நீ உன்னை அறிந்து கொள்வதே ஆன்மீகம் - மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பெருமகளூர் ஸ்ரீசோமநாதர்

பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் சிவலிங்க மஹிமை
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. பேராவூரணி –அத்தாணி – கட்டுமாவடி பஸ் மார்க்கத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. அதிபழமை வாய்ந்த ஸ்ரீசோமநாதர் சிவாலயம் இங்கு அமைந்துள்ளது. மிகவும் அற்புத சக்திகள் வாய்ந்த மூலவரான ஸ்ரீசோமநாதரின் மஹாத்மியங்களை இனியாவது மக்கள் உணர்ந்து நல்வழி அடைவார்களாக!
தாமரைத் தண்டு லிங்கம்
இங்கு அருளாட்சி புரியும் ஸ்ரீசோமநாதரின் சிவலிங்கம் கல்லால் அமையப் பெறவில்லை. தாமரைத் தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப் போல் இப்புவியில் எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத் தண்டினால் சிவலிங்கம் அமைந்திருப்பதை ஆத்திகப் பெருமக்கள் அறிந்து ஸ்ரீசோமநாதரைத் தரிசித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்களாக! தாமரைத் தண்டினாலான இந்தச் சிவலிங்கத்தின் மஹிமையைச் சித்த புருஷரின் அருள் மொழிகளாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எடுத்துரைக்கிறார். கேட்டு, உய்த்து, உணர்ந்து பிறருக்கும் அறிவித்து அனைவரும் பயனடைவோமாக!
தாமரை பலவிதம்

ஸ்ரீசோமநாதர். பெருமகளூர்

சித்தபுருஷர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பூலோகத்திற்கு வருகின்றனர். ஒவ்வொரு சித்தரும் எவரும் இதுவரை அணுகாத விசேஷமான இறைப்பணிகளை மேற்கொண்டு தம்மை நாடி வருவோர்க்கு நல்வழி காட்டி அவர்களை உன்னத ஆன்மீக நிலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.
தாமரைகளில் பல்லாயிரம் வகைகள் உண்டு. பூலோகத்தில் நாம் காண்பது ஒரு சிலவே. பூஜ்ய தாமரை, புவனத் தாமரை, பங்காரு தாமரை, சாரூப தாமரை, ஐஸ்வர்ய தாமரை, ஆலோல தாமரை – இவ்வாறாகத் தாமரைகளில் பலவிதங்கள் உண்டு. ஒவ்வொன்றும் விதவிதமான குணங்களைக் கொண்டு, பல வகைப்பட்ட பலன்களைத் தரவல்லவை. அனைத்தும் அறிந்த பெட்டகமான சற்குருவே இவற்றின் பெருமைகளை உரைக்க வல்லார்.
ஸ்ரீதிரிபுவன சித்தர்
பல கோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் பெறற்கரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தைச் சிவனருளால் பூலோகத்திற்குக் கொண்டு வர விரும்பினார்..
இவருடைய கடும் தவத்தைக் கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும், மஹரிஷிகளும் அஞ்சினர். சித்த புருஷர் ஆதலின் எதையும் செய்ய வல்லவர் என்ற அச்சத்தில் அவர் அருகில் செல்லவில்லை. சித்தர்களுடைய திருவிளையாடலே இப்படித்தான். அனைத்தையும் இறையருளால் ஆற்றும் வல்லமை பெற்றிருந்தாலும் மேலும் மேலும் தபஸ் செய்து கொண்டே இருப்பார்கள். காரணம் தங்கள் சித்துகளை அவர்களாகப் பயன்படுத்துவதில்லை. சித்தம் எப்போதும் சிவன்பால் உய்வதால் அவர்கள் செய்வதெல்லாம் சிவப்பணிகளே.
ஸ்ரீதிரிபுவன சித்தரின் தவத்தின் மஹிமையால் அவரருகே ஒரு தாமரைத் தண்டு வளரத் தொடங்கி, அது உயர்ந்து உயர்ந்து பல அண்டங்களையும் தாண்டிச் சென்றது.
ஆங்கே திருக்கயிலாயத்தில் ...... தேவர்களும், மஹரிஷகளும் திரிமூர்த்திகளை நாடி ஸ்ரீதிரிபுவன சித்தரின் அருட்பெரும் தவத்தின் காரணத்தை அறிய வேண்டிக் குழுமினர். திரிமூர்த்திகளும், “சித்தர்களின் தவம் சதாசிவ பரப்பிம்மத்தின் எல்லைக்கு உட்பட்டதாகும். சித்தர்களின் சற்குரு ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி ஆதலின் அவரைச் சரணடைவீர்களாக!“ என்று அருளினார். ஸ்ரீஅகஸ்தியர் அனைவரையும் முகமலர்ந்து வரவேற்றார். “ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக ஆயிரத்தெட்டுக் கலைகளையும் ஒன்றாக்கி இன்றைக்குத் திருக்கயிலாயத்தில் நடனம் ஆட இருக்கிறார். அத்திருநடனத்தில் உங்களுக்கு விளக்கம் கிட்டும்” என்றார். ஸ்ரீதிரிபுவன சித்தரின் மஹிமையால் தங்களுக்கு ஸ்ரீபரமேஸ்வரனின் திருநடனத்தைக் காணும் பெறற்கரிய பாக்யம் கிட்டியது குறித்து அனைவரும் பேரின்ப உவகை எய்தினர்.
சிவனின் திருமுடி ஜோதி
ஸ்ரீநடராஜ மூர்த்தியாய்ப் பொலிந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் தம் நடனத்தினூடே தம் சிரசிலிருந்து தம் திருமுடி ஒன்றை உருவி எறிந்திட அத்திருமுடியிலிருந்து வீசிய பரஞ்ஜோதி கண்ணைப் பறித்தது.. எங்கு செல்கிறதோ என்று காண முடியா வண்ணம் ஒளிக்கற்றைகளுடன் பலகோடி சூரியன்கள் பிரகாசித்துப் பல விண்ணுலகங்களையும் வலம் வந்தது அத்திருமுடி. அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. திரிமூர்த்திகளே திகைத்து நின்றனர். ‘இறைவனின் ஒரு திருமுடியைத் தாங்கும் சக்தி எந்த லோகத்திற்கும் இல்லையே! என் செய்வது? மீண்டும் இத்திருமுடியைத் திருக்கயிலாயத்திற்கு அழைக்கும் வல்லமை ஸ்ரீஅகஸ்தியருக்கு மட்டுமே உண்டு. அவரோ, மௌனியாய் நிற்கிறாரே!” தேவர்களும், மஹரிஷிகளும் திகைத்தனர். அப்போது ஸ்ரீஅகஸ்தியர் தம் திருக்கரங்களை அசைக்க.. பூலோகத்தில் ஸ்ரீதிரிபுவன சித்தரின் அருந்தவத்தால் ஒரு தாமரைத் தண்டு பல லோகங்களையும் தாண்டி நெடிது வளர்ந்ததல்லவா?

சிவகங்கை பெருமகளூர்

ஸ்ரீஅகஸ்தியரின் கையசைப்பில் அத்தாமரைத் தண்டின் மேல்நுனி அவர்பால் வளைந்து நின்றது. ஸ்ரீஅகஸ்தியர் அத்தாமரைத் தண்டின் நுனியைப் பற்றியவாறே ஓம் “ஓம் நமசிவாய” என்று துதித்து அத்திரு நாமத்தில் லயித்து நின்றார்.
 கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் அங்கு தோன்றிய ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருமுடி அத்தாமரைத் தண்டினுள் சென்று ஐக்கியம் அடைந்தது. அனைவரும் கட்டுண்டு நின்றனர். இத்தாமரைத் தண்டிற்கு இவ்வளவு சக்தியா? ஆம்! ஸ்ரீதிரிபுவன சித்தரின் அற்புத தவசக்தியில் விளைந்த தாமரைத் தண்டல்லவா? ஸ்ரீஅகஸ்தியரின் திருக்கரம் பட்டவுடன் அதன் சக்தி பலகோடி மடங்குகள் பெருகியது. ஸ்ரீஅகஸ்தியர் கைகூப்பி வணங்கி அத்தாமரைத் தண்டினை லேசாக அசைத்திட,
பூலோகத்தின் முதல் தாமரை....
ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரரின் தேஜோமயமான திருமுடியைத் தாங்கிய அத்தாமரைத் தண்டு சுருங்கத் தொடங்கிற்று. அதன் உயரம் குறைந்து கொண்டே வந்து பூலோகத்தில் ஸ்ரீதிரிபுவன சித்தர் அமர்ந்திருந்த இடத்தில் சந்தன நிறத்தில் ஒரு பெரும் தாமரைத் தண்டாய் மாறிட... அதன் நுனியில் ஓர் அற்புதத் தாமரை மலர் உருவாயிற்று. சுற்றிலும் ஒரு தடாகம் ஏற்ப்பட்டது.. அத்தடாக நீர் திருக்கயிலாயத்திலிருந்து ஸ்ரீசிவபெருமானின் சிரசிலிருந்து பெருகிய கங்கை நீர் ஆகும்.
இத்தடாகத்தில் அற்புதத் தாமரை மலர்கள் தோன்றின. தம் தவத்தின் நோக்கம் இறையருளால் நிறைவேறியதை உணர்ந்த சித்தர் கண்களைத் திறந்தார். அத்தாமரைத் தண்டு லிங்கமாக மாறிட, அத்தாமரை மலர், ஸ்ரீகுந்தளாம்பிகை அம்பாளாகத் தோற்றம் பெற இவ்வாறாக  ஸ்ரீதிரிபுவன சித்தரின் அற்புத தவத்தால் ஸ்ரீசோமநாதர் – ஸ்ரீகுந்தளாம்பிகை தெய்வத் திருமூர்த்திகள் கலியுக மக்களுக்காக அவதாரம் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
தரிசன பலன்கள்
1. பெண் குழந்தை வேண்டுவோர் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்து, தான தருமங்கள் செய்திடில் பெண் வாரிசு திறம்பட அமையும்.
2. பெண்களால் பல துன்பங்களைப் பெற்று வாடுகின்ற பெற்றோர்கள் ஸ்ரீசோமநாதரை வழிபட அவர்களுடைய பெண்களின் துன்பங்கள் நீங்கி நல்வழி கிட்டும்.
3. பெண் மருத்துவர்கள் இக்கோயிலில் இயன்ற திருப்பணிகள், தானங்கள் செய்திட அவர்கள் துறையில் சிறப்பான இடம் பெறுவர்.
4. மருமகளால் அவதியுறுவோர், மாமனார், மாமியார், நாத்தனார் போன்றோர்களினால் துன்பமுறுவோர் ஆகியோருக்கு இத்தல தரிசனம் நல்வழி காட்டும். இவர்கள் இத்திருக்கோயிலில் பெண்களுக்கு உரிய வஸ்திரங்கள் தானம் செய்தல் வேண்டும்.
5. 40 வயதாகியும் திருமணம் ஆகாத பெண்கள் பலர் உண்டு. இவர்கள் இக்கோயிலில் ஜாதி, மதம் பாராது பல சுமங்கலிகளுக்கு மஞ்சள், தாலிச் சரடு, வளையல், கண்ணாடி, குங்குமம், சீப்பு, மருதோன்றி ஆகியவற்றைக் குறிப்பாக வெள்ளிக்கிழமை, வஸந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, திங்கட் கிழமை ஆகிய தினங்களில் அளித்தல் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவற்றைச் செய்வோர்க்கு உடனடியாகப் பலன் கிட்டும்.
6. சொட்டை, வழுக்கை போன்றவற்றால் தலைமுடி குறைவாக உள்ள பெண்கள் இக்கோயிலில் ஏழைகளுக்கு நிறைய எண்ணெய், தைலம் தானம் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.
ஸ்ரீசோமநாதர் ஆலயம்
பிரளயங்களில் பலவிதமுண்டு என்பதை மார்ச் 1994 இதழில் விவரித்திருந்தோம். சில விசேஷ பிரளயங்களில் பல அபூர்வ லிங்கங்கள் பூமியினுள்ளோ, ஜலத்திலோ புதைந்து அமிழ்ந்து விடும். இறை நியதிக்கேற்பத் தக்க தருணத்தில் சித்தர்கள், மஹரிஷிகள் மூலமாகவோ அல்லது பக்தி மிக்க அரசர்கள் மூலமாகவோ வெளிவரும்.
இவ்வாறாக ஸ்ரீதிரிபுவன சித்தரால் உருப்பெற்ற ஸ்ரீசோமநாதர் சிவலிங்கம் காலப்போக்கில் தடாக நீரினுள் அமிழ்ந்தது. சிவநெறிச் செல்வனான ஒரு சோழ மாமன்னன் வளர்த்து வந்த யானை இத்தடாகத் தாமரையை உண்ண ஒரு தாமரையிலிருந்து இரத்தம் பீறிட்டுத் தடாக நீரே செங்குருதியாயிற்று. விஷயம் கேட்டு  ஓடோடி வந்த சோழ மன்னன் தடாகத்தில் புகுந்த போது ஆங்கே ஓர் அற்புதமான தாமரைத் தண்டாலான சிவலிங்கம் இருப்பது கண்டு “சுவாமி! அபசாரம் செய்து விட்டேனே! தங்கள் திருமேனிக்கு என்னால் தீங்கு வந்து விட்டதே! மன்னன் குற்றம் மக்களைச் சாருமே. சிவபெருமானே! என் பிழையைப் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கதறியவாறு தாமரைத் தண்டாலான லிங்கேஸ்வரரைக் கட்டித் தழுவினான்.
மன்னனின் மார்பில் ஒளிர்ந்த முத்து மணிகள் தாமரைத் தண்டில் பதிந்தன. அம்முத்து மணிகளின் பதிவுகள் அரை வட்டங்களாக லிங்கத்தில் பொதிருந்திருப்பதை இன்றும் காணலாம். சிவபெருமான் அந்த அன்பில் களித்து, “சோழ மன்னனே! எம் சிவாலயம் உன்னால் இங்கு அமைய வேண்டும் என்ற எம் விருப்பத்தின் விளைவே இத்திருவிளையாடல். இங்கு எமக்கு ஒரு திருக்கோயில் எழுப்புவாயாக! என்று இறை ஆணை ஒலிக்க கலியுக மக்களுக்கென இவ்வாறு மீண்டும் எழுந்ததே சோமநாதர் ஆலயம்.
ஸ்ரீசோமநாதர் – பெயர்க் காரணம்
தசரத மஹாராஜா  புத்ர காமேஷ்டி யாகம் தொடங்குமுன் மாபெரும் சோமயாகம் நிகழ்த்த எண்ணித் தக்க இடத்தைத் தேர்ந்தெடுக்குமாறு நம் குலகுருவாம் வசிஷ்ட மஹரிஷியை வேண்டினார். சோம யாகத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்திலுள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறொரு சோம யாகத்தை அவ்வூர் மக்கள் நிச்சயித்திருந்தனர். அத்தேதியில் செய்ய இயலாவிடில் அதற்கடுத்த தக்க தேதி மூன்றாண்டுகள் கழித்தே வருமாதலின் தசரத மஹாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தைப் பெற்று அருளுமாறு ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியை வேண்டினார்.
ஸ்ரீவசிஷ்டர் திருக்கயிலாயம் சென்று ஸ்ரீஅகஸ்தியரை நாடி விளக்கம் வேண்டிட, “ஸ்ரீதிரிபுவன சித்தர் தபஸ் செய்த இடமே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், என்ற மூன்று லோகங்களிலும் சோமயாகம் செய்யச் சிறந்த இடமாகும். அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவத்தலமாகும்.. இந்த யுகத்திலிருந்து ஸ்ரீசோமநாதர் என்ற திருநாமத்தையும் தாங்கி அச்சிவலிங்க மூர்த்தி அருள் பாலிப்பார்”, என்று ஸ்ரீஅகஸ்தியர் விளக்கந் தந்திட, தசரத மஹாராஜா இப்பெருமகளூர் சிவத்தலத்தில் அரும்பெரும் சோம யாகம் இயற்றினார். சேதுக்கரை செல்கையில் ஸ்ரீராமர் இதனைப் பூஜித்தார்.
எனவே இத்தலத்தில் சோமயாக வேள்வியை நடத்துவது அபரிமிதமான பலன்களைத் தரும். புத்ர பாக்யத்தை அருளும்.

அடிமை கண்ட ஆனந்தம்

கொல்லிமலை ரேஞ்சில்........... கோவணாண்டிப் பெரியவருடன் சிறுவன் படுகுஷியாக உலா வந்து கொண்டிருந்தான். காரணம், வழக்கமான வெயிலில்லை! சாலையெங்கும் பழமரங்கள், நல்ல மூலிகை மணங்களுடன் சுகமான காற்று! வழியெங்கும் பல சித்தபுருஷர்களின் மகாத்மியங்களையும், பல கோயில்களின் அபூர்வமான வரலாறுகளையும், தன்னுடைய வழக்கமான “மெட்ராஸ் பாஷையில்”  அற்புதமாகக் கூறி சிறுவனை மகிழ்வித்தார் பெரியவர்.
“எப்படி வாத்தியாரே இவ்வளவு விஷயங்களையும் ஞாபகம் வச்சுக்கறது? எனக்கு மூளையே இல்ல்லைன்னு வேற சொல்றியே”
“இதோ பாருடா, உன்னை உன் குருதான் இன்ட்டலிஜென்டுன்னு சொல்லணும், மத்தவங்க கண்ணுக்கு நீ ஒரு அசடாட்டம் தான் நடிக்கணும். எதிர்காலத்துல அசடாட்டமே எல்லோருட்டேயும் நடந்துக்கோ! உங்கிட்ட இருக்கிற ஆத்ம சக்திக்கு, சித்துகளுக்கு உன்னைச் சுத்தித் தேனியாட்டம் மொய்ச்சுடுவாங்க.....”
“வாத்தியாரே உனக்கே சித்து தெரியாதுன்னு சொல்ற, எனக்கும் சித்து வருமா என்ன?“ – சிறுவன் அப்பாவியாகக் கேட்டான்.
“உன்கிட்ட சித்து நிறைய இருக்கடா. ஏதாச்சும் செஞ்சு பாரேன்!” பெரியவர் குறும்பாகச் சொன்னார். கொல்லி மலையோரம் அதன் இயற்கையழகை ரசித்தவாறே இருவரும் நடந்தனர். பெரியவர் ஓரிடத்தில் திரும்பி திடீரென்று மலைமேல் கிடுகிடுவென்று ஏற ஆரம்பித்து விட்டார்., கரடு முரடான பாதை!
“விஷயமில்லாமல் இந்தப் பக்கம் மலையேறுவாரா என்ன?” சிறுவனும் வேக்மாகப்பின் தொடர்ந்தான். ‘என்ன ஸ்பெஷலாகக் காண்பிக்கப் போகிறாரோ? வழக்கம் போல் சஸ்பென்ஸ்!  ஓரிடத்தில் பெரியவர் அமர்ந்தா.
“ஏண்டா இந்த மே மாசம் உனக்குப் பொறந்த நாள் வருமே!” சிறுவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது. கொல்லிமலை ரம்யத்தில் தன் பிறந்த நாளையே மறந்துவிட்டான். தேதியும் தெரியாது, கிழமையும் தெரியாது! ... ஆங். 18ம் தேதி திருச்சி வந்தோம். 19ம் தேதி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்..... சிறுவன் ஏதோ கணக்குப் போட்டவாறே. “ஹையா! இன்னிக்குத்தான் மே இருபத்தி ஒண்ணாம் தேதி! எனக்குப் பொறந்த நாள்’ – சிறுவன் குதூகலித்தவாறே சிட்டாய்ப் பறந்தான்.
“வாத்தியாருக்குப் புடிச்சதா ஏதாச்சும் தரணும் .... கையில் பைசா கிடையாது. இங்கேயோ எங்க பார்த்தாலும் பேர் தெரியாத மரஞ் செடி கொடிகள் தாம்.., ஊம்...” சிறுவன் யோசித்தவாறே நின்றான். “பொறந்த நாளுக்கு வாத்தியாருக்கு நல்லதா ஏதாச்சும் தரணுமே” சிறுவனுடைய கண்கள் ஆவலுடன் நாலாபுறமும் சுற்றின.. “அடடே செம்பருத்திச் செடியிருக்கே” .. சிறுவன் அவ்விடத்திற்கு ஓடினான். பெரியவர்க்கு பெரிய சிவப்புச் செம்பருத்திப் பூ என்றால் கொள்ளை ஆசை! ஒவ்வொரு இதழாகப் பிரித்து மிகவும் சுவாரசியமாக மென்று தின்பார். ஒரு பூ தின்பதற்கே கால்மணி நேரம் ஆகும்! அவ்வளவு பொறுமையாக இதழ் ஒடியும் சப்தம் கூடக் கேட்காமல் மெதுவாகக் கடித்து ருசித்துச் சாப்பிடுவார்!  நூற்றுக்கணக்கான செம்பருத்திச் செடிகள்! பெரிய பெரிய பூக்கள்! ஆனால் என்ன ஏமாற்றம்! எல்லாமே வெள்ளை நிற, ஆரஞ்சு நிறப் பூக்கள்! மருந்துக்குக் கூட ஒரு சிவப்பு நிறப் பூவும் கண்ணில் படவில்லை. சிறுவனுக்கு வருத்தம் மேலிட்டது. நேரமோ கடந்து கொண்டிருந்தது. சிறுவன் வேகவேகமாகப் பன்னிரெண்டு வெள்ளைச் செம்பருத்திப் பூக்களைப் பறித்துப் பையில் வைத்துக் கொண்டு ஓடோடி வந்தான் .
“வாத்தியாரே! என் பொறந்த நாளைக்கு உனக்கு என்ன கொண்டாந்திருக்கேன், சொல்லு பார்க்கலாம்?”
“எனக்கு என்ன கொண்டாந்திருக்கப் போற, உனக்கு வயசு பன்னிரெண்டு! பன்னெண்டுனா 2 +1 = 3 மூணு குரு நம்பர். உன் குருவான எனக்கு செவப்புச் செம்பருத்திப் பூன்னா உயிர்னு உனக்குத் தெரியும். மொத்தத்துல பன்னெண்டு செவப்புச் செம்பருத்திப்பூ கொண்டாந்திருப்பே. அதுவும் கொல்லி மலை செவப்புச் செம்பருத்தின்னா அதோட டேஸ்ட்டே தனி தான். எடுடா கண்ணு.... நல்லா ருசிச்சுத் திங்கலாம்...”, எனப் பெரியவர் ஆவலுடன் கைகளை நீட்டினார். சிறுவனுக்கு மனம் என்னவோ போலிருந்தது. ‘செவப்புப் பூ இல்லையே, வெள்ளைப் பூதான் இருக்கு, வாத்தியாரே!” என்று சொன்னால் அவருக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும். தன் பிறந்த நாளில் கூட அவரை சந்தோஷப்படுத்த முடியவில்லையே..... சிறுவன் பரிதவித்தான்...
இந்த ஏக்கமே அழுகையாக மாறிக் கண்களில் நிரம்பி நின்றது. பெரியவரின் முகத்தைப் பார்க்கவே மனமில்லாமல் தலையைக் குனிந்து  கொண்டே பையிலிருந்த பூக்களைத் தலை நிமிராமலேயே அவர் கையில் திணித்து விட்டு அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். வெம்மையான கண்ணீர்த் துளிகள் அவர் திருப்பாதங்களைச் சூடாக்கின. தலையைத் தூக்கிப் பார்க்க மனமில்லதவனாய் அவர் பாதங்களோடு தலையை ஒட்டி வைத்துக் கொண்டான். சிறுவன், தன் தலையிலும், முதுகிலும் பூக்கள் விழுவதை உணர்ந்து பெரியவர் தன்னைப் பூக்களினால் ஆசீர்வதிக்கின்றார் எனத் தெளிந்து அப்பூக்களைத் திரட்டிக் கணிகளில் ஒற்றியவாறே மெதுவாக எழுந்தான்.
அமைதியாகக் கண்களைத் திறந்த சிறுவன்.... “ஹை! சிவப்புப் பூ.....” சிறுவனுடைய ‘கிறீச்’ என்ற குரல் விண்ணைப் பிளந்தது... ஆம்! அந்தச் செம்பருத்திப் பூக்கள் மருதாணிக் கறை நிறத்தில் கருஞ்சிவப்பில் பளபளத்தன.
சிறுவன் மிகுந்த ஆச்சரியத்துடன் பெரியவரை நோக்க.... அவரோ வழக்கம் போல்.... வானத்தை நோக்கியவாறே தன் கையிலிருந்த செம்பருத்திப் பூக்களை மென்று தின்று கொண்டிருந்தார். அனைத்துப் பூக்களும் கருஞ்சிவப்பு நிறத்தில்! “வாத்தியாரே! நான் கொண்டு வந்தப்போ எல்லாம் வெள்ளைப் பூவாத்தானே இருந்திச்சு............”
“ஆமாண்டா, உன் கிட்டதான் நிறையச் சித்து இருக்குன்னு சொன்னனே. புரிஞ்சுக்கலையா!”
பெரியவர் கலகலவென்று சிரித்தார். அவருடைய பேரண்டச் சிரிப்புக் கொல்லி மலையெங்கும் ஒலித்தது!
அணிமா, மஹிமா போன்ற அஷ்டமா சித்திகள் மட்டுமல்லாது ஏனைய ஆயிரமாயிரம் சித்துக்கள் கைவரப் பெற்ற நிலையை நீ அடைந்து விட்டாய்! என்பதை அதிகார பூர்வமாகப் பட்டயமாக்கும், அருள்வாக்கன்றோ, அந்தத் தெய்வீகச் சிரிப்பு! சித்துக்களில் பரிபூரண நிலை எய்தும் பயிற்சி முகாம் ஆயிரமாயிரம் சித்தர்கள் உலாவும் கொல்லி மலையிலன்றோ சற்குரு நாதரின் தலைமையில் அச்சிறுவனுக்கு அமைந்தது! அற்புத இறையருள் கூட்டும் பேரின்ப நிலையன்றோ அது!
சிறுவன் தன்னை மறந்து லயித்து நிற்க... “டேய்! நம்ப குருநாதர்டா! நமஸ்காரம் பண்ணிக்கோ!” சிறுவன் விழித்துப் பார்த்தான்.. எதிரே ஒரு விறகுவெட்டி நின்று கொண்டிருக்க.... பெரிய்வர் விறகுவெட்டியை நமஸ்கரித்து எழுந்தார். சிறுவன் உஷாரானான்! .பெரியவரைப் போல் ஸ்ரீஅகஸ்தியர் குல வழக்கப்படி சித்தர்கள் பாணியில் விறகுவெட்டியின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கி எழுந்தான்.... “இந்தா! இதை அவருக்குக் கொடு”.... பெரியவர் ஒரு அட்டை டப்பாவை நீட்டினார். ஸ்வீட் பாக்ஸ்! “சாமீ! நம்ம பிள்ளையாண்டானுக்கு இன்னிக்கிப் பொறந்த நாள். நல்லா ஆசீர்வாதம் பண்ணு“.
விறகுவெட்டி  ஸ்வீட் பாக்ஸில் இருந்து ஒரு இனிப்புக் கட்டியை வாயில் வைத்து பல்லால் விண்டு... .சிறிது நேரம் மென்றான். வாயைத் திறந்து மென்ற பகுதியில் ஒரு விள்ளலை எடுத்துப் பெரியவரின் வாயில் சிறிது வைத்து மீதியைச் சிறுவனின் வாயில் திணித்தான். சிறுவனுக்கு என்னவோ போலிருந்தது. வியர்வை நாற்றத்துடன் விறகு வெட்டி அருகில் வந்து காவியேறிய பற்களின், ஊடே ஒடுங்கியிருந்த ஸ்வீட்டை எடுத்துக் கொடுத்தது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..
அந்த ஸ்வீட் துண்டு கூட ஏதோ ஒரு ருசியில் இருந்தது. சிறுவனுக்கு அவ்வளவாக ருசிக்கவில்லை.. “வேற ஆசீர்வாதம் கிடையாதா?” பெரியவர் குரலிது! விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தவாறே அருகில் இருந்த ஒரு மூலிகைச் செடியில் இருந்து ஒரு மூலிகை இலையை எடுத்துச் சிறுவனின் வாயில் அதன் சாற்றைப் பிழிந்து அந்த இலைக் காம்பினால் சிறுவனின் நாக்கில் ஏதோ அட்சரங்களை எழுதிட ... சிறுவன் வாய் திறந்து பாடினான்.. சிறுவன் சராமாரியாகப் பொழிந்தான் அற்புதமான கிரந்த நாடிகளை!
ஆதிமூல ஸ்ரீஅகஸ்திய பகவான் மூல ஸ்துதி
“அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்மகனே! அகத்தியா, வா!”
சதாசிவப் பரப்பிரும்மம் சிவபெருமானின் பரிபூரண இறைநிலையில் இருந்து சித்த புருஷர்களின் மகரிஷியாக ஸ்ரீஆதிமூல ஸ்ரீஅகஸ்திய பகவான் ரிஷி அவதாரம் பெற்றபோது ஸ்ரீபரமேஸ்வர மூர்த்தியே அருளிய மூலத் தமிழ் ஸ்லோகமிது. இந்த அரிய இறை மொழிகளே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் திருவாயிலிருந்து மலர்ந்த முதல் அகஸ்திய கிரந்த நாடியாகும்.

அவளிவநல்லூர் சிவத்தலம்

சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, “நாமா இந்தக் கிரந்த நாடிகளைப் பாடினோம்!” ஒரு விதப் புத்துணச்சியோடு உடல் சிலிர்க்க பெரியவரை நோக்கினான்.. “நல்ல ஆசீர்வாதம்டா உனக்கு!” எனப் பெரியவர் கையை ஆட்டினால், யாருக்காக கையை அசைத்தார்? சிறுவன் திரும்பிப் பார்த்தான்.. விறகுவெட்டியைக் காணவில்லை.. பெரியவர் புன்முறுவலுடன் “ஓம்ஸ்ரீ சர்வஸ்ரீ சாக்த பரப்பிம்ம ஸ்ரீஅகஸ்திய மஹராஜ் கீ ஜெய்!“ என்று பெரிய கோஷத்துடன் விண்ணை நோக்கி ஸ்ரீஅகஸ்திய முத்திரையில் வணக்கம் செலுத்தினார்.
வந்த விறகுவெட்டி ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவா! சிறுவன் ஆனந்தம் அடைந்தான். அவன் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என்ன செய்வதென்று தெரியாது விறகுவெட்டி நின்ற இடத்தில் உருண்டு புரண்டு எழுந்தான்..
“வந்தவரை விட்டாச்சு! இனி என்ன பிரயோஜனம்?” இது பெரியவரின் குறும்புக் கேள்வி!
“வாத்தியாரே அவர்தான் அகஸ்தியர்னு முன்னாடியே ஏன் சொல்லலை?”
“சொல்லிருந்தா, அதைக் கொடு இதைக் கொடுன்னு புடுங்கி எடுத்திருப்பியே”
பெரியவர் கிளம்பி விட்டார். அன்றைய திருநாளில் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் திருக்கரங்களால் தம் நாக்கு தீண்டப் பெற்றமையால், அன்றிலிருந்தே அச்சிறுவனின் நாவில் ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகள் பொழியத் துவங்கின. அன்றிலிருந்து ஆயிரமாயிரம் ஆன்மீக நாடிகளை அமிர்தமெனப் பொழிந்து வரும் குருவருளைத் திருவருளாகப் பெற்ற நம் குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் நம்மிடையே வாழ்ந்து நமக்கு அருள்பாலிக்க வந்துள்ளார். அவர் அறிவுறுத்தும் நற்காரியங்களைப் பேணி  இறைப் பணி புரிந்து தான தருமங்கள் செய்து ஸ்ரீஅகஸ்திய தரிசனம் பெற்ற அவர்தம் திரண்ட குருவருளைப் பெற்று உய்வோமாக!
சித்த புருஷர்கள் தங்களை இனம் காட்டிக் கொள்வதே கிடையாது. அழுக்கடைந்த கறுத்த மேனி.... வியர்வை நாற்றம்... பழுப்பேறிய பரந்த தலை அழுக்கு மண்டிக் கிடக்கும் நீண்ட நகங்கள்.... வெற்றிலைக் காவியேறிய கோணல் மாணலான பற்கள். மொத்தத்தில் காணச் சகிக்காத ஒரு விறகுவெட்டி உருவம். இப்படி ஓர் உருவம் எடுத்தால் அவரையா ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு என்று சொல்ல முடியும்!
ஆனால் நம் குருமங்கள கந்தர்வாவிற்கு இவ்வுருவத்தில் தானே ஸ்ரீஅகஸ்தியர் தரிசனமளித்தார்! அருகிலிருந்த சிவகுருமங்கள கந்தர்வாவாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகளும் அறிந்தும் அறியாதவர் போல் மறைபொருளாய் சாட்சியாகத்தான் நின்றாரே தவிர தம் குருநாதரைப் பற்றி ஒன்றும் கூறினாரில்லை! இவர்தான் அவர் என்று சுட்டிக்காட்டினால் அலைபாயும் மனம் கொண்டு எதை வேண்டுமானாலும் கேட்டு அவரைப் பாடாய்ப்படுத்தி விடுமோமல்லவா?
மேலும் இத்தகைய அற்புதத் தெய்வ தரிசனங்களைச் சற்குருவே அருகிருந்து கூட்டுவிப்பதால் அவரே நாம் பெற வேண்டியதைப் பெற்றுத் தருவார். கொல்லி மலையில் விறகுவெட்டியாய்த் திருவுலா வந்த ஸ்ரீஅகஸ்தியரிடம் சிவகுரு மங்களகந்தர்வா தம்மை அண்டிப் பிழைக்கும் (இதுவன்றோ முழு சரணாகதி) “சிறுவனுக்கு“ வெறும் ஆசிர்வாதம் தான் பெற்றுத் தந்தார்.. சற்குரு ஆசீர்வாதம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. ஏனெனில் வேண்டத்தக்கது அறிந்தவரும், வேண்ட முழுவதுந் தருபவரும் அவரே!
விறகுவெட்டியாய் வந்து ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் நம் குரு மங்களகந்தர்வாவிற்கு வழங்கிய அனுக்ரஹத்தால் அவர் திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரையின் 1001வது குருமஹா சன்னிதானமாக இலங்கும் பெரும்பாக்யம் பெற்றார்.
ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகள்
பிரபஞ்சத்தைப் பற்றிய முழு அறிவையும், ஸ்ரீஅகஸ்திய மஹா கிரந்தங்களில், நாடி வடிவில் ஸ்ரீஅகஸ்திய மாமுனியே அருளியுள்ளார். இந்தக் கிரந்த நாடிகளில்
1. கிருத யுகத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீஆயூர்தேவி போன்ற தெய்வாவதார மூர்த்திகளைப் பற்றிய ஆன்மீக ரகசியங்கள்.
2. வால்மீகி, கம்பராமாயண காவியங்கள், வியாசரின் மஹாபாரதம் இவற்றில் இடம்பெறாத ஆயிரக்கணக்கான ராமாயண, மஹாபாரத கால நிகழ்ச்சிகளை இருடிகள் இராமாயணம், இருடிகள் மஹாபாரதம் ஆகிய இரண்டு அற்புதக் காவியங்கள் மட்டுமே விவரிக்கின்றன. இவை கிரந்த நாடிகளாக உள்ளன.
3. கொடிய நோயான எயிட்ஸ்ஸிற்குச் செருப்பட்டை என்னும் அரிய மூலிகையால் பகுக்கப்படும் மருந்து – இவ்வாறாக அதி அற்புதமான, ஆயிரக்கணக்கான மூலிகாபந்தன ரகசியங்கள்.
4. ஸ்படிக உருவங்கள், நவபாஷாண மூர்த்திகள், ஆன்மீக ரசவாதக் கலை அம்சங்கள், கோயில் தூண்களிலும், மாடங்களிலும் காணப்படும் சிலா ரூபங்களின் தெய்வீக ரகசியங்கள்
5. கிராம தேவதை முதல், ஸ்வயம்பு மூர்த்திகள் உட்பட பூலோக தெய்வதேவதா மூர்த்திகளின் பூஜா ரகசியங்கள், அவதார அம்சங்கள், சிலா தாத்பர்யங்கள்.
என மேற்கண்டவை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில்  காணப்படும் விஷயங்களின் ஒரு அணுவே ஆகும். ஈரேழு உலகங்களிலும், ஏன் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளின் படைப்பு ரகசியத்தையும் ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகள் விளக்குகின்றன. காண்பதற்கரிய ஆன்மீகப் பொக்கிஷமிது. இவற்றை ஏட்டுச்சுவடியில் அல்லாது நான்கு வேதங்கள் போல் ஒலிப்பொருளாய், கிரந்த நாடிகளாய் தேனருவிபோல் தம் திருவாயால் அமிர்தமெனப் பொழியும், தெய்வத் திருவருளைப் பெற்றவரே நம் குரு மங்கள கந்தர்வா! ஸ்ரீஅகஸ்தியரே திருவுருக்கொண்டு மொழிவது போல் அவர்தம் திருவாய் மலர்ந்து அருளும், அமிர்தப் பொழிவினைக் கேட்கும் பாக்யம் பெற்றவர்கள் ஒரு சிலரே. என்னே சற்குரு மஹிமை!

பாவ வருடம்

ஸ்ரீபாவ வருடப்பிறப்பு – நம் குருமங்கள கந்தர்வாவின் விசேஷ அருளுரை
ஸ்ரீபவ வருடம் என்றும் ஸ்ரீபாவ வருடம் என்றும் இரண்டு விதங்களில் அழைக்கப்படுகிறது. இரண்டுமே விசேஷமான தத்வார்த்தங்களைத் தம்முள் கொண்டுள்ளன. அன்பு என்றும் ஆத்மார்த்தமான குணம் என்றும் விளக்கம் தரலாம். சென்ற ஸ்ரீமுக வருடத்தில் பஞ்சாங்க ரீதியாக ஸ்ரீராம நவமி அமையவில்லை எனினும் சித்த புருஷர்கள் அருளியவண்ணம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமி ஏற்று நடத்திய ஸ்ரீராம நவமி 22.3.1994 அன்று (செவ்வாய்கிழமை) ஹரித்துவார மங்கலம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலில் தேவபூஜையாக அமையைப்பெற்ற ஆன்மீக ரகசியத்தை குருவருளால் மார்ச் 1994 அகஸ்திய விஜயம் இதழில் வெளியிட்டு இருந்தோம். நிகழும் ஸ்ரீபாவ வருடத்தில் இரண்டு ஸ்ரீராமநவமி உற்சவங்கள் வருவதால் ஸ்ரீராமர் உபாசனை, ஸ்ரீராமர் பூஜை, ஸ்ரீராமர் மந்திர ஜபம் போன்றவை இவ்வருடத்தில் அற்புதமான பலன்களைத் தரும். மேலும் ஒவ்வொரு வருடத்திய ஸ்ரீராமநவமியையும் ஒவ்வொரு வைஷ்ணவ  கோவிலில் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது எனச் சித்தர்கள் அருளுகின்றனர்.

திருப்பூவனூர் சிவத்தலம்

ஆங்கிரஸ வருடம் – ஸ்ரீபுள்ள பூதங்குடி திருக்கோயில்
ஸ்ரீமுகம் – ஹரித்தவாரமங்கலம் திருக்கோயில்
ஸ்ரீபாவ வருடம் 20.4.1994 முதல் ஸ்ரீராமநவமி – திருபூவனூர் திருக்கோயில்
இவ்வாறு அறுபது வருடங்களுக்கும் உரித்தான வைஷ்ணவ திருக்கோயில்களைத் தக்க சற்குருமார்களை நாடி அறிய வேண்டும்.
20.4.1994 அன்று மேற்கண்ட திருப்பூவனூர் பெருமாள் கோவிலுக்குச் செல்ல இயலாதோர் அடுத்து வரும் ஸ்ரீபவவருட இரண்டாவது ஸ்ரீராமநவமி உற்சவத்திற்குள் (9.4.1995) திருப்பூவனூர் சென்று பெருமாள் கோவிலில் தரிசனம், அன்னதானம், வஸ்திர தானம், குறிப்பாக பூமாலை அலங்காரங்கள் செய்து வழிபட்டால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். இவ்வூரில் உள்ள சிவன் கோவிலை தரிசனம் செய்து மணமுள்ள பூமாலை அலங்காரம் செய்து பெருமாள் கோயிலையும் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீராமர் பூஜை செய்த சிவலிங்கம் ஆதலால் இந்த நியதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வடைமாலை சாற்றுதல் முக்கியமானது.
திருப்பூவனூர் ஸ்ரீராமநவமி மகிமை

திருப்பூவனூர் பெருமாள் தலம்

ஒரு மகா பிரளயத்திற்குப்பின் சர்வேஸ்வர மூர்த்தி, பார்வதி தேவியுடன் உலாவந்த போது பூக்கள் நிறைந்த இவ்விடம் பிரளயத்தையும் விஞ்சி நின்று மலர்ந்து காட்சியளித்தது குறித்து ஆச்சரியம் அடைந்தார். இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகக் குடிகொண்டார். சேதுக்கரை செல்லும் வழியில் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி இந்த நந்தவனத்தில் பூக்களைப் பறித்தபோது பூச்செடிகளுக்கிடையே இந்த லிங்கத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து பூஜை செய்தார். குறிப்பு : தஞ்சை மாவட்டம் மன்னார்குடி அருகே திருப்பூவனூர் கிராமம் உள்ளது.
ஸ்ரீபாவ வருடத்தில் வாகனங்கள் வாங்குவது மிகவும் சிறப்பானதாகும். வீடு மாற்றுபவர்கள் ஆனி மாதத்திற்குள் மாற்றுதல் உத்தமமானதாகும். இரவு 10 பத்து மணிக்குள் அவரவர் இல்லம் திரும்பி விடவேண்டும். வெளி இடங்களில் தங்க நேரிட்டால் இரவு பத்து மணிக்குள் அவரவர் தங்குமிடம் சேரவேண்டும். இரவில் தக்க நேரத்தில் இல்லம் திரும்புவதற்குத் தக்க வசதிகளை ஏற்படுத்திக்க் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வருடத்தில் பொதுவாகத் தெய்வத்தைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல் சிறந்த தவமாகக் கருதப்படுகிறது. இலவசமாகத் தெய்வீக புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்தல், பிரயாணம் செய்கையில் சக பயணிகளுடன் தெய்வீகத்தைப் பற்றி பேசுதல் நாம சங்கீர்த்தனம், பஜனை போன்றவற்றை நடத்துதல் போன்ற தெய்வீகப் பிரச்சார காரியங்களில் ஈடுபட வேண்டும்.

அட்சய திரிதியை

ஆதிமூல பிரம்மாவிற்கு ஐந்து சிரசுகள் இருந்தன. நான்கு வேதங்களை ரக்ஷிப்பதற்கு நான்கு தலைகளையும், ஜீவசிருஷ்டிக்கு ஐந்தாவது தலையையும் சிவபெருமான் தந்து பிரம்ம தத்துவத்தை ஏற்படுத்தினார். ஒரு முறை ஸ்ரீபிரம்ம தேவருக்குத் தன்னால் தான் பிரபஞ்சசிருஷ்டியே இயங்குகிறது என்ற அகங்காரம் குடிகொள்ளவே அவருடைய சிருஷ்டியில் பல பேதங்கள் எழுந்தன. அகங்காரம் மிகுந்த அசுர சிருஷ்டிகள் தோன்றின. கலியுகம் முன்னரே வந்து விட்டதோ என்று மஹரிஷகளும், தேவர்களும் அஞ்சும் வண்ணம் திரேதா யுகத்திலேயே தீயசக்தி ஓங்கியது.
தாம் உற்பவித்த அகங்காரம் மிக்க சிருஷ்டிகள் எதிர்சக்திகளாக அமைந்ததைக் கண்டு ஸ்ரீபிரம்மாவே திகைத்தார்... அவர்தம் செருக்குற்ற ஐந்தாம் சிரசு வேத பிரம்மங்களான நான்கு சிரசுகளையும் அடக்கி ஆண்டது. தம் புத்தியே தடுமாறுவதை ஸ்ரீபிரம்ம தேவர் உணர்ந்தார். அகந்தையால் தாம் சிருஷ்டித்த பிரஜைகளைத் தாமே அழிப்பதென்பது, அவரால் இயல்லாததன்றோ?
தம் தவறுக்காக சிருஷ்டிக்கப்பட்டவைகளை மாய்ப்பதா? ஸ்ரீபிரம்மா மனங் கலங்கினார். ஊழித் தாண்டவ மூர்த்தியாம் ஸ்ரீருத்ரனை நோக்கித் தவமிருந்தார். ஊழித் தாண்டவ உக்கிரகத்தில் ஸ்ரீருத்ரன், ஸ்ரீபிரம்மாவின் ஐந்தாம் சிரசின் அகந்தையால் விளைந்த விபரீதமான விளைவுகட்குத் தண்டனையாக அந்தச் சிரசைக் கொய்து எறிந்து விட்டார். இதனை ஸ்ரீருத்ரேஸ்வரரின் ஹஸ்த தீட்சையென ஏற்று ஸ்ரீபிரம்மா மனமகிழ்ந்து தம் தவத்தை முடித்துக் கொண்டார்.

ஸ்ரீசாட்சிநாதர் அவளிவநல்லூர்

ஆனால் ஸ்ரீருத்ரனால் கொய்யப் பெற்ற சிரசோ புவனமெங்கும் அலைந்தது. காரணம் திரிமூர்த்திகளுள் ஒருவராம் ஸ்ரீபிரம்மதேவரின் தெய்வாம்சங்களுடன் அகங்கார ராஜஸ குணமும் கூடியமையால் அக்னிப் பிழம்பாய் அது விரைவாகச் சுற்றி வந்தும், பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் போன்ற பதினான்கு லோகங்களிலும் ஏனைய அண்ட சராசர லோகமெங்கும் எவரும் அதனை ஏற்கவில்லை. காரணம், அகங்கார அம்சங்கள் நிறைந்த அதனை எந்த லோகத்திற்கும் ஏற்கும் சக்தி அமையவில்லை. அந்தச் சிரசு மீண்டும் பிரம்ம லோகம் செல்ல, ஸ்ரீபிரம்மா அதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கிட அது ஸ்ரீருத்ரனைச் சரணடைந்தது. “ஸ்வாமி! அடியேனுடைய அஹங்காரத்திற்க் போதிய தண்டனை பெற்று விட்டேன். தங்கள் திருக்கரங்களால் தீண்டப் பெற்ற அடியேனுக்கு அதற்குரித்தான பாக்கியத்தை அளித்தாவது கரையேற்றுவீர்களாக!“ என்று ருத்ரனை வேண்டியது.
“ஊழிக்காலத்தில் அதே தாண்டவ கோலத்தில் தான் பரிபூர்ணமாக்க இயலும். எனினும் எம் ருத்ர அம்சத்தால் தீண்டப் பெற்றமைக்குப் பரிசாக ஸ்ரீசதாசிவ பிரம்மமாகிய சிவபெருமானே உனக்கு நற்கதி அருள்வார்” என்று ருத்ரன் அருளினார். அந்தச் சிரசு திருக்கயிலாயத்தை அடைந்தது. ஸ்ரீருத்ர மூர்த்தியின் ஸ்பரிசம் பட்டிருந்தமையால் சிவபெருமானே அதனை எதிர்கொண்டழைத்தார். சிவன் தம் திருக்கரங்களை நீட்ட....
சிவனின் திருவிளையாடல்
எவரும் தீண்ட இயலா ஆலகால விடத்தையே உண்டு அவனியைக் காத்த ஆலகால சுந்தரனல்லவா? அனைத்து ஜீவன்களையும் ஜடப்பொருட்கள், பிரபஞ்ச வஸ்துக்கள், ஏன் பிரபஞ்சத்தையும் உள்ளிட்ட அனைத்தின் தொடக்கும், இடையும், கடையும் அவனன்றோ! சிவபெருமான் தம் வலக்கரத்தில் ஸ்ரீருத்ரனால் கொய்யப் பெற்ற ஐந்தாம் சிரசை ஏற்றுக்கொள்ள ..... அது கபாலமாகச் சிவபெருமானின் வலக்கரத்தில் ஒட்டிக் கொண்டது. இத்திருக்காட்சியைப் பார்த்து நின்ற தெய்வ மூர்த்திகளும், தேவர்களும், மஹரிஷிகளும் அடுத்து என் செய்வது என்று புரியாது விழித்தனர்.
“சிவபெருமானின் திருக்கரங்களிலிருந்து இக் கபால ஓட்டை எப்படி விடுவிப்பது? அவனன்றி ஓர் அணுவும் அசையாது அல்லவா? பரம்பொருளுக்கு நாமா உதவிபுரியும் நிலையில் இருக்கிறோம். இந்த எண்ணமே அகங்காரத்தின் விளைவு அல்லவா? அகங்காரத்தில் தானே பிரம்மன் செருக்குண்டார்”, என இவ்வாறாக அவர்களுடைய எண்ணங்கள் பொங்கி எழுந்தன.
சிவபெருமான் நகைத்தார் “உமையவளை  நாடி உற்ற விளக்கம் பெறுவீர்“, அகங்காரப் பிரியர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.” இதுவே பரமசிவனின் அருள்வாக்கு, அனைவரும் ஸ்ரீபார்வதி தேவியை நாடித் தொழுது, “எமக்கு விளக்கம் தர வேண்டுகிறோம்” என்றனர்.
இறைவனுக்கும் ஒரு சோதனை
ஸ்ரீஉமையவள் புன்முறுவலுடன் அருளுரை தந்தனள், “இறைவனின் மகத்தான திருவிளையாடலில் இதுவும் ஒன்றாகும். பலயுகங்களுக்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. பிரபஞ்சத்திலுள்ள எறும்பு முதல் யானை வரை அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்ரீபரமேஸ்வரனால் தினந்தோறும் எப்படிப் படி அளக்க முடிகிறது? என்பதே என் சந்தேகம். அவரைச் சோதிக்கும் பொருட்டு ஒரு சிறு படியினுள் ஒரு எறும்பை இட்டுக் கவிழ்த்து வைத்தேன்.. படிக்குள் சிக்கிய எறும்பிற்கு ஈசன் எப்படிப் படி அளக்கிறார் என்று சோதித்தேன். இரவு வந்தது. ஈசனும் வந்தார், “இன்றைக்கு எல்லா ஜீவன்களுக்கும் உணவு அளித்தீர்களா?” என்று கேட்டேன். “ஆம்! நிச்சயமாக ..,, இதிலென்ன உனக்குச் சந்தேகம்?” “இந்த எறும்பிற்கு “ என்று கூறியவாறே சிறுபடியினை நிமிர்த்திப் பார்த்தேன் அதற்குள் நான்கைந்து ரவை கலந்த சர்க்கரை சிதறியிருந்தது. சிவபெருமானைப் பார்க்க நாணி, வெட்கித் தலைகுனிந்து நின்றேன். “அகிலாண்ட பரமேஸ்வரியாக இருந்தும் என்னுடைய ஜீவ பரிபாலனத்தை சந்தேகித்தமையால் சிலகாலம் என்னை விட்டுப் பிரிந்து இருப்பாயாக!“ என்று ஈசன் ஆணையிட்டார்.
நான் அவர் பாதங்களைச் சரணடைந்து, “அறியாமல் பிழை செய்து விட்டேன்., ஈசா! என் பிழையைப் பொறுத்து அருளுங்கள்“ என வேண்டினேன். ஈசன் சிரித்தவாறே, “தேவி! உன்னுடைய இன்னொரு அவதாரம் உருவாவதற்கான பின்னணியே எம்முடைய இத்திருவிளையாடல்!”
எம்முடைய அன்ன பரிபாலனத்தைச் சோதித்தாய் அல்லவா? அதற்காக நீ ஸ்ரீஅன்னபூரணி தேவியாக வடிவுகொண்டு கங்கைக் கரையில் அனைவருக்கும் அன்னம் பாலிப்பாயாக! ஒரு நாள் உன்னிடம் யாமே அன்னம் யாசிப்போம்! அன்றே உன்னை மீண்டும் ஏற்று அருளுவோம்“ என்று  கூறிட நான் கதறி அழுதேன் “அனைவருக்கும் அன்னமிடும் ஆண்டவனுக்கு நான் அன்னமிடும் நிலைமையா என்று மன்றாடிக் கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை”.
இதன் பின்னணியாகத்தான் அவர் தம் வலக்கரத்தில் இன்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கபால ஓடாக ஏந்தியுள்ளார். நீங்களனைவரும், அன்னபூரணியாக நான் அமர்ந்திருக்கும் கங்கைக்கரைக்கு வருவீர்களாக! என்று ஸ்ரீஉமையவள் அருளினாள்.
சிவன் யாசித்தல்
கையில்  திருவோட்டுடன் ஸ்ரீசிவபெருமான் பல லோகங்களிலும் அன்னம் யாசித்தார், “பவதி பிக்ஷாந்தேஹி” சாட்சாத் பாமேஸ்வரனே அன்னம் யாசிக்கின்றார், ஈசன் தம் திருவோட்டில் எவ்வளவு அன்னம் விழுந்தாலும் அதனை அந்தக் கபால ஓடே சாப்பிட்டு விடும், அந்தக் கபால ஓடும் ஈசன் கையை விட்டு அகல்வதாயில்லை, இதனைக் கண்டு  ஈசனை எங்கும் தொடர்ந்த தேவமூர்த்திகளும், ரிஷிகளும் இன்னாரென்ன பிறரும் வருந்தினர்..
திருதியைத் திதியில்....
அன்று திருதியை திதி, ஈசன் கங்கையில் நீராடி ஆங்கே, கங்கைக் கரையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம், “பவதி பிக்ஷாந்தேஹி தாயே அன்னபூர்ணேஸ்வரி!“ என்று யாசித்திட, லோக மாதாவாம் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி சர்வேஸ்வரனுக்கு அன்னம் பாலித்தாள். கோடிக்கணக்கான சித்தர்களும், மஹரிஷிகட்கும் மட்டுமல்லாது, தசாவதார மூர்த்திகள் மற்றும் அனைத்து அவதார மூர்த்திகளுக்கும் அன்னம் பாலித்த திருக்கரங்கள் அல்லவா? அந்த அன்னத்தின் சாரமான பராசக்தி அம்சங்களைத் தாங்க இயலாது ஈசன் கையிலிருந்த கபால ஓடு உதிர்ந்தது, சர்வேஸ்வரனாகிய சதாசிவன் காசி விஸ்வேஸ்வரனாக அவதாரங் கொண்டு, ஸ்ரீவிசாலாட்சியாக ஸ்ரீஅன்னபூரணி அன்னையை ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக லோகமாதாவாகிய ஸ்ரீஅகிலாண்ட பரமேஸ்வரி, இறைவனுக்குப் படி அளந்த திருநாளே அக்ஷய திருதியை ஆகும். ஸ்ரீஅன்னபூரணி தேவியின் திருக்கரங்களில் உள்ள பாத்திரமே அக்ஷய பாத்திரம் ஆகும். இப்பாத்திரத்திலிருந்து இறைவன் உணவு உண்ட நாளே “அக்ஷய திருதியை“ ஆகும்.
அட்சய திருதியை
இறைவனே உணவு உண்ட இந்த அக்ஷய திருதியை நன்னாளில் அனைவரும் உணவு உன்பதற்கு வழி செய்ய வேண்டும். எனவே ஏழை, எளியோர்க்கும், வறியோர்க்கும் அன்னமிடுதல் அனைத்து சௌபாக்யங்களையும் தரும். காசி, காசிக்கு நிகரான திருவிடைமருதூர், கங்கை, காவிரி படித்துறைகள், ஸ்ரீஅன்னபூரணி எழுந்திருளியுள்ள ஆலயங்களில் அக்ஷய திருதியை வரும் 13.5.1994 வெள்ளிக் கிழமையன்று அன்னம் பாலித்திடில் அச்செயல் மிகுந்த இறையருளைப் பெற்றுத் தரும். எனவே, அக்ஷய திருதியை அன்று அன்னதானம் செய்தால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும். ஏனைய தினங்களில் இறைவனுக்கு நிவேதனம் மட்டுமே செய்கிறோம். நிவேதனம் என்றால் “காண்பிப்பது“ என்று பொருள். இந்நாளில் நிவேதனம் மட்டுமன்றி, “இறைவா! உண்டு மகிழ்வாயாக“ என்று வேண்டிட இறைவனே உணவை ஏற்று நம்மை ஆனந்தப்படுத்துகிறான்.ஆகையால் அக்ஷய திருதியையில் படைக்கப்படும் உணவு மிகச் சிறந்த பிரசாதமாகும்!.

 

ஸ்ரீஅன்னபூரணி தேவியும் ஸ்ரீசரஸ்வதி தேவியும்
திருப்புகலூர் திருத்தலம்

அக்ஷய திருதியைக்குப் பிறகு........
அக்ஷய திருதியைக்குப் பிறகு நிகழ்ந்தது என்ன? இதனை அருளும் வல்லமை பெற்றவர்கள் சித்த புருஷர்களே. இத்தகைய ஆன்மீக ரகசியங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் அருளும் போது நாம் பூரிப்படைகிறோம். இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோமாக.
ஆங்கே விண்ணுலகத்தில்..... ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்ம தேவரின் சிரசிற்கு பங்கம் ஏற்பட்டதால், தம்முடைய நாயகர் ஸ்ரீபிரம்ம தேவருக்கு நற்கதி அளிக்கும்படி சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரியத் தொடங்கினார். தவத்தின் உச்சநிலையில் அவள் கங்கையினும் மிஞ்சிய பெரும் நதியாக உருவெடுத்துச் சீற்றத்துடன் பூலோகம் நோக்கிப் பாய்ந்தனள். பூலோகத்தால் அதனைத் தாங்க இயலுமா! எவருக்கு அதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை அமைந்து இருக்கிறது? பூலோகத்தின் எப்பகுதியில் இப்புனித ஆறு சென்று இறங்கும்? தேவர்களும், மகரிஷிகளும் ஏதும் புரியாது திகைத்தனர்., இது இப்படியிருக்க... ஆங்கே காசியில்..... சிவபெருமானின் திருக்கரங்களிலிருந்து கீழிறங்கிய ஸ்ரீபிரம்ம தேவரின் (ஐந்தாம் சிரசின்) கபால ஓடு, சர்வேஸ்வரனின் திருக்கரம்பட்டதால் ஜோதிப் பிழம்பாய் பூமியின் மேல் மிதந்தது. ‘இதைத் தாங்கும் வல்லமை யாருக்கு உளதோ?’‘ பூலோகத்தில் இதனை எங்கு வைத்திருப்பது? தேவர்களும் மகரிஷிகளும் இதற்கு முடிவு காண இயலாது மீண்டும் திகைத்து நின்றனர்.

பூலோகத்திலும் மற்றும் சர்வலோகத்திலும் ஏற்படுகின்ற இத்தகைய தெய்வீகப் பிரச்சனைகளுக்கு விடை காண வேண்டிய தார்மீகப் பொறுப்பு தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் உண்டு. ஒரு புறம் விண்ணுலகத்தில் ஸ்ரீசரஸ்வதியின் சீற்றம் ... மறுபுறாம் பூலோகத்தில் ஸ்ரீபிரும்ம தேவரின் கபாலம்! இரண்டுமே மிகப் பெரிய விஷயங்கள்! எப்போதுமே பிரச்சனைகள் மஹரிஷிகளின் ஆன்மீக சக்திக்கு விஞ்சினால் சித்த புருஷர்களே  அதற்கான தெய்வீகத் தீர்வை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள்,
அனைவரும் ஸ்ரீஅகஸ்திய மாமுனியை நாட, அவர் “புக்கொளியூர் சித்தன் தானே தக்க நிலையில் விடை தருவானே“ என்று அருளினார்.
புக்கொளியூர் ஸ்ரீபோடா சித்த புருஷர்
புக்கொளியூர் (அவினாசி) சித்தர் என்றும் மாம்பட்டிடைச் சித்தர் என்றும் போற்றப் பெற்று காலத்தை வென்ற சித்த புருஷரைப் புக்கொளியூரில் (அவினாசியில்) தேவர்கள் தரிசனம் பெற்றனர். அவரோ மௌனியாக ஒவ்வொரு கோயிலாகச் சென்று வந்து ஓரிடத்தில் வானத்தை நோக்கிக் கைகளை ஆட்ட....
அன்று அக்ஷயத் திரிதியை திருநாள்!!!
காசியில் சர்வேஸ்வரனின் திருக்கரத்திலிருந்து ஜோதிரூபமாய் வெளிவந்த ஸ்ரீபிரும்ம தேவனின் கபால ஓடு விண்ணில் பறந்து புக்கொளியூர் சித்தர் கைகளை வீசி நின்று கொண்டு இருந்த இடத்தில் பூமியில் விழுந்தது. ஈர(கபாலம்) ஓடு விழுந்த இடம் ஆதலினால் அது ஈரோடு ஆயிற்று. சர்வ லோகங்களிலும் எவராலும் தாங்க இயலாத அத்திருவோட்டை தம் திருக்கரங்களில் தாங்கி ஸ்ரீபுக்கொளியூர் சித்தர் அனைவரையும் காத்து ரட்சித்தார். அத்திருவோட்டுடன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சன்னிதிக்கு வந்து சேர்ந்தார்.,
காஞ்சியில் ஸ்ரீசரஸ்வதி – ஸ்ரீபுக்கொளியூர் சித்தர் திருவோட்டைத் தம் மார்பிற்கு நேராக வைத்து ஸ்ரீஏகாம்பரேஸ்வரனைத் தொழ.... மாபெரும் நதியாய் சீற்றத்துடன் வந்த ஸ்ரீசரஸ்வதி தேவி அத்திருவோட்டில் புகுந்தாள்,
நல்லிடம் சேர்ந்தேன்
நற்கதி பெற்றேன்
என்று தலை வணங்கியவாறு சித்தரை வணங்கினாள். ஆம், ஸ்ரீசரஸ்வதி தேவி தம் நாயகன் ஸ்ரீபிரம்ம தேவனுடன் திருவோட்டில் இரண்டறக் கலந்தாள். இவ்வற்புதத்தை அக்ஷய திரிதியை தினத்தில் நிகழ்த்தியவரே ஸ்ரீபுக்கொளியூர் சித்தர்.

ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர் ஜீவ சமாதி
ஸ்ரீமௌன சுவாமிகள், ஸ்ரீநாகநாத சுவாமிகள், சித்தர் சுவாமிகள் என்று பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்ட இச் சித்த புருஷரின் ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர் ஜீவசமாதியில் அமைந்துள்ள லிங்கத்திற்குத் தயிர் சாதக் காப்பு அணிவித்து நீர்மோர் தானம், அன்னதானம் (குறிப்பாக தயிர்சாதம்) செய்வது மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி ஆலயங்கள், ஸ்ரீபுக்கொளியூர் சித்தரின் ஜீவசமாதி போன்ற இடங்களில் திருவோடு தாங்கி இருக்கும் வறியவர்களுக்கு அன்னதானம் இடுதல் சர்வேஸ்வரனின் திரு அருளைப் பெற்றுத் தரும்.

கோயில் உழவாரத் திருப்பணி

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர் பெரியோர். ‘ஏன் தினமும் ஆலயம் தொழ வேண்டும்?‘ இந்தக் கேள்வியை நாம் குரு மங்கள கந்தர்வாவிடம் கேட்டபோது அரிய சில விளக்கங்களை நமக்கு அருளினர்கள். அதை நாம் இங்கு அடியார்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
துன்பங்களைத் தீர்ப்பவையே திருக்கோயில்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் விதவிதமான பிரச்சனைகள் பல உண்டு. பிரச்சனைகளின் பிறப்பிடம் மனிதனே. அவைகள் தீரும் இடமோ திருக்கோயில்! எப்படி? மாணிக்கவாசகர் கூற்றுப்படி “தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்...” என்பது தான் உண்மை. ஆகவே அவரவர் பிரச்சனைகள் வந்து மனிதனை அலைக்கழிக்கும்போது அவன் சென்று தஞ்சமடைய வேண்டிய இடமோ திருக்கோயில்கள் தாம். நாம் குறைகளைத் தீர்க்க வேண்டி இறைவனை நாடிச் செல்லும்போது நம்முடைய எண்ணங்களை (குறைகளை) தம்முடைய பிரகாரங்களின் தரையில் பாதங்கள் மூலமாக ஈர்த்துக் கொண்டு நமக்கும் பரிகாரம் தந்து அனுப்புகிறான். ஆகவேதான் ஆலயத்தைத் தினம் தொழுதல் மிக அவசியம் என்றனர் பெரியோர்.
நந்தியின் துன்பம் தீர்த்த நமசிவாயன்
உதாரணத்திற்கு நாம் நந்தீஸ்வரரை எடுத்துக் கொள்வோம். ஈசன் ஆலாலம் (விஷம்) உண்ட வேளையிலே சித்தம் கலங்க நின்ற காலையிலே உமையவள் நந்தியின் நிலைகண்டு மனமிரங்கி பூவுலகில் கோயம்பேடு எனும் உத்தம தலத்தை அடைந்து அங்கு நந்தியை வலம் வரச் செய்தனள். சிவலோகவாசியான நந்தியெம்பெருமானுடைய பிரச்சனைக்கு முடிவு பூவுலகில் தான் ஈசன் வைத்தான் பார்த்தீர்களா?
எண்ணங்களை ஈர்க்கும் ஈசன் ஆலயம்
தேவலோகம் முதல் அனைத்து லோகங்களின் பிரச்சனைகளும் பூஉலகில் நம்முடைய திருத்தலங்களில் தான் தீர்த்து வைக்கப்படுகின்றன என்றால் நம்முடைய பிரச்சனைகளுக்கா அங்கு வழி கிடைக்காது! ஆகவே தான் ‘கோவிலுக்குத் தினமும் செல்‘ என்றனர் பெரியோர். அப்படித் தன்னுடைய இடத்தில் (கோயில்) ஈர்த்துக் கொண்ட எண்ணங்களை எண்ணத்தின் சக்திகளை இறைவன் என்னசெய்கிறான்? தன்னுடைய அடியார்களை வைத்தே அப்புறப்படுத்திக் கொள்கிறான். ‘அப்புறப்படுத்துதல்‘ என்றால் என்ன? கோயில் முழுவதும் நீரால் சுத்தப்படுத்துதல் என்பது தான்... அப்படி ஈசனடியர்கள் திருக்கோயில்களைச் சுத்தப்படுத்தினால் தான் மேலும் மேலும் மக்களின் எண்ணங்களை ஈசன் புதிதாக ஈர்த்துக் கொள்ள முடியும் அல்லவா? ஆகவே தான் திருக்கோயில்களைச் சுத்தமாக வைப்பது ஓர் உத்தமத் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் மணிவாசகரும்.. “கோமானின் திருக்கோயில் மெழுகினேன்..” என்றார். ஆகவே தான் நாமும் ஸத்ஸங்கம் மூலமாகத் திருக்கோயில்களைச் சுத்தம் செய்வதை முக்கிய திருப்பணியாகக் கொண்டுள்ளோம்” என்று முடிக்கிறார் குரு மங்கள கந்தர்வா.
குருவுடன் திருப்பணி
அடியார் : குருதேவரே, உத்தம குருவுடன்  இத்திருப்பணி செய்வதே உத்தமம் என்று சொல்வது எதனால்? .
குருமங்கள கந்தர்வா : நன்றாகக் கேட்டீர்கள். கேட்பதால் சொல்கிறோம். சாதாரண கலைகளுக்கே “குரு” என்றால் ஆன்மீகத்திற்குக் குருவேண்டாமா? புண்ணியத்திற்கான வழியை ஈசன் எங்கு வைத்துள்ளான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆகவே குருவை நம்பி வாழ்கின்ற அடியார்களுக்கு அந்தக் குரு ஈசன் திருப்பணியின் போது பாவங்கள் சேராமல் பார்த்துக் கொண்டுவிடுகிறார்.
உதாரணத்திற்குச் சம்பவம் ஒன்று சொல்கிறேன்..
ஒரு கோயிலின் திருப்பணி சமயம் அடியேனும் (குருமங்கள கந்தர்வா) உங்களில் ஒருவரும் (அடியார்) மூர்த்திகள் அருகே சுத்தம் செய்ய நுழைந்தோம். முதலில் அந்த அடியார் அங்கு வீற்றிருக்கு பெரிய மூர்த்திகள் அருகில் சுத்தம் செய்ய முனைந்து விட்டார். அடியேன் அவரைக் கூப்பிட்டு அங்கு மூலையில் இருந்த மற்றொரு சிதலமடைந்திருந்த அம்பாள் சிலை அருகில் முதலில் சுத்தம் செய்யச் சொன்னோம்.
கோயிலினுள் பொறுமையாக என்னென்ன மூர்த்திகள் உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அந்த மூர்த்திகள் எந்தெந்த திசைகள் நோக்கி உள்ளன என்பதையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட விக்கிரங்கள் இருக்குமானால் அதில் சிதிலிமடைந்த உருவங்கள் ஏதேனும் உண்டா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்குமாயின் அந்த சிதிலமடைந்த தெய்வ உருவத்தின் அருகில் சுத்தம் செய்த பின்னர் தான் மூலவர் அருகில் சுத்தம் செய்ய வேண்டும்.
இங்கு ஈசனுக்கருகில் அம்மையின் சிலை உள்ளது. அது  சிதிலமடைந்திருந்ததால் தான் யாம் உன்னை அதன் அருகே சுத்தம் செய்யச் சொன்னோம்.. அப்படி முதலில் அன்னவனைக் கவனிக்காது விட்டால் அது பிரச்சனை தான். பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்கள் பின்னே சுற்று தெரிந்து கொள்வாய் என்று சொன்னோம்.. அதுபோல கோயில் திருப்பணி உத்தமம் என்றாலும் அதில் உள்ள பிரச்சனைகள் கவனிப்பதற்கே குரு உங்களுடன் வருகிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
புண்ணியப் பங்கீடு
ஒரு மனிதன் தனியாக ஒரு நற்காரியம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் செய்ததன் பலனால் அவனுக்குப் புண்ணியம் சேர்கிறது அல்லவா! அந்தப் புண்ணியம் என்னவாகிறது? அந்தப் புண்ணியத்திலிருந்து அவனுடைய தாய்க்கு ஒரு பங்கு, தந்தைக்கு ஒரு பங்கு, உடன் பிறந்தவர்களுக்கு ஒரு பங்கு என்று இப்படி பங்கு பங்காகப் போக அவனைச் சாரும் புண்ணியமோ மிகக் குறைவானது. ஆனால் அதே நேரத்தில் அந்த நற்காரியத்தை ஒரு சத்சங்கம் மூலமாகச் செய்வானாகில் என்னவாகிறது.. தெரியுமா?
பங்கீட்டில் குருவின் பங்கு
அத்தனை சத்சங்க அடியார்களுடைய புண்ணியத்தையும் ஒன்று திரட்டுவோம் அது பெரிய அளவில் இருக்கும் அப்படி ஒன்று திரட்டியதிலிருந்து ஒரு சிறு பகுதியை அனைவருடைய தாய், தந்தை etc பாக்கிகளுக்குப் போய்ச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்துத் தீர்த்துவிடுகிறோம். அப்படி ஒரு சிறு பங்கை எடுப்பதனால் ஒன்று சேர்க்கப்பட்ட புண்ணியத்தின் அளவு குறைவதேயில்லை. ஆகவே ஒரு மனிதன், தான் செய்யும் நற்காரியங்களின் பலனைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவானேயாகில் அவன் சத்சங்கத்தில் சேர்வது மிக மிக அவசியமாகும்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்

விஷ்ணுபதி புண்யகாலம் வரும் 15.5.1994 அன்று அமைகிறது. 14.5.1994 நள்ளிரவு 1 மணி முதல் 15.5.1994 அன்று 10 மணி வரை உள்ள நேரம் விஷ்ணுபதி எனப்படும் அற்புதமான புண்ணிய காலமாகும். இதில் செய்யப்படும் தான தர்மங்கள், பூஜை, ஹோமம், அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம் போன்ற இறைப்பணிகளுக்குப் பன்மடங்கு பலன் கிட்டும்.
துவாபர யுகம்... ஸ்ரீகிருஷ்ணன் பால பருவ லீலைகளை முடித்து, யுவலீலைகளை மேற்கொண்ட சமயம்....
கோபியர்கள் அனைவரும், “ஹரே கிருஷ்ணா!” என்று கூவிக் கூவி ஸ்ரீகிருஷ்ணனைச் சுற்றி வந்தனர். இறைபக்தியின் உன்னத நிலையை அடைந்தவர்கள் கோபியர்! ஸ்ரீகிருஷ்ணனோ பிருந்தாவனத்தில் பக்திசிரத்தை வாரி வழங்கி லீலா விநோதங்களைப் புரிந்து வந்தார்.
விண்ணுலகில் தேவர்களும் மஹரிஷியரும் ஸ்ரீகிருஷ்ணனின் தெய்வீக லீலைகளைக் கண்டு திகைத்தனர்.  “என்ன இது! ஸ்ரீகிருஷ்ணனின் அவதார நோக்கமென்ன? கோபியர்களோ ஸ்ரீகிருஷ்ணனைச் சுற்றி சுற்றி வருகின்றனரே! ஸ்ரீகிருஷ்ணனே பாசமாயையின் வசப்பட்டு விட்டாரா! யோக மாயை ஸ்ரீகிருஷ்ணனைச் சூழ்ந்து விட்டாளா! என்றவாறாக விண்ணுலகத்தினர்  அறியாமையினால் குழப்பமடைந்தனர். பரமாத்மாவின் அவதார மஹிமைகளை எவரோ முழுவதுமாக அறிவர்.
ஸ்ரீபிரம்ம தேவரும் இந்த “அறிவு மாயையில்“ சிக்கினார். “ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தம் அவதார அம்சங்களை நினைவுகூர செய்ய வேண்டியது தம் கடமை“  என்று முடிவு செய்து காரியத்தில் இறங்கினார். மாயைகளைப் படைக்கும் பரமாத்மாவிற்கே மாயையா?
பசுக்களை மேய்த்துக் கொண்டு மாயவிநோதங்களை மட்டுமே ஸ்ரீகிருஷ்ணன் புரிகின்றானே! இன்றைக்கு நாம் பசுக்களையும், கோபியர் பலரையும் மறைத்து விடுவோம்! ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்கின்றானென்று பார்ப்போம்!
சிருஷ்டிக்கு நம்மிடம் வரும்போது பரமாத்மாவிற்கு அவருடைய மகாத்மியங்களை உணரவைப்போம்! என ஸ்ரீபிரம்மதேவர் இவ்வாறாக மாயையின் மயக்கத்தில் எண்ணியாறே பசுக்களையும், கோபியர்களையும் மறைத்து விட்டார்.
கோகுலத்தில்........ ஸ்ரீகிருஷ்ணன் புல்லாங்குழலை எடுத்துத் தெய்வீக நாதமெழுப்பினான்.. புல்லாங்குழலிருந்து பசுக்களும் கோபியரும் ஆனந்தமாக வெளிவந்தனர். மாலையில் அவரவர் தத்தம் இடம் ஏகினர். கோகுலத்தில் வழக்கம் போல் ஸ்ரீகிருஷ்ண லீலைகளுடன் தெய்வீகப் பேரின்பமயமான வாழ்வு தொடர்ந்தது.. ஸ்ரீபிரம்மாவின் சிருஷ்டி மறைப்பினால் ஒரு விளைவும் ஏற்ப்படவில்லை!..
ஸ்ரீபிரம்மா பெற்ற பாடம்
பிரம்ம லோகத்தில்................ ஸ்ரீபிரம்ம தேவர் குழப்பமடைந்தார்..
“நாம் கோகுலத்துப் பசுக்களையும், கோபியரையும் இங்கு மறைத்துவைத்துப் பல நாட்களாகி விட்டனவே! அங்கிருந்து ஒரு புகாரும் வரவில்லையே! ஸ்ரீகிருஷ்ணன் கூட எதிர்ப்பார்த்தப்படி இங்கு தோன்றவில்லையே!” என நினைத்தார்.
ஸ்ரீபிரம்மா கோகுலத்திற்கு விரைந்தார்..... அங்கே... கோகுலத்தில் எந்தவிதக் குழப்பமுமில்லாமல் ஆனந்தமய வாழ்வும் சாந்தம் தழுவிய அமைதியும்  நிலவியது குறித்து வியப்புற்றார்... ஸ்ரீகிருஷ்ணன் மீண்டும் குழலெடுத்து ஊத.... அதிலிருந்து பறவைகள், மீன்கள், பசுக்கள் மட்டுமின்றி மீண்டும் கோபியரும் வெளிவந்தனர்.. தாம் மறைத்த ஜீவன் களுக்குப் பதிலாக அவர்களைப் போல் பலரை ஸ்ரீகிருஷ்ணன் படைத்த செயல் கண்டு ஸ்ரீபிரம்மா திகைத்தார்.
“கர்ம வினைகளைப் பகுத்து ஒரு ஜீவனைப் படைக்கத் தாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஜீவசிருஷ்டியில் பங்கம் வந்து விடக் கூடாதே என்று எவ்வளவு கவனமாகப் படைக்கின்றோம்.. ஸ்ரீகிருஷ்ணனோ நினைத்த மாத்திரத்தில் புல்லாங்குழலை வைத்து ஊதியவுடனே உயிரினங்கள் தோன்றுகின்றனவே, என்னே விந்தையிது !”, என வியந்தார்..
 ஸ்ரீபிரம்மா அடைந்த விஷ்ணுபதி
ஸ்ரீபிரம்ம தேவர் சிந்திக்கலானார்.
ஆஹா...! பரமாத்மாவின் முழு அம்சமன்றோ ஸ்ரீகிருஷ்ணன்.. அவர்தம் மஹிமை அறியாது அவருக்கும் மாயை என்று கருதி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு விட்டோமே! ஏதேதோ செய்து விட்டோமே! ஹரே கிருஷ்ணா! என்னை மன்னிப்பாயாக! என கிருஷ்ண பரமாத்மாவின் கால்களில் தஞ்சமடைந்தார்! ..அங்கு ஸ்ரீகிருஷ்ண பகவானா நின்றார்? இல்லையில்லை ..!!! “ஜகமே சர்வம் விஷ்ணுமயம்“ என்பதாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் ஒன்றாய்ப் பிரபஞ்சமெங்கும் பரந்தாற்போல் ஜோதிப் பிரகாசமாய்த் திகழ.....

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயம்
திருவல்லிக்கேணி சென்னை

ஸ்ரீபிரம்மா, விஷ்ணுபதி என்னும் அற்புத நிலையை அடைந்தார், இதுவும் ஸ்ரீகிருஷ்ண லீலைகளில் ஒன்றாகும். சித்த புருஷரின் அருளும் அற்புத ஆன்மீக ரகசியமாகும். இவ்வாறாக பலகோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீபிரம்மா விஷ்ணுபதியை அடைந்த நாளே ஸ்ரீபவ வருடத்திய விஷ்ணுபதி புண்ணியகாலமாகும்.
சிவபதி நிலை எது?
சர்வேஸ்வரனாம் சதாசிவ மூர்த்தியின் அடிமுடியைக் காண்பதற்காக ஸ்ரீவிஷ்ணுவும் ஸ்ரீபிரம்மாவும் மேற்கொண்ட முயற்சிகளையும், இதில் ஸ்ரீபிரம்மா பெற்ற சாபத்தையும், நாம் அறிவோம்... இதன் பிறகு ஸ்ரீபிரம்ம தேவர் அருணாசலமான திருஅண்ணாமலையில் பலகோடி ஆண்டுகள் கிரிவலம் வந்து தவமிருந்து அடியண்ணாமலை பகுதியில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பி வழிபடுகையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தரிசனந்தந்தார், “பிரம்ம தேவா! உன் அருள் பெருந் தவத்தாலும் இங்குக் கிரிவலம் புரிந்ததாலும் உன் குறைகள் யாவும் நீங்கி மும்மூர்த்தியின் அருள் ஒன்றான அற்புதமான நிலையைப் பெருகிறாய்! நீ எம் திருவடியை அடைய வேண்டுமாயின் அதற்கு விதிமுறைகள் உண்டு. “சிவபதி“ க்கு முன் “விஷ்ணுபதியை“ அடைய வேண்டும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அதற்கான அருள்புரிவார்“, என்று அருளினார்.
இவ்வாறாக ஸ்ரீபிரம்மா விஷ்ணுபதி அடைந்த தெய்வத் திருநிகழ்ச்சியை எண்ணி தியானித்து ஸ்ரீவிஷ்ணு பகவானின் ஸ்மரனையோடு ஏழைகளுக்குத் தான தர்மங்களோடு 15.5.1994 அன்று விஷ்ணுபதியைக் கொண்டாட வேண்டும் இவ்வாறாக ஸ்ரீராமர் ஸ்ரீபிரம்மா போன்ற தெய்வீக மூர்த்திகளே அடைந்த ஸ்ரீவிஷ்ணுபதி நிலையைக் குறிக்கும் அப்புண்ய காலத்தை நாம்......
1). 15.5.1994 அன்று விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், வேதகோஷம், வடமொழி தமிழ் மறை ஓதுதல், நாம சங்கீர்த்தனம், பஜனை, ஸ்ரீபிரம்ம துதிகள் இவற்றோடும் அன்னதானம், வஸ்திர தானம்,, போன்ற தானதர்மங்களோடும் மட்டுமன்றி
2) தம் தாய்நாட்டிற்காகப் போரிட்டு உயிர்த் தியாகம் புரிந்த வீரர்களின் மனைவியர், குழந்தைகளுக்கு (war widows family)  இயன்ற சேவைகளைச் செய்தல், இந்த “விஷ்ணுபதி” புண்ய காலத்தில் ஆற்றவேண்டிய விசேஷமான சேவையாகும். இதன் காரணமென்ன?
பிறிதொரு யுகாந்திர விஷ்ணுபதி
....... பாண்டவர்கள்  கௌரவர்கள் போர் முடிந்த பிறகு அதே போர்க்கோலத்தில் கிருஷ்ண பரமாத்மா ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாளாகச் சென்னை திருவல்லிக்கேணித் தலத்தில் எழுந்தருளினார். அப்போரில் ஆயிரமாயிரம் போர்வீரர்கள் மடிந்து ஆயிரமாயிரம் விதவைகளும் அவர்தம் குழந்தைகளும்  சோகமாகத் தத்தளிப்பத்தைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் அந்த நினைவுகளோடு ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாக அடுத்த அவதாரம் பூண்டார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாக எழுந்தருளிய காலமும் விஷ்ணுபதிப் புண்ணியகாலத்தில் தான் .. (பிறிதொரு யுக பவ வருட – வசந்தருதுவில்)...
எனவே ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளே “எம் போர்முனைக் கோலத்தோடு யாம் பார்த்தசாரதியாக அவதரித்த ஸ்ரீபவ வருடத்தில் விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் (வஸந்தருது) போரில் உயிர்த் தியாகம் புரிந்த வீரர்களின் மனைவி, குழந்தை, குடும்பங்களுக்கு இயன்ற அளவு இருஅவதார அம்சங்களுடன் அபரிமிதமான புண்ணிய சக்தியினை அளிக்கின்றோம்.. இந்த விஷ்ணுபதிப் புண்ணியகாலம் கிடைத்தற்கரிய புண்ணிய காலமாகும்..” என்று அருளினார்..
சிவபதி
சொற் பொருள் நிலை கடந்த அதிஅற்புத சிவபதி நிலையும் உண்டு.
சிவபதி நிலையெது? அதன் தாத்பர்யங்கள் என்ன? இத்தகைய அரிய அன்மீக ரகசியங்களை அடியவர்க்கு அருள்புரிய சற்குருமார்கள் பூலோக வாழ்வு ஏற்றுக் காத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே சற்குருவை நாடி, கேட்டுப் பயன் பெறுங்கள். இதனைப் பிறருக்கும் உணர்த்தி உய்வு பெறச் செய்வீர்களாக!

பெண்களுக்கான இறைப் பணிகள்

1. காலையில் எழுந்தபின் தன் கணவருடைய பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்க வேண்டும். பெற்றோர், மாமனார், மாமியார், தன்னுடன் இல்லாவிடில் அவர்கள் இருக்கின்ற திசை நோக்கி நின்று நமஸ்கரிக்க வேண்டும்.
2. காலை, மாலை வேளைகளில் அவரவர் குடும்ப முறைப்படி உடையணிந்து (மடிசார் போன்ற முறை) இரண்டு திரிகள் உள்ள இரு ஜோதிகளுடன், விளக்கேற்றி, இருதயகமலக் கோலமிட்டு இறைவனை வணங்க வேண்டும். ஒரு திரியால் ஒரு ஜோதியுடன் விளக்கேற்றக் கூடாது.
3. “சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே

இதயக் கமல கோலம்

   சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ”
என்ற ஸ்லோகத்தை 21 முறை தியானிக்க வேண்டும் அல்லது அபிராமி அந்தாதி போன்ற தமிழ்த் துதிகளில் ஏதேனும் ஒன்றை 21 முறை ஜெபிக்க வேண்டும்.
4. ஸ்நானம் செய்யும்போது  தம் பாதங்களை நன்றாகக் கழுவி மஞ்சளிட்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
5. நெற்றியில் மட்டுமல்லாது முன்வகிட்டிலும் குங்குமம் வைக்க வேண்டும்.
6. தினந்தோறும் பெற்றோர்கள், மாமனார், மாமியார் ஆகியோருடைய துணிகளைத் துவைத்தல் அவர்தம் ஆசீர்வாதங்களை நிரம்பப் பெற்றுத் தரும். பொதுவாக வயதானவர்களுக்கு ஸ்நானம் செய்வித்தல், உணவூட்டுதல், துணி துவைத்தல் போன்ற சரீர சேவைகள் தாம் அவர்களுடைய மனப்பூர்வ ஆசிகளைப் பெற்றுத் தரும்.
7. காலையிலும், மாலையிலும் தலையில் சிறிது எண்ணெய் /தைலத்தை வைத்து உடன் தலைவாருதல் வேண்டும். தலை வாரும் போது வருகின்ற தலைமுடிகளை “கேசகுலாம்ருத தீர்க்க பாபநாசனாய நம“ என்று சிறு மந்திரத்தை உச்சரித்தவாறு எடுத்துச் சுருட்டி ஒரு டப்பாவில் சேர்த்திடல் வேண்டும். அக்காலத்தில் இதற்கென வீட்டில் பெரியவர்கள் சிறு பெட்டியை வைத்திருந்தனர்.
8. சாதாரணமாக தலைமுடிகளினால் பில்லி, சூனிய தோஷங்கள் வருவதால் அவற்றைப் பிறர் கண்களுக்குப் படாவண்ணம் எடுத்து வைத்தல் வேண்டும்.
9. தலை வாரியபின் கை, கால், முகங்களைக் கழுவி , நெற்றி, முன்வகிடுகளுக்குக் குங்குமம் இட்டு “ பவாய சுமங்கலி தேவாய நம :” என்ற மந்திரத்தை ஓதி, தன்னைச் சுய பிரதட்சிணம் (தனைத் தானே சுற்றுதல்) செய்து இறைவனை நமஸ்கரிக்க வேண்டும்.
10. பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது. தலைமுடிகளை விளக்குமாற்றால் கூட்டக் கூடாது..
11) கடலிலோ, நதியிலோ கேசத்தைச் சேர்க்கும் முன்னர் அந்தக் கேசத்திற்கு தூபம், தீபம் காட்டி 108 முறை “ஸ்ரீகேசவாய நம:” என்று தியானிக்க வேண்டும்.
12) டப்பாவில் சேர்த்து வைக்கப்பட்ட உதிர்ந்த கேசங்களை தேய்பிறையில் வரும் கரிநாள் அன்று கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற நதிகளிலும் சமுத்திரங்களிலும் “ஸ்ரீகேசவாய நம :” என்று மீண்டும் ஜபித்து சேர்த்துவிட வேண்டும்.
13) ஸ்ரீதிரௌபதி தேவி ஒருமுறை தம் காலில் சிக்கிய முடியை துடைப்பத்தால் தள்ளிவிட்டாள். கேசத்திற்கு உரிய தேவதைகளுள் ஒன்றான பரிசாரக தேவதை திரௌபதியை நோக்கி, “என்னைக் கையால் தாங்க வேண்டிய நீ துடைப்பம் கொண்டு தீண்டியதால் தலைவிரி கோலம் உனக்கு வந்து சேருவதாக”, என்று சபித்திட அதனால் திரௌபதி பெற்ற நிலையை நாம் அறிவோம்.

14) மாதத்திற்கு ஒரு முறையேனும் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனின் பாதங்களைத் தாம்பாளத்தில் வைத்துப் பாத பூஜை செய்தல் வேண்டும். கணவன் தன் கால் பாதங்களைச் ஒன்று சேர்த்து தாம்பாளத்தில் வைத்திட, மனைவி அவர்தம் பாதங்களைச் சுத்தநீர், கங்கை நீர் கொண்டு கழுவ வேண்டும். பின் விரல்களுக்கும் கால்பாதங்களைச் சுற்றியும், அரைத்த மஞ்சளைப் பூச வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு மந்திரம் உண்டும்.
கால்விரல்கள்
சுண்டு விரல்  - “ஸ்ரீபௌம புத்ர தேவாய நம:”
மோதிர விரல் – “ஸ்ரீ பாஸ்கர புத்ர தேவாய நம:”
நடுவிரல் – “ஸ்ரீமங்கள குருதேவாய நம :”
ஆள்காட்டு விரல் – “ஸ்ரீகருட பட்சிவாகன தேவாய நம :“
கட்டை விரல் – “ஸ்ரீசுபமங்கள சுகதாய நம : ”
இந்த பாத பூஜையை எவ்வளவு முறை செய்கின்றார்களோ, அந்த அளவிற்கு கணவனுடைய ஆயுள் வளரும், நோய்கள் குறையும் – சுமங்கலித்துவம் நன்கு அமையும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam