இறைவனின் எல்லையற்ற கருணைக்கு சான்றே சற்குரு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஞாயிறு திருத்தலம்

திருஅண்ணாமலையும் ஞாயிறு திருக்கோயிலும்
சென்னையில் செங்குன்றம் அருகில் ஞாயிறு என்ற குக்கிராமத்தில் பழம் பெரும் சிவாலயம் அமைந்துள்ளது. திருஅண்ணாமலையுடன் ஆன்மீகப் பிணைப்புக் கொண்டது. பிரசண்ட மஹரிஷி எனும் தவசீலர் எவராலும் அண்ட இயலா கோடி கோடி சூர்யன்களை நிகர்த்த ஹரி மஹா சூரிய கோளத்தைத் தாங்கும் அதி அற்புத சக்தியைப் பெற வேண்டி பல கோடி யுகங்கள் தவம் பூண்டார். ஸ்ரீசூர்யநாராயணப் பிரபு அவர் முன் தோன்றி, ‘மஹரிஷியே, தாங்கள் வேண்டுகின்ற தவசக்தியை அடியேனால் அளிக்க இயலாது. இதனைத் தர வல்லவர் சகலகோடி அண்டங்களையும் தம்முள் அடக்கி நிற்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வர மூர்த்தியாவார். எனவே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து தாங்கள் வேண்டியதைப் பெற யாம் துணை புரிகிறோம்’ என்று அருளினார்.

அல்லா சாயி பகவான் !

இன்றைக்கும் சூரியன் திருஅண்ணாமலையில் குறுக்கே செல்லாமல் அதனைச் சுற்றி வலம் வந்து மேற்கில் மறைகின்ற அற்புதத்தைக் கண்டு ஆனந்திக்கலாம். ஸ்ரீபிரசண்ட மஹரிஷி, திருஅண்ணாமலையில் ஒரு முறை கிரிவலம் வரவே பல யுகங்கள் ஆயின. கிரிவலத்தில் கிட்டுகின்ற வியத்தகு ஆன்மீக விந்தைகள், தெய்வத் திருமூர்த்தித் தரிசனங்கள், காணக் கிடைக்கா மூர்த்தங்கள், அற்புதசக்தி வாய்ந்த தீர்த்தங்கள், பெறற்கரிய மூர்த்திகளின் விஸ்வரூப தரிசனங்கள், வேண்டும் வரந்தரும் ஆயிரக்கணக்கான கற்பக விருட்சங்கள், எங்கும் காண இயலாத காமதேனு, அன்னம், ஆதிசேஷன், கருடன் போன்றவற்றின் புனித ரூபங்கள்......
இவற்றைக் காணக் கோடிக் கண்களல்லவோ வேண்டும். இப்பேரின்பத்தில் திளைத்தவாறே கிரிவலம் வந்த பிரசண்ட மஹரிஷி, ‘கோடி கோடி யுகங்களாகத் தவம் இருந்தும் பெற இயலா ஆனந்தத்தை திருஅண்ணாமலை கிரிவலம் தரவல்லது என்பதை அறியாமல் இருந்து விட்டேனே! கிரிவலம் தருகின்ற இறைநிலைகளைக் காணும் பொழுது என்னுடைய தவத்தின் நோக்கம் ஒரு சிறு கடுகாய்த் தோன்றுகிறதே! அருணாசலேஸ்வரா! எனக்கு நல்வழி காட்டுவாயாக’ என்று வேண்டினார். அவர் இவ்வாறாகப் பிரார்த்தித்த தினமே ரதசப்தமி தினமாகும். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் காட்சியளித்து ஸ்ரீபிரசண்ட மஹரிஷியைத் தம் திருக்கரங்களில் ஏந்த, மஹரிஷியின் சரீரம் அற்புத சோதியாய்க் கோடி கோடியாம் சூரிய கோளங்களை நிகர்த்தப் பிரகாசத்துடன் ஜொலித்தது. ஸ்ரீஅருணாசலேஸ்வரர் , அச்சுடரை விண்ணில் செலுத்திட, அத்திருஜோதி திருஅண்ணாமலையை வலம் வந்து சென்னை அருகிலுள்ள ஞாயிறு கோயிலில் ஸ்வயம்பு லிங்கத்தில் ஜோதியாய் ஒன்றியது. அம்மகரிஷியின் தபோபலன்கள் சுயம்பு லிங்கத்தில் இருந்து வெளிவந்து லிங்கத்திற்கு எதிரே ஸ்ரீசூர்ய பகவானாக உருக்கொண்டது.
காடராக்ட் (Cataract), மாலைக்கண் நோய், குருட்டுத் தன்மை போன்ற கொடிய கண் நோய்களுக்கு ஞாயிறு சிவ மூர்த்தி கண் கண்ட தெய்வமாவார். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவரை வணங்கிக் குருடர்கள், குருடர் பள்ளிகள், ஏழைக் கண் நோயாளிகள் போன்றோர்க்கு உதவி செய்தல், ஏழைகட்கு இலவச கண் சிகிச்சையளித்து மருந்துகள் கண்ணாடி அளித்தல் போன்ற நற்பணிகள் செய்வோர்க்கு ஸ்ரீபிரசண்ட மஹரிஷியே மனமுவந்து அருள்புரிவார்.
திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து மேற்கண்ட தான தர்மங்களுடன் ஞாயிறு சிவமூர்த்தியைத் தரிசிப்போர்க்கு உன்னதப் பலன்கள் கிட்டும். மூலஸ்தானத்திற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீசூர்ய மூர்த்திக்கு எண்ணெய் காப்பிடுதல் விசேஷமானதாகும். இக்கோயிலில் தீபங்கள் ஏற்றுதல், மின் விளக்கு வசதிகள் செய்தல் போன்ற திருப்பணிகளைச் செய்கின்ற கண் மருத்துவர்கள் தங்கள் துறையில் சிறப்பிடம் பெறுவர்.

அடிமை கண்ட ஆனந்தம்

கடும் வெயிலில் வயல்களுக்கிடையே கோவணாண்டிப் பெரியவர் வேகமாக முன் செல்ல பத்து வயதுச் சிறுவனாயிருந்த குருமங்கள கந்தர்வா ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தார்...
“காலில் செருப்பில்லாமல் முன் வழுக்கையுடன் தகிக்கும் வெயிலில் இவரால் இந்தத் தள்ளாத வயதில்................... “ .... இவையெல்லாம் சிறுவனின் மனச் சுவரில் முட்டி மோதும் வழக்கமான மன ஓட்டங்கள்.
 மூச்சிறைத்தவாறே சிறுவன் “வாத்யாரே, ஒவ்வொரு மாசச் சிவராத்திரிக்கும் ஏதாச்சும் இருட்டுக் கோயிலுக்குப் போய் விளக்கேத்தச் சொல்லுவியே! இந்த வருஷம் எங்கேயும் போகலியா.... “ என்று கேட்டவாறே பெரியவரது வேகத்தை மட்டுப்படுத்தினான்!
“அதெல்லாம் நீ பெரியவனானவுடன் மத்தவுங்களுக்குச் சொல்லித்தர வேண்டிய சிவராத்திரித் திருப்பணி, வருஷா வருஷம் சிவராத்திரித் திருப்பணி மாறுமே! நீ கவனிக்கிறது கிடையாதா?”
சிறுவன் மௌனமானான்.
சென்னை அருகே பஞ்சவடிக் கோயில், மணவூர் நந்தீஸ்வரர் கோயில் என்றவாறாகப் பல கோயில்களில் பெரியவருடன் கொண்டாடிய சிவராத்திரிகளை எண்ணி எண்ணி அவன் கண்கள் குளமாயின. ஆனந்தக் கண்ணீர் பொங்கியது.
கும்மிருட்டில் இரண்டு மூன்று தீக்குச்சிகள், கையில் பிசுபிசுக்கும் ஓட்டை எண்ணெய்க் குவளை, அன்று பறித்த வில்வ தளங்கள், செப்புக் குப்பியில் கங்கா ஜலம்............. – இவையெல்லாம் பெரியவரின் சிவராத்திரி படைப்புகள்.! ஓட்டை எண்ணெய்க் குவளையுடன் கோயிலெங்கும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளைப் பெரியவர் ஏற்றுவதை சிறுவன் ஆச்சரியத்துடன் பார்ப்பான். சந்து பொந்தெல்லாம் தேடி சண்டிகேஸ்வரர், பைரவர், காசி விசுவநாதர் போன்ற தெய்வ மூர்த்திகளைச் சுத்தம் செய்து எண்ணெய்க் காப்பிட்டு விளக்கேற்றுவார். “ஏன் வாத்தியாரே, இதுக்கெல்லாம் எண்ணெய்க் காப்பிட்டு நாப்பது, ஐம்பது வருஷம் ஆயிருக்குமே!”
“ஆமாண்டா, இப்படி ஒரு தடவை காப்பு போட்டு விளக்கு, சூடம் ஏத்தினாலே போதும். ஒட்டு மொத்தமா நாப்பது ஐம்பது வருஷம் பூஜை செய்த பலன் எல்லாம் சேர்ந்து வந்துடும், இது பெரிய பாக்கியம் இல்லியா!”
 உடனே சிறுவன் வில்வ தளங்களைக் கொண்டு “ஓம் நமசிவாய” என்று ஜபித்து அனைத்து மூர்த்திகளுக்கும் அர்ச்சனை செய்வான். உடனே பெரியவர் “ஆனா உனக்கு இதில் ஒரு தம்பிடிப் புண்ணியம் கூடக் கிடையாது. தெரிஞ்சுக்கோ” என்று கூறி கண்ணைச் சிமிட்டினார்.
சிறுவன் கண்களை உருட்டியவாறே மெதுவாகத் திரும்பினான்.
“ஆமாண்டா, இதைச் சொல்லிக் கொடுத்த குருவுக்கும் உன்னை உருவாக்கின பெற்றோர்களுக்கும் இதுல share உண்டு. எதிர்காலத்தில் குறைஞ்சது ஆயிரம் பேரை வச்சு பழைய கோயில்களிலெல்லாம் நீ சிவராத்திரி கொண்டாடணும், அதுதான் என்னேட ஆசை! நீ அடைஞ்ச நாப்பது ஐம்பது வருஷ புண்ணியத்தை ஆயிரம் பேருக்காவது கொடுக்கின்ற தியாக உணர்வு உனக்கு வந்து சேரணும், இதுவும் என்னோட ஆசைதான். நீ develope பண்ற அடியார்களும் ஒரு பத்தாயிரம் பேருக்குப் புண்ணியத்தை அள்ளித் தரணும், அதுவும் என்னோட ஆசைதான், பாத்துக்கோ, இந்தக் கிழவனுக்கு எவ்வளவு ஆசைகள்! நிறைவேத்தி வைப்பாயா, ராஜா....?” – பெரியவர் நாதழுக்க உரைத்திட......
சிறுவன் கையில் வில்வ தளங்களுடன் பெரியவரின் கால்களில் பாய்ந்தான்., “உன்னோட ஆசியில நிச்சயமா பண்றேன்,, வாத்யாரே.... “ கண்கள் பனிக்கச் சிறுவன் பெரியவரின் கால் பாதங்களைத் தழுவினான். அவரோ வேறெங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிறு குச்சியால் ஸ்ரீபைரவரின் மேலிருந்த ஒட்டடையைச் சுற்றிக் கொண்டிருந்தார். சித்தன் போக்கு சிவன் போக்குத்தானே.......
சிறுவன் விழித்துப் பார்த்தான்... தான் எங்கிருக்கிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை, ‘அனல் தகிக்கும் தார் ரோட்டில் பெரியவருடன் நடந்து வந்தோமே, ஏதோ ஒரு மர நிழலில் தங்கினோமே, நாம் வந்திருப்பது ஏதோ ஒரு கிராமம் போலல்லவா இருக்கிறது. எப்படி இங்கு வந்தோம்....?”
வழக்கம் போல் சிறுவன் குழம்பினான்.
இவ்வாறாகப் பல சித்துக்களை கண்கட்டி விந்தையாய்ச் செய்து குருகுலவாசத்தை உத்தமமாய் அமைத்துத் தந்தார் கோவணாண்டிப் பெரியவரான சிவகுரு மங்களகந்தர்வா என்று நாம் போற்றும் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சுவாமிகள்.
“வாத்தியாரே! ஏதோ தெலுங்கு கிராமம் போலிருக்கே!”
“அப்படியா, எனக்குப் படிக்கத் தெரியாதுப்பா!”
சிறுவன் ஜாக்கிரதையாக மௌனமாய்ப் பெரியவரைப் பின் தொடர்ந்தான். உள்ளே நல்ல கூட்டம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி அனைத்துப் பாஷைகளும் உலவின. ஒரு அழகான மண்டபத்தில் முன்னே பரந்த வெளியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். நிசப்தமான அமைதி! அனைவரும் கட்டுப்பாட்டுடன் வரிசையாக அமர்ந்திருந்தனர். அமைதியாய்ச் சென்று கொண்டிருந்த Q வரிசையில் குறுக்கே புகுந்து பெரியவர் முன்னே விரைந்தார். சிறுவனுக்கு வியர்த்தது... “கோவணத்தோடு Q வைத் தாண்டி ஓடுகிறாரே, போலீஸ்காரகள்... பிடித்துவிட்டால்.....?”
‘எல்லோரும் ஒழுங்காய் வரிசையில் செல்ல, இவர் மட்டும் முன்னே பாய்ந்தோடினால் கூட்டத்தினர் நம்மை வெளுத்து விடுவார்களே!’ – சிறுவன் அச்சத்துடன் பெரியவர் பின் ஓடினான். இருவரும் முன் வரிசையில் அமர்ந்து கொண்டார்கள். சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எவர் கண்களுக்கும் தெரியாமல் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம்!’ ஆனால் பெரியவருக்கு இதெல்லாம் கைவந்த கலைதானே! சென்னையில் தியேட்டருக்குள் கோவணத்துடன் புகுந்து சினிமா பார்த்தவரை இடைவேளையின் போது வெளிச்சத்தில் பார்த்தால் பாண்ட், கோர்ட், டை, ஷூ சகிதம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு அவன் அதிசயித்திருக்கிறான். தியேட்டரை விட்டு வெளி வந்தால் மீண்டும் கோவணம்.
இப்படிப் பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை............
“அக்கட சூடுடா!” – பெரியவரின் கர்ஜனை உலுக்கியது...
சிறுவன் எட்டிப் பார்த்தான்...  ”ஆ, சாய்பாபா....!” சிறுவன் ஆனந்தத்தில் தன்னை மறந்து கூச்சலிட்டான். ஆம்! ... பெரியவர் அவனைப் புட்டபர்த்திக்குத்தான் அழைத்து வந்திருந்தார். அதுவும் சிவராத்திரி தினத்தன்று சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இப்பேரானந்த அநுபூதி நம் குருமங்களா கந்தர்வாவிற்குக் கிட்டியது.
ஸ்ரீசத்ய சாய்பாபா மிகுந்த பிரயாசையுடன் தன் திருவாயிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்து முன் வரிசையில் இருந்தவர்களிடம் நீட்டினார். பெரியவர் சிறுவனின் இரு கைகளையும் கெடியாகப் பிடித்துக் கொண்டார். சிறுவன் ஏக்கத்துடன் பெரியவரைப் பார்த்துக் கொண்டே அந்தச் சிவலிங்கத்தை எட்டிப் பார்த்தான். அந்தச் சிவலிங்கத்தினுள் ஒரு ஜோதி சுடர் விட்டுப் பிரகாஸித்தது.
பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு வெகுவேகமாக ஸ்ரீசத்ய சாய்பாபா இருந்த மேடையைச் சுற்றி வலம் வந்து வெளியே வந்து விட்டார்., சிறுவனைத் தரதரவென்று இழுத்து வந்துவிட்டார். சிறுவனுக்கு அழுகை வந்து விட்டது.
“என்ன வாத்யாரே, எதையுமே சரியாப் பாக்க விடமாட்டேங்கறே! கண்ணாடி மாதிரியான அந்த லிங்கத்துல விளக்கு மாதிரி ஜோதி எரியுது, அதைப் பாக்கவும் விடல, தொடவும் விடல, பாபாவையும் வேகமா சுத்திட்டு வந்திட்ட, அவரையும் சரியாப் பாக்க முடியலை, ஏன் வாத்தியாரே...! இப்படிப் பண்ணிண்டிருக்கே!”
சிறுவன் பெரிதாக அழுதான். பெரியவர் சிறுவன் தலையைக் கோதியவாறே அணைத்துக் கொண்டார்...... சிறுவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான்.... சுற்றிப் பார்த்தால் சென்னை ராயபுரம் கல்மண்டபம் ஸ்ரீஅங்காளியம்மன் கோயில் வளாகத்திலிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். எதிரே பெரியவர் சிரித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார். ‘வழக்கம் போலத் தன்னைத் தூங்கவைத்து புட்டபர்த்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவந்து விட்டார்’ என்பதை புரிந்த சிறுவன் அவரையே உற்றுப் பார்த்தான்.
‘என்னிக்கு என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்?” அப்பார்வையின் பொருளே அது பெரியவர் சிரித்தார்.
“...... பாபாதானே..... ! சாஷாத் நாராயண அம்சம்! எத்தனையோ யுகங்கள்ள வந்து நெறஞ்சிருக்கார்....! அந்த ஜோதி இருக்கே, அது பாபாவோட அடியார்களின் ஆத்ம ஜோதிகளின் மொத்த ஜோதி. அதைப் பார்க்கிறதுக்குத்தான் உனக்குப் ப்ராப்தம்! தொடுவதற்கில்லை! அவ்வளவு கூட்டத்திலே உன்னை முன்னாடி விட்டதே பாபாவோட கருணைதான்! எங்க ரெண்டு பேருக்குள்ள ஆயிரத்தெட்டு விஷயங்களிருக்கும், அத உனக்குச் சொல்லணும்னு அவசியம் கிடையாது! இந்த வருஷ சிவராத்திரி இங்கே தான்னுட்டு உன் தலையில எழுதியிருக்கு. அத நிறைவேத்தறதுதான் எங்க வேலை....!”

பெரியவர் அடுக்கிக் கொண்டே சென்றார். அவரளித்த ஏனைய பிற விஷயங்கள் அற்புத ஆன்மீக இரகசியங்களாகும். அவை தக்க தருணத்தில் வெளிவரும். இத்தகைய சிவராத்திரி அநுபூதியை ஸ்ரீசத்ய சாயிபாபாவுடன் தன் சற்குருவின் முன்னிலையில் பெறும் பாக்கியத்தைப் பெற்றவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் சுவாமிகள்.

விஷ்ணுபதி புண்ய காலம்

நாம் செய்கின்ற காரியங்களின் பலாபலன்களைப் பொறுத்தே பாவ, புண்ணியங்கள் அமைகின்றன. உண்மையைப் பேசுவதால் ஓரிடத்தில் தீங்கு விளையுமெனில் அங்கு மௌனமாக இருப்பதோ, தீங்கைத் தவரிக்கும் பொய் உரைப்பதோ சிறந்தெனச் சித்தர்கள் அருள்கின்றனர். பெருந் தவசீலராகிய சத்ய சீலர் என்ற முனிவர் தான் பிறந்ததிலிருந்து எவ்விதத் தவறுஞ் செய்யாதவர். சத்யமே நெறியென வாழ்த்து வருபவர். வாழ்வில் பொய்யே பேசிடாத உத்தமர். எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைத் தியானிக்கும் பெரும் மஹரிஷி!
ஒரு நாள் சத்யசீலர் ஸ்ரீகாயத்ரீ மஹா மந்திரத்தைத் தியானித்திருக்க..... ஆங்கே கையில் பெரிய கூர்மையான பட்டாக் கத்தியுடன் ஒருவன் ஒரு பசு மாட்டை வெட்டுவதற்காகத் துரத்தி வந்து கொண்டிருந்தான். முனிவரின் பர்ணசாலைக்கருகே அந்த பசுமாடு ஒரு தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. அடர்த்தியான வனத்தில் பசுமாடு எங்குச் சென்றது என்று புரியாது திகைத்து நின்ற அவன் முனிவரிடம், “ஸ்வாமி அந்தப் பசுமாடு எந்தப் பக்கம் சென்றது” என்று வினவினான்.
உண்மையைப் பேச வேண்டும் என்ற உத்வேகத்தில் அவர் இரு கைகளையும் நீட்டி, ‘இத்திசையில் தோட்டத்திற்குள் சென்றதப்பா!’ என்றார்,
கையில் பட்டாக் கத்தியுடன் சிட்டாய்ப் பறந்த அவன் ஐந்தே நிமிடங்களில் பசு மாட்டை வெட்டி வீழ்த்தி, அதனை இழுத்துச் சென்றான். சத்யசீலர் திகைத்தார். ‘வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு தவறு இழைத்து விட்டோமே, ஒன்றுமே சொல்லாமல் மௌனியாக இருந்திருந்தால் ஒரு பசு மாட்டைக் காப்பாற்றி இருக்கலாமே! பசுவதைக்குப் பிராயச்சித்தமே கிடையாதே! உண்மையே பேசுவேன் என்று வைராக்கியம் எடுத்து கோஹத்தி தோஷம் வந்து விட்டதே; என் செய்வேன்!’ என்று புலம்பினார்.
சஜ்ஜனர் சாரு என்னும் பெயர் தாங்கி சாரு இனத்தில் மஹரிஷிக்கு உரித்தான அம்ஸங்களைத் தாங்கிய ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த உடனேயே இறை நாமாவைத் தியானித்த அக்குழந்தை தேஜோமயமாய் வளர்ந்தது.
அற்புத தேஜஸ்வியாக, இளந்துறவியாய் ஜ்வலித்த சஜ்ஜனர் பல இடங்களிலும் பண்டரீநாதனின் புகழைப் பாடியவாறே விஷ்ணுபக்தியைப் பரப்பி வந்தார். ஓரிரவில் ஒரு வீட்டின் திண்ணையில் பயணக் களைப்பினால் சஜ்ஜனர் அயர்ந்து உறங்கினார். அவ்வீட்டுப் பெண்மணி இளந்துறவியாய்ப் பிரகாசித்த சஜ்ஜனரிடம் மனதைப் பறிகொடுத்து, ‘சுவாமி! என் மனம் தங்கள் வயப்பட்டுவிட்டது. தாங்கள் என்னை மணம்புரிந்து கொண்டால் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம்’’ என்றாள்.
 சஜ்ஜனர் திகைத்தார், “இறைவா! என்ன சோதனை இது”, உடல் பதைத்திட, ‘அம்மணி! கணவனே கண்கண்ட தெய்வமல்லவா? அவருடன் மனமொத்து வாழ்வதே உத்தம வாழ்க்கையாகும்’ என்று கூறிட, அவள் உடனே சென்று ஒரு பெரிய பட்டாக் கத்தியினால் உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனை வெட்டினாள். “சுவாமி! நமக்கு தடையாய் இருந்த என் கணவனைக் கொன்றுவிட்டேன்! வாருங்கள், இங்குத் தங்கி இன்பமாக வாழலாம்”
சஜ்ஜனர் அதிர்ச்சி அடைந்தார். இனி இங்கிருப்பது ஆபத்து என்று எண்ணியவராய்த் தெருவில் இறங்கி ஓடலானார். “காமவேகத்தில் இருந்த யான் கணவனையும் இழந்தேன். இவரையும் விட்டுவிட்டால் என் வாழ்வு எண்ணாவது?” என்று நினைத்த அப்பெண்மணி சஜ்ஜனரைத் துரத்தியவாறே பெருங்கூச்சலிட்டு ‘என் கணவனைக் கொன்றுவிட்டு ஓடுகிறார்! பிடியுங்கள்! பிடியுங்கள்!’ என்று ஊரையே எழுப்பிவிட்டாள்.
ஊர் மக்கள் சஜ்ஜனரை நையப் புடைத்தனர். மன்னனிடம் சஜ்ஜனரை அழைத்துச் சென்றனர். அவனும் தீர விசாரிக்காது ‘அதர்மமாக அடுத்தவர் மனைவியைத் தீண்டிய இவர்தம் இரண்டு கரங்களையும் வெட்டி வீழ்த்துக!’ என்று ஆணையிட்டான்.
சஜ்ஜனர் இரு முன் கைகளையும் இழந்தவராய் இரண்டு முட்டிகளையும் சேர்த்துத் தட்டி விட்டல நாமத்தைப் பாடியவாறே க்ஷேத்திராடனத்தைத் தொடர்ந்தார். .............
பண்டரீபுரத்தில் ஸ்ரீவிட்டல நாதனின் ஆலய பட்டாச்சாரியார் அந்நாட்டு மன்னன் இருவர் கனவிலும் ஸ்ரீபண்டரீபுர நாதனாகிய ஸ்ரீவிட்டல நாதன், ‘நாளை இரு முன்கைகளை இழந்த என் அடியார் சஜ்ஜன மகரிஷி இங்கு வருகின்றார். அவரை சகல பூர்ணகும்ப மரியாதைகளுடன் வரவேற்று உபசரிப்பீர்களாக’ என்று அருளாணை இட்டார்.
மறுநாள் முழங்கைகளைத் தட்டியவாறே ஸ்ரீவிட்டல நாமம் ஓதி உலா வந்த சஜ்ஜன மகரிஷியை பண்டரீபுர மன்னன் முன்னிலையில் ஆயிரமாயிரம் மக்கள் வரவேற்றனர். சஜ்ஜனர் திகைத்தார். ‘இறைவா! ஒருபுறம் உன் சோதனை, மறுபுறம் உன் திருவிளையாடல்!” என்று வியந்தவாறே மௌனியாக அனைத்து மரியாதைகளையும் ஏற்று ஸ்ரீபண்டரீபுரத்தார் திருச்சன்னதியை அடைந்தார். ‘ஹே விட்டலா! இன்று என்னை மகானாக்கி விட்டாய்! ஆனால் நேற்றோ என் கைகளை இழந்தபோது நீ எங்குச் சென்றிருந்தாய், விட்டலா! விட்டலா!’  என்று சஜ்ஜனர் கதறியழுதார். ஸ்ரீவிட்டல நாதன் காட்சி அளித்தார்.
“சஜ்ஜனா ! இவையெல்லாம் உனது முன்வினையின் பிரதிபலிப்புகளே! முற்பிறவியில் நீ சத்யசீல முனிவனாக இருந்தபோது சத்யமே பேசுவதாக நினைத்துக் கொண்டு, இரு கைகளையும் நீட்டி பசு சென்ற திசையைக் காட்டி, பசுவதைக்குக் காரணமானாய். அப்பசுவே உன் கைகளை நீ இழக்க காரணமான பெண்மணியாவாள். அப்பசுவை வெட்டியவனே அப்பெண்மணியின் கணவனாக வெட்டுண்டிறந்தான். எனவே வாழ்க்கை என்பது முன்வினைகளின் மாய பிரதிபலிப்புகளே என்பதை இதனால் உணர்வாயாக! இந்தத் தர்மநெறியை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே உனது வாழ்க்கைப் பாத்திரத்தை இவ்வாறு அமைத்தேன்”.
தம் இரு முழங்கைகளையும் விண்ணில் தட்டியவாறே விட்டல நாதத்தை உரக்க முழங்கி பஜனையைத் துவங்கினார் சஜ்ஜனர்.
விண்ணை முட்டும் கோஷம், சஜ்ஜனர் தன்னை மறந்தார். சஜ்ஜனருக்கு ஓர் அற்புதத் தரிசனம் கிடைத்தது. அதுவே விஷ்ணுபதி  தரிசனம். சொற் பொருள் கடந்த நிலையது!.
சஜ்ஜனரின் தீர்க யோக நிலையில் கண்ட காட்சி இதுவே............
ஸ்ரீவிஷ்ணு பக்தரான வைவஸ்வத மனு பல ஆண்டுகள் தான தர்மங்கள் செய்து மௌன நோன்பிருந்து ஸ்ரீமஹாவிஷ்ணுவிடமிருந்து அற்புதச் சக்திகள் வாய்ந்த ஒரு அம்பினை வரமாகப் பெற்றார். தர்மசீலனான வைவஸ்வத மனுவிற்கு அனைவரும் அடிபணிந்தமையால் அந்தத் தெய்வீக அம்பினைப் பயன்படுத்த எவ்வித வாய்ப்பும் ஏற்படவில்லை. தேவர்களும், அசுரர்களும் வைவஸ்வத மனுவின் தவசீலத்திற்கு அடிபணிந்தமையால், விண்ணுலகங்களிலும் அதைச் செலுத்தும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. தன் மன்வாதி காலம் முடிவுபெறுவதைத் தீர்க தரிசனமாக உணர்ந்த வைவஸ்வத மனு, தம் குலகுருவான ஸ்ரீவஸிஷ்டரிடம், ‘சற்குருவே! என் காலம் முடியுமுன் நம் தலைநகரான அயோத்தி நகருக்கு யுகங்கள் தோறும் நிலைக்கக் கூடிய ஓர் இறைப்பணியைச் செய்ய ஒரு வழி கூறுவீர்களாக! தங்கள் குருபரம்பரா ஆசீர்வாதத்தால் யாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் வரமாகப் பெற்ற சராஸ்திரம் என்ற அம்பையும் நல்வழியில் ப்ரயோகிக்கத் தங்கள் ஆசீர்வாதத்தை நாடுகிறேன்’‘ என்று குருநாதர் தம் தாள் பணிந்தான்.
பிரம்ம ரிஷியான வஸிஷ்டர், வரவிருக்கும் திரேதா யுகத்தில் ஸ்ரீராம அவதார விசேஷங்களை அறிந்து தெளிந்தவராய், ‘வைவஸ்வத மனுவே! அயோத்யா நகரம் வருங்காலத்தில் தெய்வீக அவதாரத் தலமாக விளங்க இருக்கிறது. இந்நகருக்குக் கங்கை நதியை நிகர்த்த புண்ணிய நதியைப் பெற உன் சராஸ்திரத்தால் திருக்கயிலாயத்திற்கு அணிசேர்க்கும் மானசரோவர் ஏரியை நோக்கி இறையருள் பொங்கும் புண்ணிய நதி வேண்டி எய்வாயாக’‘ என்று அன்புடன் ஆணையிட்டார்.
வைவஸ்வத மனு தம் குருவின் ஆக்ஞையை நிறைவேற்றினான். மானசரோவரை அடைந்த ‘சராஸ்திரம்’ ஒரு புண்ணிய நதியாக விண்ணில் மிதந்து அயோத்தித் திருப்பூமியில் ஒன்றியது. இவ்வாறாகப் பிறந்ததே சரயு நதி. வைவஸ்வத மனுவின் ஆட்சி முடிந்த பின்னர் ஸ்ரீராம அவதார சர்வார்த்தங்கள் நிறைவேறியதும் ‘ஹே ராமா! நின் அவதார விசேஷங்கள் நிறைவு பெற்றன. எம்மை, விஷ்ணுபதியை, நின் அடியார்களுடன் அடையாவாயாக’ என்று ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியின் தேவவாக்கு ஒலித்திட ஸ்ரீராமர் தன் அடியார்களுடன் ஸ்ரீவிஷ்ணுபதியை அடைந்தார். பூரணத்தில் பூரணம் கலந்ததன்றோ?..
சஜ்ஜன சாரு மஹரிஷி இவ்வரிய விஷ்ணுபதிக் காட்சியை திவ்ய தரிசனம் செய்தவாறே ஸ்ரீவிஷ்ணு யோகத்திலிருந்து மீண்டு, தம் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! அவருடைய இரண்டு முன் கைகளும் வளர்ந்து முழுமை பெற்று ஜ்வலித்தன. ஸ்ரீராமர் விஷ்ணுபதியை அடைந்ததும் மகரிஷியின் திருக்கரங்கள் நற்கதி பெற்றதும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தில் தான்.
ஸ்ரீராமர் தம் அடியார்களைக் கூவி அழைத்து, ‘எம்முடன் விஷ்ணுபதியை அடைவீர்களாக’ என்று அன்பொழுக விளித்த காலம் விடியற்காலை சுமார் இரண்டு மணி முப்பது நிமிடங்களாகும். ஸ்ரீசஜ்ஜன சாருகர் ஸ்ரீபண்டரீ நாதனின் விஸ்வரூப தரிசனத்தைப் பெற்றதும் தம் இரு முட்டிகளால் விட்டல பஜனை துவங்கிய நேரமும் விடியற்காலை இரண்டு மணியே! எனவே இத்தகைய ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தில் சூர்ய உதய நேரத்திற்கு முன்னும் பின்னும் நாலரை மணி நேரங்களில் செய்யப்படுகின்ற தியானம், பஜனை, ஹோமம், யோகம், யாகம், ஹவ்யம், கவ்யம், தான தர்மங்கள், தர்ப்பணங்கள் போன்ற நற்காரியங்கள் புனிதம் பெற்றுத் தெய்வ மூர்த்திகள், தேவர்கள், பித்ரு தேவர்களால் ஆசீர்வதிக்கப் பெற்றுப் பன்மடங்கு பலனைத் தரும்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சரயு புண்ணிய நதித் தீர்த்தம் மூலமாகத் தம் அடியார்களுடன் விஷ்ணுபதியை  அடைந்ததும் விஷ்ணுபதி புண்ய காலத்திலேயே தான். மேற்கண்ட ஸ்ரீவிஷ்ணுபதி தத்துவார்த்தங்கள் வைவஸ்வத மன்வாதிக்கு மட்டுமே உரியதாகும். இது தவிர ஏனைய மன்வந்திரங்களில் அமைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்திற்கு அமைகின்ற விசேஷ அம்ஸங்கள், பலன்கள் உண்டு. இவற்றைச் சற்குரு மூலமாகவே அறியலாம்.

மகா சிவராத்திரி

மாசி மாத வளர்பிறை (சுக்லபக்ஷ) திரயோதசி திதியே மஹா சிவராத்திரியாக அமைகின்றது. பூலோகம் மட்டுமின்றி வைகுண்டம், தேவலோகம், இந்திர லோகம், சந்திர லோகம், சூர்ய லோகம் போன்ற கோடிக் கணக்கான லோகங்களில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீவைகுண்ட பரமபதத்தில் சிவராத்திரியன்று ஸ்ரீரங்கநாதர் ரங்க லிங்கமாகக் காட்சியளிப்பார். அதேபோல் வைகுண்ட ஏகாதசியன்று திருக்கயிலாயத்தில் சிவபெருமான் சிவரங்கனாக அனந்தசயனக் கோலத்தில் தரிசனம் தருவார். ஹரியும் சிவனும் ஒன்றன்றோ!

ஸ்ரீராமர் பிரதிஷ்டை லிங்கமூர்த்தி
பாபநாசம் தஞ்சாவூர்

திரிகாலத்தை வெல்பவன் மகானாகின்றான். இதற்குச் சிவராத்திரி வழி காட்டுகிறது. இரவு, பகல் என்பது காலத்தின் திரிபுதான். நவீன விஞ்ஞானம் சூரிய, சந்திரனால் இரவு உருவாவதெனப் பறைசாற்றுகின்றது. ஆனால் ஆன்மீகமோ சூர்ய, சந்திர தெய்வமூர்த்திகளின் ஒளிச் சக்தியினை விரித்துரைக்கின்றது. இதுவே சித்தர்களின் விஞ்ஞானம், திரிகாலத் தத்துவத்தை விளக்குவதே மஹாசிவராத்திரி. எவ்வாறு?
ஒரு முறை தேவர்கள், அமிர்தம் உண்டதால் தாம் பெற்ற அழியா ஜீவசக்தியால் அகந்தை கொண்டு ஸ்ரீசூர்யபகவானுக்குரித்தான பூஜைகளைச் செய்ய மறந்தனர். ஜீவாதார மூர்த்தி ஸ்ரீசூர்ய நாராயணர் அல்லவோ? அவரும் ஸ்ரீசந்திர பகவானோடு இணைந்திடப் பரிபூரணக் கிரஹணம் உருவாகிப் பலகோடி லோகங்களில் இருள் சூழ்ந்தது. ஜீவசக்திகள் ஜடமாயின. தேவர்கள் திகைத்து பல மஹரிஷிகளிடம் இதுபற்றி முறையிட அவர்களோ ‘ஸ்ரீஅகஸ்திய மாமுனியே இத்தகைய பிரபஞ்சந் தழுவிய பிரச்சனைகளைத் தீர்க்கும் சிவசக்தி பூண்டவர்’ என்று கூறிடவே, அனைவரும் பொதிய மலைக்கு விரைந்தனர். பொதியமலையில் ஸ்ரீஅகஸ்தியர் அனைவரையும் வரவேற்று உபசரித்து அவர்கள் வந்த காரணத்தினை அறிந்து கொண்டார்.
‘எல்லாம் வல்ல சதாசிவப் பரப்பிரம்மத்தின் அருளால் பல கோடி சூர்ய, சந்திரர்களை உருவாக்கலாம். ஆனால் இதற்குத் தீர்வு அதுவல்ல. எல்லா தெய்வமூர்த்திகளும் பரம்பொருளின் அம்சங்களாதலின் அந்தந்த தெய்வமூர்த்திக்குரித்தான வழிபாடுகளைத் தவறாது செய்தல் வேண்டும். அதுவும் தேவர்கள் என்னும் உத்தம நிலையிலுள்ள நீங்கள் அல்லவோ அனைத்துப் பூஜைகளையும் செவ்வனே செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். எனினும் உங்கள் அகந்தையால் விளைந்துள்ள துன்பங்களுக்கு ஓர் உபாயம் உள்ளது.. உத்தம சிவனடியார் ஒருவர் திருக்கயிலாயம் சென்று அதன் தல விருட்சமான சிவவில்வ தளங்களை முறைப்படிப் பறித்து வந்தால் அதைக் கொண்டு இங்கு இரவு முழுதும் சிவபூஜை செய்திடில், இறைவன் நல்வழி காட்டுவான்’ என்று உரைத்தார்.
அப்போது தான் தேவர்கள் ஒன்றை உணர்ந்தார். வெளி உலகங்கள் இருளில் மூழ்கியிருக்க. பூலோகமும் இருளாயிருக்க, பொதியமலையில் மட்டும் சூரிய ஒளி எங்கும் வியாபித்திருந்தது., இதற்கு ஸ்ரீசூர்ய பகவானிடமே விளக்கம் கேட்கலாமெனில் அவரோ தேவர்களின்  தபோசக்திக்கு எட்டாத நிலையில் சாந்தமாக ஜ்வலித்துப் பொதியமலைக்கு மட்டும் ஒளியூட்டி நின்றார்.
‘உத்தம சிவனடியாரா?’ தேவர்கள் குழம்பி நின்றனர். இது இறைவனின் திருவிளையாடல் எனத் தெளிந்து ஸ்ரீஅகஸ்தியரையே சரணடைந்தனர். ஸ்ரீஅகஸ்தியர் ஒரு ஹோம குண்டத்தை வகுத்து ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஆஹுதியிட்டு, ‘ஹே ஆஞ்சநேய ப்ரபோ! எமது சிவபூஜைக்குத் திருக்கயிலாய சிவவில்வ தளங்கள் பெற்றுத் தருவீர்களாக!’ என்று வேண்டிட, இமைக்கும் நேரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் வில்வ தளங்களுடன் பிரசன்னமானார்.

ஸ்ரீஅனுமன் பிரதிஷ்டை லிங்கமூர்த்தி
பாபநாசம் தஞ்சாவூர்

தேவர்கள் திகைத்தனர்.., “ஆஞ்சநேயர் உத்தம சிவனடியாரா?”
ஸ்ரீஆஞ்சநேயரின் உள்ளத்தில் உறைபவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியோ  ஸ்ரீராமநாத சுவாமியை உபாஸிப்பவர். எனவே தம் தெய்வம் ஸ்ரீராமரது சிவ பூஜைக்கு ஸ்ரீஆஞ்சநேயரே திருக்கயிலாய சிவவில்வ தளங்களைக் கொண்டு வருகிறார். அதோடு தம் ஸ்ரீராம பூஜைக்கும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நாராயண துளசி தளங்களையும் தாங்கி வருகிறார். எனவே நிதமும் திருக்கயிலாயத்தையும் ஸ்ரீவைகுண்டத்தையும் தரிசிக்கும் மகாபாக்கியம் பெற்றவர் ஸ்ரீஆஞ்சநேய சுவாமி. அவரே உத்தம சங்கர நாராயண அடியார்!”
“மேலும் இலங்கை யுத்தத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு “ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம்” மந்திரத்தை உபதேசிக்கும் பாக்கியத்தை எம் இறைவன் மஹேஸ்வரனால் பெற்றேன். ஸ்ரீராமர் ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியின் அனுக்ரஹத்தைப் பெற அம்மந்திரம் அருள்பாலித்தது. அதற்குச் சாட்சியாக நின்றவர் ஸ்ரீஆஞ்சநேயர். எனவே ஸ்ரீஆஞ்சநேயர் ஹரிஹர  காட்சியுடன் கொணர்ந்த திருக்கயிலாய சிவவில்வ தளங்களால் இன்றிரவு சிவபூஜை செய்வோம். அதோ பாருங்கள்! ஸ்ரீசூர்ய பகவானும் உங்கள் தபோ பலத்திற்கு எட்டாத நிலையில் திருக்கயிலாய லோகமருகே நிலை கொண்டு ஒளி தருகிறான்.”
அன்றிரவு முழுவதும் ஸ்ரீஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்திருக்க, ஸ்ரீஅகஸ்தியர் தலைமையில் தேவர்கள் சிவபூஜை நிகழ்த்தினர். ஓரிரவா அது! பலகோடி யுகங்களுக்குச் சிவபூஜை தொடர்ந்தது. காரணம் ஸ்ரீஅகஸ்தியரே செய்து வைத்த அந்த சிவபூஜையில் அனைவரும் லயித்துத் தங்களை மறந்தனர். அப்பூஜையின் மகத்தான சக்தியால் சூர்ய, சந்திரர்களுடன் அனைத்து தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும் தேவதைகளுடன் பிரசன்னமாகிச் சிவபூஜையில் கலந்து கொண்டனர்.

சிவபூஜையில் கரடி :
அப்போது அற்புதமான சிவபக்தரான கரடி ரூபங் கொண்ட ஸ்ரீஜாம்பவான் அங்கு வந்தார். ‘அனைவரும் ஸ்ரீஅகஸ்தியரின் சிவபூஜையில் லயித்து விட்டதால் பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டதே, இவர்களைத் தங்கள் தேக உணர்வுகளுக்குக் கொண்டு வந்தால் தான் பிரபஞ்சத்தில் ஜீவ சக்திகள் உணர்வு பெறும்!’ என்று எண்ணியவராய் ஸ்ரீஅகஸ்தியரை நோக்க அவரும் தலையை அசைத்து ஆமோதித்தார்.
உடனே ஸ்ரீஜாம்பவான் கர்ஜித்தார். அந்த (கரடி) கர்ஜணையில் அனைத்து தேவர்களும் தேக உணர்வைப் பெற்றனர். இதுவே ‘சிவ பூஜையில் கரடி நுழைந்தது‘ என்ற சொல்வழக்கின் தத்துவமாகும். ஆனால் நடைமுறையில் இது தவறாகக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீஜாம்பவான் உன்னதமான சிவபக்தர். சமாதி நிலைகளை மேற்கொள்ளாது தம் தேக உணர்விலேயே பல அற்புத சிவகடாட்சங்களைப் பெற்றவர். இது பெறற்கரிய இறைநிலையாகும். எனவே சிவபூஜையில் கரடி என்பது
1) தேக உணர்வுடன் இறை அநுபூதிகளை அனுபவித்தால் தான் பிறவியெடுத்த தேகத்திற்கு உயர்நிலை கிட்டும் ;
2) தேகத்தில் உறையும் ஆத்மா தேக உணர்வுகளைச் சார்ந்திருப்பதால் தேக உணர்வுடன் கூடிய இறை அனுபவங்களே அவசியமானது ;
3) தேக உணர்வில்லா சமாதிநிலை கூட குருவருள் தேவை. ஆன்மீக வழிகாட்டி இல்லாது கிட்டும் சமாதி நிலை, ஆவி லோகப் பயணம் (Astral Travel) இவற்றிலிருந்து மீள இயலாவிடில், மனநோயைத் தரும். பைத்தியமடைவது இவ்வாறே.
எனவே ‘சிவபூஜையில் கரடி’ என்ற சொல் வழக்கைக் கேலிக்குரிய தொனியில் பயன்படுத்துவது சாபத்தைத் தரும்.
ஸ்ரீஅகஸ்தியர் சிவபூஜையை நிறைவு செய்ய அனைத்து லோகங்களிலும் ஒளி சேர்ந்தது. காலச் சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்கியது. இவ்வாறு அனைத்து தெய்வமூர்த்திகளுடன் ஸ்ரீஆஞ்சநேயர் சாட்சியுடன் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் ஸ்ரீஅகஸ்தியர் நிகழ்த்திய பூஜை தினமே அந்த யுக ஸ்ரீமுகவருட மாசிமாத திரயோதசி தின மஹா சிவராத்திரியாகும்.

ஸ்ரீஅகத்தீஸ்வரர் பஞ்சேஷ்டி

ஸ்ரீஆனந்தவல்லி பஞ்சேஷ்டி

இவ்வாறாக ஸ்ரீஅகஸ்திய மகரிஷி சிவராத்திரி பூஜை நிகழ்த்திய தலம் சென்னை அருகே பஞ்சவடியில் (செங்குன்றம், காரணோடை அருகில்) உள்ள சிவன் கோயில் ஆகும். பிறிதொரு யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டில் இத்தலத்தில் மேற்கண்டவாறு ஸ்ரீஅகஸ்தியர் நிகழ்த்திய சிவராத்திரி பூஜையில் தான் ஸ்ரீஜாம்பவான் அனைத்து சிவ பகதர்களையும் சகஜயோக நிலையிலிருந்து சகஜ நிலைக்கு மீட்டு அருள் புரிந்தார்.
எனவே இந்த ஸ்ரீமுக ஆண்டில் அமையும் சிவராத்திரி 10-3-1994 பூஜையினை சென்னை பஞ்சவடியிலுள்ள சிவன் கோயிலில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதெனச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் இவ்வாண்டு ஸ்ரீமுக வருட சிவராத்திரி பூஜையில் ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஜாம்பவான்., ஸ்ரீஆஞ்சநேயர் ஆகிய மூவரும் ஏனைய தெய்வாதி தேவரோடு பிரசன்னமாகி அருள்புரியும் அற்புதக் காட்சியை உய்த்துணரலாம்.
இதனால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரிக்கு ‘மாத சிவராத்திரி’ என்று பெயர்.
ஸ்ரீஅகஸ்தியர் நிகழ்த்திய பூஜை மாசி மாதத்தில் அமைந்ததால் மாசி மாதசிவராத்திரி மஹா சிவராத்திரியாகும்.
ஸ்ரீராமர் இன்றைக்கும் பல சிவஸ்தலங்களில் ஸ்ரீசிவலிங்க பூஜை செய்வதால் அதற்கான திருக்கயிலாய சிவவில்வ தளத்தைக் கொணரும் வண்ணம் சிவன் கோயில்களில் பெரும்பாலும் முன் தூண்களில் ஸ்ரீஆஞ்சநேயர் தரிசனம் தருவதைக் காணலாம். சிவராத்திரியில் வில்வ தளங்களை ஸ்ரீஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து சிவபெருமானுக்குச் சூட்டுதலும், அர்ச்சனை செய்தலும் விசேஷமாகும். மேலும், ஸ்ரீஆஞ்சநேயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல லிங்கங்கள் உள்ளன.
இக்கோயில்களில் சிவராத்திரியன்று இரவு முழுதும் வடமொழி, தமிழ் மறைகளே ஓதுதல், மின்விளக்கு வசதியில்லா கோயில்களில் நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றுதல், தூபமிடுதல் அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள் போன்ற சிவபூஜைகள் நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். ஸ்ரீமுக வருடத்தில் பஞ்சாங்க ரீதியாக ஸ்ரீராம நவமி அமையாததால் இவ்வருடத்திய மஹா சிவராத்திரியை பஞ்சவடித் திருத்தலத்தில் கொண்டாட இயலாவிடில், ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர் இருவரும் பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்க மூர்த்திகள் அமைந்துள்ள சிவாலங்களில் நிகழ்த்துவது சித்தர்களின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும். சென்னை அருகே பாடி (Padi) ஸ்ரீதிருவலிதாயர் சிவன்கோயிலில் ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீராம நவமி

நிகழும் ஸ்ரீமுக ஆண்டில் பஞ்சாங்க ரீதியாக ஸ்ரீராமநவமி இடம்பெறவில்லை. ஆனால் சித்த புருஷர்களின் அருள்வாக்கின்படி எந்த ஆண்டில் ஸ்ரீராம நவமி (புனர்வசு நட்சத்திரம், நவமி திதியுடன் கூடும் நாள்) பஞ்சாங்க கணிதப்படி, அமையவில்லையோ, அவ்வாண்டின் ஸ்ரீராமநவமி உற்சவத்தினைத் தாமே ஏற்று, பூலோகத்தின் ஏதேனும் ஒரு வைணவக் கோயிலில் நிகழ்த்துவதாக ஸ்ரீஆஞ்சநேயர் ஆக்ஞாபித்துள்ளார். அப்படியானால் இந்த ஸ்ரீமுக ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவத்தை ஸ்ரீஆஞ்சநேய மஹாப்பிரபு எந்த திருக்கோயிலில் தேவபூஜையாக ஏற்றுக் கொண்டாடவிருக்கிறார் என்று அறிய ஆவலாக உள்ளதல்லவா? இவ்வான்மீக இரகசியத்தை நமக்கு அருளியவர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள். அதனை ஈண்டுக் காண்போம்.

ஸ்ரீபாதாளேசுவரர் அரிதுவாரமங்கலம்

சதாசிவபரப்பிரம்மத்தின் அடிமுடியைக் காண்பதற்காக ஸ்ரீவிஷ்ணுவும், ஸ்ரீபிரம்மாவும் பிரத்யனம் செய்த புராணத்தை நாம் அறிவோம். ஸ்ரீவிஷ்ணு பாதாள லோகங்களை அடைவதற்காக பூமியைக் குடைந்தபோது வராஹ ரூபமெடுத்தும் பூமிக்குள் செல்ல இயலவில்லை. ஸ்ரீவராஹமூர்த்தி வியந்து ஸ்ரீசதாசிவனை நோக்கித் தொழுதிட அவரும், ‘ஹே வராஹரூபா! வேதங்களை ரட்சிப்பதற்கு நின் வராஹ ரூபம் பெரும் சேவை ஆற்றியதல்லவா? உலக பரிபாலனத்தின்பாற்பட்டதால் அது எளிதாக அமைந்தது, ஆனால் தற்பொழுது எம் அடிமுடியைக் காணும் ப்ரயத்னமானது ஆணவம், சுயநலத்தின் பாற்பட்டதால், தற்போது பாதாள லோகத்திற்குள் செய்ய இயலவில்லை. யாம் பாதாளேஸ்வரராக உறையும் திருத்தலத்திற்கு வந்து சேவித்து பாதாள லோகங்களுக்குச் செல்லும் திருவழியைக் காணலாம்’‘ என அருளினார்.
ஸ்ரீமஹா விஷ்ணு தஞ்சை – நாகை சாலையிலுள்ள அரதைப்பெரும்பாழி (ஹரித்துவார மங்கலம்) என்னும் சிற்றூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாதாளேஸ்வரரைத் தரிசித்து மகிழ்ந்தார். இன்றைக்கும் இக்கோயில் மூலஸ்தானத்தில் ஸ்ரீபாதாளேஸ்வர லிங்கத்தினருகில் ஒரு பிலத்வாரத்தைக் காணலாம். ஸ்ரீமஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்ற ஸ்தலம் இதுவே. ஸ்ரீசிவபெருமானின் அடியைக் காண ஸ்ரீமஹாவிஷ்ணு பூமியினடியில் சென்ற திருத்தலமும் இதுவேயாகும்.
ஹரித்துவார மங்கலம் என்னும் இவ்வூரில் கிருதயுகத்துப் பெருமாள் மூர்த்தம் ஒன்றுள்ளது. 108 வைஷ்ணவ திருப்பதி, அபிமானத் தலங்கள் இவற்றில் இத்திருக்கோயில் அமையாததால் இத்தல மஹிமையை எவரும் அறியவில்லை. இவ்வான்மீக இரகசியங்களைச் சித்தா புருஷர்களே அறிவர்.

ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயம்
ஹரித்துவாரமங்கலம்

ஆழ்வார்களால் இயற்றப் பெற்ற பல பாசுரங்கள் யுகரகசியங்களாக மறைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட யுகத்தில், குறிப்பிட்ட மஹான்கள் மூலமாகவே அவை வெளிவரும் என்பது இறைநியதியாகும். இவ்வாறாக ஹரித்துவார மங்கலம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலைப் பற்றிய ஆழ்வார்களின் பாசுரங்கள் தக்க சமயத்தில் இறையருளால் வெளிவரும்.
நிகழும் ஸ்ரீமுக ஆண்டின் ஸ்ரீராம நவமி வைபவமானது ஹிரித்துவார மங்கலத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில்தான் ஸ்ரீஆஞ்சநேயரால் கொண்டாடப்பட இருக்கிறது. ஸ்ரீராமநவமி ஸ்ரீராமர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலல்லவா கொண்டாடப்பட வேண்டும் என்ற கேள்வி ஏழலாம். ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் புராணத் தொடர்புகள் உண்டு.
ஸ்ரீமஹாவிஷ்ணு 24 அவதாரங்கள் மட்டுமல்லாது பல்வேறு அவதார மூர்த்திகளாய்ப் பல்வேறு லோகங்களிலும் அடியவர் விருப்பத்திற்கேற்பக் காட்சியளிக்கின்றார். அவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய்த் திரேதா யுகத்தில் பிறப்பெடுக்கு முன்னர் ஸ்ரீவரதராஜப் பெருமாளாக அவதாரமெடுத்து அருள்பாலித்தார்.
ஸ்ரீராமாவதாரத்தில் ஸ்ரீசீதாதேவி பல இன்னல்களுக்கிடையே வாழவேண்டிய தாயிற்றல்லவா?  எனவே புன்னகை என்பதையே அவள் மறந்தனள். ஸ்ரீலக்ஷ்மியாய்ப் புன்சிரிப்புடன் அனைவர்க்கும் அருள்வழங்கிய ஸ்ரீசீதாதேவி ராமாவதாரத்திற்குப் பின்னர் தம் ஸ்ரீலக்ஷ்மி அவதாரத்தை ஸ்ரீசீதாதேவி ரூபத்திலேயே காண விரும்பினாள். இதற்காகப் பல வைஷ்ணவத் திருப்பதிகளுக்குச் சென்று ஹரித்துவார மங்கல ஸ்ரீவரதராஜப் பெருமாளைச் சேவித்தனள். ஆங்கே........

ஸ்ரீமகாவிஷ்ணு
ஹரித்துவாரமங்களம்

ஸ்ரீவரதராஜப் பெருமாளின்  திருமுகம் மலர்ந்து ஸ்ரீமுகமாக (ஸ்ரீ – லக்ஷ்மி) அதாவது ஸ்ரீலக்ஷ்மி முகம் புன்சிரிப்புடன் ஒளிர்விட்டுப் பிராகசித்தது. இதைக் கண்டு புன்னகை செய்தாள் ஸ்ரீசீதாதேவி. எனவே ஸ்ரீமுக வருடத்தில் இப்புனித வைபவம் நிகழ்ந்தமையால் ஸ்ரீமுகவருட  ஸ்ரீராமநவமியை இத்தலத்தில் கொண்டாடுதல் மிகவும் சிறப்பானதாகும்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், ஸ்ரீசீதாதேவி புன்னகை புரிந்து ஸ்ரீமுகமாக மலர்ந்த இத்தலத்தின் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் காண ஓடோடி வந்தாராம். இரு அவதாரங்களும் இணைந்து நிற்க இவ்விரு சந்திர புருஷர்களில் தம் நாயகன் ஸ்ரீராமரை அடையாளம் காண ஸ்ரீஆஞ்சநேயரே ஒரு க்ஷணம் திகைத்து நிற்கவேண்டியதாயிற்றாம். அப்போது ஸ்ரீமுகமாய் மலர்ந்த ஸ்ரீசீதாதேவியைத் தியானிக்க, அவருக்கு தெளிவு கிட்டியது. கிருதயுகத்து ஸ்ரீவரதராஜப் பெருமாளே திரேதாயுகத்தில் ஸ்ரீராமராக உதித்துள்ளார் என்ற தெளிந்த ஞானம் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஸ்ரீமுகவருடத்தில் தான் கிட்டியது.
எனவே ஸ்ரீமுகஆண்டின் ஸ்ரீராம நவமியை ஹரித்துவார மங்கலம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கொண்டாடுவது, ஸ்ரீமஹா விஷ்ணுவின் இரு அவதார மூர்த்திகள், ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரின் அருட்காட்சத்தை ஒருங்கே பெற்றுத் தரும். இது பெறற்கரிய வாய்ப்பல்லவா?
23-3-1994 அன்று ஸ்ரீஆஞ்சநேயர் ஏற்று நடத்தும் தேவபூஜையாக மலரும் ஸ்ரீராமநவமியை ஹரித்துவார மங்கலம் ஸ்ரீவரதாரஜப் பெருமாள் கோயிலில் கொண்டாடுதல் அற்புதமான பலன்களை அளிக்கும். இத்திருநாளில் இத்தலத்தில் சந்தனக் காப்பிடுதல் ஸ்ரீராம ஸ்தோத்ர பாராயணம், ஹோம யாகங்கள், அன்னதானம், வஸ்திர தானம், பாதணி தானம் போன்ற தானங்களோடு வழிபடுதல் அளப்பரிய தெய்வீக சக்தியைத் தரும்.

புனுகு மகிமை

ஸ்ரீபசல மாமுனிவர் தாம் புனுகுச்சட்டப் பூஜையைப் பூலோகத்திற்கு அளித்த உத்தம மஹரிஷி என ஏற்கனவே விவரித்துள்ளோம். பிரபஞ்சத்தின் முதல் புனுகுச் சட்டத்தை ஸ்ரீபசல மாமுனிவர் தமிழகத்தில் கொல்லி மலையடிவாரத்திலுள்ள முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்கையில் கோயில் நடை சார்த்திடவே, அதனை ஸ்ரீகாலபைரவருக்குச் சாற்றி மகிழ்ந்தார்.
ஸ்ரீபைரவருக்குச் சாற்றிய நறுமணம் அக்கோயிலின் எல்லா தெய்வ மூர்த்திகளுக்கும் பரவியதோடன்றிப் பூவுலகெங்கும் உள்ள சுயம்பு மூர்த்திகள் அனைத்திலும் அப்புனுகின் மணம் நிரவியது. இவ்வருட்பெருஞ் சாதனையை விண்ணுலகத்தினரும் சகல தெய்வ மூர்த்திகளும் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தனர். இத்தருணத்தில் புனுகைத் தாங்கி நின்ற இந்த விசேஷமான ஸ்ரீகாலபைரவரின் சிறப்பம்சங்களை ஸ்ரீபசலமாமுனிவரே ‘புனுகு மஹிமா’ கிரந்தத்தில் விவரித்துள்ளார்.,
இவ்வரிய ஆன்மீக இரகசியங்களைச் சிவகுரு மங்களகந்தர்வார் அவர்கள் நம் சற்குரு குருமங்கள கந்தர்வாவிற்கு அருளியுள்ளார்.

ராகு கேது மூர்த்திகள் காருகுடி

பாற்கடலில் கிட்டிய அமுதத்தைப் பெற தேவர்களுடன் அமர்ந்தமையால் மோஹினி அவதார ஸ்ரீமந்நாராயணால் ராகு, கேது கிரஹங்களாக உருக்கொண்ட இரு அசுரர்களும் ஸ்ரீகாலபைரவரைத் தஞ்சம் அடைந்தனர். ஸ்ரீராகு,ஸ்ரீகேது சரணடைந்த ஸ்ரீகாலபைரவ மூர்த்தியே மேற்கண்ட கொல்லி மலையடிவார முருகன் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.
கோரரூபமாய் தம்மைச் சரணடைந்த அரக்கர்களிடம் பரிவு கொண்டு ஸ்ரீகாலபைரவர், அவ்வசுரர்களை ஸ்ரீமோஹினி ரூப பெருமாளிடம் ஒப்படைத்து அவர்கட்கு விமோசனம் தர வேண்டினார். ஸ்ரீமஹாவிஷ்ணுவும் அந்தத் தினம் நாகசதுர்த்தியாக அமைந்ததால் ராகுவிற்கு நாக, சரீரத்தையும், கேதுவிற்கு நாக சிரசை (தலை)யும், தந்து ‘(கிரஹங்களாக அமர்ந்து) அமிர்தத்தை ஸ்பரிசித்த பலன்களை அனைத்து ஜீவன்களுக்கும் அருள்வீர்களாக! என்று அருளாணையிட்டார்.
பிரபஞ்சத்தில் முதல் புனுகுச் சட்டத்தை தாங்கியவரான ஸ்ரீகாலபைரவ மூர்த்தியின் அனுக்ரஹத்தைப் பெற்றமையால், ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகளுக்குப் புனுகுச் சட்டம் ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ராகு, கேது தசாபுக்திக் காலங்களில் இத்தகைய வழிபாடு இன்னல்களைத் தணித்து நன்மைகளை அளிக்கும். மேலும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவ மூர்த்திக்குப் புனுகுச் சட்டம் சார்த்துவதால், ஸ்ரீகாலபைரவரின் அனுக்ரஹத்தோடன்றி, ஸ்ரீராகு பகவானின் அருட்கடாட்சத்தைப் பெறலாம். திருநாகோஸ்வரத்தில் ஸ்ரீராகு பகவானுக்கு ராகு காலத்தில் புனுகு கலந்த திரவிய அபிஷேகம் அபரிமிதப் பலன்களை அளிக்கும். இது சித்தபுருஷர்கள் அருளிய ஆன்மீக இரகசியங்களாகும். இம் மூர்த்தியைத் தரிசிக்கையில் ஸ்ரீபசலமாமுனிவரைத் தியானித்தலும், ஸ்ரீகால பைரவ மூர்த்தியைத் துதித்துப் போற்றுதலும் இவருக்குப் ப்ரீதியளிக்கும்.
திருக்காளத்தி, காருகுடி, திருநாகேஸ்வரத் தலங்களில் ராகு காலங்களில் புனுகுத் திரவிய அபிஷேக ஆராதனைகளுடன் உளுந்து, கொள் முதலியவற்றால் ஆன உணவுப் பொருட்களைத் தானமளித்தல் அனைத்து நவக்ரஹ அனுக்ரஹங்களைப் பெற்றுத் தரும். கருப்பு, சிவப்பு நிற ஆடைகளைத் தானமாக அளித்தலும் அருகு, தர்ப்பைகளால் பூஜித்தலும், கோமேதஹம், வைடூரியம் கற்கள் நிறைந்த ஆபரணங்களைப் பாலில் இட்டு அதனை அபிஷேகம், நைவேத்யம் செய்தலும் நவக்ரஹங்களின் பரிபூரண பலனைப் பெற்றுத்தரும். இவ்வாறாக அற்புதமான திருவருளைப் பெற்றுத் தரவல்ல புனுகுத் திரவியத்தை நமக்கு அளித்த பசலமாமுனிவரின் மஹிமைகளை நாம் உணர்வதுடன் அனைவரும் அறியுமாறு செய்து எல்லோரும் இன்புற்றிருக்க நாம் ஒரு கருவியாக அமைந்து செயல்பட வேண்டும்.

எம பயம் நீங்க

அடியார் : குருவே எம பயம் நீங்குவதற்கு ஏதேனும் வழி சொல்லுங்களேன்!
குரு : (சிரித்தவாறே) எவ்வளவு எளிதாகக் கேட்டு விட்டாயே, இருந்தாலும் சொல்லுகிறேன்!
பிறருடைய எம பயத்தை நீக்குவதற்கு எத்தகைய முயற்சிகளில் ஒரு மனிதன் ஈடுபடுகின்றானோ அந்த அளவில் அவனுடைய எம பயம் குறையும். இதுவே நிதர்சன உண்மை.
அடியார் : பிறருடைய எம பயத்தைக் குறைப்பதென்றால்...
குரு : எம பயம் என்பது பொதுவாக மரணத்திற்கு அஞ்சுதல் அல்லது சடலங்களைப் பார்த்து அஞ்சி வருந்துதல் ஆகும்.
அநாதைப் பிரேதங்களின் ஈமக்கிரியைகளுக்கு உதவி செய்தல் ஓர் உத்தமான சேவையாகும். கறவை நின்ற வயதான பசுக்களைப் போஷிக்கின்ற தர்மத்திற்கு ஈடான காரியம் இது. இவ்விரண்டுமே எம பயத்தை நீக்கும் அற்புதமான வழிகளாகும்.
இவை தவிர எளிமையான பலவழிகள் உள்ளன. இறந்த பக்ஷிகள், பிராணிகளுக்காகப் பிரார்த்தித்தல், விபரமறியாதவர்களுக்குப் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றி விளக்கி அவர்களை அமாவாசைத் திதிகளில் தர்ப்பணம் செய்ய வைத்தல், வசதியற்றோர்க்கு காசி, புனித யாத்திரைக்கு ஏற்பாடு செய்தல், பிராணிகள் வதைத் தடுப்பு, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி செய்தல், ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி செய்தல் போன்ற நற்காரியங்கள் எம பயத்தைத் தணிக்கும்.
அடியார் : எம பயத்தைத் தணிப்பதென்றால்..... !
குரு : விபத்து, தற்கொலை, விஷக்கடி போன்ற அசுப மரணங்களில்லாது இறை நினைவோடு சாந்தமான முறையில் மரணத்தைப் பெறுதல் மிகவும் சிறப்பானதாகும். இதுவே எமபயம் இல்லாததற்கான அறிகுறி ஆகும். மருத்துவ மனைகளில் அவதியுறாது, தம் வீட்டிலேயே அமைதியாக மரணத்தை ஏற்பதற்கு மேற்கண்ட நற்காரியங்கள் பெருந்துணை புரியும்.
அடியார் : இத்தகைய நற்காரியங்கள் எவ்வாறு எம பயத்தைத் தணிக்கின்றன ?
குரு : மேற்கண்ட நற்காரியங்கள் தாம் மரணத்தைப் பற்றிய ஞானத்தைத் தெளிவுற அளிக்கும் வெறும் புத்தக அறிவால் பலனில்லை.
மரணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகளை ஒருவன் உணர்ந்தால் ‘மரணம் தூக்கத்தின் விரிவு‘ என்பதை உணர்வான். ஆத்மா உறையும் வீடே தேகமாகும். இந்த தேகத்திற்குரித்தான கர்மங்கள் கழிந்தபின், மற்றொரு தேகத்தை அந்த ஆத்மா நாடுகிறது. இந்தக் கூடுவிட்டுக் கூடு பாய்தலே மரணமாகும்.
அடியார் : மற்றொரு தேகமென்றால்....?
குரு : அந்த மற்றொரு தேகம் எவ்வித ஜீவனின் உருவாகவும் இருக்கலாம் ; அல்லது ஆவியாய் அமைவதற்குரித்தான தேகமாகவும் (Shell) இருக்கலாம். அடுத்த தேகத்தை அவ்வாத்மா பெறும்வரை இந்த Shell –ல் தான் குடியிருக்கும்.
ஆத்மா புனிதமானது அது தான் தோன்றிய பூரண ஆத்மாவான பரமாத்மாவுடன் ஐக்யமாவதற்குத் தடையாகப் பல கர்மங்கள் நிறைந்துள்ளன. இக்கர்மங்களின் நிழல் ஆத்மாவைச் சுற்றி அமைவதால் அவ்வாத்ம ஜோதி கண்ணுக்குப் புலனாவதில்லை. பற்று, பாசம் போன்றவற்றால் உருவாவதே இந்த நிழலாகும். பிறவிகளை வளர்க்கும் இந்நிழலே ‘பிறவிப் பிணி’ ஆகும். இவ்வாறாகப் பல கோடிப் பிறவிப் பிணிகளுடன் எண்ணற்ற ஜீவன்கள் பல தேகங்களில் பிறப்பெடுக்கின்றன..
அடியார் : இறந்தவுடன் நிகழ்வதென்ன,, குருவே?
குரு : ஒரு தேகத்திலிருந்து ஒரு ஆத்மா தனக்குரித்தான பிறவிப் பிணி நிழலுடன் வெளிவந்து Shell ஆகிய கண்ணுக்குத் தெரியாத தேகத்தில் குடியேறுகிறது. அணுவினும் சிறிய இந்த தேகத்திலிருந்து இந்’‘நிழல்‘ அனைத்தையும் கண்காணிக்கிறது. மக்களுக்கு எளிதில் புரியும் பொருட்டு பிறவிப் பிணியாகிய இந்நிழலை ‘ஆவி’ என்றழைக்கிறோம். அதாவது மனித சரீரம் போல ஆவி என்பது ஆத்மா உறையும் கண்ணுக்குப் புலனாகாத ஒரு சரீரம் ஆகும்.
அடியார் : அதாவது ஆத்மாவானது மனித சரீரத்தைவிட்ட பின், ஆவி தேகத்தில் புகுகின்றது. அப்படித்தானே குருதேவா ?
குரு : ஆம்! எனினும் சில ஆத்மாக்கள் ஒரு ஜீவ தேகத்திலிருந்தும் மரணம் மூலம் வெளிப்பட்டு ஆவி தேகத்தைப் பெறாமல் மற்றொரு ஜீவ தேகத்தைப் பெறுதலும் உண்டு. எனினும் மரணத்தைப் பற்றிய கடினமான ஞானத்தைப் பெறும் வரையில் சுலபமான இந்த ஆவி தேகத்திலிருந்தே நம் விளக்கத்தைத்  தொடர்வோம்.
ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய ஆவி மேலிருந்தவாறே அனைத்து நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனிக்கிறது. தன் மரணத்திற்காக உண்மையாக அழுபவர்கள் யார், வெறும் நடிப்புக் கொண்டவர்கள் யார், உண்மையான நண்பர்கள், சுற்றத்தார் யார் போன்ற அனைத்தையும் அந்த ஆவி தெரிந்து கொள்ளுகின்றது. ஆனால் அதை வெளிப்படுத்தக் கூடிய உருவத்தையோ, மொழியையோ கீழே உள்ள மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாது. அதற்குச் சிறந்த மனோலய (Telepathy) அறிவு  தேவைப்படுகிறது. இந்தச் சக்தியை உடையவர்களே (Medium) ஆவியுடன் பேசுபவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இதைப் பற்றி விவரித்தால் நம் ஆயுள் போதாது. எனவே மரணம் பற்றிய விளக்கத்திற்குள் நாம் தெளிவு பெறுவோம்.

தினசரி இறைப் பணிகள்

சென்ற இதழில் சராசரி மனிதன் தினந்தோறும் செய்ய வேண்டிய இறைவழிபாடுகள், தான தர்மங்கள் ஏனைய நற்பணிகள் பற்றி விளக்கியிருந்தோம். இவ்வளவு நற்காரியங்களையும் தினந்தோறும் செய்ய இயலுமா என்று எல்லோரும் மலைப்புறலாம்.
உறக்கம், அலுவலகப் பணி, குடும்பப் பணி, விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இவை போக நேரம் கிட்டினால் தான் பூஜை செய்வது, கோயிலுக்குச் செல்வது என்ற அவல நிலை உருவாகியுள்ளது. ‘தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் புண்ணியத்தால் தான் சுபமாகக் கழிகின்றது ; இருக்கின்ற புண்ணியத்தை இவ்வாறாக எளிதில் வேகமாக இழந்து வருகிறோம். இள வயதிலேயே புண்ணிய நற்காரியங்களைச் செய்தால் தான் நடப்பு, எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படும். இத்தகைய ஆத்மவிசாரங்களில் மனிதன் ஈடுபடுவதே இல்லை. ‘தினமும் ஒரு நற்காரியமாவது செய்தோம்’ என்ற திருப்தியுடன் அந்நாளை முடிக்க வேண்டும். இல்லையேல் அது பயனற்ற வாழ்க்கை, ‘நம் குடும்பம், நம் வாழ்க்கை, நம் அலுவலகம்‘ என்று நமக்காக வாழ்வதால் என்ன பயன்? இத்தகைய சுயநல வாழ்வு பிறவிகளையே பெருக்கும்,
‘புனரபி ஜனனம்
புனரபி மரணம்’
என்று மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து வாழும் வாழ்வால் என்ன பயன்?
மற்றும் சிலர், ‘தானுண்டு, தன் வேலையுண்டு‘ என்று பூஜைகள், கோயில் தரிசனங்கள் இன்னிசைக் கச்சேரிகள், சபரிமலை போன்ற க்ஷேத்ராடனம் போன்றவற்றைச் செய்து எவருடனும் ஒட்டாமல் தாமாகவே வாழ்கின்றனர். இவை புண்ணிய காரியங்கள் எனினும் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கைக்குத்தான் உதவும். இந்த நற்காரியங்களினால் அவர் பெரும் தனவந்தராக, தொழிலதிபராகப் பிறப்பெடுக்கலாம். இந்தச் சுகபோக வாழ்விலும் பிரச்சனைகள் தாமே மலிந்துள்ளன!
எனவே பலர் ஒன்று கூடி சற்குருவின் கீழ் அமைகின்ற சத்சங்கங்களை நாடிச் சேர்ந்திடில்.
1. பல அரும்பெரும் திருப்பணிகளைக் கூட்டாக நிறைவேற்றிப் பெரும் பயனடையலாம்.
2. சற்குருவே இவர்களுக்கு வழி காட்டுவதால், புண்ணியப் பங்கீட்டையும் அவரே மேற்கொள்கிறார்.
3. கோயில் உழவாரத் திருப்பணி, ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி, அன்னதானம், வறியோர் திருமணங்களுக்குதவுதல் போன்ற மாபெரும் நற்காரியங்களைக் கூட்டாக நிறைவேற்றலாம் இவற்றைத் தனியொருவராகச் செய்ய இயலாது.
4. பல அடியார்களை ஊக்குவித்து சத்சங்கங்களில் அவர்களைப் பிணைப்பதன் மூலம் பலருக்கும் இறைச் சேவை மஹிமையை உணர்த்துவதால், சுயநலம் குறைந்து பலருக்கும் புண்ணியத்தைப் பெற்றுத் தருகின்ற தியாக உணர்ச்சி ஓங்கும்.
5. சுயநலத்தின் முடிவே தியாகத்தின் தொடக்கம் ஆகும். குரு கிட்டவில்லை என்று ஏங்குபவர்கள் சுயநலத்தை விடுத்துத் தியாகத்துக்குத் தயாராக வேண்டும். அதற்குச் சத்சங்கமே ஒரே வழியாகும். தனிப்பட்ட முறையில் வாழ்ந்து சற்குருவைப் பெற இயலாது.
எனவே தினசரி இறைப்பணிகளாக நம்குரு மங்கள கந்தர்வா அளித்துள்ளவற்றை நிறைவேற்றுவதற்குச் சத்சங்கமே வழிவகுக்கும். அனைத்து இறைப் பணிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து சத்சங்க அடியார்கள் நிறைவேற்றுவதால் நாள்தோறும் வியத்தகு முறையில் பல அற்புதமான ஜப, தப, தானதருமங்களையும், இறை வழிபாடுகளையும் எளிதாக நிறைவேற்றுவதற்குச் சற்குரு அருளாட்சி செலுத்தும் சத்சங்கமே ஒரே சிறந்த நல்வழியாகும்..

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam