அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீமுக வருடம்

தமிழ் வருடங்களில் ‘ஸ்ரீ’ என்று தொடங்கும் சிறப்பைப் பெற்றது ஸ்ரீமுக வருடமாகும். ஸ்ரீமுகம் என்றால் அருட்தன்மை வாய்ந்த முகம், லக்ஷ்மிகரமான முகம் என்று பொருள். இந்த ஸ்ரீமுக வருடத்திற்குக் “கோகழி ஆண்டு” என்ற பெயரைச் சித்தர் பெருமான்கள் சூட்டியிருக்கின்றார்கள். இந்தக் கோகழி ஸ்ரீமுக ஆண்டில் கோகழித் திருத்தலத்தில் உறையும் சிவபெருமானுக்கு உழவாரத் திருப்பணிகளும், இறைத் திருப்பணிகளும், மற்ற சேவைகளும் செய்தால் அளப்பரிய வரங்களைப் பெறலாம். “கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க” என்று மாணிக்கவாசகர் அருளியுள்ளதைப் போல் கோகழியானது திருவாவடுதுறையைக் குறிக்கின்றது. எனவே கோகழி ஆண்டான ஸ்ரீமுக வருடத்தில் திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அனைத்துச் சேவைகளையும் செய்து ஏழை எளியோர்க்கு எல்லாவித தானங்களையும் வழங்குதல் வேண்டும்.
ஸ்ரீமுக வருடம் திருமகளைக் குறிப்பதால் இவ்வாண்டில் லக்ஷ்மிகரமான பொருளான மாங்கல்ய தானம் செய்வது விசேஷமான சேவையாகும். “எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்”. அந்தச் சிரசிலும் அகத்தின் அழகை முகமே காட்டும் என்பதால் ஒரு பெண்ணிற்கு லக்ஷ்மிகரமான வாழ்க்கையைத் தரக் கூடிய திருமணத்திற்கான அனைத்து சேவைகளையும் இவ்வாண்டில் செய்ய வேண்டும். ஒவ்வொருவருடைய  வாழ்க்கையின் அம்சங்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அம்சங்களைப் பகுக்கின்றபொழுது முகம் போன்ற அவளுடைய திருமண வாழ்க்கையே மிகவும் பொலிவுற்றதாக அமைகின்றது. இத்தகைய பொலிவைத் தரக் கூடியது ஸ்ரீமுக வருஷமாகும்.

திருவாவடுதுறை சிவாலயம்

எனவே இவ்வாண்டில் பொன்னால் ஆன மாங்கல்யத்தை ஏழை, எளிய தம்பதிகளுக்கு வழங்கி அவர்களுடைய திருமணங்களை நன்முறையில் நடத்துவதற்கு உதவி செய்தல் வேண்டும். மஞ்சள் நிறமுடைய பொன்னானது சற்குருவைக் குறிக்கும். “குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை” சற்குருவைப் பெறுதல் அரிதினும் அரிதாம். இவ்வாறு சிறந்த சற்குருவின் அருளைப் பெற்று அதனைக் பிறருக்கும் வழங்குதலென்றால் அது அதியற்புத ஆன்மீகத் திருப்பணியாகும். எனவே இந்த ஸ்ரீமுக ஆண்டில் மாங்கல்ய தானம் செய்வதன் மூலம் ஏழை எளியோர்க்கும் சற்குருவின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகின்ற பேரிறைப் பணியைச் செய்தல் வேண்டும்.
இந்த ஸ்ரீமுக ஆண்டில் ஏழை எளிய தம்பதிகளுக்குப் பொன் மாங்கல்ய தானம், மஞ்சள் சரடு தானம், முதிய தம்பதிகளுக்குச் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது நிறைவு), சதாபிஷேகம் (80 வயது நிறைவு) ஆகியவற்றை நடத்துதல்; மாங்கல்ய தானமளித்தல் போன்றவை தெய்வீகத் திருப்பணிகளாகும். மேலும் இவ்வாண்டில் தொழிற்கல்வி பயில்வோர்க்கு அனைத்து உதவிகளும் செய்தல் வேண்டும். இத்தகைய தெய்வீகத் திருச்செயல்களைப் பலர் ஒன்று சேர்ந்து சத்சங்கம் அமைத்து ஒன்றாகச் செய்வதே பெரும் பலன்களைத் தரும். தனிப்பட்ட முறையில் செய்யப்படும் எவ்விதத் தான தருமமும் புண்ணியம் தருவதாயினும் அகங்காரத்தையும், ஆணவத்தையும் கூடவே வளர்க்கும்.

திருவாவடுதுறை

நன்னெறி உடையோர் பலர் சேர்ந்து சத்சங்கங்கள் அமைத்துப் பெருமளவில் அன்னதானம், வஸ்திர தானம், கோயில்களில் உழவாரத் திருப்பணிகள், எழை எளியோர்க்கு உதவிகள், முதியோர், அனாதைகள், ஆதரவற்றோர் ஆகியோர்க்கு உதவிகள் செய்தல் போன்ற இவற்றை நன்முறையில் விரிந்த அளவில் செய்ய வேண்டும்.
இந்தக் கோகழி ஸ்ரீமுக ஆண்டில் பிறந்த தேதியைக் கொண்டோ, எண்ணியலைக் (numerology) கொண்டோ 4, 6 என்ற Numerology எண்ணை உடையவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் எச்செயல்களையும் ஒன்றுக்குப் பன்முறையாகச் சிந்தித்துச் செய்தல் நலம். எச்செயலையும் தொடங்கும் முன்னர் இஷ்ட தெய்வத்தையும், சற்குரு நாதரையும் வணங்கி முறைப்படி பூஜித்துச் செயல்படுதல் நலம் பயக்கும். இது மட்டுமல்லாது இந்த ஸ்ரீமுக ஆண்டில் மக்கள் அனைவரும் கீழ்க்கண்ட தேதிகளில் எச்செயலையும் சற்று நிதானித்துச் சிந்தித்துத் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் செய்தல் நலம் விளைவிக்கும். சிந்தித்துத் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் செய்தல் நலம் விளைவிக்கும்.
1,2,4,8,9,10, 11,17,18, 19,20,22,26, 27,28,29,31
ஸ்ரீமுக ஆண்டு முடியும் வரை மேற்கண்ட ஆங்கிலத் தேதிகளில் எச்செயலைச் செய்திடினும் தீர்க்கமாக யோசித்துச் செய்தல் வேண்டும். கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் ஆராய்ந்து ஹோரைகள், சூன்யத் திதிகள் பார்த்து நற்செயல்களில் ஈடுபடுவது நலம் தரும்.

ஸ்ரீபரமாச்சார்யாளின் நூறாவது ஆண்டு

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீபரமாச்சார்யாளின் நூறாவது ஆண்டு ஜெயந்தி வைபவம் மாங்கல்ய தான மகிமை
“உலக ஜீவன்களின் மேன்மைக்காக சதாசர்வ காலமும் இறைவனைப் பிரார்த்திப்பதனால் இந்த ஜகத்திற்கே குருவாகப் பரிணமிக்கும் காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நூறாவது ஆண்டு ஜெயந்தி விழாவில் இல்லறவாசிகளாகிய எங்களுடைய கடமை என்ன ?” என்று நாம் குருமங்கள கந்தர்வாவிடம் பணிந்து கேட்ட காலையில் அவர் அருளிய அருள்வாக்கு  :-
“அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”, என்ற கூற்றுப்படி தெய்வீகத்தைத் தவிர மற்ற எந்த அனுபவங்களுக்குமே ஒரு எல்லை தேவை. ‘காமம்’ என்ற சொல்லில் அனைத்து ‘ஆசைகளும்’ அடங்கி விடுகின்றன. மனிதன் இல்லறத்திலிருந்து கொண்டே இறையறம் இயற்றி உத்தம நிலையடைய எந்தெந்த காமத்தில் எந்தெந்த அளவு பெறலாம் என்று கோடிட்டுக் காட்டும் பீடம் ஆதலால் அது காமகோடி பீடம் என்று அழைக்கப்படுகிறது என ‘அகத்தியர் நாடி’ உரைக்கிறது.
மகான்களுடைய பிறந்த நாளைத்தான் நாம் ‘ஜெயந்தி’ என்று கூறுகிறோம். அந்தப் புனித நாட்களில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அதனைச் செய்து தான் தீர வேண்டும். பொதுவாக ஒரு குருவின் கடமை சீடனை ஆதரிப்பது. சீடனின் கடமையோ குருவை ஆராதிப்பது. ஆகவே தான் ‘குரு ஆராதனை’ என்ற சொல்லே பிறந்தது. குரு ஆராதனை (ஜெயந்தி விழா) யின் நோக்கம் என்ன? குரு ஆராதித்த எண்ணங்களை ஓரளவிற்காவது நாம் நிறைவேற்றுவதுதாம். அவ்வாறு செய்யும்போது தான் அந்த உத்தம குருவின் அருளை ஓரளவாவது பெறமுடியும். இது உறுதி.

திருவாவடுதுறை

ஒரு எஜமானனுக்கு இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர். ஒருவன் அந்த எஜமான் இட்ட பணிகளை வாய் திறக்காமல் ஓசையில்லாமல் செய்பவன். மற்றொருவனோ எப்போதும் எஜமான் அருகிலேயே இருந்து கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பவன். இதில் யார் எஜமானனின் உண்மையான பக்தன்?
எஜமானன் எங்கிருந்தாலும் எவன் அவனுடைய எதிர்பார்ப்புகளைச் செவ்வனே செய்து முடிக்கிறானோ அவன்தான் உண்மையான எஜமான பக்தன் அல்லவா! அதேபோல் ‘பெரியவாளின் பக்தர்கள்’ என்று கூறிக் கொள்ளும் நாம், அந்த உத்தம எஜமானனின் எண்ணங்களை எந்த அளவிற்கு  ஈடேற்றி வைக்கிறோம்? வெறும் புகழ்ச்சியால் யாது பயன்?
விடத்தையே தாம் விரும்பி ஏற்று பக்தர்களுக்கு அமிர்தத்தையளித்த கருணைக் கடலாகிய ஈசனுடைய அவதாரமல்லவா நம் காஞ்சி மாமுனி! பிறப்பு இறப்பு அற்ற அந்த உத்தம புருஷரின் நூறாவது பிறந்த நாளைக் காணும் இந்த நேரத்தில்...
மற்றவர்களுக்குக்காகவே மாற்றமின்றி வாழ்ந்து வரும் அந்த ஒப்பற்ற முனிவருக்கு, தியாகச் செம்மலுக்கு வெந்து விழும் உடற்பிறவி மெய்யென்று வினை பெருக்கி வாழும் மனிதர்களாகிய நாம் நூறாவது ஜெயந்தி நாளில் செய்ய வேண்டிய தருமங்கள் எவை என்று சித்தர்கள் வகுத்துள்ளார்கள்.
அத்தகைய தருமங்கள் பல உண்டு என்றாலும் அவற்றுள் ஒன்றையாவது நாம் அனைவரும் நிச்சயம் செய்தல் வேண்டும்.
‘சாடி விட்ட குதிரை போல் தெய்வம் வந்து காக்க வேண்டும்’ என்று நினைக்கும் மனிதன் ‘ஓடி ஓடிப் பிச்சையிட்டானா?’ ‘உகந்து ஏதாவது தருமம் செய்தானா?’ என்று பெரியவர்கள் கேட்கிறார்கள்.

நல்ல வழிகாட்டி செய்கின்ற நல்ல காரியங்களைச் சரியாகச் செய்ய முடியாமல் தவிக்கச் செய்வதுதான் தன் கடமை என்று சிலர் தங்கள் புண்ணியத்தாலும், கடவுளை வலம் வந்து பிரார்த்தனையாலும் சாதிக்கத் துணிவர். இவர்கள் யார் தெரியுமா? இந்தத் தவறுக்குப் பலன் யாது தெரியுமா? ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். இத்தகைய துரோகிகளைக் குறிப்பிட்டுக் காட்டி விடலாம். அவர்கள் அடையும் தண்டனைதனையும் சொல்லி விடலாம். ஆன்மீகத்தில் இருப்போர் அவ்வாறு செய்வதில்லை. பிறரைத் தோற்றுப் போகச் செய்வதோ, செயல் இழக்கச் செய்வதோ தூய ஆன்மீக வாதியின் லட்சியமல்ல. தர்மவான்களையும், தெய்வ நம்பிக்கை உடையவர்களையும் உருவாக்குகின்ற வெற்றியே நமது குறிக்கோளாகும்.

கனிந்த கனி காஞ்சி மாமுனிவரின் நூறாவது ஜெயந்தி நாளில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய உத்தம தருமம் என்ன?
அதுதான் “பொன்தானம்” அதாவது “மாங்கல்ய தானம்” . பொன் தானம் என்றால் யாருக்கு ?
ஏழை எளியோர்க்குப் பொன் மாங்கல்யம் அளித்து (இயன்ற அளவில் தான்... குண்டுமணியளவு தங்கத்திலும் மாங்கல்யமுண்டு) மணவாழ்வு பேணுதல்...
பொன் மாங்கல்யம் அணிய வசதியில்லாது மாங்கல்யச் சரடு (மஞ்சள் கயிறு) மட்டும் அணிந்துள்ள சுமங்கலிகளுக்கு அவரவர் குடும்ப கலாசாரத்திற்கேற்ப, ஜாதி சமய சிவ, வைஷ்ணவ, சக்தி உபாஸனைகளுக்கு ஏற்ப மாறுபடும்.
ஜாதி மதம் பாராது ஸ்ரீபரமாச்சார்யாள் அருளாசி வேண்டி ஏழை எளியோர்க்குக் கோயில் திருச்சன்னதிகளில் இந்தப் பொன் மாங்கல்ய தானம் செய்வது உத்தமமானது!
பொன்னைத் தானம் செய்ய வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் பெரியோர்கள்?
பொன்னின் நிறம் மஞ்சள்.... குருவிற்கு உகந்த நிறம். பல நிலைகளில் சுடப்பட்டுப் பக்குவமான பொன்னாகி ‘பொன்னார் மேனியன்’ என்று ஈசனையே புகழும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மனிதர்களாகிய நாமும் குருவைத் தேடியோடி நாடி அவர்தம் அருளால் சுடப்பட்டு (பக்குவப்பட்டு) உத்தம நிலை அடைய வேண்டும் என்று காட்டுவதே இந்தப் பொன் தானம்.
உடம்பில் ‘பொன்னை’ அணிவது இலக்குமியின் அருளைப் பெற்றுத் தரும் என்பதாலும் பொன்தானம் விசேடமாகிறது. ‘பொன் உராய்வு’ உடம்பிற்கு ஆரோக்யமாகும் என்பதும் பொன் தானத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகும். ஏழைகளும் இவற்றைப் பெற மாங்கல்ய தானம் வழிவகை செய்யும்..!
குருவுக்கு உரித்தான பொன் உலோகம் பரிசுத்தமானது... வேத மந்திரங்களை, சற்குருவின் அருளாசிகளைக் கிரஹித்து மானிட உடலுக்கு அளிக்கும் அற்புத ஆன்மீக வைபவத்தில் பெண்ணிற்குப் பொன் மாங்கல்யத்தை மங்களம் சூழச் சூட்டுகின்றனர். மாங்கல்யத்தில் கூடி வரும் மந்திர ஒலி, சற்குருவின் அருள் ஜோதி, பெரியோர்களின் ஆசி பல நூறு ஆண்டுகளுக்கு வாழையடி வாழையாய்ப் பல்கி வளர்ந்து பல தலைமுறைகளைக் கட்டிக் காக்கும். கலியுகத்தில் திருமண அழைப்பிதழில் “காஞ்சி காமகோடி (பீடாதிபதி) பெரியவாளின் அனுக்கிரகத்தாலும்” .... என்ற வாசகம் இல்லாமலிருப்பதில்லை.... ஆனால் எத்தனை திருமணங்கள் அவர் அருளியவாறு நடத்தப்படுகின்றன? சீர்வரிசை இல்லாது, பட்டு வஸ்திரங்களைத் தவிர்த்து நடைபெறும் திருமணங்கள் எத்தனை? அப்படி, அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் கூறியபடி திருமணத்தை நடத்தாவிடின் அதற்குரித்தான சாபம் உண்டு. அத்தகைய கர்மங்களைத் தீர்த்துக்கொள்ள அவர் நூறாவது ஜெயந்தி நாளில் மாங்கல்ய தானம் செய்வது ஒன்றே ஏற்ற சிறந்த வழியாகும். வசதியற்றோர் மாங்கல்ய தானம் செய்ய விரும்பினால் வெள்ளியிலும் மாங்கல்ய தானம் செய்யலாம்.

அடிமை கண்ட ஆனந்தம்

இராயபுரம் கல்மண்டபம் வட எல்லை ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வழக்கம் போல் முன் மண்டபத் தூணருகே அமர்ந்திருந்தார் அந்தக் “கோவணாண்டிப் பெரியவர்” அருகே அவருடைய சிஷ்யகோடியான அரை டிராயர் பையன் பாவாடை சைஸிற்குப் பெரிய காக்கி டிராயருக்குள் அமர்ந்திருந்தான்!
அக்கோயிலில் நடுத்தர வயதுள்ள ஓர் இளைஞன் பக்தியுடன் ஸ்ரீஅங்காளம்மனைச் சுற்றி ஏதோ முனகியவாறு வலம் வந்து கொண்டிருந்தான். இக்காட்சியைப் பல நாட்களாகவே கவனித்து வருகின்றனர் அப்பெரியவரும், அச்சிறுவனும்.
அன்றும் அவ்விளைஞன் வந்திருந்தான். வழக்கம் போல அவன் விறுவிறுவென்று அம்மனைச் சுற்றிச் கொண்டே, “ஆத்தா! எத்தனை நாளா சுத்தறேன்? கருணை பண்ண மாட்டேங்கிறியே...” இளைஞனின் முறையீடு இது...
சிறுவன் பெரியவரை நோக்க, அவர் தூணில் சாய்ந்தவாறே குரல் கொடுத்தார், “தம்பி! கவலைப்படாதே அம்பாளைச் சுத்தறதை மட்டும் நிறுத்திடாதே..... அம்மன் நிச்சயம் கருணை புரிவா!” என்றார். குரல் கேட்டுத் திரும்பிய இளைஞன் பெரியவரிடம் ஓடி வந்தான். “பெரியவரே! தினமும் இங்கே நான் சுத்துறதைப் பாத்துக்கிட்டிருக்கே. எனக்கு அஞ்சு வருசமா கல்யாணம் தள்ளிக்கிட்டே வருது. வர்ற சம்பந்தம் எல்லாம் இடையிலேயே முறிஞ்சி போவுது”, என்றவாறு பெரியவரிடம் தன் கதையைக் கூறலானான்.

ஸ்ரீஞானசரஸ்வதி திருவாவடுதுறை

பெரிய குடும்பியான அவனுக்குத் திருமணம் முக்கியமானது. வயதான பெற்றோர்களைக் காப்பாற்றவும், சிறுவர்களான தம்பி தங்கைகளைக் கவனிக்கவும் அவனுக்கு வாழ்க்கைத் துணை அவசியமாகி விட்டது. கடந்த 5 வருடங்களாகத் திருமண நிலை வரை வந்த பல சம்பந்தங்கள் பல்வேறு தடங்கல்களால் நின்று விட்டன.
பெரியவர் அவ்விளைஞனைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் ஒனக்கு நல்ல முடிவு வரும். அடுத்த மாசம் கல்யாணம் நடக்கும். ஆனால் அதுவரைக்கும் அம்மனைச் சுத்தறதை மட்டும் விட்டுடாதே”, என்று சொல்லி ஸ்ரீஅங்காளம்மனைச் சுற்றும் முறையையும் சொல்லிக் கொடுத்தார்.
அடுத்த வாரம் அவ்விளைஞன் பெரியவரிடம் ஓடி வந்தான். “உனக்கு 108 வயசு பெரியவரே! நீ சொன்ன முகூர்த்தத்திலே எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. ஆத்தா என்னைக் கைவிடலே”, என்று கூறினான் கண்கள் பனித்தவாறு கை நிறைய பூக்களுடன் பெரியவர் காலில் விழுந்தான்.
“சிவ சிவ” என்று கூறிய பெரியவர் ,”தம்பி! இது ஆத்தாளுடைய கூத்து. நீ அவளைத்தான்  கும்பிடணும்”, என்றார்.
திருமண நாள் நெருங்கியது.
திருமணத்திற்கு முதல் நாள் அந்த இளைஞன் மீண்டும் பெரியவரிடம் ஓடி வந்தான். “என்னை மறந்திடாதே பெரியவரே! உன் ஆசீர்வாதத்தால் நாளைக்கு எனக்குக் கல்யாணம். அங்கேயும் வந்து என்னை நீ ஆசிர்வாதம் பண்ணனும்”, என்று அவன் பெரியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
பெரியவர் சிரித்தார். “நாளைக்குக் கூட நீ வந்து ஆத்தாளைச் சுத்தணும். தம்பி! கல்யாணத்தில் எனக்கு சாப்பாடு போடுவியா?” என்று எங்கோ பார்த்தவாறு பெரியவர் அந்த இளைஞனைக் கேட்டார்.
“என்ன பெரியவரே! இப்படிச் சொல்லிப்புட்டே! நீ வந்தால் உன்னைத்தான் மொதல்ல கவனிப்பேன்”, என்றான் அவன்.
பெரியவர் மீண்டும் சிரித்தார்.... “ ஆனால் ஒண்ணு ராஜா! நான் எப்படி வேணுமானாலும் உன் கல்யாணத்துக்கு வருவேன். ஞாபம் வெச்சுக்கோ”, என்று பதில் கொடுத்தார்.
மறுநாள், சிறுவனுடன் பெரியவர் திருமணத்திற்குப் புறப்பட்டார். வழக்கமான கோவணம். வழக்கமான காக்கி அரை டிராயர்.
கல்யாண வீடு வந்ததும் பெரியவர் திடீரென்று கோவணத்தைக் களைந்து நிர்வாணமாய் “அவதூதராய்” நின்றார். சிறுவன் அதிர்ச்சியுற்றான்! “என்ன இது?” என்று எண்ணி விழித்தான். பெரியவர் கண் ஜாடையால் மௌனம் காட்டினார்.
கல்யாண வீட்டு வாசலில் நின்று, “டேய், தம்பீ ...”, என்று குரல் கொடுத்தார் பெரியவர். பழக்கமான குரல் ஆயிற்றே. கல்யாண மாப்பிள்ளையான அவ்விளைஞன் ஓடோடி வந்தான்.

ஸ்ரீசூரிய மூர்த்திகள் திருவாவடுதுறை

வாசலில் வந்து பார்த்து “ஷாக்” அடித்தவன் போல் நின்றான். பெரியவரோ வானமே ஆடையாக நின்றார். அவருடைய நிர்வாணக் கோலம் அவனுக்கு என்னவோ போலிருந்தது!
“என்ன தம்பீ! மாப்பிள்ளை டிரஸ்ல ஷோக்கா இருக்கியே”, என்று பெரியவர புன்முறுவல் செய்தார்.
என்ன செய்வதென்று ஒரு கணம் யோசித்த இளைஞன் வந்த வேகத்திலேயே கல்யாண மண்டபத்தினுள் திரும்பிச் சென்று விட்டான்.
“தம்பி! என் வேலை முடிஞ்சது” , பெரியவர் பலத்த குரல் கொடுத்தார்.
அந்த இளைஞன் அவரைக் கண்டு கொள்ளவில்லை. கல்யாணக் கூட்டத்தில் அந்தப் பெரியவரைத் தெரிந்தவர் போல் காட்டிக் கொண்டால் என்ன நேருமோ என்று பயந்து அவன் வெளியே வரவேயில்லை.
“தம்பி! நான் வந்த வேலை முடிஞ்சது”, என்று மீண்டும் குரல் கொடுத்த பெரியவர் உள்ளே எட்டிப் பார்த்தார்... அந்த இளைஞன் (மாப்பிள்ளை) முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“வாடா போகலாம்! ஆத்தா நமக்குக் கொடுத்த டூட்டி முடிஞ்சது”, என்று பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு திரும்பினார்.
“ஏன் வாத்தியாரே! நிர்வாணமாய் நின்னா யார் சாப்பாடு போடுவாங்க?” என்று சாப்பாட்டை இழந்த வேதனையில் சிறுவன் பெரியவரிடம் பிரஸ்தாபித்தான். அவன் பெரியவரை “வாத்தியார்” என்றே அழைப்பான். ‘வாத்தியார்’ என்றால் இறைநெறியைக் கற்றுக் கொடுப்பவர் என்பது பொருள்.  வழக்கம் போல் பெரியவர சிரித்தார்.
ஒரு வாரம்  கழித்து... அதே அங்காளம்மன் சன்னிதித் தெருவில் நிர்வாணக் கோலத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிந்த ஒர் இளைஞனை நாலைந்து பேர் தரதரவென்று இழுத்து வந்து நிறுத்தினார்கள். அதே இளைஞன்!
“போன வாரம் தான் கல்யாணம் ஆச்சு. இப்படிப் பைத்தியம் ஆயிட்டானே!” என்று அந்த இளைஞனின் குடும்பத்தினார் கதறினர்.
நிர்வாண நிலையில் அவ்விளைஞன் ஏதேதோ உளறியவாறு திமிறிக் கொண்டிருந்தான்.
கோயிலில்  வழக்கம் போல் ‘தூண் ஓரத்தில்’ பெரியவரும், சிறுவனும் நின்று இதைப் பார்த்தனர். சிறுவன் மெதுவாகப் பெரியவரைத் தொட்டான். “ஏன் இந்த மாதிரி ஆயிற்று?” என்று கேட்பது போல் இருந்தது அவன் பார்வை.

திருவாவடுதுறை

“வாத்தியாரே! அன்னிக்கு உனக்குக் கல்யாணத்துலே சாப்பாடு போட்டிருந்தா இவனுக்கு இந்த மாதிரி கதி வந்திருக்காது இல்லையா?” என்று பெரியவரிடம் சிறுவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.
“நீ சின்னப் பையன். உனக்குத் தெரிஞ்சது கூட அவனுக்குத் தெரியலை பார். விதிப்படி அவனுக்குப் பைத்தியம்  பிடிக்கணும்னு அவன் தலையிலே எழுதியிருக்கு. அதைப் படம் போட்டுக் காட்டத்தான் நான் அன்னிக்கு அங்கே நிர்வாணமாய் நின்னேன். ‘இந்த நிலை உனக்கு வரும்’  அப்படீன்னு சொல்லிக் காட்டத்தான் என்னுடைய நிர்வாணக் கோலம்...”, என்று பெரியவர் விளக்கினார்..
“நான் எப்படி வேணாலும் வருவேன்னு முன்னாடியே சொல்லிட்டியே! அப்படீன்னா, உன்னை மாதிரி பெரியவருக்குச் சொன்னபடி சாப்பாடு போட்டிருந்தா இந்த விதி மாறி இருக்குமில்லையா?” என்று சிறுவன் கேட்டான்.
பெரியவர், சிறுவனைத் தட்டிக் கொடுத்தார், “நீ என் சிஷ்யப் பிள்ளையாச்சே! கரெக்டா சொல்லிட்டே. சித்தனுக்கு  ஒரு வாய் தண்ணீர் கொடுத்தாலே விசேஷம், அதுவே பல ஜென்மங்களைக் கழித்து விடும். அதிலும் சாப்பாடு போட்டிருந்தா, அந்தச் சித்தனே விதியை மாத்தி அம்பாள்கிட்டயே சேர்ந்திருப்பான் : எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். வெட்கம், மானம் பார்க்காம பெரியவங்களை மதிக்கணும். அவங்க மேன்மையைப் புரிஞ்சிக்கணும்.... நீ பெரியவன் ஆனதும் இதை ஒலகத்துக்குச்  சொல்லு! இது ஒரு படிப்பினை”, என்றார்.
சிறுவன் ஸ்தம்பித்து நின்றான்.
சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை. ஏனோதானோ என்றுதான் வரும்.. இது பெரியவரான சித்தரின் வாக்கியம். எனவே வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடலாகாது. சற்குருவானவர் எந்த நிலையிலும், எந்த ரூபத்திலும் நம்மை ஆட்கொள்ளலாம். எவரையும் எந்நிலையிலும் அவமதித்து உதாசீனப்படுத்தி அலட்சியப்படுத்திப் புறக்கணித்தல் ஆகாது.          

புக்கொளியூர் போடா சித்தர்

காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோயில் முக மண்டபத்தில் அனாதையாக வீற்றிருந்து கோடிக்கணக்கான மக்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவ சமாதி கொண்டார். இவருடைய மேன்மைகளைப் பற்றி சித்த புருஷர்களே அறிவார்கள். காஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்களைப் பார்த்து ”அந்தச் சித்தரைத் தரிசனம் செய்தேளா?” என்று அடிக்கடி கேட்பதுண்டு.
புக்கொளியூர் போடா சித்தர் என்ற பெயரைப் பெற்ற இந்தச் சித்த மஹரிஷி பல கோடி யுகங்களாகப் பல்லாயிரங் கோடி அண்டங்களை இயக்கி வருபவர். இன்றைக்கும் தன்னுடைய மனித உடலான சட்டையைக்  கழற்றியுள்ளாரே தவிர என்றும் சிவபெருமானின் சித்தத்தில் உறையும் இந்த உன்னதமான சித்த புருஷர் எங்கும் எதிலும் விரவி அருள் புரிந்து வருகிறார். இவர் பற்றிய ஆன்மீக ரகசியங்களை அகஸ்திய மகா பிரபு பல்லாயிரக்கணக்கான பாடல்களில் நாடி வடிவத்தில் புனைந்துள்ளார்.. இதை அறிந்தவர்களும் சித்தர் புருஷர்களேயாவர்.

புக்கோளியூர் ஸ்ரீபோடா சித்தர்

நம்முடைய குருமங்கள கந்தர்வார ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் புக்கொளியூர் போடா சித்தர் பற்றிய அதியற்புத ஆன்மீக ரகசியங்களை வழங்கியுள்ளார். இதனை அன்பர்கள் அனைவரும் அறிந்து அச்சித்தரின் ஜீவ சமாதியைத் தரிசனம்  செய்து சுயநலமற்ற சேவைகள் புரிந்து அவருடைய அருளுக்குப் பாத்திரமாக வேண்டுகிறோம்.
பல்வேறு நாமங்களை உடைய இந்தச் சித்த மஹாபுருஷர் சிவபெருமானாலேயே “புக்கொளியூர் போடா சித்தர்” என்று அழைக்கப்பட்டார். புக்கொளியூர் எனபது தற்போதைய கோயம்புத்தூரில் உள்ள அவிநாசி என்ற பெரிய நகரத்தின் புராதனப் பெயராகும்.
நான்முகனான பிரம்மன் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து உற்பவித்த போது ஐந்து முகங்களுடன் அருள் பாலித்தார். ஒரு முறை ‘கோடிக்கணக்கான ஜீவன்களைப்  படைப்பது நாமே’ என்று அவருடைய ஐந்தாவது சிரசு (தலை) செருக்குற்ற போது பரமசிவன் அத்தலையைக் கிள்ளி எறிந்திடவே அது பல லோகங்களையும் கடந்து பூலோகத்தில் வந்து விழுந்தது. இதற்குப் பிராயச்சித்தம் பெற வேண்டி பிரம்மன் பூலோகத்தின் பல்வேறு திருத்தலங்களில் தவம் இயற்றி இறுதியில் சிவபெருமானின் அருளைப் பெற்றான். அவ்வாறு சிவபெருமானால் கிள்ளி எறியப்பட்ட பிரம்மனுடைய ஐந்தாவது தலை அக்னிக் குழம்பாகப் பூலோகத்தில் வந்து விழுந்திட, தேவர்கள் உட்பட எவருமே அதன் அருகில் செல்ல முடியவில்லை. அப்போது புக்கொளியூரில் பிரசன்னமாகி இருந்த போடாசித்தர் அவ்வழி வந்து எவரும் தொடயியலா பிரம்மனுடைய ஐந்தாம் சிரசைத் தம் கரத்தில் ஏற்றுக் கொண்டார். ஓட்டில் ஈரம் இருந்தமையால் இந்த ஈர ஓடு விழுந்த இடமே “ஈரோடு” எனவாயிற்று.
இந்த ஈர ஓட்டைத் தம் கையில் ஏந்தியாவாறே போடா சித்தர் சுவாமிகள் பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். அவ்வாறு அவர் புக்கொளியூர் வந்து சேர்ந்த போது, மஹாப் பிரளய முடிவிற்குப் பின் ருத்ர தாண்டவத்தின் அங்கமாக அக்னித் தாண்டவம் ஆடி நின்ற சதாசிவனாம் சிவபெருமான் பெரிய அக்னி ஜ்வாலையாக, ஜோதிப் பிரகாசத்துடன் புக்கொளியூர் சிவாலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தில் ஐக்கியமானார். திருக்கையிலையில் ருத்ர தாண்டவத்தினைக் கண்டு கொண்டிருந்த உமையவள் “ஈசன் எங்கு சென்றார்?“ எனத் தெரியாமல் வருத்தமுற்றுப் பல லோகங்களுக்கும் சென்று ஈசனைத் தேடித் தவமியற்றத் தொடங்கினாள்.
இவ்வாறு பல லோகங்களுக்கும், பூலோகத் திருத்தலங்களுக்கும் சென்று வந்த பார்வதி தேவி புக்கொளியூர் போடா சித்தரின் மகிமைகளை அறிந்து அவரை நாடி வணங்கி நின்றாள். போடா சித்தரும் உரிமையாகப் புக்கொளியூர் நாதரை, அவினாசி லிங்கேஸ்வரரை அழைத்து “என் அம்மையை எத்தனை ஆண்டுகள் காக்க வைத்தனை?” என்று அன்புடன் சினந்து கொண்டார். சிவபெருமானும் அசரீரியாக, “எங்கு, எவ்வாறு, எங்ஙனம், மணம் கொள்வேனோ?” என்று கேட்க, “இங்கே இவ்விடம் இப்பொழுதே இம்மாமரத்தின் அடியில் மணம் புரிவாயாக! ஏனைய மணத்தைப் பிறிதோரிடத்தில் காட்டுகிறேன்” என்று புக்கொளியூர் போடா சுவாமிகள் அருளிடவே சிவபெருமானும் பார்வதியை மணம் புரிந்தார். இவ்வாறு புக்கொளியூர் மாமரத்து அடியில் நிகழ்ந்த தெய்வீகத் திருமணக் காட்சியைக் கண்டு களித்தவரே போடா சித்தர் ஆவர்.

அவிநாசி

பிறகு பரமேஸ்வரன் ஏகாம்பரேஸ்வரராகக் காஞ்சியில் நான்கு வேதங்களுக்கு ஒப்பான மாமரத்தடியில் அம்பிகையாம் பார்வதியை மணந்து பிறிதோரிடத்தினில் திருமணத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். இறைவனுடைய இத்தகைய பல்லாயிரக்கணக்கான திருமண வைபவங்களைக் கண்டு துய்த்துணர்ந்த சித்த புருஷரே புக்கொளியூர் போடா சித்த சுவாமிகள் ஆவார். இவரே காஞ்சீபுரத்தில் பல லட்சம் ஆண்டுகள் அமர்ந்திருந்து “போடா, போடா, போடா” என்றுரைத்துப் பல விந்தைகளைப் புரிந்தவர். இவர் எப்போதும் “போடா, போடா” என்று கூறியமையால் இவருக்குப் “புக்கொளியூர் போடா சித்தர்” எனச் சிவபெருமானே மனமுவந்து பெயரிட்டார். “இவர் ‘போடா’ என்றிட்டால் கர்ம வினைகள் கரைந்து விடும்”. பாவங்கள் பொசுங்கிவிடும். தீவினைகள் தீய்ந்து விடும். அதர்மங்கள் அழிந்து விடும். இவருக்கே “மாம்பட்டிடைச் சித்தர்”  என்ற பெயரும் உண்டு. மாமரத்தடியில் பார்வதி பரமேஸ்வரன் திருமணக் காட்சியைக் கண்டு உய்க்கும் பேறும் பெற்றமையால் இப்பெயரை அவர் பெற்றார்.
பிறிதொரு விதத்தில் பிரம்மனுடைய கிள்ளி எறியப்பட்ட ஐந்தாவது தலையான ஈர ஓட்டுடன் இவர் காஞ்சி நகரம் வந்து சேர்ந்தபோது பிரம்மன் அங்கே இவருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு சிறு பூசலையே தனக்கேற்பட்ட அவமானமாகக் கருதிய சரஸ்வதி பெரும் சீற்றம் கொண்டு பலகோடி கங்கைகள் ஒன்றாகக் கூடிப் பிரவாகம் எடுத்தது போல “காஞ்சி நகரை அழிக்கின்றேன்” என விண்ணிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய வேகத்தைக் கட்டுபடுத்த இயலாது திரிமூர்த்திகளும் புக்கொளியூர் போடா சித்தரை நாடினர். அவரோ, “ நாம் காஞ்சி நகரில் கருணை புரிவோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். இதற்காகக் காஞ்சி நகரை வந்தடைந்தார்.
கலைவாணி தன்னுடைய சரஸ்வதி லோகத்திலிருந்து பெரு நதியாகப் பிரவாகமெடுத்துக் காஞ்சி நகரை அடையப் பல கோடி யுகங்கள் ஆனது எனில் அந்த நதியின் வேகத்தை , பேரண்டத்தை ஒத்த பெரு விரிவை என்னென்று சொல்வது? சீறி வந்து கொண்டிருந்த சரஸ்வதியைப் புக்கொளியூர் போடா சித்தர் தம் கையில் கொப்பறையாகக் கிடந்த பிரம்மனுடைய ஐந்தாவது சிரசான ஈர ஓட்டில் வாரியெடுக்க விண்ணில் விரிந்த கலைமகளுடைய பிரவாக நதி புக்கொளியூர் போடா சித்தரின் கையிலிருந்த ஈர ஓட்டுக் கொப்பறையில் குமிழ்ந்து நின்றது. ஆம், சரஸ்வதி பிரம்மனுடன் கலந்து விட்டாள். இத்தகைய ஆன்மீகப் பேரிணைப்பைச் செய்து வித்தை புரிந்தவரே புக்கொளியூர் போடா சித்தராவார்.

“நானும் நல்லிடம் வந்து சேர்ந்தேன்” என்று சரஸ்வதியும் இந்தச் சித்த புருஷருக்கு நன்றி செலுத்தினாளாம். “சினத்தால் வந்த வினையால் காஞ்சி அழிந்திருக்குமெனில் எத்தகைய சாபத்திற்கு  ஆளாகியிருப்பேன்” என்று கலங்கிய கலைவாணி, தான் நல்லிடம் சேர்ந்து தன் நாயகனுடன் இணைந்ததை ஒரு தெய்வத் திருவிளையாடலாக ஏற்று மகிழ்ச்சியுற்றாள். இந்த ஆன்மீகப் பெருவிந்தையை நிகழ்த்தியவரே புக்கொளியூர் போடா சித்தராவார்.
அதிஅற்புதமான ஆன்மீக ரகசியங்கள் கொண்ட தெய்வீக மாமரமானது ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இந்த விசேஷ மாமரத்தின் கீழ் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வர பார்வதி தேவி திருமணத்தினைக் கண்டு துய்த்த புக்கொளியூர் போடா சித்தரின் காலத்தை எவ்வாறு நிர்ணயிக்க இயலும்? கோடானுகோடி யுகங்களாக அவ்விடத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவரெனில் எவருமறிய இயலாத பகுத்தறிவுக்கு எட்டாத அம்மகான் உன்னதமான சித்த புருஷரன்றோ?

கோயில் தூண்கள்

வினா : கோயில்களில் உள்ள தூண்களிலும், சுவர்களிலும், மண்டபங்களுலும், மேல் கோபுரங்களிலும் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதின் தாத்பர்யம் என்ன ?
சற்குரு : கோவிலின் எந்தப் பகுதியிலாவது ஒரு சித்தரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாயின் அவ்விடத்தில் அவர் ஜீவ சமாதி பூண்டுள்ளார் என்பது பொருளாகும். சமாதி என்றால் உயிர் பிர்ந்த பின் உடலுக்கு அமையும் “நிலமுகவம்” என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால் யோகியரும், ஞானியரும், சித்தர்களும் உயிருள்ள உடலிலேயே பல சமாதி நிலைகளைக் காட்டி அருளியுள்ளனர் “சகஜ சமாதி” “நிர்விகல்ப சமாதி” போன்ற பல சமாதி நிலைகள் உண்டு. இந்த நிலைகளில் உயிரோடு உடல் இயங்கிக் கொண்டு இருப்பினும், உடல் உயிர் அற்றது போல காணப்படும். இத்தகைய உன்னதமான சமாதி நிலைகளில் உயிர் உடலோடு இருக்க ஆன்மா பல்வேறு தெய்வீக நிலைகளில் ஐக்கியமாகி மீண்டும் பூலோக ஜீவன்களின் உய்விற்காக அந்த உடலில் உருக்கொள்ளும். இத்தகைய அற்புதச் சாதனைகளைப் படைப்பவர்கள் மகான்களே ஆவர். அவர்கள் சட்டையைக் கழற்றுவது போல் இந்தத் தேகத்தை விட்டுப் பல தெய்வீக நிலைகளை அடைந்து மீண்டும் சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வது போல அதே தேகத்தில் உருப் பெறுகின்றனர். இத்தகைய அனுபவங்களை மனிதனும் உன்னதமான தியான நிலைகளில் பெறலாம். ஆனால் இதற்குச் சற்குருவின் திருவருள் இன்றியமையாததாகும்.

பிராண தீபிகா சித்தர்
சித்துக்காடு சென்னை அருகே

கோயில்களில் சித்தர்கள் ஜீவசமாதி பெறக் காரணம் இப்பூவுலகில் உள்ள பல்வேறு கோடி ஜீவன்களை உய்விப்பதற்காகும். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு காரணத்திற்காகப் பூலோகத்திற்கு வந்து மக்களுக்குத் தெளிவு புகட்டி, இறை நிலையைப் பரப்பி அவர்களை ஆன்மீக நிலைகளில் மேம்படச் செய்கின்றனர். இதற்காகவே பலகோடி சித்த புருஷர்கள் இன்றைக்கும் இவ்வுலகில், குறிப்பாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் நிறைந்துள்ளனர்.
ஒவ்வொரு கோயிலிலும் பல்வேறு இடங்களில் ஜீவசமாதி கொண்டுள்ள சித்தர்கள் பல வகையான முறைகளில் மக்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர். உதாரணமாக சென்னை திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள “அக்னி புராந்தக மகரிஷி” முதுகு வடத்தில் உள்ள நோய்களையும், சென்னை சித்துக்காடு தாந்திரீஸ்வரர் சிவாலயத்தில் நந்தி மண்டபத்தில் நந்திக்கு வலது பக்கத்தில் உள்ள “பிராண தீபிகா சித்தர்” இருதய நோய்களையும், சென்னை திருக்கச்சூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள “அக்னி கச்ச சித்தர்” அல்சர், பெப்டிக் அல்சர் (Ulcer, Peptic Ulcer) போன்ற வயிற்று உபாதைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள்.
ஆனால் இத்தகைய ஆன்மீக இரகசியங்களைச் சற்குரு மூலமாகவே பெற முடியும். எனவே பலவிதமான இறைத் திருப்பணிகள் செய்கின்ற சத்சங்கங்களை நாடி அதில் இணைந்து திருப்பணிகள் செய்து, அந்தச் சத்சங்கங்களை இயக்கி வரும் சற்குருமார்களின் அருள் ஆசி பெற்று இத்தகைய சித்தர்களைப் பற்றிய ஆன்மீக ரகசியங்களை அறிந்து அவர்களுடைய அருள் வழங்கும் தன்மைகளை ஏனையோருக்கும் எடுத்துரைத்துப் பலரும் நலம் பெற்று வாழ வழிவகை செய்தல் வேண்டும். மேலும் கோயில்கள் நடைசாத்தும் சமயங்களில் அதாவது மனிதருடைய பூஜை முறைகள் எப்போது முடிவடைகின்றனவோ அச்சமயத்தில் பிற லோகத்தில் வசிப்போருடைய கோயில் பூஜை முறைகள் தொடங்குகின்றன.
எனவே மதிய நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பல சித்த புருஷர்கள் பலகோடி லோகங்களில் உள்ளவர்களின் நலனுக்காகத் தங்களுக்கே உரிய சித்த பூஜை முறையில் கோயில்களில் வழிபாடுகளை நிகழ்த்துகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொரு கோயிலிலும் நடைபெறுகின்ற சித்தர்களுடைய பூஜை வைபவங்களைக் கண்டு மகிழப் பல கோடி லோகங்களிலிருந்து தேவர்களும், கந்தர்வர்களும், கிம்புருடர்களும், பித்ரு தேவதைகளும், ரிஷிகளும், பல்வேறு அவதாரங்களும், நவக்கிரஹங்களும், கிரஹாதிபதிகளும் வந்து அருளும் பெற்றுச் செல்கின்றனர்.
தற்போது தமிழகக் கோயில்களில் ஆறுகால பூஜை என்பது அரிதாகி விட்டது. எனவே மனிதர்கள் தங்களுடைய இறை நிலை முறைகளிலிருந்து தவறுகின்றபோது சித்தர்கள் இந்த பூலோக மனிதர்களுக்காக, அவர்கள் செய்யத் தவறிய ஆறுகால பூஜைமுறைகளைத் தாமே ஏற்றுச் செய்கின்றனர். எனவேதான் நலிவுற்று இருக்கும் கோயில்களிலும் கூட மூலவருடைய சான்னித்யம் இன்றைக்கும் பரிணமிக்கின்றது. இத்தகைய அதியற்புத சேவைகளைச் செய்து மக்களுடைய நல்வாழ்விற்காக ஜீவ சமாதிகளைக் கொண்டுள்ளவர்கள் சித்தர்கள் ஆவர். இவர்களே மூலமூர்த்திகளை உண்மையாகப் பூஜிப்பவர்கள்.
இவ்வாறு கோயில்களில் ஜீவசமாதி கொண்டுள்ள சித்த புருஷர்களுக்கு எண்ணெய்க் காப்பிட்டு வணங்கி வேண்டிக் கொள்ளுதல் பற்பல பலன்களைப் பெற்றுத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இத்தகைய சித்த புருஷர்களை வணங்கி கோயில்களில் அருள் பாலிக்கும் தெய்வங்களை தரிசிப்பது பன்மடங்கு பலன்களைப் பெற்றுத் தரும்.
பல சித்தர்களும், மஹான்களும் புகைப்படங்களில் (photos) அமைய விரும்புவதில்லை. ஆனால் பல கோடி யுகங்களுக்குப் பிறகும் தங்களை நாடி வருவோர்க்குக் கருணையுடன் அருள் பொழியக் கோயில் தூண்களில் ஜீவசமாதி கொண்டு அமர்கின்றனர். அவ்விடம் மறையும் செயற்கைப் படமாக இன்றி காலங் கடந்து நிற்கும் நிரந்தர உறைவிடம் அன்றோ!

சித்துக்காடு

கடந்த ஆண்டு சென்னை பூந்தமல்லியில் இருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள சித்துக்காடு என்னும் பெருமாள் ஆலயத்தில் நம் குருமங்கள கந்தர்வாவுடன் உழவாரத் திருபணி செய்யும் அரிய வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாள் சனனதி மண்டபத்தின் தூண் ஒன்றின் அருகே வந்ததும் நம் குருமங்கள கந்தர்வா சற்று நின்றார். அத்தூணிலிருந்த ஒரு சிற்பத்தின் மேல் அவர் கண்கள் லயித்து நின்றன. காலம் கடந்த கண்களால், பல யுகங்கள் முன்னே ஊடுருவிச் சென்று கடல் மடை திறந்தாற் போல் அவர் சொல்வாராயினார் :-
...  ஸ்ரீ வைகுண்டத்தில் பள்ளி் கொண்டிருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கருடாழ்வாரை அழைத்து செல்லமாகக் கடிந்து கொண்டாராம்...!
“கருடா! இன்னமும் உனக்கு என் அடியார்களைக் கண்டு உணரும் ஆற்றல் வரவில்லையே! ஒவ்வொரு முறையும் உன்னுடன் செல்லும் போது நானல்லவோ என் பக்தனின் முகவரியைத் தர வேண்டியிருக்கிறது. நீயாக உன் தீர்க்கமான கண்களால் என் அடியவர்களை எப்போது அடையாளம் காணப் போகிறாய்?”
கருடாழ்வார் வெட்கித் தலைகுனிந்தார் சூரிய நாராயணராகிய ஸ்ரீவைகுண்ட நாதர், பூலோகம் சென்று சித்த புருஷர்களைத் தரிசனம் செய்து நேத்ர தீர்க்க தரிசனத்தையும் தர வல்லவர்கள் சித்த புருஷர்களே! கோடானு கோடி சித்தர்கள் உலவும் புனித பூமியின் பாரதப் பகுதிக்கு அடியேன் செல்லத் தாங்கள் தாம் அனுக்ரஹம் செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

ஸ்ரீ வைகுண்ட நாதர் புன்முறுவலுடன் ஒப்புதல் அளித்துக் கருடாழ்வாரை ஆசீர்வாதம் செய்தார். அவரே அனைத்தும் அளிக்க வல்லவராயினும் ஏதோ நாராயண லீலை புரிய விழைந்தார் போலும்!
கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டுத் திரிலோக சஞ்சாரியான நாரதரை நாடி, சித்த தரிசனம் பற்றி விளக்கம் கேட்டார். அவரும் கருடாழ்வாரைத் தொழுப்பேட்டுத் தலம் உறையும், ஸ்ரீ முருகப் பெருமானிடன் அனுப்பினார். கருடாழ்வார் தம்முடைய வேகத்தைப் பற்றிச் சிறிது கர்வம் கொண்டிருந்தார். இதை அவருக்கு உணர்த்தவே நாராயண லீலை புரிந்தார் மஹாவிஷ்ணு! ஏனெனில் கந்தவேளைத் தேடி கருடாழ்வார் தொண்டை மண்டலத்தின் மேல் வானில் பறந்து வருகையில் அற்புதமான பச்சை நிற மயில் பறவையொன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தம்மைக் கடந்து செல்வதைக் கண்டு அதிசயித்தார். தாமே பெருமாளுக்குரிய விரைவான வாகனம் என்ற சிறு துளி அகங்காரத்திற்காக வெட்கித்து அந்த மயிலைத் தொடர்ந்தார்.
மால் மருமகன் முத்துகுமரனின் மயூர (மயில்) வாகனமே அது! அம்மயிலோ தொழுப்பேட்டு (சென்னை மதுராந்தகம் அருகே உள்ளது) மலையருகே மாயமாய் மறைந்து விட்டது. வியப்புடன் அம்மலையில் இறங்கிய கருடாழ்வாருக்கு, முருகப் பெருமானே மயில் வாகனனாய்க் காட்சி தந்து அருள் புரிந்தான்.
தொழுப்பேட்டு மலையில் மயில், கருடப் பறவைகளின் இரு பாதச்சுவடுகளும் இணைந்து பதிந்திருப்பதைக் காணலாம். ஆனால் சற்குரு அருளுடன் செல்பவர்க்கே இந்தப் பாத தரிசனம் கிட்டும்.
“கருடாழ்வாரே! தாங்கள் தேடி வரும் சித்த மஹாபுருஷரைத் தெற்குத் திசையில் காண்பீர்கள். அற்புத மூலிகைகள் நிறைந்த தொழுப்பேட்டுப் புண்ணிய பூமியில் வந்திறங்கிய மஹிமையால் அந்தச் சித்த புருஷரும் தாமாகவே எளிதில் காட்சி தருவார். “விருட்சக் கொடி சித்தர்” எனக் காரணப் பெயர் பூண்ட அவர் விருட்சக் கொடியைக் கையில் ஏந்தியவாறே எப்பொழுதும் நகர்ந்து கொண்டே இருப்பார். தெற்குத் திசையில் விண்ணில் பறக்கையில், மேலிருந்து நோக்குகையில் எங்கு ஒரு வனமே நகர்வது போல் தோன்றுகிறதோ அவ்விடத்தில் அவரைத் தரிசனம் செய்யலாம்” என்று முருகன் அருளினான்.
“முருகப் பெருமானே! தங்களுடைய தரிசனமே எனக்கு அருள் சுரந்ததோடு அல்லாமல் எனக்குப் பல பாடங்களையும் புகட்டியது. ‘நானே விண்ணில் பறப்பதில் வல்லவன். தீர்க்கமான பார்வையுடையவன்’ என்று இறுமாந்திருந்தேன். தங்களுடைய மயூர வாகனம் என்னுடைய அகங்காரத்தை நீக்கி விட்டது. தன்யனானேன். எனக்கு அருள் புரிவீர்களாக!” என்று முருகனை வணங்கி விடைபெற்றார் கருடாழ்வார்.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை
தென்திருமுல்லைவாயில்

நீங்களே உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். தன்னம்பிக்கையோடு இறைச் சேவை செய்யுங்கள். நாம் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியும். பிறருக்கு நம்மைப் பற்றி என்ன தெரியும்? பிறரால் நம்மைப் பற்றி ஒருபோதும் சரியாகக் கணிக்க முடியாது. பிறருடைய உதட்டளவே வரும் வார்த்தைகளில் நாம் பணிந்து, நெளிந்து, குழைந்து, மகிழ்ந்து, சிரம் தாழ்த்திக் குளிர்ந்து விட வேண்டாம். உங்களுக்கு வழிகாட்டிகள் நாயன்மார்களும், ஆழ்வார்களும்தான். தேடுங்கள் அவர்களின் வாய்மொழிகளை. திருஅருள் பெறுவீர்!

திருமுருகனின் மயிலோ இமைப்பொழுதில் தெற்குத் திசையில் வழிகாட்டிய பின் மறைந்து விட்டது. எப்போதும் முருக நாமத்துடன் மௌனமாய்த் தனக்கிட்ட பணியைச் செவ்வனே செய்து வரும் மயூரத்தினை வணங்கித் தெற்கில் தம் பயணத்தைத் தொடர்ந்தார் கருடாழ்வார்.
ஓரிடத்தில் ..... செடி, கொடி, மரங்கள் நிறைந்த வனமே இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வது போலிருந்தது. “நகரும் வனமா?” என்று வியந்த கருடாழ்வார் அவ்விடத்தை நோக்கி விரைந்து இறங்கினார். அங்கே விருடசக் கொடியுடன் விருட்சக் கொடி சித்தர் தரிசனம் தந்தார். அக்கொடியில் விருட்சத்துடன் (மரம்) கருடனின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்த கருடாழ்வார் அவரைச் சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்துத் துதித்தார்.
விருட்சக் கொடி சித்தர் உலகின்கண் தோன்றி உள்ள அனைத்து மூலிகை மரங்களையும், செடி, கொடிகளையும் தம்முடைய முதுகிலே சுமந்து பிரபஞ்சமெங்கும் சுற்றி வந்து இறையருளைப் பரப்பி மூலிகை வைத்தியம் செய்து, உடல் ரோகங்கள் மட்டுமல்லாது மனநோய்களையும், கர்ம வினைகளையும் நிவர்த்தி செய்யும் சிவனருள் பெற்ற சித்தராவார்.
விருட்சக் கொடி சித்தரிடம் கருடாழ்வார் தமக்குப் பரப்பிரம்மமாம் ஸ்ரீ நாராயணனின் அடியார்கள் எங்கிருப்பினும் அவர்களை அறியும் வண்ணம் நேத்ர தீர்க்கம் அதாவது தேஜோமயமான கண்ணொளியை வரமாக வழங்க வேண்டினார். சித்தர் பெருமானும் சில மூலிகைகளைத் தொகுத்து அவற்றின் சாற்றினைக் கருடாழ்வாரின் கண்களில் பிழிய அவருக்கு நேத்திர தீர்க்கமெனும் அதியற்புத கோடிகோடியாம் சூர்யர்களின் ஒளிப்பிரகாசம் கொண்ட பார்வை கிடைத்தது.
அன்றிலிருந்து எந்த ஜீவனும், எந்த லோகத்திலிருந்தும் “நாராயணா” என்று குரல் கொடுத்துக் கூவிழைத்தால் அடுத்த க்ஷணமே அவ்விடத்தில் ஸ்ரீநாராயணனை எழுந்தருளச் செய்யும் தீர்க்க தரிசன அமானுஷ்ய சக்தியைக் கருடாழ்வார் விருட்சக் கொடி சித்த புருஷரிடமிருந்து பெற்றார். கருடனைத் தம் கொடியில் தாங்கியமையால் அவர் “கருடக் கொடி சித்தர்” என்ற பெயரும் பெற்றார். இவரே சித்துக்காடு ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் சன்னதியிலுள்ள முன் மண்டபத்தில், அம்பாளுக்கு வலப்புறம் உள்ள தூணில் ஜீவசமாதி கொண்டிருக்கிறார். காடராக்ட், கான்சர் போன்ற கொடிய கண் ரோகங்களைத் தீர்த்து அருள் புரிகிறார் விருட்சக் கொடி சித்தர்.
க்ளொகோமா, மாலைக்கண் பார்வைக் குறைவு போன்ற சகல கண் வியாதிகளையும் தீர்க்க வல்ல விருட்சக் கொடி சித்தரைத் தரிசித்து, இத்திருக் கோயிலுக்கான இயன்ற திருப்பணிகள், அன்னதானம் முதலியன செய்தல் வேண்டும். இது தவிர குருடர்களுக்கான கல்வி, நிதி, மருத்துவம் போன்ற உதவிகளை இயன்ற அளவு செய்திடில் விருட்சக் கொடி சித்தர் ஆனந்தத்துடன் அருள் புரிகின்றார். கண் மருத்துவர்கள் தங்கள் திறமை பெருக இவரைத் தரிசித்து இலவச மருத்துவ உதவியை மக்களுக்குச் செய்ய வேண்டும்.

ராகு கால மகிமை

ராகு காலத்தில் ஸ்ரீதுர்கை தேவியை வழிபடுவதா? அல்லது ஸ்ரீராகு பகவானை வழிபடுவதா? என்ற ஐயம் வழிபடும் ஒவ்வொரு பக்தர் மனதிலும் எழலாம். ஸ்ரீதுர்கை தேவி எழுந்தருளியுள்ள இடங்களில் ஸ்ரீராகு பகவானைத் தியானித்து ஸ்ரீதுர்கை தேவியைத் துதிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் தேவி உபாசனையாகிய சக்தித் தத்துவம் இன்றியமையாதது என்பதை ஸ்ரீதுர்கை வழிபாடு வலியுறுத்துகிறது.

மகான்கள் யாருடைய விதியையும் மாற்றுவதில்லை. விதியின் வேகத்தைத் தணிக்கும் வழியை மட்டுமே சொல்கின்றனர்.

தற்போது பெரும்பாலான கோயில்களில் ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்துச் செயல்களையும் ஒதுக்கி வைத்து ராகு காலத்தில் கோயில்களில் ராகு கால வழிபாடு நிகழ்த்துவதே அவ்வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. இந்த ராகு கால வழிபாட்டிற்காகவே நம் பெரியோர்கள் ராகு காலத்தில் பிற செயல்கள் செய்வதைத் தவிர்த்தனர்.
ஆகவே ஒவ்வொருவரும் ராகு காலத்தில் ஸ்ரீராகு பகவானையும், ஸ்ரீதுர்க்கை தேவியினையும் வழிபட்டு, அன்னதானங்கள் பல செய்து நற்பலன்களைப் பெறுவோமாக!
ராகுகால துர்கை வழிபாட்டு முறையினை எமது வெளியீடான “ஸ்ரீராகு கால துர்க்கை மகிமை” புத்தகத்தில் காணவும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam