அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தினசரி இறைப் பணிகள்

ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் எளிய பல இறைப்பணிகளைச் செய்தே ஆக வேண்டும். “இறைவன் ஒருவனே“ என்பது சத்திய வாக்கானாலும் சாதாரண மனிதன் தன் எண்ணற்ற ஆசைகள் நிறைவேறுவதற்காகப் பல தேவதைகளையும், தெய்வங்களையும் வழிபட வேண்டியுள்ளது. கல்விக்குக் கலைவாணி, செல்வத்திற்கு லக்ஷ்மி, எடுத்த காரியங்கள் இனிது நிறைவேற வினாயகர் என்றவாறாகப் பல இறைவடிவங்களைத் தனது காமியப் பிரார்த்தனைகளுக்காக வணங்க வேண்டிய நிலைகளில் மனிதன் உள்ளான்.
சித்த புருஷர்கள் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் நடத்த வேண்டிய பூஜை முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். இவற்றை பக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் நாளடைவில் “வேண்டுதல் வேண்டாமை“ என்ற உன்னத நிலையை அவன் பெறுவான்.
1) ஸ்ரீகாயத்ரி வழிபாடு – தினசரி செய்கின்ற சிறு பாவங்களுக்கு நிவர்த்தி
2) ஸ்ரீசூரிய வழிபாடு – கண்கள், தேக ஆரோக்கியத்திற்கு
3) ஸ்ரீகணபதி வழிபாடு – நித்ய வாழ்வில் தடங்கல்கள் நீங்க
4) இஷ்ட தெய்வ வழிபாடு ( முருகன், பிள்ளையார், ஐயப்பன்) போன்ற தெய்வ மூர்த்திகள் – காரியங்களில் வெற்றி பெற
5) குலதெய்வ வழிபாடு – குடும்ப வாழ்க்கை நன்கு நடைபெற
6) ஸ்ரீகுரு வழிபாடு – திருவருளுடன் பிறவியிலிருந்து கடைத்தேற
7) பெற்றோர்கள் வழிபாடு – பெறற்கரிய மனிதப் பிறவி பெற வழி வகுத்தமைக்கு நன்றி வழிபாடு
8) பித்ருக்கள் வழிபாடு – குழந்தைகள் நல்வழியில் வாழ
9) கோயில் வழிபாடு – மன அமைதிக்கு
10) ஸ்ரீவிஷ்ணு நாமம் – நோய்கள் தீர
11) ஸ்ரீசிவதியானம் – குருவருள் பெற, இறைநினைவோடு என்றும் எங்கும் வாழ
மேற்கண்ட தெய்வ வழிபாடுகளை பூஜை, ஜபம், தியானம், ஹோமம், பஜனை, நாமஸ்மரணம், மந்த்ர/ஸ்லோக பாராயணம், அபிஷேகம், கோயில் தரிசனம், அர்ச்சனை, என்றவாறாக நேரம், வசதிக்கேற்றபடி அமைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவதாக தினசரி செய்ய வேண்டிய தானதர்மங்கள் பல உண்டு. காக்கை, பசு, எறும்பு போன்ற ஜீவன்கங்களுக்கும் ஏழை எளியோர்க்கும் (குறைந்தது ஒரு உணவுப் பொட்டலமேனும்) இயன்ற அளவில் தினந்தோறும்  தம் குழந்தைகளை ஈடுபடுத்தித் தான தர்மங்களைச் செய்தல் வேண்டும். இதுபற்றிய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் டிசம்பர் 1993 இதழில் காணலாம்.
மூன்றாவதாகத் தினசரி நிறைவேற்ற வேண்டிய ஜபங்கள், தியானங்கள், யோக முறைகள் சில உண்டு. சித்தர்கள் இவற்றை எளிமைப்படுத்தியுள்ளனர்.
1. தனது (சுய) நாமத்தைக் குறித்த இடத்தில், குறித்த நேரத்தில் தினந்தோறும் ஜபித்தல்
2. பிராணாயாமம் பயிலுதல் – மூக்கின் ஒரு நாசித் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்துச், சற்று நிறுத்தி, மற்றொரு நாசித் துவாரத்தினால் வெளி விடுதல், யோகத்தில் இதற்கான அளவீடுகள் இருந்தாலும் சாதாரணமாக நிமிர்ந்த உடலில் எவ்வித சிரமமுமில்லாமல் இயன்றளவு மூச்சை உள்ளிழுத்தால் போதுமானதாகும்.
3. குத்துவிளக்கேற்றி ஊதுபத்தி, சாம்பிராணி தூபத்துடன் இறை நாமத்தை ஜபித்தல் மனதைத் தூய்மைப்படுத்தும்.
4. அலுவலகத்தில்/வியாபாரத்தில் அன்புடன் பழகுதல், உதவி செய்தல், ஊனமுற்றோர், குருடர் போன்றோர்க்குச் சேவை செய்தல், குடும்பத்தினர், நண்பர்கள், அயலார் ஒன்று சேர்ந்து கூடி மேற்கண்ட எளிமையான இறைப்பணிகளைத் தினசரி செய்து வந்தால் குறுகிய காலத்திலேயே அபரிமிதமான பலன்களைப் பெறலாம். இது திடமான மனதையும் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையையும் தந்து குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் தரும். வாழ்க்கையில் தேக்கம் (Frustration )  இல்லாமல் ஆக்க ஊக்கத்துடன் உற்சாகமான ஆன்மீக வாழ்க்கை வாழ இது அடிப்படைப் பாடமாகும்.
திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில்  ஸ்ரீசடநடஈஸ்வர சித்தர் மகிமை
சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் சிவாலயத்தில் பல அற்புதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்துள்ளன. நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்த ஸ்வாமிகள் இதுவரை எவருமறியா இக்கோயிலின் ஆன்மீக இரகசியங்களை நம்முடைய நல்வாழ்விற்காக எடுத்தருளியுள்ளார்.

ஸ்ரீசடநட ஈஸ்வரர்

பல யுகங்களுக்கு முன்னர்....
ஸ்ரீசடநட ஈஸ்வர சித்தர் நவநாத சித்தர் லோகத்தில் ஒரு அரிய தவத்தை மேற்கொண்டார். பூவுலகில் அதுவரையில் அரிய மூலிகைகளான நவபாஷாண திரவியங்கள் எவராலும் பயன்படுத்தப்பட முடியாமலிருந்தன. காரணம், அவற்றின் ஆகர்ஷண சக்தியும், தாங்க முடியாத சீதளத் தன்மையும் ஆகும். ஆலகால விடத்தையே உண்டு அவனிக்கு வழி வகுத்தவனவல்லவா ஸ்ரீஆலால சுந்தரன்! எனவே சிவலிங்க மூர்த்திக்கு எந்த லோகத்திலும் காண இயலாத வகையில் நவபாஷாண சக்திக்கான பூஜையை அளிக்க எண்ணிக் கடுந்தபஸை சித்தர் மேற்கொண்டார். ஒரு லட்சம் ஆண்டுகளுக்குகொரு முறை கடுந்தவத்திலிருந்து எழுந்து நவபாஷாணங்களில் ஒரு மூலிகையினுள் தன் தவத்தின் பலனை ஏற்றுவார். இவ்வாறாக, ஒன்பது லட்சம் ஆண்டுகள் தொடர்ந்து தவமிருந்து நவபாஷாணங்களாலான ஒரு பெரிய கோலத்தை உருவாக்கினார்.
 ஒரு சித்த புருஷரின் ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கான தவ வலிமையாலும், நவபாஷாணங்களின் மூலிகாபந்தனக் கூட்டினாலும் அந்த நவ பாஷாணக் கோளம் ஜகத் ஜோதியாய் பல சூர்யன்களைப்போல் பிரகாசித்தது.
தவத்தின் முடிவில் சிவபெருமான் ஸ்ரீநடராஜ மூர்த்தியாய்க் காட்சி தந்து நவபாஷாண உருண்டையினைத் தம் கையில் எடுத்து சர்வ லோகத்தினரும் வியந்து வணங்க ஓர் அற்புதமான நடனத்தை ஆடினார். “சடநட ஈஸ்வரா, உன் தவத்தில் உருவான எல்லையில்லா தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நவபாஷாணத்தை விண்ணுலகங்களில் எங்கும் வைத்து பூஜிக்க இயலாது. இத்தகைய அபூர்வமான இறைச் சக்தி ஒளிரும் கோளத்தைப் பூலோகத்தில் போகர் ஒருவரே பழனியில் ஸ்ரீதண்டபாணியாக வடித்துள்ளார். எனவே இதனையும் சித்தர்களால் பிரதிஷ்டிக்கப்பட்ட பூலோக சிவலிங்கம் ஒன்றில் கூட்டிடுவாயாக”, என்று ஆசீர்வதித்து ஆணையிட்டார்.
ஸ்ரீஅகத்தியர் வழி சித்தபுருஷர்களாலேயே கையில் ஏந்த வல்ல அந்த நவபாஷாணக் கோளத்துடன் ஸ்ரீசடநட ஈஸ்வரர் பூமியெங்கும் உள்ள திருக்கோயில்களுக்கெல்லாம் க்ஷேத்ராடனம் செய்தார்.
ஒவ்வொரு கோயில் தூணிலும் உறையும் சித்தர்கள் ஸ்ரீசடநட ஈஸ்வரரிடம் “அப்பனே, சடநட ஈஸ்வரா! உன் தவ சக்தியைத் தாங்கிவரும் இந்த நவபாஷாணத்தை இங்குள்ள சுயம்புலிங்க மூர்த்தியால் தாங்க இயலாது. அதற்க்குரித்தான சிவஷேத்திரமும் இதுவல்ல, வேறிடம் செல்வாயாக” , என்று அருளினர்.
ஸ்ரீசடநட ஈஸ்வரரும் மனந்தளராது பல்லாயிரந் திருக்கோயில்களுக்குச் சென்று இறுதிகட்டமாகத் தொண்டைநாட்டின் திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு வயதான கிழவர் ஸ்ரீசடநட ஈஸ்வரரை வரவேற்று “நவபாஷாணத்தை நிகர்த்த பலகோடி மூலிகைகளின் திரண்ட சத்துப் பொருளே இங்கு உறையும் மருந்தீஸ்வரர் ஆவார“ என்று கூறி அவரிடமிருந்து நவபாஷாணக் கோளத்தைத் தம் கையில் வாங்கி “ஸ்ரீபராசக்தியின் அருளால் உன் விருப்பம் நிறைவேறுவதாக“ என ஆசீர்வதித்து அளித்து மறைந்தார்.
ஸ்ரீசடநட ஈஸ்வரர் திகைத்தார் எவராலும் தாங்க இயலா இக்கோளத்தைக் கையில் வாங்கி ஆசீர்வதித்தவர் ஸ்ரீபோகர் சித்தரே என்பதை உணர்ந்து அளவிலா ஆனந்தம் அடைந்தார். கோயிலினுள் 108 சிவலிங்கங்களாக உறையும் ஸ்ரீமுல்லைப்பால் சித்தர், ஸ்ரீசூட்டுக்கோல் சித்தர், ஸ்ரீதம்பிக் கலையான் சித்தர் போன்ற 108 சித்த புருஷர்களையும் வலம் வந்தார். “மூலவராம் ஸ்ரீமருந்தீஸ்வர சிவபெருமானே! அடியேன், காணிக்கையை ஏற்று அதன் சக்தியினை நோய் நீக்கும் அருமருந்தாய்க் கலியுக மக்களுக்கு அளிக்க வேண்டும்”, என்று வேண்டி நவபாஷாணக் கோளத்தினை அவர் மெதுவாக உருட்டிவிட.... என்ன ஆச்சர்யம்! நவ பாஷாண உருண்டை சிவலிங்கத்தின் மேல் உறைந்து ஜோதியாய்ப் பரிணமித்தது!
“ஆஹா! இறைவன் ஏற்றுக்கொண்டான்”, என்று ஸ்ரீசடநட ஈஸ்வரர் தம் திருக்கரங்களைச் சிரம் மேல் உயர்த்திச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். அவ்வாறு எழுந்தவர் தம் திருக்கரங்களில்.... ஸ்ரீமருந்தீஸ்வரர் லிங்கத்தின் மேல் குடிகொண்ட நவபாஷாணம் மெதுவாக உருண்டோடிவந்து அவர்கரங்களில் மீண்டு-விட்டது.
ஸ்ரீசடநட ஈஸ்வரர் திகைத்தார்...”இறைவா, என்ன சோதனை இது!” என்று கதறினார். தேவர்கள் மும்மாரி பொழிய அனைத்து தேவமூர்த்திகளும், சித்த புருஷர்களும் பிரசன்னமாயினர். ஸ்ரீஅகத்தியர் முன் வந்து “சடநட ஈஸ்வரா! உன் தவத்தின் மகிமையை உலகோர்க்கு உணர்த்த இறைவனின் திருவிளையாடலே இது. உன் தவத்தால் இதுவரை எவரும் கண்டிடா இறைவன் திருநடனத்தை அனைவரும் காணும் பாக்கியத்தைப் பெற்றவர்களாகிறோம்”, என்று கூறிட.... ஸ்ரீமருந்தீஸ்வரர் நவபாஷாணத்தைக் கையில் ஏந்தி மீண்டும் ஓர் அற்புத நடனத்தை ஆடினார்.
“சடநட ஈஸ்வரா! இங்கு மருந்தீஸ்வரனாக வாழும் எம்மால் உனது நவபாஷாண கோள சக்தியைத் தாங்க இயலாது ஆனால் இதைத் தாங்கும் வல்லமை பெற்றவள் ஸ்ரீதிரிபுரசுந்தரியாய் எமதொருபாகமாய் அருள்பாலிக்கின்றாள்.. இதனை அவள்பால் சேர்ப்பாயாக”, என்று அருளாணையிட.... ஸ்ரீசடநட ஈஸ்வரர் நவபாஷாணத்துடன் ஸ்ரீஅம்பாள் சன்னதிக்குச் சென்று பிரார்த்தித்தார். அவர் கையில் இருந்த நவபாஷாணம் மெதுவாக ஊர்ந்து சென்று திரிபுர சுந்தரியின் பாதங்களில் நிலைத்து நிற்க..... நவ பாஷாணத்தின் தவச்சக்தியால் ஸ்ரீஅம்பாளின் விக்ரகம் பலகோடி சூரியன்களை நிகர்த்தாற்போல் ஒளிபொங்கிச் சிவந்தது.
ஒளிக்கோளமாய்ப் பிரகாசித்து நின்ற ஸ்ரீதிரிபுர சுந்தரியைக் கைதொழுது வணங்கிய ஸ்ரீசடநட ஈஸ்வரர், “தாயே அகிலாண்டேஸ்வரி! இறையருளால் யாம் இடும் சாம்பிராணி தூபத்தால் உனது அக்னித்வத்தை சாந்தப்படுத்தி மக்களுக்கு நோய் தீர்க்கும் ஸ்ரீமருந்தீஸ்வரரின் உடனுறைத் தெய்வமாய் கலியுகத்தின் கண்கண்ட தேவியாய் அருள் புரிய வேண்டுகிறேன்” என்று வணங்கினார்.
ஸ்ரீசடநட ஈஸ்வரர் வெண்பனியெனப் படரும் வண்ணம் சாம்பிராணி தூபத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்கு இட்டு வர, ஸ்ரீஅம்பிகையின் சிவந்த மேனி இயற்கை வண்ணம் பெற்றது. எனவே இத் திருக்கோயிலில் அடர்த்தியான சாம்பிராணி தூபம் இட்டு தூதவளை கீரை, நச்சுகொட்டைக் கீரை, சிறு கீரை போன்ற கீரை வகை உணவினை அன்னதானமாக அளிப்போர்கட்குப் புற்று நோய், தொழுநோய், சிறுநீரக, இருதயக் கோளாறுகளுக்கு நிவாரணம் கிட்டும்.
பெரிய அறுவைச் சிகிச்சைகளுக்கு முன் மேற்கண்டவாறு அன்னதானம் அளித்துத் தூபமிட்டால் நற்பலன்கள் கிட்டும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடியும். ஸ்ரீசடநட ஈஸ்வரர் இக்கோயிலில் ஸ்ரீஅம்பாள்  சந்நதியின் வலதுபுறம் முதல் தூணில் நவபாஷாணக் கோளத்துடன் தரிசனம் அளிக்கின்றார்.

இரவு நேரப் பயணங்கள்

முடிந்தவரை இரவு நேரப் பிரயாணங்களைத் தவிர்த்தல் வேண்டும். பகல் பிரயாணங்களிலும் தனித்துச் செல்வதை விட, இரண்டு அல்லது பலர் சேர்ந்து செல்வதே உத்தமமானதாகும். பயணச் செலவுகள், வேலையின் தன்மை இவற்றைப் பார்க்குங்கால் ‘இது சாத்தியமானதா.’ என்று தோன்றும்.
தற்காலத்தில் விபத்து, ஸ்டிரைக், மோசமான சாலை நிலைமைகள், கொலை கொள்ளை, வன்முறைச் செயல்கள் போன்ற துன்பங்களைப் பார்க்கும்பொழுது தான் ஒரு மனிதன் எத்தகைய புண்ணிய சக்தியுடன் பயணம் செய்து, மீண்டு வர வேண்டியுள்ளது என்பது புலனாகும். அபரிமிதமான புண்ணிய சக்தி இருந்தாலல்லவா ஒவ்வொரு பிரயாணத்திற்கும் அதைச் செலவழித்துத் தற்காத்துக் கொள்ள இயலும்! இவ்வாறாக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியைக் கழிப்பதற்கும் அளவிறந்த புண்ணியம் தேவைப் படுகிறது. எனவே இப்பிறவியில் நாள்தோறும் புண்ணியம் தரும் நற்காரியங்களையும், பூஜைகளையும் செய்தால் ஓரளவு துன்பமின்றி வாழலாம்.
உபரியாக நற்காரியங்கள் செய்யாது, ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று யதார்த்தமாக வாழ்வதால் ஒரு பலனுமில்லை. இவ்வாறாக வாழ்வதால் பூர்வ ஜன்ம புண்ணியங்கள் தான் விரைவில் கழியுமே தவிர வரும் பிறவிகளுக்கோ, ஏன் இப்பிறவியின் இறுதியிலோ பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
a) இரவு நேரங்களில் தீய சக்திகளின் ஆதிக்கம் (Negative Forces) அதிகம் என்பதாலும்
b) பிரயாணம் என்பது எதிப்புகளைச் சமாளித்தல் என்பதால் மனிதன் விழிப்பு நிலையில் இறைநினைவுடன் காயத்ரீ மந்திரம், தியானம், நாமஸ்மரணம் போன்றவற்றுடன் பிரயாணம் செய்தலே அவனைக் காக்கும். எனவே பகல் நேரத்தில் விழிப்பு நிலைப் பிரயாணமே சிறந்தது. உறக்கத்தில் மனிதன் தன் தேகத்தை மறப்பதால் அவனால் பிரார்த்திக்க இயலாது.
c) பிரயாணத்தில் உள்ள ஆபத்துக்களைக் கருதியே இராகுகாலம், வார சூலை போன்றவற்றைக் கணித்துப் பிரயாணம் மேற்கொள்கின்ற நற்பழக்கத்தை நம் பெரியோர்கள் வகுத்தனர். சூலை இரகசியங்களை சற்குருவை நாடி அறிய வேண்டும்.
d) இரவு நேரத்தில் பிரயாணம் மேற்கொள்ள வேண்டிவந்தால் இரயில் பிரயாணமே ஏற்றதாகும். செல்ல வேண்டிய ஊரின் திசையை அறிந்து அந்த “திக்கிற்குரிய“ திக்தேவதையைத் தியானிக்க  வேண்டும். இரயில் பிரயாணத்தில் ஆபத்துக்கள் ஓரளவு குறைவு என்றாலும் இதிலும் இறைநினைவைப் பெருக்கும் மானசீக பூஜைகளைச் செய்தே ஆக வேண்டும்.
மானசீக வழிபாடு
மனதால் இறைவனை வழிபடுவது என்பது மகான்களுக்கும், ஞானியர்களுக்கும் மட்டுமே உரித்தானது என்று எண்ண வேண்டாம். புற்றீசல்கள் போல எண்ணங்கள் தோன்றினாலும், அவற்றிற்கு இடையே மானசீக பூஜை செய்வது எளிதான காரியமே, ஹோட்டல்களிலும் வெளியிடங்களிலும் சிற்றுண்டி, காபி, தேனீர், பிஸ்கட், பிரெட், பழங்கள் போன்றவற்றை உண்ண நேரிடும்போது, மானசீகமாக “ஓம் நமசிவாய“, “ஓம் முருகா” , என்று எந்த தெய்வத்திற்கும் படைத்து உண்ணலாம். இது மானசீக பூஜையின் தொடக்கமே. அது போள வாசனை சோப், துணி வெளுக்கும் சோப், போன்றவற்றை வாங்கும் போது கூட தெய்வச் சிலையை வாசனை சோப்பால் நீராட்டுவது போலவும், இறைவனுக்குச் சார்த்தும் வஸ்திரங்களை சோப்பினால் துவைப்பது போலவும் மானசீகமாக எண்ணுவதும் மானசீக பூஜையில் அடங்கும்.
அதுபோலப் புதுக்காலணிகள் வாங்குகையில் அவற்றை இறைவனின் திருவடிகளுக்கு அணிவிப்பதாக பாவனை செய்து மகிழ்வது மானசீக பூஜையே, புத்தாடைகள், புது ஆபரணங்கள் ஆகியவற்றையும் இறைவனுக்கு அணிவித்து ஆனந்திப்பதாக எண்ணுதலும் மானசீக பூஜையே.
இவ்வாறாக நம் வாழ்வில் ஒவ்வொரு நற்செயலிலும், இறைவனைப் பிணைத்து நல்லெண்ணங்களை உருவாக்குதலே மானசீக பூஜையாக மட்டுமல்லாது , அற்புத தியானமாகவும் மலரும். இவ்வாறாகப் பழகினால் , புற்றீசல்கள் போலத் தீய எண்ணங்கள் எழுவது தணியும்.
உடல் நாடிகள்
பஞ்சாங்கத்தில் பார்சுவ நாடி, மத்யம நாடி என்ற இருவகை நாடிகள் விவாகப் பொருத்தத்தில் குறிப்பாக இடம் பெறும். அக்காலத்தில் அவரவர் தேக நிலைக்கேற்ப கிரக அமைப்புகளுக்கேற்ப உடல் நாடியைப் பகுத்தனர். நாடிப் பொருத்தங்கள் நன்கு அமைகின்ற தம்பதியினர், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, வளமான தோஷமற்ற நோய் நொடிகளற்ற சந்ததியினரைப் பெறுவர்.
பொதுவாக , உணர்ச்சிவசப்படுகிறவர்களுக்கு அமைவது பார்சுவ நாடி, தாமச உணர்வு உள்ளவர்களுக்கு அமைவது மத்யம நாடி.
இவை தவிர உத்கல நாடி, திரவிய நாடி, பூடக நாடி, லங்கண நாடி என்று பலவகை நாடிகள் உண்டு. இந்த நாடிகளின் தன்மைகள் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளுக்கு ஏற்பவும் இராசியில் உலவும், கிரஹ  சஞ்சாரங்கள், நான்கு பாத நட்சத்திரக்கால்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.
உத்தம யோகியானவன், கிரகநிலைகளுக்கு ஏற்ப தன் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு உத்தம நாடியில் வாழ்ந்து தன் மனோநிலைகளை அடக்கி ஆள்கின்றான்.
ஏகாதசி, சோமவாரம், பௌர்ணமி விரதங்கள் அனைத்தும் தேக நாடிகள் கிரகங்களுக்கு ஏற்ப உத்தம நாடியில் அமையும் நல்வழிகளாக நம் ஆன்றோர்கள் அமைத்துத் தந்துள்ளனர்.
நாடிப் பொருத்தங்கள் உட்பட 108 வகையான அனைத்து விவாகப் பொருத்தங்களும் ஒருங்கே அமையப் பெற்ற திருமண வாழ்கையைக் கொண்டவர்களே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் ஸ்ரீசீதாதேவியும்  ஆவர். ஏகபத்தினி விரதனாக அற்புதமாக வாழ்ந்து மானுட வர்க்கத்துக்கே இலக்கணமாக அமைந்தது ஸ்ரீராமபிரானின் சரித்திரமாகும். எனவே தக்க நாடி விவாகப் பொருத்தங்களுடன் திருமண வாழ்வைப் பெறுவோர் இணைபிரியா அன்பின் தெய்வீகத்தை உய்த்துணர்வர்.
பிரார்த்தனைகளும் சங்கல்பமும்
லங்கல்பம் என்றால் பிரார்த்தனையின் பயனை எதற்கேனும் அர்ப்பணிப்பதே ஆகும். ஒரு மனிதன் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைய சுயநலமில்லாத சேவைகளும், பூஜைகளும் அவசியமாகும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா? தியாக உணர்ச்சி அதாவது தன்னிடமுள்ளதைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை பெருகப் பெருக சுயநலம் குறையும். எனவே சிறிய அளவிலாவாது தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் பிறவி எடுத்த தேகத்திற்கு மேன்மையும், மனதிற்குச் சாந்தமும் பெருகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் மானுடதேகம், மனோதேகம் (physical body, mental body) என்ற இரு சரீரங்கள் உண்டு. மானுட தேகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்குத் தான தர்மங்கள் துணை புரியும். தான தர்ம பலன்கள் மனோதேகத்திற்கும் சென்றடையும். இது தவிர மனோதேகத்தின் முக்தி நிலைக்காக
1. மானசீக பூஜைகள்
2. தியானம்
3. பிரார்த்தனை முறைகள் போன்றவை அத்யாவசியமானதாகும். பூஜைகளின் பலன் மானுட தேகம், மனோ தேகம் இரண்டிற்குமே ஆன்மீக சக்தியை அளிக்கிறது. தனக்கும், தனது குடும்பத்திற்கும் இறைவனிடம் தினமும் மன்றாடும் மனிதன் தனது பூஜையின் ஒரு பங்கை பிறர்க்கு அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மையைச் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் முதல் கட்டமே சங்கல்பமாகும்.
அடிப்படை ஸங்கல்ப முறை : ஒவ்வொருவரும் வாரத்தில் சில நாட்களாவது காலையில் எழுந்தவுடன் , “இறைவா, என் இன்றைய பூஜை தியானப் பலன்களை முழுவதுமாக  இன்னாருக்காக, இந்த நற்காரியத்திற்காக அர்ப்பணிக்கின்றேன்,’ என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்ங்கல்பம் செய்கையில்,
1. பூஜாபலனுக்குரியவர் தான் அறியாதவராகவும், தெய்வீகத் துணை நாடுபவராகவும் இருத்தல் வேண்டும். (உம்) சபரிமலைக்குச் செல்ல விரதமிருக்கும் அடியார்கள், நோயால் அவதியுற்றால் அவர் குணமடைந்து நன்முறையில் சபரியாத்திரை செல்ல ஸங்கல்பம் செய்தல்.
2. சங்கல்பம் செய்யப்பட்ட நற்காரியம் பொது நலத்திற்காக அமைய வேண்டும். (உ-ம்) ஏதேனும் கோயிலில் அன்னதானத்திற்கு வேண்டிய பொருள் வசதி இடவசதி ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவை அகல சங்கல்பம் செய்தல்.
சுயநலமற்ற ஸங்கல்பங்களுக்காக இவ்வுதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
எனவே, வேண்டுதல் வேண்டாமை என்ற பேதமற்ற மனோநிலையை அடையும் வரை சராசரி மனிதன் இத்தகைய ஸங்கல்பங்கள் நிறைந்த பிரார்த்தனைகளை மேற்கொள்தல் அவசியமாகும்.
இவ்வாறு ஸங்கல்பங்களை மேற்கொள்ளும் போது
1. எவருடைய நன்மைக்காக பிரார்த்திப்பது
2. எந்த நற்காரியத்திற்காகப் பிரார்த்திப்பது
3. பயன் பெற வேண்டியவர்கள் பலர் தன் குடும்பத்திலேயே இருக்க, அறிமுகமாகாத நல்லவர் ஒருவரின் நல்வாழ்விற்குப் பிரார்த்திப்பதை மனம் ஏற்குமா என்பது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. இக்குழப்பங்களிலிருந்து மீண்டு வருகின்ற நிலையைப் பொறுத்துத் தெளிந்த அறிவுகிட்டும். இதனை அவரவர் மனசாட்சிக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

சட்டைநாத சித்தர்

அற்புத சித்த புருஷர்களுள் ஒருவரான சட்டைநாத சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத் திருக்கோயிலில் அமைந்துள்ள ஆன்மீக இரகசியத்தை ஒரு சிலரே அறிவர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் உக்கிரமான ரூபத்தோடு தோன்றியபோது தன் உக்கிரக சக்தி தணிவதற்காக பூலோகத்தின் பல விஷ்ணுத் தலங்களில் அவர ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பூசித்தார் எனினும், உக்கிரஹம் தணியவில்லை.
ஸ்ரீசட்டை நாத சித்தர் ஒரு முறை சிவராத்திரியன்று ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீரங்க லிங்கமாக தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். ஸ்ரீரங்க லிங்கமாகக் காட்சியளித்த ஸ்ரீமஹாவிஷ்ணு, ‘சட்டை நாதா! ஸ்ரீசக்கரத்தாழ்வாரைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவாயாக! என்று ஆசிர்வதித்தார். அதே சமயத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீசக்கரத்தாழ்வாரிடம், உன் உக்கிரஹம் ஒரு அடியாரின் அன்பு பூஜையினால் தான் தணியும்’ என்று அருளினார்.
பல விஷ்ணுத் தலங்களில் ஸ்ரீமஹா விஷ்ணுவை ஆராதித்து வந்த ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸ்ரீரங்கத் திருத்தலத்திற்கு வந்து நிலை கொண்டார். அவ்விடத்திலேயே ஸ்ரீசட்டை நாதர் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்குப் பல்லாண்டுகள் திருமஞ்சன சேவை புரிந்தார். இந்த திருமஞ்சன நீரின் மஹிமையால் ஸ்ரீசக்ரத்தாழ்வாரின் உக்கிரஹம் தணிந்தது.
ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் திருவருளினால் ஸ்ரீசட்டைநாதர், திருமஞ்சன நீர் அமைந்த தீர்த்தக் கிணற்றிலேயே ஜீவசமாதி அடைந்தார். இக்கிணறு இன்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருச்சந்நதியில் அமைந்து அருள் பாலிக்கின்றது.
சூலைநோய் கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், உணர்ச்சி வசப்படுபவர்கள், அதிக சினம் கொள்பவர்கள் ஆகியோருக்கு, சட்டைநாதரின் ஜீவசமாதி தரிசனம் சிறப்பான குணங்களைத் தரும். ஜீவசமாதி தரிசனம் என்பது, இந்த தீர்த்தத்தில் , கங்கை, காவிரி, மஹாமக தீர்த்தம் போன்ற புண்ணிய தீர்த்தங்களின் நீரைத் தெளித்து வணங்குவதாகும். இக்கிணற்றைத் தூர்வார்வது, கட்டுச்சுவர் அமைத்தல் போன்றவையும் சிறந்த திருப்பணிகளாகும். இருதயத்துறை மருத்துவர்கள் (Cardiologsists ), இத்தகைய திருப்பணிகளை மேற்கொண்டால், அவர்கள் தம் துறையில் மேண்மையடைவர். இருதய நோயாளிகளுக்கு இத்திருப்பணி ஓர் உன்னத மருந்தாகும்.

சுயநாம ஜபம்

சுயநாம ஜபத்திற்கு முன், குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி குருவை தியானிக்க வேண்டும். சற்குரு கிட்டும் வரை தனக்கு ஈடுபாடுள்ள மஹானை குருவாக ஏற்று அவரை நினைந்து வணங்க வேண்டும்.
தனது பெயரை இயன்றவரை உதடுகள் அசையாது மனதினுள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும் தொடக்கத்தில் கண்களை மூடி, கால்களில் சம்மணம் கூட்டி அமர்ந்து கொள்ளலாம். பழக்கமானவுடன் கண்களைத் திறந்து கொண்டு, பத்மாசனத்துடன் சுயநாம ஜபத்தைச் செய்தல் வேண்டும்.
தனது இதயத்துள் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கான அர்ச்சனையே தனது சுயநாம ஸ்மரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த பாவனை அற்புதமான இறையனுபவத்தைக் குறுகிய காலத்திலேயே கூட்டுவிக்கும். முதலில் 10 நிமிடங்களில் துவங்கிப் பின்னர் சுயநாம ஜப காலத்தைப் படிப்படியாகக் கூட்ட வேண்டும். இதுவும் உன்னதமான இறை பூஜைகளில் ஒன்றென சித்தர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த சுயநாம ஜபத்தைத் தினந்தோறும் செய்து வந்தால்
1. எதிர்வரும் துன்பங்கள் முன் கூட்டியே அறியும் ஆன்மீக சக்தி கிட்டும்.
2. எதிரிலுள்ளவர்களின் எண்ணங்களை அறியும் தெய்வீக சக்தி வந்து சேரும்.
3. குடும்பத்தில் சாந்தமான வாழ்க்கை அமையும்.
4. முகப் பொலிவும் அனைவரையும் கவரும் முக தேஜஸும் பொங்கும்.
5. சுயநாம ஜெபத்தால் சற்குருநாமப் பொருளுணர்ந்து சற்குருவின் அருளைப் பரிபூரணமாகப் பெறும் பாக்கியம் கைகூடும். இந்நிலையில் சுயநாமம் தானாகவே சற்குருவின் நாமமாக இருதயத்தில் ஒலிக்கும்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

சம்பளப் பணம்

மாதச் சம்பளம் பெற்றவுடன் அதனை
1. பெற்ற தாயிடம்/உற்ற மனைவியிடம் முதலில் அளிக்க வேண்டும்.
2. பூச்செடி, பால் அரிசி, பூ, உப்பு போன்ற வளரும்/பொங்கும் பொருட்களை வாங்குதலே முதல் செலவினமாக அமைய வேண்டும்.
3. பணம் வாங்குதல் / கொடுத்தல்
காயத்ரீ மந்திரத்தையோ “ஓம் நமசிவாய“ “ஓம் நமோ நாராயணாய“ என்று ஏதேனும் ஓர் இறை நாமத்தையோ பன்முறை ஜபித்தே பணத்தைப் பெற/கொடுக்க வேண்டும்.
4. பணத்தைப் பின் பாக்கெட்டில்/இடுப்புப் பையில் வைத்தல் கூடாது. இது அநாவசிய செலவுகளை உருவாக்கும்.
5. பணத்தைச் சட்டைப் பையில் இடதுபுறம் உள்பாக்கெட்டில் இதயத்தைத் தொடுமாறு வைத்து  ஸ்ரீவெங்கடாஜலபதியை தியானிக்க வேண்டும். இதனால் ஸ்ரீஏழுமலையானின் இடது மார்பில் உறையும் ஸ்ரீலக்ஷ்மி தேவி ஆனந்தித்து ஆசிர்வதிக்கின்றாள்.
தோல் கர்மங்கள்
1. தோல் பர்ஸை உபயோகித்தல் கூடாது. இயற்கையாக இறந்த பிராணிகளின் தோலால் செய்யப்பட்ட பர்சை உபயோகிக்கலாம். ஆனால் இதை அறிவது கடினம்.
2. மாடு, நாய், குதிரை, மான், பாம்பு போன்ற வதைக்கப்பட்ட பிராணிகளின் தோலால் ஆன பர்ஸ்/பை/காலணி போன்றபொருட்களை உபயோகித்தால் கொல்லப்பட்ட அப்பிராணிகளின் வேதனைகள் நம் வாழ்வில் வந்து சேரும். எனவே தோல் பொருட்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருத்தல் வேண்டும்.
3. தோலாலான பர்ஸ்/பை/சூட்கேஸை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டால்
a) தோலைக் காக்கும் ஸ்ரீசூர்ய பகவானைத் துதித்து நவகிரஹங்களை வலம் வந்து வணங்க வேண்டும். ஸ்ரீசூர்ய பகவானுக்குரித்தான கோதுமையினாலான அல்வா, சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவுகளை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். பசு, எருமை, நாய், குரங்கு போன்ற பிராணிகளுக்கு உணவிடவேண்டும். நாகப்புற்றில் பால் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தபின் தோல் பர்ஸை/பொருளைப் பயன்படுத்தலாம்.
b) தோல் பர்ஸை/பொருளை ஆறுமாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இயன்ற அளவு பணம்/காசு வைத்து அதனை தானமாக அளிக்க வேண்டும்.
திருமணங்களில் ஆசீர்வதிக்கும் முறை
தற்காலத் திருமணங்களில் மாங்கல்ய தாரணத்தின் போது அனைவரும் எழுந்து நின்று, இருந்த இடத்திலிருந்தே மலர்கள், அட்சதைகளைத் தூவுகின்ற காட்சியைக் காண்கிறோம். இது தவறு. தம்பதியரை ஆசீர்வதிக்கின்ற முறையை ஸ்ரீலோபாமுத்திரா தேவி “மாங்கல்ய மஹிமை“ என்னும் தொகுப்பில் பல்லாயிரம் பாடல்களில் விளக்கமாக அருளியுள்ளார்.
1. ஆசீர்வாதத்திற்குரித்தான பூக்கள் உதிரியாக இருத்தல் கூடாது. நாரிலோ, நூலிலோ தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கனகாம்பரம், டிசம்பர் பூ, வாசனையற்ற காட்டுமல்லி போன்ற மணமற்றப் பூக்களைத் தவிர்க்க வேண்டும்.
2. அட்சதையானது முழுஅரிசி மணிகளால், 60 வயதுக்கு, மேற்பட்ட வயதான தம்பதியர்களால் பூஜை செய்யப் பெற்றதாக அமைந்தால் மிகவும் விசேஷமானதாகும். பின்னமடைந்த அரிசி மணிகளை அட்சதையில் சேர்க்கலாகாது.
3. ஆசீர்வாதத்திற்கான அட்சதைகள், பூச்சரங்கள் 60 வயதுக்கு மேல் இணைபிரியாது வாழ்ந்த தம்பதியரால் செய்யப்படுவது உத்தமமான மாங்கல்ய பாக்கியத்தைத் தரும். பலர் ஒன்று கூடித் தங்கள் இல்லங்களிலிருந்து பெரியோர்களால் ஆசீர்வதிக்கப் பெற்ற அட்சதைகள், பூச்சரங்களைத் திருமணங்களுக்கு எடுத்துச் சென்று பிறருக்கும் அளித்து அங்கு புதுமணத் தம்பதியரை ஆசீர்வதித்தல் ஒரு சிறந்த தர்மக்காரியமாகும்.
4. ஆசீர்வதிக்கையில் தம்பதியர் அருகே சென்று அவர்கள் சிரசிலும், உடலிலும் அவர்கள் தம் கையில் ஏந்தியிருக்கும் வஸ்த்திரத்திலும் படுமாறு அட்சதைகள், பூச்சரங்களைத் தூவுதல் வேண்டும். வீசி எறிதல் கூடாது.
5. அட்சதைகள், பூக்களை இறைநாமம், காயத்ரி மந்திரம், இறைப்பாடல்களைத் துதுத்தவாறே கையில் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 1008 இறைநாமங்களாவது ஜெபிக்கப் பட வேண்டும்.
6. சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
   சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.
என்று துதியை உச்சரித்தல் இறையருளைக் கூட்டும்.
7. தம்பதியரைத் திறம்பட, உளமார ஆசிர்வதிக்க விரும்புவோர்க்கு சற்றுக் கடினமான விதிகளை சித்தர்கள் அருள்கின்றனர்.
a) பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நீறு/திரிபுண்ட்ரம்/ குங்குமம் அணிந்து குறைந்தது 10,000 முறை காயத்திரி மந்திரத்தை ஓதிய நிலையில் திருமண தம்பதியரை ஆசிர்வதிக்க வேண்டும். பிறகு இல்லம் திரும்பிப் பூஜை அறையில் சிறிது நேரம் தியானித்து உடனே நீராடவேண்டும். பின் கோவிலுக்குச் சென்று தம்பதியருக்காக அர்ச்சனை செய்து வழிபடுதலே சம்பூர்ண ஆசீர்வாத முறையாக சித்தர்கள் அருள்கின்றனர்.
b) 10000 முறை காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் திருமணம் நடைபெறும் இடங்களில் உள்ள தீய எண்ணங்களை எதிர்த்து வெல்லும் ஆன்மீக சக்தி கிடைக்கும். இப்புனித நிலையில் ஆசீர்வதித்தலே இதயம் மலர்ந்த சக்திவாய்ந்த ஆசீர்வாதமாகும்.
ஆசியின் நோக்கம் :
தாமரை மொட்டுப் போல் மூடியிருக்கும் வலதுகரத்தினுள் மங்கள அட்சதைகளும் பூச்சரங்களும் விளக்கும் தாத்பர்யம் என்ன ?
சுண்டு விரலிலிருந்து துவங்கி 5 விரல்களும் முறையே புதவிரல், சூரியவிரல், சனி விரல், குரு விரல், சுக்கிர விரல் என்றவாறாக ஐந்து கிரஹங்களையும் உள்ளங்கையில் செவ்வாய் மேடு, சந்திர மேடு இவற்றோடு ஏழு கிரஹாதிபதிகளையும் குறிக்கின்றன. செவ்வாய், சனி கிரஹங்கள் சாயா கிரஹங்களான ராகு, கேதுவின் அம்சங்களாய்ப் பிரதிபலிப்பதால் நமது கைகளே நவ கிரஹங்களாக ஆசீர்வதிக்கின்றன.
ஐந்து விதமான பலன்களை வேண்டித் திருமண தம்பதியரை ஆசீர்வதிக்க வேண்டும். அவையாவன :
1). கடவுள் விருப்பபடியே எத்திருமணமும் நடைபெறுவதால் இந்தத் தம்பதியர்கள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றித் தங்கள் கருமங்களைச் செயல்படுத்த இறைவா! அருள்வாயாக!
2) இவர்கள் மனம் ஒத்து வாழ இவர்களுடைய கர்மங்கள் துணைபுரிய இறைவா! அருள்வாயாக!
3) இவர்களுடைய நியாயமான ஏக்கங்கள் இயன்ற வரை சுமூகமாகத் தீர்ந்து வாழ்க்கைப் படகை சாந்தமாக ஓட்டுவதற்கு இறைவா! அருள்வாயாக!
4) இவர்கள் பெரியோர்களின் மனதை அறிந்து சேவைகள் பல புரிந்து அவர்களைத் திருப்தி செய்வித்து அவர்கள்தம் ஆசிகளைப் பெற இறைவா! அருள் புரிவாயாக!
5) பணம், பொருள், ஏக்கம், ஆசை, காமம், லௌகீகம் போன்றவற்றிற்காக இவர்கள் மணம் புரிந்திருப்பின், மனம் திருந்தி வாழ இறைவா! அருள்வாயாக!
இவ்வைந்து பிரார்த்தனைகளையும் மனதில் நினைத்து சிந்தித்து இறையருளை வேண்டிப் புதுமணத்தம்பதியினரை வாழ்த்துவதே சம்பூர்ண ஆசீர்வாத முறையாகும். ஸ்ரீபோகதா தேவியின் அருளைப் பெற்று அற்புதமான திருமண வாழ்க்கையைப் பெற்ற ஸ்ரீஅத்ரி மஹரிஷி – ஸ்ரீஅனுசூயா தேவி – இம்மஹரிஷித் தம்பதியரின் தியானத்துடன் மேற்கண்ட பிரார்த்தனைகளுடன் மஞ்சள் அட்சதை, பூச்சரங்களைத் தூவி வாழ்த்த வேண்டும்.
ஆன்மீக நிலை உயர உயர வாழ்த்தும் முறையும் மாறுபடும்!

திருமண தோஷங்கள்

திருமணத் தடங்கல்களுக்கான காரணங்களை “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ October – 1993 இதழில் விளக்கியுள்ளோம்.  பொதுவாக முற்பிறவிகளில் பிறருடைய திருமண வாழ்விற்கு விளைவித்த தீங்குகளே இப்பிறவியில் திருமண தோஷங்களாக மாறுகின்றன. தஞ்சை மாவட்டம் மாயவரம் அருகில் திருமணஞ்சேரியிலுள்ள சிவாலயமும், சென்னை மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை கிராமத்திலுள்ள ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆலயமும் திருமணத் தடங்கல்கள் நீங்குந்தெய்வீகத் தீர்வை அளிக்கின்றன.
திருமணஞ்சேரி ஸ்ரீஈஸ்வரனுக்கும், திருவிடந்தை ஸ்ரீபெருமாளுக்கும் பெரிய இரண்டு பூமாலைகளை அணிவித்துக் கல்யாண உற்சவங்களை நிகழ்த்தி அப்பூமாலைகளைப் பிரசாதமாகப் பெற்று வீட்டில் வைக்க வேண்டும்.
திருமண தோஷங்களுக்கான கர்ம வினைகள் ஒரு பெரிய வடிவெடுத்துப் பெண்பார்க்கும் படலம், ஜாதகப் பரிவர்த்தனை, செவ்வாய் தோஷ நிவர்த்தி, வரதட்சணை சீர்விஷயங்கள் போன்றவற்றில் பாதிப்பை உருவாக்கி திருமணத் தடங்கல்களுக்கு வழிவகுக்கின்றன. இறைப் பிரசாதங்களான இப்பூமாலைகள் இல்லங்களில் வைக்கப்படும் போது பூமாலைகளின் தெய்வீக ஆகர்ஷ்ண சக்தியால் தோஷங்களின் பெரிய வடிவானது நாளடைவில் மங்கிக் குறையைத் தொடங்குகிறது.
“மாங்கல்யஸ்தவம்“ மந்திரப் பாராயணம், ஏழைகளுக்கு மாங்கல்யதானம் அளித்தல், வறியோர்களுக்குத் திருமணங்களில் உதவுதல் போன்ற நற்காரியங்கள் இப்பூமாலைகளின் தெய்வீக சக்தியை மேம்படுத்துகின்றன. இதனால் “தோஷ பூதத்தின்” வடிவு முற்றிலும் மறைந்து மாங்கல்ய பாக்கியம் விரைவில் கைகூடுகிறது.
திருமணம் நிறைவேறியவுடன் அந்தப் பூமாலைகளை அந்தந்தக் கோயில் வளாகத்தில் (நந்தவனம், கோயில் நிலங்கள், பழைய கிணறுகள் etc..) சேர்த்துவிட வேண்டும். இவ்வரிய திருமண தோஷ நிவர்த்தி முறையைப் பலருக்கும் அறிவித்து அனைவரும் பயன்பெற உதவ வேண்டும்.
இத்தகைய அற்புதமான திருமணதோஷ நிவர்த்தி முறைகளை நமக்கு அருளியவர் சிவகுரு மங்கள கந்தர்வா ஆவார்.

வஸ்திர தான மகிமை

அடியார் : குருவே! ஓர் ஆடையை எத்தனை நாட்களுக்குப் பயன்படுத்தலாம்?
குரு : எந்த  ஆடையையும் பத்து மாதங்கட்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது! அதனைத் தானமாக அளித்து விட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்கலாம்.
ஆடைகள் அனைத்து எண்ணங்களையும் தாங்கும் சக்தி கொண்டவை என்பதை நன்கு புரிந்து கொண்டால் ஆன்மீக வாழ்வு வாழவிரும்புவனுக்கு இந்தப் பத்துமாத காலம் பிரச்சனையாக இருக்காது. மாறாகத் தனது கர்மங்களைப் போக்கும் ஒரு பெரும் வேள்வியாக ஆடை தானத்தைப் புரிந்து கொள்வான்.
அடியார் : குருதேவா, பத்து மாத கால கெடுவை விளக்க வேண்டுகிறேன்!
குரு : ஒரு தாய் தனது உடல் ஜவ்வை ஒரு ஜீவனுக்குக் காப்பாக பத்து மாதம் அளித்துக் காக்கின்றாள். எனவே புத்தாடை அணியும்போது தனக்குப் பிறவி ஆடைக் காப்பை அளித்த அன்னையை எண்ணித் துதித்தே அணிய வேண்டும். அந்த ஆடை அந்த ஜீவனிடம் பத்து மாதம் தங்கியிருந்து அடுத்த ஜீவனுக்குச் சென்று விட வேண்டும். இதுவே ஒவ்வொரு ஆடையின் பின் உள்ள ஆன்மீக ரகசியம்.
அடியார் : பஞ்சபூத சக்திகள் மிகுந்துள்ள பருத்தி ஆடைகளில் அனைத்து நல்ல, தீய எண்ணங்களும் படிகின்றன. துவைத்துச் சுத்தப் படுத்தும் போது தீய எண்ணங்கள் அழிந்து நல்லெண்ணங்கள் மட்டும் ஆடையில் தங்குகின்றன. இது கருதியே “கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு“ என்னும் முதுமொழி வந்ததாகக் கூறியுள்ளீர்களே, குருதேவா!
குரு : உண்மையே, அந்த விதி எந்த ஆடைக்கும் பத்து மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும், பத்து மாதங்களுக்குப் பிறகு குழந்தை தனி ஜீவனாகத் தாயிடமிருந்து பிரிகிறது. ஆடைத் தத்துவத்தில் பத்து மாதங்களுக்குப்பிறகு அதனுடைய நல்லெண்ணங்களைக் காக்கும் சக்தி குறைகின்றது. எப்படித் துவைத்துச் சுத்தம் செய்தாலும் பத்து மாதங்களுக்குப் பிறகு ஆடையில் படும், நல்ல, தீய எண்ணங்கள் நன்கு பதிந்து விடுகின்றன. துவைப்பதால் மட்டும் தீய எண்ணங்கள் விலகுவதில்லை. வரம்புக்கு மீறிய எண்ணங்களைத் தாங்கியுள்ள ஆடைகளை அணிவது சஞ்சல புத்தியை வளர்க்கும்..தீர்க்கமான முடிவுகளை எடுக்க இயலாது. இதனால் காரியங்கள் தாமதப்படும்.
அடியார் : பத்து மாதங்களுக்கு மேற்பட்ட ஆடைகளில் தீய எண்ணங்களில் எப்படித் துவைத்தாலும் நீங்குவதில்லை என்றால் அதனைத் தானமாக அளிக்குங்கால் வாங்குவோரை அது பாதிக்காதா, குருவே?
குரு : உனக்குரித்தான பொருள் உன்னிடம் இருக்கும் வரையில் உன் எண்ணங்கள் அதில் பதிந்திருக்கும். தானம் செய்கையில் உன் கையைவிட்டு நீங்கிய எந்தப் பொருளுக்கும் உனக்கு உரிமை கிடையாது. உனக்கு உரிமை இல்லாத பொருளில் உன் எண்ணங்கள் எப்படி இருக்க முடியும் அதாவது, தானமளிக்கும் போது தானத்தில் கிட்டும், புண்ணிய சக்தியால் ஆடையிலுள்ள தீய எண்ணங்கள் நீங்குகின்றன. தானத்தை ரக்ஷிப்பதற்காகப் பல தர்ம தேவதைகள் உண்டு. இவை தான தர்ம இடங்களில் ஆவாஹனமாகித் தங்கள் புண்ணிய சக்தியைத் தந்து தானப் பொருட்களிலுள்ள தீய எண்ணங்களை, சக்திகளைத் தாங்கிக் கொள்கின்றன. இவ்வாறாக உனது கர்மங்களை தர்ம தேவதைகள் ஏற்பதாலேயே அவை கழிகின்றன.
அடியார் : அப்படியானால் தர்ம தேவதைகள் தங்கள் சக்திகளை இழப்பார்களல்லவா?
குரு : அதுவும் உண்மையே! ஒரு தான தரும கைங்கரியத்தில் நிகழும் விண்ணுலகக் காரியங்களைக் காணும் சூட்சுமக் கண் பார்வையை நீ பெறுவாயானால் தான் எதையும் உன்னால் அறிய இயலும். பிறருடைய கர்ம வினைகளைத் தாங்களே ஏற்று அனுபவிக்கும் தியாக உள்ளம் கொண்ட ஜீவன்களே தர்ம தேவதைகளாகப் படைக்கப்படுகின்றனர். உன்னதமான தியாகமல்லவா இது.
தங்கள் ஈடில்லாத் தவத்தை பூஜா பலன்களைத் தான தருமம் செய்வோருக்காக வழங்கும் உத்தம தேவதைகளின்  தியாக நிலையை என்னென்று உரைப்பது!
ஆடைதானம் பெறுவோருக்கு புது ஆடையாக அமைவதால் அதில் எவ்விதத் தீய எண்ணங்களும் கூட வருவதில்லை. மேலும் கோயில்களில் அளிக்கப்படும் தான தருமங்களைக் கோயில்களின் தெய்வ மூர்த்திகளே சாட்சியாக நின்று ஆசிர்வதிப்பதால் அவ்வாடைகள் புனிதம் பெறுகின்றன. திருஅண்ணாமலை போன்ற புனிதமான ஸ்தலங்களில் நிகழும் தான தருமங்களின் புண்ணிய சக்தியை எழுத்தில் வடித்திட இயலாது! அங்கு வஸ்திர தானம் செய்வது, பல கோடி ஜன்மங்களின் தீவினைகளைக் கழிக்க வல்லதாகும். அங்கு ஆடைதானம் பெறுவோர்க்கு அளவிறந்த புண்ணிய சக்திகள் நிறைந்த ஆடைகளைப் பெறுவதால் அதன்மூலம் வறுமை, நோய்கள் போன்ற வாழ்க்கைப் பிரச்சனைகளும் தீரும்.
ஆடைதான மஹிமையின் ஓர் அணு அளவே இது. எஞ்சியதை விவரித்தால் பெருங் காப்பியமாக அமைந்திடும்..

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam