அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தண்டையார் பேட்டையில் “ஸ்ரீராமா” என்னும் புகழ் பெற்ற பெரிய வீட்டில் காஞ்சி காமகோடிப் பீடாதிபதியாம் பரமாச்சாரியாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டிருந்தார்,
அப்போது....
ராயபுரம் கல்மண்டபம் வடஎல்லை அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வழக்கம் போல அந்த கோவணாண்டிப் பெரியவர், அரை டிராயர் சிறுவனுடன் குதூகலமாய் பேசிக் கொண்டிருந்தார். தொன்னூறு வயதும், ஒன்பது வயதும் இணைந்த அதியற்புத கலந்துரையாடல்.. திடீரென்று பெரியவருக்கு சுவாசம் இரைக்கத் தொடங்கியது .... புஸ்... புஸ் என்று முச்சிரைக்க சிறுவன் பயந்துவிட்டான்.
பெரியவருக்கு தாகம் போலிருக்கிறதே... என்று எண்ணி.. சோடா வாங்கி வரட்டுமா என்றான்....
மூச்சிரைத்த போதும்.. அவர் குஷியாகப் பேசிக் கொண்டிருந்தார். “ஒண்ணுமில்லடா! அந்த தண்டையார் பேட்டை ராமர் பங்களாவிலே.. காஞ்சி மஹான் வந்திருக்கிறாராம் பெரிய சிவனடியார். அவரு ரொம்ப தூரம் நடந்தாரு.. மெல்லிசு உடம்புதானே அவரு tired ஆயிட்டாரு.... அதுல கொஞ்சம் எனக்குனு transfer  பண்ணிக்கிடேன் அதான் மூச்சு வாங்குது..” என்ற பெரியவர் கலகலவென்று சிரித்தார்..

ஸ்ரீஅங்காளி கோயில்
ராயபுரம் சென்னை

சிறுவன் விழித்தான். “வழக்கமாகக் கொச்சை மொழியில் பேசும் இவர் புத்தகங்கள் ஏதும் படித்துப் பார்த்ததில்லை. ஆனால் அனாயசமாக ஆங்கில வார்த்தைகளில் ஊடுருவுகிறாரே” .... சிறுவனுக்குச் சிரிப்பு வந்தது.... ஆனால் அடக்கிக் கொண்டான்.... ஏனெனில் பலமுறை இவர் ஸ்ரீஅங்காளம்மன் சன்னிதிக்குள் கோவணாண்டியாகச் சென்று திரும்பி வரும்போது குடுமி, பஞ்சகச்சம், பட்டை விபூதிகளுடன்; கன கச்சிதமான கோட், பாண்ட், சூட் சகிதமாகப் பல ரூபங்ளில் வருகின்ற அற்புதங்களைப் பார்த்திருக்கின்றான்!
ஆனால் ஒன்பது வயதுச் சிறுவனல்லவா .... தனக்கு இவ்வாறு ஆன்மீகத்தை ஊட்டி போஷிப்பது அகஸ்தியர் பரம்பரையில் வரும் உன்னதமான சித்த புருஷர் என்பதை அவன் அப்போது அறியவில்லை. தன்னுடைய சற்குரு ஒரு சத்சித் ஆனந்தம் தரும் சித்த மஹாப் பிரபு என்பதையும் அறிந்தானில்லை.
“என்னடா முழிக்கிறே..! எனக்குச் சோடா வாங்கி வர்றேன்னியே!”  என்று பெரியவர் கர்ஜிக்கவே சிறுவன் சுதாரித்துக் கொண்டான்.. கூடவே ஒரு கிலி பிடித்துக் கொண்டது.
‘இந்த இடத்தில்... இன்ன நிறத்தில்... இந்த நிற உடைகளுடன் கடை வைத்திருப்பான்.... அவனிடம் சோடா வாங்கி வா..... அவன் இந்த ஜென்மத்தில் எனக்கு ஒரு சோடா பாக்கி’ என்று ஏதேனும் இவர் சொல்லிவிட்டால் இந்த உச்சி வெயிலில் அல்லவா ஓட வேண்டும்.... காலில் செருப்பும் கிடையாது.... உச்சந்தலையில் ஊசியிலைக் காடு போல அரை அங்குலக் கிராப்பு.... வெயில் உஷ்ணம் தகிக்குமே.... சிறுவன் வேகமாகக் கணக்குப் போட்டான்.
.... “டேய் அங்கெல்லாம் போக வேண்டாம்” என்று சிறுவனின் மன ஓட்டத்தை முற்றும் அறிந்த பெரியவர் கண் சிமிட்டிச் சிரித்தார்.
“நேராத் தண்டையார் பேட்டை போய்  அந்த மஹாங்கிட்ட தண்ணி வாங்கிட்டு வா.... அப்பத்தான் தாகம் எடுப்பது நிக்கும்.”
இவர் “மஹான்” என்று சொன்னால் அதில் ஏதோ விஷயமிருக்கிறது. மஹானின் களைப்பை இவர் தம் உடம்பில்  மாற்றிக் கொள்கிறாரென்றால்..... மஹான்களை மஹான்களே அறிவார்கள்.
அவனுக்கு நடை என்பதே கிடையாது. அந்த அளவிற்குப் பெரியவர் கோயில். குளம், தானம் என்று “ tight schedule”  கொடுத்து விடுகிறார். தினமும் அங்காளம்மனை 1008 முறை சுற்ற வேண்டும். நடுவில் பள்ளிக்கூடம்... தினசரி 36 வைராக்கியங்கள்.... 51 காயத்ரீ முத்திரைகள்.... இத்யாதிகள்.
“..... டேய் குளிச்சிட்டு ‘மடியா’ போ என்ற பெரியவர் குளக்கரையில் வந்தமர்ந்தார். சிறுவன் அங்காளம்மன் கோயில் குளத்தில் முழுக்குப் போட...... அவனுடைய பெரிய பலத்த காக்கி டிராயர் நீரை உறிஞ்சி கால் டன் எடை கூடியது போலாயிற்று!
... சிறுவன் திகைத்தான். இதையும் தூக்கிக் கொண்டு ஓடுவதா?
பெரியவர் கையிலிருந்த துண்டால் தலையைத் துடைத்துக் கொள்ளலாமா?
சிறுவன் திரும்பினான். அவரோ வேண்டுமென்றே அந்த்த் துண்டை ஐந்தாவது முறையாகத் தண்ணீரில் நனைத்தவாறே சிறுவனை அரைக் கண்ணால் விஷமாகப் பார்த்தார்.
... பொல்லாத மனுஷரிவர்!
“வேகமாப் போய்ட்டு வாடா! இன்னும் 843 வாட்டி ஆத்தாளைச் சுத்தணும்..” என்று பெரியவர் ஆணையிட்டார்.
‘ஆமாம், இந்த விஷமக்காரப் பெரியவருக்குப் பிரதட்சணக் கணக்கு வேறயா’..... , சிறுவன் பாவாடை – டிராயரைத் தூக்கியவாறு துள்ளலுடன் ஓடினான்.
“டேய்! இதைப் பெரியவாள் கிட்ட கொடுத்துடு”.,
சிறுவன் திரும்பி வந்தான், என்ன விரட்டு விரட்டுகிறார்! ”இந்தப் பெரியவர்” தண்ணீருக்குள் கையை விட்டு எடுக்க  அவர் கையில் .. பெரிய அழகிய தாமரைப்பூ! தாமரை இலையுடன்!
தாமரைக் கொடி இல்லாத குளத்தில் பூ மட்டும் எப்படி வந்த்து? யோசித்தபடியே அவர் கொடுத்த பூவைத் தாமரை இலையில் மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு சிறுவன் ஓடினான்.
ஒரு வழியாக “ஸ்ரீ ராமா” வீடு வந்தது. நல்ல கூட்டம்..... பகல் 12 மணி..... சிறுவன் மடியாக ஒதுங்கி நின்றான்,,, நின்றான்... நின்று கொண்டேயிருந்தான்....
‘பெரிய மகான், மெல்லிய உடல் என்றாரே! அவர் எப்படியிருப்பார்?” – சிறுவன் கற்பனை செய்து கொண்டிருந்தான்.
மாலை மணி 4 ஆகிவிட்ட்து. சிறுவனை ஒதுக்கி விட்டு ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருக்க.., சிறுவனோ தயங்கியவாறே கையில் மலருடன் காத்திருந்தான்.
மணி ஐந்தாகி விட்ட்து.
“பெரியவாள் தரிசனம் இனிமேல் எட்டு மணிக்குத் தான்” என்ற அறிவிப்போடு திரையைத் தொங்க விட்டனர்.
சிறுவனுக்கு என்ன செய்வதென்று ஒரே உதறல், யாரிடம் எப்படி எடுத்துச் சொல்ல முடியும் ?
அவனுக்கு அழுகையே வந்து விட்டது.
‘வருவது வரட்டும்’ என்ற துணிவுடன் திரைச் சீலையைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே யாருமேயில்லை.
வாசற்படியில் கையில் ஏந்திய தாமரை இலையில் சுற்றிய தாமரைப் பூவுடன் சிறுவன் உட்கார்ந்து விட்டான்.
கமகமவென்று துளஸி மணந்தது  ...  பரமாச்சார்யாள் மெதுவாக வந்து கொண்டிருந்தார்.
துளஸி மணம் வந்த்தும் சிறுவனுக்குப் புரிந்து விட்ட்து. முன்னர் “துளஸி தளங்கள்” தந்தவரல்லவா இவர்!
ஏதோ தனக்குப் பரிச்சயமானவர் போல் தாமரைப் பூவுடன் உள்ளே ஒடினான் சிறுவன்... கால் வழுக்கிவிட.... தடாலென்று தாமரைப் பூவை மேலே கையில் தூக்கியபடியே பரமாச்சார்யாள் முன்னர் போய் விழுந்தான்.... அவன் கையிலிருந்து உயர்ந்து நின்ற தாமரைப் புஷ்பத்தை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார் அந்தக் ‘கனிந்த கனி’.
சிறுவன் slow motion movie  போல் மண்டியிட்டு எழுந்தான்.
“அப்படியே இத வாங்கிக்கோ....” என்று அருளி கையிலிருந்த மரச் செம்பிலிருந்து தீர்த்தத்தைச் சிறுவனின் கையில் வார்த்தார் அந்த மாமுனி. “இத வாங்கிக்கோ மூச்சு இரைக்காது!” என்று புன்முறுவலுடன் மொழிந்தார்.
மின்னல் கீற்றுப் போல சிறுவனுக்குக் கோவணாண்டிப் பெரியவரின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன...
அவருக்கு மூச்சிரைப்பது இவருக்கு எப்படித் தெரியும்? வலது கையில் தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு மெதுவாகக் கோயிலுக்குத் திரும்பினான் சிறுவன். தனக்கு இக்கோயில் பெரியவர் சொல்லித் தந்த “புலஸ்தியர் களி நோக்கு முத்திரை” முறையில் தன் குவிந்த கரங்களில் பரமாச்சாரியாரின் தீர்த்தத்தைத் தாங்கி நெடுந்தூரம் நடந்து வந்து அவரிடம் சமர்ப்பித்தான்.
“அடடா! இதுதாண்டா நான் கேட்ட சோடா!” என்று இந்தப் பெரியவர் ஆனந்தமாய் சிறுவன் கையிலிருந்த நீரை அப்படியே உறிஞ்சிவிட்டார். எஞ்சிய நீர்த்திவலைகளை சிறுவனின் முகத்தில் தெளித்தார்.
இவருடைய மூச்சிரைப்பும் ஓய்ந்தது. தாகமும் தணிந்தது.
மஹான்களை மஹான்களே அறிவர்.... குருமேல் முழு நம்பிக்கை கொண்டு அவர் வார்த்தைகளைப் பரிபூரணமாக நம்பி அவரிடும் பணிகளைச் செய்தல் வேண்டும். இச்சிறுவனே நமது குருமங்களகந்தர்வா! கோவணாண்டிப் பெரியவரே சிவகுருமங்களகந்தர்வா.

சனிப் பெயர்ச்சி

இந்த வருட சனிப்பெயர்ச்சியில் ஸ்ரீசனீஸ்வரப் பெருமான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிபெயர்ச்சியில் ஸ்ரீ சனீஸ்வரரை ஆராதிக்கும் வழிமுறைகள் உண்டு. இதனைச் சித்த புருஷர்களும், மஹான்களும்ம் சற்குருமார்களுமே, அறிவார்கள்.. அவர்களை நாடி ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியிலும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபடும் உரிய முறைகளை அறிந்து பிறருக்கும் அறிவிக்க வேண்டும். தம்முடன் அனைவரும் ஸ்ரீசனீஸ்வரரைத் தக்க முறையில் துதித்து, பூஜித்து அவருடைய அனுக்கிரஹத்தைப் பெற வழிவகை செய்தல் வேண்டும்.
இவ்வகையில் ஆங்கீரஸ வருட சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியில் நிலை கொண்டு இருக்கும் ஸ்ரீ சனீஸ்வரரைப் பூஜிக்கும் முறை :
மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் கம்பம் அருகே கூச்சானூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்க வடிவிலுள்ள ஸ்ரீ சனீஸ்வரரே இவ்வருட சனிப்பெயர்ச்சி வழிபாட்டிற்குரிய சிறப்பிடம் பெறுகிறார்.
சனிப்பெயர்ச்சி தினத்தன்று கூச்சானூரில் இவரை தரிசிக்க இயலாதவர்கள் கும்ப ராசியில் அவர் நிலை பெறும் 2½ ஆண்டுகளுக்குள் கூச்சானூர் சென்று தரிசனம் செய்யலாம். இத்தலத்தில் உறையும் சனீஸ்வரர், லிங்க உருவத்தில் அருவமாய்க் காலங் கடந்த சுயம்பு மூர்த்தியாய் இலங்குகிறார். தஞ்சைப் பெரிய கோவில், கூச்சானூர் போன்ற அபூர்வமான ஸ்தலங்களில் தான் நவக்கிரஹாதிபதிகள் லிங்க வடிவு கொண்டு அருள்புரிகின்றனர்.
கூச்சானூரில் கருமை, கரு நீல நிறங்களில் உள்ள உணவு வகைகளை [எள் சாதம், திராட்சை, பீட்ரூட் அல்வா போன்றவை] அன்னதானமாக அளித்தலும், கறுப்பு நிற ஆடைகளை வஸ்திர தானமாக வழங்குதலும் மிகவும் விசேஷமானதாகும். உடல் ஊனமுற்றோர், கறுப்பு நிற ஆடைகளை அணிந்தோர் போன்றவர்களுக்குத் தானமளித்தல் மேலும் சிறப்பானதாகும். இவை தவிர ஏனைய உணவு வகைகளையும் பிற ஆடைகளையும் தானம் அளிக்கலாம். இத்தகைய தானங்களைச் சனிக்கிழமைகளிலும், கரி நாட்களிலும் அளித்தல் அற்புதமான பலன்களைத் தரும்.
இம்முறையில் அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தானங்களைச் செய்து, கூச்சானூரில் ஸ்ரீசனீஸ்வரரை வழிபடுதலே கும்ப ராசியில் குடிகொண்டுள்ள ஸ்ரீசனீஸ்வரரை முறையாகப் பூஜிக்கும் பாங்காகும்.

புலஸ்தியர் களிநோக்கு முத்திரை, லேப்யா முத்திரை ஆகிய அற்புதமான கை முத்திரைகளைப் பயிற்சி செய்திடில் கையளவு நீரைக் கீழே சிந்திடாமல் ஏந்திக் கொண்டே பல மைல்கள் தூரத்தை எளிதில் கடக்கலாம். இதை சற்குரு மூலமாக அறிய வேண்டும். இவ்வாறு ஆயிரக்கணக்கான முத்திரைகளை முற்றும் பயின்றவரே நமது குருமங்கள கந்தர்வா.

பொதுவாக நவக்கிரஹாதிபதிகள் அவரவர் கர்மவினைகளுகு ஏற்ப பாரபட்சமின்றி நன்மைகளையும், சிறு இன்னல்களையும் அளிப்பவர்கள். எனவே நம்முடைய பூர்வ ஜென்ம கர்மவினைகளுக்கு ஏற்ப, நாம் செய்த பாவ புண்ணியங்களூக்கு ஏற்ப நமக்குத் துன்பங்களும், துயரங்களும், இன்பங்களும் அமைகின்றன. நம்முடைய ஒவ்வொரு செயலையும் சூரியன், சந்திரன், சனீஸ்வரன் உள்ளிட்ட ஒன்பது நவக்கிரஹங்களும் சாட்சிகளாக அமைந்து, நம்மை யுகம் யுகமாக, அணுஅணுவாகக் கவனித்து வருகின்றனர். எனவே தான் ஒருவருடைய ஜாதகத்தை வைத்தே கிரஹ சஞ்சாரங்களின் மூலம் அவருடைய முற்பிறவிகளையும், எதிர்காலத்தையும் எளிதில் கணிக்கலாம். ஏனெனில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிகழ்ச்சிகளையும் துல்லியமாய் நுணுக்கமாய் சாட்சி பூதங்களாய் விண்ணிலிருந்து கண்காணிப்பவர்கள் நவக்கிரஹங்களன்றோ! இதையே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்று கூறுகிறோம்.
எனவே நாம் அடைகின்ற இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம். நம்முடைய செயல்களின் பலாபலன்களுக்கு ஏற்ப இறைவன் நவக்கிரஹாதிபதிகள் மூலமாய் நமக்கு இன்ப துன்பங்களை அளிக்கின்றான். அதைப் பக்குவமாய் ஏற்று வாழ வேண்டும். எனவே நல்லெண்ணங்களையும், நற்செயல்களையுமே செய்ய சற்குருவைத் தந்து, இன்பங்களையும் இன்னல்களையும் அமைதியாக ஏற்று இறை நினைவோடு வாழ வேண்டிப் பிரார்த்திப்பதே நவக்கிரஹ வழிபாடாகும்.

ஸ்ரீராம நவமி

ஒவ்வொரு வருடமும் அமைகின்ற, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த ஸ்ரீராம நவமி தினமானது பல்வேறு வகையான சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது. வருகின்ற ஸ்ரீமுக வருடத்தில் ஸ்ரீராம நவமி உற்சவம் அமையாததால் இந்த ஆங்கீரஸ வருட ஸ்ரீராம நவமி இரட்டிப்பான சிறப்பைப் பெறுகிறது. மேலும் இந்த வருட ஸ்ரீராம நவமியன்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இந்த விசேஷ தினம் கோடி மடங்கு அனுக்கிரஹத்தை தரவல்லது. இவற்றை அறிந்தோர் சற்குருமார்களும், மஹான்களும், யோகிகளும், சித்த புருஷர்களுமேயாவர்.
எனவே தக்க சற்குருமார்களை நாடி அந்தந்த வருடத்திய ஸ்ரீராம நவமி, சனிப்பெயர்ச்சி, சங்கராந்தி போன்ற விசேஷ தினங்களில் செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறைகளையும் தானதர்மங்களையும் அறிந்து செய்தல் வேண்டும். சிறந்த முறையில் நல்லெண்ணங்களுடன் நற்காரியங்களைச் செய்து பயனுள்ள வகையில் இத்தகைய முக்கிய தினங்களைச் செலவிட வேண்டும். இவ்வாறு இறைநினைவோடு அன்னதானம் வஸ்திர தானம் போன்ற நற்காரியங்களைச் செய்து கழிகின்ற நாட்களே நாம் உண்மையாக வாழ்ந்த நாட்களாகும்.

ஸ்ரீநரசிம்ம மூர்த்தி
புள்ளபூதங்குடி

இவ்வகையில் நடப்பு ஆங்கீரஸ ஆண்டிற்கான ஸ்ரீராம நவமி வரும் 1-4-1993 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. கோத்திராதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீ ஆங்கீரஸர் பல அற்புதத் தவங்கள் புரிந்து இறைவனை முற்றும் உணர்ந்த பரிபூர்ண ஞானி ஆவார். இவர் ஹோமங்களைப் பற்றிய அற்புதமான ரகசியங்களை உலகிற்கு உணர்த்தியவர். எனவே ஆங்கீரஸ வருட ஸ்ரீராம நவமி உற்சவத்தில் பக்தர்கள் ஸ்ரீராமர் மற்றும் அவர் சன்னிதி கொண்டுள்ள திருக்கோயில்களில் ஹோமங்கள் நடத்தி அனைவரையும் பங்கு பெறச் செய்வது விசேஷமானதாகும். ஸ்ரீ ஆங்கீரஸ மஹரிஷிக்கு விசேஷ ஆஹூதிகள் தருவது இன்றியமையாததாகும்.
மேலும் ஆங்கீரஸ வருட ஸ்ரீராம நவமி ஆராதனைகளை விசேஷமாக ஏற்று அருள்பாலிப்பவர் புள்ளபூதங்குடி என்ற சிற்றூரில் சயனக் கோலம் கொண்டுள்ள ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாவார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது புள்ள பூதங்குடி என்னும் சிற்றூர். ஸ்ரீராமர் சயனக் கோலத்தில் எழுந்தருளியுள்ள ஒரே திருத்தலமாகிய இது பூலோகமெங்கிலும் காணக் கிடைக்காத திவ்விய  ஷேத்திரமாகும். ஸ்ரீராமருடைய சயனக்கோலம் அழகு நிறைந்ததாகவும், அருள்மழை பொழிவதாகவும் காண்போரைக் கவர்ந்திழுக்கும் அதி அற்புதத் தெய்வீக சக்தி நிறைந்ததாகவும் விளங்குகிறது. உற்சவரோ எங்கும் காணப் பெறாத சங்குச் சக்கரம் மட்டுமே தாங்கிய “வல்வில் ராமச்சந்திர மூர்த்தி” ஆவார். ஆங்கீரஸ வருட ஸ்ரீராம நவமியில் புள்ள பூதங்குடி ஸ்ரீ ராமரைத் தரிசித்து சுவாமிக்கு பீதாம்பரம் (வஸ்திரம்), தாயாருக்கு மஞ்சள் வஸ்திரம் அளித்து வழிபட வேண்டும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீராம நவமியன்று நாமே அரைத்த சந்தனத்தை இறைவனுக்கு அளித்தல் விசேஷ பலன்களை அளிக்கும். மேலும் சர்க்கரைப் பொங்கலை அன்னதானமாக ஏழைகளுக்கு அளித்தல் தரிசனப் பலன்களை முழுமையுடன் நிறைவு பெறச் செய்கிறது.
ஸ்ரீராமர் இங்கு சயனக் கோலத்தில் காட்சியளிப்பதால் மன அமைதியின்றி தூக்கமின்றி துன்பப்படுவோர் மேற்கண்ட முறையில் சர்க்கரைப் பொங்கல் அன்னதானத்துடன் புள்ள பூதங்குடி ஸ்ரீராமரை வரும் 1-4-1993 வியாழ்க்கிழமை “ராம நவமி” தினத்தன்று தரிசிக்க வேண்டும். கொடிய நோய்களாலும் , தீய பழக்கங்களாலும் உறக்கத்தை இழந்தோர்க்கு நல்லுறக்கம் தந்து நல்வரமளிப்பவர் இந்த ஸ்ரீராமரே.
1.4.1993 அன்று புள்ள பூதங்குடியில் மேற்கண்ட முறையில் தரிசனம் செய்ய இயலாதவர்கள் அடுத்த வரு ஸ்ரீராம நவமிக்குள் ஏதேனும் ஒரு நவமி திதியன்றோ அல்லது புனர்வசு  நக்ஷத்திர தினம் அன்றோ, புள்ள பூதங்குடி ஸ்ரீராமரை மேற்கூறிய தான முறைகளோடு தரிசித்து அவர் திருவருளைப் பெறலாம்.

ஸ்ரீஹேமாப்ஜ நாயகி
புள்ளபூதங்குடி

தெய்வத் திரு அவதாரமாய் மானுட சரீரந் தாங்கிய ஸ்ரீராமர் அரியணை இழந்து அடர்ந்த வனத்தில் அல்லலுற்று, அருள் தேவி சீதாபிராட்டியையும் பிரிந்த சோகத்தில் ஆழ்ந்து ..... இவ்வாறு பல துன்பங்களைச் சுமந்தமையால் ஊண் உறக்கமின்றி வனவாழ்க்கை வாழ்ந்தார். ‘சீதாப்பிராட்டியின் நிலை யாதோ’ என்ற விசாரத்தில் நித்திரை செய்யாது சோக நினைவுகளுடன் வனத்தில் இலக்குவனுடன் அலைந்தார். இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தாற் போல் இலங்கையிலிருந்து மீண்ட ஆஞ்சநேயர் “கண்டேன் சீதையை” என்று இனிய மொழி கூற உடனே ஸ்ரீராமன் மனக்கவலை நீங்கிச் சிறிது நேரம் சுகமாகச் சயனித்து நித்திரையிலாழ்ந்தாராம். இந்தச் சிறிது நேர நித்திரையே அவருக்குப் பல ஆண்டுகளுக்கு உரித்தான தெய்வீக சக்தியை அளித்ததாம்.. இந்த நித்திரைத் தத்துவத்தை விளக்குவதே புள்ள பூதங்குடி ஸ்ரீராமனின் சயனக்கோலம்.

ஸ்ரீவல்வில்ராமர் ஆலயம்
புள்ளபூதங்குடி

இத்தகைய தரிசனம் மனச்சாந்தியையும், நிம்மதியான உறக்கத்தையும் தரவல்லதாகும். புள்ளபூதங்குடி ஸ்ரீராமரைச் சித்த புருஷ்ர்களால் அளிக்கப்பட்ட மேற்கண்ட வழிபாட்டு முறையில் துதித்தல் விசேஷமானதாகும். இதனைச் சித்த புருஷர்களின் மஹரிஷியாம் ஸ்ரீஅகஸ்தியரின் கிரந்தங்களில் இருந்து தொகுத்துக் கலியுக மக்களின் நன்மைக்கென எடுத்துரைத்தவர் நம் குரு மங்களகந்தர்வா ஆவார்.
எந்த ஆண்டிலாவது பஞ்சாங்க ரீதியாக ஸ்ரீராமநவமி உற்சவம் அமையாவிடில் அவ்வருடத்திய ஸ்ரீராம நவமியை தேவ பூஜையாகத் தானே ஏற்று நடத்துவதாக ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமர் பட்டாபஷேகத்தின் போது பிரதிக்ஞை செய்து கொண்டார். வரும் ஸ்ரீமுக வருடத்தில் பஞ்சாங்க ரீதியாக ஸ்ரீராமநவமி  அமையவில்லை எனினும் சித்தர்கள் அருளியபடி சுக்லபட்ச நவமி திதியுடன் புனர்வசு  நட்க்ஷத்திரம் அமைகின்ற திருநாளே ஸ்ரீராமநவமி ஆகக்கொண்டாடப் படவேண்டும்.
வரும் ஸ்ரீமுக ஆண்டு சுக்லபட்சத் திதியும், புனர்வசு நக்ஷத்திரமும் அமைகின்ற திருநாள் ஆகிய 22-3-1994 (செவ்வாய்கிழமை) ஸ்ரீஆஞ்சநேயர் ஏற்று நடத்துகின்ற ஸ்ரீராமநவமி தேவ பூஜை ஆகும். இதையே ஸ்ரீமுக வருடத்திற்குரிய ஸ்ரீராமநவமியாகக் [பஞ்சாங்க ரீதியாக அமையாவிடினும்] கொண்டாட வேண்டும்.

ராகு காலம்

ஸ்ரீராகுவைப் பகவானாக வழிபடுகின்ற நிலையில், ராகு காலத்தில் சுபச் செயல்களை ஏன் தவிர்க்கின்றனர்? ராகு காலம் என்பது தீமை பயக்கும் நேரமா? ஸ்ரீராகு பகவான் நன்மைகளை அருள்வதில்லையா  ?
இக்கேள்விக்கு ருமங்கள கந்தர்வா தெளிவுபடுத்தியதாவது ...
ராகு காலம் நற்செயல்களுக்கு ஏற்றதல்ல என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. மோகினி அவதாரத்தில், தேவர்களுடன் அமர்ந்து தேவாமிர்தம் பெற விழைந்தனர் இரு அசுரர்கள், மோகினியாம் ஸ்ரீவிஷ்ணு தம் திருக்கரத்தில் ஏந்தியிருந்த அகப்பையால் அவ்வசுரர்களின் தலைகளிலும், தோள்களிலும் தட்டினார். அப்போது சிந்திய தேவாமிர்த துளிகளினால் அழியாத தலைகளையும், உடல்களையும் பெற்றனர் அவ்வசுரர்கள். அவர்களே ராகு, கேதுவுமாகி விண்ணில் சஞ்சரித்து எட்டாவது, ஒன்பதாவது கிரஹாதிபதிகளாய் அமையும் பேறு பெற்றனர்.
அசுரர்கள் என்ற தனிவகுப்பு கிடையாது. அசுரர்கள் அனைவரும் கொடியவர்களும் அல்லர். மிதமிஞ்சிய ஆசை, காமம் போன்ற தீய பண்புகள் நிறைந்த மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் போன்றோரும் அசுரரகள் ஆகின்றனர். முனிவரகளின் சாபத்தால் பலர் அசுரர்களானதும் உண்டு. இந்த அசுரர்களில் கர்ம வினைகளை வென்ற, அற்புதப் பண்புகள் நிறைந்த ரிஷிகளும் உள்ளனர்.
அனைத்தையும் அறியும் வல்லமை வாய்ந்த தேவர்கள் அமிர்த விருந்தில் தங்களுடன் அமர்ந்திருப்பவர்களில் இருவர் அசுரர்கள் என்று அறியாதவர்களா? நன்கு அறிந்த போதும் தேவர்கள் இதுவும் இறைவனின் லீலை என்று அமைதி கொண்டனர். பரமாத்மாவாம் ஸ்ரீமந் நாராயணப் பெருமாளின் திருக்கரத்தில் உள்ள அகப்பையினால் தேவாமிர்தத் துளிகள் தெறிக்க பாக்கியம் பெற்றவர்கள் எனில் அவ்விரு அசுரர்தம் மேன்மையை என்னென்று சொல்வது! இதனை மோகினி அவதார மூர்த்தி அறியாரா என்ன ? மேலும் அழியா சிரசும், உடலும் பெற்றதோடு அன்றி பிரபஞ்சத்தின் கோடானுகோடி ஜீவன்களின் கர்மவினைகளைப் பரிபாலனம் செய்யும் கிரஹாதிபதிகளாக  அமையும் பேறு பெற்றவர்கள் ராகு, கேது எனில் அது மோகினி அவதாரம் கொண்ட ஸ்ரீவைகுண்டப் பெருமானின் கருணையாலன்றோ! அவருடைய கருணைக்கு ஆட்பட்டவர்களின் சிறப்பினை எடுத்துரைக்க இயலுமா?

தலவிருட்சம் புன்னை
புள்ளபூதங்குடி

இவ்வாறாக சாயா கிரஹமாய்ப் பிரபஞ்சத்தில் பவனி வரும் ராகு பகவானை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு “ராகு காலம்” என்று பிரத்யேக காலத்தையும் படைத்திருக்கின்றனர்.
சிருஷ்டி நியதியின்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்றவாறாக யுகங்கள் மாறுகின்றன. கோடானு கோடியுகங்கள் கழிந்து விட்டன.. முதல் மூன்று யுகங்களில் சூரியன், சந்திரன், அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரஹாதிபதிகளை ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தை இறைவன் சித்தப்படி மேற்கொண்டனர்.
சிருஷ்டி நியதியில் கலியுக மகாத்மியப்படி அதர்மங்களும், அராஜகங்களும் பெருகும். இதனால் ஜீவன்கள் துன்பமடைவர்., எழு கிரகங்களின் கர்ம பரிபாலன சுமை மிகுந்ததாகும் ., எனவே தான் இரண்டு கூடுதல் கிரஹாதிபதிகளை அமைத்தனர். இவர்களே ராகுவும் , கேதுவுமாவர், கலியுகத்தின் காலகட்டத்தில் மற்ற கிரஹாதிபதிகளை விட இவர்களே உச்சம் பெறுவர். ராகுவும் , கேதுவும் உச்சமமாக இருப்பின் தக்கக் கோளமைப்பில் குருபகவான் கூட கலியுக நியதிகளின்ன் படி வலுவிழந்து நிற்பார்.
தினசரி வான சஞ்சாரத்தில் சூரியன் முதல் சனி வரை ஒவ்வொரு கிரகமும் பூமியின் மீது ஒரு மணி நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த ஆதிக்க நேரமே ஹோரை என்று சொல்லப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே சூரிய ஹோரை முதல் சனி ஹோரை வரை ஏழு ஹோரைகளாகப் பகுத்துள்ளனர். ஆனால் ராகு கிரகத்திற்கு மட்டும் விசேஷமாக 1½ மணி நேரம் விதிக்கப்பட்டுள்ளது. பகலிலும் இரவிலும் ஒன்றரை மணி  நேரம் இவ்வாதிக்கம் அமையும். எனவே இரவு நேர இராகு காலமும் உண்டு.
கலியுகம் தொடங்கி 5094 ஆண்டுகளே ஆகியிருப்பதால் ராகுவின் உச்ச ஸ்தானம் சமீபத்தில் தான் தொடங்கியுள்ளது.. காலப் போக்கில் சிருஷ்டி நியதிகளுக்கேற்ப, கலியுக மகாத்மியத்துக்கு உரிய கேதுவும் உச்சம் பெறுகையில் கேது நேரம் என்ற ஒரு நேரமும் வழக்கத்திற்கு வரும். இதனைத் தக்க பருவத்தில் சித்தர்கள் அறிவிப்பார்கள். ராகு காலத்தை ஏற்ற உலகம் கேது  நேரத்தையும் நிச்சயமாக ஏற்கும். அச்சமயத்தில் ராகுவும், கேதுவுமே பிரதானமாக ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தை மேற்கொள்வர்.
கிரகங்களின் கர்ம பரிபாலனம் என்றால் என்ன? நம்முடைய முற்பிறவிகளின் கர்மங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் இன்ப துன்பங்களை அடைகிறோம். எனவே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு நம்முடைய செயல்களே (கர்மங்களே) மூலகாரணம் என்று தெளிவு பெற்றால் பிறரை நிந்தித்தல், பழி சுமத்துதல் போன்றவை குறைந்து “எல்லாம் அவன் செயல்” என்று எதையும் அமைதியாக ஏற்கும் மனப்பக்குவம் கிட்டும். நம்முடைய செயல்களின் (கர்மாக்கள்) வினையைப் பொறுத்துப் பணக்கஷ்டம், விபத்து, இழப்பு, நோய்கள், சந்ததியின்மை போன்ற இன்னல்களையும், ஏனைய இன்பங்களையும் துல்லியமாகக் கணித்து வழங்குபவர்களே கிரஹாதிபதிகள். நவக்கிரகங்களில் கலியுக மகாத்மியத்தை ஒட்டி ராகுவும், கேதுவும் விசேஷமான சக்திகளைப் பெறுவதால் கர்ம பரிபாலனத்தில் ஏனைய வழிபாடுகளோடு முக்கியமாக இவர்களுடைய கிருபையைப் பெற வழிபட வேண்டும்.

கொக்குமந்தாரை திகழும்
காளையார்கோவில் திருத்தலம்

ராகு காலத்தில் பூமியின் அந்தந்தப் பகுதிகளில் ராகு பகவான் ஆட்சி செலுத்துவதால் , அந்தந்த இடத்திற்கான ராகு கால நேரத்தை அறிந்து அந்நேரத்தில் அவரைப் பூஜித்து வழிபட வேண்டும். திருஅண்ணாமலையில் செய்கின்ற அன்னதானம் பன்மடங்குப் பலன்களை வர்ஷிப்பது போல, ராகு காலத்தில் ராகு பகவானைத் தரிசனம் செய்தல் , பூஜித்தல், தென்மேற்குத் திசையில் வழிபடுதல் போன்றவை ராகுபகவானின் அனுக்கிரஹத்தைப் பன்மடங்கில் பெற்றுத் தரும்.
ராகு காலத்தில் வீட்டிலுள்ள பெண்டிர் ஸ்ரீராகு பகவானுக்குரிய பிரத்யேக பூஜைகளைச் செய்து அற்புதமான பலன்களைப் பெறலாம். ராகு கால பூஜையின் மகத்துவத்தை ஒட்டியே சுபச் செயல்கள் மட்டுமல்லாது அனைத்துச் செயல்களையும் விடுத்து ராகு காலத்தில் ஸ்ரீராகு பகவானை வழிபட வேண்டும் என்று பெரியவர்கள் நிர்ணயித்தனர்.
அலுவலகம் செல்வோர் ராகு காலத்தில் “ஸ்ரீராகு பகவானுக்கு நமஸ்காரம்” என்று அவர் நாமத்தை இடைவிடாது உச்சரிக்க வேண்டும். ராகு பகவானுக்குத் தனி சன்னதிகள் பெரும்பாலான கோயில்களில் இல்லாமையால் ராகு பகவானின் பிரத்யதி தேவதையான ஸ்ரீதுர்கா தேவியை வழிபடும் முறை பிரபலம் அடைந்துள்ளது. தம்முடைய பிரத்யதி தேவதையை ராகு காலத்தில் பூஜிக்கையில் , ராகு பகவான் அதனையும் தமக்கு உகந்த பூஜையாக ஏற்கிறார். எனவேதான் ராகு காலத்தில் ஸ்ரீதுர்கையை வழிபடுகிறோம்.
ராகு காலத்தில் செய்ய வேண்டுவன :
1. “ராஹவே நம:” அல்லது “ராகு பகவானுக்கு நமஸ்காரம்” என ராகு நாமஸ்மரணை செய்தல், ராகு பகவான் காயத்ரீ, வேயுறு தோளி பங்கன் பாடல். நவக்ரஹ தோத்திரம் , ராகுவிற்குப் ப்ரீதியான துர்கா காயத்ரீ, துர்கா ஸூக்தம் போன்றவற்றைப்  பாராயணம் செய்தல்.
2. ராகுவிற்குப் ப்ரீதியான உளூந்தினால் ஆன இட்லி, வடை போன்ற உணவு வகைகளை அன்னதானமாக இடல்.
3. மந்தாரைப் புஷ்பத்தால் அர்ச்சித்தல்; மந்தாரைப் பூமாலைகளைத் தானமளித்தல்.
4. அறுகு கொண்டு ராகு பகவானுக்குத் தென்மேற்குத் திசையில ஹோமம் செய்தல்.
5. கோமேதக (ராகு கிருஹத்திற்கான ரத்தின) தானம் – கோமேதக ஆபரண தானம்.
6. கருப்பு வஸ்திரங்களை வஸ்திர தானமாக அளித்தல்.
7. காளஹஸ்தி போன்ற ராகு க்ஷேத்திரத்தில் பூஜை, அன்னதானம், வஸ்திர தானம் செய்தல்.
8. கருங்கல்லால் ஆன விக்ரஹம், தூண் போன்ற வஸ்துக்களைக் கோயில் , பள்ளிகள் , ஆஸ்ரமங்களுக்கு அளித்தல்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam