அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சதுர்முகனோத்ரி தரிசனம்

கிரிவல முடிவில் அமைந்திருக்கும் விசேஷமான தரிசனமாகும். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமுருகன் போன்ற சதுர்முக தெய்வமூர்த்திகளின் தரிசன பலனைத் தரவல்லது, திண்டுக்கல் அருகே சின்னாளம்பட்டியில் சதுர்முக நாயகனாகக் காட்சித் தரும் ஸ்ரீசுப்ரமண்யப் பெருமானின் அருட்கடாட்சத்தைச் சதுர்முகனோத்ரி தரிசனத்தில் தான தருமங்களுடன் பரிபூரணமாகப் பெறலாம். புத்தக வெளியீட்டுத்துறை, நூற்பாலைகள், பேருந்து நடத்துதல் – ஆகிய துறைகளைச் சார்ந்த முதலாளிகள், ஊழியர்களின் நியாயமான குறைகளைத் தீர்த்தல், வியாபார அபிவிருத்தி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அருள் பாலிக்கும் உன்னத தரிசனம்.
சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்
தசமுக தரிசனத்தின் ஆரமாக அமைந்து அருள்பாலிக்கும் உத்தம தரிசனம் இது. சித்தபுருஷர்களின் காட்சியைப் பெற்றுத் தரும் தரிசனம் .இவ்விடத்தில் தக்க தான தருமங்களுடன் கிரிவலம் புரிந்திட பிள்ளைப்பேறு கிட்டும். ஞானம் கூடிய சந்தான பாக்கியத்தைத் தர வல்லது.
திருஅண்ணாமலை – அழற்பிழம்பு மலையின் சிறப்பு
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் சடாமுடியின் ஒரு இழையைக் கூட தரிசனம் பெற மாதவம் புரிந்திருக்க வேண்டும்! சிவசித்தத்தில் எப்போதுந் திளைக்குஞ் சித்த புருஷர்கள் மட்டுமே என்றும் திருக்கயிலாயத்தில் உறையும் பேறு பெற்றவர்கள்! சித்தர்களின் பிரம்ம ரிஷியான ஸ்ரீஅகஸ்திய மஹாப் பிரபு தினமும் பொதிய மலை, கொல்லி மலை, திருஅண்ணாமலை போன்ற பல உத்தமத் தலங்களைத் தரிசித்து, நித்யபூஜைகள், அறப்பணிகள் பல புரிந்து மறுநாள் சூர்யோதயத்திற்கு முன் திருக்கயிலாயந் திரும்புகிறார்! சிவன் ஆட்டுகின்றபடி ஆடும் ஆதிமூல சிவயோகி! இடையே ஸ்ரீநந்தீஸ்வரர் திருஅண்ணாமலையின் மஹிமைகளைப் பல கோடி சதுர்யுகங்களாக எடுத்துரைக்க, பலகோடி கிரந்தங்களாக ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் அவற்றை இன்றும் படைத்து வருகிறார். பலகோடி யுகங்களில் அவர் படைத்தவற்றுள் ஸ்ரீஅருணாசல மஹிமையாக நாம் அறிந்துள்ளது ஓர் அணுவினும் சிறிதே ஆகும். சித்த புருஷர்களைக் குருவாகப் பெறும் சாக்ஷாத் சிவபெருமானே இறைமலையாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என்பது யாவரும் அறிந்ததே! பல கோடித் தேவர்களும் மஹரிஷிகளும் இன்னோரன்னோரும் சதாசிவப் பரப்பிரும்மத்தின் தரிசனம் பெறக் கடுந்தவத்தை மேற்கொண்ட போதிலும் திருஅண்ணாமலையின் தரிசனங்கூட எட்டாக் கனியாகவே அவர்கட்கு விளங்கி வந்துள்ளது.

ஸ்ரீஅக்னி பகவான்
திருக்கழுக்குன்றம்

அவனன்றி அணுவும் அசையாதன்றோ!!! ஆனால் மானுடர்கள் எளிதில் திருஅண்ணாமலையைத் தரிசனம் பெறுகின்றனர் என்றால் எத்தகைய உத்தமமான மானுடப் பிறவி! மனிதப் பிறவி ஒன்று எடுத்துத் திருஅண்ணாமலையைத் தரிசிக்க ஏங்கும் பிற லோக ஜீவன்கள் எத்தனை எத்தனையோ! ‘தேவர்களோ, கந்தர்வர்களோ எந்த லோகத்தவரும் அந்தந்த லோகத்திலிருந்தவாறே திருஅண்ணாமலையைத் தரிசிக்கலாமே! கடுந் தபஸினால் இது இயலாததா’‘ என்ற வினா எழலாம். குறிப்பிட்ட புண்ணிய சக்தி பெற்றிருந்தால் தான் திருஅண்ணாமலையின் திவ்ய தரிசனங் கிட்டும்! இல்லாவிடில் மாயாசக்தி, எந்த லோகத்திலிருந்து பார்த்தாலும் அதன் தரிசனத்தை மறைத்து விடும்.
பார்ப்பது வெறும் மலைதானா?
‘பேருந்தில் சென்று இறங்கினால் போதுமே! திருஅண்ணாமலை தரிசனம் எளிதில் கிட்டுகின்றதே’ – என்று பலர் எண்ணலாம். உண்மையில் அளப்பரிய புண்ணிய சக்தி பெற்றிருந்தால் அன்றி திருஅண்ணாமலைத் திருத்தரிசனங் கிட்டாது! இதனை மனித மனம் உணர்வதில்லை. எத்தனையோ கோடித் தேவர்கள் திருஅண்ணாலையில் சிவபெருமானின் கிரிரூப தரிசனத்தைப் பெற துடிக்கின்றபோது ஒரு சாதாரண மனிதனுக்கு எளிதில் திருஅண்ணாமலையைக் காண முடிகின்றதென்றால் அதன் பேரின்பத்தை, மனிதப் பிறவியின் தெய்வீகத் தன்மையை உணர வேண்டுமல்லவா? பேறு பெற்ற தேவர்களும், இதர லோகத்தினரும், பல கோடி ஆண்டுகள் தவமிருந்து இதனைத் தரிசனம் பெற விழைகின்றனர். ஏனென்றால் இந்த மலை தரிசனம் எழுத்தில் வடிக்க இயலா எண்ணற்ற உயர்நிலைகளைத் தரவல்லது!
அழற்பிழம்பு மலையின் புராண வரலாறு
ஸ்ரீபிரம்மா ஸ்ரீவிஷ்ணு மூர்த்திகளுக்கிடையே ஏற்பட்ட இறை தரிசனம் பற்றிய சிறு கருத்து வேறுபாட்டின் இறுதியில் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரராக, சதாசிவன் சிவக்கோலம் தரித்திட உருவானதே திருஅண்ணாமலை எனப் புராணங்கள் விவரிக்கின்றன. உண்மையில் இப்புராண வரலாற்றுக்கும் முந்தையதே இவ்வாதிமூல திருஅண்ணாமலையின் எழுச்சி ஆகும். கோடிக்கணக்கான கர்மவினைகளைத் தீர்ப்பதற்காகத் திருஅண்ணாமலை கிரிவலம் அருளப்பெற்றுள்ளது. முக்தி தரும் வழியாகவும் கிரிவலம் அமைந்துள்ளது. இன்றைக்கும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா, அனைவருக்கும் வழி காட்டும் பொருட்டுத் தானே வழிகாட்டியாக நின்று, நித்ய கிரிவலம் ஏற்று சிரத்தையுடன் கிரிவலம் வருபவர்களுக்கு, கிரிவலப் பாதையில் நின்று அவர் அருள்பாலிக்கின்றார். பல கிருஷ்ண பக்தர்கள் திருஅண்ணாமலையில் ஸ்ரீகிருஷ்ண தரிசனத்தைப் பெற்று உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளனர். சைவ, வைணவ பேதங்களைக் களையும் மாமருந்தாய் இத்திருத்தலம் விளங்குகின்றது. அது மட்டுமா? கிரிவலத்தின் பாதையில் அதன் பல்லாயிரங்கோணங்களிலும் பிறை தரிசனம், சிலுவை தரிசனம், வாள் தரிசனம், போதி தரிசனம், நிர்வாண தரிசனம் போன்று பல மதத்தினருக்கும் உரியதாக பல தரிசனங்கள் அமைந்து ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று ஒருமைப்பாட்டை விளக்குகின்றது.
ஈசன் உடலாம் மலை ஏறுதல்
திருஅண்ணாம்லையே, இறைவனின் திருமேனியாக விளங்குவதால், பொழுது போக்கிற்காகவும், காரணமின்றியும் மலை ஏறுதல் கூடாது. பிரார்த்தனை இருப்பின் மலை மீது ஏறலாம். கார்த்திகைத் தீபத்தின் போது தீபத்திற்கான எண்ணெய், நெய், திரி, கற்பூரம் எடுத்துச் செல்லவும். இச்சேவைகளைப் புரிவோருக்கு உதவி செய்யவும் மலை மீது ஏறலாம். மற்ற சமயங்களில் காரணமின்றி மலை ஏறுதலைத் தவிர்க்க வேண்டும். பிரார்த்தனையோடு மலை ஏறுதலுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. மௌனமாக, சிவநாமத்தைத் துதித்தவாறே மலை ஏறுதல் உத்தமமான பலன்களைத் தரும்.
நிரந்தர அழற்பிழம்பு மலை தீபம்
மலையே சிவனின் திருமேனி என்றால் தீபம் எதைக் குறிக்கின்றது?
இருளை அகற்றுவது விளக்காகும். பிறவி எனும் இருளை நீக்கும் விளக்கே திருஅண்ணாமலை ஜோதி! கலியுக மக்களின் நல்வாழ்விற்காகச் சித்த புருஷர்களும், பிரும்ம ரிஷிகளும் சதாசிவப் பரப்பிரும்மத்தின் அருளை வேண்டி நின்றனர். அப்போது சிவபெருமான் ; “யான் அசையாப் பொருளாய் அண்ணாமலையாய் ஆகி நிற்போம்; கலியுகத்தில் இறையுணர்வு என்பது காண்பதே காட்சியெனக் கண்ணால் காணும் நிரூபணத்தை ஒட்டியே அமைந்திருக்கும். அசைபொருள், அசையாப் பொருள் இரண்டும் யாமே என்பதை உணர்த்த திருஅண்ணாமலையின் மேல் அசையும் பொருளாய் அற்புத ஜோதியாய் யாம் காட்சியளிப்போம்‘ என்று அருளினார். எனவே கார்த்திகை தீபத்தன்று எழும் ஜோதி மனித முயற்சிகளால் எழுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் சிவபெருமானே பிரபஞ்சத்தின் நல்வாழ்விற்கென அருட்பெருஞ் ஜோதியாய்த் தனிப் பெருங் கருணையுடன் ஒளிர்கின்றார்! எனவே “இறைவனைக் கண்டீர்களா?“ என்ற வினாவிற்கு ‘ஆம், திருஅண்ணாமலை ஜோதியினைக் கண்டோம்’ என்பதே உத்தமமான பதிலாகும். இறைவனாம் திருஅண்ணாமலை ஜோதியைத் தரிசித்த பின்பு பிறவிப் பிணி முடிவடைய வேண்டுமல்லவா? என்ற கேள்வி எழுகின்றது. தான் வேறு இறைவன் வேறு என்ற எண்ணங்கள் மிகும் போதுதான் மேற்கண்ட வினாக்கள் எழும், தன்னை இயக்குவது அந்த அருட்பெருஞ்ஜோதியே என்ற எண்ணம் மிகுந்தால் தான் இறைவன் தன் திருக்கரங்களில் தாம் ஒரு கருவியே’ என்ற பேரின்ப நிலை உண்டாகும். எனவேதான் குருவருளின்றி கிரிதரிசனத்தின் பரிபூரண பயனை எவராலும் உணர இயலவில்லை. குருவருள் கூடியோர் உணர்ந்துள்ளனர்.

சிவபெருமானின் தரிசனம் பெற்ற ராவணனின் நிலை என்ன? அருட்பெருஞ்ஜோதியே திரண்டு வந்தும், தன்னுயிரைக் காக்கும் சுயநலமான வரங்களையே பெற்றான். அவ்வாறல்லாது திருஅண்ணாமலைக் கார்த்திக்கைத் தீப ஜோதியாய் சாக்ஷாத் சிவபெருமான் தோன்றும் போது ‘உன் நினைவுடன் வாழும் பெருநிலையையளிப்பாயாக’ என்ற வரம் வேண்டிப் பெறுதல் வேண்டும்.
பிரத்யட்ச அழற்பிழம்பு மலை தீபம் ஏற்றுதல்
பல சித்த புருஷர்கள் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளின் தைலங்களை ஆன்மீக ரகசியமாக தீபநாளன்று அண்ணாமலை நெய்யுடன் சேர்க்கின்றனர். இதன் மஹிமையால் ஜோதியின் புகையாய் எழும் புனித வாயு பூலோகம் மட்டுமின்றிப் பல லோகங்களுக்கும் விரவித் தீய சக்திகளை அழிக்கின்றது. இறைவன் தன் சக்தியைத் தன் படைப்புப் பொருட்களின் மூலமாகவே வெளிக்காட்டுகின்றான் என்பதையே இது காட்டுகின்றது.இது மட்டுமின்றி பல அவதார உருவங்களில் தன் மஹிமையை வெளிப்படுத்துகின்றான். இவ்வாறாகத் தன்னை உய்த்துணரத் தானே பல வழிமுறைகளை இறைவன் அளிக்கின்றான். பல சற்குருமார்களின் ரூபங்களில் வந்து நம்மை ஆட்கொள்கின்றான்.
தீபத்தன்று....
தறி, க்னா போன்ற பல பஞ்சபூத தேவதைகள் திரியாய் மாறிட சித்த புருஷர்கள், பிரும்ம ஞானிகள் போன்ற இறைப் பெருநிலை கொண்டோரின் பூஜா சக்திகள் மிகுந்த மூலிகைகளின் தைல எண்ணெயுடன் அக்னி தேவர்களின் கற்பூர ரூபங்களில் இறைவன் ஜோதியாய் மலர்கின்றான். இதுவே ஒவ்வொரு தீபத்திலும் நடக்கின்ற இறைத் திருவிளையாடலாகும். ஏதோ மனித முயற்சியினால் ஏற்றப்படும் தீப ஜோதி போலத் தோன்றினாலும், உண்மையில் இறைவன் தானாகவே தன் அடியார்களைக் கருவிகளாகக் கொண்டு ஜோதியாய் மலர்கின்ற திருநாளே தீபத்திருநாளாகும்.
தீபத்திற்கான பூஜை    
காத்திகை தீப அருணாசல ஜோதியை சித்த புருஷர்கள், ஞானியர்கள், யோகியர், பிரும்மரிஷிகள், மஹரிஷிகள், முமூக்ஷுக்கள், முனிவர்கள் போன்றோர் சந்தனம், தூபம் இட்டுப் பூஜை செய்திட, இதன் பின்னரே லட்சோபலட்சம் மக்கள் தரிசனம் செய்கின்றனர். இன்றைக்கும் அருணாசல தீபம் ஏற்றப்பட்டவுடன் சிறிது நேரத்தில் மேகங்கள் தீபத்தைச் சூழ்வதைக் காணலாம். உண்மையில் முப்பத்து முக்கோடித் தேவர்களும் பூஜை செய்கின்ற பூஜையே மேகத்தினிடையே நிகழும் ஆன்மீகப் பின்னனியாகும். இது யாவரும் அறியா நிகழும் ஆன்மீக ரகசியமாகும். இச்சமயத்தில் நக்ஷத்ர வடிவில் மலைப்பாதை விளிம்பில் பல ஜோதிகள் தென்படும். இவை தீவட்டிகள் அல்ல. மஹரிஷி, தேவர்களின் திருவுருவே இந்தத் திருநக்ஷத்ரங்களாகும்., திருஅண்ணாமலைத் தீபத்தில் நிகழும் ஆன்மீக விந்தைகளைப் பார்த்தீர்களா?
இவ்வருட தீபப் பிரார்த்தனை
அடியார் : குருதேவா! ஒவ்வொரு வரு திருஅண்ணாமலை தீபத்திற்கும் உரிய பிரார்த்தனையாக சித்த புருஷர்களின் அருள் வாக்காகத் தாங்கள் சிலவற்றை வருடந்தோறும் வழங்குவீர்களே, இவ்வருடத்திற்குரிய பிரார்த்தனை யாதோ குருதேவா?
குரு:‘உண்மையே! சித்த புருஷர்கள் அருள்கின்ற பிரார்த்தனையை அப்படியே ஒவ்வொரு தீபத்திலும் பின்பற்றினால் தீப தரிசனத்தின் பரிபூரண பலன்கள் கிட்டும். இவ்வருடம் 18.11.1994 நடைபெற இருக்கும் திருஅண்ணாமலை தீபத்தில் ஜோதியை ஏற்றும்போது அவரவர் தந்தை வர்கத்தில் தந்தை, தாத்தா, முப்பாட்டனார் ஆகியோருடைய நல்வாழிவிற்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதையே எம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் சித்த புருஷர்களின் அருள்வாக்காய் அருள்கின்றார்.
அடியார் : அதாவது தந்தை இருப்பின் தாத்தாவின் நல்வாழ்விற்கும், தந்தை, தாத்தா இருப்பின் முப்பாட்டனாரின் நல்வாழ்விற்கும் பிரார்த்திக்க வேண்ட்டும் அல்லவா?
குரு : ஆம்! தீபம் ஏற்றப்பட்டவுடன் “ஸ்ரீஅருணாசல சிவபெருமானே! என் தந்தை/தாத்தா/முப்பாட்டனாரின் மேலுலக நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றேன்’ என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்!
அடியார் : இது மிகவும் லௌகீகமான, சுயநலமான பிரார்த்தனையாக அல்லவோ இருக்கின்றது குருதேவா?
குரு: மேல் நோக்கில் அவ்வாறாகத் தோன்றலாம்! பிறர் நலத்திற்காகப் பிரார்த்திற்கும் அளவிற்கு மனப்பக்குவம் பெற வேண்டுமல்லவா? புண்ணிய சக்தி மிகுந்திருந்தாலல்லவா, பிறர்க்கும் சேவை செய்ய இயலும்? தன்னுடைய நித்ய வாழ்விற்கே தேவையான புண்ணிய சக்தி இல்லாது துன்பத்தில் உழலும் மனிதன், உதட்டளவில் பெரிய சேவைகளைச் சாதிப்பதாகக் கூறினால் அது சத்தியத்திற்கு மாறானதல்லவா? சித்த புருஷர்கள் சிறிய அளவிலாவது கூடிய தான தர்மங்களுடன் கூடிய பிராத்தனைகளே உத்தமமான பலன்களை அளிக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்.
அடியார் : அப்படியானால் தன் தந்தை/தாத்தா/முப்பாட்டனார் மேல் உலகிலோ அவர்தம் மறுபிறப்புகளிலோ நல்வாழ்வு பெற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் குருதேவா?
குரு: சற்று ஆழ்ந்து ஆத்மவிசாரம் செய்தால்தான் இதன் மகத்துவம் புரியும். மக்கள் சேவை செய்திட, அதிக புண்ணிய சக்தி தேவை என்று சொன்னேனல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகும்
அடியார் : அன்னதானம், வஸ்திரதானம், உழவாரத் திருப்பணி, எளியோர்க்கு மருத்துவ உதவி போன்ற மக்கள் சேவையான அரும்பெரும் நற்காரியங்களே மிகுந்த புண்ணிய சக்தியை அளிக்கின்றன.
குரு: இவற்றைத் தனித்தே ஒருவன் செய்ய இயலுமா?’
அடியார் : சற்குருவின் கீழ் உள்ள சத்சங்க அமைப்பில் பலர் ஒன்று கூடினால் தான் இத்தகைய அரும்பெரும் நற்காரியங்களைச் செய்ய இயலும், தனித்துச் செய்தால் அகங்காரம், ஆணவம், கர்வமே விளையும்.
குரு : ஆம்! குருவானவர், சத்சங்க அடியார்கள் ஒன்று கூடி அனைத்து தான தருமங்களையும் புரிந்து ஆன்மீக சக்தி பெற்றிட அவரவர் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தருகிறார்.
அடியார் : ஆம்! குருவானவர், சத்சங்க அடியார்கள் ஒன்று கூடி அனைத்து தான தருமங்களையும் புரிந்து ஆன்மீக சக்தி பெற்றிட அவரவர் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தருகிறார்.
அடியார் :‘பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்றுத் தருவதைவிட தங்களைப் போன்ற சற்குருமார்களே நேரடியாகவே அடியார்களுக்குக் குருவருளைத் தந்திடலாகாதா?
குரு : (சிரித்துக் கொண்டே) சத்சங்க அடியார்களை மட்டும் கரையேற்றுவது மட்டுமல்லாது அவர்களுடைய பித்ருக்களுக்கும் உயர்ந்த இறைநிலைகளை அளித்து அவர்களுக்கும் பிறவிப் பிணியற்ற பேரின்ப நிலையை அளிப்பதே ஒரு சற்குருவின் கடமையாகும். அதாவது சற்குருவை அடையும் போது அத்தகைய பேறு பெற்ற அடியாரின் பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளைக் கரையேற்றும் அற்புத ஆற்றலை உடையவரே சற்குரு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்!
அடியார் : அதாவது சத்சங்க அடியார் நற்காரியங்களை நிகழ்த்த பித்ருக்களின் ஆசி தேவை., பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தருபவர் சற்குரு அல்லவா?’
குரு : அது மட்டுமல்ல! தம் சந்ததியினரின் மக்கள் சேவைக்குரிய தான தருமங்களினால் தான் பித்ருக்களுக்கும் முக்திநிலை கிட்டுகிறது. பித்ருக்கள் – சந்ததியினர் இவர்களிடையே ஓர் ஆன்மீகப் பேரிணைப்பாக சற்குரு விளங்குகின்றார். பித்ருக்களுடைய சூட்சும சரீரங்களை அவர்களின் சந்ததியினரின் தேகங்களில் உருவகித்துப் பல வியத்தகு நற்காரியங்களை ஆற்றுபவரே சற்குரு.
அடியார்: நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் சபை அடியார்கள் தங்களுடைய அருட்பெருங்கருணையால் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், திருஆனைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம், காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி ஆலயம், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம், திருக்கழுக்குன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரர் ஆலயம், தஞ்சை ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயம், திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் ஆலயம், மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர் ஆலயம் போன்ற பிரும்மாண்டமான திருக்கோயில்களில் சிறப்பான முறையில் உழவாரத் திருப்பணிகள் புரிந்ததற்குக் காரணம் தம் சத்சங்க அடியார்களின் பித்ருக்களின் ஆசீர்வாதத்தாலன்றோ குருதேவா?
குரு: ஆம்! பித்ருக்களின் ஆசீர்வாதமின்றி நம் விரலைக்கூட அசைக்க இயலாது. நம் சற்குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர்.”ஒரே ஒரு பித்ருவோட ஆசி கிடைச்சாப் போதும், ஜன்மத்தையே கரையேத்திடலாம்’ என்று அடிக்கடி கூறுவார். இதை வலியுறுத்துவதாக அமைவதே இவ்வருட தீபப் பிரார்த்தனையாகும். இப்போது புரிகின்றதா, மேலோட்டமாக லௌகீகமாகக் காணப்படும் இந்தப் பிரார்த்தனையின் உள்ளே பொதிந்துள்ள ஆழமான இறைவழி முறையினை! சித்தர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் ஆன்மீகப் பின்னணியில் இருக்கும். இதை எவராலும் புரிந்து கொள்ள இயலாது. சற்குருவிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டால் அவரே அனைத்தையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அளிப்பார்.
கிரிவல மஹிமை
திருஅண்ணாமலையைச் சுற்றி வருவதால் விளைகின்ற பயன்களை வடித்துரைக்க யுகங்கள் போதா. சென்ற வருட நவம்பர் மாத ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் திருஅண்ணாமலை மஹிமையெனச் சித்தர்கள் ஓரளவு அருளியுள்ளதை விளக்கியுள்ளோம்.ஆஞ்சனேயர், பஞ்ச பாண்டவர்கள், சகுனி போன்ற பல மஹாபாரத, ராமாயண பாத்திரங்கள் பல்வேறு நிலைகளில் தங்கள் துயரங்கள் நீங்குவதற்கும் வெவ்வேறு இறை மூர்த்திகளின் தரிசனங்களைப் பெறுவதற்கும் பல யுகங்களில் கிரிவலத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குறிப்புகளெல்லாம் சித்தர்களின், இருடிகள் ராமாயணம், இருடிகள் மஹாபாரதம், இருடிகள் பாகவதம் போன்றவற்றில் நாடி கிரந்தகளாக வடிக்கப் பெற்றுள்ளன. ஸ்ரீஅகஸ்தியரின் அருளாசியைப் பெற்றவர்களுக்கு இவை நாடிப் பொழிவாய் அமையும். நமக்குக் கிட்டியுள்ள வால்மீகி ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் ஆகியவை ஆதிமூலப் புராணங்களின் ஒரு சிறு தொகுப்பேயாகும். காலப் போக்கில் வால்மீகியும், வியாஸரும் அளித்த  ஆதிமூலராமாயண, மஹாபாரத, பாகவத புராணங்களின் பல்லாயிரம் தொகுதிகள் மறைந்து எஞ்சியவையே நாம் கற்பவையாகும். இவற்றில் இடம் பெறா பல புராண சம்பவங்களை இருடிகள் புராணங்கள் மூலமாகச் சித்தர்கள் அருள்கின்றனர். இவற்றில் தாம் புராண நாயகர்களின் அருணாசல கிரிவல சம்பவங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. தசாவதார மூர்த்திகள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபார்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் போன்ற கண்கண்ட தெய்வமூர்த்திகளும், நாரதர், வியாஸர், சுகர் உள்ளிட்ட பல உன்னத மஹிரிஷிகளும் கிரிவலம் புரிந்து இன்றைக்கும் ஆங்காங்கே கிரிவலப் பகுதியில் பலநிலைகளில் குடிகொண்டு கிரிவலம் வரும் தம் அடியார்களுக்கு அருள் புரிகின்றனர்.
ஸ்ரீஐயப்ப தரிசனம்
உண்மையான விரதமிருந்து சபரிமலையில் ஜோதியைக் காண விழைவோர் திருஅண்ணாமலை யாத்திரையை மேற்கொள்வது ஸ்ரீஐய்யப்பனின் தரிசனத்தைச் சம்பூர்ணமாகும். கிரிவலப் பகுதியில் ஓரிடத்தில் ஐயப்ப தரிசனம் என்ற சிறப்பான தரிசனம் ஒன்று உண்டு. குருவருளுடன் இதைத் தரிசிப்போருக்கு மகர ஜோதி தரிசனமும், மலையின் நட்சத்திர வடிவில் இவ்விடத்திலேயே கிட்டும். இத்தகைய ஆன்மீக ரகசியத்தை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் போன்ற சித்த புருஷர்களிடம் நாடி அறிந்து ஐயப்ப பக்தர்கள் பயன் பெறுதல் வேண்டும். திருஅண்ணாமலை கிரிவலத்துடன் ஸ்ரீசபரிமலை யாத்திரையை மேற்கொள்வோர்க்கு ஒரு பரிபூரண மனநிறைவு கிட்டுவதை உய்த்து ஆனந்திக்கலாம். ஸ்ரீஅய்யப்ப தரிசனமும் சம்பூர்ணமாகும்.
மஹரிஷிகளின் தரிசனம்
திருஅண்ணாமலை கிரிவலத்தில் பல்வேறு விசேஷ தினங்களிலும் உருவமாகவோ அருவமாகவோ மஹரிஷிகள் தரிசனந் தந்து அருள் பாலிக்கின்றனர்.
பீஷ்மாஷ்டமி, ரதசப்தமி – ஸ்ரீ பீஷ்மர்
வியாஸ பௌர்ணமி – ஸ்ரீவியாஸர்
சித்ரா பௌர்ணமி – ஸ்ரீஇந்திரன், ஸ்ரீகுபேரன்
நாக பஞ்சமி – நாக தேவதைகள்
ஆவணி அவிட்டம் – 64 பிரவர மஹரிஷிகள் (பிருகு, பரத்வாஜர், அத்ரி முதலிய பல மஹரிஷிகள்) இத்தகைய விசேஷ தினங்களில் அந்தந்த மஹரிஷிகள் தியானத்துடன், தக்க தான தர்மங்களைச் செய்தவாறே கிரிவலம் வந்து அந்தந்த மஹரிஷிகள் தரிசனத்தை உருவமாகவோ அருவமாகவோ கிரிவலப் பாதையில் பெறலாம்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்
ஒரு முறை ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள், திருஅண்ணாமலையில் நம் குருமங்கள்கந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு ஒரு சிறிய உணவுப் பொட்டலத்தை அளித்து., கிரிவலத்துல உடம்பு அஷ்ட கோணலா ஒருத்தருக்கு இருக்கும்; அவர்கிட்ட இதக் குடுத்துடு’ என்று ஆணையிட்டார்.
ஒன்பது வயதுச் சிறுவனாயிருந்த நம் குருமங்கள கந்தர்வா, அந்தப் பொட்டலத்துடன் ஒரு முறை கிரிவலம் வந்தார்... இரு முறை கிரிவலம் வந்தார்... ஆனால் அஷ்ட கோணலான உடலுடன் எவரும் தென்படவில்லை. ஆனால் சொல்லியவாறு செய்யாவிடில் கடுந்தண்டனை காத்திருக்குமே என்ற அச்சத்தில் களைப்பையும், அசதியையும் பொருட்படுத்தாது சிறுவன் மூன்றாவது முறையும் கிரிவலம் வந்து கொண்டிருந்தான். சிறுவனுக்கு அழுகை வந்துவிட்டது. ஆனாலும் மூன்று கிரிவலங்களிலும் சுமார் 45 கி.மீ நடந்ததைப் பொருட்படுத்தாது நான்காவது முறையும் கிரிவலம் வரத் துவங்கினார். அதற்குள் இருட்டி விட்டது. வழியெங்கும் இருட்டில் சுற்று முற்றும் பார்த்தவாறே சிறுவன் அச்சத்தில், தயங்கித் தயங்கி நடந்தான். தள்ளாடித் தள்ளாடி உடல் சாய்ந்தது! கிரிவலத்தில் ஆரம்பத்திலேயே, சாலையின் ஒரு மூலையில், இருட்டில் பைராகியைப் போல் ஒரு சிறிய உருவம் அஷ்ட கோணலுடன் ஒட்டிப் படுத்திருந்தது. சிறுவன் அருகில் சென்று உணவுப் பொட்டலத்தை எடுத்து நீட்டிட, அந்த உருவம் அதைப் பெற்றவுடன்....
அக்காரிருளிலும் அவ்வுருவத்தைச் சுற்றி தேஜோ மயமான ஒளி வியாபித்தது! சிறுவன் நன்றாக உற்றுப் பார்த்தான். எட்டுக் கோணல்களுடன் (அஷ்டவக்ரம்) அந்த யோகியின் தேக காந்தி பல கோடி சூர்யன்களைப் போல் பிரகாசித்தது. ‘ஏண்டா! நான் சொன்ன ஆளு இவருதான்.. இங்கேயே படுத்துக்கிட்டிருக்காரு.., நீயோ சும்மா சுத்திச் சுத்தி வர்றியே!’ கோவணாண்டிப் பெரியவர் அங்கு திடீரென்று தோன்றி கடகடவென்று சிரித்தார்! ‘இவர் திருவிளையாடல்தான் நமக்குப் பரிச்சயமான ஒன்றாயிற்றே! ஆனால் இவரெங்கு இங்கு வந்தார்!’ சிறுவன் பெரியவரை வியப்புடன் பார்த்தான்! ‘!ஏன் வாத்யாரே !மூணுவாட்டி என்ன அலையவச்சுட்டியே!’
“இவர் இங்கதானே இருக்கார்! அதுவும் கிரிவலத்துல ஆரம்ப இடத்திலேயே படுத்துட்டு இருக்கார். சரியாக கவனிக்காதது உன் தப்பு!” – பெரியவர் சொன்னதையே சொல்லி மீண்டும் சிரித்தார்! சிறுவன் மௌனமானான், வெறுமனே தலையை ஆட்டினான், அவன் எதையும் ஏற்கத் தயாராயில்லை!
‘போடா கிரிவலத்தை முடிச்சுட்டு வா, பாதில விட்டுடாதே’ என்று சொன்னாலும் சொல்வார். சிறுவன் எதற்கும் தயாரானான். பெரியவர் சிறுவனைத் தட்டிக் கொடுத்தவாறே, ‘இவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!’ எனக் கூறிட சிறுவன் அஷ்டகோணல்களுடன் ஒளிப் பிழம்பாய்ப்படுத்திருந்த அவருடைய திருப்பாதங்களைப் பற்றி வணங்கிட அவரும் தம் திருக்கரங்களால் சிறுவனைத் தொட்டு ஆசீர்வதித்திட..... அவர்தம் தெய்வீக கரங்கள் தன் சரசில் பட்டவுடன் இனம் புரியாப் பேரின்ப நிலையைச் சிறுவன் பெற்றுக் கண்களைத் திறந்திட்டான்.... அந்த மஹரிஷி, ஜோதி ரூபத்தில் திருஅண்ணாமலைப் பகுதியில் மறைந்தார்.
‘இவர்தாண்டா அஷ்ட வக்ர மஹரிஷி! வேதத்தில் கரை கண்டவர். கோடிக்கணக்கான ஜீவன்களை உய்விக்கும் உத்தம மஹரிஷி, இத்தரிசனமே உனக்குப் பெரிய பாக்கியம். கஷ்டப்பட்டு மூணு முறை கிரிவலம் வந்ததால் தான் உனக்கு இவருடைய தரிசனம் கிட்டியது. எதிர்காலத்துல இந்த கிரிவலத்து மஹிமையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லு.’
‘குரு ஒண்ணு சொன்னான்னா கண்ணை மூடிண்டு நிறைவேத்திடணும். அப்பப்ப சந்தேகம் வரும்., வாஸ்தவந்தான். ஏன்னா கலியுகத்துல நாங்களெல்லாம் சற்குரு வேஷம் போட்ட மாதிரியும் போடாத மாதிரியும் ஆடி நடிக்க வேண்டியிருக்கு! சற்குரு சுயரூபத்தைக் காமிச்சுட்டா கோயில் சுவாமிகளையெல்லாம் அப்படியே விட்டுட்டு ஆயிரக்கணக்கான பேர் சற்குருவைச் சந்திப்பாங்க! வாழ்க்கை முழுதும் அவரைச் சுத்தினாங்கன்னா பரவாயில்லையே!’
“எனக்கு காசு கொடு, ஆண்பிள்ளை கொடு, கல்யாணம் செஞ்சு வை, வீடு கொடுன்னு அவரைப் பிச்சுப் புடுங்கிடுவாங்க! எதிர்காலத்துல உனக்கு குருபீடத்தை அங்காளியம்மா தந்தாக்க நீ ஜாக்ரதையா அதைக் காப்பாத்தணும்! லட்சக்கணக்கான சித்தருங்க ஆட்சி செஞ்ச பீடம்! எதிர்காலத்துல உன்னை ஆயிரமாயிரம் பேர் சுத்திப்பாங்க ! தெய்வீகத்துக்குப் பயன்படறவங்க, வசதிகளை மட்டும் கேட்டு உன்னை சுத்தறவங்க, இப்படிப் பலபேர் நடுவுல எதிரிகாலம் தெரிஞ்சாக் கூட நீ தெரிஞ்சும் தெரியாதவன் போல ‘அப்படியா ராஜா’ன்னு சொல்லி இருபத்தி நாலு மணி நேரமும் நடிக்கணும்!”
“இதுக்குத்தான் அஷ்டவக்ரர், த்ரைலிங்க சுவாமி, மஹாஅவதூது பாபா, சத்ய சாய்பாபா, பாண்டிச்சேரி அன்னை, பன்றிமலை ஸ்வாமி, பரமாச்சார்யார், பாலவரம் யோகி, பூண்டிமஹான் , ஒடுக்கத்தூர் சித்தர் இப்படி பல சித்த புருஷர்கள், மஹரிஷிகள், யோகிகள், ஞானிகளோட தரிசனம், ஆசீர்வாதம், எல்லாம் உனக்கு வாங்கித் தந்திருக்கேன்! எதுக்கு? நீயும் அவங்களை மாதிரி அமைதியா, ஜாதி, மதம், பேதமில்லா அன்னதானம், மருத்துவ வசதியெல்லாஞ் செஞ்சு எப்பவும் மக்கள் சேவை செய்யணும், செய்வியா ராஜா! என்னை ஏமாத்திட மாட்டியே!’
கோவணாண்டிப் பெரியவர் குரல் தழுக்கக் கேட்டதும் சிறுவனுக்குக் கண்கள் பனித்தன. பெரியவரின் கைகளைப் பற்றிய வண்ணம், ‘நான் நிச்சயமாச் செஞ்சு காட்டறேன், வாத்யாரே’ சிறுவனின் நா குழறியது! பெரியவர் வேகமாகச் சிறுவனின் கைகளை உதறினார். ஏண்டா! அறிவு கெட்டவனே! நீ என்னடா செஞ்சு காட்டறது! அதுவும் நான் நிச்சயமாச் செஞ்சு காட்டறேன்னு சொல்றது! என்ன அகம்பாவம், என்ன ஆணவம்! அஷ்ட வக்ரர் மாதிரி மஹிரிஷிங்க தரிசனம் கெடச்சாலே பெரும் புண்யம்! புண்யம் சேர்ந்தாலே அகம்பாவம் தான்வரும்! அங்காளி கருணைல அடியேன் சிறுகருவியாய் இருப்பேன்கற எண்ணம் தானே உனக்கு வரணும், படிச்சுப் படிச்சுச் சொன்னேனே! திரும்பும் உச்சாணிக் கொம்புல நிக்கறியே....’ பெரியவர் படபடவென்று பொரிந்து தள்ளினார். சிறுவன் வழக்கம் போல் மௌனமானான்! சாந்தத்தின் தத்ரூபமாய் விளங்கிய பெரியவர் எரிமலையாய் க்ஷண நேரத்தில் மாறிவிட்டார்.
“எதிர்காலம் தெரிஞ்சதுனால நாங்களெல்லாம் இருபத்தி நாலு மணி நேரமும் நடிக்க வேண்டியிருக்குடா! எப்பனாச்சும்  ஒரு அரைநிமிஷம் உண்மையா இருப்போம்! அந்தக் கால், அரைநிமிஷ நேரம் தான், எங்களோட விஸ்வரூப தரிசனத்தைப் பார்க்கலாம்...”- சிறுவன் பெரியவருடைய வார்த்தைகளை எண்ணியவாறே அவருடன் நடக்கலானான்! அப்பப்பா குருகுலவாசத்தில் என்னென்ன சோதனைகள்!

நாடி ஜோதிடம்

கர்மங்களை அறிந்து கொள்ளலாமா?
பல துன்பங்க்ளுக்கான பரிகாரங்கள் தேடி, நாடி சோதிடத்தை அணுகிட சில பூர்வ ஜென்ம கர்மங்கள், தெளிவாகவோ, சூசகமாகவோ அறிவிக்கப்படும். அவை வேதனையுறும் சம்பவங்களாகக்கூட இருக்கக்கூடும். இதனால் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படும். இந்நிலையில் என் செய்வது? உண்மையான நாடி ஜோதிடர்கள் எவற்றையும் சூட்சுமமாகவே தெளிவுறுத்துவர். அங்கே மனவேதனைக்கே இடமிராது.
இரண்டாவதாக, உண்மையான நாடி சோதிடம் அறிவிக்கும் பரிகாரங்களைச் செய்துதான் தீரவேண்டும். காரணம் எது அறியப்படாமலிருக்க வேண்டுமோ, அதை அறியமுற்படின் அதற்கான சோதனைகளை ஏற்கத்தான் வேண்டும். மேலும் பூர்வஜென்ம கர்மங்களை அறியவரும் போது அதைக் கழிக்கின்ற வரைமுறைகளையும் செய்து தான் ஆக வேண்டும். ஏனெனில், அதை அறியப்படாமலிருக்கும் போது அதற்கு உரித்தான விளைவுகளை இயற்கையாகவே நாம் ஏற்றிருப்போம் அல்லவா? எனவே இந்நிலையில் எவ்வாறு முடிவெடுப்பது?

திருப்பூவனூர் சிவத்தலம்

தன்னுடைய முடிவிலா துன்பங்களுக்காக நாடி சோதிடத்தை நாடும்போது அத்துன்பங்களுக்கான பூர்வ ஜென்மவினைகளை ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெற்றிருந்தால் தான் இம்முறையை நாடலாம். மனோதைர்யம் இல்லாதவர்கட்கு இம்முறை ஏற்றதல்ல. ஏனெனில் அனைத்துத் துன்பங்களும் நோய்களும் ந்ம் பூர்வ ஜென்மங்களின் வினைப்பயனே என்பதை உணர்விக்கும் ஜோதிட மார்க்கம் நாடி ஜோதிடம்.
பரிகாரங்கள் : பொதுவாக நாடி ஜோதிடர்கள் அனைத்துப் பரிகாரங்களையும் முழுமையாக அளிப்பதில்லை. ஆரம்ப நிலையில் சில பரிகாரங்களைத் தந்து அவற்றை நிறைவேற்றிய பின்னரே ஏனையவற்றை அளிப்பார்கள். இதற்குக் காரணம் பரிகாரங்களினால் அதிக பணச் செலவு இருக்குமானால் நாடி கேட்போர், அவற்றை முறையாக நிறைவேற்றுவதில்லை. கர்மவினைகளை எடுத்துரைத்ததினால் நாடி ஜோதிடருக்குப் பல பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன. நாடி கேட்டோர் சரியாகப் பரிகாரங்களை நிறைவேற்றாவிடில் அதன் கர்மச்சுமை நாடி படிப்போரின் தலையில் விழும். எனவே கர்மவினைகளுடன் விளையாடுதல் கூடாது. அவர்கள் சரியாக நிறைவேற்றாத பரிஹாரங்களுக்குப் பிராயச்சித்தமாக நாடி ஜோதிடரே பலதான தர்மங்களைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
நாடி ஜோதிடரும் தன் வருமானத்தில் ¾ பங்கை தான தர்மங்களில் செலவிட்டு ¼ பங்கையே ஜீவனத்திற்கு உபயோகித்துக் கொள்ளவேண்டும். இத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் தான் அவர்தம் நாடி வாக்கின் சத்திஸ்தானம் மேம்படும். இன்றேல் அவை பொய்த்து சாபங்களாக மாறும்.

விஷ்ணுபதி

வருடத்திற்கு நான்கு முறை பெரும்பாலும் மாதப்பிறப்பு ஏற்படுகின்ற புண்யகாலத்தில் அமைகின்ற விஷ்ணுபதி புண்யகாலம், பிரதோஷ நேரம் போன்று மிகவும் புனிதமான காலமாகும். காலப்போக்கில் மக்களின் அசிரத்தையால் விஷ்ணுபதி காலபூஜைகள், உற்சவங்கள் மறைந்துவிட்டன. தற்போது பிரதோஷ காலபூஜை புத்துணர்ச்சி பெற்று வருவது போல விஷ்ணுபதி புண்யகால பூஜை முறைகளும் மீண்டும் உன்னதமான புத்துணர்ச்சி பெற வேண்டும் என நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அரும்பாடுபட்டு வருகின்றார்கள். அடியார்கள், ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அருளிவரும் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை மஹிமையினை அவர்தம் ‘பிரதோஷ மஹிமை’ அருளுரைகளைப் போல யாங்கணும் பரப்பி ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையினை அனைத்து விஷ்ணுத் தலங்களிலும் கொண்டாடிட பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக வைணவப் பெரியோர்கள், வைணவ பக்தர்கள் இந்த விஷ்ணுபதி பூஜையினை (பிரதோஷ பூஜை போல) அனைத்து ஸ்ரீபெருமாள், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீவேங்கடேஸ்வரர், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீஅழகிய சிங்கர், ஸ்ரீவரதராஜர் சந்நதிகளில் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடினால் தான் பிரதோஷ பூஜை போல ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையும் முக்யத்வம் பெற்று கலியுக மக்களின் துன்பங்களைத் துடைக்கும் தூய மாலவனின் தனிப்பெரும் பூஜையாய்ச் சிறப்பிடம் பெறும்.

திருப்பூவனூர் பெருமாள் தலம்

வரும் 15.11.1994 இரவு 1.30 முதல் 16.11.1994 காலை 10.30வரை விஷ்ணுபதி புண்ய காலம் அமைகிறது. இப்புண்ய காலத்தில் செய்யப்படுகின்ற அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், இறைத் துதிப் பாராயணங்கள், தர்ப்பணங்கள், தான தர்மங்கள் பன்மடங்குப் பலன்களை வர்ஷிக்கின்றன. பிரதோஷ நேரம் போன்று விஷ்ணுபதிப் புண்ய காலமும் மிகவும் புனிதமான நேரமாதலின் பக்தர்கள் இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் திருத்தலங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கு பெற்று நல்வாழ்வு பெறவேண்டும்.
விஷ்ணுபதி
16.11.1994க்குரிய விஷ்ணுபதி புண்ய காலத்தின் சிறப்பு இந்த விஷ்ணுபதி மஹிமையானது ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியது ஆகும். இத்தகைய விசேஷமான ஆன்மீக இரகசியங்களைத் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளிடமிருந்து தம் குருகுலவாசத்தில் பெற்று நம்நல்வாழ்விற்காகத் தற்போது நமக்கு அருள்கின்றார்.
ஸ்ரீவைகுண்டத்தில்... ஸ்ரீமன்நாராயண மூர்த்தி அன்றைய பக்த பரிபாலனம் முடிந்த பின்னர் ஸ்ரீவைகுண்டத்திற்குத் திரும்புகிறார்.வழக்கத்திற்கு மாறாக, தம் பாதரட்சைகளைத் தம் மஞ்சனத்தின் மீது வைக்கின்றார். என்ன திருவிளையாடல் காத்திருக்கின்றதோ! ஸ்ரீவிஷ்ணுவின் சயனாசனமாக (படுக்கை) ஸ்ரீஆதிசேஷன் அமைய...! அதில் தம் பாதணியை வைப்பானேன்!
ஸ்ரீபெருமாள் தம் பாதணிகளை மஞ்சத்தின் மீது வைத்தது கண்டு ஆதிசேஷன், சங்கு, சக்கரம் மூவரும் வியந்து நின்றனர். பாதணியோ மௌனமாக இருந்தது. இறைவனுக்கு அபரிமிதமான சேவைகளைச் செய்து மகிழ்வோரை இறைவன் தம் திருவதனத்தில் சங்கு, சக்கரம், அம்பு, சூலம், பாசக்கயிறு, மழு, வாள், கதை போன்ற வஸ்துகளாகத் தன்னிடம் ஏற்கின்றான்.. ‘யான் இறைவனோடு ஒன்ற வேண்டும்’ என்பதல்லவா உண்மையான இறையடியாரின் பிரார்த்தனை! இதனை இவ்வாறாகவே இறைவன் நிறைவேற்றுகின்றான்! சில சமயங்களில் இவற்றைக் கொண்டே இறைவன் பல திருவிளையாடல்களைப் புரிவதுமுண்டு! காரணம், இத்தகைய பாத்திரங்களினால், காட்சிகளினால் புராண நிகழ்ச்சிகளினால் மக்களுக்குப் பல பாடங்களைப் புகட்டி அவர்களுக்கு நற்கதியளிக்க  விரும்புகின்றான் இறைவன்!
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மஞ்சத்திலிருந்த பாதணியைக் கண்டு சங்கு, சக்கரங்கள் பொறாமை கொண்டன. ஆதிசேஷனுக்கும் வருத்தம் மேலிட்டது. “என்னுடல் மீது பாதணியை வைத்து விட்டாரே ஸ்ரீபெருமாள்” – என்று ஆதிசேஷம் கலங்கினார். ஸ்ரீபெருமாள்தான் மறந்து உன்னை மேலே வைத்து விட்டாரென்றால் நீ கீழிறங்கி வரவேண்டியது தானே!’‘ மூன்றும் சேர்ந்து பாதணியைத் தூற்றிட பாதணி சாந்தமாக இருந்தது! அதன் அமைதி மற்றவர்களுடைய சினத்திற்கு வித்தாயிற்று.
‘உன்னை பெருமாள் மேலே வைத்தார் என்ற அகங்காரமோ!’ – ஆதிசேஷனும் தன் உடலை அண்டங்கள் அதிர ஆட்டிப் பாதணியைக் கீழே தள்ளிட முயற்சித்தும் முடியவில்லை. பாதணி தன் விஷ்ணு தியானத்தை தொடர்ந்தது! அனைத்தையும் பொறுமையாக அனுபவித்து இறுதியில் பாதணி பேசலாயிற்று. ‘விஷ்ணு பக்தர்களே! அவரவர் விஷ்ணு பக்திக்கேற்ப இறைவன் சங்கு, சக்கரம், பாதணி, ஸ்ரீசூர்ணம், கிரீடம், பூணூல், கைக் காப்பு, ஒட்டியாணம் போன்றவற்றாக மாற்றித்தான் திருமேனியில் தாங்குகின்றான். இன்று நான் பாதணியாக அமைந்து அவர்தம் திருவடிகளைத் தாங்குகின்றேன். அதுவும் அவர்தம் கருணையால் தான். நாளையே அடியேனுக்கு அவரே ஒரு பிறவி அளித்து எந்த லோகத்திற்கும் அனுப்பலாம். கிரீடமாக மாற்றித் தம் சிரசில் அணியலாம். யக்ஞோபவீதமாகத் தம் திருமார்பில் அணியலாம். காலில் மெட்டியாக அணியலாம். அல்லது பூலோகத்தில் சந்தனக் கல்லாக மாற்றிச் சந்தனம் தரும் கருவியாக மாற்றலாம். ஸ்ரீவிஷ்ணு மீது உண்மையான பக்தி கொண்டால் எதுவாயினும் அவரளித்ததே என்ற உணர்வைப் பெறவேண்டும்!’‘
‘அவர் ஆட்டுவித்தால் நாம் ஆடுகின்றோம் அவ்வளவே! இதை உணர்ந்தால்தான் விஷ்ணுபக்தி பரிபூர்ணமாகும். இறைவனுடைய ஆட்சியில் எவ்வித பாராபட்சமும் கிடையாது. அவரவர் பக்திக்கேற்ற நிலையை ஆண்டவன் அளிக்கின்றான். அவர் உறையும் திருப்பாற்கடலிலே போட்டி பொறமைக்கு இடமேது! இன்று இந்நேரத்தில் அடியேன் பாதணியாக உள்ளேன். அதுவும் அவர்தம் திருக்கருணையால்! அடுத்த நொடியில் அடியேனின் நிலையறியேன்! எல்லாம் அவர் அளிப்பதே!‘

திருப்பூவனூர்

“அடியேன் ஸ்ரீவிஷ்ணுவின் திருமஞ்சத்தில் அமர என்றும் விரும்பியதில்லை. இன்று ஏதோ காரணத்திற்காக அவர் என்னை இங்கு வைத்துள்ளார். எல்லாம் அவர் விருப்பம் என்று அடியேன் கருதுகின்றேன். இந்த எண்ணத்திற்கும் அவரே காரணம். எல்லாம் அவர் செயல் என்று எண்ணினால் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியே எழாது!”
ஸ்ரீமஹாவிஷ்ணு பாதுகை ஓர் அற்புத உபநிஷத்தையே பொழிந்தது. சங்கு, சக்கர, ஆதிசேஷர்கள் தலைகுனிந்து நின்றனர். ஸ்ரீமன் நாராயணமூர்த்தி ஆங்கே தோன்றினார். ‘ஓஹோ! பாதணியை மஞ்சத்தின் மேல் வைத்து விட்டேனா! பூலோகத்தில் ஒரு பக்தனின் குரலைக் கேட்டு ஓடிச் சென்ற அவசரத்தில் பாதணியை மறந்து விட்டேன் போலிருக்கிறதே!’ – ஸ்ரீபெருமாள் ஒன்றுமறியாதவர் போல் தம் திருவிளையாடலைத் திறம்பட நடத்திக் கொண்டிருந்தார்!
நல்லவேளை, ஸ்ரீவிஷ்ணுபகவான் கேட்பதற்கு முன்னரேயே ஆதிசேஷன், சங்கு, சக்கரம் மூவரும் ஸ்ரீமன்நாராயணரை சாஷ்டாங்கமாகத் துதித்தெழுந்து நடந்ததை விவரித்து அகங்காரத்தால் அவர்கள் செய்த அபசாரங்களுக்காகத் தண்டித்து தக்க பாடம் புகட்டுமாறு வேண்டினர்.
ஸ்ரீவிஷ்ணு : பார்த்தீர்களா, நான் சற்று நேரம் வைகுண்டத்தை விட்டு நகர்ந்ததால் ஆணவமாயை நிகழ்த்தும் லீலைகளை! நான் உங்களைத் தண்டிப்பதை விட, என் பாதுகை அளிக்கும் தண்டனையையே ஏற்பீர்களாக!
பாதுகை : மஹாபிரபோ! என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்! நாராயண, நாராயண! அடியேன் அவர்களைத் தண்டிப்பதா! கிருஷ்ண, கிருஷ்ண! இதுவரை நிகழ்ந்தது அனைத்தும் தங்கள் இச்சைப்படி நிகழ்ந்ததென அடியேன் எண்ணுகின்றேன்! அடியேன் இந்த விஷ்ணு அடியார்களிடம் சற்று அதிகமாகவே பேசிவிட்டேன்! அதற்கு தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும்!
ஸ்ரீஆதிசேஷன், சங்கு, சக்கரம் : ஸ்வாமி! தங்கள் திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்ற பாதுகைக்கு ஈடு இணையான விஷ்ணு பக்தர் பிரபஞ்சமெங்கும் கிடையாது! எனவே எங்களுக்கு நாங்களே ஒரு தண்டனையை விதித்துக் கொள்கிறோம்! தங்கள் திருவடியைத் தாங்கும் பேறு பெற்றத் தங்கள் பாதுகையினை நாங்கள் எங்கள் தலையில் சுமக்கும் பாக்யத்தையும் அதனைத் தினந்தோறும் பூஜிக்கும் அனுக்ரஹத்தையும் தருவீர்களாக!
ஸ்ரீவிஷ்ணு : எம் அடுத்த அவதாரமான ராமாவதாரத்தில் நீங்கள் இலட்சுமண, பரத, சத்ருக்கனர்களாகப் பிறப்பெடுத்து எம் திருப்பாதுகையைத் தாங்கும் பேற்றைப் பெறுவீர்களாக!
இவ்வாறகவே ஆதிசேஷனாக ஸ்ரீலட்சுமண சுவாமி அவதரிக்க, ஸ்ரீபரத, சத்ருக்னர்களாய் வந்தவர்களே சங்கு, சக்கரங்கள். இதுவரையில் உள்ளது யாவரும் அறிந்ததாகும்! ஆனால் சித்தபுருஷர்கள் அருள்கின்றவற்றில் பல அற்புத ஆன்மீக இரகசியங்கள் புதைந்திருக்கும் அல்லவா?
ஸ்ரீமஹாவிஷ்ணு, பாதணிகளை அணிவதேன்! இதற்கான ஆன்மீக விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து தொகுத்து நம் குருமங்களகந்தர்வா அருள்கின்றா! இவையெல்லாம் அவர்தம் குருகுல வாசத்தில் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தசுவாமிகளிடம் பெற்ற அனுபூதிகளாகும்.

ஸ்ரீவிஷ்ணு பாதுகை
அறுபது, எழுபது, எண்பது வயது நிறைந்த தம்பதியினருக்கு ஜாதி, மத, பேதமின்றிப் பாத பூஜைகள் செய்து, வயதானோர்க்கு சரீர சேவை செய்தல், வெந்நீர் அளித்து ஸ்நானம் செய்வித்தல், உடல் பிடித்து விடுதல், தல யாத்திரைக்கு அழைத்துச் செல்லுதல், மனதார அவர்களுடன் பேசுதல், அவர்களுடைய சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றுதல், ஆடைகளைத் துவைத்துத் தருதல், பொறுமையுடன் அவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டல் (பல சமயங்களில் அவர்கட்குப் இவ்வாறு பொறுமையுடன் அவர்கள் பேசுவதை கேட்பது அவர்களுக்கு பேரமைதியைத் தரும்) இதுபோன்ற பெரியோர்களுக்கு உரித்தான சேவைகளில் ஈடுபட்டு நல்தொண்டாற்றுபவர்களை ஸ்ரீமஹாவிஷ்ணு தம் திருப்பாதங்களில் பாதுகைகளாக ஏற்கிறார். இவ்வாறாக ஸ்ரீவைகுண்டத்தில் ஆயிரமாயிரம் பாதுகைகள் உண்டு. இவற்றை ஸ்ரீமஹாவிஷ்ணு பயன்படுத்தும் முறையே அலாதியானதாகும். ஒவ்வொரு பாதணிக்கும் ஒரு சிறப்புப் பெயர் உண்டு. திவ்ய பாதுகா சிந்தாமணி, சிந்தூர சகடரூபிணி, மாலா த்ரிகரணி, வசுபுத்ர வ்யாபக ரூபிணி என பலவகைச் சிறப்பு நாமங்களுடன் அவை திகழ்கின்றன.
பிரம்ம முகூர்த்ததில் நீல வண்ணனாக ஸ்ரீபெருமாள் சுவாமி பூலோகத்திலுள்ள பல கோடி மலர்த் தாவரங்களின் மீது நடை பயிலுகின்றார். அன்றைக்கு அவர் திருப்பாதம் படுகின்ற மலர்கள் மட்டுமே அர்ச்சனை, அலங்காரம், பூச்சொரியல், பூமாலைகள் போன்ற தெய்வீக காரியங்களுக்குப் பயன்படுகின்றன. திருமாலின் திருப்பாதம் பட்டு மலர்கள் விரிகின்றன என்றால் அவர்தம் பூப்பாதங்களின் மென்மையை எவ்வாறு வர்ணிக்க முடியும்?
அதேபோல திருஅண்ணாமலை போன்ற திவ்ய க்ஷேத்திரங்களில் பாதணியின்றி கிரிவலம் வருதல் விசேஷம் என விதிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் மழை, கரடு முரடான பாதை இவற்றைப் பொருட்படுத்தாது கிரிவலம் வருகின்ற அடியார்களின் பாதங்கள் படுகின்ற இடங்களிலெல்லாம் திவ்ய பாதுகா சிந்தாமணி பாதுகைகளைப் பதித்து அடியார்களின் திருப்பாதங்களைத் தாங்க ஸ்ரீவிஷ்ணு அருள்புரிகின்றார். இது மானுடக் கண்களுக்குத் தெரியாமல் நிகழ்கின்ற ஆன்மீக விந்தையாகும். இத்தகைய திவ்ய சிந்தாமணிப் பாதுகையின் ஆன்மீக சக்தி இறை நினைவுடன் கிரிவலம் வரும் அடியார்களின் சூக்ஷ்ம சரீரத்தினால் தான் உணர இயலும். எப்போதும் மலையை நோக்கிய வண்ணமே சிவ சிந்தனையுடன் கிரிவலம் புரிவோர் இத்தகைய ஆன்மீக சக்தியை எளிதில் உணரலாம். அடுத்ததாக சபரிமலை, காசி க்ஷேத்திரம் புனிதத் தலங்களுக்கு கால்நடையாகச் செல்வோர்க்கு ஸ்ரீமஹா விஷ்ணுவின் ‘பாத சுகேந்திர’ பாதுகைகளின் அனுக்ரஹம் கிட்டுகின்றது. இவ்வாறு தெய்வத் திருக்காரியங்களுக்குத் தம்மைத் தியாகம் செய்வோரின் நல்வாழ்வுக்கெனத் தம் பாதுகைகளினால் அருள்புரிகின்றார். இதுவே ஸ்ரீவிஷ்ணு பாதணி தரிக்கும் இரகசியமாகும்!
ராமாயணத்தில் ஸ்ரீபரதாழ்வார் ஸ்ரீராமரின் பாதுகைகளைத் தாங்கி அதை அரியணையில் ஏற்றி ‘ஸ்ரீராமரே அரியணையில் வீற்றிருந்து ஆட்சிபுரிவதாக உளம் மகிழ்ந்து அரசாண்டாரல்லவா? அத்திருப்பாதங்களாகப் பிறவி கொண்டவர் யார்? பிரபஞ்சத்தில், மண், நீர் உட்பட ஒவ்வொன்றும் ஒரு பிறவியே, மனித அறிவினால் இந்த ஆன்மீக ரகசியங்களை உணர இயலாது. எனவே இவற்றை உணர்த்தும் வல்லமை பெற்ற சற்குருவை நாடிப் படைப்பின் ரகசியத்தை அறிய வேண்டும். அத்திருப் பாதுகைகளின் புராணத்தை அறிவோமா?
திருப்பாதுகை வரலாறு
ஒருமுறை ஸ்ரீபரமசிவ மூர்த்தி ஸ்ரீஅகஸ்தியர் பெருமானுடன் வான் வழியே பூலோகத்தில் திருவுலா வருகையில் அவர்தம் திருத்தேர் பாண்டிய நாட்டினுள் சென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணுமிடமெங்கும் பூங்காவனங்கள் நிறைந்து காணப் பெற்றன. நூற்றுக்கணக்கான பூச்செடிகள் பூத்துக் குலுங்கி நின்றன. அவற்றின் மணமோ வானமெங்கும் நிரவி நின்றது. நாட்டின் பெரும்பகுதியில் பூஞ்செடிகள், மலர்த் தாவரங்கள், நிறைந்து மலர்களே கீழ்வானமாய்ப் பூத்து விளங்கின. இன்னிசை கீதங்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒலித்தன. வடமொழி/தமிழ் வேதங்களின் புனிதமான ஸப்தங்கள் விண்ணை முட்டின. கண்ணுக்கெட்டிய இடங்களில் எல்லாம் மாட மாளிகையளவிற்கு யாகசாலை அக்னிபிழம்புகள் கண்ணைப் பறித்தன. அப்பப்பா..... எவ்வளவு ஹோம குண்டலங்கள்!  மந்தை மந்தையாக ஆடுகளும், பசுக்களும் மேய்ப்பாரின்றித் திரிந்து கொண்டிருந்தன. திருக்கோயில்களெங்கும் நிதமும் உற்சவங்களோ என்று வியக்கும் வண்ணம் கூட்டம்.
மஹேஸ்வர மூர்த்தியுடன் சேர்ந்து உலாவந்த அகஸ்தியர் ‘சுவாமி, இந்த தெய்வீக சாம்ராஜ்யத்தையே அரசன் உருவாக்கியிருக்கிறான். தன் ஒரே மகளையும் தெய்வீகத்தில் ஈடுபடுத்தி அவள்  விருப்பப்படியே நாடெங்கும் நந்தவனங்கள் பூத்துக் குலுங்குகின்றது. எங்கும் ஹரிஹர நாமம் ஒலிக்கின்றது. ஆண்டாளின் முன் அவதாரம் போல் இப்பெண் எப்போதும் சிவநினைவில் உழல்கின்றாள். எப்போதும் அவள் சகட ஆட்டம் ஆடுவது போல் தோன்றினாலும் உண்மையில் அவள் சகடசக்கரம் என்ற சிவசக்ரத்தின்பால் உய்த்துக் காய்களை நகர்த்தி பல உன்னத ஞான நிலைகளை அடைந்துள்ளாள். அரசனும்; மஹேஸ்வரனுக்கே என் மகளை மணமுடிப்பேன்’‘ என்று உறுதியாக நிற்கின்றார்’‘ என்று மொழிந்தார். சிவபெருமான், புன்முறுவலுடன், “அகஸ்தியா! விண்ணுலக லோகங்கள் எங்குமே காண இயலாத தெய்வீக சாம்ராஜ்யத்தையே அதுவும் கலியுகத்தில் இந்த மன்னன் உருவாக்கி இருக்கின்றானென்றால் அது பலகோடி ஆண்டுகள் கூடிய தவத்திற்கும், எண்ண இயலா அஸ்வமேத யாகங்களை நிறைவேற்றியதற்கும் சமமானதாகும். இதற்குப் பரிசாக மன்னனின் மகளையே யாம்  மணமுடிப்போம்!” என்று மொழிந்தார்.
இதன் பிறகு சிவபெருமான் மன்னனின் மகளை மணம் புரிந்த வரலாற்றை விவரித்தால் பெரும் புராணமாகும். எனவே நாம் மன்னன் பெற்ற நற்கதியை மட்டும் அறியப் புகுவோம். தன் நாடெங்கும் ஹரிஹர பக்தியைப் பரப்பிய மன்னன் தன் மானுட உடலை உகுக்கும் தருணத்தை இறை அருளால் உணர்ந்து, ‘மஹேஸ்வரா! என்றும் உன் திருவடி பற்றும் பாக்கியத்தைத் தருவாயாக!’ என்று வேண்டினான்.
சிவபெருமானும், ‘எம் பாதத்தை விட, எம் அடியாரின் திருப்பாதத்தைப் பற்றுதலே எனக்கு உவப்பு அளிக்கக் கூடியதாகும். எம்மை எந்நேரமும் தம் இதயத்தில் வைத்துப் பூஜிக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருப்பாதங்களைத் தாங்கும் பேற்றை உனக்கு அளிக்கிறோம். யாம் சதுரங்க வல்லபநாதர் என்ற உன் நாமத்தில் திருப்பூவனூரில் எழுந்தருளுவோம். எம் திருக்கோயில் அருகே பொலியும் ஸ்ரீராமர் திருச்சந்நிதியில் நீ பாதுகையாக மாறி ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களை அலங்கரிப்பாயாக! , என்று அருளினார்.
இவ்வாறாக அம்மன்னன் இறைத் திருப்பணிகளால் ஸ்ரீவிஷ்ணு பாதுகையாக மாறிய நாளே விஷ்ணுபதி புண்ய காலமாகும். வரும் கார்த்திகை மாதம் 16.11.1994 தேதி அமையும் விஷ்ணுபதி புண்யகாலத்தில்தான் மேற்கண்ட விஷ்ணுபாதுகையாக மாமன்னன் உயர்நிலைப் பிறவி பெற்றான். ஸ்ரீவைகுண்டத்தில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அனைத்துமே விசேஷ பிறவிகள் அன்றோ!
16.11.1994 அன்று விடியற்காலை 1.30 மணி முதல் 10.30 மணிவரை விஷ்ணுபதி புண்யகாலம் அமைகின்றது. தஞ்சை மாவட்டம் மன்னார்குடி நீடாமங்கலம் அருகிலிருக்கும் திருப்பூவனூர் ஸ்ரீராமர் கோவிலில் கொண்டாடுவது பலவிசேஷமான அனுக்கிரஹங்களைப் பெற்றுத் தரும். இவ்விடத்தில் இத்திருநாளில் ஏழைகட்கு சர்க்கரைப் பொங்கல் தானமளித்துத் தொழுநோய், ஊனம், யானைக்கால் போன்றவற்றால் வாடும் நோயாளிகட்கும் ஏழை/எளியோர்கட்கும் காலணிகளை தானமாக வழங்குதல் மிகவும் சிறப்பானதாகும். அன்னதானம், வஸ்திர தானம், இலவச மருத்துவ உதவி இவற்றோடு தர்ப்பணங்கள் அளித்தலும் விஷ்ணுபதி புண்யகாலத்திற்கு ஏற்ற பூஜை முறைகளாகும் பிரதோஷ கால பூஜைமுறைகளைப் போல விஷ்ணுபதி புண்யகால பூஜைகளும் பன்மடங்கு பலன்களைப் பெற்றுத் தரும். இவ்வரிய புண்ய காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டுகிறோம்.
திருப்பூவனூர் அம்பாளின் மஹிமை
சுலபாகிதன் என்ற கந்தர்வன் தன் கந்தர்வ லோகத்திலிருந்து வெளிவந்து பூலோகத்தில் வானில் சஞ்சரிக்கையில் திருப்பூவனூரில் விசேஷமான நந்தவனங்களைக் கண்டு அதிசயித்துக் கீழே இறங்கினான். நந்தவன புஷ்பங்களில் தேவலோகத்திலும் கிட்டாத புஷ்பங்களும் இருப்பதைக் கண்டு ஆனந்தித்துத் தம் கந்தர்வலோக ஸ்தீரிகளைக் கீழே அழைத்து அவர்கட்குப் பூச்சூட்டி மகிழ்வித்தான். பலா நாட்களாயினும் தம் கந்தர்வலோகம் மீளும் எண்ணம் எழவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி கந்தர்வனை எச்சரித்தார். இறைவனுக்கு உரித்தான பூக்களை அவருக்குச் சூட்டிய பின்னரே அணிய வேண்டும் என்று அவர் எச்சரித்தும் அதனை அவன் பொருட்படுத்துவதாக இல்லை. ‘இறைவனுக்கு உரித்தான மணமுள்ள பூக்களை நீயும், உன் கந்தர்வ ஸ்திரீகளும் நுகர்ந்தமையால் அழுகிய நாற்றப் பொருட்களின் மேல் உலவி வாழும் எலிகளாகப் பிறப்பீர்கள்’‘ என்று அவர் சாபமிட அவர்கள் எலிகளாக மாறினார்கள். இதனால் சினமுற்ற கந்தர்வன் எலிரூபத்தில் தன் குலத்தவருடன் சேர்ந்து உணவு தானியங்களை உண்டு தீர்த்துப் பஞ்சத்தையும், நோய்களையும் பரப்பினர். இதனைக் கண்டு அஞ்சிய ஏனைய கந்தர்வர்கள் திருப்பூவனூர்க்கு வந்து சுலபாகித கந்தர்வன், அவன் சார்ந்த பெண்களுக்கும் நல்லுரைகள் வழங்கி திருப்பூவனூர் அம்பிகையான ஸ்ரீராஜராஜேஸ்வரியினை நோக்கித் தவமியற்றினர்.

ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழ்விற்கு ஆசான் தரும் அற்புத அருள் மருந்து
சென்ற இதழில் காய்ச்சல் நோய்க்கு நிவாரணமாக ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்குத் தேனபிஷேகம்  செய்து ஏழைகளுக்கு பால்சாதத்தை தானமாக அளிக்க வேண்டும் என்று நம் குருமங்கள கந்தர்வா அருளியுள்ளார். (சென்னை) போரூர் குன்றத்தூர் சாலையில் உள்ள கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கான சந்நிதி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நந்தவனத்தில் 3 முதல் 16 இதழுள்ள தளங்கள் உள்ள அற்புத வில்வ மரங்கள் உள்ளன. கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி இவ்வற்புதமான அளப்பரிய ஆன்மீக சக்தி வாய்ந்த இவ்வில்வ தளங்களைப் பெற்று ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு அர்ச்சித்து (தேனாபிஷேகம் செய்வித்தபின்) ஏழைகளுக்குப் பால்சாதம் அளித்திட எவ்விதக் காய்ச்சலும் விலகும். ‘கோவில் மரந்தானே இலவசமாகப் பறிக்கலாம்’ என்ற எண்ணம் கூடாது. மேலும் இந்த வில்வ் தளச் செடியைப் பெற்றுச் சொந்தமாக தன் வீட்டிலும் பயிரிடக்கூடாது. தவறாகப் பயன்படுத்தினால் கடுஞ்சாபங்களை ஏற்க நேரிடும்.
விஷக்காய்ச்சல் (viral fever )
தன் குழந்தைகளை மட்டும் நன்கு கவனித்துவிட்டு, வீட்டிலுள்ள பெரியோர்களைப் பாரபட்சமாக நடத்துதலால் விஷக் காய்ச்சல் உண்டாகிறது. தன் குழந்தைகளுக்கு மட்டும் நல்ல இனிப்பு வகைகள், நல்ல கட்டித் தயிர், சூடான ரசம், நல்ல பழங்கள் அளித்துவிட்டு வயதான பெரியோர்க்குப் புளித்த மோர், ஆறிய ரசம், அழுகிய பழங்கள் ஆகியவற்றை அளித்து உதாசீனப் படுத்துதலால் விஷக் காய்ச்சல் ஏற்படுகிறது. மொத்தத்தில் பெரியோர்களுக்குச் சரியாக உணவிடாததால் விஷக்காய்ச்சல் உருவாகிறது. பல குடும்பங்களில் மாமியார்கள் தன் மருமகள்களை தகாத உணவிட்டோ, வயிறார உணவளிக்காமலோ துன்புறுத்துவதாக கூறுவர். இதே போன்று மாட்டுப் பெண்கள் தங்கள் மாமியார்களைச் சரியாக உணவிடாது இருப்பதாகக் கூறுவர். இவ்வாறாகத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கர்மவினைகள் தீரும்வரை விஷக்காய்ச்சல் நோய் தொடரும். இப்பிறப்பில் மட்டுமின்றி இத்தகைய பூர்வ ஜன்ம கர்மங்களினாலும் இவ்விஷக்காய்ச்சல் நோய் ஏற்படும். இவ்வாறாகத் தன்னுடைய கர்மவினைகளின் பலனே நோய்கள் என உணர்ந்தால் இது உன்னதமான ஆத்மவிசாரத்திற்கு வழிவகுத்து பல மேன்மையான ஆன்மீக நிலைகளுக்கு வழிவகுக்கும்.
அக்னி குண மண்டலா தேவதை
இவ்விஷக்காய்ச்சலுக்குரித்தான தேவதை அக்னி குணமண்டலா. இத்தேவதையைத் துதித்து வணங்கிட விஷக்காய்ச்சல் நோய் தணியும். நோய்க்குண்டான காரணங்களையும் தீர்க்க தரிசனமாக உணரலாம். இத்தேவிக்கான மந்திரம்,
‘தேவி ஜய அக்னி குண மண்டலா ஐம் ஸ்ரீ ஜய ஓம் சக்தி ஹ்ரீம்‘ ஆகும்.
லிங்க முத்திரை தன்வந்த்ரீ
விஷக்காய்ச்சலுக்கு நிவாரணமளிக்கும் தன்வந்த்ரியே ‘லிங்க முத்திரை தன்வந்த்ரி‘ ஆவார். இவர் நாமத்தைத் துதித்து 108 முறை காயத்ரீ தேவிக்குரித்தான காயத்ரீ மந்திரத்தை ஜபித்த தேங்காய் சாதத்தைப் படைத்து ஏழைகளுக்கு அளித்திட விஷக்காய்ச்சல் நோய் தீரும். இத்தன்வந்த்ரி மூர்த்திக்கான மந்திரம்
‘சிவ ஸ்ரீஜயஹர ஸ்ரீஹர ஹர ஓம்’ ஆகும்.
ஒரே தெய்வத்தை வணங்குதல் எளிதல்லவா? ஸ்ரீஜுரஹரேஸ்வரர் பூஜை, ஸ்ரீகாயத்ரீ தேவியின் காயத்ரீ, ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி பூஜை, தான தர்மங்கள் இவ்வாறு பல வகை வழிபாடு ஏன் என்ற வினா எழலாம். விஷக்காய்ச்சல் ஏற்படும் போது இதுவரையில் ‘ஏதோ மருத்துவரைப் பார்த்தோம், மாத்திரைகளை விழுங்கினோம்’ என்ற அளவில் தான் சாதாரண மனிதன் இயங்குகின்றான்.ஆனால் சித்தர்கள் அருளும், ஆசான் அளிக்கும் அற்புத அருள் மருந்து முறையில் பலதெய்வ, தேவதாமூர்த்திகளின் வழிபாட்டால்
1. நோய் வருவதற்கான காரணங்கள் அறிதல்
2. நம் வீட்டில் குழந்தைகள், மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் சோற்றை வீட்டிலுள்ள பெரியோர்க்கு உண்ண அளிப்பது
3. வீட்டில் வேலை செய்பவர்களுக்கு நாம் உண்ட எச்சிற் சோற்றை அளிப்பது.
மேற்கண்ட நம் கர்மவினைகளை அகற்றி நமக்கு நல்வாழ்வருளும் இந்நோய்க்குரித்தான தேவதை சந்த்ர நிபானனா ஆவாள். இந்நோய் அகல சந்த்ர நிபானனா தேவியை
“சோமதள சூத்ர நிபானனா ஸ்ரீ ஓம் ஜயஹரி சோமஸ்ரீ ஓம்‘ என்ற மந்திரத்தால் துதித்து, ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்வித்து அரிசிப் புட்டை (108 காயத்ரி தேவி காயத்ரீ ஜபித்து) ஏழைக் குழந்தைகட்கு அளித்தல் வேண்டும். இந்நோக்குரித்தான தன்வந்த்ரீ சோமநாத தன்வந்த்ரீ ஆவார். இவரை
‘வித்யா கணநாத ஹரிஓம் ஜயஹரி ஸ்ரீ ஓம்’ என்ற மந்திரத்தால் துதித்து மேற்கண்ட முறையில் சந்த்ரநிபானனா தேவியைப் பூஜித்து ஸ்ரீ ஜுரஹரேஸ்வரர் அபிஷேகத்திற்குப் பின் அரிசிப் புட்டினை தானம் அளித்திட இந்நோய்க்குரித்தான கர்மவினைகள் எளிதில் தீர்ந்திட நாம் நல்வாழ்வு பெறலாம்.

கிரிவல தரிசனங்கள்

திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதால் அடையும் பலன்களை எழுத்தில் வடிக்க இயலாது. தீயவன் ஒருவன் தான் எங்கும் சிக்காமல் தப்புகிறான் எனில் அவன் புண்ய சக்தியே அவனைக் காப்பாற்றுகிறது! அப்படியானால் புண்ய சக்தி, தீயதை வளர்க்குமா என்ற வினா எழலாம்! ஒருவன் கையில் நூறு ருபாய் கொடுத்தால் அவன் அதைக் கொண்டு ஆடை, உணவு, புத்தகம், காலணி, காய்கறி என்றோ புகை, மதுபானம், கேளிக்கை என்றோ அன்னதானம், கோயில் உண்டியலில் செலுத்துதல், ஏழைக்கு உதவி என்றோ எவ்வகையிலும் செலவு செய்யலாம். அவன் நூறு ரூபாயைக் கொண்டு மது அருந்தினால் அது தீய புத்தியின் செயலே தவிர, நூறு ருபாய் கிடைத்த புண்ய சக்தியின் செயல்வண்ணம் ஆகாது!
ஆனால் தீய வழிகளில் செல்கையில் புண்யசக்தி விரைவாகச் செலவழிகின்றது என்பதே உண்மை! நூறுருபாயைக் கொண்டு தனக்கு நியாயமான பொருட்களை வாங்கிச் சிறிதளவேனும் தானதர்மங்களைச் செய்தால் புண்ய சக்தி பெருகும். நூறு ருபாயையும் மது, புகை போன்ற கேளிக்கைச் செயல்களில் செலவழித்தால் இருக்கின்ற புண்ய சக்தியும் கரைந்து விடும். எனவே நற்காரியங்களைப் புரிந்து புண்ய சக்தியைச் சேர்ப்பதோ, தீய எண்ணங்களில், தீய காரியங்களில் உழன்று புண்யசக்தியை இழந்து பாவ சக்தியைப் பெருக்கிக் கொள்வதோ மனிதனின் கைகளில் தான் இருக்கின்றது. நல்லதையே எண்ணுவோம், நல்லவற்றையே செய்வோம்.
திருஅண்ணாமலையில் இறைநாமம் ஜபித்தல்
திருஅண்ணாமலையில் ஓம் நமசிவாயா, ஓம் சக்தி போன்ற இறைநாமங்களைத் துதித்திட அதனால் எவ்வித விசேஷ சக்தி கிட்டுகின்றது? இதைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் ஆயிரமாயிரம் வரிகளில் விவரிக்கின்றன. திருஅண்ணாமலையில் ஜபிக்கப்படும் ஒவ்வொரு இறை நாமத்திற்கும் ஆயிரம் மடங்கு புண்ய சக்தி பெருகின்றது.. ஆனால் திருஅண்ணாமலையில் பெறப்படும் இத்தகைய புண்யசக்தி நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்படும்! என்ன அதிசயமான, அற்புதமான புண்யசக்தி! காணக் கிடைக்காத எங்கும் பெற இயலா புண்யசக்தி! பிரபஞ்சத்திலேயே திருஅண்ணாமலைக்கு மட்டுமே இத்தகைய புண்ய சக்தி உண்டு! அப்படியானால் திருஅண்ணாமலையில் தங்குகின்ற ஒவ்வொரு விநாடியையும் இறைநாம ஜபத்திலோ நற்காரியத்திலோ அல்லவா பயன்படுத்த வேண்டும்! இங்கு இறைநாமம் ஜபித்துக் கொண்டே நற்காரியங்கள் புரிந்தால்.... இமாலயத்திலும் விரிந்து வானிலும் உயர்ந்து கிட்டும் புண்ய சக்தியை விரித்துரைக்க இயலுமா!
கூட்டு நாமம்/சத்சங்க நற்காரியங்களின் மஹிமை
இந்து மதம் போற்றுகின்ற கூட்டு நாம ஜபம், கூட்டு பிரார்த்தனை இன்றைக்குப் பல மதங்களிலும் பரவி இறைவனின் பெருமையைப் போற்றுகின்றன! இன, மத, ஜாதி பேதங்களைக் கடந்த இறைவனே, பலர் ஒன்று கூடி ஒற்றுமையுடன் தன்னைப் பிரார்த்திப்பதால் ஆனந்தமடைகின்றான்! இதற்காகவே கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் எழுந்தன! நூறு பேர் சேர்ந்து நாமாவளி, ஸஹஸ்ர நாம பாராயணம், த்ரிசதி, தேவாரம், திருவாசகம் போன்ற இறைத் துதிகளை ஓதிட அவை நூறு நூறாய்ப் பெருகும். நூறுபேர்கள் சேர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்று ஒரு முறை ஓதினால் ஒவ்வொருவரும் நூறுமுறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை ஓதியதாக ஸ்ரீசித்ரகுப்த தேவர் புண்யக் கணக்கை எழுதுகிறார். என்னே கூட்டு நாம ஜபத்தின் வலிமை! இந்த கூட்டு நாம ஜபமே திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் நிகழ்ந்தால்....... திருஅண்ணாமலை எல்லைப் பகுதியில் எந்த இடத்திலும் நூறுபேர்கள் சேர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்று ஒரு முறை ஓதினாலே ஒவ்வொருவரும் 100000 முறை ஓம் நமசிவாய ஓதியதாக ஸ்ரீசித்ரகுப்தர் புண்ய கணக்கு எழுதுகிறார். ஏனெனில் எந்த நற்காரியத்திற்கும் 1000 மடங்குப் பலனை அளிக்கும் திருத்தலமல்லவா திருஅண்ணாமலை!
இது கருதியே ஸ்ரீசத்யசாய் பாபா போன்ற இறை குருமூர்த்திகள் கூட்டு நாம சங்கீர்த்தனத்தை ஜாதி, மத, இன பேதமின்றிப் பரப்பி வருகின்றனர்.
அல்லாஹு அக்பர், பரமபிதா நாமம் போன்று எம்மதத்தினரும் இங்கு இறைநாமம் ஓதி நற்காரியங்கள் நிகழ்த்திட அவை ஆயிரம் மடங்காய்ப் பெருகும். திருஅண்ணாமலையில் நிகழும் ஜபம், தவம், தியானம், பூஜை, ஆராதனை அபிஷேகம், அன்னதானம், வஸ்திர தானம், ஏழைகளுக்கான மருத்துவ உதவி போன்ற அனைத்து நல்லெண்ணங்கள்/நற்காரியங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு விதமான விசேஷமான புண்யசக்தி கிட்டுகின்றது! இதன் இரகசியங்களைத் தக்க சற்குருமார்களிடமிருந்து அறிந்து நலம் பெற வேண்டும்.
அன்னதானம், வஸ்திர(ஆடை)தானம், மருத்துவ உதவி, காலணி தானம், விறகு தானம், எண்ணெய் தானம், விளக்கு தானம் மற்றும் ஹோமம் போன்றவற்றைக் கூட்டாக நிகழ்த்திக் கோடி கோடியாய்ப் பலன்களைப் பெறுவீர்களாக!
திருஅண்ணாமலை வாருங்கள்
திருஅண்ணாமலையில் செய்யப்படும் நற்காரியங்களின், ஜப/தியானத்தினால் கிட்டும் புண்ய சக்தி நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்படும், அதனைத் தீய வழிகளில் செலுத்த இயலாது என்று விளக்கினோம் அல்லவா? இதன் பொருள் என்ன? ஒருவன் அடிக்கடி திருஅண்ணாமலை சென்று பலருடன் கூடி வாழ்நாளில் நல்லவிதமாகவே பயன்படுத்தக் கூடிய புண்ய சக்தியைப் பெருமளவில் பெறுவானாயின் அவனால் தீய எண்ணத்தைக் கூட எழுப்ப இயலாது மனம் பக்குவம் ஆகிவிடும்! எத்தகைய உன்னதமான பாக்கியம்! திருஅண்ணாமலையிலேயே வாழும் பாக்கியம் பெற்றவர்கள், தங்களுடைய பெறற்கரிய மனிதப் பிறவியின் விசேஷத் தன்மையை உணர்ந்து தங்களுடைய வாழ்க்கையைத் தான, தர்மங்களிலும், திருஅண்ணாமலை யாத்ரீகர்களுக்கு ஆவன சேவைகளையும் இறை அருளால் செய்து வருவாராயின் இப்பிறவித் துன்பத்திலிருந்து அறவே விடுபடும் நன்னெறியை அடைவர். கோடி கோடியாம் ஜன்மங்களை அறுக்கும் அறவழியைத் தரும் திருத்தலமே திருஅண்ணாமலை!
திருஅண்ணாமலைக்கு அடிக்கடி செல்ல இயலாதவர்கள், வர இயலாதவர்கள் என் செய்வது? அவர்களுக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் நல் வழி கண்டிருப்பதாக ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் அருள்கின்றது! கார்த்திகை தீபம் அண்ணாமலையில் ஏற்றப்படுகின்றதல்லவா! இலட்சோப இலட்சம் மக்கள் கூடும் அந்தத் தீபப் பெருவிழாவில் அன்னதானம் செய்திடில் ஒரு வருடத்திற்குரித்தான புண்ய சக்தியை எளிதில் பெறலாம். என்ன இது! திருஅண்ணாமலையின் மஹிமையைச் சிறப்பாக எடுத்துரைத்துவிட்டு தீபத்தன்று செய்யப்படும் அன்னதானப் பலன்கள் ஒரு வருடமே தாங்கும் என்றால்....
ஒரு வருடத்திற்கான கவச சக்தி
ஒரு வருடத்தில் எத்தனை கோடி கர்மாக்களை ஒரு மனிதன் சேர்த்துக் கொள்கிறான்! மனதால், எண்ணத்தால், உடலால் எழுத இயலாதளவிற்குக் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கிறான். அதுமட்டுமா! கொள்ளை, அதர்மம், அநியாயம், வன்முறை, குரோதம், பொறாமை, விரோதம், பகைமை, எதிரிகள், அரசியல், திருஷ்டிகள், தோஷங்கள், பில்லி, சூன்ய, ஏவல்கள் – இவ்வளவு எதிர்வினைகளிடையே (negative forces) ஒரு மனிதன் வாழ வேண்டியதிருக்கிறது! திருஅண்ணாமலையில் சேர்க்கும் புண்யம் நற்காரியங்களுக்கே பயன்படும் என்று சித்தர்கள் அருள்கின்றனர் அல்லவா! எப்படி?
ஒரு வருடத்தில் ஒரு மனிதன் சேர்க்கும் கோடிக் கணக்கான கர்மங்களின் விளைவுகளிலிருந்தும் மேற்கண்ட எதிர் வினைகளிலிருந்தும் ஒரு மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள வானளாவிய புண்ய சக்தி தேவைப்படுகிறது! தினசரி பூஜைகளை, நித்ய கர்மாக்களைச் சரிவரச் செய்யாத மனிதன் எதையும் நல்ல நேரம் கணித்தும் செய்வதில்லை. நல்ல நேரம் பார்த்து அனைத்துக் கார்யங்களையும் செய்தால் நாள், நட்சத்திர, வார, யோக, கரண தேவதைகளின் அனுக்ரஹமாவது கிட்டும். இந்நிலையில் புண்ய சக்தி அடுத்த ஒரு வருடத்தின் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே சரியாகிவிடும்.!
ஆனால் அண்ணாமலை தீப உற்சவத்திற்குப் பிறகு முறையற்ற காமம், குரோதம், பொறாமை, கோபம் போன்றவற்றால் எவ்விதத் தீய செயல்களையும் செய்வதில்லை என்று ஒரு மனிதன் வைராக்யம் பூண்டு மன உறுதிப்பாட்டுடன் செயல்பட்டால் ஒரு தீபஅன்னதானத்தின் புண்ய சக்தியானது எத்தனையோ வருடங்களுக்கு ஏன்  எத்தனையோ ஜன்மங்களுக்கு, குருவருள் திரண்டிருந்தால் பிறவிப் பிணி நீக்குவதற்கு அருள்புரியும்! எல்லாம் மனிதனின் மனோநிலையைப் பொறுத்துள்ளது!
அன்னதானத்தின் திரண்ட பலனைப் பெறுவீர்
அன்னதானம் என்றாலே நிறைய செலவழித்துச் செய்வது, வசதியுள்ளோர் செய்ய வேண்டியது என்ற எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது. வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் தனக்கேற்ற அளவில் திருஅண்ணாமலை தீபத்தன்று இரண்டு உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட்டுகள், பிரட், வாழைப்பழம், நீர்மோர், பழைய துணிகள் இவற்றில் எது இயலுமோ அதை அளிக்கலாம். தனக்கு மூன்று வேளைக்கு உணவில்லாத போது அடுத்த ஒருவருக்கு அன்னதானமா? இதுவன்றோ தியாகம்! ஆனால் அவரவர் மனசாட்சிக்கேற்ப இயன்ற அளவு தானம் செய்ய வேண்டும்! திருஅண்ணாமலை அன்னதானத்தின் திரண்ட அருளைப் பெற
1. பலருடன் சேர்ந்து முன்கூட்டியே அன்னதான முறையை வகுத்துக் கொள்ள வேண்டும்
2. சிறுக சிறுகப் பணம் சேமித்து தீபத்தின் போது பயன்படுத்த வேண்டும்.
3. பலரை இந்த நற்காரியத்தில் சேருமாறு இறைப் பிரச்சாரம் செய்தல் வேண்டும்.
4. ஜாதி, மதம் இன பேதமின்றி தான, தர்மங்களைச் செய்தல் வேண்டும்.
5.. இறைநாமம் ஓதியவாறே அன்னத்தை தயாரித்து தானமிடல் வேண்டும்.
வெளியூரிலிருந்து வருகின்றோமே! இதற்கெல்லாம் நேரமேது! நாங்களும் அன்னதானத்தின் திரண்ட திருவருளைப் பெறவேண்டாமா? பெரும்பாலோருடைய எண்ணமிது! இவர்களுடைய ஏக்கங்களையும் தீர்க்க சித்த புருஷர்கள் அருள்புரிகின்றனர். எவ்வாறு?
சற்குரு நடத்தும் அன்னதானம்
சற்குருமார்கள் நடத்தும் சத்சங்கங்கள் திருஅண்ணாமலை தீபப் பெருவிழாவின் போது பலவித தான தர்மங்களை நிகழ்த்துகின்றன. சற்குருவோ சதாசிவ பரப்பிரம்மத்தைத் துய்த்துணர்ந்தவர்! அருட்பெருஞ் ஜோதியாப் பிரகாசிப்பவர்! அவர் திருஅண்ணாமலையில் தான தர்மங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியமென்ன?
சாதாரண மனிதன் தம் கர்மவினைகளால் பல பிறவிகளைப் பெருக்கிக் கொள்கின்றான். ஆனால் சற்குரு போன்ற பரிபூரண ஆத்மாக்களை இறைவனே பூலோகத்திற்கு அனுப்புகின்றான். சில கர்மவினைகளை அளித்து, பிறவியையும் அளித்து பிறவிப் பிணி தீர்க்கும் இறைப் பெருநிலையை போதிக்குமாறு சாட்சாத் சிவபெருமானே சற்குருவைப் பணிக்கிறார்.
சற்குரு தரும் சோதனைகள்
சற்குருவும் நம்மை போலவே நம்முடன் இருந்து இன்ப, துன்பங்களை அனுபவித்து அமைதியாக வாழ்ந்து காட்டுகிறார். அவர் தம் அற்புதங்களை வெளிக்காட்டுவதில்லை. அவருடன் கூடி வாழ்ந்திட அவர்தம் தெய்வீக நிலைகள் புரியும். அதற்குள் ஆயிரமாயிரம் சோதனைகள் காத்திருக்கும். சற்குருவையே நம்ப முடியாதது போல அவரே பல நிகழ்ச்சிகளை உருவாக்குவது உண்டு! அனைத்தும் சோதனைகளே! அற்புதங்கள் காட்டினால் ஆயிரமாயிரம் பேர்கள் சுற்றிச் சுற்றி வருவர். பிறருடைய கர்ம வினைகளைக் கழிப்பதற்கு அல்லவோ சற்குரு பிறப்பெடுக்கின்றார். அஷ்ட ஐஸ்வர்யங்கள், வியாபாரத்தில் லாபம், திருமணம் கைகூடுதல், சந்ததி, நோய் நிவாரணம் இவற்றிற்காக சற்குருவை மொய்ப்பவர்களே அதிகம்! ஆனால் அனைத்தையும் தரவல்லவர் அவரே! கேட்டுப் பெறுவதை விட “வேண்டத் தக்கது அறிவோய் நீ ; வேண்ட முழுதுந் தருவோய் நீ” என்று அவரைச் சரணடைதலே உத்தமம்!
சற்குருவின் தானதர்மம்
பல சத்சங்கங்கள் இன்னும் பல சற்குருமார்களின் தலைமையில் பல அரும்பெரும் நற்காரியங்களை நிறைவேற்றி வருகின்றன! அவற்றைக் கண்டறிந்து அதில் இணைந்து நல்வழி பெற வேண்டும். சற்குரு நடத்துகின்ற அன்னதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர். கூலிக்கு வேலை வாங்குவது போல் அல்லாது குடும்பத்தினருடன் பல நூறு அடியார்கள் ஒன்று சேர்ந்து இறைநாமம் ஓதியவாறே பணிபுரிகின்றனர். குப்பை கூட்டுதல், விறகு அடுக்குதல், பாத்திரம் தேய்த்தல், கஞ்சி வடித்தல்- போன்று அனைத்துக் காரியங்களையும் சற்குரு அடியார்களே அவருடைய அருளால் நிறைவேற்றுகின்றனர்.
மனநிறைவான சேவை! சற்குருவே அருகேயிருந்து உற்சாகமூட்டி, ஆன்மீகக் கதைகள், ஆத்மவிசார வினா-விடைகள், புராண விளக்கங்கள், சித்தர்களின் ஆன்மீக இரகசியங்கள் இவற்றோடு ஒரு தெய்வீகச் சூழ்நிலையில் அன்னதானத்திற்கு அடியார்கள் உருவாகின்றனர். ஆஹா! என்ன உன்னதமான தெய்வீக வாய்ப்பு! என்னதான் தனிப்பட்ட முறையில் இலட்சம் இலட்சமாகச் செலவழித்தாலும் சற்குருவோடு அன்னதானம் செய்கின்ற அனுபவமே ஒரு இணையற்ற பேரானந்தத்தை அளிக்கின்றது. என்ன இது! கலியுலகில் நடக்கின்ற காரியமா இது என்று வியப்புறலாம்! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருள்மேற்பார்வையில் நம் சபை அடியார்கள் திருஅண்ணாமலை அன்னதானத்தில் ஆயிரமாயிரம் அற்புதங்களை உய்த்துணரப் பெற்றுள்ளனர். சொற், பொருள், நிலைகடந்த அனுபூதிகள் அவை!
பத்தாயிரக் கணக்கானோருக்கு அன்னதானமிடும் சத்சங்கங்களுக்கு இயன்ற அளவு உதவி செய்திடல் மூலம் திருஅண்ணாமலை தீப அன்னதானத்தின் விசேஷமான புண்ய சக்தியை பெறும் அற்புதமான தெய்வீக சந்தர்ப்பம் கிட்டுகின்றதல்லவா! கோடிட்டுக் காட்டுவார் இல்லையாதலின் மானுட இனம் திசை புரியாது திசைபுரியாது தவிக்கின்றது! இனியாவது அறிந்து பலன் பெறுவீர்களாக!
திருஅண்ணாமலை தீப விழாவின் அன்னதான மஹிமையை வடித்திடில் அதை விவரிக்க யுகங்கள் போதாது! நம் குறுகிய வாழ்வில் விரைந்து செயல்பட்டு குருவருளை நாடும் வழியைக் காண்போமாக..!!!!
அன்னதான மஹிமை
தானத்தில் சிறந்தது அன்னதானம் எனக் கூறக் கேட்டுளோம். அதற்குரித்தான காரணங்களையும் ஓரளவேனும் அறிவோம்! ஆனால் சித்தர்கள் அருளுங் காரணங்களைக் கேட்க மனம் துடிக்கின்றது அல்லவா?
அன்னதானம் செய்கின்ற முறையாக சித்தர்கள் அருள்வதாவது
1. பலர் ஒன்று கூடி அன்னதானத்தில் ஈடுபடுதலே சிறந்தது.
2. சற்குருமார்கள் நடத்துகின்ற சத்சங்கங்கள் மூலம் நடக்கும், அன்னதானம், பணியாளர்களை வைப்பதைவிட கௌரவம், தகுதி அந்தஸ்து, நேரம், காலம், இடம் பொருள், ஏவல் பாராது, அனைவரும் சரீர சேவை செய்தலே உத்தமமானது. வாழ்க்கை முறை காரணமாக உடல் ஒத்துழைக்காவிடினும் இயன்ற அளவு முயற்சி செய்தல் வேண்டும்.
3. இறைநாமம் ஓதியவாறே அனைத்துக் காரியங்களையும் செய்தல் வேண்டும்.
4. அன்னதானத்திலும் நம் வீட்டுச் சமையல் போலத் தரம் இருக்க வேண்டும். ஏனோதானோ என்ற எண்ணம் வரக் கூடாது.
5. தலைவலி, நோய், களைப்பு இவற்றால் பணிபுரிய இயலாவிடில் மானசீகமாக மற்றவர்களுக்கு அன்னதானத் திருப்பணி செய்ய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
6. ‘அடடா! என்னால் வேலை செய்ய முடியவில்லையே’ – என்று எண்ணுவதைவிட ‘இறைவா! மற்றவர்களுக்கு மன உறுதியையும் சக்தியையும் ஊக்கத்தையும் கொடு’ என்பதே உத்தமமான பிரார்த்தனையாக  அமைந்து தார்மீக சிந்தனையை வளர்க்கும்.
7. ஜாதி, மத, இன பேதமின்றி அன்னதானம் செய்தல் வேண்டும்.
அன்னதானத்தில் நடப்பதென்ன?
யாரோ அன்னமிட எவரோ பெறுகின்றார். இதுவே சாதாரணமான கண்களுக்குத் தோன்றும் நிக்ழ்ச்சி! இதன் பின்னால் நடக்கின்ற ஆயிரமாயிரம் ஆன்மீக இரகசியங்களை அறிவிக்கும் வல்லமை பெற்றவர் சற்குரு ஒருவரே. இதை ஒரளவேனும் புரிந்து கொண்டால் தான் ‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்ற சொல்லழகின் பொருள் புரியும்.
சற்குரு வழங்கும் அன்னதானத்தில் நடப்பதென்ன?
வழங்கப்படுவது வெறும் உணவா? இல்லை, இல்லை ஓம் நமசிவாயா, ஓம் நமோ நாராயணா, ராம், ராம் என்றவாறாகப் பல்வேறு இறைத்துதிகள் ஆன்மீக சக்தி சேர்ந்த உணவு! ஆன்மீக உணவு! ஆயிரமாயிரம் இறை நாமாக்கள் செறிந்த உணவு, ருத்ரம், சமகம் போன்ற வேதமறைகள், திருவாசகம், தேவாரம், திருப்புகழ், போன்ற தமிழ் மறைகள் ஓதப் பெற்ற ஆன்மீக உணவு! சாட்சாத் சிவபெருமானாகக் காட்சியளிக்கும் திருஅண்ணாமலையானுக்குப் படைக்கப்பட்ட உணவு! உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கமான திருஅண்ணாமலைக்குப் படைக்கப்பட்ட உணவு! சமையற்காரர்களின்றி அடியார்கள் களத்தில் இறங்கி சுயசேவையில், சுயநலமற்ற உள்ளத்தில் உருவான உணவு! எல்லாவற்றிற்கும் மேலாக இறைப் பரம்பொருள்  நம்மிடையே சற்குருவாக மானுட சரீரத்தில் உலவிட, நடமாடுந் தெய்வத்தின் மேற்பார்வையில், திருப்பார்வையில், அருட்பார்வையில் உருவாகும் உணவு!
அன்னத்தின் சாரம்
இத்தகைய ஆன்மீக சக்தி நிறைந்த உணவானது ஜாதி, மத, இன பேதமின்றி ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் போது
1. அதில் பதிந்திருக்கும் இறை நாமாக்களின் சக்தியால் அதைப் பெறுகின்றவர்கட்கு இறைபக்தியைக் கூட்டும்.
2. அன்னத்தின் சாரமாக இறையருள் சேர்வதால் இந்த ஆன்மீக சக்தி அந்த வறியவர்களின் உடலில் பல வருடங்கட்கு நீடித்து நின்று அற்புதமான சந்ததிகளை உருவாக்கி நல்வாழ்கையைப் பெற்றுத் தரும்.
3. அன்னத்தின் சாரம், நல்லொழுக்கம், பக்தி, நேர்மை ஆகியவற்றைப் பெறுபவர்களிடம் பரப்புகின்றது. இவற்றைப் பொதுவாக பல ஆண்டுகளின் அனுபவத்தினால் தான் பெற இயலும். ஆனால், இத்தகைய அன்னதானத்தின் ஒரு வேளை உணவிலேயே இவை அனைத்தும் பெறப்படுகின்றன.
4. அன்னத்தைப் பெறுகின்ற தரித்திர நிலையில் இருக்கின்ற மனிதன், முன்வினைகளின் காரணமாகவே வறுமையில் உழல்கின்றான். இந்த அன்னத்தின் சாரத்தால், உணவின் ஆன்மீக சக்தியால் அவன் தம் பல கர்மவினைகள் தீரப்பெற்று அவனும் நிவாரணம் பெற்று அவனுடைய எதிர்காலச் சந்ததியினர் நற்கதி அடைவர். சற்குருவே  இவ்விந்தையை ஆயிரமாயிரம் ஏழைகளின் வாழ்வில் அன்னதானத்தின் மூலம் நிகழ்த்துகின்றார்.
5. திருஅண்ணாமலை அன்னதான இறைநெறிப்படி, 1000 ஏழைகட்கு உணவிட்டால் ஒரு சித்த புருஷரே நேரில் வந்து உணவைப் பெற்று அனைவரையும் ஆசீர்வதிக்கின்றார். எவ்வாறு? மகாபாரத்தில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா பாத்திரத்தில் எஞ்சிய சிறுகீரைத்துகளை உண்டிட துர்வாஸ மஹரிஷியின் நூற்றுக்கணக்கான சீடர்களின் வயிற்றுப்பசி பறந்தோடியதல்லவா! இதேபோன்று 1001ஆவது ஜீவனாக அவர் அன்னதானத்தைப் பெற்றுப் பசிப் பிணியை நீக்குகின்றார்.
6. அன்னதான உணவை உண்டு பசியாற வேண்டிய நிலையில் சித்தர்கள் இல்லையெனினும் இந்தக் கைங்கர்யத்திற்குப் பரிசாக நேரில் தரிசனம் தந்து, அன்னதானம் இட்ட அடியார்களையும், அன்னம் பெற்றோரையும் வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றார்.
7. அந்த சித்தபுருஷர் ஒரு முடவனாகவோ, ஒரு காக்கையாகவோ, ஒரு வசதியான மனிதனாகவோ, ஒரு கோவணாண்டியாகவோ எந்த உருவத்திலும் தோன்றலாம். இன்றும் திருஅண்ணாமலையில் தீபப் பெருவிழாவின் போது இந்த அற்புதம் நிதர்சனமாக நிகழ்கின்றது. இதை இன்றும் பலர் அனுபவித்து ஆனந்திக்கின்றார்.
8. சித்தர்களே நேரில் வந்து ஆசீர்வதிக்கின்ற அன்னத்தின் சாரமானது அதனை மனித உடலில் இரத்தமாக, விந்துவாக, பிராண வாயுவாக, அணுவாக, மஜ்ஜையாக, மாற்றி உடலில் சேர்த்து உணவைப் பெறுவரின் பல எதிர்கால சந்ததியினருக்கும் நற்பலன்கள் சென்றடைகின்றன.
9. இவ்வாறாக ஒருவேளை அன்னதானத்தின் ஆன்மீக சக்தி, குருவருளால் பல தலைமுறைகட்கும் சென்றடைவதால் தானத்தில் சிறந்தது அன்னதானமாகப் போற்றப்படுகிறது.
10. சற்குரு நடத்தும் அன்னதானத்தில் கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தங்கள், வில்வம், துளஸி போன்ற அற்புத இறை மூலிகைகள், காசி, இராமேஸ்வரம், வைதீஸ்வரன் கோவில், திருவிடைமருதூர், ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீசபரிமலை போன்ற திருத்தலங்களின் பிரசாதங்கள், ஹோம குண்டத்தின் விபூதி பிரசாதம் போன்ற புனிதப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், அன்னதானத்தைப் பெறுகின்ற, சமுதாயத்தில் ஒதுக்கப்படுகின்ற தொழுநோயாலிகள் போன்றோர்க்கு, அவர்களால் மனதால் எண்ண இயலாத அளவிற்குப் புனிதமான இறைப்பிரசாதங்கள் அவர்களைச் சென்று அடைகின்றன. இது அவர்களுடைய ஏக்கங்களைத் தணிக்கும் அதி அற்புத மருந்தாக அமைகின்றது. ஒரு குருடரால் சபரிமலைச் செல்ல முடியுமா? ஆனால் ஸ்ரீசபரிமலைப் பிரசாதம் கலந்த உணவை அன்னதானத்தில் பெறுகிறார்.
11. ஊனமுற்றோர், குருடர்கள், நாடோடிகள், தொழுநோயாளிகள் போன்றவர்கட்கு மேற்கண்ட பிரசாதங்களைப் பெறுவது என்பது ஒரு நம்ப முடியாத செயலல்லவா? இதனையே ஒரு சற்குரு மெய்ஞ்ஞான விந்தையாக, ஜாதிமத பேதமின்றி அன்னதானம் மூலமாக நடத்துகின்றார்.
12. திருஅண்ணாமலைத் தீப அன்னதானத்தில் லட்சோப லட்ச மக்கள் மட்டுமின்றி, கோடானு கோடி தேவர்கள், கந்தர்வர்கள், கிம்புருடர்கள், வசு-ருத்ர-ஆதித்ய பித்ரு தேவர்கள், சப்த ரிஷிகள், சப்த கன்னி மாதாக்கள், கோஷ்ட தேவதைகள், ஸ்ரீவித்யா சக்கரத்தில் உறையும் 48 கோடி தேவியர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், தர்ம தேவதைகள் மஹரிஷிகள், யோகிகள், ஞானிகள், மூம்முட்சுக்கள், பிரம்ம ரிஷிகள், இறைத்தூதுவர்கள், ஜீவன் முக்தர்கள், நவநாத சித்தர்கள், சித்த மஹாபுருஷர்கள், தெய்வாவதார மூர்த்திகள் போன்ற மனித மனத்திற்கு எட்டாத கோடானு கோடி தெய்வாதியரின் முன்னே நிகழ்கின்ற இந்த அன்னதானத்தில் இவர்கள் அனைவருடைய கருணை, ஆசீர்வாதம், அனுக்ரஹம் அனைத்தும் ஒன்று சேர்ந்து அன்னதான  உணவை தெய்வீக உணவுப் பொருளாக மாற்றுகின்றன.
இவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாத மெய்ஞ்ஞான தெய்வீக விந்தைகளாகும். விஞ்ஞானத்தின் பகுத்தறிவால் உய்த்துணர இயலாது. விஞ்ஞானமே இறைவனின் படைப்பண்றோ! திருஅண்ணாமலை தீபத்தின் அன்னதான மஹிமையை மேலும் விவரித்துக் கொண்டே செல்லலாம். கேட்டு ஆனந்திக்கப் பிறவிகள் போதா! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இங்கு கோடிட்டுக் காட்டியுள்ளதைச் சிக்கெனப் பிடித்து சதாசிவனாம் ஸ்ரீஉண்ணாமலை சமேத திருஅண்ணாமலையார் அருளைப் பெறுவோமாக!
இயற்கை (எண்ணெய்) ஜோதி
இருள் கெடுத்தார், அருள் கொடுத்தாரே!
என்று எண்ணெய் தீப ஜோதியைப் பற்றிக் கூறுகின்றனர். பல வருட இருளை ஒரு சிறிய அகல் விளக்கின் ஜோதி போக்கி விடுகின்றது. இருள் என்றால் தீய எண்ணங்கள் என்ற பொருளும் உண்டு. காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றும் போது அந்த எண்ணெய் தீப ஜோதியின் ஆன்மீக சக்தியால் பல அற்புதங்கள் விளைகின்றன. சந்தியா, சரஸ்வதி, காயத்ரீ என்ற மூன்று தேவியரும்  முறையே காலை, மதியம், மாலை மூனறு வேளைகளிலும் காலத்தை ஆள்கின்றனர். இந்த கால நேரங்களில் (காலை 5-6, மதியம் 11-12, மாலை 5-7) எங்கெல்லாம் இயற்கை எண்ணெய் ஜோதி தென்படுகின்றதோ அங்கெல்லாம் இத்தேவியர் ஆவாஹனமாகி அருள்புரிகின்றனர். இவர்கள் ஜோதி ரூப தேவியர்கள் ஆதலின் சோதியில்தான் தங்கி அருள் பாலிக்க முடியும். எனவேதான் காலை, மாலைகளில் தீபமேற்றும் நற்பழக்கம் நிலவுகின்றது. மதியத்தில் விளக்கேற்றும் பழக்கம் மறைந்து விட்டதா என்ற வினா எழலாம்.
ஔபாஸனம் அல்லது அக்னி சந்தானம், அக்னி ஹோத்ரம் என்ற ஒளி வழிபாடு ஜாதி இன பேதமின்றி அனைவரும் செய்ய வேண்டியதாகும். சிறு ஹோம குண்டம் அமைத்து ஜோதிலிருந்து ஹோம நெய்யில், தாமரைத் தண்டுத் திரியில் விளக்கேற்றுவர். ஹோமத்தின் முடிவிலும் தீபம் ஏற்றுவதுண்டு. இந்த மதிய வழிபாடும் வழக்கில் மறைந்து விட்டது. இவ்வாறாக நித்ய பூஜைகளை மனித குலம் மறந்ததினால் தான் வாழ்க்கைத் துன்பங்களும், வன்முறைகளும் பெருகிவிட்டன.
இருளை நீக்குவோம்
இருளோ பல வித நோய்களையும், தீவினைகளையும் உருவாக்குகின்றது. ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றினால் போதும் அனைத்துத் தீவினைகளும் ஆவிகளும் பறந்து விடும். இதனால் தான் இறந்தவர் வீட்டில் அவர் இறந்த இடத்தில் பத்து நாட்களுக்கு தீபம் ஏற்றும் பழக்கம் நிலவுகின்றது. தற்காலத்தில் மண்ணெண்ணெய், காஸ் விளக்குகளை ஏற்றுகின்றனர். இது தவறு. தாவர எண்ணெயின் ஜோதியையே ஏற்ற வேண்டும். இதனால் ஆவி சேஷ்டைகள் இரா, ஏனெனில் தீய ஆவிகள் ஜோதியைக் கண்டால் ஓடிவிடும். காரணம் விளக்கில் ஆவாஹனமாகும். பிரம்ம தேவதை, ஜோதிக்குரித்தான சந்தியா, சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரீ, த்ரிசதி போன்ற தேவதைகள் இல்லத்திற்குக் கவசமாக நின்று தீய ஆவிகளை விரட்டி விடும். எனவே இல்லத்தில் எப்போதும் ஜோதி (மின் விளக்கல்ல, எண்ணெய் விளக்கே) எரியுமாயின் அது மிகச் சிறற்த ஆன்மீகக் காப்பாக அமையும்.
இயற்கை எண்ணெய் ஜோதி கண்களுக்கு மிகவும் நன்மை தரும். மின்விளக்கு, சீமை எண்ணெய் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு ஆகியவை தீமை பயக்கும். இந்த நவீன காலத்தில் பூஜை அறையிலாவது தாவர எண்ணெய் விளக்கு ஜோதியே ஏற்றப்பட வேண்டும். மின் விளக்கான Night Lamp ஐப் பூஜை அறையில் எப்போதும் எரியவைப்பது நாகரீகமாகி விட்டது. இது தவறு! பசு நெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்றவையே ஏற்றவையாம். கடலை எண்ணெய் அறவே கூடாது. கடலை எண்ணெயால் விளக்கேற்றினால் சாபங்களே மிகும்.
நல்லெண்ணய் ஜோதி : - பெருமாளுக்கு உரிய சிறந்த மூலிகையான எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் ஏற்றப்படும் ஜோதி வாஸவி வீர்யக் கிரணங்களை உருவாக்குகிறது. இது பித்தத்தைப் போக்கும். பித்தாதிக்க நோய்கள், கட்டிகள், கல்லீரல் நோய்களைப் போக்கும். ஜோதியைப் பார்த்தவாறே வாஸவி வீர்ய தேவியைத் துதித்திட கிரணங்கள், கண்கள் வழியே பாய்ந்து உடம்பிலிருந்து பித்த நோய்களைத் தீர்க்கும்.
விளக்கெண்ணெய் ஜோதி :- ஆமணக்கெண்ணெய் பராசக்திக்குப் ப்ரீதியான பிணையீஸ்வர ஜோதியை உருவாக்கும். விளக்கெண்ணெய் ஜோதியானது கண் சிவத்தல், பூ விழுதல், வீங்குதல், conjunctivitis, Madras Eye போன்ற கண் நோய்களுக்குத் தடுப்பாய் (prophylaxis) அமையும், ஜோதியை உற்று நோக்கி தியானித்திட அதன் கிரணங்கள் கண்கள் வழியே பாய்ந்து ஆரோக்யத்தைத் தரும்.
பசு நெய் தீபம் :- பசு நெய் உருவாக்கும் ஸ்துகோல வ்ரதாதி கிரணங்கள் உடலின் துர்நாற்றைப் போக்கும். ஜோதியை உற்றுப் பார்த்தாவாறே ஸ்துகோல தேவியைப் பிரார்த்திக்க கிரணங்கள் கண்களின் வழியே பாய்ந்து உடலின் சொல்லொணா துர்நாற்றத்தைப் போக்கும்.
தேங்காயெண்ணெய் தீபம் : பிள்ளையாருக்குப் ப்ரீதி அளிக்கும் தேங்காய் எண்ணெய் தீப ஜோதியானது ‘ம்ருதுபல பாலா’ என்ற கிரணங்களை உருவாக்குகின்றது. இது தோல் வியாதிகளுக்கு நிவாரணமளிக்கின்றது. தினமும் தேங்காய் எண்ணெய் ஜோதியில் தன் தேகத்தைக் காட்டி அமர்ந்த வண்ணம் ஜோதியை நோக்கி ‘ம்ருதுபல பாலா தேவியை’ தியானித்திட எத்தகைய கடுமையான தோல் வியாதிகளும் குணமாகும்.
இலுப்பை எண்ணெய் தீபம் : சிவபெருமானுக்குப் ப்ரீதியான இலுப்பை எண்ணெய் உறையும் தன்மை உடையது. ‘சுராபவிருத்யாதி’ கிரணங்களை இலுப்பையெண்ணெய் ஜோதி வெளியிடுகிறது. இந்த கிரணங்கள் எவ்வித அலர்ஜியையும் குணப்படுத்துகிறது. தினமும் இலுப்பை எண்ணெய் ஜோதியைப் பார்த்த வண்ணம் தியானித்திட ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் குணமாகின்றன.
திருஅண்ணாமலை தீப சேவை
திருஅண்ணாமலை தீபத் திருநாளில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றதல்லவா! அப்போது பஞ்சதீபத் தைலம் எனப்படும் தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்தையும் கலந்து மலை மீது (பிராத்தனை இருந்தால் மட்டும்) ஏறிச் சென்று அங்கிருக்கும் எண்ணெய்க் கொப்பறையில் ஊற்றலாம் அல்லது ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் பெரிய கொப்பறையில்  எண்ணெய் ஊற்றலாம். இது மட்டுமல்லாது மருதாணித் தைலம், பொன்னாங் கண்ணித் தைலம், செம்பருத்தித் தைலம் போன்ற மூலிகைத் தைலங்களையும் சேர்க்கலாம். இதற்கு விசேஷமான பலன்கள் உண்டு. இவற்றை சற்குருவை நாடி அறியவும். மேலும் தீபம் ஏற்றுவதற்காக புதிய 4 முழம், 8 முழ வஸ்திரங்களை அளிப்பதும் சிறந்த திருப்பணியாகும். பலர் ஒன்று கூடி புதிய 4 முழ, 8 முழ வஸ்திரங்களைக் குவித்துக் குறைந்தது 10000முறையாவது காயத்ரீ மந்திரம் ஓதி தீபத்திரிக்காக அதனை அளித்திடில் அடையும் பலாபலன்களோ எண்ணற்றவை! சந்ததி பெருகும்! பயிர் விளைச்சல் கூடும்! வியாபாரம் அபிவிருத்தியாகும். கூட்டு நாம ஜபத்தில் 25 பேர் ஒன்று கூடி 400 முறை காயத்ரீ மந்திரம் சொன்னால் போதும் 10000ஆகிவிடும். இது எளிதல்லவா! இதுவே சத்சங்கத்தின் மஹத்வம்!
 திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் எந்த நற்காரியம் நிகழ்ந்தாலும் அதன் பலன்கள் 1000 மடங்காகப் பெருகின்றதல்லவா. இங்கு நடக்கும் யாக, வேள்வி ஹோமங்களின் ஆன்மீக சக்தியை விவரிக்க இயலாது. மற்ற இடங்களில் நடக்கும் ஹோமங்களில் ஸ்வாஹா தேவதை, ஹோம குண்ட அக்னியில் இடப்படும் ஆஹுதியைப் பெற்று அந்தந்த லோகத்திற்கு அளிக்கின்றது. கணபதி ஹோமம் என்றால் ஸ்வாஹா தேவதை, அஹுதியை ஸ்ரீகணபதி லோகத்திற்கு அளிக்கின்றது. திருஅண்ணாமலையில் நிகழும் ஹோம ஆஹுதிகளை ஸ்வாஹா தேவதை பெற்றுத் திருஅண்ணாமலை உச்சியில் (மலையில்) எப்போதும் சூட்சுமமாக எரிந்து கொண்டிருக்கும் ‘யோக தண்ட க்ரியா சக்தி’ அக்னியில் சேர்த்துவிட அந்தந்த தெய்வ மூர்த்திகளுக்கே நேரிடையாக அந்த ஆஹுதி சென்று விடுகிறது..! ஹோமத்தில் இடும் ஆஹுதிகளைப் பெரும் தேவதைக்கு ‘ஸ்வாஹா’ தேவதை என்று பெயர். அக்னி பகவானின் பத்னித் தெய்வமே ஸ்வாஹா தேவி!
திருக்கழுக்குன்றத்தில் ஹோமம்
ஸ்ரீஅக்னி பகவான் நான்கு முகங்கள், இரண்டு நாக்குகளை உடையவர்! ஸ்ரீபகவானின் திருஉருவத்தைக் காண்பதே அரிது! திருக்குழுக்குன்றம் ஸ்ரீபக்தவத்சல சிவபெருமான் கோயில் முன் மண்டபத்தில் ஸ்ரீஅக்னிபகவான் திரு உருவம் பொறிக்கப் பெற்றுள்ளது. எனவே இம்மண்டபத்தில் ஹோமம், குறிப்பாக புத்ரகாமேஷ்டி யாகம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் தன் பதி எழுந்தருளியிருக்கும் இம்மண்டபத்தில் ஸ்ரீஸ்வாஹா தேவி தன் பதியுடன் சேர்ந்து பதிபத்னியாக ஆஹுதியைப் பெறுவதால் தம்பதிகள் சமேதம் இங்கு நடத்தும் ஹோமங்கள், குறிப்பாக புத்ர பாக்யம் வேண்டி செய்யப்படும் ஹோமங்கள், தக்க தான தர்மங்களுடன் நிகழ்த்தப் பெறின் கை மேல் பலன் தர வல்லதாகும். இம்மண்டபத்தில் தம்பதிகள் சமேதம் ஹோமம் செய்து கர்பிணிகளுக்கு உணவு, மருந்துகள், டானிக்குகள், ஆடைகள், தொட்டில்கள் தானமளித்திட தக்க பலன்கள் கிட்டும். ஹோமத்தை இங்கு நடத்தி, கர்பிணிகளுக்கான அனைத்து உதவிகளையும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். தம்பதிகளில், மனைவியின் வயது எத்துணை வருடங்களோ அத்தனை கர்பிணிகளுக்கு, உதவி செய்திடல் வேண்டும். ஹோமத்திற்கு முன்போ அல்லது பின்னரோ இந்த தான தர்மங்க்ளைச் செய்திடல் வேண்டும். இத்தகைய அனுக்ரஹத்தை வழங்கிய சித்தபுருஷரே ‘குருலிங்க முத்திரை சித்தர்’ ஆவார். இவரும் இந்த மண்டபத்திலேயே எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி ஆசி பெற்று ஹோமத்தை நடத்துதல் வேண்டும். ஹோமத்திற்குப் பசு நெய்தான் உகந்தது. சிராத்தூள், விறகுக் குச்சிகளை ஹோமத்தில் சேர்க்கலாகாது. அக்னிக்கு பசுஞ்சாண விரட்டி மற்றும் அரசு, ஆல், வேம்பு, நாயுருவி ,புரசை, மா, பலா, எருக்கு போன்ற ஹோம சமித்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஆன்மீக இரகசியங்களை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து எடுத்தருளி அருட்பணி ஆற்றுபவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
திருஅண்ணாமலை ஹோமம்
திருஅண்ணாமலை தீபப் பெருவிழாவில் நடக்கும் பல ஹோமங்களில் சவுக்கு, புளியமரம், கருவேல மரம், காட்டு மரத் துண்டுகள் எரிக்கப்படுகின்றன. ஹோமத்தில் சமித்துக்குரிய வகைகளே பயன்படுத்த வேண்டும். ஏனையவற்றைப் பயன்படுத்தினால் கடுமையான சாபங்கள் வந்து சேரும். சந்ததியின்மை, கொடிய நோய்கள், வறுமை, நஷ்டம், தோஷங்கள், பில்லி, சூன்ய, ஏவல் துன்பங்கள் போன்றவைகளாக அவை அமையும். பூலோகத்தில் எங்கு ஹோமம் நடப்பினும் சமித்திற்குரிய மரச் குச்சிகளே ஆஹுதிகளாகப் பயன்படுத்தப் பட வேண்டும் என்பது சித்தர்களுடைய நெறிமுறை. பிரபஞ்சத்திலேயே பிற எந்த லோகத்திலும் இல்லாத அளவிற்குக் கோடிக் கோடியான சித்த புருஷர்கள் உலவும் திருஅண்ணாமலையில் ஹோமங்களில் எவ்விதத் தவறும் நிகழலாகாது!

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டிக்குரித்தான ஆறுநாட்களும் விரதமிருந்து ஸ்ரீசுப்ரமண்ய அஷ்டோத்திரம், த்ரிசதி, சஹஸ்ரநாமம், திருப்புகழ், கந்த சஷ்டிக்கவசம், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம், பகை கடிதல், கந்தர்கலிவெண்பா, கந்தரனுபூதி போன்றவற்றைப் பாராயணம் செய்திட, கோழைத்தனம் விலகிப் பகைவர்களால் வருந்துன்பங்கள் மறைந்து அற்புதமான முறையில் மனோதைர்யம், வீடு, வாகன வசதிகள் கிட்டும். தன்னால் உண்மையான மனத்துடன் பூஜை செய்ய முடியவில்லையே என ஏங்குவோர்க்கு கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறு நாட்கள் விரதமானது கைமேல் பலனளிக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டோடு இஷ்ட தெய்வ மூர்த்தி ஒன்றையுந் தேர்ந்தெடுத்து அம்மூர்த்தியைத் தினந்தோறும் பூஜிக்க வேண்டும். ‘ஒருவனே தேவன்’ என்பது உண்மையே. ஆனால் ஒருமுகப்பட்ட நிலையில் இறைவனை வழிபடும் உயர்ந்த நிலை கிட்டும்வரை ஒரே தேவனைப் பல உருவங்களில் வழிபடுதலே இறைவனை அடையும் எளிய வழி ஆகும். பெரும்பான்மையான ஆத்திகப் பெருமக்கள் ஸ்ரீமுருகப் பெருமானையே இஷ்ட மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
 ‘அப்பனே முருகா! காப்பாத்துடாப்பா’ என்று உரிமையோடு நாம் பேசுகின்ற தெய்வ மூர்த்தி முருகப் பெருமானே! ‘முருகா! ஏண்டாப்பா இவ்வளவு சோதனை தந்து கஷ்டப்படுத்துறே’ என்ற வாத்ஸல்யத்துடன் சிநேக பாவனையில் நாம் உரிமையோடு பேசக்கூடிய தெய்வம் கந்தவேளே!
சூர சம்ஹாரம்
‘சூர சம்ஹாரம்’ எனில் நம்மிடம் குடி கொண்டிருக்கும் கோபம், லோபம், மதம், மாச்சரியம், விரகம், பொறாமை, பகைமை போன்ற அசுரகுணங்கள் சம்ஹரிக்கப்பட வேண்டியவையாகும் என்பதையே உணர்த்துகிறது. ஆறு நாட்களிலும் ஆறுமுகப் பெருமானின் ஆறு சிரசுகளும் விதவிதமான அனுகிரஹங்களை அருள் பாலிக்கின்றன. நம்மிடம் உள்ள அசுர குணங்களைச் சம்ஹாரம் செய்தால் தான் உண்மையான பக்தியைப் பெறுவோம். இறை தரிசனம் பெறுவோம், பிறவிப்பிணி அகலும். இம் மூன்றையும் ஒருங்கே தரவல்லது குருவருளே. குருகுஹனாகிய குமரப் பெருமானே சற்குருமார்களாக எங்கும் வியாபிக்கின்றார். தந்தைக்குபதேசித்த ஞானத் தந்தையாம் வடிவேலன் எளிமையான பூஜையிலேயே மகிழ்வடைகின்றான்.
பாமரர்களுக்குரிய கடவுள்
ஆறுநாள் கந்தசஷ்டி விரதத்தினை வருடந்தோறுங் கொண்டாடிட நம்மிடம் உறையும் சூரபதுமஅசுர குணங்களை எளிதில் வென்று பிறவிப் பிணியை சம்ஹாரம் செய்யும் வழி காணலாம். நவராத்திரி பூஜை, கந்த சஷ்டி விரதம், தீபாவளி, பொங்கல், மாளய பட்ச தர்ப்பணங்கள் போன்ற பல பண்டிகைகளும் தான தர்மங்களுடன் கூடிய பூஜைகளையே உன்னத பக்தி நிலை தரும் மார்கம் என வலியுறுத்துகின்றன. தான, தர்மங்களும் இறைப் பணிகளுமே பல தீய குணங்களை அழித்துக் கர்மவினைகளைப் போக்கித் தூய மனதை பக்தி நெறிக்கு மூலதனமாக்குகின்றன.
கந்தசஷ்டி விரதம் – பிரதமை திதி
ஆறு திதிகளில் முதல் திதியான பிரதமைக்குரிய பூஜையில், தாயை இழந்தவர்கள் தன் தாய் உயிரோடிருந்தால் என்ன வயதாகியிருக்குமோ குறைந்தது அத்துணை வருடங்கள் பழைமையான திருக்கோயிலைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். உதாரணமாக இவ்வருடம் தன் தாய் உயிரோடிருந்தால் 80 வயது ஆகியிருக்கும் என்று கணக்கிட்டால் 80 வருடங்களுக்கு மேல் தொன்மையான கோயிலைத் தேர்ந்தேடுத்தல் வேண்டும். 60, 65, 71, 82 ...... என்றவாறு தாயின் வயதமைந்திருந்தால் முதல் இலக்கத்தைக் கொண்டு 7 அல்லது 8 புடைவைகளை தானமாக அக்குறிப்பிட்ட கோயிலில் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ரவிக்கை துணி, உள்ளாடைகளோடு சேர்த்துத் தானமளித்தல் விசேஷமானதாகும். இவ்வாறு தானம் செய்திட, இறந்த தாய் மேற்கண்ட தானத்தைப் பெறுபவர்களாக உருக்கொண்டு அல்லது தானத்தைப் பெறுபவர்களின் உருவத்தில் ஆவாகனமாகி தானத்தைப் பெற்று நிறைந்த ஆசிகளை வழங்கிச் செல்கின்றனர். ‘மேலுலகில் இருந்து தன் தாய் நேரடியாகவே ஆசி வழங்குதல் கூடாதா’ என்று கேட்டிடலாம். மேலுலகம் சென்றவுடன் அத்தாய் ஆன்மாவிற்கு இப்பிறவிப் பிள்ளைகள் மட்டுமின்றி எத்தனையோ பிறவிகளில் பெற்ற ஆயிரமாயிரம் பிள்ளைகளைக் கவனித்து ஆளாக்கி ஆசீர்வதிக்கின்ற பெரிய பொறுப்பு அமைகின்றது. ஏழைகளுக்குச் சேவைகள் புரிந்து நல்வழியில் நடக்கும் சந்ததியினருக்கு மிகுந்த ஆசீர்வாதங்களை அருள்கின்றனர். இவ்வாறாகத் தர்ப்பணங்கள், தான தர்மங்கள் செய்வோர்க்கே இறந்த தாயின் பரிபூரண ஆசிகள் கிட்டும்.
தற்காலத்தில் தர்ப்பணங்கள் முறையாகச் செய்வது அருகிவிட்டமையால் மேற்கண்ட முறையில் சித்தர்கள் அருள்கின்ற தானங்களே தக்க பரிகாரங்களாக அமைந்து பித்ருக்களின் சாபங்களிலிருந்து அவர்தம் வம்சா வழியினரைக் காப்பாற்றுகின்றது.
பித்ரு பூஜை
பொதுவாக அமாவாசையன்று அனைத்துப் பித்ருக்களும் பூலோகத்தில் கடல் ஆறு, கோயில்கள், குறித்த தீர்த்தங்கள் போன்றவற்றில் கூடித் தர்ப்பணங்களை நேரடியாகப் பெறுகின்றனர். ஏனைய இடத்தில் செய்யும் தர்ப்பணங்களை ஸ்வதா என்னும் தேவி பெற்றுச் சென்று பித்ரு லோகத்தில் சமர்ப்பிக்கின்றாள்.. திருவிடைமருதூர், காசி, திருவள்ளூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை, கயா, பிரயாகை, திருப்புல்லாணி – தர்ப்பசயனம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் இதர புண்ணிய நதிகள், தீர்த்தங்கள், சமுத்திரங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி இத்தலங்களில் கூடுகின்ற பித்ருக்களிடம் நேரடியாகவே அளிக்கின்றாள். இத்தலங்களில் பித்ருக்களின் மூர்த்திகளின் ஆசி பன்மடங்காகப் பெருகி இத்திருத்தல தெய்வ மூர்த்திகளின் திரண்ட அனுக்ரஹத்தையும் பெற்றுத் தருகிறது.. அமாவாசைக்குப் பிறகு பித்ருக்கள் தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தெய்வ தரிசனத்திற்காகப் பல பூஜைகளையும், தங்களுடைய வம்சாவழியினரைக் கரையேற்றுவதற்காக அவர்கள் மூலம் தான தருமங்களையும் ஆற்றுகின்றனர். இவ்வகையில் தாய்வர்கத்தைச் சேர்ந்த பித்ருக்கள் சுக்ல பக்ஷ ப்ரதமைத் திதியில் (அமாவாசைக்கடுத்த ப்ரதமைத் திதியில்) சந்திர மண்டலத்தில் ஹோம, யாக, வேள்விகளை நட்த்த ஸ்ரீபரமசிவனின் சிரஸில் ஒளிரும் பாக்யம் பெற்ற ஸ்ரீ நட்சத்திர பூஷண சந்திர பகவானைத் துதிக்கின்றனர். ஜன்ம நக்ஷத்ரத்திற்கும், சந்திர கிரஹத்திற்கும், நெருங்கிய தொடர்புண்டு. எனவேதாம் ப்ரதமைத் திதியில் தாய்வர்க்கப் பித்ருக்கள், தம் வம்சாவளியினருக்காக சந்திர பகவானிற்குப் பூஜைகள் செய்கின்றனர். இத்திதியில் மேலே கூறியவாறு குறித்த காலத் தொன்மையுடைய கோயில்களில் செய்யும் தான தர்மங்கள், சந்திர பகவானையும் தாய் வர்கப் பித்ருக்களையும் திருப்திப்படுத்தும்.
கந்தசஷ்டி விரதம் – த்விதியைத் திதி
இறந்த தந்தையின் வயதுகால அளவிற்கேனும் தொன்மை பெற்ற பெருமாள் கோயிலைத் தேர்ந்தெடுத்து அவருடைய தற்போதைய வயதின் முதல் இலக்கத்திற்கேற்ப எண்ணிக்கையிலான வேஷ்டி சட்டை துண்டுகளைத் தானமாக அளிக்க வேண்டும். (உம்) 1992ல் 81 வயதில் காலமான தந்தைக்குத் தற்போது (1994ம் வருட கந்த சஷ்டியில்) 83வயது ஆகியிருத்தலால் அவர்தம் வம்சாவழியினர் எட்டுப் பேருக்கு வேஷ்டி, சட்டை, துண்டு (பெருமாள் கோயிலில்) தானமளிக்க இறந்த அத்தந்தையர் திருப்தியடைந்து ஆசிகள் வழங்குவர். மேலும் தந்தைவழிப் பித்ருக்கள் மேற்கண்ட துலாமாத சுக்லபக்ஷ த்விதியைத் திதியன்று பெருமாள் கோயிலில் மேற்கூறியவாறு அளிக்கப்படும் தானங்கள் தந்தை வழிப் பித்ருக்களையும், ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியையும் திருப்தியடைவிக்கச் செய்வதால் அவர்கள் ஆசி நமக்கு எளிதில் கிட்டும். இதனால் தீர்க்கமான அறிவு, நல்ல சந்ததியும் உண்டாகும். மேற்கண்ட ப்ரதமை திதியில் தாய்க்குப் பிடித்தமான உணவினையும் அரிசியால் ஆன உணவு உப்புமா ஆகியவற்றைத் தானம் செய்தல் வேண்டும்.
த்விதியைத் திதியில் தந்தைக்குப் பிடித்தமான உணவினையும் அல்லது கோதுமையால் ஆன உணவு/ உப்புமா ஆகியவற்றைத் தானம் செய்தல் வேண்டும்.
கந்த சஷ்டி விரதம் – த்ரிதியைத் திதி
இத்திருதியைத் திதியில் இறந்த தன் சகோதரியின் (தற்போதைய வயதைக் கணக்கிட்டு) அவ்வயதுள்ள ஏதேனும் ஒரு பெண்ணிற்கு சப்த கன்னிகள், கன்னியாகுமரி, கன்யா பரமேஸ்வரி போன்ற கன்னித் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோயிலகளில் இயன்ற தான தர்மங்கள் செய்ய வேண்டும். கன்னிப் பெண்ணாயிருப்பின் தாவணி, குங்குமம், மஞ்சள், வளையல் செட் அளித்தல் விசேஷமானதாகும். இதனால் பிள்ளைகள்/பெண்களுக்கு எவ்விதத் தடங்கலுமின்றித் திருமணம் கைகூடும். தம் பெண் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தணியும்.
கந்தசஷ்டி விரதம் – சதுர்த்தி திதி
எங்கும் சிவலிங்க மூர்த்திகளைச் சுற்றியிருக்கும் நாக தேவதைகட்கு நாகராஜ தேவதைகள் என்று பெயர். ஏனைய நாகங்கள் பெண் நாக தேவதைகளாகும். இறந்த தன் சகோதரனுக்காகப் பிரார்த்தித்துச் சதுர்த்தி திதியில் நாகராஜ தேவதைகள் அமைந்துள்ள கோயில்களில் கல்யாணாமாகாத பிரம்மச்சாரிகளுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி போன்ற இயன்ற சேவைகளைப் புரிந்திடல் வேண்டும். இதனால் பிள்ளைகள் எவ்விதக் கெட்ட பழக்கங்களுக்கும் ஆகாமல் ஒழுக்கத்தோடு வாழ்வர்.
கந்தசஷ்டி விரதம் – பஞ்சமிதிதி
பஞ்சமித் திதியில் 60 வயதிற்கும் மேற்பட்ட சுமங்கலித் தம்பதிகளை ஏதேனும் மலைக்கோயிலுக்கு (திருநீர்மலை, திருக்கச்சூர், த்ரிசூலம், குன்றக்குடி, மலைக்கோட்டை.....) அழைத்துச் சென்று தரிசனம் செய்ய ஆவன உதவிகள் செய்ய வேண்டும். அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று வருதல், புடவை, வேஷ்டி அளித்தல், அவர்கட்குக் கண்ணாடி, கைத்தடி போன்றவை அளித்தல், அவர்கட்குப் பிரியமான உணவளித்தல், மனதாரப் பேசுதல் போன்றவை நற்சேவைகளாகும். இதனால் வயதானபின் தம் பிள்ளைகள் நல்ல முறையில் கவனித்து உதவுவர்.
கந்த சஷ்டி விரதம் – சஷ்டி திதி
இறந்த தன் சகோதரனுக்காக இத் திதியில் காவடி எடுத்தல், தீமிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்ற முருக பக்தர்களுக்கு இயன்ற பண உதவி, தாக சாந்தி, சந்தனம் அரைத்துக் கொடுத்தல், தைலமளித்தல் போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும். இத்தகைய ஆறு வகையான சேவைகளையே ‘கந்தசஷ்டி விரதம்‘ எனச் சித்தர்கள் போற்றுகின்றனர். உபவாசம், பூஜை முறைகளை அனுஷ்டிக்க இயலாதோர் மேற்கண்ட தான தருமங்களை நிறைவேற்றிட முறையான விரதத்திற்கீடான பலன்களை இவை அளித்திடும் எனச் சித்தர்கள் அருள்கின்றனர். உபவாசம், நியம நிஷ்டைகளுடன் மேற்கண்ட தான தர்மங்களை நிறைவேற்றிட முருகனின் திரண்ட அருளைப் பெற்று மகிழலாம்.
1. தாய், தந்தை சகோதர சகோதரிகள் உள்ளோர் அவரவர் வயதிற்கு ஈடான வறியோர்களுக்குச் சேவை செய்திடல் வேண்டும்.
2. சகோதர , சகோதரி இல்லாதோரும் கன்னிப் பெண்கள்/பிரம்மச்சாரிகளுக்கு தான தர்மங்கள் செய்திட வேண்டும்.
3. இறையருளால் அனைவருடனும் வசிப்போர் அவரவர் வயதிற்கேற்ற சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கைக் கேற்ப ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும்.
(உதாரணமாக) 2 சகோதரர்களுடனும், 2 சகோதரிகளுடனும் உள்ள ஒருவர் தம் சகோதரர்களின் வயதுள்ள 2 பெண்களுக்கும் சகோதரிகளின் வயதுள்ள 2 ஆண்களுக்கும் தானம் செய்திடல் வேண்டும்.
4. இறந்த தாய் தந்தையரின் வயது 100 ஆண்டுகளைத் தாண்டினால் முதல் 2 இலக்கங்களை மூன்றாவது இலக்கத்துடன் கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக : இறந்த தந்தையின் தற்போதைய வயது 115 என்றால் 11+5=16 என்ற முறையில் கணக்கிட்டு 16 பேருக்குத் தான தர்மங்களைச் செய்திடல் வேண்டும்.
பத்தாண்டு விதி முறைகள்
கந்தசஷ்டி விரத தான தருமங்களில் முதல், அல்லது முதலிரண்டு இலக்கங்களைக் கொண்டு தான தருமங்களை நிர்ணயிப்பதின் தாத்பரியம் என்ன? ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு 10 ஆண்டும் ஒவ்வொரு பருவத்தைக் குறிக்கின்றது. பால பருவம், விடலைப் பருவம், இளம் பருவம், நடுப் பருவம் என்றவாறாக பல பருவங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சத்சங்கத்தில் கூட குறைந்தது 10 ஆண்டுகள் குருவோடு ஒட்டி வாழ்வோருக்குத்தான் பொதுவாக கர்மங்களை உணர்ந்து, தாங்கி வாழ்ந்து வரும் பக்குவம் உண்டாவதாகச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். 10 ஆண்டுகள் தொடர்ந்து திருஅண்ணாமலைத் தீப அன்னதானம், 10 வருட சபரிமலை யாத்திரை, 10 வருடம் வருடமொரு முறையாவது காவடி எடுத்தல் என்றவாறாகப் பத்து ஆண்டுகளுக்குச் செய்யும் நற்காரியங்கள் பெரிய விண்ணுலக உயர்நிலைகளையும், அருள் பாக்கியங்களையும் அளிக்கின்றது. இறந்த தன் எண்பது வருடத் தாயாருக்கு கந்த சஷ்டிப்பிரதமைத் திதியில் செய்யும் தான தருமங்களினால் அந்த தேகம் 7 பத்து ஆண்டுகளில் செய்த நற்காரியங்களின் புண்ணிய சக்தி ஆசீர்வாதமாக மாறுகிறது. அதாவது பிள்ளைப் பேறாக, பணவரவாக உயர்ந்த உத்யோகமாக, வீடு, வாகன வசதிகளாக, இவ்வாறான பயன்களைத் தரவல்லதாகும். பத்து, பத்தாம் நாள் கிரியை எனப்படுபவை எல்லாம் பத்தாண்டு கால கர்மவினைப் பாங்கினைத் தான தர்மங்களால் பரிபாலனம் செய்வதையே குறிக்கின்றது.
யாக்ஞ வல்கியர் ஜயந்தி
ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் உரித்தானவர் யாக்ஞ வல்கிய மஹரிஷி ஆவார். எல்லோருக்கும் வேதங்களைக் கற்பித்து உன்னத நிலை பெற்றவர். சாக்ஷாத் ஸ்ரீசூர்ய நாராயணப் பெருமாளிடமே வேதம் கற்கும் அபூர்வ சக்தியைப் பெற்றவர். யாக்ஞ வல்கிய ஜயந்தி அன்று, ஆதித்ய ஹிருதயம், சூர்ய கவசம், சூர்ய ஸஹஸ்ரநாமம், சூர்ய நமஸ்காரம் போன்ற வடமொழி/தமிழ் துதிகளைக் குழந்தைகளுக்குக் கற்பித்து சூரியபகவான் பூஜையை, கோதுமை உணவாலான பிரசாத நைவேத்யத்துடனும் அதனை தானமளிப்பதுடனும் நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்நாளில் இரண்டு மனைவியருடன் ஒருமித்து வாழ்கின்ற கணவன் மனைவியர்க்குப் பாத பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் விசேஷமானதாகும்.  இரண்டாவது விவாகம் சட்டரீதியாகத் தவறு எனினும் அதே சட்டமே இரண்டாவது மனைவியர் மூலமாகப் பெறும் பிள்ளைகளுக்குச் சகலப் பிரஜா உரிமைகளையும் வழங்குகிறது.
தார்மீகமான காரணங்களுக்காகவும் இயற்கை நியதிகளுக்காகவும் அபலைப் பெண்களைக் காத்து ரட்சிக்கவும் இரண்டாவது தாரம் அமைவதுண்டு. காம வயப்பட்டும், அதர்ம முறையில் மனசாட்சிக்கு விரோதமாக மறுவிவாகம் புரிதலை ஆன்மீகம் ஏற்பதில்லை. மாறாக அதனைக் கொடிய பாவம் என நம் மூதாதையர்கள் உணர்த்தியுள்ளனர். இரண்டு மனைவியரும், ஒருமித்து வாழ, தார்மீக நெறியில், அறம் வழுவாது குடும்பம் நடத்துவோர் உண்டு. இங்கு முறையற்ற காமத்திற்கு இடமில்லை. இத்தகையோருக்கு இயன்ற உதவிகள் அளித்துச் சேவை புரிவதையே யாக்ஞவல்கியர் ஜெயந்தி தினத்தன்று செய்ய வேண்டியது அனைவருடைய கடமையென ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் விளக்குகின்றன. இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு உத்தமப் பெரியோர்களின் ஆசியுடன், அறநெறிகள் பிறழாது, பெண்களுக்குரிய தர்மங்களிலிருந்து வழுவாது நடக்கும் ஒரு சில இரண்டாந்தார விவாகங்கள் உண்டு. இரண்டாவது மனைவியாக வாழ்க்கையைப் பெறும் பெண்களுக்கு நல்வழிகாட்டும் பூஜையாக இது மலர்ந்து அரும்பெரும் சேவையாகவும் அமைகின்றது. காமம், செல்வம், புகழ், இளமை, வன்முறை, சொத்து போன்றவை காரணமாக இரண்டாவது விவாகம் புரிவது மிகவும் கொடிய, பஞ்சமா பாதகமாகும். எனவே மேற்கண்ட பூஜையைச் செய்வதில் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

முடவன் முழுக்கு

துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் காவேரி போன்ற புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது பலவிதமான பாவங்களைக் கழித்து அபரிமிதமான புண்ணிய சக்தியைத் தரும். துலா தேவியானவள் இம்மாதம் முழுவதும் ஸ்ரீகங்கா தேவி, ஸ்ரீகாவேரி தேவி போன்ற தேவி சக்திகளைப் பூஜித்து அதன் பலன்களைத் துலாஸ்நானம் செய்வோர்க்கு அருள்கின்றாள். காமம், குரோதம், கோபம் போன்ற தீய குணங்களின் பால் வசப்படும் மனம், சமமில்லாது ஆடி அலைக்கழிக்கும்!! மனதைத் தராசு (துலாம்) போல் நல்லவை, தீயவை பாகுபாடுகளினின்றும் தனித்து சமமாக நிறுத்தி அமைதியை அளிக்கின்றது. ஒரு துலா ஸ்நானத்திற்கே இவ்வளவு மஹிமையென்றால் துலாமாதம் முழுதும் இதை நிறைவேற்றிடில் கிட்டும் உன்னதமான நிலைகளை எடுத்துரைக்க இயலுமா? நல்லவர், தீயவர் பாகுபாடின்றி தேவியானவள், அனைவருக்கும் தன் ஆசிகளை வழங்குகின்றாள். கை, கால், முதுகு ஊனமுற்றோர் தினந்தோறும் துலா ஸ்நானம் செய்ய இயலாதல்லவா? எனவே ஊனமுற்ற முடவன், நதியில் ஒரு முழுக்கிட்டால் போதும், அதுவும் துலா மாதாம் முடிந்தாலும் பரவாயில்லை, அடுத்து வரும் கார்த்திகை முதல் நாள் மூழ்கினால் கூட துலா ஸ்நானத்தின் பலனை இது தரும். இது முடவனுக்குரித்தான சலுகையாக முடவன் முழுக்கு எனப் பொதுவாக வழங்கப்படுகிறது.
தசரத கீர்த்தி
முடவன் முழுக்கைப் பற்றிச் சித்தர்கள் அருள்வதென்ன?
தன் குரு வசிஷ்ட மஹரிஷியின் வார்த்தைக்கேற்ப அளவிறந்த தான தருமங்களைச் செய்த தசரதச் சக்ரவர்த்தி வியத்தகு தேவ சக்தியினைப் பெற்றார். வானளாவிய கோசல நாட்டைத் தான் பெற்ற சக்தியால் 10000 ஆண்டுகட்கு மேல் ஆண்ட ஸ்ரீதசரதர், காத்திகையிலிருந்து, ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி ஸ்ரீரோகிணி நக்ஷத்ரத்தைப் பிளந்து செல்கையில் வற்கடம் என்னும் மாபெரும் பஞ்சம் பூலோகத்தைப் பீடிக்கும் என்பதை அறிந்தவுடன் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியையே எதிர்த்துத் தன் புண்ய சக்தியால் ஸ்ரீசூர்ய மண்டலத்தருகே தன் படையை அணிவகுத்தார் ஸ்ரீதசரதர். ஸ்ரீதசரத மஹாராஜா தன்னைத் தாக்க வந்திருப்பது நாட்டைப் பெருக்கிக் கொள்ள அல்ல, ஆனால் கோடிக்கணக்கான ஜீவன்களைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதற்கே என்று அறிந்து அறியாமையைக் கருணையுடன் மன்னித்தார் ஸ்ரீசனீஸ்வரர்.
‘தசரதா! யான் முடவன் ரூபத்தில் மஹாபுனிதமான காவேரி நதியில் துலா மாதத்தில் குறித்த இடத்தில் மூழ்கி எழுவோம், நீயும் அந்நேரத்தில் யாம் மூழ்கி எழுந்த இடத்தில் நீயும் ஸ்நானம் செய்திடில் வற்கடம் எனும் பஞ்சம் உன் நாட்டைத் தாக்காமல் அதன் விளைவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்!’ ‘ என்று அருளினார். ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, தஞ்சை மாவட்டத்தில் குறித்த இடத்தில் காவேரி தீர்த்தத்தில் முடவன் ரூபத்தில் ஒரு முழுக்கிட்டு ஸ்நானம் செய்திட, தசரதரும் அவ்விடத்திலேயே ஸ்நானம் செய்து ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியிடம் மனமுருக வேண்டினார்.
தசரதர் : ஸ்ரீசனீஸ்வர ப்ரபோ! நான் என் நாட்டை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் இங்கு வரவில்லை. நடப்பதோ திரேதாயுகம், இதில் லட்சோப லட்சம் ஆண்டுகள் நடக்கவுள்ளன. த்வாபர, கலியுகங்கள் வரவுள்ளன. வரவிருக்கும் மன்வந்தரங்களில் த்வாபர, கலியுகங்களில் இவ்வற்கடப் பஞ்சம் எந்நாட்டையுந் தாக்கலாகாது. அதற்குக் கருணை புரிவீர்களாக!’ ஸ்ரீதசரதன் சனீஸ்வரரை நோக்கி ஸ்ரீசனீஸ்வர ஸ்துதி என்னும் ஸ்லோகத்தால் ஸ்தோத்திரம் செய்தார். லோக க்ஷேமத்திற்காகத் தன் புண்ணிய சக்தியை ஈந்து எவரும் அணுகவியலா ஸ்ரீசூர்ய மண்டலத்தைக் கடந்து வந்த ஸ்ரீதசரதனின் தியாகத்தை உணர்ந்து அவருடைய ஸ்ரீசனீஸ்வர துதியில் ஆனந்தமடைந்தார்.
ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி : உன்னுடைய இந்த சனீஸ்வர ஸ்துதியைத் தினமும் பாராயணம் செய்வோர்க்கு நான் நன்மையையே செய்வேன். இதனுடன் எள் கலந்த அன்னத்தை அல்லது திராட்சை போன்ற கருமைநிற உணவு வகையினை முடவர்கட்கு, குறிப்பாகக் கறுப்பு உடையணிந்த முடவர்கட்குத் தானமளித்திட அவர்கட்கு எத்தகைய சனிதசையிலுமல்லாது அஷ்டமத்தில் சனி இருப்பினும் எக்காலத்திலும் அவர்கட்கு நன்மையையே செய்வேன்!
தசரதர் அருளிய சனீஸ்வர ஸ்துதி
நம:க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாய ச|
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாய ச||
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ஸ்ருதிஜடாய ச|
நமோ விஸால நேத்ராய சுஷ்கோதர பயாநக||
நம:பௌஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம: ||
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம: ||
நமோ தோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே |
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே ||
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம: |
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே ||
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே |
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே |
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம : ||
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச ||
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே|
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத் ||
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா : |
த்வயாவலோகிதா: ஸர்வே தைந்யமாஸு வ்ரஜந்தி தே||

முடவன் முழுக்கன்று மேற்கண்ட சனீஸ்வர துதியை காவேரி போன்ற புண்ணிய நதி தீரங்களில் கூட்டாகப் பாராயணம் செய்தால் குருவருளால் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி எத்தகைய இக்கட்டினின்றும் காக்கும் கருணைப் பார்வையால் நம்மைக் காத்தருள்வார். தினமும் காலையிலும் மாலையிலும் பாராயணம் செய்தல் கிரஹ தோஷங்களிலிருந்து நம்மைக் காக்கும். ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி மூழ்கி எழுந்த அத்திருத்தலத்தைச் சற்குருவை நாடி அறிந்திடுவீர்!

பைஸாச தீபம்
இறந்தோரெல்லாம் பித்ருக்களாக மாறி ஒளிப்பகுதிக்குச் செல்வதில்லை. நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் ஒரு சமயம் ‘எண்பது கோடி ஜனங்கள்ள ஒரு வருஷத்துல எட்டுப் பேர்தான் இறைவனோட இடத்துக்குப் போய்ச் சேர்றாங்க! ஆனா அங்ககூட நிறைய சோதனைகள் இருக்கு! சுவாமி கிட்டே வந்துட்டோங்கிற அகங்காரத்திலே, ஆணவத்திலே ஏழு பேர் திசைமாறிப் பிறவிக் கடலில் திரும்பி விழுந்து திருப்பித் திருப்பிப் பிறவி எடுக்கறாங்க., ஒரே ஒருத்தர் மட்டும் சாக்ஷாத் பரமசிவன் கிட்ட போய் உறுதியா நிக்கறாரு!’ – என்று கூறினார். ‘அவரை சுவாமி என்ன பண்ணினாரு? – எனச் சிறுவனான குருமங்கள கந்தர்வா அப்பாவித்தனமாகக் கேட்டார். உம்..... அதுதான் பிரம்ம ரகசியம்., நீ அந்த எட்டாவது ஆளா மாறினா அது தெரியும்....’  வழக்கம் போல் கடகடவென்று சிரித்தார் கோவணாண்டிப் பெரியவர்
பல தாபங்கள்,,ஏக்கங்கள், ஆசைகள், மனோபீஷ்டங்கள், வெளியில் கூற இயலா விருப்பங்கள், பாசப்பிணைப்புகள் இத்தகைய மாயைகளினால் இறந்தவர்கள் அவை நிறைவேறும் வரை ஆவி ரூபங்களில் அலைவதுண்டு. ஆவிகளென்றால் அஞ்சுதல் வேண்டாம். ஏனெனில் நன்மை செய்யும் ஆவிகளும் பலவுண்டு. மனிதனின் கண்களுக்குத் தெரியாத சூட்சும தேகமே ஆவியாகும். அந்த ஆவிக்கும் ஆசாபாசங்கள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திலும் மேற்கண்ட நிலை இருக்கக்கூடும். இதனை அவரவரே நிர்ணயம் செய்து கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து கொள்ளலாம்.

ஸ்ரீபிரளயகாலேஸ்வரர் திருத்தலம்
பெண்ணாடம்

சில விசேஷ தினங்களில் தர்ப்பணங்கள், தான தருமங்கள், குறிப்பிட்ட ஹோமங்கள் திருவிடைமருதூர், ராமேஸ்வரம், காசி போன்ற தல யாத்திரைகள், தர்ப்பணங்கள் செய்திட இவை இறந்தோரின் ஏக்கங்களை ஓரளவு தணிக்கும். ஏனைய சில ஏக்கங்களைத் தீர்க்கும் முறையே பைசாச தீபமாகும். பைசாச தீபத்தன்று ஸ்ரீப்ரளய காளேஸ்வரர், ஸ்ரீயமதர்மராஜா, ஸ்ரீகாலபைரவர் எழுந்தருளியுள்ள தலங்களில் பசுநெய்யினால் ஆன தீபம் ஏற்ற வேண்டும்..,
(விருத்தாசலம் அருகே) பெண்ணாடத்தில் ஸ்ரீப்ரளய காலேஸ்வரர், (திருச்சி அருகே) திருப்பைஞ்ஞீலியில் ஸ்ரீஎமதர்ம ராஜா (பத்தினியுடன்) எழுந்தருளியுள்ள தலம். திருக்கடவூர் திருத்தலத்தில் ஸ்ரீமார்க்கண்டேய புராணத்தில் தன் தண்டத்தை இழந்த ஸ்ரீஎமதர்ம ராஜா சென்னை வேளச்சேரி (ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயம்) தலத்தில் மீண்டும் அதனைப் பெறுதல் மேற்கண்ட ஆலயங்களில் தீபத்தை ஏற்றி தானங்கள் வழங்கிட இறந்தோரின் தணியா ஏக்கங்கள் நிவர்த்தியாகும். துர்தேவதைகள், பேய், பிசாசு, இவற்றால் பாதிக்கப்படடோர் மேற்கண்ட ஆலயங்களில் பசுநெய் தீபமிட்டு ஏழைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் அளித்து மனநோய் விடுதிகளில் மனநோயால் அவதியுறுவோர்க்குண்டான அவசியமான தேவதைகளை நிறைவேற்றுவதே பரிகாரமாகும்..
எமதீப தானம்
பஞ்சாங்கத்தில் ‘தனிஷ்டா பஞ்சமி – இறந்தால் வீடு மூடப்பட வேண்டிய நக்ஷத்திரங்கள்’ என்று குறிக்கப்பட்டிருக்கும். அதாவது குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் ஒருவர் இறந்தால் அவ்வீடு எவ்வளவு காலத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இது பழங்கால முறையாகும்.. ஆனால் இதன் பின் பொதிந்துள்ள ஆன்மீகப் பின்னணி இன்றும் உலகெங்கும் நடக்கின்ற நிதர்சன உண்மையாகும்.
இறந்தவர்கள் தங்களின் சில பணிகள் நிறைவேறும் வரை அவ்வீட்டிற்கு அருவமாக அடிக்கடி விஜயம் செய்வர். ஆனால் இது அச்சத்திற்குரிய விஷயமன்ற . அந்த ஆவிக்குச் சகாயம் செய்யும் பொருட்டே தினமும் விளக்கிட்டு வீட்டை குறித்த காலத்திற்கு மூடுகின்றனர்.
தேகத்தை விட்டபின் எந்த ஆவியும் எந்த ரூபத்திலும் எங்கும் செல்லலாமல்லவா? குறிப்பிட்ட வீட்டிற்கு ஏன் செல்ல வேண்டும்? பெரும்பாலும் இறந்தவருடைய ஏக்கங்கள், ஆசைகள் தாம் வாழ்ந்த வீட்டின் சூழ்நிலையில் தான் அமைந்திருக்கும். அந்த ஆவியும் தன் காரியங்களை நிறைவேற்ற பூவுலகில் தான் வசித்த அதே பகுதியைத்தான் நாடுகின்றது.  இதற்கு நம் மூதாதையர்களான  வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் உதவுகின்றனர்.
பொதுவாக ஆவிகள் ஜோதியைவிட்டு விலகிச் செல்கின்றன. விளக்கு ஜோதியில் ஆவாஹனமாகும் தேவதையைத் துதித்து அவர்கள் ஒதுங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே இறந்தவரின் ஸ்தூல தேகம் கிடந்த இடத்தில் துர் ஆவிகள் அனுகாமலிருக்க 10 நாட்களுக்கு விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு.. ஆனால் தற்காலத்தில் பல இடங்களில் மண்ணெண்ணெய், பெட்ரோமாக்ஸ் விளக்குகளே பெரும்பாலும் ஏற்றப்படுகின்றன. இது தவறாகும். நல்லெண்ணெய், தேங்காய்யெண்ணெய் போன்ற தாவர மூலிகை எண்ணெய் விளக்கு ஜோதி விளக்குகள் தாம் ஆவிகளே போற்றி வணங்கும் ஆன்மீக சக்தியைப் பெற்றுள்ளன. துர் ஆவிகள் இத்தகைய தீபங்களிடம் வருவதில்லை. ஒருவர் இறந்த ஒருவருட காலத்திற்குள் அவருடைய பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் செய்ய வேண்டிய பூஜையே எம தீப தானமாகும். ஸ்ரீஎமதர்மராஜா எழுந்தருளியுள்ள கோயில்கள், பாடல் பெற்ற கோயில்கல் ஆகியவற்றில் பசுநெய் தீபம் ஏற்றி இறந்தோரின் ஆன்மா ஒளி உலகம் சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் ஆகியவற்றில் ஒரு தாமரை இலையில் பசுநெய் தீபம் ஏற்றி மிதக்க விடுதலும் எமதீப தானத்தைச் சார்ந்ததாகும். இறந்தால் வீட்டை மூடுவது என்பதி கலியுகத்தில் இயலுமா என்று கேட்கலாம். இதற்குப் பரிகாரமாகவே மேற்கண்ட எமதீப தானம் சித்த புருஷர்களால் அருளப்பட்டுள்ளது.
பசுநெய் தீபத்தின் மஹிமை
பசுநெய் தீபத்தின் ஜோதியானது புகையாக மாறி பல விண்ணுலகங்களையும் அடையும் ஆன்மீக சக்தி பெற்றதாகும். ஆன்ம சாந்திக்காக நாம் எழுப்பும் பிரார்த்தனை, பசுநெய் ஜோதியின் மூலம் ஆன்மாவைப் புனிதமான ஒளிப் பகுதிக்கு அனுப்புமாறு வேண்டிட அறக்கடவுள் அத் தீபத்தின் மஹிமையால் ஆனந்தித்து சந்ததியினரின் தான தருமங்களின் பலனுக்கேற்ப அவர்தம் ஆன்ம நிலையை நிர்ணயம் செய்கிறார். எவரும் இறந்தவர்கள் சார்பாகத் தானே அனைத்துக் கோயில்களிலும் நதிதீரங்களிலும் எமதீபம் ஏற்றுவது இயலாதல்லவா? எனவே ஆயிரமாயிரம் வெண்கல, அகல் விளக்குகளை, பசுநெய், நல்லெண்ணையுடன் தானம் செய்திட இதனால் பல்லாயிரக்கணக்கான தீபங்களைப் பல கோயில்களில் ஏற்றும் வாய்ப்புப் பெருகிறதல்லவா? இது இறந்தோரின் ஆன்ம ச்ரேயஸிற்குப் பேருதவியாகி நிற்கும். ஆனால் விளக்கு தானம் ஏற்பவர்கள் உண்மையாகவே தீபத்தைக் கோயிலில் ஏற்றுதல் வேண்டும்.. இவற்றுடன் கரும்புச்சாறு, எள்ளுருண்டை, எள் கலந்த தட்டை, முறுக்கு போன்றவை, எள்ளுப் பொடிச் சாதம், நல்லெண்ணையினால் ஆன ஆகார வகைகள் ஆகியவற்றைத் தானம் செய்திட, அறக் கடவுளுக்குப் ப்ரீதி அளிக்கும். இறந்தோரின் ஆன்ம சாந்திக்கு இது வழிவகுக்கும்.
எம தர்ப்பணம்

திருப்பைஞ்ஞீலி

ஸ்ரீமார்கண்டேய புராணத்தில் திருக்கடவூரில் சிவபெருமானால் தண்டிக்கப் பெற்றபோது ஸ்ரீதர்மராஜா தாம் அறம் பிறழ்ந்ததை அறிந்து ப்ராணனைவிட்டார். அறக் கடவுளாகத் திகழும் அவர் முக்காலத்தையும் உணர்ந்தவரே. ஸ்ரீமார்கண்டேயர் புராணம் மூலம் சிவபக்தியை ஊட்டுவதற்காகத் தம் அறம் பிறழும் பாத்திரம் நிறைவுறும் என்று உணர்ந்தார். சிவபெருமானும் அறக்கடவுளுக்கே தர்ப்பணம் அளிக்கும் பாக்கியத்தைப் பூலோக விண்ணுலக ஜீவன்களுக்கு அளிக்க விரும்பி அறக்கடவுளை ஒரு கருவியாகக் கொண்டார். எனவே ஸ்ரீஎமதர்மராஜாவை புராணப்பாத்திரப் படைப்பின் மூலம் எடையிடாது இதன் மூலம் உணர்த்தப்பட்ட சிவபக்தி, அற்புதமான எமதர்ப்பண முறை, எமவந்தனம், உன்னதமான எமதீப தானம் போன்றவை இதனால் உலகிற்குப் புகட்டப் பெற்றன என்று தெளிதல் வேண்டும்.
ஸ்ரீமார்கண்டேய புராணத்திற்குப் பின் நிகழ்ந்தவற்றை சித்தர்களுடைய சிவபுராணத்தில் காணலாம். அங்கே அறக்கடவுளின் பணி நின்று போகவே பிரபஞ்சத்தில் மரணநிலைகள் ஸ்தம்பித்தமையால் ஜீவன்களின் பெருக்கம் பல லோகங்களில் கட்டுக்கடங்காது சென்றது. அறக்கடவுளாகும் சக்தியை, தெய்வ நிலையை எவரும் பெறவில்லை. மஹரிஷிகளின் ஆன்மீக சக்தியையும் மீறிச் சென்ற இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைச் சித்த புருஷர்களிடம் தானே பெற முடியும் ? ஆனைவரும் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியை நாட அவர் சிவபெருமானின் குறிப்பை உணர்ந்தவராய் அருள்வாராயினார்.....
“இறையவதாரங்களுக்கே அர்க்யங்கள் அளிக்கப்பட வேண்டியதை உலக ஜீவன்களின் மாபெரும் கடமை என்று இறைவனே அருளியுள்ளான். அறக்கடவுளாம் ஸ்ரீஎமதர்மராஜாவின் நற்பணி மீண்டும் தொடர அவர்தம் சூட்சும சரீரத்திற்கான எமதர்ப்பணம், எமவந்தனம் என்ற முறையை ஆதி சிவன் அருளால் கூறுகின்றேன். இவை தேவி பாகவத மந்திரங்களுள் சந்தியாவந்தன மந்திரத்தில் அடங்கும். எனவே உலக ஜீவன்கள் அனைத்தும் எவ்வித பேதமின்றி எமதர்ப்பண மந்திரங்களால் ஸ்ரீஎமதர்ம ராஜாவிற்குப் பூஜை செய்வீராக!’
அன்று முதல் எம தர்ப்பணம் தலைசிறந்த மந்திரமாக விளங்கி அதன் ஓர் அங்கமாக எமவந்தனம், சந்தியாவந்தனத்தின் மூன்று வேளை நித்ய பூஜையாக மலர்ந்து அருள்பாலிக்கின்றது. இத்திருநாளே எமதர்ப்பண பூஜைநாளாகும்.  இந்நாளில் மூன்று வேளை சந்தியாவந்தனத்துடன் எமதர்ப்பணம் செய்திட சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் அறக்கடவுள் மீண்டும் அவதாரம் பெற்றுத் தனி தண்டத்தையும் பெற்றார். இந்நாளில் ஸ்ரீஎமதர்மராஜா எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் எமதர்ப்பணம், எம வந்தனம் செய்திட..
1. எம பயம் அகலும்
2. பாயில் படுத்து நோயில் வாடாது சுகமான இறைநாம ஸ்மரணத்துடன் கூடிய மரணம் கிட்டும்
3. இறப்பை பற்றிய தீர்க்க தரிசனம் ஏற்படுதலால் இறப்பு, பிறப்பு பற்றிய ஞானம் ஏற்றப்படும்.
விஷ்ணு த்ரிராத்ரி விரதம்
முதல் நாள் ஸ்ரீஹயக்ரீவர் பூஜை, இரண்டாம் நாள் ஸ்ரீகுருவாயூரப்பன்/ ஸ்ரீகிருஷ்ணனுக்குரித்தான பூஜை, மூன்றாம் நாள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் விஸ்ரூப தரிசனத்திற்கான பூஜை, இவற்றோடு இம்மூன்று நாட்களிலும் உறங்காது ஸ்ரீஹயக்ரீவ, ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசன நினைவுடன் சுமார் 180 நாழிகைகள் இருத்தலால் 180 யுகங்களுக்கான கர்மவினைகள் கழிகின்றன என்று ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்கள் கூறுகின்றன. மூன்று நாட்களிலும் கல்கண்டு கலந்த பால் தானம் விசேஷமானதாகும்.
இத்தகைய விஷ்ணு த்ரிராத்ரி பூஜையால்
1. அரும்பெரும் நற்காரிய சாதனைகளை எளிதில் நிறைவேற்றலாம்.
2. வியக்கதக்க மாபெரும் இறைப் பணிகளை எளிதில் செய்து முடிக்கலாம்.
3. இமாலய சாதனைகளை வாழ்வில் சாதிக்கலாம்.. (11.11.1994 முதல் 13.11.1994 வரை 3 நாட்களுக்கு விஷ்ணு த்ரிராத்ரி விரதம்.)
துளஸீ விவாகம்
ஸ்ரீமன்நாராயணன், துளஸிதேவியை விவாகம் செய்து கொண்ட திருநாள். இன்று 60 வயது நிறைந்த சுமங்கலிகளுக்குப் பாதங்களில் மஞ்சள், குங்குமம் இட்டு, நமஸ்கரித்து அவர்கள் தம் திருக்கரங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தாலிச்சரடுகளைப் பெற்றிட சகல சௌபாக்கியங்களுடன் தீர்க சுமங்கலிகளாக வாழும் பாக்யத்தைப் பெறலாம். 5,12,21 என்ற எண்ணிக்கையில் துளசிச் செடிகளை வளர்த்துப் பூஜை செய்யும் பெரியோர்கள் வீட்டிற்கு சென்று, அவர்களை நமஸ்கரித்து இயன்ற உதவிகளைச் செய்தால் ஸ்ரீதுளசி தேவியின் அனுக்கிரஹம் கிடைக்கும். கன்னிப்பெண்களின் கல்யாண தோஷங்கள் தணிந்து திருமணம் எளிதில் கைகூடும்.
த்ரிதின த்ரயோதசி
திரயோதசி திதி மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அமைவது த்ரிதின திரயோதசி ஆகும் .சிவபெருமானுக்கு இம்மூன்று தினங்களிலும் பதின்மூன்று தளங்களை உடைய வில்வதளங்களால் வீட்டிலோ அல்லது கோவிலிலோ பூஜைகள் செய்து தினமும் 18 முறை சிவ சகஸ்ர நாமம் ஓதி, உருண்டை வடிவில் உளுந்து போண்டாவினை பிரசாதமாகப் படைத்து ஏழைகளுக்கு தானம் அளித்தல் வேண்டும்.
உருண்டு திரண்டு உருளும் மனதை நிலைப்படுத்திட சிவத்யானத்தின் முதல் படியை இத்தியானம் காட்டும். ஸ்ரீயமதர்மராஜா இந்த பூஜையை செய்து உத்தம பலன்களைப் பெற்றார். இதனால் முறையற்ற விகாரக் கர்ம உணர்வுகள் விலகும். பிற பெண்களிடம் மனம் வயப்படுவது தணியும்.
பரணி தீபம்

ஸ்ரீபடம்பக்கநாதர் திருக்கோயில்
திருவொற்றியூர் சென்னை

கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் அண்ணாமலை பரணி தீபமாகும். பஞ்ச மூர்த்திகளுக்கு உரிய தரிசனம் பஞ்சபூதங்களும் தங்களுக்கு மூலாதாரமான சிவபெருமானை சிவஜோதியாகக் காணும் நாள். பொதுவாக புதிதாகத் திருமணமான மாட்டுப் பெண்கள் கார்த்திகை தீபத்திற்கு வீட்டிலிருந்து தீபங்கள் ஏற்றவேண்டும் என்ற பழக்கம் நிலவி வருகிறது. திருஅண்ணாமலை அழற்பிழம்பு தீபதரிசனம் மகாவிசேஷமானது என்றால், அனைவரும் இந்த திவ்ய தரிசனத்திற்குச் சென்று விட்டால், வீட்டில் யார் விளக்கேற்றுவது? தீபத்தின் போது வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லலாமா? இத்தகைய சந்தேகங்களுக்கு சற்குருதானே தெளிவை அளிக்க முடியும்!
1. பொதுவாக வயதானோர், அல்லது வேறு சிலர், வீட்டில் தங்கியிருப்பவர் அக்கபக்கம் உள்ளவர்களை வைத்தோ கார்த்திகை தீபத்தை ஏற்றச் செய்யலாம். எனினும் திருஅண்ணாமலை சென்று பசுநெய் திரி ஏனைய எண்ணெய்கள் அளித்து மலை தீபத்தைத் தரிசனம் செய்தல் எப்பிறவியிலும் பெறற்கரிய வாய்ப்பாகும். தீபதரிசனமே கொடிய கர்மவினைகளைக் கரைக்கும் சக்தி உடையதாம்.. திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தில் ஏற்றுவதற்கான இயன்ற சேவைகளைப் புரிந்தால் இப்பூலோகம் மட்டுமின்றி பிரபஞ்சத்தில் உள்ள சகலகோடி ஜீவன்களை உய்விக்கும் இத்தீபத்தை ஏற்றி மகா புண்ணிய சக்தியைப் பெறலாம். அனைத்து ஜீவன்களையும் உய்விக்கும் இந்த அற்புத மகேசன் சேவையில் பங்கு பெறுவது பெறற்கரிய பாக்கியமல்லவோ!
புதிதாகக் கல்யாணமாகி வந்த பெண்கள், தம்பதி சகிதம் திருஅண்ணாமலைத் திருக்கோயிலில் பசுநெய் அகல் தீபங்கள் ஏற்றுவதும் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும் மிகவும் விசேஷமானதாகும். சுமங்கலியான மாமியாரிடமிருந்தோ, கணவன் வகையைச் சார்ந்த சுமங்கலிகளிடமிருந்தோ முதல் தீபஜோதியை ஏற்ற வைத்து அதிலிருந்து 12,21,51 போன்ற எண்ணிக்கையில் பசுநெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். தலைக் கார்த்திகைக்கு இல்லத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற குடும்பப் பழக்கம் உள்ளவர்கள் பரணி தீபத்தன்று 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ள கோயில்களில் முதலில் பரணி நட்சத்திர லிங்கத்திற்குத் தீபங்கள் ஏற்ற வேண்டும். சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான லிங்கங்கள் உள்ளன.
இல்லத்தில் மேற்கண்ட முறையில் சுமங்கலியான மாமியார், அல்லது கணவன் வகையைச் சார்ந்த சுமங்கலியிடமிருந்து பசுநெய் தீபஜோதி பெற்று 12,21,51 போன்ற எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்ற வேண்டும். 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ள கோயில் அருகில் அமையாவிடில், ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்குப் பெரிய சுமங்கலியுடன் சென்று மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்ற வேண்டும். பரணி தீபஜோதியின் புண்ணிய சக்தியானது., நாத்தனார் மற்றும் கணவன் வகையைச் சேர்ந்த குடும்பத்தாரின் நல் வாழ்க்கைக்காகும். இதனால் நாத்தனார், மாமியார் போன்றோரால் ஏற்படும் துன்பங்கள் மறையும். ஒற்றுமை ஏற்படும்.
எனவே திருஅண்ணாமலை தீபத்திற்குச் செல்ல இயலாவிடில் இல்லத்தில் மட்டுமின்றி ஏதேனும் ஒரு கோயிலில் பசுநெய் தீபங்களை ஏற்ற வேண்டும்..,

கார்த்திகை தீபம்
கார்த்திகையில் திருஅண்ணாமலை செல்ல இயலாவிடில் 60 வயது நிறைந்த சுமங்கலிகளைக் கொண்டு தீபத்தை ஏற்ற வைத்து, அதிலிருந்து ஆறு தீபங்களை இல்லத்திலும் கோயிலிலும் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு சுமங்கலியும் ஏற்றுகின்ற தீபத்திலிருந்து ஆறு ஆறாக விளக்குகளை ஏற்ற வேண்டும். இவ்வாறாக எவ்வளவு சுமங்கலிகளைக் கொண்டு ஆறு மடங்காகப் பசுநெய் தீபங்களை ஏற்றுகின்றோமோ அந்த அளவிற்கு ஜோதியின் புண்ணிய சக்தி பன்மடங்காகப் பெருகி கணவனுக்கு ஆயுள் விருத்தியையும், தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கையையும் அளிக்கும். கார்த்திகை தீபத்தன்று தாமரைத் தண்டினால் ஜோதி ஏற்றுவது உத்தமமானதாகும். கணவனின் நல்வாழ்க்கைக்காக ஏற்றப்படுவதே கார்த்திகை தீபம்.
விஷ்ணு தீபம்
முதல் நாள் பரணி தீபம் , இரண்டாம் நாள் கார்த்திகை தீபம், மூன்றாம் நாள் விஷ்ணு தீபம்
இன்றைக்கு இல்லத்தில் பஞ்சுத்திரியால் விளக்கேற்றிப் பெருமாள் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது மிகச் சிறந்த பூஜையாகக் கருதப்படுகிறது., கணவன் மனைவி குழந்தைகள் சார்ந்த அக்குடும்பத்தாரின் நல்வாழ்விற்காக ஏற்றப்படுவதே விஷ்ணு தீப ஜோதி.. அன்னதான அக்னியும் ஒரு ஜோதியே இன்றைக்கும் திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது பல சற்குருமார்களின் தலைமையில் பல நூறு குடும்பங்கள் சேர்ந்து சத்சங்கங்கள் மூலம் அன்னதானங்கள் நிகழ்த்துகின்றனர்.
குடும்பங்களோடு நூற்றுக்கணக்கானோர் இந்த அன்னதானத்தில் பங்கேற்பதால் அவர்களால் தீபம் ஏற்றுவதற்கே நேரமிராது. பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு வயிற்றுப் பசி போக்கும் உன்னதமான தெய்வீகப் பணியில் ஈடுபட்டிருப்பதாலும் அன்னம் தயாராகும் அடுப்பின் ஜோதியே பரணி கார்த்திகை விஷ்ணு தீபங்களாகும். ப்ரும்மா, ருத்ரன், விஷ்ணு ஆகிய திரிமூர்த்திகளும் அன்னதான அக்னியை நேரடியாகவே அருணாசல மலை தீபத்தில் இணைக்கின்றனர். எத்தகைய உன்னதமான பாக்கியம் ! சற்குரு அருள்கின்ற மகேசன் சேவையால் அன்னதானத்தில் கிட்டுகின்ற ஈடுஇணையற்ற மகத்தான தெய்வீக சக்தி! எனவே திருஅண்ணாமலை தீபத்தில் குருஅருளால் அன்னதானத்தை சிரத்தையாக நிறைவேற்றும் பொழுது அது ஆயிரமாயிரம் ஏழைகளைச் சென்றடைவதால் சித்தர்களே வரிசையில் வந்து நின்று அன்னத்தைப் பெற்று அருணாசல தீபம் ஏற்றிய புண்ணிய சக்தியை பெறற்கரிய வரமாக அருளிச் செல்கின்றனர்.
நவம்பர் மாத விசேஷ தினங்கள்!
1-11-1994 – எம தீபதானம்
2-11-1994 – தீபாவளி.
3-11-1994 – எம தர்ப்பணம்.
3-11-1994 - 8-11-1994  - கந்தசஷ்டி விரதம்.
11-11-1994 - 13-11-1994 – விஷ்ணு த்ரிராத்ரி விரதம் .
11-11-1994 – ஸ்ரீஹயக்ரீவர் பூஜை.
12-11-1994 – ஸ்ரீகிருஷ்ண/ஸ்ரீகுருவாயூரப்பன் பூஜை.
13-11-1994 – ஸ்ரீவிஷ்ணுவின் விஸ்வரூப பூஜை.
14-11-1994 – துளஸி விவாகம்.
14-11-1994 – விடியற்காலை 4.46முதல் 16.11.1994 காலை 7.08 மணி வரை மூன்று தினங்கட்கு திரயோதசி திதி தொடர்ந்து அமைகிறது.
15-11-1994 – நள்ளிரவு 1.30 மணி முதல் 16.11.1994 காலை 10.30 மணிவரை விஷ்ணுபதி புண்ய காலம்.
16-11-1994 – ஸ்ரீவிஷ்ணுபதி – திருப்பூவனூர் ஸ்ரீராமர் கோயிலில் பூஜை.
17-11-1994 – பௌர்ணமி பூஜை, பரணி தீபம்.
18-11-1994 – திருஅண்ணாமலை தீபம்.
19-11-1994 – விஷ்ணு தீபம்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam