குருவருள் என்றும் நிலைக்கட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

சிறுவன் பெரியவரை நோக்கினான்.
“இதோ பாரு ராஜா! உன் கையாலே அந்தக் கோழிங்களைத் தெறந்து விடணும்னு அதுக தலைல எழுதியிருந்தாக்க அப்படீன்னு கேட்கறீயா? நல்ல கேள்விதான்! குரு இல்லைன்னா அப்படித்தான் நெனைக்கணும். அது தான் சரியான முடிவும் கூட. ஆனா நான் தான் குத்துக் கல்லாட்டம் உன் பின்னாடி நிக்கறப்போ குரு என்ன சொல்றாரோ அதுதான் சத்யம்! பக்கத்துல குரு நின்னார்னா அவர் வெள்ளக் காக்கா பறக்குதுன்னு சொன்னா அது நெஜம் தான். ஏன்னா கறுப்புக் காக்காவை வெள்ளைக் காக்காவா மாத்தற சக்தி அவருக்கு இருக்கு! செஞ்சும் காண்பிப்பார். அவர் மேல முழு நம்பிக்கை வச்சா! சாதாரண மனுஷனுக்கு ஒரு தவறுக்கு இரண்டு மடங்கு தண்டனை. குரு கிட்ட இருந்துண்டே! கஷ்டப்பட்டுத்தான் தெய்வீக வாழ்க்கைல நிலைச்சு நிக்கணும். பெரிய மஹான்களுக்கு எவ்வளவு சோதனைகள் தெரியுமா? ஆனா நம்பிக்கையோடு சோதனையெல்லாம் சமாளிச்சேன்னு வச்சுக்கோ மேலே பெரிய லோகத்துல இருந்துக்கிட்டு பித்ரு தேவரா, மஹரிஷியா பல உயர்ந்த நிலைல லட்சக்கணக்கான ஜீவன்களுக்கு வழிகாட்டலாம். அதுக்குக் கிழே பூலோகத்துல நிறைய தான தர்மங்கள் பண்ணி தியாக வாழ்க்கை நடத்தணும்! அதுக்கும் குரு தேவை!“
... பெரியவர் படபட வென்று பொரிந்து அருளூரைகளைப் பொழிந்தார்., சிறுவன் மலைத்து நின்றான்!!!
நாய் தீர்க்கும் கர்மம்
“சரி சரி இந்தா நாலணாக் காசு.... போயி பொற பிஸ்கட் வாங்கி ரெண்டு நாய்களுக்குப் போட்டுட்டு வா, போ!”
“நல்ல வேளை சிம்பிள் தண்டனை தான்,” சிறுவன் மனதிற்குள் சந்தோஷித்தவாறு நாலணாவைப் பெற்றுக் கொண்டான். “அதுல ஒரு நாய்க்கு வால் மட்டும் சுத்தமா வெள்ளையா இருக்கும், மத்தபடி உடம்பு, வால் வேற நிறத்துல இருக்கும்.”
“நல்லாத் தேடிப் பார்த்துக் கரக்ட்டான ரெண்டு நாய்ங்களுக்குப் பொற பிஸ்கோத்து கொடுத்தாவது இந்த எழுபத்தி மூணு கோழிங்களோடக் கர்மாவைச் சரி பண்ணிடலாம்”, பெரியவர் எங்கோபார்த்தவாறு கூறினார். சிறுவன் வெலவெலத்து நின்றான்!
சோர்வுடன், பொறை பிஸ்கட்டை வாங்கியவாறே தயங்கித் தயங்கிப் பெரியவரைப் பார்த்தான்! “தன் பரிதாபமான முகத்தைப் பார்த்தாலாவது அவர் மனம் இரங்கி தண்டனையை சற்று தளர்த்த மாட்டாரா?” சிறுவனின் நப்பாசை இது! பெரியவராவது அசர்வதாவது!
“இந்த வேலையை சாய்ந்தரம் சூர்ய அஸ்தமனத்துக்குள்ள முடிச்சுடு ராஜா! ஏன்னா சூர்ய நாராயண ஸ்வாமிதான் நித்ய கர்மாவுக்கு அனுகூலம் பண்றவர்.” பெரியவர் ஒரு புது நிபந்தனையை விதித்ததும் தான் தாமதம், சிறுவன் சிட்டாய்ப் பறந்தான்., “இனி இங்கு நின்றால் என்னென்ன கண்டிஷ்ங்கள் போடுவாரோ தெரியாது”, என்று எண்ணியவாறே திருவொற்றியூர் சிவன் கோயிலை அடைந்தான். அப்பகுதியில் தான் நாய்கள் நடமாட்டம் அதிகம். சிறுவன் புத்திசாலித்தனமாய் முதலில் கோயிலுள்ள காலபைரவரின் சந்நதியில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தான்,”கால பைரவா! இந்த வேலையை நல்லபடியா முடிச்சுக் கொடு”.
நாயைத் தேடும் படலம்
கோயிலை விட்டு வெளியில் வந்த சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! பெரியவர் சொன்னபடியே இரண்டு நாய்கள்! ஒன்றுக்கு வால் மட்டும் கருப்பு! மற்றொன்றிற்கு முகம் மட்டும் வெள்ளை! சந்தோஷத்தில் மிதந்த சிறுவன் பொறைத் துண்டுகளை அந்த நாய்களிடம் தூக்கிப் போட, அவை அச்சத்தில் “வீல்” என்று கத்திக் கொண்டே விரைந்து ஓடின! இரண்டும் எதிர் எதிர்த் திசையில் ஓடியதால் சிறுவனுக்கு என்னசெய்வதென்று புரியவில்லை! ஏதேனும் ஒரு நாயை மட்டுமாவது பிடிப்போம் என்ற எண்ணத்துடன் கோயில் எதிரே இடப்புறச் சந்தில் ஓடினான். அந்த நாயோ சிறுனுக்குப் போக்குக் காட்டியவாறே நாலைந்து தெருக்களுக்கு அவனை இழுத்தடித்து எங்கோ சென்று மறைந்தது. கடும் வெயிலில் சிறுவன் அலையலானான். பட்டினத்தார் சமாதி, வீரராகவ சுவாமிகள் சமாதி, ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம், பாடகச்சேரி சுவாமிகள் சமாதி, நந்தீஸ்வரர் கோயில் என்றவாறாகத் திருவொற்றியூரில் பல பகுதிகளில் இரண்டு நாய்களையும் தேடி அலைந்து வட சென்னைப் பகுதியையே அலசி  ஒய்ந்து விட்டான். நேரமோ கடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து ஆறு, ஏழு மணி நேரம் தண்ணீர் கூட அருந்தாமல், காலில் செருப்புமின்றித் திரிந்த சிறுவன் மிகவும் களைத்துப் பலவீனமடைந்து சோர்வுடன் அங்காளி கோயிலருகே வந்தான். அடுத்த நடை எடுத்து வைக்க முடியாது என்ற நிலை கண்கள் இருட்டின! கை, கால்கள் தொய்ந்து விட்டன! இனி நடக்க முடியாது என்ற நிலையில் கோயில் வாசலில் சாய்ந்தான். கையிலிருந்த பொறை பிஸ்கட் துண்டங்கள் சிதறின. எங்கிருந்தோ வந்த இரண்டு நாய்கள் அப்பொறைத் துண்டுகளை விழுங்கிட... சிறுவன் கண்களைத் திறந்து பார்த்தான்.
கண்டேன் நாய்களை!
பெரியவர் குறிப்பிட்ட அந்த இரண்டு வகை நாய்களே அவை! புதுத் தெம்புடன் கண்களைக் கசக்கியவாறே சிறுவன் உற்றுப் பார்த்தான்..., வெள்ளை முகம்..., கருப்பு வால்... ஆஹா! அதே நாய்கள்! சிறுவன் பரமானந்தத்துடன் எழுந்து நிற்க முயற்சித்தான். கால்கள் தொய்ந்து விட்டன. “என்ன ராஜா! இந்த அங்காளி கோயிலண்ட இந்த ரெண்டு நாய்ங்க இருக்குதுடா, ரொம்ப அலைய வேண்டாம்னு நான் சொல்றதுக்குள்ள வேகமா ஓடிட்டியே!” – எங்கிருந்தோ திடீரென்று அங்கே தோன்றிய பெரியவர் சிறுவனை அரவணைத்துத் தூக்கினார்..., அவர் திருக்கரங்கள் பட்டதும்....... அறுசுவை உண்டி உண்டு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டது போல் ஒரு தெம்பு , சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி. பெரியவர் வழக்கம் போல் சிரித்தார்.,
“ஏன் வாத்யாரே! இப்படி என்னை நாயாய் வெயில்ல அலைய விட்டு வேடிக்கை பார்த்து நிற்கிற? அச்சிறுவனின் பார்வையில் தொக்கி நின்ற வினா!
“எழுபத்திமூணு கோழிங்க கர்மாவைச் சரி பண்றது எவ்வளவு கஷ்டம்னு கொஞ்சமாவது உனக்குத் தெரியணுமில்லையா? அதுக்குத்தாண்டா அங்காளி உன்னை அலையவச்சா! அதுக்குள்ளாற கோழிக்காரன் இங்க வந்து அங்காளி சந்நிதில மண்ணைத் தூத்திட்டுப் போய்ட்டான். அதுக்குத்தான் முன் ஜாக்கிரதையா பரிகாரமாய் உன்னை தெரு மணல்ல அஞ்சாறு மணி நேரம் அலைய வெச்சேன்.”
விரஜா கால பைரவர்..
“ஏதோ அந்த கால பைரவர் அனுக்ரஹத்தில எல்லாம் நல்லபடியா முடிஞ்சது! இது ரெண்டும் வெறும் நாய்ங்க இல்லைடா! திருவொற்றியூர் சிவன் கோயில்ல இன்னிக்கு நீ தரிசனம் பண்ணினியே அந்த கால பைரவருக்கு விரஜா பைரவர்னு பேரு. இரண்டு கால், நாலு கால் உயிரினங்களுக்கு உரித்தான பைரவர். இரண்டையும் கணிச்சு அதனதன் கால கர்மங்களை நிர்ணயம் பண்றவர். அசைவ உணவு சாப்பிடறவங்க இந்தக் கால பைரவருக்குப் பூஜை செஞ்சு, புனுகு சார்த்தி, முந்திரிப் பருப்பினாலாகிய மாலையை சார்த்தி அதனை (பருப்பினை) ஏழைங்களுக்குத் தானமாகக் கொடுத்து வந்தால் பிராணிகளின் உயிர்வதைக் கர்மங்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வைப் பெற குரு அருள்வார். அசைவ உணவின் மேல் மோகமும் குறையும்.”

ஸ்ரீவிரஜா கால பைரவர்
திருவொற்றியூர்

குருவின் கர்ம பரிபாலனம்
“இந்த அங்காளி கருணைல கோழிங்களுக்கு விடுதலை கொடுத்ததா நெனைச்சு நீ சேர்த்துண்ட கூடுதல் கர்மாக்களுக்கு அந்த விரஜா பைரவரே நேரில் தரிசனம் கொடுத்து பரிஹாரம் தந்து விட்டார். ஏன் ரெண்டு நாய்னு கேக்கறியா? காலம்னா இரவு, பகல் ரெண்டும் சேர்ந்தது! விஞ்ஞானத்துல சூரியன், சந்திரன்னால இரவு, பகல் வருதும்பாங்க. ஆனா பகல்நேரக் கர்மங்களோடு தொகுப்புதான் இரவுன்னு சித்தர்கள் சொல்றாங்க! நீ கோழிங்களுக்குச் செஞ்ச பகல் நேரக் கர்மா இரவுல வேற கர்மாவா மாறும். நாயின் முகம் பகல், வால் இரவு! அதனால பகல் நேர விரஜா பைரவர், இரவு நேர விரஜா பைரவர் ரெண்டு பேரும் ரெண்டு நாயா வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போய்ட்டாங்க!“
“குரு நெனைச்சார்னா எவரோட கர்மத்தையும் விதியையும் மாத்தலாம். தெரிஞ்சுக்கோ! குருவை விட்டுடாதே. அது ரெண்டும் சாதாரண நாய்கள் இல்லை. சிவபெருமான் சண்டாள வேடத்தில் ஆதி சங்கரருக்குக் காட்சியளித்த போது நான்கு நாய்கள் அங்கு சிவனுடன் தோன்றின அல்லவா! அவற்றில் இரண்டையே நீ தரிசனம் கண்டாய்! இன்னும் ரெண்டின் தரிசனமும் காலப்போக்கில் உனக்குக் கிட்டும்...
“இனிமேலாவது புரிஞ்சுக்கோ உலகத்துதல கோடி, கோடியா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சாத்தான் உலகமே என்னன்னு புரியும். அப்புறம்தான் நீ யாருன்னு தெரியும். கடைசிலதான் இறைவன் யாருன்னு புரியும்! அப்படீன்னா ஆன்மீகம்னா மிகவும் கஷ்டமானதான்னு கேட்காதே! ஏன்னா நீயா கோடி கோடியா விஷயங்களைத் தெரிஞ்சுகறதை விட, எல்லாம் தெரிஞ்ச சற்குருவைக் கெட்டியாப் புடுச்சுகிட்டா அவரே தேவையானதை எல்லாம் சொல்லிக் கொடுப்பார்! எவனைத் தெரிஞ்சுண்டா வேற எதையும் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லையோ அவனை மட்டும் தெரிஞ்சுண்டா போதும்! அவன் தான் சற்குரு!”
கோவணாண்டிப் பெரியவர் ஒரு பெரிய உபநிஷத்தை அருளியவர் போல் களைத்து உட்கார்ந்தார்! அவராவது களைப்பதாவது! உட்கார்ந்த அடுத்த க்ஷணமே எழுந்து விட்டார்! “வா ராஜா! இப்ப எல்லாரும் அங்காளிக்குப் பொங்கல் வக்க வருவாங்க! என்னைப் பார்த்தா “சாமியார் , சாமியார்ன்னு” சுத்திப்பாங்க! அதுக்குள்ள நாம நகர்ந்து வேற முக்யமன வேலையைப் பாக்கலாம்! ஆமா இன்னிக்கு உனக்கு ரிஸல்டு வருமில்ல! ஸ்கூலுக்குப் போயிட்டு வரலாம் வா!
நீ பாஸா, பெரிலான்னு தெரியலையே!”
சிறுவனுக்கு பகீரென்றது! பரீட்சை சமயத்தில் பெரியவருடன் கோயில் திருப்பணிகள், அன்னதானம் என்று சுத்தியாகி விட்டது.! “ரிஸல்ட்டில் ஏதாவது ஆகிவிட்டால்...” பையன் அச்சத்துடன் எழுந்தான்! “ஏன் வாத்யாரே! உன்னோட எவ்வளவு சுத்தறேன்! கொஞ்சம் பாஸ் போட்டு விட்டேன்”
“ஹூம்! அது என்னடா நியாயம்! சரியாப் படிக்காதது உன் தப்பு.. டெய்லி அப்பப்ப படிக்காம கோயில், குளம்னு சுத்தினா என்ன செய்றது.” சிறுவன் வெலவெலத்து நின்றான்! என்ன இது! பிளேட்டையே மாத்தறாரே! ..
பள்ளியில் சிறுவன் பெயிலாகி விட்டான்!  

அசூன்ய சயன விரதம்

சோம்பேறித்தனத்தினாலும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் கலியுக மனிதன் நேரங்காலமில்லாது தூங்கி வருகிறான். வாழ்க்கைப் பிரச்னைகள் நாள் தோறும் அதிகரித்து வருகையில், பூஜைகள், தானங்கள், நற்காரியங்கள், தியானம் போன்றவைதாம் மனிதனுக்குப் புண்யத்தை நல்கி அனைத்துத் துன்பங்களிடமிருந்து இரட்சை போல் காக்கின்றன. எனவே உடலுக்குத் தேவையான 6 அல்லது 7 மணி நேர உறக்கத்தை மட்டும் மனிதன் ஏற்று மற்றைய நேரங்களில் ஏதேனும் இறைநாமா, பஜன், துதி, காய்த்ரீ போன்ற மந்திரங்கள் இவற்றை ஜபித்தவாறு விழிப்பு நிலைக் காரியங்களை நிறைவேற்ற வேண்டும். ஒரு மனிதன் உறக்கத்தினால் தீய எண்ணங்கள், தீய காரியங்களிலிருந்து விலகுகிறான் என்பது உண்மையே! அதே அசூன்ய உறக்கமே சோம்பேறித்தனம், அசிரத்தை, மந்த நிலை, சுறுசுறுப்பின்மை, பொறுப்பின்மை, தேவையில்லாத கோபம் போன்ற கெடுதலான மனித குணங்களைக் கொண்ட ஓர் உபயோகமற்ற வாழ்க்கையை உருவாக்குகிறது. பிரயாண சமயங்களில் உறக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். இந்த நவீன காலத்தில் நடைபாதை மீது நடந்து செல்வது கூட கழிவுநீர்ப் பள்ளம் (manhole), பாதையில் வண்டிகள் மோதுதல் (platform crashing) போன்ற விபத்துக்களிலிருந்து மீண்டு வருவதற்குள் நிறையக் கார்கள், லாரிகள் எதிரும் புதிருமாக விரைந்து செல்ல ஒவ்வொரு பிரயாணமும், நடைபாதைப் பயணமும் கூட ஒரு கண்டமாக அமைகிறது.
பிரயாண உறக்கம் தவிர்!
பிரயாண நேரத்தில் கோயிலை மானசீகமாக வலம் வருதல், பழநி, திருப்பதிக்கு கால் நடையாகச் செல்லுதல், லிங்கம், பிள்ளையார் போன்ற மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்தல், தொழுநோயாளிகள், குருடர்கள், ஊனமுற்றோர் போன்றோருக்கு உடலால் (மானசீகமாக) சேவை செய்தல், உங்களுக்குப் பிடித்தமான கோயிலில் ஏதேனும் திருப்பணி செய்தல் (துர்கை சந்நதியில் எண்ணெய்ப் பிசுக்கை நீக்குதல், தேங்காய் மட்டைகள், கற்பூரக் காகிதப் குப்பைகளை நீக்குதல் போன்றவை) ஏழை எளியோர்க்கு உதவும் விதவிதமான முறைகளில் உத்தம எண்ணங்களுடன் கழிக்க வேண்டும்.
 ராமராம, நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, சரணம் ஐயப்பா போன்ற இறை நாமங்களையும் காயத்ரீ மந்திரம், வேத, தேவார, திருவாசக, திருப்புகழ்ப் பாடல்களையும் இசைத்தவாறே பிரயாணம் செய்தல் வேண்டும். இதனால் பிரயாணத்தில் தன்னை மட்டுமல்லாது தன் குடும்பத்தினரோடு தன் பூஜையின் சக்தியால் டிரைவர், கண்டக்டர் உட்பட அனைத்துப் பிரயாணிகளையும் காக்கும் பூஜையை நிகழ்த்துகின்ற மக்கள் சேவையை மஹேஸன் சேவையாகப் புரிந்து பேரானந்தம் அடையலாம். இத்தகைய பிரயாண பூஜை முறைகளினால் அசதி, களைப்பு, உடல் வலி கூட மறைந்து மனதை மகிழ்விக்கும் பிரயாணமாகவும் அமையும்.
நேரகாலமின்றி எப்போதும் எவ்விடத்திலும் தூங்குவதால் வாழ்க்கையில் பல நல்வாய்ப்புகளையும் பிரதோஷம் போன்ற புனித நேரங்களையும் இழக்கின்றோம். உறங்கும் போது தீய காரியங்கள் செய்யாமலிருக்கிறோமா? உண்மையில் நாம் தூங்குமிடம், அருகில் இருப்போர் இவற்றைப் பொறுத்துத் தூக்கத்தில் தீயதேவதைகள், துர்சக்திகள் வசம் நாம் சிக்கிப் பல கொடிய பாவச் செயல்களைப் புரிவதாகக் கனவைப் பெறுகிறோம். கனவுக்கு நாம் பொறுப்பாளியா?
தற்கொலை, விபத்து போன்ற தீவினைகள் நிகழ்ந்த இடங்கள், இலஞ்சம் போன்ற அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் அலுவலகங்கள், பிக்பாக்கெட்டுகள், திருடர்கள் உலவும் இரயில், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் உறங்கினால் அங்கு நிலவும் தீய எண்ணங்களினால் உறக்கத்திற்குரித்தான மனோதேகம் பாதிக்கப்பட்டு மனவியாதிகள், தலைவலி, நெஞ்சு வலி போன்றவை பிரயாணத்திலோ, பிரயாணம் முடிந்த சில நாட்களிலோ, மாதங்களிலோ உண்டாகும். ஏனெனில் அத்தகைய தீயசக்திகள் நாம் தூங்கும் போது மிக எளிதாக நம்மிடத்தில் பதிந்து விடும். விழித்த நிலையில் ஏதேனும் தியானம், இறைநாமம் இவை கவசமாக நின்று தீயவினைகளைத் தடுத்து விடும். எனவே அசூன்ய சயனம் என்றால் தேவையற்ற அகாலத் தூக்கம் என்று பொருள். அகால நேரங்களில் தூங்குவதால்
1. பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து பிறவிகளைப் பெருக்குதல்
2. ஜடமான வாழ்க்கையினால் பல புனிதமான காலக் கட்டங்களை இழந்து கால பைரவரின் சாபத்தைப் பெறுதல்
3. முன்பின் அறிமுகமாகாத இடங்களில் தூங்கிப் பல தீயசக்திகளின் வயப்படுதல்
4. பல நல்ல நேரங்களை இழத்தல்
இவ்வாறாக அகால தூக்கத்தால் பல தொல்லைகள் தவறுகளுக்கு மனமார வருந்தினால் அசூன்ய விரத பூஜையினால் , குறித்த தான தர்மங்களால் பலன் பெறலாம்.

பெண்களுக்கான இறைப்பணிகள்

நாரிகேள பூஜை
1. தினமும் காலையில் ஆணும் பெண்ணும் தம் தலையில் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுதல் வேண்டும். எண்ணெயின்றி கேசத்தை வாருதல் கூடாது. “கலிதோஷ ஹராயை” என்ற தேவி, கேசத்தில் வசித்து அருள்பாலிப்பதால் தலையில் எண்ணெயிடுவது என்பது “கலிதோஷ ஹராயை” தேவதைக்குரித்தான அபிஷேகமாக, தைலக் காப்பாக அமைகிறது. தேங்காய் எண்ணெயை உபயோகித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் ஸ்ரீபரசுராமர், ஸ்ரீகலிதோஷ ஹராயை தேவதையை நாரிகேள அஞ்சனம் (தேங்காய் எண்ணைய்) கொண்டு அபிஷேகித்துத் தைலக்காப்பிட்டு தினமும் காலையில் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்திடுவோர்க்குப் பல கலிகால தோஷங்களை நிவர்த்தி செய்யுமாறு வேண்டி ஸ்ரீதேவியிடமிருந்துப் பல வரங்களை நமக்குப் பெற்றுத் தந்தார்.
எளிய கோ பூஜை
2. கோடி கோடியாம் தேவதைகள், ருத்திரன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட அவதார மூர்த்திகளுடன் கணபதி, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உறையும் பசுவிற்குத் தினமும் ஒரு வாயேனும் கீரை, தழை, வாழைப்பழம் ஏதேனும் உணவு அளித்தல் முக்கியமானதாகும். உலகில் தர்மம் செழிக்க நாம் செய்யும் “கோ பூஜையாக” இது மலர்ந்து பெரும் புண்ய சக்தியாக, கவசமாக பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் உதவும். இது விசேஷமான தினசரி பூஜையாகும்.
பெண்கள் – பூணூல் – காயத்ரீ
3. ஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளன்று மறுபிறவியைப் பெறுகிறாள். பூணூல் என்பது ஜாதி பேதமின்றி அனைத்து ஆண்களுக்கும் உரித்தானது. ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் அனைத்து ஜீவன்களுக்கும் பொதுவானது. ஒவ்வொரு ஆணும், பூணூலை அணியும் நாளன்று “துவிஜப் பிறப்பு” அதாவது மறுபிறவி கொண்டதாகக் கருதப்படுகிறான். இவையெல்லாம் சத்யமானவை. இது போலப் பெண்களும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மாதவிலக்குக் காலங்களைத் தவிர எப்போதும் எந்நேரமும் மானசீகமாக ஜபிக்கலாம். மாதவிலக்கு சமயங்களில் பிரத்யேகமாக வழிபட வேண்டிய ஸ்ரீதேவி அம்சங்களைப் பற்றி ஜுன் 1994, ஜுலை 1994 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் (ஸ்ரீகுரு மங்களகந்தர்வா அருளியுள்ளவற்றை) வெளியிட்டுள்ளோம். மாதவிலக்கு சமயங்களில் ஸ்ரீகாயத்ரீ போன்ற மந்திரங்களையும் இறை நாமாக்களையும் மானசீகமாக மனதினுள் ஜபிப்பதில் தவறில்லை. ஆனால் வாய்விட்டு உச்சரித்தல் கூடாது! பெண்களுக்கான “பூணூல்” மாங்கல்யமே! திருமண நாளன்று அவர்கள் மறுபிறவி பெறுவது இறை நியதி. உன்னத தெய்வங்களாம் தாய், தந்தையிடமிருந்து “பதிவிரதா” பூஜையை (திருமண பூஜை) ஏற்றுக் “கணவனே கண் கண்ட தெய்வம்” என்று உணரத் தொடங்கும் நன்னாளே திருமண நாள்!
திருமண நட்சத்திர பூஜை
4. எனவே ஒவ்வொரு பெண்ணும் பூணூலாம் மாங்கல்யம் அணிந்து மறுபிறவி பெறும் தன்னுடைய திருமணத்திற்குரித்தான நட்சத்திரத்தை அறிந்து ஒவ்வொரு மாதமும் அந்த நட்சத்திர நாளில் பூஜை, தான, தர்மம், இறைப் பணிகளைப் புரிந்து தன் “மறு ஜன்மமான” திருமண வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ளும் நல்வழியைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்த நட்சத்திர தினத்தில் திருமணம் நடைபெற்றதோ அந்த நட்சத்திர தேவிக்கான மாதாந்திர பூஜையே இது! ஒரே மாதத்தில் அந்த நட்சத்திரம் இரண்டு முறை வருவதும் உண்டு!
அந்த நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்ற தான தர்மங்கள் செய்திட அந்த நட்சத்திர தேவியே பெண் குழந்தையின் வடிவில் ஆசிர்வாதம் செய்கின்றாள். இத்தகைய மாதாந்திர நட்சத்திர பூஜையால் கணவனுக்குத் தெளிந்த அறிவும் நல்ல பழக்க வழக்கங்களும் உண்டாகும். புகை, மது, முறையற்ற காமம் போன்ற தீய பழக்கங்கள் மறையும். தீர்க்கமான மாங்கல்ய பாக்யத்துடன் நல்ல சந்ததியும் கிட்டும்.
திருமண நாளைக் கொண்டாடும் முறை
5. நடைமுறையில் வருடாந்திரத் திருமண நாளை ஆங்கில ஆண்டு முறைப்படி “Wedding Day” ஆகக் கொண்டாடும் வழக்கம் நிலவுகிறது. இதில் தவறில்லை. ஆனால் தம்பதியர் உடை, அணிகலன்கள் வாங்கித் தங்களை அன்று மகிழ்வித்துக் கொள்வதுடன் அம்மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்வதற்காக ஏதேனும் அனாதை இல்லங்களில் சிறுவர், சிறுமியர், நோயாளிகளுக்கு இனிப்புகள் அல்லது இயன்ற தானம் அளித்திட ஆனந்தம் பல்கிப் பெருகும்.
இந்த (ஆங்கில வருடத்) திருமண நாளன்று மனைவி, கணவனை வலம் வந்து நமஸ்கரித்த பின்னரே வெளிச் செல்லலாம்.கணவனும் மனைவியை
சந்தன கந்த பாக்ய
பூர்ண கல்யாண சுந்தர்யை நமஸ்தே|
சங்கரப்பிரியே||
என்ற மந்திரம் சொல்லி அட்சதைகளிட்டு ஆசிவதிக்க வேண்டும். தன்னை நமஸ்கரிக்கும் போதெல்லாம், கணவன் இந்த மந்திரத்தைச் சொல்லி இறைவனை வேண்டி மனைவியை ஆசிர்வதித்தால்
1. கணவன் – மனைவியிடையே பரஸ்பர அன்பு உறுதிப்படும்.
2. சிறு சிறு சச்சரவுகள் கூட இல்லாது வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
3. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு நன்றாக வாழ்வார்கள்.
பேன்களைப் பேணாதீர்!!
பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு தலையில் எண்ணைய் தேய்த்துவிட வேண்டும். (மிகவும் நல்ல மனம் படைத்தோர் கலியுலகில் கிடைப்பது அரிது.) பிறர்கைப்பட எண்ணெய் தேய்ப்பதால் அவர்களுடைய தீயெண்ணங்களால் தூக்கமின்மை, உடல்முறித்து அழுதல், தலைவலி, கீழே விழுந்து காயம்படுதல், அடிக்கடி சோர்வடைதல் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்..
பொதுவாகப் பிறருடைய நிந்தனைகள், வசவுகள், தீய எண்ணங்கள், அவதூறுகள் போன்றவற்றால் தான் தலைவலி ஏற்படுகிறது. நம்மை வெறுக்கின்றவர்களுடைய தீய எண்ணங்கள் குறைந்தால் தான் நம் தலைவலி தீரும். அதுவரையில் எவ்விதத் தலைவலி மருந்தும் வேலை செய்யாது. தலைவலி ஏற்படுகின்றபோது, ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு “ஸ்ரீகபால லகுலேஸ்வர்யை நம:” என்ற மந்திரத்தைத் துதித்தவாறே அப்பழத்தை நெற்றியைச் சுற்றி லேசாக உருட்ட வேண்டும். உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பல தேவதைகள் உண்டு. தலைப் பகுதிக்குரித்தான தேவதைகளுள் ஸ்ரீலகுலேஸ்வரியே நெற்றிக் கபாலப் பகுதியை ரட்சிக்கின்றாள். இந்த தேவியின் நாமஸ்மரணம், தியானமும் நம்மைப்பற்றித் தீய திட்டம் தீட்டும் எதிரிகளின் எண்ணங்களை மாற்றி விடுவதால் அவர்களுடைய தீய நினைவுகளின் விளைவால் நமக்கு ஏற்பட்ட தலைவலி நீங்கிறது.
பிறருடைய தீய எண்ணங்கள் வலிமை பெற்றால் அவை பேன் உருவில் தலையைத் தாக்கும். பொறாமை, குரோதம், திருஷ்டி போன்றவற்றால் விளையும் தோஷங்களே பேன்களாக உருவெடுத்து எப்போதும் துன்பம் தருகின்றது. எனவே பேன்களை உடனுக்குடன் நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். குழந்தைகளுடைய தலையில் பேன் நிறைந்தால், அது அவர்களுடைய தெய்வீகத் தன்மையை பாதிக்கின்றது. எனவே பேன்களை உடனடியாக ஒழிக்க வேண்டும். இல்லாவிடில் அவை எதிர்வினைகளாக (negative forces) உருவெடுத்து பலவகைத் துன்பங்களாகப் பெருகும்.
“ஸ்ரீலகுலேஸ்வர்யை நம :” என்ற நாமத்தைச் ஜெபித்து ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு தேங்காய் எண்ணெய் தைலக் காப்பிட்டு அதனை வழித்துத் தெய்வப் பிரசாதமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இதனை அவ்வப்போது உபயோகத்திற்கான தேங்காய் எண்ணெயோடு சேர்த்துத் தினமும் காலையிலும், மாலையிலும் “ஸ்ரீலகுலேஸ்வர்யை நம:” என்ற நாமத்தை ஜபித்தவாறு தேங்காய் எண்ணெயை தலைக்குத் தடவி வாருதல் வேண்டும்.
7. கணவனுக்குச் செய்ய வேண்டிய விரிவான பாத பூஜை முறை
1. ஜுன் 1994 ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் குறித்தவாறு மந்திரங்களைத் துதித்து கணவன் பாதங்களுக்கு மஞ்சளிட்டு வணங்க வேண்டும்.
2. கணவனுடைய பாதங்களில், மனைவியானவள் தன் முழு மனதினையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது கணவனின் பாதங்களை தன் மனதில் நினைத்தல் வேண்டும். இது ஆரம்ப நிலையில் ஒரு மனோபாவ நிகழ்ச்சியாகவே அமையும். நாளைடைவில் இது உன்னத ஒர் நிலை தியான சித்தியாக மலரும்.
3. ஸ்ரீஅகஸ்தியர் இயற்றிய கீழ்க்கண்ட பாத பூஜைத் துதியினை ஜெபித்துப் புஷ்பமிட்டு கணவனின் பாதங்களை வணங்க வேண்டும்.
ஸ்ரீஅகஸ்திய அருளிய பாதபூஜைத் துதி
உலகு புகழ் உருகி வளர் உத்தமா போற்றி
உனது உள்ஜோதி பெருகி அருளவே போற்றி
உலகு வாழ உன் உறவு தியாகமாய்ப் போற்றி
உனது உள்ளொளி உயர்ந்தெழுந்து அருளவே போற்றி
உலகு படைப்பினில் உனது கர்மம் களைவாய் போற்றி
உலகு ஓர் சக்தி எனை உயர்வு பெறச் செய்வாய் போற்றி
உனது மாயையில் உனது கருத்து உள்ஒளி ஜோதி காணலே போற்றி
உனது வினைப்பாக்கி எனை விழித்தெழச் செய்வாய் போற்றி
உலகு ஒளிஜோதி , செங்கதிரோன் சிவன் நேத்திரமாய்த் திகழ்ந்தாய் போற்றி
உனதுடன் இணைந்து ஊர்ந்து வர எனக்கு உதவுவாய் போற்றி
உலகு நிலா ஒளியாய் உலாவும் என் கற்பின் கருவூலமே போற்றி
உனது மனத்திடத்தை உருக வைத்த என் கண்மணியே போற்றி
உலகு அருட்பெருஞ்ஜோதியில் அடங்கினாய் போற்றி
உனது உளமதில் எனது மனம் கரைந்து உனதாக்குவாய் போற்றி
உலகு நிறை பெருவடிவமதில் உறைந்த உண்ணாமுலை திருஅண்ணாமலையா போற்றி
உனது திருவடி நிழலில் உறையும் உத்தமியாய் எனை ஏற்பாய் போற்றி.
குடிப்பழக்கம் தீர...
பல கலியுகப் பெண்மணிகளின் தீராத குறை, தங்கள் கணவன்மார்களின் குடிப்பழக்கமே! எப்போதாவது ருசிக்காக மது அருந்துவது முதல் நித்ய வழக்கம் உள்ளவர்கள் வரை விதவிதமான குடிப் பழக்கங்கள்! ஆண்டாண்டு காலமாக உள்ள இந்த பழக்கத்தை விடுவதற்கு என் செய்வது! ஆன்மீகம் இதற்கும் என்ன பதில் சொல்கிறது?
ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு “ஔஷத மாயா” என்னும் கிரந்தத்தில் கலியுக மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், தீய வழக்கங்கள் அனைத்திற்கான காரணங்களையும் நிவாரண முறைகளையும் விளக்கியுள்ளார்.
குடிப் பழக்கத்திற்கான காரணம்
குடிப்பழக்கம் தீர்வதற்கான பரிகார, நிவாரண முறைகளை அறியும் முன், குடிப்பழக்கம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும். சகவாசம், அந்தஸ்து, காதல் தோல்வி, உயர்பதவி, மனக் கவலைகள், கடுங்குளிர், போதை, மகிழ்ச்சி நிறைந்த செல்வம், வியாபார மேம்பாடு போன்ற காரணங்கள் ஒரு சமாதானமாகவே அமைகிறதே தவிர குடிப்பழக்கம் ஏற்படுவதற்கான உண்மையான காரணங்களைத் தக்க ஆத்ம விசாரம் மூலமாக அவரவரே அறியலாம் என ஸ்ரீஅகஸ்தியர் உரைக்கிறார்.
தனக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டதற்கான காரணங்களை மனப்பூர்வமாக அறிந்து கொண்டால் தான் அதைத் தீர்ப்பதற்கான நிவாரண முறைகளைப் பின்பற்றலாம். இல்லையெனில் விட்ட குறை தொட்ட குறையாகப் பிறர் அறிந்தும் அறியாமலும் இப்பழக்கம் வாழ்க்கை முழுவதும் தொடரும்.
1. பிறரை மயக்கித் தன் வசப்படுத்தி ஏமாற்றுதல்
2. அழகு, அந்தஸ்து, பலம், செல்வம் இவற்றால் பிறரை மயக்கி, மிரட்டி தன் சுகபோகங்களை அனுபவித்தல்
3. போதைப் பொருட்களை விற்றுப் பணம் சேர்த்தல்
4. மதுபான வகைத் தொழிலை நடத்துதல் (Breweries, Wine Shops)
5. ஆபாசங்களினால் பிழைப்பை நடத்துதல்
6. பிறர் அழகில் மயங்கித் தன் குடும்பத்தை நிராதரவாக விட்டுவிடுதல்
7. அவ்வப்போது பிறருக்கு மதுபான வகைகளை அளித்து மகிழ்ச்சியூட்டித் தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுதல்
8. பொழுது போக்கிற்காக, நேரத்தைக் கடத்துவதற்காக போதையில் தன்னையிழத்தல்
9. வீட்டில் பிரச்சனைகளை சமாளிக்க அஞ்சி போதை நிலையிலேயே தன்னையிழத்தல்
மேற்கண்ட முன்ஜன்ம, இப்பிறவியின் பல அதர்மச் செயல்களினாலும் இவை தவிர வேறு பல தீவினைகளினாலும் குடிப்பழக்கம் தொற்றுகிறது. எனவே குடிப்பழக்கம் என்பது முந்தைய ஜென்மங்களின் தீவினைத் தொகுப்பே! மிகவும் பெரிய பாவச் செயல்! பிறவிகளைப் பெருக்கும் பாவச் செயல்! இன்றைய நிலையில் அபரிமிதமான செல்வத்தால் நாள்தோறும் குடித்தால் வரும் பிறவிகளில் பெருங்குடிகாரனுக்கு மனைவியாக, குழந்தையாகப் பிறந்து வாழ்நாள் முழுவதும் அடி, உதை, நரக வேதனைதான். கணவனுடைய / பிள்ளைகளுடையை குடிப் பழக்கத்திற்கு அவர்களுடைய தீவினைகள் மட்டுமின்றி தம்முடைய முன்ஜன்மத் தீவினைகளும் காரணமாகின்றன என்பதை ஒவ்வொரு பெண்மணியும் தெளிவாக உணர்ந்து அதைக் களைவதற்கானத் தக்க பரிஹார முறைகளை அறிந்து அவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.
அட்சதையை உருவாக்கும் முறை
60வயதிற்கும் மேற்பட்ட இணை பிரியாது நன்கு வாழ்ந்த தம்பதியர்களான பெரியவர்களைக் கொண்டு நல்ல முழுமையான பச்சரிசி மணிகளைப் பொறுக்கி எடுத்து அவர்கள் தம் திருக்கரங்களால் இறை நாமம் ஓதியவாறே மஞ்சள் குங்குமத்தைச் சேர்ந்து ஆசீர்வாதத்திற்குரிய அட்சதையைப் பெற வேண்டும். இம்முறையையே சித்தர்கள் உத்தமமான ஆசீர்வாதத்திற்குரிய அட்சதையைத் தயாரிக்கம் முறையென அருள்கின்றனர்.
 60 வயதிற்குமேல் இணைபிரியாமல் திருமண வாழ்க்கையை வாழ்ந்தவர்களால் தான் வாழ்க்கையின் இன்ப துன்பங்களைக் கடந்து எவர் மீதும் விருப்பு வெறுப்புமில்லாத சமமான மன நிலையைப் பெறுகின்றனர். இந்நிலையில் கூட தன் பேரன்கள் பேத்திகள் என்ற பாசம் ஒட்டியிருப்பினும், ஆசிர்வதிக்கின்றபோது அனைத்து ஜீவன்களையும் ஒன்றாகக் கருதும் மனோபாவத்தைப் பெறுகின்றனர். 40, 50 வருட இணைந்த மண வாழ்வானது எண்ணற்ற அனுவங்களைத் தந்து அறிவு முதிர்ச்சியை அளிக்கின்றது. இஃதோடு அத்துணை வருட பூஜா பலன்களும் சேர்ந்து கனிந்த ஆசீர்வாதமாக மலர்கின்றது. மேலும் அவ்வயதான நிலையில் நல்வாழ்க்கையோடு இறைஅருளோடு வாழ்ந்தோர்க்கு அப்பிறப்பிற்குரித்தான பெரும்பான்மையான பிராரப்தக் கர்மங்கள் அனுபவிக்கப்பட்டுப் பெரும்பாலும் சஞ்சிதக் கர்மாவே தொக்கி நிற்கும். கணவன் மனைவி இணை பிரியாது நெடுங்காலம் வாழ்வது அவர்கள் பெற்றுள்ள இறையருளைக் குறிக்கின்றது.
மனிதன் பல்வேறு விதமான பாவங்களைச் சுமக்கின்றான். தானம், தருமம், பூஜை, ஹோமம், மூர்த்தி, தீர்த்தம் தல தரிசனங்கள், சித்தர்கள், மஹரிஷிகள் போன்ற உத்தம இறைஅடியார்களின் அருள்முறைகள் போன்ற பல நற்காரியங்களினால் பாவங்கள் கரைக்கப்படுகின்றன. பாவம் தீர்க்கும் வழிகளுள் பெரியோர்களை நமஸ்கரித்தலும் அவர்தம் ஆசீர்வாதங்களைப் பெறுதலும் அடங்கும். பிரபஞ்சத்தில் முதல் முதலாகப் படைக்கப்பெற்ற இனம் நெல் ஆகும். மற்ற தாவரங்களை விட நெல் மிகவும் விசேஷமானது ஆகும். நல்லெண்ணங்களை ஈர்த்து தன்னுள் நெடுங்காலம் உறைய வைக்கும் சக்தியை அரிசி மணி பெற்றுள்ளது. தானங்களுள் சிறந்தாகக் கருதப்படும். அன்னதானத்தில் தான் அன்னம் மூலமாக அற்புத மந்திர சக்திகள், தார்மீக நல்லெண்ணங்கள், ஆன்மீக சக்திகள் ஏழைகளுக்கு அளிக்கப்படுகின்றன.
பின்னப்படாத முழு அரிசி மணிகளில் தான் தெய்வீக சக்திகள் நிரம்பியிருக்கின்றன. இவற்றோடு மங்களத்துவத்தைக் குறிக்கும் மஞ்சள், சக்தி அம்சத்தைக் குறிக்கும் குங்குமம் சேரும்போது பெரியோர்களுடைய கனிந்த நல் ஆசிகளை தாங்கிச் செல்லும் அற்புதக் கதிர் மணிகளாய் உருப்பெறுகின்றன. புஷ்பங்கள் வேதமறைகளின் சக்தியையும் மஞ்சள் மங்கள சக்தியையும் குங்கமம் தீர்க்கமான ஆயுள் சக்தியையும் தாங்கி நிற்பதால் அரிசி மணிகள் பெரியோர்களின் நற்காரிய பூஜா பலன்களையும் தாங்கும் தன்மை உள்ளமையால் மேற்கண்ட முறையில் தக்க பெரியோர்கள் மூலம் அட்சதைகளைச் செய்து பெறுவதே சாலச்சிறந்ததாகும்.

தோல் பொருளால் விளையும் தோஷங்கள்

தோலால் செய்யப்பட்ட காலணிகளை அணிகையில் பல சாபங்களுக்கும் தோஷங்களுக்கும் உள்ளாகிறோம். கறவை நின்ற பசு, எருமை, மட்டுமல்லாது ஆடு, பாம்பு, நாய் போன்ற உயிரினங்களை வதைத்துக் கொன்று அவைகளிடமிருந்து பெற்ற தோல்தான் காலணிகளாக மாறுகின்றன. அக்காலணிகளை அணிந்தால் அத்தகைய உயிர்வதையான மாபாவத்திற்கு நாமும் காரணமாகின்றோம் அல்லவா? இப்படியெல்லாம் பார்த்தால் நாம் சாதாரணமாக வாழ்க்கையையே நடத்த முடியாதே என்ற வினா எழலாம். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் நன்றாகத் தீர ஆலோசித்தே செய்தல் வேண்டும் என்பதையே இத்தகைய கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. மனிதர்கள் காலணிகள் அணிவதைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் யாது உரைக்கின்ற்ன.?
1.இயற்கையாக இறந்த பிராணிகளின் தோலினால் ஆன தோல் பை, பர்ஸ், காலணிகளை அணிவதால்/பயன்படுத்துவதால் தவறில்லை. ஆனால் இதனை அறிவது கடினம்.
2. தோல் பொருட்களை வாங்கியவுடன் அத்தகைய உயிரினங்களின் நற்கதிக்கு மானசீகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
3. எந்தத் தோலாலானது என்பத்தை அறிந்தால் அதன் இன உயிரினங்களுக்கு (ஆடு, மாடு) பழம், காய்கறிகள், உணவினை அளிப்பது ஒரு பரிஹாரமாக, உயிர்வதை தோஷங்களிலிருந்து நம்மைக் காக்கும்.
4. தோல் இனம் அறிய இயலாவிடின் கோடி கோடியாம் தேவதைகள் உறையும் புனிதமான பசுக்களுக்குத்  (தோலுடன் கூடிய) காய், கனிகளை அளித்து காயத்ரீ மந்திரம் சபித்து அவற்றை வலம் வர வேண்டும். இதனால் தோலுக்குரித்தான தேவதைகள் ப்ரீதி ஆவதால் அவை நம்மைப் பல தோஷங்களிலிருந்தும்/ சாபங்களிலிருந்தும் காக்கின்றன.
5. பழைய காலணிகளைத் தூக்கியெறிந்து விடாமல் செப்பனிட்டு ஏழை, எளியோர்க்கு அளிக்க வேண்டும்.
6. வெண்குஷ்டம், பொடுகு, எக்ஸிமா, சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளால் பல வருடங்களாக அவதியுறுவோர் ஏராளம். இவர்கள் யானை, பசுக்களுக்குத் தினந்தோறும் வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற தோலுடன் உண்ணக்கூடிய காய், கனிகளை அளித்து வர, வியக்கத்தக்க முறையில் குணமேற்படும். ஏழைச் சிறுவர், சிறுமியர்கட்கு இலவசமாகக் காலணிகள் அளித்தலும் விசேஷமானதாகும். இத்தகைய தான தர்மங்களே நோய் தீர்க்கும் மருந்துகள்!
7. இயன்றவரை தோலினால் ஆன பொருட்களைத் தவிர்த்தல் நலம். அவற்றை வாங்க வேண்டிய அத்யாவசியம் ஏற்படில் மேற்கண்ட தான தர்மங்களே சிறந்த பரிஹாரங்களாகும். அவற்றைக் கோயில் ஆஸ்ரமங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிகள் போன்றவற்றிற்குத் தானமாக அளித்து வருதலும் சிறந்த பரிஹாரமாகும். தானத்திற்குரித்தான தர்மதேவதைகள் அத்தகைய தோஷங்களை ஏற்பதால் தானம் பெறுவோரை அவை (தோஷங்கள்) தீண்டா.

யானையின் ஆன்ம பலம்

வெறும் இலை, தழைகளை மட்டும் உண்டு எத்தகைய உடல் பலத்தை யானை பெற்றுள்ளது! இது ஆன்மீக பலத்தின் முன்னோடி என சித்தர்கள் அருள்கின்றனர். அத்தகைய பெரிய யானையையே அங்குசம் எனும் பன்னிரண்டு அங்குலக் குச்சியால் அடக்கும் மனிதன், கேவலம் அரை அவுன்ஸ் மதுவிற்கும், இரண்டு அங்குல பீடி போன்ற புகை போதை பொருளுக்கும் அடிமையாகின்றான். என்ன கொடுமை இது! இது எதைக் குறிக்கிறது?
பிறரை அடக்கத் தன்னுடைய அபாரமான புத்தியின் சக்தியைப் பயன்படுத்தும் மனிதன், சில ஆசாபாசங்களை நாடிச் செல்லும் தீய மனதிற்கு அடிமைப் பட்டுவிடுகிறான். மனம் புத்தியை அடக்கி விடுகிறதா? இல்லையில்லை! புத்தி மிகவும் சக்தி வாய்ந்ததே! மாயா விதிகளுக்கு ஏற்ப மனம் ஆடுகின்ற போது புத்தி, மனதிற்குப் பணிகின்றது. அவ்வளவே!
யானையும் நல்ல வைராக்கியமான, திடமான மனம் உடைய ஜீவனே! ஓர் அங்குசத்திற்கு பயந்தா அது மனிதன் சொற்படி ஆடுகிறது! அல்ல அல்ல! அடக்கம், பணிவு காரணமாக அது மௌனமாக இயங்குகிறது! இதனை மனிதனுக்கு உணர்விக்கும் ஜீவன்களாகவே யானை, ஆமை, எறும்பு போன்ற ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் ஆன்மீக சக்தியின் அளவை மனிதனுக்கு ஓரளவேனும் புரியும்படி காட்டிடவே சாத்வீகப் படைப்பாக இறைவன் யானையைப் படைத்தான். பெரியோர்களின் இயல்பான குணம் சாத்வீகம். மிகவும் சாத்வீகமான யானைக்கு இத்தகைய வலுவான உடல் பலம் எவ்வாறு வந்தது?  இத்தகைய உடல் சக்தி பெற்றிருந்தும் அது பணிவுடன் இருக்கக் காரணம் என்ன? பணியுமாம் என்றும் பெருமை! யானைக்கு இத்தகைய உடல் வலுவவைத் தருவது அதன் ஆன்மீக சக்தியே! இந்த ஆன்மீக சக்தி எவ்வாறு வந்தது? குகை நமசிவாயரைச் சுற்றிப் பதினெட்டு அடி நீளமுள்ள வேங்கை காவல் காக்கும்! மிகச் சிறிய தேகம் கொண்ட குகை நமசிவாயருக்கு எத்தகைய ஆன்மீக சக்தி! அச்சக்தியின் ஒரு துளியே வேங்கையாய் மாய உருக் கொண்டு அவரைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றியது!
யானை உண்பது வெறும் இலை, தழைகளை மட்டுமா? அரும்பெரும் மூலிகைகளையன்றோ அவை! பசுக்களும் ஆடுகளும் உண்ணா அரிய தழைகளை யானை உண்கின்றதன்றோ! அம்மூலிகைகளின் அரிய சக்தியே ஆன்மீக சக்தியாக மாறுகின்றது! ஆன்மீகம் பெருக்கெடுத்தால் அங்கு தோன்றுவது என்ன ? அடக்கமும் பணிவுமே. இவையே யானையின் மொத்த வலு, இவ்விரண்டின் உருகமே அதன் உடல் சக்தி. அடக்கமும் பணிவும் மிகும்போதுதான் ஆசிர்வதிக்கின்ற தகுதியினை இறைவன் வழங்குகின்றான்! இது காரணமாகவே அறுபது வயது, எண்பது வயது நிரம்பிய பெரியோர்களை, பழுத்த தம்பதிகளை, பல்லாண்டுகள் வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை அனுபவித்து தனி அனுபவம் மிக்கோரை வணங்குகின்ற நற்பழக்கம் அமைந்துள்ளது!
ஆசிர்வதிக்கும் யானை
இரண்டு வயது யானைக் குட்டியாக இருந்தாலும் கூட எண்பது வயதுப் பெரியவர்களை துதிக்கையைத் தூக்கி ஆசிர்வதிக்கின்ற அற்புதக் காட்சிகளை இன்றும் காணலாம்! மனிதனல்லாத உயிரினங்களிலேயே ஆசிர்வதிக்கும் அற்புதப் பண்பை உடையது யானையே! அத்தகைய ஆன்மபலத்தை மூலிகை சத்தாய் இறைவன் அதற்களிக்கின்றான். மிருகங்களிடையே ஆசிர்வதிக்கும் ஆன்மீக சக்தி பெற்றது யானையே! மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தின் சிறப்பினை மனித குலம் நன்கு புரிந்து கொள்ளவில்லை.
“சித்த மருந்தா, பேதியாகுமே!! ஆயுர்வேதமா குணமாறதுக்கு ரொம்ப நாளாகுமே” இத்தகைய வியாதியை விரட்டுவது எப்படி என்ற நோக்கில் விஞ்ஞானமய மனம் செயல்படுவதால் விபரீதமான விளைவுகள் [Side Effects] உண்டாகின்றன. ஆயுர்வேத, சித்த மருந்துகள் பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டிருப்பதால், மூலிகைகளின் பண்பால்
1. நோய்களைத் தாங்கும் மனோ சக்தி, உடல் வலிமை
2. பொறுமை, அடக்கம் ஆகியவற்றை அளிப்பதோடன்றி
3. உடலிலிருந்து தீய சக்திகளையும் விலக்கி விடுகின்றன

கம்ப்யூட்டர்

உட்கார்ந்த இடத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்களின் மனோ, கர்ம நிலைகளை அறிந்து அவர்கட்கு அருள்பாலிப்பதென்றால் மஹான்கள், யோகிகள், சித்தர்கள் போன்ற இறைப்பெரும் உத்தம புருஷர்களின் உன்னத அறிவு நிலைக்கு முன் கம்யூட்டர்கள் எம்மாத்திரம்! உண்மையில் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைகின்றபோது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது மாபெரும் தொழிற்சாலைகள், விஞ்ஞானக் கருவிகள் ஒலி, ஒளி இயக்கங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான மின்சார சக்தியை அளிப்பவர்கள் யோகிகளும், மஹரிஷிகளும், சித்தபுருஷர்களும் ஆவர் அவர்களுடைய அறிவின் திறம் முன் கம்ப்யூட்டர் மூளையானது ஒரு பூஜ்யமே. ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் யோக விளக்கங்களில் கலியுகத்தில் உருவாகும் கம்ப்யூட்டரைப் பற்றிய குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. பல லட்சம் வருடங்களுக்கு முன்பு தீர்க்க தரிசனமாக எழுதப்பெற்றவை. எதுவும் இறைவன் விதித்தபடியே நிகழும் என்பதைப் பறைசாற்றும் வேத மறைகளே, சாத்திரங்களே ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களாகும். இவற்றிலிருந்து பல ஆன்மீக ரகசியங்களை நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகள் எடுத்தருள, குருவின் அனுபவ மொழிகளாக, உபதேசங்களாக அவற்றை நமக்குத் தந்தருள்பவர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் ஆவார்.

திருவெறும்பூர் திருத்தலம்

கம்ப்யூட்டர் - பற்றி ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் அருள்வது என்ன ?
நவீன கால கம்ப்யூட்டர் என்பது எறும்புகளால் பயன்படுத்தப்பட்ட கணிதப் பொறிகளே. இன்றைக்கும் பல எறும்புப் புற்றுகளுக்குள் மனிதனின் விஞ்ஞான அறிவுக்கெட்டாத பல சூட்சும ரகசியங்கள் உண்டு. ரேடார் (Radar) , செயற்கைக் கோள் (satellite) போன்ற ராட்சஸ இயந்திரங்களைக் கொண்டு மனிதன் கண்டறியும் புதுமைகளை எறும்புகள் தங்கள் புற்றுகளில் இருந்து கொண்டே கடுகினும் சிறியதான சில அற்புத திரவிய உருண்டைகளால் எளிதில் அறிகின்றன. இவையே Micro chips ஆகும். கம்ப்யூட்டரில் உபயோகமாகும் சிலிக்கானின் உயர்ந்த குணங்களைக் கொண்ட மண்ணாலான மலைப்பகுதியே திருச்சி அருகில் உள்ள திருஎறும்பூரில் ஸ்ரீஎறும்பீஸ்வரர் எழுந்தருளியுள்ள சிவமலையாகும். மேல்நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆன்மீக ரகசியங்கள் தெரியவந்தால், இந்த திருஎறும்பூர் மலையையே பெயர்த்தெடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் ஸ்ரீஎறும்பீஸ்வரராக அருள்பாலிக்கும் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தி! புற்று மண்ணால் ஆன சிவலிங்கம். எனவே அபிஷேகம் கிடையாது. சித்த புருஷர்கள் மட்டுமே அபிஷேக ஆராதனைகளைச் செய்ய இயலும். இன்றைக்கும் இக்கோயிலில் உள்ள எவரும் உட்செல்ல இயலா நிலச்சுரங்கத்தில் தியானம் புரியும் சித்த புருஷர்கள் இரவில் ஸ்ரீஎறும்பீஸ்வரருக்கு எறும்பு வடிவில் பூஜைகளை நிகழ்த்துகின்றனர்.
1963-ல் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் சிறுவனாயிருந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கட்ராம ஸ்வாமிகளிடம் “என்னடா பெரிய கம்ப்யூட்டர்! நம்ப ஊர் எறும்புங்க வேண்டாம்னு தூக்கிப் போட்டதைத் தான் விஞ்ஞானிங்க கம்ப்யூட்டர்னு பெரிசாக் கொண்டாடுறாங்க. அணுராதாக்கிரமண சரஸ்வதின்னு ஒரு சரஸ்வதி தேவி இருக்கா. இந்த தேவிதான் கம்ப்யூட்டருக்கு உரித்தான தேவி. இந்த அம்பிகைக்கு பூஜை பண்ணினா கம்ப்யூட்டர்ல பெரிய, பெரிய கண்டு பிடிப்புகளை உருவாக்கலாம். இந்த உலகத்துக்கான கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருஎறும்பூர் சிவன் கோவில்ல தான் இருக்கு. சமயம் வரும்போது எல்லோருக்கும் எடுத்துச் சொல்லிடு” என்று அருளினார்.
கம்ப்யூட்டர் துறையைச் சார்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், தொழிலாளிகள் இக்கோவிலில் :
1. மூலவரைச் சுற்றி முட்டியிட்டிப் பிரதட்சிணம் செய்தல்
2. கோவில் பாறை, மலைப்படிகள் போன்றவற்றில் நவதான்யங்கள், ரவை, சர்க்கரை,  கலந்த மாவினை எறும்புகளுக்கு இடுதல்
3. நிலச்சுரங்கப்படி அருகே 108 பசுநெய் தீபங்கள் ஏற்றி சித்தர்களை தியானித்தல்
4. ஸ்ரீஅணுராதாக்ரமண சரஸ்வத்யை நம : (ஸ்ரீஅணுராதாக்ரமண சரஸ்வதியே போற்றி) என்ற நாமத்தை ஜெபித்து ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு சிலேட்டு, பல்பம், புத்தகங்கள் அளித்தல்.
5. ஸ்ரீஅணுராதாக்ரமண சரஸ்வதியின் நாமத்தை தினந்தோறும் 1008 முறையாவது ஜெபித்தல் போன்ற வழிபாடுகளைக் செய்திட கம்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனைகளைப் புரிவர்.
எறும்புப் புற்றுகளிலிருந்து வெளிப்படும் செம்பழுப்பு நிற, கறுப்பு நிற வஸ்துக்கள் அவைகளால் நிராகரிக்கப்பட்ட சிறு கருவிகள் ஆகும். இவைகளை அவற்றின் முட்டைகளென நாம் கருதுகிறோம். அது தவறு! இந்த திரவியங்கள் Micro Chip –பை விட உன்னதமான சிறு நுணுக்கமான கருவிகள். கம்ப்யூட்டருக்கு உயிர் நாடியாகக் கருதப்படும் Micro Chip என்ற கருவியின் அளவு ‘கால்’‘ (1/4) அல்லது ‘அரை’‘ (1/2) (inch) ஆகும். இதனுள் பத்தாயிரக்கணக்கான Memory Units இருப்பதாகக் கூறுகிறார்கள். இவற்றை சாதாரண மனிதக் கண்களால் பார்க்க இயலாது. ஆனால் ஒரு எறும்ப்பினால் அனைத்தையும் பார்க்க இயலும். மைக்ரோ சிப் என்பது சிலிகான் எனப்படும் மண்வகை உலோகக் கனிமப் பொருளில் ஆனது. இதுவே எறும்பின் புற்று மண்!
எனவே மனிதனுக்கு முன்னரேயே புற்று மண்ணின் ரகசியங்களை அறிந்தே எறும்புகள் தங்கள் புற்றுகளில் லட்சக்கணக்கான micro chip  களை உருவாக்கி வருகின்றன. இன்றைக்கு கம்ப்யூட்டர் துறையில் சாதனை புரிந்து பரிணமிக்கும் எல்லோருக்கும் உத்தம எறும்புகளாய்ப் பிறப்பெடுத்து ஸ்ரீஎறும்பீஸ்வரருக்கு பல ஜன்மங்களில் சேவை புரிந்தவர்களே .

குரு கிரக சம்பவம்

சென்ற மாதத்தில் july1994  வியாழன் (குரு) – Jupiter கிரஹத்தின் மேல் ஒன்பதுக்கும் மேற்பட்ட பெரிய விண்கற்கள் மோதியதால் உலகமே பரபரப்படைந்தது அல்லவா? இதனைப் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன?
இதனைப் பற்றி ஸ்ரீஅகஸ்தியரின் குருகிரஹநாடிகள் விளக்கம் தருகின்றன. வியாழன் கிரஹத்தில் கோடிக்கணக்கான உயிரின வகைகள் உள்ளன. வியாழன் கிரஹவாசிகள் மனிதர்களை விடக் கோடி மடங்கு அறிவில் சிறந்தவர்கள். மிகுந்த குருபக்தி கொண்டவர்கள். உலகில் எப்பகுதியிலும் கொடியவர்களின் ஆதிக்கம் மேலோங்கும் போது அப்பகுதியில் உள்ள நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக வியாழன் கிரஹவாசிகள் அங்கு வந்து பல சற்குருமார்களின் துணையோடு நல்லவர்களைக் கரைசேர்த்து ஆரவாரமின்றி திரும்பிச் சென்று விடுகின்றனர். இவ்வளவு சக்தி வாய்ந்த வியாழன் கிரஹவாசிகளி வியாழன் கிரஹத்தில் இருந்தவாறே நல்லவர்களை ஏன் காப்பாற்றக் கூடாது? அதற்காக ஏன் கீழே இறங்கி வரவேண்டும். நல்லவர்கள் மட்டும் தான் காப்பாற்றப்பட வேண்டுமா? ஒன்றுமறியா அப்பாவிகளின், ஜீவன்களின் கதி என்ன? தீவினைகளைப் புரிவோர் அதற்குரித்தான தண்டனையைப் பெற்றாக வேண்டும் என்பது தர்ம நியதி. பிறர்க்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கித் தனித்து வாழ்வதைவிடப் பல நற்காரியங்கள் புரிந்து தீயவர்களிடையே வாழ்ந்து நல்மக்களுக்குக் கவசமாகக் காத்தலே நன்று. இதற்காகவே இந்த கிரஹ தேவதைகள் இக்கொடியோர்களையும் தங்கள் கிரஹத்தில் வாசம் செய்ய அனுமதிக்கின்றனர்.
பூமியில் ஒரு பொய்கூட சொல்லாத, ஒரு தீய நினைவும் அண்டாத தூயமனம், உடல் உடைய ஜீவனைக் காண முடியுமா? ஆனால் எல்லா ஜீவன்களும் இந்நிலையை நோக்கிய அறிந்தோ அறியாமலோ வாழ்க்கைப் பிரயாணம் செய்கின்றனர். இத்தகைய நல்வழியைக் காட்ட வல்லவர்களே ஸ்படிகம் போன்ற மனதை உடைய சித்தர்கள் யோகிகள் மஹரிஷிகள் போன்ற தெய்வ புருஷர்கள். வியாழன் கிரஹத்தில் உன்னத தெய்வ நிலையை அடைந்தோர் அதிகமாகக் காணப்படுகின்றனர். அந்தத் தாக்குதலின் பிரதிபலிப்பே சமீபத்தில் விண்கற்கள் வியாழன் கிரஹத்தில் மோதிய நிலையாகும். விஞ்ஞானிகளின் கண்களுக்கு இது விண்கற்களாகவே தோன்றும். மெய்ஞ்ஞானமிருப்பின் உண்மை புரியும். “Where Modern Science Ends There Spiritual Science Begins”
விஞ்ஞானமும் இறைவனின் படைப்பே. விஞ்ஞானம் நிரூபணத்தை நாடுகின்றது. மெய்ஞானம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.  Faith moves mountains whereas scientific cranes lifts stones only that too subject to technical faults and power failures! நம்பிக்கையே இறைவனைக் குருவைக் காட்டும்.
தியாகம் என்றால்....
சோதனைகளை எதிர் நோக்கி, பிறருக்குச் சேவை புரிந்து வாழ்வதையே உத்தமமான வாழ்க்கையென சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். தீயவர்களின் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் நல்லவர்கள் மனித, விலங்கு எந்த வகையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் தீயவர்க்ளிடமிருந்து பிறரியக்காக்கும் சேவையில், நல்லோர் தம் உயிருக்கு அஞ்சாது சுயநலம் பாராது சேவை புரிகையில் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
வியாழன் கிரஹ வாசிகள் அனுப்புகின்ற் செய்திகளைப் பெறுகின்ற அளவுக்கு உயர்ந்த ஆன்மீக நிலையை நல்லோர் அடையவில்லை. ஆனால் மக்கள் சேவை மூலம் அவர்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே உன்னத தெய்வீக சக்தி பெற்ற வியாழ கிரஹவாசிகள் அவ்வப்போது இத்தகைய நல்லவர்களுக்காகக் கீழ் இறங்கி வந்து மானுட தேகங்களில் உலவி அந்தந்த மொழிகளில் பேசி மதகுல வழக்கப்படி காரியங்களைப் புரிந்து நல்லவர்களைக் காப்பாற்றித் தங்கள் கிரஹம் மீள்கின்றனர்.
விண்ணுலகச் சமுதாயம்
பூமியில் கொடியவர்கள் உலவுவது போல விண்ணுலக கிரஹவாசிகளில் தீவினையாளர்கள் உண்டு. இவர்கள் வியாழ கிரஹவாசிகளின் நற்காரியங்களை எதிர்த்துத் தீவினைகளைப் பரப்புகின்றனர். இவை எல்லாம் சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்களாகும். இக்கொடியவர்கள் சனி, ராகு, கேது, சூரியனில் ஒரு பகுதி, சந்திரனில் ஒரு பகுதி, செவ்வாய் கிரஹம், புதனில் ஒரு பகுதி போன்ற கிரஹங்களிலும் வியாழ கிரகத்தின் பல மூலைகளிலும் குடி கொள்கின்றனர். இது கருதியே ஜோதிடத்தில் செவ்வாய், ராகு, கேது, சனி போன்றவை பாபகிரஹங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் இதற்காக இந்த கிரஹங்களைத் தீயவை எனக் கருதக் கூடாது. புண்ணிய ஸ்தலங்களான காசி, ராமேஸ்வரத்திலும் கூட கொள்ளையரிகளின் சஞ்சாரம் உண்டு! கொடியவர்களும் என்றேனும் ஒரு நாள் மனம் திருந்தி இறைவழி காண வேண்டாமா?

விசேஷ தினங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் பல சிறப்பான நாட்கள் அமைகின்றன. இவற்றில் ஒவ்வொன்றின் மகத்துவத்தையும் அறிய வேண்டியது அனைவருடைய கடமையாகும். தினமும் பண்டிகை என்றால் ஏழை எளியவர்கள் என் செய்வார்கள்? இது கருதியே ஜாதி பேதமின்றி எல்லோருடைய சார்பாகவும் கோயில்களில் தினமும் பூஜை, அபிஷேகம், ஆராதனை, பூச்சொரியல், தேர் உத்ஸவம், தான தர்மம் – இவ்வாறாகப் பலவும் கொண்டாடப்படுவதால் இந்த மக்கள் சேவையே உண்மையிலேயே மஹத்தான மஹேசன் சேவையாகும். தனியொருவருக்காக ஆலயங்களில் பூஜைகள் நடத்தப்பெறுவதில்லை. ஆத்திகன், நாத்திகன், கோயிலுக்கு வருபவர்கள், வராதவர்கள், ஜாதி, மத பேதமின்றி அனைத்து ஜனங்கள், உயிரினங்கள், ஜடப் பொருட்கள் போன்று எல்லா பிரபஞ்ச வஸ்துக்களுக்காகவும் கோயில்களில் பூஜைகள்/விழாக்கள் நடக்கின்றன.
ஆலயங்களில் பொது பூஜைக்குப் பிறகுதான் தனிப்பட்டவர்களுடைய அர்ச்சனைகள். தனி பூஜையும் கலியுகத்திற்காக மக்களின் மனோநிலைக்கேற்ப ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீபரசுராமர் போன்ற மஹான்கள், மஹரிஷிகளால் சமீப யுகங்களில் படைக்கப் பெற்றவையாகும். சுயநலமற்ற பிரார்த்தனையே உத்தமமானது. பல விசேஷமான நாட்களின் மஹிமை அறியாது நாம் பல பெறற்கரிய சந்தர்ப்பங்களை இழந்து வருகிறோம். அவற்றை அறிந்து உரிய முறையில் கொண்டாடினால் வாழ்க்கையில் பல துன்பங்களையும், விபத்துக்களையும் தவிர்க்கலாம். தக்க சற்குருமார்களை நாடிப் பெறற்கரிய இம் மானுட சரீரத்தில் வாழும் நாம் ஒவ்வொரு நாளையும் அதன் சிறப்பை அறிந்து வாழ்வோமாயின் “நல்வாழ்க்கை” அமைந்தது என்ற ஆத்ம திருப்தியுடன் இறைவழியில் பீடுநடை போடலாம். இல்லையேல் ஆசாபாசங்களுடன், காம, குரோதக் குற்ற உணர்வுகளுடன் விரக்தியாக வாழ்க்கையை முடித்துக் கோடி கோடியாய் ஜென்மங்களெடுத்துப் பிறவிதோறும் துன்பந்தான் சூழும். அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பார்த்து விடைகாணுங்கள்!
குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையே! தனித்து எதையும் சாதிக்க முடியாது! குருவைத் தேடுங்கள், தேடின் அவர் உங்களை நாடி வருவார்! இறை நம்பிக்கையோடு அமைதியாக இருந்தாலும் குருவை நாடாது ஒருவன் தனித்தே “நம்மால் பிறருக்குத் துன்பம் வரக்கூடாது” என்று ஒதுங்கி வாழ்ந்தால் அவனுடைய மறுஜென்மம் என்ன தெரியுமா? செம்மறியாட்டுப் பிறவி! எறும்புப் பிறவி, காக்கை பிறவி! எனக் கூடிவாழும் பிறவிகள்! தனித்து வாழ்ந்தால் இதுவே கூடிவாழ்வதின் தத்துவத்தை விளக்க ஆண்டவன் தரும் பிறவிகள். (வாழ்க்கைப்) பயிற்சி!  ஆன்மீகத்தில் எந்நிலையில் பின்தங்கி இருக்கிறோமோ அதை நிவர்த்திக்க தக்கதொரு பிறவி! சற்குரு நடத்தும் சத்சங்க இறைபணிகளில்தான் ஆன்மீகத்தில் உன்னத நிலைகளைத் தரும் கோயில் திருப்பணி, தான தர்மங்கள், விசேஷமான தானங்கள் (மாங்கல்ய தானம், கோதானம் etc…) பெறற்கரிய ஜப, தபப் பயிற்சிகள், கூட்டு நாம சங்கீர்த்தனம் க்ஷேத்ராடனம் போன்று பலவித இறைப்பணிகளை நிறைவேற்றிடலாம். இவற்றால்
1. அற்புதமான புண்ய சக்திகளைக் கவசமாகப் பெற்று வாழ்க்கையில் பல இன்னல்களைக் கழித்து விடலாம். இத்தகைய புண்யசக்திகள் குரு அருளுடன் பிரகாசிப்பதால் இவை மரணத்திற்குப் பின் உள்ள நிலைகளிலும் கூட வரும். தனித்து வாழ்வதில் கிட்டும் புண்ணிய சக்திகள் லௌகீக வாழ்விற்கே பயன்படும்.
2. தெளிந்த ஞானம் கிட்டும். இதனால் எந்த இன்ப, துன்பத்தையும் அதிரிச்சியின்றி (heart attack etc..,) உணர்ச்சிவசப்படாமல் (excitement) எதிர்நோக்கலாம்.
3. எதிலும் மனதிருப்த்தி (contentment) கிட்டும். இதனால் காம, குரோத உணர்வுகள் மறையும். காம குரோதத்திற்கு அடிமையாகாத மனிதனே கிடையாது. சத்சங்க இறைப்பணிகளில் இவை முறைப்படுத்தப்படுவதால் நல்லொழுக்கம் சிறந்துவிளங்கும். மேலை நாடுகளில் விஞ்ஞானம் மேன்மை பெற்றாலும் வாழ்க்கைப் பிரச்சனைகள் மலைபோல் குவிவதற்குக் காரணம் ஒழுக்கமின்மையே!
4. நம் சந்ததியினர் (Off springs) நல்லொழுக்கத்துடன் இறைபக்தியுடன் வாழ சத்சங்க நற்பணிகள் குறிப்பாக தான தர்மங்கள் கோவில் உழவாரப் பணிகள் சிறந்த வாழ்க்கை பயிற்சியை (Practical Training) அளிக்கின்றன. சிறுவயதிலேயே அவர்களை நாம சங்கீர்த்தனம், கோவில் பணிகள், தான தர்மங்களில்  ஈடுபடுத்த
1. அவர்கள் ஞாபகசக்தி, அறிவுவிருத்தி தானாகவே பெருகி நல்வழி காட்டும்.
2. ஒழுக்கமான அடிப்படை வாழ்க்கை அமையும். தீய பழக்கங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கை எந்நிலையிலும் அவர்களை அணுகாது! ஸ்புடம் போட்ட தங்கமாக மிளிர்வார்கள்!
சத்சங்கம் என்றால் (சத்தியமான கூட்டம்) எல்லாம் வல்ல பரம்பொருளை மட்டும் நம்பி அவனருளால் ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவையை மருத்துவ வசதி, தான, தர்மங்கள் போன்ற நற்பணிகள் மூலம் ஆற்றும் இறையடியார்களின் கூட்டமே! அந்த எல்லாம் வல்ல பரம்பொருளே நம்மைக் கரையேற்றுவதற்காக பூலோகத்தில் சற்குருவாக மலர்ந்து அருள்பாலிக்கின்றார்!
செப்டம்பர் மாதத்திற்குரிய விசேஷ தினங்கள்
மக்களுக்கு அறிமுகமாகாத விசேஷ தினங்களின் மகத்துவத்தையும் யாவரும் அறிய சில பண்டிகைகளின் ஆன்மீக இரகசியங்களையும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியவாறு வழங்குகிறோம்


1.

2.9.1994
(ஆவணி 17)

வெள்ளி

வைஷ்ணவ ஏகாதசி

2.

5.9.1994
(ஆவணி 20)

திங்கள்

சோமவார பிரதட்சிண அமாவாசை

3.

9.199.94 ஆவணி 24

வெள்ளி

விநாயகர் சதுர்த்தி

4.

11.9.1994 ஆவணி 26

ஞாயிறு

முக்தாபரண விரதம்

5.

13.9.1994 ஆவணி 28

செவ்வாய்

ஆவணி மூலம்

6.

16.6.1994 ஆவணி 31

வெள்ளி

க்ஷீர விரதம் வாமன ஜெயந்தி

7.

21.9.1994

புதன்

அசூன்ய விரதம்

8

23.9.1994

வெள்ளி

மஹாபரணி

9.

20.9.1994 to 4.10.1994

ஒரு பட்சம் (15நாட்கள்)

மாளயபட்சம்

வைஷ்ணவ ஏகாதசி

ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொன்றும் தனித்தனிப் பெயர்களைத் தாங்கி (ஸர்வ சயன ஏகாதசி, ஸர்வ யோகினி ஏகாதசி etc..) பற்பல மஹிமைகளைக் கொண்டுள்ளன. வைஷ்ணவ ஏகாதசி ஹரியும் சிவனும் இணைந்து காட்சியளிக்கும் ஸ்ரீசங்கர நாராயண சுவாமிக்கு உரித்தான ஏகாதசியாகும். வைஷ்ணவ ஏகாதசி அன்று ஸ்ரீவிஷ்ணு அம்சமான தோசையுடன் சிவஅம்சமான மிளகு சேர்த்து மிளகு தோசையாக வார்த்து ஸ்ரீசங்கர நாராயண சுவாமி எழுந்தருளியுள்ள தலங்களில் தானமாக அளிக்கவேண்டும். ஸ்ரீசங்கர நாராயண சுவாமி சன்னதி அமையா இடங்களில் வீட்டிலேயே ஸ்ரீசங்கர நாராயணர் படத்திற்கு நைவேத்யம் செய்து மிளகு தோசையை ஏதேனும் சிவ, விஷ்ணு தலங்களில் ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும். வைஷ்ணவ ஏகாதசி அன்று பெருமாளுக்கு பட்டு பீதாம்பரம் சாற்றுவது அற்புதமானப் பலன்களைத் தரும். இயலாதோர் நார்ப்பட்டு வஸ்திரங்களைப் பகவானுக்கு அளிக்கலாம். பிரிந்த கணவன்-மனைவி, விவாகரத்து நிலையில் உள்ள தாம்பத்ய உறவு, பெற்றோர்கள் பிள்ளைகளிடையே கடும் மனஸ்தாபங்கள் – இவர்கள் வைஷ்ணவ ஏகாதசியை தான தர்மங்களுடன் நன்கு கொண்டாடிட பிரிந்த கணவன் மனைவி, பிள்ளைகள் ஒன்று சேர்வர். பொதுவாக ஏகாதசியானது ஆரோக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பூண்டு, வெங்காயம் ஆகியவை சக்தி கூட்டும் சைவக் காய்கறிகளாகக் கலியுகத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வெங்காயத்திற்கு “அடிநிலத் தாமரை” என்று பெயர். பூமியின் கீழ் தாமரையைப் போல் வெங்காயத்தின் மேல் ஸ்ரீலட்சுமி வாசம் செய்கிறாள். வெங்காயம் என்பது லட்சுமி அம்சம் பொருந்தியதால் வைஷ்ண ஏகாதசியன்றும், மிளகு தோசையுடன் (சிவ-விஷ்ணு அம்சங்கள்) எண்ணெய் (பார்வதி அம்சம்) கலந்த வெங்காய (லட்சுமி அம்சம்) சட்னி சேர்த்து தானமாக அளிக்க ஸ்ரீசங்கர நாராயண ஸ்வாமியின் பரிபூரண அனுக்கிரஹம் கிட்டும். ஏகாதசியன்று விரத நாளாயிற்றே! அன்னதானம் செய்யலாமா? உணவில் வெங்காயம் சேர்க்கலாமா? என்ற கேள்விகள் எழும்.
கலியுலகில் ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்போர் 99-99% கூடக் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறலாம். ஏகாதசிக்கு ஒரு நாழிகை முன்னர் தசமியிலேயே ஆரம்பித்து, துவாதசி முடிந்து ஒரு நாழிகை வரை பசி, தூக்க உணர்வுகள் சிறிதும் இல்லாமல் விரதம் இருத்தலே சத்தியமான ஏகாதசி விரதமாகும். காலண்டரைப் பார்த்துவிட்டு “அடடே! இன்று ஏகாதசி! காபி, பழம், பலகாரத்தோடு விரதம்” என்று விரதம் கொள்ளும் அவல நிலைதான் கலியுகத்தில் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய விரத பங்கங்களோடு ஏகாதசி அமைந்தால் அதற்குக் கொடிய சாபங்கள் வந்தமையும்.
புலால் உண்போரும் ஏகாதசியைப் பற்றி அறியாதவர்களும் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாதவர்களும் மிகுந்திருக்கும் கலியுகத்தில் ஆத்மார்த்தமாக ஏகாதசி விரதம் பூண்டிருப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏகாதசி விரதம் ஏற்காவிடில் சாபங்கள்! முறையாக விரதம் ஏற்பதற்குப் பலவித கட்டுப்பாடுகள். இக்கட்டான நிலையில் என் செய்வது? இதற்காகவே சித்த புருஷர்கள் பல பரிகாரங்களை அருளியுள்ளனர். அவற்றை வைஷ்ணவ ஏகாதசி, ஸ்ரீவைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் நிறைவேற்றிட ஏகாதசி விரதம் பூணா நிலைக்கான சாபங்கள் குருவருளால் தீரும்.
மேலும் பூலோகத்தில் அரைகுறையாக ஏகாதசியை அனுஷ்டித்தோர் மேலுலகம் சென்றவுடன் அதற்கான பிராயச்சித்தங்களைத் தேடுகின்றனர். கலியுகத்தில் தங்கள் வம்சாவழியினர் சரிவர பூசைமுறைகளைச் செய்யாமையால் விண்ணுலகவாசிகள் கவலை கொள்கின்றனர். அவை சாபங்களாகவும் மாறி பித்ரு சாபங்களாக அமைவதுண்டு. எனவே அவர்கள், சித்தர்கள், மஹரிஷிகளாகிய சற்குருவின் மூலம் பல தான தர்மங்களைப் பிராயச்சித்தங்களாக நிறைவேற்ற முயல்கின்றனர். எனவே ஏகாதசி விரதத்தை பரிபூர்ணமாக அனுஷ்டிக்க இயலாதோர் சித்தர்கள் அருளியுள்ள வைஷ்ணவ ஏகாதசிக்குரித்தான தான தர்மங்களையாவது நிறைவேற்றி ஏகாதசி அனுஷ்டித்ததின் பலனைப் பெறுவார்களாக!
வெங்காயம், பூண்டு பழக்கமில்லாதோர் தாங்கள் உண்ணாவிடினும் மேற்கண்ட மிளகு தோசையை வெங்காய சட்னியுடன் அன்னதானம் செய்தல் வேண்டும். இதனால் லெட்சுமியின் அம்சம் நிறைந்த வெங்காயம் உணவில் சேர்ந்திட அதைப் பெறுகின்ற ஏழை எளியோர் ஸ்ரீலட்சுமி கடாட்சத்தால் வறுமையிலிருந்து விடுபட வழிகாணலாமன்றோ! அரைகுறை அனுஷ்டானத்தில் சம்பிரதாயங்களை நடத்துவதை விட மனப்பூர்வமான தான தருமங்கள் தான் உண்மையான பலனைத் தரும்
பல செல்வக் குடும்பங்களில் செல்வமே விவாகரத்திற்குரிய பிரச்னையாக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் செல்வத்தை முறையாக தான தர்மங்களுக்குப் பயன்படுத்தாததே ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் செல்வத்தை எவ்வித தான தர்மங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆன்மீக ரகசியத்தை அறிந்தவர்கள் சித்த புருஷர்களே. மனம் போன போக்கின்படி தானத்தைச் செய்தல் முழுமையான தான பலன்களைத் தராது. எந்த தானத்தையும் முறைப்படி செய்தால் தான் பூரண முழுப்பலன் உண்டு. ஆனால் எந்தப் பிரச்சனை தீருவதற்கு எந்த தானத்தை எவருக்கு எவ்விடத்தில் செய்ய வேண்டும் என்பதை சற்குருவினை நாடியே அறிய வேண்டும்
லெட்சுமியின் அம்சமான வெங்காயம் கலந்த மிளகு தோசையை வைஷ்ணவ ஏகாதசியன்று ஸ்ரீசங்கர நாராயணன் கோயிலில் அளித்திட விவாகரத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். லெட்சுமி கடாக்ஷம் என்பது செல்வம் பெருகுவது மட்டுமில்லாமல் வரும் செல்வத்தால் வேறு எந்தப் பிரச்னைகளும் வரக்கூடாது என்பதுமாகும். இதற்குத் தக்க சற்குருமார்களை நாடி தான தர்மம் செய்யும் வழிவகையறிந்தால் எவ்விதத் துன்பங்களும் இல்லாமல் செல்வம் பெருகும். இதுவே உண்மையான லட்சுமி கடாட்சம்.
ஏகாதசி விரதமென்பது பசியுணர்வு சற்றும் தோன்றா வண்ணம் நாராயண தியானத்தில் திளைப்பதாகும். பசியெடுத்தால் அது ஏகாதசி விரதத்திற்குப் பங்கமாகும். உண்மையான விஷ்ணுபக்தியில் திளைப்பவர்க்கு ஆன்மீகப் பசி தவிர உணவு பசி தோன்றவே தோன்றாது. எனவே ஏகாதசி விரதமிருப்பவர்கள் தங்களுக்குப் பசியெடுத்தால், தங்களுடைய பக்குவமில்லாத ஆன்மீக நிலையை இவ்வாறாகவே அறிந்து கொள்ளலாம். பசியெடுக்கும் வயிற்றிற்கு உடனே பசியுணர்வு தோன்றா விரதமே பக்குவமான ஏகாதசி விரதமாகும். இயன்ற வரை பட்டினி கிடப்பது. காபி, பலகாரம் மட்டும் ஏற்பது இவையெல்லாம் இடையே ஏற்பட்ட விரத பங்கத்திற்கான அடையாளங்கள். எனவே பல தோஷங்களோடு முழுமையற்ற முறையில் ஏகாதசி விரதம் மேற்கொள்வதை விட முறையான ஏகாதசி தானங்களால் ஏகாதசி விரத பலன் தானே வந்து சேரும்.

சோமவார பிரதட்சிண அமாவாசை

திங்கட்கிழமை அமையும் அமாவாசைக்கு சோமவார பிரதட்சிண அமாவாசை என்று பெயர். அனைத்துக் கோயில்களிலும் குறிப்பாக அரச விருட்சம் அமைந்துள்ள கோயில்களில் அடிப்பிரதக்ஷிணம் செய்து கோயிலை வலம் வரவேண்டும்.
மருதாணியின் வாசனையை உண்டு வாழும் அணுத்துகள் “மருத ஜீவகள்” கோயிலில் வாசம் செய்கின்றன. சித்த புருஷர்கள், மகரிஷிகள் கோயிலை வலம் வருகையில் கோயில் பாதையில் வாழும் அணுத்துகள் மருத ஜீவிகள் அவர்களுடைய ஆன்மீக சக்திகளையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொள்கின்றன. அவற்றைப் பக்தர்களுக்காக வழங்க வேண்டுமல்லவா ? எப்படி?
புதிதாக மருதாணியிட்ட கால்களோடு மஞ்சள் நீரால் கழுவி அடிப்பிரதட்சிணம் செய்கையில் அணுத்துகள் மருத ஜீவிகள் மருதாணியின் இனிய மணத்தை உண்டு தாங்கள் சித்தபுருஷகள், மகான்களிடமிருந்து பெற்ற தெய்வீக சக்தியை பக்தர்களுக்குத் அளித்து அவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்ற அருள்பாலிக்கின்றன. அடிப்பிரதக்ஷிணத்திற்குப் பிறகு, மிளகு கலந்த வெண்பொங்கலை ஏழை எளியோருக்குத் தானம் அளித்திட பித்ரு தேவர்களின் நாயகனான ஸ்ரீமகாவிஷ்ணு அனுக்கிரஹிக்கின்றார். அமாவாசையன்று அனைத்துக் கோயில்களிலும் கூடும் பித்ருக்களின் பரிபூரண ஆசி கிட்டும்.
நீருடன் எள் கலந்த தர்ப்பணங்களுடன் தான தர்மங்களுடன் கூடிய தர்ப்பணங்களையே பித்ருக்கள் பரிபூர்ணமாக ஏற்கின்றனர். திருவள்ளூர், திருவிடைமருதூர், காசி, கயா, கும்பகோணத்திலுள்ள சர்க்கரைப் படித்துறை போன்ற இடங்களில் தானதர்மங்களுடன் தர்ப்பணமிடுதல் அளப்பரிய பலனைத்தரும். வெவ்வேறு லோகங்களில் வாழும் நம் மூதாதையர்கள் அந்தந்த உலகிற்குரித்தான (ஆவி) ரூபங்களில் குறித்த சில நாட்களில் தான் பூலோகத்திற்கு விஜயம் செய்யலாம் என்பது இறை நியதி. அமாவாசை, பௌர்ணமி, கிரஹணங்கள், அவரவர் இறந்த திதிநாள் போன்ற நாட்களில் மட்டுமே அவர்கள் பூலோகத்திலுள்ள அனைத்துக் கோயில்கள், புண்ய நதிக்கரைகள், சித்தர்கள், மஹான்கள், யோகிகளின் ஜீவ சமாதிகள் போன்ற இடங்களில் கூடி அங்கு தானதர்மங்கள் செய்கின்ற தம் சந்ததியினருக்கு ஆசிகளை வழங்குகின்றனர்.

முக்தாபரண விரதம்

பூலோக வாசிகள் தங்களுடைய சற்குருவின் கருணையால் அருட்பெரும் காரியங்களை மக்கள் சேவையாக நிறைவேற்றுகின்றபொழுது பிறப்பிறப்பின்றி இறைவனை உணர்கின்ற ஜீவன் முக்தனாக ஆகின்றனர். இத்தகைய ஜீவன் முக்தனாக ஒளிரும் ஆத்மாக்களையே இறைவன் “கபால மாலையாக” ஜீவன் முக்தர்களின் ஆத்ம மணிகளுடன் கபால மாலையாக ஏற்கிறான். ஜீவன் முக்த கபால மாலை, ஜோதி சங்கம கபால மாலை என்று பலவகை உண்டு.
ஜோதியாய்க் கபாலத்தினின்றும் வெளிப்பட்டு பிறப்பு, இறப்புகளைக் கடந்த கபால மோட்ச நிலையை, ஜீவன் முக்தனின் நிலையை அடைந்தவர்களைத் தம் திருமேனியில் இறைவன் தாங்குகிறான் என்பதே இதன் பொருள். எத்தகைய உயர்ந்த நிலை! இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்தவர்களே நம் நாயன்மார்களும், ஆழ்வார்களும், கோத்ராதிபதிகளும் ஆவர். நமது மூதாதையர்களில் துறவி, சன்னியாசம், பிரம்மச்சர்யம், குடும்பஸ்தனாக வாழ்ந்து உன்னத இறைநிலை பெற்றவர்கள் எவரேனும் இருப்பர். இந்த முக்தாபரண விரத நாளில் அவர்களை நினைவு கூர்ந்து முக்தாபரண விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் என்பது வெறும் உண்ணாநோன்பு மட்டுமன்று.
இந்த முக்தாபரண விரதநாளில் உயர்ந்த இறைநிலை அடைந்த நம் மூதாதையர்களை நினைந்து அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், கைத்தடி, பெட்டி, பூஜை பாத்திரங்கள், விக்கிரஹங்கள், அணிகலன்கள், உடைகள் போன்றவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு அவர்கள் நாமத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும். அவர்கள் இறந்த நேரத்தை அறிந்தால் அதற்கு முன்னும், பின்னுமாக ஒன்றரை மணி நேரங்கள் தண்ணீர் கூட அருந்தாமல் அவர்கள் இறந்த நேரத்தில் இந்நாளில் சுத்த உபவாசம் இருந்து உண்ணாமல் உறங்காமல் அவர்களை வழிபட வேண்டும். நன்கு சாப்பிட்ட பின் இந்த விரத்தைத் துவங்குவதில் தவறில்லை. விரத காலத்தின் போது, நிர்ஜலமாக, நீர்கூட அருந்தாமல், பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும். அவர்கள் திருஉருவப்படத்தின் முன் அவர்கள் நாமத்தை விடாது தொடர்ந்து உச்சரித்தலும் சிறந்த பூஜையாகும்.
இந்நாளில் மூதாதையர்க்கு விருப்பமான உணவினைப் படைத்து ஏழை, எளியோர்க்கு அளித்தல் வேண்டும். தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றாலான ஆபரணங்களை ஏழைகளுக்குத் தானம் அளித்தல் மிகவும் உத்தமமானதாகும். வசிதியற்றோர் வளையல்கள், பிளாஸ்டிக்கினால் ஆன அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வறியோர்க்கு அளிக்கலாம். இத்தகைய ஆபரணங்களை ஏழைகள் அணியும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே ஜீவன் முக்தர்களை ஆனந்தப்படுத்தும். அவர்களுடைய ஆனந்தமே இறைவனின் பேரானந்தம், பரமானந்தம்.
இவ்வாண்டு விநாயக சதுர்த்தி அன்று சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நாளில் திரயட்சர தினமாக அமைகின்ற்ன.
9.9.1994 வெள்ளிக்கிழமை (ஆவணி 24) காலை சூர்யோதய நேரம் 6.01 மணி முதல் அடுத்த நாள் சூர்யோதய்ம் 6.01 வரை தமிழ்ப் பஞ்சாங்கக் கணிதப்படி சுமார் 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாளாகும். இந்நாளில் சூர்யோதய காலை 6.01 முதல் 6.40 வரை சித்திரை நட்சத்திரமும், 6.41 முதல் இரவு 4.46 மணி வரை (28.46 hrs) சுவாதி நட்சத்திரமும் அதற்கு மேல் விசாக நட்சத்திரமும் அமைந்துள்ளன. ஒரே நாளில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும்.  இந்நாளில் பாதாதி கேச ஸ்தோத்திரங்கள், கேசாதி பாத ஸ்தோத்திரங்கள் (சிரசுமுதல் பாதம், பாதம் முதல் சிரசு இறைத்துதிகள்) பாராயணம் சிறப்பானதாகும் (உ.ம்) சௌந்தர்ய லகரி, ஸ்ரீவிஷ்ணு, சிவ, ஸ்ரீநாராயணீய கேசாதி பாத, பாதாதி கேசத் தோத்திரங்கள்) இந்நாளில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோர், ஸ்ரீவிநாயகருக்கு சிரசு முதல் நெற்றிவரை வேர்க்கடலை மாலையுடன் அலங்காரம் செய்தல் வேண்டும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் நெற்றி முதல் நாபி முதல் பாதம் வரை (ஆறிய) மிளகு கலந்த வெண் பொங்கல் காப்பு இட வேண்டும். அல்லது வெண் பொங்கலை பாதத்தில் வைத்து நைவேத்யம் செய்தல் வேண்டும். கரும்பு, மோதகம், கொழுக்கட்டை மூன்றினையும் பிரசாதமாகப் படைத்துத் தானமளித்தல் உத்தமமானதாகும்.
ஆவணி மூலம் (13.9.1994) செவ்வாய் – ஆவணி 28
ஸ்ரீஆஞ்சனேயர்க்கு உரிய நக்ஷத்ரமே மூலம் ஆகும். இந்நாளில் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தோர் ஏழை எளியோர்க்கு இயன்ற சேவைகளைப் புரிதல் வேண்டும். படுத்த படுக்கையாய்க் கிடக்கும் நோயாளிகட்குச் சேவை செய்வது உத்தமமானதாகும். அவர்கட்கு சரீரசேவை புரிதல், மருந்துகளைப் பெற்றுத் தருதல் போன்ற உதவிகள் சிறந்தவை. மூல நக்ஷத்திரத்தை உடைய வறியோர்க்கு உதவி புரிதல் மிகவும் சிறந்தது. ஸ்ரீஆஞ்சனேயருக்கு பசு வெண்ணெய்க் காப்புடன் வடைமாலை சார்த்தி அதனைத் தானமாக அளிக்க வேண்டும்.
வாமன ஜெயந்தி, க்ஷீர விரதம் (16.9.1994) வெள்ளி ஆவணி 31
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்குரித்தான நாள், பிரபஞ்சத்தில் க்ஷீரம் என்று அழைக்கப்படும் பால் உற்பத்தியான நாள். பிள்ளைப்பேறு இல்லாதோர் முக்கியமாக கொண்டாட வேண்டிய விரத நாளாகும். நீர்ச்சத்து (பாகு) கொண்ட குலோப்ஜாமூன், ரஸகுல்லா, பால் கலந்த உணவு, பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை ஏழைக் குழந்தைகட்கு அளிக்கவேண்டும்.
பிள்ளைப்பேறு வேண்டுவோர் இந்நாளில் ஸ்நானம் செய்து பக்தியுடன் மேற்கொண்ட பிரசாதங்களை இறை நாமம் ஜபித்து உணவு தயாரிக்கும் வரை நிர்ஜல உண்ணாநோன்பிருந்து (பாற்கடலில் பள்ளி கொண்ட) விஷ்ணுவிற்குப் படைத்து, ஏழைக் குழந்தைகட்கு தானம் அளித்தபின் உணவு உண்டிட புத்ர பாக்யம் கிட்டும். ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனுக்குப் பூஜை செய்வது விசேஷமானதாகும். “DWARF” என்று அழைக்கப்படும் வசதியற்ற குள்ளமான எழைகட்கு அவர்கள் மன விருப்பத்திற்கேற்ப தானம் அளிக்க வேண்டும். இது ஸ்ரீவாமனாவதார விஷ்ணு மூர்த்தியின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும். குடைகளை தானமாக அளித்தலும் விசேஷமானதாகும்.
“அசூன்ய சயனவிரதம்“ 21.1.1994 புதன் புரட்டாசி 5
ஆகஸ்டு1994 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிலும், இந்த இதழிலும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இன்று ஸ்ரீகாலபைரவருக்கு புனுகு சார்த்தி, முந்திரிப் பருப்பினாலாகிய மாலை அணிவித்துப் பூஜித்து , முந்திரிப் பருப்பினை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
மாளய பக்ஷம்
20.9.1994 முதல் 4.10.1994 வரை “மாளயபக்ஷம்” 4.10.1994 அன்று மாளயபட்ச அமாவாசை
நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தசுவாமிகள், “மனுஷனோட எல்லாப் பிரச்சினையும் தீரணும்னா ஒரே ஒரு பித்ருவோட ஆசீர்வாதம் கெடச்சாப் போதும்!  அவனோட ஜென்மத்தைக் கரையேத்திடலாம்” என்று அடிக்கடி கூறுவாராம். பித்ருக்களுக்குரித்தான தர்ப்பணங்கள், தான தருமங்களைச் சரிவரச் செய்யாமையால் தான் கலியுக மனிதன் நாள் தோறும் எண்ணற்ற துன்பங்களை எதிர் நோக்குகின்றான், நித்யம் செய்ய வேண்டியத் தர்ப்பண முறைகள் உண்டு. இதையும் செய்யாது, மாதாம் ஒருமுறை வருகின்ற அமாவாஸ்யை தர்ப்பணமும் செய்யாது விட்டால், அதன் சாபங்கள் நோய்களாகவும், பணப் பிரச்சனைகளாகவும், குழந்தைகளுக்கான துன்பங்களாகவும் வந்து சேர்கின்றன. நம் மூதாதையர்குரித்தான தர்ப்பணங்களைச் செய்யாவிடில் அது நம் சந்ததியைத்தானே பாதிக்கும்! தினசரி, மாத, கிரஹண, அயன (6மாதம்) வருடாதி தர்ப்பணங்களைச் சரிவரச் செய்யாதோர்க்கு, மாளய பக்ஷ தர்ப்பணங்கள், தானதருமங்கள் விதிக்கப்பட்டுள்ளன. வருடத்தில் இந்த 15 நாட்களிலாவது முறையான தர்ப்பண, தான தர்மங்களைச் செய்திட்டால்  இதுவரை தர்ப்பணங்கள் செய்யாது விட்ட மாபெரும் பாவத்திற்கு ஓரளவு பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம்.
மாளயபக்ஷ தர்ப்பண, தான விதிமுறைகள் ஜாதி, மத, குல பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவை. இறையருளால் தம் குருநாதர் (சிவகுரு மங்கள கந்தர்வா) ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தசுவாமிகள், தமக்கு குருகுல வாசத்தில் அருளியவற்றை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எடுத்துரைக்கின்றார். நவராத்திரிக்கு முந்தைய கிருஷ்ண பக்ஷத்தின் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 திதிகளும் மாளய பக்ஷமாகும். மால்+அயம் = திருமாலுக்கு உரித்தான அயன காலம். சகல கோடி பித்ருக்களின் நாயகரே ஸ்ரீவிஷ்ணு ஆவார். ஸ்ரீவிஷ்ணுவிற்குப் ப்ரீதி அளிக்கும் அயனகாலத்தில், தர்ப்பண, தான தருமங்களைச் செய்திட ஸ்ரீமகாவிஷ்ணுவின் பேரருளால் அவை எளிதில் பித்ருக்களைச் சென்றடையும். மாளயபட்ச தர்ப்பணங்களின் அபரிமிதமான பலன்கள் ஸ்ரீவிஷ்ணு லோகத்தை நேரடியாகச் சென்று அடைவதால், பித்ரு தேவர்களும் பரமானந்தம் அடைகின்றனர். ஒரு பித்ரு தேவரின் கால் தூசியைப் பெற்றால் போதுமே! அது பல கோடி ஜென்மங்களைக் கரைத்து விடுமே!
மாளயபட்சம் பற்றிய அரிய அபூர்வ ரகசியங்கள் உண்டு. அவை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணப்படுகின்றன. அவற்றை அவ்வப்போது தக்க சித்த புருஷர்களின் மூலம் கலியுக மக்களின் நல்வாழ்விற்கென அருளப் பெறும். அவற்றில் சிலவற்றை நம் சிவகுரு மங்களகந்தர்வா, தம் சித்தர்குலத் தோன்றல் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் மூலம் எடுத்தருள்கின்றார். மாளய பட்சத்தில் குறிப்பிட்டத் திதிகளில் மட்டும் தர்ப்பணம் அளிக்கும் முறை நிலவுகிறது. இது தவறு. 15 நாட்களிலும், தினந்தோறும் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு முதலில் தர்ப்பணம் அளித்து ஏனைய வர்க்கத்தினருக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். வருடத்தில் நாள் முழுவதும் 365 நாட்களும் அளிக்க வேண்டிய தர்ப்பணாதிகளைச் சரிவர செய்யாததற்கானப் பிராயச்சித்தமே இந்த மாளய பட்சத்திய 15 நாட்களுக்கான தினசரி தர்ப்பண முறை என்பதை மனதில் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.
மஹா பரணி
மாளயபக்ஷத்தில் வரும் பரணியே மகா பரணி, இன்று பரணி நட்சத்திரத்தில் பிறந்தோர் முழுவகை ஆடைகளை (வேட்டி, சட்டை துண்டு – புடவை, ரவிக்கை) தானமாக அளித்திடல் வேண்டும். ஆடைகளே முழு ஆபரணமாகும். எனவே ஓர் ஏழைக்கு முழு ஆபரணமாக அந்த ஏழையின் தேகத்திற்குத் தேவையான முழு ஆடைகளை செட்டாக அளித்திட ஆடையால் வரும் தோஷங்கள் நீங்கும்.
மாளய பட்ச தர்ப்பணமுறை
சாதாரண தர்ப்பணங்களில், தாய்-தந்தை, இரு தாத்தாக்கள், இரு பாட்டனார்கள் என்றவாறு தாய்-தந்தை வர்கத்தில் ஆறாறாக மொத்தமாக 12 பேர்கட்குத் (ஒரு தலைமுறை) தர்ப்பணம் அளிக்கப்படுகிறது.  இது மட்டுமா உலகம்! ஆன்மீகத்தில் மக்கள் சேவையன்றோ மஹேசன் சேவையாகிறது! அப்படியானால் இறந்த நம் நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உண்டு கழித்த கோழி, நண்டு, மீன், ஆடு போன்ற உயிரினங்கள் இவர்களெல்லாம் நற்கதி பெறவேண்டுமல்லவா? சைவமோ, அசைவமோ நாலாபுறமும் மடிகின்ற மனிதர்கள், உயிரினங்களுக்குத் தர்ப்பணம் செய்கின்ற ஆன்மீக உயர்நிலையை நாம் என்று பெறுவது?
இன்றும் மஹான்களும் சித்த புருஷர்களும் அனைத்து உயிரினங்களுக்கான தர்ப்பணங்களை ஆன்மீக இரகசியமாய்த் தங்கள் தெய்வீக நிலைகளை உணர்த்தாது அமைதியாகச் செய்து வருகின்றனரே! அவர்கள் நமக்களித்துள்ள தர்ப்பண முறைகளை செய்வது நம் கடமையல்லவா? பிரம்ம யக்ஞம் என்ற நித்ய கர்மா ஒன்று உண்டு. இதுவும் ஜாதி, குல இனவேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டியதே! இதில் மஹரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்க்யங்கள் அளிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தினசரி ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய தர்ப்பண பூஜைகள், இதனை அனைவரும் நித்யமும் செய்யாததினால் தான் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற தீய சம்பவங்கள் நாள்தோறும் நாட்டில் நிகழ்கின்றன.
எனவே சித்தர்கள் அளித்துள்ள முறையில் மாளய பட்சத்தில் அட்டவணையில் குறித்துள்ளபடி முதலில் அந்தந்த வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம்/ பூஜை/ அர்க்யம் அளித்தபின் ஏனையோருக்கு வழக்கம் போல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
மாளய பட்சத்திற்கான தினசரி தர்ப்பண விதிகள்
கீழ்கண்ட வகையில் மாளய பட்சத்தின் 15 திதிகளிலும் முதலில்
1. இறந்த வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம் அல்லது
2. விசேஷ பூஜைகள்/ஹோமம் அல்லது
3. தெய்வ மூர்த்திகள்/சித்தர்கள்/ மகரிஷிகளுக்கு அர்க்யங்கள்
என்ற வகையில் முறையானவற்றை முதலில் நிறைவேற்றிப் பின்னர் ஏனைய வர்கத்தினருக்கு வழக்கம் போல் தர்ப்பணம் அளிக்கலாம்.

திதி

முதலில் தர்ப்பணம் கொடுக்கப்பட வேண்டிய வர்க்கம்/பூஜை/அர்க்யம்

அன்னதான வகை

1. பிரதமை

 பெண்கள் வர்க்கத்திற்குத் தர்ப்பணம்

மணிக்கொழுக்கட்டை, நீர் உருண்டை

2.துவிதியை

சகோதரர்களுக்கு / அக்கா, தங்கையை மணந்த மாப்பிள்ளைகள் ஆகியோர்க்குத் தர்ப்பணம்

பாயசம்

3.திரிதியை

60 வயதிற்கு மேற்பட்ட ஆண்/பெண் இருபாலார் (குடும்பத்தைச் சாராதோர்க்கும் சேர்த்து) தர்ப்பணம்

ஏலம், திராட்சை, முந்திரி, கலந்த பாயசம்

4.சதுர்த்தி

பூணூலை நிராகரித்து வாழ்ந்தவர்களுக்கும் திருமணம் ஆகாமல் இறந்தவர்களுக்கும் தர்ப்பணம்

தயிர் சாதம் கொத்தமல்லி துவையல்

5.பஞ்சமி

முதலில் குலதேவதை பூஜை பிறகு தாய்வர்க்கம், பின் தந்தை வர்க்கத்திற்குத் தர்ப்பணம்

ஐந்து காய்கறிகள் கூடிய சாம்பார் சாதம்.

6.ஷஷ்டி

உறவினர்கள், பங்காளிகளுக்குத் தர்ப்பணம்

ஆறு வகை (கொடி வகை) காய்கறி சேர்ந்த உணவு (உ.ம் புடலை, பாகல், அவரை etc,,.)

7. சப்தமி

நண்பர்களுக்குத் தர்ப்பணம்/மூலிகை, தாவர வகைகளுக்கு தர்ப்பணம்

பாசிப்பருப்பு கலந்த வெண் பொங்கல்

8.அஷ்டமி

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு அர்க்யம் (பிரம்மயக்ஞ மந்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது)

இனிப்புப் பணியாரம்

9. நவமி

முதலில் நவக்ரஹப் பூஜை/ஹோமம் அடுத்து தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு (colleagues) தர்ப்பணம்  

சித்ரா அன்னம் (எலுமிச்சை சாதம், புளிசாதம் etc….)

10. தசமி

சித்த புருஷர்கள், மஹான்கள், யோகிகள், ஜீவன் முக்தர்கள், மும்மூட்சுக்கள், சற்குருமார்கள், ஆசார்யார்கள், ஏகாந்த சாந்திகள்/ உத்தம தேவர்கள் ஆகியோர்க்கு அர்க்யம்

   சர்க்கரைப் பொங்கல்

11. ஏகாதசி

பசுவிற்கு அர்கயம் குறிப்பாக (பசுவதையில் இறக்கும் பசுக்கள்) கர்மார்க்க தேவதா பசு என்ற காமதேனுவின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் இடுதல் வேண்டும்

 

மிளகு கலந்த தோசை, வெங்காயச் சட்னி

12.துவாதசி

 ஆடுகள், மான் போன்ற சாத்வீக பிராணிக்குத் தர்ப்பணம்

 இடியாப்பம்

13.திரியோதசி

கோழி, மீன், நண்டு, காடை, கௌதாரி போன்ற நீர்வாழ்வன, பறப்பன இனங்களின் சாத்வீக உயிரினங்களுக்குத் தர்ப்பணம் .

 

   புட்டு

14. சதுர்த்தசி

சுந்தரகாண்டம் பாராயணம் செய்தல் வேண்டும். ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருக்கு அர்க்யம் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரிக்கு அர்க்கியம்

பால் சாதம், மோர் சாதம்

15.அமாவாசை

அனைவருக்கும் தர்ப்பணம் (அறிந்தோர் /அறியாதோர்) ஸர்வ ஜீவன்களுக்கும்

எல்லாவகை உணவுகளும் தான தருமங்களும்

இன்றைக்கு அயல் நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள், நீக்ரோக்கள், ஆங்கிலேயர்கள் போன்றோரும் முன் ஜென்மங்களில் நம் உறவினரே. எனவே மாளய பக்ஷம் என்பது இப்பூவுல ஜீவன்களான முட்டை (அண்டஜம்), வியர்வை (ஸ்வேதஜம்), விதை-வேர்-கொடி-கிழங்கு (உத்பிஜம்), கரு (சராயுஜம்) என்ற நால்வகையில் தோன்றும் அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தான தர்ப்பண பூஜையாகும். இது மட்டுமல்லாது தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய எழுவகை பிறப்பினங்களுக்கும் உரித்தான தர்ப்பண பூஜையாகும். எனவே மாளய தர்ப்பணத்தை சித்தர்கள் அருளியவாறு மேற்கண்ட முறையில் செய்தால் பிரபஞ்சத்திற்கே உரித்தான தர்ப்பண பூஜையாக மக்கள் சேவையாக மலர்ந்து மகேசன் சேவையாக கனிகின்றது.

விநாயக சதுர்த்தி

1. கர்மபூமியாக பூலோகம் விளங்குவதாலும் கர்மங்களைக் கழிப்பதற்காகவே பூமியில் ஜீவன்கள் பிறப்பெடுப்பதாலும் இப்புனித பூமியின் மண்ணால் ஆகிய விநாயகரே விநாயக சதுர்த்தியன்று வீட்டுப் பூஜைக்கேற்ற உத்தம மூர்த்தி ஆவார்.
2. விநாயகர் சதுர்த்தி அன்றோ அல்லது முதல் நாளில் சதுர்த்தி திதிக்குரிய நேரம் இருக்கும் போதே குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கிய பின்னரே பூஜைக்குரித்தான மண் பிள்ளையாரை வாங்க வேண்டும்.
3. பூஜைக்குரிய இடத்தில் மரப்பலகை போன்ற ஆசனத்தில் பச்சரிசி மாவினால் கோலம் வரைய வேண்டும். ஒருநுனி வாழை இலையை நுனிப்பகுதி கிழக்கு திசையை நோக்குமாறு ஆசனக் கோலத்தின் மேல் வைக்க வேண்டும். மூன்று கையளவு சுத்தமான முழுமையான் பச்சரிசியை வாழையிலையின் மேல் பரப்ப வேண்டும். அரிசியின் மேல், வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு அதன் கீழ் “ஓம்” என்று அவ்விரலால் எழுதி இதன் மேல் மண் பிள்ளையார் அமர்த்திட வேண்டும்.
4. புஷ்பம், அருகம்புல், எருக்கம்பூ, ஆடை, அணிகலன்கள், விபூதி, குங்குமம், சந்தனம், சாந்து போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து ஆறு புரிகள் கொண்ட பூணூலை அனிவித்து, ஸ்ரீவிநாயகரை திருமணமானராக வரித்துப் பூஜிக்க வேண்டும்.
5. ஸ்ரீவிநாயகரின் நாபியில் (தொப்புளில்) பொற்காசு வைத்தல் மிகவும் விசேஷமானதாகும். வசதியற்றோர் வெள்ளிக்காசு, ஒருரூபாய் நாணயத்தை வைக்கலாம்.
6. ஸ்ரீவிநாயக சதுர்த்திப் பூஜைக்குப் பிறகு மண் விநாயகரை விஸர்ஜனம் (கிணறு, ஆறு/சமுத்திர நீரில் கரைத்தல்) சாலச் சிறந்தது ஆகும். நம் பூஜா பலன்களே ஆறு/கடல் நீரினால் விண்வெளியில் மேகங்களாகப் பரவி நல்மழையாக வர்ஷிக்கின்றன. எனவே விநாயகர் பூஜை மகத்தான மக்கள் சேவையாகும்.
7. ஆண்களே விநாயகரை நீரில் கரைக்க வேண்டும். கரைக்கும் நாள், விநாயகர் சதுர்த்தி பூஜை நாளையும் சேர்த்து 1,3,5,7... என்றவாறு  ஒற்றைப்படை நாளில் தான் கரைக்க வேண்டும். அந்நாளும் ஞாயிறு அல்லது திங்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனைய நாட்களில் கரைத்தல் கூடாது. தக்க ஒற்றைப் படை நாளும், ஞாயிறு அல்லது திங்கள் சேரும் நாள் கிட்டும் வரை தினமும் மண் பிள்ளையாருக்கு நைவேத்யம் அளிக்க வேண்டும்.
8. ஸ்ரீவிநாயகரை ஆற்றிலோ கடலிலோ சேர்க்கப் புறப்பட்ட பின் நடுவில் எங்கும் தங்குதல் கூடாது. விசர்ஜனத்திற்குப் பின்னரே பிற பணிகளைத் தொடங்க வேண்டும்.
9. ஆபரணங்கள், பூணூல், தொப்புள் காசு ஆகியவற்றை எடுத்த பின்னர்
“மங்கள மூர்த்தி மகராஜா, அடுத்த வருஷம் வா ராஜா”
என்று துதித்து, மண் பிள்ளையாரை பிரசாதமாக நீரில் இடவேண்டும்.. கரைத்தல் என்றால் மண்ணைக் கரைப்பது என்று பொருள் கொள்ளலாகாது மண் பிள்ளையாரை மெதுவாகக்  கடல்/ஆறு/கிணற்று நீரில் இறக்கி விடுதலே, விஸர்ஜனம் (நீரில் கரைத்தல்) என்பதின் பொருளாகும்.
10. மண் பிள்ளையாரை வீட்டிலேயே வைத்துக் கொள்ளும் பழக்கமிருந்தால் வெடிப்பு வராமல்  சிதைவு பெறாமல் பாதுகாத்து தினமும் நைவேத்தியம் படைக்க வேண்டும். இது கடினமாதலின் விஸர்ஜனமே சிறந்ததாகும்.
11. விநாயகர் நாபியில் வாசம் செய்த நாணயத்தை வீட்டில் வைத்துப் போஷித்தால் லெட்சுமி கடாட்சம் பெருகும். ஸ்ரீவிநாயகரின் பூணூலை நாம் அணிந்து கொள்ளலாம்.
ஸ்ரீகன்னியாகுமரி அம்மனின் வைர மூக்குத்தியின் மஹிமை
எவ்வித அழுக்குகளும் ஒட்டாத ஒளி பொருந்திய தோற்றத்தோடு விளங்குவது ஆன்மா. நம் உடலாகிய சட்டையில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவை ந்ன்முனைப்போடு வழிநடத்தும் சக்தி எல்லாம் வல்ல இறைவனுக்கே உண்டு. இறைவனின் கருணையைப் பெற நற்செயல்கள் பல நாம் புரிய வேண்டும். அப்போது தான் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு தீக்குணங்களால் பீடிக்கப்படும் நம் மனம் தெளிவடையும். எனவே விகாரமாய் இருக்கும் மனதை ஆன்ம விசாரம் மூலமாகத்தான் பண்படுத்த முடியும். இத்தகைய ஆன்மவிசாரத்தால் பண்பட்ட மனதில் தான் தெளிவுகள் பிறப்பெடுத்து முழுமை பெறுகின்றன. எனவே உடலுக்கு உணவு எப்படி முக்கியமோ அதுபோல ஆன்மா கடைத்தேற ஆன்ம விசாரம் மிக மிக முக்கியம்.
நாம் அனைவரும் பல கோயில்களுக்குச் செல்கிறோம். இறையுருவங்களைக் கண்டு தரிசனம் முடிந்தது என்று திரும்பி விடுகிறோம். அக்கோயிலில் சிறப்பம்சத்திற்குரிய காரணம் என்னவென்பதைப் பற்றி ஆராய்தல் வேண்டும். அதனுள் புதைந்திருக்கும் தெய்வீக உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். இதுவே ஆன்ம விசாரத்தின் முதல் நிலையாகிறது.
உண்மைக் கதை தெரியுமா?
“திரிவேணி சங்கமம்” ரொம்ப விசேஷம், கன்னியாகுமரியில் சூரிய உதயம் பிரமாதமாய் இருக்கும், அம்மனோட மூக்குத்தி ஜகத் ஜோதியாய் பிரகாசிக்கும் – என்றெல்லாம் சொல்வதைக் கேட்டுக் கன்னியாகுமரி தலத்திற்குச் செல்பவர் பலர். இவர்களில் எத்தனை பேருக்கு அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பதற்கான உண்மையான ஆன்மீக ரகசியங்கள் தெரிந்திருக்கும்? அந்த வைரக்கல்லின்‘மகிமையை அருகிலுள்ளவர்கள் எடுத்துச் சொன்னாலும் மனதில் ‘இந்த வைரம் மட்டும் செய்த பாக்கியம் என்ன? இது எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்? இதைப்பற்றி அறிய முடியுமா?’ என்ற ஏக்கம் இருக்கும்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்தர் போன்ற சற்குருமார்களைத் தவிர யாரால் இவ்வினாக்களுக்கு விடையளிக்க இயலும்?
இது பல கோடி யுகங்களுக்கு முன் நிகழ்ந்தது. அப்போது நில, இன, மத வேறுபாடு கிடையாது. வைரமூக்குத்தியின் புராண வரலாறு நன்கு புரிவதற்காக ஆப்பிரிக்கா, இந்தியா என்று நிகழ்ச்சிகள் நடந்த எல்லையைக் குறிக்கின்றோம்.
ஆப்பிரிக்கத் குள்ளர்கள்
வட ஆப்பரிக்காவில் ஒரு பயங்கர காடு. அதன் ஒரு பகுதியில் குள்ளர்கள் ஒரு கூட்டமாக வசித்து வந்தனர். இவர்கள் மிகுந்த விஷய ஞானமுள்ளவர்கள். இக்குள்ளர்கள் ஒரு வகையான மூலிகை ரசத்தை, குழல் போன்ற ஒரு குச்சியின் நுனியில் தொட்டு, அதனை எந்த இடத்தில் வைத்து ஊதினாலும் அந்த இடமே ஒன்றுமில்லாமல் நிர்மலமாகி விடும். அதே போல் அந்தக் குழலைப் பூமிக்குள் நுழைத்து வைத்து  ஊதினாலும் சுமார் 1000 அடிக்கு துவாரத்தை ஏற்படுத்தும் கலைகளில் வல்லவர்களாகவே விளங்கினர்.

பஞ்சாங்க நேர பேதங்கள்

அடியார் : குருதேவா! வாக்ய பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என்ற இரண்டு முறைகளும் வெவ்வேறு திதி, நட்சத்திர நேரங்களைக் காட்டுகின்றனவே!இதனால் மக்கள் குழப்பமடைகிறார்களே!
குரு: வாக்ய பஞ்சாங்கம் என்பது ஒன்பது கிரஹங்களின் சஞ்சாரத்தை வைத்து கணிப்பது. மிகவும் பழமையான முறை. திருக்கணிதம் என்பது ஒன்பது கிரஹங்களுடன் நெப்ட்யூன், புளூட்டோ, யுரேனஸ் போன்ற கிரக சஞ்சாரங்களையும் சேர்த்துக் கணிப்பதாகும். அதனால் இது தவறு அது சரி என்றி கூறிட முடியாது. ஒன்பது கிரஹ சஞ்சாரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதானால் வாக்ய பஞ்சாங்கம் சரியே! அடுத்த நவீன கணித முறையைப் பயன்படுத்துவதால் ஒன்பதிற்கும் மேற்பட்ட கிரஹ சஞ்சார முறையிலான திருக்கணிதமும் சரியே! கிலோ, வீசை நிறுவை அலகுகளைப் போல் அந்தந்தப் பிரிவில் இரண்டும் சரியான முறையில் அமைந்தவையே. உலகநேரம் (Greenwich Mean Time) தேசிய நேரம் (Standard Time) ஆகியவற்றை ஒட்டி அமைவதால் திருக்கணித முறை, உலக வழக்கிற்கு பிறநாட்டு வானவியலுடன் ஒப்பு நோக்கிக் கற்க ஏற்றதாகும்.
தமிழ் வருடம், தெலுங்கு வருடம் என்று பலவகை பிராந்திய வருடங்களிருப்பினும் 1994,1995 என்றவாறு உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதற்குப் பொதுவாக ஆங்கில வருடத்தைப் பயன்படுத்துகிறோமல்லவா? இம்முறையில் திருக்கணிதம் நவீன காலத்தை ஒட்டி அமைந்துள்ளது.
அடியார்: குழந்தை பிறக்கும் நட்சத்திரம் கூட இவ்விரு வகைகளில் மாறுபடுகிறதே குருதேவா! எந்த நட்சத்திரத்தை ஏற்பது?
குரு: இரண்டு முறைகளிலும் நட்சத்திரம் மாறுபட்டால் திருவோணம் (வாக்ய பஞ்சாங்க முறை) அவிட்டம் (திருக்கணித முறை) என தனித்தனியே குறிப்பிடுவது குழப்பத்தைக் தவிர்க்கும். நல்ல நட்சத்திரம் என்பதற்காக ஏதேனும் ஒரு வகை கணிதத்தை வசதிக்கேற்ப மாற்றலாகாது. அந்தந்த பஞ்சாங்க முறைக்கேற்ப நட்சத்திரத்தை மாற்றாமல் குறித்துக் கணிக்க வேண்டும்.
அடியார் : இவ்விரண்டில் எதை ஏற்பது குருதேவா!
குரு : அவரவர் குடும்ப வழக்கப்படி எதையேனும் ஒன்றை ஏற்பதே சிறந்தது. வம்சாவழியாக வாக்கிய பாஞ்சாங்கத்தை ஏற்பவர்கள் அதனையே பின்பற்ற வேண்டும். திருக்கணிதத்தில் நம்பிக்கை கொண்டோர் அதனையே ஏற்க வேண்டும். ஜோதிடம் கற்பவர்கள் இரண்டையும் அறிந்து சஞ்சாரங்களில் நவீன கணிதம் மூலமாக ஆழ்ந்த ஞானம் பெறலாம். வெறும் ஏட்டுப் படிப்பு உதவாது. அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
பொதுவாக எதிர்காலத்தில் வானவியல் கணிதம் பெரிதும் விரிவு பெறுவதால் திருக்கணித அமைப்பே எதிர்காலத்திற்கு ஏற்றதாகும். ஆனால் ஜாதகப் பொருத்தங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று வாக்ய பஞ்சாங்க கணிதம், மற்றொன்று திருக்கணிதமாக இருந்தால் அப்படியே கணித்திட்டால் ஜாதக பலனில் விபரீதங்கள் ஏற்படும். இரண்டு ஜாதகங்களையும் ஏதேனும் ஒரு முறைக்கு மாற்றிக் கொண்டு கணிக்க வேண்டும்.
அடியார் : ஒரே ஜாதகத்தை இரண்டு முறைகளிலும் கணித்தால் பலன்கள் மாறுபடுமே குருதேவா!
குரு : மாறாது! வாக்யபஞ்சாங்கத்தின் கிரஹ சஞ்சாரங்களும் திருக்கணித கிரஹ சஞ்சாரங்களும் ஒரே விகிதாசாரத்தில் மாறுவதால் பொதுவாக பலன் மாறாது. இதனை ஒரு வேடிக்கையாகவோ, அவதூறாகவோ, நகைப்பிற்குரியதாகவோ கொண்டு ஜாதகக் கணிப்பில் தேவையற்ற, பயனற்ற ஆராய்ச்சியில் இறங்கினால் ஸ்ரீகாலபைரவரின் சாபம், கணிப்பவர்க்கு உண்டாகும், உண்மையான ஜோதிடம் என்றும் பொய்க்காது. கணித்து பொய்த்தால் அது கணித்தவரின் தவறே தவிர உண்மையான ஜோதிடம் சத்தியமான வாக்காகும்.
ஒருவனுடைய விதியை அறிந்தவர்கள் இறைவனும், சற்குருவுமே. இருவரும் ஒருவரே! ஒரு மனிதன் தன் சுய முயற்சியால் கைரேகை,  ஜாதகம் மூலம் தன் விதியை அறியலாம். ஆனால் அதையும் அறிய சற்குரு அருள் தேவை. திருக்கணிதமோ, வாக்கியமோ எம்முறையாயினும் சரி ஆழ்ந்த தெய்வநம்பிக்கை சுயநலமற்ற சேவை, குருபக்தி இவைதாம் ஜாதக கணிப்பிற்குத் தேவையான மூலப் பொருட்கள், சற்குரு மனங்கனிந்தால் அவர் கூட்டுவதே கிரக சஞ்சாரங்களாய் அமையும். ஸ்ரீஅம்பிகையை உபாசித்த அபிராம பட்டர் சந்திர கிரஹத்தின் சஞ்சாரத்தையே இறையருளால் மாற்றினார்.
எனவே அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப வாக்ய பஞ்சாங்கத்தையோ, திருக்கணிதப் பஞ்சாங்கத்தையோ ஏதேனும் ஒன்றை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam