அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆசமன திசை

வினா: ஆசமனத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மட்டும் செய்வது ஏன்?
விடை : ஆசமனத்திற்கு பல விளக்கங்கள் உண்டு. சந்தியா வந்தன, பிரம்ம யக்ஞம், ஔபாஸனம், ஸமிதாதானம், பித்ரு தர்ப்பணம் கோயிலில் ஆறுகால பூஜைகள், வீட்டில் நித்ய பூஜை போன்ற பல முறைகளிலும் மல ஜலங்கழித்தபின் தேக சுத்தியிலும் ஆசமனம் செய்யப்படுகிறது, செய்கின்ற பூஜையின் ஸங்கல்பத்திற்கேற்றவாறு ஆசமன மந்திர விளக்கங்கள் மாறும். பொதுவாக உடல் சுத்திக்காகவே ஆசமனம் செய்யப்படுகின்றது. உடல் சுத்திக்கான ஆசமனத்தில் உடலில் உள்ள தேவதைகளே அவற்றை ஏற்கின்றனர். சந்தியாவந்தனத்தில் சூர்ய சவிதா மண்டல தேவதைகளும் தேவ மண்டல தேவதைகளும் ஆசமனத்தை ஏற்கின்றனர். இவ்வாறாக இதன் விளக்கங்கள் பலப்பல.,
ஆசமனத்தில் கீழே பாத்திரத்தில் இருக்கும் வரை அது சாதாரண நீர்! வலது கை உள்ளங்கையில் ஊற்றப் பட்டவுடன் அது “பிந்து கோஷ்ட தீர்த்தமாகிறது!“ கிழக்கே பார்த்து அமர்ந்து வலது கையை உள்ளே தீர்த்தம் ஏற்க குழியாக மடித்தால் அதற்கு “பிந்து கோஷ்டம்” என்று பெயர். பிந்து கோஷ்டத்தில் தீர்த்தத்தை ஏந்தி “கேசவா, நாராயணா/அச்யுதா/அனந்தா என்று இறைநாமாவைத் துதித்திட அது ஆசமன பூஜைக்கேற்ப தேவதீர்த்தம், பித்ரு தீர்த்தம், ஸ்வதா தீர்த்தம், ஸாவித்ரீ தீர்த்தம் என பல வகைப் பெயர்களில் அனுக்ரஹ சக்திக்கேற்ப மாற்றப்படுகிறது.
கிழக்கே இந்திர மண்டலத்தின் பகுதியில் வாலகில்ய மஹரிஷிகள் தவம் புரிகின்றனர். இவர்கள் பிந்து கோஷ்ட தீர்த்தத்தை மட்டுமே அருந்திக் கடுமையான தவம் புரிகின்றனர். எதற்கு? யார் ஒருவர் பிந்து கோஷ்ட தீர்த்தம் மூலம் விஷ்ணு நாமங்களுடன் ஆசமனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்ம வினைகளில் ஒரு சிறிதைத் தாங்கள் ஏற்று அனுபவிப்பதற்காக! என்னே தியாகம்!!
எனவே வாலகில்ய மஹரிஷிகள் தவம் மேம்படுவதற்காகவும், அவர்களுடைய ஆசியினைப் பெறவும் கிழக்கு நோக்கி ஆசமனம் செய்யப்படுகின்றது.
வடக்கு திசையில் ஆசமனம் ...
ஸ்ரீவித்யா மேரு சக்கரத்தில் 43 கோடி அம்பிகைகள், தெய்வ மூர்த்திகள் உறைகின்றனர் என்று நாமறிவோம். வடக்கு காந்ததிசைப் பகுதியில் “சுக்ல வர்ணா” என்ற அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.
காந்த சக்தியானது உச்சிக் காலத்திலும் மாலையிலும் சுக்ல வர்ணா அம்பிகையிடம்  பூசுவர்ணா, நீளாக்ய வர்ணா, பர்பராலிக வர்ணா, பலிபந்தன வர்ணா, பாச வர்ணா என்று ஐந்து உபதேவியர் உண்டு. இவர்களே நம்முடைய பஞ்சேந்திரியங்கள் செய்த தீவினைகளின் தீயசக்தியை ஓரளவு குறைத்து நம் தேகத்தை புனிதப்படுத்த உதவுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தினாலும் நாம் செய்கின்ற நல்ல, தீய காரியங்களுக்கேற்ப நம் தேகத்தின் பஞ்சபூத சக்தி கூடும்/குறையும். மனிதன் தீர்க ஆரோக்யத்துடன்  வாழ குறித்த அளவு பஞ்சபூத சக்தி தேவை. பொதுவாக நித்ய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் இதைத் தர வல்லதாம். தீய காரியங்களில் எண்ணங்களில், ஈடுபட்டால் இப்பஞ்சபூத சக்தி குறையும். இதனால் தான் நோய்கள், மனவருத்தங்கள் உண்டாகின்றன.
வடக்குத் திசையில் செய்கின்ற ஆசமனத்தின் போது உள்ளங்கையில் ஏந்துகின்ற தீர்த்தமானது சுக்ல கோஷ்ட தீர்த்தமாக மாறுகிறது. இதில் கேசவா, நாராயணா/அச்சுதா, அனந்தா என்ற இறை நாமங்கள் சேர்ந்திட இவற்றையே சுக்ல தாரிணியின் ஐந்து உபதேவிகள் நம் உடலில் 72 ஆயிரம் நாடிகளிலும் சுழலச் செய்கின்றனர். கோவிந்தா என்று ஆசமனத்தின் கடைசி மந்திரம் மூலம் தீர்த்ததைக் கீழே விடுகையில் அதனையே அவர்கள் அர்க்யமாக ஏற்று நம்முடைய பஞ்ச இந்தியங்களின் மூலம் விளைந்த தீவினை கர்ம வினைகளை ஓரளவு நீங்கச் செய்கின்றனர். இந்த ஆசமனம் செய்த பின்னர் தான் அடுத்து வரும் பூஜையைச் செய்வதற்கான தகுதியை நம் உடல் பெறுகிறது.
எனவே, இனியேனும் ஆசமனத்தை ஏதோ மும்முறை நீரைக் குடிக்க வேண்டும், ஒரு முறை கீழே ஊற்ற வேண்டும் என எண்ணாது இதன் மஹிமையினை உணர்ந்து சிரத்தையுடன் செய்தல் வேண்டும்.
கோயில் தீர்த்தக் குளங்களைப் போல் ஒரு சாதாரண மனிதனும் தன்னுடைய வலக்கை உட்புறத்தைக் குழிவாக அமைத்துப் பிந்து கோஷ்டத் தீர்த்தம், சுக்ல கோஷ்ட தீர்த்தங்களை எளிமையான மந்திரங்கள் மூலம் உருவாக்க முடியுமென்றால் எத்தகைய அரிய மந்திரங்களை இந்த மானுடப் பிறவியில் பெற்றிருக்கிறோம்!
இந்த எளிய ஆசமன மந்திரம் அனைவருக்கும் உரித்தானது. நாள் முழுதும் பூஜை, ஹோமம், தர்ப்பணம் போன்ற எவ்வழிபாட்டிற்கும் முன்னரும் இந்த எளிய ஆசமனத்தைச் செய்து அனைவரும் பயனுற வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்
 

ஓடலாமா? சீச்சீ! இந்த எண்ணமே தப்பு! வாத்யாரை விட்டு எப்படி ஓடுவது! வருவது வரட்டும்... ஆங்...... பழம் கையிலிருந்தாலல்லவா குரங்கு பிடுங்கும். டிராயர் பையில் போட்டுக் கொண்டு விட்டால் ..... “ பதட்டத்துடன் அதே சமயத்தில் மிக துரிதமாய் அந்த மாம்பழத்தைத் தன் டிராயர் பையில் போட்டுக் கொண்டான் சிறுவன்.
கெட்டிக்காரக் குரங்கு இப்போது டிராயரைப் பிடித்து இழுத்து விட்டது. அந்தோ பரிதாபம்! சிறுவடைய அரைடிராயருக்குப் பட்டன்கள் இல்லை. இடுப்பில் ஒரு உந்து உந்தி “தேங்காய்க் கோணி முடிச்சு” போடுவான். அந்த முடிச்சு அவிழ்ந்தாலோ, டிராயர் முழங்காலுக்கு வந்து தங்கி இமைக்கும் நேரத்தில் பாதத்திற்கு வந்துவிடும்! அவ்வளவு பெரிய லொடலொடா (பாவாடை) டிராயர்!
சிறுவனுடைய அப்பா அந்த காலத்தில் அதைச் “சிக்கனமாக” பெரிதாகத் தைத்திருந்தார்! ஐந்தாறு வருடங்களுக்கு வருமே ! அப்பப்பா!! குரங்குப் பிடி என்றால் இதுவன்றோ குரங்குப் பிடி! குரங்கு இழுத்த இழுப்பில் “தேங்காய்க் கோணி முடிச்சு“ அவிழ்ந்து டிராயர் பாதங்களைத் தழுவியது! அப்புறமென்ன! சில வினாடிகளில் காரியம் முடிந்து விடும்! குரங்கின் அடுத்த இழுப்பில், சிறுவனின் கால்கள் தாமாகவே சுழன்று விட, குரங்கு தன்னுடைய குறிக்கோளை மாபெரும் வெற்றியுடன் நிறைவேற்றியது. குரங்கு தன் இரு கைகளிலும் பெரிய டிராயரைக் குழந்தை போல் அரவணைத்து ராஜ நடை போட்டு நகர்ந்தது.
“பொத்” என்ற சப்தம் கேட்டுச் சிறுவன் நிமிர்ந்து பார்த்தான். ஆம், சிறுவனுடைய ஓட்டை டிராயரிலிருந்து மாம்பழம் கீழே விழுந்து விட்டது! சிறுவனுக்கு ஒரே குஷி! “ஆஹா! குரங்கு, பழத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் சிறுவனை நோக்கி ஒரு “ராஜபார்வை“ பார்த்துச் சென்றது! கண்கட்டு வித்தை போல் நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் மெதுவாக எழுந்து நின்றான்.
சூர்ய பகவானை பார்த்து வணங்கினான். ............................. அவதூது மேனி!
இம்முறை சிறுவன் பதட்டமடையவில்லை, சாந்தமாக நின்றான்! பெரியவர் தீர்க தரிசனமாகக் கூறிய கனவில் “கருங்குரங்கு” தரிசனத்தின் பலனை நிதர்சனமாகப் பார்த்து விட்டானே! மீண்டும் அவன் பார்வை பழ மூட்டையின் மேல் பட்டவுடன் மீண்டும் பசியுணர்ச்சி. ஆனால் இம்முறை முடிவு செய்து கொண்டான்.
“ஏதேனும் குரங்கு வந்தால் மரியாதையாகப் பழத்தைக் கொடுத்து விடுவோம். நமக்கு எவ்வளவு தின்னலாம் என்று தலையில் எழுதியிருக்கிறதோ, அவ்வளவுதான் தின்ன முடியும்“ என்னே தீர்கமான முடிவு! அனுபவப் பாடமல்லவா? நன்றாக நீடித்திருக்கும் வாழ்க்கை முழுதும்!
சாவகாசமாக ஒரு மாம்பழத்தை எடுத்துத் தின்றான். “என்னே ருசி! வாத்யாரின் திருக்கரங்களில் தவழ்ந்த பழமல்லவா! சித்தர் கைப்பழம் சித்தமெல்லாம் இனிக்குமோ!“ எப்போது “தனக்கு எது பாக்கியோ அதுதான் கிட்டும்“ என்ற தீர்கமான எண்ணித்திற்கு வந்து மாம்பழத்தை எடுத்தானோ, அதற்கப்புறம் ஒரு குரங்கும் வரவில்லை. பழத்தை ஹாய்யாக நன்றாக மென்று தின்றான்.! பழம் உண்டபின் நிறைய இறைத்துதிகள், மந்திரங்களை ஓதினான். அவதூது மேனியாக!!
இமாலய மலையில் அவதூது பாபா, சதா சிவபிரம்மேந்திரர், த்ரைலிங்க சுவாமிகள், வட இந்தியா நாகாஅவதூது யோகிகள் போன்ற மஹான்களுடைய, சித்தர்களுடைய சரிதைகளைப் பெரியவர் நிறைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். பல மகான்களையும் தரிசித்தும் உள்ளான். சந்நியாச பரிமாணங்களில் அவதூது மேனியாக ஆற்ற வேண்டிய பல வழிபாடுகள் உண்டு. முறையற்ற காமத்தை நீக்கினால் தான் முக்தி தரும் வழி தெரியும்.
அவதூது மேனியாகக் காட்டு விலங்குகளிடையே வாழ்ந்து பல ஆன்மீகப் பயிற்சிகளை குருவருளுடன் பயின்றால் மான், புலி, யானை போன்ற விலங்குகளிடையே உள்ள அபூர்வமான ஆன்மீக சக்தியைப் பெறலாம். மான் தோல், புலித்தோல், யானைத் தோலில் பல அற்புதமான ஆன்மீக இரகசியங்கள் உள்ளன. இயற்கையாக இறந்த இவ்விலங்குகளின் தோலாடை உன்னத தியான நிலைகளை எளிதில் தரவல்லதாம்! இவற்றையெல்லாம் குருகுல வாசத்தின் இம்மலைவனப் பகுதியில் தான் சிறுவன் பெரியவரிடம் பின்னர் கேட்டுணர்ந்தான். அந்தக் குகை வாயிலில் பல கூழாங் கற்கள் கிடந்தன, அவதூது மேனியாய் உச்சாடனம் செய்ய வேண்டிய மந்திரங்கள் பல உண்டு! அவற்றில் கூழாங்கல்லை உருட்டிச் செய்ய வேண்டிய சில அற்புதமான மந்திரங்கள் உண்டு. ஸ்படிகக்கல் வகையைச் சேர்ந்தமையால் கூழாங்கல் மந்திரங்களை எளிதில் கிரஹிக்கும்.
ஒருமுறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகையில் குபேரலிங்கம் அருகே நிழலுக்காக அமர்ந்த பெரியவர் ஏழு கூழாங்கற்களைக் கொணடு “கல் ஆட்டம்“ ஆடினார். சிறுவன் வியப்புடன் பார்த்தான். வாத்யார் கல்லை வைத்து ஆட்டம் ஆடுகிறாரே! பொழுது போகவில்லை. அவ்வளவு நற்காரியங்களைச் செய்யணும் சொல்வாரே! “
“இதோ பாருடா! பெரிய கல்தான் சூரியன்! மத்த ஆறும் குரு, சுக்ரன், செவ்வாய், புதன், சனி கிரஹ மூர்த்திகள் – காலை கிழக்கைப் பார்த்தும் சாயந்தரத்துல மேற்கைப் பார்த்தும் ஆட வேண்டிய ஆட்டம்! ஏன்னு கேக்கிறியா! இது பாக்கறதுக்கு விளையாட்டு மாதிரி இருக்கே தவிர, கூழாங்கல் வச்சு ஆடற இந்த விளையாட்டுக்குப் “பாஸ்கர நேத்ர தீட்ச யோகம்னு” பேரு!
“காலைல கிழக்கே பார்த்து இந்தக் கற்களைக்  தூக்கிப் போட்டு ஒன்றாம் ஆட்டம், இரண்டாம் ஆட்டம்னு பல ஆட்டங்கள் உண்டு. கல்லை மேலே தூக்கிப் போட்டு ஆடும்போது அவ்வப்போது எதிர் சூர்ய ஒளி கண்ணுக்குள்ள பாஞ்சு, கண்ணுக்குள்ளாற இருக்கற ரத்த நாளங்களை சுத்தம் பண்ணும், கண்களுக்கு நல்ல எக்ஸ்ர்சைஸ்! கண்பார்வை மேலே கீழே உருண்டு சூர்ய ஒளி படுறதுனால் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, மாறுகண், காமாலை நோய் எதுவும் வராது! காட்ராக் வியாதியே வராது! அறுபது வயசுல கூட அரிசியில் தூசு பொறுக்கலாம். “
“அதுமட்டுமில்ல, இந்தக் கூழாங்கல்லுக்கு தெய்வீக சப்தஸ்வர ஒலிசக்தி உண்டு.! அதனால் தான் திக்குவாய் இருக்கறவங்க தினமும் காலை, சாயந்தரத்துல வாய்ல கொஞ்சம் கூழாங்கற்களைப் போட்டு, அசைபோடும் பசு மாதிரி வாயசைச்சு வந்தாக்க அந்தக் கூழாங்கல்லோட சக்தியால் திக்குவாய் சரியாகும். ஸ்படிகக் கல், சாளக்கிராமக் கல் வகையைச் சேர்ந்தது கூழாங்கல், மந்திரத்தை அப்படியே கிரஹிக்கும்.”
இவையெல்லாம் நர்மதா நதிக்கரையில் பெரியவர் சிறுவனுக்குக் கூறிய ஆன்மீக இரகசியங்கள்! நர்மதா நதிப்படுகையில் இன்றைக்கும் பல தெய்வீக சக்தி மிகுந்த பாணக் கற்கள், கூழாங்கல் பாறைகளைக் காணலாம். அவற்றில் பல காந்த சக்தியும், மின்சக்தியும் கொண்டவை! இவற்றைச் சுற்றிப் பலரிஷிகளும், யோகிகளும் மீன் வடிவில் தவநிலையை மேற்கொண்டிருக்கின்றனர்.
விண்ணுலகங்களிலும் கிட்டாத தெய்வீகப் பாறைகள்! கன்யாகுமரியில் ஸ்ரீவிவேகானந்தர் அமர்ந்த பாறையும் இவ்வகையில் அமைந்ததாகும். இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்தவாறே சிறுவன் ஏழு கூழாங்கற்களைக் கையில் எடுத்துக் கொண்டு பெரியவர் அவனுக்கு அளித்திருந்த மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினான்!
அவதூது மேனி!
பத்மாசனம்!
வலதுகை விரல் இடுக்குகளிலும் உள்ளங்கையிலும் ஏழு கற்கள்!
பிராணாயாமங் கூடிய நிலையில்.....
நிவித நிலையில் (கழுத்தில் மாலையாக) பூணூல்!..........இந்நிலையில் அம்மந்திரத்தை ஜபித்தான்.
என்ன மந்திரம் அது (நர்மதை நதிக்கரையில் பெரியவருடன் சஞ்சாரஞ் செய்கையில் அவர் கற்றுத் தந்த எளிய மந்திரங்கள் !)
“நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம :
நம : பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம : “
எளிய ஆனால் அற்புதமான தெய்வீக சக்தி வாய்ந்த மந்திரம்! முறையோடு குருமுகமாக உபதேசம் பெற்று ஜபித்தால் மேலும் அளப்பரிய சக்தியைத் தரவல்லது!
எவ்வளவு நேரம் தான் அந்த மந்திரத்தைச் சிறுவன் ஜபித்தானோ  தெரியாது, திடீரென்று “கர்ர்ர்ர்........... “ என்ற இடி முழக்கக் கர்ஜனை கேட்டு திடுகிட்டு எழுந்தான்!
எதிரில் ........
சுமார் பத்தடி நீளமுள்ள புலி...........
பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு வாலைச் சுழற்றியவாறு ஆக்ரோஷ நிலையில் பாயத் தயாராக இருந்தது!
அனல் கக்கும் கண்கள்!
சிவந்த நாக்கினால் அடிக்கடி முழங்காலை நக்கிக் கொண்டு அவ்வப்போது தலையைத் தூக்கி பயமுறுத்தியது.
“கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............” மீண்டும் இடி போன்ற கர்ஜனை...
சிறுவன் வெலவெலத்து நின்றான். கைகால்கள் உதறத் தொடங்கின.சதுரகிரி மலை, பொதியமலைப் பகுதியில் பெரியவர் அவனுக்கு 16 அடி வேங்கையைக் காட்டி இருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் புலியை நேருக்கு நேர் சந்திப்பது இதுதான் முதல் தடவை!
“ஒரு சிலமந்திரவாதிகள்“ மந்திரக்கட்டினால் மாயப்புலியை ஏவுவார்கள். உண்மையான புலியைப் போலவே அது மிகவும் பயமுறுத்தும், அவ்வளவே! அதனால் வேற ஒண்ணும் பண்ணமுடியாது!. அந்த மாயப் புலியோட கால்தரையில் பாவாது! அதுலேந்தே அதை ஈஸியாக் கண்டு பிடிச்சுடலாம்“ ............ பெரியவர் எப்போதோ சொன்னது!
இவையெல்லாம் வாமன – தந்திர – சாஸ்திரத்தில் உள்ள ஆன்மீக இரகசியங்கள். “கடவுளே! அந்த மாதிரி இது இருக்கக்கூடாதா“ – என்று பீதியினூடே எண்ணியவாறே சிறுவன் புலியின் கால்களைப் பார்க்க முயன்றான். மந்திரவாதி ஏவிய மாயப் புலியா! இல்லை நிஜப்புலியா!
“புர்.........புர்...... “ என்று உறுமியவாறே அது சிவந்த கண்களுடன், திறந்த வாயுடன் பாய்வதற்குத் தயாரானதைக் கண்டவுடன் சிறுவனுக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. மாயப்புலியா என்று கண்டறியும் வித்தையை நினைவுக்குக் கூடக் கொண்டு வரமுடியவில்லை....! புலி கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வர.............
சிறுவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை!
“....... நம்மைத் தாக்க வருகிறதா, வாத்யாரின் உடலை இழுத்துச் செல்ல வருகிறதா! எப்பாடுபட்டாவது வாத்யரைக் காப்பாத்தணும். அதுக்கு ஒரே வழி புலிகிட்ட நான் மாட்டிக்கிறது தான். என்னைப் புடிச்சதுன்னா வாத்யாரை விட்டுடும். ஆனா மந்திரவாதி ஏவின புலியா இருந்தாக்க அது வாத்யார் உடம்பைத்தான் எடுக்கும் இது என்ன பண்ணப் போகுதுன்னு தெரியலையே ....  “
புலி நெருங்க ... நெருங்க..... சிறுவன் பெரியவரின் உடல் மேல்படுத்தவாறே  ...... ஏதோ யோசனையில்  .....
கைகளில் கூழாங்கற்கள்.....
வாயோ “நம உக்ராய ... “ மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருந்தது!
வருவது வரட்டும் என்று சிறுவன் வெகுசப்தமாக “நமஉக்ராய“ மந்திரத்தை ஓதியவாறே....
ஒரு கூழாங்கல்லைத் தூக்கிப் புலியின் மேல் ஏறிந்தான்!
அது உருண்டு கழன்று, சிறுவனை நெருங்கிக் கொண்டிருந்த புலியின்முன் விழ..........
“டர்.. புர்ர்.... “ பலத்த சப்தத்துடன் ஏதோ தாக்குண்டது போல் பல அடிகளுக்குப் புரண்டு பின்னால் விழுந்தது புலி..!!!
சிறுவன் திகைத்தான்! ஒரு கூழாங்கல்லுக்கு இவ்வளவு சக்தியா!
அவனுக்கு குஷி பிறந்து விட்டது. அடுத்த கூழாங்கல்லை எடுத்தான்.
“டேய்! இந்த மந்திரத்தை வரம்புக்கு மீறிப் பயன்படுத்தினால் பஸ்மாசுரன் மாதிரி உன்மேலேயே பாஞ்சுடும்!” – பெரியவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன!
சிறுவன் வழக்கம் போல் குழம்பினான்.

மரணத் தீட்டு

மரணம் என்பது இயற்கையின் விதி. யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. மகானகளைத் தவிர ! அப்படி அந்த இயற்கையான (ஒருவடைய) மரணத்துடன் நாளடைவில் செயற்கையான சில விஷயங்களும் சேர்ந்து கொண்டன. அதில் ஒன்றுதான் “தீட்டு” என்பது.....
இந்தத் “தீட்டு”... என்பது எப்படி வந்தது?
நம்முடன் பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு “அவரைப் பிரிந்து விட்டோம்” என்ற வருத்தம் சில காலங்களுக்கு, இறந்தவருக்கோ, “நாம், இவ்வுலகையும், உறவுகளையும் விட்டுப் பிரிகின்றோமே’ என்ற வருத்தம் (சாதாரண மனிதனுக்கு!).
ஆகவே மரணம் என்ற ஒரு நிகழ்ச்சி மனிதனுக்கு சில காலங்களுக்கு, வருத்தத்தைத்தான் தருகிறது. வருத்தம் மனிதனை (மன) அமைதி கொள்ளச் செய்யாது. மனம் அமைதியற்ற நிலையில் ஒரு மனிதன் எந்த ஒரு நற்செயலையும் செம்மையாகச் செய்து முடிக்க முடியாது. வருத்தமுற்ற மனிதன் எதையுமே கருத்துடன் திருத்தமாகச் செய்து முடிக்க முடியாது என்பதால் அவனை சிறிது காலம் ஒதுங்கி வாழ்வதையே “தீட்டு” என்று சொன்னார்கள்.
அதே சமயம் “மரணம் சம்பவித்த காலத்திலிருந்து சில நாட்கள் கோவிலுக்குச் செல்லக் கூடாது” .... என்று ஒரு பழக்கமும் இப்போது நிலவி வருகிறது, “மரணம்” என்றாலே... முதலில் கோவிலுக்குப் போவதை நிறுத்து என்றுதான் மனிதன் சொல்கிறான்.... இறந்தவன்  தாம் இவனுக்கு உற்ற உறவாயிற்றே... இவன் ஏன் சில காலங்களுக்குச் சாப்பிடுவதை நிறுத்தி விடக்கூடாது...! அதை மட்டும் அவன் செய்ய மாட்டான்... உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, ஆத்மஸ்ரேயஸுக்கு பக்தி அவ்வளவு அவசியம். அந்த சமயத்தில் “கோவிலுக்குப் போக வேண்டாம்“ என்று ஏன் பெரியவர்கள் (அந்தக் காலத்தில்)  சொன்னார்கள் தெரியுமா?
இறந்தவர் இல்லத்தில் “கல் ஊன்றுதல்” என்ற வழக்கம் இன்றும் நிலவுகிறது. அந்தக் கல்லுக்கு  பூஜைகள், நிவேதனங்கள் செய்வதும் உண்டு. அதாவது இறந்தவருடைய ஆவி அந்தக் கல்லில் இறங்கி (ஆவாஹனமாகி) இவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது அர்த்தம்.... இது உண்மையே ..
கோயிலிலும் கடவுளைக் கல் வடிவில் தான் காட்டுகிறார்கள். இறைவனும் அந்தக் கல்லில் தான் குடிபுகுந்து குடிமக்களைக் காக்கிறான். நாம் எந்த விதமாகப் பிரார்த்தனை செய்தாலும் அது இறைவனைச் சென்றடைவதற்குப் நம் பித்ருக்களே பாலமாக அமைகிறார்கள் இதை நாம் உணந்தேயாக வேண்டும்.
“ஆகவே உனக்கு இறையருளைப் பெற்றுத்தரும் பித்ருவே கல்வடிவத்தில் உன் வீட்டில் நிற்கும் போது நீ ஏன் அனாவசியமாக கோயிலுக்குச் செல்ல வேண்டும்? உன் வீட்டிலிருக்கும் தெய்வத்தை முதலில் வணங்க வேண்டும்.... என்று தான் பெரியவர்கள் சொன்னார்களே தவிர கோயிலுக்குப் போகவே கூடாது (இறந்த நாளிலிருந்து சில காலங்களுக்கு) என்று எந்த சித்த தந்திரங்களிலும் சொல்லவில்லை.”
ஆகவே தீட்டு என்றவொன்றைக் காரணம் காட்டி கோயில்களில் நாம் செய்து முடிக்க வேண்டிய திருப்பணிகளைச் செய்யும் போது தான்.. இறந்தவர்களுக்கு நல்லதை ஈசன் செய்வான் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்தாக வேண்டும்.

விஷ்ணுபதி

வருடத்திற்கு நான்கு முறை வருகின்ற (மாதப் பிறப்புகள்) விஷ்ணுபதி புண்ணிய காலமானது. ப்ரதோஷ காலம் போன்று மிகப் புனிதமான நேரமாகும். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்ய்ப்படுகின்ற பூஜை, ஹோமம், யாகம், தான தர்மங்கள் போன்றவற்றிற்கு அபரிமிதமான புண்ணிய சக்திகள் உண்டு. “ப்ரதோஷமகிமை” என்னும் அரிய ஆன்மீக ரகஸ்யங்கள் நிறைந்த புத்தகத்தின் மூலமும், ஆன்மீக சொற்பொழிவுகளினாலும் ப்ரதோஷ மஹிமையை யாங்கணும் பரப்பி வரும் குருமங்களகந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், விஷ்ணுபதி புண்யகால பூஜைகளும், வைணவத் தலங்களில் சிறப்புடன் கொண்டாடுவதற்காக அரும்பாடுபட்டு வருகின்றார்கள்.
வைணவப் பெரியோர்களும், பக்தர்களும், ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜையினை, ப்ரதோஷ பூஜை போல் ப்ரசித்தி அடையச் செய்து கலியுக மக்கள் இறைநிலையில் உன்னத நிலைமை அடைய அரும்பணி ஆற்ற வேண்டுகிறோம்..
..... அதோ விஸ்வாமித்ரர், ஸ்ரீநாராயணனை நோக்கிக் கடும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார், பல லட்சம் ஆண்டுகளாக! ஓர் அசரீரி ஒலிக்கின்றது..
“விஸ்வாமித்ரா! நீ விஷ்ணு மாயையைக் கடந்தால் தான் உனக்கு ஸ்ரீமந்நாராயண  தரிசனம் கிட்டும்!“ விஸ்வாமித்ரர் கண் திறந்து பார்த்தார் . எதிரே..... ஆயிரம் ஆயிரம் விஷ்ணு லோகங்கள் தென்பட்டன. அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு மஹாவிஷ்ணு சயனக் கோலத்தில், அவர்தம் திருவடியில் ஸ்ரீலக்ஷ்மி!
இதில் எது ஸ்வய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியோ! இது தான் விஷ்ணுமாயையோ! உத்தம மகரிஷிகளுக்கும் மாயை உண்டா என்ன? மன உறுதியுடன் விஸ்வாமித்ரர் ஒரு விஷ்ணு லோகத்தினுள் நுழைந்தார். “வாருங்கள் மகரிஷியே, தங்கள் வரவால் அடியேனுடைய லோகம் புனிதம் அடைந்தது. தாங்கள் அருகில் உள்ள விரஜா நதியில் நீராடி வருவீர்களாக! அடியேனும் லக்ஷ்மியுடன் தங்களுக்குப் பாதபூஜை செய்ய விழைகின்றோம்!” விஸ்வாமித்ரர் நீராட விரைந்தார்.!
“என்ன இது ஒரே புதிராக இருக்கின்றது. ஏதேனும் ஒரு மகரிஷி, தம் மாயையால் விஷ்ணு, லக்ஷ்மியாக உருவம் பூண்டு என்னைச் சோதனை செய்கின்றாரோ” என்று ஆழ்ந்த சிந்தனை ஊடே அவர் நீராடித் திரும்பினார் அதற்குள் விஷ்ணு ஆழ்ந்து உறங்கிவிட்டார்! .. வந்ததே கோபம் விஸ்வாமித்ரருக்கு, ஈரக்காலுடன் விஷ்ணுவை உதைத்து விட்டார்..
விஷ்ணுமாயை உச்சத்திற்கு வந்து விட்டதோ..!
ஸ்ரீவிஷ்ணுவை உதைத்தமையால் அனைத்து சக்திகளையும் ஒருங்கே இழந்து விட்டு இதோ சாதாரண மனிதனாய் அலைந்து திரிகின்றார் விஸ்வாமித்ரர். பறவை இனங்களும், பூச்சி இனங்களும் கூட அவரைச் சீண்டவில்லை. மாமகரிஷி என அவரைச் சுற்றி சுற்றிச் வந்த ஆயிரமாயிரம் சிஷ்ய கோடிகளும், “பெருமானை உதைத்த பெரும்பாவி” என்று விலகிச் சென்றனர். பெண்டிர்கள் “இவருக்கு அன்னம் இடுதலே மாபாதகச் செயல்” என்று ஒதுங்கினர்.
இவ்வாறு மதிகெட்டு விதிகுலைந்து நின்ற விஸ்வாமித்ரரைக் காணவே பரிதாபமாக இருந்தது. அழைப்பாரோ, அரவணைப்பாரோ எவரும் இன்றி நிலை குலைந்து நின்றார் விஸ்வாமித்ரர். உடல் உருக்குலைந்து எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டார்.
மகரிஷிகள் எல்லாம் விஸ்வாமித்ரரின் நிலை கண்டு இரங்கி அவருக்கு நல்வழி காட்டுவதற்காக ஸ்ரீஅகஸ்தியரை நாடினர். “நீங்கள் அனைவரும் இன்றைக்கு விஸ்வாமித்ர மகரிஷி பெற்றுத் தந்த உன்னதமான ஸ்ரீமந்திரத்தின் தெய்வீகச் சக்தியால் தான் மகரிஷிகளாய் ப்ரபஞ்சத்தில் உலவி வருகின்றீர்கள். இதற்கு நன்றிக் கடனாக நீங்கள் அனைவரும் உங்கள் காயத்ரீ மந்திர சக்தியை விஸ்வாமித்ரருக்கு அளித்து அவரை, அனைத்தும் தரவல்ல அருணாசல மலையை (திருஅண்ணாமலை) கிரிவலம் வரச் செய்யுங்கள். அதுவே அவருடைய தவத்தின் பலனை பரிபூரணம் அடையச் செய்யும். நல்வழியைக் காட்டும். அங்கு தசமுகதரிசனத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதார காட்சியினைப் பெற்று பூத உடலுக்கு மோட்சம் தரும் ஸ்ரீபூதநாராயணனின் திருஅருளுடன் அந்த நல்வழியைக் காட்டப் பெறுவார்” என்று அகஸ்தியர் அருளினார்.
உருக்குலைந்த மெலிந்த உடலுடன் தளர்ந்து நின்ற விஸ்வாமித்ரரைச் சுற்றி நின்றனர் மகரிஷிகள்.
பாண்டவ மகரிஷி என்பார் தான் ஜபித்த காயத்ரீ மந்திரத்தின் ஓர் அக்ஷர பலனை அவருக்கு அளிக்க விஸ்வாமித்ரருக்குத் திருஅண்ணாமலையை நோக்கி நடக்கின்ற உடல் தெம்பு கிட்டியது. இதிலிருந்து என்ன தெரிகின்றது? இறைவனை நோக்கிச் செல்கின்ற மனோதிடத்தை உடல் சக்தியாகத் தரும் சக்தி உடையதே காயத்ரி மந்திரத்தின் ஓர் அக்ஷர பலனாகும்.
சுகந்தமுனி என்பவர் காயத்ரீ மந்திரத்தின் இரண்டாவது அக்ஷர பலனை விஸ்வாமித்ரருக்கு அளிக்க, அவருக்குத் திருஅருணாசலத்தை நோக்கிக் கூப்பிய கரங்களுடன் நடக்கும் சக்தியைப் பெற்றார். காயத்ரீ மந்திர இரண்டாவது அக்ஷர பலன்யாதெனில் இறைவன் படைத்த கைகளை நற்காரியங்களுக்காகவும், பிறருடைய துன்பங்களைக் களைவதற்காக பயன்படுத்தவும் அதன் தெய்வீக சக்தி உதவுகிறது.
ஸ்திரப்ரக்ஞ் ரிஷி தன்னுடிய காயத்ரீ மந்திர தவத்தின் மூன்றாவது அக்ஷரபலனை விஸ்வாமித்ரருக்கு அளிக்க, இதனால் திருஅருணாசலமலை ஸ்வரூபம் அவர் மனக்கண் முன் நிற்க அவர் வெகுவேகமாக நடக்கலானார். காயத்ரீ மந்திரத்தின் மூன்றாவது அக்ஷரபலனாக இறைவனின் ஸ்தூல ரூபம் என்றும் உள்ளத்தில் நிலைந்து நிற்கும். இது நிர்குண பரப்ரும்ஹத்தை அடைவதற்கான முக்கியமான நிலையாகும்.
ப்ரபுசந்திர மகரிஷியென்பார் தன் காயத்ரீ தபோபலனில் நான்காவது அக்ஷர சக்தியை உவப்புடன் அளிக்க, இதனால் சூர்ய கலையில் சுவாசம் நிலைக்கப்பெற்று திருஅண்ணாமலையின் தெளிந்த காட்சி  நிறைந்த கூரிய பார்வையை அவர் பெற்றார். காயத்ரீ மந்திரத்தின் நான்காவது அக்ஷர பலனாக தீர்கமான பார்வையையும் தேஜோமயமான கண் ஒளியும் ப்ரமஹ தேஜசும் உண்டாகும். சூர்ய கலையான பிங்கலை சுவாசத்தால் கண் ஒளி பெருகி ஆரோக்யம் உண்டாகும். தீயவை, பிறர்மனை நோக்குதல், பேராசைக் காட்சிகளை ஒதுக்கி நல்ல எண்ணங்களைத் தரும்.
ஸ்ரீமஹேஸ்வர மஹரிஷி  தன்னுடைய காயத்ரீ தபோசக்தியின் ஐந்தாவது அக்ஷர பலனை விஸ்வாமித்ரருக்கு அளித்தார். இதனால் அவருடைய மனோநிலை சீராகி, சாந்தமும் மனோதிடமும் பெற்றார். காயத்ரீ மந்திரத்தின் ஐந்தாவது அக்ஷர பலனானது நிலையற்ற மனதை நிலைப்படுத்தி ஏகாந்த மனோபாவத்தை உருவாக்கி இறைச் சிந்தனையை நிலைப்படுத்தும்.
இவ்வாறாக ஐந்து மகரிஷிகள் தியாகம் புரிந்து அளித்த காயத்ரீ மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களின் பலனால் உயர்மிகு ஆன்மீக சக்தியைப் பெற்ற விஸ்வாமித்ரர் திருஅருணாசல மலையை பலயுகங்களாக வலம் வந்தார்.
(ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் ஐந்து அக்ஷ்ரங்களுக்கே இந்த சிறப்பான பலன், என்றால் இருபத்து நான்கு அக்ஷங்களுடைய முழு மந்திரத்தின் மகத்துவத்தை அளவிட இயலுமோ!)
ஒரு நாள்.....
தசமுக தரிசனம்! அங்கே விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ஒருங்கே நின்று ஈசனைத் தரிசனம் புரிகின்ற காட்சியைக் கண்டு ஆனந்தித்தவாறே பூத நாராயணப் பெருமாளின் சந்நிதியை அடைந்து அவரை வணங்கி, அங்கிருந்து திருஅண்ணாமலையை தரிசித்தார். திருஅண்ணாமலையார் அசரீரியாக அருள்மழை பொழிந்தார். “விஸ்வாமித்ரா, துலா ராசியில் சூரியனும் குருவும் இணைந்து இருக்கின்ற காலத்தில் காவிரி நதியில் நீராடி வந்திடில் நீ பெருமாளை காலால் உதைத்த பாவத்திற்கு ப்ராயசித்தம் கிட்டுவதோடு அன்றி உன் தபசங்கல்பமும் நிறைவேறும்”
விஸ்வாமித்ரர் அருணாசல கிரிவல சக்தியால் காவேரியை நோக்கிப் பயணம் தொடங்கினார். சோழநாட்டில் ஓர் இடத்தில் குறித்த சூரியன் – குரு இருவரும் துலாவில் சங்கமிக்கும் காலத்தில் காவேரியினுள் மூழ்கிட..... அவர் மூழ்கி எழுந்த இடமோ வேறு!
எந்த தெய்வ சக்தி அவரை நீரினுள் இட்டு வந்ததோ அவரே அறியார். எந்த தெய்வ சக்தி அவரை நீரினுள் இட்டுவந்ததோ அவரே அறியார்.  ஸ்ரீகாவேரி ப்ரசன்னமானாள்!
பாருங்கள், ஒரு மகரிஷியே ப்ராயசித்தத்திற்காக எத்துணை தெய்வ நிலைகளை, தபோமுறைகளை, தெய்வ தரிசனங்களை உய்த்து உணர வேண்டியுள்ளது அப்படியானால் சாதாரண மனிதன் அடைய கடக்க வேண்டிய இறைநிலைகள் எவ்வளவோ!
ஸ்ரீகாவேரி தேவி, “விஸ்வாமித்ரரே! இந்த திவ்யமான க்ஷேத்ரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅபீஷ்டவரதனைச்  சரண் அடைவீராக, இங்குள்ள ஸ்தல வ்ருக்ஷமான பாதிரிமரம், வரத புஷ்கரிணி தீர்த்தம் அனைத்தையும் தரவல்லது. உம்முடைய மனோபீஷ்டத்தை இங்கு அடைவீர்களாக! தாங்கள் எண்ணி ஏங்குகின்ற ப்ராயச்சித்தமும் இங்கு கிட்டும்! என்று கூறி அங்கு பூஜை செய்ய வேண்டிய முறையையும் விளக்கிக் கூறினாள். அந்த க்ஷேத்திரமே காரப்பங்காடு! கரப்பங்காடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பவரே ஸ்ரீஅபீஷ்டவரதர்.
இங்குள்ள ஸ்தல வ்ருக்ஷமே சிவப்பு, வெள்ளை புஷ்பங்கள் கூடிய பாதிரி விருக்ஷம். விஸ்வாமித்ரர் வரத புஷ்கரணியில் நீராடி ஸ்ரீஅபீஷ்டவரதரை தரிசனம் செய்து ஹோம, யாக, பூஜைகளை நிறைவேற்றி, வரப்ரசாதத் தீர்தத்தை ஸ்தல விருக்ஷமான பாதிரி மரத்தின் வேரில் ஊற்றி அம்மரத்தின் அடியில் தியான நிலையை மேற்கொண்டார். சிறப்பான தான தருமங்களுடன் ஸ்ரீஅபீஷ்டவரதரைச் சேவிக்க, ஸ்ரீஅபீஷ்டவரதரே அவருக்கு விஷ்ணுபதியாம் உத்தம நிலையை அருளினார்.
இவ்வாறாக விஸ்வாமித்ரர் அந்த யுகத்தில் விஷ்ணுபதியை அடைந்த திருநாளே யுவவருட துலா மாதாமும் விருச்சிக மாதமும் சங்கமமாகும் விஷ்ணுபதி புண்யகாலமாகும். 16.11.1995 வியாழன் அன்று இரவு 2 மணி முதல் 17.11.1995 காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்யகாலம் அமைகிறது. கிடைத்தற்கரிய புண்யகாலம் இது.

இந்நாளில் காரப்பங்காடு திருஅபீஷ்டவரதர் திருச்சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள், ஹோமம், தான தருமங்களைச் சிறப்பாக நிறைவேற்றி ஸ்ரீகாவேரி மாதா அளித்த முறையில் ஸ்ரீஅபீஷ்டவரதரைச் சேவித்திட
1. பெரியவர்களைக் காலால் மிதித்த பாவம்
2. கோயிலுக்குச் செல்லாத பாவம்
3. மஹான்களைச் சென்று தரிசிக்காத பாவம்
4. இறைவன் கோவிலில் நின்று அவன் நாமம் சொல்லாத பாவம்
5. கோயில்களில் அடி ப்ரதட்சிணம், அங்கப்ரதட்சிணம் செய்யாத பாவம்
6. திருஅருணாசலேஸ்வரரைக் (திருஅண்ணாமலையாரை) கிரிவலம் வராத பாவம்
7. கணவனுக்கு/பெற்றோருக்குப் பாதபூஜை செய்யாத பாவம்
8. தகாத இச்சைக்காகக் கால் கடுக்கநின்ற பாவம்
9. பெரியோர்களின் பாதுகையைச் சுமக்காத பாவம்
10. கணவன் பாதங்களை மிதித்த பாவம்
11. வசதி இருந்தும் பெற்றோர்களையோ, குழந்தைகளையோ அனாதை இல்லங்களில் மாணவ மாணவியர் விடுதி (HOSTEL), குழந்தைக் காப்பகங்களில் (crèche) சேர்த்தலால் வருகின்ற பாவம்.
            -மேற்கண்ட பாவங்களைத் தீர்க்கும் ஸ்ரீஅபீஷ்டவரதனின் அனுகிரஹத்தைப் பெற்றிடலாம். இந்நாளில் வேதஞானம் கூடிய நல்லோர், பெரியவர்களுக்குப் பாத பூஜை செய்து ஸ்ரீஅபீஷ்டவரதருக்குப் தான தருமங்களுடன் பெருமாளைச் சேவித்திட பெரும் பாவங்களுக்கு ப்ராயச்சித்தம் காணலாம்.
ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம்
ஸ்ரீவிஸ்வாமித்ரர் காவேரி நதியில் மூழ்கிட ......  அவர்  எழுந்த இடமோ, வரதபுஷ்கரணி தீர்த்தம்! வரும் விஷ்ணுபதி புண்யகாலத்தைக் கொண்டாட வேண்டிய காரப்பங்காடு புனிதஸ்தலமானது மன்னார்குடி – பட்டுக்கோட்டை சாலையில் மதுக்கூர் அருகே உள்ளது. இங்குதான் வரத புஷ்கரணி தீர்த்தமும் உள்ளது.

உடல் பிறப்பும் முடிவும்

ஸ்தூல, சூட்சும சரீரங்களைப் பற்றி ஒரு தத்துவவாதியான அடியார்க்கு (philosopher) நம் குருமங்கள கந்தர்வா அளித்த விளக்கங்களின் ஒரு பகுதி
அடியார் : பல இடங்களில் இறப்பு, மரணம், ஆவியுலகம் பற்றிய சற்குகுருமார்களின் விளக்கங்கள் ஸ்ருதி, ஸ்மிருதியின் விளக்கங்களிலிருந்து மாறுவது போல் தோன்றுகிறதே!
சற்குரு: சூட்சும சரீரம், காரண சரீரம், ஆகியவை பற்றி ஸ்ருதி, ஸ்ம்ருதி கூறுபவை அனைத்தும் உண்மையே. ஆனால்  அதே ஸ்ருதி, ஸ்ம்ருதிகளே “விதியை மாற்றும் அனுக்ரஹம் பூண்டவர் சற்குருவே” என்று தெளிவாக  உரைப்பதால் சற்குருவைப் பெற்ற ஒருவனுக்கு அவரே அடியாரின் இறுதி காலத்தை மேற்பார்வை (Supervision) செய்கிறார்.
அவனது தேக வியோகம் குருவின் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. அந்த குருவே தேக வியோகத்தின் Rehearsal ஐக் காட்டுவதற்காக பகவத்கீதை பாராயணம், கருட பாராயணம், கடோபநிஷத் போன்றவற்றை முன்கூட்டியே உபதேசமாக அளிக்கலாம். அந்த அடியாரின் நம்பிக்கைக்கேற்ப அந்த குரு அவனது கர்ம பரிபாலனத்தை மேற்கொள்கிறார்.
எனவே குரு கூறியதை மட்டும் நோக்கி மனம் சென்றால், “ஸ்ருதி, ஸ்ம்ருதி பிரமாணமாயிற்றே, குருவின் விளக்கம் அதற்கு ஒட்டியவாறில்லையே” என்ற ஐயமோ, குழப்பமோ ஏற்படாது. எனவே ஸ்ருதி, ஸ்ம்ருதியை Baseஆக வைத்து ஆத்ம விசாரம் செய்வதை விட குருவின் வார்த்தைகளை ஸ்ருதி, ஸ்ம்ருதியாக பாவித்து அதுவே உண்மையென ஆத்ம விசாரம் செய்தல் வேண்டும். இப்படிச் செய்தால் எந்த விசனத்திற்கும் இடமில்லை. சற்குரு அருள்கொண்டு ஸ்தூல சரீரத்தோடு மேலுலகம் செல்லலாம்.
சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைலாயம் அடைந்தனர். இராமானுஜருடன் “ஓம் நமோ நாராயணா!” என்று ஓதியவர்களுக்குக் கூட்டமாக வைகுண்ட ப்ராப்தி கிட்டியது. இதற்கு குழுவினை இயக்கம் என்றும் பெயர். (Group karma, Group elevation) சற்குரு வீற்றிருக்கும் போது ஸ்தூல, சூட்சும சரீர (ஸ்ருதி, ஸ்ம்ருதி கூறுகின்ற) வியோக முறைகள் அவர் விருப்பப்படியே அமையும்.
சற்குருவை நாடினோர்க்கு அவரே “அப்பனே சிஷ்யா! இதோ பார் உனது ஸ்தூல சரீரம் அழியும் நேரம் வந்துவிட்டது. இவர்தான் எமபகவான் ஸ்ரீஎமதர்ம பகவான்! அவரை நன்றாக சேவித்துக் கொள்! சாதாரணமான உடல்களுக்கு எமகிங்கரர்கள் வருவார்கள். நீ இறையருளால் சற்குருவைப் பெற்றுள்ளதால் ஸ்ரீஎமதர்மராஜாவே வந்துள்ளார்”.
“இதோ பார், உனது சூட்சும சரீரங்கள் இந்த ஸ்தூல தேகத்திலிருந்து பிரிகின்றன. சுற்றி நிற்கும் சுற்றத்தார்கள் உனது இந்த ஸ்தூல தேகத்திற்குத்தான உரித்தானவர்கள். இன்னும் சிறிது நேரத்தில் உனது ஏனைய சூட்சும சரீரங்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான சுற்றத்தார்களை நீ பல லோகங்களில் பார்க்கப் போகிறாய்! அப்படியானால் உனக்கு எத்தனை இலட்சம் குழந்தைகள், பெற்றோர்கள், மனைவியர்கள், சுற்றத்தார்கள்! இவர்களில் யாரை உனக்குச் சொந்தம் என்று சொல்வாய்! கவலைப் படாதே! நானே உனது சூட்சும சரீர பரிபாலனத்தையும் மேற்கொள்கிறேன் ! உன் குரு நம்பிக்கையால் விளையும் அற்புதங்களைப் பார்த்தாயா!
நீ மனித தேகத்தில் இருக்கும்போது உன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஸ்ருதி, ஸ்ம்ருதியில் படித்திருப்பாய்! எங்களைப் போன்ற மஹரிஷிகள் பிரபஞ்சத்தில் வேதமலர்களாய் மானிட பூஜைக்காக அளித்தவையே ஸ்ருதி, ஸ்ம்ருதிகள். உனது தேகவியோக முறையிலும் இப்போது ஸ்ருதி, ஸ்ம்ருதிகளே எங்கள் சத்திய வாக்காய், சற்குருமொழிகளாய், வேதவாக்காய் அமைகின்றன.“
“இதனையே பகவத்கீதை மூலமாக ஆண்டவன் சூட்சுமமாக அறிவித்தார் இப்போதாவது சற்குருவின் வார்த்தைகளே ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்கியங்கள் என்பதை உணர்வாயாக!” – இவ்வாறகவே சற்குரு சிஷ்ய சம்பாஷணை சூட்சும சரீரத்தில் நடைபெறுகிறது..... எனவே மனிதன் அறியாத ஸ்ருதி, ஸ்மிருதிகள் பல லோகங்களில் உண்டு. அந்தந்த அடியாரின் ஆன்மீக நிலையைப் பொறுத்து அந்தந்த லோகத்தின் ஸ்ருதி, ஸ்ம்ருதி கூறுகின்ற நிலைகளை சற்குருவே அளிப்பார்.
உண்மையில் பல பிறவிகளில் கூடிய பல சூட்சும சரீரங்களின் தங்கும் இடமே ஸ்தூல சரீரம், தம் வினைகளைக் கழிக்கவே அவை ஒரு ஸ்தூல சரீரத்தில் குடியேறுகின்றன. விதிக்கப்பட்ட கர்மங்கள் கழிந்திட அந்த சூட்சும சரீரங்கள் ஸ்தூல சரீரத்தில் இருந்து விடைபெறும் நேரமே மரணம்! That departing  is destined and not affected as per visions of  ஸ்தூல, சூட்சும சரீரம்.
Given the choice, due to Vasanas , no sukshma sareera desires to quit ஸ்தூல தேகம். Hence it is destined!
……..  ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள் விவரிக்கும்  ஸ்தூல, சூட்சும சரீர விதிகள் ஒரு துளியே! விவரிக்கப்படாதவை பிரபஞ்சமளவு விரிந்துள்ளது. Having mastered a decimal quantum of thesis of ஸ்தூல, சூட்சும is of zero effect compared to the oceanic syllabus to be covered there in. சற்குரு  is  the only master/teacher who has mastered in all arts. Hence what Guru dictates becomes  ஸ்ருதி and ஸ்ம்ருதி  provided absolute faith is placed in Him (GURU).
எவ்வாறு ஒரு experienced doctor, nurse வலியின்றி ஊசி குத்துகின்றார்களோ, அதுபோல மரண பயமின்றி மரணத்தை அளிக்கும் experienced (elevated) Souls தான் சற்குருமார்கள் அவர் இருக்கும் போது பயமேன்!
மிருகங்களுக்கு ஐந்தறிவு உண்டு. இந்த ஐந்தறிவைக்கொண்டு இறைவனை உணரும் விலங்குகளும் உண்டு. பெரும்பாலான மனிதர்கள் ஆறறிவு பெற்றிருந்தும் ஐந்து, நான்கு, மூன்று, ஏன் ஒரு அறிவு கொண்டு கூட, அற்பமான வாழ்க்கை நடத்துகின்றனர். ஏ.சி காரில் பயணம் செய்யும் நாய் சாதாரண மனிதனை விட அதிகப் புண்ணியம் கொண்டது.
மிருகங்களுக்கு அறிவில்லை என்பது தவறு. சுகபோகங்கள அனுபவித்த மனிதன் பற்றால், பாசத்தால் உயிர் துறக்க..... இதேபோல் தான் பிராணிகளும், எனவே ஆசைதான் உயிர் வாழ்வதற்கும் துறப்பதற்கும் காரணமே தவிர, இயற்கை உந்துதல் (instinct desire to live) அதில் (உயிர் வாழ்வதற்கான காரணத்தில்) கிடையாது!
எளிய விளக்கங்கள்  ஸ்தூல சரீரம் : நம் உடல் (தற்போது நாம் வாழ்வது)
சூட்சும சரீரம் : உடலற்ற உருவம் (கனவு நிலையில் நம் உயிர் எடுக்கும் சூட்சும உடல்)
காரண சரீரம் : நம் பல பிறவிகளுக்கு காரணமான ஆதியுடல்

காசி யாத்திரை

சேது எனப்படும் இராமேஸ்வரத்திலிருந்து சமுத்திர மண்ணை எடுத்துச் சென்று காசியில் கங்கையில் சேர்த்து அங்கிருந்து கங்கை மண்ணை எடுத்து வந்து அதனை இராமேஸ்வரத்தில் சமுத்திரத்தில் சேர்க்க வேண்டும். இது சேது, காசி யாத்திரையின் ஓர் அங்கமாகும். இத்தல யாத்திரைகளின் பரிபூரணப் பலனைப் பெறும் வழிகளாக நம் சிவகுகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் குருகுலவாசத்தில் தம் முதன்மைச் சீடனாம் நம் குருமங்களகந்தர்வாவுக்கு எடுத்தருளியுள்ள விளக்க்ங்களை இங்கு அளிக்கிறோம். அவற்றை யாவருக்கும் எடுத்துரைத்து அனைவரும் பயன் பெறும்படி செய்தல் சிறந்த இறைப்பணியாகும்.
சொந்த ஊர்க் காசி விசுவநாதரின் அனுமதி
இயன்றவரை இளவயதிலேயே சேது – காசி யாத்திரை மேற்கொள்வது சிறந்தாகும். தம் குல தேவதையைத் துதித்து இஷ்ட தெய்வ மூர்த்தியை வணங்கி, தாம் வசிக்கின்ற/சொந்த ஊரிலுள்ள ஸ்ரீகாசி விசுவநாதர்/விசாலாட்சி சன்னதிக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளுடன் இயன்றளவு அன்னதானம் செய்து ஸ்ரீகாசி விசுவநாதரின் அனுமதி வேண்டி, தீர்த்த யாத்திரையின் முதல் அங்கமான சேதுயாத்திரைய மேற்கொள்ளல் வேண்டும்.
இராமேஸ்வரத்தில் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீஇராமர் பாதம் அமைந்துள்ள கடற்கரைக்கும் சென்று ஸ்ரீராமநாம தாரக மந்திரம் ஓதியவாறு சமுத்திர மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து கொள்ள வேண்டும். இராமேஸ்வரத்தில் அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தானங்களுடன் சேது காசி யாத்திரையின் முதல் அங்கம் நிறைவு பெறுகிறது.
நந்தி சேகரத் தரித்த ராம ராம நாமமே................!!
பிரபஞ்சத்தில் இராம நாமம் எவர் ஓதிடினும் அவற்றைத் தம் திருக்கொம்புகளில் சேர்க்கின்ற, அதியற்புத மைசூர் சாமுண்டி மலையிலுள்ள ஸ்ரீநந்திஸ்வரரைப் பற்றிச் சென்ற மே 1995 இதழில் விளக்கியுள்ளோம். காசியில் மரிக்கும் பாக்யம் பெற்றோரின் காதுகளில் ஸ்ரீபரமேஸ்வரனே ராமதாரக மந்திரத்தை ஓதுகிறரல்லவா? சிவபெருமான் இராம நாமத்தை ஓதுவதற்கு எந்த நந்தியை வாஹனமாக ஏற்றுக் காசியில் எழுந்தருளுகிறாரோ, அந்த நந்தீஸ்வரரை காசிக்குச் செல்லும் முன் த்ரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். இது எவரும் அறியா ஆன்மீக இரகசியமாகும். குறிப்பிட்ட சில சிவரகசிய உபாசகர்களும், வீரசைவர்களும், திருக்கயிலாய (மானஸரோவர், கைலாசமலை) யாத்திரை புரிந்தவர்களும் இன்றும் கடைப்பிடிக்கின்ற காசி யாத்திரை முறையாகும். இதனால் கிட்டும் பலன்களோ அளப்பரியன. சேதுயாத்திரைக்குப் பின் சாமுண்டி மலையில் இந்த நந்திஸ்வரரைத் தரிசித்து பச்சை வேர்க்கடலைகளாலான மாலை சாற்றி வழிபட வேண்டும். இங்கு வேர்க்கடலைப் பாயசம் தானமளித்தல் மிகவும் விசேஷமானது. இங்குக் குறைந்தது 1008 முறையேனும் இராமநாம தாரக மந்திரத்தைக் கூட்டாக ஜபிக்க வேண்டும். இத்துடன் சேது-காசி யாத்திரையின் இரண்டாம் அங்கம் நிறைவு பெறுகின்றது.
 இராமேஸ்வரம், சாமுண்டி மலை தல யாத்திரைக்குப் பின்னர் காசிக்கு யாத்திரை! இந்த யாத்திரைகளை அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டுமா அல்லது இடையில் வேறுகாரியங்களையோ, அலுவல்களையோ நடத்திக்கொள்ளலாமா என்ற வினாக்கள் எழும்.
பொதுவாக சேது-காசி யாத்திரைக்காக உள்ளூர் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஸ்ரீவிசாலாக்ஷி சந்நதியில் சங்கல்பம் செய்து கொண்ட ஒரு மண்டலத்திற்குள் (45 அல்லது 48நாட்கள்) இராமேஸ்வரம் –சாமுண்டி-மலை –காசி-இராமேஸ்வரம் என்று யாத்திரையை நிறைவு  செய்வதே சாலச் சிறந்ததாகும். காசியில் தரிசிக்க  வேண்டிய மூர்த்திகளும், செல்ல வேண்டிய இடங்களும் பலப்பல. ஆனால் சேது காசி யாத்திரையின் அங்கமாகக் காசியில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான இறைப்பணிகளை/நற்காரியங்களைச் சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.
1. காசியில் கங்கைக்கரையில் 64க்கும் மேற்பட்ட ஸ்நான கட்டங்கள் இருப்பினும் அவற்றில் மிகவும் முக்கியமானவையான அனுமான் காட், மணிகர்ணிகா காட், அரிச்சந்திரா காட் போன்ற ஸ்நான கட்டங்களில் பிண்டமிட்டுப் பித்ருக்களுக்குத் தர்ப்பணமளித்தல் வேண்டும். தாமே சமைத்த உணவினை பித்ரு தர்ப்பணத்திற்குப் பின் அன்னதானமாக அளித்தல் பித்ருக்களின் அபரிமிதமான அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும். வாழ்க்கையில் இது பெறற்கரிய வாய்ப்பாகும்.
2. ஸ்ரீகாசி விசுவநாதர், ஸ்ரீவிசாலாட்சியைத் தரிசித்த பின்னர் இராமேசுவரத்திலிருந்து எடுத்து வந்த புனிதமான மண்ணை கங்கையில் கரைத்து, கரைத்த இடத்திலேயே சிறிது மண்ணை எடுத்து அதே மஞ்சள் துணியில் மடித்து, ஸ்ரீபூமாதேவிக்கு நன்றி, செலுத்தி, ஸ்ரீகங்காதேவியையும் வணங்கி அம்மண்ணைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. அன்னபூரணேஸ்வரியை வணங்கி, அவ்விடத்தில் யாசிப்பவர்களுக்கு அன்னதானம் இடுவதும் மிகவும் முக்கியமானதாகும். த்ரிதியைத் திதியில் இங்கு ஸ்ரீஅன்னபூரணேஸ்வரியை வணங்கி மேற்கண்டவாறு தானமிடுதல் ஸ்ரீஅம்மனின் அருளைப் பெற்றுத் தரும். இதனால் எக்காலத்திலும் வாழ்க்கையில் உணவிற்கான பஞ்சம் ஏற்படாது. எத்தகு நோய்நோடியிலும் உணவின் சாரத்தை உடல் ஏற்றுக் கொள்ளும். அன்னத்துவேஷம் ஏற்படாது.
4. காசியில் காலபைரவர் தரிசனம் மிகவும் இன்றியமையாததாகும் . ஸ்ரீகால பைரவருக்குப் புனுகு சாற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். மேலும் ஸ்ரீகாலபைரவ மூர்த்திக்கு முந்திரிபருப்பைச் சாற்றி (மாலையாக) வழிபடுவதால் மரண பயம் அகலும். இரவு, பகலைப் பிரிக்கும். ஆன்மீக உணவே முந்திரிப் பருப்பாகும். இதனால் காலத்தின் மஹிமையுணர்ந்து பிறப்போ, இறப்போ இரண்டுமே இறைவன் தரும் வரமென உணரும் பக்குவம் கிட்டும். இதுவே மரண பயத்தை நீக்கும் எளிய உபாயமாகும்.
5. கங்கையின் எதிர்க் கரையிலுள்ள வியாச காசிக்குச் சென்று, ஸ்ரீகணபதியையும், ஸ்ரீவியாசபகாவனையும் தரிசித்திடுக! தாய் இல்லாதோர் இங்கு தாய்க்குத் தர்ப்பணமிடுதல் உத்தமமானதாகும். இங்கு தேவமொழி/தமிழ்மொழி மறைகள், திவ்வியப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம், போன்றவற்றை ஓதி தேவ கடனுக்கு ஓரளவு பிராயச்சித்தம் காணவேண்டும்.
6. காசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செல்லும் (BHU) வழியில், கழுதை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சோழியம்மன் அல்லது அழுதாலம்மன் திருச்சன்னதியில் சோழிகளைச் சமர்ப்பித்து வணங்கிப் புது ஆடைகளை தானம் செய்தல் வேண்டும். இதனால் வாழ்க்கையில் எக்காலத்திலும் உடைப் பஞ்சம் இராது. பாயில் படுத்து உழல்கின்ற நோயும் வராது.
7. காசி யாத்திரையின் இறுதிக் கட்டமாக அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து ஸ்ரீராமநாம தாரக மந்திரத்தை, “ஓம் நமசிவாய” எனும் சிவபஞ்சாட்சரத்துடன் சேர்த்து தியானிக்க வேண்டும்.
மீண்டும் இராமேஸ்வரம்
காசித் திருத்தல யாத்திரை முடிந்த பின்னர் மீண்டும் இராமேஸ்வர யாத்திரை தொடர்கிறது. காசியில் எடுத்து வந்த மண்ணை இராமேஸ்வரக் கடற்கரை மண்ணுடன் சேர்த்துச் சிறு சிவலிங்கம் செய்து ஸ்ரீராமநாம தாரக மந்திரத்தைக் குறைந்தது 1008 முறையேனும் ஓதி வணங்கி அச்சிவலிங்கத்தைக் கடல் நீரில் கரைத்துவிட வேண்டும். இதனுடன் சேது, காசியாத்திரை பரிபூரணம் அடைகின்றது.

ஆவிகள் பேய் பிசாசுகள்

நல்ல ஆவிகள், தேவதைகள் உள்ளனவா? மந்திர சித்திக்கு இவை கட்டுப்படுமா? பேய், பிசாசு போன்றவை உண்டா? இவை மயானத்திலும், பழைய வீடுகளிலும் வசிக்கின்ற்னவா? இவைகளில் ஆண்டாண்டு நம்பிக்கை உள்ளவர்கள் கூட “எனக்கு பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இவை தவிர பில்லி சூன்ய தேவதைகளைப் பற்றி ஒருவித பயமே நிலவி வருகிறது.
நல்ல ஆவிகள், தேவதைகள், பேய், பிசாசுகள் உண்டா? அவற்றைப் பற்றிய ஆன்மீக விளக்கங்களை அறிந்து கொண்டால் எவ்வித அச்சத்துக்கும் இடமில்லை.
ஆவிரூப ஜீவன்கள்
மனிதன், தாவரம், பூச்சிகள், விலங்குள் போன்ற பல ஜீவன்களின் வடிவங்களைப் போலவே (நம்) கண்ணுக்குத் தெரியாத பல கோடி ஜீவன்களையும் ஆண்டவன் படைத்துள்ளான். இவைகளும் நம்முடனேயே வாழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாததால் இவற்றை இல்லை என்று நாம் ஒதுக்க முடியாது. பரந்த வெளியில் எண்ணற்ற ஆவிரூப ஜீவன்கள் உள்ளன.
விலங்கியல், தாவர, மருத்துவ விஞ்ஞானிகளில் அமீபா, பாக்டீரியா, வைரஸ் போன்ற லட்சக்கணக்கான உயிரணுக்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவதால் இதை மனிதமனம் ஏற்கிறது. கண்ணுக்குத் தெரியாது நுண்ணணுக்களைக் கிருமி என்று விஞ்ஞானம் அழைக்கிறது. ஒரு அமீபா கிருமி எவ்வாறு தன் உருவத்தைக் குறுக்கி, விரித்து மாற்றிக் கொள்கிறதோ, அதே போல பல ஆவிரூப ஜீவன்களும் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்கின்றன. ஆவிகளில் நல்ல ஆவிகளும் தீய ஆவிகளும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியாக்களைப் போலவே.
ஆவிகள் உருவாதல்
1. இஷ்ட தேவதா மூர்த்திகளைச் சிறப்பாக வழிபட்டு நித்ய பூஜைகள், தான தர்மங்களுடன் பூஜித்து வந்தால் அவரவர்களுடைய மூதாதையர்களோ அல்லது நல்ல தேவதைகளோ அவ்வாறு உபாசிப்பவரின் உடலில் புகுந்து நற்காரியங்களை நிறைவேற்றிப் பலருடைய துன்பங்கள் தீருவதற்குமே நல்வழி காட்டுவதுண்டு . உடுக்கடித்தல், சாமி ஆடுதல், குறி கூறுதல், அருள்வாக்கு கூறுதல் போன்றவை இதனுடைய பல்வேறு நிலைகளாம்.
2. பல திருக்கோயில்களிலும், உதாரணமாகக் திருச்சி ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோவிலில் பல விதமான நாக தேவதைகளு, நாகக் கன்னிகளும் அரூபமாக இன்றும் வாழ்ந்து கொண்டு மக்களை நாக தோஷங்களிலிருந்து காப்பதற்காக அரும் சேவை செய்து வருகின்றனர். நாக பூஜை அல்லது நாக விரதத்தைச் சிறப்பாக அனுஷ்டிப்போருக்கு இரவில் ஆவி விடிவிலோ அல்லது நாக் வடிவிலோ அவை காட்சி அளிப்பதுண்டு. எனவே ஆவி (spirit) என்பது ஒரு பொது வார்த்தையே ஆகும்.
3. இவை தவிர எத்தனையோ ஜீவன்கள் ஆவி ரூபங்களிலேயே வாழவிரும்பி அவைகள் பூலோகத்திற்கும் வருவதுண்டு.
4. இன்றைக்கும் நாய்களுக்கு மட்டும் சில எம லோகத்து தேவதைகள் கண்ணில் படும். மனிதர்களுக்குக் கண்ணில் படாது. எனவேதான் அக்காலத்தில் நம் பெரியோர்கள் நாய் தொடர்ந்து குரைக்கும், ஊளையிடும் திசையைக் கணித்து அப்பகுதியில் இறப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தார்கள்.
5. இரண்டு வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் எல்லா ஆவி ரூபங்களும் நன்றாகவே புலப்படும். ஆனால் அந்நிலையைப் புரிந்து கொள்வது கடினம். அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலையல்லவா அது? அப்படிப் பிறந்த மனிதனே, வளர்ந்து ஆசாபாசங்கள், காமம், மாயைகளுக்கு உள்ளாகி 80/90 வயதில் மீண்டும் குழந்தை மனமாகிப் பிறப்பை நோக்கியே செல்கின்றான்.
6. சுருங்கச் சொன்னால் ஆவி நிலை என்பது இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள நிலை. இந்தப் பொதுவான விளக்கம் பூமியில் பிறந்த ஜீவன்களுக்கு மட்டுமே.
7. சில மூலிகைகள், பால்விருட்சங்கள், சமித்து விருட்சங்கள் (அரசு, ஆல், வேம்பு, புரசை etc)  போன்றவற்றில் மூலிகா/விருட்சதேவதைகள் எப்போதும் அரூபமாக (ஆவி ரூபத்தில்) இன்றைக்கும் வாழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றன.
8. ஆவிகள் எவ்வாறு உருவாகின்றன? சில வாமன, தாந்த்ரீக மந்திரங்களை நன்கு உச்சாடனம் செய்தால் அம்மந்திர சக்தியே பல நல்ல அல்லது துர் ஆவிகளாக உருவெடுக்கும். பில்லி சூன்ய மந்திர தேவதைகள் இவ்வகையில் அமையும். அப்படியானால் குறித்த சில மந்திரங்கள் கொண்டு சமுதாயத்தில் துர்தேவதைகளைக் கொண்டு அட்டூழியம் செய்வார்களோ என்ற அச்சம் ஏற்படும்.
உண்மையில் துர்தேவதைகளை ஆட்கொள்கிறவர்கள் அதனைச் சரியாகப் பராமரிக்காவிடில் தன் வினையே  தன்னைச்சுடும் என்பதற்கேற்ப அதனை ஏவுபவர்களையே அழித்துவிடும். இதனால் ஆயிரமாயிரம் மந்திரவாதிகள் ஒழிவதோடன்றி, அவர்களுடைய குடும்பங்களும் பூண்டோடு அழிந்து விடுகின்றன.
9. தற்கொலை, கொலை, கோரவிபத்து போன்றவற்றில் இறக்கும் மனிதர்கள் சில காலம் வரை பூமிலேயே ஆவிரூபத்தில் அலைவதுண்டு.
10. ஆயிரமாயிரம் தேவதைகளும் அரூபமாகவே வாழ்கின்றன. எனவே அரூபமாக இருப்பதனைத்தையும் தேவதைகள் என்றோ, நல்ல ஆவிகள் என்றோ, பேய், பிசாசுகள் என்றோ எளிதில் சாதாரண மனிதனால் பகுக்க இயலாது. தக்க சற்குரு வழிகாட்டியாக அமைந்தால் தான் இவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.
பேய், பிசாசு உருவங்கள்
இதுவரை ஓரளவு பொதுப்படையான ஆவிரூப விளக்கங்களைக் கண்டோம். இவற்றில் பேய், பிசாசு, போன்றவை தீய ஆவிகளாகும். உதாரணமாக, ஒருவரைப் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தீவிர வெறிகொண்டு ஒருவன் இறந்தால் அவன் அப்பழியைத் தீர்க்கும் எண்ணம் விலகும் வரை தீய ஆவிரூபத்தில் அலைந்து கொண்டிருப்பான். இதனால் சம்பந்தப் பட்டவரின் குடும்பத்தில் (அவன் பழிதீர்க்க எண்ணியவரின் குடும்பத்தில்) அத்தீய, ஆவி ஏதேனும் சேஷ்டைகளைச் செய்து கொண்டிருக்கும். ஆனால் அதன் எண்ணம் நிறைவேறுமா என்பது அதன் விதியைப் பொறுத்ததே. இதன் காரணத்தை அறிந்தால் அத்தீய ஆவியை எளிதில் முறைப்படி சமாதானம் செய்து அதன் ஆவி வாழ்வினையே முடித்து விடலாம். இதனால் அதற்கும் நிம்மதி கிடைக்கும். மற்றோர்களும் அமைதியாக வாழ்வர். இதற்கு ஆவியோடு பேசுகின்ற  சிறந்த வழிகாட்டி தேவை.
தற்கொலை கூடாது
காதல் தோல்வி, மற்றும் பல அற்பக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வோர்கள் கூட ஆவி உருவில்தான் அலைய வேண்டியிருக்கும். மனிதப் பிறவி அரிய பிறவி. இறைவனுடைய கருணையினாலான இப்பிறவியைத் தானே செயற்கையாக முடித்துக் கொண்டால் அதற்குக் கடும் தண்டனையாக ஆவி ரூபத்தில் அலைய் வேண்டியிருக்கும். இத்தகைய ஆவிகள் பொதுவாகக் கெடுதல் செய்யாவிட்டாலும் மாயையால் தாங்கள் வாழ்ந்து பழகிய இடங்களிலேயே சுற்றிச் சுற்றி அலைவர். வேறு எங்கும் செல்ல இயலாது. அப்படிச் செல்ல முயன்றால் அடுத்த எல்லைக்குரிய கொடிய ஆவிகள் அதனை வதைத்துத் துன்புறுத்தும். இருக்கும் இடத்திலேயே சுற்றினால் கூட பலதீய ஆவிகள் வந்து அதனைக் கொடுமையாய்த் துன்புறத்துவர். அப்போதுதான் ‘ஏன் தற்கொலை செய்து கொண்டோம்’ என்று மனம் வருந்துவர். ஆனால் எத்தனை யுகங்கள் (லட்சக்கணக்கான வருடங்கள்) அந்த ஆவிகள் வருந்தி அழுது வாழ வேண்டுமோ தெரியாது. எனவே தற்கொலை மிக மிகக் கொடிய பாவம். அதற்குக் கடுந்தண்டனை உண்டு!
பேயாகும் பெருந்தீவினைகள்
எனவே மிகக் கொடிய எண்ணங்கள், கேவலமான எண்ணங்கள், பிறரை வதைக்கும் துன்புறுத்தும் எண்ணங்கள், சர்வாதிகாரிபோல் அணு அணுவாகப் பிறரைச் சித்திரவதை செய்வோர், வரதட்சிணை, பழிவாங்குதல், குரோதம் காரணமாகத் தீ வைப்போர், திகில் கொண்ட பயங்கரமான பல மர்மக் கதைகள், திரைப்படங்கள் மூலம் பலருக்குப் பீதியை உண்டாக்கியவர்கள், தீவினைகளையே வாழ்நாள் முழுதும் செய்து வருபவர்கள் – போன்ற தீவினையாளர்களே பேய்களாகவும் பிசாசுகளாகவும் வடிவெடுக்கின்றனர். எனவே பேய்கள் என்றும் பிசாசுகள் என்றும் எல்லோரும் பயப்படுவது நம்முடன் வாழ்ந்த தீவினையாளர்களின் மற்றுமொரு வடிவைத்தான்!

காப்பு இரட்சைகள்
நல் மந்திரம், காயத்ரீ, சுயநாமம் ஜபித்து உரு ஏறிய பூணூல், கடுக்கன், விபூதி, குங்குமம், சந்தனம் நாமம், தரித்தல், இடுப்பில்/கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டுதல் – போன்றவற்றால் பேய், பிசாசு பயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். ருத்திராட்சம், அணிதல் மிகச் சிறந்த காப்பாகும். ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய. ஓம் முருகா, ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ஸ்ரீமஹிஷாசுர மர்த்தினி துதி போன்ற ஏதேனு இறை நாமத்தைத் துதித்திட எத்தீவினையும் அருகில் தெருங்காது.
நாம் அடிக்கடி ஸ்ரீகாயத்ரீ மந்திரம், பஞ்சாட்சரம், ஷடாட்சரம், அஷ்டாட்சரம், ஓங்காரம் போன்றவற்றை ஜபித்து வந்தால் அவற்றின் மந்திர சக்தியானது ருத்ராட்சம், பூணூல், கடுக்கன், இடுப்புக் கயிறு, காசிக்கயிறு போன்றவற்றில் பதிந்து நம்மை எங்கும் எச்சமயத்திலும் இரட்சை போல் நின்று காக்கும். மயானம், சுடுகாடு இவற்றை நடந்தோ, பஸ்ஸிலோ, ரயிலிலோ கடந்து செல்லும் போது “ஸ்ரீஅரிச்சந்திர மஹா பிரபு போற்றி, மயான தேவதைகளே போற்றி” என்று  துதித்தால் (உலகத்திலுள்ள அனைத்து மயான, சுடுகாடுகளைக் காக்கும்) ஸ்ரீஅரிச்சந்திரரும் மயான தேவதைகளும் அந்தந்த மயான எல்லை வரை நம்முடன் வந்து பாதுகாப்புடன் வழியனுப்புகின்றனர். இவ்வெளிய பிரார்த்தனை முறையைப் பழகிக் கொண்டால் எவ்விதப் பேய்களும், தீய ஆவிகளும் நம்மை அண்டாது.
பாடிகாட் ரோடு ஸ்ரீமுனீஸ்வரர்
பேய், பிசாசு பற்றிய பயம் அதிகமிருந்தால் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே மேம்பாலத்தின் முடிவில் உள்ள பாடிகாட் ரோடு ஸ்ரீமுனீஸ்வரர் திருக்கோயிலில் மிளகுபொடி சாதம் தானம் (நெய் கலந்த மிளகுபொடி சாதம் தானம்) அளித்துவர பேய், பிசாசு பயம் தணியும். மிகவும் சக்தி வாய்ந்த ஈஸ்வர மூர்த்தியே ஸ்ரீமுனீஸ்வரர். கேட்டவரம் தரும் பிரத்யட்ச மூர்த்தி! மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது!
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்குச் சிறு வயதில் அவர்தம் குருதேவர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளின் அருளாசியால் பாடிகாட் ரோடு ஸ்ரீமுனீஸ்வரருடைய  பரிபூரண அருட்கடாட்சத்தைப் பெறும் பாக்கியம் கிட்டியது. தம் குருகுலவாச அனுபூதிகளில் ஸ்ரீமுனீஸ்வரருடைய திருவருளால் சுடலைப் பேய்கள் மற்றும் பைசாசங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் நம் குருமங்களகந்தர்வா அவைகளை நல்வழிப் படுத்துவதற்கும் அவை நற்கதி அடைவதற்கும் பல இறைப்பணிகளைத் திறம்பட ஆற்றியுள்ளார்.
ஓம் பூர்புவஸ்ஸுவ : தத்ஸவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயேந ப்ரசோதயாத் ||
என்ற காயத்ரீ மந்திரமும் துர்சக்திகளிலிருந்து நம்மைக் காக்கும்.

மலைக்கோட்டை மகிமை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள், காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன், பழனி ஸ்ரீமுருகன் போன்ற தெய்வ மூர்த்திகள் கலையுகத்தின் பிரத்யட்ச தெய்வ மூர்த்திகளாவர். கேட்கின்ற நல்வரங்களை உடனே தந்தருள்பவர்களே பிரத்யட்ச தெய்வ மூர்த்திகள்.
திரிசிரன் என்ற அரக்கர் குல அரசன் அறம் தவறாமல் நல்லாட்சி புரிந்து வந்தான். திரிசிரபுரமே திருச்சிராப்பள்ளியாக மருவியுள்ளது. மலையின் மேலுள்ள ஸ்ரீதாயுமான சுவாமி கருணைப் பெருங்கடலாய் அருளாட்சி செலுத்துகின்றார் மிகப் பிரமாண்டமான லிங்க மூர்த்தி. இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நான்கு சனகாதி முனிவர்களுடன் மட்டுமல்லாது ஐந்தாவது சனகாதி முனிவருடன் காட்சி தருகின்றார்.
ஜாக்ரத் (விழிப்பு நிலை), ஸ்வப்னம் (கனவுநிலை), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) இம்மூன்றையும் கடந்த துரியநிலை ஒன்றுண்டு. சொற்பதம் கடந்த நிலையது. இதையே ஔவையும் “ சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான ...” என்று விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனும் விழிப்புநிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை மூன்றையும் அனுபவித்தேயாக வேண்டும். முதல் மூன்று சனகாதி முனிவர்களும் ஒவ்வொரு நிலையிலும் மனிதன் தன் கர்ம வினைகளை எவ்வாறு கழிக்க வேண்டும். என்ற ஞானத்தைப் புகட்டுகின்றனர். மூன்றையுங் கடந்த துரீய நிலையை, நான்காவது சனக முனி புகட்டுகின்றார். ஆனால்  துரீய நிலையையும் அனைத்தையும் கடந்த நிலை ஒன்றுண்டு. அதுவே நிலைகளற்ற துவாநிலை, இந்நிலையைக் காட்டுபவரே ஸ்ரீதாயுமான சுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவார்.
துரீய காயத்ரீ என்ற ஒரு மந்திரம் உண்டு. இது புனிதமான துறவிகளுக்கு உரித்தானதாகும். கனிந்த கனி என்று சித்த புருஷர்களால் போற்றப்பட்ட காஞ்சி காமகோடி பரமாச்சாரியார் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துரீய காயத்ரீ மந்திரத்தின் உத்தம நிலையை இறைப் பேரின்பமாக அனுபவித்த ஞானயோக மகாபுருஷராவார்.

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் மலைக்கோட்டை

ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஈஸ்வரனால் அரவணைக்கப்பட்ட ஐந்தாவது சனகமுனி இங்கு தவமியற்றிய போது திரிசிர மன்னன் அவரைச் சரணடைந்தான். மாமுனிவர் தம் வலத்திருக் கரத்தால் ஒரு பாறையை குறுக்காக, வெட்டுமாறு சைகை காண்பிக்க, திரிசிரன் தன் பலங்கொண்ட மட்டும் கையால் அப்பாறையைப் பிளந்தான்.  உள்ளே....
சுயஞ்ச்சோதியாய் ஒளிப்பிரவாகத்தினூடே பிரம்மாண்டமான லிங்கத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். மலையின் ஆழ்ந்த உட்பகுதியில் அமைந்த லிங்கத்திற்கு எப்படி கோயில் கட்டுவது? ஐந்தாவது சனகமுனி தன் தபோபலத்தால் சுயம்பு லிங்கத்தை மேலே ஈர்த்திட அவரே சுயம்பு மூர்த்தியாய், தாயுமான சுவாமியாக ஆங்கே எழுந்தருளினார். திரிசிரனுக்கோ அந்த லிங்க மூர்த்தியை மலையுச்சியில் பிரதிஷ்டை செய்ய ஆசை, சனக முனியோ “ஈசனின் மூத்த குமரன் இனிதாய் அங்கிடம் பெறுவான். உச்சந்தலை கஜமுகனுக்குரியதாம்! என்று சூசகமாக அறிவித்தார். பின்னர் எழிலார்ந்த ஈசகுமாரனாய் கணபதியும் உச்சியிலமர்ந்தார்.
ஸ்ரீபாதாள் ஐய்யனார்
மலைக்கோட்டை சிவங்கோயிலில் ஸ்ரீமட்டுவார் குழலம்மை சன்னதி எதிரில் ஒரு பாதாள அறையில் ஸ்ரீபாதாள ஐயனார் அருள்பாலிக்கின்றார்., பொதுவாக ஸ்ரீஐயனார், கோயிலினுள் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருள்வது மிகமிக அபூர்வம். இங்கு ஸ்ரீபாதாள ஐயனாரைத் தரிசித்த பின்னரே  ஸ்ரீஅம்பிகையை தரிசிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஸ்ரீஅம்பிகையின் பரிபூரண அருள் கிட்டும். ஸ்ரீஐயனார் இங்கு தனிச்சன்னதி கொண்டு அருள்புரிவதன் இரகசியம் யாதோ?
திரிசரன், தமிழகத்தின் பல பகுதிகளையும் வென்று அவற்றைத் தானே ஆக்கிரமித்துக் கொள்ளாமல் அந்தந்தக் குறுநில மன்னர்களிடத்திலேயே ஆட்சியை ஒப்படைத்திருந்தான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆவணி மூல நட்சத்திரத்தன்றும் திரிசிரனுக்குக் கப்பம் செலுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் செலுத்திய கப்பத்தொகை, திரவியங்கள், தான்யங்களைக் கொண்டு அவன் பல அறப்பணிகளைப் புரிந்து வந்தான்.
திரிசிரன் அரக்க உருவம் பூண்டிருந்தமையால் பல அரக்க குணங்களை இயல்பாகவே பெற்றிருந்தான், கப்பம் செலுத்த மறுப்பவர்களை அப்படியே விழுங்கி விடுவான். திரிசிரன் கடுமையான பூஜா விதிகளைக் கடைபிடித்தான். அவன் பூஜை சமயத்தில் அனைவரும் எழுந்து நின்று இறைநாமம் துதித்தே நிற்க வேண்டும். பூஜை சமயங்களில் சிறு பிழை நேர்ந்தால் கூட உக்கிரஹம் கொண்டு பிழை செய்தோரையும், சுற்றியிருப்போரையும் அப்படியே விழுங்கி உண்டு விடுவான்.
ஒருமுறை.... அது கடுமையான பஞ்ச காலம். உணவுப் பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் அவதியுற்றனர். ஆட்சித் திறமை வாய்ந்த திரிசிரன் தனக்கு கப்பமாக வந்திருந்த தானியங்களைத் தமிழகமெங்கும் முறையாக விநியோகித்து இயன்ற மட்டும் நன்னெறி செலுத்தி வந்தான். ஆனால் கப்பம் பெறுவதில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருந்தான். பஞ்ச மான்ய சலுகை எவருக்கும் கிடையாது!
உத்தமர் கோயிலில்..............
உத்தமர் கோவில் குறுநிலப் பகுதியில்.... கடும் வறட்சி, கடுமையான நீர்ப் பஞ்சம்..... இந்நிலையிலும் பக்த கோடிகள் தவறாமல் கோயிலில் நைவேத்யம் செய்து வந்தனர். தினமும் ஆறு மூட்டை நைவேத்யமானது ஆறுமரக்காலாக, ஆறுபடியாக,,, ஆறுசிறுபடியாக, படிப்படியாகக் குறைந்து தற்போது பஞ்சத்தில் ஆறு உழக்காக வந்து நின்றது.
அப்போது சுகந்நாத பட்டாச்சாரியார் என்னும் உத்தம வைஷ்ணவர், உத்தமர் கோவில் மும்மூர்த்தித் தலத்தில் இறைப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். ஆசார அனுஷ்டானங்களை முறையோடு கடைபிடித்தவர். ஜாதி, மத பேதமின்றி அன்புடன் அனைவருடனும் பழகியவர். தனக்கென கிஞ்சித்தும் சிறு பொருள் கூட வைத்திராது அனைத்தையும் இறைவனுக்கென, ஏழை மக்களுக்கென அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் சுகந்நாதரிடம் பணி செய்து வந்த குணசம்மித்திரர் என்பவரும் அவரைப் போலவே இறைப் பணியில் திளைத்து வாழ்ந்து வந்தார். கடும் பஞ்சத்திலும் ஆறு வேளையும் இறைவனுக்கு நைவேத்யம் படைக்கப்படுகின்றது என்ற செய்தி திரிசிரனை எட்டியது. ஆனால் கப்பம் மட்டும் வந்து சேரவில்லை.
உத்தமர் கோவிலை ஆண்டுவந்த மன்னன், ஸ்ரீசுகந்நாத பட்டாச்சாரியாரை அழைத்து, “சுவாமி! திரிசிர மகாராஜாவிடமிருந்து கப்பம் கேட்டு அரசாணை வந்துள்ளது. தங்களுடைய ஈடு இணையற்ற இறை பக்தியினால் எவ்வாறோ இறைவனுக்கு நைவேத்யம் படைப்பது மட்டுமல்லாமல் நம் பகுதி மக்களும் எவ்வகையிலோ இறையருளால் பஞ்சத்தினைச் சமாளித்து வருகின்றனர். ஆனால் மகாராஜாவின் குணத்தைப் பற்றித் தாங்கள் அறிவீர்கள். தாங்களே இக்கட்டான நிலையிலிருந்து அடியேனைக் காப்பாற்ற வேண்டும். என் பிரதிநிதியாகத் தாங்களே மகாராஜாவிடம் சென்று நம் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். தங்களைப் பலிகடாவாக ஆக்குவதாக எண்ணக் கூடாது என்று மனமுருகி வேண்டினான்.
சுகந்நாதரும் , ‘இதுவும் இறைவனின் விருப்பமே’ என்று மனந்தெளிந்து மன்னனின் வேண்டுகோளை ஏற்றார். “இறைவா! நீயே நல்வழி காட்ட வேண்டும்” என்று வேண்டி கருவறைக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார். நடந்ததை அறிந்த குணசம்மித்திரரும் சுகந்நாதருடன் தியானத்தில் இணைந்தார்.  எத்தனை மணி நேரங்கள் இருவரும் தியானத்தில் அமர்ந்தனரோ! தெரியாது! கோவில் மணி தானாகவே ஒலித்தவுடன் இருவரும் பதைபதைத்து எழுந்து நின்றனர். மற்ற தெய்வீகக் கைங்கரியங்களைச் செவ்வனே செய்து முடித்தனர்.
“தானாக மணி அடிப்பானேன்! மணியடித்தால் நைவேத்யம் ஆகிவிட்டது என்றல்லவா அர்த்தம்! குணசம்மித்திரன் தினமும் தன் குலதெய்வமான ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் படைத்து வணங்கிய பின்னர்தான் உத்தமர் கோவிலுக்கு வருவார். ஆனால் அன்றைக்கு ஸ்ரீஐயனாருக்குப் படைப்பதற்கான அரிசி வீட்டிலில்லை. அக்கம் பக்கத்தில் அநேகக் குழந்தைகள் இருந்தமையாலும் அவர்களே சாதம் வடிக்காமல் கஞ்சியே குடித்து வந்தமையால் எவரிடமும் கையேந்த இயலவில்லை, அந்நிலையில் மனமும் இல்லை.
 சுகந்நாதர் திருச்சி சென்று மகாராஜாவைச் சந்தித்தால் அங்கு என்ன நடக்குமோ தெரியாது! அரசன் எவ்வளவு நேரம் கூப்பிட்டுப் பேசுவானோ அதுவும் தெரியாது! எவ்வளவு நாள் அங்கிருக்க வேண்டும்? ஆனால் இங்கு கோயில் காரியங்களும் தடை பெறக் கூடாது. என்ன செய்வது ?
எனவே குணசம்மித்திரர் தானே முதலில் மகாராஜாவை சந்திப்பதாகவும், சுகந்நாதர் கோயில் காரியங்களை முடித்துவிட்டுப் பின்னால் வருவதாகச் சொல்வது என ஆலோசனை கூறிட, சுகந்நாதர் அதை ஏற்றார். குணசம்மித்திரருக்கு ஊர் எல்லையிலிருந்த தம் குலதெய்வமான ஐயனாரிடம் அளவற்ற பக்தி பூண்டிருந்தார்.  ஸ்ரீபெருமாளின் அம்சங்களைப் பூண்டவரே ஸ்ரீஐயனாராவார். அன்றைய தினம் ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் ஆக வேண்டும். அதே சமயத்தில் திரிசிர மகாராஜாவையும் பார்க்க வேண்டும்.
நேரமோ கடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது? சுகந்நாதர் “குணசம்மித்திரா! நான் முதலில் இங்கு சுவாமிக்கு நைவேத்யம் செய்து விடுகிறேன், அதனையே ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் செய்து விடுவாயாக. ஸ்ரீபெருமாளும் ஸ்ரீஐயனாரும் ஒன்றே!” என்று கூறி சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டு வெளியில் வந்தார். அதற்குள் குணசம்மித்திரரும் ஸ்ரீஐயனார் பூஜைக்குத் தயாராகி விடவே இருவரும் மீண்டும் உட்சென்று நைவேத்திய அன்னத்தை எடுத்து வரச் சென்ற போது...
நைவேத்தியத்திற்கான தங்கத் தட்டைக் காணவில்லை! அது தான் ஏற்கனவே தானாக மணியடித்து நைவேத்யமாகிவிட்டதே!!! இருவரும் திகைத்து நின்றனர்.. அக்காலத்தில் திருடு, கொள்ளை என்பது கிடையாது. அதுவும் உத்தமர் கோவில்  திருத்தலத்தில் நன்னெறி மிக்க உத்தமர்களே வாழ்ந்து வந்தனர்....
பின் தங்கத் தட்டு எவ்வாறு மறைந்தது.?

பாஷாண சதுர்த்தி

 பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்பில்  துரியோதனன், பீமனுக்கு நஞ்சூட்டி, அவன் மயக்கமடைந்தவுடன் அவனைக் கயிறுகளால் கட்டி ஆற்றின் ஆழமான பகுதியில் தள்ளி விட்டான். ஆற்றினுள் வசித்த கிருஷ்ண நாகமெனும் கருநாகங்கள் பீமனைக் கடித்தும் அவன் சாகவில்லை. காரணம் துரியோதனன் ஊட்டிய நஞ்சும் கருநாகந் தீண்டிய விஷமும் ஒன்றுக்கொன்று முறிந்தமையால் பீமன் மயக்கந் தெளிந்தான்.
பிரபஞ்சத்திலேயே கொடிய நாகங்களான கிருஷ்ண நாகங்கள், “நம்முடைய கொடிய நஞ்சு ஏறியும் இவன் சாகவில்லையே, இந்த அற்புத மனிதனை நம் நாகராஜாவிடம் சென்று காண்பிக்க வேண்டும்” என்று அவனை நாகலோகத்திற்கு இட்டுச் சென்றன. நாகராஜா குந்திதேவியின் வம்சத்திற்கு உறவினனாகையால் தம் குல ப்ரஜையைக் கண்டு மகிழ்ந்து பீமனுக்கு நாகலோகத்துப் பாயாசத்தை அளிக்க அதன் பலனாய் எண்பது யானைகளின் பலத்தைப் பெற்றான் பீமன். துரியோதனன் ஏதோ திட்டம் தீட்ட அது அவனுக்கே எமனாகி விட்டது! பீமனுக்கு இந்த தெய்வானுபவம் ஏன் கிட்டியது?
பீமன் வாயு அம்சங்களைப் பூண்டு பிறவியிலேயே பல யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தான். உணவிலும் மல் யுத்தத்திலும் அவனுக்கு நாட்டம் சென்றதே தவிர கல்வி, கேள்விகளில் மந்தமாகவே இருந்தான். இதனால் பஞ்ச பாண்டவர்களிலேயே, குந்தி தேவிக்கு, பீமனைப் பற்றிய கவலையே பெரிதாகி விட்டது. குந்தி தேவி, சினத்திற்கும் சாபமளிப்பதற்கும் பிரசித்தி பெற்ற் தூர்வாஸ மஹரிஷியிடமே சேவை செய்து அவருடைய நன்மதிப்பை பெற்றதோடன்றி அவருடைய ஆசியால் ஸ்ரீதத்தாத்ரேயரின் தரிசனம் பெற்று அவரிடமிருந்து சங்கடஹர சதுர்த்தி விரத மஹிமையை அறிந்து அதனை மிக்க சிரத்தையுடன் கடைபிடிக்கலானாள்.
பீமனின் விரதம்
உபவாச நியதிகள் அதில் பல உண்டு. சங்கடஹர சதுர்த்தி உபவாச காலங்களில் அருகம்புல் சாறு ஒரு துளி உண்டு விரத உச்சநிலையில் தான் பீமனைப் பெற்றாள். உபவாச விதிகளினூடே பிறந்தவன் தான் உணவில் பெருநாட்டம் உடையவனானான்! என்னே இறைவனின் திருவிளையாடல்! ஆனால் காரண காரியமின்றி எதுவும் நடைபெறாதே!
பீமன் பிறந்தவுடன் குந்திதேவி தூர்வாஸரிடம் தீர்க்க தரிசனமாக அவனுடைய மந்த புத்தியைப் பற்றிக் கூறிடவே, தூர்வாஸரும், பீமனுக்கென சதுர்த்தசி திதியில் “ஸர்பாபரண கணபதி“ பூஜையைச் செய்வதற்காக உபதேசித்தார். அவனுடைய உடல் வாகை முன்னிட்டு வருடத்திற்கு ஒரே ஒரு சதுர்த்தசி திதியைக் குறித்துக் கொடுத்தார் விரதத்திற்காக!
நாகங்களை ஆபரணங்களாக உடையவரே ஸர்பாபரண கணபதி. பீமனுக்கோ ஸதா ஸ்ர்வ காலமும்  சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவனுக்கு சதுர்த்தசி உபவாஸம் எப்படி ஒத்து வரும்? தூர்வாஸரே அதற்கும் ஒரு விதிவிலக்கு அளித்தார். தூர் என்றால் அருகம்புல் என்று பொருள். அருகம்புல்லை உண்டு அதிலேயே வாசம் செய்பவர் தூர்வாஸர்.
எனவே அருகம்புல்லைப் பறிக்கும் போதும், அருகம்புல் சாற்றைப் பருகும் போதும், அருகம்புல் மாலையை வாங்கி ஸ்ரீவிநாயகருக்குச் சாற்றும் போதும், “ஸ்ரீ தூர்வாஸாயா நம“ என்று மூன்று முறை துதித்திடில் தான் அருகம்புல் புனிதம் பெறுகிறது. இதற்கென சிறிய எளிய “தூர்வா ஸுக்த” மந்திரங்கள் உள்ளன. அருகம்புல் கணுக்கள் போல் சந்ததி வளர்ச்சி பெறவும் கெட்ட கனவுகளின் தோஷங்கள் மற்றும் அல்லல்களிலிருந்து விடுபடவும், மன அமைதி பெறவும், நீராடுவதற்கு முன்னும் தூர்வாஸுக்தத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
பீமன் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதுர்த்தசி திதிதோறும் ஸ்ர்பாபரண விநாயகரைத் தொழுது உபவாசமிருந்தான். எப்படி ? சதுர்த்தசி திதியன்று அருகம்புல் சாறை மட்டும் பருகுவான்! அன்று எவ்வளவு வேண்டுமானாலும் அருகம்புல் சாறை அருந்தலாம், ஆனால் வேறு எதையும் உண்ணவோ, அருந்தவோ கூடாது. பீமனுக்கோ அடங்காப் பசி! எனவே கொப்பறை கொப்பறையாய் அருகம்புல் சாற்றை அன்று அருந்துவான். இந்த சதுர்த்தசி பூஜையை ஆழ்ந்த நம்பிக்கையுடன் நிறைவேற்றுவான்.
இவ்வாறு அவன் அருந்திய அருகம்புல் சாறே அவனைத் துரியோதனன் அளித்த நஞ்சிலிருந்து காப்பாற்றியது, இவ்வாறு பீமன் கடைபிடித்த சதுர்த்தசியே “பாஷாண சதுர்த்தசி“ என்று பெயர் பெற்றது. விஷத்தின் துன்பங்களிலிருந்து காக்கும் சதுர்த்தசி பிறருடைய விஷ் எண்ணங்களிலிருந்து காக்கும் சதுர்த்தசி! இதுவே பாஷாண சதுர்த்தசி.
இந்த பாஷாண சதுர்த்தசி நாளன்று அருகம்புல் சாறு மட்டும் அருந்தி சர்பாபரண விநாயகரைத் தொழ வேண்டும். இன்று ஸர்ப்பத்தை அணிந்திருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாறு/அருகம்புல் தைலக் காப்பிடுவது மிகவும் விசேஷமானதாகும்.
தூர்வா ஸுக்தப் பாராயணத்துடன் ஸ்ரீஸர்பாபரண விநாயகருக்குரிய பூஜை ஹோமம், அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்ற வேண்டும். இன்று பசும்பால் தானம் விசேஷமானது. தோல் பர்ஸ், தோல் காலணிகள், தோல் பைகளை என்றுமே பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக இன்று தோல் பர்ஸ், தோல் காலணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
1. விஷ ஐந்துக்கள் புழங்கும் குடிசை, ஓட்டு வீடு, கூரை, வீடு, நிலம், பாக்டரி போன்ற இடங்களில் வசிப்போர்/வேலை செய்வோர்
2. பகைவர்கள், எதிரிகளை உடையோர்
3. ரசாயண ஆலை/தொழிற்சாலை/ ஆராய்ச்சிக் கூடம்  ஆகிய ரசாயணம் புழங்கும் இடங்களில் பணி புரிவோர் மற்றும் ஏனையோர்
     - இந்த பாஷாண சதுர்த்தசியை மேற்கண்டமுறையில் கொண்டாடிட விஷ் ஜந்துக்களினால் வரும் துன்பங்களை/ நோய்களைத் தவிர்ப்பதோடு ஆபத்தான ரசாயனக் கலவைகளின் விளைவுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்!
ஸ்ரீ ஸர்பாபரண விநாயக காயத்ரீ
“ ஓம் தத்புருஷாய வித்மஹே ரோகாகு நாசாய தீமஹி
   தந்நோ ஸர்பாபரண விநாயாக ப்ரசோதயாத்||“

ஸ்ரீகௌதமேஸ்வரர்

ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் என்கிற கௌதமேஸ்வரர் கோயில் மகிமை – (கும்பகோணம்)
தளராத மனமுடைய பெண்கள் தாய் என்கிற உயர்நிலைக்கு வளரக் காரணம் அவர்களுடைய பதிபக்தி, கற்பின் சக்தி, தியாகம் ஆகும். மனைவியின் பக்தி, கற்பு இவைகளால் சித்திகளைப் பெறுகின்றான் கணவன். ஒரு முறை தேவர்களுக்கு ஈசன் ஒரு கட்டளையிட்டான். என்ன அது?
கணவனுக்குச் சேவை செய்கின்ற மனைவியின் தாச சக்தி
ஆண், பெண் என்ற பாகுபாடின்றி குழந்தைகளின் மேல் செலுத்தும் சுலப சக்தி
எத்தகு துன்பத்தையும் பொறுத்து, புகுந்தவீடு வேதனையையும் சந்தித்துக் கிட்டும் சளைத்தன சக்தி : தெய்வம் தான் துணை என்கின்ற வைராக்கிய சக்தி –
இவைகளை ஒன்றாய்த் திரட்டிக் கொண்டு வாருங்கள் என்றார் ஈசன்
தேவர்களும் பிரபஞ்சமெங்கும் அலைந்து இத்தகைய சக்திகளை ஒன்றாய்த் திரட்டி பஞ்சுநூலில் சேர்த்துப் பதித்து ஈசனிடம் சமர்ப்பித்தனர். ஈசன், “தெய்வ சக்தி புகும் நூல். எனவே இது பூணூல்” என்று அருளி அமுதக் கலசத்தில் உள்ள சிருஷ்டி பீஜத்தைக் காப்பதற்காக அதில் பூணூல் இட்டுப் பிரளயத்தில்  மிதக்க விட்டார். பிரளயத்தில் அப்பூணூல் தங்கிய இடமே கும்பகோணத்தில் மகாமகக் குளத்தின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள ஸ்ரீயக்ஞோபவீத ஈஸ்வரராகிய  கௌதமேஸ்வரர் கோயில். பூணூலைக் கையில் தாங்கி ஜபித்தால் தெய்வசக்தி வளரும். இதை அணிய வெட்கமோ, கேலியோ கூடாது. போடாமல் விடுவதும் தவறாகும். யாவரும் பூணூலை அணியலாம்.
நப்பாசை, பேராசை, துர்ஆசை இவைகளினால் தான் மனிதன் பாவம் செய்கின்றான். இத்தகைய பாவங்கள் எங்கு செய்திருந்தாலும் காசியில் அதனைப் போக்க வழிகள் உண்டு. காசியில் செய்த பாவம் தீரம் கும்பகோணத்தில் நல் வழிகள் உண்டு. ஆனால் கும்பகோண க்ஷேத்திரத்தில் செய்த பாவம் தீர கும்பகோணத்தில் தான் வழி உள்ளது. திருந்த நினைக்கும் மனிதனுக்காக இறைவன் இத்தகைய இடங்களை வரப் பிரசாதமாகக் கொடுத்துள்ளார்.
மகான்கள் நிறைந்த கும்பகோணத்தில் அவர்கள் விருப்பத்திற்காக ஈசன் பல கோயில்களில் இந்த க்ஷேத்திரத்தில் குடியிருக்கிறான். அவைகளில் ஒன்று தான் ஸ்ரீகௌதமேஸ்வரர் கோயில். கௌதம ரிஷி, தன்னுடைய பத்தினி அகலிகையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சபித்த காரணத்தால் பத்தினிஹத்தி தோஷம் அவரைத் தாக்க அவர் பல இடங்களுக்குச் சென்று பிராயச்சித்தம் தேடினார். ஸ்ரீஅகத்தியர் அவர் மீது இரக்கம் கொண்டு “திருஅண்ணாமலை கிரிவலம் வந்தால் வழி கிடைக்கும்“ என்று கூற, கௌதமரும் திருஅண்ணாமலை சென்று ஆசிரமம் அமைத்து கிரிவலம் வந்தார். அசரீரியாக இறைவன் “சிருஷ்டிக் கலச பூணூல் விழுந்த இடத்தில் வழி பிறக்கும்“ என்று கூற, கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயிலில் தவமியற்றி, பல அபிஷேக ஆராதனைகள் செய்து சாப விமோசனம் பெற்றார். எவ்வாறு ?
“ஸ்ரீராமர் அவதாரத்தின் போது அவரது திருப்பாதம் பட்டு அகலிகையைப் பெறுவாய்“ – அவ்வாறே அதுவரை காத்திருந்து பின்னர் அகலிகையைத் திரும்ப பெற்றார் கௌதமர். இறைவனிடம் வேண்டிட இங்கு பல பாவங்கள் தீர பல வழிகளையும் அவர் நமக்குப் பெற்றுத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் பூஜை

 

பூஜை முறை / கிட்டும் சக்தி

  தீரும் வினைகள்

1.

 தினமும் நாகலிங்கப் பூ சூட்டி, புதுப் பூணூல் சார்த்திட ஸ்ரீபுர சக்தி கிடைக்கும்

மனைவியை காரண காரியமில்லாமல் கடுமையாகத் திட்டிய பாபம் தீரும்.

2.

காயத்ரீ ஜபித்து முப்புரிநூல் சாற்றினால் புரி மந்திர சக்தி

மனைவியைக் குற்றம் சாட்டி அடித்த துன்பம் தீரும்.

3

பஞ்சாட்சரம் ஜபித்துப் புதுப் பூணூலுடன் வில்வம் சாற்றினால் – பல்லகபுரி சக்தி

தாய் தந்தை சொல் கேட்டு மனைவியைத் துன்புறுத்திய பாவம் தீரும்.

4

புது பூணூலுடன் கோபூஜை செய்து அந்தப் பாலை அபிஷேகம் செய்தால் – கோபத்ர புரிசித்தி

கணவனின் தாய், தந்தை/மனைவிக்கு உணவிடாமல் பட்டினி போட்ட துன்பம் தீரும்

5

பசுந்தயிர் அபிஷேகம் செய்து புதுப்பூணூல் சாற்றிட – சரபுவசித்தி

குடித்து விட்டு மனைவியை அடித்த/அங்கஹீனம் செய்த துன்பம் தீரும்.

6

தேன் அபிஷேகம் செய்து பூணூல் சாற்றுதல் – சுந்தராமிர்த சக்தி

மனைவி நகைகளைப் பறித்து அழித்த துன்பம் தீரும்.

7

எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம் செய்து பூணூல் சாற்றிட – பதீஸ்வர சித்தி

மனைவிக்கு நாத்தனார்கள் கொடுத்த துன்பம் தீரும்.

8

பன்னீர் அபிஷேகம் செய்து பூணூலிட்டால் – மாதவ சித்தி

மனைவியைப் பூட்டி வைத்த/அவள் மேல் சந்தேகம் கொண்ட தோஷம் தீரும்.

9

இளநீர் அபிஷேகம் செய்து பூணூல் சாற்றிட கல்பால் கராசித்தி

 மனைவியிடம் தாம் செய்த தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டல். ஒரு முறையே இப்பிராயச் சித்தம் பலனளிக்கும். கணவனின் மைத்துனர் மனைவிக்கு செய்த துன்பம் தீரும்.

கணவன் மனைவி ஒன்று சேர ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குப் பூணூல் சாற்றி இட்டு வணங்கினால் வழி பிறக்கும். சிவ ரகசியங்களில் அரன் தீப சித்தி என்ற பாடத்தை அதிகார நந்தியிடம் முறையாகப் பயில வேண்டும். இதனால், தேவதைகளையும்  வசியம் செய்து மற்றவர்களையும் அடக்கும் சித்தி பெறலாம். இதனை சனீஸ்வர பகவான் அதிகார நந்தியிடம் முறையாகக் கற்று அனைவர்க்கும் அருள் பாலித்தார். சனீஸ்வரர் இங்கு தினமும் ருத்திர காயத்ரீ ஜபித்து பூணூல் சாற்றி ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரரை வணங்கிப் பல சித்திகளைப் பெற்றார்.

ஸ்ரீசனீஸ்வரர் அளித்த ஸ்ரீருத்ரகாயத்ரீ – பூணூல் பூஜை

பூணூல் மேல் வைக்க வேண்டிய (இலை/தளம்) அனைத்திலும் 1008 முறை ருத்ர காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

 பெறும் சக்தி

       தீரும் துன்பம்

1.

அருகம்புல்

பாபரக சித்தி

மனைவி கணவனை சந்தேகித்து இழைத்த துன்பம்.

2.

வெள்ளெருக்கு

விக்னபார நிவர்த்தி சித்தி

மனைவி கணவனிடமிருந்து அவருடைய பெற்றோரைப் பிரித்து அவமதித்த துன்பம்.

3.

வில்வ இலை

பத்ரனாப சித்தி

கணவனை ஏமாற்றிய, கணவனை எதிர்த்து அடித்த துன்பம்.

4.

துளஸி இலை

சகாயவிர சித்தி

கணவனை அவமதித்துக் கோர்ட்டுக்கு அழைத்த துன்பம்.

5.

வன்னி இலை

ஊதுகோல சித்தி

கணவனின் சொத்துகளை அபகரித்து, ஈடு மருந்து கொடுத்த துன்பம்.

6.

மருவு இலை

தான்வச சித்தி

கணவன் மனைவியை பிரித்த தோஷம்  துன்பம்.

 பிராயச்சித்தங்கள் பலன் தரவேண்டுமென்றால் தவறை மீண்டும் செய்யாமலிருக்க வேண்டும். இவ்வாறு பல சக்திகளைப் பெற்று சனீஸ்வர பகவான் மேற்கே பன்மடங்காகப் பிரகாசித்தார். சூரியபகவான் இங்கு சனீஸ்வரரை மேற்கு நோக்கிப் பார்த்து  சனீஸ்வர பகவானிடம் மேற்கூறிய சித்திகளைப் பெறுகிறார். எனவே இக்கோயிலில் சூரிய பகவானும் சனீஸ்வரபகவானும் ஒரே திக்கில் (மேற்கு நோக்கி) இருக்கின்றனர்.
பூணூலை அவமதித்த/அறுத்த சாபம் தீரவும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் இக்கோயில் வழிபாடு உகந்தது. கௌதமேஸ்வரரை கணவன் மனைவியுடன் சேர்ந்து வணங்க வேண்டும். வெளிப்பிரகாரத்தை நமஸ்கார பிரதட்சிணம் செய்ய வேண்டும். மருதாணி தைலத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பஞ்சு திரி இட்டு மூன்று தீபம் ஏற்றுதல் வேண்டும். அடிக்கடி வீட்டில் சண்டை இடும் தம்பதிகள் இங்கு மூன்று முக தைல தீபம் ஏற்றி பிறகு கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கும் ஜேஷ்டா தேவிக்கு விளக்கேற்றி வைத்திடில் குடும்பத்தில் கணவன் – ம்னைவி சண்டைகள் தீரும்.
ஸ்ரீருத்ர காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய விசேஷமான பூணூலை ஜாதி, இன பேதமின்றி யாவரும் அணியலாம்.

இராசி கர்ம நிவாரண தீபிகை

அவரவருடைய பிறந்த நேர கிரஹ அமைப்புகள், நவாம்சம், ஷட்வர்கம், அஷ்டவர்கம், த்ரிகோணம் போன்றவற்றோடு அன்றைய தின (கோசார) கிரஹ சஞ்சாரங்கள், குடும்பத்தில் ஏனையோருடைய ஜாதக அம்சங்களையும் சேர்த்து கணித்தல் மட்டும் போதுமா? பெரியோர்களின் ஆசிர்வாதம், நிறைந்த பூஜைகள், சத்யமான வாக்கு, ஒழுக்கமும் புனிதமும் நிறைந்த வாழ்க்கை, குருவருள் நிறைந்த திருவருள், காசு, பணம் பெறாது இறையருளை மட்டும் வேண்டி ஜாதகம் பார்த்தல் போன்றவற்றையும் கூடினால் தான் இராசி-பலன்களை தீர்கமாக உரைக்க இயலும். இத்தகைமை பூண்ட சான்றோர் இன்று ஒரு சிலரே உள்ளனர்.
சற்குருவை அடையப் பெற்றால் சொல், பொருள், செயலால் அனைத்தையும் உணர்த்துவார். சற்குருவைப் பெறும் வரையில் என் செய்வது? சற்குருவை அடையும் ஒரே பிரார்த்தனையோடு திருஅண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.
“இராசி கர்மநிவாரண தீபிகை” என்னும் இப்பகுதியில் “எது, எப்படி, எங்கு நடக்கும் என்று அறிவதை விட ஒவ்வொரு மாதத்திலும் தீய கர்ம வினையின் பிரதிபலிப்பே துன்பங்கள் என்பதை அந்தந்த இராசிக்காரர்கள் அறிந்து கர்ம நிவாரண கார்யங்களை எங்கு, எப்படி நடத்தினால் அம்மாதத்திய துன்பங்களைச் சமாளித்திடலாம் என்பதற்கே முக்யத்வம் தரப்பட்டிருக்கிறது.
அந்தந்த மாதத்தில் எதிர்வரும் கஷ்டங்களைத் தீர்க்கவல்ல புண்ய, பூஜா சக்திகள், பித்ருக்களின் ஆசி, தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைத் தந்தருளும் மூர்த்தி, தீர்த்தம், தல தரிசனங்கள், தான தருமங்கள், பாராயண முறைகள், ஹோமம், பூஜை, இறைப் பணிகள், நற்காரியங்களின் விளக்கங்களே இராசி கர்ம நிவாரண தீபிகையாக மலர்கின்றது. கர்ம வினைகளை களைய வழி காண்பீர், கவினுற வாழ்வீர்
மேஷம்
அலுவலகம் செல்வோர் : இம்மாதத்தில் புதிதாக பொருட்கள் வாங்க முனைவர். ஆனால் பொருட்களில் சில குறைபாடுகள் இருக்கலாம். இதனால் உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகலாம், கவனம் தேவை, பிரயாணத்தில் முக்கிய தஸ்தாவேஜுகளை தொலைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஆஞ்சனேய சுவாமியை விடாமல் வழிபடுவது நலம் தரும். வெளிர்நீலம் கொண்ட ஆடைகள் அணிவது நலம் தரும். நேரம் கடந்து உண்பதால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வர ஏது உண்டு. கீழ்க்கண்ட பாடலை தினமும் 21 முறை ஓதி ஆட்டிற்கு வாழைப்பழம் தருவது நலம் தரும்.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கல்லால்
நலமிலனாடொறு நல்கு வானவன்
குல மில ராகினுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே
முதியோர் : மூத்த மகனும் மூத்த மகளும் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இருந்தாலும், நீங்கள் நல்லது தான் சொல்கின்றீர்கள் என்பதைப் பிறர்தான் அறிவார். ஆகவே உங்கள் உதவியை பிறர்க்குச் செய்யுங்கள், உபவாசம் நலம் தரும். பணவிஷயத்தில் கவனம் தேவை.
திருமணம் ஆகாதோர் : திடீர் திருப்பம் திருப்திகரமாக இருக்க வேண்டும் என்றால் லலிதா சகஸ்ரநாமத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறை ஓதுதல் நலம் தரும். பஞ்சமி அன்று விரதம் இருந்து ஒரு வேளை உண்டு, அம்பாள் கோயிலில் ஐந்து தீபம் ஏற்றல் வேண்டும்.
வியாபாரிகள் : நல்லதொரு பொருட்களை கையில் வைத்துக் கொண்டு நலம் பிறக்குமா என்று வேடிக்கை பார்க்காதீர்கள். உங்களுடைய சரக்கை விட தரமற்ற பொருட்கள் நன்றாக விற்கிறது. இதற்கு காரணம் எது என்று யோசித்து விரைவில் புதிய முயற்சியோடு இறங்குங்கள். தடைக்குக் காரணம் உங்கள் சஞ்சல மனதுதான்.  கீழ்க்கண்ட பாடலை தினமும் 12 முறை ஓதி ஆட்டிற்கு சிவப்பு நிற காரட் அளித்து வியாபாரம் செய்யுங்கள் நல்ல திருப்பம் வரும்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
மாணவ மாணவிகள் : படிப்பில் கவனம் குறைய வழியுண்டு. மற்ற தேவையில்லாத விஷ்யங்களில் மனம் அலைபாய்கிறது. குறிக்கோளோடு முடியுங்கள், மற்ற விவகாரங்கள் இப்பொழுது தேவை இல்லை. நீங்கள் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. முதுநிலை சரித்திரம் பொருளாதாரம், படிப்போர் தேவையில்லாத சிக்கலில் மாட்டுவர். தாய் தந்தையர் சொல் கேட்டு நடங்கள், வீரபத்திரசுவாமியை தினமும் வணங்கி கீழ் கண்ட பாடலை ஓதுங்கள்
தன்னார்மதி ஆடிதழல் போலுந் திருமேனி
என்னார் புரமூன்று மெரியுண்ணநகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அண்ணாவுனக் காளாயினியல்லே னென்னலாமே.
கணவன்/மனைவியினை இழந்தோர் : நீங்கள் பேசாவிட்டாலும் ஏதோ பேசியதாகப் பழிவிழும். ஆகவே மனதிற்குள்ளேயே பேசுங்கள். பழைய நினைவுகள் உங்களை பரிகசித்துப் பார்க்கும். உணர்ச்சி வசப்பட்டு விடாதீர்கள். உங்கள் முடிவு ஒரு திருப்பத்தைத் தரும். பொறுமையாய் இருங்கள். குருஹோரையில் தினமும் தட்சிணாமூர்த்தி துதி பாராயணம் அவசியம்.

ரிஷபம்
அலுவலகம் செல்வோர் : ஆண், பெண் இருபாலருக்கும் சந்தர்பங்கள் சாதகமாக இல்லை. உங்கள் அலுவலகத்தில் அருகில் இருப்பவரிடம் கவனமாய் இருங்கள். தலை வழுக்கையாய் இருப்பவரிடம் கவனம் தேவை. கறுப்பு நிற பார்டர் போட்ட புடவைகளை அணிதல் நலம் தரும். கணக்கு சரி பார்ப்பதில் தவறுகள் வரவழியுண்டு. கீழ்க் கண்ட பாடலை தினமும் 21 முறை ஓதி இரண்டு முக தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மழுவாள் வலனேந்தீ மறையோதீ மங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின தீர்த்தலுன தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அழகாவுனக் காளாயினியல்லே னென்னலாமே
வியாபாரிகள் : தெரியாதவரிடம் புதிதாகத் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைத் தெரிந்தது போல் பலர் தேடி வருவார்கள். புதுப்புது ஆசைகளைக் காட்டுவார்கள். மயங்கி விடாதீர்கள். உங்கள் பொருளுக்கு நல்ல விலை வரும். தற்போது பொறுத்துக் கொள்ளுங்கள். வயிறு காய்கையில் பொறுமை காக்க முடியுமா? தெரியாதவரிடம் மாட்டிக் கொள்வதைவிடப் பட்டினி இருக்கலாம். கவனம் தேவை. கீழ்க்கண்ட பாடலை தினமும் முப்பது முறை ஓதுங்கள்.
நல்லவர் தீயரெனது நச்சினார்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன வஞ்செழுத்துமே.
முதியோர் : பேசாத வார்த்தைக்கு நீங்கள் எஜமானர். பேசிய வார்த்தை இப்பொழுது உங்களுக்கு எதிரியாய் மாறித் துன்பம் தருகிறது. வாதம் சம்பந்த நோய் உங்களை வருத்த வழியுண்டு. வாதபுரநாதாஷ்டகம் படிப்பது நலம் தரும். தனியாக வெளியில் போகாதீர்கள். மயக்கம் வரும். கீழ்கண்ட பாடலை ஓதுங்கள்
வாழ்த்தவாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினையேன் நெடுங்காலமே!
மாணவ மாணவிகள் : தட்டெழுத்து, சுருக்கெழுத்து, சுத்தி சுத்தி துன்புறுத்தும். ஆசிரியர், ஆசிரியைகள் கண்டிப்பாக இருப்பார்கள். இதனால் மாணவர்கள் மாணவிகளிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்படும் பொறுமையைக் கையாளுங்கள். எளிதாகப் பாடங்கள் புரிந்துவிடும். கீழ்கண்ட பாடலை தினமும் 18 முறை  ஓதுங்கள். எறும்பிற்கு ரவை போடுங்கள்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவு நீருங்கண்டு
நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே
மிதுனம்
அலுவலகம் செல்வோர் : சுகந்திரமாய் இருந்த உங்களுக்கு கையை கட்டிப் போட்டு விடுவார்கள் அதிகாரிகள். திறமையாகச் செயல்பட்டாலும் திடீர் சோதனைகளுக்கு ஆளாவீர்கள். நீங்கள் உயரமாய் இருந்தால் உங்களை விடக் குள்ளமாய் இருப்பவரிடம் கவனம் தேவை. நீங்கள் குள்ளமாய் இருந்தால் உயரமாய் இருப்பவரிடம் உஷாராக இருங்கள் இந்த மாதம். மேலும் கடிதம் எழுதுவதில் கவனம் தேவை. சிகப்பு, அல்லது பச்சையில் கருப்புக் கோடுகள் உள்ள ஆடைகள் நலம் தரும். பால சந்திர கணபதியை வழிபடுதல் நலம் தரும்
திருமணம் ஆகாதோர் : உங்களுக்கு உங்களுடைய திறந்த மனம்தான் எதிரி. விருப்பு வெறுப்புகளை உடனே கொட்டி விடுகிறீர்கள். உங்களைப் புரிந்தவர்கள் உங்கள் வார்த்தையை வைத்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள். கீழ்க்கண்ட பாடலை 21முறை ஓதி வயதானவர்களுக்கு உணவிடுங்கள்.
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் எத்துவீர்க் கென்றும் இன்பமே
முதியோர் : அலைச்சல் தான் மிச்சம், ஆவது ஒன்றுமில்லை. வீணான மனத்தாங்கல் தான் வரும் உறவினர்களிடமிருந்து. வெளிமனிதரை நம்பலாம். பழைய அலுவலக நண்பர் உதவுவார். பேரன், பேத்தியால் பழிசுமக்க நேரிடும். முருகன் கோயில் வலம் வருதல் நலம் தரும். கந்தர் அனுபூதி ஓதவும்.
கணவன், மனைவி இழந்தோர் : தேவையில்லாத புதிய தொடர்புகள் உருவாகும். அதையே நம்பி ஏமாந்துவிடாதீர்கள். உங்களைப் புகழ்ந்து காரியத்தை சாதிக்கப் பலர் திட்டம் தீட்டுவர். பண விஷயத்தில் கவன தேவை. மன சஞ்சலம்தனை அடைக்க சிவபூசை சிறந்தது. கீழ்க்கண்ட பாடலை 51 முறைக்கு குறையாமல் ஓதி நாய்க்கு உணவிடுங்கள். பைரவ பூஜை சிறந்தது.
கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தனாய ச!
நந்த கோபகுமாராய கோவிந்தாய நமோ நம : ||
வியாபாரிகள் : திறமையைப் பயன்படுத்துங்கள், வங்கிகள் உதவும் என்று முடிவு எடுத்து விடாதீர்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்து கொள்வது நலம். இதில் சிறிது சிக்கல் உண்டு. புதிதாக முதலீடு செய்யாதீர்கள். நண்பர்கள் கையை விரித்து விடுவார்கள். நெருப்பு வேலை செய்பவர்கள் கவனம் தேவை. இந்த பாடலை ஓதி மாலை மட்டும் 51 முறைக்கு குறையாமல் ஓது பசுவிற்கு வாழைப்பழம் அளிக்கவும்.
அருந்தமதாவது நீறு அவலமறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறுவான மளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.
கடகம்
அலுவலகம் செல்வோர் : புதிய திருப்பங்கள் உண்டு. தேடித்தேடி வேலைகளை நிரப்புவர் அதிகாரிகள். அத்தனையும் சமாளித்துக் காட்டும் மாதம் இது. உங்கள் திறமையை பயன்படுத்தி நற்பெயர் வாங்குவீர்கள். புதிய உறவுகள் உருவாகும். ஆனால் அது பழைய கனவுகளைத்தான் நினைவூட்டும். பணப் புழக்கம் இருந்தாலும் வீண் செலவுக்கு வழி வகுத்துவிடும். அதிகாரிகளின் இடமாற்றத்தால் ஆதாயம் பெருகும். மஞ்சள் நிறத்தில் வெள்ளைக் கோடுகள், பச்சை நிறத்தில் வெள்ளை கோடுகள் உள்ள புடவை சட்டைகள் அணிவது நலம் தரும். கோயில் யானைக்கு தேங்காய் அளிக்கவும். தடுக்கி விழ சந்தர்ப்பம் வரும், கவனமாய் இருக்கவும்.
முதியோர் : இந்த மாதம் நீங்கள் விரும்பியதை அடைய வழியுண்டு. போய்ப் பார்க்கும் இடங்கள் உதவியாய் இருக்கும். ஆண் வாரிசுகள் உங்கள் வார்த்தைக்கு செவி சாய்க்கும். பெண் குழந்தைகளுக்கு பிறரறியாது உதவி செய்யுங்கள். வயதாகியும் உங்களுக்கு பொய் பேசும் ஆவல் உங்களை விடாது துரத்தும். சூழ்நிலையைப் பார்த்துச் செய்க! பண விஷயத்தில் யாரையும் நம்பிவிடாதீர்கள். தினமும் தட்சிணா மூர்த்தி தரிசனம் செய்து உளுந்து வடை தானம் செய்தல் நலம் தரும்.
கணவன் மனைவி இழந்தோர் : வேதனைகள் யாரை விட்டது? வீணாக நினைத்து நினைத்து அழாதீர்கள். கடவுள் துணை உங்களுக்கு உண்டு. புதிய மாற்று வழிகளை திட்டம் தீட்டுங்கள். கோவிலுக்குச் செல்லுங்கள். குழந்தை முகங்களைப் பாருங்கள். சாஷ்டாங்க நமஸ்காரப் பிரதட்சிணம் செய்யுங்கள் புண்டரீகாட்சனை. நிச்சயம் வழி பிறக்கும் வாழ்வில். கீழ்க்கண்ட பாடலைச் சொல்லி தினமும் ஒரு ஏழைக்கு உணவு இடுங்கள்.
நம : பங்கஜ நாபாய நம: பங்கஜ மாலினே!
நம : பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்க ஜாங்க்ரயே||
வியாபாரிகள் : வியாபாரத்தில் திருப்பங்கள் காணும் மாதம் இது. வரவேண்டிய் வருமானம் நீங்கள் போய் கேட்டவுடன் ஓரளவாவது பெறலாம். போய்க் கேட்காமல் இருந்து விடாதீர்கள். மேலும் கடல் பொருட்கள் விற்போர் நல்ல நிலைகளை காணலாம். பொன் வியாபாரிகள் முடிந்த மட்டும் பெரிய ஆர்டர்களை அதிகமாக எடுக்க வேண்டாம்.  பச்சைப் பயிறு நெல்கடலை வியாபாரம் நல்ல திருப்பத்தைத் தரும். இரும்பு வியாபாரத்தில் பேச்சுத் தகராறுகள் வளரும். ஆகவே கவனமாய் பேச்சு வார்த்தைகள் நடத்தலாம். தொழில் முன்னேற்றம் கான உடல் ஊனமுற்றோர்களுக்கு தினமும் இரண்டு பேருக்கு உணவிட்டு இந்தப் பாடலை ஓதுங்கள்.
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப்பாடி திருஅண்ணாமலை கைதொழ
ஓடிப் போநமதுள்ள வினைகளே
மாணவ மாணவியர் :  ஆங்கிலம், வடமொழி, தாவரஇயல், மிருகஇயல் இந்தப் பாடங்களைக் கவனமாய் படித்தல் வேண்டும். இரகசிய கடிதங்கள் நாளடைவில் துன்பம் தரும். சாதாரணமாகப் பேசப் போய் அது வேறுவிதமாக முடிந்துவிடும் கவனம் தேவை. அதிகமாக நீண்டநேரம் இரவு நேரப் படிப்பு உடல் பாதிப்பைத் தரும். காலைப் படிப்பு நலம். விளையாட்டில் சிறு காயங்கள் ஏற்பட வழியுண்டு. கீழ்க்கண்ட பாடலை தினமும் 21 முறைக்கு குறையாமல் ஓதி திருக்கோயிலை வலம் வருதல் நலம்.
இட்டனும் மடிஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள்
கெட்டநாள் இவை என்றலலாற் கருதேன் கிளர்புனற் காவிரி
வட்டவாசிகை கொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஸ்ரீவீணா ஞான தட்சிணா மூர்த்திகள்
திருத்தவத்துறை லால்குடி

சிம்மம்
அலுவலகம் செல்வோர் : வந்தவுடன் வேலைகளை அடுக்காகச் சுமத்திவிடுவர். வேலைப் பளு உங்களைச் சூழ்ந்து விடும். கோபத்தால் தவறுகள் செய்து விடுவீர்கள் கவனம் தேவை. வெளிர்நீலம், ஆரஞ்சு, வெளிர் சிகப்பு ஆடைகளை அணிந்து விடுங்கள். ஒரளவு சமாளித்து விடலாம். அதோடு தினமும், பசுமாட்டிற்கு அகத்திக் கீரை அளித்து கீழ்க் கண்டபாடலை ஓதுங்கள். தினமும் திருநீறும், ருத்ராட்சமும் அணிய உங்கள் நிலை சரியாகிவிடும்.
மருந்து வேண்டில்லிவை மந்திரங்கள்ளிவை
புரிந்துகேட்கப் படும் புண்ணியங்கள்ளிவை
திருந்துதேவன் குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர் தொழும் அடிகள் வேடங்களே.
முதியோர் :  நீங்கள் நலம் தரும் ஒன்றைச் சொன்னால் அதை வைத்தே உங்கள் மீது பழியைச் சுமத்தி விடுவர். நீங்கள் பார்த்து ஏற்றுக் கொண்ட மருமகன்கள், மருமகள்கள். பொல்லாத  நேரமிது. புரியாதவர்களுக்கு புத்திமதி சொல்லாதீர்கள். மாதத் தர்ப்பணம் செய்யுங்கள், முறையான  தான தர்மம் செய்து உங்கள் தாய் தந்தயரை வணங்குங்கள். கீழ்க்கண்ட பாடலை ஓதி
வீரவேல் தானாவேல் விண்ணோர் இறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டேதுணை.
பெண்கள் : அழகுப் பொருள்கள், ஆடம்பரப் பொருள்களை நீங்கள் வாங்கினால் மற்றவர்களுக்குப் பொறுக்காது. ரொம்ப சுயநலக்காரி என்ற பட்டம் வரும். ரகசியமாய் காரியங்களைச் செய்யுங்கள். வீட்டுக்காரரும் சில நேரங்களில் எரிந்து விழுவார். திருப்பி எதிர்த்து விடாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். நீலம், பொன்நிறம், சிகப்பு கண்ணாடி வளையல்களைத் தானமாய்த் தாருங்கள் சுமங்கலிகளுக்கு. உங்கள் மன ஆசை நிறைவேறும். கீழ்க்கண்ட பாடலை ஓதுங்கள். அனுமார்கோயிலை அடிப்பிரதட்சிணம்  செய்யுங்கள். தினம் ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் பொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
வியாபாரிகள் : தினமும் பூசைகள் செய்து காயத்ரீ ஜபிக்கிறீர்களா, எங்கு நேரம் இருக்கிறது. உருட்டல் புரட்டலுக்கே நேரம் போதவில்லை. ஆட்களை மேய்ப்பதற்கே நேரம் சரியாகிவிடுகிறது. திறமைசாலிகளாக இருந்தாலும் உங்கள் கீழ் வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்வதில்லை. என்ன செய்வது, சீட்டுக் கம்பெனிக்காரகள் சிறிது கவனமாய் இருந்தால் நலம். உணவுப் பொருட்களை விற்போர் போராடி விற்க வேண்டும் தெரிந்தவர்க்கே, தினமும் இந்தப்பாடலை ஓதி மலைமீது இருக்கும் சிவனை வழிபட்டு மசால்வடை தானம் செய்யுங்கள், நல்ல மாற்றம் வரும்.
நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
மாணவ மாணவிகள் : மாணவிகள் மிகவும் அன்புடன் தாய் தந்தையிடம் பழக வேண்டும். மாணவர்கள் கணக்கு, தொழில்கல்வி, படிக்கும் மாணவர்கள் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது. சிறுதவறுகள் உங்களுடைய நன்மதிப்பைக் குறைத்துவிடும். விளையாட்டு வீரர்கள் உணவில் கவனம் செலுத்துதல் அவசியம். பந்தயம் கட்டி விளையாடாதீர்கள். அது ஆபத்தில் முடியும். கீழ்க்கண்ட பாடலை ஓதித் தினமும் கணபதிக்கு 21 முறை தோப்புக் கரணம் போடுவது நலம்.
கோவிற் கொடியநமன்றமர் கூடாவகைவிடுவன்
காவிற் றிகழ் திருநாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய விருமதத் தொற்றை மருப்பின் முக்கண்
ஏவிற் புருவத் திமைய வன்றான் பெற்ற யானையையே.
கன்னி
அலுவலகம் செல்வோர் : உயரதிகாரிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும். ‘ஒரே நேரத்தில் பல காரியங்களை முடித்து விட்டாயா’ என்ற கேள்வி அடிக்கடி எழும். மண்டையைப் பிய்த்துக் கொள்வதுபோல் சிறுசிறு வேலைகளே பெரிய வேலைபோல் ஆகிவிடும். ஓய்வு எடுக்க சிறிது ஓதுங்கினாலும் தேடிவந்து தலையில் கட்டிவிடுவர். பழைய பைல்களைத் தேடி எடுக்கும்படி அடிக்கடி உத்தரவு வரும். திடீர் சோதனைகளால் உங்களுடைய தவறுகள் வெளியே வரும். சாம்பல் நிறம் கறுப்பு பார்டர், வெளிர்சிவப்பு ஆடைகளை அணிவது நலம். தினமும் பெண் குழந்தைகளுக்கு உணவுப் பண்டங்களைத் தானம் செய்து சிவன் கோயிலை 21 முறை அப்பிரதட்சிணமாக வலம் வந்து இந்த பாடலை ஓதவும்.
பத்துர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளிமெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.
வியாபாரிகள் : இரும்பு, மோட்டார், கார், பைக், கல், மணல், சிமெண்ட் வியாபாரிகள் தொழிலாளிகள் மிகுந்த கவனத்தோடு செயல்படுதல் நலம். வடக்கு மாநில வியாபாரிகளை நம்பி எதிலும் ஈடுபடாதீர்கள். அடமானம் செய்ய வேண்டிய நிலையில் பல துன்பங்கள் வரும். இருந்தாலும் எங்காவது ஒரு சிறிய வருமானங்களும் வரும். காய்கறி, உப்பு போன்ற வியாபாரிகள் நஷ்டத்திற்கு விற்றல் போதும் என்றாகிவிடும். அளவோடு வியாபாரத்தில் ஈடுபடுங்கள். லாரிதொழில் அதிபர்கள் தங்கள் கீழ் வேலை செய்பவர்களை சரியாக கவனியுங்கள். பலசரக்கு வியாபாரிகள் வாங்கும் போதும் விற்கும் போதும் நேரடிப் பார்வையில் செயல்படுங்கள். தினமும் மூன்று பேருக்கு உணவு இட்டு மூதாதையர்களுக்குத் தர்ப்பணம், திவசம் கொடுங்கள். கீழ்கண்ட பாடலை 18 முறைக்கு குறையாமல் ஓதுங்கள். முருகன் கோவிலை வலம் வாருங்கள்.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடாநின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன் கைவேல்
இல்லறப் பெண்கள் : அன்பிற்கு மதிப்பு கொடுப்பவர்கள் சிலரே, நீங்கள் அன்பு செலுத்தினாலும் புரிந்து கொள்ளுபவர்கள் உங்கள் அருகில் இல்லை. உங்களுடைய ஆபரணங்கள் அடமானம் வைக்க வேண்டிய நிலைக்கு வரும். குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்களை அணைப்பதற்கு வேறு யார் இருக்கிறார்கள் உங்களைத் தவிர, கணவர் உங்கள் பேச்சுக்கு எதிர்மாறாக நடக்க வழியுண்டு. தினமும் 21 முறை இப்பாடலைச் சொல்லி கணபதி கோயிலின் முன் அரிசிமா கோலம் இடுங்கள்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
முதியோர் : சொல்லம்புகளைத் தாங்கிய இதயம் உங்களுக்கு. இருந்தாலும் நல்லது என்று மனதில் பட்டுவிட்டால் வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உங்களால் என்ன செய்வது? ஏணிப்படி வைத்தாலும் உங்களால் ஏறித் தொட முடியவில்லை. பெண் குழந்தைகளைப் பற்றிதான் கவலை. அவர்கள் நலமுடன் இருக்க இந்தப் பாடலை தினமும் 51 முறை ஓதி சிவங்கோயிலில் எறும்பிற்கு ரவை போடுங்கள் தினமும்.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்தவர்க்கெல்லாம்
நன்னெறி யாவது நமச்சிவாயவே.
மாணவ மாணவிகள் : தையல் படிப்பு, சமையல் படிப்பு, வரைகலைப் படிப்பு, ஆசிரியர், ஆசிரியை படிப்பு மாணவர்கள், தங்களுடைய பாடங்களை சரிவர முடிக்க முடியாமல் தடங்கல் ஏற்படும். இதை சமாளிக்க அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்துதல் நலம். தோழிகளையும் தோழர்களையும் நம்பாதீர்கள். திடீர் என்று காலைவாரி விடுவார்கள்.
துலாம்
அலுவலகம் செல்வோர் : உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொண்டு அதைப் பயன்படுத்தி தன்னுடைய திறமை என்று வெளிக் காட்டிக் கொள்வார்கள் உங்களோடு இருப்பவர்களே. சிறுவேலைக்கெல்லாம் உங்களை அலையவைத்து விடுவார்கள். கடங்கொடுக்காதீர்கள். வெளிர்சிகப்பு, வெளிர் பச்சை ஆடைகள் உதவியாய் இருக்கும். பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு நல்லெண்ணெய் தீபம் இட்டு 21 முறை வலம் வருதல் நலம் தரும்.
கணவன் மனைவி இழந்தோர் : புதிய நட்புக்கள் முளைத்தெழும், புரியாத விதத்தில் பேச்சுக்கள் வளரும். பேச்சில் பொடியை வைத்து பேசுவார்கள். கவனமாய் இருங்கள். உணவு விஷயத்தில் இரவில் பலகாரம் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்பாடலை 21 முறைக்கு குறையாமல் ஓதி நாய்க்கு இரவில் உணவிடுங்கள்.
துஞ்சலும் துஞ்சலிலாத போழ்திலும்
நெஞ்சக நைந்து நினைமின் நாள்தோறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்சஉதைத்தன அஞ்செழுத்துமே.
வியாபாரிகள் : பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்கு எழுதுவதில் இருந்து விடாதீர்கள். நீங்கள் ஏன் பணத்தை கொடுத்துவிட்டு தட்டிக் கேட்காமல் இருக்கிறீர்கள்? சிறிது சிறிதாய் சேர்த்த பணம். வாகனம் தொழில் செய்வோர், உருக்கு ஆலைகள், இயந்திரக் கருவிக்காரர்கள், துவரை, எள்ளு, பச்சைப் பயிறு, வாத்தியக் கருவிகளை இசைப்போர், இவர்கள் மௌனமாய் இருந்தால் காரியம் கெட்டுவிடும். பேசிப்பேசி காரியத்தைச் சாதியுங்கள். இப்பாடலை தினமும் ஓதி சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன் கிழமைகளில் இரண்டு பேருக்கு உணவு இடுங்கள், சிவன் கோயிலில்,
கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்விநாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வண மாவன அஞ்செழுத்துமே.
பெண்கள்: பயந்து பயந்து சாதிக்கப் போகிறீர்கள். நீங்கள் அன்புக்கு அடிமை, எதை எப்பொழுது பேச வேண்டுமோ அதை சூழ்நிலை பார்த்து பேசிவிடுங்கள். தெரிவித்தால் எது நடக்குமோ என்று பயப்படாதீர்கள் இரண்டில் ஒன்று தெரியவேண்டாமா? மனதில் பளு வேண்டாம். இறக்கி வையுங்கள். இந்தப் பாடலை தினமும் 21 முறை ஓதி சிவன் கோயிலை அடிப்பிரதட்சணம் செய்து கோதுமை ரவையை நவக்கிரக சன்னதியில் ஓரமாய் இடுங்கள்.
கொல்வாரேனுங் குணம் பலநன்மைகள்
இல்லா ரேனும் இயம்பு வராயிடின்
எல்லாத் தீங்கையும் நீக்குவரென்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.
மாணவ மாணவிகள் : விவசாயத் துறை,  தொலைத்தொடர்புத் துறை, இயல், இசை, நாடகத்துறை, விமானத் துறை மாணவர்கள், கவனமாய் இருத்தல் வேண்டும். உங்கள் திறமையைப் பார்த்து ஏமாற்றத் திட்டம் தீட்டுகிறார்கள் கவனமாய் இருங்கள். நண்பர்களின் தொடர்பு இந்த மாதம் அவ்வளவு சரியில்லை., கீழ்க்கண்ட பாடலை ஓதி நந்திக்கு வில்வ மாலை இடுங்கள் தினமும்.
என்றான் மறக்கேன் எழுமைக்கும் என் பெருமானையே
உற்றாய் என்னுன்னையே உள்குகின்றேன் உணர்த் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.
விருச்சிகம்
அலுவலகம் செல்வோர் : பரவாயில்லை இந்த மாதம் பணவிஷயத்தில் திருப்திகரமாய் ஓட்டிவிடுவீர்கள். மேல் அதிகாரிகள் உதவியாய் இருப்பர். சுப செலவுகள் செய்யாமல் இருக்க முடியாது. வேலை உயர்வுக்காக முயற்சி செய்யுங்கள், தலைவர் குஷியாக இருக்கிறார். மஞ்சளில் வெள்ளை  நிறக் கோடுகள், அல்லது வெளிர்பச்சை நிறத்தில்  வெள்ளை புள்ளிகள் உள்ள ஆடைகள் உதவியாய் இருக்கும். பெண்கள் சாதாரண ஆடை போட்டால் கூட கவர்ச்சி அதிகமாக இருக்கும் மாதம் இது.  அனாதை குழந்தைகளுக்கு உணவு இட்டு தினமும் கீழ்க்கண்ட பாடலை 30 முறைக்கு குறையாமல் ஓதி சிவன் கோயில் வலம் வரவும்.
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
தேத்து மடியார்கட் இல்லையிடர்தானே.
இல்லறப் பெண்கள்: பிக்கல் பிடுங்கல் குறையும் மாதமிது. உங்களைக் குறை சொல்லியே வேலை வாங்கியவர்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்வர். ஏன் என்றால் அவர்கள் மூளைக்கு வேலை வந்துவிட்டது. உங்களைக் கட்டி அணைக்கும் குழந்தைகளை நன்றாக கவனியுங்கள். கணவனுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் ஆறுதல் வார்த்தைகளைத் தருபவர்கள் கிடையாது. கணவன் நலனுக்காக பூசை அதிகமாய் செய்யுங்கள். 80 வயது நிரம்பிய தம்பதிகளுக்கு வாரம் ஒரு முறை உணவிட்டு கடைசி வாரம் பாதபூசை செய்து ஆசி பெறுங்கள். உங்கள் கவலை குறைந்து விடும். கீழ்க்கண்ட பாடலை தினமும் 21 முறைக்கு குறையாமல் ஓதுங்கள்
வண்ணமலரானும் வையமளந்தானும்
நண்ணலரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ணமலர் தூவித்டொழு தேத்த
எண்ணு மடியார்கட் இல்லை யிடுக்கணே.
வியாபாரிகள் : துணிச்சலுடன் உங்கள் வியாபாரத்தில் ஈடுபடுங்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால், சூட்சித் திறமையால் வியாபாரத்தை நடத்துங்கள். அதிக லாபத்திற்கு ஆசைப்படாதீர்கள். இப்பொழுது ஏமாந்தவர்க்ள் பிறகு ஒருகாலத்தில் உங்களை விழுங்கி விடுவார்கள். நீங்கள் முன்னேற வேண்டிய நேரமிது! தினமும் மூன்று பேருக்கு உணவு தானம் செய்து கீழ்கண்டபாடலை 21 முறை ஓதுங்கள்.
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே  போற்றி போற்றி
முதியோர் : வைத்தியச் செலவுகளை ஓர் அளவு கட்டுப்படுத்தும் மாதம் இது, உறவினர்கள் உள்ளம் திறந்து பேசுவர், உங்கள் சொல்லை விட உங்கள் பணத்திற்குத்தான் மதிப்பு அதிகம். இன்னுமா ரகசிய உயில் எழுதவில்லை. சட்டநிபுணரை சந்தித்து சிறிது சிந்தியுங்கள். நன்றி கெட்டவர்களுக்கா உங்கள் பணம். தானதருமத்திற்கு நிறைய ஒதுக்குங்கள். ஒன்றுமே கையில் இல்லை எப்படி உயில் எழுதுவது என்று நினைக்கின்ற முதியோர்களையும், நவகிரகங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இருக்கிறவர்களுக்கு கர்ம-நிவாரண தீபிகா வழி சொல்கிறது. இல்லாதவர்களுக்கு சிவனே கதி.
திருமணம் ஆகாதோர் : மாப்பிள்ளையும், பெண்ணும் அருகில் தான் இருக்கிறார்கள். பெரியவர்கள் முடிவுக்குவரத்தான் தாமதம் ஆகிறது. எதிர்ப்பார்ப்புகளை பெரியவர்கள் குறைத்து சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொண்டால் திருமணம் ஆனதுபோல் தான். திருமணம் ஆகாதோர் கீழ்க்கண்ட பாடலை 51 முறை ஓதி கோதுமை ரவையுடன் சர்க்கரை கலந்து முருகன் கோயிலில் ஓரமாக எறும்பிற்கு இடுங்கள், குறை தீரும்.
மதியங்கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகைமூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.

தனுசு
அலுவலகம் செல்வோர் : புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளலாம் என்றால் யார் என்ன சொல்வார்களோ என்ற பயத்தால் புது ஆடை அணிவதைக் குறைத்து விட்டீர்கள். இம்மாதம் அணிந்துக் கொள்ளுங்கள். ஆனால் சிரமத்தின் மீது தான் காரியங்கள் நடக்கும். வெளிவேலைகள் உங்களை அடிக்கடி இருக்கும் இடத்தை விட்டு துரத்தும். உயர் அதிகாரியின் தொல்லையிலிருந்து மூல நக்ஷத்திரக்காரர்கள் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு விரயம் தரும் மாதமாய்த் தான் அமைந்துள்ளது. வெளிர்நீலம், ஆரஞ்சு, கருப்பு கலந்த சிகப்பு நிற ஆடைகள்  அணிந்து துர்க்கை அம்மனை வலம் வந்து வணங்கி ராகுகாலத்தில் தீபம் ஏற்றி கண்தெரியாதவர்களுக்கு உணவு அளித்து இப்பாடலை 21 முறைக்குக் குறையாமல் ஓதுதல் நலம்.
பற்றாய் நினைந்திடப் போது நெஞ்சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றாயலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றானுமை யவட்கன்பன்றிருப் பாதிரிப்புலியூர்
உடையா னாடியா ரடியடி யோங்கட்கரியதுண்டே.
இல்லறப் பெண்கள் : சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தால் நல்ல பொருளை வாங்கும் காலம் இது, அடிவயிற்றுத் தொல்லை உங்களை துன்புறுத்தும். இப்பாடலை 11 முறை சொல்லி பசுவிற்கு வாழைப்பழம் குறைந்தது 6 அளித்தல் நலம்.
அவ்வினைக் இவ்வினையாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
வியாபாரிகள் : வீண் தொல்லையால் காரியங்களைச் சரிவர செய்ய முடியாமல் போகும், வயதானவர்கள், செய்கின்ற காரியத்தில் தடங்கலாக ஏதாவது சொல்வார்கள்! பிரயாணத்தில் காரியங்கள் நிதானப்படும்., உரத்த குரலில் பேசுபவர்களை நம்பாதீர்கள். கடல் பொருட்கள், வெல்டிங் டிங்கரிங், பெயிண்டிங் வியாபாரிகள் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் நலம். ஆசை காட்டி ஏமாற்றுபவர்களிடம் தொடர்பு ஏற்படும். தினமும் இப்பாடலை 12 முறை ஓதி சேவலுக்கு கோதுமை தானியங்களை தானமாய் போடவும்.
ஓம் முருகாஉன் அண்டமே போற்றி
ஓம் முருகாகிடைப்பதற்கு அரியதேவா போற்றி
ஓம் முருகாஎண் திசைவாசா போற்றி
ஓம் முருகாஅருள் ஈசாபோற்றி போற்றி.
கணவன் மனைவியை இழந்தோர் : வீட்டில் உள்ளோர் குற்றம் கண்டுபிடிப்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர். என்ன செய்வது பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம். நீங்கள் சில நாட்கள் கோயில் குளம் என்று செல்லக் கூடாதா? மகன் நல்லவன் தான். இருந்தாலும், அவன் முன்கோபம் பேசவைத்து விடுகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள். இளையோர்க்கு மருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். கீழ்க் கண்ட பாடலை 21 முறைக்கு குறையாமல் ஓதி ஏழைக்கு ஏதாவது புதுத் துணி கொடுங்கள்.
நெக்கு நெக்குநினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீருங்கண்டு
நக்கு நிற்பவர் அவர் தம்மை நாணியே.
மகரம்
அலுவலகம் செல்வோர் : எளிமையாக முடித்து விடவேண்டிய வேலைகள் எல்லாம் இழுபறியாக வளர்த்துக் கொண்டே போகும். முதலில் பேசியபடி முடிவில் இருக்கமாட்டார்கள் அதிகாரிகள், யார்பக்கம் சாய்வது என்று தெரியாமல் முழிப்பார்கள் நடுத்தர அதிகாரிகள், சிரித்துக் குழைந்து பணிந்தாலும் சகஜமான தீட்டுகள் சரளமாகத் தான் வரும். உங்களைப் பற்றி காது மூக்குவைத்து சொல்லிவிடுவார்கள் மேல் இடத்தில். ஆகவே எதையும் எழுத்தில் வைத்துவிடாதீர்கள். விநாயக கவசம் மூன்று முறை தினமும் ஓதி வன்னி பத்திரத்தால் வீட்டிலேயே படத்திற்கு அர்ச்சனை செய்து தினமும் ஒரு குழந்தைக்காவது பால் தானம் செய்யுங்கள்.
வியாபாரிகள் : மருந்து தயாரிப்போர், உரம் வியாபாரிகள், பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுவோர், கோழிப்பண்ணை, மீன்பண்ணை, ஆட்டுப்பண்ணை அது சம்பந்தமான உணவுப் பொருட்களை தயாரிப்போர், விற்போர்- வியாபாரத்திற்காக வெளியூர் செல்ல வேண்டாம். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சரியாக இராது. கீழ்க்கண்ட பாடலை 21முறைக்கு குறையாமல் ஓதி அனாதை முதியோர் இல்லத்து ஏழைகளுக்கு தினமும் உணவு அளிக்கவும்.
கொல் புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனேமரர்கடம் இறைவா போற்றி
யாவமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
மாணவ மாணவிகள் : நூற்பாலை பயிலும் மாணவர்கள், கப்பல், தொலைபேசி கலையை பயிலுபவர்கள், மிருகவியல் படிப்போர் ஆசிரியர்களிடம் பணிவாக நடந்துகொள்ளுங்கள். சகமாணவர்களின் விளையாட்டு சூழ்ச்சிகள் விபரீதத்தையும், சண்டையையும் உருவாக்கி வரும். ஆகவே முடிந்த மட்டும் மாணவர்கள் ஒதுங்கி இருப்பது நலம் தரும். கீழ்க்கண்ட பாடலை ஓதி கண் தெரியாதவருக்கு உதவி செய்தல் நலம்.
மணிஅடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவன்னடி.
முதியோர் : பெரிய பொறுப்பையும், சிறிய பொறுப்பையும் யார் கையில் கொடுப்பது? என்ற எண்ணம் உங்களை வாட்டுகிறது. எந்தப் பொறுப்பையும் எடுத்துச் செய்ய உங்களுக்கு ஏற்ற ஆள் கிடையாது.நீங்கள் யாரையும் நம்ப மாட்டீர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் நடமாடுகிறது. உங்களுக்குப் பின்னே  ரகசிய திட்டம் தீட்டிக் கொண்டுள்ளார்கள். தான தருமத்திற்கு நிறைய செய்யுங்கள். கீழ்கண்ட பாடலை ஓதி யானைக்கு தினமும் தேங்காய் அளிக்கவும்.
எழுது பாவைநல்லார் திறம்விட்டுநான்
தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்து கொண்டு
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சமிதென் படுகின்றதே
கும்பம்
அலுவலகம் செல்வோர் : உறவினர் வருகையால், அலுவலக வேலைகளைச் சரிவர செய்ய முடியாமல் போகும். ஆராய்ச்சி, சிந்தனை இவைகளால் வேலையில் கவனம் செலுத்துவது குறைந்து விடும். செய்தித் தொடர்பு இடைவெளியால் காரியங்கள் தாமதமாகும். இதனால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும். புதிய வேலைகளை நன்றாக யோசித்து செய்யுங்கள். அலுவலகத்தில், பெண்களிடம் கவனமாய் இருங்கள், கீழ்க்கண்ட பாடலை தினமும் 51 முறை ஓதி 60 வயது சுமங்கலிக்கு துணி தானம் செய்யுங்கள்.
முத்தாரம் இயலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளிமெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.
வியாபாரிகள் : வடகிழக்கு, தெற்கு, மேற்கு வாசல் வைத்து வியாபாரம் செய்வோர் பெரிய வியாபாரம் கிடைக்கும் என்று சிறிய வியாபாரத்தை விட்டுவிடாதீர்கள். வியாபாரத்தில் உறவுகாரர்களுக்கு உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்து செய்ய வேண்டிய இடத்தில் கௌரவத்திற்காக வீம்பு பிடிக்காதீர்கள். முடிந்தமட்டும் லாபத்தில் நஷ்டத்தைப் பாருங்கள். அடம்பிடித்து கஷ்டத்தை வாங்காதீர்கள். கீழ்க்கண்டபாடலை ஓதி அனாதை இல்ல குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்.
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்
நலமிலனாடொறு நல்குவானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.
இல்லறப் பெண்கள் : சிகப்பு புடவையில் கருப்பு புள்ளிகள், பச்சையில் கருப்புக் கோடுகள் உள்ள புடவைகள் அணிதல் நலம் தரும். மனதில் உள்ள குறைகளை யாரிடமும் சொல்லாதீர்கள். சிவன் கோயில் பைரவர் இடம் சொல்லுங்கள். சிரித்துப் பேசியவர்கள் உதவாமல் போவார்கள் தந்தையோடு மனம் திறந்து பேசுங்கள். கணவனின் நெருங்கிய உறவினர்கள் உங்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். உங்கள் வேதனையை பங்கு கொள்ளமாட்டார்கள். கீழ்க்கண்ட பாடலை தினமும் 21 முறை ஜபித்து தினமும் காகத்திற்கு உணவிடுங்கள்.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கிவாய் மொழிசெய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

குளிகை நேரத்தில் ஸ்படிக லிங்க தரிசனம், ஸ்படிக லிங்க பூஜை மிகவும் விசேஷமானதாகும். குளிகை நேரத்தில் ஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து 1008 முறை பஞ்சாட்சரம் ஓதி வலம் வந்து கற்கண்டு பிரசாதத்தைத் தானமாக அளித்திட வியாபாரக் கூட்டாளிகளிடையே  (partners)  உள்ள பிரச்சனைகளும் தீரும்.  (ஸ்படிக லிங்கம் உள்ள இடங்கள் – சிதம்பரம், புட்டபர்த்தி)

முதியோர் : வங்கியில் உள்ள கணக்குகளை சரிபார்த்தீர்களா? வெறுங்கையெழுத்து போட்டு காசோலைகளை யாரிடமும் கொடுக்காதீர்கள். உங்களை அழைக்கும் குழந்தையோடு அண்டிவாழுங்கள் அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், வயதாகி விட்டதல்லவா ஒரு ஆசிரமத்திலாவது இருங்கள், தனியாக இருக்க வேண்டாம். கீழ்க்கண்ட பாடலை ஓதி துணி தானம் கொடுங்கள்.
போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றி யெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி போற்றி சிவபாதம் போற்றி போற்றி.
மீனம்
அலுவலகம் செல்வோர் : பேச்சுத் திறமையால் தவறைக் கூட சரியாய் ஆக்கிவிடுவீர்கள். திறமையாக அதிகாரிகளிடமிருந்து உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளுவார்கள். வங்கியில் வேலை செய்பவர்களை திடீர் என்று குழப்பங்கள் சூழ்ந்துவரும். சுற்றிவளைத்து அலுவலகம் முடிவுகளை எடுக்க வேண்டி வரும். கூடவே வேலை செய்பவர்கள் நேரடியாகத் தாக்காமல் பின்னால் தங்கள் வேலையைச் செய்வார்கள். ஏமாற்றுபவர்களை கண்டு பிடித்து விடுவீர்கள். யூனியன் தலைவர்களிடம் கவனமாய் இருத்தல் நலம். கீழ்க்கண்ட பாடலை ஓதி குதிரைக்கு வேகவைத்த கொள் தானம் செய்யுங்கள்.
மற்றொருவ ரொப்பில்லாமைந்தா போற்றி
வானவர்கள் போற்று மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.
இல்லறப் பெண்கள் : வெளிர் பச்சை, மஞ்சளில் வெள்ளை புள்ளிகள், பூக்கள், கோடுகள் உள்ள ஆடைகள் அணிவது நலம் தரும். புதிய ஆடைகள், பொன், பொருள் சேர்க்க நலம் தரும். கணவனுக்கு ஏதாவது பொன்னால் ஆன பொருளை பரிசு தாருங்கள். உங்கள் உதவியை நாடுவார்க்ள் உறவினர், நாத்தனாருக்கும், மாமியாருக்கும் உங்கள் மீது உள்ள பொறாமையை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தவிப்பார்கள். கீழ்க்கண்ட பாடலை 30 முறைக்கு குறையாமல் ஓதி சுமங்கலிகளுக்கு வளையல் தானமாய்த் தாருங்கள்.
ஊனாயுயிர் ஆனாயுடல் ஆனாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேனெனலாமே.
திருமணமாகாதோர் : பிறருக்கு உதவி செய்து பெயர் பெறுவீர். ஆனால் உங்களுக்கு உதவ தெய்வம் வரும். சிறுசிறு ஆசைகளால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி விடுவீர்கள். உங்கள் கையில் பணம் வருவது போல் வந்து அது கரைந்து கொண்டிருக்கும். உங்களுக்கு என்று ஒரு சேமிப்பை யாருக்கும் தெரியாமல் தொடங்குங்கள். உங்களுடைய மன விருப்பங்களை படுத்து இருக்கும் பெருமாளிடம் கூறுங்கள், ஆவன செய்வார்.
முதியோர் : உங்கள் குழந்தைகளுக்காகப் பாடுபடுகிறீர்களே உங்களை எவ்வளவு தூரம் காப்பாற்றப் போகிறார்கள்? உங்களுக்குத் தெரிந்தாலும் பலநாள் வைத்த பாசம் ஆட்டுகிறது. உங்கள் கண்ணை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மனைவி ஒரு இடத்தில் நீங்கள் ஒரு இடத்தில் இருக்காதீர்கள். இருவரும் ஒரே  இடத்தில் இருங்கள். உணவு கிடைத்தாலும் அளவோடு உண்ணுங்கள். இப்பாடலை தினமும் 21முறை ஓதிடவும்
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதி தேவனடியினையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
வியாபாரிகள் : வியாபாரத்தில் புதிய திருப்பம் வரும். ஆனால் அது போதுமானதாகாது, பொன், வெள்ளி வைர வியாபாரிகள் திறமையாக செயல்பட வேண்டிய மாதமிது. லாபத்தில் வருமானத்தைக் குறைத்து நிறைய காரியங்களை சாதித்துக் கொள்ளும் மாதமிது. இரும்பு, கட்டிட வியாபாரிகள், தங்களுடைய  சக உதவியாளர்களோடு சிறிது மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்புண்டு. நெல், கடலை, பச்சைபயிறு வியாபாரத்தில் திறமையைக் கையாண்டால் லாபம் வர வழி உண்டு. நண்பர்களுக்கு வாகனங்களை கொடுப்பதில் பலமனப் போராட்டங்கள் வரும். பேசியதைப் பேசிப் பேசி குழப்புவதால் உள்ளமும் உடலும் பாதிக்கும். கீழ்க்கண்ட பாடலை தினமும் 21 முறை ஓதி, பசுவிற்கு பசும்புல் கட்டுகளைத் தானமாக அளியுங்கள்.
அயனை அரங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா வடுச் செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமண்றோ வானவர்க்குத் தாழ்குழவாய் சாழலோ.

காயத்ரீ தபஸ்

சரு(க்)கு தியானம்
இதனை சருகு அல்லது சருக்கு தியானம் என்றழைப்பர். பத்மாசனத்தில் அமர்வதற்குத் தற்போது அனைவரும் பழகியிருப்பீர்கள். பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கைகளை மடக்கி ஒன்றினுள் ஒன்றாகக் கோர்த்துக் கொள்ள வேண்டும். இடதுகை, வலதுகை முழங்கைக்கு மேல் உள்புறமாகவும் வலதுகை இடதுகையின் முழங்கைக்கு வெளியிலும் தெரியும் படி (படத்தில் உள்ளபடி) கைகளை மடக்கிக் கண்களுக்கு நேராக, தோள் உயரத்திற்கு நன்றாக உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே கழுத்தை சற்றும் அசைக்காமல் நேரே வைத்துக் கொண்டு செலுத்த வேண்டும். பிறகு வலது தோளின் நுனியிலிருந்து பார்வையைத் தொடங்கி வலதுகை வெளிவிளம்பு வழியே இடது முழங்கை, வலதுமுழங்கை வழியே வலது தோளின் நுனிவரை பார்வையைச் செலுத்த வேண்டும்.

சருகு தியானம்

பிறகு வலது தோளின் நுனியிலிருந்து பார்வையைத் தொடங்கி வலதுகை வெளி விளிம்பு வழியே இடது தோளின் நுனிவரை பார்வையைச் செலுத்த வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றிச் செய்தாலே சருகுதியானம். ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தலை மறத்தலாகாது. துவக்கத்தில் இது சற்று சிரமமாக இருக்கும். வலி ஏற்படும் போது கரங்களைத் தளர்த்திக் கொண்டு பிறகு மீண்டும் செய்யலாம்.
பலன்கள் : சிவபெருமான் “குக்குடாஸனம்” என்ற அபூர்வமான யோகாசன முறையில் திருக்காறை வாயிலில் (சப்தவிடங்கத் தலம்) நாட்டியமாடினார். திருப்போரூர் முருகன் கோயிலிலும் ஸ்ரீகுக்குடாப் ஜதரர் என்ற அர்ச்சாவதாரமூர்த்தி அருள்பாலிக்கின்றார். இந்த யோகநிலை பூமியின் புவியீர்ப்பு சக்தியுடன் மிகுந்த சம்பந்தமுடையது. அதைப் பயில்வதற்கான ஆரம்ப நிலை ஆசனங்களுள் சருகு தியானமும் ஒன்று பீதாம்பர யோக ஜாலக் கோலங்களின் பயிற்சியிலும் சருகுதியானம் உண்டு.
உடல், மனம் இரண்டையும் புவியீர்ப்பு விசையின் ஆகர்ஷண சக்தியிலிருந்து தளர்த்தி சருகுபோல் எடையில்லாமல் இருப்பதற்கு உதவும் முத்திரையிது. வாயுமூலம் உடலை பூமியில் படாது நகற்றுதல், ASTRAL TRAVEL உட்பட பல சித்திகளைத் தரவல்லது. ஆனால் இந்த உயர்நிலைகளைத் தக்க குருவிடம் முறையாகப் பயில வேண்டும். உடலில் நாடிகள் சுத்த மடைந்து இரத்தம் சீராகப் பாய்வதால் இரத்த சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது. ஆரோக்யமான உடலமைப்புடன் மூச்சு நாளங்கள் சுத்தமடைந்து இருப்பவர்களுக்கு சரீரம் இளைத்து எடை குறைய இம்முத்திரை உதவுகிறது. தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்களேனும் செய்து பழக வேண்டும்.
சந்தியாவந்தனத்தில் ஸ்ரீகாயத்ரீ அர்க்கயம் விடுவதற்கு முன்னர் இந்த “சருகுதியான” முத்திரைச் செய்துவிட்டு குதிகால்களை உயர்த்தி ஸ்ரீகாயத்ரீ அர்க்யத்தை விடுவதால் பூமியின் ஆகர்ஷண சக்திக்கு இணையான “த்ராயந்த சக்தி” உடலில் பாய்கிறது. இதனால் கூரிய கண்பார்வை, தெளிந்த புத்தி கூடும். முறையற்ற காம உணர்வுகள் தணியும்.

இடுக்குப் பிள்ளையார்

திருஅண்ணாமலையில் கிரிவல முடிவில் குபேரலிங்கம், பஞ்சமுக லிங்கங்கள் அருகே இடுக்குப் பிள்ளையார் சந்நதி சிறுமண்டபமாக உள்ளது. நிலைவாசல் போன்ற சிறியகோபுர அமைப்பு வாயிலுடன் உள்ளது. இதனுள் தவழ்ந்து புகுந்து மறுபுறம் வெளிவருகையில் திருஅண்ணாமலையை தரிசித்தவாறே வருதல் வேண்டும் என்பது சம்பிரதாயம்.
எத்தகைய உடல் அமைப்பு இருந்தாலும் சரி, குண்டாகவோ, நடுத்தரமாகவோ, ஒல்லியாகயோ எத்தகைய உடல் வாகாயினும் “ஆழ்ந்த நம்பிக்கை” இருந்தால் மட்டும் போதும் அழகாக உள்நுழைந்து வெளிவந்துவிடலாம்! சிறிய நிலை கோபுர உட்பகுதியில் பாதங்களை தரிசிக்கலாம். அதாவது “இடுக்கினில் அமர்ந்து இடுக்கை களையும் இனிய கணபதி! சில ஆண்டுகள் முன்வரை இங்கு பிள்ளையார் சிலாரூபத்தில் தரிசனம் தந்தார். ஒருவர் தன் வாழ்நாளில் அண்ணாமலை கிரிவலத்தின் பகுதியாக எத்துணை முறை இடுக்குப் பிள்ளையாரை தரிசித்து இதற்குள் நுழைந்து மலையை, திருஅண்ணாமலையை தரிசித்து வெளிவருகிறார்களோ அத்துணை பிறவிகள் குறைகின்றன. கர்பவாசத்தைக் குறைக்கும் சக்திவாய்ந்த மஹாகணபதி!

ஸ்ரீஇடுக்குப் பிள்ளையார்

இந்த சிறுமேடையில் தற்போது பலர் திருஅண்ணாமலையானுக்கு முதுகைக் காட்டியபடி தெற்கிலிருந்து வடக்காக உள்நுழைகின்றார்கள். இது முற்றிலும் தவறானது. வடக்கிலிருந்து தெற்காக, மலையை நோகியவாறுதான் உள்நுழைய வேண்டும்.
தரிசனபலன்கள் :
நரம்பு, வியாதிகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், முதுகுத் தண்டு நோய்கள் ஆகியவற்றிற்கு நிவாரணமளிப்பது இடுக்குப் பிள்ளையார் தரிசனம். கர்ப வாசத்திலிருந்து நாம் வந்தவர்களாதலின், பெற்ற அன்னையை மானசீகமாகத் துதித்து வணங்கி, பெறற்கரிய  பிறவியைத் தந்த பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தி இதனுள் படுத்தவாறே உள்நுழைந்து இடுக்கில் பிள்ளையாரை தரிசித்து மலையை தரிசித்தவாறே வெளிவந்து வலப்புறமாக மண்டபத்தைப் பிரதட்சிணமாக வர வேண்டும்.
இடக்காட்டு சித்தரின் ஜீவசமாதியின் மேல்தான் ஸ்ரீஅருணாச்சலேஸ்வர லிங்கம் அமைந்துள்ளது. தாம் ஜீவசமாதி அடையுமுன் இடக்காட்டு சித்தர், இவ்விடுக்குப் பிள்ளையார் மண்டபத்தின் கீழ் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்தார் இவற்றின் இறை காந்த சக்திகளையும், ஆகர்ஷண சக்தியையும் இயக்கும் மூலக்கருவே உள்ளிருக்கும் இடுக்குப்பிள்ளையாரின்  மூர்த்தங்கள். படுத்தவாறு தரையோடு தரையாக உடலை இழுத்து இழுத்துச் செல்கையில் இந்த யந்திரங்களின் இறைகாந்த சக்தி உடலில் பரிபூர்ணமாக உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளுக்கும் பரவுகின்றது. சொல்லவும் பெரிதே இதன் மஹிமை! செய்து பார்த்தால்தான் இதன் தெய்வீக அனுபவம் புரியும்!
நம்பிக்கை

சந்திராஷ்டம தினங்களில் ஸ்ரீசந்திர பகவான் தனித்து எழுந்தருளியுள்ள சந்நதிகளில்/அல்லது நவகிரஹ சந்திரமூர்த்திக்கு உளுந்து வடைமாலை சார்த்தி,
ஓம் தத்புருஷாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தந்ந: ஸோம பிரசோதயாத்
என்ற சந்திர காயத்ரீ மந்திரத்தை 1008 முறையேனும் ஓதித் துதித்து வடைகளைப் பசுமாட்டிற்கு அளிக்க, சந்திராஷ்டம விளவுகள் தணியும்.

இன்றைக்கும் பெரிய உருவம் கொண்ட கிராமத்து ஜனங்கள் சர்வ சாதாரணமாக இடுக்குப் பிள்ளையார் மண்டபத்தில் உள்நுழைந்து வெளிவருவதைக் கண்டு ஆனந்திக்கலாம்! என்ன பக்தி! என்னே இறை நம்பிக்கை! ஆனல் மற்றவர்கள் சில விஷயங்களை மனதில் கொள்வது நல்லது.
1. “உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியுமா? நடுவில் மாட்டிக் கொண்டு விடுவோமா” – என்ற பயமிருந்தால் நம்பிக்கை குறைவு என்று பொருள். எனவே பலபரீட்சை செய்ய வேண்டாம். இத்தகையோர் வெளியிலிருந்தவாறே இடுக்குப் பிள்ளையாரை சந்து வழியாக தரிசித்து வந்து விடுக!
2. முதுமை, நோய், ஊனம் போன்றவை காரணமாக உள்செல்ல முடியாவிடில் உள் புகுந்து வரமுடியவில்லையே! என ஏங்காதீர்கள்! இங்கு அமர்ந்து சற்று நேரம் தியானித்து அப்போது கிரிவலம் வருபவர்கள் எவரேனும் வந்தால் அவர் நல்லபடியாக உள்ளே சென்று இடுக்குப் பிள்ளையாரின் அனுக்ரஹத்துடன் வரவேண்டும் என்று பிறருக்காகப் பிரார்த்தனை செய்க!
3. “அவர்களால் முடிகிறதே, நம்மால் முடியவில்லையே“ என்று எண்ணுவது சாபத்தைத் தரும். ஏதோ பூர்வ ஜென்மத்தில் இதனுள் நுழைந்து வந்தமையால் தான் இன்று  பூர்வஜன்ம வாசனையால் இங்கு வந்து நிற்கின்றீர்கள்! இதனோடு திருப்தி அடையுங்கள்.
இதனுள் தலை முதல் பாதம் வரை ஊர்ந்து செல்ல வேண்டியிருப்பதால் இடக்காட்டு சித்தருடைய யந்திரங்களின் ஆகர்ஷ்ணசக்தி உடலெங்கும் வியாபித்து நரம்பு வியாதிகள், கர்ப்பப்பைக் கோளாறுகள் போன்றவற்றை நிவர்த்தி செய்கின்றது. ஆழ்ந்த இறை நம்பிக்கையே எதையும் சாதிக்க வல்லதாம். இவ்விடத்தில் நாவற்பழம், மோதகம், வெல்லம் கலந்த விளாம்பழம், கொழுக்கட்டை தேன் தினைமாவு போன்றவற்றை தானமளித்தல் விசேஷமானதாகும்.

தனிச்சன்னதியில் சந்திரபகவான்
திருப்புனவாசல் புதுக்கோட்டை

செயற்கைக் கருச்சிதைவு (Abortion)
 தற்காலத்தில் செயற்கைக் கருச் சிதைவு (Abortion) என்பது சகஜமாகி விட்டது. புனித உணர்வோடு புணர்ச்சி விதிகளை முறையாக அறிந்தால் தான் ஜீவசக்தியின் அருமை புரியும். செயற்கைக் கருச்சிதைவு செய்து கொண்டு விட்டோமே என்று எண்ணி வருந்துபவர்கள் உண்டு. இதற்குப் பிராயச்சித்தம் தேடிப் பலர் அலைகின்றனர்.
குழந்தை என்பது இறைவன் தரும் பரிசு! பிறவி என்ற ஒன்று இருந்தால் தானே கர்மவினைகளை அப்பிறவி வாழ்க்கை மூலம் கழிக்க முடியும்! இந்த நிலையில் வறுமை, வசதி, நோய், உணர்ச்சி, சூழ்நிலை, காரணமாக செயற்கைக் கருச்சிதைவு செய்து கொண்டு பின்னர் பலர் அதற்காக வருந்துகின்றனர். இக்கர்ம வினையிலிருந்து எவ்வாறு மீள்வது என்று திகைக்கின்றனர். இதற்குப் பிராயச்சித்தம் உண்டா என்று ஆராய்வதை விட பிராயச்சித்தத்தைக் காட்டுகின்ற நல்வழி முறைகள் உண்டா என்று தேடுவதே மேல்!
வசதி, குடும்ப சூழ்நிலை காரணமாகப் பெற்றோர்களையே முதியோர்  (அநாதை) இல்லங்களில் சேர்ப்போர் உண்டு. மனவேதனையுடன் அவர்கள் (பெற்றோர்கள்) இறந்த பின் எவ்வாறு பிராயச்சித்தம் தேடுவது? தன் பெற்றோர்களைப் போல் முதியோர் இல்லங்களில் வாழும் வயதானவர்களுக்கு  சரீர சேவை (வியர்வை, மல மூத்ராதிகளைச் சுத்தம் செய்தல் etc.) மருத்துவ உதவி, மன ஆறுதல் தரப் பேசுதல் போன்ற நற்பணிகளைப் புரிந்தால் இப்பணியே இறைப் பணியாக மாறி பெற்றோர்களை வதைத்ததற்கான பிராயச்சித்தத்திற்கான நல்வழியைக் காட்டும்.
இதே போல் செயற்கைக் கருச் சிதைவு கொண்டதற்கான வருந்துபவர்களில் கணவன், மனைவி இருவருமே பொறுப்பாளிகளாதலின் அவர்கள் இருவருமே அந்த (கருச் சிதைவான) திதியில் மாதந்தோறுமாக, இடைவிடாது 24 மாதங்களுக்கு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஒவ்வொரு முறை இடுக்குப் பிள்ளையார் மண்டபத்தில் நுழைந்து தரிசனம் செய்து எங்கேனும் 24 எழை கர்பிணிகளுக்கான பிரசவச் செலவுகளை ஏற்க வேண்டும். தொடர்ந்து 24 மாதங்கள் 24 கர்பிணிகளுக்கு உதவி என்பது கணவன், மனைவி வரிசையில் 12 மூதாதையர்களைக் குறிக்கின்றது. ஆக இந்த 24 மூதாதையர்கள் அருள்புரிந்தால் தான் நல்வழி முறைகள் காட்டப் பெறும்.
 இதற்கு வழிகாட்டுவது திருஅண்ணாமலை கிரிவலமும் இடுக்குப் பிள்ளையார் தரிசனமும் ஆகும்.

கணவன் மனைவி அமரும் முறை

அடியார் : எவரேனும் நமஸ்கரிக்கும் போது கணவனுக்கு அருகில் மனைவி நிற்க, அமர வேண்டியது, கணவனுக்கு வலப்புறமா, இடப்புறமா? பலருக்கும் இதில் குழப்பம் ஏற்படுவதால், தகுந்த விளக்கம், அளிக்க வேண்டுகிறோம், குருதேவா?
சற்குரு : பொதுவாகக் குழந்தைகளை ஆசீர்வதிக்கும் பொழுது கணவனுக்கு இடதுபுறம் மனைவி இருக்க வேண்டும். ஆசீர்வதித்தல், பெரியவர்களை நமஸ்கரித்தல், இறைவனைத் துதித்தல், புகைப்படம், கணவன் மனைவி சேர்ந்து அமர்தல, தம்பதி சமேதராக எதையேனும்  (தாம்பூலாம், பிரசாதம் etc.)  பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் கணவன், மனைவி இருக்க வேண்டிய  ஸ்தானத்தை/நிலையைத் திசை கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.

தம்பதியினர் நிற்கும் முறைகள்

கணவன், மனைவியர் நிற்கின்ற திசை

பார்க்கின்ற திசை

கணவன், மனைவி நிற்க வேண்டிய ஸ்தானங்கள்

கிழக்கு

மேற்கு

கணவனுக்கு வலப்புறம் மனைவி

மேற்கு

கிழக்கு

கணவனுக்கு இடப்புறம் மனைவி (பெண்களை ஆசீர்வதிக்க)

தெற்கு

வடக்கு

மனைவி, கணவனின் வலது தோளுக்கு முன்புறம் (மகனை ஆசீர்வதிக்க)

வடக்கு

தெற்கு

கணவன் மனைவியின் இடதுதோளுக்கு முன்புறம் (பேரன், பேத்திகளை ஆசீர்வதிக்க)

வடகிழ்க்கு

தென்மேற்கு

மனைவி, கணவனின் வலது தோளுக்குப் பின்புறம் ஒரு அடி தள்ளி நின்று நமஸ்கரித்தல் (பெரியோர்களை வணங்கிட)

தம்பதியினர் அமர வேண்டிய முறை

அமர வேண்டிய திசை

பார்க்கின்ற திசை

அமரும் நிலை

தென்கிழக்கு

வடமேற்கு

கணவனுக்கு வலப்புறம் மனைவி அமர்தல் மனைவி கால்களை பாதங்களைச் சற்று உள்ளடக்கி, அமர்தல் கணவன் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடித்திருத்தல் (குடும்பத்தினரை ஆசீர்வதிக்க )

வடகிழக்கு

தென்மேற்கு

(பெரியோர்களை/மூத்தவர்களை இந்நிலையில் அமர்த்தி ஆசி பெற வேண்டும். இருவரும் கால்களைத் தொங்கவிட்டு அமர்தல். மனைவியின் பாதங்கள் உள்மடித்திருக்க வேண்டும்.

வடமேற்கு

தென்கிழக்கு

மனைவி இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடித்து கணவனின் இடது மடியில் மனைவி அமர்ந்து தானதர்மங்கள் செய்திட தர்ம தேவதையின் அருள் சித்தி தரும்.

எட்டுத் திக்கு வந்தனம்

அடியார்: குருதேவா ! தெற்கு நோக்கியோ தெற்கிலிருந்தோ வணங்குதல் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே!
சற்குரு : வடக்குப் பகுதியில் தேவர்கள் வசிப்பதால் தெற்கு நோக்கி வணங்கினால் கால்பகுதியில் பித்ரு தேவர்கள் வசிக்கின்றார்களே! நாம் வசிக்கும் புனித பூமியை எட்டுத் திசைகளிலும் நின்று காப்பவர்கள் அஷ்ட திக்பாலர்களே! எந்தத் திக்கில் தான் தேவர்கள் இல்லை. பார்க்குமிடங்களில் எல்லாம் பரம் பொருளின் ஆட்சியே! எனவே தெற்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ வணங்குவதில் எவ்விதத் தவறுமில்லை. உண்மையில் “திக்தேவதா மந்திரம்“ என்ற ஒன்றுண்டு. தினமும் அனைவரும் செய்ய வேண்டும்.
தினந்தோறும் அலுவலகம், பள்ளி, கடைகள், பிரயாணம் என்றவாறாக எட்டு திசைகளிலும் சுற்றிச் சுற்றி வருவதலால் நன்முறையில் திரும்பிவர அஷ்டதிக்கு தேவ மூர்த்திகள் அருட்கடாட்சம் தேவை. எனவே வெளியில் புறப்படுகையில்  “வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்“ என்று 18 முறை கூறி ஸ்ரீஅரிச்சந்திரா போற்றி என்று துதித்துச் செல்ல வேண்டும். அஷ்ட திக்பாலகர்களில் முதன்மையானவர் ஸ்ரீஅரிச்சந்திர மஹாபிரபு, ஸ்ரீமுருகனுடைய வேல்சக்தி அஷ்டதிக்குகளிலும் விரவி நம்மைக் காக்கின்றது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam