ‘சகாதேவன் என்ன சொல்கிறான் பார்ப்போம் !’ என்கிறான். சகாதேவன், ‘நான் கூறினால் அனைவரும் என்னைத் திட்டுவீர்கள். அதனால் நான் எதுவும் கூறவில்லை,‘ என்றான்.
கண்ணன், ‘சகாதேவன் என்ன சொல்கிறானோ அதுவே நான் சொல்வதும்,‘ என்றான். அனைவரும் சகாதேவனையே பார்க்கின்றனர். சகாதேவன், ‘துரியோதனனே இதற்குத் தகுதியானவன்,’ என்று கூற அனைவரும் குதித்து எழுந்தனர். சகாதேவனை வெறுப்புடன் பார்த்தனர். கண்ணன் சிரித்துக் கொண்டே, ‘உண்மை சகாதேவா ! எதனால் நீ துரியோதனனை தேர்ந்தெடுத்தாய் ?’ என வினவ அதற்கு சகாதேவன், ‘காந்தாரி தேவி கணவனுக்கு கண்கள் இல்லை என்றவுடன் தானும் கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த மகா பதிவிரதை. கணவனால் பார்க்க முடியாததை தானும் பார்க்கக் கூடாது என்று விரதமாக இருந்தவள். அவள் நாடு பரந்த நாடாக உள்ளதால் பொக்கிஷம் நிறைய இருக்க வேண்டும் என்பதற்காக தன் கைகளினாலே மல்லிகைத் தோட்டம் ஏற்படுத்தினாள். நந்தவனம் வைத்து, ‘அன்னை கோமதியே ! மலர் ஈந்த அன்னையே மலர் கொடு,’ என்று வேண்ட மலர் கொட்டும். அதனை எடுத்து கோமதி தாய்க்கு அர்ச்சித்து, துரியோதனா என்று அழைக்க துரியோதனன் அங்கு பொக்கிஷப் பெட்டியை தயாராக வைத்திருப்பான். அதில் அந்த மல்லிகைப் பூவை வைத்து மூடி விடுவாள் காந்தாரி தேவி. இது தினமும் நடந்தது. அந்த பொக்கிஷத்தை உபயோகப்படுத்துவதனால் துரியோதனின் கையில் தனரேகையை நிஜப்படுத்தியது மல்லிகைப் பூ. கஜானாவில் மல்லிகைப்பூ வைத்தால் பொக்கிஷம் பொங்கி வளரும். அவர்கள் கையால் எந்த பொக்கிஷத்தை எடுத்தாலும் பொக்கிஷம் குறையவே குறையாது. எனவே அந்த தன ரேகை நிஜப்படுத்தப்பட்டுள்ள துரியோதனன் எதை வாரிக் கொடுத்தாலும் பொக்கிஷம் குறையாது,’ என்றான் சகாதேவன். அனைவரும் இதை ஆமோதித்தார்கள்.
தருமர் துரியோதனனைக் கூப்பிட்டு, ‘தான தர்மம் நீதான் செய்ய வேண்டும்,’ என்று கூற துரியோதனனுக்கு மிகவும் சந்தோஷம். கண்ணன், ‘சகுனி மாமா, யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்,‘ என்றான். இருவரும் சந்தோஷத்துடன் அள்ளி அள்ளிக் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கே வியப்பூட்டும் வகையில் பொக்கிஷம் குறையவில்லை, வளர்ந்து கொண்டே இருந்தது.
சீடர் : குருவே ! பணம் வைக்கும் முறை கூறினீர்கள். அதனை உபயோகப்படுத்தும் முறையையும் கூற வேண்டும்.
அகஸ்தியர் : பணத்தை எடுத்துச் செல்லும்போது மார்பின் இடது பக்கத்தில் இதயம் உள்ள இடத்தில்தான் வைக்க வேண்டும். உள் பையில் வைத்துக் கொள்ளலாம். இதயத்தினருகில் வயிற்றுப் பகுதிக்கு கீழிருந்தோ, பின் பக்கத்திலிருந்தோ லட்சுமி தேவியின் அம்சமாகிய பணத்தை எடுக்கவும் வைக்கவும் கூடாது. கையை விரித்துத்தான் கொடுக்க வேண்டும்.
தோல் சம்பந்தப்பட்ட பொருள்களில் (பெல்ட், பர்ஸ்) பணம் வைக்கக் கூடாது. ஏனென்றால் சங்குத்திரிணி கலை என்ற சக்தி இதிலிருந்து வருகிறது. இதனை சுவாசிக்கின்ற பெரியவர்கள், மகான்கள் ஆசி கூறும்போது தோஷம் வருகிறது. எனவே இவ்வாறு அணிந்தவர்களை விலக்கி மகான்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறுகின்றனர். இதனால் சிலருக்கு மட்டும் ஆசி கூறுகிறார், சிலர் மட்டும் வேண்டியவர்கள் என்றெல்லாம் பெரியோர்களைப் பேசுவது தவறு. இதனால் பல சாபங்கள் வருகின்றன.

ஸ்ரீராம அவதாரம்

தசரத மகாராஜா மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தபோது ஒரு நாள் நாரதர் தோன்றி தென்கோசலை வடகோசல அரசர்களுக்குள் சம்பந்தம் நடந்தால் நல்ல பலன்கள் பல விளையும் என்று கூற அரச சபையில் உள்ளோர் முயற்சி எடுத்து தென்கோசல நாட்டு அரசனின் மகள் கௌசல்யாவை தரசதருக்கு மணமுடிக்க பேசி முடிக்கின்றனர். அதே சமயம் இராவணன் எதிரில் தோன்றிய நாரதர், ‘தசரதனுக்கும் கௌசல்யாவிற்கும் திருமணம் நடக்கப் போகிறது,’ என்றார். இராவணன், ‘அதனால் என்ன நடந்து விட்டுப் போகிறது,’ என்றான்.
‘இல்லை, இராவணா ! அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உனக்கு எதிரி,’ என்றார் நாரதர். மிக பலமாகச் சிரித்த இராவணன், ‘என் எதிரே இனிமேல் திருமணமாகிப் பிறக்கப் போகும் குழந்தை எனக்கு எதிரியா?’ என்று கேட்டான். ஆனால் உள்ளுக்குள், ‘நாரதர் கூறினால் உண்மை இருக்கும்,’ என்று எண்ணினான்.
நாரதர், ‘இராவணா! யார் யாரிடம் எந்த சக்தி உள்ளது என்று யார் அறிவார் ? வருகிறேன்,’ என்று கூறி மறைந்தார்.
திருமணத்தை மிகவும் பத்திரமாக நடத்த வேண்டும். ஏனென்றால் எதிரிகள் அப்போது அதிகம். இரு கோசல நாடுகளும் இணைந்தால் அனைத்து எதிரிகளையும் சமாளித்து விடலாம். ஆனால் சேரவிடாமல் எதிரிகள் தடுப்பார்கள். இதை யோசித்து கடல் நடுவில் மரத்தாலான மாளிகை கட்டி அதில் திருமணம் நடத்த ஏற்பாடு ஆயிற்று.
இலங்கையில் இராவணன் யோசித்தான். இவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைதானே நமக்கு எதிரி. இவர்கள் இருவருக்கும் திருமணமே நடக்காமல் செய்து விட்டால் என்று எண்ணி ஆகாயத்தில் தேடி வருகிறான். எங்கே திருமணம் நடந்து விடுமோ என்று வேகமாகத் தேடி வருகிறான் இராவணன்.
கடல் நடுவில் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. எதிர்ப்பு எதுவும் இன்றி திருமணம் முடிந்து விட வேண்டும் என்று தம்பதிகள் பயந்திருந்தனர். ஆகாயத்தில் வரும்போது கடல் நடுவில் ஒரு மண்டபம் புதிதாக உள்ளதே என்று இறங்கினான் இராவணன். தசரத திருமண மண்டபம் என்று தெரிந்தவுடன் அதனை உடைத்து விட்டான். மாளிகை சிதற கௌசல்யாவையும் தசரதனையும் தண்ணீருக்கடியில் அழைத்துச் சென்று நாரதர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இவ்வளவு திருமணத் தடங்கல்கள் வந்த பின்னும் தசரதன் கௌசல்யா திருமணம் வெற்றிகரமாக நிறைவேற காரணமாயிருந்தது புஷ்பம் வைக்கும் முறையே. அதனை கௌசல்யா நாரதர் மூலம் அறிந்திருந்தாள்.

ஸ்ரீவசிஸ்டர் அருந்ததி தம்பதிகள்

பூக்களைச் சூடும்போது காதின்மேல் நுனிக்கும் கீழ் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில்தான் தலையில் சூட வேண்டும். உச்சந் தலையிலோ கழுத்து பகுதியில் இறக்கியோ, ஜடையில் வால் பகுதியிலோ சூடக் கூடாது. பூவைத் தொங்க விடுதலும் தவறு. இவ்வாறு தொங்கவிட்டு பெரியவர்களை நமஸ்கரித்தால் பூ உச்சந்தலையில் சரியும், இதனால் பெரியவர்களின் ஆசி கிடைக்காது. இந்த முறையில் வாசனை புஷ்பத்தை மட்டும் இறைவனுக்கு வைத்து பூஜித்து பின்னர் கௌசல்யா தலையில் வைத்துக் கொண்டதால் மாபெரும் திருமணத் தடங்கல்கள் நீங்கப் பெற்றாள். அதுபோல் வாழ்க்கையில் வரும் துன்பங்களும் நீங்கப் பெற்றாள்.
திருமணம் நடந்துவிட்டது என்பதனை சமுத்திர ராஜன் மூலம் அறிந்த இராவணன் அவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று கொல்ல எண்ணினான். மண்டோதரி தேவியோ, “இவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைதானே உங்களுக்கு எதிரி. இவர்களை ஏன் கொல்ல வேண்டும் ? திருமணமானவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும். கொல்லுதல் தவறு,” என்று கணவனை சாந்தப்படுத்தி சீருடன் வழி அனுப்பி வைத்தாள்.
பல காலம் ஆட்சி செய்தான் தசரதன். ஆனால் அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. வசிஷ்டர், ”தசரதா ! வடகோசலை, தென்கோசல சம்பந்தத்தால் உனக்கு ஒரு பெருந் துன்பம் ஏற்படும். ஆனால் இறைவன் அருளால் நீங்கும்,” என்று கூற தசரதன், “தாங்கள் கூறியபடி செய்கின்றேன், காப்பாற்றுங்கள்,“ என்றார்.
சில வருடங்கள் கழித்து தசரதனுக்கும் கௌசல்யா தேவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை இளம்பிள்ளை வாதம் வந்ததுபோல் கை கால்கள் சூம்பி இருந்தது. மிகவும் வருத்தமுற்றார்கள் தசரத தம்பதியினர். வசிஷ்ட மகரிஷி, “கவலை வேண்டாம். இறைவனுக்கு பூஜைகள், பெரிய மகான்களின் ஆசி இவைகளால் சரியாகி விடும்,” என்று கூறி, ”அரண்மனை ஜோதிடர்களை அழைத்து ஜாதகத்தை விளக்கமாகப் பார்க்கச் சொல்,“ என ஆறுதல் அளித்தார்.
தசரதனும் அவ்வாறே செய்ய பலமாக ஆலோசித்து ஜாதகத்தை அலசிப் பார்த்த ஜோதிடர்களில் ஒருவர், “இந்தப் பெண்ணை வேற்று நாட்டு அரசருக்குச் சுவீகாரம் கொடுத்து விட்டால் பெண்ணின் ஊனம் சரியாகி விடும்,” என்றார். தசரதன் வசிஷ்டரிடம் அனுமதி பெற்று அங்க தேசத்து மன்னன் ரோமபாதனிடம் சுவீகாரம் கொடுத்தான். அக்குழந்தைக்கு சாந்த்யை என்று பெயரிட்டு ஆசி கூறி அனுப்பினார் வசிஷ்ட மகரிஷி.
சிவ வருடம் கழித்து வசிஷ்டர் அங்க தேசம் சென்றபோது சாந்த்யை அவரை வணங்கி உபசரித்தாள். “குருவே, என்னுடைய ஊனம் நீங்கவும் நான் உலகிற்கு பயன்படவும் தங்கள் ஆசி வேண்டும்,” என்று வேண்டினாள். வசிஷ்டர், “குழந்தாய், புஷ்பங்களை முறையாகப் பயன்படுத்துவதின் மூலம் எல்லா துன்பங்களையும் நீக்கலாம். உனக்கிருக்கும் துன்பம் நீங்க, பஞ்சமி திதியில் பங்கஜாக்ஷி, பங்கஜவல்லி என்ற நாமமுடைய தேவிக்கு விரதம் இருந்து பூவால் ஆடை சாற்ற வேண்டும். எந்தெந்த பூக்கள் தெரியுமா ? கவனமாகக் கேள். நீலினி மந்திரம் சொல்லி நீலோத்பல மலரையும், சூலினி மந்திரம் சொல்லி முல்லை மலரையும், கபாலினி மந்திரம் சொல்லி மல்லிகையையும் பறித்து மாலையாகக் கட்டி பங்கஜாக்ஷி, பங்கஜவல்லி என்ற நாமம் கொண்ட தேவிக்கு அணிவித்து வணங்கி வந்தால் எத்தகைய ஊனமாக இருந்தாலும் நீங்கும். அத்துடன் முக்கியமாக வளர்பிறை சாதக, மைத்ர, பரம மைத்ர சந்திராஷ்டம தினங்களில் இவ்வாறு செய்தால் அவர்கள் உலகிற்கு நற்சேவைகள் மூலம் பயன்படுவார்கள்,” என்று கூறி ஆசீர்வதித்தார்.

தசரதர் வழிபட்ட ஆவூர் திருத்தலம்

இத்தனையும் கவனமாகக் கேட்ட சாந்த்யை முறைப்படி விரதமிருந்து பூஜைகள் செய்து வந்தாள். நாட்கள் செல்லச் செல்ல ஊனத்தில் குணம் தெரிந்தது. அதனால் ஏற்பட்ட சந்தோஷம் வசிஷ்ட மகரிஷியின் ஆசி இவைகளால் சிறிது காலத்தில் ஊனம் நீங்கி முழுமையான குணம் அடைந்தாள்.
விஷ்ணுவை நோக்கி தவமிருந்தாள். பல நாட்கள் சென்றன. விரதம் தொடர்ந்தது. ஒரு நாள் அசரீரி கேட்டது, “உன் விரதம் ஏற்றோம். உன் கணவனால் உன் எண்ணம் ஈடேறும்,” சாந்த்யையின் எண்ணம் எதுவாக இருந்தது ? தனக்குப் பின் தந்தைக்கு குழந்தை இல்லை. தசரத மகாராஜாவிற்கு ஈடாக தனக்கு ஒரு உத்தம சகோதரன் வேண்டும் என்பதே சாந்த்யையின் எண்ணம். ரோமபாதன் தன் வளர்ப்பு மகள் சாந்த்யைக்கு மணமுடிக்க எண்ணி இருடிகளில் சிறந்தவரும் இருடிகளாலேயே வணங்கப்படுபவரும் வேதம் முழுவதும் அறிந்தவருமான ரிஷ்யசிருங்கர் என்ற முனிவரை சாந்த்யைக்கு மணமுடிக்கிறார். இருடிகள் என்றால் முனிவர்கள் என்று பொருள். ஒரு அரசர் ஏன் முனிவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ?
அரசகுலப் பெண்ணாக இருந்தாலும் சாந்த்யை முதலில் ஊனமுற்றவளாக இருந்தாள். பின்னர் பெரியோர் ஆசியாலும், புஷ்மை மகிமையாலும் கோமதி அம்மன் அருளாசியாலும் ஊனம் நீங்கப்பெற்று பல உன்னத காரியங்களைச் செய்யும் அறிவும் பெற்று விளங்கினாள். இறைவனிடத்தில் மாறா அன்பும் தெய்வத் தொண்டும் செய்து வரும் சாந்த்யைக்கு ஏற்ற வரனாக ரிஷ்யசிருங்கரை ரோமபாதன் தேர்ந்தெடுத்தான். பெண்ணின் குணமும் தொண்டும் திருமணத்திற்கு பின்னும் நடைபெற வேண்டும். மேலும் உத்தம பெண்ணாக உலகம் போற்றும் பெண்ணாக சாந்த்யை வர வேண்டும் என்ற ஆர்வத்தால் ரிஷ்யசிருங்கரைத் தேர்ந்தெடுத்தான்.
அப்போது தசரத மகாராஜாவும் தன் சம்மதத்தைத் தெரிவிக்க திருமணம் நடந்தது.
எப்போதும் மாப்பிள்ளை மாமனாருக்கு கடன்பட்டவரே ! பல காலம் வளர்த்து, ஆளாக்கி, திருமணமும் செய்வித்து பெண்ணை ஒப்படைத்து விடுவதால் மாப்பிள்ளை மாமனாருக்குக் கடன்பட்டவரே. அக்கடனை எப்படித் தீர்ப்பது என்று ரிஷ்யசிருங்கர் நினைக்க அது சமயம் சாந்த்யை தன்னுடைய விருப்பத்தைக் கூறுகிறாள். “அடியேனுக்குப் பின் தசரத மகாராஜாவிற்கு குழந்தையில்லை. எனவே அவர் சார்பில் புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதருக்குப் பின் நாட்டை ஆள ஆண் குழந்தை பிறக்கும். அதனால் உங்களின் கடனும் தீரும்,“ என்றாள் சாந்த்யை.
அதுவே சரியென்று ரிஷ்யசிருங்கர் தசரத மகாராஜாவிடம் சென்று அவர் அனுமதியின் பேரில் புத்ரகாமேஷ்டி யாகம் செய்தார. பெண்கள் சொல்வதை ஏற்கக் கூடாது என்பதில்லை. அதை யோசித்து நல்ல விஷயமாக இருந்தால் செயல்படுவது அறிவுடையவர் செயல் என்பதை ரிஷ்யசிருங்கர் நிரூபித்தார். அந்த யாகத்திற்குத் தலைவராக அமர்ந்தவர் ரிஷ்யசிருங்கர். பூரண ஆஹுதிகள் கொடுத்தும் தேவதூதன் பூரண கலசத்தில் பாயசம் வைத்து அதை தசரதனிடம் கொடுக்க அதன் மூலம் ஸ்ரீராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் பிறந்தனர்.
ஏக பத்தினி விரதனாகவும், தந்தை சொல்லை மந்திரமாக ஏற்றவனாகவும், சத்யம் தவறாதவனாகவும் இன்றளவும் என்றென்றும் தன் திருநாமம் போற்றப்படும் அளவிற்கு ஸ்ரீராமபிரானைச் சகோதரனாகப் பெற்று உலகம் போற்றும் வண்ணம் சாதனை புரிந்தாள் சாந்த்யை.
ஸ்ரீராமர் சகோதரர்கள் பிறந்தவுடன் தேவர்கள் சாந்த்யை ரிஷ்யசிருங்கர் மீது மலர்களைப் பொழிந்து வாழ்த்தினர்.
எனவே அன்று முதல் இன்றுவரை யார் மலரைப் பறித்தாலும், கொடுத்தாலும் கடையில் கட்டிய பூவை வாங்கினாலும், “ஓம் ஸ்ரீசாந்த்யை ஸ்ரீருஷ்யசிருங்கர் பத்தினியை நமஹ” என்று சொல்லித்தான் வாங்க வேண்டும். பூவைத் தலையிலும் சூட வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் சுமங்கலியாக வாழ்ந்து சிறப்படைவர்.
போகர் : பிராணநாதா ! சனிக் கிழமை பெருமாளுக்கு உகந்தது என்கிறீர்களே. சனீஸ்வர பகவானுக்கு உகந்த நாளும் சனிக்கிழமைதானே.
ஸ்ரீஅகத்தியர் : ஆமாம், உண்மையில் பெரும்பாலானோர் கலியுகத்தில் சனிக்கிழமை அன்று நவகிரகங்களைச் சுற்றி வந்து வழிபடுவார்கள். உண்மையில் நவகிரகங்களை தினமுமே வழிபட வேண்டும். முக்கியமாக சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டுமானால் மிக உகந்த தினம் ஞாயிறுதான்.
போகர் : காரணம் யாதோ, சுவாமி.
ஸ்ரீஅகத்தியர் : ஒரு சமயம் சூரிய பகவான் மேருமலையில் கடுந்தவம் செய்து வந்தார். அவருடைய மகனான சனீஸ்வர பகவான் தந்தைக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவருடனே தங்கியிருந்து தானும் தவம் செய்தார். சூரிய பகவான் மனம் மகிழ்ந்து, “உனக்கு வேண்டும் வரம் கேள்,” என்று கூற அதற்கு சனி பகவான், “இறைவா, சூரிய பகவானே ! உங்களுடைய தினமாகிய ஞாயிறு அன்று என்னை வழிபட்டு என்னை ப்ரீதி செய்வோருக்கு எல்லா நன்மைகளும் விளைய வேண்டும்,” என்று வேண்டினார். சூரிய பகவானும் மகிழ்ந்து அவ்வரத்தை அளித்தார். இந்நாள் வரை இது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இன்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நேரம். எனவே தெரிந்து கொண்டீர்கள். எல்லாம் இறைவன் செயல். எனவே முக்கியமாக ஞாயிறு அன்று தெய்வத் திருப்பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும். பல தோஷங்களிலிருந்து ஞாயிறு அன்று செய்யும் தெய்வத் தொண்டு காப்பாற்றும்.
புலிப்பாணி : குருவே ! ஒரு சந்தேகம் விளக்கம் கூற வேண்டுகிறேன். இறைவழிபாடு என்ற பெயரில் உரத்த குரலில் பாடுவது சரியா ? இல்லை மனதிற்குள் தோத்திரம் செய்வது சரியா ?
ஸ்ரீஅகத்தியர் : உரத்த குரலில் இறைவழிபாடு செய்தால் அவனின் கவனம் பாதிக்குமேல் குரலிலும், பலர் கேட்பரே, தவறுதல் கூடாதே என்ற நினைவிலும் போய்விடும். இறைவன் மேல் மனம் முழுமையாகச் செல்லாது. மேலும் இது இறைவழிபாடு செய்யும் மற்றவருக்கு இடையூறாகவும் இருக்கும். எனவே உரத்த குரலில் பாடி இறைவழிபாடு செய்வது அவ்வளவு நல்லதல்ல என்பது சிலரின் அபிப்ராயம். உண்மையில் ஒருவன் இறைவன் மேல் மனதை லயிக்க வைத்து விட்டால் மற்றவர்களைப் பற்றியோ, மற்றவர்கள் எழுப்பும் ஒலி பற்றியோ கவலைப்பட மாட்டான். அவனுக்குக் கேட்கவும் கேட்காது. எனவே ஒருநிலைப்பட்ட மனோ லயம் இறைவன் மேல் இல்லாதவர்களுக்கே மற்றவர்களுடைய குரல் கேட்கும். இரண்டாவதாக உரத்த குரலில் பாடுபவன் இறைவனுக்காகப் பாடினால் மற்றவர்களைப் பற்றிய கவலை அவனுக்குத் தேவையில்லை. எனவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே தவறு. அதோடு மட்டுமல்லாமல் சாதாரணமாக வேறு எண்ணங்களுடன் கோயிலுக்கு வந்தவர்களும் இவனுடைய பாடலினால் ஒரு சில வினாடிகளாவது இறைவன்பால் மனதைச் செலுத்தி இருப்பார்கள். அது பாடுபவனுக்கு வெற்றி. தான் மட்டும் இறைவனை வணங்குதல் போதாது. வேறு ஒருவரையாவது இறைவனை வணங்கவும் வைக்க வேண்டும். எனவே வாய் திறந்து பாடுவீர் ! வாழ வழி காணுவீர் ! எனவே எந்த யுகத்திலும் நாம சங்கீர்த்தனமே உயர்ந்தது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். இறையடியார்கள் குறைந்தது இரண்டு பேராவது ஒன்றாகக் கூடி இறைவன் நாமம் பாடுவதே நாம சங்கீர்த்தனம்.
போகர் : ஞான ஆசானே ! கலியில் யாரை நம்முடைய உண்மையான உறவினர்களாக ஏற்றுக் கொள்வது ?
ஸ்ரீஅகத்தியர் : உன்னுடைய கேள்விக்கு விஸ்வாமித்திரரே பதிலை அளித்துள்ளான். இதே கேள்வியை ஸ்ரீராமர் கேட்டபோது விஸ்வாமித்திரர் ஸ்ரீராமா, உன்னுடைய வாழ்க்கைப் பயணம் நெடுந்தூரம் கொண்டது. எனவே நீ உண்மையில் உன் உறவினர்களாக யார் யாரைக் கொள்ள வேண்டும் தெரியுமா ? அறிவே உனக்கு தந்தை, திருப்தியே தாய், சத்யம் உன் சகோதரன், பொறுமை உன் சகோதரி. இவர்களை உன்னுடைய உண்மை உறவினர்களாகக் கொண்டால் வெற்றி நிச்சயம். விஸ்வாமித்திரரின் உபதேசத்தை சிரமேற் கொண்டு ஸ்ரீராம பிரான் நடந்ததால்தான் அவரைத் துதிக்கும் ஸ்ரீராமஜயம் என்ற ஒரு பதமே இன்றும் அனைவருக்கும் வெற்றியைத் தரும் விஜய பாதமாக விளங்குகிறது.

காரிய சித்தி மலர் வழிபாடு

விஸ்வாமித்திரர் ஸ்ரீராமபிரானுக்கு அளித்த காரிய சித்தி மலர் வழிபாடு
அஸ்வினி
பெரியோர்களைக் காண உத்தமமான நாள். அன்றைய தினம் சூரியகாந்திப் பூவால் சூரிய பகவானுக்கு மாலை சாற்றி வணங்கிச் சென்றால் காரியம் சித்தியாகும். தன்னைவிட மேலானவர்களைக் காண்பதற்கும் இதுவே வழி. அலுவலக மேலாளர், மாமனார் இவர்களைக் காணவும் இவ்வழி சிறந்தது.
மிருகசீரிஷம்
மாடு, குதிரை, வாகனங்கள் வாங்க உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தன்று சிவனுக்கு முருங்கைப் பூவால் அர்ச்சித்து அந்த பூவில் சிறிது தன்னுடன் எடுத்துச் சென்று வாகனங்களை வாங்கினால் விருத்தியாகும். நன்மை பயக்கும்.
அஸ்தம்
பெண் பார்க்கவும், தங்கம் வாங்கவும் இந்த நட்சத்திரம் உகந்தது. தாழம்பூவினால் கூர்நுனி மேலே பார்த்திருக்கும்படி அம்பாளுக்கு பாவாடை கட்டி வணங்கி தங்கம் வாங்கச் சென்றால் மேலும் மேலும் தங்கம் சேரும்.
கிருஷ்ணர் சத்யபாமாவைப் பார்ப்பதற்கு முன் கோமதித் தாய்க்கு தாழம்பூவினால் நுனிமேலே பார்த்திருக்கும்படி பாவாடைச் சாற்றி வணங்கிச் சென்றார், சொர்ணாம்பிகையான சத்யபாமாவை மணந்தார். தாழம்பூ பாவாடையை நுனிகீழே பார்க்கும்படி வைத்து அம்மனுக்கு பாவாடை சாற்றி வழிபட்டால் ஆடைக்கு என்றுமே பஞ்சம் ஏற்படாது.
அனுஷம்
இரும்பு முதலான பொருள்களை வாங்க, பிரயாணம் செய்வது நல்லது. தளவாடங்கள், கப்பல் கட்டுதல், இயந்திரங்கள் (அச்சு இயந்திரம்) முதலியன வாங்கச் செல்லுகையில் இந்த அனுஷ நட்சத்திரத்தில் மாம்பூவினால் சிவனுக்கு அர்ச்சனை செய்து அப்பூவைத் தன்னுடன் எடுத்துச் சென்று மேற்கூறியவைகளை வாங்கினால் பல்விதமாகப் பெருகி பயன்படும்.
திருவோணம்
பவளமல்லி பூவினால் பெருமாளுக்கு திருவோணத்தில் மாலை கட்டி வெளிநாட்டுப் பயணம், கடல் கடந்து பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம். நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும்.
அவிட்டம்
முருகப் பெருமானுக்கு அகத்திப் பூவால் அர்ச்சித்து வெளியில் சென்றால் கனவு, விபத்து முதலியவைகளிலிருந்து தப்பிக்கலாம்.
பயண வெற்றிக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் தூதுவளை பூவை முறையாக தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சித்து வணங்க வேண்டும்.
பூசம்
அறுவை சிகிச்சை, வியாதிகளுக்கு மருத்துவரை அணுக பூச நட்சத்திரம் மிக உகந்தது. சாமந்திப் பூவினால் மாலை கட்டி முறையாக ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்கோ அணிவித்து வணங்கினால் ஒவ்வொரு நோயாளியும் எத்தகைய வியாதியாக இருந்தாலும் அதிலிருந்து குணமாகிவிடுவர்.
புனர்பூசம்
படிப்பறிவு குழந்தைகளுக்கு அதிகமாக வளரவும் அலுவலகத் தேர்வுகளில் வெற்றி பெறவும் புனர்பூச நட்சத்திரத்தில் ஹயக்ரீவப் பெருமானுக்கு சாமந்திப் பூவினால் திண்டுமாலை கட்டி அணிவித்து வணங்க வேண்டும்.
மூலம்
நட்சத்திரங்களில் உத்தமமான மூலம் நட்சத்திரத்தன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். செம்பருத்திப் பூவினாலும் அருகம்புல்லாலும் மாலை கட்டி விநாயகருக்குச் சாற்றி வணங்கினால் மூல நட்சத்திரத்தில் செய்யும் பயணம், காரியங்கள் வெற்றியைத் தரும்.
பூரம், பூரட்டாதி, திருவாதிரை, பரணி நட்சத்திரங்கள் பிரயாணத்திற்கு உகந்தது அல்ல. அதுவும் தனியாகப் பிரயாணம் செய்தால் திரும்புவது மிகக் கடினம்.
எல்லோரும் ஒருவிதத்தில் ஒவ்வொருவருக்குக் கடன் பட்டவரே. இவ்வாறான கடன்களோடு அல்லாமல் குடும்பத்திற்காகவும் இறை தொண்டிற்காகவும் கடன் பட்டிருந்தால் முறையோடு சித்தி செய்து காயத்ரீ ஜபித்து குலதேவதை பூஜை செய்து வேப்பம் பூவினை சக்தி பீஜ மந்திரம் ஜபித்து இடது கையில் வைத்து வலது கையினால் மூடிக் கொண்டு ஓடும் நீரிலோ, கும்பாபிஷேகம் செய்த கோயில் தீர்த்தத்திலோ விட்டால் கடன் ஓடிப் போகும். இதைத்தான் மூர்த்தி தீர்த்தம் தலம் முறையோடு தரிசிப்பவருக்கு சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்பார் தாயுமானவர்.
கடன் என்பது குதிரைமேல் பணம் கட்டி தோல்வி கண்டதாலோ, சூதாட்டங்களிலும் கேளிக்கைகளிலுமே ஏற்பட்டிருந்தால் அக்கடன்கள் தீராது. ஒவ்வொருவரும் நடந்து கொள்வதை வைத்துத்தான் அடுத்த பிறவியில் தன் நிலையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். ஒருவனை ஓட ஓட விரட்டி வேலை வாங்கி விட்டு உரிய கூலி தராவிட்டால் அடுத்த பிறவியில் குதிரைமேல் பணத்தைக் கட்டி ஏமாறுவான். ஆனால் கோயிலுக்கு தேர் செய்து தானமாக ஒருவன் கொடுத்திருந்தால் அடுத்த பிறவியில் குதிரைமேல் பணம் கட்டி வெகுவாக பணம் சேர்ப்பான். ஆனால் அதுவும் ஒரு முறைதான்.
எதிரிகள் இல்லாதவரே கிடையாது. எதிரி என்றால் எதிர்த்து நின்று அழிப்பவர் என்று பொருள் கொள்ளக் கூடாது. உடன் இருப்பவர்களும் கூட அப்போதைக்கப்போது ஏற்படும் பொறாமை, எதிர்பார்ப்பும் மாறும். வெளியில் தெரியாது. எனவே எந்நிலையிலும் எதிரிகளிடம் வலுச் சண்டைக்கு போகக் கூடாது. ஆனால் அவர்கள் உங்களை எதிர்த்து வந்தால், தயங்காமல் தாக்கலாம். இதில் வெற்றிபெற மகிழம்பூ உதவுகிறது.
ஒவ்வொரு மகிழம் பூவிற்கும் சுதர்சன மந்திரம் சொல்லித் தொடுத்து ஸ்ரீநரசிம்மருக்கு மாலையாக அணிவித்தால் எதிரிகளினால் தொல்லை இருக்காது. பில்லி, சூன்யம், ஏவல் முதலியவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும். இவைகளினால் வரும் துன்பங்களைவிட போதும் என்ற மனம் இல்லாததால், பொறாமையினால் ஏற்படும் துன்பங்கள் மிகவும் அதிகம். அதுவும் மகிழம்பூவினை மேற்கூறியவாறு நரசிம்மருக்கு அணிவிப்பதால் நீங்குகிறது.
துன்பங்களில் மிகக் கொடிய துன்பம் பசித் துன்பம். இத்துன்பத்தைத் துடைப்பது மிக அருமையான தொண்டு. எனவேதான் அன்னதானம் மற்ற தானங்களை விடச் சிறந்து விளங்குகிறது. இந்த பசித் துன்பத்தை நீக்க பூக்கள் வழி சொல்கின்றன. சித்திரை, வைகாசி மாதங்களில் செண்பகப் பூவை முருகனுக்குச் சாற்றினால் பசித் துன்பம் உடனே நீங்கும். உணவிற்கு என்றும் குறையிருக்காது.
இருப்பதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுவோர் செவ்வாய்தோறும் அரளிப் பூவை ஆறுமுகனுக்குச் சாற்றி வணங்கினால் சொந்தத்தில் இடம் பெறுவார்கள்.
உடுக்க உடைக்கு என்ன செய்வது ? வெண்தாமரை மலரால் சிவபெருமானை அலங்கரித்து அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அணியும் ஆடைக்கு தடையேதும் இன்றி பலவித ஆடைகள் கிடைக்கும். இருப்பினும் முக்கியமாக இதில் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. பழைய ஆடைகளையும் ஒரு சில புது ஆடைகளையும் வஸ்திர தானமாக வெளியில் கொடுக்க வேண்டும்.
திருமணத் தடங்கல்கள் பல காரணங்களுக்காக ஆவதுண்டு. வேறு திருமணங்களுக்கு இவர்கள் தடங்கல் கூறியிருந்தால் இவர்கள் திருமணம் தடங்கலாகும். இதுபோல் பல காரணங்களால் திருமணம் தடைபடுவதுண்டு. இதிலிருந்து நிவர்த்தி பெற அசோகப் பூவினைப் பறித்து அரசும் வேம்பும் பின்னி வளர்ந்துளள விருட்சத்திற்கு அடியில் உள்ள விநாயகருக்கு மாலையாக அணிவித்து அர்ச்சித்து வணங்க வேண்டும். அனைத்து திருமணத் தடங்கல்களும் நீங்கும்.
காதல் தோல்வி, கணவன் மனைவி பிரிவு இவைகளிலிருந்து விடுபடவும் இத்துன்பங்கள் தாக்காமல் இருக்கவும் வழி உள்ளது. உடல் கவர்ச்சியால் ஏற்பட்ட காதலுக்கு இது பொருந்தாது.

ரோஜா சகுனங்கள்

ரோஜாப் பூவினை எப்போதும் ஒற்றை ரோஜாவாக வைக்கக் கூடாது. இவ்வாறு வைத்துச் சென்றால் அபாண்டப் பழி சுமத்தப்படுவர். எனவே ஒன்றிற்கு மேற்பட்ட ரோஜா பூக்களையே அணிய வேண்டும்.
ரோஜாக்களில் பல நிறங்கள் உள்ளன. அவற்றில் வெள்ளை நிற ரோஜா அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த வெள்ளை நிற ரோஜாவால் வலுச் சண்டைதான் வளரும்.
மஞ்சள் ரோஜா மிகச் சக்தி வாய்ந்தது. இதில் மாசீர் தனுவசி என்னும் தேவதை வாழ்கிறது. இந்த தேவதையை சித்தி செய்துதான் பிரகஸ்பதி தேவகுரு ஆனார். இதனை விரும்பி வைப்பவர்கள் (இரண்டு அல்லது அதற்கு அதிகமாக) நினைத்த காரியத்தைச் சாதிப்பர். ஆனால் அக்காரியங்கள் பிறருக்கு தீமை விளைவிப்பதாக இருந்தால் படுதோல்வி அடைவர்.
சிவப்பு ரோஜா ஒன்பதை சேர்த்துக் கட்டி அதை ஆரமாகத் தலையில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டால் குழந்தை அதனுடைய தாய் தந்தையரை ஏமாற்றாது. குழந்தைகளால் ஏமாற்றப்படும் தாய் தந்தையரின் துன்பம் மிகக் கொடியது. மருமகளும் மாமனார் மாமியாரை ஏமாற்ற மாட்டாள்.
பூக்களைத் தொடுக்கும்போது இடைவெளி அதிகம் விட்டு தொடுப்பது தவறு. இவ்வாறு விற்கும் பூக்களை வாங்குவதும் தவறு. ஏனென்றால் இதனால் கணவன் மனைவிஇடைய இடைவெளி, மனஸ்தாபங்கள் அதிகமாகிறது.
செம்பவள ரோஜாவானால் ஐந்து பூக்களாகச் சேர்த்து வைத்துத்தான் அணிய வேண்டும். இதனால் செல்லுமிடங்களில் போட்டி இருக்காது.
பூவினைத் தலையில் பின்னலிட்டு, பின்னலின் நடுவில் முதுகுப் புறத்தில்படும் மாதிரி வைக்கக் கூடாது. பூவினை உள்ளே செருகி சுற்றித்தான் பந்து போல் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பவர்கள் புகுந்த வீட்டில் நல்ல பெண் என்று பெயரெடுப்பார்கள். ஒரு பக்கமாக பூவினை வைக்கக் கூடாது. வைத்தால் பேசாததைப் பேசியதாகப் பழிச் சொல் வரும்.
பூக்களையே அம்புகளாய்த் தொடுத்த வரலாறும் உண்டு.

மலர் அம்புகள்

14 ஆண்டுகள் வனத்தில் திரிந்து இராவணனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி மன்னனாக தசரத குமாரன் ஸ்ரீராமன் அரசாண்டான். கர்ப்பமாக உள்ள நிலையில் கணவனைப் பிரிவது பெரும் துன்பம். அந்த நிலையில் இருந்தாள் சீதை. இலக்குவனை அழைத்து ஸ்ரீராமர் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் விட்டு வா என்றார். வால்மீகி ஆஸ்ரமத்தில் பிறந்தவர்களே லவனும் குசனும். லவனும் குசனும் அரச குமாரர்கள் ஆனாலும் இருப்பதோ காடு. எனவே காட்டில் கிடைக்கும் குச்சி அம்புகளை வைத்து வித்தை சொல்லித் தருகிறார். மரக் குச்சி அம்புகளில் நுனியில் இரும்பு கவசங்களைப் பதித்து பயிற்சி தருகிறார் வால்மீகி.
லவ குசனின் எதிர் காலத்தைக் கணக்கிட்டு தான் அவ்விடம் விட்டு விலகி இருப்பது நல்லது என்று எண்ணி ஒரு நாள், “லவ குச, நான் தனித்து தவம் செய்வதற்காகச் செல்கின்றேன். நான் வரும் வரை உங்களுடைய தாய் சீதா தேவியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று கூறிச் சித்திரகூடம் சென்று விட்டார்.
ஒரு நாள் தாய்க்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து விட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு வெள்ளைக் குதிரை ராஜ அலங்காரங்களுடன் வந்தது.
ஸ்ரீராமர் அசுவமேதயாகம் செய்ய எண்ணி குருவிடம் விண்ணப்பிக்க குரு அதற்குரிய லட்சணங்கள் பொருந்திய குதிரையைத் தேர்ந்தெடுத்து ஹோமஙகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மிகச் சிறப்பாக அசுவமேத யாகம் செய்தார். அசுவமேத யாகம் செய்தால் குதிரையை திக்விஜயம் செய்வித்து அத்துடன் படையை அனுப்பி யார் எதிர்த்தாலும் அவர்களை வென்று குதிரையை திரும்பப் பெற்று புறப்பட்ட இடம் வர வேண்டும் என்பது சட்டம். அவ்வாறு கிளம்பிய குதிரை பல இடங்களுக்குச் சென்றது. குதிரையின் பின்னே சத்ருக்னன் தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்றான். சத்ருக்கனன் என்ற பெயருக்கு துன்பம் அழிப்பவன் என்று பொருள். பல இடங்களிலும் திரிந்து விட்டுத் தெற்கு நோக்கி வருகிறது குதிரை. அவ்வாறு வரும்போதுதான் ஒரு நாள் அந்த குதிரை லவகுசர்களுக்கு எதிரில் வந்தது.
“ஸ்ரீராமர் அசுவமேத யாகம் செய்து முடிவில் இக்குதிரையை திக்விஜயம் செய்ய அனுப்பியுள்ளார். இதனை யார் பிடித்தாலும் அவர்களுடன் போர் செய்து குதிரையை மீட்பேன். போர் செய்ய விரும்பாதவர்கள் குதிரையை வணங்கி அனுப்பி விடவும்.” என்று எழுதியிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தனர். யாரையும் காணவில்லை. குசன், “அண்ணா, குதிரை நன்றாக இருக்கிறது. நாம் பிடித்துக் கட்டி விட்டால் என்ன ?” என்றான்.
லவன், “தம்பி, இநத குதிரையைப் பிடித்துக் கட்டினால் பின்னால் வரும் படையுடன் போர் செய்ய வேண்டும். இருந்தாலும் குதிரையை வணங்கி வழி அனுப்புதல் என்பது நம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகும். எனவே பிடித்துக் கட்டி விடுவோம், வா. நம் குருவின் அஸ்திரக் கலை நமக்குத் துணை உள்ளது,” என்றான்.

 

மந்தாரையும் பன்னீர்ப் பூக்களும் பூத்துக் குலுங்கும் வடகுரங்காடுதுறை திருத்தலம்

உடனே இருவரும் அந்தக் குதிரையைப் பிடித்து மரத்தில் கட்டி விட்டனர். குதிரையைத் தேடி வந்த சத்ருக்னன் படை குதிரை ஒரு மரத்தில் கட்டப்பட்டுள்ளதைப் பார்த்து நின்று விட்டனர். இரண்டு குழந்தைகள் பக்கத்தில் உட்கார்த்திருப்பதைக் கண்டு அவர்களிடம் வந்தனர்.
தங்களை நோக்கி வரும் படை வீரர்களைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தனர் லவகுசர்கள்.
சுற்றும் முற்றும் பார்த்து வேறு யாரும் இல்லாததால இக்குழந்தைகளிடம் வந்த படைவீரர்களில் ஒருவன், “குழந்தைகளே, இந்தக் குதிரையைக் கட்டியது யார் ? நீங்களா ?” என்றான்.
லவன், “ஆமாம், நாங்கள்தான் கட்டினோம்,“ என்றான். உடனே படைவீரர்கள் சத்ருக்கனனிடம் சென்று தெரிவித்தார்கள். சத்ருக்னன் குழந்தைகளைப் பார்த்தவுடன் அவர்கள் அழகில் மயங்கி, “குழந்தைகளே, விளையாட்டாக எண்ணி இக்குதிரையைக் கட்டி விட்டீர்கள். இது போர்க் குதிரை. இதனைக் கட்டினால் என்னுடன் சண்டையிட்டு என்னை வெல்ல வேண்டும். நீங்களோ அறியாமல் செய்து விட்டீர்கள். எனவே குதிரையை வணங்கி அவிழ்த்து விடுங்கள்,“ என்றான்.
இதைக் கேட்ட குழந்தைகள், “நாங்கள் குதிரையின் நெற்றியில் உள்ள வாசகத்தைப் படித்த பின்னர்தான் பிடித்துக் கட்டினோம். முடிந்தால் போர் செய்து வென்று பின் குதிரையை மீட்டுச் செல்லுங்கள்,” என்றனர்.
சத்ருக்னன் எவ்வளவு கூறியும் குழந்தைகள் கேட்காததால் சத்ருக்னன் போருக்குத் தயாரானான். முதலில் சாதாரணமாகப் போர் செய்த சத்ருக்னன், குழந்தைகளின் போர்த் திறனைக் கண்டு உக்கிரகமாகவே போர் செய்தான். எதிரில் உள்ளவர்கள் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் போர் செய்தான். தன்னுடைய திறமை அனைத்தையும் பயன்படுத்தி அம்பினை எய்தாலும் அவ்வம்புகள் லவகுசர்களிடம் போகாமல் அவர்கள் எய்த அம்புகளினால் நடுவிலேயே நிறுத்தப்பட்டன.
இச்சமயத்தில் லவன் ஒரு மரக்குச்சி அம்பினை எடுத்து மலைவேப்பம் பூவினை குரு சொல்லிக் கொடுத்தபடி ரீங்கார பீஜம் ஜபித்து அம்பின் மேல் வைத்து எய்தான். அந்த அம்பு வேகமாகச் சென்று மகாபாச அஸ்திரமாக மாறியது. எங்கும் இருள் சூழ்ந்து மேகங்கள் திரண்டு மின்னல்கள் மின்ன பாணம் சத்ருக்கனனை வீழ்த்தி விட்டது.
தலைவன் விழுந்தவுடன் படைகள் சிதறி ஓடின. விஷயம் அறிந்த பரதன் அடங்காத கோபத்துடன் லட்சுமணனிடம் நடந்த விஷயம் சொல்ல, இருவரும் படையெடுத்து வந்தனர்.
ஸ்ரீராமரைப் போன்று ஆயிரம் ராமர் சேர்ந்து நின்று போர் செய்வது போல் லவ குசரர்களைக் கண்ட லட்சுமணர் மயங்கி குழந்தைகளிடம் பேசினாலும் குழந்தைகளோ, “முடிந்தால் போர் செய்த குதிரையை மீட்டுப் போ. இல்லையேல் சரணடைந்து கேள். குதிரையை அனுப்புகின்றோம்,“ என்றனர்.
உடனே பன் மடங்கு கோபம் கொண்ட லட்சுமணர் தன் பலம் முழுவதையும் பிரயோகித்துக் கடுங் கோபத்துடன் போர் செய்தான். எவ்விதத்திலும் லட்சுமணரால் லவகுசர்களை நெருங்க முடியவில்லை. முடிவில் கொடூராஸ்திரம் ஏவினார் லட்சுமணர். அந்த அஸ்திரம் எதிரிகளைக் கொடூரமாகத் தாக்கி அழித்து விடும். அஸ்திரம் ஏவியவுடன் அது அவர்களை என்ன செய்துவிடுமோ குழந்தைகளாயிற்றே,” என்று கவலைப்பட்டான். உடனே லவன் குசனைப் பார்க்க, குசன் இலுப்பை பூவை கால பைரவ மந்திர பீஜத்தை ஜபித்து அம்பின் மேல் வைத்து ஏவினார்கள். அந்த பாணம் பாசுபதாஸ்திரமாக மாறி லட்சுமணரை வீழ்த்தி விட்டது.
கை கொட்டிச் சிரிக்கும் குழந்தைகள் மேல் அபார கோபம் கொண்ட பரதன் உடனே தன்னிடமிருந்த கடைசியில் பயன்படுத்தும் நிலைகளா அஸ்திரத்தை ஏவினான். எதிரியை கூர் கூராகப் பிளக்கும் அஸ்திரம் அது. லவன் பார்த்தான். செந்தாழம் பூவினை வைத்து சக்தி பீஜம் ஜபித்து அம்பின் மீது வைத்து ஏவினான். அது ஜகிஸ்திரமாக மாறி கேமாகச் சென்று பரதன் ஏவிய அம்பினை தடுத்து மேலும் சென்று பரதனை வீழ்த்திவிட்டது.
ஸ்ரீராமர் இதனைக் கேள்வியுற்றதும், “இரு குழந்தைகள் இத்தனை பேரை வீழ்த்தி விட்டனரா ? இதில் ஏதோ விசேஷமுள்ளது,“ என்று வியந்த வண்ணம் படையுடன் வருகிறார்.
ஒவ்வொரு நாளும் நடந்தவைகளை சீதாதேவியிடம் கூறிய குழந்தைகள், “தாயே, இன்றும் ஜயித்து விட்டோம். நாளை மீண்டும் வருவதாகச் சென்றுள்ளது படை. தங்களைக் காக்க வேண்டியது எங்கள் கடமை. நாளை வரும் அரசனையும் தோற்கடிக்க ஆசி கூறுங்கள்,“ என்றனர். அரசர்களின் பெயர் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. உடனே தாய் சீதா தேவி, “யார் வந்தாலும் வெற்றி உங்களுக்கே,” என்று கூறி ஆசி வழங்கி தான் செய்து வரும் பூஜையினை தொடர்ந்தாள். பன்னீர்ப் பூவினால் ஈசனுக்கு அர்ச்சனை செய்வதே சீதையின் பூஜை.
இந்த பன்னீர்ப்பூ என்ன செய்யும் ?

பரமன் விரும்பும் பன்னீர்ப் பூ

மறுநாள் போருக்கு வந்த ஸ்ரீராமர் குழந்தைகளைக் கண்டவுடன் தன்னைப் போலவே இருப்பதைக் கண்டு வியந்தார். அவர் மனதிற்குள் வேகமாக எண்ணங்கள் ஓடின. ஒரு முடிவிற்கும் வரமுடியாததால் குழந்தைகளைப் பார்த்து, “குழந்தைகளே, நீங்கள் எந்த குலம் ?“ என்றார்.
லவன், “அரசே, நாங்கள் சூரிய குலம்,” என்றான். குசன் தலையை ஆட்டி ஆமோதித்தான்.
உடனே ஸ்ரீராமர், “குழந்தைகளே, நானும் சூரிய குலம்தான். ஒத்த குலத்தவர் சாதாரணமாகப் போர் செய்யக் கூடாது,” என்று நிறுத்தினார். குசன், “பின் எதற்காக வந்துள்ளீர்கள் ?” என்றான்.
ஸ்ரீராமர், “குழந்தைகளே, அசுவமேத யாகச் சட்டத்தின்படி இக்குதிரை வெற்றியுடன் திரும்பினால்தான் யாகம் முடியும். எனவே குதிரையைக் கொண்டு போகத்தான் வந்தேன். என் தம்பிமார்கள் தோல்வி அடைந்ததிலிருந்து உங்கள் வீரம் அறிகிறேன். இருந்தாலும் ஒரே குலமாக இருப்பதாலும் நீங்கள் குழந்தைகளாக இருப்பதாலும் போர் செய்ய மனம் ஒப்பவில்லை. குதிரையை அனுப்பி விடுங்கள்,“ என்றார்.
லவனும் குசனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். லவன், “அரசே, தைரியம் இருந்தால் போர் செய்து குதிரையை மீட்டுச் செல்லுங்கள். இல்லையேல் திரும்பிப் போய் விடுக,“ என்றான்.
ஸ்ரீராமர் இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று முடிவு எடுத்து கல்லடி தோத்திரம் கூறி அம்பின் பின் பகுதியால் தன் மார்பை தட்டிக் கொண்டார். கனிந்த மனம் கல்லாகியது. ஏனெனில் எதிரில் உள்ள குழந்தைகள் மனம் கல்லாக இருந்தது. போர் பலமாக நடந்தது. பல வகையிலும் போர் செய்து பார்த்த ஸ்ரீராமர் குழந்தைகள் சரிசமமாக போர் செய்வதைக் கண்டு வியந்து கோபம் கொண்டு பஞ்சாட்சரி மந்திரம் ஜபித்து ஐந்து அம்புகளை ஏவினார். இதுவரை எந்தப் போரிலும் எய்யாதது இந்த பாணம். இதனைப் பார்த்த லவகுசர் இருவரும் இரண்டு குச்சி அம்புகளை வைத்து கொன்றைப் பூவினை அதன் மேல் வைத்து பஞ்சாட்சர பீஜத்தை ஜபித்து ஏவினார்கள். மேலே எழுந்த இரண்டு பாணங்களும் ஒன்றாகி அக்ஷயஜித பாணமாக மாறியது. பஞ்சபூத சக்திகளைக் கக்கிக் கொண்டு ஸ்ரீராமரின் ஐந்து பாணங்களும் லவகுசர்களை நெருங்கி வருகிறது. ஸ்ரீராமரோ இதனை ஏவி விட்டோமே குழந்தைகளை என்ன செய்து விடுமோ என்று மனம் கலங்கிப் பார்க்க, குழந்தைகளோ தாங்கள் அனுப்பிய பாணம் என்ன செய்கின்றது என்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு அம்புகளும் நெருங்குகின்றன. தாய் சீதாதேவியோ பன்னீர் புஷ்பங்களால் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறாள். வேகமாக வந்த அக்ஷயஜித பாணம் சிவகூறாக மாறியது. பஞ்சாட்சரி ஜபிக்கப்பட்ட ஸ்ரீராமர் பாணம் சக்தி கூறாக மாறியது. நெருங்கியவுடன் சிவகூறு சக்திகூற்றினை விழுங்கி ஸ்ரீராமரை நோக்கி வந்தது. ஸ்ரீராமர், “என்னைவிட வல்லவன் வந்து விட்டான். இனி நான் அரசாளக் கூடாது,” என்று நினைத்தார். உடனே அந்த அம்பினால் தாக்கப்பட்டு மயங்கிச் சாய்ந்தார்.
சிவபூஜையில் ஈடுபட்டிருந்த சீதாதேவி திடீரென்று நிலைகுலைந்து போனாள். மனம் படபடக்க பூஜையிலிருந்து விடுபட்டு குழந்தைகளுக்கு ஆபத்தோ என்று வெளியில் ஓடி வந்தாள். ஆனால் குழந்தைகளோ சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டாள். குழந்தைகள் தாயிடம் ஓடி வந்து, “அன்னையே, உங்கள் ஆசியால் எதிரி அரசனை வீழ்த்தி விட்டோம்,” என்றனர்.
நிமிர்ந்த சீதை ஸ்ரீராமரின் கொடி தேரில் பறப்பதைக் கண்டு பதறினாள். ஓடி வந்த சீதை ஸ்ரீராமர் நினைவிழந்து சாய்ந்து விட்டதையும் அதுவும் தன் மக்களாலேயே வீழ்ந்து விட்டதையும் அறிந்து பதறினாள்.
ஸ்ரீராமர்தான் லவகுசர்களின் தந்தை என்பதைச் சொல்லாதது தன் தவறுதான் என்று தன்னையே நொந்து கொண்டு, “குழந்தைகளே, நெருப்பினை மூட்டுங்கள், இனி நான் வாழக் கூடாது,” என்று நெருப்பினை மூட்டச் செய்கின்றாள். விஷயம் புரியாத லவகுசர்கள் நெருப்பினை மூட்டினார்கள்.
விசுவாமித்திரர் ஸ்ரீராமருக்கு குரு. அரசனாக இருந்து துறந்து ரிஷியானார். அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார் ஸ்ரீராமருக்கு. வால்மீகியோ வில்வித்தையில் கைதேர்ந்தவர். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டாம். குலவித்தை கல்லாமல் பாகுபடும். ஆகையால் வில்வித்தையில் சிறந்து விளங்கினர். மேலும் லவகுசர்களுக்கு காட்டில் வித்தை கற்றுக் கொடுத்தாலும் அவர்களுடைய எதிர்கால வாழ்வில் வரும் துன்பங்களை எதிர்க்கவும் பூக்களை வில்வித்தையில் பயன்படுத்தும் புதிய வித்தையினையும் கற்றுக் கொடுத்திருந்தார். எனவே பல போர்களைக் கண்டிருந்த ஸ்ரீராமரும் சாய்ந்தார்.
அங்கு தோன்றிய வால்மீகி நொடிப் பொழுதில் நடந்ததை உணர்ந்து கொண்டார். மனதிற்குள் தன் சீடர்களின் திறமையை எண்ணி மகிழ்ந்தார். சிஷ்யர்களின் வெற்றியால் குருவிற்கு மகிழ்ச்சிதானே. தன்னுடைய தபோபலத்தால் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து தண்ணீரை அவர்கள் மேல் தெளிக்க ஸ்ரீராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்னன் அனைவரும் எழுந்தனர்.
வால்மீகியை வணங்கிய ஸ்ரீராமரும் அவருடைய சகோதரர்களும் கண்களில் வியப்பைத் தேக்கி நின்றனர். லவகுசர்களை ஸ்ரீராமரின் மகன்கள் என்று வால்மீகி அறிமுகப்படுத்தியவுடன் ஆச்சரியப்பட்டனர் மற்றவர்கள். ஆனால் ஸ்ரீராமரோ, “முனிவரே, இவர்கள் என் குமாரர்கள் என்பதனை அறிந்தேன். ஆனால், அவர்களாலேயே நான் தோல்வியுறக் காரணம் என்ன ? தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும்,” என்று வினவினார்.

ஸ்ரீவால்மீகி முனிவர் திருப்பத்தூர் திருத்தலம்

வால்மீகி, “ஸ்ரீராமா, நீ சத்திய கீர்த்தி ஆனாலும் இந்த யுகத்தில் பெண்களைக் கொல்லக் கூடாது என்பது சட்டம். இருப்பினும் நன்மையைக் கருதி தாடகையை நீ கொன்றாய். அடுத்து குரங்கினை யுக தர்மப்படி மனிதன் கொல்லக் கூடாது. தவறு செய்தவனாய் இருந்தாலும் குரங்கினத்தை சேர்ந்த வாலியை நீ கொன்றாய். வீஜீரவசு என்ற பிரம்ம குலத்தில் பிறந்தவன் இராவணன். அவனை நீ கொன்றாய். இவைகளினால் சாபம் ஏற்றாய். பிரம்ம குலத்தில் பிறந்த இராவணனைக் கொன்று பிரம்மஹத்தி சாபம் பெற்றதால் பிரம்மா, “உன் புத்திரர்களாலேயே நீ தோற்கடிக்கப்டுவாய்,” என்று சாபம் கொடுத்தார். அதன் விளைவே அந்த சாபங்களின் பலன்களே இந்த நிகழ்ச்சி,” என்றார். சிறிது நேரம் இவைகளை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்த ஸ்ரீராமர் தனக்குள், “நன்மை கருதிச் செய்தாலும் தவறுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு,“ என்று உணர்ந்தார். தண்டனை முடிந்து விட்டதால் மனம் மகிழ்ந்து குதிரையை மீட்டு அசுவமேத யாகம் முடிக்க கிளம்பினார். ஏனென்றால் சாப விமோசனம் கிடைத்து விட்டதே.
வால்மீகியை வணங்கிய சீதை, “குருவே, தங்கள் அருளால் இன்று பெரிய விபரீதம் நடைபெறாமல் நன்மையில் முடிந்தது. தாங்கள் வருவதற்குச் சற்று காலதாமதமானால் என்ன நடந்திருக்கும் ? நினைக்கவே அச்சமாயிருக்கிறது,” என்றாள்.
வால்மீகி, “தாயே, இதில் அடியேன் செய்தது பெரிய விஷயமல்ல. நீ செய்த பூஜையும், பூக்களை முறையாகப் பயன்படுத்தியதுமே உன்னையும் மற்றவரையும் காப்பாற்றிற்று,” என்றார்.
சீதாப்பிராட்டி, “ஆச்சரியமாக இருக்கிறதே குருவே. அடியேன் செய்த பூஜை அனைவரையும் காப்பாற்றியதா ? தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன், குருவே,“ என்றாள்.
வால்மீகி : அம்மா சீதாதேவி, பூச நட்சத்திரத்தில் பன்னீர்ப்பூவை நீ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதை விரதமாகக் கொண்டு தொடர்ந்து செய்தாய். அது கணவனுக்கு எந்தவித ஆபத்தானாலும் அதிலிருந்து அவனைக் காப்பாற்றும், மாங்கல்ய பலத்தைப் பெண்களுக்குத் தரும்.
சீதை : குருவே, அவர் கீழே விழுந்தவுடன் உங்கள் தீர்த்தத்தினாலும் மந்திரத்தினாலும்தானே உயிர் பெற்றார் ?
வால்மீகி : இல்லை அம்மா, நீ உன் மக்களுக்கு யாராக இருந்தாலும் வெற்றி உங்களுக்கே என்று ஆசி தந்திருந்தாய். அதனாலும் ஸ்ரீராமர் சக்தியாகிய உன்னை விட்டுப் பிரிந்திருந்தமையாலும் லவகுசர்களின் வீரத்தாலும் அங்கு பூக்கள் அம்புகளில் பயன்படுத்தப்பட்டதாலும்தான் ஸ்ரீராமரை லவகுசர்கள் வென்றார்கள்.
சீதை : குருவே, அப்போது அவர் மீண்டும் எழுந்தது எவ்வாறு ?
வால்மீகி : அது உன்னுடைய பூஜையினால்தான் அம்மா. ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்தது அடியேனாக இருந்தாலும் அதனை அனைவருக்கும் பயன்படுத்த முடியாது. அதற்கான புண்ணியமும் பூஜையும் ஒருவரிடத்தில் இருந்தால்தான் அவரை ம்ருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி எழுப்ப முடியும். அதற்கு உன்னுடைய பன்னீர்ப்பூ பூஜை உதவியது. யாரொருவர் பூச நட்சத்திரத்தில் பன்னீர்ப் பூவினால் ஈசனுக்கு பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு மாங்கல்ய பலம் அதிகமாகிறது.
பூச்சூடும் முறைகள்
தளர்வாகப் பின்னிப் பூவினை கீழே கழுத்து அருகில் வைப்பதும் தவறு. தாலிக்கயிறு கட்டும் இடத்திற்கு கீழே அந்த அளவில் முதுகில் பூவினை வைத்துக் கொண்டால் கருச் சிதைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கன்னிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு குழந்தையானாலும் பூவினை அவர்கள் தலையில் வைக்கும்போது கிருஷ்ணர் கொண்டை போலலோ அல்லது மீனாட்சி தேவி கொண்டை போலவோ போட்டு பூவினை அதில் முழுவதுமாக சுற்றி வைக்க வேண்டும். யாராக இருந்தாலும் பூவினை வைத்துக் கொண்டு நடக்கும்போது பூ ஆடி ஆடி பின்தலையைத் தொடக் கூடாது. இவ்வாறு நடந்தால் பின்னர் மணவாழ்க்கையில் ஒற்றுமை இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். பூவினை ஆடாமல் வைக்க வேண்டும்.
இரும்பாலான ஹேர்பின் ஊசிகளைக் குத்தி நிற்க வைப்பார்கள். அதுவும் தவறு. இவ்வாறு செய்தால் மயக்க நோய், இரத்த கொதிப்பு நோய் முதலிய நோய்கள் வரும் பின்னர் என்ன செய்வது ? மரத்தால் செய்து வண்ணம் பூசப்பட்டுள்ள ஊசிகளை உபயோகிக்க வேண்டும்.
பூவினை ஜடை முழுவதும் சுற்றி அலங்கரிப்பது வளைகாப்பு விழாவிற்கு மட்டும்தான் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தனால் குறைப்பிரசவம் ஆகாது. மற்ற நேரங்களில் செய்தல் தவறு.
பூவினை ஜடை நுனியில் வைப்பது தவறு. இதனால் பூ ஆடி ஆடிப் பின் பக்கத்தில் இடிக்கும். இதனால் வரும் சாபம் என்ன ? இவள் கணவனை இழப்பாள். ஒரு பக்கத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை, பூஜை. மறுபக்கத்தில் நேர்மாறாக பூச்சூடுதல். இதனால்தான் என்ன பலனை எதிர்பார்த்தாலும் நடப்பதில்லை.
ஜடையின் நுனியை அப்படியே விடக் கூடாது. நுனியை மடித்து மேலே கட்டி விட வேண்டும். அதனையும் நூல் கயிற்றினால்தான் கட்ட வேண்டும். ரப்பர் வளையம் உபயோகிக்கக் கூடாது. ரப்பர் வளையம் உபயோகித்து சிலர் ஜடையை அடர்த்தியாகக் காண்பிப்பர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் பல கண்டங்கள் வரும்.
முடி வளர்வதற்கு சாங்க்யா வித்தகி என்ற தேவதையின் அருள் வேண்டும். ஆனால் அந்த தேவதை மணமுள்ள மலரை மணமில்லாத மலரோடு தலையில் வைத்தால் சாபம் கொடுக்கும். அதனால் தலைமுடி கொட்டும்.
புஷ்பத்தை தலையில் வைக்கும்போது இரண்டு பக்கங்களில் மட்டும் வைக்கக் கூடாது. சூரிய பிறை சந்திர பிறை எனப்படும் இவ்வகை அலங்காரம் திருமணத்தின்போது மட்டும் மணமகளுக்குச் செய்யலாம். மற்ற நாட்களில் கிடையாது. எப்பொழுதும் பெண்கள் காதினை மூடும்படி தலைமுடியை வாரக் கூடாது. இது ஆரோக்யத்தைக் கெடுக்கும்.

பின்னல் இலக்கணம்

பின்னலை போடும் முறை
பின்னலை முன்பக்கம் போடக் கூடாது. எக்காரணத்தாலும் பின்னல் முன்பக்கம் வரவே கூடாது. பெரியோர்களைக் குனிந்து நமஸ்கரிக்கும்போது தலைப் பின்னல் முன்பு வந்து விழும். இது தவறு. இவ்வாறு வராமல் இருப்பதற்காகத்தான் பின்னலை உள்ளே விட்டு முந்தானையை இழுத்து இருப்பர். இதனால் நமஸ்கரிக்கும்போது பின்னல் பக்கவாட்டிலோ உச்சி நெற்றியிலோ வந்து விழாது. இறைவன் கருணையினால் முடி பின் பக்கம் வளருகிறதே தவிர தலையின் முன் பக்கமல்ல.
முன்பக்கம் போட்ட பின்னலுடன் எதிரில் பெண் வந்தால் சகுனத் தடை. மனைவி பின்னலை முன்னே போட்டுக் கணவனை வெளியில் வழி அனுப்புதல் தவறு.
கொண்டைகள் போட்டு பூ வைப்பது பழக்கம். அவ்வாறு வைக்கும்போது கொண்டை முழுவதும் மூடியது போல் வைக்கக் கூடாது. இவ்வாறு வைத்தவர்களை நம்புவது தவறு. அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களே.
பூவினை முந்தானையைத் தொங்கவிட்டு வைக்கக் கூடாது. கண்ட இடங்களிலும் நின்று தலையில் பூ வைக்கக் கூடாது. நடுத் தெருவிலும், செருப்புக் கடைகளைப் பார்த்துக் கொண்டும் பூவினைத் தலையில் வைக்கக் கூடாது. நடுத் தெருவில், தெரு முனைகளில் பூக்களை வாங்கி அங்கேயே பூச்சூடக் கூடாது. இதனால் சுமங்கலித்துவம் கிடைக்காது. வாழ்க்கையும் நடுத் தெருவிற்கு வந்து விடும்.
கணவன் முன்னிலையில் அல்லது தெய்வப் படத்திற்கு முன்னால் அல்லது வயதான சுமங்கலியின் முன்னால்தான் தலையில் பூ வைக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மாதவிடாய் நோய் வந்து துன்பப்படுவாள்.
பூவினை துணிப் பையில்தான் போட்டு எடுத்துப் போக வேண்டும். அந்த பையினை அங்குமிங்கும் மோதவிடாமல் கையில் பத்திரமாக எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுக்க வேண்டும். இல்லையேல் இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பையுடன் தூக்கி எறிதல் தவறு.
கோயம்பேடு திருத்தல மகிமை
ஸ்ரீராமர் நிறைவேற்றிய அசுவமேத யாகத்திற்குப் பின் வால்மீகி முனிவர் லவ குசர்கள், சீதாதேவியுடன் கோயம்பேடு திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது இத்தல மகிமையைப் பற்றி தெரிவித்த இரகசியங்களை நம் குருமங்கள கந்தர்வா அருளியுள்ளார்.
லவ குசர்கள் : குருவே, எங்கள் தந்தைக்கு பிரம்ம தேவனின் சாபம் நீங்க நாங்கள் கருவிகளானோம். இருந்தாலும் தந்தையை எதிர்த்தோம் என்ற அவச் சொல்லுக்கும் சாபத்திற்கும் ஆளாகி விட்டோமே. இதிலிருந்து மீளும் வழியினைத் தாங்கள்தான் கூற வேண்டும்.
வால்மீகி : வாழ்க்கையில் ஆரம்பம் எது ? முன்னேற்றம் எது ? வெற்றி எது ?
லவன் : வாழ்க்கையில் ஆரம்பம் நற்காரியம் செய்வதற்காக இப்பிறவி எடுத்ததுதான்.
குசன் : சத்சங்கத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதுதான் முன்னேற்றம்.
லவன் : அனைவரும் சிவத் தொண்டு செய்யும்போது பூரண ஒத்துழைப்புக் கொடுத்து சிவ ஆசி பெறுவதே வெற்றி.
வால்மீகி : மகிழ்ச்சி. வாழ்வில் பெரும்பாலோர் தான் செய்வது சரியே என்று எண்ணியேதான் தவறு செய்கிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்தத்தான் சத்சங்கம் தேவை. மலையளவு திரண்ட புண்ணியத்தால் மனிதப் பிறவி எடுத்துவிட்டு சிறிய விஷயங்களுக்காக அடிமைப்படுவதும், தெய்வத் தொண்டு செய்யாமல் இருப்பதும் எவ்வவு வீண் ? எனவே வாழ்க்கையில் ஆரம்பம், முன்னேற்றம், வெற்றி இம்மூன்றையும் கடைபிடிப்பவரின் வாழ்க்கை திசை மாறுவதில்லை.
கோயிலில் இறைத் தொண்டு செய்வதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். கோயில் தொண்டு என்பது மிகச் சிறந்த தொண்டாகும். பல சாபங்களையும் அதர்மங்களையும் அழிக்கும். பல மகான்களின் ஆசியும் கிடைக்கும். ஒவ்வொரு மகானும் சித்தரும் ஒரு கோயிலுடன் தொடர்பு கொண்டவர்களாய் இருப்பார்கள். அக்கோயிலில் முக்தி அடைந்தவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லாம் அருவமாக அந்தந்த கோயில்களில் சுற்றி வருவார்கள். அந்த கோயிலில் யார் தொண்டு செய்தாலும் அவர்களுக்கு ஆசி தருவார்கள். எனவேதான் பழைய கோயில்களைப் புதுப்பிக்க வேண்டும். அங்கு தொண்டு செய்ய வேண்டும். பல காலமாக இருக்கும் கோயில்களில் ஒன்றிற்கு மேற்பட்ட மகான்கள், சித்தர்கள், தேவர்கள் வந்து சென்றிருப்பார்கள். இப்போதும் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அருவமாக சுற்றும்போது அவர்கள் மேல் பட்ட காற்று நம்மேல் பட்டால் கூட போதுமானது. அதுவே நம் உன்னத ஆன்மீக நல்வாழ்வுக்கு அடிகோலும்.

சுருசோதன மகரிஷி

ஒரு சமயம் ஒருவர் தவத்தில் இருந்தார். அவர் யார், எதற்காகத் தவம் செய்கின்றார் என்பது பலருக்கு தெரியவில்லை. தேவர்களும் முயற்சித்துப் பார்த்தனர் முடியவில்லை. உடனே தங்களுடைய தலைவர் தேவேந்திரனிடம் வினவினர். தேவேந்திரன் அவர்முன் தோன்றி, “நீர் வேண்டும் வரம் யாது ?” என்று வினவினார். கண் திறந்து பார்த்த தவயோகி, “இந்திர பகவானே, செயற்கரிய தவம் செய்ய விரும்புகிறேன். இதுவரை எவரும் செய்யாத தவம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்வது என்று தாங்கள் கூற வேண்டும்,“ என்றார். அதற்கு இந்திரன், “பலவிதமாக தவங்கள் செய்தவரை நான் அறிவேன். எவருமே செய்யாத தவம் என்று ஒன்றினைக் கூறுதல் என்னால் இயலாதது. ஏனென்றால் அது நான் அறியாத தவமாக இருக்குமே தவிர செய்யாத தவமாக இருக்குமா என்பதை நான் அறிய மாட்டேன். எனவே நீ செய்த தவத்தின் பயனால் எல்லா உலகங்களுக்கும் போகும் சக்தியினைத் தருகிறேன். நீயே நேரில் சென்று தெரிந்து வா,“ என்று கூறி மறைந்தார்.
அந்த தவசியின் திருநாமம் சுருசோதனன் என்பதாகும். சுருசோதனரும் பல உலகங்கள் சென்று விசாரித்தார். ஒவ்வொரு உலகத்திலும் புதிதாகத் தவம் என்று ஒன்றைச் சொன்னால் ஏதாவது ஒரு உலகில் அதனைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். அப்போதுதான் சுருசோதனருக்கு அவருடைய விருப்பம் எவ்வளவு கடுமையான விஷயம் என்று தெரிய வந்தது. இருந்தாலும் விடாமல் கேட்டுக் கொண்டே வந்தார். அப்பொழுது தேவலோகத்தில் ஓரிடத்தில் நாரதரைக் கண்டார். அவர், “பூலோகம் சென்றால்தான் வழி பிறக்கும். எத்தனை பெரிய மகானானாலும் தேவனானாலும் ஒவ்வொருவரும் பூமியில் சென்றுதான் புண்ணியம் சேர்க்க முடியும்.

ஸ்ரீஆனந்த வெண்சாமர
கணபதி கோயம்பேடு

மற்ற இடங்களில், உலகங்களில் எல்லாம் பூமியில் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பிறவி கிடைத்ததை அனுபவிக்கத்தான். இறைவன் நினைவும், இறைவன் தொண்டும், அவன் அடியவர் தொண்டும் பூவுலகில் செய்தால்தான் உண்டு. எனவேதான் பல மகான்கள், சித்தர்கள் பூமியில் பிறந்து பல மக்களை இறைத் தொண்டில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.
மிகவும் சந்தோஷப்பட்ட சுருசோதனர் பூமிக்கு வந்தார். தினமும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில்களில் தண்ணீர் ஊற்றி அலம்பி விடுவார். பல நாட்கள் பிரகாரத்தின் தரையைக் கழுவிய பிறகு பக்க சுவர்களின் மேல் தண்ணீர் ஊற்றி அலம்பினார். இதனால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் ஈசன் குளிர்ந்தார். ஒவ்வொரு கோயிலாகச் சுத்தம் செய்து வந்த அவர் கோயம்பேடு திருத்தலத்தை அடைந்தார். பல நாட்களாகத் தனக்கு பதில் இல்லை என்ற ஏக்கத்துடன் வரும்போது ஆகாயத்தில் அசரீரி ஒலி கேட்டது, “சுருசோதனா, இங்கிருந்து கிழக்கே சிறிது தூரம் சென்றால் ஒரு கோயில் உள்ளது. அங்கு உனக்கு விடை கிடைக்கும்.”
இறைவனை வணங்கி நடந்தார் சுருசோதனன். சிறிது தூரம் சென்றபின் கோயில் இருப்பதைக் கண்டு அதனை நெருங்கினார். அங்கு இரண்டு கோயில்கள் இருப்பதைக் கண்டு வியந்தார். எதிரில் உள்ள வைகுண்டவாசப் பெருமாளை வணங்கி, சிவன் கோயிலினுள் நுழைந்தார். மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் உள்ள விநாயகரை வணங்கி உள்ளே சென்றார். அம்பாளை வணங்கி வலம் வந்து விட்டு ஈசனின் பிரகாரத்தை வலம் வரும்போது ஓரிடத்தில் மிகவும் வெளிச்சமாக இருந்தது. சற்று நின்று, “அது என்னவாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டே அந்த ஒளியினை நெருங்கினார். மேகங்களுக்குள் நாம் நடந்தால் எப்படியிருக்குமோ அதுபோல் ஒளிக்குள் நடந்தார். சிறிது தொலைவில் மிகவும் ஒய்யாரமாக விநாயகர் அமர்ந்திருக்கும் கோலம் கண்டு வணங்கினார். அவர் அந்த ஒளி வெள்ளத்தில் இரண்டு வெண்சாமரங்கள் அந்தரத்தில் தாமாகவே விநாயகருக்கு வீசுவதைக் கண்டு வியந்தார். அப்போது தேவர்கள் பலர் மலர்களைப் பொழிந்தனர். தேவ லோகத்திலும் காண முடியாத காட்சி இது என்று வியந்தார் சுருசோதனர். கணேச லோகங்களைப் பார்த்திருந்த சுருசோதனர் இத்தகைய விநாயகரை அங்கேயும் பார்த்ததில்லை என்பதனை உணந்தார். அதனால்தான் சுருசோதனரைப் பின்பற்றிய தேவர்கள் இக்காட்சியினைக் கண்டு மலர்களைப் பொழிந்து வணங்கினர்.
தேவர்கள் தங்களுக்கும் தெரியாத ஒரு தவத்தினை சுருசோதனர் செய்யப் போகின்றார, அது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரைப் பின்தொடர்ந்து அருவமாக வந்தனர். அதனால் விநாயகரின் இக்காட்சி கிடைத்தது. அனைவரும் வணங்கினர். இந்த விநாயகருக்கு பெயர் என்னவாயிருக்கும் என்று சுருசோதனர் யோசிக்கையில் அசரீரி ஒலித்தது, “ஆனந்த வெண்சாமரப் பிள்ளையாரிடம் நீ இருக்கிறாய்,” என்று. விநாயகரை வணங்கி அக்கோயிலைக் கழுவி அங்கு இரவு தங்கினார். கனவில் தோன்றினார் ஆனந்த வெண்சாமரப் பிள்ளையார். “சுருசோதனா, உன்னை ஒரு ரிஷி சுமந்து வந்தால் உனக்கு வழி கிடைக்கும்,” என்று கூறி ஆசீர்வதித்து மறைந்தார்.

ஸ்ரீஆனந்த வெண்சாமர கணபதி

ரிஷி தன்னை சுமப்பதா ? எப்படி சாத்தியமாகும் ? தன்னைச் சுமப்பவருக்கு நான் என்ன செய்ய முடியும் ? என்றெல்லாம் நினைத்து குழம்பிய மனதுடன் ஒவ்வொரு ரிஷியாக அணுகி விசாரித்தார். இவரைச் சுமக்க வேண்டும் என்ற உடனேயே ரிஷிகள் நிராகரித்தனர். “ஒருவர் செய்யும் தொண்டே போதவில்லை. இந்நிலையில் உம்மையும் சுமந்து எதைச் செய்ய முடியும் ?” என்று கூறி அனைவரும் மறுத்து விட்டனர். ஆனால் சுருசோதனரோ சற்றும் மனம் தளராமல் தன்னுடைய திருப்பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவ்வாறு மனம் தளராமல் ஊர் ஊராக வரும் சுருசோதனரைச் சிலர் கேலியாகப் பேசி சிரித்ததும் உண்டு. பாண்டிய நாட்டிற்கு வந்த சுருசோதனர் மீனாட்சி அம்மன் அங்கு ஆட்சி செய்வதைக் கேள்விப்பட்டு மீனாட்சியை தரிசிக்கின்றார். “தாயே, அடியேனுக்கு உதவ வேண்டும். ஒரு ரிஷி என்னைச் சுமக்க நீங்கள் உதவ வேண்டும்,” என்றார்.
“முனிவரே, நானே இன்னமும் திருமணம் புரியாமல் குழப்பமாக உள்ளேன். இறைவன் படைப்பால் மூன்று தனங்கள் உள்ள நான் என்னுடைய மணாளனைக் காணும்போதுதான் மூன்றாவது தனம் மறையும் என்று சோதிடர்கள் கூறி உள்ளனர். சுவாமி, இதைத் தீர்க்க வழி கூறுங்கள்,” என்று வேண்டினாள்.
சுருசோதனர் தான் செய்த தவங்கள் அனைத்தையும் மீனாட்சி தேவிக்கு தாரை வார்த்துத் தந்தார். இதனால் மேலும் புனித சக்தி பெற்ற மீனாட்சி தேவி ஒருநாள் போருக்குச் செல்ல கிளம்புகிறாள். சுந்தரேசப் பெருமானான ஈசன் எதிர்படைத் தலைவராக வர அவரைப் பார்த்தவுடன் மூன்றாவது தனம் மறைந்தது. மீனாட்சி கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கு ஒரு காரணமாக அமைந்த சுருசோதனரை மீனாட்சி தேவி நினைத்தாள். உடனே அங்கு தோன்றிய சுருசோதனரை வணங்கி, “சுருசோதனரே, உங்கள் தவவலிமையால் அடியேனின் திருமணம் நடைபெற்றது. அடியேனின் பிரச்னையத் தீர்த்து வைத்த உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன். அடியேனின் அம்சமாகிய சக்தீஸ்வரானந்தா என்ற ரிஷி தங்களைச் சுமக்க வருவார்,” என்று ஆசி கூறினாள். ஈசனிடமும் ஆசி பெற்று ஒவ்வொரு ஊராகச் சென்றார். மீனாட்சி தேவி கூறிய சக்தீஸ்வரானந்தா என்பவரைத் தேடிக் கொண்டிருந்தார். வயதும் ஆகி விட்டது. கண்கள் சரியாகத் தெரியாத நிலை. இருந்தாலும் மனதிற்குள் வைராக்கியம் அப்படியே இருந்தது. இம்மி அளவும் குறையவில்லை. தள்ளாடி நடக்க ஆரம்பித்தார். நடை வேகம் குறைந்ததால் ஒரே நாளில் பல கோயில்களைக் கடந்தவர், இப்போதெல்லாம் ஒரு நாள் ஒரு கோயில் என்று நடக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் சக்தீஸ்வரானந்தாவின் கனவில் மீனாட்சி தேவி சென்று, “சுருசோதனர் என்ற ரிஷியைத் தேடிச் சென்று அவரைச் சுமந்து செல்வாயாக,” என்று கூறினாள். சக்தீஸ்வரானந்தா ஈஸ்வரியின் அம்சம். அவருடைய தொண்டு என்னவென்றால் யாரெல்லாம் தவம் செய்து அதனால் இரத்தம் வற்றிப் போகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தன் தவபலத்தால் இரத்த தானம் செய்வார். இத்தகைய தவம் செய்து வந்தார் சக்தீஸ்வரானந்தா.

கோயம்பேடு திருத்தலம்

சுருசோதனர் சக்தீஸ்வரானந்தாவைத் தேடிக் கொண்டிருக்க அவரோ மீனாட்சி தேவியின் ஆணைப்படி சுருசோதனரைத் தேட ஆரம்பித்தார். மிகவும் தள்ளாமை அடைந்து விட்ட சுருசோதனர் ஒரு கோயிலில் மயங்கி விழுந்துவிட, எழுந்திருக்கக் கூட சக்தியற்ற நிலையில் இருந்தார். கடவுள் கருணையால் அங்கு வந்த சக்தீஸ்வரானந்தா தான் எப்போதும் செய்யும் தொண்டாக முதலில் நினைத்து சுருசோதருக்குத் தன்னுடைய தபோ பலத்தால் இரத்தத்தினை கொடுத்து சக்தி அளித்தார். அப்போது அவரைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்தது. அந்த எண்ணத்தின் தூண்டுதலால், “சுவாமி, அடியேன் தங்களைச் சுமக்கலாமா ?” என்று கேட்க இதுவரை அந்த ஒரு சொல்லுக்காகவே அலைந்து வந்த சுருசோதனர் மிகவும் மகிழ்ந்து மீனாட்சி தேவியை நன்றியுடன் நினைத்தார். பிறகுதான் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இருவருமே ஒருவரை ஒருவர் தேடியதும் தேவியின் அருளால், ஒன்று சேர்ந்ததும் இறைவனின் திருவிளையாடலால்.
அன்றிலிருந்து சக்தீஸ்வரானந்தா சுருசோதனரை சுமந்து தவழ்ந்து வந்தார். முட்டிகள் தேய்ந்தன. சுருசோதனரை மக்கள் ரிஷி சுமந்தான் சித்தர் என்று அழைக்கலானார்கள். பலருடைய துன்பங்களைத் துடைத்துப் பல தொண்டுகளில் பங்கு கொண்டு கோயம்பேடு நோக்கி வருகிறார்கள். நெருங்க நெருங்க மனதில் குதூகலம் பொங்கி வழிகிறது. இருவரும் கோயிலை அடைந்து விநாயகர், அம்பாளை தரிசித்து விட்டு ஈசன் சந்நிதிக்கு வருவதற்குள் உயிர் பிரியும் அளவு நலிந்து விட்டார்கள்.
சூரிய பகவானை தரிசித்து ஆனந்த வெண்சாமரப் பிள்ளையாரை நெருங்கியவுடன் அந்த அற்புதக் காட்சி தெரிந்தது. அந்தரத்தில் வெண்சாமரங்கள் இருபக்கமும் தானாக வீசப்பட விநாயகர் வெகுப் பிரகாசமாக காட்சி தந்தார். இருவரும் வணங்குகையில், “சுருசோதனா, உன்னுடைய அற்புதமான எவரும் செய்யாத தவம் என்ன தெரியுமா ? ஒரு ரிஷி சுமந்து வர பல கோயில்களில் நீ செய்த தொண்டு. மக்களின் இன்னல்களை ஒரு ரிஷியின் மேல் அமர்ந்து நீ போக்கிய தொண்டு. இதுவரை எவரும் செய்யாத தொண்டை நீ செய்தாய். மேலும் ஒன்று கூறுகிறேன். இன்றிலிருந்து கோயில் பிரகாரங்களில் உள்ள மேல் விதானத்தை தண்ணீரால் கழுவும் இறைத் தொண்டு செய்து வருவாய்,” என்று கூறினார்.
அன்றிலிருந்து சுருசோதனரும் சக்தீஸ்வரானந்தாவும் புதிய சக்தி பெற்றுத் தண்ணீரினால் கோயில் பிரகாரங்களில் உள்ள மேல் தளத்தினையும் சேர்த்து கழுவினர். கோயில் தரையைக் கழுவி முக்தி அடைந்தவர் பலர். பிறகு பக்கச் சுவர்களையும் தூண்களையும் கழுவி முக்தி அடைந்தவர்கள் பலர். விதானத்தைக் கழுவி தொண்டு செய்து முக்தி அடைந்தவர்களில் முதன்மையானவர் ரிஷி சுமந்தான் சுவாமி என அழைக்கப்பட்ட சுருசோதனர். அவருடன் சக்தீஸ்வரானந்தாவும் தொண்டு செய்து முக்தி அடைந்தார்.

இவ்வாறு வால்மீகி முனிவர் கூறிவரும் போது அவர்கள் கோயம்பேட்டை நெருங்கி இருந்தார்கள். லவனின் மனதில் வேகமாக எண்ண ஓட்டங்கள் ஓடலாயின.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தலமாக உள்ளதே, சுருசோதனரும் சக்தீஸ்வரானந்தாவும் இங்குதான் சமாதி ஆனார்கள் என்று குரு சொல்கிறாரே! இந்தக் கோயிலில் அவர்கள் நினைவாக ஏதாவது செய்ய முடியுமா? ஒரு சம்பவத்தைக் கேட்டால் பலருக்கும் பயன் தரும் வகையில் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று முனிவர் கூறியுள்ளாரே, இதனை எப்படி எடுத்து கூறலாம்? என்று சிந்தித்தவண்ணம் நடந்து கொண்டு வந்தான், குசன். “இந்த கோயிலில் சிறப்பாகத் தொண்டு செய்ய வேண்டும். முக்தி அடைந்தவர்கள் இவர்கள் மட்டுமாக இருக்க முடியாது! இன்னமும் பல மகான்கள் முக்தி அடைந்த இடமாகவும் இருக்கும்!” என்று எண்ணிக் கொண்டே நடந்து வந்தான், இவர்கள் இருவருடைய எண்ணங்களும் சரியான பாதையில் போகின்றனவா என்று பார்த்துக்கொண்டு வந்த வால்மீகி, தன் சிஷ்யர்களை எண்ணி மனதில் சந்தோஷப்படுகிறார். கோயம்பேட்டினை நெருங்கிவிட்ட இவர்கள் அங்கு கூட்டம் கூட்டமாகப் பசுக்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு மிகவும் வியக்கின்றனர். சீதைப்பிராட்டி, “குருவே! இங்கு என்ன இவ்வளவு பசுக்கள் மாடு மேய்ப்பவன் இல்லாமல் தானாகவே இருக்கின்றன? ஆச்சரியமாக உள்ளதே!” என்று மெதுவாகக் கேட்டாள்.

லவனும் குசனும் பசுக் கூட்டத்தினை பார்த்துக் கொண்டே குரு என்ன சொல்கிறார் என்று கேட்கத் தயாராக இருந்தார்கள். வால்மீகி சிறிது மௌனமாக பசுக் கூட்டத்தினையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, “ஒரு பசுவைக் கண்டாலே லட்சுமி கடாட்சம். அத்தனை தேவர்களையும் வணங்கிய பலன் ஒரு பசுவை வணங்கினால் வருகிறது. இத்தனை பசுக்கள் என்றால் எவ்வளவு அருமையான காட்சி!” என்று கூறியவர் தொடர்ந்து, “தாயே! கோக்களை, இரும்புக் கவசங்கள் போல் காத்து ரட்சிக்கும் இடம் இந்த இடம் அதனால் தான் இந்த இடத்திற்குப் பெயர் கோ+அயம்+பீடு = கோக்களை, அதாவது பசுக்கள் இரும்புக் கவசங்கள் போல் பாதுகாக்கும் பீடு நிறைந்த இடம்“ என்று கூறி நிறுத்தினார்.

“இங்கு என்ன குருவே அப்படி விசேஷம்” என்றான் லவன்.

இதற்குள் கோயிலை நெருங்கி விட்டார்கள். சுற்றிலும் முட்புதர்களும் குப்பையுமாக இருந்தது. கோயிலுக்குள் செல்லும் ஒரு ஒத்தையடிப் பாதை மட்டும் கண்ணிற்கு தெரிந்தது. அப்போது மாலை நேரம்! குரு என்ன சொல்லப் போகிறார் என்று லவன், குசன், சீதாதேவி காத்திருக்கின்றனர்.

“இந்தக் கோயிலே நாம் சில மாதங்கள் தங்கி தொண்டு செய்ய சிறந்த இடம்” என்று தேர்ந்தெடுத்த வால்மீகி, மற்றவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்று அம்பாளை, ஈசனை வணங்கி வலம் வருகின்றனர். ஆனந்த வெண்சாமரப் பிள்ளையாரைக் காண்பிக்கிறார்! அனைவரும் வணங்கி ஆசி பெறுகின்றனர். பின்னர் வெளியில் வந்து மண்மேடு ஒன்றில் குருவிற்கு ஆசனம் இட்டுத் தாங்களும் அமர்கின்றனர்! அதற்குள் ஊர் மக்களிடம் செய்தி பரவியது.

ஒரு முனிவர் இரண்டு குழந்தைகளுடன் ஒரு இளம் பெண்ணுடனும் வந்திருக்கிறார் வடநாட்டிலிருந்து வந்திருக்கிறார். அந்த குமாரர்கள் அயோத்தி மன்னனின் புதல்வர்கள் அந்தப் பெண் அந்தக் குழந்தைகளின் தாய். அயோத்தி ராணி என்றெல்லாம் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். சுற்றுப்புற மக்களெல்லாம் வந்து வணங்கினர். இரவு நேரமாதலால் தீப்பந்தங்களை ஏற்றி ஒளி எல்லா இடத்திலும் பரவும்படிச் செய்து வழிபட்டனர். அவ்வூர் பெரிய மனிதர்கள் வந்து, “முனிவரே! உடன் வந்த அரச குலத்தவர்களே! இவ்வூருக்கு உங்களை வரவேற்கிறோம். எங்களால் ஆன உதவியும் செய்கிறோம் உங்களுக்குத் தங்க இடம் அளிப்பது எங்கள் கடமை,” என்று ஒரு ஆசிரமம் இரவிலேயே அமைத்துத் தந்தனர். மறுநாள் காலையில் கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசித்துப் பின்னர் வெளியில் அமர்ந்து லவகுச இருவரும் குருவின் சொல்லை எதிர்பாத்த வண்ணம் இருந்தார்கள். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன் முனிவரிடம், “சுவாமி, இந்த கோயிலுக்கு இரவு நேரங்களில் மக்கள் ஒருவரும் வருவதில்லை சுவாமி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இரவின் முதல் பாகத்திலேயே அதிகமாகி விடுவதால் பகலில்தான் கோயிலுக்கு வருவோம்,,” என்றான்.

வால்மீகி முனிவர் சிறிது யோசித்துவிட்டு ”லவகுச! நீங்கள் இருவரும் முதலில் இந்த இடத்தினை சுத்தம் செய்யுங்கள்,” என்றார் லவனும் குசனும் அந்த இடத்திலுள்ள குப்பைகளையெல்லாம் அப்புறப்படுத்தி அந்த இடத்தினை பெருக்கிச் சுத்தம் செய்தனர். மேலும் மண்வெட்டி முதலியவைகளால் முட்புதர்களை அழித்து தாராளமாக நடப்பதற்கு வழி செய்தனர். இவர்கள் செய்வதைக் கண்டு ஊர் மக்கள் “அரச குமாரர்களே கோயிலில் வேலை செய்யும் போது நாம் சும்மா இருக்கலாமா?” என்று கூறிக் கொண்டு அவர்களும் சேர்ந்து திருப்பணியில் ஈடுபட்டனர். கோயிலின் சுற்றுப்புறம் துப்புரவானவுடன் கோயிலினுள் தரைகளையும் பக்க சுவர்களையும் மேல் விதானத்தையும் தண்ணீரினால் கழுவி சுத்தம் செய்தனர்.

ஒரு நாள் மாலை வேளையில் லவகுசர்கள், ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வால்மீகி முனிவரிடம் அறிவுரைகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது லவகுச இருவரும் வால்மீகி முனிவர் ஐக்யமான சுருசோதனரையும் சக்தீஸ்வரானந்தாவையும் மக்கள் நினைவு வைத்திருக்க என்ன வழி உள்ளது! அதற்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார். வால்மீகி முனிவர்” கவலைப்படாதே, லவகுச! பின்னால் அரசாளப் போகும் சில அரசர்கள் காலத்தினால் அழியாத வகையில் உருவங்களைச் செதுக்கி வைப்பார்கள் உண்மையான தொண்டர்கள், மகான்கள் அந்தப் பக்கம் வந்தால் இவர்களுடைய கதைகளை கிரகித்துத் தன்னுடன் வந்தவர்களுக்கு கூறுவார்கள். இவ்வாறு பிரபல்யமாகும்” என்றார். தங்களது சந்தேகம் நீங்கப் பெற்றனர் லவகுசர்கள்.

இன்றும் சென்னைக்கு அடுத்துள்ள கோயம்பேடு என்னும் ஊரில் உள்ள குசலவபுரீஸ்வரர் கோயிலில் பிள்ளையார் கோயில் இடது பக்க்கத்தூணில் ரிஷி சுமந்தான் சுவாமி அவர்களின் சிலை உள்ளது. சக்தீஸ்வரானந்தா சுருசோதனரை சுமந்து வருவது போல் உள்ளது.

இந்த சிலை இரகசியம் திருக்கயிலாயப்பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமகா சந்நிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் சுவாமிகளால் தற்போது அறிவிக்கப்படுகிறது ஒவ்வொரு காலத்திலும் ஈசன் அருளால் ஒவ்வொருவரால் தெரிவிக்கப்படும்.

வால்மீகி முனிவர், “குசலவ! இந்த கோயிலில் நீங்கள் செய்ய வேண்டிய தொண்டு உள்ளது! கோயிலைச் சுற்றி நந்தவனங்கள் அமைத்து அதில் உள்ள பூக்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்விக்க வேண்டும். பூக்களின் மகிமை தெரிந்துள்ள நீங்கள் இக்காரியத்தினைச் செய்ய வேண்டும்,” என்றார்.

ஆறு மாதங்களுக்குள் நந்தவனம் அமைக்கப்பட்டுப் பூக்களும் பூத்திருந்தன. அவற்றை முழுவதுமாக கோயிலுக்கே பயன்படுத்தினர். கோயிலின் முகப்பிலேயே வாசனையான காற்று அனைவரையும் வரவேற்கு! மிகவும் ரம்மியமாகவும் மனமுள்ளதாகவும் அமைந்தது, அந்த சூழ்நிலை!

இவ்வாறு அவர்கள் வந்து சரியாக ஒரு வருடம் ஆகியிருந்த போது வால்மீகி முனிவர் “லவகுச! இந்தக் கோயிலில் பிரதோஷம் பூஜை செய்வது மிகவும் சிறந்தது. வேறு எந்தக் கோயிலில் செய்வதைவிட இந்தக் கோயிலில் பிரதோஷம் மிகவும் முக்கியமானது. ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். எனவே இந்த கோயிலில் சரியான நேரத்தில் (பிரதோஷ காலத்தில்) பிரதோஷம் நடக்க வேண்டும்.” என்றார், “சுவாமி அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றனர், ஊர் மக்கள். லவகுச இருவரும் கிராம மக்களுடன் சேர்ந்து கோயிலைச் சுற்றிப் பிரகாரத்தை, சுவாமி வலம் வரும் வகையில் பெரிதுபடுத்தி புல்செடி, முதலியவைகளை நீக்கி வழி செய்தனர். வாகனம் (நந்தி) செய்தனர். குடை, வாத்தியங்கள் முதலியனவற்றையும் தயார் செய்தனர். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்துவிட்டு வால்மீகி முனிவரிடம் சென்று தெரிவித்தனர்.

அந்த ஊர்ப் பெரிய மனிதர் “குருசாமி! ஏன் இந்த கோயிலில் பிரதோஷம் மிகவும் முக்கியம் என்கிறீர்கள்? ஆயிரம் மடங்கு பலன் தருவதற்குக் காரணம் என்ன, என்று தெரிவிக்க வேண்டும் சுவாமி!” என்றார்.

அசுரர்கள் யார்?

வால்மீகி முனிவர் “கூறுகிறேன். கேளுங்கள்! இந்த கதையினைக் கூறுவதே மிகவும் விசேஷம். தேவர்கள், அசுரர்கள் என்று இருசாரார் இருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அசுரர்கள் என்பவர் யார் கூறுங்கள் எப்படி பிறக்கிறார்கள்?” என்று கேட்டார்.

யாருமே பதில் அளிக்கவில்லை.

வால்மீகி அனைவரையும் பார்த்து, “அசுரர்கள் என்று தனியாக யாருமே கிடையாது. தேவர்களாக இருப்பவர்கள், தங்கள் சுயநலத்திற்காக ஏதாவது செய்யும்போதோ அல்லது தவறுகள் செய்யும்போதே, முனிவர்கள் மற்ற தேவர்களால் சாபம் கொடுக்கப்பட்டு அசுரர்களாகின்றார்கள். சாபம் முடிந்தவுடன் மீண்டும் தேவர்களாகிறார்கள்.

இந்த அசுரர்கள் ஒரு பக்கமும் தேவர்கள் ஒரு பக்கமும் நின்று பாற்கடலைக் கடையும்போது, அதிலிருந்து ஆலகால விஷம் வெளிவந்து தேவர்களையும் அசுரர்களையும் துரத்தியது. எல்லோரும் ஈசனை நாடி வேண்ட அவர் சுந்தரரையும் நந்தியையும் அனுப்பி நீங்கள் சென்று அந்த விஷத்தினை எடுத்து வாருங்கள் என்று சொன்னார். சுந்தரரும் நந்தியும் சென்று எடுத்துவர அதனை விழுங்கினார் ஈசன்.  உமையவள் ஈசன் கண்டத்தினுள் விஷம் நிற்குமாறு செய்ய திருநீல கண்டரானார்.

இந்த சமயத்தில் நந்தியின் மனதில் ஒரு எண்ணம்! அது என்ன?

“இந்த விஷத்தின் தன்மை தான் என்ன? வந்தவுடனே அசுரர்களையும் துரத்தியது. திருமால் விஷத்தினால் நீலநிறமாக மாறிவிட்டார் அதனை விழுங்குகிற ஈசனின் கண்டமோ நீலமாகி விட்டது. ஆனால் அதனை கையிலெடுத்துத் தந்த எனக்கு ஒன்றுமே ஆகவில்லையே, ஈசனின் கண்டத்தையே நீலமாக்கிய விஷம், பெருமாளை நீல நிறமாக மாற்றிய விஷம், நம்மை ஒன்றும் செய்யவில்லை! எனவே நான் உயர்ந்தவன் போலிருக்கிறதே!” என்று நினைத்து லேசாக சிரித்தார்.

இதனைக் கண்ட, ஈசன் நந்தியை ஒருமுறை மெதுவாக புன்னகைத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினார். அவ்வளவுதான் அந்த நிமிடத்திலிருந்து சிரிக்க ஆரம்பித்தார் நந்தி. சிரித்துக் கொண்டே இருந்தார். சித்தம் கலங்கி விட்டது! கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. பலமணி நேரங்கள் ஆகியும் சரியாகாததால் பார்வதி தேவி ஈசனை வணங்கி, “சுவாமி! நம்மைப் பலகாலம் சுமந்தவன் அறக்கடவுள்! தெரியாமல் செய்த பிழை பொறுக்க வேண்டும், அருள வேண்டும் நாதா கருணை காட்டுங்கள்!” என்று வேண்ட, “உன்னால் முடிந்ததைச் செய்து அவனை திருத்து,” என்றார் ஈசன்.

விநாயகரை வேண்டி, பார்வதி தேவி விநாயகருக்கு விருப்பமான அருகம்புல் மாலையை நந்திக்கு அணிவித்தால் சிறிது குறைந்தது சித்தக்கலக்கம்! விநாயகர் “தாயே! காப்பரிசி கொடுங்கள்,” என்றார்! அதனையும் நந்திக்குப் பார்வதிதேவி, கொடுக்க சற்று குறைந்தன ஆட்டங்கள்! ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தான் நந்தி. அப்போது பார்வதி தேவி பூலோகம் சென்றால்தான் சாபம் நீங்கும் என்று தெரிந்து கோயம்பேடு வருகிறாள். தர்மசம்வர்த்தினியாக நின்று நந்தியை கோயிலைச் சுற்றி வரச் செய்கிறாள். ஆயிரமாயிருந்தரமாய் தினம் தினம் சுற்றி வந்தார், தன் தவத்தினைத் தொடர, கொஞ்சம் கொஞ்சமாக சித்தம் தெளிவு பெற்ற நந்தி பூரணமாகத் தெளிவு பெற்றார்.

பிரதோஷ வாகனம்
சோழபுரம்

எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்த நந்தி, அன்றிலிருந்து அந்தக் கோயிலில் பிரதோஷ விழா செய்தார். தன் கொம்புகளுக்கு இடையில் இறைவனைத் தூக்கிக் கொண்டு ஆடினார். தன்னுடைய சகாக்கள் ஏழு பேரைக் கூப்பிட்டு அவர்களுடன் தானும் சேர்ந்து பிரதோஷ சிவனை அம்பாளுடன் தாங்கிக் கொண்டு பல நாட்கள் நடந்து மிகச் சிறப்பாக பிரதோஷம் செய்து வந்தார். பல வருடங்கள் கழித்து இறைவனின் அருள் பெற்று சிவலோகம் அடைந்தார் அன்று முதல் இக்கோயிலில் பிரதோஷம் செய்தால் பல சாபங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் இடமாகியது. உங்கள் தந்தையை நீங்கள் எதிர்த்த சாபம் நீங்க, நீங்கள் 12 வருடங்கள் இங்கு பிரதோஷம் செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் பல சாபங்கள் நீங்கப் பெற்று நற்கதி அடைவீர்கள். ஒவ்வொரு பிரதோஷத்திலும் அறக்கடவுள் நந்தியும் வருகிறார்! அவர் ஆசியும் கிட்டும்”, என்றார் வால்மீகி

(பிரதோஷத்தினால் ஏற்படும் பலன்களும் பிரதோஷ பூஜையில் பங்கு கொண்டவருக்கு ஏற்படும் நன்மைகள் முதலியவற்றைத் தெரிந்து செய்ய வேண்டுமானால், பிரதோஷ மகிமை என்ற புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

லவகுசர்கள் அன்றிலிருந்து பிரதோஷ பூஜையினை இங்கு சிறப்பாகச் செய்து சாபம் நீங்கப் பெற்றனர். இக்கோயிலில் புஷ்ப அலங்காரம் சுவாமிக்குச் செய்வது மிகவும் அற்புதமான பலனையெல்லாம் தரும்.

கோயம்பேட்டில் சுயம்வரா விருட்சம்

இந்த கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளது. அங்கு இரண்டு வில்வ மரங்களும் நடுவில் வேப்ப மரமும் உள்ளது. இவ்விருட்சத்தின் பெயர் பார்வதி சுயம்வரா விருட்சம். இது சிவன் பார்வதி திருமணத்திற்கு சிவாம்சமாக பெருமாள் சாட்சியாக நிற்பதாக ஐதீகம்! இந்த விருட்சத்தினை வணங்குபவர்களுக்கு திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மன வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமையாகத் திருமணமானவர்கள் வாழ்வர். இத்தகைய அருமையான கோயில் சென்னைவாசிகளுக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்வதே, அறிவுடைய செயல்!

லவகுசர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பிரதோஷ காலத்தில் அபிஷேகங்கள் செய்து கோயில் முழுவதும் தூபம் இட்டு தீப்பந்தத்துடனும் குடையுடனும் எட்டுபேர் சுவாமியை தூக்கிவர வாத்யங்கள் முன்னர் வாசிக்க, சோமசூக்த பிரதோஷம் செய்வித்தனர்.

சோமசூக்த பிரதோஷம்தனை, வடக்கு பார்த்த மூலவர் சந்நிதி கொண்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் செய்வது மிகவும் விசேஷமானது (சோமசூக்த பிரதோஷம் என்றால் என்ன? அவ்வாறு செய்வதால் பலன் என்ன? பங்கு கொள்வதால் அடையும் பலன்கள் என்ன? முதலியவற்றை பிரதோஷ மகிமை புத்தகத்தில் பார்க்கவும்.)

பன்னிரண்டு ஆண்டுகள் பல நடைகளில் பிரதோஷம் செய்து வந்தனர் லவகுசர்கள். பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்ததும் வால்மீகி லவகுசர்களை அழைத்து “உங்கள் சாபம் நீங்கியது. இறைவன் அருளால் நீங்கள் நாட்டிற்குத் திரும்பி அரசாளலாம்,” என்று கூறினார்.

குருவையும் தங்கள் நாட்டிற்கு  தங்களுடனேயே வர லவகுசர்கள் அழைத்தனர். அதற்கு குரு “லவகுச! உங்கள் அன்பைப் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் அடியேன் இன்னமும் செய்ய வேண்டும் காரியங்கள் பல உள்ளதால் அதனை நோக்கிச் செல்ல வேண்டும்” என்றார்.

அப்போது ஊர் மக்கள், “அரசர் வருகிறார்! அரசர் வருகிறார்” என்ற பறை கூற நால்வரும் வெளியில் வந்து பார்க்கையில் ஸ்ரீராமர் தேரிலிருந்து இறங்கி வந்தார். சீதாதேவியையும் லவகுசாவும் ஸ்ரீராமரரை வணங்குவதற்கு முன் ஸ்ரீராமர் வால்மீகியை முதலில் வணங்குகிறார். அனைவருக்கும் தரிசனம் தந்துவிட்டு ஸ்ரீராமர் வால்மீகி முனிவரிடம், “முனிவர் பெருமானே! அரசாட்சியை அடியேனின் மக்களிடம் ஒப்புவித்துப் பின் தவம் செய்ய விரும்புகிறேன்,” என்றார். வால்மீகி முனிவர் ஆசி கூற ஸ்ரீராமர் லவகுசர்களையும் சீதையையும் அழைத்துக் கொண்டு அயோத்தி சென்றார்.

பூக்களின் மகிமையைப் புரிந்து கொண்டீர்களா!

பூக்களினால் எதனைத் தான் சாதிக்க முடியாது!!

இறைவன் அருளால் அனைத்தையும் பூக்கள் சாதிக்கும்!!!

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam