அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருத்தல வழிபாடு

மூர்த்தி – தீர்த்தம் – தலம் (சித்தர்கள் காட்டும் தல வழிபாட்டு முறை)
“மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாக தரிசிப்போர்க்கு நல்ல சொல் கூற சற்குருவும் வாய்க்கும் பராபரமே!” என்பது ஆன்றோர் வாக்கு. “முறை” என்ற சொல்லை பெரியார்கள் சேர்த்திருப்பதிலிருந்தே எந்த ஒரு திருத்தலத்தையும் முறையாக தரிசனம் செய்தால்தான் முழுமையான பலன்கிட்டும் என்பது தெளிவாகிறது. அது சரி! முறை என்பதை எப்படி தெரிந்து கொள்வது? சற்குருவைத் தவிர வேறு கதி ஏது! ஆகவே நாமும் நம் குரு நாதராகிய குரு மங்கள கந்தர்வாவை நாடி பணிந்தபோது அவரும் பெருங் கருணைக் கொண்டு “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று மனமுவந்து நம் திருக்கோயில் தரிசன முறைகளை “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே” என அளிக்க முன்வந்தார்கள். அவ்வாறு நம் குரு நாதராகிய குரும்ங்கள கந்தர்வாவிடமிருந்து பெற்ற பொக்கிஷங்களை மேற்கண்ட தலைப்பில் தொடர்ந்து பெற்று பேரின்பமடையலாம்.
ஸ்ரீசுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்கும் முறை :

  1. முதலில் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்ரீவினாயகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும், கடல் நுரை போன்ற வஸ்துவால் ஆன விசேஷமான வெள்ளை நிறப் பிள்ளையாரான இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது.
  2. இரண்டாவதாகச் சுவாமி மலையில் ஸ்ரீசுப்ரமணியரைத் தரிசிக்க வேண்டும்.
  3. மூன்றாவதாக ஆடுதுறையில் உள்ள ஸ்ரீசூரியனார் கோவிலைத் தரிசிக்க வேண்டும். இங்குள்ள குளம் அற்புத மூலிகைச் சக்தி வாய்ந்தது. பார்ப்பதற்குப் பாசி பிடித்தாற் போல் அழுக்காகத் தோன்றிடினும் பரிபூர்ண நம்பிக்கை உள்ளோர் இதனை ஔஷத (மருந்து) நீராகக் கருதிப் பருகுகின்றனர். தேவ ரகசியங்கள் நிறைந்த மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும் இது.

இம்முறையில் மூன்று கோயில்களிலும் தரிசனம் செய்து மூன்றிலும் அன்னதானம் செய்து வழிபடுதலே சுவாமிமலையில் குடிகொண்ட ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமியைத் தரிசிப்பதின் பரிபூர்ண பலனைத் தரும்,

ஆத்ம விசார வினா விடை

வினா : கோயில்களில் உற்சவ மூர்த்தி புறப்பாடு நடைபெறுகின்ற போது மூலவரின் சக்தி உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால் மூலவரைத் தரிசிப்பதால் பயனில்லை என்று கூறுகிறார்கள். இது சரியானதா ?
பதில் : கோயில்களில் உற்சவ மூர்த்தி புறப்பாடு நடைபெறுகின்ற போது மூலவரின் சக்தி உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால் மூலவரைத் தரிசிப்பதில் பயனில்லை என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. சித்தர்கள் அருளியபடி ஒவ்வொரு சுயம்பு மூர்த்திக்கும் 1008 இறைக் கலையம்சங்கள் உண்டு. எனவே உற்சவ மூர்த்தி புறப்பாடு நடைபெறும்போது மூலவரின் ஓர் அம்சமானது உற்சவ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. எனவே எத்தகைய உற்சவ மூர்த்தி வழிபாடுகள் நடைபெற்றாலும் மூலவரின் சான்னித்தியத்தில் , அருள் புரியும் தன்மையில் மாறுதல் இராது.
பல காரணங்களால் கோயிலுக்குள் வர இயலாத முதியோர், அனாதைகள், ஆதரவற்றோர், குருடர்கள், உடல் ஊனமுற்றோர், கடும் ரோகங்கள் கொண்ட நோயாளிகள் போன்றோருக்கும் தரிசனம் தர, கருணைக் கடலாம் கடவுள் உற்சவ மூர்த்தியாய் வலம் வருகிறார். தம்மால் பார்க்க இயலாவிடினும் உற்சவ மூர்த்தியாய் வெளி வந்து தம்மைக் கண்டதாக பாவித்து மகிழ்ச்சியடைகின்றனர் குருடர்களும் ஊனமுற்றோரும்.
இனிப்பான கொழுக்கட்டையின் பூர்ணத்திலிருந்து சிறிது எடுப்பதால் அதன் இனிப்புத் தன்மை குறைவதில்லை. ஒரு ஜோதியிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றுவதால் ஜோதி எவ்விதத்திலும் குறைபடுவதில்லை எனவே உற்சவ மூர்த்தியே மூலவரின் அம்சத்தைக் தாங்கி வந்து அருள் பாலிக்கின்றார். எனினும் மூலவரும் பூர்ணமாகப் பரிமளிக்கின்றார்.
சுயம்பு மூர்த்தியானால் 1008 கலையம்சங்களும், தேவப் பிரதிஷ்டையானால் 708 கலையம்சங்களும், ரிஷிகள், மஹான்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டி இருந்தால் 108 கலையம்சங்களும் மூர்த்திகளுக்கு அமைகின்றன. எனவே எத்தகைய கோயில்களிலும் உற்சவ மூர்த்திக்கு ஓர் அம்சம் மட்டுமே அர்ப்பணிக்கப்படுவதால் மூலவரின் சான்னியத்தில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாது. எனவே இதனைப் பக்தர்கள் அறிந்து தெளிவதோடு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் இந்த அரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பரப்ப வேண்டும். பூரணமாக எங்கும்  வியாபித்துள்ள இறைவனின் அம்சங்களைப் பகுப்பதால் அவனுடைய பூரணத்வம் குறைவுபடுவதில்லை.

பெண்களுக்கான நல்வழி

அகல்யா, திரௌபதி , சீதா, தாரா, மண்டோதரி என்ற ஐந்து மாதர்களும் “பஞ்ச மாதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். கலியுகத்தில் ஒவ்வொரு பெண்மணியும் இந்த ஐந்து அற்புதமான ஆன்மீக நிலையடைந்த மாதர்களை நினைத்துத் துதிக்க வேண்டும். இவர்களுடைய தினசரி நாம ஸ்மரணையே மனச்சாந்தியையும், சுக வாழ்வையும், கணவனுக்கு நீண்ட ஆயுளையும் , மிக நல்ல பண்புகளையும் அளிக்கும். இவர்கள் செய்த தவங்களைப் பற்றியும், பூஜை முறைகள் பற்றியும் கேட்டலோ, படித்தலோ, இதைப் பிறர்க்கு எடுத்துச் சொன்னாலோ அதன் பலன் பன்மடங்காகப் பெருகும்.
ராமாயணத்தில் வாலியின் மனைவியான தாராதேவி இறைவனை, பரம் பொருளை, ஒலி ரூபத்தில் தரிசித்த பேறு பெற்றவள். மகரிஷிகளும், சித்த மாபுருஷர்களும் இறைவனை ஜோதி ரூபத்திலும் சப்த ரூபத்திலும் வணங்கிப் பேறு பெறுகின்றனர். ஏனென்றால் இறைவன் பிரபஞ்சத்தைப் படைக்கின்ற போது ஒவ்வொரு வஸ்துவையும் ஒவ்வொரு உயிர்ச் சத்தையும் , ஒவ்வொரு ஜீவனையும் , ஒளி ரூபமாகவும், ஒலி ரூபமாகவும் படைக்கின்றான். எனவே இந்த ஒளியும், ஒலியும் பஞ்சபூதங்களாக உருக்கொண்டு பிரபஞ்சப் பொருட்களாக மாறுகின்றன. இறைவனை ஜோதி ரூபத்தில் காண விரும்பித் தவ நிலைகள் மேற்கொண்டோர் மிகச் சிலரே. அதிலும் இத்தகைய ஒளி ரூபத் தியானத்தை மேற்கொண்ட பெண்மணிகள் அரிதிலும் அரிதாவர்.

திருவலஞ்சுழி

ஸ்ரீஅஞ்சநேய மகாப் பிரபு, தாரா தேவி, தியாகப் பிரமம் தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் போன்றோர் இறைவனை ஒலி ரூபத் தியானத்தில் கண்டு தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்களாவர்.
தாராதேவி சிறுவயது முதலே “ஓம்” என்ற சப்த தியானத்தை மேற்கொண்டு பல யுகங்களாகத் தவங்கள் செய்து இறைவனை ஒலி ரூபத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றாள். ஒரு பெண்மணியாக இருந்து ஒலி ரூபத் தியானத்தில் உன்னதமான நிலைகளை அடைந்தமையால் இறைவன் மகிழ்ந்து தாராதேவிக்குப் பல வரங்களை அளித்தனன். இவ்வரங்கள் மூலம் தாராதேவியானவள் நெடும் தொலைவிலிருந்து வரும் சப்த ஒலியைக் கொண்டு நடக்கப் போகின்ற சம்பங்களை அறிவிக்கின்ற தீர்க்க தரிசனத் தத்துவத்தைப் பெற்றனள். பறவைகளின் ஒலி, விலங்கினங்களின் சத்தம், மனிதர்களின் உரையாடல் இவற்றைக் கொண்டு அவர்களுடைய குணாதிசயங்களையும், எதிர்காலத்தையும் கணிக்கின்ற திறமையைப் பெற்றாள். அவளுடைய சுயம்வரம் நடந்தபோது அவளை எதிர்நோக்கி வருகின்ற மன்னர்களின் தன்மைகளையும், குண நலன்களையும், படைகளின் வலிமையையும் அம்மன்னர்கள் வருவதற்கு முன்னதாகவே அவர்தம் படைகள் எழுப்புகின்ற ஒலியைக் கொண்டே அறிவிக்கும் திறமையைப் பெற்றிருந்தாள்.
வாலி அற்புதமான சிவத் தியானங்கள் புரிந்து பல லோகத்தாரும் வியக்கும் வண்ணம் உடல் வலிமையைப் பெற்றான். தன்னுடைய குமாரனான அங்கதனுக்காகப் பத்துத் தலைகளை உடைய ராவணனை ஒரு சிலந்திப் பூச்சியாகப் பாவித்து, குழந்தையின் தொட்டிலில் தொங்க விட்டானென்றால் அவனுடைய பலத்தை என்னவென்று கூறுவது! வாலியைக் கண்டாலே ராவணனுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது.
வாலியானவன் தனக்குத் தாரை மனைவியாக வாய்த்தால் எதிரிகளுடைய நடவடிக்கைகளை எளிதில் அறிந்து கொள்ளலாம் என்று புரிந்து கொண்டான். அவளுடைய சுயம்வரத்திற்கு வருகின்றபோது அவள் தன்னுடைய ஆற்றல்களைக் கணிக்கலாகாது என்று கருதி பல லோகங்களையும் கண் சிமிட்டும் நேரத்தில் கடந்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கான லோகங்களையும் சில வினாடிகளில் கடந்து எந்த மனோவேகத்தாலும் புரிந்து கொள்ள இயலாத வேகத்தில் சுயம்வரத்தில் தாராதேவியின் முன் வந்து நின்றான். ஆனால் தாராதேவியோ கண் சிமிட்டும் நேரத்தில் வாலி சென்று வந்த லோகங்களை எல்லாம் விளக்கி ஒரு குறிப்பை அவனிடம் எடுத்து நீட்டினாள். இதைக் கண்டு அயர்ந்து நின்ற வாலி இவளே தனக்குரிய துணைவி என்று தேர்ந்தெடுத்தான்.
தாராதேவி சப்த தியானத்தின் மூலம் பெண்கள் அற்புதமான இல்லற நிலைகளையும், ஆன்மீக நிலைகளையும் அடைய முடியுமென்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினாள். அவள் இல்லறப் பெண்மணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றியும், சப்த ஒலித் தியான முறைகளைப் பற்றியும் பல அற்புதமான கிரந்தங்களை இயற்றியுள்ளாள். அவற்றில் இல்லறப் பெண்மணிகள் கடைபிடிக்க வேண்டிய எளிதான பூஜை முறைகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை யுகங்களுக்கு ஏற்றவாறு சித்த புருஷர்கள் அறிவித்து வருகின்றனர்.
தற்போதைய கலியுகத்திற்குத் தாராதேவி உள்ளிட்ட அனைத்துப் பஞ்ச மாதர்களின் பெயர்களைக் தாங்கிய சிறிய மந்திரமொன்று பெண்மணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறிய மந்திரத்தை அனைத்துப் பெண்டிரும் தினமும் காலையில் சிறிது நேரமாவது உச்சரித்து வழிபட வேண்டும். நாம சங்கீர்த்தனமே கலியுகத்திற்கான எளிதான இறை வழிபாடு என்று படைக்கப்பட்டு இருப்பதால் இந்த மந்திரத்தைப் பெண்மணிகள் அனைவரும் தினமும் உச்சரிப்பதைத் தம்முடைய தினசரி கடமையாகக் கொள்ள வேண்டும். பெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக இந்த மந்திரத்தை தியானம் செய்வார்களேயானால் இதன் பலன் பன்மடங்காகப் பெருகி அருள்பாலிக்கும்.
பெண்கள் , தத்தம் கண்வன்மார்கள் குடும்ப நலன்களில் நன்முறையில் ஈடுபடுவதற்கும், தெய்வீக காரியங்களில் பங்கு கொள்வதற்கும் , ஆன்மீக நிலையில் உயர்வடைவதற்கும் இந்தப் ‘பஞ்ச மாதா’ மந்திரமானது அருள் புரிகிறது. சீட்டு விளையாட்டு, குதிரைப் பந்தய ஆட்டம், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான கணவன்மார்களைத் திருத்த விரும்புவோர் இப்பஞ்ச மாதா மந்திரத்தைப் பக்தி சிரத்தையுடன் தினசரி தியானித்து வரவேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதைச் செய்து வருவார்களேயானால் அத்தகைய கண்வன்மார்கள் மனம் திருந்தி நல்வாழ்வில் ஈடுபடுவதற்கு இறையருள் கிட்டும்.
சிரத்தையுடன், ஆழ்ந்த பக்தியுடன் இந்த மந்திரத்தைத் தியானம் செய்திடில் அத்தகையவர்களுத் தாராதேவியினுடைய மற்றைய வழிபாட்டு முறைகளைச் சற்குருமார்கள் தக்க சமயத்தில் கிடைக்க அருள்வார்கள்.
பஞ்சமாதா ஸ்லோகம்
“அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்ச கன்யாஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசனம்”
இம்மந்திரத்தைக் குறைந்தது 108 தடவையாவது தியானம் செய்து வர வேண்டும். இம்மந்திரத்தை 108 முறை தியானம் செய்து வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், பூ, தேங்காய், குங்குமம், தாலிச்சரடு, ரவிக்கை, வளையல் போன்றவற்றில் தங்கள் வசதிக்கேற்ப இயன்றதைச் சாதி மதம் பாராது கோயில்களில் சுமங்கலிகளுக்குத் தானமளித்தல் மிக விசேஷமானதாகும். இதுவே தாரா தேவியின் அருளைப் பெறும் வழியாகும்.

இலவச மருத்துவ முகாம்

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதற்கு இணங்க இறையருளால் நம்முடைய சபையானது இயன்றளவு இலவச மருத்துவ உதவியினை ஏழை மக்களுக்கு அளித்து வருகின்றது. சாதாரண மனிதனுக்கு நோய்களைக் குணமாக்குவது மருந்துகளே என்ற எண்ணம் ஏற்படினும் உண்மையில் நோய்கள் வருவதற்கும், அவை தீர்வதற்கும் உரித்தான காரணங்களைச் சித்தர்கள் விளக்கியுள்ளனர். இவற்றை நாம் புரிந்து கொண்டோமேயானால் நமக்கு நோய்கள் வருவதற்குக் காரணங்களை மட்டுமன்றி அவை தீர்வதற்கான வழிமுறைகளையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்குப் பரிபூரண நம்பிக்கை தான் தேவைப்படுகின்றது. இதனை விஞ்ஞானம் ஏற்காது, ஏனெனில் எங்கு விஞ்ஞானம் முடிகின்றதோ அங்கு தான் சித்தர்களின் ஆன்மீக விஞ்ஞானம் துவங்குகின்றது.
தற்போதைய நவீன விஞ்ஞானத்தால் ஒரு அணுகுண்டைத் தயாரித்து ஆயிரக்கணக்கான மக்களை வதைக்கத் தான் முடியும். ஆயுதத் துறையில் நவீன விஞ்ஞான முன்னேற்றத்தால் யாது பயன்? புது விதமான ஆயுதங்களும், நவீன ரக விமானங்களும், கப்பல்களும் அழிவுக்குத் தாமே பயன்படுகின்றன? ஒரு அணுகுண்டை வெடித்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை உருவாகச் செய்ய முடியுமென்றால் அதை ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இந்த அற்புதத்தைப் பல மகான்களும் , சித்தர்களும் புரிந்துள்ளனர்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி
சித்தலவாய் கரூர்

ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அவனுடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளே அவனுடைய துன்பத்திற்கும், வறுமைக்கும் , நோய்க்கும் உரிய காரணங்களாக அமைகின்றன, இவ்வகையில் ஏழை எளிய மக்கள் தம் முற்பிறவி கர்மவினைகளால் வறுமையாலும் நோயினாலும் வாடுகின்றனர். இக்கர்ம வினைகளால் ஏற்படுகின்ற நோய்களைப் புண்ணியத்தால் தான் தீர்க்க இயலும். ஆனால் புண்ணியத்தைத் தருகின்ற தான தருமங்களில் ஈடுபடுகின்ற அளவிற்கு ஏழைகளிடத்தில் வசதி இல்லை. மேலும் இறை உணர்வை ஊட்டுகின்ற ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்ற அளவிற்கு அவர்களுக்குக் கல்வி அறிவும் இல்லை., பின் எவ்வாறு இந்த ஏழைகள் புண்ணியத்தைப் பெறுவார்கள், அந்தப் புண்ணியத்தின் மூலம் தங்கள் நோய்களைத் தீர்ட்துக் கொள்வார்கள்? இதற்காக வழிவகுப்பதே இலவச மருத்துவ முகாம்கள்.. இங்கு நடக்கின்ற ஆன்மீக விந்தைகளை அறிந்து கொண்டோமெனில் இறைவன் காருண்ய ரூபியாக விளங்குவதை ஆத்மார்த்தமாக உணரலாம்.
இலவச மருத்துவ முகாமில் பல நூற்றுக்கணக்கான சேவகர்கள் பங்கு பெறுகின்றனர். மருந்து தயாரிப்பவர்கள், விற்பவர்கள், அதைப் பெற்று வருபவர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தங்கும் இடவசதி தருபவர்கள், மேஜை நாற்காலி முதலியவற்றை அளித்து வசதி செய்து தருபவர்கள், உணவு தருபவர்கள், இதைக் கூடி நடத்துபவர்கள் என இவ்வாறு பல தரப்பட்ட நூற்றுக்கணக்கான சேவகர்கள் தங்கள் புண்ணியத்தை ஈந்து இங்கு அற்புதப் பணிபுரிகின்றனர். அத்தகையோரின் புண்ணியத்தை மருந்துகள், ஊசிகள், டானிக்குகள் போன்றவற்றின் மூலமாக ஏழைகளுக்கு அளிக்கின்ற அற்புத விந்தையினைப் புரிபவர்களே மகான்களும் , ரிஷிகளும், சித்தர்களும் ஆவர். இவர்கள் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்ற இடத்தில் அரூவமாகவோ, பல வடிவங்களில் வந்தோ இலவச மருத்துவ முகாமில் சேவை செய்கின்ற அடியவர்களின் புண்ணியத்தை ஏழை எளியவர்களுக்கு, மருந்துகள் மூலமாகத் தருகின்ற அற்புத ஆன்மீக விஞ்ஞான விந்தையைப் புரிகின்றார்கள். இதன் மூலம் புண்ணியத்தைப் பெறுகின்ற ஏழை மக்கள் நோய்கள் தீரும் வழி காண்கின்றனர்.
ஒரு இலவச ம்ருத்துவ முகாமில் ஆன்மீகமாக நடக்கின்ற செயல்கள் என்னவெனில் பல அடியவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் சேர்த்த புண்ணியத்தைத் தியாகமாக ஏழை மக்களுக்கு அளிக்கின்றனர். இந்த அற்புத விந்தையைக் கிரியா ஊக்கியாக நின்று நடத்துபவர்கள் தான் உத்தமப் பெரியவர்களும், மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் ஆவர். எனவே ஒரு இலவச மருத்துவ முகாமில் புண்ணியத்தைத் தானமாகத் தருகின்ற அற்புதமான தியாகத்தைப் புரிபவர்களே அடியார்கள்.
இதனால் தான் இலவச மருத்துவ முகாம் ஒரு அற்புதமான இறைத் திருப்பணியாகக் கருதப்படுகின்றது. இதையே “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று அறிவுறுத்துகின்றனர். எனவே இதை அறிந்த பிறகாவது மக்கள் இலவச மருத்துவ முகாமிற்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்தல் வேண்டும். இதன் மூலம் புண்ணியத்தை ஏழை மக்களுக்கு ஈந்துத் தருகின்ற ஒரு அற்புதமான திருப்பணியைச் செய்கின்ற வாய்ப்புக் கிட்டுகின்றது. அரிதினும் அரிதாம் இந்த மனிதப் பிறவியில் இத்தகைய தொண்டு ஆற்றுவதற்கு நாம் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
இலவச மருத்தவ முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் பொருளுதவி, மருத்துவ உதவி, வாகன வசதி போன்ற பல வகைகளில் உதவி புரிந்து கலந்து கொள்ளலாம்.இவ்வாறு கஷ்டப்பட்டுச் சேர்த்த தம் புண்ணியத்தை மற்றவர்களுக்குத் தந்து விட்டால் தம்முடைய வாழ்க்கை எவ்வாறு நடக்கும் என்று பலர் ஐயமுறலாம். சரீர உதவியும், பொருள் உதவியும் தருவது எளிது தான். ஆனால் புண்ணியத்தைத் தருகின்ற மனப்பான்மை எல்லோருக்கும் அமைவதில்லை. இவ்வாறு புண்ணியத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்குகாகத் தந்து உதவுகின்ற போது அவனுடைய சுயநலமின்மையைக் கௌரவிக்கும் பொருட்டு இறைவன் அவனுக்காக அற்புதமான சக்திகள் வாய்ந்த வரங்கள் நிறைந்த தெய்வீகப் புண்ணிய சக்தியானது அவர்களுடைய வாழ்க்கை இன்னல்களைச் சமாளிக்க உதவி செய்யும்.
எவனொருவன் தியாக மனப்பான்மையுடன் சுயநலமின்றி மற்றவர்களுக்காகத் தன் சரீரத்தை அர்ப்பணிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கைத் தேவைகளை இறைவனே பூர்த்தி செய்கின்றான். இத்தகைய சுயநலமில்லாத சேவை முறையானது பல்கிப் பெருகிடும்போது அந்த மனிதன் மகானாகின்றான். இவ்வாறாக மற்றவர்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கின்ற மகான்களின் வாழ்க்கையை இறைவன் தம் நேர்க் கவனத்தில் வைத்துக் கொள்கிறான். அப்பொழுது நாம் ‘நம்மை இயக்குபவன் இறைவனே’‘ என்ற அற்புதமான மன நிலையைப் பெறுகின்றோம்.. “எல்லாம் அவன் செயல்” என்ற உணர்வு தேகத்தில் உறையும் பொழுது, மனத்தில் ஒன்றிடும் போது சர்வமும் இறைமயமாகத் தோன்றுகிறது. இதுவே மகான்களின் நிலையாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

பல ஆண்டுகளுக்கு முன்னர்....,
சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலை..... வழக்கம் போல நம் கோவணாண்டிப் பெரியவரும் சிறுவனும் விறுவிறு என நடந்து கொண்டிருக்கின்றனர்.
சிறுவனுக்கோ பெரியவருடன் வெளியூர்ப பயணமென்றால் ஒரே குதூகலம் தான். வழிநெடுக நிறையக் கோயில்களைப் பற்றிப் பல ரகசியங்களை எடுத்துச் சொல்வார்... நிறையத் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்.... ஆனால் அதே சமயத்தில் உச்சந்தலை காயும் வெயிலில் மைல் கணக்கில் நடை.......
வெயில் கடுமை தாங்காது சிறுவன் தளர்ந்து விட்டான்.
“வாத்தியாரே! இளநீர் குடிக்கலாமா?“
“ஆங்.... அதெல்லாம் சுவாமிமலைல தான்!”“
‘இவர் கோவணாண்டியகவே உலகத்தைச் சுற்றுகிறாரே! வெயில், மழை எதையும் பாராது ஒரே நடைதான்.... தாகம் , பசி, தூக்கம், எதுவும் கிடையாது! நினைத்தால் பஸ்ஸில் ஏறுவார். திடீரென்று ரயிலில் பயணம்... ‘சித்தன் போக்கு சிவன் போக்குத்தான்!” “ எவரேனும் டிக்கட்” என்று கேட்டால் இடுப்புக் கயிற்றிலிருந்து சுருட்டிய காகிதத்தைத் பிரிப்பார். ஒன்றரை டிக்கட் இருக்கு! எப்படிப் பணம் வந்தது? எங்கே டிக்கட் வாங்கினார்? இவையெல்லாம் விடையில்லாத வினாக்கள்!“
கடும் உஷ்ணத்தைத் தாங்க இயலாத சிறுவன், வழிநெடுக பனை நுங்குகளைப் பார்த்ததும் ஆசை கொண்டான். ஆனால், பூசாரி வரம் தர வேண்டுமே!
“தாகமாய் இருக்கு நுங்கு சாப்பிடலாமா?“ என்று சிறுவன் பயந்தவாறே கேட்டான்.
“பயப்படாதே! அடுத்த நுங்குக் கடை வந்ததும் சொல்லு, வாங்கித் தரேன்”. பெரியவருக்கே நுங்கு போல் மனம் இளகி விட்டது போலும்.!
மாறாக எங்கு பார்த்தாலும் இளநீர்க் கடைகள்!
‘இளநீரோ, சுவாமிமலையில் தான் என்று சொல்லி விட்டார்.  நுங்கு கேட்ட நேரமோ, என்னவோ நுங்கும் கிடைக்கவில்லை. வெளியில், தண்ணீரோ குடிக்கக் கூடாது என்பார்‘. சிறுவன் நொந்து கொண்டே வேகமாக நடந்தான்.
ஒரு பெரிய ஆலமரம் வந்ததும் பெரியவர் சற்று இளைப்பாறினார். சிறுவனை மடியில் படுக்க வைத்து, அவன் தலையைக் கோதியவாறே கதைகள் சொல்ல ஆரம்பித்தார்.
சிறுவன் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டான்.
விழித்துப் பார்த்தால் கும்பகோணம்! ‘எப்படி வந்தோம்? எதில் வந்தோம்?’‘ as usual பதில் காணமுடியா கேள்விகள் தாம் !
பெரியவர், சிறுவனை அழைத்துக் கொண்டு காவேரிக் கரையிலுள்ள சக்கரப் படித்துறை சென்றார். காவிரில ஒரு முழுக்குப் போட்டுக்கோ, வேணுமனா தண்ணி குடிச்சுக்கோ! “ .... பெரியவர் கண்களைச் சிமிட்டினார்.....
சிறுவன் காவேரிக்குள் பாய்ந்தான். அவ்வுளவு தாகம்! காவேரியில் நீராடிய சிறுவனுக்குக் காவேரிக்குள் இருந்த வரை தாகம் தெரியவில்லை. ஆகையால் நீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.
“வா போகலாம்“ ... பெரியவர் ஆணையிட்டார். தண்ணீரிலிருந்து வெளியில் வந்தவுடன் சிறிவனுக்குத் தொண்டையில் கடும் வறட்சி. காவேரி நீர் குடிக்கலாம் என்று எண்ணிய சிறுவனை “டேய்! திரும்பிப் போகாதே!”“ என்று பெரியவர் அதட்டவே, சிறுவன் திரும்பி விட்டான்.  “உன்னைத் தான், குளிக்கும் போதே குடிச்சுக்கடான்னு சொன்னேனில்ல“ .. பெரியவர் திரும்பிப் பாராமல் நடந்தார்.
‘இந்த மனுஷனுக்கு எதுதான் தெரியாது‘ என்று பயந்தவாறே அவர் பின்னால் நடந்தான் சிறுவன். வழியில் ஒரு மண்டபத்திலமர்ந்த பெரியவர், “மடத்துல ஒரு மஹான் வந்திருக்காராம். அவரைப் பாத்துட்டு பன்னீர் இலைல திருநீறு வச்சி கொடுத்துட்டு வா“ என்றார்.
‘இங்கேயும் ஒரு மஹானா!‘ சிறுவன் அதிர்ச்சியுற்றான். ‘இவர் சொல்லும் மஹானைப் பார்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அவரைப் பார், இவரைப் பார், என்று இவர் செய்கின்ற கூத்தே பிடிபடவில்லையே!“ என்று யோசித்தான்.
பின்பு சிறுவன் சிட்டாய்ப் பறந்தான். பன்னீர் இலை எங்கும் கிடைக்கவில்லை. பெரியவர் எதையவது வாங்கி வரச் சொன்னால், அதற்காக முட்டி மோதி  அலைய வேண்டும் என்பது தெரிந்த கதை தானே!
விபூதியோடு சங்கர மடத்திற்கு வந்தான் சிறுவன். அந்தச் சங்கர மடத்து மஹான், பெரியவருக்குப் பரிச்சயமானவர் என்பது சிறுவனுக்குத் தெரியாது. “பன்னீர் இலை இருக்கா?“ என்று கேட்டு, அழுது கொண்டு வந்த சிறுவனை ஒரு சுவாமிஜி நிறுத்தி, அவன் கையில் ஒரு பன்னீர் இலையைக் கொடுத்தார்
அதைப் பெற்ற மகிழ்ச்சியில், சிறுவன் அனைவரையும் தாண்டிக் கொண்டு வரிசையின் முன்னால் நின்றான்.
‘டர்‘ என்று திரைச்சீலையை இழுத்தார்கள்..  ஆம் பரமாச்சார்யாள் முடிந்தது... “இனிமேல், பரமாச்சார்யாள் தரிசனம் நாளைதான்“ என்றும் அறிவித்தும் விட்டார்கள்.
‘ஓ! நம் காஞ்சி மகான்தானா?“ சிறுவனுக்குக் குஷி பிறந்தது. “பெரியவாளுக்குப் பன்னீர் இலை கொண்டு வந்திருக்கேன். அவரை நான் பார்த்தே ஆகனும்!” சிறுவன் கூவத் தொடங்கி விட்டான்.  அடித்தொண்டையிலிருந்து கூச்சலிட்டு , “பெரியவாளை நான் பார்த்தே ஆகணும்“ என்று கதறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான் சிறுவன்..
‘இவரைப் பார்க்காமல் சென்றால் அவரிடம் உதை வாங்க வேண்டும்’ என்ற பயத்தில் எழுந்த சிறுவனுடைய கூச்சலோ, அங்கிருந்தோரை உருக்கி விட்டது. திரைச்சீலை சற்று விலகி உள்ளிருந்து இருவர் சற்று வெளிவர ..... ‘வருவது வரட்டும்‘ என்று சிறுவன் கையில் பன்னீர் இலையுடன் உள்ளே குதித்து ஓடினான்.
அங்கே... வழக்கமான தெய்வீகப் புன்னகையுடன் பராமாச்சார்யாள்.... தம் இடது கையை உயர்த்தி ஆசிர்வதித்து ..... மெதுவாக வருமாறு கையசைத்தார். பரமாச்சார்யாளுடன் துளசித் தளங்கள்... தாமரைப்பூ ..... சிறுவனுக்கு மலர்ந்தன நினைவுகள்..
சிறுவனிடமிருந்து பன்னீர் இலையைப் பெற்ற பரமாச்சாய்யாள், “தீர்த்தத்தைக் கையிலே  வாங்கிக்கோ..! குடிச்சிடு, போன தடவை மாதிரி கோவணாண்டிக்குக் கொடுத்து விடாதே!“. பளிச்சென்று பொன்மொழிகளை உதிர்த்தார் பரமாச்சார்யாள் ... ‘இவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்?‘ என்று யோசித்தான் சிறுவன்.
பரமாச்சார்யாள், மரச் சொம்பிலிருந்து தீர்த்தத்தைச் சிறுவனின் வலக்கையில் வார்த்திட, புன்னாகவராளியில் மயங்கிய நாகம் போல், சிறுவன் எவ்வித நினைவுமின்றி மடக்கென்று தீர்த்தத்தைக் குடித்து விட்டான்.
“சரி  போயிட்டு வா!”“ ...... ..பன்னீர் இலையை அசைத்துப் பரமாச்சார்யாள் விடை கொடுத்தார்.... சிறுவன் தயங்கியவாறே வெளி வர, காத்திருந்த கூட்டத்தினர் அவனை வியப்புடன் நோக்க, ... சிறுவன் விரைந்தோடினான்.
வழியில், வரும்போது தான் ‘அடடா!. ... அவர் கொடுத்த தீர்த்தத்தைக் குடித்து விட்டேனே! கோவணாண்டிப் பெரியவர் நம்மைத் தொலைத்து விடுவாரே!“ சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது.
‘என்ன செய்வாரோ! ஏது செய்வாரோ!“ என்று அஞ்சி அழுதவாறு பெரியவரிடம் வந்து சேர்ந்தான்.
“வாய்யா வா!“ நினைத்ததற்கு மாறாகத் கையை விரித்தவாறே கேட்க, “அதான் இலையை எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துட்டாரே!.., அது, வரவேண்டிய இடத்துக்கு வந்தாச்சு”“. என்று புன்சிரிப்புச்க் சிரித்தார் கோவணாண்டிப் பெரியவர்.
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இங்கே அவர் கொடுத்த தண்ணிய குடிக்க வேண்டியது உன் பாக்கி., எனக்கு இலை பாக்கி“. கலகலவென்று சிரித்தார் பெரியவர்.
“தாகத்துக்கு, மஹாங்கிட்டே அமுதமே குடிச்சாச்சு! சுவாமி மலையிலே இளநீர் வேணுமா என்ன?“ பெரியவர் குறும்பாகத் கேட்டபடி, சிறுவனை வாரியணைத்துக் கொண்டு, திருவலஞ்சுழிக்குப் புறப்பட்டார்.. “முதல்ல, வெள்ளப் பிள்ளையாரைப் பாத்துட்டு, அப்புறம்,அவன் தம்பிய சுவாமி மலைல கவனிக்கலாம்“ .... என்றார்...

கூடா நாட்கள்

நாளும் கிழமையும் நன்கு கனிந்து வந்தால் நற்காரியங்கள் நன்கு நடைபெறும். எனவே கூடா நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்த்து மற்றவர்களுக்காக இந்நாட்களில் கூட்டாக விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் , கோயில் திருப்பணிகள் செய்தல் வேண்டும். கூடா நாட்களின் விளைவுகள் தெரியாது, அறியாமையால் இந்நாட்களில் நற்காரியங்கள் செய்பவர்களுக்கு இவ்வித விஷ்ணு சகஸ்ரநாம கூட்டுப் பாராயணம் கோயில் திருப்பணிகள் இன்னல்களைத் தனிக்க உதவும். ஆனால் இதுவே முழுப் பரிகாரம் ஆகாது.. சற்குருவே ஏனைய விளக்கங்களை அளிக்கும் தகுதி உடையவர்.  திங்கள்கிழமையும் சித்திரை நட்சத்திரமும் , செவ்வாய்க்கிழமையும் உத்திராடமும் , புதனும் அவிட்டமும் , வியாழனும் கேட்டையும் , வெள்ளியும் பூராடமும் , சனியும் ரேவதியும் , ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாட்கள் .. கூடா நாட்களாகும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam