அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பித்ருக்களுக்கான ராக சாந்தி

குறிப்பிட்ட இராகத்தைக் குறித்த காலத்தில் இசைக்கும் போது அல்லது பாடும்போது அதற்குரிய ஆரோஹண, அவரோஹண ஸ்வரங்கள் ஆகாயத்தில் மிதந்து நின்று எண்ணங்களையும், தீய சக்திகளையும் விலக்கி விண்வெளியைத் தூய்மைப்படுத்துகின்றன. ஆனால் இதற்கு சத்சங்க அமைப்பாகப் பலரும் சேர்தல் வேண்டும். 100 சதுர அடிப்பரப்பைப் புனிதமாக்க வேண்டுமெனில் மூன்று பேராவது மூன்று மணி நேரம் தொடர்ந்து லய ஸ்ருதி மாறாது இசைக்க/பாட வேண்டும்! ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு குணம், நிறம், ஒளி, தட்பவெப்பம், சுவை உண்டென்று நாமறிவோம்.

இராகம்

நிறம்

குணம்

பால்

தோடி

கருநீலம்

அருவறுப்பு

பெண் ராகம்

ஸ்ரீரஞ்சனி

மஞ்சள்

பக்தி

புருஷ ராகம்

உடலில் எந்தச் சத்து குறைகின்றதோ ,அதை ஈடுசெய்யும் அல்லது சத்துப் பொருளை ஏற்பது போல் இவ்வாண்டு ஏற்படவிருக்கும் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்கண்ட மூவகை ராகங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். சங்கராந்தி தேவதைகள் பல உண்டு. யுவ வருடத்திற்குரிய சங்கராந்தி தேவதை மிச்ரகா, தாது வருடத்திற்குரிய தேவதை மஹோதரி, இவ்விருவரும் ஸ்ரீரஞ்சனி, தோடி, கௌள ராகங்களால் ப்ரீதி அடைகின்றனர். குறிப்பாக மிச்ரகா தேவி, மிச்ரசாப தாளத்தால் ப்ரீதி பெறுவதாலும், மிச்ரசாப தாள ராகம் அளிக்கப்பட்டுள்ளது.
தாது வருடம்
நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தாது வருடத்திய புத்தாண்டுச் செய்தியாக அருள்வதாவது:- தாது வருடம் என்றால் சக்தியை ஊட்டக் கூடிய வருடம் என்று பொருள். மனிதன் உடல், மன – இவ்விரு நிலைகளில் தான் வாழ்ந்தாக வேண்டும். உடலுக்கும், மனதிற்கும் சக்தியை ஊட்டக்கூடிய வருடமே தாது வருடம். குறித்த சில ஆன்மீக அறவழி முறைகளைச் செம்மையாக இந்த தாது வருடத்தில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தாலே போதும், அவன் தன் வாழ்நாளுக்குரித்தான மனோ சக்தியை இந்த ஒரே வருடத்தில் பெற்றிடலாம். ஆழ்ந்த நம்பிக்கையும், வைராக்ய சித்தமும் இரண்டிற்கும் மேலாக குருபக்தியுமே அதற்குத் தேவையாம்.
உணவு முறைகள் :-
1. நன்மையான உணவு முறைகளையே மேற்கொள்ள வேண்டும். ஊட்டச் சத்துள்ள கீரை, பழங்களை அதிகமாக ஏற்பது சிறந்தது. குறித்த காலத்தில் உணவேற்க வேண்டும். தேன், முந்திரி, திராட்சை, மூலிகைக் கீரைகள், அத்திப்பழம் போன்ற இயற்கை உணவுகளை ஏற்பது சிறந்தது. இவையெல்லாம் சாதாரணமான அறிவுரைகள் தானே எனத் தோன்றும். ஆனால் தாது வருட குணாதிசயங்களின் படி நல்ல உணவுப் பழக்க வழக்கங்களின் மூலம் ஆன்மீக சக்திகளை மிக எளிதில் பெற்று விடலாம். அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடிய, ஏன் பொதுவாக வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிட்டும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாகாது!
2. காபி, டீ போன்ற தீமை தரும் பானங்களைத் தவிர்க்க மனிதனால் இயலவில்லை, அந்த அளவிற்கு அவன் அவற்றிற்கு அடிமையாகி விட்டான். ஆனால் விடா முயற்சி மூலம் இவ்வருடத்தில் தீவிர வைராக்கியத்தை மேற்கொண்டால் உள்ளக் கிளர்ச்சியை ஊட்டக் கூடிய பானங்களை அறவே தவிர்த்து விடமுடியும்! முயற்சி செய்திடுக!
3. மது, புகையிலை, போதைப் பொருட்கள்/உபகரணங்களிலிருந்து விடுதலை பெறுதற்குத் தாது ஆண்டே உகந்த ஆண்டாகும். அற்புத மனோ சக்தியைத் தர இருக்கும் இவ்வாண்டில் இத்தகைய தீய வழக்கங்களுக்கு எளிதில் தீர்வு காணலாம். எத்தகைய ஆன்மீக சக்தி கிட்டிடினும் அதை முறையாகப் பயன்படுத்தாவிடில் எல்லாம் வீண்தானே!
விந்தைப் பேணுவீர்....
4. ஆண்கள் எக்காரணம் கொண்டும் இவ்வாண்டில் தங்கள் விந்து சக்தியினை வீணே கழித்தலாகாது! கோடிக் கணக்கான இரத்த அணுக்கள், ஜீவ விருத்தியம்சங்கள் நிறைந்த விந்தை சாதாரணச் சிற்றின்பத்திற்காக வீணாக்கி அழித்திடல் தர்மமாகுமா? முறையான காமம் ஏற்புடையதே! அதுவே இல்லற தர்மம்! விந்தை முறையாகச் செலுத்துதல் வேறு, வீணாக்குதல் வேறு! யோனி பேத தர்மங்கள் பல உண்டு! தக்க பெரியோரை, ஆன்மீக வழிகாட்டியை நாடித் தெளிவு பெற வேண்டும். ஆண்கள் தங்களுக்கென காலநேர சந்திகளை நிர்ணயித்து, இரவு நேர  அசுப ஹோரைகள், எமகண்டம், அமாவாசை, பௌர்ணமி நேரங்களை/திதிகளைக் கருத்தில் கொண்டு சில முக்யமான பிரம்மச்சர்ய விதிகளையேனும் கடைபிடித்து விந்தைக் காத்திடல் வேண்டும். இவ்வாண்டில் முறையாகப் பேணப்படும் விந்து சக்தி பன்மடங்கு ஆன்மீக சக்தியைத் தந்து வாழ்நாள் முழுவதும் காத்து நிற்கும்.
5. ஆண், பெண் இருபாலரும் இவ்வருடத்தில் அநாவசியமான பேச்சைக் குறைத்திடல் வேண்டும். இதனால் பெருமளவு மனோசக்தி, தேகத்திறன் வீணாவதைத் தடுத்திடலாம்.
6. இவ்வாண்டில் கூடுமானவரை கோர்ட் சம்பந்தமான வழக்குகளைத் தவிர்க்கவும். இயன்றால் நீதிமன்ற வழக்கு எதனையுமே தவிர்த்து, இதர சமரச முறைகளை ஏற்பது நல்லது.
7. கல்வியில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதால் பெற்றோர்கள் குழப்பமடைவர். தக்க சற்குரு, ஆன்மீக வழிகாட்டியின் அறிவுரையை ஏற்பதே சிறந்ததாகும். தக்க வழிகாட்டியைப் பெறாதோர் உத்தம ஜோதிட நியதிகளின்படிக் கல்விப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
8. திருமணத் தடங்கல்கள் இவ்வாண்டில் நிறைய ஏற்படும். திருமணம் நடக்கும் வரை எதையும் நிச்சயித்துக் கூற இயலாது. ஜாதி, மத பேதமின்றி ஏழை தம்பதிகளுக்குப் பொன் மாங்கல்யம் தானமளித்துத் திருமணத் தடங்கல்களுக்குப் பரிஹாரம் காண்பீர்களாக!
9. நெருங்கிப் பழகுபவர்கள் கூடத் துரோகம் செய்யும் நிலை ஏற்படும், கவனமாக இருக்கவும். இதைத் தவிர்க்க மஹான்களின் ஜீவ சமாதிகளில் பௌர்ணமியில் அன்னதானம் செய்து வரவும்.
10. விலைவாசி மாற்றங்கள் வாழ்வை பாதிக்கும். பிறர் வயிற்றிற்கு நாம் இடும் அன்னமே (அன்னதானம்) நம் வயிற்றைக் குளிர்விக்கும்.
11. நில, புல, வீடு விவகாரங்கள் (அநீதியான முறையில்) துன்பங்களைத் தரும். செவ்வாய் பகவானை வேண்டி சிவப்பு நிற ஆடைகளை ஏழைகளுக்கு அளித்திடுக!
12. அரசியல் வாழ்க்கையில் ஏமாற்றங்கள், அநீதி, தலைகீழான மாற்றங்கள், எதிர்பாராத முடிவுகள் உண்டாகும். ஸ்திரமான மனதுடன் தனக்குரிய இறைப் பணியைச் செவ்வனே செய்து எதையும் இறை நியதியாக ஏற்கும் மனப் பக்குவத்தைப் பெற வேண்டும். தாது வருடத்திற்குரிய ராஜாவான புதன் கிரஹம், மந்திரியான சனி கிரஹ வழிபாடு, பச்சை, கறுப்பு, கருநீல நிற ஆடை தானம், பச்சைப் பயிறு, எள் உணவு தானம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
காலணி தானம்
13. 191996ம் ஆண்டில் பொதுவாக கால், பாதப் பகுதிகளில் குறிப்பாக இடது கால், இடது முழங்கால், இடது பாதத்தில் அடிபடுதல், வீக்கம், நோய்கள், எலும்பு முறிவு போன்றவை ஏற்படும். இயன்றவரை அடிக்கடி காலணிகளை தானமாக அளித்தல், குதிரை, மாடுகளுக்குக் கால்களில் லாடம் அடிக்கும் செலவினை ஏற்றல், 60/70/80 வயது நிறைந்த தம்பதிகளுக்குப் பாத பூஜை செய்தல், ஏழை மாணவ, மாணவியர்க்கு காலுறை (socks) ஷூ அளித்தல், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாதங்களில் சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு சார்த்துதல் போன்ற நற்காரியங்களை செய்து வரவேண்டும். இடது காலை உயர்த்திய நர்த்தன ரூப மூர்த்திகளின் (ஸ்ரீசிவன், ஸ்ரீகாளி, ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீவாமனர், ஸ்ரீநடராஜர்) திருத்தலங்களில் பாதம் பருப்பு கலந்த இனிப்பு உணவினை தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
14. ஜோதிடத் துறையில் வாக்சக்தி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவுபடும். பூஜா பலன்கள் நிறைந்தவர்களுக்கே வாக்சக்தி மேம்படும். அபிப்பிராய பேதங்களினால் ஜோதிடத் துறையில் குழப்பங்கள் ஏற்படும். பக்தி மிகுந்த, எவ்விதக் கட்டணமும் வசூலிக்காது ஜோதிடக் கலையை இறைப் பணியாக ஆற்றி வரும் உத்தம ஜோதிடர்களை நாடுவதே சிறப்பானதாகும்.

அமுத தாரைகள்

1. எக்காரணம் கொண்டும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கரியில் அக்னியெழுப்பித் தூபத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இதனால் கடுமையான சாபங்களும் தோஷங்களும் உண்டாகும். கரியில் பஞ்சு, கற்பூரம், தேங்காய் நார், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் – இவற்றைக் கொண்டு சாம்பிராணி அக்னியை எழுப்புதலே உத்தமமானது.
2. பெண்கள் மாதவிலக்கான மூன்றாம் நாள் தலை குளித்து, கூந்தலுக்கு சாம்பிராணி தூபம் இடுதல் மிகவும் முக்யமானதாகும். இறைநியதியாக கணவனுடைய நற்காரியங்களின் புண்யசக்தியில் ஐம்பது சதவீதம் இயற்கையாகவே மனைவிக்கு வந்து சேர்கிறது. அதற்கு ஒவ்வொரு பெண்ணிற்கும் உதவி புரிபவளே சுதபூரணி தேவி! மாதவிலக்கின் அசுத்தம் காரணமாக, அம்மூன்று நாட்களிலும் சுதபூரணி தேவி விலகி இருப்பதால் மூன்று நாட்களுக்கான அதிகப்படியான புண்ய சக்தி, பெண்ணிற்குக் கிட்டாமல் போகிறது. எனவே இந்நாட்களில் கணவன்மார்கள் கூடுதலான தான தர்மங்களைக் செய்து அதிகப்படியான புண்ய சக்தியைப் பெறவேண்டும். நான்காம் நாள் நீராடலுக்குப் பிறகு கூந்தலுக்குச் சாம்பிராணி தூபம் இடும்போதுதான் சுதபூரணி தேவி மீண்டும் இணைந்து இல்லறப் பெண்ணிற்குக் கணவனின் மூன்று நாள் புண்ய சக்தியையும் (பாதி) பெற்றுத் தருகின்றாள்.. எனவே மனைவியின் மாதவிலக்கு சமயங்களில் கணவன் சீரிய இறைப் பணியை ஆற்ற வேண்டும்.
3. ஸ்ரீவிஷ்ணுவின் முக்யமான நாமங்களுள் பன்னிரெண்டு கூடியவைக்கு “ஸ்ரீதுவாதச நாமாவளி” என்று பெயர். ஸ்ரீகோமதி அன்னையின் அருந்தவத்தைக் கண்டு அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் ஆனந்தத்திருக்க, ஸ்ரீமஹா விஷ்ணு ஸ்ரீகோமதி அன்னையின் முன்னிலையில் அனைத்துக் கோடி மஹரிஷிகட்கும் இந்த துவாதச நாமாவளியை உபதேசித்தார். ஸ்ரீகோமதி அன்னை இதனைத் “தபதி” என்ற பெண்மணிக்கு அருளிட நாரதர், சிபிச் சக்கரவர்த்தி மற்றும் அனைவரும் இதனைப் பெற்றுப் பரமானந்தம் அடைந்தனர்.
1. ஓம் ஸ்ரீஹராய நம:
2 ஓம் ஸ்ரீகேசவாய நம:
3. ஓம் ஸ்ரீபத்மநாபாய நம:

நம் சற்குருவே உபதேசமாக
அருளும் துவாதச நாமாவளி !

4. ஓம் ஸ்ரீவாமனாய நம:
5. ஓம் ஸ்ரீவேத கர்பாய நம:
6. ஓம் ஸ்ரீமதுசூதனாய நம:
7. ஓம் ஸ்ரீவராஹாய நம:
8. ஓம் ஸ்ரீவாசுதேவாய நம:
9. ஓம் ஸ்ரீபுண்டரீகாக்ஷாய நம:
10. ஓம் ஸ்ரீஜனார்த்தனாய நம:
11. ஓம் ஸ்ரீகிருஷ்ணாய நம:
12. ஸ்ரீ ஸ்ரீதராய நம:
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஈடான இதனை தினந்தோறும் 12 முறை துதித்து வருதல் சீரிய பலன்களைத் தரும்.
4. நம் வாழ்நாளில் புனிதமான பசுவை அறிந்தோ அறியாமலோ அடித்து, உதைத்து, மிதித்து அலட்சியப் படுத்தி வருத்தியிருப்போம். இது கடுமையான கோ சாபமாக மாறி நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதிக்கும். இதற்குப் பிராயச்சித்தமாக துவாதசி திதியன்று கச்சபேஸ்வரர் கோயிலில் அல்லது காமதேனு வழிபட்ட ஸ்வயம்பு லிங்கம் எழுந்தருளியுள்ள கோயிலில் (சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்) சாம்பிராணி தூபமிட்டு பசுக்களுக்கு உணவு, புல், பழங்கள் அளிக்க வேண்டும். பிறகு மாலையில் கோதூளியில் (பசுவின் காலடிக் குளம்பிலிருந்து தெறிக்கும் தூசியை நீரில் கரைப்பது) நீராட வேண்டும். ஸ்ரீகச்சபேஸ்வரரைச் சாந்தி செய்திடில்தான் கோ சாபம் தீரும்.

5. தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்குச் சாம்பிராணி தூபப் புகையைக் கொண்டு வந்தவரே மஞ்சுபாஷ்ய மஹரிஷி. இவரை தியானித்தே சாம்பிராணி தூபப் புகையைத் தொடங்கிட வேண்டும்.
6. அக்னி மூலையான தென்கிழக்கில் சமையல் அடுப்புகளையும் அக்னிப் பொருட்களையும் வைக்க வேண்டும். (உ.ம்) விளக்கு, ஊதுபத்தி, தீப்பெட்டி, காஸ் ஸ்டவ், அடுப்புகள், காஸ் லைட்டர், மெழுகுவர்த்தி. முச்சந்தியில் சூறைத் தேங்காய்களை/தெரு நடுவில் உடைக்கக் கூடாது. தென்கிழக்கில் நடுகல்லை வைத்து அதில்தான் சூறைத் தேங்காயை உடைக்க வேண்டும்.
7. குங்குமத்தை மோதிர விரலால்தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிறவண்ணங்களில் குங்குமம் இடலாகாது. பெண்கள் தம் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது குங்குமம் இடுதல் மாங்கல்ய விருத்தியைத் தரும். ஸ்ரீலக்ஷ்மி தேவி உறையும் மூன்று இடங்களான மாங்கல்யம், நெற்றி, தலை வகிடின் ஆரம்பம் – ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுதலே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கையில் மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
8. கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் உள்ளிட்ட பல சிவத்தலங்களில் ஆயிரத்தெட்டு கோடி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை , சிவபாத பூஜை நிகழ்த்திய அற்புத மஹரிஷியே ஜன்ஹு மஹரிஷியாவர், கோயபேடு ஆலயத்தில். “விபத்து, பூகம்பம், புயல், உயிரைப் பணயம் வைக்கும் பணிகள் போன்ற ஆபத்தான நிலைகளில் எவரொருவர் உன்னை தியானிக்கின்றாரோ அவர் எந்த ஆபத்திலிருந்தும் விடுபடுவார் என்னும் திருவரத்தை உனக்கு அளிக்கின்றேன்” என்று அருள்பாலித்தார். எனவே எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலும் “ஸ்ரீ ஜன்ஹு மஹரிஷிக்கு ஜெய்” என்று வேண்டுவோர்க்கு ஆபத்சகாயராய் இம்மஹரிஷியே காத்து நிற்கின்றார். ஆனால் விளையாட்டாக, சோதனை காரணமாக இதைப் பயன்படுத்திடில், பரீட்சித்திடில் சாபங்களே விளையும்.
9. எண்ணெய் ஸ்நானம் செய்யும் முறை
அனைவரும் வாரம் இருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும். ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும். எண்ணெய் ஸ்நானத்துக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இரண்டையும் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்போர் மிதமான சுடுநீரிலும், தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்போர் குளிர்ந்த நீரிலும் நீராட வேண்டும். எண்ணெயைத் தலை முதல் கால் வரை, உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரமாவது நன்கு ஊறிய பின்னரே குளிக்க வேண்டும்.
குளிப்பதற்கு ஷாம்பு, சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சீயக்காய், பச்சைப் பயிறு, வெந்தயம், அரிசி, காய்ந்த எலுமிச்சைத் தோல் இவைகளைச் சேர்த்து அரைத்த சீயக்காயைத்தான் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை தவறாது எண்ணெய் ஸ்நானம் செய்து வருவதால் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் சூடு தணிந்து நிதானப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகஅவசியமான பழக்கம் இது! குறிப்பாக, தியானம் செய்வோர் மேற்குறித்த முறையில் தவறாது எண்ணெய் ஸ்நானம் செய்து வந்தால் உடல் தியானத்திற்கு நல்ல முறையில் ஒத்துழைக்கும்.
10. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்பும் கிழக்கு நோக்கி நின்று “ஸ்ரீபாஸ்கராய நம:” (ஸ்ரீசூர்யா போற்றி) என்று பதினெட்டு முறை துதித்துச் செய்தல் மூலம் எதிர்வரும் பல துன்பங்களை வெல்லலாம்.
11. ஆதவனுக்குரிய கிழக்கு திசையில்தான் அனைத்து ஆபரணங்களையும், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், கண்ணாடி, பேனா ஆகியவற்றை வைக்க வேண்டும்.
12. எந்தவிதமான தஸ்தாவேஜுகளிலும், பத்திரங்களிலும் கிழக்கு நோக்கி நின்று கையெழுத்திடுதலே சுபத்தைத் தரும். (Contract, Guarantee, Documents, attendance register etc..).
13. புஷ்பங்களையும், மாலைகளையும் “ஸ்ரீபவ தேவாய நம:” என்று ஐந்து முறை (கிழக்கு நோக்கித்) துதித்தே ஸ்வாமிக்கு சார்த்துதல்/பெண்கள் அணிதல் வேண்டும்.
14. புதிதாக அரைத்த சந்தனத்தை, அரைத்த ஒரு மணி நேரத்திற்குள் இறைவனுக்குச் சார்த்துவதே பரிபூரண பலன்களைத் தரும். அரைத்து பன்னிரெண்டு மணிநேரத்திற்கு மேற்பட்டச் சந்தனத்தை ஸ்வாமிக்குச் சார்த்தவே கூடாது. கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் கரைத்துப் பயன்படுத்துவதை விட, இல்லத்திலேயே நாமே சந்தனக் கல்லில் சந்தனம் அரைப்பதே விசேஷமானது. அதிகமான அளவு தேவைப்படில் சந்தனக் கட்டைகளை வைத்துக் குறைந்தது 1008 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்துப் பின் இயந்திரத்தில் அரைத்துக் குழைக்கலாம்.
15. எந்த விதமான முடிச்சுகள், முடிதல் பணிகளைக் கிழக்கு நோக்கியே முடி(ந்)த்திட வேண்டும். உதாரணம், மாங்கல்யதாரணம், பூமுடிதல், நார் முடிதல், கிணற்றுக் கயிறு முடிதல், கட்டுகள், வேஷ்டி/சேலை அணிதல்.
16. சிறுநீரக, குடல் நோய்களுக்கு நிவாரணம்
சிறுநீரகக் கோளாறுகள், குடல் சம்பந்தமான வியாதிகள் போன்றவற்றிற்கு நிவாரணமாக சென்னை பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சிவதரிசனம் சித்த புருஷர்களால் அருளப்பட்டுள்ளது. இங்கு அபிஷேக ஆராதனைகள், உழவாரத் திருப்பணியுடன் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிரசவமடைந்த பெண்களுக்கும் உள்ளாடைகள், மருந்துகள், டானிக்குகள் வாங்கி அளித்து உதவுதலால் சிறுநீரக மற்றும் உடல் நோய்களுக்குப் பரிகாரம் பெறலாம்.
17.  நம் மரணத்தை நாமே அறிய முடியுமா? முடியும் எவ்வாறு? நல்ல கண்ணாடி முன் நிற்கும் போது,
தலை தெரியாதிருந்தால் – 3 நாளில் உயிர் பிரியும்
இடது கை தெரியாதிருந்தால் – 12 மாதங்களில் உயிர் பிரியும்
நாசி தெரியாதிருந்தால் – 6 மாதங்களில் உயிர்பிரியும்
வலது கை தெரியாதிருந்தால் – 3 மாதங்களில் உயிர் பிரியும்
மேலும் பல விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடி அறியவும்.
18. பச்சிளங் குழந்தை நன்றாகத் தாய்ப் பால் அருந்த குழந்தையின் முதல் மாதத்தில் தினமும் காலை, மாலையில் பால் குடிப்பதற்கு முன் குழந்தைக்கு சாம்பிராணி தூபப் புகையைக் காட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி, தாய்மார்களுக்கும் பால் கட்டுதல் போன்ற துன்பமும் ஏற்படாது. தினமும் குழந்தையைப் பலரும் வந்து, பார்த்து, தூக்கி, கொஞ்சிச் சென்ற பின்னரும் குழந்தைக்கு மந்தம், விதிர்த்து அழுதல், முறுக்கி அழுதல் போன்றவை தீரும்.
19. பஞ்சாங்கத்தில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று குறிப்பிட்டிருக்கும். மேல்நோக்கு நாட்களில் பூமிக்கு மேல் செய்யப்படும் கூரை போடுதல் போன்ற காரியங்களையும் கீழ்நோக்கு நாட்களில் அஸ்திவாரம், கிணறு தோண்டுதல் போன்றவற்றையும் சமநோக்கு நாட்களில் தானியங்களைக் காயவைத்தல் போன்ற பணிகளையும் நிகழ்த்திட இவற்றில் எவ்விதத் தடங்கல்களும் ஏற்படாது. ஸ்ரீபூமாதேவியை வழிபட்டுக் குறித்த தானதர்மங்களுடன் இவற்றை நிறைவேற்றிடில் பல துன்பங்களைத் தவிர்த்திடலாம்.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம வினை வேரறுக்கும் வழி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக!

தேதி

நித்ய கர்ம – நிவாரண சாந்தி

1.4.1996

வடக்கு நோக்கியிருக்கும் பாம்புப் புற்றிற்குப் பால், மஞ்சள், குங்குமம் கொண்டு பூஜை – நாத்தனார் கொடுமை தீரும்.

2.4.1996

“சர்வ மங்கள மாங்கல்யே” சுலோகம் 51/108 முறை துதித்து 5 சுமங்கலிகளுக்கு மாங்கல்யப் பொருட்களைத் தானம் செய்திட – இரண்டாந்தார மனைவி(யாலான)யின் துன்பங்கள் தணியும்.

3.4.1996

கார அரிசிப் புட்டுடன் சந்திர பகவானுக்குப் பூஜை, குழந்தைகளுக்கும் புட்டுதானம் – தடுக்கி விழும் ஆபத்துகள் தணியும்.

4.4.1996

வாஸ்துவின் சுப நேரத்தில் பூமாதேவிக்கு மஞ்சள் நிற உணவு – நைவேத்யம், தானம் – அறிந்த, அறியாத கிரஹ தோஷங்கள் தீரும்.

5.4.1996

வயதானோர்க்குக் கைத்தடி தானம் – வருமானக் குறைவுப் பிரச்னைகள் தீரும்.

6.4.1996

அனாதை இல்லங்களுக்குத் தென்னைத் துடைப்பங்களைத் தானமாக அளித்தல் – வீட்டில் உள்ள பீடைகள் நீங்கும்.

7.4.1996

வெள்ளை நிறம் உள்ள பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்யம், தானம் – பக்கத்தில் இருப்பவர்கள் கோள்மூட்டுதலால் வரும் துன்பங்கள் தீரும்.

8.4.1996

துளஸி மாதாவைப் பூஜித்து ஏழைகட்கு மாங்கல்யச் சரடு தானம் – கணவனின் கொடுமை தீரும்.

9.4.1996

தேங்காய்த் துருவலில் வெல்லம் கலந்து யானைக்கு அளித்தல் – பண பலத்தின் அகங்காரம் குறையும்.

10.4.1996

எட்டு விமானங்கள் உள்ள கோயில் தரிசனம் – எட்டுப் பேருக்கு அன்னதானம் – பல வருட ஆத்ம ஏக்கங்கள் குறையும்.

11.4.1996

நாய்க்கு உணவிட வங்கி உயரதிகாரிகளின் பிரச்னைகள் தீரும்.

12.4.1996

காவி உடையணிந்த உத்தமரைத் தரிசித்துப் பழ தானங்கள் – இறந்த பெரியப்பாவிற்குப் ப்ரீதி அளிக்கும்.

13.4.1996

ராகு பகவானுக்குக் கறுஞ்சிவப்பு நிற வஸ்திரம் சார்த்துதல், கறுப்பு நிறமுடையோர்க்கு அதே நிற ஆடைதானமளித்தல் – பெரும் கடன்கள் தீரும்.

14.4.1996

 ஸ்ரீவரதராஜர் கோயிலில் தானம்.

15.4.1996

பஞ்சவர்ணக் கிளிகளுக்கு உணவிடுதல் – எதிர்பாராத நற்செயல் நடக்கும்.

16.4.1996

ஓதுவா மூர்த்திகளுக்கு வஸ்திர தானம் – 10 பாடல்களைப் பாட வைத்தல் – ஸஹஸ்ர அர்ச்சனையின் பலன் கிட்டும்.

17.4.1996

70 வயதுக்கு மேல் வாழ்ந்த பெரியோர் பெயரில் 7பேருக்கேனும் தானம் – குழந்தைகளால் குழப்பங்கள் தீரும்.

18.4.1996

ஸ்ரீதன்வந்த்ரீ சந்நதியில் தானம் – ஆரோக்யமான வாழ்வு.

19.4.1996

ரிஷப வாகன தரிசனம் – மல்லிகைப்பூ சார்த்துதல் – தேங்காய் சாதம் தானம் – அபாண்டத் திருட்டுப் பழி தீரும்.

20.4.1996

மூதாதையர்க்கு குறிப்பாகத் தாய்வழிப் பிதுருக்களுக்கு தர்ப்பணம் – இயன்ற தானம் – ஆசி கிட்டும். குழந்தைகளின் படிப்பு விருத்தி.

21.4.1996

ஸ்ரீகால பைரவருக்கு முந்திரி மாலை – பயம் தீரும்.

22.4.1996

வீட்டில் வாஸ்து ஸ்தானத்திற்கு பூஜை – தோஷ, திருஷ்டி நிவர்த்தி

23.4.1996

ஸ்ரீநாராயணாய நம: ஜபம் ஸ்ரீராமர் கோயிலில் தானம் – கடன் நிவர்த்தி

24.4.1996

கங்கை நீரால் முருகனுக்கு அபிஷேகம் – நிலையான வாழ்வு கிட்டும்.

25.4.1996

ஸ்ரீஹயக்ரீவருக்கு மணமுள்ள பூமாலை – குழந்தைகளுக்குப் பால் தானம் - பிரயாண சுகம்.

26.4.1996

வேதம் படித்தவர்களுக்கு உணவிடுதல் – ஆத்ம சாந்தி.

27.4.1996

குதிரைக்குக் கொள் அளித்தல் – மூச்சிரைப்பு தணியும்.

28.4.1996

வஸந்தா, வசந்தி, வாசவி போன்ற பெயருடையோருக்கு மங்களப் பொருட்கள் தானம்- இந்திரப்ரீதி, முறையான ஆசை தீரும்.

29.4.1996

பூனைகளுக்கு உதவி (Blue Cross) – கடிதப் பிரச்னைகள் தீரும்.

30.4.1996

தமிழ்மணி, தமிழரசி, மனோன்மணி, கார்த்யாயனி, கருணாகரி, காமாட்சி, முத்தம்மா போன்ற பெயருடையோர்க்கு உணவு/உடை தானம் – காணாமல் போன பொருள் கிட்டும்.

1.5.1996

சிவ தரிசனம்/அர்ச்சனை – கடன் தொல்லை குறையும்.

2.5.1996

வெள்ளை விநாயகருக்கு அர்ச்சனை/அபிஷேகம் – வெள்ளை நிறமுடையோர்க்கு தானம்.

விசேஷ தினங்கள் ஏப்ரல் – மே 1996
3.4.1996 – பங்குனி உத்திரம்
13.4.1996 – தாது வருடப் பிறப்பு
20.4.1996 – அட்சய திரிதியை
2.5.1996 – பௌர்ணமி பூஜை (சித்ரா பௌர்ணமி)
3.5.1996 – கத்ரி ஆரம்பம்

டமருக தந்த மகரிஷி

ஆத்ம விசார – வினா விடை (அன்பர்களின் ஆன்மீக வினாக்களுக்கு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் விளக்கம் அளிக்கின்றார்கள்)
வினா : சகஸ்ரநாமத்தில் ஹாஹாஹுஹு என்று வருவதன் பொருள் என்ன? ( ஹாஹா ஹுஹு கந்தர்வர்கள் என்று பொருள ்கொள்ளப் படுகிறது.)
விடை : கந்தர்வர்களில் பல கோடிப் பேர்கள் உண்டு! ஏழு ஸ்வரங்களை வைத்து நாம் இசைப் பண்களை அமைக்கின்றோம். 27, 108 ஸ்வரங்கள் மட்டுமன்றி ஏழுவகை நிறங்களுக்கு மேல் 21, 57, 108 வண்ணங்களுடன் பொலியும் அற்புத கந்தர்வ லோகங்கள் உண்டு. இவையெல்லாம் விண்ணுலக அற்புதங்கள்! இசைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் பெரும்பாலும் கந்தர்வ லோகத்தில் தான் மறுபிறப்பெடுக்கின்றனர். அங்கிருந்தும் பலர் பூமிக்கு வருவதுண்டு.
எண்ணற்ற கந்தர்வ லோகங்களில் தேவதாரு என்ற கந்தர்வ லோகத்தைச் சேர்ந்த டாகினீஸ்வரி என்ற தேவதை சுந்தர ரூபத்துடன் அற்புதமான இனிய குரல் வளமுடையவள். அவள் சரணம் பாடினால் தாவரங்கள் நன்கு வளரும். தேவலோகத்தில் அந்த அதிலாவண்ய ரூபியின் இசையால் வளர்ந்த அமிர்த, புஷ்பத் தாவரங்களே இன்றைக்கும் பல லோகங்களில் உண்டு. டாகினீஸ்வரி தன்னுடைய இசை, நாட்டியத் திறமை, குணாதியசங்களை, ஆற்றலை இறைவனுக்கே அர்ப்பணித்தனள். இத்தகைய உத்தம தேவதையின் உள்ளத்தில் ஒரு சிறு அவா! என்ன அது!
டமருக தந்த மஹரிஷி
திருக்கையிலாயத்தின் சிவகணங்களுள் முதன்மையானவருள் ஒருவராகத் திகழும் டமருக தந்தர் என்னும் உத்தம மஹரிஷியை மணந்து கோடானு கோடி யுகங்களுக்கு, சதுர் யுகங்களுக்குத் தம்மையே இசைத் துறைக்கு அர்ப்பணிக்கும் உத்தமப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்பதே அச்சிறு அவாவாம். அத்தகைய தெய்வீகப் பேராற்றல் பெற்ற டமருக தந்தர் மஹரிஷியார் யாரோ? 38,000 கோடி கந்தர்வ லோகங்களில் பல சதுர்யுகங்களாக, திருக்கயிலாயம், ஸ்ரீவைகுண்டம், சரவணம், சூர்ய, சந்திரலோகம், குரு, சுக்ர மண்டலங்களில் அவர் நல்லிசையைக் கூட்டியதன் தவப் பலனாய்த்தான் அவர் இன்றைக்கும்  கைலாயத்தில் உறைகின்றார். இசைக்குரிய ஸ்ரீசியாமளா தேவியின் பாக்யம் பெற்று சியாமளா லோகத்தில் இன்றைக்கும் இரண்டு சந்தி நேரங்களிலும் கான மழை பொழிகின்றார். டமருக தந்தரின் தரிசனமே பலருக்கும் கிட்டாது, ஏனெனில் அவர் எப்போதும் சிவ தியானத்தில் சிவ பூஜையில் சிவ கானத்தில் திளைப்பவர். எவரேனும் இறைப் பண்களை ஓதிடில் ஆனந்தமுடன் மௌனியாகக் கேட்டு நிற்பார். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெறுவது எவ்வளவு கடினமோ அதேபோல் டமருக தந்த மஹரிஷியின் திருவாயால் இசைப் பாராட்டுதலைப் பெறுவது! எத்தனையோ உத்தம கந்தர்வர்கள் டமருகதந்த மஹரிஷியின் முன் இசைத்துள்ளனர். அடியேனின் இசை எப்படியிருந்தது மஹாபிரபோ? என்று எவரேனும் கேட்டிடில் மௌனம் சாதித்திடுவார். மிகவும் வற்புறுத்திக் கேட்டிடில் அந்த கந்தர்வகானத்தில் ஒரு பகுதியை மட்டும் தன் இனிய குரலில் தெய்வீக பாவத்துடன் ,அற்புத அபிநயத்துடன் ஆடியும் பாடியும் காண்பிப்பார். அதைக் கண்டு வெட்கமடையும் கந்தர்வர் தன்னைத் திருத்திக் கொள்வர்.
டமருக தந்தர் – டாகினீஸ்வரி
ஒரு யுகத்தில் தாது வருட பகுள பஞ்சமி திதியன்று டாகினீஸ்வரி, டமருக தந்தரின் தியான நிலையைக் காணும் பேறு பெற்றாள், அவளுடைய தீவிரமான சியாமளா தேவி உபாசனையின் காரணமாக! ... கணீரென்று மணிரங்கு ராகத்தில் பாடத் தொடங்கினாள் டாகினீஸ்வரி.. எத்துணை மணிநேரம் விதவிதமான ராகங்களில் கான மழை பொழிந்திருப்பாளோ டாகினீஸ்வரியே அறியாள். “ஆஹா, ஊஹு.... “ என்ற தேனினும் இனிய பாராட்டு மொழிகளைக் கேட்டுக் கண் திறந்தனள் டாகினீஸ்வரி.! அனைத்து கந்தர்வர்களும் இவ்வரிய அற்புதக் காட்சியைக் கண்டு வியந்து அசையா நின்றனர், காரணம் டமருக தந்தர் தம் ஆயுளிலேயே முதன் முதலாக “ஆஹா, ஊஹு”“ என்று உளமாரப் பாராட்டிய தெய்வீக நிகழ்ச்சியைக் கண்டுதான்!
பிறகென்ன வசிஷ்டர், விஸ்வாமித்ரர் உட்பட அனைத்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ஆசிர்வதித்திட, டமருக தந்தர், டாகினீஸ்வரியை மணந்தார். அவ்வுத்தமத் தம்பதியர்கள் இரு தெய்வீகப் புதல்வர்களைப் பெற்றனர். டமருக கந்தர்வர், இறையருளுடன் அவர்களுக்கு இட்ட பெயர் என்ன தெரியுமா?
ஆஹா விஸ்வ பூஜிதன், ஊஹு அதர்வண பூஜிதன் என்பதே அவர்களுடைய திருப்பெயர்களாகும். இவை சாதாரணப் பெயர்களா, இல்லையில்லை, ஸ்ரீஹயக்ரீவ, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசியாமளாதேவி, ஸ்ரீவீணா தக்ஷிணாமூர்த்திகளின் பீஜாட்சர ரகசியங்கள் பொதிந்த திவ்ய நாமங்களன்றோ அவை! இசை ஞானிகளின் சேய்களன்றோ! பிறவியிலேயே அற்புதமான இசை ஞானம் பெற்றிருந்தனர் இருவரும்! காலை, மதியம், மாலை மூன்று காலங்களிலும் நிதமும் பெற்றோர்  முன் அமர்ந்து பாடுவர். இவர்கள் நினைவில் தான் இன்றைக்கும், கானமோ, இசையோ மிகவும் சிறப்புற அமைந்தால் “ஆஹா, ஊஹு” என்று மனதாரப் பாராட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஊஹு என்பதே “ஓஹோ” ஆயிற்று. ஆரோஹண ஸ்வரங்களுக்கு ஸ்ரீஆஹா விஸ்வ பூஜிதரும் அவரோஹண ஸ்வரங்களுக்கு ஸ்ரீஊஹு விஸ்வ பூஜிதரும் அருள்பாலிக்கின்றனர்.
பெற்றோருக்கு முன் (முதல்) கானம் – இன்றைக்கு இசைத் துறையில் சிறந்து விளங்குவோரும் இசைத் துறையில் முன்னேற விழைவோரும் கடைபிடிக்க வேண்டிய விசேஷ நடைமுறைகள், வழிபாடுகள் உண்டு. குருமுகமாக அவற்றை அறிந்து கடைபிடிப்போருக்கு தெய்வீகப் பொலிவு ஏற்படுவதுடன் அவர்களுடைய இசைக்கு ஆன்மீக சக்திகளும் பெருகிடும்.
1. மாதா, பிதாவை நமஸ்கரித்தே நிதமும் சாதகத்தை தொடங்கிட வேண்டும்.
2. தினமும் தாய் தந்தையர் மனங்குளிர இசைபாடி/வாத்யங்களை இசைத்து மகிழ்விக்க வேண்டும். தாய், தந்தை மகிழ்ந்திடில் தான் புகழ், பேறு, செல்வம் நிலைத்து நிற்கும்.
தற்காலத்தில் ஆயிரக்கணக்கானோரை, மேடையில் இசைத்து மகிழ்விக்கும் இசைக்கலைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் ஒரு பத்து நிமிடம் கூடப் பாடுவதற்கு “நேரம் இல்லை” என்று கூறுவது மிகவும் வேதனையளிக்கக் கூடியதாகும். பணத்திற்காக அயல் நாடுகளுக்கெல்லாம் இசைக் கருவிகளைத் தூக்கிக் கொண்டு, அலைவோர், அன்னையையும் பிதாவையும் அலட்சியப்படுத்தினால் தன்னை வாழவைக்கும் இசை தேவியையே உதாசீனப்படுத்துவது போலாகும்.
இசை இறைவனுக்கே.....
3. இசை இறைவனுக்கே உரித்தானது. லௌகீக வாழ்க்கைக்காக இசையைப் பயன்படுத்தினாலும் இசை ஞானத்தை ஊட்டியவன் இறைவனே என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்தால் தான் சிறப்பு தரும்.
4. இசைத் துறையிலிருப்போர் எவ்வளவு செல்வம் சேர்ந்திடினும் அல்லது வறுமை வந்திடினும் எக்காரணம் கொண்டும் புகை, புகையிலை, மதுவிற்கு அடிமையாகக் கூடாது. இதனால் சாபங்களே ஏற்பட்டுச் சந்ததியையே பாதிக்கும்.
5. இசைத் துறையில் அழியாப் புகழ் பெற்று நிரந்தர சேவை செய்ய வேண்டுமெனில் தன் திறமையனைத்தையும் இறையருளின் கருணையே எனத் தெளிந்து இறைவனுக்கே தன் படைப்புகளை அர்ப்பணிக்க வேண்டும்.
தக்க சற்குருவை நாடி டாகினீஸ்வரி உபாசனை, டமருக தந்தரின் சுவாசயோக தந்திரங்கள் ஆகியவற்றைப் பயில்வதுடன் ஸ்ரீவீணா தக்ஷிணா மூர்த்தி வழிபாடு, ஸ்ரீசியாமளாதேவி பூஜைகளை முறையாக மேற்கொண்டால் இசை ஞானம் தானாகவே உற்பவிக்கும்.
6. ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீசதாசிவ பிரமேந்திரர், ஸ்ரீநந்தனார், ஸ்ரீவள்ளலார் போன்ற மஹான்களின்/ஞானிகளின் ஜீவ சமாதியில், திருச்சந்நதியில் அடிக்கடி இசைக் கூட்டித் தங்களுடைய ஆன்மீக சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
7. கோயில்களில் இறைவனைப் பற்றிய பாடல்களை மட்டும் இசை “தானம்” அளிக்க வேண்டும். எவ்விதத் தொகையையும் பெறலாகாது.
இசை அர்ப்பணிப்பு முறை
எந்த ஒரு இசைஞானியும்  ஆஹா, ஊஹு கந்தர்வர்களின் ஆசியைப் பெற்றால் தான் இசை ஞானத்தில் பரிபூர்ணத்தைக் காண இயலும். பௌர்ணமி, ஏனைய நாட்களில் புதஹோரை நேரங்கள், காலை, மாலை, மதிய சந்தி நேரங்கள் போன்ற புனிதமான நேரங்களில் ஸ்ரீஅம்பிகை சந்நதிகளில் ஆஹா, ஊஹு இருவரும் பிரசன்னமாகின்றனர். சுபமுகூர்த்த நேரங்களும் இவர்களுக்குப் ப்ரீதியானவையாகும்.
மப்பேடு சிவாலய மஹிமை

மப்பேடு சிவாலயம்

எனவே இக்குறித்த நாட்களில் புனிதமான நேரங்களில் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல் இவ்விரு கந்தர்வர்களையும் ஆனந்தப்படுத்தும். சென்னை – மப்பேடு சிவாலயத்தில் உள்ள அற்புதமான பலிபீடமருகே நவவியாகரண பண்டிதராண ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி இன்றைக்கும் நிதமும் சந்தி நேரங்களில் பிரசன்னமாகி இசைத்து ஆனந்திக்கின்ற ஆன்மீக ரகசியத்தைச் சித்தர்களின் நாடி கிரந்தங்களின் மூலம் அறியலாம். ஒரு யுகத்தில் இச்சிவாலயம் இசை ஞானிகளின் கூடமாக விளங்கியது. தற்போது இதனருமையை எவரும் உணராததால் எவ்விதச் சந்தடியுமின்றி தனித்தே காட்சியளிக்கின்றது! பாடகர்களும் இசைக்கருவி விற்பன்னர்களும் இத்திருக்கோயிலில் பலிபீடத்தருகே அமர்ந்து பாடி/வாசித்துப் பெறற்கரிய இறையனுபூதியைப் பெறவேண்டுகிறோம். திவ்யமான சிவத்தலம்! பழம்பெரும் சிவத்தலம்! இசைக்கே உரித்தான ஈஸ்வரத் தலம்! இசையில் உன்னதம் பெற்ற உத்தம கந்தர்வர்கள் நடமாடும் புண்யத் தலம்! ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த புனிதத்தலம்! இசையமைப்பாளர்கள், இசைத் துறையைச் சார்ந்தவர்கள், இசைக்கருவி ரேடியோ, காஸெட் தயாரிப்போர், பாடகர்கள், இசைக் கருவி விற்பன்னர்கள், பின்னணி பாடகர்கள் போன்றோர் இந்த சென்னை – மப்பேடு (ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது) ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவலாயத்தில் இசைத்துப் பெறுதற்கரிய உத்தமமான ஆனந்த நிலையை அடைந்து நல்வாழ்வு பெற வேண்டுகிறோம்.
பங்குனி உத்திரம்
பல தெய்வ மூர்த்திகளின் திருமண வைபவ நாள். பொதுவாக, திருமணங்கள் திருக்கோயில்களில் நடப்பதே உத்தமமானது. தமிழ், வடமொழி வேத பாராயணங்கள், ஹோமம், பாலிகை பூஜை, தீப பூஜை, தான தர்மங்களுடன் அக்காலத் திருமணங்கள் நிகழ்ந்தமையால் தான் ஜாதக தோஷம், கால, வர்தமான தோஷங்கள், சாபங்கள், திருஷ்டிகள் நீங்கி குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக விருத்தியடைந்தன. இறை பக்தியும் பொலிந்தது. ஆனால் தற்காலத்தில் அனைத்துத் திருமணச் சடங்குகளும் குறுகிவிட்டன. சாந்தி முகூர்த்தத்திற்கு முன் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான ஹோமம் அறவே மறைந்து விட்டது. இந்நிலையில் திருமணத்தை, குறிப்பாக, தாலிகட்டும் வைபவத்தை இறைவனின் திருச்சந்நதியில் நிகழ்த்துவதே புனிதமானதாகும்.
இறைவனுடைய திருப்பார்வை பட்டிட, அனைத்து மாங்கல்ய தோஷங்களும் மறைந்துவிடும். உத்தம தேவதைகளும், வசு, ருத்ர, ஆதித்யப் பித்ரு தேவர்களும், மஹான்களும், ஞானியரும், யோகியரும், சித்த புருஷர்களும் வலம் வரும் திருக்கோயிலில் நிகழ்வதென்ன? வேத மந்திரம் ஜபிக்காமல், ஹோமம் நிகழ்த்தாமையால் வரும் எண்ணற்ற சாபங்களை இவர்களே ஏற்று, கர்மவினை பாரத்தைத் தாமே சுமந்து தம்பதியருக்குக் கர்ம நிவாரணம் அளிப்பதுடன் தங்கள் அனுக்ரஹத்தையும் அள்ளித் தருகின்றனர். நடமாடும் கோயிலான மஹான்கள் நேரில் வந்து ஆசிர்வதிக்கும் திருமணத்தை நிகழ்த்தினால் கூட, மாங்கல்ய தாரணம் கோயிலில் தான் நடைபெற வேண்டும். ஆனால் அறியாமையாலும் பல காரணங்களாலும் பலருடைய திருமணங்கள் கோயிலில் அல்லாமல் சத்திரங்களில் நடைபெற்றிருக்கலாம். இத்தகையோருக்குத் தகுந்த பரிஹாரமாக, யுவ வருடப் பங்குனி உத்திரத் தினத்தன்று தம்பதியினர் கீழ்கண்ட கோயில்களில் புது மாங்கல்யம் அணிவது, மாங்கல்யச் சரடை மாற்றுவது ஆகியவற்றை மேற்கொண்டிட, திருமணத்தைக் கோயிலில் நடத்தாமைக்கானப் பிராயச்சித்தத்தை ஓரளவு பெற்றிடலாம்.
1. ஸ்ரீபெருமாள் நித்யகல்யாண சேவை சாதிக்கும் திருவிடந்தை (சென்னை அருகில்) வைணவத் தலத்தில் அவரவர் திருமண நாளன்று ஸ்வாமிக்குக் கல்யாண உற்சவம் நடத்தி  மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்தல் விசேஷமானதாகும்.
2. மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் சிவபெருமான் திருமணக்கோலம் பூண்டுள்ள சிவத்தலத்தில், அவரவர் திருமண நாளன்று, இங்கு கல்யாண உற்சவத்துடன் மாங்கல்யச் சரடை  மாற்றிக் கொள்வது விசேஷமானதாகும். இத்தலங்களில் ஜாதி மத பேதமின்றி குறைந்தது 21 ஏழை சுமங்கலிகளுக்கு  மாங்கல்யப் பொருளைத் தானமாக அளித்தல் அளப்பரிய அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும்.
3. வடபழனி முருகன் ஆலயத்தில் செவ்வாய் பகவானுக்கு அவரவர் திருமணநாளில் செவ்வாய் ஹோரையில் செம்பால் அபிஷேகம் (குங்குமம் + பச்சரிசி + பசும்பால்) செய்திடில் மாங்கல்ய தோஷங்கள் தீரும்.
அட்சய திருதியை
அட்சய திருதியைப் பற்றிய பல அபூர்வமான ஆன்மீக விளக்கங்களை கடந்த ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் (மே 1994) வெளியிட்டுள்ளோம். வரும் அட்சய திருதியை (20.4.1996) விசேஷ நாளன்று
1. சிவபெருமான் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரியிடமிருந்து அன்னம் பெற்ற விசேஷ தினமாகையினால் அன்ன பூரணி தேவி எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் (காசி, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம்) குரு ஹோரை சுபநேரத்தில் இல்லையென்று சொல்லாது அன்னதானம் செய்திட ஆதிசிவனுக்கே அன்னமிட்ட புண்யத்தைப் பெற்றுத் தரும்.
2. காஞ்சிபுரத்தில் பல சதுர்யுகங்களாக பூவுடலில் அருள்பாலித்த அன்றும் இன்றும் என்றும் அருள்பாலிக்கும் ஸ்ரீபோடா சித்த ஸ்வாமிகளின் (ஸ்ரீசிவஸ்வாமி, ஸ்ரீநாகநாதஸ்வாமி) ஜீவசமாதியில் அன்னாபிஷேகம், அன்னதானம் மிகவும் விசேஷமானதாகும். ஆதிசிவன் பிரம்ம கபாலத்தை ஏந்திய யுகத்தைச் சார்ந்த சித்த மஹரிஷியே அவரென ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் சிறப்புடன் எடுத்துரைக்கின்றது.
(ஏனைய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா விளக்கியுள்ள “ஸ்ரீபோடா சித்தர் மஹிமை” என்ற நூலில் காண்க) எத்தகைய திருமண தோஷங்களுக்கும் நிவர்த்தியளிக்கும் அற்புத ஜீவசித்தபுருஷராய் இன்றைக்கும் ஜீவசமாதியில் அருள்பாலிக்கின்றார். “அந்த சித்த புருஷரைத் தரிசித்தேளா!” “என்று காஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தர்களிடம் கனிவுடன் இச்சித்புருஷரைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்கள்.
3. திருப்பரங்குன்றத்தில் அறுபடையுள் ஒன்றாகிய தலத்தில் ஸ்ரீஅன்னபூரணியின் விதவிதமான ஸ்வரூபங்களைக் காணலாம். வேறு எங்கும் காணக் கிடைத்திடா மூர்த்திகள், குருவாயூர் போல் இங்கும் அன்னப் பிராசனம் (குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டுதல்) செய்தல், குழந்தைக்குப் பெரும் பேற்றைப் பெற்றுத்தரும்.
காரட், பீட்ரூட் , எண்ணெய், கத்தரிக்காய் போன்ற உணவு அலர்ஜி (food allergy) நோயுள்ளோர் இங்குப் பிரார்த்தித்துத் தனக்கு எது அலர்ஜியோ அவ்வுணவினைப் பெருமளவில் இங்கு அன்னதானம் செய்துவர எத்தகைய உணவு அலர்ஜி நோயும் தீரும். கடுமையான சர்க்கரை நோயுள்ளோர் (acute diabetic) ஆழ்ந்த நம்பிக்கையுடன் இங்கு வேண்டுதல் மேற்கொண்டு ஷஷ்டி, கிருத்திகை, பங்குனி உத்திரம், அட்சய திருதியை, விசாக நட்சத்திரம், பூரம், செவ்வாய்க் கிழமை ஆகிய நாட்களில் இனிப்பு உணவுகளை அன்னதானம் செய்துவர நோயின் கடுமைகள் நன்கு தணியும். ஆழ்ந்த நம்பிக்கையே பலத்த அஸ்திவாரம்.

திருஅண்ணாமலை கிரிவலம்

திருஅண்ணாமலை கிரிவல மஹிமை – சில விளக்கங்கள் (நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளிக்கும் விளக்கங்கள்)
அடியார் : திருஅண்ணாமலை கல்லாலான மலைதானா, குருதேவா?
சற்குரு : கிருத யுகத்தில் நெருப்பு மலை, திரேதா யுகத்தில் மாணிக்க மலை, துவாபர யுகத்தில் பொன்மலையாக அருணாச்சலம் விளங்கிற்று என்பதை நாமறிவோம். கலியுகத்தில் இது பொன்னாகக் காட்சியளித்தால்.... அதன் விளைவுகளைச் சற்றே எண்ணிப் பாருங்கள்! எனவேதான் ஆதிசிவன் தன் திருமேனியையே மலையாகக் கொண்ட இத்தலம் தற்போது கல்மலையாகக் காட்சியளிக்கின்றது. ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்களோ ஏராளம், ஏராளம்! ஸ்ரீரமண மஹரிஷிக்குக் கல்லாலமரத்தின் ஒரு பெரிய ஆல இலையின் புனித தரிசனம் கிடைத்ததை நாமறிவோம். அந்தக் கல்லால மரம், சாட்சாத் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, தன் பூத உடலில் சத்சித் ஆனந்த யோகானந்த தியானத்தில் திருஅண்ணாமலைமேல் வீற்றிருக்கும் கல்லாலமரம், அதைக் காண கண் கோடி வேண்டும். கல் மலை என்றல்லவா அடியேன் சொன்னேன், அதுவே தவறு! கல் மலைபோல் நம் ஊனக் கண்களுக்குக் காட்சியளிக்கிறது! தானாகத் தோன்றிய (கல்)  லிங்கத்தை ஸ்வயம்பு லிங்கம் என்று தானே சொல்கிறோம்! இறைவனின் திருமேனியான இப்புனித மலையே ஸ்வயம்பு லிங்க மலைதானே! பூமியிலேயே மிகப் பெரிய ஸ்வயம்பு லிங்க மூர்த்தியே திருஅண்ணாமலை! மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு ஸ்வயம்பு லிங்கம்! எனவே தான் திருஅண்ணாமலை க்ஷேத்திரத்திலுள்ள சிறு மண்ணையோ, கல்லையோ எவரும் எங்கும் எடுத்துச் செல்லலாகாது. “அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்” “ என்று ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் வர்ணிப்பதன் ஆன்மீக இரகசியம் இதுவே!
உண்மையில் பூவுலகில் யாங்கணும் தோன்றியுள்ள ஸ்வயம்பு மூர்த்திகள் இத்திருஅண்ணாமலையில் இருந்து தோன்றியோரே! இம் மலையினுள் பிரபஞ்சத்தின் அனைத்து மூலப் பொருட்களும் உள்ளன. சாட்சாத் ஸ்ரீலக்ஷ்மி தேவியே தனிமையை நாடி இம்மலைக் குகை ஒன்றினுள் தவம் மேற்கொண்டபோது வைகுண்டம், கைலாயம், ஸ்கந்த லோகம், ஸ்ரீவித்யாலோகம் போன்று அனைத்துலக கோடி லோகங்களும் உள்உறைவதைக் கண்டு வியந்தனள் எனில் இதனை வெறும் கல்மலை என்றா கூறமுடியும்! இன்றைக்கும் பல தெய்வமூர்த்திகள் கிரிவலம் வருகின்ற அற்புதத் தலம். தினமும் சிவபூஜைக்காக திருக்கயிலாயம், ஸ்ரீராம தரிசனத்திற்காக வைகுண்டம் செல்லும் ஸ்ரீஆஞ்சநேயர், நவவியாகரண பண்டிதராய் இவ்விடத்தில் தினமும் கிரிவலம் வருகின்றார்.
உருவம் மாறும் தெய்வீக மலை
கிருத யுகத்திலிருந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மஹான்கள், ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள் போன்றோர் இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சிதரும். அதேபோல் திரேதாயுக வாசிகள் இங்கு வந்திடில் அவர்கட்கு இது இன்னமும் மாணிக்க மலையாகவே காட்சியளிக்கும். துவாபரயுக வாசிகளுக்கு இம்மலை பொன் மலையாகவே காட்சிதரும்... ஏன் மரகதமலை, வைரமலை, சித்ர மலை, ரஜத மலை, வைடூரிய மலையாகவும் இது காட்சி தருவதுண்டு. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!
மஹாபாரதத்தில் அர்ஜுனன் இம்மலையின் தரிசனத்தைப் பெற்று கிரிவலம் வந்து பல அபூர்வமான நாகாஸ்திரங்களைப் பெற்றான். நாகலோகத்திற்கு மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் உள்ள சர்வலோகங்களுக்கான திருவழிகள் இம்மலையினுள் உள்ளன! இன்னமும் இதன் மஹிமையினை விவரித்துக் கொண்டே செல்லலாம்.
அடியார் : திருஅண்ணாமலையை எந்நாளில் கிரிவலம் வரவேண்டும் என்று பலர் கேட்கின்றனரே, குருதேவா?
சற்குரு: நம்மை மட்டுமின்றி அனைத்தையும் படைத்த சர்வேஸ்வரனை, மலை ரூபத்தில் நமக்காக எழுந்தருளியுள்ள ஆதிசிவனை, எந்நேரமும், எந்நாளிலும் வலம் வந்திடலாம். ஆனால் காம்யப் பிரார்த்தனைகள் அதாவது எதையாவது லௌகீகமாக வேண்டி, ‘அதுவேண்டும், இது வேண்டும், அது நல்லபடியாக முடியவேண்டும், இது சிறப்பாக நடக்க வேண்டும்’‘ – என்று எதையேனும் எண்ணி கிரிவலம் வரும் போது காலசந்தி, நேரங்கள் பலனை மேம்படுத்தும், ஆனால் எதையும் வேண்டிடாது இறைவா எல்லாம் உன் செயல்! இருக்கின்ற சூழ்நிலைகளில் இத்தகைய பிரார்த்தனையுடன் உன்னை நான் வலம் வருகின்றேன். முடிவு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே என் உள்மனம் விரும்புகிறது. இச்சுயநலம் கூடிய என்னைத் திருத்தி எல்லாம் உன் செயல் என்ற உத்தம நிலையைத் தருவாயாக! – என்று இறைவனிடமே உள்ளக் குமுறல்களைக் கொட்டிப் பழகி வந்திடில், நிஷ்காம்ய (எதையும் வேண்டிடாத) பக்குவம் கிட்டும். ஆனால் இத்தகைய உத்தமமான மனோ நிலையைப் பெறும் வரை குறித்த நாள், நட்சத்திர, திதி, ஹோரை கால முறைகளில் கிரிவலத்தை மேற்கொண்டிடலாம். இதைப் பற்றி நம் விரிவாக “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மாத இதழில் விளக்கி வருகின்றேன். ஸ்ரீஅங்கவ மஹரிஷி என்பவர் தம் 10000 சிஷ்யர்களுடன் பல கோடி யுகங்களாக கிரிவலம் வந்தவாறிருக்கிறார். இன்றைக்கும் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்காக தினமும் இரவு 7 மணி அளவில் அங்கவ மஹரிஷி கிரிவலம் வருவதைக் கண்டு ஆனந்தித்திடலாம். இந் நட்சத்திரம் இரவில் மணிக்கு மணி இடம் மாறி மலையைச் சுற்றி வரும்.
திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தின் ஓர் அற்புதமான ஆன்மீக இரகசியம் என்னவெனில் இரவோ, பகலோ, வெயிலோ, மழையோ, எவரேனும் கிரிவலம் வந்தவாறு இருப்பர். இதைக் கண்டு ஆனந்திப்பவரே ஸ்ரீஅங்கவ மஹரிஷி. இரண்டு மூன்று எனத் தொடர்ந்து கிரிவலங்களை மேற்கொள்ள விழைவோர் ஸ்ரீஅங்கவ மஹரிஷியை தியானித்திடில் விசேஷமான தெம்பும் அவர்தம் அனுக்ரஹத்துடன் கூடிவரும்.
அடியார் : திருஅண்ணாமலையே இறைவனின் திருமேனி! இதற்கு அபிஷேக ஆராதனைகள் ... எப்படி குருதேவா!
சற்குரு: இதில் ஆன்மீக இரகசியங்கள் பல அடங்கியுள்ளன. அவற்றைப் பரிபூரண நம்பிக்கையுடன் மனித மனம் ஏற்க வேண்டுமே! உள்ளத்தனையது உணர்வு! சில சமயங்களில் மலையைச் சுற்றி மேகங்கள் சூழ்ந்து மழையும் பொழியும்! இதுவே மஹரிஷிகள் நிகழ்த்துகின்ற அபிஷேகம்! அச்சமயத்தில் அம்மேகங்களின் மழை நீரைச் சுவைத்துப் பார்த்திடில் அமிர்தமென இனிக்கும். பலசமயங்களில் பலத்த இடிகள் ஏற்படும்.. இதற்கு இடிபூஜை என்று பெயர். அர்ஜுனன் விசேஷ அம்புகள் கொண்டு இம்மலைக்கு இடிபூஜை நிகழ்த்திப் பல அனுக்ரகங்களைப் பெற்றான். மலையுச்சியில் பல நாட்களில் இரவில் நட்சத்திரங்கள் போல் ஒளி அலைகளின் பிரவாகங்கள் ஏற்படும். ஒளிரூபமுடைய தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் நிகழ்த்துகின்ற பூஜை. பெரும்பாலும் மலைக்கு நிகழ்த்துகின்ற பூஜைகளை விண்ணுலுகத்தோர் மேகமண்டலங்களில் அமர்ந்தவாறே நிகழ்த்துகின்றனர்.
அடியார் :  இடையில் ஒரு சிறு ஐயம், மன்னிக்க வேண்டும் குருதேவா, சாதாரண மனிதர்களாகிய நாங்கள் திருஅண்ணாமலைக்கு அதாவது மலைக்கான அபிஷேக, ஆராதனைகளை எவ்வாறு நிகழ்த்திடலாம்! இறைவனே மலையாக இருப்பதால் மனிதர்களால் ஏதேனும் கைகூடிடுமா?

இறைவன் பாத தரிசனம்
திருஅண்ணாமலை

சற்குரு: நிச்சயமாக முடியும். கிரிவலம் வருகையில் தொடர்ந்து சாம்பிராணி தூபம் இடுதல், ஊதுபத்திகளை ஏற்றி வருதல், கற்பூரம் காட்டி வருதல் போன்றவற்றால் பரவெளியில் நறுமணம் கூடி அது மலையை அடைகின்றது. மலையைச் சுற்றியுள்ள நந்திகள், பிள்ளையார், கல்லில் வடிக்கப் பெற்ற திருப்பாதங்களுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, புஷ்பம் சார்த்தி வழிபட இதனை மலை ஈர்த்துக் கொள்கிறது. எவ்வாறு ஒரு கோயிலில் எந்த மூர்த்திக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகள் மூலவரைச் சென்றடைகிறதோ அதேபோல!
உலை நீர் மஹிமை :- அன்னதானம் சிறந்த பூஜையாகும். அன்னதான உலை கொதிக்கும் போது ஏற்படும் சப்தம், நீர்வாயுக் குமிழிகளால் ஏற்படுவது போலத் தோன்றினாலும் அன்னம், அக்னி, வாயு, ஜல, பிருத்வி தேவதைகளின் பீஜாட்சர மந்திர ஒலி வழிபாடே, உலை சப்தமாகக் கேட்கின்றது. எனவேதான் பெரியோர்கள் “பால் பொங்கிற்றா” “உலை ஆயிடுச்சா” எனக் கேட்பதையே மங்களகரமான வார்த்தைகளாகக் கொண்டார்கள். உலையில் உண்டாகும் நறுமண ஆவியே பித்ருக்களுக்கும் ப்ரீதி அளிப்பதாகும். எவ்வாறு தேவர்கள் அக்னியில் சமர்ப்பிக்கப்படும் ஹோம ஆஹுதிகளை ஹவிஸ்ஸாக ஏற்கின்றார்களோ அதேபோல் அன்னம் கொதிக்கின்ற உலையின் ஆவியே பித்ருக்களுக்குப் பிரசாதமாக அமைகின்றது. திருஅண்ணாமலையில் அன்னதான உலை ஆவியே ஸ்வாமிக்கும் ப்ரீதி அளிக்கக்கூடியது ஆகும். எனவே அன்னதானமே சிறந்த சரீர பூஜையாகும். ஷோடசோபசார பூஜை எனப்படும் 16வித பூஜா அம்சங்கள் சற்றுக் கடினமானவை. ஆனால் அன்னதானத்திற்கான சரீர சேவையில் உடலின் அனைத்து அவயங்களும் ஈடுபட்டு, மனமும் ஒன்றுபடுவதால் ஷோடசோபசாரபூஜையின் அனைத்து அங்கநியாஸ, கரநியாஸ முறைகளும் அன்னதானத்திலேயே அடங்கி விடுகின்றன. தியானத்தில் மனம் ஒருமைப்படுவதற்கு இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணியிருப்பது என்பதல்ல. அன்னதான சமையலில் இறைநாமத்தை ஜபித்தவாறே, அன்னதான உணவு நன்றாக அமைய வேண்டும் என்று உன்னிப்பாகச் செயல்படுவது கூட ஒரு முக்கிய தியான மனோ நிலையின்பால் பட்டதாகும்.
தற்காலத்தில் குக்கரில் அன்னம் தயாரிக்கப்படுகிறது. மண்பானை, வெண்கலப்பானையில் உலை கொதித்து அன்னத்தைச் சமைத்திடில், உலை ஆவியின் பீஜாட்சர சப்த ஒலிகளினால் எத்தனையோ தேவதைகளின், தேவர்களின் பித்ருக்களின் ஆசியை எளிதில் பெற்றுப் பலவிதமான நித்ய வாழ்க்கைப் பிரச்னைகளை எளிதில் சமாளித்திடலாம்.
மந்திர வஸ்திர பூஜை
சித்தர்களுடைய அபூர்வமான, திருஅண்ணாமலைக்குரிய பூஜை ஒன்றை இறையருளால் அளிக்கின்றோம் அவரவருக்கு இஷ்டமான மந்திரத்தால், இறைத் துதியால், மலைக்கு வஸ்திரம், மந்திரத்தால் ஆன புனித ஆடையை மானசீகமாக சார்த்துதலே இப்பூஜையாகும். கிரிவலப் பாதையில் ஏதேனும் ஓரிடத்தில் முடிந்தால் நன்றாகப் பத்மாசனமிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். தனக்கு இஷ்டமான மந்திரத்தை, துதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராணம், அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், தேவாரம், திருவாசகப் பாடல்கள் அல்லது எளிய ஓம்காரம் என எதையும் ஏற்றிடலாம். மலையை நோக்கி அமர்ந்தவாறு, இடது கண் விளிம்பிலிருந்து பார்வையைத் துவக்கி மலையின் ஒரு விளிம்பிலிருந்து கண்பார்வையை மெதுவாகப் படர விட்டுக் கொண்டே இறை நாமத்தை, மந்திரத்தை, மானசீகமாகவோ, உரக்கவோ துதித்திடுக! அதாவது இம்முறையில் மனதால் மந்திரத்தைப் பின்னி, கண்களால் நெய்து, மலையின் மேல், லிங்கத்திற்கு வஸ்திரம் சாற்றுவதைப் போல் மலைக்கு மந்திரத்தால் ஆன வஸ்திரத்தைச் சாற்றுகின்றோம். ஆவுடையை லிங்கத்தைச் சுற்றி வஸ்திரத்தைச் சார்த்துவது போலவும் அம்பாளுக்கோ, பிள்ளையாருக்கோ வஸ்திரம் சாற்றுவது போலவும் கூட விதவிதமாக மலைக்கு மந்திர வஸ்திரம் சாற்றி மகிழ்ந்திடலாம். இது மிகச் சிறந்த தியான முறைகளுள் ஒன்றாகும். அற்புதமான மந்திர சக்தியைத் தரவல்லது. கார்ய சித்தியைத் தரும் சிறந்த பிரார்த்தனை முறையுமாகும். திருஅண்ணாமலையான் எத்தனையோ விதமான பூஜைகளை ஏற்று மகிழ்ந்து, பக்தர்களையும் மகிழ்விக்கின்றான். இறைவனுக்கு ஆனந்தந் தரும் மந்திர வஸ்திர பூஜையை மேற்கொண்டு பரமானந்தத்தை அடைவீர்களாக! இந்த பூஜையின்போது அருணாசல திருமேனியான மலையிலிருந்து ஒளி வீசுவதை, நட்சத்திரங்கள் மின்னுவதை பக்தர்கள் தங்கள் ஊனக் கண்களால் தரிசனம் செய்வது சகஜமே என்றாலும் இதைப் பற்றி பொருட்படுத்தாது பக்தர்கள் மேலும் மேலும் இப்பூஜையைத் தொடர்தலே சிறப்பாகும். திருஅண்ணாமலை சுயம்ஜோதி பிரகாசத்துடன் திகழ்கின்றான் என்பதை அவரவரே உணரும் இறைவனின் கருணா மகாத்மியங்களில் இதுவும் ஒன்று.

கத்ரி

கத்ரி என்பது உஷ்ணமான காலத்தைக் குறிக்கும். ஆதிபராசக்தி காளி உருவம் கொண்டு பல கொடிய அரக்கர்களை வதைத்திடுகையில் கோர ரூபம் கொண்டிருந்தாள் அல்லவா! அக்கோர ரூபத்தின் பிரதிபலிப்பாய் பிரபஞ்சத்தின் உஷ்ணநிலை கூடியது. கிருத்திகா நட்சத்திரத்தை ஒட்டி வருவது கத்ரி காலமாகும். கிருத்திகையும் அக்னி நட்சத்திர அமைப்புகளுள் ஒன்றாகும். கத்ரிக்கான விசேஷ பூஜைகளுண்டு. இவற்றை முறையாகக் கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கையில் சமுதாயச் சூழ்நிலைகள் சாந்தமுடன் நிலவ பெரிதும் உதவுகின்றன. கூட்டாகச் செய்யப்படும் சத்சங்க நற்காரியங்கள், வழிபாடுகளுக்குப் பன்மடங்கு பலன் உண்டு. அம்மை, டைபாய்டு, அக்கி, வறட்டுக் காசம் போன்ற உஷ்ண நோய்களைத் தடுப்பதற்கும் தீய சக்திகளின் கொடிய விளைவுகளைத் தணிப்பதற்கும் தீவிரமான மனோ நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கத்ரி விசேஷ பூஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீர், இளநீர், நீர்மோர், குளிர்பானங்கள், தயிர்சாதம், கிரிணி, தர்பூசணி பழங்கள், பழ ரசம் போன்றவற்றைக் கத்ரி நாட்களில் தானம் செய்து வர வேண்டும்.  தாது வருடத்தில் 3.5.1996 முதல் 25.5.1996 வரை கத்ரி தினங்களாகும். ஒவ்வொரு கத்ரி தினத்திற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. அந்தந்த கத்ரி தினத்தில் அதற்குரிய கத்ரி தேவதையை வழிபட்டுக் குறித்த தானங்களைச் செய்து வந்திடில் குடும்பத்தில், உறவு முறைகளில், அலுவலகத்தில் சுமுகமான, சாந்தமான, சூழ்நிலை உருவாவதோடு வருடம் முழுவதும் அக்னி சம்பந்தமான நோய்கள், விபத்துக்களிலிருந்து ரட்சையாய் நின்று காத்திடும். கத்ரி தின பூஜைகளை நடத்துவதற்குரித்தான விசேஷத் திருத்தலங்களும் உண்டு. இத்தலங்களில் கத்ரி விசேஷே பூஜைகளை நிகழ்த்திடில் பூஜா பலன்கள் பல்லாயிரம் மடங்காய் பெருகும். காரணம் இத்தலங்களில் அருள்பாலிக்கும் ஸ்வயம்பு மூர்த்திகள் அக்னி அம்சங்கள் நிரம்பப் பெற்றவர்களாய், கத்ரி காலத்தில் இப்பூவுலகில் எழுந்தருளியதேயாம். திண்டுக்கல்-பழனி சாலையில் ரெட்டியார் சத்திரம் அருகே ஸ்ரீகத்ரி நரசிங்கப் பெருமாள் ஆலயம் இதற்கு ஏற்றதாகும். கத்ரி தினங்களில் குறித்த பூஜைகளை நிகழ்த்தி வந்திடில்.,
1. உஷ்ண சம்பந்தமான நோய்கள், வயிற்று ரணங்கள், Piles எனப்படும் மூலம், ரண நோய்கள் ஆகிய நோய்களின் கடுமை தணியும்.
2. உறவினர்களின் பொறாமை , திருஷ்டி, பில்லி, சூன்ய ஏவல்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
3. பலவிதமான கொடிய கர்மவினைகளுக்கும் வெளியில் சொல்ல இயலாத பல கொடிய கோரமான அருவருக்கத்தக்க செயல்களுக்கும் கத்ரி- விசேஷ தான தர்மங்களே சிறந்த பரிஹாரமாகும்.
கத்ரியின் பூஜா சக்தி
கத்ரி காலத்தில் சூரிய கோளங்கள், (சூரியன்கள் பல உண்டு) செவ்வாய் போன்ற அக்னி கிரஹங்களிலிருந்து கத்ரி சக்தி திரண்டு பூலோகத்தில் தங்குகிறது. இது அற்புதமான ஆன்மீக சக்தியின் திரட்சியாம். பல கோளங்களின் அக்னி அம்சங்களின் திரட்சியாதலின் அந்தந்த நாள், திதி, நட்சத்திரத்திற்கேற்ப கத்ரியின் சக்தி தினமும் மாறுபடுகிறது. கத்ரி கால முடிவில் இச்சக்தி மீண்டும் அந்தந்த கோளங்களுக்குச் சென்றுவிடும். இச் சக்தியைப் பெற வேண்டுமெனில் அதற்குரித்தான தான தர்மங்கள், கத்ரி தேவமூர்த்தி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். கத்ரி காலத்தின் (3.5.1996 முதல் 25.5.1996 வரை) விசேஷ கத்ரி தினப் பெயர்களை நன்கறிந்து அந்தந்த தினத்திற்குரிய தான தர்மங்களைச் சிறப்பாகச் செய்து பயன்களைப் பரிபூரணமாக அடைய வேண்டும்.  தெடர்ந்து 26 நாட்களுக்கும் தான தர்மங்களா என்று மலைத்திடாதீர்கள் வருடத்தின் 365 நாட்களிலும் தீய வினைகள், தீய செயல்கள், தீய எண்ணங்கள் இல்லாது என்றைக்கேனும் ஒரு நாளாவது பரிபூர்ணமாக புனித மனிதனாக வாழ்ந்திருக்கின்றோமா அல்லது வாழ்வோம் என்ற வைராக்ய மனதுடன் கூற முடியுமா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். 365 நாட்களில் ஏன் பல்லாயிரம் பிறவிகளில் சேர்த்த பல கொடிய வினைகளை 26 நாட்களுக்கான கத்ரி பூஜை தீர்க்கின்றதெனில் அது ஓர் அற்புதமான தெய்வீக வாய்ப்பு தானே.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள், செஞ்சிப் புனித யாத்திரை அனுபவங்களின் தொடர்ச்சி....)
துணியை நன்றாக உலர வைத்துப் பெரியவரின் திருமேனியில் சார்த்திப் போர்த்திவிட குரங்கோ பெரியவரின் கால்மாட்டில் துணியினை நன்றாக இழுத்து மூடியது. வஸ்திரம் சாற்றியபின் பெரியவரைச் சுற்றி மூன்றுமுறை மீண்டும் வலம் வந்து பாதங்களைத் தொட்டு வணங்கி அமர்ந்தது. சிறுவன் பெரியவரின் திருஉடல் இருந்த இடத்தைக் கோரைப் புல்லால் சுத்தம் செய்வதையெல்லாம் குரங்கு வேடிக்கை பார்த்ததோடன்றிக் குப்பைகளை அகற்றுவதில் அவனுக்கு உதவியும் புரிந்தது. இப்போது சிறுவனுக்குப் பசியெடுப்பது போலிருந்தது! பசியெடுத்தாலே சிறுவனுக்கு ஒரு பரிதாபகரமான களை வந்து விடும்! இதனால் பெரியவர் அவனை அடிக்கடி “சோத்து மூட்டை” என்று கேலி செய்வார்.”என்ன வாத்யாரே, விரதமெல்லாம் இப்ப வேண்டாம், நல்லாத் தின்னுட்டு உடம்புல சக்தி, மனசுல தெம்பு, கையில் பணம் இருக்கிறவரைக்கும் சுவாமிக்கு உடம்புனால் நல்லாத் தேஞ்சு திருப்பணி, தான தர்மம் நல்லாப் பண்ணனும்னு சொல்றியே, பசிச்சா சாப்பிடாம என்ன பண்றதாம்?”  பெரியவரிடம் இவ்வாறு பேசலாகாது என்று அறியாப் பருவமது! அஞ்சிலே வளைய முயற்சி செய்த பருவம்!
“அது சரிடா! இருந்தா நல்லாத் தின்னுடு, இல்லாட்டி இருக்கறத வச்சுப் பசியாறக் கத்துக்கோ!”
“ஒண்ணும் இல்லாட்டி என்ன செய்யறது வாத்யாரே!”
“ ஏண்டா, அறிவு கெட்டவனே, என்னடா நம்பிக்கையிது! என்னிக்காச்சும் ஒண்ணுமில்லாமப் பண்ணியிருக்கேனா? நீ கேட்டவுடன் கொடுத்துட்டாக்க அதுல கர்வம்தான் வளரும். எப்படியும் கொடுப்பாருன்னு நீ உன்னாலான முயற்சியெடுக்கணும்”.
சிறுவனுக்குப் பழைய நினைவுகள் நிழலாடின!

செஞ்சிலை

சிறுவனுடைய கவனத்தைத் திருப்புவதுபோல் குரங்கும் தன் வயிற்றைத் தடவி, “எனக்கும் தான் பசிக்குது” என்று கூறாமல் கூறியது!
“நமக்கே தடுமாறுது! இதுல அதிதி போஜனம் வேற!” சிறுவன் கிண்டலாகச் சிரித்திட “உர்.....” என்று முதன் முதலாகக் குரங்கு உறுமியது! “ஓஹோ, சொன்னதும் நோப்பாளம் வந்து விட்டதோ”- சிறுவன் கடகடவென்று சிரித்தான்.
(பொய்க்) கோபத்துடன் குரங்கு அவ்விடத்தை விட்டு அகன்றது. “அப்பாடா! ஒரு வழியாய் இடத்தை காலி செய்தாயே, உனக்குக் கோடி நமஸ்காரம்!” சிறுவன் தன் நித்ய பூஜைகளைத் தொடங்கினான். முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று ஒவ்வொரு நாளுக்குரித்தான மந்திரங்களை முறையாகப் பாராயணம் செய்தபின்..., ஏதோ “க்ளுக்” என்ற சப்தம் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்திட..... எதிரே நாலைந்து கொய்யாப் பழங்களுடன் குரங்கு வந்து நின்றது! பூஜை முடிந்ததும் கைமேல் பலன்!
“எப்படியாச்சும் கொடுப்பார்னா..நம்பிக்கை வேணும்” ....
பெரியவரின் தீர்கமான மொழிகள் எதிரொலித்தன! அவன் கண்கள் பணித்தன. குரங்கும் ஒரு கையில், பழங்களை மாற்றிக் கொண்டு மற்றொரு கையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டது.., “ஹெஹ்ஹே... “ என்ற கேலிச் சிரிப்புடன்!
“குரங்கு எதற்காகப் பழங்களைக் கொண்டு வந்ததோ, எனக்குத் தின்பதற்காக என்று நினைத்து விட்டேனே!”........
குரங்கு “ஆமாம், நீ நினைப்பது சரியே” என்ற பாவனையில் தலையாட்டியது!
“அப்பப்பா, டெலிபதியில் (Telepathy) பெரிய ஆளாயிருக்கும் போலிருக்கிறதே!”
குரங்கு இப்போது அடக்கத்துடன் வாய் பொத்தி நின்றது! இந்த தமாஷைப் பார்த்து சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. “அப்பப்பா! இவ்வாறு வாய் விட்டுச் சிரித்து எத்தனை நாளாகிவிட்டது! “ஏதோ கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில ஆழ்ந்தது போலிருந்த சிறுவன் முடிவாகக் குரங்கு வைத்திருக்கும் பழங்களை உண்பது என்ற முடிவிற்கு வந்தான்.
“ஆமாம், பழங்களை வாத்யாருக்கு நைவேத்யம் காட்டி.... அதற்கு முன் பழங்களை நன்றாகக் கழுவ வேண்டுமே!”  இதைப் புரிந்து கொண்டாற்போல் குரங்கு பழங்களை சிறுவன் முன்னால் நீட்டியது!
பழங்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதற்கு அடையாளமாக அதில் நீர்த் திவலைகள் மொட்டு மொட்டாய்த் தெரிந்தன!
“நிச்சயமாக இது சாதாரணக் குரங்கில்லை! மிலிடரி குட்டிக் குரங்குபோல் பணிவுடன் ஆன்மீக விஷயங்களும் அத்துபடியாயிருக்கும் போலிருக்கிறதே” என்று எண்ணிய சிறுவன் வியந்தான். பெரியவரின் உடலருகே அமர்ந்து பழங்களை உண்ணத் தயாரானான். உண்ணும் உணவைப் பொறுத்து ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் பல உண்டு. கொய்யாப் பழத்திற்க்கென்று தனி மந்திரம் உள்ளது. அந்தந்த பழத்திற்குரிய அதிதேவதை, பிரத்யதி தேவதையைக் கொண்டு மந்திரம் அமைகின்றது. அதை ஜபித்திட அவ்வுணவுப் பொருளில் உள்ள தீய குணங்கள் அனைத்தும் விலகிவிடுகின்றன. உண்ணும் உணவும் புனிதமான பிரசாதமாகி விடுகின்றது. கொய்யாப் பழத்திற்குரிய மந்திரத்தை ஜபிப்பதற்கு முன்னர் குரங்கு என்ன செய்கிறதென்று ஓரக்கண்ணால் பார்த்தான் சிறுவன். அதுவும் முகத்திற்கு நேரே பழத்தைப் பிடித்துக் கொண்டு எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது! அல்லது வாசனைதான் பார்த்ததோ? இப்போது குரங்குக் குட்டியின் முறைபோலும்! கண்களைச் சற்று சாய்த்தவாறே சிறுவனை நோட்டமிட்டது! சிறுவன், முகத்தில் நெளிந்த புன்னகையுடன் கணீரென்று சொல்லலானான்.
“நம: கல்யாண தேவி நம:
சங்கர வல்லபே
நம: பக்தி ப்ரதே தேவி
அன்னபூர்ணேஸ்வரி நமோஸ்துதே!
இம்மந்திரத்தைக் கண்களை மூடியவாறே ஜபித்தபின் மெதுவாகக் கண்களைத் திறந்திட, எதிரே பெரியவரின் திருமேனியைச் சுற்றிலும் அங்கு இங்குமாய்க் குட்டிக்குரங்கின் சிறியப் பாதச் சுவடுகள்... தெரிந்தன.... “அடடா! இது 108 முறை வாத்தியாரை வலம் வந்திருக்கும் போலிருக்கிறதே, என்ன சாதுர்யம்! தன் பாதச் சுவடுகள்படுவது கேட்டால் கூட என் ஜபம் நின்று விடுமோ என்று மெதுவாக பாதங்களைப் பதித்து ஆனால் துரிதமாக வலம் வந்திருக்குமோ!” குரங்கு சாதுவாய் பெரியவரின் பாதங்களின் கீழ் அமர்ந்திருந்தது. கையில் கொய்யாப்பழம் தயாராக இருந்தது. யார் முதலில் தின்பது?
சிறுவனோ மரியாதை நிமித்தமாகக் குரங்கு உண்ட பின்னரே தான் உண்பது என்று முடிவு செய்திருந்தான். ஆனால் அதுவோ பழத்தைத் தின்பதாகவே தெரியவில்லை.....
“இங்கு நீதானே எனக்கு அதிதி. அதிதி போஜனத்திற்குப் பின்தான் நான் சாப்பிடணும்” – சிறுவன் குரங்கிடம் சொல்லாமல் சொன்னான்... குரங்கு புதர்ப்புறம் கைகாட்டித் தன் நெஞ்சையும் தொட்டுக்காட்டிச் சிறுவனையும் சுட்டிக் காட்டியது! என்ன சொல்கிறது குரங்கு? – சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “அப்பா! உன்னைப் போல் எனக்கு டெலிபதி கிடையாது, நீ சொல்வதைப் புரிந்து கொள்ள!”
“... ஓகோ! பழங்களை நான் தானே அங்கிருந்து கொண்டு வந்தேன், நீதான் எனக்கு அதிதி என்று சொல்கிறதா?...”
குரங்கு “ஆம்” என்பது போல் தலையாட்டியது.. சிறுவன் கலகலவென்று சிரித்து மகிழ்ந்தான்.. குரங்கும் குதூகலமாகி வெகுவேகமாகப் பழங்களைத் தின்று முடித்தது. மரக் குவளையிலிருந்த நீரை எடுத்து வாயைத் துடைத்துக் கொண்டது. சிறுவனும் பழங்களை உண்டான். அவனுக்கு இப்போது குரங்கின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.
“எங்க வாத்தியார் வர வரைக்கும் எனக்கு துணையா இருப்பியா? என்னைக் கை விடமாட்ட இல்லையா?” குரங்கும் அதை உறுதிசெய்வது போல் பெரியவரின் பாதங்களின் கீழ் மூன்று முறை கர்ணமிட்டுத் தரையில் கைகளை அடித்துச் சத்தியம் செய்தது. சிறுவன் திருப்தி அடைந்தான்.
அடுத்த இரண்டு நாட்களும் குரங்குடன் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கினான்.
மறுநாள் காலையில்..... தூங்கி எழுந்த உடனேயே ஏதோ ஒரு பீதி அவனைக் கவ்வியது. “இன்று ஏதோ பயங்கரமாக நடக்கப் போகின்றது!” – அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.
அவன் குரங்கை நோக்கினான். அதுவோ வேண்டுமென்றே தன் பார்வையை வேறெங்கோ செலுத்தியது. அன்றைய காரியங்கள் மந்த கதியிலேயே நடந்தன. ஆனால் ஒவ்வொரு காரியமும் முடிந்தவுடன் குரங்கு குகை வாயிலில் போய் உட்கார்ந்து விடும். பல கார்யங்களை நடுக்கத்துடனே அவன் செய்தான். ஒருமுறை அச்சம் நெருங்கிடவே (காரணம் மாலைப் பொழுது நெருங்கி வருகின்றதே) குரங்கு அவன் அருகில் வந்து அவன் தோள்களிலும், தலையிலும் தட்டிக் கொடுத்தது. மீண்டும் குரங்கு பல்டி அடித்து தன் சத்தியத்தை நினைவு கூர்ந்தது. மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். திடீரென்று குகை வாசலிலிருந்து ஓடி வந்து குரங்கு சிறுவனை இழுத்துச் சென்றது. அங்கே....
பயங்கரமான அருவறுக்கத்தக்கத் தோற்றம் கொண்டு அச்சத்தைக் கிளப்பக்கூடிய ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. சிறுவன் கனவிலும் கூடக் கண்டிராத கோர உருவம். பயங்கரத்தை அள்ளித் தெளித்தாற்போல் தாறுமாறாக அதன் உடல் அவையங்கள்! சிறுவனுக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது!

ஸ்ரீசத்ய நாராயண பூஜை

பௌர்ணமி தோறும் ஸ்ரீசத்யநாராயண பூஜை கொண்டாடப்படுகிறது. பௌர்ணமிக்கும் இதற்கும் என்ன பிணைப்போ! முழு நிலவில் பரிணமிப்பில் தான் சந்திர பகவானுடைய பதினாறு கலைகளும் ஒன்றுகூடி ஜோதிர்மயமாய் ஒளிப் பொழிவை அளிக்கின்றன. பதினாறு கலைகளுள் பிரதானமானது சத்யத்வம். இது மூன்றாம் கலையாக பாவிக்கப்படுகின்றது. எனவே தான் சிவபெருமான், சத்ய ரீதியாக நிரந்தரத்வம் கூடி என்றுமிருப்பது சத்யமான “பரம்பொருள் ஒன்றே” என்பதைப் பிரபஞ்சத்திற்கே எடுத்துக் காட்டும் வண்ணம் சத்ய கலையுடன் ஒளிரும் மூன்றாம் பிறைச் சந்திரனைச் சிரசில் பூண்டு சந்திர மௌளீஸ்வரரானார். லிங்கோத்பவ புராணத்தில் ஸ்ரீவிஷ்ணு மெய்யுரை கூறிடவே இதனால் மனமகிழ்ந்த சர்வேஸ்வரன் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்குத் தன் ஸ்வயஞ்சோதிப் பிரவாகத்தைக் காட்டியருளிட ஸ்ரீவிஷ்ணுவோ அடக்கத்துடன் ‘சர்வேஸ்வரா! தங்களுடைய  ஸ்வயஞ்சோதி அனுபூதியை மானுடதேகத்தில் ஸ்ரீராமன்போல், ஸ்ரீகிருஷ்ணன் போல் நான் தரிசிக்க வேண்டுகிறேன்’ என்று பிராத்திட்டார்.
சர்வேஸ்வரனும் ஸ்ரீவிஷ்ணுவைத் தன்னுள் ஐக்யப்படுத்தி ஸ்ரீசத்யநாராயண மூர்த்தியாய்த் தானே, காட்சியளித்து, பரம்பொருள் ஒன்றே சத்யமானது என்று மும்முறை அருளி திவ்ய தரிசனம் தந்தார். இவ்வாறாக ஒன்றே பரம்பொருள் அதுவே சத்யமானது ஆகும். அப்பரம்பொருளே ஸ்ரீமஹா விஷ்ணுவாக, சிவபெருமானாக, ஸ்ரீஅம்பிகையாக, நாம் காணும் வடிவில் காட்சி தருகின்றார். ஸ்ரீஆதிசங்கரர் எடுத்துரைத்த ஷ்ண்மதங்களிலும் இறைவனை அடையும் பல்வேறு வழிகள் அருளப் பெற்றுள்ளன., பரம்பொருளைத் துய்த்துணரும் இறைநெறி முறைகளுள் சத்யநாராயணனாய், சத்ய ஜோதிக்கே வடிவு தந்து நம்மை ஆட்கொள்ள தெய்வாவதாரம் பூண்டு அருள்பாலிக்கின்றார்.
சத்திய ஜோதி
இதிலிருந்து என்ன தெரிகின்றது? பரம்பொருளை, நித்ய சத்யத்தைத் தனித்துப் பார்த்திட சத்யம், அசத்யம் என்ற பாகுபாடுகள் தோன்றவே செய்யும். காரணம் பார்ப்பவரிடமே உள்ள பிழையே தவிர, பார்க்கும் பொருளின் பிழையில்லையே! இதேபோல் சத்யத்தை உணர, பரம்பொருளை அறிய, தனித்து நிற்காது சத்யத்தோடு ஐக்யமாக வேண்டும்! இதனையே விஷ்ணுபகவான் சர்வேஸ்வரனிடம் வேண்டிட, பரம்பொருள் தன்னுள் விஷ்ணு அம்சங்களை ஐக்யப்படுத்தி சத்யநாராயணராகக் காட்சி தந்தார்.
எனவே ஸ்ரீசத்ய நாராயண மூர்த்தியாய்ப் பரம்பொருளை காட்சிதந்த திருநாளே பௌர்ணமியாம்! ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்றே நாம் எண்ணுகின்றோம். கோடிக் கணக்கான சூரியன்களும், சந்திரன்களும் பிரபஞ்சத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளனர். ஏன், பூலோகம் (பூமி) ஒன்றுதான் என்றல்லவா ஒரு குறுகிய கருத்தைக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற பூமிக் கோள்கள் பிரபஞ்சத்திலுள்ளன. இத்தகைய பிரபஞ்ச இரகசியங்களை எடுத்துக் கூறினால் மனித மனம் குழ்ம்பிவிடும், எதையும் ஏற்காது.
நம்பியோர்க்கு நாராயணன்
மனிதர்கள் விஞ்ஞான பூர்வமாக ஆராய முனைந்து இருக்கின்ற ஸ்திர புத்தியையும் இழந்து குழம்பி நிற்பார்கள். இதனால் தான் கலியுகத்தில் நம்மிடையே நமக்காக பவனி வரும் மஹான்களும் யோகியரும், ஞானியரும் சித்த புருஷர்களும் எதையும் வெளிக்காட்டாது தம்மை அண்டி வருபவர்களில் உண்மையிலேயே பரிபூர்ணமான இறைதரிசனம் பெற விழைவோர்க்கு மட்டும் ஆன்மீக இரகசியங்களைப் புலப்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு  பொறுமை, நம்பிக்கை, தீவிர வைராக்கியம், கருணை போன்றவற்றில் உத்தம நிலைகளை அடைய வேண்டும். சற்குரு சொல்வதையே செயல்படுத்தும் போதுதான் உண்மையான உன்னதமான தெய்வானுபூதிகள் கிடைக்கும். பரம்பொருளே ஸ்ரீசத்ய நாராயணராக அவதாரம் பூண்டிருக்கையில் சகலகோடி மஹரிஷிகளும் யோகியரும் சித்த புருஷர்களும் முப்பத்து முக்கோடித் தேவர்களும் ஒர் அபூர்வமான ஜோதியினூடேதான் அவரை தரிசித்தனர்.
அதுவே இயற்கையான சத்யோஜாதி ஒளிப்பிழம்பு! அதற்கு நிகரான ஒளி பிரபஞ்சத்தில் யாங்கணுமில்லை. எனவே ஸ்ரீசத்ய நாராயண ஸ்வாமியே பேரருள் கருணை கொண்டு, “யாவரும் எம்மை ஒளி ரூபத்தில் அர்ச்சாவதாரத்தோட்டு தரிசனம் செய்ய பதினாறு கலைகளுடன் பூர்ணமிக்கும் பௌர்ணமி நாளை யாம் அளிக்கின்றோம்” என்று அருள்பாலித்தார். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது போல ஸ்வாமியே தம் தரிசனத்தைத் தரத் தேர்ந்தெடுத்த நாளே ஸ்ரீசத்யநாராயண ஸ்வாமி பூஜைக்குரித்தான பௌர்ணமி! தீர்கமான மதி சத்தியத்தை உரைக்கும், சத்யமான காரியங்களைச் செய்யும். பொய்யுரைக்காது! மதி பிறழ்ந்தால் தான் அசத்தியம், பொய் வெளிப்படும். ஆனால் மதிகாரகன் ஸ்ரீசந்திர பகவானாயிற்றே! சத்யம், புனிதமான மதியில்தான் சத்தியம் உதிக்கும். எனவே பரம்பொருளே நிரந்தரம், ஏனையவை அசத்யமே என்று தெளிந்து சத்யப் பொருளை நன்மதியால் உணர, மதிகாரகனாகிய சந்திரபகவான் பதினாறு கலைகளுடன் பூர்ணமித்து இருக்கும் திருநாளில் செய்யப்படும் ஸ்ரீசத்யநாராயண சுவாமி பூஜைக்குப் பன்மடங்குப் பலனுண்டு.

ஸ்ரீசத்யநாராயண பூஜைநியதிகள்
1. ஸ்ரீசத்ய நாராயண பூஜை நிகழும் பௌர்ணமி திதியின் ஆரம்பம் முதல் முடிவு வரை உண்மையையே பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்நிலைவரினும் அன்று பொய் பேசலாகாது.
2. ஆண்கள் இயன்றவரை பஞ்சகச்ச முறையிலும் பெண்கள் அவரவர் குடும்பவழக்கிற்கேற்பக் கச்சம் (மடிசார்) கொண்டு உடையணிதல் நலம். இம்முறையில் உடையணிவதால் சுவாசம் சீராக ஓடி மனசாந்தத்தை அளிக்கும். யோக முறைப்படி ஆண்களுக்கு பிங்கலை (வலதுநாசி) சுவாசமும் ; பெண்களுக்கு இடகலை (இடதுநாசி) சுவாசமும் தான் சிறப்பானதாகும். யோக ,ஆசன, சுவாசப் பயிற்சிகளை எவரும் கடைபிடிக்காத இக்காலத்தில் மேற்கண்ட எளிய உடை முறையிலாவது சிறந்த சுவாசமுறையைப் பெற வேண்டும். இத்தகைய உடைமுறை ஜாதி, மதபேதமின்றி யாவருக்கும் பொதுவானாதே!
ஆலமரத்தின் புனிதம்
3. சத்யம் பேசுதற்கு, ஆலமரம் மனித குலத்திற்குப் பெரிதும் உதவுகிறது. அக்காலத்தில் கிராமப்புறப் பஞ்சாயத்து (நீதி) மன்றங்கள், ஆலமரத்தினடியில் தான் நடைபெறும். நம் பெரியோர்கள் விருந்தாளிகளுக்குக் கைகால்களைச் சுத்தம் செய்து கொள்ள நீரளித்து வாய் கொப்புளிப்பதற்காக, ஆலம்பட்டைக் கஷாயத்தைச் சிறுகிண்ணத்தில் அளிப்பார்கள். லலாடங்கக் கஷாயம் எனப்படும் ஆலம்பட்டைக் கஷாயத்தால் மூன்று வேளையும் தினமும் வாய் கொப்புளித்து வந்தால் வாக் சுத்தி ஏற்பட்டு வாழ்வில் சத்யம் பெருகும்.  மந்த புத்தி உள்ள குழந்தைகளுக்கு வாக்சாதுர்யம் ஏற்பட்டு நன்கு படிப்பில் முன்னேறுவர்.
அனைவரும் குறிப்பாக வக்கில்களும் உபந்யாஸ ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் பேச்சாளர்களும் இதனைக் கடைபிடித்து வாக்வன்மை, சத்யத்துடன் திகழ்வராக! தினமும் பொய்யை, அசத்யத்தைப் பேச வேண்டிய நிர்பந்தத்திலுள்ள வக்கில்களுக்கு இந்த லலாடங்கக் கஷாய முறை சிறந்த ஆன்மீகப் பரிஹாரமாக அமைகின்றது. பரிஹார விளக்க முறைகளைத் தக்க ஆன்மீக வழிகாட்டியை, சற்குருவை நாடி அறியவும். ஸ்ரீசத்ய நாராயண பூஜையன்று ஸ்ரீசத்ய நாராயண காயத்ரீயுடன் ஆல சமித்து கொண்டு ஹோமம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். செங்கற்கள், மணல், பசுவிரட்டி, பசுநெய், கற்பூரம், ஆல சமித்துக்கள் கொண்டு அவரவரே சுயமாக (குடும்பத்துடன்) ஸ்ரீசத்ய நாராயண ஹோமம்தனை எளிமையாக நடத்தி அபரிமிதமான பலன்களைப் பெறலாம். எளிமையான, சிக்கனமான ஆனால் முறையான, சிரத்தையுடன் கூடிய ஹோமத்தை நாமே நம் குழந்தைகளுடன் கூடி அருமையாக நடத்திடலாம். அரசு, ஆல், நாயுருவி, எருக்கு போன்ற ஹோமத்திற்குரிய சமித்துக்களைத் தவிர வேறுவகைக் குச்சிகளை எக்காரணம் கொண்டும் ஹோம அக்னியில் சேர்க்கக் கூடாது. தற்கால ஹோமங்களில் ஆஹுதிக்காகவும் அக்னியைப் பெருக்கவும் பலவிதமான விறகுக் குச்சிகளை (மூங்கில், சிராத்தூள், கருவக்கட்ட , புளிய விறகு) பயன்படுவது மிகவும் வேதனையைத் தருவதாகும். தேவதைகளும், தெய்வ மூர்த்திகளும் ஆவாஹனம் ஆகும் ஹோம குண்டத்தை அடுப்பாகக் கருதி அனைத்து விறகுக் கட்டைகளையும் குச்சிகளையும் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கும் சாபங்களாகவும் தோஷங்களாகவும் வந்து சேரும். (எளிய முறையில் முறையான ஹோமங்களை வளர்க்கும் நெறிகளை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ‘அருகம்புல் அற்புதனின் மஹிமை’ என்ற நூலில் காணலாம்.)
4. ஸ்ரீசத்ய நாராயண விரதம் வேறு, பூஜை வேறு! நிர்ஜல உபவாசம், நீராகார உபவாசம், ஒருவேளை உபவாசம் என்று அவரவர் தேக நிலையைப் பொறுத்து உபவாசத்துடன் அல்லது சாதாரணமாகப் பூஜை செய்திட ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்களுண்டு. விரதமிருக்க முடியவில்லையே என்று ஏங்குதல் வேண்டாம். முறையான விரதத்தில் பௌர்ணமி திதி துவங்கும் போதே ஆரம்பித்துப் பௌர்ணமி திதி முடியும் வரை விரதமாக இருத்தல் சிறப்புடையது.
5. ஸ்ரீசத்ய நராயண பூஜையைப் பௌர்ணமியன்று மாலை நேரத்தில் துவங்க வேண்டும். ஸ்ரீவிநாயக பூஜை, ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திரம் ஆகியவற்றை அவரவர் குடும்பப் பாரம்பரியப்படி அவரவர் விருப்பப்படிச் செய்யலாம். ஜாதி மல்லிகைப் பூ, பவளமல்லி கொண்டு அர்ச்சித்தல் விசேஷமானது. கடையில் வாங்கிய சந்தனத்தைக் குழைத்து வைப்பதை விட, ஸ்ரீசத்யநாராயண நாமம் ஓதி நாமே சந்தனம் அரைத்து இடுவதே விசேஷமானது.     ஸ்ரீ சத்யவதி, சத்ய நாராயணன், சத்யபாமா என்றபடி சத்ய நாமம் உள்ளவர்கள் பூஜை செய்தால் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் பூர்வஜென்மங்களில் அவர்கள் ஸ்ரீசத்யநாராயணரை வழிபட்டமையால் தான் இன்று இந்த ஜன்மத்தில் அவருடைய நாமங்கள் இவ்வாறு அமைகின்றன.

மலைக்கோட்டை மகிமை

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குள மஹிமை
முத்தாழக் குள தீர்த்த வழிபாடு 
ஞாயிற்றுக் கிழமை : இத்தீர்த்தத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று ருத்ர பசுபதி ராஜரிஷி என்ற மஹா உத்தமர் நீராடி சித்ருவ சக்தி என்ற அற்புத சக்தியை ஆவாஹனம் செய்தார். ஞாயிறு அன்று இத்திருக்குளத்தில் நீராடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து முறையாக வழிபடுவோருக்கு சித்ருவ சக்தியால் தேங்கிய வியாபாரத் தடங்கல்கள் நீங்கி வணிகம் பெருகும், தொழிலில் முன்னேற்றம் அடைவர்.
திங்கட்கிழமை : தேவர்களுடைய ரிஷியான மோகனோத்தம முனிவர் என்னும் உத்தம புருஷர் இத்தீர்த்தத்தில் திங்களில் நீராடி பாலுருவ சக்தி என்னும் அனுக்கிரக சக்தியை தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்தார். இத்திருக்குளத்தில் இந்நாளில் நீராடி உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கிடில் பாலுருவ சக்தி அனுக்கிரகத்தால் இயந்திரங்களால் தயாரிக்கும் பொருட்களின் வியாபாரம் பெருகிப் பலனடைவர்.

திருச்சி மலைக்கோட்டை

செவ்வாய்க்கிழமை : செவ்வாய்க் கிழமையன்று சிந்தூர கனாத்யக்ஷ பசுபதி என்ற முனிவர் போக சக்தியை இத்திருக்குளத்தில் ஆவாஹனம் செய்து உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து தேவ பதவியை அடைந்தார். செவ்வாய் அன்று இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிப்பிள்ளையாரை முறையாக வலம் வந்து வணங்கினால் குடும்பத்தில் வந்த சண்டைகள் நிவர்த்தி அடைந்து நலம் பெறுவர்.
புதன் : முத்தாழக் குளத்தில் பல்குணி சக்தி என்ற அற்புத சக்தியை புதன்கிழமை அன்று ஆவாஹனம் செய்தார் பல்குண பராந்தக குருபதி முனிவர். எனவே புதன் கிழமையன்று இங்கு தீர்த்தமாடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கிட அவருக்குக் கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டும்.
வியாழக்கிழமை : இன்று ஸ்திர சஞ்சார குருபதி முனிவர் என்ற உத்தமர் இத்திருக்குளத்தில் தீர்த்தமாடி உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து உயர்ந்த நிலையை அடைந்தார். வியாழக் கிழமையன்று இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிபிள்ளையாரைக் கிரிவலம் வந்து முறையாக வணங்கினால் பிரிந்தவர் கூடுவர், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
வெள்ளிக்கிழமை : இன்று விந்தபோச முனிவர் என்ற உத்தம ரிஷி இத்திருக்குளத்தில் நீராடி விந்தபோச சக்தியை ஆவாஹனம் செய்து, உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து உத்தம சிவநிலையை அடைந்தார்.. திருமணமாகிக் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமை யன்று திருக்குளத்தில் நீராடி உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து முறையாக வழிபடுவதால் குழந்தைச் செல்வம் பெற வாய்ப்புண்டு.
சனிக்கிழமை : இன்று கம்புலிராய முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கி கம்புலிசக்தி என்னும் அற்புத சக்தியை ஆவாஹனம் செய்து உயர்நிலையை அடைந்தார். எனவே இத்திருக்குளத்தில் சனிக்கிழமையன்று நீராடித் தீபமேற்றி வழிபட்டால் புதுவீடு புகுதல், புதுமனைவாங்குதல், நல்ல வீட்டில் வாடகைக்கு அமர்தல் போன்ற அனுக்கிரக சக்திகளைப் பெறலாம்.

முத்தாழக் குளம் திருச்சி

தெய்வத் திருக்குளம் : உமையம்மையின் அருளாசியும், கந்தவேளின் கருணை கடாக்ஷமும், உச்சிப் பிள்ளையாரின் பூரண அனுக்கிரகமும், அரங்கநாதனின் சங்கநாதமும் ஒருங்கே இணைந்து மிளிரும் ஒப்பற்ற தீர்த்தமே முத்தாழப் புனிதக்குளம்.
ஒப்புயர்வற்ற இந்த ஆன்மீகப் பொக்கிஷத்தைத் தன் இதயத்தில் கொண்ட திருச்சி மாநகரம் செய்த புண்ணியத்தை வார்த்தைகளால் வடிக்க இயலுமா? இத்திருக்குளத்தைத் தெய்வமாய் வாழ்த்தி வணங்கிப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளனர் திருச்சி வாழ் பக்தர்கள். இத்திருக்குளத்தைத் தெய்வமாய் வணங்கி, அசுத்தம் செய்யாது படிகளை நிர்மாணித்தவர்கள் சிவலோக நிலைகளை அடைவர். இத்தீர்த்தத்தை ஆழ்ந்து, அகழ்ந்து, தோண்டித் தூய்மைப் படுத்தியவர்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்வர். இப்புண்ணியத் தீர்த்தத்தைத் தூய்மையாகப் பராமரிப்போர் உயர்ந்த பல அரசியல் பதவிகளை வகிப்பர். இக்குளத்தில் மீன்களை விட்டு, வளர்த்து நீர் தூய்மையாக இருக்க வழிசெய்வோர் கௌரவமான, பெருமையுடைய பதவிகளை வகிப்பார்கள். புனிதமான இம்முத்தாழக் குளத்தை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போர்க்குத் தேவையில்லாமல் தேடி வருகின்ற துன்பங்கள் தானே விலகும். சாதி மத பேதமின்றி அனைவரும் தங்களால் இயன்ற உதவியை அளித்து இத்திருக்குளத்தைப் புனிதமாக வைத்திருக்க உதவுவதன் மூலம் அளப்பரிய புண்ணிய சக்தியைக் கவசமாகப் பெற்று நல்வாழ்வை அடையலாம்.
கேள்வி : ஆஞ்சநேயர் சிரஞ்சீவி என்கிறார்களே அவரை இப்போது எங்கே காணலாம்?
குரு: எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சநேய மஹாப்பிரபுவின் வாசம் இருக்கும். அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது ஜெயராமா, கல்யாணராமா, வெங்கடராமா போன்ற நாமங்களைச் சூட்டினர். அவ்வாறு குழந்தைகளை அழைக்கும் போதெல்லாம் ஆஞ்சநேயர் அங்கே பிரசன்னமாகி அருளாசி வழங்கிச் செல்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இமயமலையில் (நேபாளம்) பசுபதிநாத் அருகே உள்ள பரந்தவெளியில் ஆஞ்சநேயர் வாசம் செய்கிறார்.

கொட்டாவி

கொட்டாவி – சில ஆன்மீக விளக்கங்கள்
கொட்டாவிக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய அவயம் ஒவ்வொன்றின் சிறு அசைவிற்கும் கூடப் பொருளுண்டு, இவ்வுலகில் எதுவுமே காரண காரியமின்றி நிகழ்வதில்லை என்பதைப் பன்முறை விளக்கி வந்துள்ளோம். கொட்டும் ஆவி என்பதே கொட்டாவி ஆயிற்று. அதாவது ஆவிரூபம் நிறைந்திருக்கும் இந்த பூதவுடலைக் “கொட்டினால்“ என்ன துன்பங்கள் நேருமோ அத்தகைய (ஆவியைக்) கொட்டும் தன்மையுடைய துயரங்கள் வரவிருக்கின்றன என்பதை முன் கூட்டியே அறிவுறுத்துவதே கொட்டாவி! பொதுவாக இரவில் உறங்குவதற்கு முன்னும், ஏனைய களைப்புற்ற நேரங்களிலும் கொட்டாவி விடுதல் உறக்கத்திற்கு அறிகுறி என்றே எண்ணி வந்துள்ளோம். நல்ல, தீய சகுனக் குறிகள் போலக் கொட்டாவியும் எதிர்வரும் துன்பத்தை அறிவிக்கும் ஒரு அனிச்சைச் செய்கையாம். களைப்படைந்திருக்கும் மூளைக்கு அதிக அளவு சுவாச சக்தியை அளிப்பதே கொட்டாவி என விஞ்ஞானம் கூறிடும். ஆனால் உற்சாகமாக இருக்கும் போதே கொட்டாவி வருவது ஏனோ?!
கொட்டாவியும் கனவும் :- கனவு நிலைகளை முன்னரே அறிவிப்பது கொட்டாவியின்  குணாதிசயங்களில் ஒன்றாம். கொட்டவியின் போது :-
1. கழுத்து நிமிர்தல்
2. கைகளை முறுக்குதல்
3. கண்களை மூடுதல்
4. வயிறு மேல் தூக்குதல்
5. “ஹா....ய்..” என்ற ஒலி ஏற்படுதல்
6. கொட்டாவி தொடர்ந்து வருதல்
7. தொண்டையில் நீர் ஊறுதல்
8. கண்களில் நீர் திரள்தல்
-இவ்வாறாக அநேக அவய மாறுதல்கள், கொட்டாவியின் முன்னும் பின்னும் ஏற்படும். கொட்டாவியின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அதன் விளைவுகள் மாறும். கொட்டாவி ஏற்படும் போது திசையினை மாற்றி அமர்ந்து பாருங்கள். அப்போது அதன் குணாதிசயங்களும் மாறுபடுவதைக் கண்டிடலாம். கொட்டாவி அரைகுறையாக நின்றுவிட்டால் மறுநாள் நரம்பு சம்பந்தான பிரச்சனைகள் வரும். இரவில் தூக்கம் பாதிக்கப்படும். ராத்ரி சூக்தம் என்ற வேத மந்திரத்தைத் துதித்து உறங்குவதால் தீய கனவுகளின் விளைவுகளைத் தடுத்திடலாம். ஒவ்வொரு மனிதனும் கனவின் மூலமாக, கனவுலகங்களில் பல கர்மவினைகளைக் கழிப்பது/பெறுவது உண்டு! கனவு நிலைகளுக்கான அறிகுறிகளைக் கொட்டாவி விடும் பாங்கிலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.
கொட்டாவி வருவதற்கான காரணங்கள்
1. பெரும்பாலும் நற்காரியங்களைத் தொடங்கு முன் (உதாரணமாக : பூஜை, நவராத்திரி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தானதர்மங்கள், க்ஷேத்திராடனம் etc….) கொட்டாவி ஏற்பட்டுக் களைப்பு, உறக்கம், சோம்பேறித்தனம் போன்றவற்றை உருவாக்கி நம்முடைய தீவினைகளும், பிறருடைய பொறாமை குரோத உணர்ச்சிகளும் நம்மை நற்காரியங்களைச் செய்யவிடாது தடுக்கும். எனவே பிறருடைய தீய எண்ணங்களே கொட்டாவிக்குக் காரணமாகும்.
2. ஹோட்டலிலோ பிறர் இல்லங்களிலோ உண்கையில், உணவு மூலமாகவும் நல்லதோ கெட்டதோ யாவுமே உணவு மூலமாகவே உட்செல்லும். அவ்வெண்ணங்கள் வாயுப் பரிமாணங்களாக மாறிக் கொட்டாவியாக மாறும்.
சில சமயங்களில் சாப்பிட்ட உணவு தொண்டைக்கு மீண்டும் வந்து “எதுக்களிப்பதுண்டு”, எந்த உணவுப் பண்டத்தில் தீய எண்ணங்கள் மிகுந்துள்ளனவோ அதை உடல் ஏற்காது வெளித் தள்ளும். ஆனால் இதனை “அஜீர்ணம்” என்று எண்ணி விடுகிறோம்.. தீய எண்ணம் என்றால்....... எங்கேனும் இனிப்பை உண்ணும் போது, ‘நம்மால் இந்த அளவு இனிப்பை உண்ணமுடிய வில்லையே”, என்று கண்ணால் கண்டு சிலவிநாடிகள் எதிரிருப்பவர் எண்ணினாலே போதும் அது உண்டவரை நிச்சயமாகப் பாதிக்கும்.
எனவே உணவு உண்ணுமுன் “அன்னபூர்ணே ஸதாபூர்ணே.....” என்ற சுலோகத்தையோ அல்லது தெரிந்த இறைப்பாடலைத் துதித்து... சிறிது உணவை இலையின் இடது ஓரத்தில்..”உண்டபின் ஆகும் தர்மத்திற்காக..” எடுத்து வைத்திடல் வேண்டும்.. இத்தகைய பிரார்த்தனையும் இச்சிறிய தர்மத்தின் புண்ய சக்தியுமே உணவில் மிதந்து வரும் தீய எண்ணங்களின் விளைவுகளைத் தணிக்கும்.
3. கொட்டாவி விட்டால் கண்களில் நீர் தளும்பி நிற்கும். இதற்குக் காரணம் பிறருடைய கண் திருஷ்டிக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பது பொருளாகும். இயற்கை நியதியாகவே கண்ணில் சுரக்கும் தைலமே ஓரளவு கண் திருஷ்டியைப் போக்கவல்லதாம். எனவே கொட்டாவி விடுகையில் கண்களில் நீர் திரளுமாயின் ஸ்ரீஅருணகிரிநாதரின் ‘பகை கடிதல்’ பாடல்கள், கந்தர் சஷ்டிக் கவசம் போன்ற இறைத் துதிகளைத் துதித்துத்  தேங்காயில் கற்பூரம் ஏற்றிச் திருஷ்டி கழித்தல் போன்ற திருஷ்டி பரிஹார முறைகளை மேற்கொள்ள வேண்டும். கொட்டாவி விட்ட பிறகு உடல் வலியோடு களைத்த உணர்வு ஏற்படுமாயின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் உடனடியாகத் துன்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்து உஷாராகச் செயல்பட வேண்டும்.
5. விடுகின்ற கொட்டாவிகளின் எண்ணிக்கை, இடம், திசையைப் பொறுத்தும்  எதிர் வருகின்ற துன்பங்கள், எத்திசையிலிருந்து பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் அறிந்திடலாம், தக்க நல்வழிகாட்டியின் மூலம்

ஆயில்ய நட்சத்திரம்

ஆயில்ய நட்சத்திரம் பற்றிய தவறான அபிப்பிராயம் தற்போது நிலவி வருகிறது. இதனால் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பல பெண்களுக்குத் திருமணமாகாது பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. ஆயில்ய நட்சத்திரம் தீங்குடையது என்ற தவறான எண்ணமும் வேரூன்றிவிட்டது. இந்நிலையில் ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பை எடுத்துரைத்து ஆயில்ய நட்சத்திரம் பற்றி நிலவும் பீதியை அகற்ற வேண்டியது பெரியோர்களுடைய கடமையாகும்.
இருபத்தியேழு நட்சத்திர தேவியரும் ஸ்ரீசந்திர பகவானுடைய பத்னிகளாவர். எனவே ஆயில்ய நட்சத்திரத்தை வெறுத்து ஒதுக்கிடில் அது சந்திர பகவானுடைய சாபத்திற்கு ஆளாக்கி விடுமன்றோ! இக்கலியுலகில் ஆயில்ய நட்சத்திரமுடைய பெண்களை நிராகரித்தோர் பலர் உண்டு. இதற்காக இவர்கள் ஆயில்ய நட்சத்திற்குரிய அதிதேவதையான ஆதிசேஷனின் சாபங்களுக்கு உள்ளாவர். இதனால் ஆயில்ய நடசத்திரத்தை வெறுத்து ஒதுக்குகினவர்களின் குடும்பத்தில் நாக தோஷம், விஷகடி மரணம், புத்ர நாசம் ஏற்படும்.
எனவே அறிந்தோ அறியாமலோ ஸ்ரீஆயில்ய நட்சத்திரத்தை இகழ்ந்தவர்கள் இதற்குத் தக்க பிராயசித்தத்தை, சற்குருவை நாடி அறிந்து, மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீஆதிசேஷ ப்ரீதி
ஸ்ரீஆதிசேஷனுக்குரிய தலங்களிலும் ஆயில்ய நட்சத்திரதிற்குரிய நாக தேவதையான ஆதிசேஷன் உறையும் அரசமர நாகப் புற்றுகளிலும் பஞ்சமி திதி, நாகப் புற்றுகளிலும் பஞ்சமி திதி, ஆயில்ய நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமைகளில் பால் வார்த்தல், பால், தயிர் சாத தானம், நீர்மோர் தானம், பாயச தானம் போன்ற தான தர்மங்களைச் செய்திடல் வேண்டும். 108 நாகங்களுக்கு மேல் உள்ள அரசமரத்தை அடிப் பிரதட்சிணம் வருதல் மிகவும் விசேஷ பலன்களைத் தருவதோடு முழுமையான பரிஹார பலன்களையும் தரும். மேற்கண்ட நாட்களில் 108 நாக தேவதைகளுக்கு மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அரச மரத்தைக் குறைந்தது 108 முறை அடிப்பிரதட்சிணம் செய்து, ஏழைக் குழந்தைகளுக்குப் பால் பாயாசம் அளித்தல் பெறுதற்கரிய பாக்யமாகும். இவை ஸ்ரீஆதிசேஷ பகவானின் மண்டலங்களைச் சேர்ந்தவை! காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்தில் 108க்கு மேலான நாகதேவதைகள் அருள்பாலிக்கின்றனர். பல யுகங்களாக இருந்து வரும் அரசமரமிது! ஆதிசிவன், பார்வதி, ஸ்ரீகூர்ம விஷ்ணு, ஸ்ரீலக்ஷ்மி போன்ற தெய்வமூர்த்திகளை ஒருசேர தரிசனம் பெறும் பாக்யம் பெற்ற அரசமரம். ஸ்ரீஆதிசேஷனின் சூட்சம வாசஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. ஆயில்ய நட்சத்திரமுடையோருக்கும் உரிய தலமிது! ஆயில்ய நட்சத்திரம் பற்றிய தவறான கருத்துகளால் திருமணத் தடங்கலாயிருக்கும் ஆண், பெண் இருபாலாரும் 108 நாகதேவதைகள் உறையும் அரசமரங்கள் உள்ள திருத்தலங்களில்
1.  மேற்கண்ட நாட்களில் 108 முறை அடிப்பிரதட்சிணம் அல்லது இயன்ற அளவு அங்கப் பிதட்சிணம்.
2. பால் பாயச தானம்
3. ஏழை தம்பதிகளுக்கு மாங்கல்யம், ஆடைகள், குங்குமம், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் அளித்தல்
4. ஏழைகளின் திருமணங்களுக்கு உதவுதல்.
போன்ற நற்காரியங்களைச் செய்துவர திருமணத் தடங்கல்கள் நீங்கி, திருமணம் செவ்வனே நடைபெறும். ஆயில்ய நட்சத்திரத்தை ஒதுக்கிச் சாபங்களுக்கு  உள்ளானோரும் இதைக் கடைபிடித்துச் சாபநிவர்த்தி பெறவேண்டும்.

அம்மனுக்கு இளநீர் அபிஷேகம்

ஸ்ரீஅம்மனுக்கு இளநீர் அபிஷேகம்
தாது வருடத்தில், ஏன் யுவ வருட இறுதியிலும் கூட  சென்ற இதழில் விவரிக்கப்பட்டது போல நெப்டியூன், புளூட்டோ கிரஹ சஞ்சாரங்களினால் உலகிற்கு, குறிப்பாக பாரத மக்களுக்குப் பல துன்பங்கள் ஏற்படும். உஷ்ண சம்பந்தப்பட்ட பிணிகள் மக்களைத் தாக்கும். மக்கள் ஒன்று சேர்ந்து சத்சங்க இறைப் பணிகளை ஆற்றுவதின் மூலம் இதனை ஆன்மீக ரீதியாக வென்று நலம் பெறலாம். வெப்ப நோய்களைத் தணிப்பதற்காக மார்ச், 1996-லிருந்தே ஒவ்வொரு குடும்பத்தினரும் மாரியம்மன், முத்து மாரியம்மன், பெரியபாளையத்தமன், இளங்காளியம்மன், மருத்தி அம்மன் இதர அம்மன் அம்ச தெய்வ மூர்த்திகளுக்கு, தாது வருடம் முழுதும், செவ்வாய்/வெள்ளியன்று அபிஷேகம் செய்திடல் வேண்டும்.

சமயபுரம் மாரியம்மன்

இத்தகைய அம்மன் அம்சங்களை, கிராம எல்லை தேவதை என்று பலர் இரண்டாம் பட்சமாகக் கருதுகின்றனர். இது அறியாமையினால் உண்டாவது! ஆதிசிவனின் ருத்ராக்னி தாண்டவம் போல் மஹிஷாஸுரன் போன்ற அரக்கர்களை வதம் செய்யப் பயங்கரவடிவம் கொண்டு புறப்படும் ஈஸ்வரி, அசுர வதம் முடிந்தபின் தன் அக்னி ஸ்வரூபத்துடன் எண்ணற்ற லோகங்களில் சஞ்சரித்திட, எவ்வுலகாலும் அந்த ருத்ராக்னியைத் தாள இயலவில்லை. அம்பிகையே பெருங்கருணை கொண்டு தன் அக்னிதாண்டவ கோலகுணங்களுடன், மாரியாத்தா, முத்துமாரியம்மன் போன்ற அம்மனின் அம்சங்களாகப் பிரிந்திட அகிலாண்டேஸ்வரி சாந்தம் பெற்றனள். எனவே ஈஸ்வரியின் வடிவங்களே அம்மனின் வெவ்வேறு ரூபங்கள். தஞ்சாவூர் மாரியம்மன், திருச்சி சமயபுரம் மாரியம்மன், சென்னை அருகே பெரியபாளைத்தம்மன், முப்பாத்தம்மன் போன்ற அம்மன் ஸ்வரூபங்களை வழிபட்டு முக்திநிலை அடைந்தோர் பலருண்டு. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அக்னி ரூபமாதலின் வெம்மை நோய்களைத் தீர்க்கும் அற்புத சக்தியைப் பெற்றவர்களே அம்மன்- ஈஸ்வரி ரூபிகள். திருச்சியில் வெக்காளியம்மன் சதாசர்வ காலமும் வெயில், மழை என்று பாராது மேற்கூரை இன்றியே பல யுகங்களாகத் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றாள். பல மன்னர்களுக்குப் பஞ்சம், பசி, பிணி தீர்த்திட அருள்புரிந்த அற்புத தெய்வமூர்த்தி! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருந்து நம்மைக் காப்பவள்.
இளநீர் அபிஷேக மஹிமை
இளநீர், பன்னீர் அபிஷேகத்தால் யாது பலன்? பல அசுரர்களை வதம் செய்த பிறகு ஸ்ரீகாளிரூபத்தில், ஈஸ்வரி சர்வேஸ்வரன் முன் வந்து நின்று, “பிரபோ! அக்னிப் பிழம்பாய் நிற்கும்  நான் என் செய்வது? பிரபஞ்சத்தின் கோடிக் கணக்கான லோகங்களில் எதனாலும் என்னுடைய அக்னி ப்ரவாகத்தைத் தாங்க இயலவில்லை! இது என் தவறா? பல கொடிய அசுரர்களை வதைப்பதற்காகத் தாங்கள் தானே எனக்கு இத்தகைய ரூபத்தைத் தந்தீர்கள். இப்போது நான் என் செய்வது? – என்று நெக்குருகி வேண்டிட, “ஈஸ்வரி! பிரபஞ்சத்தில் காரண காரியமின்றி எதுவும் நடைபெறுவதில்லை என்பதையே உன் மூலம் உணர்த்துகின்றோம்.
வரும் கலியுகத்தில், மது, தீயக் காமம், பேரராசை போன்ற ஒவ்வொரு தீயசக்தியும் சமுதாயத்தையே பாழ்படுத்த வல்லவையாதலின் அவை ஒவ்வொன்றும் பல அசுரர்களுக்குச் சமமாகும். எனவே நீ இதே ருத்ராக்னி ரூபத்தில் ஸ்ரீலோகத்தில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் அம்மன்களாக எழுந்தருளி உன்னை நம்பி வரும் பக்தர்களை,  அரக்கர்களை விடக் கொடிய தீய சக்திகளிலிருந்து காப்பாற்றுவாயாக! உன்னுடைய அக்னிப்ரவாகத்தை உன்னாலேயே தாங்க இயலாதிருப்பதால் எவர் கண்ணும் படாத புனித நீரே அவ்வக்னியைத் தணித்திடும். இதற்காக நாரிகேளம் (தேங்காய்) என்னும் புனித தாவரத்தைப் படைக்க உள்ளோம். பூலோகத்தில் பல சக்தி பீடங்களை அமைத்து விதவிதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த சக்கரங்களையும் யந்திரங்களையும் பிரதிஷ்டை செய்யவிருக்கின்ற ஸ்ரீபரசுராம மூர்த்தியே இந்தத் தென்னை விருட்சத்தை பூலோகத்திற்குக் கொண்டு வர இருக்கிறார்.
அவர் தம் திருக்கரங்களால் பிரபஞ்சத்தின் முதல் இளநீர் கொண்டு அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தை அபிஷேத்திட சக்தியாகிய அது உன் திருமேனியிலும் பட்டுச் சாந்தம் பெறுவாய்! என்று அருள் பாலித்திட,
ஸ்ரீபரசுராம மூர்த்தியும், ஆதிசிவனை, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகப் பிரபஞ்சத்தின் முதல் இளநீர் கொண்டு அபிஷேகித்திட அது சக்தியம்சமான ஸ்ரீகாளியம்மனின் திருமேனியையும் அபிஷேகித்தது. ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, ஈஸ்வரி ருத்ராக்னி ரூபத்தில் பூலோகத்திற்கு வந்திட, ஈஸ்வரிக்கு அபிஷேகம் செய்யபட்ட இளநீர்த் திவலைகள் தெறித்து விழுந்த இடங்களில் எல்லாம் அம்மன்கள் தோன்றினர்.. அனைத்தும் ஈஸ்வரியின் அம்சங்கள். ஈஸ்வரியின் சிரசிலிருந்தும், திருக்கரங்களிலிருந்தும், திருவிரல்களிலிருந்தும், திருஉதரத்திலிருந்தும் – இவ்வாறாக ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் திருமேனியிலிருந்து ஏற்பட்டவர்களே துளிர்காத்தம்மன், கருகாத்தம்மன் போன்ற அம்மன் – மூர்த்திகள்... எனவே தான் அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்கின்றோம்.
கண்படா தீர்த்த மஹிமை
எவர் கண்ணும் படாத தீர்த்தத்திற்குத் தான் கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை நிவர்த்தி செய்யும் அற்புத சக்தி உண்டு. எனவேதான் திருஷ்டி தேங்காயைச் சிதறுகாயாக உடைக்கின்றோம். இதைத் தவிர மூன்று கண்களுடைய தேங்காய்க்கும் பல ஆன்மீக சக்திகள் உண்டு. இளநீரை அபிஷேகம் செய்வதற்கு முன்னர் துளையிட்டு இரு கைகளாலும் தாங்கியவாறு வலதுகை சுண்டு விரல் வழியே இளநீரை ஸ்வாமியின் சிரசின் வழியே வழியுமாறு அபிஷேகிப்பதே உத்தமமான முறை!
எத்தனை இளநீர்கள்?
ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் இருக்கின்றார்களோ, குறைந்தது அத்தனை இளநீர்க் காய்களினால் அபிஷேகித்திட வேண்டும். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்வது உத்தமமானதாகும். எனவே பலவித எதிர்பாராத, கண்ணுக்குத் தெரியாத, தெரிந்த எதிரிகளின் தீவினைக் காரியங்களினால் பல்விதமான வாழ்க்கைத் துன்பங்களில் உழன்று அவதியுறும் மக்களைக் காத்திட அம்மனுக்கான இளநீர் அபிஷேகம் நல்வழிகாட்டும். எனவே அனைத்துக் குடும்பத்தினரும் தாது வருடத்தில், மாதம் ஒரு முறையேனும், செவ்வாய்/வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோயிலில் இளநீர் அபிஷேகத்துடன் இயன்ற தான தர்மங்களைச் செய்து அறவழிகாண வேண்டுகிறோம். இது மிகச் சிறந்த சமுதாய இறைப் பணியாகும்.

பஞ்சாங்க படனம்

தாது வருஷம் – பஞ்சாங்க படனம் , பஞ்சாங்க படனம் அல்லது பஞ்சாங்க பூஜை
புதுவருடப் பிறப்பன்று பஞ்சாங்கத்தில் ‘பஞ்சாங்க படனம்’ என்று குறிக்கப்பட்டிருக்கும். தினசரி காலண்டர் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பஞ்சாங்கம் பார்க்கும் வழக்கம் பெரும்பாலும் மறைந்துவிட்டது. மனிதனுடைய வாழ்க்கை முழுவதும் காலத்தை ஒட்டித்தான் அமைந்திருக்கின்றது. காலன் எனப்படுபவரே காலத்திற்குரிய தெய்வ மூர்த்தியாவார்., எல்லா உயிரினங்களுக்கும் உயிர் வாழ்க்கையானது காலத்தின் அலகாகவே அமைந்துள்ளது. கோடானு கோடி கோளங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் கூட கால நிர்ணயம் உண்டு. சர்வேஸ்வரனே காலபைரவராக இவை அனைத்தின் காலத்தினை நிர்ணயித்து அருள் பாலிக்கின்றார்.
காலத்தின் பிரிவுகள்
காலத்திற்குள் எத்தனையோ பிரிவுகள் உண்டு. பொதுவாக ஒவ்வொரு தினத்தையும் திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என பஞ்ச அங்கங்களாகப் (பஞ்சாங்கம்) பகுத்துள்ளனர். இவை தவிர சித்த, அமிர்த, மரண, பிரபலாரிஷ்ட யோகங்களும், ராகு காலம், குளிகை, யம கண்டம், அர்த்தப்பிரகரணன், காலன் போன்ற பிரிவுகளோடு இரவு, பகலும் உண்டு. இன்னமும் எண்ணற்ற காலப் பிரிவுகளும் உள்ளன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்கின்ற கோடிக்கணக்கான காரியங்களைக் காலக் கணிப்புடன் இன்ன காரியத்தை எந்த நேரத்தில் செய்வது என்றறிந்து செய்வானாகில் அவன் எளிதில் உத்தம நிலையை அடைகிறான். இதற்கான வழிமுறையைத் தருவதே பஞ்சாங்கம் படனம் அல்லது பஞ்சாங்க வழிபாடாகும்.
புது வருட வழிபாடு
மனிதனுடைய நித்ய வழிபாடுகளுள் பஞ்சாங்க வழிபாடும் ஒன்றாகும். அந்தந்த நாளுக்குரிய நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தையும் முதல் நாளன்றோ அல்லது அந்தந்த நாளின் விடியற் காலையிலோ நிச்சயமாகத் துதித்திட வேண்டும். ஏழு நாட்களுக்குரிய கிரஹ மூர்த்திகள், அந்தந்த நாள் தேவதைகள், அமாவாசை, பௌர்ணமிக்குரிய தேவதைகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள், இருபத்தியேழு யோகங்களுக்குரிய தேவதைகள், பதினோரு கரணங்களுக்குரிய தேவதைகள் மற்றும் பல யோகாங்க தேவதைகள் – போன்ற பல கால தேவ மூர்த்திகளின் ஆசியால்தான் நம் நித்ய வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. ஆனால் எந்த மனிதனும் இதைப்பற்றி ஆத்மவிசாரம் செய்வது கிடையாது. ஏனோதானோ என்று, இரவு பகல் என்றுமறியாது இயந்திர கதியில் அவன் காலத்தை ஓட்டுகிறான்.
காலத்தை மதிக்காததின் விளைவுகள்
கால தேவதைகளை முறையாக வழிபடாதது மட்டுமின்றி நற்காரியங்கள் செய்வதற்கு சுபநேரத்தை கணிக்காதது மட்டுமல்லாது, நேரம், காலம் பாராது நல்ல, தீய காரியங்களைச் செய்வதனால்தான் கலியுக மக்கள் தங்களைத் தாமே பல துன்பங்களுக்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக, எமகண்டத்தில், உயிரை பற்றிய ஆத்மவிசாரம், எமவழிபாடு, எமதீபங்கள் ஏற்றுதல் போன்ற பூஜைகளில் மட்டும் ஈடுபட்டால் தான் மரணபயம் அகல்வதோடன்றிப் பாயில் கிடக்கும் பெருநோய் அண்டாது. இவ்வாறாக, காலத்தின் அருமை தெரியாது வாழ்கின்ற மக்களுக்காகவே புதுவருடப் பிறப்பு, பஞ்சாங்க படனம் அல்லது காலத்தின் பஞ்சஅங்க வழிபாடும் ஒரு சிறந்த பரிகாரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் என்றால் நமக்குப் புரியாதது என்றோ, மூட நம்பிக்கை என்றோ ஒதுக்குவது கால தேவதைகளின் சாபத்தைத் தேடித் தரும். எவ்வாறு நம் கண்ணுக்குத் தெரியாத இறைவனை சிவன், விஷ்ணு, முருகன் என்று பலவித நாமங்களால் அழைக்கின்றோமோ அதேபோல் நம் ஆத்மா குடியிருக்கும் பூத உடல் நிலைக்கின்ற காலத்தை நிர்ணயிக்கின்ற நாள், திதி, நட்சத்திர, யோக, கரண தேவதைகளை அந்தந்த நாமம் சொல்லி வழிபடுவதே பஞ்சாங்க படனம் ஆகும். இது தினந்தோறும் செய்ய வேண்டிய நித்திய வழிபாடாகையால் தான் பூஜையின் சங்கல்பப் பகுதியில் இவ்வைந்தும் குறிப்பிடப்படுகின்றன.
அதாவது, வருடம் முழுவதும் 365 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ஐந்து காலதேவதைகளை வழிபடாமைக்கு பிராயச்சித்தமாய் வருடப் பிறப்பன்றாவது இவ்வரிய பூஜையை, புத்தாண்டு பூஜையாக நிச்சயமாகச் செய்யப்பட வேண்டியதென அமைத்துள்ளனர்.
அடியார் : குருதேவா! பஞ்சாங்க படனம் என்பது யாரால் படிக்கப்பட வேண்டும்?
சற்குரு : பொதுவாக, உத்தம இறையடியார்கள், புனிதமான வாழ்க்கை நடத்துவோர், நல்ல சான்றோர்கள் மூலமாகவே பஞ்சாங்க படனம் நடைபெறுவதற்குக் காரணம் அத்தகைய பெரியோர்கள் தம்பதி சமேதராய், பெரிய குடும்பமாக, ஆயிரங் காலத்துப் பயிராக வாழ்ந்து ஜாதி, மத பேதமின்றி அனைவருடைய நலனுக்காகவும் பூஜைகள் செய்து மிகுந்த புண்ணிய சக்தி, ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, உத்தம குருபக்தி ஆகியவற்றைப் பூண்டிருப்பர் என்பதால் தான். ஆனால் அத்தகைய சான்றோர்கள் தற்போது அருகி விட்டனர். எனவே கோயில்களிலோ அல்லது வீட்டில் பூஜை அறையிலோ வீட்டுப் பெரியவர்களைக் கொண்டாவது புதுவருடப் பிறப்பன்று பஞ்சாங்கத்தைப் படித்திடல் வேண்டும்.
பஞ்சாங்கத்தைப் படிக்கும் முறை
பஞ்சாங்கம் என்பது புனிதமான புத்தகம், உலக சமுதாயத்தின் நன்மைக்காக நல்ல விஷயங்களைத் தரும் உத்தமமான நூல். புது வருட விடியற் காலையில் கோயிலுக்குச் சென்று கால பைரவருக்கு முந்திரிப் பருப்பாலான மாலை சாற்றி வழிபட்டு பஞ்சாங்கத்தைப் படித்திட வேண்டும். உதாரணமாக தாது வருடம் பிறக்கும் 13.4.1996க்கான சனி கிரஹம், ஏகாதசி தேவதை, அவிட்ட நட்சத்திர தேவதைகள், சுபயோகம், பவகரண தேவதை ஆகிய ஐவரையும் துதித்து வணங்கிட வேண்டும். கும்ப ராசி தேவதை, கடக லக்ன தேவதை, நவாம்ச லக்னமான மீனராசி தேவதை ஆகியோரையும் துதித்திடுக! மேஷ்த்தில் இருக்கும் சூரிய, புத கிரகங்கள், ரிஷபத்தில் இருக்கும் சுக்கிரன், தனுசு – ஆட்சியில் இருக்கும் குரு, கும்பத்தில் இருக்கும் சந்திரன், மீனத்தில் இருக்கும் கேது, அங்காரகன், சனி கிரகங்களையும் வணங்கிடுக!
மேற்கண்ட கிரக நிலைகளைப் படித்தவாறே நவகிரகங்களை ஒன்பது முறை அடிப்பிரதட்சிணம் செய்தல் வேண்டும். தாது வருஷத்திற்குரிய
ராஜாவாகிய “ஸ்ரீபுதனே போற்றி”
மந்திரியாகிய “ஸ்ரீசனியே போற்றி”
சேனாதிபதியாகிய “ஸ்ரீசுக்ரனே போற்றி“
அர்க்காதிபதியாகிய “ஸ்ரீசுக்ரனே போற்றி“
சஸ்யாதிபதியாகிய “ஸ்ரீஅங்காரகனே போற்றி“
ரஸாதிபதியாகிய “ஸ்ரீகுருவே போற்றி“
தான்யாதிபதியாகிய “ஸ்ரீசூரியனே போற்றி“
மேகாதிபதியாகிய “ஸ்ரீசுக்ரனே போற்றி“
நீராஸாதிபதியாகிய “ஸ்ரீஅங்காரகனே போற்றி
என்று போற்றிப் பிராத்தித்திடுக!
உபநாயக பூஜை
1. ஸ்ரீபுதகிரகத்தை துதித்து குதிரைக்குக் கொள் அளித்தல்
2. ஸ்ரீசனீஸ்வரரைத் துதித்து, யானைக்குக் குறைந்தது 12 கவள உணவு அளித்தல்
3. ஸ்ரீசுக்ரனைத் துதித்துப் பசுவிற்கு கோபூஜை செய்தல்
4. ஸ்ரீசுக்ரனைத் துதித்து கிளி, புறா, போன்ற பறவைகளுக்கு தான்யமளித்தல், கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை அளித்தல்
5. ஸ்ரீஅங்காரகனைத் துதித்துப் பெருநோயாளிகளுக்குத் துவரை கலந்த உணவு அளித்தல்.
6. ஸ்ரீகுருவைத் துதித்து நாக பூஜை, புற்றிற்குப் பால் வார்த்தல்
7. ஸ்ரீசூர்யனைத் துதித்து நீர்மோர், பழரச தானம்
8. ஸ்ரீசுக்ரனைத் துதித்து அரசமரம், வேப்பமரம், சேர்ந்து இருக்கும் இடங்களில் பச்சரிசி மாவுக் கோலமிட்டு அடிப்பிரதட்சிணம் செய்தல்
9.   ஸ்ரீஅங்காரகனைத் துதித்து நவதானிய மாவு, சர்க்கரை கலந்த உணவினைத் கோயிலில் எறும்புகளுக்கு இடுதல்
- ஆகிய பூஜைகள், தான தர்மங்களைப் புதுவருடப் பிறப்பன்று செய்வது விசேஷமானதாகும்.
கிரகசஞ்சாரம் : பஞ்சாங்கத்தில் தாது ஆண்டிற்குரிய ஒவ்வொரு கிரகத்தின் சஞ்சாரங்கள், அதாவது கிரகங்கள் இராசிக்கு இராசி பெயர்ச்சி ஆகின்ற தேதிகள் குறிக்கப்பட்டு இருக்கும். இதனை முழுவதுமாகப் படிப்பதால், மன அமைதி உண்டாகும். உண்மையில் கிரகங்களின் அசைவினால் தான் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் பலவாறாகக் கழிகின்றது. எனவே அவற்றின் ஒருவருடத்திற்குரிய சஞ்சாரங்களைப் படித்திடுகையில் எதிர்வரும் நம் கர்மங்களை ஒருமுறை அனுபவிக்கின்ற மானசீக உணர்வு ஏற்படுவதால் மனதிற்குச் சாந்தம் கிட்டும்.
எளிய பஞ்சாங்க படன முறை
நம் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழில் உள்ள இக்கட்டுரையை வரும் 13.4.1996 அன்று படித்தல் கூட பஞ்சாங்க படனத்திற்குரிய வழிபாடாகும். எனினும் ஒவ்வொரு வீட்டிலும் புனிதமான வருடப்பிறப்பன்று ஒரு பஞ்சாங்கம் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
சித்தர்கள் அருள்கின்ற புதுவருட நட்சத்திர வாக்கியங்கள்
சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள், ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து பல அரிய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளுக்கு அருளியதன் சாராம்ஸத்தை இங்கு காண்போமாக.. அக்காலத்தில் வருடப் பிறப்பன்று தகைசான்ற உத்தம பெரியோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய, 365 நாட்களுக்கும் உரித்தான கிரக சஞ்சாரப் பலாபலன்களை எடுத்துரைத்தனர். நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்க்க தரிசனமாக அவர்கள் விளக்கியமையால் அனைவரும் நன்மையோ, தீமையோ அவரவர் கர்மவினைப்படி நிகழ்வதே என்று உள்ளன்புடன் ஏற்று மனச்சாந்தியுடன் எதையும் இறைவன் செயலாக ஏற்றுத் தத்தம் கடமைகளைச் செய்தனர். கலியுகத்தில் அத்தகைய பண்பாடு மறைந்துவிட்டது. காரணம் பக்திநிலை மங்கி வருவதோடன்றி உத்தமப் பெரியோர்களை மதிக்கின்ற தன்மையையும் மக்கள் இழந்து வருகின்றனர். அதே சமயத்தில் உண்மையான புனிதத்துவம் மிகுந்த பெரியோர்களும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாது இலைமறைகாயாக வாழ்ந்து வருகின்றனர்.
நட்சத்திர வாக்கியம் : சித்த புருஷர்களின் அருள்மொழிகளாக ஒவ்வொரு வருடத்திற்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சத்திய வாக்காக சில வார்த்தைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. குழுக்குறியாக விளங்கும் இவ்வார்த்தைகள் பீஜாட்சரங்களின் நிறைந்த தெய்வீக சக்திகளைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தாது வருடத்திற்கான (சித்தபுருஷர்களின்) நட்சத்திர வாக்கியங்களை வரும் இதழில் இறையருளால் குருவருளுடன் அளிக்கவிருக்கின்றோம். உதாரணமாக தாது வருடத்தில் மிருகசிரீஷ நட்சத்திரத்திற்குரிய சங்கேத வாக்கியங்களாக ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் சித்த புருஷர்கள் அருள்வதாவது : “குழுதனைக் கூட்டி வாழ்வாய்” மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் இவ்வாண்டில் சகவாசம், அலுவலகச் சூழ்நிலை, குடும்பத்து நிலைமை போன்ற ‘பலர் குழுமும்‘ இடங்களில் கவனமாக இருந்து குறிப்பாக அலுவலகத் தலைவர், சகவாச குழாம்களில் மூத்தவர், குடும்பத்துப் பெரியவர் ஆகியோரிடம் எவ்வித மனஸ்தாபமுமின்றி வாழ்ந்திடுக என்பதே இதன் பொதுப் பொருளாகும். ஆனால் சித்தர்களின் தெய்வீக இவ்வாக்கியத்தை நன்றாக ஆராய்ந்து ஆத்மவிசாரம் செய்திடில் அதன் உட்பொருள் நன்றாய் விளங்கும்...

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam