அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அகத்தி மரம்

வினா : வீட்டில் அகத்தி மரம் வளர்க்கலாமா ?
விடை : வளர்க்கலாம். ஆனால் வீட்டில் வளர்க்கும் அகத்தி மரத்தின் தழையினை/பூவினை சமையலுக்குப் பயன்படுத்தலாகாது. பசு, எருமை போன்ற கால்நடைகளுக்கு உணவாக அளித்தல், அன்னதானம் போன்ற தானங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். வீட்டு சமையலுக்கு அகத்திக் கீரையை வெளியில் காசு கொடுத்தே வாங்க வேண்டும்.
எமதர்ம ராஜாவிற்குரிய மக நட்சத்திரத்தன்று எருமைக்கு அகத்திக் கீரை அளித்துவர எம பயம் அகலும். ஒரு பொருளைத் தானம் செய்கையில் தான தேவதைகள் அங்கு பிரசன்னமாகி தான தர்ம புண்ய சக்தியைப் பகுத்துத் தருகின்றன. அகத்தி மரம், நாகலிங்க புஷ்ப மரம் போன்றவற்றில் தான, தர்ம தேவதைகள் விசேஷமாக வசிக்கும் விருட்சங்களாகும். தான, தர்ம காரியங்களினால் தான் இந்த தேவதைகள் ப்ரீதி அடைகிறார்கள். எனவே தான் வீட்டில் அகத்திமரம் வளர்த்தால் அதன் தழையினை அன்னதானம், கால்நடைகளுக்கு தானமாக அளித்திட அம்மரத்தில் தான, தர்ம தேவதைகளின் அருட்கடாட்சம் பெருகி இல்லத்திற்கு சுபம் தரும்.
இதேபோல், நாகலிங்க புஷ்பத்தைப் பலர் ஒன்று சேர்கின்ற பூஜையில் பயன்படுத்தலாம். கோயிலுக்கு அளிப்பது சிறப்புடையது. வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்தினால் ஒவ்வொரு நாகலிங்கப் பூவிற்கும் குறைந்த்து ஒருவருக்கேனும் அன்று அன்னதானமிட்டால் தான் (அதிதி போஜனம்) நாகலிங்க புஷ்ப பூஜையின் பலன் பரிபூர்ணமடையும்.
வினா : இறந்து விட்ட பெரியவர்களுடைய படத்தைப் பூஜையில் வைத்து வழிபடலாமா ?
விடை : நிச்சயமாக வழிபடலாம். இது மட்டுமல்ல, மூதாதையர்கள் பயன்படுத்திய கைத்தடி, சந்தனக் கல், கட்டை பலகை போன்றவற்றிற்கும் மஞ்சள், குங்குமமிட்டு வைக்கலாம். இவற்றில்தான் அமாவாசை, கிரஹணம், திவசதிதி நாட்களில் பித்ருக்கள், ஆவாஹனமாகி நம்மை ஆசிர்வதிக்கின்றனர்.

அடிமை கண்ட ஆனந்தம்

கை, கால் நடுங்குவது போல் உடலும் நடுங்கத் துவங்கியது. அந்த இறை நாமங்கள் மலையில் பட்டு எதிரொலிக்க, யாரோ பதில் கூறுவது போல் இருந்தமையால் சிறுவன் ஓரளவு மனம் தெளிந்தான்............ ஆனால்...............
சில இறை நாமங்கள் எதிரொலிக்காமல் காற்றில் கரைந்தனவோ? அல்லது அவை என்னவாயிற்று “ஏன் எதிரொலி கேட்கவில்லை?” – இந்த பீதியே சிறுவனுக்கு மீண்டும் அச்சத்தைக் கிளப்பிவிட்டது.
அழுகிய நாற்றம் பொங்கியதோடு அருகிலும் வேறு வந்து கொண்டே இருந்த்து. ஒரு வேளை எதையேனும் ஓநாய் இழுத்துக் கொண்டு வருகிறதா? இந்த எண்ணம் வந்தவுடன் சிறுவனுடைய பயங்கரமான கற்பனைக்கு எல்லையில்லாமல் போய் விட்டது!
“ஒரு வேளை நம்ம வாத்யார் உடலைத்தான் ஓநாய் இழுத்துப் போக வருகின்றதோ? “ இந்த எண்ணம் உதயமானது தான் தாமதம், சிறுவன் உடனே “வாத்தியாரே” என்று அலறிக் கொண்டு அவர் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவர் உடலின் மேல் தன் தலை முதல் கால் வரை நன்றாக நீட்டிப் படுத்துக் கொண்டான்.
“ ஓநாய் வந்தால் முதலில் என்னைத் தானே இழுக்கும். அப்படியாவது வாத்தியாரைக் காப்பாற்றுவோம்” சிறுவனாயிருந்தாலும், பார்த்தீர்களா, எத்தகைய உத்தமமான எண்ணத்தைக் கொண்டிருந்தானென்று ! அதுவே குருகுலவாசத்தின் மகிமை!
ஒரு நிமிடமா அல்லது ஒரு மணி நேரமா, எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று அவனுக்கே தெரியாது. திடீரென்று ஒரு பெரிய இடிச்சத்தம் கேட்டது! அச்சத்தில் சிறுவன் சற்றுத் தலையை உயர்த்திப் பார்த்தான். அங்கே...............
இரண்டு  பெரிய மின்னல்கள்! ஆனால் மின்னல் மின்னி மறைந்து விடுமல்லவா? இது மறையவில்லை! நகர்ந்து நகர்ந்து முன்னால் வந்தது!
சிறுவன் கதறி அழுதான், அவனுக்குப் புரிந்து விட்டது என்னவென்று!
காட்டு மந்திரவாதிகளைப் பற்றி சிறுவனிடம் பெரியவர் நிறையச் சொல்லி இருக்கிறார். இவர்கள் மயானத்தில் பிணத்தின் மீது அமர்ந்து பலவிதமான மந்திரங்களை உச்சாடனம் செய்வர். எதற்காக? பல பயங்கரமான ஆவிகளையும் மோகினிப் பிசாசுகளையும், சுடலைப் பேய்களையும் தம் வசப்படுத்துவதற்காக! இதனால் கிட்டும் சக்திகளைத் தங்களுடைய வாழ்வில் கெட்ட வழியில் பயன்படுத்துவார்கள்.
நன்கு வாழ்ந்தவருடைய பிணம் கிடைக்குமாயின், அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவர். அதற்காகவே அலைவர். அதுவும் மகான்களுடைய உடல் கிடைக்குமாயின் அவர்களுக்குக் கோலாகலம் தான்! எனவேதான் மகான்களோ, சித்தபுருஷர்களோ, யோகியரோ, ஞானியரோ தங்கள் தேகத்தை விட்டுச் சென்றால் தங்கள் நம்பிக்கைக்குரித்தான சீடரை உடலருகில் வைத்து விட்டுச் செல்வது வழக்கம். எண்ணற்ற தெய்வீகக் காரியங்களை நிறைவேற்றுவதற்கும் அவர்கள் அவ்வாறு தங்கள் உடலை விட்டுச் செல்வது உண்டு. அதற்குக் காவலாகவே தெய்வீக சக்தி மிகுந்த சிஷ்யர்கள் அருகில் இருப்பர்.]
ஸ்ரீஆதிசங்கரருடைய சரிதையில் கூட கூடுவிட்டுக் கூடு பாய்கின்ற இத்தகைய நிகழ்ச்சியைக் காணலாம்.  இத்தகைய காட்டு மந்திரவாதிகள் நேரடியாக வருவதில்லை. மாறாகத் தங்களுக்கு அடிமையாக உள்ள சுடலைப் பேய்களை அனுப்புவர். பெரியவர் இத்தகைய விளக்கங்களை முழுவதுமாக அப்போது அளித்திராவிட்டாலும், சுடலைப் பேய்களைப் பற்றியும், காட்டு மந்திரவாதிகளை பற்றியும் குறிப்பால் அவ்வப்போது உணர்த்தியிருந்தார். அவையெல்லாம் இப்போது சிறுவனுக்கு ஞாபகத்திற்கு வந்தன! “அந்த இரண்டு மின்னல்களும் சுடலைப் பேய்களா?” அவ்வளவு தான், சிறுவன் அச்சத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்.
சிறுநீர் தானாகவே கழிந்தது, அதுவும் பெரியவரின் திருமேனியில்! இறை நாமத்தை ஒலித்தவாறே இருந்த வாயில், நுரையாக எச்சில்! அதுவும் பெரியவரின் திருவதனத்தின் மேல் தான். மலம் கூட வந்து டிராயர் ஈரப்பட்டது போலிருந்தது, அதுவும் பெரியவரின் திருஉடலில் தான்! கண்களைக் குத்திட்டவாறே கைகள் இரண்டும் பெரியவரின் தோள்களை அழுத்திப் பிடித்திருக்க, சிறுவன் அந்த மின்னல் உருவங்களைப் பார்த்தான். அழுகிய வாடை, மின்னல் உருவம்! சந்தேகமே இல்லை. இவை சுடலைப் பேய்கள் தாம். இவை காட்டு மந்திரவாதியின் ஏவல் வேலை தான்!
திடீரென்று அவை கோர உருவங்கள் எடுத்தன. காணச் சகிக்காத உருவங்கள்! கோரமான அரக்க உருவங்கள். பயங்கரமான பற்கள்! மிக நீளமான நகங்கள்!
சிறுவன் அதைப் பார்த்துப் பார்த்து வெலவெலத் திருக்க, தன் உடலே அசைவது போன்ற ஓர் உணர்வு! சிறுவன் குனிந்து பார்த்தான். ஆம், பெரியவரின் தேகம் சற்று அசைய ஆரம்பித்தது! சிறுவன் புரிந்து கொண்டான்.
“அவ்விரு உருவங்கள் தாம் சற்றுத் தள்ளி நின்று கொண்டு வாத்தியாரின் உடலை இழுத்துச் செல்ல நிற்கின்றன. ஆனால் அவைகளுக்கு அருகில் வருமளவிற்குச் சக்தியுமில்லை. அந்த மந்திரவாதிக்கும் சக்தி அவ்வளவு தான்”
இதைப் புரிந்து கொண்ட சிறுவன் உடனே பெரியவரின் உடல் பக்கப் பகுதிகளில் கால்களைக் “கவையாக” நுழைத்து நன்றாகப் பிடியை இறுக்கினான். என்ன இருந்தாலும் சிறுவன் தானே! உடல் பலத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணமே உடலில் முதலில் ஏற்படும்! “டேய் தம்பி! அந்த உடம்பை எங்களுக்கு விட்டுடு” . பேய்கள் அதட்டின!
அவ்வளவுதான் .,சிறுவனுக்கு வந்ததே ஆவேசம்! ஒரு வெறியே வந்துவிட்டது. பெரியவரின் உடலை இறுக்கி இறுக்கி கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டான். “விடமாட்டேன், விடமாட்டேன். எங்க வாத்தியாரை விடமாட்டேன். அங்காளி மேல் சத்தியம்” என்று கதறிக் கொண்டே சிறுவன் பெரியவரின் உடலை, கைகளைக் குறுக்காகப் போடுக் கட்டிக் கொண்டான், கண்களையும் நன்றாக மூடிக் கொண்டான்!
“ கோரமாக இருக்கும் இவை நினைத்தால் என்னைப் பொடிப் பொடியாக்கி விடமுடியுமே , ஏன் அவைகளால் இங்கு வரமுடியவில்லை?” சிறுவன் மெதுவாகத் தலையைத் தூக்கியவாறே அக்கோர உருவங்களைப் பார்த்தான். கண்ணீர் அவன் பார்வையை மறைத்தது, வலது கரத்தால் விரல்களைப் பிரித்து, கண்களின் நீரை வழித்திட., கை விரல்கள் நழுவி மூக்கில் பட்டு உதட்டில் ஒட்டி , உப்புக் கரித்து, தாடை வழியே “டொக் கென்று நெஞ்சில் வலக்கை படிய, அவனையறியாமல் வலக்கை எதையோ பிடித்துக் கொண்டது! “என்ன அது!“ ஏதோ கைக்கு அகப்படுகின்றதே! அப்போது தான் கழுத்தில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பது தெரிந்தது.
“ஆம், வாத்தியார் கொடுத்த 14 முக ருத்ராட்சமல்லவா? இதன் சக்தியினால் தானே எவரும் நம்மை அண்ட முடியவில்லை! ருத்ராட்சம் எங்கு இருக்கிறதோ அங்கு எந்த தீய சக்தியும் வர முடியாதுன்னு சொன்னாரே!” சிறுவன் நிதர்சனமாக உணர்ந்தான். என்னே அனுபவங்கள்! எத்தனை பாடங்கள்!
இந்த ஒரு பாடத்தை உணர்த்துவதற்குத் தானே பீதி, அச்சம், பயம், கலவரம், மாயை அனைத்தையும் சற்குரு அளித்திருக்கிறார். இதுவே அனுபவப் பாடம்! குரு தொட்டுக் காட்டுகின்ற பாடம்!
”ருத்ராட்சம் உடலில் இருந்தால் எத்தகைய தீயசக்தியும் தீண்டாது”- பெரியவருடைய வார்த்தைகள் உள்ளத்தில் எழுந்தன. ருத்ராட்சத்தைக் கெட்டியாகப் பிடித்தவாறே சிறுவன் ஏதோ சொல்ல நினைத்தான். பெரியவரின் உடலில் முகப் பகுதியைத் தடவித் தேடினான்! “ஆமாம் ! என்னவாயிற்று! “ அந்தக் கோர உருவங்கள் படுத்திய பாட்டில் சிறுவன் திரும்பிய நிலையில் பெரியவரின் கால்மாட்டிற்கே வந்து விட்டான். அடடே! என்ன காட்சி! அவனுடைய ருத்ராட்சம் பெரியவரின் கால் கட்டை விரலில் சிக்கியிருந்தது!
என்னே பாக்யம்! குருவின் திருப்பாதங்களுடன் ருத்ராட்சத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “டேய் பையா, கைகளை எடு” – இரண்டு உருவங்களும் செவிப்பறை கிழியும்படி கத்தின, சிறுவன் அவற்றின் வலுவற்ற சக்தியை நன்றாகப் புரிந்து கொண்டான். இப்போதுதான் ருத்ராட்சத்தின் மகிமையை ஓரளவுக்கு கண்கூடாக கண்டுவிட்டானே!
குருபாதங்களுடன் தன் கண்களை ஒட்டிச் சேர்த்துத் தெரிந்த மந்திரங்கள், இறை நாமங்கள் அனைத்தையும் தியானித்தான். பெரியவர் சொல்லிக் கொடுத்த ருக்வேத மந்திரத்தைத் தியானிக்க ஆரம்பித்தான். அவனாகவா சொன்னான். இல்லை இல்லை. அந்த ருத்ராட்சத்தைக் கையில் பிடித்துக் கொண்டு எத்துனை ஆயிரம் முறை அம்மந்திரத்தை ஓதியிருக்கிறான். எனவே அதைத் தொட்டவுடன் அம்மந்திரம்தனைப் பிரதிபலிக்குமல்லவா!
“யோவை ஸ்கந்த :
ப்ருஷ்டரங்கோஸ் சத்யம் ஞானம்
ப்ரம்மாத்வைதம்
ஓம் காராத்மப்ரமஸ் மேத்வம்
சுப்ரஹ்மண்யோம் சுப்ரஹ்மண்யோம்!
இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கத் தொடங்கினான். அது மட்டுமா? ஒவ்வொரு முறையும் அம்மந்திரத்தை உச்சரித்த பின்னும், “சிவ சிவா, சிவ சிவா, அபயம், அபயம்” என்று மனமுருக வேண்டினான். சில நிமிடங்களுக்குப் பின்னர் அக்கோர உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின்னால் சென்று.............

“டமால்”“ என்ற சப்தம் கேட்டது. ஏதோ இரண்டு பாறைகள் மோதினாற்போல் சப்தம்! அப்புறம் எங்கும் நிசப்தம்! அனைத்தும் அடங்கி விட்டன. ருத்ராட்சம், குருவின் பாதங்களைப் பற்றியவாறே சிறுவன் அயர்ந்து உறங்க ஆரம்பித்தான். உடல் தாங்க இயலாத அளவில் அச்சம் ஏற்பட்டால் உடல் சக்தியை இழந்து அசதியே ஏற்படும். மேலும் இறைநாமம், மந்திரம், ஓதி ஓதி உடலும் களைத்து விட்டது. ஆனால் இதுதான் ஒருமுகப்பட்ட தியானம். இங்கு வேறு எந்த எண்ணமும் வரவில்லையே!
உண்மையில் என்ன நிகழ்ந்ததெனில், சற்குருவாம் கோவணாண்டிப் பெரியவரின் குருவருளால் அந்த ருத்ராட்சத்தில் மந்திர சித்தியாயிருந்த ருக்வேத மந்திரத்தின் சக்தியால் காட்டு மந்திரவாதியின் வசத்தில் இருந்த பலதீய ஆவிகள் விடுதலை அடைந்து அந்த நன்னாளில் நல்வழி அடையும் பாக்கியத்தைப் பெற்றன. காரணம் ஒரு மகானின் தேக தரிசனம்,. வேத ஒலி மஹிமை!
பார்த்தீர்களா, மனிதர்கள் மட்டுமின்றி எத்தனையோ கோடி தாவரங்கள், ஆவிகள், ஜீவன்களைக் கடைத்தேற்ற இப்பூவுலகிற்கு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய நற்கதிக்காக இவர்கள் படுகின்ற வேதனைகள் எத்தனை எத்தனை?  இதை உணர்ந்தேனும் சற்குருவின் பாதத்தைப் பற்றுவோமாக!
அடுத்த நாள் காலை! சிறுவன் மீண்டும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான். “நெடுநேரம் தூங்கி விட்டோமா? இன்றைக்கு என்ன காத்திருக்கின்றதோ? இந்த வாத்தியார் எப்பத்தான் திரும்பி வருவாரோ!” அப்போது தான் பெரிய்வரின் உடலைப் பார்த்தான். அந்த எட்டு முழத் (மூலிகைச் சாறு படிந்த) துணியைக் காணவில்லை!

ஆவணி மூலம்

திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வரும் முறை பற்றி ஜூலை 1995 இதழில் விளக்கியிருந்தோம். மலையைச் சுற்றிக் கீழே பிரதட்சிணம் வரும் முறை, மலையின் நடுப் பகுதியில் உள்ள வீதியின் வழியே கிரிவலம் வரும் முறையும் உண்டு. இது தவிர கிரிவலம். மலையில் சிவதரிசனம், பிள்ளையார் தரிசன முறைகளும் உண்டு. இவற்றை தக்க சற்குருவை நாடி அறிய வேண்டும். ஒவ்வோரு வருடமும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தன்று மலைக்கோட்டையை கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானதென சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
1. கர்ப்பப்பைக் கோளாறுகள், கர்ப்பக் குறைபாடுகள், குறைப் பிரசவம்
2. வியாபாரத்தில் நெருக்கடிகள், வியாபார அபிவிருத்தியில் எதிர்பாராத தடங்கல்கள், வியாபாரம் நடக்குமிடத்தில் உள்ள தோஷங்கள்
3.வயிற்றுக் கட்டிகள், குடல் கட்டிகள், வயிற்று ரணங்கள்
போன்ற துன்பங்கள் தீருவதற்காக ஆவணி மூலத்தன்று மலைக் கோட்டையை கிரிவலம் வருவது சிறப்பானது எனச் சித்த புருஷர்கள் அருளுகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை கிரிவலம்
ஸ்ரீதாயுமானவ ஸ்வாமிகள், ஸ்ரீசஸபிந்து மகரிஷி, ஸ்ரீமௌனகுரு சுவாமிகள் போன்றோர் பல நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து வரும் மக்களுடன் சேர்ந்து கூட்டாக ஆவணி மூலத்தன்று கிரிவலம் வருவர். இப்பழக்கம் நாளடைவில் நின்று விட்டது என்பது வருத்ததிற்குரியதாகும்.  எனவே பக்தகோடிகள் கார்த்திகை தீபப் பெருவிழாவைப் போல் ஆவணி மூல நட்சத்திரத்தன்று திருச்சி மலைக்கோட்டையில் அன்னதானம், நீர்மோர் தானம், வஸ்திர தானம், போன்ற தானதர்மங்களுடன் சீரும், சிற்ப்புமாக் மலைக்கோட்டை கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் ஆவணி மூலத்தன்று மலைக்கோட்டை கிரிவலம் ஒரு முக்கியமான அம்ஸமாகத் திகழ்வதற்கு அனைவரும் ஒத்துளைக்க வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைதான் மிகுந்த பலன்களை அளிக்கும். எனவே கூட்டாக கிரிவலம் வருவதினால் யாவர்க்கும் திருவருளைப் பெற்றுத் தருகின்ற பாக்கியத்தைப் பெற்றிடலாம். எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற மளிகை, பசுமைப் பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் தங்களுடைய நியானமான வியாபாரப் பிரச்சனைகள் தீர்வதற்கு ஆவணி மாத மூலநட்சத்திரத்தன்று மலைக்கோட்டை பிள்ளையாரை கிரிவலம் வருதல் வேண்டும்.
தெய்வ மூர்த்திகளின் கிரிவலம்
 பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதையை நாம் அறிவோம். அம்மாம்பழத்தை உண்டபின் விநாயகருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. அப்போது வைண சூர்ய ராஜ்ய ஸ்ரீபிரம்மா என்பவர் பிரம்ம பதவியைப் பெற்றிருந்தார்.பிள்ளையார் அவரிடம் தன் வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்க, “ஸ்வாமி! தாங்கள் அறியாதது ஏதுமில்லை! ஆனால் தாங்கள் என்னைக் கேட்பதன் காரணம், அந்த மாம்பழ சிருஷ்டியின் காரண காரியங்களினால் வயிற்று வலி ஏற்பட்டிருக்குமோ என்று அறியத்தானே கேட்கின்றீர்கள். யாமறிந்த வரையில் அம்மாம்பழத்தில் சிருஷ்டி தோஷம் எதுவுமில்லை. எனினும் மஹரிஷிகள் அறிவித்தபடி தாங்கள் அருகம்புல் காப்பு சாற்றிக் கொண்டால் வயிற்று வலிதீரும். என்றார்.
பிள்ளையார் தன் திருபெருவயிற்றில் அருகம்புல் சாறுகொண்டு காப்பிட்டுக் கொண்டார். ஏதோ வலி குறைந்தது மாதிரி இருந்ததே தவிர வயிற்று வலி தீர்ந்தபாடில்லை. இதுவும் திருவிளையாடல் தானே! ஸ்ரீபிரம்மா கவலையுற்றவராய் மலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அருளை நாடினார். தான் நீண்ட காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் ஐந்தாவது மானஸ புத்ரனாகிய சனகமுனி அங்கே இருப்பது கண்டு தான் வந்த காரியத்தையே மறந்து விட்டார்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி தம் திருகரங்களை அசைத்து, வைணசூர்யா! நீ படைத்த அந்த மாம்பழத்தில் ஸ்கந்தப் பெருமானாகிய முருகனும் சம்பந்தப்பட்டிருப்பதால் நீ பிள்ளையார், முருகனோடு மூவராய், திரிசிர ஈஸ்வரனாகிய ஸ்ரீதாயுமான சுவாமியை தரிசித்து இத்திரிசிர மலையை வலம் வருவீர்களாக. இதனால் முருகனும் பிள்ளையாரைப் போல் அம்மையப்பனை வலம் வந்ததாகும்/ அதே சமயத்தில் விநாயகனும் திரிசிரமலையை அதாவது பிரபஞ்சத்தை வலம் வந்ததாகி விடும். இதைத் தானே முருகன் எதிர்பார்த்தான்! இதற்காகத்தானே அந்த மாம்பழத்தையே நீ சிருஷ்டித்தாய்!
மூவரும் கிரிவலம் வந்திடில் அம்மாம்பழம் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணகாரியம் நிறைவேறும்” என்றே அருளினார். ஸ்ரீபிரம்மா இந்த அபூர்வமான விளக்கத்தைக் கேட்டு ஆனந்தமடைந்தார். நாமும் தானே! இவையெல்லாம் சித்தபுருஷர்கள் அருள்கின்ற ஆன்மீக இரகசிய விளக்கங்கள். இவ்வாறு ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமுருகன், ஸ்ரீகணபதி மூவரும் திரிசிர புருஷராகிய ஸ்ரீதாயுமானவ ஸ்வாமியை கிரிவலமாக வந்து வணங்கிய நாளே ஆவணி மூலம் ஆகும்.  
 கிரிவல பலன்கள்
ஆவணி மூல நட்சத்திரத்தன்று பல தெய்வ மூர்த்திகளும், தேவர்களும், தேவதைகளும், குறிப்பாக நாக தேவதைகளும் கன்னிகைகளும், தாயுமானவ சுவாமியை கிரிபிரதட்சிணமாக வந்து வணங்குகின்றனர்.
1. பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் தகுந்த முறையில் சேவை செய்யாதவர்கள், பெற்றோர்களை உதாசீனப் படுத்தியவர்கள்
2. சகோதரர், சகோதரிகளை வஞ்சித்து சொத்தை அபகரித்தவர்கள்
3. கணவனையோ, குழந்தையையோ பிரிந்து அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று அறியாமலேயே வாழ்பவர்கள்.
          ஆகியோர் ஸ்ரீதாயுமான சுவாமியையும், ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரையும் மனமுருக வேண்டி மலையை கிரிவலம் வந்து வணங்கி
1. இறந்த பெற்றோர்களுக்கு உரித்தான தர்ப்பண பூஜைகளை இனியேனும் தொடர்ந்து செய்தல்
2. பெற்றோர்கள் இருப்பின் இனியேனும் அவர்களுக்குத் தக்க சேவை புரிதல்.
3. தன்னால் வஞ்சிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நிவாரணம் அளித்தல்
 ஆகியவற்றைச் செய்திட இவையே தக்க பரிஹாரங்களாக அமைந்து பல கொடிய கர்மவினைகளின் சுமையைக் குறைக்கும். ஒவ்வொரு மாத மூல நட்சத்திரம், பிறந்தநாள், திருமண நாள், சதுர்த்தி, சதுர்த்தசி திதிகள், மூதாதையர்களின் திதி நாட்கள், பௌர்ணமி, அமாவாசையாகிய பூரண நாட்கள் போன்ற நாட்களில் கிரிவலம் வருதல் உத்தமமானதாகும்.

சிவ பதவி

இறந்தோரையெல்லாம் “சிவ பதவி அடைந்தார்” “வைகுண்ட பதவி அடைந்தார்“ என்று குறிப்பிடுவது தவறு! இறந்த பிறகுமா பதவி ஆசை! இறப்பு வந்தவுடனேயே எந்த ஆவிக்கும் அதனுடைய ஆன்மீக நிலை நன்கு தெரிந்து விடும். தான் வைகுண்ட பகுதிக்குச் செல்வோமா, ஒளிப் பகுதிக்குச் செல்வோமா எங்கு முதலில் செல்ல வேண்டும் என்பதை அந்த ஆவி நன்கு அறிந்து விடும்.
எதற்கும் தகுதி இல்லாத தன்னை “சிவபதவி/வைகுண்ட பதவி அடைந்தார் என்று எழுதுகிறார்களே! இது மாபெரும் பிழையன்றோ” – என்று எண்ணி அழுது அந்த ஜீவன் வருந்தும். எனவே “சிவலோகம்/வைகுண்ட லோகம் அடையப் பிரார்த்திக்கிறோம் என்று எழுதுவதே ஓரளவு சரியானதாகும்.
ஏனெனில் நாயன்மார்களும் ஆழ்வார்களுமே சிவபதவியும் விஷ்ணு பதவியும் அடைந்தவர்கள். உண்மையிலேயே உடல், பொருள், ஆவி அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்தவர்கள். அவர்களுடைய நிலையில் அடைவதே சிவபதவி, வைகுண்ட பதவிகள்! வெறும் எழுத்தால் அடைவதல்ல சிவபதவியும் வைகுண்ட பதவியும்!
ஆதிசிவனுடன் திருக்கயிலாயத்தில் இன்றும் உறையும் சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளே இறைவனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட போது இருகண்களையும் இழந்து குருடராகிப் பல துன்பங்களை அனுபவித்தாரெனில் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
எனவே சிவ, வைகுண்ட பதவியை அடைய சுயநலமற்ற தியாக வாழ்வுடன் இறைப் பணியாம் ஜாதி, சமயபேதமற்ற மக்கட் சேவையையும் ஆற்ற வேண்டும்.

போஷக பௌர்ணமி

யுவ வருட ஆவணி மாதப் பௌர்ணமியை “போஷக பௌர்ணமி” என்றும் “கஷ்டநிவாரண பௌர்ணமி” என்றும் சித்தபுருஷர்கள் அழைக்கின்றனர். தட்சிணாயனப் புண்ய காலத்தில் வருகின்ற சிறப்பான பௌர்ணமி! உத்தராயணப் புண்ய காலத்தில் (தை முதல் ஆனி வரை) மரணமடைவது உத்தமமானது, தட்சிணாயன கால மரணம் மத்திமமே என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது! இது போலவே அஷ்டமி, நவமி திதிகளும் ஒதுக்க வேண்டிய திதிகள் என்று கருதப்படுகின்றன. இதுவும் தவறானதே!
எந்த நட்சத்திரமும், திதியும் தீயதன்று! ஸ்ரீராமர், நவமியிலும் ஸ்ரீகிருஷணர், அஷடமியிலும் அவதரித்து இவ்விரண்டு திதிகளின் மேன்மையை உணர்த்தினர். தட்சிணாயனப் புண்ய காலத்தில் பல மஹான்கள் தங்கள் தேகத்தை விடுத்து ஜீவசமாதி பெற்று இதன் மஹிமையை உணர்த்தியுள்ளனர். இறப்பிற்குப் பின் ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வினைக்கேற்ப “இருண்ட பகுதி” அல்லது “நடுப் பகுதி” அல்லது “ஒளிப் பகுதி” செல்லும். எத்தகைய நல்ல ஜீவனாக இருந்தாலும் குரு அருளிருந்தாலன்றி, அதனுடைய சிறு தீவினைகளுக்கு நரகமாம் இருண்ட பகுதியில் அத்தீவினை கழியும் வரை இருந்தே ஆக வேண்டும்.
ஆவணிப் பௌர்ணமியாம் இத்திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தந்த மூதாதையர்களை நினைவு கூர்தல் வேண்டும். வயதிற் பெரியோர் எல்லோரும் (தீர்கமான) பெரியோர்களாகார். அவர்களில் சிலருடைய தீவினைகள் அப்பட்டமாக அந்தந்தக் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கும். இத்தீவினைகளின் கர்மச் சுமைகள் கழித்தால் தான் விண்ணுலகில் அவர்கள் இருள் பகுதியிலிருந்து ஒளிப் பகுதிக்கு வரமுடியும். அதன் பிறகே சிவ/வைகுண்ட பதவியைப் பற்றி எண்ணவே முடியும்.
எனவே “போஷக பௌர்ணமியாம்” ஆவணிப் பௌர்ணமியில் அவரவர் வீட்டுப் பெரியோர்கள் எவரேனும் தீவினைகள் புரிந்திருப்பது தெரிந்திருந்தால் அவர்களின் சந்ததியினர் அவற்றிற்கு இந்நாளிலிருந்து பரிஹாரங்களை மேற்கொள்ள வேண்டும். தக்க சற்குருவை நாடினால் எளிய பரிஹாரங்களைப் பெறலாம். (பிறர் சொத்தை அபகரித்தல், மது, பிறன்மனை, மங்கை, புகை போன்ற தீய வழக்கங்கள், குடும்ப நாசம், பழி வாங்குதல், கொலை, பிறருக்கு சூன்யம், ஏவல் வைத்தல், வன்முறை, அவமரியாதை போன்றவை  தீவினைகளாகும். )
1. கோயில் வீட்டில் மிகமிகக் குறைந்த வாடகைக்குக் குடி இருந்திருந்தால் நியாயமான வாடகையைக் கணக்கிட்டு அதனை வட்டியுடன் கோயிலில் செலுத்துதல் (உண்டியலிலும் போடலாம்).
2. எவருடைய வாழ்விற்கும் ஊறு விளைவித்திருந்தால் சம்பந்தப்பட்டவருக்குத் தார்மீக முறையில் நிவாரணமளித்தல் .
3. அதர்மமான முறையில் சொத்து, பொருள் சேர்த்திருந்தால் அவற்றை முறையான தான, தர்மங்களுக்கு செலவிடல்.
     இவ்வாறாக வீட்டுப் பெரியவர்கள், பெற்றோரோ, சகோதரரோ எவராயினும் சரி, அவர்களுடைய தீவினைகளுக்குப் பரிஹாரம் செய்ய முதல் அஸ்திவாரம் தரும் நாளே ஆவணி மாதப் பௌர்ணமி! இந்நாளில் நதிக்கரை, கடலோரக் கரைக் கோயில்களில் அன்னதானம், ஆடை தானம் போன்ற தானங்களை நிறைவேற்றுதல், நீராடுதல் விசேஷமானதோடன்றி அத்தகைய மூதாதையர்களுக்கும் நன்னிலையை அளித்துப் பித்ருக்களின்  ஆசியையும் பெற்றுத் தந்து குழந்தைச் செல்வம், வீடு வாங்குதல், வாகனம், கன்னிப் பெண்களின் திருமண தோஷம் நீங்கித் திருமணம் கைகூடுதல் போன்ற நற்செயல்களும் நிறைவேறும்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் கோயிலில் மேற்கண்ட தான, தர்ம பூஜைகளுடன் இப்பௌர்ணமியைக் கொண்டாடுதல் மிகவும் விசேஷமானதென சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.

கஜ்ஜலி திரிதியை

மக்கள் செல்வம் வேண்டுவோருக்கு உரித்தான விசேஷநாள் ஆகும். இன்றைய தினம் மலை வாழை, செவ்வாழை, மொந்தன் வாழை, பேயன் வாழை, கற்பூரவாழை ஆகிய ஐந்து வகை வாழைப் பழங்களுடன் நாட்டுச் சர்க்கரை , தேன், கல்கண்டு, (பசு)நெய் சேர்த்து ஸ்ரீகதலீஸ்வரன் என்ற பெயருடைய தெய்வமூர்த்திக்குக் காப்பு இட்டு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை மூன்று பங்காக்கி ஒரு பங்கைக் காக்கைக்கும் இரண்டாவது பங்கை ஏழைக் குழந்தைகளுக்கும் அளித்து மூன்றாவது பங்கில் ஒரு சிறிது எடுத்து வைத்து, எஞ்சியதை சினைப் பசுமாட்டிற்கு அளித்தபின் தனியே எடுத்து வைத்த பிரசாதத்தை தம்பதியர் உண்ண வேண்டும்.
ஐந்து வகை வாழைப் பழ பஞ்சாமிர்தத்தைச் செய்யும் வரை உண்ணா நோன்பிருந்து வாயில் துணி கட்டி மௌனம் காத்து ஸ்ரீசந்தான ராஜகோபால காயத்ரீ மந்திரத்தைக் குறைந்தது 1008 முறையேனும் ஜபிக்க வேண்டும். இந்நாளில் மேற்கண்ட ஸ்ரீகதலீஈஸ்வர வழிபாட்டோடு கதலி (வாழை) ஸ்தல விருட்சமாக உள்ள கோயில்களில்  ஸ்தல விருட்சக் கதலியையும் சேர்த்து கோயிலை 108 முறை ஸ்ரீசந்தான இராஜகோபால காயத்ரீ அல்லது மூல மந்திரத்தை தியானித்தவாறே அடிப் பிரதட்சிணம் செய்வது அளப்பரிய தெய்வானுக்ரஹத்தைப் பெற்றுத் தரும். (கும்பகோணம் – திருநாகேஸ்வரம் அருகே) ஐயாவாடி சிவன் கோயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர்.
பொதுவாக குழந்தைப் பேறு வேண்டுவோர்க்கு உரித்தான விரதமிது. குறைந்தது 108 பேருக்கேனும் இந்நாளில் அன்னம் அளித்து முறையாக ஸ்ரீசந்தான கோபால காயத்ரீ ஹோமம் செய்திடில் ஆண், பெண் வாரிசு அமையும். நல்வழி காணலாம். ஆண் பெண் வாரிசற்ற குடும்பங்களுக்கு உரித்தான விசேஷ நாளிது. பெறற்கரிய திருநாள்!

மாளய பட்சம்

புரட்டாசி மாத அமாவாசை மாளயபட்ச அமாவாசையாகும். ஸ்ர்வகோடி லோகங்களிலும் உள்ள மஹரிஷிகள் உட்பட அனைத்து ஜீவன்கள், தேவதைகள் அனைவரும் இந்நாளில் பூலோகத்திற்கு வந்து புண்ய நதிக் கரைகளிலும் சமுத்திரங்களிலும், காசி, இராமேஸ்வரம், பவானி, கயை, அலாகாபாத் திரிவேணி சங்கமம், திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை போன்ற புனிதத் தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர்.
வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால் மாளயபட்ச மஹிமை சொல்லவும் பெரிதன்றோ!
இதுவரையில் முறையான தர்ப்பண பூஜைகளை அறிந்தும் அறியாமலும் செய்யாமல் விட்டவர்கள் இந்த மாளயபட்ச அமாவாசையன்றும் தர்ப்பணம் இட்டுப் பரிஹாரம் காணலாம். ஆனால் இதன் பிறகேனும் முறையான தர்ப்பணாதிகளைச் செய்தல் அவசியமானது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய கிருஷ்ணபட்சத்திற்கு மாளயபட்சம் என்று பெயர். இந்த பதினைந்து திதிகளிலும் தினந்தோறும் முறைப்படி தர்ப்பணம் பூஜைகளைச் சரிவரச் செய்யாமையால் விளையும் சாபங்களுக்கு இது சிறந்த பரிஹாரமாக அமைந்து நம்மைக் காப்பாற்றுகின்றது.
யதிமாளயம்
மாளயபட்ச துவாதசியன்று அமைவது யதிமாளய தினமாகும். இன்று அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களுடன் ஆறுதலாக அளவளாவி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் மிகவும் விசேஷமானதாகும். இத்தகைய இல்லங்களில் வாழும் முதியோர்கள் தங்களுடைய துன்பகரமான மனோநிலையில் எவருக்கும் பித்ரு தர்ப்பண செய்யும் நிலையில் இரார். எனவே அத்தகையோரைத் தர்ப்பணம் செய்ய வைப்பதோ அல்லது அவர்கள் சார்பில் தர்ப்பணம் செய்வதோ மிகச் சிறந்த தெய்வீக சேவையாகும்.
பெற்றோர்களுக்குச் சேவை செய்யவில்லையே என்று ஏங்குவோர் மாளயபட்சத்தில் யதிமாளயத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மேற்கண்ட முறையில் சேவை செய்திடில் இது அவர்களுடைய பெற்றோர்களின் ஆத்மசாந்திக்கு வழிவகுக்கும். சரிவர கவனிக்காததினால், பெற்றோர்கள் தம் புதல்வர்களுக்கு  இடுகின்ற சாபங்களிலிருந்து விடுபட இது மிகச் சிறந்த தெய்வீக வாய்ப்பாகும். இவ்வாறாக அநாதைகள் ,ஆதரவற்றோருடைய மூதாதையர்களுக்கத் தர்ப்பணம் அளிக்கும் சேவை பெறற்கரிய பாக்யமாகும். அற்புத தெய்வீக சக்தியைப் பெற்றுத் தரும்.
 எளிய மாளயபட்சத் தர்ப்பண விதிகள்
 1. புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் கிருஷ்ணபட்சப் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரித் தர்ப்பண பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
2. பித்ரு தர்ப்பணம் என்பது ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடாகும்.
3. நம் மூதாதையர்க்குரித்தான அமாவாசை, கிரஹண கால, மாதப் பிறப்புத் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையால்தான் சந்ததியின்மை, குழந்தைகளை இழத்தல், பண தரித்திரம், அடிக்கடி நோய் வாய்ப்படுதல், திருமணத் தடங்கல்கள் வியாபார நெருக்கடிகள், நஷ்டங்கள், வேலையின்மை, குடும்பத்தில் பகை, சச்சரவுகள் போன்ற துன்பங்கள் உண்டாகின்றன.
4. இதுகாறும் செய்யாமல் விட்ட தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச் சித்தமாக மாளயபட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம் இட வேண்டும்.
5. “தர்ப்பணம் என்றால் தெரியாதே” என்று ஒதுங்கிடாது, சுயநலமற்ற, பக்தி மிகுந்த, காசு, பணத்திற்கு ஆசைப்படாத, மந்திரங்களறிந்த தக்க பெரியவர்களை நாடித் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றுங்கள்
6. அத்தகையோர் கிட்டாவிடில் மந்திரம் அறியாதோருக்காக நம் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” பிப்ரவரி 1995, மார்ச் 1995 ஏப்ரல் 1995 இதழ்களில் (எவர் உதவியுமின்றித்) தாமே எளிமையான முறையில் தர்ப்பணமிடும் முறைகளை விவரித்துள்ளோம்.
7. ஒன்றுமே தெரியாவிடில் அனாதை என்ற நிலையில் இருந்தாலும் மூதாதையர்கள், பெயர் தெரியாவிட்டாலும் “என் மூதாதையர்க்கு இது சேரட்டும்” என்று சொல்லி தர்ப்பை வைத்து எள் கலந்த நீரை வார்த்தல் நலம்.
எனவே பன்னிரண்டு தர்ப்பைகளை சுத்தமான தரையில் வைத்து தம் மூதாதையரின் பெயரைச் (தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி, பாட்டனார், பெற்றோர்கள்...) சொல்லி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எள் கலந்த நீரை தர்ப்பையின் மேல் ஊற்றி இயன்ற அளவு காக்கைக்கு அன்னம், ஏழைக்கும் உணவு, பசுவிற்கு ஆகாரம், (புல்,கஞ்சி நீர், பழம், வைக்கோல்) அளித்தல் இதுவே எளிமையான தர்ப்பணபூஜை, இதைப் பித்ருக்கள் மனமுவந்து ஏற்று ஆனந்தித்து ஆசிர்வதிக்கின்றனர். மனிதனாய்ப் பிறந்த யாவரும் இதனைக் கடைபிடித்து நற்பலன்களை அடையலாம்.
8. திருஅண்ணாமலை திருவிடைமருதூர் சிவத்தலத் திருக்குளம், இராமேஸ்வரம், காசி, வேதாரண்யம், கும்பகோணம் சக்கரப் படித்துறை, பவானி சங்கமேஸ்வரர் ஆலய சங்கமக் கரை, கயா, திரிவேணி சங்கமம், கங்கை, காவிரி, தாமிரவருணி போன்ற புண்யநதிக் கரைகள், சமுத்திர ஸ்தலங்கள், கன்யாகுமரி, திருச்செந்தூர், திருவள்ளூர் (சென்னை அருகில்) திருக்குளம் போன்ற இடங்களில் தர்ப்பண பூஜையுடன் அன்னதானம் செய்வது தர்ப்பணப் பலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும்.
குளிகன் காலத்தில் அனைத்து நற்காரியங்களையும் செய்வதை விடக் குறித்த சில நற்காரியங்களை மேற்கொண்டால் தான் அபரிமிதப் பலன்கள் ஏற்படும். எல்லாவற்றிற்கும் குளிகன் ஏற்றதல்ல! பங்காளிகளிடையே சமாதானம் செய்தல், வியாபாரப் பங்குதாரர்களிடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்தல், மேலதிகாரியுடன் சமரசமாதல், கடைநிலை ஊழியர்களிடையே சமாதானப் பேச்சு நடத்துதல், தொழிற்சங்கம் – மேனேஜ்மெண்ட் இடையே உள்ள பிரச்னைகள் தீர சுமுகமாகப் பேச்சு வார்த்தை நடத்துதல் – போட்டி வியாபாரிகளுடன் இணைந்து நட்பு ஆதல், வாகனங்களைச் சுத்தம் செய்தல், வாகனங்களை சர்வீஸிற்காக அளித்தல், வாகனங்களைப் புதுப்பித்தல். அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடுதல் போன்ற நற்காரியங்களை மட்டுமே குளிகன் நேரத்தில் செய்ய வேண்டும்.

(யுவ வருட) அமாவாசைத் திதிகள்
ஏகாதசி, நவமி, பௌர்ணமி போன்று அனைத்து திதிகளுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. சில ஆஸ்மரங்களில் ஒவ்வொரு மாதப் பௌர்ணமியையும் கட்டளையாக, மண்டகப் படியாக ஒவ்வொருவர் ஏற்று நடத்துவர். அதே போல் பிரபஞ்சத்தின் பலலோகங்களிலும் மாதாந்திர அமாவாசை, பௌர்ணமிக்குரிய இயற்கை விதிகள், கிரணவீச்சு நியதிகள், தர்ப்பணச் சட்டங்கள் கோள் இயக்கங்கள் போன்றவற்றை பல மஹரிஷிகள் ஒன்று சேர்ந்து தங்கள் தபோ, பூஜா சக்தியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் நடத்தித் தருகின்றனர். இவர்களுடைய கருணையால் தான் நாமும் அமாவாசைத் தர்ப்பணம், பௌர்ணமி பூஜை போன்றவற்றைக் கொண்டாடுகிறோம்.
எனவேதான் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கும் அடிப்படையாக தர்ப்பணம், நீராடல், அன்னதானம் , நாம சங்கீர்த்தனம் போன்ற சில இறைப் பணிகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும். தினசரி பூஜைகளையே செய்ய மறந்து விட்ட மனிதனுக்கு இத்தகைய மாதாந்திர பூஜைகளின் மூலமாவது ஏதேனும் புண்ய சக்தியைப் பெற்றுத் தருவதற்காகவே பெரியோர்கள் இவற்றை நிர்ணயித்துள்ளனர்.
சித்தபுருஷர்கள் அருள்கின்ற அமாவாசைக்குரிய நாமங்களையும் மாதந்திர அமாவாசைத் தர்ப்பண முறைகளையும் இங்கு அளிக்கின்றோம்.

மாதம்

அமாவாசையின் பெயர்

தர்ப்பண முறை

புரட்டாசி

பிரஹ்லாதவரத அமாவாசை

நெல் 12 மலை வாழைப் பழங்கள் வைத்து அதன் மேல்  தர்ப்பைச் சட்டம் அமைத்தல்

ஐப்பசி

திரிதியை சுக்லதாரிணி

நெல் மீது 6மொந்தன் வாழைப் பழங்கள் வைத்து அதன் மேல் தர்பைச் சட்டம் அமைத்தல்

கார்த்திகை

புலஸ்திய விக்னதாரண அமாவாசை

தினையைப் பரப்பி அதன்மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்தல்

மார்கழி

காண்ட ரிஷிபாத அமாவாசை

நெல் அல்லது அரிசி மேல் ஆறு செவ்வாழைப் பழங்களை வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம்.

தை

பங்கஜ ப்ராணபாத அமாவாசை

நெற்கதிர்களைப் (கொத்தோடு) பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்தல்.

மாளயபட்சம் :- கீழ்கண்ட வகையில் யுவ வருட மாளயபட்சத்தின் 15 திதிகளிலும் முதலில்
1. குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு முதலில் தர்ப்பணம் இடுதல் அல்லது
2. குறித்த  விசேஷமான பூஜை/ ஹோமம் அல்லது
3. தெய்வ மூர்த்திகள்/சித்தர்கள்/ரிஷிகளுக்கான அர்க்யங்கள்
என்ற வகையில் அட்டவணைப்படி முதலில் கூறியவற்றை நிறைவேற்றி பின்னர் ஏனைய பித்ரு வர்கத்தினருக்கு வழக்கம் போல் தர்ப்பணம் அளிக்கலாம்.
விசேஷமான குறிப்புகள்
1. இன்றைக்கு அயல் நாடுகளில் வாழும் அமெரிக்கர்கள், நீக்ரோக்கள், ஐரோப்பியர்கள் போன்றோரும் நம் மூதாதையர்களே!
2. நம் மூதாதையர் அல்லது பெரியோர்கள் தற்போது எவ்வகைப் பிறப்பும் எடுத்திருக்கலாம், அல்லது எந்த மதத்தினராகவும் வாழலாம். அவர்களுடைய தற்போதைய பிறவி வாழ்விற்குத் தர்ப்பணங்களின் விசேஷ சக்தி அருள் புரியும்.
3. இருண்ட பகுதி, நடுப் பகுதி, ஒளிப் பகுதி என்ற பொதுவான மூன்று பெரும் பகுதிகளில் தான் இறப்பிற்குப் பின்னான வாழ்வு அமைகிறது. ஒளிப்பகுதி தான் தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வகள் போன்ற புண்ய ஆன்மாக்கள் வசிக்கும் பகுதி.
4. நாம் அளிக்கும் தர்ப்பணங்கள் . பிறவி பெற்றிருக்கும் மூதாதையர்க்கு இப்பிறவிக்குரித்தான சுக போகங்களையும், சொத்து, பணம், சந்தானம், குழந்தை பாக்யம் போன்றவையாகவும் மலர்ந்து பயனளிக்கும்.
மேற்கண்ட முப்பகுதிகளில் வாழ்வோர்க்குத் தேவையான உத்தம ஆன்மீக நிலைகளையும் தர்ப்பண சக்தித் தரவல்லதாம்.
எனவே மாளயபட்சம் என்பது முட்டை (அண்டஜம்) , வியர்வை (ஸ்வேதஜம்), விதை – வேர் செடி- கொடி-கிழங்கு (உத்பிஜம்), கரு (சராயுஜம்) என்று நால்வகையில் தோன்றும் அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தான பூஜையாம்.
6. இது மட்டுமா! தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர், வாழ்வன, தாவரம் ஆகிய எழுவகை பிறப்பினங்களுக்கும் உரித்தான தர்ப்பண பூஜையாகும்.
எமகண்ட நேரத்தில், வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயம், திருப்பைஞ்லி (திருச்சி அருகில்) ஸ்ரீஎமதர்மராஜா பத்னியுடன் எழுந்தருளியுள்ள சந்நிதி, திருக்கடவூர் சிவாலயம் போன்ற இடங்களில் அபிஷேகம், அர்ச்சனை செய்து எள் பொடிசாதத்தை அன்னதானமிட்டால் படுத்த படுக்கையாய் உயிருக்குப் போராடுபவர்களுக்கு குணம்/நற்கதி கிட்டும். பக்தி சிரத்தையுடன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனை மேற்கொண்டால் மருத்துவர்களால் கை விடப்பட்டவர்கள் கூட உயிர் பிழைப்பர். இவ்வாறாக மரணத்தினின்று மீண்டவர்கள் மேற்கண்ட தலங்களில் எம கண்ட நேரத்தில் மேற்குறித்த வழிபாடுகள், தான தர்மங்களை மேற்கொண்டால் ஆயுள் தீர்க்கமாகி நல்வாழ்வு பெறுவர்.

யுவ வருட மாளய பட்சத் தர்ப்பண நியதிகள்

திதி

முதலில் தர்ப்பணம் கொடுக்கபட்ட வேண்டியவர்கள் முதலில் செய்ய வேண்டிய ஹோமம்/பூஜை/அர்க்யம்

 

தர்ப்பணத்தின் பெயர்

 

அன்னதான வகை

1. பிரதமை

குழந்தை இல்லாமல் இறந்தவர்களுக்கு

ஜலசுக்ல விதர்ப்பணத் தர்ப்பணம்

திரட்டுப்பால்,
பால் பாயசம்

2.துவிதியை

அக்கா, தங்கைகளை மணந்து இறந்த மனைவியர்க்கு (இறந்தவர் ஒல்லியாக இருந்தால் அரிசிவடாமும், குண்டாக இருந்தால் பல வர்ண ஜவ்வரிசி வடாமும் தானம்

பார்யசாப விமோசன தர்ப்பணம்

சுண்டைவற்றல் குழம்பு சாதத்துடன் அரிசிவடாம்

3. திரிதியை

முப்பது வயதுக்கு மேல் இறந்தவர்களுக்கு (உறவினரல்லாத ஆண், பெண் இருபாலார்)

அற்ப ம்ருத்யு

அக்காரவடிசல் நெய்கூடிய சர்க்கரைப் பொங்கல்

4. சதுர்த்தி

புரோகிதர்கள், தமிழ் மறை ஓதுவார் மூர்த்திகள்

பிரேமசாகைத் தர்ப்பணம்

வெண்பொங்கல் (முந்திரி மட்டும், மிளகு இல்லாது)

5.பஞ்சமி

கணவனுடைய குலதேவதை பூஜை, மனைவி குடும்ப குலதேவதை பூஜை பின் தாய் தந்தை வர்கத்திற்குத் தர்ப்பணம்

பிரார்த்தனா பூஜ்ய விரத தர்ப்பணம்

வாழைக்காய், முருங்கை, பீர்க்கங்காய், வெண்டைக்காய்,  சீமைக் கத்திரிக்காய் கூடிய சாம்பார் சாதம்

6. ஷஷ்டி

பகை, விரோத மனப்பாங்குடன் பிரிந்து இறந்த பங்காளிகளுக்கு

குரோத, சோதர சாந்தித் தர்ப்பணம்

ஆறுவகை இனிப்புகள்

7. சப்தமி 

நண்பர்களாய் இருந்து விலகியிறந்தோர் நட்பு கைகூடாமல் இறந்தோர்

தாக விருட்சப்    பிரேம தர்ப்பணம்

சிறுபருப்பு கலந்த வெண் பொங்கல்

8.அஷ்டமி

ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீபலராம, ஸ்ரீசுபத்ரா மூர்த்திகளுக்கு (பூரி ஸ்தலத்தில் இதைச் செய்வது விசேஷம் ) அர்கயம்

பூதாகர்ஷணத் தர்ப்பணம்

பால்கோவா பாசந்தி, வெண்ணெய் சர்க்கரை கலந்த இணிப்பு

9. நவமி

முதலில் நவதுர்க்கை பூஜை/ஹோமம்  பிறகு தன்னுடன் பணிபுரிந்து இறந்த பெண்களுக்கு தர்ப்பணம்

காரண மூல தர்ப்பணம்

புளியோதரை, தேங்காய் சாதம்

10. தசமி

80 வயது கடந்து இறந்தோர், குலகுரு, குடும்பத்தில் சந்யாசம் பெற்றோர், ஆஸ்ரம வாழ்வு பெற்றோர்க்கு அர்க்யம்

குசவலவபுரீஸ்வர தர்ப்பணம்

ஜாங்கிரி

11. ஏகாதசி

கறவையில்லாத பசு, கன்று ஈன்று கன்றை இழந்த பசுவிற்கு சுரபியின் பெயர் சொல்லித் தர்ப்பணம்

கோசம்ரட்சணத் தர்ப்பணம்

மிளகு கலந்த தவலை இட்லி, வெங்காயச் சட்னி

12. துவாதசி

முயல், அணில், வாத்து, மான் சாத்வீகப் பிராணிகளுக்கு

ஜன்ம பிராயச் சித்தத் தர்ப்பணம்

கார சேவை

13.திரயோதசி

கோழி, மீன், நண்டு, சுறா, கெண்டை, இறால் புறா, காடை, கௌதாரி, வௌவால், சிட்டுக் குருவி-பறப்பன நீர்வாழ்வன

பட்சி ஜாக்ரதா தர்ப்பணம்

இனிப்பு புட்டு

14. சதுர்த்தசி

ஸ்ரீபகவத்கீதை பாராயணம் – ஸ்ரீபரசுராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி தேவிக்கு அர்க்யம், அத்ரி, வசிஷ்டர், அனுசுயாதேவிக்கு அர்க்யம்

கர்ம நிவர்த்தி தர்ப்பணம்

ஊத்தப்பம் போளி

15.மஹாளய அமாவாசை

அறிந்தோர் அறியாதோர், அனைத்து ஜீவன்கட்கும் தாவரங்களுக்கும் தர்ப்பணம்

சகஜ தர்ப்பணம்

அனைத்து உணவு வகைகள்

16.பிரதமை

கடுமையான வியாதிஸ்தர், படுத்த படுக்கையாய் இருந்து/இறந்தோர்க்குப் பிடித்த உணவு வகை கர்மதண்டத் தர்ப்பணம் இறந்தவர்களுக்கென்றே இத்தர்ப்பணம் செய்யப்படுவது,

மஹா பரணி

சுக்ர தசை உள்ளவர்கள் இந்நாளில் வெண்ணிற ஆடைகளை தானமளிக்க வேண்டும். மாளயபட்சத்தில் வரும் பரணி மஹாபரணியாகும். இன்று பெண் நோயாளிகளுக்கு உள் ஆடைகள், நோய்க்கான மருந்துகள், டானிக்குகள் அளித்தலால், பெண் பாவங்கள் தீரும். அதாவது ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும், மனம், வாக்கு, தேகத்தால் இழைத்த சிறுதீங்குகளுக்கு மஹாபரணி தான முறைகள் சற்று பரிஹாரங்களாக அமைகின்றன.
யானைகளுக்கு இன்று பழங்கள், கவள உணவிடுதல் (கேழ்வரகு, சோளம் – குறைந்தது 21 பெரிய கவளங்கள்) கரும்பு, புல், தழைகள், அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் பெரியோர்களை நிந்தித்த பாவம் அகலும். தற்காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார், நாட்டுப் பெண், மருமகள் ஆகியோரிடையே உள்ள பூசல்கள், பெரியோர்களை அவமதித்தல் இவற்றால் தான் நிறைய பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. இதற்குப் பிராயசித்தமாக மாளயபட்ச மஹாபரணி தானதர்மங்கள் அமைந்துள்ளன.
புரட்டாசி சனிக்கிழமைகள்
பெருமாளுக்கு, குறிப்பாக ஸ்ரீரங்கநாதர், சத்ய நாராயணன், ஸ்ரீவெங்கடாஜலபதி, ஸ்ரீனிவாசன் ஆகிய அவதாரமூர்த்திகளுக்குப் ப்ரீதியான விசேஷ தினங்கள் புரட்டாசி சனிக்கிழமை நாட்களாகும்.
புரட்டாசி மாத முதல் மூன்று சனிக்கிழமைகளில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் தசாவதாரங்களில் மூன்று மூர்த்திகளை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். கடைசி சனியன்று ஸ்ரீகல்கியுடன் அலர்மேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாஜலபதி, ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதர், ஸ்ரீசத்ய நாராயணர் – ஆகிய மூர்த்திகளில் ஏதேனும் ஒரு ரூபத்திற்குப் பூஜை செய்து வணங்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் 3, 5, 7 முறை ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து நெய் கலந்த சர்க்கரைப் பொங்கலை நைவேத்யம் செய்து பசுவிற்கும் ஏழைகளுக்கும் அளித்திடுக! நாமம் இட்டுப் பூஜை செய்வது மிகவும் விசேஷமானது.. புரட்டாசி சனிக்கிழமை பூஜையினால் ஸ்ரீலட்சுமி கடாட்சம் பெருகும்.
ஸ்தா(நா)ன விருத்தி
கண்ணேறு திருஷ்டி, கருநாக்கு, சாபம், கொள்ளிக் கண் போன்ற சகலவித தோஷங்களையும் நீக்கி உத்யோக மேன்மை, வியாபார அபிவிருத்திக்கு நல்வழி காட்டும் விரதம்.
2. வியாபாரிகளுக்கு மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியது.
3. எவ்வித தோஷங்களையும் அகற்றி வியாபார ஸ்தலத்தில் உள்ள சூன்யப் பார்வையின் விளைவுகளை முறியடித்து நன்மை பயக்கும் சூழ்நிலையைப் பெற்றுத் தரும்.
விரதமுறை
 இன்று பெருமாள் கோயிலில் ஸ்ரீதாயாரின் சந்நதியிலிருந்து கோமுகநீரை (மூலஸ்தானத்திலிருந்து வெளி வரும் அபிஷேக நீர்) ஜலத்தில் சேர்த்து அதில் நீராட வேண்டும். முன்னரே எடுத்து வைத்த கோமுக நீரையும் பயன்படுத்தலாம். இல்லத்திலோ அல்லது வியாபார ஸ்தலத்திலோ ஒரு செம்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை) ஸ்ரீவரலட்சுமி விரதம் போல் ஸ்ரீஅம்பாளின் முகம் வரைந்து பிம்பம் வைத்து மாவிலை, தேங்காய் வைத்து, பூ, ஆபரணங்களால் அலங்கரித்து பச்சரிசி நிரவிய வாழையிலை மேல் வைக்க வேண்டும். செம்பினுள் பாதியளவிற்கு கங்கை, காவிரி போன்ற புண்ய நதி நீருடன்/நீர்சேர்த்து, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், வெட்டி வேரையும் சேர்க்க வேண்டும்.
சுவற்றில் ஸ்ரீஅம்பாளின் பிம்பம் வரைந்தும் இப்பூஜையைச் செய்யலாம். இதன் முன் பச்சரிசி நிரவிய வாழை நிலையைப் பரப்பி அதன்மேல் அலங்கரித்த செம்பை வைக்க வேண்டும். நைவேத்யம்,வெற்றிலை, பாக்கு நீர்த்த சுண்ணாம்புடன் மலைவாழைப் பழம், ஏனைய பழங்கள், கொழுக்கட்டை, மஞ்சள், அதிரசம் ஒவ்வொன்றும் 21 எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.  ஐந்து முடிச்சுக்கள் உள்ள, 5 அல்லது 9 இழைகள் கொண்ட நூலை அம்பாளுக்கு சார்த்தி அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
தூபம், தீபம், நைவேத்யம், கற்பூர ஹாரத்தி்யுடன் பூஜையை நிறைவு செய்தபின் செம்பு ஜலத்தை இல்லத்திலும் வியாபார ஸ்தலத்திலும் மாவிலையால் தெளித்து, பிரசாதமாக அருந்தி, நைவேத்யப் பண்டங்களை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். இது சகலவித தோஷங்களையும் நிவர்த்தி செய்து தனவரவைப் பெருக்கி, வியாபாரஸ்தலத்தை மேம்படுத்தும்.

நவராத்திரி

ஒவ்வொருவருக்கும் குல தேவதை பூஜை, இஷ்ட தேவதா பூஜை மிகவும் முக்யமானதாகும்.  குல தேவதை பெரும்பாலும் மூதாதையர்களின் பிறப்பிடத்தை ஒட்டியிருக்கும். இஷ்ட தெய்வம் அவரவராக ஏற்பது! இஷ்ட தெய்வம் என்பது மன ஈடுபாடு, வாழ்க்கை அனுபவங்கள்,  தெய்வ நம்பிக்கையைப் பொருத்து அமைவது! ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் இஷ்ட தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துத் தினசரி பூஜை செய்தே ஆக வேண்டும். எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டால் ஜாதகம், நியூமராலஜி, தக்க பெரியோரின் அருள்வாக்கு கொண்டு இஷ்ட தெய்வத்தை நிர்ணயிக்க வேண்டும்.
சமயசந்தர்ப்பத்திற்கேற்றவாறு இஷ்ட தெய்வத்தை மாற்றலாகாது! சற்குரு கிட்டிடில் அவரே தக்க இஷ்ட தெய்வ உபாஸனையைத் தந்தருள்வார். இஷ்ட தெய்வ உபாஸனையை மேம்படுத்துவதே நவராத்திரி பூஜையாகும். ஜாதி, இன, குல பேதமின்றி  யாவரும் கடைபிடிக்கக் கூடியது நவராத்திரி பூஜை! ஏனெனில் கடுமையான விரத நெறிகள், கடினமான மந்திரங்கள், ஹோம, யாகங்கள் இல்லாது யாவரும் பின்பற்றக் கூடிய மிக மிக எளிமையான பூஜை!
1. இஷ்ட தெய்வத்தைத் தேர்ந்தெடுத்தும் கூட தினசரி பூஜையைச் சரியாக நிறைவேற்றாதோர்.
2. இஷ்ட தெய்வம் யாதோ என்று தெரியாது குழம்புவோர்
3. இஷ்ட தெய்வத்தைப் பலமுறை மாற்றிச் சரியான வழிகாட்டியின்றித் தவிப்போர்
  - இத்தகையோர் யுவவருட நவராத்திரி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடிட பராசக்தியினருளால் தங்களுக்குரிய இஷ்ட தெய்வத்தை அறிவர்.
நவராத்திரியாம் ஒன்பது நாட்களிலும் ஸ்ரீபார்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கையாகிய தேவி அம்சங்கள் ஹரியையும் ஹரனையும் பூஜிக்கின்றனர். ஹரிஹரனே பரம் பொருள்.
பரம்பொருளே மனித குலத்தை உய்விப்பதற்காக சிவனாகவும், விஷ்ணுவாகவும் ஆதிபராசக்தியாகவும் பல ரூபங்களில் தோன்றி அருள்பாலிக்கின்றார். எனவே நவராத்திரியாம் ஒன்பது நாட்களிலும் பரம்பொருளை வழிபடுகின்ற தேவி அம்சங்களை நாமும் வழிபடுகின்றோம்.
 இதன் மஹிமை என்னவெனில் ஸ்ரீபராசக்தியே பரம்பொருளைப் பூஜை செய்யும் நவராத்திரி நேரத்திலேயே நாமும் பூஜை செய்தால், ஸ்ரீஅம்பிகை, தன் பூஜையில் தன் பக்தர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு அபரிமிதமான கருணையுடன் இறைவனை வேண்டுகிறாள். என்னே பாக்யம்! பராசக்தியின் பூஜையில் நாமும் பங்கு பெறும் பாக்யம் கிட்டுகிறதென்றால் எத்தகைய அற்புதமான மானிடப் பிறவியிது!
இத்தகைய அதியற்புத சக்தி வாய்ந்த வாய்ப்பினை, நவராத்திரி பூஜையைக் கொண்டாடும் வாய்ப்பினை இழக்கலாமா? இஷ்ட தெய்வத்தை அறிய வேண்டுமா? நித்யதேவி பூஜையை முறையாகச் செய்ய வில்லையா? தினசரி கோயிலுக்குச் செல்ல வில்லையா? – பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்குத் தக்க முறையில் இறைவழிபாடுகள் செய்யவில்லையா? குழந்தைகளை முறையான இறை வழிபாடுகளில் ஈடுபடுத்தவில்லையா? அக்கம் பக்கத்தில் சகஜமாகப் பழகி நாமறிந்த ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையா ? ஒன்றே குலம் என்ற எண்ணம் சரியாக வேரூன்றாது ஜாதி, சமய எண்ணங்களைத் தாண்டி மனம் சீரடையவில்லையா? புழு, பூச்சி, வண்டுகள் விலங்கினங்கள் , தாவரங்கள்  மட்டுமல்லாது அனைத்து  ஜீவன்களிலும் ஓரே பரம்பொருளே ஊடுருவி நிற்கின்றான் என்பதை ஒரு துளியேனும் உணர்ந்தால் தான் மனிதகுல இன வேறுபாடுகள் மறையும்.

இதன் பின்னர்தான் இறைவனையே உய்த்துணர முடியும். எந்த மனித இனத்தை ஜாதியை வெறுக்கின்றோமோ அதே இனத்தில் தான், ஜாதியில் தான் மறுபிறவி என்பதை  உணர்க! ஸ்ரீஅம்பாள் பூஜையே ஆணினம், பெண்ணினம், ஜாதி, இனவேறுபாடுகளை நீக்குவதற்கு உதவும். மேற்கண்டவற்றை உணர்விக்கும் பூஜையே நவராத்திரி பூஜை! மனிதகுலம் இழந்து கொண்டிருக்கும் எத்தனையோ நற்பண்புகளை மீண்டும் அடைந்து இன்புற நவராத்திரி பூஜை வழிகாட்டுகின்றது.
நவராத்திரி பூஜை முறைகள்
1. அனைவரும் வீட்டில் கொலுவைத்தல் வேண்டும். பொம்மைகள் வாங்குதற்கு வசதி இல்லையே, வைப்பதற்கு இடவசதி வேண்டாமா என்றெல்லாம் ஏங்காது இருக்குமிடத்திலேயே , (பலகை, புதுத்துணியின் மேல்) இயன்ற அளவு, நாலைந்து பொம்மைகளையேனும் கொலுவாக வைக்க வேண்டும்.
2. தெய்வ மூர்த்திகள், கோபுரங்கள், பசு, காளை போன்ற அனைத்து ஜீவன்கள், தெய்வீக உணர்வுகளை எழுப்பக் கூடிய உருவங்கள், இயற்கைப் பொருட்கள் காட்சிகளை கொலுவாக அமைக்க வேண்டும்.
3. மணல், நீர், தாவரங்கள், உதிரிப் பொருட்களைக் கொண்டு தாமே கொலு உருவங்களையும், இயற்கைக் காட்சிகளையும் அமைக்கலாம்.
4. கொலுகாட்சிகளை அமைப்பதற்குச் செலவிடும் நேரமும் நவராத்திரி பூஜையின் ஓர் அங்கமாகும். இதில் மனம் ஒரு முகப்பட்டு தெய்வத்திடம் லயிப்பதை உணரலாம். இதுவும் ஸ்ரீஅம்பாள் தியானத்தில் ஒரு பகுதியாகும். இவ்வாறு நம்மையுமறியாமல் இறைப் பணியில் லயிக்கச் செய்வதே நவராத்திரி பூஜையின் மஹிமையாகும்.
5. மாளய அமாவாசை (24.9.1995) அன்றே கொலுவை அமைத்திட வேண்டும். நவராத்திரி காலம் முழுதும் கொலு பொம்மைகளை, காட்சிகளைத் தொடாமல், மாற்றாமலிருப்பது நலம். காரணம் பலரும் வந்து பார்த்து வணங்குகின்ற இல்லறக் கோயிலாக நவராத்திரி கொலு அமைவதால் அனைத்து பொம்மைகளும். ஜீவகளை ததும்ப, தெய்வாம்சங்கள் நிரம்பியிருக்கும். இல்லம் முழுதும் தெய்வச் சூழ்நிலை விரவி, ஒரு ஆனந்த நிலையை அளிக்கும்.
6. நவராத்திரி தினங்களில், ஊதுபத்தி ஏற்றுதல், சாம்பிராணி தூபமிடுதலை எந்த அளவிற்குச் செய்கின்றோம் அதனினும் அபரிமிதமான அளவில் இறையுணர்வு பொங்கும்.
7. நவராத்திரியில் கொலு வைத்திருக்கும் பகுதியே தெய்வீகப் பூங்காவாக திகழ்ந்து கோயிலின் சாந்தமான ஒரு தெய்வத் திருச்சூழ்நிலை வியாபித்திருப்பதை உய்த்துணரலாம். செய்து பாருங்கள், புரியும்!
“தன்னலம் அறிந்தால் சுயநலம் புரியும் ! சுயநலம் பிரிந்தால் பொதுநலம் தெரியும். பொதுநலம் புரிந்தால் இறைநிலை துவங்கும்.”
8. நவராத்திரி கொலு நமக்காக அன்று, இந்நாட்களில் உறவினர்கள், நண்பர்கள், சக அலுவலர்கள், பெரியோர்கள் அனைவரையும் அழைத்து குங்குமம், தாம்பூலம், தேங்காய், பழங்கள், சீப்பு, (பெரிய) கண்ணாடி, குங்குமச் சிமிழ், வளைல்கள், ரவிக்கைத் துணி (தைப்பதற்கான கூலியுடன்) கருகமணி ஓலை, ஏழைக் குழந்தைகளுக்கு ஆடைகள், போன்ற மாங்கல்ய பொருட்களில் இயன்றவற்றை அளிக்க வேண்டும். பலருக்கு அளிக்கின்ற மங்களமே பல்கிப் பெருகி நமக்கு மங்களச் செல்வமாக கிட்டும்.
வசதியற்ற ஏழைகள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கூடிய தாம்பூலத்தை மட்டுமாவது அனைவருக்கும் வழங்க வேண்டும். இது மிகவும் எளிதான காரியந்தானே!
9. இவ்வாறாக நமக்காக நாம் வாழ்வதற்குப் பிறப்பெடுக்கவில்லை. இந்த சரீரம் மூலம் எவ்வகையில் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழலாம். இதுவே தெய்வ தரிசனத்திற்கான வழி என்பதையும் பகுத்தறிவாக ஊட்டுவதே நவராத்திரி பூஜை!
நவராத்திரியில் நான்கு கால பூஜைகள்
முதலாவதாக கொலு அமைப்பது. எவ்வித மனித இன வேறுபாடுகளின்றி அனைத்துத் தெய்வ மூர்த்திகள், புத்தர், மஹாவீரர், குருநானக், யேசுகிறிஸ்து போன்ற பல மதங்களில் பிரகாசிக்கும் மஹான்கள். யோகிகளின் உருவங்கள் மட்டுமல்லாது தாவரங்கள், கருவிகள், இயற்கைக் காட்சிகள், அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு குட்டி பிரபஞ்சத்தையே இல்லத்தில் உருவாக்குகிறோம். ஏன், எதற்காக?
யாதும் இறைவனின் படைப்பே, எல்லோர்க்கும் தந்தை இறைவனே என்ற தெய்வீகச் சிந்த   சிந்தனையை ஊட்டி வளர்ப்பதற்காக! உயிர்களிடத்து அன்பு வேண்டும். தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும். என்பதை உய்த்து உணர்வதோடு பிறர்க்கும் இந்த சுந்தர அனுபவத்தை எடுத்துரைப்பதற்காக!
சுமங்கலி பூஜை
இரண்டாவதாக ஏழை சுமங்கலிகளுக்கு மங்களகரமான பொருட்களை அளித்துக் கண்கண்ட தெய்வமான கணவனின் நல்ஆரோக்யத்திற்கும் நீண்ட தீர்கமான ஆயுளுக்காகவும் பிரார்த்திப்பது. சுமங்கலி பூஜையை 3/5/12 பெண்கள் சேர்ந்து செய்வது சிறப்பானதாகும். குறைந்தது இரண்டு குழந்தைகளைப் பெற்ற 60/70/80 வயது நிறைந்த மூன்று பழுத்த சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
“மாத்ருகா புஷ்பமாலாதுதியை” 108 முறை பாராயணம் செய்து பெரிய கண்ணாடி, சீப்பு, வளையல்கள், மஞ்சள், குங்குமம், தேங்காய், வஸ்திரம், அளித்தல் சிறப்பானதாகும். தினமும் மூன்று பேருக்கு இத்தகைய பாத பூஜை செய்து மங்களப் பொருட்களை ஏழை சுமங்கலிகளுக்கு தானம் அளித்துவர,
1. தீராத மனசஞ்சலங்கள் தீரும்.
2. திருந்தாத கணவன் திருந்துவான், கணவனுடைய தீய வழக்கங்கள் மறையும்.
3. கணவன் மனைவியரிடையே அபிப்பிராய பேதங்கள் தணியும். மூன்றாவது பூஜையே திதிக்குரிய தானதர்மங்கள்!
குளிகை நேரத்தில் ஸ்ரீசனீஸ்வரரை வழிபட்டுக் கறுப்புநிற உடைகள், உணவு வகைகளைத் (எள் சாதம், கறுப்பு திராட்சை etc.. ) குளிகையில் செய்ய வேண்டிய நற்காரியங்கள் சுலபமாக நிறைவேறுவதோடு சனீஸ்வர மூர்த்தியின் அருளும் கிட்டும். குறிப்பாக சனிக் கிழமையன்று சனிஹோரையும் குளிகை நேரமும் சேர்ந்து வரும் காலை 6-7 மணியில் சனீஸ்வரருக்கு மேற்கண்ட வழிபாடு, தான, தர்மங்களைச் செய்தால் இது மிகச் சிறந்த சனீஸ்வர ப்ரீதியாகிறது. அபரிமிதமான பலன்கள் கிட்டும்.

நான்கு விதமான பூஜைகள் சேர்ந்ததே நவராத்திரி பூஜை, பூஜை என்றால் மந்திரங்களால் மட்டுமானதல்ல! பாத பூஜை, கோ பூஜை, ஓம்கார தியானம், புண்ய நதிஸ்நானங்கள், அன்னதானம் போன்றவையும் பூஜைகளே! இவையெல்லாம் பல தீவினைகளைக் கழிக்கும், எதிர்வரும் துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும் மிகச் சிறந்த தெய்வீக நற்காரியங்களாகிய பூஜை முறையில் அடங்கும்.
நவராத்திரிக்குரிய நான்கு பூஜைகளில் முதலாவது கொலு வைப்பது, இரண்டாவது சுமங்கலி பூஜை, மூன்றாவது கீழ்க் கண்டதினசரி (நவராத்திரி) திதிதான, தர்ம பூஜை, நான்காவது நவதுர்கா பூஜை! இவற்றை ஜாதி, இன பேதமின்றி அனைவரும் எளிய முறையில் நிறைவேற்றும் படியான அறவழி முறைகளை சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
நாம் பின்பற்றுவது மட்டுமின்றி பலரும் இவற்றைக் கடைபிடிக்கும் வண்ணம் பிறருக்குப் பயன்படும் வகையில் இறைப் பணியாற்றுவதே உண்மையான வாழ்க்கையாகும்.இவ்வாறாக இறை சேவையை ஊட்டியுணர்த்துவதே பண்டிகைகளின் தாத்பர்யம்.

திதி

பாதபூஜை பெறுபவர்

பிரதமை

75 வயதிற்கு மேற்பட்ட சுமங்கலி

துவிதியை

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றோர்

திரிதியை

மூன்று பெண்கள், ஒரு ஆண் குழந்தையைப் பெற்றோர்

சதுர்த்தி

இரண்டு ஆண்கள் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றோர்

பஞ்சமி

ஒரு பெண், மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றோர்

சஷ்டி

இரண்டு ஆண்குழந்தைகளைப் பெற்று ஸ்ரீவெங்கடாஜலபதியைக் குலதெய்வமாகக் கொண்டோர்

சப்தமி

மூன்று பெண் குழந்தைகள் உடையவர்

அஷ்டமி

ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்ற வைணவகுடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியை

நவமி

இரண்டு பெண்கள், ஒர் ஆண் குழந்தையைப் பெற்றோர்

தசமி

60 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர்.

தம்பதியினரின் பாதங்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டுப் பாதபூஜை செய்து அவர்கள் கரங்களாலேயே ஏழை எளியோர்க்கு தினமும் இயன்ற தான, தர்மங்களைச் செய்து திதிப் பூஜையை பரிபூர்ணமடையச் செய்ய வேண்டும். யுவ வருட சாரதா நவராத்திரி திதி பூஜையினால் இஷ்ட தெய்வ ப்ராப்தியுடன் உலகில் எய்ட்ஸ்/காலரா ப்ளேக் போன்ற கொடிய நோய்த் தடுப்பு, ஜாதி, மத, இனச் சண்டைகள் தவிர்ப்பு போன்ற உலக ஜன சேவைக்கும் இப் பூஜா பலன்கள் உதவுகின்றன. எத்தகைய அரியவாய்ப்பு! மகத்தான மஹேஸன் சேவை!
கலியுகத்தில் எந்த வருடத்தில், ருதுவில், பட்சத்தில் எத்தகைய சோதனைகள் எழும், இவை ,தீர எத்தகைய சங்கல்பத்துடன் எவ்வித பூஜைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை சித்த புருஷர்கள் தீர்கதரிசனமாக கிரந்த நாடிகளில் வகுத்துள்ளனர். தக்க சற்குருவை நாடி இவற்றை அறிந்து பயன்பெற வேண்டும்.
ஒரே நாளில் இரண்டு திதி/நவதுர்க்கா திதி பூஜைகளையும் செய்யலாம். சென்னை திருவள்ளூர் அருகே கூவம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தில் தீண்டாத் திருமேனியராக அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் நிறம் அவ்வவ்ப்போது மாறுகின்றது. இச்சிவலிங்கம்தனை பிரபஞ்சத்தின் பிரதிபிம்பமாகக் கொண்டால் லிங்கத்தின் எப்பகுதியில் எவ்வகையில் நிறம் மாறுகிறது என்பதையறிந்து பூமியின் அப்பகுதியில் ஏற்படவிருக்கும் துன்பங்களை தீர்கதரிசனமாக உணர்ந்து தக்க பெரியோர்களின் குருவருளினால் தற்காத்துக் கொள்ளலாம் எவர் கையும்படாது பூஜையைப் பெறும் மிகவும் சக்தி வாய்ந்த அற்புதமான லிங்கமூர்த்தி.

ஸ்ரீதுர்கை பூஜை
நான்காவதாக அமைவது ஸ்ரீதுர்கை பூஜை, நவராத்திரியின் ஒவ்வொரு திதியிலும் ஸ்ரீஅம்பிகை ஒவ்வொரு துர்காரூபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். எனவே அந்தந்தத் திதியில் அதற்குரிய துர்கா தேவியின் நாமத்தை நாள் முழுதும் தியானித்திடல் வேண்டும். சமையல் பணி, அலுவலகப் பணி, நடத்தல், வெளியில் செல்லுதல் ஆக எப்போதும் ஸ்ரீதுர்கையின் நாமத்தை ஜபித்துக் கொண்டேயிருக்கலாம்.

திதி

ஸ்ரீதுர்கையின் நாமம்

ஸ்ரீதுர்கை நாம ஜபப் பலன்கள்

பிரதமை

ஸ்ரீகுலவாதின்ய துர்கை

பிரிந்தவர் கூடுவர் குடும்ப ஒற்றுமை பெருகும்

துவிதியை

ஸ்ரீஆகாசகாமிண்ய துர்க்கை

விமான விபத்து தவிர்ப்பு, கெட்ட காற்றினால் வரும் நோய்கள் நிவர்த்தி

திரிதியை

ஸ்ரீபிரம்மசாரிண்ய துர்க்கை

உத்யோகத்தில் (நல்ல) திருப்பம் ஏற்படும்., தங்க, வைர வியாபாரிகளுக்கு மேன்மை தரும்.

சதுர்த்தி

ஸ்ரீபூர்ண சந்த்ர துர்க்கை

ஏர்கண்டிஷனர், மின் சாதனங்கள், மோட்டார் பம்ப் செட் வியாபாரிகளுக்கு நன்மை.

பஞ்சமி

ஸ்ரீபஞ்சகதாரிண்ய துர்க்கை

நெருப்பு/தீ கண்டங்கள் அகலும்/கல்லூரிப் பெண்கள் கல்வியில் சிறப்பு அடைவர்/மிளகாய் மண்டி வியாபாரிகளுக்கு உயர்வு தரும்.

சஷ்டி

ஸ்ரீமதுப்ரிய துர்க்கை

குழந்தைகளின் கல்வியில் சிறப்பு தரும் முன்னேற்றம்/கண்ஒளி பெருகும்/ மருமகளின் எதிர்ப்பு குணம் தணியும்.

சப்தமி

ஸ்ரீசிகிபிஞ்சத்வஜ துர்க்கை

இடமாற்றத்தால் நலம் - விவசாயத்தில் பயிர்கள் பூச்சிகளால் நாசமடைவது நீங்கும்.

அஷ்டமி

ஸ்ரீபாசதாரிண்ய துர்க்கை

திருஷ்டி, கண்ணேறு நீங்கும். திருஷ்டிப் பூசனியை மிதித்தல், காக்கை தலையில் கொத்துதல் ஆகியவற்றால் விளையும் பெரும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

நவமி

ஸ்ரீபிரசன்ன துர்க்கை

எதிரிகளின் பிரயோக விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுதல் – மாமியார்/நாத்தனார் கொடுமைகள் தீரும்.

மேற்கண்ட பலன்களைப் பெற அந்தந்த ஸ்ரீதுர்க்கையின் நாமத்தைக் குறைந்து 1008 முறையேனும் ஜபித்து, ஸ்ரீசௌபாக்ய வித்யையால் 3/9/12/23 முறை ஸ்ரீதுர்கையை அர்ச்சித்து வணங்க வேண்டும்.

திருஅண்ணாமலை மகிமை

கிரிவலப் பாதையில் ஒவ்வொரு அடி-நடைக்கும் மலை உச்சியை தரிசிப்பதே “தரிசனம்” எனப்படும். நாலைந்து தப்படிகளுக்கு ஒரு முறை கூட மலையின் தரிசன அமைப்பு மாறுவதைக் காணலாம். ஏறுமுக தரிசனம், சாணக்கிய  தரிசனம், முக்கூட்டு தரிசனம், மஹாமக தரிசனம், சோமாஸ்கந்த தரிசனம், ஏகமுக தரிசனம், திரிபுராந்தக (சம்ஸ்கார) தரிசனம், தசமுக தரிசனம், பஞ்சமுக தரிசனம் என்று ஆயிரமாயிரம் தரிசனங்கள் உண்டு.
தரிசன பலன்கள் :- சித்த புருஷர்களும் மஹான்களும் பல்வேறு யுகங்களில் ஸ்ரீஅருணாசல மலையின் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் அமர்ந்து தவம் செய்து அற்புதமான இறை தரிசனங்களைப் பெற்று அவற்றின் பலன்களை மக்களுக்கு அர்ப்பணித்து அவர்களுடைய நோய்கள் , துன்பங்கள், தோஷங்கள், பாவங்களை நிவர்த்தி செய்தனர். அவ்வாறு அவர்கள் தவம் செய்த இடங்களே மண்டபங்களாக ஸ்ரீஅருணாசல கிரிவலத்தில் அமைந்தன. ஆனால் இத்தகைய ஆன்மீக இரகசியங்களை அறிந்தவர் சற்குருமார்களே!
பல ஆண்டுகளுக்கு முன் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுடன் பலர் கிரிவலம் வரும் பாக்யம் பெற்றனர். அப்போது நூற்றுக்கணக்கான தரிசனமுறைகள்,      பலன்களை ஆனந்தத்துடன் அடியார்கள் பெற்று மகிழ்ந்தனர். இன்றைக்கும் கிரிவலப் பகுதியில் ஆங்காங்கே சில மண்டபங்கள், திருப்பாத வடிவுகள், நந்திகள், அபூர்வமான மரங்கள் போன்றவற்றைக் காணலாம். இங்கெல்லாம் சற்று அமர்ந்து தியானித்து மலை தரிசனங்களைக் கண்டு வணங்க வேண்டும். சித்த புருஷர்களும், மஹான்களும் அமர்ந்து இன்றும் அருள்பாலிக்கும் இடமல்லவா?

சிங்கமுக தீர்த்தங்கள்
சித்தர்கள் அருள்கின்ற கிரிவலமுறையை மட்டும் இங்கு நாம் காண்பதால் பல்வேறு தரிசன விளக்கங்களையும் பிறகு விரிவாகக் காணலாம். எனினும் முக்யமான ஓரிரு தீர்த்தங்களையும் தரிசனங்களையும் விளக்கினால்தான் கிரிவல முறையில் ஒரு தெளிவு ஏற்படும். சென்ற இதழில் ஸ்ரீபிரம்ம லிங்கத்திலிருந்து தொடங்குகின்ற கிரிவல யாத்திரையை தெற்கு கோபுரம், ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய தரிசனம், முக்கூட்டு ரோட்டிலிருந்து கும்ப தரிசனம் (மஹாமக தரிசனம் – கும்பம் போன்று மலை அமைப்புடன் தரிசனம்), தீர்த்தம், ஸ்ரீஇரமணாஸ்ரமம், ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் அதிஷ்டானம் வழியே செங்கம் சாலையில் வலதுபுறம் திரும்புகின்ற நிலைவரை ஓரளவு விளக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் கடந்த பின்பு மயான பூமி உண்டு.மயானம் என்றவுடன் அஞ்சுதல் வேண்டாம். சிவபெருமானே மயான வாசிதானே! இந்த மயான பூமியில் பல பெரியோர்களின் ஜீவசமாதிகள் உள்ளன. இவர்கள் நம்மை எப்போதும் காப்பாற்றுவார்கள்.

எங்கு மயான பூமியைக் கண்டாலும் “ஸ்ரீஅரிச்சந்திர மஹாபிரபுவிற்கு நமஸ்காரம் மயான தேவதைகளே வந்தனம்” என்று வணங்கிச் சென்றால் எவ்வித பேய், பிசாசு பயங்களின்றி செல்லலாம். ஸ்ரீஅரிச்சந்திர மஹாபிரபுவின் அருளால் மயான தேவதைகளே நம்மைக் காத்து மயான எல்லைவரை நல்வழிகாட்டும். உலகெங்கும் உள்ள மயானங்களின் மயான தேவதைகளுக்கு அதிபதியாகவும் அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராகவும் நமக்கு அருள்புரிபவரே ஸ்ரீஅரிச்சந்திர மஹாபிரபு!

சிங்கமுக தீர்த்தம் :- பெரிய மயான பூமியைத் தாண்டியதும் வலப்புறம் சிங்கமுக தீர்த்தம் ஒன்றுண்டு! பல சித்தபுருஷர்களும், யோகியரும், மஹான்களும் தவமிருந்து நீராடிய புனித தீர்த்தம். இதேபோன்று சிங்கமுக தீர்த்தங்கள் கிரிவலப் பாதையில் பல இருந்தன. தற்போது மூன்று மட்டும் இருந்த போதிலும், இரண்டு மட்டுமே பக்தர்களின் வழிபடும் முறையில் உள்ளது. செங்கம் சாலையில் உள்ள சிங்க (சுதை) ரூபத்தின் உட்சென்று கவனமாக இறங்கி தீர்த்தத்தை சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். இது கபால சூட்டைத் தணித்து, அச்சம், பீதி, பயம் கூடிய மனோநிலைகளை நிவர்த்தி செய்யும். பயந்த சுபாவம் உள்ளவர்கள், மனோதிடம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்களுக்கு இத்தீர்த்தம் நல்வழி காட்டும்.
முற்கால கிரிவலம்
பெரிய மயான பூமியைக் கடந்த பின் செங்கம் சாலையின் இடதுபுறம் ஒரு சிறு குன்றின் உச்சியில் ஸ்ரீபெருமாள் அருள்புரிகின்றார். இதன் மேலிருந்து ஸ்ரீஅண்ணாமலையாரை தரிசித்தல் விசேஷமானதாகும். முற்காலத்தில் கிரிவலப் பாதை இச்சிறுகுன்றினையும் சுற்றி அமைந்திருந்தது. கிரிவல மஹாத்மியத்தை நன்கு அறிந்தோர் ஆன்மீக இரகசியமாக இன்றைக்கும் இச்சிறு குன்றினையும் சுற்றியே கிரிவலம் வருகின்றனர். மஹாபாரதத்தில் அர்ஜுனன் இப்பகுதியில் தான் ஸ்ரீநரநாராயணன் தரிசனத்தின் பரிபூரணத்தை உய்த்துணர்ந்தான். 
அடிஅண்ணாமலை ஸ்ரீஆதி அருணாசல சிவ ஆலயத்தை நிர்மாணித்த ஸ்ரீபிரம்மா, இவ்வாலயத்தைக் கட்டும் பாக்யத்தையும் ஸ்ரீஅருணாசல தரிசனத்தையும் பெருமுன் பலகோடி ஆண்டுகள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தார். ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் இச்சிறு குன்றினைச் சுற்றியே கிரிவலத்தை மேற்கொண்டார்.

தீர்த்தங்கள் : பிருதிவி, அப்பு, ஆகாசம், அக்னி, ஆகிய பஞ்ச லிங்கங்களும் அருள்பாலிக்கும் திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தில் திருஅண்ணாமலையே அக்னி லிங்கமாகக் காட்சி தருகின்றது. இந்திரன், அகின், யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானம் உள்ளிட்ட அஷ்டதிக்கு தேவமூர்த்திகளும் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றனர். இவற்றின் அருகே தீர்த்தங்களும் உண்டு. இவற்றின் அருகே நீர் நிறைந்திருந்தும், கோடையில் தீர்த்தங்களில் நீர் வறண்டிருப்பது போல் தோன்றினாலும் அனைத்து தீர்த்தங்களிலும் எப்போதும் நீர் உண்டு. நம் கண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் அரூவமாக இருக்கும் நீர் நிலையைக் காணுமளவிற்கு நாம் ஆன்மீக சக்தியைப் பெறவில்லை!
வறண்டதாகக் காட்சியளிக்கும் தீர்த்தங்களில் என் செய்வது? மானசீகமாக தீர்த்த மாடுவது போல் எண்ணித் துதிக்க் வேண்டும். இந்த ஆழ்ந்த நம்பிக்கை படிப்படியாக வேரூன்றி அரூவ தீர்த்தத்தின் தெளிந்த காட்சியை நம் கண்களால் காணும்படி செய்யும். ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படில் அங்கே மன சஞ்சலங்களுக்கு இடமில்லை, தியான நிலை தானாகவே கைகூடும்.

அடிஅண்ணாமலைப் பகுதி
செங்கம் சாலையிலிருந்து வலப்புறம் பிரியும் கிரிவலப் பாதையில் பல விசேஷமான இடங்கள் அமைந்துள்ளன. கிரிவலப் பகுதியில் நந்திகள் உள்ளன. இயன்றவரை அவற்றின் திருக்கொம்புகள் ஊடே மலையை தரிசனம் செய்வது சிறந்தது. பிரதோஷ நேரத்தில் (மாலை 4-30 - 6.00 மணி)  திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதும் நந்திக் கொம்புகளுக்கிடையே திருஅண்ணாமலையை தரிசனம் செய்வதும் பெறற்கரிய பாக்யங்களாகும். பிரதோஷ நேரத்தில் கோடிக்கணக்கான சித்தபுருஷர்கள், மஹான்கள், ஞானிகள், யோகிகள், முமூட்சுக்கள், தீர்க்கதரிசிகள், பித்ரு தேவர்கள், தேவதைகள், தேவர்கள், கந்தர்வர்கள்,  திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர். அவர்கள் தங்கள் தபோசக்தியை கிரிவலப் பகுதிகள், நந்திகள், மரங்கள், மலை தரிசனங்கள், தீர்த்தங்கள் போன்றவற்றிலும் பரவெளியிலும் நிரவிச் செல்கின்றனர். இவை கிரிவலம் வருவோரின் தேகங்களில் படுவதால் அந்நற்கிரணங்களின் மேன்மையால் கிரிவலம் வருவோரின் துன்பங்கள் தீர்வடைகின்றன.

வரம் தரும் வாலீஸ்வரர்

உயர்பதவியில் இருக்கின்றவர்கள் தங்கள் பதவிக்கு எதிராக வேலை செய்பவர்களின் சதித்திட்டம் பலிக்காமல் இருக்கவும், பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும், சட்டம் ஒழுங்கு என்பதைப் பூரணமாக நிலை பெறச் செய்யும் உயர்நிலையோர் மீது அவதூறு, பழிவராமல் இருப்பதற்கும், வேலையில்லாமல் திணறும் இளம் வாலிபர்கள் சுயமாக வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கும், அறுசுவை சிகிச்சைகள் செய்வோர் சிறந்த வைத்தியராகத் தங்கள் துறையில் திகழவும், பிறர் உதவியின்றித் தனித்தே நின்று தன் திறமையைக் காட்டுவதற்கும் அருளும் ஈஸனே வாலீஸ்வரர்.
வாலியால் இந்த ஈஸ்வரரை எப்படித் தெரிந்து கொள்ள முடிந்தது? மேருமலையில் உள்ள “உருமாறு தீர்த்தத்தால்” மாற்றப்பட்டு அழகும் வீரமும் திடகாத்திரமான உடலும் பெற்ற கன்னிகையை மணக்க இந்திரன் விரும்பினான். அவ்வாறு. விரும்பிய போது அந்த ரிஷன் கன்னிகை இந்திரனுக்கு சில நிபந்தனைகளை விதித்தாள்.
“தாங்கள் என்னை மணக்க வேண்டுமென்றால் தனக்குப் பிறக்கும் குழந்தை, சிறந்த சிவவழிபாட்டைச் செய்பவனாகவும், அரிய பெரிய சிவலிங்கங்களைப் பூஜிப்பவனாகவும், குற்றங்களைத் தெரிந்து நியாயமான தண்டனையைக் கொடுப்பவனாகவும், சந்தர்ப்பவாதிகள் தன்னைத் தாக்குமுன் அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் திறமையையும் வைத்திய சித்தியையும் அடைந்து இறையருள் பெற்றவர் கையாலேயே இறைவனடி சேரும் பாக்கியத்தையும் பெறும் குழந்தையை எனக்கு அளிக்க முடியும் என்றால், தங்களைத் திருமணம் கொள்வேன்” என்றாள் ., இந்திரனும் அவ்வாறே வாக்களித்து மணந்தான்.

இந்த இருவருக்கும் பிறந்த குழந்தைதான் வாலி
வாலி மிகுந்த பராக்கிரமத்துடன் வளர்ந்தான். தாய்தான் இவனுக்கு குரு. தன் மகன் சிறந்தவனாக வாழவேண்டும் என்றும் நல்ல மனைவியை அடைந்தால், இவன் வாழ்வு சிறக்கும் என்று அறிந்த தாயானவள் வாலியை அழைத்து “ நீ சிறப்புடையவனாக வாழ வேண்டுமென்றால் திருஅண்ணாமலையானை வலம் வந்து அங்கு கௌதம முனியைச் சந்தித்து, ஸ்ரீமயூரக்ஷேத்திரம் என்னும் மயூரபுரியை (மயிலை) அடைவாய், அங்கு கைரவணி என்ற நீரோடையில் தினமும் சந்தி மந்திரங்களை முடித்து அருகில் இருக்கும் சப்த ஈஸ்வரர்களுள் ஒருவரான பலதாரண்யரை (வாலீஸ்வரர்) வழிபட்டிடில் நல்ல மனைவியும் சிறந்த அறிவும், ஆயுளும் திறமையும் கூடி, அவமதிப்பு அடையா நிலையும், பலமும் பெறுவாய்”, என உரைத்தாள்.
தாய் சொல் கேட்டு வாலி திருஅண்ணாமலையானை வலம் வந்து கௌதம முனியைச் சந்தித்து மயூரபுரிக்கு வந்து சேர்ந்தான். தினமும் முறையாக ஈஸனை வலம் வந்து தூய மலர்களாலும், வில்வத்தாலும் பலவித அபிஷேக ஆராதனைகளும் செய்தான். அந்த அபிஷேக ஆராதனைகளால் வாலி பெற்ற பலன்களை நாமும் பெறலாம்.
1. வாலி கருப்பு நிறமுடைய காராம் பசுவின் பாலால் வாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தான்.... இதனால் உடலில் நல்ல உரசித்தி பெற்றான். இந்த அபிஷேகம் இரும்பு வியாபாரிகளுக்கு நல்ல பலனைத் தரும்.
2. பஞ்சாம்ருத அபிஷேகம் செய்து பவ சித்தி பெற்றான் வாலி. இது காய்கறி , பழ வியாபாரிகளுக்கு நல்ல பலனைத் தரும்.
3. தேன் அபிஷேகம் செய்து சுகவன சித்தியைப் பெற்றான் வாலி.
4. இளநீர் அபிஷேகம் செய்து விருக்க்ஷ சித்தியைப் பெற்றான் வாலி. இது நோய்வாய்ப் பட்டோரை குணமடையைச் செய்யும்.
5. கரும்புச் சாறால் அபிஷேகம் செய்து சந்தான சித்தியைப் பெற்றான் வாலி. (குழந்தை இல்லாதோர் இந்த அபிஷேகம் செய்திடில் கருக்குற்றம் குறைந்து நல்லருள் பெறலாம்,)
6. சந்தன அபிஷேகம் செய்து ரோக நிவாரண சித்தியைப் பெற்றான் வாலி. (சிறந்த வைத்தியப் படிப்பு சிறப்பைத்தரும் இந்த அபிஷேகம் செய்திடில்)
7. அன்னாசிச் சாறு அபிஷேகம் செய்து  திலபந்த சித்தியை பெற்றான் வாலி. (இந்த அபிஷேகம் செய்தால் காவல் துறையினருக்கு நல்ல இடமாற்றம் கிட்டும். எதிரிகளின் தாக்குதலியிருந்து தப்பிப்பர்.)
8. மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து ராஜ்ய சித்தியைப் பெற்றான் வாலி. (அரசியலில் பதவி ஏற்ற இறக்கங்களில் வரும் கலகங்கள் குறையும், இந்த அபிஷேக செய்திடில்)
9. அன்னாபிஷேகம் செய்து நல்ல மனைவியை அடைந்தான் வாலி.

வாலி தன் தாய் தீர்க்க சுமங்கலியாய் இருப்பதற்காக ஒரு விசேஷமான பூஜையைச் செய்தான். அது என்னவென்றால், ஆடிப் பூரத்தன்று அம்பாளுக்குக் கண்ணாடி வளையல்களும், வெள்ளி வளையல்களும், தங்க வளையல்களும் , பலாமர வளையல்களும், சந்தன வளையல்களும், காப்பு வளையல்களும், திருஷ்டி வளையல்களும் (அம்மனுக்கு) வளைக்காப்பாகச் சூட்டி அனைவருக்கும் தானமாக அளித்தான்.
ஆகவே ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்புச் செய்து தானமாய்த் தருவது மாங்கல்ய பலத்தை வளர்க்கும். ஆடிக்கிருத்திகை அன்றும் மாசி மகத்தன்றும் ஸ்வாமியை வீதி உலாவரச் செய்து கல்யாண உற்சவம் செய்தான் வாலி.
ஒவ்வொருவர் மனதிலும் பலபல ரகசியங்கள் (வெளியில் சொல்ல முடியாத விஷயங்கள்) பல உண்டு. இத்தகைய  விஷயங்கள் பிறரிடம் சொன்னால் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பலர் நினைப்பதுண்டு. இச்சங்கடங்களை வாலீஸ்வரரிடம் சொல்லிடில் பல வருடங்களாக தீராத மனச் சுமை தணியும். தங்களுடைய மனத்தில் நினைத்த காரியம் (நல்லதாய் இருந்தால்) நடக்க வேண்டுமென்று ஒரு விசேஷ ப்ரார்த்தனையை வாலி செய்யத் துவங்கினான். அது என்னவென்றால் :
சனிக்கிழமை தோறும் வெற்றிலை (காம்பு இல்லாமல்) மாலையை இறைவனுக்குச் சாற்றுவது விசேஷம். இந்த சென்னை மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் சந்நிதியில் வாலி வடக்குப் பார்த்து நிற்கிறார். வாலீஸ்வர சிவபெருமான் கிழக்கு, அம்பாள் தெற்கு, வீரபாகு, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், பைரவர் சந்நிதிகளும், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார் (லிங்கோத்பவர்), ப்ரம்மா, சண்டீஸ்வரர், துர்க்கை தெய்வமூர்த்திகள் உள்ளனர். பஞ்சலிங்கம் விசேஷமாக உள்ளது, அனைவரும் சேவித்து அனைத்து அருளும் பெற வேண்டுகிறோம்.

இராசி கர்ம நிவாரண தீபிகை

அவரவருடைய பிறந்த நேரம் கிரஹ அமைப்புகள், நவாம்சம் ஷட்வர்கம், அஷ்டவர்கம், த்ரிகோணம் போன்றவற்றோடு அன்றைய தின (கோசார) கிரஹ சஞ்சாரங்கள், குடும்பத்தில் ஏனையோருடைய ஜாதக அம்சங்களையும் சேர்த்து கணித்தல் மட்டும் போதுமா? பெரியோர்களின் ஆசிர்வாதம் நிறைந்த பூஜைகள், சத்யமான வாக்கு, ஒழுக்கமும் புனிதமும் நிறைந்த வாழ்க்கை, குருவருள் நிறைந்த திருவருள், காசு, பணம் பெறாது இறையருளை மட்டும் வேண்டி ஜாதகம் பார்த்தல் போன்றவையும் கூடினால் தான் இராசி பலன்களை தீர்கமாக உரைக்க இயலும். இத்தகைமை பூண்ட சான்றோர் இன்று ஒரு சிலரே உள்ளனர்.
சற்குருவை அடையப் பெற்றால் சொல், பொருள், செயலால் அனைத்தையும் உணர்த்துவார். சற்குருவைப் பெறும் வரையில் என் செய்வது! சற்குருவை அடையும் ஒரே பிரார்த்தனையோடு திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.
“இராசி கர்ம நிவாரண தீபிகை” என்னும் இப்பகுதியில் “எது எப்படி நடக்கும்” என்று அறிவதை விட ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த இராசிக்காரகள்., தீய கர்ம  வினையின் பிரதிபலிப்பே துன்பங்கள் என்பதை அறிந்து கர்ம நிவாரண கார்யங்களை “எங்கு எப்படி” நடத்தினால் அம்மாதத்திய துன்பங்களைச் சமாளித்திடலாம் எனபதற்கேற்ப முக்யத்வம் தரப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகின்றோம்.
அந்தந்த மாதத்தின் எதிர்வரும் கஷ்டங்களைத் தீர்க்க வல்ல புண்ய, பூஜா சக்திகள், பித்ருக்களின் ஆசி, தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைத் தந்தருளும் மூர்த்தி, தீர்த்தம், தலதரிசனங்கள், தானதருமங்கள் பாராயண முறைகள், ஹோமம், பூஜை, இறைப் பணிகள் நற்காரியங்களின் விளக்கங்களே இராசி கர்ம நிவாரண தீபிகையாக மலர்கின்றது. கர்ம வினைகளைத் தீர வழி காண்பீர், கவினுற வாழ்வீர்!

மேஷம்
படிப்பில் தடை ஏற்படுமாதலின் மாணவ, மாணவியர், தினமும் கையில் தர்ப்பைகளைத் தாங்கி “ஸ்ரீகணபதியே நம” என்று 108 முறை ஜபித்து ஸ்ரீகணபதிக்கு மாலை அணிவித்து வணங்கிட, ஞாபகமறதி நீங்கி, படிக்கும் ஆர்வம் பெருகும். வியாபாரக் கஷ்டங்கள் தீர வியாபாரிகள் , வேகவைத்த கொள் தானியத்தை சிவப்புத் துணியில் வைத்து “விநாயகர் கவசம்“ (ஔவையார்) மூன்று முறை படித்துக் கொள் தானியத்தைக் குதிரைக்கு, குறிப்பாக ஆண் குதிரைக்கு அளிக்க வேண்டும். தினந்தோறும் இதனைச் செய்வது நல்லது.
இல்லற பெண்கள் மௌனியாக இருந்து எந்த இரகசியத்தையும் காப்பாற்ற வேண்டும். பிரச்சனைக்குரியவற்றைச்சிவன் கோயில் நந்தியின் காதில் கூறி மூன்று அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஏற்ற வேண்டும். இதனால் சொல் குற்றம் அகலும், அநாவசியப் பழி ஏற்படாது. முதியோர்கள் பெண் குழந்தைகளிடம் கடுஞ்சொல் தவிர்த்து கவனமாகப் பழகி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை வாய்நிறைய நன்கு ஜபிக்க வேண்டும்.
அலுவலகம் செல்வோர் சகுனம் பார்த்துச் செல்க! துளஸிச் செடியை தரிசித்து சூர்ய துதியை ஜபித்துச் செல்ல வேண்டும். (ஸ்ரீபாஸ்கரா போற்றி , ஸ்ரீரவியே போற்றி, ஸ்ரீசூர்யா போற்றி etc.. )  துளஸிச் செடியை வணங்குதல் எப்போதும் சிறந்த துர்சகுன நிவர்த்தியாகும்.

ரிஷபம்
தேவையில்லாத பழிகளைத் தவிர்க்க இல்லறப் பெண்கள் இம்மாதம் முழுதும் மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை அணிதல் நலம். குறைந்தது ஒரு மஞ்சள் நிறக் கைக்குட்டையையேனும் எப்போதும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் வர்ண கதிர்களுக்கு சாந்தம், புனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சக்தி உண்டு. பெண்கள் திருஞானசம்பந்தருடைய “கோளறு பதிகத்தின்“ முதற்பாடலை தினமும் மூன்று முறை பாராயணம் செய்திட வேண்டும்.
குடும்பச் சண்டைகள், அவமரியாதை ஆகியவற்றை தவிர்க்க வயதானவர்கள் தாமே சந்தனம் அரைத்து (சந்தனப் பவுடரைக் கரைத்துப் பயன்படுத்துவது தவறு) சிவலிங்கத்திற்கு அளித்து
“பொய்யவன் நாயடியேன் புகலேநெறி ஒன்றறியேன்
செய்யவன் ஆகிவந்திங்கு இடரானவை தீர்த்தவனே
மெய்யவனே திருவே விளங்கும் திருக்காளத்தி என்
ஐயநுன்தலை யல்லால் அறிந்தேத்த மாட்டேனே “
என்ற பாடலை அடிக்கடி ஓதிட வேண்டும். இதனால் குடும்பச் சண்டைகள் வராது தவிர்த்திடலாம். வியாபாரிகள் எவர்மீதும் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தாலும் இம்மாதம் அவ்வப்போது கணக்கைப் பார்த்தல் வேண்டும். தினமும் காளை மாட்டிற்கு வாழைப்பழம் அளித்துவர இந்த தான மஹிமையால் கணக்கு மோசடிகளைத் தவிர்க்க வழியுண்டு. மாணவ, மாணவியர்  பௌதிக, இரசாயன பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீதுர்கையை செம்பருத்திப் பூவால் அர்ச்சித்து வர கவனக்குறைவு தீரும்.
அலுவலகம் செல்வோர், வண்டி ஏறுதல், பிறருடன் பேசுதல் வீனாக விஷயங்களைக் கொட்ட வேண்டாம். பொறாமைக்காரர்களால் வரும் கலகத்தைத் தவிர்க்க தினமும் அதிகார நந்திக்கு வில்வ மாலை சாற்றிட வேண்டும்.

மிதுனம் :

உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத் துன்பங்களைத் தவிர்க்க
“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயவலம் அரன்நாமமே
சூழ்க வையகமும் துயர்தீர்கவே!“
நைவேத்யம் : பச்சைப் பயிறு சேர்ந்த உணவு, கன்னிப் பெண்கள் பச்சைநிற உடையணிந்து தினமும் ஸ்ரீமீனாட்சி சோம சுந்தரக் கடவுளை வேண்டிவர மனச்சுமைகள் தணியும்.
“திருவால வாய்க்கிணையாம் ஒருதலமும்
தெய்வ மணம் செய்யப்பூத்த
மருவார் பொற்கமல நிகர்தீர்த்தமும்
அத்தீர்த்தத்தில் மருங்கீல் ஞான
உருவாகி உறைசோமசுந்தரன் போல்
இகபரம் தந்து உலவாவீடு
தருவானும் முப்புலனத்திலுமில்லை
உண்மையிது சாற்றின் மன்னோ“
என்ற பாடலைக் கன்னிப் பெண்கள் பாராயணம் செய்து ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரக் கடவுளை வேண்டி வர நல்வாழ்வு அமையும்.
மாணவ மாணவிகள் : கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடல்களில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும். விஜய கணபதியை தினமும் வேண்டி, பூஜை செய்து படித்தல் நலம்.
வியாபாரிகள் : பெண் குழந்தைகளைக் கண்டிக்க கூடாது. அன்போடு பழகுதல் வேண்டும். ஏன் என்றால் இம்மாதம் பெண் குழந்தைகளின் ஆசியால், கைராசியால் புது வருவாய் வரும். அக்குழந்தைகளின் கரங்களால் தானதருமம் செய்தல் நலம் பயக்கும்.
வயதானோர் : ஏமாறாதிருக்க அதிகம் வெளிச் செல்லாது. சிவ பஞ்சாட்சரம் விடாமல் ஜபித்தல் மிகவும் நலம் தரும்.

கடகம்

மாணவ மாணவியரின் படிப்புச் சுமை, மன ஆதங்கங்கள் தீர பெருமாள் கோயிலில் மொச்சைக் கொட்டை சுண்டல் தானம் செய்ய வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் ஆவன செய்திடில் மகன்/மகளுடைய நல்ஒழுக்கம் மேம்படும்.
இம்மாதம் வியாபாரம் பெருக அரிய வாய்ப்பு! மன அமைதியும் கூடுகின்ற நேரம்! இதற்காக வியாபாரிகள் வெள்ளிக்கிழமைகளில் ஆறு ஏழைக்காவது அன்னமிடல் வேண்டும். மேலும்
“ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்
இன்று மறப்பேனோ ஏழைகாள் – அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன்
கண்டேன் திருவரங்கமேயான திசை“
என்ற பாடலை மேஜை மேல் / சட்டைப் பையில் எழுதி வைத்துக் கொண்டு வியாபார நேரம் முழுதும் ஓத வேண்டும். புண்டரீகாட்சன், வரதராஜன் என்ற நாமங்களை உடைய பெருமாள் கோயிலில் வெண்தாமரைப் பூ சார்த்துவது மிகவும் விக்ஷேமானதாகும்.
குழந்தைகள் பலவீனமாகாது ஆரோக்யமாக இருக்கவும், புஷ்டியாக வளரவும். பெண்கள் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் சர்க்கரை கலந்த பால் ஊற்றி
“மூர்க்கவான் சூரவாணன்
முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழை பெய்விக்கும்
கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானவர்கள் போற்றச்
செத்தவர்தமை யெழுப்பும்
பார்கவான் சுக்ராச்சாரி
பாதபங்கயமே போற்றி “
என்ற பாடலை பல முறை ஓதி பாலை ஏழைப் பெண் குழந்தைகளுக்கு தானமாக அளித்துவர சுகவீனமாயுள்ள குழந்தைகள் புஷ்டியாவர்!
சிம்மம் :

கணவனை/மனைவியிழந்தோர் பொறுமை காத்து இம்மாதத்தில் அடிக்கடி மௌன விரதம் மேற்கொண்டு ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நதியைச் சுற்றிவர வேண்டும். இதனால் வீண்வாக்குவாதத்தால் வரும் பலதுன்பங்கள் குறையும்.  (முதியோர்கள் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் துதியைப் பாராயணம் செய்ய மகனோ, மகளோ பரிந்து நடப்பர்).
உத்யோகஸ்தர்கள் : இம்மாதம் முழுவதும் மஞ்சள் கலந்த ஆரஞ்சு ஆடையை அணிதல் நலம். செந்தாமரையால் தினமும் சிவனுக்கு அர்ச்சனை, கோளறு பதிகப் பாராயணம், ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவருக்காவது அன்னதானம் இவற்றால் அலுவலக இடமாறுதலைத் தவிர்க்கலாம். கிழக்கு நோக்கி அமர்வதால் பகை, பொறாமை காரணமான அலுவலகத் துன்பங்கள் ஏற்படாது.
மாணவ மாணவியர் : மஞ்சளும் பழுப்பும் கலந்த ஆடையணிவதால் நல்ல நட்பு ஏற்படும். தீய சகவாசம் அண்டாது. யூனிபார்ம் ஆடையணிவதானால் ரிப்பனேனும் மஞ்சள்+பழுப்பு நிறத்திலிருப்பது நல்லது. சீருடை அணிவதெனில் கல்லூரி/பள்ளி நேரந்தவிர மற்ற நேரங்களில் இந்த குறித்த வர்ண ஆடை அணிவது உகந்ததாகும். ஸ்ரீசித்தி வினாயகரை வணங்கி வர பூகோள, சரித்திர பாடங்களில் கவனம் சிதறுவது தவிர்க்கப்படும்.
கன்னிப் பெண்கள்/இளைஞர்கள் மூன்றாம் பிறைச்சந்திரனை தரிசனம் செய்து சிவன் கோயிலில் முறையாக 21 முறை பிரதட்சிணம் செய்வதால் நல்ல செய்தியைப் பெறுவர்.
கன்னி :

வியாபாரிகள், கொடுக்கல், வாங்கலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இம்மாதம் நவரத்ன மோதிரத்திற்கு பன்னீர், அபிஷேகம் செய்து கீழ்க்கண்ட தமிழ் மந்திரம் ஓதி மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து அணிந்திட வேண்டும்.
திருவாலவாயென்று கேட்டவரே
அறம்பெறுவர் செல்வம் ஓங்கும்
திருவாலவாயென்று நினைத்தவரே
பொருளடைவர்தேவ தேவைத்
திருவாலவாயிடத்து விதிந்தவரே
வீட்டுநெறி சேர்வர் அன்றே
இதை விடாமல் ஜபித்தால் பணம் கைமாறுதலில் வரும் பிரச்சனைகளைத் தவிக்கலாம்.
உத்யோகஸ்தர்கள் பசுவிற்குத் தினமும் அகத்திக் கீரை, வாழைப் பழம் அளித்திடப் பிரயாணத் துன்பங்கள் நீங்கும்.
பெண்களுக்கு : உடல் நலமில்லாமல் போக சந்தர்ப்பம் உண்டு. ஆகவே மோர், சீதள சம்மந்தமான பொருட்களை குறைத்தல் நலம். பானக தானம் செய்க! மேலும் புது ஆடைகளை அணியும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நீங்க புதிய அல்லது பழைய ஆடையையாவது தானம் செய்து முருகன் கோயிலில் வலம் வருதல் நலம்.
மாணவ மாணவிகள் : வைத்தியதுறை படிப்பு, சட்டத்துறை படிப்பு, பேனா நண்பர்கள் இவர்கள் கவனமாய் இருத்தல் நலம். திடீர் நண்பர்கள், திடீர் வருமானம் சகாயமாய் இருக்காது பஞ்சமுக அனுமார் தரிசனம் மிகவும் நலம் தரும். (சென்னை மேற்கு மாம்பலம்)
முதியோர் : சப்த கன்னிமார்களாகிய தெய்வத்தை வணங்க வேண்டும். தூரத்துச் சேதி சுமூகமாக இருக்கும். இம்மாதம் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டாம்.
திருமணம் ஆகாதோர் அளந்து பேசவும். முடிந்ததை மட்டும் உறுதி செய்யவும். பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு ஏழைக்கு தானமிட்டு ஆஞ்சனேயர் கோயில் சென்று அடிப்பிரதட்சணம் செய்யவும்.
துலாம் :

கணவனை இழந்தோர் இம்மாதம் பூராவும் காலணி அணியாது இருத்தல் நலம். தினமும் கோயிலை அடிப்பிரதட்சிணம் செய்து குமரகுருபரரின் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்பாக்களைப் பாடிவர மனப் போராட்டங்கள் குறையும். குடும்பத்தில் ஏற்படும் அவமரியாதை, பழிச்சொல் நீங்கும்.
மனைவியை இழந்தோர் ஸ்ரீகணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றி விநாயகர் அகவல் (ஔவையார்) ஓதி ஏழைக்கு அன்னமிட்டு வந்தால் மனசஞ்சலங்களும் அலைபாயும் எண்ணங்களும் குறையும். இவ்விநாயக வழிபாடு இறந்த மனைவியின் ஆன்மீகப் பெருநிலைக்குப் பேருதவி புரியும்.
வியாபாரிகளுக்கு பற்று கடன் வசூலில் கவனம் தேவை. இவர்கள் மந்தாரை இலையில் உணவு படைத்து ,
“வசனநல் தைரியத்தோடு மன்னவர்சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீணிலம்தனிலளிக்கும்
குசனின் மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி” என்ற பாடலை 21 முறை துதித்து அன்னதானமிட பணவரவு சீர்பெறும்.
விருச்சிகம்  :

குழந்தைகள் இல்லாதோர், சுற்றம், அயல் இடங்களின் வசை, பழியை நீக்கிட வேர்கடலைச் சுண்டல்தனை குருபகவானுக்குப் படைத்துக் குழந்தைகளுக்கு தானம் செய்ய வேண்டும். கல்யாணமாகாதவர்கள் யானைக்கு கேழ்வரகு களி அல்லது உணவளித்தல் சிறப்பானதாகும். யானை வாகனத்துடன் கூடிய குருபகவான் அல்லது வாகனம் மீது அமர்ந்த சுக்கிர பகவானை 21 முறை பிரதட்சிணம் வரவேண்டும்.
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கரசன் மந்திரி
நரசொரி கற்பகம்
பொன்னாட்டினுக்கதிபனாகி
நிறைதனம் சிவிகைமண்ணில்
நீடுபோகத்தை நல்கும்
இறைவன்குரு வியாழன்
இருமலர்ப்பாதம் போற்றி
முதியோர்கள் குடும்ப விஷயங்களை வெளிச் சொல்லாது இருத்தல் நலம். சிவபுராணத்தை உரக்கப் பாராயணம் செய்திட வாய்ச்சொற்குற்றம் தவிர்க்கப்படும்.
மாணவ-மாணவியர் ஆசிரியர்களிடம் கவனமாய் நடந்து கொள்க, தண்டனை பெறும் வாய்ப்புகள் அதிகமாதலின் பாடல் பெற்ற தலமுருகனைத் திருப்புகழ்ப் பாசுரங்களை 18 முறை ஓதி வலம் வந்திட சாந்தம் பெருகும்.
உத்யோகஸ்தர்கள் மறதியால் பல துன்பங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் ஆதலால் ஸ்ரீஹேரம்ப கணபதியை (ஏகாதசி திதிக்குரிய ஸ்ரீகணபதி) வணங்கிடத் துன்பங்கள் நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் கணக்கர்களிடம் பரிவுடன் நடந்து தேவையான உதவிகளைச் செய்வதுடன் “ஸ்ரீசித்ரகுப்தாய நம“ என்று தினமும் 108 முறை ஓதி பழ தானங்கள் அளித்திடப் பெரிய நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
தனுசு :

உத்யோகஸ்தர்கள் மஞ்சள் நிறக் கோடுகள் அணிந்த உடையை அணிவதின் மூலம் அலுவலகத்தில் கோபத்தினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும். இம்மாதம் முழுதும் பொன்னாங்கண்ணித் தைலஸ்நானம், தலைக்கு இத்தைலத்தைப் பயன்படுத்துவது, புஷ்பராக மோதிரம் அணிவது ஆகியவற்றால் அலுவலகத்தில் நன்மதிப்பைப் பெறலாம். பொன்னாங்கண்ணித் தைலம் மூளைக்குக் குளிர்ச்சியாதலின் கொந்தளிப்பான எண்ணங்களைத் தடுக்கும். வசதியுள்ளோர் புஷ்பராக மோதிரத்திற்கு சந்தன, பன்னீர் அபிஷேகம் செய்து “ஸ்ரீதட்சிணாமூர்த்தி போற்றி” என 1008 முறை ஓதிவர செல்லும் நற்காரியங்களில் வெற்றி கிட்டும். இம்மாதம் கஜபூஜை விசேஷமானது. யானைக்கு உணவளிப்பதும் கஜபூஜையே ! சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் அளித்து கஜபூஜையைச் செய்திட நற்காரியத் தடங்கல்கள் நீங்கும்.
வியாபாரிகள் புதிய கடன் களைத் தவிர்த்து பழைய பாக்கிகளை நன்கு வசூல் செய்ய எள்சாத தானம் செய்யவும்.
மாணவ-மாணவியர்களிடையே வாக்குவாதம், கடுமையான விமர்சனம் வராமலிருக்க தினமும் ஒரு மணி நேரம் மௌனவிரதம் பழகுவது நல்லது.
குலதெய்வப் பூஜையைச் செய்வதன் மூலம் பெரியோர்கள் குடும்பத்தில் கௌரவப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும். எதிலும் விட்டுக் கொடுத்தல் நலம் பயக்கும்.
மகரம் :

இல்லறப் பெண்கள் மாமனார், மாமியார், நாத்தனாருடன் பிணக்குகள் ஏற்படாமலிருக்க தினமும் காக்கைக்கு அன்னமிடல் வேண்டும். பித்ருக்கள் ஆசியை நிறையப் பெறும் நற்காரியங்களை நிறைவேற்ற வேண்டும்.
வியாபாரிகள், வியாபாரம் பெருகிட, நீல புஷ்பங்களால் பெருமாளை அர்ச்சித்து காராம் பசுவிற்கு வாழைப்பழம், அகத்திக் கீரையை அளித்து
ஸ்ரீஆதிபுரீஸாய நம : (போற்றி) | ஸ்ரீதர்ப்பாரண்யாய நம : (போற்றி) ஸ்ரீநகவிடங்கபுராய நம: (போற்றி) என்று தியானித்துப் பசுவை வலம் வந்து வணங்கிட வேண்டும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமிருந்து வரும் கண்டனங்களைத் தவிர்க்க வன்னிமரப் பிள்ளையாரை தினமும் தரிசித்து
படையானைப் பாசுபத வேடத் தானைப்
    பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
    அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
    சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
என்ற பாடலை அடிக்கடி ஓதி வர வேண்டும். ஏனையோர் காரியத் தடங்கல்களை வெல்ல மேற்கண்ட பாடலைப் பாராயணம் செய்து கறிவேப்பிலை சாதந்தன்னை (பதார்த்ததுடன்) தினமும் ஒருவருக்கேனும் அளிக்க வேண்டும்.
கும்பம் :

ஆண், பெண் இருபாலரும் மாதம் முழுதும் நீலக்கோடுகள் உள்ள ஆடைகளை அணிந்திடில் மனசஞ்சலங்கள் தணியும். சனீஸ்வர காயத்ரீ மந்திரத்தை தினமும் குறிப்பாக சனிஹோரையில் சனியன்று காலை 6-7, பகல் 1-2, இரவு 8-9 நள்ளிரவு 3-4) ஜபித்தல்.
மாணவ, மாணவியர்க்கு அடிபடுதல், காயம்படுதலுக்கு வாய்ப்பிருப்பதால் தினமும் நவகிரஹங்களை அடிப்பிரதட்சிணமாக வருவது நன்று.
முதியோர்கள் துர்செய்திகள் வருவதைத் தடுத்திட எள்ளுருண்டை மாலையினை சனீஸ்வர பகவானுக்கு அணிவித்து வணங்கி வருதல் வேண்டும்.
திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் மருவு, மல்லிகைப் பூவினைத்தாமே கோர்த்துக் கட்டி ஜாதி, குலபேதமின்றி சுமங்கலிகளுக்கு அளித்து வர நற்செய்தி தேடி வரும். சனீஸ்வர பகவானுக்கு வியாபாரிகள் சிறு கருப்புத் துணியில் எள்ளைக் கட்டி நல்லெண்ணெய் (அகல்) தீபத்தில் இட்டு
என்போடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடிவந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடொன்றொடேழுபதினெட்டாறும் உடனாய நாங்களவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே
என்ற எளிய சம்பந்தரின் கோளறு பதிகத்தின் இரண்டாவது பாடலை, (7, 16 முறைகளேனும் ஓதி) நவகிரஹத்தை வலம் வந்து இயன்ற அன்னதானம் செய்துவர சிறு உடல்நல பாதிப்புகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

மீனம் :

கணவனுடைய காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும் ஆதலின் பெண்கள் அம்மன் கோயிலில் அடிப்பிரதட்சிணம் செய்திட, வேண்டும். மருதாணியிட்டு மெட்டியுடன் அடிப்பிரதட்சிணம் செய்வதால் கோயிலை அரூவமாக வலம் வரும் மஹரிஷிகளின்  திருப்பாதத்தூளியின் ஆசி கிட்டும்.
கல்யாணமாகாதோர்க்கு சகோதரிகளுடன் மன வருத்தம் ஏற்படக் கூடும். பெருமாளையும் சிவன் கோயிலில் அம்பிகையையும் வலம் வர வேண்டும்.
வயதானோர் அதிகம் வெளிச் செல்லாமல், கடிதம் எழுதுதலையும் தவிர்த்தல் நலம். ஸ்ரீசொக்கநாதரை எப்போதும் தியானித்திட வேண்டும்.
அலுவலகம் செல்வோர்க்கு இடமாற்றம் உண்டு. பொறுமையாய்க் கோபப்படாமல் எதனையும் சந்தித்தல் நலம். முருகனின் ஸ்ரீதண்டாயுதபாணிக் கோல  தரிசனமும் பஞ்சாமிர்த தானமும் நன்மை பயக்கும்.
வியாபாரிகள் மூன்றாம்பிறை சந்திரனை மறக்காமல் தரிசித்து
அலைகடல் அதனில் நின்று அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுள் என்று எவரும் ஏத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவலமாக வந்த மதியமே போற்றி போற்றி
என்ற பாடலை 21 முறை பாராயணம் செய்து ஸ்ரீசந்திரபகவானை வணங்கிட புதிய (நல்) மாற்றங்கள் ஏற்படும். புதுத்துறையை ஏற்க சிறந்த காலம்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam