இனி பிறவிகள் இல்லையடி பாப்பா !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ராமாதித்ய திருநாள்

அயனம் என்றால் பிறவி என்று பொருள். உத்தரம் என்றால் அடுத்து வருவது அல்லது எதிர்காலம் என்று பொருள். அதுபோல அயனம் என்றால் பாதை, உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி அமையும் சூரிய பாதை உத்தராயணம். இந்த இரண்டையும் இணைத்தால் இனி வரும் பிறவிகள் நலமாய் அமைய, எதிர்காலம் சிறப்படைய உறுதுணையாய் இருப்பதே உத்தராயண கால வழிபாடு என்பது புலனாகும். உத்தராயண காலத்திற்கு இத்தகைய சிறப்புகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன ? ஜோதிட ரீதியாக சூரிய பகவான் சூரிய நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் சஞ்சரிக்கும் காலமே உத்தராயணம் ஆகிறது. ராசி மண்டலத்தின் இந்த உத்திராட இரண்டாம் பாதம் மகர ராசியில் அமைவதோடு மட்டுமல்லாமல் உத்தராயண புண்ணிய காலத்தில் நவாம்ச ரீதியாகவும் மகர ராசியில் சூரிய பகவானின் உத்தராயண சஞ்சாரம் ஏற்படுகிறது. எனவே ராசியை சூரியனின் தூல சக்தியாகவும் நவாம்சத்தை பகவானின் சூட்சும பிரவேசமாகவும் கொண்டு பார்க்கும்போது சூரிய பகவானின் சக்திகள் முழுமையாக உத்தராயண புண்ணிய காலத்தில் பொலிகின்றன என்பது தெளிவாகின்றது.

வரும் உத்தராயண புண்ணிய காலம் 14.1.2018 (தை மாதம் தமிழ் 14) ஞாயிற்றுக் கிழமை அன்று நண்பகலில் துவங்குகின்றது. இந்த உத்தராயண புண்ணிய காலம் அனைத்து லோகங்களிலும் கொண்டாடப்பட்டாலும் குறிப்பாக ராமச்சந்திர லோகங்களிலும், சூரிய மண்டலங்களிலும், சத்ய லோகங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. ராமச்சந்திர லோகங்கள் எத்தனையோ உண்டு, சத்ய லோகங்களோ எண்ணற்றவை, சூரிய மண்டலங்கள் கோடி கோடி. எப்படி பூமியில் நிகழும் இந்த உத்தராயண புண்ணிய காலம் கோடிக் கணக்கான லோகங்களில் கொண்டாடப்படுகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம்.

அனைத்து மக்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காகவே சித்த பிரான்கள் உத்தராயண புண்ணிய காலம் பல லோகங்களில் கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கிறார்கள். உண்மையில் பல கோடி லோகங்களில் கொண்டாடப்படும் இந்த புண்ணிய காலம் பற்றிய இரகசியத்தை நமது மூதாதையர்களின் பெரும் தவப் பயனாலும் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் பெருங்கருணையாலும்தான் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது என்பதே மெய்ஞ்ஞான விளக்கமாகும்.

வரும் உத்தராயண புண்ணிய காலத்தை சித்தர்கள் ராமாதித்ய திருநாளாக அறிவிப்பதன் காரணம் என்ன? வரும் உத்தராயண நன்னாள் ஞாயிற்றுக் கிழமை அன்று நண்பகல் 1.39 மணிக்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள வடகுரங்காடுதுறை திருத்தல சூரிய உதய நேரப்படி அமைகிறது. ஞாயிற்றுக் கிழமை சூரிய ஹோரை நேரத்தில் குரு எண் கணித இயல் அடிப்படையில் அமைவது அரிதிலும் அரிதாக எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூலோக மக்களுக்கு கிட்டும் வரப் பிரசாதமாகும்.

ராம நாமமே சத்ய நாமம்

இந்த சூரிய பிரவேச உத்தராயண முகூர்த்த லக்னமும் குருவின் நேர்ப் பார்வையைப் பெறுவது என்பது கனவிலும் கருதா கால யோக அதிசயமாகும்.

திருவையாறு கும்பகோணம் சாலையில் திருவையாற்றிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளதே வடகுரங்காடுதுறை திருத்தலமாகும்.

நவகிரகங்களில் எண் ஒன்றுக்கு அதிபதியாக இருப்பவரே சூரிய பகவான். எண் ஒன்று சத்தியத்தை குறிப்பது. சத்தியம் ஒன்றுதான் இருக்க முடியும். அதனால்தான் சத்தியத்தையே பேசி சத்திய சீலனாக புகழ் பெற்ற ஹரிச்சந்திர மகாராஜா சூரியனின் கிழக்கு திசைக்கு அதிபதியாகத் திகழ்கிறார்.

அதுபோல சத்திய மணம் பரப்பிய அவதார மூர்த்தியே ஸ்ரீராமபிரான் ஆவார். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று ஒன்றையே தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டதால் பூரண கிருஷ்ணவாதாரத்திற்கு முன் தோன்றியிருந்தாலும் ராம நாமம் இன்றும் உலகில் நிலைத்து நிற்கிறது. சத்தியம் என்ற ஒன்றே என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு ராம நாமமே எடுத்துக் காட்டு.

வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக வடகுரங்காடு திருத்தலத்தில் ராம நாம சக்திகளும், சூரிய சக்திகளும், சத்தியசீல சக்திகளும், சத்தியம் நிலைத்து நிற்க உறுதுணையான நன்றி மறவா செந்நெறி சக்திகளும் செறிந்திருப்பது விந்தையிலும் விந்தையாகும்.

சத்திய தீர்த்தம் திருச்செங்கட்டாங்குடி

வாலியின் பராகிரமம் பற்றி முழுமையாக பலரும் அறிந்து கொள்ளவில்லை. இராவணனைப் போல ஆயிரம் மடங்கு பலசாலி, இராவணனை விட பன்மடங்கு சிவபக்தியில் தலை சிறந்தவன். வாலி நினைத்திருந்தால் இராவணனை ஒரு நொடியில் மாய்த்திருக்கலாம், ராமபிரானின் ராம பாணத்திற்கே அமைதி அளித்திருக்கலாம். ஆனால், ராம பிரானின் அவதார நோக்கமோ வாலியின் பிறவிப் பயனோ ஒரு அசுரனை மாய்ப்பதற்காக அல்ல. எதிர்காலத்தில் வரும் இராவணனை விட பல்லாயிரம் மடங்கு சக்தி பெற்ற அசுர சக்திகளை அழிப்பதற்கு தோன்றியதே இராம அவதாரமும் வாலியின் குரங்கு பிறவியும்.

வாலி காலையில் ஒரு கடலில் சந்தியா வந்தன வழிபாடுகளைச் செய்வான், மதியம் வேறு ஒரு கடலிலும், மாலையில் மற்றோர் கடற்கரையிலும் அவனுடைய சந்தி வழிபாடுகள் பூரிக்கும். இடையில் எந்நேரமும் காயத்ரீ மந்திர ஜபத்தில் அவனுடைய மனம் முழுவதுமாக ஒன்றி விடும். தினமும் குறைந்தது ஒரு லட்சம் சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நிறைவேற்றி வில்வ தளங்களால் பூஜித்து விடுவான். கண் இமைக்கும் நேரத்தில் நமது பூலோகம் போன்ற பல்லாயிரக் கணக்கான கண்டங்களை கடந்து சென்றவாறே அதில் உள்ள சிவலிங்கங்களுக்கு பூஜையை நிறைவேற்றி விடுவான்.

இவ்வாறு கோடி கோடியாய் சிவலிங்கங்களை வழிபட்டும், காயத்ரீ மந்திரங்களை ஜெபித்தும் தான் பெற்ற வானளாவிய புண்ணியத்தை ஒரு சிறு துளியைக் கூட தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தும் எண்ணமின்றி அனைத்தையும் வடகுரங்காடுதுறை ஈசன் திருவடிகளில் சமர்ப்பித்தான் வாலி. காயத்ரீ மந்திரத்தை உண்மையாக ஜபிப்பவர்கள் எதிர்காலத்தை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதனால் வாலி தான் நீண்ட நாட்கள் உயிர் வாழப்போவதில்லை என்பதை உணர்ந்து தன்னுடைய பூஜா பலன்களை எல்லாம் இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்தான். வாலியின் தியாகத்தால் மகிழ்ந்த ஸ்ரீஅகத்திய பெருமான் வாலியை மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச செல்ல திருவுள்ளம் கொண்டு ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் என்ற ராம தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். இவ்வாறு ஸ்ரீராமஜெயம் என்ற ராம மந்திரம் தோன்றிய உத்தம தலமே வடகுரங்காடுதுறையாகும்.

ஸ்ரீராமஜயம் தோற்றம் இங்கேதான்

ஸ்ரீஅகத்திய பிரான் எதற்காக இந்த தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். சித்தர்களின் விரல் அசைந்தால் கோடி காரணங்கள் இருக்கும் என்றாலும் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய காரணங்களும் அதில் இருக்கும். வாலி உலகில் உள்ள தீய சக்திகளை, அசுர சக்திகளை அழித்து சாந்தத்தை நிலவச் செய்யவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் திகழவும் அரும்பாடு பட்டான். பற்பல அனுகிரக சக்திகளுடன் இந்த இரண்டு விசேஷ அனுகிரக சக்திகளை சிறப்பாக அளிக்கக் கூடியதே ஸ்ரீஅகத்தியர் அருளிய ராம தாரக மந்திரம். தம் சீடர்களுக்காக அரும்பாடு பட்டு தம் உயிரையும் அளிக்க சித்தமாக இருக்கும் குருமார்களின் நன்றியை பல சீடர்களும் மறந்து புறக்கணித்து விடுகிறாரகள். கலியுலகில் இத்தகைய சீர்கேடுகள் அதிகமாகவே நிகழும். இதைத் தடுப்பதே இந்த ராம தாரக மந்திரம்.

வாலி மலையளவு பூஜை புனஸ்காரங்கள் நிறைவேற்றி அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து ஸ்ரீஅகத்திய பிரான் மூலமாக இந்த ராம தாரக மந்திரத்தை உபதேசமாகப் பெற்றான். ஆனால், கருணை வள்ளலான சற்குரு வெங்கடராமன் அவர்கள் அனைவரும் இந்த மந்திரத்தை வெள்ளிக் கிழமைகளில் ஓதும் ராமநாமமாக தாரை வார்த்து அளித்துள்ளார் என்றால் அவர்தம் கருணைக்கு ஈடேது, இணையேது, புகழ வார்த்தைகள்தான் ஏது ?

வெள்ளிக்கிழமை அசுர சக்திகளை மாய்க்கும், மாங்கல்ய மங்கள சக்திகளை வளமாக்கும். தென்னை மரமோ நன்றியுடன் திகழும் ஒரே மரம். எனவே இரண்டு தென்னைகள் வெற்றி வடிவில் தலமரங்களாகத் திகழும் வடகுரங்காடுதுறை திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பிரான் வெற்றி தரும் ஸ்ரீராமஜெய மந்திரத்தை வாலிக்கு உபதேசமாக அளித்தார்.

திருநறையூர் சித்சீச்சரம்

ஈசனின் நெற்றிக் கண் ஜோதியில் மறைந்த அம்பிகை பல யுகங்கள் தொடர்ந்து தவமியற்றி வந்தாள். அம்பிகையின் கூந்தல் வளர்ந்து கைலாயத்தையே மறைக்கும் அளவிற்கு பெருகியது. பூத கணங்களும், தேவர்களும், யோகிகளும், சித்தர்களும் ஈசனையே காண முடியாத அளவிற்கு அம்பிகையின் ஜடாமுடி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பின்னரே ஈசன் அம்பிகையின் தவத்தை அங்கீகரித்து உமையம்மையை தன் இடபாகத்தில் ஏற்றுக் கொண்டார். அந்த அற்புத வைபவம் தோன்றிய இடமே வடகுரங்காடுதுறை திருத்தலமாகும்.எனவே குடும்ப ஒற்றுமைக்கு தாம்பத்ய நல்வாழ்விற்கு இதை விட சிறந்த தலம் வேறு எது இருக்க முடியும் ?

எம்பெருமானின் அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்பது மனிதர்கள் நினைப்பது போல ஒரே ஒரு வடிவத்தில் திகழ்வது கிடையாது. மனிதர்கள், விலங்குகள், மகான்கள், யோகிகள் என அவரவர் ஆன்மீக நிலையை பொருத்து ஒருவர் பெறும் காட்சியே அது. இவ்வாறு மனித குலத்திற்கு இறைவன் அளித்த முதல் அர்த்த நாரீஸ்வர கோலமே வடகுரங்காடு துறையில் பொலிவது.

அதே போல சித்தர்கள் பெற்ற அர்த்தநாரீஸ்வர கோல காட்சியையும் தங்களுக்கென வைத்துக் கொள்ளாது மக்கள் சமுதாயத்திற்காக அர்ப்பணித்த முதல் அர்த்தநாரீஸ்வர கோலத்தையும் நறையூர் சித்தீஸ்வரம் திருத்தலத்தில் காணலாம். எல்லையற்றது சித்தர்களின் கருணை வெள்ளம்.

வரும் உத்தராயண புண்ணிய காலத்தை கொண்டாட ராமச்சந்திர லோகத்தைச் சேர்ந்த யோகிகள், மகான்கள், சித்தர்களும் எழுந்தருள்கின்றனர். முக்கியமாக சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் தாயார் ஸ்ரீமதி முத்து மீனாட்சி சித்த யோகினியும் அந்த புனித நாளில் வடகுரங்காடுதுறைக்கு எழுந்தருள்கின்றார் என்பதும் சுவையான விஷயமே. கோடிக் கணக்கான இறையடியார்களுக்கு திருஅண்ணாமலை திருத்தலத்திலும் சென்னை திருக்கோயில்களிலும் அன்னதான கைங்கர்யத்தை நிறைவேற்றிய ஸ்ரீமதி முத்து மீனாட்சி தன்னுடைய ஒவ்வொரு நடைமுறை காரியங்களிலுமே ராம நாம சக்தியை நிரவி வந்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பாக தான் தயார் செய்த அன்னதான பிரசாதங்களிலும் ராம நாம திவ்ய சக்தியை அளித்து வந்தார்கள். அவர்கள் தயார் செய்த பிரசாதத்தின் ஈடுஇணையற்ற சுவையை உண்டு அனுபவித்த பாக்யசாலிகள் இன்றும் பலர் நம்மிடையே உண்டு.

ஸ்ரீசத்யாஷாட மகரிஷி திருச்செங்கட்டாங்குடி

தியாகச் செம்மலாய் ஸ்ரீஅகத்திய முனிவரிடமிருந்து ராம தாரக மந்திரத்தை உபதேசமாகப் பெற்ற வாலி தான் இராம தரிசனம் பெறும் நாள் வரை முழு மனதுடன் ஜபித்து ராமருக்கே வெற்றி உண்டாகட்டும் என்று கூறி அவர் திருவடிகளில் தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தான். அதன் பயனாய் வாலி என்ற இரண்டெழுத்து ராமா என்ற இரண்டெழுத்தாய் மாறி விட்டது. ஆம், வாலி மறைந்தான் என்று சொல்வதை விட தெய்வ நிலைக்கு வாலியின் தியாகம் வாலியை உயர்த்தியது என்பதே உண்மை. இதை எப்படி நாம் ஒத்துக் கொள்வது ? வாலியின் உயர்ந்த நிலைக்கு நிரூபணமாக அமைவதே வடகுரங்காடுதுறை ஈசனின் நாமம் ஸ்ரீவாலிநாதர் என்று பொலிவதாகும். சென்னை மேடவாக்கம் போன்ற எத்தனையோ தலங்களில் ஈசன் ஸ்ரீவாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருளாட்சி செய்து வருகின்றான். என்ன கிடைத்தற்கரிய பேறு இது ?

மேலும் வாலி பெற்ற பேறு வாலியுடன் முடிந்து விடவில்லை. வாலியின் மனைவி தாரா பஞ்ச கன்னிகை தேவிகளில் ஒருவராக இடம் பெறுவதற்கும் வாலியின் பூஜை உதவியது. உண்மையில் வாலியின் அருந்தவத்தால் தாரையும் தாரையின் உத்தம பூஜைகளால் வாலியும் உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். இந்த அன்யோன்ய உத்தம தம்பதி நிலையை அளிப்பதே வடகுரங்காடுதுறை தல மகிமையாகும்.
சிதம்பரம் திருத்தலத்தில் ஆதிசேஷனும் பதஞ்சலி முனிவரும் நடராஜ பெருமானின் ஆனந்த நடன கோல தரிசனத்தைப் பெற்றார்கள் என நாம் அறிவோம். இந்த ஆனந்த நடனத்திற்கு முன்னரே ஸ்ரீஅகத்தியர் பெருமான் ஈசனின் விஜய தாண்டவம் என்ற நடன கோல தரிசனம் பெற்றார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். அதனால் விஜய தாண்டவ நடராஜ கோலம் பொலியும் வடகுரங்காடுதுறை திருத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.
300 கோடி நடன இரகசிய அம்சங்களுடன் பொலிவதே விஜய தாண்டவமாகும். இந்த இரகசியங்கள் சித்தர்களின் ஏகபோக உரிமை. இந்த இரகசியத்தின் ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி விளக்க சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் திருவுள்ளம் கொண்டார்கள். அதை மட்டும் இங்கே விரிவாக எடுத்துரைக்கிறோம்.

ஆதிசிதம்பரத்தில் அரிய நடனம்

உதாரணமாக வளர்பிறை திரிதியை திதி ஹஸ்த நட்சத்திரம் வெள்ளிக் கிழமை சந்திர ஹோரை பொலியும் நேரத்தில் தங்க ஆபரணங்களை வாங்கினால் தங்க ஆபரண விருத்தி ஏற்படும். அந்த ஆபரணங்களால் பல மங்கள காரியங்களும் இல்லத்தில் பெருகும். ஆனால், இத்தகைய அபூர்வ முகூர்த்த நேரங்கள் அரிதிலும் அரிதாகவே அமைகிறது அல்லவா ? இந்த முகூர்த்த நேரத்தை ஸ்தம்பனம் செய்து நமக்கு வேண்டும்போது பயன்படுத்துக் கொள்ள முடியுமானால் அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும் ?

ஆனால், முகூர்த்த நேரத்தை ஸ்தம்பனம் செய்வது என்பது எவராலும் இயலாத காரியம். இழந்த ஒரு நிமிடத்தைக் கூட மீண்டும் திரும்ப பெற இயலாது. காலம் பொன்னானது. இழந்த காலத்தை யாராலும் மீட்க இயலாது. ஆனால், இறைவனால் முடியாதது என்று எதுவும் உண்டா, அது போல இறைவனின் சித்தத்தில் சதா சர்வ காலமும் உறையும் சித்தர்களால் முடியாதது என்று உண்டா ? ஆம், சித்தர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். காரணம் காலத்தை கடந்து நிற்பர்கள் சித்தர்கள். அவர்கள் காலத்தையே உருவாக்க முடியும், மாற்ற முடியும்.

விஜய தாண்டவத்தில் பொலியும் ஒரு அனுகிரக சக்தியே இந்த ஸ்தம்ப முகூர்த்த சக்தியாகும். ஸ்ரீஅகத்திய பிரானின் பாரம்பர்யத்தில் வந்த சித்தர்கள் மட்டுமே இவ்வாறு முகூர்த்தத்தை ஸ்தம்பனம் செய்து தாங்கள் விரும்பும்போது அதை விரும்பிய இடத்தில் உபயோகிக்க முடியும்.

உதாரணமாக ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் தயிர் இருந்தால் அது புளித்து வீணாகி விடும். அன்னதான சிவன் என்ற ஒரு மகானைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். லட்சக் கணக்கான மக்களுக்கு ஒரே நாளில் அன்னதானம் அளித்து இறை சேவை செய்த அற்புத மகான் அவர். அன்னதானத்திற்குத் தேவையான தயிரை வருடம் முழுவதும் சேகரித்து வருவார். அவ்வாறு அவ்வப்போது கிடைக்கும் தயிரை மரப் பீப்பாய்களில் ஊற்றி அந்த பீப்பாய்களை தேன் மெழுகு கொண்டு அடைத்து கும்பகோணத்தில் உள்ள திருக்குளங்களில் அமிழ்த்தி வைத்து விடுவார். ஒரு வருடம் சென்றாலும் அவர் இவ்வாறு பத்திரப்படுத்தி வைக்கும் தயிர் சற்றும் புளித்துப்போகாமல் புதிதாகவே இருக்கும். இதுவும் ஒருவகை ஸ்தம்பன யோகமே.

ஸ்ரீஸ்தம்ப முகூர்த்த விநாயகர்
திருச்செங்கட்டாங்குடி

இவ்வாறு பிறர் நலம் பேணுவதை குறிக்கோளாகக் கொண்டு வாழும் சித்தர் மரபில் வந்த சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இந்த ஸ்தம்ப முகூர்த்த யோக சக்திகளை அன்னதானம், இலவச திருமணங்கள், இலவச மருத்துவ முகாம்கள் போன்ற அனைத்து நற்காரியங்களிலும் நிரவி சேவை ஆற்றி வருகின்றார்கள் என்பது பலரும் அறியாத இரகசியமாகும். சிறப்பாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் இத்தகைய ஸ்தம்ப முகூர்த்த அம்சங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன் ஸ்ரீராமபிரான் ஓதிய மந்திரங்களை இன்றும் பாடலூர் திருத்தலத்தில் நாம் கேட்க முடிகின்றது, எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன் ஆஞ்சநேயர் பெற்ற அனுகிரகத்தை இன்றும் பூவனூர் தல விஷ்ணுபதி முகூர்த்த நேரத்தில் நாம் பெற முடிகிறது. இதற்கு அடிப்படையாக அமைவதே விஜய தாண்டவ கோலத்தில் பொலியும் ஸ்தம்ப முகூர்த்த சக்திகளாகும். காலம் கடந்து நிற்கும் இந்த அனுகிரக சக்திகளின் மதிப்பை யாராலும் நிர்ணயம் செய்ய முடியுமா ?

திருச்செங்கட்டாங்குடி திருத்தலத்தில் அருள்பாலிப்பவரே ஸ்ரீஸ்தம்ப முகூர்த்த விநாயகர். பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் இந்த மூர்த்தியின் மகிமையை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே. காரணம் இந்த மூர்த்தியின் மகிமையைப் பற்றி கோடியில் ஒரு பங்கு உணர்ந்தவர்கள் பிரளயத்தையே உருவாக்கி விடலாம். ஸ்ரீஸ்தம்ப முகூர்த்த விநாயகர் என்ற நாமத்தில் இரு விநாயக மூர்த்திகள் இங்கு எழுந்தருளி இருப்பதை தரிசிக்கலாம். இந்த உலகில் உருவாகும் அனைத்து முகூர்த்தங்களுக்கும் ஒரு மூர்த்தி ஆதாரமாகவும், அந்த முகூர்த்த அம்சங்களை வர்த்தமான சக்திகளுடன் பொலிய உதவுவதாக மற்றோர் மூர்த்தியும் எழுந்தருளி உள்ளார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் ஸ்தம்ப இரகசியம்.

முகூர்த்தமும் ஸ்தம்பிக்குமே

நவீன கம்ப்யூட்டர் பாஷையில் சொல்வதானால் இதில் ஒரு விநாயக மூர்த்தி முகூர்த்த server. மற்றோர் மூர்த்தி node. இதில் யார் server யார் node என்பதை அறிவதற்கே 1200 பிறவிகள் செங்கட்டாங்குடி சத்திய தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனை வழிபட்டு வர வேண்டும் !

சத்யாஷாட மகரிஷி என்ற ஒரு அற்புத மகரிஷி சத்யத்தையே அணிகலனாக கொண்டு வாழ்ந்த, வாழும் உத்தம மகரிஷி. திருச்செங்கட்டாங்குடி திருத்தலத்தில் சத்திய தீர்த்தம் என்ற அபூர்வ தீர்த்தம் உண்டு. ராஜ கோபுரத்திற்கு வலது பக்கம் பொலிவதே சத்திய தீர்த்தமாகும். இது தவிர சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் இத்தலத்திற்கு அணி சேர்க்கின்றன.

சத்திய சக்திகள் மங்காமல் யுகங்கள் தோறும் செழித்து வளர பாடுபட்டு வரும் உத்தம மகரிஷியே சத்யாஷாட மகரிஷி. ஸ்ரீராம அவதாரத்திற்கு முன்னரே திருச்செங்கட்டாங்குடி தல ஈசனை வழிபட்டு சத்திய சக்திகளை இறை பிரசாதமாக பெற்று அதை பிரபஞ்சம் எங்கும் நிலை நாட்டி வருபவர். சத்யாஷாட மகரிஷியின் தபோ சக்திகளே திருச்செங்கட்டாங்குடி திருத்தலத்தில் சத்திய தீர்த்தமாக இன்று பொலிகின்றது. ஹரிச்சந்திர மகராஜா, யுதிஷ்டிரர், விதுரன், பீஷ்மர், ஆஞ்சநேயர் போன்று சத்தியத்தை நிலை நாட்ட நாட்டம் கொண்ட பலரும் நீராடிய அற்புத தீர்த்தம் இது.

உத்திராட நட்சத்திரத்திற்கு ஆஷாடம் என்று பெயர். சத்ய ஆஷாட மகரிஷி ஒவ்வொரு உத்திராட நட்சத்திர தினத்தன்றும், உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் சூரிய பகவான் பிரவேசிக்கும் உத்தராயண தினத்தன்றும் சத்ய சக்தி தீர்த்தங்களை ஒன்று திரட்டி வடகுரங்காடுதுறை ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றுகின்றார். திருச்செங்கட்டாங்குடி சத்திய தீர்த்தம், ராமேஸ்வரம் கோடி தீர்த்தம், பட்டீஸ்வரம் கோடி தீர்த்தம், திருநெய்த்தானம் சத்திய தீர்த்தம் போன்றவை சாஸ்வத சத்திய சக்தி தீர்த்தங்களாகும்.

ஸ்ரீதிவ்யதேக சனீஸ்வர மூர்த்தி
வடகுரங்காடுதுறை

திருவையாறு அருகே உள்ள தில்லைஸ்தானம் என்னும் திருநெய்த்தானம் சிவத்தலம் அருகே பாயும் காவிரி நதியே அதியற்புத சத்திய சக்திகளுடன் துலங்கும் புராதன தீர்த்தமாகும். தில்லை என்பது ஒரு வகை தெய்வீக மரம். சிதம்பரம் திருத்தலத்தின் தலவிருட்சமே தில்லை மரமாகும். தில்லை அம்பலம், தில்லை அம்பல நடராஜா என்று சிவத்தலமும், சிவமூர்த்தியுமே இந்த விருட்சத்தின் நாமத்துடன் பொலிகின்றார்கள் என்றால் இதை மரம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? தில்லை மரத்தின் ஒரே ஒரு இலையின் சக்தியை வைத்து இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு படைத்து விடலாம். அத்தகைய தெய்வீக ஆற்றல் உள்ளதே தில்லை மரமாகும். காரணம் தில்லை மரத்தில்பொலியும் சத்திய சக்திகளும் புனிதத்திலும் புனிதமான தூய்மையுமே ஆகும்.

உப்பு நீரிலேயே வாழும் மீன் மிகவும் புனிதம் உடையதாக சித்தர்களால் புகழப்படுகிறது. இறைவனின் சிருஷ்டி தத்துவத்தில் புதிராக இருப்பது மீன். அது போல உப்பு நீரில் வளரும் தில்லை தாவரமும் புனிதமான தாவரமாக சித்தர்களால் வர்ணிக்கப்படுகிறது. தில்லை என்ற வார்த்தையே சத்திய சக்திகளுடன் பொலிவதால் தில்லைஸ்தானம் என்ற திருத்தலத்தில் பாயும் காவிரி நதி சத்திய தீர்த்தம் என்ற பெருஞ் சிறப்பைப் பெற்றுள்ளது.

சத்யசீல ஆஷாட பூபதி

உத்திராட நட்சத்திர தினங்களிலும் உத்தராயண புண்ணிய தினத்தன்றும் சத்யாஷாட மகரிஷி கோடி தீர்த்தம், சத்ய தீர்த்தம் போன்ற தீர்த்தங்களிலிருந்து பெறும் புனித தீர்த்தத்துடன் தில்லைஸ்தான சத்திய தீர்த்தத்தையும் சேர்த்து ஒரு சுரக் குடுவையில் வைத்து அதை தன்னுடைய வலது தோளில் சுமந்தவாறே தில்லைஸ்தானத்திலிருந்து நடந்தே சென்று வடகுரங்காடுதுறை திருத்தல ஸ்ரீதயாநிதி ஈசனுக்கு அபிஷேக ஆராதனை நிறைவேற்றுகின்றார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.

எனவே வரும் 14.1.2018 அன்று அமையும் ராமாதித்ய திருநாள் அன்று சத்யாஷாட மகரிஷி அருளிய முறையில் கோடி தீர்த்தங்களை தில்லைஸ்தான சத்திய தீர்த்தத்துடன் சேர்த்து வலது தோளில் சுமந்து சென்று வடகுரங்காடுதுறை ஈசனுக்கு அபிஷேகம் செய்வது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்யமாகும். ஆன்மீக அன்பர்கள் அரிதிலும் அரிதான இந்த ராமாதித்ய நன்னாளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தில்லைஸ்தானம் சிவாலயம்

புனிதத்திலும் புனிதரான சத்யாஷாட மகரிஷியுடன் சேர்ந்து ஸ்ரீதயாநிதி ஈசனுக்கு வழிபாடு செய்யும் சந்தர்ப்பம் இந்த மனிதப் பிறவிலேயே கிடைக்கின்றது என்றால் நம்மை விடக் கொடுத்து வைத்த பாக்யசாலிகள் வேறு யார் ?

செம்பு, வெண்கலம், பித்தளை, பலா மரம், வெள்ளி, தங்கம், சுரக் குடுவை, மிண்டுரங்க குவளை, கொட்டாங்கச்சி போன்ற பாத்திரங்களில் தீர்த்தத்தை சுமந்து செல்லலாம். உடல் சுத்தியான பெண்களும் இத்தகைய தீர்த்த வழிபாட்டில் தாராளமாக பங்கு பெறலாம். தில்லைஸ்தானத்திலிருந்து வடகுரங்காடுதுறை வரை நடந்து செல்ல வேண்டும் என்பது முக்கியமாகும். அப்போதுதான் நடந்தே யாத்திரையாக செல்லும் சத்யாஷாட மகரிஷியின் தெய்வீகத் திருப்பணியில் நாமும் பங்கேற்க முடியும்.

இதனால் விளையும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

உதாரணத்திற்கு ஒரு விளக்கம்.

விஸ்வாமித்திர மகரிஷி ராம லட்சுமணர்களுடன் மிதிலாபுரிக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு கல்மேல் ஸ்ரீராமர் பாதம்பட அதுவரை கல்லாயிருந்த அகலிகை சாப விமோசனம் பெற்று தன் சுய உருவம் பெற்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் தொடர்பாக அமைந்த பல தெய்வீக லீலைகளை சித்தர்களின் இருடிகள் ராமாயணத்தில்தான் காண முடியும். அகலிகை தன் சுய உருவம் பெற்றவுடன் ராமபிரானின் திருவடிகளில் விழுந்து வணங்கி தனக்கு சாம விமோசனம் அளித்த மகாவிஷ்ணுவிற்கு நன்றியைத் தெரிவித்தாள். ஆனால் ராமபிரானோ அப்போது பால பருவத்தில் மனித உருவில் தோன்றியிருந்தான். அதனால் அவன் அகலிகையின் வணக்கத்தையும் தன் தாயின் வயதுடைய அகலிகையின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ள தயங்கினான்.

ஸ்ரீராமர் அகலிகையிடம், “அன்னையே, நீங்கள் என்னை மகாவிஷ்ணுவின் அவதார மூர்த்தி என்று வணஙகினாலும் என்னால் இப்பிறவியில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் குருவின் வழிகாட்டுதலையே நாட வேண்டும்,” என்று கூறி விஸ்வாமித்திர மகரிஷியை நோக்கி, “முனி சிரேஷ்டரே, இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நீங்கள்தான் என்னைக் காப்பாற்றி நல்வழி காட்ட வேண்டும். கல்லின்மேல் என்னுடைய கால் பட்டது தவறில்லை என்றாலும் அது அகலிகை மாதாவாக மாறிய பின்னர் நான் ஒருபெண்ணைக் காலால் தீண்டிய தவறுக்குப் பொறுப்பாளி ஆகிறேன். எனவே இந்த தவறுக்குத் தக்க பிராயசித்தம் பெறும் முறையை தாங்கள் அருள் கூர்ந்து தெரிவிக்க வேண்டும்,” என்று பணிவுடன் தெரிவித்தார் ராம பிரான். இதுவே சத்திய சீலம்.

சத்திய தீர்த்தம், தில்லைஸ்தானம்

ராமருக்கு சத்தியத்தின் மேல் இருந்த ஆழ்ந்த பிடிப்பை பாராட்டிய விஸ்வாமித்திர மகரிஷியும், “ராமா, நீ மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது உனக்கும் அகலிகைக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமே என்றாலும் மனிதனாக ஏற்ற நாடகத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற யுகநியதியும் மதிக்கப்பட வேண்டியதே. இதற்காக ஒரு உபாயத்தைக் கூறுகிறேன். பாலனாக இருக்கும் நீ சீதையை மணம் புரிந்து அயோத்திக்குச் திரும்பி சென்ற பின் உன்னுடைய பட்டாபிஷேகம் நிறைவேறிய பின்னர் சத்திய சக்திகள் பொலியும் தில்லைஸ்தானத்தை அடைந்து அங்கு தவமியற்றும் கௌதமர் அகலிகை தம்பதிகளை நீ சீதையுடன் வணங்கி மரியாதை செலுத்துவதே அகலிகை மேல் உன் பாதம் பட்ட தவறுக்கும் பிராயசித்தம் பெறும் முறையாகும். உன்னை அறியாமல் செய்த தவறுக்கு நீ பிராயசித்தம் பெறத் துடிக்கிறாய். ஆனால் எதிர்காலத்தில் பலரும் தெரிந்தே, அறிந்தே பொய் கூறி ஏமாற்றும் சூழ்நிலைக்கு நல்லோர்கள் கூட பலியாவர். அவர்களுக்கு பிராயசித்தம் அளிப்பதாகவும் இந்த வழிபாடு அமையும்”, என்று அருளினார்.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜாதகம்

இவ்வாறு ராம பட்டாபிஷேக வைபவத்திற்குப் பின் ராமச் சந்திர மூர்த்தி சீதையுடன் தில்லைஸ்தான திருத்தலத்தில் எழுந்தருளி அங்கு தவயோகத்தில் நிலைத்திருந்த கௌதமர் அகலிகை தம்பதிகளை வழிபட்டு தன் தவற்றிற்கான பிராயசித்தத்தைப் பெற்றதும் ஒரு உத்தராயண புண்ணிய காலத்தில்தான். அந்த தெய்வீக வழிபாட்டின்போது காமதேனுவும் அங்கு எழுந்தருளி ராமர், சீதை, கௌதமர், அகலிகை தம்பதிகளை வணங்கி அருள் பெற்றது.

எனவே தில்லைஸ்தான தீர்த்த வழிபாடு பொய், அசத்தியம் போன்ற தவறிழைத்தவர்களுக்கும், அத்தகைய தவறுகளால் ஏமாற்றப்பட்டு சொத்து, அந்தஸ்து, கௌரவம் இழந்தவர்களுக்கும் பிராயசித்தம், நிவாரணம் அளிக்கவல்லதாகும். ராமர், சீதை, கௌதமர், அகலிகை, சத்யாஷாட மகரிஷி, காமதேனு என அனைத்து தெய்வீக நாதர்களின் சக்தியையும் ஒருங்கே பெற்றுத் தருவதே தில்லைஸ்தானத்தில் நிகழ்த்தும் தீர்த்த வழிபாடாகும்.

வரும் உத்தராயண புண்ணிய காலம் அமையும் முகூர்த்தத்திற்கு ஞான தம்ப முகூர்த்தம் என்ற சிறப்பம்சமும் உண்டு. சத்திய சக்திகள் மட்டுமல்லாது ஞான சக்திகளை அபரிமிதமாக அளிப்பதும் இத்தகைய ஞான தம்ப சக்திகளாகும். கிரக சஞ்சார இராசி கட்டத்தில் தனுசு ராசி முதல் மீன ராசி வரையில் உள்ள நாலு ராசிகள் சேர்ந்தது ஞான தம்பம் எனப்படும். குரு ஆட்சி செய்யும் தனுசில் தொடங்கி குருவிற்கு உரித்தான மீன ராசியில் முடிவதால் இது ஞான தம்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞானதம்பத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது ஞான தம்ப சக்திகளுடன் பொலியும் ஞானதம்ப முகூர்த்தம் எனப்படும்.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜாதகத்தில் ஆறு கிரகங்களுடன் லக்னமும் ஞான தம்பத்தில் நிற்க குருவும் சந்திரனும் முறையே குரு ராசிகளான தனுசு ராசியையும் மீன ராசியையும் பார்க்க அற்புத ஞான சக்திகளுடன் பொலியும் ஜாதகமாக சிறப்பு பெறுகிறது.

இம்முறையில் வரும் உத்தரயண புண்ணிய கால முகூர்த்தமானது ஆறு கிரகங்கள் ஞான தம்பத்தில் நிற்க லக்னம் குருவின் நேர் பார்வையையும் லக்னாதிபதியான செவ்வாய் பகவானின் நேர்ப்பார்வையைப் பெறுவதும் கிடைத்தற்கரிய ஞானதம்ப முகூர்த்தமாகும். சூரிய பகவான் உச்சம் பெறும் மேஷ ராசியில் லக்னம் அமைந்து அது குரு மங்கள திருஷ்டியைப் பெறுவதால் ராமாதித்ய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. எத்தகைய கர்ம வினைகளையும், திருமண தோஷங்களையும் பொடிப் பொடியாக்குவதே மேஷ லக்னத்தில் அமையும் இத்தகைய குருமங்கள திருஷ்டியாகும்.

ஆஷாடம் என்றால் கல்யாண முருங்கை என்ற பொருளும் உண்டு. ஆஷாட பூபதிகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். கல்யாண முருங்கை குச்சியை கையில் ஏந்தியபடி அக்குச்சியுடனே எல்லா இடத்திற்கும் பவனி வரும் அத்வைதிகளையே ஆஷாட பூபதிகள் என்று அழைக்கிறோம். இருப்பது இறைவன் என்ற ஒன்றே என்பதைக் குறிக்கும் முகமாக ஆதிசங்கரர் வழிவந்த மடாதிபதிகளும் இத்தகைய ஆஷாட கழிகளைக் கையிலேந்தி தரிசனம் அளிப்பார்கள்.

ஞான தம்ப ஞான முகூர்த்தம்

இதிலிருந்து தோன்றியதே சற்று காலம் முன்பு வரை பிரசித்தி பெற்றிருந்த ஆஷாட பூபதி விரதமாகும். ஆஷாட கழி ஒன்று என்ற சத்திய சக்தியைக் குறிப்பதால் சத்திய சக்திகள் பொலியும் திருத்தலங்களுக்கு இத்தகைய ஆஷாட கழிகளுடன் பாத யாத்திரையாக செல்வதே ஆஷாட பூபதி விரதமாகும். சன்னியாசிகள், கிரகஸ்தர்கள், பிரம்மசாரிகள் போன்ற பல தரப்பினருக்கும் இந்த ஆஷாட விரத முறைகள் பல நியதிகளுடன் இருப்பதால் அனைவரும் அனுஷ்டிக்கக் கூடிய எளிய யாத்திரை முறையை இங்கு அளிக்கிறோம்.

சத்திய சக்தி தலங்களான திருச்செங்கட்டாங்குடி, சிதம்பரம், தில்லைஸ்தானம், வடகுரங்காடுதுறை, ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், பழநி போன்ற தலங்களுக்கு நடந்து யாத்திரையாக செல்ல வேண்டும். கையில் ஒரு கல்யாணமுருங்கையை எடுத்துச் செல்ல வேண்டும். கீழே எங்கும் வைக்காமல் அந்தக் குச்சியை வைத்திருந்து குறிப்பிட்ட தல ஈசனை தரிசனம் செய்தபின் அக்குச்சியை அத்தலத்திலேயே சமர்ப்பித்து விட்டு மீண்டும் தங்கள் இல்லம் திரும்புவதே ஆஷாட பூபதி விரதமாகும். வழியில் அந்தக் குறிப்பிட்ட தலத்தைத் தவிர வேறு எந்த தலத்திற்கும் தரிசனத்திற்காகச் செல்லக் கூடாது. நடந்தேதான் யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். சன்னியாசிகளைத் தவிர மறறவர்கள் யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது ரயில், பஸ் போன்ற வாகனைங்களைப் பயன்படுத்தலாம்.

ஸ்ரீபூரண புஷ்கலை ஐயனார்
வடகுரங்காடுதுறை

இறைவனிடம் பிரார்த்தனை செலுத்தும்போது கையிலிருக்கும் குச்சி நழுவி கீழே விழுவதைப் போல இறைவனிடம் சரணடைந்து வேண்ட வேண்டும். இம்முறை பிரார்த்தனையை தண்டம் செலுத்துதல் என்றும் கூறுவதுண்டு. இத்தகைய பிரார்த்தனைக்கு உடனடியாக செவி சாய்ப்பவனே தண்டத்தை ஏந்தி அருள்புரியும் பழநி தண்டபாணி போன்ற மூர்த்திகள். வேலை, திருமணம், சந்தான பாக்யம், வீடு, வாகன வசதி போன்ற எத்தகைய சுயநல பிரார்த்தனைகளுக்கும் தாராளமாக இந்த ஆஷாட பூபதி விரதத்தை மேற்கொள்ளலாம். அதே சமயம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த விரதத்தை மேற்கொண்டால் இறைவன் மேல் பக்தியை வளர்க்க இதை விடச் சிறந்த பூஜை வேறு எதுவுமே கலியில் இல்லை எனலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடகுரங்காடுதுறைக்கு இவ்வாறு எண்ணற்றோர் யாத்திரையாக வந்து தண்டம் சமர்ப்பித்தனர். இத்தலத்தில் ஸ்ரீஅய்யனார் பூரண புஷ்கலை தேவிகளுடன் எழுந்தருளி இருப்பதால் பக்தர்களின் தண்ட சமர்ப்பண பூஜைகளை ஏற்று அவர்களுக்கு துரிதமாக அருள் வழங்கி வந்தார் ஐயனார் சுவாமி. எனவே தம்பதி சகிதமாக ஸ்ரீஐயனார் சுவாமி எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களும், சாஸ்தா என்ற நாமத்துடன் ஸ்ரீஐயனார் எழுந்தருளிய தலங்களும் இத்தகைய தண்ட பிரார்த்தனைகளுக்கு உடனடி பலன்களை வர்ஷிக்கின்றன.

முகூர்த்தக்கால் நடுவது ஏன்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமண நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் மணமகன் வீட்டு வாசலில் முகூர்த்தக் கால் என்ற மூங்கிலை ஊன்றி அதற்கு பூஜை செய்வது வழக்கம். முதல் நாள் சூரிய பகவானை வேண்டி பிரார்த்தனை செய்து அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நவகிரக மூர்த்தியையும் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு ஒன்பது நாட்கள் நவகிரகங்களையும் வழிபட்ட பின்னர் திருமண நாள் அன்று கல்யாணமுருங்கை குச்சிக்கு அல்லது அரசங் குச்சிக்கு மஞ்சள் குங்குமம் பூசி வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார்கள். முகூர்த்தம் என்பது நவகிரங்களின் சஞ்சாரத்தால் அமைவதுதானே ? இவ்வாறு நவகிரகங்களை திருமணத்திற்கு முன் முறையாக வழிபட்டு வந்தால் திருமண முகூர்த்தங்கள் எத்தகைய தோஷங்களாலும் பாதிக்கப்படாது என்பது உண்மையே.

அவரவர் குல வழக்கப்படி திருமண நாளிற்கு முன்பு மூன்று, ஐந்து, ஏழு நாட்களுக்கு முன் இத்தகைய முகூர்த்தக் கால் பூஜையை நிறைவேற்றுவதும் ஏற்புடையதே. தினமும் அனைத்து நவகிரக மூர்த்திகளுக்கும் அஷ்டோத்திர பாராயண வழிபாடு செய்தல் பலன்களை பன்மடங்காக பெருக்கும். ஆனால், தற்காலத்தில் திருமண மண்டபங்களில் ரெடிமேடாக இருக்கும் அரசாணி குச்சிகளுக்கு பந்தக்கால் பூஜையை நிறைவேற்றுவது சகமாகி விட்டது. இதனால் பலத்த தோஷங்கள் பெருகும் என்பதை நினைவில் கொள்ளவும். அதே போல் வீட்டின் முன் வைக்கும் முகூர்த்தக் காலும் புதிதாக பிறர் பயன்படுத்தாத மூங்கிலாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இவ்வாறு முறையான பந்தக்கால் பூஜை, முகூர்த்தக் கால் பூஜையை நிறைவேற்றாதவர்கள் வரும் உத்தராயண புண்ணிய நாளில் வடகுரங்காடுதுறையில் உத்தராயண பூஜையை நிறைவேற்றுவதால் திருமண தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இராவணன் தன்னுடைய சிவபக்தியின் மகிமையால் நவகிரக மூர்த்திகளை எல்லாம் படியாக்கி அவர்களை தினந்தோறும் மிதித்துச் சென்றவாறே தன் சிம்மாசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். நவகிரக மூர்த்திகள் தேவ நிலையை அடைந்தவர்கள். அவர்கள் எளிதில் இராணவனை இருந்த இடம் தெரியாமல் அழித்திருக்கலாம் என்றாலும் விதிக்கு கட்டுப்பட்டு, இராவணனின் சிவபக்திக்கு மதிப்பளித்து அமைதியாகவே இராவணனின் கொடுங்கோல் செயல்களை பொறுத்துக் கொண்டனர். எல்லா நவகிரக மூர்த்திகளும் இராவணனின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அடங்கி நடந்தாலும் வடகுரங்காடுதுறை திருத்தலத்தில் அருளாட்சி செய்த சனீஸ்வர பகவான் மட்டும் இராவணனின் ஆதிக்கத்தில் அடங்கவில்லை. அதை அறிந்த இராவணன் பெருங் கோபத்துடன் வடகுரங்காடுதுறை திருத்தலத்தை அடைந்தான். ஆனால், அங்கு வாலி ஸ்ரீதயாநிதி ஈசனுக்கு உள்ளன்புடன் பூஜை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட இராவணன் வந்த வேகத்தில் இலங்கைக்கு திரும்பி விட்டான். காரணம் வாலி என்றாலே இராவணனுக்கு சிம்ம சொப்பனம் அல்லவா ? இவ்வாறு இராவணனின் காலில் மிதிபடாத திவ்யதேகத்தை வடகுரங்காடுதுறை சனீஸ்வர மூர்த்தி பெற்றிருந்ததால் இவர் திவ்யதேக சனீஸ்வர மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீதிவ்யதேக சனீஸ்வரர்

எனவே வடகுரங்காடுதுறையில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் திவ்ய தேக சனீஸ்வர மூர்த்தியை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு நாவல் பழம், பீட்ரூட் அல்வா போன்ற கரிய நிற உணவு வகைகளைத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய சனித் துன்பங்களாலும் பாதிக்கப்பட மாட்டார்கள். தந்தை வழி சொத்துத் தகராறுகள் தீர்வு பெறும்.

பொதுவாக திருமணம், புதுமனை புகுதல், நாமகரணம், சீமந்தம் போன்ற மங்கள வைபவங்களுக்கு உரித்தான முகூர்த்த நேரங்கள் சுபமுகூர்த்த லட்சணங்களோடு அமைந்திருக்க வேண்டியது அவசியமே. ஆனால், தற்காலத்தில் பலரும் பணம் பெற்றுக் கொண்டே இத்தகைய முகூர்த்த நேரங்களை குறிப்பதால் அனைத்து சுபமுகூர்த்த அம்சங்களையும் கணக்கிட முடியாமல் தேய்பிறை, பிரபலாரிஷ்ட யோகங்கள், சூன்ய திதிகள், அசுத்தி லக்ன அம்சங்கள் போன்றவையும் முகூர்த்த லக்னங்களில் இடம் பெற்று விடுகின்றன. அதனால் பலவிதமான வேதனைகளையும் துன்பங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

இதற்கு ஓரளவு பரிகாரமாக அமைவதே இங்கு குறிப்பிட்டுள்ள ராமாதித்ய முகூர்த்த நேரமாகும். எல்லா கிரகங்களும் சூரியனையே சுற்றி வருவதால் சூரிய பகவான் அபரிமிதமான சூரிய சக்திகளுடன் பொலியும் ராமாதித்ய முகூர்த்த லக்னத்தை ஒரு பலகையிலோ அல்லது வாழை இலையிலோ பச்சரிசி அல்லது கோதுமை மாவால் வரைந்து ஔவையார் அருளிய, “சீத களபம் ...” என்று தொடங்கும் விநாயக துதியை ஓதி வழிபட்டு அந்த மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து திருக்கோயில்களில் எறும்புகளுக்கு உணவாக இட்டு தங்கள் காரியங்களை நிறைவேற்றுதால் முகூர்த்த நேரங்களில் உள்ள தோஷ அம்சங்களுக்கு இது ஓரளவு நிவாரணத்தை அளிக்கும்.

மனதை குரங்கிற்கு ஒப்பிடுவது வழக்கம். ஒரு நொடி நேரமும் ஓயாமல் மாறி மாறித் தாவிக்கொண்டே இருக்கும் மனதை கட்டுப்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள் மட்டுமே. காரணம் அவர்களுக்கு மனம் என்பது கிடையாது. மனிதர்கள் அனுபவிக்கும் நிலையற்ற தற்காலிக சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் மனமே. இவ்வாறு மனித சமுதாயத்தை மனதின் குரங்குப் பிடியிலிருந்து மீட்டு அவர்களுக்கு நற்கதி அளிக்க தோன்றிய சித்த பிரானே குரங்காட்டி சித்தர் என்ற கருணைதேவர் ஆவார்.

 

இவர் எப்போதும் ஒரு குரங்கை தன்னுடன் வைத்திருப்பார். அதைக் கயிறு, சங்கிலி போன்ற எதனாலும் கட்டி வைத்திருப்பதில்லை. அவர் எங்கு சென்றாலும் அந்த குரங்கு அவருடனே செல்லும். ஆனால், அதன் செய்கையோ தெய்வீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மனிதனைப் போன்ற அறிவு முதிர்ச்சியுடன் இருக்கும். அவர் என்ன சொன்னாலும் அந்த குரங்கு உடனே நிறைவேற்றி விடும். அதனால் அந்த சித்தரை மக்கள் அனைவரும் குரங்காட்டி என்று நினைத்து வந்தனர். குரங்காட்டி சித்தர் பல தலங்களுக்கு சென்று கோயில் பிரகாரங்களை பெருக்குதல், கோயில் பிரகாரங்களில் உள்ள முட்கள், புல் புதர்களை நீக்குதல், கோமுகங்களை சுத்தம் செய்தல் போனற உழவாரத் திருப்பணிகளை அந்த குரங்கின் உதவியுடனே நிறைவேற்றி வந்தார்.

குரங்காட்டி சித்தர்

குரங்காட்டி சித்தரின் அருமை பெருமைகளை எப்போதாவது ஆயிரத்தில் ஒருவர் உணர்ந்து அவரை அணுகினால் அத்தகையோருக்கு மனதை அடக்கும் யோக பிராணாயாம வித்தைகளை உணர்த்துவார். சிறு சிறு கதைகள் மூலம் மனம் அடங்கும், மனதை அடக்கும் வித்தையை எளிமையாக போதிப்பார். பல திருத்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று மன வள யோக கலையை பரப்பி வந்த குரங்காட்டி சித்தர் தன்னுடைய உடலை விடுத்து செல்லும் நாளைக் குறித்து இறைவனை கேட்டபோது எங்கு மனதிற்கு அதிபதியான தட்சிணா மூர்த்தியுடன் லிங்கோத்பவ மூர்த்தியும் தென்திசை நோக்கி எழுந்தருளி உள்ளாரோ அந்த இடத்தில் ஜீவ சமாதி கொண்டு தன்னுடைய உடலை விட்டுவிடலாம் என்று தெரிவித்தார் எம்பெருமான்.

சித்தர்கள் என்பவர்கள் நமது பூமியைப் போன்ற ஒரு கோடி பூமிகளில் எத்தனை சிவமூர்த்தங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை சுயம்பு மூர்த்திகள், எந்தெந்த லிங்கங்கள் சித்தர்களால், தேவர்களால், மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை, எத்தனை லிங்கங்கள் கிழக்கு நோக்கி உள்ளன, இதில் எத்தனை பட்டை லிங்கங்கள், எத்தனை லிங்க மூர்த்திகள் சிவபுரம், திருவெண்காடு போல் பூமிக்கு அடியில் எழுந்தருளி உள்ளன, எத்தனை லிங்கங்கள் தனுஷ்கோடி, திருப்புகலூர் போல் நீரில் அமிழ்ந்துள்ளன, எத்தனை லிங்கங்கள் சிதம்பரம், கடுவெளி போல் ஆகாயத்தில் உள்ளன என்ற விவரங்களை எல்லாம் ஒரே ஒரு நொடியில் கிரகித்து விடுவார்கள். அவர்களே சிவனின் சித்தத்தில் வாழ்பவர்கள்.

ஸ்ரீபவளவாய் நந்தீஸ்வரர்
வடகுரங்காடுதுறை

அதுபோல் குரங்காட்டி சித்தரும் ஒரு நொடியில் லிங்கோத்பவ மூர்த்தி தட்சிணா மூர்த்திகள் அருகருகே எந்த தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளனர் என்பதை ஒரே நொடியில் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் எந்த சித்தியையும் அவர்கள் தாங்களாக பயன்படுத்துவது கிடையாது. அந்த பரம்பொருள் ஆணையில்லாமல் கடுகளவு இறை சக்தியைக் கூட அவர்கள் வெளிகாட்டுவது கிடையாது. அதனால் குரங்காட்டி சித்தரும் தன்னுடைய உழவாரத் திருப்பணிகளை தொடர்ந்து காவிரித் தலங்களில் நிறைவேற்றி வந்தார்.

இறையருளால் குரங்காட்டி சித்தர் ஒரு சுக்ல பட்சம் ஞாயிறு அன்று வடகுரங்காடுதுறையில் எழுந்தருளிய லிங்கோத்பவ மூர்த்தியை கண்டு தரிசனம் செய்து அங்குள்ள தட்சிணா மூர்த்தி திருவடிகளில் ஜீவசமாதி கொண்டார். ஆமாம், குரங்காட்டி சித்தருடன் பல திருத்தலங்களுக்கும் தொடர்ந்து சென்ற குரங்கின் நிலை என்னவாயிற்று ?

எந்த ஜீவனாக இருந்தாலும் திருஅண்ணாமலையில் தோன்றும் பிறவிதான் அதற்கு கடைசி பிறவியாக அமைந்து முக்தியை அளிக்க முடியும் என்ற இறை நியதியின்படி குரங்காட்டி சித்தரை தொடர்ந்து சென்ற குரங்கு சத்திய சக்திகள் நிறைந்த வடகுரங்காடுதுறை திருத்தல தரிசன மகிமையால், குரங்காட்டி சித்தரின் பூரண குருவருட் கடாட்சத்துடன் சத்தியம் என்ற ஒரே சக்தி மிளிரும் ஏக முக தரிசனம் அமைந்த திருஅண்ணாமலையில் கடைசிப் பிறவியான முக்திப் பிறவியைப் பெற்றது. அந்த குரங்கு ஏகமுக லிங்க தரிசனம் அமையும் தற்போதைய ரமணாஸ்ரம பகுதியில் குரங்காய்ப் பிறந்து ஒன்றே குலம் என்று வாழ்ந்த ரமணரின் திருவருளால் திருஅண்ணாமலையில் முக்தி அடைந்தது. இந்த வரலாறு பலரும் அறிந்த ஒன்றே.

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். ஆனால், மனதை செம்மையாக்குவது என்பது கோடியில் ஒருவருக்கே சாத்தியம் ஆகும். இதற்கு உதவும் ஒரே திருத்தலம் குரங்காட்டி சித்தரின் ஜீவசமாதி பொலியும் வடகுரங்காடுதுறை திருத்தலமாகும்.

சந்திரன் நீசத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்கள், அஷ்டமத்தில் சந்திரன் உள்ளவர்கள், தேய்பிறையில் பிறந்தவர்கள், தேய்பிறையில் திருமணம் புரிந்தவர்கள், சந்திரனுடன் பாவிகள் இருக்கப் பிறந்தவர்கள் போன்ற சந்திரன் சம்பந்தப்பட்ட, மனம் சம்பந்தப்பட்ட எத்தகைய துன்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தலமே வடகுரங்காடுதுறையாகும்.
மனம் விளங்க, மனம் மணமாக வழிபட உகந்தது ஞாயிறன்று நிலவும் சந்திர ஹோரையா அல்லது வளர்பிறை திங்கட் கிழமைகளில் சூரிய ஹோரையா அல்லது திங்கட்கிழமைகளில் சந்திர ஹோரை சிறந்ததா என்ற விவரங்களை அவரவரே நன்கு தீர ஆலோசித்து அதன்படி வழிபடுதல் சிறப்பு, இதற்குரிய மனோ சக்தியைத் தருவதும் வடகுரங்காடுதுறை திருத்தலமே.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலால விஷத்தை நந்தி மூர்த்தி தன்னுடைய நாக்கால் நக்கி திரட்டி ஈசனிடம் அளித்த வரலாறு அனைவரும் அறிந்ததே. அவ்வாறு அதிஉஷ்ணமுடைய விஷத்தை நாக்கால் திரட்டியதால் நந்தி பகவானுடைய வாய், உதடு, நாக்கு அனைத்தும் புண்ணாகி விட்டன. அதனால் இன்றும் பிரதோஷ வைபவங்களின்போது நந்தி மூர்த்திக்கு சாந்தம் அளிக்கும் வழிபாடாக காப்பரிசியும் தேங்காய் துருவலும் அளித்து வருகிறோம்.

ஸ்ரீபவளவாய் நந்தி மூர்த்தி

ஆனால், வடகுங்காடுதுறை திருத்தலத்தில் தென்னை மரம் தலவிருட்சமாக பொலிவதால் பக்தர்கள் நெடுங்காலம் நந்தி மூர்த்திக்கு தேங்காய் துருவலை பிரதோஷ நைவேத்யமாக அளிக்காமல் விட்டு விட்டார்கள். அதனால் இத்தல நந்தி மூர்த்தியின் வாய் புண்கள் ஆறாமல் சிவப்பாகவே இருந்தது. இத்தலத்திற்கு வருகை புரிந்த குரங்காட்டி சித்தர் நந்திமூர்த்தியின் நிலை அறிந்து அவருடைய வாயில் பசு வெண்ணையை பூசி அதன் மேல் மாதுளை முத்துக்களை பதித்து வழிபட்டாராம். அதனால் நந்தி மூர்த்தியின் வாய், நாக்கில் உள்ள புண்கள் மறைந்ததுடன் அவர் வாயில் இருந்த புண்கள் நிறம் மாறி பவள நிறத்தை அடைந்தனவாம். அன்று முதல் அம்பாள் சன்னதிக்கு எதிரில் உள்ள இந்த நந்தீஸ்வர மூர்த்தி பவளவாய் நந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

தொண்டை, நாக்கு, வாய், உதடுகள் போன்றவற்றில் ஆறாத புண்கள் உள்ளோரும் கான்சர் போன்ற வேதனைகளால் வாடுவோரும் பவளவாய் நந்தி மூர்த்திக்கு பிரதோஷம், வளர்பிறை திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் சுத்தமான பசு வெண்ணெயை பூசி, மாதுளை முத்துக்ளை பதித்து வழிபடுதலால் வாய் சம்பந்தமான பிரச்னைகள் தீர்வு பெறும். வீண் வம்பு, வதந்தி, கொடுமையான வார்த்தைகளால் அவமானம் அடைந்தோரும், பிறருக்கு வேதனை அளித்தவர்களும், தவறான புகார்களால் பிறர் வாழ்வைக் கெடுத்தவர்களும், அபாண்டப் பழிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தகைய வழிபாடுகளால் துரித நிவாரணம் பெறுவார்கள்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam