அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருக்கழுக்குன்றத்தில் திவ்ய அபிஷேகம்

தை, ஆடி மாதங்களில் அம்பிகை இறைவனைப் பலவிதமான விசேஷ வழிபாடுகளினால் துதிக்கின்றாள். இப்படி சர்வேஸ்வரியே இறைவனைப் பூஜிப்பதன் காரணம் என்ன? மனிதனுடைய தலைவிதியானது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருப்பினும் ஒவ்வொரு ஜீவனின் விதி நிர்ணயமானது ஆடி முதல் தேதி அன்றும், தை முதல் தேதி அன்றும் இதில் வருகின்ற தட்சிணாயன, உத்தராயண (ஆறுமாத) காலங்களுக்கான கர்மவினைகளின் பரிபாலனமாக, பித்ரு தேவர்களாலும், நவக்கிரக மூர்த்திகளாலும் அலசி ஆராயப்படுகின்றன. சற்குருவை அடைந்தோருக்கு அவரே முன்னின்று தம் அடியார்களுடைய கர்மவினைப் பயன்களின் அம்சங்களை, அவரவர்களின் புண்ய சக்திக்கேற்ப சீர்திருத்தி அமைக்கும்படி இறைவனிடம் மன்றாடுகின்றார். இப்பிரார்த்தனையானது முதலில் இறைவியின் திருச்செவியிகளில் தான் விழுகின்றது. இவற்றை எல்லாம் அம்பிகை தம்முள் ஏற்று ஆடிப்பூரம் அன்றும், தை அமாவாசை அன்றும் யோகப் பெருந்துவத்துள் ஆழ்ந்து மக்களின் நலனுக்காகத் தம் பூஜாபலன்களை அந்தப் பரம்பொருளிடமே அர்ப்பணம் செய்கின்றாள். எனவே ஆடிப்பூரம் அன்று அபிஷேக ஆராதனைகளுடன் நாம் அம்பிகையைத் தொழும்போது ஆழ்ந்த யோகத்தில் இறைவனைப் பூஜித்துக் கொண்டிருக்கின்ற ஈஸ்வரியையே வழிபடுகின்ற, கிடைத்தற்கரிய ஒரு பாக்யமாக அமைகின்றது. இதுமட்டுமின்றி சர்வேஸ்வரனே நம்முடைய பூஜையையும் அம்பிகையின் வழிபாட்டின் ஓர் அங்கமாக ஏற்று நமக்கு அருள்பாலிக்கின்றார். பெரும்பாலும், யோகப் பெருநிலையில் அம்பிகை ஜோதி ரூபத்தைப் பெறுவதால் இன்று கோயில் முழுவதுமே பசுநெய், தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்த வழிபாடாகின்றது.

வேதகிரியில் பாதபூஜை
அற்புத பூஜா சக்தி நிறைந்த தாமரை மலர் சில தடாகங்களிலேயே பூத்துக் குலுங்குவது போல் ஆடிப்பூரம் அன்று அம்பிகையின் அருள் பெருங்கடாட்சம் அருவி போல் பொழிகின்ற சில திருத்தலங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றே திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திருபக்தவசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீதிரிபுரசுந்தரி தாயார் சந்நதியாகும். வருடம் முழுதும் இங்கு அம்பிகைக்குப் பாதபூஜை நிகழ்கின்றது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரி நவமி திதி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே அம்பிகைக்கு முழுமையான அபிஷேக ஆராதனைகள் இங்கு நடைபெறுகின்றன. எனவே ஆடிப்பூரம் அன்று இத்தலத்தில் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பிகைக்கு வஸ்திரங்கள் (குறிப்பாக மஞ்சள் வஸ்திரங்கள்) சார்த்திப் பாதங்களில் பச்சை கற்பூரம், வில்வம், சந்தனம் வைத்து அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, ஸ்ரீஅகஸ்தியர் அருளிய ஸ்ரீலலிதா நவரத்தின மாலை போன்ற வடமொழி, தமிழ்மொழி துதிகளை ஓதி அம்பிகைக்குச் சார்த்தப்பட்ட புனித வஸ்திரங்களை ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஏழைப் பெண்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும். வசதி இல்லாதோர் இன்று இந்த அம்பிகை சந்நதியில் இயன்ற அளவு அகல் விளக்கு தீபங்களை ஏற்றிடல் வேண்டும். அம்பிகையைத் தரிசிக்க வருவோர்க்கு எண்ணெய், திரி, அகல் இவற்றை இலவசமாக வழங்குவது புண்ணியத்தை அபரிமிதமாகப் பெற்றுத் தரும்.
பலன்கள்
1. கணவனின் தீய ஒழுக்கம், குழந்தைகள் மந்தமாக இருத்தல், இல்லறத்தில் பல சொல்லொணாத துன்பங்கள், கர்ப்ப, சிறுநீரக, மாதவிலக்குக் கோளாறுகள் போன்ற பல இன்னல்களால் வருந்தி வாடுகின்ற இல்லறப் பெண்கள் இச்சிறப்பான ஆடிப்பூரம் வழிபாட்டை மேற்கண்ட முறையில் நிறைவேற்றிட இன்னல்கள் தீரும்.
2. அம்பிகையின் பிரசாதத்தை (வில்வம், சந்தனம், பச்சைக் கற்பூரம்) மிகக் குறைந்த அளவில் நாள்தோறும் உண்ண வேண்டும். இப்பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்ததால், அச்சக்தியை அதிக அளவில் ஏற்கும் உடல் வலிமையும், மனோதிடமும் அபரிமிதமாகத் தேவைப்படுவதாலும் மிகமிகக் குறைந்த அளவு பிரசாதத்தைச் சித்த வைத்ய முறைப்படி தொடர்ந்து ஏற்று எல்லாப் பலன்களையும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

அடிமை கண்ட ஆனந்தம்

குருமங்கள கந்தர்வா என்றழைக்கப் பெறும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடம்  பெற்ற குருகுலவாசத்தில் திருஅண்ணாமலை, செஞ்சிமலை, மாலயம் மானஸரோவர் (கயிலாயம்), வேதகிரி, கொல்லி மலை, போன்ற புனிதமான தலங்களில் பெற்ற அனுபூதிகளே இங்கு அடிமை கண்ட ஆனந்தமாய் மலர்கின்றன.......
இன்றைக்கும் சக்தி வாய்ந்த பல இறைத்தலங்களிலும், பல புனிதமான மலைப்பகுதிகளிலும், பன்றிகளுக்கு இடையிலும், மலக்குவியல்களிடையேயும் உலவி வருகின்ற அருட்பெரும் சித்புருஷரே மலப்புழு சித்தராவார். அருகில் சென்றால் நாற்றம் அடிக்குமே எனத்தோன்றும். ஆனால் அவரே திருநீறு எடுத்து அளித்திடில் அதில் அருமையான மல்லிகை மணம் வீசும். சிறு மலத்தையே பிரசாதமாக அவர் அளித்திடில் அதுவே அமிர்தமான சர்க்கரைப் பொங்கலாக மாறுகின்ற அற்புதங்களும் உண்டு. இதனைப் பெற்று ஆனந்தித்தோர் பலர்!
திருஅண்ணாமலையில் பல ஆண்டுகளுக்கு முன் இந்திர தீர்த்தமருகே பன்றிகளுக்கிடையே அமர்ந்திருந்த மலப்புழு சித்தரிடமிருந்து அரிய தெய்வீக மணம் கமழும் பிரசாதத்தை ஏற்கும் பெரும் பாக்யத்தை அடைந்தவரே நாம் இங்கு காணுகின்ற சிறுவனாகிய குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். இம்முறை கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு எவ்வித suspense-ம் இல்லாது மலப்புழு சித்தர் இன்னார் என முன்னரேயே அடையாளம் காட்டி விட்டார்.

திருக்கழுக்குன்றம்

நெடுநேரம் கழித்து.. கொதிக்கும் நல்ல சூடான வெயிலில் படியேறி வந்த தொழுநோயாளி கோயில் வாசற்படியில் நின்று கைகளை ஆட்டிக் கூவி நிற்க.... கோவணாண்டிப் பெரியவர் தம் கைகளை அசைத்து மலப்புழு சித்தர் இருக்கும் இடத்தையும், திசையையும் அவனுக்குக் காட்டினார்.. ஏதோ ஓர் அபூர்வ பலம் வரப் பெற்றவனாய் அவன் நடந்தும் நடவாமலும், ஊர்ந்தும், உருண்டும் வெகு வெகமாகப் பெரியவர் காட்டிய திசைநோக்கி விரைந்தான்.. மலப்புழு சித்தரிடம் நேரே சென்ற அவன் அவருடைய கால்களை நன்கு கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.. அவர் அவனைச் சட்டை செய்யவே இல்லை. ஏதோ பூமியைக் கீறுவதும், வானத்தைப் பார்ப்பதுமாக இருந்தாரே தவிர, என்ன ஏது என்று கேட்பதாகத் தெரியவில்லை..
உச்சிவெயில் கொளுத்திட, தரையில் காலை வைக்க இயலாத வகையில் உஷ்ணம் தகித்திட..., மலப்புழு சித்தரோ சர்வசாதாரணமாகக் கட்டாந்தரையில் நன்றாகக் கால்களை நீட்டி அமர்ந்திருக்க, அவனோ சூடு தாங்காது உடல் நெளிந்து, வருந்தி அமர்ந்து கொண்டிருந்தான்.. நேரமோ மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. அவனோ சித்தரின் கால்களைப் பற்றிய நிலையிலே கதறத் தொடங்கி விட்டான்.
“நீ ஏதாச்சும் கொடுத்தால் தான் இங்கிருந்து நகருவேன்”! சித்தரோ கொஞ்சங்கூட அசைந்து கொடுக்க வில்லை... திடீரென்று அங்கே சிறுசிறு புழுக்கள் நெளியலாயின. கொளுத்தும் வெயிலில் அவை சுருண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவையோ மிகவும் ஆனந்தமாக வளைந்து நெளிந்து சுற்றிச் சுற்றி ஓடின, அதுமட்டுமா? வயிற்றைப் புரட்டும் நாற்றமும் ஏற்பட்டது. மலப்புழு சித்தரோ அப்புழுக்கள் ஒவ்வொன்றாக எடுத்து உண்ணத் தொடங்கினார்.. அவனோ கண்களை மூடிக் கொண்டு வேறு எதையும் பாராது அவர் கால்களில் தஞ்சமெனக் கிடந்தான்.. அவரோ  இம்மிகூட அசையாது, இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு புழுக்களை உண்ணலானார். இவ்வாறாக எவ்வளவு மணி நேரங்கள் கடந்தனவோ எவரும் அறியார்! இவனோ கதறிக் கதறி அழுது புலம்பிக் கொண்டே தொண்டையே வீங்கும் அளவுக்குக் கூக்குரல் இட்டு அலற.... அவரோ எதையும் கண்டும் காணாதது போல் தம் காரியத்திலேயே கருத்தாக இருந்தார்...
இதற்குள் மாலைப் பொழுதும் வந்திட, இக்கூத்தைக் குறைந்தது பத்துமணி நேரமாவது கோவணாண்டிப் பெரியவரும் சிறுவனும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“சரி வாடா, போகலாம்! அவரும் இப்போதைக்குக் கொடுக்க மாட்டார், இவனும் விடப்போவதில்லை. எல்லாம் அந்த வேதகிரீஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்!” என்று கூறியவாறே பெரியவர் சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கோயிலை வலம் வந்து இறங்குபாதையில், இருட்டுமுன் மலை அடிவாரத்துக்கு வந்து விட்டார். சிறுவனுக்கோ மேலும் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள ஆசை, ஆனால் இவரோ பாதியிலேயே இழுத்து  வந்து விட்டார். என்ன செய்வது? சிறுவன் இவ்வாறு எண்ணுவதற்கு முன்னரே பெரியவர் பளிச்சென்று பதில் தந்தார்.. “ஏண்டா, சூரியன் படுத்துட்டா அங்கே நீ என்ன பார்க்க முடியும்? அவர் சாதாரண சித்தர் இல்லையடா, கோடானு கோடி தேவர்கள் எல்லாம் இன்னும் சற்று நேரத்திலே அவருக்குப் பூஜை பண்ணுவாங்க.., நாம் அதைப் பார்க்கறதுக்கே ஆயிரம் கண் வேணும். ஆனா அதையெல்லாம் நீ பார்த்தா ஆச்சரியத்துலே, அப்படியே சிலையா நின்னுடுவியே! அதுக்குத்தான் வேகவேகமா சீக்கிரமா இங்கே உன்னைக் கூட்டியாந்தேன்.”
சிறுவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் பசியும் சேர்ந்து கொண்டதால் முதலில் நம் வயிற்றைக் கவனிப்போம் என்ற முடிவுக்கு வந்தான்.. பெரியவரோ சிறுவனின் வயிற்றுக்கு என்றுமே குறை வைத்ததில்லை. பரோட்டா, போண்டா, ரொட்டி, சாப்பாடு என விதவிதமாக வாங்கித் தந்து சிறுவனை ஆனந்தப்படுத்திவிடுவார். அன்று கூட அவனுக்கு நல்ல விருந்து தான்! சிறுவன் கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆனால் பில்லுக்குப் பணம் கொடுக்கும்போது அனாயாசமாகப் பின்புறக் கோவணத்தில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்கும் வித்தைதான் அவனுக்குப் புரியவில்லை.
கேட்டால்...“அந்த வித்தையெல்லாம் உனக்கு வேண்டாம்டா! இதனால் கர்மம் தான் எக்கச்சக்கமா சேரும். எங்களுக்குக் கர்மத்தைச் சேரவிடாமல் செய்யும் Technique எல்லாம் அத்துப்படி. உனக்குன்னு அப்படி மனப்பக்குவம் வரும்போது எல்லாத்தையும் அந்த அங்காளியே கத்துக் கொடுத்துடுவா!” – இவ்விதமான பதில்கள் தாம் சிறுவனுக்குக் கிட்டும். இதன் பிறகும், கும்மிருட்டில் இருவரும் திருக்கழுக்குன்றத்தைக் கிரிவலம் வந்தனர். வழியெங்கும் பெரியவர் திருக்கழுக்குன்ற கிரிவலச் சிறப்பினைப்பற்றி நன்றாக விளக்கி வந்தார். பொதுவாக வேத, விராட, புருஷ மூர்த்தியே மலையாக, மலையின் அம்சங்களாகத் திகழ்வதால், மேலும் குறிப்பாக ஆயுர்வேத மூர்த்திக்கான திருத்தலமாக இது விளங்குவதால் திருக்கழுக்குன்ற கிரிவலம் பலவித பிணிகளை எளிதில் தீர்த்து வைக்கும்.

கருட சேவை திருக்கழுக்குன்றம்

இரவு மலையடிவாரத்தை அடைந்த பின்புதான் சிறுவனுக்கு மலப்புழு சித்தரின் ஞாபகமே வந்தது.. சிறுவன் பெரியவரின் கைவிரல்களை மெதுவாகச் சுரண்டியவாறே. “அப்ப நம்ம மேல போயி மலப்புழு சித்தரு என்ன செய்யறாருனு பார்க்கலாமா?” என்றான்..
“அதெல்லாம் தெரிஞ்சு நீ என்னடா செய்யப்போற? தெய்வீக ரகசியங்கள், அற்புதங்களைத் தெரிஞ்சுக்க ஆசைப் பட்டா மட்டும் போதாது. அதுல வர்ற பிரச்னைகளையெல்லாம் சந்ததிக்க நாம் ரெடியா இருக்கணும். ஆனா அதுக்கு உரிய ஸ்பெஷலான ஒரு புண்ய சக்தி இருக்கு . அது இருந்தாத்தான் இதை எல்லாம் புரிஞ்ச்சுக்குற மனப் பக்குவம் வரும்.”
ஆனால் சிறுவனோ பெரியவரை மேலும் மேலும் வற்புறுத்திடவே, பெரியவர் ஆங்கே ஒரு படிக்கட்டில் விநோதமான ஆசன முறையில் அமர்ந்தார்... சிறுவனுக்குப் புரிந்து விட்டது...,ஆம் அவனுக்கு T.V காட்சி தெரியப் போகின்றது..! பெரியவர் வழக்கம்போல் தம் வலது கையை நன்றாகத் துடைத்து விட்டு உள்ளங்கையைத் திறந்து காட்டிட, அதிலே மேலே நடப்பவை வீடியோ காட்சி போல நன்றாகத் தெரிந்தன.
அப்போது இரவு 12 மணிக்கு மேல் இருக்கும்.. அந்த உள்ளங்கை T.Vயிலே மலப்புழு சித்தர் அதே நிலையில் அமர்ந்து இருக்க, அவருடைய கால்களைப் பற்றிய வண்ணம் அத்தொழு நோயாளி தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். அழுது ஓய்ந்த கண்கள் சிவப்புப் பழமாய் இருந்தன., முகம் உப்பி இருந்தது! “என்னே ஆழ்ந்த நம்பிக்கை!” – சிறுவன் வியந்தான்.. இதோ! மலப்புழு சித்தர் சற்றே அசைவது போல் தெரிந்தது.. கை நிறைய எதையோ அள்ளி அவனிடம் கொடுத்தார்... மனித மலம் அது! மூக்கைத் தீய்க்கும் நாற்றம் வேறு..... “இதைத் தின்னுட்டு இங்கே படுத்துத் தூங்கு”.... மலப்புழு சித்தரின் அருள்வாக்கிது! திடீரென்று மலப்புழு சித்தரைக் காணவில்லை... அவர் இருந்த இடமோ புதர்,,, மண், கற்களுடன் பழைய மாதிரியே இருந்தது.. அம்மனிதனோ விடாமுயற்சியுடன்,, நம்பிக்கையுடன் சித்தர் அளித்த அப்பிரசாதத்தை ஆனந்தத்துடன் உண்ணலானான்.. நாற்றத்திற்கிடையில் அதனை ஒரு மருந்தாகவே எண்ணி சிறிது சிறிதாக, உண்ணத் தொடங்கினான்...  அதற்கு மேல் கோவணாண்டிப் பெரியவர் கையில் ஒன்றும் தெரியவில்லை. பெரியவர் தம் கையை இழுத்துக் கொண்டார். “இதுவரைக்குத்தான் பார்க்கறதுக்கு மேல permission கொடுத்துருக்காங்க” என்று முடித்துக் கொண்டார்.

சங்கு தீர்த்தம் திருக்கழுக்குன்றம்

பெரியவர் சிறுவனின் மடியில் தலையை வைத்து உறங்கலானார். “அவர் தூங்கினால் தான் உறங்கலாகாது” என்று பெரியவர் விதித்த நியதிப்படி இரவு முழுதும் கொட்டக் கொட்ட விழித்தவாறே சிறுவன் ஏதேதோ எண்ணங்களில் உழன்றாலும் மலப்புழு சித்தரின் உருவமே அவன் மனதில் வியாபித்திருந்தது.. மறுநாள்.. காலை..... இன்னமும் பெரியவர் விழித்து எழவில்லை. மேல் மலையிலிருந்து “சாமி! சாமி!” என்று குரல் கொடுத்தவாறே நடுத்தர வயதுள்ள மனிதன் ஓடோடி வந்து கொண்டிருந்தான்! “சாமி! நீ சொன்ன மாதிரிய் செஞ்சுட்டேன், சாமி! எனக்குக் கை, கால் முழுசு முழுசா அஞ்சஞ்சு விரல் வந்துருச்சு. குஷ்ட வியாதியே பறந்து போயிடுச்சு.” அவனோ பரம சந்தோஷத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெரியவரை உலுக்கி எடுத்தான். பெரியவரோ அசையவில்லை. அவனும் விடாமல் பெரியவரைப் புரட்டி எடுத்து “நீதான் எனக்கு நல்ல வழி காட்டினே! உனக்கு ஆயுள் பூரா அடிமையா இருக்கேன்”, என்று கதறி அவர் கால்களை கட்டிக் கொண்டான்... அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. பெரியவர் கண்களைத் திறந்து பார்த்தார்.
கண்களில் நீர் மல்க அவனோ பெரியவரின் கால்களை விடாது பற்றிக் கொண்டிருந்தான்... பெரியவர் கால்களை உதறினார்.., “எதுக்குடா கூட்டம் போடுறீங்க? இவன் யாரையோ நெனச்சுக்கிட்டு என்னைக் கட்டிபிடிச்சிக்கிட்டு அழுவுறான்.... எனக்கும் இவனுக்கும் சம்மந்தமில்லை”,, எனக் கூறியவாறே சிறுவனை பிடித்திழுத்துக் கொண்டு மலைப்படிகளில் வேகமாக இறங்கினார் பெரியவர். அம்மனிதனோ விடாமல் துரத்தி வந்தான்.. அதற்குள் ஒரு சிலர் அவனைப் பிடித்துக் கொண்டு “ஏம்பா! நீ அவங்களைத் தொந்தரவு பண்ற, உன் வேலையைப் பாரு” என்று கூறினர்.
பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே, “வாடா! நம்ம போலாம். நமக்கு வேதகிரீஸ்வரர் கொடுத்த duty முடிஞ்சுது. ஒரு நிமிஷம் கூட இனி இங்கே நிக்கக் கூடாது”, என்று சொல்லி துரித கதியில் மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தார்.
சிறுவனுக்கோ அம்மனிதன் தன் அடித்தொண்டையிலிருந்து எழுப்பும் குரல் கடைசிவரை கேட்டுக் கொண்டே இருந்தது....
“இத்தகைய தெய்வீக அற்புதங்களை நிகழ்த்திவிட்டு மிகவும் சாதாரண மனிதனாக நடிக்கும் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது?” ஒரு தெய்வீக சித்புருஷருடன் உலவுகின்றோம் என்ற எண்ணம் கூட இல்லாது, ஒரு குழந்தையைப் போல் பெரியவரைத் தொடர்ந்தான் சிறுவன்... ஆனால்..... “தான் அண்டியிருப்பது,, அடைக்கலமாக இருப்பது, சரணடைந்திருப்பது, தெய்வீகச் சித்புருஷர்தான் என்ற ஞானம் எந்த நேரத்தில் ஏற்பட்டதோ அப்போது..... “ராஜா! இனிமேல் என் உருவம் உன் கண்ணுக்குத் தென்படாது. நானாக விரும்பும்போது தான் உன் முன்னால் தோன்றுவேன்” என்று சொல்லி விட்டு அவர் ராயபுரம் அங்காளபரமேஸ்வரியின் சந்நதியினுள் புகுந்து விட்டார். அதற்குப்பின்.. அவ்வப்போது திடீரென்று காட்சி அளிப்பார்.... பிறகு அக்காட்சிகளும் மறைந்து அவருடைய குரல் மட்டும் கேட்கத் தொடங்கியது. நாளடைவில்.. “நீயாக இருந்து இந்த அடிமை சொன்னதைக் கடைபிடிப்பாயாக! உன்னுள் இருந்து யாம் உன்னை இயக்குவோம்!” என்பதே குருவாக்கியமாகப் பரிபூரணமடைந்தது. அச்சிறுவன் தான் குருமங்கள கந்தர்வா என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.

ஆடை கர்மங்கள்

ஆடைகளை அணியும் முறை – சில ஆன்மீக விளக்கங்கள்..
ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு குருகுலவாசத்தில் அவர்தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள் போதித்த மிகவும் முக்கியமான அருளுரை யாதெனில், “உனக்கு நான் எவ்வளவோ தெய்வீக சக்திகளைப் பத்தி நல்லாப் புரியவச்சிருக்கேன்... ஆனால் வெறும் அற்புதம் (Miracles) செய்து காட்ட உன்னை நாங்க பூலோகத்துக்கு அனுப்பவில்லை! அவங்கவங்க கர்ம வினைகள் கழியறது ரொம்பவும் முக்யம்! ஒவ்வொரு மஹானையும் ஒவ்வொரு விதத்துல மக்களைக் கரையேத்த கடவுள் அனுப்புகிறார்.. அதுல மக்களின் கர்மவினைகளைக் கழிக்கும் எளிய மார்கத்தை  நடத்திக் காட்டி வழிகாட்டுறதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள கடமை! அதாவது எளிய முறையிலான கர்மவினைக் கழிப்புதான் நம்முடைய முதல் வேலை!”..... அருட்பெருஞ் சித்புருஷராகிய கோவணாண்டிப் பெரியவராம், ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் அருள் வாக்கு! இடியாப்பம் என்ற உணவு போல், கர்மவினைகளில் சுற்றிச் சுற்றிப் பின்னிப் பிணைந்து கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நம்மைக் கடைத்தேற்ற வல்லவர் சற்குரு ஒருவரே அல்லவா! மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, ஆபரணங்கள் இம்மூன்றிலும் சித்புருஷர்கள் அருள்கின்ற எளிய முறைகளைப் பின்பற்றினால் கொடிய கர்மவினைகள் மிக எளிதில் கரைவதோடு, ஆன்மீக வலுநிறைந்த (Positive) புண்ணிய சக்தியினையும் பெற்றிடலாம்.
1. ஆடைகளில் பருத்தி ஆடையே சிறந்ததாகும். ஏனெனில் பஞ்சபூத சக்திகள் நிறைந்திருப்பது பருத்தியாதலின் கோயில் தரிசனங்கள், மஹான், யோகியர், சித்புருஷர்களின் தரிசனம், விளக்கு பூஜை போன்றவற்றில் நிறைந்த தெய்வீக ஒளி/ புண்ய சக்தியை ஆகர்ஷித்து உடலில் சேர்ப்பதே பருத்தி ஆடையாகும். சூரிய மண்டலத்திலிருந்து வந்த தாவரமாதலின் பருத்திக்கு மந்திரங்களைக் கிரஹிக்கும் அக்னி சக்தி நிறைய உண்டு!
2. இந்நவீன காலத்தில் டெரிகாட்டன், நைலான் போன்ற செயற்கை இழை ஆடைகளே அதிகமாதலின் குறைந்த பட்சம் உள்ளாடைகளாவது கட்டாயம் நல்ல பருத்தியாடையாக இருத்தல் வேண்டும். அதிக அளவு பருத்தி கலவையுடைய ஆடையையேனும் உடுத்திடுக!
3. இல்லற ஆண்களும், பெண்களும் பஞ்சகச்ச/மடிசார் முறையில் ஆடையை அணிவது சுவாசத்தை முறைப்படுத்தி பிராணாயாம சக்தியைக் கூட்டி நம் மன சஞ்சலங்களைத் தவிர்க்கும் பஞ்சகச்ச/மடிசார் முறை (ஆந்திர, வங்காள, தமிழ் என்று பல கச்ச முறைகளும் உண்டு) ஜாதி, குல பேதமின்றி யாவருக்கும் உரித்தானதே! பூஜையின் போதும், கோயிலுக்குச் செல்லும்போதேனும் இம்முறையிலான ஆடையணிந்து சென்றிடுக! மற்ற முறையிலான ஆடையானது சுவாச பந்தனத்தைச் சுற்றி அலைக்கழித்து மன சஞ்சலங்களைப் பெருக்கி விந்து நஷ்டம், முறையற்ற காம உணர்வுகளைப் பன்மடங்காக்கித் தீயொழுக்கத்தைத் தருவதாகும். எனவே இதனைத் தவிர்த்திடுக!
4. ஒரே ஆடையைப் பல மாதங்களுக்கோ, பல வருடங்களுக்கோ அணியாதீர்கள்! உள்ளாடை, புற ஆடை என ஆடையின் ஒவ்வொரு வகையும் அணிய வேண்டிய கால நியதிகள் உண்டு! அதற்குப் பின் அதனை நன்முறையில் (துவைத்து, சீர்செய்து) பிறர் அணியுமாறு தானமளித்திட வேண்டும். இதனால் ஆடைச் செலவுகள் அதிகமாகுமே என்று எண்ணாதீர்கள்., செலவிற்குப் பயந்து எவரேனும் தீய கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்வார்களா? வெற்றிலை, பாக்கு, சூயிங்கம், காபி, டீ, ஹோட்டல் செலவு, ஆட்டோ செலவு, பீடி, சிகரெட், பொடி என்று பெருகுகின்ற செலவு வகைகளைச் சற்றே எண்ணிப் பாருங்கள்!
5. பிறருடைய ஆடைகளை ஒரு போதும் அணியாதீர்கள்! எண்ணெய், உணவு, பிறர் ஆடை மூலமாகத் தான் பல தீவினைகளும், பாவங்களும் தோஷங்களும் எளிதில் சேர்கின்றன. பொதுவாக மஞ்சள் நிற ஆடை அனைவர்க்கும் ஏற்புடையது. சிறந்த சகுனமாக இருப்பதோடு கண் திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்யும் வல்லமையுடையதே மஞ்சள் நிற ஆடையாகும்.
6. கைக்குட்டையோ, துண்டோ, வேஷ்டியோ எதனையும் வாங்கிய உடனேயே அணிந்து விடாதீர்கள். புதுத் துணிகளில் அவ்வளவாகத் தீவினை கர்மப் படிவுகள் இல்லையெனிலும் பலர் கண்களும், கைகளும் படுவதால் அவற்றிற்கும் தோஷங்கள் உண்டு! உதாரணமாக ஒரு ஜவுளிக் கடையில் ஓர் அழகான புடவையைப் புரட்டி அலசிப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறோம்., கணவனுக்கோ/மனைவிக்கோ பிடிக்கவில்லை/பணப்பற்றாக்குறை  - டிஸைசன்/கலர் மாற்றம் – என்று பல காரணங்களால் அப்புடவையை வாங்காமல் வைத்துவிட்டு வந்தால் நம் ஏக்கங்கள் அனைத்தும் (வாங்க முடியவில்லையே! பணம் இல்லையே!) அப்புடவையில் படிந்து, பின் அதை வாங்கப் போகின்றவரைப் பாதிக்கும். இவ்வாறாகத்தான் எந்தப் புது ஆடையிலும் எண்ணப்படிவுகள் சேர்கின்றன! புது ஆடைகளை நாம் அணியும் முன் செய்ய வேண்டிய எளிய பூஜை முறையையும் இத்தொகுப்பில் இனி அளிக்க இருக்கிறோம்.
7. இறைவனுக்குச் சார்த்தப்படும் ஆடைகளுக்கு எவ்வித தோஷமும் கிடையாது. நீங்கள் வாங்குகின்ற வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி etc.. என அனைத்தையும் இறைவனுக்குச் சார்த்தி வஸ்திரப் பிரசாதமாக மீண்டும் பெற்று அணிந்திடில் அந்த ஆடை மிகவும் புனிதம் பெற்றதாகிறது.. “இறைவனுக்கு அணிவித்த ஆடையையே யான் உடுப்பேன்”, என்ற வைராக்யத்தை எடுத்துக் கொண்டு மிக உறுதிபட வாழ்வீர்களானால் நிச்சயமாக வாழ்வில் பெருமளவு தீவினைக் கர்மங்களை மிக எளிதில் கரைத்து விடுவதோடு மேலும் சேர விடாமலும் தடுத்திடலாம்.
காவியை வணங்கிடுவீர் கவினுற வாழ்ந்திடவே!
காவியுடை மிகவும் பவித்ரமானது! காவியுடையணிந்து தீச்செயல்களில் ஈடுபடில் (தாம்பூலம், தரித்தல், பீடி, சிகரெட், மது, காமச் செயல்கள் etc..) பாவங்கள் பல கோடி மடங்காய்ப் பெருகும். உடலால் மட்டுமின்றி மனதாலும் ஒரு தீங்கும், ஒரு தீயெண்ணமும் எழாதோரே காவியைத் தரித்திடலாம். ஒரு முறை காவியை அணிந்திடில் பின்பு வாழ்க்கையில் ஒரு போதும் அதனைக் களைந்திடலாகாது! ஏனெனில் காவித் துணியை எரித்தலோ, புதைத்தலோ, எறிதலோ கூடாது. “காவி பஸ்மம்” என்ற முறைப்படி காவித் துணியைப் “பூமியில் அடக்கும்” முறைகளைத் தக்க சற்குருவை நாடி அறிந்திடுக! காவியின் புனிதத்தைப் பரிபூரணமாக உணர்ந்தோரே அதனை அணியத் தகுந்தவராவர்! காவி உடையின் புனிதத் தன்மையை நன்கு வலியுறுத்தி உணர்த்திடவே இவ்விளக்கம் மீண்டும் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் அளிக்கப்படுகின்றது. காவியின் புனிதம் போற்றிப் பாதுகாப்பட வேண்டுமென்றால் அதற்கு நாம் அளிக்கின்ற தெய்வீக மதிப்பைப் பெருக்குதல் வேண்டும்.

நல்ல துணையைப் பெற

நல்ல கணவனைப் பெற ஆடிப்பூரம் அம்மனை வழிபடுவீர்
கணவனே கண் கண்ட தெய்வம் என்பது பாரதத்தின் தனிப்பெரும் பண்பாடு! கட்டிய கணவனைக் கண்ணிமை போல் காத்துப் பேணும் மாண்பைப் பாரத மாந்தர்கள் பெற்ற காரணத்தால் தான் நம் மூதாதையர் மற்றும், நம் பெற்றோரும் எழுபது, எண்பது என நீண்டகால தாம்பத்ய வாழ்வைப் பெற்று அகிலமே வியக்கும் வண்ணம் மனித வாழ்வின் இலக்கணத்தைப் படைத்துள்ளனர். இன்று திருமணம், நாளை பிரிவு என்ற அதர்மநெறி வெளிநாடுகளில் பரவி வருகையில், கணவனைக் கண்கண்ட தெய்வமாக இன்றும் நம் மாந்தர்கள் போற்றுகின்ற தெய்வீகப் பண்பாடு என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம். மனோசக்தியிலும், சிறந்த ஆன்மீக சக்தியிலும் ஆண்களைவிடப் பெண்கள் ஏழுமடங்கு அதிகத் திறன் உள்ளவர்களாதலின் அடக்கம், பொறுமை, தயாளம், சாந்தம், கருணை ஆகியவை இயற்கையிலேயே நிரம்பப் பெற்று வாழ்க்கையின் அனைத்து விதமான துன்பங்களையும் தம்முள் ஏற்று இல்லற விளக்காய்ப் பிரகாசிக்கும் பெண்களுக்கு ஆண்கள், தார்மீக நெறியில், உறுதுணையாய் நிற்றல் வேண்டும்.
கலியுகத்தில் இல்லற தர்மங்கள் குறைந்து வாழ்க்கைத் துன்பங்கள் மிகும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த மைத்ரேயி வருணி போன்ற மகரிஷி மாதர்கள் ஸ்ரீபிரம்ம தேவரை வேண்டி, “ஸ்வாமி! இந்த யுகத்திலும், வரும் யுகங்களிலும் பெண்கள் அடைய இருக்கின்ற துன்பங்களைக் கண்டு நாங்கள் அஞ்சுகின்றோம். இடர்கள் மிகும்போது இறை நம்பிக்கையும் தளருமன்றோ! குடும்பச் சூழ்நிலையே கலியுகப் பெண்களின் பெரும்பாலான அல்லல்களுக்கு உரிய காரணமாக இருப்பதால் தாங்களே, முன்வந்து கன்னிப் பெண்கள், தாங்கள் விரும்பியவாறு, நல்ல கணவனை அடைய, தக்க பூஜையொன்றை அளித்திட வேண்டுகிறோம்” என்றனர்..
ஸ்ரீபிரம்மா புன்னகை செய்தார், “அம்மணியீர்! மகரிஷிகளே! தாங்கள் தவத்தினால் பெற இயலாதது ஏதேனும் ஒன்று உண்டா? பிரஜைகளின் சிருஷ்டிக்கு மூலகாரணமாக விளங்கும் அடியேனை இக்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றீர்களே! அசுரர்கள் பலருக்கும் பலவிதமான வரங்களை அளித்துவிட்டு அதனால் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து அடியேன் தற்போது தான் மீண்டுள்ளேன். தங்களுடைய கோரிக்கை கலியுகப் பெண்களின் நல்வாழ்விற்கு உரித்தானது என்றாலும் பிரஜைகளின் கர்ம பரிபாலனத்தையே அது மாற்றி விடுமல்லவா? கணவன், மனைவி உறவு என்பது பூர்வஜென்ம கர்மவினை மூலம் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்லவா! எனினும் தங்களுடைய பக்திப் பூர்வமான பிரார்த்தனைக்கு ஏற்ப “பூரத்ரய ஹோமம்” என்ற ஓர் அரிய வேள்வியைத் தங்களுக்காகத் தொடங்குகின்றேன். இதில் ஆவாஹனம் ஆகி எழுந்தருள்கின்ற தேவியினிடம் உங்களுடைய வரத்தைக் கேட்டு மகிழ்வீர்களாக” – நான்முக தேவன் இவ்வாறாக நன்றே நவின்றார்.
நான்மறைகளின் நாயகன் ஸ்ரீபிரம்ம தேவரன்றோ! வேதத்திற்கு எல்லை கண்ட ஸ்ரீபிரம்ம மூர்த்தியையே “ஓம்காரப் பிரணவ விளக்கம் அறிந்தாரில்லை”- எனச் சோதித்து அவரையே மனச் சிறையிலிட்டானன்றோ செந்தில்வேலவன்! காரணமென்ன? மனத்துக்கு இனியவனான திருமுருகனின் மனமே ஓங்கார வடிவமானது. அத்தகைய சிறையில் அடைபடுதல் எனில் பெரும் பாக்கியமன்றோ? ஓங்காரச் சிறையில் உறைந்த பின்னர்தான் ஸ்ரீபிரம்மதேவர் நான்மறைகளை ஓங்காரத்துள் அடக்கமென உணர்ந்தார்.. நான்முகனின் நான்கு முகங்களும் ருக், யஜுர், சாம, அதர்வண வேத மந்திரங்களை ஓங்கார நாதத்தில் பரிபூரணமாக ஓதிட... ஹோமத்திலேயே யுகங்கள் பல கடந்தன! ஆம்! அனைத்து வேதமந்திரங்களும் முழங்கப் பெற்று அவற்றிற்குரிய ஆஹுதிகள் முறையாக அளிக்கப்பட வேண்டுமல்லவா? சகல கோடி தேவர்களும் வந்து கூடி நின்றனர். அம்பிகை அவர்களுடைய பொறுமையை மேலும் சோதிக்க விரும்பவில்லை. ஸ்ரீபிரம்மனின் பல கோடியுக காலத்தில் ஒலித்த வேத கோஷத்தில், வேதகிரி சற்றே அசைவது போல் தோன்றி, புனித பூரத்ரய ஹோமத்திலிருந்து “ஸ்ரீமஞ்சுள தேவி” தோன்றினள்.., இதற்காக ஸ்ரீபிரம்மதேவர் அளித்த ஆஹுதி யாது தெரியுமா..
(ஆஹுதி எனில் தேவாதி தேவமூர்த்திகளுக்கு உரிய உணவு என்பது பொருள்..) என்ன! இறைவனுக்கும் உணவு உண்டா? ஏனில்லை? இல்லங்களிலும் கோயில்களிலும் நாம் படைக்கின்ற பிரசாதத்தை நமக்குப் படைத்து அளித்தவன் பரம்பொருளன்றோ! நாம் அன்னமுண்டு ஜீவிப்பது அவனருளால் தான் என்பதை நமக்கு நாமே ஒவ்வொரு வேளையும் நினைவூட்டிக் கொண்டால் மட்டுமே; உலகில் அவனருளால் தான் உலகில் ஒவ்வொரு வினாடியும் நாம் இயங்குகின்றோம் என்ற உண்மையான, புனிதமான, உயர்ந்த எண்ணம் உள்ளத்துள் ஓங்கும். இல்லையெனில் எல்லாம் நம்மால் தான் என்ற தீய அகங்காரமே பெருக்கெடுக்கும்! மனிதன் வாழ்வது உணவால்! தேவர்களோ அக்னிமூலமாகத் தங்கள் உணவைப் பெறுகின்றனர். இயல், இசை, நாடக அம்சங்களை நமக்குப் போதிக்கும் கந்தர்வர்கள், ஹோமத்தின் நெய் மூலமாகவே தம் சக்தியைப் பெறுகின்றனர். முந்திரி, திராட்சை, பழம், அன்னம், மூலிகை, சமித்து, தேன், தேங்காய் போன்ற பலவித ஹோம ஆஹுதிகளும் இவ்வாறாகவே பல்வேறு தேவாதி தேவ மூர்த்திகள் உறையும் தேவ மண்டலங்களை உணவாகச் சென்றடைகின்றன. சுபத்தைக் காட்டும், மங்களைத்தைக் குறிக்கும், சுமங்கலித் தன்மையை உணர்த்தும் மஞ்சளையும், மஞ்சள் நிற வஸ்திரத்தையும், ஸ்ரீபிரம்மா ஆஹுதியாக அளித்தார்.. எதற்கு? ஸ்ரீமஞ்சுள தேவியை எழுந்தருளச் செய்ய! மஞ்சள் நிற மேனியில்  சுற்றிலும் சுபமங்கள தீபங்கள் ஒளிர, ஸ்ரீமஞ்சுள தேவி தோன்றி ஆடிப்பூரம் அம்மனின் மஹிமையையும் , பூஜை முறைகள் மற்றும் அதன் பலாபலன்களையும் பூலோகப் பெண்மணிகள் நல்வாழ்வு பெற்றிட எடுத்துரைக்கலானாள்..
ஆடிப்பூரத்தில் தேடி வந்த தேவி..
“அடியேன் ஸ்ரீபார்வதி தேவியாகிய பராசக்தியின் அருளாலும், ஸ்ரீஅக்னி பகவான், ஸ்வாஹா, ஸ்வதா தேவி தம்பதி மூர்த்திகளின் அனுக்ரஹத்தாலும் ஸ்ரீபிரம்ம தேவனின் பெருங்கருணையாலும் இந்த பூரத்ரய ஹோமத்தில் பூர்வாங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்க இருக்கின்ற அன்னையாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அம்சமான ஸ்ரீஆடிப்பூரம் அம்மனின் மஹிமையை விளக்குவதில் பேரானந்தம் அடைகின்றேன். சர்வலோக அன்னையாம் ஆடிப்பூரம் அம்மனின் பெருமையை விளக்க யுகங்கள் போதாது. எனினும் அடியேன் அறிந்த வரையில் என் சிற்றறிவிற்கு எட்டியவரை ஆடிப்பூரம் அம்மனின் அருட்சக்தியைக் குறித்துக் கூறத் தொடங்குகின்றேன். ஈஸ்வரியானவள் பல அரும்பெரும் தவங்களைப் புரிந்து ஈஸ்வரனின் அம்பிகையாகப் பல ரூபங்களில் தோன்றி நம்மை ஆனந்திக்கின்றாள்.. பூரம் நட்சத்திரத்திற்கு உரிய அதி தேவதையே பார்வதி தேவியாவாள். உத்தராயன காலத்திலும், தட்சிணாயனத்திலும், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அக்னி, நீர், வாயு மண்டலங்கள், ஆகாசம், ஊசிமுனை, விரல்நுனி போன்றவற்றின் மேல் அமர்ந்தும், நின்றும் அற்புதமான தவங்களை மேற்கொண்டு அதன் பலன்களை மகரிஷியர்க்கும் மக்களுக்கும் அளிக்கின்றாள்.. தெற்கே செல்கின்ற ஆறு எங்கு மீண்டும் வடக்காகச் செல்கின்றதோ அவ்விடம் உத்திரவாஹினி எனப்பெயர் பெற்று மிகவும் தெய்வீக சக்தி நிறைந்து விளங்குகின்றது., தமிழ்நாட்டிலும், வடபாரதத்திலும் இவ்வாறு உத்திர வாஹினியாக வடக்கு நோக்கி நதி செல்லும் இடங்கள் மிகமிக புனிதத் தலங்களாகச் சித்புருஷர்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எனவே நதிகள் வடக்கு முகமாகச் செல்லும் இடங்களில் நதிகளின் போக்கிற்கு எதிராக நின்றோ, அமர்ந்தோ, ஜப, தியான, யோகங்கள் புரிந்திடில் நதியின் ஆகர்ஷண சக்தி, பூமியின் ஆகர்ஷண சக்தி, ஆடியில் தெற்கு நோக்கிச் செல்கின்ற சூரியனின் தட்சிணாயன ஆகர்ஷண சக்தி மூன்றும் உடலில் ஊடுருவி பாய்ந்து சிறந்த மகத்தான சக்தியை அளிக்கின்றன.
இவ்வாறு அம்பிகை தவம் பூண்டு ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரத்தன்று நிலசக்தி, நீர்சக்தி, அக்னி சக்தி போன்று பஞ்சபூத சக்திகள் கூடி பஞ்சலோக சக்தியைத் தர ஆடிப்பூரம் அம்மனாய் அவதரித்தாள்.. பல ஆலயங்களிள் இன்றும் ஆடிப்பூரம் அம்மனைப் பெரும்பாலும் பஞ்சலோக உற்சவ மூர்த்தியாகக் கண்டிடலாம். மூலமூர்த்தியாய்க் கண்டிடுவது மிகவும் பெறற்கரிய தரிசனமாகும். உத்தராயணத்தின் துவக்கத்திலும், தட்சிணாயனத்தின் துவக்கத்திலும், சர்வேஸ்வரன் விச்ராந்தியாய், மௌனியாய், நிர்மலமாய், உருவமற்றவனாய் தனித்தே தியானத்தில் ஆழ்கின்றார். இவ்வாறாக தட்சிணாயனத்தில் அயன தீர்க்க யோகத்தில் ஆழ்ந்தபோது, அம்பிகை அத்தவக்கோலம் பூண்ட ஈஸ்வரனை அடைய வேண்டி நதிகள் உத்திரவாஹினியாக வடக்கு நோக்கி செல்லும் இடங்களில் தவம் புரிந்து வேண்டினள். சகலவிதமான புண்ய நதிகளின் ஆகர்ஷண சக்தியும், பூமியின் ஈர்ப்பு சக்தியோடு நீரோட்ட மாறுதல்களால் ஏற்படுகின்ற ஆகர்ஷண சக்தியும், தெற்கு நோக்கி விரைகின்ற கதிரவ மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியானது நீரோட்டச் சுழலாலும், எதிர்திசை நீரோட்டச் சுழலாலும் ஏற்படும் ஆகர்ஷண சக்தியுமாக அம்பிகையின் தவத்திற்கு மெருகூட்டின. இவற்றின் ஊடே தெய்வத் திருத்தவத்தில் ஒளிர்ந்தவளே ஆடிப்பூரம் தேவி சர்வேஸ்வரனின் திருக்கரம் பற்றிட விழைந்து வெற்றி பெற்று ஆனந்தித்த அம்பிகையாதலின் கன்னிப் பெண்களின் இனிமையான திருமண வாழ்விற்கு ஆடிப்பூரம் தேவியே அருள்தந்து காக்கின்றாள். எத்தனையோ அவதாரங்களில், ஈஸ்வரனின் குறித்த ஒரு அவதாரத்தின் அம்பிகையாக இணைவதற்கு அருள் தவம் புரிந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரித் தாய் தட்சிணாயனத்தில் உருவமற்றுத் திகழும் ஈஸ்வரனை அடைய எண்ணினாள் அன்றோ?
இதேபோல் கன்னிப்பெண்கள், இன்ன தகுதி, இன்ன அழகு, இன்ன யோக்யதாம்சங்கள் என்று எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், “அம்பிகையே! அன்னையே! ஆடிப் பூரம் தேவியே! நாங்கள் நல்லறம் கூடிய சிறந்த திருமண வாழ்வை வேண்டி வணங்குகின்றோம். நீ அளிக்கும் தீர்ப்பை ஏற்று, நீயே உவந்து அளிப்பவரை நற்கணவராக ஏற்போம்”, என்று உளமார வேண்டுவார்களெனில் நிச்சயமாக ஆடிப்பூரம் அம்மனின் திருஅருளால் பெரியோர்கள் மூலமாகவும், உண்மையான நியாயமான ஜாதக பரிவர்த்தனை மூலமாகவும், ஆழ்ந்த நம்பிக்கை மூலமாக நல்ல கணவனைப் பெறுவர்.
ஜாதி, இன, குல பேதமின்றி வயதான, 60,70,80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகள் ஒன்று கூடி.
1. செங்கற்களுக்கு மஞ்சள் பூசி எளிய ஹோமகுண்டம் அமைத்து.
2. மஞ்சள் நிற ஆடையணிந்து பசுநெய், பசுவிரட்டி, தாமரைத் தண்டு திரிகொண்டு ஹோம அக்னியை வளர்த்து.
3. மஞ்சள் நிற சமித்துக்களை ஆஹுதிகளாக அளித்து (எருக்கு, மா மர குச்சி, நெல்லி, மூங்கில், பலா இவற்றிற்கு மஞ்சள் பூசிடலாம்.)
4. இந்த பூரத்ரய ஹோமத்தில் மஞ்சள் நிறப்பொருட்களை (மாம்பழம், பலா, சோளம் etc.) ஆஹுதியாக அளித்து..
5. சிறிது தங்கம் (வசதிக்கேற்றபடி சிறிய தங்கப் பொட்டு) அல்லது மஞ்சள் வஸ்திரத்தில் பசுநெய் தோய்த்துப் பூர்ணாஹுதி அளித்திட வேண்டும். பூர்ணாஹுதி அளித்தல் என்றால் மஞ்சள் துணியில் அனைத்து ஹோம ஆஹுதிகளின் ஒரு சிறு பங்கை வைத்து ஒன்றாக, ஒரு முடிச்சாக ஆக்கி, பசு நெய்யில் தோய்த்து, அக்னியில் இட்டு ஹோமத்தைப் பரிபூரணமாக்கி முடித்தல் என்பது பொருளாகும். இதன் பிறகு நைவேத்தியத்துடன், சாஷ்டாங்க வணக்கத்துடன் ஹோமம் நிறைவு அடைகிறது.

ஸ்ரீஆடிப்பூர அம்மன்
பட்டீஸ்வரம்

6. பூரத்ரய ஹோமம் செய்தல் என்றால் மிகவும் செலவாகும்.மந்திரங்களை நாம் அறியோம் என்று அஞ்சுதல் வேண்டாம். நீராடி, உலர்ந்த ஆடையணிந்து, தூய்மையான உடல் மற்றும் உள்ளத்துடன் எவரும் மேற்கண்ட முறையில் அவரவர் வசதிக்கேற்ப பசுநெய், பசுவிரட்டி, ஆல மரக்குச்சிகள் கொண்டு, ஒரு சிறிய புதிய மஞ்சள் துணி கொண்டு மிகமிக எளிய முறையில். ரூ.50க்குள் ஹோமத்தினை நிகழ்த்திடலாம். பலரும் ஒன்று சேர்ந்து இதனைச் சத்சங்க ஹோமமாகச் செய்திடில் பலன்கள் பல்கிப் பெருகும். மேலும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இத்தகைய தெய்வீக சக்தி கிட்டிடுமாறு அரிய சமுதாயப் பணியைப் புரிந்திடலாம். இத்தகைய தியாக மனப்பான்மையே இறை தரிசனத்தை எளிதில் பெற்றுத் தரும் என்பது உறுதி.
“ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே பார்வத்யை ச தீமஹி
தந்நோ பூர்வ பல்குனீஸ்வர்யை ப்ரசோதயாத்”
என்ற காயத்ரி மந்திரத்தையோ அல்லது சித்புருஷர்கள் அருளியுள்ள
மஞ்சள் தம் மஹிமை பூண்டு
மஹேசனின் அம்சம் கொண்டு
மஞ்சுள வல்லி தந்த
மகத்தான பூரத்தம்மன்
மங்களம் தந்திடுவாளே
மஞ்சள் நல் ஆகுதியாலே!
என்ற தீந்தமிழ் தெய்வ மந்திரத்தையோ ஓதி ஆஹுதியை அளித்திட வேண்டும்.
இவ்வாறாக ஸ்ரீமஞ்சுள தேவி அளித்த ஆடிப்பூரம் தேவியின் மஹிமையை அறிந்தோமன்றோ? மேற்கண்ட ஹோமத்தைப் பல்வேறு காரணங்களால் கடைபிடிக்க இயலாத பக்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப ஸ்ரீஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளி உள்ள தலங்களில் ஸ்ரீஅம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து இயன்றால் புறப்பாட்டு உற்சவத்தை நிகழ்த்தி, மஞ்சள், தாம்பூலம், மஞ்சள் நிற ஆடைகளை ஜாதி பேதமின்றி ஏழைப் பெண்களுக்கு அளித்து வந்திடில், திருமணத் தடங்கல்கள் நீங்குவதோடு நல்வித திருமண வாழ்வு அமைந்திடும்.
பலன்கள் :- காதல், செல்வம், அந்தஸ்து, பதவி, கௌரவம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்றவற்றால் பெரியோர்களின் விருப்பமின்றி, உண்மையான ஜாதக பரிவர்த்தனங்களுமின்றி திருமணம் புரிந்து தற்போது திருமண வாழ்க்கையில் அதிருப்தி கொண்டு இருப்போரும், பெரும் துன்பச் சூழ்நிலைகளில் உழல்வோரும் மேற்கண்ட முறையில் ஸ்ரீஆடிப்பூரம் அம்மனை மனமுருகி வேண்டிடில் ஸ்ரீஅம்பிகையே தக்க நல்வழி காட்டுவாள்... சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் போல் ஆடிப்பூரம் தேவியும் மகத்தான சக்தி கொண்டவள். ஆனால் கலியுகத்தில் புனிதமான திருமண வாழ்க்கை என்பது அதனுடைய சிறப்பு இயல்புகளையும், தெய்வீக அம்சங்களையும் பெருகி வரும் அதர்ம நெறிகள் காரணமாக இழந்து வருவதாலோ என்னவோ ஆடிப்பூரம் அம்மனும் தன்னுடைய தரிசனத்தைச் சில கோயில்களுக்குள்ளேயே அமைவதாகக் குறைத்துக் கொண்டு விட்டாள். எதையும் தேடிச் சென்றால் தானே அதனருமை தெரிய வரும்? எனவே ஆடிப்பூரம் அம்மனைத் தேடி செல்லுங்கள். அப்போதுதான் அம்பிகையின் மகத்துவம் தெரியவரும்..
தேடிடில் நாடிவரும்,,, ஒரு காலத்தில் உயர்வு பெற்றிருந்த ஸ்ரீஆடிப்பூரம் அம்மனின் வழிபாடு மக்களுடைய அசிரத்தையால் தற்போது மறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளியுள்ள தலங்களில் கூட உற்சவ விக்ரகமாகத் தனிப்பட்ட இடத்திலோ அல்லது பிரசித்தி பெறாது தனி சந்நதியிலோ எழுந்தருளி அம்பிகை சாந்தத்துடன், அமைதியுடன் தன் மகத்தான தெய்வீக சக்தியை வெளிக் காட்டாது “சிவனே என்று நாடி வருபவர்க்கு அனைத்தையும் கூட்டித் தருவேன்” என்றவாறாக மௌனமாய் வீற்றிருக்கின்றாள்.. இனியேனும் விழித்தெழுந்து ஸ்ரீஆடிப்பூரம் அம்மனின் அருள் சக்தியைப் பெற விழைவீர்களாக! பழமை காரணமாக அம்பிகை எங்கெங்கோ வீற்றிருப்பினும் தேடி பிடித்து ஆடிப்பூரம் தினத்தன்று ஸ்ரீஆடிப்பூரம் தேவியை அபிஷேக ஆராதனைகளுடன் பூஜித்து உங்கள் பிராத்தனைகளை அம்பிகையிடம் செலுத்திடுங்கள். ஈஸ்வரியை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்து வைத்தால் அம்பிகையே உங்களை நோக்கி மூவாயிரம் அடிகள் எடுத்து வைக்கின்றாள் என்பது திண்ணமே...

ஸ்ரீபாலாம்பிகை திருமாந்துறை

ஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளி உள்ள இடங்கள்
1 திருச்சிற்றேமம் (சிற்றாய்மூர், சித்தாய்மூர்) திருவாரூர், திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி அருகே
2. அம்பர் பெருந்திருக்கோயில் (அம்பல், அம்பர் – அம்பர் மாகாளம்) மாயவரம் – பூந்தோட்டம் அருகே
3. ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில் (புள்ளிருக்கு வேளூர்) மாயவரம் – சீர்காழி அருகே.
4. திருப்பனந்தாள்
5. பட்டீஸ்வரம்
உற்சவ விக்ரகமாயிருப்பின் உவந்தே அனைத்துப் பூஜைகளையும் வேண்டி விரும்பி கேட்டுச் செய்க... தக்க ஆலய பெரியோர்களின் அனுமதியுடனும், துணையுடனும், இவ்விடங்களிலேயே ஸ்ரீஆடிப்பூரம் அம்மனின் ஹோமத்தை நிகழ்த்திடில் பல அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம். வடக்கு முகமாகச் செல்கின்ற புண்ணிய நதிகளிலும் நதிக்கரைகளிலும், கோயில்களிலும் ஆடிப்பூரம் அம்மனை எண்ணி தியானித்து வழிபடுவது சிறப்புடையதாகும்
1. திருப்பூவனம் (மதுரையருகில்..) வைகை வடக்கு முகமாக,
2. திருமழபாடி  - காவிரி வடக்கு முகமாக (கொள்ளிடம் – பொன்னி)
3. திருமாந்துறை – திருச்சியருகில் – ஸ்ரீகாயத்ரீ நதி வடக்குமுகம்
4. வடரங்கம், ஆச்சாள்புரத்துக்குக் கிழக்குப் பகுதியில், திருமங்கலக்குடி, கஞ்சனூர், திருக்கோடிக்கா, குற்றாலம், மாயவரம், சுவேதாரண்யம், குறுக்குக் காவேரி – வடக்கு முக நதி ஓட்டம்.
இத்தகு தெய்வத் திருத்தலங்களைக் காண சற்றே முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சியில் நீங்கள் செலவிடும் நேரமனைத்தும் இறைப் பணிக்காகச் செலவழிக்கப்பட்ட நேரம், நீங்கள் உண்மையாக வாழ்ந்த உயர்ந்த நேரங்களாகும். மற்றெல்லாம் சுயநலத்தில் கழிந்தவையே!

கும்பாபிஷேக குறைகள்

கும்பாபிஷேகம் – சில ஆன்மீக விளக்கங்கள்
கேள்வி :- தஞ்சாவூர் கும்பாபிஷேக வைபவத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி ஆன்மீக ரீதியான காரணங்களை விளக்கினால் பக்தர்களாகிய நாங்கள் தெளிவு பெற்றிடுவோம்.
பதில் : மனித அறிவு கொண்டு எவ்விதப் பாதுகாப்பு முயற்சிகளையும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது முதற்கடமையாகும். அனைத்தும் இறைவன் செயல் என்பது வேதவாக்காகப் புனிதமான உண்மையாயினும் இறைவன் நமக்களித்துள்ள உடல், அறிவு, பகுத்தறியும் தன்மை போன்றவற்றைக் கொண்டு எச்செயலையும் மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். குழந்தைக்கு அனைத்தையும் இறைவன் செய்வான் என்று நாம் சும்மாவா இருக்கிறோம்? பாலூட்டி, சீராட்டி, வளர்த்து ஆளாக்குவது பெற்றோருக்கு இறைவன் இட்ட கடமையன்றோ! உலகில் நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவிற்கும் செயலுக்கும், ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு என்பதைப் பன்முறை நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். இதே போன்று தஞ்சை பெருஉடையார் திருப்பணி வைபவத்தில் நடந்த சம்பவத்தைக் கொண்டு நமக்கு பொதுவாக ஏற்பட்டுள்ள பாடங்களை நன்றாக உணர்ந்து அதற்குரித்தான முன்னெச்சரிக்கை முறைகளை இனியேனும் பிற இடங்களில் பக்குவமாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆலயக் கும்பாபிஷேகங்களில் ஏற்படுகின்ற பிழைகளைப் பற்றி கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீஅகஸ்தியர் விஜயம் இதழ்களில் விளக்கி வந்துள்ளோம். ஆகமக் கோட்பாடுகள் நன்முறையில் கடைபிடிக்க இயலாமல் போகின்றன என்று கூறுவதைவிட பக்தி சிரத்தையுடன் செய்ய வேண்டிய இறைப்பணியில் பங்கம் ஏற்படுமேயானால் அதற்கு நம்முடைய தவிர்க்கக் கூடிய பெருந்தவறுகளே காரணமென அறிக!
1. SAND BLASTING போன்ற நவீன முறைகள் சிலா ரூபங்களின் அங்கங்களை பின்னமாக்குவதால் இத்தகைய முறைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துத்தான் தீரவேண்டும்.
2. சித்புருஷர்கள் அருளியுள்ள அஷ்டபந்த சூர்ணக்காப்பு, திலவட்டக் குழம்புக் காப்பு, சோற்றுக் காப்பு, கொள்ளுக் காப்பு, தான்யக் காப்பு என ஏனைய 1001வித மூலிகா பந்தனங்களால் மட்டுமே தெய்வச் சிலைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். கை நகங்களாலோ கூரிய கருவிகளைக் கொண்டோ சிலைகளை ஒருபோதும் சுரண்டுதல் கூடாது. வாஷிங்சோடா, துணி வெளுப்பதற்கான வாஷிங் பவுடர் மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, கடுஞ்சாபத்தைத் தேடிக் கொள்ளுதல் ஆகாது.
3. பாலாலயம் செய்த பின்னும், தெய்வச் சிலைகளுக்குச் செலுத்த வேண்டிய பக்தியில் ஒரு சிறிதும் குறைதல் கூடாது. “ஏதோ பாலாலயம் செய்து விட்டோம்” என்ற அசிரத்தையில் லிங்கத்தின்/சிலைகளின் மீது கம்பு, கல், மண், தூசி, சிமெண்ட், பெயிண்ட் அனைத்தும் சிலா ரூபங்களில் படியுமாறு இறைப் பணிபுரிந்தால் கடும் தோஷங்களும், பாவங்களும், சாபமும் தானே விளையும்!
4. இறைத்திருமேனி சிலாரூபங்களில் ஈயம், வெள்ளீயம், அரக்கு போன்றவற்றைக் காய்ச்சி ஊற்றுதல் தகாது. இதற்கென சிறப்பான அஷ்டபந்தன மருந்து கலவைகள் உண்டு. மேற்கண்ட அனைத்தும் பொதுவாக எல்லாக் கோயில் கும்பாபிஷேகங்களிலும் அறிந்து உணர வேண்டியதாகும்.
மேலும், தஞ்சைப் பெரிய கோயிலில் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்தது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஜீவன்களின் ஆத்ம சாந்திக்காகவும் கோயில் திருப்பணிகளில் அறிந்தோ, அறியாமலோ நிகழ்ந்திருக்க கூடிய தவறுகளுக்கானப் பிராயச்சித்தங்களுக்காகவும் கடைப் பிடிக்கவேண்டிய வழிபாடுகளைப் பரிபூர்ணமாக பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றிய பின்னரே கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். எப்போதுமே பின்னர் விளைகின்ற சில சம்பவங்கள் தான் இறைப்பணிகளில் நிகழ்ந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி நம்முடைய தவறுகளுக்கானப் பிராயச் சித்தங்களைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தைக் கோடிட்டுக் காண்பிக்கின்றன . ஆலயத் திருப்பணிகளில் நிகழ்கின்ற தவறுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும், நாம் பன்முறை விவரித்து வந்துள்ளோம். ஜாதி, மத, இன குல பேதமின்றி பக்தர்கள் சத்சங்கமாக ஒன்று கூடி தக்க சற்குருமார்களின் அருளுரையின்படி, அவரவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில், எவ்விதத் தவறுகளுமின்றி நன்முறையில் திருப்பணிச் செயல்கள் நடைபெற ஆழ்ந்த இறை நம்பிக்கையுடனும், மக்களுக்குச் சேவை செய்கின்ற சுயநலமற்றத் தியாக மனப்பான்மையுடனும் முன்வந்து பணியாற்ற வேண்டும்.
ஒரு கோயில் கும்பாபிஷேகமெனில் சமுதாயத்தின் பலவகையினரும், பல்வேறு முறைகளில் பங்கு கொள்கின்றனர். இது பொதுநல இறைப்பணியாதலின் அனைவரும் சுயநலம், பணம்/லாபம் ஈட்டும் எண்ணம், பேராசை போன்ற எண்ணங்கள் ஒரு துளியுமின்றி, பக்தி, தியாகம், அன்பு, மக்கள் சேவையே மகேசன் சேவையென பணியாற்றும் உயரிய மனப்பான்மை போன்ற மனிதநேய, ஆன்மீக, தெய்வீக இறை அருட்சுரக்கும் உணர்வுகளுடன் செயலாற்றிடின் கும்பாபிஷேகங்கள் சிறப்புடன் நடைபெறும். இனி ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிகள் பலவற்றிலும் நிகழ்கின்ற பொதுவான தவறுகளை, விவரிக்கத் தொடங்குகின்றோம்.
வேள்வியானது கும்பாபிஷேகத்தின் சிறப்பான அங்கங்களுள் ஒன்றாகும். வேள்வி முறைகளை அறிந்தோர், ஆலய வேள்விகளில் பக்தி சிரத்தையுடன் எவ்வித கட்டணமும் பெறாது வேள்விகளை நடத்திட வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் வந்து வணங்குகின்ற இறைத் திருமேனிக்கு மந்திர சக்திகளைக் கூட்டும் வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி சாந்தமான மனத்துடன் சன்மானமோ வேறு எதையுமோ பெறாது மனதார அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வேள்வியினைச் செய்தல் வேண்டும். இத்தகைய தியாக மனப்பான்மை மிகுந்திருத்தலே இறைவனை ஆனந்தப்படுத்தும். வறுமையோ, தரித்திரமோ எந்தக் குடும்பச் சூழ்நிலையிலும், எவ்வித எதிர்பார்ப்புமில்லாது வேள்விகளை ஆலயங்களில் தம்முடைய மாபெரும் கடமையாகச் செய்து, எவ்வித ஊதியத்தையும் எதிர்பார்க்காது வேள்விகளை நடத்தித் தருதல் வேண்டும். இவ்வித இறைவுணர்வு கூடிடில், வேள்விகளில் எவ்வித பங்கமும் ஏற்படாது. கடவுள் கருணையால் அனைத்தும் சிறப்புடன் நடைபெறும். இத்தகைய தெய்வீகத் தன்மை உடலிலும், உள்ளத்திலும், மனதிலும், பரிபூர்ணமாகக் குடிகொண்டிருந்தால் தான் வேள்வியில் எத்தகைய இடர்களும் ஏற்படாது அனைத்தும் நன்மையாக முடியும்.
ஆனால் வேள்விக்கான திக்குகள், அக்னி குண்டத்தின் அமைப்பு, வேள்விக்கான புனித நேரம் போன்ற அம்சங்கள் நன்முறையில் அமைந்திடினும் வேள்வி மூலம் வருமானத்தைப் பெருக்குகின்ற எண்ணம் ஏற்படின் அது வேள்வியின் தெய்வீகத் தன்மையைப் பாதிக்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள் வந்து வணங்கிச் செல்கின்ற வேள்விச் சாலையில், சுயநலமான எண்ணம் ஒரு சிறிதும் வேள்வியை நடத்துவோருக்கு ஏற்படலாகாது. சுயநலச் சிந்தனைகளுடன், வேள்விகளினால் வருமானத்தைப் பெறுகின்ற எண்ணங்களுடன், அசிரத்தையுடன் பக்தி குன்றி வேள்விக் கிரியைகளில் ஈடுபட்டால் இதன் விளைவாக முன்னூறு வகையான தோஷங்கள் ஏற்படுவதாக சித்புருஷர்களின் கிரந்தங்கள் கூறுகின்றன. ஒரு முறை பிட்சாடணராக ஈஸ்வரன் வடிவு கொண்டிட அதனை அறியாது வேத மந்திரங்களையே அவர் மீது ஏவி, அதனால் தாருகாவனத்து முனிவர்கட்கு விளைந்த சாபங்களை நாம் அறிவோம்.
இறையருளால் தாம் கற்ற வேதத்தை சாதி, குல, பேதமின்றி சமுதாய நல்வாழ்க்கைக்காகப் பயன்படுத்த வேண்டுமோ அதனைத் தம் சுயநலத்திற்காகவும் சம்பாதித்தியத்திற்கும் பயன்படுத்துகையில் பிட்சாடன புராண நெறியின் படி அது சாபமாக மாறி இன்னல்களைத் தருகிறது. இதற்கானப் பிராயச்சித்தங்களையும், பரிகாரங்களையும் சித்புருஷர்கள் தாம் அளிக்க முடியும்.
தற்போதைய கும்பாபிஷேகங்களில் ஹோம குண்ட அமைப்புகளில் ஏற்படுகின்ற பல தவறுகளே ஹோமத்தின் பூர்ணப் பலனை பெற இயலாமைக்குக் காரணமாகிறது. ஹோம கர்த்தா எனப்படுபவர் புனிதமான உள்ளத்துடன் கோடிக்கணக்கான ஜீவன்களின் தெய்வீக உய்விற்காகத் தம்மை இறைவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதை உய்த்துணர்ந்து சமுதாய நலனுக்காகத் தன் தோள்களில் வைக்கப்பட்டுள்ள அருட்பெரும் பணியைத் தியாக உள்ளத்துடன் திறம்பட ஆற்றுதல் வேண்டும். ஹோமகர்த்தாவின் எவ்விதத் தீட்டோ வேள்வியின் பலாபலன்களைப் பாதிர்ப்பதோடன்றி சமுதாயத்திற்குக் கிட்ட வேண்டிய பரிபூர்ணமான தெய்வ அனுக்கிரஹமும் கிட்டாமல் போய் விடுகிறது. எனவே வேள்வியில் பங்கு பெறுவோர், தங்களுக்குரிய தெய்வீகக் கடமைகளை உணர்ந்து, அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பரந்த உள்ளத்துடன் இறைப்பணி ஆற்றிட வேண்டும். பித்ரு சாந்தி, ஆயுள் விருத்தி, பிறந்த நட்சத்திர வழிபாடு. பிரார்த்தனா ஹோமம், சந்தான பாக்கியம், கல்வி (வித்யா) அபிவிருத்தி, நோய் நிவாரணம், நவக்கிரஹப்ரீதி போன்ற பலவிதமான காரியங்களுக்காகப் பல்வகை ஹோம குண்டங்கள் உண்டு. இதே போல் சுயம்பு மூர்த்தி, தேவ பிரதிஷ்டை/மானுட பிரதிஷ்டை/ சித்தபிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகள், தெய்வாவதார மூர்த்திகள்/ மூலமூர்த்திகள் நோக்கும் திசை, நந்தி நோக்கும் திக்கும், ராஜகோபுரம் மற்றும் கருவறை கோபுரங்களில் உயரம், விமான அமைப்பு போன்ற பல அம்சங்களைப் பொறுத்தும் ஹோம குண்டங்கள் அதற்குரித்த முறையில் அமைக்கப்பட வேண்டும். ஹோம குண்டங்கள் பற்றிய அனைத்து விளக்கங்களும் சித்புருஷர்களின் கிரந்த நாடிகளில் அளிக்கப்பட்டுள்ளன.
தஞ்சைக்கென தனித்த ஹோமம்
தஞ்சை பெரிய கோயிலில் அதனுடைய விசேஷ அமைப்புகளுக்கேற்ப பெரிய நந்தி, ஸ்ரீவராஹி அம்மன், அற்புதமான நாகப் பிரதிஷ்டைகள், லிங்க வடிவில் நவக்கிரஹங்கள், சதலிங்க பிரதிஷ்டா பூமி என விசேஷப் பெயர் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லிங்க மூர்த்திகளின் அமைப்புகள் போன்ற பல்வேறுவிதமான ஆகம, வைதீக, ஆத்ம கோட்பாடுகளைக் கொண்டு இக்கோயிலில் அமைக்கப்பட வேண்டிய விசேஷமான ஹோமகுண்டங்களைப் பற்றிய விபரங்கள் அவற்றில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இறையருளாலும் கருவூர் சித்தரின் குரு அருளாலும், இவற்றை நன்கறிந்த சித்புருஷர்கள் இன்றும் நம்மிடையே உள்ளனர். இத்தகையோரை நாடி, பெறவேண்டிய கும்பாபிஷேக இறைநெறி முறைகளைப் பெற்றிடுக! போகரும், கருவூராரும் இன்னோரன்ன சித்புருஷர்களும், இன்றும் உலா வருகின்ற இப்புனித பூமியில் மகத்தான சக்தி வாய்ந்த இக்கோயிலுக்குரிய விசேஷ ஹோமகுண்ட அமைப்பு முறைகளை அறிந்து அவற்றைக் கடைபிடித்து அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக இறைப்பணியாற்றுதல் வேண்டும். ஒவ்வொரு கோயிலுக்கும் உரித்தான ஹோமகுண்ட அமைப்புகள் தனித்தனியே உண்டு. அந்தந்த முறைகளில் அதற்குரித்தான ஹோமகுண்டங்களை அமைத்தால் தான் ஹோமங்களின் பரிபூர்ணமான பலன்களைப் பெற முடியும். உதாரணமாக, தஞ்சை கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் லிங்க வடிவில் அமைந்திருப்பதாலும், இவற்றில் சந்திர பாணலிங்கம், மற்ற கிரக மூர்த்திகளை விட உயர்ந்திருப்பதாலும் இக்கோயிலுக்குரிய வேள்வியில் சந்திரபாண கிரிப்பிரகாச முறைப்படி ஒரு ஹோமகுண்டத்தை அமைத்திடல் வேண்டும். இங்கு விசேஷமான நாக மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், அஸ்தீக சித்தர் அருளியுள்ளபடி பஞ்சாக்னி தீபமுறையில் பஞ்சமி திதியன்று ஒரு ஹோமகுண்டம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு கோயிலுக்கும் உரித்தான ஹோமகுண்ட அமைப்பு முறைகள் உண்டு.

அமுத தாரைகள்

அமுத தாரைகள்
1. ஓரகடம் ஸ்ரீரகுநாதர்
திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் (டவுன்பஸ் ரூட் எண் T11)  உள்ள ஓரகடத்தில் வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீராமர் சேவை சாதிக்கின்றார். அருகிலிருக்கும் குன்றில்தான் ஸ்ரீவாடாமல்லீஸ்வரராக சிவலிங்க மூர்த்தியும் அறம் வளர்த்த நாயகியாக (தர்மசம்வர்தினி) ஸ்ரீபார்வதி தேவியும் அருள்பாலிக்கின்றார். எதிரில் தாமரைத் தடாகத்தில் இன்றும் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்க இம்மலையிலிருந்து தான் ஸ்ரீபார்வதி தேவி 32 விதமான அறங்களை முறையாகச் செய்து ஜீவன்களுக்கு அருள்பாலித்து ஸ்ரீவாடாமல்லீஸ்வரரின் தரிசனத்தையும், சீதாபிராட்டியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள ஸ்ரீராமனை தரிசிக்கும் பாக்யமும் பெற்றாள்.

ஒரகடம்

2. ஸ்ரீபூண்டிமஹான், கோரக்க சித்தர் (வடபொய்கை நல்லூர் – நாகை அருகே) போகர் சித்தர் (பழநி) போன்ற சித்புருஷர்களுடைய ஜீவ சமாதிகளில் (ஜீவ ஆலயங்களில்) வியாழக்கிழமை தோறும் குருஹோரை நேரத்தில் (காலை 6-7, பகல் 1-2, இரவு 8-9) தொடர்ந்து சாம்பிராணி தூபம் இட்டு வந்திடில் குரு அருளால் திருமணத் தடங்கல்களும், தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும்.
3. வீட்டிலோ, வியாபாரத்திலோ பணக்கஷ்டம் ஏற்பட்டால் ஒரு மண்டலமாகிய 48 நாட்களுக்கு தினமும் எட்டு முழுத்தாமரை மலர்களைக் கொண்டு ஸ்ரீமஹாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து இரண்டு ஏழை சுமங்கலிகளுக்கு பிரசாதத் தாமரை மலருடன் அன்னமும் அளித்துவர அற்புதமான முறையில் பணக் கஷ்டங்கள் தணியும்.
4. கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு நிவாரணமாக, செவ்வாய் கிரஹ ப்ரீதியாக, செவ்வாய்க்கு அதிபதியான முருகனின் சந்திர காந்தக் கல்லாலான உருவத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வர, அதிஅற்புதப் பலன்கள் கிட்டும்.
5. குழந்தைகளின் கல்வி நன்கு விருத்தியடைய சந்திர காந்தக் கல்லினாலான விநாயகருக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து பாலைப் பிரசாதமாக குழந்தைகளுக்கு அளித்துவர மனதிற்கு அதிபதியான சந்திர பகவானின் கருணையால் தெளிந்த அறிவு ஏற்பட்டு குழந்தைகள் தானே விருப்பங் கொண்டு நன்கு படிக்கத் தொடங்குவர்.

6. தெற்கு திசை நோக்கிப் பல் துலக்கிடில் தேவையில்லாத வீண் பழிகளும் குற்றங்களும் வந்து சேரும். திசைக்கும் பல் துலக்குதலுக்கும் என்ன சம்பந்தம்? தெற்கு திசை, நோக்கியவாறு நின்று கை, கால்களைச் சுழற்றிப் பாருங்கள். ஒருவித மயக்கமான மனோ நிலையையும் தலை பாரமும் உருவாவது தோன்றும். மேலும் பலவிதமான தீயசக்திகளும் தீய எண்ணங்களும் விண் வெளியில் பரவிக்கிடக்கின்றன அல்லவா. இவற்றில் வசைகளை, பழிகளை உருவாக்கும் தீவினை சக்திகள் தெற்கில் தான் குடி கொள்கின்றன.
7. தங்களுடைய வியாபாரப் பொருட்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வியாபாரம் நன்கு பெருக, ஆஞ்சனேயருக்குரிய மூல நட்சத்திரந் தோறும் உளுந்து எள் கலந்த பண்டங்களை (தட்டை, முறுக்கு etc..) மாலையாக அணிவித்து அவற்றை ஏழை எளியோருக்கு விநியோகித்து வர சந்திர பகவான், சனீஸ்வரரின் கடாட்சத்தால் நற்பலன்கள் ஏற்படும்.
8. ஈசன் வாக்கு : அம்பிகையே! நீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்கு ஈடான ஒரு தியானத்தை அறிய வேண்டும். ஸ்ரீராம நாமத்தை எவன் ஒருவன் தியானிக்கின்றானோ அவன் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பொருள் அறிந்து ஓதிய பலனை எளிதில் பெற்று விடுகிறான்.
9. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அனைவருக்கும் தந்த ஸ்ரீகமல முனி
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்”
நான்கு மறைகைன் சாராம்சமாக விளங்கு இந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தினை ஜாதி, இன பேதமின்றி அனைவரும் ஓதிடலாம். வடமொழி, வேதமறைகளை ஓத இயலவில்லையே என்று ஏங்குவோரும் வடமொழி மறைகட்கு ஈடாக விளங்கும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற தமிழ் மறைகளின் சிறப்பையுணர்ந்து ஓதாதோரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் விடாது வைராக்யத்தோடு ஓதிவர அனைத்து பாக்யங்களையும் பெற்றிடலாம். ஸ்ரீவிஸ்வாமித்திர மஹரிஷி பெற்றுத் தந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மனித குலம் மட்டுமின்றி, புல், பூண்டு என அனைத்து ஜீவன்களின் மேன்மைக்காகவும், யாங்கணும் பரப்பி, இதனை ஓத இயலாத, அறியாத ஜீவன்களும் இம்மந்திரத்தின் பலன்களைப் பெறும் பொருட்டு அவர்கட்காகத் தாமே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அன்றும் இன்றும் என்றும் ஜபித்து வருபவரே ஸ்ரீகமல மாமுனி ஆவார்.
10. கடவுள் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் அகல
தீய நட்புகளினாலும், தேவையற்ற பத்திரிக்கைகள், நூல்களைப் படிப்பதினாலும், துன்பங்கள் மிகும்போதும் இறைவன் மேல் கொண்டுள்ள நம்பிக்கை தளர்கின்றது. இறையருளினால் தான் இவ்வுலகம் இயங்குகின்றது, ஒவ்வொரு அசைவுடன், ஒவ்வொரு விநாடியும் நாம் வாழ்வது இறைப் பெருங்கருணையால் தான் என்ற நம்பிக்கை நிலைத்து நிற்க, கீழ்க்கண்ட பாடலை இடைவிடாது ஓதி வருக!
ஆசைதனை யிரண்டாக்கி யழியா அழியுமெனக் கூறியுனைப்
பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீசுவரியென்பது முன்நாமமே!
(ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதியிலிருந்து)
11. திருமணத் தடங்கல்கள் தீர
பலவிதமான தோஷங்களாலும், சாபங்களாலும் திருமணத் தடங்கல்கள் ஏற்படுகின்றன. இப்பிறவியில் பொறாமை, ஆசை, குரோதம், அந்தஸ்து, பகைமை காரணமாக எவருடைய திருமணத்திற்கேனும் ஊறு விளைவித்திடில் அதுவே சாபங்களாகவும், தோஷங்களாகவும் மாறி மறுபிறவியில் திருமணத் தடங்கல்களுக்குக் காரணமாகிடும். கீழ்க்கண்ட துதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஓதிவர, அனைத்துத் துன்பங்களும் நீங்கி சுபமங்களகரமாகத் திருமண வாழ்வு நிச்சயமாக அமையும்.
சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்
நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தானே.
(ஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் குருவருளால் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியுள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதியிலிருந்து.)

ஆடிப்பூர அம்மன்

ஆடிப்பூரம் அம்மன்
சில கோயில்களில் ஆடிப்பூரம் அம்மன் என்ற பெயரிலேயே அம்பிகை தனிச் சந்நதி பூண்டு தனிப்பெரும் தேவியாய் அருள்பாலிக்கின்றாள். கேரளத்தில் இன்றும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் பல மகத்தான உத்சவங்கள் பெரு மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றன. ஈஸ்வரியானவள், ஈஸ்வரனின் பற்பல அவதார மேன்மைகளில், ஈஸ்வரனிடம் ஐக்யமாவதற்கும், இடப்பாகம் பெறுவதற்கும், பல இறைப்பெரும் அவதாரங்களில் இறைவியாவதற்கும், சாபங்கள் தீருவதற்கும், தட்ச யாகத்தின் போதும், இதர புராண நிகழ்ச்சிகளின் தொடர்பாகவும், அக்னியில் ஊசி மீது நின்ற கோலத்திலும் ஏனைய கடும் தவங்களையும் மேற்கொண்டதை நாம் அறிவோம்.
ஒரு முறை இறைவன் திரிபுர சம்ஹார மூர்த்தியாக அவதாரம் கொள்ள விழைந்திட.. அம்பிகை திரிபுர சம்ஹார மூர்த்தியின் துணையாக விரும்பினள். ஆனால் இது எளிதல்லவே! ஈஸ்வரனின் எத்தனையோ அவதாரங்களில் தாம் சிறப்புறு தேவியாய் இலங்க முடியாம்ற் போனது குறித்து வருந்திய அம்பிகை, அதற்குரிய தெய்வீக பூஜைகளை வேண்டி ஸ்ரீமஹாவிஷ்ணுவை நாடினள். அவரும்.
“பலாவின் கீழ், கீழ்நோக்கு நாளில்
கீர்த்தியைப் பெறுவாய்”
என்று அருள்பாலித்தார்.. ஸ்ரீமஹாவிஷ்ணுவே தம் திருக்கரங்களில் பார்வதியைக் குழந்தையாக்கி பலாமரத்தின் அடியில் இட்டிட, பல்குனி மகரிஷி என்பவர் அக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். சிறு குழந்தையாயினும் அதன் அழகிய கூரிய கண்கள் பலா மரத்தின் மேலேயே பெரும்பாலும் லயித்திருப்பதைக் கண்ட பல்குனி மகரிஷி தம் பத்னியுடன் அப்பலா மரத்தினடியிலேயே தங்கி வசிக்கலானார். அக்குழந்தைக்கு ஆஷாடதேவியின் பிறப்பைக் கேள்வியுற்ற பிரம்மா அக்குழந்தை தம்மால் படைக்கப்படாது எங்கிருந்தோ வந்ததெனச் சினம் கொண்டார். பிரம்மா மாயையில் சிக்குண்டதால் ஆஷாட தேவியின் தெய்வீகப் பிறப்பை அவரால் அறிய முடியவில்லை. எவ்விதமான பாவ, புண்ணியமும் எவ்விதக் கர்மவினைகளும் இன்று ஒரு ஜீவன் வளர்கின்றது என்பதை அவரால் நம்பமுடியவில்லை. நல்ல வேளை சினத்தினால் அவர் எதனையும் செய்யுமுன் நாரத மகரிஷி அங்கு வந்து, “தந்தையே! சற்றே நிதானித்துச் செயல்படுவீர்களாக”, என அறிவுரை கூறிச் சென்றார்.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தெய்வப்ரகாசத்துடன் ஜோதியாய் பரிணமித்த ஆஷாடதேவி. சர்வேஸ்வரனையே சதாகாலமும் பூஜித்து வந்தாள். இதற்குள் எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. திரிபுர சம்ஹாரம் மனிதக் கணக்கில் சில நொடிகளுக்குள் முடிந்துவிட்டது. ஆனால் எம்பெருமானின் திரிபுர சம்ஹாரக் காட்சியைப் பல யுகங்கள் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு மகிழ்ந்தனர் பல்லாயிரக்கணக்கான மஹரிஷிகளும், முப்பது முக்கோடி தேவர்களும், தேவியின் தவம் பரிபூரணம் அடையும் முன்னரே ஸ்ரீமஹாவிஷ்ணு காட்சியளித்தார்... “பார்வதி நீ தட்சிணாயனப் புண்ய காலத்தில் தோற்றம் பெற்றமையால், நீ அடைந்த வரங்கள், பூஜா பலன்கள், தவ சக்தி யாவும் கோடி கோடியாய்ப் பெருகிவிட்டன. எம்பெருமான் ஆதிசிவனின் பல அவதாரங்களுக்கும் இறைவியாய்த் திகழும் பாக்யத்தை இப்பலாமரத்தின் அடியில் நீ கைக்கொண்ட தவம் தந்துள்ளது. மேலும் பூர நட்சத்திரமானது பவித்ரமான பலன்களைத் தரவல்லது! ஆடிப்பூரம் அன்று சர்வேஸ்வரனாம் சிவபெருமானே ஆட்கொண்டு அருள் பாலித்திடுவார். உன்னை மஹரிஷிகளும் யோகியரும் தேவாதி தேவரும் வந்து தரிசித்த வண்ணமிருப்பர். யாவருக்கும் அருள்மழை பொழிந்து ஆனந்தம் அடைவாய்!” என்று அருளாணை இட்டார். இவ்வாறு பல யுகங்கள் கழிந்திட, இறைவனும் ஸ்ரீபிரம்மாவின் ஐந்தாவது சிரசைக் கொய்து அவர்தம் கர்வம் அகற்றிட ஸ்ரீபிரம்மா ஆஷாடதேவியின் மஹிமையை உணர்ந்தவராய், பிரம்ம மாயை அகலப் பெற்றார்! ஸ்ரீபார்வதி தேவியே ஸ்ரீஆஷாட தேவியாய்த் தெய்வீகப் பரிபாலனம் செய்கின்றனள் என உணர்ந்து தம் தவறுகளைத் திருத்திக் கொள்ள அம்பிகையின் கருணையை வேண்டி நின்றார்.
“அம்பிகையே! எமக்குரிய வாகனம் ஒன்றுமில்லையாதலின் சிருஷ்டிக்குப் பிரம்ம கணங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். இதனால் படைப்புத் தொழிலில் பல பின்னங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தாங்கள் தயவு கூர்ந்து அடியவனுக்குத் தக்க வாகனமளித்து அருள்தல் வேண்டும்”, என விண்ணப்பித்தார். அம்பிகயும் புன்முறுவலுடன்,
“திருமால் செப்பிய திருப்பூரம் நாளில்
 வருமாம் வாகனம் வரமெனக் கொள்வாய்”
எனக் கூறிட , அவரும் அத்திருநாள்வரை தவம் பூண்டு காத்திருக்கலானார்.
ஆடிப்பூரம் அம்மன் வந்தாள்
வந்ததே பூரம் - அதுவும் ஆடிப்பூரம்! ஆடிப் பூரத்தில் சர்வேஸ்வரனே பெருமாள் திருவருள் கூற்றின்படி, ஆஷாட தேவிக்குக் காட்சி அளித்தார். “பார்வதி! நீ பூர நட்சத்திரத்தின் அதிதேவதையாக விளங்குவதாலும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருக்கரங்கள் பட்டு உத்தமமான தட்சிணாயனப் புண்ய காலமான ஆடியில் அவதரித்து ஆடிப் பூரம் அன்று தெய்வாவதாரப் பரிபூர்ணம் பெற்றமையாலும், இன்று முதல் “ஆடிப்பூர அம்மன்” என்ற நாமத்தைப் பெறுவாயாக!
யாம் திரிபுரசம்ஹார மூர்த்தியாய்த் தோன்றிய போது நீ தேவியாய் இணைந்திடத் தவம் பூண்டனை! ஆனால் எம் அவதாரம் ஒரு சில நொடிகளே நீடித்தன! அறியாமை காரணமாக சகல மூர்த்திகளும், தேவாதி தேவியரும் அதில் எம்முடைய வாகனமாகவும், ஆயுதங்களாகவும் ஆயினர்! இதோ அவ்வாகனத்தில் உனக்காகவே திரிபுர சம்ஹார மூர்த்தியாகக் காட்சி தருகின்றோம்! பூலோக ஜீவன்களுக்கு மட்டுமின்றித் தேவாதி தேவர்களுக்கும், தேவமூர்த்திகளுக்கும் தெய்வீகச் சிறப்புடைய வாகனங்களை நிர்ணயிக்கும் அரிய பணியை நீ ஏற்பதோடு வாகன, ஆயுதங்களால் உண்டாகும் பற்பல துன்பங்களிலிருந்து அனைவரையும் கார்ப்பாயாக! மேலும் நீ தவமிருந்து ஒளி கூட்டிய பலாமரத்தின் தெய்வீக குணங்களையும் அனைவர்க்கும் உணர்த்துவாயாக! இல்லற வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்திட உன்னை அனைவரும் சிறப்பாக வழிபடுவார்களாக!” என்று கூறி அருள்பாலித்தார். சர்வேஸ்வரனே ஆஷாடதேவியின் தவத்தினால் ஆனந்தமுற்று, பலா இலையில் தம் சிரசிலிருந்து கங்கையை வர்ஷித்து ஆடிப்பூரம் அம்மனின் மேல் தெளித்தார். அது ஈஸ்வரியின் மேல் பட்டு பூமியில் தெளித்திட, அம்மையப்பனின் திருமேனியிற் பட்ட அப்புனிதமான தீர்த்தத்துளிகள் பட்ட இடங்களில் ஆடிப்பூர அம்மனின் திருஉருவங்கள் தோன்றின! அதன் பின்னர் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவமூர்த்திகளும் ஆஷாட தேவியைத் தரிசித்துவரங்கள் பெற்றனர். அனைவர்க்கும் பலா(ச) இலையில் புண்ய நீர் தெளித்து, பலாப்பழப் பிரசாதத்தைப் பல்குனி மகரிஷி அளித்தார். ஸ்ரீபிரம்மா தமக்குரிய வாகனங்களில் ஒன்றாகிய அன்னவாகனத்தைப் பெற்றதும், அன்னமாய் மாறிச் செய்த சாபங்களுக்குப் பரிகாரம் பெற்றதும் ஆடிப்பூரம் அம்மனிடத்தில் தான்!
ஆடிப்பூரம் அம்மனின் பூஜா பலன்கள்
ஆடிப்பூரம் அன்று
1, ஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளியுள்ள தலங்களில் அம்பிகைக்குப் பால் காவடியெடுத்து நடந்து வந்து சமர்பித்து, அபிஷேக ஆராதனைகள் செய்து பால் தானம் செய்திட முறையான வாகன பிராப்தி அமையும்.
2. கணவன், மனைவியிடையே பிணக்குகளிருப்பின், ஆடிப்பூரம் அம்மன் தலங்களில் இருவரும் பலாப்பழத்திற்கு மஞ்சள் குங்குமமிட்டுத் தலையில் சுமந்து பிரகாரத்தை மூன்று முறை வலம்வந்து, அம்மனுக்குப் பலாப் பழத்தை நைவேத்யம் செய்து ஏழைகளுக்குத் தேன் கலந்த பலாப்பழத்தைத் தானமாக அளித்திடில் வாழ்வு இனிமை பெறும்.
3. ஆடிப்பூரம் அம்மன் அருள் பாலிக்கும் கோயில்களில் இன்று பலா சமித்துகள் (குச்சி) கொண்டு எளிய ஹோமம் செய்வதால் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்ற மனைவி, கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழும் இனிய வாழ்க்கையைப் பெற்றிடலாம். ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்படுக!
“ஓம் ஆஷாடதேவ்யை ச வித்மஹே பராசக்த்யை ச தீமஹி
 தன்னோ பூர்வ பல்குனி தேவ்யை ப்ரசோதயாத்”
என்ற காயத்ரீ மந்திரம் ஓதி பலாப்பழம், பலா சமித்து, பசு நெய், பசு வரட்டி கொண்டு ஜாதி, இனபேதமின்றி எவரும் முறையான ஹோமம் நடத்திடலாம். இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது..
4. Taxi, Cabs, Omni Bus போன்ற வாகனத்தொழிலில் உள்ளோர் வாகன விபத்துகளின்றித் தொழில் நடைபெற ஆடிப்பூரம் அன்று அம்பிகைக்கு நிறைய பால், பலாப்பழம் அபிஷேகம் செய்து, பால், பலாப்பழம் தானத்துடன் கோமுக நீரைக் (அபிஷேக நீர் வெளிவரும் தாரை) கொண்டு வாகனங்களின் மேல் தெளித்திட வேண்டும்.
5. ஆடிப்பூரம் அம்மனுக்கு உற்சவம் இருப்பின் விக்ரஹத்தைத் தாங்கிச் செல்லுதல், சந்நதியைச் சுத்தம் செய்து தருதல் போன்றவை மிகுந்த புண்ணியத்தைத் தரும் தெய்வத்திருப் பணிகளாகும்.

வரலட்சுமி விரதம்

செல்வம் தரும் ஸ்ரீவரலட்சுமி விரதம்
 இலட்சுமி கடாட்சம் என்றால் பணத்தில் புரள்வது என்ற தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. கேரள நாட்டில் வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த ஒரு மாது ஸ்ரீஆதிசங்கரருக்குத் தன் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை அளித்திட அதனைக் கண்டு ஸ்ரீஆதிசங்கரர் மனமகிழ்ந்தார். எத்தகைய தரித்திர நிலையிலும், அதிதியாக வந்தவர்க்கு, வீட்டில் அன்னம் இல்லாவிடினும் உள்ளன்புடனும் பக்தியுடனும் ஒரு சிறு நெல்லிக்கனியை பிச்சையாக இட, ஸ்ரீஆதிசங்கரர் மனமகிழ்ந்து ‘கனகதாரா தோத்திரம்’ எனப்படும் அற்புத மந்திரத்தை ஓதிட, ஸ்ரீலட்சுமி தேவியே எழுந்தருளி அப்பெண்ணிற்குப் பொன்காசுகளைக் குவியல் குவியலாக அளித்தனள். புனிதத் துறவியாம் ஸ்ரீஆதிசங்கரர் தமக்கென்றா அச்செல்வப் பொழிவை வேண்டினார்? இல்லை, இல்லை! மகான்களுக்கும் யோகியருக்கும் பொன்னும், மண்ணும் அனைத்தும் ஒன்றாகத் தான் தென்படும். அளவுக்கு மீறிய பொற்காசுகளைப் பெற்ற அப்பெண்மணி அவற்றைக் கொண்டு என்ன செய்தனள் தெரியுமா? தனக்குக் கிட்டிய பொற்காசுகளைக் கொண்டு கேரளத்தில் உள்ள பல ஆலயங்களில் பல வகையான அற்புத இறைத்திருப்பணிகளை அப்பெண்மணி நிறைவேற்றி, தான் பெற்ற லட்சுமி கடாட்சத்தை நன்முறையில் பயன்படுத்தி உத்தமத் தெய்வீக நிலையை அடைந்தனள். இப்பெண்மணி லட்சுமி கடாட்சம் பெறக் காரணம் யாதெனில் அவள் எத்தகைய வறிய நிலையிலும் அவளுடைய குடும்பத்தில் ஆண்டு தோறும் விடாது எளிமையான ஸ்ரீவரலட்சுமி நோன்பை மேற்கொண்டு முறையாகக் கடைபிடித்ததேயாகும். அஷ்டலட்சுமி தேவியரின் அம்சங்கள் ஒருங்கே அமையப் பெற்றவள் ஸ்ரீவரலட்சுமி தேவி ஆவாள்.
லக்ஷ்மி கடாட்சமெனில்.... கோடி கோடியாய்ச் செல்வம் குவிந்தாலும் அச்செல்வம் எவ்வாறு பயனுள்ளதாக அமைகின்றது என்பதைப் பொறுத்தே அங்கு நிலவுகின்ற லட்சுமி கடாட்சத்தை நிர்ணயிக்க முடியும். எனவே பணக்காரர்கள் எல்லோரும் லட்சுமி கடாட்சம் உள்ளவர்கள் என்று கூறிட முடியாது. லட்சம் லட்சமாகச் சம்பாதித்து, மது, மங்கை, கேளிக்கைகள், சூதாட்டம், சினிமா, முறையற்ற காமம் எனப் பணத்தை விரயம் செய்திடில் அங்கே திருமகளா உறைந்திடுவாள்? இல்லை இல்லை! எட்டவே நின்று ஒதுங்கிடுவாள்!

லட்சுமி கடாட்சம் எனில் இல்லத்தில் ஸ்ரீலட்சுமியே நிறைந்திருந்து நன்முறையில் செல்வத்தைப் பெருக்கி, தர்மத்தை நிலைநாட்டி, நல்ல சந்ததிகளைக் கூட்டி அருள்பாலிக்கும் இடமாகும். வெறும் பணம் புழங்கும் ஏனைய இடங்களில் தீயொழுக்கமே நிலவுமாயின் பூர்வ ஜென்மப் புண்ணியமும், மூதாதையர்களின் தான தரும காரியங்களின் புண்ய சக்தியுமே பணமாகத் திரண்டிருக்கிறது என்பது பொருள். லட்சுமி கடாட்சத்தால் கிட்டும் செல்வம் வேறு, புண்ய சக்தியால் கிட்டும் பணம் வேறு என்பதை உணர்தல் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் நிறைந்திருந்தால் கூட மூதாதையர்களுக்குரிய அமாவாசை தர்ப்பணம், திவசம், படையல், பித்ரு பூஜை/ஹோமம் போன்றவற்றை முறையாக நடத்தி வந்தால் தான் பூர்வீக சொத்துக்களில் லட்சுமி கடாட்சம் தொடர்ந்து நிறைந்திருக்கும். மூதாதையர்களாகிய பித்ருக்களை முறையாக நினைவு கூர்ந்து வழிபடாவிடில் இல்லத்தில் குடிகொண்டுள்ள லட்சுமி கடாட்சம் குறையத் தொடங்கி வெறும் சொத்து/பண நிலக் குவியலாகவே இருக்கும். அனைத்து விதமான தீவினைச் சக்திகளும் மொய்த்துப் பூர்வீகச் சொத்தினைப் பதம்பார்த்துவிடும்.
விரத பலன்கள்
ஸ்ரீவரலட்சுமி விரதம் மிகவும் எளிமையான, நம் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்வரங்களை அபரிமிதமாகத் தருவதாகும்.
1. இதுவரையில் மூதாதையர்கள், பெற்றோர்கள், உறவினர்களுடைய சொத்துக்களை அனுபவித்து அவர்களுக்கு உரிய கடமைகளையோ வழிபாடுகளையோ செய்யத் தவறியவர்களுக்குப் பிராயச்சித்தம் தருவதாக இப்பூஜை அமைகின்றது.
2. வறுமை நிலையிலும், தரித்திர சூழ்நிலைகளிலும் அவதியுற்று, கடன் தொல்லைகளால் அவதிப்படுவோர்க்கு நிவாரணம் அளிப்பதாகும்.
3. செல்வச் சூழ்நிலையிலோ, நல்ல வசதியான நிலையிலோ இருப்பினும் சாந்தம், அமைதி இல்லாது ஏனோதானோ என்று வாழ்வோருக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நல்வாழ்க்கைப் பெற வரலட்சுமி பூஜை உதவும்.
4. எத்தனையோ திட்டங்கள், புது வியாபாரங்கள், தொடர்புகள் ஏற்பட்டும் தொழிலை அபிவிருத்தி செய்ய இயலாதோர் நன்முறையில் முன்னேற்றம் பெற இப்பூஜையை உள்ளன்புடன் செய்தல் அவசியமாகும்.
5. வியாபார கூட்டாளிகளின் (Partners) மோசடியாலும், ஒத்துழைப்பின்மையாலும், வேறு பல காரணங்களாலும் வியாபாரத்தில் நொடித்தோர் மீண்டும் நல்ல விதமாகத் தொழில் வளர்ச்சி பெறவும், மற்றும் பல பண சம்பந்தமான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் ஸ்ரீவரலட்சுமி விரதம் பெரிதும் துணை புரிகிறது.
எளிமையாக ஆவாஹனமாகும் ஸ்ரீவரலட்சுமி தேவி
சித்புருஷர்கள் அருளியுள்ள கூப்பிட்ட குரலுக்குத் தேடிவந்து நல்வரம் தரும் ஸ்ரீவரலட்சுமி தேவிக்கான கீழ்க்கண்ட விரத வழிபாட்டு முறையைக் கடைபிடித்திடில் மிகமிக எளிய முறையிலேயே அன்பிற்கு கட்டுப்பட்டு எவ்வித கடுமையான நியதிகளின்றி எளிதில் ஆவாஹனமாகின்றாள்.
1. இவ்வித முறையில் எவ்வித கடுமையான நியதிகளும் கிடையாது. நீராடி, நல்லாடை தரித்து, அவரவர் குலவழக்கப்படி நெற்றிக்கு இட்டு, ஜாதி, பேதமின்றி அனைவரும் செய்திடலாம்.
2. இவ்விரத பூஜைக்கு அதிகச் செலவும் கிடையாது. ஏழை எளியவரும் கூட சுலபமாகப் பின்பற்றிடலாம்.
3. சாதி பேதமின்றி பல இல்லறப் பெண்கள் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக அவரவர் பகுதிகளில் உள்ள கோயில்களில் நிறைவேற்றிடில் இவ்விரதத்திற்கு விசேஷமான பலன்களுண்டு. தேவ மூர்த்திகளும், நல் தேவதைகளும், சித்புருஷர்களும், ஞானியரும், உலவுகின்ற புனிதமான கோயில்களில் ஸ்ரீவரலட்சுமி விரத்தன்று விரதம் பூணுவோரை இவர்கள் ஆசிர்வதிக்கின்றனர்.
ஸ்ரீவரலட்சுமி விரத முறை.
முதலில் ‘ஸ்ரீவரலட்சுமி யார்?’ என்று தெரிந்து கொள்வது அவசியமாகும். கஜலட்சுமி, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, விஜய லட்சுமி , வீரலட்சுமி, மஹாலட்சுமி என்ற அஷ்டலட்சுமி  தேவதைகளின் பரிபூரண அம்சங்களைப் பூண்டவளே ஸ்ரீவரலட்சுமியாவாள்.
1. தீபலட்சுமி, ஸ்ரீஹரி லட்சுமி, ஸ்ரீதுளசி லட்சுமி, ஸ்ரீசெஞ்சுள லட்சுமி, ஸ்ரீவஞ்சுள லட்சுமி, ஸ்ரீவைகுண்ட லட்சுமி, ஸ்ரீஐஸ்வர்ய லட்சுமி, சித்த லட்சுமி, ஸ்ரீமோட்ச லட்சுமி, ஸ்ரீஜெய லட்சுமி, ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி, ஸ்ரீஸௌபாக்ய லட்சுமி, ஸ்ரீஸௌந்தர்ய லட்சுமி, ஸ்ரீகுல லட்சுமி , ஸ்ரீபிரசன்ன லட்சுமி, ஸ்ரீஅமிர்த லட்சுமி போன்று பல ஸ்ரீலட்சுமி அவதாரங்களின் அம்சங்களை ஒருமித்துப் பூண்டவளே ஸ்ரீவரலட்சுமியாவாள். ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதரும், ஸ்ரீவரலட்சுமி தேவியைப்பற்றி ஓர் அற்புதமான கீர்த்தனையைப் பாடி பல யுகங்களிலும் பலவிதமான கடுமையான தவங்களில் ஈடுபட்டால் தான், ஸ்ரீலட்சுமி தரிசனத்தைப் பெற முடியும் என்ற நிலையிருக்க, இந்தக் கலியுகத்திலோ பல்வேறு ஸ்ரீலட்சுமி தேவியரின் அவதார அம்சங்கள் நிறையப் பெற்ற ஸ்ரீவரலட்சுமி தேவியே நம் இல்லத்தை நோக்கி வருகின்றாள் எனில் இம்மானிடப் பிறவியைப் பெற்றிட நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்! எனவே வருகை தந்து நல்வரம் வார்க்கின்ற வஞ்சுள வல்லித் தாயாரின், ஸ்ரீநாராயணியின் திவ்யஸ்வரூபமே ஸ்ரீவரலட்சுமி தேவியாகும்.
ஸ்ரீவரலட்சுமி விரதமானது வரும் 15.8.1997 வெள்ளியன்று அமைகின்றது. 14.8.1997 வியாழனன்று மாலையிலேயே ஸ்ரீவரலட்சுமியை வீட்டிற்கழைக்கும் சுபமங்கள வைபவம் நடைபெறுகிறது. வாயிலுக்கெதிரே கூடத்தில் ஒரு வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி வைக்க வேண்டும். வெள்ளி அல்லது பித்தளைச் சொம்பை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் கயிறைக் கட்டி, சந்தனம் குங்குமம், மஞ்சளிட்டு அலங்கரித்திட வேண்டும். பித்தளைச் சொம்பின் வெளி முகத்தில் கண்மை கொண்டு ஸ்ரீவரலட்சுமியின் திருமுகத்தை வரைதல் வேண்டும். “நம்மால் அழகாக வரைய முடியவில்லையே” என்று எண்ணிடாதீர்கள். அன்புடனும், ஆர்வத்துடனும், பக்தி சிரத்தையுடனும் நீங்களே லட்சுமியின் முகத்தை வரைவீர்களானால், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல், அவ்வுருவத்தையே தன் பக்தையின் அன்புக் காணிக்கையாக ஏற்று ஸ்ரீவரலட்சுமியே அதில் மனமகிழ்ந்து குடியேறுகிறாள்.
சொம்பிற்குக் கருகமணி, பாசி, கருவோலை, ஆபரணங்கள், புஷ்பம் போன்றவற்றால் நன்கு உங்கள் மனமே ஆனந்திக்கும்படி அலங்கரியுங்கள். வசதியற்றோர் மிகமிக எளிய முறையில் பூ, மஞ்சள் சரடு சார்த்தி வழிபட்டிடலாம் .
வெள்ளி/பித்தளை சொம்பிற்குள் கங்கை, காவிரி போன்ற புனித நீரை ஊற்றி, வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், பச்சை கற்பூரம் கலந்து, மேலே மாவிலைக் கொத்து, தேங்காய் வைத்துப் பூரண கும்பமாய் அமைத்திட வேண்டும். சில குடும்பங்களில் புனித நீருக்குப் பதிலாகப் பச்சரிசி, குண்டு மஞ்சள், தங்க ஆபரணங்கள் நவரத்தினங்கள் வைப்பது உண்டு. அவரவர் வசதிக்கேற்ப எதையும் கடைபிடித்திடலாம். சொம்பில் அம்பிகையை வரைவதற்குப் பதிலாக வெள்ளியாலான ஸ்ரீவரலட்சுமி முக அமைப்பையும் வைப்பதுண்டு. இவ்வாறாக ஸ்ரீவரலட்சுமி விரதம் அமைகின்ற ஆடி வெள்ளிக்கு முதல் நாளாகிய வியாழக்கிழமையன்று மாலையில் மேற்கண்ட முறையில் சொம்பு கலசத்தை அலங்கரித்து வாழையிலையின் மேல் பரப்பிய பச்சரிசி மேல் கும்பத்தை வைத்திட வேண்டும். கும்பத்தை வைப்பதற்கு முன் பச்சரிசியில் பிள்ளையார் சுழியிட்டு, குலதெய்வத்தை நினைத்து வணங்கி குலதெய்வ நாமத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ (ஸ்ரீமுருகன், ஸ்ரீவெங்கடாஜலபதி ,etc..) எழுத வேண்டும். வலது கை மோதிர விரலினால் (சூரிய விரல்) பச்சரிசியில் இறைநாமத்தை எழுதுவது மிகவும் உத்தமமானது. கும்பத்திற்கு ஆபரணங்களை எல்லாம் அணிவித்துப் புனித அம்பிகையை அழகுபடுத்தி எல்லை இல்லாத ஆனந்தம் அடைவீர்களாக!
இச்சொம்புக் கலசமே ஸ்ரீவரலட்சுமி தேவி குடியேறும் திருக்கோயில், “ஸ்ரீவரலட்சுமி தேவியே வந்தருள்வாய்” எனக் குழந்தைகளுடனும், அக்கம் பக்கம் உற்றார் சுற்றத்துடன் கூடிப் பாடி ஸ்ரீஅம்பிகையை எழுந்தருள வேண்டிப் பிரார்த்தனை செய்வீர்! ஜாதி பேதமின்றி 70-80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு கலசத்தை வைப்பது மிகவும் சிறப்புடையது.
ஆயிரம் காலத்துப் பயிராகப் பல்லாண்டுகளாக ஒருமித்து வாழும் தம்பதியரின் மகத்தான ஆசியைப் பெறுவது பெறும் பாக்கியமாகும். ஸ்ரீஅபிராமி அந்தாதி, ஸ்ரீலட்சுமி சூக்தம் போன்ற அம்பிகைத் துதிகளை ஓதி, புஷ்பங்களால் அர்ச்சித்துச் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து எளிய பூஜை முடித்து, கலசத்தை இல்லத்திற்குள் எடுத்து வந்து பூஜையறையில் வைத்திட வேண்டும். நம் இல்லத்துள் நுழைந்து தங்கி எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜையிடத்தில் நிலைபெறச் செய்கிறோம் என்பதே இதன் பொருளாகும்.. அதே வாழையிலையிலோ அல்லது பலகையிலோ ஸ்ரீவரலட்சுமி தேவியைப் பூஜை இடத்தில் அமர்த்திடலாம். மறுநாள் வெள்ளியன்று காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் எளிய முறையில் ஆராதனை வழிபாடுகளை நிகழ்த்தி  ஸ்ரீவரலட்சுமியை நாம் வேண்டுகின்ற நல்வரங்களைத் தந்திட பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலையிலும், மதியத்திலும், மாலையிலும் பூஜைகளை நிறைவேற்றிட வேண்டும். பூஜையெனில் தாமறிந்த மந்திரங்களை/துதிகளை/ அஷ்டோத்திர நாமாவளிகளை ஓதி தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் அன்னம் போன்று அவரவர் வசதிக்கேற்ப எளிய நைவேத்யத்தைப் படைத்து கற்பூர ஆரத்தியுடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். சனிக்கிழமை மாலை ஸ்ரீவரலட்சுமி தேவியை, அம்பிகைத் தாயாரின் லோகத்திற்கு மீண்டும் அனுப்பும் வைபவமாகக் கலசத்தினை எடுத்து அரிசிப் பானையில் வைத்திட வேண்டும்.

ஸ்ரீவாடாமல்லி ஈஸ்வரர்
ஒரகடம்

பிறந்த வீட்டுப் பெண்ணே வரலட்சுமி
வரலட்சுமியைத் தாயாரின் லோகத்திற்கு அனுப்புதல் என்றால் என்ன? ஸ்ரீவரலட்சுமி தேவியானவள் தமக்குரிய நாயகனாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் சென்றடைவது தானே நம்மை ஆனந்தப்படுத்தும், நம்மிடம் நம் இல்லத்தில் ஸ்ரீலட்சுமி கடாட்சத்தைப் பொழிய வந்த ஸ்ரீவரலட்சுமி தேவி மீண்டும் ஸ்ரீநாராயணனிடமே ஐக்யமாகின்றாள்.. நம் வீட்டுப் பெண்ணே ஸ்ரீவரலட்சுமி தேவி! ஆம், நம் இல்லத்தில் பிறந்த ஸ்ரீவரலட்சுமி தேவியைச் சர்வேஸ்வரனாம் ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்கே மணமுடித்துக் கொடுத்தோம். புகுந்த வீட்டிலிருந்து (வரபூரண வைகுண்ட லட்சுமி லோகம்) பிறந்த வீடான நம் இல்லத்திற்கு வருகின்ற ஸ்ரீவரலட்சுமி தேவியை அன்புடன் ஆராதித்து மகிழ்கின்றோம். நம் மகிழ்ச்சிக்கு ஈடாக ஸ்ரீவரலட்சுமி தேவியோ அவளுடைய ஆனந்தத்தை லட்சுமி கடாட்சமாய் அளித்துச் செல்கின்றாள். பிறந்த வீட்டிலிருந்து அவள் எடுத்துச் செல்வது நம் பக்தியை, வெள்ளிக்கிழமை நம் இல்லத்துப் பெண்ணைத் திருப்பி புகுந்த வீடு அனுப்புவது கிடையாதன்றோ! எனவேதான் சனிக்கிழமையன்று நம் பெண்ணாம் ஸ்ரீவரலட்சுமி தேவியை அவளுடைய புகுந்த வீடான அரிசிப் பானையில் வைத்து நாம் அனுப்புகின்றோம். அரிசிப்பானை என்பது லட்சுமியின் உறைவிடம் என்பதை நாம் அறிவோம். இதுவே ஸ்ரீவரலட்சுமி நோன்பின் மகத்துவமாகும். இப்பொழுது சொல்லுங்கள்! நல் இல்லத்துப் பெண்ணான ஸ்ரீவரலட்சுமி தேவியை ஆராதிக்கும் நோன்பினை நாம் கொண்டாடத்தானே வேண்டும். “எங்களுக்குத் தெரியாது, எங்கள் வீட்டில் நோன்பு ஏற்கும் வழக்கம் இல்லை” என்று சொல்லாது இனியேனும் அனைவரும் எவ்வித வேறுபாடோ, பாகுபாடோ இல்லாது ஸ்ரீவரலட்சுமி விரதத்தை மேற்கொள்வீர்களாக. நோன்பு நோற்றல் என்றால் இயன்றோர் வெள்ளிக்கிழமை மாலைவரை உண்ணா நோன்போ, பால் மட்டும் அருந்தியோ விரதம் இருந்திடலாம். ஆனால் நோன்பு நோற்றல் எனில் பொதுவாக அம்பிகைக்குச் சார்த்தப்பட்ட மஞ்சள் சரடுகளைப் பல சுமங்கலிகளுக்கும் எவ்வித ஜாதி, இன பேதமின்றி அளித்து கைகளில் கட்டிக் கொள்வதாகும். எவ்வளவு இல்லறப் பெண்களுக்கு ஸ்ரீவரலட்சுமி தேவியின் அனுக்ரஹம் நிறைந்த சரடுகளை அளிக்கின்றோமோ, அந்த அளவுக்கு தியாக மனப்பான்மையும், மாங்கல்ய பலமும் கூடும்.
பெருமாள் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும், ஸ்ரீலட்சுமியின் சந்நதியிலும், ஏனைய கோயில்களில் ஸ்ரீலட்சுமியின் திரு உருவப் படத்தை வைத்தும் மேற்கண்ட முறையில் பூஜைகளைச் செய்திடலாம். பல இல்லறப் பெண்களும் தம் இல்லத்திலிருந்து சொம்பை எடுத்துச் சென்று கோயிலில் ஒன்று கூடி தெய்வத்தின் முன் கலசங்களை வைத்து முறையாகப் பூஜைகளை நடத்தி அன்றே இல்லத்திற்கு கலசச் சொம்பினை எடுத்து வந்தும் இல்லத்தில் பூஜையில் வைத்து பூஜையைத் தொடரலாம். கோயில்களில் நடத்துகின்ற பூஜைகளுக்குப் பன்மடங்குப் பலன்களும், விசேஷமான சக்தியும் அற்புதமான மகத்துவமும் உண்டு. செல்வந்தர்கள் இத்தகைய பூஜைகளை கோயில்களில் நிகழ்த்தி, ஸ்ரீவரலட்சுமி ஆவாஹனமாகியுள்ள கலசங்களை ஏழைகளுக்கு அளித்து, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஸ்ரீஅம்பிகையின் கடாட்சம் கிட்டும்படி அரிய இறைப் பணியைச் செய்து வந்திடில் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறையும். வீணான விரயங்களும் நஷ்டங்களும் தீய வழக்கங்களும் தணியும்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்

ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம்
பிரதோஷம் போன்று மிகவும் சக்திவாய்ந்த புனிதமான நேரமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை அதாவது வருடத்திற்கு நான்கு முறை வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்திற்கு நம் மூதாதையர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வந்தமையால் தான் நற்குணங்களுடன், நல்ல ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் உன்னத தெய்வ பக்தியும் பெற்றுச் சிறப்புடன் விளங்கினர். ஆனால் காலப்போக்கில் இவ்வற்புதமான வழிபாடு மறையலாயிற்று. சமீப வருடங்களில் பிரதோஷ வழிபாடு மீண்டும் ஆன்மீகப் புத்துணர்ச்சியைப் பெற்று இன்று கோடிக் கணக்கான மக்களுக்கு திருவருளைப் பெற்றுத் தருவது போன்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால வழிபாடும் மக்களிடையே மீண்டும் தெய்வீக மறுமலர்ச்சி பெற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் அரும்பாடுபட்டு வருகின்றார்கள்.

பெரும்பாலும் தமிழ்மாதப் பிறப்பை ஒட்டி வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலமானது நள்ளிரவு மணி 1.30 முதல் காலை 10.30 மணி வரை அமைகின்றது. பிரதோஷம் போன்று இவ்விஷ்ணுபதி புண்ய காலமும் மிகவும் உத்தமமான நேரமாகும். இந்நேரத்தில் செய்யப்படும் வழிபாடுகள் அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள், தியானம், ஹோமம், மூதாதையர்களுக்கான தர்ப்பணம், போன்றவைக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. அனைத்து பக்த கோடிகளும், ஆன்மீகச் செல்வர்களும் வைணவப் பெரியோர்களும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தின் மஹிமையை யாங்கணும் பரப்பி அனைத்து வைணவத் தலங்களிலும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தைச் சிறப்புடன் கொண்டாடிட வேண்டி பணிந்து கேட்டுக்கொள்கின்றோம். உத்தம பக்தியுள்ளவர்கள், சிவ, வைணவ பேதத்தைக் கொள்ள மாட்டார்கள், வைணவப் பெரியோர்கள் அனைத்தையும் விஷ்ணுமயமாகத் தரிசனம் கண்டமையால், ஸ்ரீமந்நாராயண மூர்த்தியையே பரம்பொருளாகக் கொள்கின்றனர். அவர்களுடைய பக்திக்குக் கட்டுப்பட்டு சிவபெருமானும் திருமாலாகவே காட்சியளிக்கின்றார். இதேபோன்று சைவப் பெரும் சான்றோர்களுக்கு அனைத்தையுமே சிவமயமாகக் காண்பதால் சிவபெருமானே அவர்களுக்கு சர்வேஸ்வரனாவார். அவர்கள் தம் பேரன்பிற்கு உட்படும் பெருமாளும் சிவச்சுடராய் மிளிர்கின்றார். எனவே ஒன்றே இறைவன் என நன்றே நவில்வோம்.
தியாகப் பெருஞ்சுடராம் தியாகத்தின் செம்மலாம் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் ஏராளம், ஏராளம்! எண்ணியவர்க்கு எண்ணியடியே அருளும் சிவன் நமக்கு எது நன்மையோ அதையே எண்ண வைத்து திருவிளையாடல் புரிவதில் அதிவல்லவன் ஆவான். சிவனுடைய திருவிளையாடல்கள் ஜீவன்களிடம் மட்டும் தான் என்று எண்ணுதல் வேண்டாம். எல்லாம் வல்ல ஜகன்மாதாவாகிய பார்வதியிடம் பலமுறை பல திருவிளையாடல்களைப் புரிந்து பாமர மக்களாகிய நமக்கும் அருள் போதனைகளை இறைவன் ஸதாசர்வகாலமும் செய்து கொண்டேயிருக்கிறான்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருக்காட்டுப்பள்ளி

தியானத்தில் தியாகேசன்
சிவபெருமானும் தியானத்தில் ஆழ்வதுண்டு! பரம்பொருளுக்கே தியானம் ஏன்? உத்தம இறைநிலையைப் பிறவியிலேயே பெற்று ஜீவன்களைக் கடைத்தேற்ற இறைவனால் அனுப்பப்பெற்ற இறைத் தூதுவர்களாம், இறையம்சம் நிறைந்தவர்களாகிய ஆதிசங்கரர், மத்வர், சைதன்ய மஹாபிரபு, வள்ளலார் சுவாமிகள், உடையவர், பரமாச்சார்யார் போன்றோர் தினசரி பூஜைகளையும் அறநெறியில் எடுத்துக் காட்டாக நின்று அருள்வழி புகட்டினர்.. அன்றும் இன்றும் என்றும் அருள் கூட்டும் இறை வள்ளல்களே இத்தகைய மஹான்களும், யோகியரும், ஞானியருமாவர். தியானத்தில் பல நிலைகள் உண்டு. அவரவருடைய உத்தம நிலைகளைப் பொறுத்துத் தியானத்தின் குறிக்கோள்களும் மாறும். மன அமைதி, சாந்தம், சித்திகள், மற்றும் பல அற்புதங்களை நிகழ்த்த வல்ல தியான முறைகளுமுண்டு. ரிஷிகள், யோகியர், தேவர்கள், தேவதைகள் மட்டுமின்றி தெய்வ மூர்த்திகளும் கூட, பலருக்கும் பாடம் புகட்டும் வண்ணம் அற்புதமான தியான முறைகளைக் கூட்டுகின்றனர். திருநெடுங்களம் (திருச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை, கண்டியூர் அருகே) தலங்களிலுள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி அபூர்வமான யோகத்தில் ஆழ்ந்து அருள்பாலிக்கின்றார். இவ்வாறாகவே பிரளயம், சிருஷ்டியின் போது சிவபெருமான் அதியற்புத தியான நிலையில் ஆழ்ந்து விடுகின்றார். யோக நரசிம்ஹர், யோக ஆஞ்சநேயர், யோக லட்சுமி, யோகாம்பாள் என தெய்வமூர்த்திகளின் யோக நிலை தரிசனம் பெறற்கரிய தெய்வீக சக்தியை அள்ளித் தருகின்றது.
ராம தியானத்தில் சிவரஞ்சனி
ஒரு முறை ஸ்ரீபார்வதி தேவியையே சோதிக்கும் பொருட்டு சிவபெருமான் ருத்ர யோக நிலையில் ஆழ்ந்துவிட, பார்வதி தேவி அதைக் கண்ணுற்றவாறே அசையாது நின்றாள். சிவபெருமான் தியான யோக நிலையிலிருந்து மீண்டு எழுகையில், அம்பிகை, “சுவாமி அனைத்து ஜீவன்களும் மகரிஷிகளும், ஏனையோரும் தங்களையே தியானித்திருக்க தங்களுடைய தியானம் எதைப் பற்றியதென அறிய விரும்புகிறேன்”, எனக் கேட்டனள். சிவபெருமான் பதிலளிக்காது சிறிய புன்னகையுடன் அமைதியாக இருந்தார். ஆனால் பார்வதி தேவியோ விடாது அதே வினாவைக் கேட்டுத் துளைத்தெடுத்துவிடவே சிவபெருமான், “தியான நிலையின் ரகசியங்களைக் கேட்டறிவதை விட, பயின்று அறிவதே உத்தமமானது, நான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையே எண்ணி தியானம் புரிகின்றேன். இதை நீ எவ்வாறு உணர்வாயோ?”

ஸ்ரீராமபிரான் ஒரகடம்

பார்வதி தேவி திகைத்து நின்றுவிட்டாள். சிவபெருமானே தியானித்து வழிபடுகின்ற ஸ்ரீராமரை பூலோகத்தில் தரிசித்து அந்த அவதார மூர்த்தியின் மனோநிலையை தானே நேரில் கண்டறிய விரும்பினாள்.
அப்போது ராமாயணம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்! ராமபிரான் சீதாபிராட்டியைத் தேடிய வண்ணம் வனமெங்கும் அலைந்து கொண்டிருந்தார். மரங்களையும் செடி கொடிகளையும் பூக்களையும், “நீங்கள் சீதையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டு புலம்பி வருத்தத்துடன் தம் பூப்பாதங்கள் தேய வனங்களைச் சுற்றி வந்தார். “என்ன இது சதாசர்வகாலமும் சீதாப்பிராட்டியை எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்ரீராமரையா ஆதிசிவன் தியானிக்கின்றார். ஒரு வேளை நான் தான் தெய்வ மாயையில் சிக்கிக் கொண்டு விட்டேனா?” – பார்வதி தேவி நிலைபுரியாது தவித்து நின்றாள்.. சீதையைப் பிரிந்து வாடுகின்ற ஸ்ரீராமரின் மனோநிலையைக் கண்டு பார்வதி மிகவும் வருத்தமுற்று பூலோகத்திற்குத் தான் வந்த காரியத்தையே மறந்து விட்டனள். அனுசூயா தேவி கற்றுத் தந்த பூக்களால் ஆன புனித வழிபாடுகளின் மஹிமை பார்வதி தேவியின் நினைவிற்கு வரவே அவ்விடத்திலேயே சிவபெருமானைத் தியானித்து அவரை வாடாமல்லி மலர்களால் அர்ச்சித்து ஸ்ரீராமருடைய மனவேதனையைப் போக்கத் தவமிருந்தனள். என்னே அதிசயம்! ஈஸ்வரனும் ஸ்ரீராமனைத் தியானித்திட ஈஸ்வரியும் ஸ்ரீராமருக்காகவே பிரார்த்தனையில் ஈடுபட்டனள். இதையன்றோ சிவபெருமான் எதிர்பார்த்தார். பார்வதி தேவி அர்ச்சனையாய்ப் பொழிந்த மலர்கள் குவிந்து ஒரு பெண் உருவைக் கொண்டன. பார்வதி தேவியும் அவ்வாடாமல்லி மலர்தேவியை சீதாபிராட்டியாக பாவித்து வடித்து ஸ்ரீராமர் வரும் வழியில் நிறுத்தி, இதனைக் கண்ணுற்றாலாவது ஸ்ரீராமரின் மன வேதனைகள் தணியாதா என்று எண்ணினாள். ஸ்ரீராமரும் அவ்வழியே வந்தார். “அம்பிகையே! ஸ்ரீஅகிலாண்டேஸ்வரித் தாயே, ஸ்ரீபார்வதி தேவியின் பாதாரவிந்தங்களைச் சரணடைகின்றேன். ஜகன்மாதாவாகிய தாங்கள் இங்கு தனித்தே நிற்பதன் காரணமென்ன?” என்று துதித்து வணங்கிய ஸ்ரீராமர், தன்னை அறிந்து கொண்டுவிட்டதைக் கண்டு அதிசயித்தாள் பார்வதிதேவி!

அரியாசனத்தில் வீராசனம்
ஸ்ரீராமர் ஒரகடம்

சீதையன்றி வேறு கோதையில்லை!
ஸ்ரீராமரோ அவ்வாடாமல்லி தேவியைச் சற்றும் கண்களை உயர்த்திகூடப் பார்க்கவில்லை. ஏகபத்தினி விரத உத்தமரல்லவா! சீதை வடிவில் இருந்திடினும் அப்புனித தெய்வ உள்ளமானது பெண்குலத்தை தெய்வமாகவே போற்றி வணங்கும் இறைவடிவாயிற்றே! பிற பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதும் கூட இல்லை. பார்வதி தேவி வெட்கித் தலை குனிந்தனள்.. “நாம் என்னே தவறு செய்து விட்டோம். ஏகபத்னி விரதனாகிய, சீதையன்றி வேறு எவரையும் மனதால் கூட எண்ணாத ஸ்ரீராமருக்குப் பரிவு காட்டுவதாக எண்ணி வாடாமல்லி மலர்களால், சீதாப்பிராட்டியைப் போன்று, ஒரு தேவியை உருவகித்து தவறு செய்துவிட்டோமே”, என்று பரிதவித்து மிகுந்த வேதனைகளை அடைந்த பார்வதி தேவி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வணங்கி “ஹே ராமா! உன்னை மீண்டும் உன் பத்தினி தெய்வமாம் சீதாப்பிராட்டியுடன் தான் தரிசிப்பேன். அதுவரையில் வாடாத நல்ல மணமுள்ள மல்லிகைப் பூக்களால் ஈசனை இரவு பகலாய் அர்ச்சித்தும், ஆராதித்தும் ஈசனை நோக்கித் தவமிருப்பேன். இதற்காக யான் சிவபெருமானை இப்போது சென்றடைவேன்”, என்று கூறி அன்னை பார்வதி மறைந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கோரி பிராயச்சித்தம் வேண்டி திருக்கையிலாயத்திற்கு விரைந்து சென்றனள் பார்வதி..
வாடிய தேவியின் வாடாமல்லி பூஜை
அங்கு சிவபெருமானின் தரிசனம் கிட்டவில்லை! பார்வதி தேவி அழுது புலம்பினள். ஸ்ரீராமருக்கு மனசாந்தி அளிப்பதாக எண்ணி வாடாமல்லியால் சீதையை உருவாக்கிய குற்றத்திற்காக தனக்கு இனி ஈஸ்வர தரிசனம் கிட்டாது என்பதை உணர்ந்த பார்வதி தேவி திருக்கயிலாத்தில் கதறி அழுதனள். ஈஸ்வரனும் அசரீரியாய் அருளாணையிட்டார், “தேவீ நீ செய்த குற்றத்தை உணர்ந்து விட்டாயன்றோ! என்னுடைய ராம நாம தியானத்தை என்னருகிலேயே இருக்கும் உன்னால் புரிந்துகொள்ள முடியாவிடில், வேறு யார்தான் இதனை அறியமுடியும்!? எனினும் உன்னுடைய வாடாமல்லி அர்ச்சனை வழிபாடானது உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததே ஆதலின் இதன் மஹிமையால் ஸ்ரீராமனுக்கு சீதாப்பிராட்டியுடன் இணையும் காலம் விரைவில் கூடி வரும்.” “நீ நவமி திதிதோறும் வாடாமல்லியால் எம்மை அர்ச்சித்து வருவாயாக! நீ ஸ்ரீராமனிடம் கூறியது போல் என்று நீ சீதாபிராட்டி சமேத ராமச்சந்திர மூர்த்தியை தரிசிக்கின்றாயோ அன்று யான் வாடாமல்லீஸ்வரராகக் காட்சியளித்து உன்னை ஏற்றுக் கொள்வோம். வீர யோகம், போக யோகம், யோக யோகம் என்ற முந்நிலை தியான யோக சக்திகளைத் தரவல்லதே ஸ்ரீராமநாம தியானமாகும். இதனை சீதாதேவி சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே உனக்கு அருளிடுவார்”, என்று சிவபெருமான் அருள்பாலித்தார். இவ்வாறாக சீதா பிராட்டியை அடைந்து அற்புதமான வீரம், போகம், யோகம் ஆகிய மூன்று தெய்வீக நிலைகளிலும் ஸ்ரீராமர் பார்வதி தேவிக்கு சேவை சாதித்த திருநாள் தான் ஈஸ்வர வருட ஆவணி மாத விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். இப்புண்ய காலத்தில்தான் பல யுகங்களுகுப் பின்னர் பார்வதி தேவி திரிபுரசுந்தரியாக ஸ்ரீவாடாமல்லீஸ்வரராம் ஈஸ்வரனுடன் ஐக்யமாயினள்..
இவ்வகையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீரகுநாதப் பெருமாள் என்ற திவ்ய நாமத்தோடு சீதாப்பிராட்டியுடன் வீரம், போகம், யோகம் ஆகிய மூன்று உத்தமமான தெய்வீக நிலைகளில் சேவை சாதிக்கின்ற இடமே ஓரகடம் என்னும் திருத்தலமாகும். இது திருக்கழுக்குன்றத்தின் அருகிலுள்ளது. இவ்விடத்தில் தான் சிவபெருமானும் ஸ்ரீவாடாமல்லீஸ்வரராய் சுயம்புத் திருமேனியாய் அருள்பாலிக்கின்றார். குறிப்பு : வாடாமல்லி என்பது பவளமல்லி போல் தேவலோகத்துப் புஷ்பம். தற்போது காணப்படும் காகிதம் போன்ற சிவப்புப் (pink) பூவல்ல !
நித்ய கர்ம நிவாரணி

தேதி

செய்ய வேண்டிய கர்மா

கிட்டும் பலன்கள்

1.8.1997

பாயாசம் செய்து பொக்கைவாய்ப் பெரியோர்க்கு அளித்திடில்...

பணத்தால் வரும் கஷ்டம் தீரும்.

2.8.1997

தாய் வர்க்கத்திற்கு தர்ப்பணம் அளித்து, வயதான மூதாட்டிகளுக்கு வஸ்திர தானம் செய்திடில்..

பயிர் விளைச்சலில் துன்பம் தீரும்.

3.8.1997

நல்ல சிவந்த நிறமுடைவர்கட்கு கறுப்புத் துணி தானம் அளித்திடில்

வீடுமாற்றலால் வரும் துன்பம் தீரும்.

4.8.1997

கணபதிக்கு உருளைக் கிழங்கால் செய்த பண்டம் (சிப்ஸ், கறி) நைவேத்யம், குழந்தைகட்கு தானம் செய்திடில்..

விவசாய விளைச்சலில் நன்மை கூடும்.

5.8.1997

மங்கள கௌரி விரதம் இருந்து அதிரச தானம் செய்திடில்...

திருமண பாக்யம் கூடும்.

6.8.1997

ஆடிப் பூரத்தன்று அம்மன் கோவிலில் கூழோ, உணவோ தானமாகச் செய்திடில்

வீட்டில் அடிக்கடி நோய் வாய்ப்படும் நிலைமை தணியும்.

7.8.1997

கணபதிக்கு முறுக்கு மாலை அணிவித்தால்...

குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.

8.8.1997

நாகதேவதைகட்கு குங்குமம், மஞ்சள், அரிசிமாவால், அர்ச்சனை செய்து கோலமிட்டு ஏழைகளுக்குப் பால்தானம் செய்திட...

பெண்களுக்கு நாள்பட்ட நோய் நீங்கும்.

9.8.1997

குதிரைக்கு கொள் தானம்

வேலையில் வரும் பிரச்சினை நீங்கும்.

10.8.1997

மயில்களுக்கு உணவிடுவதால்

மனக்கோளாறுகள், உளைச்சல், மனநோய்கள் தணியும்.

11.8.1997

இன்று சந்திரனுக்கு பாலபிஷேகம் செய்து பால்தானம் செய்திடில்...

நற்செய்தி தேடிவரும்.

12.8.1997

மங்கள கௌரி விரதமிருந்து குழந்தைகட்கு அதிரசம் தானம் செய்திடில்

சிறு ஆபத்துகள் விலகும்

13.8.1997

கிளிக்கு உணவிட்டு கூட்டினின்று விடுவித்தால்

எதிர்பாராத வகையில் பண உதவி தேடிவரும்.

14.8.1997

தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்திட..

இடமாற்றம் நன்கு அமையும்.

15.8.1997

வரலட்சுமி விரதம் முறையாய்க் கொண்டாடி மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்களப் பொருட்களை நிறைய சுமங்கலிகட்கு அளிப்பதால்..

கணவனுக்கு வரும் ஆபத்து நீங்கும்.

16.8.1997

விஷ்ணுபதியை முறையாய்க் கொண்டாடினால்...

பிரிந்தவர் சேருவர்.

17.8.1997

நண்பர்களுக்காக வாழ்நாளில் தியாகம் செய்தோர்

நலம் பெறும் நாள்.

18.8.1997

ஹயக்ரீவரை முறையோடு வணங்கி மணமுள்ள மலர்களாலான திண்டு மாலை அணிவிக்க....

குழந்தைகள் நன்கு படித்திடுவர்.

19.8.1997

காயத்ரீ ஜபம் முறையாய் ஜபித்து பல்லாயிரம் முறை உரு ஏற்றினால்...

பித்ருக்கள் ஆசி பெறலாம்.

20.8.1997

குரங்குகளுக்கு உணவிடு (கடலை, பிஸ்கட், பழம்)

அலைகின்ற மனம் நிலைபெறும்.

21.8.1997

இன்று காகத்திற்கு உணவிடுவதால் ...

தோல் நோய்கள் தணியும்.

22.8.1997

வாஸ்து நாளை முறையாய் கொண்டாடிடில்....

வீட்டிலுள்ள, காத்து, கறுப்பு, தோஷங்கள் விலகும்.

23.8.1997

முருகன் கோவிலில் அன்னதானம் செய்திடில்.

முதியோர்கள் ஆசி பெறலாம்.

24.8.1997

பெருமாள் கோவிலில் கோபுர கலசங்களை தரிசித்து எள் சாதம் தானம் தருமம் செய்திடில்....

இழந்த செல்வத்தை முறையாகப் பெற்றிடலாம்.

25.8.1997

சந்திரபகவானை வேண்டி வெள்ளையுடை தானம் செய்திடில்.

நம்பியோர்களால் உதவிபெறுவர்...

26.8.1997

குழந்தைகட்கு சுண்டல், இனிப்புதானம்...

எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண உதவி கிட்டும்...

27.8.1997

எருமைகளுக்கு உணவிட்டு கீரை தானம் செய்திடில்...

வீட்டிலுள்ள பீடை தொலையும்.

28.8.1997

லட்டு தானம்...

நல்வரன் அமையும் (திருமணத்திற்கு)

29.8.1997

காகிதத்தில் ஸ்ரீராமநாமம் எழுதி அதனை ராமருக்கு மாலையாக அணிவித்து பானக தானம் செய்திடில்

வீட்டிலுள்ள பயம் நீங்கும்...

30.8.1997

பிரதோஷ பூஜை செய்து, கறுப்பு ஆடைகளைத் தானம் செய்து வர சனீஸ்வர பகவான் அருளால் ...

நல்லதொரு இல்லற வாழ்வு அமையும்....

31.8.1997

 சிவனுக்கு ஆராதனை அபிஷேகம் செய்து.. ஸ்ரீஅருணாசல ஈசனை கிரிவலம் வருவதால்....

எதிர்பார்க்கின்ற நற்புகழ் எளிதில் கிட்டும்.

ஓர் இனிய அறிவிப்பு
மாங்கல்யச் சரடு, ஆபரணங்கள், ஸ்படிகம், தாயத்து, கருகமணிமாலை, ருத்ராட்சம் போன்று பூணூலும் எவ்வகை பேதமுமின்றி அனைத்து ஆண்களும் அணிய வேண்டியதொன்றாகும். எவ்வாறு ருத்ராட்சம் தரித்தலும், பத்மாசனமிடுதலும், திருநீறு, சந்தனம் அணிதலும் பூஜா சக்தியின் பலன்களைப் பன்மடங்காய்ப் பெருக்குகின்றனவோ அதேபோல் மார்பில் அணிகின்ற பூணூலும் மந்திரங்களின் சக்தியைக் கிரஹித்து, கோபுர, தெய்வ மூர்த்திகளின் தரிசன பலன்களை, புண்ணிய நதிகளின் தெய்வீக சக்தியையும், கிரஹித்து ஆன்மீக உணவாய் தேகத்தில் சேர்கின்றது. எனவே ஜாதி, மத, இன ,குல பேதமின்றி யாவரும் பூணூலை அணிந்திடலாம்.

ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி
ஒரகடம்

பூணூலை அணிய வேண்டிய சிறப்பான முறைகளைச் சித்புருஷர்கள் அருளியுள்ளனர். மஹாபிரளயத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சிருஷ்டியின் போது சிருஷ்டியை தொடங்குவதற்கான யாகத்தை ஸ்ரீபிரம்மா தொடங்கினார் அல்லவா! அப்போது அவர் அனைத்து ஜீவன்களின் அணுக் கருக்களை ஒரு கும்ப கலசத்தில் வைத்து வில்வம், மாவிலை, பூணூல், தேங்காய் கொண்டு அலங்கரித்து வேள்வியைத் தொடங்கினார். ஸ்ரீகிராதமூர்த்தியாய் ஆதி சிவன் சிருஷ்டியைத் தொடங்குவதற்குத் தம் இறைச் சக்தியைக் கும்பத்தின் மேல் செலுத்திட, இறையருளால் கலசத்திலிருந்து ஜீவன்கள் யாங்கனும் பெருகின. இவ்வாறாக கலசத்திற்கே பூணூல் அணிவிக்கப்பட்டதெனில் புனித பூணூல் அனைவருக்கும் உரித்தானது தானே!
பெண்களுக்கு மாங்கல்யமே பூணூலின் சக்தியை அளிக்கின்றது. சிருஷ்டிக் கலசத்தின் மேலிருந்த பூணூலானது ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வர லிங்கமாக இன்றைக்கும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவமூர்த்தியான ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வர லிங்கத்திற்கு பூணூலைச் சார்த்தி அதனைப் பிரசாதமாக அணிவது பெறர்கரிய பாக்யமாகும். கடந்த பல ஆண்டுகளாகத் திருஅண்ணாமலை ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்கு அணிவிக்கப்பட்ட பூணூலை, ஆவணி அவிட்டத்தன்று, பூணூலை அணிய விரும்புகின்றோருக்கு அளித்து வருகின்றோம். விருப்பமுள்ளோர் வரும் ஆவணி அவிட்டத்தன்று (18.8.1997) திருஅண்ணாமலை ஆசிரமத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்கு சார்த்தப்பட்ட பூணூலைப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் அதன் விளக்கங்களும் ஓதும் முறைகளுடன் நன்கு விளக்கப்படும். இதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. உண்மையில் பூணூலைத் தானமாக அளிப்பதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைக் கேட்போர் எவராயினும், முறைப்படிக் கற்றுத் தருதலும் மிகச் சிறந்த தானமாக, வித்யா தானமாக ஏற்கப்பட்டுள்ளது. அனைவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தால் தான் சமுதாயத்தில் நல்லொழுக்கம் மிகுந்து சாந்தமும் தெய்வீக அமைதியும் பரிணமிக்கும்.

ஸ்ரீஇரட்சக குலசேகர ரிஷி
ஒரகடம்

ஓர் அன்பான வேண்டுகோள்.
ஸ்ரீஅகஸ்தியவிஜயம் பரிபூர்ணமான தெய்வீக மாத இதழாகப் பரிமளிக்கின்ற காட்சியைக் கண்டு இன்புறும் இறை நெறிச் செல்வர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்.. எல்லாம் வல்ல ஸ்ரீஅருணாசலேசுவரரின் பெருங்கருணையால் எம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திகழ்கின்ற திருஅண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெற்று வருவதை அறிவீர்களன்றோ! ஆஸ்ரமத்தின் இதர தெய்வீக வெளியீடுகளாக அருணாசல கிரிவல மஹிமை, பிரதோஷ மகிமை, ராகுகால ஸ்ரீதுர்க்கா பூஜை மகிமை, சுபமங்கள தீப மகிமை, சந்தன மகிமை, திருப்பணி தரும் திருஅருள், திருச்சி மலைக்கோட்டை மகிமை, சுமங்கலிக் காப்பு போன்ற அற்புதமான ஆன்மீக நூல்களும் (ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் அருளப் பெற்றவை.) வெளியிடப்பட்டுள்ளன. சித்புருஷர்களின் அற்புதமான விளக்கங்களைத் தாங்கி வரும் நூல்கள் இவை. மேலும் ஸ்ரீநவகிரஹ மகிமை, பிள்ளையார் மகிமை, திருஅண்ணாமலை மகிமை போன்ற பல நூல்களும் வருகின்ற கார்த்திகை தீபத்திற்குள் வெளிவர உள்ளன. ஸ்ரீஅகஸ்திய விஜய ஆன்மீக இதழின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், ஆஸ்ரமத்தின் கட்டிட உதவிக்காகவும், ஆஸ்ரமத்தின் மாதாந்திர பௌர்ணமி அன்னதானத்திற்காகவும் ஆஸ்ரமத்தின் சார்பில் மாதந்தோறும் சென்னை, திருச்சி, கிராமப்புறப் பகுதிகளில் ஏழை எளியோருக்காக நடத்தப்படும் இலவச மருத்துவ முகாம்களுக்காகவும்.. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வண்ணம் எளிய தெய்வீக விளக்கங்கள், பூஜை வழிபாட்டு முறைகளை அளிக்கும் தெய்வத் துணை நூல்களைப் பிரசுரிக்கவும் இயன்ற பொருள் உதவியைத் தந்தருளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். தங்களுடைய  இல்லங்களில் நிகழும் திருமணங்கள், கிரஹப்பிரவேசம், சீமந்தம், உபநயனம், புனித நீராட்டுதல், சதாபிஷேகம்/சஷ்டியப்த பூர்த்தி, போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்குகொள்கின்ற விருந்தினர்களுக்கு மேற்கண்ட தெய்வீக நூல்களை அன்பளிப்பாக அளித்து எங்களுடைய அறவழிக்கு உறுதுணையாக நிற்பதோடு, தெய்வீகத்தை யாங்கனும் பரப்புகின்ற அருட்பெறும் தெய்வீகத் திருப்பணியிலும் பங்கு கொள்ள வேண்டுகின்றோம். உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகளுக்கும் மற்றும் நூலகங்களுக்கும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழுக்கான சந்தாத் தொகையைத் தாங்களே செலுத்தி எங்களுடைய இறைப்பணி தழைத்தோங்கிட உதவிபுரிய வேண்டுகிறோம். ஆஸ்ரமத்திற்கான நன்கொடைக்கு இந்திய வருமானவரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின்படி வருமானவரிச் சலுகை (EXEMPTION UNDER SEC 80G OF IT ACT)  என்பதை மகிழ்வுடன் நினைவூட்டுகின்றோம்.

ஒரகடம்

விசேஷ தினங்கள்
2.8.1997 – ஆடிஅமாவாசை , ஆடிப்பெருக்கு
4.8.1997 -  சந்திர தரிசனம்
5.8.1997 – ஆடிப்பூரம்
6.8.1997 – நாகபஞ்சமி
15.8.1997 – ஸ்ரீவரலட்சுமி விரதம்
15.8.1997 – நள்ளிரவு 1.30 மணி முதல்
16.8.1997 – காலை 10.30 வரை ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம் – தர்ப்பண நாள்.
18.8.1997 – ஆவணி அவிட்டம் – ஜாதி, குல பேதமின்றி அனைவரும் பூணூல் அணிய வேண்டிய நன்னாள்
22.8.1997 – ஸ்ரீவாஸ்து நாள்  - ஸ்ரீவாஸ்து நேரம் (மதியம் 3.19 முதல் 3.55 வரை)
26.8.1997 – ஸ்ரீஜெயந்தி
30.8.1997 – சனி பிரதோஷம்
3.9.1997 – சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை)
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமச் சேவைச் செய்திகள்
15.6.1997 – திருச்சி முத்தரசநல்லூரில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
19.6.1997 – திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதானம்.
6.7.1997 – சென்னை அருகே வீரராகவபுரம் (காடுவெட்டி) வறியோர்க்கான இலவச மருத்துவ முகாம்.
13.7.1997 – திருச்சி முத்தரசநல்லூரில் இலவச மருத்துவ முகாம்.
கூடா நாட்கள்
குறிப்பிட்ட நாளும் நட்சத்திரமும் கூடுகையில் அமைகின்ற பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கீழ்க்கண்ட கூடாநாட்களில், கரிநாள் போன்று அனைத்தையும் குறிப்பாக சுபகாரியங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
14.8.1997 – காலை 10.30 வரை
15.8.1997 – காலை 9.16க்கு பிறகு நாள் முழுதும்

24.8.1997 – காலை 11.36 வரை.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam